All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தாழம் பூ

Page 1 / 2
 

Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

வணக்கம் தோழமைகளே.

என்னுடைய தாழம் பூ நாவல் இனி தளத்தில் ...பாய்மரக் கப்பலின் இரண்டாவது பாகமான தாழம் பூவும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். கதையை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                தாழம் பூ

 பனியும் , காற்றும் பதவிசாய் விலாவி வீசியது போல் இருந்தது அந்த அதிகாலை நேரம். நல்ல பளீர் வெளிச்சம் பரவாமல் அழுக்காய் விடிந்திருந்தது.

 

இரவில் வானம் லேசாய் அழுதிருக்கும் போலவே. வராண்டா முழுக்க ஈரமாய் மலர்ந்திருக்க, ஈசி சேரில் அமர்ந்தபடி பெருத்த யோசனையில் இருந்தாள் வானதி.

 

இறுக பின்னிய சடையைப் போல், பிரிக்க முடியாமல் முடியிடப்பட்டு இருந்தது சிந்தனை.

 

" ஆப்னி கீ உத்லேன்..?" மெல்லிய குரலில் கேட்டபடி அருகில் வந்து நின்ற மம்தாவை நிமிர்ந்து பார்த்தபோது முகம் முழுக்க புன்னகை பூவாகி இருந்தது.

 

" ரெம்ப நேரமாச்சு." என்றவள், காலை குறுக்கிக் கொண்டு முழங்காலை கட்டிக் கொண்டாள். அந்த அதிகாலை சுகமான ரசமாய் அவளுள் விரவத் தொடங்கி இருந்தது.

 

வெளுப்பு தட்டத் தொடங்கிய ஆகாயத்தை இமைக்காமல் பார்க்கத் தொடங்கி இருந்தாள். இயற்கை மீது சலனமில்லா பிரியம் பூத்து புன்னகைத்தது.

 

" என்னம்மா, ஆகாயத்தை இப்படி பார்க்கிறீங்க..? இன்னைக்கு இது புது வானமா..?" மம்தா எதிரில் இருந்து ஸ்டூலில் அமர்ந்து கொண்டு மெலிதாக புன்னகைக்க, கால்களை இன்னுமே இறுக கட்டிக் கொண்டாள் குழந்தை போல.

 

" எனக்கு கருமையில இருந்து ஆகாயம் மெல்ல மெல்ல வெண்மையா நிறப் பிரிகை செய்றதை பார்க்க ரெம்பவே பிடிக்கும் மம்தா. எனக்கும் நாற்பத்தஞ்சு வயசாயிடுச்சு இன்னும் கூட வானம் பிரிச்சு துப்பிய கருப்பு எங்க போச்சுன்னு கண்டுபிடிக்க முடியல. இது மட்டுமில்லை, பூ ஒண்ணு மலர்வதை பார்க்கணும். மொட்டுல இருந்து எப்படி முகம் மாறி அது வடிவாகுதுன்னு பார்க்கணும்…" அவள் சொல்லி முடித்தபோது மம்தா கண்களை முகம் முழுக்க விரித்து சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.

 

" மாய், நீங்க பெரிய கலா ரசிகை… அதான் உங்க பொண்ணும் அப்படியே இருக்கா."

 

" என்னை ரசிச்சது போதும். இன்னைக்கு நம்ம மிஷனரிக்கு ஜெர்மனியில இருந்து டிரஸ்டி எல்லாம் வர்றாங்க தெரியும் தானே..?" அன்றாடத்தில் புகுந்ததால் மற்றேனய ரசனைகளை அடுத்த நாள் இரவுக்கு அள்ளி கட்டி வைத்து விட்டு இருந்தாள்.

 

" நியாபகம் இருக்கு மாய். அவங்களுக்கு ஸ்பெசலா டிபன் தயார் செய்யணுமா..?"

 

" தேவையில்லை. நம்முடைய வாழ்வியல் சூழலை பார்க்கத் தான் இங்கே வர்றாங்க. எதுக்கு மிகைப்படுத்தி அவங்களை நம்ப வைக்க..? எப்பவும் செய்றதே செய்ங்க. ஆனால் சுவை குன்றாமல் செய்ங்க."

 

 தலையாட்டி விட்டு மம்தா நகர, எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டாள். இறுதியாய் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். சுத்தமாய் பிரசவம் முடிந்திருந்து. வெள்ளை மேகங்கள் நீந்தி நீந்தி திசை தேடிக் கொண்டிருந்தன. பறவைகள் சொல்லி வைத்தது போல், கிசுகிசுத்தபடி ஒரே திசையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தன.

 

 குளியலறையில் இருபது நிமிடத்தை நீரோடு சேர்த்து விரயம் செய்து முடித்து, கண்ணாடி முன் வந்து நின்றாள். கருநீலத்தில் வெண்பூக்கள் தூவிய டிஷ்யூ காட்டனில் வெகு கம்பீரமாய் இருந்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை பார்த்து இருந்தது தலைமுடியில்.

 

முன்பிருந்த பொலிவு கேசத்திலும் இல்லை, தேகத்திலும் இல்லை. இதயம் வேண்டுமானால் நின்ற இடத்தில் நிற்கும், எலும்பிற்கும் தோலுக்கும் அந்த இத்யாதி வேலைகள் தெரியாது. ஆனால் நாற்பதில் நரைதான் அழகு… அதை கரும் மை' திரையிட்டு மறைக்கும் அளவிற்கு முதுமை பற்றிய பதட்டம் வந்திருக்க வில்லை இன்னும்.

 

புடவை மடிப்பை நீவி சரிசெய்து கொண்டிருந்த நிமிசம் அலைபேசி பிரத்யேகமாய்ச் சிணுங்க, அந்தச் சத்தம் அங்கமெல்லாம் தட்டி எழுப்பும் அலாரம் போல் உள்ளத்தை உரச, வேகமாய் வந்து கையில் எடுத்தாள்.

 

இணைப்பு சென்னையை அவள் கன்னத்தில் உரசி உயிரூட்ட வைத்தது.

 

" வானு…" ஒரு வார்த்தை தான். அதில் இருந்தது இரண்டு எழுத்துகள்தான். அதற்கே காதுவழி ரத்தம் பாய்ந்து அவள் உடம்பு முழுக்க இன்னொரு உயிரை ஊடாட வைத்தது.

 

" சொல்லுங்க நந்தா." என்றாள் உணர்வை கட்டி நிறுத்தியபடி.

 

" நைட்  தூங்கலயா..? "

 

அட..! ஐந்தாம் தலைமுறை அலைகற்றை (5G) வரவில்லை என்ற மனக்குறை எதற்கு..? மனசோடு மனசு மோதும் வேகத்திற்கு 15ம் தலைமுறை அலைகற்றையின் வேகம் இருந்தது.

 

" உங்களுக்கு எப்படி தெரியும் நந்தா..?" என்றாள் சிறு பெண்ணின் உத்வேகத்தோடு.

 

" ரெம்ப நேரம் ஆன் லைன்ல காட்டுச்சு. கால் பண்ணலாம்னு கூட நினைச்சேன். எதுவும் வேலையா இருப்பியோனு யோசிச்சிட்டே…"

 

" நீங்களும் தூங்கல. அதானே."

 

அவன் வாக்கியத்தை அவள் முடித்தபோது, இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு. உணர்வுகளை உணர்கின்ற தருணத்தை விட உன்னதமான தருணம் உலகில் எது..?

 

" வேலைலாம் இல்ல நந்தா. இன்னைக்கு மிஷனரியில இருந்து வர்றாங்க இன்ஸ்பெக்சன் செய்ய. அதைப் பத்தி யோசனை." என்றாள் பொய்யாக.

 

மறுமுனையில் அவள் கூற்றில் உண்மை கண்டறியும் சோதனையில் இருந்தான் நந்தா.

 

" சரி, தொண்டை ஏன் கரகர' னு இருக்கு..?" ஆரம்பித்து விட்டான். இனி அவனை சமாளிப்பதிற்குள் அவள் பாடு, வம்பாடு.

 

" மழையா இருக்கு நந்தா இங்கே."

 

" உனக்கு மழையில அலையற வேலை இல்லயே."

 

" கிளைமெட் சேன்ஞ் ஆனால் இதெல்லாம் வரும் இல்லயா? நான் என்ன பதினாறு வயசுப் பொண்ணா..?" என்றாள் வேண்டுமென்றே அவனைச் சீண்ட,

 

" எனக்கு எப்பவும் அப்படித்தான். சரி இந்த முறை சந்தியா வரும்போது நானும்…" வழக்கமான விசயத்தை ஆரம்பிக்க மெல்ல அவள் முகம் இறுகியது.

 

" நான் வச்சிடட்டுமா..? நிறைய வேலை இருக்கு. "

 

" எனக்கு நிறைய வேதனை இருக்கு. ஆனால் அதை கேட்கவே மாட்டேங்கற உன் மேல கோபம் இருக்கு. உன் ஆதங்கத்துல அர்த்தம் இருக்கு, அதே மாதிரி என் தவிப்பில நியாயமும் இருக்கு."

 

" நந்தா…" என்றாள் தவிப்பாக.

 

" நீ போட்ட லஷ்மண ரேகையை தாண்டறது அவ்வளவு பெரிய விசயமில்லை. உன் வார்த்தைக்கு நான் தர்ற மரியாதையை, என் உணர்வுக்கு நீ எப்போ தரப்போறே..? இல்ல, நம்ம ரெண்டு பேருடைய சந்திப்பு ஒரு இழப்பில தான் நிகழணும்னு நினைக்கிறியா..?"

 

" நந்தா…" வீறிட்டு விட்டாள். உடலும் மனசும் ஒருசேர நடுங்கியது. அந்த காலை நேரத்தில் அந்த வார்த்தை அவள் இதயத்தை என்னவோ செய்தது. மெல்ல எட்டிப் பார்த்த விசும்பலை உதடு கடித்து அடக்கினாள். அழுவது தெரிந்தால் இன்னும் கோபப்படுவான்.

 

மெல்ல நிலைப் பட்டான். சினம் காட்டத் தெரியாதவனின் சினம், வீரியமாய் காரியம் ஆற்றும் தான்.

 

" யாழி எங்கே..? என்கிட்டே பேசி எத்தனையோ நாள் ஆகுது." என்றான் இறுக்கம் குறையாமல்.

 

" கேம்பஸ் போய் இருக்கா  ஷில்லாங் வரைக்கும். வந்ததும் பேசச் சொல்றேன்." குரல் அடங்கி இருந்தது. அந்த தர்க்கமில்லாத வெறுமை குரல் அவனுள் தாக்கத்தையும் ஏக்கத்தையும் உண்டாக்கியது.

 

" இப்போ என்ன சொல்லிட்டேன் வானு..? எதுக்கு அழறே..?"

 

" நான் அழல. ஆனால் ரெம்ப கஷ்டமா இருக்கு நந்தா அந்த வார்த்தை. சுமக்கவே முடியல. இனியும் இழக்க என்கிட்ட என்ன இருக்கு.?" என்று முடித்த போது குரல் வெடித்து இருந்தது.

 

" நான் நாளைக்கு அங்கே இருப்பேன். இப்படி கண்ணீர் விட்டா எனக்கு தாங்காது. எனக்கே ரெண்டு நாளா…" என்றவன் நிறுத்திவிட்டான். இப்போது அவள் இதயம் இடம்மாறி, தடம்மாறி பரிதவிக்க ஆரம்பித்து இருந்தது.

 

" ரெண்டு நாளா என்ன நந்தா..? உடம்புக்கு எதுவும் பண்ணுதா..?"

 

" அதெல்லாம் இல்ல. லேசா மார்வலி. கேஸ் ப்ராபளமா இருக்கும். அம்மா பூண்டு தட்டி பால் காய்ச்சி தந்தாங்க." அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் இணைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ காலில் வந்திருக்க, அவசரமாய் இணைத்தான்.

 

அடடா! அந்த கண்களில் தான் எத்தனை பரிதவிப்பு. அந்த முகத்தில் தான் எத்தனை பரிமளிப்பு. 6 இன்ச் தொடுதிரையில் அலைகழிந்து கொண்டு இருந்தாள் அவனை துளைக்கும் கண்களால்.

 

  மொபைலை தாங்கியில் பொருத்திவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தான். சின்ன சிரிப்பு ஒரிரு முடி நரைக்க தொடங்கி இருந்த மீசையில் முளைத்து மறைந்து நின்றது.

 

    ‘’ நல்லா பார்த்துட்டே இல்லே..? சொல்லு பார்க்கலாம், அந்த ஸ்கேன் ரிப்போர்ட், இ.சி.ஜி ரிப்போர்ட், அப்பறம் அந்த ப்ளட் டெஸ்ட் கூட முடிச்சிட்டேன்னு உன் கண்ணு சொல்லுதே..!’’ சட்டையின் கை முனையை மெல்ல சுருட்டிக் கொண்டு முஷ்டியை மடக்கி காட்டிய மேனரிசம் எப்போதும் போல இப்போதும் அவளை உள்ளக் கிடக்கையில் அழுத்தியது.

 

   ‘’ போதும் கேலி..! அத்தையை கூப்பிடுங்க. நான் உங்களைப் பத்தி பேசணும்.’’

 

      ‘’ அடேங்கப்பா..!’’

 

     ‘’ கேலி என்ன நந்தா இப்போ வேண்டி கிடக்கு..? என்ன பண்ணுது நிஜமா..!’’

 

     அவள் கேட்டுக் கொண்டே இருக்க, மெல்ல விரல் நீட்டி அவள் தலையை மென்மையாக வருடித் தந்தான். வீடியோ காலில் தன் கண்ணீரை கட்டுபடுத்த இயலாமல் தவித்தாள்.

 

        ‘’ பயப்பட ஒண்ணுமில்ல வானு..! பேங்கில போஸ்டிங் வந்ததுல இருந்து நிறைய ஓர்க் டென்சன். ஒரு இடத்தில நிம்மதியா இருக்க முடியல. தபு மெடிக்கல்ல இருக்கா. நித்தமும் ஆயிரம் கம்ப்ளைண்டோட வந்து நிக்கிறா. குடும்பம் வளர வளர, கவலைகளும் வளர்ந்துட்டே தானே இருக்கு.’’ 

 

        ‘’ அதுக்குன்னு உங்களை கவனிச்சுக்காம இருப்பீங்களா நந்தா..? உங்களுக்கு ஏதாவதுனா, அதை தாங்கிக்கிற சக்தியாவது எங்களுக்கு இருக்கா..?’’

 

            ‘’ ஏன் வானு, இத்தனை சொன்னாலும், ஒரு வார்த்தை, நான் உங்களை வந்து பார்க்கிறேன்னு சொல்ல தோணல இல்லையா..? நான் உனக்காக இருக்கணும்கிற உன்னோட சிந்தனை ரெம்ப சுயநலமானதுனு உனக்கு தோணும் போது என்னைத் தேடி நீயே வருவே..!

 

         யாழியை பார்க்கணும்கிற என் எண்ணத்தின் நேர்மை உனக்கு புரியலயா..? அம்மாக்கு எழுபது வயசுக்கு மேலே ஆகுது. பலநேரம் உன்னையும் யாழினியையும் பார்க்காமல் தனக்கு எதுவும் ஆகிடுமோங்கிற அவங்களுடைய கண்ணீர்க்கு என்னால் நியாயமே பண்ண முடியல வானு. இந்த அழுத்தமெல்லாம் சேர்ந்துதான் என்னை கவலையில் ஆழ்த்துது. ’’

 

       ‘’ நந்தா…’’

       

      ‘’ நான் வைக்கிறேன். உனக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னே இல்லே..! யாழியை என்கிட்ட பேசச் சொல்லு..! ‘’ இணைபில் இருந்து வெளியேறினான். குமைந்து போனாள் அந்த செயலில்.

 

        தன்னுடைய இயலாமையை அதிருப்தியாக கூட வெளிப்படுத்த விரும்பாத அவன் மனதை இன்னும் எத்தனை நாள்கள் காயப்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறோம், என்ற எண்ணமே அவளை சின்னா பின்னமாக்கினாலும், அதைப்பற்றி சிந்திக்க இப்போது நேரமில்லை என்பதால், இறங்கி கீழே வந்தாள்.

 

    கீழ்தளத்தில் இருந்து ஒட்டி பிரிந்து உள்ளே நகர்ந்த சின்ன நடைபாதையில் இரைந்து கிடந்த பூக்களை மிதிக்காமல் நடந்து வந்தால், சின்ன மரகேட்டை திறந்து கொண்டு காரிடரில் நடந்தாள்.

 

       விதைக்காமல் விளைந்திருந்தது அமைதி. கொல்கத்தா மிசினரி ஹாஸ்பிடல் என்று வங்கத்திலும், அதற்கு நேர் கீழே ஆங்கிலத்திலும், வெள்ளை எழுத்துக்கள் மின்னின.

 

               நெடிய ஹாலில் ஒருபக்கம் மரியோடு மைந்தன் இருக்கும் முகப்பு படமும், மற்றொரு பக்கம் மிசினரியின் வரலாற்றோடு, புன்னகை முகமாய் இருந்த மதர் சுப்பீரியர்களின் படமும் சுவற்றில் அமைதியாக வீற்றிருந்தது.

 

           அவற்றின் நடுநாயகமாக இருந்த மதர் கேப்ரியலாவின் சாந்தம் தவழ்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். இந்த வாழ்க்கையும், இந்த பாதுகாப்பும், இந்த நிம்மதியும் அவர் இல்லாது போயிருந்தால், சொல்லாது எங்கோ போயிருக்கும். எல்லா நிலைகளிலும் பாதுகாப்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் தருகின்ற இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மனமார.

 

           ‘’ மாய், ரெடியாகி வந்தாச்சா..? நான் டிபன் எடுத்து வைக்கட்டும..?’’ மம்தா பக்கத்தில் வந்து நின்று நினைவை டேக் டைவர்சன் போட வைத்தாள்.

 

             ‘’ நான் முதல்ல ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு மதரை பார்த்துட்டு வந்திடறேன். நீ மத்த ஸ்டாப்புகளுக்கு முதல்ல சாப்பாட்டை அனுப்பி வச்சிடு. கிச்சனை துப்புரவாக வைக்கணும். அதிகாரிகள் வந்து கேட்டால், எந்தக் குறையா இருந்தாலும் தயங்காமச் சொல்லணும். அது என் மீதான குறையா இருந்தாலும். அதுதான் நம்முடைய ஹாஸ்பிடலுக்கு நல்லது.’’ சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்தவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு மெல்ல மம்தா சமையலறையை நோக்கி நகர, மதர் கேத்ரீனாவின் அறை வாசலில் நின்றாள் வானதி.

 

             அவள் ஒலி அனுப்பி அனுமதி கேட்க, உள்ளிருந்து அழைப்பு வந்தது.

 

            ‘’ குட் மார்னிங் மை சைல்டு…’’ 

 

            ‘’ குட் மார்னிங் மதர்..! எனக்கு எதுவும் தகவல் இருக்கா..?’’

 

            ’’ மிசினரி டிரஸ்டில் இருந்து அதிகாரிகள் இன்னும் சில மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க. நம்முடைய மருத்துவமனையோடு சேர்த்து இந்தியா முழுக்க, முப்பத்தி இரண்டு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து இவர்கள் சமர்பிக்கும் அறிக்கையை வைத்துத்தான் வருங்காலத்தில் நமக்கான நிதியை டிரஸ்ட் விடுவிக்கும். அதனால, நம்முடைய தேவையை அவங்களுக்கு புரிய வைக்கவேண்டிய சாமார்த்தியம் உன்னை சேர்ந்தது.’’

 

          ‘’ புரியுது மதர் சுப்பீரியர்..! அது ரொம்பவே எளிதான விசயம். உண்மை பேசினா போதும். மிகைப்படுத்தலும், பேராசையும் இல்லாத உண்மைக்கு நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும். ’’

 

    ‘’ வானதியிடம் பொறுப்பை தந்த பிறகு நமக்கு எந்தக் கவலையும் தேவையில்லைனு’ மதர் கேப்ரியலா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதருகில் தான் இருக்கு வானதி. ஆனாலும் நினைவூட்ட வேண்டியது என் கடமை.’’ என்றார் புன்னகையோடு.

 

           தலையசைத்து விட்டு வெளியேற திரும்பியவளை மதரின் குரல் மறுபடியும் தடை போட, நின்று திரும்பி பார்த்தாள்.

 

            ‘’ இன்னொரு தகவல் கூட இருக்கு வானதிக்காக.’’

 

            இந்தமுறை வானதியின் முகத்தில் தான் வியப்பு குழுமி இருக்க, என்ன என்பதுபோல் அமைதியாக நின்றாள்.

 

            ’’ ஷில்லாங்கில் இருந்து கேம்பஸ் முடிச்சிட்டு, யாழினி அப்படியே உன் தோழி சந்தியாவை சந்திக்க சென்னை கிளம்பறதா எனக்கு தகவல் அனுப்பி இருக்கா. உன்கிட்ட விசயத்தை சொன்னால் நீ அனுமதிக்க மாட்டேன்னு தெரியும்கிறதால, என்கிட்ட மட்டும் தகவல் சொல்லிட்டு கிளம்பி இருக்கா. அவளைப் பொறுத்தவரை நீயும்  நானும் வேறில்லை தானே..? ’’ கேத்தரின் அர்த்தமாய் புன்னகைக்க, வானதியின் பூமி தரை தட்டி நசுங்கி இருந்தது.

 

       அறையை விட்டு வேகமாய் வெளியில் வந்தவள் இமைகள் இரண்டும் பட்டாம் பூச்சியாய் சிறகாட்ட, பதட்டத்தில் கைகளை அழுத்திக் கொண்டாள்.

 

        ‘ எத்தனை அழுத்தம்..! எத்தனை பிடிவாதம்..! இத்தனை நாள் கட்டுக்குள் நின்ற காற்று கரை கடந்து கொண்டு இருக்கிறது, அவளின் கண் பார்வையைத் தாண்டி.. இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது. சந்திக்க போவது சந்தியாவை அல்ல, நந்தாவை..! அவரின் குடும்பத்தை.இவளின் கோபத்தை அந்த குடும்பம் தாங்குமா..?

 

              ஆயிரம் கேள்விகள் மனதில் முளைத்து முளைத்து சரிய, தன் வசம் இழந்த உணர்வுகளை கட்டி நிறுத்த வழியற்று அப்படியே நாற்காலியில் சரிந்தாள்.

 

"பாதை கொஞ்சம் மாறிப் போனால்

பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தால்

வாசம் விட்டு போகுமா

ராஜா நீ தான்

நான் எடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே மானே இள மானே…"

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra
This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  
                          2
 
மெல்லிய டெட்டால் வாசம் நாசியை வருட, நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி இருந்தாள் கட்டிலில். சற்றுமுன் மனதை மொய்த்த பரபரப்பு இப்போது இல்லை. இந்த நிதானத்தை சற்று முன் காட்டி இருந்தால், இப்படி மயங்கி கவிழும் அவசியமும் இருந்திருக்காது தான்.
 
மம்தா தந்த ஒட்ஸ் கஞ்சி இன்னும் கொஞ்சம் அதிகமாய் உடலை தெம்பூட்டி இருந்தது.
     
 
‘’இப்போ எப்படி இருக்கு, மாய்..?’’
         
’’ரொம்ப நல்லா இருக்கேன் மம்தா. என்னை இப்படி படுக்கையிலே தள்ளியே வேடிக்கை பார்க்காம, முதல்ல மிசினரி வர்றதுக்குள்ள, இடத்தை சுத்தம் செய். நான் அரை மணிநேரத்தில் அங்கே இருப்பேன்.’’ அவளை அனுப்பிவிட்டு எழுந்து, உடைகளை சரிசெய்து கொண்டாள்.
 
சந்தியாவின் எண்ணிற்கு அழைத்தபோது இணைப்பு உடனே கிடைக்க, மெல்லிய அர்த்த புன்னகை இதழில் தவழ்ந்தது.
 
‘’எப்படி இருக்கே வானு..? இப்போ தேவலயா..? ஏன்டி வாரத்துல முதல் நாளே இப்படி வம்படி பண்றே..? நான் கிளம்பவும் முடியாது இப்போ.’’ 
 
‘’அப்புறம் அலுத்துக்கோ சந்தியா. நீயும் தானே இதுக்கு உடந்தை..? அதைச் சொல்லு முதல்ல.’’ கேள்வி ஆணித்தரமாக வந்து விழ, சின்ன தடுமாற்றம் மொய்த்தவளாக சந்தியா, பதிலளிக்க திணறிப் போனாள்.
 
‘’இல்ல நதி..! உன் வார்த்தைகளை நந்தா கூட மீறலாம். நான் மீற மாட்டேன்.’’ என்றாள் வானதியை வம்பிழுக்க.
 
‘’ நந்தா மீறினதை நீ பார்த்தியா..? உனக்கும் எனக்கும் மட்டும் தான் பேச்சு இப்போ. சொல்லு இத்தனை நாள் இல்லாமே, யாழி திடீர்னு கிளம்பி இருக்கான்னா, அதுக்கு யார் காரணம்..? அவளுக்கு என்னை மீறிப் போகிற தைரியத்தை யார் தந்தது..? ‘’
 
‘’அவள் உன் அடிமை இல்ல நதி..!’’
 
‘’அடிமையா வச்சுக்க நானும் விரும்பல. ஆனால் அந்த கங்கை என் பார்வைங்கிற செம்புக்குள்ள தான் இத்தனை நாளும் அடங்கிக் கிடந்தது..! அந்த அலை கரை மீறினதே இல்லையே, எத்தனை ஆக்ரோசம் வந்த போதும். இப்போ திடீர்னு என்ன..?’’
 
‘’அவளுக்கும் வயசாகுது நதி..! குழந்தை எத்தனை தவிக்கிறா தெரியுமா..?’
 
இப்போது வானதி பேசவே இல்லை. மெல்லிய அழுத்தம் நெஞ்சை பிசைய மார்பை பற்றிக் கொண்டே வெகுநேரம் நின்றாள்.
                 
‘’எனக்கு புரியும் சந்தியா. எல்லாத்துக்கும் அர்த்தமும் இருக்கு, அது புரிய காலமும் இருக்கு.’’
 
‘’என்ன காலமோ, போடி. இருபது வயசு பொண்ணு. தன் தகப்பனை சந்திக்கும் போது, பக்குவமா இருப்பாளா, மாட்டாளா..? அவ பிடிவாதக்காரி மட்டுமில்ல, கூர்மையானவ.’’
 
‘’பிரச்சனை அதுதான் சந்தியா. அந்த கூர்மையை சோதிக்க என் விரலையே விலையா தர முடியுமா..? நந்தாவை காயப்படுத்தினால் அது என்னை வெந்து தணிய வைக்கும். என்னால அதை அனுமதிக்க முடியாது சந்தியா.’’
 
தவிப்பாய் வந்து விழுந்த வார்த்தைகளில் ஒரு நொடி மெய் மறந்து போனாள் சந்தியா. சேர்ந்து வாழ்ந்த காலத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இருவருக்கும் நடுவில் இருக்கும் புரிதலை, காதலை, யுகம் கடந்தும் அளந்திட முடியாது.இத்தனை இதத்தை பெற இருவருக்கும் நடுவில் அப்படி என்னதான் இருக்கிறது’ என்ற சிந்தனையும் தோன்றாமல் இல்லை.
 
‘’ சந்தியா, லைன்ல இருக்க தானே..?’’
     
‘’ இருக்கேன் இருக்கேன். இல்லாமல் எங்கே தொலையப் போறேன்..? நீ முதல்ல என்னென்ன கட்டளை இடணுமோ இட்டு முடி. உன் கட்டளையே என் சாசனம்.’’ என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டே. வெடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, மென்மையாகச் சொன்னாள்.
 
’’ இன்னைக்கு மிஷினரி டிரஸ்டுல இருந்து ஆட்கள் வர்றாங்க . மெடிக்கல் கேம்பஸூம் இருக்கு. ஒரு மணிநேரம் என் மயக்க களேபரத்துல போயாச்சு.  இனி நிற்க நேரமில்லை. யாழி வந்ததும் மெசேஜ் போட்டு விடறேன். " 
 
அலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு அறையை விட்டு வெளியே வரவும், யாழினி அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
 
ஒரு கணம் மனம் பூரித்து இயல்பிற்கு திரும்பியது. ஒரு தாய்க்கு தன் பிள்ளைகளிடம் எது அழகு என்று இனம் பிரிக்கவே தெரியாது… பிள்ளை என்ற சிந்தனையே அழகென்ற இயல்பில் மூடி மறைந்து கொள்கிறது.
 
"என்னாச்சுமா..? "
 
" முதல்ல நீ சொல்லு யாழி, உனக்கு என்னாச்சு..?
 
’’எதுவும் ஆகல. சந்தியா ஆன்ட்டியை பார்க்க மட்டும் தான் சென்னை போக நினைச்சேன். அதுக்குள்ளே உடம்பு முடியலைனு நாடகம் பண்ணி திருப்பி அழைச்சாச்சு.’’ நாடகம்' என்ற வார்த்தை வானதிக்கு இனம் புரியாத வலியைத் தர, பதில் தராமல் அமைதியாக நின்றாள்.
 
அடுத்த வார்த்தையை இருவரும் ஆரம்பிப்பதிற்குள் ஹாஸ்பிடல் சீப் நர்ஸ் மோனிஷா சில மருந்துகளோடு முன்னே வந்து நின்றாள்.
 
‘’இந்த இன்ஜெக்சனை போட்டுக்கங்க தீதி. அப்பத்தான் ஃபீல் ஃபிரியா இருக்க முடியும். டாக்டர் மேரி தான் சஜெஸ் பண்ணி இருக்காங்க.’’ என்றபோது வானதி மென்மையாக தலையசைத்தபடி சட்டை கையை மேலேற்றி புஜத்தை காட்ட, இப்போது யாழினியின் பிடிவாதமான சிறுமுகத்தில் ஒரு பதட்டமும் குற்றவுணர்வும் சேர்ந்து படிய ஆரம்பித்து இருந்தது.
 
‘’ஏய் மோனி சிஸ்டர், எங்க அம்மாக்கு என்ன..?’’ என்றவளை மோனிசா நகைப்போடு பார்க்க, வானதியின் முகம் தான் கடுமைக்கு மாறி இருந்தது.
 
‘’அதென்ன, ’ஏய் மோனி சிஸ்டர்..! நீ ஒழுங்கா பேசவே கத்துக்க மாட்டியா யாழி..?’’
     
’’என்னம்மா ஆச்சு..? நான் உன்னை தப்பா நினைச்சிட்டேன். ஐ'யம் சாரி மா.’’ தன்னால் வந்து தோளில் சாய்ந்து கொண்டவளை மெல்ல தலை தடவ, மோனிசா தன் வேலையை நிறுத்திவிட்டு இவர்களையே கண்களால் தின்று கொண்டு நின்றாள்.
 
‘’திடீர்னு மயக்கமாயிடுச்சு யாழிமா. ஏன்னு தெரியல. இதுக்கு முன்னேயும் சில முறை இப்படி வந்திருக்கு. ஆனால் இன்னைக்கு கொஞ்சம் சிவியர்.’’
 
‘’என்னால தானே..?’’
 
‘’யார் சொன்னா அப்படி..? ’’ மெல்ல விரல் அவள் தலைகோதியது. இப்போது தன்னுடைய ஐந்து வயதை மட்டும் வைத்துக் கொண்டு அத்தனை வயதையும் விற்றிருந்தாள் யாழி. அம்மாவின் தோளில் துக்கணாங் குருவிக்கூடு போல் ஊசலாடினாள். அந்த காட்சி அத்தனை அழகாக இருந்தது கண்ணுக்கு.
 
‘’ நான் நிஜமா நந்தாவை பார்க்க போகல…’’ வானதியின் காதோர முடியை கையில் சுற்றியபடி கழுத்தில் பேசியவளின் இதழ்களில் செல்லமாய் ஒன்று போட, இருவருக்குமே சிரிப்பு குப்பென்று பற்றிக் கொண்டது.
 
 ‘’இப்படி அவர் பேரை தலையில அடிச்ச மாதிரியா சொல்லுவ யாழிமா..? அவங்க அம்மா மட்டும் கேட்டு இருக்கணும், அப்புறம் இருக்கு உனக்கு..!’’
 
‘’பெரிய இவரு..! நந்தா… நந்தா… நந்தா… என்ன பண்ணிக்கணுமோ பண்ணிக்கோ.. எனக்கு அவரைப் பத்தி எந்த அக்கறையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், என் கண் முன்னாலே அவர் அடிபட்டு கிடந்தாலும் ஏன்'னு கேட்க மாட்டேன். எனக்கு அவர் யார்மா..? என்ன செய்தாரு ஒரு தகப்பனா..? நீதானேமா எல்லாம்… உனக்கு ஒண்ணுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன். 
 
நான் போய் ப்ரெஸ் ஆயிட்டு வர்றேன், மம்தா எனக்கு டிபன் ரெடி பண்ணி எடுத்து வையேன். அப்புறம் உனக்காக ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். உங்க மாய் போகட்டும் அப்புறம் தர்றேன்.’’ என்றபடி டிராலியை  தர தரவென கையில் இழுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடியவளை வெறுமையாக பார்த்துக் கொண்டே நின்றாள்.
 
புழுவின் மீது தீக்கங்கை போட்டுவிட்டு எரிச்சலை நீவ, சாமரம் வீசியது போல் இருந்தது அவள் தந்துவிட்டு போன அன்பும்,அணுசரணையும். நந்தாவை சுட்டி பொசுக்கிய வார்த்தைகளை தந்த இதழால், அவள் தந்த முத்தத்தின் தித்திப்பை ரசிக்கவே முடியவில்லை.
 
பாஷை  தெரியாவிட்டாலும் வானதியின் முக வாட்டத்தை பார்த்து அவர்களின் விவாதங்கள் புரிந்திருக்க, மோனிசா மெல்ல அவள் தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு நகர, மதர் கேத்தரினின் அழைப்பு வர, கவலைகளை தற்காலிகமாக ஒத்திப் போட்டுவிட்டு வேகமாய் மருத்துவமனை நோக்கி நகர்ந்தாள்.
 
மருத்துவமனையை சுற்றிக் கொண்டிருந்த குழுவில் மதர் கேத்தரின் முன்னே நடக்க, பின் தங்கி ஐ பாட்’டுடன் தொடர்ந்து கொண்டு இருந்தாள் வானதி.
 
பூனைக் கண்ணும், வெளிர் நிறமுமாய் இருந்த நான்கு அதிகாரிகள்  கொக்கு தலையுடன் ஆய்வில் இருந்தார்கள். 
 
இவர்கள் தரும் ஆய்வறிக்கையை கொண்டே வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு இருக்கும்.  மருத்துவமனை கட்டுமானம், மருத்துவ உபகரணங்களின் தேவை, படுக்கை வசதி, சமையல் உபகரணங்கள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துப் போய், தேவைகளின் விஸ்தீனங்களை வானதி விலக்கிச் சொல்ல, அவர்கள் அதை ஒளிப்படத்தில் பதிந்து தரச் சொன்னார்கள்.
 
அவர்களுக்கான உணவும் அங்கே வழங்கப்பட அதையும் ருசித்து குறை நிறைகளை பதிவு செய்து கொண்டார்கள்.அத்தனையையும் ஓரு மெளனமான மனதோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி. காலையில் இருந்த இதமான மனசு இப்போது துளிகூட இல்லை. மனம் யாழியைச் சுற்றிக் கொண்டே இருந்தது. அவள் வார்த்தைகள் ஸ்டாண்ட் போடாத இருசக்கர வாகனம் போல், தன்னை கடந்து கொண்டிருந்த அத்தனை நினைவுகளையும் காயப்படுத்திக் கொண்டே உடன் வந்தது.
 
குளித்து உடைமாற்றி, தூக்கி கொண்டையிட்டுக் கொண்டு வந்து நின்றாள். மெல்லிய மஞ்சள் நிற டாப்ஸும், கருநீல ஜுன்ஸும் அலட்சியமான பார்வையுமாய் நிமிர்வாய் நின்றவளின் அத்தனை அழகிற்கும் பின்னே, ஒரு பிடிவாதக் குழந்தை ஒளிந்து கொண்டிருப்பது பெற்றவள் மட்டுமே அறிந்த ரகசியம்.
 
வானதியைப் பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி ‘ என்ன..?’ என்பது போல் கேட்ட கேள்வியில்  மொத்தமாய் அந்த அழகு முகத்தில் லயித்து நின்றாலும், தான் இன்னுமே கோபமாய் இருப்பதைக் காட்ட, பார்வையை மாற்றிய அம்மாவை கைகட்டி தலை சாய்த்து சிரித்து உதடு குவித்து முத்தம் பறக்கவிட, வானதிக்கு உள்ளுக்குள் ஏகத்துக்கு கோபம் முட்ட, பார்வையை மாற்றிக் கொண்டாள்
 
மருத்துவமனையை சுற்றி ஓய்ந்திருந்தவர்கள், பரிசோதனை கூடத்துக்குச் செல்ல ஊழியர்கள் உட்பட மருத்துவமனையின் அத்தனை பேருக்கும் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு அது பதியப்பட்டது.   
    
‘’மோனி சிஸ்டர், எனக்கு எதுக்கு எடுக்கறாங்க..? நான் என்ன உங்க ஹாஸ்பிடல்லயா வேலை பார்க்கிறேன்..? தோ, மிசஸ் நந்தா இருக்காங்களே, நந்தா, நந்தா… அவங்களுக்கு வேணும்னா பண்ணுங்க. அவங்க வீட்டுக்காரரை நினைச்சு நினைச்சு, முடியெல்லாம் நரைச்சு போச்சு.! காலையில மயக்கம் வேற போட்டு இருக்காங்க போதாத குறைக்கு..! 
 
என்னன்னு பாருங்க..! என்னைக்காவது ஒருநாள் அவங்க, நந்தாவை பார்க்கும் போது, அடையாளம் தெரிய வேண்டாமா, அவங்க நந்தாவுக்கு.’’ வானதியை பார்த்துக் கொண்டே, கைகளை மடக்கி ரத்தம் கொடுக்க, திரு திருவென விழித்தபடி மோனி ரத்த மாதிரிகளை சேகரிக்கத் தொடங்கினாள். இது எதுவும் என்னை அசைக்காது என்பது போல், கவ்விய கோபத்தை கை நழுவ விடாமல் பிடித்தபடி நின்றாள் வானதியும்.
 
’’மிசஸ் நந்தா, எனக்கு எதுக்கு ரத்தம் எடுக்கறாங்க..? நான் என்ன உங்க ஹாஸ்பிடல்லயா வேலை பார்க்கிறேன். நீங்க என்னனு கேட்க மாட்டீங்களா..?’’
 
இந்த சமாதானத்துக்கும் எந்த பதிலும் இல்லை..!  
 
‘’அய்யோ அம்மா…’’ யாழி கைகளை பிடித்துக் கொண்டு கண்களை மூடி கத்த, பதறிப் போய் ஒடி வந்து மடக்கி இருந்த மகளின் கைகளைப் பற்றி நீட்டிப் பார்த்து தவித்த வானதியைப் பார்த்து காலாட்டி, கண் சிமிட்டி சிரித்தவள், அமர்ந்திருந்த பெரிய டேபிளில் இருந்து கால்களை உதறி கீழே இறங்கி அவளைப் பார்த்து உதடு குவிக்க வானதி முகமெல்லாம் தவித்து கண்களே கலங்கிப் போனது ஒரு நொடி
 
‘’மா, எனக்கு நல்லா தெரியும். உங்க பலகீனமும், பலமும். அந்த ரெண்டுமே நானும், நந்தாவும் தான். " அம்மாவின் தோளில் முகம் புதைத்தவளை மெல்ல வருடியவள் கண்களில் மிதமிஞ்சிய அழுத்தம் இருந்தது
 
மகளை ஆமோதிக்கவோ, ஆட்சேபிக்கவோ நேரமில்லை. முழு உடல் பரிசோதனையை முடித்துக் கொண்டு மருத்துவமனை வளாகத்தை நோக்கி நகர்ந்தவளை, யாழி கைகளைப் பற்றி நிறுத்த, அயர்ச்சியாய் திரும்பி பார்த்தாள்.
 
"ஒரு வாரம் அலைஞ்சு திரிஞ்சுட்டு வந்திருக்கே, போய் ரெஸ்ட் எடு யாழி. மம்தா கிட்ட மதியம் சாப்பாடு தந்து அனுப்பறேன். எனக்கு இன்னைக்கு முழுக்க ஆபிசர்ஸ் கூட இருந்தாகணும். "
 
" வருத்தமா இருக்கியாமா..? "
 
" சொல்லத் தெரியல. ஆனால், நான் சந்தோசமா இல்ல. " என்றபடி திரும்பி நடந்த அம்மாவின் முதுகிலேயே பார்வை பதிந்து இருந்தது. அந்த  பார்வையில் வெறுமை அடர்ந்து திளைத்து இருந்தது.
 
வீட்டிற்கு  வந்து கட்டிலில் அதிர சரிந்தவளுக்கு இனம் தெரியாத கோபம் மனசு முழுக்க. அம்மாவின் கலங்கிய முகமும், பரிதவித்த தோற்றமும், எல்லாவற்றுக்கும் மேலாய் நந்தாவின் மீதான பேய்க் காதலும் அவளை வெகுவாய் ஒடித்தது.
 
இயல்பை விட ஒரு வீசை நல்ல மனுஷியான அம்மாவிற்கு, நந்தா மாதிரியான அற்ப சராசரி மட்டும் கிடைக்காமல் போய் இருந்தால், அவள் வாழ்க்கை எத்தனை அழகாக இருந்திருக்கும்.
 
காத்திருப்பில் கூட ஏதோ நியாயமிருக்கலாம். ஆனால் இது ஏமாற்றம் இல்லயா..? ஒரு முழு வாழ்க்கையையும் தியாகம் செய்யுமளவிற்கா உயர்ந்தவன் அந்த நந்தா..?
 
இளமையை அம்மாவின் தேகத்தில் இளைப்பாற வைத்ததிற்கு பலனாக காலச் சனியனாய் தன்னை பெற்றதை விட, அம்மா வாழ்ந்ததிற்கு என்ன அடையாளம்..? நினைக்க நினைக்க குமுறிக் கொண்டு வர, ரோலிங் சேரில் அமர்ந்து தன்னைத் தானே உந்தி தாலாட்டிக் கொண்டாள்.
வேகம் கூட்ட கூட்ட தேகம்  மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்தது.
 
மஞ்சள் வெயில் இதமாய் அவள் முகத்தில் படரத் தொடங்கி இருந்தது. ஒரு வாரத்திய அலைச்சல், காலையில் இருந்து வானதியோடு செய்த வம்பாட்டம் அத்தனையும் மெல்ல மெல்ல மறைந்திருக்க, ஒரு குழந்தையாய் தன்னை மடக்கிக் கொண்டு உறக்கத்தில் வீழ்ந்து இருந்தாள்.
 
அலைபேசி அடித்து அடித்து முடித்து, முடித்து மீண்டும் அடித்துக் கொண்டு இருந்தது.
 
அவள் விழித்திருந்தாலே, அந்த விளிப்பு அவளை வசீகரித்து இருக்காது எனும்போது, உறக்கத்தில் கிடந்தவளை அந்தச் சத்தம் தொட்டுக் கூட பார்க்கவில்லை.
 
மறுமுனையில் நந்தா தான் ஏமாற்றத்தின் விளிம்பில் தன்னை தானே சமாதானித்துக் கொண்டு நின்றான்.
 
"...கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
 
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
 
காலம் வரும் அங்கு தெய்வம் வரும்
 
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் 
வரும்…
 
காலம் தனை நான் மாற வைப்பேன்
 
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்
 
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு....
 
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா, கண்ணில் நீரோட்டமா,
 
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா…"
 
 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra
This post was modified 7 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                 3

இரவு போட்ட தார்சாலை இன்னும் பளபளப்பை இழந்திருக்க வில்லை. கருமையின் பிசுபிசுப்பு அழகாய் ஒட்டி உறவாடிக் கொண்டு வாகனங்களோடு.

 

கே.கே. நகர் உள்ளே தரங்கிணி நகர். கருப்பு வட்டத்தில் வெள்ளை மசியில் ஆறு என்ற இலக்கம் இட்டிருக்க, வாசலில் அகண்ட கேட் கைவிரித்து இருந்தது.

 

கார் ஷெட்டை விஸ்தீனம் செய்து இருந்தார்கள். உள்ளே காருக்கு போட்டியாய் ஸ்கூட்டியும், பல்சரும் நின்றது. ஒரு பக்கம் நிழல் மரங்கள் ஒதுங்கி நிற்க, போன் சாய்கள் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியது.

 

ஹாலில் கிடந்த ஷோபாவில் கால்நீட்டி கைகளை தலைக்குத் தந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான் நந்தா. உள்ளே மிருதுளாவும், பிள்ளைகளும் பெரும் ஆர்பாட்டத்தில் இருந்தார்கள், விடிந்து விட்டதிற்கு அடையாளமாய்.

 

" எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் இருக்கு. மெட்டீரியல் வாங்கணும். கே.ஆர் மால் போகணும்." தபு முகத்தை டிஷ்யூவால் ஒற்றியபடியே சொன்னாள். 

 

" உங்கப்பாக்கு இன்னைக்கு ஆஃப் தான். படுத்துதான் இருக்காரு. எழுப்பிட்டு போ." மிருதுளா  இட்லியை லாவகமாய்  அவி தட்டில் இருந்து பிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

" அப்பா வேண்டாம் மா. நீ வா…"

 

"எனக்கு இன்னைக்கு ட்யூட்டி இருக்கு. அவருக்கென்ன சும்மாதானே இருக்காரு கூட்டிட்டு போ." கையும், வாயும் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, பின்னால் வந்து நின்ற சாதுர்யன் நெகு நெகுவென வளர்ந்து பதின்ம வயது நந்தாவை உரித்து உள்ளடக்கி இருந்தான்.

 

" இப்போ எதுக்கு இவ அடி போடறானு தெரியலயா மம்மி, கார் சாவி வேணும். மேடம் தனியா ஆவர்தனம் செய்துக்குவாங்க." என்ற தம்பியை திரும்பி முறைத்து விட்டு, அம்மாவிடமே பார்வையை மீட்டாள்.

 

" அப்பா அநியாயத்துக்கு இளமையா இருக்காருமா. அவர் உன் அண்ணவானு கேட்டு எல்லாரும் கண்ணு வைக்கிறாங்க. மத்தவங்க கண்ணை விட்டு அப்பாவை காப்பாத்தறதே பெரிய வேலையா இருக்கு." மகள் சிணுங்க, மிருதுளாவின் முகத்தில் பூரிப்பு ததும்பினாலும் காட்டிக் கொள்ள நாணமுற்றோ, பின் ஏனோ தன் வேலையில் மும்முரமாக்கி கொண்டு திரும்பி நிற்க,

 

" அதுசரி, ஏற்கனவே ரெண்டு இப்போ மூணாவது வேறயாக்கும்." நகைச்சுவையாய் எண்ணி சாதுர்யன் சொன்ன வார்த்தைகள்  எதற்கோ உள்ளே வந்த நந்தாவின் காதுகளை மிகச்சரியாக சென்று சேர, அப்படியே நின்று விட்டான்.

 

மிருதுளா கூட இந்த இதமற்ற வார்த்தைகளை எதிர்பார்த்து இருக்கவில்லை, அதிலும் அந்த சமயத்தில் மிகச் சரியாய் நந்தாவையும் அங்கே எதிர்பார்த்து இருக்க வில்லை.

 

"துர்யன்…" மிருதுளாவின் குரல் ஒங்கி ஒலிக்க, அந்த அதட்டலில் பதட்டம் கொண்டு திரும்பி பார்த்தவன்  முகத்தில் ஈயாடவில்லை.

 

" சாரி பா." என்றான் தலை கவிழ்ந்து. நந்தா எதுவுமே பேசவில்லை. மூவரையும் நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை வெறித்துக் கொண்டே சில வினாடிகள் நின்றவன், எதுவும் பேசாமல் திரும்ப சென்று விட்டான்.

 

குமைந்து போனாள் மிருதுளா. கோபம் முழுக்க மகன் முகத்தில் திரும்ப, அவளின் மனதை படித்தவனாய், எப்போதோ சிட்டாய் மறைந்து இருந்தான் துர்யன்.

 

ஆனாலும் வலித்தது. நந்தாவின் மெளனமும், அமைதியும் அதன் பின் இருந்த வேதனையும் அவள் இதயத்தை என்னவே செய்தது. இந்த நொடியே அவன் முகம் பார்த்து, அதை தன் மார்பில் பொதித்து தலை கோதி விட உயிர் துடித்தது.

 

மகளை அனுப்பிவிட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். நந்தா பால்கனியில் தலைகீழாய் தொங்கிய பூச்செடிக்கு நீரை ஸ்ப்ரே செய்து கொண்டு இருந்தான். முகத்தில் இறுக்கமில்லை, ஆனால் மிதமிஞ்சிய வருத்தமிருந்தது.

 

‘’நந்தா… இந்தாங்க.’’ நீட்டிய பாட்டிலை வாங்கி நீரை தொண்டையில் சரித்துக் கொண்டான் மறுவார்த்தை பேசாமல்.

 

‘’ அவன் சின்னப் பையன். விளையாட்டா ஏதோ சொல்லிட்டான்.’’

 

‘’நான் எதுவும் சொல்லல மிருதுளா. என் வாழ்க்கையும், தனிப்பட்ட உணர்வும் மற்றவர்களுக்கு விளையாட்டு தானே..? நீ பேங்க்குக்கு கிளம்பிட்டியா..? நான் டிராப் பண்ணிட்டு வந்திடறேன்.’’ இத்தனை பாரமாய் வார்த்தைகளை வீச முடியுமா..? கேட்பவர்களின் இதயத்தை வலிக்க வலிக்க நார் உரிக்க..?

 

‘’நான் கேப் புக் பண்ணிக்கிறேன் நந்தா..! நீங்க ஆஃப்ல இருக்கீங்க. எதுக்கு சிரமப்படறீங்க..?’’ 

 

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான். மெல்ல மனைவியை திரும்பிப் பார்த்துச் சொன்னான்,

 

‘’ நான் ஆஃப்ல இருக்கிறது வேலைக்கு தான். கடமைக்கு இல்லை. அஞ்சு நிமிசத்துல வந்துடறேன்.’’

 

போய்விட்டான். ஏனோ இப்போதெல்லாம் அவனின் அதீத மெளனம் கூட வலிக்க வலிக்க உயிரை துளைக்கிறது. இருபது வருடங்களாய் அவனுக்குள் அனல் மூட்டிக் கொண்டிருக்கும் வானதி என்ற நெருப்பு, அவளை உணர்வுகளால் தழுவி தழுவி தன்னைத் தானே உயிர்பிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவனின் தனிமை ஏனோ இப்போதெல்லாம் வெகுவாய் மிருதுளாவை உரசுகிறது.

 

 இல்லாமல் போயே அவர்கள் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டு இருக்கிறாள். அவள் பாய்ச்சி விட்டுப் போன நங்கூரத்தின் வீரியத்தில் இருந்து மொத்த குடும்பமும் துளிகூட நகர முடியாமல் கட்டுண்டு கிடக்கிறது.

 

அவள் திரும்பி வரவே இல்லை இதுவரைக்கும். ஆனால் அவள் நினைவும், தொடர்பும் இந்த வீட்டில் அத்தனை பேரிடமும் இருந்தது. விக்கியின் திருமணம், வீணாவின் திருமணம், அவர்கள் குழந்தைகள் என்று அத்தனை நிகழ்விலும் எங்கிருந்தோ அவள் தன்னை புகுத்திக் கொண்டுதான் இருந்தாள்.

 

   தவறாமல் பரிசுகள் வந்தது. இந்த கலர் நல்லாயில்ல, இந்த ஆரம் செட் ஆகல உனக்கு, கல்கத்தாவில் இருந்து ஜர்தோசி ஓர்க் பண்ணினது வாங்கி அனுப்பறேன். தபுமா’வுக்கு ‘ அத்தைக்கு ஷால் அனுப்பி இருக்கேன்..’ இப்படி அவளிடம் இருந்து அக்கறையும் அன்பும் வந்துகொண்டே இருக்கும்.

 

இங்கிருந்தும் அன்பும், நம்பிக்கையும், அக்கறையும், பரிசுகளும் சந்தியாவின் மூலமாய் சென்று கொண்டே இருக்கும். அதை வானதி மறுத்ததே இல்லை. ஆனால் உரிமைகளை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தாள். நந்தாவை உணர்வுகளால் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். இந்த நிமிசம் வரைக்கும் அவளின் குரலை மீறுகின்ற சக்தி அவனுக்கு இல்லவே இல்லை.

 

தபு’விற்கு வானதியிடம் இருந்த பிடிப்பும், நன்மதிப்பும் சாதுர்யனுக்கு இல்லை. அவள் அருகாமையை அனுபவிக்காததால் இருக்கும் என்றாலும், வீடியோ காலில் வரும்போது, ஹாய் சித்தி’ என்று அவன் சொல்லும் போது வானதிக்கு வலிக்கும்.

 

தபஸ்வியும், விக்னேஷின் பிள்ளைகளும் நதிமா' என்று உணர்வு பொங்க அழைக்கும் போது, இவன் மட்டும் சித்தி’ என்று அவள் மாற்றாந்தாய் என்பதை மறைமுகமாய் சுட்டிக் கொண்டே இருப்பான்.

 

‘’வானதி, எப்படி என்னை வந்து பார்க்கப் போறே..? என் காலம் முடியறதுக்குள்ளே, உன்னை கண்ணால காணுகிற பாக்கியத்தை தர மாட்டியா..? என் பேத்தியை பார்க்காமயே போயிடுவேனா..?’’ கல்பனாவின் கண்ணீரும் வானதியை இதுவரைக்கும் கரைத்ததில்லை. ஏனோ தன்னை கட்டுபடுத்தி வைத்திருந்தாள். அது புரியாதது போல் இருந்தது, புரிந்தது போலவும் இருந்தது.

 

குளித்து முடித்துவிட்டு டிராக் பேண்டும், டீ ஷர்ட்டுமாய் கீழே இறங்கி வந்தான். மிருதுளா தயாராகிக் கொண்டு இருந்தாள். அவள் திரும்பி வந்தபிறகு, அவள் இருப்பை உறுதி செய்து, மீண்டும் அத்தனை சான்றுகளையும் சமர்பித்து, இழந்த வேலையை வாங்குவதிற்குள் மூன்று வருடங்கள் கடந்து போய் இருந்தது.

 

 மிருதுளா மீண்டும் பணிக்கு செல்ல பிரியப்பட்ட போது நந்தா தடையேதும் சொல்லவில்லை. இதோ இன்று அதே நாட்டுடமையாக்கப் பட்ட வங்கியில் ஒரு கிளையின் மேலதிகாரியாக நந்தா இருக்க, மற்ற கிளைகளில் சந்தியாவும், மிருதுளாவும் பணியில் இருந்தார்கள்.

 

காலம் நிறைய வளமையை காட்டி இருந்தது. அப்பாவின் காலத்திற்கு பிறகு காலுன்ற தவித்த குடும்பம் இன்று அழகாய் கிளை பரப்பி கோலோச்சிக் கொண்டு இருந்தது. விக்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காதல் திருமணம், திருவான்மியூரில் சொந்த வீடு என்று எந்தக் குறையும் இல்லாமல் இருந்தான். 

 

படிப்பை முடித்த வீணா, நெட் தேர்வில் மூன்றாவது அட்டம்ட்டில் தேர்வாகி, அரசு கல்லூரியில் பேராசிரியையாக, அதற்கு தகுந்த வாழ்க்கையும் அமைய, அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் நிறைவும் நிம்மதியுமாகவே சுழலத் தொடங்கி இருந்தார்கள்.

 

ஆனால், நந்தா மட்டுமே எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவனாக இருந்தான். புன்னகையும், சந்தோசமும், நிறைவும், கடமையும், அவனை அழுத்தி அழுத்தி குடும்ப சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க வைத்தாலும், அவன் மனம் மட்டும் அந்த ரயிலடியிலேயே தேங்கி கிடந்தது.

 

அவளிடம் பேசினான், அவளை வீடியோ காலில் பார்த்துக் கொண்டும் தான் இருந்தான். கட்டளை இட்டான், கட்டுப்பட்டான். அவள் கண்ணீரையும் ஆனந்தத்தையும் பகிர்ந்து கொள்ள இவனைத் தேடித்தான் ஒலிக்கற்றையில் ஓடி வந்தாள். ஆனாலும் ஏனோ மனம் தள்ளாடியது.

 

ஸ்பரிசத்துக்கு இருவருமே அடிமைகள் இல்லை. அறைக்குள்ளேயே அவர்கள் அந்தரங்கங்களை தேடியதும் இல்லை. ஆனால் அவளின் உணர்வு  பிரவாகத்தை அவன் மட்டுமே முழுக்க உணர்ந்திருக்கிறான்.

 

 இயல்பான நாளில் எல்லாமுமாய் இருப்பது என்பது வேறு. இக்கட்டான அந்த நாள்களில், அவள் இந்த குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்திருக்கிறாள்..! இன்னுமே இல்லாமலும் இங்கே இணைந்தே இருக்கிறாள்.

      

  அந்த நாளில் அவள் காட்டிய பாசமும், ஸ்பரிசமும், அக்கறையும், அன்பும் கிணற்று படிகளில் படிந்த பாசியாய் அவனுள் பிரிக்க முடியாமல் அப்பிக் கொண்டது. எல்லோர்க்கும் யாரோ இருந்தார்கள். அவளுக்கு தான் மட்டும் தானே,' என்ற நினைப்பே அவனை குற்றவுணர்வில் கொதிக்க வைத்தது.

 

 உணர்வுகள் உரசி, உரசி, தீ வைக்கும் பொழுதுகளில் தன்னை மறக்க அவன் நாடியது ரயிலடியை… அவள் நிழல் இறுதியாய் அவனிடம் இருந்து பிரிந்து போன இடத்தில் வந்து மணிக்கணக்காய் அமர்ந்து கொள்வான். கரைக்க, கரைக்க, கரைந்து போகாத நினைவுகளை, கல்லைப் போல மென்று தின்றபடி அமர்ந்து இருப்பான். 

 

அந்த நிமிசம், அவள் அருகாமையும், ஸ்பரிசமும், கண்ணீரும், மென் பட்டில் பொதிந்த பக்த மீரா சிலையும், தரையில் கிடக்கும் நிழலும், ஆழ்ந்த மூச்சும், அவளின் அருகிருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும். மகளை மனசு நாடும். அம்மாவின் வார்த்தைக்கு கட்டுபட்டு மட்டுமே, தன்னிடம் பாராமுகமாய் பேசும் யாழியை மனசு நாடிக் கொண்டே இருக்கும்.

 

நினைவுகளை வெளித்தள்ள இயலாமல் தவிக்கும் துளையற்ற, இருதலைக் கொள்ளி எறும்பாய் தன்னை உணர்வான். அடிக்கடி வந்து அடித்து அடித்து நொறுக்கும் சில வார்த்தைகளும் இப்படித்தான் மெல்ல முடியாத சவ்வு போல், அவனை வெதும்ப வைத்துக் கொண்டே இருக்கும்.

 

  ‘’ நந்தா’’ கண்களை மூடி தலைக்கு கையை அணைகட்டி அமர்ந்து இருந்தவன், நினைவுகளை நிறுத்திவிட்டு நிஜத்துக்கு வந்திருந்தான்.

 

‘’ கிளம்பலாம் மிருது’’ கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். 

 

மிருதுளாவை அண்ணா நகர் கிளையில் இறக்கி விட்டுவிட்டு, சாந்தோம் வந்து பேங்கை விட்டு தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு, சந்தியாவிற்கு அழைத்திருந்தான்.

 

‘’ என்ன நந்தா பீக் ஹவர்ல கூப்பிடறே..? அவசரமா.? ‘’

 

‘’ இல்ல சந்தியா. ஃப்ரீயா இருந்தா பர்மிசன் போட்டுட்டு வாயேன். கொஞ்சம் காபி ஷாப் வரைக்கும்.’’

 

‘’காலையில பதினொரு மணிக்கே, ஃப்ரீயா உட்கார்ந்து ஈ ஓட்டிட்டு இருக்க, இது திருவான்மியூர் ப்ரான்ச் இல்லே. அங்கே மேனேஜரா இருக்கிறது அசமஞ்சம் நந்தகோபாலன். இது சாந்தோம் ப்ரான்ச். இங்கே அசிஸ்டெண்ட் மேனேஜர் சந்தியா சிவராமனாக்கும்.’’

 

‘’ரொம்ப பீத்தாதடி தங்கமே. லோன் டிபார்ட்மெண்ட் ஹெட்டா இருந்தப்போ, நீ வாரி வாரி அனாமத்தா தந்த கடனெல்லாம் வசூலிக்க முடியாம நிலுவையில இருக்குன்னு தானே உன்னை, டீ ப்ரோமோசன் பண்ணி ப்ரான்ச் மாத்தினது, முன்னால் மேனேஜரே..!’’ அவன் சிரிக்காமல் சொன்னபோது சந்தியாவின் முகத்தில் அசடு வழிந்தது.

 

‘’போதும். உன்னை நான் கேவலமா பேசறதும், என்னை நீ கேவலமா பேசறதும் புதுசா என்ன..?  நீதான் உள்ளே வாயேன். ஏன் தயங்கி தயங்கி வெளியே நிக்கிறே..?’’

 

‘’ப்ச்..! வேண்டாம் சந்தியா. நான் கேசுவல்'ல இருக்கேன். மிருதுவை டிராப் பண்ண வந்தேன். உள்ளே வந்தா தேவையிலாத மரியாதைகள் கிடைக்கும். அதையெல்லாம் ரசிக்கிற மனநிலையில் இல்லை நான். எனக்கு கொஞ்சம் உன்கூட பேசணும்.’’ அவன் இணைப்பைத் துண்டித்து விட்டு காத்திருந்த நிமிசம், பேங்க் கதவை திறந்துகொண்டு சந்தியா வருவது தெரிந்தது.

 

காரை பூட்டிக் கொண்டு இறங்கியவன் கூலரை பொருத்திக் கொண்டு இங்கிருந்து கையசைத்து காபி ஷாப்பிற்கு அவளை வரச் சொல்லி சைகை செய்துவிட்டு முன்னே சாலையை கடந்தான்.

 

அருகில் வந்ததும் எப்போதும் போல் கள்ளமில்லாமல் சிரித்தாள். 

 

‘’ சொல்லுங்க பாஸ், என்ன விசயம்..?’’ நாகரீக நாற்காலியை நந்தாவுக்கு எதிரில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிறைய மாறி இருந்தாள் தோற்றத்தில். பாப் கட் கூட அவள் முகத்திற்கு வெகுவாய் பொருந்தி இருந்தது.

 

  ‘’ ஸ்பெசலா எதுவும் இல்ல.’’

 

‘’ அட கிறுக்கு பயலே. அப்புறம் எதுக்கு பெர்மிசன் போட்டுட்டு வரச் சொன்னே..?’’

 

 ‘’ சொல்லத் தெரியல. மனசு ஏனோ பாரமா இருக்கு.’’ 

 

  அவன்  முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அமைதியாக. ஒரு தவிப்பின் மிச்சத்தை மெல்ல முடியாமல் மிடறு கூட்டிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.

 

‘’சரி சொல்லு, இப்போ எதுக்கு லீவு போட்டு இருக்கீங்க சார்..? ஏதாவது முக்கிய வேலையா நந்தா..? எனக்கு தெரியாதது, என்ன அது..?’’

 

 ‘’ வேலையெல்லாம் இல்ல சந்தியா. லாஸ்ட் வீக் கொஞ்சம் ஹெல்த் இஷ்யூவா இருந்தது. ஒர்க் லோடினால் இருக்குமானு எனக்கே சின்ன குழப்பம். அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன்.’’ 

 

 பலுடாவை ஸ்பூனால் கலக்கிக் கொண்டு இருந்தவள், துணுக்குற்று போய் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் பயம் கவ்வியது.

 

‘’நந்தா…’’ எதிரில் அமர்ந்திருந்தவனின் வலக்கையை பற்றினாள். அதில் மெல்லிய நடுக்கம் தெரிய, வியந்துபோய் நிமிர்ந்து பார்த்தான்.

 

‘’அட.! எதுக்கு இத்தனை பதட்டம்..? கூல்டா. ‘’

 

‘’இல்ல நந்தா. உனக்கும் எனக்குமான பந்தம் விசித்திரமானது. நீ மட்டுமில்லே எனக்கு உயிர் நட்பு, உன் வாழ்க்கையில இருக்கிற இரண்டு பெண்களுமே எனக்கு உயிர். உங்கள்ல யாருக்கு எது நடந்தாலும், எனக்கு அது என் உயிரை உருகிட்டு போன வலியை கொடுக்கும்.

    

  சரி சொல்லு, என்ன பண்ணுது உடம்புக்கு..? மிருதுவுக்குத் தெரியுமா..? அம்மாக்கு..? வானதிக்கு விசயம் தெரியுமா..?’’

  

‘’அப்படியே அப்போலாவில அட்மிசனும் வாங்கிட்டு, பரேல் கிரவுண்டுல இடம் புக் பண்ணிட்டு, ஐஸ் பாக்சுக்கும் சொல்லிடு.’’

 

‘’டேய்..! அடங்க மாட்டே என்கிட்டே. இரு உன் இரண்டு பொண்டாட்டிகளுக்குக்கும் தகவலைச் சொல்றேன்.’’ போனை கையில் எடுத்தவளை அயர்ச்சியாக பார்த்தான்.

 

’’பேச சந்தர்ப்பம் தரவே மாட்டியா சந்தியா..?’’

 

  ‘’ சரி சொல்லு.’’

 

 ‘’ சொல்லத் தெரியல மனநிலையை. உணர்வுகளை சமாதானம் செய்ற மாதிரி, மனசாட்சியை சமாதானம் செய்ய முடியல. வானதியை பார்க்கணும், யாழியை கட்டிபிடிச்சு முத்தம் தரணும். இரண்டு பேர் கையையும் பிடிச்சிட்டு இந்த ஊரையே சுத்தி வரணும். இந்த ஏக்கம் கவலையா மாறி, பயமா என்னை ஆட்கொள்ள ஆரம்பிச்சிடுச்சு. நான் உண்மையாவே தவிப்பில இருக்கேன் சந்தியா. இதை உன் பிடிவாதக்கார ப்ரெண்ட் எப்போ உணர்வா..?

 

 இந்தக் கவலைதான் என்னை அரிச்சு, அரிச்சு, வியாதிக்காரன் ஆக்கிடுமோனு பயமா இருக்கு.’’

 

‘’போதும் நந்தா. கிழவன் மாதிரி பில்டப் பண்ணாதே.’’ என்றவளை குசும்பாய் பார்த்தபடி நாடியை நீவிக் கொண்டான்.

 

‘’அப்போ நான் கிழவன் இல்லையா சந்தியா..? ‘’

 

முகத்தை அஷ்ட கோணலாக்கி திருப்பிக் கொண்டவளை பார்க்க, சிரிப்பாய் வந்தது. ஆனாலும் கைகளைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

 ‘’உடம்புக்கு என்ன நந்தா..?’’

 

 ‘’லைட்டா ஹார்ட் பெயினா இருந்தது.கேஸ்டிக் ப்ராபளமா இருக்கும்னு மருந்து எடுத்து இருக்கேன். என் பயம் அது இல்லை. எனக்கு வானுவை பார்க்கணும்.’’ குழந்தை போல் சொன்னவனின் முகத்தைப் பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது.

 

நடுவில் புகுந்து வானதி கெடுத்திருக்கா விட்டால், இன்று யாழி தன் தந்தையின் அணைப்பில் இருந்திருப்பாள். அத்தனையும் ஒற்றை மயக்கத்தில் நிறுத்தி விட்டாள் என்றபோதும், உடல் உபாதையில் கூட ஒருசேர இருக்கும் இருவரின் ஒற்றுமையை மனதிற்குள் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

 

‘’ நான் என்ன நந்தா செய்யட்டும்..? அவ பிடி கொடுக்க மாட்டேங்கிறாளே. அவ மனசு முழுக்க, எந்த நிலையிலும் மிருதுளாவுக்கு போட்டியா தான் வந்துட்டதா சிந்தனை கூட வந்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் தான் இருக்கு. 

        

அந்த முட்டாள் தன்னையும் யோசிக்கல, உன்னையும் யோசிக்கல, ஏன் என்னையும் யோசிக்கல. இப்போ உனக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா, பதறுவா, தன்னைத் தானே வருத்திக்குவா. ஆனால் அவள் சிந்தனையில் உன்னை வந்து சேரணும்கிற நிதர்சனம் உரைக்கவே உரைக்காது. செக்கு மாடு வட்டத்துக்குள்ள பழகின மாதிரி, அவள் எண்ணம் முழுக்க நீ மட்டும் தான்..! ஆனால் உன்னை அடைகிற வழி இருந்தும் அதை செயல்படுத்த அவளுக்கு உணர்வும் இல்லை.’’

 

இருவருக்கும் இடையே ஒரு கெட்டியான மெளனம் அப்பிக் கிடந்தது. எதிரில் இருந்த காப்பி நீர்த்து ஆறிப் போயிருக்க, ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொன்றுக்கு ஆர்டர் செய்தான்,

  

‘’ உனக்கு நேரமாகுது. நீ கிளம்பு சந்தியா. ஏதோ மனசுல இனம் புரியாத தவிப்பு. அதுக்கு முகம் தரத் தெரியல எனக்கு. உன்னைத் தேடி அதனால தான் வந்தேன். பார்ப்போம்.’’ எழுந்து கொண்டான்.

 

கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் அவனின் உள்ளத்துக்கு தளர்ச்சி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. எதையோ சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். ஒரு நேர்மையான ஆணின் பரிதவிப்பு ஆயிரம் ஆழிகளை விட ஆர்பரிப்பானது. உள்ளடக்கி, உள்ளடக்கி, தன் உணர்ச்சிகளுக்கு உயிரையே விலையாக தந்து கொண்டு இருக்கிறான், என்று புரிந்தபோது இயல்பாக அவன்மீது இரக்கம் சுரந்தது. 

 

அவன் மறுபாதியிடம் பேச வேண்டும். எண்ணிக் கொண்டு அவளும் எழுந்து கொள்ள, சாலையைக் கடத்தி பத்திரமாய் பேங்கிற்குள் அனுப்பி வைத்து விட்டேதான் தன் காருக்குச் சென்றான்.

 

நேற்று முழுக்க அழைத்தும் யாழி இணைப்பில் வரவே இல்லை. இன்றும் அழைத்தான்… இதயம் தான் வலித்தான்.

"...காயமொன்று நீ கொடுத்தாய

காய்ந்த வடு நீங்கவில்லை

காய்ந்த வடு ஆறுதற்கோ

கைதவழும் சேய் கொடுத்தாய் 

உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்

என் கதையை நீ எழுதி, ஏடுகளை மறைத்து விட்டாய்

கனவுகளே கனவுகளே

  • காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போக மாட்டீரோ

நிம்மதியை தாரீரோ…"

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                    4 

கொல்கத்தா. லாலா லஜ்பதிராய் சாலை. 'குங்கட் கே பீச்சே…’ ஹிந்தி பாடலில் இருந்த மசாலாவை விட, சபகெட்டியில் அதிகமாய் இருந்தது போல், எலெக்ட்ரிக் லாந்தார்கள் ஏற்றிய  தள்ளு வண்டி முழுக்க நிறைந்து இருந்தது தெருக்கள் முழுக்க.

 

    குறுகிய தெருக்கள் முழுக்க தின்பண்டக் கடைகளாய் சொப்பி வழிய, அங்கிருந்த ஏதோ ஒரு கடையில், அம்ரித்துடன் நின்று சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தாள் யாழி.

 

 ‘’ சொல்லு, யாழினி. எப்படி இருக்கு இந்த மசாலா முர்கி…’’ கோழி காலை கவ்வி இழுத்துக் கொண்டு அம்ரித் கேட்டபோது , ஆள்காட்டி விரலை சப்பிக் கொண்டு இருந்தாள் யாழி.

 

‘’நல்லாத்தான் இருக்கு. ஆனால் பகதூர் ஸ்டீட் முர்கி மாதிரி இல்லடி. அங்கே ஒரு மசாலா போடுவான் தெரியுமா..? அச்சோ  அள்ளும்.’’ வங்கம் தண்ணி பட்டபாடாய் அவளுக்கு வந்தது. கரு தரித்தது முதல், அத்தனையும் அவளுக்கு இங்கேதான். வானதியிடம் பேசுவதைத் தவிர வேறு யாரிடமும் தமிழ் தேவைப்படுவதில்லை என்றாலும், வானதி தமிழில் தான் பேசியாக வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து இருந்தாள்.

 

 ‘’  இன்னொரு நாள் அங்கே போகலாம். நமக்கு பிராக்டிகல் இருக்கிற நாள் கட் அடிச்சிட்டு.’’

 

‘’பானார்ஜி கடை இருக்கானு விசாரிச்சிட்டு போகணும், அதுவும் அந்த மசாலா தூத்… உப்..! அப்பா..!’’ நாக்கை சுழற்றி சுவை காட்டிய போது, அந்த அழகு பார்க்க போதையாக இருந்தது.

 

ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், லெகின்ஸும். தூக்கி போட்ட குதிரைவாலும், ரசகுல்லா கன்னமும், அளவான நிறமுமாய் கண்களை கசக்கி பிழிந்து கவன ஈர்ப்பு செய்து கொண்டு இருந்தாள்.

 

கன்னத்தில் அடக்கிய கறித்துண்டு, அவள் கன்னக் கதுப்புகளை தின்ன அழைப்பு விடுப்பது போல இருந்தது. வானதிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். சுதந்திரத்தோடு சேர்த்து இலவச இணைப்பாய்  சொல்லி மாளமுடியாத அளவிற்கு கட்டுபாடுகளையும் வாரி இரைத்துக் கொண்டே தான் சுற்றுவாள்.

 

மேகம் திரளத் தொடங்கி இருந்தது. காற்று ஊடாடி ஊடாடி மேக கர்பத்தை கலைக்க ஆரம்பித்து இருக்க, ஒருமணிநேரம் ஊரையே குளிர் பெட்டியில் வைத்து பதப்படுத்தி எடுத்ததுபோல், சில்’லென்று இருக்க, கைகளை உரசி கழுத்தில் வைத்துக் கொண்டாள்.

 

  ‘’ இன்னொரு ப்ளேட் முர்கி சொல்லவா..?’’ அம்ரித் கேட்டாள்.

   

‘’ வேண்டாம். எனக்கு தஹி வடா சொல்லு டி அதுக்கு மேல கொஞ்சமாய் சில்லி ப்ளாக்ஸ் தூவி. ‘’

 

சொல்லிவிட்டு மெல்ல வானத்தை அண்ணாந்து பார்க்க, அவசரமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த மேகங்கள் அவளை ஆனந்தப்படுத்த ஆரம்பித்தது. மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கி நின்றாள். அலைபேசி சிணுங்க எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் சின்ன சலிப்பு மிகுந்தது.

 

நந்தா..! மூன்று நாட்களாய் அழைத்துக் கொண்டே இருக்கிறான். அழைத்து அழைத்து மனம் வெறுத்து போய் வானதியிடம் புகாரும் சென்று இருக்கிறது.

 

 காலையில் கிளம்பும் போதே அம்மாவிடம் இருந்து நந்தா அழைத்தால் பேச வேண்டும்' என்ற கண்டிப்பும் வந்திருந்தது. பெரிதாய் நந்தாவின் மீது பாசமும் அன்பும் இல்லைதான். எட்ட எட்ட விலகினாலும், வந்து ஒட்டி ஒட்டி அன்பு செய்யும் அந்த பாசத்தின் மீது ஒரு இனம் தெரியாத பிடிப்பு இருந்தது. தசையாடும் இயற்கையின் தீர்ப்பு.

 

கோபம் முட்டிக்கொண்டு வந்தாலும், தகப்பனின் முகத்தை பார்க்கும் போது அது ஒத்திப் போய்க்கொண்டே தான் இருக்கிறது, என்பதுதான் நிஜத்திலும் நிஜம்.

 

முதல் அழைப்பு முற்றுப்பெற்ற சில வினாடிகளிலேயே அடுத்த அழைப்பு வர, லேசாய் முகம் சுளித்தபடி எடுத்தாள். எப்போதும் வீடியோ காலில் தான் வருவான். இப்போதும் அப்படியே.

 

 சட்டென்று தொடு திரை விலகி, முழு மதியாய் தன்முன்னே நின்ற மகளின் தோற்றம் நந்தாவை என்னவோ செய்தது. 

 

  ‘’ பாப்பா..!’’ என்றான் பரவசமாய்.அந்த கண்ணின் பளபளப்பு, அடிவயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்ய, எடுக்கும் போது இருந்த இறுக்கமும் அழுத்தமும் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்க, இமைக்காமல் நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

’’என் பேரு பாப்பா இல்ல..! யாழி… யாழினி.’’ அந்த செப்பு உதடுகளின் அசைவை பார்த்துக் கொண்டே இருந்தான். பார்க்காமல் தன்னைப் பார்க்கும் அந்த கண்களில் நர்த்தனமாடிய ஒரு மயக்கும் அசைவும், அந்த தகப்பனை அங்கமெல்லாம் குளிர வைத்தது.

 

‘’கோபமா என்ன பாப்பாவுக்கு..? நான் கால் பண்ணிட்டே இருந்தேன்,எடுக்கவே இல்லையே…’’

   

  பதிலில்லை. உதட்டு சுளிப்பு மட்டும் தான். பார்வை எங்கோ பதிந்து கொண்டது. மகளின் அத்தனை அசைவும் நந்தாவை மெய் மறக்க வைத்தது. கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

கடைத் தெருவின் இரைச்சலும், லஜ்பதிராய் தெருவின் நெருக்கமும் திரையைத் தீண்டி தீண்டி நகர்ந்தது. மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஆறுக்கு இன்னும் ஐந்து நிமிடம் பாக்கி இருக்கிறது என்று சொல்ல, லேசான கவலையோடு மகள் முகத்தைப் பார்த்தான்.

 

‘’யாழி, எங்கே இருக்கே இப்போ..? அங்கே மழை வருதா..? ஸ்கிரின்ல தெரியுதே.’’

 

‘’ம்ம்..! க்ளைமேட் ரெம்ப ஜாலியா இருக்கு. காலையில இருந்து பயங்கர வெயில். இப்போ சில் சில் கூல் கூல்…’’ அண்ணாந்து பார்த்து கைகளை மடக்கி சைகை செய்தாள்.

 

‘’எங்கே இருக்கே இப்போ..? ‘’

 

‘’ லாலா லஜபதிராய் ஸ்டீட்ல. இங்கே மசாலா முர்கி ரொம்ப நல்லா இருக்கும். முர்கி, முர்கி.! அப்படின்னா உங்களுக்கு என்னன்னு தெரியுமா..?’’ தூக்கி போட்ட குதிரைவாலில் மிச்சமிருந்த முடி அனைத்தும் நெற்றியில் கொட்டி பூத்திருக்க அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க மனசு தவியாய் தவித்தது.

 

‘’அதென்னமா முர்கி..! எனக்குத் தெரியாதே.’’என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

 

‘’கோழி. இளம் கோழியை நல்லா மசாலா தடவி, கான் ப்ளாக்ஸ்ல புரட்டி, தவால போட்டு நிறைய எண்ணெய் விட்டு மொறு மொறுனு பொரிச்சு, சில்லி சாஸ் வச்சு தருவாங்க. அவ்வளவே நல்லா இருக்கும்.’’ கண்களை மூடி லயித்துச் சொன்னவளை அவள் அறியாமலே நூறு ஸ்டில் எடுத்து முடித்து இருந்தான். ஒவ்வொரு அசைவும் அவனுள் விரைவி விரைவி என்னவோ செய்து கொண்டு இருந்தது.

 

‘’இது உடம்புக்கு நல்லதா..? அம்மாக்கு நீ இப்படி சாப்பிடறது தெரியுமா..?’’

   

உதட்டை சுளித்துக் கொண்டாள். 

 

‘’தெரியாது. நீங்க அம்மாகிட்ட சொல்லக் கூடாது. ‘’ கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள். 

 

‘’ஏன் சொல்லக் கூடாது..?இது ஹெல்தியே கிடையாது இல்ல. அது என் பாப்பா உடம்புக்கு கெடுதல் தானே..?’’

 

‘’ரெகுர்லாம் இல்ல, எப்பயாச்சும் தான்.’’ குரலை உள்ளிழுத்து சொன்னாள். வானதியிடம் நிறைய பயமிருப்பது தெரிந்தது. அந்த கண்டிப்பு லேசான ஆச்சர்யத்தை தந்தது. 

 

‘’ஏன் சொல்லக் கூடாதுனு கேட்டேன்.’’ என்றான் இன்னும் அழுத்தமாக

 

‘’ஏன்னா நீங்க…’’ நிறுத்திவிட்டாள். சொல்ல மாட்டாளா' என்று நந்தாவும், சொல்லி விடப் போகிறோம்' என்று யாழியும் சேர்ந்தே தவித்தார்கள்.

 

‘’சொல்லுடா…’’ என்றான் குரல் இடற. நிமிர்ந்து பார்த்தாள். வெறுப்பும் இல்லாத விருப்பும் இல்லாத தகப்பன். அம்மாவின் தனிமைக்கு சொந்தகாரன் என்ற வகையில் அவன் மீது அளப்பறிய கோபம் இருக்கிறது தான். ஆனால், அந்த உறவுக்காக தான் எத்தனை ஏங்குகிறோம் என்றும் அவள் மட்டும் தானே அறிந்தவள்.

 

‘’சொல்லேன் பாப்பா…’’ என்றான் ஏக்கத்தின் மூர்க்கத்தில்.

 

உதடு சுளித்து அதிருப்தி பட்டுக் கொண்டாள். அவளின் எந்த அலட்சியமும் நந்தாவை எதுவுமே செய்யவில்லை. இல்லாமையை விட எதுவாகவோ இருப்பது அத்தனை ஏகாந்தமாய் இருந்தது. மகளின் புறக்கணிப்பை விட, வெறுப்பு தித்திப்பாக இனித்தது.

 

’’எதுக்கு கால் பண்ணினீங்க..? நான் வீட்டுக்கு போகணும்.’’ என்றாள் முணுமுணுப்பாய்.

 

 ‘’எப்படி போவே..? வண்டி ஓட்டறியா..? கல்கத்தா ரெம்ப ஜனநெருக்கமான சிட்டியாச்சே..? பத்திரமா ஓட்டணும் இல்ல.’’

 

‘’நீங்க எதுக்கு அதைப்பத்தி சொல்றீங்க..? ஒருமுறை கூட கல்கத்தா வந்ததில்லை தானே..? நான் வண்டியெல்லாம் ஓட்ட மாட்டேன். அம்மாக்கு பிடிக்காது.’’ 

 

 ‘ என்னைப் பார்க்க வந்தாயா..?’ என்று கேட்காமல் கேட்கிறாள். நெகிழ்ந்து போய் நின்றான். வானதியின் மீது பொங்கி வந்த கோபத்தை அமைதியாக கட்டுப்படுத்திக் கொண்டான். அவளின் உருவமில்லாத பயத்துக்கு விலையில்லாத எத்தனை பேரின் உணர்வுகளை காவாக தந்து இருக்கிறாள்.

 

‘’ சரி, அப்போ கிளம்பு. மழை வந்திடும் இல்லே..? வீட்டுக்கு போயிட்டு கால் பண்றியா எனக்கு.’’ அவன் கோரிக்கைக்கு பிடித்தம் இல்லாமல் மெல்ல தலையசைத்தாள்.

 

அதற்குள் அம்ரித் எதையோ வாங்கிக் கொண்டு வர, அதை கேமரா அருகில் குவித்து காட்டிவிட்டு, விரல்களை மடக்கி, நல்லா இருக்கும்’ என்று சைகை செய்துவிட்டு  மூன்று விரல்களை மட்டும் ஆட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்து, நந்தாவை தண்டித்தாள்.

                   +   +  +

ல்கத்தா செண்ட் ஜான்ஸ் மிசினரி ஹாஸ்பிடல். மெல்லிய ஊசித் தூறல் ஈசித்துக் கொண்டு இருந்தது காரிடரை.  உள்ளே வந்து கல்கத்தா டைம்சில் கண்களை சுழற்றிவிட்டு, தீதியின் ஆக்ரோச அறிக்கைகளை வாசித்து விட்டு, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள்.

 

மணி ஆறு..! வீட்டுக்கு வந்தாச்சா.?’ என்று விசாரித்து யாழிக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, உள்ளே இருந்து வரும் அழைப்பிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மதர் கேத்தரின் ரவுண்ட்ஸ் முடித்து திரும்பிப் போகும் போது  மிசினரிகளிடம் இருந்து நல்ல தொகை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஓதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் சொல்லிச் சென்றார்.

 

இரண்டு நாள்கள் முன்னர் நிர்வாகத்தினர் அத்தனை பேரும் செய்து கொண்ட முழு உடல்தகுதி பரிசோதனை அறிக்கையை வாங்கிப் போக வந்திருந்தாள்.

 

 அத்தனை பேருக்கும் அறிக்கைகள் தனித்தனியாக அனுப்பப்பட்டு இருக்க, டீன் டாக்டர் போஸ் வானதியை வரச்சொல்லி தகவல் அனுப்பி இருந்தார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அழைப்பு வந்ததும் எழுந்து உள்ளே சென்றாள்.

 

 ‘’ வெல்கம் வானதி.’’ என்றார் பரிட்சயமான அன்பில்.

 

நிமிர்ந்து பார்த்து சிரித்தாள். மெல்ல இருக்கையை நிறைத்துக் கொள்ள, வழக்கமாக விசாரிப்புகள், மருத்துவமனை பற்றிய தகவல்கள் என்று நேரத்தைக் கடத்தி, உரையிட்ட மருத்துவ அறிக்கையை எடுத்து நீட்டினார், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.

 

" உங்களுக்கு நிறைய உபாதைகள், அதன் அறிகுறிகள் இருக்கிறதா முன்னேயே சொல்லி இருந்தீங்க. ஆனால் எந்த நோயுக்கான முகாந்திரமும் உடலில் இல்லை. அது உங்கள் மனதோடு சம்பந்தப்பட்டதா இருக்கலாம். மனதை காபந்து செய்யுங்கள் வானதி." என்றார் புன்னகையோடு.

 

"...உறக்கமில்லாமல்

அன்பே நான் ஏங்கும் ஏக்கம்

போதும்

இரக்கமில்லாமல்

என்னை நீ வாட்டலாமோ நாளும்

 

எந்நாளும்

தனிமையே எனது

நிலைமையா

தந்த கவிதையா கதையா

 

 இரு கண்ணும்

என் நெஞ்சும் நீரிலாடுமோ

 

 மயங்கினேன்

சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன்

உயிரே

 தினம் தினம்

உந்தன் தரிசனம் பெறத்

தவிக்குதே மனமே

 இங்கு

நீயில்லாது வாழும்

வாழ்வுதான் ஏனோ…"

 

                      5 

 சென்னை மெடிக்கல் காலேஜ். அனாடமி வகுப்பு முடிந்து, அலுத்துப் போய் மரத்தடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் தபஸ்வி.

 

ஆர்த்தி வகுப்புகளை முடித்து விட்டு வந்து விட்டால்,கிளம்பி விடலாம் .நான்கு நாட்களாய் நந்தா விடுப்பில் இருந்ததால் கல்லூரிக்கு வந்து போகும் சிரமமே தெரியவில்லை.

 

பின்னால் வந்து தோளில் கை போட்டாள் ஆர்த்தி. 

 

" என்னடி அனாடமி கிளாஸ்க்கு போயிட்டு வந்து மந்திரிச்சு விட்ட மாதிரியே திரியறே. அரண்டுட்டியோ…"  வாய்விட்டுச் சிரிக்க, கைகளை ஊன்றி எழுந்து நின்றாள்.

 

"என்ன செய்ய..? நான் கைனகாலஜிஸ்ட்டாகியே தீரணும்னுகிறது என் அம்மாவோட லட்சியம். இப்போ நான் கிடந்து அல்லாடறேன். பசி உயிர் போகுது. ஏதாவது வயித்துக்கு போடணும். அதுக்கு முதல்ல குளிக்கணும்."

 

"டாக்டர் இப்படி அசூசை பார்க்க கூடாது மேடம்." ஆர்த்தி குறும்பாய் தோள்களை கட்டிக் கொள்ள, மெல்ல அவள் கைகளை பிரித்து விட்டாள்.

 

"உங்கப்பா வருவாரா..? "

 

" ம்ஹூம். அவர் லீவ் முடிஞ்சு ட்யூட்டியில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. நீ உன் வீட்டுக்கு கால் பண்ணு." என்னும் போதே உள்ளுக்குள் சிலிர்த்தது. 

 

பள்ளி காலம் தொட்டு இருவரும் நெருங்கிய தோழிகள். கொஞ்சம் நெருக்கமாய் வசிப்பிடம் இருந்ததும் இரு குடும்பத்தின் நட்பை வெகுவாய் கெட்டிப் படுத்தி இருந்தது.

 

அலைபேசி எடுத்து தகவலை சொல்லி முடித்து வைத்த ஐந்தாவது நிமிடம், கே'போடு தபஸ்வி எதிர்பார்த்தது போலவே அமர் வந்து நிற்க, உள்ளுக்குள் பறந்த பட்டாம்பூச்சியை வெகு சிரமப்பட்டு கட்டி வைத்தாள்.

 

போலீஸ் டிரெயினிங்கில் இருந்தான். போஸ்டிங்கிற்கு முன்னமே மிடுக்கும் கம்பீரமும் முகத்தில்  மெருகை ஏற்றி இருந்தது.

 

ஆர்த்திக்கு அப்பா இல்லை. அம்மா கல்லூரி பேராசிரியை. அமரும், ஆர்த்தியும் மட்டும்தான். நேர்த்தியான குடும்பச் சூழல். அப்பா இல்லாததால் அந்தப் பொறுப்பையும் சேர்த்து சுமக்கும் அமரின் கடமை உணர்வின் மீதுதான் இளமை பூஞ்சைக் காளானாய் காதலை படர விட்டு இருந்தது. 

 

பசி சிறுகுடலை ருசித்துக் கொண்டிருந்த நிமிசம் தான், சரியாக அமர் வந்திருந்தான். பார்த்ததும எப்போதும் தபுவை கிறங்க வைக்கும் அந்த வசீகரச் சிரிப்பை சிரித்தான். குளோரோபார்ம் செலுத்தாமலே உடம்பு சொக்கிச் சரிந்தது.

 

" இன்னைக்கு அப்பா வரலியா தபு..?" என்றான்.

 

" இல்ல அமர். அப்பா ட்யூட்டில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. துர்யன் இருந்தா வருவான். அவனுக்கு காலேஜ்ல வேலை இருக்குன்னு சொல்லிட்டான். நீங்க டிரெயினிங் ஸ்பார்ட்க்கு போகலயா..?"

 

" முடிச்சிட்டு ஃபோர் ஒ கிளாக் வீட்டுக்கு வந்துட்டேன். இனி நாளைக்குத் தான்." 

 

"நானும் ஒருத்தி இங்கே இருக்கேன்." நடுவில் புகுந்து கைகளை ஆட்டி ஆர்த்தி கேலி செய்ய அசடு வழிந்தபடி இருவரும் கேப்பில் ஏறிக் கொண்டார்கள்.

 

முன் இருக்கையில் டிரைவரோடு அமர்ந்து கொண்டான். ஒரு அத்துமீறிய பார்வையைக் கூட அவசியமின்றி விரயம் செய்யாமல் கண்ணியமாய் அமர்ந்து இருந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் அவள் நெஞ்சில் சிகரம் ஏறினான்.

 

வீடு வந்து சேர்ந்தும் வெகு நேரம் மட்டுக்குக்கும் நினைவுகளின் தித்திப்பு அடங்கவே இல்லை அவளுள்.

 

நிலைகளை மாற்றமல், சுளை தேடி தேன் உறிஞ்சும் பெரும் மாய வித்தை கொண்டது காதல் உலகம். கண்ணியமான மனிதர்களுக்கு மத்தியில் உருவாகும் ஈர்ப்பு விசை, பெரும் சக்தி வாய்ந்தது. 

 

"வந்ததுல இருந்து கனா கண்டுட்டே இருக்கியே அம்மாலு, உன் அத்தைகாரி நம்பர் இதுல இருக்கு போட்டு குடேன்." பழசான கைத்தறி புடவை போல் உடம்பு முழுக்க ஏகப்பட்ட சுருக்கத்தோடு வந்து நின்ற கல்பனா பாட்டியை அயர்ச்சியாய் பார்த்தாள்.

 

சிந்தனை, சிறகில்லாமல் பறந்து கொண்டிருக்கும் போது, நடுவில் தொண தொணத்த படி அதென்ன டீல் செய்வது..? எரிச்சல் மண்டியது.

 

"சும்மா இருங்க பாட்டி..? அத்தை காலேஜ்ல இருந்து வந்திருக்க மாட்டாங்க. வந்தா வீட்டில வேலை இருக்கும் இல்ல..? அப்புறம் பேசிக்கலாம்." எழுந்து போய் விட்டாள்.

 

இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் எட்டி பார்க்கும் தூரம்தான். ஏனோ அது இளமையில் புரிவதில்லை.

 

கல்பனா மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டார். வலி எடுத்த கழுத்தை நீவி விட்டுக் கொண்டார்.

 

எப்போதும் போல வயதை கணக்கு போட ஆரம்பித்து இருந்தார். இப்போது எல்லாம் நாட்களை எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டு இருந்தார் சிக்கனமாக. மனசு முழுக்க வானதியும், தான் ஒரு முறை கூட பார்க்காத பேத்தியுமே நின்றார்கள்.

 

தொடுவானம் போல் கண்ணுக்கு எட்டியும் எட்டாமலும் நின்ற அந்த பந்தத்திற்கு பந்தக்கால் போட்டவர் என்ற வகையில், ஒரு டீஸ்பூன் குற்றவுணர்வு அதிகமாய்த்தான் இருந்தது.

 

வானதியிடம் அடிக்கடி பேசுவார் தான். பிடிவாதக்கார பேத்திதான் எத்தனை முயற்சி செய்தும் முகம் காட்ட மறுக்கிறாள்.

 

சில நாட்கள் முன்பு நந்தா தந்த யாழியின் படங்களை பார்த்ததில் இருந்து உள்ளுக்குள் ஒருவித தவிப்பு. அள்ளி அணைத்து, கொத்து முடியில் பின்னல் போட்டு, பால் கன்னம் வருடி, அந்த எழுத்தாணி மூக்கில் மூக்குத்தி போட்டு, காஞ்சிபுர பாவடை தாவணி உடுத்தி… வயதானவர் கனவில் இளமை மட்டுமே இருந்தது.

 

கொஞ்ச நாட்களாய் கண் கோளாறு செய்கிறது. எழுபதை தாண்டியாகி விட்டது. ஆரோக்கிய சதவிகிதம் பின்னடைவு தான் இனி. எல்லாம் முடிவதிற்குள் ஒரு காலத்தில், தனக்கு எல்லாமுமாய் இருந்தவளை பார்க்க வேண்டும்.

 

அது வரைக்கும், நடை தளராமல், பார்வை பஞ்சடையாமல், நடமாட வேண்டும். மனசு வைராக்கியமாய் காத்திருந்தது. ஆனால், அவள் வருவாளா..?

 

திரிப் பூவாய் உதிர்ந்து கொண்டிருந்த மழை, வேகமெடுத்து சரம் தொடுக்க ஆரம்பித்து இருந்தது.

 

யாழிக்கு அழைத்து அவள் வருகையை உறுதி செய்து கொண்ட பிறகு, மருத்துவமனை முகப்பில் இருந்த ஒய்வறையில் கண்களை மூடி அமர்ந்து இருந்தாள் வானதி.

 

உள்ளுக்குள் ஒரு பிரளயம் உண்டாகி கால்விரல் நரம்பு முதல் தலை உச்சி வரைக்கும் ஆட்கொண்டு இருந்தது.

 

வெளிச்சம் குறைவான நியான் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த பரிசுத்தமான அறை. சுவற்றில் மேரியின் பிடியில் சிசுபாலன் இருந்தார். அந்த அமைதி தவளும் முகம், அவள் இதயத்தின் சர்வத்தை நுணுக்கி நூறாக்கியது.

 

மாடத்தில் மெழுகுவர்த்தி மேல் அடர்ந்த சுடர் ஒன்று குத்த வைத்து அமர்ந்திருக்க, அதற்கு நேர் எதிரே மதர் சுப்பீரியர் கேபிரியலாவின் தெய்வீக படம்.

 

' இத்தனை கால வாழ்க்கையின் அஸ்திவாரமும், அன்று மேய்ப்பன் இல்லாத இந்த செம்மறியை, அந்த மரி தோளில் ஏந்திய துவக்கம் தான்.

 

மேம்போக்காய் பார்த்தால் அங்கே எதுவுமே பிரச்சனையாய் இருக்கவில்லை தான். இவள் மட்டும் விலகாமல் இருந்திருந்தால், நந்தா என்ற பேரன்பான மனிதன் இரண்டு நல் இதயங்ளுக்கு நடுவே பயணம் செய்ய இயலாமல் இல்லாமலே போயிருப்பான். 

 

வடுவாய் கூட அங்கே வாழ்ந்து உறுத்தலை தந்துவிடவே கூடாது என்றுதான் பிரிந்து வந்தாள்.

 

உருவத்தில் மட்டும் தானே பிரிவு… உள்ளத்தில் இல்லயே. இந்த பிரிவுக்கு பிறகுதான் இருவரும் பிரிக்கவே இயலாமல் கலந்து போனார்கள்.

 

அவன் தீண்டல் அவளுக்கு தேவைப்பட்டதே இல்லை எப்போதும். அவன் குரலும், அதில் வழியும் அவளுக்கே அவளுக்கான பிரத்யேக அன்புமே போதுமானதாய் இருக்கும் எப்போதும்.

 

மதர் கேப்பரியலா மட்டும் இல்லாது போயிருந்தால் இத்தனை வருடம் தாக்கு பிடித்திருக்க முடியுமா..?' அயர்ந்த பெருமூச்சு ஒன்று எழுந்தது.

 

வைப்ரேசனில் இருந்த ஃபோன் மடியில் துள்ளத் துடித்து அடங்கி இருந்தது. நேரம் அனல் மேல் விழுந்த புனல் போல் இருந்த இடம் தெரியாமல் தொலைய, எழுந்து கொள்ள பிரியமின்றி அமர்ந்தே இருந்தாள்.

 

மூன்று முறை அழைத்து ஓய்ந்து, பொறுமையை காற்றில் பறக்க விட்டுவிட்டு யாழி தேடிக் கொண்டு வந்து நின்றாள். உடன் மம்தாவும்.

 

"மாய், யாழியே தேடிட்டு வந்திருச்சு." குரலுக்கு கட்டுபட்டு கண் திறந்து பார்த்தாள்.

 

கையில் சிப்ஸ் பாக்கெட்டை வைத்து நொறுக்கி கொண்டு, அம்மாவை முறைத்துக் கொண்டு நின்ற யாழியை பார்த்ததும் அடிவயிறு என்னவோ செய்தது. இருபது வருடங்கள், எந்த உறவுமே இல்லாமல், அம்மாவை மட்டுமே ஆட்கொண்டு வாழ்கிறாள்.

 

"என்னம்மா பண்றீங்க..?" இயல்பாய் கேட்டபடி இரண்டு சிப்சை எடுத்து அம்மாவுக்கு ஊட்ட, மெல்ல பலமற்று அசைய மறந்திருந்தது வானதியின் தாடைகள்.

 

" சாப்பிடலயா யாழி.? இப்படி ஜங் புட் சாப்பிடாதனு எத்தனை முறை சொல்றேன். மம்தா டிபன் செய்து தரலியா..? " மகளின் அடர்ந்த கேசத்தை ஒதுக்கி விட, அவள் வானதியின் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பதின்ம வயது சிறுமி போல.

 

"மா இன்னைக்கு நந்தா கூட பேசினேன். அவரும் இதையேதான் சொன்னார். என்னை பார்த்த்த்த்த்த்துட்டே இருந்தாரு. லைப்ல முதல் முறையா அவர் கூட கோபப்படாம, சண்டை போடம பேசி இருக்கேன்." கழுத்தை கட்டிக் கொண்டு காலாட்டினாள்.

  

அமைதியாகவே இருந்தாள். மடிமீது அமர்ந்திருந்தவளின் மீது இறுக்கமாக விரல்களை பதியவிட்டு இருந்தாள். சஞ்சலமான மனநிலைக்கு அந்த அழுத்தம் ஒருவித இதமாக இருந்தது.

 

"மா, என்ன முகமே சரியில்லை. நந்தா உனக்கு கால் பண்ணி சண்டை போட்டாறா..? " வேண்டுமென்றே கண் சிமிட்டி கேட்டவளை பதில் சொல்லாமல் பார்த்தாள்.

 

"அப்பா'னு கூப்பிட மாட்டியா..?" மகளின் கன்னம் வருடி காது மடலை நிமிண்டி விட்டாள். அம்மாவின் நெஞ்சணையை பஞ்சணை ஆக்கி இருந்தாள் யாழி. சிப்ஸ் சாப்பிட்ட விரல் நுனியை குழந்தைபோல் சப்பித் தீர்க்க, அவளின் ஒவ்வொரு அசைவும், கண்களில் விழுந்து எண்ணத்தில் கலந்தது.

 

"அப்பாங்கிறது பட்டம் இல்லமா படிச்சு வாங்க. பதவி..!அதை அடைய போராடணும். அவர் எனக்கு என்ன செய்தார்? இந்த உபகாரம் கூட உங்களுக்குக்காத் தான்.

 

மா, வீட்டுக்கு போகலாம்மா. பசிக்குது." கொஞ்சியவள் மேற் கொண்டு சிந்திக்க விடாமல் அம்மாவை இழுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

 

வந்ததும் முகம் அலம்பி உடை மாற்றி சோபாவில் சரிந்தவள் கண்கள், பெங்காளி தொடரில் லயித்துப் போக, சிந்தனையாகவே வானதி சமையலறையில் இயங்கிக் கொண்டிருந்தாள்.

 

புல்காவும், கடாய் பனீரும் செய்து முடித்து ஹாலுக்கு வந்த போது, யாழி அங்கே இல்லை.

 

விளக்குகள் தனிமையில் விழித்திருக்க, டி.வி. கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தது. பக்கவாட்டு ப்ரன்ச் டோர் திறந்திருக்க அங்கே வானதி போலவே ஒற்றையாய கிடந்த மடக்கு நாற்காலியில் கால்களை குறுக்கி அமர்ந்து இருந்தாள் யாழி.

 

"யாழி மா…" அம்மாவின் அழைப்பு காதில் விழுந்தாலும், கருத்தில் விழவே இல்லை.

 

பொட்டு பொட்டாய் இருந்த நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டே இருந்தாள். அருகில் வந்து மோடாவை நகர்த்திப் போட்டு முன்னே அமர்ந்த அம்மாவை பார்த்துவிட்டு, அந்த ஷணமே பார்வையை மாற்ற, வானதி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள்.

 

"யாழி, திடீர்னு என்ன ஆச்சு..?" 

 

பெற்றவளுக்கு பதில் சொல்லாமல், பார்வை அவளைத் தாண்டி குதித்து, ஹாலில் அனாதையாய் ஓடிக் கொண்டிருந்த டி.வி.யில் நிலைக்க வானதி புரியாமல் மகளைப் பார்த்தாள்.

 

" ஏன்மா, உனக்கு ஒரு முறை கூட நந்தாவோட அருகாமை தேவைப்படவே இல்லையா…" அந்தக் குரலில் வழிந்த உணர்வு இதுவரை வானதி அறியாதது.

 

மெல்லிய தடுமாற்றமும், பதட்டமும், வேர்வைச் சுரப்பிகளுக்கு வேலை வாய்ப்பை தந்திருக்க, கழுத்தடியில் கச கச' வென நனைய ஆரம்பித்தது.

 

"பசிக்குதுன்னு சொன்னியே யாழி, வா, தட்டெடுத்து வைக்கிறேன்." அவசரமாய் எழுந்தவள் கைகளைப் பற்றிக் கொண்டாள், எங்கோ வெறித்தபடி.

 

"சொல்லிட்டு போம்மா."

 

" அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை யாழி மா." என்றாள் கண்டிப்பான குரலில்.

 

" அது தான் ஏன் மா..? தன் பிறப்பிற்க்கே அப்பா, அம்மாவுடைய அந்தரங்கம் தான் காரணம்னு குழந்தை உணரும் நிமிசம், தாம்பத்யத்தின் தயக்கம் எல்லாம் முடிஞ்சு போயிடுதுமா. வேர் இல்லாம மரமேது… எனக்கும் அது புரியற வயசுதான். ஒரு நீண்ட இடைவெளி… 20 வருசம், அதுவும் உணர்வுகள் கூர்மையான 20 வருசம்… 

 

எனக்கு வலிக்குதுமா உன் தனிமை. அந்த சீரியல்ல காம உணர்வோட நியாயத்தைச் சொல்லி புது வாழ்க்கையைத் தேடி ஓடற ஒரு நடு வயது பெண்ணை பார்த்தப்போ, எனக்கு உன் முகம் நியாபகம் வந்து, அழுகை அழுகையா வந்தது."

 

சட்டென்று தளர்ந்து அம்மாவின் இடையைக் கட்டிக்கொண்டு விசும்ப, சொக்கிப் போனாள் வானதி. சொல்லில் வடிக்க இயலாத உணர்வாக இருந்தது.

 

" யா..ழி...'" என்றாள் கண்கள்  ததும்ப. ஆணை பெண் அறிவதும், பெண்ணை ஆண் அறிவதும் காலத்தின் கட்டாயம். ஆனால் பெற்றவளை பிள்ளை அறிவது, பேறு அல்லவா..!பெற்ற மகளின் நுணுக்கமான கேள்விகள், வானதியை உணர்வுக் குவியலாக மாற்றி இருந்தது.

 

மகளின் தலைகோதி, முகம் துடைத்து விட்டு, இரண்டு தோள்களையும் பற்றி தூக்கி நிறுத்தினாள். சிணுங்கிக் கொண்டு துவளப் போனவளை, இழுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்த்தி, புல்காவை எடுத்து வைத்தாள். 

 

"'எனக்கு சாப்பிட பிடிக்கல."' கையைக் கட்டிக் கொண்டு, அழிச்சாட்டியம் செய்தவளை, சட்டையே செய்யாமல் புல்காவை விள்வி கிரேவியில் தோய்த்து ஊட்ட ஆரம்பித்தாள்.

 

இரண்டு ரொட்டிகளை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, அதே தட்டில் தானும் எடுத்து வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்.

 

படுக்கையை தட்டிப் போட்டு, பேசி பேசி களைத்து கால்களை  மடக்கிக் கொண்டு தூங்கியும் போனாள்.

 

முதுகில் தட்டி தட்டித் தந்தபடி மகளை உறங்க வைத்தவளுக்குத் தான் உறக்கம் ஒரு சொட்டுக் கூட வரவில்லை.

 

மகள் எடுத்து தாக்கிய ஆயுதம் கூராய் நெஞ்சுக்குள் குத்திக் கொண்டு நின்றது.

 

 '... 20 வருடங்கள்… அதுவும்,கூர்மையான 20 வருடங்கள். ' மெல்ல ஒரு புன்னகை உதட்டில் விரிந்தது. எத்தனை சிந்திக்கிறாள், என் செல்ல மகள்…!

    சமையல் அறையில் இருந்த சந்தியா, சர்க்கரை டப்பாவின் மேல் இருந்த டேப்பில் ஒடிய சமையல் குறிப்பை எட்டி எட்டிப் பார்த்து சமைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்க, அரைத்த சட்னியை வழித்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான் சிவராமன்.

 

"ஏன் சந்தியா, இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி யூ ட்யூப் பார்த்து சமைப்பே ? உனக்கு வெட்கமாவே இருக்காதா? " கேட்டவன் முதுகில் பொளேர் என்று அறை விழுந்தது.

 

"நான் எப்படி சமைச்சா உனக்கென்ன மேன்? பசிக்கும் போது சாப்பிட தட்டில ஏதாவது விழுதானு பாருங்க. " அவள் முடிக்கும் முன்னே ஹாலில் இருந்து கரண் சத்தமிட்டு அழைத்தான்.

 

" மீ, கால் வந்துட்டே இருக்கு உங்க நம்பர்ல."

 

"யார்னு பார்த்து சொல்லு கரண்.'' கொத கொதவென  கிளறி இருந்த எனதயோ உள்ளங்கையில் கொஞ்சமாய் வைத்து நக்கி சுவைத்து தனக்கு தானே மெச்சிக் கொண்டு நின்றவளை திரும்பி நக்கலாய் பார்த்தான் சிவராமன்.

 

"என்ன நல்லா இருக்கு தாக்கும்…" 

 

" அடி தூள்னு இருக்கு சிவா. இப்படியொரு வாங்கிபாத்'தை உன் பரம்பரையில இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க." கண்களை மூடி லயித்தவளை பார்த்த பார்வையில் கேலி கேட்பாரற்று கிடந்தது.

 

" அதுசரி, இப்படி நீயே கொஞ்சம் கொஞ்சமா நக்கி டேஸ்ட் பார்த்துட்டு என்னையும் என் புள்ளையையும் காப்பாத்தி விட்ரு." என்றவனை அடிக்க கை ஓங்க, போனுடன் கரண் சமையலறையில் இருந்தான்.

 

" மீ, வானு ஆன்ட்டி…" சட்டென்று முகத்தில் குறும்பு மறைய, அலைபேசியை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள். அழைத்து ஓய்ந்து சளைத்திருந்த அலைபேசியில் வானுவை அழைக்க, உடனே இணைப்பில் வந்தாள்.

 

"என்ன வானு..? காலையில தானே பேசினோம்? எதுவும் முக்கியமா?" குரலில் கவலை அலைகடலில் கட்டுமரமாய் தத்தளித்தது.

 

" முக்கியம்னு இல்ல. சும்மாதான்…" என்ற குரலே, இது சும்மாவே இல்லை' என்று சும்மா சும்மா மூளைக்குள் வந்து சொல்ல, கவனத்தை வானதி வார்த்தைகள் மீது, குவி லென்சாக்கினாள்.

 

"என்ன நினைக்கிறியோ பேசு. அது சும்மாவா இல்லையானு நான் முடிவு பண்ணிக்கிறேன்."

 

இரண்டு நிமிடம் மெளனத்தில் வீணாக்கிய பிறகு, வானதி தயக்கமாய் கேட்டாள்,

 

" நீ சாப்பிட்டியா சந்தி..?"

 

"விளக்கெண்ண. சொல்ல வந்ததை சொல்லு டி நீ. எனக்கு இன்னும் பி.பி-லாம் வரவே இல்ல. உன்னால வந்தது, உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்க."

 

தவிப்பின் உச்சத்தில் வானதி நிற்பது புரிந்தது. கல்தூண் மனசு கூட காற்றுக்கு துருப்பிடிக்கும் காலத்தில் அவள் இருப்பதும் புரிந்தது.

 

"என்னடிமா யோசிக்கிறே? ஏதாவது பேசேன்."

 

"நான் கல்கத்தா வந்து இருபது வருசத்துக்கு மேல் ஆயிடுச்சு இல்ல. இருபது வருசமா நா…ன்… யாரை…யும் பார்க்…கல இல்…ல" குரல் நசுங்கி வந்தது.

 

"வார்த்தையை சாதுர்யமா, உனக்கு சாதகமா பயன்படுத்தாதே. நீ யாரையும் பார்க்க விடல."

 

"ப்ச். ரெண்டும் ஒண்ணு தான் டி." என்றாள் அலுப்பாக.

 

"அதெப்பிடி டி ஒண்ணாகும்?  வனவாசத்துக்கும், சிறை வாசத்துக்கும் வித்யாசம் இருக்குல. நீ போனது வனவாசம். அதனால மத்தவங்களுக்குத் தான் சிறைவாசம்."

 

வானதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, சந்தியாவின் இதயம் கனிந்துருக ஆரம்பித்தது.

 

"சரிடா, இப்ப என்னாச்சு? எதுக்கு இந்த சிந்தனை எல்லாம்? ஏதாவது கெட்ட கனவு பார்த்தியா?"

 

" சொல்லத் தெரியல. ஒரே  தவிப்பா இருக்கு. காரணம் புரியல. நீண்ட தவத்துக்கு பிறகு, அந்த கடைசி நொடிகள்ல ஒரு நடுக்கம் உடம்பு முழுக்க ஒடுமே, அதுமாதிரி இருக்கு. எனக்கு, எனக்கு நந்தா…வை பார்க்கணும் போல இருக்கு…" வார்த்தைகளை கட்டுபாடாய் உதிர்த்த வானதியால், கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போனது விசித்திரமே.

 

சந்தியா கண்களை மூடி நின்றாள். காதில் அலைபேசி ஆயிரம் உணர்வுகளின் கதையை பேசிக் கொண்டு இருந்தது ஆனால் அது எதுவுமே அவள் கவனத்தில் இல்லை.  கண்கள் தன்னால் சுரக்க, உதடு தன்னிட்சையாய் துடிக்க, மூக்கு துவாரங்கள் விரிந்து, சிவந்து விஸ்தீனமாக… அந்த வார்த்தையின் வீச்சை அவளாலே தாங்க இயலவில்லையே, அந்த பைத்தியக்காரன் கேட்டால் என்னாவான்' என்ற கவலை அவளை வெட்டி சரித்திருந்தது.

 

"...நான் உன்னை நெனச்சேன்,

நீ என்ன நெனச்சே…

தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு…

நம்ம யாரு பிரிச்சா,

ஒரு கோடு கிழிச்சா,

ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு…

உன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு

நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு

அது மாயம் என்றாச்சு…"

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                           6

லஸ் கார்னரை ஒட்டி மூன்றாவது திருப்பத்தில் இருந்த பொடிக்கில்  உபயோகமே இல்லாத ஜீன்ஸுக்கு வேண்டா வெறுப்பாய் ஃஓஃ ஒரு குர்தியை வாங்கிக் கொண்டு, ஜீ பே செய்துவிட்டு காருக்கு வந்தாள் சந்தியா.

 

மாலை மங்கிப் போய் இரவு பவனி வந்திருந்தது. நகரமே விளக்கில் வீழ்ந்து கிடக்க, இன்னும் முகமும் மனசும் தெளியவே இல்லை.

 

வானதி என்ற அமரநதி, அவள் சிந்தனையில் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது. அவள் வார்த்தைகளின் கீறல், சரியாய் எதையோ சொன்னது. அவளாலே புரிந்து கொள்ள முடியாத உணர்வை, இவளுக்கு எப்படி புரிய வைப்பாள்?

 

ஒரு பாதையில், ஒரே பரிமாணத்தில் நேர்கோட்டில் பயணம் செய்யும் ரயில்கள் தடுமாறினால் அங்கே ஏதோ இடர்பாடு என்றுதானே பொருள்..? சொல்லத் தெரியாமல் தவிக்கிறாள்.

 

கொஞ்சம் அழுத்தமான சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடந்தவளை கொஞ்சம் தள்ளி ஒலித்த அழைப்பு நிமிர்ந்து பார்க்கச் சொன்னது.

 

நந்தா மகனோடு ஸ்போட்ஸ் ஷாப்பில்  நின்றான். கையசைத்து விட்டு, காரை திருப்பிக் கொண்டு அவன் முன்னே நிறுத்த, அதே புன்முறுவலுடன் நின்றான். சட்டென்று அவன் முகத்தில் வானதி தெரிய துணுக்குற்றுப் போனாள்.

 

"நந்தா…" என்றாள் வழக்கமான உற்சாகம் இல்லாமல். கண்களை குறுக்கி முகத்தை பார்த்தான்.

 

"என்ன இப்படி நடுரோட்டில நின்னு சிந்திச்சுட்டு இருக்கே? ''

 

"கரணும் சிவாவும் பாண்டிச்சேரிக்கு ஒரு பங்சன்க்கு போய் இருக்காங்க. வீட்டில தனியா இருக்க போர்  அடிச்சது. அதான் சும்மா."

 

" நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தானே? இந்த ஹோம்லி லுக் உனக்கு நல்லாவே இல்ல." பெரிதாய் சிரித்தான்.

 

கடைக்குள் துர்யன் ஸ்போட்ஸ் ஷு'வில் ரகம் பார்த்துக் கொண்டிருக்க, இருவரும் கடைவாசலில் ஆர்ச் வடிவில் இருந்த நீண்ட படிகட்டின் ஒரமாய் சென்று அமர்ந்தார்கள்.

 

"நந்தா, வானதி கிட்டே பேசினியா?" திடுப்பென்று கேட்பவளை யோசனையாய் பார்த்தான்.

 

பேசாத நாள் ஏது? நாளின் தொடக்கமும், நாளின் முடிவும் அவள் குரலோடு தான் என்பது சந்தியாவுக்கு புரியாமல் இருக்குமா?

 

"என்னாச்சு சந்தியா?"

 

"நேற்று என்கிட்ட பேசினாள். ஆனால் அந்த குரல்ல சொல்ல முடியாத எதுவோ ஒண்ணு. எனக்கு அது புரிபடல. உனக்கு புரியாம இருக்காது நந்தா, அதான்கேட்டேன்."

 

இரவு வானத்தின் மேகங்கள் கலைந்து போய்க் கொண்டு இருந்தன. கைகளை பின்பக்கமாய் ஊன்றி, கால்களை கீழ் படிக்கட்டுகளில் நீட்டிக் கொண்டான்.

 

" எனக்கு வானதியை பார்க்கணும் போல இருக்கு சந்தியா…"

 

அதே வார்த்தை. நேற்று ஈரப்பசையாய் அவள் சொன்ன அதே வார்த்தை. முகத்திலும், அகத்திலும், ஈயாடவில்லை சந்தியாவிற்கு

 

"அவள் வார்த்தைகளுக்கு நான் எத்தனை கட்டுபட்டவன் அப்படிங்கிறதுக்கு இந்த பிரிவுதான் தரச்சான்று.

 

அவள் உணர்வுகளின் சுதந்திரத்துக்கு என்னை விட யார் மதிப்பளிக்க முடியும்..? என்னை பார்க்க கூடாதுங்கிற  கட்டுப்பாட்டை அவள் எத்தனை கடுங்காவலா தனக்குள்ள போட்டு வச்சிருக்கான்னு எனக்கு மட்டுமே தெரியும். 

 

இதுக்கு வெளிப்படையா அவள் ஆயிரம் புணுகு பூசலாம். ஆனால் நிஜத்தில் அவளால என்னை தன்னில் இருந்து பிரிச்சு பார்க்க முடியல, அதான் நிஜம். இந்த இக்கட்டை நான் எப்படி சரி செய்வேன் சந்தியா.? இது குழப்பம் இல்ல புரிய வைக்க. இது தவிப்பு. இதைச் சரி செய்ய எந்த ஒப்பனையும் ஒத்துழைக்காது.

 

அவளை பக்கத்திலே  வச்சு அணு அணுவாய் சித்ரவதை செய்யக் கூடாதுனு தான் நான் அவள் கேட்டதுக்கு எல்லாம் தலையாட்டினதே." நீளமாய் பேசி முடித்த போது இருமல் வந்தது. 

 

தன் கைப்பில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

 

வாங்கி பருகிவிட்டு வெற்று வானத்தை பார்த்தான்.

 

"சரி, இப்போ இந்த புரிதல்ல எங்கே விரிசல் வந்தது..?"

 

"விரிசல் இல்ல, நெருடல். ஏனோ பரிட்சை ஹால்ல கடைசி அரை மணி நேரத்துக்கு  ஆக்ரோசமா எழுதுவோமே அதே மாதிரி ஒரு பரிதவிப்பு. வானுவையும், பாப்பாவையும் பக்கத்துல வச்சுக்கணும்னு."

 

துர்யன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவன், சின்ன வியப்பு காட்டிவிட்டு, நந்தாவை அழைத்து சென்று பணம் செலுத்தி விட்டு பெரிய பையோடு காருக்கு நகர்ந்தான்.

 

"நான் டிராப் பண்ணட்டுமா சந்தியா? இப்படி தெருவில நின்னு பராக்கு பார்த்துட்டே எவ்வளவு நேரம் நிற்பே.?"

 

"நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு."

 

நந்தாவை அனுப்பிவிட்டு காருக்கு வந்தாள். மனம் முழுக்க நந்தாவின் வார்த்தைகளே நந்தவனத்து வண்டாக வட்டமடித்துக் கொண்டு இருந்தது.

 

'நிஜம்தான். அவன் வார்த்தை சத்தியமான நிஜம்தான். நந்தாவின் மீது வானதிக்கு இருக்கும் ப்ரேமை, வார்த்தைகளில் விஸ்தீணம் செய்ய முடியாதது.

 

அவள் இங்கிருந்து சென்ற பிறகு, கிட்டத்தட்ட பைத்தியக்காரன் போல் சுற்றி வந்த நந்தாவை, அத்தனை பேரும் அறிவார்கள். அந்த தவிப்பு, காதல் கடிமணம் புரிந்த மிருதுளாவை வெகுவாய் வெட்டி சரித்தது.

 

திரும்பி வந்த மறுபிறப்பிற்கு பிறகும், நந்தா கடமையில் மட்டும் கண்ணாய் நின்றானே தவிர, காதல் என்று இருந்த ஒன்று அடையாளம் தெரியாமல் தொலைந்து போயிருக்க, எல்லோரையும் பறிகொடுத்து அவனை மட்டுமே சாஸ்வதம் என்று நம்பி வந்தவளுக்கு அது பெரும் ஆற்றாமையில் மூழ்க வைத்தது.

 

அது நாளாக ஆக அவளை படுக்கையில் தள்ள, மனோவியாதி பிடித்தவள் போல் ஆகிப் போனாள்.

 

ஒருபக்கம் வானதி வயிற்றில் குழந்தையோடு இங்கிருந்து போனது வேறு அவளை குற்ற உணர்வில் ஆழ்த்தியது. அத்தனை துயரத்தையும் தன்னுள் அடக்க முடியாமல் தவிக்க, அவள் படுக்கையில் சரிந்த போதுதான் நந்தா தவித்துப் போனான்.

 

"கேர் எடுங்க சார். சுய பச்சாதாபம் கொடுமையான நோய். இப்படியே விட்டா அவங்களை மீட்கவே முடியாது." மருத்துவர்களின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகுதான் அவன் மிருதுளாவின் உணர்வுகளுக்கு அர்த்தம் செய்ய ஆரம்பித்தான்.

 

அவள் மீது வெறுப்போ கோபமோ என்றைக்குமே இருந்தது இல்லை. வானதி என்ற பெரும் வெள்ளத்தில், அவன் கரைந்து காணாமல் போனதால், இந்த கிணற்று நீரை லேசாய் மறந்து போய் இருந்தான்.

 

கடல் கடந்து போன பின்னே, தவளைக்கு கிணறே கடலானது போல் அவள் பேரன்பில் மூழ்கிப் போனான். அருகாமை தித்திக்க தித்திக்க, மிருதுளாவிற்கு செய்ய வேண்டிய நியாயம் உரைத்தது.

 

சாதுர்யன் பிறந்தபோது அதை வானதியிடம் சொல்ல அவன் பட்டபாடு. அவன் சொல்லி முடித்தபோது, கண்களை மூடி அமைதியாக நின்றவள், அடுத்து மூன்று மாதங்கள் அழைக்கவே இல்லை. தவித்துப் போனது நந்தா தான்.

 

மிசினரி வேலைகள், மதர் கேப்ரியாலா மரணம், என்று நந்தாவோடு முற்றாக பேசுவதை தவிர்த்து, எப்போதாவது குறுஞ்செய்தியுடன் முடித்துக் கொள்ள, அவளின் அந்த தனிமை தவிப்பை சந்தியா தான் மீட்டெடுத்தாள். ஆனால் சந்தியாவை வற்புறுத்தி அனுப்பியதே நந்தா தான்.

 

நேரில் வந்து பார்த்த போது, கை குழந்தையுடன், கையறு நிலையில் அமர்ந்து கிடந்தவளின் தோற்றம் சந்தியாவை உலுக்கி போட்டது.

 

"வானு, இத்தனை பூஞ்சையா நீ..?" என்று வியந்தபோது, முகம் காட்டாமல் கண்ணீரை எங்கோ மறைத்தாள்.

 

"எனக்கு வருத்தமோ, பொறாமையோ, கோபமோ இல்ல சந்தியா. ஆனால் மனசும் உடம்பும் ரொம்ப தனியா இருக்கிற மாதிரி இருக்கு.  நந்தா அவங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் மனப்பூர்வமா விலகி வந்தேன். ஆனால் இதைக் கேள்விப் பட்டதும் அழுகையா வருதுடி. அது ஏன்..?" அப்பாவியாய் கேட்டவளை நெஞ்சோடு சேர்த்து அழுகையை அடை காத்தாள்.

 

" வானு…"

 

"எனக்கும் பாப்பாவுக்கும் யாருமே இல்லை'னு மனசு தவிக்குது. சந்தோசமான நிகழ்வாகவே இருந்தாலும், பெற்ற பெண்ணை மணமுடிச்சு புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது, உயிரை அறுக்கிற மாதிரி வலிக்குமே, அப்படித்தான் எனக்கு வலிக்குது."

 

எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்று கொண்டாள். பொங்கி பொங்கி அழுகை வந்தது, புறங்கையால் துடைத்துக் கொண்டே நின்றாள்.

 

"நீ தானே வானு நந்தாவை உன்னை பார்க்க வரக் கூடாதுனு வச்சிருக்கே. இல்லைனா நீயும் இன்னொரு குழந்தை…" என்று ஆரம்பித்து, கூசிப் போய் நின்று விட்டவளை, வானதி பார்த்த பார்வையில் உணர்வுகள் அடி வாங்கியது.

 

" மாறி மாறி பிள்ளை வரம் தர்ற சாமியாடி நந்தா..? ஒவ்வொரு கலவியும் அவருக்கு குற்ற உணர்வை தந்திடவே கூடாதுன்னு தான் கண் காணாமே வந்தேன். ஆனால் சேர்ந்து பிரிஞ்சதும், அந்த மனுசன் எத்தனை தவிச்சிருப்பார் தெரியுமா? அதை அவங்க முன்னாடி வெளிக் காட்டிக்க முடியாம அடாது பாடுபட்டு இருப்பார் தெரியுமா?

 

மனசாட்சி உள்ள மனிதர்களை, நியாயங்கள் கூட தண்டிக்கத் தான் செய்யும். " என்றவள் மடியில மலர்ந்து கிடந்த இரண்டு வயது யாழியை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

 

" பாப்பா வளர்ந்துட்டு இருக்கா. கண்டிப்பா நந்தாவை அவளுக்கு பிடிக்கும்னு என்னால சொல்லவே முடியாது. அவளுக்கு உலகம் புரிபடற வரைக்கும் சாதுர்யன் இருக்கிற விசயம் பாப்பாக்கு தெரியக் கூடாது." என்று சொல்லி 18 ஆண்டுகள் ஓடோடி விட்டது. 

 

இதையேதான் நந்தாவிடமும் சொன்னாள். அவன் குற்றவுணர்வு இன்னும் கூடிப்போனது. ஆனாலும் இலக்கே இல்லாத அவர்கள் பயணத்தில், பொய்யும் உண்மையும் ஒரே கனம்தான் என்பதால்  மௌனமே தற்காலிக வலி நிவாரணி ஆனது யாவருக்கும்.

 

*...ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

 

வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா…"

 

                      

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம். வெளியில் வந்ததும் டாக்சி அமர்த்திக் கொண்டு மிசினரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தாள் சந்தியா.

 

சந்தியா வருவதாய் சொல்லி இருந்ததால், வானதி ரிசப்சனிலேயே காத்து இருந்தாள்.

 

"மாய், துமி டிகா சோ..?" என்றபடி மம்தா அகலமாய் சிரித்து வரவேற்க,

 

"என்ன வானு இது, துணி துவைச்சாச்சா'னு வந்ததும் வராததுமா கேட்குறா.?" சிரித்தவள் இடையை அழுந்த கிள்ளி வளாகத்தை கடந்து பின் பக்கமாய் இருந்த கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து சென்றாள்.

 

மம்தாவிடம் ஏதோ சொல்ல, அவள் தலையை தலையை ஆட்டிவிட்டு, சமையல் அறை புகுந்தாள்.

 

"குளிக்கிறயா சந்தியா?"

 

"செய்யலாம் டி. முதல்ல உன் புருசன் உனக்கும், உன் மகளுக்கும் வாங்கி தந்தனுப்பி இருக்க பொருளை எல்லாம் பிடி. என் பதவியென்ன, அந்தஸ்த்து என்ன..? உன் குடும்பத்துக்கு போர்ட்டர் வேலை பார்க்கிறேன். டயர்டா இருக்கு, முதல்ல ஒரு டீயை குடிக்கலாம். " என்றபடி தயக்கத்திற்கு பழகாத உரிமையோடு உள்ளே சென்று முகம் அலம்பி, தலையை வாரி முடியிட்டுக் கொண்டு வந்து சோபாவில் சரிந்தாள்.

 

" எங்கே யாழியைக் காணோம்..?"

 

"வந்திடுவா. பக்கத்திலே அவ ப்ரெண்டை பார்க்க போய் இருக்கா."

 

சூடான டீயும் பிஸ்கெட்டும் கொண்டு  வந்து வைத்துவிட்டு, முகத்தை திருப்பி திருப்பி பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்து விட்டு போனாள் மம்தா.

 

" இவயேன்டி எப்போ என்னைப் பார்த்தாலும். ஒரு மார்க்கமா சிரிக்கிறா..?"

 

"பஃபூன் மாதிரி இருக்கியோ…"

 

"தேவைதான்டி  எனக்கு. சரி சொல்லு உடம்பு எப்படி இருக்கு..?" பக்கத்தில் வந்து கைகளைப் பற்றி, விரல்களை நீவி விட்டு கேட்டவளை கண் இமைக்காமல் பார்த்தாள்.

 

"நந்தா எப்படி இருக்காரு..?"

 

"நான் உன்னைக் கேட்டேன்."

 

"நானும் உன்னைத்தான் கேட்கிறேன். நந்தா எப்படி இருக்காரு..?"

 

எழுந்தவள் தான் ஒரு

கோப்பையை எடுத்துக் கொண்டு, வானதிக்கு ஒரு கோப்பையை எடுத்து நீட்டினாள். துளி துளியாய் மிடறாய் இறங்கி நேரத்தை கடத்தியது.

 

" சொல்லத் தெரியல. ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் இங்கே வந்தப்போ, இதே கேள்வியை நீ கேட்டப்போ என்னால தெளிவான பதில் தர முடிஞ்ச மாதிரி இன்னைக்கு தர முடியல."

 

உரிய உதடு குவித்தவள், அப்படியே நின்று விட்டாள்.

 

"நீ கேட்ட கேள்விக்கும் இது தான் பதில். என்னால தெளிவா பதில் தர முடியல. உடம்பு உபாதை பண்ணல. மனசு ஏதோ பண்ணுது. தவிப்பா இருக்கு. நந்தாவை பார்க்க மனசு ஏங்குது. அத்தை போன வாரம் கால் பண்ணும் போது, தனக்கு சரியா கண் தெரிய மாட்டேங்குது. முழுசா பார்வை போறதுக்குள்ளயாவது திரும்ப உன்னையும், என் பேத்தியையும் பார்த்திட மாட்டேனா'னு அழுதபோது குற்ற உணர்ச்சியா இருந்தது."

 

இடைமறிக்காமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சந்தியா.

 

"ஆனால், எனக்கு யாழி'யை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு சந்தியா."

 

" வானு…"

 

"அவள் நிறைய சிந்திக்கிறா. அதுவும் மெல்லிய உணர்வுப் பூர்வமான விசயங்களை விவரிக்க முடியாத அளவுக்கு சிந்திக்கிறா.    ' கூர்மையான இளமைக் காலத்துல தனிமையை எப்படி மா தாண்டி வந்தே'னு கேட்குறா. எனக்கு அவ்வளவு வியப்பா இருக்கு. அவளுக்குள்ள புரையோடிய கோபம் நந்தா மேல இருக்கு. அவளுக்கு நந்தாவை அவ்வளவு சீக்கிரம் புரியாது சந்தியா."

 

"இது மட்டும்தான் இந்த பிரிவுக்கு காரணமா..?" மெல்லிய புன்னகையோடு கேட்டபடி கோப்பைகளை எடுத்துப்போய் கழுவி ரேக்கில் எடுத்து வைத்தாள்.

 

வானதி சோபா முதுகில் மல்லார்ந்து தலையை சாய்த்து இருந்தாள். 

 

"தெரியல சந்தியா. சில உணர்வுகளும், உறவுகளும் விசித்திரமா இருக்கும். இந்த இருபது வருசத்திலே, வீணா, விக்கி, அத்தை, என் பொண்ணு தபு எல்லாரும் எத்தனையோ முறை கால் பண்ணி பேசி இருக்காங்க. ஆனால்… ஆனால்… ஒரு முறை கூட மிருதுளா பேசினது இல்ல.

 

அவங்க பேசணும்னு நினைக்கிறது அபத்தம் தான். உணர்வுகளை குளிர்சாதன பெட்டியில வச்சு பாதுகாக்கிற வரைக்கும் தான் அது கெட்டுப் போகாமல் இயல்பிலேயே இருக்கும். பெட்டியை விட்டு வெளியில் வந்தபிறகு அது கெட்டுபோய், வீச்சம் எடுக்கும்.

   

அவங்க என்னை ஏத்துக்கிட்டாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நந்தாவை விட்டுத் தர மாட்டாங்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்." என்ற போது ஒரு கசப்பான புன்னகை இதழில் வழிந்தது.

 

பக்கத்தில் வந்து அமர்ந்து, மெல்ல அவள் தலை கோதினாள் சந்தியா. சட்டென்று மடி கவிழ்ந்து வானதி குழந்தை போல் குறுக்கி கொண்டாள்.

 

"வானு, உன் பல்ஸ் ரொம்ப அப்நார்மலா இருக்குடி. உடம்புக்கு ஏதாவதா..? என்கிட்ட மறைக்காம சொல்லுடி." குரலில் கவலை கொத்து கொத்தாய் வழிந்தது.

 

"ஏதோ பண்ணுது. சொல்லத் தெரியல. இந்த ஏதோ'வில இருக்கிற சேதி, எனக்கானதா இல்ல நந்தாவிற்கானதானு தெரியல. ஹாஸ்பிடல்ல கொஞ்சநாள் முன்னாடிதான் மாஸ்டர் செக்கப் பண்ணினேன். வழக்கத்தை விட படபடப்பும், இதய துடிப்பும் அதிகமா இருக்குன்னு வந்திருக்கு."

 

சந்தியா உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

 

"இதுக்கும் நந்தாவுக்கும் என்னடி சம்பந்தம்." என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டு, வலக்கையால் நெஞ்சை நீவி விட்டாள்.

 

"என் இதய துடிப்பே நந்தா தானே சந்தியா. அது சீரில்லாம இருக்குன்னா, என் நந்தாவுக்கு என்னவோனு என் உள்ளுணர்வு எனக்கு காட்டி கொடுக்குதே. 

 

என்னை சிந்திச்சு சிந்திச்சு சிந்தையெல்லாம் சிக்கு விழுந்து போச்சோனு இப்போ பரிதவிப்பா இருக்கு. ஒரு நல்ல மனுசனை நான் என் சுயநலத்தால தண்டிச்சுட்டனோனு மனசு தவிக்குது." என்று முடித்தபோது விசும்பத் தொடங்கியவளை இழுத்து தன் நெஞ்சில் சரித்துக் கொண்டாள்.

 

"நீயா சுயநலவாதி.?" என்று கேட்டபோது பெரிய சிரிப்பு வர எழுந்து முறைத்து பார்த்தாள்.

 

அடுத்த வார்த்தை எடுப்பதிற்குள் யாழி பெரிய பைகளுடன் துள்ளலாய் உள்ளே ஓடி வந்து சந்தியாவைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு, கடித்து, ஏதேதோ சில்மிசம் செய்து ஓய்ந்து இருந்தாள்.

 

"நாய்குட்டி நக்குற மாதிரி மூஞ்சியெல்லாம் நக்குறதை பாரு." வானதி கேலி செய்து சிரிக்க, அதைப் பற்றி அக்கறை அற்றவளாய் சந்தியாவின் இடுப்பை வளைத்து, கழுத்தில் தலை புதைத்தாள்.

 

"என்ன செல்லம் இத்தனை அன்பு.?" முகத்தை நிமிர்த்தி அழுந்த துடைத்து விட,

 

" இந்த 20 வருசத்துல என்னையும், அம்மாவையும் தேடி வர்றது நீங்க மட்டும்தானே..? அதான் உங்களை பார்த்ததும் அழுகை வருது." என்று சொன்னவளின் தலையை வருடியபடி வானதியை பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.

 

மூவரும் பேசி, சிரித்து, உண்டு முடித்து, சின்னதாய் ஷாப்பிங் முடித்து, பாடவதியான இந்தி படத்தை டிரைவின் தியேட்டரில் பார்த்து, டாக்சியில் திரும்பும் போது, யாழினி சந்தியாவின் மடியில் தலைவைத்து உறங்கி இருந்தாள்.

 

அளவான நிறம்தான். ஆனால் அழகு என்றால் அப்படியொரு அழகு முகத்தில்.

 

" வானு, பேசாம நாம சம்பந்தி ஆயிடலாமா..?" கண் சிமிட்டி கேட்டபோது வானதிக்கு தூக்கி வாரிப் போட்டது.

 

"சந்தியா, அவ குழந்தை டி. இன்னும் டாக்சியில ஏறினதும் தூங்கிறது கூட மாறல. இப்பத்தான் யூ.ஜி பைனல் பண்ணி இருக்கா. நான் உன்னை வரச்சொன்னதே இதுக்காகத் தான்." என்று முடித்த போது சந்தியா யாழியின் கன்னத்தை வருடுவதை நிறுத்திவிட்டு கூர்ந்து பார்த்தாள்.

 

வானதி கண்களை சாலையில் பதித்து இருந்தாள்.

 

"சென்னைக்கு வந்துடலாம்னு யோசிக்கிறேன். இன்னும் யாழி கிட்டே இதுபத்தி பேசல. கண்டிப்பா முரண்டு பிடிப்பா. ஆனால் என் வார்த்தையை எந்த இடத்திலும் அவ மீற மாட்டா. 

 

நந்தா பக்கத்திலே போகச் சொல்லி உள்ளுணர்வு சொல்லுது. தப்பும் தவறுமா மனசுக்குள்ள ஏதோ சிந்தனைகள் ஓடுது. அதை சரியா இனம் பிரிக்க முடியல என்னால. ஆனால் இனியும் நந்தாவை விட்டுட்டு இருக்கிறது சரியில்லைன்னு உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு. நான் அங்கே வந்தால் பல பிரச்சனைகள் வரும்தான். ஆனால் அதையெல்லாம் சந்திக்கவும், சிந்திக்கவும் இனியும் தயங்கிறதுல அர்த்தம் இல்லைனு தோணுது. " என்றவள் மெல்ல தலையை நீட்டி யாழி உறங்குவதை உறுதி செய்து கொண்டு, மெல்லிய குரலில் சொன்னாள்,

 

"அங்கே இரண்டு ஆண்களை யாழியால் எதிர்கொள்ளவும் முடியாது, ஏத்துக்கவும் முடியாது…  ஒண்ணு நந்தா… இன்னொன்னு துர்யன்." என்ற போது நெடும் மூச்சு ஒன்று வெளியேறி இருந்தது.

 

ஆனால் இதைக்கேட்டுக் கொண்டிருந்த சந்தியா உணர்வுகளின் உச்சத்தில் இருந்தாள். எந்த மாற்றத்திற்காக 20 வருடங்களாய் நந்தாவோடு சேர்த்து மொத்த குடும்பமும் தவம் கிடந்ததோ அந்த வார்த்தையை கடைசியாய் வானதி சொல்லித்தான் விட்டாள். 

 

இதை நந்தா அறிந்தால் என்னாவான் என்று நெஞ்சு துள்ளாட்டம் போட்டு துடிக்க, அவள் அறிந்திருக்க நியாயமில்லை, இனித்தான் உணர்வுகளில் பின்னல் போட்டு, பூ சூட்டி பொட்டு வைக்கும் ரோலர் கோஸ்டர் சதிராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்று.

"...என் பாதைகள்,

என் பாதைகள் உனத விழிபார்த்துவந்து முடியுதடி,

என் இரவுகள்,

என் இரவுகள் உனது

முகம் பார்த்துவிடிய ஏங்குதடி!

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்,

எனக்குள் உன்னை நீ ஊற்றிவிட்டாய்,

மூழ்கினேன் நான், உன் கண்ணிலே….

முன்பனியா, முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே,

விழுகிறதே, உயிர் நனைகிறதே!..."

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

 

   

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                          9

 

தையெல்லாம் காலம் கட்டுமானம் செய்தெல்லாம் வைத்திருக்கவில்லை. ஒரு பாதை ஓட்டத்தின், பயண சஞ்சலத்துடன் அத்தனை நிகழ்வுகளையும் கடந்து வர காலம் கற்று இருந்தது. எதிர்கொள்ளத் தெரியாத துணிவில்லாதவன் கூட, எதிர்காற்றில் வேகம் கூட்டி நடை போடும் வித்தையின் விஸ்தீனத்தை கால்கள் அவனுக்கு கற்றுத் தந்துவிடும்.

 

சில நாட்களாய் மனதில் நெட்டூரு போட்டுக் கொண்டே இருந்த உணர்வை இன்று சந்தியாவிடம் வெளிப்படுத்தி விட்டாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனைக்கு தன்னை சிக்குபடுத்திக் கொள்ளாமல் தான் காத்திருந்தாள் வானதி. 

 

‘’நான் முடிவு பண்ணிட்டு நந்தாகிட்டே பேசும் வரைக்கும், நீயா எதுவும் பேசிக்க வேண்டாம். இந்த ஒருமுறையாவது நீ என் கூட நில்லு…’’ என்றாள் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது. தூரத்தில் ஐஸ்க்ரீமுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்த யாழியை யோசனையாய் பார்த்தாள் சந்தியா.

 

‘’யாழி சம்மதிப்பாளா..?’’

 

‘’கண்டிப்பா மாட்டா. நந்தா கால் பண்ணாலே அதை எடுக்கச் சொல்லி நான் போராட வேண்டி இருக்கும். எல்லாத்துக்கும் மேல, என் சிந்தனைகளுக்கு இன்னும் நானே உருவம் கொடுக்கல. அதுவரைக்கும் எதையும் வெளியில சொல்ல வேண்டாம் சந்தியா. நந்தாவுக்கு நான் அசைய ஆரம்பிச்சது தெரிஞ்சா, தன் அன்பைக் காட்டியே என்னை தவிடு பொடியாக்கிடுவாரு. 

 

 நான் யோசிக்கிறதை எந்த சேதாரமும் இல்லாமல் செயல்படுத்த எனக்கு ஒரு மூச்செடுக்கும் அவகாசம் வேணும் சந்தியா. முதல்ல யாழிமாகிட்டே பேசறேன்.ப்ளீஸ் அதுவரை யார்கிட்டயும் பேசிக்க வேண்டாம்.’’ என்று கரம் குவித்தவளை முறைத்து பார்த்துவிட்டு, தன்னோடு சேர்த்தாள். அவளைப் பொறுத்தவரை இந்த மாற்றமே பெறும் ஆசுவாசம்.

 

ஆனால் அத்தனை எளிதாய் மனிதனை ஆசுவாசப்பட காலம் அனுமதிப்பதில்லை. மெல்லிய கோடு ஒன்றே, விந்தையாய் உலகத்தின் எல்லைகளை பிரிக்க இயலும் என்றால், அந்த கோடால் உலகத்தின் அடையாளத்தை மாற்ற இயலுமானால், வேறு என்ன ஆதாரம் வேண்டும் நம்மை காலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதிற்கு.

 

துவொரு வெள்ளிகிழமை. மிசினரியில்  பிராத்தனை கூட்டம் முடிந்து வானதி வீட்டுக்கு வந்த நிமிசம், வீட்டிற்குள் அலைபேசி அலறிக் கொண்டு இருந்தது. பிராத்தனை கூட்டத்திற்கு செல்லும் போது, அலைபேசியை எடுத்துப் போகும் பழக்கமில்லை என்பதால், வேகமாய் வந்து எடுத்துப் பார்த்தவள் கண்கள் தெறித்து போகும் அளவிற்கு தவறிய அழைப்புகள்..!

 

நந்தாவின் எண், விக்னேஷ், வீணா , சந்தியா என்று அத்தனை பேரின் எண்களிலும் இருந்து அழைப்புகள் வந்து, கொட்டிக் கிடந்தது. இத்தனை பேரும் ஒட்டு மொத்தாய் அழைக்கும் அளவிற்கு என்ன நடந்தது அங்கே..? ஒருவேளை உள்ளுணர்வு சொல்லி சொல்லி எச்சரித்தது போல என் நந்தாவிற்கு ஏதுமோ…

 

வேகமாய் திருப்பி அழைக்க, அவர்கள் எடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று மணிநேர போராட்டம். அடைய முடியாத தூரத்தை அவயங்கள் தொட முடியாத தொலைவை சிந்தனை தொட்டு தொட்டு வேதனையில் விம்ம வைத்தது.

 

இறுதியில் நந்தாதான் இவள் அழைப்பை பார்த்துவிட்டு மீண்டும் அழைத்தான். 

 

‘’என்னாச்சு நந்தா..?’’ அவள் பதட்டத்தை குரலில் ஏற்ற, நந்தா சோர்ந்து கிடந்தான்.

 

‘’அம்மாக்கு முடியல வானு.’’ என்றான்.

   

‘’என்னாச்சு..? இப்போ எப்படி…’’ வார்த்தைகள் தந்தி அடித்தது.

 

‘’ஐ.சி.யூ ல இருக்காங்க. இன்னும் எந்த தகவலும் வரல.’’ என்றவன் அங்கே இருந்த ப்ளாஸ்டிக் சேரில் சோர்ந்து போய் சரிந்தான். மேற்கொண்டு எப்படி உணர்வுகளை நகர்த்துவது என்று இருவருக்குமே தெரியவில்லை. யாருக்கு இப்போது யார் ஆறுதல் தருவது..?

 

 ‘’ திடீர்னு ஏன் நந்தா இப்படி..?’’ கேட்கும்போதே அழுதுவிட்டாள். ஆனால் எப்போதும் போல இப்போது நந்தா ஆற்றுப் படுத்தவே இல்லை. தலையை கோதிக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான். அதுவே அவளை அசைத்தது.

 

 சிறுதுநேரம் அவளை அழ விட்டு விட்டு சொன்னான்,

  

‘’ அவங்களுக்கு வயசு எழுபதுக்கு மேல ஆகுது. இனி இது ஏன் வந்துச்சுன்னு ஆராய்ச்சி செய்ற வயசில்லை. அவங்களுக்கு முடியாம போன பத்து நிமிசமும் சுய உணர்வு இருந்துச்சு வானு. அப்போ அவங்க முகமெல்லாம் வேர்த்து, கண்கள் நட்டுப்போய் இருந்த நிலையிலும் என் கையை பிடிச்சிட்டு என்ன சொல்லி அழுதாங்க தெரியுமா,

 

‘... நந்தா கடைசியில என் வானதியை பார்க்காமேயே போயிடப் போறேனா..! என் பேத்தியை கட்டி அணைக்காமயே என் உடம்புக்கு நெருப்பு வைக்கப் போறியா..? என் கட்டை வேகாது நந்தா. நான் வானதியை பார்க்கணும்…’ இதுமட்டும் தான் அவங்க வாயில இருந்து வந்த வார்த்தைகள். அவங்களுடைய கடைசி நிமிடமாத் தான் எங்களுக்கு தெரிஞ்சது. அதனாலதான், உன்னை போன்லயாவது பார்க்கட்டும்னு கூப்பிட்டது.’’

 

 ‘’ ந…ந்…தா…’’

 

‘’நீ உடனே கிளம்பி வா’னு அதிகாரம் பண்ற உரிமை எனக்கு இருக்குன்னு நினைச்சா, நீ கிளம்பி வந்துடு. இருபது வருசமா சொல்ற அதே வார்த்தையைத்தான் இப்பவும் சொல்றேன். நான் உன்னை ஏமாற்றல வானு. இதுக்கு மேல அதை எப்படி புரிய வைப்பேன்..?’’

 

  ‘’ ஐயோ நந்தா…’’

 

‘’ இன்னைக்கு அம்மா இருக்கிற இடத்துக்கு நான் வர்றதுக்கு பெரிய அவகாசம் எல்லாம் தேவைப்படாது. என் பொண்ணை என்கிட்டே இருந்து இன்னும் எத்தனை காலத்துக்கு பிரிச்சு வைக்கப் போறே வானு..?’’

 

‘’ஐயோ நந்தா, அங்கே அவ வந்தால், உங்களுக்குத்தான் வேதனை அதிகமாகும். அதுவும் துர்யனைப் பார்த்தா…’’ என்றவள் மேற்கொண்டு பேசத் தெரியாமல் விசும்ப, நந்தாவின் மூக்குநுனி சிவந்தது.

 

‘’என் பொண்ணு தானே..? என்னை அடிச்சாலும் நான் வாங்கிக்குவேன். எனக்கு எந்த அவமானமும் இல்லை. நீயேன் அதையே சொல்லிட்டு இருக்கேன்னு தான் தெரியல.’’ சலித்து களைத்து எரிந்து விழுந்த அந்தக் குரல் அவளை விக்கித்து நிற்க வைத்தது. இதுவரை அவனிடம் இருந்து வெளிப்படாத ஒரு குரல்… இத்தனை நாள் அவனிடம் தான் இது இருந்ததா என்று எண்ணி தவிக்க வைக்கும் ஒரு குரல்.

 

 ‘’ நந்தா…’’

  

‘’நான் வைக்கிறேன் வானு.’’  அவன் இணைப்பை துண்டித்தது அவள் இதயத்தையே துண்டித்தது போல் இருந்தது.

 

அதன் பிறகு நந்தா பேசவே இல்லை. அரை மணிக்கொரு தரம், வீணாவிடமும், விக்கியிடமும் கேட்டுத்தான் விசயத்தை அறிந்து கொண்டாள். 

  

யாழி வந்து சொன்னபோது, அம்மாவின் பதட்டமும் கண்ணீரும் அவளை வெகுவாய் அசைத்தது. இரவு எத்தனை சொல்லியும் உண்ணாமல் படுத்துக் கொண்டாள் வானதி. மனசு முழுக்க, கருப்பு வெள்ளைப் படமாய் கல்பனாவின் முகமும், அவர் காட்டிய அன்பும், நந்தாவிற்காக தன்னை பெண் கேட்டதும் ,ஏய் பொண்ணே..’ என்று தன்னை விளித்ததும், மனசை அழுத்தியது.

 

இந்த இருபது வருடங்களில் அந்த பேதை தாய் எத்தனை முறை அழைத்து அழைத்து ஓய்ந்து இருப்பார், அவர் மனதின் தவிப்பும் வேதனையும் ஒரு சின்ன முடிவில் சரிசெய்திருக்க முடியுமே..’ என்று யோசித்தபோது குற்ற உணர்வாக இருந்தது..

 

  அடுத்த நாள் மாலை தான் கல்பனாவை ரெகுலர் வார்டுக்கு மாற்ற,மெல்லிய ஆசுவாசம் வானதிக்கு வந்தது. நந்தா பேசினான் தான். ஆனால் அவன் குரலில் இனம்புரியாத விலகலும், தவிப்பும் தென்பட்டது, அல்லது தென்படுவதாக வானதிக்குத் தோன்றியது.

 

  ஒரு வாரம் கழித்து ஒரு மதிய நேரத்தில் கல்பனாவே வீடியோ காலில் வர, நைந்துபோன தோற்றமும், மூப்பு முற்றி நெத்து விட்டிருந்த முகத் தோற்றமும், மருத்துவமனையின் உடையுமாய் பார்த்த நிமிசம் மனசு பதறிக் கொண்டு கண்ணீர் ததும்ப, கைகளால் வாயை அடைத்துக் கொண்டு கதற, ஹீனக் குரலில் கல்பனா அழைத்தார். 

 

பக்கத்தில் வீணா நின்று இருந்தாள்.

 

‘’ஏன் அத்தை இப்படி..?’’

 

‘’எழுபத்தி சொச்ச வயசிலும் இது இல்லாம எப்போ அப்புறம்..?’’ முடிவை உணர்ந்திருந்தது அந்த குரல்.

 

‘’ இது எல்லாம் வயசே இல்ல அத்தை. ‘’

 

‘’எதுக்குமே வயசே இல்ல வானதி. பத்து வயசு குழந்தையும் அகாலமா இறந்து போகுது, ஐம்பது வயதிலேயும் திருமணம் செய்து குடும்பம் நடத்தறாங்க. ஆனால், முதுமைக்கான அடையாளமும், அதன் பாதையும் யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது.

 

இனி இருந்துதான் என்ன செய்ய..? அவயம் தேய்ஞ்சும் ஆசை தேயாமே இந்த உயிரை பிடிச்சு வச்சிட்டு என்ன செய்யப் போறோம்..? கடமை'னு எதுவும் மிச்சமில்லை. ஆனால், ஆசையும், பிராயசித்தமும் அப்படியே இருக்கு.’’ என்றபோது லேசாய்  மூச்சிரைத்தது.

 

   ‘’ அப்புறம் பேசலாம் அத்தை.ரெஸ்ட் எடுங்க.’’

 

‘’அப்புறங்கிற ஒண்ணு இல்லாமயே கூட போயிடும் வானதி. நான் இப்பவே சொல்லிடறனே. நான் ரொம்ப சுயநலவாதி வானதி. பூஞ்சை முகமும், கொட்டிக் கிடந்த அன்புமாய் என்னை குணப்படுத்த வந்து நின்ன உன் முகம் எனக்குள்ள அப்படியே தங்கிப் போச்சு என் செல்வமே..!

 

அந்த நல்ல குணத்தை என் வீட்டுக்கு சொந்தமாக்க நினைச்ச என் சுயநலத்தால, உடம்பாலயும் மனசாலயும் உன்னை நான் தண்டிச்சிருக்கேன். இன்னைக்கு நீ அனாதையா நிற்கிறதுக்கு என் சுயநலம் மட்டுமே காரணம். உன் இடத்தில இன்னொருத்தி வந்திருந்தா, நந்தா மட்டுமில்ல, இந்த வீட்டில யாராவது நிம்மதியா இத்தனை நாளும் வாழ்ந்திருக்க முடியுமா..? எல்லாமே உன்னாலே தானே..!

 

நான் செய்த இந்த துரோகத்துக்கு என்ன பிராயசித்தம் செய்யட்டும் நான்..!  என் பேத்தி முகத்தை பார்க்கணும். கட்டிபிடிச்சு ஒரு பத்து நிமிசம் என் வயித்துக்குள்ள புதைச்சுக்கணும் அந்த முகத்தை. இது மட்டும்தான் இந்த காய்ஞ்ச உடம்புக்குள்ள மிச்சமிருக்கிற ஆசை. இது ரெண்டையும் தவிர இந்த நிமிசம் எனக்கு எதுவும் தேவையில்லை வானதி.  

 

எனக்கு அந்த பாக்கியத்தை தருவியா அம்மாலு..?" படுக்கையில் சரிந்தபடி வீணா அலைபேசியை பிடித்து இருக்க, நடுங்கிய கையை கூப்பியபடி கேட்க, வானதி உடைந்து போய் கதறி விட்டாள். 

 

இணைப்பைத் துண்டித்தும் வெகுநேரம் மட்டுக்கும், அந்த பஞ்சடைத்த கண்ணும், முகமுமே நினைவு முழுக்க நின்று இருந்தது.

 

மாலை குளித்து விட்டு மாடியில் வந்து நின்றாள். இரண்டு நாளாய் பெய்து ஒய்ந்திருந்த மழை, மறுபடி வருவேன் என்பது போல மிரட்டிக் கொண்டு இருந்தது. கூடு கூடாய் சாம்பல் மேகங்கள் கருப்பு வானத்தில் அப்பிக் கிடந்தது. காற்று வீசிய திசைக்கு மேகங்கள் நகர்ந்து, கலைந்து, பிரிந்து சேர்ந்தது.

 

காற்றின் திசைக்கேற்ப பயணத்தை செலுத்தும் பாய்மரங்கள்… மீண்டும் அவளை நந்தாவை நோக்கி செலுத்துவதை உணர முடிந்தது. உலகம் முழுக்க ஒடட்டுமே அந்த நதி… கடலோடு கலப்பது தானே விதி. மெல்ல கண்களை மூடிக் கொண்டாள். மூளையில் இருந்து வார்த்தைகளை இறக்குமதி செய்து, நெஞ்சுக்குழியில் கோர்த்து எடுக்க ஆரம்பித்தாள், யாழினியிடம் பேசுவதிற்கு.

 

“...என் சுவாசக் காற்று

வரும்பாதை பாா்த்து

உயிா்தாங்கி நானிருப்பேன்;

மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலை மீது தீ குளிப்பேன்…

போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…"

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                              9

தின்னரை தடவி நகப் பூச்சை மொத்தமாய் சுரண்டி எடுத்து இருந்தாள் ஆர்த்தி. புது வண்ணத்துக்கு நகங்களை தயார் செய்து காத்திருக்க, ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்த தபஸ்வியை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

 

தனியாக வந்து இருக்கிறாள். அதுவும் ஸ்கூட்டியில் வந்து இருக்கிறாள். அவசரமாய் மடியில் கிடந்த பொருட்களை, எதிரில் இருந்த கூடையில் கிடத்திவிட்டு வாசலுக்கு வந்தாள். தபுவின் முகத்தில் சுரத்தே இல்லை.

 

" ஒய், என்னடி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சு இருக்கே. பாட்டி எப்படி இருக்காங்க." கைப்பற்றி அழைத்துக் கொண்டு ஹாலுக்கு நகர, தபு அவள் கையை ஒதுக்கி விட்டு சிட் அவுட்டில் கிடந்த பிரம்பு நாற்காலியில் சரிந்து கொண்டாள்.

 

எப்போது வந்தாலும், அமரைத் தேடி அலைபாயும் கண்கள் இன்று ஒடுக்கத்திலேயே இருந்தது. அவன் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் கண்களில் எந்த ஆவலும் தேடலும் இல்லை.

 

"தபு, பாட்டி எப்படி இருக்காங்க..? டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாச்சா? நானும் அமரும் நேத்தே ஹாஸ்பிடல் கிளம்பினோம். அதுக்குள்ள அவனுக்கு டிபார்ட்மென்டுல இருந்து கால் வந்திடுச்சு." பக்கத்தில் வந்து தரையில் கை ஊன்றி அமர்ந்தபடி ஆர்த்தியின் அம்மா லதா கேட்க, தபஸ்வி மெல்ல தலை அசைத்தாள்.

 

"இப்போ நல்லா இருக்காங்க ஆன்ட்டி. அனேகமா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவாங்க."

 

"ரொம்ப நல்ல விசயம். அப்போ வீட்டுக்கே வந்து பார்த்துக்கறோம். ஆனால் உன் முகம் ஏன்டா வாடி இருக்கு." என்றபடி அவள் கன்ன கதுப்பை மெல்ல வருடிக் கேட்க, உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அமருக்கு சிரிப்பு வந்தது.

 

"ஒண்ணுமில்லே ஆன்ட்டி. கொஞ்சம் குழப்பம் இனம் புரியாத பயம்."

 

" அது சரி. டாக்டர்கே பயம் வந்தா. உன்கிட்ட வைத்தியம் பார்க்கிற பேசண்ட் நிலைமை என்னாகும் தபஸ்வி..?" அமர் கேட்டபடி தானும் ஒரு நாற்காலியில் வந்து அமர, அப்போதுதான் அவன் முகத்தையே நிமிர்ந்து பார்த்தாள்.

 

" சரிதான், டாக்டர்னா பயப்படவே கூடாதா? நல்ல கதையா இருக்கு. வீட்டில உணர்வு பூர்வமான சுழ்நிலை ஓடிட்டு இருக்கு அமர். அதை எப்படி கையாள்றதுன்னு எல்லோருக்குள்ளும் ஒரு தடுமாற்றம்." என்றவள் நிறுத்தி மெல்ல தயங்கினாள். 

 

"நதிமா, பாப்பாவை கூட்டிட்டு இங்கே வரப் போறாங்க." என்றாள் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல். ஒரு நொடி அங்கே கனத்த மெளனம் ததும்பி வழிந்தது.

 

லதா நெருங்கி அமர்ந்து தபஸ்வியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அந்த தாய்மை ஸ்பரிசத்தில் ஒரு துளி கண்ணீர் பொங்கி மூக்கின் ஓரம் வழிய, அவசரமாய் துடைத்துக் கொண்டாள்.

 

குடும்ப நண்பர்கள் என்பதால் தபு ஆர்த்தியிடம் சொல்லிய விசயங்கள், அத்தனை பேருக்கும் தெரிந்து இருந்தது. காரணம் புரியாமலே வானதியின் தியாகத்தின் மீது மட்டு இல்லாத மரியாதை  அவர்களுக்கும் இருந்தது.

 

"நீ பயப்படாதே தபஸ்வி. நீ சொன்னது எல்லாம் வச்சுப் பார்த்தா உன் நதிமா பேரன்பான மனுசினு தான் தோணுது. கண்டிப்பா உனக்கோ உன் குடும்பத்திற்கோ எந்த வருத்தமும் வர விட மாட்டாங்க." லதா ஆதரவாய் சொல்ல மென்மையாக சிரித்தாள்.

 

"எனக்கு நதிமா'வை தெரியும். என் பிஞ்சு உடம்புல பட்ட அவங்க விரல்களின் ஸ்பரிசத்தை எனக்கு  இப்பவும் அடையாளம் தெரியும். எனக்கே எனக்காக மட்டும்தான் அவங்க அப்பாவை கல்யாணம் பண்ணிட்டாங்க. இருபது வருச தனிமைக்கு பிறகு திரும்பி வர்றாங்க. அதுவும் பாட்டியுடைய ,அப்பாவுடைய பெரும் போராட்டத்தால். 

 

அம்மா நல்லவங்க தான். நதிமாவும் நல்லவங்க தான். என் அப்பாவும் நல்லவர் தான். இந்த மூணு பேர்ல யார் காயப்பட்டாலும் என்னால அதை தாங்க முடியாது. நான் பாப்பாவை வீடியோ கால்ல பார்த்து இருக்கேன். அப்பாவும் அவளை ஸ்டில்ஸ் எடுத்து காட்டுவார். ரொம்ப முன்கோபி மாதிரி இருக்கா. அது தான் ஒருவித குழப்பம், சொல்லத் தெரியாத பயம்." என்று சொல்லி சிரித்தபோது அங்கிருந்த மூவருக்கும் அவள் மீதான மதிப்பும், மரியாதையும் கூடித் தான் இருந்தது.

 

ஆர்த்தி கொண்டு வந்து தந்த ஜூசை மடக்கில் குடித்து காலி செய்து டம்ளரை வைத்தாள். 

 

" நீ நேத்து அனுப்பின நோட்ஸ்'ல நிறைய டவுட்ஸ் இருக்கு. வந்து க்ளாரிபை பண்ணு. நான் அப்பா வர்றதுக்குள்ள வீட்டுக்கு போகணும். அவர் இல்லைங்கிற தைரியத்துல ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்திருக்கேன்." ஆர்த்தியை இழுத்துக் கொண்டு அறைக்குள் நகர்ந்தாள்.

 

  அமர் ஹாலில் வந்து அமர்ந்து டி.வியை ஆன் செய்து, வால்யூமை குறைத்து வைத்தான்.

 

' …பாப்பா கஹத்தே ஹை, படா நாம் கரேங்கா…' என்று  தொண்ணுறுகளின் இளமையில் பாடிக் கொண்டு இருந்தார் அமீர்கான். அவனை அறியாமல் இதழ்களில் ஒரு புன்னகை பூத்தது.

 

'... பாப்பா முன்கோபி.' சற்றுமுன் தபு சொன்ன வார்த்தைகள் அத்தனை மென்மையாக இருந்தது. கண்ணில் பார்த்திராத தங்கையின் கல்யாண குணங்களை ரசிக்கும் மூத்தவளின் பாசமும், அந்த முன்கோபி பாப்பா எப்படி இருப்பாள் என்ற நினைப்பும் முரணாய் ஒரே  நேரத்தில் முளைத்து முறுவலிக்க வைத்தது.

 

தர் கேத்தரினின் கண்கள் பனித்து போய் இருந்தது. உணர்வுகளை கட்டுபடுத்தும் வெள்ளை அங்கிக்கு உள்ளேயும் உணர்வுகளின் ஊசலாட்டம் தெரிந்தது கண்ணீர் வழியே.

 

" ஆனந்தமும், பெரும் துன்பமும் ஒருசேர உணரும் நிகழ்வு இப்போது எனக்கு…" என்றவர், இறுக அணைத்து அவளை தன் இதயத்தோடு தழுவி நின்றார்.

 

இந்த இடமும், இந்த மனிதர்களும், இந்த நிழலும் இல்லாமல் போய் இருந்தால், அவள் உலகம் என்னாகி இருக்கும்..? நன்றி கடன் இமயத்தை விட உயர்ந்தது இல்லையா..?

 

" நல்ல முடிவு வானதி. நான் எப்பவும் சொல்றது தான், உனக்கு உன் கணவனின் அணைப்பு அவசியப்படாமல் இருக்கலாம், ஆனால் யாழிக்கு தகப்பனின் அரவணைப்பு நிச்சயம் தேவை. முரணாக நடந்த சில விசயங்களுக்காக வாழ்க்கை முழுக்க முரண்டு பிடிக்க வேண்டிய தேவை இல்லை. 

 

ஆனால்,இந்த மிசினரிக்கு உன்னை மாதிரி ஒரு நிர்வாகி அவசியம் தேவை. உன்னை முழுக்க விடுவிக்க முடியாது. நீ இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது இங்கே வந்து போகணும்." கைகளை பற்றிக் கொண்டு சொன்ன போது, கண்ணீர் திரை மறைக்க, மெல்ல தலை அசைத்தாள்.

 

வீட்டிற்கு வந்து ராக்கிங் சேரில் சரிந்தபோது, ஒரு குழப்பமும், மனம் முழுக்க பயம் கவ்விய வாயு பிடிப்புமாய் இருந்தது.

 

நான்கு நாள்களாய் இதுபற்றி யாழியிடம் பேசி பேசி நலிந்து போன நினைவு அப்புகிறது.

 

சொன்ன போது விசித்திரமாய் பார்த்தாள்.

 

" எனக்கு அங்கே வர இஷ்டமில்லை மா. எனக்கு நந்தாவை பார்க்க விருப்பமில்லை." ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, டேபிளை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள்.

 

" யாழி… அம்மாக்கு தெரியும். அடுத்து என்ன செய்றதுன்னு. " விவாதம் பண்ணத் தெரியாமல் வானதி மிரட்டுவது போல் ஆரம்பிக்க, எதிரில் வந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அம்மாவை தீர்க்கமாய் பார்த்தாள்.

 

"பிறகு என்னை ஏன்மா கேட்கறீங்க..? என்னை அடிமாடுனா நீங்களே விலை வைங்க. பலி ஆடுனா நீங்களே கத்தியை உயர்த்துங்க. எனக்குன்னு எந்த கருத்தும் இருக்க கூடாதுனா, என்கிட்ட கேள்வி கேட்காதீங்க, கட்டளை மட்டும் இடுங்க." 

 

எங்கு போய் கற்றுத் தொலைத்தது இந்தப் பெண், இப்படி ஓயாமல் பேச..?

 

இரவில் உணவு உண்ணும் போது கூட அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு ஹாலில் சென்று டி.வி.யின் முன் அமர்ந்து கொண்டாள்.

 

அந்த நேரம் நந்தாவின் அழைப்பு வர, எட்டிப் பார்த்துவிட்டு உதடு சுளித்துவிட்டு, வேண்டும் என்றே வானதியை அழைத்துச் சொல்வதை தவிர்த்தாள்.

 

வானதி வந்து முறைத்துக் கொண்டு அழைப்பை எடுத்து, கல்பனாவின் உடல் நலம் விசாரித்து, யாழியை கூப்பிடச் சொல்லி நந்தா கேட்ட போது, ஏதோ சொல்லி சமாளித்து, அத்தனைக்கும் நடுவிலும் மகளை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.

 

பேசி முடித்து எதிரில் வந்து நின்ற அம்மாவிடம் கல்பனாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இல்லை. அந்த இயல்பு வானதிக்கு நெருடலாய் இருந்தது.

 

கால்களை மடக்கி ஏதோ சிந்தனை வயப்பட்டவளாய் சுருங்கி கிடப்பவளின் எதிரில் வந்து தரையில் அமர்ந்தாள். யாழி கண்களை திறக்கவே இல்லை. முந்தானை எடுத்து முகத்தை துடைத்து விட்டுவிட்டு,  மடக்கி இருந்த கால்களை பிரித்து இறக்கி விட்டுவிட்டு, மகளின் மடியில் தலை கவிழ்த்துக் கொண்டாள்.

 

யாழி உதடு கடித்து உணர்வை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். வழக்கமாய் இப்படி  தலை கவிழும்  தாமரை வேலையை யாழி தான் அம்மாவிடம் செய்வாள். இப்போது வானதி மகள் மடியில் அடைக்கலம் ஆனபோது, வருடத் துடித்த விரல்களை மடக்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

 

"யாழி, அம்மாகிட்ட பேசமாட்டியா? நான் என்ன தப்பு செய்தேன்டா..? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை..?"

 

"அதேதான் மா நானும் கேட்கிறேன். நாம என்னம்மா தப்பு செய்தோம்..? எதுக்கு இந்த தண்டனை..?"

 

"யாரும் நம்மை விலக்கி வைக்கல. நான் தான் விலகி வந்தேன் யாழி. இப்போ நானேதான் போக முடிவு எடுத்து இருக்கேன்."

 

"அட போங்கம்மா. மனைவி மேல அதிகாரம் செலுத்தாம இருக்கிறது சுதந்திரம்னு நீங்க சொல்லிப்பீங்க. எனக்கு அது அக்கறை இல்லாத செயல்னு தான் புரியும்.

 

அவர்கூட சண்டை போட எனக்கு எந்த அக்கறையும் இல்ல, ஆனால் அவருக்கு அந்த உயர் மதிப்பான இடத்தை தரவும் எனக்கு இஷ்டமில்லை."

 

வானதி தலையை உயர்த்தி மகளைப் பார்த்தாள். கண்கள் கண்ணீரில் தத்தளித்தது. முகத்தை அழுந்த துடைத்தபடி க்ரில் கேட்டில் தலை சரித்து சிறிது நேரம் நின்றவள் உள்ளே போய் விட்டாள்.

 

இரண்டு நாட்களாய் தாய் மகளுக்கு நடுவில் மௌன ஊஞ்சல் காற்றுக்கு ஆடிக் கொண்டு இருந்தது.

 

உள்ளுணர்வில் ஏதோ உபாதையாய் இருந்தது. நந்தாவிடம் சென்று சேர்ந்து விட வேண்டும் என்று உடலில் ஒவ்வொரு செல்'லும் முடிவெடுத்த பிறகு, யாழியின் இந்த திடமான மறுப்பு வானதியை ஒய்ந்து போக வைத்தது. இத்தனை நாள் காத்திருந்த உள்ளம் இனி மாட்டேன் என்று இவள் மூச்சின் வழி மூளைக்கு செய்தி அனுப்பியது.

 

ஒய்ந்து போனாள் வானதி. உடன் சேர்ந்து காய்ந்தும் போனாள். ஜுரத்தில் அனர்த்திக் கொண்டு படுக்கையில் விழ, மாலையில் வீடியோ காலில் வந்த நந்தா மூக்குறிஞ்சிக் கொண்டு இருந்தது விசித்திரமாக இருந்தது.

 

" என்னாச்சு நந்தா..?"

 

" ஹாஸ்பிடல் வீடு'னு அலைஞ்சதுல கோல்ட் அட்டாக் ஆகி இருக்கு வானு. முடியல." என்றான் டிஸ்யூவால் மூக்கை அழுத்திக் கொண்டு. உண்மையில் இது வானதிக்கு வெகு விசித்திரமாக இருந்தது.

 

ஒருவருக்குள் ஒருவர் கலந்து அடையாளம் தொலைத்து கொண்டிருப்பதாய் தோன்ற, உடல் முடிகள் சிலிர்த்து எழுந்து நின்று அவள் முகம் பார்த்தது.

 

இதையெல்லாம் மற்றவர்களிடம் சொன்னால் புரியுமா..? ஆனால் அவள் சொல்லவும் விரும்பவில்லை. விலை மதிப்பில்லாத இந்த உணர்வை  சொல்லி அதன் வெளிச்சத்தை அவள் குறைக்கவும் விரும்பவில்லை.

 

இன்னொரு முனையில் அம்மாவின் மெளனத்தால் சோர்ந்து கிடந்த யாழிக்கு, அம்மாவின் உடல் நோவும் சேர்த்து உலுக்கி போட்டது.

 

'சீ போ…' என்று ஒதுக்கும் ரகமாக இருந்தால் விட்டுவிட்டு நகர்வாள், இங்கு முரண்பட்டது கோபமும், வெறுமையும் தானே.

 

இடையில் கல்பனா டிஸ்சார்ஜ் ஆன செய்தி கேட்டு மெல்லிய ஆசுவாசமாய் இருந்தது வானதிக்கு. என்றாலும் ஏனோ அன்றாடத்தில் அவள் கலக்க இயலவில்லை. விசை கையில் இருந்தாலும், காற்றாடியின் திசைக்கு கைகள் பொறுப்பாகாது.

 

ஒரு வார தேக்கத்தில், உடம்பு ஒட்டி கிடந்தது. உதடுகள் உலர்ந்து கறுத்து போய் இருந்தன. அதன் பிறகு மகளின் முடிவுகள் மீது ஆதிக்கம் செலுத்த இயலவில்லை. ஆனால் தன் உணர்ச்சிகளை மெளனப் பூட்டு போட்டு சாவியை தொலைத்து இருந்தாள்.

 

கல்லூரியில் சான்றிதழ் வாங்குவதிற்காக சென்ற போது, அம்ரிதா சொன்ன வார்த்தைகள் தான் யாழியின் உணர்வுகளை நெம்பி விட்டது.

 

" யாழி, உனக்கு உன் அப்பா அம்மா சேர்ந்து வாழணும்கிறது. தானே ஆசை. இப்போ அது நிறைவேறும் போது நீ தான் தடையா நிற்கிறே. புரியுதா..?" யாழிக்கும் அது புரிந்து தான் இருந்தது. ஆனாலும் ஏனோ மனம் வீம்பாய் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

 

அம்ரிதா பக்கத்தில் வந்தமர்ந்து தோழியின் சிறுமுகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு, உச்சியில் முத்தம் வைத்தாள்.

 

"ஊருக்கு போ. நீ ஆசைப்பட்ட மாதிரி அப்பா, அம்மாக்கு நடுவிலே உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பாரு. அப்பா கூட சேர்ந்துட்டு அம்மாவை கேலி பண்ணு. அப்பாவோட வயித்தை கட்டிட்டு லாங் ட்ரைவ் போ. சென்னையில மேற்படிப்பு படி. சந்தோசமா இரு. நீ இல்லாம எனக்கு பெரிய வேதனை தான். ஆனால் நீயும் உன் அம்மாவும் படற கஷ்டத்துக்கு இதெல்லாம் எதுவுமில்லை." முடித்தபோது இருவரும் அழுது கொண்டு இருந்தனர். அழுகை கூட ஆனந்தம்தான் பிரசவ வேதனையின் முடிவில் என்பதுபோல், அந்த அழுகையின் இறுதி நுனியில் தான் யாழி சென்னை செல்லும் முடிவை எடுத்து, வீட்டிற்கு வந்து அதை அம்மாவின் முகத்தை பார்க்காமல் அறிவித்தது எல்லாம்.

 

ஆசுவாசமாய் இருந்தது, அதே நேரம் எப்படி இந்த விசயத்தை சந்திக்க போகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது.

 

வீட்டில் இருந்த பொருட்களை மிசனரிக்கு தந்துவிட்டு, வந்தால் தங்குவதற்கு இரண்டு அறைகளையும், அத்தியாவசிய சாமான்களையும் போட்டு பூட்டி வைத்து விட்டாள்.

 

மம்தா யூனிவர்சல் சோக கீதமான கண்ணீரை பாடி வழியனுப்பி வைத்தாள், வலியை அனுப்ப வழியற்று தவித்தாள். ஏனோ பிரிவு எல்லா மொழிகளிலும் வலிக்கிறது. உரசல்களோடு இருந்தாலும், கடந்து போகின்றதை இதயம் அனுமதிப்பதில்லை. துண்டு நிழல் போலவாவது காலுக்கடியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.

 

" இதப் பாருமா, நாம அங்கே தனியாத்தான் இருக்கப் போறோம். சந்தியா ஆன்ட்டிகிட்ட சொல்லி வீடு பார்க்கச் சொல்லிடு. நான் அந்த வீட்டில நந்தா கூட இருக்க மாட்டேன்." சம்மதம் சொன்ன நாளில் இருந்து யாழியின் குரலில் இனம் தெரியாத பிடிவாதம் வந்து உட்கார்ந்து இருந்தது.

 

இதை நந்தாவிடம் கேட்டபோது, புருவத்தை சுறுக்கி அலைகற்றை வழியாய் முறைத்தான்.

 

" என்னை மொத்தமா வித்துட்டியா வானு..? நான் உன்மேல உரிமையில இல்லாது போனாலும்,அன்பின் அடிப்படையில் கூட அதிகாரம் செலுத்த கூடாதுனு நினைக்கிறியா.?"

 

"நந்தா…" என்றாள் தவிப்பின் உச்சத்தில்.

 

"இங்கே முதல்ல புறப்பட்டு வா. நம்ம வீட்டை பெரிதாய் எடுத்து கட்டி இருக்கோம். அதை விட விசாலமாய் இதயங்கள் இருக்கு. உனக்கா இந்த கூட்டில் இடமில்லாம போகப் போகுது…" என்று முடித்தபோது நெகிழ்ந்து இருந்தது குரல்.

 

"யாழி…" என்றாள் தவிப்பாக.

 

"பாப்பாவை நான் பார்த்துக்கறேன். முதல்ல இங்கே வாங்க. நான் வந்து அழைச்சிட்டு வர்றேன்." என்றவனை வன்மையாக மறுத்தாள். ஏனோ வலுவில் பிரிந்து வந்த தானே அவனிடம் திரும்பச் செல்வது தான் முறை என்று மனசு நியாயம் பேசியது.

 

தயக்கம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, என்று ஆயிரம் விசயங்கள் இருந்தாலும், யாழி என்ற பெரும் புயல், அங்கே சுருட்டி தின்னாமல் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் இதயத்தில் இல்லாமலும் இல்லை.

 

அத்தனை யோசனைகளையும் கைப்பையில் அடக்கிக் கொண்டு, ப்ளைட்டில் செல்லலாம் என்ற யாழியின் பிடிவாதத்தை மறுத்துவிட்டு, ஹவுராவில் ஸ்டேசனில் விழுந்த பச்சை கொடியசைப்பில் அவள் பயணம் சென்னையை நோக்கி ஆரம்பமானது.

 

இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். ரத்தம் சூடாகி, இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது.

 

சரியாய் இருபது வருடங்கள் … நந்தா என்ற விருட்சத்தின் வேர், அவள் எங்கு போனாலும் அவளை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்பதிற்கு இது தான் ஆதாரம். மடியில் இருந்த கைப்பையில், நகத்தால் நந்தா என்று கீறினாள். 

 

சொல்லாலும், செயலாலும் நந்தாவை கீறி கிழித்து எறியப் போகிறவள், எந்த அரவமும் இல்லாமல் கடந்து கொண்டிருந்த கொல்கத்தாவை கண்களால் தேக்கியபடி அமைதியாக எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.

 

"...உலகம் எனக்கென்றும்

விளங்காதது உறவே எனக்கின்று

விலங்கானது அடடா முந்தானை

சிறையானது இதுவே என் வாழ்வில்

முறையானது

 

பாறை ஒன்றின்

மேலே ஒரு பூவாய்

முளைத்தாயே உறவுக்கு

உயிர் தந்தாயே 

 

உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தேன் நானே உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இடு விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இடு…"

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                            10

சென்ட்ரலில் வந்து இறங்கிய போது மணி ஒன்பதை தொட்டு இருந்தது. ஒரு நாளை தாண்டிய பயணம்.

 

நடைபாதையில் இறங்கி நின்றபோது, கால்களில் ரயிலின் தடதடப்பு மிச்சம் இருந்தது போல் இருக்க. இரவிலும் ரயில் நிலையம் விழித்திருந்தது.

 

அவளையும் மறந்து, கண்கள் நந்தாவோடு கடைசியாய் அமர்ந்திருந்த இடத்தை இதமாய் வருடிய நிமிசம், தொண்டை முடுச்சு ஏறி இறங்கியது.

 

மறுபடியும் அங்கே சென்று ஒரு நொடி அமர்ந்து கொள்ள இதயம் தவிக்க, யாழியை திரும்பிப் பார்த்தாள்.

 

குழப்பமான முகத்தோடு ஒருவரையும் தெரியாத அந்த இடத்தில் ஒவ்வொரு முகமாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

நந்தாவுக்கு தகவல் தெரியும். கண்டிப்பாக வந்துவிடுவான். சந்தியாவும் சும்மா இருக்க மாட்டாள். வந்துதான் விடுவாள். உலக அதிசயமாய் இன்று ரயில் முன்கூட்டி வந்து சேர்ந்து இருக்கிறது.

 

வானதியின் கண்கள் காலியாக கிடந்த அந்த இருக்கையிலேயே பதிந்து இருந்தது. உணர்வுகளையே வென்றவள், நினைவுகளிடம் டெபாசிட் இழந்து இருந்தாள்.

 

" யாழி …"

 

" ம்."

 

"இப்படி கொஞ்ச நேரம் இரு. நான் அடுத்த ப்ளாட்பாரத்துல சந்தியா வந்து வெயிட் பண்றாளானு பார்த்துட்டு வந்துடறேன்.ரயில் முன்கூட்டியே வந்துடுச்சுல.அவள் அதை கவனிக்காம பராக் பார்த்துட்டு நிற்பாள்."வானதி சொன்னது கொஞ்சம் விசித்திரமாய் இருந்தாலும் தலையாட்டினாள்.

 

வேகமாய் நடையை எட்டிப்போட்டு கிட்டத்தட்ட அந்த இருக்கையை நோக்கி ஓடியவள் இருக்கையின் பக்கவாட்டில் நின்று மெல்ல மூச்செடுத்தாள்.

 

நந்தா கைகளைப் பற்றியது, மீரா பொம்மையை தந்தது, எழுந்து போனது… ரேணிகுண்டாவில் இருந்து அழைத்த போதும், அவன் இங்கேயே அமர்ந்து கிடந்தது… அடுக்கடுக்காய் அத்தனையும் விரிய, மெல்ல இடம் மாற்றி நந்தா அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தாள். அவன் மடிமீதே அமர்ந்தது போல் மெல்லிய கூச்சம் இடுப்பிற்கு கீழ் பரவ, வேகமாய் எழுந்து தான் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

மெல்ல பக்கவாட்டில் ஊன்றி இருந்த கரத்தை நீட்டி, நந்தா அமர்ந்திருந்த இடத்தை வருடித் தந்தாள். அழுகை தொண்டைக்குள் வெடித்து, உள்ளுக்குள் கரைந்தது. கண்களை மூடிக் கொண்டவளுக்கு, அத்தனையும் மறந்து போனது… யாழி உட்பட.

 

ணிக்கட்டை திருப்பி பார்த்த யாழிக்கு, மெல்லிய பசி அடிவயிற்றை நிமிண்டியது. புது இடத்திற்கு போனதும் அத்தனை இயல்பாய் எடுத்து உண்ண முடியுமா என்ற அவசர கவலை ஒருபக்கம் என்றால், இந்த அம்மா எங்கே போனார்' என்ற கிளை கவலை வேறு வந்திருக்க, கண்களை சுழற்றி பார்த்தாள். அம்மாவின் மெஜந்தா வண்ண புடவையே தென்படக் காணோம்.

 

ராட்சத பீமிற்கு பின்பக்கம் நாற்காலியில் அமர்ந்து, தன்னை மறந்து கண்களை முடி இருந்தவள், கண்டிப்பாய் தென்பட்டிருக்க மாட்டாள் தான்.

 

டிராலியின் மீது லேசாய் பின்பக்கம் படிய அமர்ந்து, இரு கைகளாலும் டிராலியின் பக்கங்களை பற்றிக்  கொண்டு, வந்து போகும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் வந்து மோதியது அந்தக் குரல்…

 

"யாழி மா…" அவசரமாய் திறந்திருந்த கண்களை மூடிக் கொண்டாள். அடையாளம் தெரிந்த அந்தக் குரலின் பேரன்பு, அவளை அடியோடு வென்றாலும், இத்தனை நாள் எனக்கு நீயில்லையே' என்ற வீம்பு அவளை விம்ம வைத்தது. ஆயிரம் காரணம் தான் இருக்கட்டும், ஒரு தகப்பனின் ஸ்பரிசத்துக்கு ஏங்கும் தன் மகவை உணராதவன், என்ன சொன்னாலும் இழந்த காலம் திரும்ப வருமா..?

 

"யாழி மா…" இன்னும் குரல் பக்கத்தில் கேட்டது. அவசரமாய் அழுகையை அடக்கி முகத்தை இடப்புறமாய் திருப்பிக் கொண்டாள். உள்ளம் துடித்தது. அதை பிரதிபலிப்பது போல் உதடுகள் நடித்தது. கண் முழுக்க கண்ணீர் நிரம்பி இருக்க, இமை திறந்தால் விழி வெள்ளம் நிச்சயம் என்பதால், உடைந்து போய்விடுவோமோ என்று வெகுவாய் பயந்தாள்.

 

நொடிகள் சரிய, அடிகள் சமீபிப்பது நன்றாக உணர முடிந்தது. இந்த நிமிசத்தை சந்திக்காமல், எழுந்து ஓடி விடலாமா' என்று மூளை தப்பு தப்பாய் யோசனை சொல்ல, நகர முடியாத பாறையாகி இருந்தாள்.

 

பக்கத்தில் மூச்சு சத்தம் கேட்டது. முதன் முறையாக தகப்பன் வாசனை அடித்தது. ஒரு கரம் நீண்டு, அவள் இடக் கன்னத்தை பற்றி தன் புறம் திருப்ப விளைந்தது.

 

அழுகையும் வீம்பும் ஒரு சேர வெடிக்க, அந்த கரத்தை வேகமாக தட்டி விட்டாள். இமை திறக்காமல் கிடந்த போதும், கன்னம் நனைந்து கொண்டு இருந்தது.

 

" யாழி மா… அப்பா டா. என்னை பார்க்க மாட்டியா..? " நந்தாவின் குரல் அவனுக்கே அடையாளம் தெரியவில்லை. 

 

மூடிய கண்களோடும், துடித்த அதரங்களோடும் வேகமாய் மாட்டேன் என்று தலை அசைத்தாள். அவள் குதிரைவால் அவளை முந்திக்கொண்டு மறுப்பு சொல்லி குதித்தது. நெற்றியில் கொட்டிக்கிடந்த முடியை ஆசையாய் ஒதுக்கி விட்டான். எத்தனை நாள் இதற்கு ஏங்கி இருக்கிறான்.

 

லேசாய் கால்நீட்டி டிராலியில் அமர்ந்து இருந்தவளின், எதிரில் வந்து நின்று முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

" அப்பா எந்த தப்பும் செய்யலடா." குரல் கெஞ்சியது.

 

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன், மூடிய இமையில் மென்மையாய் முத்தமிட, சட்டென்று விழி பூட்டு, முத்தச் சாவிக்கு மொத்தமாய் விடுபட்டது.

 

கொட்டிய கண்ணீரோடு முதன் முறையாய் தகப்பனைப் பார்த்தாள். அந்த உயரமும், நிகு நிகுத்த நிறமும், முகத்தில் ஒளிர்விட்ட தேஜஸ்சும், இமைக்காமல் அப்படியே பார்த்தாள். அத்தனை குற்றச்சாட்டையும் மறந்து சத்தியமாய் மனசு கர்வமாய் உணர்ந்தது, இவன் என் தகப்பன் என்று…

 

"எதுக்கு என் பாப்பா, அப்பாவை பார்த்ததும் அழறாங்க…" மெல்ல யாழியின் தலையோடு மோதி, ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து கர்சிப் எடுத்து முகத்தை துடைத்து விட்டான் மறுப்பு காட்டி முகத்தை இப்படி அப்படி திருப்பி போக்கு காட்டினாள். 

 

" எனக்கு உங்களை பிடிக்கல." என்றாள் மூக்கு நுனி விடைக்க.

 

" இனி பிடிக்கும். யாழி பாப்பா அப்பா மாதிரி நல்ல  உயரம்னு நினைச்சனே, அம்மா மாதிரி நார்மல் தானோ..?" என்றான் மெல்ல தாடையை வருடிக் கொண்டு.

 

வேகமாய் டிராலியில் இருந்து எழுந்து நின்றாள். நந்தாவே தான் அச்சு அசலாய். நிறம் மட்டும் வானதியைப் போல் பொது நிறம். ஆனால் அந்த முகலட்சணம் கண்டு, கொள்ளை கொள்ள இரு கண்கள் போதாது. நந்தாவின் தோளுக்கு உயர்ந்து நின்றாள்.

 

  மெல்ல தோளில் கை போட்டுக் கொண்டான். இந்த முறை அவள் கைகளை விலக்கவில்லை. அமைதியாக எங்கோ வெற்த்துக் கொண்டு நின்றாள்.

 

     ‘’ அம்மா எங்கே யாழி..?’’

 

 ‘’ சந்தியா ஆன்ட்டியை தேடிட்டு போய் இருக்காங்க.’’ குரல் கிணற்றுக்குள் இருந்து வந்தது.  சட்டென்று நந்தாவின் உணர்வு வெடித்தது. வானதி எங்கு போய் இருப்பாள் என்று உணர முடிந்தது. வேகமாய் பைகளை அள்ளிக் கொண்டான்.

 

  ‘’ என் கூட வா, யாழிமா.’’ என்றபடி நடக்க, யாழி சின்ன இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.

   

      மனிதர்களை கடந்து நெரிசலை விளக்கி  நடைமேடை கூரைகளையும், ராட்சஷ பீம்களையும் நடையால் பின் தள்ளி… தூரத்தில் இருந்து பார்த்த போதே, வானதியின் உருவம் கண்ணில் இருளை தாண்டி படிந்தது.

  

   கண்களை மூடி லேசாய் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மெல்ல நடந்து போய் அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். மார்புக்கு குறுக்காய் கைகளை கட்டிக் கொண்டான். சட்டென்று ஏற்பட்ட அசைவில் கண்களை திறந்து பார்த்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். கண்களில் எந்த ஆச்சர்யமோ, அங்கலாய்ப்போ இல்லை. காணாமல் கண்ட பெரும் ஆவல் இல்லை. காத்திருப்பின் கோபம் இல்லை. 

 

  ஒருவராக ஒருவர் மாறிப் போய் இருந்ததால், ஆழத்தை விழுங்கிய ஆழ்கடல் போல் இருந்தது அவர்களின் உணர்வு. 

 

   ‘’ நந்தா…’’ என்றாள் ஆவியெல்லாம் வார்த்தையில் திரட்டி, கண்களை மூடி மெல்ல தலையசைத்தான்.

 

 ‘’ உங்களுக்கு வயசே ஆகல நந்தா. நான் விட்டுட்டு போனா அதே இடத்தில தான் இருக்கீங்க.’’ என்றாள் புன்னகையுடன்.

 

  ‘’ விட்டுட்டு எங்கே போனே..? எனக்குள்ள தானே கலந்து போயிட்டே. செம்மண்ணில் இருந்து சிகப்பை பிரிப்பதை விட, கடுமையானது என்னில் கலந்த உன்னை பிரிப்பது. என்ன, அங்காங்கே லேசா நரை இருக்கு. அதுக்கு அர்த்தம் வயசாயிடுச்சுன்னு இல்ல, நமக்கு அனுபவம் கூடியிருச்சுன்னு அர்த்தம்.’’ இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். யாழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். எத்தனை பரவசம் அம்மாவின் முகத்தில். இத்தனை காதலை தருகிறாள் என்றால், நந்தா சாமானிய ஆள் இல்லைதான். தன்னையும் மறந்து போய், தங்களையும் மறந்து அமர்ந்திருந்த இருவரின் காதல் மோனத்தை கலைக்க விரும்பாமல், அமைதியாக அந்த காட்சியை தன்னுடைய அலைபேசியில் நிழற்படமாய் அடைத்துக் கொண்டு நின்றாள்.

 

  கூவிக் கிளம்பிய ரயில் பறவை, அவர்களை குலுக்கி எழுப்பி விட்டது. தங்களையே பார்த்துக் கொண்டு நிற்கும் மகளை நோக்கி கரத்தை நீட்டி பற்றி இழுத்து தன் அருகில் அமர வைத்தாள். அந்த இருக்கையில் இடைவெளி விட்டிருந்த வாழ்க்கை, அதே இருக்கையில் மூவரையும் இணைத்தும் வைத்து இருந்தது.

 

  காற்றின் திசைதேடி தத்தளித்த பாய்மரங்கள், மெல்ல தன் நிலைக்கு திரும்பி சீராகி இருந்தது. நீண்ட பெருமூச்சு ஏனோ மூவருக்கும் ஒருசேர வந்தது. இனி இந்தப்பயணம் என்ன தரப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், அதை சேர்ந்து அனுபவிக்க ஒரு அருகாமையை தந்து இருந்தது. எழுந்து கொண்டார்கள். மகளின் கையைப் பற்றிக் கொண்டே வந்தான். ஏனோ உரசலில் பற்றிக் கொள்ளும் நெருப்பை போல, ஒற்றை நொடியில் நந்தாவுக்குள் பற்றி எரிந்த பேரன்பின் நெருப்பில், யாழியால் இயல்பாக இணங்க முடியவில்லை.

 

    பசிக்குது’ என்று உரிமையாய் சொல்ல இயலவில்லை. அவன் புஜத்தை பற்றிக் கொண்டு நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. அத்தனை உரிமையும், அளவில்லாத ஏக்கமும் இருந்தும், ஏனோ மனது ஓயாமல் பேயிரைச்சல் போட்டது.

 

    காரில் ஏறியது முதல் யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. புது உணர்வை எப்படி கையாள்வது என்று தடுமாற்றத்தோடு அமர்ந்து இருந்தாள் வானதி. நந்தாவுக்கு சாதுர்யனை மகள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறாள் என்ற குழப்பமே மிகுத்தமாக இருந்தது. ஆனால் இனி என்ன நடக்குமோ என்று கவலை கொள்ளவெல்லாம் அவகாசம் இல்லை. 

 

 இரவின் அரவம் குறைந்த சாலையில் மூவரும் வேறு வேறு மனநிலையில் பயணம் செய்தபடி இருந்தனர். அது ஒருவித இறுக்கமாக இருந்தது. அதை நந்தாவேதான் உடைத்து எறிந்தான்.

 

   ‘’ சந்தியாவை நான் தான் வரவேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். உன் ப்ரெண்டை பார்த்ததும் மனசு, அவளோட போக முடிவு செய்தாலும் செய்திடும் இல்ல..?’’ என்றான் சிரித்தபடி.

 

    பதிலுக்கு சிரித்தாள். இதையும் தான் முன்பே யூகித்து இருந்தேன், என்ற தங்கள் மனபொருத்தத்தை வியந்து கொள்ளக்கூட ஒருவித சங்கோஜமாக இருந்தது.

 

   ‘’ விக்கி, வீணா எல்லாம் நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஓடி வந்துடுவாங்க. எப்போ எப்போனு காத்துட்டு இருக்காங்க.’’

 

   ‘’ ம்.’’

 

   ‘’ அம்மா நேற்றில இருந்து, தரையில இல்ல. பேத்திக்காக பார்த்து பார்த்து ஏதேதோ செய்துட்டு, சின்னப் பொண்ணு மாதிரி ஓடியாடி வேலை பார்த்துட்டு இருக்காங்க. ‘’

 

 அவன் பாதையிலும் வார்த்தையிலும் கவனமாக இருந்தான். மிருதுளாவையோ, அவள் குழந்தைகளையோ பற்றி ஒற்றை வார்த்தை பேசாமல் வந்தான் வெகு கவனமாக. லேசான பெருமூச்சுடன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

  தள்ளி இருந்த நிமிசம் வரைக்கும் நந்தா அவளுக்குரியவனாக மட்டுமே இருந்தான். ஒரு உலகத்தில் அவளும் நந்தாவும் மட்டுமே நீக்கமற நிறைந்து இருந்தார்கள். ஆனாலும் இனி அந்த உலகத்தில் தன்னைப் போலவே சம உரிமை கொண்ட இன்னொருத்தியையும் சந்திக்க வேண்டும். சிந்தனையில் ஒதுக்கியது போல், நிஜத்தில் அவளை ஒதுக்க முடியாது.

’’ பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால், 

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி…  அதுதான் காதலின் சன்னிதி…’’

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                          11

 

கே.கே நகர் நுழைந்து வண்டி அவர்களின் வீட்டின் முன்னாக சறுக்கிக் கொண்டு நின்றது. ஒட்டுமொத்தமாய் அத்தனை நினைவுகளும் கொத்து கொத்தாய் பூத்தது. நிறைய மாறி இருந்தது வீடு. இரண்டு அடுக்குகளில் தனி வில்லாவாக நின்றது. நல்ல பொருளாதார வளர்ச்சி கண்கூடாக தெரிந்தது. வாசலிலேயே கல்பனா ஸ்டிக்கோடு காத்திருந்தார். 

 

  மூப்பு முரட்டுத்தனமாய் அவர் மீது கால் நீட்டி, கை நீட்டி படர்ந்திருந்தது. ஆஜானுபாவம் எல்லாம் வடிந்து போய், எலும்புக்கும் தோலுக்கும் நடுவில், தசை என்ற அடையாளமே சுத்தமாக இல்லை. லேசாய் கூன் தட்டி இருந்தாலும், ஊன்றுகோல்  நன்றாக நிற்க வைத்து இருந்தது.

  

   மிருதுளா கூட கொஞ்சம் பின் தங்கி காத்திருந்தாள். வண்டியை விட்டு இறங்கியதும், இத்தனை நேரத்து குழப்பம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக, ஓடி வந்து கட்டிக் கொண்ட வானதி, தன்னை மறந்து கல்பனாவின் தோளில் முகம் சாய்த்துக் கொண்டு கண்ணீர் விட, மிருதுளாவிற்கே அந்தக் காட்சி இதயத்தை பிசைந்தது.

 

  ‘’ என் சீதை, அயேத்தியா திரும்பினாள்.’’ கல்பனா விம்மலோடு வெடிக்க, தள்ளி நின்று கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் நந்தா.

   

 ‘’நதிமா…’’ தவித்தபடி ஓடி அணைத்த தபஸ்வியை கண்களால் அளவெடுத்தாள் யாழி. மிருதுளாவையும், நந்தாவையும் பிசைந்து செய்த நிறத்தில் இருந்தாள். அழகும் கூட. உதட்டை பிதுக்கிக் கொண்டாள். அந்த பிஞ்சு உதட்டின் பொறாமை அழகாக இருந்தது.

 

   ‘... மக்கு  மாதிரி இருக்கா. இவ என் அக்காவாம்.’ 

 

 ‘’ வாங்க.’’ என்றாள் மிருதுளா. நிச்சயம் அதற்கு பின்னால் ஒரு பெரும் உணர்வு போராட்டம் இருக்கும் என்று வானதிக்கு தெரியாதா..? ஆனால் காலத்தின் கட்டாயம்  அவளுக்கும் புரிந்தே இருந்தது. எல்லோரும் உள்ளே நகர, யாழி மட்டும் அப்படியே நின்றாள். 

 

  நான்கு அடி எடுத்து வைத்து உள்ளே நடந்தவன், மெல்ல திரும்பி பார்த்தான் நந்தா. தயக்கமும், குழப்பமுமாய் நின்றவளின் அருகில் வந்து வலக்கையின் மணிக்கட்டை பிடித்துக் கொண்டு அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

 

   நாகரீகமும் விஸ்தீனமுமான ஹால். சட்டென்று மனசுக்கு பிடித்தது. சோபாவில் அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மெல்ல முகம் நிமிர்த்தி பார்த்து, சினேகமில்லாமல் சிரித்தான். எழுந்து இவர்களை நோக்கி நடந்து வந்தான். அப்படியே நந்தா… அங்க அசைவில், சிரிப்பில், சிகையில், நாசிக் கூர்மையில், உயரத்தில்…

 

  சற்றுமுன் தான்தான் தகப்பனை முழுசாய் நகலெடுத்து இருக்கிறோம் என்று நிமிர்ந்த கர்வம், மெல்ல சரிய ஆரம்பிக்க, யார் இவன்..? அத்தை, அல்லது சித்தப்பாவின் பிள்ளையோ..? அவர்களை வீடியோ காலில் சிலமுறை பார்த்து இருக்கிறாளே..! அப்படியென்றால் இவன் யார்..? பத்து அடி நடந்து அவன் இவர்களை நெருங்கும் முன், மனம் பல கேள்விகளை கேட்டு மடிந்து இருந்தது.

 

 ‘’ ஹாய் சித்தி வாங்க.’’ என்றான் வானதியை நோக்கி.

 

 ஒரு நொடிதான். யாழியின் உடலில் இரும்பை காய்ச்சி வார்த்தது போல், ஓரு இறுக்கம் உடல் முழுக்க ஓடியதை, பற்றிய இருந்த கரத்தில் நந்தா உணர்ந்தான். மெல்ல அந்த கரத்தை அவனிடம் இருந்து உருகிக் கொள்ள அவள் எத்தனித்த போது, நந்தாவின் உயிரே கரைந்தது போல் இருந்தது.

 

   இன்னும் இன்னும் அவன் இறுக்கம் கூட்ட, அவள் மூர்க்கம் அதிகமானது.

 

  ‘’ துர்யன்…’’ அப்பாவின் அழைப்பிற்கு அருகில் வந்தான்.

 

‘’ யாழிமா, இது சாதுர்யன். உன்…னோட தம்பி.’’ நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகமே கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணீரும் ஏமாற்றமும் கண்களை அடைத்து இருந்தது. இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. நந்தா மீது கோபம் வந்த நிமிசம் கூட அவன் சந்தர்ப்ப கைதி என்றுதான் நினைத்து இருந்தாள், இந்த நிமிசம் அவன் மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக, நீசனாக அவளுக்கு தெரிந்தான்.

 

  அடி முதல் நுனிவரை ஏமாந்து போனது தன்னைப் பெற்றவள் மட்டும் தான்.இளமையை சில நாள் இந்த மனிதன் களவாடியதிற்காக கனவில் கூட காமுற மறந்து வாழ்ந்த பெரும் யோகி..!

 

 கோபமும், ஆத்திரமுமாக ஆங்காரமாய் கையை உதற, நந்தாவின் கரங்கள் விடுபட்டது. அத்தனை பேரும் அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, அம்மாவின் முன்னே போய் நின்றாள். வானதியின் இதயம் திக் திக்’ என்று திக்கின்றி அடித்துக் கொள்ள,  மகளின் கரத்தை பற்றிக் கொண்டு, மெல்ல வேண்டாம் என்பதுபோல் தலையசைத்தாள்.

 

‘’ ஓ..! அப்போ என் அம்மா மட்டும் தான் சன்யாசி. காம பேத தண்டத்தை, இந்த தண்டத்துக்காக முழுசாய் தியாகம் பண்ணிட்டு இருந்திருக்காங்க. இவர் குடும்ப வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் தான் வாழ்ந்து இருக்காரு. இந்த ஒரு தென்னை மரம் தானா, இல்ல உள்ளே பனையும், ஆலமரன்னு ஏழெட்டு பதிங்கிட்டு இருக்கா மிஸ்டர் நந்தா…’’  

 

   ‘ இவளா அந்த யாழி..! கனிவும், குழந்தை முகமுமாய் தன்முன்னே பேசக் கூட தயக்கம் காட்டிய அந்த சிறு பெண்ணா இது..?  உக்கிரத்தில் காளி போல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள். சுரு சுரு’வென ஏறிய கோபத்தை, முஷ்டியை மடக்கி துர்யன் காட்ட, நிலைமையின் வீரிய வேகத்தை பார்த்து, வேகமாய்  வந்து மகனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் மிருதுளா.

 

  ‘’ அம்மாடி…! இதெல்லாம் நீ புரிஞ்சுக்க இன்னும் காலம் பிடிக்கும். இங்கே யாரும் குற்றவாளி இல்ல.’’ கல்பனா தளர்ந்து போன கரங்களால் யாழியை பற்றிக் கொண்டு சொல்ல, வேகமாய் ஒதுக்கி விட்டாள். 

 

   ‘’ உண்மைதான் நந்தா மா. இங்கே யாருமே குற்றவாளி இல்ல. ஆனால் என் அம்மா மட்டும் தான் ஏமாளி. அதான் ஊருக்கே தெரிஞ்சிருக்கு.’’ என்ற குரலில் அப்படியொரு ஆற்றாமை தெறிக்க, கல்பனா மட்டுமல்ல, அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள்.

 

  ‘ அதென்ன நந்தா மா..! இருபது வருடமாய் தவமாய் தவமிருந்து, இந்த நாளும், இந்த நிமிசமும் வந்து சேராதா என்று நின்ற அந்த முதியவளை, பாட்டி’  என்ற தகுதிக்கு கூட ஏற்றவளில்லை என்று சொல்லாமல் சொல்கிறாளா..? கல்பனாவின் கண்களில் கண்ணீரும், இதயத்தில் ரத்தமும் கசிந்தது.

 

   ‘’ யாழி, பொறுமையா இரு. அப்புறம் பேசிக்கலாம்.’’ வானதியின் குரலில் கண்டிப்பு ஏற, கைகளை கட்டிக் கொண்டு பேசாமல் நின்றாள். 

 

 சூழ்நிலை ரசபாசமாக ஒருவர் முகத்தை மற்றவர் நிமிர்ந்து பார்க்க சங்கடமாக இருந்தது.

 

  ‘’ நீ இப்படி இன்னொரு பிள்ளையோட வந்து நினறிருந்தா, இவர் உன்னை ஏத்துட்டு இருப்பாராமா..?’’ வார்த்தைகளை முடிப்பதிற்குள் வானதியின் கரங்கள், வேகமாக யாழியின் கன்னத்தில் இறங்கி இருக்க, 

   

  ‘’ வானதி…’’ நந்தா கோபமாக கத்த, விரல் பதிந்த கன்னத்தை தடவியபடி நந்தாவை முறைத்துப் பார்த்தாள்.

 

 ‘’ அவங்க எங்கம்மா. என்னைத் தானே அடிச்சாங்க. நீங்க யார் எங்க வாழ்க்கையிலே..? இத்தனை நாள் எங்கே இருந்தீங்களோ, அங்கேயே நில்லுங்க.’’ என்றாள் கண்ணீர் தெறிக்க. 

 

 குன்றிப் போனான் நந்தா. மிருதுளாவின் கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டே இருந்தது. நந்தா படும் அவமானத்தை பார்த்து ஒருபக்கம் இதயம் விண்டு போனாலும், இன்னொரு பக்கம், கட்டிய கணவனுடன் முறைப்படி பெற்ற பிள்ளையை பார்த்து ஒரு சிலுவண்டு கேள்வி கேட்கிறது..! இதென்னா நியாயம்..? என்ற நியாயமான கோபமும் வந்தாலும், வானதியின் முகத்தை பார்த்தால் எதுவும் பேசத் தோன்றாது. ஆனால் கண்ணீர் தன்னால் வழிய, வேகமாய் முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் பெற்ற பிள்ளைகள் இரண்டும் ஓடோடி வந்தார்கள் பதறிக் கொண்டு.

 

  ‘’ நீயேன்மா அழறே..! உனக்குத் தான் இங்கே முழு உரிமையும் இருக்கு.’’ துர்யன் யாழியை முறைத்துக் கொண்டே சொல்ல, விசயம் வேறுமுகம் பூணுவதை அறிந்த நந்தா, வானதியை நிமிர்ந்து பார்த்தான். அவள் புரிதலோடு அவன் முகத்தை வெறுமையாக  மறு பார்வை பார்த்தாள்.

 

   ‘’ தபு, வானுமாவை இரண்டாவது மாடிக்கு அழைச்சிட்டு போ.’’ என்றான் மெல்லிய குரலில்.

 

  மகளை இழுத்துக் கொண்டு படியேறினாள். மனம் முழுக்க வேதனை மட்டும் தான் நிரம்பி வழிந்தது. முதல் மாடியில் நந்தாவின் அறையைக் கடந்து இடப்பக்கம் திரும்பிய போது, ஏனோ மனசு பழைய நினைவுகளில் நடையை தேக்கியது. ஆனால் இரும்பு போல இறுகி நின்ற யாழியை இழுத்துக் கொண்டு  நடப்பது பெரும் கஷ்டமாக இருந்தது.

 

  கண் மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டே இருந்த நந்தா தளர்ந்து போய் சோபாவில் சரிந்தான். இத்தனை நாள் எந்த சொர்க்கத்திற்கு காத்திருந்தானோ, எந்த மகளின் அரவணைப்புக்கு தவமாய் கிடந்தானோ அந்த ஸ்பரிசம் வந்த வேகத்தில் அவன் கைவிட்டுப் போனது.

 

   ‘’ அப்பா..’’ என்று சொல்லிக் கொண்டு அருகில் வந்த துர்யனை நிமிர்ந்து பார்த்தான்.

 

   ‘’ ப்ளீஸ் கண்ணா, மெல்ல மெல்ல எல்லாம் சரியாகும். அதுவரைக்கும் யாரும் எதுவும் பெரிசா பேச வேண்டாம். பாப்பாக்கு வானதிதான் உலகம். அவளால சில விசயங்களை ஏத்துக்க முடியல. ‘’ என்றான் தரையை பார்த்துக் கொண்டே.

 

    ‘’ ஆனால், இதுல நம்ம தப்பு என்னப்பா..?’’ என்றான் கோபம் கொப்பளிக்க.

 

   சட்டென்று நிமிர்ந்து பார்த்த நந்தா, அருகில் வந்தான். பார்வையிலும், குரலிலும் ஒரு தீர்க்கம் தெரிந்தது.

 

 ‘’ அந்த நம்ம’ள்ல எப்பவும் யாழியும், வானதியும் இருக்காங்க துர்யன். உனக்கும் தபுவுக்கும் இருக்கிற அத்தனை உரிமையும் யாழிக்கு என்கிட்ட இருக்கு. அவளுடைய நோக்கம் என்னை காயப்படுத்தறது தான். அதுல தவறுதலா சிலநேரம் உங்கள் மேல பட்டா, அந்த குழந்தையோட மனநிலையை புரிஞ்சுகிட்டு யாரும் யாழியை காயப்படுத்த கூடாது.’’ என்றான் எல்லோருக்கும் சேர்த்து. மிருதுளாவிற்கு புரிந்தது அது தனக்கும் சேர்த்து தான் என்று.

 

 ‘’ மிருது, அவங்க ரெண்டு பேருக்கு சாப்பாடு தபுக்கு கிட்டே கொடுத்து அனுப்பு.’’ என்று விட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

      மிருதுளா சப்பாத்தியும், குருமாவும் ஹாட்பேக்கில் வைத்து தந்தாள்.

     

    ‘’ தபு, கொஞ்ச நேரம் அங்கே இருந்து பேசிட்டு வா. உடனே வந்துடாதே.’’ என்று சொல்ல, தலையாட்டி விட்டு படியேறினாள்.

 

 இந்த இரண்டாம் தளத்தை வானதியை யோசித்து தான் நந்தா கட்டியதே. அழகான ஹால், அது எந்த நவீன வசதிக்கு குறைவில்லாத பொருட்கள், இரண்டு பெரிய அறைகள், சின்னதாய் இன்னொரு அறையும் கட்டி இருந்தான்.

 

 மீதி இருந்த இடத்தில் அழகாய் தளம் அமைத்து, ஊஞ்சல் போட்டு இருந்தான். வெளியில் அழகான தோட்டமும், தொட்டிச் செடிகளும் கண்ணை பறித்தது. கைப்பிடி சுவரைச் சுற்றி, கிரைனைட்டில் இருக்கைகள் கட்டி இருந்தான். அதில் தான் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள் யாழி. தபுவை பார்த்ததும் முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டாள்.

 

      கோபத்துக்கு பதில் அந்த செய்கை சிரிப்பைத் தான் தந்தது.

   

  ஹாலில்  அமர்ந்து இருந்தாள் வானதி. சிந்தனை கோடு முகத்தில் ஓடிக்  கொண்டு இருந்தது. 

 

 ‘’நதிமா… ‘’ தபுவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள் நெஞ்சில் அத்தனை தாய்மை பொங்கியது. யாழி என்ன யாழி, இவள் அல்லவா தன் இதயத்தின் தாய்மை தடாகத்தில் பூத்த முதல் மலர். எத்தனை வளர்ந்து விட்டாள் என் மகள்..!

 

  ‘’ தபு…’’ என்றபோது ஓடி வந்து மடி கவிழ, அவசரமாய் கண்கள் வெளியில் பார்த்தது. இதை மட்டும் அந்த குரங்கி பார்த்தால், அதற்கும் மூக்கு நுனி சிவப்பாள்..!

 

    ‘’ அம்மாவை மறந்துட்டியா தபஸ்வி..?’’

 

 ‘’ இல்ல நதிமா. நீங்க தானே என் முதல் அம்மா..’’ என்றபோது நெஞ்சு விம்மியது. இழுத்து அவளை அணைத்து, அவள் முகத்தை மார்பில் தாங்கிய நிமிசம் நெஞ்செல்லாம் புது ரத்தம் பாய்ந்தது. அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள். கண்கள் கலங்கிப் போக, அணைப்பிலேயே வெகு நேரம் வைத்து இருந்தாள்.

 

   ‘’ இன்னும் எத்தனை வருசம் இருக்கு, என் பொண்ணு டாக்டராக.’’

 

  ‘’ இரண்டு வருசம்.’’ என்றாள்.

 

   ‘’ துர்யன்..?’’

 

  ‘’இப்பத்தான் முதல் வருசம் போயிட்டு இருக்கான் நதிமா. அவனைப்பத்தி யாழிக்கு தெரியாதா..? ஏன்..?’’ 

 

 ‘’ அது அந்த நிமிசம் அவசியமில்லைனு நினைச்சேன் தபுமா. தவிர முழு கடலையும், ஒரு கட்டுமரத்தை நம்பியே கடக்க வேண்டிய ஒரு மனிதனுக்கு உலகமே அந்த மரத்துண்டுதான். எங்கே அந்த மரம் ஊறி உதிர்ந்து போகுமோங்கிற்தாலேயே முழு கவனமும், அந்த மரத்துண்டின் மீதுதான் இருக்கும். அதே மாதிரிதான், யாழியோட உலகம் முழுக்க நான் மட்டும் தான். சரியாகிடுவா சீக்கிரம். இல்லாட்டி நான் சரியாக்கிடுவேன்.’’ என்றாள்.

 

சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு வெளியே வந்தாள். இன்னும் யாழி அதே இடத்தில் அப்படியேதான் அமர்ந்து இருந்தாள். அந்த சின்ன முகத்தில் கொட்டிக் கிடந்த கவலைகளை பார்க்கும் போது, மனசை பிசைந்தது. அருகில் சென்று அவள் தலையை வருடித்தர மனசு துடித்தாலும், இன்னும் அந்த உரிமையெல்லாம் அந்த கோபக்காரி தந்திருக்கவில்லை. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கீழே இறங்கி சென்றாள்.

’’ அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்..

 பந்தம் என்பது சிலந்தி வலை. 

பாசம் என்பது பெரும் கவலை 

சொந்தம் என்பது சந்தையடி 

 இதில் சுற்றம் என்பது மந்தையடி…’’

 

                         12

 

  பு சென்ற பிறகு, சப்பாத்தியை தட்டில் வைத்துக் கொண்டு யாழியின் எதிரில் வந்தமர்ந்து ஊட்டி விட ஆரம்பித்தாள். எந்த மறுப்பும் சொல்லாமல் உண்டு முடித்ததே அப்போதைக்கு போதுமானதாக இருந்தது.

 

‘’ ஏன்மா என்கிட்டே எதுவும் சொல்லல. உனக்கு நடந்த இவ்வளவு பெரிய துரோகத்தை..?’’ வாயில்படியில் வானதி வந்து அமர்ந்து கொள்ள, அம்மாவின் மடியில் முகம் புதைத்தாள் யாழி.  

 

 " இதிலே என்ன இருக்கு யாழி மா.?" என்றபோது நெஞ்சை அடைத்தது.

 

 " பொய் சொல்றமா." என்ற போது யாழிக்கு அழுகை முட்டியது.

 

"அவங்க எனக்கு முன்னமே நந்தாவுடைய மனைவி. சகல உரிமையும் அவங்களுக்கு அவர்கிட்ட இருக்கு. நான் விலகிப் போனதே அவங்க சேர்ந்து வாழணும்னு தான்."

 

" அவங்க… அவங்க…அவங்க. அவங்களுக்கு நீ யார் மா.? உன் உணர்வுகள், ஆசாபாசம் இதிலெல்லாம் அவங்களுக்கு கடமை இல்லையாமா..? எத்தனை இரவுகள் நான் தூங்கிட்டதா நினைச்சிட்டு சோபாவில போய் உட்கார்ந்து கிடந்து இருக்கே. அந்த நிமிசம் உன் உடம்பும், மனசும், என்ன தேடுச்சோ…" அவள் முடித்தபோது அள்ளி அனணத்து மகளை நெஞ்சுக்குள் புதைத்து இருந்தாள்.

 

'...இத்தனை நுணுக்கமாய் எனக்காக சிந்திக்கும் ஒரு மகள். இதற்கு மேல் என்ன வேண்டும்.'

 

" அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை யாழி. இந்த விசயத்துல நீ நந்தாவை மட்டுமில்லை, மிருதுளாவையும் காயப்படுத்தி இருக்கே." என்ற போதுதான் யாழிக்கு தன் தவறு புரிந்தது.

 

" காலையில் சாரி சொல்லிடறேன்." என்றாள் அம்மா மார்பில் முழுதாய் முகம் பொதித்து.

 

" அடேங்கப்பா யாழி’மாக்கு இப்பத்தான் ஒரு வயசு, அம்மாகிட்ட மம் மம் சாப்பிடறாங்க." என்று கேலி செய்ய, அம்மா மார்பிலேயே சிரித்தாள்.

 

" இரண்டு மூணு நாள்’ல தனியா வீடு பார்த்துட்டு போயிடலாம். அதுவரை யாரையும் ஹர்ட் பண்ணக் கூடாது. சரியா..?"

 

" நோ. நான் தனியா வரமாட்டேன். இங்கேதான் இருப்பேன்." குரலில் இருந்த பேதமையில் லேசாக முகம் வெளுத்தது வானதிக்கு.

 

" யாழி, நீ தான் தனியா போயிடலாம்னு சொன்னியே."

 

"சொன்னேன். இப்போ மாத்திட்டேன். நான் இப்படியே கொஞ்ச நேரம் தூங்கறேன். நேத்து நைட் டிரெயின்லயும் தூங்கல." என்றவள் வானதியின் மனசின் பாரத்தை கூட்டிவிட்டு, உறங்க ஆரம்பித்து இருந்தாள்.

 

  கால் ஸ்மரனை அற்றுப் போக அப்படியே அமர்ந்திருக்க, ஒரு மணி நேரம் சென்றிருக்கும், நந்தா வந்தான்.முகம் வேறு களைப்பின் உச்சத்தில் இருந்தது. 

 

  தான் வந்த அரவம் கூட அறியாமல் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தான். நீண்ட வாயில்படியில் வானதியின் அருகில் அமர்ந்தான். அம்மாவின் மார்பில் முகம் புதைத்து கிடந்தவளின், நெற்றியை மெல்ல தடவித் தந்தான்.

 

"தூங்கிட்டாளா..? என்கிட்ட கொஞ்சம் குடு வானு…" சமமாய் அமர்ந்து கைகளை நீட்ட, வானதிக்கு அவன் தவிப்பு என்னவோ செய்தது.

 

"டிரெயின்ல ராத்திரியும் தூங்கல. உள்ளே கொண்டுபோய் படுக்க வச்சிடுங்க நந்தா. மைக்ரேன் இருக்கு. நைட் சரியா தூங்கலைனா காலையில தலைவலியோட எழுந்திரிச்சு பெரிய ஆர்பாட்டம் பண்ணுவா." மெல்ல திரும்பி, இடுப்பில் ஒரு கையும், முதுகில் ஒரு கையும் தந்து மகளை ஏந்திக் கொண்டான். அனிட்சையாய் யாழியின் கைகள் தகப்பனின் தோளில் படிந்தது. 

 

இமைக்காமல் மகளையே பார்த்தான். தன்னின் பெண் உருவை கைகளில் ஏந்திக்கொண்டு நிற்பது, நெகிழ்விலும் மகிழ்வாய் இருந்தது. மெல்ல நெற்றியில் பட்டும் படாமலும் முத்தம் வைத்தான். அவள் முகத்தை மார்பில் புதைத்து, கழுத்தை அழுத்தி அடைகாக்க, வானதி தவித்துப் போய் நந்தாவைப் பார்த்தாள்.

 

இவன் செய்யும் ஆர்பாட்டத்தில், அவள் விழித்து விட்டால், அவள் செய்யும் அக்கப்போரை தாங்க இயலாதே.

 

" நந்தா, ப்ளீஸ்…" என்றாள் நந்தாவின் கைகளைப் பற்றி.

 

மெல்ல பெருமூச்சு விட்டபடி மகளை அள்ளிச் சென்று, படுக்கையில் விட்டு, ஏ.சி.யை குறைவாக்கி வைத்து, கதவை சாத்தி விட்டு வந்து, வானதியின் அருகில் அமர்ந்தான்.

 

சில நிமிடம் பேசுவதற்கு பிரியமின்றி அமர்ந்து இருந்தார்கள். 

 

" இப்படியெல்லாம் நடக்கும்னு தான் நான் இத்தனை நாள் தயங்கியதே. கஷ்டமா இருக்கு நந்தா. அவங்களுக்கும் இதனால மனவேதனை. கிளம்பும் போது, நான் இங்கே இருக்க மாட்டேன்னு ஆர்பாட்டம் பண்ணிட்டு வந்தவ, சட்னு இங்கிருந்து நான் போகமாட்டேன்னு சொல்லிட்டு தூங்கறா." வானதி வார்த்தைக்கு வார்த்தை வருத்தப்பட்டுக் கொண்டு இருக்க, மெல்ல அவள் தோளில் கைபோட்டு தன் மார்பில் சரித்தான்.

 

  இதற்காகவே காத்திருந்தவள் போல், அவன் மார்பில் புதைந்து மெல்ல விசும்ப ஆரம்பித்தாள். அவன் காரணம் கேட்கவில்லை, அவள் காரணத்தை விளக்கவுமில்லை. தலை கோதிக் கொண்டே இருந்தான்.

 

"இத்தனை நாள்ல ஒருமுறை கூட, என் அருகாமை உனக்கு தேவைப்படவே இல்லயா வானு …" அவன் கேட்ட போது விசும்பல் வேகம் இன்னும் கூடியது.

 

"சில நியாயங்கள் வெளியில் தெரியாமல் இருக்கும் வரைக்கும், எல்லாருக்கும் நல்லது நந்தா." நிமிர்ந்து அமர்ந்து முகத்தை துடைத்து கொண்டாள். 

 

"என் தண்டனை காலம் இன்னும் முடியலைனு நினைக்கிறேன்." என்ற போது கண்கள் பனித்து போனது.

 

"'ரொம்ப நேரமாகுது நந்தா. நீங்க போய் தூங்குங்க. எனக்கும் தூக்கம் வருது." அவன் முகத்தை பார்க்காமல் சொன்னவளை சில வினாடிகள் கூர்ந்து பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்.

 

" குட் நைட் வானு. காலையில் பார்க்கலாம்." சட்டென்று அவன் இறங்கிப் போனபோது மனசு தவித்தது. அத்தனை தள்ளி இருந்தபோது, தன் அருகிலேயே அவன் இருப்பதாய் நம்பிய மனசு, இப்போது அவனை யாரோ என்று சொல்கிறது. இருபது வருடங்களை கடந்தும், இன்னும் அழிச்சாட்டியம் செய்யும் இதயம் மாறவே இல்லை.

 

யோசனையுடன் கீழே வந்தவன், அறைக்கதவை தள்ள, அது உள்பக்கமாய் தாளிடப்பட்டு இருந்தது. 

 

தான் வருவதிற்குள் எதற்காக கதவை அடைத்தாள்' என்ற கோபம் தலைநீட்ட, ஒற்றை விரலால் கதவை தட்ட, அடுத்த நிமிடமே, கதவை திறந்த மிருதுளாவின் கண்கள் சிவந்து போய் இருக்க, நிலைகுலைந்து போனான். அவனை நேரிடையாக பார்க்காமல் எங்கேயோ பார்த்தாள்.

 

" நான் வர்றதுக்குள்ளே எதுக்கு மிருது கதவை சாத்தினே..?" 

 

ஒரு நொடி தாமதித்தவள்,

 

"இன்னைக்கு இங்கே வரமாட்டீங்கன்னு நினைச்சேன்." பட்டென்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள், தண்ணீரை வேகமாய் திருகி விட்டாள், தன் அழுகை சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க.

 

நந்தா தலையை பற்றிக் கொண்டு கட்டிலில்  தொப்பென்று அமர்ந்தான்.

 

வானம் தோல் உரித்து இருந்தது. எழும்போதே பசி வயிற்றை கவ்வி இழுக்க, முழுசாய் கண் விழித்து, முப்பது வினாடிகளுக்கு பிறகுதான், நேற்றைய நிகழ்வுகள் நினைவில் வந்தது யாழிக்கு.

 

சோம்பல் முறித்துக் கொண்டு வெளியில் வர, வானதி ஹாலில் இல்லை. குளித்து புத்துணர்வாகி கீழே வந்தாள்.

 

முதல் தளத்தில் அரவமே இல்லை. கீழ் தளத்தில் பெரும் சத்தமும், ஆர்பாட்டமும் கேட்டது. மெல்லிய தயக்கம் கீழே செல்ல. தன்நிலையை யோசிக்க விசித்திரமாய் உணர்ந்தவள், வானதி கீழேதான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் இறங்கி வந்தாள்.

 

நந்தா பேப்பரில் முழ்கி இருக்க, மிருதுளா சமையல் அறையில் நின்றாள். பிள்ளைகள் இரண்டும் ஏதோ மருத்துவ பாடத்தில் விவாதத்தில் இறங்கி இருக்க, கல்பனா இத்தனை சத்தத்திற்கும் நடுவில் ஜபமாலை உருட்டிக் கொண்டு இருந்தார்.

 

வானதியை காணோம். சட்டென்று ஒரு பயம் உள்ளே உண்டாக, நர்சரி சிறுமியை போல் தன்னை உணர்ந்தாள்.

 

"என் அம்மா எங்கே..?" என்றாள் யாரையும் பார்க்காமல் பொதுவாய். ஒரு நிமிடம் செய்த வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தவர்கள், பதில் சொல்லாமல் மீண்டும் அவரவர் வேலையில் இறங்க, அந்த அலட்சியம் யாழியின் தன்மானத்தை சரியாய் சீண்டியது. தன்னை அவர்கள் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று உணரக் கூட அவள் மூளை வேலை செய்ய விடவில்லை.

 

"நந்தா, அம்மா எங்கே..?" பக்கத்தில் வந்து நின்றவளை குறும்பாய் பார்த்தவன்,

 

" அப்பா' னு கூப்பிட்டாத் தான் சொல்லுவேன்." என்றான் பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டே.

 

' அப்பா… எத்தனை ஏங்கி இருக்கிறாள் அந்த பந்தத்திற்கு. உனக்கு அப்பா இல்லயா..? இறந்துட்டாரா..? உன் அம்மா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல…' எத்தனை எத்தனை கேள்விகள். அந்த ஒற்றை ஏக்கத்திற்கு பின்னே. ஆனால் அது அத்தனைக்கும் காரணமானவன், இங்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லா உறவுகளோடும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்து இருக்கிறான். நினைத்தவுடன் உடல் இறுகியது.

 

 அவனை ஒரு கீழ் பார்வை பார்த்து விட்டு, சமையல் அறையை எட்டிப் பார்த்தாள். 

 

 ஒரு பெண் பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருக்க, மிருதுளா வெந்த இட்லிக்கு பதம் சோதித்துக் கொண்டு இருந்தவள், திரும்பிப் பார்த்து வியப்பாய் புருவம் உயர்த்தினாள். 

 

" உள்ளே வா பாப்பா. பசிக்குதா..?" என்று கேட்ட  போது, மளுக்கென உள்ளுக்குள் அன்பு குமிழ் உடைந்து உடம்பெங்கும் கொட்டி ஓடியது.

 

'இல்லை '  என்று தலையசைத்தாள். வேலை செய்யும் பெண் திரும்பி பார்த்துவிட்டு, வேலையில் மடங்க, கைகளை ஒற்றியபடி மிருதுளா வெளியில் வந்தாள்.

 

" என்ன வேணும் யாழி…" என்றாள் முகவாய் பற்றி.

 

"மன்னிச்சிடுங்க. நேத்து உங்களையும் சேர்த்து காயப்படுத்திட்டேன். அதுக்குத்தான்." 

 

" அட..! அதுக்கெல்லாம் கோபம் வருமா என்ன..? சாப்பிடறியா..?"

 

 பசித்தது. ஆனாலும் அதை ஒப்புக்கொள்ள மனசு மறுத்தது.

 

" என் அம்மா எங்கே.?"

 

"கோயிலுக்கு போயிருக்காங்க."

 

" ம். சரி." என்றவள் சோபாவில் வந்து அமர்ந்தாள். நந்தா எழுந்து போய் இருந்தான். பிள்ளைகளும் கல்லூரிக்கு தயாராக நகர்ந்திருக்க, கல்பனா பூஜை அறையில் மணி அடித்துக் கொண்டு இருந்தார்.

 

வீட்டை கண்களால் அளந்தாள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பாய் வென்னீரும், அரை மணிக்குள் இஞ்சி டீயும் சாப்பிட்டால் தான் தலைவலி வராமல் இருக்கும்.

 

வென்னீர் கேட்கலாமா…' தயக்கமாய் எழுந்து சமையல் அறையை சமீபிக்க, 

 

"யார் மா அவங்க. அந்தப் பொண்ணு பார்க்க ஐயா மாதிரியே இருக்கே." வேலை செய்யும் பெண் விசாரித்துக் கொண்டிருக்க, யாழியின் இதயம் எகிறியது.

 

" அவர் பக்கத்து சொந்தம்தான். நீங்க வேலையை கவனிங்க சுசிலா." என்று மிருதுளா கண்டிக்கும் குரல் கேட்டது.

 

கண்களை மூடி ஒரு நிமிடம் சுதாரித்தவள், விருட்டென வெளியில் வந்தாள். கோபமும், இயலாமையும், ஆத்திரமும் மொத்தமாய் உடல் முழுக்க ஓட, தொட்டி செடியை எட்டி உதைத்தவள், விடு விடுவென தோட்டத்தின் பின்பக்கம் நடந்தாள். 

 

' இன்னும் கம்பீரமாய் அறிமுகப் படுத்த முடியாத இடத்தில் தான் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாயா அம்மா..? உன்னைப் போல் ஒருத்திக்கு இந்த இலைமறை அங்கீகாரம் எதற்கு..?' குமுறிக் கொண்டு அழுகை வந்தது.

 

குளித்து உடைமாற்றிக் கொண்டு கீழே வந்த நந்தாவின் கண்கள் யாழியைத் தான் தேடியது. அதற்குள் பிள்ளைகளும் தயாராகி வர, செலவளிக்க நேரமற்று டைனிங் டேபிளுக்கு நகர்ந்தான்.

 

மிருதுளா உணவு பரிமாற ஆரம்பிக்க,

 

" யாழி, எங்கே மிருதுளா..?" 

 

துர்யன் ஒரு நொடி அப்பாவை நிமிர்ந்து பார்த்தவிட்டு சாப்பாட்டில் கவனமானான்.

 

"என்கிட்ட வந்து சாரி சொன்னா. அப்புறம் அவங்க அம்மா எங்கேனு கேட்டுட்டு போனா. மாடிக்கு போயிருப்பா. நீங்க சாப்பிடுங்க.அவங்க அம்மா கூட சாப்பிடுவா நந்தா."

 

" அவளுக்கு காப்பி தந்தியா..? காலையில இருந்து எதுவுமே சாப்பிடாம இருக்கா போல இருக்கு."

 

" கொஞ்சம் தயக்கம் காட்டறா நந்தா. குழப்பமாவும் இருக்கா. எல்லாம் சரியாக நாலு நாள் ஆகும். தபுக்கு இன்னைக்கு கிளாஸ் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னா. நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. அத்தை இருக்காங்க பார்த்துப்பாங்க "

 

அவள் பேசுதை காதில் ஏற்றாமல் நாற்காலியில் இருந்து நந்தா எழ, வெளியில் இருந்து உள்ளே புயலாய் நுழைந்த யாழிக்கு அந்தக் காட்சிதான் கண்ணில் பட்டது.

 

காலையில் இருந்து பசியும், தலை நோவுமாய் தான் விம்மிக் கொண்டிருக்க. குடும்பத்தோடு அமர்ந்து நந்தா உணவருந்திக் கொண்டு இருக்கிறான். அம்மாவாக இருந்தால் இப்படி செய்வாளா..?

 

"பாப்பா, வெளியில எங்கே போயிட்டு வர்றே..?" என்றான் தவிப்பாக. அவனை புழுவைப் போல் பார்த்து விட்டு, நேராக சமையல் கட்டிற்கு சென்றவள், அங்கு தரையை துடைத்துக் கொண்டிருந்த சுசிலாவை அழைத்தாள்.

 

" கொஞ்சம் இப்படி வாங்க  ஆன்ட்டி."

 

 முதலில் அந்த ஆன்ட்டி என்ற அழைப்பே, அடி வயிற்றில் பயமாய் கபடி விளையாட அந்தப் பெண் புடவை தலைப்பை சரி செய்தபடி வெளியே வந்தாள்.

 

" சொல்லுங்கம்மா."

 

" அவங்ககிட்டே என்ன கேட்டீங்க..? ஐ மீன் என்னைப் பத்தி."

 

நந்தா மிருதுளாவை நிமிர்ந்து பார்க்க, மிருதுளாவின் முகம் லேசாய் வெளிறியது.

 

" இல்லமா… யார்னு…"

 

"எதுவா இருந்தாலும் என்கிட்டயே கேளுங்க. நான் அவரோட பொண்ணுதான். இங்கே இருக்கிற என் அம்மா அவரோட இரண்டாவது மனைவி. முறைப்படி கல்யாணம் செய்த மனைவி. போதுமா..? இதை போய் தாரளமா அக்கம் பக்கமெல்லாம் சொல்லுங்க." என்றாள் சத்தமாக. பேத்தியின் சத்தம் கேட்டு ஒடி வந்த கல்பனா, அத்தனை பேரையும் தவிப்பாய் பார்த்தார்.

 

மிருதுளா நந்தாவை நிமிர்ந்து பார்க்க, அவனோ இமைக்காமல் பார்வையை மகள் மீதே படிய விட்டு நின்று இருந்தான்.

 

சேரை இழுத்துப் போட்டு துர்யனின் அருகில் அமர்ந்தாள். தட்டை எடுத்து வைத்து, இட்லியையும், சப்பாத்தியையும் அள்ளி அள்ளி வைக்க, திரும்பிய  துர்யன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

 

" உன் வயசுக்கு இவ்வளவு சாப்பிடுறியா பாப்பா..? இப்படி சாப்பிட்டா, ஆறு மாசத்துல இவளை மாதிரியில்ல ஆயிடுவே. எவ்வளவு ஸ்லிம்மா அழகா இருக்கே இப்போ." சிரிக்காமல் சொன்னவனின் கன்னத்தில் பொளேர் என்று அறை விழுந்தது, தபஸ்வியிடம் இருந்து.

 

 சாம்பார், சட்னி கிண்ணங்களை அவள் புறமாய் நகர்த்தி வைத்தான். நாலு இட்லிக்கு மேல், வயிறு கதவடைத்துக் கொள்ள, உண்ண முடியாமல் பிசைந்து கொண்டே அமர்ந்து இருந்தாள். அத்தனை பேரும் எழுந்து போயிருக்க, கல்பனா பக்கத்தில் வந்தமர்ந்து பார்வையில் வருடிக் கொண்டே இருந்தார்.

 

நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த முதியவளின் பார்வையில் வழிந்த ஸ்பரிசத்தை, கண்கள் வழி உள்வாங்க துளியும் மனதில்லை.

 

எஞ்சிய உணவை வழித்து குப்பையில் போட்டாள், வீம்புக்கு எடுத்து வைத்து வீணாக்கி இருக்க வேண்டாம் என்று அவள் கற்று வைத்திருந்த நேர்மை சொன்னது. வானதி மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் அடி விழுந்து தான் இருக்கும்.

 

ஹாலில் வந்தமர்ந்தாள். வானதியின் எண்ணை அழைத்த போது, தொடர்பில் இல்லை. சலிப்பாக வந்தது. ஒவ்வாத இடத்தில் ஒட்டாமல் இருப்பது எத்தனை வலி என்று இப்போது புரிந்தது.

 

அலுவலகத்திற்கு தயாராகி வந்த நந்தா மகளின் துயருற்ற முகத்தைப் பார்த்து, வெதும்பிப் போனான். அருகில் வந்து, முகம் வருட கைநீட்ட, வேகமாய் நகர்ந்து அமர்ந்தாள்.

 

"பாப்பா, நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. அம்மா வந்ததும் சாப்பிடச் சொல்லணும். நான் ஈவினிங் சீக்கிரம் வந்து யாழி’மாவை வெளியே அழைச்சிட்டு போறேன். உனக்கு என்னென்ன வேணுமோ வாங்கிட்டு வரலாம்." அவள் எதிர்ப்பையும் மீறி தலைவருட அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.

 

பெருமூச்சோடு எழுந்து கொண்டான். மிருதுளாவும், தபஸ்வியும் வர, மூவரும் கிளம்பிச் சென்றார்கள். முன்பே துர்யன் சென்றிருந்தான். வீடு விரிச்சோடியது.

 

மூவரும் காரில் ஏறிச் செல்லும் காட்சி கண்ணை உறுத்தியது. இப்படி ஒரு நிகழ்ச்சி, அவள் வாழ்க்கையில் நடக்கவே இல்லை. கல்பனா பக்கத்தில் அமர்ந்து, கைகளைப் பற்றிக் கொண்டு, பேசி, பேச்சை எதிர்பார்த்து, சோர்ந்து போனவர், மெல்லிய ஏமாற்றத்தோடு உறங்க ஆரம்பித்து இருந்தார்.

 

முதுமையின் சவுகரியமும், முதுமையின் சவுந்தர்யமும் இதுதான். உறங்கும் மனுசியைப் பார்க்க பாவமாய் இருந்தது. நிறைய அலைக்கிறோமோ’ என்று தோன்றியது.

 

நந்தா கார் புறப்பட்டுச் சென்ற பத்தாவது நிமிடம் வானதி திரும்பி வர, அம்மாவின் செயல் கோபத்தை கொட்டி கொட்டி இதயத்தில் வார்த்தது.

 

" எங்கே மா போனே..?" 

 

"கோயிலுக்கு டா." நெற்றியில் திலகமிட்டு மிச்சமுள்ளதை மகள் கழுத்தில் வைத்து விட்டாள்.

 

" எந்த கோயிலுக்கு..?"

 

" கிருஷ்ணர் கோயில்."

 

"உன் தெய்வம் நந்தகோபலன் தான்னு தெரியும். அவரோட ரதம் கடந்து போன பிறகு வந்திருக்கே. ஏன்மா இப்படி இருக்கே..? நீ இப்பவும் இப்படி இருந்தா, உனக்கு வேற பேர் வந்திடும் மா." மகள் விம்மிக் கொண்டே கூற, எதுவும் பேசாமல் அறையை நோக்கி நடந்தாள்.

 

’’ கண்ணிலே என்ன உண்டு, 

  கண்கள் தான் அறியும்.

  கல்லிலே ஈரம் உண்டு 

  கண்களா அறியும்:

   என் மனம் என்னவென்று 

   என்னையன்றி யாருக்குத் தெரியும்…’’

  

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                          .13

காலம் மிகப்பெரிய ஆசான். ஆகச்சிறந்த வழிகாட்டி. ஓயாமல் இரவு வந்தது, ஓயாமல் நிலவும் வந்தது. விடியலின் வெளிச்சம் நம்பிக்கையைத் தந்தது. முடியலின் இருள் சிறு அச்சத்தை தந்தது. 

 

விக்கி, வீணா, சந்தியா என்று தேடிக் கொண்டு ஓடிவந்த அத்தனை பேர் வீட்டிற்கும் மகளோடு சென்று வந்தாள்.

 

படபடக்கும் யாழி, சிரித்து சிரித்து அம்மாவின் கைப்பற்றி ஓயாமல் பேசித் திரியும் யாழி, அத்தனை இடத்திலும் அமைதியாகவே இருந்தாள். சொல்லும் அளவிற்கு செல்வச் செழிப்போடே அத்தனை பேரும் இருந்தார்கள். விக்கியும், ரேகாவும் வேலைக்குச் செல்ல, அவர்களின் பிள்ளைகள் பள்ளியில் படித்தார்கள்.

 

நீலாங்கரையில் அலை சத்தத்திற்கு நடுவே வீடு கட்டி இருந்தான். 

  

கார் அல்லாமல் இரண்டு பைக்குகள் நிற்க, வானதியை அழைத்துப் போய் காட்டினான்.

 

" நீங்க தந்த பணத்திலே வாங்கின  முதல் பைக் அண்ணி. அதுக்கு பிறகுதான் என் வாழ்க்கையே மாறுச்சு. உங்க ஞாபகமா எப்பவும் இங்கே இருக்கும்." என்ற போது வானதி நெகிழ்ந்து போய் நின்றாள்.

 

வீணா கல்லூரியில் பணி செய்தாள். ஒரே மகள் பள்ளியில் படித்தாள். யார் முகத்திலும் துளி கூட கல்மிஷம் இல்லை. 

 

நந்தா ஒரு வாரமாக வெளியில் செல்ல அழைத்துக் கொண்டே தான் இருந்தான். இதுவரை முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

 

இரவில் மாடிக்கு வந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் கீழே செல்வான் நந்தா. அவன் அரவம் கண்டதும் சட்டென்று எழுந்து போய் தன் அறையில் கதவடைத்துக் கொள்வாள் யாழி.

 

நொறுங்கிப் போவான். நந்தாவின் உணர்வுகளை உள்வாங்கி தின்னும் வானதிக்கு அவனின் ஏக்கங்கள் புரியும். ஏனோ அவள் விழி அசைவிற்கு கட்டுப்பட்டு நிற்கும் மகள், இந்த ஒரு விசயத்தில்  முரண்படுகிறாள். அந்த கீரைத்தண்டை கொடுவாளால் வெட்டும் பெரும்பாவம் பெற்றவளுக்கு வரவே இல்லை.

 

மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி இருந்தது. அந்த வீட்டில் வியாபித்து இருந்த அன்னியத்தனம் நகர்ந்து ஒருவித இயல்பு மேவத் தொடங்கி இருந்தது. 

 

ஆனால்… ஆனால் யாழினிக்கு இந்த வாழ்க்கை அவள் கற்பனைக்கு கரும்புச் சாறை தரவே இல்லை. ஒரு வித ஏமாற்றம் இதயம் முழுக்க.

 

ஒரு வீடு… அதில் அம்மாவும், அப்பாவும். அம்மா ராணியாக இருப்பாள். வீடு முழுக்க தழைய உடுத்தி, குழைய சிரித்து, உரிமையோடு உலவி வருவாள். ஆனால் அப்படியொரு காட்சி இங்கு இல்லவே இல்லை.

 

மிசினரி தந்திருந்த அந்த சின்ன வீட்டில் உயிர்போடு சுற்றி வந்த அம்மா, இங்கே அடையாளம் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறாள். சமைத்து வைத்ததை உண்கிறாள். 

 

கல்பனா வானதியைப் பார்த்த பிறகு, அரை வீசை ஆரோக்கியமாகி இருந்தார். ஆனால் யாழி தான் யாரிடமுமே ஒட்டவில்லை. எதையோ பறிகொடுத்ததைப் போல் தனியாகவே அமர்ந்து இருந்தாள்.

 

பேங்க் வந்து, முஸ்தீபுகளை முடித்து விட்டு, லேசாய் இருக்கையில் சாய்ந்து, ஏ.சி.யை  ஸ்விங் மோடில் வைத்துக் கொண்டிருந்த போது, அலைபேசி அனத்தியது.

 

வானதி..! பெயரைப் பார்த்ததும் வேகமாய் எடுத்தான்.

 

"' என்னாச்சு வானு..?"

 

" அச்சோ குரல்ல ஏன் இந்த பதட்டம் நந்தா..? ரிலாக்ஸ்." வார்த்தைகளால் வைத்தியம் பார்த்தாள் அங்கிருந்தே.

 

'' வானு…"

 

" உங்க கூட கொஞ்சம் பேசணும். மூணு மணிக்கு நான் பேங்க்குக்கு வந்திடட்டுமா..?"

 

சில நொடிகள் எதிர்முனையில் மெளனம் நிலவ, அவனாகவே மாறிப் போன அவளுக்குத் தெரியாதா, அவனின் பரிதவிப்பை .

 

" நான் பக்கத்திலே வந்துட்டு கால் பண்றேன் நந்தா. நீங்க வந்திடுங்க. " என்றாள் உலர்ந்து போன குரலில்.

 

" வானு …" என்றபோது வெகு நாளைக்கு பிறகு இதயத்தில் ஒரு மின்னல் வெட்டியது.

 

"இங்கே மிருதுளாவை எல்லார்க்கும் தெரியும். அவ இதே பேங்கில வேலை செய்யற அடிப்படையிலயும். நமக்கு கல்யாணம் ஆன விசயம் தெரிஞ்ச சிலரும் இப்போ இங்கே இல்ல. மாற்றல்ல போயாச்சு. இந்த நீண்ட பந்தத்தை விலாவாரியா விவரிச்சு நீ எனக்கு என்ன'னு இவங்களுக்கு புரிய வைக்கிறதுல எந்த கவலையும் எனக்கில்லை. ஆனால் இவங்க உனக்கு இரண்டாவதுங்கிற ஸ்தானத்தை பார்வையால தர்றதை கூட என்னால பொறுத்துக்க முடியாதே… இதைத்தான் சிந்திக்கணும்னு நான் மத்தவங்களை கட்டாயப்படுத்த முடியாதே வானதி." மீண்டும் இதயத்தில் மின்னல் வெட்ட, ஏ.சி.யிலும் வியர்த்தது.

 

  ‘’ நான் எதுவுமே சொல்லயே நந்தா. எதுக்கு இத்தனை விளக்கம்..?’’

 

 ‘’ நீ சொல்லல தான். ஆனால் நினைக்கல’னு உன்னால சொல்ல முடியாது இல்லையா..? ஏனோ இப்பெல்லாம் மனசு ஒருமுகம் இல்லாம தவிக்குது வானதி.’’ 

 

   ‘’ நான் இப்போ போன் பண்ணியிருக்க கூடாதோ. ‘’

 

  ‘’ நீ முதல்ல போனை வை. மூணு மணிக்கு கிளம்பினதும் கால் பண்ணிடு. சென்னை ரூட் எல்லாம் நிறைய மாறி இருக்கு வானதி. எதுவா இருந்தாலும் என்னை கூப்பிடு. ‘’ என்றவன் அழைப்பைத் துண்டித்தாலும், வெகு நேரத்துக்கு அலைவரிசையில் இருந்து மனதை நகர்த்த ஆகமாட்டாமல் அமர்ந்து இருந்தான்.

 

 மூன்று மணிக்கு முன்னரே அழைத்தவனை பார்த்து பெருமூச்சும், பெருமிதமும் ஒன்றாக வந்தது வானதிக்கு. இந்த தவிப்பும், குற்ற உணர்வும் வரக்கூடாது’ என்றுதான் அவள் தள்ளி இருந்ததுமே. 

 

  ஆரஞ்சு வண்ணத்தில் கருப்பு கரையிட்ட பெங்காலி காட்டனில் வந்து இறங்கியவளை பார்த்தவனின் கண்கள் ஒரு நொடி வியந்து போனது. ஒரு பெண்ணின் அழகு ஆளுமையாய் இருப்பது ஒரு காலம். ஆனால் ஒரு பெண்ணின் ஆளுமையே அழகாக இருப்பது சிலருக்கு மட்டும் தான். அப்படி ஆளுமை கொண்ட பெண்கள் தான் எப்போதும் சமூகத்தின் சூத்திரதாரிகளாக இருக்கிறார்கள்.

 

   கையசைத்து விட்டு காரை திருப்பிக் கொண்டு வந்தான். வானதி ஏறிக் கொண்டதும் சீல்ட் பெல்ட்டை மாட்டச் சொல்ல, சோம்பலாய் தலை அசைத்தாள்.

   

 மெயின் ரோட்டை தாண்டி வண்டி சீராக கடக்க, மதிய நேரத்து சாலைகளில், கானல் நீர்தான் கண்ணுக்குத் தெரிந்தது. ஏனோ அது அவளுள் பெருமூச்சை உண்டாக்கியது. மெல்ல இருக்கையில் இருந்து நகர்ந்து நந்தாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். இடக்கையால்  அவன் மார்பை வளைத்து அணைத்துக் கொண்டாள்.

 

 மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் தவள, சாலையில் கவனத்தை பதித்தபடியே ஜாக்கிரதையா முகத்தை திருப்பி, அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்தான்.

 

   ‘’ ரொம்ப ஓடிட்டேன் நந்தா. எனக்கு முடியல. இந்த வைராக்கியம் வீம்பு,  பிடிவாதம் எல்லாத்தையும் தாண்டி, ‘ என்னால என்னை பார்த்துக்க முடியல நந்தா, கொஞ்சம் என்னை பார்த்துக்கங்களேன்’னு, என்னை ஒப்படைச்சிட்டு நிம்மதியா இப்படி தோள்ல புதைய, எத்தனை தவிச்சேன். நிஜமாவே என்னை என்னால பார்த்துக்க முடியல நந்தா. ‘’ அவன் தோளில் முகம் உரசி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். இன்னும் அவள் கைகள் அவன் மீதான இறுக்கத்தை கூட்டியது.

 

‘’ வானு, என் மேல கோபம் இல்லையா..? காலையில…’’ என்று ஆரம்பித்தவன். பக்கவாட்டில் தலையை திருப்பி, அவள் முகத்தை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்.

 

‘’ இப்படி எந்த இடத்திலும் உங்களுக்கு குற்றவுணர்வோ கவலையோ வரவே கூடாதுனு தான் நான் தள்ளிப் போனேன். எனக்கு புரியும் உங்களை, உங்க வார்த்தையை, உங்க பரிதவிப்பை, உங்க தயக்கத்தை. இதுக்கு பின்னால உள்ள என் மீதான அக்கறையை. இதுகூட புரியாமயா என் நந்தாவுக்குள்ள நான் வாழறேன்.’’ என்றாள் இன்னும் இயைந்து அமர்ந்து.

 

  ‘’ வண்டியை நிறுத்திடட்டுமா வானு…’’ என்றான் காதுக்குள் கேலியாக. நிமிர்ந்து முறைத்துபடி இன்னும் இயைந்து கொண்டாள்.

 

   பீச் ரெஸ்டாரண்டில் வண்டியை ஓரங்கட்டினான். நான்கு மணி வெயில் உக்கிரம் இல்லாமல், ஆனால் வெடு வெடு’வென உதிர்ந்து கொண்டு இருந்தது. எதிர்த்து முகம் பார்க்காதபடி சர்வாதிகாரம் செய்து கொண்டு இருந்தது சூரியன்.

   

  பார்க்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு இருவரும் உள்ளே நடந்தார்கள். சின்ன நடைபாதையின் இருமருங்கிலும், அடர்ந்த  செடிகள் செயற்கையாக சிரித்துக் கொண்டு இருந்தது. அதன் மீது பனித்துளி போல் நீர்துளிகள் ஒட்டிக் கொண்டு இருந்தன.

 

  கண்ணாடி தடுப்பைக் கடந்து உள்ளே ஒதுக்குபுறமான டேபிளில் அமர்ந்து கொண்டார்கள். 

’’சொல்லுங்க மேடம், என்ன திடீர்னு ரொமான்ஸ்லாம் பண்றீங்க..! அவ்வளவு புண்ணியமா நான் பண்ணிட்டேன்.’’ என்றான் பளீரிட்ட புன்னகையில். அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

   

 ‘’ இதெல்லாம் ரொமான்சில் சேர்த்தியா நந்தா..? அதுவும் இந்த வயசில.’’

 

‘’முட்டாள். இன்னும் ரொமான்சுக்கும் வயசுக்கும் சம்பந்தம் இருக்குதுன்னா நினைச்சிட்டு இருக்கறே..? அந்த கோஷ்டியா நீ..? ரொமான்ஸ் செய்ய பேரன்பும், பெரும்காதலும் இருந்தாப் போதும். அதுசரி, சொல்லுங்க மேடம், எதுக்கு அவசரமா வரச் சொன்னீங்க, அதுவும் என் பொண்ணுக்கு தெரியாமே. ‘’

 

‘’அவளைப் பத்தித்தான் பேசணும் நந்தா. பி.ஜி அட்மிசன் வாங்கணும். ஏதேதோ பேசிட்டு வந்துட்டு, இங்கே வந்து அமைதியா இருக்கா. என்னால அவளை புரிஞ்சுக்கவும் முடியல.’’ என்றாள் அலுப்பாக.

 

 ‘’பாப்பாவை மெடிக்கல்ல சேர்த்து விடறேன்னு அவ்வளவு எடுத்துச் சொன்னப்போ கேட்கல. ‘’ என்றான் அழுத்தமாக.

 

 ‘’ மருத்துவம் மட்டும் படிப்பில்லை நந்தா. தவிர, யாழி பயோ டெக் ஸ்டூடண்ட் தான். அதுவும் இன்னொரு வகையில் மருத்துவத்தோட சம்பந்தப்பட்ட துறைதான். பி.ஜி.க்கு ட்ரை பண்ணுங்க.’’

 

  ‘’ நாளைக்கு டீடெயில் கலெக்ட் பண்ணிட்டு வந்துடலாம்.   என் பொண்ணு தினம் என்கூட காலேஜ் வருவா பாரேன்.’’ என்றான் குழந்தை போல.

 

 ‘’ இன்னும் ஒரு விசயம் இருக்கு நந்தா. நான் டாக்டர் பிரான்சிஸ்க்கு கால் பண்ணி பேசினேன். நான் திரும்ப இங்கே வந்ததுல அவருக்கு ரொம்பவே சந்தோசம். என்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்காரு. நான் விரும்பினால் மறுபடியும் வேலையில ஜாயிண்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்கார்.’’ சொல்லி விட்டு அவன் முகம் பார்த்தாள்.

 

 அமைதியாக இருந்தான். அவள் சிந்தித்து அத்தனையும் சிந்தி விட்டால் தான், தான் சொல்வது அவளுக்கு தங்கு தடையின்றி புரியும் என்ற நிதர்சனம் நந்தாவுக்கு புரிந்துதான் இருந்தது. 

 

" போகணும்னு நினைக்கிறியா வானு..?" மெல்ல அவள் கைகளை எடுத்து தன் புறங்கையில் வைத்து நீவித் தந்தான்.

 

 " மிசினரி முழுக்க என் பொறுப்பில் இருந்தது நந்தா. சுத்தி சுழன்றுட்டே இருந்தாச்சு. இப்போ யாழியும் காலேஜ் போயிட்டா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்."

 

" அது மட்டும்தானே காரணம்."

 

" ஆமாம்’னு பதில் சொன்னால், அது பொய் நந்தா. யாழிக்கு இங்கு வந்ததில் இருந்து மனசுக்குள்ள ஒரு ஒதுக்கம், தனிமை. எல்லா குழந்தைகள் மாதிரி தான் வளரலைனு ஏக்கம் வரும்னு நான் யூகிக்க தவறிப் போயிட்டேன். இங்கே வந்தா அவள் எப்படி நடந்துக்குவாளோனு மட்டுமே யோசிச்ச நான், இங்கே வந்தபிற்கு அவளுக்குள் குழப்பமும், வெறுமையும் வரும்னு சிந்திக்க தவறிப் போயிட்டேன்.  இப்போ நானும் என்னை சுருக்கிட்டு நின்னா, என் பொண்ணு உடைஞ்சிடுவா நந்தா." 

 

மிடறு விழுங்கினான். குடித்துக் கொண்டிருந்த ஜுசை பாதியிலேயே தள்ளி வைத்தான். கன்ன சதை துடித்தது. 

 

"அந்த வீடு, அதிலுள்ள மனிதர்கள், என் ஆஸ்தி, நான் செத்த பிறகு கிடைக்கிற அஸ்தி, என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உனக்கும், என் பாப்பாவுக்கும் பங்கு இருக்கு. பிறகு ஏன் இந்த ஒதுக்கம்…" மெல்ல மூச்சு இரைக்க, அவன் கரத்தை அழுந்தப் பிடித்தாள் வானதி.

 

" இது உரிமைக்கான சண்டையில்ல நந்தா. உணர்வுப்பூர்வமான விசயம். என் அப்பா, இன்னொரு பெண்ணுடைய கணவர்ங்கிற கசப்பை அந்த பிஞ்சால தாங்க முடியல நந்தா. அவள் இடத்தில இருந்து பார்த்தால் எல்லாம் சரிதான். ஒரு அப்பாவை திடீர்னு ஏத்துக்கறதே கஷ்டம். அவரோட குடும்பத்தையும் இயல்பா ஏத்துக்கிற பக்குவம் அவளுக்கு வரல . கண்டிப்பா அவள் உணர்வுகள் சமாதானம் ஆகும். எனக்கு நம்பிக்கை இருக்கு.

 

பீச்சுக்கு போகலாம் நந்தா. எல்லாம் கொஞ்ச நேரம் மறந்திடுங்க." நகத்தால் அவன்  உள்ளங்கையில் கீற, செல்லமாய் முறைத்தபடி எழுந்து கொண்டான்.

 

கூப்பிடு தூரத்தில் அலைகள் கைதட்டி, இவர்களை கூப்பிட்டது. கைகளை கோர்த்து கொண்டு நடந்தபோது, ஆயிரமாயிரம் சிந்தனைகள் மனம் முழுக்க.

 

அந்த கடைசி இரவு … தபுவை கையில் பற்றிக் கொண்டு இங்கு வந்து போனது. காலடிகள் புதைய புதைய மணலை அளந்தார்கள். ஒவ்வொரு ஒற்றடியிலும் பாதச் சுவடிகள் வந்து பற்றிக் கவ்வியது.

 

அன்று பார்த்த அலை அப்படியே இருந்தது. அன்று பார்த்த அலையை நின்று பார்த்தார்கள். இறுக்கமாய் தோள் சாய்ந்து அமர்ந்திருந்தவள் விசித்திரமாய் இருந்தாள். இத்தனை நெருக்கம் காட்டுபவள் இல்லை. உடலை விலக்கி, உள்ளத்தில் குடி இருப்பவள்.

 

நெருடல் தந்தாலும் அந்த வருடலில் நந்தா தன்னை மறந்திருந்தான்.

 ’’... நீரின்றி ஆறில்லை

       நீயின்றி நானில்லை…

       வேரின்றி மலரே ஏதாமா…

       நினைவாலே சிலை செய்து

       உனக்காக வைத்தேன்  திருக்கோயிலே ஓடி வா….’’  

 


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                   |4

மெல்ல சூழல் இளகி இருந்தது. தங்கள் பகுதியிலேயே அடைந்து கிடப்பதை  தவிர்த்து கீழ் போர்சனில் அமர ஆரம்பித்து இருந்தாள் யாழி. யாரோடும் பேசிக் கொள்ள மாட்டாள். அவர்கள்  பேசிக் கொண்டிருப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்பாள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாய் முதுநிலை படிப்பில் சேர்வதிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணபித்து விட்டு அதற்காக தன்னை தயார் செய்து கொண்டு இருந்தாள்.

 

கல்கத்தாவில் தான் பயோ டெக்னாலஜி மேற்படிப்பிற்கு மிகச் சிறந்த கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், அதைவிட அம்மாவின் நிம்மதி முக்கியம் என்றுதான் இங்கு கிளம்பி வந்திருந்தாள்.

 

வானதி பேசிவிட்டு வந்த மறுநாளே நந்தா அத்தனை தரவுகளோடும், நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தோடும் வந்து விட்டான்.

 

யாழியை அழைத்து அவள் கையில் தந்த போது, தேங்ஸ்' என்று மகள் சொன்னபோது, அவன் புருவங்கள் தவிப்பில் சுருங்கியது.

 

" நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி இருக்கே யாழிமா. கண்டிப்பா என் பொண்ணு ஜமாய்ப்பா எண்டர்ன்ஸ்ல. ஏதாவது புக்ஸ் வாங்கணும்னா சொல்லு, போயிட்டு வந்துடலாம்." மெல்ல கை நீட்டி அவள் தலை வருட முயல, வேகமாக நகர்ந்து நின்றாள். வானதிக்கே நந்தாவை பார்க்க அழுகை வந்தது.

 

"நான் அம்மாகூட போய் வாங்கிக்கறேன்.ஐ வில் ட்ரை மை பெஸ்ட்." நகர்ந்து உள்ளே போய்விட்டாள். கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவன், இறங்கி போய் விட்டான்.

 

பிறகு வந்த நாட்களில் மெல்ல மெல்ல கீழ் தளத்திற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தாள். விசித்திரத்திலும் விசித்திரமாய், இவர்கள் யோசித்தது போல் துர்யனை அவள் விரோதப் பார்வை பார்க்கவில்லை.

 

ஆரம்பத்தில் இருந்த விலகலும், முறைப்பும் கூட மெல்ல கரைய  உடன்பிறந்தவர்கள் இருவரிடமும் தள்ளி நின்றாலும் மெல்ல ஒட்டிக் கொண்டு தான் இருந்தாள்.

 

ஏதாவது சண்டை வந்து முதலில் சாரி சொல்பவர்கள் சாக்லேட் தர வேண்டும் என்ற ஒப்பந்தம் தபுவுக்கும், துர்யனுக்கும் நடுவே இருக்க, இருவரும் பார் சாக்லேட்டை யாழியின் புத்தகத்தில் ஒளித்து வைக்க, அதை கண்டும் காணதவளாய் எடுத்து தின்ன, ரத்த பந்தம் கர்பத்தில் மட்டுமாய் பிணைக்கப் படுவதில்லை…உயிரணுவின் ஒர்மையிலும் உண்டாகும் என்ற பேருண்மை புரிந்தது.

 

"ஏன் கண்ணு, கல்கத்தாவில மூணு வேளையும் என்ன சாப்பிடுவீங்க..?" பாத்திரம் தேய்த்தபடி சுசிலா வம்புக்கு இழுப்பார்.

 

"சுசிலா கா, காலையில எழுந்திரிச்சதும் ஸ்வீட்தான்.  அதுவும் ரசகுல்லா தான் இங்கே டீ காப்பி மாதிரி." சமையல் மேடையில் காலாட்டிக் கொண்டு அமர்ந்து, தேங்காய் கீற்றெடுத்து தின்றுகொண்டே சொன்னவளை புன்னகையுடன் வேடிக்கை பார்த்தபடி மிருதுளா குக்கர் ஏற்றிக் கொண்டிருக்க, முன்பு இருந்த தயக்கமும், பயமும் விலகி இருந்தவள், இயல்பாக சுசிலாவுடன் வாயாடிக் கொண்டு இருந்தாள்.

 

"வூட்டு வேலை செய்ய ஆள் கிடைக்குமா பாப்பா."

 

"எங்க மம்தாவை பார்த்தா நீங்க மயக்கம் போட்டுருவீங்க. சினிமா நடிகை மாதிரி இருப்பா." 

 

சுசிலாவிற்கு அந்த மம்தா மீது உடனடியாய் பொறாமை வந்தது.

 

பக்கத்தில் வந்து, பேசி உறவாடவில்லை என்றாலும், கொஞ்சம் இதயத்தில் அவர்களுக்க்காகவும் இடம் காலியாகத் தொடங்கி இருந்தது. 

 

வங்கிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிமிசம், வீணாவிடம் இருந்து அழைப்பு வர, எடுத்துப் பேசிய மிருதுளா, வீணாவின் மகள் நிவி, பெரிய பெண்ணான விசயத்தை சொல்லி முடிக்க, கல்பனா சந்தோசத்திலும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்.

 

வங்கிக்கு விடுப்புச் சொல்லிவிட்டு மிருதுளா கிளம்பி இருந்தாள். மற்றவர்கள் அனைவரும் அவரவர் பணிகளுக்கு மடங்க, வானதியும்  மருத்துவமனைக்கு சென்று விட்டு இருந்தாள். 

 

வீட்டில் யாழி மட்டும்தான் என்பதால் சுசிலாவை துணைக்கு வைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.

 

'"எனக்கெதுக்கு துணைக்கு ஆள்." எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டவளை, எதிரில் வந்து நின்று ஏற இறங்கப் பார்த்தான் துர்யன்.

 

" நீ பாப்பா இல்ல. அதனாலதான் வீட்டில தனியா விட்டுட்டு போக எல்லார்க்கும் பயம்." என்றான் சிரிக்காமல்.

 

" நந்தா மா, இவனை சும்மா இருக்கச் சொல்லுங்க. என்னை இவன் பாப்பா'னு கூப்பிட்டா கோபம் வரும். என்னை விட சின்னவன்." என்றபோது சிவக்கும் அந்த மூக்கு நுனிக்காகவே ஆயிரம் முறை அவளை வம்புக்கு இழுப்பான்.

 

அத்தனை பேரும் கிளம்பியாக, ஒரு தனிமை சட்டென்று வந்து அப்பிக் கொண்டது.

 

பக்கவாட்டு சுவரில் தொங்கிய நந்தாவின் படத்தை பார்த்துக் கொண்டே  இருந்தாள். ஒரு கோபமும், அழுகையும், அத்தோடு ஒரு முகமில்லா தவிப்பும் வந்து முட்டியது. 

 

ஹால் முழுக்க கண்களை சுழற்ற, சுசிலாவின் அரவமே இல்லை. போட்டோவை கையில் எடுத்து அழுந்த முத்தமிட்டவள், அவசரமாய் கண்களைத் துடைத்தபடி அங்கிருந்து ஒடிச் சென்றவள், வாசலில் பைக்கை பார்க் செய்பவனைப் பார்த்து ஒரு நொடி தாமதித்தாள். 

 

ஒரு நிமிடம் தான். அந்தப் பார்வையில் ஒருவித மையல் தெரிய, தடுமாறிப் போய் முகம் பார்த்தாள்.

 

" அங்கிள் இல்ல…" என்றான் உரிமையாய் பார்வையை உள்ளுக்கு விரட்டிக் கொண்டே.

 

"இல்ல… பேங்க் போயிட்டாங்க." 

 

"இன்னும் நேரம் இருக்கே." மணிக்கட்டை திருப்பி பார்த்தபடி யோசித்தான்.

 

"ரிலேடிவ் வீட்டில பங்சன், அதுக்கு போயிட்டு அப்படியே பேங்குக்கு…. ஹலோ நீங்க யாரு? எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க.?" அவசரமாய் பதட்டப்பட்டவளை அவன் பார்த்த பார்வைக்கு, புலன்களுக்கு பொருள் தெரியவில்லை.

 

அதற்குள் வெளியில் இருந்து வந்த சுசிலா பவ்யம் காட்ட, தெரிந்தவன் தான் என்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

 

"'அங்கிளோட பேங்க் ஸ்டாப் ஒருத்தர் பத்தி என்கொயரி பண்ணனும். அதான் இங்கே வந்தேன். ஒகே. பார்த்துக்கலாம்." என்றவன் தோள்களை குலுக்கிக் கொண்டு திரும்பியவன் கண்கள் ஆழ்ந்து அவள் முகத்தில் நின்றது.

 

எதுவோ ஒன்று அந்த கண்களை அங்கேயே கவ்வி கடித்து நிறுத்தி வைக்க, வேகமாய் சுதாரித்தவன், திரும்பி நடந்தான். வாசலைத் தொட்டவன். திரும்பி பார்க்க, அவளும் பார்த்தபடியே தான் இருந்தாள்.

 

" நிஜமாவே பாப்பா தான். என்ன, பார்த்த கண்ணை பறிச்சு திங்கற கொஞ்சம் வில்லங்கமான பாப்பா." ஒரு மந்தகாச புன்னகையை விசிறிவிட்டு வண்டியை உசுப்பிக் கொண்டு பறந்தோடி விட்டான்.

 

முதன்முறையாய் உடல் முழுக்க ஒரு துளி மின்சாரம் தெறித்து ஒடியது.

 

" அவர் யாரு சுசிலா கா..?" சமையல் கட்டை தேடிச் சென்று விசாரித்தாள்.

 

" போலீசா இருக்காரு. இவர் தங்கச்சி ஆர்த்தி, தபு பாப்பா கூட டாக்டர்க்கு படிக்குது. ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்ப பழக்கம். " 

 

" சரிதான்." என்றவள் நினைவுகளில் அவன் புறமாய்ச் சரிந்திருந்தாள்.

 

 ’’ஏன் ஆன்ட்டி இந்த டிஷ் எப்படி செய்றீங்க..? என் அம்மாவுக்கு கொஞ்சம் கத்துக் குடுங்க.’’ இடியாப்பத்தை சுருட்டி சொதியில் தோய்த்து வாய்க்குள் திணித்தவளை முறைத்துப் பார்த்தாள் வானதி.

 

  ‘’ ஏன் யாழி, உனக்கு நான் இடியாப்பம் செய்து தந்ததே இல்லையா..? இவயெல்லாம் ஓரு ஆளுனு இவகிட்ட கம்ப்ளைண்ட் சொல்லிட்டு இருக்க பார்த்தியா..’’ முறைத்த அம்மாவின் முன் விரல்களை சப்பிக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

 

  ‘’ மா, இடியாப்பத்தை பத்தி நான் பேசவே இல்லை. இந்த சைட் டிஷ் பத்தித்தான் நான் சொன்னது.ஏதோ சதி’யாம். உனக்கு அதெல்லாம் பண்ணத் தெரியாதுனு சொல்லிட்டு இருந்தேன். சரிதானே…’’ என்று அம்மாவைப் பார்த்து கண் அடிக்க,  இருவருக்கும் ஒருசேர ஒரு வெடிச் சிரிப்பு வந்தது.

 

‘’ என்ன, ஆத்தாவும் மகளும் என்னை வம்புக்கு இழுக்குறீங்களா..? இந்த குதிரைவாலை என் மருமகளாக்கணும்னு நான் கனவு கண்டுட்டு இருந்தேன். அது இந்த நிமிசம் கேன்சல்…’’ சந்தியா பொய்யாய் முறைத்து வைத்தாள்.

 

‘’அச்சோ, நல்ல சான்ஸ்  மிஸ் ஆயிடுச்சே. ஆனாலும் இந்த சின்னப் பையனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது..?’’ யாழி வம்புக்கு இழுக்க, கரண் அம்மாவை முடிந்தளவு முறைத்து வைத்தான். 

 

  ‘’ வானு, இப்பல்லாம் புடவை கட்டவே மறந்து போச்சுடி. கொஞ்சம் இந்த பிலிட்சை சரி பண்ணி விடேன்.’’ சந்தியா வயலட் வண்ணப் புடவையை கொத்சலாய் கையில் சுருட்டிக் கொண்டு வந்து நின்றாள்.

 

  ‘’ இப்படி புடவை கூட கட்டத் தெரியாத உன் வீட்டுக்குத்தான் என் பொண்ணை அனுப்பச் சொல்லி கேட்டியாக்கும். போடி…’’ என்றபடி புடவையை சரிசெய்ய ஆரம்பிக்க, யாழி சாப்பிட்டத் தட்டோடு உள்ளே நகர்ந்தாள்.

 

  ‘’ வானு, ‘’ என்றாள் மெல்லிய குரலில்.

 

    ‘’ சொல்லுடி.’’

  

‘’ மிருதுளா நந்தா கூடவே நீ போய் இருக்கலாம் இல்ல. ஏன் இப்படி தனியா வந்தே..?’’ 

 

குனிந்து புடவை மடிப்பை கைகளில் அடிக்கிக் கொண்டிருந்தவள், ஒரு நொடி நிதானித்து நிமிர்ந்து பார்த்தாள்.  

 

‘’பெரிசா பங்சன் செய்யல சந்தியா. சும்மா ரொம்ப நெருங்கிய ரிலேடிவ்சுக்கு மட்டும் சொல்லி இருக்காங்க. இதுல வீணாவுக்கு அவ புருசனுக்கும் இஷ்டமில்லை. அத்தை, வீணா மாமியார் எல்லாம் பழைய ஆட்கள். அதான் செய்றாங்க.’’ என்றவள் சரி செய்துவிட்டு நிமிர்ந்து நின்றாள். லேசாய் முதுகு வலித்தது போல் இருந்தது.

 

 ‘’ நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல வானு.’’

 

‘’இதுக்கு என்ன பதில் சொல்ல சந்தியா..? வீணா, விக்னேஷ் இரண்டு பேருடைய மாமியார் வழி சொந்தங்கள் வருவாங்க. அவங்களுக்கு நான் இருக்கேன்னு தெரியும். என்னைப் பார்த்திருக்காட்டியும் கேள்விப்பட்டு இருக்கலாம். எனக்கு அங்கே எந்த அங்கீகாரமும் அவசியமில்லை. ஆனால் என் பொண்ணு அதை இயல்பா எடுத்துக்க  மாட்டா. அவளுடைய உணர்வுகள் வேற விதமானது. அதான் பின் தங்கி உன்கூட வர்றதா சொல்லிட்டு வந்திருக்கேன். இதனால பல தர்மசங்கடங்களை தவிர்க்கலாம் இல்லையா..?’’

 

சந்தியா மெல்ல கரம் நீட்டி, அவள் கன்னத்தை வருடித் தந்தாள்.

 

‘’என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனாலும் நீ யோசிக்கிறதுல நிறைய நியாயம் இருக்கு.’’ 

 

மிக மெல்லிய குரலில் பேசினாலும், துல்லியமாய் யாழியின் காதுகளில் வார்த்தைகள் வந்து மோதியது. மெல்ல கண்களை மூடிக்கொண்டு நின்றாள். 

 

பத்து நாள்களுக்கு மேலாய் கல்பனா வீணா வீட்டில் தான் இருந்தார். மிருதுளாவும், நந்தாவும் மதியமே கிளம்பி போய் இருந்தார்கள். கிளம்பும் போது, நந்தா வந்து அழைத்தான். வானதிதான் சந்தியாவுடன் வருவதாகச் சொல்லி, ஒரேடியாக மறுத்து விட்டாள். 

 

யாழி இதுபோன்று எந்த நிகழ்வுகளுக்கும் சென்றதும் இல்லை, வானதியும் அவளுக்கு செய்து பார்க்கவும் இல்லை. கண்கள் கலங்கிப் போனது. அதன்பிறகு அமைதியாகவே வந்தாள். மூன்று பேரும் வீணாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது மணி ஏழைத் தொட்டு இருந்தது. கிட்டதட்ட சம்பிரதாயங்கள் அத்தனையும் முடிந்திருக்க, நெருங்கிய உறவுகளைத் தவிர்த்து அத்தனை பேரும் கிளம்பி இருந்தார்கள்.

 

அதற்குள்ளாகவே நான்குமுறை அழைத்து ஓய்ந்திருந்தான் நந்தா. வேஷ்டி சட்டையில் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டு நிற்க, ஸ்டியரிங்கை ஒடித்தபடி சந்தியா வானதியை கேலி பார்வை பார்த்தாள்.

 

‘’பாரேன் உன் ஹீரோவை. உனக்காக வாசல்லயே காத்துட்டு நிற்கிறதை.’’ என்று விலாவில் இடிக்க, வானதி முறைத்தபடி யாழியைத் திரும்பிப் பார்த்தாள்.

 

முகம் முழுக்க சிந்தனை சிலந்தி கூடு கட்டி இருக்க, எப்போதும் வழியும் அந்தக் குழந்தைத்தனமும், கொண்டாட்டமும் இல்லாத ஒருவித அமைதி, வானதியை என்னவோ செய்தது.

 

‘’யாழிமா, என்னாச்சு…’’

 

ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தவள் பார்வை முழுக்க, இவர்களுக்காக காத்திருந்த நந்தாவின் மீதே படிந்து கிடந்தது.

 

குறை இல்லாத முகம். வழிந்து பிரவாகமாகும் கம்பீரம். நிமிர்ந்த பார்வையில் வழியும் நேர்மை. ஆனால் இவன் என் அம்மாவிற்கு மட்டுமே சொந்தமானவனும் அல்ல.

 

இறங்கிய மூன்று பெண்களையும் தாண்டி அவனுடைய கண்கள் அனிட்சையாய் யாழியிடம் தான் சென்று நிலைத்தது.

 

அந்த கண்களும், முகமும் அவனுக்கு அப்பட்டமாய் புரிந்தது. தோளில் கைபோட்டு, என் பிம்பம் என்று எல்லோர் முன்னும் காட்ட உள்ளம் தவித்தது. ஆனால் பக்கத்தில் கூட வாராது தள்ளி நிற்பவளை என்ன செய்ய..?

 

"ஏன் வானு இவ்வளவு நேரம்..? சந்தியாக்கு லேடி கெட்டப் போட இவ்வளவு நேரமாக்கும்..?" என்றவனை சந்தியா முறைத்து வைத்தாள். உள்ளே நடக்க யாழி பின்தங்கியே வந்தாள்.

 

வீணாவின் வீடு மிதமான அலங்காரத்தில் இருந்தது. நிறைய பெண்களும், நெருங்கிய உறவுகளில் ஆண்களும் இருக்க, வானதியின் கால்கள் மெல்ல பின்தங்கியது. அவளுக்கு பின்னாக வந்த யாழிக்கு அது தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.

 

அவளின் தயக்கம் புரிந்த நந்தா, அழுத்தமாய் கைகளைப் பற்றிக் கொண்டவன், வானதியை நிமிர்ந்து பார்த்து மெல்ல தலை அசைத்தான். உள்ளங்கையில் சின்ன அழுத்தம் நான் இருக்கிறேன்' என்று.

 

" வா வானதி. யாழி பாப்பா, வா வா… சரோஜா அண்ணி அதான் யாழினி என் பேத்தி. வானதி நந்தா மனைவி." கல்பனா தான் குதியாட்டம் போட, அத்தனை பார்வைகளும் ஒருசேர சொளேர் என்று மோதியதில் தாயும் மகளும் தடுமாறித்தான் போனார்கள்.

 

அத்தனை பார்வைகளும் எங்கோ இருக்க, மிருதுளா மட்டும் நந்தா பற்றி இருந்த கரத்திலேயே பார்வையை பதித்தவள் விருட்டென உள்ளே போய்விட்டாள்.

 

"அட.. நீங்க தான் வானதியா? " யாரோ கேட்டார்கள். 

 

புன்னகைத்துக் கொண்டாள். கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி நிவியை இறுக அணைத்துக் கொண்டாள். 

 

யாழி அங்கு இருந்த ஒரு நாற்காலியில் ஒரமாய் சென்று அமர்ந்து கொண்டாள். கட்டிபிடித்து கேலி செய்து தபுவிடம் உறவினர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

 

வானதியும், சந்தியாவும் வேலைகளில் ஒதுங்க, சிலர் தலைகுனிந்து கிசுகிசுப்பது, மெல்லிய கேலியோடு வானதியை பார்ப்பதும் புரிய, யாழியின் இதயம் வேதனையில் விம்ம ஆரம்பித்தது.

 

" நந்தா பொண்ணா? அச்சு அசலா அவனாட்டமே இருக்கா." பக்கத்தில் வந்தமர்ந்த இரட்டை நாடி பெண் கேட்க, மென்மையாய் தலை அசைத்தாள்.

 

" பிறந்ததில் இருந்து இப்பத்தான் சென்னை வர்றியா..?" 

 

" ம்."

 

" இவ்வளவு நாள் உன் அப்பாவை பார்கலயா நீ..? அவனாவது வந்து போவானா? அப்போ செலவுக்கு எல்லாம் யார் தந்தா? அடபாவமே. ஒரு பொண்ணை கட்டி வயத்தில குழந்தையை தந்து அவளோட வாழ்வாதரத்தை கூட வா பார்க்காம விடுவாங்க. இங்கே அவனுக்கு சட்டபடி பிறந்த பிள்ளைகள் இரண்டும் டாக்டருக்கு படிக்குதுங்க." சரியான வம்பு வளர்த்தி என்று புரிந்தது.

 

'... சட்டபடி பிறந்த பிள்ளைகள்…' யாழியை மிகச் சரியாய் அந்த வார்த்தை தாக்கியது.

 

" என்ன பெரியம்மா, என் பொண்ணு என்ன சொல்றா…" பக்கத்தில் வந்து நந்தா அமரவும், பேச்சு குடுத்த பெண் மெல்ல சுதாரித்தார்.

 

"பொண்ணு கிளியாட்டம் இருக்கா. என் பேரனுக்கு பார்க்கலாமானு தான்." 

 

நந்தாவின் முகத்தில் அப்படியொரு கர்வம் குதிர, யாழியை நிமிர்ந்து பார்த்தான்.

 

அவள் எங்கோ பார்வையை பதித்து அமர்ந்து இருந்தாள்.

 

"என் பொண்ணு பி.ஜி.ஜாயிண்ட் பண்ணப் போறா. அப்புறம் வேலைக்கு போய்ட்டு பெரிய ஆளாகணும். அதுக்கு பிறகுதான் கல்யாணம் பண்ணித் தருவேன். அதுக்கு முன்னாடி தபுவும் இருக்கா. ஏன் பெரியம்மா அத்தனை சீக்கிரம் என்னை தாத்தாவாக்க ஏற்பாடே…" அவன் சிரிக்க, இடமே கலகலப்பானது.

 

 யாழி எழுந்து வெளியில் வந்தாள். சின்ன போர்ட்டிக்கோவை ஒட்டி மர ஊஞ்சல் நிற்க, அதில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு அடையாளம் தெரியாத தவிப்பு. தன்னைத் தொலைத்து விட்டுத் தேடும், சிறுமியின் மனப்பான்மை.

  

கண்கொத்தி பாம்பாய் அவளையே தொடர்ந்து கொண்டிருந்த நந்தா, அவனும் வேகமாய் எழுந்து வெளியில் வந்தான். தனியாய் இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த யாழியைப் பார்க்க மனசு என்னவோ செய்தது. அந்த கண்களில் வழியும் ஏக்கத்தின் முடிச்சை எதை தந்து அவிழ்க்க என்ற நூலிழையே அந்த தகப்பனுக்கு பிடிபடத்தான் இல்லை.

 

இப்போது அவன் பக்கத்தில் சென்றால், எழுந்து சென்று விடுவாள். இந்த பொட்டு நிம்மதியையும், அந்தக் குழந்தையிடம் இருந்து பறித்துக் கொள்ள, அவனுடைய இதயம் ஒத்துழைக்கவே இல்லை. 

 

இப்படி தனிமையிலேயே அவளை விட்டுப் போகவும் மனசு ஒப்பவேயில்லை. எந்த வேலையும் இல்லாமல் அரட்டையில் அமர்ந்திருந்த ரேகாவை கைதட்டி அழைத்தான்.

 

    ‘’ என்ன மாமா..?’’ 

 

‘’ ஏதாவது வேலை இருக்காமா..? விக்கி எங்கே போனான்..?’’

 

‘’எதுவும் இல்ல மாமா. சொல்லுங்க என்ன செய்ய..?’’

 

‘’என் பொண்ணு வெளியே தனியா உட்கார்ந்து இருக்கா. கொஞ்சநேரம் போய் பேசிட்டு இருமா. இங்கே அவளுக்கு யார்கூடவும் பழக்கமில்லை.’’ 

   

தலையாட்டிவிட்டு புன்னகையுடன் யாழியை நோக்கி நகர்ந்த போதுதான் லேசான நிம்மதி உண்டாக, ஓரமாக தள்ளி நின்றான்

 

‘’யாழி, என்ன தனியா உட்கார்ந்து இருக்கே..?’’  சினேகமாய் பக்கத்தில் வந்து அமர்ந்தவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்.

 

‘’ சும்மாதான் ஆன்ட்டி. எனக்கு யாரையும் இங்கே தெரியாது. தவிர இந்த மாதிரி பங்சன் எல்லாம் எனக்கு புதுசு, நான் பார்த்ததே இல்லை.’’ என்றபோது கண்களில் வியப்பு விரிந்தது.

    

’’உனக்கு அம்மா செய்யலயா..? அப்படியே பொம்மை மாதிரி இருந்திருப்பியே, அலங்காரம் செய்து பார்த்திருந்தா.’’ 

 

 தோள்களை குலுக்கி சிரித்தாள்.

 

‘’இதுவரைக்கும் நான் மிசினரியில இருந்த ரெண்டு மூணு பேர் கல்யாணத்துக்கு சர்ச்சுக்கு போய் இருக்கேன். அதைத்தவிர கல்யாணம், வேற பங்சன் எதுக்கும் போனதில்லை. எனக்கும் அம்மா இப்படியெல்லாம் செய்யல. எங்களுக்கு யாரும் இல்லையில, அதனால இருக்கும்.’’ ஒரு சின்ன சலனமும் இல்லாமல் இயல்பாகத்தான் சொன்னாள். ஏனோ அது ரேகாவை வெகுவாய் தாக்கியது. அவளுக்கே அப்படி எனும்போது, தள்ளி நின்ற நந்தாவின் இதயம் சுக்கல் நூறாக நொறுங்கிப் போய்விட்டது.

 

‘’யாழி…’’ ரேகா மென்மையாக கைகளைத் தொட்டபோது, நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.

 

‘’ஏன்மா அப்படிச் சொன்னே..! உங்களுக்கு இங்கே எல்லோரும் இருக்காங்கம்மா. அந்த வார்த்தையை மட்டும் மாமா கேட்டு இருந்தா, என்னாகி இருக்கும் தெரியுமா..? ‘’ என்றாள் வேதனையோடு.

 

‘’நான் வருத்தமா சொல்லல ஆன்ட்டி. அங்கே நானும் அம்மாவும் மட்டும்தான். எங்களுக்குன்னு யாருமில்லை. என் பிறந்த நாள் மட்டும் தான் அம்மா கொண்டாடுவாங்க. மிசினரியில எல்லாருக்கும் சாக்லேட் தருவோம். சாப்பாடு வாங்கித தருவோம். அவ்வளவுதான் எங்களுடைய கொண்டாட்டம். அம்மா மட்டும் கோயிலுக்கு போயிட்டு வருவாங்க.

 

சந்தியா ஆன்ட்டி வந்தாத்தான் வலுக்கட்டாயமா வெளியே இழுத்துட்டு போவாங்க. மத்தபடி இதெல்லாம் வாழ்க்கைக்கு அவசியம்னு கூட எனக்கு தோணினது இல்ல."

 

மனசு பாரமாகிப் போய்விட்டது ரேகாவிற்கு. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேச்சு வளர்த்திக் கொண்டு இருந்தவள், யாழியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

 

நந்தா மாடிக்கு வந்திருந்தான். சட்டென்று உடலில் ஊற்றெடுத்த அத்தனை உணர்வுகளும், தரையில் சிதறி வீணாகி இருக்க, காலி பாத்திரம் போல் இருந்தது உணர்வும், உடலும்.

 

'எங்களுக்குத்தான் யாருமில்லயே…' அந்த வார்த்தை மட்டும் உடம்பு முழுக்க ஓடி ஓடி உறைய வைத்துக் கொண்டு இருந்தது.

 

" நந்தா, டயம் ஆகுது சாப்பிடாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? கீழே வாங்க." மிருதுளா தேடிக் கொண்டு வந்து நின்றாள். நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் அப்படியொரு வாட்டம்.

 

" என்னாச்சு மிருது.?" என்றான் கவலையோடு.

 

"எதுவுமில்ல நந்தா. வாங்க." நகரப் போனவளை இழுத்து தன்னோடு சேர்த்தான்.

 

"சொல்வேன். என்னால நிறைய பேச முடியல அலுப்பா இருக்கு."

 

"அவங்களை கை பிடிச்சு கூட்டிட்டு வந்தீங்கள்ல …" என்றவள் நிறுத்திவிட்டு தரை பார்க்க, கூர்மையாக அவள் முகத்தை பார்த்தான்.

 

"நீங்க அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதை கூட கடந்து வந்த மனசு, அவங்களையும் காதலிக்கிறதை தாங்கவே மாட்டேங்குது. அதுவும் எல்லோர்க்கும் நடுவில, அவங்களுக்கு நீங்க தந்த அந்த இடம், எனக்கே எனக்கானது  இல்லயா…" என்றவள் அது மொட்டை மாடி என்பதையும் மறந்து அவன் மார்பில் முகம் பொதித்து முத்தமிட, நந்தா கண்களை மூடி நின்றான்.

 

வானதி இத்தனை நாள் கண்காணாமல் போனதின் முழு காரணமும் இப்போது புரிபட, இந்த நொடியே அந்த அன்பு பெட்டகம் தன் கைபிடிக்குள் வேண்டும் போல் தவித்தது. ஒரு பெண்ணாய் மிருதுளாவின் துயரம் உணர்ந்து தன்னையே நெருப்புக்கு தின்னத் தந்த அந்த பேரன்பை என்ன சொல்ல…

 

ஒரு நொடியில் சுதாரித்து, முகத்தை துடைத்துக் கொண்டாள் வேகமாக.

 

"சாரி நந்தா. ஏதோ எமோசனல்ல உளறிட்டேன். நீங்க சீக்கிரம் கீழே வாங்க. சாப்பிட்டா வீட்டுக்கு கிளம்பலாம்.

 

போய் விட்டாள். உண்டு முடித்து கிளம்பும் போது, எந்த குழப்பமும் வந்துவிடக் கூடாது என்று கல்பனாவை அழைத்துக் கொண்டு வானதி சந்தியாவின் காரில் ஏறிக்கொள்ள, சலனமில்லாது பார்த்துக் கொண்டு நின்றாள் யாழி. அவளை மட்டுமாவது தங்களுடன் அழைத்துப் போக நந்தா தவித்தான். எல்லா இடத்திலும் ஏதோ ஒரு ஒதுக்கமாய் வானதியும், யாழியும் இருப்பது போல் அவன் நெஞ்சை அழுத்தியது.

 

" மிருது, நீயும் வானதி கூட சந்தியா கார்ல வந்திடு. நான் பசங்க மூணு பேரையும் கூட்டிட்டு போறேன்." என்றான் யாழியை பார்த்துக் கொண்டே. மறுத்து விடாதே' என்று அந்தப் பார்வை கெஞ்சியது.

 

மிருதுளா சரியென்று தலையாட்டிக் கொண்டு நகர, யாழி அம்மாவின் முன் வந்து நின்றாள்.

 

"மா, நான் உன்கூட வர்றேன். எனக்கு நந்தா கூட போக இஷ்டமில்லை." எந்தச் சலனமும் இல்லாமல் சொல்ல, உறவுக்காரர்கள் அதிர்ந்து போய் பார்த்தார்கள். அதில் அந்த வம்பு வளர்த்தி பெரியம்மாவும் நிற்க, மற்றவர்கள் முகம் நிறம் மாறியது.

 

" என்ன, அப்பா பேரை சொல்லி கூப்பிடுது." முகம் சுளிக்க, எல்லோரையும் விட துர்யன் தான் சிவந்து போனான்.

 

சட்டை கையை சுருட்டியபடி யாழியின் எதிரில் வந்து நின்றான்.

 

"அறிவில்ல..? படிச்சு இருக்க தானே? இப்படி ஒரு பொது இடத்தில அப்பாவை அசிங்கப்படுத்தறே. இனி அவர் பேரை சொல்லி கூப்பிட்டே நான் சும்மா இருக்க மாட்டேன்." பற்களை கடித்து அடிக்குரலில் அதட்ட, அடிபட்ட பார்வை நந்தாவைப் பார்த்தாள். இன்னுமே அவன் தன்னை விட்டு விலகிப் போனது போல் இருந்தது.

 

"துர்யன், முதல்ல வண்டியில ஏறு." நந்தா கடினக்குரலில் அதட்ட, திரும்பி யாழியை முறைத்து விட்டு அவன் காரை நோக்கி நகர, ஒரு வெறுமையும் கோபமும் யாழியை சட்டென்று தாக்கியது.

 

"யாழி… பாப்பா…" நந்தா அழைக்க அழைக்க சந்தியாவின் காரில் ஏறிச்சென்று அமர்ந்து கொண்டாள். வானதியிடம் வார்த்தைகளே இல்லே. இதெல்லாம் சந்திக்க பயந்துதான் அவள் வெருண்டு விலகி ஓடியதே.

 

"பாவம். ஏதோ பிரச்சனை போல. எவ்வளவு தான் நல்லவங்களா இருந்தாலும், ரெண்டு குடும்பம் ஒரே இடத்தில இருக்க முடியுமா..?" வீணாவின் மாமியார் லேசாய் நொடித்து பேச, வானதிக்கு ஐயோ'வென வந்தது.

 

கல்பனா மகள் வீட்டிலேயே நின்று விட்டார், இந்த களேபரத்தில். வந்தது போலவே மூவரும் சேர்ந்து கிளம்பினார்கள்.

 

அம்மா கோபமாய் இருக்கிறாள் என்று புரிந்தது. அதைப்பற்றி துளி வருத்தம் இல்லாமல் கோபமாய் பின் இருக்கையில் சரிந்து அமர்ந்து கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள்.

 

"தூங்கற மாதிரி நடிக்கிறியா யாழி..?"

 

 "......."

 

"இப்படியெல்லாம் நடந்துக்க எங்கே கத்துகிட்டே..?"

 

"என்ன நடந்துட்டேன்..?" என்று சீறிக் கொண்டு வந்தாள்.

 

" அவர் கூப்பிட்டார்ல போக வேண்டியது தானே? இல்லாட்டி வரலைனு இதமா சொல்ல வேண்டியது தானே..? வீட்டில நடந்து கிட்ட மாதிரியே வெளியே நடந்துக்கணுமா?"

 

"அது என் இஷ்டம். அந்த நெடுமரம் எதுக்கு என்னை திட்டறான்..? அவனுக்கு என்னவோ அதுதான் எனக்கும். எப்பவும் நான் அப்படித்தானே கூப்பிடுவேன். நான் அப்படி கூப்பிட வேண்டாம்னா நந்தா சொல்லட்டும். இவன் யார் நடுவில..? வேற சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. அதுக்கான தகுதியும் அந்தாளுக்கு இல்ல." என்றவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

 

பேச வாயெடுத்தவள் கைகளை பற்றிக் கொண்டு வேண்டாம்  என்று தலையசைத்து மறுத்தாள் சந்தியா. மெல்லிய மௌனம் விரவ, பேச்சே இல்லை சில நிமிடங்கள்.

 

யாழி சீட்டில் சரிந்து உறங்க ஆரம்பித்து இருக்க, வானதிக்கு அயர்ச்சியாய் இருந்தது. 

 

" வானு, நந்தாவைப் பார்க்க பேங்குக்கு போய் இருந்தியா..? மிகமிக மெல்லிய குரலில் கேட்டாள். மிரர் வழியே பார்த்த போது, யாழி சீரான பெருமூச்சில் உறங்குவது தெரிந்தது.

 

"' சொன்னாரா..?"

 

" ம். யாழி சீட் விசயமா சிவாதான் முயற்சி பண்ணிட்டு இருக்காரு. அப்போ பேசும்போது நீ வந்த விசயம் சொன்னாரு. ஆனால், எப்படி போனே? யாரும் எதுவும் உன்னை விசாரிக்கலயா.?"

 

" நான் பேங்க்குக்கு போகல. நந்தா பெர்மிசன் போட்டுட்டு வந்தாரு. வீட்டிலயே பேசலாம். இந்த பிசாசை வச்சுட்டு ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பேச வேண்டி இருக்கு.அதான் வெளியே போனேன். என்னால எந்த இடத்திலயும் அவர் தவிக்கிறதை தாங்க முடியாது. என் உயிர்துடிப்பே நந்தா தான் சந்தியா. நான் இப்படி புரிதலோட  இருக்கிறதை கூட அந்த மனுசனால தாங்க முடியல." அதே மெல்லிய குரலில் சொன்னவள் சீட்டில் இன்னும் அழுந்த புதைந்து அமர, மெல்லிய உறக்கத்தில் கிடந்தவள் செவிகள் வழி அல்ல, சிந்தனை வழி மிகச் சரியாய் சென்று சேர்ந்தது அந்த வார்த்தைகள்.

 

"ஊர் எங்கள் பிள்ளை என்று

இன்று சொல்லக் கூடும்

உலகம் உந்தன் சொந்தமென்று

உந்தன் உள்ளம் பாடும்

நீ யாரோ அன்பே அமுதே.

 

ஆலோலம் பாடி

அசைந்தாடும் காற்றே

அதைக் கேட்டு தூங்கும்

ஆவராம் பூவே

தனியானால் என்ன

துணை இங்கே

நான் பாடும் பாட்டுண்டு…"

 

                16

 

வெளிச்சம் வானத்தில் கால் அகட்டி ஆதிக்கம் செய்ய ஆரம்பித்து இருந்தது. இறுக்கத்தின் சுவடுகள் விலகாத முகத்தோடே இருந்தாள்.

 

கை நகத்தில் பெரும் ஆராய்ச்சியில் இருக்க, வானதியும் மகளோடு பேசத்தான் இல்லை. பொதுவெளியில் நந்தாவை படுத்திய அவமானம், வானதிக்கு துளி கூட உடன்பாடில்லை. இன்னும் தான் நெகிழ நெகிழ தலையில் ஏறி ஆட்டமிடுவாள் என்று தோன்றியது.

 

ஆனால் நொடிக்கு நூறு முறை முந்தானையை பற்றிக் கொண்டு, தன்னையே சுற்றிவரும் யாழி, காலையில் இருந்து பின்தங்கியே இருக்கிறாள். 

 

" நான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன் யாழி. என்ட்ரன்சுக்கு பிரிப்பேர் பண்ணு. டயம் ரொம்ப குறைவா இருக்கு." எங்கேயோ பார்த்து சொல்லிவிட்டு கீழே போகும் அம்மாவை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

அவள் மனக்கடலில் பிரளயமே நடந்து கொண்டு இருக்கிறது என்பது அவளை பெற்றவளுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்.

 

வெகுநேரம் கழித்து கீழே வந்தபோது, சுசிலா தான் வீடு துடைத்துக் கொண்டு இருந்தார்.

 

கல்பனா மகள் வீட்டில் இருந்து அப்போதுதான் வந்து இருப்பார் போல. வந்த பயணக் களைப்பு கூட தீராமல், அசதியில் சோபாவில் படுத்து இருந்தார்.

 

"டிபன் எடுத்து வைக்கட்டுமா மா…" என்ற சுசிலாவுக்கு தலை அசைத்து மறுத்துவிட்டு, நந்தாவின்  வங்கி முகவரியை கூகுளில் தேடி எடுத்தவள். மெளன பிடிவாதத்துடன் வெளியில் வந்தாள்.

 

தீ பிடிக்கும் வெயில் அடித்தது சென்னையில். துளிகூட இங்கே எதுவும் பரிட்சயம் இல்லை. வானதியோடு போய் வந்த சில பகுதிகளை தவிர, சென்னை அவளுக்கு அதீதமான மிரட்சியை தந்திருந்தது என்னவோ உண்மைதான்.

 

சரியாக லொகேசன் சொல்லத் தெரியவில்லை. அடையார்க்கு கேபில் வந்து இறங்கியவள், அங்கிருந்து விசாரித்து போய்க் கொள்ளலாம் என்ற தீர்மானத்தில் இருந்தாள்.

 

வெயில் வாட்டி புரட்டியது. உடல் முழுக்க வேர்வையில் குளித்திருக்க, இறங்கி எங்கே நகர்வது என்று திக்குத் தெரியாமல் நின்றாள்.

 

எதிரில் வந்து இரண்டொருவரிடம் முகவரி விசாரித்துக் கொண்டு, வெயிலை துளைத்துக் கொண்டு நடந்தவளின் அருகில் வந்து நின்ற, பல்சரையும், காலை தரையில் ஊன்றி, ஹெல்மெட்டை கழட்டியவனையும் மிரட்சியாக பார்த்தாள்.

 

அமர். பார்த்தவுடன் நினைவில் வருகின்ற அளவிற்கு கூட பரிட்சயம் இல்லை. ஆனால் அவசரமாய புன்னகை அவளை மீறி இதழில் பிறந்தது.

 

"எங்கே போறே  வெயில்ல ..?" அவன் உரிமையாய் ஒருமையில் அழைத்தது கூட பிடித்துத்தான் இருந்தது.

 

ட்யூட்டியில் இருந்தான். அந்த காக்கி உடுப்பு அவனுக்கு அதீத கம்பீரத்தை தந்து இருந்தது. 

 

'"பேங்குக்கு போகணும். எனக்கு  இடம் தெரியல." என்றாள் அடிக்குரலில்.

 

" எந்த பேங்குக்கு..?"

 

சொன்னாள். புருவத்தை நெறித்து அவள் முகத்தை பார்த்தான். ஏதோ யோசனை அவனுள் பிரவாகித்தது.

 

"உங்க அப்பா பேங்குக்கா..?"

 

தலை ஆடியது. 

 

"அவர்க்கு கால் பண்ணு. அவரே வந்து அழைச்சிட்டு போவார்." 

 

"இல்ல, நான் சர்ப்ரைஸ் தரணும். எனக்கு இடம் மட்டும் சரியா சொல்லுங்க. நான் போயிடுவேன்." அவளையே பார்த்தவன்,

 

"வண்டியிலே ஏறு. நான் கொண்டு போய் இறக்கி விடறேன். பக்கத்தில தான்." 

 

மெல்லிய தயக்கம் இருந்தாலும், அதற்கு அவசியமில்லை என்று நந்தா குடும்பத்தோடு அமர் குடும்பத்திற்கு இருந்த நட்புறவு சொன்னது. ஏறிக் கொண்டாள். இரண்டு சிறு திருப்பம், ஒரு நீண்ட சாலை என்ற பயணத்திற்கு பிறகு, மெயின் ரோட்டிலேயே பேங்கின் பெயர் பலகை பளீரிட்டது.

 

உள்ளுக்குள் இளைப் பாறிய எரிமலை குமுறிக் கொண்டு லாவா' வை கக்க ஆரம்பித்து இருந்தது. அலைபேசியை எடுத்து நேரத்தை சரிபார்த்துக் கொண்டாள்.

 

11:30. உச்ச நேரம். கூட்டம் அலைமோதுவது கண்ணாடி தடுப்பின் வழியே தெரிந்தது. நன்றி கூடச் சொல்லாமல், விருட்டென உள்ளே புகுந்தவளின் நடவடிக்கை அமர்க்கு இயல்பாக இல்லை. 

 

யூ டேர்ன் எடுத்தவன், அப்படியே வண்டியை ஓரங்கட்டி விட்டு உள்ளே வந்தான்.

 

வலப்பக்கம் பெரிதாக இருந்த அறையின் கதவில் மேலாளர் என்ற நீல வண்ண போர்டுக்கு சொந்தமான கண்ணாடி அறையில் தன் எதிரில் அமர்ந்திருந்த அதிகாரிகள் இருவருடன் பேச்சு மும்முரத்தில் இருந்தான்.

 

சாக்லேட் வண்ண சர்ட்டில், கம்பீரத்தின் மொத்த உருவமாய் தெரிந்தான்.

 

" என்ன வேணும் மேடம். சலானா..?" கேட்ட சிப்பந்தியை ஏற இறங்க பார்த்துவிட்டு, உயர்த்திய குரலில் கேட்டாள்,

 

"நான் மிஸ்டர் நந்தாவை பார்க்கணும். போய் வெளியில வரச் சொல்லுங்க."

 

கண்ணாடி கதவையும் கடந்து அந்த வார்த்தைகள் நந்தாவுக்கு வந்து சேர்ந்தது. மகளின் அசைவையே அறியும் அவனுக்கு, அவள் குரலா புரியாமல் போகப் போகிறது..?

 

விருட்டென எழுந்து அவன் வெளியில் வர, அவனோடு விவாதத்தில் இருந்த அதிகாரிகளும் உடன் சேர்ந்து வர, மற்ற ஊழியர்களை பணியை மறந்து இவர்களையே பார்த்தனர்.

 

"யாழி மா…" என்றான் தவிப்பான குரலில். கூர்ந்து தகப்பன் முகத்தை பார்த்தாள். கண்ணும், முகமும், உணர்வும் அவளுள் தாண்டவமாடியது. 

 

திரும்பி யார் என்று கேட்டு, தன்னைத் தடுத்த அந்த ஊழியரை இகழ்வாய் பார்த்தாள்.

 

"நான் யார்னு கேட்டீங்கள்ல… இப்போ சொல்றேன். உங்க மரியாதைக்குரிய மேனேஜரோட பொண்ணு. இத்தனை நாள் நீங்க யாரும் என்னைப் பார்த்து இருக்க மாட்டீங்க. ஏன்னா, நான் இங்கே இல்ல. 

 

பிறந்தது முதல் யாருமே இல்லாத, அப்பாங்கிற உறவுக்காக ஏங்கி ஏங்கி செத்த ஒரு பரிதாபமான குழந்தை. சிங்கிள் பேரண்ட் கிட்டே வளர்ந்த பரிதாபமான குழந்தை."

 

வங்கியில் இருந்த அத்தனை சலசலப்பும் நொடியில் ஒடுங்க எல்லோர் பார்வையும் நந்தாவை கொத்த ஆரம்பிக்க, அமர் தவிப்பின் உச்சத்தில் நின்றான்.

 

'"யாழி மா…" நந்தாவின் குரல் ஓய்ந்து போய் வந்தது.

 

" சத்தியமா இவர் என் அம்மாவை ஏமாற்றி கல்யாணம் பண்ணல. ஆனால் என் அம்மாவை டைம் பீயிங் பார்ட்னரா பயன்படுத்திட்டாரு. 

 

அரசு வேலையில இருக்கிற இவர் சட்டப்படி இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டா இவர் மனைவிகள்ல யார் புகார் தந்தாலும் வேலை போயிடும்ல, அதான் என் அம்மாவை யாருக்கும் தெரியாம மறைச்சே வாழ வச்சிட்டாரு."

 

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு மகளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

"நான் எல்லாத்தையும் கூட தாங்கிட்டேன். ஆனால் என் அம்மா இவரை பார்க்க பேங்குக்கு வர்றேன்னு சொன்னப்போ, எங்கம்மாவை மனைவினு அறிமுகப்படுத்தி, சட்டப்படி அடையாளம் தர தயங்கிட்டு, இங்கே வராதே'னு சொல்லி இருக்காரு.

 

அதைத்தான் என்னால தாங்க முடியல. இப்படியே விட்டா, என் அம்மாக்கு வேற அடையாளத்தை இந்த ஊர் தர இவரே காரணமாகிடுவார். " என்றவள் பரபர' வென கைப்பையைத் திறந்து, நந்தா வானதியின் திருமண புகைப்படத்தை எடுத்து தலைக்கு மேல் வைத்து நாலாபக்கமும் சுற்றி சுற்றி காண்பித்தாள்.

 

நந்தா அசையாமல் நின்றான்.

 

"இவங்க தான் வானதி. என் அம்மா. இவரோட  இரண்டாவது மனைவி. முறைப்படி தாலி கட்டின மனைவி. சைக்கியார்டிஸ்ட்.

 

இவர் நல்லவர் தான். ஆனால் பக்கா சுயநலவாதி. தான் தன் குடும்பத்துக்காக மட்டும் வாழறவர். அதில் நானும், என் அம்மாவும் இல்ல."

 

அந்த வார்த்தையில் ஒரு வீரியமான வலி, வயிற்றில் விழுந்து நெஞ்சில் எழுந்தது நந்தாவிற்கு.

 

"இதை சொல்லத்தான் வந்தேன். சாரி, உங்க நேரத்தை வீணாக்கினதுக்கு. இப்போ நான் பேசாட்டி, என் அம்மாவை பத்தின சமூகத்தின் பார்வை மாறிடும். மன்னிச்சிடுங்க ப்ளீஸ்." என்றவள் விருட்டென வெளியேற, அத்தனை பேரும் பரிதாபமாக நந்தாவையே பார்த்தனர். அமர் செய்வதறியாது நின்றான்.

 

" சாரி மிஸ்டர் நந்தா. வீட்டில என்ன பிரச்சனை இருந்தாலும், அது வெளியே வராம பார்த்துக்க வேண்டியது நம்ம கையில தான் இருக்கு. டேக் கேர்." தோளில் தட்டிவிட்டு அதிகாரிகள் நகர, நின்ற இயக்கம் மெல்ல மெல்ல இயல்பு பெறத் தொடங்கியது. 

 

எதுவுமே பேசாமல் அமர் பக்கத்தில் வந்து, மெல்ல நந்தாவின் கரங்களை பற்றி அழுத்தி விட்டு, வருத்தம் தோய்ந்த முகத்தோடு வெளியேற, இன்னதென்று இனம் காண முடியாத முகத்தோடு நந்தாவும் வெளியில் வந்தான்.

 

தன்னை கடந்த ஆட்டோவை கை நீட்டி நிறுத்தினாள் யாழி.

 

"கே.கே. நகர் போகணும்." என்றாள் விரக்தியான குரலில்.

 

"கே. கே. நகர்ல எங்கே..? லேண்ட் மார்க் சொல்லுமா."

 

சொல்லத் தெரியவில்லை. லேசான திணறலோடு பார்க்க, 

 

"கே. கே. நகர். தேர்ட் கிராஸ் ஸ்டிட். வாட்டர் டேங் அடுத்து இரண்டாவது ரைட். கார்னர்ல பீட்சா ஹட் இருக்கும்." ஆட்டோவை ஒரு கையில் பற்றிக் கொண்டு டிரைவரிடம் குனிந்து சொன்ன நந்தா, வாலெட்டில் இருந்து இருநூறு ரூபாய் தாளை எடுத்து டிரைவரிடம் தந்து விட்டு, சீட்டின் பின்புறம் இருந்த ஆட்டோ பதிவு எண், இத்யாதி விபரங்களை மொபைலில் படம் பிடித்துக் கொண்டான். 

 

யாழிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. 

 

"வீட்டில போய் சாப்பிட்டு தூங்கு பாப்பா. மதியம் கோட்சிங் கிளாஸ் போகிற வரைக்கும்." என்றவன் டிரைவரை பார்த்து தலை அசைக்க, ஒரு கதறல் கதறி, ஆட்டோ கிளம்பியது. 

 

ஆட்டோ நகர நகர, தன் உயிரையே தவறவிட்டுப் போவது போல் வலித்தது. அழுகை பிதுங்க பிதுங்க பின்பக்க  கண்ணாடி வழியே பார்த்தாள். நந்தா அங்கேயே நின்று கொண்டு இருந்தான்.

 

அவனை அடித்து விட்டு வந்திருக்கிறாள்…. ஆனால், இவளுக்குத் தான் வலித்தது. தூரம் அதிகமாக ஆக, புள்ளியாய் நந்தா மாறிக் கொண்டிருக்க, தாங்க முடியாத பிரிவின் வலியோடு தலையை அவசரமாய் வெளியில் நீட்டிப் பார்த்தாள். நந்தா முழுக்க காணாமல் போய் இருந்தான்.

 

" அ…ப்…பா… ஐ'யம் சாரிப்பா…" என்றாள் மெதுவாய் உதடு பிரியாமல்.

 

" வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு…

அதை விட்டுவிட்டு தவிக்குது பார் அப்பாவோட நெஞ்சு…

ஆயிரம் தான் இருக்கட்டுமே அம்மா போதுமா…

அங்கே இங்கே கூட்டிபோகும் அப்பா ஆகுமா…"

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 7 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

17
 
டைசி மிடறு எலுமிச்சை ஜூசை குடித்து முடித்த போது முதல் மிடறைப் போலவே தான் கசந்தது. 


அவன் கம்பீரமாய் அமர்ந்து ஆளுமை செய்த இடம். அரசல் புரசலாய் அவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது தெரியும்.


அவன் மீது ஆத்திரப்பட்ட சமயத்தில் அதை அவதூறாகவும், அவன் மூலம் சலுகை அனுபவித்த நாட்களில், அதை அங்கீகாரமாகவும் பேசி சிரிக்கும் நபர்களையும் அவனுக்குத் தெரியும்.


அவர்கள் யார் தன்னை நல்லவன், பொல்லாதவன் என்று வரையறை செய்ய..? அவன் உதிரத்தின் மிச்சமே அவனை சுயநலக்காரன் என்று சொல்லி விட்டு போய் விட்டதே…


உடம்பும், மனசும் ஏகத்துக்கும் வலித்தது. நான் நல்லவன் தான் யாழி மா…' என்று மகள் உள்ளங்கையில முகம் பொதித்து கதற வேண்டும் போல் இருந்தது.


பெருமூச்சோடு பருகிய பழச்சாறுக்கு பணத்தை தந்து விட்டு பேங்குக்கு வந்தான். ஊழியர்கள் ஒரிருவராய் கூடிக் கூடி அடிக்குரலில் கிசுகிசுத்துக் கொண்டு இருந்தார்கள். 


நந்தாவை பார்த்ததும் அவசரமாய் அவரவர் இடத்துக்குக்கு நகர பெருமூச்சு விட்டுக் கொண்டான். இவர்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. இவர்கள் தரும் நற்சான்றிதழ்க்கு அவன் காத்துக் கொண்டு இருக்கவுமில்லை. அவனுக்கு தேவை மகளின் பேரன்பு.


அவன் நல்ல கணவனா, இல்லையா, என்று அவன் மனைவிகள் தான் சொல்ல வேண்டும்.  சிறந்த தகப்பனா இல்லையா என்ற நற்சான்று அவன் பிள்ளைகளால் மட்டும்தான் வழங்க முடியும். அவன் சிறந்த மனிதன் என்ற சான்றை மட்டும்தான் இந்த சமூகம் அவனுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளது. அதைவிடுத்து அவன் எப்படிபட்ட தகப்பன் என்று இவர்கள் தீர்மானிப்பது எல்லாம் அவனுக்கு பொருட்டே இல்லை.


கேபினுக்கு வந்து நெற்றியை தேய்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான். மனசு முழுக்க ஆற்றாமை. ஒரு வித அங்கலாய்ப்பு. 


வானதியின் எண்ணில் அழைத்தான். 


"நந்தா, என்ன இந்நேரத்தில…" மனம் என்றும் அரிதிற் கடத்தி வார்த்தைக்கு முன்னே செய்தியை கடத்தி இருந்தது. 


’’எங்கே இருக்கே வானதி..?’’


‘’ஹாஸ்பிடல்ல நந்தா. என்னாச்சு..?’’


‘’ பர்மிசன் போட்டுட்டு வீட்டுக்கு வந்துடேன்.’’ குரல் ரசத்தில் குழைந்த சாதம் போல் அடையாளம் தொலைத்து இருந்தது.


‘’நந்தா என்னாச்சு..?உடம்புக்கு…’’ பதறிக் கொண்டு இருந்தாள்.


’’எதுவுமில்லை. நல்லாதான் இருக்கேன். எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் வந்து அழைச்சிட்டு வரவா..?’’


‘’வேண்டாம் நந்தா. நான் வந்துடறேன். மறுபடியும் கேட்கிறேன்னு கோபப்படாதீங்க. ஆர் யூ ஒ.கே..?’’


‘’ நல்லா இருக்கேன். நீ கிளம்பி வந்துடு.’’ இணைப்பை துண்டித்தவன், அசிஸ்டென்ட்  மேனேஜரை அழைத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, கார் சாவியுடன் வெளியில் வந்தான்.


  இவனுக்கு முந்தியே வானதி வந்து விட்டு இருந்தாள். அம்மா அறைக்குள் உறக்கத்தில் இருக்க, சாப்பாடு எடுத்து வைக்கவா' என்று கேட்ட சுசிலாவிடம் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு,மாடிக்கு வந்தான். 


வானதி முகம் அலம்பி துடைத்துக் கொண்டே வெளியில் வந்தவள், ஒரு நொடி அவன் முகத்தை பார்த்து சிந்தை சுருங்க ஏறிட்டாள்.


‘’நந்தா…’’ என்றாள் தவிப்பின் உச்சத்தில்.


‘’இப்பத்தான் வந்தியா..?’’ என்றான், கழுவித் துடைத்த அவள் பளிங்கு முகத்தை பார்த்தபடி.


‘’ ஆமாம். ஏன் உங்க முகத்தில இத்தனை கவலை..? என்னாச்சு நந்தா..?’’ டவலை சோபாவின் மீது போட்டு விட்டு அவன் முன்னே வந்து நின்று, தலையை மெல்ல கோதித் தந்தாள்.


 ‘’ பாப்பா எங்கே..?’’


‘’நான் வர்றதுக்கு முன்னாடியே கோட்சிங் கிளாசுக்கு போயிட்டானு, சுசிலா சொன்னாங்க.’’ அவள் முடிக்கும் முன்னே திரும்பி மெல்ல கதவடைத்தவன், வானதியை இழுத்து தனக்குள் புதைத்தான்.


விக்கித்து போய் அவனை விலக்கி நின்றாள். கோபமாகவும், ஆதங்கமாகவும் இருந்தது. இப்படி யாருக்கும் தெரியாமல் ஆலிங்கனத்தை அவள் எதிர்பார்த்தாளா என்ன..? இவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான்..?


 ‘’ என்ன நந்தா இது..? நான் இதெல்லாம் உங்ககிட்ட எதிர்பார்க்கலே..’’ என்றாள் இறுகிப் போன குரலில்.


ஏற்கனவே காயம்பட்டு வந்திருந்தவன் இதயத்தில் ரத்தம் கசிந்தது.


‘’இப்படி ஏதாவது ஒருநாள் யாரும் இல்லாத போது, என்னை உடலாலும் நீங்க திருப்தி செய்யணும்னு நான் எப்பவும் எதிர்பார்த்தது இல்ல. எனக்கு  அது அவசியமும் இல்லை. நம்ம உறவும் இதுக்காக மட்டும் ஆனதும் இல்லை. முதல்ல கதவைத் திறந்து விடுங்க. யாழி வந்தா என்ன நினைப்பா..?’’ சொல்லிவிட்டு திரும்பி நின்றாள். அவள் முதுகையே வெறித்துக் கொண்டு நின்றான்.


’’நான் உனக்கும் வேண்டாமா வானு..’’ குரல் அடிபட்டு நசிந்து போய் வந்தது. திரும்பாமலே உதடு கடித்துக் கொண்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டு நின்றாள். சில நிமிடங்களாகவும் எந்த பதிலும் வராமல் போகவே, ஒரு நீண்ட பெருமூச்சு எடுத்துக் கொண்டு சொன்னான்,


’’ஆனால், எனக்கு நீ வேணும் வானு. இந்த நிமிசம் எனக்கு நீ வேணும். நான் ரொம்ப ஓய்ஞ்சு போய் வந்திருக்கேன். இப்போ நான் உன்னை எனக்கு கொடு’னு கேட்க வரல, என்னை எடுத்துக்க’னு சொல்ல வந்திருக்கேன். யாருக்கும் தெரியாம வந்தேன்னு எல்லாம் சொல்லி என்னை இன்னும் குறுக வைக்காதே. நான் என்ன'னு உனக்கு கூட விளக்கம் தர்ற நிலைமை வந்தா நான் வாழ்றதுல அர்த்தமே இல்லை வானு.’’ 


அடுத்த வார்த்தைக்கு முன்னே வானதி அவன் நெஞ்சில் படர்ந்து இருந்தாள்.


இறுக அணைத்து அவன் நெஞ்சில் அழுதாள். இருகைகளை குவித்து அவளை அள்ளியவன், வானதியின் படுக்கை அறையை நோக்கி நகர்ந்தான்.


தென்றல் தடவி, கருமேகத்தை சூழ் ஊட்டிக் கொண்டு இருந்தது. மதிய நேரத்தின் அத்துவான அமைதி அங்கே ஒரு சங்கமத்தின் சத்தத்தை மெளனமாக மென்று இருந்தது.


 அவன் தான் அவள்… அவள் தான் அவன். ஆனால் இருவருமே தங்களுக்குள் மண்டிக் கிடந்த மட்டற்ற அன்பை காமத்தின் வாயிலாக பரிமாறிக் கொண்ட நேரம் மிக மிக குறைவு. அந்த நேரத்திலும் காமத்தை விட, காதலே விஞ்சி நின்றது இருவருக்கும் இடையில்.


உடல் புலன் இன்பத்தை மறந்து மரத்துப் போய் விட்டது வானதிக்கு. அவன் தொட்டபோது மெல்ல அது விழித்துக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பிக்க, அவன் வெற்று மார்பில் கன்னம் பொதித்து அழுதாள்.


‘’ என்னை ஏன் நந்தா தொட்டீங்க..? இந்த உணர்ச்சிகளை பட்டு போக வைக்க, நான் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பேன் தெரியுமா..? அதை மறுபடியும் துளிர்க்க வச்சு என்னை ஏன் நந்தா தண்டிச்சீங்க..? உங்க பொண்ணு இருக்காளே, அவ எத்தனை அறிவாளி தெரியுமா..? என்னைப் பார்த்து ஒருநாள் கேட்டா, ‘இளமையின் கூர்மையான இருபது வருசத்தை எப்படிமா தனியா கடந்து வந்தே’னு. அந்த ராத்திரி அப்படி அழுதேன்… 


முரடன், குடிகாரன்,மோசமான புருசன்கள் கூட எல்லாம் சகிச்சுட்டு வாழற கதைகள் எவ்வளவு பார்க்கிறோம். ஆனால் அப்பழுக்கில்லாத ஒரு நல்லவன் கூட வாழ, என் விதியில ஏன் நந்தா எழுதி வைக்கல..?’’


‘’ வானு…’’ என்றான். அவள் மீதான இறுக்கத்தை இன்னும் கூட்டி. அவன் தன்னை தொலைத்துகொள்ள வந்திருந்தான். அவள் தன்னை மீட்டுக் கொண்டு இருந்தாள்.


யாழி அடித்த அடியின் உள்காயம், அவன் நெஞ்சை அசைத்திருந்தது. எந்த பந்தத்தை அவன் உயிருக்கு மேலாய் ஆராதித்துக் கொண்டு இருக்கிறானோ, அதை உடைத்து சுயநலக்காரன்' என்ற பேரை பொதுச்சபையில் வைத்து விட்டுப் போய் இருக்கிறாள் அவன் மகள். அந்த வலியை போக்க, அவனுக்கு தாய்மடி தேவைப்பட்டது. அவள் அணைப்பில் தன்னை தொலைக்க வந்தவன், ஆறி நீர்த்துப் போன அந்த கரிக்கட்டைக்கு உயிரூட்டி இருந்தான் உள்ளபடி.


ஆனால் யாழி வங்கிக்கு வந்து செய்த ஆர்பாட்டத்தை சொல்லவே இல்லை. 


‘’ஏன் நந்தா ஒரு மாதிரி இருக்கீங்க..?’’ கேட்டவளுக்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு, மெல்ல அவள் தலை களைத்து, நெற்றியில் அழுந்த இதழ் பதித்துவிட்டு கதவைத் திறந்தான்.


வெயில் இறங்கி இருந்தது. தொட்டி செடிகளுக்கு நடுவே இருந்த கிரைனைட் திட்டில் கால்களை கட்டிக்கொண்டு யாழி அமர்ந்து இருந்தாள். பார்வை எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தது. பக்கத்தில் பாடப் புத்தகங்கள் இருந்தது. 


எப்போது வந்தாள் என்று தெரியவில்லை. பக்கத்தில் சென்று அவள் தலையை கோதி, முகத்தை வயிற்றில் புதைக்க, மனசு தவியாய் தவித்தது. அரவம் கேட்டும் திரும்பி கூட பார்க்காமல் இருக்கும் மகளின் பிடிவாதத்தை நினைத்து மனசும் பயந்தது. ஒரு நெடிய மூச்சோடு கீழே இறங்கிப் போய்விட்டான்.


 நந்தா சென்ற பிறகு, உள்ளே எழுந்து வந்தாள். 


‘’யாழி எப்போ வந்தே..?’’ கண்களை பார்க்காமல் தவிர்த்தபடி கேட்ட அம்மாவையே கூர்ந்து பார்த்தாள். முகமும் அதில் தெரிந்த ஒரு ஆத்மமும், களைந்த தலையும், நெற்றியில் வழித்திருந்த குங்குமமும்… 


தன்னையே மகள் கூர்ந்து  பார்ப்பதை பார்த்தவள், தர்மசங்கடமாய் உணர்ந்தாள். 


‘’இரு யாழி அம்மா ப்ரெஸ் ஆயிட்டு வந்துடறேன் .’’ என்றபடி பாத்ரூமிற்குள் செல்ல முயன்றவளை, பின்னால் இருந்து அணைத்து முதுகில் முகம் புதைத்தாள். இருவருக்குமே அந்த ஷணம் நெகிழ்ச்சியாக இருந்தது.


மகள் புரிந்து கொண்டது தர்மசங்கடத்தை விட, இனம் புரியாத நெகிழ்வாய் இருந்தது. அவள் தான் முன்பே சொன்னாளே, பெற்றவர்களின் அந்தரங்கத்தை உணராத குழந்தைகள், பிறப்பின் சூட்சமத்தை அறியாதவர்கள் என்று..!


‘’யாழி மா, அம்மா ப்ரெஸ்சாகிட்டு வந்துடறனே…’’ என்றாள் சன்னமான குரலில். 


"வேண்டாம் மா. நீங்க இப்பத்தான் ரொம்ப ப்ரெஸ்சா இருக்கீங்க. ’’ என்றவள் முன்னால் வந்து அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஏதோ ஒருவிதத்தில் உணர்வுகள் மட்டு பட்டு இருப்பதை போல் உணர்ந்த யாழி, சோபாவில் சரிந்து அமர்ந்தாள்.


வங்கிக்கு போய் நந்தாவை படுத்தி வைத்துவிட்டு வந்ததை வானதி எதுவும் கேட்காத போதே, அந்தத் தகவல் இங்கே வந்து சேர்ந்து இருக்கவில்லை என்று புரிந்தது. வருத்தமே இல்லை யாழினிக்கு. அவரவர் நியாயம் அவரவர்களுக்கு. 


 அம்மா என்ற மனுசி, அவளுக்குள் இருந்த தனிமை,பகிர முடியாத ஏக்கம், எல்லாவற்றையும் பார்த்து பார்த்து வளர்ந்த மகளுக்கு, நந்தா மீது கோபம் வருவது இயல்புதான்.


மாலை நகர்ந்து கொண்டு இருந்தது. யாழினியே விரும்பினாலும், நந்தாவையும், அவன் குடும்பத்தையும் விட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டாள் வானதி. மகளை அழைத்துக் கொண்டு கீழே  வந்திருந்தாள்.


புத்தகத்துடன் யாழி சோபாவில் அமர, இவளைப் பார்த்ததும் வம்பிழுப்பதும், கேலி செய்வதுமாய் இருக்கும் துர்யன், நிமிர்ந்து கூட பார்க்காமல் எழுந்து போக, நிஜமாகவே அந்த புறக்கணிப்பு வானதிக்கும் சேர்த்தே வலித்தது. புத்தகத்தின் முனையை கைகளில் கீறிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் அமர்த்திருந்த யாழியின் தோற்றம் வேறு மனசை பிசைந்தது.


"துர்யன். ஏன்பா உள்ளே எழுந்து போறே..?" வானதி தவிப்போடு கேட்டாள்.


" நத்திங் சித்தி." 


"என் மேல எதுவும் கோபமா..?" அவளும் விடாது கேட்டாள்.


"உங்கமேல இல்ல. உங்க பொண்ணு மேல . எங்கிருந்தோ திடீர்னு வந்து நின்னுட்டு, அப்பாவை சுத்தி சுத்தி அவமானப்படுத்தினா நாங்க எப்படி மன்னிக்கிறது..? அவரைப் பத்தி இவளுக்கு என்ன தெரியும்..? அவர் கூட வாழ்ற எங்களுக்குத் தான் அவருடைய அன்பு புரியும். எல்லாத்துக்கும் மேலே நம்ம வீட்டில இருக்கிற பிரச்சனையை பொது இடத்தில காட்டறது அசிங்கம்னு கூட தெரியல. 


அவளை பார்த்த நிமிசம் எந்த மாற்று எண்ணமும் எனக்கு வரல. அப்பாவையே உரிச்சுட்டு பிறந்திருக்க அவளை வெறுக்க மனசும் வருமா? ஆனால் இப்போ அவளை பார்க்கவே எனக்கு பிடிக்கல." உள்ளே போய்விட்டான்.


கண்கள் கலங்க உதடு துடிக்க அமர்ந்திருந்த மகள் முன்னாக போய் நின்றாள். ஒற்றை விரலால் மேவாயை பற்றி உயர்த்த, கரைந்து வழிந்த கண்ணீரை பார்த்து துடித்துப் போனாள்.


" யாழி மா…"


"எங்கிருந்தோ நான் வந்தனாம். என்னை பார்க்க பிடிக்கலையாம். இவனையும் எனக்கு பிடிக்கல. நாம எங்கயாவது போயிடலாம்மா. நம்ம யாருக்குமே வேண்டாம் இங்கே." அழுதபடி எழுந்து போன யாழி, வானதிக்கே புதியவள். 


மிருதுளாவை கொண்டு வந்து விட்டுவிட்டு, நந்தா வேலை இருப்பதாய் சொல்லி விட்டு வெளியில் சென்றுவிட்டான். கல்லூரி முடிந்து ஆர்த்தியோடு க்ருப் ஸ்டடிக்கு அவள் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு எட்டு மணி சுமாருக்குத் தான் தபு வீட்டுக்கு வந்தாள்.


வரும்போதே முகம் சிவந்து போய்  இருந்தது. வானதியும், கல்பனாவும் அமர்ந்து பூத்தொடுத்து கொண்டு இருக்க, மிருதுளா லேப்டாப்பில் ஏதோ வேலையில் மூழ்கி இருந்தாள்.


புத்தகப் பையை சோபாவில் விசிறிவிட்டு, நேராக யாழியின் முன்னாக போய் நின்றாள். 


"எழுந்திருடி." குரல் வீடு முழுக்க எதிரொலிக்க, அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையும் இருவர் மீதே படிய, தன் அறையில் இருந்த துர்யன் கூட வேகமாக இறங்கி வந்தான்.


யாழி அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்க, அவள் தோள்களை பற்றி தூக்கி நிறுத்தியவள், விட்ட அறையில் பொறி பறந்தது.


"...பறவைகள் நினைப்பதை
யார் அறிவார்
அந்த பரம்பொருள் இதயத்தை
யார் அறிவார்
குழந்தைகள் எண்ணத்தை
யார் அறிவார்
அந்த குலமகள் ஆசையை
யார் அறிவார்


ஊமை பெண் ஒரு கனவு
கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்…"

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 7 days ago by Kavi Chandra
This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 10 months ago
Posts: 332
 

 

 
                       18
இடி ஒன்று அடி என்று கன்னத்தில் இறங்கி இருந்தது.
 
 
"தபஸ்வி…" மிருதுளா போட்ட அதட்டலுக்கு எல்லாம் தபு ஒடுங்கவில்லை.
 
 
"காலையில எங்கே போய் இருந்தே..?" தபுவின் சின்ன உடலில் இருந்து அவ்வளவு பெரிய சத்தத்தை இதுவரை யாருமே கேட்டதில்லை.
 
 
"அப்பா பேங்குக்கு போய் இருந்தியா..? " யாழியின் தோளைப் பற்றி குலுக்க, பதிலே சொல்லாமல் வீம்பாய் நின்றாள். தபுவின் கோபம் அங்கே விபரீதமாக, மிருதுளா, வானதி இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடி வந்தார்கள்.
 
 
"என்னாச்சு தபு..?" மிருதுளா தன் மகளின் பக்கத்தில் வந்து நின்றாள்.
 
 
"என்னம்மா ஆகணும்..? பாவம்மா அப்பா. இவள் இன்னும் எத்தனைதான் மா அவரை படுத்தி வைப்பா..? நேத்து உறவுக்காரங்க முன்னாடி இவ நடந்துகிட்டதே பெரிய தப்பு. இப்போ அதையும் தாண்டிட்டா.
 
 
அப்பாவோட பேங்குக்கு போய், அவருக்கு 2 மனைவிகள், இவங்க அம்மாவை அவர் பயன்படுத்தி கிட்டாரு, சுயநலவாதி, அது இது'னு பேசி அவமானப் படுத்தி இருக்காமா. பாவம்மா அந்த மனுசன். கூனிக் குறுகிப் போய் நின்னு இருக்கார்.
 
 
அமர் அந்த நேரம் அங்கே இருந்திருக்கார். அவர் சொன்னப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? எனக்கே இப்படின்னா, அப்பா நிலைமையை யோசிங்க. அவர் என்ன தப்புமா செய்தார்..? இவ எதுக்கு அவரை இத்தனை அவமானப்படுத்தறா..?
 
 
முதல்ல அதெல்லாம் செய்ய இவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..?’’
 
 
தபுவின் வார்த்தைகளில், யாழினியை விட வானதிதான் அதிகமாய் அதிர்ந்து நின்றாள். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் தபு இல்லை.
 
 
‘’ஒரு மனிதரை புரிஞ்சுக்க, யுகமெல்லாம் தேவையில்லை. ஒரு பார்வை, ஒரு ஸ்பரிசம் போதாது..? அவர் நல்லவரா இல்லையானு உனக்கு புரியாமல் போய் இருந்தா, அது உன்னுடைய புத்தியின் கோளாறு. அவருடைய அவமானத்தை நீ உன் அவமானமா இல்ல நினைச்சு இருக்கணும். அப்படி நீ நினைக்கலைன்னா, நீ அவரை அப்பா’னு கூப்பிடாததும் நல்லதுதான். அந்த வார்த்தைக்கும், உறவுக்கும் உண்டான மரியாதையை தர தெரியாத உனக்கு அப்பாவா என் அப்பா இருக்க வேண்டியது இல்லை.’’
 
 
‘’தபு, நிதானமா பேசு…’’ மிருதுளா அதட்டினாள். வானதியின் கண்ணீர் தேய்ந்த முகமும், இயல்பாகவே யாழியின் மீது பொங்கி வழியும் ஏதோவொரு இரக்க சிந்தனையும் சேர்த்து மிருதுளாவை, என்னவோ செய்தது.
 
 
‘’ மா, ப்ளீஸ். இது ஒரு தகப்பனுக்கான போராட்டம். தயவுசெய்து இதுல நீங்க ரெண்டு பேருமே தலையிடாதீங்க.’’ என்றாள் இரு அம்மாக்களையும் ஒருசேர பார்த்து.
 
 
‘’உன்னோட இந்த ஆட்டத்தை, அகம்பாவத்தை இத்தோட நிறுத்திக்க. இனி எப்பவும் நீ எங்க அப்பாவை, அப்பான்னோ, இல்ல பேர் சொல்லியோ கூப்பிடக் கூடாது. அதுக்கு அவசியமும் இல்லை. உனக்கு போட வேண்டியதை அவர் சத்தியமா போடுவார். உனக்கு அவர் சொத்துல மட்டும்தான் பங்கு இருக்கு. அவர்மேல இல்ல. ஒரு தகப்பனோட, பரிசுத்த அன்பை புரிஞ்சுக்க உனக்கு தகுதியில்லை. ஏன்னா, நீ தகப்பன் கால் பிடிச்சு வளராதவ.’’
 
 
இத்தனை நேரம் இழுத்து பிடித்திருந்த அழுகை அந்த ஒற்றை வார்த்தையில் உடைந்து போக, வானதியிடம் இருந்து ஒரு கேவல் வெடித்தது. அம்மாவின் கண்ணீர் அந்த வீம்புக்காரியை முற்றாய் குலைக்க, தபஸ்வியின் மீது ஒரு வெறுப்பு பார்வையை விசிறிவிட்டு, அழுகின்ற அம்மாவை நோக்கி ஒடினாள்.
 
 
தபுவுக்குமே அந்த வார்த்தையை சொன்ன பிறகுதான் அதன் வலி நெஞ்சை இழுத்து பிடிக்க, மிருதுளாவின் கோபப் பார்வையை பார்த்து தன்னால் தலை கவிழ்ந்தாள்.
 
 
‘’ அம்மா, அழாதமா..’’ யாழி பக்கத்தில் வந்து அம்மாவின் முகத்தை கையில் ஏந்த, வேகமாய் கைகளை தட்டிவிட்டாள்.
’’நீ பேங்குக்கு போனியா..? ஏன் போனே..? என்கிட்ட ஏன் அதை சொல்லல.’’ குரல் கோபத்தில் நடுங்கியது.
 
 
‘’நீ எதுக்கு போனமா..? "
"உன் அட்மிசன் விசயமா பேச. என்னை எதிர்கேள்வி கேட்காதே யாழினி. எனக்கு ரொம்ப கோபம் வரும்."
"அப்போ உன்னை ஏன் அவர் உள்ளே அழைச்சிட்டு போகல."
 
 
"அதைப்பத்தி சொன்னா உனக்கு புரியாது. அதை நான் சொல்ல வேண்டியதும் இல்ல. எங்களை வச்சுத்தான் நீ. உன்னை வச்சு நாங்க சேரல. கொல்கத்தாவில இருந்து கிளம்பும் போது, உன்கிட்ட என்ன சொல்லி அழைச்சிட்டு வந்தேன். நீ இங்கே வந்து என்ன பண்ணிட்டு இருக்கே..?" வானதியின் இயலாமையும், ஆற்றாமையும் கோபமாக வெடித்தது.
 
 
கல்பனா கண்ணீரோடு அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்.
 
 
யாழி கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக நிற்க, அந்த பிடிவாதம் வானதியை இன்னும் கோபமூட்டியது.
 
 
"வாயைத் திறந்து பேசு யாழி."
"நாம கொல்கத்தாவுக்கு திரும்பி போயிடலாம் மா." நலிந்த போன குரலில் சொல்ல, இன்னும் கோபம் கூடியது.
 
 
"நான் கேட்ட கேள்விக்கு இது பதிலில்லை. ஏன் அப்படி செய்தே.? " மகளின் முகவாயை பற்றி வேகமாய் திருப்ப, சீற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
 
 
"அப்படித்தான் போவேன். நீ யார்னு இப்பவும் வெளி உலகத்துக்கு தெரியாம போனால், அந்த சுயநலக்கார மனுசன் உன்னை கீப்'னு ஊரை நம்ப வச்சிடுவார்மா. " முடிக்க கூடயில்லை. முகத்திலும், முதுகிலும் மாறி மாறி விழுந்த அறையில் நிலைகுலைந்து போனாள்.
 
 
"செத்து போயிடு யாழி. நீ எனக்கு வேண்டாம். இந்த போராட்டமும், பரிதவிப்பும் உன்னால தானே? உனக்காகத் தானே நான் அத்தனையும் ஏத்துகிட்டு உயிரோட இருக்கேன். எனக்காக செய்றேன்'னு சொல்லிட்டு நீ செய்யுற ஆர்ப்பாட்டத்தை இன்னும் எவ்வளவு நான் சகிக்க.? நான் சகிப்பேன், உன்னை பெத்த கடனுக்காக நந்தா சகிப்பார். அவரை சேர்ந்த மற்றவங்க ஏன் சகிக்கணும்..?
பிடிவாதம், வீம்பு, எதிர்வாதம்..! உன்னை நான் சரியா வளர்க்கலயா..? அதனால தான் இவ்வளவு அவமானமா.? "
வானதி அழுது பார்த்ததில்லை.
 
கோபப்பட்டு பார்த்ததில்லை. கடிந்து பார்த்ததில்லை. அடித்தும் பார்த்ததில்லை.
 
 
அத்தனையும் இன்று தன் மீது செய்ததை பார்த்துக் கொண்டு நின்றாள். மொத்த குடும்பமும் விக்கித்து நிற்க, கல்பனா கண்ணீரோடு வந்து வானதியின் கைகளை பற்றிக் கொண்டார்.
 
 
"இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டியே அந்த பச்சை மண்ணை பார்த்து..! உன் பொறுமையும் நிதானமும் எங்கே போச்சு வானதி..?"
 
 
மாமியார்க்கு எந்த பதிலும் சொல்லாமல், கைகளை விலக்கி விட்டு, கண்ணீரோடு தன்னுடைய அறைக்குச் செல்ல, சில நிமிடங்கள் தரையைப் பார்த்துக் கொண்டே நின்ற யாழி, வெளியே சென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
 
 
ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவ, யாரும் யாரோடும் உரசிக் கொள்ளாமல் அவரவர் அறைக்கு திரும்ப, அவர்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் அங்கேயே கிடந்தது.
 
 
எத்தனை காற்று தடவியும் அவள் இதயத்தின் வேக்காடு மட்டும் ஆறவே இல்லை.
 
 
'......செத்து போயிடு யாழி … எனக்கு நீ வேண்டாம்…' அம்மாவின் வார்த்தைகள் மட்டும்தான் காது முழுக்க அடைத்துக் கொண்டு நின்றது.
 
 
'...நான் வேண்டாமா மா..! உன் யாழி பாப்பா உனக்கு வேண்டாமா மா..? உனக்காகத் தானே எல்லாமே செய்றேன். உனக்கே நான் வேண்டாமா மா …' உள்ளம் கேள்வியாய் கேட்க முழங்காலை கட்டிக் கொண்டு முகத்தை மூடி சத்தமில்லாமல் அழ ஆரம்பித்து இருந்தாள்.
 
 
"...சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன் உன்னை
பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள்
தானே மலர்கின்றது பல பூக்கள்
ஏனோ உதிர்கின்றது பதில் என்ன
கூறு பூவும் நானும் வேறு…"
 
 
        19
 
 
நிலவு வானத்தில் ஒரமாய் ஒதுங்கி இருந்தது. நடைபாதை வாசிகளுக்கு உயரத்தில் இருந்து டார்ச் அடிப்பது போல் தெரிந்தது அந்த காட்சி.
 
 
நந்தா போர்டிகோவில் காரை நிறுத்திய போது மணி பத்தை தாண்டி விட்டது. அடிக்கடி இப்போது உதரவிதானத்தை ஒட்டிய பகுதிகளில் ஒரு வலி வருகிறது.
 
 
வீட்டில் சொல்லி வீண் கவலைகளை உற்பத்தி செய்வதை விட, முதலில் டாக்டரை கண்டு வரலாம் என்று தான் அவன் கிளம்பிப் போனதே.
 
 
புத்துணர்வாகி கொண்டு வந்து சாப்பிட்டு முடித்தான்.
"எல்லாரும் சாப்பிட்டாங்களா மிருது..? "
"ம். அவங்க மட்டும் சாப்பிடல. சுசிலா போய் கூப்பிட்டாங்க.
 
 
பசிக்கலைனு சொல்லிட்டாங்க."
தலை அசைத்துவிட்டு சாப்பிட்டு முடித்தவன், கை அலம்பிக் கொண்டு மாடிக்கு போனான். அறையின் விளக்குகள் எல்லாம் அணைந்து கிடக்க, கிரைனைட் திட்டில் கைகளை ஊன்றி, முகம் முழுக்க கண்ணீரின் ரேகையோடு வானதி அமர்ந்திருந்தாள்.
 
 
அவளால் தபு, யாழினியை பார்த்து கேட்ட கேள்வியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
 
 
'...தகப்பன் கால் பிடித்து வளராதவள்…' எத்தனை வீரியமான வார்த்தைகள். எத்தனை வேதனையான உணர்வுகள்… அத்தனையும் தன்னால் தானே…
ஒரு தாயின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும், நியாயத்துக்கும் போராடும் ஒரு மகள், சின்ன வயதில் இருந்தே உறவுக்கு ஏங்கி, ஏங்கி, தன்னை வெளிக்காட்டினால், தாய் வருந்துவாளோ என்று அடைகாத்த ஒரு மகள், இன்று அந்த தாயாலேயே சபிக்கப்பட்டாள்.
 
 
அடிவயிற்றை தடவி பார்த்தாள். கண்ணீர் தன்னால் வழிந்தது.
 
 
'யாழி பாப்பா, நீ மட்டும் இங்கே வந்திருக்காட்டி இந்த ஜென்மத்துக்கு அர்த்தம் ஏதுடி..? உன்னைப் போல ஒரு மகள் தவத்தில் கூட கிடைக்காதே…அம்மாவை மன்னிச்சிடு யாழி பாப்பா…' தனக்குள்ளே பேசிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து பார்க்க, நந்தா குழப்பம் தோய்ந்த முகத்தோடு நின்றான்.
 
 
சில மணி நேரத்திற்கு முன், தன்னோடு சங்கமித்து முகம் ததும்ப நின்ற பெண்ணா இவள் …' என்று கேட்கும் வண்ணம் உருக்குலைந்து அமர்ந்து இருந்தாள்.
 
 
" வானு, ஏன் இப்படி இருட்டில உட்கார்ந்து இருக்க..? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..?" அவசரமாய் நெற்றியை தொட்டுப் பார்த்தான். சில்லிட்டு இருந்தது.
 
 
"காலையில யாழி உங்க பேங்குக்கு வந்து இருந்தாளா நந்தா.? அதையேன் நீங்க என் கிட்ட சொல்லல, மதியம் வந்தபோது..?" ஒய்ந்து உலர்ந்திருந்த குரல், அவனை உலுக்க வேகமாய் அருகில் வந்தமர்ந்தான்.
 
 
"சொல்ற அளவுக்கு அது பெரிய விசயமில்லை. என் பொண்ணு என்னை தேடி வந்தா." இயல்பான குரலில் சொன்னவனை வேதனையாய் பார்த்தாள்.
 
 
"அவ்வளவுதானா..? கலாட்டா எதுவும் பண்ணலயா..?" இருளில் கூட அவள் பார்வையின் கூர்மை அப்படியே தெரிந்தது.
 
 
"ப்ச். அது கலாட்டாவா இல்லையானு நான்தான் சொல்லணும். வயித்தை கிழிச்சு குழந்தையை எடுக்கறதாலே எந்த தாயாவது தன் குழந்தையை வெறுத்திடுவாளா என்ன..?
என் கவலை எல்லாம் மற்றவங்க பார்வையில நான் என்னன்னு இல்ல, என் குழந்தைகள் பார்வையில் நான் எதுவா இந்த நிமிசம் இருக்கேன்… அவ்வளவுதான். சரி உனக்கு யார் இதெல்லாம் சொன்னது? பாப்பாவை எதுவும் திட்டினியோ ..?" அவன் இயல்பாக கேட்க, வானதிக்கு அழுகை அணை மீறி உடைந்தது.
 
 
"ம்." என்றாள், தரை பார்த்துக் கொண்டே.
"உனக்கு ரொம்ப திமிர் ஆகிப்போச்சு வானதி. என் பொண்ணை என் கண்ணுக்கு முன்னாலயே கொடுமைப் படுத்தற நீ. எங்கே யாழி தூங்கிட்டாளா..?" சட்டை கையை மடக்கிக் கொண்டு எழுந்து அறையை நோக்கி நகர, தூக்கி வாரிப் போட்டது போல் எழுந்து நின்றாள் வானதி.
 
 
"அவ… அவ கீழே தானே இருக்கா. இங்கே இல்லயே…"
அறையை நோக்கி நடந்தவன், அப்படியே நின்றான். முகத்திலும், வார்த்தையிலும் சினம் ஏறத் தொடங்கி இருந்தது.
"என்ன பைத்தியம் மாதிரி உளர்றே வானு..? அவ எப்போ நான் வர்ற வரைக்கும் கீழே இருந்திருக்கா..?"
 
 
"தோட்ட…த்தில இருந்தா."
 
 
"போர்டிகோல காரை விட்டுட்டுத் தானே வர்றேன். அங்கே யாரும் இல்லயே…" பதில் சொல்லிக் கொண்டே பரபர'வென கீழே இறங்கினான். வானதியும் அதே வேகத்தோடே பின் தொடர, ஹால், பூஜையறை, தோட்டம் கார் ஷெட் என்று எங்குமே யாழி இல்லை…
நடுநிசி வானம் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருந்தது. சத்தம் கேட்டு அத்தனை பேரும் ஹாலில் நிற்க, வானதி சிலையாகி இருந்தாள். உணர்வுகள் மட்டுமல்ல அவள் உயிரும் அவளை விட்டு தள்ளிப் போய் இருந்தது.
 
 
கல்பனாவுக்கு அவசரமாய் நெஞ்சுவலி வந்திருக்க, மிருதுளா தண்ணீர் கொண்டு வர ஓடினாள்.
 
 
தபுவுக்கு பயத்தில் அழுகை வந்தது.
 
 
"அய்யோ, பகல்லயே திக்கு திசை தெரியாதே அந்தக் குழந்தைக்கு. எல்லாரும் திட்டி, அடிச்சு, பெத்தவளே செத்துப் போ'னு சொன்னதை தாங்க முடியாம அந்த குழந்தை எங்கே போச்சோ…" கல்பனா அரற்றிக் கொண்டே இருக்க, நந்தா கோபத்தின் உச்சியில் நின்றான்.
 
 
"யார் என் பொண்ணை அடிச்சது..?" நடுநிசி அமைதியை அவன் குரல் துளைத்து நடுங்க வைக்க, தபு விசும்பலுடன் அம்மாவின் பின்னால் பதுங்கினாள்.
 
 
"எனக்கும், என் பொண்ணுக்குமான உணர்வு போராட்டத்தில தலையிட, அவளை பெத்தவளுக்கே உரிமையில்லை, இதுல மத்தவங்களுக்கு இடம் ஏது..?"
சப்தநாடியும் ஒடுங்கிப் போனது அனைவருக்கும்.
"என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும். உங்களை எதுவுமே செய்யமாட்டேன்.
 
 
எனக்காகத் தானே இந்த சண்டை..? நானும் எங்கேயாவது போயிடுவேன். கண் காணாமே " என்றவன் அலைபேசியை எடுத்து அமரை அழைத்துக் கொண்டே கிட்டத்தட்ட கார் ஷெட்டை நோக்கி ஓடி இருந்தான்.
 
 
அவனை பின் தொடர்ந்து துர்யனும் ஓட, வானதி அப்படியே சம்மணம் இட்டு தரையில் அமர்ந்தவள், வெறித்த பார்வையோடு சுருண்டு படுத்துக் கொண்டாள்.
 
 
இந்த உலகம் அவளை விட்டுவிட்டு சுழன்று கொண்டு இருந்தது. அப்படி ஒன்றும் யாழி விட்டுவிட்டு போய்விட மாட்டாள். என் மனதையும், உணர்வையும் பார்த்து பார்த்து காபந்து செய்த என் தெய்வம் என்னை விட்டு போகுமா..’ துளிதுளியாய் சிந்தனை அவள் இதயத்தை விட்டு ஒழுது கொண்டு இருந்தது.
தபு தண்ணீர் கொண்டு வந்து வானதியின் முகத்தில் தெளித்து, நிமிர்த்தி அமர வைத்தாள். மிருதுளாவின் பாதங்கள் தரையில் படாமல் கூசிக் கொண்டு இருந்தது. எங்கோ இருந்தார்கள். இணக்கமோ, வருத்தமோ எதுவாக இருந்தாலும், தாய்க்கு மகளும், மகளுக்கு தாயுமே ஆதாரமாக இருந்தார்கள். இங்கு வந்தநேரம் மொத்தமாய் அந்த பந்தம் முடிந்து போய் விடுமோ என்று தவிப்பாக இருந்தது.
 
 
‘’தபு, யாழியோட நம்பர் தெரியுமா..? கால் பண்ணிப் பாரு.’’ மிருதுளா தன்னுடைய மொபைலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.
 
 
‘’நம்பர் தெரியலயேமா..’’ என்று சொன்ன மகளை எரிச்சலோடு முறைத்தாள்.
‘’அவ நம்பரை தெரிஞ்சுக்க கூட ஆர்வமில்லை. ஆனால் அவளை அதட்டவும், மிரட்டவும் மட்டும் முன்னாடி வந்து நிற்கிறே.’’ என்றவள், மெல்லிய தயக்கத்தோடு வானதியின் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தாள். இரண்டு பிள்ளைகளை பெற்ற தாயாய், வானதியை பார்க்க பார்க்க அடிவயிறு தீப்பிடித்தது.
 
 
ஏனோ பார்த்த நிமிசம் தொட்டு இந்த நிமிசம் வரைக்கும், அவளை பிடிக்காமல் போகவே இல்லை. அந்த மாயம்தான் என்னவென்று மிருதுளாவுக்குமே புரியவில்லை.
 
 
‘’இதப் பாருங்க, பயப்படற மாதிரி எங்கேயும் போய் இருக்க மாட்டா. முதல்ல தைரியமா இருங்க. பாப்பா நம்பரை இதுல டயல் பண்ணுங்க..’’ தன்னுடைய மொபைலை நீட்டினாள். இயந்திரமாய் வானதி யாழினியின் எண்ணை ஒற்றித் தர, மொபைலை வாங்கிக் கொண்டு தபஸ்வி வாசலுக்கு விரைந்தாள்.
 
 
நிலைகுத்திய பார்வையில் இருந்து ஒருதுளி கண்ணீர் இல்லை பெற்றவளுக்கு. அவளைப் பார்க்க பார்க்க பயமாக இருந்தது கல்பனாவுக்கும், மிருதுளாவுக்குமே.
 
 
‘’இதப்பாருங்க, ஒரு இக்கட்டான சூழ்நிலையில இந்த மொத்த குடும்பத்தையே மீட்டுட்டு வந்த நீங்க இப்போ இப்படி கலங்கிப் போய் இருக்கலாமா..? பயப்படாதீங்க ப்ளீஸ்.’’ என்றவள் வேகமாக எழுந்து வெளியில் வரவும், தபு முகம் வெளிறி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
 
 
 ‘’ என்னாச்சு தபு..?’’
 
 
‘’ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருதுமா.’’ முடிக்கும் முன் கன்னத்தில் பொளேர் என்று அடி விழுந்தது.
 
 
‘’எல்லாத்துக்கும் காரணம் நீதான். எதுவா இருந்தாலும், அவ அம்மாகிட்டே தானே நீ சொல்லணும். இப்போ பாரு எவ்வளவு பெரிய விபரீதம்.’’ என்றவள் நந்தாவின் எண்ணை அழைத்தபடி, பதட்டமாக வாசலுக்கு ஒடினாள்.
 
 
 தூங்க சென்ற அமர் பைக் சாவியுடன் வேகமாய் வெளியில் வர, லதா குழப்பமாய் தன் அறையில் இருந்து எழுந்து வந்தார்.
‘’இந்நேரம் எங்கே அமர்..? எமர்ஜென்சி கேஸ் எதுவுமா..?’’
 
 
‘’ நந்தா அங்கிள் கால் பண்ணினார்மா. பாப்பா, ஐ மீன் அவங்க பொண்ணை காணோம்னு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஈவினிங் தபு இங்கே வந்தப்போ, நான் சொன்னதை வச்சு வீட்டில எதுவும் பிரச்சனை ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். கில்டியா இருக்குமா.’’ என்றவன் லதாவின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறி இருந்தான்.
 
 
சென்னை உறங்கி இருந்தது. நந்தா பரிதவிப்பின் உச்சத்தில் இருந்தான். எத்தனை வேகமாய் செலுத்தியும் வண்டி நகராமல் நிற்பது போலவே இருந்தது. ரவுண்டானாவை ஒட்டி காத்திருக்க, அமர் வேகமாய் வந்து சேர்ந்திருந்தான். என்ன நடந்தது என்று விசாரித்து நேரத்தை வளர்த்தவில்லை இருவருமே.
 
 
’’என்னாச்சு அங்கிள்..? யாழி நம்பருக்கு கூப்பிட்டு பார்த்தீங்களா..?’’
‘’என்னாச்சுன்னு தெரியல அமர். நான் வரும்போது யாழிமா வீட்டில இல்ல. வீட்டு லேண்ட்மார்க் லொகேசன் கூட அவளுக்கு தெரியாது. இன்னும் இந்த ஊரும், மொழியும், ஏன் நானுமே கூட அவளுக்கு புரிபடல. எனக்கு ரொம்ப நெர்வசா இருக்கு அமர்.’’ நந்தாவிற்கு அந்த வெட்டார வெளியிலும் வியர்த்தது. நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டான். நிற்பதா, நடப்பதா, இங்கிருந்து நகர்வதா எதுவுமே புரிபடாத பரிதவிப்பில் இருந்தான்.
 
 
 ‘’கவலைப் படாதீங்க அங்கிள் கண்டுபிடிச்சிடலாம்.’’ என்றவன் யார் யாரையோ அழைத்து பேசிக் கொண்டு இருந்தான். அந்த ஐந்து நிமிடங்களும் நரகத்தில் நீந்துவது போல் இருந்தது நந்தாவுக்கு. சொல்லத் தெரியாத தவிப்பு. ரத்தம் சூடாய் மூளையை போய் தொட்டு தொட்டு வந்தது.
‘’ஸ்டேசனுக்கு எல்லாம் தகவல் அனுப்பிட்டேன் அங்கிள். நீங்க ஏன் இவ்வளவு நெர்வர்சா இருக்கீங்க..?’’ வேர்த்து விதிர்விதிர்த்த நந்தாவின் கைகளைத் தொட்டபோது, அப்பட்டமாய் அதில் நடுக்கம் தெரிந்தது.
 
 
’’என் பொண்ணை பக்கத்தில் வச்சு பார்த்து பார்த்து வளர்க்கணும்னு நான் இருபது வருசமா தவிக்கிறேன். கருவான நாள் முதல் என்னைவிட்டு தள்ளியே இருந்தா. இப்போ என்கிட்ட வந்து இரண்டு மாசம் முழுசா ஆகல, என் தங்கத்தை நான் தவற விட்டுடேனோ..! தள்ளி வச்சே நான் ரசிச்சு இருக்கலாமோ..! என் பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லை அமர்.’’
 
 
‘’சே..! எதுவும் ஆகாது, யாருக்கும். நீங்க கூட இத்தனை உடைஞ்சு போனா மத்தவங்க நிலைமையை யோசிங்க. இங்கே தெரிஞ்சவங்க, ரிலேடிவ்ஸ் வீடு..?’’
 
 
‘’எங்கேயும் போகத் தெரியாது. ஆனாலும் நான் இப்பத்தான் கால் பண்ணி உறுதி செய்தேன்.ஒவ்வொருத்தரும் இல்லை இல்லை’னு சொல்லும்போது நான் உடைஞ்சு நொறுங்கிப் போறேன். விக்கியும், கிளம்பி போயிருக்கான். வீணா மாப்பிள்ளையும் தேடிட்டு போய் இருக்கிறார். சிவா இன்னொரு பக்கம் கிளம்பி இருக்கான்.’’
 
 
லேசாக மூச்சு திணறியது,நந்தாவுக்கு. திறந்திருந்த பெட்டிக் கடையில் இருந்து வாட்டர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து முகத்தில் அடித்தான். கொஞ்சமாய் புகட்டி காருக்குள் அமர வைத்தான்.
 
 
ஒரு மனிதன் தகப்பனாகும் போது இத்தனை பலவீனமாகியா போவான்..! ஆச்சர்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
சுதாரித்து அமர்ந்தான், காரை இயக்கப் போக, கவலையாக ஏறிட்டான் அமர்.
‘’அங்கிள். நீங்க கண்டிசன்ல இல்லை. இப்போ காரை ஓட்டறது ரொம்ப கஷ்டம். முதல்ல வீட்டுக்குப் போங்க. என்னை நம்புங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல உங்க பொண்ணை சேதாரம் இல்லாம கூட்டிட்டு வந்து சேர்க்கிறேன்.’’ என்றான், கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டு.
மறுத்து தலை அசைத்தான் நந்தா.
 
 
‘’என் பொண்ணை பார்க்காமே என்னால மூச்சுவிடவே முடியாது. எப்படி வீட்டுக்குப் போவேன், அமர். நான் இப்படி தேடிட்டே போறேன். நீங்க யாழியைப் பார்த்தா உடனடியா தகவல் தர்றீங்களா..?’’ கண்கள் கலங்க குழந்தை போல் கேட்டவனைப் பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது அமருக்கு.
 
 
நந்தாவை நிறுத்த முடியாது என்று தெரியும். நந்தாவுக்கு நம்பிக்கை தந்துவிட்டு, பைக்கை எடுத்துக் கொண்டு இருளோடு கலந்தான்.
 
 
”...அவள் எனக்கா மகளானாள்… நான் அவளுக்கு மகனானேன்
    என் உரிமைத் தாயல்லவா..? என் உயிரை எடுத்துக் கொண்டாள்.
 
 
 என் இதயத்தில் பூட்டி வைத்தேன்… அதில் என்னையே காவல் வைத்தேன்
   அவள் கதவை உடைத்தாளே, தன் சிறகை விரித்தாளே…
    அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே…
    நான் பார்க்கும் போது, கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே…
 
 
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 
 
 
 
This post was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 51
Topic starter  

                           20

த்து நிமிடங்கள் பரபரப்பான அலைபேசி பேச்சுகளிலேயே கரைந்தது. அடங்கி இருந்த ஊர் ஒரு அமானுஷ்ய பயத்தை என்றும் இல்லாமல் இன்று உண்டாக்கியது. காலையில் இதேபோல் யாழிக்கு வழி சொல்லி, கொண்டு போய் விட்டு, அந்த மிரட்சி வழியும் கண்களை ரசித்து, இவனாலே அவளை காணாத கொடுமையை சகிக்க முடியவில்லை என்னும் போது, நந்தாவையும், வானதியையும் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

 

 கதீட்ரல் சாலையை கடந்து கொண்டிருக்கும் போது, எக்மோர் ஸ்டேசனில் இருந்து அழைப்பு வந்தது, வாட்ஸ் அப்பில் யாழியின் படத்தோடு.

 

யில் நிலையங்கள் எப்போதும் அரவம் தொலைப்பது இல்லை. வந்து போவதும், சென்று வருவதுமாய் மனிதர்கள் நித்தமும், அங்கே வாடிக்கையாளர்கள் ஆகிக் கொண்டு இருந்தார்கள். முகம் முழுக்க வெறுமையில் நிழல் குடை விரித்திருக்க, அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

 

’செத்து போயிடு யாழி…’ அந்த வார்த்தைதான் சில மணிநேரமாய் மூச்சு காற்று முழுக்க அடைத்துக் கொண்டு இருந்தது. இலக்கில்லாமல் தான் பஸ்சில் ஏறினாள். இறுதி ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொண்டாள். மகளிர்க்கு இலவசம் என்பதால், ஏறுமிடமும், இறங்குமிடம் பற்றியும் நடத்துனர் அக்கறைபடவே இல்லை.

 

ஸ்டேசனில் வந்து அமர்ந்தவள் தான். எந்தச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே அமர்ந்து கிடந்தாள். அம்மா சொன்னது போல் செத்து போய்விடலாம் தான்… அப்படி போனால், அம்மா என்னாவாள்..? இந்த கோபம் மட்டுமில்லை அம்மா, இத்தனை நாளும் காட்டிய அன்பும், பாசமும், அர்த்தமில்லாதவையா..? 

 

யாழி மட்டும் இல்லாமல் போனால், வானதி என்பவள் இல்லவே இல்லை. யாருமே இல்லாவிட்டாலும், கொல்கத்தாவில் இருந்த மட்டுக்கும், இருவருக்கு மட்டுமே இருந்த உலகத்தில் அத்தனை பாசமும், அன்பும் இருந்தது. இங்கு வந்தபிறகுதான் இத்தனை சச்சரவும். 

 

நான் இங்கு இருந்து போய்விட்டால், நிச்சயம் அம்மா அங்கே வந்துவிடுவாள்..’ இந்தச் சிந்தனை மட்டும்தான் யாழிக்குள் ஓடிக் கொண்டு இருந்தது. நேரத்தின் கரைசல் வேறு மெல்ல மெல்ல அடிவயிற்றில் பயத்தை தந்தது. கையில் பணமும் இல்லை, எப்படி ரயிலேறுவது..? என்ற யதார்த்தமும் சேர்த்து மிரட்ட, மிரட்சியோடே அமர்ந்து கிடந்தாள்.

 

‘’எந்த வண்டியில போகணும்..? ரொம்ப நேரமா இங்கேயே குந்திகினு இருக்கே..?’’ அசிங்கமாய் சிரித்துக் கொண்டு கழுத்துப் பட்டையை தளர்த்தியபடி கேட்ட, யாரோ ஒருவனின் கண்ணில் வழிந்த காமம்தான் யாழியின் அடிவயிற்றில் பயத்தை கிளப்பியது.

 

வேகமாக எழுந்து இன்னும் கொஞ்சம் வெளிச்சமாய் இருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் நடவடிக்கை அவனுக்கு இன்னும் சந்தேகத்தை வலுக்க வைக்க, பீடியை இழுத்தபடியே யாழியை ஆராய ஆரம்பித்தான். இவனைத் தாண்டி வெளியிலும் செல்ல முடியாது என்பதால், மெல்ல மெல்ல மிரள ஆரம்பித்து இருந்தாள்.

 

‘...மா, சாரிமா. உன்னை விட்டுட்டு தனியா வந்தது தப்புமா. உன் யாழிக்கு பயமா இருக்குமா..’ மானசீகமாய் கைகளை குவித்து முணுமுணுக்க ஆரம்பித்து இருக்க, மெல்ல தடதடக்கும் காலடிச் சத்தத்தின் அடையாளம் தெரிய, கண்ணீரோடு வேகமாய் எழுந்து நின்றாள்.

 

 நந்தா, துர்யன், அமர் என்று அத்தனை பேரும் கிட்டத்தட்ட அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்க, அந்த நிமிசம் அவளுக்குள் உண்டான ஆசுவாசம் வார்த்தைக்குள் அடக்க முடியாது. அதுவும் பைத்தியக்காரன் போல் தலை களைந்து, கண்கள் சிவந்து, ஆள் தளர்ந்து வந்த நந்தாவை பார்த்த நிமிசம் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.

 

‘’ என்ன பாப்பா இது..! எதுக்கு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே..’’ இழுத்து தன்னோடு சேர்த்து அவள் உச்சந்தலையில் முகவாயை வைத்து அழுத்தி, மகளை தனக்குள்ளே அடைகாத்துக் கொண்டான். இருவருக்குமே உடல் நடுங்கியது. உதடு துடித்தது, அப்பா’ வென்று சத்தமிட்டு கதற. ஆனால் வீம்பாய் வெற்று கண்ணீரை மட்டும் விட்டுக்கொண்டு நின்றாள்.

 

நந்தாவின் அன்பை பார்த்து மற்ற இரு ஆண்களும் நெகிழ்ந்து போய் நிற்க, மகளை தன்னோடு சேர்த்து அணைத்தபடியே நடந்து காருக்கு வந்தான். 

 

காரில் யாழியை ஏற்றிவிட்டு, அமரை நன்றிப் பெருக்கோடு பார்த்தான்.

 

‘’மறக்க முடியாத உதவி அமர். நன்றினு எளிமையா எப்படிச் சொல்ல..? என்ன தந்து இந்த நன்றிக்கடனை அடைக்க..!’’ என்றபோது எத்தனை கட்டுப்படுத்தியும் அமரின் பார்வை காருக்குள் அமர்ந்திருந்த யாழியைத் தொட்டுத்தான் மீண்டது.

 

கைகளை ஆதரவாக தட்டித் தந்தவன், மெல்ல தலையசைத்து விட்டு விடை பெற்றுக் கொள்ள, துர்யனும் அப்பாவை பைக்கில் தொடர்ந்து கொண்டு இருந்தான். 

 

சீட் பெல்ட்டை மகளுக்கு மாட்டி விட்டான். அமைதியாக இருந்தவளை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூட பேச்சில்லை. வீட்டை சமீபிக்கும் போது, சாலையை பார்த்துக் கொண்டே சொன்னான்,

 

’’இன்னொருமுறை உன்னையும் வானுவையும் நான் இழக்க மாட்டேன் யாழி. அப்படியொரு நிலைமை வந்தால், என்னை நீங்க சந்திக்கவே மாட்டீங்க. ’’ விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள். நந்தா திரும்பி பார்க்கவே இல்லை. அந்த இருளில் கல்பனா, மிருதுளா, தபு என்று அத்தனை பேரும் படியிலேயே உட்கார்ந்து இருக்க, வானதி வெளியே வரவே இல்லை. நந்தாவிடம் இருந்து யாழி கிடைத்து விட்ட தகவலும், அவள் எங்கிருந்தாள் என்ற செய்தியும் வந்த பிறகு ஒரு பெரும் மெளனத்தோடே அமர்ந்து இருந்தாள்.

 

தவிப்போடு பேச ஓடிவந்த கல்பனாவை பார்வையாலேயே தடுத்துவிட்டு, கைகளை பற்றிக் கொண்டு போய் வானதியின் முன்னாக நிறுத்தினான். வானதியின் கைகளை எடுத்து யாழியின் கைகளைத் தந்தான்.

 

‘’உன் உயிரை உன்கிட்டயே திருப்பி தந்துட்டேன் வானு. மறுபடியும் உன்னை அம்மாவாக்கி இருக்கேன். வார்த்தைகளில் இனி நிதானம் வை. உன்னைவிட, என்னைவிட நம்ம பிரிவால பாதிக்கப்பட்டது என் பொண்ணுதான். என் குழந்தைகள் வார்த்தைகள் எதுவுமே என்னை காயப்படுத்தாது. அப்படி காயப்படறதா உணர்ந்தா நான் ஒரு தகப்பனா இருக்கிறதுக்கே தகுதியில்லாதவன். ‘’ என்றவன் யாழியின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். 

 

வானதி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், மகளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

 

 நான்கைந்து மணிநேரம் போராட்டம் முடிவுக்கு வந்தபோது நடுநிசியை கடந்து இருந்தது நேரம். ஏ,சி. குறைத்து வைத்துவிட்டு படுக்கையில் சரிந்தவன், மார்பை சுற்றி மிருதுளாவின் கரங்கள் படிந்தது. ஆதரவாய் தட்டித் தந்தாள்.

 

  ‘’ரொம்ப பயமுறுத்திட்டா. காலையில காலேஜ்க்கு அழைச்சிட்டு போகும் போது, தபுவை கொஞ்சம் கண்டிச்சு வைங்க.’’ 

 

  ‘’அது தப்பு மிருதுளா. யாழி மேல உள்ள உரிமையில தான் தபு பேசினது. அது தப்புன்னு சொல்லி இரண்டு பேருக்கும் நடுவில இடைவெளியை உண்டாக்க கூடாது. நான் பார்த்துக்கறேன். நீ தூங்கு. மணி இப்பவே நாலு ஆயிடுச்சு.’’ என்றவன் திரும்பி படுத்தபோது இதயத்தில் மின்னல் வெட்டியது போல் இருந்தது. அதைத் தொடர்ந்து மூச்சு திணற ஆரம்பிக்க, அந்த ஏ.சி. குளிரிலும் வேர்த்து கொட்ட ஆரம்பித்து இருக்க, நந்தாவின் இதயத்தில் முதன் முறையாக மரணபீதி மெல்ல வளையமிட ஆரம்பித்தது. வேகமாய் திரும்பி மிருதுளாவைப் பார்த்தான். அவள் உறக்கத்திற்கு தன்னை கடத்த தொடங்கி இருந்தாள்.

 

நடுத்தர வயதில் இரண்டு பெண் துணைகள், அறியாத வயதில் இரண்டு பெண் பிள்ளைகள், இன்னும் ஓட்டு போடக்கூட துவங்கி இருக்காத ஒரு ஆண்பிள்ளை, தள்ளாத வயதில் பெற்றவள்… இத்தனை பேரையும் விட்டுவிட்டு போய் விடுவோமோ என்று முதன்முறையாக பயந்தான்.

 

”...

காட்டு மனமிருந்தால்

கவலை வளர்ந்து விடும்

காட்டு மனமிருந்தால்

கவலை வளர்ந்துவிடும்

கூட்டை திறந்து விட்டால்

அந்த குருவி பறந்து விடும்

காலில் விலங்கும் இட்டோம்

கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம்

நாட்டியம் ஆடுகின்றோம்

 

மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

                    21

 

மெல்ல விடியத் தொடங்கி இருந்தது. இரவின் ஆர்பாட்டம் முடிந்து அத்தனை பேரும் உறங்கச் செல்லவே  நேரமாகி இருந்ததால், விழித்துக் கொள்ளவும் வெகு நேரமாகி இருந்தது. சுசிலா அங்கேயே தங்கி வேலை செய்பவர் என்பதால், அவர் காலையில் எழுந்து வேலைகளை  ஆரம்பித்திருக்க, மிருதுளா குளித்து விட்டு வேகமாய் வந்து சேர்ந்து கொண்டாள்.

 

நந்தா எழுந்து வந்தபோது, அப்பட்டமாய் கண்களில் சோர்வு சொக்கிக் கொண்டு நின்றது.

 

மூச்சு திணறலும், வேர்வையும் நிற்க நீண்ட நேரம் பிடித்து இருக்க, அவன் கிட்டத்தட்ட உறங்கவே இல்லை. உடம்பு முழுக்க அசதியும், சோர்வும் நிரம்பி வழிந்தது. டீபாயில் இருந்த பேப்பரை எடுத்து படிக்கவே யானைபலம் தேவைப்படும் போல் இருக்கவே அமைதியாக அமர்ந்து இருந்தான்.

 

வானதியும் இரவு முழுக்கவே உறங்கவில்லை. ஒரு வார்த்தையும் பேசாமல் அறைக்குள் சென்று படுத்துக் கொண்ட யாழி பற்றிய சிந்தனை ஒருபக்கம் என்றாலும், அதைவிட பெரிதாய் கடல் அரித்து திண்ணும் கடற்கரையைப் போல் ஒருவித பரிதவிப்பிலேயே இருந்தது மனசு.

 

உடம்பில் அலை அலையாய் எழுந்த பரிதவிப்புக்கு பெயர் தெரியவில்லை. ஏனோ அந்த இரவில் நந்தா தன்னுடைய பக்கத்தில் வேண்டும் போல் மனசும் உடம்பும் ஏங்கியது. இங்கே வந்து படுத்துக் கொள்ளச் சொல்லாமா என்று கூட நினைத்தாள். ஆனால் அந்த சிந்தனையும் உணர்வும் தான் அவளுக்கு விசித்திரம். உடலால் அவள் நந்தாவை தேடியதே இல்லை. அவனுக்குள் ஒரு விசித்திர அணுவாய் கலந்து போனவளுக்கு, அவன் அங்கத் தழுவலில் அப்படியொன்றும் லயிப்பெல்லாம் இல்லை.

 

ஆனால் இந்த இரவில், தான் அவன் அருகில் இருக்கவேண்டும் என்று உள்ளங்கை அகல இதயம், ஓயாமல் சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. யாழி செய்த ஆர்பாட்டங்களை கடந்து நந்தா ஏனோ இன்று அவளை உணர்வுகளால் ஆக்ரமித்து இருந்தான். இப்படியொரு உணர்வுதானே அவளை இங்கே கடத்தி வந்தது.அப்படியென்றால் நந்தாவுக்கு ஏதோ சுகவீனம்..! இப்படி யோசித்த பிறகு எப்படி அவளால் கண்களை மூட முடியும்..?

 

எப்போதும் வழக்கமாய் விடிந்ததும் எல்லாம் கீழே வந்து உட்கார்ந்து கொள்ள மாட்டாள். அவர்கள் கட்டுமானம் செய்த அன்றாடத்துக்குள் தனக்கு உரிமை இருக்கிறது என்று காட்டிக்கொள்ள தன்னைத் தானே வழுவில் புகுத்திக் கொள்வதில் துளிகூட விருப்பமில்லை  வானதிக்கு.

 

சமையல் அறைக்குள் புகுந்து எனக்கும் உரிமை இருக்கிறது என்று நிலை நாட்டியதும் இல்லை. மாலையில் எப்போதும் மிருதுளாவிற்கு முன்னாக வந்துவிடுவாள். சுசிலா சமைக்கும் போது,உதவி செய்வாள். யாழிக்கு பிடித்தமானதை சமைக்க போகும்போது அனைவருக்கும் சேர்த்து செய்து வைப்பாள். 

ஆனால் இன்று எழுந்து முகம் அலம்பிக் கொண்டு வாரிச் சுருட்டி, கொண்டை இட்டுக் கொண்டே கீழே இறங்கி இருந்தாள். இரண்டாவது மாடியில் இருந்து இறங்கும் போதே சோர்ந்து போய் அமர்ந்திருந்த நந்தா தான் கண்ணில் பட்டான்.

 

‘ நான் சொன்னேன்ல…’ அவள் இதயம் அவளைப் பார்த்து கெக்களிப்பு செய்தது. அவனும் நிமிர்ந்து வானதியையே தான் பார்த்தான்.

 

கீழே வந்தவள் பார்வையாலேயே, ‘ என்னாச்சு..?’ என்று விசாரித்துக் கொண்டு இருந்தாள். அந்த மடையனோ அவளின் தவிப்பை துளிகூட உணர்ந்தவனாக இல்லாமல் கேட்டான்,

 

‘’ வானு, என்ன இத்தனை சீக்கிரம் எழுந்து வந்திருக்கே..? பாப்பா என்ன பண்றா..? நைட் நல்லா தூங்கினாளா..? நீ எதுவும் திட்டல இல்ல..!’’ 

 

‘’ அவ இருக்கா. அவளுக்கென்ன..! ‘’ என்றவள், எதிரில் அமர்ந்தாள், நந்தாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.

 

 ‘’ கண் எல்லாம் சிவந்து இருக்கே. நைட்டெல்லாம் தூங்கலயா நந்தா..? முகத்தில ஏன் திடீர்னு இத்தனை அசதி…’’ கைகளை நீட்டி அவன் தலையை கோதப் போனவள், மிருதுளா சமையல் அறையில் இருப்பதை எண்ணி, கையை கட்டுப்படுத்தி வைத்தாள்.

 

’’ தெரியல வானு. திடீர்னு என் பலத்தை எல்லாம் யாரோ களவாடிட்டு போயிட்ட மாதிரி இருக்கு. சரியாகிடும். நீயும் தூங்கலயா..?’’ என்றான் வானதியின் வலக்கையை எடுத்து வருடிக் கொண்டே. அந்த வருடல் அவளுள் இனம்புரியாத உணர்வைத் தர, அவன் முகத்தை உற்றுப் பார்த்து. அவனுக்கு என்ன உபாதை என்று அறிய முற்பட்டு தோற்றுக் கொண்டு இருந்தாள்.

 

‘’ தூங்க முடியல. ஏதோ குழப்பம். ‘’ என்றவள் மிருதுளா வரவும், எழுந்து கொண்டாள். மீண்டும் மாடிக்கு வந்து குளித்து முடித்து ஹாலுக்கு வர, யாழி அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தாள். தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் கடந்து போகும் அம்மாவின் புறக்கணிப்பு யாழினியை என்னவோ செய்தது.

 

’... செத்துப் போ யாழி…’ அம்மா அந்த வார்த்தையை கோபத்தில் அல்ல, அறிந்தேதான் உச்சரித்தாளா..? அதிலேயே தான் இன்னும் நிலைபெற்று இருக்கிறாளா..? இந்த புறக்கணிப்பு ஏன்..?

 

ஹாஸ்பிடலுக்கு தயாராகி வெளியில் வந்தாள். இன்னும் யாழி அங்கேயே அமர்ந்திருக்க, ஒரு பெருமூச்சுடன் சுவற்றை பார்த்தபடி சொன்னாள்.

 

‘’ என்னை தனியா விட்டுட்டு போகிற உறவுகள், எனக்கு புதுசே இல்லை. என் அம்மா என்னை விட்டுட்டு போனதிற்கும், நீ என்னை விட்டுட்டு போக நினைச்சதுக்கும் அதிக வித்யாசமில்லை. ஒரு தாயா, உனக்கு என்னால முடிஞ்ச அத்தனையும் செய்து இருக்கேன். இங்கே வந்ததும் கூட ஒரு நீண்ட ஆலோசனைக்கு பிறகு எடுத்த முடிவுதான். 

 

நந்தாவை காயப்படுத்தினா எனக்கு வலிக்கும்னு தெரிஞ்சும், நீ அதை செய்றேன்னா, உனக்கு நான் ஒரு பொருட்டே இல்லைனு மறுபடி மறுபடி நிரூபிக்கிறே. நான் ஓய்ஞ்சு போயிட்டேன். நீ என் உயிர்மூச்சு, நந்தா என் ஆன்மா. இந்த ரெண்டுல ஒண்ணு இல்லாட்டியும் நான் பிணம் தான். நந்தாவை ஏத்துக்கன்னு எல்லாம் உன்கிட்ட கேட்க மாட்டேன். புரிஞ்சுக்க முயற்சி செய்.’’ என்றவள், மறுநிமிடம் தாமதிக்காமல் இறங்கிப் போய் விட்டாள்.

 

யாழிக்குள் ஒரு பிரளயமே உண்டாகி கொண்டு இருந்தது. அத்தனையும் அம்மாதான். ஆனால் அவளுக்கு கூட இவளை புரியவில்லை. 

 

தாமதமாக குளித்து விட்டுத்தான் கீழே வந்தாள். வானதி மருத்துவமனைக்கு கிளம்பி இருக்க, மற்றவர்கள் இருக்கிறார்களா போய் விட்டார்களா என்று பார்க்கும் ஆர்வம் கூடயில்லை. சோபாவில் அமர்ந்து தொட்டி மீன்களை பார்த்துக் கொண்டே இருக்க, பக்கத்தில் வந்து கைகளைப் பற்றிக்கொண்டு அமர்ந்த கல்பனாவை பார்த்ததும், பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

 

‘’ ஏன் பாப்பா இப்படி செய்தே..? எங்கே போனே..? குடும்பம்னா எல்லாம் இருக்கும் தானே..? அதுக்காக இப்படி சட்னு வெளியில போயிட்டா உன்னை உயிருக்குள்ள வச்சு காபந்து பண்ணிட்டு இருக்கிற நந்தாவோட நிலைமையை யோசிச்சு பாரு..! பாவம்டா உன் அப்பன்.’’ 

 

நந்தா விசயத்தில் தன்னை மட்டுமே குற்றவாளி ஆக்கும் உலகத்தை பார்க்க  பார்க்க, சிரிப்புத்தான் வந்தது.

 

’’பாட்டி உனக்கு சாப்பாடு ஊட்டி விடட்டா..?’’ ஒடுங்கிய கண்களில் ஒளி வீசியது.

 

 வேண்டாம்’ என்று தலையசைத்தாள்.

 

’’தலை வாரி விடட்டா. இறுக்க பின்னல் போட்டு, பிச்சிப் பூ வச்சு விடறேன்.’’

 

  அந்த அன்பில் அழுகை வந்தது. ஆனாலும் அமைதியாகவே இருந்தாள்.

 

  ‘’உன் கோபத்துல நியாயம் இருக்கு. ஆனால் இந்த வயசான மனுசி மேல என்ன கோபம்..? நான் என்னம்மா செய்தேன்..?’’

 

 நிமிர்ந்து பார்த்தாள். இந்தக் கேள்விக்காகத்தான் இத்தனை நாளாக காத்துக் கொண்டு இருக்கிறாள். செப்பு இதழில் ஒரு சின்ன புன்னகை அலட்சியமாக விரிந்தது.

 

’’ இத்தனை பேரோட தனிமைக்கு சூத்திரதாரி நீங்க மட்டும்தான்.உங்கமேல நான் காட்டுற கோபமும், ஆற்றாமையும் ரொம்ப குறைவு.’’

 

‘’ யாழி…’’

 

’’ ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நந்தா மா. எங்கம்மாவை எதுக்கு உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க..?’’

 

‘’ அவன் வாழ்க்கை பட்டுப் போகாமல் இருக்க. அவன் கையில இருந்த பச்சைக் குழந்தைக்கு ஒரு தாயைக் கொடுக்க, இந்த குடும்பத்துக்கே ஒரு மகாலட்சுமியை கொண்டு வர. இதைத் தவிர எனக்கு எந்த சுயநலமும் இல்லையம்மா. ஒரு தாய் இதுக்கு மேல எதை எதிர்பார்க்க போகிறா..?’’

 

‘’ அந்த சமயத்திலே இந்த வீட்டில யாருமே இல்லையா..?’’ அடங்கிய குரலில் கேட்டாள்.

 

‘’பைத்தியககாரி மாதிரி நான் இருந்தேன். காலேஜ்ல படிக்கிற வீணா, விக்கி, மனைவியை இழந்து துயரத்தோட என் நந்தா. தபு பாப்பாவை மிருது விட்டுட்டு போனப்போ அதுக்கு இரண்டு மாசம் கூட ஆகி இருக்கல.

 

‘’ஓ..! இத்தனை பேர் இருந்தும், ஒரு குழந்தையை வளர்க்க, என் அம்மாவை கொண்டு வந்தீங்க. ஏன்னா, உங்களுக்குத் தெரியும், எத்தனை பேர் இருந்தாலும், ஒரு தாய்க்கான ஸ்தானத்தை, இன்னொரு தாயால மட்டும் தான் தரமுடியும்னு அப்படித்தானே..?’’

 

‘’அந்த இடத்துக்கு வர்ற எல்லாரும் தாயாகிட முடியாது யாழிமா. என் வானதி மாதிரி தியாகமே உருவான ஒரு மனுசிக்குத் தான் அதெல்லாம் சாத்தியம்.’’

 

‘’ அவ்வளவு நல்ல மனுசிக்கு இந்த குடும்பம் செய்த கைமாறு என்ன..? இத்தனை பேர்கள் இருந்தும், ஒரு குழந்தையை வளர்க்க ஒரு பெண் தேவைப்பட்டு இருக்கா. ஆனால் யாருமே இல்லாம, அனாதை மாதிரி ஒரு மனுசி,வயிற்றில் குழந்தையோட இங்கிருந்து போனாளே, அவ எப்படி அந்தக் குழந்தையை பெற்று வளர்த்து இருப்பான்னு உங்கள்ல யாருக்காச்சும் தோணி இருக்கா..? 

 

வானதி எங்களை பார்க்க விடலைனு மட்டுமே சொல்லிட்டு இருக்கீங்களே, பிரச்சனை உங்களுதுன்னதும் அதுக்கு எப்படி எப்படியெல்லாம் உபாயம் தேடறீங்க..! நானும், என்னை பெத்தவளும் உங்களுடைய பிரச்சனை இல்லையா..? அதுக்காக நீங்க சிந்திச்ச நேரம் எவ்வளவு..! ’’

 

‘’ யாழி பாப்பா…’’

 

‘’தானா சுமந்து, தானா பெத்து, தானே வளர்த்து, தானே வதங்கி, தானே துயரப்பட்ட ஒரு மனுசிக்கும், தனக்கே தனக்கான வாழ்க்கை இருக்குன்னு நீங்க நினைச்சிருக்கீங்களா..? இப்படி மனம் வெறுத்து உங்க பிள்ளைகள் போய் இருந்தா இப்படித்தான் கடவுள் விட்ட வழினு அமைதியா இருந்திருப்பீங்களா..?  அவங்க தனிமைக்கும், இளமைக்கும் நியாயம் செய்ய எத்தனை உபாயம் யோசிச்சு இருப்பீங்க. அது ஏன் என் அம்மா விசயத்துல வரல..? ’’

 

கோபப்படவில்லை, வார்த்தைகளை விபரீதமாக வீசவில்லை. இத்தனை நாள் இருந்த அலட்சியம் கூட இல்லை அந்தப் பார்வையில். நிதானமாக வலியோடு வார்த்தைகளை நெசவு செய்து கொண்டு இருந்தாள்.

 

விக்கித்து நின்றது கல்பனா மட்டுமல்ல, அறைக்குள் இருந்த நந்தாவும் தான். ஒரு மணிநேரம் பர்மிசன் போட்டு இருந்தான் கிளையண்ட் ஒருவரை சந்தித்து விட்டு பேங்குக்கு செல்வதிற்காக தாமதித்துக் கொண்டிருந்தவன் காதுகளில் தான் அந்த உரையாடல் வந்து மோதியது.

 

‘’ யம்மாடி தப்புத்தான்.’’ கல்பனா கண்கள் கலங்கிப் போனது.

 

‘’ தப்பு, தவறு, மன்னிப்பு’னு எதுக்காகவும் நான் இப்போ இதைக் கேட்கல. பெரிய வலிக்கு பின்னால் இருக்கும் அடி, யார் கண்ணுக்கும் தெரியறது இல்ல. 

 

உடம்புக்கும், மனசுக்கும் ஒரு ஆசுவாசம் வேணும். அந்த நியாயமான தேடலுக்கு பதில் மரியாதை செய்ய யாருமில்லைனா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்ல. என் அம்மா இடத்தில உங்க பிள்ளைகள்ல ஒருத்தர் இருந்திருந்தா நீங்க என்ன செய்திருப்பீங்களோ, அதை நீங்க செய்யல. அந்த வகையில இந்த கதையோட முதல் குற்றவாளி நீங்கதான்.

 

நேத்து உங்க பேத்தி என்னை அடிச்சப்போ எனக்கு வலிக்கல. ஆனால் என்னை  பார்த்து, ' தகப்பன் கால் பிடிச்சு வளராதவ'னு சொன்ன வார்த்தை தான் வலிச்சது. அந்த கால்கள் என்னை நோக்கி வரவே இல்லியே, பிறகு நான் எப்படி அதை பிடிச்சு வளர..?

 

கல்கத்தாவில எங்க மிசனரி குவார்ட்டர்ஸ்க்கு எதிரில் ஒரு மைதானம் இருக்கு. சாயங்காலம் ஆயிட்டா அங்கே அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சைக்கிள் விட கற்றுத் தருவாங்க. அந்தக் காட்சி எனக்குத் தந்த ஏக்கத்தை சரிசெய்ய நீங்க விடற இந்த கண்ணீர் போதுமா? 

 

எனக்கும் ஒரு அப்பா வேணும், அவர் என்னை தன் மேல சாய்ச்சுகிட்டு சைக்கிளை பிடிச்சபடி என் கூடவே ஓடி வரணும். நான் தவறி விழுந்தா தாங்கி பிடிக்கணும். திரும்ப வரும்போது, நான் கேட்கிறதை எல்லாம் வாங்கி தரணும். ஒவ்வொரு அடி தூரத்திற்கும் எனக்கு ஏற்படற சந்தேகத்தை தீர்த்து வைக்கணும்… இப்படி ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள் அத்தனையையும் சரி செய்யுமா உங்க கண்ணீர்..?

 

ஆயிரம் அப்பாக்கள் சேர்ந்தாலும் ஒரு அம்மாவாக முடியாதுங்கிறது எத்தனை நிஜமோ அத்தனை நிஜம், ஆயிரம் அம்மாக்கள் வந்தாலும் ஒரு அப்பாவுக்காக ஏங்கிற இதயத்தை சமாதானம் செய்ய முடியாதுங்கிறதும்."

 

கல்பனா நொறுங்கிப் போனார்.அழுதபடி அமர்ந்திருக்க,  அதற்கு மேலும் அங்கிருக்க பிரியமில்லாமல் யாழி மாடிக்குச் செல்ல, அறை வாசலில் நந்தா குற்றுயிராய் நின்றான். மகளின் வார்த்தைகள் அவன் இதயத்தை சின்னா பின்னமாக்கி இருந்தது.

 

அவனின் சோர்வும், முக வாட்டமும் யாழியையும் என்னவோ செய்தது. ஷேவ் செய்யப்படாத முகத்தில் ஆங்காங்கு முளை விட்டிருந்த வெள்ளை முடிகளை யாழினிக்கு பிடிக்கவில்லை. 

 

முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டே சொன்னாள்,

 

"சாரி. நேத்து பேங்குல நடந்துகிட்டதுக்கு. உங்களை ஹர்ட் பண்றது என் நோக்கமில்லை. என் அம்மா இனியாவது தனக்கான அங்கீகாரத்தை பெறணும்கிறது மட்டும்தான்."

 

பதிலே சொல்லாமல் மகளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

"எனக்கு சாரி'லாம் வேண்டாம். ஒரே ஒரு முறை அப்பாவை கட்டிக்கோ பாப்பா. அப்பா ரொம்ப களைச்சு போயிருக்கேன்." லேசாக மூச்சிரைக்க சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லாமல் கைகளை விரித்து காத்திருந்தான்.

 

இரண்டு நொடிதான் தாமதித்தாள். எத்தனை முரட்டு அலையானாலும் அது கடலுக்கு கட்டுபட்டது தானே.? அவளையும் மீறி அலை அவளை இழுத்துக் கொண்டு போய், நந்தாவின் கைகளில் தள்ளியது.

 

நெற்றியிலும், உச்சந் தலையிலும் மாறி மாறி முத்தமிட்டான். 

 

"என்ன கோபம், வருத்தம் இருந்தாலும் என்கிட்ட காட்டு. நான் தாங்கிக்குவேன். என்னை விட்டு போக மட்டும் யோசிக்காதே. சரியா..? " என்றவன் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியேற, இமைக்காமல் நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தளர்ந்த நடையும், சோர்ந்த முகமும் அவளை என்னவோ செய்தது.

 

உன்னை நான் அறிவேன், 

  என்னை அன்றி யார் அறிவார்…

  கண்ணில் நீர் வழிந்தால், 

  என்னை அன்றி யார் துடைப்பார்…’’

                22

 

காய்ந்த ஓட்டில் விழுந்த நீர் துளி போல் காலமும் நேரமும் இல்லாமல் சொல்லாமல் ஓடோடிக் கொண்டு இருந்தது.

 

லதா அமரோடு நந்தாவின் வீட்டிற்கு வந்திருந்த போது, ஆர்த்தியும் அங்குதான் இருந்தாள்.

 

நந்தா வீடு இருந்த பகுதிக்கு வெகு அருகில் இருந்த, அவர்களின் பூர்வீக வீட்டை கட்டி முடித்து இருந்தார்கள். கிரகபிரவேச பத்திரிக்கை வைக்க வந்திருக்க, அப்போதுதான் முதன் முறையாக வானதியையும், யாழியையும் பார்த்தார், லதா.

 

"இன்னும் கிட்டத்தில வந்துட்டே லதா. ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசணை. அன்றைக்கு  ஒரு உதவினு நந்தா கூப்பிட்டதும் அமர் ஓடி வந்துச்சு. இன்னும் நெருங்கி வந்துட்டா நல்லது தானே…" கல்பனா சொன்னார். 

 

ஆர்த்திக்கு அருகில் நின்ற தபஸ்வியின் இதயமோ விதவிதமாய் ஜலதரங்கம் வாசித்தது. இது ஓரு விசித்திர நிலை. நினைப்பதும் நினைவாக இருப்பதும் வெவ்வேறு மனிதர்கள் என்பதை இதயங்கள் உணராத விசித்திர நிலை. பிடித்தம் என்ற நிலையே மனசுக்குள் இத்தனை குளுமையை விரவச் செய்கிறதோ, அதுவே காதலாய் மாறினால் எப்படி இருக்கும்.

 

"அடுத்து பிள்ளைகளுக்கு கல்யாணத்தையும் முடிச்சிட்டா நிம்மதியா மூச்சு விடலாம். ஆர்த்தியோட அப்பா இருந்திருந்தா உன் பாரம் பாதியாக குறைஞ்சு இருக்கும்."

 

"அது சரிதான் சித்தி. குலதெய்வம் கோயில்ல பூ போட்டு பார்த்தாச்சு. அமர்க்கு மாலை பொருத்தம் வந்திடுச்சுன்னு உத்தரவு வந்திருச்சு. கிரகபிரவேசம் முடிஞ்ச கையோட ஜாதகத்தை எடுக்க வேண்டியது தான்."

 

‘’பாட்டி, நான் ஒரு போலீஸ் ஆபிசர். எங்கம்மா எனக்கு கல்யாணம் பண்ண பூ வச்சு உத்தரவு கேட்டுட்டு இருக்காங்க. இந்த கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல..! டிபார்ட்மென்டுல இந்த விசயம் தெரிஞ்சா, ஒரு பய என்னை மதிக்க மாட்டான்.’’ அமர் பெரிதாய் சிரித்தான்.

 

‘’இவன் கிடக்கிறான் சித்தி. படிச்சு வேலைக்கு போனால், அடிப்படை நம்பிக்கை இல்லாம போயிடுமா..? இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு சாமி கும்பிடறதுல கூட நாகரீகம் வேண்டி கிடக்கு. இவன் போலீஸ் ஆபிசர் ஆனதே நான் குலதெய்வம் கோயில்ல மண் சோறு சாப்பிட்ட பிறகுதான்." லதா மகனை வம்புக்கு இழுக்க, இடமே கலகலப்பு தொற்றிக் கொண்டது.

 

"ஆர்த்தி புள்ளை வீட்டில இருக்கே. முதல்ல அமர்க்கு பார்க்க யோசிக்கிறியா லதா..? " கல்பனா தயக்கமாய் கேட்க, ஆர்த்தி கண்ணை கசக்கியபடி கல்பனாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

 

"உங்களுக்காவது என் ஞாபகம் இருக்கே பாட்டி. கேளுங்க கேளுங்க." என்று சிணுங்க, அனைவர் முகத்திலும் மெல்லிய சிரிப்பு படர்ந்தது.

 

"அதுசரி, எங்க காலத்தில எல்லாம் கல்யாணம்னா தலையை நெருப்பு கோழி மாதிரி பூமியில புதைச்சிக்குவோம். இப்ப பாருங்க எப்படி நேர்க்கு நேர் பேசுதுங்கன்னு.

 

இவ படிப்பு, மேற்படிப்புக்கு எய்ம்ஸ்னு ஆயிரத்தெட்டு கணக்கு வச்சிருக்கா. எள்ளு காயலாம். எலி புழுக்கை எதுக்கு காய..?"

 

"டேய் அண்ணா அம்மா உன்னை எலி புழுக்கை'னு சொல்லுது."

 

" கூடவே அவ்வையார் ஆனப்புறம் தான் உனக்கு கல்யாணம்னும் சொல்லுது." அவனும் சளைக்காமல் வார, இடம் இறுக்கம் மறந்து கலகலப்பாக மாறியது.

 

மாடிப்படியில் அமர்ந்தபடி இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் யாழி.

 

"முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் வைக்கிறேன் அண்ணா. நீங்க குடும்பத்தோடு வந்து சிறப்பா எடுத்து நடத்தி கொடுங்க." பெரிய தாம்பூல தட்டு எடுத்து பழம் தேங்காய் மரியாதையோடு மஞ்சள் பூசிய பத்திரிக்கையும் வைத்தவர், மிருதுளாவை உள்பக்கம் தேடினார்.

 

"ஆர்த்தி, மிருதுளா ஆன்ட்டியை கூட்டிட்டு வா."

 

சத்தம் கேட்டு மிருதுளாவே இவர்களுக்கு தயார் செய்து கொண்டிருந்த பதார்த்தங்களுடன் வந்து சேர, நந்தாவையும், மிருதுளாவையும் ஒருசேர நிறுத்தி, முறைப்படி பத்திரிக்கையை தந்தார்.

 

வானதி எந்த முகபாவனையும் காட்டாமல் ஓரமாய் நின்றாள்.

 

"வானதி…'' எப்போதும் போல இப்போதும் அவளை உணர்ந்து நந்தா தான் அழைத்தான்.

 

மெல்ல கண்களை மூடித் திறந்து எனக்கு எந்த வருத்தமுமில்லை' என்று சமிக்ஞையால் புரிய வைத்தாள். 

 

அவன் அவளுக்கு தந்த இடத்தை இந்த உலகம் அவளுக்கு தரப்போவதே இல்லை. அந்த அங்கீகாரம் குறித்து வானதி வருத்தம் கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் அவள் பெற்ற பூமனசு பெண்ணோ, மூச்சுக் காற்றின் சூட்டிற்கே மூர்ச்சையாகி போவாளே.

 

துளி நிமிசத்துக்கு முன் நிமிசம் துர்யனோடு கேளிக்கை செய்து கொண்டு இருந்தவள் முகம் நொடியில் சூம்பிப் போனது. அதுவும் கிளம்பும் போது அந்த லதா, நீங்களும் வந்திடுங்க' என்று வானதியிடம் சொன்ன போது, அனிமேசன் படங்களில் வருவதுபோல ஒற்றை பாய்ச்சலில் அந்த மொத்த குடும்பத்தையும் துவம்சம் செய்து விட்டிருந்தாள் கற்பனையில். மொத்தத்தில் அந்த லதாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை யாழிக்கு.

 

ஆனால் வீட்டுக்கு வந்ததும் லதா, அமரிடம் கேட்ட முதல் கேள்வியே,

 

"அந்த யாழி பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா அமர்..? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மூக்கும் முழியுமா கடைஞ்சு எடுத்து வச்ச மாதிரி. கேட்டு பார்க்கலாமா? நந்தா அண்ணா தருவாரா..?" என்பது தான். 

 

அமர் மெல்லிய அதிர்வோடு நின்றான். தன் மனதின் வருடலை அம்மா இனம் கண்டது கொஞ்சம் அதிசயமாக கூட இருந்தது.

 

‘’என்னம்மா திடீர்னு..?’’ தன்னுடைய உணர்வுகளை காட்டாமல் இயல்பாக கேட்டான்.

 

’’ தோணுச்சு. உனக்கு பிடிச்சிருக்கா..?’’

 

‘’ரொம்ப சின்ன பொண்ணுமா. அங்கிள்க்கு அந்தப் பொண்ணு பத்தின நிறைய கனவுகள் இருக்கு.நிறைய படிக்க வைக்கணும். பெரிய வேலைக்கு அனுப்பணும்னு.’’ என்றான் சன்னமான மறுப்போடு.

 

’’அதுசரி, இதெல்லாம் இருந்தா கல்யாணம் பண்ணித் தரக்கூடாதா என்ன..? பொருந்தி போனால் கல்யாணம் பண்ணிட்டு கூட படிக்கலாம். உனக்கு பிடிச்சிருக்கா..?’’ லதா மகனின் மனசை வெகு அழகாய் படித்தவராய் கேட்டார்.

 

‘’ஹலோ கொஞ்சம் இருங்க. இந்த டீல்ல என் ஃப்ரெண்ட் தபஸ்வியை யாரும் கன்சிடர் கூட பண்ணல பார்த்தியா..? அவ டாக்டர்யா. இந்த வீட்டில ஒண்ணுக்கு ரெண்டு டாக்டர் இருந்துட்டு போகட்டும்னு கூடத் தோணல பாருங்க…’’ ஆர்த்தி பக்கத்தில் வந்து கைகளை நீட்டி முழக்கி பேச, அமர் தங்கையை இழுத்து பக்கத்தில் அமர வைத்து தோளில் கை போட்டுக் கொண்டான்.

 

’’ஓய் அறுந்த வாலு, ஒரு அரைகுறை டாக்டர் உன் தொல்லையே இங்கே தாங்க முடியல. எப்பப்பாரு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன், டயட்டுனு நீ பண்ற ஓட்டை அதிகாரத்துக்கே இந்த வீடு அவுஞ்சு போய் கிடக்கு. அதுல இன்னொருத்தியா..! வேண்டாம்டா சாமி…’’ சலித்துக் கொள்பவன் போல், கைகளை உதறியவனைப் பார்த்து எரிச்சலுடன் முறைத்தாள்.

 

‘’அவன் கேலி பண்றான் ஆர்த்தி. இதெல்லாம் பூ பூக்கிற மாதிரி. சட்னு மனசுக்குள் விழணும். இத்தனை நாளா தபு இங்கே வந்து போறா. உன்கூட பார்க்கிறதாலேயோ ஏனோ, அவளுக்கும் உனக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியல. இந்த குட்டியை பார்த்ததும் ரொம்ப பிடிச்சது. ‘’

 

‘’தபு பெரிய பொண்ணுமா. அவ இருக்கும்போது யாழிக்கு செய்வாங்களா..?’’ என்று கேட்டு அமர் மனதை சுணங்க வைத்தாள் ஆர்த்தி.

 

‘’அம்மா வேற தானே..! அவங்களுக்கு இது ஒரே பொண்ணு. செய்யலாம் மனசு இருந்தா. கேட்டுப் பார்க்கிறது தப்பில்லை.’’ என்றபடி இரைந்து கிடந்த பொருள்களை கையில் பொறுக்கிக் கொண்டு உள்ளே நகரப் போனவர், ஒரு நொடி நின்று மகளை பார்த்தார்,

 

’’இதப் பாருடி இவளே, இது நம்ம வீட்டுக்குள்ள நடக்கிற பேச்சு. இதை எப்படி சுமூகமா நகர்த்தறதுன்னு நாங்க பெரியவங்க பேசி முடிவு செய்றோம். அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் தபுகிட்டே பேசாதே.’’ கண்டிப்பாய் சொல்லிவிட்டு லதா நகர, அந்தப் பேச்சை அங்கேயே விட்டு விட்டு ஆர்த்தியும் உள்ளே சென்று இருந்தாள்.

 

அமர் அடுத்து வந்த அலைபேசி அழைப்புக்கு வெளியில் ஒதுங்க, ஆரம்பித்த பேச்சு அவரவர் இதயத்திலேயே நின்று போனது.

 

மாலை காற்று மந்தகாசமாக இருந்தது. கிளிஞ்சல்கள் இரைந்து கிடந்த கடற்கரையில் கூட்டம் கூட்டமாய் மனிதர்கள் காற்றைத் தின்று கொண்டு இருந்தார்கள். மூன்றாவது மாடியில் இருந்த காரிடரில் தனக்கான அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்த நந்தாவின் பார்வையில் தான் கடற்கரை காற்று காதல் பேசிக் கொண்டு இருந்தது.

 

ரிசப்சனில் இருந்து அழைப்பு வர, பார்த்துக் கொண்டிருந்த காட்சியை பத்திரமாக அங்கேயே வைத்துவிட்டு உள்ளே சென்றான். ஏ.சி. மிதமாக இருந்தது. நாசூக்காய் கதவு தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவனை, பார்த்து புன்னகைத்தார் டாக்டர் ராவ்.

 

 ‘’’ வெல்கம் மிஸ்டர் நந்தா.’’

 

அவர்க்கு எதிரில் இருந்த குஷனில் தன்னை நிறைத்துக் கொண்டான். 

 

‘’ சொல்லுங்க மிஸ்டர் நந்தா, இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க..? ‘’

 

‘’பெரிய முன்னேற்றம் இல்லை டாக்டர். அப்படியே தான் பெயின் தொடருது. ஆனால் இப்போ துணையா மூச்சுத் திணறலும், உடல்வலியும் சேர்ந்தாச்சு.’’ என்றபோதும் முகத்தில் அப்படியொரு சிரிப்பு தேங்கி நிற்க, ஹனுமந்த ராவ் வியப்போடு பார்த்தார்.

 

‘’ரொம்ப ரிலாக்சா இருகீங்களே நந்தா. அப்பறம் எப்படி உங்களுக்கு இப்படி உடல் நலிவெல்லாம் வருது..!’’ என்றவர் இண்டர்காம்மை எடுத்து தகவல் சொல்லிவிட்டு வைக்க, நந்தா இன்னும் சவுகரியமாக தன்னை இருக்கையில் பொருத்திக் கொண்டான்.

 

‘’இயல்புக்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம் இருக்கு டாக்டர்..? ஈ எறும்புக்கு தீங்கு செய்யாதவன் எனக்கு ஆரோக்யத்தை ஆறுமாசம் எக்ஸ்டென் பண்ணிக் கொடுங்கன்னு கடவுள்கிட்ட கேட்க முடியாதில்ல.’’ சிரித்த போது ஹனுமந்த் ராவ் ஆமோதித்து சிரித்தார்.

 

‘’அதுவும் நல்லதுக்குத்தான். அப்படி ஏதாவது நடந்துட்டா, எங்களை மாதிரி ஆட்கள் எப்படி வாழறது…’’ என்றபோது சேர்ந்து சிரித்தார்கள் மனம் விட்டு.

 

ரிசப்சன் பெண் நாசூக்காய் கதவு திறந்து கொண்டு வந்து வைத்து விட்டுப் போன, கவரை பிரித்துப் பார்த்தவர், சில நிமிடங்கள் பார்வையை நிமிர்த்தாமல், காகிதத்திலேயே பொதிந்து கிடந்தார்.

 

‘’ஈ.சி.ஜி. ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் வந்திடுச்சு மிஸ்டர் நந்தா. ஹார்ட் பெயின் பயப்பட எதுவுமில்லை. கேஸ்டிக் ப்ராபளம் தான். ஆனால் அதுக்கும் இப்போ வர்றதா நீங்க சொல்ற மூச்சு திணறலுக்கும் சம்பந்தம் இல்லை. கூட உடல் சோர்வு, இரவில் வேர்த்தல்னு நிறைய புகார் வாசிக்கிறீங்களே..! யோசிக்க வைக்குது.’’ என்றார் பொருந்தி சாய்ந்து கொண்டு.

 

‘’இந்த சில நாட்களில் என் சக்தியில் பெருவாரியை யாரோ களவாடிட்டு போனது போல் உடம்பு உணருது.’’ 

 

நந்தாவையே யோசனையாகப் பார்த்தவர், சில கேள்விகள் கேட்டு தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு, நோட்பேடில் எழத ஆரம்பித்தார்.

‘’மிஸ்டர் நந்தா.பயப்பட எதுவுமில்லை. சில சந்தேகம் இருக்கு. அதுக்கு டெஸ்ட் எழுதித் தர்றேன். எடுத்துட்டு வந்துடுங்க. பட் ஒன் திங், எதுக்காகவும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஏன்னா வருத்தப்பட நாம செலவளிக்கிற நேரம் கூட வாழ்க்கையில விரயம் ஆகக்கூடாது.’’ என்றார் முறுவலிப்போடு. நந்தா ஆமோதித்து சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டான்.

 

அவன் வெளியேற கதவில் கைவைக்க, மீண்டும் அழைத்தார்,

 

‘’பர்ஸ்ட் ரைட்டுல தான் லஷ்மி லேப் இருக்கு. போகும் போதே டெஸ்டுக்கு தந்துட்டு போயிடுங்க நந்தா. ‘’ என்று நினைவூட்டினார். தலையசைத்து விட்டு வெளியே வந்தான். 

 

சற்றுநேரத்துக்கு முன் வரைக்கும் தெளிவாய் இருந்த வானத்தில் கரி பிடித்தது போல் மேகங்கள் வந்து அப்பிக்கொள்ள ஆரம்பித்து இருந்தன. 

 

ருப்பு வானத்துக்கு வெள்ளை பொட்டு வைத்தது போல் இருந்தது பௌணர்மி நிலா. கால்களை கட்டிக் கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் யாழி.

 

அந்த ரசபாசமான நிகழ்விற்கு பிறகு, பத்து நாட்களுக்கு மேல் கடந்து விட்டது இன்னும் வானதி முகம் கொடுத்து பேசவில்லை.

 

இடையில் முதுநிலை தகுதி தேர்வுக்கு அழைத்துப் போனபோது கூட, தேவையை தாண்டி ஒரு வார்த்தை காதுகளை தீண்டவில்லை.

 

உடைந்து நொறுங்கி போனாள் யாழினி. இதற்கும் ஏனோ நந்தாவின் மீது தான் கோபம் வந்தது.

 

காலையில் இருந்து லேசாய் காந்தத் தொடங்கிய உடம்பு, இப்போது ஜூரத்தின் பிடியில் மொத்தமாய் இருந்தது.

 

இருபது வயதை தின்று ஏப்பமிட்டு இருந்தாலுமே, யாழினி இன்னும் வானதியின் முலைப்பாலுக்கு ஏங்கும் சிசுதான். பிறந்தது முதல் பெற்றவளின் கோபத்தையும், சாடல்களையும் அறியாதவளுக்கு இங்கு வந்துதான் அது அறிமுகம். 

 

அதையே அவளால் தாங்கமுடியாத போது, இந்த புறக்கணிப்பும், கோபமும் உள்ளுக்குள்ளே ஏங்க வைத்தது. எந்த உறவுமே அறியாத அந்த வளர்ந்த குழந்தைக்கு, அம்மாவின் சட்டென்ற விலகல் உடல் நோவை கொண்டு வந்து சேர்த்து இருந்தது.

 

ஓயந்து போய் அமர்ந்திருக்கும் மகளை ஒற்றைக் கண்களால் பார்த்தபடி தான் வானதி உள்ளே போனாள். முகம் அலம்பி துண்டை தோளில் போட்டுக் கொண்டே வெளியில வந்தவள், நிலைப்படியில் சாய்ந்தபடியே மகளை கூர்ந்து பார்த்தாள். 

 

தலை கலைந்து தாறுமாறாய் இருந்தது. உள்ளே சென்று சீப்பை எடுத்துக் கொண்டு வந்தவள், எந்த வார்த்தையும் பேசாமல், ஹேர் பேண்டை தளர்த்தி முடியை கலைத்து, தலையில் கைவைத்த போது, தலை கொதிக்க, உள்ளுக்குள் திக்'கென்று இருந்தது வானதிக்கு.

 

பின்னால் இருந்தே மகளின் மேவாயை பற்றி நிமிர்த்தி தன் நெஞ்சில் சேர்க்க, கீழே விழும் போது அழாத குழந்தை, தூக்கி நிறுத்தியதும் வீரிடுவது போல் செப்பு உதட்டை குவித்தாள், அழுகைக்கு.

 

" ஏன் உடம்பு சுடுது.?"

 

பதிலில்லை.

 

"மாத்திரை போட்டியா..? " கேட்டபடி அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தவள், தோளில் தொங்கிய துண்டால் மகள் முகத்தை அழுந்த துடைத்து விட்டாள்.

 

பதிலே இல்லை.

 

ஒற்றை விரலில் முகத்தை நிமிர்த்தி, புருவத்தை வளைத்து, ' என்ன…' என்பதுபோல் பார்க்க,

 

" நீ தான்  என்னை செத்துபோக சொன்னியே மா. அப்புறம் எதுக்கு இப்போ மாத்திரை சாப்பிடலையானு விசாரிக்கிறியாம்…" கேவல் வெடிக்க, மகளின் கன்னத்தை கைகளில் ஏந்தி நெற்றியோடு நெற்றி மோதினாள்.

 

"நீ என்னை ஏமாத்தாதே. உனக்கு நான் வேண்டாம் தானே..? எப்பவும் உனக்கு நந்தா தானே முக்கியம்." விசும்பல் இன்னும் அதிகமாக வெடிக்க, மகளை இழுத்து மார்பில் புதைத்து, சேலை தலைப்பால் முகம் மூடிக் கொண்டாள் .

 

எப்போதும் இப்படித்தான்… அவள் முகம் புதைத்தாள் வானதி உலகத்தையே மறப்பாள் என்றால், யாழி தன்னையே மறப்பாள். ஆனால் இன்று சின்னது திமிறிக் கொண்டு எழுந்து அமர்ந்தது.

 

"நான் ரயில்ல விழுந்து செத்து போய் இருந்தாலும் நீ சந்தோசமாத் தானே மா இருந்திருப்ப."

 

"யாழி…" வானதியின் குரல் கண்டிப்பாய் வந்தது.

 

"ஆனால் நான் அப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு சாக மாட்டேன்மா. என் உலகமே நீ தான் மா." வார்த்தை தத்தி தத்தி வர, மகள் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை முத்தத்தையே பதிலாய் வைத்தாள் வானதி.

 

"எல்லா தாய்க்கும், தன் மகள் கண் நிறைஞ்ச வாழ்க்கை வாழணும், புருசன் கூட சந்தோசம இருக்கணும்கிற ஆசை இருக்கும். அந்த ஆசை எவ்வளவு நியாயமானதோ. அதே ஆசை ஒரு மகளாய் எனக்கு இருந்தா தப்பா மா…"

 

வானதிக்கு அழுகையில் உதடு துடித்தது.உதடு சுழித்து அழுகையை விரட்டியபடியே நிறுத்தாமல் முத்தமிட்டாள், நெற்றி மூக்கு, கண்கள், உதடு, கன்னம் என்று இலக்கில்லாமல் மகளை முத்தத்தில் குளிக்க வைத்தாள். இருவருக்கும் நடுவில வானதியின் கண்ணீரும், யாழினியின் வார்த்தைகளும் மட்டுமே இருந்தது.

 

"நந்தா ரொம்ப நல்லவர்மா. உனக்கும் அவர்க்கும் எவ்வளவு பொருத்தம் தெரியுமா.? ரெண்டு பேரையும் சேர்த்து உங்களுக்கு தெரியாம எத்தனை ஸ்டில் எடுத்திருப்பேன்னு உனக்கு தெரியாது. ஆனால் இந்த உலகம் உனக்கு தர்ற அங்கீகாரம் எனக்கு பிடிக்கலமா."

 

"ம்…"ஒற்றை முணுகல் மட்டும் இப்போது பதிலாய் வந்தது. இப்போது முத்தமிடும் போது உதடு வெகுவாய் துடித்தது. 

 

"எல்லாரும் நல்லவங்க தான் இங்கே. அவர் மனைவி, பிள்ளைங்க எல்லாரும் நல்லவங்க தான். ஆனால் என…க்கு, என…க்கு அவரை அவங்க எல்லார் கூடவும் பங்கு போட்டுக்க முடிய…லமா…"

 

சொளேர்' என்று எழுந்து நின்று விட்டாள். அடிவயிற்றை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அதே வார்த்தை… அடி வயிற்றில் அசைவற்று யாழி இருந்தபோது, நந்தாவிடம் வானதி சொன்ன அதே வார்த்தை,

 

'...என்னால உங்களை பங்கு போட்டுக்க முடியல நந்தா…'

 

சொல்கிறாளே, அதையே என் செல்வமகள் சொல்கிறாளே…

 

"இந்த ஊர், படிப்பு, வேலை எதுவுமே வேண்டாம்மா. இத்தனை நாள் அவங்களுக்காகத் தானே இங்கே இருந்தார்..? இனி நம்ம கூட இருக்கட்டும். நீ, நான்,  அவர் மட்டும். கல்கத்தா முழுக்க அவர் கை பிடிச்சிட்டு சுத்தணும். எவ்வளவு பேச வச்சிருக்கேன் தெரியுமா… பேசிட்டே இருக்கணும். நாம போயிடலாம் மா." 

 

அந்த கண்களில் வழிந்த ஏக்கத்தில் நிலவு மங்கிப் போய் இருந்தது. நெற்றியில் அழுந்த முத்தமிட்டவள், இடுப்பில் சொருகி இருந்த சீப்பை எடுத்து, தலையை வாரி, சிக்குடைத்து, இறுக பின்னி, பேண்ட் வைத்து விட்டாள்.

 

"பேக்குல பாரசிட்டமால் இருக்கு எடுத்து போட்டுக்க. பிளாஸ்கில பால் இருக்கு. பிரட் இருக்கு. பசிச்சா சாப்பிடு. இல்லாட்டி காலையில பார்த்துக்கலாம். ஜூரத்துல அனத்தாம போய் படு." மகளை அனுப்பி விட்டு, வாசற்படியில் வந்து அமர்ந்தாள்.

 

மனசு பூரித்துக் கொண்டு இருந்தது. இத்தனை சிறந்த குழந்தையை பரிசாக தந்த நந்தாவின் பேரன்பின் மீது மையல் பீறிட்டது.

 

அதிசயத்திலும் அதிசயமாய் அவன் அருகாமைக்கு உடல் ஏங்கியது. எப்போது வந்தாலும் சிட் அவுட்டில் கிடக்கும் உயரம் குறைந்த மரக்கட்டிலில் படுத்துக் கொண்டு தான் பேசிக் கொண்டு இருப்பான். இன்று வந்தால், அவன் மார்பில் தலைவைத்து கொஞ்ச நேரமேனும் படுத்துக் கொள்ள வேண்டும் என்று காத்திருக்க ஆரம்பித்தாள்… ஆனால் நந்தா இன்று மாடிக்கு வரவே இல்லை.

 

"...தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே…

 

பெற்றெடுத்த பிள்ளை கற்றுக் கொண்ட தொல்லை இடையில் இருக்கும் தடையாகும் செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான் என்னிடத்தில் தவறில்லையே…

 

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா…"

 

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்துக் கொள்ளுங்கள் 

 

https://kavichandranovels.com/community/topicid/630/

This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page