All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 17 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 17 💖

சந்தனா மௌனமாய் தன் முன்னிருந்தப் பெண்ணைக் காண, அவள் முகம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னே அழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இவள் என எண்ணுமளவிற்கு அவளது உதடுகள் இறுகப் பூட்டியிருந்தன. கண்களில் தெரிந்த சோகம் உதட்டை எட்டக் கூடாதென இதழ்களில் புன்னகையை புகுத்த முயன்று தோற்றிருந்தாள்.

சந்தனாவிற்கு அந்த முகத்தை, விழிகளைக் கண்டதும் மனம் பாரமேறியது. ஒரு மருத்துவராய் அவளைத் தேற்றுவது தன் கடமையென எண்ணியவள், “ப்ரியா, உங்களுக்கு யார்கிட்டேயாவது மனசுவிட்டுப் பேசணும்னு தோணுச்சுன்னா, என்கிட்டே பேசுங்க. என்னை டாக்டரா பார்க்காம, ஒரு ஃப்ரெண்டா பாருங்க. மனசுல இருக்கதை ஷேர் பண்ணா பாரம் குறையும்.‌..” என்றாள் ஆதரவாகக் கையைப் பிடித்து.

அந்த கரத்தின் அழுத்தத்தில் எதிரிலிருந்தவளின் உதடுகளில் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. “பேசி என்னாகப் போகுது டாக்டர்? என்னை விட்டுட்டுப் போனவன் திரும்ப வருவானா என்ன? இல்ல, நடந்ததைதான் மாத்த முடியுமா?” எனப் பேச பேச அவளது விழிகள் கலங்கின.

“ப்ரியா, அதான் சொல்லிட்டீங்களே. அவர் தான் உங்களைவிட்டு மூவ் ஆன் பண்ணிட்டாரு. பட், நீங்க இன்னும் ஏன் அதே இடத்துல நிக்குறீங்க? உங்களோட வாழ்க்கை இது. உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போனவருக்காக லைஃபை ஸ்பாயில் பண்ணிக்கப் போறீங்களா? இல்ல, இதுல இருந்து மீண்டு உங்களுக்கான வாழ்க்கையை அழகா அமைச்சுக்கப் போறீங்களான்றது உங்களோட முடிவுதான் ப்ரியா. நான் ஆயிரம் சொன்னாலும், உங்களோட வலியையும் வேதனையும் என்னால வாங்கிக்க முடியாது. உங்களை அதுல இருந்து மீட்டெடுக்க மட்டும்தான் முடியும்...’ சந்தனா நிதர்சனத்தை உரைக்க, அந்தப் பெண் மேஜை மீது கவிழ்ந்து படுத்தாள். என்ன முயன்றும்‌ மனதில் கதறலைக் கட்டுப்படுத்த முடியாது போக, உதடு விம்மியது.

விழகளில் சரசரவென கண்ணீர் வழிய, “முடியலை டாக்டர். என் மனசு... அது சிவாவுக்கு மட்டும். இந்த ஜென்மத்துல அவனை மட்டும்தான் என்னால லைஃப் பாட்னரா ஏத்துக்க முடியும். யாரையும் என்னால அக்செப்ட் பண்ண முடியாது. அவன் என்னை விட்டிருக்கலாம். பட், என்னால அப்படி விட முடியாது. ஐ லவ் ஹிம் தட் மச். ஒவ்வொரு நாளும் அவனோட எப்படியெல்லாம் வாழணும்னு ஆசை வச்சிருந்தேன். அதெல்லாம் ஒரு நிமிஷத்துல உடைச்சுட்டான். அவனை வேற ஒரு பொண்ணோட பார்க்கும் போதே செத்துட்டேன் டாக்டர். என்னதான் வீட்ல கட்டாயப்படுத்துனாலும் என்னை மறந்துட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட அவனுக்கு எப்படி மனசு வந்துச்சுன்னு நினைக்கும் போதே நெஞ்சைப் போட்டு அழுத்துது...”

“நானா அவனைக் காதலிக்கிறேன்னு சொன்னேன். அவன்தான் ரெண்டு வருஷமா என் பின்னாடி சுத்தி லவ் பண்ண வச்சான். நான் அவன் மேல உண்மையான அன்பு வச்சிருந்தேன். அவனுக்காகத்தான், அவங்க வீட்ல இருக்கவங்களால அவனுக்குப் பிரஷர் வரக்கூடாதுன்னு மொழி தெரியாத இடத்துல போய் கஷ்டப்பட்டேன். ஆனால், எல்லாத்தையும் மறந்துட்டான். என்னை தானே கல்யாணம் பண்ணிப்ப? என்னை விட்டுட்டு போய்ட மாட்டதானேன்னு ஒவ்வொரு தடவையும் கேட்டுட்டே இருப்பான் டாக்டர். பட், அவன் என்னை விட்டுப் போய்ட்டானே டாக்டர். அவன் இனிமே என் வாழ்க்கைல இல்லைன்றதை என்னால ஏத்துக்கவே முடியலை. எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு நினைச்சு நினைச்சு அழுறேன்...” தேம்பியபடி உரைத்தப் பெண்ணைக் காண்கையில் சந்தனா விழிகளிலிருந்து ஒரு சொட்டு நீர் கன்னத்தில் இறங்கியது.

“அவர் உங்க கூட இனிமே இருக்க மாட்டருன்றதுதான் நிதர்சனம் ப்ரியா. இதை அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும். உங்க கூட இல்லாத ஒருத்தருக்காக உங்களைப் பெத்து வளர்த்த அம்மா அப்பாவை காலம் முழுக்க கஷ்டப்படுத்தப் போறீங்களா? உங்களை நினைச்சு தவிச்சுப் போய் வெளிய உக்காருந்திருக்காங்க. அவங்களுக்காகவாது நீங்க மூவ் ஆன் பண்ணித்தான் ஆகணும். யார் இல்லைனாலும், உங்களோட வாழ்க்கை நின்னுப் போய்டாது. உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்துதான் ஆகணும். நடந்ததை நினைச்சு மிச்சமிருக்க வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க. இப்போ முடியாதுன்னு தோணலாம். பட், இன்னும் ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் கழிச்சு உங்களோட வாழ்க்கை கண்டிப்பா நீங்க நினைக்கிறதைவிட பெஸ்ட்டா இருக்கும்...”

“பேசுறது ஈசிதானே டாக்டர்? உங்களுக்கு என்னை மாதிரி ஒரு சிட்சுவேஷன் வந்திருந்தா என்னப் பண்ணுவீங்க நீங்க? ஹம்ம்? சொல்லுங்க டாக்டர்? உங்க இஷ்டத்துக்குப் பேசாதீங்க!” கோபமும் ஆற்றாமையுமாய் அவள் பேச, சந்தனா பெருமூச்சை வெளிவிட்டாள். அவளிடம் மேலும் சில நிமிடங்கள் பேசியவள், அவளது தாய் தந்தையை அழைத்து உரையாடினாள். அவர்கள் முகம் வருத்தத்தில் தோய்ந்திருக்க, ஆறுதலாகப் பேசி அனுப்பினாள்.

காலையிலிருந்து உணவுண்ண கூட செல்லாது அடுத்தடுத்து வந்த நோயாளிகளை கவனித்தலில் உடல் மேலும் சோர்ந்தது. மனமும் பாரமேறியிருக்க, கண்ணை மூடி மேஜையில் சாய்ந்தாள். சற்று முன்னே பேசிச் சென்ற பிரியாவின் வார்த்தைகள் இப்போதும் இவளது செவிகளில் எதிரொலிக்க, மெது மெதுவாக விழிகள் கலங்கின. அமைதியாய்ப் படுத்திருந்தாள். ஏனோ பல வருடங்களுக்கு முன்னே அவள் அரற்றிய அதே வார்த்தைகள்தான். 

 

பித்துப் பிடித்ததைப் போல சுற்றிய நாட்கள் நினைவில் நிழலாட, நெஞ்சடைத்துப் போனதொரு நினைவு. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என தன்னையே ஏமாற்றி வைத்திருந்தவளின் வேலி உதிர்ந்து கொண்டிருந்தது.

நெஞ்சு முட்டுமளவிற்கு வாதை வதைத்தப் போதும் எதையும் காண்பிக்காது எப்போதும் போல தன்னைக் காண்பித்துக் கொண்டிருக்கும் முகமூடி விரைவில் கழன்று விடுமோ என பயபந்து சுழலலாமல் இல்லை. அதற்குள்ளே இவ்விடத்தை, தன்னிலையை இழக்கச் செய்யும் இந்த சூழ்நிலையிலிருந்து விடைபெற்று கண்காணாத இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பு அவளைத் தூண்டியது.

ஸ்மரனையற்றிருந்தவள், செய்தி வந்ததற்கான அறிகுறியாய் ஒலியெழுப்பிய அலைபேசியில் புறத்தூண்டல் உறைக்கப் பெற்றாள். அதைப் புறக்கணிக்க முயன்று தோற்றவள், எடுத்துப் பார்க்க குகேஷிடமிருந்துதான் செய்திகள் வந்திருந்தன. அதை திறந்து பார்த்தாள். குடும்பம் சகிதமாக மகிழ்ச்சியாய் புகைப்படம் எடுத்து இவளுக்குப் பகிர்ந்திருந்தான். அதைக் கண்டதும் சந்தனாவின் மனம் எத்தனை ஆசுவாசம் அடைந்தது என அவள் மட்டுமே அறிவாள்.

கைகள் தன் போல அவனுக்கு அழைப்பை விடுத்தன. அவன் ஏற்றதும், “யசோகிட்ட சமாதானமாகிட்டீயா குகா. உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. எனக்காக இனிமே உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரக்கூடாது டா!” என்றாள் அக்கறையும் கண்டிப்புமாய். அவனிடம் பதிலில்லை.

“குகா, லைன்ல இருக்கீயா?” இவள் வினவ, “இருக்கேன் சந்தனா. நீ சாப்டீயா?” என கேட்டான். 

 

அந்தக் கேள்வியில் இவளுக்கு விழிகள் கலங்கப் பார்க்க, “ஹம்ம்...சாப்டேன் டா!” என்றாள்.

“பொய் சொல்றீயா சந்தனா? நீ சாப்பிடிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இங்க என்ன நடக்குமேன்னு யோசிச்சு எதையும் குழப்பிக்காத. நாங்க சமாதானமாகிட்டோம்...” என்றான் அவளுக்காகப் பார்த்து. சந்தனா முகத்தில் முறுவல் பிறந்தது.

“உன் பொண்டாட்டியை சமாளிக்கிறது கஷ்டம்னு நினைச்சேன். சண்டைக்காரியாச்சே அவ. பரவாயில்லை டா. நீ தேறிட்ட!” என்றாள். நீண்ட நாட்கள் கழித்து சந்தனா குரல் தன்னவர்களுக்காக மீண்டிருந்தது.

குகேஷ் முகத்தில் புன்னகை ‌நீண்டது. “இதை மட்டும் அவ காதுல பட்ற மாதிரி சொல்லு சந்து...” என்றான்.

“ஹம்ம்...சொல்லிட்டா போச்சு. நீ அவகிட்டே ஃபோனை கொடு டா. நான் பேசணும்!”

“தர்றேன். பட் பேசுவாளா, மாட்டாளான்னு எனக்குத் தெரியாது. நீயாச்சு, அவளாச்சு!” என்ற குகேஷ் குரலில் வருத்தமில்லாமல் இல்லை.

“யசோ, சந்தனா பேசுறா...” தன் முன்னே நீண்ட அலைபேசியை வெறித்த யசோதா, “கண்டவங்ககிட்டே பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லங்க!” என்றாள் அலட்சியம் மிகுந்த குரலில். அதில் சந்தனாவின் மனம் காயம்பட்டது. வார்த்தைக்கு வார்த்தை அந்நியர் என்று சொல்லித் தன்னைக் காயப்படுத்துபவளின் மீது சந்தனாவிற்கு துளியும் கோபம் வரவில்லை. அந்தக் குரல் அவளுக்கானது, அவள் மீதிருக்கும் அக்கறையில்தான் வருகிறது என அவள் மட்டுமே அறிவாள்.

“குகா... நீ அவ காதுல ஃபோனை வை டா. நான் பேசுறதை அவ கேட்கட்டும்!” சந்தனா இறைஞ்ச, அவன் பெருமூச்சுடன் மனைவியின் காதில் அலைபேசியைப் பொருத்தினான்.

“யசோ... ப்ளீஸ் டி... ரெண்டு நிமிஷம். நான் பேசுறதை மட்டும் கேளு. நீங்க ரெண்டு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் யசோ. என்னை வச்சு இனிமே சண்டை போடாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. நான், அது என் வாழ்க்கை இப்படி தான். அதை மாத்த முடியாது. எனக்கு மனோ இருக்கான் டி. ஏன் நான் சொல்றது உனக்குப் புரியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என் யசோ எனக்கு வேணும். என் அம்மாவுக்குப் பிறகு நீதான் டி அந்த இடத்தை நிரப்புன. பட், இப்போ நீயே என்னை அவாய்ட் பண்ணா, நான் என்ன பண்றது?” எனக் கேட்க சந்தனா குரல் லேசாய் கமறிவிட, யசோதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“வார்த்தைக்கு வார்த்தை அம்மா இடத்தை ஃபில் பண்ணேன்னு சொல்றீயே சந்தனா. அப்போ நான் உன் நல்லதுக்குத்தான் எதுவும் சொல்லுவேன்னு தோணலை இல்ல? ஹம்ம், உன் இஷ்டத்துக்கு தனியா இருந்துடுவேன்னு பேசிட்டு இருக்க? நீ இப்படி தனியா கஷ்டப்படும் போது நாங்க எப்படி சந்தோஷமா இருப்போம்னு நினைக்கிற? காலம் முழுக்க என் மனசுல குறையா தங்கிடும் டி. நான் சொல்றதை கேளு சந்து. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு நீ சந்தோஷமா வாழ்றதைப் பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா?” எனக் கேட்ட யசோவின் குரல் ஆதங்கம் ததும்பி வழிந்தது. சந்தனாவிடம் பதிலில்லை.

“இப்போ பேசாத டி... இவ்வளோ நேரம் பேசுன வாய் எங்கப் போச்சு. உன் இஷ்டத்துக்கு வாழ்வேன்னா, நானும் அவனும் உன் வாழ்க்கைல இல்ல. புரிஞ்சுக்கோ, இனிமே என்னைத் தொல்லைப் பண்ணாத. எக்கேடோ கேட்டுப் போ‌. நான் சொல்றதை கேக்க கூடாதுன்னு முடிவெடுத்துட்ட உன்கிட்ட பேசுறது வேஸ்ட் டி... இனிமே இந்த மாதிரி எதாவது அழுதுட்டு பேசி என்னை சமாளிக்கலாம்னு கால் பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” முழு மூச்சாகக் கத்திய யசோதா அழைப்பைத் துண்டித்திருக்க, சந்தனா விழிகளில் நீர் வழிந்தது.

“ஏன் டி... அவளைக் கஷ்டப்படுத்தணும்னு இப்படி பேசுவீயா?” குகேஷ் மனைவியைக் கடிய, அவனை முறைத்தவள், “உங்களை மாதிரியே அவ பண்ற எல்லாத்துக்கும் என்னால சப்போர்ட் பண்ண முடியாது. இனிமே அவளுக்கு ஏத்துட்டு என்கிட்ட வராதீங்க. இதுக்கு முன்னாடி பேசி வாக்குவாதம் வந்து ரெண்டு வருஷம் வனவாசம் போய்ட்டீங்க. இனி அப்படி எதுவும் பண்ணீங்க, பொண்டாட்டி புள்ளை உங்களுக்கு இல்ல. அவளை மாதிரி நீங்களும் தனியாதான் கிடந்து அல்லாடணும்‌. அதை ஞாபகம் வச்சுக்கோங்க!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு போனவளை இவனால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.

இன்று மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாக குகேஷ் அவர்கள் இருவருக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தான். சந்தனாவின்புறம் பேசினால் யசோதா கோபப்படுவதும், மனைவி கூற்றை ஆதரித்தால் சந்தனா வருந்துவதும் என அவன் எந்தப் பக்கம் நிற்பதென உத்தமமாய் தெரியவில்லை. தன்னிலையை எண்ணி நொந்து கொண்டான்.

மேலும் இரண்டு நாட்கள் மௌனமாய் கழிந்திருந்தன. சந்தனாவிற்கு அன்றைக்கு எழ சுத்தமாய் விருப்பமில்லை. விழித்தும் அசையாது படுக்கையிலே இருந்தாள். லட்சுமி அம்மா அவளுக்காக கொடுத்த குளம்பி ஆறிப்பபோயிருந்தது.

தலையை உயர்த்தி தாயின் புகைப்படத்தை வேதனையாய்ப் பார்த்தாள். அவரில்லாது ஆறு வருடங்களை கடந்துவிட்டாள். ஒவ்வொரு பிறந்தாளின் போதும் ஆசையாய் உச்சி நுகர்ந்து முத்தமிட்டு வாழ்த்து சொல்லும் தாயின் ஸ்பரிசத்திற்கு மனம் வெகுவாய் ஏங்கியது. தலையணையில் முகம் புதைத்து கண்ணீரை உகுத்தாள்.

“குட்டி, இனிமே நான்தான் உன் பெர்த்டேக்கு ஃபர்ஸ்டா விஷ் பண்ணுவேன்!” எனக் கூறிய மனோவின் கடைசியும் முதலுமான வாழ்த்து அதுதான் என நினைக்கும் போது இன்னும் அழுகை வந்தது.

சிறிது நேரம் படுத்தே கிடந்தாள். இப்படியே இருந்தால் எதுவும் மாறிவிடுமா என்ன என மனம் கேள்வியெழுப்ப, விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள். தாய், தந்தையின் புகைப்படத்தை தொட்டு வணங்கினாள். கழிவறைச் சென்று முகம் கழுவி, பல் துலக்கிவிட்டு வந்தாள்.

அறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்து, “காபி ஆறிப்போச்சு சந்துமா. சூடு பண்ணித் தரவா?” என லட்சுமி அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார்.

“இல்லை மா... வேணாம்!” எனக் கசந்த குளம்பியை ஒரே மிடறில் குடித்து முடித்தாள். என்ன உடுத்துவது என தெரியாது நிலைபேழையைத் திறந்தாள். ஷோபனா அவளுக்குப் பரிசளித்த பச்சை நிற சேலை விழிகளுக்குப் புலப்பட, அதை எடுத்து ஆசையாய்த் தடவியவள், அதற்குத் தோதாக மேல்சட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு குளித்து தயாராகினாள்.

லட்சுமி அம்மா சமையலை முடித்திருந்தார். “ரெண்டு நாள் இந்தப் பையன் இல்லைன்னதும் வீடே வெறிச்சோடி போச்சு சந்தனா. சீக்கிரம் அவனைக் கூட்டீட்டு வா!” என அவர் கூறியபடியே உணவை எடுத்து வைக்க, சந்தனாவின் உதடுகளில் முறுவல் பிறந்தது. அவளுக்கும் மனோகர் இல்லாதது எதையோ இழந்த உணர்வை கொடுத்திருந்தது. வீட்டிலிருக்கும் போது எப்போதும் அவள்பின்னே சுற்றிக் கெண்டிருப்பான். அவனில்லாது கொஞ்சம் வெறுமையை உணர்ந்தாள்.

ஒவ்வொரு உயிருக்கும் பற்றிக் கொள்ள, வாழ்க்கையை நகர்த்த ஏதோ ஒரு காரணம் தேவையாயிருக்கிறது. அப்படியில்லையென்றால் வாழ்க்கையில் எவ்வித பிடிப்புமின்றி சலித்துவிடுவது மனித இயல்பு. சந்தனாவை உயிர்ப்புடன் வைத்திருப்பவள் மனோதான். அந்த பெயரா, இல்லை அந்தப் பெயருக்கு உரியவனா என யாரும் அறியார்.

உண்டு முடித்தவள் மருத்துவமனைக்கு கிளம்ப, ஷோபி எதிர்ப்பட்டாள். “டாக்டரம்மா... சேரி உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு!” என்றாள் ஆர்ப்பாட்டமாய்.

“தேங்க்ஸ் ஷோபி!” என இவள் முறுவலிக்க, சில பல நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர். ஷோபி கருதரித்திருப்பதால் ரஞ்சன் அவளை எங்கும் வெளியேவிடவில்லை. அவனே அனைத்தையும் செய்தான். இன்றைக்குத்தான் அவள் அடம்பிடித்து அஷூவைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட வந்திருந்தாள். இடைப்பட்ட நாட்கள் பார்த்துக் கொள்ளவில்லை எனினும், குறுஞ்செய்தி வழியே அவளது நலத்தை சந்தனா நாடியிருந்தாள்.

 

***

சந்தனா பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வுக்காகப் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள். தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தன. அதனாலே விளையாட்டு, பேச்சு, கலாட்டாக்கள் என எல்லாம் அருகிப் போய்விட்டன. சில நாட்களாக மருத்துவராக வேண்டும் என்றொரு ஆசை அவளுக்கு முகிழ்த்திருக்க, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உந்துதல் மனம் முழுவதும் பிறந்தது. 

 

அதனாலே முழு மூச்சாக படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அவளது வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் சந்தனா நல்ல மதிப்பெண் பெறுவாள் என அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்க, அவர்களுக்காகவும் சிந்தனையை சிதறவிடாது பார்த்துக் கொண்டாள்.

மனோவும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். தாய், தந்தையைப் பெருமைபடுத்த வேண்டும் என்று தன்னால் இயன்ற அளவு படிப்பில் கவனத்தை செலுத்தினான்.

மாலையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பதை வழக்கமாக்கியிருந்தனர். சந்தனாவிற்குத் தெரியாதவற்றை மனோ சொல்லிக் கொடுக்க, இவனுக்குத் தெரியாதவை எல்லாம் அவள் பயிற்றுவித்தாள்.

அன்றைக்கும் அது போல அவர்கள் படிப்பில் கவனமாய் இருக்க, மனோ சந்தனாவின் புத்தகம் ஒன்றைக் கையிலெடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.

“மனோ, நான் இந்த சம்மை புரியுற மாதிரி போட்டிருக்கேன் டா. நீ பாரு, புரியலைன்னா சொல்லு, எங்க மிஸ்கிட்டே கேட்டுட்டு வரேன்!” என அவள் கூறுவதை கேட்டவன் புத்தகத்தை சுழற்ற, அதிலிருந்து ஒரு காகிதம் வெளியே வந்து விழுந்தது.

“குட்டி... என்ன பேப்பர் இது?” அவன் வினவ, “தெரியலையே மனோ...” என சந்தனா நிமிரவே இல்லை. மறுநாள் நடக்கவிருக்கும் மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

அந்த காகிதத்தை அசட்டையாகத் திறந்த மனோவின் முகம் சில நொடிகளில் மாறியது. “குட்டி... சர்ஜூன் யாரு?” என அவன் கோபமாய்க் கேட்க, “ஏன் டா... என் ஸ்கூல்தான் அவன். பட் ட்வெல்த் படிக்கிறான்!” எனப் புரியாமல் வினவினாள்.

“இதைப் பாரு... என்ன எழுதியிருக்கான்னு!” மனோ காட்டமாய் அவளிடம் காகிதத்தைக் கொடுக்க, அதைப் படித்த சந்தனாவின் முகம் நொடியில் வெளுத்திருந்தது.

“மனோ... இது, எனக்கு... யார் என் புக்ல வச்சதுன்னு தெரியலை டா. இதை மிஸ் பார்த்திருந்தா, என்னை என்ன நினைச்சிருப்பாங்க!” என்றவளின் விழிகளில் சரசரவென நீர் கோர்த்தது.

“குட்டி... நீ ஏன் டி அழற? நீதான் எந்த தப்பும் பண்ணலையே. அவன்தானே லவ் லெட்டர் கொடுத்தது?” மனோ கோபமாய் வார்த்தைகளைத் துப்பினான்.

“இல்ல மனோ... எங்க மிஸ் லவ் எல்லாம் தப்புன்னு சொல்லியிருக்காங்க. அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க டா!” என்றாள் கலக்கமாய்.

“குட்டி... நீ அழாத. நான் இதைப் பார்த்துக்குறேன். என் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டீட்டுப் போய் அவனை ரெண்டு அடி போட்றேன்...”

“ஐயோ மனோ... அப்படிலாம் பண்ணிடாத டா. நான், நான் கீதா மிஸ்கிட்டே சொல்லிக்கிறேன். அவங்க நான் சொன்னா நம்புவாங்க. சர்ஜூனைக் கூப்ட்டு தண்டனை கொடுப்பாங்க. நீ எதுவும் செய்யாத. உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. என் அம்மாவும் திட்டுவாங்க!” பதறிய குரலில் இயம்பினாள் சந்தனா.

“குட்டி... நீ மிஸ்கிட்டே சொல்லு. ஆனாலும் நான் அவனைப் பார்க்கணும்!” எரிச்சலாய் உரைத்தான். எத்தனை தைரியமிருந்தால் அவனுடைய குட்டிக்கு காதல் கடிதம் எழுதியிருப்பான். இந்த வீடு, பூந்தொட்டி, மணல்மேடு, அவர்களது ஆஸ்தான இடத்தோடு குட்டியும் சேர்த்து அவனுடைய உடைமைதான். அதை யாருக்கும் விட்டுத் தருவதில் சர்வ நிச்சயமாய் மனோவுக்கு உடன்பாடில்லை. முகத்தில் பிடித்தமின்மையைக் காண்பித்தான்.

“மனோ... ப்ளீஸ்டா... பிரச்சனை வேணாம். நானே பார்த்துக்கிறேன். இந்த மாதிரி எதாவது நடந்தா, உடனே என்கிட்ட சொல்லுங்கன்னு கீதா மிஸ் சொல்லிருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க!” என இவள் கூறும்போதே கண்ணீர் வடிந்துவிட்டது.

அவள் அழுகைப் பொறுக்காதவன், “ப்ம்ச்... குட்டி... அழாத டி. நான் அவனை அடிக்க மாட்டேன்...” என்றான் சலிப்பாய். ஆனாலும் இதை இப்படியே விட்டுவிடும் எண்ணம் மனோவுக்கு உத்தமமாய் இல்லை. அவன் பதிலில் சமாதானமடைந்தாலும் வீட்டிற்குச் செல்லும்போதும் அவனிடம் அறிவுறுத்தி நகர்ந்திருந்தாள் சந்தனா.

மறுநாள் காலை சந்தனா சிறப்பு வகுப்பிற்காக எட்டு மணிக்கே பள்ளிக்குச் சென்றுவிட்டாள். அவர்கள் வகுப்பாரிசியை தாமதமாக வருவேன் எனக் கூறி, பக்கத்து வகுப்பு வாத்தியாரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்றிருக்க, “எல்லாரும் அமைதியா படிக்கணும். பேச்சு சத்தம் கேட்டுச்சுன்னா, அடிவாங்குவீங்க...” என அவர் கூறி நகர, சந்தனா புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்.

அருகிலிருந்த சகமாணவிகள் இவளைப் பார்த்து ஏதோ கிசுகிசுவென பேசுவதாய் தோன்ற, பார்வையை அவர்கள் புறம் திருப்பினாள். சட்டென அவர்கள் பேச்சு தடைபட்டிருந்தது. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை‌.

வகுப்பு தோழியொருத்தி எழுந்து சந்தனாவின் அருகே அமர்ந்தாள். “சந்தனா... அது உன் ஃப்ரெண்ட் மனோ இருக்கான் இல்ல?” அவள் இழுக்க, இவளுக்கு நொடியில் வியர்த்திருந்தது.

“சீதா... மனோ, மனோவுக்கு என்னாச்சு?” இவள் பதற்றப்பட, “மனோ நம்ப ட்வெல்த் சி க்ளாஸ் சர்ஜூனோட ரோட்ல சண்டை போட்டுட்டு இருக்கானாம். பசங்க சொன்னாங்க!” என மற்றவள் உரைத்ததும் அமர்ந்த இடத்திலிருந்து நொடியில் எழுந்திருந்தாள் சந்தனா. மனம் முழுவதும் படபடவென அடிக்க, குடுகுடுவென வெளியே ஓடினாள். வாயிலருகே கூட்டமாயிருந்தது. அங்கேதான் மனோ இருக்கக் கூடுமென கருதி அங்கே விரைந்தாள்.

“டேய், சந்தனா என் ஆளு டா. அவளுக்கு நான் லவ் லெட்டர் கொடுப்பேன். உனக்கென்ன வந்துச்சு? அவளுக்கும் என்னைப் பிடிக்கும்!” சர்ஜூன் கூறியதில் மனோவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“டேய்... அவ என் குட்டி டா. என் சந்தனா, அவ எனக்கு மட்டும்தான்!” மனோ கோபத்தை இழுத்துப் பிடித்துப் பேச,

“மனோ... இது எங்க ஸ்கூல்ல நடக்குறது. நீ தேவையில்லாம தலையிடாத. எங்க ஸ்கூல்ல படிக்கிற சந்தனாவை சர்ஜூனுக்கு பிடிச்சிருக்கு. அதனால லவ் பண்றான். அந்தப் பிள்ளைக்கும் இவனை பிடிக்கும். நீ இடையில வராத. சந்தனா உனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான். ஆனால் சர்ஜூனுக்கு ஆளு!” வேறொரு மாணவன் பேசியதும் மனோ அவனை அடிக்கப் பாய, சந்தனா அந்நேரம் கூட்டத்தில் நுழைந்திருந்தாள்.

“மனோ...” என அவள் மூச்சு வாங்க கத்த, அனைவரது கவனமும் இங்கே குவிந்தது‌.

“என்ன பண்ற மனோ. நான்தான் நேத்தே சொன்னேன்ல பிரச்சனை வேணாம்னு. ஏன் டா இப்படி பண்ற?” என அவன் கையைப் பிடித்திழுத்தாள் இவள். விழிகள் தளும்பி நின்றன.

“ப்ம்ச்... அவன் என்ன பேசுறான்னு பாரு டி... என்னை போக சொல்ற நீ. இன்னைக்கு அவனை அடிக்காம நான் போக மாட்டேன்!” மனோ துள்ள, “மனோ... நான் சொல்றதை கேக்கப் போறீயா இல்லையா?” என இவள் கோபமாய்க் கத்தினாள்.

“முடியாது குட்டி...” அவன் மறுக்க, “அப்போ இனிமே உங்க வீட்டுக்கு நான் வரமாட்டேன்!” என்றாள் தீர்க்கமாக.

“ப்ராமிஸ் பண்ணிருக்க குட்டி. அதை மறக்காத!” மனோ பல்லைக் கடிக்க, அவனை இயலாமையுடன் பார்த்தாள் சந்தனா.

“பாரு டா... இப்போ கூட அவ உன்னைத்தான் போக சொல்றா. ஏன்னா, அவளுக்கு சர்ஜூனைத்தான் பிடிச்சிருக்கு‌. நீ வேற ஸ்கூல். இது எங்க ஸ்கூல் டா. நாங்க பார்த்துக்குறோம். நீ கிளம்பு!” எள்ளலாக ஒருவன் உரைக்க, மனோ சந்தனா கையை உதறியிருந்தான்.

“மனோ...” என அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் நுழைந்தவள், “நான் சொல்றதை கேட்டு இங்கருந்து கிளம்புற நீ. இல்ல, நான் உன்கூட எப்பவுமே பேச மாட்டேன். வீட்டுக்கு வருவேன்னு மட்டும்தான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்!” சந்தனா கூறியதும், மனோ பல்லைக் கடித்தான்.

மறுபுறம் திரும்பியவள், “ப்ளீஸ், எல்லாரும் கிளம்புங்க. இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க. மிஸ்க்கு தெரிஞ்சா திட்டுவாங்க. போய்டுங்க...” என அவள் கெஞ்ச, “சந்தனா, சர்ஜூன் உன்னை லவ் பண்றான்னு தெரியும்தானே. அவனுக்கு பதில் சொல்லு...” ஒருவன் கேட்க, சர்ஜூன் அவளது கையைப் பற்ற வந்தான்.

நொடியில் அவளின் கையைப் பிடித்திழுத்து தோளில் கையைப் போட்ட மனோ, “குட்டி என் ஆளு டா. அவளும் நானும் லவ் பண்றோம். அவளுக்கு என்னை மட்டும்தான் புடிக்கும். இனிமே அவகிட்டே வம்பு பண்ணாதீங்க!” எனக் கூறியதும், அவளுக்கு நெஞ்சடைத்துப் போனது. என்னப் பேசுகிறான் இவன் என மருண்ட விழிகளுடன் அவனை நோக்கினாள். அவன் பேசியது ஆசிரியர் வரை சென்றுவிட்டால் அவளுடைய பெயர் என்னவாது? படிப்பு என்னாவது என நினைத்ததும் அழுகை வரப் பார்த்தது.

“சந்தனா... அவன் சொல்றது உண்மையா. நான் தான் உனக்கு முதல்ல லவ் லெட்டர் கொடுத்தேன். என்னை உனக்குப் பிடிக்கலையா?” என சர்ஜூன் கோபப்பட, மனோ அவனை நக்கலாகப் பார்த்தான்.

அதில் மேலும் சீண்டப்பட்டவன்,

“சந்தனா, உனக்கு அவனைப் புடிக்குமா? என்னைப் புடிக்குமா?” என வினவ, அவள் மௌனமாய் இருவரையும் வெறித்தாள்.

“குட்டி... பதில் சொல்லுடி...” மனோ தனது பிடியை இறுக்க, “சர்ஜூன், எனக்கு மனோவும் ஃப்ரெண்ட். நீயும் ஃப்ரெண்ட்தான். இனிமே இப்படி லவ்னு பேசிட்டு வராத. அப்படி மறுபடியும் வந்தன்னா, நான் ஸ்கூல் மிஸ்கிட்டே, ஹெட்மிஸ்கிட்டே சொல்லிடுவேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது!” என தன் தோளிலிலிருந்த மனோவின் கையையும் சேர்த்து தட்டிவிட்டு விறுவிறுவென பள்ளிக்குள்ளே நுழைந்தாள். அவன் அவளைக் சினத்துடன் பார்த்தான்.

அத்தனை பேரின் முன்பும் மனோ அப்படி பேசியதில் அவளுக்கு அழுகையும் கோபமும் ஒரு சேரப் பொங்கியது.

மனோ அவளைக் காப்பாற்றுவதற்காக அப்படி கூறியிருந்தாலும், இந்த விஷயம் தன் தாயின் காதிற்கு சென்றால் என்னவாது என இப்போதே மனம் பிசைய, தேம்பியழுதாள். வகுப்பாசிரியர் வந்துவிட்டார். இவள் அவசர அவசரமாக முகத்தைத் துடைக்க, அதை கவனித்தவர், மற்றவர்களைப் படிக்க பணித்துவிட்டு அவளை அழைத்தார்.

“சந்தனா... என்னாச்சு? ஏன் அழுற?” என அவர் வினவ, திக்கித் திணறி அவள் நடந்ததைக் கூறிவிட்டாள். அவளை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றவர் அந்த மாணவனை அழைத்துக் கண்டித்தார். இது போல இனியொரு முறை நடந்தால் பெற்றவர்களிடம் கூறிவிடுவோம் என அவனை மிரட்டி அனுப்பியவர், சந்தானவை சமாதானம் செய்தார். பிரச்சனை முடிந்ததில் அவளுக்கு நிம்மதி பிறந்தது. அவளுமே ஆசிரியர் வந்ததும் இதைக் கூறி பூதாகரமாக வெடிக்கும் முன்னே சரி செய்துவிடலாம் என்றெண்ணியிருக்க, மனோ வந்து அனைத்தையும் தலைகீழாய் மாற்றிவிட்டிருந்தான். இப்போது அதை நினைத்தாலும் அவளுக்கு கோபம் வந்தது.

அதனாலே மாலை அவனைக் காணச் செல்லவில்லை. வயிற்று வலி என தாயிடம் பொய்யுரைத்து வீட்டிலே இருந்துவிட்டாள். மனோ சந்தனாவுக்காக அவளுக்கு குறையாத கோபத்துடன் காத்திருந்தான். ஆனால் ஏமாற்றிவிட்டாள் பெண். 

 

மறுநாள் சந்தனா வந்ததும் வராததுமாய், “குட்டி... என்னைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்...” என அடமாய் நின்றிருந்தான் அவளது உற்றத் தோழன்.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page