All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 12

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

நெஞ்சம் 12

அன்று தென்னவனின் வீடு பரபரப்பாக இருந்தது. ஒரு மாதம் கழித்து அவரின் வீட்டிற்கு பெற்றவர்கள் இருவரும் வருகை புரிய இருந்தனர். நாச்சி தான் பரபரப்பாக சமையல் கட்டில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். எப்பொழுதுமே அவரின் மாமியாருக்கு வீடும் சரி சமையல் கட்டும் சரி சுத்தமாக இருக்க வேண்டும். சிறு தூசி கூட இருக்கக் கூடாது.

உணவு எந்நேரமும் இருக்க வேண்டும் யார் எந்த நொடி வந்து பசியென தர்மம் கேட்டாலும் கொடுக்க வேண்டும், அந்த அளவுக்கு எப்பவுமே உணவு மீதம் இருக்கும் அளவு தான் சமைக்க வேண்டும். இது தான் மாமியாரின் வார்த்தைகள். அவரும் திருமணம் முடிந்த இந்த நாள் வரை அப்படியே தான் செய்து வந்தார்.

எந்த ஒரு செயல் செய்ய வேண்டியதாக இருந்தாலும் மாமியாரிடம் கேட்டு தான் செய்வார். அவர் இல்லாத நேரங்களில் தான் நாச்சியின் வாயே அந்த வீட்டில் திறக்கும். அடிக்கடி மாமியார் கோவில் குளம் என்று சென்று விட அந்த நேரங்கள் எல்லாம் தன் விருப்பம் போல இருந்து விடுவார். இன்று வருகிறார்கள் என்றென்றும் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து வெளியே முற்றத்தையே பரப்பும் அளவிற்கு கோலம் போட்டு சமையல் வேலையை தொடங்கி விட்டார்.

என்ன தான் வேலைக்காரிகள் இருந்தாலுமே மற்ற வேலைகளை அவர்கள் பார்த்து விடலாம். ஆனால் ஐஸ்வர்யம் பெருகும் பூஜை அறையும், லட்சுமி வீட்டுக்குள் வரும் வாசல், அன்னலட்சுமி குடியிருக்கும் சமையல் கட்டும் என்றுமே அந்த வீட்டின் பெண்களின் கையில் தான் இருக்க வேண்டும்.

"அடியேய் எவ்வளோ நேரம் தான் ஒரு டீ போட்டு குடுன்னு கேட்பேன். நான் எழுந்து வந்து உட்கார்ந்து எவ்வளவு நேரம் ஆகுது. என்ன தாண்டி பண்ணிட்டு இருக்கே ?"  என்று சமையலறைப் பார்த்து தென்னவன் குரல் கொடுக்கவே,

அந்த நொடி சரியாக சமையலறைக்குள் நுழைந்த மகளிடம் டீயைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

தன் தந்தையிடம் வந்து அதை கொடுக்கவே, "என்னம்மா உங்க அம்மா எங்கே ?" என்க,

"அப்பா உங்களுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா இன்னைக்கு தான் அப்பத்தா, அப்புச்சி வராகல. அப்போ அம்மா பரபரப்பா தானே இருப்பாக " என கூறிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது.

"வந்துட்டாங்க போல, போய் கூட்டிட்டு வா " என்க, சரியெனக் கூறிய நிகழ்மதி வாசலுக்கு வர காரில் இருந்து இறங்கினர்.

வேலைக்காரனோ அவர்களின் பின்னே இருந்த பைகளை தூக்கிக் கொள்ள, " அப்புச்சி, அப்பத்தா " என்றவாறு வேகமாய் வந்து இருவரும் கரங்களுக்குள் தன் கரம் கோர்த்துக் கொண்டாள்.

"என்னடி உன் ஆத்தா உன்னை நல்லா கவனிச்சுகிறாளா ?"

"அதெல்லாம் நல்லா தான் பார்த்துக்குது. எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க ?" என்று ஆசையோடுக் கேட்கவே,

"உனக்கு இல்லாமையாடி நான் வருவேன்.  என் பேத்தி உனக்கு எப்படி நான் வாங்காம இருப்பேன் உள்ளார போவோம் "

"அப்புச்சி நான் நீங்க சொன்ன மாதிரியேவும் இந்த ஒரு மாசத்துல நீச்சல் சூப்பரா கத்துக்கிட்டே. அண்ணா தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான். நாளைக்கு நம்ம ரெண்டு பேருமே வயலுக்கு போவோம். அப்ப உங்க முன்னாடியே நான் நீச்சல் அடிச்சு காட்டுறேன் "  என்று தன் தாத்தா அப்புச்சியிடம் கூற, அவரோ தன் பேத்தியை தோளோடு அணைத்துக் கொண்டார்.

அந்த வீட்டில் மூத்தவர்கள் ஆன பேச்சியம்மாள் அப்பத்தாவும் சங்கரமணி அப்புச்சியும் தன் பேத்தியோடு வீட்டுக்குள் நுழைய, மரியாதையாக எழுந்து நின்று தன் பெற்றோரை வரவேற்றார் தென்னவன். பின் அவர்கள் சோபாவில் அமர சமையலறையில் இருந்து தன் கரங்களை துடைத்துக் கொண்டு வேகமாய் வந்து நாச்சியும் இன்முகத்தோடு வரவேற்றார்.

"ஏய் இதுல திருநீர்,குங்குமம், கயிறு எல்லாமே இருக்கு பத்திரமா கொண்டு போய் பூஜை ரூம்ல வை. நான் யாருக்கு என்ன கொடுக்கணும்னு சொல்றேன். சாயங்காலம் குளிச்சிட்டு பூஜை பண்ணிட்டு கொடுக்கணும் சரியா " என்றதும், சரி எனக் கூறி தன் மாமியார் கொடுத்ததை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

"அப்புறம் அப்பா அம்மா பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு ? எந்த தடங்கலும் இல்லையேm ஒரு சில நேரங்களில் போன் பண்ணா போகவே இல்ல. நீங்க வேற தொந்தரவு பண்ண கூடாதுன்னு சொல்லிட்டீங்களா, அதனால தான் நாங்க உங்க விருப்பப்படியே விட்டுட்டோம். இப்போ உங்களுக்கு ரொம்ப களைப்பா இருக்கும் போய் அவங்களோட ரூம்ல ஓய்வெடுங்க "

"ஆமாலே நீ சொல்றதும் வாஸ்து தான். வந்தது ரொம்ப அசதியா தான் இருக்கு. நான் போய் படுக்கிறேன். ஆமா எங்கே என் பேரண்டிய காணோம் " என்று னசங்கரமணி அப்புச்சி கேட்க,

"அவன் எங்க அப்பா வீடு தங்குவான் உங்களுக்கு தெரியாதா. எங்கையாவது சுத்த போயிருப்பான் " என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கூறவே, அப்பனுக்கும் மகனுக்கும் ஏதோ வாக்குவாதம் என்பதை பெரியவர்கள் இருவரும் புரிந்துக் கொண்டனர்.

தன் மகனை தான் மாமனார் தேடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நாச்சி தன் மகளை அழைத்து, "அடியேய் உன் அப்பத்தாவும் அப்புச்சியும் வந்துட்டாங்கன்னு உன் அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லு. அவன் வேற ரெண்டு நாளா வீட்டுக்கு வராம கிடக்கான். இவங்க வந்த தகவல் தெரிஞ்சா வருவான். இப்படியே வராம இருந்த  என்ன ஏதுன்னு கேட்டு உன் அப்புச்சி என்ன கத்துவாக. அதுவும் போக உன் அப்பத்தாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. சீக்கிரம் போனை போட்டு சொல்லு " என்று மகளிடம் கூறியதும், அவளும் தன் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை கூறினாள்.

"சரி நான் தோப்பு வீட்டுல தான் இருக்கேன். சாயங்காலம் போல வீட்டுக்கு வரேன் " அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாது அழைப்பினை துண்டித்து விட்டான்.

கூறியதுப் போல் மாலை நேரம் வீட்டுக்கு வர தன் மகனைக் கண்ட தென்னவனோ எழுந்து அறை நோக்கிச் சென்று விட, "என்னலே உன் அப்பா இந்த தடவை இப்படி வெரப்பா திரியுறான் அப்படி என்னத்த பண்ண ?"  என்று அப்புச்சி கேட்கவே,

"கடுப்பா இருக்கா அப்புச்சி அத பத்தி பேசாதீங்க "

"சரி விடு ஊர்ல என்ன நிலவரம் நம்ம இல்லாத இந்த நாளில என்ன எல்லாம் நடந்துச்சு " என்று எப்பொழுதுமே சங்கரமணி தாத்தா சகஜமாக வளவளவென பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் தன் பேரன் மட்டுமே !

மகனான தென்னவனிடம் கூட முக்கியமான பொறுப்புகளைப் பற்றி மட்டும் தான் பேசுவார் ஆனால் இளவட்டம் போல் பேரனிடம் இந்த ஜெனரேஷன் பற்றி எல்லாம் கேட்டு அறிந்துக் கொள்வார்.

பூஜை அறையில் இருந்து தன் பேரனுக்காக கொண்டு வந்த கயறனை அவனின் கரங்களில் பேச்சியம்மாள் அப்பத்தா கொடுக்கவே, வாங்கியவனோ அந்த கருப்பு நிற கயறைக் கண்டான்.

"என்ன அப்பத்தா இது ? எதுக்கு நீ என்கிட்ட குடுக்குற ?"

"நாங்க கோவிலுக்கு போனோம்ல அப்போ ஒரு இடத்துல ஜோசியம் பார்த்தோம். உனக்கு ஆபத்து இருக்கு அப்படின்னு சொல்லி மந்திரிச்சு இந்த கயத்த கொடுத்தாங்க. இது நீ உடம்பில கட்டிக்கிட்டா உனக்கு எந்த ஆபத்து நெருங்காதாம். காத்து கருப்பு கூட உன்கிட்ட வராதாம் "பேச்சியம்மாள் அப்பத்தா கூறவே, அவரிடம் வாதிட முடியாது  அவர் முடிவு எடுத்தால் பின் மாற்றமும் முடியாது என்பதால் அப்போதைக்கு அதை வாங்கிக் கொண்டான். ஆனால் அவனுக்கு அதை கட்ட வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை இரவு நேரம் தூங்கப்போகும் போது தங்கை வரவே அவளிடம் அந்த கயிறை கொடுத்தான்.

"இத அப்பத்தா உனக்கு தானே அண்ணே கொடுத்துச்சு "

"நானே ஒரு காத்து கருப்பு நான் வேணா அடுத்தவங்களுக்கு ஆபத்த தருவேன் தவிர எனக்கு எவனாலும் எந்த ஆபத்தும் வராது. அப்பத்தா சொல்லுதுன்னு எல்லாம் என்னால கேட்க முடியாது. உனக்கே தெரியும் கோவில் பக்கமே எட்டி பார்க்காதவன் அப்படி இருக்கும் போது இதெல்லாம் நான் கழுத்து எல்லாம் கட்டுவேனா. ஏதோ ஒரு காப்பை கொடுத்து போடுடா கையில அப்படின்னா போட்டுப்பேன். கயிறு கொடுத்தா நமக்கு எல்லாம் இது பிடிக்காது நீ தான் பயந்தாங்கோலி ஆச்சே கட்டிக்கோ.  என்ன நினைச்சாலும் நடக்கும் அப்படி நடந்துச்சுன்னா அப்புறம் பார்த்துக்கலாம் " என்றவனோ தங்கையிடம் கொடுத்து விட்டு அறைக்குள்  நுழைந்துக் கொண்டான்.

நிகழ்மதியும் அதனை அந்த நொடியை தனக்கு உதயன் கணவனாக கிடைக்க வேண்டும் என நினைத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டாள். விரைவில் இதே கயிறு போல் அவனின் கரங்களால் தான் மாங்கல்யமும் வாங்க வேண்டும் என்ற ஆசையோடு கனவுலகில் அவனோடு வாழ்வதற்கு தன் அறையை நோக்கிச் சென்றாள்.

இரு நாட்கள் சென்ற நிலையில் ஆதி தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு யுகனிகாவை பின் தொடர்வதை நிறுத்தி விட்டான். ஆனால் மனதால் ஒவ்வொரு நொடியும் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். சில நாட்களாகவே தன் பின் ஆதி வரவில்லை என்பதையும் நன்றாகவே உணர்ந்தாள் யுகனிகா. அவளுக்கு அந்த நொடி எதையோ ஒரு பொருளை இழந்ததுப் போல் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் தன்னை விட்டு விலகியதுப் போல் உள்ளுணர்வு. அவளாலே அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் மனம் தரிகெட்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

சில நாட்களாகவே மகனை கவனித்து தான் வந்தார் நாச்சி. அடிக்கடி அவன் போதையோடு சுற்றி வருவது வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் வீட்டுக்கு வருவது வீட்டிலிருந்து சரியாக உண்ணாது போல் ஏதோ பித்து பிடித்தவன் போல் தன் மகன் சுற்றுவதை நாச்சியால் காண முடியவில்லை.

அன்று மகன் வீட்டுக்கு வரவே, "டேய் கண்ணா எதுக்குடா இப்படி இருக்கே ? சேவ் பண்ணாம சரியா குளிக்காம முகம் எல்லாம் வாடி போயி. நீ இப்படி இருந்தா என்னடா அர்த்தம் ? ஏன் குடிச்சிக்கிட்டே இருக்கே, கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்கு பாரு. அப்படி உனக்கு என்னடா கஷ்டம் ? " என தன் மகனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் கன்னத்தை வருடியவாறுக் கேட்க, தன் அன்னையின் கரங்களை தன்னிடம் இருந்து விலக்கி விட்டான்.

பிறந்ததிலிருந்து இந்த நொடி வரை தன் அன்னை தன்னை தொட்டால் சுகமாக ஏற்றுக் கொள்வானே தவிர ஒரு நாளும் இப்படி பிரித்து விட்டது கிடையாது இன்று மகனின் செயல் அவரை என்னவோ செய்து

"உங்க அப்பா உன்னை திட்டுனா அதுக்கு அம்மா நான் என்னடா பண்ணுவ. இந்த ஆத்தால நீ ஒரு நிமிஷமாவது நெனச்சு பார்த்தியாடா.  நீ இப்படி இருந்தா என்னால எப்படிடா நிம்மதியா இருக்க முடியும். நான் என்னடா பாவம் பண்ணேன். எதுக்குடா பெத்த ஆத்தாளுக்கு நீ இப்படி ஒரு தண்டனையை கொடுக்குற " என்று அவரோ முந்தானை வைத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கவே,

"அம்மா இப்ப என்ன நான் செத்தா போயிட்டேன் உசுரோட தான இருக்கேன். எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க. மனுஷனை நிம்மதியா இருக்க விடுறீங்களா.  எல்லாரும் சேர்ந்து என் விருப்பத்துக்கு எதுவும் செய்யக்கூடாது. நீங்க எல்லாரும் சொல்றது நான் கேட்டுகிட்டு இருக்கணும். நான் என்ன தலையாட்டி பொம்மையா ? "என்று சத்தமோடுக் கத்தினான்.

"பார்த்தியா பாத்தியா இப்படி எல்லாம் நீ அம்மாகிட்ட என்னைக்குமே எரிஞ்சு விழுந்து பேசினதே கிடையாதுடா தங்கம். இப்போ என்ன உனக்கு அந்த புள்ளைய புடிச்சிருக்கு கண்ணால கட்டி வைக்கணும் அவ்வளவு தானே நான் வேணா உங்க அப்பா கிட்ட பேசுறேன் "

"ஒன்னும் தேவையில்லை. அதான் எல்லாம் முடிச்சு விட்டீங்களே. இங்க பாருமா இந்த ஜென்மத்துல நான் எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணவே மாட்டேன். என் மனசுல புகுந்த ஒரே ஒருத்தி அவ மட்டும் தான். அவ வேற ஒருத்தனுக்கு சொந்தமானாலும் என் மனசு விட்டு அவ போக மாட்டா "

"உங்க அப்பா சொன்னதையே நீ ஒரு தடவை யோசித்துப் பார்க்கலாம்ல. என்ன ஜாதியோ என்ன கோத்திர, குலமோ தெரியல. பொழைக்க வந்தவக. நாம நம்ம தகுதிக்கு ஈடா பொண்ணு எடுக்கணும் அப்படி இல்லைன்னா நம்ம வீட்டுல நமக்குன்னு மரியாதை இருக்காது இல்லையா. அதனால தானே உங்க ஐயா சொல்றாரு. உன் தங்கச்சிக்கு வேற இடத்துல பொண்ணு எடுக்கணும். அப்ப என்ன பேசுவாங்க. ஒன்னு இல்லாத வீட்டில் இருந்தா மருமகளை எடுத்தேன்னு கேட்க மாட்டாங்களா. அதுக்கு தான் உன் அப்பா அப்படி சொல்றாரு "

"நம்ம கிட்ட இல்லாத தாம்மா அவ வந்து கொண்டு வரணும்ன்னு ஏம்மா நினைக்கிறீங்க. "

"சரிப்பா நாங்க அப்படி நினைக்கலை. ஆனா அந்த பொண்ணு ஒத்துக்கலையே "

"அவள நான் ஒத்துக்க வைப்பேன். ஆனா உன் புருஷன் அத பண்ண விடாம என்ன தடுத்துட்டாரு "என்று அன்னை மகள் இருவரும் பேசிக் கொண்டிருக்கவே, சத்தம் கேட்டு அறையில் இருந்து தள்ளாடிக் கொண்டு வெளியே வந்தார் பேச்சியம்மாள்.

"என்னலே பேராண்டி வீட்டு பக்கமே வர மாட்டீங்க போல, பார்க்கவே முடியல. உன் அப்பன் கிட்ட ஏதோ சண்டை போட்டுக்கிட்டு கிடக்க போல. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். கொஞ்ச நாளா சரியாவே இல்ல உன் ஆத்தாக்காரி கிட்ட கேட்டா எதுவும் சொல்ல மாட்டிக்கா "

"அப்படிலாம் ஒன்னும் இல்ல அப்பத்தா  உன் கிட்ட சொன்னாப்புல நீ அப்படியே என் பிரச்சனையை தீர்த்து வச்சிருவையா. கூட கொஞ்சம் தலையில இரண்டு மூட்டை பிரச்சனை தான் கட்டி வைப்பேன் "

"என்ன பேராண்டி நீ இப்படி சொல்லிப்புட்டே. ஆமா அன்னைக்கு நான் ஒரு தாயத்து கொடுத்தேனே அந்த தாயத்து எங்கே நீ கழுத்துல கட்டிக்கிலையா. அந்த தாயத்தை கட்டினால் நீ நினைச்சதெல்லாம் நடக்குன்னு. உனக்கு வர்ற ஆபத்து விலகும். பரமேஸ்வரி ஆத்தா சன்னதியில் இருந்து அந்த தாயத்தை எடுத்துட்டு வந்து இருக்கேன்டா "

"அப்பத்தா இந்த ஆன்மீகம் சாமி இதெல்லாம் நீங்க நம்புங்க நான் இல்லன்னு சொல்லலை. ஆனா என்னை எல்லாம் அதுக்குள்ள இருக்கணும்னு நினைக்காதீங்க. எனக்கு தான் இந்த கயிறு கட்டுறது இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுல. அப்பறம் என்ன ? அதை நான் மதிக்கிட்ட கொடுத்துட்டேன். வீணா போகல போதுமா " என்றவனோ மாடியேறிச் சென்று விட்டான்.

தன் பேரன் இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக இருக்கிறானே முன்பெல்லாம், அப்பத்தா அப்பத்தா என்று பின்னாடியே சுற்றிக்கொண்டு தன்னை வம்பு இழுத்தவாறு தன் புடவை முந்தானையில் இருக்கும் சுண்ணாம்பை எடுத்து வேண்டுமென்றே தன் மீது தடவுவது, வெற்றிலையை எங்கேயாவது ஒளித்து வைப்பது, தன் கொண்டையை அவிழ்த்து விடுவது என்று தன்னிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பவனா இப்பொழுது இப்படி இருக்கிறான்.

தான் ஆன்மீக சுற்றுலா சென்று வந்த இந்த ஒரு மாதமும் அப்படி என்ன ஆயிற்று இவனுக்கு ? யோசித்தவாறே மருமகளின் அருகில் வந்தார்.

"அடியேய் நான் திரும்பவும் கேட்கிறேன் காத்து கருப்பு எதுவும் என் பிள்ளைக்கு அடிச்சிடுச்சா என்ன ? இப்படி கோபப்பட்டு திறியுறான் "

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல அத்தை. அவனுக்கு ஏதாவது வேலையில டென்ஷன் ஆகி இருக்கும். உங்களுக்கு தான் தெரியும்ல. அவஎன் அப்பாரு ஒன்னு சொன்னா இவன் ஒன்னு செய்வான். ரெண்டு பேருக்கும் ஆகாது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க  அதை நினைச்சுக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருக்கான். வேற ஒன்னும் இல்ல அத்தை. நீங்க போங்க, நீங்க போய் படுங்க. நான் வேணா பூண்டு போட்டு உங்களுக்கு பால் கொண்டு வரவா. மாமா தூங்கிட்டாரா "

"அது இப்போ குறட்டை விட்டு தூங்குது.  நான் சத்தம் கேட்குதுன்னு தான வந்தேன். சரித்தா இருக்கட்டும். அடியேய் நான் உன் மாமியாருடி உன் புருஷனே வளர்த்த எனக்கு அவன் பிரச்சனை பண்ற பேரனுக்கு சமாளிக்க தெரியாதாக்கும். கவனிச்சுக்கிறேன் " என்றவரோ அணிந்திருந்த கண்டாங்கி சேலையில் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு மீண்டும் தங்களின் அறை நோக்கிச் சென்றார்.

வீட்டில் பொறுப்புகள் முழுவதும் தன் மகன் தென்னவனிடம் கொடுத்து விட்ட பின் சங்கரமணி அப்புச்சி தன் மனைவிக்கு ஒத்தாசையாக ஆன்மீகம் என்று முழுமையாக அதற்கு மாறி விட்டார். ஆனால் பேச்சியம்மாள் பாட்டி அப்படியில்ல என் நேரமும் பூஜை அறையை கதியாக இருந்தாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் சரியாக கவனித்து அதனை தீர்த்து வைப்பது தான் அவரின் அதி முக்கிய வேலையே ! அப்படி இருக்க பேரனின் பிரச்சனையை விடுவாரா என்ன ?

கருத்துக்களைப் பகிர

 

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page