All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

18. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

பிரஹாசினியை விடுதியில் விட்டு விட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிய விருச்சிகன், உமாராணி மற்றும் நீரஜ்ஜிற்கு அவளது நடமாட்டம் இல்லாமல் அந்த வீடே வெறிச்சோடி விட்டதைப் போன்றதொரு பிம்பம் தோன்றிற்று. 

 

“இனிமேல் பிரஹா லீவுக்கு மட்டும் தான் இங்கே வருவா” என்று வருத்தத்துடன் கூறிய மகனிடம், 

 

“ஆமாம். ஆனால், நாம அவகிட்ட சொன்ன மாதிரி அவளை அடிக்கடி போய்ப் பார்த்துட்டு வருவோம்” என்றார் விருச்சிகன். 

 

உமாராணி,“பிள்ளைக்குச் சாப்பாட்டில் எந்தக் குறையும் வந்துடக் கூடாதுன்னு எனக்குக் கவலையாக இருக்கு”

 

“அது அந்த ஊரிலேயே இருக்கிற பெரிய காலேஜ் ம்மா. அங்கே, ரூல்ஸ் அதிகம் தான்! ஆனால் அங்கே கேன்டீன், ஹாஸ்டல் மெஸ் எல்லாம் குவாலிட்டியாகத் தான் இருக்கும். நாமளே கேன்டீனில் வாங்கிச் சாப்பிட்டுத் தானே வந்தோம்?” என்றவனிடம், 

 

“ம்ம். அவ தங்குற ரூம் கூட நல்லா தான் விஸ்தாரமாகத் தான் இருந்துச்சுடா” என்று அவனது கூற்றை ஆமோதித்து விட்டு, 

 

“இனிமேல் தான் சாப்பாடு செய்யனும். ஏதாவது சிம்பிளாக செய்யவா?” என்று கேட்டார் உமாராணி. 

 

“அங்கே கேன்டீனில் பலகாரம் சாப்பிட்டதே எனக்குப் போதும்ன்னு இருக்கும்மா. உங்க ரெண்டு பேருக்கு மட்டும் செய்யுங்க” என்று கூறி விட்டான் நீரஜ். 

 

“எனக்கும் அப்படித் தான் இருக்கு உமா. டீ மட்டும் போட்டுத் தா. அதைக் குடிச்சிட்டுக் கிளம்புறேன்” என்கவும், 

 

“சரிங்க. நானும் இப்போ சாப்பிட்ற மனநிலையில் இல்லை” என்றவர், தேநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து பருகினார் உமாராணி. 

 

இங்கே தனது விடுதி அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தவளோ, அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டு விட்டு,‘இன்னும் மூன்று வருடங்களுக்கு இது தான் தனது உறைவிடம்!’ என்பதைப் புரிந்து கொண்டுத் தன்னுடைய பையிலிருந்து உடைகள் மற்றும் பொருட்களை எடுத்து அதற்குண்டான இடத்தில் அடுக்கி வைத்தாள் பிரஹாசினி. 

 

அப்போது, அறை வாயிலில் அரவம் எழுவதைக் கண்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

 

அங்கே, அவளுடன் அந்த அறையைப் பகிர்ந்து கொள்ளப் போகும் மாணவிகள் இருவரும் தத்தமது பெட்டிகளுடன் நின்றிருந்தனர். 

 

இவளைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்து,”ஹாய்! நாங்க தான் உங்களோட ரூம் மேட்ஸ்” என்றதும், 

 

உடனே தானும் மெலிதாக முறுவலித்து,”ஓஹ், ஹாய்! உள்ளே வாங்க” என்று அவர்களை அறைக்குள் நுழைய அனுமதித்தாள் பிரஹாசினி. 

 

“என் பேர் அனிகா”,

“என்னோட பேர் சௌமியா”, என்றவர்கள், தங்களது உடைப் பெட்டிகளை அவற்றிற்கான இடத்தில் வைத்து விட்டுத் தாங்கள் உறங்கப் போகும் கட்டிலையும் தேர்ந்தேடுத்து விட்டு, 

 

“நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலில் தான் படிச்சோம்” என்ற அனிகாவோ,

 

“உங்க பேர், ஊர், நீங்க எந்த ஸ்கூலில் படிச்சீங்கன்னு சொல்லுங்க” என்று அவளது பூர்வீகம் மற்றும் பள்ளிப் படிப்பைப் பற்றி விசாரித்தாள். 

 

“என் பேர் பிரஹாசினி” என்று கூறி விட்டு, மற்றக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்ல, 

 

“ஓஹோ, உங்க ஃப்ரண்ட்ஸ் யாரும் உங்க கூடப் படிக்க வரலையா?” என்று வினவினாள் சௌமியா. 

 

“இல்லைங்க” என்றாள் பிரஹாசினி.

 

“அப்போ தனியாகத் தான் வந்திருக்கீங்களா?” என்றாள் அனிகா. 

 

“ஆமாம்” என்றவளிடம், 

 

சௌமியா,“உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்ங்க. அதை நினைச்சுத் தான், நானும், இவளும் ஒன்னா இந்தக் காலேஜில் சேர்ந்து இருக்கோம். ஏன்னா, எங்களால் எல்லாத்தையும் தனியாகவே பண்ணிக்க முடியாது. அதான்” என்று அவளிடம் கூற, 

 

“ஓஹோ, சரிங்க. நான் என் வீட்டுக்குக் கால் பேசிட்டு வர்றேன்” என அவர்களிடம் தெரிவித்து விட்டுத் தன் செல்பேசியுடன் வெளியே வந்தவள், 

 

அங்கேயிருந்த திண்டில் அமர்ந்து கொண்டு, உமாராணிக்கு அழைப்பு விடுத்து, அதை அவர் ஏற்றதும்,”ஹலோ பெரியம்மா” என்றாள் பிரஹாசினி. 

 

“ஹேய் பிரஹா! சொல்லுடா! என்னப் பண்ற?”என்று அவளிடம் வினவினார். 

 

“நான் இப்போ தான், என் பொருளை எல்லாம் அடுக்கி வச்சேன். என் கூட ரூமை ஷேர் பண்ற ரெண்டு பேரும் வந்துட்டாங்க” 

 

“அப்படியா? அவங்க கூடப் பேசினியா? நல்லப் பொண்ணுங்களாக இருக்காங்களா?” என்று விசாரித்தார் உமாராணி. 

 

“இப்போ தானே வந்திருக்காங்க பெரியம்மா. இனிமேல் தான் போகப், போகப் பேசிப் பழகனும்” எனக் கூறினாள் பிரஹாசினி. 

 

“அவங்க கிட்ட அதிகப் பேச்சு வச்சுக்காதே! அவங்க உன் கூட பேசுறது, நடந்துக்கிறதைப் பார்த்துட்டு நீயும் அப்படியே பழகு. இல்லைன்னா, போறப் போக்கில் உன்னைப் பத்தின எல்லா விவரங்களையும் கேட்பாங்க. அதனால், அவங்க கூட லிமிட் ஆகவே இரு” என்று அவளுக்கு அறிவுரை வழங்கவும், 

 

“சரிங்க பெரியம்மா. பெரியப்பா கிட்டேயும், அண்ணா கிட்டேயும் சொல்லிடுங்க” என்றாள். 

 

“ம்ம். சொல்லிடறேன். உனக்குக் கிளாஸ் எப்போ ஆரம்பிக்கும்னு சொல்லிட்டாங்களா?” 

 

“இல்லை பெரியம்மா. சீக்கிரம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கு” எனப் பதிலளித்தாள் பிரஹாசினி. 

 

உமாராணி,“சரி. உடம்பைப் பார்த்துக்கோ. காலேஜூக்குப் போகும் போது ஃபோன் பண்ணிச் சொல்லிரு” என்று கூறி விட்டு அழைப்பை வைத்தார்.

 

அதன் பின்னர், அறைக்குள் நுழைந்து, மற்ற இருவரும் தத்தமது செல்பேசியுடன் ஐக்கியமாகி இருப்பதைக் கண்டுத் தன் கட்டிலில் அமர்ந்தாள் பிரஹாசினி. 

 

அவளுக்கு எப்போதும் ஓயாமல் செல்பேசியில் நேரம் செலவிடப் பிடிக்காது. அதனால், தனது பையிலிருந்து ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதை வாசிக்கத் தொடங்கி விட்டாள். 

 

அதைக் கண்ட மற்ற இரு பெண்களும்,’இந்தப் பொண்ணு நம்ம டைப் இல்ல போலயே!’ என்ற வகையிலான பார்வைப் பரிமாற்றத்தைச் செய்து கொண்டனர். 

 

ஆனால், வாசிப்பில் ஆழ்ந்து இருந்த பிரஹாசினியோ, அதைக் கண்டு கொள்ளவில்லை. 

 

அதன் பிறகு, அன்றிரவு உணவிற்கான அறிவிப்பு வந்து விட அவளைத் தனியாகச் செல்ல விடாமல் தங்களுடனேயே கூட்டிச் சென்றனர் அனிகா மற்றும் சௌமியா. 

 

அங்கே வரிசையில் நின்று தான் உணவைத் தட்டில் வாங்கிக் கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்குத் தான் முன்னுரிமை. யாராவது தாமதமாக வந்தால் அவர்களுக்கு உப்புமா தான் அந்த நேரச் சாப்பாடாக கொடுக்கப்படும் என்பதை அப்போதே அனைத்து மாணவிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. 

 

அனிகா,“சூடாக இருந்தால் கூட உப்புமாவைச் சாப்பிட முடியும். ஆனால், ஆறிப் போயிட்டா அதை என்னால் முழுங்கவே முடியாது! நாம சீக்கிரம் வந்து சாப்பாட்டை வாங்கிடனும். சரியா?” என்று மற்ற இருவரிடமும் வலியுறுத்தினாள். 

 

அவர்களும் ஒப்புக் கொண்டுத் தங்கள் உணவில் கவனம் வைத்தனர். 

 

அத்தனை பெரிய கல்லூரியின் விடுதியில் தரும் உணவு மிகவும் மோசமானதாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல், அன்றைய சாப்பாடும் உண்ணக் கூடிய வகையில் தான் இருந்தது. அதனால், அம்மூவரும் நன்றாகவே உண்டு முடித்து விட்டு அறைக்குத் திரும்பினார்கள். 

 

அதன் பிறகுத் தத்தமது கட்டிலில் சென்று உறக்கத்தை மேற்கொண்டனர் மூவரும். 

 

பிரஹாசினிக்கு எப்போதும் அதிகாலையிலேயே எழுந்து கொள்வது பழக்கம் என்பதால் ஐந்து மணிக்கே விழிப்புத் தட்டி விட்டதால், அப்போதே தன் காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்து தயாராகி விட்டாள். 

 

அதே சமயம், அவளது வீட்டிலோ, தானும் எழுந்து, தன் கணவர் மற்றும் மகனை எழுப்பி விட்டார் உமாராணி. 

 

“பிரஹா எழுந்துட்டாளா ம்மா?” என்ற நீரஜ்ஜிடம்,

 

“அவ ஹாஸ்டலில் இருக்காடா. நேத்து தானே கொண்டு போய் விட்டுட்டு வந்தோம்” என்றார் விருச்சிகன்.

 

உடனே அதைக் கேட்டு முகம் சுணங்கிப் போய் விட,”ஆமாம்ப்பா. அவ இங்கே இருக்கிற மாதிரியே தோனுது. அதான் கேட்டுட்டேன்” என்று வருத்தத்துடன் கூற, 

 

“எங்களுக்கும் அப்படித் தான் இருக்கு நீரு! அவளுக்கு அவ்வளவு தைரியம் சொல்லி அனுப்பிய நம்மால் அவளை விட்டு ஒரு நாள் கூடப் பிரிஞ்சு இருக்க முடியலை பாரேன்!” என்று சோகமாக உரைத்தார் உமாராணி. 

 

“சரி, சரி. விடுங்க. நான் கடைக்குப் போகனும். உனக்கும் காலேஜூக்கு நேரமாச்சுல்ல? போய்க் கிளம்பு” என்றவர், 

 

“டீ போட்டுக் கொண்டு வாம்மா” என்று மனைவியிடம் கூறி விட்டுச் சென்றார் விருச்சிகன். 

 

பிரஹாசினிக்கு அழைத்துப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து, வேகமாக கிளம்பத் தொடங்கினான் நீரஜ். 

 

அந்த நேரத்தில், அனிகாவும், சௌமியாவும் கூட எழுந்து விட்டார்கள். 

 

“ஹாய்! குட் மார்னிங்” எனக் கூறி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள் பிரஹாசினி. 

 

“குட் மார்னிங். என்ன நீங்க அதுக்குள்ள குளிச்சிட்டீங்க?” என்றவர்களிடம், 

 

“ஆமாம். எனக்கு இது பழக்கம் தான்ப்பா”எனப் பதிலளித்தாள். 

 

சௌமியா,“ஓஹோ. ஓகே. உங்களுக்குக் காஃபி, டீ ஏதாவது கொடுத்தாங்களா? இதைப் பத்தி நாம நேத்தே எதுவும் கேட்டு வைக்காமல் விட்டுட்டோம்” 

 

பிரஹாசினி,“இல்லைங்க. நானும் இன்னும் மெஸ் பக்கம் போகலை. நீங்க எழுந்து கிளம்பினதும் மூனு பேரும் சேர்ந்து போகலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று கூறவும்,

 

அனிகா,“அப்போ நாங்க போய்க் கிளம்பிட்டு வர்றோம்” என்று அவளிடம் சொல்லி விட்டுப் போனவர்கள், சில நிமிடங்களிலேயே தயாராகி வந்தனர். 

 

அவர்கள் மூவரும் சேர்ந்து விடுதியின் மெஸ்ஸிற்குப் போய்,”டீ, காபி ஏதாவது கிடைக்குமா?” என்று வினவினர். 

 

“ரெண்டுமே கிடைக்கும். எப்பவும் காலையில் ஏழு மணிக்கு இங்கே வந்துருங்க. அதே மாதிரி சாயந்தரம் அஞ்சு மணிக்கு வாங்க. அது கூடப் பிஸ்கெட்டும் கொடுப்போம்” என்று அங்கு பொறுப்பில் இருக்கும் பெண்மணி கூறி, அவர்களுக்குப் பிடித்தமான பானங்கள் நிறைந்த கோப்பைகளைக் கொடுக்கவும், 

 

“தாங்க்ஸ் மேம்” என்று அவற்றை வாங்கிக் கொண்டு பெஞ்சில் போய் அமர்ந்து பேசிக் கொண்டே குடிக்கத் தொடங்கினர். 

 

சௌமியா,“நாங்க இன்னும் எங்க வீட்டுக்குக் கால் பண்ணிப் பேசவே இல்லை. மெசேஜ் மட்டும் தான் அனுப்பினோம். இதைக் குடிச்சிட்டு ரூமுக்குப் போய்ப் பேசனும்” என்க, 

 

“நமக்கு எப்போ கிளாஸஸ் நடக்க ஆரம்பிக்கும்ன்னு தெரியுமா?” என்றாள் பிரஹாசினி. 

 

“ஊஹூம். அதைப் பத்தி எதுவுமே சொல்லலை. எல்லாருக்கும் சேர்த்து ஒரே நாளில் சொல்லுவாங்க போல” எனக் கூறினாள் அனிகா.

 

“அப்படியும் இருக்கலாம்” என்று முடித்துக் கொண்டுத் தங்கள் பானத்தைப் பருகி முடித்தவுடன் அறைக்குத் திரும்பினர்.

 

அப்போது, தனது கைப்பேசியின் ஒலி எழுப்பவும், அதை எடுத்துப் பார்த்த பிரஹாசினியோ,”ஹைய் அண்ணா கூப்பிட்றார்” என்று மகிழ்ந்தவள், 

 

அந்த அழைப்பை ஏற்று,”ஹலோ நீருண்ணா” என்று உற்சாகமாகப் பேசினாள்.

 

“ஹாய் பிரஹாம்மா! நைட் நல்லா தூங்கினியா? இப்போ டீ குடிச்சியா? அங்கே எல்லாம் வசதியாக இருக்கா?” என்று அவளிடம் கேள்விகளை அடுக்கினான் தமையன்.

 

“நான் நல்லா தூங்கினேன், டீ குடிச்சிட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். எனக்கு இங்கே எல்லாமே வசதியாக இருக்கு அண்ணா” என்று அவனுக்குப் பதிலளித்தாள் பிரஹாசினி. 

 

நீரஜ்,“சரிம்மா. காலையில் எழுந்ததுமே நீ அங்கே இருக்கிறதை மறந்துட்டு ‘பிரஹா எழுந்துட்டாளான்னு?’ அம்மா கிட்ட கேட்டுட்டு இருந்தேன். அதான் மனசுக் கேட்காமல் உனக்குக் கால் பண்ணேன்டா”  

 

“நானும் உங்ககிட்ட பேசனும்னு நினைச்சேன். நீங்க எப்போ எழுந்திருப்பீங்கன்னு காத்துட்டு இருந்தேன். நல்லவேளை நீங்களே கால் செஞ்சிட்டீங்க. தேங்க்ஸ்ண்ணா” 

 

“ஹேய் பிரஹா. நீ இப்படி பேசினால் அப்பறம் நான் எமோஷனல் ஆஹ் ஆகிடுவேன்” என்று நெகிழ்வுடன் கூறினான். 

 

“சாரிண்ணா” 

 

“பரவாயில்லை. நான் போய்க் காலேஜூக்குக் கிளம்பறேன். டேக் கேர்” என்றுரைத்து விட்டு வைத்தான் நீரஜ்.

 

அவனிடம் பேசிய பிறகு தான், தன் மனம் இலகுவாகி விட்டதை உணர்ந்தாள். 

 

அதன் பின், திங்களில் இருந்து கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும் என்பதை அறிவித்து விட்டதால், அதைத் தன் வீட்டாரிடம் தெரிவித்து விட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள் பிரஹாசினி. 

 

        - தொடரும்

 

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 3 weeks ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page