About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நாணல்-18
இளநீல புடவையில் அளவான அலங்காரங்களோடு தயாரானவள் அருகே அர்ச்சனா, அம்பிகா, விஜயலட்சுமி, தடாதகை, அங்கையர்கண்ணி, திலகா ஆகியோர் சூழ்ந்திருந்தனர்.
படபடப்போடு அமர்ந்திருந்த பொற்றாமரையாளைப் பார்த்து சிரித்த அம்பிகா, “அம்மாடி கண்ணு.. ஒன்னுமில்ல தாயி.. எதுக்கு இப்ப இப்படி வேர்த்து கொட்டுதாக்கும்?” என்க,
அவளுக்கு பதில் கூறத் தெரியவில்லை! அதன் காரணம் வெட்கமோ? தயக்கமோ? அவளே அறியாள்.
மூத்த பெண்மணிகள் மாறி மாறி அவளை சாந்தப்படுத்துகின்றேன் என அறிவுரைகள் கூற, அது அவள் படபடப்பை இன்னுமே தான் ஏற்றியது!
“அத்தை அத்தை.. நீங்க இம்பூட்டு சொல்லுறதுலயே சித்திக்கு பயமாயிடபோவுது.. நீங்கெல்லாரும் போங்க. நானும் அங்கையும் இருக்கோமாட்டிக்கு. நல்ல நேரமா பாத்து உள்ள அனுப்பி வைக்குதோம்” என்று திலகா கூற,
அதில் சிரித்துக் கொண்டோரும் தாமரையாள் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்து மனமார வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
கைகளை பிசைந்துகொண்டே அமர்ந்திருப்பவளைக் கண்டு சிரித்த அங்கை, “சித்தி.. எதாவது சந்தேகமுன்னா நம்ம திலகா அக்காட்ட கேளுங்க.. என்னையவிட அவுகளுக்குதேன் எக்ஸ்பீரியன்ஸ் சாஸ்தியா இருக்குமாட்டிக்கு” என்று கூற, திலகா அவளை செல்லமாய் முறைத்தாள்.
அதில் தாமரையாள் சிரித்துவிட, “ஒன்னுமில்ல சித்தி.. பதட்டபடாது போ..” என்று வேறு ஏதும் பேசி அவளை சங்கடப்படுத்தாது அவள் சிந்தையை வேறுபுறம் திருப்பி பேச்சுக் கொடுத்தனர்.
பெரியோர் குறித்த நல்ல நேரம் நெருங்கவும், கையில் பால் செம்பை கொடுத்து பெண்கள் இருவரும் அவளை அவளறைக்கு அழைத்துச் சென்றனர்.
வாசல்வரை சென்ற பெண்கள் அவளை அணைத்து வாழ்த்திவிட்டுச் செல்ல, இத்தனை நாட்கள் தனதறையாய் இருந்த அறை, தங்களறையாக மாறிய பூரிப்போடும் படபடப்போடும் உள்ளே சென்றாள்.
அங்கு அவளுக்கும் மேலான பதட்டத்தோடு கட்டிலை சுற்றி சுற்றி நடை பயின்று கொண்டே நகமற்ற விரல்களைக் கடித்துக் கொண்டிருக்கும் தன்னவனைக் கண்டதும் அவளுக்கிருந்த பதட்டம் பாதியாய் குறைந்த உணர்வு!
அவள் கதவடைக்கும் சத்தத்தில் திரும்பியவன் அவள் எழிலில் எப்போதும்போல் சொக்கி மீள, பால் செம்பை அவனிடம் கொடுத்தாள்.
சின்ன சிரிப்போடு அதை வாங்கியவன் மேஜையில் வைக்கவேண்டி திரும்புவதற்குள் அவன் பாதம் பணிந்து வணங்கினாள்.
“ஏ..” என பதறியவன், “என்னம்மா?” என்க, “இல்ல.. கால்ல விழுந்து கும்மிடனும்ல?” என்று அவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் அவள் தலையில் கரம் வைத்து, “நல்லா இருப்ப. எழுந்திரி” என்க, தானும் சிரித்துக்கொண்டே எழுந்தாள்.
செம்பை மேஜையில் வைத்துவிட்டு அவன் அமர, அவளும் அவனருகே சென்று அமர்ந்தாள். முதலில் யார் பேசுவது? என்ன பேசுவதென்று இருவருக்குமே விளங்கவில்லை!
தன் தொண்டையை செறுமிக் கொண்டவன், “ய..யாழ்” என்க,
“ம்ம்..” என்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன், “நெர்வஸா இருக்கா?” என்று கேட்க,
ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள், “ம்ம்..” என்றாள்.
“எ..எனக்கும்” என்று அவன் கூறவும், பாவை அவனை நோக்க, “அ..அது.. நான்..” எனத் தடுமாறினான்.
அவன் கரத்தின் மேல் தயக்கத்தோடு தன் கரம் வைத்தவள், “புரியுதுங்க.. பொண்ணுங்களுக்கு தான் தயக்கமிருக்கனுமா என்ன? பசங்களுக்கும் இ..இது நினைச்சு தயக்கம் இருக்கும்..” என அவனைப் புரிந்தவளாய் அவள் கூற,
மெல்லிய சிரிப்போடு “டயர்டா இருக்குடா” என்றான்.
“எனக்கும்..” என அவள் கூற,
“தூங்கலாமா?” என்றான்.
மெல்ல சிரித்துக் கொண்டவள் சரியெனத் தலையசைக்க, அந்த பெரும் கட்டிலில் இருவரும் படுத்துக் கொண்டனர்.
படுத்தவர்களை அந்த மெத்தை உள்வாங்கிக் கொள்ள, அதில் ஒட்டியிருக்கும் தன்னவளின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி படுத்தவன், “உனக்கு மேல கை போடுற பழக்கமிருக்கா?” எனக் கேட்டான்.
எதற்கிந்த கேள்வியென புரியாது விழித்தவள், “தலவாணி வச்சு படுத்துக்குவேனுங்க” என்று கூற,
“என்மேல கைபோட்டு படுத்துக்குறியா?” என்று அவள் புறம் திரும்பி ஆசையாகக் கேட்டான். அவன் முகத்தில் பொம்மை வாங்கித் தருகிறாயா? என்று கேட்கும் சிறு பிள்ளையின் சாயல்!
அவனையே விழிவிரித்து புரியாமல் பார்த்தவளைக் கண்டவன், “உனக்கு ஓக்கேனா.. என்மேல கைபோட்டு படுத்துக்கோ” என்று கூற,
மெல்லிய புன்னகை அவளிடம்.
மெல்ல அவனை நேருங்கியவள் அன்மீது கையிட்டுப் படுக்க, தானும் அவள்மேல் பட்டும் படாது கைபோட்டுக்கொண்டவன், “இப்படி படுக்கனும்னு ரொம்ப ஆசை” என்று மெல்லிய குரலில் கூறினான்.
பாவை அவனை நிமிர்ந்து பார்க்கவும், கண்களில் பளபளத்த நீருடன், “தேங்ஸ்” என்று அவன் கூற, நெகிழ்வான தருணத்தை தனதாக்கிக் கொண்டவள் மெல்ல எம்பி, அவன் நெற்றியில் நாணம் உடைத்து முத்தமிட்டாள்.
அதில் அவன் விழியில் பளபளத்த மின்னல்கள் கன்னங்களில் இறங்க, அதை துடைத்துவிட்டவளாய் அவன்மீது கையிட்ட கரத்தின் இறுக்கம் கூட்டி அணைத்துக் கொண்டு உறங்கினாள்.
அந்த இரவு அத்தனை ரம்மியமான, நிம்மதியான உறக்கத்தை இருவருக்குமே அளித்தது!
அடுத்த மூன்று நாட்களில் தாமரையாளுக்கு சீரென்ற பெயரில் பலதும் வாங்கி குவித்திருந்த அவள் அண்ணன்மார்கள், அவர்களை நல்ல நாள் பார்த்து அவனது வீட்டில் குடியமர்த்த தயார் செய்தனர்.
“யாழ்.. நம்ம வீட்ல இத்தனைக்கும் இடம் பத்துமா?” என்று ஆதி விழி பிதுங்கி, தயக்கத்தோடு வினவ,
அவனது கூற்றிலிருந்த ‘நம்ம வீடு' என்ற சொல்லே அவளுக்கு ஜிவ்வென்ற உணர்வைக் கொடுத்தது!
“நான் பத்து பதினஞ்சு தடவ அங்க வந்து தங்கிருந்துருக்கேன் பாருங்க.. எங்கிட்ட கேட்டா நாநென்னத்த சொல்ல? உங்களுக்குதேன் தெரியும்” என்று அவள் கூற,
“அந்த கட்டில் சத்தியமா உள்ளயே போகாதுடி” என்று கூறினான்.
அதை கூறவே அவனுக்கு சங்கடமாக இருப்பதை அவள் உணர்ந்தாள்.
அவன் கரத்தின் மேல் தன் கரம் வைத்தவள், “எது எது கொண்டு போக முடியுமோ அதை மட்டும் சொல்லுங்க. எடுத்துப்போம். எல்லாமே வேணாமுன்னு என்னால சொல்ல முடியாதுங்களே” என்று கூற, அவளது நிலையும் அவனுக்குப் புரிந்தது.
பிறந்த வீட்டு சீர் என்பது ஒரு பெண்ணிற்கு எத்தகைய உரிமை மிக்கது! அதிலும் பாதியை தனக்காக அவள் வேண்டாமென்பதே அவனுக்கு வருத்தமாக இருந்தது.
அவன் ஏதோ பேச வர, “நானேதும் நினைக்கலைங்க. நாமதேன் ஒன்னுபோல சம்பாதிச்சு சொந்தமா வீடு வாங்குவோமே? அப்பத பெரிய வீடா வாங்கி இதெல்லாம் வச்சுகிடலாம்” என்று அவள் கூறினாள்.
அதில் மென்மையாய் புன்னகைத்தவன், “பீரோ எடுத்துக்கோ. கட்டில் மட்டும் வோணாம். பாத்திரம் அங்கயே இருக்கு. ஆனா இதுபோல அதென்டிக் வெசல்ஸ் எதுவும் என்கிட்ட கிடையாது. இதெல்லாம் எடுத்துக்கோ. பட் ப்ளீஸ் மூத்த மச்சான் கார் வாங்கி தரேன்னு சொல்றதை மட்டும் வேணாம் சொல்லிடு. கட்டில் உள்ள போகாது. அதனால தான் வேணாம் சொல்றேன்மா.. சாரி” என்று அவன் கூற,
“ப்பா.. என்னதிது சாரியெல்லாம்?” என்று முறைத்தவள் எழுந்து சென்றாள்.
தன் அண்ணிகளிடம் சென்றவள் எடுத்துப் பேசி, அவன் கோட்டுக்கொண்டதைப்போல் அந்த மகிழுந்து வாங்கும் திட்டத்தையும் கைவிட வைத்திருந்தாள்.
அவனுக்கு அவள் வீட்டிலிருந்து சீர் வாங்குவது கௌரவக் குறைஞ்சலாகவெல்லாம் இல்லை… ஆனால் சிலவற்றை வாங்குவதில் அவனுக்கென்று சில கனவுகள் உள்ளன… அதை தன்னவள் எப்படி ஏற்றுக்கொள்வாளோ? என்ற அவன் தயக்கத்தை முற்றுமாக உடைத்து, அவனது ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாள்.
அதன்படி அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது! கண்களில் நீர் தேங்க அனைவரையும் கட்டியணைத்தவளுக்கு மனதில் ரணமெல்லாம் இல்லை. யாரையும் பிரிந்து செல்லும் வேதனையெல்லாம் இல்லை.. இருந்தாலும்கூட பிறந்ததிலிருந்து வாழ்ந்த வீட்டின் வாசம் துறந்து, இப்படியான கூட்டிலிருந்து செல்ல இனித்திடுமா?
“ஐத்த.. அடிக்கடி வருவ தானே?” என்று காயத்திரி கண்ணீரோடு கேட்க,
“வராம எங்கட்டி போவேன்?” என்று அவள் கன்னம் தட்டினாள்.
செழிலன் பொழிலன் இருவருமாய் அவளை அணைத்துக் கொண்டு, “வில் மிஸ் யூ அத்த” என்று ஒன்றுபோல் கூற,
அவர்கள் தலையைக் கோதிக் கொடுத்தவள், “நெலத்தெல்லாம் ஒழுங்கா பாத்துகிடுங்கடே.. ஐத்தையில்லையினு விளைச்சலுல பங்கில்லாது போச்சு.. பிச்சுபோடுவேனாக்கும்” என்று கூறினாள்.
“உனக்கில்லாம இந்த வீட்டுக்குனு ஒரு துரும்பையும் ஒதுக்க மாட்டோமத்த” என்று இருவரும் கூற,
ஆருத்ரனும் வேந்தனும் அவளை அணைத்து வாழ்த்தினர்.
துர்காவும் சங்கரனும் அவளை அணைத்துக் கொண்டு தங்கள் பிரியா விடையை வெளிப்படுத்த, குழந்தைகளுக்கு முத்தம் பதித்து தன் அன்பை பரிமாறினாள்.
திலகா அவள் கரம் பற்றி தன் வாழ்த்துக்களைக் கூற, கலங்கிய அவள் கண்கள் துடைத்தவள் அங்கையை தேடினாள்.
தன்னவனோடு ஒன்றி நின்ற அங்கை கண்ணீரை வெகு பிரயத்தனப்பட்டு அடக்கினாள். அவ்வீட்டில் அங்கை வெகுவாக ஒன்றி பழகுவது தாமரையாளிடம் தானே? ஆருத்ரன் மனையாளை தோளோடு அணைத்தபடி தாமரையாளிடம் கூட்டிவர, “சித்திக்கு டாட்டா பையெல்லாம் சொல்லமாட்டியாக்கும்?” என்று அவள் நாடி பற்றி கேட்டாள்.
“சித்தீ..” என்று அழுதவள் தாமரையாளை அணைத்துக் கொள்ள, தாமரையாளும் அவள் கண்ணீரில் அழுது விட்டாள்.
“அங்கை.. என்னதிது? கிளம்புற நேரம் பிள்ளைய அழவிட்டுகிட்டு?” என்று அர்ச்சனா கடிய,
முகம் வாடிய அங்கையின் கன்னம் பற்றியவள், “நெதம் பேசுறேனடி.. அழுது வடியாது வெரசா படிச்சு முடி.. சரியா?” என்று கூறினாள்.
பெரியோரிடமும் கூறிக் கொண்டவள் அம்மாபெரும் மாளிகையை விட்டு கலக்கமாய் வெளியே வந்தாள்.
அதிவீர பாண்டியர், அர்ச்சனா மற்றும் அக்னி மட்டும் அவர்களோடு சேர்ந்தே வர, தன்னவள் கரம் பற்றியவன் அவளைக் கலக்கமாய் பார்த்து, “அடிக்கடி கூட்டிட்டு வரேன் யாழ். உனக்கு எப்பெல்லாம் பாக்கனும்னு தோனுதோ அப்பெல்லாம் வருவோம்” என்று கூற, புன்னகையோடு அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அதோ இதோவென அவன் இல்லம் வந்திட, அர்ச்சனாவே முதலில் உள்ளே சென்று ஆலம் சுற்றி இருவரையும் வரவேற்றனர்.
அளவான இரு படுக்கையறை, கூடம், ஒரு சமையலறை கொண்ட வீடு அது! பேசுலர்ஸ் வீடு என்று சொல்லுவதற்கான அடையாளமேயின்றி வீடு நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருப்பதை கண்டு அனைவருமே அதிசயித்துப் போயினர்.
“மச்சான்.. வீட்டை க்ளீன் பண்ண ஆள் யாரும் வச்சிருந்தியா?” என்று அக்னி கேட்க,
“அதுசரி.. அதுக்கு யாருடா தனியா செலவு செய்ய? நானே தான் க்ளீன் பண்ணுவேன்” என்றான்.
“பயங்கர பொறுப்பான ஆளா தான் இருப்ப போலயே” என்று அக்னி கூற, அதற்கு பதிலாய் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.
அனைவருமாக குளித்து காலை உணவை உண்டு முடிய, அர்ச்சனாவும் தாமரையாளும் சேர்ந்து, கொண்டு வந்த பொருட்களை அடுக்கத் துவங்கினர்.
“அக்கா.. கொஞ்சம் போய் ரெஸ்ட் எடுங்க. இப்பதானே வந்திருக்கோம்? நானும் யாழும் சேர்ந்து கூட பிறகு அடுக்கிக்கிரோம்” என்று அவன் கூற,
“இருக்கட்டுமுங்க தம்பி.. கையோட முடிச்சுகிட்டா பிள்ளைக்கு வசதிப்படுமில்ல” என்று கூறினார்.
சிரித்தபடி தானும் வந்தவன், “அப்பனா நானும் வரேன். இங்க யாழை வேலைப்பாக்க மட்டுமே நான் கூட்டிட்டு வரலை. அவ ஒரு காரியம் செஞ்சா நான் ஒன்னு செய்யுவேன். அதனால எங்கெங்க எதெது இருக்குனு நானும் தெரிஞ்சுக்கனுமே” என்று கூற, தன்னவனைக் காதலாய் பார்த்து புன்னகைத்தாள்.
“அட என்ன தம்பி?” என்று கேட்டபோதும் கூட அர்ச்சனாவின் மனம் குளிர்ந்தது உண்மையே!
“டேய்.. என்னடா? எங்கம்மை எவ்வழியோ? நீயும் அவ்வழியேனு இங்க வந்துட்டியா?” என்று கேலி செய்தபடி அக்னி வர,
“இல்லைடா.. பொருளெல்லாம் அடுக்க உதவலாம்னு வந்தேன்” என்றான்.
அனைத்தையும் அடுக்கி, இருந்து அவர்களுக்கான வசதிகள் செய்துவிட்டு மூவரும் புறப்பட்டுவிட, இப்போது இருவர் மட்டுமே அவ்விடம் இருக்கும்படி ஆனது!
கல்லூரியில் படித்தபோதும் சரி, வீட்டில் இருக்கும்போதும் சரி கூட்டத்துடனே இருந்து பழகியவளுக்கு அவ்வீட்டின் அமைதி சற்று ஆயாசமாகத்தான் இருந்தது!
“யாழ்..” என்று அவளுக்கான தேநீருடன் வந்து அமர்ந்தவன், அவளிடம் அதைக் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிப் பருகினாள்.
“ரொம்ப அமைதியா இருக்காமா?” என்று அவன் வினவ,
தயக்கத்துடன் இமைகள் சிறகடித்தபோதும் மனதில் இருந்ததை அவனிடம் பகிறவே செய்தாள்!
“சாரிடி..” என்று அவள் கரம் பற்றியவன், “நீயும் வேலை ஜாயின் பண்றதுனா பண்ணிக்கோ யாழ். நான் வர்க் போயிட்டா தனியா இருக்கனுமே” என்று கூற,
“ம்ம்.. பாக்கனும்ங்க” என்றாள்.
அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், “இன்னும் ஒருவாரம் தான் பாக்கி இருக்கு லீவு” என்று கூற,
என்ன கூற வருகிறாய் என்பதைப்போல் அவனைப் பார்த்தாள்.
“அ..அது..” என்று தயங்கியவன், தன் தொண்டையை செறுமி, “ஹனிமூன் போக டிக்கெட்ஸ் புக் பண்ணிருக்கேன்” என்க,
அவனை ஆச்சரியமாய் பார்த்தவள், “இது எப்ப? எங்க போறோம்?” என்று சந்தோஷமாய் கேட்டாள்.
அவள் கண்ணிலும் வண்ண வண்ண கனவுகள் மின்னுவதைக் கண்டவன், “அது சர்ப்ரைஸ்” என்று கூறி அவள் முன்னுச்சி கேசத்தை ஒதுக்கிவிட,
“சீனியர்? ஹனிமூனெல்லாம் எதுக்காம்? அதான் ஏதும் நடக்கப்போறதில்லயே?” என்று நக்கலாகக் கூறி அவனை கேலி செய்தாள்.
“ஆஹாங்? எதுக்குனு அங்கப் போவுமுல்ல? அப்பத பாருங்க பொஞ்சாதி” என்று பதிலுக்கு கேலி செய்தவனாய் அவள் வெற்றிடையில் கையிட்டு தன்னோடு நெறுக்கிக் கொள்ள, அதில் திடுக்கிட்டுப் போனவள், “அய்யோ டி..டீ.. கொட்டிடப்போவுது” என்று தடுமாறினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “யாரோ இப்ப என்னை கேலி செஞ்சாங்க” என்றபடி நகர, சடுதியில் நாணச்சிவப்புப் பூசிய கன்னங்களை மறைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டாள்.
“சரி அதெல்லாம் இருக்கடுமாட்டிக்கு.. ஹனிமூனுக்கு எங்கன போறோம்?” என்று அவள் கேட்டபடி அவன் பின்னே வர,
“அதை அங்க போய் தெரிஞ்சுக்கோ” என்று கூறிவிட்டுச் சென்றான்.
-தொடரும்...
எங்க ஹனிமூன் போவாய்ங்கனு யாராது கெஸ் பண்ணி சொல்லுங்க பாப்போம்😉
நாணல்-19
தன்னவனை முறைத்துக் கொண்டே அந்த மாபெரும் கூட்டத்தில் நின்றிருந்தாள், பொற்றாமரையாள்.
'சும்மா கல்யாணம் ஆயிருக்கு போலாமுன்னு கூப்பிட்டா வேணாம்னா சொல்லப்போதேன்? எதுக்கு ஹனிமூனு, சர்ப்ரைஸு, அது இதுனு ஆசைய காட்டிபோட்டு இங்கன கூட்டியாரனும்? சாமி கண்ண குத்தப்போவுது பாரு' என்று மனதோடு முனுமுனுப்பவள் எண்ணமெல்லாம் அவள் முகமே அவனுக்குக் காட்டிக் கொடுத்தது!
அப்படி அவன் கூட்டி வந்திருப்பது அந்திரா மாநிலம்… திருப்பதி ஏழுமலையான் கோவில்!
அவளை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்த ஆதி, “யாழ்மா.. கோவில்ல வந்து முகத்தை சிடுசிடுனு வைச்சா சாமி என்ன நினைக்கும்?” என்று வினவ,
“என்னத்த நினைக்கும்? உங்களை பத்தி நெனப்பதவிட கம்மியாதேன் நினைக்கும்” என்று நொடித்துக் கொண்டாள்.
அதில் இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவன் எப்படியோ மணிக்கணக்காய் கால்நோக நின்று அவளுடன் அந்த ஏழுமலையானை தரிசித்தான். அத்தனை நேரம் கால்கடுக்க நின்றதெல்லாம் பரந்தாமன் முகம் கண்ட நொடி, அந்த பக்தி சிகாமணிகளுக்கு பஞ்சாய் பறத்து போனது! மனமுருகி தங்கள் வாழ்வு சிறக்க வேண்டிக் கொண்டு இருவரும் வர, அவளைக் கூட்டிக் கொண்டு மதிய உணவு உண்ணச் சென்றான்.
உண்டு முடித்ததுமே கீழே லாக்கரில் கொடுத்து வைத்திருந்த தங்கள் உடைமைகளை வாங்கியவன் மீண்டும் அவளைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டிருந்தான்.
தங்களுக்கான இருக்கையை பிடித்துக் கொண்டு அவளுடன் ரயிலில் அமர்ந்தவன் “இனி அடுத்த நாள் காலைல வரை டிராவல் தான் யாழ்மா..” என்க,
“திரும்ப கோவை போக எதுக்கு அத்தனை நேரம்?” என்று புரியாமல் கேட்டாள்.
“கோவை போகப்போறோமனுனு நான் சொல்லவே இல்லையே?” என்று அவன் குறும்பாய் சிரிக்க,
“ஏன்? காசி, ராமேஷ்வரம் எங்கேயும் போகப்போறோமா? ஆனாப்பா.. நாஞ்(ன்) செத்தாலும் இதை மறக்க மாட்டேனாக்கும்.. நாளபின்ன பெறக்கப்போற பிள்ளையளுக்கு உங்கப்பன் ஹனிமூனுக்குனு எங்கன கூட்டிகிட்டு போனான் பாருனு இப்ப எடுத்து போட்டோவெல்லாம் காட்டி சொல்லுதேனா இல்லையானு பாருங்க” என்று மரியாதையெல்லாம் காற்றில் பறக்க பேசினாள்.
அதில் அட்டகாசமாய் சிரித்தவன், “சாமி கும்பிட்டது நிறைவா இருந்துச்சா இல்லையா?” என்க,
“இல்லைனு சொல்லவேயில்லை. கோவிலுக்கு தான் போறோமுன்னு சொல்லியே கூட்டியாந்துருக்கலாமேனுதேன் சொல்லுதேன் சீனியர்” என்று கூறினாள்.
அவள் தோளை சுற்றி கரமிட்டவன், அவள் காதோரம் குனிந்து, “நாந்தேன் சொல்றேன்ல.. ஹனிமூன் தான் கூட்டிவந்துருக்கேனாட்டு.. சாமி கும்பிட்டு மங்களகரமா ஆரமிப்போமேனு கோவிலுக்கு கூட்டிப்போனேன் தாயி” என்று கூற,
“ம்க்கும்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கிட்டதட்ட பதினைந்து மணிநேரப் பயணம் என்பதால் பயணத்தை அழகாக்கவென்றே அழகழகான வாழ்வைத் தாங்கிய புத்தகங்களை வாங்கியிருந்தான்.
கோபமாக முகத்தைத் திருப்பிக் கொள்வது போன்ற பாவனையுடன் புத்தகத்தை வாங்கிக் கொண்டவள் சில நிமிடங்களில், “ஏங்க.. இந்த லைன் பாருங்களேன்.. எவ்வளவு அழகா எழுதிருக்காகல?” “ஏங்க இதை பாருங்களேன்.. எவ்வளவு பெரிய வெடயத்தை சாதாரணமா சொல்லிட்டாகல?” என்று அவனோடு ஒன்றி அமர்ந்து குதூகலிக்கத் துவங்கியிருந்தாள்.
சில நிமிடங்களில், “யாரோ என்மேல கோவமா இருந்தாங்க?” என்று அவன் கேலி செய்ய, முறைக்க முயன்றும் சிரித்து விட்டாள்.
அதன்பிறகு ஒன்றாக புத்தகம் படிப்பது, அதுபற்றி விமர்சிப்பது, பாடல் கேட்பது, ஒருவர் தோளில் மற்றவர் சாய்ந்து உறங்குவதென நேரம் ரம்மியமாய் ஓடியது!
இரவு வரவும் இருவரும் எதிரெதிரே படுத்துக்கொள்ள, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் மெல்லிய குளிருக்கு இதமாய் தன்னை யாரோ அணைப்பதைப் போன்று உணர்ந்தாள்.
முதலில் அதில் கட்டுண்டு படுத்தவள் பின் பதறி எழ, “ஏ.. யாழ்.. நான் தான்..” என்று ஆதி அவளை ஆசுவாசப்படுத்தினான்.
“இறங்கனும்டா.. அதான் எழுப்ப வந்தேன்” என்று அவன் கூற,
“எழுப்ப வந்தபோல இல்லியே” என்று கூறினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், தங்கள் பொதிகளை எடுக்க, ஆளுக்கு பாதியாய் சுமந்துக்கொண்டு இருவரும் இறங்கினர்.
அதிகாலை நான்கரை மணியளவில் விஷாகப்பட்டினத்தின் குளிர் இருவரையும் ஊசியாய் குத்தியது!
“ஸ்வெட்டர் எடுக்கவாமா?” என்று அவன் வினவ,
“இல்லபா.. பாத்துக்கலாம் வாங்க” என்றாள்.
விரைவே ஒரு வண்டியைப் பிடித்தவன் தாங்கள் தங்கவிருக்கும் விடுதியைப் பற்றிக் கூற, வெளியே வேடிக்கைப் பார்த்தபடி சென்றனர்.
விடுதி வந்திடவே தங்களுக்காக பதிவு செய்திருந்த அறைக்குள் வந்தனர். அசதியும் குளிரும் சேர்ந்து தட்டிய தூக்கத்தில் கட்டிலில் சென்று பொத்தென விழுந்தாள்.
அவளைக் கண்டு புன்னகைத்தவன் சென்று புத்துணர்ச்சி பெற்று வந்து அவளருகே அவளை அணைத்தபடி படுத்தான்.
“ஜில்லுனு இங்கீங்க.. கைய துடைச்சுட்டு வரக்கூடாதா?” என்று அவள் தூக்கத்தோடு முனக, “ம்ஹும்?” என்றபடி அவள் வெற்றிடையில் தன் ஈரக்கரம் பதித்தான்.
அதன் குளிரில் துள்ளி எழுந்தவள், “யோ.. அறிவிருக்கா?” என்று கத்திவிட, அதில் வாய்விட்டு சிரித்தவன், “அவ்ளோ ஜில்லுனா இருக்கு?” என்றான்.
“தூங்க விடுங்க சீனியர்” என்றவள் அவன் மார்போடு ஒன்ற,
“தூங்குறதுக்காடி ஹனிமூன் வந்த?” என்றான்.
கேட்டபோதும் கூட அவள் தலையை கோதிக் கொடுத்தவன் அவளோடு சேர்ந்து சில நிமிடங்கள் கண்ணயர, சில மணி நேரங்களுக்குப் பின் இருவரும் கண்விழித்தனர்.
“எங்க வந்துருக்கோம்?” என்று அவள் கேட்க,
“விஷாகப்பட்டினம்” என்றான்.
விழிகள் விரிய அவனை நோக்கியவள், “எதுக்குப்பா இவ்ளோ தூரம்?” என்றபடி அவனை நெருங்கி, “எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டாள்.
அவள் முகம் பற்றியவன், “ஹனிமூன் என்ன மாசா மாசமா வரப்போறோம்? உனக்கு கொடுக்கும் அனுபவத்தில் எந்த குறையும் வைக்கக்கூடாதுனு நினைக்குறேன்டி” என்று கூற,
தன் கன்னம் தாங்கிய அவன் கரத்தின் மேல் தன் கரம் வைத்தவள், “நீங்க எங்கேயுமே கூட்டிட்டு போகலைனா கூட அதை குறையா நெனக்க மாட்டேங்க. தூரமா கூட்டிகிட்டு வந்தாதேன் சந்தோஷம்முனு நினைக்காதீக.. இந்த ட்ரிப்புக்கான செலவெல்லாம் ஊருக்குப் போனதும் எனக்கு லிஸ்ட் போட்டு சொல்லுங்க. நீங்க வாங்குற சம்பளத்துல எனக்கும் பங்கிருக்குது. வரவு செலவு எனக்கும் தெரியனும். அப்றம் நம்ம வீடு கட்டுற கனவு நெனவிருக்கட்டும்” என்று மென்மையாய் ஆரம்பித்து அதட்டலாய் முடிக்க,
அவள் நெற்றி முற்றி நின்றவன், “சரிங்க மகாராணி” என்றான்.
அந்த மோன நிலையில் இருவரும் அமர்ந்திருக்க, பின் நேரமாவதை உணர்ந்து குளிக்க எழுந்து சென்றாள்.
இருவரும் தயாராகி வர, அவளைக் கூட்டிக் கொண்டு காலை உணவை முடித்துவிட்டுப் புறப்பட்டான். இருவருமாய் குட்டி குட்டியாய் பச்சை நிற குப்பிகளை அடுக்கிவைத்தார் போன்று இருந்த அரக்கு பள்ளத்தாக்கிற்கு வந்திருந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற சுற்றுப்புறத்தோடு, சில்லென்ற காற்று மேனியில் மெத்தென்று மோதி செல்ல, காற்றோடு மிதந்து வந்த குளம்பிக் கெட்டையின் வாசம் அவர்கள் நுரையீரலெங்கும் நிறைந்தது!
“ஏ.. செம்மயா இருக்குப்பா” என்று ஆச்சரியம் மின்னும் விழிகளோடு அவள் கூற,
“ட்ரெயின் பயணத்துக்கு ரெடியா?” என்றான்.
“ட்ரெயினா?” என்று தாமரையாள் அவனைப் புரியாது நோக்க,
அவள் கரம் பற்றி அழைத்து வந்தவன் அந்த ரெயிலில் ஏறி, ஜன்னலோரமாய் அவளோடு அமர்ந்தான்.
அந்த மலையையும், பள்ளத்தாக்குகளையும், அருவிகளையும், குகைகளையும் ரயிலில் அமர்ந்தபடி பார்வையிடுவதற்கு சொர்கத்தில் சுற்றுலா செல்வதைப் போன்றுதான் இருந்தது!
அத்தனை அழகான இயற்கையின் படைப்புகள் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் ஜோடி கண்கள் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும்!
“அழகாருக்குங்க.. அந்த அருவியை கடந்து வந்த இடம் ரொம்ப அழகாருந்தது” என்று விழிகள் விரிய கூறியவளைக் கண்டு புன்னகைத்தவன், “எனக்கு குகைக்குள்ள போறதுதான் புடிச்சிருந்தது” என்றான்.
மொத்த இடத்தையும் சுற்றிப்பார்த்து ரசித்துவிட்டு, மதிய உணவை முடித்துக் கொண்டோர் அங்குள்ள ‘காஃபி மியூசியம்' மற்றும் ‘ட்ரைபில் மியூசியம்’ சென்று பார்வையிட்டனர்.
மாலை நேரம் அங்கே அமர்ந்து காதல் பேச்சுக்களுடனான தேநீரை சுவைத்துவிட்டு இருட்டத் துவங்கிய தருவாயில் அவளைக் கூட்டிக் கொண்டு சென்றான்.
“இப்ப எங்க போறோமுங்க?” என்று அவள் வினவ,
“போனா தெரியபோதுங்க பொஞ்சாதி” என்றவன் அவள் கண்களை சிறு துணிகொண்டு மறைத்தான்.
“சீனியர்? எதுக்கு கண்ண மூடுதீக?” என்று அவள் கேட்க,
அவள் காதோரம் தன் மூச்சுக்காற்று உரச, “சர்ப்ரைஸ்” என்றான்.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தவளை இறங்கி நடக்க விட்டான்.
கால் பதியும் மணலைக் கொண்டே கண்டுகொண்டவளாய், “ஏ.. பீச்சா? இதுக்கேதுக்கு கண்ணை கட்டி கூட்டிவாரீக?” என்று அவள் வினவ,
“வாய் வலிக்காதாடி உனக்கு?” என்று சிரித்தவன் கட்டை அவிழ்த்துவிட, அப்படியே உறைந்து நின்று விட்டாள்.
கருமை பூசிய காரிருள் வேளையில் அந்த கடற்கரை நீர் இளம் நீலத்தில் மின்னியது தனித்துத் தெரிந்தது.
விஷாகப்பட்டினத்திலிருக்கும் ‘glowing beach' என்றழைக்கப்படும் ‘பீமிலி பீச்’ அது!
விசாகப்பட்டினத்தில் உள்ள பீமிலி கடற்கரை பயோலூமினெஸென்ஸ் (Bioluminescence) என்ற அரிய நிகழ்வால் இரவில் ஒளிர்கிறது. Bioluminescence என்பது ஆல்கா போன்ற உயிரினங்கள் ஒளியை வெளியிடுவது. பீமிலி கடற்கரையில், பைடோப்ளாங்டன் (phytoplankton) மற்றும் ஆல்கா டை ஆடம் நோக்டிலூகா சோரிசியம் (algal diatoms Noctiluca மற்றும் Sorecium) ஆகியவை ஒளிர்வை ஏற்படுத்துகின்றன, இது தண்ணீரை பிரகாசமான நீல நிறத்தில் ஒளிரச் செய்கிறது.
காணும் காட்சியை பிரம்மிப்போடு பார்த்தவள், “ஏங்க… அழகாருக்குங்க” என்று கூற,
“இதுக்காகதான் முக்கியமா இங்க கூட்டிட்டு வந்தேன். இந்த மினுமினுக்குற கடற்கறையில உன்னோட சேர்ந்து டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ரொம்ப ஆசைடி” என்று கூறினான்.
அவனைக் காதலாய் பார்த்தவள், அவன் கரம் கோர்த்து அக்கடலை நெருங்கினாள்.
காலில் வந்து மோதிச் சென்ற நீரின் பளபளப்பு கண்களைப் பரித்தது.
“ஏ.. மண்ணு கூட மினுமினுக்குதுங்க” என்று கூதுகளித்தவள், மணலில் இதயம் வரைந்து இருவர் பெயரையும் எழுத, புன்னகையோடு அவற்றைக் காணொளியாக்கியவன், “நமக்கு கண்ணாலமாகிடுச்சுங்க.. இன்னும் பீச்சுல பேரு வரஞ்சுகிட்டிருக்கீக” என்று கூறினான்.
“கண்ணாலமானாலும் நீங்க எனக்கு காதலரு தானுங்களே?” என்று கேட்டு கண்ணடித்தவள் மணலில் கோலமிட்டு விளையாட, அவளைக் கூட்டிக் கொண்டு கடற்கரையில் கால் நனைத்தான்.
அங்கிருந்தோரின் உதவியோடு இருவருமாய் சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, கடலில் ஓடியாடி விளையாடியதன் உபயமாய் தொப்பலாக நனைந்து மணலை உடையெங்கும் பூசிக் கொண்டிருந்தனர்.
மூச்சுவாங்க ஓடி வந்து அப்படியே கரையை ஓட்டி அமர்ந்திட்டவள், “எப்பா முடியலை” என்க, வேகமாய் வந்த அலை மொத்தென அவள்மேல் விழுந்துச் சென்றது.
அதில் வாய்விட்டு சிரித்தவன், கூந்தல் நனைந்து முகத்தில் கோலமிட அலங்கோலமாய் அமர்ந்திருப்பவள் அருகே வந்து அடுத்த அலை வரும் முன் அவளைக் கூட்டிக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.
அவள் முகத்திலுள்ள முடியை ஒதுக்கிய வண்ணம், “உன்னயாருடி அங்கயே உக்கார சொன்னது?” என்று கேட்டவனுக்கு சிரிப்பை சுத்தமாக அடக்க முடியவில்லை.
கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டபோதும் கூட அவன் மனமார சிரிப்பதைக் கண்கள் மின்ன ரசித்துப் பார்த்தாள்.
அவள் பார்வை மாற்றத்தை சில நிமிட சிரிப்புக்குப் பின்பே உணர்ந்தவன், “என்னங்க பொஞ்சாதி? முழுங்கிடுவீக போலையே?” என்று கேட்க, நாணத்துடன் தன் பார்வையை தழைத்துக் கொண்டவள் இதழ் கடித்து புன்னகையை அடக்கினாள்.
அந்த கடற்கரையில் கழித்த ஒவ்வொரு மணித்துளியும் அவர்கள் வாழ்வின் மறக்க முடியாத பெட்டகமாய் சேமிக்கப்பட்டன.
அங்கேயே ஒரு உணவகத்தில் தங்களை ஓரளவு சுத்தம் செய்துக்கொண்டு பெயருக்கு உண்டு முடித்தவர்கள் தங்கள் விடுதிக்கு புறப்பட்டனர்.
மூன்று மணி நேர பயணத்திலேயே பாதி உறங்கி எழுந்தவள், விடுதிக்கு வந்ததும் நீள்விருக்கையோடு ஐக்கியமாகியிருந்தாள்.
“நாங்குளிச்சுட்டு வரேன்.. அதுவரை தூங்கு” என்று அவள் காதோடு கிசுகிசுத்துவிட்டு சென்றவன் குளித்துவிட்டு இளகுவான உடைக்கு மாறி வர, பாவையும் எழுந்து சென்றாள்.
வெதுவெதுப்பான நீரில் காலை முதல் அலைந்ததன் களைப்பு மொத்தமும் தீர்ந்திடும்படி குளித்து முடித்தவள் வர, பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறித்துக் கொண்டிருந்தான், ஆதி.
அவன் இதழில் நிறைவான ஒரு புன்னகை!
பாவை அருகே வரவும், அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன் சற்றே நாணம் கொண்டு அவள் நெழிந்ததில் சிரித்துக் கொண்டு, “ஐம் ஃபீலிங் கம்ப்ளீட்” என்று கூற,
“அதுக்குள்ளயேவா?” என்றாள்.
ஆடவன் சிறு சிரிப்போடு அவளைக் கேள்வியாய் நோக்க,
“என்ன அதுக்குள்ள கம்ப்ளீட்டு? இப்பதேன் கண்ணாலமே ஆயிருக்குது.. இன்னும் ஒன்னுமே..” என்றவள் நாணத்தோடு தன் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு, “பிள்ளைகுட்டியெல்லாம் பெத்து முழு குடும்பமா ஆவ வேணாமா?” என்று கேட்டாள்.
அவள் கேட்காது விடுத்த வார்த்தைகளும் புரிந்தவனாய் சிரித்தவன், “நீயும் நானும் இருக்குறதே எனக்கு குடும்பம் தான்டி.. பிள்ளைகுட்டி பெத்துகிட்டா தான் குடும்பம் முழுமையடைனும்னு இல்லையே! அப்ப பிள்ளை இல்லாம இருக்குறவங்கெல்லாம் குடும்பம் இல்லைனு ஆயிடுமா?” என்று கேட்க,
இப்படியான தருணத்தில் எதற்கு இந்த மாதிரி பேச்சென்று அவள் முகம் சுருங்கியது!
சுருங்கிய அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியின், “நெருப்புனா சுட்டுடாது யாழ்மா..” என்று கூற,
“உங்க வெடயத்துல எனக்கு கங்குனாலே எரியுறதுக்கு சமானமுங்க.. தலைமுறைக்கு ஏத்தாப்ல எம்பூட்டு மாடனா பேசினாலும் நானும் சாதாரண பொண்ணுதானே?” என்று எந்த போர்வையிலும் தன்னைப் போர்த்த விரும்பாது தன்னியல்பை வெளிப்படையாய் கூறினாள்.
அதில் மெல்ல புன்னகைத்தவன், “இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தேன் யாழ்மா.. ஒவ்வொரு இடமா உன்னை கூட்டிட்டு போய், அங்க நீ எக்ஸைட் ஆறத பாக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. உன்னோட இந்த குண்டு குண்டு கண்ணு ரெண்டும் காட்டின அத்தனை உணர்வுகளும் அவ்வளவு அழகா இருந்தது. அது அத்தனையுமே எனக்கே எனக்குனு பொத்தி வச்சுக்கிட்ட உணர்வு” என்று கூற,
“எனக்குமட்டும்? பீச்சுல வச்சு நீங்க சிரிச்சப்ப மனசே நெரம்பிப்போச்சுதுங்க.. எப்போதுமே நீங்க இதே சிரிப்போடவேதேன் இருக்கனும். அதை நான் பாத்துகிட்டே இருக்கனும். அப்றம்.. உங்களுக்கு தெரியுமா? வீட்லருந்து வாரச்ச அம்பூட்டு பேரும் என்னை பத்திரமா இருந்துகிடு, சந்தோஷமா இருந்துகிடுனு சொன்னாய்ங்க.. உங்க சின்ன மச்சான் மட்டுந்தேன் என் ஆதிய சந்தோஷமா வச்சுகிடுனு சொன்னாக.. எங்கண்ணனுக்கு என்ன சொக்குப்பொடி போட்டிகளோ தெரியலையே?” என்று நாடி தட்டிக்கொண்டு யோசிப்பதைப் போல் கூறினாள்.
அதில் அட்டகாசமாய் சிரித்து, “நான் என் பொண்டாட்டிக்கே எந்த சொக்குப்பொடியும் போடலையேடி” என்றவன், “ஆனா யாழ்மா.. நிச்சயம் இந்த விஷயத்துல உனக்குதான் நன்றி சொல்லனும். அக்னி கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். உனக்கே தெரியும்.. எனக்குனு நண்பர்கள்னு யாருமே கிடையாது. நான் முதன்முதலா நட்புனு ஒரு வட்டத்தில் நுழைஞ்சது உன்னோடதான்.. அந்த நட்போட, காதல், கடமை, கணவன் மனைவி பந்தம்னு அத்தனையுமே சேர்த்து நீ எனக்கே எனக்கானு கொடுத்த.. ஆனா அக்னி? அவனுக்கு என்ன செஞ்சுட்டேன்னு என்மேல அத்தனை அக்கறையும் பாசமும் காட்டினான்னே தெரியலைடி.. ஒவ்வொரு இடத்திலும் என்னோட கம்ஃபோர்ட் ஜோனை அவன் தான் கொடுத்தான். எனக்காக யோசிச்சான்.. மனசே உருகிடுச்சு” என்று கூறியவன் கண்களில் சந்தோஷத்தின் சாட்சியமாய் கண்ணீர்த்துளிகளின் மினுமினுப்பு!
தன்னவன் கன்னத்தில் கரம் வைத்து, “அக்னி அண்ணா அப்படித்தேன்.. அண்ணா பாசம் வச்சுபுடுச்சுனா உசுரையும் கொடுக்கும்..” என்றவள், “என் செல்லத்தோட கொணத்துக்கும் மனசுக்கும் இப்படியாளுக கிடைக்காட்டிதேன் அதிசயங்க..” என்று செல்லம் கொஞ்ச,
சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டான்.
“நிஜமாவே எனக்கு வீடு கட்டனும்னு ரொம்ப ஆசை யாழ்மா.. நானு, நீ, நமக்கு கியூட்டா ரெண்டு குழந்தைங்க..” என்று அவன் கூற,
“ரெண்டு போதுமா?” என்றாள்.
“ஏன் எத்தனை பெத்துகுடுக்குறதா எண்ணம் உனக்கு?” என்று கேட்டு சிரித்தவன் பார்த்து, “இந்த சிரிப்புக்காவ எத்தனை வோணுமானாலும் பெத்து குடுப்பேனே” என்றாள்.
“போதும் போதும்.. நம்ம விருமாண்டி குடும்பத்துல அல்ரெடி எண்ணிக்கை அதிகமாதேன் இருக்குது.. நாம வரிசையா பொத்துபோட்டுகிட்டே கிடந்தா பூமி தாங்காது” என்று அவன் கூற, வாய்விட்டு சிரித்தாள்.
“எப்பப்பாரு சிரிப்பு சத்தம் நிறைஞ்சு இருக்கனும். காம்பேக்டா நமக்கு ஒரு சின்ன கார்.. நமக்கு பிடிச்ச பழைய பாட்டெல்லாம் நம்ம குட்டீஸுக்கும் போட்டுவிட்டு ரசிச்சுகிட்டே ஒவ்வொரு டிராவலும் போகனும்.. சண்டை போடனும்.. நிறையா குட்டி குட்டியா சண்டை போட்டு, நீ எதிர்ப்பார்க்காத நேரம் உன்னை கட்டிபுடிச்சு, முத்தம் குடுத்து உன்னை சமாதானம் படுத்தனும்” என்று அவன் கூற,
ஆச்சரியத்தோடு வாயில் கை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அதில் குறும்பாய் சிரித்து கண் அடித்தவன், “ஜாலியா வாழனும்டி.. உனக்கு இப்படிலாம் ஆசை இருக்கும்ல? உனக்கு ஒரு புட்டிக் ஓபன் பண்ணலாமா கொஞ்ச நாள் போனதும்?” என்று கேட்க,
மென்மையான புன்னகையோடு, “எனக்கு ஆசைங்க.. சொந்தமா புட்டிக் வைக்கனும்னு.. சொன்னா அண்ணனுங்களே வச்சு குடுத்துடுவாய்ங்க.. ஆனா எனக்கு என்னோட செலவுலயே செய்யனுமுனு ஆசை.. கொஞ்ச நாள் வேலைக்குப்போயி அனுபவம் கிடைக்கவோட்டு துவங்கலாமுன்னு எண்ணம்” என்று கூறினாள்.
“ஹ்ம்.. அப்ப அப்ப இப்படி பியூச்சர் ப்ளான் டிஸ்கஸ் பண்ணுவோம்டி..” என்று கனவுகள் மின்ன அவன் கூற,
“ம்ம்.. டிஸ்கஸ் மட்டுமே பண்ணிகிட்டு இருங்க.. வாயிதேன்” என்று அவனை கேலி செய்தாள்.
“என்ன வாயிதேன்?” என்று புரியாமல் கேட்டவனுக்கு உண்மையில் அவள் எதுகுறித்துக் கேலி செய்கிறாளென்று புரியவேயில்லை!
“அழகா ரெண்டு குட்டீஸ் வேணுமின்னு சொன்னா போதுமா?” என்று கேட்டவள் சிரிப்பும் நாணமுமாக தலையை தாழ்த்த,
ஆடவன் தானும் அழகாய் வெட்கம் கொண்டவன் அவள் நாடி பற்றி, “உனக்கு..?” என்று கேள்வியை முடிக்க இயலாது நிறுத்தினான்.
அவன் மார்புச் சட்டையை கசக்கிப் பிடித்தவள், அவன் கேட்கத் துடித்த கேள்விக்கான அழகிய பதிலை தன் ஒற்றை இதழ் முத்தத்தில் அவனுக்கு பதில் கொடுத்திருந்தாள்.
அவர்களது அத்தனை வருட காதலுக்கு அவள் கொடுக்கும் முதல் இதழ் சஞ்சரம்!
வாழ்வின் மறைபொருள் பகுதியைப் பற்றிய எந்த அர்த்தமும் அறிந்திடாத இருவரும், அந்தரங்க அறைக்குள் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்தத் தருணம், தடுமாற்றம் கொண்டு தயங்கவேச் செய்தனர்.
ஒருவரது தடுமாற்றத்தை மற்றவர் துடைத்து, தங்களது முதல் அடியை அழகாய் துவங்கியவர்களில், ஆதி அவளை அள்ளிக் கொண்டு உள்ளே சொன்றான்.
மெத்தென்ற பஞ்ச சயனத்தில் அவளைக் கிடத்தியவன் மென்மையினும் மென்மையாய் தன் அச்சரங்களை பதித்தான்!
அச்சமும் நாணமும் பெண்ணவள் மேனியை மெல்ல நடுங்கச் செய்ய, “யா..யாழ்மா..” என ஆடவனும் தயங்கினான். தயங்கும் கணவனைக் கண்டு சிரித்தவளாய் முன் வந்தவள், தங்கள் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு தானே அவனை வழிநடத்திச் சென்றாள்.
இதழ்கள் அதன் தாகத்தை மேனியின் உஷ்ணத்தில் தீர்த்துக்கொள்ள தவிக்க, பூவில் வந்து உறவாடி அதன் வாசம் களவாடிச் செல்லும் தென்றலாய், தன்னவளோடு உறவாடி, அவள் நாணத்தைக் களவாடிச் சென்றான், கேள்வனவன்!
களைத்துக் கழித்து இருவரும் அந்த பஞ்சணையில் அயர, சாற்றிவைத்தச் சாளரத்தையும் தாண்டி அந்த அறையின் அந்தகாரத்தைக் களைத்தது உணர்ந்து முகில் கொண்டு தன்னை மூடிக் கொண்டதாய், நிலவொளியும் தனிந்தது, இருவரின் காதல் மனம் கனிந்தது!
சட்டென நினைவு பெற்றவளாய் “ஏங்க..” என்றவள் எழ,
“என்ன யாழ்?” என்றான், மோகம் நிறைத்த குரலில்.
மேஜையிலிருத்த தனது கைப்பையை எட்டி எடுத்தவள் ஒரு பரிசு பெட்டியை அவனிடம் நீட்ட, புன்னகையுடன் “ஃப்ர்ஸ்ட் நைட் கிஃப்டா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
அதில் நாணத்தை இதழ் கடித்து அடக்கியவள் “ம்ம்..” என்க, அதை வாங்கி திறந்தான்.
அழகிய வெள்ளி காப்பு. 'AP' என்று பொறிக்கப்பட்டு இதயம் வரையப்பட்ட அந்த காப்பைக் கண்டு புன்னகையுடன், “இதை தான நம்ம கல்யாணத்துக்கு நகை எடுக்கப் போறச்ச பார்த்துட்டு இருந்த?” என்று கேட்டான்.
“ம்ம்.. இதபோல மாடல் அங்க பாத்து உங்களுக்கு என் சம்பாதியத்துல நான் வாங்கோனும்முனு நினைச்சதை நீங்க கண்டுகிட்டதால தானே நீங்க சேலைக்கு பணம் அனுப்பி விட்டீக” என்றவள், ‘உன்னைப் போல் நானும் உன்னை அறிந்தே வைத்துள்ளேன்' என்பதை வெளிப்படுத்தினாள்.
புன்னகையுடன் அதை அணிந்துக் கொண்டவன் அவளை இறுக அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட, சோர்வும், களிப்பும், மகிழ்வும் ஒருசேர ஆழ்ந்த அணைப்போடு இருவரும் நிம்மதியான உறக்கம் தழுவினர்!
-தொடரும்...
நாணல்-20
இருவரும் தங்கள் இருப்பிடம் திரும்பி ஒரு வாரம் ஓடியிருந்தது!
அருகே இருக்கும் நல்ல நிறுவனங்களாகப் பார்த்து தனது ரெசியூமை அனுப்பி வைத்திருந்த தாமரையாள், நேர்காணலுக்காக காத்திருந்தாள்.
அன்றைய மாலை வேளை.. தனது வீட்டிற்கு அழைத்துப் பேசத் துவங்கியிருந்தவள், பேசியபடியே வீட்டு வேலைகளையும் முடித்திருந்தாள். ஆடவன் வீடு திரும்பியிருக்க, அவன் புத்துணர்ச்சி பெற்று வரவும் அலைபேசியை அவனிடம் கொடுத்தவள் அவனுக்காக திண்பண்டங்களும் கொட்டை வடிநீரும் எடுத்து வந்து வைத்தாள்.
தானும் பேசிவிட்டு அலைபேசியை அவளிடம் கொடுக்கும்போது கிட்டதட்ட மூன்று மணிநேரமாக அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அழைப்பை முடித்துக் கொண்டு தானும் வந்தவளைக் கண்டவன், “மூனு மணிநேரமாவாடி பேசுற? காது என்னாகும் யாழ்மா?” என்றான்.
“அவ்வளவு நேரமாச்சுதுங்களா? நேரம் போனதே தெரியலைங்க.. பேசிகிட்டே வேலையெல்லாம் முடிச்சுபோட்டேன்” என்று அவள் கூற,
“காதுலயே வச்சுட்டு இருந்தா நல்லதில்லடா” என்றான்.
“அத்தனை பேருகிட்டயும் மாத்தி மாத்தி ஒத்த வார்த்தை பேசிகிடவே நேரமாயிடுதுபா” என்று அவள் கூற,
“ம்ம்.. புரியுதுமா.. பாத்துக்கோ” என்றவன், “ரெஸியூம் அப்லை பண்றதா சொன்னியே பண்ணிட்டியா?” என்று கேட்டான்.
“ம்ம் பண்ணிருக்கேன். இன்டர்வியூ வந்தா அடென்ட் பண்ணனும்” என்றவள் அவனை நெருங்கி அமர்ந்து, “நாம ஒரு டீல் போட்டுப்போமா?” என்று கேட்க,
“டீலா? என்ன டீல்?” என்றான்.
“அதாவது.. நாம ரெண்டு போருமே சேந்து சம்பாதிச்சோம்முன்னா.. என்னோட சம்பளத்த அப்படியே பேங்க்ல போட்டுகிடலாம்.. உங்களோடதுல நாம ஃபேமிலி ரன் பண்ணலாம்.. சேமிக்குற அமௌன்ட்ல ஓரளவு தொகை வாரவும் வீடு வாங்குற ப்ளானை எக்ஸிகியூட் பண்ணுவோம்.. ஓகேவா?” என்று அவள் கேட்க,
தன் ஆசையை தன்னுடையதாய் கொண்டு செயல்படும் தன்னவள் மீது மென்மேலும் அவனுக்குக் காதல் பெருகியது!
அவளை அள்ளி தன் மடியில் அமர்த்தியவன், “சரிங்க மகாராணி” என்று கூற,
அவன் கன்னம் பற்றியவள், “சீக்கிரமே உங்க ஒவ்வொரு ஆசையா நிறைவேத்துவோம்.. நீங்க சொன்ன போல ஜாலியா வாழலாம்..” என்று கூறி, “அதுக்கு முதல்ல நீங்க என்ன பண்றீங்க.. இன்னிக்கு ரவைக்கு டிஃபன் செஞ்சு பாத்திரத்தையும் தேச்சு போட்டுடுங்க” என்று கூறினாள்.
புன்னகையுடன் கேட்டுக்கொண்டு வந்தவன் கடைசியாய் அவள் முடித்ததில் ‘ஞ?’ என விழிக்க, அதில் வாய்விட்டு சிரித்தவள், “அச்சோ..” என அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
“நானே டிஃபன் பண்ணிடுவேன்” என்று அவள் கூற,
“ஏ லூசு.. அதுக்கெல்லாம் நான் ஒன்னும் சொல்லலைடி.. சும்மா தான் அப்படி பாத்தேன். இதுக்கு முன்ன வீட்டுக்கு வரும்போது எவ்வளவு டயர்டா இருந்தாலும் எனக்கானதை நானே தான் பண்ணிக்கிட்டேன். எனக்கான காரியம் செய்ய அழுத்துக்காதவன், எனக்காக வந்த உனக்கு சேர்த்து செய்றதுல என்ன எனக்கு?” என்றான்.
அவன் கன்னம் பற்றியவள், “எனக்கு சொகமில்லைனா கண்டிப்பா உங்ககிட்டதேன் சமைக்க சொல்லுவேன். ஆனா என்னால முடியுற நேரமெல்லாம் எங்கையாலதேன் நீங்க சாப்பிட்டாகனும். எவ்வளவு மோசமா இருத்தாலும் அந்த தண்டனைல இருந்து தப்பிக்கவே முடியாது” என்று அவள் கூற,
“ஏன்டி?” என சிரித்தான்.
“ஆமாபா.. உங்களுக்குனு ஒவ்வொன்னும் செய்ய நான் ஒருத்தி இருக்கேன்னு இப்படி நிறைய சின்ன சின்ன வெடயத்துல நான் உணர்த்திகிட்டே இருக்கவேணாமா? வேற எப்படி நான் எங்காதல காட்டுறதாம்?” எனக் கூறியவள் அவன் கன்னம் பற்றி ஆட்டிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள்.
அவள் கூறிவிட்டுச் சென்றதில் அவளுக்குத் தன்மீதுள்ள காதலைவிட வேறு எதை அவனால் உணர்ந்திட முடியும்?
அத்தனை ஆத்மார்த்தமான அந்த நேசத்தில் நெகிழ்ந்து போனவன், சில நிமிடங்களில் உள்ளே சென்று அவளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தான்.
சமையல் நேரங்களில் அவளுக்கு காய்கள் நறுக்கித் தருவதும், மேடையில் அமர்ந்து கால்களை ஆட்டியபடி அவளோடு சேர்ந்து பாட்டுப் பாடுவதும், அன்றைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதும் அவர்களது வாடிக்கையாக மாறியது!
இதோ அதோவென அவளுக்கும் வேலை கிடைத்திருக்க, அவள் பிறத்த வீட்டில் இது சற்றே அதிருப்தியாகத்தான் இருந்தது!
தங்கள் மாளிகையில் தங்கள் கைக்குள் தாங்கியப் பெண் என்பதால் அவள் தனியே குடி புகுந்து, கால் நோக கை நோக வீட்டு வேலைகள் செய்வதே அவர்களுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது. பெண் பிள்ளையென புகுந்த வீடு சென்றுவிட்டாள் இவற்றைப் பழகிதானே ஆக வேண்டும்? இது விதியல்ல கடமை என்ற பக்குவம் அவளுக்கு இருந்த அளவு அவள் அண்ணன்மார்களுக்கு இல்லையென தான் கூறவேண்டும்!
அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடியிருந்த நிலையில் அதிவீர பாண்டியர் மற்றும் அர்ச்சனாவின் திருமண நாள் வரவிருந்தது! அதற்கு தங்கையை அழைக்கும் சாக்கோடு பார்த்துவிட்டு வரலாமென தீஞ்சுடரோன், அம்பிகா, அக்னி, உடனே வருவேன் என்று அடம் செய்த அங்கை, செழிலன், பொழிலன் மற்றும் காயத்திரியையும் கூட்டி வந்திருந்தனர்.
மாலை வேலை முடித்து மிக சோர்வோடு வீட்டிற்கு வந்த ஆதி தன் வீட்டு வாசலியேயே கிடந்த பல காலணிகளில் வந்திருப்போரைக் கண்டுகொண்டான். மனதில் பிறந்த ஒருவித குதூகலத்துடன் உள்ளே நுழைந்தவன் நீள்விருக்கையில் அமர்ந்திருந்த தீஞ்சுடரோன் மற்றும் அம்பிகாவைப் பார்த்து புன்னகையுடன், “அக்கா.. மச்சான்.. வாங்க வாங்க..” என்றான்.
“வாங்க மாப்பிள்ளை..” என்று தீஞ்சுடரோன் எழுந்து நிற்க,
“உக்காருங்க மச்சான்..” என்றவன், “கைகால் கழுவிட்டு வாரேன்” என்றுவிட்டு சென்றான்.
அங்கு சமையலறையில் இக்கூட்டத்துடன் நின்றிருந்தவள், “அவரு வந்துட்டாரு..” என்க,
“அதுக்கு??” என்று காயத்திரி கேலி செய்தாள்.
“ஏ கோட்டி.. போடி அங்கிட்டு.. நாம்போய் துண்டு எடுத்தாந்துட்டு வாரேன்” என்றவள் இவர்களது சிரிப்பில் நாணம் கொண்டவளாய் அறைக்குள் நுழைந்தாள்.
முகம் கழுவி புத்துணர்ச்சி பெற்றவன் இளகுவான உடைக்கு மாறியிருக்க, உள்ளே வந்தவளைக் கண்டு மெலிதாய் சிரித்தவன் அவளை சுண்டி இழுத்து தன் கைக்குள் நிறுத்திக் கொண்டான்.
“என்ன பொஞ்சாதி.. அண்ணா, அண்ணி, பிள்ளையலையெல்லாம் பாத்தோதும் முகம் மின்னுதோ?” என்று கேட்க,
“இருக்காதா பின்ன? ஒருமாசமாச்சே” என்று கூறினாள்.
புன்னகையோடு கூறியபோதும் அதில் சிறு வருத்தம் இருக்கவே செய்தது! கல்லூரியில் நான்காண்டு பிரிந்து வந்து படித்தபோதும் கூட வாரா வாரம் அவள் பிறந்தகம் சென்று வந்திடுவாள் என்பது அவன் அறிந்ததே! அப்படியிருக்க தொடர்ந்து ஒரு மாதம் அவர்களைக் காணாமல் இருப்பது அவளுக்கு வருத்தமாகத்தானே இருக்கும் என்றும் புரிந்தது!
அவள் கேசம் வருடியவன், “நீ எப்போ வேலை முடிஞ்சு வந்த? எல்லாரும் எப்ப வந்தாங்க? ஏதும் குடிக்கக் கொடுத்தியா? நீ டீ காஃபி எதும் குடிச்சியா? நைட்டுக்கு செய்ய பொருள் எல்லாம் இருக்குதா இல்ல வாங்கியாறவா?” என்று கேட்க,
“எங்கிட்ட பேசையிலகூட நார்மலாதேன் பேசுதீக.. உங்க மச்சான் அக்காவையெல்லாம் பாத்தாதேன் ஊரு பாஷை தன்னால வந்துடுது” என்று கேலி செய்தவள், “பொருளெல்லாம் இருக்குது.. அக்னி அண்ணே காய் நறுக்கவே தொவங்கிடுச்சு..” என்றாள்.
“ஏ! அக்னி வந்திருக்கானா?” என்றவன் மனைவியை விலக்கியவனாய் சமையலறைக்கு ஓட, ‘அடப்பாவி’ என்று சிரித்தபடி தானும் சென்றாள்.
உள்ளே நின்றிருந்த பட்டாளத்தைக் கண்டு, “ஏ செழில் பொழில்.. எப்புட்ரே இருக்கீங்க? நெலத்துல சோலியெல்லாம் எப்பிடி போவுது?” என்றவன்,
“காயூ.. நல்லா படிக்குறியா?” என்று அவளிடமும் கேட்டான்.
“நல்லாருக்கோம் மாமா.. சோலியெல்லாம் நல்லா போவுது.. இந்த மொற வெள்ளாமை வரவும் மொத மூட்ட எங்கைத்தை மாமனுக்குதேன் வரும்” என்று இருவரும் கூற,
காயத்திரியும், “நல்லாருக்கோம் மாமா. நீங்க எப்படிருக்கீக?” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம்டா.. நல்லாருக்கேன்.. உங்க ஐத்த புண்ணியத்துல” என்றவன் தன்னையே புன்னகையாய் பார்த்திருக்கும் அக்னியை நெருங்கி அணைத்துக் கொண்டான்.
அவன் முதுகை தட்டிக் கொடுத்தவன், “எப்புட்ரே இருக்க?” என்று கேட்க,
“உந்தங்கச்சி புண்ணியத்துல ராசாவாட்டம் இருக்கேன்டே” என்றான்.
“உம்மொவமே சொல்லுதேடே.. நல்லாயிரு” என்று மனமார வாழ்த்தியவன் “அண்ணே அண்ணிய பாத்தீயா?” என்க,
“உள்ளவரும்போது பாத்தேன்டே” என்றான்.
அனைவரும் கூடத்தில் ஒன்றுகூட, பேச்சுத் துவங்கியது!
“பாண்டியண்ணேனுக்கும் மதினிக்கு கண்ணாலநாள் வருது மாப்பிள்ளை” என்று தீஞ்சுடரோன் கூற,
“ரொம்ப சந்தோஷமுங்க மச்சான்” என்று ஆதி கூறினான்.
“அதேன் ஓரெட்டு புள்ளைய பாத்துபோட்டு ரெண்டேரையும் அழைக்க வந்தோம். விடுமுறை நாளுலதேன் வருது” என்று தீஞ்சுடரோன் கூற,
“கண்டிப்பா மச்சான்.. கண்டிப்பா வந்துடுதோம்” என்று கூறினான்.
தாமரையாள் அனைவருக்கும் தேநீர் கொண்டுவர, “ஆத்தே.. எளச்சுபோனாப்ல இருக்கியே தாயி?” என்று தீஞ்சுடரோன் கேட்டார்.
“ஆமா.. ஒரு மாசத்துல அப்படியே துரும்பா இளைக்குறாக.. ஏண்ணே நீங்க வேற?” என்று சிரிப்போடு வந்து அவள் அமர,
“காரியமெல்லாம் பாக்குதியேத்தா” என்றார்.
அவர் குரலில் இருந்தது வேதனையா? ஆதங்கமா? அதிருப்தியா? இல்லை அனைத்தும் கலந்த உணர்வா என்று பிரித்தறிய இயலவில்லை!
“ஏன்னே.. வீடுனு ஆச்சுதுனா எல்லாம் செஞ்சுதானே ஆவனும்? அங்கன நம்ம அண்ணிகளெல்லாம் அம்பூட்டு பேருக்கு செய்யிலியாக்கும்?” என்று அவள் கேட்க,
“அங்க ஒத்தாசைக்கு வேலையாக்கள் அம்பூட்டு பேரு இருக்காகளே தாயி. நீ ஒத்தையாயில்ல செய்யுது? ரெண்டும் ஒன்னாகுமா?” என்றார்.
“இங்கன நான் தனியா ஏதும் செய்யலை.. சமையலுல தொவங்கி வீடு கூட்டி பெருக்குறவர அம்பூட்டும் அவுகளும் உதவுறாகளே.. என் வீட்டுக்கு நாங் காரியம் பாக்காது வேறு எதை செய்யபோறேனாம்?” என்று தான் செய்யும் செயலில் மனநிறைவை உணர்ந்தவளாய் அவள் கூற,
மேலும் ஏதோ பேச வந்த அண்ணனைத் தடுக்கும் விதமாய், “எங்கம்மை பெரிய பிள்ளையாயிட்டுனு இப்படி பக்குவமா பேசி நிறூவிக்குதில்ல மதினி?” என்று அக்னி கேட்கவும், அம்பிகா புன்னகையாய் தலையசைத்தார்.
அவனுக்காக செய்வதில் என்றுமே அவள் சுமை கண்டதில்லை! அதற்குக் காரணமும் அவனே! வேலைவிட்டு வந்தபிறகும் கூட, இருக்கும் அலுப்பை மறக்கும் வகையில் அவளுக்கு துணையாக அவன் உதவி, அவளோடு அன்றைய நாளைப் பற்றி பேசி, பேச்சில் கவனம் செழுத்தியவண்ணம் இருவருமாய் காரியத்தை முடிக்க, அவளுக்கு எங்கனம் வேலையின் சுமை உணர முடிகிறது?
தீஞ்சுடரோனை முழுதாய் பேச விடாமல் அக்னி தடுத்திருந்தபோதும் கூட, அவர் பேசியதன் நோக்கம், சொல்ல வந்தவையென ஆதியின் மனதில் பதியவே செய்தது!
பேச்சு பின்பு கலகலப்போடே கழிந்துவிட, அன்று இரவு உறங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் கிளம்புவதாய் முடிவாயினர்.
தன்னவனுக்குக் கண்காட்டிய தாமரையாள் அறைக்குள் செல்ல, தானும் எழுந்து உள்ளே வந்தவன், “என்ன யாழ்மா?” என்றான்.
“ஏங்க.. நைட்டுக்கு..” என்று அவள் முடிக்கும் முன்,
“இங்கன தானே யாழ்மா ஸ்டே? பெரிய மச்சானும் அக்காவும் பக்கத்து அறைய எடுத்துகிடட்டும்” என்றான்.
“அதேன் பேச கூப்பிட்டேன். அண்ணே அண்ணியோடவே கீழ செழிலன் பொழிலன் தூங்கிகிடுவாக. நீங்களும் அண்ணேனும் இங்கன படுத்துக்கோக. நானும் காயுவும் கூடத்துல உறங்கிக்குதோம்” என்று அவள் கூற,
“எதுக்கு யாழ்மா? நீயும் காயுவும் உள்ள படுங்க. நானும் அக்னியும் மாடியில படுத்துகிடுதோம்” என்றான்.
“வேணாமுங்க.. நீங்க உள்ளயே படுங்களேன்..” என்று தாமரையாள் கூற,
“இருக்கட்டும்டா.. இல்லாட்ட அக்னி பெரிய மச்சான் ரூமுலயே படுக்கட்டும். வாண்டுகள இங்கன விட்டுட்டு நாம கூடத்துல படுத்துகிடுவோம்” என்றான்.
சற்றே யோசித்தவள், “ஓகேங்க” என்று கூற,
இருவருமாய் வெளியே வந்தனர்.
“அக்கா.. மச்சான்.. நீங்களும் அக்னியும் அந்த ரூமுல படுத்துக்கோங்க.. பிள்ளையலா.. நீங்க மூனு பேரும் இங்க படுத்துக்கோங்க” என்று ஆதி கூற,
“மாமோய்.. என்னாதிது? நாங்கெல்லாம் ஒரு கணக்கு போட்டா நீங்க வேற கணக்கு போடுதீக? அப்பாவும் அம்மாவும் அங்கன படுக்கட்டும். நாம எல்லாருமா மாடியில போயி படுப்போம்” என்று செழிலன் கூறினான்.
அவன் கூற்றை மற்றவர்கள் ஆமோதிக்க, தன்னையே பார்த்து நிற்கும் மணவாட்டியைப் பார்த்து புன்னகைத்த ஆதி, உற்சாகத்தோடு தலையசைத்தான்.
இந்த கூட்டு உறக்கம், கூட்டாஞ்சோறெல்லாம் அவன் அறிந்திடாத அமுதமாயிற்றே!
பெரியோருக்கான வசதிகளைச் செய்துகொடுத்துவிட்டு இளையோர்கள் யாவரும் மாடிக்கு செல்ல, தனது பையிலிருந்த சீட்டு கட்டை எடுத்துக் கொண்டு செழிலன் வந்தான்.
“எல்லாம் பொறவு தூங்கலாம். வாங்க ஒரு ஆட்டத்தை போடுவோம்” என்று செழில் கூற,
“டேய்.. அவேன் நாள விடிஞ்சா வேலை சோலிய பாத்து போவோனும். உங்கூட ஆடிமுடிச்சு எப்படே தூங்குவியான்?” என்று அக்னி ஆதியை மனதில் வைத்துப் பேச,
மெல்லிய சிரிப்போடு “பரவாலடே.. ஒரு ஆட்டம் போட்டுட்டு தூங்குவோம்” என்று ஆதி கூறினான்.
அதன்படி அவர்கள் சீட்டாட்டம் துவங்க, பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாகவே அவர்களது பொழுது கழிய, உறக்கம் கண்ணை சுழற்றியடிக்கவும்தான் உறக்கம் தழுவினர்.
காலை சற்றே தாமதாய் எழுந்த ஆதி, தன்னை சுற்றிலும் கைகளையும் கால்களையும் ஒருவர்மேல் ஒருவர் போட்டுக்கொண்டு படுத்துறங்குபர்களைக் கண்டு புன்னகைத்தபடி எழுத்தான்.
இரவு உறங்கும்போது இருந்தோர் அனைவரும் அப்போதும் இருந்தனர், அவன் மணையாளைத் தவிர.
அலைபேசியில் மணியைப் பார்த்தவன் கீழேவர, தன் அண்ணனுக்கு தேநீர் கொடுத்தபடி அவர் அருகே அமர்ந்து காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் அவனவள்!
அங்கு வந்தவன் காதில் அவனவள் மற்றும் அவள் அண்ணனின் உரையாடல் தவறாமல் விழுந்தது!
“ஏந்தாயி.. நேத்து எந்நேரம் உறங்குனீக எல்லாரும்?” என்று தீஞ்சுடரோன் வினவ,
“இந்த பயலுவலோட ஆட்டம் போட்டு படுக்க பண்ணன்டு ஆச்சுதுண்ணே” என்று சின்ன சிரிப்போடு காய்களை நறுக்கியபடியே கூறினாள்.
“அம்பூட்டு தாமதமா உறங்கியும் பொழுதோட எழுந்துபுட்டியே தாயி?” என்று அவர் கேட்க,
“அவுகளுக்கும் எனக்கும் வேலையிருக்கில்லண்ணே? சாப்பாடு பொங்கி கட்ட வேணாமாட்டு?” என்றாள்.
“ரொம்ப நோவுதாத்தா? வீட்டு சோலிக்கு ஆரும் ஆளு போட்டிகிடலாமுல்ல?” என்று தீஞ்சுடரோன் கேட்க,
“எதுக்குண்ணே வெட்டிச் செலவு?” என்றாள்.
“செலவுனு பாக்காதத்தா..” என்றவர், “அண்ணே ஏற்பாடு பண்ணட்டுமா?” என்க,
அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள், “நாஞ்செலவுனு ஒதுக்கலைங்கண்ணே.. வெட்டிச்செலவுனுதேன் வேணாமுன்னு சொல்லுதேன். இருக்குறது நாங்க ரெண்டேரு.. எங்க வேலையை நாங்களே பிரிச்சுகிட்டு சுலுவா செஞ்சுபுடுதோம். இதுக்கு எதுக்கு வேலையாளுவல்லாம்?” என்று கேட்டாள்.
“அதில்லத்தா..” என்று அவர் ஏதோ கூறுவர,
“அண்ணே போதும்.. இன்னும் நான் ராசாவீட்டு ரோசா இல்லை.. நான் இந்தவீட்டுக்கு வாழ வந்த பொண்ணு.. எனக்கான பொறுப்பை நான் தட்டிகழிக்க விரும்பல” என்று கூறினாள்.
அத்துடன் அவரும் பேச்சை நிறுத்திட, உள்ளே நுழைந்தவன் முயன்று தன் முகத்தை சீராக்கிக் கொண்டு புன்னகையாய் தீஞ்சுடரோனுக்குக் காலை வணக்கம் கூறினான்.
“எழும்பிட்டீகளா? நானே எழுப்புவோமுன்னுதேன் இருந்தேன். போயி பிரஷ்ஷாயிட்டு வாங்க. டீ போடுதேன்” என்றபடி தாமரையாள் எழ முற்பட,
“வேணாம் யாழ்.. நோரமாச்சுது.. குளிச்சுபோட்டு வாரேன்.. சாப்டு கெளம்பலாம்” என்றதோடு உள்ளே சென்றான்.
இளையோர் பட்டாளமும் கிளம்பி வர,
அனைவரும் குளித்து தயாராகி காலை உணவை உண்டனர். அனைவரும் ஊர் திரும்பவேண்டி தங்கள் மகிழுந்தில் புறப்பட, தன்னவளை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஆடவன் வேலைக்குச் சென்றான், கலங்கிய மனதோடு!
-தொடரும்...
நாணல்-21
அந்த மாளிகையே ஜே ஜே என இருந்தது!
அவ்வீட்டின் மூத்த தம்பதியரின் திருமண நாளை வெகு விமர்சியாக கொண்டாட வேண்டி இளையோர்கள் ஆசைப்பட்டதற்கு இணங்க, அனைவருமாக காலை கோவிலுக்குச் சென்று மீனாட்சி அம்மனை வழிபட்டு, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை நெருங்கிய உறவினர்களை அழைத்து அனைவருக்கும் உணவிட்டு கொண்டாடுவதே அவர்கள் எண்ணமாக இருந்தது!
அனைவரும் ஒன்று கூட ஒரு பொன்னாளின் தேவை இருக்கத்தானே செய்கிறது! அப்பொன்நாளில் ஆடம்பரத்தை விட அனைவருக்கும் அற்புதமாய் உணவளிப்பதே சிறந்த பாங்கென்பது அவ்வீட்டாரின் கருத்து! அதன்படியே அவர்கள் ஏற்பாடுகளை வைத்திருந்தனர்.
தனது அறையில் அண்ணன் வாங்கித் தந்த பட்டுப் புடவையில் தங்க சிலையாக தயாராகிய பொற்றாமரையாள் திரும்பி, அவளவனின் அழகில் அப்படியே அசைவற்று நின்றாள்!
அழகிய கருநீல நிற பருத்தி சட்டையும் அதே நிறக் கறை கொண்ட வேட்டியும் என தாயாராகியிருந்தவன், தன் மீசையை கண்ணாடி பார்த்து முறுக்கிக் கொண்டிருக்க,
“அள்ளி அணைக்கனுமாட்டு வருதே” என்று ஆயாசமாய் முனுமுனுத்தாள்!
“என்னதுங்க பொண்டாட்டி? ஏதும் கேக்கலியே?” என்றபடி ஆதிவருணேஷ்வரன் அவளருகே வர,
அவனை இறுக அணைக்கத் துடித்த கரங்களுக்கு தடையேதும் விதிக்காது முனுமுனுத்ததை செயலில் காட்டினாள்.
“ஏ.. சேலையெல்லாம் கசங்கிடப்போவுதுட்டி” என்று அவன் கூற,
“காரணங்கேட்டா சொல்லிகிட போதேன்” என்று நக்கலாய் கூறினாள்.
“யாரு நீயு? முட்டக்கண்ணை உருட்டி உருட்டி முழிப்பு, இந்த குண்டு கன்னத்தை உள்ள இழுத்து கடிப்பு.. வாயத்தொறந்தா உங்கூரு முத்தெல்லாம் கொட்டிப்புடுமுனு யாரோ காதுல சேதி சொன்னாப்புல கப்பு சிப்புனு வெக்கப்பட்டுகிட்டு இருப்ப. நீயு கேலி போசுவியாக்கும்?” என்று அவன் கேட்க,
அதில் நாணத்தோடு சிரித்தவள், “உங்கட்ட பேசுறாப்ல அம்பூட்டு பேருட்டயும் பேசிகிட முடியுமாக்கும்?” என்றாள்.
“அதுவும் சரிதேன்” என அவளை இடையோடு கட்டிக் கொண்டவன், அவள் காதுமடலில் ரகசிய குரலில், “அம்சமா இருக்க யாழ்” என்று கூறினான்.
அந்த குரலில் கசிந்த மோகம், அவளை என்னவோ செய்திட, “போதும் போதும்.. விடுங்க.. கீழ எல்லாரும் தயாரா கிடப்பாக” என்று சமாளிப்பாய் அவனை நகர்த்தினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “வாங்கியாந்த பரிசெங்க?” என்று வினவ,
சிறு முக சுறுக்கத்துடன் சென்றவள் அதை எடுத்து வந்தாள்.
அவளது அண்ணா அண்ணி இருவருக்குமான மெல்லிய தங்க சங்கிலி அது!
“எதுக்கு முகம் இப்படி கோணுது?” என்று அவன் கேட்க,
“இம்பூட்டு செலவு தேவைதானா?” என்று பொறுக்க மாட்டாது கேட்டுவிட்டாள்!
“என்ன யாழ் இது? பரிசா கொடுக்க வாங்கின பொருளுல கணக்கு பாக்குறியே” என்று அவன் கண்டிப்பாய் கேட்க,
“பரிசு மனசார வாங்கணமுங்க.. இதுல எனக்கு மனசே ஒப்பலையே” என்றாள்.
“ஏன் ஒப்பலை?” என்று அவன் கேட்க,
“இம்பூட்டு செலவு வேணுமா இப்ப? போன வாரம் தானே உங்க கூட வேலை பாக்குறவக சொன்னதா ஒரு வீட்டோட விவரத்தை காட்டுனீக? காசை சேத்து வைச்சிருந்தா கொஞ்ச மாசம் போக நாம வாங்கிக்குறதா பேசி வச்சுருந்துருக்கலாம்ல?” என்று கேட்டாள்.
“நமக்கு இன்னும் எத்தனையோ நாளிருக்கே யாழ்மா.. விழா போல சிறப்பா கொண்டாடுறாக.. இருபத்திரெண்டு வருஷ வாழ்க்கை.. எதாவது நல்லதா வாங்கிக் கொடுத்தா நிறைவா இருக்குமில்ல” என்று அவன் கூற,
“தங்கமா வாங்கினாதேன் நிறைவா?” என்று கேட்டாள்.
“ப்ச்.. இப்ப என்ன? நாம இருக்குற வீட்டுல வசதிப்படலையா உனக்கு?” என்று சட்டென வார்த்தையை விட்டிருக்க,
அத்தனை நேரம் இருந்த மோக நிலை களைந்தவளாய் அவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தான்.
'உன் ஆசையை தானே எனதாய் கொண்டு பேசுகிறேன்? உனது ஆசை என் ஆசையென தானே கருதுகிறேன்?’ என்ற அவளது சொல்லப்படாத வாக்கியங்களின் வலி அந்த விழிகளில் கண்ட பின்பே, அவன் விட்ட வார்த்தைகளின் கூர்மையை உணர்ந்தான்.
கண்களில் குளம் கட்டத் துடிப்பதை சிரமப்பட்டு அடக்கியவள் பரிசுப் பெட்டியை அவன் கையில் திணிக்காத குறையாய் வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட,
அவளை நிறுத்தவேண்டுமெனவும் தோன்றாது வருந்தி நின்றான்.
இப்படி ஒரு நன்நாளில் தான் ஒரு ஊடலை உருவாக்கிட வேண்டுமா? என தன்னடக்கமற்ற தன் நாவைத் திட்டிக் கொண்டவனும் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான்!
தன் நிலையை உயர்த்தி காட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் அதை வாங்கவில்லை. ஆனால் சற்றே நிலையான பொருளாய் பரிசாகக் கொடுக்க வேண்டுமெனதான் நினைத்தான்!
அதன் பொருட்டே அவன் இப்பரிசை வாங்கியிருக்க, பரிசை கொடுக்கவிருக்கும் தருணம் வரையிலும் கூட மனமார அதைக் கொடுக்க விரும்பாத மனைவியின் செயல் கொடுத்த அதிருப்தியில் பட்டென வார்த்தைகளை விட்டிருந்தான். வார்த்தைகளைப் பெற்றவளுக்கென்னவோ அதன் கூர்மையான தாக்குதல் ஏற்படுத்திய வலிதான்.
ஆனால் அவற்றைக் கொட்டிவிட்டவனுக்கு, தன்னவளைக் காயப்படுத்திவிட்ட வேதனையோடு சேர்த்து கொட்டிய வார்த்தைகளை அள்ளமுடியவில்லையே என்ற ஆற்றாமையும் வதைத்தது!
சில நிமிடங்களில் பாவை வெளியே வர, அவளை பரிதவிப்போடு பார்த்து நின்றான். அழுதது தெரியாதிருக்க மீண்டும் முகம் கழுவி தன்னைத் திருத்திக் கொண்டு அவள் வந்தது அவனுக்குத் தெளிவாய் புரிந்தது.
“கீழ போலாம்.. எல்லாங் காத்திருப்பாக” என்று கூறியபடி அவள் சொல்ல, தானும் அவள் பின்னோடே சென்றான்.
குட்டி கிராமமே கூடியிருந்தது அம்மாளிகையில்! கூட்டத்தில் அவள் பின்னோடே சென்றுகொண்டிருந்தவனை உறவினர் கூட்டங்கள் பிடித்துக் கொண்டன.
அக்குடும்பத்து ஆட்களை மணனம் செய்யவே அவனுக்கு ஏக நாட்கள் எடுத்தபோது, இந்த குட்டி கிரமாமெல்லாம் அவனுக்கு சற்றும் அறிந்திடாத உறவுகள்! எப்போதும் அவனுடனே இருந்து ஒவ்வொரு உறவினரையும் நினைவூட்டுபவள், இன்று அவனை அம்போவென விட்டு தன் அண்ணிகளோடு ஐக்கியமாகிக் காரியத்தில் ஈடுபட, அவனுக்குத்தான் ஐய்யோ என்றானது.
முதலில் தன்னை இப்படி தனியே விட்டுச் சென்றுவிட்டாளே என்று கோபம் எழுந்தபோதும், சில நிமிடங்களில் அவள் மனநிலை குறித்து கவலையும் எழுந்தது!
தன்னிடம் வந்து பேசுவோரிடம் கவனம் செழுத்த இயலாது கண்களால் தன்னவளைத் தேடியவனுக்கு முன் ஆபத் பாண்டவனாய் வந்தான், அக்னி!
“ஏ அக்னி..” என்றவன் அக்கூட்டத்திடமிருத்து நாசூக்காய் விலக,
“என்னடே தனியா வார? எங்கம்மையக்காணும்?” என்று அக்னி கேட்டான்.
“ம்க்கும்.. உங்கம்மை என்னைய அம்போனு விட்டுபோட்டு போயிட்டா” என்று ஆற்றாமையும் சோகமுமாய் கூறிய ஆதியைப் பார்க்க கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் போலத்தான் தெரிந்தது அக்னிக்கு!
சிரிப்பை அடக்கிய வண்ணம், “ஏன்டே?” என்று அவன் வினவ,
“ஒன்னுமில்ல.. சின்ன சண்டை. என்னைய உங்க குட்டி கிராமத்துகிட்ட கோத்துவிட்டுபோட்டு போயிட்டா” என்று ஆதி கூறினான்.
அதில் பக்கெனச் சிரித்த அக்னியை முறைத்த ஆதி, “சிரிப்பு வருதாக்கும்? மச்சான்.. குடும்பஸ்தனாயிப்பாரு.. பொறவு புரியும்” என்று கூற,
“எல்லாம் ஆவோம்.. அதுக்கு இன்னும் காலமிருக்கு” என்று அக்னி கூறினான்.
“எப்போ? தாத்தாவான பொறவா?” என்று அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் திலகாவைப் பார்த்தபடி ஆதி வினவ,
மெல்லிய சிரிப்பு அக்னியிடம்!
முந்தைய நாள் விழாவிற்காக வேலை செய்துகொண்டிருந்த திலகா மயங்கி சரிந்திருந்தாள்.
அனைவருமே பதறிவிட, வேந்தன் மனைவியை மடிதாங்கி அவள் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான்.
நீர் தெளித்து அவளை எழுப்பியவன், என்னவோ ஏதோவென பதற, அவள் நாடி பற்றி துடிப்பைக் கணக்கிட்ட அர்ச்சனா தேவி, “அடடே.. எங்க சாமி! வம்சத்த விருத்தி செஞ்சுபுட்டியே மவராசி” என்று கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தார்.
அதில் மொத்தக் குடும்பமும் ஆனந்தமாய் அதிர, அன்றே அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று இரண்டுமாத கரு உருவாகியிருப்பதை உறுதி செய்துகொண்டு வந்திருந்தான்.
அதுகுறித்தே ஆதி அக்னியை கேலி செய்ய, “பெங்களூருல ஒரு பிராஜ்க்ட் லீட் பண்ற ஆப்பர்சூனிடி வந்துருக்குடே” என்று அக்னி அமைதியான குரலில் கூறினான்.
“டேய் மச்சான்.. சொல்லவேயில்லடா” என்று ஆதி உற்சாகமாக வினவ,
“இன்னும் ஆருக்கும் சொல்லலடே” என்று சுரத்தே இன்றி கூறினான்.
“என்னடே? நல்ல சோலி தானே? உனக்கு பிராஜக்ட் லீட் பண்ணுற கெபாசிடி இருக்குது.. கொடுக்காம தட்டிகழிச்சப்பவெல்லாம் வருத்தப்பட்டதா சொன்னியே? பெறவென்ன?” என்று ஆதி கேட்க,
“எனக்கு ஊருதான்டே பிரச்சனை! இங்கனவேனா பரவால்ல.. அம்பூட்டு தொலவு போதேன்.. ஒரு வருஷத்துக்கு எந்த லீவுமே எடுத்துகிட கூடாதாம். அங்கனவே இருந்து சோலிய பாத்து முடிச்சுபோட்டு வந்துக்கலாமாம். ஆத்தர அவரமுன்னாதேன் ஒரே ஒருமுறை லீவு உண்டாம்” என்றான்.
“வேலையினு ஆகிபோச்சுதுனா இப்படி சிக்கலு வரும்தானடே? இதுக்குலாம் பாத்தா நீ ஆசைபட்டது நடக்குமா? இதை ஒழுங்கா முடிச்சுகொடுத்து வந்தா இங்கனவே உனக்கு ப்ரமோஷன் போடுவாய்ங்கள்ல?” என்று ஆதி கூற,
“அதான்டே நானும் யோசித்தேன். அண்ணேங்கிட்ட கேட்கனும்.. பேசி சம்மதிக்க வைக்கோனும். அவுக எங்கனயோ பொண்ணுதேடுற சொலியில இருக்காக. ஆரூ, வேந்தன்னு ரெண்டேருக்கும் முடிச்சும் எனக்கு முடிக்காதது சங்கடமா இருக்குது அவுகளுக்கு” என்று கூறினான்.
“அவுக கவலையும் நியாயமானது தானடே.. சரிபோனு விட நீயும் சின்ன பய இல்லயே.. இளமை போனா திரும்ப வாரது இல்லடே” என்று கூறிய ஆதி,
“இந்த ஒருவருஷத்துக்கு மட்டும் தட்டி கழிச்சுபோட்டு சோலிய முடி.. இல்லாட்டி பொண்ணு தேட சொல்லு.. எல்லாம் சுலுவா முடிவாகவே ஒரு வருஷம் ஆகிப்போவுமே? உனக்குவேற ஏகப்பட்ட அத்த பொண்ணு மாமா பொண்ணு இருக்குது” என்று கண்ணடித்தான்.
“போடே.. லூசுப்பயலே” என்று திட்டியபோதும் நண்பனைக் கழுத்தோடு இறுக்கிக் கொண்டவன் அடுத்திலிருந்து அவனை விட்டு நகரவில்லை! தான் கொடுத்த தண்டனையை தன் அண்ணன் வந்து நிவர்த்தி செய்திருந்த அழகை ரசித்தபோதும் மனதோடு முறுக்கிக் கொண்டே சென்றாள், தாமரையாள்!
நேரம் ஓடி அனைவரும் ஒன்றுகூடி பெரியோரை வாழ்த்த, அனைவருக்கும் தம்பதியர் கையால் தாம்பூலம் வழங்கப்பட்டது!
அத்துடன் அனைவரும் சென்று உணவு அருந்த, தன்னருகே அமைதியாய் அமர்ந்து உணவருந்தும் மனையாளை அவ்வப்போது ஏக்கமாய் பார்த்தான்.
பந்தியில் நண்டு பரிமாறப்பட, அவள் அண்ணன்களை முந்திக் கொண்டு, “அவளுக்கு நண்டு சேராது வைக்காதீங்க” என்று அக்கறையோடு ஆதி கூற,
அவள் அண்ணன்கள் ஐவருமே அவனைப் பார்த்தனர்.
அனைவர் முகத்திலும் நிறைவான ஒரு புன்னகை வந்துபோக, தன்னவனைப் பார்த்து பிறர் கவனிக்கா வண்ணம் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு திரும்பியவள் உணவைத் தொடர்ந்தாள்.
அனைவரும் உண்டு முடிய, பெரியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது!
இருவரும் தம்பதியராய் தாங்கள் வாங்கி வந்த பரிசைக் கொடுக்க, அதிவீர பாண்டியருக்கும் அர்ச்சனாவுக்கு அந்த தங்க சங்கிலி அத்தனைப் பிடித்திருந்தது.
மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்கள் நன்றி கூறியபோது எழுந்த மனநிறைவில் அத்தனை நேரம் இருந்த மனச்சோர்வும் கூட பறந்து சென்றதைப் போல் தாமரையாள் உணர்ந்தாள்! பிறருக்குக் கொடுக்கும் பரிசில் நாம் பதிலாய் எதிர்ப்பார்க்க வேண்டியவை இந்த புன்னகையைத்தான் என்பது அவளுக்குத் தெளிவுர புரிய, தன்னவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.
ஆட்டம் பாட்டமென நேரம் ஓடிட, அனைவரும் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.
விழா இரண்டாம் சனிக்கிழமையாக வந்தமையால் வெள்ளி மாலையே புறப்பட்டு சனிக்கிழமை இரவு வந்திருந்தனர். ஞாயிறு ஒரு நாளும் இங்கேயே கழித்துவிட்டு இரவு புறப்படலாம் என்பதாய் இருவரும் கணக்கிட்டிருக்க, தாமரையாள் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருந்தாள்.
தற்போது கொண்டாட்டத்தின்போதா இப்படி அவளை மனம் சுருங்கச் செய்திட வேண்டுமென மனம் கலங்கி அறைக்குள் நுழைந்தவன் அமைதியாய் குளியலறைக்குள் உடை மாற்ற சென்றவளைக் கண்டு பெருமூச்சு விட்டான்.
தானும் உடை மாற்றிக் கொண்டவன் அவள் வெளியே வரவும் ஒரு முடிவோடு அவள் முன் செல்ல,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
“மன்னிசிடுங்க”
“மன்னிச்சுடுடா” என்றுக் கூறிக் கொண்டனர்.
தான் பேசிய வார்தைக்காக தான் மன்னிப்புக் கேட்க, தன்னவள் கேட்பதன் காரணம் என்னவோ? என அவன் பார்க்க, “ஒருத்தருக்குக் கொடுக்குற பரிசுக்கான மதிப்பு என்னனு அண்ணா மதினி மொவத்துல வந்த சந்தோஷத்த பாக்கையில புரிஞ்சுது.. பரிச வாங்கி வச்சுகிட்டு நாங் கணக்கு பாத்து பேசினது தப்புதேன்” என்று அவள் கூற,
“கோவத்துல வீசின வார்த்தையா இருந்தாலும் அது உனக்கு கொடுக்கும் வலிய உணர முடியுதுடா.. நிஜமா தெரியாம பேசிட்டேன். மன்னிச்சுடு” என்று அவனும் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“சரிவிடுங்க வலிக்கலைனுலாம் சொல்ல மாட்டேன்.. சட்டுனு அப்படி நீங்க சொல்லிருக்க வேணாம்” என ஆதங்கம் தீராதவளாய் அவள் கூற,
“சாரிடி” என்று கரகரத்தக் குரலில் கூறியபடி அவளை அணைத்துக் கொண்டான்.
பேசிய வார்த்தையை வாங்கிய தன்னைவிட அதை கொடுத்தவனுக்கு எத்தகைய வலியென்று அவனது இறுகிய அணைப்பு உணர்த்திடவே, “சரி சரி.. மன்னிச்சுட்டேன்..” என்று தானும் அணைத்துக் கொண்டாள்.
“நிஜமா சாரிமா” என்று அவன் கூற,
“அச்சோ.. போதுமுங்க.. போதும்.. நானுந்தேன் தப்பு.. அதையே புடிச்சு தொங்கவும் நீங்களும் பேசிபுட்டீக.. இதை இப்படியே விடுவோம்” என்று கூறினாள்.
சில நிமிட அணைப்புத் தொடர, அவள் முகம் தாங்கியவன் கலங்கிய கண்களோடு அவள் விழிகளை நோக்கி, “இப்ப நான் பேசினதையே மனசுல வச்சுக்கிட்டு இனிமே நாம வீடு கட்டப்போறதைப் பத்தி ஏதும் போசாது இருந்திட மாட்டல? நான் நெஜமாவே தெரியாம தான் போசினேன்.. ப்ளீஸ்” என்று கூற,
அவன் கன்னத்தில் கரம் வைத்தவள், “நீங்க கேட்டீங்களே இந்த வீடு வசதிப்படலையானு? அது உண்மைதேன்.. இந்தவீடு எனக்கு வசதிப்படலைதேன்.. ஆனா அது புலங்குறதுக்கு வசதிபடாமயில்ல.. மனசுக்கு வசதிப்படலை.. நாம சொந்தமா வாங்குற வீடுபூரம் நிறைஞ்சிருக்கும் உங்க ஆசையை சுவாசிக்கும் சொகம் இந்தவீட்ல இல்லைங்குறதுதேன் எனக்கில்லாத வசதி.. அந்த வசதி கிடைக்க நீங்க எம்பூட்டு பேசினாலும் சண்டை போட்டு, உங்கள இப்படி அழவச்சாதும் வாங்கிபுடுவேன்” என்று காதலை தேக்கி நிறுத்திய விழிகளோடு கூறினாள்.
அதில் கண்களிலிருந்து நீர் வழிய அவளை அணைத்தவன் “இனிமே நெசத்துக்கும் உன்னைய காயப்படுத்துற போல பேசமாட்டேன்” என ஆழமாய் தன் இதழை அவள் நெற்றியில் பதிக்க, அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவளாய் அவன் இதழ்களை சிறை செய்து கொண்டாள்.
விரைவாய் தங்கள் சண்டையைத் தீர்த்துக் கொண்டனர். ஆனால் இருவருமே வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் வதைகொண்டு பிரிந்திருக்கப்போவதை அப்போது அறிந்திருக்கவில்லை!
காலை, பற்றிக் கொண்டு தற்காலிகமாய் அணைந்து போன மோகத்தீ மீண்டும் பற்றி எரிய, அதற்கு தீனியிடும் கடமையோடு பஞ்சனையில் சரிந்து, தங்கள் தகிப்பை அதனில் தீர்த்துக் கொண்டு துயில் கொண்டனர்!
மறுநாள் காலை சற்றே தாமதாய் எழுந்த ஆதி கண்டதென்னவோ குளித்துத் தலை துவட்டிக் கொண்டிருக்கும் மனையாளைத்தான்!
“ஆயிரம் இரவுகளை
மழைத்துளிகளால் குளிர்வித்து
மின்னல் கீற்றுகளால்
தட்டிக் கொடுக்கும் பேரழகை
அவள் வெண்டை விரல்கள்
தலை துவட்டும்
சில மணித்துளிகளில் கண்டு கழித்திடுகின்றேன்!” என்று பள்ளிகொண்டப் பெருமாளைப் போல் அவளைப் பார்த்தவாறு படுத்திருந்தபடி ஆதிவருணேஷ்வரன் கூற,
தலை உளர்த்திக் கொண்டிருந்தவள் மென் புன்னகையோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
தலைய தலைய சீராய் கட்டப்படாத புடவையிலும் அவன் கண்களுக்கு அவனின் சொர்க்கத்து நாயகியாய் காலை தரிசனம் கொடுத்தவளை நோக்கி, குதித்து எழுந்தவன், தன் பெரும் புஜங்களுக்குள் அவளை சிறை செய்துக் கொண்டான்.
“அடடா.. சீனியரே.. மணியை பாத்தீகளா? சண்டேனு நம்ம வீட்டுல ஆயாசமா எழுந்தவாக்குலயே எழுந்தாச்சு.. கீழ் பிள்ளைய எல்லாம் ஓட்டப்போறாக” என்று அவன் அணைப்பிலிருந்து விலகுவதைப் போன்று பாவளா செய்தபடி தாமரையாள் கூற,
“ஓட்டினா என்ன? நீங்கதேன் பெரிய வீரி சூரியாச்சே? நேத்து பதிலுக்கு பதிலு பேசிடுவீகனு இந்த வாயி தானே சொல்லிச்சு?” என்று அவள் கீழுதடை அழுந்த இரு விரலில் பிடித்துக் கொண்டான்.
“அச்சோ.. வலிக்குது” என்றவளைப் பார்த்து சிரித்தவன், “குட் மார்னிங் மை ஏஞ்சல்” என்க,
“ப்ச்.. அவ்ளோ ஃபீலா இல்ல” என்று சேட்டை செய்தாள்.
அவளை இறுக அணைத்து கழுத்தடியில் முகம் புதைத்தவன், “காலை வணக்கம் மகா ராணி” என்று தன் உஷ்ண மூச்சும் இதழும் மோதும் வண்ணம் கூற, தன்னை மறந்து அவன் சேஷ்டைகளில் மயங்கி நின்றாள்.
சில நிமிடங்களில் சுயம் மீண்டவள், “ஏங்க.. போதும் போதும்.. போயி குளிச்சுபோட்டு வாங்க.. அண்ணேங்கலாம் சாப்பிடாம காத்திருப்பாக” என்று கூற,
“இவ்வளோ நேரமாச்சு.. இன்னுமா உக்காந்துட்டு இருப்பாங்க?” என்று ஆதி வினவினான்.
அவனைத் தள்ளி நிறுத்தியவளாய், “நான் வீட்டுல இருந்தா அண்ணேங்க என்னோடதேன் காலைக்கும் ரவைக்கும் ஒன்னா சேந்து உங்கும். எம்பூட்டு தாமதமானாலும் எங்கூடதேன் சாப்பிடுவாக” என்று சற்றே பெருமைபட அவள் கூற,
“ஏன்டி? அவங்களுக்குலாம் பசிக்காதா?” என்று ஆச்சரியமாய் கேட்டான்.
“நானும் அதேசொல்லிதேன் வஞ்சேன்.. போதா குறைக்கு இந்த மதனிகளும் பட்னி கிடப்பாக.. நா வஞ்சு அம்பூட்டு பேரையும் பத்திவிட்டு பத்திவிட்டு அவுக, பிள்ளைகயெல்லாம் சாப்பிட்டுகிவாக.. அப்போவும் இந்த அண்ணேங்களும் அம்பி மதனியும் மட்டும் கிடயா கெடப்பாக..” என்றவள்,
கண்களில் லேசாய் துளிர்த்த நீரை புண்ணகையோடு சுண்டிவிட்டவளாய், “நாம்பொறந்து ஒன்ற வருஷத்துலயே அம்மா அப்பா போயிட்டாக.. நான் அப்போவும் பால்புடி பிள்ளையாம்.. எனக்கும் செழிலு பொழிலுக்கும் ஒரே வயசுதானே? அம்மா பாலுக்கு ஏங்கி ஏங்கி அழவும் அம்பி மதினிதேன் எனக்கு பாலு கொடுத்தாக.. அதனால அவுகளுக்கு எம்மேல ஒரு தனி பாசம்” என்று கூற,
தன்னவளைப் புன்னகையோடு பார்த்தவன் அவன் கன்னம் பற்றி நெற்றி முட்டிவிட்டு, “நீ போய் சாப்பிடு.. நாங்குளிச்சுபோட்டு வாரேன்” என்று அனுப்பி வைத்தான்.
மனதில் அவள் மீதான அக்குடும்பத்தின் பாசம் நெகிழச்செய்த அதே கணம், கண்களுக்குப் புலப்படாத மெல்லிய தாழ்வுமனப்பான்மை என்னும் திரையும் வளரத் துவங்கியிருந்தது!
-தொடரும்...
நாணல்-22
மாலை வேளை சற்றே சோகமாய் அமர்ந்திருந்த பொற்றாமரையாள், ‘இப்ப இவுகள மலையிறக்க என்ன செய்யுறது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
முந்தைய நாள் மாலை இருவரும் படித்த ஒரு புத்தகத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையில் இருந்தனர். கணவன் மனைவியான நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே நாயகனது தாயின் அதீத பாசம் நடத்தும் சச்சரவுகளை அக்கதை கூறியிருக்க, அதுகுறித்த வாதமே இருவரிடமும்!
'அவுக பண்ணது சரினு சொல்லலை.. ஆனா எந்த அம்மாக்கும் அவுகதேன் அவுக மவன அதிகம் புரிஞ்சுக்கனுமுனு ஆசையிருக்கும்' என்று அவள் கூற,
'அதேமாதிரி தானே மனைவியும் தன் கணவனை அதிகம் புரிஞ்சுக்க ஆசைப்படுவா?’ என்று கேட்டான்.
'அது சரிதாங்க.. அதுக்காக அந்த அம்மாவைப் பாத்து இவ தாழ்வுமனப்பான்மைய வளத்துக்குறது சரியா?’ என்று இவள் பேச,
'அவளோட சூழ்நிலைல யோசி யாழ்..’ என்று அவனும் வாதிட்டது இறுதியில் இருவருக்குள்ளும் சண்டையில் முடிந்தது.
கதையில் வரும் கதாபாத்திரங்களுக்காக இவர்கள் சண்டைபோட்டுக்கொள்வதொன்னும் புதிதல்ல.. ஆனால் ஆதியின் மனம் கதைக்காக மட்டுமேயல்லாது தன் மனதில் அவனே அறியாது வளர்ந்த மெல்லிய உணர்வுக்கும் சேர்த்தே வாதிட்டிருந்தான். அது தெரியாத தாமரையாளும் அக்கதையின் தாய் கதாபாத்திரத்திலிருந்து யோசித்தவளாய் அவனோடு வாதமிட்டாள்.
மேலும் தன் கருத்தை எப்படியேனும் அவன் புரிந்து ஏற்றுவிட வேண்டுமென்ற எண்ணம் வேறு அவளுள் தோன்றியதன் விளைவாய் இருவருக்கும் வாதம் முற்றி சண்டை வந்து தனித்தனி அறையில் துயில் கொள்ளும்படி சென்றது!
மறுநாள் காலையும்கூட இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு வேலைக்கு சென்றுவிட, நேரம் செல்ல செல்லவே தனது தவறை பெண் உணரத்துவங்கினாள்.
அவனிடம் அவ்வப்பொழுது அனுப்பி பதிலாய் பெறும் கவிதை குறுஞ்செய்திகள் இல்லாது அந்நாள் நகர்வேனா என்று சண்டித்தனம் செய்தது.
மதியம் மேல், உண்ணும் உணவு கூட உட்செல்ல மறுத்ததைப்போன்று தொண்டையை அடைத்தது! பேசிய வார்த்தைகள் எல்லாம் மனதில் வந்து போக, “ப்ச்.. ஒரு கேரெக்டருக்குபோய் இம்பூட்டு சீரியஸா ஒரண்டை இழுத்திருக்க வேணாம். அதே தப்பைதேன் மறுபடி பண்ணிருக்கேன். ஒரு கதை படிச்சா ஆயிரம் பேத்துக்கு ஆயிரம் விதமா கருத்துக்கள் தோனும்.. என் கருத்துதேன் சரினு அவுகளை ஒத்துக்க சொல்றது எந்த வகையில நாயமா படும்? ச்ச!” என்று தன்னையே நொந்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தாள்.
அவனை எப்படி சரிகட்டுவதென்று புரியாது விழித்தவள் சட்டென பெற்ற யோசனையோடு சமையலறை சென்றாள்.
அவனுக்குப் பிடித்த மசால் தோசையை செய்வதற்கான அனைத்தையும் ஆயத்தமாக்கினாள்.
வீடுவந்து சேர்ந்தவனோ அவள் சமையலறையில் மும்முரமாக வேலை செய்வதை கண்டு அறைக்குள் சென்றுவிட,
'இன்னும் கோவம் போலாட்ருக்கு’ என்று மனதோடு வருந்தியவலாய் வேலையை செய்தாள்.
முறுக முறுக நெய் ஊற்றி மசால் தோசையை வார்த்து எடுத்தவள், அதன்மேல் ‘sorry’ என்று காய்கறிகளின் துருவல் கொண்டு வடிவமைத்தாள்.
ஆடவனும் அறைக்குள்ளிருந்து வெளியே வர, அவன் அருகே சென்றவள் பாவம் போல் முகத்தை வைத்துக் கெண்டு தட்டை அவன் புறம் நீட்டினாள்.
அவள் செய்த முயற்சிகளைப் பார்க்க அவன் இதழோரம் வெடித்துவிடும் சிரிப்பு துடித்துக் கொண்டு நின்றது!
ஆனால் அவனோ முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு தட்டை வெடுக்கென வாங்கி அவள் ‘சாரி’ என எழுதியதை அழித்தவனாய் தோசையை பிட்டு உண்ணத் துவங்கினான்.
அதன் ருசி அவனை எங்கோ அழைத்துச் சென்று அவள் கரங்களில் சரண்புக வைத்திடத்தான் தூண்டியது… அத்தனை எளிதில் தன்னிலை விட்டுக்கொடுத்திட யாருக்குத்தான் இங்கே மனம் வருகிறது?
அவள் முகமே வாடிவிட, ‘என்ன பொசுக்குனு பண்ணிபுட்டாரு? எம்புட்டு ஆசையா பண்ணேன்.. சூப்பருனு சொல்லிபோட்டாவுது சாப்பிட்டா என்னவாம்?’ என்று மனதோடு அவனை வறுத்தெடுத்தவள் சமையலறைக்கு சென்று அடுத்தடுத்த தோசைகளை வார்த்து முடித்து அவன் தட்டில் தோசை தீரத் தீர இட்டுக்கொண்டிருந்தாள்.
நான்கு தோசை உள்ளே செல்லவும் தட்டுடன் சமையலறை சென்றவன் அதனை கழுவி வைத்திட்டு நகர, “பேசமாட்டீகளாக்கும்?” என்று கேட்டாள்.
அவளை ஏறிட்டுப் பார்த்தவன் மௌனமாய் நகர முற்பட, “நாந்தேன் தப்பு.. மன்னிச்சுபோடுங்க.. இனிமே இப்படி சண்ட போட மாட்டேன்” என்று கூறினாள்.
“இதயே நீ ஏற்கனவே ஒருமுறை சொன்னதா நெனவு” என்று அவன் கூற,
“தப்புதேன்.. இனியும் மறுக்கா இப்படி பண்ண மாட்டேன்” என்றாள்.
தனது தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பதும் ஒருவகை கர்வம் தான்! அதில் தன்னவளின் நிமிர்வை ரசித்தவன் பேசாது மௌனம் காக்க,
“இப்பநான் என்ன பண்ணா பேசுவீங்க?” என்று சத்தமாகக் கேட்டாள்.
அவள் சத்தமாக பேசியப்போதும் குரல் லேசாய் கமரியதோ என்று அவன் எண்ணும் வகையில் அவள் குரல் பிசிறு தட்ட,
“சொன்னா செஞ்சுடுவியா?” என்றான்.
“செஞ்சா பேசிடுவீகளா?” என்று அவள் பதில் கேள்வி கேட்க,
சிரித்தபடி இழுத்து அவளை அணைத்துக் கொண்டான்.
“ப்ச்.. போய்யா..” என்று அவன் சட்டையில் முகம் புதைத்தவள் துளிர்த்துவிட்டக் கண்ணீரை அதில் துடைத்துக் கொள்ள,
“போய்யானுட்டு கட்டிபுடிச்சுகிடுதீகளே பொஞ்சாதி” என்றான்.
அதில் சிரித்துக் கொண்டவள் “சாரி” என்க,
“நானும் மன்னிப்புக் கேட்கனும். கதைக்காக கொஞ்சம் அதிகமா கத்திட்டேன்” என்று கூறினான்.
“ம்ம்.. நம்ம ரெண்டு பேரும் கதை படிச்சேதான் முட்டிக்குறோம்” என்று அவள் கூற,
“இட்ஸ் காமன்டா.. ஆனா அதோட விளைவை நாம பெருசு பண்ணாம இருந்துக்கனும்” என்றான்.
அவனை அணைத்தபடியே “மூன் ரைட் போலாமா?” என்று அவள் ஆசையாய் வினவ, அதற்கு மறுப்பு தெரிவித்திட இயலுமா அவனால்?
வண்டி சாவியை எடுத்துக் கொண்டவன் அவளுக்கு உணவூட்டி உண்ண வைத்திட்டு அழைத்துக் கொண்டு பறந்திருந்தான்.
சில்லென்று காற்று இருவரது மேனியையும் ஊசியாய் துளைக்க, அதில் மேலும் அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “இப்படியே நாம மட்டும் போயிட்டே இருக்கலாம் போல இருக்குல?” என்றாள்.
காதலனாய் ஒரு கர்வப் புன்னகை சிந்தியவன், தன் தோள் தாங்கிய அவள் தலையை முன்னிருந்தபடி லேசாய் கோதிவிட்டான்.
கடற்கரையில் வண்டியை நிறுத்தியவன் அவளுடன் அந்த மணலில் கால்கள் புதைய நடந்தான்.
அத்தருணம் அத்தனை கவித்துவமாய் அவளில் பதிந்தது! ஊடலுக்குப் பின்னே நிகழும் இணக்கத்தின் சுகம் அனுபவிப்பவருக்கே புரியும்! அத்தனை இதமான நிலையில் இருவரும் பால்டகளை ஒலிக்கவிட்டபடி நடந்தனர்.
கடல் அலைகளின் அழியாத ஓசை, வானில் பவனிவரும் வெள்ளி நிலவின் ஒளி, கடல் குளுமையை களவாடிக்கொண்டு வந்து மேனியில் முத்தமிடும் தென்றல், கொண்டவனின் நேசம்மிகுந்த கரங்களின் ஆத்மார்த்தமான பிணைப்பு, இருவருக்குமான ஆழ்ந்த தனிமை, அவர்கள் மனதிற்கினிய பாடல், அவர்களால் பிறந்து அவர்களோடு வளரும் அவர்களின் காதல்! வேறென்ன வேண்டுமென்று தோன்றிவிடும் அத்தருணத்தில்!
‘'ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…’
என்ற வரிகள் அவள் செவியில் நிறைக்க, பதறிக் கொண்டு துயில் கலைந்து நிகழ்வுக்கு வந்தாள் தாமரையாள்!
அண்ணன்களுடன் சண்டையிட்டு வந்து படுத்த ஒருமணி நேரம் அவளுக்கு ஒரு யுகத்தைப் போன்ற உணர்வை கொடுத்தது!
கனவில் கேட்ட பாடல் நிகழ்விலும் கேட்பதை உணர்ந்தவள் சுற்றிமுற்றிப் பார்க்க, அவள் அறையிலுள்ள தொலைகாட்சி கட்டிலில் அவள் காலுக்கடையில் கிடந்த ரிமோட்டினால் உயிர்ப்பெற்றிருப்பது தெரிந்தது!
அந்த பாடல் அவளை என்னவோ செய்தது! 'உயிரின் மூலத்தை பாதிக்குமா?’ என்ற வரிகள் அவள் உயிரின் ஆணிவேரையே அசைத்த உணர்வு!
அவனுடன் கழித்த அந்த இரவு ‘இவ்வுலகமே தன் கைவிட்டுப்போனாலும் போகட்டும் என்னவன் போதுமே!’ என்று உணர்வை உள்ளூர பாய்ச்சியதன் பாதையெங்கும் இன்று பசுமை திரிந்து பாலையாகி வெம்பி வெடித்ததைப் போன்ற வேதனை.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே படுத்தவள் வெம்பி கரைத்தாள். “நா..நான்.. அப்படி பேசிருக்கக் கூடாதுங்க.. நா..நான் தப்புப் பண்ணிட்டேனே? எங்கண்ணே கூப்பிடயிலேயே நாந்தான் தப்புப் பண்ணவனு அவுக கைய உதரிட்டு உங்க கால்ல விழுந்துருக்கனுமே! இ..இன்னிக்கு இப்படி துடிக்குதே இந்த மனசு..” என்று கதறியவள் அன்று பேசிய வார்த்தைக்கு இன்று ஆயிரமாம் முறையாய் கண்ணீர் சிந்தினாள்.
வாட்போரைவிடவும் வலிமிகுந்தது சொற்போர் என்று அறிந்த இருவருமே அதை செய்து ஒருவரை ஒருவர் ரணப்படுத்திக்கொண்டனர்.
காயப்பட்டதற்காக விடவும் காயப்படுத்தியதற்காகவே வருந்துகின்றனர்…
முதலில் சண்டையைத் துவங்கியதும் தன் வார்த்தைகளால் அவளை வதைபடச் செய்ததும் அவனே! எனினும் கூட, அவன் பேசியதால் தான் தானும் பேசி வதைப்படுத்திவிட்டேன் என்று ஒருபோதும் அவள் எண்ணவில்லை! வார்த்தைக்கு வார்த்தை வலி கொடுப்பதில் பழி தீர்த்துக்கொள்ள இருவரும் பகைவர்கள் அல்லவே! காதலில் திழைத்து, காதலால் இணைந்த கணவன் மனைவியராயிற்றே!
அவன் வீசிய சொல்லுக்கு வதைபட்டவள் அதற்காக அவனை மீண்டும் வார்த்தைகளால் தண்டிப்பது தான் கொண்ட நரக வலியை தானே அவனுக்கும் கொடுப்பதாயிடுமே என்று அறிந்தமையால் தான் பேசிய வார்த்தைகளுக்கு இன்றும் மனம் நொந்து கரைகிறாள்.
தன் மடியில் சுமக்கும் நெருஞ்சிப்பழங்கள் குத்திக் கிழிப்பதன் வேதனை தாளாமல் அலைபேசியை எடுத்தவள் ‘ஈஸ்வர் மாமா’ என்று பதிவு செய்திருத்த அவன் பெயரை தட்டச்சு செய்தாள்!
'ஈஸ்வர் சீனியர்' என்று அவள் பதிவு செய்த பெயர், அவன் ஆசையாய் கேட்டதற்கு இணங்க ‘ஈஸ்வர் மாமா' என்றான தருணத்தை அவள் மனம் மெல்ல திருப்பிப் பார்த்தது!
இருவருமாய் கூடிக் களித்து எழ மனமின்றி மெத்தையில் படுத்திருந்த தருணமது! அவர்களின் அழகியதோர் ஞாயிற்றுக்கிழமை!
“ஏங்க.. இந்த மாச வரவு செலவெல்லாம் எழுதி வச்சேனே பாத்தீகளா?” என்று அவன் நெஞ்சில் தலைவைத்து அவன் ஸ்வாச இசையை ஆழ்ந்து ரசித்தபடியே அவள் கேட்க,
“ம்ம் பாத்தேன்டா.. போன மாசம் விடவும் இந்த மாசம் செலவு கூடிபோச்சுதோ?” என்று கேட்டான்.
“ம்ம்.. கொஞ்சம் கூடிருக்குது..” என்று அவள் கூற,
“பரவாலடா.. எப்படினாலும் உன் சம்பளம் கை வைக்காம அப்படியேதானே பேங்க்ல போட்டு வைக்குதோம்” என்று கூறினான்.
“அதுக்காக அலட்சியமா இருக்கக்கூடாதுங்க. ஆசைக்கு பண்ணுறதா இருந்தாலும் வெட்டிச் செலவாயிடக்கூடாதே” என்று தாமரையாள் கூற,
“சரிங்க மகாராணி. இனிமே பாத்து செலவு செஞ்சுபுடலாம்” என்றபடி அவள் காதோரம் குறுகுறுப்புக் காட்டினான்.
அதில் சிறுபிள்ளையாய் கிளுக்கிச் சிரித்தவள், “வீடு வாங்க எம்புட்டு காசுங்க ஆகும்?” என்று கேட்க,
“இடமா வாங்கி அங்க நம்ம இஷ்டபடி வீடு கட்டனும்னா எப்படியும் கோடிகனக்குல ஆகும்டா” என்று கூறினான்.
“என்னது?” என்று பதறி எழுந்தவள், “அவ்வளவு ஆகுமா?” என்று கேட்க,
லேசாய் சிரித்தவன், “ஆகாதா பின்ன?” என்றான்.
“அப்ப வீடா வாங்குறதுனா?” என்று அவள் கேட்க,
“இடத்தைப் பொறுத்து மாறும்டா.. அப்பார்ட்மென்ட்ல வாங்கனும்னாலே நிறையா ஆகும். ஆனா எனக்கு தனி வீடா வாங்க ஆசை. சிட்டி அவுட்டர்லனா முப்பதஞ்சுலருந்து நாப்பது லட்சம் ஆகும். சிட்டிக்குள்ளனா அம்பது லட்சம் மேல ஆகும். டபுள் பெட்ரூம்னா அம்பத்தஞ்சு லட்சம் மேல வரும். புது ஃப்ளாட்னா எம்பது லட்சம் மேல ஆகும்” என்றான்.
தலை சுற்றாத குறையாக அவனைப் பார்த்தவள், “என்னங்க அசராது இத்தன லட்சமுனு சொல்லுதீக?” என்று கேட்க,
“நீ என்ன பத்து ரூவாயிக்கு பப்பரமிட்டாய் வியாபாரம்னு நினைச்சியா இதை? நான் சின்ன வயசுல பார்டைம் ஜாப் பண்ணி படிக்கும்போதுருந்தே இதுபத்தி விசாரிச்சு காசு சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன்” என்றான்.
“நிஜமா இத்தனை லட்சம் நான் எதிர்ப்பார்க்கவேயில்லைங்க” என்று அவள் கூற,
“அதுசரி.. கோடீஸ்வரி உனக்கு லட்சத்தைக் கண்டா அச்சமாக்கும்?” என்று கேட்டான்.
உண்மைதானே? அவள் வீட்டில் அவள் அண்ணன்கள் நினைத்தால் போதுமே புதிதாய் ஒரு வீட்டை வாங்கி பரிசாய் கொடுத்திட! ஆனால் அதற்கு இருவருமே ஆசைப்படுவுமில்லை, அதை ஏற்க தயாருமில்லை!
“கோடீஸ்வரியெல்லாம் என் அண்ணனுங்களுக்குதேன்.. எம்புருஷனுக்கு பொண்டாட்டியாதேன் இப்ப நான் என்னை யோசிக்குதேன்.. எனக்கு நிஜமா இதை கேட்க ஷாக்கா இருக்கு” என்று அவள் இயல்பாய் கூற,
அவன் மனம் சற்றே தன் தரத்தை அவள் அண்ணன்களுடன் ஒப்பிட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டது!
“அப்ப எத்தன வருஷமாகும் நாம வீடு வாங்க?” என்று அவள் கேட்க,
“கொஞ்சம் காசு சேந்ததும் லோன் போட்டு வாங்கி கொஞ்ச கொஞ்சமா அடைச்சுக்கலாம்” என்றான்.
“இல்லங்க.. வேணாம்.. நமக்கே நமக்குனு நாம வாங்குறது.. கடன்பட்டு வாங்க வேணாமே” என்று அவள் கூற,
“அப்படினா ஆறு ஏழு.. இல்ல பத்து வருஷமாச்சு ஆவும்டா” என்று கூறினான்.
வீடு வாங்குவதைப்பற்றிய பகுத்தறிவு ஏதும் இல்லாதமையால் தாமரையாளுக்கு இதில் இத்தனை விடயமிருக்குமென்பது ஆச்சரியமாகத்தான இருந்தது!
அவள் யோசனையான முகம் கண்டு, “என்னடா?” என்று அவன் கேட்க,
“எத்தனை வருஷமானாலும் ஆட்டும்.. நாம வீடு வாங்குறோம்” என்று உறுதியாய் கூறினாள்.
அதில் மெல்ல புன்னகைத்தவன், “வாங்கிடுவோமுங்க ராணி” என்று கூற,
அவன் பாவனையில் சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “சீனியருக்கு எழ மனசில்லாட்ருக்கு?” என்றாள்.
அதில் சிரித்தவனோ, “உங்கூருலலாம் புருஷன மாமானுதானே கூப்பிடுவாக?” என்று கேட்க,
“எல்லாருமெல்லாம் அப்படி கூப்பிட மாட்டாக.. ஒறவுகாரவள கல்யாணம் முடிச்சாதேன் மாமானுலாம் கூப்பிடுவாக. விஜியண்ணி எங்களுக்கு தூரத்து சொந்தம்.. அண்ணே மாமா முறைக்கு வருமுனு அவுக மட்டும் அண்ணேன மாமானு கூப்பிடுவாக” என்று கூறினாள்.
“இன்னும் என் நம்பர சீனியர்னுதான் சேவ் பண்ணிருக்கியா?” என்று அவன் கேட்க,
“ஆமா..” என்றவள், “ஏங்க.. உசிலம்பட்டி பாடுங்களேன்” என்று ஆசையாய் கேட்டாள்.
அவர்களது முதல் சந்திப்பின் ஆதாரமாயிற்றே அப்பாடல்!
அவள் கேட்டு மறுத்திட இயலாதவன்,
“ரெண்டு பேரும் பாடுவோம்..” என்றுவிட்டு, “கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா?” என்க,
“மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா?” என்றாள்.
“அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா”
“மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா”
“மயிலே மயிலே இறகொண்ணு போடு”
“தானா விழுந்தா அது உம் பாடு”
“இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்..” என்று பாடி முடித்தான்.
“சரி நீ கேட்டாப்ல பாட்டு பாடிட்டேன்ல.. என் பேர மாமானு சேவ் பண்ணேன்” என்று அவன் ஆசையாய் கேட்க,
“மாமாவா?” என்று சிரித்தாள்.
“ஆமாடி.. ஒருக்கா மாமானு கூப்பிடேன்” என்று அவளை அணைத்தபடி அவன் கேட்க,
“என்னங்க இது?” என்று சிரித்தாள்.
“ப்ச்.. என்ன உனக்கு? மாமானு தானே கூப்பிட கேட்குறேன்” என்று அவன் செல்லமாய் கோபம் கொள்ள,
“சரி சரி..” என்றவள் அவனைப் பார்த்து “ஈஸ்வர் மா..மா” என்று நாணம் மேலிட அழைத்தாள்.
அனைவருக்கும் ஆதியானவன் அவளுக்கு மட்டும் மனதில் ஈஸ்வராக பதிந்திருப்பது அவளது இந்த அழைப்பில் தெரிந்தது.
அரிதிலும் அரிதாய் கிடைக்கும் சில இன்பங்களின் சுகம் சொல்லில் வடித்திட இயலா இதய சிற்பங்கள்! அதை அணு அணுவாய் உணர்ந்தவன், அவள் காதோரம் தன் மூச்சுக்காற்று உரச, “சில்லுனு இருக்குடி” என்று கூற, மீண்டும் அரங்கேறிய கூடலில் திழைத்து எழுந்தவள் அவன் ஆசைப்படி ‘ஈஸ்வர் மாமா' என்ற பெயரையே அவன் அலைபேசி எண்ணிற்கும் சேமித்துக் கொண்டாள்.
அப்பொன்னான நினைவுகளிலிருந்து மீண்டவள் கண்களை அழுந்த மூடித் திறந்து அவனுக்கு அழைத்தே விட, எதிர்முனையில் கையில் தன்னவள் அழைப்பைத் தாங்கி ஒலிக்கும் அழைப்பேசியை கண்களில் நீருடன் பார்த்தவன் அதை அப்படியே அணைத்து தன் சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டான்.
-தொடரும்...
நாணல்-23
இரண்டு முறை அழைத்துப் பார்த்தவள் அவன் அழைப்பை ஏற்காகததில் கோபமும் வலியும் ஒருசேர அனுபவித்தாள்.
அவனை பிரிந்திருந்த நொடிகள் அனுபவித்த வலிகளைத் திரட்டி ஆயிரமாய் பெருக்கி, அவள் அகத்தில் ஆழ குழி தோண்டி அழுந்த புதைத்து வைத்ததைப் போன்று நெஞ்சம் விம்மி வெதும்பியது!
“ஏன் எடுக்க மாட்றீக? ஒருமுறை எடுத்துப் பேசுங்களேன்..” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள், ஆனால் அவன் அதைப் பார்க்கவுமில்லை பதிலுமில்லை!
வலித்தது! வலியைத் தாங்க முடியாமல் செழிலனுக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்ற செழிலன் பேசும் முன் கண்ணீரோடு அறற்றும் குரலில், “அவரு எங்கடே?” என்று கதறினாள்.
அப்படியான அவளது கதறும் குரல் செழிலனுக்குப் புதிது! அந்த குரல் உமிழ்ந்த வேதனை அவனை வந்து தீயாய் சுடுவதைப் போன்று அவனுக்கே தோன்றியது!
“அ..அத்தே..” என்று அவன் குரல் கமற அழைக்க,
“பேசச் சொல்லுடே.. நெஞ்சே வெடிச்சுடும் போல வருது” என்று கூறினாள்.
செழிலன் “அத்த..” என்று பேசத் தெரியாத குழந்தையாய் தடுமாற,
“நான் தப்புப் பண்ணிட்டேன்டே.. நாந்தேன் தப்பு.. மன்னிப்புக்கேட்கனும்டே.. ஃபோன எடுக்கச் சொல்லுடே” என்று அவள் கதற,
“அத்தே.. நாங் கிளம்பிட்டேன் அத்தே அங்கிருந்து” என்று செழிலன் கூறினாள்.
“அய்யோ..” என்ற முனகலோடு தலையில் தட்டிக் கொண்டவள் அலைபேசியை அப்படியே போட்டுவிட்டு வெடித்து அழுதாள். கட்டிலில் இருகரம் கொண்டு தட்டியபடி அழுதவள், “சாரிங்க.. எ.. என்னால தான்.. நாந்தேன்” என்று கரைந்தாள்.
அலைப்பேசியை எடுத்து அவன் தான் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டானா என்று பார்வையிட்டவளுக்கு புலனத்தில் அவன் நிலைபாடு வைத்திருப்பது தெரிந்தது.
கரம் நடுங்க அவள் அதைத் தொட, ‘அவள்மீதான நேசம்
நெஞ்சில் வெடித்து விம்முவது தான்
காதலெனும்போது,
தீப்பிழம்பாய் அவற்றை சுட்டெரிக்கும்
வலிகளின் ரணம் சுமக்கும்
இப்பிரிவின் துயரை
ஏன் இவ்விதி பரிசளித்தது?’ என்ற கவிதையும் அதனுடனே அவர்களுக்கு மிக நெருக்கமான பாடலும் ஒலித்தது!
‘மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா’ என்ற பாடல் அவ்வரிகளோடு சேர்ந்து ஒலிக்க, அவள் அலைபேசியையே அசைவற்றுப் பார்த்தாள்.
கண்களிலிருந்து கோடாய் கண்ணீர் வழிய, உள்ளுக்குள் என்னவோ உடைந்து மீண்டும் உருவம் பெறத் துடிப்பதைப் போன்ற உணர்வு எழுந்தது பாவைக்கு!
அன்றைய நாள்.. இருவருமாய் சேர்ந்து இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தனர்.
அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த பாட்டை அணைத்த ஆதிவருணேஸ்வரன், “பாட்டு கேட்டது போதும்.. பாடுவோம்டி யாழூ..” என்றான்.
அது அவர்களுக்குள் வாடிக்கையாய் நடப்பது தான்! ஆதி நன்றாகவே பாடுவான். தாமரையாளுக்கு அந்தளவு பாட வராது. ஆனால் ஒருவர் பாடும் திறனை மற்றவர் கேலி செய்யாது அவர்கள் இருவருக்குமான நேரங்களில் வருவதைப் பாடி வரிகளின் பொருளைப் பரிமாறித் தங்கள் நேசம் வெளிப்படுத்திடுவர்!
மெல்லிய சிரிப்போடு “என்ன பாட்டு பாடலாம்?” என்று அவள் கேட்க,
“என்னவோ என்னவோ.. என் வசம் நானில்லை” என்று மேடையில் முழங்கை ஊன்றி அதில் தன் கன்னம் தாங்கி, அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே பாடினான்.
“என்ன நான் சொல்வது? என்னிடம் வார்த்தையில்லை..” என்று அவள் அடுத்த வரியினை பாட,
மெல்லிய சிரிப்போடு கண்ணடித்தான்.
“உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்..”
“உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்..”
“என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ…”
“பிரியமானவனே…”
என்று அவனும் அவளும் மாறி மாறி பாடினர்.
மேலும் தான் தொடர்ந்தவன், “மழைதேடி நான் நனைவேன்.. சம்மதமா சம்மதமா?” என்க,
“குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?” என்றாள்.
அவள் கரம் பற்றியவன் “விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா?” என்று பாடி கடிப்பதைப் போல் பாவனை செய்ய,
“நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா?” என்று அவன் கன்னம் தட்டினாள்.
அவளை சுண்டி இழுத்துக் கொண்டவன் “விடிகாலை நேரம் வரை என் வசம் நீ சம்மதமா?” என்க,
அத்தனை நேரம் இருந்த இயல்பு தொலைந்தவளாய் அடுத்த வரி பாட நாணம் தடுக்க அவனையே பார்த்து நின்றாள்.
ஒற்றை புருவம் உயர்த்தி “ம்ம்..” என்று அவன் ஊக்கப்படுத்த,
“இ.. இடைவேளை வேண்டுமென்று இடை கேட்கும் சம்மதமா?” என்று பாடினாள்.
அதில் அட்டகாசமாய் சிரித்தவன், “நீ பாதி நான் பாதி.. என்றிருக்க சம்மதமா?” என்க,
“என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா?” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
அமைதியான இதமான அணைப்பு!
இறுகி அணைக்கும் அணைப்பு வெளிப்படுத்தும் தவிப்பையும் தாபத்தையும் போல், இதமான அணைப்பு வெளிப்படுத்தும் உள்ளார்ந்த நேசமும் பேரழகு தானே!
ஆதி, “என்ன மேடம்.. சமையல் செய்யுற மூட் போச்சு போல?” என்க,
பட்டென விலகியவள், “சும்மாருந்த புள்ளைய அதையும் இதையும் பாடி சீண்டிபுட்டு இப்பத பேச்சப்பாரு” என்று கூறி நாணத்தில் தன் நாவைக் கடித்துக் கொண்டாள்.
“ஆஹாங்?” என்றவன், “பாடும்போது வெட்கப்பட்டாப்ல இருந்தது?” என்று அவளைச் சீண்ட,
“ஆமா ஆமா.. வெட்கப்படுறாக..” என்று நொடித்துக் கொண்டவள் அலைப்பேசி ஒலித்தது.
அழைப்பது வேந்தன் என்பதைக் கண்டுகொண்டவள் அழைப்பை ஏற்று, “வேந்தா.. சொல்லுயா..” என்க,
“அத்தே.. நல்லாருக்கியா? மாமா எப்படிருக்காக?” என்று விசாரித்தான்.
“எனக்கென்னடே? ராணி போல இருக்கேன். அவுகளும் நல்லாருக்காக” என்று புன்னகையுடன் கூறியவள், “உம்பொஞ்சாதியும் வைத்துக்குள்ளார இருக்குற குட்டி வாண்டும் என்ன சொல்லுறாக?” என்று கேட்க,
“அவுக என்ன சொல்லப் போறாக? இப்பதேன் அம்மை வைத்துல உருள ஆரமிச்சுருக்காக.. ஒரு இடத்துல இருக்க மாட்றாளே..” என்று ரசித்துக் கூறினான்.
ஒலிபெருக்கி மூலம் அவன் பேசுவதைக் கேட்ட ஆதி, “என்ஜாய் டா மாப்ள..” என்க,
“தேங்ஸ் மாமா” என்று மனமார கூறினான்.
அதில் புன்னகைத்த தாமரையாள், “வேந்தா.. ஏதும் சேதியாடே?” என்க,
“ஆமாத்தே.. திலகாவுக்கு அஞ்சாம் மாசம் வளைபூட்டு வைப்போமாட்டுனு யோசிச்சோம்.. அதேன்.. உன்னையவே நா(ள்) குறிச்சு தரச் சொல்லி கேட்டுப்போமுன்னு கூப்பிட்டேன்” என்றான்.
“ஏன்யா.. வீட்ல அம்புட்டு பெரியவக இருக்காக.. என்னைய போய் கேக்குதியே” என்று தாமரையாள் கூற,
“என் கண்ணாலத்துக்கும் உன்னையத்தேன் அத்தே நா(ள்) குறிக்கச் சொன்னேன்.. எனக்கு நீ குறிச்சுத்தார நாளுதேன் ராசி.. எம்மவராசி சொகமா பிள்ளைப் பெத்தெடுக்கப்போற விசயம்.. உன் கைபட்டு துலங்குறதுதேன் எங்குலத்துக்கே நல்லது” என்று மனமார கூறினான்.
அவன் பேசியதை கண்கள் பனிய கேட்டவள், “நேருல இருந்தன்னா கட்டிகிட்டு ரெண்டு முதுகுலயே போட்ருப்பேன்” என்று சிரிக்க,
தானும் சிரித்தவன், “நா(ள்) பாத்து சொல்லுத்தே.. அவசரமில்ல.. பொறுமையா பாத்து பொறவு சொல்லு” என்றான்.
“சரியா.. பாத்து சொல்லுதேன்” என்றவள் அனைவர் நலன் குறித்து விசாரித்துவிட்டு வைக்க,
“நீ ஜோசியமெல்லாம் பாப்பியாடி?” என்று ஆதி கேட்டான்.
“இல்லிங்க.. நம்ம வீட்டாளுகளுக்கு நாம்பாத்து சொல்லுற நாளுலதேன் எது செஞ்சாலும் அது நல்லதா விளங்குமுனு ஒரு நம்பிக்கை.. அண்ணேங்க பழக்கத்த இதுகலும் பழகுது.. நான் வேந்தன விட வயசுல சின்னவ.. எனக்கு போட்டு கேட்கிறியான் பாருங்க” என்று அவள் கூற,
“அத்தைமேல அம்பூட்டு பாசம் அவனுக்கு” எனப் புன்னகையுடன் கூறினான்.
“பாருங்க.. எம்மருமவனுக்கு எம்மேல எம்பூட்டு பாசமுன்னு. நீங்க ஒருநா(ள்) இப்படி எங்கிட்ட கேட்டிருப்பீகளா?” என்று கேட்டு சிரித்தவள், “அதுசரி.. நம்ம வீட்டுல விசேஷம் வந்தாதானே நீங்க கேப்பீக?” என்று நாணச் சிரிப்புடன் கூறிவிட்டு சென்றாள்.
அதே இடத்தில் தேங்கி நின்றவனுக்குத்தான் அவள் கூறியதன் பொருள் விளங்காது தன் மனமாய் ஒரு பொருளை உருவகித்துக் கொண்டது!
'எனில் தன் பாசம் அவர்கள் பாசத்திற்கு ஈடு செய்யவில்லையா? தன்னவள் பிறந்த வீட்டிற்கு ஏங்குமளவு தன் பாசம் அவளை முழுமையடைய வைக்கவில்லையா?’ என்று அவனுள் பிறந்த தாழ்வுமனப்பான்மை எனும் அரக்கன் தன் வேலைகளை சிறப்பாய் செய்ய, விசேஷம் என அவள், தானும் கருத்தரிப்பதைக் குறிப்பிட்டது உணராது அவர்கள் வீட்டு கூட்டத்தில் அடிக்கடி விஷேஷங்கள் நடக்க இங்கு அப்படி ஏதுமில்லையென அவள் வருந்துவதாய் நினைத்துக் கொண்டான்.
அவளிடம் சண்டையிடவெல்லாம் தோன்றவில்லை.. அவளைத் தான் சரியாக பார்த்துக் கொள்ளவில்லையோ? என்று அவனது நேசம் அவளது அண்ணன்களின் நேசத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தே வருந்தினான்!
சில விடயங்களுக்கு ஆரம்பத்திலேயே சண்டையிடுவதும் நல்லதாய் அமையும் போலும்! இவ்வெண்ணம் தோன்றும்போதே அவன் அதை வெளிப்படுத்தியிருந்தால் நிச்சயம் ஊடலின் துயர் இருவருக்கும் உண்மைகளை விவரித்திருக்கும். காலதாமதம் இருவருக்கும் கடும் வேதனைகளை அல்லவா பரிசாய் கொடுத்திருக்கிறது!
நாட்கள் சில நகர, ஊடலும் கூடலுமாய் இருவரது வாழ்வு அழகோவியமாகவே சென்றது.
அன்று திலகாவின் ஐந்தாம் மாத விசேஷத்திற்கு வீட்டாரை மட்டும் வைத்து நடத்தும் விழாவிற்கு இருவரும் புறப்பட்டனர்.
தாமரையாள் வேலை செய்யும் நிறுவனத்தில் அவரவர் பணிக்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை மொத்தமாக ஐந்து நாட்கள் போல் விடுமுறைகள் வழங்குவர். அப்படி அவளுக்கு விடுமுறை கிடைத்திருக்க, ஆதியையும் விடுப்பு எடுக்க இயலுமா என்று கேட்டாள்.
ஆனால் அவன் பணி அப்படியானதில்லையே! அவனால் விடுப்பு எடுக்க முடியாது போகவும் பாவை முகம் சுருக்கினாலும் அவனை அதுகுறித்து நச்சரிக்கவில்லை!
திலகாவின் வளைபூட்டை விடுமுறை நாளில் வைத்திருப்பதால் அதற்குமட்டுமாக இருவரும் புறப்பட்டனர்!
செல்லும் வழியே அவன் தோள் சாய்ந்து கரம் கோர்த்து சாளரம் வழியே நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள், “ஏங்க..” என்று மெல்லமாய் அழைக்க,
நிலவை ரசித்துக் கொண்டிருந்தவன் விழிகள் நிலவவளை நோக்கியது!
“நமக்கும் பாப்பா வந்தா நல்லாருக்குமுல்ல?” என்று நாணமும் ஆசையும் கலந்த குரலில் மெல்லமாய் அவள் கேட்க,
அவள் தோளை சுற்றி கரமிட்டவன் “சூப்பரா இருக்குமே” என்றான்.
சுற்றி முற்றி பார்த்தவள் அவன் தோள் சாய்ந்து, “நாம தள்ளியே போடலை.. அப்றம் ஏன் இன்னும்?” என்று கேட்க,
அவள் தலை கோதியபடி “எல்லாத்துக்கும் நேரம் வரணும்டா கண்ணம்மா” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழகாய் புன்னகைத்து “வீராண்ணே என்னைய கண்ணம்மானுதேன் கூப்பிடுவாக” என்று கூற, தானும் அதில் புன்னகைத்துக் கொண்டான்.
“உங்களுக்கு என்ன பாப்பா வேணும்?” என்று சந்தையில் எந்த பொம்மை வேண்டுமென கேட்பதைப்போல் அவள் கேட்க,
பக்கென சிரித்தவன் சுற்றம் உணர்ந்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தினான். இரவு வேளை அனைவரும் உறங்கியிருந்தனர் அந்த ரயிலில்!
“ஏன் சிரிக்கீக?” என்று அவள் முறைக்க,
முன்னுச்சியில் மோதுமவள் கார்குழலை காதுமடலுக்கு நகரத்தி அவள் கன்னம் தாங்கியவன், “அதெல்லாம் உன் கைல இல்ல” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினான்.
“ப்ச்.. சும்மா தானே கேட்கேன்.. சொல்லுங்களேன்” என்று தாமரையாள் சிணுங்கலாய் கேட்க,
“எனக்குனு ஒரு குடும்பம்.. அதுவே எனக்கு சந்தோஷம் தான் யாழ்.. நமக்கே நமக்காக நம்மால நம்ம உணர்வுகளால, நம்ம கடமைகளையும் நேசங்களையும் உருவாக்க பிறக்கப்போகும் குழந்தை ஆணா இருந்தா என்ன? பெண்ணா இருந்தா என்ன? எந்த குழந்தையா இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்” என்று கூறினான்.
அவன் கூற்றில் கண்கள் பனியப் பெற்றவள், “லவ் யூ ஈஸ்வர் மாமா” என்று கிசுகிசுக்க,
அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளைத் தன் மார்பில் புதைத்துக் கொண்டான்!
இனிமையான பயணம் அவர்களை அந்த கூட்டிற்கு அழைத்துச் செல்ல, நடுநசி தாண்டி வீடு வந்தவர்கள் சென்று அவர்கள் அறையில் உறங்கிவிட்டனர்.
காலை, நேரமே எழுந்த இருவரும் அழகுபட தயாராகிக் கீழே வர,
“அட ஐத்த.. மாமா.. எப்ப வந்தீக?” என்று ஆர்ப்பாட்டமாய் ஓடி வந்தாள் காயத்திரி!
“ராவுக்கே வந்துட்டோம் புள்ள” என்று அவள் கன்னம் தட்டி தாமரையாள் கூற,
“என்ன மாமா.. இளைச்சு போனாப்புல இருக்கீக? ஐத்த சோறு சரியில்லயோ?” என்று கேட்டாள்.
அதில் தாமரையாள் அவளை முறைக்க, வாய்விட்டு சிரித்த ஆதி, “உங்க ஐத்த சாப்பாட்டுக்கு குறையுண்டா?” எனக் கூறி, “ஏன்டா என் சோத்துல மண்ணள்ளி போடப்பாக்குற?” என்று அவள் காதோரம் முனுமுனுப்பதைப் போல் சற்று சத்தமாகக் கூறினான்.
“ஏங்க..” என்று தாமரையாள் கோபம் போல் கூற, மற்ற இருவரும் கலகலத்து சிரித்தனர்!
“ஐத்த மாமா..” என்று அங்கே வந்த செழிலன் மற்றும் பொழிலன் ஆளுக்கொருத்தரை கட்டியணைத்துக் கொள்ள,
“எப்புட்ரே இருக்கீக?” என்று ஆதி கேட்டான்.
“எல்லாம் நல்லாருக்கோம் மாமா” என்று செழிலன் கூற,
“ஏடே.. போன முற நம்ம வயல்லருந்து சோளம் தந்தீகளே.. அசத்தலாருந்துது” என்று ஆதி கூறினான்.
“நீ சொல்லிபுட்டீல மாமா? அடுத்த மொற மூட்ட மூட்டையா இறக்குதோம்” என்று பொழிலன் கூற,
ஆருத்ரன் மற்றும் அங்கை வந்தனர்.
அங்கை ஆனந்த ஆர்ப்பரிப்போடு தாமரையாளை அணைத்துக் கொண்டு “சித்தி..” என்று உருக, அவள் நேசம் கண்ணீராய் கரைந்தது!
“ச்சூ.. என்னபுள்ள இது? நாளும் பொழுதும் காலையே கண்ணை கசக்கனுமானு உங்கத்தை வந்து வையப்போறாக” என்று செல்லமாய் கடிந்தபடி அவள் கண்ணீர் துடைத்த தாமரையாள் அவளை கட்டியணைத்துக் கொண்டாள்.
“எம்பொண்டாட்டி நானில்லாட்டா கூட இப்படி உருக மாட்டாத்தே” என்று ஆருத்ரன் கூற,
அங்கையின் செல்ல சிணுங்களைக் கண்டு சிரித்தவளாய், “ஏன்டே புள்ளைய ஓட்டுத?” என்று கடிந்தாள்.
“ஆமாத்தே.. ஒருநாளுக்கு இரு முறையானும் உம்பேரோ, உன்னைய பத்தின சேதியோ பேசிபோடுவா.. அம்பூட்டு பாசம்” என்று ஆருத்ரன் கூற,
“எம்மவளுக்கு எம்மேல பாசமிருக்காதாக்கும்?” என்றபடி அங்கை கன்னம் தட்டினாள்.
வீட்டின் மூத்தவர்கள் யாவரும் வேலையில் பரபரப்பாய் இருக்க,
“சரிசரி.. பேச்சோட போச்சா ஆளுக்கொரு காரியத்தை பாருங்க” என்று அனைவரையும் விரட்டிய தாமரையாள் அங்கை மற்றும் காயத்திரியை அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
வழமை போல் அவர்கள் வெகு குறுகிய நெருங்கிய சொந்தம் மட்டுமே வந்து அவ்வீட்டை நிறைக்க,
அனைவரும் ஒவ்வொரு புறமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
நல்லநேரம் நெருங்கவும் விழாவின் நாயகன் நாயகியாய் வேந்தனும் அவனது ஐந்து மாத செல்வம் தாங்கிய அவன் மனையாள் திலகாவும் வந்தனர். ஐந்தாம் மாதம், தெரிந்தோரை அழைத்து நலங்கிட்டு வளைபூட்டி நடத்தும் சிறு விழா அது.
பெங்களூரில் இருக்கும் அக்னிக்கு காணொளி அழைப்பு எடுத்த ஆதி, நடப்பவற்றை காட்சிகளாய் காட்ட, தானங்கு வர இயலாத வருத்தத்தில் கண்கள் பனிந்தபோதும் நடப்பதை ஆனந்தமாகவே கண்டான்!
ஒரு விசேஷம் என்று வந்தால் கலவரம் செய்வதற்கென்றே கிளம்பி வரும் சில மூதாட்டிகளில் ஒருவர் தாமரையாளையும் அவளையே ஒட்டிக் கொண்டு சுற்றும் அங்கையையும் தனியே அழைத்து வந்தார்.
“சொல்லுங்க ஆச்சி.. ஏதும் வேணுங்களா?” என்று அங்கை புன்னகையாய் உபசரிக்க,
“தாயிகளா.. ஆச்சி சொல்லுதேன்னு வெசனப்படாதீக” என்று பீடிகை போட்டவர், “பிள்ளத்தாச்சி உசுரு சம்மந்தப்பட்டது.. ரெண்டேரும் கண்ணாலமாகி நிறைய மாசமாயும் புள்ளையில்லாதிருக்கீக.. சபையில நாலு பேரு நாலு விதமா பேசுறப்போல ஆயிடாம இருக்க தள்ளியே இருந்துகிடுக.. ஒரு கண்ணபோல ஒரு கண்ணு ஆவாது.. எதாவதுனா ஊரு உங்களத்தேன் பேசும்” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல் பேசினார்.
அதில் அங்கையின் முகம் முற்றுமாய் வாடிவிட்டது! ஆனால் இவற்றுக்கெல்லாம் வருத்தம் கொண்டாள் அது நம் தாமரையாளாகிவிட இயலுமா?
“சரிதேன் ஆச்சி.. ஆனா பாருங்க.. இந்த குடும்பந்தேன் எங்களுக்கு சொர்க்கம்.. இந்த குடும்பத்து ஆட்கள் எல்லாம் எங்களை உசுரா நினைக்குறவக.. ஊரு என்ன பேசமோ, இல்லாததை பேசி நோகடிக்க பாக்குறவக ஏதும் பேசுவாகளோனு பாத்து எங்க குடும்பத்தாட்கள நோவடிக்க முடியாதுல்ல? பேசுற வாயி என்ன நடந்தாலும் பேசத்தேன் செய்யும்.. அதையெல்லாம் பாத்தா நாம எங்கருந்து நிம்மதியாருக்குறது? உங்க ஆலோசனைக்கு நன்றி ஆச்சி.. நாங்க போயி நலங்கு வச்சுட்டு வாரோம்” என்று தானும் பட்டாசாய் பதமாய் வெடித்தவள் அங்கை கரத்தைப் பற்றிக் கொண்டு இழுக்காத குறையாய் அழைத்து வந்தாள்.
வாடிய அவள் முகம் கண்டு, “அங்க சொன்னது அவிங்களுக்கு மட்டுமில்ல.. உனக்குந்தேன்.. படிச்ச பிள்ளையாட்டம் நடந்துகிடு அங்கை” என்று அதட்டலாகவே கூறியிருந்தாள்.
“அவுக என்னைய சொன்னத விடு சித்தி.. எங்க சாமி நீ.. உன்னைய போய் பேசுதே..?” என்று அங்கை வருந்த,
அவள் கன்னம் வருடியவள், “அங்க சொன்னதுதேன் புள்ள.. ஊரு வாயிக்கு பயந்து நான் ஒதுங்கி நின்னா வேந்தன் உக்கிபோவான்.. எனக்காக உயிரா நிக்குறவனைத்தேன் நான் நினைக்கனுமே தவிர ஒன்னுத்துக்கும் ஆவாத இவங்களபோல ஆக்களுக்கு இல்ல” என்று கூற,
“உன்னைய இன்னுமின்னும் பிடிக்குது சித்தி.. உன்னைய போலவே இருக்கனும்.. உங்கொணத்துல பிள்ளைய பெத்து வளக்கனும்” என்று அங்கை ஆசையாய் கூறினாள்.
“ஆஹாங்..” என்று அவளை கேலி செய்த அங்கை, அவளை அழைத்துக் கொண்டு வந்தாள்.
முதல் வளையலே வேந்தன் ஆசைப்படி தாமரையாள் தான் போட்டாள். அடுத்ததாக அவள் சொல்லுக்கிணங்க அங்கை வந்து போட, குடும்பத்து பெண்கள் யாவரும் வந்து அவர்களைத் தொடர்ந்தனர்.
விழா மிகுந்த கோலாகலமாய் நிகழ, அனைவரும் உண்டு வரவும் அதிவீரர் தாமரையாளிடம் பேசிய பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் முகம் காட்டிய கடினமான பாவனையைக் கண்ட ஆதி அருகே செல்ல, “வயசுல மூத்தவக நீங்க.. எங்கவீட்டு அடுத்தத் தலைமுறையோட முதல் உயிர தாங்கி நிக்கிற புள்ளையோட விசேஷத்துக்கு வந்துருக்கீக. வந்தபடி புள்ளைய மனசார வாழ்த்துவீகனு நம்புதோம். எப்போதும் நெருங்கிய ஆக்கலை மட்டுந்தேன் இப்படி சில விசேஷத்துக்கு அழைக்குறது. உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அழைக்குதோம், இனியும் அழைப்போம். ஆனா எங்கவீட்டு கொலசாமிய இன்னும் ஒருமுறை நீங்க ஏதும் பேசுனதா தெரிஞ்சா நாஞ்சும்மா இப்படி பேசிகிட்டு இருக்கமாட்டேங்க சித்தி. வந்ததுக்கு நன்றி” என அழுத்தமான குரலில் அமைதியாய் பேசி அதிவீரர் வணக்கம் வைப்பது தெரிந்தது!
‘யாழை என்ன பேசினாங்க?’ என்று யோசித்தபடி அவன் அருகே செல்ல, அவன் அரவம் உணர்ந்து பெரியவர் திரும்பினார்.
“என்னாசுங்க மச்சான்?” என்று ஆதி வினவ,
“ஒன்னுமில்லிங்க மாப்பிள்ள.. சாப்டீகலா?” என்று விசாரித்தார்.
“ஆச்சுங்க மச்சான். நீங்க சாப்டீகளா? தாத்தாவாகப்போற சந்தோஷத்துல சாப்பாட்டை மறந்துடாதீக” என்று புன்னகையுடன் ஆதி கூற,
வாய்விட்டு சிரித்தபடி அவன் தோள் தட்டியவர், “எல்லாம் ஆச்சுங்க மாப்பிள்ள” என்றார்.
அனைத்து வேலையும் முடிந்து அனைவரும் உறங்கச் செல்ல, உடை மாற்றி வந்த தன்னவளை தன் அணைப்பில் கொண்டுவந்தவன், “ஏன் யாழ்.. யாரும் உன்னைய ஏதும் சொன்னாகளா?” என்று கேட்டான்.
“ஏங்க? என்னாச்சு?” என்று அவள் வினவ, அதிவீரர் பேசியது குறித்து கூறினான்.
“அட அண்ணே பாத்துச்சாக்கும்?” என்று எண்ணியவள் அப்பாட்டி பேசியதையும் கூற,
அவள் கன்னம் வருடியவன், “எனக்கு உன்கிட்ட புடிச்சதே இந்த பாசிடிவிடி தான் யாழ்மா.. நீ சரியா பேசிருக்க” என்று கூறினான்.
“ம்ம்.. அங்கைதேன் மொகம் வாடிச்சு. ரெண்டு அதட்டு போட்டு அவளையும் வளை பூட்ட வச்சேன். இந்த அண்ணே எப்போ பார்த்துச்சோ? மருமவள விட்டுபோட்டு என்னையவேதேன் கவனிக்குறது” என்று கூறி சிரித்துக் கொள்ள,
“ம்ம்.. உங்க பீம சேன அண்ணன்கள் உன்னைய கவனிக்காம இருந்தாதேன் அதிசயம்” என்றான்.
கூறியவன் கூற்றில் மெல்லிய பொறாமை இலையோடியதோ? அவனுக்கே வெளிச்சம்!
-தொடரும்...
நாணல்-24
“ஏங்க.. ப்ளீஸ்.. கேட்டு பாருங்களேன்” என்று ஆதியிடம் கெஞ்சியபடியே அவனது உடுப்புகளை மடித்துப் பைக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள், தாமரையாள்!
“யாழ்.. நாந்தான் சொன்னேனே.. மித்தவக கேட்காக சரி.. எல்லாந்தெரிஞ்சே நீயும் கேக்குறியே?” என்று ஆதி கூற,
சற்றே முகம் வாடியவளுக்கு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருக்கும் உணர்வு!
இருவரும் வளைபூட்டு முடிந்த மறுநாள் மாலைக் கிளம்புவதாக இருந்த பயணம், தற்போது ஆதி மட்டுமே புறப்படுவதாய் உருமாறியிருப்பதே அவர்களின் தற்போதைய பேச்சு வார்த்தைக்கான காரணம்!
தாமரையாளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் அதைக் கூறி அங்கை அவளைத் தங்கும்படி கேட்க, மற்ற வாண்டுகளும் அவளுக்கு ஒத்து ஊதினர்.
“உங்க மாமாவுக்கு லீவில்லையேடா” என்று தாமரைக் கூற,
“அத்தை நீயாச்சும் இரேன் அத்தை” என்று துர்கா ஆசையாய் கேட்டாள்.
தாமரையாளுக்கு என்ன பதிலாற்றுவது என்று குழப்பமாய் இருக்க,
“உனக்கு லீவுதானே யாழ்.. நீ வேணுமின்னா இருந்துட்டு வா” என்று ஆதி கூறினான்.
அவனுக்கும் அவளை விட்டுச் செல்வது அத்தனை உவப்பான செயலில்லை தான் என்றாலும் அங்கு அவள் தான் இல்லாத நேரம் தனியே இருப்பதற்கு இங்கு இருந்துவிட்டு வருவது அவளுக்கும் பிடித்தமாக அமையுமே என்று யோசித்துக் கூறினான்.
“இல்லங்க… நீங்க.. உங்களுக்கு லீவில்லயே” என்று அப்போதும் அவனையும் இங்கு இருக்க வைக்க இயலுமா என்ற யோசனையோடே அவள் பேச,
“மாமாக்கு தானே ஐத்த லீவில்ல.. உனக்கு லீவு தானே? அவுக கிளம்பட்டும் நீ இரேன்” என்று காயத்திரி கூறினாள்.
“அப்ப உங்க ஐத்த மட்டும் போதும் உனக்கு?” என்று ஆதி பொய் கோபம் கொண்டு வினவ,
“மாமா.. ஐத்தக்கு லீவில்லாம இருந்து உங்களுக்கு லீவுனு வந்தாலும் நான் இதேதான் உங்கட்ட சொல்லிருப்பேன். நீங்களும் ஐத்தையும் வேறா சொல்லுங்க” என்றவள் கூற்றில் நிச்சயம் கேலி இல்லை! உண்மையான பாசமே நிறம்பியிருந்தது!
அதில் புன்னகைத்த ஆதி, “அங்க நான் வேலைக்கு போயிட்டா தனியாதானே யாழ் இருக்கனும்.. நீ இங்கனவே இருந்துபோட்டு வா” என்று அவன் கூறியிருக்க, அவளுக்கு அவனை தனியே அனுப்பவும் மனமில்லை, கிடைத்த விடுமுறையில் இங்கே இருக்கவுள்ள வாய்ப்பை விடவும் மனமில்லை!
யோசனையோடு அறைக்கு வந்தவள் அவனுக்கு துணி மடிக்க உதவியபடி அவனையும் விடுப்பு எடுக்கக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
முகம் வாட அமர்ந்திருப்பவள் அருகே வந்து அவள் முகம் தாங்கியவன், “என்னமா?” என்று கேட்க,
“இல்ல.. எனக்கு..” என்று தடுமாறினாள்.
“உனக்கு இங்க இருக்க ஆசை. ஆனா நான் அங்க தனியா இருப்பேனேனும் வருத்தம்” என்றவன் பார்வை ‘உன்னை எனக்குத் தெரியாதாடி?’ என்ற உணர்வை வெளிப்படுத்துவதாய்..
அவனை மெல்ல அணைத்துக் கொண்டவள், “ம்ம்..” என்க,
“நான் சின்னபுள்ளையா யாழ்? ஐ கேன் மேனேஜ்” என்றவனுக்கு அவளில்லாதமையால் தனக்காக தானே செய்துகொள்ளும் வேலையிலெல்லாம் சளிப்பில்லை.
ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் தன்னை வரவேற்பதற்கும், தனக்காக ஆசையாய் ஏதேனும் செய்து காதலை தேக்கிய உணவைக் கொடுப்பதற்கும், இரவு தன்னுடன் அன்றைய பொழுதுகளைக் கதைப் பேசுவதற்கும், சமையல் செய்யும் வேளை, பாட்டு பாடுவதற்கும், உடன் இணைந்து கதை படிப்பதற்கும் அவள் வேண்டுமே!
இருப்பினும் தன் ஒருவனின் தீரா காதலுக்காக மொத்த குடும்பத்தையும் விடுத்து ஒற்றை ஆளாய் தன்னுடன் இருப்பவளுக்கு அவள் குடும்பத்துடன் நேரம் செலவளிக்கும் நேரத்தினையும் தான் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே அவளுக்காக யோசித்துப் பேசினான்.
“நீங்க இல்லாம இருக்கப்போற ஃபர்ஸ்ட் டைம்..” என்று மெல்லிய குரலில் அவள் கூற,
“இங்க தானே யாழ்மா?” என்றான்.
“நீங்க இருக்க மாட்டீகளே?” என்று அவள் கூற,
“இன்னும் நாலு வருஷம் போனா நம்ம பிள்ளைய தூக்கிட்டு நான் வரேனா இல்லையானெல்லாம் கேள்வியே இல்லாம நீ இங்க லீவு கிடைக்குறப்போவெல்லாம் கிளம்பி வந்துடுவ.. அப்பவும் இதேதான் பேசுதியானு பாப்போம்” என்று கேலி செய்தான்.
“ஒத்துக்குறேன்.. இன்னும் கொஞ்சம் காலம் போனா நீங்க சொல்றது நடக்கலாம்.. ஆனா அப்பவும் கூட உங்களைத் தனியா விட்டு வர்றதுல மனசுக்குள்ள உருவாகுற இந்த சின்ன பூகம்பத்துல மாற்றமே இருக்காது” என்றவள் அவன் கண்களை நோக்கி, “நான் இல்லாமபோனா நீங்க மேனேஜ் பண்ணிப்பீங்க தான்.. ஆனா மிஸ் பண்ணுவீங்க தானே?” என்க,
அவன் அவளையே பார்த்தபடி இருந்தான்.
“நானும் வந்துடுறேன்” என்று அவள் கூற,
“எல்லாரும் நீ இருப்பனு ரொம்ப ஆசையா இருக்காங்க யாழ்” என்று அவள் தலை கோதியபடி கூறினான்.
திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் இருவரும் தனித்தனியே இருக்கப் போகும் முதல் தருணம்… அனைத்திற்கும் முதலென்று ஒன்றிருக்கும்.. அம்முதல் கணமான தாக்கத்தைக் கொண்டதாகவே அமையும். அப்படித்தான் இருந்தது இருவருக்கும்.. காலப்போக்கில் இந்த தவிப்புகளின் கனம் குறையலாம், ஏன் இல்லாமலும் கூட போகலாம்.. ஆனாலும் கூட அப்பரிவில் காதல் கொண்ட உள்ளம் காதலரின் நிலைகுறித்து எண்ணி அக்கறை தாங்கிய வார்த்தை பறிமாற்றங்களின் மூலம் அவர்கள் மனதின் நேசத்தின் கதை பேசிடுமே!
அவளிடம் பேசி அவளை சமாளித்தவன் மனதில் சிறு கணத்துடன் வீடு திரும்பினான். அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவளுக்கும் முதலில் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.
வாண்டுகளுடன் சேர்ந்து நேரம் செலவிடவும், சற்றே தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.
அங்கு ரயிலில் நிலவை பார்த்தபடி அமர்ந்திந்தவன் கையிலிருந்த குறிப்பேட்டில் தன் கரும் மை கொண்ட பேனாவினால் எழுத்துக்களைத் தீட்டினான்!
வரும்போது அவளுடன் சேர்ந்து ரசித்த நிலவு தற்போது அத்தனை ரசிப்பிற்குறியதாக தோன்றவில்லை! தனியே சென்ற என்னற்ற பயணங்களில் தனித்தமர்ந்து நிலவுடன் கதை பேசுபவனுக்கு இன்று மங்கையற்ற இந்தத் தனிமை அத்தனை உவப்பானதாக இல்லை!
'ப்ச்.. மிஸ் பண்றேன் யாழ்’ என்று கூறிக் கொண்டவன் வராத தூக்கத்தை இழுத்து பிடித்துக் கொண்டு உறங்கினான்.
ஊருக்கு சென்று சேர்ந்தவன் வீட்டில் இருக்கும் நேரத்தை முடிந்தளவு குறைத்துக் கொள்ளவே பார்த்தான். நிறுவனத்தில் கேட்டு இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் கூடதல் நேரம் பணியில் ஈடுபட்டுக் கொள்ள அனுமதி வாங்கிக் கொண்டான்.
இரவு உறங்க மட்டுமே வீட்டிற்கு வருவதைப் போன்று இருந்த போதும் அந்த இரவுமே அவள் இல்லாது கசப்பாகத்தான் இருந்தது அவனுக்கு.
அன்று காலை உணவை சமைத்துக் கொண்டவன், அலைபேசியில் இணைய காணொளிகளைப் பார்த்தபடி உண்டு கெண்டிருந்தான்.
அதில் ஒரு குழந்தையின் அழகிய காணொளி ஒன்று வரவும் தன்னை மறந்து புன்னகைத்தவன் ஆர்வமாய், “ஏ யாழ் இங்க பாரேன்” என்று அருகே காட்ட, அப்போதே அவள் அங்கு இல்லை என்பது உரைத்தது!
நொடியில் அவன் முகம் சோகம் கொண்ட சிறுபிள்ளையின் முகமாய் மாறிப்போக, அவன் அலைபேசி சிணுங்கியது!
தன்னவனின் வாட்டம் அத்தனை தொலைவில் இருந்த பாவையும் உணர்ந்தாளோ என்னவோ? காணொளி அழைப்பு விடுத்திருந்தாள்…
அலைபேசியைப் பார்த்தவன் முகம், வாட்டத்தையும் தாண்டி ஒளி பெற்றதாய் மின்னியது! அழைப்பை ஏற்றவன் திரையில் தெரியும் அவள் முகம் காண, சிறு புன்னகை அவன் இதழில் கீற்றாய் தோன்றியது!
கூந்தல் கலைந்து தோகையாய் அவள் தோள்களில் ஆடிக் கொண்டிருக்க, முந்தைய நாள் அவள் தீட்டிய மை கன்னம் வரை வடிந்து கிடந்தது! குங்குமம் நெற்றியை அலங்கோலாமாக்கியிருக்க, தூக்கம் கலையாத விழிகளோடு புன்னகையாக அவனைப் பார்த்து “குட் மா..ஹா.. மார்னிங்” என்று கொட்டாவி விட்டபடி கூறினாள்.
அதில் சிரித்துக் கொண்ட ஆதி, “குட் மார்னிக் சொல்ற நேரமா இது?” என்று கேட்க,
“நைட்டு வாண்டுகளோட செம்ம அரட்டைங்க.. தூங்கவே நேரமாச்சுது.. அதேன் நல்லா ஒறங்கிட்டேன்.. எனக்கு இங்கன வேற வேலயென்னருக்குது? ஒறங்க உங்கதேன் செய்யுதேன்” என்றாள்.
மீண்டும் சிரித்துக் கொண்டவன், அவளையே நோக்க, பாவை அவனுடன் கதை பேசிக் கொண்டே இருந்தாள்.
அவள் பேசுவதைக் கேட்டபடியே உண்டு முடித்து அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டவன், அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே “லவ் யூ யாழ்..” என்று கூறினான்.
சட்டென பேச்சை நிறுத்தியவள், “என்னங்க?” என்க,
சன்னமான சிரிப்போடு “கோல்டன் வர்ட்ஸ் ஆர் செட் வன்ஸ்” என்றான்.
அவன் கூறியது கேட்காமலா? நிதனமாய் கேட்க இயலவில்லையே என்று தானே மீண்டும் கேட்டாள்!
நொடியில் முகம் சிவத்தவள், “மிஸ் பண்றீங்களா?” என்று கேட்க,
சற்றும் தாமதியாமல், “ரொம்ம்ப..” என்று அழுத்தமாய் கூறியிருந்தான்.
அக்குரலில் அப்பட்டமான ஏக்கம்! அது அவளை என்னவோ செய்தது! அவனை ஏங்க விட்டுவிடக் கூடாது என்றுதானே அவளும் அதிகம் யோசித்தாள். தற்போது அவன் தனித்து தவிப்பதைக் காண அவளுக்கும் கஷ்டமாக இருந்தது!
அவளது சுருங்கிய முகம் கண்டவன், “அப்படினு சொல்லத்தான் ஆசை.. ஆனா இந்த வீக் வர்க் ப்ரஷர்ல எனக்கு வீட்டுக்கு வரவே டைம் இல்லடா” என்று பேச்சை மாற்ற,
'உன்னை நான் அறிவேன்' என்பதாய் ஒரு பார்வைப் பார்த்தவள், “ஓ..” என்றாள்.
“ம்ம்.. நேரமாச்சே.. நீ போலனா உன் அண்ணாஸ் சாப்பிடாம பட்னி கிடப்பாங்கடி” என்று அவன் அவளுக்கு நினைவூட்ட,
“ம்ம்.. ஆமாங்க லேட் ஆச்சு..” என்று சுரத்தையே இல்லாத குரலில் கூறியவள், “லவ் யூ ஈஸ்வர் மாமா..பை” என்றதோடு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
கிளம்பி தயாராணவன் அவள் அழைப்பை துண்டித்ததும் அப்படியே நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டான். 'ப்ச்.. எதுக்கு ஆதி இவ்வளோ ஃபீலிங்ஸ்.. இன்னும் ரெண்டு நாள்ல வந்துடப் போறா' என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.
தன் முகத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டவன் வேலைக்கு புறப்பட்டு செல்ல, அங்கே கட்டிலில் தோய்ந்து படுத்திருந்தவளுக்கு எழுந்து தயாராகவே தோன்றவில்லை!
அவனைப்போல் அணுதினமும் அவனுக்காக அவள் ஏங்கவில்லை தான்.. அவள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதால் அவளுக்கு அந்த நாட்கள் அருமையாகவே சென்றது! ஆனாலும் எத்தனை பேர் உடன் இருந்தாலும் காதல் கொண்டவனின் இன்மை மனதில் எரிந்து கொண்டு தானே இருக்கும்?
'ப்ச்.. பாவம் ரொம்ப மிஸ் பண்றாக' என்று எண்ணிக் கொண்டவள் மணி ஒன்பதானதை கடிகார ஒலி உணர்த்தியதால் தான் எழுந்து குளிக்கச் சென்றாள்.
அங்கு வேலைக்கு சென்றவன் அலைபேசி மீண்டும் ஒலிக்க, அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் முகம் சற்றே மலர்ந்தது!
அழைப்பை ஏற்றவன் “சொல்லுடே” என்க,
“ஆதி.. எப்புட்ரா இருக்க?” என்று கேட்டது அக்னியல்லாது வேறு யாராக இருந்திட இயலும்?
“இருக்கேன்டே” என்று ஆதி கூற,
எப்போதும் ‘உங்கம்மை புண்ணியத்துல நல்லாருக்கேன்டே’ என்பவன் வசனம் மாறியதில் குழம்பியவன் பின்பே தாமரையாள் அவனுடன் இல்லை என்பதை உரைக்கப் பெற்றான்.
“அடடா.. யாரோ எங்கம்மைய மிஸ் பண்ணுறாக போலயே” என்று அக்னி கேட்க,
“ரொம்ப தேடுதுடே.. எனக்குக் கட்டிக்கொடுத்தவாட்டி எப்படித்தேன் அவ இல்லாத இருந்தீகளோ?” என்று கூறினான்.
“எங்கம்மை மகிமைடே அது.. அவயில்லாத வீடே வெறும் கல்லும் மண்ணும்தான்” என்று உணர்ந்து கூறிய அக்னி, “வரச்சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்க,
“பாவம்டே.. இங்கன வந்து தனியாதானே இருக்கனும்.. அங்கன எல்லாரோடயும் இருந்துபோட்டு வரட்டுமேனு விட்டேன்.. என்னாலதேன் இருக்க முடியல..” என்று ஏக்கம் வழியும் குரலில் கூறினான்.
“அடடா.. குடும்பஸ்தனானா இப்படியெல்லாம் வேற ஃபீல் பண்ணுவாய்ங்களா?” என்று அக்னி கேட்க,
“நேசம் இருந்தா இதெல்லாம் கண்டிப்பா வரும்டே” என்று ஆதி உளமார கூறினான்.
“எப்ப வருவா எங்கம்மை?” என்று அக்னி கேட்க,
“ஹ்ம்.. இன்னும் ரெண்டு நா(ள்) கிடக்கு” என்று ஆதி கூறினான்.
“சரிடே.. வெசனப்படாத.. வந்துபுடுவா” என்ற அக்னி அவனுடன் சில நிமிடங்கள் அளவலாவிவிட்டு வைத்தான்.
'என்ன யாழ் என்னை இப்படி மந்திரிச்சு வச்சுருக்க.. கொல்லுறடி.. வந்ததும் உன்னைய கைக்குள்ளயே வச்சுகிடுவேன் பாரு’ என்று நெஞ்சை நீவிக் கொண்டு தன் பணியை துவங்கினான்.
-தொடரும்...
நாணல்-25
காலை வேளையது! தன் வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தவன் தன்னை நெருங்கி யாரோ ஒருவர் படுத்திருக்கும் கதகதப்பை உணர்ந்தான்…
சூரிய ஒளியில் கண்களை சுருக்கியவன் திரும்பிப் பார்க்க, அவனவள் அவனை இறுக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.
முதலில் இயல்பாய் புன்னகைத்தபடி அவளுக்குத் தட்டிக் கொடுத்தவன் பின் அதிர்ந்து எழ, சட்டென அவன் எழுந்ததில் தூக்கம் தடைபட்டவள், “ப்ச்..” என்று முனங்கினாள்.
சுற்றி முற்றி பார்த்தவன் மாடியில் ஒரு ஓரமாய் அவளது பைகள் இருப்பதைக் கண்டு “யாழ்மா..” என்க,
“தூங்க விடுறீகளா?” என்றபடி கண்களை கசக்கினாள்.
“ஏ.. எப்படி வந்த? நாளைக்கு காலைல தானே வர்றதா இருந்தது?” என்று ஆதி அதிர,
“ஏன்டி வந்தனு கேட்குதீகளோ?” என்று கேலியாய் கேட்டாள்.
“ப்ச்.. யாழ்” என்று அவன் கோபிக்க,
அவன் தாடையைப் பற்றி ஆட்டியவள், “சண்டேவே வந்துட்டா உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாமுல்ல? அதேன்.. அண்ணேன்ட கேட்டு நேத்தே கிளம்பிட்டேனாக்கும்” என்றாள்.
அவள் செயல் முற்றும் முழுதும் உணர்த்தியது அவன்மீதான நேசத்தைத் தானே! உள்ளம் உருகி குளிர்வதைப் போன்ற கலவையான உணர்வுப்போராட்டம் அவனுள்.
அவள் தனக்காக அவளது விருப்பம் துறந்தும் வந்திருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது அவனுக்கு.. ஆனாலும் கூட தனக்கே தனக்கான அவளது செயல் தாங்கிய காதலில் தேங்கிவிடும் பேரவா அவனுள்…
அவளை மிக மிக இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்தில் முகம் புதைத்து, “தேங்ஸ் யாழ்..” என்க, பெண்ணவளுக்கு லேசாய் கண்கள் கலங்கியது!
அக்னியுடன் பேசும்பொழுது பேச்சு வார்த்தையில் அக்னி, ஆதி அவளை பிரிந்து ஏங்குவதைப் பற்றி கூறி கேலி செய்திருக்க, அந்த கேலியையும் மீறிய அவனது ஏக்கம் தாமரையாளை தீண்டி தூண்டியிருந்தது!
அதிவீரரிடம் சென்றவள், “சண்டேவே போயிட்டா ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துபோட்டு வேலைக்கு போவ வசதிப்படுமுன்னே.. அவுக கூடவும் இருந்தாப்ல இருக்கும்” என்று வெட்கம் கலந்த கெஞ்சலோடு கேட்க, முகம் மலர்ந்த புன்னகையோடு அவளை அனுப்பி வைக்க மகிழுந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி வீடு வந்து சேர்ந்தவள் வாசலில் உள்ள கம்பிக் கதவுகளை தன்னிடம் உள்ள சாவியோடு திறந்துகொண்டு வர, வீட்டுக்கதவுகள் பூட்டியிருந்தது!
வெளியே இருக்கும் அவனது வாகனமும், காலணிகளும் கொண்டு அவன் மாடியில் உறங்குவதைக் கணித்தவள் தானும் வந்து அவனோடு ஒன்றி படுத்துக் கொண்டாள்.
வெகு நாட்களுக்குப் பிறகான அவனது அன்மையின் கதகதப்பு அவள் அறியாத தாயின் கருவறையையே நினைவூட்டியது என்றாலும் மிகையாகாது! கொண்டவன் வாசம் கோதையவளை மெல்ல மெல்ல உறங்க வைத்திருந்தது, இதமான தென்றலாய்!
ஆதியின் தலைகோதி தான் வந்த கதையை கூறி முடித்தவள் அவன் முகம் பற்றி, “ரொம்ப மிஸ் பண்ண வச்சுட்டேன்ல?” என்று கேட்க,
ஆமென்ற தலையசைப்போடு புன்னகைத்தவன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
காதல்… இம்மூன்றெழுத்து, செலவிட சிரிதளவு நேரம், காதலாய் சில வார்த்தைகள், அக்கறையாய் பல விசாரிப்புகள், ஆறுதலாய் ஒரு தலைகோதல், மிகச்சிறிய விட்டுக்கொடுத்தல் போன்றவற்றைத் தவிர வேறு என்ன ஆடம்பரமாய் கேட்டுவிடப் போகின்றதாம்!?
அவள் தனக்காக விட்டுக் கொடுத்த இந்த ஒரு நாளில் உலகையே வென்று அவன் காலடியில் போட்டுவைத்ததை விடவும் அதிகமாக இன்பம் கொண்டான்.
“விடிஞ்சிடுச்சு.. உள்ள போவோமுங்களா?” என்று தாமரையாள் கேட்க,
“நீ வந்ததும் இப்படி இறுக்கி பிடிச்சுக்கனும்னு நினைச்சுகிட்டே இருந்தேன்” என்று கூறினான்.
அதில் நெகிழ்ந்து, “இன்னும் நல்லாவே புடிச்சோங்க.. எல்லாம் உள்ள போயி பாத்துகிடலாம்” என்றவள் அவனை எப்படியோ எழுப்பி உள்ளே கூட்டி வந்தாள்.
இருவரும் சென்று புத்துணர்ச்சி பெற்று வர, கொண்டு வந்த சமையல் சார்ந்த பொருட்களை உள்ளே அடுக்கியபடி இருவருக்குமாக தேநீர் போட்டுக்கொண்டிருந்தாள் பெண்..
சமையலறைக்குள் வந்தவன், “இப்பதானேடா வந்த? அதுக்குள்ள எல்லாம் செய்யனுமா?” என்று கேட்க,
“நாலு நாள் நீங்களா தானே போட்டு குடிச்சுகிட்டீக.. நான் வந்த பெறவாட்டி என் பனிஷ்மெண்டை தான் குடிச்சாகனும்” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் மேடை மேலேரி அமர, அவனுடன் கதை பேசியபடியே தேநீரைக் கொடுத்தவள் தானும் அவன் புறமாய் சாய்ந்தபடி அருந்தி முடித்தாள்.
“ம்ம்.. சொல்ல மறந்து போட்டேன்.. அண்ணே உங்களுக்கு சட்டை கொடுத்துவிட்டாக. பெரிய மதனி செலெக்ஷன்” என்று பாவை கூற,
“ஓ.. அப்ப சூப்பராத்தேன் இருக்கும்” என்று கூறினான்.
“ஆஹாங்.. பெரிய மதனி செலெக்ஷன்ல அப்படியென்ன நம்பிக்கை?” என்று தாமரையாள் வினவ,
“நம்பிக்கை அவங்க செலெக்ஷன்னால இல்லடாமா.. அவங்க எம்மேல வச்சுருக்குற பாசத்தால.. பாசத்தோட கொடுக்குற அத்தனைக்கும் மதிப்பு அதிகம்” என்று கூறினான்.
அப்படியான பாசம் கொடுக்கப் போகும் மதிப்புமிக்க வலியை இருவரும் உணரப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இருவரும் அறிந்திருக்கவில்லை!
தேநீரை குடித்து முடித்து காலை உணவையும் சேர்ந்தே சமைத்து உண்டவர்கள் கதை படிக்க வேண்டி அறைக்குள் சென்றனர்.
கதை படிக்க புத்தகம் தேடியவளை பின்னிருந்து அணைத்துக் கொண்ட ஆதி, “யாழ்..” என்று மீசை கொண்டு அவள் காதுமடலில் ராகமிசைக்க,
அதில் கூசப் பெற்றவளாய் துள்ளியவள், “ஏங்க.. என்னதிது பட்டபகல்ல?” என்றாள்.
“காதலிக்க என்னடி நேரங்காலம்” என்றவன் பேச்சில் இருந்த துள்ளலே அவனது மனநிலையை அவளுக்குச் சொல்லியது!
இருந்தும் சிறு நாணத்துடன் அவள் புன்னகைத்தபடி, “புக்கு படிக்க வந்தோம்..” என்க,
“நானும் படிக்கத்தான் கேட்கிறேன்” என்றான்.
“ஏங்க..” என்று சிணுங்கியவள் அழகில் சிதைந்து நின்றவன்,
“ஆதிக்கு யாழைப் படிக்கனுமாம்..” என்று கிசுகிசுப்பான குரலில் தன் மூச்சுக்காற்று மோத, ஏக்கம் தேங்கிய குரலில் கூறி, “யாழுக்கு வேணாமா?” என்க,
அதற்குமேல் தன்னவனை ஏங்க விடுவாளா அந்த பைங்கிளி?
அவன் படிக்கத் துடிக்கும் புத்தகமாய் தன்னையே ஒப்படைத்து தன்னில் அவனை வழிநடத்திச் செல்லும் பாதைகள் அமைத்துக் கொடுத்தாள் பாவையவள்!
சந்திர ஒளியின் சாட்சியாய் நடந்த கூடல்களுக்கு மத்தியில், சூரிய ஒளியின் சாட்சியோடு நடந்த காதல் லீலையை எண்ணி நாணம் கொண்டு அவனில் புதைந்தவள் அவனது ஒவ்வொரு தீண்டலிலும் தன்னை எத்தனை தேடியிருக்கின்றான் என்பதை அணு அணுவாய் உணர்ந்தாள்.
தன்னவன் தீண்டலில் கூட அவன் மனவுணர்வை உணர்ந்து திழைப்பதில் தான் எத்தனைக் காதலுள்ளது!
மஞ்சத்து போரினை முடித்து வைத்தவன் மார்பில் புதைந்து போனவள் கண்ணோரம் மெல்லிய நீர்த்துளி! அதை உணர்ந்தவன் லேசாய் பதறி, “ம்மா.. ஆ..ஆர் யூ ஓகே?” என்க,
“சாரி..” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
“எதுக்குடா?” என்றவனுக்கு அக்கணம் அந்த நான்கு நாட்களுக்கான பிரிவின் துயர் துளியும் நினைவிலில்லை!
“இல்ல.. நீங்க இவ்ளோ மிஸ் பண்ணுவீகனு நினைக்கலைங்க.. சாரி” என்று அவள் கூற,
லேசான சிரிப்போடு அவள் தலைகோதியவன், “உன்னை மிஸ் பண்ணாம இருக்க முடியுமா? ஆனா அதுக்காக நீயும் என்கூட வானு சத்தியமா கேட்க மாட்டேன்.. எனக்கு புரியுது யாழ்.. எனக்கு நாலு நாளுக்கே இப்படினா உன்னை இங்க கொடுத்துபுட்டு வீட்ல எல்லாரும் எவ்வளவு கஷ்டபடுவாகனு.. அந்த பிரிவுக்கான மரியாதையையும் நாந்தரனுமில்ல? மறுபடியும் உனக்கு லீவு கிடைக்கும்போது அனுப்பி வைப்பேன்.. ஆனா அனுப்பிவச்சதுக்கு இப்படி வட்டியும் முதலுமா வசூலும் பண்ணிப்பேன்” என்று உணர்வுப்பூர்வமாய் பேசியவன் கடைசி வரிரையை மட்டும் கிசுகிசுப்பான குரலில் கூறினான்.
அதில் புன்னகையோடு கண்ணீர் துடைத்தவள் அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, “ரொம்ப லவ் பண்ண வைக்குதீக தெரியுமா?” என்க,
“நீ கூடத்தான் என்னை கால நேரம் பாக்காம கிரங்கடிக்க வைக்குற?” என்று மயங்கும் குரலில் கூறி அவளை மயக்கினான். அன்றைய பொழுதை மிகவும் அழகாக்கி கழித்த இருவரும் அடுத்து வந்த நாட்களையும் அழகாக கழித்தனர்.
அந்த இரவு வேளை, பால்கனியில் அமர்ந்தபடி படபடப்பாய் இருந்த தாமரையாள், ஆதி வரவும் விரைந்து சென்றாள்.
இரவு உணவாய் தயாரித்ததை எடுத்து வைத்தவள், “ஏன் லேட்டு?” என்று கேட்க,
“கொஞ்சம் வேலைடா” என்றவன் அயர்ந்து அமர்ந்தான்.
“ரொம்ப டயர்டாபா?” என்றவள் அவன் தலைகோத, அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டவன், “சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
“இதோ எல்லாம் ரெடி” என்று எடுத்து வந்தவள் அனுக்கு தானே ஊட்டியும் விட்டாள்.
“மேடம் ஏதோ படபடப்பா இருக்கபோல இருக்கே?” என்று உணவை மென்ற படியே அவன் வினவ,
“அப்படிலாம் இல்லியே” என்றாள்.
“ம்ம்..” என்றவன் உண்டு முடித்து மிகுந்த சோர்வால் உறங்கச் சென்றிட,
காரியங்களை முடித்தவள் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் மெல்ல வீட்டுக் கதவைத் திறந்தவள் அலைப்பேசியில் அழைத்து “தூங்கிட்டாருடே..” என்றாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், மாடியிலிருந்து ஆருத்ரன், அங்கை, வேந்தன், செழிலன், பொழிலன் மற்றும் காயத்திரி ஆகியோர் வந்தனர். திலகா கற்பமாக இருப்பதால் அவளை அலைக்களிக்க இயலாதென விட்டுவந்திருந்தனர்.
அனைவரும் கூடியிருப்பதன் காரணம் நாளை ஆதியின் பிறந்தநாள் என்பதே!
தங்கள் திருமணம் முடிந்து வரும் அவனது முதல் பிறந்தநாள்… இத்தனை வருடம் தினம் ஒரு நாளாய் அதை தனியே கடந்தவன் இனி வரும் வருடங்கள் தோரும் தனக்கென்று பலர் உள்ளனர் என்ற எண்ணத்தோடு அதை கொண்டாட வேண்டும் என்ற பேரவா அவனைவிட தாமரையாளுக்கே அதிகம் இருந்தது!
மதுரைக்கு அழைத்துச் சென்று கொண்டாடலாம் என்றால் அவனுக்கு விடுப்பு இருக்கவில்லை! இங்கு வீட்டார் அனைவரையும் அழைக்கலாம் என்றால் அனைவருக்கும் இடம் போதாது. அதனால் இளையோர்களைக் கொண்டு கொண்டாடலாம் என்று முடிவு செய்திருந்தாள்.
மேலும் இளையோர்கள் அனைவருமாக சேர்ந்தால் இரவு பன்னிரெண்டு மணிக்கு கொண்டாடி மகிழலாம் என்ற எண்ணத்துடன் முந்தைய நாளே அவர்களை வரவழைத்து என்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தாள்.
ஆதிக்கு தெரியாதிருக்கவே அவன் வரும் நேரம் பார்த்து அனைவரையும் மாடிக்கு அனுப்பி வைத்திருந்தாள்.
“சரிடே.. பக்கத்தறையிலருந்து ஊதிவச்ச பலூனையெல்லாம் கொண்டு வாங்க. டெகரேட் செஞ்சுபோடுவோம்.. நேரமாவுது” என்று ஆருத்ரன் கூற, அதன்படி அனைவரும் வேலையைப் பார்த்தனர்.
பலூன்களைக் கட்டும்போது பொழிலன் தெரியாமல் ஒன்றை உடைத்துவிட, அது எழுப்பிய சத்தத்தில் அனைவரும் பதறிப் போயினர்.
“அடேய் கோட்டிப்பயலே” என்று என்று கடிந்தவள் மெல்ல உள்ளே சென்று எட்டிப் பார்க்க ஆதி ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தான்.
“ஏன்ணே?” என்ற காயத்திரி சிரிக்க,
“தெரியாம வெடிச்சுடுச்சு அத்தே” என்றான்.
“சரி சரி.. காரியத்தை பாருங்க” என்று அங்கை கூற, பலூன்கொண்டு அலங்காரம் செய்தவர்கள் மேஜை ஒன்றை எடுத்துப்போட்டு அதையும் அலங்கரித்தனர்.
குளிர்பெட்டியில் வாங்கி வைத்திருந்த அணிச்சலைக் கொண்டு வந்து வைத்தத் தாமரையாள், அனைத்தையும் சரிபார்க்க, “ஐத்த மணியாவப்போவுது.. நீ போயி மாமாவ கூட்டியா” என்று காயத்திரி கூறினாள்.
“ம்ம்.. எல்லாம் ஓகே தானே?” என்றவள்,
“எல்லாம் சரியாத்தேன் இருக்குது சித்தி.. சித்தப்பாவை எழுப்பி கூட்டியாங்க” என்று அங்கை கூறியதில் புன்னகையாகச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்தவள் மணி பண்ணிரெண்டாக இன்னும் இரு நிமிடங்கள் இருப்பதைக் கண்டு, புன்னகையோடு அவனை எழுப்பினாள்.
முதலில் பிரண்டு படுத்தவன், அவளது தொடர் தொந்தரவில் எழுந்து அவளை அப்படியே தன்னில் புதைத்தபடி, “அர்த்த ராத்திரில என்னடி வேணும்?” என்று கேட்டான்.
மணியைப் பார்த்துக் கொண்டவள், “ஹாப்பி பர்த்டே ஈஸ்வர் மாமா” என்றபடி அவன் இதழை சிறை செய்ய, கண்களை கட்டியிழுத்த தூக்கம் அவள் இதழை தீண்டிய நொடி மாயமாய் மறைந்தது!
ஆழ்ந்த அணைப்பில் அவளை தன்னுள் இருக்கிக் கொண்டவன் அவள் விட்ட நொடி தான் தொடர, அதுக்கு தடா போட்டு நிறுத்தியவள், மீண்டும் “ஹாப்பி பர்த்டே” என்றான்.
மெல்லிய சிரிப்போடு, “தேங்ஸ்டா” என்று அவன் கூற,
அவன் கரம் பற்றி கூட்டிவந்தாள்.
“என்ன யாழ்மா?” என்றவன் அவளைப் புரியாது பார்க்க,
“சர்ப்ரைஸ்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவள் அவனை கூடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அங்கிருந்த அலங்காரங்களையும் அணிச்சலையும் கண்டவன், “ஏ யாழ்..” என்க,
“சர்ப்ரைஐஐஐஸ்” என்று அவன் முன் ஆர்ப்பாட்டமாய் குதித்து வண்ணத்தாள்களைப் பறக்கவிட்டனர், அறுவரும்.
அவள் செய்து வைத்திருக்கும் ஏற்பாடே அதிர்வைக் கொடுத்திருக்க, இந்த அறுவரின் வருகை அவனுக்கு மேலும் பெரும் இன்ப அதிர்வைக் கொடுத்திருந்தது!
“விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே மாமா/சித்தப்பா” என்ற கலவையான குரல்கள் அவன் செவியை நிறைக்க, முற்றும் முழுதாய் நெகிழ்ந்து போனான்.
அவன் முன் செழிலன் அலைபேசியை நீட்ட,
“ஹாப்பி பர்த்டேடா மச்சான்” என்று உற்சாகமான முகபாவத்துடன் உரைத்தான், அக்னி!
“எ..எப்படே வந்தீங்க எல்லாரும்?” என்று ஆதி நம்ப முடியாது வினவ,
“நாங்கெல்லாம் காலைலயே வந்தாச்சு.. நீங்க வரவும் மாடில ஒளிஞ்சுருந்தோமாக்கும்” என்று காயத்திரி கூறினாள்.
“என்ன சித்தப்பு.. எப்படி எங்க டெகரேஷன்?” என்று அங்கை கேட்க,
“நான் இதெல்லாம் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலைடே” என்று உளமாரக் கூறினான்.
அவன் கண்களின் பளபளப்பு அங்குள்ளோரையும் நெகிழ்வான மகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியது!
“ரியலி சர்ப்ரைஸிங்” என்று கூறியவனை செழிலும் பொழிலும் வந்து அணைத்துக் கொண்டனர்.
அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்தவனை ஆரு மற்றும் வேந்தனும் வந்து அணைத்துத் தங்கள் வாழ்த்தை தெரிவிக்க, அங்கை மற்றும் காய்த்திரியும் தங்கள் வாழ்த்துக்களைக் கூறினர்.
அனைத்தையும் மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தாமரையாளுக்கு தன் மனதில் அவன் புன்னகை நிறப்பும் உணர்வுகளில் அப்படியொரு நிறைவு! வாழும் காலம் மொத்தமும் அவனை சந்தோஷமாய் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பேரவாவுடன் வேண்டிக் கொண்டவள் “சரிசரி வாங்கடே.. கேக்க வெட்டிபுட்டு படுப்போம்” என்று அழைத்தாள்.
அவனுடன் சேர்ந்து அனைவரும் மேஜையை நெருங்க, அழகிய சாக்லேட் கேக் அங்கிருந்தது.
“பேரு போடுவோமுனு சொன்னா ஐத்ததேன் வேணாமுனுடுச்சு” என்று காயு கூற,
மெலிதான புன்னகையுடன் அருகேயுள்ள மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அணிச்சலை வெட்டினான்.
“முதல் பீஸ் யாருக்கு?” என்று காணொளியிலிருந்து அக்னி கேட்க,
“இதென்ன கேள்வி?” என்ற ஆதி, நேராய் அவனவள் புறமாய் அதைத் கொண்டு வந்தான்.
அதில் அனைவரும், “ஓஹோ..” என்று கத்த,
நாணத்துடன் இதழ் கடித்த தாமரையாள் ஆதியை நோக்கினாள்.
மெல்லிய சிரிப்போடு அவளுக்கு ஊட்டிவிட்டவன் அடுத்தடுத்த துண்டுகளை வெட்டி மற்றவர்களுக்கும் ஊட்ட, அந்த நேரம் பொன்னான நேரமாய் கழிந்தது!
“சரி சரி வாங்க கிப்ட் தருவோம்” என்ற அங்கை உள்ளிருத்த பெரிய பையைக் கொண்டு வந்தாள்.
“இந்த சட்டை வீரா மாமாவும் அத்தையும் வாங்கியாந்தது, இந்த தொக்கு அம்பியத்தை கொடுத்தனுப்புனது, இந்த கிரீட்டிங் கார்ட்ஸ் துர்கா குட்டியும் சங்கர் குட்டியும் குடுத்தனுப்புனது, இந்த ஷுஸ் (காலணிகள்) தீரா மாமா குடுத்தது” என்று வரிசையாய் அங்கை எடுத்து வைக்க,
அனைத்தையும் புன்னகையோடு பார்த்து நின்றான்.
“இது நானும் அவரும் உங்களுக்கு வாங்கினது” என்ற அங்கை கைகடிகாரம் ஒன்றை கொடுக்க,
“அழகாருக்குடா” என்றான்.
செழிலனும் பொழிலனும் கண்ணாடி குடுவை ஒன்றினுள் ஒரு ஜோடி அமர்ந்து புத்தகம் படிப்பதைப் போன்ற சிலை, அதன் கீழே உள்ள பொத்தானைப் போட்டால் வண்ண விளக்குள் ஒளிர்ந்து அதை மேலும் அழகாக்கும் அலங்கார பொருளைப் பரிசாய் கொடுத்தனர்.
“டேய்.. ஆனாலும் உங்களுக்கு வாய்க்கப் போற புள்ளைக கொடுத்த வச்சவங்கடா.. கலா ரசிகர்களா இருக்கீங்கடே” என்று ஆதி கூற,
“மொதல்ல எங்க சித்தப்பனுக்கு பொண்ணு பாருங்க மாமா.. தாத்தாவாகப் போறாரு.. இன்னும் புருஷனான பாடக்காணும்” என்று செழிலன் கேலி செய்தான்.
“நான் உன்னைய ஏதாவது வம்பு பண்ணேனாடே? எம்பக்கமாட்டு வந்து ஒரண்டை கூட்டாட்டி உனக்கு ஒறக்கம் வராதோ?” என்று அக்னி அதட்ட, யாவரும் வாய்விட்டு சிரித்தனர்.
வேந்தன் அழகான சொக்கர் மீனாட்சி அம்மன் சிலையைப் பரிசாய் கொடுத்திருக்க, காயத்திரி அவளே வடிவமைத்த எம்பிராயிடரியை மென்தகடு செய்து தந்திருந்தாள். அதில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கைகோர்த்து செர்ரி மலர்களின் தூவலுக்கிடையே நிற்பதைப் போன்றிருக்க, “ரொம்ப அழகாருக்கு காயுமா” என்று அனைவருமே அவளைப் பாராட்டினர்.
“என்ன சித்தப்பு உங்க மச்சானுக்கு பரிசில்லயோ?” என்று ஆருத்ரன் அக்னியைப் பார்த்து வினவ,
“ஏன்டே? இல்லாம.. டேய் செழிலா” என்று ஆருத்ரனிடம் துவங்கி செழிலனை அழைத்தான்.
“இதோ..” என்ற செழிலன் அக்னியின் பரிசை கொடுக்க, அதில் ஒரு காதல் நாவல் புத்தகமும், புத்தகத்தில் பக்கம் எண்ணை குறித்து வைக்க அழகிய இயற்கை எழில் வரையப்பட்ட காகித அட்டையும் இருந்தது!
“மச்சான்.. தேங்ஸ்டா” என்று ஆதி மனமாரக் கூற,
“எல்லாஞ்சரி.. உங்க பொஞ்சாதி கிப்டென்னவாம்?” என்று அங்கை கேலி செய்தாள்.
அதில் சிரித்த ஆதி, “பழைய டைலாக்கா தெரியலாம்.. பட் அவ என் லைஃப்ல வந்ததைவிட பெரிய கிப்ட் எனக்கு எதுவுமே கிடையாது..” என்று உணர்ந்து கூற,
புன்னகையுடன் ஒரு மென்தகடைப் பரிசாகத் தந்தாள்.
அதைப் பிரித்துப் பார்த்தவன் தாங்கள் இருவருமாய் எடுத்துக் கொண்ட அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நான்கு படங்களை இணைத்து மென்தகடாக்கியதைக் கண்டான். இதில் ஒரு முக்கிய சாராம்சம் என்னவெனில் அவர்கள் புகைப்படம் யாவும் கதவுகள் போன்ற அமைப்பின் மேல் இருக்க, ஒவ்வொரு புகைப்படம் தாங்கிய கதவுகளாய் திறந்துப் பார்த்தான்.
முதல் கதவினுள், ‘நேற்று ரசித்த நிலவை
இன்று வெறித்துப் பார்க்கின்றேன்…
நேற்று வரை அழகோவியமாய் காட்சிகொடுத்த நிலவவள்,
இன்று வெரும் கல்லாய் தெரிகின்றாள்…
அதுசரி! அர்ப்பமானதை ரசிப்பதற்கும்,
அர்த்தமுள்ளவற்றை வெறுப்பதற்கும்
இக்காதலினால் தான் நிகழ்த்திவிட இயலுமே!
அவள் மீதான காதல்
இன்று இந்நிலவையே
தேய வைத்திட்டது!?’ என்ற கவிதையும்,
இரண்டாம் கதவினுள்,
‘அவளுடன் இல்லாதத் தருணம் அப்படியென்ன வேதனைக் கொடுத்திடப் போகின்றதாம்?
என்ற என் மூளைக்கு
எப்படி உணர்த்திடுவேன்?
அவளில்லை என்பதையே
உணரமுடியாது என்னை மறந்து
அவளை அழைத்திடும் தருணங்களில்
என் மனம் கொள்ளும் ஏமாற்றத்தினை?’ என்ற கவிதையும்,
மூன்றாம் கதவினுள்,
'அவள் வாசம் தாங்கிய
இத்தலையணையின் அணைப்பிலேயே
தேங்கி விடுகிறது
காதல் கொண்ட இப்பொல்லாத மனம்!’ என்ற கவிதையும்,
நான்காம் கதவினுள்,
‘என்னைவிட பல மயில் தொலைவில் அவள்…
ஆனாலும் இந்த நேசத்தின் தொடர்பு
இருவரையும் இணைத்து பாலம் கட்டி வைத்துள்ளது!
அதனால்தானோ என்னவோ?
அவள் சிந்தனைகள் பாலம்வழி என்னுள்ளும்,
என் சிந்தைகள் அவளுள்ளும் புகுந்த
இன்மை போராட்டம் நடத்தி மகிழ்கிறது!’ என்ற கவிதையும் இருந்தது.
அதைக் கண்டவன் விழிகளில் ஆச்சரிய பாவம்.. அவள் அவனை விட்டு தனியே ஊரில் இருந்த நான்கு நாட்களும் அவன் தீட்டிய நான்குக் கவிதைகள் அவை! பத்திரமாய் பீரோவினுள் வைத்திருந்தது பதமாய் அவள் கைகளுக்கு அகப்பட்டதன் வெளிப்பாடு அதுவென அவனுக்குப் புரிந்தது!
அதை தன் நுனிவிரல் கொண்டு வருடி, அப்படம் உணர்த்திய காதலெனும் மின்சாரத்தின் தாக்கத்தை உள்வாங்கியவன் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் உதையமாக, “ரொம்ப அழகாருக்கு யாழ்மா..” என்றான்.
தன்னவனின் ஆனந்தம் கண்டு தானும் நெகிழ்ந்து போனவள், “ஹாப்பி பர்த்டே” என்க,
அவளைத் தோளோடு அணைத்துத் “தேங்ஸ் டா” என்று அவன் கூறியதில் மொத்த கூட்டமும் “ஓஹோ..” என்று கோஷமெழுப்பினர்!
அணிச்சலை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தபின், “சரி எல்லாம் போயி தூங்குங்க.. நாளைக்கு காலையில பாப்போம்.. ரொம்ப நேரமாச்சுது” என்று தாமரையாள் கூற,
“ஓகே ஆபீசர்” என்று யாவரும் களைந்தனர்.
தாமரையாள் அவனுடன் தனியே நேரம் செழவு செய்ய ஆசைப்பட்டதால் அன்று அவர்கள் அறையில் அவர்கள் இருவரும் உறங்க, அடுத்த அறையில் காயத்திரி ஆருத்ரன் மற்றும் அங்கையும், கூடத்தில் செழிலன் பொழிலன் மற்றும் வேந்தனும் படுத்துக் கொண்டனர்.
அறைக்குள் நுழைந்தவன் குளியலறை செல்லவேண்டி விளக்கை ஒளிர விட, சுவரில் ஊசலாடிக் கொண்டிருந்த தோரணம் ஒன்று அவனை அதிர வைத்தது!
அதைக் கண்டு திகைத்துப் போனவன், அதனருகே சென்று பார்வையிட, விழியிலிருந்து ஆனந்தம் தாங்காத குதூகலத்தில் அவன் கன்னம் குதித்தன கண்ணீர்!
அவனைப் பின்னிருத்து அனைத்துக் கொண்டவள், “நீங்களும் நானும் காதலையே சொல்லிகிடாம இருந்தப்ப நீங்க எனக்காக வைக்கும் கவிதை அத்தனையையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைப்பேன். அதையெல்லாம் கலர் ஜெராக்ஸ் போட்டு ஈரம் படாம இருக்க கவர் ஒட்டி இப்படி தோரணமா ரெடி பண்ணேன்” என்று கூற,
அவளைத் தனக்கு முன் இழுத்தவன் அவள் இதழில் தன் இதழுக்கு சிறை வைத்தான்.
அவன் இதழ் சஞ்சரம் உணர்த்திய அவனது அளவில்லா சந்தோஷத்தினையும் நேசத்தினையும் அணு அணுவாய் உணர்ந்தவள் கண்களில் நீர் பெருக அவனைக் கட்டியணைத்தாள்.
அவள் இதழுக்கு விடுதலைக் கொடுத்தவன் மதிமுகத்தில் ஊர்வளம் செல்ல, கணவன் தேடல் புரிந்து தேவை தீர்த்து வைத்தாள், தேவதையவள்!
-தொடரும்...
நாணல்-26
நாட்கள் சில ரம்மியமாய் கடந்தது! அன்றைய நாள் தான் அத்தனை ரம்மியமாக இல்லை ஆதிவருணேஷ்வரனுக்கு. இரண்டு நாட்கள் தாமரையாளுடன் ஊருக்கு செல்ல வேண்டி விடுப்பு எடுத்திருந்தான், ஆதி.
சிம்ம வரதனின் பிறந்தநாள் விழாவாக அமைந்திருக்க, இருவரையும் அழைத்து விருந்து வைத்து, சீர் வைத்துக் கொடுக்க அவர் ஆசைப்பட்டிருந்தார். அதற்கு இணங்க, அவர் அழைத்திருக்க, தவிர்க்க இயலாதமையால் பேசி தனக்கான விடுப்பை எடுத்திருந்தான் ஆதி.
அது அத்தனை பெரிய விளைவுகளைக் கொடுக்காதிருந்திருக்கும், அடுத்து ஊர் திரும்பிய இரண்டாம் நாள் காய்ச்சல் வரப்பெற்று மேலும் இரண்டு நாட்கள் அவன் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் வராது இருந்திருந்தால்…
தற்போது ஒரு நுண்ணுயிரியை உருவாக்கி அதன் மூலம் செடிகளின் மரபணுவில் மாற்றம் செய்து புதுவகை ஒன்றை தாயராகிக்கும் பணிக்கான தலைமை வேறு அவனுக்கு வழங்கப்பட்டதனால் அதிக விடுப்பு எடுக்கக் கூடாத சூழல். இரண்டு நாட்கள் தானே என்றும் மேலும் அதை சரிகட்டிக் கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தவனுக்கு உடல் நலம் மேலும் இரு நாட்கள் விடுப்பு எடுக்க வைத்திருந்தது.
உடல் நலம் சரியில்லாது அவனை வேலைக்கு அனுப்பவே யோசித்த தாமரையாள் அவனை வண்டியில் செல்வதற்கு முற்றுமாக தடை போட்டதால் பேருந்தில் தான் பயணித்து வரவேண்டியானது.
கலைப்போடு வண்டி ஓட்ட இயலாது என்பதால் அவன் பாதுகாப்பிற்காக அவள் பேருந்தில் செல்லக் கூறியது புரிந்த போதும், அசதியோடு பேருந்துக்காக காத்திருந்து ஏறுவது இன்னும் எரிச்சலைத்தான் கொடுத்தது அவனுக்கு.
பேருந்தில் ஏறியவனுக்கு இருக்கையும் கிடைக்காது போக, இன்னுமின்னும் கடுப்பானவனை சோதிக்காது அடுத்த நிறுத்தத்தில் ஆண்டவனே ஒரு இருக்கையை அவனுக்குக் கொடுத்து வழிவகை செய்தார்.
இருக்கையில் அமர்ந்தோனுக்கு வேலையிடத்தில் நடந்தவையே மனதில் ஓடியது. அவன் விடுப்பு எடுத்ததன் விளைவு, அவர்கள் வளர்க்கும் நுண்ணுயிரி சரிவர வளராதும், சிலவற்றில் மற்ற உயிரிகளின் வளர்ச்சிகள் அநாவசியமாய் ஏற்பட்டும் என பெரும் சொதப்பலில் வந்து நின்றிருந்தது. அதுவே அவனுக்கு ஏக கடுப்பைக் கொடுத்திருக்க, அவனது முதன்மை அதிகாரி அவனை அழைத்திருந்தார்.
நிச்சயம் திட்டு விழும் தான் என்றாலும் தனது தவறுக்காக திட்டு வாங்கித்தான் ஆகவேண்டும் என்பதை புரிந்துகொண்டே அமைதியாக உள்ளே சென்றான்.
ஆனால் அவரோ அவனைத் திட்டாது “நீ நல்லா ஹாண்டில் பண்ணுவனு தான ஆதி உன்னை நம்பி கொடுத்தேன்?” என்று ஆதங்கப்பட்டுவிட அது அவனுக்கு குற்ற உணர்வைத் தூண்டிவிட்டிருந்தது. மன்னிப்பை வேண்டிக் கொண்டவன் விரைவில் சரிசெய்வதாய் கூறிவிட்டு வந்திருக்க, மனமெங்கும் நடந்த சொதப்பலிலேயே உழன்றது.
தன்னை திசை திருப்பி ஆசுவாசம் செய்ய நினைத்தவன் அலைப்பேசியை எடுத்து கதை படிக்கத் துவங்க, அது அவனை தணிப்பதற்கு பதிலாய் மேலும் கொதிக்க வைத்திடும் வேலையைப் பார்த்து வைத்தது!
அவன் படித்துக் கொண்டிருந்த கதையில் எழுத்தாளர் கூட்டுக்குடும்பத்தினைப் பற்றிய அழகிய அம்சங்களை விவரித்துக் கொண்டிருக்க, அதை படிக்கப் படிக்க தன்னவளை அவளது மாபெரும் குடும்பத்திலிருந்து தனித்துக் கூட்டி வந்ததற்காக அவன் மனதில் எப்போதுமே ஒரு ஓரமாய் தூங்கிக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு விழித்ததோடு அல்லாமல் தலைவிரித்து ஆடத் துவங்கியது.
மேலும் அக்கதையில் கூட்டுக்குடும்பத்தின் அழகை மெருகேற்ற வேண்டுமென தனிக்குடும்பமாக வாழ்வதை தாழ்த்தி அவர் குறிப்பிட்டிருக்க, அது அவனை வகையாய் பதம் பார்த்தது!
எழுத்தாளரானவர் நீதிதேவதையைப் போன்று இரு பக்கமும் சரிசமமாய் யோசிக்கவேண்டும்.. நாம் கொடுக்கும் எழுத்துக்களானது உணர்ந்து படிப்போரிடம் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தும் எனும் வகையில் சரியான மற்றும் முறையான கருத்துக்களைப் பகிர வேண்டும். ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவரைத் தாழ்த்திக் காட்டும் யுக்தியானது தாழ்த்தப்பட்டவர் நிலையிலிருந்து படிப்போருக்கு எத்தகைய காயத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அவ்வெழுத்தாளர் செய்த சிறு பிசகு, அவன் மன உணர்வையே மொத்தமாக மாற்றியமைத்தது!
அதில் அலைபேசியை அணைத்து வைத்தவன் கலவையான உணர்வோடு வீடு வந்து சேர்ந்தான். அவன் முகத்தில் இருந்த கலவையான உணர்வையும் தாண்டி, அவனது களைப்பே தாமரையாள் கண்களுக்குத் தெரிந்தது!
அவனுக்குப் பருக ஏதுவாக நீர் கொண்டு வந்தவள், “இவ்ளோ டயர்ட வச்சுகிட்டு அவசியம் இன்னிக்கு வேலைக்கு போவனுமாங்க?” என்று கேட்க,
இருந்த கடுப்பில் “ப்ச்” என்றதோடு வார்த்தைகளை உள்ளே தள்ளியவன் நீரை வாங்கி அதன் மேல் ஊற்றி உள்ளே அமுக்கப் பார்த்தான். ஆனால் வார்த்தைகள் யாவும் விஷ எண்ணைகளாய் மாறி நீருக்குள் புதையாது மேலே மிதந்து வந்து அவன் கழுத்தை அல்லவா குத்தின?!
“மொகத்துல எம்புட்டு களைப்பு தெரியுது பாருங்க.. காலையில அண்ணே ஃபோனடிச்சுது.. அம்பூட்டு கலைப்புல ஒடம்புக்கு சொகமில்லாது என்னத்த வேலை வெட்டினு அம்புட்டு திட்டு..” என்று அவள் கூற,
சட்டென கோபம் பிறக்கப் பெற்றவனாய், “நானொன்னும் உங்கண்ணாங்க மாதிரி பெரியாளு இல்லை யாழ்.. வேலைவெட்டிக்கு எனக்கு வேணுமுன்னா லீவு பொட்டுக்க சொந்தமா தொழில் பண்றவன் கிடையாது நான்.. என் வேலைக்கு விடுப்பில்லாம போனாதான் ஒழுங்கா சம்பளமே வரும்.. தெரியும் தானே உனக்கு?” என்று காட்டமாய் கேட்டான்.
அவன் பேசியதில் அதிர்ந்து போனவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அப்போதே மிதமிஞ்சிய களைப்போடு சில எரிச்சல் ரேகைகளும் அவன் முகத்தில் வளம் வருவதை உணர்ந்தாள். தற்போது தானும் பேசி பேச்சை வளர்த்து பிரச்சினையாக வேண்டாமென்று யோசித்தவள் அமைதியாய் எழுந்து சமையலறை செல்லத் திரும்ப, மேஜையிலிருந்த அவள் அலைபேசி ஒலித்தது!
அழைப்பது அதிவீரர் என்பது அவரோடு அவள் மலர்ந்த முகத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அவள் பதிவு செய்த ‘வீராண்ணே’ என்ற பெயருடன் கூடிய உற்சாக முகங்களும் காட்ட, ஏனோ அவனுக்குள் பல உணர்வுகளின் போராட்டம் வெடித்துவிட துடித்தது!
அதைப் பார்த்துக் கொண்டே, “நான் உன் வாழ்க்கைல வராம இருந்திருந்தா உன் லைஃபே வேற மாதிரி போயிருக்கும்ல யாழ்?” என்று அவன் கேட்க,
புருவம் சுருங்க அவனை நோக்கியவள், “ஏங்க..?” என்றாள் சற்றே அதட்டலாய்.
“ஆமா தானே? நீயே சொன்னதானே அன்னிக்கு.. நீங்க வராம போயிருந்தா பணமும் குணமும் கொண்ட மதுரை பையனாவோ இல்ல வீட்டோட மாப்பிள்ளையாவோ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப ஒரு குழந்தையும் பெத்துகிட்டு இருந்திருப்ப, பொட்டிக் கூட வச்சுருப்பனு” என்று அவர்களது அந்தரங்க இரவு பொழுதில் அவள் கூறியதை குறிப்பிட்டுக் கூறியவன் அதனோடு சேர்த்து ‘ஆனா அத்தனையும் கிடைச்சிருந்தாலும் உங்க காதலுக்கு அது இணையாகியிருக்காது.. அங்க புட்டிக் என் செலவுல நானே துவங்கிருக்க முடியாது.. உங்க நேசத்தோட சேர்த்து நமக்கு நாமே உழைச்சு நமக்காக செய்யுற சின்ன சின்ன ஆசைகள் இருத்திருக்காது' என்று அவள் உணர்ந்து கூறியதை வசதியாய் மறந்து போனான்.
அவனை கோபத்தை அடக்கிக் கொண்டு பார்த்தவள், “நீங்க..” என்று பேச வர,
கைநீட்டி தடுத்தவன், “வேணாம் யாழ்.. வேணாம்.. கூட்டுக்குடும்பத்துல எல்லார்கூடவும் இருந்தவள இங்க தனியா கூட்டிட்டு வந்து நான் வச்சிருக்குறதை நீ ஒருநாள் கூடவா குறையா நினைச்சிருக்க மாட்ட சொல்லு?” என்றான்.
அவன் மனதில் அத்தனை நாட்களாய் இருந்த தாழ்வுமனப்பான்மை கோபக்கங்குகளோடு வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது!
தன்னவன் பேசுவதை நம்ப இயலாது அதிர்ந்து பார்த்துக் கொண்டிருத்த தாமரையாள் வார்த்தைகள் வரப்பெறாமல் தவிக்க,
“சொல்லு யாழ்.. உனக்கு தோனிருக்கும் தானே? ஆயிரந்தான் இருந்தாலும் தனிக்குடும்பத்தில் நீயும் நானும் எவ்வளவு சந்தோஷமா இருந்தாலும் கூட்டுக்குடும்பமா நீங்க அங்க இருந்ததை தானே நீ ஆசைப்பட்டிருப்ப?” என்று நிதானமாக ஆனால் வார்த்தைகளில் பெரும் அழுத்தத்துடன் ஆதி கேட்டான்.
“ஏங்க.. என்ன பேச்சிது?” என்று அவள் தவிக்கையில் மீண்டும் அழைப்பு வர அதை பார்த்தவன் பார்வை அவளது அலைபேசியிலேயே நிலைத்து நின்றது!
“உனக்கு உங்க அண்ணாங்கனா ரொம்ப இஷ்டம் தானே? அப்ப நான் அவங்ககிட்டருந்து உன்னை தனியா கூட்டிட்டு வந்துட்டேன்னு தானே உங்க அண்ணாங்களும் வருத்தப்படுறாங்க..” என்று கேட்டவன் அவளை நோக்கி, “நான் உன் லைஃப்ல பொருத்தமில்லாதவன்னு தானே எல்லாருமே நினைக்குறீங்க?” என்று கேட்டான்.
அவர்கள் நினைக்காதவற்றையெல்லாம் நினைத்துத் தன்னைத் தானே தாழ்வாக நினைத்திருந்தவனது எண்ணம், தற்போது கோபத்தில் எதிராளியின் பக்கமே திரும்பியது! மூளையோடு நாவுக்குள்ள தொடர்பு நரம்புகள் எல்லாம் கோபமெனும் கத்தியால் அறுபட்டதன் பயணாய் தான் உதிர்க்கும் வார்த்தைகள் உணர்த்தும் வலிகளை உணர இயலாமலே பிதற்றிக் கொண்டிருந்தான்…
“ஏங்க போதும்..” என்று கண்கள் முட்டும் கண்ணீரோடு அவள் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல,
“நான் உங்க அளவு வசதியில்லாதவன் தானே? அங்க நீ ராணி மாதிரி இருக்க, ஆனா என்கிட்ட அப்படி இல்லை தானே? இந்த வீட்டுக்கு ஒரு வேலையாள் ஏற்பாடு செய்யும் வசதிக்கூட எனக்கில்லைனு தானே அன்னிக்கு தீரன் மச்சான் நினைச்சாரு? உங்க வீட்ல நீ வராம யாரும் சாப்பிட கூட மாட்டாங்க.. ஆனா நான் அப்படியில்லைனு உங்க அண்ணாக்களோட என் பாசத்தை ஒப்பிட்டுப் பார்த்திருப்ப தானே?” என்றான்.
இதற்குமேல் இங்கு நின்றாள் நிச்சயம் தானும் வெடித்து பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால் தாமரையாள் நகர முற்பட, அவள் முலங்கையைப் பிடித்துக் கொண்டவன் தன்னை நோக்கி இழுத்து, “என்ன என் கேள்விக்கு பதில் சொல்ல முடியலையா?” என்றான்.
“ஏங்க.. வேணாம்.. நீங்க நிலையா இல்லை.. உங்களுக்கு ஒடம்பு முடியலையேன்னுதேன் நாங்க வேலைக்குப் போறதைப்பத்தி பேசினோம்” என்று அவள் கூற,
“ஆமா.. உங்கண்ணா சொல்லிட்டாங்க.. அதான் என்கிட்ட கேட்குறல? அவங்க என்ன சொன்னாலும் கேட்டுப்ப தானே? நான் லீவு போடலைனு சொன்னேன்ல? உனக்காக லீவ் போட்டு போனதாலதான் பிரச்சினையே” என்று கத்தினான்.
அவனது எரிச்சலுக்கான காரணம் ஓரளவு பெண்ணவளுக்கு பிடிபட, பல்லைக் கடித்துக் கொண்டு வழியும் கண்ணீரை துடைக்கத் தோன்றாது “அண்ணேங்கள இதுல இழுக்காதீக” என்றாள்.
“அண்ணா அண்ணா அண்ணா… எல்லாத்துக்கும் அவங்கதான். நானெல்லாம் உனக்கு ரெண்டாம் பட்சம்தான்ல? அவங்க சொன்னா என்னையும் வேணாம்னு தூக்கிப்போட்டுட்டு போயிடுவ தானே?” என்று அவன் கத்த,
அதற்கு மேல் அவன் சொற்களை தாங்க இயலாதவளாய், “போதும் நிறுத்துங்க” என்று கத்தினாள்.
அவள் குரல் உயர்த்திய நொடி அவளது கோபத்தில் அதிர்ந்து நின்றவன் பேசிய வார்த்தைகளின் வீரியமாய் அவள் நிற்பதை அவள் கண்களில் கண்டு உணர, ‘நானா இப்படி பேசினேன்? நானே என் யாழ துடிக்க வச்சுட்டேனா?’ என்று மனதால் மறிக்கத் துவங்கினான்.
அத்தனை நேரம் எதை செய்திடக்கூடாது என்று அமைதியாக இருந்தாளோ, பெண்ணவள் அச்செயலையே செய்திடும் விதமாய் தானும் வார்த்தைகளை விட்டிருந்தாள்.
“ஆமா.. நான் எங்கண்ணாங்க பாசத்துக்கு அடிமைபட்டவதேன்” என்று கத்தியவள் ஆக்ரோஷமான பார்வையோடு, “உறவுகளோட மகிமையும், பாசமும் உறவுகளே இல்லாம வளர்ந்த உங்களுக்கு எங்கருந்து புரியப்போகுது? யாருமே இல்லாம வளர்ந்ததாலதேன் எங்க பாசத்தையும் புரிஞ்சுக்க முடியல, என் காதலையும் புரிஞ்சுக்க முடியலை” என்று, அவனைத் துடிக்க வைத்திடும் விஷத்தை கலந்த வார்த்தைகளை அவன் இதயத்தின் மையம் பார்த்து அவள் குறிவைத்திட,
அது கொடுத்த துடிப்பில் கோபம் கொண்டவன் ‘பளாரென’ அவள் கன்னத்தில் தன் கரம் பதித்திருந்தான்.
அதில் அதிர்ந்து நீள்விருக்கையில் விழுந்தவள் வலியுடன் கூடிய கண்ணீரோடு ‘அய்யோ.. என்ன பேசிட்டேன்?’ என்று மனதோடு அதிர, “மாப்பிள்ள!” என்று கர்ஜனையாக ஒலித்தது அதிவீர பாண்டியரின் குரல்.
அத்தனை நேரமும் பெரியவர் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும் தகவலைக் கூறிடத்தான் அழைத்துக் கொண்டிருந்தது. அவளெடுக்காது போகவும் சரி நேரில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று வந்தவர், கண்டது தனது அருமை மாப்பிள்ளை தங்கள் வீட்டு செல்ல சீமாட்டியின் கன்னத்தைப் பதம் பார்க்கும் காட்சியைத் தான்.
நெஞ்சம் வெடித்துவிடுவதைப் போல் அவர் வலியை உணர, கணத்த கால்களோடு உள்ளே நுழைந்தவர், தான் பேசிவிட்ட வார்த்தைகளின் வீரியம் சுட்டதில் அதிர்ந்துபோய் அமர்ந்திருக்கும் தாமரையாளைப் பார்த்து, அடிவாங்கிய வேதனையில் அவள் அமர்ந்திருப்பதாய் நினைத்துக் கொண்டார்.
ஆதிவருணேஷ்வரன் பெரும் ஆலமரம் ஒன்று வேறோடு சாயப்பட்டு பிளந்திருக்கும் நிலமாய் இதயம் பிளந்த நிலையில் தவித்து நிற்க, “என்ன தைரியமிருத்தா எங்கவீட்டு கொலசாமிய கைய நீட்டி அடிப்பீரு?” என்று கண்கள் சிவந்து, குரல் கமர கர்ஜித்தார், அதிவீரபாண்டியர்.
அவர் கேள்விக்கு பதிலாற்ற முடியாமல் தலைகுனிந்தவனுக்கு அக்கணம் உலகமே தன்னை எதிர்த்து நிற்பதைப் போன்ற உணர்வு எழுந்தது!
“பிள்ளை உங்களுக்கு ஒடம்புக்கு சொகமில்லைனு அம்பூட்டு வெசனப்படுதேனு ஊருல மருத்தெல்லாம் வாங்கிகிட்டு உம்ம நேருல பாக்க வந்ததுக்கு எனக்கு நல்ல காட்சிய காட்டிபுட்டீகய்யா.. காட்டிபுட்டீக” என்ற அவரின் வேதனை பொங்கும் குரலிலும், வழிந்தோடும் கண்ணீரிலும் நிலைகுலைந்து போனவன், “ம..” என்று பேச வரும்முன் கைநீட்டி தடுத்தவர்,
“இதுக்குத்தேன் சொன்னேன்.. வீட்டோட மாப்பிள்ளையா வாரும்முனு.. நாளை பின்ன இப்படி ஏதும் நடந்திடக்கூடாதுனுதேன் சொன்னேன்.. எங்கம்மைய கைய நீட்டி அடிக்க எப்புடிய்யா மனசு வந்தது? நாங்க அதிர்ந்துகூட பேசினதில்லையே” என்று கண்ணீர் வடித்தார்.
அவரால் கண்ட காட்சியை இன்னமும் தாங்க இயலவில்லை! இதயம் விண்டுவிடுவதைப் போன்று அவர் துடிப்பது அவரது கண்களின் சிவப்பிலும், நாசியின் துடிப்பிலும் தெளிவுற தெரிந்தது!
எதை பேசி அவருக்கு விளக்கம் கூறிட இயலும்? எதைக் கூறி தனது செயலை அவனால் நியாயம் செய்திட இயலும்? என்று தவித்தவன் அதற்கு வழியே இல்லை என்பது புரிந்தவனாய் துடிதுடித்தான்…
நடப்பதைப் கூட கிரகிக்க தோன்றவில்லை தாமரையாளாள்… அவள் இப்படியாக வார்த்தைகளை உதிர்க்காமலிருந்திருந்தால் நிச்சயம் தன் அண்ணனை இப்படி கேள்வி கேட்க விட்டிருக்க மாட்டாள். ‘என் புருஷனுக்கு என்னை அடிக்க உரிமை இருக்குண்ணே’ என்று கூறி தன் கோபத்தை அவனிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியிருப்பாள்.
ஆனால் தான் உதிர்த்த சொற்களால் அவன் முகம் காண முடியாது தவித்துக் கொண்டிருந்தவளுக்கு லேசாய் சிவந்து கடுகடுத்த கன்னம் கருத்தில் கூட பதியவில்லை!
“இனி ஒரு நிமிஷம் எங்கம்மைய இங்க விட்டுவைக்க மாட்டேன்” என்றவர் தமரையாளை பதமாய் தூக்கி நிற்கச் செய்ய, தன்னவன் முகம் காண முடியாது கூனிக் குறுகியவள், வெடிக்கத் துடித்த கேவளை இதழ் கடித்து அடக்க, அவள் அண்ணனுக்கு அது அவள் அடிவாங்கியதன் ஓலமாகவே சென்று சேர்ந்தது!
அவளது நிலையைக் கண்டு தன்னையே வெறுத்துவிடும் போலானது ஆதிக்கு! நானே என்னவளது மனதை கொய்து உடலை வறுத்திவிட்டேனே என்று துடிதுடித்த போதும் அவள் அண்ணன் கரம் பிடித்து அழைத்த நொடி, அவள் ஒருமுறையேனும் தன்னைத் திரும்பிப் பார்ப்பாள், தன்னைவிட்டு செல்ல மாட்டேன் என்று கூறிடுவாள் என்ற குருட்டு நம்பிக்கை இருக்கவே செய்தது!
ஆனால் அவளோ தன் உணர்வுப்போராட்டித்தில் சிக்கி, புயலில் அடிபட்ட தோணியாய் அண்ணனின் இழுப்பில் அவளது இல்லம் வந்து சேர்ந்திருந்தாள்…
வீட்டிற்கு வந்தவுடன் அனைவருமே ஆதியின் செயலில் அதிர்ந்து நிற்க, அப்போதே சுயம் மீண்டவள், “அவுகள யாராது ஒருவார்த்தை பேசினா நாஞ்சும்மாருக்க மாட்டேன்.. இது எங்க வெடயம்.. யாரும் வாயிக்கு அவளாக்க வேணாமாட்டு” என்று கண்ணீரோடே அறற்றிவிட்டு அறைக்குள் அடைந்துக்கொண்டாள்.
இதோ இருபது நாட்களானது.. நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் வெம்பி வெதும்ப, பலமுறை தன்னவனுக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவள் தீர்க்கமான முடிவை எடுத்துக் கொண்டு தன் சிகையை அள்ளிமுடிந்துவிட்டுக் கீழே சென்றாள்.
-தொடரும்...
நாணல்-27
அழுது வடிந்த முகத்துடன் கீழே வந்தவள் தனது ஐந்து அண்ணன்களும் கூடி அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்களிடையே பேச்சுவார்த்தை இருக்கவில்லை, ஆனால் நால்வரிடையே சோகமெனும் பெரும் இரைச்சல் அறற்றிக்கொண்டிருந்தது!
“அண்ணே..” என்று அவள் முன்னே வந்து நிற்கு, நலுங்கி கசங்கி கண்ணீர் தடம் மறையா அவள் முகம் நால்வரையும் உள்ளுக்குள் உருகுழைய வைத்தது!
“அண்ணே.. நான் போகனும்?” என்று அவள் கூற,
வருத்தமாய் அவளைப் பார்த்திருத்த நால்வரும் பதறி எழுந்து நின்றனர்.
“தாயி.. என்னாச்சு கண்ணு?” என்று சிம்ம வரதன் பதற,
“நான் ஊருக்குப்போறேன்ணே..” என்றாள்.
“தாயி.. அண்ணேமேல உள்ள கோவத்துல சொல்லுதியா கண்ணு?” என்று அதிவீர பாண்டியர் குரல் உடைய கேட்க,
“இல்லண்ணே” என்று அவரது கரம் பற்றிக் கொண்டவள் அதில் முகம் புதைத்து வெடித்துவிட்டாள்.
அவளது குரலில் வீட்டின் அத்தனை உறுப்பினரும் அடித்துபிடித்து ஓடிவர, விஜயலட்சுமி கடைகுட்டிகளை அறைக்குள் அனுப்பிவைத்துவிட்டு வந்து கண்ணீர் மல்க நின்றார்.
“எ..என்னால தாங்க முடியலைண்ணே.. அ.. அவரு அடிச்சதைதேன் எல்லாரும் யோசிக்குறீக.. அவரு உசுரா நினைக்குற என்னைய கை நீட்டுற அளவு நா என்ன செஞ்சேன்னு யாருக்கும் தோணலையில்ல? அப்ப இங்கன யாருமே அவுகள இந்த குடும்ப ஆளா பாக்கலையா?” என்று பெண்ணவள் ஆற்றாமையாய் கேட்டாள்.
“அம்மாடி.. என்ன வார்த்தைடா இது?” என்று பதறிய ரணதீரன், “தாயி.. நீயின்னு வந்துபுட்டா இந்த வீட்டுல யாரா இருந்தாலும் நாங்க உனக்கடுத்துதானேத்தா பாக்குதோம்..” என்று கேட்க,
“வேணாமுன்னே.. வேணாம்.. அப்படி பாக்காதீக” என்று கரைத்தாள்.
“தாயீ..” என்று பரிவோடு தீஞ்சுடரோன் அவள் தலைகோத, “நான் வாப்பெட்டிய வச்சுகிட்டு சும்மாயில்லாது வார்த்தைய விட்டுபுட்டேண்ணே.. கொட்டிபுட்ட பொறவு அள்ளமுடியாது துடிக்குறேன்..” என்று கதறியபடி மடிந்தமர்ந்தாள்.
அவளருகே விரைந்து வந்த அங்கை அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு, “சித்தி.. அழுவாத சித்தி” என்க,
அங்கையைக் கட்டிக்கொண்டு, “நான் அவுகட்டயே போறேன் அங்கையு.. எதுவானாலும் நாங்கதேன் பேசிக்கிடனும்.. என்னால அவுகளோ அவுகளால நானோ தாழ்த்தப்பட்டா அது எங்க ரெண்டுபேரோட குடும்ப வாழ்க்கைக்குதேன் கலங்கம்” என்றாள்.
அந்த நொடி, தாமரையாளின் கண்ணீரைத் தாண்டி எதுவும் யோசனையில்லாத அங்கை, குடும்பத்து பெயியோர் முன்னிலையிலேயே அவர்களின் முடிவை தன் கையில் எடுத்துக்கொண்டு “போய்வா சித்தி.. உன்னைய யாரு தடுத்திட முடியும்?” என்றாள்.
தாமரையாள் அவளை நிமிர்ந்து பார்க்க, “அம்புட்டுபேரும் உம்முவத்த பாத்து உக்கிபோயி கிடக்கோம் சித்தி.. நீ இப்படி அழுதுவடிஞ்சுதேன் இங்கன இருக்கோனும்முனு ஒருத்தரும் கேட்டுகிட மாட்டோம்.. நீ எங்கன இருந்தாலும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருப்பனு நம்பிக்கை ஒன்னு போதும் எங்களுக்கு.. நீ சித்தப்பாவோட இருந்தாதேன் சந்தோசமா இருப்ப சித்தி.. நீ போய்வா” என்று கூறினாள்.
அங்கையைக் கட்டிக் கொண்டு வெடித்து அழுதவள், “அவுக பாவம் அங்கை” என்க,
“உம்மேல தப்பிருக்குனு உனக்கு புரிஞ்சுதுனா நீயே மாப்புகேளு சித்தி.. சித்தப்பா உன்னைய தங்கத்தட்டுல தாங்காத குறையா மனசுக்குள்ளார வச்சு பூஜிக்குறாக.. அவுகளா உன்னைய மன்னிக்காம போவப்போறாக? அவுகளோட எதுவானாலும் போயி பேசி சரிகட்டு சித்தி.. இப்படி இருக்காத சித்தி.. பாக்க முடியமாட்டுது” என்று அழுதாள்.
அங்கையை இறுக அணைத்துக் கொண்டு எழுந்தவள் தன் அண்ணன்களை நோக்க, அவர்களது முகம் வெகுவாக கசங்கியிருந்தது!
நால்வருக்கும் சரியான முடிவு எடுத்திட சற்று நேரம் தேவை என்பதை அவர்களது முகம் பார்த்தே அக்குடும்பத்து மூத்த பெண்மணிகள் புரிந்து கொண்டனர்.
“கண்ணு.. தாமரை.. உன் வீட்டுக்கு போவ நீ யாருட்டயும் ஒப்பு கேட்க வேணாம் தாயி.. இந்த வீட்டுல உனக்கு எம்புட்டு உரிமையுண்டோ அதைவிட பலமடங்கு அங்கனயும் உண்டு.. இப்ப வேற ஏதும் பேச வேணாமாட்டு.. எல்லாம் சாப்பிட்டுபோட்டு ஒறங்கபோங்க.. நால கால பொழுது விடிஞ்ச பெறவாட்டி பேசிகிடலாம்” என்று அர்ச்சனா கூற, தன் கண்ணீரைத் துடைத்து மெல்ல தலையசைத்தாள்.
அவளுக்கு இருபுறமும் வந்து அவளை அணைத்துக் கொண்ட பொழில் மற்றும் காயத்திரி, “சிரி ஐத்த” என்க,
கண்களில் நீரோடு மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள். அச்சிரிப்பில் உயிர் மீட்ட, அவள் உயிர் தாங்கியவன் வரவேண்டும் என்பது அங்குள்ள அனைவருக்கும் புரிந்தது!
உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றவளுக்கு தன்னவனை எதிர்கொள்ளும் நொடியை எப்படி கடப்பதென்று பயமாகத்தான் இருந்தது! கண்களில் மெல்லிய கோடாய் நீர் வழிய அதை அழுந்த துடைத்துப் பெருமூச்சு விட்டாள்.
மனமெங்கும் வலி சூழ கட்டிலில் விழுந்தவளுக்கு வலியையும் தாண்டி தீர்கமான முடிவை எடுத்துவிட்டத் தெளிவு உறங்க வைத்திருந்தது!
அங்கு ஆதி தன் காதில் வைத்திருந்த அலைபேசியை அழுத்தமாய் பற்றிக் கெண்டிருக்க, எதிர்முனையில் அக்னி கத்திக் கொண்டிருந்தான்.
“எதாவது பேசுடே.. எங்கம்மை கதறி துடிச்சிருக்குது அங்கன.. ஒரு ஃபோன போட்டா பேசுறதுக்கு என்ன?” என்று அக்னி வினவ,
“செழில் சொன்னானா?” என்று கேட்டான்.
“யாரு சொன்னா என்ன இப்ப? என்கிட்ட நீயும் மறைக்கோனுமுனு பாக்கியா?” என்று அக்னி கேட்க,
“ப்ச்.. மச்சான்..” என்றான்.
“வலிக்குதுடே.. ஏன்டே எங்கம்மையையும் வருத்தி நீயும் நொந்துபோற?” என்று அக்னி கேட்க,
அயர்ந்து போய் சாய்ந்து அமர்ந்தவன், “அக்னி..” என்று வலியோடு அழைத்தான்.
அந்த குரலின் வலி சுட்டதில், “பாத்துகிடுடே.. நான் வைக்குதேன்” என்று அழைப்பை துண்டித்த அக்னி கண்ணீரோடு படுத்துவிட்டான்.
அன்றைய இரவு அணைவருக்குமே மிக கணமான இரவாகத்தான் அமைந்தது!
மறுநாள் காலை குளித்து தாயாராகிக் கீழே வந்த தாமரையாள் முகம் அத்தனை நாட்கள் இல்லாத ஒரு தெளிவை கொண்டிருந்தது! அதற்குக் காரணம் அவளவனை சென்று சேரப்போகும் திருப்தியாகவல்லாது வேறு ஏதாக இருந்திட இயலும்?
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் அனைவருமே சற்றுத் தாமதமாகத்தான் எழுந்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே காலை உணவு அனைவருக்குமாக பழையசோற்றைப் பிசைந்து மொத்தமாக அமர்த்தி அர்ச்சனா கைகளில் உருட்டித் தருவது தான்.
இரு வாரங்களுக்கு பிறகு இன்று தான் அந்த வழமை மீண்டும் துவங்கியது! சிறு புன்னகையுடன் வந்தமர்ந்த தாமரையாளின் அருகே அங்கையும் காயத்திரியும் அமர்ந்துகொள்ள, “ஏம்மா.. செழிலு வருவேன்னு சொன்னியான்.. இன்னும் ஆளையே காணுமே?” என்று பொழில் கேட்டான்.
“ஏன்டே.. அவேன் காருல தானே போனியான்? எதுக்கு ரவைக்கு காரு ஓட்டிகிட்டு வாரான்” என்று சிம்ம வரதன் அதட்டலாய் வினவ,
“தெரிலிங்க ப்பா.. கிளம்புதேன் காலையில வந்துடுவேன்னுதேன் சொன்னியான். அவேன் சொன்ன நேரத்துக்கு வெள்ளனவே வந்து சேர்ந்திருக்கனும்.. இன்னும் ஆளையே காணும்.. ஃபோணும் எடுக்குதில்ல” என்று சற்றே கலக்கமாய் கூறினான்.
அதில் அனைவரும் கொஞ்சம் படபடப்பாக, “வந்திடுவியான்.. வழில எங்கனயாது நிறுத்திபோட்டு ஒறங்கிட்டு வாரானா இருக்கும்” என்று தீஞ்சுடரோன் கூறி அனைவரையும் சமன் செய்தார்.
பெரிய பாத்திரத்தில் பழையசோற்றை பிசைந்துகொண்டு வந்து அமர்ந்த அர்ச்சனா அனைவருக்கும் உணவை உருட்டிக் கொடுக்க, செழிலனின் மகிழுந்து ஓசை கேட்டது.
“இதோ வந்துட்டியான்ல?” என்று ரணதீரோன் கூற,
“ம்ம்.. வரட்டும் வரட்டும்..” என்று கூறிக் கொண்டனர்.
வாசல்புறமாக திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த தாமரையாளை, “ஏத்தா தாமரை.. உருண்டைய வாங்கிக்கிடு.. உள்ளாரதேன் வரப்போறான்” என்று அர்ச்சனா கூற,
சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்டு மீண்டும் திரும்பியவள் விழிகள் விரிய உறைந்து போனாள்.
அவளது உறைநிலை கண்டு அனைவருமே வாயிலை நோக்க,
செழிலனோடு சேர்ந்து, பதினைந்து நாள் தாடியும், களைந்த கேசமும், அழுத தடத்தைக் காட்டிக்கொடுத்திடும் சோர்ந்த முகமும், சிவந்த கண்களும் இதழில் ஒரு அழகிய புன்னகையுமாக வந்துகொண்டிருந்தான் ஆதிவருணேஷ்வரன்.
அனைவருமே அவன் உள்ளே வரவும் ஆச்சரியத்தில் எழுந்து நின்றிட,
தாமரையாள் கையில் வைத்திருக்கும் உணவோடு அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் கண்களில் நீரும் இதழில் புன்னகையும் சுரக்கப் பெற்றவன், அவளை நெருங்கி அவள் கையில் இருப்பதை கரம் பற்றி தன் நாவருகே கொண்டு சென்று உண்டான்.
சுற்றியுள்ளோரையெல்லாம் கருத்தில் கொள்ளாதவனாய் அவளைக் கரங்களில் மொத்தமாக அள்ளிக் கொண்டு விடுவிடுவென படிகளில் ஏறியவன், அவள் அறைக்குச் சென்றிருந்தான்.
அதை கண்ட மொத்த குடும்பமுமே அரண்டு நிற்க,
“ஒரு வயசு புள்ள இருக்குற வீடுனு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்குதா இந்த மாமனுக்கு” என்று செழிலன் கேலி செய்து சிரித்ததிலேயே சுயம் மீண்டனர்.
அனைவரும் செழிலனைக் கேள்வியாய் நோக்க,
“மாமாவும் எங்கூடவே வாரேன்னு சொல்லிட்டாக.. அதேன் வர தாமதமாச்சுது” என்றான்.
தாமரையாளுக்கும் அவள் அண்ணன்களுக்கும் நடத்த வாக்குவாதத்தைப் பற்றி அக்னியிடம் செழிலன் அலைப்பேசியில் கூறியதைக் கேட்டு மனமுடைந்து உள்ளே சென்ற ஆதிக்கு பழைய நினைவுகளின் தாக்கம் பெரும் வலியாய் தைத்தது!
தன்னவள் தன்னைப் பற்றி அவளது அண்ணன்கள் பேசியதில் சண்டைப் போட்டு கதறியதாய் கேட்டவனுக்கு அவளது வலியை தான் உணர்வதாய்…
தீர்கமான முகத்துடன் நிமிர்ந்தவன் இனியும் இருவரும் பிரிந்திருந்து வலி கொடுத்து வலி பெறுவதில் பயனில்லை என்பது புரிந்தது!
பேசி தீராத பிரச்சினை என்று ஒன்றுண்டா?
இருவரும் தனியே இருப்பது மற்றோருக்குப் பேசுபொருளோ இல்லையோ? தங்களின் குடும்ப வாழ்வுக்கு கலங்கம். தங்களது பிரச்சினைகளை விமர்சிக்கவும் பேசி தீர்க்கவும் தங்களால் மட்டுமே இயலும், இயல வேண்டும் என்று புரிந்தோனாய் புறப்பட்டு விட்டான்.
தான் பழைய நினைவுகளோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போதே செழிலன் வந்து விடைபெற்றுச் சென்றது நினைவு வந்தது! செழிலனுக்கு அழைத்தவன் தானும் உடன் வருவதாய் கூற, அளவில்லா சந்தோஷத்துடன் அவனை அழைத்துப்போக வந்திருந்தான்.
அப்போதே தாமரையாள் ஆதிக்கு அழைக்க, தன்னவளும் தன் முடிவில் தான் இருப்பாள் என்பது அவனுக்கு தெளிவுர விளங்கியது! நேரில் சென்று அதிர்வைக் கொடுத்து அனைத்துப் பூசல்களையும் முடித்துக் கொண்டு தானே கூட்டி வருவது தான் நல்லது என்று புரியவே அழைப்பை முற்றுமாக தவிர்த்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செழிலனுக்கு அழைப்பு வர, தான் வருவதைக் கூற வேண்டாம் என்று அவனிடம் கூறியிருத்த ஆதி, அழைப்பை ஒலிபெருக்கியில் போடும்படியே கூறியிருந்தான்.
தாமரையாள் கதறித் துடித்ததில் துடிதுடித்துப் போனவன் அவள் அழைப்பை துண்டிக்கவும் செழிலனைக் கட்டிக் கொண்டு வெடித்தழுதான்.
தாமரையாள் கண்ணீரிலேயே கலங்கியிருந்த செழில், ஆதியின் அழுகையில் முற்றுமாய் உடைந்துபோனான்.
“மாமா..” என்று அவன் தடுமாற,
“உங்கத்தைய ரொம்ப வதைச்சுபுட்டேன்டே.. என்னைய மன்னிப்பாளா?” என்று அழுதான்.
“மாமா.. அத்தை உங்கமேல உசுரயே வச்சுருக்குது மாமா..” என்று செழில் கூற,
“அதை உடைச்சுப்புட்டேனே செழிலா” என்று அவனை மேலும் இறுக அணைத்துக் கொண்டான்.
“இல்ல மாமா.. நீயும் அத்தையும் வச்சருக்குற நேசம்.. உடைஞ்சுபோற நேசமில்லை.. நீங்க பேசுங்க.. ஒருத்தருக்கொருத்தர் பேசிகிட்டா சரியாபோவும்” என்று செழிலன் கூற அவனைப் பார்த்து வலிநிறைந்த புன்னகையைக் கொடுத்தான்.
இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கிய இருவரும் அதிகாலை விரைவே எழுந்து தயாராகி புறப்பட்டு, இதோ வந்து சேர்ந்திட்டனர்.
-தொடரும்...
நாணல்-28
தன்னவன் வந்ததையே நம்ப இயலாத அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் தன்னைத் தொட்டுத் தூக்கி தங்களின் அறைக்குள் வந்திருப்பது மேலும் அதிர்வாகத்தான் இருந்தது!
இன்னும் துயில் கலையா கனவில் இருக்கின்றோமோ? என்று எண்ணிக்கொண்டிருந்தவளை மஞ்சத்தில் கிடத்தித் துகில் கலைந்து தன் ஆதிக்கத்தில் நிகழ்வு உணர்த்தத் துவங்கினான், பொற்றாமரையாளின் ஆதிவருணேஷ்வரன்!
பலவகையான உணர்வுகளில் குழம்பியிருத்தவள் பல நாட்கள் கழித்துக் கிடைத்தத் தன்னவனின் இதழ் ஒற்றலில் முற்றுமாக உலகம் மறந்து போனாள்.
அத்தனை நாட்களின் ஏக்கம் மொத்தமும் தீர்த்திடத் துடித்த இதழ் சஞ்சரம், தீரா தீயாகி இருவரினுள்ளும் மோக யாகம் மூட்டிவிட்டதன் விளைவாய், அவளுள் அவனும், அவனுள் அவளும் ஒருவரை ஒருவர் தொலைக்கத் துடித்திடும் தேடலில் இறங்கினர்…
“யாழ்..” என்று பெருமூச்சு கலந்து இசைத்த அவளின் பெயர் தந்த இனிமையில் முற்றுமாய் கரைத்தவள்,
அவன் காதோரமாய், “ஈஸ்வர்..” என்று குழைந்தாள்.
அந்த நொடியை அணு அணுவாய் ரசித்த இருவருமே தங்களது பிரிவின் துயர் மொத்தமும் துடைத்தெரியும் விசையாய் தங்களையே உருமாற்றிக் கொண்டனர்.
அயர்ந்து, கலைந்து, கழித்து இசைத்தக் காணம் கொடுத்த நிறைவை அமைதியாய் உணர்ந்தபடி படுத்த இருவரும், கால நேரம் கடந்து துயிலில் ஆழ்ந்தனர்…
துயர் தீர்ந்த துக்கமில்லா உறக்கம் இருவரையும் தன்னுள் விழுங்கிக் கொண்டு, சில மணி நேரங்களுக்குப் பின் விடுதலைக் கொடுத்தது!
மெல்ல துயில் கலைந்த இருவருக்கும் நடந்தவைக் கனவோ என்ற பயம் எழுந்திருக்க வேண்டும்? இருவரின் உடலும் ஒருமுறை அதிர்ந்து அடங்க, பின்பே ஒருவரை ஒருவர் கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டனர்!
தன்னவன் நெஞ்சை மஞ்சமாக்கித் தலைவைத்து மௌனமாய் அவள் படுத்திருக்க, அவள் சிகையைக் கோதியபடியே தானும் படுத்திருந்தான்…
கடிகாரமுள்ளின் ஓசை மட்டுமே அங்கு ஆட்சி புரியம் அரசனாய்!!!
மெல்ல அசைந்துக்கொடுத்தவள் அவன் முகம் நோக்க, தன் குரலை செறுமிக் கொண்டவன், “ஒன்னு கேட்கவா யாழ்…” என்றான்.
அவனையே பார்த்திருந்தவள் பார்வை அவனுக்கு பதில் சொல்லும் விதமாய்…
“இப்ப.. நாம ரெண்டுபேரும் ஒன்னா இருந்த அந்த நிமிடங்கள்.. நான் பேசினது, அடிச்சது எதுவும் உன் மனசுக்குள் நினைவா வந்துச்சா?” என்று அவன் கேட்க,
அவளிடம் பெரும் அதிர்வு…
அவள் தலையை மேலும் பரிவாய் வருடியவன், ‘சொல்’ எனும் விதமாய் நோக்க, விழிகளில் நீருடன் இல்லையென தலையசைத்தபடி, “உ.. உங்களுக்கு…?” என்று வலிக்கும் குரலில் கேட்டாள்.
அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “உன்னைத்தவிர உலகமே மறந்துபோச்சுடி” என்று உருகும் குரலில் கூற, அவன் கண்ணீர் அவள் கன்னத்தில் விழுந்தது!
பெரும் கேவளுடன் அவனை அணைத்துக் கொண்டவள், “மன்னிச்சிடுங்கங்க..” என்று அழ,
“என்னையும் மன்னிச்சுடு யாழ்…” என்று அன்று அறைந்த அவள் கன்னத்தை மென்மையினும் மென்மையாய் வருடினான்… அன்று அவளுக்குக் கொடுத்த வலி இன்று இவ்வருடலில் தன் நுனிவிரல் வழியே மின்சாரமாய் தன்னுள் பாயும் உணர்வு அவனுக்கு…
அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அதில் முகம் புதைத்தவள், “எ..எனக்கு நீங்க அடிச்சதுல வருத்தமேயில்லேங்க.. இ..இன்னுஞ் சொல்லப்போனா.. நீங்க அடிக்காம இருந்திருந்தாதேன் கு..குற்ற உணர்வுலயே உக்கிப்போயிருப்பேன்” என்று அழ,
“அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்ததாவே இருந்தாலும் நான் பண்ணது பெரும் தப்பு யாழ்.. மன்னிச்சுடுடி” என்று தானும் கண்ணீர் வடித்தான்…
அவனை நிமிர்ந்து பார்த்தவள் இப்போதே இதை பேசிமுடித்திடும் திடத்தோடு, “ஏங்க..” என்க,
அவளைக் கண்ணீரோடு ஏறிட்டான்.
“அ..அன்னிக்கு.. நீங்க..” என்றவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி, “உங்களோட தரத்தையும் அண்ணனுங்க தரத்தையும் ஒப்பிட்டுப் பாத்துட்டு இருந்துருக்கீகளா?” என்று கேட்க,
கண்ணீரோடு தலை குனிந்தான்.
அந்த செயலே அவளுக்கு பதில் கூறியிருந்தது. மனதின் அடி ஆழம் வரை ஊடுறுவும் வலியை என்ன முயன்றும் தடுக்க இயலவில்லை!
அவள் வலி அவனும் உணர்வதாய் தன் நெஞ்சம் நீவிக் கொண்டவன், “தெரியலை யாழ்.. தோனும்போதே அப்பப்ப வெளிப்படுத்திருந்தா இது ஒரு விஷயமே இல்லைனு முன்னவே புரிஞ்சிருக்கும்.. சொன்னா நீ ஏதும் நினைப்பியோன்ற பயத்துல எனக்குள்ளயே வச்சு வச்சு சமயம் பார்த்து வெடிச்சு சிதறிடுச்சு” என்றவன் அவளை நோக்க,
பேசி முடி எனும் விதமாய் அவனைப் பார்த்தாள்.
“ரொம்ப பெரிய குடும்பத்துல பிறந்து வளர்ந்த உன்னை என்னோட தனிமையில நிறுத்திட்டேனோனு மனசுக்குள்ள அப்ப அப்ப ஒரு குற்ற உணர்வு எழும். நீ இங்க ராணி மாதிரி இருந்தனு மச்சான் சொல்லும்போதெல்லாம் நம்ம அவளை அப்படி பார்த்துக்கலையோ? இங்க தரைக்கு நோகாம இருந்தவளை நமக்கு ப.. பணிவிடை செய்யும்படி ஆக்கிட்டோமோனு மனசுக்குள்ள தோன்றும்.. அந்த நிமிடம் உணரும் அளவில்லாத வலியை அப்படியே தூக்கிபோட்டுட்டு கடந்துடுவேன்.. அ..ஆனா அன்னிக்கு” என்றவன் உடல் மெல்ல குலுங்கியது.
அவன் முதுகை மென்மையாய் வருடி அவனைப் பேசத் தூண்டியவள் அவன் உதிர்க்கும் சொற்கள் தரும் பெரும் வலியை வாங்கி விழுங்கிக் கொண்டு மௌனமாய் அவனை ஏறிட்டாள்.
“உனக்கு தெரியும்ல இப்ப ஒரு ப்ராஜெக்ட் லீட் பண்றேன்னு.. ரெண்டு நாள் நாம இங்க வர லீவ் போட்டது எதும் பிரச்சினையா அமையலை.. ஆனா உடம்பு முடியாம கூட கொஞ்சம் லீவ் போட்டதுல ப்ராஜெக்ட் ரொம்ப சொதப்பிடுச்சு. எ..என் மேனேஜர் திட்டிருந்தா கூட பெருசாருந்துருக்காது.. உன்னை நம்பிதானே கொடுத்தேன்னு கேட்டது ரொம்ப வலிச்சுடுச்சு யாழ்.. அது, உடம்பு அசதி, போதாத குறைக்கு அன்னிக்குப் படிச்ச கதை..” என்று அதைக் கூறினான்.
கேட்டவளுக்கே அக்கதையால் பெரும் கோபம் எழுந்தது!
“எல்லாம் சேந்து என்னை தடுமாற வச்சுடுச்சு.. பார்க்குற அத்தனையும் தப்பாவே தெரிஞ்சது… அமைதியா போய் படுத்திடனும்னு தான் வந்தேன்.. ஆனா முடியாம இப்படி ஆயிடுச்சு” என்று கூறியவன் தவறு செய்த குழந்தையாய் அவள் முகம் நோக்கினான்.
அவள் கண்கள் கலங்கியிருப்பதில் மனமுடைந்து போனவன், “நா.. நான் ரொம்ப பேசிட்டேன்னு எனக்கே தெரியும்.. பே..பேசி கோவப்படுத்தினதுமில்லாம க..கைவேற நீட்டிட்டேன்” என்று கூற,
தற்போது தான் அவன் சிகை கோதியவள், “நானும் வார்த்தைய விட்டுபோட்டேனே…” என்றாள். மனதின் ஆழம் வரை இன்றளவும் அவளை அறுத்துக் கொண்டிருப்பது அவள் உதிர்த்த வார்த்தைகள் தானே? தன்னவனுக்கு தானே வலி குடுத்து பரிதவிக்க வைத்துவகட்டோமே என்று அவள் துடிக்கும் துடிப்பை சொல்லில் வடித்திட இயலவில்லை அவளால்…
அவள் முகம் தாங்கியவன், “நீ பேசினது ரொம்ப வலிச்சிடுச்சு யாழ்மா… தாங்கவே முடியலை.. அதை இல்லைனு சொல்ல மாட்டேன்.. அந்த வலியை உணர்ந்தப்போ நான் உனக்கு அதைவிட ஆயிரமா வலி கொடுத்திருக்கேனேனு என் வார்த்தைகள் உணர்த்திச்சு” என்று கூற,
“வலிக்கு வலியைக் கொடுக்க நாம பகையாளி இல்லிங்க.. புருஷன் பொஞ்சாதி” என்றாள்.
“ஆனா நீ சொன்னதும் ஒருவகையில உண்மை தானே? யாருமேயில்லாம வளந்ததால தானோ என்னவோ எனக்கு குடும்ப சூழல்ல வாழுறதுக்கான நேர்த்தி புரியலை” என்று அவன் கூற,
பதறி போனவள், “ஏங்க..” என்றாள்.
ஆடவன் அவளையே கண்கள் கலங்க நோக்க, தன் கண்களை அழுந்த மூடித் திறந்தவள், “நாஞ்சொன்ன வார்த்தையே தப்புங்க.. உண்மைலயே யாருமே இல்லாம வளந்தவகளுக்கு குடும்பத்தோட அரவணைப்பு இல்லாம ஏங்கினவகளுக்கு அந்த பாசம் புரியும். இதுக்கும் நம்ம சண்டைக்கும் சம்மந்தமே இல்லைனு உணராம நாந்தேன் வார்த்தைய விட்டுபுட்டேன்… அப்பருந்த கோவம்.. ஏதோ பேசிபுட்டேன்.. மறந்துடுகனு கேட்க மாட்டேன்.. மறக்கக் கூடிய வார்த்தைய நான் பேசலை.. பேசினது என் தப்புனு நான் உணர்ந்து மனசார மன்னிப்பு கேட்டுகிடுதேன்னு தான் சொல்றேன். மன்னிப்பால உங்களுக்கு குடுத்த காயத்தை என்னால ஆத்த முடியாதுங்க. ஆனா நி..நிச்சயம் எங்காதல்.. ம்ஹும்.. நம்ம காதலால ஆத்திபுடுவேன்” என்று கூற,
அவளை இறுக அணைத்துக் கொண்டவன், உடல் குலுங்க அழுதபடி, “யாருமே இல்லாம வளந்தவன் தான் யாழ்மா.. ஆனா இ..இப்ப எனக்கு பெரிய குடும்பம் இருக்குது.. அந்த குடும்பத்தை எனக்கே எனக்குனு கொடுத்தவ நீ.. உ..உன்னை கஷ்டபடுத்திட்டேனேடி” என்றான்.
அவன் அழுவதில் அவன் கண்ணீர் தன் மேனியை சுடுவதாய் உணர்ந்தவள் தானும் தன் அணைப்பின் இறுக்கம் கூட்டி,
“இப்படி ஒரு குடும்பமே உங்களுக்கு இருக்குனு புரிஞ்சும் ஏன் உங்களுக்குள்ள அப்படியொரு தாழ்வு மனப்பான்மை வளர்த்துகிட்டீக? நீங்களும் இந்த குடும்பத்து ஆள் தானே?” என்றாள்.
ஆடவன் பதிலேதுமின்றி இருக்க, அவன் சிகை கோதியவள், “ஒன்னு நல்லா புரிஞ்சுகிடுக.. நீங்க வரலைன்னா இந்த வீட்டுல எல்லார்கூடவும் நான் இருப்பேன்.. கூட்டு குடும்பமா சந்தோஷமா இங்க இருப்பேன்னு நினைச்சுகிட்டு இருந்தீக தானே? உங்களோட இந்த எண்ணத்தை பொய்யுனு உணர்த்ததேன் நமக்குள்ள இந்த சண்டை வந்திருக்குது… இதோ.. இருபது நா(ள்) நீங்க இல்லாமதேன் கிடந்தேன்.. எனக்கு புடிச்ச இடம், புடிச்சவக சூழதேன் இருந்தேன்.. ஆனா சந்தோஷம ஒரு நொடி இருந்திருப்பேனா?” என்று கேட்க,
அவளை மெல்ல நிமிர்ந்து பார்த்தான்.
இடவலமாய் தலையாட்டியவள், “யாரை கண்ணாலம் கட்டினாலும் எனக்குனு வரப்போறவகளுக்கு செய்யுற சின்ன சின்ன வேலைக்கு சோம்பல் பட்டு ஆளு வைக்க, அங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு செஞ்சுகிட என்னதான் இருக்கும் சொல்லுங்க? ஒன்னு நல்லா புரிஞ்சுகிடுக, நான் உங்களுக்கு செலவு வைக்கக் கூடாதுனு வேலையாள் வேணாமுனு சொல்லலை.. வெட்டியா ஒரு செலவை செய்யக்கூடாதுனுதேன் சொன்னேன். வேலையாள் வந்து வேலைய செஞ்சா நாம ரெண்டேரும் சேந்து பேசி, சிரிச்சு பாடி, பாட்டுகேட்டு நமக்கே நமக்காக செலவளிக்குற அந்த நேரமே இல்லாது போவுமேனுதேன் வேணாமுனு சொன்னேன். உங்க துணையில்லாம நான் ஒருத்தி மட்டுமே அம்புட்டையும் செஞ்சிருந்தா கூட எனக்கு அந்த ரோசனை வந்துருக்கும். ஆனா நீங்க அப்படி நடந்துக்கவே இல்லயே? எங்க அண்ணேனுங்க உங்களைவிட பணக்காரகதேன். எனக்கு அவுகளா கட்டிவச்சா லட்சாதிபதியா பாத்திருப்பாகதேன்.. ஆனா உங்க காதல் கொடுத்த நிறைவை அந்த வசதி நிச்சயம் கொடுக்காதுங்க.. பணத்தால தீர்க்க முடியாத உணர்வுகள் நீங்க… அந்த உணர்வுக்கு விலையே கிடையாது” என்று கூற,
“சா..சாரி யாழ்..” என்றான்.
“இல்லிங்க.. உங்க வேதனை எனக்கு புரியுது.. ஆனா இதை நீங்க உங்களுக்குள்ளயே வச்சுக்காது எங்கிட்ட பகிர்ந்திருந்தா இப்படியொரு எண்ணம் வளராமலே இருந்திருக்குமேனுதேன் வேதனையா இருக்கு” என்று அவள் கூற,
“நான் அதை பெருசா நினைக்கலைனு நினைச்சுட்டு இருந்தேன்டி.. என் மனசுல இப்படியொரு தாக்கத்தை அது ஏற்படுத்திருக்குனே இப்பதானே புரியுது” என்றான்.
“இதை நீங்க சுமந்தது ஒரு பக்கம் வருத்துச்சுனா நான் பேசிபுட்டேனே ஒரு பொல்லாத வார்த்தை.. அண்ணே பேசினதுக்கு அந்த அதிர்ச்சில பதிலேதுஞ் சொல்ல வரலை. அவுக கூப்பிட்டப்ப வேணாமுனு இருக்கவுந் தோனலை. அப்படியொன்ன பேசிபோட்டு உங்க முகத்த பாக்க துணிவு இல்ல. அதேன் கிளம்பினேனே தவிர உங்க மேல கோவமே இல்லிங்க. நேத்து வார உங்கள எதிர்கொள்ள துணிவில்லாதுதேன் தவிச்சேனே தவிர பேசக்கூடாதுனு இல்லிங்க” என்று அவள் கூற,
“உன் வார்த்தை வலி குடுக்கலனு சொல்ல மாட்டேன் யாழ்மா. ஆனா சத்தியமா நீ அதை வாய் வார்த்தையாதேன் சொல்லிருப்பனு எனக்கு புரியாத அளவு நீ என்மேல் வச்சுருக்குற நேசம் மேல நம்பிக்கையில்லாம இல்லடி” என்று கண்ணீருடன் கூறினான்.
கண்ணீரும் புன்னகையுமாய் அவன் கண்ணீர் துடைத்தவள் மௌனமாகிட, இருவரது மனதிலிருந்தும் பெரும் பாரம் ஒன்று நீங்கிய உணர்வு! நடந்த பிரளயத்திற்கும், பிரிந்து இருந்த நாட்களுக்கும், கொண்ட வேதனைக்கும், பேசிக்கொண்டு தீர்த்துக்கொள்ள பயன்படுத்தியதென்னவோ சொற்ப வார்த்தைகள் தான்… ஆனால் அவ்வார்த்தைகளிலும் பகிற இயலாத பல உணர்வுகளை ஒருவருக்குள் மற்றவர் கடத்தியிருந்தனர்!!!
இருவருமே தங்கள் தவறையும், காதலையும் ஆழமாய் உணர இச்சண்டை தேவையாகப்பட்டிருப்பது தான் விதியெனில் யாரால் மாற்றி அமைத்திட இயலும்?
“என்மேல கோவம் போச்சுதா?” என்று இருவரும் ஒன்றுபோல் கேட்டுக்கொள்ள, அது இருவர் இதழிலும் மெல்லிய புன்னகையைக் கொடுத்தது.
“கோவமேயில்லை.. வருத்தம்தேன்” என்று பதிலும் ஒன்றுபோல் வரப்பெற, அது இருவர் விழியிலும் கண்ணீரைக் கொடுத்தது!
“யாழ்…” என்று பயத்துடன் அழைத்தவன், “நா.. நான் பேசினதை..” என்று துவங்க,
அவன் வாய் பொத்தி, “குத்திக்காட்ட மாட்டேங்க… எனக்கு வலியைக் கொடுத்த உங்களுக்கு அது எத்தனை வலிச்சிருக்கும்னு எனக்கு தெரியும். நானும் அதே நிலையிலதேன் இருந்தேன். நானும் வார்த்தைய விட்டுபோட்டு பேசிபோட்டோமேனுதேன் தவிச்சேன்.. அப்படியிருக்க திரும்ப பேசின வார்த்தைகளை கிளறினா அது எப்பேற்பட்ட ரணம்னு எனக்கு புரியும்.. இதை இப்படியே விடுவோம்… கெட்டதிலும் ஒரு நல்லதா இந்த சண்டை நமக்குள்ள ஒரு புரிதலைக் கொடுத்திருக்கு. உங்க மனசுல இருந்த கசடுகள அழிக்க உதவிருக்கு… அதை மட்டும் நினைச்சுகிட்டு இதை ஒன்னா கடந்து வந்துபுடுவோம்” என்றாள்.
இப்படியொரு தேவதை தன் வாழ்வில் அமைய தான் என்ன செய்திட்டோம்? என்று எண்ணி கலங்கியவன் “லவ் யூ டி..” என்றபடி அவளை அணைத்துக் கொள்ள, சில நிமிடங்கள் இருவருக்கும் மொத்த வலிகளையும் இறக்கி வைப்பதற்குத் தேவைப்பட்டது!
“ரொம்ப பயந்துட்டேன் யாழ்.. நம்ம சண்டை.. எ.. எதாவது..த..தப்பா முடிஞ்சுடுமோனு.. நீ இல்லாம நானும், நான் இல்லாம நீயும் வாழவே முடியாதுனு உள்ளுக்குள்ள இருந்த நம்பிக்கை திடம் கொடுத்தாலும் கூட அந்த வலி கொடுத்த பயத்தையும் தடுக்கவே முடியலை” என்று அவன் கூற,
“நம்ம காதல் ஒன்னும் ஆலமரம் இல்லைங்க.. அது நாணல் (புல்)” என்றவள் புரியாது விழிக்கும் கணவனைக் கண்டு மெல்ல புன்னகைத்து, “ஆலமரம் வலுவானதுதேன். ஆனா பெரும் புயல் ஒன்னு வந்தா வேரோட சாஞ்சுபுடும்.. ஆனா இந்த நாணல் அப்படியில்லீங்க.. எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் அதுக்கு வளைஞ்சு கொடுத்து நிலைச்சு நிக்கும். எப்பேர்பட்ட சண்டை வந்தாலும் நம்ம காதல் ஒருத்தருக்கு ஒருத்தர் வளைஞ்சு கொடுத்து நிலைச்சு நிக்க வைக்கும். விட்டுக்கொடுக்குறதால நாம குறைஞ்சுடப் போறதில்லைன்ற எண்ணமும், வளைஞ்சு போறது அவமானமில்லைன்ற எண்ணமும் நம்ம காதலில் இருக்கு. நாணல் போன்ற இந்த காதல் நம்மலை நிலைச்சு இருக்க வைக்கும்” என்றாள்.
அவளையே காதலும் கண்ணீருமாய் பார்த்தவன் மனம் நிறைந்து போனது!!!
கொண்டவன்(ள்) தோள் சாய்ந்து கண்ணீர் உகுத்து முடித்த நொடி, அத்தனை நாட்கள் இருந்த பாரம் பனியாய் உருகிவிட்ட மாயமாய் இருவருள்ளும்…!-தொடரும்...
Hope that I had satisfied the thoughts of both. Thank you friends ☺️ இன்னும் ரெண்டே எபிதேன் தாயிகளா😍
நாணல்-29
நாணல்-30
ஊர் திரும்பியவுடன் தங்கள் வீட்டைக் கண்டவள், “பரவாலயே.. வீட்டை அழகாதான் வச்சிருக்கீக” என்று கூற,
“ஆக்சுவலி நான் மட்டுமே இருந்திருந்தா குப்பைபோல ஆயிருக்கும்.. எதையும் கவனிச்சு செய்யும் நிலையில் இல்லாமதேன் இருந்தேன்.. ஆனா எம்மருமவன் வந்து துருதுருனு அம்புட்டையும் செஞ்சு வச்சு என் பொண்டாட்டி இல்லாத குறைய கொஞ்சம் தீத்து வச்சான்” என்று கூறினான்.
அதில் சிரித்துக் கொண்டவள் “அதுக்குத்தேன் அவன அனுப்பிச்சேன்” என்று கூற,
“இருஇரு.. உன் பாசமான அத்தை எனக்கு எடுபிடி வேலை பாக்கத்தேன் உன்னைய அனுப்பிருக்கானு போட்டுத்தரேன்” என்று கூறினான்.
அதில் பொய் கோபம் கொண்டு அவனை அடிக்கத் துறத்தியவளுக்கு அவன் போக்குக் காட்ட, நீள்விருக்கையை சுற்றிச் சுற்றித் துரத்தியவள், “யப்பா சாமி முடியலை” என்று மூச்சுவாங்க அமர்ந்தாள்.
தானும் மூச்சுவாங்க அவள் அருகே அமர்ந்தவன் அவள் கரத்தை எடுத்துத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு, “தேங்ஸ் யாழ்..” என்று கூற,
“எதுக்காம்?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“நிறைஞ்சுருக்கு.. மனசு வீடு ரெண்டும்…” என்று ஆழ்ந்து அனுபவித்தக் குரலில் அவன் கூற,
“எல்லாம் இருக்கட்டும்.. இருபது நாள் செலவு செஞ்சதுக்கு கணக்கு கொடுங்க” என்று பக்கா இல்லத்தரசியாய் மாறி அவனை அதட்டி உருட்டினாள்.
“யாழ்.. ஒரே ஒருமுறை அதுபத்தி பேசிக்கவா?” என்று ‘அச்சண்டை பற்றியே பேச்சுவார்த்தையே இனி வேண்டாம்’ என அவள் குறிப்பிட்டதால் அனுமதி கேட்க, பாவை அவனை என்ன எனும் விதமாய் பார்த்தாள்.
“நான் இவ்வளவு செஞ்ச பிறகும் சண்டைய கடந்து இவ்வளவு இயல்பா எப்படி யாழ் இருக்க? என்மேல கோவமே வரலையா?” என்று அவன் கேட்க,
“நானும் தான் பேசினேன்.. அப்ப இதே கேள்விய நானுங் கேக்கட்டுங்களா?” என்றாள்.
“நாங்கேட்டதுக்கு பதில சொல்லாது என் பக்கமே திருப்பி விடுறியாக்கும்? நான் அப்பதே அதுக்கு அடிச்சு ஓஞ்சு தேஞ்சு போயிட்டேன்டி.. ஆனா நீ எந்த எதிர்ப்புமே காட்ட மாட்டேங்குறியே” என்று அவன் கேட்க,
“கோவத்துல வீசுற வார்த்தைக்கெல்லாம் கணக்கு வச்சு முறுக்கிட்டு நின்னா நம்மளோட அத்தனை வருஷ காதலுக்கு மதிப்பென்ன சொல்லுங்க? கோபமும் காமமும் மனுஷனால கட்டுப்படுத்தவே முடியாத உணர்வுகளுங்க.. உங்கள காதலிச்சேன்னா உங்களோட நேசத்தை மட்டுமே வாங்க காதலிக்கல.. உங்க அன்பு, பாசம், காதல் எவ்வளவு ஏத்துக்குறேனோ அதே அளவு உங்க கோபத்தையும் குறைகளையும் நான் ஏத்துக்கோனும்.. அம்புட்டையும் ஏத்துக்குறதுதேன் நெசமான நேசம்.. நம்மளோடது அப்படிபட்ட தூய்மையான நேசந்தேன்..” என்று கூறினாள்.
கண்கள் பனிய அவளைப் பார்த்தவன், “நான் ரொம்ப லக்கி யாழ்” என்க,
“உங்க காதல் கிடைக்க நானும் லக்கிங்க” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.
“டிராவல் பண்ணதாலயானு தெரியலை.. வைத்த பிரட்டுற போலவே இருக்குது” என்று அவனைப் பார்த்து பாவம் போல் அவள் கூற,
“என்னாச்சுடி?” என்று கேட்டவன், “இரு வெண்ணி வச்சு கொண்டு வாரேன்” என எழுந்து சென்றான்.
தானும் அவனுடனே வால் பிடித்து வந்தவள் மேடையில் ஏறி அமரவேண்டி எக்கி நிற்க முயல, அது என்னவோ செய்ததில் பிரட்டல் உருட்டலாய் மாறி தொண்டைக்குழிக்குள் எதனையோ உருட்டி விட்டது!
அதில் வாயைப் பொத்திக் கொண்டு விறுவிறுவென குளியலறைக்குள் சென்றவள் வாந்தி எடுத்துவிட, “ஏ யாழ்மா..” என்று வந்தவன் அவளை அமர்த்திவிட்டு நீர் கொடுத்துப் பருகச் செய்தான்.
அவளது சோர்ந்த முகம் கண்டவன், “யா..யாழ்.. ம.. மதியம் ரொம்ப படுத்திட்டேனா? அ..அதனால எதும் பண்ணுதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள், இல்லை எனும் விதமாய் தலையாட்டியபடி யோசனையாய் முகத்தை சுருக்கினாள்.
அவனுக்கு உண்மையில் அவள் சோர்வும், முக பாவமும் பதட்டத்தைத் தர, “என்னடி பண்ணுது? ஹாஸ்பிடல் போவோமா?” என்று கோட்டான்.
“அர்த்த ராத்திரில அதுக்கும் அலையனுமா இப்ப? ரொம்ப டயர்டா இருக்குது.. படுப்போம்.. நாளைக்கும் இப்படியே இருந்தா பாப்போம்” என்று அவள் கூற,
“ம்ம்.. நாளைக்கு வேலைக்கு போறியா?” என்றவன், “ஏய்.. இத்தனை நாள் என்னடி பண்ண?” என்று கேட்டான்.
“அதெல்லாம் வர்க் ஃப்ரம் ஹோம் போட்டுகிட்டேன்.. டிசைனிங் வேலைதானே எனக்கு.. அதனால கொடுத்துபுட்டாக..” என்று கூறியவள், “தூங்கலாமா?” என்க,
“படு கதவெல்லாம் பூட்டிட்டு வாரேன்” என்றுவிட்டுச் சென்றவன் சொன்னபடி கதவை அடைத்துவிட்டு வந்து படுத்தான்.
மனதிற்குள் சில எண்ணங்கள் தோன்றி பெண்ணவளை உற்சாகமடைய வைத்தப்போதும் தெளிவாய் அறியும்வரை கூறவேண்டாம் என மௌனம் காத்தாள்.
**
காலை எழுந்ததிலிருந்து தாமரையாளின் முக உணர்வுகளையே ஆராயும் பார்வை பார்த்தபடி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தவன், “நிஜமாவே உனக்கு ஓகேவா இல்ல எனக்கு லீவ் போட வைக்க வோணாம்னு சொல்றியா?” என்று கேட்க,
அவனை முறைத்தபடி கரண்டியை ஓங்கியவள், “அடிவாங்க போறீக எங்கிட்ட” என்றாள்.
பாவம் போல் அவளைப் பார்த்தவன், “டயர்டா தெரியுறடி” என்க,
“நைட்டு நாம நடுசாமந்தேன் தூங்கினோம்.. அதேன் டயர்டாருக்குது.. நீங்க கிளம்பி போனவாட்டி கொஞ்ச நேரம் ஒறங்கி எழத்தான் போறேன். சரியாபோவும்” என்று கூறினாள்.
ம்ம் கொட்டிக் கேட்டுக் கொண்டவன் கிளம்பும் முன் அவளை நோக்க, “இப்ப கிளம்புதீகளா இல்லையா? எனக்கு ஒன்னுமில்லபா” என்று கூறினாள்.
சரியெனக் கூறியவன், “முடியாட்டி எனக்கு ஃபோனடிடி கண்ணு..” என்க,
“சரிங்க.. நான் எதும்னா கூப்பிடுதேன்” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அவன் கிளம்பிய அடுத்த அரைமணி நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் தேவைகளைக் கேட்டு பரிசோதித்த மருத்துவரும் அவள் வேண்டிய பதிலையே கொடுத்திருக்க, அவள் சந்தோஷத்திற்கு அளவே இல்லாது போனது!
கண்கள் கலங்க, ஆனந்தத்தில் திளைத்தவளுக்கு அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் கூறி அவர் அனுப்பி வைக்க, வரும் வழியிலேயே தன்னவனிடம் கொடுக்க பரிசு ஒன்றை வாங்கி வந்திருந்தாள்.
அறிந்துகொண்ட விடயத்தைத் தன்னவனிடம் பகிர்ந்துகொள்ள பரபரத்த மனதைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது!
'அய்யோ.. எப்ப வருவீக.. ரொம்ப ஈகரா இருக்கேன்' என்று மனதோடு அவனிடம் பேசிக் கொண்டவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை!
மாலை நேரம் வழிமீது விழி வைத்துக் காத்திருந்தவளை சோதிக்காது அவன் நேரமே வந்துவிட, ஆர்ப்பாட்டத்துடன் எழுந்தவள் தன் மணிவயிற்றை வருடிக் கொண்டு அவனை வரவேற்றாள்.
இத்தனை நாட்கள் தன்னை வரவேற்க இல்லாத மனைவியின் வெற்றிடம் நீங்கிய சந்தோஷத்துடன் அவளை ஒரு கையால் அணைத்து நெற்றிமுட்டியவன் புத்துணர்ச்சி பெற நகர்ந்து விட, தானும் அவன் பின்னோடே வந்தவள் அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள்.
“ஒடம்பு எப்படியிருக்கு யாழ்.. அகைன் வாமிட் ஏதும் வந்ததா?” என்று ஆதி கேட்க,
“அதெல்லாம் இனிமேதான் வருமாருக்கும்” என்று கூறி களுக்கிச் சிரித்தாள்.
அவள் பதிலில் புரியாது அவளை நோக்கியவன் அவள் முகம் காட்டும் உற்சாகத்தில் சிறு புன்னகையுடன் “என்னடி முகம் பளபளனு மின்னுது?” என்று கேட்க,
“உங்களுக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்” என்று கூறினாள்.
“கிஃப்டா? என்னது?” என்றபடி ஆடவன் அவளிடம் வர,
ஒரு சிறு பெட்டியை அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பார்த்தவன், “என்னது யாழ்? எதுக்கு இந்த கிஃப்ட்?” என்றபடி அதைப் பிரித்துப் பார்க்க, அவன் கண்கள் சுறுங்கி பின் விடயம் புரிந்து அதிர்ச்சியில் விரிந்தது!
அவனை கட்டியணைத்துக் கொண்டவள் கிசுகிசுப்பான குரலில், “அப்பாவாகப் போறீக” என்று கூறவும்,
தன் கையிலிருக்கும் குழந்தைகள் அணியும் காலணியையும், தன்னை அணைத்திருக்கும் தன்னவளையும் பார்த்தவன் அவள் முகம் தாங்கி, “யா..யாழ்..?” என்க,
“ஒன்ற மாசமாச்சாம்” என்று நாணம் மேலிட்ட குரலில் கூறினாள்.
“யா..யாழ்..” என்று தடுமாற்றமாய் அவளை அழைத்தவன், மனதில் கர்ப்பமாக இருந்த மனைவியையா கைநீட்டி அடித்தும் வார்த்தையால் தண்டித்தும் வதைத்தோம் என்ற எண்ணம் அவனுக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுத்திருக்க, அவன் மன உணர்வு புரிந்தவளாய், அவன் கன்னம் தாங்கி இல்லையென தலையசைத்தவள், “ப்ளீஸ்..” என்றாள்.
அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டவன், “இன்னொரு முறை அதை சொல்லு யாழ்” என்று கலங்கும் குரலில் கேட்க,
மென்மையான புன்னகையுடன், “நீங்க அப்பாவாகப்போறீக” என்றாள்.
அதில் கண்கள் கலங்கி, உடல் குலுங்க அவளை அணைத்தவன், “யூ ஆர் மை ஏஞ்சல் யாழ்..” என்று கூற,
“நீங்க எனக்கு அதுக்கும் மேல” என்று கூறி அவன் நெற்றியில் முத்தமிட எம்பினாள்.
அவளைத் தடுத்துத் தான் அவள் உயரத்திற்கு குனிந்து அவன் வர,
“பார்டா.. இன்னும் வராத பிள்ளைக்காக இப்பவே இறங்கி வர ஆரமிச்சாச்சா?” என்று கேட்டாள்.
அதில் அவன் புன்னகைக்கவும், “பொண்டாட்டிக்காக இறங்கி வாரதுலயே ஈகோ பாக்காத எம்புருஷன், பொண்ணு விஷயத்துலயா ஈகோ பாத்துட போறீக?” என்று பெருமை பொங்க அவள் கூற,
“பணிந்து வாரதுக்கு உங்காதல் அத்தனை உரியதுடா.. யூ ஆர் வர்த் ஃபார் தட்” என்று உணர்ந்து கூறினான்.
அதில் கண் கலங்கி சந்தோஷமாய் நின்றவள், “போதும் போதும்.. ஐஸ் வச்சு சளி புடிச்சுடப்போவுது.. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு எனக்கு வாரது அம்புட்டையும் என் புள்ளைக்கும் வேற நான் பங்கு போடனுமே” என்று கூற,
புன்னகையாய் அவளை அணைத்துக் கொண்டு அவள் உச்சியில் இதழ் பதித்தான்…
அவளைத் தன் திருப்திக்காக ஒருமுறை மருத்துவமனை அழைத்துச் சென்றவன் வரும் ஞாயிறு மேற்கொள்ளும் பயணத்தை மேற்கொள்ளலாமா என்றும் விசாரிக்க, மருத்துவர் அதற்கு தடை போட்டுவிட்டார்.
“கார்ல கூட்டிட்டு போயிக்கலாமா டாக்டர்?” என்று அவன் அவரை விடாது நச்சரிக்கு,
தாமயையாள் தான் அவனை அடக்கிக் கூட்டி வரவேண்டி இருந்தது!
“எதுக்கு இம்புட்டு சோகம்? வேணுமின்னா நீங்க போயிட்டு வாங்களேன்..” என்று அவள் கேட்க,
“முன்ன மாதிரினா நான் மட்டுமாது போறேன்னு உன்னை விட்டுட்டு போயிருக்கலாம்.. இப்ப உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறது?” என்று சோகமாய் கேட்டான்.
“ஆஹாங்.. நான்னா பரவாலனு அம்போனு விட்டுட்டு போவீக.. உங்க புள்ளனா மட்டும் பாவம் பாக்க தோணுதோ?” என்று அவள் பொய் கோபம் கொள்ள,
அதில் சிரித்துக் கொண்டவன், “நீ வளந்த குழந்தைடா யாழ்.. மேனேஜ் பண்ணிப்ப.. பாப்பா அப்படியில்லையே” என்று அவளது பொய்யான கோபத்திற்கும் சளிக்காது விளக்கம் கொடுத்தான்…
“பேசி பேசியே கௌத்துடுங்க” என்று அவள் சிரிக்க,
“நான் கவிதையா காட்டிக் காட்டி உன்னை கௌத்தவன்டி” என்று கூறி சிரித்தான்.
****
அந்த மண்டபம் மொத்தமும் கலைகட்டிக் கொண்டிருந்தது! மனம் நெகிழ, குளிர்ந்துபோன உணர்வோடு அங்கே மேடையின் திரைக்குப் பின்னே அமர்ந்துகொண்டிருந்த தாமரையாள் சுற்றி பரபரப்பாய் வேலை செய்துக் கொண்டிருந்தோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கண்ணு.. இந்தா தாயி..” என்று அம்பிகாதேவி அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்துத் தர, அதை ஆயாசமாகப் பார்த்தவள், “இப்ப என்னது?” என்று கேட்டாள்.
“மாதுளை ஜூஸுடா..” என்று அவர் கூற,
“மதனீஈஈஈ.. காலைலருத்து எம்புட்டுதேன் தருவீக எல்லாரும்? அவுக வந்து முந்திரி தின்னு பாதம் தின்னுனு உயிரெடுத்தாகனு துறத்திவிட்டா, இந்த வீரா அண்ணே வந்து அவ்வளவு ஆப்பிளை வெட்டிக்கொண்டாந்து கொடுத்துட்டாக. அதை உங்கி முடிக்கும் குள்ள விஜி மதினி பாதுஷா கொடுத்துபுட்டாக. அது முடிய இந்த அங்கையு சத்துமாவு உருண்டைய கொண்டாந்து நீட்டுது.. சத்தியமா முடியலை என்னால” என்று பொறிந்தாள்.
“எங்கம்மா.. புள்ளத்தாச்சி புள்ளை எதுக்குத்தா கத்துற?” என்று கேட்டபடி தீஞ்சுடரோன் வர,
அவர் கையிலிருந்த பதார்த்ததைப் பார்த்து மேலும் கோபம் வரப்பெற்றவள், “நான் வீட்டுக்கேப் போறேன் போங்க” என்று எழ,
அவள் முன் தன் ஏழு மாத சூழ் துங்கிய வயிற்றை ஏந்தியபடி வந்த திலகா, “என்னையவும் கூட்டிப்போங்க சித்தி.. இவுக பண்ற அலும்பு தாங்குதில்ல. என்னத்தையாது கொடுத்து தினிச்சுகிட்டே இருக்காக” என்று கூற,
“அடடா.. கொஞ்ச நேரம் அங்கிட்டு போனதும் என்ன சத்தம்?” என்றபடி வந்த அர்ச்சனாவின் கைகளில் இரு குவளைகள் இருந்ததில் பெண்கள் சோர்ந்து போயினர்.
“கண்ணுகளா.. நானும் இவுகள போல ஏதும் கொண்டு வரலை.. சீரகத்தண்ணீதேன் இருக்கு.. மாசமா இருக்குறப்போ அடைக்க அடைக்க எதும் கொடுக்காதீகனு வஞ்சுபோட்டுதேன் வாரேன். தண்ணிய குடிச்சுபோட்டு கம்முனு கிடங்க” என்று அர்ச்சனா கூற,
“ஹப்பாடா” என்ற பெருமூச்சோடு அதை குடித்துவிட்டு அமைதியாக அமர்ந்தனர்.
அது கோவையில் இருக்கும் பிரம்மாண்டமான மண்டபம். தாமரையாள் விழாவிற்கு வர இயலாது என்று செய்தி அனுப்ப, முதலில் பதறி கேள்வி கேட்டவர்களுக்கு குட்டி வரவினை பதிலாய் கொடுத்து சந்தோஷத்தில் திளைக்க வைத்திருந்தனர்.
வேந்தன் தனது அத்தை மாமா இல்லாது விழா நடப்பதில் சற்றே சுனக்கம் கொள்ள, வீட்டில் உள்ள அனைவரும் பேசி கோவையிலேயே மண்டபம் ஏற்பாடு செய்து விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று அவள் ஒருத்திக்காக இங்கிருந்து படையையே திரட்டிக் கொண்டு வந்தனர்.
ஐந்து மாதம் மேல் கடந்துவிட்டது என்றாலும் திலகாவை மட்டும் தனியே பாதுகாப்பாக மகிழுந்தில் தான் அழைத்து வந்தான் வேந்தன். இச்செயலில் தன் குடும்பத்தாருக்கு தன்மீது உள்ள நேசத்தில் நெகிழ்ந்த போதும் கூட, திலகாவை அலைய வைத்ததில் அனைவரிடமும் கோபம் கொள்ளவே செய்தாள் பெண்.
அப்படியிப்படியென சரிகட்டி இதோ விழாவும் துவங்கியிருந்தது! அனைவரும் மேடையில் குழுமியிருக்க, “தாமரை.. தம்பியெங்க?” என்று தடாதகை கேட்டார்.
“ம்க்கும்.. உங்க தம்பிக்கு என்னைய கட்டிவச்சதுக்கு அக்னி அண்ணேன கட்டி வச்சிருக்கலாம். அண்ணே ஃபோன் போட்டுதுனு பேசிட்டு வாரேன்னு போனவக இன்னும் வரக்காணும். போயி கூட்டியாரேன்” என்றபடி எழுந்து சென்றாள்.
அங்கு தோட்டத்தில் நின்று அக்னியுடன் காணொளி அழைப்பில் இருந்த ஆதி முகத்தில் அப்படியொரு நிறைவு!
“உன்னைய பாக்கனும்போல இருக்குதுடே.. சீக்கிரம் வேலைய முடிச்சுபோட்டுவா” என்று ஆதி கூற,
சிறு சிரிப்புடன், “வாரேன்டே..” என்றான்.
“போற வரவக யாராது கேட்டா எனக்கு தெரியாது யாரையும் செட் பண்ணி வச்சிருக்கீகனு நினைக்கப்போறாக.. ஏக்கம் பொங்கி வழியுது” என்று கூறியபடி தாமரையாள் வர,
“எங்கம்மா சிங்தாரீ” என்று அக்னி அழைத்தான்.
“பேச்ச மாத்தப்பாக்கதண்ணே.. நீ எம்புருஷனை உன் சட்ட பாக்கேட்டுல முடிஞ்சு வச்சுருக்குற ஆமா” என்று கோபம் போல் அவள் கூற,
ஆடவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“தாயி.. சோலியெல்லாம் இழுத்துப்போட்டு செஞ்சுகிட்டு கிடக்காத” என்று அக்னி கூற,
“ம்க்கும்.. என்னைய இங்க எல்லாரும் செய்ய விட்டுட்டாலும்” என்று முகவாயை தோளில் இடித்துக் கொண்டு கூறினாள்.
சிரித்தபடி மணையாளை தோளோடு அணைத்துக் கொண்ட ஆதி, “புள்ளைய ஏந்த மாமங்காரன் வந்துடனும்” என்று கூற,
“உன் புள்ளைக்கு மாமாக்காடே பஞ்சம் அங்கன?” என்று கேட்டு அக்னி சிரித்தான்.
“புள்ளைக்காக கேட்கலடே.. எனக்காக.. எங்கூடருக்க நீ எனக்கு வேணும்” என்று ஆதி கூற,
கண்கள் பனியப்பெற்ற அக்னி, “மனசு நெறஞ்சு இருக்கு.. அழ வச்சுபுடாதடே” என்று கூறினான்.
“போதும் போதும் உங்க பாசப் போராட்டம்.. அங்கன எல்லாரும் தேடுதாக.. வாங்க” என்று கணவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவள் விசேஷத்தில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பொழுதை கடந்தாள்….
அனைவரும் இன்பமே உருவாய் கொண்டாடிய நிகழ்வு மறக்க இயலா பெட்டகமாய் அவர்கள் மனதில் பதிந்து அழகோவியமாய் மிளிர்ந்தது!!!
எபிலாக்:-
அழகிய காலைப் பொழுது அது…
“கொஞ்சமாது பொறுப்பிருக்கா பாரு இவுகளுக்கு.. நாலும் பொழுதுமா பாக்குற வேலையா இது?” என்று கத்தியபடி சமையலறையில் பாத்திரங்களை தாமரையாள் உருட்டிக் கொண்டிருக்க, சமையலறையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் காயத்திரியும் அங்கையும்.
கத்திக் கொண்டே வேலை செய்தவள், ஒரு குவளையில் பழரசத்தைக் கொண்டு வந்து அங்கை கையில் திணித்து, “மாசமாருக்குறவ எதுக்குடி அலைஞ்சுகிட்டு இருக்குத? உன்னைய சொல்லக்கூடாது.. நீ கண்ண கசக்கினதும் பதறியடிச்சுகிட்டு இங்கன கூட்டியாறான் பாரு எம்மருமவன், அவேன சொல்லனும்” என்று கடிய,
அவளைக் கண்டு முகத்தைப் பாவம் போல வைத்துக்கொண்டாள், ஐந்து மாத கற்பவதியான அங்கை!
“ஒன்னு சொல்லிடக்கூடாதே.. மொகத்த பால்புடி புள்ளையாட்டம் வச்சுக்குறது” என்று கடுப்போடு அவள் கூறுகையிலேயே அறையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது..
“ஆத்தே.. ஆரமிச்சுட்டியானே.. அடியே காயு வாடி” என்றவள் உள்ளே செல்ல,
தன் பிஞ்சு கரங்களையும் கால்களையும் உதைத்துக் கொண்டு அழத்தயாரகிய, அவளது எட்டு மாதங்களை பரிபூரணமாய் கடந்த மகன், அமரவேலனைக் கைகளில் அள்ளினாள்.
“தூக்கிட்டு ஓடுடி முழிச்சுடப் போறா..” என்று அடிக்குரலில் அமைதியாய் தாமரையாள் கூற,
அமரவேலனின் அருகே பொம்மைபோல் உறங்கிக் கொண்டிருந்த அவனது இரட்டை சகோதரி அசோகசுந்தரியைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள் காயத்திரி!
ஆம்! நம் பொற்றாமரையாளுக்கும் ஆதிவருனேஷ்வரனுக்கும் ஆண், பெண் என இரட்டை மகவுகள்! அமரவேலன், அசோகசுந்தரி…
மகனுக்கு பசியாற்றிய தாமரையாள் அவனைத் தட்டிக் கொண்டே வர, மகளின் அழுகைத் துவங்கியது! “ஆத்தீ…” என்று அவள் நொந்தபடி மகனைக் கொடுத்து மகளை வாங்க,
“ஆத்தீனு புலம்புதீகளா இல்ல ஆதினு மாமாவ கூப்பிடுதீகளா?” என்று அங்கை கேலி செய்தாள்.
மகளைத் தட்டிக்கொண்டே திரும்பியவள், “அவுகள கூப்பிடுறதுனாலும் ஆதினு கூப்பிட மாட்டேன்.. ஈஸ்வர்னுதேன் கூப்பிடுவேன்.. வந்துட்டா கேலி பண்ண” என்றுவிட்டுச் சென்றாள்.
மகளுக்குப் பசியாற்றி முடித்து உருங்கும் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்தவள், “அப்படியே அப்பன உரிச்சு வச்சுருக்குது” என்று கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் கொடுத்தாள்.
கணவனை எண்ணிய ஏக்கம் மனதில் வந்துபோக, உடனே முந்தைய நாள் போட்ட சண்டையும் மனதில் வந்தது. அதில் கோபத்துடன், முறுக்கிக் கொண்டவள் மீண்டும் அவனை மனதோடு அர்ச்சித்தபடி வேலையைப் பார்த்தாள்.
அங்கு வீடே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க, வக்கனையாய் உண்டு கொண்டிருந்த ஆதியை ஆயாசமும் கோபமும் கலக்கப் பார்த்து அமர்ந்திருந்தான் அக்னி!
“ஏன்டே.. வெக்கங்கெட்ட பயலே..” என்று அக்னி அழைக்க,
எலும்பில் உள்ள மஞ்சையை உறிஞ்சியபடியே, “சொல்லுடா வருங்கால மானங்கெட்ட பயலே” என்றான்.
அவனை ஏகத்துக்கும் முறைத்த அக்னி, “என்ன செஞ்சுருக்குறனு தெரிஞ்சுதேன் செஞ்சுருக்கியா?” என்று கேட்க,
“ஏன்.. என்னத்த செஞ்சுபுட்டேனாம்?” என்றான்.
அக்னி ஏதோ பேச வர, “ஏன்டே மாப்பிள்ளை வந்ததுலருந்து கடிந்துகிட்டே கிடக்க.. உங்க உடுடே” என்ற ரணதீரோன், “அம்மாடி அம்பி.. அந்த நல்லி எலும்பை எடுத்து மாப்பிள்ளை இலையில வையு” என்று மனைவியிடம் கூற,
இதோங்க என்று அவனுக்கு எலும்புகளை அள்ளி வைத்தார்.
“அக்கா அக்கா போதும் போதும்..” என்று அவன் கூற,
“போதும்னா எந்திச்சுபோடே” என்று அக்னி கூறினான்.
“டேய்.. உங்கும்போது என்ன வார்த்தையிது.. பல்லுகில்லயெல்லாம் கழட்டிபுடுவேன்” என்றபடி அதிவீரர் வர, பயத்துடன் எழுந்தவன், “மன்னிச்சுபுடுங்கண்ணே” என்றுவிட்டு ஆதியை முறைத்தான்.
அதில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட ஆதி, “மச்சான்.. அந்த இரா தொக்கை இப்படி குடு” என்க,
விஜயலட்சுமி மீண் வருவலை அவன் இலையில் வைத்து, “நல்லா சாப்பிடுங்க தம்பி” என்று கூறினார்.
“மடில வச்சு ஊட்டி விடுறதுதானே மதனி” என்று அக்னி பல்லைக் கடிக்க,
“ஏன்டே.. எந்தம்பிக்கு நான் ஊட்டியும் விடுவேன்” என்று கூறியவர் ஆதியுடன் ‘ஹை-ஃபை’ போட்டுக் கொண்டார்.
“அவேன் விருந்தா உங்க வந்திருக்கான் இங்க?” என்ற அக்னி ஆதியைப் பார்த்து முறைத்தபடி, “ஏன்டே.. பொம்பளப்புள்ளையதேன் புருஷனோட சண்டை போட்டுகிட்டு அம்மா வீட்டுக்கு கிள்மபிப் போவாக.. நீயென்னடானா பொண்டாட்டிகூட சண்டைய போட்டுட்டு மாமனார் வீட்டுல வந்து விருந்து உங்கிட்டு கிடக்க” என்று பொறிந்தான்.
“உங்கம்மைதேன் சண்டை போட்டா.. சண்ட போட்டா அவளுக்குத்தான் கோச்சுட்டு போக போக்கிடம் இருக்காமா? எங்க போனாலும் வீட்டுக்குத்தானே வந்தாகனும்முனு சொன்னா.. அதேன் நான் போறோன்டி கிளம்பினு எங்கவீட்டுக்கு வந்துபுட்டேன்” என்று ஆதி கூற,
அக்னிக்கு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போலத்தான் இருந்தது!
“ரெட்டப்புள்ளைய வச்சுகிட்டு இருக்காடே” என்று அக்னி கூற,
“தனியாலாம் இல்லை, அங்கை காயூ, ஆருவெல்லாம் கூட இருக்காகலே.. அவளும் புறப்பட்டு வரத்தானே போறா” என்றான்.
“முதல்ல உங்களை கதை படிக்குறதை நிறுத்த வைக்கனும்டே.. சும்மா இல்லாததையெல்லாம் படிச்சு சண்டைய போட்டுகிட்டு திரியிறீக” என்று அக்னி கூற,
வீட்டில் அனைவருக்கும் சிரிப்புதான் வந்தது. அக்னிதான் கத்திக் கொண்டிருந்தான்.. அனைவருமே சிரிப்பாகவே அதைக் கடந்தனர்… பாவம் அவனுக்கு அவன் கவலை. இருக்கும் படபடப்பை எப்படி காட்டவென்று புரியாத தவிப்பை இப்படி காட்டிக் கொண்டிருக்கின்றான்.
“மச்சான்.. ரொம்ப கத்தாத.. கல்யாண மாப்பிள்ளை சும்மா சும்மாலாம் டென்ஷன் ஆவக்கூடாது” என்று ஆதி கூற,
அனைவரும் கலகலவென சிரித்து அந்த வளர்ந்த ஆண்மகனை வெட்கமடையச் செய்தனர்.
அதை புகைப்படம் எடுத்த ஆதி, “ஆண்களின் வெட்கம் பேரழகனு அருவிக்கு அனுப்பிடுவோமா?” என்று கேட்க,
“டேய்.. ஏன்டா..” என்று அவனிடமிருந்து அலைபேசியை பிடுங்க முற்பட்டான்…
ஆம்… அக்னிவேந்தனுக்கும் அவனது தூரத்து சொந்தத்தில் வரும் மாமா பெண்ணான தேனருவிக்கும் திருமணம்…
அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க, ஆதி வழக்கம் போல் கதை படித்து மனையாளுடன் சண்டை போட்டிருந்தான். சண்டை அப்படியொன்றும் பெரிதாக இல்லை. அவன் கிள்மபும்போது ‘எப்படியும் இங்கதானே வருவீக? பாத்துகிடுதேன்' என்று மனையாள் கூறியிருக்க, ‘நானும் சண்டை போட்டுட்டு என் வீட்டுக்கு போறேன் பாரு’ என்று கிளம்பியிருந்தான்.
அவர்களை கூட்டிப்போகத்தான் ஆருத்ரன் மகிழுந்தை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் தங்கையுடன் வந்திருந்தான். ஆதி வேலை முடித்து அப்படியே இங்கு ஊருக்கு வந்து தகவல் கூறியிருக்க, அவனது அசட்டுத்தனத்தில் தாமரையாள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் நொந்துபோனாள் எனில், உடன் இருந்தோர் அவளை கேலி செய்தே ஓட்டினர்…
நேரம் அத்தனை சந்தோஷமாக செல்ல அன்று இரவே கோவையிலிருத்து ஆருத்ரன், அங்கை, காயத்திரி, தாமரையாள் மற்றும் அவளது இரட்டைக் குழந்தைகள் வந்திறங்கினர்.
வந்ததும் காயுவிடமிருந்து தன் மகளை அள்ளிக் கொண்டவனை மகள் தன் பிஞ்சு கைகளால் கன்னம் தட்டி பொக்கை வாய் கொண்டு கடித்து தன் அன்பை வெளிப்படுத்த அதை ஆசையாய் ஏற்றுக் கொண்டவன், மகனைப் பார்த்து கைகளை நீட்டினான்.. தத்தை நடையிட்டு அன்னையிடமிருந்து தந்தையிடம் வந்த அந்த பிஞ்சையும் அள்ளிக் கொண்டவன், இருவரையும் முகர்ந்து அவர்களது பால் மணத்தை நுரையீரலெங்கும் நிறப்பிக்கொண்டான்.
கணவன் செயல்களை கண்கள் நிறைக்க ரசித்தபோதும் தாமரையாள் அவனைக் கண்டுகொள்ளாததைப் போல் முறுக்கிக் கொண்டு நகர்ந்திட, ‘பாருடா..’ என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
அனைவருமாய் இரவு உணவை உண்ண, மகளுக்கும் மகனுக்கும் ஓடி ஓடி இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தான் ஆதி.
அவனுக்குத் துணையாய் தனது ஒரு வயது மகனான அமுதனுடன் வேந்தனும் ஓடி ஓடி ஊட்ட, அங்கை தன்னவனைப் பார்த்து ‘பாத்துக்கோங்க’ என்று கண் காட்டினாள்.
“அண்ணி.. கவலைய விடுங்க.. அண்ணேலாம் சூப்பரா ட்ரெயின் ஆயிடும்” என்று செழிலனும் பொழிலனும் சத்தமாய் கூற,
அதில் நாணம் கொண்டவள் அவர்களை முறைக்க இயலாது புன்னகைத்து வைத்தாள்.
தடாதகை நாச்சியார் மற்றும் தீஞ்சுடரோனின் பிள்ளைகளில் மகள் துர்கா பதினோராம் வகுப்பும் மகன் சங்கரன் கல்லூரி இரண்டாம் ஆண்டும் பயில, மழலை வாசம் குறைந்துவிட்டதோ என்று அவர்கள எண்ணி முடிக்கும் முன் மூன்று மழலை செல்வங்கள் வீட்டை வலம் வந்திருந்தனர்…
அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குச் செல்ல, இரு பிள்ளைகளையும் தோளில் போட்டு தட்டிக் கொண்டே உறங்க வைத்துக் கொண்டிருந்தான் ஆதி.
பாதி உறங்கிய பிள்ளைகளைக் கண்ட தாமரையாள், “ஒறங்க வச்சுபுட்டீகளா? பாலு கொடுப்போமானு பாத்தேன்” என்று சண்டை மறந்து இயல்பாய் பேசியதில் சிரித்துக் கொண்டவன், “ஒறங்கிடுச்சுங்கடா” என்று கூறினான்.
தானும் புன்னகைத்தவள், “பத்து பைசா பெறாத சண்டைக்கு மாமியார் வீட்டுல வந்து அடைகாத்துகிட்டாச்சு” என்று கூற,
தானும் சிரித்துக் கொண்டவன், “சும்மா” என்றான்.
பிள்ளைகளை வாங்கி படுக்க வைத்தவள் மகனின் புறம் சரிந்து படுக்க, ஆடவன் தன் மகளின் புறம் வந்து படுத்தான்.
பிள்ளைகளின் கண்ணம் வருடி, “நான் இவுகளுக்கு ஏன் இந்த பேரு முடிவு பண்ணேன் தெரியுமா யாழ்?” என்க,
அவன் கூறி பல முறை கேட்டுவிட்ட போதும் சலிக்காது ‘ம்ம்’ கொட்டினாள்.
“சிவன் இல்லாத நேரம் உருவான தனிமைத் துயர போக்கிக்க பார்வதி கல்பவிருக்ஷ மரத்துகிட்ட வரமா கேட்டு வாங்கின குழந்தைதான் அசோகசுந்தரியாம்.. என்னோட வரமே நீ தான்.. உங்கிட்ட நான் வாங்கின வரமா எம்மகளையும் மகனையும் பாக்குதேன். அதான் அவளுக்கு அசோகசுந்தரினும், அசோகசுந்தரியோட சகோதரனான வேலனோட பெயரை அமரவேலனுக்கும் வச்சேன்” என்று கூறியவன் கண்கள் இன்றும், பிரசவ அறையில் அவள் துடித்ததின் வலி உணர்ந்து கண்ணீர் சுரந்தது.
தன்னவன் கரத்தைப் பற்றிக் கொண்டவள், “சந்தோஷமா இருக்கீகளா?” என்று கேட்க,
“ரொம்ப நிறைவா இருக்குடி.. இதைவிட என்ன வேணுமாட்டு?” என்றான். ஏகாந்தமான சூழல், அவர்கள் காதலால் உருவாகி காதலே கருவனதாய் இரு மகவுகள், அன்றலர்ந்த மலராய் இன்றளவும் மிளிரும் காதல்! வேறு என்ன வேண்டுமாம் அந்த காதல் ஜோடிக்கு?! இருவருக்கும் அத்தனை ரம்மியமான உணர்வைக் கொடுத்தது அந்தத் தருணம்…
இதோ அதோவென அக்னியின் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது!
அனைவரும் ஆதியின் பாட்டு திறனால் கவரப்பட்ட தாமரையாளிடம் ஓட்டி ஓட்டி ஆதியையும் பாடச் சொல்லிக் கேட்க, பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் தானும் பாட ஒப்புக் கொண்டான்…
மேடை ஏறியவன் மனையாளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு,
“உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு.. உன் ஒசரம்பாத்து எங்கழுத்து சுலுக்கிப் போச்சு..” என்று துவங்க,
அருகே அங்கையுடன் பேசிக் கொண்டிருந்த தாமரையாள் சட்டென கனவன் புறம் திரும்பினாள்.
அவள் கண்களில் ஆயிரம் கோடி மின்னலின் ஜொலிப்பு வந்து போக, தூரமிருந்தே அதை உணர்ந்த ஆதி, கூடுதல் புன்னகையுடன்,
“கூட மேல கூட வெச்சு
குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேன்டி
உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசுதடி
குதி போட்டு
வந்தேன்டி…” என்று பாடினான்.
“என்ன சித்தி.. சித்தப்பா பாடுற உசிலம்பட்டி பொண்ணு யாராம்?” என்று அங்கை கேலி செய்ய,
“உங்க சித்தபாக்கு என்னையவிட்டா வேற யாருடி அவ உசிலம்பட்டி பெண்குட்டியா வரப்போறா?” என்று நாணம் முட்டியபோதும் பெருமையுடன் கூறினாள்.
பாடலை முழுதுமாய் பாடி முடித்த ஆதியிடம் பிள்ளைகள் வந்து கட்டிக் கொண்டு முத்தம் வைக்க, மற்ற யாவருமே ஆரவாரத்தோடு கை தட்டினர்.
கழுத்தில் மாலையும், அருகே மனைவியுமாய் நிற்கும் அக்னியிடம் வந்து “என்ன அக்னி.. அருவிய கொஞ்சம் திரும்பி பாக்குறது” என்று ஆதி ஓட்ட,
“மாமா.. நம்மட்டத்தான் இப்படி வெக்கமெல்லாம் காட்டுறாக.. ஃபோனுல பாத்தீகளா? தேனூஊஊஊனு போட்டுருக்காக” என்று செழில் கேலி செய்தான்.
அதில் தேனவருவி நாணத்துடன் தன்னவனை நோக்க, அவளுக்கு இணையாய் தானும் வெட்கம் கொண்டவன், “எம்பொஞ்சாதிய எப்படியும் கூப்பிடுதேன்.. போங்கடா” என்றான்.
“இதோ பாருடா..” என்று கூட்டம் மொத்தமும் ஆரவாரமாய் அவனை கேலி செய்திட,
இதழ் கடித்து புன்னகைத்தவன் தன்னவள் கரம் பற்றி அவளை நோக்கிப் புன்னகைத்தான்…
“சரிடே சரி.. இன்னும் நீங்க ரெண்டு பேருந்தேன் பாக்கி” என்று அக்னி கூற,
“கடைசிவர என்னைய இந்த வீட்டுல யாருமே மதிக்குறதில்லப்பா” என்று காயு சோகம் போல் கூறினாள்.
அதில் அனைவரும் கலகலவென சிரிக்க,
“எல்லாத்துக்கும் கேலியாருக்குதாக்கும்?” என்ற காயத்திரி வேந்தனின் மகனை தூக்கிக் கொண்டு தேனருவியைக் காட்டி, “அந்தா பாரு அமுதா.. பாட்டி பாரு பாட்டி பாரு..” என்றாள்.
அருவி திடுக்கிட்டுப்போய் அக்னியை நோக்க,
அதில் வாய்விட்டு சிரித்தவன், “எங்கண்ணே பேரன் நமக்கும் பேரந்தானே?” என்றான்.
“எனக்கு பேரனா?” என்று அவள் அதிர,
“அருவி.. முதல் முதலா இந்த மாயாண்டி குடும்பத்துக்குள்ள வாரச்ச இந்த குட்டி மவராசனோட சித்தி என்னைய சித்தப்பானு கூப்பிட்டு ஷாக் ஆக்கிட்டா.. ஆனா உன் நிலமை என்னைவிட மோசம்.. இருபத்தஞ்சு வயசுல பாட்டியாகிட்ட” என்று ஆதி வாய்விட்டு சிரித்தான்.
அக்னியின் பக்கம் வந்த தாமரையாள் கூட்டத்தில் இரு பெண்கள் செழில் பொழிலைப் பார்ப்பதைக் கண்டு, “எண்ணே.. அடுத்த ஜோடி தயாராயிடும்போலயே.. அக்கா தங்கை சிக்கிடுச்சோ?” என்க,
“ஐத்த நீ பேசுனது எனக்கு தப்பாகிப்பா விழுகலை தானே?” என்று அவளருகே வந்தபடி இரட்டையர்கள் கேட்டனர்.
“இதெல்லாம் தெளிவாத்தேன் கேட்குது.. அந்த பிள்ள துர்கா பரிட்சைக்கு பாட்டனி சொல்லித்தரச் சொன்னா மட்டும் திருதிருனு முழிக்க வேண்டியது” என்று தாமரையாள் சிரித்தபடி அவன் காலை வாரினாள்.
“கிரேட் இன்சல்ட்…” என்று அண்ணன் தம்பி இருவரும் தலையை ஆட்டிக் கொள்ள,
“எப்பா எல்லாம் வாங்க.. அந்த போட்டோ காரரு போட்டோக்கு நிக்க சொல்லுதாரு” என்று அர்ச்சனா கூறினார்.
பெரும் அலங்கார நீள்விருக்கை இரண்டு போடப்பட, அதில் ஒன்றில் அர்ச்சனா, அதிவீர பாண்டியர், அம்பிகா மற்றும் ரணதீரன் அமர்ந்தனர்.
மற்றொன்றில் விஜயலட்சுமி, சிம்மவரதன், தடாதகை நாச்சியார் மற்றும் தீஞ்சுடரோன் அமர்ந்தனர்.
இரண்டு நீள்விருக்கைக்கும் நடுவே பின்புறம் அக்னி வேந்தன் மற்றும் அவன் மனையாள் தேனருவி மாலையும் கழுத்துமாய் நிற்க, அவர்களுக்கு இருபுறமும் செழிலன் மற்றும் பொழிலன் நின்றனர். செழிலன் பக்கம் ஆருத்ரன் மற்றும் அங்கை தம்பதியரும், பொழிலன் பக்கம் திலகா, வேந்தன் மற்றும் அவர்களது மகன் அமுதனையும் ஏந்திக் கொண்டு நின்றனர்.
கீழே நடுநாயகமாய் காயத்திரி அமர, அவளுக்கு இடதுபுறம் துர்காதேவி மற்றும் சங்கரனும், வலதுபேறம் பொற்றாமரையாள், ஆதிவருணேஷ்வரன், மற்றும் இவரும் தங்கள் மடியில் அமரவேலன் மற்றும் அசோகசுந்தரியை வைத்திருந்தனர்.
“ஆங் எல்லாரும் வந்தாச்சாப்பா? அப்றம் அந்த ரெண்டு பேர் விட்டுபோச்சு நாலுபேர் விட்டுப்போச்சுங்குறதுக்கு பேச்சே இருக்கக் கூடாது” என்று செழிலன் கூற,
அனைவரும் கலகலத்து சிரித்தனர், அது புகைப்படக் கருவியில் அழியா படமாய் பதிந்தது!
படத்தில் பதிந்த அவர்கள் புன்னகை, நிஜத்தில் நிலைத்து நின்றிட வேண்டி, அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெருவோம்!
-சுபம்…
எபிலாக்-02
ஏழு வருடங்களுக்குப் பின்பு…
அந்த அழகிய வீட்டில் பெரும் கூட்டம் கூடியிருந்தது.
“யாழ்மா பூ எங்க?”
“யாழ்மா சாப்பாட்டுக்கு சொல்லியாச்சா?”
“யாழ்மா தம்பி யார்கிட்டருக்கான்? குழந்தைங்களலாம் சாப்ட்டாங்களா?”
“யாழ்மா தாம்பூலப்பை ரெடியா?” என்று நொடிக்கொரு முறை தனது யாழ்மாவை கேள்வியால் படுத்திக் கொண்டிருந்தான், ஆதிவருணேஷ்வரன்.
“ஆத்தாடியாத்தே… எம்பூட்டு யாழ்மா” என்று இடுப்பில் கரம் ஊண்றி அவனைப் பார்த்து அவள் முறைக்க,
“அப்பா.. உங்க யாழ்மா முறைக்குதாக” என்று மழலை மாறாமல் கிளுக்கிச் சிரித்துச் சொன்னாள், அவனது ஏழு வயது மகள் அசோகசுந்தரி.
“அசோ..” என்று அவளைக் கத்தி அழைத்தபடி வேந்தனின் எட்டு வயது மகன் அமுதனும், ஆருத்ரனின் ஆறு வயது மகன், சொக்கனாதனும் வந்தனர்.
“சொல்லுங்க மாமா” என்று அவனைக் கண்டு கண்கள் சிரிக்கக் கூறிய அசோகசுந்திரியைப் பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தான் ஆதிவருணேஷ்வரன்.
“யாழ்.. அங்கன எல்லாம் உங்களத்தேன் கூப்பிடுதாக” என்றபடி அர்ச்சனா தேவி வர,
“எங்க மதினி? இப்பத்தேன் நான் பெத்தேனே ஒரு புள்ளைய.. அதை செத்தநேரம் போய் விளையாடேன்டானு அனுப்பிச்சிருக்கேன். அதுக்குள்ள யாழு அதிருக்கா யாழு இதிருக்கானு இந்த மனுஷன் மென்னிய பிடிக்காக” என்றாள்.
“ஏ.. வந்த வேலையவே மறந்துட்டேன். அக்கா, மச்சான் எங்க? இன்னும் வரக்காணும்?” என்று மீண்டும் ஆதி பரபரப்பாக,
“டேய் மாப்ள.. கொஞ்சம் மூச்சு வுடேன்டா. ஷப்பா” என்று தன் நான்கு வயது மகளான வேல்விழியைத் தோளில் தூக்கிப் பிடித்துக் கொண்டு அக்னி வந்தான்.
“டேய்.. உன்ன மச்சான கூட்டிகிட்டு வரத்தான சொன்னேன்” என்று ஆதி கூற,
“மாமா.. நான் பெய்ப்பாவ கூப்டுட்டேன்” என்று வேல்விழி கூறினாள்.
அந்த அழகிய ரோஜா மொட்டை அள்ளிக் கொண்ட ஆதி, அவள் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “அப்படியாடா குட்டி. உங்க பெய்ப்பா என்ன சொன்னாங்க?” என்று கேட்க,
“தோ சர்ருனு வந்துடுவேன் சொன்னாங்க” என்று கூறினாள்.
அதில் அனைவரும் வாய்விட்டு சிரிக்க,
“என்னய்யா சத்தம் இங்க?” என்றபடி தனது ஐந்து மாத சூள் தாங்கிய வயிற்றை ஏந்திக் கொண்டு காயத்ரி அவ்வறைக்குள் நுழைந்தாள்.
“ஏ காயு” என்று அவளை அணைத்துக் கொண்ட பொற்றாமரையாள், “எங்கடி மூத்ததும், உன் வீட்டுக்காரரும்?” என்று கேட்க,
“ம்க்கும்.. அப்பா அப்பா அப்பானு அவுகள கட்டிகிட்டு நல்லா அலையுறா. எங்கூட உக்காரகூட விடமாட்றா ஐத்த. என்ன புள்ளையோ” என்று காய்தரி சளித்துக் கொள்ள,
“அதுசரி. நீயும் இப்படித்தான்டியம்மா உங்கப்பாவ கட்டிகிட்டு சுத்தின” என்று அர்ச்சனா தேவி கூறினார்.
“எங்கம்மா விட்ட சாபந்தேன் போல” என்று அவள் அழுத்துக்கொள்ள,
“சரிசரி. வந்தவகள கவனிப்போம் வாங்கய்யா” என்று அக்னி அழைத்தான்.
அவ்விருமாண்டி குடும்பத்தாரும் அவர்களது மிகக் குறுகிய சொந்தமும்… (நம்புங்க சாமிகளா.. நெசத்துக்குமே குறுகிய சொந்தந்தேன்) அவ்வீட்டில் கூடியிருந்தனர்.
வாசலில் தனது ஆறு மாத கற்பினியான மனைவி, தேனவருவியுடன் நின்று அக்னி வந்தவர்களை வரவேற்க,
மூன்றாம் அண்ணன் சிம்மவரதன் மற்றும் அவர் மனைவி விஜயலட்சுமி மேலே மொட்டை மாடியில் பந்தியைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
நான்காம் அண்ணன் தீஞ்சுடரோன் மற்றும் தடாதகை நாச்சியார், வந்தவர்களை கவனித்து உண்ணுவதற்கு அனுப்பி, உபசரித்துக் கொண்டிருக்க,
முதல் இரண்டு அண்ணன் மற்றும் அண்ணிமார்கள் ஓமம் வளர்க்கப்பட்டிருக்கும் இடத்தில், பொற்றாமரையாள் மற்றும் ஆதிவருணேஷ்வரனுக்குத் துணையாய் அமர்ந்திருந்தனர்.
ஆருத்ரன், அங்கை உள்ளே தாம்பூலப் பைகளை வைத்துக் கொண்டிருக்க, அவளது மடியில் அவர்களது இரண்டு வயதுடைய, இரண்டாம் வாரிசான, மென்முகை உறங்கிக் கொண்டிருந்தாள்.
“புள்ளைய எங்கிட்ட கொடு அங்கை. தூங்கிபுட்டா. நீயே எம்பூட்டு நேரம் வச்சிருப்ப. செத்த அப்படி கால நீட்டி சாஞ்சு உக்காந்துக்க” என்றபடி ஆருத்ரன் மகளை வாங்கிக் கொள்ள,
புன்னதையுடன் அங்கை சாய்ந்து அமர்ந்தாள்.
வேந்தனும் திலாகாவும் அவ்வீட்டின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சின்ன தோட்டத்தில், யாழ் மற்றும் ஆதியின் பிள்ளைகளான அமரவேலன் மற்றும் அசோகசுந்தரி, அவர்களது இரண்டு ஆண் பிள்ளைகளான அமுதன் மற்றும் பிறைசூடன், ஆருத்ரனின் மகனான சொக்கன், காய்த்ரி மற்றும் அவளது கணவன் ஆருடையப்பனின் மூத்த மகளான சங்கீதா ஆகியோரை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
“எனக்கொரு வேலைய குடுங்கடானு கேட்டதொரு குத்தாமாயிட்டு. இதுகல காவகாக்க விட்டுபோட்டாக பாரு” என்று வேந்தன் கூற,
களுக்கென்று சிரித்தத் திலகா, “அத்தை மாமாலாம் தெனத்துக்கும் நாம வேல சோலினு போனபிறவாட்டி இப்படித்தானே நெனப்பாக” என்று கூறினாள்.
மேலே தனது கணவன் கரம் பற்றி சிரமப்பட்டு நடந்து சென்ற காய்த்ரி, “அம்மா” என்று உற்சாகமாய் அழைக்க,
“ஏ காயு” என்று வந்தவர், “வாங்க மாப்பிள்ளை” என்று ஆருடையப்பனை வரவேற்றார்.
சிம்மவரதனும் வந்து அவர்களை இன்முகமாய் வரவேற்க,
புன்னகையுடன் தலையசைத்துத் திரும்பிய ஆருடையப்பன், “டேய் சங்கர்” என்று நான்காம் அண்ணனான தீஞ்சுடரோனின் மகனைப் பார்த்து அழைத்தான்.
படித்து முடித்து நல்ல வேலை ஒன்றில் அமர்ந்திருக்கும் முழு ஆண்மகனாய் தெரிந்த சங்கரனிடம், கள்ளமில்லா புன்னகையுடன் வந்து நின்றாள், கல்லூரி ஆண்டின் இறுதியில் இருக்கும் துர்கா தேவி.
“ஏ கடைகுட்டி.. எப்படி இருக்கீக?” என்று ஆருடையப்பன் கேட்க,
“நாங்கெல்லாம் நல்லாத்தேன் இருக்கோம் மாமா. எங்கக்கா ஒழுங்கா சமைக்குதா?” என்று துர்கா கேலி செய்தாள்.
“உங்கக்காவா?” என்று இழுத்தபடி ஆருடையப்பன், காயத்ரியை நோக்க,
அவள் கண்களாலேயே அவனை எரித்துக் கொண்டிருந்தாள்.
'ஆத்தீ..’ என்று திடுக்கிட்டவன், “அதெல்லாம் சூப்பரா செய்றாமா” என்று கூற,
“அதான் அக்கா பார்வையே சொல்லுதே” என்று சங்கர் கூறினான்.
ஆம்! அது ஆதிவருணேஷ்வரன் மற்றும் பொற்றாமரையாளின் புதுவீட்டின் கிரகப்பிரவேசமே.
அவர்களது வாழ்நாள் கனவான ஒன்று, இன்று நினைவாய் உதித்திருப்பதன் விழாவே அப்பொன்னான விழா.
தத்தித் தடுமாறி, சிறுகச் சிறுக சேமித்து, இதோ கோவையிலேயே அழகியதோர் வீட்டைக் கட்டி முடித்துள்ளனர்.
சின்னதாய், ஒரு கூடம், சமையலறை, பூஜையறை, ஒரு படுக்கையறை என்று கீழேவும், மேலே இரண்டு அறைகளும், அதன் மேல் மொட்டை மாடியும் என்று அமைக்கப்பட்டிருந்தது அவ்வீடு.
பின்பக்கம், கொஞ்சம் போலாவது இடம் விடவேண்டும் என்று கட்டுமானப்பணியில் உள்ளோரிடம் மன்றாடி, ஒரு வெற்றிடத்தை பின்புறம் உருவாக்கியவன், அங்கு அழகியதோர் தோட்டம் அமைத்திருந்தான்.
ஏழு நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின், அழகிய சிறிய வீடு ஒன்று அவர்கள் வசம் வந்திருந்தது.
அவர்களது கனவு இல்லம். அதனில் அவர்களது வாசம்.
பூஜை நல்ல முறையில் நடந்து முடிய, பால் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தனர்.
யாழுக்குப் பிறந்த வீட்டிலிருந்து சீர் வந்து இறங்கியிருக்க, “என்ன மச்சான் இது? இதுக்கே நான் தனி வீடு கட்டனுமாருக்கு?” என்று கேட்டான்.
“மாப்ள.. மாடி ரூமு காலியாதேன் கடக்குது. கட்டில அதுல வச்சுகிடுக. சின்னச் சின்ன சீராதேன் கொண்டாந்துருக்கோம். இன்னும் பெரியண்ணே நிறையா சொன்னாக. இந்த அக்னி பயதேன் அவன சங்கடப்படுத்தாதீகனுட்டான்” என்று தீஞ்சுடரோன் கூற,
'ஏதே இன்னுமா?’ என்று பார்த்தான்.
அதில் சிரித்தபடி அவன் தோள் தட்டிய அக்னி, “அண்ணேங்க பாசத்தை இதுக்கும் கொறவா அடக்க முடியாதுடே. அதுமட்டுமில்ல.. இது எங்கம்மையோட புருஷன்னு ஒனக்குக் கொடுத்தது இல்ல. எங்க மச்சான் ஆதிக்காக ஆதிமேல உள்ள பாசத்துக்காக கொடுக்குறது” என்று கூற,
நெகிழ்வாய் புன்னகைத்தான்.
“ஆத்தே.. பாலு காய்ச்சியிருக்கீக. ரவைக்கு இங்கனதேன் ஒறங்கனுமாட்டு. துணிமணியெல்லாம் கொண்டுவந்தியா?” என்று அம்பிகாதேவி கேட்க,
“எடுத்தாந்துட்டேன் மதினி” என்றாள்.
“சரிதாயி” என்று அவர் கூற,
“ஏன் எல்லாரும் கிளம்புதீக? ரவைக்கு மேல வராந்தா, ரெண்டு ரூமு, இங்கன கூடம், ரூமு, போதாத குறைக்கு மொட்ட மாடினு எடம் கெடக்கே. எல்லாருந்தான் படுக்குறது?” என்று தாமரையாள் கூறினாள்.
“நானும் அதேன் யாழ் கேக்கவந்தேன். எல்லாருமா படுக்குறதுதான?” என்று அவளவன் கேட்க,
“ம்ம்.. நல்லா வச்சீக நாளு. இங்கன எல்லாம் வேல சோலிய விட்டுபோட்டு ரெண்டு நாளு விடுப்பு போட்டுத்தேன் வந்துருக்கோமாட்டு. ரவைக்கு கெளம்பினாதேன் எல்லாம் வீடு காடு போய் சேந்து மறுநா புள்ளையலையும் கெளப்ப முடியும்” என்று ஆருத்ரன் கூற,
“சரிதேன்.. நீ மட்டும் உம்பொஞ்சாதி வளைகாப்ப எப்படி வச்சியாம்? நல்லா நாள் பாத்து வச்ச. வந்த கையோட நான் ஓடி வாரபோல” என்று ஆதி குறைபட்டான்.
“சரிதேன்.. நம்ம குடும்பத்துல விடுப்பு நாளா பாத்துதேன் விசேஷம் வெக்கனும்முனா வாரா வாரம் கூடிகிட வேண்டிதுதேன்” என்று காயத்ரி கூற,
“சரியா சொன்ன புள்ள. அடுத்து உம்புள்ளபேரும், அருவி புள்ளபேரூந்தேன் இருக்குது. பொறவு நம்ம சங்கருக்கு ஒரு புள்ளைய பாத்து கட்டிவச்சுட வேண்டிதுதேன்” என்று திலகா கூறினாள்.
“ஏதே.. கண்ணாலமா? அதுக்கென்ன அவசரமாட்டு?” என்று சங்கர் பதற,
“என்னாடே.. பதட்டம் பலமாருக்குது?” என்று ஆதி கேட்டு சிரிக்க,
“இவேன் சரியில்ல மாமா. என்னேரமும் சிரிச்சாமேனிக்கே இருக்கியான்” என்று துர்காவும் ஏற்றிவிட்டாள்.
“இந்தாடி” என்று தங்கையை வலிக்காமல் குட்டியவன், “ஆமா, உங்க பொண்ணு வளரோட்டுமாக்கும். அந்த ராங்கிய எனக்குக் கட்டித்தர மாட்டீகளா?” என்று கூற,
“இந்தாடா. எம்பொண்ணு என்ன உனக்கு ராங்கியா?” என்று ஆதியும்,
“ஆமா உங்கபொண்ணு ராங்கிதேன். எம்பையந்தேன் அப்பாவி” என்று தாமரையாளும்,
“டேய் தம்பி.. எம்புள்ளைக்குதேன் என் ஐத்த மவ. போடா அங்குட்டு” என்று வேந்தனும்,
“என்னமும் செய்யுங்க. எம்மவளை எம்மருமவேக்குதேன் கட்டித்தருவேன்” என்று அக்னியும் கூற, பேச்சு நீண்டுகொண்டே சென்றது.
“புள்ளைய வளரும்முன்ன இப்படிலாம் பேசாதீக தாய்களா” என்று அதிவீர பாண்டியர் கூற,
“எல்லாம் சும்மா வெளையாட்டுக்குதேன் அண்ணே” என்று அக்னி பவ்யமாய் கூறினான்.
பேச்சும் கலகலப்புமாய் அனைவரும் புறப்பட, அசோகசுந்தரியும், அமரவேலனும், அனைவரும் புறப்பட்டுவிட்டதில் ஒருமூச்சு அழுது முடித்திருந்தனர்.
தன் மகனைத் தூக்கி முத்தம் வைத்து கொஞ்சி, அமைதி படுத்திய யாழ், கைகளைக் கட்டிக்கொண்டு முறைத்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்தாள்.
ஆதி இக்காட்சியை சின்ன சிரிப்போடு பார்த்திருந்தான்.
“அவேன மட்டும் தூக்கி வச்சு தூக்கி வச்சு கொஞ்சுதீகம்மா” என்று அவள் கோபம் போல் கூற,
“இந்தாடி.. எப்போதும் உங்கப்பாருகிட்டத்தானே ஒட்டிகிட்டு சுத்துவ? என்னத்த திடீருனு அம்மா பக்கம் வாரியாம்?” என்று யாழ் கேட்டாள்.
திருதிருவென விழித்த மகள் தந்தையைப் பார்க்க, “அப்ப உங்கட்ட வரகூடாதானு கேளு” என்று மூட்டிக்கொடுத்தான்.
“அப்பத உங்கட்ட வரக்கூடாதா?” என்று அவளும் கேட்க,
“ம்ம்.. எரியுறத அணைச்சா கொதிக்குறது தானா அடங்கும்” என்று கணவனை முறைத்தாள்.
தந்தையைக் கட்டிக்கொண்ட மகள், “அப்பாவ அடிக்காதீக ம்மா. அப்பா குட் பாய்” என்று கூற,
மகளை அள்ளி முத்தமிட்டவன், “அம்மா அப்பாவ பயங்கரமா அடிப்பாக பாப்பா. அப்பா தப்பு செஞ்சா அம்மா நல்லா அடிப்பாக” என்று இருபொருள்பட நமட்டு சிரிப்போடு கூறினான்.
அவன் பேச்சில் நாணம் பாதி வெட்கம் மீதியாய் தவித்தவள், “ஆமா அடிதான் எல்லாருக்கும்” என்க,
ஆதி வாய்விட்டு சிரித்தான்.
“ப்பா.. பாட்டு பாடுங்க” என்று சுந்தரி கூற,
“ஆமா ப்பா.. பாட்டு பாடுங்க” என்று வேலனும் கேட்டான்.
யாழ் பழக்கப்படுத்திய செயல் அது. சமையல் நேரமெல்லாம் குழந்தைகளும் அவர்களுடன் தான் நேரம் செலவளிப்பர். 'ஏங்க பாட்டு பாடுங்க' என்று அவள் கேட்கும் கேள்விக்குத் தந்தை கொடுக்கும் அழகிய பாடல்களுக்கு அக்குழந்தைகளும் ரசிகர்களாகியிருந்தனர்.
ஆதி யாழைப் பார்க்க,
“உசிலம்பட்டி” என்றாள்.
அட்டகாசமாய் சிரித்தான்.
கண்களில் நீர்மணிகள் சிதறியோட சிரித்தவன் அவளது ஆசைக்காக அப்பாடலையும் பாடி முடிக்க,
குழந்தைகள் சந்தோஷமாய் கைதட்டினர்.
'சூப்பர்' எனக் கைகளில் அபிநயம் பிடித்து கண்கள் சுருக்கி, தாமரையாள் புன்னகைக்க,
இரவு உணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளை படுக்க வைத்துவிட்டு கூடம் வந்தனர்.
அவ்வீட்டின் ஒவ்வொரு இங்கு இடுக்கையும் ரசனையோடு பார்வையிட்டபடி அமர்ந்திருந்தான் ஆதி.
அதன் ஒவ்வொரு செங்கலிலும் அவர்கள் இருவரும் ஒன்றாய் உழைத்து, காதலைக் குழைத்துக் கட்டியிருப்பதன் தாக்கம் எதிரொலித்தது!
அவன் அருகே அமர்ந்து, அவனது புஜங்களைக் கட்டிக்கொண்ட தாமரையாள், “நம்ம வீடு” என்று கூற,
அவன் உடல் சிலிர்த்தது.
கண்கள் பணிய அவளைப் பார்த்தான்.
“என்னவாம்?” என்று அவள் கேட்க,
“தேங்ஸ் யாழ்” என்றான்.
“எதுக்காம்?” என்று மீண்டும் அவள் கேட்க,
“நீ என் வரம்டி. என் சாமி. ஒன்னுமே இல்லாம இருந்தேன்டி. தோழியா வந்த, காதலியா ஆன, மனைவியா மாறின, அப்பாவா மாத்தின, இன்னிக்கு நல்ல நிலமைல, உன்னை ராணி மாறி பாத்துக்க வச்சு ஒரு ராஜாவாவே மாத்திட்ட” என்று நெகிழ்வாய் கண்கள் பணியக் கூறினான்.
அவன் கண்ணீர் அவள் கண்களையும் தொற்றிக் கொண்டு, மனம் நிறைத்தது.
“நம்ம கனவு யாழ்மா.. இன்னிக்கு உன்னோட, உன் கைய புடிச்சுட்டு நமக்கே நமக்கான வீட்டோட நடூ கூடத்துல உக்காந்துட்டுருக்கோம். வேற என்ன வேணும்? மனசே நெறஞ்சு போச்சுதுடி” என்று அவன் கூற,
“எனக்குமட்டும் என்ன குறையாம்? என் ராசா என்னைய மகாராணியால நடத்துறாக? இன்னிக்கு கோட்டையே கட்டிபுட்டீகளே” என்று அவன் தாடை பற்றி ஆட்டிக் கூறினாள்.
புன்னகையாய் அவள் நெற்றி முட்டியவன், “ம்மா..” என்று கண்கள் கசக்கி சப்தம் போட்ட, வேலனின் சத்தத்தில் திரும்பி, “வந்துட்டியான்டி. மூக்கு வேத்து போவும் போல. உங்கூட உக்கார விடுதானா?” என்று செல்லமாய் கோபம் கொண்டான்.
“உங்கபொண்ணு மட்டும் என்ன பண்ணுதாளாம்?” என்றவள், “வாடா வேலா” என்க,
சுந்தரியும் எழுந்து வந்துவிட்டாள்.
“இந்தா வந்துட்டாள்ல?” என்று அவள் கூற,
மகளையும் மகனையும் மடியில் அமர்த்திக் கொண்டனர்.
“அப்பா.. இனிமே நம்ம இந்த வீட்லதானா ப்பா?” என்று வேலன் கேட்க,
“ஆமா வேலா” என்று மகன் தலைகோதி கூறினான்.
“ஏன் ப்பா? நம்ம பழைய வீடு?” என்று சுந்தரி கேட்க,
“அது நம்ம வீடில்ல சுந்தரி. இது நம்ம வீடு. நாம எல்லாம் சேந்து, கஸ்டபட்டு ஆசையா கட்டின வீடு” என்று யாழ் கூறினாள்.
“உங்களுக்கு வீடு கட்ட தெரியுமா ம்மா?” என்று குழந்தை வெள்ளந்தியாய் கேட்க,
வாய்விட்டு சிரித்த ஆதி, “அப்படியில்ல பட்டு. நாம கஸ்டபட்டு சம்பாதிச்சதுல கட்டினது” என்றான்.
“ஓ.. அப்ப இது அப்பா அம்மா வேலா சுந்தரி வீடு தானே?” என்று வேலன் கேட்க,
தம்பதியர் உடல் சிலிர்த்து.
“ஆமாடா” என்று ஒன்றுபோல் கூறிய இருவரும் புன்னகைத்தனர்.
அவ்வீட்டின் வாசம் அவர்கள் நாசியெங்கும் நிறைந்து அவர்கள் வாழ்வின் பரிபூரணத்தை உணர்த்தியது.
“சுந்தரி. நாமலும் பெருசாகி இப்படி ஒன்னு கட்டுவோம். நான் உனக்கு கட்டித்தரேன் நீ எனக்குக் கட்டித்தா” என்று வேலன் கூற,
“ஓகே வேலா” என்று அவளும் தலையசைத்தாள்.
பிள்ளைகளின் ஒற்றுமையில் மனம் நிறைந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
“என்ன புக்கு படிக்கீகனு கேட்டு, என் வாழ்க்கை புத்தகத்துல இடம் புடிச்சுட்டடி” என்று அத்தனை சந்தோஷத்தோடு ஆதி கூற,
“நீங்களாப்ல? புத்தகத்த படிக்க கம்பெனி தாரேனுட்டு இப்படி வாழ்க்கைக்கே கம்பெனி குடுத்துபுட்டீக தானே” என்று அவன் காதோரம் கூறினாள்.
“அப்பா அம்மா தூங்குவமா?” என்று குழந்தைகள் கேட்க,
நால்வருமாய் அந்த பெரிய கட்டிலை ஆக்கிரமித்தனர்.
உரிமை மற்றும் அன்பின் வாசம் வீசிய அவ்வில்லத்தில் அவர்கள் நல்லறம் தொடரட்டும்…
Currently viewing this topic 2 guests.
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page