All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அத்தியாயம் 1

 

VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 1

 

 

“கீச்.. கீச்” என்றபடி அங்குமிங்கும் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தன் அன்றாடங்களை அப்போதே துவக்கிவிட்டிருந்தன. கதிரவனின் கதிர்கள் மெதுமெதுவாக வானை அப்பியிருந்த இருளை விலக்கி, உறங்குகின்ற மக்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடக் காத்துக் கொண்டிருந்த சமயம் அது. அலைபேசியின் மெலிதான சிணுங்கல் சப்தம் அறையைச் சூழ்ந்திருந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டதில் இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தாள் கோமதி நாச்சியார்.

 

முன்தினம் இரவு அவள் வீடு வந்து சேரும் போது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்ததால் இன்னும் தூக்கம் அவளுக்கு முற்றிலும் கலையவில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி சோம்பி மீண்டும் துயிலும் பழக்கம் அவள் வழக்கத்தில் என்றுமே இருந்ததில்லை.  

 

அதிகாலை நாலரையை ஒட்டி கண்விழிப்பவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஜாகிங் சென்றுவிடுவாள். அதை முடித்துவிட்டு வந்து சிறிது நேரம் உடற்பயிற்சி. அவள் உடற்பயிற்சியை முடிக்கும் நேரம் சரியாக அவளது அன்னை சங்கரகோமதி அவளது அறைக்கே காபியைக் கலந்து கொண்டு வந்துவிடுவார். அன்றும் அதே வழக்கம்தான் தொடர்ந்தது.

 

ஜாகிங் முடித்துவிட்டு கோமதி நாச்சியார் வீட்டிற்குள் நுழையும்போது அவளது தந்தை சங்கரநாராயணன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அதிலிருந்த செய்தி ஒன்றை வெகு தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார் அவர். மின்விசிறி சுழன்று கொண்டிருந்தாலும் அதையும் மீறி அவருக்கு நெற்றியில் வியர்வைத் துளிகள் படிந்தன.  

 

“காவல் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்ற மர்ம நபர்” என்ற தலைப்பின் கீழ் வாசித்த செய்தி தான் அவரை அந்த நிலைக்குத் தள்ளியிருந்தது. 

 

அவர் பயத்துடன் எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி அப்படியே அமர்ந்திருக்க, அவரைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்த கோமதி நாச்சியார், தந்தையை ஓரக்கண்ணால் பார்த்து அவரை அவதானித்தபடி கடந்து சென்றாள். 

 

“நாச்சி” என்று அவரது அழைப்பில் அவள் திரும்பி நின்று பார்க்க,

 

“என்ன பாப்பா இது? இதைப் பத்தி ஒன்னும் சொல்லலியே” என்றார் கவலை அப்பிய குரலில்.  

 

“ப்பா இன்னும் நீங்க இதுக்கெல்லாம் பழகலியா?” என்று அவருக்கு சமாதானம் செய்யும் குரலில் சொன்னவள், “என் வேலைல இதுக்கெல்லாம் பயந்தா என்ன செய்றது?” என்று அதைப் பற்றித் துளியும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

 

அவளது அலட்சியமும் தைரியமும் எப்போதும்போல அவரைக் கவர்ந்தாலும் தந்தையாய் அவரது மனம் நடுங்கிக் கொண்டிருந்தது தான் நிஜம்.

 

“உனக்கு ஒன்னும் ஆகலியே? யாரு பாப்பா அது? புடிச்சாச்சா? பகல்ல அத்தனை பேரு பார்க்க கத்தியால குத்த வந்திருக்கான்.. எதாவது ஆகியிருந்தா…” என்று அவர் ஆரம்பிப்பதற்குள்,

 

“மெதுவா பேசுங்க.. அம்மா வந்தா உங்களத்தான் திட்டுவாங்க” என்றாள் புன்சிரிப்புடன் கோமதி.

 

உண்மைதான்! என்னதான் இந்த வேலையில் நிறைந்திருந்த ஆபத்துக்கள் அவரை பயம் கொள்ளச் செய்தாலும் கோமதி நாச்சியார் தான் ஐபிஎஸ் தேர்வெழுதப் போவதாகச் சொன்னபோது முழுமனதுடன் மகளுக்கு பச்சைக்கொடி காண்பித்தார் அவர். அதற்கு முற்றிலும் நேர்மாறாக சங்கரகோமதி முடியவே முடியாது என்று நிற்க, இறுதியில் கோமதி நாச்சியாரின் பிடிவாதத்தால் வேறுவழியில்லாமல் சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போதிருந்தே ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் கூட சங்கரநாராயணன் தான் சங்கரகோமதியின் அர்ச்சனைகளுக்கு முதல் பலியாவார்.

 

மகள் நினைவுபடுத்தியதில் ‘கப்சிப்’ என்று அவர் வாயை மூடிக் கொள்ள, சரியாக அந்த நேரம் சமையலறையிலிருந்து சங்கரகோமதி கையில் காபிக் கோப்பையுடன் வெளியே வந்தார்.  

 

மகளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, கணவரிடம் காபிக் கோப்பையைக் கொடுத்தவர், “என்ன முகம் இப்படி வாடிக் கிடக்கு?” என்று சந்தேகமாக மகளைத் திரும்பிப் பார்த்தார்.

 

“நீ ஏன் மாடிக்குப் போகாம இங்க நிக்க(நிக்கிற)?” 

 

“அப்பா கூட சும்மா பேசிட்டு இருந்தேன்மா”

 

“அதுக்கு ஏன் இவர் இப்படி உட்கார்ந்திருக்காரு?” 

 

“நல்லா தான்மா இருக்காரு.. உங்களுக்கு அப்படித் தெரியுதா இருக்கும்”

 

“முப்பது வருஷம் ஆச்சு உங்கப்பாவை கட்டிக்கிட்டு இங்க வந்து.. எனக்குத் தெரியாதா அவரை?” என்று சடைத்தவர்,

 

“உங்கட்ட தானே கேட்கேன்.. காலங்காத்தால ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய் உட்கார்ந்திருக்கீங்க” என்றார் மீண்டும்.

 

‘அவ்வளவு தான்.. இனி அப்பா அம்பேல்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட கோமதி நாச்சியார் அன்னையின் கவனத்தைக் கவராமல் பூனையைப் போல நைசாக நழுவி மாடியேறிப் போய்விட்டாள்.

 

“இல்ல கோமு.. ஏசிபி -யை யாரோ கத்தியால குத்த வந்துட்டாங்கனு நியூஸ் பேப்பர்ல..” என்று மென்று விழுங்கியவர் மனைவியின் அதிர்ந்த பார்வையில் சட்டென்று பேச்சை நிறுத்தினார். சங்கரகோமதி அவசரமாக செய்தித்தாளைப் பிடுங்கி அதிலிருந்த செய்தியை வாசிக்க, ஒவ்வொரு எழுத்தும் அவருள் பயத்தை விளைவித்தது.

 

‘அம்மா தாயே.. இதென்ன சோதனை’ 

 

அவர் அவசரமாகக் குலதெய்வத்திடம் ஒரு வேண்டுதலை வைத்து மனமருகிப் பிரார்த்திக்க,

 

அவரது நிலையைக் கண்டு, “அது ஒன்னுமில்லையாம்.. பேப்பர் காரனுங்க கூடுதலா கதை சொல்லிப் போட்ருங்கானுங்க.. நீ ஒன்னும் பயப்படாத.. நான் பாப்பாட்ட விசாரிச்சுட்டேன்” என்று சங்கரநாராயணன் விளக்கிச் சொல்ல, அவருக்கு வந்ததே கோபம்!!!

 

“எத்தனை வாட்டி நான் சொன்னேன்.. பொம்பள புள்ளைய பொம்பள புள்ளை மாதிரி வளரும் வளரும்னு.. என் பேச்சைக் காதுல போட்டா தான? ஆம்பள புள்ளை மாதிரி வளர்க்கேனு என் மவளைப் பையனாட்டம் வளர்த்து அவ மனசுல கண்ட ஆசையை விதைச்சுட்டீங்க.. அதுவும் அடங்காம போனா போலீஸ் வேலைக்குத் தான் போவேனு அதையே சாதிச்சிருச்சு.. உங்களுக்கென்ன? அவளை வேலைக்கு அனுப்பிட்டு நானில்ல வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்கேன்”

 

“எனக்கு அவ போலீஸ் ஆவனும்னு சொல்லுவானு தெரியுமா கோமு?”

 

“யோசிக்கணும்.. நாலையும் யோசிச்சு செய்றவன் தான் குடும்பத் தலைவன்”

 

‘ம்க்கும்.. அதான் இந்தக் குடும்பத்துக்குத் தலைவன் இல்ல தலைவி தான்னு தெருல திரியிற நண்டு சிண்ட கூப்பிட்டுக் கேட்டா கூட சொல்லிடுமே’

 

“என்ன பதிலைக் காணோம்.. நின்னுட்டே உறங்குதீங்களோ?” என்று சந்தேகமாக சங்கரகோமதி வினவ,

 

“இல்ல கோமு” என்ற பதில் அவரிடமிருந்து வேகமாக வந்தது.

 

“என்ன நொள்ள கோமு? அப்படியே பத்திக்கிட்டு வருது எனக்கு.. என்கிட்ட ஏச்சு வாங்காம போங்க அங்குட்டு”

 

“ஏட்டி நான் வேணும்னா உனக்கு சூடா காபி போட்டுத் தரவா?”

 

மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் அவர் கேட்க, அவரைத் தீயாக முறைத்தவர் இது வேலைக்கு ஆகாதென அடுக்களைக்குள் புகுந்து கொண்டார்.

 

கோமதி நாச்சியார் எப்போது ஐபிஎஸ் தேர்வெழுதப் போவதாகச் சொன்னாளோ அப்போது துவங்கிய இந்தப் பிணக்கு கணவன் மனைவிக்குள் இன்னும் தீராமல் நீண்டு கொண்டிருக்கிறது. அதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் தன் முடிவில் உறுதியாக நின்றுவிட்டாள் அவள். ஒன்றை நினைத்தால் அதிலேயே நிற்கும் ரகம் அவள். எதற்காகவும் அவளால் காக்கிச்சட்டையை விட முடியாது. இதனைக் கொண்டு அவள் இழந்தது நிறையவே இருந்தாலும் அதையெல்லாம் மீறிய நிறைவை இந்த வேலை அவளுக்குத் தருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அவளுக்கு அடுத்துப் பிறந்தவள் ஸ்ரீநிதி. வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறாள். போன வாரம் தான் கடைசித் தேர்வை எழுதியிருந்தாள். அடுத்ததாக மேற்படிப்பைத் தொடர்வது தான் அவள் எடுத்து வைத்திருந்த முடிவு. ஆனால், சங்கரகோமதி விடவில்லை. படிப்பை முடித்ததும் ஸ்ரீக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதேபோல மாப்பிள்ளையையும் முடிவு செய்துவிட்டார்.

 

மூன்றாம் வருடத்தின் பாதியிலேயே அவரது முடிவு பற்றி அவ்வப்போது சங்கரகோமதி சொல்லுவார்தான்.. ஆனால், படிப்பு முடிந்ததும் உடனேயே வரன் அமைந்துவிடுமா என்ன? என்கிற எண்ணத்தில் ஸ்ரீ அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அவளது எண்ணத்தை அடித்துத் துவம்சம் செய்யும்படி இப்படித் தேர்வு முடிந்த ஒரே வாரத்தில் மாப்பிள்ளையைக் கொண்டு வந்து தன் அன்னை நிறுத்துவார் என்று அவள் கனவிலும் நினைத்தாளில்லை. அப்படி இருந்தும் ஸ்ரீ அதைத் தட்டிக்கழிக்க என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். பலன்தான் இல்லை.

 

“ஒருத்தியை அவ போக்குல விட்டது போதும்.. வயசு இருபத்தி ஒன்பதாச்சு.. கல்யாணமே வேணாம்னு நிக்கா.. உன்னை மாதிரி தான் அவளும் வேலைக்குப் போனதும் பண்ணிக்கிடுதேனு சொல்லுதாளேனு சரினு சொன்னேன். ஆனா, அவ முடியாதுனு நிக்குதாளே இப்ப வரை.. சின்னப்புள்ளையா அதட்டி உருட்டிக் கல்யாணம் கட்டி வைக்க” என்று ஆரம்பித்தவருக்கு மூத்த மகளை எண்ணிக் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.

 

“ம்மா.. ரெண்டு வருசம் போகட்டும்.. பண்ணிக்கிறேனு தானே சொல்றேன்.. நான் என்ன அக்கா மாதிரி வேணாம்னா சொல்லுறேன்?” என்று ஸ்ரீயும் கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.

 

“ம்கூம்.. ஒரு வயசு வரை தான் நம்ம கைக்குள்ள புள்ளைக இருப்பாக.. அப்பவே நம்ம கடமையை முடிச்சுடணும்.. நாளைக்கு என்னவாகும்னு யார் கண்டா? எனக்கு மூத்தவளைத் தான் கல்யாணக் கோலத்துல பார்த்துப் பூரிக்கக் கொடுத்து வைக்கல.. உனக்காச்சும் சரியா அந்தந்த வயசுல எல்லாம் நடக்கணும்”

 

“ம்மா.. எனக்குக் கல்யாண வயசு வந்துட்டா போதுமா? நான் அதுக்குத் தயாரா இருக்க வேணாமா?”

 

“ஆமா நாங்களாம் தயார் படுத்திட்டா கல்யாணம் கட்டிக்கிட்டோம்? என்னட்டி இப்படி ஏட்டிக்கு மூட்டியா பேசிட்டு கிடக்கிற.. வாயை மூடு.. நல்லது நடக்குற நேரத்துல இப்படிப் பேசி வைச்சு என் பொறுமையை சோதிக்காத” 

 

ஸ்ரீக்கு கட்டளையிட்டுவிட்டு அவர் நகர, அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். இவ்வளவு சீக்கிரம் இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் மனம் தளராமல் அவள் அடுத்து சங்கர நாராயணனிடம் போய் நின்றாள்.

 

“ப்பா என்ன அம்மா என்னவெல்லாமோ சொல்லுறாங்க?” என்று முறையிட்டவளிடம்,

 

“ஏற்கனவே அக்கா விசயத்துல அம்மா ரொம்ப நொந்து போய்ட்டா பாப்பா.. அம்மா பத்தி தெரியாதா? சும்மா ரோட்ல போறவனைக் கைகாட்டி கல்யாணம் கட்டிக்கிடச் சொல்லுவாளா? நானும் கூட விசாரிச்சேன் ரொம்ப நல்ல இடம்டா குட்டி.. கல்யாணம் பண்ணிட்டுக் கூட உன் கரியரை நீ உருவாக்கிக்கிடலாம். அதுக்கு அவங்க கிட்ட பேசி சம்மதம் வாங்குறது எங்க பொறுப்பு” என்று சொல்லிவிட்டார் அவர்.

 

இனி என்ன செய்வது என்று திகைத்து நின்றவளுக்கு தமக்கையிடம் போய் நிற்பது தான் மீதமிருந்த ஒரே வழி! ஆனால், அதை செயல்படுத்தத் தான் அவளுக்குத் தைரியம் இல்லை.

 

கோமதி நாச்சியாருக்கும் ஸ்ரீநிதிக்கும் ஒன்பது வருடங்கள் இடைவெளி. அவள் தமக்கையாக இருந்ததை விட அன்னையாகிப் போன சமயங்கள் தான் அதிகம். சிறுவயதிலிருந்தே அப்படித்தான். அன்பும் கண்டிப்பும் சரிபாதியாக அவளிடம் கொட்டிக் கிடக்கும். அன்னைக்குப் பயப்படுகிறாளோ இல்லையோ தமக்கையிடம் அதீத பயம் அவளுக்கு! அதனால்தான் ஸ்ரீ தமக்கையிடம் விஷயத்தைக் கூற அவ்வளவு யோசித்தாள்.

 

இதோ அதோ என்று பெண் பார்க்கும் வைபவம் இன்னும் சிலமணி நேரங்களில் என்றிருக்க, அதுவரை ஸ்ரீ இதைப்பற்றி கோமதி நாச்சியாரிடம் எதுவும் பேசவில்லை. சங்கரகோமதி முன்பே பெண் பார்க்கும் நாளன்று கண்டிப்பாக நீயும் உடனிருக்க வேண்டுமென்று சொல்லியதில் அன்று கோமதி நாச்சியார் விடுமுறை எடுத்திருந்தாள். 

 

கீழே கணவனிடம் சண்டையிட்டு அடுக்களைக்குள் நுழைந்த சங்கரகோமதி அடுத்து வேலைகளில் மூழ்கிவிட்டார். காபி கலந்து கோமதி நாச்சியாருக்குக் கொடுத்தவர் தன் சின்ன மகளின் அறைக்குள் நுழைந்தார்.

 

ஸ்ரீநிதி ஏற்கனவே எழுந்து அமர்ந்திருக்க, “எழுந்துட்டியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டவாறு அவளது கையிலும் காபியைத் திணித்தார் அவர்.

 

“எந்திருச்சுப் போய் குளி ஸ்ரீ.. கீழே பலகாரம் சுட ஆரம்பிச்சுட்டா உன் பின்னாடி வால் புடிச்சுட்டு என்னால அலைய முடியாது.. நல்ல புடவையா ஒன்னை எடுத்துக் கட்டிக்க.. ம்ம் உங்க காலேஜ்ல பொங்கல் அப்போ செட்டா எடுத்தீங்களே.. அதைக் கட்டிக்கோ.. அதுல அழகா இருந்த.. பூ வாங்கிக் கட்டி வைச்சிருக்கேன்.. கிளம்பிட்டு மேலேயிருந்த மாதிரி ஒரு குரல் கொடு.. நகையும் பூவும் கொண்டுவந்து தாரேன்” என்றவர் மகள் எதுவும் பேசாமலிருக்கவும் அவளது முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

 

“என்னடி எதுவும் பேசாமாட்டிக்க?”

 

“என்ன பேசச் சொல்றீங்க? எல்லாம் உங்க இஷ்டத்துக்குத் தானே செய்றீங்க? என்னையும் என் விருப்பத்தையும் கேட்குறீங்களா?” 

 

அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொன்ன விதத்தில் சங்கரகோமதி துணுக்குற்றார். 

 

“என்னட்டி ஸ்ரீ சொல்லுத? உனக்குக் கெட்டதா நெனைப்போம் நானும் உன் அப்பாவும்?” என்று அவர் தழுதழுத்த குரலில் கேட்க, ஸ்ரீநிதி உதட்டைக் கடித்தாள்.

 

அவளுக்கே சங்கரகோமதியின் முகமாறுதலைக் காணச் சகிக்கவில்லை. ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு,

 

“நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன்மா விடுங்க” என்றவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளது சமாதானத்தில் அவர் கொஞ்சம் தெளிவானார். இந்தப் பேச்சும் ஏச்சும் மாப்பிள்ளையைப் பார்த்தால் நிச்சயம் மாறிவிடும் என்றே சங்கரகோமதி நம்பினார். பின்னே ராஜகுமாரன் மாதிரி அல்லவா மாப்பிள்ளையைப் பார்த்திருக்கிறார்! பார்த்திருக்கிறார் என்பதை விடத் தேடிச் சலித்து எடுத்திருக்கிறார். அவருக்குத் தன் தேர்வின் மீது அப்படியொரு நம்பிக்கை. ஆனால், ஸ்ரீ தனக்கு எந்த ராஜகுமாரனும் தேவையில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். அந்த உறுதி அவளது தமக்கை மீதான பயத்தினை நீர்த்துப் போகச் செய்ய, சங்கரகோமதி அங்கிருந்து அகலவும் அவள் நேராகத் தமக்கையின் அறையை நோக்கிச் சென்றாள் அவள்.

 

ஒருமுறை கூட நேரில் பார்க்காமல் சங்கரகோமதியின் நம்பிக்கையை எளிதாகப் பெற்றுவிட்ட நம் நாயகன் அதைப்பற்றி எனக்கென்ன என்பது போல் இன்னும் துயில் மீளாமல் தன் சொகுசுக் கட்டிலில் படுத்திருந்தான். அவன் அஜய் கிருஷ்ணன். சென்னையின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக பணியிலிருக்கிறான்.

 

அவனருகே மண்டியிட்டு அமர்ந்து அவனை எழுப்பப் போராடிக் கொண்டிருந்தான் தேவ் சரண். 

 

“டாடி எழுந்துக்கோங்க.. புது மம்மியைப் பார்க்க போகணும்னு பாட்டி சொன்னாங்க” 

 

தேய்ந்து போன ரெக்கார்ட் போல அதையே தான் அவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான். அஜய் எழுந்தபாடில்லை. அவனைக் காப்பாற்றவோ அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவோ தவமணியே மேலே மாடிக்கு வந்துவிட்டார்.

 

“அஜய்.. எவ்வளவு நேரமா தேவ் உன்னை எழுப்புறான்.. எழுந்திருடா.. அப்பா கிட்ட நீ எழுந்துட்டனு சொல்லிருக்கேன்டா” என்று அழும் குரலில் சொன்னவாறு தன் பேரனை விடுவித்துவிட்டுத் தான் அந்த சுழலில் மாட்டிக் கொண்டார் தவமணி.

 

அவரது வார்த்தைக்கும் செவிசாய்க்காமல் அவன் படுத்திருக்க, அவனது போர்வையை உருவி அவனை உலுக்கினார்.  

 

அதில் உறக்கம் கலையப் பெற்றவன், “காலங்காத்தால என்னை டென்ஷன் பண்ணாதீங்கமா.. நான்தான் பொண்ணு பார்க்க வரலைனு சொல்லிட்டேன்ல” என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தான் அஜய் கிருஷ்ணன்.

 

அவனது அந்தக் கோபத்தைக் கண்டு துளியும் அஞ்சாதவனாய் அவன் முன்னே இடுப்பில் கைவைத்து முறைத்தபடி வந்து நின்றான் தேவ்.

 

“எனக்கு நீங்க ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க டாடி”

 

“போடா புடலங்காய் ப்ராமிஸ்.. என்னை இப்படிச் சொல்லியே ஆஃப் பண்றியா நீ? கல்யாணம் பண்ணிக்கிறேனு தான் சொன்னேன். பொண்ணு பார்க்க வரேனு சொல்லவே இல்லையே” என்றவாறு அவனிடம் தோள்களைக் குலுக்கியவாறு அஜய் சொல்ல, தேவ் விழித்தான்.

 

‘ஆமால்ல’ என்பது போல அவன் திகைத்து விழிக்க, தேவ் முகத்தைப் பார்த்த அஜய் சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கினான். கொஞ்சம் இளகினால் போதும்.. அந்த நிலையை அவனுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் தேவ் கெட்டிக்காரன். அதனால், முகத்தை ‘உம்’மென்று வைத்தபடியே அஜய் கூற, தேவ் பாவமாகத் தன் பாட்டியைப் பார்த்தான். அவர் அதற்கு மேல் பாவமாகத் தன் பேரனைப் பார்க்க, அவன் அழுகையில் உதட்டைப் பிதுக்கினான்.

 

“இங்க என்ன ஆஸ்காரா கொடுக்கிறாங்க.. எதுக்குடா இப்போ இப்படி நடிக்கிற?” என்ற அஜய் கூற,

 

“ஏம்லே அவன் நிஜமாவே அழுவுறான்.. புள்ளைக்கு ஆசை காட்டி மோசம் செய்யாத.. அது பாவம்.. எந்திரிச்சு கிளம்புற சோலியைப் பாரு.. உங்கப்பா கிட்ட என்னை ஏச்சுப்பேச்சு வாங்க வச்சா பொறவு நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்க” என்று மகனைக் கோபமாகத் திட்டியவர் பேரனை சமாதானம் செய்தார்.

 

“எனக்குத் தெரியாது டாடி.. நீங்க புது மம்மி கூட்டிட்டு வரேனு சொன்னீங்க.. எனக்கு வேணும்” என்று தேவ் மிரட்டும் தொனியில் கூற,

 

“அதென்ன ரெடிமேட் சப்பாத்தி மிக்ஸாடா நீ கேட்டதும் கூட்டிட்டு வர்றதுக்கு?” என்று முறைத்தான் அஜய்.

 

“முடியாதுனா ஏன் அன்னைக்கு சரினு சொன்னீங்க?” 

 

தேவ் பாட்டியின் பிடியிலிருந்து விலகி அஜய்க்கு முன்பாக நின்றுகொண்டு அவனை முறைத்தான். அந்தத் தோரணையில், தவமணியும் அஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 

சிரித்துக்கொண்டே, “இந்த ஆட்டிட்யூடெல்லாம் யார்கிட்ட இருந்துடா கத்துக்கிட்ட?” என்று கேட்டபடி அவனை இழுக்க முயல, லாவகமாக அவனிடமிருந்து விலகினான் தேவ்.

 

“என்னடா?”

 

“பொய் பேசுறவங்க பேட் பாய்னு நீங்க தானே சொன்னீங்க? அப்போ நீங்க பேட் பாய்.. உங்க கூட இனிமேல் பேசமாட்டேன். முத்தா கொஞ்ச மாட்டேன்” 

 

“இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் எல்லாம் டாடி தாங்க மாட்டேனே”

 

“அப்போ ரெடி ஆகுங்க.. புது மம்மியைப் பார்த்துட்டு வருவோம்”

 

எங்கே சுற்றினாலும் சரியாகத் தன் மையப்புள்ளிக்கு வந்து நின்றவனை சிரிப்புடன் பார்த்தவன் தாயிடம் திரும்பினான்.

 

“எதுக்கும்மா இவன் புது மம்மி மேல இவ்வளவு அப்செஸ்டா இருக்கான்?” 

 

“அவனுக்குத் தனியா இருக்க பிடிக்க மாட்டிக்காம்.. தங்கச்சி பாப்பா வேணுமாம்.. அவன் சிநேகிதனுக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்காம்.. அப்போம்ல இருந்து ஒரே அனத்தம்”

 

புன்னகையுடன் தவமணி சொல்லியதில்,

 

“அட.. இதுக்கா என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்றான்? இதை நீங்க முன்னமே சொல்லியிருந்தா சென்னைலயே அதுக்கு ரெடி பண்ணியிருப்பேனே” என்று குறும்புடன் அஜய் கூற, 

 

“அந்த வாரியலை(துடைப்பம்) எடு தேவ்” என்றார் தவமணி மகனை முறைத்துக்கொண்டு.

 

அதில் சுதாரித்தவன், “ம்மா.. சும்மா சும்மா.. என்னைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு?” என்று அஜய் அசட்டுப் புன்னகையுடன் கூறவும்,

 

“விளையாட்டுக்கு எதைப் பேசுறதுன்னு ஒரு கூறுவாறும் இல்ல.. போய்க் கிளம்புலே.. இப்ப கிளம்புனா தான் நல்ல நேரத்துலப் போய்ச் சேர முடியும்” என்று தவமணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே கீழே இருந்து, “தவம்..” என்ற சண்முகத்தின் குரல் கேட்டது. குரல் கேட்ட நொடி தவமணி அங்கிருந்து வேகமாகக் கீழிறங்கிச் செல்ல, அஜய் குளியலறைக்குள் புகுந்தான்.

 

நாயகியின் குடும்பத்தில் சக்தியின் ஆட்சி என்றால் நாயகன் குடும்பத்தில் சிவபெருமான் ஆட்சி.

 

“என்ன உன் புள்ளை கிளம்பிட்டானா?”

 

“குளிக்கான்”

 

“என்ன இப்பத்தான் குளிக்கானா? நல்ல நேரத்துக்குள்ள அவிய(அவங்க) வீட்டுக்கு போகணும்னு எத்தனை முறை சொல்லுதேன்”

 

“கிளம்பிடுவான்ங்க”

 

“அவனுக்கு இன்னும் பொறுப்பே வருதில்லை.. நீ பொருளெல்லாம் எடுத்து வைச்சிட்டியா?”

 

“நான் எல்லாம் எடுத்து வைச்சாச்சு.. போறப்ப கொஞ்சம் மல்லிகைப் பூவும் இனிப்பும் மட்டும் வாங்கிக்கிடலாம்”

 

“ம் காரை நிப்பாட்டிப் போற வழில வாங்கிக்கிடலாம்.. அவனைக் கொஞ்சம் சொல்லி வேகமா கிளம்பச் சொல்லு”

 

மீண்டும் மனைவியிடம் வற்புறுத்தி விட்டு அவர் அங்கிருந்து அகல, அப்போதுதான் தவமணிக்கு மூச்சே வந்தது.  

 

அங்கு நடக்க இருக்கும் விபரீதம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவர் இத்தனை வற்புறுத்தியிருக்க மாட்டாரோ என்னவோ!? அவரது இந்த முடிவை எண்ணி அன்றே வருந்தப் போகிறார் என்பது புரியாமல் மனைவியிடம்

கட்டளையிட்டு நகர்ந்தவரைக் கண்டு காலம் கண்சிமிட்டியது!!

 

 

 

கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள:

https://kavichandranovels.com/community/postid/231/

 

 

This topic was modified 1 month ago 3 times by VSV 37 – செந்தணல் தாரிகையே
This topic was modified 3 weeks ago 2 times by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 2

 

 

 

“ம்மா இப்போ எதுக்கு இவரு இப்படி அலம்பல் பண்றாரு? நெற்கட்டான்செவ்வல்-ல இருந்து சங்கரன்கோவில் போக மிஞ்சிப் போனா இருபது நிமிஷம்.. இதுக்கு ஏன்மா இப்படி படுத்துறாரு?”

 

அஜய் சலித்துக்கொண்டு கேட்க, தேவ் தந்தையின் மடியில் அமர்ந்து உணவினை அவன் ஊட்ட ஊட்ட வாங்கிக் கொண்டிருந்தான்.

 

“அவரைப் பத்தி தெரியாதா? ஒன்பது மணி பஸ்ஸுக்கு எட்டு மணிக்கே போய் காத்துக்கிடப்பாரு.. அப்படியே அவிய அம்மா மாதிரி”

 

தவமணி மகனிடம் மெதுவாக முணுமுணுத்துவிட்டு தோசை வார்க்க உள்ளே செல்ல, தேவ் வேகவேகமாக உணவினை உண்டும் உண்ணாமலும் அடுத்த வாய் உணவிற்காக வாய் திறந்தான்.

 

“டேய் மெதுவா சாப்டு.. எதுக்கு இப்படி நீயும் அவசரப்படுற?” என்று கடிந்தவாறே அவனுக்கு ஊட்டினான் அஜய்.

 

“மம்மி பார்க்க டைம் ஆச்சு‌ டாடி”

 

தேவ் உணவினை ஒருபுறம் அதக்கியவாறே பதில் சொல்ல, தோசையைப் பிய்த்துக் கொண்டிருந்த அஜயின் கரங்கள் ஒரு நொடி அப்படியே நின்றது. அவனது நெற்றி யோசனையாய்ச் சுருங்கியது.  

 

“பாட்டி உன்னை நல்லா தானே பார்த்துக்கிறாங்க தேவ்.. அப்புறம் ஏன் நீ புது மம்மி மேலே இவ்வளவு இன்ட்ரெஸ்டடா இருக்க?”

 

என்னவோ அவனது இந்த ஆர்வம் அஜயின் மனதைப் பிசைந்தது. தனக்கே தெரியாமல் தேவ் தாயன்பிற்காக ஏங்குகிறானோ? என்றெண்ணிக் குழம்பினான்.

 

“நல்லா பார்த்துக்கிறாங்க.. ஆனா அவங்க பாட்டி டாடி.. எனக்கு மம்மி வேணும்” என்று தேவ் சொல்ல, அஜய் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவனது கண்கள் நொடியில் கலங்கிப் பின் இயல்பானது.

 

அதுவரை திருமணத்தின் மீது பெரிதான நாட்டமில்லாமல் இருந்தவன் அந்த நொடியில் தேவிற்காகத் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ள யோசித்தான். அவன் அவ்வாறு யோசித்த கணமே என்னவோ நெஞ்சில் பாரமாக அழுத்துவதைப் போலிருக்க, அந்த உணர்விலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் தட்டில் சுடச்சுட அடுத்தத் தோசையைக் கொண்டு வந்து வைத்தார் தவமணி.

 

அதேநேரம் சரியாக வீட்டிற்குள் நுழைந்த சண்முகம், “என்னட்டி இன்னும் கிளம்பலயா?” என்று சத்தமிட, 

 

“அவ்வளவுதான்.. இதோ கிளம்பியாச்சு” என்றபடி அடுக்களைக்குள் சென்று அடுப்பை அணைத்துவிட்டு வெளிவந்தார் தவமணி.

 

“போகலாம் தாத்தா” என்று தேவ்சரணும் அஜயின் மடியிலிருந்து குதூகலத்துடன் இறங்கிவர, அஜய் தோசையின் மீதே கைகழுவிவிட்டு எழுந்துவிட்டான்.

 

“போகலாம்” என்றவாறு அஜய் தேவ்சரணைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடக்க, தவமணிக்கு முகமே விழுந்துவிட்டது.

 

‘நெய் ஊத்தி அவனுக்குப் பிடிக்குமேனு பார்த்துப் பார்த்து ஊத்திக் கொடுத்தேன்.. இந்த மனுசன் காலுல சுடுதண்ணியைக் கொட்டிக்கிட்டுப் பறக்காருனு(பறக்கிறாருனு) பசியாறாம போறான் எம்மவன்’

 

மனதுக்குள் கணவனைக் கரித்துக் கொட்டியவாறு தவமணி அவரைப் பார்க்க,

 

அவரோ, “கிளம்பலயானு கேட்கக்குள்ள சாப்பாட்டுல கைகழுவுதான் உன்புள்ள.. அப்படியென்ன திமிரு” என்று பொரிந்தார்.

 

“அப்பா அவசரம்னு சொல்லுதாங்களேனு கைகழுவிட்டுப் போகுதான்(போறான்).. அது குத்தம்னு அவனை ஏசுனா பொறவு வரலனு சொல்லிடப் போறான்” என்று தவமணி சொன்னதில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே வெளியே சென்றார் அவர். அவரைத் தொடர்ந்து தவமணியும் சென்று காரிலேற, கார் மொத்தக் குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலை நோக்கிச் சென்றது.

 

பத்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்ததால் சங்கரகோமதி பதட்டத்துடன் இருந்தார்.

 

“இந்த நேரத்துல தான் உங்க மவ கமிஷ்னரைப் பார்க்கணும்னு போவணுமா? என்ன சொன்னாலும் கேட்க மாட்டிக்கா” என்று புலம்பியபடி அவ்வப்போது வாசலை எட்டிப் பார்த்துக்கொண்டே சுட்டு வைத்திருந்த பலகாரங்களைத் தனித்தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் சங்கரகோமதி.

 

சங்கரநாராயணன் யாருக்கோ வந்த நட்டமென தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதால் திரும்பி அவரைப் பார்த்தவருக்கு, அவர் முனைப்பாக தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தது அப்படியொரு எரிச்சலைத் தந்தது.  

 

“இப்போ அந்த டிவி கழுதையை ஆஃப் பண்ணுதீங்களா என்ன?” என்று சங்கரகோமதி உள்ளிருந்தவாறே சத்தம் போட்டதில் மனைவியைத் திரும்பிப் பார்த்தவர், சங்கரகோமதியின் காளி அவதாரத்தில் வேகமாக தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தார்.

 

“நாச்சிக்குப் போன் அடிச்சு எங்க இருக்கான்னு கேளுங்க”

 

அடுத்த கட்டளை அவரிடமிருந்து வந்தது. சங்கர நாராயணன் மகளுக்கு அழைப்பு விடுக்க, அந்தப் பக்கம் உடனே அழைப்பு எடுக்கப்பட்டது.

 

கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் எடுத்ததும், “வந்துட்டே இருக்கேன் ப்பா.. டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்று கோமதி நாச்சியார் கூற, அதையே மனைவியிடம் திரும்பிப் படித்தார் அவர். அதன்பின் தான் சங்கரகோமதிக்குக் கொஞ்சம் பதட்டம் தணிந்தது.

 

சங்கர நாராயணனிடம் பேசிவிட்டு முகத்தில் சிந்தனை ரேகைகள் படிய ஆள்காட்டி விரலால் புருவ மத்தியில் தட்டியவாறே பயணித்துக் கொண்டிருந்த கோமதி நாச்சியாருக்கு எண்ணமெல்லாம் இந்தத் திருமணத்தை என்ன சொல்லி நிறுத்துவது என்பதில் தான் இருந்தது. அவளது மனதில் காலை ஸ்ரீநிதி வந்து பேசியதுதான் படமாக ஓடிக் கொண்டிருந்தது.

 

அன்று காலை வழக்கம்போல உடற்பயிற்சி முடித்துவிட்டு அறையில் அமர்ந்திருந்த கோமதி நாச்சியார், கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த தங்கையை வியப்பாகப் பார்த்துவிட்டு,

 

“என்ன ஸ்ரீ?” என்றாள் கேள்வியாக.

 

“இன்னைக்கு லீவாக்கா நீங்க?”

 

“ஆமா.. அம்மாவோட ஆர்டர்” 

 

புன்னகையுடன் கோமதி நாச்சியார் சொல்ல, அந்தப் புன்னகை சற்றும் தொற்றாமல் பதட்டமும் பயமுமாக நின்றிருந்தாள் ஸ்ரீநிதி. அவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு,

 

“என்ன ஸ்ரீ?” என்று குழப்பமாகக் கோமதி நாச்சியார் வினவ,

 

“அக்கா.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.. அம்மா அப்பா கிட்ட சொன்னா..” என்று தயக்கத்துடன் நிறுத்தினாள் ஸ்ரீ.

 

அவள் தயங்கி நிறுத்தியதே அவள் சொல்லாமல் விட்ட செய்தியைக் கூற, கோமதி நாச்சியாரின் முகம் கன்றியது.

 

“சென்ட்டிமென்ட்டலா பேசி என்னை அடுத்துப் பேச முடியாத மாதிரி பண்றாங்க.. நீங்க அம்மா கிட்ட பேசி இது வேணாம்னு சொல்றீங்களாக்கா?”

 

கெஞ்சுதலோடு கேட்ட தங்கையைப் பார்த்தவளின் விழிகளில் இப்போது சந்தேகம் வந்திருந்தது.

 

“இப்போதைக்கு கல்யாணம் வேணாமா? இல்ல இந்த மாப்பிள்ளை கூடக் கல்யாணம் வேணாமா?”

 

சரியாக நூல் பிடித்து கோமதி நாச்சியார் கேட்க, ஸ்ரீநிதி திகைத்தாள்.

 

“அக்கா..”

 

“கூடப் படிக்கிற பையனா?”

 

“இல்..இல்லக்கா.. அப்படி..லாம் இல்ல.. எம்.காம் பண்ணலாம்னு நினைச்சேன். அ..தான்”

 

திக்கித் திணறி ஸ்ரீநிதி சொல்ல, அவளைக் குறுகுறுவென்று பார்த்தவள்,

 

“பொண்ணு பார்க்கத் தானே வர்றாங்க.. பேசிக்கலாம் போ” என்றாள்.

 

ஸ்ரீநிதிக்கு அதுவே போதுமானதாக இருந்தது. தமக்கையின் இந்த பதிலே நேர்மறையான முடிவைத்தான் தரும் என்று உறுதியாக நம்பினாள் அவள். பெரிய மனப்பாரம் அகன்ற நிம்மதியில் அவள் தன் அறைக்குச் செல்ல அடுத்த அரைமணி நேரத்தில் கோமதி நாச்சியார் அலுவலக வேலையாக கோப்பு ஒன்றைக் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டாள். விஷயம் அறிந்தவுடன் ஸ்ரீநிதி பதறிப் போய்விட்டாள்.

 

உடனே தமக்கைக்கு அவள் அழைப்பு விடுக்க, “முக்கியமான வேலையா அக்கா? லேட் ஆகிடுமா வர்றதுக்கு?“ என்ற அவளது கேள்விக்கு,

 

“அவங்க வர்றதுக்குள்ள வந்திருவேன் ஸ்ரீ.. நீ ரிலாக்ஸா இரு” என்ற பதில் கிடைக்கவும் தான் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள் அவள்.

 

இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே சென்றவள் வீட்டிற்குள் நுழையும்போதே அங்கே நின்ற மற்றொரு காரைப் பார்த்துவிட்டாள். தன் கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்க்க, அவர்கள் வருவதாகச் சொல்லியிருந்த நேரத்தைக் கடந்து ஏழு நிமிடங்கள் சென்றிருந்தன.

 

அவசரமாக காரிலிருந்து இறங்கியவள் தனது வழக்கமான வேகநடையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் அஜய் குடும்ப சகிதமாக அமர்ந்திருந்தான். தனக்கு இடது பக்கத்தில் திடீரென்று நிழலாடவும் யாரென்று திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டான்.  

 

அஜய் எழுந்து நிற்கவும் அங்கிருந்த பெரியவர்கள் மூவரும் ஒருசேர வாயிலைப் பார்த்தனர். தேவ்சரணும் அனைவரோடு சேர்ந்து அவளைப் பார்க்க, எழுந்து நின்றவனை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே மற்றவர்களை வரவேற்கும் விதமாகத் தலையசைத்தவள் அவளது தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

“நீ ஏம்லே இப்படி நிக்க?” என்று தவமணி கிசுகிசுப்பாய் கேட்கவும் தான் அஜய் உணர்வு வந்து அமர்ந்தான்.

 

“என்னுடைய மூத்த பொண்ணு. ஏசிபி-யா இருக்கா..” என்று சங்கரநாராயணன் பெருமிதமாக அறிமுகப்படுத்தியவர்,

 

“வேலை முடிஞ்சதா நாச்சி” என்று மகளிடம் விசாரித்தார்.

 

“ம்ம்‌ முடிஞ்சதுப்பா” என்று பதிலளித்தவள் மாப்பிள்ளையாக்கப்பட்டவனைப் பார்வையிட்டாள். அவளது விழிகள் அவனை ஏறெடுத்துப் பார்க்கும் போதெல்லாம் அவனது கண்களில் ஒருவித மின்னல் வந்து போக, அதையும் சேர்த்தே நோட்டமிட்டவள் பல்லைக் கடித்தாள்.

 

‘பொண்ணுங்களையே பார்க்காதவனைப் போல பார்க்கிறானே’ என்று அவனை இளக்காரமாகப் பார்த்தவள் அதையே கண்களில் பிரதிபலிக்கவும் செய்தாள்.

 

அவளது விழிகள் கூறும் செய்தியை மிகச் சரியாக உள்வாங்கியவன், “ஆமாம்.. அப்படித்தான்” என்று சொல்வதைப் போல, சோபாவில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு கோமதி நாச்சியாரைப் பார்வையிட ஆரம்பித்துவிட்டான்.

 

அதில் கடுப்பானவள் எதையும் பேசி வைக்கும் முன்னரே சங்கரகோமதியின் தலை தெரிய, வேறுவழியின்றி அமைதியைக் கடைபிடித்தாள். சங்கரகோமதியின் பின்னால் தழையத் தழையப் புடவை கட்டிக்கொண்டு ஸ்ரீநிதி நடந்து வந்தாள். சண்முகமும் தவமணியும் ஸ்ரீநிதியைப் பார்க்க, அஜயின் பார்வை அப்போதும் நாச்சியாரை விட்டு அகலவில்லை.  

 

அவனது பார்வையில், ‘சரியான பொறுக்கியா இருப்பான் போல’ என்ற முடிவிற்கே கோமதி நாச்சியர் வந்துவிட்டாள்.  

 

முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் ஸ்ரீநிதி அனைவருக்கும் காபியைத் தர, அஜய் ஸ்ரீநிதியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தவமணிக்கும் சண்முகத்திற்கும் பரம திருப்தி. தேவ்சரண் தவமணியின் மடியிலிருந்து இறங்கி அஜயின் மடியில் போய் அமர்ந்து கொண்டான். தேவ்சரணின் காதுகளில் அஜய் எதையோ கிசுகிசுப்பாகக் கூற, அதுவரை ஸ்ரீநிதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன் யோசனையுடன் அவனும் கோமதி நாச்சியாரைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

 

‘இதென்னடா சோதனை?’ என்று திகைத்தவள் அஜயை நேர்ப்பட முறைத்தாள். அவளின் முறைப்பையும் கூட அவன் கண்கள் மின்னப் பார்க்க, ஏன் தான் முறைத்தோமோ என்ற எண்ணத்தில் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள்.

 

“சும்மா கூச்சப்படாம உட்காருமா” என்று தவமணி சொல்ல, ஸ்ரீநிதி தமக்கையைப் பார்த்தாள்.  

 

“இங்க வா ஸ்ரீ” என்று அவள் அழைக்க, தமக்கையின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

 

“என்னம்மா படிச்சிருக்க?” என்று தவமணி கேட்க,

 

“பி.காம்” என்றாள் தயக்கமாக.

 

“அடுத்துப் படிக்க விருப்பம் இருந்தாலும் அஜய் உன்னைப் படிக்க வைப்பான்மா.. நீ அதை நினைச்சு வெசனப்பட்டுக்க வேணாம்” என்று கூற, சண்முகமும் அதை ஆமோதித்தார்.

 

“பொண்ணு பார்க்க வந்ததே ஒரு சடங்கு சம்பிரதாயத்துக்குத் தான்.. எங்களுக்குப் பொண்ணை போட்டோலயே பிடிச்சுப் போச்சு.. உங்களுக்கும் எண்ணமிருக்கப் போய் தான் வரச் சொல்லியிருப்பீங்க” என்று சண்முகம் சங்கரநாராயணனிடம் பேச்சுவார்த்தையைத் துவங்க, ஸ்ரீநிதியின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தது.  

 

யாரும்‌ அறியாத வண்ணம் தங்கையின் கரங்களைத் தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டாள் கோமதி நாச்சியார். அவரது பேச்சை ஒட்டியே சங்கரநாராயணனும் பேச, இதை எப்படித் தடுப்பது என்று யோசித்தவள் அஜய் தொண்டையைச் செறுமியதும் அவனிடம் கவனத்தைச் செலுத்தினாள்.

 

“டேட் எல்லாம் அப்புறம் குறிச்சுக்கலாம் மாமா.. எனக்கு உங்க பொண்ணு கூடத் தனியா பேசணும்.. பேசலாமா?” என்று கேட்க, சண்முகத்தின் முகம் கடுமையானது.

 

அவர் கோபமாகத் தவமணியைப் பார்க்க, தவமணி கைகளைப் பிசைந்தார்.

 

“என்ன தவம் இது?” என்று அவர் மனைவியைக் கடிய,

 

“பொண்ணு கூடத் தனியா பேசுறதுலாம் சகஜமா போச்சுங்க” என்றார் அவர் முணுமுணுப்பாக.

 

“அதெல்லாம் எனக்கும் விளங்குது.. ஆனா அதை அவன் முன்கூட்டியே நம்மகிட்ட சொல்லியிருக்கணும்ல.. இவனா இப்படிக் கேட்கான்.. சம்பந்தி வீட்ல என்ன நினைப்பாங்க?”

 

சண்முகம் கோபமாகப் பேச, தவமணிக்கு யார் பக்கம் பேசுவதென்று தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கரநாராயணனும் சங்கரகோமதியும் கண் ஜாடையில் பேசி முடித்திருந்தனர்.

 

“தாராளமா பேசுங்க மாப்பிள்ளை” என்று சங்கரநாராயணன் அனுமதி கொடுக்க, ஸ்ரீநிதிக்கு இதுவேறா என்றிருந்தது.

 

“அவங்களுக்குள்ள பேசிப் புரிஞ்சுக்கிட்டா நல்லது தானே சம்பந்தி” என்று சண்முகம் மகனை விட்டுக் கொடுக்காமல் பேச, சங்கர நாராயணனும் அதையே சொன்னார்.

 

அஜய் புன்னகையுடன் எழ, ஸ்ரீநிதியும் வேறு வழியில்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு எழுந்தாள். அப்போது தான் அஜய் அந்த குண்டைத் தூக்கிப் போட்டான்.

 

“நீங்க இல்லைங்க.. உங்க அக்கா கூட தான் தனியா பேசணும்” என்று அவன் சொல்ல, அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

 

“என்னட்டி பேசுதான் உன் புள்ள” என்று சண்முகம் குரலை உயர்த்த, தவமணிக்கு சங்கடமாகிவிட்டது.

 

“ஏம்லே என்ன பேசுத?” என்று அவரும் சத்தம் போட, 

 

சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு ஒருசேர மகளின் முகத்தைப் பார்த்தனர். ஸ்ரீநிதி அதுவரை இல்லாமல் அப்போதுதான் அஜயை நிமிர்ந்து பார்த்தாள். அவனது தைரியத்தில் அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, கோமதி நாச்சியார் முறைப்புடன் அவனைப் பார்த்தாள்.

 

“என்கிட்ட நீங்க தனியா பேச என்ன இருக்கு?” என்று அவள் கேட்க,

 

“பேசுனா தெரியப் போகுது.. இந்த சிட்டியோட ஏசிபி.. உங்க இடத்துல என்கூடத் தனியா பேசுறதுக்கு இவ்வளவு பயமா?” என்றான் அவன் புன்னகை மாறாமல்.

 

அவனது பேச்சு அவளை சரியான முறையில் சீண்ட, பதிலே பேசாமல் எழுந்து வெளியே விறுவிறுவென்று நடந்தாள் அவள். நினைத்தது நடந்த திருப்தியில் அவள் பின்னே அவன் நடக்க, நிலைமை பெரியவர்களின் கைகளை மீறுவதை அங்கிருந்த நால்வருமே உணர்ந்தனர். சங்கரகோமதிக்கு நடப்பது எதுவும் சரியாகப் படவில்லை. அவர் ஸ்ரீநிதிக்கு கண்சாடை காட்ட, அவள் யாருடைய கவனத்தையும் கவராமல் எழுந்து பெற்றோரின் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

 

அஜயின் பேச்சினால் சீண்டப்பட்டு அங்கிருந்து எழுந்து வந்த கோமதி நாச்சியார் வீட்டிற்கு வெளியே இருந்த தோட்டத்தின் நடுவே வந்துதான் நின்றாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த அஜய் அவளுக்கு முன்பாக வந்து நின்றான்.

 

ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிடுவானோ என்ற குழப்பத்தில் அவனை முறைப்புடன் அவள் பார்க்க, “ஹலோ சீனியர்.. என்னை அடையாளம் தெரியலையா?” என்றானே பார்க்கலாம்.. கோமதி நாச்சியார் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளானாள்.

 

சுளித்த புருவங்களுடன் அவனை நன்றாகப் பார்க்க, அவளுக்கு அவனைப் பார்த்த நினைவேதும் இல்லை.

 

“பத்து வருஷம் கழிச்சு பார்த்தா அடையாளம் தெரியாதுதான்” என்றான் அவன் புன்னகையுடன். அவளது குழப்பம் இன்னும் அதிகமானது. அவள் தன் நினைவடுக்குகளைத் தூசு தட்டி முழுவதுமாக அலசிப் பார்த்துவிட்டாள். அஜயை முன்பின் பார்த்த நினைவு சுத்தமாக இல்லை.

 

“சி.ஓ.ஏ காலேஜ்.. 2011-14 பேட்ச்” என்று அவன் கூற,

 

“ஓ” என்றாள் அவள் யோசனையாக. அவள் அதே கல்லூரியில் தான் 2010-13 ஆம் ஆண்டு படித்தாள். ஒருவேளை முன்னமே தெரிந்தவள் என்றுதான் அப்படிப் பார்த்து வைத்தானா? என்று யோசித்தவளுக்கு அவளது மனம் மறுப்பாகப் பதிலளித்தது. அவனது விழிகளில் ஆர்வம் அல்லவா வழிந்தது!?

 

அவனது பார்வைகள் நினைவுக்கு வந்த நொடியில் அவளது முகம் மீண்டும் கடுமையானது.

 

“எதுக்காக உள்ளே அப்படிப் பார்த்தீங்க? என்னைத் தெரிஞ்சுருந்தா ஒன்னு பேசணும் இல்ல அமைதியா இருக்கணும். இப்படியா ஒரு பொண்ணைப் பார்ப்பாங்க?” என்று அவள் கடுமையாக வினவ,

 

“எப்படிப் பார்த்தேன்?” என்றான் அஜய் திகைத்துப் போய்.  

 

எப்படிப் பார்த்தேன் என்று கேட்டால் அவள் என்ன சொல்லுவாள்? அவனது பார்வையில் ஆர்வத்தைக் கண்டாளே ஒழிய கல்மிஷத்தை அல்ல. நீ என் தங்கையைப் பெண் பார்க்க வந்துவிட்டு என்னை ஆர்வமாகப் பார்த்தாய் என்று சொல்ல ஏனோ அவளுக்குக் கூசியது. அவனுக்கு அதுமாதிரி எந்த உணர்வும் இல்லை போல! மிகவும் இயல்பாக நின்றிருந்தான்.

 

“என்ன பேசணும்னு சொன்னீங்க?”

 

தேவையில்லாத யோசனையை வரவிடாமல் அவள் நேராகப் பேச்சிற்குத் தாவ, அஜய் அவளைக் குறுகுறுப்புடன் பார்த்தான்.  

 

“நேரா விஷயத்து வான்னு சொல்றீங்க.. ரைட் வந்திடுறேன். உங்கள எனக்கு காலேஜ்ல இருந்தே ரொம்ப பிடிக்கும்.. அது காதலா என்னனு எனக்குள்ள அனலைஸ் பண்ணவே ரொம்ப நாள் ஆகிடுச்சு.. நீங்க காலேஜ் விட்டுப் போனதும் தான் எனக்குத் தெளிவான ஒரு ஆன்சர் கிடைச்சது” என்று அவன் பேசிக்கொண்டே போக,

 

அவனை முழுதாக முடிக்க விடாமல், “ஸ்டாப் இட்.. என்ன கண்டபடி உளறிட்டு இருக்க?” என்றாள் கோமதி நாச்சியார் அவனைத் தீயாய் முறைத்தபடி.

 

“உளறலா? ஹலோ உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்றேன்” என்றவன் அருகிலிருந்த செம்பருத்திச் செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து அவள் முன் நீட்டினான்.

 

“ஐ லவ் யூ.. சாரி ரோஜா செடியில் பூ எதுவும் இல்ல.. இதான் கைக்கு வசமா சிக்குச்சு” என்று செம்பருத்திப் பூவை நீட்ட, 

 

“என் தங்கச்சியைப் பொண்ணுப் பார்க்க வந்துட்டு என்கிட்ட பூவை நீட்டிட்டு இருக்கியே.. ச்சீ.. வெட்கமா இல்ல” என்று கோமதி நாச்சியார் சீறினாள்.

 

“இதுல எனக்கு எந்த வெட்கமும் இல்ல.. நான் ஏன் வெட்கப்படணும்? இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியாத அப்பப்ப நெஞ்சோரமா துடிச்சுட்டே இம்சை பண்ணுற என் கல்லூரிக் காதல் நீ.. வீட்டு கம்பெல்ஷன்ல பொண்ணுப் பார்க்க வந்த இடத்துல பொண்ணுக்கு அக்காவா நீ இருக்கிற.. எனக்கென்னமோ இதெல்லாம் எனக்காகக் கடவுள் கொடுக்கிற குறியீடா தான் தெரியுது.. இந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட்டா அப்புறம் உன்னையே நான் மிஸ் பண்ண வேண்டி வந்தாலும் வந்திடும்”

 

இருவருமே தங்களை அறியாமல் ஒருமைக்குத் தாவியிருந்தனர்.

 

“கடவுளுக்கு வேற வேலை இல்ல பாரு.. ஏய் முட்டாள் உன்னை விட நான் பெரிய பொண்ணு வேற”

 

“அது சரியா இருந்தா உனக்குப் பிரச்சனை இல்லையா?”

 

அவன் ஆர்வமாகக் கேட்க, அதற்குமேல் அவளுக்குப் பொறுமையில்லை. அவள் நகரப் போக, சட்டென்று அவளது கையைப் பிடித்து நிறுத்தினான் அஜய்.

 

அவன் கையைப் பிடிப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கையைப் பிடிக்கவும் உச்சகட்ட கோபத்தை அடைந்தவள் சற்றும் யோசிக்காமல் தன் பேண்ட்டின் பின்னால் சொறுகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவனது இடுப்புக்குக் கீழ்புறத்தில் வைத்து அழுத்தியிருந்தாள்.  

 

அவளிடமிருந்து இப்படியொரு எதிர்வினையை அவனும் எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கியை முதன்முறையாக அவன் நேரில் பார்க்கிறான். அதோடு அவளது குறி அவனது உயிர் குறியாக இருக்க மிரண்டு விட்டான். அவனது பிடியிலிருந்து தானாக அவளது கை விடுதலையானது.

 

“ஹே என்ன பண்ற நீ?”

 

பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவன் கேட்க,

 

“ஒழுங்கா குடும்பத்தோட இடத்தைக் காலி பண்ணுங்க.. காதல் கல்யாணம்னு எதாவது உளறிட்டு இருந்தா அடுத்த முறை இப்படி வச்சுட்டுப் பேசிட்டு இருக்க மாட்டேன்.. ஒரே அழுத்து” என்றவள் மீண்டும் துப்பாக்கியை எடுத்து இடத்தில் வைத்தாள்.

 

இப்போது அவனது பயம் சற்றே மட்டுப்பட்டு, அவனது துடுக்குத்தனம் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது. 

 

“எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய் கோம்ஸ்.. ஏடாகூடமா எதாவது ஆகிடுச்சுனா நாளைக்கு நீ தான் கஷ்டப்படுவ” என்று அவன் சொல்லவும், அவன் சொல்ல வந்தது புரிந்து கோபத்தில் அவளது முகம் மாற,

 

“இல்ல வேட்டையன் படத்துல ரஜினி சார் நிரபராதியை சுட்டுட்டுக் குற்றவுணர்ச்சில சுத்துவாரே.. அது மாதிரி நீயும் கஷ்டப்படுவனு சொன்னேன்” என்றான் அவன் சிரிக்கும் கண்களோடு.  

 

“உன்னலாம் முதல்ல வாய்ல சுடணும்டா” என்றபடி அவள் திரும்பிப் போக, இப்போது அவன் அவளைத் தடுக்கவில்லை.

 

“போலீஸம்மா எவ்வளவு நாள் வேணும்னா டைம் எடுத்துக்கோ நல்ல பதிலா சொல்லு” என்றபடியே அவன் அவள் பின்னே செல்ல,

 

பெரியவர்கள் நால்வரும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வந்த கோமதி நாச்சியாரைத் தான் கண்டனர்.

 

சங்கரகோமதி முகத்தில் கேள்வியைத் தேக்கித் தன் மகளைப் பார்க்க, 

 

“ம்மா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாரையும் வெளியே போகச் சொல்லுங்க.. கல்யாணமும் நடக்காது காதுகுத்தும் நடக்காது” என்று சொன்னவாறு மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குச் சென்றுவிட்டாள் அவள்.  

 

அவள் சொன்னதில் சண்முகம் முகம் கன்றிப்போய் எழுந்து கொள்ள, தவமணியும் எழுந்தார். சங்கரநாராயணன் சங்கரகோமதி தம்பதியினர் சங்கடமாக அவர்களைப் பார்த்தனர்.

 

“மன்னிக்கணும்” என்று சங்கரநாராயணன் சொல்ல, 

 

“நீங்க ஏன் மாமா மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க?” என்றபடி அஜய் உள்ளே நுழைந்தான்.

 

“என்னலே போய் பேசுன?” என்று சண்முகம் மகனிடம் குரலை உயர்த்த,

 

“எனக்கு கோமதியைப் பிடிச்சிருக்கு.. அதைச் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன்” என்றான் அஜய் தைரியமாக.

 

இதுபோல் தான் இருக்கும் என்ற அனுமானம் இருந்தாலும் அஜய் வாய்மொழியில் கேட்கும்போது பெரியவர்கள் பதறித்தான் போனார்கள்.

 

“என்னடா சொல்லுத?” என்று தவமணி பதறிப் போய்க் கேட்க,

 

அவருக்குப் பதில் கூறாமல், “அத்தை மாமா.. உங்க ரெண்டாவது பொண்ணைப் பார்க்க வந்துட்டு முதல் பொண்ணைக் கட்டிக்கிறேனு சொல்றதுனால என்னைத் தப்பா நினைச்சுடாதீங்க.. எனக்கு காலேஜ்ல இருந்தே உங்க மூத்த பொண்ணைத் தெரியும். நான் இது காதல்னு முடிவு பண்றப்போ காலம் கடந்து போய் உங்க பொண்ணைத் தொலைச்சுட்டேன்.. விருப்பமே இல்லாமல் தான் பொண்ணுப் பார்க்க வந்தேன்.. வந்த இடத்துல உங்க பொண்ணைப் பார்க்கவும் என்னால என் மனசை அதுக்கு மேல மறைக்க முடியல” என்றான் அஜய்.

 

‘இதென்ன புதுசா கிளைக்கதையெல்லாம் சொல்லுதாரு இவரு’ என்ற குழப்பத்தில் சங்கரகோமதி இருக்க,

 

சங்கரநாராயணன், “நீங்க எங்க கிட்ட சொல்லியிருந்தா நாங்க பேசியிருப்போமே” என்றார் மகளின் குணமறிந்து.

 

“காதலுக்குத் தூதெல்லாம் இருக்கக் கூடாது மாமா.. சரியோ தப்போ நான் பேசுறதுதான் சரியா வரும்”

 

“என்னலே பேசுத? காதல் கண்ணறாவினு என்னென்னமோ பேசிட்டு நிக்க.. இங்க பாருலே.. இது கண்டிப்பா நடக்காது.. எப்பவும் நான் இதுக்கு சம்மதிக்கப் போறதில்ல”

 

சண்முகம் குரலை உயர்த்திப் பேசியது மேலே தன் அறையிலிருந்த கோமதி நாச்சியாருக்கே கேட்டது. அந்தக் குரலும் அது தந்த கோபமும் அவளை அலைக்கழிக்க காதுகளை மூடிக் கொண்டாள் அவள்.

 

“ப்பா.. இந்த வீட்ல பெண் எடுக்கணும்னு சொன்னது உங்க முடிவுதான? ரெண்டாவது பொண்ணுக்குப் பதிலா மூத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போறேன்.. இதுல என்ன பிரச்சனை?”

 

“ஆமாம்லே.. சொன்னேன்தான்.. ஆனா போலீஸ்காரப் பொண்ணெல்லாம் நம்ம வீட்டுக்கு வேணாம்”

 

சண்முகம் உறுதியாய்க் கூற, கதவைத் திறந்துகொண்டு புயல் வேகத்தில் வெளியே வந்தாள் கோமதி நாச்சியார்.

 

“இங்கே யாரும் உங்க பையனைக் கல்யாணம் பண்ணத் தவமிருக்கல சார்.. உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் உங்க ஆசை தீருமட்டும் உங்க பையனுக்குப் புத்தி சொல்லுங்க.. இப்போ இடத்தைக் காலி பண்ணுங்க” என்று அவள் வாயிலை நோக்கிக் கைகாட்ட, சண்முகத்தின் முகம் சுருங்கிவிட்டது.

 

அவர் விடுவிடுவென்று வெளியே நடக்க, நடக்கும் களேபரத்தை அதுவரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவ்சரணைக் கையில் பிடித்துக்கொண்டு தவமணியும் கணவனின் பின்னே ஓடினார்.

 

அஜய் மட்டும் அங்கேயே நின்றிருந்தான்.

 

“உனக்குத் தனியா சொல்லணுமா?”

 

கோமதி நாச்சியார் கிட்டத்தட்ட கத்தியதில்,

 

“உன் கோபமோ மிரட்டலோ எதுவும் என்னையும் என் காதலையும் பாதிக்காது.. முதல்ல இப்படிக் கத்தாம நிதானமா உட்கார்ந்து யோசி” என்று கூறிவிட்டு அஜயும் கிளம்பிச் செல்ல, பெரும்புயலில் மாட்டிக்கொண்டு கரை சேர்ந்த உணர்வில் அங்கிருந்த சோபாவில் ‘தொப்’பென்று அமர்ந்தாள் அவள். அவளருகே சங்கரகோமதியும் சங்கரநாராயணனும் அமர்ந்தனர்.

 

அதுவரை அங்கே நடந்தததையெல்லாம் பெற்றோரின் அறையில் கதவிடுக்கின் வழியே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதி வெளியே வந்தாள். கோமதி நாச்சியாரின் முகமே பெற்றவர்களையும் சேர்த்தே மற்ற மூவரைத் தூரமாக நிறுத்த, அவளிடம் பேசவே தயங்கி அமர்ந்திருந்தனர்.

 

அவர்களது உறவுக்கான ஆரம்பப்புள்ளியை அஜய் வைத்துவிட்டுச் செல்ல, அது அழகான கோலமாக வளரும் முன்னவே அலங்கோலமாக மாற்றவல்ல ஓர் கொடூரம் அதே நகரத்தின் மற்றொரு மூலையில் அரங்கேறியது.

 

 

 

 

கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள:

 

 

 

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கரு

த்/#post-231

 

 

This post was modified 1 month ago by VSV 37 – செந்தணல் தாரிகையே
This post was modified 3 weeks ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 3

 

 

 

 

 

 

 

இன்னும் சத்தம் அடங்காமல் சண்முகம் முணுமுணுத்துக் கொண்டேதான் இருந்தார். அவரால் நடந்து முடிந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. அஜய் தலை தெரியும் போதெல்லாம் அவர் எதையாவது ஒன்றை சொல்லிக் கொண்டேயிருக்க, தவமணி தான் அவரை அவ்வப்போது அமைதிப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கே சண்முகத்திற்கு இரத்த அழுத்தம் கூடிவிடுமோ என்ற பயத்தில் அவர் கணவரை அமைதிப்படுத்த, அஜய் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகனைக் கொஞ்சிக் கொண்டும் அவனுடன் விளையாடிக் கொண்டும் இருந்தான்.

 

“உன்ட்ட தாம்லே இம்புட்டு நேரமா பேசுதேன்.. வெளங்குதா இல்லியா?”என்று அவர் கேட்க,

 

மகனைக் கொஞ்சுவதை நிறுத்திவிட்டுத் தந்தையைப் பார்த்தவன், “வெளங்குது” என்றான்.

 

“என்ன வெளங்குச்சு?” என்று அவர் விடாமல் கேட்க, 

 

“நான் குடும்பம் குட்டினு வாழ்றது இந்த ஜென்மத்துல நடக்காதுனு வெளங்குச்சு” என்றவன் அவர் அடுத்து ஆரம்பிக்கும் முன்னர் தேவ்சரணைத் தூக்கிக் கொண்டுத் தன் அறைக்கு வந்துவிட்டான்.

 

சண்முகம் அவனது பதிலில் திகைத்துப் போய் மனைவியைப் பார்க்க, அவரது கண்கள் கலங்கிக் கண்ணீரைச் சிந்த தயாராகிக் கொண்டிருந்தது.

 

“இப்ப எதுக்கு நீ கண்ண கசக்குத? அவன் சொன்னா அப்படி ஆகிப்புடுமா? நாம அப்படியே விட்டுருவோமா?” என்று மனைவியைக் கடிந்தாலும் அஜயின் வார்த்தைகள் அவருக்குமே சுருக்கென்றிருந்தது தான் நிஜம்.

 

அவன் இப்படியே நின்றுவிட்டால் அது அவருக்கு மகிழ்வையா தரும்?  

 

‘என்ன வார்த்தை சொல்லுதான்’ என்று கலங்கிப் போனவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனுக்கு வேறு ஏதாவது பெண் மீது பிடித்தம் வந்திருக்கக் கூடாதா? என்று விதியை நொந்தவர் சீக்கிரமாக அஜயின் திருமணத்தை நிகழ்த்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

 

அஜய் தன் அறையில் மகனுக்கு விளையாட்டுக் காட்டியபடி இருந்தாலும் அவனது நினைவுகள் முழுதும் கோமதி நாச்சியாரைச் சுற்றித்தான் இருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் போதே தேவ்சரண், தந்தையைப் பார்ப்பதும் மீண்டும் விளையாட்டில் கவனமாவதும் என்றிருந்தான். அதில் தன் சிந்தனையை ஒதுக்கி வைத்தவன்,

 

“என்னடா பெரிய மனுஷா? என்னைத் திருட்டுப் பார்வை பார்த்துட்டு இருக்க?” என்றான் அஜய் புன்னகையுடன்.

 

“மம்மி நம்ம வீட்டுக்கு வரலனு சொல்லிட்டாங்களா டாடி?” என்றான் தேவ்சரண் சோகமாக.

 

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “அச்சச்சோ.. முகமெல்லாம் சுண்டுதே.. உனக்கு மம்மியை அவ்ளோ பிடிச்சிருக்கா தேவ்?” என்றான் அவனைக் கொஞ்சிக்கொண்டே.

 

“எஸ்.. ரொம்ப!”

 

தேவ்சரண் கண்களில் ஆர்வம் மின்ன இதைச் சொல்ல, அஜய் இதழ்களில் இதமான புன்னகை.

 

“எப்போ மம்மியைக் கூட்டிட்டு வரலாம்?”

 

பதிலைத் தெரிந்து கொண்டே மகனிடம் இந்தக் கேள்வியைக் கேட்க,

 

“இப்பவே…” என்ற தேவ்சரணின் குரலில் தாங்காத ஆர்வம் வழிந்தது.

 

அவனுக்குக் குறையாத ஆர்வத்துடன், “நாளைக்குப் போகலாமா?” என்று அஜயும் சொல்ல,

 

“சூப்பர் டாடி.. ஆனா தாத்தா..” என இழுத்தான் தேவ்சரண்.

 

சண்முகத்திற்கு இதில் விருப்பமில்லை என்பது அவனுக்குக் கூடத் தெரிந்திருந்தது. அவன் அப்படித்தான். ஆறு வயது தானென என்று சொன்னால் நம்ப முடியாது. பேச்சிலும் நடத்தையிலும் வயதுக்கு மீறிய புரிதல் இருக்கும். அதில் வழக்கம் போல அஜயின் இதயம் இளகியது. வாஞ்சையுடன் தன் மகனை அணைத்துக் கொண்டான் அவன்.

 

“நாம தாத்தா கிட்ட சொல்ல வேணாம்” என்று சொல்ல, தேவ்சரணிற்கு அப்போதே குதூகலம் தாங்க முடியவில்லை.  

 

“அப்பே நாளைக்கு நான் என்னோட பெர்த்டே ட்ரஸ் போட்டுக்கவா?”

 

அன்றே அவன் மறுநாளுக்கான உடைத்தேர்வு முதற்கொண்டு செய்து வைக்க, அஜய் புன்னகையுடன் தலையாட்டினான்.

 

அஜயும் தேவ்சரணும் நாளை கோமதி நாச்சியாரைக் காணச் செல்வதென முடிவாக இருக்க, அங்கே கோமதி நாச்சியார் வீட்டிலும் இன்னும் சகஜ நிலைக்கு யாரும் திரும்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

 

இரவு உணவெல்லாம் முடிந்து அவரவர் அறைக்குள் அனைவரும் அடைந்திருக்க, கோமதி நாச்சியார் சின்ன மகளின் அறைக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருக்க, வெளியிலிருந்தவாறே சத்தம் கொடுக்கவும் ஸ்ரீ எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

 

“என்னம்மா இந்த நேரத்துல?” என்று ஸ்ரீ குழப்பமாகக் கேட்க, 

 

“நீ தூங்கலியா இன்னும்?” என்றார் அவர். இல்லையென்று ஸ்ரீ தலையசைக்கவும் எதையோ சொல்ல வந்து அவர் திணறுவதைப் போலிருக்க, அவளுக்கு இன்னும் குழப்பம் அதிகமாகியது.

 

“எதுவும் என்கிட்ட சொல்லணுமா மா?” என்று அவளே எடுத்துத் தர,

 

“அது.. அ..து காலைல நடந்ததுல உனக்கு ஒன்னும் சுணக்கமில்லையே?” என்றார் தவிப்புடன் சங்கரகோமதி.  

 

மேலே படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவளை வற்புறுத்தித் திருமணத்திற்கு அவர் சம்மதிக்க வைத்திருக்க, பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை உன் அக்காவைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் மனம் சங்கடப்பட்டு விடாதா என்ற எண்ணம் தான் அவருக்கு! அதிலும் மாப்பிள்ளையைப் பார்த்ததுமே ஸ்ரீக்கும் எதாவது எண்ணம் வந்திருந்தால் அது இன்னமும் மோசம் ஆயிற்றே..! இப்படிப் பல யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தார் அவர்.

 

தாய் கேட்க வருவது புரிந்து பளீரென்ற புன்னகை சிந்தினாள் ஸ்ரீ.

 

“ம்மா.. நானே நல்லவேளை இது நின்னிடுச்சுனு நினைக்கிறேன்.. நீங்க வேற.. நான் அவர் முகத்தை ஒழுங்கா கூடப் பார்க்கலமா” என்று அவள் புன்னகைக்க, 

 

“நெசமாத்தான் சொல்லுதியா? எனக்காக ஒன்னும் நீ மாத்திச் சொல்லலயே?” என்றார் அவர் நம்பாமல்.

 

“கடவுள் சத்தியம். எனக்கு ஒன்னுமில்ல நான் நல்லாத்தான் இருக்கேன்” 

 

அவள் அப்படி உறுதியாகக் கூறவும் தான் அவர் மனமிறங்கி கீழே வந்தார். இப்போது சின்ன மகளின் கவலை மறைந்து மனம் பெரிய மகளைச் சுற்றி வட்டமடித்தது. அவர் கோமதி நாச்சியாரை நினைத்துக் கொண்டே அங்கிருந்து செல்ல, கதவை அடைத்துவிட்டு வந்து படுத்தவள் ப்ளூடூத்தை மீண்டும் காதுகளில் மாட்டினாள்.

 

“யாரு வந்தது?” என்ற கார்த்திக்கின் குரலில் அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து மீண்டும் கடுகடுவென்று முகத்தை வைத்தாள் ஸ்ரீ.

 

“இப்போ அதுதான் முக்கியமா? நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற?”

 

அவளது கோபம் புரிந்தாலும் தன் நிலைமையை அவள் யோசிக்க மாட்டேன் என்கிறாளே என்ற குறையோடு அவன் அமைதியாக இருந்தான்.

 

“இப்போ எதுக்கு முகம் ஒரு மீட்டர் நீளத்துக்குப் போகுது?”

 

அதையும் கண்டுபிடித்து அவள் சொன்னதில், ‘எல்லாம் தெரியுது இவளுக்கு’ என்ற எண்ணம் தோன்ற அந்தப்பக்கம் கார்த்திக்கின் முகத்தில் இளநகை.

 

“இன்னைக்கு வந்தவர் அக்காவைப் பிடிச்சிருக்குனு சொல்லலனா என் நிலைமையை யோசிடா” என்று அவள் கடுப்புடன் சொல்ல,

 

“எனக்குப் புரியுது ஸ்ரீ.. நான் அம்மா நல்ல மூட்ல இருக்கும்போது இதைப் பத்தி பேசுறேன்” என்றான் அவன் அமைதியாக.

 

அவன் அப்படிச் சொன்னாலும் அவளுக்கு என்னவோ நம்பிக்கையே இல்லை. கார்த்திக் அத்தனை பயந்த சுபாவம். ஸ்ரீ அவனுக்கு அப்படியே நேர்மாறாக இருந்தாள். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். முதலில் நண்பர்களாகப் பழகி வந்தாலும் காலப்போக்கில் அது கார்த்திக்கின் மனதில் காதலாக மாற்றம் பெற, அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கூடப் படிக்கும் இன்னொரு பையனும் அதேநேரம் ஸ்ரீயிடம் காதலைச் சொல்ல, ஸ்ரீயை விடக் கார்த்திக் தான் அதிர்ந்துவிட்டான். ஸ்ரீ எங்கே சரியென்று சொல்லிவிடுவாளோ என்றெண்ணி மிகவும் பயந்து போனான். அதேநேரம் காதலைச் சொல்லவும் தைரியம் இல்லை. எதையோ இழந்தவனைப் போல் சுற்றிக்கொண்டு இருந்தவனை ஸ்ரீ தான் அழைத்து விசாரித்தாள். அப்போதும் உண்மையைச் சொல்லாமல் போக்குக்காட்ட, அவனது திணறலே அவளுக்கு விஷயம் என்ன என்பதை விளக்கிவிட்டது. தலையில் அடித்துக் கொண்டு அவனை உடனழைத்துக் கொண்டவள் அடுத்து அவனைத் தனியாக விடவில்லை. காதல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும் அவளது அருகாமையே அவனுக்குப் போதும் என்றிருந்தது. அப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் தான் திடீரென்று ஒருநாள் ஸ்ரீ அவனிடம் காதலைச் சொன்னாள். அதிலிருந்து காதல் பறவைகளாகச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் படிப்பு முடியவும் திணறித்தான் போனார்கள். அதிலும் சங்கரகோமதியின் இந்த அதிரடி நடவடிக்கையில் கார்த்திக் அங்கே நெஞ்சைப் பிடித்துவிட்டான்.  

 

“வீட்ல நான் சொல்லணும்னா நீ அம்மா கிட்ட பேசணும் கார்த்திக்” என்று ஸ்ரீ முடிவாகச் சொல்ல, இதோ அதோ என்று நாளைக் கடத்திக் கொண்டிருந்தான் அவன். அதற்குத்தான் இப்போது அவனுக்கு அத்தனை திட்டுக்களும்.

 

கார்த்திக்கிற்கு அவளது நிலைமை புரிந்தாலும் தன் வீட்டு நிலையை எண்ணித் திண்டாடிப் போனான் அவன். இருந்தும் சரியென்று அவன் சமாதானமாகப் பேச, நம்பிக்கை இல்லாமல் ‘ம்ம்’ கொட்டினாள் ஸ்ரீ.

 

ஸ்ரீ வீட்டிலும் சொன்னதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அவளது வீட்டிலிருந்து வரும் எதிர்ப்பை வேறு அவள் சமாளிக்க வேண்டும். அதை நினைத்தாலே இப்போதே பயம் பிடித்துக் கொண்டது. ஆனால், காதலித்தாகிவிட்டது. அடுத்தது என்ன என்று பார்த்தாக வேண்டும் அல்லவா? அதுதான் அவளது வாதம். கார்த்திக் சொல்வானா இல்லை இன்னும் இழுத்தடிப்பானா என்று அவள் வருந்த, விதி அதற்கு வேறொரு முடிவு வைத்திருந்தது.

 

சின்ன மகளிடம் பேசிவிட்டு தங்கள் அறைக்குச் சென்ற சங்கரகோமதி யோசனையுடனே படுத்தார். மனைவியின் முகத்திலிருந்த யோசனையில் சங்கரநாராயணன் கேள்வியாக மனைவியைப் பார்த்தார்.

 

‘என்ன யோசனைனு கேட்போமா வேணாமா?’ என்ற யோசனையுடன் அவர் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குள் சங்கரகோமதியே கணவனைப் பார்த்தவர்,

 

“என்ன இங்க பார்வை?” என்று கேட்டு வைக்க,

 

“இல்ல கோமு.. ஏதோ யோசனையா இருக்குத மாதி தெரிஞ்சது.. அதான் என்ன யோசனைனு பார்த்தேன்” என்றார் சங்கரநாராயணன் பதிலுக்காக மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.

 

“ம்ம்.. பிள்ளைங்கள எல்லாம் வளர்த்து கடமையாத்தி முடிச்சாச்சு.. அதான் அக்கடானு நீங்களும் நானும் எங்கனயாவது போய்ட்டு வரலாமேனு யோசனை” என்று சங்கரகோமதி சொல்லவும்,

 

“எங்கன போவனும்னாலும் சொல்லு கோமு.. உன் ஆசைப்படியே போய்ட்டு வந்துரலாம்” என்று சங்கரநாராயணன் சொல்ல, 

 

அவ்வளவுதான்! சங்கரகோமதிக்கு வந்ததே ஆத்திரம்!! கணவனைத் தீயாக முறைத்தவர்,

 

“அடி சக்கை.. பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்சான்ற மாதி கிழவனுக்கு ஆசையைப் பாரும்.. எனக்கு வாய்ல நல்லா வருது.. தலைக்கு மேல ரெண்டு பொட்டப் புள்ளைக இருக்குதாங்கனு கொஞ்சமேனும் கவலை உமக்கிருந்தா இந்த வார்த்தை வாயில வந்திருக்குமா?” என்றார் அதீத கோபத்துடன் அவர்.

 

மனைவியின் கோபத்தில் பதறிப்போய், “அய்யோ கோமு.. நான் அப்படி அர்த்தம் பண்ணிச் சொல்லல” என்றார் அவர்.

 

“பொறவு வேற என்ன அர்த்தம் பண்ணீங்க?”

 

“எப்பவுமே வாயைத் திறந்து நீ இப்படி கேட்டது இல்லையே.. இப்ப கேட்கவும் அம்புட்டு அழுத்தம் போலனு நெனைச்சுப்புட்டேன்.. உனக்காகத்தான் கோமு”

 

பாவம் போல அவர் சொன்னதில் சற்று இறங்கி வந்தவர், போனால் போகுதென்று கணவனை மன்னித்து அவரிடம் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

 

“சரி அதை விடுங்க.. எனக்கொரு யோசனை” என்று கணவரையும் பேச்சில் இழுக்க, இப்போது சங்கரநாராயணன் விழித்தார்.

 

‘இப்போ நான் என்ன யோசனைனு கேட்கணுமா இல்ல கேட்கக் கூடாதா?’ என்று அவர் யோசனையுடன் அமர்ந்திருக்க,

 

“ஏங்க முன்பொறப்பு குதிரையா என்னமும் பொறந்து தொலைச்சீங்களா? அதான் இப்படி நின்னுட்டே உறங்குமாம்” என்றார் சங்கரகோமதி கடுப்புடன்.

 

‘நான் உட்கார்ந்து தான இருக்கேன்.. இதைக் கேட்டா இன்னும் பேசுவாளே’ என்று முகத்தைச் சுருக்கியவர்,

 

“நான் உறங்கவெல்லாம் இல்ல கோமு” என்றார்.

 

“முதல்ல கோமு கீமுனு ஏலம் விடாதீங்கனு எத்தனைதரம் சொல்லுதது உங்களுக்கு? வீட்ல இம்புட்டு பெரிய விஷயம் நடந்திருக்குது.. அதைப்பத்தி கொஞ்சமாச்சும் விசனம் இருக்குதா? மணியடிச்சா சோறு மாமியா வீடுனு அக்கடானு உறங்க வந்தாச்சு.. சரி நமக்கா இல்லைனாலும் பொண்டாட்டி பேசுதாளேனு காது கொடுத்துக் கேட்கீங்களா?”

 

கோமு என்று சொல்ல வந்தவர் அதை நிறுத்திவிட்டு, “இல்லட்டி நீ சொல்லு.. நான் கேட்கேன். என்ன யோசனை?” என்றார் சமாதானமாக.

 

“இன்னைக்கு காலைல நடந்ததைப் பத்தி என்ன நினைக்கீங்க நீங்க?”

 

சங்கரகோமதி ஆரம்பிக்க மனைவியைப் பாவமாகப் பார்த்தவர்,

 

“நீயே சொல்லிடேன் ட்டி” என்றார் அவர். அதில் அலுப்புடன் கணவரைப் பார்த்தவர், 

 

"அந்த தம்பி பேசுனது மாதி நம்ம ஏன் நம்ம நாச்சிக்கு அவரையே பார்க்கக் கூடாது?” என்றாரே பார்க்கலாம்.. சங்கரநாராயணன் திகிலுடன் மனைவியைப் பார்த்தார்.

 

“நாச்சி கல்யாணமே வேணாம்னு சொல்லுதாளே” என்று மனைவிக்கு அவர் நினைவூட்ட,

 

“அது தெரியுது.. ஆனா எனக்கு இன்னொரு தடவையா முயற்சி செஞ்சுத்தான் பார்க்கலாம்னு தோனுது” என்றார்.

 

“இது சரிவராது கோமு.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத” என்று சங்கரநாராயணன் சொல்லிவிட,

 

“ஏன் இப்படி எடுத்ததும் அச்சாணியமா பேசுதீங்க?” என்று எரிந்து விழுந்தார் அவர்.

 

இதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் மனைவியைப் பார்த்தவர் பின் நினைவு வந்தவராய்,

 

“மாப்பிள்ளையோட அப்பா எப்படிப் பேசுதாருனு பார்த்தல்ல.. நாச்சிக்கு அவ வேலையைச் சொன்னா பிடிக்காதுனு தெரியும்ல உனக்கு.. எப்படி சரிவரும்?” என்றார்.

 

சங்கரநாராயணன் சொல்லவும் சங்கரகோமதியின் விழிகள் பளிச்சிட்டன. அவரது விழிகளில் சந்தோஷம் கூத்தாட, தான் அப்படியென்ன சொல்லிவிட்டோம்? என்ற சிந்தனையில் அவர் மனைவியைப் புரியாமல் பார்த்தார்.

 

“பார்த்தீங்களா உங்க வாய்ல இருந்தே மாப்பிள்ளைனு வந்துட்டு.. நீங்க வேணா பாருங்க.. நான் சொல்லுதது நடக்கும்” என்று அவர் சிறுபிள்ளையின் குதூகலத்துடன் சொல்ல, சங்கரநாராயணனுக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

 

இதெல்லாம் மகளின் பிடிவாதத்தின் முன் நடக்காது என்பதை எப்படி புரியவைக்க? என்பது தெரியாமல் மனைவியைப் பார்க்க, கணவனின் பார்வையில், அவரும் வித்தியாசமாகக் கணவனைப் பார்த்தார்.

 

“ஏன் இப்படி பார்க்குதீங்க?”

 

“ஒன்னுமில்லட்டி”

 

“இதை என்னை நம்பச் சொல்லுதீங்களா?”

 

“நாச்சி பிடிவாதம் தெரிஞ்சும் இப்படி கனவுக் கோட்டை கட்டுதியேனு…’

 

சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாதியிலேயே அவரது பேச்சு நின்றது. காரணம் சங்கரகோமதியின் பார்வை. பத்ரகாளி அவதாரம் எடுத்திருந்தார் அவர்.

 

“வாய்ல வசம்பு வைச்சுத்தான் தேய்க்கணும் போல.. மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்குதேனு பேசுறது கனவுக் கோட்டையாம்ல.. எந்த அப்பனாச்சும் இப்படிச் சொல்லுவானா?”

 

“ஏட்டி கோமு.. நான் என்ன சொல்லுதேன் நீ என்ன பேசுத? இளையவ கல்யாணத்துக்கு நீ சொல்லுத மாதி பண்ணிடலாம்னு தான நானும் சொன்னேன்”

 

“அப்போ பெரியவள குடும்பம் குட்டினு பார்க்க ஆசை இல்லையா? நமக்குப் பின்ன அவளுக்குனு யாரு இருப்பா?”

 

சங்கரகோமதி இதைச் சொல்லும்போதே அவரது விழிகள் கலங்க ஆரம்பித்தது.

 

“ஏன் நம்ம ஸ்ரீ இல்லையா?”

 

ஆறுதலாகப் பேசுகிறேன் என்று சங்கரநாராயணனும் பேச, ‘இவருக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?’ என்று தெரியாமல் அவரைப் பார்த்தார் கோமதி.

 

“எனக்கும்தான் கூடப் பொறந்தவ ஒருத்தி இருக்கா.. இப்போ நாங்க ஒட்டி உறவாடுதோமா?”

 

“ஏட்டி உன் தங்கச்சி கூடவா நம்ம ஸ்ரீயை சோடி சேர்க்க? இது உனக்கே அடுக்குமா?”

 

சங்கரகோமதிக்கு ஒரு தங்கை.. பெயர் ரேவதி. பெங்களூரில் வசிக்கிறார். அவர் திருமணமாகிச் சென்ற இடம் அந்தஸ்தில் சங்கரநாராயணனை விட பலமடங்கு உயர்வான இடம். அதுவரை அத்தான் அத்தான் என்று அழைத்துப் பாசமாகப் பேசி வளைய வந்த ரேவதியின் சாயம் அவருக்குத் திருமணமானதும் வெளுக்கத் தொடங்கியது. அது சங்கரகோமதிக்கும் சங்கரநாராயணனுக்கும் புரிய அவர்களும் மெதுமெதுவாகப் போக்குவரத்தைக் குறைத்துக் கொண்டனர். இப்போது அவருடன் போய் ஸ்ரீயை ஒப்பிட்டு சங்கரகோமதி பேச, சங்கரநாராயணனுக்கு வருத்தமாகிவிட்டது.  

 

“எம்புள்ளைங்கள நான் அப்படி வளர்க்கல.. ஆனா யாருக்கு என்னனு நாம கண்டோமா?”

 

“நீ தப்பாவே யோசிச்சா என்ன செய்யட்டும்?”

 

“சரி சரியாவே யோசிக்கேன். நாளைக்கே ஸ்ரீக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைனு அமைஞ்சாலோ இல்ல கட்டிக் குடுத்தப் பொறவு வெளிநாட்டுக்குப் போற யோகம் வந்தாலோ என்ன ஆகும்? என்ன தான் போன்ல பேசிக்கிட்டாலும் கூட நின்னு அனுசரணையா பேசுதது தானங்க ஒட்டும்”

 

அவரது குரலில் விரவிக் கொட்டிய ஆதங்கத்தில் இதையெல்லாம் அவர் நெடுநாளாக யோசித்து வைத்துப் பேசுவதாகவே சங்கரநாராயணனுக்குத் தோன்றியது. மனைவியின் கேள்வியும் ஆதங்கமும் சரியானது தான் என்றாலும்?? அவருக்கு மகளிடம் இதைப் பற்றிப் பேச அத்தனை தயக்கமாக இருந்தது. மகளது கண்ணீர் முகம் கண் முன்னே தோன்றி இம்சித்ததில் அவரது முகமும் சேர்ந்தே வாடிப்போனது. கணவரின் முகமாற்றம் சங்கரகோமதிக்கும் வருத்தத்தைத் தர,

 

“நீங்க ஏன் இப்ப வெசனப்படுதீங்க? இத்தனை வருசமில்லாம இந்த தம்பி கண்ணுல இப்ப ஏன் நம்ம நாச்சி படணும்? அதுவும் நம்ம ஸ்ரீக்கு பார்த்த முதல் வரன் வேற.. எனக்கு என்னவோ இதெல்லாம் கடவுள் சித்தம்னு தோனுது.. கண்டிப்பா நடக்கும்” என்றார் சங்கரகோமதி நம்பிக்கையாக.

 

அதில் புன்னகைத்தவர், “நாச்சியைக் குடும்பம் குட்டினு பார்க்க எனக்குக் கசக்குமா கோமு? நீ சொல்லுத மாதி நடந்தா எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா நாச்சி விருப்பம் முக்கியம்” என்றார். 

 

அதிலேயே சங்கரகோமதியின் முகம் மலர்ந்து போனது. அவர் மகளின் திருமணக் கனவோடு உறங்க ஆயத்தமாக, சங்கரநாராயணனும் பெருமூச்சுடன் படுத்துக்கொண்டார்.

 

அந்த வீட்டிலுள்ள மூவருமே தத்தம் வசதிக்கேற்ப காலையில் நடந்த விசயத்தை நல்ல விதமாகவே எண்ண, அதன் நாயகியோ கண்களில் உயர்ப்பைத் தொலைத்து அவளறையில் அமர்ந்திருந்தாள்.

 

‘அஜய் கிருஷ்ணன்’

 

அவனது பெயர் நினைவுக்கு வந்த நொடி அத்தனை ஆத்திரம் அவளது முகத்தில் வந்து போனது.

 

‘ராஸ்கல் எவ்வளவு தைரியமா என்கிட்டயே சொல்றான்?’

 

காலையில் நடந்த அனைத்தும் அவளது மனக்கண்ணில் மீண்டும் ஓட, சண்முகத்தின் மீது அப்படியொரு எரிச்சல் வந்தது.

 

‘இவர் பையனைக் கல்யாணம் பண்ணிக்க முதல்ல இங்க யாரு ரெடியா இருக்கதாம்? பெரிய மன்மதனைப் பெத்து வைச்சிருக்க நினைப்பு.. என்னமோ நான் சரினு சொன்ன மாதிரி எத்தனை பேச்சு? எல்லாம் அந்த இடியட்டால வந்தது’

 

கோபம் அஜயின் மேல் ஆரம்பித்து சண்முகத்தின் மீது நிலைபெற்று மீண்டும் அஜயிடமே மையம் கொண்டது. அவனை மீண்டுமொரு முறை பார்த்துவிடக் கூடாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அஜய் அதற்கு முன்னரே மறுநாள் அவளது வீட்டிற்குச் செல்வது பற்றி முடிவெடுத்திருந்தான்.

 

—---------------------

 

கமிஷனர் அலுவலகமே அந்த காலை வேளையில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கமிஷனரின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கோமதி நாச்சியார் அவருக்கு முன் நின்று விறைப்புடன் சல்யூட் வைத்தாள். அவளது வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அவளை அமரச் சொன்ன வெங்கட்ராமனின் முகம் வழக்கத்துக்கு மாறாக படபடப்புடன் இருந்தது.

 

“மிஸ் மதி.. இந்த கேஸ் ரொம்ப முக்கியம்.. எத்தனை பேர் வேணுமோ அத்தனை பேரை உங்க டீம்ல எடுத்துக்கோங்க.. எனக்கு அந்தப் பொண்ணு சேஃபா வந்தாகணும்” என்று பேச,

 

“கண்டிப்பா சார்” என்றவளின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை இருந்தது.

 

அவளிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் அவருக்கே சற்று நம்பிக்கை வந்ததோ என்னவோ, அவரது முகத்தில் மெதுவாக அதுவரை அப்பியிருந்த படபடப்பு குறைந்து அங்கே சற்று இளக்கம் தென்பட்டது.

 

“இந்த ஃபைல்ல கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் இருக்கு” என்று அவர் நீட்டிய கோப்பை வாங்கிப் பார்த்தவளுக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

 

அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, “நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம் சார். நான் பார்த்துக்கிறேன்” என்று அளவான புன்னகையுடன் கூறியவள் விடைபெறும் விதமாக எழுந்து நின்று மீண்டும் சல்யூட் அடித்தாள்.

 

அவர் தலையசைக்கவும் வெளியேறப் போனவளை வெங்கட்ராமனின் குரல் தடுத்தது.

 

“மதி ஒரு நிமிஷம்”

 

அவரது குரலில் நின்றவள் அவரது முகத்தை ஏறெடுத்துப் பார்க்க,

 

“இதை முடிஞ்சளவு கான்ஃபிடன்ஷியலா மெய்ன்டெய்ன் பண்ணுங்க” என்றார் வெங்கட்ராமன்.

 

“ஷ்யர் சார்” என்று அவருக்குப் பதிலளித்துவிட்டுச் சென்றவளின் முகம் தீவிர யோசனையைக் காட்டியது.  

 

‘எப்பவும் இல்லாம மிஸ்ஸிங் கேஸ்க்கு இந்தளவு படபடக்க வேண்டிய அவசியம் என்ன?’

 

‘அதுவும் இதை ஏன் சீக்ரெட்டா வச்சுக்கணும்?’

 

அவளது மனதின் கேள்விகளுக்கு இதுதான் என உறுதியிட்டுச் சொல்ல முடியாதவாறு பல அனுமானங்கள் அவளது மூளையை நிரப்ப, அதே யோசனையுடன் வெளியேறி அவளது கார் அருகே வந்துவிட்டாள். காரிலேறி அமர்ந்ததும் மீண்டும் கையிலிருந்த கோப்பைப் பிரித்துப் பார்த்தாள்.

 

முதல் பக்கத்திலேயே ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் தான் இருந்தது. புகைப்படத்தில் மெலிதாகப் புன்னகைத்தபடி இருந்தவள் அழகாக இருந்தாள். புகைப்படத்திலிருந்து மீண்டு கீழிருந்த அந்தப் பெண்ணின் பெயர் மீது தன் பார்வையை நிலைக்கவிட்டாள் கோமதி நாச்சியார்.

 

‘சாஹித்யா’

 

‘யாரிவள்?’

 

சிந்தனை ரேகை படிந்து அப்படியே அமர்ந்திருந்தவள்,

 

“மேடம் கிளம்பலாமா?” என்ற காரோட்டியின் குரலில் தான் தன்னுணர்வு பெற்றாள்.

 

 

 

 

 

 

 

கருத்துகளைப் பகிர:

 

 

 

 

https://kavichandranovels.com/community/vsv-37-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-comments/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/?fbcl

 

id=IwY2xjawHQkNVleHRuA2FlbQIxMQABHTb8obSY_d12Yg-iAti3yMWxTIk7px8_QdFJR1_MWOvhRYJeu_6Xrk0Z4g_aem_Pxj5Q90M-YZcOWbsuOuE3w#post-231

 

 

 

 

 

 

 

 

This post was modified 3 weeks ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 4

 

 

 

 

 

 

 

எதிர்பாராமல் வந்து நின்றவனைக் கண்டு சங்கரநாராயணன் அதிர்ந்து நிற்க, சங்கரகோமதி அவனை எதிர்பார்த்தவர் போல அஜயை வரவேற்றார். அதிலேயே அவரது மனம் அஜய்க்கு புரிந்து போனது.

 

“ஏன் மாமா இப்படி ஷாக்காகி நிற்குறீங்க?” என்று அவன் புன்னகையுடன் சங்கரநாராயணனிடம் கேட்க,

 

“இல்ல.. இல்ல.. திடீர்னு வரவும் “ என்று சமாளித்தவர்,

 

“கோமு” என்று குரல் கொடுக்க, அவனுக்கும் தேவ்சரணிற்கும் குடிப்பதற்கு பழச்சாறு கொண்டு வந்தார் அவர்.

 

“பாட்டி நாங்க வரும்போது தான் சாப்ட்டு வந்தோம்.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு குடிச்சுக்கிறேன்” என்று தேவ்சரண் மறுக்க,

 

“அரை கிளாஸ் கொடுக்கேன் பாட்டி.. அப்புறம் மிச்சத்த குடிச்சுக்கலாம் சரியா? பைய குடி ஒன்னும் அவசரமில்லை” என்று சங்கரகோமதியும் அவனுக்கு இணையாகக் கேட்க, சரியென்று தலையசைத்து விட்டு,

 

“மம்மி எங்க காணோம்?” என்றான் ரகசியக் குரலில்.

 

அதில் கலக்கமாக சங்கரநாராயணன் தன் மனைவியைப் பார்க்க, அவரெங்கே கணவனைப் பார்த்தார்? அவரது கவனம் முழுவதையும் தான் தேவ் பெற்றிருந்தானே!

 

அவனது குரலில் சிரித்த சங்கரகோமதி, “வேலைக்குப் போயாச்சே உன் மம்மி” என்று ரகசியக் குரலில் அவனைப் போலவே பேச, தேவ்சரணின் முகம் நொடியில் சுருங்கியது.

 

அவன் பாவமாகத் தந்தையைத் திரும்பிப் பார்க்க,

 

“இன்னைக்கு தாத்தா பாட்டி கிட்ட பேசு.. நாளைக்கு மம்மி வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடியே உன்னைக் கூட்டிட்டு வந்துடுறேன். ஓகே?” என்று டீல் பேசினான் அவன்.

 

“நாச்சியை ரொம்பப் பிடிச்சிருச்சோ தம்பிக்கு?” என்று சங்கரகோமதியும் அஜயிடம் கேட்க, அவனது விழிகளில் குறும்பு வழிந்தது.

 

“ஆமா அப்படியே அப்பாவைப் போல.. எந்நேரமும் உங்க பொண்ணு ஞாபகமா இருக்கான்” என்றவன் பேச்சில் தேவ்சரணை மட்டுமல்லாது அவனையும் இணைத்துக் கொண்டான்.

 

அவன் நேரடியாகப் பேச்சில் இறங்க, சங்கரகோமதி புன்னகைக்க, சங்கரநாராயணன் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

 

“இங்க பாருங்க தம்பி.. நான் சொல்லுதேனு தப்பா நினைக்காதீங்க.. பெரியவ கல்யாணமே வேணாம்னு இருக்குதா.. நீங்க உங்க விருப்பத்தை சொன்னப்பவே அதை அவளே சொல்லிருப்பா இல்லையா?” என்று கேட்க, அஜய் புருவத்தைச் சுருக்கித் தலையசைத்தான்.

 

‘இப்போ என்னத்துக்கு இந்த மனுஷன் இதை ஆரம்பிக்காரு’ என்று சங்கரகோமதி பல்லைக் கடித்துக் கொண்டு அவரைப் பார்க்க,

 

“நாங்க..” என்றவர் தொண்டையைச் செறுமிக் கொண்டு,

 

“அவ அம்மா எம்புட்டோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்துட்டா.. ஆனா அவ பேச்சு எம்புடல.. அதான் பெரியவ இருக்கும்போதே சின்னவளுக்கு வரன் பார்த்தோம்” என்றார்.

 

“அம்மா இதெல்லாம் சொல்லியிருந்தாங்க மாமா”

 

அவனும் அவர் போக்கிலேயே பேச, தலையசைத்துக் கேட்டுக் கொண்டவர்,

 

“எதுக்கு இதெல்லாம் சொல்லுதேன்னா.. இதுல அவ என்ன நினைக்கானு தான் முக்கியம்” என்றார்.

 

அஜய் அவர் சொல்ல வருவது புரிந்து தலையசைத்தான்.

 

“எங்க கிட்ட வந்து ஐஸ் வைக்காம என் மக கிட்டப் பேசுனு சொல்றீங்க.. உங்க பெர்மிஷனுக்குத் தான் வந்தேன். கிடைச்சிடுச்சு.. தேங்க்ஸ் மாமா” என்று அவன் சொன்னதில்,

 

“நான் எங்க அப்படிச் சொன்னேன்?” என்றார் அவர் திகைப்புடன்.

 

“இதோ இப்போ சொன்னீங்களே.. அதுக்கு அதானே அர்த்தம்”

 

‘அட அற்பப்பதரே’ என்பது போல அவனைப் பார்த்தவர் மனதிற்குள் அவரையும் அறியாமல், ‘மருமகனுக்கும் மாமியாருக்கும் இதில் சரியா ஒத்துப் போகுது.. நாம என்ன சொன்னாலும் அவங்களுக்குச் சாதகமா அதை மாத்தி விடுதாங்க’ என்று நினைத்துக் கொண்டார்.

 

சங்கரநாராயணன் சொல்ல வந்தது என்னவோ மகள் பிடிக்கவில்லை என்று அன்றே சொல்லிவிட்டாளே.. அதன் பிறகும் இப்படி வந்து பேச வேண்டாம் என்றுதான்! அதை அஜய் வேறுமாதிரி அர்த்தம் பண்ணிக்கொண்டாலும் அவர் என்ன விதத்தில் அதைக் கூறினார் என்று சங்கரகோமதிக்குத் தெரியுமே!  

 

வருங்கால மாப்பிள்ளையின் முன் எதுவும் பேசக்கூடாது என்று அமைதி காத்தவர் அஜயைப் பார்த்தார்.

 

“நீங்க இம்புட்டு உறுதியா இருக்கப்ப நானும் உடைச்சே சொல்லிடுதேன் தம்பி.. அவளுக்குப் புடிச்சாலும் புடிக்கலனாலும் சரி.. இந்தக் கல்யாணம் நடக்குதது எம்பொறுப்பு” என்று அவர் வாக்குத் தர, அங்கிருந்த இருவரும் இருவேறு மனநிலையில் சங்கரகோமதியைப் பார்த்தனர்.

 

“தேங்க்ஸ் அத்தை” என்று அஜய் புன்னகையோடு கூற, சங்கரநாராயணன் அதிர்வுடன் மனைவியைப் பார்த்தார். கணவனின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவர் முகத்தைத் திருப்ப, அங்கே ஸ்ரீயும் அதிர்ச்சியை முகத்தில் காட்டியபடி நின்றிருந்தாள். அவள் வந்ததை அங்கே யாரும் கவனிக்கவில்லை.  

 

“அட நீயே வந்துட்டியா? எப்பவும் பதினொரு மணியாகிடுமே உன் கோழி கூவ.. அதான் தம்பி வந்ததும் எழுப்பல” என்றவர் வரவேற்கச் சொல்லிக் கண்காட்ட,

 

“என்னம்மா நடக்குது இங்க?” என்ற ஸ்ரீ சங்கரகோமதியைக் கடுப்புடன் பார்த்தாள்.

 

“என்னட்டி?” என்று மகளின் கடுப்பை அவர் புரியாமல் பார்க்க,

 

“அக்காவை இவருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேனு வாக்குக் கொடுத்துட்டு இருக்கீங்க?” என்றாள் கோபத்துடன் அவள்.

 

அவளது கோபத்தில் சங்கரகோமதி திகைத்துப் போய்ப் பார்க்க, சங்கரநாராயணனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம் என அவர் மூவரையும் பார்க்க, அஜய் ஸ்ரீயைப் புரியாமல் பார்த்தான்.

 

“ஏன் ட்டி? அதனால என்ன?” என்ற சங்கரகோமதியின் குரல் அப்போது உள்ளே சென்றிருந்தது.

 

“என்னைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா? இவர் என்னடானா என்னைப் பொண்ணுப் பார்க்க வந்துட்டு அக்காவைப் பிடிச்சிருக்குனு சொல்றாரு.. நீங்க என்னடானா அவருக்கே அக்காவைக் கல்யாணம் பேசுறீங்க.. நாளைப்பின்ன இவரைப் பார்க்குறப்ப எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்காதா?” என்றாள் ஸ்ரீ கோபத்துடன்.

 

அவளது கேள்வியில், “நீ தானட்டி எனக்கு ஒன்னும் வெசனமில்லனு நேத்து ராத்திரி சொன்ன?” என்று சங்கரகோமதியும் மகளிடம் சங்கடமாக முணுமுணுக்க,

 

“ஆமா சொன்னேன் தான்.. அப்போ அவரை அடுத்துப் பார்க்கப் போறதில்லைனு நினைச்சேன்.. ஆனா இங்க நடக்குறது அப்படியா இருக்கு? நானும் அக்காவும் கடைசிவரை உறவாடணுமா வேணாமா?” என்று வேறு அவள் கேட்டு வைக்க, 

 

சங்கரகோமதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

 

‘இப்பத்தான் பெரியவளுக்கு ஒரு விடிவுகாலம்னு நினைச்சா சின்னக்கழுதை இப்படிப் பேசுதாளே’ என்று அவர் கலக்கத்துடன் அமர, தேவ்சரண் வேகமாக எழுந்து அவரருகே போய் நின்றுகொண்டு,

 

“நீங்க ஏன் பாட்டி கிட்ட கத்திப் பேசுறீங்க? உங்களால தான் பாட்டி ஃபீல் பண்றாங்க” என்றான் ஸ்ரீயை முறைத்தவாறு.

 

‘பாருடா பால்டப்பாவுக்கு முறைப்பை’ என்று எண்ணி உதட்டைச் சுளித்தவள், தாயைக் கவனித்தாள்.

 

“தாத்தா பாட்டிக்குத் தண்ணீ எடுத்துட்டு வாங்க” என்று சங்கரநாராயணனையும் அவன் ஏவ, ஸ்ரீ எடுத்து வந்து தந்தாள்.

 

“கோமு என்னட்டி பண்ணுது?” என்று அவர் உருகிப்போய்க் கேட்க, அதைப் பொருட்படுத்தாமல் இளைய மகளின் முகம் பார்த்தார் அவர்.

 

“என்னட்டி என்னென்னவோ சொல்லுதியே..” என்று அவர் தவிப்புடன் கேட்க,

 

“பாட்டி அவங்க கூடப் பேசாதீங்க” என்றான் தேவ்சரண்.

 

அதில் ஸ்ரீ அவனை முறைப்புடன் பார்க்க, சங்கரகோமதி புன்னகைக்க முயன்றார்.  

 

அதுவரை அமைதியாக இருந்தவன், “எதுக்குத்தை இப்போ இவ்வளவு டென்ஷன்? ஸ்ரீ சொல்றது நியாயமா தான இருக்கு?” என்றான் அஜய்.

 

‘புலி எதுக்கு புல்லைத் தின்ன சரினு சொல்லுது?’ என்று ஸ்ரீ சந்தேகமாக அஜயைப் பார்க்க,

 

“என்ன மாப்பிள்ளை சொல்லுதீங்க?” என்றார் அவரும் புரியாமல்.

 

“நாளைப்பின்ன நான் வந்து போகும்போது ஸ்ரீக்கு சுருக்குனு இருந்தா நல்லாவா இருக்கும்? இப்போதான் எனக்கும் புரியுது. பேசாம முதல்ல பேசுன மாதிரி ஸ்ரீயையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அஜய் சொல்ல,

 

“என்ன?” என்று எழுந்து விட்டாள் ஸ்ரீ.

 

“டாடி.. நோ” என்று ஸ்ரீயை விட அதிகமாக தேவ்சரண் மறுப்புக் காட்ட, ஸ்ரீ அஜயை விடுத்து தேவ்சரணை முறைத்தாள்.

 

“எதுக்குடா நோ?”

 

“நீங்க பேட்.. எனக்கு அந்த மம்மி தான் வேணும்” என்று அங்கிருந்த நாச்சியின் புகைப்படத்தைக் காட்டினான் அவன்.

 

“ஏன் நான் வேணாம்?”

 

அவள் விடுவதாக இல்லை.

 

“ஸ்ரீ அவன் சின்னப் பையன். வளர்ந்த எனக்கே இப்போ தான் உன் அருமை பெருமை புரியுது. அவனும் போகப் போகப் புரிஞ்சுப்பான்” என்று அஜய் ஊடே வர, ஸ்ரீ பல்லைக் கடித்தாள்.

 

“அப்போ அக்கா மேல இருக்க லவ்?”

 

“லவ் எல்லாம் வரும் போகும். அது எல்லாம் மேட்டரா?”

 

“எதே? அது மேட்டர் இல்லாம எது மேட்டர்?”

 

“கல்யாணம் தான் மேட்டர் பேபி”

 

அஜய் கண்ணடித்தபடிக் கூற, ஸ்ரீ மிரண்டு போய் அவனைப் பார்த்தாள். அவளது பாவனையில் அவன் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்க, என்ன முயன்றும் அதில் அவனால் வெற்றிபெற முடியவில்லை. அவன் சத்தமாகச் சிரிக்க, அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர். ஸ்ரீ மட்டும் கண்டுகொண்டாள்.

 

“அத்தான்.. ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க” என்று அவள் அழுகுரலில் கூற, 

 

“அரைப்பிடி உலக்கு சைஸ்ல இருந்துட்டு நீ என்னை ப்ராங்க் பண்றியா? எப்படி இருந்துச்சு என்னோட ப்ராங்க்?” என்றான் அவன் சிரித்தபடி.

 

அப்போதுதான் மற்றவர்களுக்கும் இருவரது விளையாட்டு புரிய, இளைய மகளைக் கண்டனத்துடன் பார்த்தார் சங்கரகோமதி. அதில் ஸ்ரீ,

 

“சும்மா விளையாடுனேன் மா.. அத்தானா வரப் போறவர் கிட்ட இப்படிக் கூட விளையாடலனா எப்படி?” என்றாள் குறும்புடன்.

 

“நீ வாயைத் திறக்காத.. எனக்கு ஒரு நிமிசம் மூச்சே அடைச்சுப் போச்சு” என்று அவர் கோபமாகக் கூற, அவள் தான் அவரை சமாதானம் செய்தாள்.

 

அஜய் மேலும் சிறிது நேரம் அங்கிருந்து பேசிவிட்டு தேவ்சரணைக் கூட்டிக் கொண்டுக் கிளம்ப, சங்கரகோமதியும் ஸ்ரீயும் உற்சாகமாக அவனை வழியினுப்பி வைத்தனர். ஸ்ரீக்கும் அஜயைப் பிடித்துப்போக, சங்கரநாராயணன் இனி இதில் தான் சொல்ல என்ன இருக்கிறது என்று தடுமாறி நின்றார். எதற்கும் நாச்சியிடம் பேசிப் பார்ப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

 

வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே தவமணியிடமிருந்து அஜய்க்கு அழைப்பு வந்துவிட்டது. அவன் புன்னகையுடன் அழைப்பை உயிர்ப்பிக்க,

 

எடுத்ததும், “கிளம்பிட்டியா?” என்று கேட்ட தவமணியின் குரல் அத்தனை பதட்டத்தைச் சுமந்து வந்தது.

 

“ரிலாக்ஸ் மா.. வந்துட்டே இருக்கேன்”

 

“எம்புட்டு நேரம்லே ஆகும்? உங்க அப்பா வந்து கேட்டா என்னனு நான் சொல்லுவேன்? அப்பாவும் மவனும் இப்படி என்னைய அலைக்கழிக்கீங்க”

 

“எதாவது சொல்லி சமாளிங்க.. நான் இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்”

 

“என்னத்த சொல்லிச் சமாளிக்க? அங்க நம்ம உறவுக்காரங்க கண்ணுல யார் கண்ணுலயும் பட்டு அந்த மனுஷன் காதுக்கு விஷயம் போச்சுனா என்னைய உண்டு இல்லைனு பண்ணிடுவாருலே உங்கப்பா”

 

“இப்ப தான்மா முதல் படியில காலை வைக்கிறோம்.. இன்னும் எவ்ளோ இருக்கு? இதுக்கே இப்படி பயந்தா எப்படி?”

 

“மொத படிக்கே எனக்கு வடியா வருது.. இதுல மொத்த படியும் கடக்க நினைச்சாலே அடிவயிறு கலங்குது”

 

“ஹாஹா.. ம்மா நான் பார்த்துக்கிறேன்.. இந்த சிட்டி ஏசிபி-யோட மாமியார்.. தைரியமா இருக்க வேணாமா?”

 

“என்னத்த தைரியமா இருந்து?” என்று அலுத்தபடி அவர் திரும்ப, அங்கே சண்முகம் கடுகடுவென்ற முகத்துடன் நின்றிருந்தார்.

 

அதிர்வுடன் தன்னாலே இரண்டடி பின்னால் நகர்ந்த தவமணியின் கரங்களிலிருந்து கைபேசி நழுவ, அது கீழே விழுந்ததில் அலைபேசியிலிருந்த பேட்டரி தனியாக வந்து விழுந்தது.

 

“என்ன நடக்குது?” என்று சண்முகம் கேட்க,

 

பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்க முயன்றவரால் அதுகூட முடியவில்லை.

 

“உன்ட்ட தான் கேட்கேன்.. என்ன நடக்குது? எங்க போய்ருக்கான் அவன்?” என்று அவர் கோபமாகக் கேட்க,

 

“பார்..க் போகணும்னு தேவ் அடம் புடிக்கவும்…” என்றவரின் வார்த்தைகள் பாதியிலேயே மீண்டும் தந்தியடிக்க ஆரம்பித்தன.

 

“பொய் சொல்லுதியா? எப்ப இருந்து இந்தப் பழக்கம்?” என்று அவர் தீயாய் முறைக்க,

 

அதில் மிரண்டு, “இல்லங்க.. அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போறேனுட்டு போனான்” என்றார் தலைகுனிந்தபடி.

 

“நான் அம்புட்டு சொல்லியும் எம்பேச்சைக் கேட்காம அவன் அங்க போய்ருக்கான்.. நீயும் அவனை வழியனுப்பி வைச்சிருக்க.. அப்புறம் நான் இந்த வீட்ல எதுக்கு?”

 

“..................”

 

“என் முடிவு அப்ப ஒன்னேமே இல்லைல?”

 

“அப்படி இல்லங்க”

 

“அப்படித்தான்.. இதுக்குலாம் என்ன அர்த்தம்? ஏதோ ஒருதரம் என் முடிவு பிசகிப் போச்சுனு அம்மாவும் மவனும் இப்படி நடந்துக்குறீங்களா?”

 

என்ன முயன்றும் அவரால் தன் குரலில் வழிந்த கலக்கத்தை மறைக்க முடியவில்லை. அது அப்படியே தவமணியைச் சென்று சேர, அவருக்கும் என்னவோ போலாகி விட்டது.

 

“என்ன நீங்க என்னென்னவோ பேசுதீங்க? அப்படிலாம் இங்க யாரு நினைக்கா?”

 

“அப்படித்தான் நினைக்கான் அவன்.. இத்தனை வருசம் இப்படித்தான் இருந்தானா?”

 

“இல்ல தான்”

 

“அப்போ இன்னைக்கு மட்டும் இப்படிப் பண்ணுதான்னா என்ன அர்த்தம்னு வெளங்கலயா உனக்கு?”

 

‘எனக்கு வெளங்கலயாவா? தேவைதான்.. எல்லாம் அவனைச் சொல்லணும்’

 

“நான் அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லியும் அவன் அங்க போய்ருக்கான்னா.. வரட்டும் நான் பேசிக்கிறேன்” என்றவர்,

 

“இதுக்கு நீயும் கூட்டு வேற” என்று மனைவியை முறைத்துவிட்டுக் கோபமாக வெளியேறிவிட்டார்.

 

அவர் வெளியேறியதும்தான் தவமணியால் சீராக மூச்சு விடவே முடிந்தது. அவர் சென்று பத்து நிமிடத்தில் எல்லாம் அஜயும் தேவ்சரணும் வந்துவிட்டனர்.

 

வந்தவுடனே, “பாட்டி மம்மி இல்ல.. அந்த பாட்டி தாத்தா தான் பார்த்தோம்” என்று தவமணியிடம் தேவ்சரண் அங்கு நடந்ததையெல்லாம் அவனது மொழியில் சொல்ல, அவர் கேள்வியாக மகனைப் பார்த்தார்.

 

“டியூட்டிக்குப் போய்ட்டா மா.. அவங்க அம்மா அப்பா கிட்டப் பேசிட்டு வந்தேன். அவங்க எல்லாருக்கும் ஓகே.. உங்க மருமகளை மட்டும் சரி கட்டணும்”

 

அஜய் சிரித்துக்கொண்டே கூறியதில் தவமணி, “உன் அப்பானு ஒரு ஜீவன் நம்ம வீட்ல இருக்கே.. அவரை யாரு சமாளிப்பா?” என்றார்.

 

“அதான் நீங்க இருக்கீங்களே?”

 

“வெளையாடாத அஜய்.. இப்பத்தான் உங்க அப்பா என்கிட்ட அந்தப் பேச்சுப் பேசிட்டுப் போகுதாரு.. நான் உன்கிட்ட போன்ல பேசுனதைக் கேட்டுட்டாரு”

 

“அய்யய்யோ அப்புறம் என்னாச்சு?”

 

“என்னாகும்? அவர் எதை எது கூட முடிச்சுப் போடுவாருனு தெரியாதா?”

 

தவமணி தலையைப் பிடித்துக்கொண்டுச் சொல்ல, அஜய் அமைதியானான். பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் அமைதியானதில் தேவ்சரண் இருவரையும் கேள்வியாகப் பார்க்க, அஜய் தான் முதலில் தன்னுணர்வு பெற்று முகத்தை சீராக்கினான்.

 

“நான் அப்பாட்ட பேசுறேன்மா.. முதல்ல அவ சரினு சொல்லட்டும்” என்று அவன் சொல்ல, 

 

“அந்தப் பொண்ணும் தான் வேணாம்னு சொல்லுது.. அப்பாவும் சொல்லுதாரு.. நீ ஏம்லே இப்படி வீம்பா இருக்க?” என்றார் தவமணி ஆதங்கமாக.

 

“ம்மா” என்றவனின் குரல் அவ்வளவு அழுத்தமாக மறுப்பைச் சுமந்து வந்தது.  

 

“தேவ்.. நீ போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ”என்று மகனை உள்ளே அனுப்பி வைத்தவன் தவமணியைக் கண்டனப் பார்வை பார்த்தான்.

 

“என்னால ஒரு சண்முகத்தையே சமாளிக்க முடியல.. நீங்களுமா?”

 

“அதுக்குச் சொல்லல அஜய்” என்றவரும் அவனிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று திணறித்தான் போனார்.

 

கணவனுக்கும் மகனுக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழிப்பது வழமையான ஒன்றுதான் என்றாலும் திருமண விசயத்திலும் அப்படி இருக்க வேண்டுமா? என்று மனதிற்குள்ளாகவே கலங்கிப் போனார்.

 

அவரது கலக்கத்தைப் பார்த்தவன் சற்றே தன் சுணக்கத்தை ஒதுக்கி வைத்து, “நான் பார்த்துக்கிறேன்மா” என்றான் நம்பிக்கையாக. மகனின் நம்பிக்கையான பேச்சில் தவமணியின் முகம் கொஞ்சம் தெளிந்தது.

 

—----------

 

அனுமதியின் பேரில் கோமதி நாச்சியாரின் அறைக்குள் நுழைந்தான் சிவராமன். ஏ2 காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்.  

 

அவரது வணக்கத்தை ஏற்று, “உட்காருங்க சிவா” என்று அவள் இருக்கையைக் காட்ட, அமர்ந்தவன் கேள்வியாக அவளது முகத்தைப் பார்த்தான்.

 

“ஒரு மிஸ்ஸிங் கேஸ்” என்று ஆரம்பித்தவள் கேஸ் பற்றிய விவரங்களைக் கூறி தன்னிடம் இருந்த கோப்பை நகர்த்த, அதை வாங்கிப் பார்த்தான் சிவா.

 

“இந்தக் கேஸ்க்கு என்கூட அசிஸ்ட் பண்ணப் போறது நீங்க தான்” என்றும் கூற, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

 

“யெஸ் மேம்”

 

“இது சம்பந்தப்பட்ட விஷயம் நம்ம டிபார்ட்மெண்ட்ல கூட வெளில போகக் கூடாது” என்றும் சேர்த்துச் சொல்ல, சிவராமனின் விழிகள் வியப்பில் ஒரு நிமிடம் விரிந்து பின் எப்போதும் போலாகியது.

 

“ஓகே மேம்” என்ற அவனது பதிலில் மேலும் சிறிது நேரம் அந்த கேஸைப் பத்தி அவனிடம் பேசியவள்,

 

“இப்போ சாஹித்யா பிஜிக்குப் போகணும்” என்றபடி எழுந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து அவனும்!

 

அடுத்த இருபதாவது நிமிடத்தில் சாஹித்யா தங்கியிருந்த பிஜியில் இருவரும் இருந்தனர். அந்த பிஜியின் உரிமையாளர் நிர்மலா ஏகத்துக்கும் பதட்டமாக இருந்தார். கோமதி நாச்சியார் அவரை விழிகளால் துளைத்தவாறு அமர்ந்திருக்க, சிவராமன் தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“எப்போ இருந்து இந்த பிஜி நடத்திட்டு இருக்கீங்க? எத்தனை பேரு இருக்காங்க? எல்லாரும் வொர்க்கிங் விமன்ஸா?”

 

இப்படிப் பொதுவான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தவன் சாஹித்யாவின் புகைப்படத்தை அவருக்கு முன்னால் நகர்த்தினான்.

 

“இவங்கள தெரியுமா?”

 

அதுவரை ஏன் எதற்கு என்றே தெரியாமல் இருந்தவர் சாஹித்யாவின் புகைப்படத்தைப் பார்த்து இன்னும் குழம்பிப் போனார்.

 

“தெரியும் சார். இங்க தான் தங்கியிருக்காங்க”

 

“தங்கியிருக்காங்கனா? இப்ப இருக்காங்களா?”

 

“ரெண்டு நாளா இந்தப் பெண்ணைப் பார்க்கல சார்.. ஏன் சார் எதாவது பிரச்சனையா?”

 

பயத்துடன் வெளிவந்தன அவரது வார்த்தைகள்.

 

அவரது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “இந்தப் பொண்ணோட ரூம் மேட்ஸ் இருக்காங்களா?” என்று கோமதி நாச்சியார் கேட்க,

 

“இல்ல மேடம்.. சிங்கிள் ஷேரிங் இந்தப் பொண்ணு” என்றார் அவர்.

 

“க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாராவது இங்க? இல்ல அந்தப் பொண்ணைத் தேடி யாராவது இங்க வருவார்களா?”

 

கோமதி நெற்றியைச் சுருக்கியபடி கேட்க, “இல்ல மேம்.. யார் கூடவும் அதிகம் பேசாது இந்தப் பொண்ணு.. வேலை வேலையை விட்டா ரூம்.. ரொம்பவே அமைதி” என்றார் நிர்மலா.

 

“நல்லா யோசிச்சுச் சொல்லுங்க நிர்மலா.. நீங்க சொல்ற சின்ன இன்பர்மேஷன் கூட எங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்” என்று சிவராமன் கேட்க,

 

“இல்ல சார். நெஜமாவே அந்தப் பொண்ணுக்கு யார் கூடவும் பழக்கமில்ல.. நானே ரெண்டு தடவை எதார்த்தமா பேச்சுக் கொடுத்தேன்.. ஆனா அந்தப் பொண்ணு சரியா பதில் பேசல.. ஒரு ஒதுக்கம் தெரிஞ்சது. சரினு நானும் விட்டுட்டேன்” என்றார் அவர்.

 

“ஒருவேளை அந்தப் பொண்ணு இங்க வந்தா எங்களுக்குத் தகவல் சொல்லுங்க” என்றபடி கோமதி நாச்சியார் எழுந்து கொள்ள, சிவராமனும் எழுந்தான்.

 

அடுத்ததாக சாஹித்யா பணிபுரியும் நிறுவனத்திற்குச் சென்று விசாரிக்க, அங்கும் அவர்களுக்கு உதவக்கூடிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இப்படி இருந்தால் அடுத்த நகர்வு எந்த மாதிரி எடுத்து வைப்பது என்பது புரியாமல் கோமதி நாச்சியார் திகைத்து விழித்தாள்.

 

“ஸ்ட்ரேன்ஜ்” 

 

அவளது உதடுகள் முணுமுணுத்தன.

 

“என்ன மேடம்? எதாவது சொன்னீங்களா?” என்று சிவராமன் கேட்க,

 

“நத்திங் சிவராமன்.. நாளைக்கு அவங்க போன் கால் ஹிஸ்டரி வரவும் அதுல எதாவது க்ளூ கிடைக்குதானு பார்ப்போம்” என்றவள் மணியைப் பார்த்துவிட்டு அவனைக் கிளம்புமாறு சொன்னாள்.

 

சிவராமன் கிளம்பவும் தானும் வீட்டிற்குக் கிளம்பியவளுக்கு வழியெங்கும் சாஹித்யா நினைவுகள் மட்டுமே!!

 

‘அதெப்படி நண்பர்களே இல்லாம ஒரு பொண்ணு?’

 

யோசிக்க யோசிக்க மீண்டும் குழப்பமே வந்தமர, ப்ளூடூத்தைக் காதுகளில் மாட்டிக் கொண்டவள் விழிகளை மூடினாள். அதில் கசிந்து வந்த இசை மெல்ல அவளை இலகுவாக்கினாலும் சாஹித்யா ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள:

 

 

 

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

 

 

 

This post was modified 3 weeks ago 2 times by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 5

 

 

உணவருந்திக் கொண்டிருந்த கோமதி நாச்சியார் அடிக்கண்ணால் தாயைப் பார்த்தாள். இட்லியை விண்டு சாம்பாரில் தோய்த்தவாறே, “என்னம்மா? என்கிட்ட எதாவது பேசணுமா?” என்று அவள் கேட்க, முதலில் தயங்கியவர் பின் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டார்.

 

“அந்தத் தம்பி பேசுனத திரும்ப யோசிச்சியா நாச்சி?” என்று கேட்க,

 

அந்தக் கேள்வியில் நிமிர்ந்து தாயைப் பார்த்தவள் கையிலிருந்த இட்லியைத் தட்டில் போட்டுவிட்டு, “அதைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு?” என்றாள் புருவங்களை உயர்த்தி.

 

“அதான் உன் கல்யாணத்தைப் பத்தி”

 

“அதைப்பத்தியும் தான் யோசிக்க என்ன இருக்கு?” 

 

மகளின் கூரிய பார்வையை சமாளிக்க முடியாமல் திணறியதெல்லாம் ஒருநொடி தான். பின் முடிவெடுத்தவராக அவளை நிமிர்ந்து பார்த்தார்.

 

‘நான் பெத்தது இதுக்கே இவ்வளவு திமிரு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்? இவ போக்குல இதுக்கு மேல விடக்கூடாது’ என்று முடிவெடுத்தவராக மகளைப் பார்க்கத் தாயின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தவளுக்கு அவருடைய முடிவும் முன்கூட்டியே தெரிந்ததில் முகம் கடுகடுத்தது.

 

“அந்த தம்பிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கேன்”

 

“வாழப் போறது நான்”

 

அழுத்தமாக வந்தது அவளது வார்த்தைகள். இதுவரை வீட்டில் அவள் உபயோகிக்காத குரல். அந்தக் குரலே அவளிடம் மீண்டும் இதைப்பற்றி பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்க, அதை இடக்கையால் புறந்தள்ளினார் சங்கரகோமதி.

 

“நான் இல்லைன்னா சொல்லுதேன்? அந்தத் தம்பியை பிடிக்கலனா வேற பார்ப்போம்”

 

அவளுக்கும் மேலே அழுத்தத்துடன் சங்கரகோமதி பேச,

 

“கோமு.. வேலையை விட்டு டென்ஷனா வந்திருப்பா.. இப்பவே பேசணுமா? காலைல பேசிக்கலாம்” என்று சங்கரநாராயணன் மனைவியை அடக்கப் பார்க்க, அதற்குமேல் உணவு இறங்காமல் சாப்பாட்டின் பாதியிலேயே கை கழுவினாள் நாச்சியார்.

 

“என்ன நாச்சி இது? கோவத்தை சாப்பாட்டுல காட்டக்கூடாதுனு நீ தான சொல்லுவ?”

 

சங்கரநாராயணன் மகளிடம் வருத்தமாகக் கேட்க,

 

“சாப்பிட முடில ப்பா” என்று தந்தையிடம் சோகையாகப் புன்னகைக்க முயன்றவள் தாயிடம் திரும்பினாள்.

 

“இந்தப் பேச்சு ஆரம்பிச்சப்பவே நான் தான் தெளிவா சொல்லிட்டேனே ம்மா.. பின்ன ஏன் திரும்ப ஆரம்பிக்கிறீங்க? எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. இதுக்கு மேல எதாவது என்கிட்ட சொல்லணுமா?” 

 

“ஏன் விருப்பம் இல்ல?”

 

“ஏன்னா என்ன காரணம் சொல்ல சொல்றீங்க?”

 

“என்ன காரணமோ அதைச் சொல்லு நாச்சி.. உன் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாலே விருப்பமில்லனு முடிச்சுடுத.. நீ எவ்வளவு பெரிய அதிகாரியா வேணும்னா இரு.. ஆனா உன் திமிரு என்கிட்ட செல்லாது. இந்த வீட்ல எனக்கு நீ மவ மட்டுந்தான் ”

 

சங்கரகோமதி வீம்பாகக் கூற, சங்கரநாராயணன் மனைவியைக் கண்டனப் பார்வை பார்த்தார்.

 

“என்ன ஏன் பார்க்குதீங்க? அவ அவ்ளோ திமிரா பேசுதாளே அதுக்கு கண்டிப்பைக் காணோம்.. உடனே என்கிட்ட வந்துடுவீங்க” என்று கணவனுக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்தவர் மகளிடம் திரும்பி,

 

“இப்போ என்னதான் சொல்லுத நீ?” என்று அதட்ட,

 

அதற்கு மேல் அவளால் அங்கே பொறுமையாக உட்கார முடியவில்லை. விருட்டென்று எழுந்து கொண்டவளின் விழிகள் கலங்கிச் சிவக்க ஆரம்பிக்க, திகைத்துப் போய்ப் பார்த்த சங்கரகோமதியைத் தாண்டி விறுவிறுவென்று அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

கோபப்படுவாள்.. ஏதாவது பேசுவாள் என்று நினைத்திருக்க அவள் கலங்கிய விழிகளோடு அறைக்குச் சென்றதில் சங்கரகோமதி திகைத்தார். இப்படியொரு எதிர்வினையில் எதை எதையோ மனம் யோசிக்க, அவரும் கலங்கிப் போனார். 

 

மகளின் நிலை சங்கரநாராயணனுக்கு நன்றாகவே புரிந்தது. அதைவிட மனைவி இப்படி கலக்கத்துடன் அமர்ந்திருக்க, அதைத் தாங்க முடியாமல் மனைவியின் தோள் தொட்டார் சங்கரநாராயணன்.

 

“எதாவது வேலை டென்ஷனா இருக்கும் கோமு.. அதை உன்மேல காட்டிட்டுப் போறா.. நீ ரூம்க்கு போ. நான் இதையெல்லாம் எடுத்து வைச்சுடுதேன்” என்று கூற,

 

அதுவரை மகளின் மேல் கவனமாக இருந்தவர் கணவரைத் திரும்பிப் பார்த்தார்.  

 

எதையோ சொல்லவோ கேட்கவோ வந்தவர் எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு அவர்களது அறைக்குச் செல்ல, உணவு மேசையை ஒழுங்கு படுத்தியவர் நேராக பெரிய மகளின் அறைக்குச் சென்றார்.

 

அவர் நினைத்தது போலவே மகள் உறங்கியிருக்கவில்லை. தந்தையின் வரவை எதிர்பார்த்தது போல கதவையும் அவள் திறந்தே வைத்திருந்தாள்.

 

சங்கரநாராயணன் உள்ளே நுழைந்ததும், “என்னப்பா இதெல்லாம்?” என்றாள் ஒவ்வாத குரலில்.

 

“பெத்தவ வேற என்ன பாப்பா செய்வா? நீயும் தான் உன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கக் கூடாதா?”

 

சங்கரநாராயணன் கேட்க, “எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படிப் பேசுறீங்களே..” என்றாள் ஆதங்கத்துடன் அவள்.  

 

“கடந்த காலத்து கசப்பை நினைச்சு உன்னோட வருங்காலத்தைத் தொலைக்கணுமாடா? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. அந்தப் பையனும் நல்ல பையனா தான் தெரியுறாரு”

 

“போதும் ப்பா.. அதைப் பத்தி பேச வேணாம். எனக்குப் பிடிக்கல”

 

அவள் பிடிவாதமாக மறுக்க, சங்கரநாராயணன் பெருமூச்சுடன் மகளைப் பார்த்தார்.

 

“அம்மா இந்த சம்பந்தத்தை முடிச்சே ஆகணும்னு இருக்கா.. என்னால சமாளிக்க முடியும்னு தோனல”

 

“நீங்க இன்வால்வ் ஆக வேணாம் ப்பா.. என்கிட்ட பேசுனா நான் பேசிக்கிறேன்” என்று அவள் கூற, தலையசைத்து விட்டுத் திரும்பியவரின் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்தன.

 

சங்கரகோமதி அறையின் வெளியே கைகளைக் கட்டியவாறு அவர்களை அழுத்தத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார். தந்தையின் திகைப்பை உள்வாங்கி நாச்சியும் திரும்பிப் பார்க்க, அவளுக்கும் அங்கே அன்னையைக் கண்டது அதிர்ச்சி தான். சங்கரகோமதியின் பார்வையிலிருந்து எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

எதையெல்லாம் கேட்டார்? என்ன கேட்கப் போகிறார்? எப்படி சமாளிப்பது? என்றெல்லாம் இருவரும் குழம்பி ஒருவரையொருவர் பார்த்து நிற்க, அவர்களது கணிப்பைப் பொய்யாக்கியவர் எதுவும் பேசாமல் கீழிறங்கிச் சென்றுவிட்டார்.

 

அந்த அமைதி சங்கரநாராயணனுக்கு சரியில்லாமல் தெரிய அவருக்கு உண்மையில் நா உலர்ந்துவிட்டது.  

 

“ப்பா” 

 

நாச்சி அவரை உலுக்க, அவர் பதட்டத்துடன் மகளைப் பார்த்தார்.

 

“என்ன பாப்பா பண்றது?”

 

“கேட்டாங்களா இல்லையானு தெரில.. போய் பேசுங்க.. நான் வேணும்னா வந்து பேசவா?”

 

“இல்ல இல்ல.. ஏற்கனவே அவ கோவத்துல இருக்கா.. நானே பேசுதேன்” என்றவரும் கீழிறங்கிச் செல்ல,

 

‘ஊஃப்’ என்ற பெருமூச்சுடன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் நாச்சி. அவளது நினைவு அஜயைச் சுற்றி தான் சுழன்று கொண்டிருந்தது. அவனது நினைவில் சண்முகமும் சேர்ந்தே வந்தார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்போதும் கேட்பது போலவே தோன்ற, கோமதி நாச்சியாரின் முகம் கடுகடுத்தது.

 

அறைக்கு வந்ததும் சங்கரகோமதி எதையாவது கேட்பார் என்று எதிர்பார்த்த சங்கரநாராயணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி கணவனைப் பார்த்தவர் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார். எதையும் பேசாமல் கேட்காமல் அவர் படுத்திருக்க, அவரது அந்த அமைதி சங்கரநாராயணனுக்கு பயத்தைத் தந்தது.

 

தானாகவே பேசிவிடலாமா என்று யோசித்தவருக்கு எதைப் பேசுவது? எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. அந்தக் குழப்பத்திலேயே சில நிமிடங்கள் கரைந்தது.  

 

பின் தயக்கத்தை விடுத்து, “கோமு” என்று மெலிதான குரலில் அவர் அழைக்க, அந்த அழைப்பிற்கும் பதிலில்லை. சங்கரகோமதி கத்தி சத்தமிட்டு சண்டையிட்டிருந்தால் கூட அவருக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. இந்த அமைதி அவரது மனதைப் பிசைய, அவர் மீண்டும் அழைத்தார். எந்த பதிலும் இல்லை. அதற்குமேல் என்ன செய்வதென்று தெரியாமல் படுத்துக் கொண்டவருக்கு உறக்கம் கிஞ்சித்தும் வரவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டார்.

 

“கோமு எதாச்சும் பேசேன்.. எனக்கு என்னமோ மாதி இருக்கு”

 

தயக்கமும் கலக்கமுமாக அவர் பேச, விழிகளைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தார் சங்கரகோமதி. மனைவி உறங்கவில்லை என்பது அவருக்கு உறுதி.  

 

“நீ தூங்கலனு தெரியும் கோமு” என்று அவர் கூற, அப்போதும் அவரிடம் அசைவு இல்லை. அதற்குமேல் என்ன பேசுவதென்று அவருக்கும் தெரியவில்லை. எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டார். இருவருக்குமே அந்த இரவு நித்திரையில்லாத இரவாகிப் போனது.  

 

அன்று மட்டுமல்ல மறுநாளும் சங்கரகோமதியின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவே இருந்தன. எப்போதும் எழுந்து கொள்ளும் நேரம் கூட அவர் எழுந்து கொள்ளவில்லை. சங்கரநாராயணனுக்குத் தான் தவிப்பாக இருந்தது.

 

ஒரே அறையில் அருகருகே படுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது என்னவோ போலிருக்க, விடிந்ததும் அவர் எழுந்து வெளியே வந்துவிட்டார். வீட்டின் நடுவே சங்கரநாராயணன் நடைபயின்றபடி இருக்க, வழக்கமான ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்தாள் கோமதி நாச்சியார். தன்னைப் போல அடுக்களையின் பக்கம் நகர்ந்த அவளது விழிகள் அங்கே தன் அன்னையைக் காணாமல் சுருங்கின. மகளின் பார்வையைக் கவனித்தவராய்,

 

“எதுவுமே பேச மாட்டிக்கா நாச்சி.. இப்போவும் முழிச்சு தான் இருக்கா ஆனா வெளில வரல பாரு” என்று கலக்கமாகக் கூறும்போதே சங்கரகோமதி வெளியே வரும் அரவம் கேட்டது. சங்கரநாராயணன் ஆவலுடன் மனைவியின் முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போக, நாச்சிக்கும் அதே நிலை தான். அவரது முகம் வீங்கி இமைகளின் மேலும் கீழும் தடித்திருந்தது. மூக்கைச் சுற்றி வேறு சிவந்திருக்க, அவரது முகத்தைப் பார்த்து இருவரும் பயந்துவிட்டனர்.

 

“என்னம்மா இது?” என்றபடி கோமதி நாச்சியார் வேகமாக அன்னையின் அருகே வர, அவளை நிமிர்ந்து அவர் பார்த்த பார்வையில் அவளது விழிகள் திகைப்பைக் காட்டியது. அப்படியொரு அந்நியமான பார்வை அது! அதே பார்வையில் சங்கரநாராயணனையும் பார்த்தவர் அவர்களைக் கடந்து அடுக்களைக்குள் சென்றார்.

 

ஒரு வார்த்தை பேசவில்லை. பேசவும் தோன்றவில்லை. வழக்கமாக இருக்கும் காலை நேர வேலைகளை எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அவர் செய்ய ஆரம்பிக்க, தந்தையும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

மகளின் பார்வையில் சங்கரநாராயணன் மனைவியிடம் பேச முற்பட்டார்.

 

“கோமு.. நீ வேணும்னா ரெஸ்ட் எடு.. நான் பார்த்துக்கிடுதேன்” என்று அவர் மனைவியிடம் பேச முற்பட, எந்தப் பேச்சும் காதில் விழாதவாறு அவர் தொடர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். காபி கலந்தவர் அதைக் கூட யாருக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுக்காமல் ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட, அவரது செயலில் சங்கரநாராயணன் விக்கித்துப் போனார். சங்கரகோமதியின் கோபம் மௌனமாக அங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தாங்க முடியாமல் கண் கலங்கிவிட்டார் சங்கரநாராயணன்.

 

“இதுக்குப் போய் கலங்குவாங்களா? அம்மா கோபமா இருக்காங்க.. அவங்க கோபம் கொஞ்சம் குறையட்டும் ப்பா.. பேசுவாங்க.. நீங்க கவலைப்பட்டு உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க” என்று மெதுவாகத் தந்தையிடம் கூறியவள் தன் அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே தன்னறைக்குச் சென்றுவிட்டாள்.

 

கோமதி நாச்சியார் வேலைக்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் கீழிறங்கி வந்து ஸ்ரீக்கு வீடே வித்தியாசமாகத் தெரிந்தது. முதலில் தொலைக்காட்சி அணைத்து வைக்கப்பட்டிருக்க, அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தால் அங்கு சங்கரகோமதி காலை சமையலில் சேர்ந்த பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவாறு ஹாலில் சங்கரநாராயணன் அமர்ந்திருந்தார். தந்தையின் முகமே எதுவோ சரியில்லை என்று காட்டிக் கொடுக்க, ஸ்ரீயின் கால்கள் தாமாக தந்தையை நோக்கி நகர்ந்தன.

 

“நம்ம வீடாப்பா இது? இவ்ளோ அமைதி? இந்த நேரத்துக்கு அம்மாவோட ஃபேவரிட் நாடகம் ஒலிபரப்பாயிருக்கணுமே” என்றபடி புன்னகையுடன் ஸ்ரீ அவரருகே அமர, இளைய மகளை நிமிர்ந்து பார்த்தவர் புன்னகைக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல சங்கரகோமதியின் இந்த அதீத மௌனம் அவரை வாள் கொண்டு அறுக்க ஆரம்பித்திருந்தது. காலை உணவைக் கூட அவர் உண்டிருக்கவில்லை.

 

எப்போதும் என்ன கோபமாக இருந்தாலும் முறைத்துக் கொண்டே ஆயினும் சாப்பிட அழைத்துவிடுவார் சங்கரகோமதி. இன்று அந்த அழைப்பும் இல்லாமல் போனதில் அவர் மிகவும் உடைந்து போயிருந்தார்.

 

‘இனி தன்னுடன் பேசவே மாட்டாளா?’ என்ற அச்சமே அவர் மனதுக்குள் உழல,

 

“ப்பா என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்றாள் ஸ்ரீ.

 

இளைய மகளின் எந்தக் கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 

 

“அம்மா கூட சண்டையா? அதுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்கீங்க? அம்மா கோவத்தைப் பத்தித் தெரியாதா?” என்று ஸ்ரீ அவளாக யூகம் செய்து பேச,

 

சங்கரநாராயணனின் கண்ணிலிருந்து ஒரு துளி நீர் அவரது பாதத்தில் விழுந்து தெறித்தது.

 

“ப்பாஆ அழுறீங்களா?”

 

அதிர்ந்து போய் ஸ்ரீ கேட்க, சங்கரநாராயணன் தலைநிமிரவில்லை. அவரை அப்படிப் பார்க்கவே ஸ்ரீக்கு என்னவோ போலிருக்க, அவள் வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்.

 

“ம்மா அப்பாவை என்ன சொன்னீங்க?” என்று ஸ்ரீ கோபமாகக் கேட்க, பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த சங்கரகோமதியின் கரங்கள் மகளின் கேள்வியில் அப்படியே நின்றன.

 

“உங்கள தான்மா கேட்குறேன்” என்றபடி வலுக்கட்டாயமாக சங்கரகோமதியைப் பிடித்துத் தன்பக்கம் திருப்ப, அன்னையின் முகம் அதற்கு மேல் அதிர்ச்சியைத் தந்தது.

 

“ம்மா என்னாச்சு? ஏன் உங்க முகம் இப்படி இருக்கு?” 

 

பதட்டத்துடன் ஸ்ரீ கேட்க, எதற்கும் அவரிடம் பதிலில்லை.  

 

“என்ன சண்டை மா?”

 

“.........”

 

“என்ன சண்டையாகவும் இருக்கட்டும்.. அதுக்காக நீங்க இப்படி அழுவீங்களா?”

 

எத்தனையோ விதமாகக் கேட்டுப் பார்த்த ஸ்ரீ ஒருகட்டத்தில் ஓய்ந்து போய் மீண்டும் தகப்பனிடமே வந்தமர்ந்து,

 

“என்னாச்சுப்பா?” என்றாள் கலக்கத்துடன்.  

 

விவரம் தெரிந்ததில் இருந்து அன்று வரை இப்படி அவர்கள் இருவரையும் அவள் பார்த்ததே இல்லை. தாயின் அமைதியும் தந்தையின் கண்ணீரும் அவளை அலைக்கழிக்க, தந்தையைப் பார்த்தாள். அவர் அப்படியே அமர்ந்திருந்தார். எந்தவித பதிலும் கூற முன்வரவில்லை. நேரம் நகர்ந்ததே தவிர, இருவரும் மாலை வரை அப்படியே இருக்க, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல் தமக்கையை அலைபேசியில் அழைத்துவிட்டாள் ஸ்ரீ.

 

“சொல்லு ஸ்ரீ” என்றவளிடம், ஸ்ரீ நடந்ததைக் கூற அமைதியாய்க் கேட்டுக் கொண்டவள்,

 

“நான் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட பேசுறேன்.. நீ வை” என்றாள் கோமதி நாச்சியார்.

 

அதேபோல இரவு வந்தவள் உடை மாற்றிவிட்டு நேராக சங்கரகோமதியைத் தேடிச் செல்ல, சங்கரநாராயணனும் மகளின் பின்னே சென்றார்.

 

மகளைப் பார்த்தும் சங்கரகோமதி முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் இருக்க, நாச்சியார் சங்கரகோமதியின் அருகில் வந்து அமர்ந்தாள். ஸ்ரீயும் என்னவோ ஏதோவென்று அறைக்குள் வர, அவளைத் திரும்பிப் பார்த்தாள் கோமதி நாச்சியார்.

 

அந்தப் பார்வையில் தானாக, “நீங்க பேசுங்க” என்றபடி ஸ்ரீ வெளியேறினாள்.

 

“என்னம்மா பிரச்சனை? ஏன் இப்படி இருக்கீங்க? அப்பாவை ஏன்மா தள்ளி வைக்குறீங்க? என்மேல கோவம்னா என்கிட்ட காட்டுங்க.. அப்பாவைப் பாருங்க.. ஒரே நாள்ல எப்படி ஓய்ஞ்சு போய்ட்டாருனு” என்று சொன்னவள் திரும்பி தந்தையைப் பார்த்தாள்.

 

உண்மையில் சங்கரநாராயணன் அப்படித்தான் இருந்தார். அவர்களது முப்பதாண்டு திருமண வாழ்க்கையில் இதுபோல சங்கரகோமதி நடந்து கொண்டதில்லை. சண்டையும் சச்சரவும் இல்லாத வீடில்லை. அவர்களுக்குள்ளும் அப்படியே! ஆனால், அப்போதும் கூட இதுபோல மௌனத்தின் பின்னால் சங்கரகோமதி அடைந்து கொண்டதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒரே நாளில் சொந்த வீட்டிலேயே அவ்வளவு அந்நியமாக உணர்ந்தார் அவர். மனைவியைச் சுற்றித்தான் அவரது உலகம் என்பது அவரறிந்த ஒன்று தான். ஆனால், தான் இத்தனை தூரம் பாதிக்கப்படுவோம் என்று அவரும் கூட நினைத்ததில்லை.

 

மகளின் எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து பதிலில்லை. அவருக்குப் பதில் பேச இஷ்டமும் இல்லை. குறிப்பாக சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவர் திரும்பி மகளைப் பார்த்தார்.

 

“எப்படியும் இப்ப நீங்க தூங்கப் போறதில்லன்னு தெரியும்.. இப்போ நீங்க என்கிட்ட பேசப் போறீங்களா இல்லையா?” என்றவள்,

 

“சரி என்ன விடுங்க.. அப்பா கிட்ட பேசுங்கம்மா” என்றாள் தணிந்துவிட்ட குரலில்.

 

அதில் சங்கரகோமதியின் முகம் இன்னும் அதீத கோபத்தில் சிவந்தது. அவளையும் அறியாமல் சங்கரகோமதியின் மனதிலுள்ள கோபத்தை இன்னும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள் நாச்சியார். அவள் என்ன பேசின போதும் சங்கரகோமதி இறங்கி வரவில்லை.  

 

அன்று மட்டுமல்ல.. அடுத்த இரண்டு நாட்களும் அப்படியே செல்ல, வீட்டில் யாருக்கும் நிம்மதி என்பதே இல்லாமல் போனது. சங்கரநாராயணன் மனைவியின் சிறு இருமல் சத்தத்திற்கும் தும்மல் சத்தத்திற்கும் கூட முகத்தில் ஆவலைத் தேக்கி மனைவியைப் பார்க்க, ஸ்ரீக்கும் தாயின் இந்த ஒதுக்கம் வேதனையைத் தந்தது. அவளும் தன் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்ள, கோமதி நாச்சியாருக்கு வீடு வரவே பிடிக்கவில்லை.

 

வீட்டின் இந்த நிலையில் அவளையும் அறியாமல் அஜய் அவ்வப்போது மனதிற்குள் வந்து போனான். அஜயின் நினைவு வரும் போதெல்லாம் கடுகடுக்கும் முகத்தை இருக்கும் இடமறிந்து மறைப்பதே அவள் வேலையாகிப் போனது. அன்றும் அப்படித்தான்!  

 

சிவராமனுடன் பேசிக்கொண்டே அவளது அலுவலகத்திற்குள் நுழைந்தவள் அங்கே அஜயைக் கண்டதும் புருவத்தைச் சுருக்கினாள்.  

 

‘இவன் எங்க இங்க?’

 

நெற்றி ஒருநொடி சுருங்கி விரிந்து மீண்டும் முகம் பழைய நிர்மலமான நிலைக்கு மாறியது.

 

அஜய் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதுமே அவள் கம்பீரம் தான். ஆனாலும் அவள் உடுத்தியிருந்த காக்கி உடை அதை அதிகம் எடுத்துக் காட்டுவதைப் போலிருந்தது. விழிகளில் தீட்சண்யமும் அலட்சியமும் ஒருங்கே வழிய அவள் நடந்து வந்ததைக் கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் விழிகளில் தெரிந்த ரசனையில் மானசீகமாகப் பல்லைக் கடித்தவள் அவனைத் திரும்பியும் பாராமல் தன்னறைக்குச் சென்றுவிட்டாள். சிவராமனும் அவளைத் தொடர்ந்து உள்ளே செல்ல, அஜய் புன்னகை மாறாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.  

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் சிவராமன் வெளியே வர, ஒரு காவலர் வந்து அஜயை உள்ளே போகச் சொன்னார்.

 

‘ஹ்ம்ம் ஸ்வீட் தான்’ என்றவனுக்கு முகமெங்கும் புன்னகை. அவனுக்கு அப்படியே நேர் எதிராக கடுகடுவென்ற முகத்துடன் கோமதி நாச்சியார் அமர்ந்திருந்தாள்.

 

“என்ன விஷயம்?”

 

அவளுக்கு அவன் மீது அத்தனை எரிச்சலாக வந்தது. திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவை எத்தனையோ பாடுபட்டு வீட்டில் சம்மதிக்க வைத்திருந்தாள். அதைப்பற்றி அவ்வப்போது சிறு சிறு முணுமுணுப்புகள் எழுந்தாலும் பெரிதாக யாரும் அவளை வற்புறுத்தியது கிடையாது. ஆனால், ஒரே நாளில் அதை உடைத்து வீட்டின் நிம்மதியையே கெடுத்துவிட்டான் என்ற கோபம் தான் அஜய் மீது அவளுக்கு! அந்தக் கோபம் அவளது வார்த்தைகளிலும் தப்பாது வெளிப்பட்டது.

 

அவளது கோபத்தை ரசித்தவாறே, “என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று அவன் கேட்க, அவனது அந்த தைரியத்தில் அதிகமாகவே சீண்டப்பட்டாள் கோமதி நாச்சியார்.

 

“எங்க வந்து என்ன பேசிட்டிருக்கீங்க.. டோண்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்?”

 

“ரொம்ப சரி.. இங்க வந்து இதைப் பத்தி பேசுறதுல எனக்குமே உடன்பாடு இல்ல தான். வீட்டுக்குப் போனா உன்னைப் பிடிக்க முடிய மாட்டேங்குதே.. நானும் என்னதான் செய்ய?”

 

“வீட்டுக்குப் போனியா? எப்போ?” 

 

அவள் திகைத்துப் போய்க் கேட்க, அவள் மரியாதையை விடுத்து ஒருமைக்கு மாறியதில் மனதில் சில்லென்ற தென்றல் வீசியது. அது அவன் பார்வையிலும் வெளிப்பட,

 

‘டேய் டேய்.. கழுவி ஊத்துறதுக்கெல்லாம் காதல் பார்வை பார்த்து வைக்கிறடா நீ.. ஆனாலும் அநியாயம் பண்ற’ என்று அவனது மனசாட்சியே அவனைக் கேலி பேச, அதைக் கண்டுகொள்ளாமல் கோமதி நாச்சியாரைப் பார்த்தான் அவன்.

 

“ரெண்டு நாள் முன்னாடி.. நீ சீக்கிரம் கிளம்பிட்டதா அத்தை சொன்னாங்க” 

 

அவனது அத்தை என்ற விழிப்பில் கடுப்பானவள், “யாரு யாருக்கு அத்தை?” என்று சீற,

 

“ஸ்ஸ்ஸ்.. ஊசி வெடி மாதிரி வெடிச்சுட்டே தான் இருக்கணுமா? உன்னைக் கல்யாணம் பண்ணக் கேட்டுட்டு இருக்கேன்.. உன் அம்மாவை அத்தைனு சொல்லாம என்னன்னு சொல்றது?” என்றான் அஜய் அவளது கோபத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல்.

 

“எனக்கு வர்ற கோவத்துக்கு…” என்றவளை முடிக்க விடாமல்,

 

“பெண்டிங்ல இருக்க எந்த கேஸையாவது என்மேல போட்டு உள்ள வச்சு லாடம் கட்டணும்னு தோனுதா?” என்றான் அஜய் ஆளை விழுங்கும் புன்னகையுடன்.

 

அவள் பதில் பேசாமல் அவனைப் பார்க்க,

 

“உடனே தி பெஸ்ட் லாயரோட என் மாமியார் என்னை பெய்ல எடுக்க வந்துடுவாங்க” என்றவனிடம் அந்த புன்னகை கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது.

 

அவனது அந்த அதீத நம்பிக்கை அவளுக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போலிருந்தது. 

 

“ஸோ? என் அம்மாவைக் கைக்குள்ள போட்டுட்டு இந்தக் கல்யாணத்தை நடத்துறதா ப்ளானா?” 

 

புயலை உள்ளடக்கிய குரலில் அவள் கேட்க, கண் சிமிட்டியவன்,

 

“பொண்ணைக் கைக்குள்ள போட ஆசை தான்.. ஆனா போலீஸம்மா அநியாயத்துக்கு ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களே” என்றான் குறையாக.

 

அவனது வார்த்தைகளில் அவள் அவனை முறைத்துப் பார்க்க, எழுந்து கொண்டான் அவன்.

 

“சரி ரொம்ப டென்ஷன் ஆகாத.. நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்து சென்றவன் பின்னால் திரும்பி,

 

“சீக்கிரம் எஸ் சொல்லிடு கோம்ஸ்.. ரொம்ப நாள் வெய்ட் பண்ண முடியும்னு தோனல” என்று ஆழ்குரலில் சொல்லிவிட்டுச் செல்ல, அந்தக் குரலின் அழுத்தமும் ஆழமும் கோமதி நாச்சியாரின் இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க வைத்தது.

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandra

 

novels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

 

This post was modified 3 weeks ago 2 times by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 6

 

சரண்தேவ் உணவருந்தாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். அவனருகில் அஜய் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க, தவமணி அதைப் புன்னகையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.  

 

“இப்போ சாப்பிடப் போறியா இல்லையா தேவ்?” என்று அஜய் அதட்டுவதை எல்லாம் காது கொடுத்துக் கூடக் கேட்காமல் அவன் வீம்பாக இருக்க, அஜய் தான் இறங்கி வந்தான்.

 

“மம்மி வேலைல பிஸியா இருக்காங்க தேவ்.. நீ சமத்தா சாப்பிடு.. நான் உன்னை மம்மி ஃப்ரீயா இருக்கப்போ அவங்களைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறேன்”

 

“ஆல்ரெடி பண்ணுன ப்ராமிஸே நீங்க பிரேக் பண்ணிட்டீங்க டாடி.. மம்மியைப் பார்க்க போனப்போ என்னையும் ஏன் கூட்டிட்டுப் போகல?”

 

“நீ தான் ஸ்கூல் போயிருந்தியே!”

 

“என்னை ஸ்கூல்ல வந்து கூட்டிட்டுப் போய்ருக்கலாம்ல”

 

எல்லா பதிலுக்கும் அவன் ஒரு கேள்வி வைத்திருக்கவும் அலுப்புடன் தாயைப் பார்க்க, அவரும் சிரிப்புடன் அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

“என்னம்மா இவன் இவ்வளவு வீம்பு பிடிக்கிறான்?”

 

தவமணி, “அப்படியே அவங்க தாத்தா மாதி” என்று புன்னகைக்க, வெளியே சென்றிருந்த சண்முகம் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்.

 

“யாரு என்ன மாதி?” என்று கேட்டுக்கொண்டே அவர் உள்ளே வர,

 

“தேவ் பத்திப் பேசிட்டு இருந்தோம்” என்றவர், “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்றபடியே எழுந்தார்.  

 

சண்முகம் தலையசைக்கவே, அவருக்கும் உணவை எடுத்து வைக்க, உணவருந்த ஆரம்பித்தவர் அஜயும் தேவ்சரணும் சோபாவில் அமர்ந்தவாறு மெல்லிய குரலில் கிசுகிசுப்பாகத் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினார்.

 

“என்னவாம் தவம்?” என்று மனைவியிடம் கண்ணைக் காட்டி சண்முகம் கேட்க,

 

“நாச்சியைப் பார்க்கக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அடம் பிடிக்கான்” என்று புன்னகையுடன் சொன்னவர், சொல்லியதும்தான் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்றே உணர்ந்தார்.

 

‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துவிட்டு அவர் விழிக்க, சண்முகத்தின் முகம் நொடியில் தன் இளக்கத்தைத் தொலைத்தது.

 

“தேவ்” என்று அவர் கண்டிப்புடன் அழைக்க,

 

“ஏங்க அவன் சின்னப்பையன்.. அவனுக்கு என்ன தெரியும்? அதான் அஜய் இருக்கான்ல.. அவன் எடுத்துச் சொல்லுவான்” என்றார் தவமணி.

 

தவமணி சொல்லும்போதே தேவ் எழுந்து உணவுமேஜை அருகே வந்து நின்றான்.

 

“சொல்லுங்க தாத்தா” என்றவனிடம்,

 

“இன்னும் சாப்பிடலையாமே.. ஏன்?” என்று அவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டுக் கேட்டதில் தேவ் தானாகத் திரும்பி அஜயைப் பார்த்தான்.

 

‘வந்து காப்பாற்று’ என்ற பாவனை அதில் தெரிய, ‘இவ்வளவு நேரம் என்னை அலைய வைச்சில்ல உனக்கு வேணும்டா’ என்று மனதில் நினைத்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தந்தையின் உதவி கிடைக்காது என்று புரிந்து தேவ் பாவமாகப் பாட்டியைப் பார்த்தான்.

 

“இட்லி வைச்சுக் கொண்டு வரட்டா தேவ்? சாப்பிடுதியா?” என்று அவர் கேட்க, அவனுக்கு சரியென்று சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.  

 

“சரி பாட்டி” என்றவன் அமைதியாக அங்கேயே அமர்ந்துகொள்ள,

 

“சாப்பாட்டுல வீம்ப காட்டக் கூடாது தேவ்.. மணி என்ன ஆகுது? இம்புட்டு நேரம் சாப்பிடாம கெடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? எதுக்கு இப்போ சாப்பிட மாட்டேனு வீம்பு பிடிக்கிற?” 

 

அப்போதும் விடாமல் சண்முகம் ஆரம்பிக்க,

 

“இனிமேல் செய்ய மாட்டேன் தாத்தா” என்றான் அவன் சிறியதாகிவிட்ட குரலில்.

 

அப்போதும் எதற்காக அவனது இந்த வீம்பு என்பதை அவன் சண்முகத்திடம் சொல்லாமலேயே இருக்க, அஜயின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

 

‘சரியான கேடி’ என்று மகனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டவனின் எண்ணங்கள் மெதுமெதுவாக அவனது நாயகியின் பக்கம் சென்றன.

 

அவனது நாயகி அந்த நேரம் ஒரு நெடியவனின் முன் அமர்ந்திருந்தாள். கூடவே சிவராமனும்! இருவரும் சாஹித்யாவைப் பற்றி விசாரிக்க அந்த க்ளினிக்-கிற்கு வந்திருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த சாஹித்யாவின் அலைபேசியின் அழைப்பு வரலாறு பட்டியலில் அந்த க்ளினிக்கின் எண் தொடர்ந்து இருக்க, நூல் கிடைத்துவிட்ட திருப்தியில், அங்கே கிளம்பியிருந்தனர்.

 

“எனக்குத் தெரிஞ்ச டீடெய்ல்ஸ் அவ்வளவு தான் மேடம். அந்தப் பொண்ணு இங்க ட்ரீட்மெண்ட் எடுக்குறாங்க. கவுன்சிலிங் செஷன் அப்போ கால் பண்ணிக் கேட்டுட்டு வருவாங்க.. மத்தபடி வேறெந்த டீடெய்லும் தெரியல” என்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட கோமதி நாச்சியார்,

 

“என்ன விதமா அவங்க பாதிக்கப் பட்டிருந்தாங்க?” என்றாள் யோசனையாக.

 

ராம் கார்த்திக்கேயன் அவளது நிலை பற்றி கூறவே, அதை கவனமாகக் கேட்டுக் கொண்டவளுக்கு இப்போது சாஹித்யாவின் நண்பர்களற்ற பின்னனி நன்றாகவே புரிந்தது.

 

“எத்தனை மாசமா இங்கே ட்ரீட்மென்ட் எடுக்கிறாங்க?”

 

“ஆறுமாசமா எடுத்துட்டு இருக்காங்க.. ஆக்சுவலி அவங்க செஷன் கூட இந்த மன்த்தோட முடியுது” 

 

“காதல் அந்த மாதிரி எதுவும்?”

 

“இல்ல.. அவங்க பயமே அதுமாதிரியான ரிலேஷன்ஷிப்-குள்ள அவங்கள போகவிடல” என்றவன் தன் முன்பிருந்த சாஹித்யாவின் கோப்பினை மூடி வைத்தபடி நிமிர்ந்தான்.

 

கோமதி நாச்சியாரிடம் மீண்டும் ஒரு சோர்வு வந்து அமர்ந்து கொண்டது.

 

‘என்ன கேஸ் இது? ஒரு நூல் கூட உருப்படியா கிடைக்க மாட்டேங்குது’ என்று அலுப்பாக நினைத்துக் கொண்டவள் தான் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி நோட்டமிட்டாள்.

 

“நீங்க முன்னாடி ******* ஹாஸ்பிடல்ல தானே இருந்தீங்க.. எதுக்காக அங்கே இருந்து வெளில வந்தீங்க?”

 

அவளது கேள்வியில் புன்னகைத்தவன், “எல்லாருக்கும் இருக்க கனவு தானே? சின்னதா இருந்தாலும் நமக்கான க்ளினிக்னு ஒன்னு இருக்கணும்னு?” என்றான் கேள்வியாக.

 

அவனது கேள்விக்குத் தலையசைத்தவள் சிவராமனைப் பார்க்க, 

 

“இந்த கேஸ் ரிலேட்டடா எதாவது சொல்லணும்னு தோனிச்சுனா எந்த நேரமா இருந்தாலும் கூப்டுங்க” என்று தன் அலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டான் அவன்.

 

“ஷ்யர் சார்” என்று ராம் கார்த்திக்கேயன் கை கொடுக்க, இருவரும் வெளியே வந்தனர்.

 

“என்ன மேடம் எந்த க்ளூவும் உருப்படியா கிடைக்க மாட்டேங்குது” என்று சிவராமனும் சலிக்க, கோமதி நாச்சியார் தலையசைத்தாள்.  

 

“இன்னைக்கு சேர்த்தா பொண்ணு காணாமல் போய் ஆறு நாளாகிடுச்சு.. நம்ம கிட்ட கேஸ் வந்து மூனு நாள் ஆகிடுச்சு.. எல்லா செக்போஸ்ட்-க்கும் அலர்ட் கொடுத்தாச்சு.. அவங்க தங்கியிருந்த பி.ஜி, அவங்க வேலை பார்க்கிற கம்பெனி, ட்ரீட்மெண்ட் எடுக்குற ஹாஸ்பிடல்னு எல்லா இடமும் விசாரிச்சாச்சு.. எங்கேயும் லூப்ஹோல் இல்ல.. அதான் வித்தியாசமாவும் இருக்கு” என்றவள் எதையோ யோசித்துவிட்டு,

 

“அந்தப் பொண்ணு உயிரோட இன்னும் இருக்கும்னு உங்களுக்குத் தோனுதா சிவராமன்?” என்றாள் யோசனையாக.

 

அவளது கேள்வியில் சிவராமன் யோசனையுடன், “இதுக்கு எப்படி பதில் சொல்றதுனு தெரியல மேம்” என்றவன்,

 

அவளது அடுத்து வரப்போகும் கேள்விக்கும் சேர்த்தே, “ஈக்குவலி சான்ஸ் இருந்தாலும் என்னவோ இன்ஸ்டின்க்ட் தப்பாவே சொல்லுது.. மே பி எந்த விதமான ஹோப்பும் இதுவரை இல்லைன்றதால அப்படித் தோனுதா இருக்கும்” என்றான்.

 

தலையசைத்தவளுக்குக் கடத்தலுக்கான காரணம் பற்றி பல யூகங்கள்! வெறும் யூகம் மட்டுமே! எதிலும் உறுதி இல்லை.  

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கமிஷனரிடமிருந்து அழைப்பு வர, கோமதி நாச்சியார் உயிர்ப்பித்தாள்.

 

“...........”

 

“யெஸ் சார்”

 

“............”

 

“நான் அங்க தான் சார் வந்துட்டு இருக்கேன். அரைமணி நேரத்துல வந்துடுறேன்” என்றபடி அலைபேசியை அணைத்தவள், அலைபேசியை நொடிக்கொருதரம் தன் முகவாயில் இடித்தவாறு பயணம் செய்து கொண்டிருந்தாள். அவளது முகம் தீவிர யோசனையில் இருந்தது. பயண நேரம் கடக்க, சொன்னது போலவே அரைமணி நேரத்தில் கோமதி நாச்சியார் கமிஷனர் முன்பு நின்றிருந்தாள்.

 

“என்ன மதி? எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லனு சொல்றீங்க?” என்று கமிஷனர் அதிருப்தியாகக் கேட்க, கோமதி நாச்சியார் அதுவரை விசாரித்து அவள் சேர்த்த விவரங்களை எல்லாம் அவரிடம் சொன்னாள்.

 

“ஃபோனை ட்ரேஸ் பண்ணாலும் அவங்க பிஜியைத் தான் லாஸ்ட் லொகேஷனா காட்டுது” என்று மதி சொல்வதைக் கேட்டவருக்கு அவளது முயற்சிகள் புரிந்தாலும் அவர் மேலிடத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் ஆயாசத்துடன் கோமதி நாச்சியாரைப் பார்த்தார்.

 

“டோன்ட் மேக் எக்ஸ்க்யூஸஸ் மதி” என்று அவர் சொல்ல, கோமதி நாச்சியாரின் முகம் கன்றியது.

 

உடனே, “கேஸ்ல என்ன நடக்குதோ அதை உங்க கிட்ட ரிப்போர்ட் பண்ணுனேன். இது எக்ஸ்க்யூஸ் மேக் பண்றதா உங்களுக்குத் தோனிச்சுனா ஐ’ம் சாரி சார்” என்றபடி எழுந்துகொண்டாள் அவள்.

 

அவளது வருத்தமும் புரிய, “அட உட்காருங்க மதி.. உங்களுக்கு நான் உங்க கிட்ட இப்படிப் பேசுறேனு கவலை.. இதுக்கு மேலே நான் அங்கே பேச்சு வாங்குவேன்” என்றவர் தன் முன்னிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி யோசனையில் ஆழ்ந்தார். அவரது வார்த்தைகள் அதுவரை அவளது மனதிலிருந்த கேள்வியைத் தொண்டை வரை கொண்டு வந்துவிட்டது.

 

“எனக்கு ஒரு டவுட் சார். கேட்கலாமா?” 

 

மதியும் யோசனையுடன் கேட்க, வெங்கட்ராமன் அவளது கேள்வியை யூகித்தே தலையை ஆட்டினார்.

 

“யார் சார் இந்தப் பொண்ணு? சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லாத ஒரு பொண்ணு.. அவளைக் காணோம்னு இவ்வளவு ப்ரஷர்”

 

“உண்மையைச் சொல்லணும்னா எனக்கும் தெரியல.. நானும் ரிப்போர்ட்டிங் தான் பண்ணிட்டு இருக்கேன். இதுக்குப் பின்னாடி பெரும்புள்ளி ஒருத்தர் இருக்காருனு மட்டும் புரியுது”

 

அவரது பதிலில் கோமதி நாச்சியாரின் முகம் காட்டிய பாவனையில்,

 

“இல்ல மதி.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல. அவங்களுக்கு சாஹித்யாவோட சேஃப்டி தான் முக்கியம்னு க்ளியரா தெரியுது” என்றார்.

 

“அப்போ ஓகே சார்.. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க.. சீக்கிரமே இந்த கேஸோட எதாவது ஒரு பாசிட்டிவ் சைடோட உங்கள மீட் பண்றேன்” என்றபடி கோமதி நாச்சியாரும் எழுந்துகொள்ள, வெங்கட்ராமன் தலையசைத்தார்.

 

ஏதாவது ஒரு திருப்பம் கிடைத்துவிடாதா? என்று எண்ணியபடியே வெளியேறியவள் நேராக வீட்டிற்குச் சென்றாள். அவள் எதிர்பார்க்கும் திருப்பம் எதிர்பாராத விதமாக வரக் காத்திருப்பது தெரியாமல் சோர்வுடன் பயணித்தவள், வீட்டிற்குள் நுழையும்போதே சலிப்பாக உணர்ந்தாள்.

 

வேலை பிரச்சனை பின்னுக்குச் சென்று தன் வீட்டின் பிரச்சனை பூதாகரமாக அவளைத் தாக்கியது.  

 

‘என்ன இது? இப்படியே இதை வளர்த்துட்டே இருக்காங்களே இந்த அம்மா’ என்றவளுக்கு என்றுமில்லாமல் வீட்டின் அமைதி மனதை அலைக்கழித்தது. இந்த அலைக்கழிப்பிற்குப் பேசாமல் திருமணத்திற்கு சரி என்று கூட சொல்லிவிடலாம் போல என்ற ஆயாசம் தோன்ற, திடுக்கிட்டாள் கோமதி நாச்சியார்.

 

‘நானா இப்படி நினைச்சேன்?’ என்று நம்பமுடியாமல் தன்னைக் குறித்த சிந்தனையில் அவள் குழம்பிப் போக, அப்போதுதான் அறையை விட்டு சங்கரநாராயணனும் ஸ்ரீயும் வெளியே வந்தனர். இல்லையில்லை! ஸ்ரீ தந்தையை அழைத்து வந்தாள்.

 

தந்தையின் முகம் அதற்கு மேலும் தன்னைக் குறித்து சிந்திப்பதைத் தடை செய்ய, அவர்களது அருகே சென்றவள், “என்னாச்சு ஸ்ரீ?” என்றாள்.

 

“அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ அக்கா.. உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடல் போயிருக்காங்க.. எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. அப்பாவோட ஃப்ரெண்ட் அந்த வெங்கடேஷ் அங்கிள் இருக்காருல.. அவரும் ஹாஸ்பிடலுக்குப் போயிருப்பார் போல.. அப்பாவுக்குப் போன் பண்ணி தங்கச்சி கூட ஹாஸ்பிடல் வராம அப்படியென்ன வேலை? குடும்பம் தான் முக்கியம்னு க்ளாஸ் எடுக்குறாரு” 

 

ஸ்ரீ படபடவென்று நடந்ததைக் கூற, “என்னாச்சு அம்மாவுக்கு?” என்ற கேள்வி தான் அவளிடம் முதன்மையாக இருந்தது. தேவையில்லாமல் யோசித்து எதையும் இழுத்துக் கொண்டார்களோ என்று பயம் வர, அதுவே அவளது கேள்வியாகவும் இருந்தது.

 

“தெரியல.. போன் பண்ணுனா அட்டெண்ட் பண்ண மாட்றாங்க.. அந்த அங்கிள் பேசிட்டு இருக்கப்பவே அவர் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.. எந்த ஹாஸ்பிடல்னு எதுவும் தெரியல”

 

ஸ்ரீயின் குரலிலும் கவலை எட்டிப்பார்க்க, “எப்பவும் பார்க்குற ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்த்தீங்களா?” என்றாள் நாச்சி.

 

“அப்பா போய்ட்டு இப்போ தான்க்கா வந்தாங்க.. அங்கே அம்மா பேரே OP லிஸ்ட்ல இல்ல.. எங்கே போயிருப்பா உடம்புக்கு என்ன செஞ்சதோனு அப்பா ரொம்ப பயப்படுறாங்க” என்ற ஸ்ரீயின் குரலில் ஆதங்கமும் பயமும் ஒருங்கே கலந்திருந்தது.

 

‘அப்பா மேல் தான கோபம்.. என்கிட்ட கூட ஏன் சொல்லாம போனாங்க? என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல’ என்ற ஆதங்கமும் தந்தையின் எண்ணங்களை ஒட்டி என்னவாகியதோ என்ற பயமும் ஒருசேர ஸ்ரீயை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

 

“நான் போய் பார்த்துட்டு வரேன்ப்பா.. ரெண்டு பேரும் மூஞ்சிய இப்படி வைச்சுக்காதீங்க” என்றபடி அவள் திரும்பும் நேரம் வீட்டின்‌ முன் ஆட்டோ வந்து நின்றது.

 

சங்கரநாராயணன் வேகமாக மனைவியை நோக்கி செல்ல, அவர் ஆட்டோவிற்கு பணத்தைச் செலுத்துவிட்டு உள்ளே வந்தார்.

 

“என்ன கோமு இப்படி பண்ணிட்ட? என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா? என்ன செய்யுது உடம்புக்கு? என்கிட்ட ஏன் சொல்லல?” என்று அவர் படபடப்புடன் கேட்க, அவரிடம் பதில் சொல்லாமல் அவரைக் கடந்து செல்ல முற்பட்டார் சங்கரகோமதி.

 

“ம்மா” என்ற நாச்சியின் கண்டனக்குரலை வெகு அலட்சியமாக அவர் கடக்க முற்பட, நாச்சி தன்னைக் கடந்து செல்லவிருந்தவரைத் தன் வலுவான பிடியால் பிடித்து நிறுத்தினாள்.

 

ஏற்கனவே சாஹித்யாவின் கேஸில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதில் அப்படியொரு சோர்வில் இருந்தவளைத் தன் வீடிருக்கும் நிலை அதிகத்திற்கும் பாதித்தது. அவளது சோர்வும் அயர்வும் கோபமாக உருமாற, அன்னையில் அலட்சியம் அதற்குத் தூபம் போடுவதாக இருந்தது.

 

“ம்மா உங்க கிட்ட பேசத்தானே நாங்க நிக்கிறோம்.. எத்தனை நாளைக்கு இந்தக் கோவத்தைப் பிடிச்சுத் தொங்கிட்டு இருப்பீங்க?” என்று அவள் கேட்கவும்,

 

“விடு பாப்பா.. இப்ப பேச வேணாம். அம்மா முகமே ரொம்ப சோர்வா இருக்கு பாரு” என்று சங்கரநாராயணன் கூற, அதுவும் சரியாகப்படவே நாச்சி தன் கைகளை விடுவித்தாள்.

 

திரும்பி மகளையும் கணவனையும் ஒரு பார்வை பார்த்தவர் ஸ்ரீயிடம் திரும்பி, “என்னால இன்னைக்கு சமைக்க முடியாது” என்று மட்டும் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

 

“நான் எதாவது ஆர்டர் பண்ணிடுறேன் ப்பா.. நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க” என்று நாச்சி கூறவும்,

 

“இல்ல பாப்பா.. நான் இங்கேயே இருக்கேன்” என்றபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் சங்கரநாராயணன்.

 

ஸ்ரீயிடம் தந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கண்ணைக் காட்டிவிட்டு, கோமதி நாச்சியார் மேலே அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.

 

முகம் கழுவி உடைமாற்றி என அவளது வேலை அதுபாட்டிற்கு நடந்தாலும் மனதில் தாங்க முடியாத அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாலே வேண்டாத நினைவுகள் தலைதூக்க எதையும் நினைக்கப் பிடிக்காமல் தலையை உலுக்கிக் கொண்டாள்.  

 

கோபம் ஒருபுறம்! ஆற்றாமை ஒருபுறம் என்று அவள் மனம் வெதும்பிப் போய் அமர்ந்திருக்க, நேரம் அவளைக் கேட்காமல் பறந்து கொண்டிருந்தது. மணி எட்டைக் கடந்து சில நிமிடங்கள் சென்றிருக்கும் போது ஸ்ரீ வந்து கதவைத் தட்டினாள்.

 

“தாழ் போடல.. சும்மா தான் க்ளோஸ் பண்ணியிருக்கு” என்ற குரலில் ஸ்ரீ உள்ளே வந்தாள்.

 

அவள் வரவும் தான் இரவு உணவு ஆர்டர் செய்ய மறந்தது நினைவுக்கு வர, அவசரமாக அவளே வெளியே வந்தாள். 

 

“சாரி‌ சாரி ஸ்ரீ.. ஆர்டர் பண்ண மறந்துட்டேன். இனிமேல் ஆர்டர் பண்ணுனா லேட் ஆகும். நான் நேர்ல போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றவள் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்று அனைவருக்கும் இட்லி மட்டும் வாங்கிக்கொண்டு பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டாள்.

 

ஸ்ரீ போய் சங்கரகோமதியை உணவருந்த அழைக்க, மறுக்காமல் எழுந்து வந்தார் அவர். உணவு கடையில் வாங்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் முகத்தைச் சுருக்கியவர், தனக்குத் தேவையானதை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு அமர, மற்றவர்கள் மனதினில் எழுந்த பெருமூச்சுடன் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டனர்.

 

அங்கே அசாதாரண அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். சங்கரநாராயணன் மனைவியின் முகத்தை அடிக்கொருதரம் பார்த்தபடி இருந்தார். உள்ளே வந்த பொழுது பார்த்ததற்கு இப்போது முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. அதுவே போதும் என்பது போல் அவர் இருக்க, ஸ்ரீக்கு மனமெங்கும் கோபம் மட்டுமே! அவள் தாயை அவ்வப்போது முறைத்துக் கொண்டே சாப்பிட, கோமதி நாச்சியார் உள்ளே இறங்காத உணவை வெகுவாகப் போராடி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். இது எதையும் கவனிக்காமல் அல்லது கவனித்தும் அதைப் பற்றிய கவலையில்லாமல் சங்கரகோமதி உணவருந்திக் கொண்டிருந்தார்.

 

உணவருந்தி முடித்துவிட்டு சங்கரகோமதி எழுந்து கொள்ள, நாச்சி தட்டிலேயே கை கழுவினாள். அதற்கு முன்பே சங்கரநாராயணன் உணவருந்தி முடித்திருந்தார்.

 

“இருங்கம்மா பேசணும்” என்று அவள் சொல்லச் சொல்ல, சங்கரகோமதி அறையை நோக்கி நடந்ததில் கோபம் தலைக்கேற, கையிலிருந்த தண்ணீர் குடுவையைக் கீழே போட்டு உடைக்க, அது மிகப்பெரும் சப்தத்துடன் கீழே விழுந்தது.  

 

அதில் சங்கரகோமதி திரும்பிப் பார்க்க, ஸ்ரீ உணவை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்.  

 

“என்ன பாப்பா இது?” என்று சங்கரநாராயணன் ஆட்சேபக் குரலில் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் தாயைப் பார்த்தாள் அவள்.

 

“பேரு ராம் குமார்.. ஒரே பேட்ச்ல படிச்சோம். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது” என்றவள் இயந்திரகதியில் நடந்ததை சொல்லி முடித்தாள். இப்படி எதாவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் அதுவே உண்மையென தெரிய வரும்போது ஸ்ரீ அதிர்வுடன் அக்காவைப் பார்த்தாள். கால்கள் தாமாக தமக்கையை நோக்கிச் சென்றது. நாச்சியின் குரலில் வழிந்த ஏதோ ஒன்றில் அவள் அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு நாச்சியின் கரங்களைப் பிடித்து நின்று கொண்டாள்.

 

அதை உணரும் நிலையில் கூட நாச்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவள் அழவில்லை. அழக்கூடாது என்ற வைராக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டி கலங்காமல் செய்தி வாசிப்பதைப் போன்று அவள் சொல்லி முடித்தாலும் அங்குள்ள ஒவ்வொருவரும் அவளது வலியை நன்றாகவே உணர்ந்தனர்.

 

சங்கரநாராயணனும் ஸ்ரீயும் கோமதி நாச்சியாரை மட்டுமே பார்த்தபடி இருக்க, “இப்போ நான் போகட்டா?” என்று சங்கரகோமதி கேட்டதில் விலுக்கென்று திரும்பினாள் ஸ்ரீ.

 

“ம்மா உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அக்கா அவ்வளவு வருத்தப்பட்டு சொல்றாங்க.. எதுவுமே சொல்லாம போகட்டுமானு கேட்குறீங்க? நிஜமா இது நீங்க தானாமா?” என்று வெறுப்புடன் கேட்க, ஸ்ரீயின் வெறுப்பான பேச்சில் சிலிர்த்து எழுந்தார் சங்கரகோமதி.

 

“நான் பைத்தியம் தான்.. முப்பது வருஷமா எனக்குனு எந்த ஆசபாசமும் வச்சுக்காம புருஷன் புள்ளைனு உங்களுக்குப் பார்த்து பார்த்து பண்ணேன்ல.. நான் பைத்தியம் தான். இந்த வீடு என் வீடு.. இங்க இருக்கவங்க எனக்கான மனுசங்க.. எம்புருஷன் எம்புள்ளைங்கனு நினைச்சேன்.. ஆனா இங்க என் இடம் எதுனு உங்கக்காவும் அப்பாவும் செருப்புல அடிச்சு புரிய வைச்சுட்டாங்க.. கடைசில இந்த வீட்ல உங்களுக்கு ஆக்கிப்போட்டு துடைச்சுக் கழுவுற வேலைக்காரியா தான் உங்க எல்லார் கண்ணுக்கும் நான் தெரிஞ்சுருக்கேன்” என்று ஆவேசம் பாதி, அழுகை மீதியாக அவர் கத்த, சங்கரநாராயணனுக்து சுருக்கென்றிருந்தது.

 

“என்ன கோமு இப்படிலாம் பேசுத.. நாங்க அப்படியா நினைக்கோம்?” என்று அவர் தவிப்புடன் கேட்க,

 

“வேற எப்படி நினைக்கீங்க? அவளுக்கு ஒன்னுன்னு ஆகவும் உங்கட்ட தான வந்திருக்கா? அப்பாவும் மகளும் சேர்ந்து என்கிட்ட இதை மறைச்சிருக்கீங்கனா நான் இந்த வீட்ல யாரு? உங்களுக்கு வடிச்சுக்கொட்டட நான் வேணும். ஆனா நல்லது கெட்டதுக்கு வேணாமா?” என்றார் சங்கரகோமதி.

 

அவரது கேள்வியில் அதுவரை கூட இயந்திரகதியில் நின்ற நாச்சியின் முகம் கசங்கியது.

 

“எனக்கு உங்க கிட்ட சொல்ல பயமா இருந்ததுமா.. சொன்னா உடனே கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவீங்களோனு.. என்னால அதை ஏத்துக்கவே முடியாதுனு தோனிச்சு. அதான் அப்பா கிட்ட உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல”

 

அவளது அந்த பதிலும் சங்கரகோமதிக்கு கோபத்தையே தந்தது.

 

‘எப்படி? இவங்கப்பா இவ மனசு புரிஞ்சு நடந்துப்பாரு.. நான் உடனே கையைக் காலைக் கட்டிக் கல்யாணம் பண்ணி வைச்சுருவேனா?’ என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது.

 

“எனக்கு எந்தக் காரணமும் வேணாம் நாச்சி.. நான் ஒரு பொண்டாட்டியாவும் தோத்துட்டேன். அம்மாவாவும் தோத்துட்டேன். இனிமேல் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் முழுசா உங்கப்பா பொறுப்பு. இந்த வீட்ல எப்பவும் போல கூட்டித் துடைக்கிற வேலையோட என் கடமை முடிஞ்சது” என்று சொல்லிவிட்டு நகர, சங்கரநாராயணன் பயந்து போனார்.  

 

மனைவியின் மனதில் இந்த விஷயம் இவ்வளவு தூரம் வடுவாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லாமல் மறைத்ததற்கு கோபம் என்று மட்டுமே நினைத்திருந்தார். ஆனால், அதை இவ்வளவு தூரம் யோசித்திருப்பார் என்று அவர் எண்ணியிருக்கவில்லை.

 

“கோமு” என்றழைத்தவாறே

சங்கரநாராயணன் மனைவியின் பின்னே செல்ல, நாச்சியும் ஸ்ரீயும் கூட அவரின் பின்னேயே சென்றனர்.

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

This post was modified 3 weeks ago 2 times by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 7

 

 

ஒருவர் பின் ஒருவராக மூவரும் அறைக்குள் நுழைவதை சலிப்பாகப் பார்த்தார் சங்கரகோமதி. வீம்புக்காக வேண்டுமென்றோ இல்லை நாச்சியைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் பொருட்டோ அவர் இதைச் செய்யவில்லை. உண்மையில் அவருக்கு மனம் விட்டுப் போயிருந்தது.  

 

இந்த மூன்று நாட்களுமே, எங்கே நான் தவறினேன் என்று அவரை அவரே கேட்டுக் கொள்ளாத கணமில்லை. உண்மையில் அவருக்குத் தோற்றுப்போன உணர்வு தான். வெளியே சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இந்தக் குடும்பத்தை நான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் அவருள் இருந்தது தான் நிஜம். ஆனால், அந்த கர்வம் அடியோடு ஒழிந்துவிட்டது. அவர் கண்ட புறத்தோற்றம் எல்லாம் மாயையோ என்றே தோன்றியது.

 

தன் மகள் காதலித்திருக்கிறாள் என்ற செய்தியே அவருக்கு அதிர்ச்சி. திருமணம் வேண்டாம் என்றபோது கூட அவர் காதலென்று நினைத்திருக்கவில்லை. கோமதி நாச்சியார் திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லித்தான் மறுத்திருந்தாள். அவளுடைய வாழ்க்கையை வேறெந்த ஆணையும் நம்பி ஒப்படைக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறிவிட்டாள். எத்தனையோ சமாதானங்கள் சங்கரகோமதி வைத்திருந்தாலும் அதற்கெல்லாம் சேர்த்து அவளிடமும் காரணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பெண்ணைப் பையன் போல வளர்த்தது தான் பிரச்சனையோ என்ற எண்ணமே அவருக்கு வந்துவிட்டது. அதனால்தான் ஒரு வயதிற்கு மேல் பெண்களிடம் இயல்பாகவே இருக்கின்ற திருமணக் கனவுகள் எல்லாம் அவளுக்கு இல்லையோ என்று சிந்தித்தவர் கணவனை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார். இத்தனை போராட்டங்கள் பெரியவள் விஷயத்தில் நடந்ததால் தான் ஸ்ரீக்கு கல்லூரி முடிக்கும்போதே திருமணத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தார். அது இப்படியொரு திருப்பத்தைத் தரும் எனக் கனவிலும் அவர் நினைக்கவில்லை. 

 

மகளுக்குக் காதல் இருந்திருக்கிறது. அதிலும் அது கைகூடாமல் போன விரக்தியில் திருமணமே வேண்டாமென மறுத்திருக்கிறாள் என்றால் அவள் அந்த நேரம் எத்தனை பாடுபட்டிருப்பாள். அந்த நிலையில் ஆறுதலுக்காக மடிசாயக் கூடத் தன்னைத் தேடவில்லையே மகள் என்பதில் அத்தனை வருத்தம். தான்‌ சரியாக மகளைக் கவனிக்கவில்லையோ என்ற குற்றவுணர்ச்சி வேறு வாட்டியது. அதிலும் கணவரும் சேர்ந்து இதை மறைத்திருக்கிறார் என்பது அந்த வருத்தத்தை வடுவாக்கி விட்டிருந்தது. அவரது யோசனையெல்லாம் இப்படியிருக்கையில்,

 

“ம்மா தப்பு செஞ்சது நான்.. நீங்க எனக்குத் தண்டனை தர்றது நியாயம். அப்பாவும் ஸ்ரீயும் என்ன செஞ்சாங்க?” என்று நாச்சி ஆதங்கமாகக் கேட்க, 

 

‘அப்போ இவங்களாம் ஒன்னு நான் தனியா?’ என்று தான் மூவரையும் பார்த்திருந்தார்.  

 

“ம்மா இப்படி பண்ணாதீங்க.. நான் என்ன பண்ணுனா நீங்க சரியாவீங்க?” 

 

தவிப்புடன் கேட்டவள் பின் தானே யோசித்து முடிவுடன் அன்னையைப் பார்த்தாள்.

 

“சரி.. நீங்க சொன்னது போல அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இப்போ நீங்க நார்மல் ஆவீங்களா?” என்று அவளாக யோசித்துக் கேட்க,

 

மகள் சொன்னதைக் கேட்ட சங்கரநாராயணன் நம்ப முடியாமல் நாச்சியைப் பார்த்தார். நாச்சியும் சொல்லிவிட்டு தந்தையைத் தான் பார்த்தாள். அவரது கண்களில் கூடவே ஒரு ஒளியும் தோன்ற, ஸ்ரீயின் முகத்திலும் கூட ஏதோ ஒரு ஆசுவாசம் தெரிய, அவளுக்கு குற்றவுணர்வாகிவிட்டது.

 

‘என்னால எத்தனை பேருக்கு கஷ்டம்’ என்று தன்னையே திட்டிக்கொண்டவள் சங்கரகோமதியைப் பார்த்தார். அவர் நம்பாத பார்வையில் மகளைப் பார்த்து வைக்க, அன்னையின் கைகளை எடுத்துத் தனக்குள்ளாக வைத்துக் கொண்டாள்.

 

“சத்தியமா சொல்றேன்” எனக் கூறவும், சங்கரகோமதியே மகளின் முடிவில் மலைத்துவிட்டார். அதுவரை முகத்திலிருந்த இறுக்கம், தன்னைத் தள்ளி நிறுத்தி விட்டார்களே என்ற ஆற்றாமை எல்லாம் பின்னுக்குச் சென்று மகளுக்கு ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டுமென்ற இயல்பான தாயின் குணம் வெளிவர ஆரம்பித்தது.

 

“நிஜமாத்தான் சொல்லுதியா? பேச்சு மாற மாட்டியே” என்று கேட்டவரின் குரலில் வழிந்த ஆசுவாசத்திற்காக எதையும் செய்யலாம் என்றே நாச்சிக்குத் தோன்றியது. அவள் இல்லையென்று தலையசைக்க, சங்கரகோமதிக்கு சந்தோஷமாக இருந்தாலும் மற்றொருபுறம் சந்தேகமாகவும் இருந்தது.  

 

“நீங்க எப்பவும் போல இருப்பீங்களா?” 

 

மகள் டீல் பேச, சங்கரகோமதியின் முகத்தில் அதுவரை இருந்த இளக்கம் மறைந்தது. அவர் எதுவும் பேசாமல் தலையசைக்க, என்னவோ பெரிய பிரச்சனை முடிந்த நிம்மதி அவளிடம்.

 

“எதுக்கு ஹாஸ்பிடல் போனீங்க?”

 

அவள் திருமணப் பேச்சை விடுத்து, அன்னையின் உடல்நலத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட, அதுவரை விலகி நின்றிருந்த ஸ்ரீயும் அப்போது ஊடே வந்துவிட்டாள்.

 

“நான் என்ன பண்ணுனேனு என்மேல கோபமா இருந்தீங்க? என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல? இப்படித்தான் தனியா ஹாஸ்பிடல் போவாங்களா?” என்று முறைத்துக்கொண்டு ஸ்ரீ கேட்க, 

 

“நான் வேற யோசனைல இருந்தேன்.. அதான் யாரையும் கூப்பிடல” என்றவர்,

 

“என்னவோ திடீர்னு படபடனு வர்ற மாதிரி இருந்துச்சு.. அதான் செக்கப் பண்ண போனேன்.. பக்கத்து வீட்ல மாலாக்கா இந்த ஹாஸ்பிடல்ல நல்லா பார்க்குறதா சொன்னாங்க அதான் எப்பவும் போற ஹாஸ்பிடல் போகாம அங்க போனேன். நான் ஹாஸ்பிடல் போனேனு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?” என, ஸ்ரீ நடந்ததைக் கூறவும் சங்கரகோமதிக்கும் இன்னொருவர் வந்து இப்படிக் கேள்வி கேட்கும்படி வைத்துவிட்டோமே என்று சங்கடமாகிவிட்டது.

 

“சரி அதை விடுங்க.. ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?” என்றவர்களிடம்,

 

“ஒன்னுமில்ல பிபி கொஞ்சம் கூட இருக்குனு சொன்னாங்க” என்று சொல்ல,

 

“என்னது?” என்றனர் ஒருசேர இரு மகள்களுமே.  

 

“ஒன்னுமில்லட்டி.. தூக்கம் தொடர்ந்து பாதிச்சதால கூட இருக்கலாம்.. எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு இன்னொரு தடவை பார்த்துக்க சொல்லிருக்காங்க” என்று சங்கரகோமதி சமாதானம் சொல்ல,

 

“கோபம்னா இப்படித்தான் உங்க உடம்பைக் கெடுத்துப்பீங்களா?” என்று ஆரம்பித்து வளவளவென்று ஸ்ரீ பேச, ஏனோ அவரால் கோபம் கொள்ள முடியவில்லை. உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவர் இருக்க, நேரமாவதை உணர்ந்து சங்கரநாராயணன் தான் இரு மகள்களையும் அனுப்பி வைத்தார்.

 

கோமதி நாச்சியார் அறைக்குள் வந்ததுமே அதுவரை இல்லாத கலக்கம் அவளை வந்து ஆட்கொண்டது.  

 

‘சரிவருமா? வராதா?’ என்றெல்லாம் யோசனை ஓடவில்லை. வராது என்றே நினைத்தாள். அஜய் நினைவுக்கு வந்தான். கூடவே அவனது தந்தையும்!  

 

‘ப்ச்’ என் சலித்தபோது அவளது அலைபேசி சிணுங்க, யாரென்று பார்த்தவள் தெரியாத எண்ணாக இருக்கவும் நெற்றியைச் சுருக்கியபடி அழைப்பை உயிர்ப்பித்தாள்.

 

“ஹலோ யாரு?” என்று இவள் ஆரம்பிக்க,

 

“மம்மி நான் தேவ் பேசுறேன்” என்றான் அந்தப்பக்கம் துள்ளலாக சரண்தேவ்.

 

மம்மி என்ற அழைப்பே அவன் யாரென்று அவளுக்குப் புரிய வைத்துவிட, ஒரு நிமிடம் அடுத்து என்ன பேசவென்று புரியவில்லை. முன்பிருந்த நிலை இப்போது இல்லையே.. அஜயைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்லியாகிவிட்டது. இதில் பேசமாட்டேன் என்று முறுக்குவதில் பயனேதும் இல்லை.. அதிலும் சிறுவனின் குரலில் தெரிந்த துள்ளலைக் குறைக்கவும் அவளுக்கு மனதில்லை.

 

“சொல்லு தேவ்.. என்ன இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க? இன்னும் தூங்கலயா” என்று இவள் சாதாரணமாகப் பேச ஆரம்பிக்க, அந்தப் பக்கம் ஸ்பீக்கரில் இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அஜய் இனிமையாய் அதிர்ந்தான்.

 

“இல்ல டாடி கூட சண்டை போட்டு முடிக்கவே டைம் ஆகிடுச்சு” என்று தேவ் சலிப்பான குரலில் சொல்ல, அவன் தோரணையை ரசித்தவாறு, “எதுக்கு சண்டை?” என்றாள் நாச்சி கேள்வியாக.

 

“உங்கள பார்க்க வரும்போது என்னை விட்டுட்டு வந்துட்டாங்க.. அதுக்கு மார்னிங் சண்டை போட்டப்போ நைட் போன்ல பேச வைக்கிறேனு சொன்னாங்க.. ஆனா பேச வைக்காம ஊருக்குக் கிளம்புறாங்க” என்று அவன் அஜயைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசிக்க,

 

“உனக்கு ஸ்கூல் இருக்கும்ல.. அதான் விட்டுட்டு வந்திருப்பாங்க”

 

“நாளைக்கு எனக்கு லீவ் தான்.. நான் வரட்டுமா உங்களைப் பார்க்க?”

 

ஆவலோடு கேட்பவனிடம் உடனே மறுக்கத் தோன்றாமல், “ஆனா மம்மிக்கு வேலை இருக்கே” என்று யோசிப்பதைப் போலச் சொல்ல,

 

“ஓ” என்றான் தேவ் சுருதி குறைந்துவிட்ட குரலில்.

 

“அச்சோ இதுக்கெல்லாம் சேட் ஆவாங்களா? இன்னும் கொஞ்சநாள்.. ‌அப்புறம் மம்மி தான் அங்க வந்துடுவேனே” என்று தேவ்க்கு அவள் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க,

 

“ஹே போலீஸம்மா என்னடி சொல்ற? நிஜமாவா?” என்றான் நம்ப முடியாத சந்தோஷத்தில் அஜய்.

 

அவன் குரலைத் திடீரென்று கேட்டதும் ஜெர்க் ஆனவளுக்கு சிறுவனிடம் பேசியதைப் போல, அவனுடன் அவ்வளவு எளிதில் பேச முடியும் என்று தோன்றவில்லை.

 

“தேவ்.. மம்மிக்கு தூக்கம் வருது.. நீயும் போய் தூங்கு” என்றவள் அவனிடமும் மறுமொழியை வாங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்துப் படுத்துக் கொள்ள, இங்கே அஜய்க்குத் தலைகால் புரியவில்லை. அவன் தேவைத் தூக்கித் தட்டாமாலை சுற்ற, தந்தையின் மகிழ்விற்கான காரணம் புரியாவிடினும் தானும் அகமகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் தேவ்.

 

“சரி மம்மிட்ட பேசிட்டல்ல.. தூங்கு.. அப்பா மம்மி கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்றவன் தன் அறைக்கு வெளியே இருந்த பால்கனியில் வந்து நின்று கொண்டு அவளுக்கு அழைத்தான். முதல் அழைப்பை அவள் ஏற்காமல் விட, மறுபடியும் அழைத்தான். அந்த அழைப்பையும் நிராகரிக்கப் போனவள் பின் ஒரு பெருமூச்சுடன் அதை உயிர்ப்பித்தாள். ஆனால் பேசவில்லை.

 

எடுத்ததுமே, “ஹேய் போலீஸம்மா எப்படிடி” என்று அவன் ஆரம்பிக்க, அவள் பேசாமல் உதட்டைக் கடித்தபடி அமைதியாக இருந்தாள். அவளது அமைதியில்,

 

“வீட்ல கம்பெல் பண்ணதால சரினு சொன்னியா?” என்று அஜய் சரியாகக் கணித்துக் கேட்க, அதற்கும் அமைதி தான்.

 

ஆம் என்று சொன்னால் என்ன செய்வான்? என்று அவள் யோசிக்க, அது அவனுக்குக் கேட்டதோ என்னவோ!

 

“அதுதான் உண்மைனு எனக்குப் புரியுது. ஆனால் அப்படியாச்சும் நீ சரினு சொன்னியேனு தான் எனக்கு இப்போ இருக்கு” என்றான் குரலில் வழிந்த துள்ளலை மறைக்காமல்.

 

சற்றுமுன் தேவ் எவ்வளவு துள்ளலோடு பேசினானோ அதற்கு சற்றும் குறையாமல் அஜயின் குரலிலும் துள்ளல் வழிந்தது. அது அவளது மனதை இன்னும் பாரமேற்றியது.

 

“ரொம்ப செல்ஃபிஷா இருக்கேனா?” 

 

அவனே பதிலும் சொல்லி அவனே கேள்வியும் கேட்டுக்கொண்டிருந்தான். நாச்சி பேசவில்லை என்பதே அவனுக்கு அப்போது தான் உரைத்தது.

 

“என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. நீ பேசவே மாட்டேங்குற? எதாச்சும் பேசேன்” என்று கேட்டவன்,

 

“எனக்கு உன்னை உடனே பார்க்கணும் போல இருக்கு.. நான் வேணும்னா அங்கே வரவா?” என்றான் பரபரப்புடன். அவன் கேட்டதில் அதிர்ந்து போனவள் தன் பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, “நோ” என்றாள் அழுத்தமாக.

 

“சரி உனக்கு வேணாம்னா வேணாம். அட்லீஸ்ட் வீடியோகால்?” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே அழைப்பைத் துண்டித்துவிட்டு காணொளி வழி அழைத்திருந்தான்.

 

கோமதி நாச்சியார் பல்லைக் கடித்தபடி அதனை ஏற்றதும் திட்டுவதற்காக அவனைப் பார்த்தவள் என்ன யோசித்தோம் என்பதையே மறந்தது போல அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவனது முகத்தில் வழிந்த உணர்வு, எதிர்பார்ப்பு அனைத்தும் அவளைப் பேரலையாய் எழுந்து வாரி எடுத்துச் செல்ல, தொண்டையில் முள் சிக்கிய உணர்வு தான் அவளிடம்.

 

“எதுக்கு இப்படிப் பார்க்குற?”

 

கோபத்தை மறந்துவிட்டு கேட்டேவிட்டாள்.

 

“எப்படி பார்க்குறேன்?”

 

மென்னகையுடன் அவளிடமே திரும்பிக் கேட்டான் அஜய். அவனுக்குப் பதில் சொல்ல வேண்டி திரும்ப அவனைப் பார்த்தவள் மீண்டும் அவன் அதேபோல பார்த்து வைத்ததில் கலக்கமுற்றாள்.

 

‘இதோ இப்படித்தான்’ என்று கூற வந்தவள்,

 

“எதுக்கு இப்போ வீடியோகால் பண்ணுன?” என்று பேச்சை மாற்றினாள்.

 

அவளது கலக்கத்தில் யோசனையாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், அவளைப் பதிலே பேசாமல் பார்த்தான். முன்பிருந்த காதல் பார்வை இல்லை இது. அவளை ஊடுருவும் பார்வை அது! அவனது பார்வையில் அவளும் சளைக்காமல் நேர்பார்வை பார்க்க, அதில் புன்னகைத்துக் கொண்டவன், தன் சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு, “லவ் யூ கோம்ஸ்” என்றான் ரசனையாக.

 

அவனது பாவனையும் அதில் வழிந்த ரசனையும், போதாத குறைக்கு உயிரைக் குடிக்கும் அவன் பார்வையும் என நிலைகுலைந்து போனாள் அவள். அவனது காதல் மொழிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க, அதில் வாய்விட்டுச் சிரித்தான் அஜய்.

 

அந்தச் சிரிப்பில் அதுவரை இருந்த அந்த மூச்சுமுட்டும் உணர்விலிருந்து வெளிவந்தவள் வெடுக்கென்று, “எதுக்கு இந்த சிரிப்பு?” என்று சீற, அஜய் சிரிப்பதை நிறுத்திவிட்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவளைப் பார்த்தான். அவளுக்கு அவன் அவளைக் கிண்டல் செய்வதைப் போலவே இருந்தது.

 

“எதுக்குடி எப்போ பாரு முகத்துல முள்ளைக் கட்டிட்டே சுத்துற? கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வைச்சா குறைஞ்சா போய்டுவ?”

 

“எப்படியோ உன் ப்ளான் படி எல்லாம் நடந்த சந்தோஷத்துல நீ இருக்க.. ஆனா நான் அப்படி இல்ல”

 

கடுப்புடன் அவள் சொல்ல, 

 

“அதுனால இப்போ ஒன்னும் குறைஞ்சு போய்டல” என்றான் அவன் பதிலாக.  

 

“அதை நான் சொல்லணும்”

 

“கண்டிப்பா சொல்லுவ”

 

அவன் குரலில் தான் எத்தனை நம்பிக்கை!!! அந்த நம்பிக்கையில் அதுவரை இருந்த கோபம் மறைந்து அங்கே குற்றவுணர்வு ஆட்கொள்ள, தலையைப் பிடித்துக் கொண்டாள்.

 

“எதுக்கு இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” என்று அஜய் மென்மையாகக் கேட்டதில்,

 

“எனக்குத் தூங்கணும் அஜய்.. நான் கட் பண்றேன்” என்று சொன்னவளிடம்,

 

“சரி குட்நைட்” என்ற அஜய் அழைப்பைத் துண்டித்துவிட்டு மணியைப் பார்த்தான்.  

 

மனதிற்குள் ஏதேதோ யோசனையோடியது. அவனுக்கு அப்போதே சண்முகத்திடம் பேசவேண்டும் என்ற பரபரப்பு. பின் தூக்கத்தில் எழுப்ப வேண்டாம் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்றும் தோன்ற, நிறைவான மனதுடன் அவனும் படுக்கைக்குச் சென்றான்.  

 

அழைப்பைத் துண்டித்த நாச்சி, தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளது நியாய குணம் அவள் செய்வது சரியில்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்தது.  

 

‘அவனைக் கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லிட்டு இதென்ன டிராமா?’ என்று அவளது மனசாட்சி அவளைச் சாட, எதிர்வாதமெல்லாம் அவள் புரியவில்லை. இதில் அவளது வாழ்க்கை மட்டுமல்ல அவனது வாழ்க்கையும் அடக்கம் என்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது. யோசித்தாள். வெகுநேரம் யோசித்தாள். யோசித்து அந்த முடிவை எடுத்தாள். கஷ்டமாக இருக்கும் என்று தெரியும். ஆனாலும் முடிவை மாற்ற உத்தேசமில்லை. குழப்பம் எல்லாம் அகன்று தெளிவான மனநிலையுடன் தூங்கச் சென்றவளை மெதுமெதுவாக நித்திரை சூழ்ந்துகொண்டது.

 

அவளுக்கு நேர்மாறாக சங்கரநாராயணன் உறக்கத்தைத் தொலைத்துப் படுத்திருந்தார். அவரது மனதில் மனைவி பேசியது தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

“உங்கள மன்னிச்சுட்டேனு என்னால சொல்ல முடியாது.. இவளுக ரெண்டு பேரும் இன்னும் குடும்பம் குட்டினு பார்க்கல.. பார்க்குறப்ப புரியும் என்னோட வலி.. நாச்சி சொல்லியிருந்தா கூட நீங்க என்ட்ட வந்து சொல்லிருக்கணுமா இல்லையா?.. பின்ன நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன மரியாதை?” என்றவர் தான். அடுத்துப் பேசவே இல்லை. மாத்திரையின் வீரியத்தில் சங்கரகோமதியும் உறக்கத்தைத் தழுவ, சங்கரநாராயணன் தான் கொட்டக் கொட்ட விழித்திருந்தார். காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்று நம்புவதை விட அவருக்கும் வேறு வழியிருக்கவில்லை.

 

அவர் மட்டுமல்ல ஸ்ரீயும் அதுவரை உறங்கிய இருக்கவில்லை. வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கார்த்திக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“இதுக்குத்தான மூனு நாளா அப்செட்டா இருந்த? இப்போ நீ ஓகேவா?” என்று அவன் கேட்க,

 

“ஓகேவா வா? சந்தோஷமா இருக்கேன்டா.. கெட்டதுலயும் ஒரு நல்லதா அக்கா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க.. எவ்ளோ பெரிய விஷயம்” என்று இன்னும் நம்ப முடியாத குரலில் அவள் கூற, கார்த்திக்கிற்கும் அவளது சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

 

“ஆமா..” 

 

“எனக்குமே அக்கா கல்யாணம் வேணாம்னு சொன்னது கஷ்டம் தான். ஆனாலும் எப்பவுமே அவங்க முடிவுல சரியான காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.. அதான் அம்மா இதைப் பத்தி புலம்பும் போது, எனக்கும் வருத்தம் இருந்தாலும் அக்காவுக்கு சப்போர்ட்டா அம்மா கிட்ட பேசுவேன்.. அப்போ எனக்கும் சேர்த்து திட்டு விழும். இன்ஃபாக்ட் நான் அப்படி அக்காவுக்கு சப்போர்ட்டா பேசுனது தான் அம்மாவுக்கு பயத்தைத் தந்திருச்சு.. அதான் எனக்கு இவ்வளவு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து பேக் பண்ணிட நினைச்சாங்க.. இப்போ நிலைமை அப்படியே ஆப்போசிட்.. அம்மாவுக்கு தான் இதுல ரொம்ப ஹேப்பி”

 

விடாமல் வளவளவென்று பேச, அனைத்தையும் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக். சிறிது நேரத்தில் அவளது பேச்சு மெதுமெதுவாக அவர்களைப் பற்றி மாற, 

 

“அம்மா கிட்ட சொல்லிட்டியா?” என்று ஆரம்பித்தாள் ஸ்ரீ.

 

“அதான் உன் அக்கா கல்யாணம் செய்ய சரினு சொல்லிட்டாங்களே.. அப்போ நமக்கு டைம் இருக்குல்ல ஸ்ரீ.. ஏன் அவசரப்படுத்துற? மெதுவா பேசுவோமே” என்ற கார்த்திக்கிடம்,

 

“அவசரம் இல்ல தான்.. அதுக்காக உன்னை அப்படியே விட முடியாது.. இப்படிப் படுத்தி எடுத்தா தான் நெக்ஸ்ட் ஸ்டெப் எடுப்ப” என்றாள் ஸ்ரீ.

 

“எனக்கு மட்டும் ஆசையில்லையா? உன் அக்கா கல்யாணம் முடியட்டும்.. நானும் போய் வேலைல உட்கார்ந்துக்கிறேன்.. இப்போ சொல்றதை விட வேலைல இருந்துட்டு சொன்னா தான் எங்க அம்மாவும் கொஞ்சம் யோசிப்பாங்க ஸ்ரீ” 

 

“ஆமாடா.. அதையும் கேட்கணும்னு நினைச்சேன்.. இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணியே.. ஜாய்ன் பண்ண சொல்லிட்டாங்களா?”

 

“இன்னும் கால் லெட்டர் வரல.. மேக்ஸிமம் இந்த மன்த் எண்ட் இல்ல நெக்ஸ்ட் மன்த் ஸ்டார்ட்டிங்ல எதிர்பார்க்கலாம்னு சொல்றாங்க”

 

“அம்மா கிட்ட சொல்லிட்டியா?”

 

“இல்ல கன்பார்ம் ஆகவும் சொல்லிக்கலாம்.. நானும் வேற வேற இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன்” என்றவனிடம் ,

 

“ஆமா.. எதுல பெர்க் அண்ட் பேக்கேஜ் நல்லா இருக்கும்னு பார்த்துட்டு போய்க்கலாம்” என்றவள் இன்னும் சிறிதுநேரம் வேறு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.  

 

_________________

 

 

மிகவும் சிரமப்பட்டு பிரிக்க முடியாமல் இமைகளைப் பிரித்தாள் சாஹித்யா. உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வலி விண்விண்ணென்று தெறித்ததில், மெதுவாக முனகினாள் அவள். அதற்கு கூட உடலில் வலுவில்லாததைப் போலிருந்தது. மெதுவாகத் தன் நிலையைக் கிரகிக்க முயன்றவளுக்கு அழக்கூடத் திராணியில்லை. என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு மங்கலாக சில நினைவுகள்..!  

 

‘இது என்ன இடம்?’ என்றபடி பார்வையைச் சுழல விட்டவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. பயத்தில் எழ முயற்சிக்க, இடுப்புக்குக் கீழ் பகுதியில் சுரீரென்ற வலி! அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அந்த வலியே அவளுக்கு என்ன நடந்தது என்று கூறியிருக்க, ஏற்க முடியாமல் நிற்காமல் அவளது கன்னத்தில் கண்ணீர் வழிய, எழ முயன்று கொண்டிருந்தவள் அப்போதுதான் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப் போனாள். உடலில் தன்னாலே நடுக்கம் பரவ, அவசரமாக விழிகளை மூடிக் கொண்டாள் .

 

தடதடக்கும் அவளது நெஞ்சத்தின் சத்தம் அவளுக்கே கேட்க, அப்படியே உணர்வற்று படுத்திருந்தாள் சாஹித்யா. உள்ளே வந்தவன் அவளைக் கவனிக்காமல் வந்த வேலையில் குறியாக இருக்க, பாதி கண்ணை மட்டும் திறந்து அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தவளுக்கு நெஞ்சமே காலியான உணர்வு. அவளது கண்கள் அச்சத்தில் விரிந்து கொள்ள, திரும்பி அவளைப் பார்த்தவனும் அதிர்ந்தான். 

 

‘எப்படி முழிச்சா?’ என்று அவன் திகைப்பாகப் பார்க்க, 

 

“ப்ளீஸ் ப்ளீஸ்.. என்னை விட்ருங்க” என்று சிரமப்பட்டு அவள் சொல்ல, குரலில் விரிவியிருந்தது அச்சம் மட்டுமே.

 

‘விடுறதா? உன்னையா?’ என்று எண்ணிக் கொண்டவனின் கண்கள் அவளது நிர்வாணத்தை மொய்க்க, அதில் கூசிப் போனவள் முகத்தை அசூயையுடன் சுளிக்க, வந்தவனின் முகம் குரூரமானது. வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளது கைகளைப் பிடித்து இழுத்து செய்த வேலையில் அரண்டு போனாள்.

 

இந்த நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தில் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனது செயலுக்கு அவள் ஒத்துழைக்க மறுக்க, அதில் வெகுண்டெழுந்தவன் பொறுமையின்றி அவளுடைய முடியைக் கொத்தாகப் பற்றி ஓங்கி அறைந்தான். ஏற்கனவே உடலும் மனமும் அதீதத்திற்கும் சோர்ந்து போயிருக்க, வாங்கிய அந்த அறையில் அவளுக்குப் பொறி கலங்கியது.

 

அவ்வளவுதான்! அடுத்து நிகழ்ந்ததெல்லாம் அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம். மிருகத்தனமான அவனது தேடலில், அவளிடம் எதிர்ப்பே இல்லை. தன் தேவை முடிந்ததும் அங்கிருந்த தனது அலைபேசியை எடுத்துக் கொண்டவன் அலைபேசியில் அவனது களியாட்டங்கள் அனைத்தும் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்தவன் குரூர திருப்தியில் சிரித்துக் கொண்டான்.

 

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-37-செ

ந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

 

 

This post was modified 2 weeks ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote

You cannot copy content of this page