All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேடலின் விடை கானலோ - 3

 

VSV 17 – தேடலின் விடை கானலோ
(@vsv17)
Member Author
Joined: 3 months ago
Posts: 9
Topic starter  

அத்தியாயம் 3

 

இப்போது தான் வளர்ந்து வரும் புறநகர் பகுதி அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டி முடித்த வீடுகளும், காட்டுமானப்பணியில் இருக்கும் வீடுகளும் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

 

அதில், இந்த தெருவில் தான் அதிகபட்சமாக  ஆறு வீடுகளுக்கு கட்டுமானப்பணி முடிக்கப்பட்டு இருந்தன.

 

அதில் ஒன்றை தான் நிரோஷா சில நாட்களுக்கு முன்னர் அவளின் ஆசிரிய தோழியோடு பார்த்து விட்டு சென்றிருந்தாள்.

 

அந்த ஆறு வீடுகளும் வெளிப்புறத் தோற்றத்தில் சில ஒற்றுமைகளோடு தான் இருந்தன. ஆனால், உட்புற கட்டமைப்புகள் எல்லாம் வேறு வேறு தான்.

 

அந்த வீட்டின் உரிமையாளர் ஆசைப்பட்டு பார்த்து பார்த்து கட்டியதாகவும், ஏதோ தனிப்பட்ட காரணத்தால், அவ்வீட்டை அவசரமாக விற்றுவிட்டு வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் தான் சந்தை விலையை விட சற்று குறைவாக விற்க இருப்பதாகவும், அந்த வீட்டை காட்டிய தரகர் கூறியிருந்தார்.

 

ஆனால், அவர் கூறிய குறைந்த விலையே நிரோஷாவின் வரவு செலவு திட்டத்தை தாண்டி தான் இருந்தது. அந்த வீடும் அதற்கு ஈடாக தான் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது.

 

தனி வீடு, வீட்டை சுற்றி இருந்த சொற்ப இடத்தில் ஒரு பக்கம் வாகன தறிப்பிடமும், மறுபக்கம் புல் தரையுடன் கூடிய சிறு தோட்டமும் இருந்தன.

 

ஒற்றை மாடியுடன் கூடிய அவ்வீட்டின் முகப்பு கதவு உயிரியளவியல் (பயோமெட்ரிக்) மற்றும் எண் குறியீடு (பின்கோட்) வசதியுடன் இக்கால தொழில்நுட்ப வசதியுடன் இருந்தது. கூடுதலாக முகப்பில் சிசிடிவி வசதியும் செய்யப்பட்டிருந்தது. காவலனான ஆத்ரேயனை ஈர்த்தது இவையே!

 

நிரோஷாவிற்கோ, வீட்டின் நடுவே பகல் நேரத்தில் வெளிச்சத்தை அள்ளித்தரும் கண்ணாடியாலான விதானம், ஒரு பக்கம் ஃபிரெஞ்ச் வகை ஜன்னல், மறுபக்கம் வீட்டின் பின்பகுதிக்கு செல்ல நெகிழ் கதவு (ஸ்லைடிங் டோர்), உள்ளலங்காரம் செய்யப்பட்ட அளவான சமையலறை, அடர் நிறங்களாக அல்லாமல் சாந்தமான நிறங்களில் மிளிரும் படுக்கையறை என அவ்வீட்டிலிருந்த அனைத்தும் பிடித்துப் போனது.

 

வீட்டை திறந்து உள்ளே போன நிரோஷாவை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

 

வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றவள், மகிழ்ச்சியில் ஆர்பரித்துக் கொண்டிருந்தாள்.

 

“ரே, இங்க ஒரு பிள்ளையார் சிலை அப்பறம் ஒரு பெரிய சுருளி நிறைய தண்ணி, அதுல கலர் கலரா பூ வைக்கணும்.”

 

“ஹான், அப்பறம் இங்க வால் மவுன்டட் டிவி, கூட கொஞ்சம் டெகரெட்டிவ்ஸ்… அதெல்லாம் நான் பார்த்து வச்சுருக்கேன்.”

 

“ஹே இங்க பார்த்தீங்களா… இந்த பூஜை அலமாரி செமையா இருக்குல. எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு. வேற வீட்டுக்கு போனாலும், இதே மாதிரி வாங்கி செட் பண்ணனும்னு நினைச்சேன்.”

 

“இதோ, இது தான் நம்ம ரூம். இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா… வாக்-இன் வார்ட்ரோப்! இதெல்லாம் நான் டிவில தான் பார்த்துருக்கேன்! சூப்பர்ல!”

 

“மாடிலயும் ஒரு ரூம் வித் பால்கனி இருக்கு. மேல இருக்க இன்னொரு ஸ்பெஷல், இந்த அலமாரி தான். புக்ஸ் வைக்கிறதுக்கா இருக்குமோ? புக்ஸ் வைக்கிறதுக்கு இவ்ளோ பெரிய ஷெல்ஃபா?”

 

இப்படி அவனை பேசவே விடாமல் பேசிக் கொண்டிருந்தவளை சிரிப்பும் ரசிப்பும் கலந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் ரே!

 

“ரோஸே, எப்போயாவது என்னைப் பத்தி இவ்ளோ எக்சிபிரஷிவ்வா பேசியிருக்கியா?” என்று செல்லமாக கோபித்துக் கொண்டவன், அவளின் இறுதி சந்தேகத்தில் காண்டாகி, “ஹ்ம்ம், ஷோ ஆஃப் பண்றதுக்கா இருக்கும். நீ என்னை கொஞ்சம் கவனி டி.” என்றான்.

 

அப்போது தான் கனவுலகத்தில்  இருந்து நிகழ்விற்கு வந்த நிரோஷா, ஒரு சமாளிப்பு புன்னகையுடன், “ரொம்ப சந்தோஷமாகிட்டேன் போல. அதான் கண்ட்ரோல் இல்லாம பேசிட்டே இருந்துட்டேன்.” என்க, அவளை பின்புறமிருந்து அணைத்துக் கொண்டவன், “நம்ம வாழ்க்கை முழுக்க இங்க தான் இருக்கப் போறோம் ரோஸே. சோ, மெதுவா பொறுமையா, கண்ட்ரோல் இல்லாம பேச மட்டுமில்ல, எது வேணும்னாலும் செய்யலாம். இப்போ, அந்த ப்ரோக்கர் கிட்ட கன்ஃபார்ம் பண்ணிடலாமா? உனக்கு ஓகே தான?” என்றவனின் கரங்கள், அவளின் இடையோடு விளையாடிக் கொண்டிருந்தன.

 

அவனின் ஆக்டோபஸ் போன்ற கைகளிலிருந்து வெளியே வந்தவள், அவளை வளைத்ததற்கான தண்டனையாக அவன் கரங்களில் மெல்ல வலிக்காதவாறு (!!!) அடித்து விட்டு, “ரே, வீடு பிடிச்சுருக்கு தான். ஆனா… நம்ம பட்ஜெட் தாண்டி…” என்று அவள் இழுக்க, அவளை இழுத்து தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவனோ, பேசும் இதழை இரு விரல்களால் மூடி, “உனக்கு பிடிச்சுருக்கான்னு மட்டும் தான் டி கேட்டேன். எனக்கு ஆன்சர் கிடைச்சுருச்சு. சோ, அதை தவிர வேற பர்பஸுக்கு வேணும்னா உன் வாயை திறந்துக்கோ.” என்று கண்ணடித்துக் கூறினான்.

 

அவனை தள்ளியவளோ, “ஷப்பா, எல்லா நாளும் அந்நியனா இருக்க வேண்டியது. என்னைக்காவது ஒரு நாள், இப்படி ஃபுல் டைம்மா ரெமோவா மாறிட வேண்டியது. போலீஸ்கார், இன்னைக்கு பெர்ஃபார்மன்ஸ் கொஞ்சம் ஓவர் தான்.” என்று சொல்லிவிட்டு ஓடிவிட, “இன்னும் ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் காட்டலையே ரோஸு. அதுக்குள்ள எங்க ஓடுற?” என்று அவளை துரத்தினான் அவன்.

 

இருவரின் சிரிப்பு சத்தமும் பொருட்கள் இல்லாத அந்த வீட்டில் எதிரொலித்து நிரம்பியது.

 

**

 

தரகருக்கு தகவல் சொல்லிய ஆத்ரேயன், அவர்கள் திருமணத்திற்கு முதல் நாள் பதிவு செய்து, மற்ற வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்றும்  கூறி விட்டான்.

 

அங்கிருந்து கிளம்பும் சமயம், “ரே, கல்யாணத்துக்கு முதல் நாள் ரெஜிஸ்டிரேஷனா? முடியுமா? எவ்ளோ வேலை இருக்கு? கொஞ்ச நாள் கழிச்சு கூட வச்சுக்கலாம்ல.” என்றாள் நிரோஷா.

 

“ஹுஹும், அது எப்படி ரோஸ் மேடம் கல்யாணம் முடிஞ்சதும் என்னோட இங்க தான வரணும்!” என்றான் ஆத்ரேயன்.

 

“ஹான், அதுக்கு முதல்ல டிரெஸ், தாலி எல்லாம் வாங்கணும்!” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் நிரோஷா.

 

“அந்த வீட்டுல இருக்கும்போது ரோஸா தான இருந்த, இப்போ மட்டும் ஏன் ரோஸுல இருக்க முள்ளு மாதிரி மூஞ்சியை வச்சுருக்க?” என்று அவனவளை சீண்டியவன், “இப்போ நாம அதை எல்லாம் வாங்க தான் போறோம் மேடம். கொஞ்சம் சிரிங்க, இல்லன்னா போலீஸ்காரன் நானே உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் பண்றதா நினைச்சுக்கப் போறாங்க.” என்றான்.

 

“க்கும், சிலருக்கு கல்யாணம் பண்றதுக்கே நேரம் இல்லையாம், இதுல கடத்தல் எல்லாம்… ஹுஹும், நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க!” என்று பதிலுக்கு அவன் காலை வாரினாள் அவள்.

 

இப்படியே பேசியபடி அந்த பிரபல ஆடையகத்திற்கு வந்திருந்தனர். 

 

ஆத்ரேயன், சாதாரண உடையில் இருந்தாலும், அதிலும் அவனின் கம்பீரம் வெளிப்பட்டு விட, மரியாதையுடனே அவர்களை வரவேற்று, அவர்களுக்கு தேவையானவற்றை காட்டினர்.

 

இருவரும் பேசி சிரித்தபடி அவர்களுக்கான உடைகளை தேர்ந்தெடுத்தனர். 

 

வேறு யாரும் அவர்களின் தேர்வை விமர்சிக்க இல்லாததால், இரண்டு மணி நேரங்களிலேயே திருமணத்திற்கான ஆடைகளை தேர்ந்தெடுத்து முடித்தனர். அதில், ஆத்ரேயனுக்கான நேரம் தான் குறைவு என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

 

அடுத்து நகை கடைக்கு சென்றனர். நிரோஷா தாலி மாடலை பார்க்க செல்ல, அவளை தனியே விட்டு எங்கோ சென்றான் ஆத்ரேயன்.

 

தனக்கு தேவையானவற்றை தேர்வு செய்த நிரோஷாவோ, “ப்ச், இவரை எங்க காணோம்? கொஞ்சம் கேப் விட்டாலும் கேஸ், ஃபோன் கால்னு எங்கேயாவது போயிட வேண்டியது!” என்று கடுப்பில் முணுமுணுக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்ணோ, “சார் போலீஸா மேடம்?” என்று சிரிப்புடன் கேட்டாள்.

 

அவளுக்கு சிரிப்புடன் ஒரு தலையசைப்பை கொடுக்கும் போதே அங்கு வந்த ஆத்ரேயன், “முடிஞ்சுதா ரோஸ்?” என்றான்.

 

“ஹ்ம்ம், எல்லாம் முடிஞ்சுது? அதுக்குள்ள எங்க போனீங்க?” என்று அவள் முறைத்தபடி கேட்க, ஏதோ சமாளித்தவனாக அவளை தள்ளிக் கொண்டு பணம் செலுத்துமிடம் நோக்கி வந்தான்.

 

ஆத்ரேயன் பணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒருவன், அங்குமிங்கும் சென்றபடி, அவனையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நிரோஷாவே சந்தேகத்துடன் அவனை பார்க்கும்போது, ஆத்ரேயன் கவனிக்காமல் இருப்பானா?

 

இருப்பினும், எதுவும் கேட்காமல் அவன் பணம் செலுத்தி நிரோஷாவை நோக்கி வந்து கொண்டிருக்க, அவனை வழிமறித்த அந்த புதியவனோ, “அதி… நீதானா? இந்த பக்கம் என்ன?” என்றவனின் பார்வை, அங்கு இருவரையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிரோஷாவை தொட்டு மீண்டது.

 

ஆத்ரேயனோ கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “நீங்க யாருன்னு எனக்கு தெரியல. அண்ட் என் பேரு ஆத்ரேயன். யாரும் என் பேரை சுருக்கி கூப்பிடுறது எனக்கு பிடிக்காது. முக்கியமா எனக்கு தெரியாதவங்க அப்படி கூப்பிடுறது சுத்தமா பிடிக்காது!” என்று அழுத்தத்துடன் கூறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிரோஷாவை இழுத்துக் கொண்டு சென்றான்.

 

வாகனத்தில் செல்லும்போது கூட அவன் உம்மென்று வர, அவனைக் கண்டு நகைத்த நிரோஷாவோ, “என்னடா போலீஸ்கார் சிரிச்சுட்டே இருக்காரேன்னு யோசிச்சேன். அதுக்கு வச்சான் பாரு ஆப்புன்னு, உங்களை பத்தி தெரியாம வந்து மாட்டிக்கிட்டாரு அவரு.” என்று சிரிப்புடன் கூறினாள்.

 

அவளை திரும்பி முறைத்தவன், “உனக்கு ரொம்ப குளுகுளுன்னு இருக்கோ?” என்று கேட்க, “கூப்பிட்டது அவரு… அதுக்கு அப்போவே அவரை காய்ச்சியும் எடுத்தாச்சு. இப்போ எதுக்கு தேவையில்லாம என்மேல பாயுறீங்க?” என்றாள் அவள்.

 

அதில் சற்று தணிந்தவன், “ப்ச், அது கண்ட்ரோல் இல்லாம வந்துடுது, நான் என்ன பண்ண?” என்றான் பாவமாக!

 

“இது என்ன வியாதியோ, பேரை சுருக்குறதுக்கு கோபப்பட்டுட்டு! ஹ்ம்ம், முதல்ல நான் ‘ஆதி’ன்னு கூப்பிட்டப்போவே வள்ளுன்னு விழுந்த ஆளாச்சே நீங்க! ஆனா, சார் மட்டும் பார்த்ததும் என்னை ‘ரோஸ்’னு கூப்பிடுவாராம்!” என்று உதட்டை சுழித்தாள்.

 

அதில் இருவரின் நினைவுகளும் தன்னிச்சையாக பின்னோக்கி நகர்ந்தன.

 

**

 

இருவரின் இரண்டாம் சந்திப்பு, இருவருமே எதிர்பாராத விதமாக உணவகத்தில் நிகழ்ந்தது.

 

நிரோஷாவின் ஆசிரிய தோழியான நிர்மலாவின் திருமணம் நடக்க இருப்பதால், அவளுடன் பணிபுரியும் ஆசிரியைகளை, அந்த புகழ்பெற்ற உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தாள் நிர்மலா.

 

இதுவரை இப்படி தோழிகளுடன் வெளியே வந்திடாத நிரோஷாவோ, தடுமாற்றத்துடன் தான் அந்த சந்திப்பில் கலந்து கொண்டாள்.

 

ஒரு மணி நேரம் அவள் தாக்கு பிடித்ததே அதிகம் என்று இருக்க, அவர்களின் பேச்சு குடும்பம், பெற்றோர் என்று வந்திருக்க, அதில் ஒவ்வொருவரும் கூறியவை நிரோஷாவை ஏக்கம் என்னும் உணர்வுக்குள் தள்ளியது.

 

நிரோஷாவிற்கு பெற்றோர் இல்லாதது அவர்களுக்கும் தெரியாது. அவளே இப்போது தானே, அவர்களுடன் பேச ஆரம்பித்திருக்கிறாள்.

 

எனவே, சாதாரணமாக குடும்பம் பற்றிய கேள்வி அவளிடம் வர, முதலில் திகைத்த நிரோஷாவோ, பின்னர் மெல்லிய குரலில், அவளுக்கு யாருமில்லை என்பதை கூறினாள்.

 

அதற்கே அவளின் மனம் அடித்துக் கொண்டது. ஆனால், அவர்களோ அவள் வருந்திவிடக் கூடாது என்பதற்காக, மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்ட, அதுவே நிரோஷாவை மறுக வைத்தது.

 

“நான்… நான் கிளம்புறேன்.” என்று அக்கம்பக்கம் பார்க்காமல் எழுந்து செல்ல எத்தனிக்க, வேகமாக வந்த ஒருவனின் மீது இடித்து விட்டாள் நிரோஷா.

 

அதில், எதிரிலிருந்தவன் பாதிக்கப்பட்டானோ என்னவோ, இடித்தவள் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.

 

“சாரி… சாரி...” என்று அவனை பார்க்காமல் அவள் பதற்றத்தில் கூற, “எப்பவும் சாரி இல்லன்னா தேங்க்ஸா மிஸ்…” என்றான் அவன்.

 

அவன் குரலை எங்கோ கேட்டிருப்பது போல தோன்ற, நிமிர்ந்து பார்த்தவள் கண்டது ஆத்ரேயனை தான்.

 

அவள் அவனை பார்க்கும் இரண்டாம் முறை!

 

காவல் உடையில் இல்லாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் இருந்தான். கண்களை குளிர்க்கண்ணாடி அலங்கரித்திருந்ததால் அவனின் விழி பேசிய பாஷை அவளுக்கு தெரியவில்லை. அவள் இருக்கும் நிலையில், அவனின் நேத்திரங்களை கண்டிருந்தாலும் புரிந்து கொண்டிருப்பாளா என்பது தெரியவில்லை!

 

நொடிக்கும் குறைவாக அவனின் மீது பார்வையை செலுத்தியவள், வியப்பை விழிகளில் காட்டிவிட்டு, மறுநொடியே அதை மறைத்துக் கொண்டாள்.

 

மீண்டும் ஒரு மன்னிப்பை கேட்டுவிட்டு அவள் நகர, அவளின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள அவளை வழிமறித்தான் ஆத்ரேயன்.

 

அதே சமயம், “நிரோஷா மிஸ்…” என்று  நிர்மலா அழைத்தாள். 

 

அதில் அவனின் இதழ்கள் தானாக ‘ரோஸ்’ என்று அவளின் பெயரை சுருக்கிக் கொண்டன.

 

முதலில், அவன் வழிமறித்ததிலேயே கண்களை அகல விரித்து அவனை பார்க்க, இதில் அவனின் இதழசைப்பை அருகிலிருந்து பார்த்தவளுக்கு இதயம் நின்று மீண்டும் துடித்தது.

 

“மூச்சு விட்டுக்கோங்க மிஸ். ரோஸ்.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறியவன், “எனக்கு தெரிய வேண்டியது தெரிஞ்சுடுச்சு. இனி, நீங்க போலாம்.” என்றான்.

 

அவளோ அவனை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருக்க, அதில் அவனின் இதழ்கள் தாமாக விரிந்தாலும், வேலை அவனுக்காக காத்திருக்க, முயன்று வரவழைத்துக் கொண்ட அழுத்தக் குரலில், “என்ன பார்வை? போலீஸ்காரனையே இப்படி பப்ளிக்காக சைட்டடிக்கிறீயா?” என்றான்.

 

இம்முறை விழிகளுடன் சேர்ந்து அவளின் உதடுகளும் விரிந்து கொள்ள, “போ…” என்று சத்தம் வராமல் இதழை மட்டும் அசைத்தான்.

 

இதற்கு மேல் நின்றிருந்தால், இன்னும் என்னவெல்லாம் சொல்வானோ என்ற எண்ணத்தில் வேகமாக வெளியேறி விட்டாள்.

 

செல்லும் சமயம், அவனை திரும்பி பார்த்தவளுக்கு பதிலாக என்னவென்று புருவம் உயர்த்தி அவன் வினவ, மேலும் அங்கு நிற்பாளா என்ன?

 

அதே சமயம், “நிரோஷா மிஸ் பாவம்ல. அவங்களுக்கு யாருமில்லன்னு தெரியாம, நாம வேற பேசிட்டோம். அந்த பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே அவங்க அன்கம்ஃபர்டபிளா தான் இருந்தாங்க.” என்று நிர்மலா கவலைப்பட, விஷயம் அறிந்த ஆத்ரேயனின் இதயம், ‘அவளுக்கு நான் இருக்கேன்!’ என்று கூக்குரலிட, அதில் திகைத்து தான் போனான்.

 

எதற்கு, ஏன் என்று யோசிக்க நேரமில்லாதவன் அவனின் வேலையை கவனிக்க சென்று விட்டான்.

 

*****

 

சில நாட்களுக்கு பின்னர், மீண்டும் அவர்கள் இருவரும் சந்தித்தனர், இம்முறை நிரோஷா வேலை செய்யும் பள்ளியில்!

 

பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக வந்த தகவலில், அதை விசாரிக்க வந்திருந்தான் ஆத்ரேயன்.

 

வரும்போது அது நிரோஷா வேலை செய்யும் பள்ளி என்று அவனுக்கு தெரியாது தான். ஆனால், தெரிந்த போது?

 

சிறிது நேரத்திலேயே, அது போலியான தகவல் என்றும், அந்த பள்ளியில் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளி நிர்வாகியின் மீதிருந்த கோபத்தில் இப்படி செய்திருப்பதை கண்டுபிடித்து விட்டனர்.

 

அத்துடன் ஆத்ரேயன் அங்கு வந்த வேலை முடிந்தது தான். இருப்பினும், அவனவளை அங்கு பார்த்து விட்டு அப்படியே சென்று விடுவானா என்ன?

 

ஆம், அவனவள் தான்!

 

ஒவ்வொரு சந்திப்பிலும் மனதுக்கு நெருக்கமாக மாறி விட்டவளை மேலும் நெருங்க முடிவெடுத்து விட்டான் அவன்.

 

பள்ளி முதல்வரிடம் சென்றவன், “சார், இது சீரியஸ் இஸ்யூ. இதைப் பத்தி ஸ்டுடெண்ட்ஸுக்கு அவேர்னெஸ் வேணும்.” என்று அழுத்தத்துடன் கூற, நடந்த சம்பவத்தில் பதற்றத்தின் உச்சத்தை தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்த பள்ளி முதல்வரோ, “உண்மை தான் சார். என்ன செய்யலாம்?” என்று ஆத்ரேயனிடமே கேட்டார்.

 

அதற்காக காத்திருந்த ஆத்ரேயனோ, “ஸ்டுடெண்ட்ஸுக்கு அவேர்னெஸ் கிளாஸ் எடுக்கலாம் சார். எங்க சைட்ல இருந்து ஹெல்ப் நாங்க பண்றோம். உங்க சைட்ல, பிரசன்டேஷன் மாதிரி ரெடி பண்ணி கிளாஸ் எடுக்க ஒரு டீச்சரோட ஹெல்ப் வேணும்.” என்றவனின் பார்வை அங்கு நின்றிருந்த நிரோஷாவை தொட்டு மீண்டது.

 

நிரோஷாவோ, நடந்த நிகழ்வின் தாக்கத்தில் அதிர்ச்சியில் இருந்தவள், ஆத்ரேயனின் பார்வையில், அவனை விழிகள் விரிய பார்த்தாள்.

 

ஆத்ரேயனின் பார்வையை பள்ளி முதல்வரும் கவனித்திருந்தார். அவர் என்ன நினைத்தாரோ, “ஓகே சார், நிரோஷா மிஸ் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.” என்றார்.

 

அவர் கூறியது நிரோஷாவிற்கு அதிர்ச்சியையும் ஆத்ரேயனிற்கு மகிழ்ச்சியையும் கொடுக்க, அதை மேலும் இரட்டிப்பாக்கும் விதமாக நிரோஷாவிடம் பேசினார் பள்ளி முதல்வர்.

 

“நிரோஷா, நீங்க சார் கூட சேர்ந்து இதை முடிச்சு குடுத்துடுங்க.” என்று கூறிவிட்டு பள்ளி முதல்வர் சென்று விட, அவளருகே நெருங்கியவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “என்ன மிஸ். ரோஸ், சேரலாமா?” என்று வினவினான். 

 

அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, “ஐ மீன், சேர்ந்து வேலை பார்க்கலாமான்னு கேட்டேன்.” என்றான் ஆத்ரேயன்.

 

அதை நிரோஷா மட்டுமல்ல பாஸ்கரும் ஆச்சரியமாக தான் பார்த்தான். அவனும் ஆத்ரேயனின் இந்த அவதாரத்தை பார்த்தது இல்லையே!

 

தொடரும்...

 

ஹாய் நட்பூஸ்!

 

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழ இருக்க திரில பகிர்ந்துக்கோங்க...

 

https://kavichandranovels.com/community/topicid/35/

 

   
ReplyQuote

You cannot copy content of this page