All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேடலின் விடை கானலோ - 2

 

VSV 17 – தேடலின் விடை கானலோ
(@vsv17)
Member Author
Joined: 3 months ago
Posts: 9
Topic starter  

அத்தியாயம் 2

நிரோஷா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருப்பவள். அவளுக்கென்று ஆத்ரேயனை தவிர வேறு யாரும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, அவள் பிறந்த நொடியில் இருந்தே தனிமையில் தான் இருந்திருக்கிறாள்.

பிறந்ததும் ஆசிரம வாசலில் கிடத்தப்பட்டவளுக்கு, அந்த ஆசிரமமே பதினாறு வருடங்கள் உலகமாகிப் போனது.

அதன்பின்னர், அந்த ஆசிரம நிர்வாகியின் உதவியுடன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவள், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்ற துவங்கினாள்.

ஒரே வித்தியாசம், அவளின் வாசம் தங்கும் விடுதி என்று மாறியிருந்தது. மற்றபடி, தனிமை தான்.

சிறுவயதிலிருந்தே, அவள் மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளியே நின்று கொண்டாள். அவள் வாழ்வினால் உண்டான தாழ்வு மனப்பான்மையோ என்னவோ!

அதனால், பெரிதாக நட்பு வட்டம் அவளுக்கு இருந்ததில்லை.

அவள் தனிமையை அதிகம் நாட காரணம், சமூக திறன் குறைபாடாக இருக்கும் என்பதை அவள் வேலைக்கு சென்ற பின்னர் தான் புரிந்து கொண்டாள்.

அதனால், அதிகம் இல்லை என்றாலும் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்திருந்தாள். அதன் விளைவாக, பள்ளியில் சில ஆசிரிய நட்புக்களையும் சேர்ந்திருந்தாள்.

அதனுடன், ஆசிரியப் பணி அவள் வாழ்வையும், அதை நோக்கிய பார்வையையும் பெரிதும் மாற்றியிருந்தது.

தினம் தினம் சந்திக்கும் மாணவர்கள், அவர்களின் கள்ளம் கபடமில்லாத பேச்சு, அவர்களின் கனவுகள் ஆகியவை எல்லாம் நிரோஷாவின் சிறகுகளையும் விரியச் செய்தது.

அதுவரை, அவளுக்கென்று கனவோ லட்சியமோ இல்லாதவள், அதன் பிறகு தான் அதை தேட ஆரம்பித்தாள்.

தேடலின் முடிவில், அவள் வாழ்க்கையின் லட்சியத்தையும் கண்டு கொண்டாள்.

அவளுக்கென்று ஒரு இல்லம், அவளுக்கென்று ஒரு குடும்பம் - இதையே அவளின் லட்சியமாக்கிக் கொண்டாள்.

அதற்கான தேடலில் அவள் இறங்க, அவளுக்கு சிரமம் வைக்காமல், அவளின் விழிகளில் விழுந்தவன் தான் ஆத்ரேயன்.

இருவரின் முதல் சந்திப்பு அவரவரின் வேலை நிமித்தமே இருந்தது.

அன்று, நிரோஷாவிற்கு பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்பு இருந்தது. அது முடிந்ததும் மாணவ மாணவிகளை அனுப்பி விட்டு சற்று தாமதமாக தான் வீடு நோக்கி சென்றாள்.

பள்ளியிலிருந்து பதினைந்து நிமிட நடையில் வீடு என்பதால், எப்போதும் நடந்து தான் செல்வாள் நிரோஷா.

அன்று, மழை வெளுத்து வாங்குவதற்கு அறிகுறியாக வானம் இருண்டு காணப்பட்டது. ஆறரை மணி கூட எட்டு மணி போல காட்சியளித்தது. நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவரசமாக நடந்தாள்.

விரைவில் வீடு சென்று விட வேண்டும் என்பதற்காகவே குறுக்கு வழியில் அவள் நடைபோட, அப்போதே அவள் மனதில் ஏதோ தவறாக நடக்கப் போவதாக சஞ்சலம் உருவானது.

இருப்பினும், அவளின் அவசரம் அதற்கு மேலும் எதையும் சிந்திக்க விடாமல் தொடர்ந்து பயணம் செய்ய ஊக்க, அவளும் பெரிதாக எவ்வித நடமாட்டமும் இல்லாத அந்த வீதியில் வீசும் காற்றுக்கு போட்டியாக வேகவேகமாக நடை போட்டாள்.

அப்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த வாகனம், அவளை கடக்கும் போது, அவளின் தோள்பையை இழுக்க முயல, சட்டென்று நடந்த நிகழ்வில் நிரோஷா அதிர்ந்தாலும், வேகமாக செயல்பட்டு பையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

அதோடு, உதவிக்கு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.

அதே சமயம், வாகனத்தில் வந்தவனோ பலமாக இழுத்தான். அவன் பலத்திற்கு முன்னால் நிரோஷாவின் முழு பலமும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

அதனால் சற்று சத்தமாக, “ஹெல்ப் ஹெல்ப்…” என்று அவள் கத்த, இம்முறை பலமான ஒரே இழுப்பில் அவளை கீழே தள்ளியதோடு இல்லாமல் பையையும் அவன் பிடுங்கி இருந்தான்.

கீழே விழுந்தவளோ கை, கால்களில் உண்டான வலியுடன் நிமிர்ந்து பார்க்க, அந்த திருடன் தப்பித்து செல்லாதவாறு காவல் வாகனம் அவனை இடைமறித்து நின்றது.

அவன் இருசக்கர வாகனத்தை வளைத்து திருப்பி செல்ல முயற்சிக்க, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது காவல் வாகனம்.

அவன் எந்தப்பக்கம் சென்றாலும், காவல் வாகனமும் இடைமறித்து நிற்க, நொந்து போனவன் பறித்த தோள்பையை நிரோஷாவை நோக்கி வீசி விட, அந்த இடைவெளியில் காவல் வாகனத்திலிருந்து வெளிவந்த காவலன் அந்த திருடனை பிடித்திருந்தான்.

அவன் கன்னத்தில் இடியென அடியை இறக்கிய காவலன், மற்றொரு காவலனிடம், “அரெஸ்ட் ஹிம்!” என்றுவிட்டு, இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போய், எழாமல் வீற்றிருந்தவளை நோக்கி நடந்தான் அவன், ஆத்ரேயன்!

“ஹலோ மிஸ்… ஆர் யூ ஓகே?” என்று அவன் வினவ, அப்போது தான் நிகழ்விற்கு வந்த நிரோஷா, வேகவேகமாக எழுந்து நின்று, “சாரி… சாரி…” என்றவள், மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “தேங்க்ஸ்… தேங்க்ஸ் சார்.” என்றாள்.

அவளின் தடுமாற்றத்தில் சுவாரசியமாக பார்த்த ஆத்ரேயன், “முதல்ல ரிலாக்ஸாகுங்க மிஸ்…” என்றவன், “உங்க பேரு?” என்றான்.

அதில் பார்வையை அவனை நோக்கி திருப்பியவள் கேள்வியாக பார்க்க, அவளின் அந்த பார்வையே, முதலில் அவனை அவளை நோக்கி இழுத்தது.

அவள் பார்வையை மட்டுமல்ல அதிலிருந்த கேள்வியையும் சரியாக புரிந்து கொண்டவன், சட்டென்று அதற்கு ஒரு பதிலை கேள்வியாக உருவாக்கினான்!

“கம்ப்லைன்ட் கொடுக்கணும் தான?” என்று ஆத்ரேயன் வினவ, பயந்து போன நிரோஷாவோ, “கம்ப்லைன்ட் எல்லாம் வேண்டாம் சார்.” என்றாள்.

அத்தனை நேரமிருந்த இலகு பாவம் தொலைந்து போக, “ஏன் வேண்டாம்? திருட வந்தவன் கிட்ட என்ன கரிசனமா? இன்னைக்கு நான் வந்ததால உங்களுக்கு ஒன்னும் ஆகல. இதுவே, நாளைக்கு உங்க இடத்துல வேற யாராவது இருந்தா, அவங்க கிட்டயும் அவன் திருட முயற்சி செஞ்சா? இது ஒரு தொடர்கதையா நடந்துட்டே இருக்கும். இங்க நடக்குற பாதி குற்றங்கள், உங்களை மாதிரி கம்ப்லைன்ட் கொடுக்க தயங்குறவங்களால தான் அதிகரிச்சுட்டு இருக்கு.” என்று ஆத்ரேயன் பெரிதாக விளக்கம் கொடுக்க, அதை நிரோஷா மட்டுமல்ல பாஸ்கருமே ஆச்சரியமாக தான் பார்த்தான்.

ஆத்ரேயன் இப்படி யாரிடமும் பொறுமையாக பேசி பாஸ்கர் பார்த்தது இல்லையே!

முதலில் அவன் பேச்சை சிறிது பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நிரோஷாவோ, முடிவில் அவன் அவளை குற்றம்சாட்டுவது போலிருக்க, பொங்கி விட்டாள்.

“புகார் கொடுக்க தயங்குறீங்கன்னு விக்டிமை பிளேம் பண்றதுக்கு முன்னாடி, அதுக்கான காரணத்தை அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க சார். நீங்க பாட்டுக்கு கம்ப்லைன்ட் கொடுங்கன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. அதுக்கப்பறம் எங்களுக்கு யாரு பாதுகாப்பு கொடுப்பா? கேஸ் நடக்குற வரைக்கும் கூட நீங்க கொடுப்பீங்கன்னு வச்சுக்கலாம். அதுக்கு அப்பறம்? பாதுகாப்பை விடுங்க, இந்த சமூகம் அதுக்கப்பறம் அவங்களை நிம்மதியா வாழ விடுமா? இது சாதாரண திருட்டு கேஸ் தான். இதை விடுங்க. ஆனா, சில சென்சிட்டிவ் கேஸ்ல, விக்டிமை இந்த சமூகம் எவ்ளோ நோகடிக்குதுன்னு டெயிலியும் பார்த்துட்டு தான் இருக்கோம். இதுல, எங்க வந்து தைரியமா கம்ப்லைன்ட் கொடுக்குறது?” என்று நீளமாக பேசினாள் நிரோஷா.

இம்முறை ஆச்சரியப்படுவது ஆத்ரேயனின் முறையாகிற்று!

ஒரு பெருமூச்சுடன், “சாரி சார். கொஞ்சம் எமோஷனலாகிட்டேன். எனக்கு யாரும் இல்ல. என்னை நான் தான் பார்த்துக்கணும். இடையில, இப்படியான தொந்தரவு எதிலயும் சிக்கிக்க விரும்பல. புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்குறேன்.” என்றவள், அவன் பதிலுக்காக கூட காத்திருக்காமல் சென்று விட்டாள்.

செல்பவளையே பொருள் விளங்காத பாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆத்ரேயன்.

அவளுக்கு யாருமில்லை என்று சொன்ன போது, அவளுக்காக முதல் முறை துடித்தது அவன் இதயம்!

அதைப் பற்றி மேலும் யோசிக்கும் முன்னர், “சார், அவனை என்ன செய்றது?” என்று பாஸ்கர் கேட்க, யோசனையிலிருந்து வெளிவந்த ஆத்ரேயனோ, “ஸ்டேஷன் கூட்டிட்டு போய், அவன் மேல ப்ரீவியஸா எதுவும் கேஸ் இருக்கான்னு பார்த்துட்டு, வார்ன் பண்ணிட்டு விடுவோம் பாஸ்கர்.” என்றான் ஆத்ரேயன்.

**

ஆத்ரேயனை காவலனாக கண்ட முதல் சந்திப்பை எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தாள் நிரோஷா.

முழுப்பரிட்சை விடுமுறையில் இருந்தவளின் நேரம் முழுவதும் அவர்களின் திருமணத்தை திட்டமிடுவதிலேயே கழிந்தது.

முதலில், இருவரும் சேர்ந்து திட்டமிடுவதாக தான் இருந்தது. ஆனால், ஆத்ரேயனின் வேலை, அவனை அத்தனை எளிதில் விட்டுவிடவில்லை.

ஒரு வழக்கை முடித்தால், அடுத்தது என்று வந்து கொண்டே தான் இருந்தது.

காவலன் என்றால் சும்மாவா?

அதில் நிரோஷா தான் அலுத்துக் கொள்வாள்.

“கடைசில என்னை விட்டுட்டு உங்க வேலையை தான் கல்யாணம் பண்ணப் போறீங்க பாருங்க.” என்று ஒருமுறை பொறிந்தாள் என்றால், “ப்ச், உங்களுக்கே எவ்ளோ வேலை இருக்கு. இதுல, கல்யாண அலைச்சல் வேறயா? நானே பார்த்துக்குறேன்.” என்று மறுமுறை அனுசரணையாக பேசுவாள்.

இருப்பினும், திருமணத்திற்கான அழைப்பிதழை தேர்ந்தெடுப்பது, மாங்கல்யம், திருமண உடைகள் தேர்ந்தெடுப்பது போன்றவற்றிக்கு அவனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். 

மணப்பெண்ணிற்கு இந்த ஆசை கூட இல்லை என்றால் தான் ஆச்சரியம்!

சென்ற வாரம் எப்படியோ நேரம் ஒதுக்கி அழைப்பிதழை தேர்ந்தெடுக்க வந்து விட்டான். ஆனால், உடை மற்றும் தாலி வாங்க தான் அவனால் நேரம் ஒதுக்க முடியவில்லை.

திருமணத்திற்கு பத்து நாட்களே உள்ள நிலையில், இன்னும் முக்கியமானவற்றை வாங்கவில்லையே என்ற பதற்றம் அவளுக்கு!

அதன் விளைவாக அவர்களுக்குள் மூண்ட பனிப்போரை ஒற்றை செய்தியில் வெற்றிகரமாக முடித்து வைத்திருந்தான் ஆத்ரேயன்.

இதோ, அது இப்போது தான் நம் நாயகிக்கு உரைத்திருக்க, “ஃபிராடு போலீஸ்! இவரு மேல கோபமா இருக்க முடியுதா? கடைசில சாரி கூட கேட்காம, என்னை பேச வச்சுட்டாரு.”என்று சலித்துக் கொண்டே, அவளின் ஆசிரிய நட்புக்களுக்கு அழைப்பிதழ் வைக்க ஆயத்தமானாள்.

**

சாந்தினி கொலை வழக்கில் சுரேஷ் தான் குற்றவாளி என்று குற்றப்பத்திரிக்கை தயார் செய்து, அதற்கு சுரேஷின் வாக்குமூலத்தை பதிவு செய்து முடித்த ஆத்ரேயன், மீதி வேலைகளை பாஸ்கரை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி விட்டான்.

செல்லும் வழியில் நிரோஷாவிற்கு அழைக்க, அவள் வேண்டுமென்றே அவன் அழைப்பை ஏற்காமல் விட, “பிடிவாதக்காரி, இன்னைக்கும் போகலைன்னா, கல்யாணமே வேண்டாம்னு நிப்பாட்டுனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல!” என்று முணுமுணுத்துக் கொண்டே, அவன் இல்லத்திற்கு சென்றவன், அவனை சுத்தப்படுத்திக் கொண்டு, அவளின் இல்லம் நோக்கி அவனின் தனிப்பட்ட வாகனத்தை செலுத்தினான்.

செல்லும் வழியில், ‘ஐ’ம் ஆன் தி வே ரோஸு’ என்ற செய்தியை அனுப்ப, அதற்கும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“லவ் பண்றதுக்கு முன்னாடி எல்லாம் பிள்ளப்பூச்சி மாதிரி இருந்தா. இப்போ என்னை வச்சு செய்யுறா!” என்று செல்லமாக அலுத்துக் கொண்டே, அவளின் வீட்டிற்கு முன்னே வாகனத்தை நிறுத்தினான் அவன்.

அங்கு வாசலிலேயே அவனவள் தயாராக இருக்க, கண்களை மறைத்த குளிர்க்கண்ணாடியை கழட்டியவாறே ஆத்ரேயன் வாகனத்திலிருந்து இறங்க, அவளோ அவனை பார்க்காமல் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டாள்.

‘ஷப்பா, இவளை மலையிறக்குறது பெரும் பாடா இருக்கும் போலயே!’ என்று எண்ணியவாறே வாகனத்தை கிளப்பினான்.

செல்லும் போதும், “ரோஸே, ரோஸ் பவுடர் போடாமலேயே ரெட் ரோஸ் மாதிரி இருக்கியே, என்ன சீக்ரெட்?” என்று அவளை அவன் வம்பிழுத்தாலும், முறைப்பு ஒன்றே பதிலாக கிடைத்தது அவனுக்கு.

“க்கும், ரோஸு பேசாதோ?” என்று அவனும் விடாமல் பேசிக் கொண்டே வாகனத்தை செலுத்தினான். அவன் பேசுவதெல்லாம் அவளிடம்மட்டும் தானே! 

அத்தனை நேரம் இடைவிடாமல் பேசிய போதெல்லாம் அமைதியாக இருந்த நிரோஷா, சட்டென்று, “ரூட் மாறி போயிட்டு இருக்கீங்க.” என்று பல்லைக் கடிக்க, “பரவாலையே, மேடம் இந்த உலகத்துல தான் இருக்கீங்க போல!” என்றானே தவிர, காரணத்தை சொல்லவில்லை.

“ப்ச், என்னமோ பண்ணுங்க. ஏற்கனவே, எல்லாம் லேட்டு! கடைசி நேரத்துல தான் இப்படி…” என்று புலம்பிக் கொண்டே வந்தவள், வாகனம் பயணிக்கும் திசையை பார்த்து கண்களை விரித்தாள்.

உடனே அருகிலிருந்தவனை நோக்கி திரும்பியவள், விழிமொழி பேச, “பார் றா, ரோஸோட கண்ணு கூட பேசுது!” என்று அதற்கும் கேலி செய்தான்.

“ப்ச் ரே, நாம இப்போ எங்க போறோம்?” என்று ஆவலை கட்டிப்படுத்திக் கொண்டு அவள் வினவ, “நான் தான் அப்போவே சொன்னேனே ரோஸு, உன்னை முழுசா என்னோடவளா மாத்துறதுக்கு முன்னாடி, உன்னோட ஆசையை, உன் லட்சியத்தோட ஒரு பார்ட்டை நிறைவேத்தி வைப்பேன்னு.” என்று அவன் கூறும்போதே, அவனை பக்கவாட்டாக அணைத்துக் கொண்டாள் நிரோஷா.

அவள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதைக் கண்டு கொண்ட ஆத்ரேயனோ, அவளை சமன்படுத்த வேண்டி, “ஹ்ம்ம், இன்னொரு பார்ட்டையும் முடிக்கலாம்னா, நீ தான் கேட்க மாட்டிங்குற. கல்யாணம் முடிஞ்சா தான்னு என் கையை கட்டிப்போட்டுட்ட!” என்று வேண்டுமென்றே சலிப்பாக கூறினான்.

அதில் அவனை விட்டு விலகியவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதே முதலில் புரியவில்லை. அது புரிந்ததும், அவனை செல்லமாக அடித்தவள், “ரே, கொஞ்ச நேரமாச்சும் ஃபீல் பண்ண விடுறீங்களா?” என்று அவளும் செல்லமாக அலுத்துக் கொண்டாள்.

“நீ தேவையில்லாததை நினைச்சு ஃபீல் பண்றதுக்கு பதிலா, உன் ரேவை நினைச்சு ஃபீல் பண்ணலாம்.” என்று அவன் கூற, “அதை விடுங்க, உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கண்கள் விரிய வினவினாள் அவள்.

“மேடமோட எல்லா மூவும் எனக்கு அத்துப்படி! உன் ஃபிரெண்டோட இந்த வீட்டுக்கு போய் பார்த்தது, அந்த வீடு உனக்கு ரொம்ப பிடிச்சு போனது, வீடு பட்ஜெட் தாண்டி போனதுல நீ அப்செட்டானதுன்னு எல்லாமே எனக்கு தெரியும்.” என்றான் அவன்.

அவனின் இறுதி வரியில் மீண்டும் சுருங்கிப் போனவளோ, “ஆமா ரே, அந்த வீடு நம்ம பட்ஜெட்டுக்கு அதிகம் தான்.” என்று அவள் சோர்வுடன் கூற, “ச்சு, உடனே க்ரை-பேபி மோடுக்கு போயிடாத ரோஸே! நம்ம பட்ஜெட் விட கொஞ்சம் அதிகமாகிடுச்சு, அவ்ளோ தான? ரிலாக்ஸ், என் குடும்பத்தோட பூர்விக சொத்து ஒன்னு இருக்கு. அதை விக்க சொல்லி கேட்டுருக்கேன். அதை வச்சு வாங்கிடலாம் ரோஸ். டோன்ட் வொரி.” என்றான்.

“பூர்விக சொத்துன்னு சொல்றீங்க… அதை விக்க வேண்டாம் ரே. நாம வேற வீடு பார்த்துக்கலாம்.” என்று அவள் வேகமாக மறுக்க, “ஷ், உனக்கு இந்த வீடு பிடிச்சுடுச்சுல. சோ, இனி அது நம்ம வீடு. நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, என் குடும்பத்தோட நான் ரொம்ப ஒட்டுதல் இல்லன்னு. அதுவும், இப்போ என்னை தவிர யாரும் இல்ல. சோ, அது சும்மா இருக்குறதுக்கு, நம்ம வீட்டுக்காவது யூஸாகட்டுமே!” என்றான்.

அப்போதும் சமாதானமாகாமல் இருந்தவளை கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்திருந்தான் அந்த காவலன்!

எல்லாம் அவள் அந்த வீட்டை பார்க்கும் வரை தான். அதைக் கண்டதும் அவளே அறியாமல் ஒருவித பரவசம் அவளை ஆட்கொண்டது. அது அந்த வீட்டின் மீதிருந்த பிரியமா, இல்லை அவளின் கனவு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியா என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.

கவனம் வாகனத்தில் இருந்தாலும், அவ்வபோது அவளை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் வதனத்தில் தெரியும் வர்ணஜாலத்தில் சொக்கி தான் போனான்.

வாகனத்தை அந்த வீட்டின் முன் நிறுத்தியவன், “ரோஸே, இந்த வீடு உனக்கு அவ்ளோ பிடிச்சுருக்கா? என்னைக்காவது என்னை இப்படி பார்த்துருக்கியா? ஹ்ம்ம், அந்த வீட்டுக்கு இருக்க லக் கூட எனக்கு இல்ல போல!” என்று புலம்பியவனை திகைக்க செய்யும் விதமாக, அவன் கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடி விட்டாள்.

“அடியேய் ரோஸு, இதெல்லாம் முத்தம்னு சொன்னா, அந்த முத்தம் கூட கோச்சுக்கும்!” என்று உல்லாச மனநிலையில் அவனும் வாகனத்திலிருந்து இறங்கினான், அன்றைய நாளின் முடிவில் அது மொத்தமாக நீங்கி விடும் என்பதை அறியாதவனாக!

தொடரும்...

 

ஹாய் நட்பூஸ்!

 

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழ இருக்கும் திரில பகிர்ந்துக்கோங்க...

 

https://kavichandranovels.com/community/topicid/35/


   
ReplyQuote

You cannot copy content of this page