All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேடலின் விடை கானலோ - 1

 

VSV 17 – தேடலின் விடை கானலோ
(@vsv17)
Member Author
Joined: 3 months ago
Posts: 9
Topic starter  

அத்தியாயம் 1

 

விடிந்ததும் விடியாத காலை நேரத்தில், அமைதியாக இருந்த அந்த வீதியினுள்ளே புழுதி பறக்க வந்து நின்றது அந்த வாகனம். அதன் முகப்பு கண்ணாடியில் சிவப்பு வண்ணத்தில் “காவல்” என்ற எழுத்துகள் இடம் பெற்றிருந்தன.

 

அந்த வாகனத்திற்குள் இருந்து, ஆறடியை தொட்டு விடும் உயரத்தில், காவல் துறைக்கான கம்பீரம் சற்றும் குறையாத வகையில், கண்களிலிருந்த கருப்புக் கண்ணாடியை கழட்டியவாறு இறங்கினான் ஆத்ரேயன், அந்த பகுதியின் காவல் ஆய்வாளன்.

 

அவன் வதனத்திலிருந்த தேஜஸே, அவன் வேலையின் மீதிருக்கும் பிடித்தத்தையும், காவலனாக அவன் காட்டும் கெடுபிடியையும் கட்டியம் கூறியது.

 

இதோ, வாகனத்திலிருந்து இறங்கியது முதலே அவனின் புலன்கள் அவற்றின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டன. வேலை என்று வந்து விட்டால், அத்தனை எளிதில் அதிலிருந்து அவன் கவனத்தை திருப்பி விட முடியாது!

 

“பாஸ்கர்…” என்று அவனுடன் வந்திருந்த காவலனை அழைத்த ஆத்ரேயன், கண்களை காட்ட, சில வருடங்களாக அவனுடன் வேலை செய்து பழகிய பாஸ்கரோ, அவனின் விழிமொழியை சரியாக படித்தவாறு முன்னேறி சென்றான்.

 

அது தான் ஆத்ரேயன். தேவையில்லாமல் அதிகம் பேச மாட்டான். அதே சமயம், பேச வேண்டிய இடத்தில் பேசாமல் விட மாட்டான். மொத்தத்தில், கண்ணசைவில் வேலை வாங்கி விடும் திறமை மிக்கவன். அதுவே, அவனை சிறந்த காவலனாக உருவாக்கியும் இருந்தது.

 

சுற்றி இருந்த சூழலை மனதிற்குள் கிரகித்தபடியே அந்த வீட்டின் முகப்பை அடைந்திருந்தான் ஆத்ரேயன்.

 

அவனுக்கு முன்னே சென்றிருந்த பாஸ்கர் அழைப்பு மணியை ஒலிக்க விட்டிருக்க, கையில் குழந்தையை வைத்துக் கொண்டு கதவை திறந்திருந்தான் அந்த வீட்டின் தலைவன் சுரேஷ்.

 

அந்த காலை நேரத்தில் காவலர்களை எதிர்பார்க்காமல் திகைத்த சுரேஷ், சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு, “வாங்க சார். சாந்தினி பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?” என்று வினவினான், அவர்கள்  உள்ளே நுழைய வழிவிட்டபடியே.

 

வீட்டை பார்வையால் அளந்து கொண்டே உள்ளே நுழைந்த ஆத்ரேயனோ, “அதை நீங்க தான் சொல்லணும் சுரேஷ்.” என்றபடி கூடத்தை அடைந்தான்.

 

அதில் சிறிது பதறினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அதான் நேத்தே சொல்லிட்டேனே சார். சாந்தினி காணோம்… வழக்கமா சண்டை போட்டா அவளோட ஃபிரெண்டு வீட்டுக்கு போவா. ஆனா, இந்த முறை எங்க போனான்னு தெரியல.” என்று முன்தினம் புகார் கொடுத்த போது கூறியவைகளை சுருக்கமாக கூறினான் சுரேஷ்.

 

“ஹ்ம்ம், எல்லாத்தையும் சொல்லலையே சுரேஷ் நீங்க!” என்று சாதாரணமாக கூறிய ஆத்ரேயன், பாஸ்கருக்கு கண்களை காட்ட, அவனின் குரலும் கண்ஜாடையும் சுரேஷுக்கு நடுக்கத்தை வரவைக்க போதுமானதாக இருந்தது.

 

“சொல்லுங்க சுரேஷ், அடிக்கடி உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சண்டை வரும் போலயே?” என்று ஆத்ரேயன் வினவ, “அது சார்… சாதாரணமா ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபுக்கு இடையில வர சண்டை தான் சார்.” என்று பதற்றத்துடன் கூறினான் சுரேஷ்.

 

“ரிலாக்ஸ் சுரேஷ், இது இன்வெஸ்டிகேஷன்ல ஒரு பகுதி தான். உங்களுக்கே தெரிஞ்சுருக்கும், ஒய்ஃப் காணாம போனா, நாங்க முதல்ல சந்தேகப்படுறது அவங்க ஹஸ்பண்டை தான்.” என்று ஆத்ரேயன் கூற, சுரேஷுக்கு வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

 

“அட, இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டி. குழந்தையை எவ்ளோ நேரமா கையில வச்சுருப்பீங்க? குழந்தையை பார்த்துக்க வேற யாரும் இல்லையா?” என்று அடுத்த கேள்வியை வினவினான் ஆத்ரேயன்.

 

அதற்குள் இன்னும் சிலர் வீட்டிற்குள் நுழைய, எழுந்து நின்றே விட்டான் சுரேஷ்.

 

“சும்மா சும்மா பதட்டப்படாதீங்க சுரேஷ். குழந்தை முழிச்சுக்க போறான்.” என்ற ஆத்ரேயன், வந்தவர்களை சுட்டிக் காட்டி, “இவங்க ஃபாரன்சிக் ஆளுங்க. அவங்க, அவங்க வேலையை பார்ப்பாங்க. நீங்க உட்காருங்க, நாம பேசுவோம்.” என்றான் ஆத்ரேயன் சாவகாசமாக.

 

உள்ளுக்குள் பதறினாலும், வேறு வழியில்லாமல் ஆத்ரேயனுக்கு சற்று தள்ளி அமர்ந்தான் சுரேஷ்.

 

“ஹ்ம்ம், சொல்லுங்க… வேற யாரும் இல்லையா?” என்று ஆத்ரேயன் மீண்டும் வினவ, “லவ் மேரேஜ் சார். ரெண்டு பேரோட வீட்டுலயும் இன்னும் அக்செப்ட் பண்ணல.” என்றான் சுரேஷ்.

 

அவன் பார்வை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை ஆத்ரேயன் கண்டு கொண்டாலும், அதைப் பற்றி எதுவும் சொல்லாமல், “ஓஹ், உங்க ஒய்ஃப் காணாம போயிட்டது சொல்லியும் கூட வரலையா?” என்று வினவினான்.

 

“இல்ல சார், அதைப் பத்தி இன்னும் சொல்லல.” என்று தலை குனிந்திருந்த  சுரேஷ் மெதுவாக கூற, “ஏன், கொலை செஞ்சது தெரிஞ்சதுக்கு அப்பறம் மொத்தமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டீங்களோ?” என்று ஆத்ரேயன் கேட்க, வெளிப்படையாகவே பதறிய சுரேஷ், “என்ன சார் சொல்றீங்க? கொலையா?” என்றவன், சற்று நிதானித்து, “சாந்தினியை… அவ இறந்துட்டாளா?” என்று கேட்டான்.

 

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த ஆத்ரேயனோ உதட்டைப் பிதுக்கி, “இன்னும் கன்ஃபார்ம் ஆகல. ஆனா, இது மாதிரி கேஸ் இப்படி தான் முடியும். சோ, வெயிட் பண்ணுவோம்.” என்று கூறும்போதே, அங்கு வந்த தடயவியல் நிபுணர் ஒருவர் ஆத்ரேயனிடம் ரகசியமாக ஏதோ கூற, “ஃபைன், ரொம்ப வெயிட் பண்ண வேண்டியது இல்ல. நீங்க வாயை திறந்தாலே போதும்.” என்று சுரேஷிடம் கூறினான்.

 

வியர்வை ஆறாக பெருக, அதை துடைத்துக் கொண்டே, “என்ன சார் சொல்லணும்?” என்று சுரேஷ் வினவ, “உங்க ஒய்ஃபை ஏன் கொலை செஞ்சீங்கன்னு சொல்லணும். அதோட, இப்போ அவங்க இறந்த உடலை எங்க மறைச்சு வச்சுருக்கீங்கன்னு சொல்லணும். அவ்ளோ தான். வெரி சிம்பிள்.” என்றான் ஆத்ரேயன்.

 

“சார்… என்ன இது? நான்… நான் எப்படி?” என்று சுரேஷ் திக்கித் திணற, “பாஸ்கர், சார் இன்னும் வேஷத்தை கலைக்க விரும்பல போலயே. ஒருவேளை இடத்தை மாத்தினா, பதில் வருமோ?” என்று ஆத்ரேயன் நக்கலாக கூற, “இடத்தை மாத்தினா பத்தாது போல சார். நம்ம ட்ரீட்மெண்ட்டையும் மாத்தணும் போல.” என்று பாஸ்கரும் பதிலுக்கு நக்கலாக உரைத்தான்.

 

“சரி மாத்திடுவோம். வாங்க சுரேஷ்…” என்றவாறே ஆத்ரேயன் எழ முற்பட, “சார், என்ன இது? என்னை ஏன் சந்தேகப்படுறீங்க? நான் எதுக்கு உங்க கூட வரணும்?” என்று சற்று தைரியமாகவே கேட்டிருந்தான் சுரேஷ்.

 

அத்தனை நேரமிருந்த பதற்றம் ஒரு ஓரத்தில் இருந்தபோதும், ஒருவித நம்பிக்கை அவன் விழிகளில் தெரிவதைக் கண்ட ஆத்ரேயன் அந்த நொடி உறுதி செய்து விட்டான், அவன் எதிரிலிருப்பவன் தான் குற்றவாளி என்று!

 

“ஓஹ், சாருக்கு காரணம் வேணுமா? காட்டிட்டா போச்சு!” என்ற ஆத்ரேயன், “பாஸ்கர்…” என்று குரல் கொடுக்க, அவன் கரத்தில் அலைபேசியை வைத்திருந்தான் பாஸ்கர்.

 

அதில் எதையோ தேடிக் கொண்டே, “நைட்டு சண்டை போட்டு உங்க ஒய்ஃப் எப்போ வெளிய போனாங்கன்னு சொன்னீங்க மிஸ்டர். சுரேஷ்?” என்று கேட்டான் ஆத்ரேயன்.

 

சுரேஷோ எச்சிலை விழுங்கியபடி, “எட்டு மணிக்கு.” என்று கூற, “அதுக்கப்பறம் அவங்க வரலைன்னு தான சொன்னீங்க?” என்று கேட்டு உறுதி செய்து கொண்ட ஆத்ரேயன், சுரேஷின் வீடிருக்கும் தெருவிலுள்ள ஒரு கடையின் சிசிடிவி காட்சியை ஓடவிட்டு, “அப்போ பத்து மணிக்கு வந்த இவங்க யாரு சுரேஷ்?” என்றான்.

 

அதைக் கண்டதும் மூச்சு விட கூட மறந்தவனாக சுரேஷ் நிற்க, “உங்க வீட்டு சிசிடிவி ஃபூட்டேஜ்ஜை டெலிட் பண்ணிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களோ? அப்படி ஒரு கான்ஃபிடன்ஸ், ஹும்? சரி, இப்போ கிளம்பலாமா?” என்றான் ஆத்ரேயன்.

 

“இது… இது… இதை வச்சு அவ வீட்டுக்கு தான் வந்தான்னு எப்படி சொல்ல முடியும்?” என்று சுரேஷ் வீம்பாக வினவ, “வீட்டுக்கு வந்தது மட்டுமில்ல, இதோ இதே ஹால்ல அவங்களை கொலை செஞ்சது முதல் பெட் ரூமுக்கு இழுத்துட்டு போய் கொடூரமா பார்ட் பார்ட்டா பார்செல் செஞ்சது வரை தெரிஞ்சு போச்சு. இப்போ என்ன தெரியணும்னா, அந்த பார்செல் எல்லாம் எங்க?” என்று நிறுத்தி நிதானமாக கேட்டான் ஆத்ரேயன்.

 

அவன் செய்ததை அருகிலிருந்து பார்த்தது போல கூறுபவனை அதிர்ச்சியுடன் பார்த்த சுரேஷ், நீள்சாய்விருக்கையில் பொத்தென்று அமர்ந்தபடி, “எப்படி?” என்று தனக்குத்தானே முணுமுணுக்க, “கொலை செஞ்சுட்டு கூலா டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் போய் ஷாப்பிங் செஞ்சது மறந்துடுச்சா மிஸ்டர். சுரேஷ்? அதுவும் மூணு பாட்டில் ஃப்ளோர் கிளீனர்! அதுவும் எப்படி, மூடப் போன கடையை திறக்க வச்சு வாங்கியிருக்கீங்க! மறந்துடுச்சா என்ன? கிளீனர் போட்டு துடைச்சா போறதுக்கு அது என்ன சாஸா? பிளட் யூ பா----! ஃபாரன்சிக் ஆஃபிஸர் என்ன சொன்னாரு தெரியுமா? ‘ஷீ மஸ்ட் பி இம்மர்ஸ்ட் இன் பூல் ஆஃப் பிளட்’னு சொல்லிட்டு போறாரு. சரி தான?” என்றான் ஆத்ரேயன், 

 

மேலும், “கொலை செஞ்சுட்டு அதை தைரியமா கம்ப்லைன்ட் வேற குடுத்துருக்க. இவங்க எப்படி கண்டுபிடிப்பாங்கங்கிற தெனாவெட்டு தான! ஒரு குற்றவாளி, உனக்கே இவ்ளோ விஷயம் தெரியுறப்போ, இதுக்காகவே டிரெயினான எங்களுக்கு எப்படி கண்டுபிடிக்கணும்னு தெரியாதா என்ன? இப்போ எல்லாம் கிளியர் தான? போலாமா?” என்றான்.

 

சுரேஷோ தலை குனிந்தபடி எழுந்து நிற்க, “பாஸ்கர் குழந்தையை வாங்கிக்கோங்க. அந்த பொண்ணோட பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணி வர சொல்லுங்க. இன்னைக்குள்ள இந்த கேஸ் முடிஞ்சுடும்.” என்ற ஆத்ரேயன் சுரேஷை பார்க்க, அவன் பார்வையில் மற்றவற்றையும் இன்றைக்குள் சொல்லி விட வேண்டும் என்ற செய்தி ஒளிந்திருந்தது.

 

இரு காவலர்கள் சுரேஷை அழைத்து செல்ல, அவர்களை பின்தொடர்ந்தனர் ஆத்ரேயனும் பாஸ்கரும்.

 

“சார், எப்படி சுரேஷ் தான் கல்ப்ரிட்னு கண்டுபிடிச்சீங்க? அதுவும், ஃபாரன்சிக் ரிப்போர்ட் வரதுக்கு முன்னாடியே நீங்க கான்ஃபிடன்ஸா இருந்தீங்களே.” என்று தூங்கும் குழந்தையை ஏந்தியபடி பாஸ்கர் வினவ, “இன்ட்யூஷன் தான் பாஸ்கர். போலீஸ்காரனுக்கு ரொம்ப முக்கியமானது இந்த இன்ட்யூஷன் தான்!” என்றான் ஆத்ரேயன்.

 

அப்போது லேசாக சிணுங்கிய குழந்தையை பார்த்த பாஸ்கர், “சார், இன்வெஸ்டிகேஷன் டைம்ல எப்படி குழந்தையை வச்சுருக்குறது? விக்டிமோட பேரண்ட்ஸ் எப்போ வருவாங்கன்னு வேற தெரியல.” என்று பாஸ்கர் கூற, “அதுவும் சரி தான். அதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்வோம்.” என்ற ஆத்ரேயனின் இதழ்கள் அதிசயமாக விரிந்தன.

 

அந்த அதிசயத்திற்கான காரணம் யாரென்று அறிந்து கொண்ட பாஸ்கரும் சிறு சிரிப்புடன் முன்னே சென்று விட, ஆத்ரேயன் யாருக்கோ செய்தியை அனுப்பி விட்டு அவன் வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

 

*****

 

அதிகாலை நேரம்… குளிரூட்டியின் சத்தம் மட்டும் அங்கு ஆட்சி செய்ய, ஆளை உள்ளிழுத்துக் கொள்ளும் மெத்தையில் சுகமாக சயனத்தில் இருந்தாள் அவள்.

 

அவள் உறக்கத்தை கெடுப்பதை போல அலைபேசி ஒலியெழுப்ப, “ஷப்பா, இந்த போலீஸ்காரருக்கு வேற வேலையே இல்ல. அவர் தான் தூங்காம ராக்கோழி மாதிரி சுத்திட்டு இருக்காருன்னா, என்னையும் தூங்க விட மாட்டிங்குறாரு.” என்று கண்களை மூடிக் கொண்ட புலம்பியவள், ஒற்றை கண்ணை திறந்து வந்திருந்த செய்தியை பார்த்தாள்.

 

கண்டவள் பதறித்தான் போனாள்!

 

‘கம் டூ ஸ்டேஷன். அர்ஜெண்ட்!’ என்றிருந்ததை பார்த்து பதறாமல் எப்படி இருக்க முடியும்?

 

உடனே, தூக்கத்தை தொலைத்தவள், அவனுக்கு அழைப்பு விடுக்க, அவன் ஏற்காமல் போக்கு காட்டினான்.

 

“இடியட் ரே! கால் அட்டெண்ட் பண்ணுங்க.” என்று சொல்லிக் கொண்டே வேகவேகமாக கிளம்பினாள்.

 

பத்து நிமிடங்களில் அதிவிரைவாக கிளம்பியவள், தொடர்ந்து அவனுக்கு அழைப்பு விடுத்து கொண்டு தான் இருந்தாள்.

 

ஆனால், அவன் ஏற்க வேண்டுமே!

 

“ஓஹ் காட்! இவரை வச்சுக்கிட்டு நிம்மதியா ஒரு நைட்டையாவது கடக்க முடியுதா?” என்று திட்டிக் கொண்டே அவளின் வெஸ்பாவை உயிர்ப்பித்து காவல் நிலையம் நோக்கி செலுத்தினாள்.

 

செல்லும் வழியெல்லாம் அவனை திட்டிக் கொண்டு தான் சென்றாள்.

 

ஒருவழியாக, அவள் காவல் நிலையத்தை அடைய, அவளுக்காக காத்திருந்ததை போல பாஸ்கர், “மேம், கொஞ்ச நேரம் குழந்தையை பார்த்துப்பீங்களாம்.” என்று குழந்தையை அவளிடம் ஒப்படைத்து விட்டு, வேலை முடிந்தது என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான்.

 

அவளா சும்மா விடுவாள்?

 

“இதுக்கு தான் உங்க சார் அப்படி மெசேஜ் அனுப்பி என்னை பயமுறுத்துனாராமா?” என்று அவள் வினவ, பாஸ்கரோ சிரித்துக் கொண்டே, “அவரு மெசேஜ் அனுப்புறதும், நீங்க பதறிட்டு வரதும் புதுசாவா நடக்குது மேம்?” என்று கேலியாக கேட்டான்.

 

“யூ டூ அண்ணா!” என்றவள், “எங்க உங்க ‘சார்’?” என்று சாரை மட்டும் அழுத்தி வினவ, “இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு மேம். நீங்க ரூம்ல வெயிட் பண்றீங்களா, இல்ல இங்கேயே இருக்கீங்களா?” என்றான் பாஸ்கர்.

 

“எத்தனை முறை சொன்னாலும் மேமை விட மாட்டீங்க, அப்படி தான?” என்று சலித்துக் கொண்டவள், “ரூமுக்குள்ள இருந்து என்ன செய்யப் போறேன். குழந்தையோட காத்தாட இங்கேயே இருக்கேன் அண்ணா. உங்க சார் வந்ததும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க.” என்று இறுதி வரியை முடிந்த வரையில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கூற முயன்றாள்!

 

ஆம், முயன்றாள் தான்!

 

அவளுக்கும் கடுமைக்கும் தான் மலையளவு தூரம் ஆகிற்றே!

 

அது தெரிந்த பாஸ்கரோ சிறு சிரிப்புடன் அங்கிருந்து நகர, அவள் கையிலிருந்த குழந்தையுடன் ஐக்கியமாகி விட்டாள்.

 

இடையிடையே, அங்கு பணியாற்றுபவர்களிடம் புன்னகையுடன் ஒரு விசாரிப்பு, பதிலுக்கு அவர்களின் உபசரிப்பு என்று நன்றாகவே கடந்தன அந்த அரை மணி நேரம்.

 

அப்போது பாஸ்கர் அவளிடம் வந்து, “மேம், குழந்தையோட கார்டியன்ஸ் வந்துட்டாங்க.” என்று கூற, “ஓஹ்…” என்றவள், கையிலிருந்த குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு பாஸ்கரிடம் கொடுத்தவள், “உங்க ‘சார்’ இன்னுமா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்காரு?” என்று வினவினாள்.

 

“அவரு அப்போவே ரூமுக்கு போயிட்டாரே.” என்ற பாஸ்கர், மேலும் அங்கிருந்தால் தன்னை ஏதாவது கேள்வி கேட்பாள் என்று சரியாக யூகித்து அங்கிருந்து சென்று விட, வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் ஆத்ரேயனின் அறைக்கு சென்றாள் அவள்.

 

அவள் வரும் வேகத்திலேயே அவளின் கோபத்தை உணர்ந்த ஆத்ரேயனோ, கண்களுக்கு புலப்படாத குறும்பு சிரிப்புடன், “ரோஸ் வாசம் இந்த பக்கம் பலமா வீசுதே, என்ன காரணம்?” என்றான்.

 

அவனருகே வந்த அவனின் ரோஸோ, கதவு, ஜன்னல் என்று அனைத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, அவன் முடியை பிடித்து மாவாட்டுவது போல ஆட்டினாள்.

 

“இடியட் ரே! மொட்டையா மெசேஜ் அனுப்பாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியும் கேட்கவே மாட்டீங்கள?  இதுல, வேலை முடிஞ்சு கூட என்னை பார்க்க வராம, இங்க வந்து உட்கார்ந்துட்டு, கூலா என்ன காரணம்னு வேற கேட்குறீங்களா?” என்று கேட்டவள், மறந்தும் அவன் தலையிலிருந்து கையை எடுக்கவில்லை.

 

“எம்மா தாயே, கையோட முடியை பிச்சுடாத. அட்லீஸ்ட், நம்ம கல்யாணம் வரைக்குமாவது இருக்கட்டும். அப்பறம் எல்லாரும் என்னை சொட்டைன்னு கேலி செய்யப் போறாங்க.” என்று ஆத்ரேயன் கூற, “நான் என்ன சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க? இனிமே, இப்படி மெசேஜ் அனுப்பி பாருங்க. அப்போ தெரியும் இந்த நிரோஷா யாருன்னு!” என்றாள் அழுத்தமாக.

 

தலையிலிருந்து எடுத்திருந்த அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “இல்லன்னா மட்டும் என் ரோஸை எனக்கு தெரியாதா?” என்றான் மையலுடன்.

 

அதில் மயங்கவிருந்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, “ரொம்ப தான்! வேலைன்னு வந்துட்டா, ரோஸ் என்ன, இந்த உலகமே மறந்து போயிடும். ஃபிரெண்ட்ஸுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு நேத்தே சொன்னேன்ல. சொன்னப்போ தலையை தலையை ஆட்டிட்டு நைட்டு வீட்டு பக்கம் ஆளே காணோம்!” என்றாள் நிரோஷா.

 

“நேத்து கிளம்புறப்போ ஒரு கேஸ் வந்துடுச்சு ரோஸு. இதோ, இப்போ கூட அந்த இன்வெஸ்டிகேஷன் தான் போயிட்டு இருக்கு.” என்று ஆத்ரேயன் கூற, “ப்ச், அதுக்குன்னு சின்ன குழந்தையை கூட ஸ்டேஷன் கூட்டிட்டு வருவீங்களா? பாவம் அந்த குட்டி. சீக்கிரமா உங்க இன்வெஸ்டிகேஷனை முடிச்சுட்டு அந்த குட்டியோட பேரண்ட்ஸை அனுப்பி வைங்க.” என்று விஷயம் தெரியாமல் கூறினாள் நிரோஷா.

 

ஆத்ரேயனோ ஒரு பெருமூச்சுடன், “இனி, அந்த குட்டி அவங்க பேரண்ட்ஸை பார்க்குறது கஷ்டம் டா.” என்றவன், அந்த வழக்கை பற்றி சுருக்கமாக கூற, “ப்ச், எதுக்காக இந்த கொலை? ஒருத்தர் இறந்து, இன்னொருத்தர் ஜெயிலுக்கு போய்… கடைசில அந்த குழந்தை இப்போ அனாதையா இருக்கு. இவங்களுக்கு எல்லாம் எதுக்கு குழந்தை?” என்று அபூர்வமாக வரும் கோபத்தை அவள் வெளிப்படுத்தினாள்.

 

வழக்கை அவளின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்ததால் உண்டான கோபம் அது.

 

“ரோஸ், ரிலாக்ஸ். ரொம்ப எமோஷனலாக கூடாது.” என்று அவளை நிதானப்படுத்தியவன் வேறு விஷயம் பேசி அவளின் கவனத்தை திசை திருப்பினான்.

 

அப்போது அவனின் அலைபேசி ஒலித்து வேலையை நினைவுபடுத்த, “ஹ்ம்ம், நான் வந்த வேலை முடிஞ்சுடுச்சுன்னு போக சொல்லப் போறீங்க, அதான?” என்று நிரோஷா போலி கோபத்துடன் கேட்க, “நீ வந்த வேலை எப்பவுமே முடியாது.” என்று அவளை தன்னருகே இழுத்துக் கொண்டவன், அவனவளின் பிறைநுதலில் இதழ் பதித்தே அவளை விட்டான்.

 

“அவ்ளோ தானா?” என்று அவள் கிண்டலுடன் வினவ, “ஓடிடு, கைல சிக்குன கைமா தான். அப்பறம் கல்யாணம் முடியட்டும்னு சொல்லக் கூடாது பார்த்துக்கோ.” என்று அவனும் அவளுக்கு சளைக்காமல் கூறினான்.

 

அவன் பேச்சில் முகம் சிவந்தவள், “ஸ்டேஷன்ல வச்சு என்ன பேச்சு மிஸ்டர். போலீஸ்? இன்னைக்காவது வீட்டுக்கு வருவீங்களா?” என்று அவள் கேட்க, “வந்தா என்ன கிடைக்கும்?” என்றான் அவனும் விடாமல்.

 

“ப்ச், நான் போறேன். நீங்க இப்படியே பெனாத்திட்டு இருங்க.” என்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் நிரோஷா.

 

செல்லும் வழியெல்லாம், “போலீஸுக்கு அதிகாரம் கூடி போச்சு. இவருக்கு பார்க்கணும்னா கூட நான் தான் வரணுமாம்ல!” என்று முணுமுணுத்தபடியே தான் சென்றாள் நிரோஷா.

 

அவள் அறையிலிருந்து சென்ற மறுநிமிடமே ஆத்ரேயனின் முகம் சிரிப்பையும் குறும்பையும் தொலைத்து, அழுத்தத்தை தத்தெடுத்துக் கொண்டது.

 

அவனின் குறும்பும் சிரிப்பும் அவனவளிடம் மட்டும் தானோ!

 

தொடரும்...

 

ஹாய் நட்பூஸ்!

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 

புது வருஷம் - புது கதையை ஆரம்பிச்சுருக்கேன். உங்க ஆதரவை தந்து, இந்த கதையை வெற்றிகரமா முடிக்க உதவுங்க நட்பூஸ்!

 

கதையை பற்றிய உங்க கருத்துகளை கீழ இருக்கும் திரில பகிர்ந்துக்கோங்க...

 

https://kavichandranovels.com/community/topicid/35/

 
This topic was modified 1 month ago by VSV 17 – தேடலின் விடை கானலோ

   
ReplyQuote

You cannot copy content of this page