All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

12. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 3 months ago
Posts: 24
Topic starter  

தீபாவளிக்கு முதல் நாள் இரவு,”ம்மா! அண்ணன் பேசினதுக்கு அப்பறம் எனக்குத் தீபாவளி கெண்டாடவே மனசு வர மாட்டேங்குதும்மா. எதுக்குடா இங்கே வந்தோம்னு இருக்கு” என்று ஆதங்கத்துடன் கூறியவளிடம், 

 

“ஏன்டி இப்படி சொல்ற? அதான் விஷயத்தை ஆறப் போட்டு இருக்கோமே? அப்பறம் ஏன் முகத்தைக் கடுகடுன்னு வச்சிருக்கிற? வீட்டுக்கு வந்ததே தப்புன்னுப் பேசுற?” என்றார் சோமசுந்தரி. 

 

“ஆறத் தானே போட்டு இருக்கீங்க? வேண்டாம்ன்னு சொல்லிடலையே?” என்றவளை தீர்க்கமாகப் பார்த்தவர், 

 

“இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்ற?” என்று மகளிடம் வினவ, 

 

“அண்ணா சொன்ன விஷயத்தில் எனக்கு விருப்பமில்லைம்மா!” என வீம்புடன் உரைத்தாள் ஆரவி.

 

“சரிடி. தீபாவளி எல்லாம் முடிஞ்சு இன்னொரு நாள் பொறுமையாகப் பேசிக்கலாம்னு சொல்லியாச்சே? விடு. நாளைக்கு உனக்கு என்னப் பலகாரம் வேணும்னு கேளு. அதுக்கு இப்போ இருந்தே தயார்ப் பண்ணி வைக்கனும்ல?” எனக் கூறி அவளைச் சமாதானம் செய்தார் சோமசுந்தரி. 

 

அதில் ஒருவாறு அமைதி அடைந்தவள்,“ம்ம். எனக்கு முறுக்கும், குலோப் ஜாமூனும் வேணும்மா” என்றாள் மகள். 

 

“சரி. இரண்டுத்துக்கும் மாவை வாங்கிட்டு வரச் சொல்றேன். நீ போய் உன் வீட்டுக்காரர் கூடப் பேசிட்டு இரு” என்று அவளை அனுப்பி வைத்து விட்டுத் தன் மகனிடம் வந்தார் சோமசுந்தரி. 

 

“என்னம்மா?” என்றவனிடம், 

 

“கடைக்குப் போய் முறுக்கு, குலாப்ஜாமூன் மாவு வாங்கிட்டு வா” என அவனிடம் கூற, 

 

“சரிம்மா” என்று கூறி விட்டுக் கடைக்குக் கிளம்பினான் திவ்யன். 

 

“ஏன் ஒரு மாதிரி இருக்கிற ஆரு?” என மனைவியிடம் பரிவுடன் விசாரித்தான் ரஞ்சித். 

 

“எல்லாம் என்னோட அண்ணனால் தான்னு உங்களுக்குத் தெரியும் தானேங்க?” என்றாள் மனைவி. 

 

“புரியுதும்மா. ஆனால், இது அவரோட கல்யாண விஷயம். அப்போ அவர் தானே யாரைக் கல்யாணம் செய்துக்கனும்னு முடிவு எடுக்கனும். அது நானே நியாயம்?” என்று அவளிடம் கேட்க, 

 

“அதுக்காக, அவர் அந்தப் பிரஹாசினியைப் போய்க் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டனுமா?” எனக் கோபத்துடன் வினவினாள் ஆரவி.

 

“அவங்களுக்கும், உனக்கும் அப்படி என்ன வாய்க்கால் தகராறு?” என்றான் ரஞ்சித். 

 

“ம்ஹ்ம்” என்று அவனை முறைக்கவும்,

 

“என்ன? நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு” எனக் கேட்டான் அவளது கணவன்.

 

“வாய்க்கால் தகராறு எல்லாம் இல்லைங்க. ஏனோ அவங்களோட குணாதிசயம் எனக்குப் பிடிக்காது! என்னோட கலகலப்பான சுபாவத்துக்கு அப்படியே நேர்மாறாக இருப்பாங்க. அதனாலேயே பிடிக்காது” என்று அவனுக்குப் பதிலளித்தாள் ஆரவி. 

 

“ஓஹ், உன்னோட குணத்துக்கு செட் ஆகலைன்னா அவங்களை உனக்குப் பிடிக்காது, உங்க அண்ணனுக்கும் அவங்களைப் பிடிக்கக் கூடாது, கல்யாணமும் பண்ணிக்கக் கூடாது. அப்படித் தானே?” என்று கேட்டவுடன், 

 

தன் முகம் சுருங்கிப் போனாலும் கூட,”ஆமாம்ங்க. அவங்க என் அண்ணாவுக்குச் செட் ஆக மாட்டாங்க. நம்மக் குடும்பத்துக்கும் ஏத்தவங்களா இருக்க மாட்டாங்க” என்று உறுதியாக கூறவும், 

 

“அதை நீ எப்படி முடிவு பண்ணலாம் ஆரு? உன் அண்ணனோட கல்யாணத்தை அவரோட விருப்பப்படி தான் நடக்கனும். அது தான் சரியும் கூட!” என்று தன் கணவனும் அதையே சொல்வதைக் கேட்டு எரிச்சல் அடைந்தவள்,

 

ஆரவி,“இந்தப் பேச்சே வேண்டாம்ங்க. அப்பறம் நமக்குள்ளே சண்டை தான் வரும்” என்றவுடன், 

 

“சரி விடு” எனக் கூறி வேறு விஷயங்களைப் பேசினார்கள் இருவரும். 

 

கடைக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்ததும் தான் வாங்கி வந்த பொருட்களைத் தன்னிடம் கொடுத்த மகனிடம்,”ஆரு தான் முறுக்கும், குலாப்ஜாமூனும் கேட்ருக்கா. உனக்கு என்னப் பலகாரம் வேணும்?” என்று அவனது விருப்பத்தைக் கேட்டார் சோமசுந்தரி. 

 

“எனக்கும் அதுவே போதும்மா” என்று கூறி விட்டுச் சென்றான் திவ்யன். 

 

அதன் பின்னர், மறுநாள், என்னென்ன அசைவ உணவுகளைச் சமைக்க வேண்டும் என்று தன் மகள் மற்றும் மருமகனிடம் கேட்டு விட்டு,”என்னங்க, நாளைக்குக் காலையில் சீக்கிரமாகவே கறிக்கடைக்குப் போய் சிக்கனும், மீனும் வாங்கிட்டு வாங்க. கட்லா மீன் வாங்கிட்டு வாங்க. அது தான் மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்” எனக் கணவனுக்கு அறிவுறுத்தவும்,

 

“சரிம்மா.அதுக்கப்புறம் ஆரு ஏதாவது உங்கிட்ட பேசினாளா?”என்று கேட்டார் மகுடபதி. 

 

“ஆமாங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அதைப் பத்தி தான் புலம்பிட்டு இருந்தாள். அவளைச் சமாதானம் செஞ்சிட்டு வந்திருக்கேன்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார் சோமசுந்தரி. 

 

“விடும்மா. அடுத்த தடவை வரும் போது அவளே புரிஞ்சிக்குவா” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தார் கணவர். 

 

இங்கே, தனது பெரியம்மாவுடன் பேசிக் கொண்டே தனது கரங்களுக்கு மெஹந்தி கொண்டு போட்டுக் இருந்தாள் பிரஹாசினி. 

 

“ம்மா, எனக்கு ஆஃபீஸில் நாளைக்கும், நாளை மறுநாளும் லீவ் கொடுத்து இருக்காங்க. நான் வேணும்னா தீபாவளி முடிஞ்சு அடுத்த நாள் கடைக்குப் போய் அப்பாவுக்கு உதவி செய்யவா?” என்றான் நீரஜ். 

 

“சரிடா. காலையில் உங்க துணிகளுக்கு எல்லாம் மஞ்சள், குங்குமம் வைக்கனும். நீ கண்டிப்பாக நல்லெண்ணெய் வைச்சுத் தான் குளிக்கனும்” என அவனிடம் கண்டிப்புடன் கூறினார் உமாராணி. 

 

“ஓகேம்மா” என உறுதி அளித்தான் மகன். 

 

“பெரியப்பாவை இன்னும் காணோமே?” என்று வினவினாள் பிரஹாசினி. 

 

“நாளைக்குத் தீபாவளில்ல? கணக்கை முடிச்சிட்டு வேலை பார்க்கிறவங்களுக்கு போனஸ் கொடுத்துட்டு வர்றதுக்கு லேட் ஆகும்டி” என்றார் அவளது பெரியம்மா. 

 

அவர் சொன்னதைப் போல், இரவு நீரஜ்ஜூம், பிரஹாசினியும் உறங்கிய பின்னர் வெகு தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்தார் விருச்சிகன். 

 

அவரைப் பார்த்தாலே களைப்புடன் இருக்கிறார் என்பது தெரியவும்,”ரொம்ப வேலையாங்க? எல்லாம் முடிஞ்சிதா, இல்லை, நாளைக்கும் போகனுமா?” எனக் கவலையுடன் விசாரித்தார் உமாராணி. 

 

“வேலை அதிகம் தான்ம்மா. தீபாவளிக்கு முதல் நாள் வரைக்குமே துணி எடுக்க வருவாங்கள்ல? அதான், கடையில் கூட்டம் அள்ளுச்சு. அந்த வியாபாரத்தை எல்லாம் முடிச்சு மூனு கடைகளோட வருமானத்தை எல்லாம் பார்த்து முடிக்கிறதுக்குள்ளே சோர்ந்து போயிட்டேன்” என்ற கணவரிடம், 

 

“சரி. சீக்கிரம் வந்து சாப்பிட்டுத் தூங்குங்க. நான் காலையில் நீரஜ்ஜைக் கடைக்கு அனுப்புறேன்” என்று கூறி விட்டு அவருக்கு உணவு பரிமாறினார். 

 

சாப்பிட்டு முடித்ததும், களைப்பின் மிகுதியால் உறங்கப் போய் விட்டார் விருச்சிகன். 

 

அதிகாலையில் எழுந்து, முதலில் தன் தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளித்து தயாராகிச் சாமி கும்பிட்டு விட்டுப் பிரஹாசினியையும், நீரஜ்ஜையும் எழுப்பி, 

 

ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டவர்களிடம்,”இந்தாங்க” என்று இருவருக்கும் தனியாக ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் தந்து குளிக்க அனுப்பி வைத்தார் உமாராணி. 

 

தன் கணவன் சிறிது நேரம் உறங்கட்டும் என்று அவரைத் தாமதமாக எழுப்ப முடிவெடுத்தார். 

 

அதன் பிறகுத் தயாராகி வந்த மகனிடம்,”கறிக்கடைக்குப் போயிட்டு வாடா” என்று அனுப்பி விட்டுப் பிரஹாசினியிடம், 

 

“உன் கையைக் காட்டு. மெஹந்தியைப் பார்க்கலாம்” என்க, 

 

அவளும் தன்னுடைய கரங்களை அவரிடம் நீட்டினாள். 

 

அவளது கைகளுக்கு அந்த மெஹந்தி டிசைன் மிகவும் நன்றாகப் பொருந்திப் போய் விட்டதைக் கண்டு, 

 

“நல்லா சிவந்து இருக்கு”என்றார் உமாராணி. 

 

பிரஹாசினி,“பெரியப்பா இன்னும் எழுந்திரிச்சுக் குளிக்கலையா பெரியம்மா?”

 

“அவர் நைட லேட் ஆகத் தான் வந்தாரு. ரொம்ப முடியலைன்னு சொன்னார். அதான், தூங்கட்டும்னு எழுப்பாமல் இருக்கேன்” எனக் கூறவும், 

 

“சரி பெரியம்மா” என்றாள். 

 

அவர்கள் தங்களது அது உடைகளை உடுத்திய பின், தன் மகனை அனுப்பி அசைவம் மற்றும் இதரவற்றை வாங்கி வர அனுப்பி விட்டுக், கணவரை எழுப்பித் தயாராகச் சொன்னார் உமாராணி. 

 

தன்னுடைய குளியலை முடித்து விட்டுத், முதலில், ரஞ்சித் மற்றும் ஆரவிக்குத் தலையில் எண்ணெய் வைத்துக் குளிக்க அனுப்பியவர், அவர்கள் வந்ததும், மகன் மற்றும் கணவரையும் நீராட அனுப்பி வைத்தார் சோமசுந்தரி. 

 

அதற்குப் பிறகுப் பையுடன் கறிக்கடைக்குக் கிளம்பிய தன் தந்தையிடம்,”நானும் உங்க கூட வர்றேன்ப்பா” என்றான் திவ்யன்.

 

“சரி வா” என அவனுடன் சேர்ந்து கடைக்குப் போனார் மகுடபதி.

 

அங்கே, தங்களுக்குத் தேவையானவற்றைக் கூறி விட்டுக் காத்திருக்கும் நேரத்தில்,”ஆருவுக்கு இன்னும் மனசு அடங்கலைடா. நீ சொன்னதையே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்காளாம். உங்கம்மா சொன்னாங்க” என்று மகனிடம் கூற, 

 

அவனோ,”அவ ஏன்ப்பா இப்படி கவலைப்பட்றா? சரி, அவளை விடுங்க. நீங்களும், அம்மாவும் என்னோட முடிவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டான் திவ்யன். 

 

அதில் சிறிது மௌனம் கொண்டவர்,”அந்தப் பொண்ணைப் பத்தி எங்களுக்கு ஒரு விவரமுமே தெரியாதேடா. அப்பறம், நாங்க எப்படி உன்னோட முடிவுக்கு சம்மதிக்க முடியும்?” என்று தயக்கத்துடன் உரைத்தார் அவனது தந்தை. 

 

“நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லுங்க” 

 

“ம்ம். கேளுடா” 

 

“இப்போ எனக்கு அரேன்ட்ஜ் மேரேஜ்ஜூக்குப் பொண்ணுப் பார்க்கிறீங்கன்னு வைங்க. அந்தப் பொண்ணைப் பத்தியும் நமக்கு எதுவுமே தெரியாது தானே? அதுக்கப்புறம் தானே விசாரிக்க ஆரப்பிப்பீங்க? அப்படி இருக்கும் போது இவளைப் பத்தியும் நீங்க விசாரிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலையே? நல்லா விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாமே?” என்று அவருக்கு விளக்கினான் திவ்யன். 

 

மகுடபதி,“நீ சொல்றதும் சரின்னு வச்சுப்போம். அந்தப் பொண்ணைப் பத்தின விவரம் எல்லாம் உனக்கு முதல்ல தெரியுமா?” என்று கேட்டு விட்டு மகனைக் கூர்மையாகப் பார்த்தார். 

 

அதைக் கேட்டுத் தடுமாறிப் போனவன், அவருக்குப் பதில் கூற முடியாமல் குறுகிப் போய் நின்றான். 

 

“பார்த்தியா? அந்தப் பொண்ணைப் பத்தி உனக்கே எதுவும் தெரியலை. அப்படியிருக்கும் போது எந்த நம்பிக்கையில் நாங்க உனக்கு அவளைக் கல்யாணம் செய்து வைக்க முடியும். சொல்லு?” என்றவருக்குச் சொல்வதற்கு எந்தச் சமாதான வார்த்தைகளும் அவனிடத்தில் இல்லை. 

 

“என்னடா அமைதியாக இருக்கிற? நான் கேட்டதுக்கு உங்கிட்ட ஏதாவது பதில் இருக்கா?” என்ற தந்தையிடம், 

 

“ம்ஹூம். இல்லப்பா” எனக் கையை விரித்தான் திவ்யன். 

 

“அப்போ முதல்ல அந்தப் பொண்ணுகிட்ட பேசி அவளைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு, அப்பறம் எங்ககிட்ட வந்து பேசு. அது வரைக்கும் இந்த விஷயத்தைப் பத்தி நம்ம வீட்டில் யார்கிட்டேயும் பேசக் கூடாது!” என்று அவனுக்கு வலியுறுத்தி விட்டுத் தங்களுக்குத் தேவையான அசைவ வகையறாக்களை வாங்கிக் கொண்டுத் தந்தையும், மகனும் வீடு திரும்பினர். 

 

அதன் பின்னர், மதிய உணவைச் சமைத்து முடித்து அனைவரும் சேர்ந்து உண்ணும் போது கூடத் தன்னுடன் ஆரவி பேசாததைக் கவனித்தாலும், அவளை வம்பிழுத்து தன்னுடன் பேச வைக்கும் நிலையில் திவ்யன் இல்லை.

 

ஆனால் அதைக் கண்டு கொண்ட அவளது கணவன் ரஞ்சித்,”நீ இன்னும் எவ்வளவு நேரம் தான் உங்க அண்ணன் கூடப் பேசாமல் மௌன விரதம் இருக்கப் போற?” என்று மனைவியிடம் வினவ, 

 

“அவர் அந்தப் பொண்ணைக் கல்யாணம் செய்துக்கலைன்னு சொல்ற வரைக்கும் பேச மாட்டேன்ங்க” என்றவளை முறைத்தவனிடம், 

 

“இந்த விஷயத்தில் நீங்க என்னை கன்வின்ஸ் பண்ணக் கூடாது!” என்று உறுதியாக உரைக்கவும், அதற்குப் பிறகு அவனால் மனைவியிடம் மேற்கொண்டுப் பேச முடியவில்லை. 

 

திவ்யனுக்கோ அவனது தந்தை உரைத்தது மட்டுமே மனம் முழுவதும் ரீங்காரமிடத் தொடங்கி விட்டது. 

 

ஆனால், இதையெல்லாம் அறியாமல், தன் குடும்பத்துடன் இணைந்து மதிய உணவையும், பலகாரங்களையும் நன்றாக ருசித்து உண்டு கொண்டிருந்த பிரஹாசினியிடம், 

 

“நைட் எல்லா பட்டாசையும் வெடிக்கனும். அதுக்கு நீயும் எனக்கு ஹெல்ப் பண்ணனும். சரியா?” எனக் கூறினான் நீரஜ். 

 

“கண்டிப்பாகப் பண்றேன் அண்ணா” என்று தன் செல்பேசியை எடுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டாள். 

 

அப்போது, தன் கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்ததைப் பார்த்தவுடன்,’அதற்கு என்னப் பதில் அனுப்புவது?’ என்று புருவம் முடிச்சிட யோசனை செய்தவன், ஒரு முடிவோடு, தனக்குத் தோன்றிய பதில் அனுப்பி வைத்தான் நீரஜ். 

 

“அப்படி அதில் என்ன வந்திருக்கு? உன் முகம் ஒரு மாதிரி சீரியஸாக மாறிடுச்சே?” என்று அவனிடம் வினவினார் விருச்சிகன். 

 

“அது என்னன்னு நாளைக்குச் சாயந்தரம் சொல்றேன்ப்பா” என்றான் மகன். 

 

உமாராணி,“ஏன் இப்போ சொல்ல மாட்டியா?” என்கவும், 

 

அவரிடம் எதுவும் சொல்லாமல் பிரஹாசினியைப் பார்த்தவுடன் மகன் கூறியதைப் புரிந்து கொண்டு, 

 

“சரி. நீ எப்போ சொல்றியோ, அப்போ கேட்டுக்கிறோம்” என்று கூறி விட்டார். 

 

தமையன் தன்னைப் பார்த்த விதத்தில் தன்னைப் பற்றிய குறுஞ்செய்தி தான் அவனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான், அவன் அதை அவள் முன்னால் பேசத் தயங்குகிறான் என்பதை அறிந்து கொண்டாள் பிரஹாசினி. 

 

ஆனால், அது என்னவென்று நீரஜ்ஜிடம் அவள் கேட்கவில்லை. ஏனெனில், அவன் மேலிருந்த அவளது நம்பிக்கை அப்படிப்பட்டது. 

 

அவனாக சொல்லும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று அவளும் விட்டு விட்டாள். 

 

இப்படியாக, மாலையில் பட்டாசு வெடிக்கும் சத்தத்திலும், அவை தந்த பிரகாசத்திலும் வானம் முழுவதும் ஜொலித்துக் கொண்டிருந்த சமயத்தில், தாங்களும் குஷியாகப் பட்டாசு வெடித்தனர் நீரஜ் மற்றும் பிரஹாசினி. 

 

ஆரவி மற்றும் அவளது கணவன் ரஞ்சித்தும் சேர்ந்து பட்டாசு வெடிப்பதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் அவளது வீட்டார். 

 

“நீயும் அவங்க கூடப் போய் வெடி வைடா” என்று மகனிடம் மொழிந்தார் சோமசுந்தரி. 

 

“இருக்கட்டும்மா. அவங்க வைக்கட்டும்” என்று கூறி விட்டான் திவ்யன். 

 

“அதெல்லாம் இல்லை. நீங்களும் வாங்க” என அவனையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டான் அவனது தங்கையின் கணவன். 

 

அதன் பிறகு, அவர்கள் மூவரும் அனைத்து பட்டாசுகளையும் வெடித்து முடித்து விட்டு அனைவரும் இரவு உணவையும் சாப்பிட்ட பின்னர் உறங்கப் போனார்கள். 

 

ஆனால், தன் தந்தை கேட்ட வினாக்களுக்குப் பதிலைத் தேடி ஓய்ந்து போய்த் தாமதமாகத் தான் தூங்கினான் திவ்யன். 

 

            - தொடரும்

எழுந்திடும் காதல் காவியம் - கருத்து திரி

This topic was modified 1 month ago by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page