All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

5. எழுந்திடும் காதல் காவியம்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 2 months ago
Posts: 23
Topic starter  

 தான் வருவதற்குள் மணப்பெண் புடவையை உடுத்தி விட்டிருந்ததால், முதலில் அவளுக்குத் தனக்குத் தெரிந்த சிறந்த சிகை அலங்காரத்தைச் செய்து விடும் வேலையில் இறங்கினாள் பிரஹாசினி. 

 

அவளது கரங்கள் நன்றாகச் சுழன்று தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்க, அதற்கேற்ப மணப்பெண்ணும் நன்றாகவே இசைந்து கொடுக்கவே அந்த அலங்காரம் வெகு விரைவில் முடிந்தது. 

 

அதேபோல், முகத்திற்கு அலங்காரம் செய்வதற்கு முன்னர்,”எனக்கு ஒரு சந்தேகம் மேம்” என்றாள் பிரஹாசினி. 

 

“என்னன்னு சொல்லுங்க மேம்?” என அவளிடம் வினவினாள் மணப்பெண் யாழினி. 

 

“நீங்க அன்னைக்குப் பார்லருக்கு வந்தப்போ மெஹந்திக்கும் சேர்த்து தான் என்கிட்ட பேசுனீங்க, காசும் கொடுத்தீங்க! ஆனால், நான் உங்க நலங்கு ஃபங்ஷன் இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு மெஹந்திப் போட்டு விட்டு இருக்கனும். ஆனால், இப்போ மேக்கப் மட்டும் தான் போட்டு விட்றா மாதிரி இருக்கு. அதனால் அதைக் கழிச்சிட்டுக் காசு கொடுங்க” என்று அவளிடம் உரைக்கவும், 

 

“ஆமால்ல? சாரி மேம். நான் அதை யோசிக்கவே இல்லை. நீங்க சொன்னா மாதிரியே பண்ணிடலாம்” எனப் பதிலளித்தாள் யாழினி. 

 

“ஓகே மேம்” என்றவள், 

 

அவளது முகத்தை அலங்காரம் செய்யத் தொடங்கிய பிரஹாசினியோ,“புருவத்தைத் திருத்திடலாமா மேம்? ரொம்ப அதிகமாக முடி இருக்கு” என்று அவளிடம் வினவவும்,

 

“நமக்கு டைம் அதிகமாக இல்லை மேம். நான் நேத்துக் காலையிலேயே இதைப் பண்ணி இருக்கனும். டென்ஷனில் மறந்துட்டேன்!” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டவள்,

 

“அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும் மேம்” என அவளுக்கு உறுதி அளித்தாள் பிரஹாசினி. 

 

“ஓகே மேம். அப்போ புருவத்தைத் திருத்தி விடுங்க” என்று அனுமதி கொடுத்தாள் மணப்பெண் யாழினி. 

 

அந்த வேலையைத் துரிதமாக செய்து முடித்தவள், முகத்தில் சில பல அரிதாரங்களைப் பூசி விட்டு, இதழ்களுக்கு ஏற்ற நிறத்தில் உதட்டுச் சாயத்தைப் போட்டு விட்டவள், இறுதியாக கழுத்துக்குக் கீழாகத் திருஷ்டிப் பொட்டு ஒன்றை வைத்து அலங்காரத்தை முடித்து வைத்தாள் பிரஹாசினி. 

 

அதற்குப் பிறகு, கண்ணாடியை எடுத்து தன்னுடைய முழு உருவத்தைப் பார்த்தவள்,”பெர்ஃபெக்ட் மேம்! இந்தச் சேலைக் கலருக்குத் தகுந்த மாதிரி மேக்கப் போட்டு விட்ருக்கீங்க. லிப்ஸ்டிக்கும் அதிகப்படியாக இல்லை. நேச்சுரலாக இருக்கு” என்றாள் மணப்பெண்.

 

 அந்தப் பாராட்டைக் கேட்ட பின்னர் தான் தன்னுடைய பதற்றத்தைக் குறைத்துக் கொண்டாள் பிரஹாசினி. 

 

“தாங்க்யூ மேம்” என்க, 

 

“இதுக்கான பணம் உங்களுக்கு எப்போ வேணும்?” எனக் கேட்டாள் யாழினி. 

 

“இன்னைக்கு நைட்குள்ளே அனுப்பி விட்டீங்கன்னா ஓகே தான் மேம்” என்று அவளிடம் தெரிவித்தாள் பிரஹாசினி. 

 

“ஷூயர் மேம்” என்றவளிடம், 

 

யாழினி,“அப்படியே என்னோட மேரேஜ் முடிஞ்சு சாப்பிட்டுப் போங்க மேம். இது என்னோட ரிக்வஸ்ட்!” என்று கேட்டுக் கொண்டதாலும், 

 

இன்னும் காலைச் சாப்பாட்டை உண்ணவில்லை என்பதாலும், அவளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுப் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டவள், 

 

தன்னுடைய செல்பேசியை எடுத்து தோழிக்கு அழைத்து,”ஹலோ வினோ, என்னோட வேலை முடிஞ்சதுடி. நீ வண்டியை எடுத்துட்டு வர்றியா?” என்றாள் பிரஹாசினி. 

 

“சாரிடி. நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். முடிச்சிட்டு வரவா?” என்று மன்னிப்புக் கேட்டாள் வினோதா.

 

“ஒன்னும் அவசரம் இல்லை. நீ பொறுமையாக கிளம்பி வா. நான் மண்டபத்துக்கு வெளியே வெயிட் பண்றேன்” என அவளுக்கு உரைத்து விட்டு, அந்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்தவள் அங்கே வரவேற்பில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் பிரஹாசினி.

 

அந்த இடத்தில் நின்றிருந்த வரவேற்புப் பெண்களோ, உணவுண்ணப் போய் விட்டதால் அவ்விடத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. 

 

அதனால், நாற்காலிகளின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. ஒன்றிரண்டு நடுத்தர வயது ஆட்கள் மட்டும் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களுக்குத் தொந்தரவு அளிக்காமல் சற்றுத் தள்ளி உட்கார்ந்து செல்பேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரஹாசினி.

 

இங்கே அலுவலகத்தில் தன் அறையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த திவ்யனோ, தற்செயலாக சன்னலின் அருகில் சென்று வெளியே எட்டிப் பார்த்தான்.

 

அப்போது, அந்த திருமண மண்டபத்தின் வாயில் இவனது கண்களுக்கு நன்றாகப் புலப்பட்டது. அதன் நுழைவு வாயிலிற்கும், அவனது அலுவலக சன்னலுக்கும் அவ்வளவு இடைவெளி இல்லை. இங்கே இருந்து பார்த்தால் அங்கே யார், யார் செல்கிறார்கள்? மற்றும் திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்கள் எல்லாம் நன்றாகத் தெரியும். 

 

அதனால் தான், திவ்யனுக்கு அங்கே போட்டிருந்த பாட்டுச் சத்தம் தெளிவாக கேட்டது. 

 

அந்த சமயத்தில், அங்கு ஒரு இளம் யுவதி அமர்ந்து இருப்பதைக் கண்டான் திவ்யன்.

 

அவளது சாயல் இவனுக்குப் பரிச்சயமானதாக இருந்தது. ஆனால், இவ்வளவு இடைவெளியில் அவளுடைய முகம் தெளிவாகத் தெரியாது அல்லவா? 

 

 இப்படி ஒரு பெண்ணை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருப்பது மிகவும் தவறானது என்றாலும், தன்னுடைய உள்ளுணர்வு எதையோ அழுத்தமாக உரைக்கவும், சற்றும் தாமதிக்காமல், அங்கே இருந்த தன் மேலாளரிடம், ஒரு தனிப்பட்ட வேலையின் காரணமாக கொஞ்சம் வெளியே செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டுக் கொண்டு, அலுவலகத்தில் இருந்து வெளியேறி வந்தான் திவ்யன். 

 

அவனைப் போலவே, அவளுக்கும் உள்ளுணர்வு உந்தித் தள்ளியது போலும்! அதனால், தன் செல்பேசியில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து பார்த்தாள் பிரஹாசினி. 

 

அதற்குள், அவளுக்கு சிறிது தொலைவில் ஒரு ஆணின் உருவம் நின்றிருப்பதைக் கண்டு அதன் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்க, 

 

அதே சமயம், அவளது முகத்தைத் தான், தன்னுடைய பொக்கிஷம், தன் கண் முன்னால் இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் விட்டான் திவ்யன். 

 

அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து அவனைக் குறுகுறுக்கச் செய்வதைப் போலான உணர்வு ஏற்பட்டது.

 

இங்கே பெண்ணவளுக்கோ, அவரைக் கண்ட நொடி தன் உடல், மனம் முழுவதும் சிலிர்த்துப் போனது. 

 

அவளது விழிகள் கண்ணீரைச் சொரிய ஆயத்தம் ஆன நேரத்தில், அவனது கன்னங்களிலோ ஏற்கனவே கண்ணீரின் தடத்தைக் காண முடிந்தது. 

 

இவர்களது பார்வைப் பரிமாற்றங்கள் சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அங்கே வந்து விட்டிருந்த வினோதாவோ, 

 

“சாரிடி. கொஞ்சம் லேட் ஆகிருச்சு! வீட்டுக்குப் போகலாமா?” என்று அவளிடம் மன்னிப்பு வேண்டவும், 

 

அது அவளது காதில் விழுந்ததா என்பது சந்தேகம் தான்! 

 

“பிரஹாசினி!” என்ற திவ்யனுடைய வாய் அசைந்ததைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் பெண்ணவள். 

 

“ஹேய்! என்னடி நான் இப்படி கத்திட்டு இருக்கேன். நீ அப்படியே அசைவு இல்லாமல் நிற்கிற!” என்று தோழியின் தோளை இடித்தாள் வினோதா. 

 

அதன் வலி தாங்காமல், திவ்யனின் பக்கமிருந்த தன் பார்வையைத் தோழியின் புறம் திருப்பி, ”ஹாங்! வந்துட்டியாடி!” என்றதும்,

 

“நான் வந்து ரொம்ப நேரமாச்சு. நீ எங்கே பார்த்துட்டு இருக்கிற?” என அவளது பார்வையின் போக்கை ஆராயும் விதமாக தானும் எதிர்புறம் திரும்பிப் பார்த்தாள் வினோதா.

 

ஆனால், அங்கேயிருந்த திவ்யனோ, அருகிலிருந்த தேநீர்க்கடையில் போய் நின்று விட்டான். 

 

அதனால், வினோதாவின் பார்வை வட்டத்திற்குள் அவன் சிக்கவில்லை. 

 

எனவே,”என்ன தான், வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தியோ தெரியலை! நீ முதல்ல வண்டியில் ஏறு” என்று அறிவுறுத்தவும்,

 

தோழியின் வண்டியில் ஏறியவள், தன்னுடைய தலையைத் திருப்பிப் பார்க்கவும், அவளுக்குத் திவ்யனின் திவ்ய தரிசனம் மீண்டுமொரு முறை கிடைத்தது. அது மட்டுமின்றி, அவனது குறுநகையையும் இனாமாகப் பெற்றுக் கொண்டவளோ, 

 

அந்த அனைத்தும் தந்த புல்லரிப்புடன் தோழியின் வண்டியில் ஏறிப் பயணமானாள் பிரஹாசினி. 

 

அவள் கிளம்பியதும், தேநீர்க்கடையில் இருந்து வெளிப்பட்டு அலுவலகத்திற்குப் போய்த் தன் அறையில் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தவனுக்கு, அன்றைய நாளின் ஆரம்பத்தில் ஏன் அவ்வளவு மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தோம் என்பதை இப்போது புரிந்து கொண்டான் திவ்யன்.

 

மூன்று வருட ஏக்கமும், தவமும், முப்பது நிமிடங்களில் கண் முன் வந்து போனதைப் போன்றதொரு நிறைவைத் தோற்றுவித்தது அவனுக்கு. 

 

தன்னவளது புகைப்படம் ஒன்று கூட இல்லை என்று வருத்தப்பட்டவனுக்கு நேரிலேயே வந்து காட்சி தந்து விட்டாள் என்பதை எண்ணியவனது மனம் ஆனந்தக் கூத்தாடியது. 

 

‘இந்த ஊருக்கு எதுக்காக வந்திருக்கா? எப்போ வந்தா? உடனே கிளம்பிடுவாளா?’ என்று எண்ணிய திவ்யனுக்கு, 

 

‘அவள் எந்த வேலைக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை, தனக்குக் காட்சி அளித்ததே போதும்! அவள் எப்போது ஊருக்குச் செல்வாள்? அதற்குள் மற்றுமொரு முறை அவளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்குமா?’ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

 

அப்போது,”திவ்யன் சார்” என்ற குரலும், கதவைத் தட்டிய சத்தமும், அவனது சிந்தனைக்குக் கடிவாளம் போட்டது. 

 

“உள்ளே வாங்க வினீத்” என்றதும், 

 

அவனது அறைக்குள் நுழைந்து,”புரொடக்ஷன்ஸ் செக் பண்ண மெயின் ஆஃபீஸில் இருந்து வந்து இருக்காங்க. உங்களைக் கூப்பிட்டாங்க” எனக் கூறவும்,

 

“ஓஹ், இதோ வர்றேன்” என்று கூறி விட்டு அவனுடன் சேர்ந்து அவ்விடத்திற்குச் சென்றவனிடம், 

 

“மிஸ்டர் திவ்யன், எவ்வளவு புரொடக்ஷன்ஸ் ஆகிருக்கு? எவ்வளவு டிஸ்பேட்ச் பண்ணி இருக்கீங்க?” 

 

திவ்யன்,“ஓகே சார்” 

 

அவன் வேலை பார்க்கும் அந்தப் பட்டாசு தொழிற்சாலையில் இம்மாதிரியான மேற்பார்வைகள் மற்றும் ஆய்வுகள் நடப்பது இயல்பானது.

 

அதுவும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால் இந்தச் சமயத்தில் இப்படியான மேற்பார்வைகள் இன்றியமையாதது ஆகும். அதற்குப் பதிலளிக்கும் வேலை தான் திவ்யனுடையது. 

 

எனவே, அந்த அதிகாரிகளின் வினாக்களுக்குப் பொறுமையாகவும், தெளிவாகவும் விடையளிக்கத் தொடங்கினான். 

 

அதே சமயம், தன் தோழியுடன் எப்போதோ வீட்டிற்குச் சென்றிருந்த பிரஹாசினியோ, முந்தைய நாள் தன் பேருந்து பயணத்தின் போது தன்னிடமிருந்து வெளிப்பட்ட ஆசை இப்போது நிறைவேறி விட்டதை நினைத்து சந்தோஷத்தில் மூழ்கிப் போனாள். 

 

“பிரஹா! அந்தப் பொண்ணுக்குப் போட்டு விட்ட மேக்கப்போட ஃபோட்டோ இல்லைன்னா மாடல் வச்சிருக்கியா?” என்று தன்னிடம் கேட்ட குறிஞ்சியிடம், 

 

“நான் அவங்களை ஃபோட்டோ எடுக்கலைம்மா. அவங்களுக்கு ஈவ்னிங் கால் பண்ணிக் கேட்டு அனுப்ப சொல்றேன்” என்று அவரிடம் கூறி விட்டுத் தோழியிடம் சென்றாள் பிரஹாசினி. 

 

அவளைப் பார்வையால் துளைத்து,”அங்கே மண்டபத்தில் ஏன்டி அப்படி மெய் மறந்து நின்னுட்டு இருந்த? அப்படி எதைத் தான் பார்த்த?” என்று தனக்குள் எழுந்த ஆர்வத்தை அடக்க முடியாமல் அவளிடம் வினவினாள் வினோதா. 

 

“நான் இந்த ஊருக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சுல்ல? அதான், அங்கேயிருந்த எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டு இருந்தேன்டி” என்றவளை சந்தேகப் பார்வை பார்த்து வைத்தாள் அவளது தோழி.

 

‘இவள் தன்னை நம்பவில்லை’ என்று புரிந்து கொண்டவளோ,”அதை விடு. நான் பெரியம்மா கிட்டே பேசிட்டு வர்றேன் வினோ” என்று அவளிடமிருந்து தன் செல்பேசியுடன் நழுவித் தனியே சென்று விட்டாள் பிரஹாசினி. 

 

              - தொடரும்

 

எழுந்திடும் காதல் காவியம் கருத்து திரி

This topic was modified 1 month ago 3 times by VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்

   
ReplyQuote

You cannot copy content of this page