All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 24
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 3 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
1786208404-IMG-20260808-WA0003.jpg
 
 
மௌனம் - 25
 
தன் அறையில் அமர்ந்திருந்த மானசாவுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. சற்று முன் அவள் கண்ட காட்சியின் தாக்கமே அவளுக்கு இன்னும் குறையவில்லை.
 
 
ஏதோ சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததில் உண்டான யோசனையோடே தன் பால்கனியில் வந்து நின்றவளுக்கு கீழே கண்ட காட்சியில் ஒரு நொடி தலையே சுற்றியது.
 
 
விநாயக் மற்றும் நந்தினி இருவரும் மாலையும் கழுத்துமாக வந்து நின்றிருக்க.. அவளின் கையை பிடித்தப்படி வேதவல்லியிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தான் விநாயக். 
 
 
‘அவளுக்கு அவர்கள் இருவரையும் இப்படி சேர்த்து வைத்து பார்த்ததை கண்டு அதிர்வதா..! இல்லை வேதவல்லியிடம் இப்படி பேசுவதைக் கண்டு திகைப்பதா..!!’ என்று கூட தெரியவில்லை. இதுவரை வேதவல்லி பேசுவதை மட்டுமே அனைவரும் கேட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தே வளர்ந்திருந்தவளுக்கு விநாயக்கின் இந்த ஆக்ரோஷமான மிரட்டல் குரல் எல்லாம் புதிதாக இருந்தது.
 
 
அதிலேயே அசையாமல் நின்று விட்டவளுக்கு அதன் பிறகு நடந்த எதுவும் மனதில் பதியவே இல்லை. விநாயக் இங்கிருந்து கிளம்பிச் சென்ற பிறகும் வேதவல்லி கத்திக்கொண்டே இருக்க. ரகோத்தமன் அவரை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் ரகோத்தமன். 
 
 
இதையெல்லாம் அசையாமல் பார்த்தபடி நின்றிருந்தவள், அப்படியே திகைப்பு மாறாமல் வந்து அமர்ந்து வெகு நேரம் ஆகிய பிறகும் கூட அவளுள் நடப்பதெல்லாம் நிஜம்தானா என்ற திகைப்பு மிச்சம் இருந்தது. தனக்கு மிகவும் பிடித்த இருவர் திருமணம் செய்து கொண்டது அவளுக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.
 
 
‘நாம பார்த்தது நிஜம்தானா..? நிஜமாவே வினய் அண்ணா நந்து அக்காவை கல்யாணம்..’ என யோசித்தவள், பட்டென தன் வாயில் போட்டுக்கொண்டு “அய்யோ இனி அவங்க அக்கா இல்லை, அண்ணி..” என சொல்லிக்கொள்ள.. அவளுக்கே சந்தோஷத்தில் சிரிப்பு கூட வந்தது. 
‘இது எப்படி..? இது எப்படி நிஜமாச்சு..! இது சாத்தியம் தானா..? அவங்க இரண்டு பேரும் காதலிச்சாங்களா..! நிஜமாவா..? நமக்கு எதுவும் தெரியலையே..! எப்போ எப்படி இதெல்லாம் நடந்திருக்கும்..?’ என்று அவளுள் விடை தெரியா ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க.. மனமும் ஒரு வகையில் சந்தோஷ பரபரப்பில் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. 
 
 
**
 
 
விநாயக் அறைக்குள் அமர்ந்திருந்த நந்தினிக்கு கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. எதிலோ பெரிதாக தோற்றது போல் மனம் தவித்துக் கொண்டிருக்க.. அது கொடுக்கும் ஏமாற்றத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 
 
 
‘அப்போ இந்த கல்யாணம் எல்லாம் வெறும் பழிவாங்க தானா..? என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட அவர் யோசிக்கலயா..! நான்.. என் காதல் எதுவுமே அவருக்கு முக்கியம் இல்லையா..?’ என அவள் மனம் கேட்டுக் கொண்டே இருக்க.. அதற்கான பதில் தெரியாமல் தான் அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
திடீரென தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டு வந்து தன் முன் நின்ற விநாயக்கை கண்டு எத்தனை சந்தோஷமாக சம்மதித்திருந்தாள் நந்தினி. ஆனால் அதெல்லாம் வெறும் பழிவாங்க தான் என தெரிய வந்த போது மனம் சுக்கு நூறாக உடைந்து இருந்தது.
 
 
மற்றவர் முன் கேட்க முடியவில்லை என்றாலும் இங்கே அறைக்குள் வந்தவுடன் ‘ஏன் இப்படி செய்தாய்..? இது நிஜம் தானா..!’ என விநாயக்கின் சட்டையைப் பிடித்து கேட்டு விட அவளுக்கு ஒரு நொடி ஆகாது.. ஆனால் ஆம் அப்படித்தான், இது உன்னை விரும்பி நடந்த திருமணம் இல்லை.. வேதவல்லியை பழிவாங்க நடந்தது..’ என்று தன் முகத்தைப் பார்த்து விநாயக் மேலும் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டால், அதன் பின் அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதே..!
 
 
அதற்கு உண்மையா பொய்யா என தெரியா ஒரு திரிசங்கு நிலையிலேயே இருந்து விடலாம் என்பது போல் தோன்ற.. அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டவளின் கண்ணீர் கூட ஒரு கட்டத்தில் வற்றி காய்ந்து விட்டிருந்தது.
 
 
ஆனால் அவளின் நிலையில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எதிரில் தெரிந்த சுவரை வெறித்துக் கொண்டு கொஞ்சமும் அசைவின்றி அப்படியே அமர்ந்து விட்டாள் நந்தினி. 
 
 
சட்டென நந்தினி அப்படி பேசி விட்ட கோபத்தில் அங்கிருந்து வெளியேறி இருந்த விநாயக், தன் உடற்பயிற்சி அறையில் இரு கைகளையும் தலைக்கு கொடுத்து விட்டதை வெறித்தபடி படுத்திருந்தான். 
 
 
‘என்ன வார்த்தை சொல்லிட்டா..? யாரையோ பழிவாங்க நான் இவளை கல்யாணம் செஞ்சுக்கணுமா..! அப்படித்தான் செஞ்சுக்கணும்னா இத்தனை வருஷம் நான் ஏன் தள்ளி இருக்கணும்..? கொஞ்சம் கூட யோசிக்க தெரியலை, படிச்ச முட்டாள்..’ என்று அவன் மனம் கொதித்துக் கொண்டு இருந்தது. 
 
 
அதேநேரம் ‘அவ அவசர புத்தி தான் உனக்கு தெரியுமே..! அப்புறம் இப்படி கோபப்பட்டா என்ன அர்த்தம்..?’ என அவனின் மற்றொரு மனம் அவளுக்காக பரிந்து பேச.. ‘அது தெரிஞ்சு தானே இத்தனை நாள் தள்ளி நின்னேன்.. இன்னைக்கு எத்தனை சந்தோஷமான நாள்..? எப்படியெல்லாமோ நடக்கணும்னு நினைச்சுருந்தா எங்க கல்யாணம் இப்படி நடந்தது கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் எங்க காதல் கை கூடி வந்திருக்கு, அது கூட அவளுக்கு புரியலை.. சரி பேசி புரிய வைக்கலாம்னா அதுக்கும் வாய்ப்பே கொடுக்கலை.. இவளை வெச்சுட்டு..’ என சலித்துக் கொண்டே எழுந்தவன், முதல் நாளே அவளிடம் கோபப்பட்டதை எண்ணி வருந்தியவனாக நந்தினியை சமாதானம் செய்ய நினைத்து மீண்டும் அறைக்கு சென்றான் விநாயக். 
அவள் எதுவும் சாப்பிட்டு இருக்கவில்லை என்பதால் அபிராமி தயார் செய்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தவனை அவள் பார்வையை திருப்பிக் கூட பார்க்கவில்லை. அவளின் கோபம் புரிந்தாலும் அமைதியாகவே சென்று நந்தினியின் முன் உணவை வைத்தவன், “நாம கொஞ்சம் பேசலாமா யது..?” என்றான்.
 
 
“இன்னும் என்ன பேசணும்..? அதான் பேச வேண்டியதை எல்லாம் அங்கேயே பேசிட்டீங்களே..!” என அவள் சொல்லவும், இழுத்து பிடித்த பொறுமையோடு “அங்கே பேசுனதை கேட்ட தானே.. அதே மாதிரி இங்கே பேசுவதையும் கொஞ்சம் கேளு..” என்றான் விநாயக். 
 
 
“வேண்டாம் சாமி, ஒரு இடத்தில் பேசுனதை கேட்டதே போதும்.. அதுவே காலம் முழுக்க இங்கே அப்படியே இருக்கும்..” என அவள் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க.. “யது வழக்கத்தை மீறி ஒண்ணு நடக்குதுனா ஏன் எதுக்குன்னு யோசிக்க மாட்டியா..? கொஞ்சம் பொறுமையாக இ,ரு அவசரப்படாதே..!” என்றான் அமைதியான குரலிலேயே விநாயக்.
 
 
“அதுதான், அதைத்தான் யோசிக்க தெரியாத முட்டாளா இருந்து இருக்கேனே..! கண்ணை மூடிட்டு நீங்க கேட்டதும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க கூடாது தான்.. நான் செஞ்ச அந்த தப்புக்கு நீங்க நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துட்டீங்க, ரொம்ப நன்றி..” என அதுவரை அடங்கி இருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க கையெடுத்து அவனை பார்த்து கும்பிட்டாள் நந்தினி. 
 
 
இது என்ன முட்டாள்தனமான பிடிவாதம்..? அவன் சொல்ல வருவதை கேட்கவே தயாராக இல்லை என்பது போல் அவள் பேசுவதும் நடந்து கொள்வதும் அவனுக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது. இப்போது என்ன பேசினாலும் தன் வார்த்தையில் கட்டுப்பாடு இருக்காது, சட்டென ஏதாவது அவள் மனம் வருந்தும்படி பேசி விடுவோம் என்று புரிய.. அவளையே முறைத்துப் பார்த்தபடி நின்றான் விநாயக். 
 
 
‘தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததே தவறு என்பது போல் அவள் சற்றுமுன் பேசியது அவனுக்கு அத்தனை வருத்தத்தை கொடுத்தது.. ஆனால் அவள் பேசியதின் அர்த்தம் அது இல்லை.. அவள் உணர்ந்து அதை சொல்லவில்லை என அவனுக்கு புரிந்தது போல், அவளுக்கு ஏன் என்னை புரியவில்லை..?’ என்ற ஆதங்கம் அவனுள் நிறையவே இருந்தது.
 
 
அதில் அமைதியாகவே அவளிடம் இருந்து நகர்ந்தவன், இப்போதைக்கு எதையும் பேசி தொந்தரவு செய்ய விரும்பாமல் “சரி நேரமாகுது சாப்பிட்டு படு..” என்றான்.
 
 
“எனக்கு வேண்டாம்..” என நந்தினி முகத்தை திருப்பிக் கொள்ள.. பொறுமையற்று அவளை பார்த்தவன் “நீ வந்ததில் இருந்து ரூமுக்குள்ளேயே இருக்கே.. சாப்பிடலைன்னு அம்மா ரொம்ப கவலைப்படறாங்க, நீ தப்பு செஞ்சதாவே இருக்கட்டும்.. என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு நீ எடுத்த முடிவு தப்பாகிடுச்சுன்னே வெச்சுக்கோ.. இனி என்ன செய்ய போறே..? இதை மாற்ற நினைக்கிறாயா..? இல்லை இப்படி நீ சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கறதில் தான் ஏதாவது மாறிடுமா..! எதுவா இருந்தாலும் இங்கே தான் இருந்தாகணும், அதுக்கு தகுந்தது போல இருக்கிறது தான் உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே நல்லது.. யார் சொல்ல வர்றதையும் கேட்காம புரிஞ்சுக்காம இப்படி உட்கார்ந்து அழுதுட்டு தான் இருக்க போறேன்னா தாராளமா செய்.. ஆனா குளிச்சு டிரஸ் மாத்திட்டு சாப்பிட்டு பொறுமையா செய்.. யாரும் உன்னை தடுக்கலை..” என்று விட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
 
 
அதில் அவன் சென்ற திசையை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதும் அவன் வார்த்தைகளில் இருந்த பொருள் புரிவதற்கு பதில் விநாயக்கின் கோபம் மட்டுமே தெரிந்தது. 
 
 
‘எவ்வளவு ஈசியா சொல்லிட்டு போயிட்டாங்க.. நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் அழு, ஆனா என்னை தொந்தரவு செய்யாம அழுன்னு சொல்றாங்கனா, நான் எந்த வகையிலும் அவருக்கு முக்கியமில்லைன்னு தானே அர்த்தம்..? அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்..?’ என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், “அதான் அங்கேயே தெளிவா சொல்லிட்டாங்களே, இது வேதாம்மாவை வருத்தப்பட வைக்க பழிவாங்க நடந்த கல்யாணம்னு, போதும்.. இத்தனை வருஷமா ஆசைப்பட்டு கற்பனையில் காதல் வளர்த்து காத்திருந்தது எல்லாம் போதும்..” என மெலிதாக அவள் புலம்பியபடி நின்றிருக்கும் போதே, குளித்து முடித்து வெளியில் வந்தான் விநாயக்.
 
 
அவன் பார்வையில் வேறு எதுவும் பேசாமல் நந்தினி அமைதியாக தலையை குனிந்து கொள்ள.. அங்கிருந்த உடை மாற்றும் அறையை காண்பித்தவன் “இந்த கபோர்டில் உனக்கான டிரஸ் எல்லாம் இருக்கு.. அவசரத்துக்கு கொஞ்சம் தான் எடுத்தேன், மீதி என்ன தேவையோ அப்புறமா வாங்கிக்கலாம்.. போய் குளி..” என்று இப்போது இளக்கமே இல்லாத லேசான கட்டளை குரலில் சொல்லிவிட்டு உறங்க தயாரானான் விநாயக்.
 
 
அவன் சொல்லியதிலேயே லேசாக திகைத்தவள், அங்கு சென்று பார்க்க.. இவளுக்கான உடைகள் தயாராக இருந்தது. இதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் பல நாள் திட்டமிட்டே அவன் தன்னை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவே நினைத்தவள், வருத்தத்தோடு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் நுழைய.. அவள் உணர்வுகள் புரிந்து நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவன் “இனி நிறைய பொறுமை வேணும்டா வினய் உனக்கு..” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சென்று படுத்து விட்டான்.
 
 
பார்த்த நொடி முதல் அவனுக்குள் வந்து விட்டிருந்தவள், இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் மனைவியாக முழு உரிமையோடும் உறவோடும் இந்த அறைக்குள் முதல் முறையாக வந்திருக்கிறாள். அதை அனுபவித்து ரசிக்க முடியாத மனநிலைக்கு தன்னை அவள் கொண்டு வந்திருப்பதில் உண்டான மன போராட்டங்களோடு விழி மூடி படித்திருந்தான் விநாயக்.
 
 
சில நிமிடங்களுக்கு பின் குளித்து முடித்து வெளியில் வந்தவள், எதைப்பற்றிய கவலையும் இல்லாதது போல் உறங்கிக் கொண்டிருப்பவனையே சில நொடிகள் நின்று வெறுமையாக பார்த்து விட்டு திரும்ப.. அங்கு விநாயக் கொண்டு வந்து வைத்திருந்த உணவு அப்படியே இருந்தது. 
 
 
அதை சாப்பிடும் மனது அவளுக்கு துளியும் இல்லை. ஆனால் அபிராமி கொடுத்து அனுப்பியதாக விநாயக் சொன்னது நினைவுக்கு வரவும், இதை சாப்பிடாமல் இருந்து அவரின் மனதை நோகடிக்க விரும்பாமல் மெல்ல அதை சாப்பிட தொடங்கினாள் நந்தினி.
 
 
அடுத்து அவளுக்கு எங்கு உறங்குவது என்பது பெரும் பிரச்சனையானது. படுக்கையில் அவன் அருகில் சென்று படுக்க லேசான தயக்கம் உண்டாக.. பார்வையை அந்த இடம் முழுக்க சுழற்சியவள், அங்கு பெரிய சோபா போல் எதுவும் இல்லாததை கண்டு அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு நின்றிருக்க.. “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் நிற்கப் போறே..? இன்னைக்கு இல்லைனாலும் கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கையை ஏற்க பழகு.. இப்போ அமைதியா படுத்து தூங்கு..” என்றான் அவளை திரும்பியும் பார்க்காமல் விழிகளை கூட திறக்காமல் விநாயக்.
 
 
தன் மன உணர்வுகளை புரிந்து கொண்டது போல் அவன் பேசியதிலேயே மெல்ல எட்டிப் பார்த்தவள், விழிமூடி விநாயக் படுத்து இருப்பதைக் கண்டு ‘இவங்களுக்கு எப்படி நான் என்ன நினைக்கறேன்னு தெரிஞ்சது..?’ என மனதிற்குள் நினைத்தபடியே லேசான தயங்கத்தோடு அவனின் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள் நந்தினி.
 
 
*
 
 
இந்தத் திருமணத்தை அபிராமி எந்த அளவு அமைதியாக ஏற்றுக் கொண்டாரோ.. அதற்கு நேர் மாறாக வேதவல்லியின் வீடு பெரும் போர்க்களமாக மாறி இருந்தது. 
 
 
சிறுவயதில் இருந்து இத்தனை செய்தும் கொஞ்சமும் நன்றி இல்லாமல் நந்தினி இப்படி நடந்து கொண்டதாக சொல்லி கத்திக்கொண்டு இருந்தவர், பெண்ணை சரியாக வளர்க்கத் தெரியவில்லை என சித்ராவையும், தன்னை பழிவாங்க நினைப்பவனுடன் செல்லும் அளவுக்கு அவளுக்கு இங்கு என்ன குறை வைத்தோம் என்று நந்தினியையும், இப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றுவதை அறிந்து கொள்ளாமல் பொறுப்பற்று இருந்ததற்காக ரகோத்தமனையும், வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் விட்டதற்காக புஷ்பாவையும் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் வசை பாடிக் கொண்டிருந்தார்.
 
 
எப்போதுமே வேதவல்லிக்கு வார்த்தைகளில் வரைமுறை இருக்காது கோபம் வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் என்ன வேணுமானாலும் பேசக்கூடியவர், இன்று நடந்திருந்த விஷயங்கள் வேறு அவரை கோபத்தில் கொந்தளிக்க செய்து கொண்டிருக்க.. பேச்சுக்களும் அதற்கு ஏற்றது போல் மிக மோசமாகத்தான் வந்தது.
 
 
அதே நேரம் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்த நிதின் அங்கு இருந்த கனமான சூழ்நிலையைக் கண்டு விழிகளை சுருக்கினான். வீட்டில் இருந்த ஒருவரின் முகமும் சரியில்லை. புஷ்பாவும் சித்ராவும் அழுதழுது வீங்கிய முகத்தோடு இருக்க.. ஏதோ நடக்கக்கூடாது நடந்தது போல் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தார் ரகோத்தமன். வேதவல்லியை பற்றி சொல்லவே வேண்டாம், ஆத்திரத்தில் முகம் ரத்தமென சிவந்திருந்தது. 
 
 
இதைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தவனை கண்ட வேதவல்லி “இங்கே இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு.. நீ எங்கேடா போய் தொலைஞ்சே..?” என்று கத்த.. “என்னாச்சு..?” என்றான் நிதின்.
 
 
“என்ன நொன்னாச்சு..? வீட்டில் இருக்க ஒருத்தி என்ன செய்றான்னு கூட பாக்காம ஆம்பளையா நீங்க இரண்டு பேரும் எதுக்கு இந்த வீட்டில் தண்டமா இருக்கீங்க..!” என்று எடுத்ததும் வேதவல்லி கத்தியதில் எரிச்சலானவன், “முதலில் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..” எனவும் “ஹ்ம்ம் சொல்றாங்க சுரைக்காயில் உப்பு இல்லைன்னு..” என வேதவல்லி சிடுசிடுக்க.. “என்னன்னு தான் யாராவது சொல்லுங்களேன்..” என்றான் எரிச்சலோடு நிதின். 
 
 
அதில் சுருக்கமாக ரகோத்தமன் அனைத்தையும் சொல்லி முடிக்க.. “என்ன இதெல்லாம் எப்போ நடந்தது..?” என்று அவன் அதிர்வோடு கேட்க.. “ஹாங் நீ வீட்டில் நடக்கறதை பத்தி கவலை இல்லாம தண்டமா ஊர் சுத்திட்டு இருந்தப்போ..” என்றார் இடக்காக வேதவல்லி.
 
 
இதில் அவரை முறைத்தவன் சட்டென தன் அலைபேசியை எடுத்து நந்தினிக்கு அழைக்க முயல.. “யாருக்கு… அவளுக்கா..! இந்த வீட்டில் இருந்து இனி அவளை யாரும் கூப்பிடவே கூடாது.. நமக்கும் அவளுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை..” என்று திட்டவட்டமான குரலில் வேதவல்லி கூற.. அப்படியெல்லாம் இதை விட முடியாது என அதை மறுத்து நிதின் பேச என்று அங்கு ஒரு கலவரம் வெடித்து கொண்டிருந்தது.
 
 
******
 
 
வெகு நேரம் விழித்தே இருந்ததாலோ என்னவோ நந்தினி மறுநாள் காலை கண் விழிக்கும் போது நன்றாகவே விடிந்து இருந்தது. பக்கத்தில் திரும்பி பார்க்க.. அங்கு விநாயக் இல்லை. 
 
 
இத்தனை அருகில் அவனை வைத்துக் கொண்டு அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டி உள்ளதை எண்ணி உண்டான வருத்தமும் கவலையும் அவளுக்கு உயிர் வலியை கொடுத்துக் கொண்டு இருக்க.. விநாயக் மேல் பட்டுக்கொள்ளாமல் உறங்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தவளுக்கு வெகுநேரம் உறக்கமே வரவில்லை.
 
 
இதைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பவனை வெகுநேரம் முறைத்துக் கொண்டே படுத்திருந்தவள், அதன் பின் எப்போது உறங்கினாலோ அவளுக்கே தெரியவில்லை. இப்போது கண்விழித்துப் பார்க்கும் போது விநாயக் அருகில் இல்லாததை எண்ணி நிம்மதி உண்டாவதற்கு பதில் வருத்தமே எழுந்தது. அவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று நந்தினிக்கே புரியவில்லை.
 
 
விநாயக் அருகில் வந்தாலோ, பேசினாலோ அவனைப் பார்க்கவோ, பேசவோ பிடிக்கா ஒரு மனநிலை எழுகிறது.. அதுவே அவன் விலகிச் சென்றால் அதுவும் வலிக்கிறது.  
 
 
என்னதான் செய்வது எனப் புரியாமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க.. அதே நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் விநாயக். உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருப்பான் போலும் கையில்லா டி-ஷர்ட், முட்டியை தொட்டும் தொடாமல் இருந்த ஷார்ட்ஸ் என்று தன் கையில் இருந்த துண்டை வைத்து வியர்வையை ஒற்றியபடி உள்ளே நுழைந்தவனை, அன்று தன்னை மறந்து பார்த்திருந்த நினைவு தான் அவளுக்கு வந்தது. 
 
 
அதில் தன்னை மீறி அவன் மேல் ஆவலாக படிய துடித்த விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு திரும்புவதற்குள் நந்தினி தவித்து போனாள். அவளின் இந்த முயற்சி புரிந்ததோ இல்லையோ சிறு மென்னகையோடு நந்தினியை பார்த்தவன் “எழுந்தாச்சா.. குட் மார்னிங், அம்மா காலையில் கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க.. சீக்கிரம் ரெடியாகிடு..” என்றவன் அதற்கு மேல் உன்னிடம் எனக்கு எந்த பேச்சுவும் இல்லை என்பது போல் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
 
 
அவனின் இந்த விலகல் அளவுக்கு மீறி வலித்தது. அதில் விநாயக் சென்ற திசையையே அவள் பார்த்துக் கொண்டு இருக்க.. அடுத்த சில நிமிடங்களில் குளித்து முடித்து பாத்ரோப்புடன் வெளியில் வந்தவனை கண்கள் தெறித்து விழும் அளவுக்கு அதிர்வோடு பார்த்தவள், தவித்து தடுமாறி அவனை ஏறேடுத்தும் பார்க்காமல் பார்வையை தழைத்துக் கொள்ள.. அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் உடைமாற்றும் அறைக்குள் சென்று விட்டான் விநாயக்.
 
 
அதன் பிறகே நந்தினிக்கு தன் தவறு புரிந்தது. இவ்வளவு நேரத்தில் அவளுக்கான உடையை கூட எடுக்காமல் அமர்ந்திருந்தை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவள், அவன் தயாராகும் வேகத்தை பார்த்து நேரமாவதை உணர்ந்து இதற்கு மேலும் காத்திருக்க வேண்டாம் என்ற முடிவோடு குளியலறைக்குள் சென்றாள். 
 
 
அங்கே அவளுக்காகவே வைக்கப்பட்டது போல் ஒரு பாத்ரோப் இருப்பதைக் கண்டு ‘இதை எப்போ எடுத்து வெச்சுருப்பாங்க..?’ என்ற யோசனையோடே குளித்து முடித்து அவள் வெளியில் வருவதற்குள், அவன் முழுதாக தயாராகி பால்கனியில் யாரோடோ அலைபேசியில் பேசியபடி நின்றிருந்தான்.
 
 
விநாயக் அறைக்குள்ளேயே இருந்து தன்னை சங்கடப்படுத்த விரும்பாமல் விலகி அங்கே நின்று இருப்பது புரிய.. இதை எண்ணி சந்தோஷிப்பதா வருந்துவதா என தெரியா மனநிலையோடே தானும் வேகமாக தயாரானாள் நந்தினி.
 
 
நேற்று இருந்த கோபத்தில் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாதது இன்று அவளுக்கு லேசாக மனதில் பதிந்து யோசனைக்குள்ளாக்கியது. அவளுக்கென விநாயக் வாங்கி வைத்திருந்த அத்தனையும் நந்தினி பல வருடங்களாக பயன்படுத்தும் அதே நிறுவனங்களின் பொருட்கள். 
 
 
அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் அவ்வளவு எளிதில் வேறு புது பொருட்களை உபயோகித்து விடமாட்டாள். அதில் உண்டான யோசனையோடே அலங்கார மேஜை முன் வந்து நின்றவள், அங்கு இருந்த நகை பெட்டியை யோசனையோடு பார்த்தாள்.
 
 
மெல்ல அதை திறந்து பார்க்க.. உள்ளே கெம்ப்பு கல் வைத்த ஆன்டிக் வகை நகை செட் இருந்தது. வெள்ளை மற்றும் சிகப்பு கற்கள் பொறித்த அந்த நகையை பார்க்கும் போதே அதன் மதிப்பை பறைசாற்றுவதாக இருந்தாலும் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டு வந்திருப்பது போல் பார்ப்பவர்களுக்கு ஒரு நாளும் கண்ணை உறுத்தாது. 
 
 
சேலை அணிந்து கோவிலுக்கு செல்லும் புது மணப்பெண் அணிந்து கொள்ளக்கூடிய பொருத்தமான நகை தான். மெல்லிய பதக்கம் வைத்த ஒரு ஆரமும் அதே டிசைனில் செய்யப்பட்ட ஒரு கம்மலும் ஒரு ஜோடி வளையலும் அங்கே இருந்தது.
 
 
அதை அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்த விநாயக் “இது உனக்கு தான், அம்மா கொண்டு வந்து கொடுத்தாங்க.. நீ குளிச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன்.. இதை கோயிலுக்கு நீ போட்டுட்டு வந்தா சந்தோஷப்படுவேன்னு சொல்லிட்டு போனாங்க..” என்றவன், அதற்கு மேல் நீ போட்டுக்கொள் என்றும் வற்புறுத்தவில்லை.. போட்டுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று அபிராமி சொல்லி சென்றார் என்றும் சொல்லவில்லை.. இது இனி உன் விருப்பம், சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்பது போல் தன் அலைபேசியை அருகில் இருந்த மேஜை மேல் வைத்தவன், தன் போக்கில் உள்ளே சென்று ஏதோ செய்து கொண்டிருக்க.. அவன் சென்ற திசையை இரு நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், பின் தலையை கிளிப் செய்து கொண்டு மெல்லிய அலங்காரத்தோடு தயாராக தொடங்கினாள்.
 
 
இறுதியாக அந்த நகை பெட்டியை பார்த்தவள், சிறு பெருமூச்சுடன் அதை கையில் எடுத்தாள். அதே நேரம் வெளியில் வந்த விநாயக் அங்கிருந்த இழுப்பறையில் இருந்து தன் பர்ஸ், வண்டி சாவி என்று எடுத்துக் கொண்டிருக்க.. முதலில் கம்மல் அணிந்தவள், அடுத்து வளையல் போட்டுக்கொண்டு இறுதியாக ஆரத்தை கையில் எடுத்தாள்.
பெட்டியில் வைத்துப் பார்த்த போது இருந்ததை விட அவள் அதை தன் மேல் வைக்கும் போது அத்தனை அழகாக கண்ணை பறித்தது அந்த நகை. நிச்சயம் விலை உயர்ந்ததாக தான் இருக்க வேண்டும் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
‘இதை நான் போட்டுக் கொண்டு தான் ஆக வேண்டுமா..? இதற்கு நான் தகுதியானவள் தானா..! ஏன் தேவ் அம்மா இப்படி எல்லாம் செய்யறாங்க..? அவங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணம் தானே இது..! அதை வைத்து கொஞ்சம் கூட அவர்களுக்கு கோபம் உண்டாகவில்லையா..? வேதவல்லி அளவுக்கு இல்லை என்றாலும் கோபமாக இரண்டு வார்த்தைகள் திட்டி விட்டால் கூட பரவாயில்லை என்று நந்தினியின் மனம் நினைத்தது.
 
 
அவரின் இந்த அன்பு தான் அவளுக்கு மேலும் குற்ற உணர்ச்சியை கொடுத்தது. இதில் லேசாக விரல்கள் நடுங்க ஆரத்தை அணிய முடியாமல் அவள் தடுமாற.. “கொடு நான் போடறேன்..” என்று அவளிடம் இருந்து அதை வாங்கி நந்தினிக்கு அணிவித்தான் விநாயக்.
 
 
தன் கையில் இருந்து ஆரத்தை அவன் வாங்கிக் கொண்டது முதல், இதோ இப்போது மெதுவாக நந்தினியின் கூந்தலை ஒதுக்கி அந்த ஆரத்தை அவளுக்கு விநாயக் அணிவித்துக் கொண்டிருப்பது வரை.. எதிரில் இருந்த கண்ணாடி வழியே அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க.. அப்போதே அவன் கைகளில் இருந்த காப்பு அவள் கண்ணில் பட்டது. 
 
 
முதலில் அதை சாதாரணமாக பார்த்தவள், பின் திகைத்து விழி விரிய அப்படியே அசையாமல் கண்ணாடி வழியே அவன் கைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு சில நொடிகளுக்குப் பிறகே உண்மை உரைக்க.. சட்டென திரும்பி “இது..?” என்று அவள் விநாயக்கின் கைகளை பிடிக்க வருவதற்குள் அவளுக்கு நகையை அணிவித்து முடித்து இருந்தவன் “நேரமாகுது அம்மா காத்திருப்பாங்க வா..” என்று விட்டு முன்னே செல்ல.. அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தாள் நந்தினி.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
1786208617-IMG-20260808-WA0004.jpg
 
 
மௌனம் - 26
 
சில நொடிகள் தன் கண்ணில் கண்டதை நிஜமென நம்ப முடியாமல் சிலையென நின்று விட்டிருந்த நந்தினிக்கு அதன் பின்பே உயிர் வந்தது. அதில் வேகமாக விநாயக்கைக்குத் தேடி அவள் படிகளில் இறங்கி வர, அவனோ வெளிவாயிலில் தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான். 
 
 
அங்கே ஓட்டமும் நடையுமாக நந்தினி அவனை தேடிச் செல்ல.. “பூஜைக்கு ஏற்பாடு செய்ய அம்மா முன்னேயே கிளம்பி போயிட்டாங்க, நமக்காக அங்கே காத்திருப்பாங்க.. நேரமாகுது சீக்கிரம் ஏறு..” என அவளை பேசவே விடாமல் அவன் முந்திக் கொண்டதில், வேறு வழியில்லாமல் விநாயக்கின் பின்னே ஏறி அமர்ந்தவளின் யோசனையெல்லாம் அவன் கரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த அந்த பிளாட்டினம் காப்பின் மீது தான் இருந்தது. 
 
 
வழியில் இதைப் பற்றி பேச நினைத்து இருமுறை முயன்றவளுக்கு மனதில் இருந்த அதீத பரப்பரப்பின் காரணமாக சரியான வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை. அவள் தன் மனதில் இருக்கும் கேள்வியை வார்த்தையாக கோர்த்து அவனிடம் சேர்ப்பதற்குள் கோவில் வந்து விட்டிருந்தது. 
 
 
இதில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நந்தினி இறங்கி நிற்கவும், நேராக அங்கிருந்த பூக்கடையின் முன் சென்று நின்றவன் மல்லிகை பூவை வாங்கி அவளிடம் நீட்டினான். அவன் பின்னேயே வந்திருந்த நந்தினி விழிகளில் அத்தனை கேள்வியும் முகத்தில் உண்டான கலக்கமுமாக அவனைப் பார்க்க.. “நேரமாகுது யது..” என்றான் விநாயக். 
 
 
அதில் அமைதியாகவே அவனிடம் இருந்து பூவை வாங்கி கொண்டவள் அதை தலையில் வைத்தவாறே விநாயக்கை பின் தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்தாள். அங்கே பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி. இருவரும் இப்படி ஜோடியாக இணைந்து வருவதைக் கண்டவரின் முகம் மலர்ந்தது.
 
 
“வாங்க வாங்க..” என இருவரையும் சந்தோஷமாக அவர் வரவேற்க.. அவரின் அருகில் சென்று விநாயக் நிற்க, அவனுக்கு பக்கத்தில் நின்றாள் நந்தினி. 
 
 
அடுத்து பூஜை ஆரம்பமாக.. அத்தனை நிறைவாக எல்லாம் நடந்து முடிந்தது. மகனின் வாழ்க்கையை எண்ணி மனதிற்குள் எத்தனை சஞ்சலங்களை சுமந்திருந்தாரோ தெரியவில்லை.. இன்று அவன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனிடம் சரணடைந்திருந்தார் அபிராமி.
 
 
விநாயக் மற்றும் நந்தினியின் பேரில் நடந்து முடிந்த பூஜையை கண்ணாரக் கண்டு ரசித்தவரின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி போனது. அபிராமி சிறப்பு பூஜைக்காக கொடுத்திருந்த பெரிய வெள்ளி தட்டை கொண்டு வந்து அர்ச்சகர் அவரிடம் நீட்டவும், “என் மருமககிட்ட கொடுங்க, இனி எல்லாம் அவதான்..” என நந்தினியின் பக்கம் கை காண்பித்தார் அபிராமி. 
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஒரு நொடி திகைத்த நந்தினி என்ன செய்வது எனப் புரியாமல் தடுமாறி நிற்கவும் “ஹ்ம்ம் வாங்கிக்கோ..” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் விநாயக். அதில் அவள் கையை மெதுவாக நீட்டவும், அவளின் சேலை முந்தியை எடுத்து அந்த கரங்களில் வைத்த அபிராமி “இப்படி வாங்கிக்கோடா..” என்றார்.
 
 
நந்தினியும் அதேபோல் செய்ய.. அடுத்து பூ குங்குமம் என்று அர்ச்சகர் ஒவ்வொன்றாக கொண்டு வந்து கொடுக்க.. தனக்கானதை வாங்கி வைத்துக் கொண்ட அபிராமி, விநாயக்கின் பக்கம் திரும்பி “நந்துக்கு நீயே வெச்சு விடு..” என்றார். இதில் அவன் மறுப்பேதும் சொல்லாமல் சொன்னதை செய்ய போக.. நந்தினிக்கு தான் லேசான குறுகுறுப்பு உண்டானது.
 
 
அவள் கனவில் நினைத்து ஏங்கியதெல்லாம் இன்று நிஜத்தில் நடந்து கொண்டிருக்க.. இதை சந்தோஷமாக ஏற்று அனுபவிக்க முடியாத ஏதோ ஒரு சஞ்சலம் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் நேற்று அளவுக்கு அது அத்தனை வீரியமாக இருக்கவில்லை.. மனம் லேசாக தடுமாற அமைதியாகவே நந்தினி நின்றிருக்க.. அவள் நெற்றியிலும் வகிட்டிலும் அழுத்தமாக குங்குமத்தை வைத்தான் விநாயக். 
 
 
எல்லாம் முடிந்து மெதுவாக பிரகாரத்தைச் சுற்றி வந்து மூவரும் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க.. “என் மனசு இன்னைக்கு எவ்வளவு நிறைஞ்சு இருக்கு தெரியுமா..? இப்படி ஒரு நாள் உன் வாழ்க்கையில் வரவே வராதோன்னு நான் தினம் ஏங்கி தவிச்சு அழுது இருக்கேன்..” என்ற அபிராமியை இடையிட்டவன் “ஓ அப்போ அப்படியே என்னை சாமியாரா மாற்ற திட்டம் போட்டு இருக்கீங்க, அப்படித்தானே அபிராமி மம்மி..?” என்று கேலியாக கேட்டான் விநாயக்.
 
 
“ஆமா நாங்க போடறோம் திட்டம்.. நீ எல்லாம் முரட்டு சிங்கிளா தான் இருக்க போறேன்னு நான் முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு மகனே..!” என அவரும் கேலி செய்ய.. இருவரும் இப்படியே மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்ததை அதிசயமாக பார்த்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
சில நிமிடங்களுக்கு பின் “சரிம்மா நேரமாகுது கிளம்புவோமா..? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்று விநாயக் சொல்ல.. “நீங்க கிளம்புங்க, நான் இப்படியே அம்மன் கோவில் போயிட்டு அப்புறமா வரேன்..” என்றார் அபிராமி. 
 
 
“இனி எங்க மம்மியை கையிலேயே பிடிக்க முடியாது..” என்று அப்போதும் வம்பு இழுத்து அவரின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டே அவன் எழுந்து நிற்க.. நந்தினி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். “என்ன மேடம் கிளம்பும் ஐடியா இல்லையா..?” என்று அவளைப் பார்த்து விநாயக் கேட்கவும் “என்ன நானா..?” என்றாள் சிறுத்திகைப்போடு நந்தினி. 
 
 
“இல்லை, உன்னை இல்லை.. அதோ பக்கத்தில் இருக்காங்களே அவங்களை கேட்டேன்..” என்று அவளுக்கு பின் விநாயக் கையை காண்பிக்கவும், நந்தினியும் திரும்பி பின்னே பார்த்தாள். அதில் அவன் முறைக்கவும், நந்தினியின் இந்த அப்பாவி தனத்தை கண்டு சிரித்து விட்டார் அபிராமி.
 
 
“வினய் உன்னை தான்ம்மா கூப்பிடறான், எப்படியும் வீட்டுக்கு போய் யூனிபார்ம் மாத்திட்டு தான் கிளம்புவான்.. அதான் உன்னையும் கூப்பிடறான், நீ கிளம்பு நான் வர நேரமாகும்..” என அபிராமி சொல்லவும் ‘சரி’ என்ற தலையைசைப்போடு எழுந்து கொண்டாள் நந்தினி.
 
 
அபிராமியின் முன் இருந்த பூஜை தட்டை எடுத்துக் கொண்ட விநாயக் “டிரைவர்கிட்ட கொடுத்திடறேன்மா..” என்று விட்டு முன்னே நடக்க.. அவன் பின்னே சென்றவளின் பார்வை முழுக்க மீண்டும் அவன் காப்பின் மேல் மட்டுமே இருந்தது. 
 
 
இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அவனிடம் இதைப் பற்றி பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடே அவனோடு வீடு வந்து சேர்ந்தவளுக்கு பாவம் அதற்கான வாய்ப்பு அதன் பின் கிடைக்கவே இல்லை.
 
 
விநாயக் வீட்டை நெருங்குவதற்குள் மூன்று அழைப்புகள் அவனுக்கு வந்துவிட்டது. எதையும் ஏற்காமல் யார் என மட்டும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தவன், அடுத்த நொடி அலைபேசியை எடுத்து அடுத்தடுத்து யார் யாரோடோ பேசியவாறே சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியில் வர, அவனோடு பேச எண்ணி அறையில் கையை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவள் அதற்கான வாய்ப்பே கிடைக்காததில் உண்டான திகைப்போடு அவனை பார்த்தாள்.
 
 
அதில் அவளை கடந்து ஒரு தலையசைப்போடு கிளம்ப முயன்றவன், அந்தப் பார்வையில் அப்படியே நின்று அலைபேசியை ஒரு நொடி அணைத்துவிட்டு “அம்மா சீக்கிரம் வந்துடுவாங்க, தேவையில்லாம நிறைய யோசிச்சு குழப்பிக்காம அமைதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வர பார்க்கறேன்..” என்று அவளின் தலையை மெதுவாக தடவி கொடுத்தபடியே கூறியவன், வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான். 
 
 
அவனின் இந்த அக்கறையான பேச்சிலும் அன்பான தொடுகையிலுமே அசையாமல் அப்படியே நின்று விட்டிருந்தவளுக்கு, அதன் பிறகே அவனிடம் கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. இதில் வேகமாக நந்தினி கீழிறங்கி வர, விநாயக் தன் இரு சக்கர வாகனத்தில் வெளிவாயிலை கடந்து சென்று கொண்டிருந்தான்.
 
 
இன்று அவன் அணிந்திருக்கும் இந்த காப்பு நந்தினி அவனுக்காக வாங்கியது போலவே இருந்தது. அன்று அத்தனை ஆசையோடு அவள் அதை விநாயக்கிடம் கொடுத்த போது அவன் அதை தூக்கி வீசி விட்டுச் சென்றது மீண்டும் நினைவுக்கு வர, இந்த நொடி அது நடந்தது போல் அவளின் விழிகள் மீண்டும் கலங்கத் தொடங்கியது.
 
 
‘அன்று வேண்டாம் என தூக்கி வீசியது எப்படி அவன் கையில் வரும்..? இது அதுதானா..! இல்லை அதேபோல் இருக்கும் வேறு ஒன்றா..?’ என்று அவள் மனம் தவித்துக் கொண்டிருக்க.. அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. 
 
 
அதை பற்றி அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பும் படபடப்பும் அவளுள் நிறைந்து இருக்க.. “இல்லை, இது அதுவா இருக்க வாய்ப்பே இல்லை.. அது எப்படி அவங்க கையில் வரும்..?” என்று அவளுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு சோர்வாக அமர்ந்தவளின் மனக்கண்ணில் அன்றைய நாள் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.
 
 
அன்று தன் பரிசை அத்தனை ஆசையாக கொண்டு சென்று அவனிடம் கொடுத்ததை வாங்கி விநாயக் வீசிவிட்டுச் சென்றதை தாங்க முடியாத துயரத்தோடு அங்கிருந்து அழுது கொண்டே கிளம்பி விட்டிருந்தாள் நந்தினி.  
 
 
வீடு வந்து சேர்ந்த பிறகும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதே கரைந்தவளுக்கு நள்ளிரவுக்கு பிறகே அந்த பரிசை பற்றிய நினைவு வந்தது. அதை எடுத்துக் கொண்டு வராமல் அப்படியே விட்டு வந்தது புரிய.. வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு இப்போதே சென்று அதை எடுத்துக்கொள்ள உடலும் மனமும் பரபரத்தது. 
 
 
ஆனால் இந்த நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பவும் முடியாது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமானால் நிச்சயம் கார் தேவை. அப்போது அவளுக்கென தனி கார் கிடையாது. அவளை கார் ஓட்டவும் அனுமதித்து இருக்கவில்லை. டிரைவரும் இப்போது வீட்டில் இல்லை, இதெல்லாம் மனதில் ஓட.. செய்வதறியாமல் வாயிலுக்கும் தன் அறைக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அவனின் செயலிலேயே அன்று எப்படியும் அவளுக்கு உறக்கம் வந்திருக்காது. அதோடு இதுவும் சேர்ந்து கொண்டதில் துளியும் ஓய்வின்றி வாயிலிலேயே காத்துக் கிடந்தவள், விடிந்த பின் டிரைவர் வந்த உடன் அவரை அப்படியே அழைத்துக் கொண்டு தீக்ஷாவின் வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள்.
 
 
இத்தனை அவசரமாக மகள் காலையில் கிளம்புவதை கண்டு என்னவென விசாரித்த சித்ராவிடம் தன் கழுத்திலிருந்த செயின் அங்கே விழுந்து விட்டதாக சொல்லி சமாளித்து விட்டாள் நந்தினி. சித்ராவும் செயின் காணோமென வேதவல்லிக்கு தெரிந்தால் நிச்சயம் பெரிய அமர்க்களம் நடந்து விடும் என்பதால் அவர் எழுந்து கொள்ளும் முன் சென்று எடுத்து வருமாறு கூறி மகளை அனுப்பி வைத்திருந்தார்.
 
 
அத்தனை பதட்டமும் தவிப்புமாக அங்கே சென்று இறங்கியவள், வாசலில் அவன் வீசி சென்ற பரிசுப் பொருள் இல்லாததை கண்டு அதிர்ந்து, செடி மறைவில் காருக்கு அடியில் என்று ஒரு இடம் விடாமல் தேடியும் அவளுக்கு அது கிடைக்கவே இல்லை.
 
 
பின் தீக்ஷாவுக்கு ஏதாவது இதைப் பற்றி தெரியுமா என அறிந்து கொள்ள அவளிடம் சென்று கேட்க.. அவளோ அதுவரை தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். திடீரென தன்னை உலுக்கி எழுப்பி நந்தினி கேட்க வருவது கூட அவளுக்கு புரியவில்லை. 
 
 
“என்ன கிப்ட்..? யார் கொடுத்தாங்க..?” என்று அவள் அரை தூக்கத்தில் கேட்க.. “அதையெல்லாம் விடு.. நீ ஏதாவது பார்த்தியா..? எடுத்து வெச்சு இருக்கியா..? இல்லை உங்க வீட்டில் இருக்க யாராவது எடுத்து வெச்சாங்களான்னு கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரேன்.. இல்லை கேட்டு சொல்லேன்..” என்று இவள் பரபரத்துக் கொண்டே இருக்க.. நிதானமாக தன் உறக்கத்தை கலைந்து முகம் கழுவிக் கொண்டு வந்து நந்தினியை தீர்க்கமாகப் பார்த்த தீக்ஷா “அப்படி என்ன கிப்ட் அது..?” என்று கேட்கவும், இனி மறைத்து என்ன ஆகப்போகிறது.. தன் மனதின் வலியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள தான் வேண்டுமென உணர்ந்து அன்று தான் முதல் முறையாக அங்கு நடந்த அனைத்தையும் தீக்ஷாவிடம் சொல்லி இருந்தாள் நந்தினி. 
 
 
இதையெல்லாம் கேட்டு திக்ஷுவுக்கு அத்தனை ஒரு அதிர்வு. தன் முன் இத்தனை விஷயங்கள் நடந்திருக்க.. எப்படி இதையெல்லாம் கவனிக்காமல் போனோம் என்ற கேள்வியும் “உனக்கு நிஜமாவே தெரியுமா நந்து.. வினய் அண்ணாக்கு உன்னை பிடிச்சுருந்ததா..?” என்று வேறு கேட்டு வைக்க.. இப்போது இருக்கும் மனநிலையில் நந்தினியை அந்த கேள்வி மேலும் உடைத்து போட்டது.
 
 
“அப்படி தான் நம்பினேன், நம்பினேன்னு கூட இல்லை.. அது தான் நிஜம், இப்போ தான் என்னவோ தெரியலை இப்படி நடந்துக்கிட்டாங்க.. எனக்கு தெரியும் அவங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு, இல்லைனா எனக்கு ஏன் பூ வாங்கி தரணும்..” என்றெல்லாம் கேட்டு அவள் அழ தொடங்க.. தீக்ஷுவுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று கூட என்று புரியவில்லை. 
 
 
இருவரும் அப்போதே கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சின்ன பெண்கள் என்பதால் இதைப்பற்றி தெளிவாக பேசி சமாதானம் செய்யவும் தீக்ஷுவுக்கு தெரியவில்லை. ஆனால் நந்தினி அழுவதை பார்க்கவும் முடியாமல் அவளோடு சேர்ந்து எவ்வளவு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை நந்தினிக்கு கிடைக்கவே இல்லை. 
 
 
இவர்கள் இப்படி எதையோ தேடிக்கொண்டு இருப்பதைக் கண்டு சூர்யகலா என்னவென்று விசாரிக்க.. “இல்லை பாட்டி நந்தினி நேற்று வந்த போது அவளுடைய பர்ஸ் கீழே விழுந்துடுச்சு.. அதான் தேடிட்டு இருக்கோம்..” என்று தீக்ஷு சமாளிக்க.. “எங்கே நம்ம வீட்டுக்குள்ளேயா..? வேலை செய்யறவங்ககிட்ட கேளுங்க, எடுத்து வெச்சுருப்பாங்க..” என்றார் தனக்கேயான அதிகாரத்தோடு சூர்யகலா. 
 
 
ஏனெனில் தன் வீட்டில் விழுந்த ஒரு பொருள் நிச்சயம் காணாமல் போகாது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதற்கு நந்தினி “இல்லை பாட்டி வெளியே தான் விழுந்திருக்கும்னு நினைக்கறேன்.. நான் கிளம்பும் வரை என் கையில் தான் இருந்தது..” என்று மெல்லிய குரலில் சொல்லவும் “அப்போ நாம எதுவும் சொல்ல முடியாதே..!” என்றவர், அங்கு வேலை செய்பவர்களை அழைத்து வீதியை சுத்தம் செய்பவர்கள் வந்து சென்று விட்டனரா என விசாரிக்க.. அரைமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வந்து சென்றது தெரிந்தது. 
 
 
‘இனி யார் எனத் தேடி எங்கே சென்று கேட்டு எப்படி அதை வாங்க முடியும்..?’ என புரியாமல் திகைத்த நந்தினி, தன்னால் முடிந்த வரை தீக்ஷுவிடம் சொல்லி விசாரித்துப் பார்த்தும் அவளுக்கு அது இறுதி வரை கிடைக்கவே இல்லை.
 
 
இன்று அதை விநாயக் கையில் கண்டவுடன் அவள் மனம் அத்தனை ஆர்ப்பரித்தது. ஆனால் அது நிஜம் தானா என தெரிந்து கொள்ள தான் இந்த நொடி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
 
இதில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத ஒரு மனநிலையோடு சோர்வாக அப்படியே அமர்ந்து விட்டாள் நந்தினி.
 
 
 ******
 
 
அதேநேரம் தன் வழக்கமான அம்மன் கோவிலில் வந்து மகன் மருமகள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அபிராமி.
 
 
அவர் மனம் இன்று உணரும் இந்த அமைதியும் நிறைவும் இதுவரை அவர் வாழ்வில் உணர்ந்திடாததாக இருந்தது. அதை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனுபவித்தபடி அமைதியாக அவர் அமர்ந்திருக்க.. மெதுவாக அவர் முன் வந்து நின்றார் ரகோத்தமன். 
 
 
சற்று தள்ளி அவர் தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த போதே அபிராமி பார்த்து விட்டிருந்தார். ஆனாலும் அசையாமல் அப்படியே அவர் இருக்க.. மெதுவாக அவரின் முன் வந்து நின்றவர் “அபி உன் கூட கொஞ்சம் பேசணும், நான் இங்கே உட்காரலாமா..?” என்றார். 
 
 
அதற்கு அபிராமி சரி என்றோ வேண்டாம் என்றோ எதுவும் சொல்லவில்லை, அமைதியாகவே இருக்க.. அதையே அவரின் சம்மதமாக எடுத்துக் கொண்ட ரகோத்தமன் சற்று தள்ளி இடைவெளி விட்டே அமர்ந்தார்.
 
 
அங்கு ஒரு கனமான மௌனம் நிலவியது. இவ்வளவு தூரம் தன்னை தேடி வந்திருப்பவர் அவராகவே பேசட்டும் என அபிராமி அமைதியாக பார்த்திருக்க.. மெல்ல நிமிர்ந்து அபிராமியை பார்த்த ரகோத்தமன் “என்ன செய்யலாம்னு இருக்கே அபி..?” என்றார்.
 
 
அதில் ஒற்றைப் புருவத்தை புரியாமல் உயர்த்தி “எதை பத்தி கேட்கறீங்க..?” என்றார் அபிராமி. “எல்லாம் வினய் விஷயம் தான், அவன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை.. என் மேலேயும் அம்மா மேலேயும் உள்ள கோபத்தில் இப்படி ஒரு முடிவை அவன் எடுத்து இருக்கவே கூடாது.. எங்களை பழிவாங்க இதுதான் வழியா..?” என அவர் சொல்லிக் கொண்டிருக்க.. விழிகளை சுருக்கி “பழிவாங்கவா..!” என்றார் அபிராமி.
 
 
“ஆமா ஏன் உனக்கு தெரியாதா.. உன்கிட்ட எதுவும் சொல்லலையா..?” என்று ரகோத்தமன் கேட்கவும் “நீங்களே சொல்லுங்களேன்..” என்றார் அமைதியான குரலிலேயே அபிராமி. 
 
 
“நிதினுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செய்யலாம்னு பேசி முடிவு செஞ்சு இருந்தோம்.. அம்மாவுக்கு ஆரம்பத்தில் இதில் பெருசா உடன்பாடு இல்லை.. ஆனா நந்தினி வீட்டில் இல்லாத நேரமா பார்த்து இரண்டு மாசமா நான் தான் பொறுமையா பேசி எப்படியோ அவங்களை சம்மதிக்க வெச்சு இருந்தேன்.. இப்போ அடுத்த வாரம் நிச்சயம் செய்யலாம்னு இருக்கும் போது இப்படி வந்து நிற்கறான்..” என்று அவர் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க.. அமைதியாக ரகோத்தமன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அபிராமி. 
 
 
“எல்லாத்தையும் நான் ஒவ்வொன்னா சரி செய்ய முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. இவன் அதை மொத்தமா சரி செய்ய முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டான்.. இப்படி ஒரு கோபமா அவனுக்கு எங்கே மேலே..!” என்றவர் அபிராமி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு “என்ன அபி எதுவுமே சொல்ல மாட்டேன்றே..?” என்றார். 
 
 
“என்ன சொல்லணும்..? அதான் நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே..! சொல்லி முடிங்க..” என்று அபிராமி சொல்லவும் “என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை, ஆனா வினய் செஞ்சது சரில்லை..” என்று கூறியவர் “உனக்கு இதில் கோபமே இல்லையா..?” என்று நிமிர்ந்து அபிராமியை பார்த்து கேட்கவும் ‘இல்லை’ என்பதாக அசைந்தது அபிராமியின் தலை.
 
 
“என்ன..?” என்று நம்ப முடியாமல் அவர் கேட்கவும் “ஏன் கோபப்படணும்..? அவனுக்கு பிடிச்ச பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சுருக்கான், இதில் கோபப்பட என்ன இருக்கு..?” என்றார் அபிராமி.
 
 
“கோபப்பட என்ன இருக்கா..! நிதினுக்கு நிச்சயம் செய்ய இருந்த பொண்ணை..” என்று ரகோத்தமன் கூறவும் “நீங்க அப்படி பார்க்கறீங்க..? நான் இன்னொருத்தனை காதலிச்சுட்டு இருந்த பொண்ணை தான் நீங்க நிச்சயம் செய்ய இருந்ததா பார்க்கறேன்..” என்றார் அபிராமி. 
 
 
“காதலா..! அவங்களுக்குள்ளே காதல் இருந்ததுன்னு நிஜமா நீ நம்பறியா..?” என்றார் ரகோத்தமன். அதற்கு அபிராமி பதிலேதுவும் சொல்லவில்லை. அதில் சந்தேகம் வந்தவராக அபிராமியின் முகத்தை பார்த்தவர் “உனக்கு.. உனக்கு இதைப்பற்றி முன்னேயே தெரியுமா..?” எனவும் ‘ஆம்’ என்பது போல தலையசைத்தார் அபிராமி.
 
 
“எப்படி தெரியும்..? எப்போ தெரியும்..? அப்போவே நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் இவ்வளவு தூரம் இதை வளர விட்டிருக்க மாட்டேனே..!” என்று ரகோத்தமன் பரபரக்க.. “இதுக்கு என்ன அர்த்தம் அப்படி என்ன செஞ்சு இருப்பீங்க..?” என்றார் அபிராமி.
 
 
“இவங்க இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒண்ணு சேரவே முடியாது.. அப்படி சேர்ந்தா அது திரும்ப பெரிய பிரச்சனையை தான் நமக்குள்ளே கொண்டு வரும்னு பேசி புரிய வெச்சு இருப்பேன்.. ஏற்கனவே இருக்க பிரச்சனையை சரி செய்ய தான் நாம பார்க்கணும்.. மேலும் அதிகமாக்க பார்க்கக் கூடாது.. யார் யார் கூட சேரணும் இருக்கில்லை..” என்றவர், “சொல்லு அபி, உனக்கு முன்னேயே தெரியுமா..?” என மீண்டும் கேட்டார் ரகோத்தமன்.
 
 
அவர் பேசிய விதத்திலேயே முகம் மாறி போயிருக்க “அவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு தெரியும், இரண்டு வருஷத்துக்கு முன்னே கல்யாண பேச்சை நான் எடுக்கும் போது எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு ம்மா.. அது யாரு என்னன்னு நேரம் வரும் போது நானே அதை பத்தி உங்ககிட்ட பேசறேன், அதுவரை வேறு எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லி இருந்தான்.. ஆனா அது நந்தினின்னு எனக்குத் தெரியாது, அவன் சொல்லவும் இல்லை..” என்றார் அபிராமி. 
 
 
“இரண்டு வருஷமாவா..!” என தனக்குள்ளேயே யோசித்தவர், ‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லை..’ என்ற முடிவுக்கு வந்தவராக “இல்லை, இவங்களுக்குள்ளே அப்படி ஏதாவது இருந்திருந்தா அரசல் புரசலாவாவது எனக்கு தெரிஞ்சிருக்கும்.. எனக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைன்னு தான் தோணுது.. எங்க மேலே இருக்க ஒட்டுமொட்டு கோபத்துக்கும் சேர்த்து பழிவாங்க தான் வினய் இப்படி செஞ்சுருக்கணும்..” என்று அழுத்தம் திருத்தமாக ரகோத்தமன் சொல்லவும், “அப்போ நந்தினிக்கும் உங்க மேலே கோபம்னு சொல்றீங்களா..? அவளும் உங்களை பழிவாங்க நினைச்சு இருக்கான்னா, அந்த அளவுக்கு நீங்க எல்லாம் சேர்ந்து அவளுக்கு என்ன செஞ்சீங்க..?” என்றார் அபிராமி. 
 
 
அதில் திகைத்து ரகோத்தமன் அபிராமியின் முகம் பார்க்கவும், “இங்கே நந்தினின்னு உயிரும் உணர்வும் உள்ள ஒருத்தி இருக்கான்றதையே மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க.. வினய் கோபப்பட்டு தான் பழி வாங்கிட்டான்னு யோசிக்கும் நீங்க நந்தினி அதுக்கு எப்படி உடன் படுவான்னு ஏன் யோசிக்கலை..” என்று அபிராமி கேட்ட பிறகே தன் தவறு புரிய.. நெற்றியை நீவி விட்டுக் கொண்டவராக “அப்போ இது..” என தொடங்கியவருக்கு அடுத்து பேச வார்த்தைகள் கூட வரவில்லை.
 
 
சில நொடிகள் அப்படியே அமைதியாக கழிய.. “சரி எனக்கு நேரமாகுது..” என அபிராமி எழுந்து கொள்ள நினைக்க.. “அபி உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானா..?” என்று அவர் கேட்கவும், “ஆமா..” என்று துளியும் யோசிக்காமல் உடனே பதிலளித்திருந்தார் அபிராமி.
 
 
அதில் அடுத்து என்ன கேட்பது என்று கூட தெரியாமல் ரகோத்தமன் பார்த்திருக்க.. “என் பிள்ளை நல்லா இருக்கணும்னு நினைக்க இந்த உலகத்தில் அவனுக்குன்னு நான் மட்டும் தானே இருக்கேன்.. அவனுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்து இருக்கான், இதில் எனக்கு முழு சம்மதம் தான்..” என்று கொஞ்சம் அழுத்தமாகவே பதிலளித்திருந்தார் அபிராமி. 
 
 
இதைக் கேட்டு திகைத்தவராக அபியை பார்த்து “அப்போ வினய்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றியா..? அவன் நல்லா இருக்கக்கூடாதுன்னு நான் நினைப்பேனா..!” என்று சிறு பதட்டத்தோடு ரகோத்தமன் கேட்கவும், “அப்படி நான் சொல்லலை, கொஞ்ச நேரம் முன்னே நீங்க தான் சொன்னீங்க.. உங்க மகனை பத்தி அவன் கல்யாணத்தைப் பத்தி கவலைப்பட்டு நீங்க இவ்வளவு தூரம் வந்து பேசும் போது, என் மகன் வாழ்க்கையை பத்தி நான் கவலைப்பட கூடாதா..” என்றார் அபிராமி. 
 
 
“ஐயோ நான் அப்படி சொல்லலை..” என்ற ரகோத்தமன் வேறு ஏதோ சொல்ல வருவதற்குள் அவரை கைநீட்டி தடுத்து இருந்த அபிராமி “இங்கே வந்து நீங்க அடுத்து என்ன செய்யலாம்னு ஆரம்பிச்ச போது என் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு எட்டிப் பார்த்தது.. 
 
 
பிள்ளை திடீர்னு யாருக்கும் தெரியாம இப்படி கல்யாணம் செஞ்சுட்டு வந்திருக்கான்.. ஊரை கூட்டி ஒரு ரிசப்ஷனாவது வைக்கலாமான்னு கேட்க தான் வந்திருக்கீங்களோன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க உங்க பிள்ளை வாழ்க்கையை பத்தி கவலைப்பட்டு தான் என்னை தேடி வந்திருக்கீங்கன்னு அப்புறம் தான் புரிஞ்சுது.. பரவாயில்லை இது எனக்கு பழகின ஒண்ணு தான், என் பிள்ளையை என்னால் பார்த்துக்க முடியும்..
 
 
ஆனா திரும்ப உங்களை பழிவாங்க தான் இப்படி ஒரு கல்யாணத்தை என் பிள்ளை செஞ்சுகிட்டான்னு சொல்லாதீங்க.. அப்படி ஒரு தப்பை அவன் என்னைக்கும் செய்ய மாட்டான்.. நிஜமாவே நந்தினியை பிடிச்சு காதலிச்சதால் மட்டுமே நடந்த கல்யாணம் இது..” என்றார் அபிராமி. 
 
 
“நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க அபி, ஒருவேளை நீ சொல்றது போல இருந்தா எனக்கும் சந்தோஷம் தான், ஆனா இது அப்படி இல்லாம போனா.. அதை தான் நான் சொல்ல வந்தேன்..” என்று ரகோத்தமன் அவசரமாக பேசவும், ஒரு இதழ் பிரியா கசந்த புன்னகை அபிராமி இதழ்களில் நெளிந்தது. 
 
 
அதை கண்டு “நான் அப்போ இருந்த மனக்குழப்பத்தில் ஏதோ உளறினதை எல்லாம் நீ வேற மாதிரி புரிஞ்சுட்டே அபி.. எனக்கு வினய் எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா..? அவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா..! திடீர்னு இப்படி நிதினுக்கு முடிவு செஞ்சுருந்தா பொண்ணை அவசரமா யாருக்கும் தெரியாம ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்னு யோசிக்கும் போது தான் ஒருவேளை இது பழிவாங்கலா இருக்குமோன்னு எனக்கு தோணுச்சு..” என்று அவர் தன் தரப்பை விளக்க முயன்றார்.
 
 
“உங்களுக்கு வினய் மேலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு அவன் இருக்கும் போது நிதினுக்கு கல்யாணம் பேசி நீங்க முடிவு செஞ்சதிலேயே தெரிஞ்சுகிட்டேன்.. இனி இதை பத்தி பேச எனக்கு விருப்பமில்லை, எந்த வகையிலும் இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க..” என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு அபிராமி அங்கிருந்து சென்றுவிட, அபிராமி சென்ற திசையையே கவலையும் அதிர்வுமாக பார்த்துக் கொண்டு இருந்தார் ரகோத்தமன்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
 
MNKN - 25 & 26
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
1786471515-IMG-20260811-WA0001.jpg
 
 
மௌனம் - 27(a)
 
இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்தது. ஏதோ முக்கியமான வேலையில் விநாயக் இருப்பதும் புரிய.. எப்போது வீட்டுக்கு வருகிறான் எப்போது கிளம்புகிறான் என்று அவளால் கணிக்கவே முடியவில்லை.
 
 
இதில் அவனிடம் நந்தினி பேச நினைத்த எதற்கும் பேச சந்தர்ப்பமே அமையாமல் ஒருவிதமான மனபோராட்டத்தோடே அமர்ந்திருந்தாள் நந்தினி. அவளின் முகத்தைப் பார்த்தவாறே வந்து பக்கத்தில் அமர்ந்த அபிராமி “என்னடா முகம் எல்லாம் வாடி இருக்கு..? என்ன யோசனை..? அம்மா ஞாபகமா..!” என்று ஆறுதலாக தலையை வருடியபடியே கேட்கவும் சட்டென அவளுக்கு விழிகள் கலங்கி போனது.
 
 
“அம்மா.. அம்மாவும் என்னை வெறுத்துடுவாங்க இல்லை அத்தை..” என்று லேசான திணறலோடு நந்தினி கேட்கவும், மறுப்பாக தலையசைத்து புன்னகைத்த அபிராமி “எந்த அம்மாவும் தன் பிள்ளையை அப்படி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வெறுத்துட மாட்டாங்க.. கோபம் இருக்கும் தான், அதுக்காக வெறுத்துடுவாங்களா என்ன..?” என்றவர், அப்போதும் அவள் முகம் தெளியாததைக் கண்டு “அவங்க தனியா இருக்கும் நேரம் எதுன்னு உனக்கு தெரியும் இல்லையா.. அந்த நேரத்தில் மெதுவா கால் செஞ்சு பார்.. ஆரம்பத்தில் பேச மாட்டாங்க தான், ஆனா அதுக்காக நீ உன் தோல்வியை ஏத்துக்க கூடாது.. திரும்பத் திரும்ப முயற்சி செய்யணும், அப்போ கண்டிப்பா பேசுவாங்க புரியுதா..” என்று கூற, “நிஜமாவா..?” என்பது போல் விழிகளில் லேசான நம்பிக்கையை தேக்கி அபிராமியை பார்த்தாள் நந்தினி.
 
 
உடனே மணியை பார்த்தவள், பெரும்பாலும் சித்ரா இந்த நேரங்களில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அறையில் தான் அமர்ந்து ஏதாவது எம்பிராய்டரி செய்து கொண்டிருப்பார் என்று நினைவு வரவும், பெரும் தயக்கத்திற்கு பிறகே அவரின் எண்ணிற்கு அழைத்து இருந்தாள் நந்தினி.
 
 
எப்போதுமே அவளின் அழைப்பை இரண்டாவது ரிங்கிலேயே ஏற்கும் சித்ரா இந்த முறை முழுதாக அழைப்புச் சென்று நின்றும் ஏற்கவில்லை என்றவுடன் நந்தினியின் மனம் வாடியது.
 
 
அதில் இரு கைகளாலும் அலைபேசியை இறுகப்பிடித்தபடி ஒரு நொடி அப்படியே மனம் சுருங்கி அமர்ந்து விட்டவளுக்கு, பின் அபிராமியின் வார்த்தைகள் நினைவு வரவும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தாள் நந்தினி. 
 
 
மூன்றாவது அழைப்பை சித்ரா வேகமாக எடுத்து “என்ன தான்டி உன் பிரச்சனை..? எதுக்கு இப்படி தொடர்ந்து கூப்பிட்டு தொல்லை செஞ்சுட்டு இருக்கே..? இதை வேற அம்மா பார்க்கணுமா..!” என்று படபடக்க.. இதுவே வேறு சந்தர்ப்பமாக இருந்தால் சித்ரா இப்படி பேசியதற்கு மனம் வருந்தி இருப்பாளோ என்னவோ..! ஆனால் இன்று அபிராமியின் பேச்சோ இல்லை தொடர்ந்து நடக்கும் சில விஷயங்களோ ஏதோ ஒன்று அவளை கொஞ்சம் சரியாக யோசிக்க செய்திருந்தது. 
 
 
“இப்போ நான் கூப்பிட்டது உங்களுக்கு பிரச்சனையா..? இல்லை உங்க அம்மா பார்த்துடுவாங்கன்றது தான் பிரச்சனையா..?” என நந்தினி சரியாக கேட்க.. ஒரு நொடி அந்தப் பக்கம் அமைதி நிலவ.. “இரண்டுமே தான்..” என்றார் சித்ரா.
 
 
“என் மேலே கோபமான்னு நான் கேட்க மாட்டேன்ம்மா.. நிச்சயம் உங்களுக்கு என் மேலே கோபம் இருக்கும், ஆனா என்னை வெறுத்திட மாட்டீங்க தானே..!” என கேட்கும் போதே அவளுக்கு குரல் அழுகையில் உடைந்தது. 
 
 
இதில் அந்தப் பக்கம் இருந்த சித்ராவுக்கும் அதே நேரம் கண்கள் கலங்கிவிட, பதிலேதும் பேச முடியாமலும் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும் தவித்து கொண்டிருந்தார். 
 
 
“சொல்லுங்கம்மா ஏன் அமைதியா இருக்கீங்க..? ஒரு வார்த்தைக்கு கூட உன்னை நான் வெறுத்திட முடியுமான்னு ஏன் உங்களால் சொல்ல முடியலை.. அப்போ நான் வேண்டாமா உங்களுக்கு..? நான் செஞ்சது தப்பு தான், ஆனா அதுக்காக என்னை மொத்தமா வேண்டாம்னு சொல்லிடுவீங்களா..?” என நந்தினி கேட்க.. அவளின் அழுகையையும் கேள்வியையும் எதிர்கொள்ள முடியாமல் அலைபேசியை அணைத்து விட்டிருந்தார் சித்ரா.
 
 
இதுவே முன்பு என்றால் தன்னோடு பேச பிடிக்காமல் தான் அலைபேசியை அணைத்து விட்டாரோ என்று எண்ணி வருந்தி இருப்பாள் நந்தினி. ஆனால் சற்று முன் அபிராமி பேசியது மனதில் ஓட, தன்னை எண்ணி அவர் வருந்துவது புரிந்து கண்ணீரோடு அப்படியே நந்தினி அசையாமல் அமர்ந்திருக்க.. அதே நேரம் சோர்வாக அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
 
 
“காவிரியில் தண்ணி வரலைன்னு நாடே வரட்சியில் வாடும்னு எல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.. இங்கே வந்து பார்த்தா தானே தெரியும், இந்த டேம் எப்போவும் திறந்தே இருக்கும்னு..” என அவளைப் பார்த்து சொல்லியபடியே அவன் குளிக்கச் சென்று விட, விநாயக் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
‘என் வருத்தம் இவருக்கு அவ்வளவு கேலியா போச்சோ..!’ என அவள் கோபமாக அமர்ந்திருக்கும் போதே குளித்து முடித்து வெளியில் வந்தவன், வேறு உடைக்குமாறி அலங்கார கண்ணாடியின் முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க.. அவனையே முறைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்போதே மீண்டும் அந்த காப்பு கண்களில் பட்டது.
 
 
இதில் இதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் வேகமாக எழுந்து வந்து சட்டென அவன் கைகளை நந்தினி பிடித்து இருக்க.. ‘என்ன..?’ என்பது போல் அவளை கேள்வியாக பார்த்தான் விநாயக்.
 
 
“இது.. இது.. இந்த காப்பு..!” என அவள் விநாயக் கையைப் பார்த்தபடியே பரபரப்போடு கேட்கவும், அவளின் பதட்டத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லா குரலில் “ஆமா காப்பு.. ஏன் இதுவரை நீ காப்பையே பார்த்ததில்லையா..?” என்றான் விநாயக்.
 
 
“ம்ப்ச், அதில்லை இந்த காப்பு..” என்றவளை இடைமறித்து அப்போதும் “என்ன இந்த காப்புக்கு..?” என அவளிடம் இருந்து தன் கைகளை எடுத்துக்கொள்ள அவன் முயல.. அதற்கு அனுமதிக்காமல் இறுக்கமாக மீண்டும் அந்த கைகளைப் பிடித்துக் கொண்டவள், இனி இவனிடம் கேட்டுப் பயனில்லை எனப் புரிந்து, அந்த காப்பின் உள்பக்கமாக எதையோ வேகமாக தேடினாள்.
 
 
அவளின் செயல்களை எல்லாம் இதழுக்குள் மறைத்த சிறு மென்னகையோடு பார்த்தபடி நின்றிருந்த விநாயக் வேண்டுமென்றே அவளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்காதது போல் கையை அசைத்துக் கொண்டே இருக்க.. “கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா..!” என்று அதட்டினாள் நந்தினி. 
 
 
அதற்கு வியப்பாக இதழ்களை பிதுக்கியவன், “சும்மா தானே இருக்கேன்..! நான் என்ன செஞ்சேன்..? கல்யாணமாகி இத்தனை நாள் ஆச்சு, இன்னும் சும்மாதான் இருக்கேன்..” என்று கூறவும், அந்தக் காப்பில் வேகமாக எதையோ தேட முயன்று கொண்டிருந்தவள், இதில் அப்படியே தன் முயற்சியை நிறுத்தி லேசாக விழிகளை உயர்த்தி அவனை பார்க்கவும், அவனோ எதுவுமறியா முகத்தோடு நின்றிருந்தான்.
 
 
இதில் லேசாக குழம்பிய நந்தினி ‘நிஜமாவே இப்போ இவங்க அப்படித்தான் சொன்னாங்களா..? இல்லை எனக்கு தான் தப்பா கேட்டுதா..?’ என்று புரியா யோசனையோடே அசையாமல் நின்று விட, அவளின் அந்த நிலையை பயன்படுத்தி சட்டென தன் கையை அவளிடம் இருந்து எடுத்துக் கொண்டவன், “நீ சாப்பிட்டியா..? இல்லைனா நீயும் வா, பயங்கரமா எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட்டு தூங்கணும்..” என்றவாறே அறையில் இருந்து வெளியேறி இருக்க.. அவன் சென்ற திசையையே செய்வதறியாது பார்த்தபடி நின்று விட்டாள் நந்தினி.
 
 
*****
 
 
அபிராமி சொல்லிக் கொடுத்திருந்தது போல் நான்கு நாட்கள் விடாமல் தொடர்ந்து சித்ராவை அவள் அழைத்துக் கொண்டே இருந்ததற்கான பலன் ஐந்தாவது நாள் கிடைத்தது. 
 
 
“எனக்கு உன் மேலே கோபம் எல்லாம் இல்லை நந்து.. கொஞ்சம் வருத்தம் தான், ஆனா அது கூட இப்போ இல்லை.. நீ எடுத்த முடிவு சரியா தான் இருக்கும்னு எனக்கு தோணுது, நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்..” என தொடங்கி, அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் மற்றவர் அறியாமல் பேசத் தொடங்கினார் சித்ரா. 
 
 
இதில் இத்தனை நாள் இருந்த மனபாரம் லேசாக நீங்கி மெல்ல தனக்கு பிடித்த ஒரு பாடலை முணுமுணுத்தபடியே பால்கனியில் நின்றிருந்தாள் நந்தினி.
 
 
“என்னடா இது அதிசயமா இருக்கு.. வழக்கமா அசோகவன சீதை மாதிரி சோக சித்திரமா உக்காந்திருக்க வேண்டிய மேடம் இன்னைக்கு சந்தோஷமா இருக்காங்க போலேயே..!” என கேட்டபடியே அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் விநாயக். 
 
 
இதில் திகைத்து “என்ன செய்யறீங்க..?” என கேட்டப்படியே அவனிடமிருந்து விலக முயன்றவளால் தன் முழு மறுப்பை காண்பிக்க முடியாமல் போக.. காற்றாகி போன குரலில் கேட்டாள் நந்தினி. 
 
 
“ஹ்ம்ம், நான் என்ன செஞ்சேன்.. ஒண்ணுமில்லை..” என்று அவன் பெருமூச்சோடு சொல்லவும், அவனை திரும்பி முறைத்தாள் நந்தினி. அதையெல்லாம் துளியும் கண்டுக்கொள்ளாமல் அவளின் முக வடிவை அவன் அளக்க முயல.. விநாயக் கைகளை தட்டி விட்டடவள், “இதெல்லாம் என்கிட்ட வேண்டாம், நான் உங்க மேலே கோபமா இருக்கேன்..” என்றாள் நந்தினி. 
 
 
அதை துளியும் கண்டு கொள்ளாமல் “ஓகே இருந்துக்கோ, நான் வேண்டாம்னு சொல்லலையே..! ஆனா எனக்கு கோபம் எல்லாம் இல்லைப்பா.. அதனால் நான் இப்படியே இருந்துக்கறேன்..” என்றவன் மேலும் ஒருமுறை அவளை இறுக்கமாக அணைத்து விட்டே விலகி செல்லும் முன் அவளை பார்த்து விஷமமாக விழி சிமிட்டி விட்டே விநாயக் செல்ல.. அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. 
 
 
அவன் பேச்சும் செயலும் அவளுக்கு புரிந்து கொள்ள முடியா வகையில் தான் இருந்தது. இப்படியே தினம் அவளை குழப்பி விட்டு ரசித்து கொண்டிருந்தான் விநாயக்.
 
 
அன்று அவன் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் அவள் நடந்து கொண்ட கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அன்றைய நாளின் அதிர்வில் அவள் அப்படி நடந்து கொண்டதாகவே இருக்கட்டும், அதன் பிறகாவது நிதானமாக யோசித்து இதை பற்றி வந்து பேசி தெரிந்து கொள்ள கூட முயலாதது வேறு அவனுக்கு சிறு ஊடலை கொடுத்திருக்க.. ‘நீயா எப்போ வந்து கேட்கறேன்னு நானும் பார்க்கறேன்.. அதுவரை நானா திரும்ப இனி இதை பற்றி பேச மாட்டேன்..’ என முடிவெடுத்தவனாக அவளை சுற்றலில் விட்டுக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
ஒரு வாரம் இப்படியே செல்ல அவனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் குழம்பிய நந்தினி பெரும்பாலும் விநாயக் வீட்டில் இருக்கும் நேரம் அவன் எதிரில் செல்வதை தவிர்த்துக் கொண்டிருந்தாள். இதை அறிந்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டவன், ‘எவ்வளவு நாள் நீயும் ஓடறேன்னு நானும் பார்க்கறேன்..’ என நினைத்தப்படியே அதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தான் விநாயக்.
 
 
இன்று விநாயக் விடுமுறையில் வீட்டில் இருக்க.. நந்தினி அபிராமியோடு கீழேயே செட்டில் ஆகிவிட்டிருந்தாள். “தினம் அவன் வெளியே போயிடறான், இன்னைக்கு ஒரு நாள் தான் வீட்டில் இருக்கான்.. நீ போய் அவன் கூட இருடா..” என நந்தினியிடம் அபிராமி சொல்ல.. “இல்லை அத்தை, அவங்க ரெஸ்ட் எடுக்குறாங்க.. நான் அங்கே இருந்தா தொந்தரவா இருக்குன்னு தான் இங்கே வந்துட்டேன்..” என்று புன்னகையோடு பேசி சமாளித்து இருந்தாள் நந்தினி.
 
 
அதற்கு மேல் அவளை வேறு எதுவும் சொல்லாமல் அபிராமி தன் போக்கில் சமையலை தொடங்கி விட அவருக்கு உதவி செய்ய நந்தினி முன் வந்தாலும் வேண்டாம் என மறுத்து அவளை அங்கேயே அமர வைத்து நந்தினியோடு பேசியபடியே சமைத்துக் கொண்டிருந்தார் அபிராமி. 
 
 
அதே நேரம் இப்போது சித்ரா ஓய்வாக அறைக்குள் இருக்கும் நேரம் என நினைவுக்கு வரவும், நந்தினி அலைபேசியை எடுத்து சித்ராவுக்கு அழைத்து பேசிக் கொண்டிருக்க.. பெரும்பாலும் ஐந்து நிமிடமோ இல்லை பத்து நிமிடமோ தான் இருவரும் பேசுவார்கள்.. அதற்கு மேல் சித்ரா பேச்சை நீடிக்க மாட்டார். 
 
 
ஏதாவது ஒரு வகையில் வேதவல்லிக்கு இதைப் பற்றி தெரிய வந்தால் அதன் பிறகு இதுபோல் சில நிமிடங்கள் பேசக்கூட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் சித்ராவுக்கு இருந்தது. அதை அவர் வார்த்தைகளில் சொல்லவில்லை என்றாலும் நந்தினிக்கும் தெளிவாக அவரின் மனநிலை புரிந்ததில் அவளுமே அதற்கு மேல் பேசுமாறு தொந்தரவு செய்யவில்லை.
 
 
இன்றும் அப்படியே அவர் பேசிக்கொண்டு இருக்க.. திடீரென “ஒரு நிமிஷம் நந்து..” என்று விட்டு அவர் சிறு இடைவெளி விட, யாரோ வந்து விட்டார்கள் போலும் என எண்ணி அமைதியாக இருந்தவள், திடீரென அங்கு கேட்ட கூச்சலிலும் “ஐயோ..” என்ற சித்ராவின் குரலிலும் பதறிவிட்டாள்.
 
 
“ம்மா.. ம்மா என்னாச்சு..? என்ன நடக்குதுன்னு சொல்லுங்களேன்..” என்று இங்கே நந்தினி பதறி கொண்டிருக்க.. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அபிராமி கூட அவளின் அருகில் வந்து நின்று விட்டார். “என்னாச்சு நந்து ம்மா..?” என அவரும் குரலில் கவலையோடு கேட்கவும், “தெரியலை அத்தை, அம்மா நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க.. திடிர்னு ஒரு நிமிஷம் சொன்னாங்க, அதுக்கு பிறகு பார்த்தா ஏதேதோ சத்தமெல்லாம் கேட்குது.. அங்கே ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்..” என அவள் பயந்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்திருந்த விநாயக் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டிருந்தான். 
 
 
மூவரின் கவனமும் அலைபேசியில் இருக்க.. கலவையான சத்தங்கள் அந்தப் பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதிலும் வேதவல்லியின் குரல் ஆங்காரத்தோடு பெரிதாக ஒலித்துக் கொண்டிருக்க.. இங்கு பதறி போனாள் நந்தினி. 
 
 
அவளை தோளில் லேசாக தட்டி “நீ பேசு.. அவங்களை பேச சொல்லு.. என்னாச்சுன்னு கேளு..” என்று ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தான் விநாயக். அதில் கொஞ்சமே கொஞ்சம் பதட்டம் தணிந்தாலும் தன்னால் தான் அங்கு ஏதோ சித்ராவுக்கு பிரச்சனை என்று உடல் லேசாக நந்தினிக்கு நடுங்கி கொண்டே தான் இருந்தது. 
 
 
இதில் “ம்மா.. ம்மா..” என்று மட்டும் அவள் அழுகை குரலில் அழைத்துக் கொண்டே இருக்க.. அவளின் இந்த தொடர் முயற்சிக்கு சில நிமிடங்களுக்கு பின் பலன் இருந்தது. “ஐயோ நீ லைனில் இருக்கறதையே நான் மறந்துட்டேன்.. நந்து நான் அப்புறம் பேசறேன்..” என்று சித்ரா அலைபேசியை வேகமாக அணைக்க முயல.. “ஐயோ ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்களேன், எனக்கு பயமா இருக்கு..” என கத்தினாள் நந்தினி. 
 
 
“அது.. இங்கே அம்மா..” என சித்ரா தொடங்கவும் “என்னாச்சு நீங்க என் கூட பேசறது தெரிஞ்சு போச்சா..? உங்களை ரொம்ப திட்டிட்டாங்களா..!” என்று நந்தினி கேட்கவும் “இல்லை, அதெல்லாம் ஒண்ணுமில்லை.. இங்கே பிரச்சனையே வேற..” என்றார் சித்ரா. 
 
 
“ப்ளீஸ்மா என்கிட்ட மறைக்காதீங்க, அங்கே என்னாச்சுன்னு சொல்லுங்க..” என்றாள் அப்போதும் அவர்களின் வார்த்தைகளை நம்பாமல் நந்தினி. 
 
 
இதில் தன்னை நினைத்து அவள் வருத்திக் கொண்டிருப்பதை அறிந்தவர் என்பதால் “நந்து நிஜமா சொல்றேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இங்கே மானுவுக்கு தான் பிரச்சனை..” என்றார் சித்ரா. அதில் திகைத்தவளாக “என்ன மானுவுக்கா..? அவளுக்கு என்ன..?” என்றாள் புரியாமல் நந்தினி. 
 
 
“அம்மா.. அம்மா அவளை அடிச்சுட்டாங்க..” எனவும் “என்னது..?” என்று பெரிதும் அதிர்ந்து நந்தினி குரல் கொடுக்கவும், இங்கே கேட்டுக் கொண்டிருந்த மற்ற இருவருக்கும் கூட அப்படித்தான் இருந்தது. 
 
 
“என்னம்மா சொல்றீங்க..? இதுவரைக்கும் அவங்க அடிச்சதெல்லாம் இல்லையே..! இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன்..?” என்று நந்தினி பெரும் திகைப்போடு கேட்கவும், “ஆமா அதான் எனக்கும் புரியலை.. அந்த சத்தம் கேட்டு தான் நானும் வெளியில் வந்தேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது..” என்று பேசிக் கொண்டிருந்தவர், திடீரென குரலை தழைத்துக் கொண்டு “நந்து நீ தனியா தானே இருக்கே..?” என்றார். 
 
 
அதில் அவள் மற்ற இருவரையும் சங்கடமாக பார்க்கவும், விஷயம் தங்களைப் பற்றியது என புரிந்து கொண்டிருந்த விநாயக் ‘ஆம்’ என கூறுமாறு தலையசைத்தான். அதை மறுக்க முடியாமல் நந்தினியும் “ஆமாம்மா, தனியா தான் இருக்கேன்..” என சொல்ல.. “மானு உங்க மாமியாரை பார்த்து பேசி இருக்கான்னு அத்தைக்கு யாரோ சொன்னாங்களாம்.. அவங்க கூட என்ன பேச்சுன்னு கேட்டு தான் அடிச்சிட்டாங்க..” என்று மெல்லிய குரலில் சித்ரா சொல்லி முடிக்கவும், இங்கு அபிராமியின் முகம் அப்பட்டமான வலியை தத்தெடுத்தது.
 
 
இதில் நந்தனியின் பார்வை அபிராமியின் முகத்தில் பதிந்து அடுத்து விநாயக் பக்கம் திரும்ப.. முகம் இறுக ஒரு நொடி நின்றவன், பின் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
 
அதே நேரம் வேதவல்லி சித்ராவை அழைக்கும் குரல் கேட்க.. “அம்மா கூப்பிடறாங்க, நான் அப்புறம் பேசுறேன்..” என அவசரமாக சித்ரா அழைப்பை துண்டித்து விட்டு செல்ல.. மானஸாவை எண்ணி உண்டான கவலையோடு தலையில் கை வைத்தப்படி அங்கேயே அமர்ந்து விட்டாள் நந்தினி. 
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 551
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 27(a)
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page