மௌனம் - 26
சில நொடிகள் தன் கண்ணில் கண்டதை நிஜமென நம்ப முடியாமல் சிலையென நின்று விட்டிருந்த நந்தினிக்கு அதன் பின்பே உயிர் வந்தது. அதில் வேகமாக விநாயக்கைக்குத் தேடி அவள் படிகளில் இறங்கி வர, அவனோ வெளிவாயிலில் தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான்.
அங்கே ஓட்டமும் நடையுமாக நந்தினி அவனை தேடிச் செல்ல.. “பூஜைக்கு ஏற்பாடு செய்ய அம்மா முன்னேயே கிளம்பி போயிட்டாங்க, நமக்காக அங்கே காத்திருப்பாங்க.. நேரமாகுது சீக்கிரம் ஏறு..” என அவளை பேசவே விடாமல் அவன் முந்திக் கொண்டதில், வேறு வழியில்லாமல் விநாயக்கின் பின்னே ஏறி அமர்ந்தவளின் யோசனையெல்லாம் அவன் கரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த அந்த பிளாட்டினம் காப்பின் மீது தான் இருந்தது.
வழியில் இதைப் பற்றி பேச நினைத்து இருமுறை முயன்றவளுக்கு மனதில் இருந்த அதீத பரப்பரப்பின் காரணமாக சரியான வார்த்தைகள் கூட கிடைக்கவில்லை. அவள் தன் மனதில் இருக்கும் கேள்வியை வார்த்தையாக கோர்த்து அவனிடம் சேர்ப்பதற்குள் கோவில் வந்து விட்டிருந்தது.
இதில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நந்தினி இறங்கி நிற்கவும், நேராக அங்கிருந்த பூக்கடையின் முன் சென்று நின்றவன் மல்லிகை பூவை வாங்கி அவளிடம் நீட்டினான். அவன் பின்னேயே வந்திருந்த நந்தினி விழிகளில் அத்தனை கேள்வியும் முகத்தில் உண்டான கலக்கமுமாக அவனைப் பார்க்க.. “நேரமாகுது யது..” என்றான் விநாயக்.
அதில் அமைதியாகவே அவனிடம் இருந்து பூவை வாங்கி கொண்டவள் அதை தலையில் வைத்தவாறே விநாயக்கை பின் தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்தாள். அங்கே பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்துவிட்டு இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி. இருவரும் இப்படி ஜோடியாக இணைந்து வருவதைக் கண்டவரின் முகம் மலர்ந்தது.
“வாங்க வாங்க..” என இருவரையும் சந்தோஷமாக அவர் வரவேற்க.. அவரின் அருகில் சென்று விநாயக் நிற்க, அவனுக்கு பக்கத்தில் நின்றாள் நந்தினி.
அடுத்து பூஜை ஆரம்பமாக.. அத்தனை நிறைவாக எல்லாம் நடந்து முடிந்தது. மகனின் வாழ்க்கையை எண்ணி மனதிற்குள் எத்தனை சஞ்சலங்களை சுமந்திருந்தாரோ தெரியவில்லை.. இன்று அவன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனிடம் சரணடைந்திருந்தார் அபிராமி.
விநாயக் மற்றும் நந்தினியின் பேரில் நடந்து முடிந்த பூஜையை கண்ணாரக் கண்டு ரசித்தவரின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி போனது. அபிராமி சிறப்பு பூஜைக்காக கொடுத்திருந்த பெரிய வெள்ளி தட்டை கொண்டு வந்து அர்ச்சகர் அவரிடம் நீட்டவும், “என் மருமககிட்ட கொடுங்க, இனி எல்லாம் அவதான்..” என நந்தினியின் பக்கம் கை காண்பித்தார் அபிராமி.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஒரு நொடி திகைத்த நந்தினி என்ன செய்வது எனப் புரியாமல் தடுமாறி நிற்கவும் “ஹ்ம்ம் வாங்கிக்கோ..” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் விநாயக். அதில் அவள் கையை மெதுவாக நீட்டவும், அவளின் சேலை முந்தியை எடுத்து அந்த கரங்களில் வைத்த அபிராமி “இப்படி வாங்கிக்கோடா..” என்றார்.
நந்தினியும் அதேபோல் செய்ய.. அடுத்து பூ குங்குமம் என்று அர்ச்சகர் ஒவ்வொன்றாக கொண்டு வந்து கொடுக்க.. தனக்கானதை வாங்கி வைத்துக் கொண்ட அபிராமி, விநாயக்கின் பக்கம் திரும்பி “நந்துக்கு நீயே வெச்சு விடு..” என்றார். இதில் அவன் மறுப்பேதும் சொல்லாமல் சொன்னதை செய்ய போக.. நந்தினிக்கு தான் லேசான குறுகுறுப்பு உண்டானது.
அவள் கனவில் நினைத்து ஏங்கியதெல்லாம் இன்று நிஜத்தில் நடந்து கொண்டிருக்க.. இதை சந்தோஷமாக ஏற்று அனுபவிக்க முடியாத ஏதோ ஒரு சஞ்சலம் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் நேற்று அளவுக்கு அது அத்தனை வீரியமாக இருக்கவில்லை.. மனம் லேசாக தடுமாற அமைதியாகவே நந்தினி நின்றிருக்க.. அவள் நெற்றியிலும் வகிட்டிலும் அழுத்தமாக குங்குமத்தை வைத்தான் விநாயக்.
எல்லாம் முடிந்து மெதுவாக பிரகாரத்தைச் சுற்றி வந்து மூவரும் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க.. “என் மனசு இன்னைக்கு எவ்வளவு நிறைஞ்சு இருக்கு தெரியுமா..? இப்படி ஒரு நாள் உன் வாழ்க்கையில் வரவே வராதோன்னு நான் தினம் ஏங்கி தவிச்சு அழுது இருக்கேன்..” என்ற அபிராமியை இடையிட்டவன் “ஓ அப்போ அப்படியே என்னை சாமியாரா மாற்ற திட்டம் போட்டு இருக்கீங்க, அப்படித்தானே அபிராமி மம்மி..?” என்று கேலியாக கேட்டான் விநாயக்.
“ஆமா நாங்க போடறோம் திட்டம்.. நீ எல்லாம் முரட்டு சிங்கிளா தான் இருக்க போறேன்னு நான் முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு மகனே..!” என அவரும் கேலி செய்ய.. இருவரும் இப்படியே மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்ததை அதிசயமாக பார்த்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள் நந்தினி.
சில நிமிடங்களுக்கு பின் “சரிம்மா நேரமாகுது கிளம்புவோமா..? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்று விநாயக் சொல்ல.. “நீங்க கிளம்புங்க, நான் இப்படியே அம்மன் கோவில் போயிட்டு அப்புறமா வரேன்..” என்றார் அபிராமி.
“இனி எங்க மம்மியை கையிலேயே பிடிக்க முடியாது..” என்று அப்போதும் வம்பு இழுத்து அவரின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டே அவன் எழுந்து நிற்க.. நந்தினி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். “என்ன மேடம் கிளம்பும் ஐடியா இல்லையா..?” என்று அவளைப் பார்த்து விநாயக் கேட்கவும் “என்ன நானா..?” என்றாள் சிறுத்திகைப்போடு நந்தினி.
“இல்லை, உன்னை இல்லை.. அதோ பக்கத்தில் இருக்காங்களே அவங்களை கேட்டேன்..” என்று அவளுக்கு பின் விநாயக் கையை காண்பிக்கவும், நந்தினியும் திரும்பி பின்னே பார்த்தாள். அதில் அவன் முறைக்கவும், நந்தினியின் இந்த அப்பாவி தனத்தை கண்டு சிரித்து விட்டார் அபிராமி.
“வினய் உன்னை தான்ம்மா கூப்பிடறான், எப்படியும் வீட்டுக்கு போய் யூனிபார்ம் மாத்திட்டு தான் கிளம்புவான்.. அதான் உன்னையும் கூப்பிடறான், நீ கிளம்பு நான் வர நேரமாகும்..” என அபிராமி சொல்லவும் ‘சரி’ என்ற தலையைசைப்போடு எழுந்து கொண்டாள் நந்தினி.
அபிராமியின் முன் இருந்த பூஜை தட்டை எடுத்துக் கொண்ட விநாயக் “டிரைவர்கிட்ட கொடுத்திடறேன்மா..” என்று விட்டு முன்னே நடக்க.. அவன் பின்னே சென்றவளின் பார்வை முழுக்க மீண்டும் அவன் காப்பின் மேல் மட்டுமே இருந்தது.
இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அவனிடம் இதைப் பற்றி பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடே அவனோடு வீடு வந்து சேர்ந்தவளுக்கு பாவம் அதற்கான வாய்ப்பு அதன் பின் கிடைக்கவே இல்லை.
விநாயக் வீட்டை நெருங்குவதற்குள் மூன்று அழைப்புகள் அவனுக்கு வந்துவிட்டது. எதையும் ஏற்காமல் யார் என மட்டும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தவன், அடுத்த நொடி அலைபேசியை எடுத்து அடுத்தடுத்து யார் யாரோடோ பேசியவாறே சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியில் வர, அவனோடு பேச எண்ணி அறையில் கையை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவள் அதற்கான வாய்ப்பே கிடைக்காததில் உண்டான திகைப்போடு அவனை பார்த்தாள்.
அதில் அவளை கடந்து ஒரு தலையசைப்போடு கிளம்ப முயன்றவன், அந்தப் பார்வையில் அப்படியே நின்று அலைபேசியை ஒரு நொடி அணைத்துவிட்டு “அம்மா சீக்கிரம் வந்துடுவாங்க, தேவையில்லாம நிறைய யோசிச்சு குழப்பிக்காம அமைதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வர பார்க்கறேன்..” என்று அவளின் தலையை மெதுவாக தடவி கொடுத்தபடியே கூறியவன், வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவனின் இந்த அக்கறையான பேச்சிலும் அன்பான தொடுகையிலுமே அசையாமல் அப்படியே நின்று விட்டிருந்தவளுக்கு, அதன் பிறகே அவனிடம் கேட்க நினைத்தது நினைவுக்கு வந்தது. இதில் வேகமாக நந்தினி கீழிறங்கி வர, விநாயக் தன் இரு சக்கர வாகனத்தில் வெளிவாயிலை கடந்து சென்று கொண்டிருந்தான்.
இன்று அவன் அணிந்திருக்கும் இந்த காப்பு நந்தினி அவனுக்காக வாங்கியது போலவே இருந்தது. அன்று அத்தனை ஆசையோடு அவள் அதை விநாயக்கிடம் கொடுத்த போது அவன் அதை தூக்கி வீசி விட்டுச் சென்றது மீண்டும் நினைவுக்கு வர, இந்த நொடி அது நடந்தது போல் அவளின் விழிகள் மீண்டும் கலங்கத் தொடங்கியது.
‘அன்று வேண்டாம் என தூக்கி வீசியது எப்படி அவன் கையில் வரும்..? இது அதுதானா..! இல்லை அதேபோல் இருக்கும் வேறு ஒன்றா..?’ என்று அவள் மனம் தவித்துக் கொண்டிருக்க.. அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
அதை பற்றி அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பும் படபடப்பும் அவளுள் நிறைந்து இருக்க.. “இல்லை, இது அதுவா இருக்க வாய்ப்பே இல்லை.. அது எப்படி அவங்க கையில் வரும்..?” என்று அவளுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு சோர்வாக அமர்ந்தவளின் மனக்கண்ணில் அன்றைய நாள் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.
அன்று தன் பரிசை அத்தனை ஆசையாக கொண்டு சென்று அவனிடம் கொடுத்ததை வாங்கி விநாயக் வீசிவிட்டுச் சென்றதை தாங்க முடியாத துயரத்தோடு அங்கிருந்து அழுது கொண்டே கிளம்பி விட்டிருந்தாள் நந்தினி.
வீடு வந்து சேர்ந்த பிறகும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதே கரைந்தவளுக்கு நள்ளிரவுக்கு பிறகே அந்த பரிசை பற்றிய நினைவு வந்தது. அதை எடுத்துக் கொண்டு வராமல் அப்படியே விட்டு வந்தது புரிய.. வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு இப்போதே சென்று அதை எடுத்துக்கொள்ள உடலும் மனமும் பரபரத்தது.
ஆனால் இந்த நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பவும் முடியாது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமானால் நிச்சயம் கார் தேவை. அப்போது அவளுக்கென தனி கார் கிடையாது. அவளை கார் ஓட்டவும் அனுமதித்து இருக்கவில்லை. டிரைவரும் இப்போது வீட்டில் இல்லை, இதெல்லாம் மனதில் ஓட.. செய்வதறியாமல் வாயிலுக்கும் தன் அறைக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருந்தாள் நந்தினி.
அவனின் செயலிலேயே அன்று எப்படியும் அவளுக்கு உறக்கம் வந்திருக்காது. அதோடு இதுவும் சேர்ந்து கொண்டதில் துளியும் ஓய்வின்றி வாயிலிலேயே காத்துக் கிடந்தவள், விடிந்த பின் டிரைவர் வந்த உடன் அவரை அப்படியே அழைத்துக் கொண்டு தீக்ஷாவின் வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள்.
இத்தனை அவசரமாக மகள் காலையில் கிளம்புவதை கண்டு என்னவென விசாரித்த சித்ராவிடம் தன் கழுத்திலிருந்த செயின் அங்கே விழுந்து விட்டதாக சொல்லி சமாளித்து விட்டாள் நந்தினி. சித்ராவும் செயின் காணோமென வேதவல்லிக்கு தெரிந்தால் நிச்சயம் பெரிய அமர்க்களம் நடந்து விடும் என்பதால் அவர் எழுந்து கொள்ளும் முன் சென்று எடுத்து வருமாறு கூறி மகளை அனுப்பி வைத்திருந்தார்.
அத்தனை பதட்டமும் தவிப்புமாக அங்கே சென்று இறங்கியவள், வாசலில் அவன் வீசி சென்ற பரிசுப் பொருள் இல்லாததை கண்டு அதிர்ந்து, செடி மறைவில் காருக்கு அடியில் என்று ஒரு இடம் விடாமல் தேடியும் அவளுக்கு அது கிடைக்கவே இல்லை.
பின் தீக்ஷாவுக்கு ஏதாவது இதைப் பற்றி தெரியுமா என அறிந்து கொள்ள அவளிடம் சென்று கேட்க.. அவளோ அதுவரை தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். திடீரென தன்னை உலுக்கி எழுப்பி நந்தினி கேட்க வருவது கூட அவளுக்கு புரியவில்லை.
“என்ன கிப்ட்..? யார் கொடுத்தாங்க..?” என்று அவள் அரை தூக்கத்தில் கேட்க.. “அதையெல்லாம் விடு.. நீ ஏதாவது பார்த்தியா..? எடுத்து வெச்சு இருக்கியா..? இல்லை உங்க வீட்டில் இருக்க யாராவது எடுத்து வெச்சாங்களான்னு கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரேன்.. இல்லை கேட்டு சொல்லேன்..” என்று இவள் பரபரத்துக் கொண்டே இருக்க.. நிதானமாக தன் உறக்கத்தை கலைந்து முகம் கழுவிக் கொண்டு வந்து நந்தினியை தீர்க்கமாகப் பார்த்த தீக்ஷா “அப்படி என்ன கிப்ட் அது..?” என்று கேட்கவும், இனி மறைத்து என்ன ஆகப்போகிறது.. தன் மனதின் வலியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள தான் வேண்டுமென உணர்ந்து அன்று தான் முதல் முறையாக அங்கு நடந்த அனைத்தையும் தீக்ஷாவிடம் சொல்லி இருந்தாள் நந்தினி.
இதையெல்லாம் கேட்டு திக்ஷுவுக்கு அத்தனை ஒரு அதிர்வு. தன் முன் இத்தனை விஷயங்கள் நடந்திருக்க.. எப்படி இதையெல்லாம் கவனிக்காமல் போனோம் என்ற கேள்வியும் “உனக்கு நிஜமாவே தெரியுமா நந்து.. வினய் அண்ணாக்கு உன்னை பிடிச்சுருந்ததா..?” என்று வேறு கேட்டு வைக்க.. இப்போது இருக்கும் மனநிலையில் நந்தினியை அந்த கேள்வி மேலும் உடைத்து போட்டது.
“அப்படி தான் நம்பினேன், நம்பினேன்னு கூட இல்லை.. அது தான் நிஜம், இப்போ தான் என்னவோ தெரியலை இப்படி நடந்துக்கிட்டாங்க.. எனக்கு தெரியும் அவங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு, இல்லைனா எனக்கு ஏன் பூ வாங்கி தரணும்..” என்றெல்லாம் கேட்டு அவள் அழ தொடங்க.. தீக்ஷுவுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று கூட என்று புரியவில்லை.
இருவரும் அப்போதே கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சின்ன பெண்கள் என்பதால் இதைப்பற்றி தெளிவாக பேசி சமாதானம் செய்யவும் தீக்ஷுவுக்கு தெரியவில்லை. ஆனால் நந்தினி அழுவதை பார்க்கவும் முடியாமல் அவளோடு சேர்ந்து எவ்வளவு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை நந்தினிக்கு கிடைக்கவே இல்லை.
இவர்கள் இப்படி எதையோ தேடிக்கொண்டு இருப்பதைக் கண்டு சூர்யகலா என்னவென்று விசாரிக்க.. “இல்லை பாட்டி நந்தினி நேற்று வந்த போது அவளுடைய பர்ஸ் கீழே விழுந்துடுச்சு.. அதான் தேடிட்டு இருக்கோம்..” என்று தீக்ஷு சமாளிக்க.. “எங்கே நம்ம வீட்டுக்குள்ளேயா..? வேலை செய்யறவங்ககிட்ட கேளுங்க, எடுத்து வெச்சுருப்பாங்க..” என்றார் தனக்கேயான அதிகாரத்தோடு சூர்யகலா.
ஏனெனில் தன் வீட்டில் விழுந்த ஒரு பொருள் நிச்சயம் காணாமல் போகாது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதற்கு நந்தினி “இல்லை பாட்டி வெளியே தான் விழுந்திருக்கும்னு நினைக்கறேன்.. நான் கிளம்பும் வரை என் கையில் தான் இருந்தது..” என்று மெல்லிய குரலில் சொல்லவும் “அப்போ நாம எதுவும் சொல்ல முடியாதே..!” என்றவர், அங்கு வேலை செய்பவர்களை அழைத்து வீதியை சுத்தம் செய்பவர்கள் வந்து சென்று விட்டனரா என விசாரிக்க.. அரைமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வந்து சென்றது தெரிந்தது.
‘இனி யார் எனத் தேடி எங்கே சென்று கேட்டு எப்படி அதை வாங்க முடியும்..?’ என புரியாமல் திகைத்த நந்தினி, தன்னால் முடிந்த வரை தீக்ஷுவிடம் சொல்லி விசாரித்துப் பார்த்தும் அவளுக்கு அது இறுதி வரை கிடைக்கவே இல்லை.
இன்று அதை விநாயக் கையில் கண்டவுடன் அவள் மனம் அத்தனை ஆர்ப்பரித்தது. ஆனால் அது நிஜம் தானா என தெரிந்து கொள்ள தான் இந்த நொடி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத ஒரு மனநிலையோடு சோர்வாக அப்படியே அமர்ந்து விட்டாள் நந்தினி.
******
அதேநேரம் தன் வழக்கமான அம்மன் கோவிலில் வந்து மகன் மருமகள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அபிராமி.
அவர் மனம் இன்று உணரும் இந்த அமைதியும் நிறைவும் இதுவரை அவர் வாழ்வில் உணர்ந்திடாததாக இருந்தது. அதை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனுபவித்தபடி அமைதியாக அவர் அமர்ந்திருக்க.. மெதுவாக அவர் முன் வந்து நின்றார் ரகோத்தமன்.
சற்று தள்ளி அவர் தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த போதே அபிராமி பார்த்து விட்டிருந்தார். ஆனாலும் அசையாமல் அப்படியே அவர் இருக்க.. மெதுவாக அவரின் முன் வந்து நின்றவர் “அபி உன் கூட கொஞ்சம் பேசணும், நான் இங்கே உட்காரலாமா..?” என்றார்.
அதற்கு அபிராமி சரி என்றோ வேண்டாம் என்றோ எதுவும் சொல்லவில்லை, அமைதியாகவே இருக்க.. அதையே அவரின் சம்மதமாக எடுத்துக் கொண்ட ரகோத்தமன் சற்று தள்ளி இடைவெளி விட்டே அமர்ந்தார்.
அங்கு ஒரு கனமான மௌனம் நிலவியது. இவ்வளவு தூரம் தன்னை தேடி வந்திருப்பவர் அவராகவே பேசட்டும் என அபிராமி அமைதியாக பார்த்திருக்க.. மெல்ல நிமிர்ந்து அபிராமியை பார்த்த ரகோத்தமன் “என்ன செய்யலாம்னு இருக்கே அபி..?” என்றார்.
அதில் ஒற்றைப் புருவத்தை புரியாமல் உயர்த்தி “எதை பத்தி கேட்கறீங்க..?” என்றார் அபிராமி. “எல்லாம் வினய் விஷயம் தான், அவன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை.. என் மேலேயும் அம்மா மேலேயும் உள்ள கோபத்தில் இப்படி ஒரு முடிவை அவன் எடுத்து இருக்கவே கூடாது.. எங்களை பழிவாங்க இதுதான் வழியா..?” என அவர் சொல்லிக் கொண்டிருக்க.. விழிகளை சுருக்கி “பழிவாங்கவா..!” என்றார் அபிராமி.
“ஆமா ஏன் உனக்கு தெரியாதா.. உன்கிட்ட எதுவும் சொல்லலையா..?” என்று ரகோத்தமன் கேட்கவும் “நீங்களே சொல்லுங்களேன்..” என்றார் அமைதியான குரலிலேயே அபிராமி.
“நிதினுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் செய்யலாம்னு பேசி முடிவு செஞ்சு இருந்தோம்.. அம்மாவுக்கு ஆரம்பத்தில் இதில் பெருசா உடன்பாடு இல்லை.. ஆனா நந்தினி வீட்டில் இல்லாத நேரமா பார்த்து இரண்டு மாசமா நான் தான் பொறுமையா பேசி எப்படியோ அவங்களை சம்மதிக்க வெச்சு இருந்தேன்.. இப்போ அடுத்த வாரம் நிச்சயம் செய்யலாம்னு இருக்கும் போது இப்படி வந்து நிற்கறான்..” என்று அவர் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க.. அமைதியாக ரகோத்தமன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அபிராமி.
“எல்லாத்தையும் நான் ஒவ்வொன்னா சரி செய்ய முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. இவன் அதை மொத்தமா சரி செய்ய முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டான்.. இப்படி ஒரு கோபமா அவனுக்கு எங்கே மேலே..!” என்றவர் அபிராமி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு “என்ன அபி எதுவுமே சொல்ல மாட்டேன்றே..?” என்றார்.
“என்ன சொல்லணும்..? அதான் நீங்க சொல்லிட்டு இருக்கீங்களே..! சொல்லி முடிங்க..” என்று அபிராமி சொல்லவும் “என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை, ஆனா வினய் செஞ்சது சரில்லை..” என்று கூறியவர் “உனக்கு இதில் கோபமே இல்லையா..?” என்று நிமிர்ந்து அபிராமியை பார்த்து கேட்கவும் ‘இல்லை’ என்பதாக அசைந்தது அபிராமியின் தலை.
“என்ன..?” என்று நம்ப முடியாமல் அவர் கேட்கவும் “ஏன் கோபப்படணும்..? அவனுக்கு பிடிச்ச பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சுருக்கான், இதில் கோபப்பட என்ன இருக்கு..?” என்றார் அபிராமி.
“கோபப்பட என்ன இருக்கா..! நிதினுக்கு நிச்சயம் செய்ய இருந்த பொண்ணை..” என்று ரகோத்தமன் கூறவும் “நீங்க அப்படி பார்க்கறீங்க..? நான் இன்னொருத்தனை காதலிச்சுட்டு இருந்த பொண்ணை தான் நீங்க நிச்சயம் செய்ய இருந்ததா பார்க்கறேன்..” என்றார் அபிராமி.
“காதலா..! அவங்களுக்குள்ளே காதல் இருந்ததுன்னு நிஜமா நீ நம்பறியா..?” என்றார் ரகோத்தமன். அதற்கு அபிராமி பதிலேதுவும் சொல்லவில்லை. அதில் சந்தேகம் வந்தவராக அபிராமியின் முகத்தை பார்த்தவர் “உனக்கு.. உனக்கு இதைப்பற்றி முன்னேயே தெரியுமா..?” எனவும் ‘ஆம்’ என்பது போல தலையசைத்தார் அபிராமி.
“எப்படி தெரியும்..? எப்போ தெரியும்..? அப்போவே நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நான் இவ்வளவு தூரம் இதை வளர விட்டிருக்க மாட்டேனே..!” என்று ரகோத்தமன் பரபரக்க.. “இதுக்கு என்ன அர்த்தம் அப்படி என்ன செஞ்சு இருப்பீங்க..?” என்றார் அபிராமி.
“இவங்க இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒண்ணு சேரவே முடியாது.. அப்படி சேர்ந்தா அது திரும்ப பெரிய பிரச்சனையை தான் நமக்குள்ளே கொண்டு வரும்னு பேசி புரிய வெச்சு இருப்பேன்.. ஏற்கனவே இருக்க பிரச்சனையை சரி செய்ய தான் நாம பார்க்கணும்.. மேலும் அதிகமாக்க பார்க்கக் கூடாது.. யார் யார் கூட சேரணும் இருக்கில்லை..” என்றவர், “சொல்லு அபி, உனக்கு முன்னேயே தெரியுமா..?” என மீண்டும் கேட்டார் ரகோத்தமன்.
அவர் பேசிய விதத்திலேயே முகம் மாறி போயிருக்க “அவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு தெரியும், இரண்டு வருஷத்துக்கு முன்னே கல்யாண பேச்சை நான் எடுக்கும் போது எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு ம்மா.. அது யாரு என்னன்னு நேரம் வரும் போது நானே அதை பத்தி உங்ககிட்ட பேசறேன், அதுவரை வேறு எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லி இருந்தான்.. ஆனா அது நந்தினின்னு எனக்குத் தெரியாது, அவன் சொல்லவும் இல்லை..” என்றார் அபிராமி.
“இரண்டு வருஷமாவா..!” என தனக்குள்ளேயே யோசித்தவர், ‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லை..’ என்ற முடிவுக்கு வந்தவராக “இல்லை, இவங்களுக்குள்ளே அப்படி ஏதாவது இருந்திருந்தா அரசல் புரசலாவாவது எனக்கு தெரிஞ்சிருக்கும்.. எனக்கு அப்படி இருக்க வாய்ப்பே இல்லைன்னு தான் தோணுது.. எங்க மேலே இருக்க ஒட்டுமொட்டு கோபத்துக்கும் சேர்த்து பழிவாங்க தான் வினய் இப்படி செஞ்சுருக்கணும்..” என்று அழுத்தம் திருத்தமாக ரகோத்தமன் சொல்லவும், “அப்போ நந்தினிக்கும் உங்க மேலே கோபம்னு சொல்றீங்களா..? அவளும் உங்களை பழிவாங்க நினைச்சு இருக்கான்னா, அந்த அளவுக்கு நீங்க எல்லாம் சேர்ந்து அவளுக்கு என்ன செஞ்சீங்க..?” என்றார் அபிராமி.
அதில் திகைத்து ரகோத்தமன் அபிராமியின் முகம் பார்க்கவும், “இங்கே நந்தினின்னு உயிரும் உணர்வும் உள்ள ஒருத்தி இருக்கான்றதையே மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க.. வினய் கோபப்பட்டு தான் பழி வாங்கிட்டான்னு யோசிக்கும் நீங்க நந்தினி அதுக்கு எப்படி உடன் படுவான்னு ஏன் யோசிக்கலை..” என்று அபிராமி கேட்ட பிறகே தன் தவறு புரிய.. நெற்றியை நீவி விட்டுக் கொண்டவராக “அப்போ இது..” என தொடங்கியவருக்கு அடுத்து பேச வார்த்தைகள் கூட வரவில்லை.
சில நொடிகள் அப்படியே அமைதியாக கழிய.. “சரி எனக்கு நேரமாகுது..” என அபிராமி எழுந்து கொள்ள நினைக்க.. “அபி உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானா..?” என்று அவர் கேட்கவும், “ஆமா..” என்று துளியும் யோசிக்காமல் உடனே பதிலளித்திருந்தார் அபிராமி.
அதில் அடுத்து என்ன கேட்பது என்று கூட தெரியாமல் ரகோத்தமன் பார்த்திருக்க.. “என் பிள்ளை நல்லா இருக்கணும்னு நினைக்க இந்த உலகத்தில் அவனுக்குன்னு நான் மட்டும் தானே இருக்கேன்.. அவனுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்து இருக்கான், இதில் எனக்கு முழு சம்மதம் தான்..” என்று கொஞ்சம் அழுத்தமாகவே பதிலளித்திருந்தார் அபிராமி.
இதைக் கேட்டு திகைத்தவராக அபியை பார்த்து “அப்போ வினய்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றியா..? அவன் நல்லா இருக்கக்கூடாதுன்னு நான் நினைப்பேனா..!” என்று சிறு பதட்டத்தோடு ரகோத்தமன் கேட்கவும், “அப்படி நான் சொல்லலை, கொஞ்ச நேரம் முன்னே நீங்க தான் சொன்னீங்க.. உங்க மகனை பத்தி அவன் கல்யாணத்தைப் பத்தி கவலைப்பட்டு நீங்க இவ்வளவு தூரம் வந்து பேசும் போது, என் மகன் வாழ்க்கையை பத்தி நான் கவலைப்பட கூடாதா..” என்றார் அபிராமி.
“ஐயோ நான் அப்படி சொல்லலை..” என்ற ரகோத்தமன் வேறு ஏதோ சொல்ல வருவதற்குள் அவரை கைநீட்டி தடுத்து இருந்த அபிராமி “இங்கே வந்து நீங்க அடுத்து என்ன செய்யலாம்னு ஆரம்பிச்ச போது என் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு எட்டிப் பார்த்தது..
பிள்ளை திடீர்னு யாருக்கும் தெரியாம இப்படி கல்யாணம் செஞ்சுட்டு வந்திருக்கான்.. ஊரை கூட்டி ஒரு ரிசப்ஷனாவது வைக்கலாமான்னு கேட்க தான் வந்திருக்கீங்களோன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க உங்க பிள்ளை வாழ்க்கையை பத்தி கவலைப்பட்டு தான் என்னை தேடி வந்திருக்கீங்கன்னு அப்புறம் தான் புரிஞ்சுது.. பரவாயில்லை இது எனக்கு பழகின ஒண்ணு தான், என் பிள்ளையை என்னால் பார்த்துக்க முடியும்..
ஆனா திரும்ப உங்களை பழிவாங்க தான் இப்படி ஒரு கல்யாணத்தை என் பிள்ளை செஞ்சுகிட்டான்னு சொல்லாதீங்க.. அப்படி ஒரு தப்பை அவன் என்னைக்கும் செய்ய மாட்டான்.. நிஜமாவே நந்தினியை பிடிச்சு காதலிச்சதால் மட்டுமே நடந்த கல்யாணம் இது..” என்றார் அபிராமி.
“நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க அபி, ஒருவேளை நீ சொல்றது போல இருந்தா எனக்கும் சந்தோஷம் தான், ஆனா இது அப்படி இல்லாம போனா.. அதை தான் நான் சொல்ல வந்தேன்..” என்று ரகோத்தமன் அவசரமாக பேசவும், ஒரு இதழ் பிரியா கசந்த புன்னகை அபிராமி இதழ்களில் நெளிந்தது.
அதை கண்டு “நான் அப்போ இருந்த மனக்குழப்பத்தில் ஏதோ உளறினதை எல்லாம் நீ வேற மாதிரி புரிஞ்சுட்டே அபி.. எனக்கு வினய் எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா..? அவன் நல்லா இருக்கக் கூடாதுன்னு நான் நினைப்பேனா..! திடீர்னு இப்படி நிதினுக்கு முடிவு செஞ்சுருந்தா பொண்ணை அவசரமா யாருக்கும் தெரியாம ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்னு யோசிக்கும் போது தான் ஒருவேளை இது பழிவாங்கலா இருக்குமோன்னு எனக்கு தோணுச்சு..” என்று அவர் தன் தரப்பை விளக்க முயன்றார்.
“உங்களுக்கு வினய் மேலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு அவன் இருக்கும் போது நிதினுக்கு கல்யாணம் பேசி நீங்க முடிவு செஞ்சதிலேயே தெரிஞ்சுகிட்டேன்.. இனி இதை பத்தி பேச எனக்கு விருப்பமில்லை, எந்த வகையிலும் இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க..” என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு அபிராமி அங்கிருந்து சென்றுவிட, அபிராமி சென்ற திசையையே கவலையும் அதிர்வுமாக பார்த்துக் கொண்டு இருந்தார் ரகோத்தமன்.