மௌனம் - 12
அந்த நேர கோபத்தில் விநாயக் அப்படி பேசி விட்டு சென்றிருந்தாலும் அபிராமி திரும்ப வந்து கதவை திறப்பார் என்று எண்ணி பல மணி நேரங்கள் அங்கேயே காத்திருந்த ரகோத்தமன், அப்படி ஒன்று நடக்காமல் போனதில் உண்டான சோர்வோடு வீடு திரும்பியிருந்தார்.
அவர் மனம் முழுக்க அத்தனை கோபமும் ஆதங்கமும் நிறைந்திருந்தது. வேதவல்லியும் நிதினும் பேசியதாக விநாயக் சொல்லிச் சென்ற வார்த்தைகள் ரகோத்தமனை அத்தனை காயப்படுத்தி இருந்தது. ‘சின்ன பிள்ளையிடம் போய் என்ன பேசி வைத்திருக்கிறார்கள்.. அதை விட சின்ன பிள்ளையான நிதினிடம் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்..!’ என்று எண்ணும் போதே மனம் கசந்தது.
‘வேதவல்லி இப்படித்தான்.. அவரை எண்ணி மனம் வருந்த எதுவுமில்லை, ஆனால் நிதின்..! அவன் அப்படி இல்லையே..!! வளரும் பிள்ளை இப்போதே அவன் மனதில் நஞ்சை கலந்தால், நாளை அவர்களின் வாழ்க்கை என்னவாகும்..?’ என்ற கவலையும் கலக்கமுமாக நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்தவரை புஷ்பா புரியாமல் பார்த்தார்.
பெரும்பாலும் விநாயக் விடுமுறையில் வந்திருக்கும் நாட்களில் எல்லாம் ரகோத்தமன் அங்கேயே தங்கி விடுவார். அதுவும் இன்று அவன் பிறந்த நாள்.. அப்படியிருக்கையில் திடீரென வீடு திரும்பி இருப்பவரை யோசனையோடு பார்த்த புஷ்பா “வாங்க.. ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு, சாப்பிட எடுத்து வைக்கவா..?” என்றார்.
அதற்கு புஷ்பாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் ‘வேண்டாம்’ என்ற தலையசைப்போடு மெதுவாக அங்கிருந்து நகர்ந்தார் ரகோத்தமன். அவர் நடையில் இருந்த வித்தியாசமே புஷ்பாவுக்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்தியது.
அதோடு நேராக தோட்டத்திற்கு சென்றவரை கவலையோடு புஷ்பா பின் தொடர்ந்து செல்ல.. சோர்வோடு தலையைப் பிடித்தபடி அங்கு அமர்ந்து விட்டார் ரகோத்தமன். இதுவரை இப்படி ஒரு நிலையில் அவரைப் பார்த்ததில்லை என்பதில் உண்டான பதட்டத்தோடு வேகமாக அவரை நெருங்கிய புஷ்பா என்னவென்று விசாரிக்க.. எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டிருந்தார் ரகோத்தமன்.
அவர் சொல்லியதை கேட்டதற்கே நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அதிர்வோடு அமர்ந்துவிட்டார் புஷ்பா. இப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அன்று கோவிலில் சந்தித்ததற்கு பின் அபிராமியை இதுவரை நேரில் சந்தித்ததில்லை புஷ்பா. இருவரும் நேருக்கு நேர் ஒரே ஒருமுறைதான் பார்த்து இருந்தனர். அன்று பேசிக்கொள்ள கூட இருவருமே முயற்சிக்கவில்லை.
ஆனால் ரகோத்தமன் மேல் அளவில்லா காதல் இருந்தும் தனக்காக அவரை விட்டுக் கொடுத்திருந்த அபிராமியை தனி ஒரு மரியாதையோடு மனதிற்குள் வைத்திருந்தார் புஷ்பா. அதோடு விநாயக் ரகோத்தமனின் மூத்தமகன்.. அவர் அளவில்லா அன்பு வைத்திருக்கும் பிள்ளை என்பதால் தன் மூத்த மகன் போலவே அவனை நினைத்திருந்தார்.
அபிராமியுமே நிதினை இன்று வரை வேறாகப் பிரித்துப் பார்த்ததில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் இரு பிள்ளைகளும் இப்படி புரிதல் இல்லாமல் எதிரெதிராக நிற்பதை எண்ணி கவலையானவருக்கு, இதை எப்படி சரி செய்வது என்றே புரியவில்லை.
அது மட்டுமல்லாமல் ‘வேதவல்லியை பற்றி தெரிந்தும் நிதினை அவரிடம் அதிகம் பழக விட்டிருக்கக் கூடாதோ..!’ என்ற எண்ணம் இருவரின் மனதிலும் தாமதமாக எழுந்தது. அவன் எதிர்காலத்தை எண்ணி இப்போது பயமாக இருந்தது.
‘தன் சுயலாபத்திற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வேதவல்லியின் அந்த குணம் நிதினுக்கும் வந்து விட்டதோ..!’ என்ற பயமே அவர்களை கலங்க செய்தது. ‘தன் மேலான தவறான புரிதலோடு இப்போது இருப்பவனிடம் எதையும் பேசி புரிய வைக்கவும் முடியாது.. வேதவல்லி இடமிருந்து தள்ளி நிறுத்தவும் முடியாது..’ என்ற கவலை வேறு ரகோத்தமனை அரித்தது.
நிஜத்தில் நடந்ததும் அது தான். நிதின் மறுநாளில் இருந்து ரகோத்தமனிடமிருந்து தள்ளி நின்றான். தன் இடத்தை வாழ்க்கையை வேறு ஒருத்தனுக்கு கொடுத்து விட்ட கோபம் அவனின் ஒவ்வொரு செயலிலும் அப்பட்டமாக தெரிந்தது.
அதை சரி செய்ய அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. வேதவல்லியின் போதனைகள் அந்த அளவு நிதினின் மனதை நிறைத்து இருக்க.. வேறு யார் சொல்வதையும் கேட்க அவன் தயாராகவே இல்லை.
****
‘ஒரு அன்னையாக தன் மகனின் மனதில் தவறான விதத்தில் பதிந்து போனோமோ..!’ என்ற தவிப்பே அபிராமியை ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டிருந்தது.
அன்று அவன் இருந்த நிலையும் வயதும் எதையும் தெளிவுபடுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்க.. விநாயக் ஓரளவு வளர்வதற்காகவே காத்திருந்தவர், அவனின் பதினான்காவது வயதில் விநாயக்கை அமர வைத்து தன் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டிருந்தார் அபிராமி.
முன்பே அபிராமியை பற்றி அறிந்திருந்தவன், நிச்சயம் அவரால் யார் வாழ்க்கையிலும் பிரச்சனை வர வாய்ப்பே இல்லை.. யார் வாழ்விலும் குறுக்கிட அவர் நினைக்கும் ரகமும் இல்லை என்று உறுதியாக நம்பினான். அது உண்மை என்பது போல் அனைத்தும் தெரிய வந்த பிறகு மேலும் அவன் கோபம் வேதவல்லி மற்றும் அவரை சார்ந்தவர்கள் மேல் திரும்பியது.
இதில் தான் எடுத்த முடிவில் எந்த ஒரு தவறும் இல்லை என்று திடமாக நம்பியவன், இனி எந்த சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தை சேர்ந்த யாரையும் தங்கள் வாழ்க்கையில் நுழையவே விடக்கூடாது என்று உறுதியான முடிவுக்கு வந்தான்.
விநாயக் அளவு பொறுமையும் நிதானமும் நிதினிடம் இல்லை என்பதால் புஷ்பா அனைத்தையும் மகனுக்கு அவன் பள்ளி படிப்பை முடித்திருந்த நேரத்தில் தான் சொல்லி இருந்தார். முகம் இறுக அனைத்தையும் கேட்டவனிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை, ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து சென்று விட்டிருந்தான்.
இப்படியே இவர்கள் பணிப்போர் தொடர.. பெரும்பாலும் விநாயக் ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை..’ என்பது போல் நிதினை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாலும், வேண்டுமென்றே அவனைப் பார்க்கும் போதெல்லாம் சீண்டி வம்பு இழுத்துக் கொண்டே இருப்பான் நிதின்.
இப்படியே நாட்கள் செல்ல.. விநாயக் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தான். அதன் பிறகான பயிற்சிக்கு செல்லும் அழைப்பு வர அவன் காத்திருந்த நேரத்தில் நிமலனின் வீட்டில் நவராத்திரி பூஜை ஏற்பாடாகி இருந்தது.
ஒவ்வொரு வருடமும் நடக்கும் பூஜை தான் அது. வழக்கமாக இது போன்ற பூஜையில் எல்லாம் விநாயக் கலந்து கொள்வது இல்லை. அன்று அபிராமிக்கு கோவிலில் ஒரு கச்சேரி இருந்ததால் தன்னால் பூஜைக்கு வர முடியவில்லை என சூரியகலாவிடம் சொல்லிவிடுமாறும் தன் சார்பாக வருபவர்களுக்கு கொடுக்க வழக்கம் போல் சில பரிசு பொருட்களையும் வாங்கி மகனிடம் கொடுத்து விட்டிருந்தார் அபிராமி.
அதைக் கொண்டு வந்தவன் சூர்யகலாவிடம் கொடுத்து விட்டு வெளியில் வந்தான். மணி நான்கு தான் ஆகியிருந்தது. பூஜை தொடங்க இன்னும் நிறைய நேரம் இருக்க.. பெரிதாக யாரும் வந்திருக்கவில்லை. சூரியகலாவும் தன் அறையில் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் அங்கேயே சென்று அவரைப் பார்த்து பேசி விட்டு வந்தவன், பார்வையில் பட்டுப்பாவாடை தாவணி அணிந்த யாரோ துள்ளி குதித்து மாடிப்படியில் ஏறி செல்வது போல் தெரிந்தது.
அந்த கொலுசு அணிந்த பட்டுப்பாதங்களும் நீண்ட பின்னலிட்ட கூந்தலும் பாவாடை தாவணி சரசரக்க படிகளில் ஓடிய விதமும் அவனை கவர ‘யாரது..? இந்த வீட்டில் புதிதாக..!’ என்பது போல் கீழ்படிக்கு அருகில் நின்று தலையை உயர்த்தி மேலே பார்த்தான் விநாயக்.
அதே நேரம் தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்ந்த நந்தினி, அங்கு நின்றபடியே கீழே பார்க்க.. இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.
இருவராலுமே பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. ‘இது என்ன உணர்வு..? முதல் முறை பார்க்கும் போதே இப்படி தோன்றுமா என்ன..?’ என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழ.. அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றுவிட்டனர்.
“ஹே, இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கே..?” என்றபடி குதித்துக் கொண்டு அங்கு வந்து அவன் தோளில் அடித்திருந்தாள் அபி. இதில் வேகமாக நந்தினி அங்கிருந்து நகர்ந்து விட, “குரங்கு, குரங்கு.. ராங் டைமிங்கில் என்ட்ரி கொடுக்குறதே உனக்கு வேலையா போச்சு..” என்று அவள் தலையில் தட்டினான் விநாயக்.
“என்ன ராங் டைம்..? பூஜைக்கு இன்னும் நேரம் இருக்குன்னு சொல்றியா..! நான் நிமலை பார்க்கத்தான் வந்தேன், பூஜைக்கு இல்லை..” என்று விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்து விட, ‘இப்போ எதுக்கு இவ வந்தா..? எதுக்கு போனா..!’ என முணுமுணுத்தபடியே இரண்டிரண்டு படிகளாக தாவி மேலே சென்றான் விநாயக்.
அங்கு தீக்ஷா நின்றிருக்க.. நந்தினி அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். வேகமாக மேலேறி வந்து விட்டவனுக்கு தீக்ஷாவின் முன் சென்று பேச லேசான தயக்கம் உண்டாக, அப்படியே கைகளை கட்டிக்கொண்டு நுழைவாயில் அருகில் சாய்ந்து நின்று கொண்டான் விநாயக்.
விநாயக்கின் வருகையை தீக்ஷா கவனிக்கவே இல்லை. எப்போதும் போல் கலகலப்பாக அவள் பேசிக் கொண்டிருக்க.. அவளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் நந்தினியின் பார்வை விநாயக்கின் மேல் அடிக்கடி படிந்து மீண்டு கொண்டிருந்தது.
அந்தப் பார்வையும் அதன் உணர்வும் அவனை ஏதோ செய்ய.. அசைய மறந்து அப்படியே அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டு நின்று விட்டான் விநாயக்.
இப்படியே அன்று முழுவதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தொடர்ந்து கொண்டே இருந்தனர். தீக்ஷா மற்றும் நந்தினி கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர்.
முதன்முறையாக தீக்ஷா வீட்டில் நடக்கும் பூஜைக்கு நந்தினி வந்திருந்தாள். வற்புறுத்தி பிடித்து வைக்க நினைத்தால் கூட மறுத்து விட்டு ஓட முயல்பவன், இன்று அவசரமே இல்லாமல் நாள் முழுக்க அங்கு சுற்றிக் கொண்டிருக்க.. அவன் பார்வை சென்ற திசையை கவனித்திருந்த நிமலனுக்கும் விநாயக் மனது லேசாக புரிந்தது.
ஆனால் முதல் நாளிலேயே அவசரப்பட்டு அவனிடம் எதையும் பேச விரும்பாமல் அவன் அமைதி ஆகிவிட, இவர்கள் நண்பர் குழுவில் இருக்கும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.
நவராத்திரி பூஜை என்பதால் பெண்கள் எல்லாம் கூடியிருக்க.. இவர்கள் அங்கிருந்து ஒதுங்கி வெளிவாயில் அருகில் குழுவாக நின்று பேசிக் கொண்டிருக்க.. விநாயக்கின் பேச்சு நண்பர்களிடம் இருந்தாலும் பார்வை மட்டும் நந்தினி மேல் தான் இருந்தது.
“என்னாச்சுடா இவனுக்கு..? ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கான்..” என்று வர்மா கேட்க, “நானும் பார்த்தேன்டா ஒரு மார்க்கமா தான் இருக்கான், மதியம் பேசும் போது பூஜைக்கு வாடான்னு கூப்பிட்டா. எனக்கு நிறைய வேலை இருக்கு உன்னை மாதிரி பாட்டிங்க தான் பூஜைக்கு எல்லாம் போவாங்க.. நான் வரலைன்னு சொன்னான், இப்போ என்னடானா எனக்கு முன்னையே வந்து இங்கே உட்கார்ந்து இருக்கான், சம்திங் ராங்..” என்றாள் அபி.
“என்ன ராங்..? நாம கூட தான் வந்திருக்கோம், இதில் என்ன ராங்..?” என தர்ஷன் புரியாமல் கேட்கவும், “நீ சின்ன பையன்டா உனக்கு அதெல்லாம் புரியாது..” என்று கலாய்த்தான் வர்மா. இப்படியே பேச்சு செல்ல விநாயக்கின் பார்வை செல்லும் பாதையை கண்டு கொண்டிருந்த துஷ்யந்த் “ஹே மச்சான் நீயாடா..?” என்று ஆச்சரியமும் சந்தோஷமுமாக கத்தினான்.
அதில் லேசாக பின்னந்தலையை கோதியவாறு விநாயக் புன்னகைக்க.. “அடடா நோட் செய்ங்கடா, நோட் செய்ங்கடா.. வெட்கப்படறான்டா..” என்று இன்னும் அதிர்ச்சியில் கூக்குரலிட்டான் துஷ்யந்த். அதில் அமர்த்தலாக சிரித்துக் கொண்டான் நிமலன்.
“டேய் என்னடா எனக்கும் சொல்லுங்கடா..” என அபி முன்னாடி வந்து நிற்க.. அவள் கன்னத்தை தன் ஒற்றை கையால் பிடித்து நந்தினி இருந்த பக்கம் முகத்தை திருப்பினான் துஷ்யந்த். அதில் அவளின் ஓரப்பார்வையும் இவனின் அசையாத பதில் பார்வையும் அப்போதே அவள் கண்களில் பட “ஆஹா.. இங்கே இப்படி ஒரு படம் ஓடுதா..? இவ்வளவு நேரம் இதை கவனிக்காம போனேனே..!” என்றாள் அபி.
“மச்சி நிஜமாவா நம்ப முடியலையே..!” என்று வர்மா கேட்கவும், “தெரியலை மச்சி, ஆனா என்னவோ பிடிச்சு இருக்கு.. இன்னைக்கு தானே பார்த்து இருக்கேன், பார்ப்போம்..” என கூறினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உறுதி நண்பர்களுக்கு தெளிவாக அவன் மனதை உணர்த்தியது.
***
மறுநாள் மாலை பூஜையில் அபிராமி பாடிக்கொண்டிருந்தார். கொலுவின் முன்னே அவர் அமர்ந்திருந்த விதம் அதிலிருந்து பாந்தம், அழகு என்று எல்லாம் நந்தினியை கவர்ந்து இழுக்க.. தீக்ஷாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் நந்தினி.
சில நிமிடங்களுக்குப் பிறகு தீக்ஷாவை சூரியகலா எதற்கோ அழைக்க.. அவள் அங்கிருந்து எழுந்து செல்லவும், நந்தினி நகர்ந்து அபிராமியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அதேநேரம் அபிராமியும் அடுத்த பாடலை பாடத் தொடங்கி இருந்தார். தன் அருகில் வந்து அமர்ந்த நந்தினியை பார்த்து மென்னகையோடு தலையசைத்தவாறே அவர் பாடலை தொடங்க..
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
அந்த குரலில் இருந்த பக்தியிலும் குழைவிலும் நந்தினி விழிமூடி பாடலை ரசித்துக் கொண்டிருக்க.. அதே நேரம் மேலிருந்து கீழ் இறங்கி வந்த நண்பர்கள் குழு பாதி படியில் அப்படியே நின்றது.
“என்னடா நடக்குது இங்கே..? இப்போவே மாமியாரும் மருமகளும் கூட்டணி சேர்ந்தாச்சு போலவே..!” என்று வர்மா கேலி செய்ய.. “அதை விடுடா ஆண்ட்டியோட பாட்டை கவனிச்சியா..! இப்போவே மருமகளை புகழ்ந்து பாடறாங்க..” என்று தர்ஷன் சொல்ல.. அனைவரின் கவனமும் அப்போதே அபிராமியின் பாடலில் பதிந்தது.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
அதே நேரம் சொல்லி வைத்தார் போல் அவரும் மீண்டும் அதே வரியை பாடிக் கொண்டிருக்க.. அங்கு அப்படி ஒரு சிரிப்பலை எழுந்தது. அதில் கீழ் இருந்தவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்ப.. நந்தினியும் விழிகளை மெல்ல உயர்த்தி பார்த்தாள்.
விநாயக் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அடுத்த நொடி அவள் லேசான நாணத்தோடு விழிகளை தழைத்துக் கொள்ள.. அபிராமி தன் மகனையும் அவனின் நண்பர்களையும் கண்டு புன்னகையோடு பாடிக் கொண்டிருந்தார்.
இப்படி அந்த நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகான நினைவுகளோடு கழிந்தது. இரண்டு நாட்கள் கழித்து, மதிய நேரம் நிமலனும் விநாயக்கும் வெளியில் செல்வதாக இருந்தது.
அதில் விநாயக் நிமலனை பார்க்க வந்திருக்க.. அவன் அப்போதே குளிக்கச் சென்று இருப்பதாக நித்திலன் கூறினான்.
இதில் உண்டான எரிச்சலோடு வெளி கேட் மேல் சாய்ந்து நின்று அலைபேசியில் விநாயக் பேசிக் கொண்டிருக்க.. நந்தினி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அந்த வீதி முனைவரை காரில் வந்தவள், காரில் மானஸா இருந்ததால் அவள் எக்ஸாம் செல்ல நேரமாவதை உணர்ந்து, அங்கேயே இறங்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்க.. அவள் விழிகள் சற்று தூரத்திலேயே விநாயக் நிற்பதை கண்டு கொண்டது.
அவளோ அலைபேசியில் மட்டுமே கவனமாக வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்க.. நிதானமாக அவனை ரசித்து உள்வாங்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் நந்தினி.
வெள்ளை, பிரவுன், மஸ்டட் என்று மூன்று நிறம் கலந்த கட்டம் போட்ட சட்டையும் வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து மூடியிருந்த கேட்டின் மேல் ஒற்றைக் காலை பின்னுக்கு மடக்கி வைத்த படி அவன் நின்று பேசிக் கொண்டிருந்த விதம் அவளை அத்தனை கவர்ந்தது.
காற்றில் அலை அலையாய் கேசம் மெலிதாக அசைந்தாட, ஒற்றைக் கையால் அதை கோதியபடியே மற்றொரு கையில் அலைபேசியை பிடித்தபடி அவன் நின்றிருக்க.. அவன் மேலிருந்து பார்வையை நந்தினியினால் நகர்த்தவே முடியவில்லை.
அதே நேரம் பேசிக்கொண்டே திரும்பியவன், நந்தினி வருவதை பார்த்து விட்டிருந்தான். அந்த நொடி அவன் கண்களில் வந்து போன ரசனையும் ஆர்வமும் அவளின் நடையை லேசாக தடுமாற செய்தது.
விநாயக் சற்றுமுன் அவள் பார்த்தது போலவே இமைக்காமல் நந்தினியை மட்டுமே பார்த்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க.. மீதம் இருந்த பத்து அடியை எடுத்து வைத்து அந்த வீட்டை நெருங்குவதற்குள் நந்தினிக்கு பெறும் தடுமாற்றமாகிப் போனது.
எத்தனை தான் மெதுவாக நடந்தாலும் ஒரு கட்டத்தில் அவன் முன் வந்து நந்தினி நின்று விட, அவனும் அவளையே சிறு புன்னகையை உள்ளடக்கிய முகத்தோடு பார்த்து, அவ்வளவு நேரம் சாய்ந்து நின்றிருந்த கேட்டை மெதுவாக அவளுக்காக திரும்பிப் பார்க்காமலே விநாயக் திறந்து விட, அவனை பார்த்தபடி கடந்து உள்ளே சென்றாள் நந்தினி.
இருவரின் விழிகளும் காந்தமாய் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ள.. மெல்ல நடைபழகும் பிள்ளை போல் அடியெடுத்து வைத்து சென்று கொண்டிருந்தாள் நந்தினி.
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
என திடீரென ஒலிக்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். அங்கு தன் அலைபேசியில் பாடலை ஒலிக்க விட்டபடி தர்ஷன் நின்றிருக்க.. அவன் பின்னே சிரித்துக்கொண்டிருந்தாள் அபி.
இதை கண்டதும் உண்டான பதட்டத்தோடு நந்தினி வேகமாக உள்ளே ஓடி விட, இருவரையும் திரும்பி முறைத்தவன் தர்ஷனை தலையில் நறுக்கெனக்கொட்டி “எனக்குனே வருவீங்களாடா..?” என்றான்.
“பின்னே என்ன மேன்.. நானும் பார்க்கறேன் இந்த நாற்பது அடி தூரத்தை நாலு மணி நேரமா கடந்து காமெடி செஞ்சுட்டு இருக்கீங்க.. எவ்வளவு நேரம் தான் உங்க ஷோ முடியட்டும், அப்புறம் உள்ளே போகலாம்னு நாங்க அங்கேயே நிற்கறது.. நீங்களும் முடிக்கறது போல தெரியலை, அதான் நாங்களே முடிச்சு வெச்சுட்டோம்..” என்றான் சிரித்துக் கொண்டே தர்ஷன்.
“உன்னை எல்லாம் வெச்சுட்டு லவ் கூட செய்ய முடியாதுடா..!” என அவன் குறைப்பட்டுக்கொள்ள.. “மச்சி, அப்போ லவ் தானா..!” என்று ஆர்வமாக கேட்டாள் அபி.
“அப்படித்தான் நினைக்கறேன்..!” என்று சிரித்துக்கொண்டே விநாயக் சொல்லிவிட, “ஓஹோ..” என்று இருவரும் கூக்குரலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் மாலை வேளையை அத்தனை ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தான் விநாயக். அவளின் வருகை அவனை அத்தனை ஈர்த்தது.
மறுநாள் மீண்டும் நந்தினி தாவணியில் வந்திருந்தாள். நந்தினி எப்போதுமே அழகு தான். அன்று பார்த்துப் பார்த்துத் தன்னை தயார் செய்து வந்திருந்தாள். அதற்கான பலனும் கிடைத்தது. நந்தினி வீட்டிற்குள் நுழையும் போதே அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் வாயிலுக்கு எதிரிலேயே நின்றிருந்தான் விநாயக்.
அவனை கண்டதும் படபடக்கும் மனதோடு அவள் பார்வையைத் தழைத்துக் கொள்ள.. அவனும் கண்கள் மின்ன அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வை அவளை ஏதோ செய்ய, ஒருவித சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருந்தாள் நந்தினி.
ஏதோ திரும்ப இன்று அவளை தாவணையில் கண்டது விநாயக்கிற்கு அத்தனை உவகையை தந்தது. முதன்முதலில் அவளை இந்த உடையில் பார்த்ததாலோ என்னவோ.. அவன் மனதில் அது தனி ஒரு இடம் பிடித்திருந்தது. அதில் பார்வையால் அவளை தொடர்ந்து கொண்டிருந்தவனுக்கு அப்போதே அந்த வித்தியாசம் புரிந்தது.
அது முதல் நாள் அவள் கூந்தலில் இடம் பெற்றிருந்த மல்லிகை பூ. இன்று அங்கு இல்லை. அதில் ஏதோ ஒன்று குறைவதாக அவன் மனம் சொல்லிக் கொண்டு இருக்கவும், சட்டென அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான் விநாயக். திடீரென அவனை அங்கு காணாமல் தவித்து போனாள் நந்தினி.
முதலில் பார்வையால் அந்த இடம் முழுக்க வலம் வந்தவள், பின் வீடு முழுக்க தேடிப் பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வந்தவனின் கைகளில் மல்லிகைப்பூ இருந்தது.
இதைக் கண்டு புன்னகையோடு நிமலன் பார்வையை திருப்பிக் கொள்ள.. அன்று வேறு நண்பர்கள் யாரும் அங்கு வந்திருக்கவில்லை. அவனைக் காணாமல் தேடி சோர்ந்து போய் இருந்த நந்தினி மெதுவாக மாடியிலிருந்து இறங்கி வரவும், அவள் எதிரில் வந்து நின்றான் விநாயக்.
இப்படி திடீரென மீண்டும் அவனை கண்டதில் உண்டான முக மலர்ச்சியோடு விழிகளும் மின்ன நந்தினி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளைப் பார்த்தபடி ஒவ்வொரு படியாக மேலே ஏறினான் விநாயக்.
அவளும் மெதுவாக ஒவ்வொரு படியாக கீழே இறங்கி கொண்டிருக்க.. இருவரும் சந்தித்துக் கொண்ட இடத்தில் தன் கையில் இருந்த மல்லிகையை அவளிடம் கொடுத்துவிட்டு அவன் மேலேறி விட்டிருக்க.. அவளும் அதை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி சென்றிருந்தாள்.
நொடி நேரத்தில் நடந்து முடிந்த ஒன்று கவனித்துப் பார்த்தாலின்றி வேறு யாருக்கும் தெரிந்தே இருக்காது. இப்போதும் அப்படியே அங்கிருந்து யாருமே இதை கவனிக்கவில்லை. ஆனால் முகமெங்கும் பூரிக்க.. தன் கையில் இருந்த மல்லிகையை பார்க்கப் பார்க்க நந்தினிக்கு அத்தனை வெட்கம் உண்டானது.
அவளும் மல்லிகை பூ வாங்க எண்ணி தான் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தாள். ஆனால் வரும் வழியெங்கும் தேடியும் அவளுக்கு பூ கிடைக்கவில்லை. நவராத்திரி நேரம் என்பதால் பூஜைக்கு என நிறைய பேர் வாங்கி சென்று விட்டிருந்தனர்.
இதில் தனக்காக தேடிச் சென்று விநாயக் வாங்கி வந்து கொடுத்தது அவளுள் இதமாக பரவியது. அதில் விழிமூடி அதன் மணத்தை ஒருமுறை நுகர்ந்தவள், ஆசையாக அதை கூந்தலில் சூடிக் கொண்டாள்.
இப்படியே அந்த நவராத்திரி முழுக்க அழகாக செல்ல.. இறுதி நாளான அன்று அவளிடம் தன் மனதை மறைக்காமல் பேசிவிட நினைத்தான் விநாயக்.
இதுவரை பேசிக்கொள்ளாமலேயே ஒருவரின் மனம் மற்றவருக்கு புரிந்தே இருந்தாலும், உடைத்து பேசி விடுவது தானே சரியாக இருக்கும் என எண்ணியவன், அவளுக்கென ஒரு பரிசை வாங்கிக் கொண்டு வந்தான் விநாயக்.
வரும் வழியில் இருந்த அம்மன் கோயிலை கண்டவுடன் அவனுக்கு அபிராமியின் நினைவு வந்தது. அவருக்கு மிகவும் பிடித்த கோயில் இது. எந்த ஒரு முக்கிய வேலையை செய்யும் முன்பும் இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்வது அவரின் வழக்கம்.
விநாயக்கையும் அது போலான நாட்களில் அழைத்து வந்துவிடுவார். பிறந்த நாளில் மட்டுமே முரண்டு பிடிப்பவன், மற்ற நாளில் அவரோடு கோவிலுக்கு செல்ல எப்போதும் மறுத்ததே இல்லை.
இன்று அந்தக் கோவிலை பார்த்த உடன் அவனுக்கு அதெல்லாம் நினைவுக்கு வர, யோசிக்காமல் கோவிலுக்குள் சென்று அம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டு விழிகளை திறக்க.. நந்தினி கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் அவன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அம்மனே அவன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியது போல் இருக்க.. லேசான புன்னகையோடு அவளைப் பார்த்தவன், அவளை நோக்கிச் செல்ல.. அப்போதே நந்தினியும் அவனை பார்த்திருந்தாள்.
இன்று நவராத்திரி கடைசி நாள் என்பதால் இதற்குப் பின் தர்ஷனின் வீட்டிற்கு செல்லவும், விநாயக்கை பார்க்கவும் முடியாது என்ற கலக்கம் அவளுள்ளும் இருந்தது. எப்படி இதைப்பற்றி அவனிடம் பேசுவது என்ற தயக்கத்தோடு வந்தவள், எதிர்பாராமல் கோவிலில் அவனை கண்டவுடன் விழிகள் மின்ன அவனைப் பார்க்க.. அவனும் நந்தினியை பார்த்துக் கொண்டே தன் கையில் இருந்த குங்குமத்தை அங்கு இருந்த தூணின் ஓரத்தில் வைத்து விட்டு நகர்ந்தான்.
நந்தினி நேராகச் சென்று அதை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள.. அவள் மனம் மேலும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. இதில் கொஞ்சமும் யோசிக்காமல் அவளை நெருங்கியவன், தன் கையில் இருந்த அவளுக்கான பரிசை அவளிடம் நீட்ட.. அவளும் அக்கம் பக்கம் லேசாக விழிகளை சுழற்றி யாரும் பார்த்து விடாதவாறு சட்டென அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து இருந்தாள்.
அவளின் பதட்டம் புரிந்து தனக்குள்ளேயே லேசாக புன்னகைத்துக் கொண்டவன், தலையை கோதியவாறே திரும்ப.. அங்கு கண்ட காட்சியில் அவன் புன்னகை மட்டுமல்ல காதலும் காணாமல் போயிருந்தது.