நேசம் - 50
சமீபமாக தான் நாகராஜன் பற்றி சிந்துவுக்கு தெரிய வந்திருந்தது. இதற்கு மேலும் சொல்லாமல் இருப்பது சரியில்லை என தாரக் தான் அனைத்தையும் கூறியிருந்தான்.
முதலில் சுஜாதாவும் அருணும் வீட்டை விட்டு சென்றதை எண்ணி திகைத்தவளுக்கு, அவர்கள் எதையும் தன்னிடம் சொல்லாமல் மறைத்த வருத்தமும் சேர்ந்துக் கொள்ள.. எதுவும் பேசாமல் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் சிந்து.
“அவங்க உன்னை நினைச்சு கவலைப்பட்டு தான் உன்கிட்ட சொல்லலை..” என்றவனை அவள் நம்பாமல் பார்க்க.. “வேணும்னா நீயே பேசி தெரிஞ்சுக்கோ..” என அருணுக்கு அழைத்து விட்டிருந்தான் தாரக்.
அதன் பின் சுஜாதாவும் அருணும் மெல்ல பேசி அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்திருக்க.. ஒரளவு சமாதானமாகி இருந்தாள் சிந்து. இதற்கிடையில் நாகராஜனை பற்றி கேட்கவோ தெரிந்துக் கொள்ளவோ கூட அவள் முயலவில்லை.
திருமணம் முடிந்து எல்லாம் இயல்பாக போவது போல் தோன்றினாலும் ஏதோ ஒரு வெற்றிடம் அவர்களுக்குள் இருந்தது. முன்பே இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.. இப்போது ஒரே அறையில் இருக்கிறார்கள் அவ்வளவு தான்.
அவளிடம் எந்த ஒதுக்கமும் காண்பிக்காமல் இயல்பாக பேசி பழகிக் கொண்டு தான் இருந்தான் தாரக். ஆனால் அதைக் கடந்து மனைவி என்ற முறையில் அவளை பார்க்கவோ நெருங்கவோ ஒரு அடியையும் அவன் எடுத்து வைக்க முயலவே இல்லை.
ஆரம்பத்தில் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிந்து, எல்லாம் நாளாக ஆக சரியாகி போகும் என்று நினைத்து கொண்டிருக்க.. நாட்கள் தான் கடந்து போனதே தவிர அவனிடம் எந்த மாற்றமும் வரவில்லை. அதற்காக அவளை தள்ளி வைக்கிறான் முகம் திருப்புகிறான் என்றெல்லாம் சொல்லிவிடவும் முடியாது. எப்போதும் போல் சிந்துவின் தேவைகளை அவள் சொல்லும் முன்பாகவே செய்து முடித்து விடுவான்.
ஒவ்வொரு விஷயத்திலும் அவளின் நலனில் அக்கறை கொண்டே செயல்படுவான். ஆனால் இது மட்டும் ஒரு திருமண வாழ்க்கைக்கு போதாதே..! ‘வேறு என்ன தான் இங்கு பிரச்சனை..?’ என்ற உறுத்தல் அவளுள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதில் தாரக் தானாக முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என நினைக்காமல் தானே ஏன் தொடங்கக் கூடாது என்று நினைத்தவள், அன்று வார இறுதி என்பதால் ஃபேமிலி லான்ஞ்ச் ஏரியாவின் சோபாவில் தன் மடிக்கணினியோடு அமர்ந்திருந்த தாரக்கை நெருங்கி “உங்களுக்கு இன்னைக்கு வேலை எதுவும் இருக்கா..?” என்றாள் சிந்து.
எப்போதும் இப்படி எல்லாம் கேட்காதவளை கேள்வியாக திரும்பி பார்த்தவன், “அப்படி எதுவும் அவசர வேலை இல்லை, என்ன விஷயம்..?” எனவும் “வெளியே எங்கேயாவது நாம போகலாமா..? இன்னைக்கு எனக்கும் வேலை எதுவுமில்லை..” என்றாள் சிந்து.
“ஓகே எங்கே போகணும்..?” என்று தாரக் கேட்கவும், “தெரியலை நீங்களே சொல்லுங்களேன்..” என்றாள் சிந்து. அதில் யோசனையாக விழிகளை சுருக்கியவன், பின் “எனக்கும் தெரியலை, வெளியே போகணும்னு நீதானே சொன்னே..! இடத்தையும் நீயே சொல்லு..” எனவும் அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் பரவியது.
அதில் ஒரு நொடி அமைதியாக இருந்தவள், பின் “வேண்டாம், நாம எங்கேயும் போக வேண்டாம்.. நீங்க உங்க வேலை கண்டினியூ செய்ங்க..” என்று விட்டு அறைக்குள் சென்று விட, அவள் சென்ற திசையையே புரியாமல் பார்த்த தாரக் எழுந்து சிந்துவின் பின்னே சென்றான்.
பால்கனியில் எதையோ யோசித்தபடி எங்கோ தூரமாக பார்வையை பாதித்தவாறு நின்றிருந்தவளை நெருங்கியவன் “என்னாச்சு..? என்ன பிரச்சனை..? ஏன் வேண்டாம்னு சொன்னே..?” என்று கேட்டுக் கொண்டே இருக்க.. எதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை.
“ம்ப்ச், இங்கே பாரு.. என்னன்னு சொல்லு, அப்போ தானே எனக்கு புரியும்..” என அவன் கேட்கவும், முயன்று தன் முழு பெயரை சொல்லாமல் தவிர்த்து ஒவ்வொரு முறையும் அவன் பேசுவது புரிய.. திரும்பி வருத்தத்தோடு அவனைப் பார்த்தாள் சிந்து.
“விருப்பம் இல்லாத வாழ்க்கை, விருப்பமில்லாத விஷயம்னு உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேனோ..!” என்றவளை அவன் புரியாமல் பார்க்க.. “உங்களுக்கு விருப்பம் இல்லாம நீங்க எதையும் செய்ய வேண்டாம், ஃப்ரீயா விடுங்க..” என்றாள் சிந்து.
“ஹே இல்லை, எனக்கு இதில் கஷ்டமெல்லாம் எதுவுமில்லை.. நான் விருப்பம் இல்லாம செய்யறேன்னு நீயா எப்படி நினைச்சே..?” என்றான் தாரக். “வேற எப்படி நினைக்க சொல்றீங்க..? நமக்கு கல்யாணமாகி எத்தனை நாளாகுது..? நீங்களா இதுவரை என்னை எங்கேயும் வெளியே கூட்டிட்டு போனதில்லை.. சரி, நானா போகலாம்னு சொன்னாலும் எங்கே போகணும்னு என்னையே கேட்கறீங்க.. வெறும் கடமைக்காக எல்லாம் செய்யற மாதிரி இருக்கு.. இதில்..” என்றவள் ‘காதல் எங்கே இருக்கு..?’ என கேட்க முடியாமல் அப்படியே பேச்சை நிறுத்தி விட, அவள் சொல்ல வந்தது அவனுக்கும் தெளிவாக புரிந்தது.
சிந்துவின் நிலையும் தெளிவாக புரிய.. “உன்னை அவாய்ட் செய்யணும்னு எல்லாம் நான் நினைச்சது இல்லை..” என்றவன் மீண்டும் அவள் பெயரை உச்சரிக்காமல் நிறுத்த, “தெரியும் நானும் நீங்க அவாய்ட் செய்யறீங்கன்னு சொல்லலை..” என்றாள் சிந்து.
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை, இதுவரைக்கும் இப்படி யாரையும் எங்கேயும் நான் கூட்டிட்டு போனதில்லை.. அதனால் எங்கே போகணும்னு தெரியலை.. அதை தான் சொன்னேன், விருப்பம் இல்லைன்னு சொல்லலை..” என்று அவளுக்கு புரிய வைத்து விட முயன்றான் தாரக்.
“நான் மட்டும் வாரத்துக்கு ஒருத்தர் கூட வெளியே போயிட்டு இருக்கேனா..!” என அவள் முகத்தை திருப்ப.. “ஹேய்..” என தான் சொல்ல வந்ததை எங்கே தவறாக புரிந்து கொண்டாளோ என்ற பதட்டத்தோடு “நான் அப்படி எதுவும் சொல்லலையே..!” எனவும், அவன் குரலில் இருந்த பயத்தை உணர்ந்தவளின் இதழ்கள் மெல்ல புன்னகையில் நெளிந்தது.
ஆனால் அவள் திரும்பி நின்றிருக்க.. அது அவனுக்குத் தெரியவில்லை. சிந்துவின் இந்த அமைதியை தன் மேலான கோபம் என்று புரிந்து கொண்ட தாரக் “நிஜமா எனக்கு என்ன செய்யணும்னு தெரியலை, என்னை அறியாமலே ஏதாவது உன்னை ஹர்ட் செஞ்சுருந்தா ஐ அம் சாரி.. நாம எங்கேயாவது போகலாம், இரு நான் ஏதாவது ஒரு பிளான் செய்யறேன் வெயிட்..” என்று விட்டு தன் அலைபேசியை எடுக்க.. திரும்பி நிதானமாக அவனை பார்த்தவள், “அதெல்லாம் வேண்டாம், திடீர் பிளான் தானே.. சும்மா ஒரு லாங் டிரைவ் ஓகேவா உங்களுக்கு..?” என தலையை சாய்த்து கேட்க.. உடனே சம்மதித்து இருந்தான் தாரக்.
மாலை நான்கரை மணி அளவில் இருவரும் காரில் கிளம்ப.. மெலிதாக சிந்து தனக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டபடியே அந்த பயணத்தை ரசிக்கத் தொடங்கினாள். இது தான் திட்டம் என்றில்லாமல் மனம் போன போக்கில் சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் இளைஞர்கள் அதிகம் தென்பட, “இங்கே என்ன ஸ்பெஷல்..?” என்றாள் பார்வையை வெளியே வைத்தபடியே சிந்து. “இது முட்டுக்காடு.. பக்கத்தில் போட் ஹவுஸ் இருக்கு, வீக் எண்ட் இல்லையா அதான் நிறைய பேர் வந்திருக்காங்க..” என்றான் தாரக்.
“ஓ போட் ஹவுஸா, இங்கே இருந்து பார்க்க முடியுமா..?” என ஆவலாக அவள் பார்வையாலேயே தேட, “உனக்கு பார்க்கணுமா..! இல்லை போகணுமா..?” என்றான் தாரக். “நாம போக முடியுமா..?” என்று கேட்கும் போதே அவள் முகத்தில் அத்தனை ஆர்வம் எட்டிப் பார்த்தது.
“ஓ போகலாமே..” என்றவன், அவள் விழிகள் மின்னுவதை கண்டு “நீ இதுக்கு முன்னே போர்ட்டில் போனதில்லையா..?” எனவும், “நான் எங்கேயுமே போனதில்லை..” என்று சிரித்தாள் சிந்து. அவள் என்னவோ இயல்பாக அதை சொல்லிவிட்டாள், ஆனால் அவனுக்குத்தான் என்னவோ போலானது.
காரை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே செல்ல.. ஒரு ஜோடி இவர்கள் எதிரில் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் எதற்கோ கோபப்பட்டு அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. அவன் தன் காதலியிடம் கெஞ்சிக் கொண்டே நடந்து வந்தான்.
திடீரென என்ன நினைத்தாளோ அந்தப் பெண் கோபத்தில் தன் காதலனை பிடித்து தள்ளி விட, கொஞ்சம் விட்டிருந்தால் அவன் இவர்களை தள்ளி விட்டிருப்பான். இதை சரியாக கணித்தது போல் தாரக் சட்டென சிந்துவை தன் தோளோடு அணைத்து பிடித்தபடி நகர்ந்துவிட்டான்.
நொடியில் நடந்து விட்ட நிகழ்வு தான். யாரும் திட்டமிட்டு எல்லாம் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் இருவரும் கீழே விழுந்து இருப்பர். அதில் அந்தப் பெண்ணுமே கொஞ்சம் பயந்து போய் இருவரையும் பார்த்து மன்னிப்பு கேட்க.. அவளுடன் வந்தவனும் அத்தனை முறை மன்னிப்பு கேட்டிருந்தான்.
இருவரும் தெரிந்தே செய்யவில்லை என புரிந்து இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அமைதியாகவே தாரக் அங்கிருந்து சிந்துவுடன் நகர, அவளுக்கு தான் மனம் லேசாக ஓரத்தில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. முதல் முறையாக இத்தனை உரிமையாக அவளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்து இருந்தான் தாரக்.
இந்த இடைப்பட்ட காலத்தில் கையைப் பிடித்துக் கொள்வது எல்லாம் அவர்களுக்குள் வெகு இயல்பான ஒன்றாக மாறிப் போயிருந்தது. ஆனால் அதைத் தாண்டி தாரக் இப்படி எல்லாம் உரிமையாக நடந்துக் கொண்டதே இல்லை. அதில் உண்டான சிறு படபடப்போடே சிந்து அவனோடு சென்றாள்.
அங்கிருந்து நகர்ந்தவுடன் தாரக் தன் கையை விலக்கி கொள்ள.. ஏமாற்றமாக உணர்ந்தாள் சிந்து. மணி ஆரைத் தொட்டிருக்க.. லேசாக இருட்ட தொடங்கி இருந்த நேரம், வார இறுதி என்பதால் படகு சவாரிக்கு நல்ல கூட்டம் இருந்தது. அங்கு வரிசையில் நின்று தாரக், டிக்கெட் வாங்கிக் கொண்டு வர.. அடுத்த ரவுண்டில் தான் அவர்களுக்கு இடம் கிடைத்திருந்தது.
“எப்படியும் அரை மணி நேரமாகும், நாம அந்த பக்கம் போய் நிற்போம்..” என்று தாரக் அழைக்க.. சரி என திரும்பியவள் வழியில் அங்கு வந்திருந்த ஒரு காதல் ஜோடி பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள். “போட்டிங் முடிந்ததும், இங்கே பக்கத்து ரிசார்ட்டில் கேண்டில் லைட் டின்னருக்கு புக் செஞ்சுருக்கேன்.. உனக்கு ஓகே தானே..!” என்று அவன் கேட்க, “அவ்வ்வ்..” என்று கன்னத்தில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள் அந்த பெண்.
இதைப் பார்த்தபடியே சிந்து நகர்ந்து வர, அவள் முகத்தை கவனித்திருந்த தாரக் “நாமும் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடலாமா..?” என கேட்க ஆச்சரியமாக விழிகளை விரித்தவள், உடனே சரி என்றிருந்தாள். ‘உனக்கும் அப்படி சாப்பிடணுமா..?’ என கேட்காமல் ‘நாம சாப்பிடலாமா..?’ என்று தாரக் கேட்டதே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இங்கு காத்திருக்கும் நேரத்திற்குள் அங்கே சென்று டின்னருக்கு புக் செய்துவிட்டு திரும்ப இருவரும் வர, இவர்களின் முறையும் வந்து விட்டிருந்தது. வரிசையில் நின்று ஒவ்வொரு ஜோடியாக சென்று கொண்டிருக்க.. சவாரி முடித்து விட்டு இறங்கி வருபவர்கள் ஒரு பக்கமாக வந்து கொண்டிருந்தனர்.
அதில் வேண்டுமென்றே மூன்று இளைஞர்கள் சிந்துவை இடிப்பது போல் வந்தனர். அவர்கள் மது போதையில் இருப்பது அவர்களின் நடையின் தள்ளாட்டத்திலேயே தெரிந்து விட, நொடியில் சிந்துவின் இடையில் கை கொடுத்து அவளை அப்படியே தூக்கி தன் மற்றொரு பக்கம் நிறுத்திக் கொண்டு இருந்தான் தாரக்.
இதை எதிர்பார்க்காதவர்கள் சிந்துவின் மேல் இடிக்க முழு வேகத்தில் வந்திருந்ததால் கீழே விழுந்திருக்க.. அங்கிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் அதீத போதையில் சரியாக நடக்க முடியாமல் தள்ளாடி விழுந்தது போல் தான் தெரிந்தது.
ஆனால் நடந்ததை உணர்ந்திருந்த சிந்து படபடக்கும் மனதோடு விழிகளை உயர்த்தி தாரக்கை பார்த்தாள். அந்தப் பார்வையை உணர்ந்தவன், சட்டென தன் கைகளை விலக்கிக் கொண்டு “சாரி.. நான் வேணும்னு எதுவும்.. அவங்க உன்னை இடிக்க வந்தாங்க.. அதான்..” என்று லேசான தடுமாற்றத்தோடு பேசினான் தாரக்.
அதில் சிந்துவுக்கு முகம் வாடி விட்டது. “நான் உங்களை எதுவும் சொல்லலையே..!” என்று மட்டும் மெலிதாக முனகினாள் சிந்து. அதன் பின் இருவரும் படகில் ஏறி மெல்ல சுற்றி வந்து கொண்டிருக்க.. அந்த அழகை ரசிக்கும் மனநிலை இப்போது அவளுக்கு கொஞ்சமும் இல்லை.
அடிக்கடி தாரக் முகத்தையே சிந்து பார்த்துக் கொண்டிருக்க.. இவ்வளவு நேரம் இயல்பாக இருந்தவளுக்கு திடீரென என்ன ஆனது என்பது போல் பார்த்தவன் மனதில் சற்று முன் நடந்த நிகழ்வே வந்து நிற்க.. ‘என்னை தப்பா நினைச்சுட்டாளோ..!’ என்று யோசித்தான் தாரக்.
அதேநேரம் “உங்களுக்கு என்னை தொட கூட பிடிக்கலையா..?” என்றாள் சிந்து. அதில் பெடல் செய்து கொண்டிருந்த தாரக்கின் கால்கள் அப்படியே நின்றது. “என்.. என்ன..?” என்று அவன் அடுத்து பேச முடியாமல் தடுமாற.. “இல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை..? என்கிட்ட இருந்து ஏன் விலகி போறீங்க..?” என்றவளை அவன் மறுப்பாக பார்த்து “அப்படி எல்லாம் எதுவும் இல்லை..” எனவும் “பொய் சொல்லாதீங்க, நமக்கு கல்யாணமாகி இத்தனை நாள் ஆகுது.. ஆனாலும் இன்னைக்கு இயல்பா நடந்து ஒரு விஷயத்துக்கு, அதுவும் என்னை காப்பாத்த நீங்க செஞ்ச விஷயத்துக்கு ஏன் மன்னிப்பு கேட்கணும்..?” என்றாள் சிந்து.
“அது.. அது உனக்கு பிடிக்காதோன்னு தான்..” என அவன் இழுக்க.. “எனக்கு பிடிக்காதுன்னு நான் சொன்னேனா..! இல்லை நீங்க தான் என்கிட்ட பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டீங்களா..! நீங்களா ஒண்ணை நினைச்சுட்டு ஏன் என்னையும் என் மனசையும் காயப்படுத்துறீங்க..?” என்றாள் சிந்து.
இப்போது தன் தயக்கத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அவள் கரங்களை இறுக பிடித்துக் கொண்டவன் “இங்கே பாரு உன்னை காயப்படுத்தணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை.. நீ வருத்தப்பட கூடாதுன்னு தான் நான் யோசிக்கிறேன்..” என்றான்.
“எனக்கு தெரியுது, அதனால் தான் சொல்றேன்.. இதனால் எல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன், நீங்க விலகி போறது தான் எனக்கு வருத்தத்தை கொடுக்குது..” என்றாள் சிந்து. “சாரி, இனி ரொம்ப கவனமா இருக்கேன்.. நீ வருத்தப்படும்படி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்..” என்றான் தாரக்.
பின் படகு சவாரி முடிந்து இருவரும் அருகில் இருந்த ரிசார்ட்டிற்கு டின்னர் சென்றனர். பறந்த மண்வெளியில் கடல் அலைகளுக்கு அருகில் வெள்ளை திரை சீலைகளைக் கொண்டு அழகான அலங்கார தடுப்புகளும் வளைவுகளும் கொண்டு ஒவ்வொரு ஜோடிக்கும் தனிமை ஏற்படுத்திக் கொடுத்திருந்த அந்த கேண்டில் லைட் டின்னர் அவ்வளவு அழகாக இருந்தது.
மெல்லிய கடல் அலைகளின் ஓசையும், கண்ணை உறுத்தாத லேசான வெளிச்சமும், ஜில்லென வீசிய இரவு காற்றும் இருவரின் மனநிலையையும் இதமாக மாற்றி இருக்க.. மெல்ல பேசிக்கொண்டே அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. எங்கிருந்து தான் தொடங்கியதோ சட்டென மழை பிடித்துக் கொண்டது.
லேசான தூறல் போல எல்லாம் இல்லை, எடுத்ததும் வேகமாக மழை வலுக்க தொடங்க.. அங்கிருந்தவர்கள் எல்லாம் அவசரமாக மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடிக்கொண்டிருக்க.. தாரக்கும் சிந்துவை அழைத்துக் கொண்டு ரிசார்ட் பக்கம் சென்றான்.
அதற்குள் இருவரும் முழுதாக நனைந்து விட்டிருந்தனர். “அச்சோ இது என்ன இப்படி ஆகிடுச்சு..?” என அவள் இருந்த நிலையை கண்டு தாரக் வருத்தப்பட.. “கடைசியா எப்போ இப்படி நனைஞ்சேன்னு கூட ஞாபகம் இல்லை, ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு..” என்றாள் புன்னகையோடு சிந்து.
மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவன், “இப்போதைக்கு மழை விடும் போல தெரியலை, கார் வேற போட் ஹவுஸ் பக்கத்தில் நிற்குது. இங்கே இருந்து அங்கே போக எப்படியும் பத்து நிமிஷத்துக்கு மேலே ஆகும்..” என்றவன் யோசனையோடு நின்றிருக்க.. ‘இப்போ என்ன செய்வது..?’ என்பது போல் அவன் முகத்தைப் பார்த்தாள் சிந்து.
“உனக்கு ஓகேனா நாம இங்கே நைட் ஸ்டே செஞ்சுடலாமா..?” என்று தாரக் கேட்கவும், திகைப்பாக அவனைப் பார்த்தவள் “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிவிட, சரி என்றவன் அங்கிருந்த ஊழியரை அழைத்து அவர்களுக்கு ஒரு அறைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினான்.
அந்த ஊழியரும் அருகில் இருந்த மற்றொரு உள்வழியில் தாரக்கை ரிசார்ட் ஆபீஸ்க்கு அழைத்துச் செல்ல முயல.. சிந்துவை அங்கேயே நிற்க வைத்து விட்டு செல்ல தாரக் தயங்கினான். “நிறைய தூரம் இல்லை சார், இதோ இப்படி போய் அந்த லெப்ட் திரும்பினா அங்கே தான் ரிசார்ட் ஆபீஸ்..” என்று ஊழியர் கூறவும், அவனோடு சென்ற தாரக், அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்கான அறை சாவியோடு திரும்பி வந்தான்.
அறைக்குள் சென்றதும் “இங்கே ஹீட்டர் இல்லை போல..” என்று பார்வையாலேயே அந்த இடம் முழுக்க அலசி விட்டு தாரக் கூறவும், “பரவாயில்லை விடுங்க, சீக்கிரம் ட்ரையாகிடும்..” என தன் சேலையை அவள் உதறிக் கொள்ள.. அந்த மெல்லிய சேலை அவள் உடலோடு ஒட்டி சிந்துவின் அழகையெல்லாம் மொத்தமாக வெளிச்சம் போட்டு காண்பித்தது.
இதில் ஒரு நொடி தடுமாறியவன், தன் பார்வையை திருப்பிக் கொண்டே அங்கிருந்த டவளை எடுத்து “தலையை துடைச்சுக்கோ..” என்று அவளிடம் நீட்டினான் தாரக். அதை வாங்கியவாறே சிந்து “நீங்க துடைச்சுக்கலையா..?” எனவும், தன் ஈரத் தலையை லேசாக உதறிக் கொண்டே “எனக்கு பரவாயில்லை, நீ துடைச்சுக்கோ..” என்றான்.
அதில் சிந்து தன் தலையை துடைப்பதில் கவனமாக.. அவன் அனுமதி இல்லாமலே தாரக்கின் விழிகள் அவள் மேல் மீண்டும் மீண்டும் பதிந்து கொண்டிருந்தது. ‘என்ன செஞ்சுட்டு இருக்கேன் நான்..?’ என்று தனக்குள்ளேயே முனங்கி கொண்டவன், மெல்ல அங்கிருந்து நகர்ந்து “இப்படியே ஈரமான ட்ரெஸ்ஸில் இருக்காதே.. இங்கே பாத்ரோப் இருக்கான்னு பார்க்கறேன் இரு..” என்று கப்போர்ட்டை திறக்க.. அங்கு இருவருக்குமான பாத்ரோப் இருந்தது.
அதை எடுத்து அவளிடம் கொடுத்தவன் “முதலில் இதை மாத்திக்கோ.. இல்லைனா உடம்புக்கு முடியாம போகும்..” எனவும் சிறு தயக்கத்தோடு அதை வாங்கிக் கொண்டவளுக்கும், இந்த ஈர உடை கொஞ்சம் அதிகமாகவே குளிரை கொடுத்திருக்க.. அருகில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள் சிந்து.
அதற்குள் தாரக் தன் சட்டையை கழட்டி ஈரத்தை உதறிக் கொண்டிருக்க.. குளியலறையில் இருந்து வெளியில் வந்த சிந்து, அவனை எதிர்பாராமல் இப்படி கண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.
அதேநேரம் அவளை திரும்பி பார்த்து இருந்தவன், முட்டியை தொடாமல் தொட்டுக் கொண்டு இருந்த உடையின் உபயத்தால் தெரிந்த அவளின் வழவழப்பான கால்களும், இதுவரை அதை அணிந்து பழக்கமில்லாததால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக அவள் அணிந்திருந்த பாத்ரோபின் நெகிழ்வில் தெரிந்த அபாயகரமான கழுத்து வளைவும், அவன் தொண்டை குழியை ஏற்றி இறக்கியது.
அதில் முயன்று பார்வையை அவன் திருப்ப முயல.. அந்த கழுத்தில் அவன் அணிவித்திருந்த மாங்கல்யம் தாரக்கின் விழிகளில் விழுந்தது. அது அவளை நோக்கி தானாக அவனை நகர செய்திருக்க.. ஆரம்பத்தில் தாரக்கை இப்படி கண்டதில் திகைத்து நின்றவள், பின் வேகமாக பார்வையை திருப்பி கொண்டாள்.
ஆனால் தாரக் தன்னையே பார்ப்பதை நிமிர்ந்து பார்க்காமலே உணர்ந்தவள் படபடக்கும் மனதோடு நின்றிருக்க.. அதே நேரம் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சிந்துவை நெருங்கினான் தாரக்.
கை கால் எல்லாம் லேசாக நடுங்க.. சிந்து நிற்க முடியாமல் தடுமாற.. அதற்குள் அவளை நெருங்கி இருந்தவன், உரிமையோடு சிந்துவின் இடையில் கை கொடுத்து அவளை தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொள்ள.. சிந்துவுக்கு இதயம் வெளியில் வந்து துடித்தது.
மெல்ல தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் முக வடிவை அளந்தவன், சிந்துவின் இதழை நெருங்க இருந்த இறுதி நொடியில் அவன் மோன நிலை கலைய.. சட்டென அவளிடமிருந்து விலகினான் தாரக்.
எதையோ எதிர் பார்த்து விழிமூடி நின்றிருந்த சிந்து திடீரென்ற தாரக்கின் இந்த விலகல் ஏன் என புரியாமல் அவன் கைகளை பிடித்தாள்.
அதில் வேதனையோடு அவளை திரும்பி பார்த்தவன், சிந்துவின் கண்களில் தெரிந்த ஏன் என்ற கேள்வியில் அழுந்த தன் விழியை ஒருமுறை மூடி திறந்து, “இது.. இது உனக்கு தேவையில்லாத பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.. உன்னை மனசளவில் காயப்படுத்திடுவேனோன்னு..” என்றவனின் குரலில் இருந்த வலியே அவனின் மனதை அவளுக்கு தெளிவாக புரிய வைக்க போதுமானதாக இருந்தது.
“அப்படி இல்லைன்னு உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கறது..?” என்று தொடங்கி, பின் சட்டென அவனை இழுத்து “வார்த்தைகளில் புரிய வைக்க எனக்கு தெரியலை..” என்றவள், தாரக்கின் இதழ்களில் தன் முத்திரையை பதிக்க.. விழிமூடி அதை ஏற்றவன், தன்னை மறந்து “தூரிகா..” என முனக.. அந்த விளிப்பில் அவனிடமிருந்து விலகி தாரக்கின் முகம் பார்த்தவளின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கியது.
ஆனால் அவளின் அந்த நொடி நேர விலகலை கூட அனுமதிக்காதவன், அடுத்த நொடி அவளின் செயலை தனதாக்கிக் கொண்டிருந்தான்.
*****
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு…
தன் சட்டையின் கைப்பகுதியின் பட்டனை போட்டபடியே “தூரிகா.. ரெடியா, கிளம்புவோமா..?” என கேட்டப்படியே அறைக்குள் நுழைந்தான் தாரக். அங்கு அலங்கார மேஜை முன் அமர்ந்து ஒப்பனைகளை செய்து முடித்திருந்த சிந்து அங்கிருந்த நகை பெட்டியை எடுத்தவாறே “இதோ இரண்டு நிமிஷம்..” என்று அதை அணிந்து கொள்ள முயல.. அவள் கரத்தில் இருந்து அந்த ஆரத்தை வாங்கிய தாரக் சிந்துவுக்கு தானே போட்டு விட்டான்.
அடுத்து அதே போல் அருகில் இருந்த வளையல்களையும் எடுத்து அவனே போட்டு விட, அமைதியாக அவனின் அத்தனை செயல்களுக்கும் அனுமதித்து புன்னகையோடு அமர்ந்திருந்தாள் சிந்து. எதிரில் தெரிந்த கண்ணாடி வழியே அவளை பார்த்தபடியே அனைத்தையும் செய்து முடித்தவன், பின்னே இருந்தவாறே சிந்துவின் கழுத்து வளைவில் தன் முகத்தை பதித்து தன் கரத்தை அழகாக மேடிட்டு இருந்த அவளின் வயிற்றின் மேல் பதிக்க.. சிந்துவும் அவன் கரத்தோடு சேர்த்து தன் வயிற்றை அணைவாக பிடித்துக் கொண்டாள்.
இருவரும் இந்த உலகையே மறந்தது போல் இந்த நொடியை மட்டுமே ரசித்தபடி இருக்க.. கரடியை போல் அவன் அலை பேசி அழைத்தது. சின்ன சலிப்போடு தன் அலைபேசியை அவன் எடுத்துப் பார்க்கவும், ராம் தான் அழைத்திருந்தான்.
“சார் எல்லாம் ரெடி, நீங்க எப்போ வருவீங்க..?” என அவன் பணிவோடு கேட்கவும், “ஹ்ம்ம்..” என்றவாறே தன் வாட்ச்சை பார்த்தவன் “இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்போம்..” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு சிந்துவைப் பார்க்க.. அவளும் விழியாலே சரி என்றிருந்தாள்.
அதன் பின் மெல்ல சிந்து எழுந்து கொள்ள அவளுக்கு கை கொடுத்து உதவியவன், குனிந்து சிந்துவின் சேலை மடிப்பை சரி செய்து விட, தன் மேடிட்ட வயிறை கடந்து தலையை சரித்து அவனை பார்த்து புன்னகைத்தாள் சிந்து.
சிந்துவுக்கு இப்போது ஒன்பதாவது மாதம். இன்று அவளுக்கு வளைகாப்பு. அதற்காகத்தான் கிளம்பி கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இன்று மேலும் இரண்டு விசேஷங்களும் உண்டு.
அவளை மெதுவாக காரில் ஏறி அமர உதவியன், மற்றொரு பக்கம் வந்து அமர்ந்து காரை எடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் கார் சென்று நின்ற இடம் தாரக் தனாவோடு சேர்ந்து வாழ்ந்த வீடு. முன்பு போல் பெரும் வேதனையோடும் வலியோடும் இறங்கிச் செல்லாமல், சிறு மென்னகையோடு தாரக் இறங்கி சிந்துவின் கையை பிடித்தபடி உள்ளே நுழைந்தான்.
தனா வாழ்ந்த இடம் இப்போது அவளின் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு கொண்டிருந்தது. அன்று நடந்த கலவரங்களுக்கான சாட்சிகள் அப்படியே இருப்பதால் தான் அந்த நினைவுகள் தாரக்கை ஒவ்வொரு முறையும் மனதளவில் கொன்று கொண்டிருக்கிறது எனப் புரிந்து, அதை அழகான நினைவுகளாக மாற்றிக் கொடுத்திருந்தாள் சிந்து.
அந்த வீட்டின் அமைப்பை பெரிதாக மாற்றாமல், அங்கு இருந்த பொருட்களை எல்லாம் மாற்றி வைத்து தனாவின் பெரிய உருவப்படத்தை நேர் எதிரே மாட்டியிருந்தவள், அவளின் உடமைகளை அதற்கு கீழ் கண்ணாடி கதவுகளாலான கப்போர்ட் செய்து அதற்குள் வைத்து விட்டிருந்தாள்.
தனா காதல் திருமணம் செய்து கொண்டு வெளியேறிய பிறகு இதையெல்லாம் எரித்து விட சொல்லி நாகராஜ் தூக்கி வீசி இருந்த பொருட்கள். சுசீலாவுக்கு தன் மகளின் பொருட்களை அப்படி செய்ய மனம் வரவில்லை. சுஜாதாவும் சிந்துவும் அவரோடு இணைந்து இதையெல்லாம் நாகராஜனுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருந்தனர். இப்போது அதையெல்லாம் இங்கே கொண்டு வந்திருந்தாள் சிந்து.
தன் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தவளின் நினைவுகளை பாதுகாக்க இப்படியெல்லாம் செய்ய முடியும் என்று கூட யோசிக்காத தாரக்கிற்கு சிந்துவின் இந்த செயல்கள் அத்தனை நெகிழ்வை கொடுத்தது. அதன் பின் ஒவ்வொரு முறை இங்கு வரும் போதும் அவன் மனம் அத்தனை நிம்மதியையும் அமைதியையும் மட்டுமே உணரும்.
அதேபோல் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்குவதற்கு முன் இங்கு வந்து விட்டுச் செல்வது அவர்களின் முக்கிய வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் வந்திருந்தவர்கள், சின்ன தாமரை மொட்டுகளாலான மாலை அணிந்திருந்த அவள் படத்தின் முன் கைகூப்பி நின்று வணங்கி விட்டு வெளியேற.. மெல்ல மேலே பார்த்தாள் சிந்து.
அவளின் மனம் அறிந்து கை தாங்கலாக சிந்துவை மேல் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான் தாரக். அங்கே குமரேசன் மற்றும் சாரதாவின் புகைப்படம் பெரிது படுத்தப்பட்டு ஜோடியாக ரோஜா மாலையோடு இருந்தது. சென்ற வருடம் ஒருநாள் இரவு உறக்கத்திலேயே குமரேசனின் உயிர் பிரிந்திருக்க.. அந்த செய்தி அறிந்த சில மணி நேரங்களிலேயே சாரதாவின் உயிரும் பிரிந்து இருந்தது.
ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்தவர்கள், அதே போல் மண்ணுலகை விட்டும் சென்றிருந்தனர். அவர்களுக்கு ஒரு மகனாக முன் நின்று அத்தனை கடமைகளையும் செய்திருந்தான் தாரக். அவர்களையும் மனமார வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர்.
அடுத்து இருவரும் சென்றது ‘தனா எலிகன்ஸ்’ என்ற பெயரில் சிந்து புதிதாக தொடங்கியிருக்கும் பொட்டிக் திறப்பு விழாவிற்கு தான். அங்கு அனைவரும் காத்திருக்க.. சுஜாதாவின் கைகளில் கத்திரிக்கோலை கொடுத்து திறப்பு விழாவை செய்து முடித்திருந்தாள் சிந்து.
தன் வாழ்நாள் முழுக்க கிடைக்காத மரியாதையும் அங்கீகாரமும் தன் பிள்ளைகள் மூலம் கிடைப்பதில் உண்டான நெகிழ்வோடு கண் கலங்க அங்கிருந்த சிகப்பு ரிப்பனை வெட்டினார் சுஜாதா. அதன் பின் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்த சிந்துவின் கைகளில் மெழுகுவர்த்தியை கொடுத்து குத்து விளக்கை ஏற்ற செய்திருந்தான் தாரக்.
இது அவள் கனவு.. முழுதாக அவளின் முயற்சியில் தன் கனவுக்கு உயிர் கொடுத்திருந்தாள் சிந்து. தாரக் முன்பே அவளுக்கென ஒரு தொழிலை தொடங்கி கொடுக்க முன் வந்து இருந்தாலும், அதை முற்றிலும் மறுத்து விட்டு தானே தன் கனவை அடையும் இலக்கை நோக்கி சரியான திட்டமிடலுடன் சென்று அதை சாதித்தும் காட்டி இருந்தாள் சிந்து.
இதில் நிஜமாகவே தாரக்கிற்கு உள்ளுக்குள் பெருமை தான். தன் சொந்த காலில் அவள் நிற்பதோடு அதை வெற்றிகரமாகவும் சாதித்து காண்பித்து இருப்பவளை எண்ணி அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை சந்தோஷம். சிந்துவின் ஒவ்வொரு முயற்சியிலும் அவளுக்கு எப்போதுமே கை கொடுப்பான் தாரக்.
இதோ இப்போதும் தன் ஒட்டு மொத்த சேமிப்பையும் அவள் முதலீடு செய்து தொடங்கி இருக்கும் தொழிலை நிச்சயம் வெற்றி பாதையில் கொண்டு செல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அருண் தன் தங்கையை மனதார வாழ்த்த.. சந்தோஷ பூரிப்போடு நன்றி தெரிவித்தவள் அங்கிருந்த அனைவரையும் வரவேற்று உபசரிக்க தொடங்க.. “சரி நேரமாகுது இங்கே இருந்து கிளம்புவோமா..?” என்றான் தாரக்.
அதில் அனைவரும் உடனே கிளம்பினர். பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலில் சிந்துவுக்கு வளைகாப்புக்கு ஏற்பாடாகி இருக்க.. அங்கு சென்று இறங்கியவர்கள் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனத்தை திருப்பினர்.
முதலில் அருணுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம். முன்பு அருண் வேலை பார்த்த இடத்தில் உடன் வேலை செய்த அகல்யாவை அவனுக்கு பிடித்து போக.. இருவரும் காதலிக்க தொடங்கியிருந்தனர்.
அப்போது அகல்யாவுக்கு அருணின் வசதி பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அவனும் தன்னை போல் ஒருவன் என்று நினைத்தே பழகி இருந்தவள், அதன் பின் அவனின் வசதி குடும்பப் பின்னணி எல்லாம் அறிந்து விலகி போக நினைத்தாலும், அதற்கு அனுமதிக்காமல் விரட்டி விரட்டி காதலித்து இதோ திருமணம் வரை கொண்டு வந்து விட்டிருந்தான் அருண்.
அந்த வீட்டின் பெண்ணாக அருணின் தங்கையாக முன் நின்று இருவருக்குமான சடங்குகளை செய்து முடித்த சிந்துவும் மாப்பிள்ளையாக தாரக்கும், அருண் - அகல்யா மோதிரம் மாற்றி முடிக்கவும் தங்கள் வாழ்த்தை தெரிவிக்க.. தாரக்கை மனம் நெகிழ அணைத்து கொண்டான் அருண்.
இருவரும் எந்த வார்த்தைகளும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒற்றை அணைப்பே அருண் சொல்ல வேண்டிய அனைத்தையும் தாரக்கிற்கு சொல்லி விட்டிருந்தது. அதில் அவனும் அமைதியாக நிற்க.. சில நொடிகளுக்குப் பிறகே தாரக்கிடமிருந்து விலகியவன், சிந்துவை பார்த்து “உன் கடமையை நீ முடிச்சிட்டே.. இப்போ என் கடமை வா..” என்றான்.
நிச்சயதார்த்தம் நடந்த மேடைக்கு பக்கத்திலேயே மற்றொரு மேடை போடப்பட்டு தயாராக இருந்தது. அதில் நடு நாயகமாக ராஜ அலங்காரத்தோடு இருந்த இருக்கையில் சிந்துவை அழைத்துச் சென்று அமர வைத்தவன், அவளுக்கான வளைகாப்பு ஏற்பாடுகளை தொடங்க.. வந்திருந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து நலங்கு வைத்து சிந்துவிற்கு கண்ணாடி வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.
இறுதியாக மேடை ஏறிய தாரக், தாய்மையின் பூரிப்பில் மலர்ந்து இருந்த சிந்துவின் முகத்தை ரசனையோடு விழிகளால் வருடியவாறே அவளின் இரு கைகளிலும் வைர வளையலை அணிவித்தான்.
அதை சிந்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க.. மெல்ல மற்றவர் அறியாமல் சிந்துவை பார்த்து கண்சிமிட்டினான் தாரக்.
எல்லா கொண்டாட்டமும் முடிந்து இவர்கள் வீடு திரும்ப மாலையாகி இருந்தது. இலகுவான உடையில் தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் காலை மெல்ல அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான் தாரக்.
“போதும்.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே செய்வீங்க..” என தன் காலை சிந்து இழுத்து கொள்ள.. அவள் அருகில் வந்து அவன் அமரவும், தாரக்கின் தோளில் சாய்ந்து கொண்டாள் சிந்து.
“நீ மட்டும் என்னை தேடி வரலைனா நான் என்னவாகி இருப்பேன் தூரிகா..?” என கடந்த மூன்று வருடங்களாக அவன் மனதில் தோன்றிக் கொண்டிருக்கும் கேள்வியை அவன் கேட்கவும், அவன் மேல் சாய்ந்தவாறே விழியை மட்டும் உயர்த்தி தாரக்கை பார்த்த சிந்து “நான் வரலைனா என்ன நீங்க வந்து இருப்பீங்க..” என்றாள்.
தன் வாழ்க்கை மீண்டும் மலராது என்று நினைத்திருந்த இருவருக்குள்ளும் நேசம் மீண்டும் துளிர்த்து எழுந்து அவர்கள் வாழ்வை மகிழ செய்திருந்தது.
நிறைந்தது