ஜானகி மந்திரம் 21
அன்று இரவு 11 மணி.
மைதிலி: "மனோ... உன் வீட்டு பிரச்சனையை பத்தி நீ சொன்னதையெல்லாம் கேட்டப்போ, எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தோணுது."
மனோ: "என்ன... சொல்லு சன்ஷைன்."
கஃபேவில் பகுதிநேர வேலையை முடித்துவிட்டு திரும்பியிருந்த மைதிலிக்கு உடல் களைப்பை காட்டிலும், மனோவின் குடும்பச் சூழல் தந்த பாரமே அதிகமாய் இருந்தது. கால் கடுக்க வேலை செய்துவிட்டு வந்திருந்தாலும், மனோ போனில் சொன்ன விஷயங்கள் அவள் மனதை உறங்க விடவில்லை.
மறுமுனையில் புனேவில் உள்ள தனது பிரம்மாண்டமான அறையில் நிலவும் நிசப்தத்திற்கு நடுவே மனோ சோகமாக அமர்ந்திருந்தான்.
மைதிலி நிதானமாக, "இதுவரைக்கும் உன் அப்பா அம்மா ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு, சரியான புரிதல் இல்லாம இருந்தாங்கன்னா அது உன்னுடைய தப்பு கிடையாது. ஆனா... இனியும் அவங்க அப்படியே இருந்தாங்கன்னா, அது கண்டிப்பா உன்னுடைய தப்புதான்", என்றாள்.
மனோ ஒரு கணம் Stuck ஆகி நின்றான்.
மனோ: "வெயிட்... நீ என்ன 'மீன்' பண்றன்னு எனக்குப் புரியல சன்ஷைன். கொஞ்சம் 'கிளியரா' சொல்றியா?"
மைதிலி: "கொஞ்சம் சைக்காலஜிக்கலா யோசிச்சு பாரு மனோ. உங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே மோசமானவங்க கிடையாது. ஆனா அவங்களுக்குள்ள ஒரு 'Common Ground' இல்லை. உங்க அப்பா பிசினஸ், வொர்க்ன்னு அதுலயே மூழ்கிட்டாரு. அவருக்கு தன் மனைவியோட உணர்வுகளுக்கு நேரம் ஒதுக்க தெரியல. உங்க அம்மா, கணவனோட கவனிப்பு கிடைக்காத அந்த ஏமாற்றத்தை லேடிஸ் கிளப், ஃபிரண்ட்ஸ்னு வெளிய தேடிக்கிறாங்க. இது ஒரு 'Vicious Cycle'. ஒருத்தர் விலக விலக, இன்னொருத்தர் இன்னும் தூரமா போயிட்டே இருக்காங்க."
மனோ மெல்லிய சலிப்போடு கண்களை மூடித் திறந்தான். அந்த அறையின் நிசப்தம் அவனது விரக்தியை இன்னும் அதிகமாக்கியது.
"ஆமா... ஆனா அவங்களை எப்படி சேர்த்து வைக்கிறதுன்னு தான் தெரியல. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். கேட்கவே மாட்டேங்குறாங்க... எப்பவும் சண்டை தான்."
மைதிலி: லுக் மனோ... இனிமேல் 'பேசிப் புரியவைக்கலாம்' என்கிற ஸ்டேஜை அவங்க தாண்டிட்டாங்க. 'சொல்றது' அங்கே வேலைக்கு ஆகாது. ஆனா, அவங்க ரெண்டு பேரோட Diverging paths ஐ intersect பண்ண வைக்கிற அந்த 'ஒற்றைப் புள்ளி' நீ மட்டும்தான்.
மனோ: (குழப்பமாக) "நானா? நான் எப்படி?"
மைதிலி: "வீட்ல இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பணம் பேர் புகழ் எல்லாம் தேவைக்கு அதிகமாவே இருக்கு. நீயும் ஒரு சமர்த்தான பையனா, அப்பா அம்மா பெயரை காப்பாத்துற பையனா இருக்கிறதுனால, அவங்களுக்கு உன் மேல எந்தக் கவலையும் இல்லை. அதனாலதான் அவங்க ஆளுக்கு ஒரு திசையில 'Diverge' ஆகிப் போயிட்டு இருக்காங்க. ஆனா, ஒருவேளை உன் விஷயத்துல ஒரு பிரச்சனை வந்துச்சுன்னு வச்சுக்கோ... அவங்க ரெண்டு பேருமே தங்களோட பாதையில இருந்து உனக்காக திரும்பி வர வேண்டிய கட்டாயம் வரும்."
மனோ: "புரியல... நான் என்ன பண்ணணும்னு சொல்ற?"
மைதிலி பதில் சொல்லவில்லை. ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பால்கனி கம்பிகளைப் பிடித்தபடி அந்த இருண்ட வானத்தை உற்றுப் பார்த்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு தன் முடிவில் உறுதியானாள்.
மைதிலி குரலில் 'கன்விக்சன்' ஏற...
"நீ பேசாம ஒண்ணு பண்ணு. ஒரு வாரம் வீட்ல யார்கிட்டயுமே சொல்லாம, எங்கேயாவது வெளியூருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா. கிளம்பறதுக்கு முன்னால உன் அப்பா அம்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு. வீட்ல நிம்மதி இல்லை அதனால நான் எங்கேயோ போறேன்னு மெசேஜ் அனுப்பி விட்டுட்டு கிளம்பிரு. போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிரு. நீ எங்க இருக்கேன்னு யாருக்குமே தெரியக்கூடாது..." என்றாள்.
மைதிலி சொன்ன அந்த 'பிளான்', மனோவின் வழக்கமான லாஜிக்கிற்கு சற்றும் பொருந்தாத ஒன்றாக இருந்தது.
"அப்படி பண்ணா என்ன நடக்கும்னு நினைக்கிற? I dont think this will workout. எங்க வீட்ல இருக்கிற தற்காலிக அமைதி கூட இதுல மொத்தமா 'டிஸ்டர்ப்' ஆகிடும்னு தோணுது."
மைதிலி உறுதியான குரலில், "நீ காணாம போகும்போது, உங்க அப்பா பிசினஸை மறந்துட்டு ஓடி வருவாரு. உங்க அம்மா கிளப்பை விட்டுட்டு உன்ன நெனச்சு அழுவாங்க. உன்னைத் தேடுற அந்த பதற்றத்துல அவங்க ஒருத்தருக்கொருத்தர் பேச வேண்டியிருக்கும், ஒருத்தரை ஒருத்தர் தேத்த வேண்டியிருக்கும். ஒரு புள்ளியில அவங்க ரெண்டு பேரோட கைகளும் உனக்காக இணையும் பாரு... அந்த நொடியில அவங்க இழந்த அந்த 'அண்டர்ஸ்டாண்டிங்' திரும்ப கிடைக்கும். என்னை நம்பி நீ பண்ணித் தான் பாரேன்! நீ எனக்கு ரொம்ப முக்கியம். உன் அப்பா அம்மா என்னோட அப்பா அம்மா மாதிரி... அதனால நான் நிச்சயமா உனக்கு தவறான அட்வைஸ்ல்லாம் பண்ணிர மாட்டேன்.."
மைதிலியின் பேச்சில் இருந்த தெளிவும், ஆழமான நம்பிக்கையும் மனோவை சிந்திக்க வைத்தது. இதுவரை தான் செய்யத் துணியாத ஒரு காரியம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் எவ்வளவு உண்மையானது என்று அவனுக்கு புரிந்தது.
மனோ: "நிஜமாவே இது ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறியா?"
மைதிலி: "உன் மேல அவங்க வச்சிருக்கிற அன்பு உண்மையா இருந்தா, கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். ஆகணும். நல்ல மனசோட தான் சொல்றேன். உன் மனசுல ஆழமா ஏற்பட்டிருக்கிற காயங்கள் இந்த பிரச்சனைல இருந்து தான் ஆரம்பிக்குது. அதனால இது சரியாச்சின்னா உன்னோட பிரச்சினைகளை பாதி சரியாயிடும். Think about it.. ஆனா எங்க போனாலும் என்கிட்ட பேசாம இருந்திராத... அட்லீஸ்ட் மெசேஜ் ஆவது பண்ணிரு... ஓகே குட் நைட்", என்று சொல்லிவிட்டு அவள் காலை டிஸ்கனெக்ட் பண்ண...
மனோ ஜன்னல் வழியாக தெரிந்த புனே நகரத்தின் இரவு வெளிச்சங்களை பார்த்தான்.
அவள் சொன்ன அந்த 'அதிர்ச்சி வைத்தியம்' ஒருவகையில் அபாயகரமானதுதான். ஆனால், தன் குடும்பத்தின் சிதறிய துண்டுகளை ஒன்றாக இணைக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றும் இருக்கப்போவதில்லை என்பதை அவனது உள்மனம் அடித்து சொன்னது. "உன் அப்பாவும் அம்மாவும் என்னோட அப்பா அம்மா மாதிரி..." என்று அவள் சொன்ன அந்த ஒரு வரி, அவனது தயக்கங்கள் அனைத்தையும் சுட்டெரித்துவிட்டது.
உடனடியாக ஒரு சிறிய டிராவல் பேக்கை எடுத்தான். சில உடைகள், அவசியமான பொருட்கள்... அவ்வளவுதான். விடியற்காலை ஐந்து மணிக்கு அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறான். யாரிடமும் சொல்லாமல், எங்கே போகிறோம் என்று அவனுக்கே தெரியாத ஒரு பயணத்திற்கு அவன் தயாரானான்.
ஒருமுறை தன் மொபைலில் 'சன்ஷைன்' என்ற பெயரை பார்த்தான்.
'சன்ஷைன்... நீ அடையாளம் தெரியாத ஒருத்தி இல்லை, என் வாழ்க்கையோட வெளிச்சம்' என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.
மறுநாள் காலை 9:30 மணி - யஷ்வந்த் ராவ் அலுவலகம்
ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங்கிற்குத் தயாராகி கொண்டிருந்த யஷ்வந்த் ராவின் மொபைல் 'டிங்' என ஒலித்தது. அலட்சியமாக பார்த்தவரின் கண்கள் மெசேஜைப் படித்ததும் அப்படியே நிலைத்து நின்றன.
"Dear Mom and Dad, a sense of loneliness engulfs me the moment I step into our home. நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில நின்னு சண்டை போட்டுட்டு இருக்கும்போது, நடுவுல நான் யாருக்காக வாழ்றேன்னு எனக்கே புரியல. உங்களோட இந்த இடைவிடாத சண்டைக்கு நடுவுல, நான் தேடுற அந்த ஒரு துளி நிம்மதி கூட இங்க எனக்கு கிடைக்கல. இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லைன்னு தோணுது. அதனால, என் மனசுக்கு நிம்மதி கிடைக்கிற இடத்தை தேடி நான் போறேன். என்னை தேடாதீங்க... - மனோ."
யஷ்வந்த் ராவிற்குத் தலை சுற்றியது. கையில் இருந்த ஃபைல் நழுவித் தரையில் விழுந்தது. பல கோடி ரூபாய் பிசினஸை தெனாவட்டாக கையாளும் அந்த மனிதனின் கைகள் முதல்முறையாக நடுங்கின.
அதே சமயம் - மனோவின் இல்லம்.
சுலோச்சனா கண்ணாடி முன் நின்று தனது வைரத் தோட்டை சரிசெய்து கொண்டிருந்தாள். மொபைல் சிணுங்கியதும் ஏதோ கிளப் மெசேஜ் என்று நினைத்து அலட்சியமாக திறந்தாள். ஆனால், மனோவின் குறுஞ்செய்தியை படித்ததும், முதலில் திகைத்தாள், அதன்பிறகு மெசேஜின் வீரியம் தாக்க அதிர்ந்தாள்.
"மனோ..." என்று மெல்ல முணுமுணுத்தவள், கையில் இருந்த ஜுவல்லரி பாக்ஸை அப்படியே மேஜை மேல் வைத்தாள். தடுமாற்றத்துடன் நடந்து அவன் அறைக்கு சென்றாள். அங்கே நிலவிய மனோ இல்லாத நிசப்தம் அவளை பயமுறுத்தியது.
அவளுக்கு அழுகையை விட குற்றவுணர்வு மேலோங்கியது. "நாங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது அவனுக்கு இவ்வளவு பெரிய வலியை தந்திருக்கா?' என்று முதல்முறையாக யோசித்தாள்.
சரியாக அந்த நேரத்தில் யஷ்வந்த் ராவ் போன் செய்ய, எப்போதும் எடுக்காமல் தவிர்க்கும் சுலோச்சனா, இந்த முறை போன் அடித்த முதல் நொடியே அட்டென்ட் செய்தாள்.
யஷ்வந்த் குரலில் பதட்டம். "சுலோச்சனா... மனோ உனக்கு ஏதாவது மெசேஜ் பண்ணானா? அவன் வீட்ல இருக்கானா?"
சுலோச்சனா: "இல்லங்க... அவன் மெசேஜ் அனுப்பிட்டு எங்கேயோ போயிட்டான். ரூம் காலியா இருக்கு. அவன் நம்பருக்குக் கால் பண்றேன்... சுவிட்ச்-ஆஃப்னு வருதுங்க. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. இதுக்கு முன்னால என் புள்ள இப்படிப் பண்ணதே இல்லையே... அவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல..."
சுலோச்சனாவின் அழுகை யஷ்வந்த் ராவிற்குள் இருந்த பிடிவாதத்தை உடைத்தது.
யஷ்வந்த்: "பயப்படாத சுலோ... அவன் புத்திசாலி. தவறான முடிவு எதுவும் எடுத்துக்க மாட்டான். எங்கேயாவது ட்ரிப் போயிருப்பான். நீ டென்ஷன் ஆகாத... இப்போவே ஆபீஸ்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வர்றேன். நம்ம பையனை எப்படியாவது கண்டுபிடிச்சிரலாம். நீ தைரியமா இரு."
யஷ்வந்த் ராவ் மீட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தனது காரை நோக்கி ஓடினார். மறுபுறம் சுலோச்சனா, கையில் இருந்த கிளப் பேக்கை ஓரமாக தூக்கி எறிந்தாள்.
பல வருடங்களாக ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்த அந்த தம்பதியினர், இன்று முதல்முறையாகத் தங்கள் மகனுக்காக ஒரே புள்ளியில் இணைந்து துடிக்கத் தொடங்கினர். மைதிலி சொன்ன அந்த 'அதிர்ச்சி வைத்தியம்' வேலை செய்ய தொடங்கியிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, காலை 9:30 மணி.
கல்லூரி வளாகம் பரபரப்பாக இருக்க, கிளாஸ் வாசலில் நின்றிருந்த பாபியை நோக்கி மனிஷும் சந்தீப்பும் பதட்டமாக மூச்சிரைக்க ஓடி வந்தனர்.
மனிஷ்: பாபி! என்னடா நடக்குது இங்க? காலையில மனோவோட அப்பா எனக்கு கால் பண்றாரு. மனோ உன் கூட இருக்கானா? கடந்த ரெண்டு நாளா மனோவை பாத்தியான்னு கேக்குறாரு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விசாரிச்சப்ப, ரெண்டு நாளா அவன் வீட்டிலேயே இல்லையாமே, அவங்கப்பா உடைஞ்சு போய் பேசினார். அவனை தேடிட்டு இருக்கோம். விஷயத்தை வெளியில சொல்லிராதபான்னு சொன்னப்ப, ரொம்ப பாவமா இருந்துச்சுடா..."
சந்தீப்: "ஆமாடா, எனக்கும் போன் வந்துச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல 'மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட்' கொடுத்திருக்கிறதா சொன்னாரு. மனோ இப்படி சொல்லாம கொள்ளாம எங்கேயும் போக மாட்டானே... உன்கிட்ட ஏதாவது சொன்னானா? உண்மையை சொல்லுடா!"
பாபி இருவரையும் அமைதியாக பார்த்தான். சுற்றும் முற்றும் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு விஷயத்தை சொன்னான்.
பாபி: "முதல்ல டென்ஷன் ஆகாதீங்க. அவன் சேஃபா தான் இருக்கான். நேத்து நைட் ஒரு எஸ்.டி.டி பூத்ல இருந்து எனக்கு கால் பண்ணினான். அவன் இப்போ 'அம்போலி' மலைப்பகுதியில ஒரு ரிசார்ட்ல தங்கியிருக்கான்."
மனிஷ் மற்றும் சந்தீப்பிற்கு அதிர்ச்சி.
சந்தீப்: "அம்போலியா? அங்க எதுக்குடா போனான்? இங்க அவங்க அப்பா அம்மாவை டென்ஷனாகிட்டு அங்க எதுக்கு போய் ஜாலியா இருக்கிறான்? இன்னும் ரெண்டு நாள்ல அவனுக்கு பர்த்டே வருது. ஆல்ரெடி காலேஜ் சேட்ரூமில் எல்லாம் அவனுக்கு அட்வான்ஸ் விஷஸ் பறந்துட்டு இருக்கு. பர்த்டே பார்ட்டி கொடுக்கணும். நெக்ஸ்ட் வீக் கல்ச்சுரல் கிளப்ல சொற்பொழிவு ஆத்தணும். இப்படி எல்லாத்தையும் பாதியில விட்டுட்டு போனா எப்படி?"
பாபி மெதுவாக மைதிலி கொடுத்த அந்த ஐடியாவையும், மனோ எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தான் என்பதையும் விளக்கினான். விஷயத்தைக் கேட்ட மனிஷும் சந்தீப்பும் சிறிது நேரம் வாயடைத்து நின்றனர்.
மனிஷ்க்கு உலக மகா டென்ஷன்: "பைத்தியமடா அவன்! யாரோ ஒரு பேரு, ஊர் தெரியாத ஒருத்தி சொன்னான்னு கேட்டுட்டு, பெத்தவங்களை இப்படி டென்ஷன் படுத்துவானா? அந்தப் பொண்ணு சொல்றதெல்லாம் இவனுக்கு வேதவாக்கா? இது ரொம்ப ஓவர்டா!"
பாபி: "ஆக்சுவலா... யோசிச்சு பார்த்தா இது ஒரு நல்ல ஐடியா தான். அவங்க அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்க இதைவிட ஒரு நல்ல ஐடியா கிடைக்காது. அந்தப் பொண்ணு ஒரு 'சைக்காலஜிக்கல் கேம்' ஆடியிருக்கா. ஆனா, எனக்கு என்ன கஷ்டமா இருக்குன்னா... அந்தப் பொண்ணு சொன்ன ஒரே வார்த்தைக்காக, யோசிக்காம இவ்வளவு பெரிய ரிஸ்க்கை மனோ எடுக்கிறான்னா, அவ வார்த்தைக்கு இவன் எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறான் பாருங்க! இது எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியல."
சந்தீப்: "டேய், இப்போதைக்கு அவன் சேஃப்பா இருக்கான்னு நமக்கு தெரியும். ஆனா அவங்க வீட்டுக்கு தெரியாது. அந்த பொண்ணு இவனை முழுசா தன் கண்ட்ரோல்ல வச்சிருக்கான்னு மட்டும் புரியுது. நாம இதுல உடனடியா தலையிட்டே ஆகணும். அந்த 'சன்ஷைன்' யாருன்னு தெரிஞ்சே ஆகணும். மனோவோட இந்த எமோஷனல் பலவீனத்தை அவ தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிறாளோன்னு எனக்குப் பயமா இருக்கு."
மனிஷ்: "You are right... அவன் பிளான் படியே அந்த ட்ரீட்மெண்ட் முடியட்டும். ஆனா, in the mean time, அவன் வர்றதுக்குள்ள அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சே ஆகணும்.
மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த இடத்தின் அட்மாஸ்பியரை மாற்றும் விதமாக ஒரு காஸ்ட்லியான 'பக்காரா ரூஜ் 540' பெர்ஃப்யூமின் அடர்த்தியான மணம் பரவியது. ஒரு வினாடி திகைத்து சைடில் திரும்பி பார்த்தால், ஸ்ரேயா அங்கே தனியாக வந்து நின்றாள். அவளது கண்கள் எதையோ துருவி தேடுவது போல மின்னின.
ஸ்ரேயா: (தன் கூந்தலை அசால்டாக ஒதுக்கிவிட்டு) : "என்ன மிஸ்டர் பாபி? உங்க கேங்ல ஒரு ஆள் குறைச்சலா இருக்கே... ஸ்டுடென்ட் சேர்மன் சார் எங்கே?" என்று கேட்க,
மூவரும் ஒரு நொடி திடுக்கிட்டாலும், பாபி சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.
பாபி: "ஓ... அதுவா? அவங்க வீட்ல ஒரு முக்கியமான 'ஃபேமிலி ஃபங்ஷன்'. அதான் ஊருக்குப் போயிருக்கான். ஒரு வாரம் ஆகும் வரதுக்கு."
ஸ்ரேயா அவர்களை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை அளவெடுப்பது போல சந்தேகமாகப் பார்த்தாள். அவளது பார்வையில் 'ஏதோ ஒரு பெரிய விஷயத்தை என்னிடம் மறைக்கிறீர்கள்' என்ற மௌனமான சவால் இருந்தது.
ஸ்ரேயா: (சந்தேகமாக புருவத்தை உயர்த்தி) "Family function? That's strange! மனோ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே? I mean, usually மனோ கே கர் மே குச் பி ஹோதா ஹை, தோ வோ ஸப்ஸே பெஹ்லே முஜே ஹீ பத்தாதா ஹை... (மனோ வீட்ல எது நடந்தாலும், அவன் முதல்ல என்கிட்ட தான் சொல்லுவான்).
But now... leave alone a call, ஏக் மெசேஜ் தக் நஹி கியா உஸ்னே! (ஒரு மெசேஜ் கூட அவன் பண்ணல). It sounds very fishy... isn't it?"
பாபி: இல்ல... இது unexpected ப்ரோக்ராம். அதனால யாருக்கும் இன்பார்ம் பண்ண முடியல...
ஸ்ரேயா: (மெதுவாக தலையசைத்து) "சரி ஓகே...bye," என்று மிக அலட்சியமாக கூறிவிட்டு, ஒரு 'கேட்வாக்' பாணியில் மிக ஸ்டைலாக திரும்பி நடந்தாள்.
அவள் சென்ற பிறகு, அவள் பூசி வந்த அந்த பெர்ஃப்யூமின் அதீத மணம் அந்த இடத்திலேயே தங்கிவிட, மூவரும் ஒருசேர தலையை பிடித்துக்கொண்டனர்.
சந்தீப்: "அபே யார்! இஸ்கி பெர்ஃப்யூம் கி ஸ்மெல் ஸே தோ மேரா ஸர் ஃபட்டா ஜா ரஹா ஹை (அடப் பாவிங்களா! இவ பெர்ஃப்யூம் வாசனையில என் தலையே வெடிச்சிடும் போலருக்கே)... வழக்கமா இவளை சுத்தி ஒரு நாலஞ்சு பேர் ஈ மொய்க்கிற மாதிரி மொய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. இவளுக்கு பின்னாடியே ஒரு கூட்டமே சுத்தி சுத்தி வரும். ஆனா இப்போ என்னடான்னா... தனியாவே வர்றா, தனியாவே போறா. யார்கிட்டயும் பெருசாப் பேசுறது கூட இல்லை. இவளுக்கு என்னதான் ஆச்சு? ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?"
பாபி: "yes... சலோனியும் பிரணவியும் கூடவே வருவாங்க... ஆளையே காணல, விசாரிக்கணும். ஆனா இப்போ முக்கியமானது அந்த 'சன்ஷைன்' மேட்டர். எனக்கு என்னவோ அவ நம்ம காலேஜ் பொண்ணுதான்னு ஆணித்தரமாத் தோணுது. என்கிட்ட இருக்கிற அவளோட நம்பரை செக் பண்ணிப் பார்த்தேன், அது ஒரு 'ஹட்ச்' (Hutch) நம்பர் மாதிரிதான் இருக்கு. அட்ரஸ் fakeனு கன்ஃபார்ம் ஆகிடுச்சு. ஹட்ச் நெட்வொர்க்ல வேலை செய்யுற யாரையாவது பிடிச்சா, இந்த நம்பர் இப்போ எந்த 'லோக்காலிட்டில' ஆக்டிவா இருக்குன்னு கண்டுபிடிச்சிரலாம்."
மனிஷ்: "good idea!!! நம்ம காலேஜ் ஏரியாவா? இல்ல ஹாஸ்டல் ஏரியாவான்னு தெரிஞ்சாலே போதும்... அதுக்கப்புறம் ஆளை தூக்குறது ஈசி. ஆனா, அந்த நெட்வொர்க்ல நமக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?"
சந்தீப்பும் மனிஷும் "யாரை பிடிக்கலாம்?" என்று தீவிரமாக யோசனையில் ஆழ்ந்தனர். அப்போது தூரத்தில் சிக்கியும், கையில் ஒரு கற்பனை கேமராவை வைத்துக் கொண்டு எதையோ 'ஃபிரேம்' செய்தபடி டைரக்டரும் வருவதைக் கண்டதும், பாபி சைகை காட்டினான்.
பாபி: "டேய்... ரெண்டு பைத்தியமும் வராங்க. டாபிக்கை மாத்துங்க... இவங்க கிட்ட இந்த விஷயம் போகக் கூடாது. போனா ஊர் பூரா தம்பட்டம் அடிச்சிருவானுங்க!"
உடனடியாக மூவரும் கிரிக்கெட் மேட்ச் பற்றிப் பேசுவது போலப் பாவனையை மாற்றிக் கொண்டனர். சிக்கி அவர்களை ஒரு விசித்திரமான பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான்.
டைரக்டர் சட்டென்று நின்று, தன் கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களை ஒரு 'வைட் ஆங்கிளில்' பார்ப்பது போலப் பார்த்தான்.
அப்போது டைரக்டர் (மைண்ட் வாய்ஸ்):
"பார்த்தீங்களா... என்கிட்ட விஷயத்தை மறைக்கிறாங்களாம்! மனிஷ், சந்தீப்... உங்க ஆக்டிங் ரொம்ப வீக்கா இருக்குப்பா! ஆனா ஒன்னு... இந்த டைரக்டருக்கு தெரியாம இந்த கதையில ஒரு துரும்பு கூட அசையாது. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... கதை இன்னும் முடியல!"
சிக்கியை நோக்கி சென்று அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
மதியம்.
கல்லூரி கேண்டீன் வழக்கம்போல சத்தத்தாலும் சலசலப்பாலும் நிரம்பி இருந்தது. டீ கிளாஸ்களின் சிணுங்கல், மாணவர்களின் சிரிப்பு, எங்காவது ஒரு மூலையில் ஓடும் சினிமா டிஸ்கஷன் — எல்லாம் கலந்து ஒரு பரபரப்பான பின்னணியை உருவாக்கி இருந்தது.
அந்த கூட்டத்தில் இருந்து சற்று ஓரமாக, ஒரு மேசையைச் சுற்றி சஞ்சு, இந்து, மைதிலி மூவரும் அமர்ந்திருந்தனர்.
சஞ்சு கையில் இருந்த கோக் பாட்டிலை மெதுவாக சுழற்றிக்கொண்டே மைதிலியை கவனித்தாள். மைதிலியின் முகத்தில் ஒரு தெளிவான அமைதி இருந்தது. தான் செய்யப்போகும் காரியத்தின் ஆழத்தை உணர்ந்த ஒரு நிதானம்.
“மைதிலி…” என்று சஞ்சு மெதுவாக தொடங்கினாள்.
“நீ இப்படி இன்னும் எவ்வளவு நாளுக்கு இருக்க போறே?”
மைதிலி புரியாத மாதிரி அவளைப் பார்த்தாள்.
“என்ன?”
இந்து: “நீ யாரு என்னன்னு தெரியாம மனோ உன்னோட இவ்வளவு attach ஆயிட்டான். இப்போ நீ சொல்லுறதெல்லாம் அவன் கேட்கிறான்… follow பண்ணுறான்… even வீட்டைவிட்டு போற அளவுக்கு…”
அந்த வார்த்தை மைதிலியின் முகத்தில் ஒரு நொடிக்கு நிழலை வீசியது.
சஞ்சு சற்றே முனைந்து, குரலை தாழ்த்தி,
“இதுக்கு மேலயும் நீ யாருன்னு சொல்லாம இருக்கிறது சரி இல்ல மைதிலி…” என்றாள்.
அந்த ஒரு வரி — நேராக அவள் மனசுக்குள் விழுந்தது.
மைதிலி கீழே பார்த்தாள். அவள் விரல்கள் மேசையின் விளிம்பை மெதுவாக தடவிக் கொண்டிருந்தது. அவள் பேசாமல் அமைதியாக இருந்தாலும்....
அவள் உள்ளே ஓடிய எண்ணங்கள் — வேகம் அதிகமாய் இருந்தது.
இந்து மெதுவாக அவளது தோளில் கை வைத்தாள்.
“நாங்க உன்னை பயமுறுத்தல… ஆனா… நீயும் அவனையும் இப்படி கெஸ்ஸிங்ல வைக்கக் கூடாது. அவன் உன்ன நம்புறான் மைதிலி… அந்த நம்பிக்கையை நீ ரொம்ப நாள் இழுக்க முடியாது.”
மைதிலி: “நான்… எப்படி...எனக்கு…எனக்கும் தெரியுது. இது ரொம்ப நாளா இப்படி போக முடியாது…” என்று தயக்கமாக, பேச்சை முடிக்க முடியாமல் இழுத்தாள்... சற்று முன்னால் தெரிந்த தெளிவு இப்போது இல்லை.
சஞ்சு: “அப்படின்னா?”
மைதிலி கண்களில் இன்னும் தயக்கம் இருந்தது. ஆனாலும் — அதுக்குள் ஒரு முடிவு முளைக்க ஆரம்பித்திருந்தது.
“கொஞ்சம் பயமா இருக்கு… இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நாளைக்கு அவனை வெயிட் பண்ண வைக்க முடியாது தான்..." என்றாள்.
சஞ்சுவும் இந்துவும்... என்ன சொல்ல போகிறாள் என்பதை போல அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,
மைதிலி சில நொடிகள் கண்களை மூடினாள். மனோவின் குரல், அவன் வார்த்தைகள், அவன் நம்பிக்கை — எல்லாம் அவள் நினைவில் ஒலித்தது.
மீண்டும் கண்களை திறந்தாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல அவன் birthday வருது…..அன்னைக்கு…” என்று ஒரு சிறிய இடைவெளி.
“நான்… யாருன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்…”
என்று அவள் சொல்லி முடித்ததும்,
அவளுக்குள்ள இருந்த சுமை கொஞ்சம் குறைந்தது.
சஞ்சு முகம் முழுக்க புன்னகை பரவியது.
“அதுதான் correct!”
இந்து திருப்தியாக தலையசைத்தாள்.
“Lateஆனா கூட right decision…”
மைதிலி சிக்கனமாக சிரித்தாள்.
ஆனா — அந்த சிரிப்புக்குள் இன்னும் ஒரு பயம் இருந்தது.
அவன் என்ன நினைப்பான்…?
அவன் விஷயம் தெரிஞ்சதும் பழைய மாதிரி இருப்பானா…?
அந்த கேள்விகள், பயங்கள் இன்னும் அவளை விட்டு போகவில்லை.
ஆனா — முதல்முறையாக
அவள் ஓடாமல்,
அந்த பயத்தை எதிர்கொள்ள முடிவு செய்திருந்தாள்.
தொடரும்…