நேசம் - 43
நள்ளிரவை நெருங்கும் நேரம் தன் மடிக்கணினியின் முன் அமர்ந்திருந்தாள் சிந்து. அவளுக்கு முதல்முறையாக கொஞ்சம் பெரிய ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருக்க.. அதை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்தோடும் பரபரப்போடும் இருந்தவளுக்கு, அவள் மனதில் நினைத்தது போல் எதுவுமே சரியாக அமையவில்லை.
காலை முதல் அவளும் எத்தனையோ விஷயங்களை முயன்று பார்த்து விட்டாள். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. இதில் மனம் சோர்ந்து போக கணினித்திரையையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
எப்போதுமே நன்கு படிக்கும் சிந்துவுக்கு இங்கு முதல் முறையாக கொடுத்திருக்கும் பெரிய ப்ராஜெக்ட்டை எங்கே சரியாக செய்யாமல் போய்விடுமோ என்ற பதட்டம் மேலும் கவலையை தர, செய்வதறியாது தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டிருந்தாள் சிந்து.
‘இங்கே தன் திறமையை நிரூபிக்க கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பைத் தவற விட்டு விடுவோமோ..!’ என்ற எண்ணத்தில் கண்கலங்க அமர்ந்திருந்தவளுக்கு ‘இதை சரியாக செய்யாமல் போய் பெயரும் கெட்டு விடுமோ..!’ என்ற பயமும் உண்டானது.
ஏனெனில் தாரக் சொல்லும் போது கூட தெரியவில்லை. ஆனால் நேரில் சென்று படிக்க தொடங்கிய பிறகே இந்த கல்லூரியும் அங்கே படிக்க வரும் ஆட்களும் எப்படிப்பட்டவர்கள் என புரிந்தது.
இதில் அப்படியே சிந்து மேஜை மேல் தலை கவிழ்ந்து கொள்ள.. அதே நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது. இந்த நேரத்தில் யார் என்பது போல விழிகளை உயர்த்திப் பார்த்தவள், அழைப்பது தாரக் என உணர்ந்து சட்டென அதை ஏற்றிருந்தாள்.
முழுதாக இரண்டு ரிங் செல்வதற்குள் அதை அவள் ஏற்றிருக்கவும், நெற்றி சுருங்க “இன்னும் தூங்கலையா நீ..?” என்றிருந்தான் தாரக். அந்த நொடி அவளிருந்த மனநிலையில் அவன் குரல் செவிகளில் வந்து மோத.. மேலும் அவளுக்கு அழுகை தான் வந்தது.
அதில் திக்கி திணறி அதை கட்டுப்படுத்தியவாறே “இல்.. இல்லை..” என அவள் நலிந்த குரலில் சொல்லி முடிப்பதற்குள் “செந்தூரிகா ஏதாவது பிரச்சனையா..?” என கேட்டிருந்தான் தாரக்.
அவ்வளவு தான் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவளுக்கு வெடித்துக் கொண்டு கிளம்பியது. இதை கேட்டு அந்த பக்கம் இருந்த தாரக் பதறி விட்டான். “செந்தூரிகா.. என்னாச்சு..? ஏதாவது பிரச்சனையா..? என்னன்னு சொல்லு..” என அவன் படபடக்க.. அதற்குள் வேகமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டே “இல்லை ஒண்ணுமில்லை..” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒண்ணுமில்லாம தான் அழறியா நீ..?” என அவன் அதட்ட.. “இல்லை..” என்று தொடங்கி தன் பிரச்சனையை சுருக்கமாக சிந்து சொல்லி முடிக்கவும், அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவன், அதுவரை என்னவோ ஏதோ என அவளோடு பேசிக் கொண்டே அடுத்த பிளைட் எப்போது என தன் மடிகணினியில் தேடிக் கொண்டிருந்ததை நிறுத்தி இழுத்து பிடித்திருந்த மூச்சை ‘ஊப்ப்ப்’ என வெளியிட்டவாறே.. “இவ்வளவு தானா..?” என்றான் ஓய்ந்துப் போன குரலில் தாரக்.
“இல்லை, நான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்னு நினைக்கறேன்.. எனக்கு எதுவும் சரியா வரலை, தேவையில்லாம ஆசைப்பட்டு உங்க பணத்தையும் வேஸ்ட் செஞ்சுட்டு இருக்கேன்..” என அவள் சிறு குழந்தை போல் லேசாக தேம்ப.. பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் தாரக்.
அவனின் ஆறுதல் வார்த்தையை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு தாரக்கின் இந்த அமைதி குழப்பத்தை கொடுக்க.. “நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா..? என்றாள் மெல்லிய குரலில் சிந்து. “எப்படி..?” என ஒன்றுமறியாதது போல் தாரக் கேட்க.. “நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு..!” என்றாள் சிந்து.
லேசாக அந்த பக்கம் புன்னகைத்தவன் “நீ அழுது முடிச்சிட்டியா..?” எனவும் “ஹ்ம்ம்..” என முனகினாள் சிந்து. “அப்போ போய் முகத்தை தொடைச்சுட்டு தண்ணி குடிச்சுட்டு வா..” என தாரக் சொல்லவும், ஏன் எதற்கு என கேட்காமல் அப்படியே செய்தாள் சிந்து.
“இப்போ எங்கே இருக்கே நீ..?” என்று அவன் கேட்கவும், “வீட்டில்..” என்றாள் சிந்து. அதில் இப்போது முன்பை விட சற்று பெரிதாக சிரித்தவன், “நான் அதைக் கேட்கலை, உன் லேப்டாப் முன்னே இருக்கியான்னு கேட்டேன்..” எனவும், ஆம் என தலையசைத்தாள் சிந்து. அது அந்த பக்கம் இருப்பவனுக்கு தெரியாமல் போக.. “என்ன பதிலையே காணோம்..” என்றான் தாரக்.
அப்போதே தன் தவறு புரிந்து “நான் தலையசைத்தேன்..” என்று நாக்கை கடித்துக் கொண்டே சிந்து சொல்லவும், “அச்சோ சமத்து..” என்றான் கேலியாக தாரக். இதில் தலையில் லேசாக தட்டிக் கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் இருக்க.. “ஹ்ம்ம், இப்போ சொல்லு.. என்ன உன் பிரச்சனை..?” என்றான் தாரக்.
அவள் யோசித்து வைத்திருந்த அத்தனையையும் கடகடவென சிந்து சொல்லி முடிக்கவும் “ரிலாக்ஸ், ரிலாக்ஸ்.. முதலில் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ, எதுக்கு இவ்வளவு டென்ஷன் அண்ட் பிரஷர்..? மைண்ட் ஃபுல்லா இத்தனை பிரஷர் இருந்தா எப்படி சரியா யோசிக்க முடியும்..?” என்றான் தாரக்.
அதில் “நான் சரியா செஞ்சு முடிக்கணுமேன்னு..” என சிந்து சொல்லவும் “ஆசைப்பட்டு தானே படிக்க போனே..?” என்றான் தாரக். “ஆமா..” என சிந்து சொல்லவும் “அப்போ பிரஷரோட யோசிக்காம, ஆசையா விருப்பப்பட்டு செய்.. எல்லாமே செய்ய முடியும்..” என அவன் கூறவும், “இது என் ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட்..” என்றாள் மெல்லிய குரலில் சிந்து.
“ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் பெஸ்ட்டா இருக்கணும்னு நினைக்கறது தப்பு இல்லை செந்தூரிகா.. இதை வைத்து உனக்கு அங்கே ஒரு தனியிடமும் மரியாதையும் கிடைக்கணும்னு நினைக்கறதிலும் தப்பில்லை.. ஆனா அதுக்காக இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுக்கறது கொஞ்சமும் சரியில்லை.. சாதாரண வேலையை கூட நாம டென்ஷனா செஞ்சா தப்பா தான் போய் முடியும்..” என்றவனுக்கு அவள் அமைதியையே பதிலாக கொடுத்தாள்.
“என்ன டாபிக்..?” என்றான் தாரக். அவள் சொல்லவும், “அதுக்கு எப்படி யோசிக்கணும்னு தெரியலையா..?” என அவன் கேட்க.. “அதெல்லாம் இல்லை, ஒரு நாலைந்து ஐடியா என்கிட்டேயே இருக்கு.. இதில் எதை எடுத்தா சரியா இருக்கும்னு ஒரு குழப்பம்.. எதை ட்ரை செஞ்சாலும் அது சரியா வராத மாதிரியே ஒரு எண்ணம்..” என்று அவள் சொல்லிக் கொண்டே செல்ல.. “இப்போ உன் பிரச்சனை என்னன்னு புரியுது..” என்றான் தாரக்.
‘எங்கே நீ இதற்கு சரிப்பட்டு வர மாட்டே என சொல்லி விடுவானோ..!’ என சிந்து நினைத்துக் கொண்டிருக்க.. “ஓவர் திங்கிங் தான் உன் பிரச்சனை..” என்றவன் “முதலில் அமைதியா உட்கார், நல்லா மூச்சை ஆழ இழுத்து வெளியே விடு..” என அவன் சொல்ல.. அதே போல் சிந்துவும் செய்தாள்.
“மூன்று முறை செய்..” என்றான் தாரக். அவளும் அப்படியே செய்தாள். “இப்போ கண்ணை மூடிட்டு எதை பத்தியும் யோசிக்காம அமைதியா ஒரு நிமிஷம் உட்கார்..” என அவன் சொல்ல.. அதையும் செய்தாள் சிந்து.
அமைதியாக ஒரு நிமிடம் செல்ல.. “இப்போ உன் மனசில் என்ன டிசைன் தோணுது..?” என தாரக் கேட்க.. அவள் முதலில் யோசித்து வைத்த ஒன்றையே சொல்ல.. “அப்போ அதையே ப்ரோசீட் செய்..” என்று எளிதாக முடித்துக் கொண்டான் தாரக்.
இப்போது சரியாக வருமா வராதா என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை. இதை எடுத்து சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க.. “சரி..” என மெல்லிய குரலில் கூறினாள் சிந்து.
“ஓகே, ஆல் தி பெஸ்ட் பெஸ்ட்.. பெஸ்ட்டா செலக்ட் ஆகும் ப்ராஜெக்ட் உன்னோடதா தான் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உனக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும், நிதானமா செஞ்சு முடிஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்லு..” என்று விட்டு தாரக் அழைப்பை துண்டித்திருக்க.. சில நொடிகள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் சிந்து.
இவ்வளவு தூரத்தில் இருந்தும் தன் மன உணர்வை புரிந்தது போல் தாரக் அழைத்து பேசியது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இங்கே அவள் வந்த இத்தனை மாதங்களில் ஒருநாள் கூட தாரக் இந்த நேரத்தில் அழைத்ததே இல்லை.
‘இன்று மட்டும் எப்படி..?’ என்று யோசித்தவளுக்கு அதற்கான விடை மட்டும் கிடைக்கவே இல்லை. பின் மெதுவாக தன் வேலையில் அவள் கவனம் செலுத்த.. கொஞ்சம் கொஞ்சமாக அது அவளை உள்ளிழுத்துக் கொண்டது.
இப்போது எந்த தடுமாற்றமும் தயக்கமும் இல்லாமல் அவள் யோசித்து வைத்திருந்த டிசைனை கொண்டு வர முயற்சி கொண்டிருந்தவளுக்கு அதை செயல்படுத்த தொடங்கிய பின் இன்னும் நிறைய யோசனைகள் தோன்றியதில் அதையும் சேர்த்துக் கொண்டாள் சிந்து.
ஒருவழியாக அடுத்த மூன்று நாட்களில் அவள் எதிர்பார்த்ததை விட வெகு அழகான டிசைன் சிந்துவின் கைகளில் இருந்தது. அதை கண்களில் நீர் தளும்ப சில நொடிகள் பார்த்தவள், “என் கனவு.. என் கனவு நிஜமாகி இருக்கு..” என சந்தோஷத்தோடு முணுமுணுத்துக் கொண்டாள் சிந்து.
******
அன்று வார விடுமுறை நாள் என்பதால் சிந்து ஓய்வாக வீட்டில் இருந்தாள். சென்ற வாரம் முழுக்க தொடர்ந்து ப்ராஜெக்ட் சம்பந்தமான வேலைகளில் இருந்ததால், ஓய்வே இல்லாமல் போனதில் உண்டான சோர்வில் தாமதமாகவே எழுந்து குளித்துவிட்டு வந்து அமர்ந்திருந்தவள், ‘என்ன சமைப்பது..?’ என யோசித்துக் கொண்டிருக்க.. வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
ஸ்வேதாவாக தான் இருக்கும் என அறிந்தே சென்று கதவைத் திறந்தவளின் எண்ணத்தை கொஞ்சமும் பொய்யாக்காமல் அங்கு ஸ்வேதா தான் நின்று கொண்டிருந்தாள். கையில் மூன்று கேசரோல் அடங்கிய ஒரு ட்ரே இருந்தது.
“நீங்களா தான் இருக்கும்னு நினைச்சேன்..” என புன்னகையோடு சிந்து வழி விடவும், “என்னை தவிர இங்கே வேற யார் வரப் போறா..?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா.
“நல்லா ரெஸ்ட் எடுத்தியா..? ப்ராஜெக்ட் வொர்க் எல்லாம் முடிஞ்சுதா..?” என ஸ்வேதா கேட்கவும், “ஹ்ம்ம், ஒரு வழியா முடிஞ்சது..” என்றபடியே இருவருக்கும் சாப்பிட தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் சிந்து.
ஆரம்பத்தில் ஸ்வேதா உடன் தயக்கத்தோடே பழகி இருந்தாலும் இப்போது இருவருக்குள்ளும் நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது. இங்கு அவளுக்கு தெரிந்த ஒரே நபர் என்பதோடு அவளின் தேவையறிந்து உடனே உதவி செய்ய ஸ்வேதா ஓடி வருவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்க.. பழகத் தொடங்கி சில நாட்களிலேயே ஸ்வேதாவை அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
பெரும்பாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அமர்ந்து ஏதாவது வளவளத்து கொண்டு இருப்பார்கள். வார இறுதி நாட்களில் வெளியில் செல்வது தேவையானவற்றை வாங்கி வருவது என எல்லாம் நடக்கும்.
இன்றும் அவள் சொல்லாமலே சிந்துவின் சோர்வை உணர்ந்து தானே சமைத்துக் கொண்டு வந்திருந்த ஸ்வேதாவை எண்ணி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவள் அமைதியாக சாப்பிட.. “மதியம் எனக்கு என்ன செஞ்சு தரப் போறே..?” என்றாள் ஸ்வேதா.
அதில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிந்து அப்படியே தன் கையை வாய் அருகில் கொண்டு சென்று நிறுத்தி ஸ்வேதாவை பாவமாக பார்க்க.. ‘இதற்கெல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்..’ என்பது போல் ஸ்வேதாவும் பார்த்து வைத்தாள்.
“நானே பாவம், ரொம்ப டயர்டா இருக்கேன்.. உங்களுக்கு தான் தெரியுமில்லை, இன்னைக்கு முழுக்க நீங்களே சமைச்சிடுவீங்களாம்.. நாளைக்கு நான் சமைப்பேனாம்..” என சிந்து பேரம் பேச.. “இந்த கதையே இல்லை, மதியம் நீ வைக்கும் பூண்டு குழம்பு தான் எனக்கு வேணும், தொட்டுக்க உன் விருப்பத்துக்கு ஏதாவது ஒரு கூட்டு செய்.. அப்புறம் பொரியல் வறுவல்னு நீ ஏதாவது சேர்த்து செய்ய ஆசைப்பட்டாலும் சரி.. நான் வேண்டாம்னு சொல்லிட்ட மாட்டேன், ஆனா மறக்காம அப்பளம் வேணும்..” என அவள் பட்டியலிட்டுக் கொண்டே செல்ல.. மலைப்பாக ஸ்வேதாவை பார்த்தாள் சிந்து.
அந்த மருண்ட பார்வையில் கலகலத்து சிரித்த ஸ்வேதா “இப்படி எல்லாம் நான் லிஸ்ட் போட கூடாதுனா ஒழுங்கா போய் சமைச்சுடு..” என போலியாக மிரட்ட.. சரி என்பதாக சிந்துவின் தலை வேகமாக அசைந்தது.
“பூண்டு குழம்பும் அப்பளமும் போதும்..” என்று ஸ்வேதா சொல்ல, நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவளாக ஸ்வேதாவை பார்த்து சிந்து “இன்னைக்கு ஏனோ ரொம்ப டயர்டா இருக்கு, நாளைக்கு நீங்க கேட்கும் எல்லாமே செஞ்சு தரேன், இன்னைக்கு சிம்பிளா சமைச்சுக்குவோமா..?” என்றாள்.
“அட இப்படி பாவமா முகத்தை வெச்சுக்காதே.. நான் தான் ஓகேன்னு சொல்லிட்டேனே..!” என ஸ்வேதா அந்த பேச்சை முடித்துக் கொள்ள.. சாப்பிட்டு விட்டு இருவரும் சோபாவில் அமர்ந்து அந்த வார நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
இது எப்போதும் உள்ள வழக்கம் தான். ஸ்வேதா தன் வேலையில் உள்ள பிரச்சனைகளை அங்கு நடந்தவற்றை பற்றி பேசுவாள். சிந்து கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வாள். இன்றும் அப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஆமா சிந்து நான் கேட்கணும்னு நினைச்சேன் தீபனை உனக்கு எப்படி தெரியும்..? நீங்க சொந்தமா..!” என்றாள் ஸ்வேதா. அன்று முதல் முறை இங்கு வந்த போது கூட ஸ்வேதாவை தன் நண்பனின் தங்கை என அறிமுகம் செய்தவன், சிந்துவை வெறும் பேரை சொல்லித்தான் அறிமுகப்படுத்தி இருந்தான். அவள் யார்..? என்ன உறவு..? என்று எதையும் சொல்லவில்லை. அப்போதே சிந்துவும் அதை கவனித்திருந்தாள்.
அவனாலும் என்னவென சொல்ல முடியும் என்று புரிந்து அமைதியாக இருந்தவளுக்கு இப்போதும் அதே தயக்கம் தான் எழுந்தது. தாரக் சொல்ல விரும்பாத ஒன்றை அவள் எப்படி வெளிப்படுத்த முடியும்..? அதில் சிந்து அமைதியாக இருக்க.. தலையை ஒரு பக்கமாக சாய்த்து சிந்துவின் முகத்தைப் பார்த்த ஸ்வேதா “என்ன ஏதாவது ரகசியமா..?” என்றாள்.
“ரகசியம் எல்லாம் எதுவுமில்லை, ஆனா சொல்லணும்னா அவங்களே சொல்லி இருப்பாங்களே..!” என்று சிந்து தயங்க.. “அதுவும் சரிதான், தீபன் சொல்லாத ஒண்ணை நீ சொல்லி நாளைக்கு உங்களுக்குள்ளே பிரச்சினையாக்கிட வேண்டாம்.. அப்படியே விடு..” என்று உடனே ஒத்துக்கொண்டாள் ஸ்வேதா.
அவளிடம் சிந்துவுக்கு பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று. ஸ்வேதா நன்கு படித்து இங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள். கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவில் தான் இருக்கிறாள். அவள் குணத்துக்கு நிறைய நண்பர்களும் உண்டு.
ஆனால் அவர்களை எல்லாம் விடுத்து சிந்து தனியே இருந்துவிடக் கூடாது என தனி கவனம் எடுத்து அவளைப் பார்த்துக் கொள்வாள் ஸ்வேதா. சிந்துவுடன் பேசிக்கொண்டே தொலைக்காட்சியின் பக்கம் கவனத்தை திரும்பிய ஸ்வேதா, அங்கு ஓடிக்கொண்டிருந்த காதல் பாடலைக் கண்டு “ஹ்ம்ம், காலேஜ் டேஸ்னா இப்படி இருக்கணும்.. உனக்கு இப்படி எதுவும் இல்லையா..?” என்றாள்.
அதைக் கேட்டு திகைத்த சிந்து “என்ன எனக்கா..?” எனவும் “ஆமா இதுக்கு ஏன் இவ்வளவு ஷாக்..? உன்னை தான் கேட்டேன்..” என்ற ஸ்வேதா “இன்ட்ரஸ்டிங்கா ஏதாவது இருந்தா சொல்லு, கேட்போம்..” என்று திரும்பி சிந்துவின் முகம் பார்த்து அமர்ந்தாள்.
அதில் சங்கடமாக நெளிந்த சிந்து “எனக்கு அப்படியெல்லாம் எதுவுமே இல்லை..” எனவும் “சுத்த போர் தெரியுமா நீ..” என சலிப்பாக முகத்தை சுழித்தாள் ஸ்வேதா.
“சரி நான் தான் போர், நீங்க இன்ட்ரஸ்டிங்கா ஏதாவது சொல்லுங்களேன் கேட்போம்..” என சிந்து சொல்லவும், அவளை ஒரு நொடி கண்கள் மின்ன பார்த்த ஸ்வேதா “இன்ட்ரஸ்டிங்கா தானே.. இருக்கு சொல்லுட்டுமா..?” என ஒரு மாதிரி ராகம் போட்டு இழுத்தாள் ஸ்வேதா.
அதில் ஆர்வமாக ஸ்வேதாவின் முகத்தை சிந்து பார்க்க.. “சொல்லுவேன், ஆனா நீ என்னை தப்பா எடுத்துக்க கூடாது..” என்று முன் ஜாக்கிரதையாக கூறினாள் ஸ்வேதா. ‘இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு..?’ என புரியாமல் சிந்து அவளை பார்க்கவும், தலையை சாய்த்து ஒரு மர்மமான புன்னகையை சிந்திய ஸ்வேதா “தீபன்..” என்றாள்.
அதில் நம்ப முடியாமல் ஸ்வேதாவை சிந்து பார்க்க.. சட்டென எதுவும் பேசாமல் சில நொடிகள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்வேதா “எனக்கு தீபனை ரொம்ப பிடிக்கும், இப்போ இல்லை.. பத்து வருஷத்துக்கு முன்னே இருந்தே பிடிக்கும்..” என்று கனவு மிதக்கும் விழிகளோடு கூறினாள்.
இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என புரியாமல் சிந்து அமர்ந்திருக்க.. திடீரென நினைவு வந்தவளாக சிந்துவின் முகத்தை பார்த்த ஸ்வேதா “ஆமா, இதுக்கு முன்னே தீபன் என்னை பத்தி உன்கிட்ட பேசி இருக்காரா..?” என்றாள் ஸ்வேதா.
அதற்கு சிந்து இல்லை என தலையசைக்க.. “அதானே..! அப்போவே நினைச்சேன், தீபன் எப்போவுமே இப்படித்தான்.. அவங்க சொல்ல நினைக்கறதை மட்டுமே தான் சொல்லுவாங்க..” என்று ஒரு வித ரசனையான குரலில் கூறினாள் ஸ்வேதா.
சிந்துவும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க.. மௌனமாக கழிந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “எனக்கு தீபனை ரொம்ப பிடிக்கும் சிந்து, பார்த்த முதல் நாளே இங்கே வந்து உட்கார்ந்துட்டார்..” என தன் இதயத்தை தொட்டு காண்பித்தாள் ஸ்வேதா.
அதில் மெல்ல விழிகளை உயர்த்தி பார்த்தாள் சிந்து. அவளாகவே பேசட்டும் என வேறு எதுவும் கேட்காமல் சிந்து அமைதியாக பார்த்திருக்க.. “எங்க அண்ணாவோட ஃபிரண்டா தான் தாரக் எனக்கு அறிமுகமானார்.. ஸ்மார்ட்டா அவ்வளவு ஜென்ட்டில் பிஹேவியரோட கண்ணு முன்னே ஒருத்தர் வந்து நின்னா எல்லா டீன் ஏஜ் பொண்ணுங்களுக்குள்ளேயும் பறக்கும் அதே பட்டாம்பூச்சி தான் எனக்குள்ளேயும் பறந்தது.. அப்போ நான் ப்ளஸ்டூ தான் படிச்சுட்டு இருந்தேன்..
அப்போ எல்லாம் அடிக்கடி எங்க அண்ணாவை பார்க்க தீபன் வீட்டுக்கு வருவார்.. அவருக்கே தெரியாம மறைஞ்சு இருந்து சைட் அடிப்பேன், அப்போவே என் மனசை அவர்கிட்ட சொல்லணும்னு எத்தனையோ முறை யோசிச்சு இருக்கேன்.. ஆனா வழக்கமா அவரை பார்க்கும் போது வம்பு இழுத்து பேச இயல்பா வந்த எனக்கு இதை சொல்ல மட்டும் தைரியம் வரவே இல்லை..
என் வயசை காரணம் சொல்லியோ இல்லை வேற ஏதோ காரணத்தை சொல்லியோ மறுத்துட்டா என்ன செய்யறதுன்னு எனக்குள்ளே ஒரு பயம்.. அதில் இன்னைக்கு நாளைக்குன்னு நான் தள்ளி போட்டுட்டே போனேன்.. திடீர்னு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு தெரிய வந்தது..
அதுக்கு பிறகு எங்க வீட்டுக்கு வருவதை மொத்தமா நிறுத்தினார், அவரை பார்க்கவே முடியாம போச்சு.. நானும் ஏதேதோ வழியில் அவரை பார்க்க முயற்சி செஞ்சேன், என்னால் பார்க்கவே முடியலை.. அப்புறம் தான் என்ன விஷயம்னு எங்க அண்ணன்கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. அவங்க வீட்டில் ஏதோ பிரச்சனையினும் அவர் இப்போ அவங்க வீட்டில் இல்லைன்னும் தெரிய வந்தது..
அவரை நினைச்சு அந்த நேரத்தில் என்னால் வருத்தப்பட தான் முடிஞ்சது.. நானும் அடுத்து காலேஜ் சேர்ந்துட்டேன், இங்கே லீவுக்கு வரும் போதெல்லாம் எங்க அண்ணன் மூலமா எப்படியாவது தீபனை மீட் செஞ்சு பேசணும், எதுவா இருந்தாலும் கவலைப்படாதீங்க உங்களுக்கு நான் இருக்கேன்னு சொல்லணும்னு எல்லாம் நான் நினைச்சுட்டு இருந்தேன்..
ஆனா நான் வீட்டுக்கு வந்த போது நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு விஷயம் எனக்கு தெரிய வந்தது..” என சொல்லி அவள் இடைவேளை விட, ‘என்ன..?’ என்பது போல் ஸ்வேதாவை பார்த்திருந்தாள் சிந்து.
லேசாக குரலை செறுமி கொண்டு “தீபனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு எங்க அண்ணன் சொன்னார், என்னால் இதை நம்பவே முடியலை.. எப்படி இது..? ஏன்னு எனக்குள்ள ஆயிரம் கேள்விகள், இந்த அதிர்ச்சி போதாதுன்னு அவரோடது காதல் திருமணம்னு வேற தெரிய வந்தது.. அவ்வளவு தான் உடைஞ்சு போயிட்டேன்..
அவரை பார்த்ததும் எனக்குள் உண்டான உணர்வுகளோ ஆசைகளோ அவருக்கு என்னை பார்க்கும் போது வரவே இல்லைன்னு தெரிய வந்த போது எவ்வளவு வலிச்சது தெரியுமா..? நைட்டில் தூக்கம் இல்லாம தினமும் அழுவேன், ஆனா நான் ஹாஸ்டலில் இருந்ததினால் எங்க வீட்டில் யாருக்கும் என் பிரச்சனை தெரிய வராமலே போச்சு..
இனி அவ்வளவு தான் இது நடக்காது, இது இல்லைன்னு தெரிஞ்சு என்னை நானே மனதளவில் தேற்றி வெளியே வர போராடிட்டு இருந்த நேரத்தில் தான் தீபன் மனைவி இறந்துட்டாங்கன்னு தெரிய வந்தது..” என்றவள், தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தி சிறு இடைவெளி எடுத்தாள்.
சிந்துவுக்கு தன் அக்காவின் நினைவு வந்ததில் அங்கு கனமான ஒரு அமைதி நிலவ.. யாரும் அதை உடைக்க முயலவில்லை. அங்கே அருகில் இருந்த தண்ணீரை மட்டும் ஸ்வேதாவை நோக்கி நகர்த்தினாள் சிந்து. அதை எடுத்து ஒரு வாய் குடித்த ஸ்வேதா, “எனக்கு என்னவோ இது எனக்கான இரண்டாவது வாய்ப்பா தான் தெரிஞ்சது..
அதில் இருந்தெல்லாம் நானே வெளியே வரணும்னு நினைக்கும் போது அதுக்கான அவசியம் இல்லைன்னு ஏதோ ஒண்ணு எனக்கு உணர்த்துவது போல இருந்தது.. அந்த நொடியில் இருந்து இதோ இந்த நொடி வரைக்கும் என் தீபனுக்காக தான் நான் காத்திருக்கேன்..” என முடித்தாள் ஸ்வேதா.
இதற்கு என்ன சொல்வது..? என்ன பேசுவது..? என புரியாமல் சிந்து அப்படியே அமர்ந்திருக்க.. அவளை லேசான தயக்கத்தோடு நிமிர்ந்து பார்த்த ஸ்வேதா “உனக்கு நான் ரொம்ப சுயநலம் பிடித்தவளா தெரியுறேனா சிந்து..? ஒரு பொண்ணோட இழப்பில் கூட எனக்கான ஆதாயத்தை தேடுவது போல தோணுதா..!” என்றாள்.
இதற்கு மட்டும் அமைதியாக இருக்க முடியாமல் சிந்து ‘இல்லை’ என தலையசைக்க.. அவளின் கையை இறுக பிடித்துக் கொண்ட ஸ்வேதா “ஒரு பொண்ணா உனக்கு என் மனசு புரியுதா சிந்து..?” என கேட்கும் போதே, அவள் விழிகள் லேசாக கலங்கியது.
அதுவே எந்த அளவுக்கு அவள் தாரக்கை விரும்புகிறாள் என சிந்துவுக்கு புரிய வைக்க போதுமானதாக இருக்க.. ‘ஆம்’ என மெல்ல தலையசைத்தாள் சிந்து.
“இதுக்கு நடுவில் வீட்டில் படிச்சு முடிச்சதும் எனக்கு கல்யாணம் அது இதுன்னு பேச்சை ஆரம்பிச்சாங்க.. இதுதான் என் மனசுல இருக்குன்னு என்னால் எப்படி சொல்ல முடியும்..? இதுவரைக்கும் தீபன்கிட்ட நான் எதுவும் பேசாத போது அவர் பற்றி என்னால் வீட்டிலேயும் சொல்ல முடியலை.. அதற்கான நேரமும் எனக்கு தேவைப்பட்டது, அதனால் மேலே படிக்கறேன்னு இரண்டு வருஷம், வேலைக்கு போகணும்னு இரண்டு வருஷம்.. செட்டில் ஆகணும்னு இரண்டு வருஷம்னு இப்படியே இதோ இன்னைக்கு வரைக்கும் ஓட்டிட்டேன்..” என சோகமாக புன்னகைத்தாள் ஸ்வேதா.
தன் கரத்தில் பதிந்திருந்த ஸ்வேதாவின் கரத்தை ஆதரவாக சிந்து தட்டிக் கொடுக்க.. “தீபனை திரும்ப ஒரு மூணு வருஷத்துக்கு முன்னே தான் பார்த்தேன்.. ஆனா நான் பார்த்து பழகின தீபனா அவர் கொஞ்சமும் இல்லை.. அடியோடு ஆளே மாறி போயிருந்தார்..
காதல் ஒரு மனுஷனை இவ்வளவு மாற்றுமா..? ஒரு பொண்ணோட இழப்பு இந்த அளவுக்கு தலைகீழா ஒருத்தர் வாழ்க்கையை மாற்றுமான்னு எனக்கு புரியலை.. இப்படிப்பட்ட ஒருவருடைய காதல் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு தான் எனக்கு அப்போவும் தோணுச்சு..
சரிக்கு சரி என் கூட பேசி வம்பு இழுத்த தீபன் காணாம போய் ஒரு வார்த்தை பதிலை அவர் வாயில் இருந்து வாங்கறதுக்குள்ளே குட்டி கரணம் எல்லாம் அடிக்க வேண்டி வந்தது.. ஆனா விக்ரமாதித்தன் முதுகில் தொங்கின வேதாளம் போல தொடர்ந்து என் முயற்சியை கைவிடாம செய்ததின் பலன் இதோ இப்போ இந்த மூணு மாசமா மத்தவங்ககிட்ட எப்படியோ..! என்கிட்ட மட்டும் சரிக்கு சரி வம்பு பேசக்கூடிய தீபனை நான் மீட்டு எடுத்து இருக்கேன்..
கூடிய சீக்கிரம் என் காதலை சொல்லி அதை அவர் புரிந்து ஏற்றுக்குவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கு, நிச்சயம் என்னால் அதை செய்ய முடியும், எவ்வளவோ நீ செஞ்சுட்டோம் இதை செய்ய மாட்டோமா..?” என சட்டென தன் வருத்தங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு மலர்ந்து சிரித்தாள் ஸ்வேதா.