All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 6 / 6
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 444
Topic starter  
 
 
நேசம் - 41
 
சாரதாவை பார்க்க வந்திருந்தான் தாரக். முன்பை விட குமரேசனின் உடல்நிலை இப்போது ஓரளவு சரியாகி இருந்தது. அதற்காக முழுவதும் சரியாகி விட்டார் என சொல்லிவிட முடியாது, இனி அப்படி ஆகவும் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் எப்போதோ திட்டவட்டமாக சொல்லிவிட்டிருந்தனர்.
 
 
அதற்கு வயதும் ஒரு காரணம் என்றால் அன்று நடந்த கொடூரத்தின் மிச்சம் இன்னும் அவர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததும் மற்றொரு காரணம். இதில் வாழ்நாள் முழுக்க இப்படியே மருந்துகளோடும் உடல் உபாதைகளோடும் அவர் போராடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
 
 
இடையில் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருந்த உடல்நிலை குறைவுகள் இப்போது ஓரளவு சரியாகி மீண்டும் வீட்டிற்குள் சக்கர நாற்காலியில் வலம் வரும் அளவுக்கு தேறி இருந்தார் குமரேசன்.
 
 
அவரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு தோட்டத்தில் சாரதாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் தாரக். பெரும் தயக்கத்திற்கு பிறகு “அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கு..?” என கேட்டிருந்தார் சாரதா.
 
 
“ஹ்ம்ம் நல்லா இருக்கா சாரதாம்மா.. அங்கே ஆரம்பகட்ட தடுமாற்றம் இருக்க தான் செய்யும், ஆனா சீக்கிரம் பழகிக்குவா..” என்றிருந்தான் தாரக். “அவ கிளம்பறதுக்கு முன்னே ஒருமுறை நேரில் பார்த்து பேசணும்னு நினைச்சேன், ஆனா முடியாம போச்சு..” என்றார் சிறு பெருமூச்சோடு சாரதா.
 
 
“உங்களுக்கு வேணும்னா போனில் பேசிக்கோங்க சாரதாம்மா..” என அவன் சொல்ல “இல்லை தீபன் தம்பி அந்த அளவுக்கு நாங்க நெருக்கம் இல்லை, அதோட அந்த பொண்ணுக்கும் எங்க மேலே கோபம் இருக்க தானே செய்யும்.. நேரில் பார்த்து சில விஷயங்களை பேசலாம்னு இருந்தேன், ஆனா முடியாமலே போச்சு..” என்று வறண்ட குரலில் கூறினார் சாரதா.
 
 
அதில் அங்கே ஒரு சிறு அமைதி நிலவ.. பின் தன் குரலை செறுமிக் கொண்டு “நியாயமா பார்த்தா அவளுக்கு மன்னிக்க முடியாத அளவுக்கான துரோகத்தை செஞ்சது நான் தான், நீங்க என்ன செஞ்சீங்க..?” என்றான் தாரக்.
 
 
இதற்கு சாரதா பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க.. அவரை திரும்பி பார்த்தவன், “எனக்காக தானே நீங்க இதெல்லாம் செஞ்சீங்க.. விடுங்க சாரதாம்மா உங்க மேலே அவளுக்கு கோபம் எல்லாம் இருக்காது.. என்கிட்டேயே அவ கோபத்தை காண்பிக்கலை, உங்ககிட்டேயா காண்பிக்க போறா..? அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டா.. மன்னிச்சிட்டான்னு இல்லை, இவ சத்தியமா அந்த நாகராஜன் மாதிரி இல்லை.. ரொம்ப நல்ல பொண்ணு சாரதாம்மா, நல்லா வாழட்டும்..” என உணர்ந்து புரிந்த குரலில் கூறினான் தாரக்.
 
 
‘அப்போ உன் வாழ்க்கை..?’ என எண்ணியவராக சாரதா அசையாமல் அவனை பார்த்திருக்க.. அவரிடம் இருந்து பதில் வராததில் கேள்வியாக திரும்பி அவரை பார்த்தான் தாரக்.
 
 
அதில் சுதாரித்தவராக  “நீ சொல்றதை எல்லாம் கேட்கும் போது நம்ம தனா ஞாபகம் தான் வருது.. அப்படியே இரண்டு பேருக்கும் ஒரே குணம் இல்லை..!” என வெகு நாட்களாக தன் மனதில் இருந்ததை சாரதா சொல்லவும், ஆம் என தலையசைத்துக் கொண்டவன் வேறு எதுவும் பேசவில்லை.
 
 
அதன் பிறகு மேலும் இரண்டு மணி நேரம் அங்கிருந்து விட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சரி பார்த்து விட்டே கிளம்பினான் தாரக். சிந்துவோடு அமெரிக்கா சென்றிருந்தவன், ஒரு மாதம் அங்கிருந்து அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இரண்டு நாட்கள் முன்பு தான் இந்தியா திரும்பியிருந்தான்.
 
 
அங்கிருந்த போதும் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் நேரில் அவன் பார்க்க வேண்டியது என பல வேலைகள் மலையளவு குவிந்து இருந்தது. அதில் கவனத்தை திருப்பியவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு முயன்று நேரத்தை ஒதுக்கி சாரதாவையும் குமரேசனையும் சந்திக்க வந்திருந்தான்.
 
 
**
 
 
அதேநேரம் தன் அப்பார்ட்மெண்டில் காபி கோப்பையோடு ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்தாள் சிந்து. அவளுக்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது.
 
 
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் நாகராஜனின் அனுமதி வேண்டி அவர் என்ன சொல்வாரோ என பயந்து எதிர்பார்த்து ஏமாந்து வாழ்ந்தே பழகி இருந்தவளுக்கு இன்று முழுக்க அத்தனையும் அவள் விருப்பமென எல்லாம் தலைகீழாக மாறி இருப்பதை யோசித்தப்படியே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
யாரின் துணையும் இல்லாமல் இதோ இந்த அப்பார்ட்மெண்டில் அவளே ராஜா அவளே மந்திரி எனும் நிலையிலான ஒரு வாழ்க்கை. அவளுக்கு பிடித்த படிப்பு, அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை முறை, இதெல்லாம் நிஜம் தானா என இந்த நொடி கூட அவளால் நம்ப முடியவில்லை.
 
 
இங்கே வந்த பின் நான்கைந்து முறை ‘ஒருவேளை கனவாக இருக்குமோ..?’ என தன்னையே கிள்ளி கூட பார்த்துக் கொண்டாள் சிந்து. அந்த அளவுக்கு எல்லாம் திடீரென நல்லபடியாக நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியா மனநிலையில் தான் இப்போதும் இருந்தாள் சிந்து.
 
 
இன்று தனியே அனைத்தையும் செய்து கொள்ள பழகிக் கொண்டிருந்தவளுக்கு முதல் நாள் இந்த மண்ணில் கால் வைத்தது தான் நினைவுக்கு வந்தது. அத்தனை பயம், பதட்டம், மனமெங்கும் நிறைந்திருக்க.. தாரக்கிடம் அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள கூட முடியா மனநிலையோடு அவன் பின்னே சென்றதை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. 
 
 
ஏர்போர்ட்டிலிருந்து இறங்கிய உடன் அவளுக்கென ஏற்பாடு செய்திருந்த அப்பார்ட்மெண்டுக்கு தான் அழைத்து வந்திருந்தான் தாரக். மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை தாரக் அழுத்த.. ‘இது யார் வீடு..? எங்கு வந்திருக்கிறோம்..?’ என புரியாமல் அவனை குழப்பமாக பார்த்தபடியே நின்றிருந்தாள் சிந்து.
 
 
அதே நேரம் கதவை திறந்து கொண்டு வந்து நின்ற ஸ்வேதா “ஹாய் தீபன் வெல்கம்..” என்று மலர்ந்து புன்னகைக்க.. “ஹாய் ஸ்வே, ஹவ் ஆர் யூ..?”  என்றான் தாரக். “ஹ்ம்ம், நலம் நலமறிய ஆவல்..” என அவள் கூறவும் “எனக்கு என்ன நல்லா இருக்கேன்..” என்றவன் “கீ..” என கையை நீட்ட.. “ஹப்பா என்ன அவசரம் உள்ள வாங்க..?” என அழைத்தாள் ஸ்வேதா.
 
 
“வரலாம், வராம எங்கே போயிட போறோம்..? இல்லை போயிட தான் நீ விட்டுடுவியா..! முதலில் கீ, ரொம்ப டயர்டா இருக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்..” என அவன் கையை நீட்டிக் கொண்டே சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே சென்று சாவியை கொண்டு வந்து அவன் கையில் வைத்தாள் ஸ்வேதா.
 
 
அதை வாங்கிக் கொண்டவன், சிந்துவின் பக்கம் திரும்பி “இது ஸ்வேதா, என் ஃப்ரெண்டோட சிஸ்டர்..” என அறிமுகம் செய்து வைத்து விட்டு ஸ்வேதாவின் பக்கம் திரும்பியவன் “இது செந்தூரிகா..” எனவும் “ஹாய் செந்தூரிகா..” என்றாள் ஸ்வேதா.
 
 
சிந்துவும் மெல்லிய புன்னகையோடு “ஹாய்..” என்றாள். “நாம அப்பறம் நிறைய பேசலாம்..” என்று சட்டென நட்பு கரத்தை ஸ்வேதா நீட்ட.. அவளை போல் உடனே பேசிவிட முடியாமல் சிந்து தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
 
 
“ஏன் என் கூட எல்லாம் மேடம் பேச மாட்டீங்களா..?” என தாரக் வம்பிழுக்கும் குரலில் பேச.. “நான் பேச ரெடி தான், ஆனா சார் தான் ரொம்ப பிஸி.. நானா கூப்பிட்டா எடுக்கவே மாட்டீங்க..” என்றாள் அவளும் கேலி குரலில்.
 
 
“இதுக்கு என் லிஸ்டில் நீ இல்லைன்னு நேராவே சொல்லி இருக்கலாம்..” என்று அவன் சோக முகம் காண்பிக்க.. “போதும் உங்க ஆக்டிங், சக்கரத்தை காலில் கட்டிட்டு சுத்தும் ஆள்.. இங்கே எப்படி ஒரு மாசம் இருக்க போறீங்கன்னு நானும் பார்க்க தானே போறேன்..” என்றவளை கண்டு புன்னகைத்தவன்,  “பார், பார் நல்லா பார்.. பக்கத்தில் இருந்து பார்..” என்று விட்டு முன்னே செல்ல.. இருவரையும் திரும்பிப் பார்த்தப்படியே தாரக்கை பின் தொடர்ந்தாள் சிந்து.
 
 
ஸ்வேதாவின் அடுத்த போஷனின் கதவை திறந்தவன், சிந்துவின் பக்கம் திரும்பி “கம்..” என்று சொல்லவும், வீட்டிற்குள் பார்வையை சுழற்றியபடியே அவன் பின்னே சென்றாள் சிந்து.
 
 
அது ஒரு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அப்பார்ட்மெண்ட். பார்க்கவே கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது. அதை கண்களால் சிந்து அளவெடுத்துக் கொண்டிருக்க.. “இனி இதுதான் உன் வீடு, பொறுமையா எங்கே என்ன இருக்குன்னு எல்லாம் சொல்றேன்.. இப்போ நீ ரெஸ்ட் எடுக்கணும்னா எடுத்துக்கோ..” என்றான் தாரக்.
 
 
“இல்லை பரவாயில்லை..” என்றவளுக்கு திகைப்பே முன் நின்றது. பேச்சு கூட சரியாக வரவில்லை. இங்கு தங்கி படிக்கப் போகிறோம் என தெரிந்தே வந்திருந்தாலும் அருகில் ஏதாவது ஹாஸ்டல் போல் எதிலாவது ஏற்பாடு செய்திருப்பான் என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. இங்கே இப்படி தனி வீடு எடுத்து தங்க வைப்பான் என அவள் ஒருநாளும் நினைத்திருக்கவில்லை.
 
 
அதிலும் அந்த வீடு இருந்த இடம் அதிலிருந்த வசதிகள் என அனைத்தையும் பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது. நிச்சயம் நிறைய செலவாகி இருக்கும் என புரிய.. ‘ஏன் இதெல்லாம்..?’ எனக்கேட்க நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை.
 
 
ஏனெனில் சிந்து இதைப் பற்றி கேட்டாலும் பெரிதாக பயன் எதுவும் இருக்காது. “செலவை பற்றி நீ கவலைப்படாதே, எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை..” என்ற ஒரே பதில் தான் அவனிடம் இருந்து வரும் என்பதால் அமைதியாகவே இருந்து கொண்டாள் சிந்து.
 
 
“உனக்கு எந்த ரூம் பிடிச்சுருக்கு பார்..” என தாரக் சொல்லவும், அந்த குரலில் நினைவு கலைந்தவள் திரும்பி அவனை பார்க்க.. அவனும் அவளின் பதிலுக்காக சிந்துவின் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தான். அதில் அவசரமாக அவளுக்கு பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த சிந்து “நான் இதையே எடுத்துக்கறேன்..” எனவும் ‘சரி’ என்று விட்டு மற்றொரு அறைக்குள் சென்றான் தாரக்.
 
 
பயண கலைப்பு தீர இருவரும் இரண்டு மணி நேரம் உறங்கி எழுந்தனர். முதலில் கண்விழித்த சிந்து குளித்து வேறு உடைக்கு மாறி வரவேற்பறைக்கு வந்து அங்கு இருந்தவற்றையெல்லாம் மெல்ல பார்த்துக் கொண்டிருக்க.. தாரக்கும் குளித்து முடித்து வெளியில் வந்தான்.
 
 
“ரெஸ்ட் எடுக்கலையா நீ..?” என அவன் கேட்கவும், அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளை கண்டு “எதுக்கு இவ்வளவு பதட்டம்..? இங்கே வேற யாரு வந்துட போறா..?” என்றான் தாரக். “இல்லை, புது இடம் அதான் கொஞ்சம் பதட்டம் ஆகிடுச்சு..” என சிந்து கூறவும் “சரி ரெஸ்ட் எடுத்தியா இல்லையா..?” என்றான் தாரக்..
 
 
“தூங்கினேன், நானும் இப்போ தான் எழுந்து வந்தேன்..” என்றவளை கண்டு தலையசைத்தவன் “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்..” என கூறவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. தாரக் சென்று கதவைத் திறக்க.. ஸ்வேதா இவர்களுக்கான உணவோடு நின்றிருந்தாள்.
 
 
அவள் கையில் இருந்ததை பார்த்து “ஸ்வே எதுக்கு இதெல்லாம்..?” என்றான் தாரக். “வேற எதுக்கு சாப்பிட தான்..? இவ்வளவு பெரிய பிசினஸ்மேனுக்கு இது கூட தெரியலையா..” என்றவாறே உள்ளே வந்தவள், நேராக உணவு மேஜையில் சென்று அதை வைக்க.. “நான் பார்த்துக்க மாட்டேனா இதெல்லாம்..?” என்றான் தாரக்.
 
 
“இல்லைன்னு யார் சொன்னா..? அதை எல்லாம் நாளையிலிருந்து பார்த்துக்கோங்க.. இப்போ இதை சாப்பிடுங்க..” என்றவள், திரும்பி சிந்துவின் பக்கம் பார்த்து “வாங்க சாப்பிடலாம்..” என உரிமையோடு அழைத்தாள்.
 
 
“மேடம் உத்தரவு..” என்றவாறே தாரக் சாப்பிட அமைதியாக அமர்ந்து விட, இத்தனை இயல்பாக அவன் யாரோடும் பேசி பழகி பார்த்திராத சிந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
 
அதை வியப்பாக உணர்ந்தவாறே சிந்துவும் வந்து அமர, இருவருக்கும் சாப்பிட எடுத்து வைத்தாள் ஸ்வேதா. “இதையெல்லாம் நீ செய்யணும்னு இல்லை ஸ்வே..” என அவன் இயல்பாக கூறவும், “ஆனாலும் செய்வேன்..” என பிடிவாதமாக கூறியவள், அனைத்தையும் இருவருக்கும் அவளே பரிமாறினாள்.
 
 
“நீ சாப்பிட்டியா ஸ்வே..?” என்றவனுக்கு “அதெல்லாம் எப்பவோ ஆச்சு..” என பதில் அளித்தாள் ஸ்வேதா. அதன் பிறகு தாரக் சாப்பிட தொடங்க, சிந்து எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருக்க.. ஸ்வேதா வளவளவென பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பதிலளித்தப்படியே சாப்பிட்டு முடித்தான் தாரக்.
 
 
“அப்புறம் தீபன் நீங்க அனுப்பி விட்ட லிஸ்ட்டில் இருந்த எல்லாம் வாங்கிட்டேன், ஒருமுறை செக் செஞ்சுடுங்க.. அதுக்கு பிறகு ஏதாவது தேவைப்பட்டா நாம போய் வாங்கிட்டு வந்துடலாம்..” என்றாள் ஸ்வேதா.
 
 
“ம்ஹூம் ஸ்வேகிட்ட கொடுத்த வேலையை திரும்ப செய்யற மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை..” என்று உறுதியான குரலில் தாரக் சொல்லவும், பணிவாக குனிந்து நன்றி என்றாள் ஸ்வேதா.
 
 
அதன் பிறகும் சிறிது நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டே கிளம்பினாள் ஸ்வேதா. சிந்து தன் அறைக்குள் சென்று உடைகளை அடுக்கிக் கொண்டிருக்க.. அவளை அழைத்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுத்தவன், சமையல் செய்வதற்காக ஸ்வேதா வாங்கி வைத்திருந்த பொருட்களையும் காண்பித்தான்.
 
 
இதையெல்லாம் சிந்தும் மலைப்பாக பார்த்தபடி நின்றிருக்க.. “நீ கட்டாயம் சமைச்சு தான் சாப்பிடணும்னு எதுவுமில்லை.. ஒருவேளை உனக்கு தேவைப்படலாம்னு தான் வாங்கி வைக்க சொன்னேன், இங்கே வெளியில் சாப்பிடுவதை விட இது பெட்டர்.. அப்படி உனக்கு சமைக்கத் தெரியாதுனா எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சமைச்சு கொடுக்க சொல்றேன்.. இங்கே வேலைக்கு ஆள் வைக்கறது எல்லாம் சரி வராது..” என்றான் தாரக்.
 
 
“இல்லையில்லை அதெல்லாம் வேண்டாம் நானே செஞ்சுக்குவேன்..” என அவசரமாக சிந்து சொல்லவும், “உன்னை கஷ்டப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லை..” என மீண்டும் கூறினான் தாரக். “இதில் கஷ்டம் எல்லாம் எதுவுமில்லை எனக்கு சமைக்க வரும்..” என்றிருந்தாள் சிந்து.
 
 
அடுத்த இரண்டு நாட்கள் அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் உடன் நின்று செய்து முடித்த தாரக், அவசர தேவைக்கு அருகில் என்னென்ன இருக்கிறது, எப்படி கல்லூரிக்கு சென்று வர வேண்டும்  என்று அனைத்தையும்  சொல்லிக் கொடுத்தான்.
 
 
அவளுக்கு கல்லூரி தொடங்க இன்னும் 15 நாட்கள் இருந்தது. அதில் அவசரப்படாமல் அனைத்தையும் செய்து முடித்து தயாரானவள், மனதிற்குள்ளான சிறு படபடப்போடும் எதிர்பார்ப்போடும் கல்லூரி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
 
 
மறுநாள் கல்லூரி திறக்க இருந்தது. அன்று அதே நினைவோடு அவள் எழுந்து வெளியில் வர, தாரக் சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வேகமாக அங்கு சென்ற சிந்து “இங்கே என்ன செய்றீங்க..?” எனவும் திரும்பி பார்த்து “பிரேக் பாஸ்ட்..” என்றான்.
 
 
“ஐயோ நீங்க ஏன் இதெல்லாம்..? நான் செஞ்சு கொடுத்திருப்பேனே..!” என வேகமாக அவள் சொல்லவும், “ஏன் நான் செஞ்சு கொடுத்தா சாப்பிட மாட்டியா..?” என்றான் தாரக். “அதெல்லாம் இல்லை, ஆனா உங்களுக்கு சமைக்க தெரியுமா..?” என்று கேட்க வந்தவள் அப்படியே பாதியில் நிறுத்தி அவனை பார்க்கவும், இரண்டு நாட்களாக அவளின் சமையலை சாப்பிட்டு இருந்தவன் “உன்னளவுக்கு இல்லைனாலும் ஓரளவு சமைப்பேன்..” என்றிருந்தான் தாரக்.
 
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிந்து நின்றிருக்க.. “இன்னைக்கு நான் சமைச்சதா இருக்கட்டும், நீ போய் ரெஸ்ட் எடு.. இல்லை வேற வேலை ஏதாவது இருந்தா பார்..” என்றான் தாரக்.
 
 
‘வேண்டாம் நான் செய்யறேன்’ என உரிமையோடு சென்று தாரக்கின் கையில் இருந்து கரண்டியை வாங்கிக் கொள்ள அவளால் முடியவில்லை. அதற்கு மேல் மறுத்துப் பேசவும் முடியாமல் அமைதியான தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்த சிந்து, உணவு மேஜையிலேயே சென்று அமர்ந்து கொண்டாள்.
 
 
அங்கிருந்து பார்க்கும் போது தாரக் என்ன செய்கிறான் என எதுவும் தெரியவில்லை. அவனின் முதுகு மட்டுமே தெரிய.. கன்னத்தில் கை வைத்தபடி அவனையே சிந்து பார்த்திருக்க.. திரும்பி இரண்டு முறை அவளை பார்த்தவன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
 
 
தோசை தக்காளி சட்னியோடு அடுத்த சில நிமிடங்களில் அவள் முன் தட்டைக் கொண்டு வந்து வைத்தான் தாரக். அந்த மொறுமொறு தோசையும் எண்ணெய் கசிய சுருண்டு வந்திருந்த தக்காளி சட்னியையும் பார்க்கும் போதே எடுத்து சாப்பிட வேண்டும் என தோன்றியது.
 
 
சிந்து அப்படியே தட்டைப் பார்த்துக் கொண்டிருக்க.. “பயப்படாம சாப்பிடலாம் உயிருக்கு நான் உத்தரவாதம்..” என்றான் தாரக். “இல்லை அதுக்காக பார்க்கலை..” என அவசரமாக சிந்து சொல்லவும், “நான் சாதாரணமா பேசறதுக்கு எல்லாம் நீ இவ்வளவு பதற வேண்டாம் செந்தூரிகா.. சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு..” என்றவன் சமையலறைக்குள் மீண்டும் சென்று விட, ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டவளை அதன் ருசி நொடியில் அந்த தட்டை காலி செய்ய வைத்திருந்தது.
 
 
இரண்டு ஆப் பாயில் போட்டுக் கொண்டு வந்து அவள் முன் வைத்திருந்தவன், தட்டு அதற்குள் காலியாக இருப்பதைக் கண்டு “இரு தோசை கொண்டு வரேன்..” என உள்ளே செல்ல முயல.. “இல்லை வேண்டாம் இதுவே போதும், இத்தனை எல்லாம் என்னால் சாப்பிட முடியாது..” என்றாள் சிந்து.
 
 
“இனி நீ சாப்பிட்டு தான் ஆகணும் செந்தூரிகா.. இங்கே தனியா இருக்க போறே உன்னை நீ தான் பார்த்துக்கணும்.. இங்கே நீ படிக்க வந்திருக்க, அது சரியா நடந்து முடியணும்னா நீ ஆரோக்கியமா இருக்கணும் புரியுதா..?” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கூறினான் தாரக்.
 
 
அதில் அவள் அமைதியாக தலையசைக்க.. மீண்டும் இரண்டு தோசைகளைக் கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தான் தாரக். அதை மறுக்க மனமில்லாமல் சாப்பிட்டு முடித்தவள், “இந்த தக்காளி சட்னி மாஸ்டர் பீஸ்..  இது வரைக்கும் இப்படி ஒரு டேஸ்ட்டில் நான் இதை சாப்பிட்டதே இல்லை..” என்று தன்னை மறந்து சிந்து கையை ருசி பார்த்துக் கொண்டே சொல்லிவிட, “தனாவும் இதையே தான் சொல்லுவா.. என் சமையலில் அவளுக்கு ரொம்ப பிடிச்சது இந்த தக்காளி சட்னி..” என்று முகம் மலர கூறினான் தாரக்.
 
 
ஆனால் சொல்லிவிட்ட பின்பே தன் தவறு புரிய, சட்டென சிந்துவின் முகத்தை தாரக் கவனிக்க.. அவளோ சிறு புன்னகையோடு அதைக் கேட்டிருந்தாள். எங்கே பழைய நினைவுகளை அவளுக்கு கிளறி விட்டு விட்டோமோ..! என்று எண்ணி பதட்டமான தாரக், அப்படி எதுவும் அவளின் முகத்தில் தெரியாததில் நிம்மதியானான்.
 
 
தாரக்கின் முகத்தை கவனித்திருந்த சிந்துவுக்கும் அவன் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆனால் இதைப்பற்றி வேறு எதுவும் பேசி இப்போது இருக்கும் மனநிலையையும் சூழ்நிலையையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் அமைதியாகவே இருந்து விட்டாள் சிந்து.
 
 
அவளுக்கு கல்லூரி தொடங்கி இருக்க.. முதல் மூன்று நாட்கள் சிந்துவை தானே அழைத்துச் சென்று அழைத்து வந்து அவளுக்கு அனைத்தையும் பழக்கப்படுத்தினான் தாரக். முன்பே அவன் அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும் இப்படி சென்று வரும் போது இன்னும் நன்றாகவே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
 
 
அதோடு அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலரோடு ஸ்வேதாவின் மூலம் அறிமுகமும் ஏற்பட்டிருக்க.. கொஞ்சம் பதட்டம் நீங்கி மெல்ல மெல்ல இந்த சூழ்நிலைக்கு பழகிக் கொள்ளத் தொடங்கினாள் சிந்து.
 
 
மறுநாள் ஸ்வேதாவை வரவழைத்து எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் அவளிடம் கேட்கும்படி கூறினான் தாரக். ஸ்வேதாவும் இந்த ஒரு வாரத்தில் நட்போடு நன்றாகவே சிந்துவுடன் பழகி இருக்க அவளும் மறுக்கவில்லை.
 
 
 ஸ்வேதா இங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறாள். மூன்று வருடமாக அவள் அமெரிக்காவில் இருப்பதோடு அவளுக்கு இந்தப் பகுதியில் அனைத்தும் நன்றாகவே தெரிந்திருந்தது. இதெல்லாம் புதிதாக வந்த சிந்துவுக்கு உதவியாக இருக்கும் என நினைத்தே ஸ்வேதாவுக்கு அருகிலேயே வீடு பார்த்திருந்தான் தாரக்.
 
 
இதையெல்லாம் விளக்கமாக கூறியவன், எப்போது என்ன தேவை என்றாலும் தயங்காமல் தன்னை அழைக்குமாறும் கூறிவிட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
 
 
இதையெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தவள், கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து தயாராக சென்றாள்.
 
 
**
 
 
இங்கே அவ்வளவு பெரிய வீட்டில் தனியே குட்டி போட்ட பூனை போல் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். தன்னை சேர்ந்தவர்கள் என்று யாரும் இல்லாமல் திடீரென தனித்து விடப்பட்டது போல் இருக்க.. அதில் உண்டான கோபத்தை தன் நடையில் காண்பித்துக் கொண்டிருந்தார் நாகராஜ்.
 
 
அவர் எவ்வளவு முயன்று பார்த்தும் இப்போது வரை முத்துவுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்னவானது என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை.
 
 
தனக்குத் தெரிந்த எல்லா வகை ஆட்களை வைத்தும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனாலும் யாராலும் முத்துவைப் பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு தாரக் தனக்குத் தெரிந்த மேலிடத்தின் மூலம் அழுத்தம் கொடுத்திருந்தான்.
 
 
அன்று தன் வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவருடன் வந்த காவலாளிகளுக்கும் மட்டுமே அன்று இரவு அங்கு நடந்தது தெரியும். மற்ற அனைவருக்கும் இதைப் பற்றி எதுவுமே தெரிய வராமல் பார்த்துக் கொண்டவன், நிஜமாகவே முகமூடி கொள்ளையர்கள் தான் பிடிபட்டனர் என்று மற்றவர்களை நம்ப வைத்து இருந்தான்.
 
 
இதில் அவரால் எதையுமே கண்டறிய முடியவில்லை. அதேபோல் சிவாவும் அவன் உடன் இருந்தவர்களும் எப்படி மாயமானார்கள் என்றும் அவருக்கு புரியவில்லை. இதைப்பற்றி யோசித்து யோசித்து குழம்பியவருக்கு தன்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே பெரும் கோபமாக மாறியது.
 
 
தாரக்கிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே அவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. வழக்கமாக அவர் அதை காண்பிக்கும் யாருமே இன்று அருகில் இல்லாததில் தன் கோபத்தை யாரிடம் கொட்டுவது என தெரியாமல் மது பாட்டில்களை தான் முழுதாக தனக்குள் சரித்துக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
ஆனால் அதுவுமே அவரை அமைதிப்படுத்தவில்லை. இதில் தன் முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போன கோபத்தோடு ஏதாவது செய்தே தீர வேண்டும் என முடிவெடுத்தவராக அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க.. இவரின் தேடலுக்கு சொந்தக்காரனான சிவாவும் அவனுடன் இருந்தவர்களும் அங்கு கொத்தடிமைகளாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.
 
 
மனிதர்களை கொத்தடிமைகளாக விலை கொடுத்து வாங்கி ஒருவேளை சாப்பாடு மட்டும் கொடுத்து 20 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
 
 
கை கால் உடைந்தவர்கள் என்று கூட பாராமல் இந்த நிலையிலும் தொடர்ந்து அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் சுரேஷ். வலி ஒரு பக்கம், நேரத்திற்கு பசிக்கு உணவு கிடைக்காத கோபம் ஒரு பக்கம், மருந்து மாத்திரை கொடுக்காமல் வலியோடு துடிக்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பக்கம் என சிவா உயிரோடு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 444
Topic starter  
 
 
நேசம் - 42
 
ஸ்வேதாவுக்கும் சிந்துவுக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகி இருந்தது. இருவருக்குமே நேர் எதிர் குணம் சிந்து அமைதியான அதிகம் பேசாத குணம் உடையவள் என்றால் அதற்கு நேர் மாறாக பார்த்தவுடன் அனைவரோடும் பழகி கலகலப்பாக பேசக்கூடியவள் ஸ்வேதா.
 
 
தாரக் அறிமுகப்படுத்தியதற்காக பேசி பழகினாலும் பெரும்பாலும் சிந்து அமைதியாக ஒதுங்கிக் கொள்ளவே முயல.. அதற்கு ஸ்வேதா வாய்ப்பளித்தால் தானே..! நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து சிந்துவோடு பேசி அவளையும் இயல்பாக்கி தன்னோடு நட்பு பாராட்ட செய்திருந்தாள் ஸ்வேதா.
இவளின் இந்த குணம் அறிந்ததால் தான் அவளுக்கு பக்கத்து வீட்டையே சிந்துவுக்கு தாரக் ஏற்பாடு செய்திருந்தானோ என்னவோ..? ஆனால் பெரும்பாலும் தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வே சிந்துவுக்கு ஸ்வேதாவின் நட்பின் காரணமாக ஏற்படவில்லை.
 
 
அவள் ஆசைப்பட்ட படிப்பில் சேர்த்து விட்டோம், மற்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டோம், இதோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணி விடவில்லை தாரக். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமும் ஒருமுறை அவளை அழைத்து நலம் விசாரித்து அவளுக்கு எதுவும் தேவையா என கேட்டு அறிந்துக் கொள்வான்.
 
 
பெரும்பாலும் அவள் கல்லூரி செல்லும் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அழைத்து பேசுபவன், ‘தூரத்தில் இருந்தாலும் நீ யாரும் இல்லாமல் அங்கே தனித்து விடப்படவில்லை, உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன்..’ என உணர்த்தி கொண்டே இருந்தான்.
 
 
இது ஓரளவு சிந்துவுக்கு மனதில் தைரியத்தை கொடுத்தது என்னவோ உண்மை. முகம் தெரியாத நாட்டில் இருப்பவளுக்கு ஒரு வகையில் இது தேவையாகவும் இருந்தது.
 
 
இப்படியே அலைபேசி வழியாக தாரக்கும், நேரில் ஸ்வேதாவும் அவளுக்கு உறுதுணையாக இருக்க.. கிட்டத்தட்ட மூன்று மாதம் கடந்திருந்தது. சிந்து அங்கு நன்றாகவே பொருந்திக் கொண்டாள் எனலாம்.
சிறுவயதிலிருந்தே கல்லூரி பள்ளி என விடுதியில் தங்கி படித்து இருந்தவளுக்கு இங்குள்ள வாழ்க்கை முறையில் பொருந்தி போகத்தான் கொஞ்சம் நேரம் எடுத்தது. மற்றபடி தன் வேலைகளை தானே பார்த்துக் கொண்டு படிக்க தொடங்கியவளுக்கு, அனைத்தும் வெகு சீக்கிரமே பழக்கமாகிவிட்டது.
 
 
இங்கிருந்து சென்ற பின் தினமும் அழைத்துக் கொண்டிருந்த தாரக், ஒரு மாதத்திற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மூன்று நாட்களுக்கு ஒரு முறை, என அழைப்பதை குறைத்துக் கொண்டே வந்து இப்போது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைத்து பேசுவான்.
 
 
அதுவும் வார இறுதி நாட்களில் அழைத்து அவளை நலம் விசாரித்து வேறு எதுவும் தேவையா என கேட்டு அங்கு எல்லாம் எப்படி செல்கிறது என அறிந்து கொண்டு அழைப்பை துண்டித்து விடுவான். அதற்கு மேல் எதுவும் இருக்காது. தாரக்கின் வேலையை பற்றி அறிந்திருந்தவளுக்கு அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று புரிந்தது.
 
 
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க.. மெல்ல சிந்துவுக்கு அங்கு நட்பு வட்டம் உருவாக தொடங்கியது. அவள் விரும்பி படிக்க ஆசைப்பட்ட துறை என்பதால் ஆர்வமாகவே ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து கற்றுக் கொள்ள தொடங்கினாள் சிந்து.
 
 
***
 
 
 நாகராஜனுக்கு வீட்டிற்கு செல்லவும் விருப்பமில்லை. யாரும் இல்லா வீட்டில் எவ்வளவு நேரம் தான் தனிமையில் இருப்பார்..? இப்போதும் அவருக்கென வேலையாட்கள் அவரிட்ட கட்டளையை உடனே நிறைவேற்ற அடியாள் போல் பலர் காத்திருக்கிறார்கள் தான்.
 
 
ஆனால் முத்துவின் இடத்தில் வைத்து அவரால் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியவில்லை. அவனிடமிருந்த ஒரு நேர்மை மற்றவர்களிடம் இல்லாதது போல் அவருள் ஒரு எண்ணம்.
 
 
அதில் அனைவரையும் சந்தேகக் கண்ணோடே பார்த்து கொண்டிருந்தார் நாகராஜன். இதற்கு காரணம் ஒருவகையில் விஷ்வா எனலாம். அவனை இப்படி ஒரு கோணத்தில் அவர் வைத்துப் பார்த்ததோ.. யோசித்ததோ கூட கிடையாது. அவனே தன் மேல் இத்தனை கொலை வெறியோடு இருந்திருக்கிறான் என்று அறிந்த நொடி முதல் அவரால் கண் முன் இருக்கும் யாரையும் சந்தேகிக்காமல் இருக்கவே முடியவில்லை.
 
 
இது வேறு நாகராஜனுக்கு ஒருவித மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது. தோட்டம் தொழில் என அனைத்தையும் இத்தனை காலமாக அருண் தான் பார்த்துக் கொண்டிருந்தான். சும்மா பெயருக்கு தான் அவனை அதிகாரம் செய்து கொண்டிருப்பார் நாகராஜன்.
 
 
இப்போது அவனும் இல்லாமல் போனதில் அனைத்தையும் அவரே பார்க்க வேண்டிய நிலை. இதில் சுஜாதாவின் கை பக்குவம் இல்லாமல் வேலையால் சமைத்து வைக்கும் உணவு வேறு உள்ளே செல்லவில்லை. இதெல்லாம் சேர்ந்து அவரை ஒருவித மன அழுத்தத்தில் தள்ளி இருந்தது.
 
 
அன்று சுஜாதாவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டை விட்டுச் சென்ற போது கூட ‘எவ்வளவு நாள் இவனால் வெளியில் இருந்து விட முடியும்..? சீக்கிரம் தன்னை தேடி வந்து விடுவான்..’ என்றே நினைத்திருந்தவரின் நினைப்பை பொய்யாக்கி இருந்தான் அருண்.
 
 
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருந்த நிலையில் அருண் தன்னைத் தேடி வராததோடு சுஜாதாவும் ஒரு முறையும் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதும் சேர்ந்து அவரை பெரும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தது.
 
 
‘திமிர், திமிர்.. நான் இல்லாம இவங்க எல்லாம் வாழ்ந்துட்டாங்களா..? இன்னைக்கு இவங்களுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனோ..! அப்படி ஒன்னும் யார் தயவிலும் நான் இல்லை.. இத்தனை நாள் என் தயவில் தான் இவங்க எல்லாம் இருந்தாங்க..
 
 
இப்போவும் நான் தனிக்காட்டு ராஜா தான், என்னைக்கு இருந்தாலும் என்கிட்ட இருக்க சொத்துக்காகவாவது என்னை தேடி வந்து தானே ஆகணும்.. அப்போ இருக்கு உங்களுக்கு எல்லாம்..’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவராக தோப்பில் கயிற்று கட்டில் போட்டு படுத்திருந்தார் நாகராஜன்.
 
 
முழுதாக இரண்டு பாட்டில் மது உள்ளே சென்று இருந்தது. ஆனால் அது கூட அவருள் கணன்று கொண்டிருந்த ஆத்திரத்தை தணிக்க முடியாமல் தோற்றுப் போக.. மற்றொரு பாட்டிலை கையில் எடுத்தவருக்கு அதை குடிக்க கூட அத்தனை வெறுப்பாக வந்தது.
 
 
முன்பெல்லாம் தினமும் மாலை நேரத்தில், தன் அறையில் முத்துவுடன் முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு குடிப்பது அவரின் வழக்கம். அப்போதெல்லாம் முத்து காண்பிக்கும் பணிவும் அவர் சொல்வதை அப்படியே நிறைவேற்ற அவன் முனைவதும் நாகராஜனுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். அதெல்லாம் இல்லாமல் இன்று தனிமையில் குடிப்பது கூட வெறுப்பாக இருந்தது.
 
 
ஆரம்பத்தில் முத்து இல்லை என்றால் என்ன..? என இப்போது அவரிடம் வேலையில் இருக்கும் ஆட்களோடு குடிக்க கூட முயன்றார் நாகராஜன். ஆனால் அவர்கள் மேல் முழு நம்பிக்கை இல்லாததில் முழுதாக போதையாக விரும்பாமல் லேசாக குடித்துக்கொண்டு மனதில் இருக்கும் எதையும் பேசி பகிர்ந்து கொள்ளவும் முடியாத நிலையில் ஒரு மாதிரி வினோத நிமிடங்களாகவே அது கழிந்ததில் வெறுத்துப் போனவர், அதன் பின் யாரையும் உடன் சேர்த்துக் கொள்வதில்லை.
 
 
இப்போதும் அப்படியே வேலை முடியும் வரை அவர்களை உடன் வைத்திருந்தவர், அதன் பின் அனைவரையும் அங்கிருந்து விரட்டி விட்டிருந்தார்.
 
 
நள்ளிரவு வரை குடித்துவிட்டு முழு போதையில் தன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கண்டபடி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தவர், இதற்கெல்லாம் காரணம் ஒருவனே என சொல்லி அவனையும் பல வண்ண வார்த்தைகளில் அர்ச்சித்து முடித்து அப்படியே போதையில் மயங்கி போனார்.
 
 
காலையில் லேசாக போதை தெளிந்து புரண்டு படுக்க முயன்றவருக்கு ஏதோ தடையாக இருக்க.. வழக்கம் போல் காது கூசும் வார்த்தைகளை சத்தமாக சொல்லியபடியே திரும்பியவர், அப்போதே தன் இரு கரங்களும் இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.
 
 
இதில் திடுக்கிட்டு போய் விழிகளை நன்றாக திறந்தவர், எழுந்து அமர்ந்து பார்க்க.. கைகள் மட்டுமல்லாமல் கால்களும் அருகில் இருந்த தூணோடு சேர்த்து கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
 
 
அந்தத் தூணில் இருந்து நான்கு ஐந்து அடிக்கு மட்டுமே சுற்றி வரக்கூடிய அளவில் கையும் காலும் கணமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பது தெரிய “ எவன்டா அது..? தைரியம் இருந்தா நேரில் வாங்கடா..” என சத்தமிட்டார் சுற்றிலும் பார்வையை சுழற்றியவாறே நாகராஜன்.
 
 
அவர் கத்தியது மட்டுமே அவருக்கு மீண்டும் எதிரொலிக்க.. அறையின் மூலையில் ஒளிர்ந்து கொண்டிருந்த குண்டு பல்பின் வெளிச்சத்தில் அந்த இருட்டு அறையை  ஆராய முயன்றார் நாகராஜன்.
 
 
ஆனால் அங்கு அவர் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் எதுவுமே இல்லை. ஒரு ஜன்னல் கூட கிடையாது, வெறும் சின்ன இரும்பு கதவு ஒன்றோடான பத்துக்கு பத்து அளவில் உருவாக்கப்பட்டிருந்த இருட்டு அறையில் நடுநாயகமாக ஒரு பெரிய இரும்பு தூண், முடிந்தால் என்னை அசைத்து பார் என்பது போல் இருக்க.. கொஞ்சம் தள்ளி ஒரு வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தது.
 
 
கதவுகளோ தடுப்புகளோ எதுவும் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த அதை பார்த்தபடியே திரும்பியவர், தன் கை கால்களில் இருந்த சங்கிலி அளவை வைத்துப் பார்க்கும் போது அதுவரை அவரால் தங்கு தடையின்றி சென்றுவர முடியும் எனப் புரிந்தது. அதை தவிர அங்கு பார்க்கவோ புரிந்து கொள்ளவோ எதுவுமே இல்லை.
 
 
எவ்வளவு முயன்றும் எப்படி இங்கு வந்தோம் என நாகராஜனுக்கு புரியவே இல்லை. இறுதியாக தோப்பில் மது அருந்தி கொண்டிருந்தது மட்டுமே அவர் நினைவில் இருக்க.. அதன் பின் நடந்ததெல்லாம் சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை.
 
 
“* யாருடா நீ..? இப்படி கோழை மாதிரி ஒளிஞ்சு நின்னு விளையாடறே..? தைரியமா இருந்தா கண் முன்னே வாடா..” என அவர் சத்தமிட்டு கொண்டிருக்க.. அதற்கும் எந்த ஒரு பிரதிபலிப்பும் எங்கிருந்தும் வரவில்லை. தனியே கத்தி கத்தி ஓய்ந்து போய் நாகராஜனே அமைதியாக வேண்டி இருந்தது.
 
 
தனிமையில் அப்படி எத்தனை மணி நேரம் கத்திக் கொண்டிருந்தார் என அவருக்கே தெரியாது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் கத்த சக்தியின்றி நா வறண்டு போய் தானே அமைதியாகி போனார் நாகராஜன்.
 
 
ஒரு பக்கம் பசி மயக்கம் மற்றொரு பக்கம் எங்கே இருக்கிறோம் என தெரிய பதட்டம், நேற்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது வேறு நெஞ்செரிச்சலை தர, குடிக்க கூட தண்ணீர் இல்லா நிலையும் எங்கோ வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமும் நேரமாக ஆக நாகராஜனுக்குள் பயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.
 
 
“ஏய் யாருடா நீங்க..? என்னடா வேணும் உங்களுக்கு..?” என பலவீனமான குரலில் அவர் முனங்கி கொண்டிருக்க.. எதற்குமே எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதோடு இங்கு வேறு யாரும் இருப்பது போலும் அவருக்குத் தெரியவில்லை.
 
 
அதில் சோர்ந்து போய் அப்படியே விழிமூடி படுத்துக் கொண்டார் நாகராஜன். இதற்கு மேல் கத்தவோ கோபப்படவோ அவர் உடலில் துளியும் சக்தி இல்லை.
 
 
பல மணி நேரங்களுக்குப் பிறகு ஏதோ சத்தம் கேட்க சுருண்டு படுத்திருந்தவர் மெல்ல சோர்வாக விழிகளை திறந்து பார்க்க.. அந்த சின்ன கதவின் அடியில் சின்ன திறவு போல் இருக்க அதன் வழியே ட்ரே போல் ஒன்று நகர்ந்து இந்த பக்கம் வந்தது.
 
 
அதை அவர் என்னவென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. மீண்டும் அந்த கதவுக்கு அடியில் இருந்த திறவு மூடிக்கொண்டது. சட்டென உடலில் இருந்த மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அந்த கதவை நெருங்க நாகராஜன் முயல.. ஆனால் அவர் கை கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அதற்கு அனுமதிக்கவில்லை.
 
 
அதே நேரம் அதன் வழியே வந்த டிரேவில் இரண்டு துண்டு பிரட்டும் ஒரு சின்ன பாட்டில் தண்ணீரும் இருந்தது. இவ்வளவு நேரம் பசியிலும் நா வறண்டு போயும் இருந்தவருக்கு இதை கண்டதும் கோபம் தான் வந்தது. ஏதோ நாயைக் கட்டி வைத்து உணவு கொடுப்பது போல் இருக்க.. மீண்டும் பல வண்ணங்களில் திட்டிக் கொண்டே அதை எட்டி உதைத்தவர் “யாருக்குடா வேணும் உன் பிச்சை சாப்பாடு..? நான் யார் தெரியுமா..? தைரியம் இருந்தா என் முன்னே வாடா, ஒரு கை பார்த்துக்கலாம்.. கோழை மாதிரி கட்டி வெச்சு விளையாடறே..” என்று அவர் பெருங்குரல் எடுத்து கத்தியும் எதற்கும் பதில் வரவில்லை.
 
 
இதில் மேலும் அரை மணி நேரம் கத்தி பார்த்துவிட்டு மறுபடியும் சுருண்டு படுத்துக் கொண்டார் நாகராஜன். சில மணி நேரங்கள் கடந்த பின் அவருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தண்ணீராவது உடனே வேண்டும் என்பது போல் இருக்க.. அதை எடுத்து குடிப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலேயே மேலும் சில நிமிடங்கள் அவருக்கு கழிந்தது.
 
 
இதற்கு மேலும் தன்னால் சமாளிக்க முடியாது எனப் புரிய.. தண்ணீரைக் குடிக்க நினைத்து அதை எடுக்க முயன்றவருக்கு உடலில் உள்ள சக்திகள் மொத்தமும் வடிந்தது போல் இருந்தது. அவரால் எழுந்து அமரக்கூட முடியவில்லை.
 
 
இரண்டு முறை முயன்று பார்த்துவிட்டு தன் முயற்சியை கைவிட்டவர், விழிமூடி அப்படியே படுத்திருந்தார். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை என்றால் உயிரே போய்விடும் எனப் புரிந்து, மெதுவாக தன் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி எழுந்து அமர முயன்று தள்ளாடி சரிந்து, பிறகு முயன்று மீண்டும் சரிந்து, என நான்காவது முயற்சியில் ஓரளவு எழுந்து விட்டார் நாகராஜன்.
 
 
ஆனால் இப்போது அடுத்த பிரச்சனையாக கோவத்தில் அவர் தூக்கி வீசிய தண்ணீர் கதவுக்கு பக்கத்தில் சென்று விழுந்திருந்தது. இப்போது இவர் கை கால்களில் கட்டி இருந்த சங்கிலி அவ்வளவு தூரம் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. வாய்ப்பே இல்லை என தெரிந்தும் பலமுறை தூணோடு சேர்த்து இழுத்து செல்ல முயன்று தோற்றவர், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்.
 
 
வழக்கமாக இது போலான நேரங்களில் கையில் கிடைக்கும் அருகில் இருக்கும் எதையாவது எடுத்து வீசியே பழகியவருக்கு அப்படி எதுவும் கூட அருகில் இல்லாதது இன்னும் வெறியேற்றியது.
 
 
வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்திவிட்டு மீண்டும் மடங்கி அமர்ந்து அப்படியே சுருண்டு கொண்டார் நாகராஜன். பசி, தாகம், கோபம், இயலாமை, வெறுப்பு, தனிமை, ஆத்திரம் என எல்லாம் சேர்ந்து அவரை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் தன் கோபத்தை காண்பிக்க கூட யாரும் இல்லா நிலையில் யாரிடம் இதையெல்லாம் வெளிப்படுத்துவார் பாவம்.
 
 
ஆரம்பத்தில் சத்தமாக திட்டி கத்தி என்னென்னவோ முயன்று பார்த்தும் எதுவும் பலிக்காமல் போனதில் இனி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தன் தாகத்தையும் பசியையும் தான் அதிகரிக்கும் என புரிந்தோ புரியாமலோ தனக்குள்ளேயே சத்தம் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முணகலாக திட்டிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
சரியாக 24 மணி நேரத்திற்கு பிறகு அதே போல் கதவின் கீழ் இருந்த சின்ன திறவின் வழியே மீண்டும் ஒரு உணவு தட்டு அவரை நோக்கி வந்தது. அதேபோல் இரண்டு பிரெட் துண்டுகளும் ஒரு சின்ன தண்ணீர் பாட்டில் மட்டுமே அதில் இருக்க.. இந்த முறை அதை வேண்டாம் என தூக்கி வீசும் நிலையில் அவர் இல்லை.
 
 
அவசரமாக அதை எடுத்து தண்ணீரை முதலில் குடித்து முடித்தவர் அதே அவசரத்தோடு அந்த பிரட்டையும் இரண்டு கரங்களில் பிடித்து வேகமாக சாப்பிட்டு முடித்தார்.
 
 
அதற்குப் பிறகும் நாகராஜனுக்கு பசியும் தாகமும் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் எதுவுமே இல்லாமல் இருந்ததற்கு இது கொஞ்சம் பரவாயில்லை என்றே அந்த நொடி அவருக்கு தோன்றியது. தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவர் ஒரு நாளும் நினைத்ததில்லை.
 
 
இப்போதும் அவர் மனதில் அந்த ஆத்திரம் கணன்று கொண்டு தான் இருந்தது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் மட்டும் யார் எனத் தெரிந்தால் அவனை கண்டம் துண்டமாக வெட்டி போடும் அளவுக்கு வெறி எழுந்தது.
 
 
ஆனால் யார் என தெரிய வேண்டுமே..! அதற்கு முன் அவர் இங்கிருந்து தப்பிக்க வேண்டுமே..!! அதுவரை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இங்கே கிடைக்கும் உணவை வீணாக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்தவராக சுருண்டு படுத்திருந்தார் நாகராஜன்.
 
 
**
 
 
கல்லூரி முடிந்து வெளியில் வந்தாள் சிந்து. சுற்றிலும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாக அவள் வயதை ஒத்த ஆண்கள் பெண்கள் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து என்று ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்க.. அதையெல்லாம் கொஞ்சமும் கவனிக்காமல் தளர்வான நடையோடு கேட்டை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தாள் சிந்து.
 
 
சுற்றி இருக்கும் அவர்களிடம் இருக்கும் துள்ளல் அவளிடம் கொஞ்சமும் இல்லை. தன் கையில் இருந்த அலைபேசியை மீண்டும் ஒருமுறை திறந்து பார்த்தவளுக்கு அதில் ஒரு அழைப்பும் மெசேஜும் வராததை கண்டு வெறுமையாக இருந்தது.
 
 
சுஜாதா அருண் என யாரும் அவளை தினமும் அழைப்பதில்லை. இந்த மூன்று மாதங்களில் மொத்தம் இரண்டு முறை தான் அருண் அழைத்து பேசியிருப்பான்.  அப்போது சுஜாதாவும் அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி பேசி இருக்கிறார் அவ்வளவு தான்.
 
 
‘இவ்வளவு தூரத்தில் தனியே இருக்கும் தன்னைப் பற்றி யோசிக்க கூட அவர்களுக்கு நேரமில்லையோ..!’ என்ற எண்ணமே அவளுள் ஏதோ செய்தது. அங்கு அவர்களின் நிலை என்ன என்று இப்போதும் சிந்துவுக்கு தெரியாததில் தன்னை மறந்தே விட்டார்களோ என்று கூட நினைத்தாள்.
 
 
தாரக்கும் இப்போதெல்லாம் அதிகம் அழைப்பதில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலோ கேட்க வேண்டும் என்றாலோ மட்டுமே அழைத்து பேசுவதோடு சரி. தானாக இதுவரை சிந்துவும் அழைத்ததில்லை என்பதால் இருவரும் பேசி இருபது நாட்களுக்கு மேலாகி இருந்தது.
 
 
யாருக்குமே தான் வேண்டாதவளாகிப் போனோமோ என்ற எண்ணம் அவள் மனம் முழுதும் நிறைந்திருக்க.. மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தவளின் கால்கள் சட்டென அப்படியே நின்றது. தன் வீட்டினரிடம் எதிர்பார்ப்பது சரி, ஆனால் தாரக்கிடம் என்ன உரிமையில் இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம்..?
 
 
நடந்த தவறை சரி செய்ய முயன்று தனக்காக இத்தனையும் செய்பவனிடம் இதற்கு மேல் எதையும் எதிர்பார்ப்பது தவறு என அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இங்கிருக்கும் தனிமை தன் மேல் அக்கறை கொண்டவன் என்ற முறையில் அவனாவது அழைத்துப் பேசலாம் என நினைத்ததோ என்னவோ..!
 
 
ஆனால் இதெல்லாம் தவறு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவளின் வழியை மறைப்பது போல் வந்து நின்றான் ரிச்சர்ட்.
 
 
அதில் சிறு திகைப்போடு தன் நடையை நிறுத்தி அவள் பார்க்க.. “காபி..?” என்றான் அவனுக்கே உரிய உடல் மொழியோடும் புன்னகையோடும் ரிச்சர்ட். அவனை பார்க்கும் யாருக்கும் ரிச்சர்டின் முகத்தில் இருக்கும் புன்னகை தானாக ஒட்டிக்கொள்ளும். அதேபோல் சிந்துவின் முகத்திலும் லேசாக புன்னகை மலர, அவனைப் பார்த்தவள், லேசான மறுப்போடு ஏதோ சொல்ல வர.. “நீ எனக்கு ப்ராமிஸ் செஞ்சிருக்கே செண்டு..” என்றான் ரிச்சர்ட்.
 
 
அவன் தன் பெயரை இப்படி உச்சரிக்கும் போதெல்லாம் அவளையும் மீறி சிந்துவின் இதழ்கள் தானாக மலரும். இப்போதும் அப்படியே சிறு புன்னகையோடு அவனை பார்த்தவள், “எஸ், ஆனா இன்னைக்கு வேண்டாமே..” என அவள் சிறு கெஞ்சுதலோடு கேட்கவும், “நேத்தும் நீ இதையே தான் சொன்னே..” என்றான் முகம் மாற அதே புன்னகையோடு ரிச்சர்ட்.
 
 
“ஆமா, ஆனா நான் இன்னைக்கு கொஞ்சம் டயர்டா இருக்கேன், நிஜமா நாளைக்கு போகலாம் ரிச்சி..” என அவள் வாக்கு கொடுக்க.. இன்று பிராக்டிகல் கிளாசில் வேலை அதிகம் இருந்ததை உணர்ந்தவனாக ‘சரி’ என தலையசைத்த ரிச்சர்ட் “நாளைக்கு கண்டிப்பா வரணும்..” எனவும், சிந்துவின் தலை வேகமாக மேலும் கீழும் அசைந்தது.
 
 
“ஓகே யூ கேரியான்..” என்று அவளின் வழியை விட்டு நகர்ந்தவன் “ஒகே பாய்..” என்று விட்டு அங்கிருந்து செல்ல முயன்றவளை “நான் உன்னை டிராப் செய்யட்டுமா..?” என்ற ரிச்சர்டின் கேள்வி தடுத்து நிறுத்தி இருந்தது. இதில் திரும்பி பார்த்தவள் “இல்லை வேண்டாம்..” எனவும் “நீ டயர்டா இருக்கே செண்டு..” என்றான் ரிச்சர்ட்.
 
 
ஆம் என தலையசைத்தவள், பின் “எனக்கு ஒரு பிரெண்ட்டை மீட் செய்யணும், எனக்காக வெயிட் செஞ்சுட்டு இருப்பா நான் கிளம்பறேன்..” என்று விட்டு செல்ல.. அவள்  செல்லும் திசையை அதே முகம் வாடா புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரிச்சர்ட்.
 
 
முதல் நாள் சிந்துவை இங்கு பார்த்ததிலிருந்து அவனுக்கு அவளை பிடித்துப் போயிருந்தது. அழகு மட்டுமல்ல அவளிடம் ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. இதுவரை அவன் பார்த்து பழகியிருந்த பெண்களிலிருந்து முற்றிலும் வேறாக தெரிந்தாள் சிந்து.
 
 
அதில் அவள் ஒதுங்கி சென்றாலும் பரவாயில்லை என தானாகவே மீண்டும் மீண்டும் சென்று பேசி அவளோடு ஒரு நட்புறவை வளர்க்க முயன்று கொண்டிருந்தான் ரிச்சர்ட். ஆரம்பத்தில் பலமுறை தோல்வியுற்றாலும் இப்போது லேசாக அவனிடம் பேசத் தொடங்கி இருக்கிறாள் சிந்து.
 
 
இதுவே அவனைப் பொறுத்தவரை நல்ல ஒரு முன்னேற்றமாகத் தான் ரிச்சர்ட்க்கு தோன்றியது. விரைவில் சிந்துவோடு நன்றாக பழகி அவளை தன்னவளக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் காரை நோக்கி ரிச்சர்ட் நகர.. சிந்துவும் தன்னையே சுற்று சுற்றி வந்து கொண்டிருக்கும் ரிச்சர்ட் பற்றி நினைத்தபடியே தான் தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
 
 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 444
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 41 & 42
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 6 / 6

You cannot copy content of this page