நேசம் - 41
சாரதாவை பார்க்க வந்திருந்தான் தாரக். முன்பை விட குமரேசனின் உடல்நிலை இப்போது ஓரளவு சரியாகி இருந்தது. அதற்காக முழுவதும் சரியாகி விட்டார் என சொல்லிவிட முடியாது, இனி அப்படி ஆகவும் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் எப்போதோ திட்டவட்டமாக சொல்லிவிட்டிருந்தனர்.
அதற்கு வயதும் ஒரு காரணம் என்றால் அன்று நடந்த கொடூரத்தின் மிச்சம் இன்னும் அவர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததும் மற்றொரு காரணம். இதில் வாழ்நாள் முழுக்க இப்படியே மருந்துகளோடும் உடல் உபாதைகளோடும் அவர் போராடிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
இடையில் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருந்த உடல்நிலை குறைவுகள் இப்போது ஓரளவு சரியாகி மீண்டும் வீட்டிற்குள் சக்கர நாற்காலியில் வலம் வரும் அளவுக்கு தேறி இருந்தார் குமரேசன்.
அவரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு தோட்டத்தில் சாரதாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் தாரக். பெரும் தயக்கத்திற்கு பிறகு “அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கு..?” என கேட்டிருந்தார் சாரதா.
“ஹ்ம்ம் நல்லா இருக்கா சாரதாம்மா.. அங்கே ஆரம்பகட்ட தடுமாற்றம் இருக்க தான் செய்யும், ஆனா சீக்கிரம் பழகிக்குவா..” என்றிருந்தான் தாரக். “அவ கிளம்பறதுக்கு முன்னே ஒருமுறை நேரில் பார்த்து பேசணும்னு நினைச்சேன், ஆனா முடியாம போச்சு..” என்றார் சிறு பெருமூச்சோடு சாரதா.
“உங்களுக்கு வேணும்னா போனில் பேசிக்கோங்க சாரதாம்மா..” என அவன் சொல்ல “இல்லை தீபன் தம்பி அந்த அளவுக்கு நாங்க நெருக்கம் இல்லை, அதோட அந்த பொண்ணுக்கும் எங்க மேலே கோபம் இருக்க தானே செய்யும்.. நேரில் பார்த்து சில விஷயங்களை பேசலாம்னு இருந்தேன், ஆனா முடியாமலே போச்சு..” என்று வறண்ட குரலில் கூறினார் சாரதா.
அதில் அங்கே ஒரு சிறு அமைதி நிலவ.. பின் தன் குரலை செறுமிக் கொண்டு “நியாயமா பார்த்தா அவளுக்கு மன்னிக்க முடியாத அளவுக்கான துரோகத்தை செஞ்சது நான் தான், நீங்க என்ன செஞ்சீங்க..?” என்றான் தாரக்.
இதற்கு சாரதா பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க.. அவரை திரும்பி பார்த்தவன், “எனக்காக தானே நீங்க இதெல்லாம் செஞ்சீங்க.. விடுங்க சாரதாம்மா உங்க மேலே அவளுக்கு கோபம் எல்லாம் இருக்காது.. என்கிட்டேயே அவ கோபத்தை காண்பிக்கலை, உங்ககிட்டேயா காண்பிக்க போறா..? அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டா.. மன்னிச்சிட்டான்னு இல்லை, இவ சத்தியமா அந்த நாகராஜன் மாதிரி இல்லை.. ரொம்ப நல்ல பொண்ணு சாரதாம்மா, நல்லா வாழட்டும்..” என உணர்ந்து புரிந்த குரலில் கூறினான் தாரக்.
‘அப்போ உன் வாழ்க்கை..?’ என எண்ணியவராக சாரதா அசையாமல் அவனை பார்த்திருக்க.. அவரிடம் இருந்து பதில் வராததில் கேள்வியாக திரும்பி அவரை பார்த்தான் தாரக்.
அதில் சுதாரித்தவராக “நீ சொல்றதை எல்லாம் கேட்கும் போது நம்ம தனா ஞாபகம் தான் வருது.. அப்படியே இரண்டு பேருக்கும் ஒரே குணம் இல்லை..!” என வெகு நாட்களாக தன் மனதில் இருந்ததை சாரதா சொல்லவும், ஆம் என தலையசைத்துக் கொண்டவன் வேறு எதுவும் பேசவில்லை.
அதன் பிறகு மேலும் இரண்டு மணி நேரம் அங்கிருந்து விட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சரி பார்த்து விட்டே கிளம்பினான் தாரக். சிந்துவோடு அமெரிக்கா சென்றிருந்தவன், ஒரு மாதம் அங்கிருந்து அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு இரண்டு நாட்கள் முன்பு தான் இந்தியா திரும்பியிருந்தான்.
அங்கிருந்த போதும் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் நேரில் அவன் பார்க்க வேண்டியது என பல வேலைகள் மலையளவு குவிந்து இருந்தது. அதில் கவனத்தை திருப்பியவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு முயன்று நேரத்தை ஒதுக்கி சாரதாவையும் குமரேசனையும் சந்திக்க வந்திருந்தான்.
**
அதேநேரம் தன் அப்பார்ட்மெண்டில் காபி கோப்பையோடு ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்தாள் சிந்து. அவளுக்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது.
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் நாகராஜனின் அனுமதி வேண்டி அவர் என்ன சொல்வாரோ என பயந்து எதிர்பார்த்து ஏமாந்து வாழ்ந்தே பழகி இருந்தவளுக்கு இன்று முழுக்க அத்தனையும் அவள் விருப்பமென எல்லாம் தலைகீழாக மாறி இருப்பதை யோசித்தப்படியே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
யாரின் துணையும் இல்லாமல் இதோ இந்த அப்பார்ட்மெண்டில் அவளே ராஜா அவளே மந்திரி எனும் நிலையிலான ஒரு வாழ்க்கை. அவளுக்கு பிடித்த படிப்பு, அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை முறை, இதெல்லாம் நிஜம் தானா என இந்த நொடி கூட அவளால் நம்ப முடியவில்லை.
இங்கே வந்த பின் நான்கைந்து முறை ‘ஒருவேளை கனவாக இருக்குமோ..?’ என தன்னையே கிள்ளி கூட பார்த்துக் கொண்டாள் சிந்து. அந்த அளவுக்கு எல்லாம் திடீரென நல்லபடியாக நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியா மனநிலையில் தான் இப்போதும் இருந்தாள் சிந்து.
இன்று தனியே அனைத்தையும் செய்து கொள்ள பழகிக் கொண்டிருந்தவளுக்கு முதல் நாள் இந்த மண்ணில் கால் வைத்தது தான் நினைவுக்கு வந்தது. அத்தனை பயம், பதட்டம், மனமெங்கும் நிறைந்திருக்க.. தாரக்கிடம் அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள கூட முடியா மனநிலையோடு அவன் பின்னே சென்றதை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.
ஏர்போர்ட்டிலிருந்து இறங்கிய உடன் அவளுக்கென ஏற்பாடு செய்திருந்த அப்பார்ட்மெண்டுக்கு தான் அழைத்து வந்திருந்தான் தாரக். மூன்றாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை தாரக் அழுத்த.. ‘இது யார் வீடு..? எங்கு வந்திருக்கிறோம்..?’ என புரியாமல் அவனை குழப்பமாக பார்த்தபடியே நின்றிருந்தாள் சிந்து.
அதே நேரம் கதவை திறந்து கொண்டு வந்து நின்ற ஸ்வேதா “ஹாய் தீபன் வெல்கம்..” என்று மலர்ந்து புன்னகைக்க.. “ஹாய் ஸ்வே, ஹவ் ஆர் யூ..?” என்றான் தாரக். “ஹ்ம்ம், நலம் நலமறிய ஆவல்..” என அவள் கூறவும் “எனக்கு என்ன நல்லா இருக்கேன்..” என்றவன் “கீ..” என கையை நீட்ட.. “ஹப்பா என்ன அவசரம் உள்ள வாங்க..?” என அழைத்தாள் ஸ்வேதா.
“வரலாம், வராம எங்கே போயிட போறோம்..? இல்லை போயிட தான் நீ விட்டுடுவியா..! முதலில் கீ, ரொம்ப டயர்டா இருக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்..” என அவன் கையை நீட்டிக் கொண்டே சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல் உள்ளே சென்று சாவியை கொண்டு வந்து அவன் கையில் வைத்தாள் ஸ்வேதா.
அதை வாங்கிக் கொண்டவன், சிந்துவின் பக்கம் திரும்பி “இது ஸ்வேதா, என் ஃப்ரெண்டோட சிஸ்டர்..” என அறிமுகம் செய்து வைத்து விட்டு ஸ்வேதாவின் பக்கம் திரும்பியவன் “இது செந்தூரிகா..” எனவும் “ஹாய் செந்தூரிகா..” என்றாள் ஸ்வேதா.
சிந்துவும் மெல்லிய புன்னகையோடு “ஹாய்..” என்றாள். “நாம அப்பறம் நிறைய பேசலாம்..” என்று சட்டென நட்பு கரத்தை ஸ்வேதா நீட்ட.. அவளை போல் உடனே பேசிவிட முடியாமல் சிந்து தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
“ஏன் என் கூட எல்லாம் மேடம் பேச மாட்டீங்களா..?” என தாரக் வம்பிழுக்கும் குரலில் பேச.. “நான் பேச ரெடி தான், ஆனா சார் தான் ரொம்ப பிஸி.. நானா கூப்பிட்டா எடுக்கவே மாட்டீங்க..” என்றாள் அவளும் கேலி குரலில்.
“இதுக்கு என் லிஸ்டில் நீ இல்லைன்னு நேராவே சொல்லி இருக்கலாம்..” என்று அவன் சோக முகம் காண்பிக்க.. “போதும் உங்க ஆக்டிங், சக்கரத்தை காலில் கட்டிட்டு சுத்தும் ஆள்.. இங்கே எப்படி ஒரு மாசம் இருக்க போறீங்கன்னு நானும் பார்க்க தானே போறேன்..” என்றவளை கண்டு புன்னகைத்தவன், “பார், பார் நல்லா பார்.. பக்கத்தில் இருந்து பார்..” என்று விட்டு முன்னே செல்ல.. இருவரையும் திரும்பிப் பார்த்தப்படியே தாரக்கை பின் தொடர்ந்தாள் சிந்து.
ஸ்வேதாவின் அடுத்த போஷனின் கதவை திறந்தவன், சிந்துவின் பக்கம் திரும்பி “கம்..” என்று சொல்லவும், வீட்டிற்குள் பார்வையை சுழற்றியபடியே அவன் பின்னே சென்றாள் சிந்து.
அது ஒரு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அப்பார்ட்மெண்ட். பார்க்கவே கச்சிதமாக அத்தனை அழகாக இருந்தது. அதை கண்களால் சிந்து அளவெடுத்துக் கொண்டிருக்க.. “இனி இதுதான் உன் வீடு, பொறுமையா எங்கே என்ன இருக்குன்னு எல்லாம் சொல்றேன்.. இப்போ நீ ரெஸ்ட் எடுக்கணும்னா எடுத்துக்கோ..” என்றான் தாரக்.
“இல்லை பரவாயில்லை..” என்றவளுக்கு திகைப்பே முன் நின்றது. பேச்சு கூட சரியாக வரவில்லை. இங்கு தங்கி படிக்கப் போகிறோம் என தெரிந்தே வந்திருந்தாலும் அருகில் ஏதாவது ஹாஸ்டல் போல் எதிலாவது ஏற்பாடு செய்திருப்பான் என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் சிந்து. இங்கே இப்படி தனி வீடு எடுத்து தங்க வைப்பான் என அவள் ஒருநாளும் நினைத்திருக்கவில்லை.
அதிலும் அந்த வீடு இருந்த இடம் அதிலிருந்த வசதிகள் என அனைத்தையும் பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது. நிச்சயம் நிறைய செலவாகி இருக்கும் என புரிய.. ‘ஏன் இதெல்லாம்..?’ எனக்கேட்க நினைத்தாலும் அவளால் அது முடியவில்லை.
ஏனெனில் சிந்து இதைப் பற்றி கேட்டாலும் பெரிதாக பயன் எதுவும் இருக்காது. “செலவை பற்றி நீ கவலைப்படாதே, எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை..” என்ற ஒரே பதில் தான் அவனிடம் இருந்து வரும் என்பதால் அமைதியாகவே இருந்து கொண்டாள் சிந்து.
“உனக்கு எந்த ரூம் பிடிச்சுருக்கு பார்..” என தாரக் சொல்லவும், அந்த குரலில் நினைவு கலைந்தவள் திரும்பி அவனை பார்க்க.. அவனும் அவளின் பதிலுக்காக சிந்துவின் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தான். அதில் அவசரமாக அவளுக்கு பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த சிந்து “நான் இதையே எடுத்துக்கறேன்..” எனவும் ‘சரி’ என்று விட்டு மற்றொரு அறைக்குள் சென்றான் தாரக்.
பயண கலைப்பு தீர இருவரும் இரண்டு மணி நேரம் உறங்கி எழுந்தனர். முதலில் கண்விழித்த சிந்து குளித்து வேறு உடைக்கு மாறி வரவேற்பறைக்கு வந்து அங்கு இருந்தவற்றையெல்லாம் மெல்ல பார்த்துக் கொண்டிருக்க.. தாரக்கும் குளித்து முடித்து வெளியில் வந்தான்.
“ரெஸ்ட் எடுக்கலையா நீ..?” என அவன் கேட்கவும், அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவளை கண்டு “எதுக்கு இவ்வளவு பதட்டம்..? இங்கே வேற யாரு வந்துட போறா..?” என்றான் தாரக். “இல்லை, புது இடம் அதான் கொஞ்சம் பதட்டம் ஆகிடுச்சு..” என சிந்து கூறவும் “சரி ரெஸ்ட் எடுத்தியா இல்லையா..?” என்றான் தாரக்..
“தூங்கினேன், நானும் இப்போ தான் எழுந்து வந்தேன்..” என்றவளை கண்டு தலையசைத்தவன் “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்..” என கூறவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. தாரக் சென்று கதவைத் திறக்க.. ஸ்வேதா இவர்களுக்கான உணவோடு நின்றிருந்தாள்.
அவள் கையில் இருந்ததை பார்த்து “ஸ்வே எதுக்கு இதெல்லாம்..?” என்றான் தாரக். “வேற எதுக்கு சாப்பிட தான்..? இவ்வளவு பெரிய பிசினஸ்மேனுக்கு இது கூட தெரியலையா..” என்றவாறே உள்ளே வந்தவள், நேராக உணவு மேஜையில் சென்று அதை வைக்க.. “நான் பார்த்துக்க மாட்டேனா இதெல்லாம்..?” என்றான் தாரக்.
“இல்லைன்னு யார் சொன்னா..? அதை எல்லாம் நாளையிலிருந்து பார்த்துக்கோங்க.. இப்போ இதை சாப்பிடுங்க..” என்றவள், திரும்பி சிந்துவின் பக்கம் பார்த்து “வாங்க சாப்பிடலாம்..” என உரிமையோடு அழைத்தாள்.
“மேடம் உத்தரவு..” என்றவாறே தாரக் சாப்பிட அமைதியாக அமர்ந்து விட, இத்தனை இயல்பாக அவன் யாரோடும் பேசி பழகி பார்த்திராத சிந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதை வியப்பாக உணர்ந்தவாறே சிந்துவும் வந்து அமர, இருவருக்கும் சாப்பிட எடுத்து வைத்தாள் ஸ்வேதா. “இதையெல்லாம் நீ செய்யணும்னு இல்லை ஸ்வே..” என அவன் இயல்பாக கூறவும், “ஆனாலும் செய்வேன்..” என பிடிவாதமாக கூறியவள், அனைத்தையும் இருவருக்கும் அவளே பரிமாறினாள்.
“நீ சாப்பிட்டியா ஸ்வே..?” என்றவனுக்கு “அதெல்லாம் எப்பவோ ஆச்சு..” என பதில் அளித்தாள் ஸ்வேதா. அதன் பிறகு தாரக் சாப்பிட தொடங்க, சிந்து எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருக்க.. ஸ்வேதா வளவளவென பேசிக் கொண்டிருக்க.. அவளுக்கு பதிலளித்தப்படியே சாப்பிட்டு முடித்தான் தாரக்.
“அப்புறம் தீபன் நீங்க அனுப்பி விட்ட லிஸ்ட்டில் இருந்த எல்லாம் வாங்கிட்டேன், ஒருமுறை செக் செஞ்சுடுங்க.. அதுக்கு பிறகு ஏதாவது தேவைப்பட்டா நாம போய் வாங்கிட்டு வந்துடலாம்..” என்றாள் ஸ்வேதா.
“ம்ஹூம் ஸ்வேகிட்ட கொடுத்த வேலையை திரும்ப செய்யற மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை..” என்று உறுதியான குரலில் தாரக் சொல்லவும், பணிவாக குனிந்து நன்றி என்றாள் ஸ்வேதா.
அதன் பிறகும் சிறிது நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டே கிளம்பினாள் ஸ்வேதா. சிந்து தன் அறைக்குள் சென்று உடைகளை அடுக்கிக் கொண்டிருக்க.. அவளை அழைத்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுத்தவன், சமையல் செய்வதற்காக ஸ்வேதா வாங்கி வைத்திருந்த பொருட்களையும் காண்பித்தான்.
இதையெல்லாம் சிந்தும் மலைப்பாக பார்த்தபடி நின்றிருக்க.. “நீ கட்டாயம் சமைச்சு தான் சாப்பிடணும்னு எதுவுமில்லை.. ஒருவேளை உனக்கு தேவைப்படலாம்னு தான் வாங்கி வைக்க சொன்னேன், இங்கே வெளியில் சாப்பிடுவதை விட இது பெட்டர்.. அப்படி உனக்கு சமைக்கத் தெரியாதுனா எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சமைச்சு கொடுக்க சொல்றேன்.. இங்கே வேலைக்கு ஆள் வைக்கறது எல்லாம் சரி வராது..” என்றான் தாரக்.
“இல்லையில்லை அதெல்லாம் வேண்டாம் நானே செஞ்சுக்குவேன்..” என அவசரமாக சிந்து சொல்லவும், “உன்னை கஷ்டப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லை..” என மீண்டும் கூறினான் தாரக். “இதில் கஷ்டம் எல்லாம் எதுவுமில்லை எனக்கு சமைக்க வரும்..” என்றிருந்தாள் சிந்து.
அடுத்த இரண்டு நாட்கள் அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் உடன் நின்று செய்து முடித்த தாரக், அவசர தேவைக்கு அருகில் என்னென்ன இருக்கிறது, எப்படி கல்லூரிக்கு சென்று வர வேண்டும் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான்.
அவளுக்கு கல்லூரி தொடங்க இன்னும் 15 நாட்கள் இருந்தது. அதில் அவசரப்படாமல் அனைத்தையும் செய்து முடித்து தயாரானவள், மனதிற்குள்ளான சிறு படபடப்போடும் எதிர்பார்ப்போடும் கல்லூரி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
மறுநாள் கல்லூரி திறக்க இருந்தது. அன்று அதே நினைவோடு அவள் எழுந்து வெளியில் வர, தாரக் சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வேகமாக அங்கு சென்ற சிந்து “இங்கே என்ன செய்றீங்க..?” எனவும் திரும்பி பார்த்து “பிரேக் பாஸ்ட்..” என்றான்.
“ஐயோ நீங்க ஏன் இதெல்லாம்..? நான் செஞ்சு கொடுத்திருப்பேனே..!” என வேகமாக அவள் சொல்லவும், “ஏன் நான் செஞ்சு கொடுத்தா சாப்பிட மாட்டியா..?” என்றான் தாரக். “அதெல்லாம் இல்லை, ஆனா உங்களுக்கு சமைக்க தெரியுமா..?” என்று கேட்க வந்தவள் அப்படியே பாதியில் நிறுத்தி அவனை பார்க்கவும், இரண்டு நாட்களாக அவளின் சமையலை சாப்பிட்டு இருந்தவன் “உன்னளவுக்கு இல்லைனாலும் ஓரளவு சமைப்பேன்..” என்றிருந்தான் தாரக்.
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிந்து நின்றிருக்க.. “இன்னைக்கு நான் சமைச்சதா இருக்கட்டும், நீ போய் ரெஸ்ட் எடு.. இல்லை வேற வேலை ஏதாவது இருந்தா பார்..” என்றான் தாரக்.
‘வேண்டாம் நான் செய்யறேன்’ என உரிமையோடு சென்று தாரக்கின் கையில் இருந்து கரண்டியை வாங்கிக் கொள்ள அவளால் முடியவில்லை. அதற்கு மேல் மறுத்துப் பேசவும் முடியாமல் அமைதியான தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்த சிந்து, உணவு மேஜையிலேயே சென்று அமர்ந்து கொண்டாள்.
அங்கிருந்து பார்க்கும் போது தாரக் என்ன செய்கிறான் என எதுவும் தெரியவில்லை. அவனின் முதுகு மட்டுமே தெரிய.. கன்னத்தில் கை வைத்தபடி அவனையே சிந்து பார்த்திருக்க.. திரும்பி இரண்டு முறை அவளை பார்த்தவன் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
தோசை தக்காளி சட்னியோடு அடுத்த சில நிமிடங்களில் அவள் முன் தட்டைக் கொண்டு வந்து வைத்தான் தாரக். அந்த மொறுமொறு தோசையும் எண்ணெய் கசிய சுருண்டு வந்திருந்த தக்காளி சட்னியையும் பார்க்கும் போதே எடுத்து சாப்பிட வேண்டும் என தோன்றியது.
சிந்து அப்படியே தட்டைப் பார்த்துக் கொண்டிருக்க.. “பயப்படாம சாப்பிடலாம் உயிருக்கு நான் உத்தரவாதம்..” என்றான் தாரக். “இல்லை அதுக்காக பார்க்கலை..” என அவசரமாக சிந்து சொல்லவும், “நான் சாதாரணமா பேசறதுக்கு எல்லாம் நீ இவ்வளவு பதற வேண்டாம் செந்தூரிகா.. சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு..” என்றவன் சமையலறைக்குள் மீண்டும் சென்று விட, ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டவளை அதன் ருசி நொடியில் அந்த தட்டை காலி செய்ய வைத்திருந்தது.
இரண்டு ஆப் பாயில் போட்டுக் கொண்டு வந்து அவள் முன் வைத்திருந்தவன், தட்டு அதற்குள் காலியாக இருப்பதைக் கண்டு “இரு தோசை கொண்டு வரேன்..” என உள்ளே செல்ல முயல.. “இல்லை வேண்டாம் இதுவே போதும், இத்தனை எல்லாம் என்னால் சாப்பிட முடியாது..” என்றாள் சிந்து.
“இனி நீ சாப்பிட்டு தான் ஆகணும் செந்தூரிகா.. இங்கே தனியா இருக்க போறே உன்னை நீ தான் பார்த்துக்கணும்.. இங்கே நீ படிக்க வந்திருக்க, அது சரியா நடந்து முடியணும்னா நீ ஆரோக்கியமா இருக்கணும் புரியுதா..?” என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கூறினான் தாரக்.
அதில் அவள் அமைதியாக தலையசைக்க.. மீண்டும் இரண்டு தோசைகளைக் கொண்டு வந்து அவள் தட்டில் வைத்தான் தாரக். அதை மறுக்க மனமில்லாமல் சாப்பிட்டு முடித்தவள், “இந்த தக்காளி சட்னி மாஸ்டர் பீஸ்.. இது வரைக்கும் இப்படி ஒரு டேஸ்ட்டில் நான் இதை சாப்பிட்டதே இல்லை..” என்று தன்னை மறந்து சிந்து கையை ருசி பார்த்துக் கொண்டே சொல்லிவிட, “தனாவும் இதையே தான் சொல்லுவா.. என் சமையலில் அவளுக்கு ரொம்ப பிடிச்சது இந்த தக்காளி சட்னி..” என்று முகம் மலர கூறினான் தாரக்.
ஆனால் சொல்லிவிட்ட பின்பே தன் தவறு புரிய, சட்டென சிந்துவின் முகத்தை தாரக் கவனிக்க.. அவளோ சிறு புன்னகையோடு அதைக் கேட்டிருந்தாள். எங்கே பழைய நினைவுகளை அவளுக்கு கிளறி விட்டு விட்டோமோ..! என்று எண்ணி பதட்டமான தாரக், அப்படி எதுவும் அவளின் முகத்தில் தெரியாததில் நிம்மதியானான்.
தாரக்கின் முகத்தை கவனித்திருந்த சிந்துவுக்கும் அவன் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆனால் இதைப்பற்றி வேறு எதுவும் பேசி இப்போது இருக்கும் மனநிலையையும் சூழ்நிலையையும் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் அமைதியாகவே இருந்து விட்டாள் சிந்து.
அவளுக்கு கல்லூரி தொடங்கி இருக்க.. முதல் மூன்று நாட்கள் சிந்துவை தானே அழைத்துச் சென்று அழைத்து வந்து அவளுக்கு அனைத்தையும் பழக்கப்படுத்தினான் தாரக். முன்பே அவன் அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும் இப்படி சென்று வரும் போது இன்னும் நன்றாகவே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதோடு அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலரோடு ஸ்வேதாவின் மூலம் அறிமுகமும் ஏற்பட்டிருக்க.. கொஞ்சம் பதட்டம் நீங்கி மெல்ல மெல்ல இந்த சூழ்நிலைக்கு பழகிக் கொள்ளத் தொடங்கினாள் சிந்து.
மறுநாள் ஸ்வேதாவை வரவழைத்து எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் அவளிடம் கேட்கும்படி கூறினான் தாரக். ஸ்வேதாவும் இந்த ஒரு வாரத்தில் நட்போடு நன்றாகவே சிந்துவுடன் பழகி இருக்க அவளும் மறுக்கவில்லை.
ஸ்வேதா இங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறாள். மூன்று வருடமாக அவள் அமெரிக்காவில் இருப்பதோடு அவளுக்கு இந்தப் பகுதியில் அனைத்தும் நன்றாகவே தெரிந்திருந்தது. இதெல்லாம் புதிதாக வந்த சிந்துவுக்கு உதவியாக இருக்கும் என நினைத்தே ஸ்வேதாவுக்கு அருகிலேயே வீடு பார்த்திருந்தான் தாரக்.
இதையெல்லாம் விளக்கமாக கூறியவன், எப்போது என்ன தேவை என்றாலும் தயங்காமல் தன்னை அழைக்குமாறும் கூறிவிட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
இதையெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தவள், கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து தயாராக சென்றாள்.
**
இங்கே அவ்வளவு பெரிய வீட்டில் தனியே குட்டி போட்ட பூனை போல் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். தன்னை சேர்ந்தவர்கள் என்று யாரும் இல்லாமல் திடீரென தனித்து விடப்பட்டது போல் இருக்க.. அதில் உண்டான கோபத்தை தன் நடையில் காண்பித்துக் கொண்டிருந்தார் நாகராஜ்.
அவர் எவ்வளவு முயன்று பார்த்தும் இப்போது வரை முத்துவுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்னவானது என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை.
தனக்குத் தெரிந்த எல்லா வகை ஆட்களை வைத்தும் முயற்சித்துப் பார்த்து விட்டார். ஆனாலும் யாராலும் முத்துவைப் பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு தாரக் தனக்குத் தெரிந்த மேலிடத்தின் மூலம் அழுத்தம் கொடுத்திருந்தான்.
அன்று தன் வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவருடன் வந்த காவலாளிகளுக்கும் மட்டுமே அன்று இரவு அங்கு நடந்தது தெரியும். மற்ற அனைவருக்கும் இதைப் பற்றி எதுவுமே தெரிய வராமல் பார்த்துக் கொண்டவன், நிஜமாகவே முகமூடி கொள்ளையர்கள் தான் பிடிபட்டனர் என்று மற்றவர்களை நம்ப வைத்து இருந்தான்.
இதில் அவரால் எதையுமே கண்டறிய முடியவில்லை. அதேபோல் சிவாவும் அவன் உடன் இருந்தவர்களும் எப்படி மாயமானார்கள் என்றும் அவருக்கு புரியவில்லை. இதைப்பற்றி யோசித்து யோசித்து குழம்பியவருக்கு தன்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே பெரும் கோபமாக மாறியது.
தாரக்கிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே அவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. வழக்கமாக அவர் அதை காண்பிக்கும் யாருமே இன்று அருகில் இல்லாததில் தன் கோபத்தை யாரிடம் கொட்டுவது என தெரியாமல் மது பாட்டில்களை தான் முழுதாக தனக்குள் சரித்துக் கொண்டிருந்தார் நாகராஜன்.
ஆனால் அதுவுமே அவரை அமைதிப்படுத்தவில்லை. இதில் தன் முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போன கோபத்தோடு ஏதாவது செய்தே தீர வேண்டும் என முடிவெடுத்தவராக அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க.. இவரின் தேடலுக்கு சொந்தக்காரனான சிவாவும் அவனுடன் இருந்தவர்களும் அங்கு கொத்தடிமைகளாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.
மனிதர்களை கொத்தடிமைகளாக விலை கொடுத்து வாங்கி ஒருவேளை சாப்பாடு மட்டும் கொடுத்து 20 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
கை கால் உடைந்தவர்கள் என்று கூட பாராமல் இந்த நிலையிலும் தொடர்ந்து அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் சுரேஷ். வலி ஒரு பக்கம், நேரத்திற்கு பசிக்கு உணவு கிடைக்காத கோபம் ஒரு பக்கம், மருந்து மாத்திரை கொடுக்காமல் வலியோடு துடிக்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பக்கம் என சிவா உயிரோடு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.