All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ் 
 
பிரிதிலிபியில் போட்டி கதை ஒண்ணு எழுதிட்டு இருக்கேன்.. விருப்பம் உள்ளவர்கள் படித்து பாருங்க..
"யாரோவாய் அன்று..! யாதுமாய் இன்று..!!", - பிரதிலிபியில் படிக்க :,
 
 
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
 
அந்த ஆப் இன்ஸ்டால் செஞ்சு 16எபி வரை தொடர்ந்து படிக்கலாம்.. அதற்கு பின் படிக்க தினமும் ஒரு எபி ஓபன் ஆகும்.. அவ்வளவு எல்லாம் எனக்கு பொறுமை இல்லைனா உடனே சப்ஸ்க்ரைப் செஞ்சும் படிக்கலாம்..
 
தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
"யானும் நீயும் எவ்வழியறிதும்..!! 1& 2", - பிரதிலிபியில் படிக்க :,
 
 
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ் 
 
ஒரு மன்னிப்பு கடிதத்தோடு வந்திருக்கேன்.. முதலில் உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாரி 🙏🙏🙏
 
உங்களுக்கு எல்லாம் என் உடல்நிலையை பற்றி தெரியும். அதனால் தான் அவசரப்படாம இப்போ எல்லாம் பொறுமையா எழுதுறேன்..
 
இப்போ புத்தக கண்காட்சிக்கான கதையை எழுதி முடிக்க வேண்டிய சூழ்நிலை. ஒரே நேரத்தில் என்னால் இரண்டு கதைகளை இப்போது இருக்கும் உடல் நிலையில் எழுத முடிவதில்லை..
 
கொஞ்சம் அதிகமா ஸ்ட்ரெஸ் எடுத்தா மைக்ரேன் வேறு ஸ்டார்ட் ஆகி படுத்தி எடுத்து விடுகிறது.. அதனாலேயே பிரிதிலிபி கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருந்தேன்..  
 
ஆனால் புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்குள் நான் நேரடி கதையை முடித்து பிரின்டிங்கிற்கு கொடுக்க வேண்டும்..
 
இப்போது எனக்கு வேறு வழி இல்லை மீள் நேசம் முகிழ்காதோ கதையின் இரண்டாம் பாகத்தை டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்குகிறேன்..
 
ஏனெனில் அவசரப்பட்டு அதையும் இப்போது தொடங்கி விட்டு சரியாக அத்தியாயங்களை கொடுக்க முடியாமல் தவிப்பதை விட, 20 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு நேரடி புத்தகத்திற்கான கதையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்.. 
 
என் சூழ்நிலையை புரிந்து காத்திருப்பீர்கள் என நம்புகிறேன் 
 
புரிதலுக்கு நன்றி ❤️❤️
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 26
 
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
 
என திடீரென்று சத்தமாக கேட்ட பாடலின் ஒலியில் திடுக்கிட்டு கண் விழித்தாள் சிந்து.
 
 
சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் இருந்து சத்தமாக பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொழுது அப்போதே விடிய தொடங்கி இருக்க, முதலில் சுற்றுப்புறம் எதுவும் அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
 
 
‘எங்கே இருக்கிறோம்..?’ என்பது போல் விழிகளை சுருக்கி பார்த்தவாறே திரும்பியவள், அருகில் தாரக் அமர்ந்திருப்பதை கண்டு சிறு திகைப்போடு எழுந்தமர்ந்தாள்.
ஒரு நொடி அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அதன் பிறகே நேற்று இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வர, சோர்வோடு விழிகளை மூடினாள் சிந்து.
 
 
சிந்துவின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் தாரக். அதில் அவளின் பயம், பதட்டமென எல்லாம் புரிய “ஆர் யூ ஓகே..?” என மென்மையான குரலில் தாரக் கேட்கவும், மெல்ல விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள் சிந்து.
 
 
அந்தப் பார்வையில் அத்தனை வெறுமை நிறைந்திருந்தது. அரை நொடிக்கும் குறைவான நேரமே தாரக்கை அவள் பார்த்தது. பின் மீண்டும் விழிமூடிக்கொண்டாள் சிந்து.
 
 
அவளின் நிலையை உணர்ந்தது போல் தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து “கொஞ்சம் இதை குடி..” என அவளிடம் நீட்டினான் தாரக். ஆனால் விழி திறந்து அதை பார்த்துவிட்டு தண்ணீரை வாங்காமல் மீண்டும் தன் விழிகளை மூடிக்கொண்டாள் சிந்து.
 
 
அவனும் வேறு எதுவும் பேசாமல் காரை ஓட்ட.. அவளுள் ஏதேதோ நினைவுகள் எழுந்து அலைமோதியது. அதிலும் நேற்றைய ஞாபகங்கள் வந்தவுடன் அவளையும் அறியாமல் உடல் பயத்தில் லேசாக உதறியது. 
 
 
இதை கவனித்திருந்த தாரக் அடுத்து வந்த திருப்பத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான். கார் திடீரென நின்றதும் மெல்ல விழிகளை திறந்து சிந்து பார்க்கவும், எங்கோ இறங்கிச் சென்று விட்டு வந்தவன் அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான். 
 
 
‘என்ன இது..?’ என்பது போல் சிந்து அவனை பார்த்திருக்க.. “ரொம்ப டயர்டா தெரியறே, கடைசியா எப்போ சாப்பிட்டியோ..! இதை வாங்கிக்கோ..” என்றான் தாரக். அவனின் செயல்கள் புரியாமல் புதிதாகவும் புதிராகவும் தாரக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
அவளாக இதை வாங்கப் போவதில்லை என உணர்ந்து “இப்படியே பார்த்துட்டு இருந்தா போதுமா..! கிளம்ப வேண்டாமா..? முதலில் இதை பிடி, சீக்கிரம் சாப்பிட்டு முடி..” என வேண்டுமென்றே குரலில் அழுத்தத்தை கூட்டி கூறினான் தாரக்.
 
 
அதில் லேசாக உடல் நடுங்க தானாக சிந்துவின் கரங்கள் உயர்ந்து தாரக்கிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டது. இதை எதிர்பார்த்தே பேசி இருந்தவன், “நைட் முழுக்க டிரைவ் செஞ்சுட்டு வந்து இருக்கேன், சீக்கிரம் சாப்பிட்டு முடி.. இங்கே இருந்து கிளம்பணும்..” என்று அதே அழுத்தத்தோடான குரலில் சொல்லிவிட்டு, தன் முன் அவள் சாப்பிட தயங்குவாள் என புரிந்து சற்று தள்ளி இருந்த மரத்தடியில் சென்று நின்றுக் கொண்டான் தாரக்.
 
 
அவன் குரலில் அழுத்தம் இருந்தாலும் துளியும் கோபம் இல்லை என்பதை கவனிக்கும் நிலையில் இல்லாத சிந்து எப்போதும் அவனைக் கண்டதும் உண்டாகும் அதே பதட்டத்தோடு தாரக் சொன்னதை செய்ய முயன்றாள். வேகமாக சாப்பிட்டு முடித்து அருகில் இருந்த நீரையும் எடுத்து பருகியவள், கை கழுவுவதற்காக காரில் இருந்து கீழே இறங்க.. அதை கண்டு விட்டு வந்து டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான் தாரக்.
 
 
அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சிந்து மீண்டும் காரில் ஏறி அமர, தாரக் காரை கிளப்பினான். இப்போது சிந்து இருக்கும் மனநிலையில் அவளுக்கு ‘தாரக்கோடு ஏன் செல்கிறோம்..? எங்கே செல்கிறோம்..?’ என்று கூட யோசிக்க தோன்றவில்லை. 
 
 
ஒரு காலத்தில் இவனிடம் இருந்து தப்பித்தால் போதும், அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என நினைத்திருந்தவள் தான். இன்று அவனோடே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டு சிந்து அமர்ந்திருக்க.. தாரக்கின் கார் அவனின் வீட்டிற்குள் நுழைந்து நின்றது. 
 
 
அதுவரை விழிமூடி அமர்ந்திருந்த சிந்து கார் நின்றதை உணர்ந்து விழிகளை திறந்தவள், “வீடு வந்தாச்சு இறங்கு..” என்ற தாரக்கின் குரலில் உடல் ஒருமுறை தூக்கி போட விழிகளை மீண்டும் மூடிக்கொண்டாள். 
 
 
அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மேலேழுந்து வந்து அழுத்தியது போல் இருந்தது. இந்த வீட்டிற்குள் எப்படி முதன்முறை இழுத்துச் செல்லப்பட்டோம் என்பது அவள் மனக்கண்ணில் வந்து நின்றது.
 
 
முதன்முறை இங்கே வந்தபோது அனுபவித்த வலிகள் எல்லாம் நொடியில் மீண்டும் மனதில் வர.. அவளையும் அறியாமல் உடல் நடுங்கியது. இதை உணர்ந்தது போல் அவளைப் பார்த்தவன், ஒரு நொடி விழிமூடி ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு “இது என் வீடு, இதுக்கு முன்னே நீ இங்கே வந்ததில்லை.. இறங்கி வா..” என்றான் மென்மையான குரலில் தாரக். 
 
 
அதுவரை உடல் நடுங்க இதழ் கடித்து தன் கண்ணீரை வெளியிட விரும்பாமல் விழிமூடி அமர்ந்திருந்த சிந்து, அந்த வார்த்தைகளிலோ அவன் குரலிலோ, ஏதோ ஒன்றில் மெல்ல விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள்.
 
 
“தைரியமா இறங்கு, நீ பயப்படற மாதிரியோ கவலைப்படற மாதிரியோ இங்கே இனி எதுவும் நடக்காது..” என மீண்டும் அவன் சொல்ல, ‘எப்படி உணர்கிறோம்..?’ என புரியா ஒரு உணர்வில் அப்படியே சிந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக தன் பக்க கதவை திறந்து கொண்டு இறங்கியவன், சிந்துவின் பக்கம் வந்து கதவை திறந்து “ஹ்ம்ம் இறங்கு..” என்றான் சற்றே அழுத்தத்தோடான குரலில். 
 
 
வழக்கம் போல் இந்த முறையும் அவனின் அந்த குரல் அவளிடம் சரியாக வேலை செய்திருந்தது. அதில் மறுப்பேதும் சொல்லாமல் சிந்து இறங்கி நிற்க.. “என் கூடவா..” என்று விட்டு விறுவிறுவென உள்ளே சென்றான் தாரக்.
 
 
அவனை பின் தொடர்ந்தவளை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றவன், ஒரு அறையின் முன் நின்று “நீ இங்கே தங்கிக்கோ..” எனவும் தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள் சிந்து. 
 
 
“நான் வெளியே சொன்னது தான் இப்போவும் சொல்றேன், நீ கவலைப்படறது போலவோ வருத்தப்படறது போலவோ இங்கே எதுவும் நடக்காது.. தைரியமா இரு, திரும்பத் திரும்ப என்னை இதை சொல்ல வைக்காதே, புரியுதா..? உள்ளே போ..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தவன் பின் பக்கத்து அறையை காண்பித்து “இதுதான் என் ரூம், நான் இங்கே தான் இருப்பேன், ஏதாவது தேவைனா என்னை யோசிக்காம கூப்பிடு..” என்ற விட்டு உள்ளே சென்று கதவடைத்துக்கொண்டான் தாரக். 
 
 
அவன் சென்ற திசையையே சில நொடிகள் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சிந்து, பின் சோர்வோடு தனக்கென ஒதுக்கப்பட்ட அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
 
 
அந்த அறை அத்தனை வசதிகளோடும் அவ்வளவு பெரியதாகவும் இருந்தது. ஆனால் எப்படி வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து எதையும் கவனிக்காமல் உள்ளே வந்தாளோ அதே போல் இப்போதும் எதையும் கண்டுகொள்ளாமல் சென்று அங்கு ஜன்னலுக்கு அருகில் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து தலையை ஜன்னலில் சாய்த்தாள் சிந்து. 
 
 
மனமும் உடலும் அவளுக்கு அத்தனை சோர்ந்து போயிருந்தது. எதையும் யோசிக்கவோ செய்யவோ தோன்றாமல் சிந்து அப்படியே அமர்ந்திருக்க.. கதவை தட்டும் சத்தம் கேட்டது. சோர்வாக விழிகளை கதவின் பக்கம் திருப்பினாள் சிந்து. அதே நேரம் அங்கு வேலை செய்யும் உமா அவளுக்கான உணவோடு அறைக்குள் நுழைந்தார். 
 
 
அவரை சிந்து கேள்வியாக பார்க்கவும், சிந்து அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்பு இருந்த வட்ட மேஜையில் கொண்டு வந்து உணவு ட்ரேயை வைத்தவர், “சார் உங்களுக்கு கொடுக்க சொன்னார் மேடம்..” என்று விட்டுச் செல்ல.. அவர் சென்ற திசையையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
அதன் பிறகே சிந்துவுக்கு வெளிச்சம் குறைய தொடங்கி இருள் சூழ்ந்திருப்பது புரிந்தது. எவ்வளவு நேரம் இங்கேயே அமர்ந்திருந்தோம் எனக்கு கூட அவளுக்கு தெரியவில்லை. 
 
 
அப்போதும் எதையும் செய்யத் தோன்றாமல் சிந்து அதே இடத்தில் அமர்ந்திருக்க.. லேசாக கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் தாரக். அவனை கண்டதும் அதுவரை இல்லாத பதட்டம் தானாக வந்து ஒட்டிக்கொள்ள.. சட்டென்று எழுந்து நிற்க முயன்றதில் லேசாக தள்ளாடி கீழே விழ இருந்தவள், அருகில் இருந்த மேஜையை பிடித்துக் கொண்டு நின்றாள். 
 
 
“ஹே கேர்புல்..” என்றவன், “என்ன அவசரம் பொறுமையா எழுந்திருக்கலாமே..?” எனவும், பதிலேதும் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. இதுவரை அவளின் அறை கதவை தட்டிவிட்டு எல்லாம் தாரக் உள்ளே நுழைந்ததில்லை. அதுவே அவள் மனக்கண்ணில் வந்து கொண்டிருக்க..
 
 
அதற்குள் தானாக அவள் அருகில் இருந்த உணவின் மீது அவன் பார்வை செல்ல.. “இன்னும் சாப்பிடலையா நீ..?” என்றவன், அப்போதே அறையை கவனிக்க.. அவள் அறையை பயன்படுத்தியது போலவும் தெரியவில்லை. ‘வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாளோ..!’ என நினைத்தவன் அப்போதே சிந்து இப்போது வரை சரியாக நிற்க முடியாமல் தடுமாறி மேஜையின் உதவியோடு நிற்பதை கவனித்தான். 
 
 
வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் கால் உணர்விழந்து போயிருப்பது புரிய.. சட்டென அவளைப் பிடித்து அமர வைக்க எண்ணி கையை நீட்டியவாறே சிந்துவை நோக்கி தாரக் இரண்டடி எடுத்து வைத்தான். 
 
 
ஆனால் அதற்கே பதட்டமாகி வேகமாக பின்னுக்கு நகர்ந்தவள், அங்கிருந்த நாற்காலியில் இடித்துக் கொண்டு சரிய பார்க்க.. அதற்குள் அவளைத் தாங்கி பிடித்திருந்தவன், மெல்ல கை தாங்கலாக அவளை பிடித்து அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தான்.
 
 
தன் நெருக்கம் அவளுக்கு பதட்டத்தை கொடுப்பது புரிய.. மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை அவளிடம் பேச விரும்பாமல் அதை தவிர்த்தவன், “இங்கே பார் செந்தூரிகா, பசியோட இருந்தா சரியா யோசிக்க முடியாது.. முதலில் நல்லா சாப்பிடு, அப்புறம் ரெஸ்ட் எடு.. இப்போ உனக்கு தேவை இது இரண்டும் தான்.. வேற எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம், பசியோட யோசிச்சா தெளிவா யோசிக்க முடியாது.. இப்படி நாள் முழுக்க ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாதால் மாற போறது எதுவுமில்லை.. இன்னும் நீ பிரெஷ் ஆக கூட இல்லை பார், குளிச்சிட்டு சாப்பிடு..” என்று தொடங்கியவன், அதன் பிறகே அவளுக்கான உடைகள் எதுவும் இங்கு இல்லை என்பது நினைவுக்கு வர.. “உனக்கு ஏதாவது தேவைனா லிஸ்ட் கொடு, வர வைக்கறேன்.. தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்காம, இப்போ சாப்பிட்டு ரெஸ்ட் எடு..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தவன், சிந்துவின் கேள்வியில் அப்படியே நின்றான்.
 
 
அதில் தாரக் தலையை மட்டும் திருப்பி அவளை பார்க்க.. மீண்டும் “நீ.. நீங்க.. த.. தனா அக்கா ஹஸ்பண்டா..?” என்றிருந்தாள் சிந்து. இதில் அவளைப் பார்ப்பது போல் சரியாக திரும்பி நின்றவன், ஏதோ சொல்ல வந்து பின் இறுதி நொடியில் எதுவும் சொல்லாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
 
தாரக் அறையின் கதவை அடித்து மூடி விட்டுச் சென்றிருந்த சத்தத்தில் உண்டான பயத்தோடு விழிகளை இறுக மூடிக்கொண்டிருந்தாள் சிந்து. இன்று முழுக்க வேறு ஒருவனாக அவள் முன் இருந்தவன், இந்த ஒரு நொடியில் பழைய தாரக்காக வெளிப்பட்டிருந்தான்.
 
 
*****
 
 
தாரக் சொல்லிச் சென்ற பிறகே குளிக்க வேண்டும் என்ற எண்ணம் சிந்துவிற்கு வந்திருந்தது. அதன் பின்பு தன்னை குனிந்து பார்த்துக் கொண்டவள், உடலும் உடையும் அழுக்காக இருப்பதை உணர்ந்து குளிக்க எழுந்து செல்ல.. அதே நேரம் மீண்டும் அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார் உமா. 
 
 
அவர் கையில் இருந்த ஒரு சல்வாரை சிந்துவின் முன் நீட்டியவர் “சார் உங்களுக்கு டிரஸ் ஏதாவது வாங்கி கொடுக்க சொன்னாரு மேடம், எப்படி வேணும்னு சொன்னீங்கனா நாளைக்கு வாங்கிட்டு வரேன்.. இங்கே பக்கத்தில் கடை எதுவுமில்லை.. இன்னைக்கு சண்டே பாருங்க, அதனால் தான் சொல்றேன்.. இது என் பொண்ணுக்கு கொடுக்க வாங்கி வெச்சுருந்தேன், அவளுக்கும் உங்க வயசு தான் இருக்கும்.. ஊருக்கு போகும் போது எடுத்துட்டு போகலாம்னு தான் வெச்சுருந்தேன்.. உங்களுக்கு சரியா இருக்கும் நீங்க போட்டுக்கோங்க..” என உமா நீட்ட.. “ஐயோ உங்க பொண்ணுக்கு வாங்கினது எல்லாம் எனக்கு வேண்டாம், அவங்களுக்கே கொடுத்துடுங்க..” என்றாள் சிந்து. 
 
 
“அட பரவாயில்லை மேடம், நான் ஊருக்கு போக இன்னும் ஒரு மாசத்துக்கு மேலே ஆகும்.. திரும்ப வாங்கிக்கறேன், இப்போ நீங்க போட்டுக்கோங்க..” என சொல்லிவிட்டு திரும்பிய உமா, உணவு இன்னும் சாப்பிடப்படாமல் அப்படியே இருப்பதை கண்டு “அச்சோ நீங்க இன்னும் சாப்பிடலையா மேடம்..? எல்லாம் ஆறிப் போய் இருக்குமே..! நான் சூடு செஞ்சு கொண்டு வரேன்..” என அதை எடுக்க முயல, “இல்லை வேண்டாம், அப்படியே இருக்கட்டும் பரவாயில்லை..” என்றாள் சிந்து. 
 
 
அதன் பின் உமா அங்கிருந்து சென்றுவிட, குளித்து தயாராகி வந்து அங்கிருந்த உணவை சில நொடிகள் அமைதியாக பார்த்திருந்தாள் சிந்து. அவளுக்கு சாப்பிடும் மனமோ எண்ணமோ கொஞ்சமும் இல்லை. ‘ஆனால் இப்போது சாப்பிடவில்லை என்றால் அதற்கு வேறு பதில் சொல்ல வேண்டி இருக்கும்..! மீண்டும் தாரக் தன் முன் வந்து நின்று கேள்வி கேட்பான்..’ என்ற ஒரே எண்ணமே அமைதியாக அவளை யோசிக்காமல் சாப்பிட வைத்திருந்தது. 
 
 
அதன் பின் சிறிது நேரம் அதே இருக்கையில் அமர்ந்திருந்தவள், மீண்டும் கால் மறுத்துப் போக தொடங்கவும் எழுந்து சென்று படுக்கையில் பெரும் தயக்கத்தோடே அமர்ந்தாள்.
 
 
இதை எல்லாம் அனுபவிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ அவளால் கொஞ்சமும் முடியவில்லை. ‘எந்த உரிமையில் இங்கே வந்திருக்கிறோம்..? எதற்காக இங்கே இருக்கிறோம்..?’ என்று அவளுக்கு புரியவே இல்லை. அப்படியொரு சூழ்நிலையில் அந்த நொடி செய்வதறியாது கிளம்பி வந்து விட்டிருந்தவளுக்கு, அடுத்து என்ன என்ற கேள்வியை பெருமளவில் மனதை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. 
 
 
அதில் எப்போது படுத்தாள்..? எப்படி உறங்கினாள்..? என அவளுக்கே புரியவில்லை. அந்த விலை உயர்ந்த மென்மையான மெத்தை அவளை அப்படியே உள்ளிழுத்துக் கொள்ள.. பஞ்சு பொதி போல் இருந்த அதற்குள் புதைந்து போயிருந்தாள் சிந்து. 
 
 
அப்படியெல்லாம் உன்னை நிம்மதியாக விட்டு விட மாட்டேன் என்பது போல் முந்தைய நாளின் சம்பவங்கள் எல்லாம் அவளுக்கு கனவாக வரத் தொடங்கி இருந்தது. 
 
 
அதில் அவர்களிடமிருந்து தப்பிக்க இவள் போராட.. சிவா தன் குழுவோடும் கோர சிரிப்போடும் சிந்துவை நெருங்க.. தன் முகத்தின் அருகில் சிவாவின் முகம் வருவதை கண்டு உண்டான அலறலோடு எழுந்தமர்ந்தாள் சிந்து.
 
 
அந்த ஏசி அறையிலும் அவளுக்கு அப்படி வேர்த்திருந்தது. முகம் எங்கும் வேர்வை துளிகள் படர்ந்திருக்க.. படபடவென அடித்துக் கொண்ட இதயத்தை தன் இரு கரம் கொண்டும் அழுத்தி பிடித்து நிறுத்த முயன்றவளுக்கு, இது கனவு என்று புரியவே பல நொடிகளானது.
 
 
அதன் பின்பே சுற்றுப்புறத்தை உணர்ந்தவள், அங்கிருந்து தப்பித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் உண்டாக.. நேரத்தை பார்க்க, அது மூன்றை தொட்டுக் கொண்டிருந்தது. அதில் உண்டான நிம்மதியோடு நீண்ட பெருமூச்சை இழுத்து வெளியிட்டு தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள் சிந்து.
 
 
அவளுக்கு படபடப்பு இன்னும் அடங்குவது போல் தெரியவில்லை. அதில் மெதுவாக எழுந்து அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவளின் பார்வை ஜன்னல் வழி தெரிந்த பால்கனியின் மீது பதிந்தது. அதில் நன்றாக ஜன்னலில் அருகே சென்று திரைசீலையை விலக்கினாள் சிந்து.
 
 
அழகிய கண்ணாடி கதவுக்கு பின் பால்கனி தெரிய.. மெல்ல அதை திறந்து கொண்டு சென்று நின்றவளின் மனப்போராட்டத்தை தணிப்பது போல் குளிர்ந்த தென்றல் வந்து அவளை தீண்டியது. 
 
 
இவ்வளவு நேரம் ஏசி அறையில் உண்டாகாத ஆசுவாசம் இந்த நொடி அவளுக்கு ஏற்பட தொடங்க.. மெல்ல விழிமூடி சில நொடிகள் அப்படியே நின்றாள் சிந்து. சிறைப்பறவை சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் அந்த நொடி அவளுக்கு தோன்ற.. மெல்லிய வறண்ட புன்னகை அவள் இதழ்களில் தவழ்ந்தது. 
 
 
எந்த யோசனையும் இல்லாமல் எதைப்பற்றியும் சிந்திக்க தோன்றாமல் தன் வாழ்வை போலவே இருள் படர்ந்து எப்போது விடியும் என்பது போல் இருந்த வானத்தை பார்த்தபடியே வெகு நேரம் அசையாமல் அங்கேயே நின்று விட்டாள் சிந்து. 
 
 
திடீரென “தனாஆஆ..” என்ற அலறலோடு தாரக்கின் குரல் கேட்கவும், தன் நினைவு கலைந்து அந்த பக்கம் சிந்து பார்வையை திருப்ப.. பக்கத்து அறையின் பால்கனி கதவு திறந்து இருப்பது தெரிந்தது. அதன் வழியே காற்றில் திரைசீலைகள் அலைபாய்ந்து கொண்டிருக்க.. அதன் வழியே மெல்லிய வெளிச்சத்தில் படுக்கையில் தாரக் அமர்ந்திருப்பது தெரிந்தது. 
 
 
தலையைப் பிடித்தபடி குனிந்து அமர்ந்திருந்தவன் “நோ.. நோ..” என்று மட்டும் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டிருப்பது அந்த இருளின் அமைதியில் அவளுக்கு தெளிவாக கேட்டது. அவனும் தன்னைப் போலவே கனவு கண்டு முழித்திருப்பது புரிய.. “தனா..” என அவ்வப்போது அவள் செவியில் வந்த மோதிய பெயர் சிந்துவை வருத்தம் கொள்ள செய்தது.
 
 
அதில் அவனையே கவலையாக சிந்து பார்த்திருக்க.. கண்ணீர் வழிய தலையைப் பிடித்தபடி “என்னால் மறக்க முடியலை, என்னால் அதிலிருந்து வெளியே வர முடியலை.. தனா என்னால் முடியலை..” என்று அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்தது தெளிவாக கேட்டது. 
முதன்முறையாக தாரக் கண்களில் கண்ணீரை பார்க்கிறாள் சிந்து. இதுவரை அவனை உணர்வுகளே இல்லாத மிருகமாக தான் உருவகித்து வைத்திருந்தாள். இன்று அவள் கண்ணுக்கு வேறு மாதிரி தெரிந்தான் தாரக். அவனுள்ளும் உணர்வுகள் வலிகள் இருப்பது புரிய.. கவலையோடும் வருத்தத்தோடும் அவனைப் பார்த்தாள் சிந்து.
 
 
சமீபமாக தான் அவளுக்கு நர்த்தனா மற்றும் தாரக் பற்றி தெரிய வந்திருந்தது. சுஜாதாவின் அறையில் அவள் தங்கியிருந்த நாட்களில் தான் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் எதிர்பாராமல் அவள் கையில் கிடைத்திருந்தது. 
 
 
ஆரம்பத்தில் அன்று அவள் இருந்த மனநிலையில் ‘இது என்ன..?’ என்று புரிய கூட அவளுக்கு வெகுநேரமானது. அதன் பிறகே நர்த்தனாவும் தாரக்கும் மணக்கோலத்தில் இருப்பது புரிய.. ஏதோ ஒன்று புரிவது போலும் பெரிதாக தவறு நடந்திருப்பது போலும் தோன்றியது.
 
 
ஆனால் அது என்னவென அவளுக்கு புரியவில்லை. இன்று வரை நர்த்தனாவுக்கு நடந்த எதுவும் அவளுக்கு தெரியாது. வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டாள் என்று மட்டுமே அவளுக்குத் தெரியும். அதுவும் அரசல் புரசலாக பெரியவர்கள் பேசும் போது கேட்டிருந்தது தான். 
 
 
அதன் பின் நடந்த எதுவுமே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. நர்த்தனா தன் மனதுக்குப் பிடித்தவனை மணந்து கொண்டு எங்கோ சந்தோஷமாக வாழ்வதாகத்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் புகைப்படம் கிடைக்கும் வரை..! 
 
 
அதில் கையில் இருக்கும் புகைப்படத்தை புரியாமல் பார்த்தவள், “தனா அக்கா.. தனா அக்கா ஹஸ்பெண்ட்.. என்கிட்ட ஏன்..? இப்படி என்னை ஏன் கல்யாணம்..? எதுக்காக இதெல்லாம்..!” என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லா வார்த்தைகளாக அவள் மனதில் கேள்விகளாக எழுந்து கொண்டே இருந்தது. 
 
 
ஆனால் எவ்வளவு யோசித்தும் அதற்கான பதில் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை. இதில் தலையை சுற்றுவது போல் இருக்கவும், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் சிந்து.
 
 
சில நிமிடங்களுக்குப் பிறகே சுஜாதா இந்த படத்தை ஒலித்து வைத்திருந்தது நினைவுக்கு வர, ‘அப்போ அவங்ககிட்ட கேட்டா இதுக்கான விளக்கம் கிடைக்குமா..? அம்மாவுக்கு இதெல்லாம் முன்னேயே தெரியுமா..? எதுக்கும் நேராவே கேட்டுடுவோம்..’ என அவள் முடிவெடுத்து சுஜாதாவுக்காக காத்திருந்த போது தான், நாகராஜனின் ஆட்கள் அவளை அங்கிருந்து கடத்திச் சென்றிருந்தனர். 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 27(a)
 
சுஜாதாவிடம் அவள் கேட்க நினைத்திருந்ததற்கும் கேட்காததற்கும் சிவாவின் மூலமே சிந்துவுக்கு விடை கிடைத்திருந்தது. நர்த்தனாவுக்கு நடந்ததாக அவர்கள் பேசிக் கொண்டதை எல்லாம் கேட்டவளுக்கு மனம் பதறியது.
 
 
தன்னையும் அதே போல் அவர்கள் செய்ய முயற்சித்ததற்கே அத்தனை வலிகளை அனுபவித்திருந்த சிந்துவுக்கு, ‘இதையெல்லாம் தனா அக்கா எதிர்கொண்டாளா..? இத்தனை வலிகளை அவள் அனுபவித்தாளா..!’ என்ற எண்ணமே அந்த நொடி மனதை அதிகம் உலுக்கியது.
 
 
நர்த்தனா அனுபவித்த அதீத வலிகளும் ரணங்களும் அவளுக்கு இப்போது வரை பாவம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு அவர்களின் பேச்சிலிருந்தும் இங்கு தாரக்கின் செயல்களில் இருந்தும் நர்த்தனா இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
இதில் தன் சகோதரியை எண்ணி உண்டான வருத்தத்தோடு சிந்து நின்றிருக்கும் போதே, அவளுக்கு சட்டென அந்த ஞாபகம் வந்தது. சுஜாதா..! அவரை எப்படி மறந்து போனோம்..? வீட்டில் தன்னை காணாமல் எவ்வளவு பயந்து போயிருப்பார்..? எங்கெல்லாம் தேடி அலைந்து கொண்டிருக்கிறாரோ..! அவருக்கு நடந்ததெல்லாம் தெரியுமா..? தெரியாதா..! அங்கிருந்து தப்பித்தால் போதுமென தாரக்கோடு கிளம்பி வந்து விட்டிருந்தவளுக்கு இப்போதே தன்னை நினைத்து சுஜாதா கவலைப்படுவார் என்ற நினைவே வந்தது. 
 
 
இதைக் கூட யோசிக்க தோன்றாமல் இவ்வளவு நேரம் சுயநலமாக இருந்து விட்டதை எண்ணி வருந்தியவள், ‘நாளைக்கு முதல் வேலையா அம்மாகிட்ட பேசிடணும்..’ என்று நினைத்துக் கொண்டாள்.
 
 
மறுநாள் காலை தன் முன் வந்து நின்ற தாரக்கை சிந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க.. அவனோ மிக இயல்பான குரலில் “ஹவ் ஆர் யூ..? ஆல் ஓகேவா..! இப்போ கொஞ்சம் ஃப்ரீயா பீல் செய்யறியா..? இப்படி ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து இருந்தா அதையே திரும்பத் திரும்ப யோசிச்சுட்டு தான் இருக்கணும்.. வெளியே வா, பின்னால் தோட்டம் இருக்கு.. அங்கே கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் செய்.. ஆப்போசிட் ரூமில் ஹோம் தியேட்டர் இருக்கு, படம் பார்.. கொஞ்சம் மனசுக்கு மாற்றமா இருக்கும்..” என்று விட்டு காலை உணவு சாப்பிட அவளை வெளியே அழைத்தான் தாரக். 
 
 
இதெல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது. அதோடு நேற்று உறக்கத்தில் இருந்து அப்படி பதறி எழுந்து தலையை பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தவன், இவன் தானா..! என்பது போல் இருந்தது இன்றைய அவனின் செயல்கள் எல்லாம்.
 
 
அவள் நடந்த எதையும் மறக்கவோ அதை பற்றி யோசிக்காமல் இருக்கவோ முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்க.. அவனோ எதுவுமே நடக்காதது போல் அத்தனை இயல்பாக அதை கடந்து செல்வது அவளுக்கு வியப்பாக இருந்தது.
 
 
ஆனாலும் வழக்கம் போல் மனதில் நினைப்பது எதையும் பேசாமல் அமைதியாக வெளியில் வந்தவள், தோட்டத்தில் சென்று உலாவ தொடங்கினாள்.
 
 
பல வண்ண பூக்களோடு அத்தனை பசுமையாக இருந்தது அந்த தோட்டம். நிறைய செடிகள், கொடிகள், மரங்கள் என விதவிதமாக வளர்ந்திருக்க.. அதில் நடை பாதை அமைத்து சுற்றிலும் அழகிய கூலாங்கற்களைக் கொண்டு அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 
 
 
அதையெல்லாம் ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தவளுக்கு அங்கிருந்த பெரிய கண்ணாடி ஜன்னலின் வழியே உணவு மேஜையில் தாரக் அமர்ந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து அலைபேசியில் அவனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க.. அதில் பேசியபடியே அவசரமாக சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த அலுவலக அறைக்குள் தாரக் நுழைவதை கண்டாள் சிந்து. 
 
 
நேற்று தாரக் சொல்லும் போது கூட அவள் மனதில் பதியாத ஒன்று, விடிவதற்கு முன்பு இருளில் பால்கனியில் நின்றிருந்த போது தான் அவளுக்கு புரியவே தொடங்கியது. அது இதற்கு முன் தாரக் அவளை அழைத்து வந்த வீடு இல்லை என்பது தான்.
 
 
அந்த வீட்டோடான அவள் நினைவுகளும் அது உண்டாக்கி இருந்த பதட்டமும் அதன் பிறகு தான் சிந்துவுக்கு குறைந்தது. அதில் கொஞ்சமே கொஞ்சம் பயம் இல்லாமல் நடமாடத் தொடங்கி இருந்தவள், முடிந்தவரை இதில் இருந்து சீக்கிரம் வெளிவர வேண்டும் என எண்ணினாள். 
 
 
‘ஏனெனில் அதன் பிறகு அடுத்து என்ன என்பதை அவளால் தெளிவாக யோசிக்க முடியும். இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி தாரக்கின் உதவியில் அவனுக்கு தொந்தரவாக இருக்க முடியும்..?’ என தோன்றவும், கூடிய சீக்கிரம் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தவளுக்கு நாகராஜனின் முகம் கண் முன் வந்து அவள் நடையை தடை செய்தது. 
 
 
அதில் அவ்வளவு நேரம் குறைந்திருந்த நடுக்கம் மீண்டும் அவளுக்கு உண்டாக.. ‘அவரை எதிர்த்துக் கொண்டு எங்கே சென்று எப்படி வாழ போகிறோம்..?’ என்ற பயம் மீண்டும் அவளுள் உயிர்த்தெழத் தொடங்கியது. அதே நேரம் ‘பளார்’ என்ற அறை சத்தம் அவள் செவியை தீண்ட, சட்டென சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள் சிந்து.
 
 
அங்கு ருத்ர மூர்த்தியாக தாரக் நின்றிருக்க.. அவனுக்கு எதிரில் பவ்யமாக கைகளைக் கட்டியபடி கன்னத்தை லேசாக தடவிக் கொண்டு நின்றிருந்தான் இசக்கி. 
 
 
“ச்சீ.. இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லை..? இதுக்கா உனக்கு கத்தை கத்தையா பணம் கொடுத்து அங்கே வேலைக்கு சேர்த்தேன்..?” என்று தாரக் எரிச்சலோடு கேட்கவும், ஆரம்பத்தில் இசக்கியை இங்கே கண்டு அதிர்ந்தவளுக்கு, அதன் பின்னான தாரக்கின் வார்த்தைகள் மேலும் அதிர்வை கொடுத்தது. 
 
 
‘என்ன நடக்குது இங்கே..? இவன் எப்படி இங்கே வந்தான்..? இவர் என்ன சொல்றார்..? அப்போ இதில் எல்லாம் இவருக்கும் சம்பந்தம் இருக்கா..! என்னை இங்கே கூட்டிட்டு வந்தது காப்பாற்றுவதற்கு இல்லையா..? திரும்ப நான் பெரிய சூழலில் மாட்டிக்கிட்டேனா..!” என்று எண்ணியவளுக்கு காலுக்கு கீழே பூமி நழுவுவது போல் இருந்தது.
 
 
அதில் உண்டான தடுமாற்றத்தோடு அருகில் இருந்த சுவரை பிடித்துக் கொண்ட சிந்து, பெரும் பயத்தோடே அவர்கள் பேசுவதை கவனிக்கத் தொடங்கினாள்.
 
 
“சார் இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை..” என இசக்கி சொல்லவும் “வாயை மூடு, இதெல்லாம் ஒரு பதிலா..? இதை சொல்லவா உன்னை அங்கே அனுப்பினேன்..! எது வேணும்னாலும் நடக்கும் எப்போ வேணும்னாலும் நடக்கும் தயாரா இருன்னு சொல்லி தானே அனுப்பினேன்..! அதுக்கு பிறகும் இவ்வளவு தூரம் போக விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தியா..?” என்று கத்தினான் தாரக். 
 
 
“அப்படி இல்லை சார், அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க.. எதை பத்தியும் கவலைப்படாம எந்த எல்லைக்கும் போகக்கூடியவனுங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதெல்லாம் கோவத்தில் ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு தான் இருக்கும்னு நான் நினைச்சுட்டேன் சார்..” என உள்ளே போன குரலில் கூறினான் இசக்கி.
 
 
“கொலைகாரனில் ஏதுடா நல்லவனும் கெட்டவனும்..? அந்த அயோக்கியன் எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் செய்வான்னு தான் ஒரு அவசரத்துக்கும் பாதுகாப்புக்கும் உன்னை அங்கே உள்ளே அனுப்பினேன்.. ஆனா நீ இருந்தும் இவ்வளவு தூரம் போக விட்டதுக்கு இப்போ என்ன சொல்ல போறே..?” என்றான் தாரக்.
 
 
அதில் பதில் சொல்ல முடியாமல் இசக்கி தலைக்கவிழ, “அட்லீஸ்ட் இப்படி ஒரு பிளான் இருக்குன்னு நீ முன்கூட்டியே எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கூட போதும்.. இவ்வளவு தூரம் இதை போக விட்டு இருக்க மாட்டேன், அதை கூட நீ செய்யலை.. அப்புறம் எதுக்கு உனக்கு நான் ஒரு வருஷமா பணம் கொடுத்துட்டு இருந்தேன்..?” என்று கத்தினான் தாரக். 
 
 
“சார் இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க.. அப்படி ஒரு பிளான் நேத்து சாயந்திரம் வரைக்கும் அவங்களுக்கே இல்லை.. திடீர்னு தான் நாகராஜன் ஐயாகிட்ட இருந்து போன் வந்ததா சொல்லி முத்து எங்களை கூட்டிட்டு போனான்.. அதுக்கு பிறகு தான் எல்லாமே அதுவும் ஒரு இரண்டு மூணு மணி நேரத்தில் எல்லாமே அவ்வளவு வேகமாக நடந்துருச்சு..” என்றான் இசக்கி.
 
 
“இந்த கதையை எல்லாம் என்கிட்ட சொல்லாதே..” என்று தாரக் சிடுசிடுக்க.. “இல்லை சார், அவனுங்க கூடவே ஒரு வருஷம் இருந்திருக்கேன் மனுஷ தன்மையே இல்லாம வெட்டுவானுங்க குத்துவானுங்கன்னு தெரியும்.. ஆனா அவ்வளவு கேவலமா நடந்துப்பாங்கன்னு நானே எதிர்பார்க்கலை.. 
 
 
திடீர்னு முத்து இப்படி ஒரு பிளான் சொல்லவும், சரி கடைசி நிமிஷத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. மேடமை தப்பிக்க விடலாம், அப்படியும் இல்லைனா உயிருக்கு சேதமாகாத அளவுக்கு கொஞ்சம் ஆழமா காயப்படுத்திட்டு அவங்களுக்கு எப்படியாவது போக்கு காட்டிட்டு இவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்னு தான் ஃபர்ஸ்ட் பிளான் போட்டேன்.. 
 
 
அதனால் தான் அவங்களுக்கு முன்னே நான் வெட்டுறேன்னு போய் நின்னேன்.. திடீர்னு அவனுங்க இப்படி எல்லாம் திட்டம் போடுவானுங்கன்னு நான் எதிர்பார்க்கலை சார்.. இதை எல்லாம் தடுக்க நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன்..” என இசக்கி தன் தரப்பை சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்க.. “ஷட் அப், நடந்து முடிந்ததை பத்தி எனக்கு பேச வேண்டாம்.. இதெல்லாம் நடக்க கூடாதுன்னு தான் நான் ஒரு வருஷத்துக்கு முன்னேயே உன்னை அங்கே சேர்த்து விட்டேன், புரியுதா உனக்கு..?” என்று கர்ஜித்தான் தாரக்.
 
 
இதில் அடுத்த வார்த்தை பேசாமல் இசக்கி அமைதியாகிவிட, “கொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம் நான் வர லேட்டாகி இருந்தா.. என்னவாகி இருக்கும்..? உன்னால் அங்கே இருந்த எல்லாரையும் சமாளிச்சு இருக்க முடியுமா..? சொல்லு மேன்..” என அவன் கோபமாக கேட்கவும், மீண்டும் அமைதியாக தலை குனிந்தான் இசக்கி.
 
 
“சரியான நேரத்துக்கு அவன் மட்டும் கால் செய்யலைனா இன்னைக்கு அவ உயிரோட இருந்திருக்க மாட்டா.. நியாயமா இந்த கால் நீ எனக்கு செஞ்சு இருக்கணும்.. அதுக்காக தான் உனக்கு மாச மாசம் அவ்வளவு பணம் கொடுத்தேன்.. நான் அப்படி செய்யலாம்னு இருந்தேன், நான் இப்படி செய்யலாம்னு இருந்தேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கலை.. இதெல்லாம் எனக்குத் தேவையான பதில் இல்லை, இதை சொல்ல உன்னை நான் வேலைக்கும் வைக்கலை.. 
 
 
அந்தப் பரதேசி நா°°° எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் செய்யும்னு தான், அவன் மேலே நம்பிக்கை இல்லாம உன் ஒருத்தருக்கு இரண்டு பேரா அங்கே நம்ம ஆளுங்க இருந்தா எதுக்கும் நல்லதுன்னு நினைச்சு தான் உன்னை வேலைக்கு சேர்த்தேன்.. ஆனா அதுக்கு பயன் இல்லாம செஞ்சுட்டே..” என்று எரிச்சலோடு கூறினான் தாரக்.
 
 
“சாரி சார், எனக்கு புரியுது.. நான் இப்போ எந்த சமாதானம் சொன்னாலும் அது சரியா இருக்காது.. இந்த விஷயத்தில் என்னோட தப்பும் இருக்கு, நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருக்கணும்.. இன்னும் நிறைய முன்னேற்பாட்டோட இருந்து இருக்கணும்.. இவனுங்க முட்டாளுங்க முரடனுங்க தானே பார்த்துக்கலாம்னு கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன் சார்..
 
 
அதிலும் மேடம் ஊருக்கு வந்த நாளிலிருந்து ரொம்பவே ஜாக்கிரதையா தான் நான் இருந்தேன், ஆனா மூணு நாளாகியும் அவர் அமைதியா இருக்கவும்..” என்று தொடங்கியவன், பின் தாரக்கின் பார்வையில் தலை குனிந்து “தப்பு தான்சார்..” என்று ஒத்துக்கொள்ள.. இதற்கு மேல் இவனிடம் ‘என்ன பேசி என்ன பயன்..?’ என்பது போல் சலிப்போடு அவனைப் பார்த்தான் தாரக்.
 
 
அதே நேரம் இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டிருந்த சிந்து மெல்ல அங்கு வந்து நின்றாள். அதில் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் இசக்கி பார்வையை தழைத்துக் கொள்ள.. கேள்வியாக சிந்துவை பார்த்தான் தாரக்.
 
 
“நீங்க சொல்றது தப்பு, அவர் நிஜமாவே என்னை காப்பாத்த நிறைய முயற்சி செஞ்சார்.. அவர் மட்டும் இல்லைனா நீங்க வரும்போது நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன்.. அவங்களை இவர் தான் தடுக்க போராடிட்டு இருந்தார்.. 
 
 
நீங்க சொன்ன வேலையை அவர் செஞ்சாரா இல்லையான்னு எனக்கு தெரியலை.. ஆனா நான் இன்னைக்கு உயிரோட இருக்க இவர் தான் காரணம், அது எனக்கு நல்லாவே தெரியும்.. அதுக்கு நான் அவருக்கு நன்றி சொல்லணும்..” என்றவள், இசக்கியின் பக்கம் திரும்பி “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, அவங்க என்னை அப்போவே வெட்டி போட்டு இருந்தா கூட சந்தோஷமா செத்து இருப்பேன்.. ஆனா..” என்றதால் அதற்கு மேல் அதை வார்த்தைகளில் சொல்ல கூட முடியா உணர்வு தளும்பலோடு விழிகள் கலங்க அடுத்த வார்த்தை பேச வராமல் தடுமாறி இதழ் கடித்து தன்னை அமைதி படுத்த முயன்றாள்.
 
 
அவளின் நிலை உணர்ந்தது போல் “மேடம் நான் உங்ககிட்ட சாரி தான் கேட்கணும்.. அந்த இடத்தில் யார் இருந்தாலும் நான் காப்பாத்த போராடி இருப்பேன்.. ஆனா இங்கே நான் உங்களுக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொல்லி கைநீட்டி காசு வாங்கி இருக்கேன்.. என்னோட வேலையில் நான் சரியா இல்லை, கடமை தவறிட்டேன்.. இதோ இப்போ கூட அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.. நீங்க தப்பிக்க நான் தான் காரணம்னு கொலைவெறியோட என்னை விரட்டிட்டு இருக்காங்க.. 
 
 
என் உயிர் போறதை பத்தி எனக்கு கவலை இல்லை, ஆனா என்னை நம்பி காசு கொடுத்து இருப்பவருக்கு நான் உண்மையா இருக்கணும்.. அங்கே நடந்ததை அவருக்கு நான் சொல்லியாகணும்.. அதுக்காக தான் உயிரை கையில் பிடிச்சுட்டு ஓடி வந்தேன்..” என்றான் இசக்கி. 
 
 
இதில் என்ன சொல்வது என தெரியாமல் சிந்து அசையாமல் நின்றிருக்க.. இருவரையும் சில நொடிகள் வெறுமையாக பார்த்த தாரக் இசக்கியின் பக்கம் திரும்பி “நீ கிளம்பு..” என்றான். அதில் வேறு எதுவும் பேசாமல் ஒரு தலையசைப்போடு இசக்கி அங்கிருந்து நகர, அவன் சென்ற திசையையே சில நொடிகள் யோசனையாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சிந்து. 
 
 தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
MNM - 26 & 27(a)
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
கவி சந்திரா 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 27(b)
 
அதன் பின் அன்று முழுக்க அறையிலேயே அடைந்து கிடந்தாள் சிந்து. சற்று முன் நடந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. ‘அவளா இப்படி எந்த தயக்கமும் இல்லாமல் சட்டென முன்னே சென்று பேசியது..?’ என்று சிந்துவினாலேயே நம்ப முடியவில்லை.
 
 
ஆரம்பத்தில் இருந்த கேள்வி குழப்பம் எல்லாம் தாரக் மற்றும் இசக்கி பேசியதை கேட்டதில் அவளுக்கு காணாமல் போயிருந்தது. அதன் பின் ஏன் எப்படி சட்டென அவர்களுக்கு இடையில் சென்று நின்று பேசினோம் என இப்போது வரை அவளுக்கு புரியவில்லை. 
 
 
‘அந்த தைரியம் திடீரென அவளுக்கு எங்கிருந்து வந்தது..?’ என யோசித்தபடியே அமர்ந்திருந்தவளுக்கு இப்போது வரை ‘அது நான் தானா..!’ என நம்பவே முடியவில்லை. ‘இப்படி ஒரு செயலை இதற்கு முன் அவள் செய்து இருக்கிறாளா..?’ என்றால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் அவளிடமிருந்து வரும்.
 
 
‘இப்போது மட்டும் எப்படி என்ற கேள்வி மனதில் எழும் போதே, உயிர் போகும் அளவிற்கான பிரச்சனை வரை பார்த்து விட்டு வந்தாகிற்று, இனி என்ன..?’ என்ற எண்ணமா..! இல்லை அந்த நிலையிலும் தன்னை காப்பாற்ற போராடியவனின் மேலான நன்றி உணர்வா..?’ என இப்போது வரை அவளுக்கே புரியவில்லை. அந்த நொடி ஏதோ தோன்ற சட்டென சென்று பேசி விட்டிருந்தாள் சிந்து.
 
 
அதுவே அவளுக்கு பெரும் ஆச்சர்யம் என்றால், அடுத்து அவள் செய்தது சிந்து கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருந்தது. 
இசக்கி சென்ற திசையை சிந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்க.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர முயன்ற தாரக்கை “நீங்க எதுக்காக என்னை அங்கே இருந்து காப்பாத்துனீங்க..?” என்ற சிந்துவின் கேள்வி தடை செய்திருந்தது. 
 
 
அதில் அவன் திரும்பி சிந்துவை பார்க்க.. “நிஜமாவே காப்பாத்தினீங்களா..! இல்லை திரும்ப உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வர நினைச்சீங்களா..?” என்று அந்த நொடி மனதில் எழுந்த கேள்வியை யோசிக்காமல் கேட்டு விட்டிருந்தாள் சிந்து.
 
 
அதில் அசையாமல் அவளை ஒரு நொடி பார்த்தவனின் இதழொரம் ஒருவித புன்னகையில் நெளிந்தது. சிந்துவின் கேள்விக்கு தாரக் ‘ஆம்’ என சொல்லி இருந்தால் கூட அவளுக்கு இவ்வளவு பயமும் படபடப்பும் உண்டாகி இருக்காதோ..! என்னவோ..? ஆனால் அந்தப் புன்னகையும், பதிலில்லா அமைதியும், அந்த பார்வையும் அவளை பெருமளவில் பதட்டப்பட வைத்தது.
 
 
அதில் சிந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. மெல்ல அங்கிருந்த ஜன்னலின் அருகில் சென்று நின்றவன், தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
 
 
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “இசக்கி இங்கே இருந்து கிளம்பிட்டான், அவனை கவனமா பார்த்துக்கோங்க.. இப்போ அவன் தனியா இருக்கறது ஆபத்து, நிச்சயம் நாகராஜன் ஆட்கள் இவனை தேடிட்டு இருப்பாங்க..” என்று சொல்லி அவன் அழைப்பை துண்டித்தான்.
 
 
அதே நேரம் நிஜமாகவே அங்கு அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. தாரக்கின் ஆட்கள் சிவாவையும் அவனுடன் இருந்தவர்களையும் அடித்துப் போட்டு வந்திருக்க.. நள்ளிரவு வரை அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததை கண்டு குழப்பமான முத்து, சிவாவை தொடர்பு கொள்ள முயன்று எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. 
 
 
நான்கைந்து முறைக்கும் மேல் முயற்சித்துப் பார்த்தவன், ஏதோ சரியில்லை என தோன்றவும், உடனே கிளம்பி அங்கு வந்திருந்தான். அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த முத்து பார்த்தது மயங்கி இருந்த தன் ஆட்களையும் சேதமாகி இருந்த இடத்தையும் தான்.
 
 
இதை கண்டு முதலில் திகைத்தாலும் உடனே செயல்பட்டு தன் ஆட்களை வரவழைத்து அடிப்பட்டு விழுந்திருந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவன், சிந்து எங்கே என தேட.. அவளோ அங்கே இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
 
 
‘நான்கு தடியாட்களை கடந்து தனியே எப்படி அவள் தப்பித்து சென்றாள்..?’ என புரியாமல் திகைத்து நின்றவனுக்கு, தன் ஆட்கள் இருந்த நிலை அப்போதே நினைவுக்கு வரவும், இங்கு வேறு எதுவோ நிகழ்ந்திருப்பது முத்துவுக்கு தெளிவாக புரிந்தது. 
 
 
அதில் உடனே நாகராஜனை காண சென்றவன், அனைத்தையும் அவரிடம் கூற, அவரோ ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். “என்னடா நடக்குது இங்கே..? ஒரு பொட்ட புள்ளை உங்களை எல்லாம் ஏமாத்திட்டு தப்பிச்சு போற அளவுக்கு சோதா பசங்களா நான் உங்களை வளர்த்து வெச்சு இருக்கேனா..? அவளை சத்தம் இல்லாம முடிக்க துப்பு இல்லை, உங்களுக்கு எல்லாம்..” என்று சரமாரியாக திட்டி தீர்த்தவர், “எனக்கு அவ உடனே வந்தாகணும், எங்கே போனா..? எப்படி போனான்னு கண்டுபிடி..?” என உத்தரவிட்டார். 
 
 
அதை தட்டாமல் முத்துவும் செயல்படுத்த தொடங்கி இருக்க.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்த சிவா கண் விழித்திருந்தான். இந்த செய்தியறிந்து மருத்துவமனைக்கு விரைந்த முத்து ‘என்ன நடந்தது..?’ என விசாரிக்க.. கொஞ்சமும் யோசிக்காமல் சிவா அத்தனை பழியையும் இசக்கியின் மீது திருப்பி விட்டிருந்தான்.
 
 
அவனே திட்டமிட்டு சிந்துவை தப்பிக்க விட்டதாகவும், இதை தடுக்க முயன்ற தங்களையும் அவன் அடித்து போட்டதாகவும் அதே நேரம் தாரக்கும் தன் ஆட்களோடு அங்கு வந்து சிந்துவை அழைத்துச் சென்று விட்டதாகவும் சிவா சொல்ல.. அப்போதும் நடப்பதேதும் புரியாமல் குழம்பினான் முத்து.
 
 
அவன் அறிந்த வரையில் இசக்கி விசுவாசமானவன். முத்து தான் இசக்கியை இங்கு வேலைக்கு சேர்த்திருந்தான். கடந்த ஒரு வருடமாக இசக்கியை அருகிலிருந்து பார்த்த வரையில் அவன் தவறு செய்யும் ஆள் போலும் முத்துவுக்கு தோன்றவில்லை.
 
 
ஆனாலும் இத்தனை வருடங்களாக உடனிருந்த சிவா ஏன் பொய் சொல்ல வேண்டும்..? அதோடு இசக்கியையும் இப்போது காணவில்லை என்பதால் சந்தேகம் மொத்தமும் அவன் பக்கம் திரும்பியது. இதில் சிவாவின் மூலம் அவனறிந்த விஷயத்தை நாகராஜனிடம் முத்து தெரிவிக்க.. ஆத்திரத்தில் ஆடி தீர்த்து விட்டார் நாகராஜன். 
 
 
“என்னது திரும்ப அவன் கூட போயிட்டாளா..? எனக்கு அப்போவே தெரியும்டா, இந்த சிறு°° அவன் கூட சேர்ந்து தான் இதை எல்லாம் செய்யறான்னு நான் அப்போவே சந்தேகப்பட்டேன்.. இங்கே அவ துணை இல்லாம எப்படி அவனால் இதையெல்லாம் சத்தமே இல்லாம செஞ்சு முடிக்க முடிஞ்சது..?
 
 
ஒரு துளி சந்தேகம் வராம எல்லாம் நடந்திருக்குனா அதிலேயே தெரியலையா, இந்த ஓ°°கா°° நா°° தான் அவனுக்கு கூட நின்னு எல்லா வேலையும் பார்த்து இருக்கான்னு, இதோ இப்போ அது ஊர்ஜிதமாகிடுச்சு இல்லை.. 
 
 
நான் தான் அன்னைக்கு சொன்னேனே..! இவளுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லைனா அவன் புள்ளை எப்படி இவ வயித்தில் வளரும்..? கடத்திட்டு போனவன் கூட எவ குடும்பம் நடத்துவா..? இவ நடத்தி இருக்கானா அதுக்கு என்ன அர்த்தம்..?
 
 
அன்னைக்கு என்னவோ உன் பொண்ணை நீயே வெச்சுக்கோன்னு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான்.. இப்போ எதுக்கு வந்து திரும்ப கூட்டிட்டு போய் இருக்கானாம்..? என் பொண்ணை நான் என்ன வேணாலும் செய்வேன், அவனுக்கு என்ன வந்தது..?
 
 
இப்போ இதையும் ஏதோ ஒரு திட்டத்தோட தான் அவன் செஞ்சுருக்கான், அப்படித்தானே..! இது என்ன எழ°° வேணாலும் இருந்துட்டு போகட்டும், எனக்கு திரும்ப அவ வந்தாகணும்.. இங்கே பாரு முத்து அவ முதன்முறை ஓடிப்போனப்போ நான் சொன்னதை உன்னால் செய்ய முடியலை.. ஆனா இந்த முறை எனக்கு அவ வேணும், கண்டிப்பா வேணும்.. இதை மட்டும் நீ செய்யலைனா..” என்று அவர் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருக்க.. “நானே நாண்டுக்கிட்டு செத்துடறேன் அண்ணே..” என்று அவர் வார்த்தைகளை முடித்து வைத்திருந்தான் முத்து.
 
 
அந்த வார்த்தைகளில் லேசாக தணிந்தவர், “சொன்னதை செய்..” என்று விட்டு வேகமாக அங்கிருந்த மது பாட்டிலை அப்படியே எடுத்து தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார் நாகராஜன். 
 
 
இவரின் சத்தத்தை கேட்டு அங்கு வந்திருந்த சுஜாதாவுக்கு சிந்து திரும்ப தாரக்குடன் சென்று விட்டாள் என்ற செய்தி தெரிய வர, அவரின் அன்னை உள்ளம் எப்படி உணர்ந்தது என அவரால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. 
 
 
நேற்றிலிருந்து மகளைக் காணாமல் அவர் தேடித் தவித்த தவிப்பும், ‘அவளுக்கு என்ன ஆனது..? உயிரோடாவது இருக்கிறாளா..! இல்லை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்து விட்டார்களா..?’ என்ற பயமுமாக எங்கெல்லாம் நாகராஜன் இதை செய்ய வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று இரவெல்லாம் தேடிக் கொண்டிருந்தார் சுஜாதா. 
 
 
நேற்று இரவு கூட சிந்துவை அடைத்து வைத்ததிருந்த வீட்டிற்கு சென்றிருந்தார் சுஜாதா. ஆனால் அதற்குள் அங்கு எல்லாமே நடந்து முடிந்திருக்க.. முத்துவும் தன் ஆட்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தான். அதன் பின்பே அங்கு சென்றவருக்கு அந்த இடமே பெரும் கலவரம் பூமியாக காட்சியளித்தது. 
 
 
அது வேறு அவருக்கு அடிவயிறை கலங்க செய்து கொண்டிருக்க.. மனதை திடப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்று ‘எதைத் தேடுகிறோம்..? என்ன தேடுகிறோம்..?’ என தெரியா ஒரு பதட்டத்தோடு தன் மனம் பயப்படும்படி மட்டும் எதுவும் கிடைத்து விடக்கூடாதே என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள தேடியவரின் கண்களில் விழுந்தது அந்த கிழிந்த துணி. 
 
 
நேற்று சிந்து அணிந்திருந்த சல்வாரின் முனை தான் அது. இவர்களுடனான தள்ளு முள்ளுக்குப் பிறகு, இசக்கியுடன் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அவகாசத்தை பயன்படுத்தி அவசரமாக சிந்து வெளியே ஓடும் போது கதவின் ஓரத்தில் இருந்த ஆணியில் சிக்கி லேசாக ஒரு சின்ன துண்டு கிழிந்திருந்தது. 
 
 
அதை விரல்கள் நடுங்க கையில் எடுத்து பார்த்தவருக்கு சகலமும் ஆடிப் போனது. தன் மகளுக்கு இங்கு தான் என்னவோ நடந்திருக்கிறது எனப் புரிய.. மனதளவில் மிகவும் உடைந்து சிதறி போனார் சுஜாதா. 
 
 
அதன் பின் கதறி அழுது கொண்டே இரவு முழுக்க அங்கேயே அமர்ந்திருந்தவர், ‘தன் மகளின் உடலாவது கிடைக்குமா..? அதையாவது தன்னால் இறுதியாக பார்க்க முடியுமா..!’ என அந்த பகுதி முழுக்க தேடி அலைந்தும் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. 
 
 
நர்த்தனாவை யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்தது போல் சிந்துவையும் புதைத்திருப்பார்களோ என வீட்டை சுற்றி உள்ள இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து பார்த்தும், புதிதாக தோண்டியது போல் எந்த ஒரு மணல் மேடும் அவர் கண்ணுக்கு தென்படவே இல்லை. 
 
 
அங்கிருந்த கிணறும் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்த பூட்டோடு கிடந்தது. இதில் ‘எங்கு சென்று எப்படி தேடுவது..?’ என தெரியாமல் ‘தன் மகள் உயிரோடு இருந்து விடமாட்டாளா..!’ என்ற ஒரு துளி நம்பிக்கையை மட்டும் மனதில் தேக்கி வீடு வந்து சேர்ந்திருந்தவருக்கு, இதை பற்றி நாகராஜனிடம் கேட்கக் கூட பயமாக இருந்தது.
 
 
‘ஆமா உன் மகள் இந்த உலகத்தில் இல்லை..’ என அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது..? அதை எப்படி தாங்கிக் கொள்வது..? என தெரியா மனநிலையோடு அமர்ந்திருந்தார் சுஜாதா. 
அருணும் இங்கே இல்லை, ஏதோ ஒரு வேலையாக பக்கத்து ஊருக்கு அனுப்பி வைத்திருந்தார் நாகராஜன். விஷ்வாவும் நேற்றிலிருந்து ஆளையே காணோம். இதில் தன்மன கலக்கங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வது எனக் கூட தெரியாமல் தனிமையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தவருக்கு இப்போது நாகராஜன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. 
‘அவள் இங்கே இல்லை என்றாலும் பரவாயில்லை, எங்காவது உயிரோடு இருந்தால் போதும்..!’ என நினைத்தவர், விழிமூடி தன் வயிற்றை நடுங்கும் விரல்களால் அழுந்த பிடித்துக் கொண்டார் சுஜாதா.
 
 
 
 
 

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 28 (a)
 
இப்படியே அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது. சிந்து தேவையில்லாமல் அறையில் இருந்து வெளியே செல்வதில்லை. முன்பு போலவே அறைக்குள்ளேயே தன்னை முடக்கி கொண்டாள்.
 
 
தாரக்கும் பரபரப்பாக ஏதேதோ வேலைகளை பார்த்துக் கொண்டு யார் யாரோடோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். அவ்வப்போது பால்கனியின் வழியே அவன் குரல் மட்டும் கேட்கும். ஆனால் அவன் இந்த அறைக்குள் வரவில்லை.
 
 
அவனின் அன்றைய புன்னகைக்குப் பின்னான அர்த்தம் புரியாத சிந்துவுக்கு எப்போது என்ன நடக்குமோ என்ற பதட்டம் அவ்வபோது உண்டாவது கொஞ்சமும் குறையவில்லை.
 
 
அவளுள் பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் முட்டி மோதிக் கொண்டிருந்தன. எவ்வளவு யோசித்தும் எதற்கும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. அதற்காக மனம் யோசிக்காமல் இருக்கவும் விடவில்லை. இப்படியே தனிமையில் இருந்து யோசித்து யோசித்து பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது.
 
 
‘அப்போதும் இப்படித்தான் தனி அறையில் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள். இப்போதும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் எப்போதும் எதுவுமே மாறாது போல..!’ என தோன்ற அமைதியாக விழிமூடி சாய்ந்தாள் சிந்து.  
 
 
அப்போதே சட்டென அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது. பல நாள் அவளுள் பதில் கிடைக்காத ஒரு கேள்விக்கு இப்போது அவளுக்கு விடை கிடைத்திருந்தது அதுதான் விஷ்வா. 
 
 
‘தன்னோடு அத்தனை அன்பும் பாசமுமாக சேர்ந்து பழகி வளர்ந்திருந்த விஷ்வா, ஏன் திடீரென இப்படி மாறிப்போனான்..? எதற்காக இப்படி நடந்து கொள்கிறான்..?’ என புரியாமல் குழம்பியவளுக்கு இன்று அதற்கான விடை தெளிவாக புரிந்து இருந்தது அது நர்த்தனா. 
 
 
அவள் மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்காவது விடை கிடைத்ததே என்ற நிம்மதியோடு சென்று பால்கனியில் நின்றிருந்தவள், பக்கத்து அறையில் கேட்ட உமாவின் குரலில் பார்வையை திருப்பினாள்.
 
 
“சார் உங்களை பார்க்க ஒருத்தர் வந்து இருக்கார்..” என உமா சொன்னது கேட்க.. “நான் யாருக்கும் அப்பாயின்மென்ட் கொடுக்கலையே.. யாருன்னு கேட்டீங்களா..?” என்றான் தாரக். 
 
 
“இல்லை சார், வாட்ச்மேன் ஒருத்தர் வந்திருக்கறார்னு மட்டும் தான் சொன்னார்.. பேர் சொன்னாலே உங்களுக்கு தெரியும்னு சொன்னாராம்..” என்றவரின் பதிலின் நெற்றியை சுருக்கியவன், வாட்ச்மேனுக்கு அழைத்து யார் என விவரம் கேட்க.. அங்கிருந்து என்ன பதில் சொல்லப்பட்டதோ..! “சரி உள்ளே அனுப்புங்க..” என்று விட்டு அலைபேசியை வைத்தவன், உமாவின் பக்கம் திரும்பி “அவரை ஆபீஸ் ரூமில் உட்கார வைங்க, நான் வரேன்..” என்றான். 
 
 
அதில் உமா அறையின் கதவை மூடிவிட்டு வெளியேறுவது தெரிந்தது. அவள் கவனித்த, புரிந்து கொண்டவரை தாரக் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அதிகம் யாரோடும் பேசுவதோ நேரம் செலவழிப்பதோ கிடையாது. வேலையாட்களிடமும் ஓரிரு வார்த்தைகளில் பேசுவதோடு சரி.
 
 
இப்போது வரை அவளைப் பொறுத்தவரை தாரக் ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தான். ‘எப்படி இவங்களை நெருங்கி தனா அக்கா பத்தி கேட்கிறது..? அந்த பேரை சொன்னாலே ரொம்ப வருத்தப்படறாங்க.. அன்னைக்கு அவங்க பழைய நினைவுகளை நான் தான் தெரியாம கிளறி விட்டுட்டேன் போல, சரியா தூக்கம் கூட வராம நிறைய கஷ்டப்பட்டாங்க.. திரும்ப அப்படி நடக்க வேண்டாம்னு நினைக்கறேன்.. ஆனா எனக்கு தனா அக்கா..’ என தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சிந்து நின்றிருக்க.. ‘தெரிஞ்சா தாங்குவியா..?’ என அவள் மனதே கேள்வி எழுப்பியது. 
 
 
‘அந்த அளவு அன்று சிவாவும் அவன் ஆட்களும் பேசியதிலேயே மனமும் உடலும் நடுங்கிப் போய் இருக்க.. மேலும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா..?’ என்ற கேள்வியும் அவளுள் எழாமல் இல்லை. ஆனால் விஷ்வாவின் மாற்றத்திற்கும், தாரக்கின் இந்த பழி வாங்கலுக்கும் பின்னே இருக்கும் காரணத்தை அவளுக்கு தெரிந்து கொண்டேயாக வேண்டும்.. 
 
 
ஏன் எதற்கு தண்டிக்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தண்டிக்கப்பட்டதே அப்போது அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது. இன்றும் அதன் வலி அவளுள் அப்படியே மிச்சமிருக்க.. அதற்கான காரணத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுள் அதிகம் எழுந்தது. 
 
 
ஆனால் அதைத் தெரிந்து கொண்டால் சுக்குநூறாக உடைந்து போவோம் என அந்த நொடி அவளுக்குத் தெரியவில்லை. இதைப்பற்றி எப்படி எப்போது தாரக்கிடம் பேசுவது என்று மட்டுமே சிந்துவின் மனம் நினைத்துக் கொண்டிருக்க.. அப்படியே வெகு நேரம் அமர்ந்து விட்டாள் சிந்து.
 
 
ஒரு மணி நேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்க எண்ணி சிந்து அறையில் இருந்து வெளியில் வரவும், யாரோ வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது. அதில் உடனே இறங்கிச் செல்ல மனமில்லாமல் அப்படியே அறைவாயிலில் சிந்து தயங்கி நிற்க.. 
 
 
“வாங்க சார், உட்காருங்க.. சார் உள்ளே தான் இருக்காங்க, நீங்க வந்து இருக்கீங்கன்னு சொல்றேன்..” என உமா சகஜமாக பேசுவது கேட்டது. அதில் வழக்கமாக வரும் யாரோ தான் என புரிய.. இப்போது கீழே செல்வதா..! வேண்டாமா..? என உண்டான குழப்பத்தோடு சில நொடிகள் தயங்கி நின்றவள், பின் எப்படியும் தாரக் வந்திருப்பவரை அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்று விடுவான் என தோன்றவும், அதன் பின் கீழே இறங்கி செல்லலாம் என்றெண்ணி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் சிந்து.
 
 
அதேநேரம் உமா கதவைத் தட்டி அலுவலக அறைக்குள் இருந்த தாரக்கிடம் ஏதோ சொல்வதும் அவன் வெளியில் வரும் சத்தமும் கேட்க.. அடுத்த நொடி “ஏன் மாமா இப்படி செஞ்சீங்க..? ஏன் இப்படி செஞ்சீங்க..? இவ்வளவு நாள் காத்திருந்து எத்தனை திட்டம் போட்டு நினைச்சது நடக்கற நேரத்தில் பானையை உடைச்சது போல ஏன் இப்படி செஞ்சீங்க..? எதுக்காக அவளை காப்பாத்துனீங்க..?
 
 
சொல்லுங்க ஏன் இப்படி செஞ்சீங்க மாமா..? அவ வேண்டாம்னு தானே கொண்டு போய் அங்கே விட்டுட்டு வந்தீங்க..! திரும்ப ஏன் வந்து காப்பாத்துனீங்க..? உங்களை யார் அங்கே வர சொன்னது..? என் இத்தனை வருஷ திட்டத்தை எல்லாம் பாழாக்கிட்டீங்களே மாமா..!” என்று அவன் வெறி பிடித்தது போல் கத்திக் கொண்டிருக்க.. “ஷட்டப் விஷ்வா..” என்றிருந்தான் கோபத்தோடு தாரக்.
 
 
அதில் விஷ்வா சட்டென அமைதியாகி தாரக்கை பார்க்கவும், அதே நேரம் விஷ்வாவின் குரல் கேட்டதில் வேகமாக எழுந்து வந்து கீழே பார்த்திருந்தாள் சிந்து.
 
 
“என்கிட்ட என்ன சொன்னே..? நீ என்கிட்ட என்ன சொன்னே..?” என ஆத்திரமாக தாரக் கேட்கவும், பதிலின்றி பார்வையில் தழைத்துக் கொண்டான் விஷ்வா. 
 
 
அவனின் அமைதியும் இந்த செயலும் தாரக்கை புருவம் உயர்த்த வைத்தது. அதில் நிதானமாக விஷ்வாவை நெருங்கியவன் “என்கிட்ட பொய் சொன்னியா விஷ்வா..?” என்றான். 
 
 
வேகமாக பார்வையை உயர்த்தி அவனை பார்த்திருந்த விஷ்வா “நான் உங்ககிட்ட பொய் சொன்னேன்னு நினைக்கறீங்களா..? தனா அக்காவுக்கு நடந்ததெல்லாம் பொய்யின்னு நினைக்கறீங்களா மாமா..?” என்றான். 
 
 
இந்த வார்த்தைகளை கேட்கும் போதே ஏதோ பெரிதாக வர போவது போல் தன்னையும் அறியாமல் சிந்துவின் உடல் நடுங்கியது.
 
 
“இல்லை, எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதை சொல்லும் போது உன் கண்ணில் தெரிஞ்ச உண்மையான வலியை நான் பார்த்திருக்கேன்.. உன் உடம்பு அதை பத்தி பேசும் போது நடுங்கினதை நான் உணர்ந்து இருக்கேன், அது பொய்யா இருக்க வாய்ப்பில்லை.. 
 
 
என் தனாவை அவனுங்க கொன்னுட்டானுங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா இவ்வளவு கொடூரமா கொன்னாங்கனே மூணு வருஷத்துக்கு முன்னே நீ என்னை தேடி வந்து சொல்லும் போது தான் எனக்கு தெரியும்.. இதை கேட்டதில் இருந்து என்னால் ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடிஞ்சதில்லை.. 
 
 
இன்னைக்கு வரைக்கும் கண்ணை மூடினா தனா அன்னைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா..? எப்படி எல்லாம் துடிச்சு இருப்பான்னு தான் தோணுது.. அதை நினைக்க நினைக்க மனசெல்லாம் என்னவோ செய்யுது..
 
 
இதுக்கெல்லாம் காரணமானவங்களை சும்மா விடக்கூடாதுன்னு எனக்கே தோணும் போது இந்த கொடூரத்தை எல்லாம் நேரில் பார்த்த உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு நல்லா புரியுது.. அதனால் தான் நீயா என்னை தேடி வந்து உன் திட்டத்தை பற்றி சொன்ன போது கூட ஆரம்பத்தில் யோசிச்சாலும் நான் அதுக்கு சம்மதிச்சேன்.. 
 
 
ஆனா நான் அப்போவும் உன்கிட்ட என்ன கேட்டேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..?” என்று தாரக் கேட்கவும், நேருக்கு நேர் அவனை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டான் விஷ்வா.
 
 
பேச்சு தன்னை பற்றியென புரிய.. நடுங்கும் விரல்களால் பால்கனியை இறுகப் பற்றியப்படி அவர்கள் பேசுவதை கவனிக்க தொடங்கினாள் சிந்து.
 
 
 தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 27(b) & 28(a)
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 28 (b)
 
“ஏன் இப்படி செஞ்சீங்க மாமா..? என் திட்டத்தை ஏன் பாழாக்கனீங்க..? உங்களை யார் அங்கே வர சொன்னது..? ஏன் அவளை காப்பாத்தனீங்க..?” என்று விஷ்வா பேசிய வார்த்தைகள் மட்டுமே அவள் செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது.
 
 
அந்தக் குரலில் இருந்த வெறுப்பு, கோபம், ஆதங்கம், எரிச்சல் என அத்தனையையும் அவளால் உணர முடிந்தது. இவன் அவளறிந்த விஷ்வா இல்லை. அவன் மென்மையாக மட்டுமே பேசத் தெரிந்தவன், அவன் அடையாளமே அந்த அன்பான குரல் தான், அது இப்போது முற்றிலும் காணாமல் போயிருந்தது.
 
 
அந்தக் குரலும் விஷ்வா பேசுவதை கேட்டதில் அவளுள் உண்டான உணர்வும் சேர்ந்து சிந்துவை சோர்ந்து போக செய்திருக்க.. அதில் உண்டான தள்ளாட்டத்தோடு மாடியின் கண்ணாடி சுவரை இறுக பிடித்துக் கொண்டாள் சிந்து.
 
 
இன்னும் கீழே அவர்கள் பேசிக் கொண்டிருப்பது சிந்துவுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் எதுவும் செவிகளில் விழவில்லை. அந்த அளவு உணர்வே மறுத்துப் போனது போலான ஒரு நிலையில் விஷ்வாவையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள் சிந்து. 
 
 
அவள் அனுமதி இல்லாமலே ‘சென்னை கல்லூரியில் தான் சேர்வேன்..!’ என விஷ்வா கெஞ்சி அடம் பிடித்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. எப்போதும் எதற்கும் இத்தனை ஆசைப்பட்டதோ.. கெஞ்சி சம்மதிக்க வைக்க முயன்றதோ இல்லை விஷ்வா. 
 
 
அவனின் அந்த செயலே புதிதாக இருக்க.. சுஜாதா கூட “அப்படி என்ன ஸ்பெஷல் விஷ்வா அந்த காலேஜ்..? ஏன் அருண் சிந்துவெல்லாம் படிக்கறாங்களே அங்கே சேர்ந்தா என்ன..?” என்றிருந்தார். 
 
 
“இல்லை பெரியம்மா, எனக்கு இந்த காலேஜில் படிக்கணும்னு சின்ன வயசில் இருந்தே ஆசை.. அங்கே படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் வரும்.. சீக்கிரமே நல்லா செட்டில் ஆகலாம், பெரியப்பாவுக்கு நான் எவ்வளவு நாள் தொந்தரவா இருக்க முடியும்..? நீங்களே சொல்லுங்க..!” என அவன் வருத்த முகம் காட்ட.. சுஜாதாவுக்கு உருகிப் போனது. 
 
 
அதற்குக் காரணம் நாகராஜன். அவர் கோபமாக இருக்கும் போதெல்லாம் விஷ்வாவை தண்ட செலவு, தண்ட சோறு என சொல்லி காண்பித்துக் கொண்டே இருப்பார். அதைத்தான் குழந்தை மன வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறான் என நினைத்த சுஜாதா, எப்படியும் அவனை சென்னையில் படிக்க அனுப்பி விட வேண்டும்.. அதன் பின் அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்ள முடியும்.. எத்தனை நாளைக்கு தான் இங்கே அவனை தன்னால் பார்த்துக் கொள்ள முடியும்..? எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் சிந்துவை தவிர இங்கு அவனை யார் கவனித்துக் கொள்வார்கள்..? அவளும் ஒரு நாள் திருமணமாகி சென்று விடுவாள்.. அப்போது யாருமில்லாமல் தனித்து விடப்படுவான் விஷ்வா..’ என யோசித்தே நாகராஜனிடம் விஷ்வாவை சென்னை கல்லூரிக்கு அனுப்ப அனுமதி வாங்கி இருந்தார் சுஜாதா.
 
 
அப்போதும் கூட நாகராஜன் அவ்வளவு எளிதில் சம்மதித்து விடவில்லை. “இவனை எல்லாம் படிக்க வைக்கறதே தண்ட செலவு, இதில் சென்னைக்கு போய் தான் படிப்பாராமா..? அப்படியெல்லாம் படிச்சு இவர் ஒன்னும் கிழிக்க வேண்டாம்.. இங்கேயே இருக்க ஜோலியை பார்க்க சொல்லு..” என்றிருந்தார் நாகராஜன். 
 
 
“செ.. செலவெல்லாம் ஆகாதுங்க, விஷ்வாவிற்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சுருக்கு.. அவன் அதில் தான் அங்கே படிக்கப் போறான்.. நாம சம்மதித்தா மட்டும் போதும்..” என்று தயக்கத்தோடு சுஜாதா சொல்லவும், யோசனையாக அவரைப் பார்த்த நாகராஜன் தனக்கு செலவில்லை என்பதிலேயே விரைவாக சம்மதித்து விட்டிருந்தார். 
 
 
ஆனால் உண்மையில் விஷ்வாவுக்கு அப்படி எந்த ஸ்காலர்ஷிப்பும் கிடைத்திருக்கவில்லை. சுஜாதா தான் தன் அண்ணன் கண்ணனிடம் பேசி விஷ்வாவின் படிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு கொஞ்ச நாள் முன்பே சுஜாதாவின் அன்னை இறந்து விட்டிருக்க.. அவரின் நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும் பிரித்துக் கொடுக்க நினைத்திருந்த தன் அன்னையின் ஆசையை நிறைவேற்ற நினைத்த கண்ணனை தடுத்திருந்தார் சுஜாதா.
 
 
“எனக்கு நகை எல்லாம் வேண்டாம் அண்ணா.. இத்தனை வருஷத்தில் நான் அம்மாவை பக்கத்தில் இருந்து கூட பார்த்துக்கலை.. என் சூழ்நிலை அப்படின்னு உங்களுக்கும் தெரியும், கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா அவங்க உடம்பு முடியாம இருந்த போது பக்கத்தில் இருந்து எல்லாம் செஞ்சது அண்ணி தான்.. அம்மா நகை முழுக்க அண்ணிகிட்டேயே கொடுத்துடுங்க.. 
 
 
அம்மா உடம்பு முடியாம இருந்த போதே இவர் என் பங்கு நிலத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டார்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த விஷயத்தில் என்னை தப்பா நினைக்காதீங்க அண்ணா.. என் அனுமதியுடன் இங்கே எதுவும் நடக்கறது இல்லை..” என்றார் சுஜாதா.
 
 
“ஏன்மா இப்படி எல்லாம் பேசறே..? உன்னை எனக்கு தெரியாதா..!” என அவர் சமாதானம் செய்ய.. “எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க அண்ணா.. அதை கடனா செஞ்சா கூட பரவாயில்லை, விஷ்வாவை எப்படியாவது படிக்க வெச்சுடணும்.. எத்தனை நாளைக்கு இவர் கட்டுப்பாட்டில் அவனாலும் இருக்க முடியும்..?” என சுஜாதா சொன்னதற்கு ஒரு வார்த்தை கூட மறுத்து பேசவில்லை கண்ணன். 
 
 
ஏனெனில் நாகராஜன் குணம் பற்றி அவருக்கும் நன்றாக தெரியும். நல்ல குடும்பம், ஊரில் வசதியான பெரிய குடும்பம் என்றெல்லாம் எண்ணி தான் நாகராஜனுக்கு சுஜாதாவை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். ஆனால் அதன் பின் தான் அவரின் சுயரூபம் தெரிய வந்தது.
 
 
ஆரம்பத்தில் சுஜாதாவின் நிலை அறிந்து அதை தட்டிக் கேட்க முயன்ற கண்ணனை அவரின் பெற்றோர்களே மகளின் வாழ்க்கையை எண்ணி தடுத்து விட்டிருந்தனர். அதன் பின் சுஜாதாவும் இதில் யாரும் தலையிட வேண்டாம், என் வாழ்க்கை விதியின் வசம் என்று சொல்லிவிட.. கண் முன்னே நடப்பதெல்லாம் அறிந்தும் அமைதியாக இருக்க வேண்டிய தன் நிலையை எண்ணி ஏற்கனவே மனதளவில் வருந்திக்கொண்டு இருந்தவருக்கு ஏதோ ஒரு வகையில் சுஜாதாவுக்கு உதவி செய்ய முடிந்தது என்ற எண்ணம் தான். 
 
 
அதில் அவர் எல்லா உதவிகளையும் செய்து விஷ்வாவை படிக்க வைத்திருந்தார். இந்த திட்டம் கூட சிந்து சொல்லி தான் சுஜாதாவுக்கு தோன்றியது. ஆனால் முழு செலவையும் தன் மாமா ஏற்றுக் கொள்வார் என சிந்துவே நினைக்கவில்லை. 
 
 
அவள் சொன்னதெல்லாம் நாகராஜனிடம் பண பிரச்சனை இல்லை ஸ்காலர்ஷிப் கிடைத்திருக்கிறது என்று மட்டும் சொல்லி அனுமதி வாங்க வேண்டும், அதன் பின் தன் நகைகளையும் சுஜாதாவின் நகைகளையும் அவனிடம் கொடுத்து அடகு வைத்து படித்துக் கொள்ள சொல்லி விட வேண்டும் என்று மட்டும் தான்.
 
 
இதைக் கேட்டதுமே பயந்து போனார் சுஜாதா, நகைப் பற்றிய விஷயம் மட்டும் நாகராஜனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்.. உயிரோடு வைத்து இருவரையும் கொளுத்தி விடுவார். “இது என்ன அவ்வளவு சுலபம்னு நினைச்சியா சிந்து..?” என அவர் மிரட்சியோடு கேட்கவும், “அவ்வளவு சுலபம் இல்லை தான் ம்மா.. ஆனா யாருக்கும் தெரியாம நிச்சயம் நம்மால் செஞ்சு முடிக்க முடியும்.. என்னைக்காவது அப்பா நம்மகிட்ட இருக்கும் நகையை பற்றி கேட்டிருக்காரா..? இல்லை எடுத்துக்காட்டுன்னு கணக்கு போட்டு இருக்காரா..! அதில் அவருக்கு இது இருந்தது அது இல்லைனு எல்லாம் ஞாபகம் கூட இருக்காதும்மா..” என்றாள் சிந்து.
 
 
சின்னப் பெண் ஏதோ விவரம் தெரியாமல் பேசுகிறாள். அவள் நினைப்பது போல் இது அவ்வளவு எளிதல்ல என சுஜாதாவுக்கு நன்றாகவே புரிந்தது. இதுவரை நாகராஜன் அப்படியெல்லாம் நகை பற்றி விசாரித்தது இல்லை என்றாலும் அவரை நம்பி இப்படி ஒரு பெரும் அடியை எடுத்து வைக்க சுஜாதாவால் முடியாது. 
 
 
ஏனெனில் நாகராஜன் எப்போது என்ன செய்வார் என அவருக்கே தெரியாது. அப்படி இருக்க திடீரென வந்து எதையாவது கேட்டு இருவரும் மாட்டிக்கொண்டால்..! அதன் பின் இவர்களை உயிரோடு விடமாட்டார் நாகராஜன். அதை அறிந்திருந்த சுஜாதா மகளிடம் வாதிடாமல் அமைதியாக இருந்து கொண்டார். 
 
 
அதன் பின்பே தன் அண்ணனிடம் சென்று பேசி விஷயத்தை வேறு மாதிரி நடத்தி முடித்திருந்தார் சுஜாதா. இதுவே விஷ்வா முதல் வருடம் படித்து முடிக்கும் போது தான் சிந்துவிற்கு தெரிய வந்தது. 
 
 
அந்த வருட கோவில் திருவிழாவுக்கு கிளம்பும் போது தான் இவள் விஷ்வாவுக்கு கொடுக்கவென தனியே எடுத்து வைத்திருந்த நகைகள் எல்லாம் அப்படியே இருப்பதைக் கண்டு சுஜாதாவிடம் அவள் மெல்ல விசாரிக்க.. அவரும் எதையும் மறைக்காமல் மகளிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். 
 
 
“மாமாவுக்கு எதுக்கும்மா வீண் சிரமம்..” என்று மட்டும் கேட்டாளே தவிர, சிந்துவும் அதைப்பற்றி அதன்பின் பெரிதாக கவலை எதுவும் படவில்லை. ‘அப்படியெல்லாம் நாகராஜனுக்கு தெரியாமல் திட்டமிட்டு இவர்கள் அவனை சென்னைக்கு அனுப்பியது இதற்குத்தானா..?’ என்ற கேள்வி அவளுள் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. 
 
 
‘அத்தனை அடமாக விஷ்வா சென்னை போக வேண்டும் என்றது தாரக்கை சந்தித்து பேசுவதற்கு தானா..! தன்னை அழிக்கத்தான் இதெல்லாமா..?’ என்று எண்ணும் போதே எதிலோ மோசமாக தோற்ற உணர்வு அவளுள் பரவுவதை சிந்துவினால் தடுக்க முடியவில்லை. 
 
 
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து இப்படி தனியே நிற்பவனுக்கு அவர்களின் இழப்பு எப்போதும் தெரிந்து விடக்கூடாது என்பது போல் சுஜாதாவும் சிந்துவும் அவனைத் தாங்கி வளர்த்ததெல்லாம் அவள் கண் முன் நிழலாடியது. 
 
 
அவளின் உடன் பிறந்தவன் அருண் தான் என்றாலும் உடன் பிறவா தம்பியான விஷ்வாவின் மேல் தான் அவளுக்கு அதிக அன்பும் அக்கறையும் எப்போதும் இருக்கும். ஏனெனில் விஷ்வா சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து நிற்கிறான்.
 
 
அதோடு திடீரென காரணமே தெரியாமல் யாரோடும் ஒட்டாமல் தள்ளி நிற்கத் தொடங்கி விட்டான் அருண். அதுவும் தனாவின் திருமணத்திற்கு பிறகு தான் நடந்தது என்பதால் ஒருவேளை அந்த கோபமாக இருக்கலாம்.. இல்லையெனில் எங்கே இவளும் அதே போல் செய்து விடுவாளோ என்று எண்ணமாக இருக்கலாம் என்றெல்லாம் தனக்குத்தானே யோசித்து காரணம் தேடி சோர்ந்து போய் இருந்தவளுக்கு இன்று வரை அதற்கான பதில் தான் கிடைக்கவே இல்லை. 
 
 
எப்போதாவது மனம் தாங்காமல் விஷ்வாவிடம் அவள் புலம்பும் போது அவளுக்கு ஆறுதலாக ஆதரவாக பேசுபவன் “அண்ணா எப்போவும் இப்படி தான் க்கா.. சின்ன வயசில் இருந்தே என்கிட்ட ஒரு மாதிரி தான் நடந்துப்பார், இப்போ உங்ககிட்டயும் அதையே செய்யறார்.. அவர் அப்படியே பெரியப்பா மாதிரி..” என்பான்.
 
 
அப்போதெல்லாம் அவன் பேச்சை முழுமையாக நம்பி அவர்களிடமிருந்து தன்னை முற்றிலும் தள்ளி நிறுத்தியிருந்தாள் சிந்து. இப்போது இதை எல்லாம் யோசித்துப் பார்க்கையில் இவன் திட்டமிட்டு தன்னை தனிமைப்படுத்தி விட்டானோ..! தன் குடும்பத்தை தனக்கு எதிராகவே திருப்பி விட்டானோ..!! அவர்கள் நல்லவர்கள் இல்லையென தன் மனதில் ஆழ பதிய வைத்தானோ..!! என்றெல்லாம் அவளுக்கு சந்தேகம் எழுந்தது. 
 
 
அதற்கு சான்றாக சற்று முன் விஷ்வா பேசிய ‘என் இத்தனை வருஷ திட்டத்தை வீணாக்கிட்டீங்களே..!’ என்ற வார்த்தைகள் மீண்டும் அவளுள் ஒலிக்க.. “சொல்லு நான் உன்கிட்ட என்ன கேட்டேன்னு ஞாபகம் இருக்கா..?” என்று அதே நேரம் விஷ்வாவை பார்த்து கேட்டிருந்தான் தாரக். 
 
 
இதில் பதில் சொல்ல முடியா தடுமாற்றத்தோடு விஷ்வா நேருக்கு நேர் பார்க்க தயங்கி பார்வையை திருப்பிக் கொள்ள.. தாரக் விஷ்வாவை சந்தேகமாக பார்க்க.. சிந்து மேலிருந்து அவர்கள் இருவரையும் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 29
 
“சொல்லு உன்கிட்ட தான் கேட்கறேன், காது கேட்குதா இல்லையா..? நான் அப்போ உன்கிட்ட என்ன கேட்டேன்னு ஞாபகம் இருக்கா விஷ்வா..?” என தன் குரலில் அழுத்தத்தைக் கூட்டி கேட்டிருந்தான் தாரக்.
 
 
இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது எனப் புரிந்து விஷ்வா
மெல்ல தலையசைக்க.. “அப்புறம் இதெல்லாம் என்ன..?” என்றவனின் குரலும் கேள்வியும் விஷ்வாவுக்கு லேசான பயத்தை கொடுத்தது.
 
 
அதில் இரண்டு நொடி தயங்கி விட்டு பின் “நம்ம வலி அவங்களுக்கும் புரியணும் இல்லை மாமா.. காலம் முழுக்க அந்த வலியை நாகராஜன் அனுபவிக்கணும் தானே..! இதை தானே நாம யோசிச்சோம்..” என்றான் தயக்கமில்லா குரலில் விஷ்வா.
 
 
“ஆமா..” என்று மட்டும் அழுத்தமான குரலில் கூறிய தாரக், விஷ்வாவையை அடுத்து நீயேப் பேசு என்பது போல் பார்த்திருக்க.. “என்ன பிரச்சனை உங்களுக்கு..? ஏன் அங்கே வந்தீங்க..? எதுக்காக அவளை காப்பாத்தனீங்க..?” என்றான் லேசாக கோபம் எட்டிப் பார்க்கும் குரலில் விஷ்வா.
 
 
“முட்டாளா விஷ்வா நீ..? அவங்க உன் அக்காவை என்ன செய்ய இருந்தாங்கன்னு உனக்கு தெரியுமா..? தெரியாதா..!” என கோபத்தோடு தாரக் கேட்கவும், “அவளை என் அக்கான்னு சொல்லாதீங்க..” என்று அது தான் முக்கியம் என்பது போல் கத்தினான் விஷ்வா.
 
 
இதில் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிந்து வலியோடு விழிகளை ஒரு நொடி மூடி திறந்தாள். ஒரு காலத்தில் இதே விஷ்வா எப்படி தன்னை அன்போடு ‘அக்கா, அக்கா..’ என அழைத்தபடி பின்னேயே சுற்றிக்கொண்டு இருந்தான் என்பதெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது.
 
 
அவனின் பேச்சு, செயல், திட்டம் எல்லாம் வீணாகிப் போன கோபத்தை காணும் போதே, அத்தனையும் நடிப்பு என தெளிவாக சிந்துவிற்கு புரிய.. மேலும் இதைப்பற்றி யோசித்து என்ன பயன் என்பது போல் அடுத்து நடப்பதை கவனிக்கத் தொடங்கினாள் சிந்து.
 
 
“சரி சொல்லலை, ஆனா என்ன நடக்க இருந்ததுன்னு தெரியும் தானே உனக்கு..?” என்று உடனே தணிந்து வந்தாலும் தன் கேள்வியில் தாரக் நிலையாக நிற்க.. ஆம் என்பதாக அசைந்தது விஷ்வாவின் தலை. 
 
 
அதில் விழிகளை சுருக்கி கூர்மையாக விஷ்வாவை அரை நொடி பார்த்த தாரக் “அப்போ இதுதான் உன் திட்டம் இல்லையா..?” எனவும், நொடியும் தாமதிக்காது இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல் “ஆமா, அதில் என்ன தப்பு..?” என்றிருந்தான் விஷ்வா.
 
 
“என்ன தப்பா..? ஏற்கனவே ஒரு உயிருக்கு இரண்டு உயிரா இழந்துட்டு..” என தாரக் தொடங்கவும், “மூன்று உயிர்.. எங்க அம்மாவையும் சேர்த்து..” என்றான் வேதனையான குரலில் விஷ்வா.
 
 
அதில் ‘ஆம்’ என தலையசைத்தவன், “ஒரு உயிரோட இழப்பு உன்னையும் என்னையும் விட வேற யாருக்கும் நல்லா தெரியாது.. அதையே இனி இன்னொருத்தருக்கு செய்ய பார்த்தால் என்ன அர்த்தம் விஷ்வா..?” எனவும் “பழிக்குப் பழி மாமா, ரத்தத்துக்கு ரத்தம்..” என்றான் அத்தனை கோபம் தெறிக்கும் குரலில் விஷ்வா.
 
 
“நாம பழிவாங்க நினைச்சது நாகராஜனை.. அது தான் நியாயமும் கூட, நீ இந்த திட்டத்தை சொல்லும் போது கூட நான் உன்கிட்ட என்ன கேட்டேன்..? நாகராஜனை தூக்கிட்டு வந்து வெட்டி போடுன்னு சொன்னா கூட நியாயம்.. ஆனா இது எந்த வகையில் சரின்னு தானே கேட்டேன்..” என சொல்லவும், விஷ்வா அமைதியாக இருந்தான். 
 
 
“சொல்லு விஷ்வா..” என தாரக் மீண்டும் அழுத்தம் கொடுக்க.. “ஆமா கேட்டீங்க, இப்போ என்ன அதுக்கு..? ஆனா எனக்கு இதுதான் சரின்னு பட்டது, அதனால் தான் உங்களை ஏதேதோ பேசி சரின்னு சொல்ல வெச்சேன்..” என பார்வையை எங்கோ பதித்தப்படி சொல்லி முடித்தான் விஷ்வா. 
 
 
“அப்போ பொய் சொல்லி இருக்கே..” என்று தாரக் அவனை முறைக்க.. “நான் நினைச்சது நடக்கணும், என் இத்தனை வருஷ வலி தீரணும்னா பொய் சொல்றதுலேயோ ஏமாத்தறதுலேயோ தப்பு இல்லைன்னு எனக்கு அப்போ தோணுச்சு..” என்றான் விஷ்வா. 
 
 
“உன்னை எனக்கு முன்னே பின்னே தெரியாது.. நீ தனாவோட தம்பின்னு சொன்ன ஒரே காரணம் தான் யோசிக்காம நான் உன்னை சந்தித்து பேச காரணமா இருந்தது.. அதோட தனா உன் மேலே எவ்வளவு உயிரா இருந்தான்னு எனக்கு தெரியும்.. அவ உங்க வீட்டை விட்டு வந்ததை நினைச்சு வருந்தினதை விட, உன்னை பிரிஞ்சதை நினைச்சு வருந்தினது தான் அதிகம்..” என்று தாரக் சொல்லி முடிக்க.. படார் படார் என முகத்தில் அடித்துக்கொண்டு அப்படியே மடங்கி அமர்ந்து அழுதான் விஷ்வா. 
 
 
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரக், “விஷ்வா..” என அவனருகில் வர முயல, வலியும் வேதனையுமாக சிவந்திருந்த கண்களோடு நிமிர்ந்து தாரக்கை பார்த்த விஷ்வா, “ஐயோ அது தான் எனக்கு அதிக வலியை கொடுக்குது.. என் மேலே உயிரா இருந்த என் அக்காவை என் கண்ணு முன்னேயே கொன்னுட்டாங்க படுபாவிங்க.. அக்கா துடிதுடித்து செத்ததை நான் கண்ணால் பார்த்திருக்கேன்.. அதே மாதிரி அவர் பொண்ணும் சாகணும்னு நினைச்சேன்..” என்று வெறி வந்தவன் போல் கத்தினான் விஷ்வா. 
 
 
“இது எப்படி சரியாகும் விஷ்வா..? உன் அக்காவை நாகராஜன் தண்டிச்சது தப்புன்னு தான் நாம அதுக்காக அவரை பழிவாங்க நினைச்சோம்.. ஆனால் திரும்ப அதே தவறையே நாம செஞ்சா அப்புறம் நாகராஜனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்..?” என்றான் தாரக். 
 
 
“எனக்கு அந்த வித்தியாசம் மண்ணாங்கட்டி எல்லாம் தேவையில்லை மாமா.. நான் என் அக்காவை இழந்துட்டு துடிச்ச துடிப்பை அந்த நாகராஜனும் துடிக்கணும்.. அது மட்டும் தான் எனக்கு வேணும், அதுக்காக தான் இத்தனை வருஷமா பொறுமையா திட்டம் போட்டு காய் நகர்த்தி ஒண்ணு ஒண்ணா செஞ்சு என் மேலே ஒரு துளி சந்தேகம் அவங்களுக்கு வராத மாதிரி நடிச்சு எல்லாம் செஞ்சேன்.. ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தீங்களா..? என் கண்ணு முன்னே எங்க அக்காவை கொடூரமா கொலை செஞ்ச கொலைகாரன் வீட்டில் அவன் கட்டுப்பாட்டில் அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேனா.. ஒவ்வொரு நாளும் அது எனக்கு எவ்வளவு ரண வேதனையா இருந்திருக்கும்னு நீங்க ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தீங்கனா, அப்போ என் நிலைமை என் உணர்வுகள் உங்களுக்கு புரியும்..” என்றான் கலங்கிப்போன குரலில் விஷ்வா. 
 
 
“உன் நிலையை என்னை விட அதிகம் தான் விஷ்வா, ஆனா நீ என்னை பார்க்க வந்த போது நீ சொன்னதை கேட்ட போது நான் இருந்த நிலைமை என்னன்னு உனக்கே நல்லா தெரியும்.. அப்போ கூட என் குறி நாகராஜன் மட்டுமா தான் இருந்தான்..” என்றவன், விஷ்வா அவனை விழியை உயர்த்தி பார்க்கவும் “இப்போவும் நாகராஜனா மட்டும் தான் இருக்கான்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் தாரக். 
 
 
அதில் ஒரு இகழ்ச்சியான புன்னகை விஷ்வாவின் இதழ்களில் வந்து போக.. “என்னாச்சு மாமா..? உங்க புது பொண்டாட்டிகிட்ட மயங்கிட்டிங்களா..? இல்லை அவ உங்களை மயக்கிட்டாளா..!” எனவும் “ஷட் அப், ஜஸ்ட் ஷட் அப் விஷ்வா..” என்று கத்தியவன் அருவருப்பாக முகத்தை சுழித்தபடி திரும்பி நின்றான்.
 
 
“உங்க பொண்டாட்டி, அதுவும் காதல் பொண்டாட்டியை கொன்னவனோட பொண்ணை நீங்க எதுக்காக காப்பாத்தணும் மாமா..? அப்போ அக்காவை நீங்க மறந்துட்டீங்கன்னு தானே அர்த்தம்..!” என்றான் விஷ்வா. 
 
 
“உளறாதே விஷ்வா, நான் அன்னைக்கும் இதைத்தான் சொன்னேன்.. இன்னைக்கும் அதையே தான் சொல்றேன், ஒரு உயிரோட நாம விளையாடக்கூடாது.. தனாவுக்கு நடந்தது அநியாயம், அக்கிரமம், நான் இல்லைன்னு மறுக்கலை.. ஆனா அதையே நாம இன்னொரு பொண்ணுக்கு செய்யறது மட்டும் எப்படி நியாயமாகும்..?” என்றவனை பார்க்க விரும்பாதது போல் விஷ்வா பார்வையை திருப்பிக் கொண்டான். 
 
 
“இதே கேள்வியை நான் இன்னைக்கு மட்டுமில்ல, அன்னைக்கும் கேட்டேன்.. அதுக்கு நீ சொன்ன பதில் உனக்கு ஞாபகம் இருக்கா..?” எனவும் விஷ்வா அமைதியாகவே இருந்தான். 
 
 
“தனா அக்காவை அவர் கொன்னதுக்கு, இவ்வளவு கொடூரமா கொன்னதுக்கு காரணம் அவங்க நாகராஜனோட பொண்ணு இல்லை.. பெத்த பொண்ணை எந்த அப்பாவாவது அப்படி செய்வாரா..? தனா அக்கா சாக காரணம் அவ உங்களை காதலிச்சதால் தான்..
 
 
அவரை பிடிச்சு இருந்த ஜாதி வெறி, அவர் விருப்பம் இல்லாம நடந்த இந்த கல்யாணம் அவருக்கு தலைகுனிவா இருந்தது, இதெல்லாம் சேர்ந்து தான் அவரை அப்படி செய்ய வெச்சது.. அதே ஆளுக்கு அவரோட பொண்ணு இதே போல கல்யாணம் செஞ்சா எப்படி இருக்கும்..?
 
 
தம்பி பொண்ணுன்னதும் மனுஷ தன்மையே இல்லாம நடந்துக்கிட்டவரால் தன் பொண்ணுகிட்ட அப்படி நடந்துக்க முடியுமா..? நிச்சயம் முடியாது மாமா..” என்றான் விஷ்வா.
 
 
“ஒருவேளை நடந்துகிட்டா..! அவனே கொலைகாரன் அதுவும் வயித்து பிள்ளைக்காரின்னு கூட பார்க்காம பெத்த பொண்ணு மாதிரி வளர்த்தவளையே இப்படி அரக்கத் தனமா கொன்னவனுக்கு தன் பொண்ணுகிட்ட மட்டும் அந்த அரக்க குணம் வெளியே வராதா என்ன..?” என்றான் தாரக்.
 
 
“நிச்சயமா வராது மாமா, அவருக்கு பொண்ணுனா உயிர்.. கண்டிப்பா இந்த கொடூரத்தை தன் பொண்ணுக்கு செய்ய யோசிக்க கூட மாட்டார்..” என்றான் பொய்யென தாரக் கண்டே பிடிக்க முடியாத னஉறுதியான குரலில் விஷ்வா.
 
 
அப்போதும் தாரக் இதற்கு சம்மதிக்காமல் இருக்க.. அன்று தனாவுக்கு நடந்ததையும், அவளின் கதறலையும் விலாவரியாக சொன்னவன், “அந்த நேரத்திலும் அக்காவோட ஞாபகம் முழுக்க உங்க மேலே மட்டும் தான் இருந்தது தெரியுமா மாமா.. உங்க குழந்தையை காப்பாத்த தவறிட்டோமேன்னு தான் உயிர் போகும் நிலையிலும் கூட உங்ககிட்ட மன்னிப்பு கேட்டா.. ஆனா அவளை கொன்னவனை தண்டிக்க நீங்க இவ்வளவு யோசிக்கிறீங்க இல்லை..” என்று அங்கிருந்து வெளியேற முயன்றான் விஷ்வா.
 
 
இதை சொல்லும் போது விஷ்வாவின் குரலில் தெரிந்த வலியும், அவன் கண்கள் வெளிப்படுத்திய எதிர்பார்ப்பும் தனாவின் கடைசி வார்த்தைகள் என அவன் சொன்னதும் எல்லாம் சேர்ந்து, வேறு எதையும் யோசிக்க விடாமல் அன்று தாரக்கை சம்மதம் சொல்ல வைத்திருந்தது.
 
 
அதன் பின் இதை எப்படி செயல்படுத்தலாம் என நிதானமாக யோசித்து திட்டமிட்டு அதை செயல்படுத்தி இருந்தாலும் ஏதோ தவறு செய்து விட்ட எண்ணம் அவனுள் உறுத்திக் கொண்டே இருக்க.. அவ்வப்போது தனாவின் நினைவுகள் வேறு வந்து அவனை வதைக்கும்.
 
 
அவளை மறக்கவும் முடியாமல், அவளின் நினைவுகளோடு மட்டுமே வாழவும் முடியாமல் பழிவாங்க என அவசரப்பட்டு சிந்துவை தொட்டு விட்டவன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீளவும் முடியாமல் பழிவாங்கவே என்றாலும் சிந்துவை நெருங்கும் போதெல்லாம் அவன் அனுபவித்த நரக வேதனையை தாரக் மட்டுமே அறிவான்.
 
 
அந்த வலியை வேதனையை தாங்க முடியாமல் தான் ஒவ்வொரு நாளும் இரவில் உறக்கம் வராமல் தனாவின் மடியை தேடி அவர்கள் வசித்த பழைய வீட்டிற்கு ஓடிவிடுவான் தாரக்.
 
 
வேறு எங்கும் அவனால் நிம்மதியாக ஒரு நொடி கூட விழிகளை மூடிவிட முடியாது. தனாவின் நினைவுகளும் ‘எனக்கு துரோகம் செய்யதீங்க..’ என அவள் கேட்பது போலான உணர்வும் அவனை துரத்திக் கொண்டே இருந்ததில் அவனுள் உண்டான போராட்டத்தில் பெருமளவில் உடைந்து போனான் தாரக்.
 
 
தன் மனப்போராட்டத்திற்கும் பழி உணர்வுக்கும் இடையில் சிக்கி ஒவ்வொரு நாளும் அவன் மரண வலியை அனுபவித்துக் கொண்டிருக்க.. ‘எத்தனை எளிதாக தன்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டான்..?’ என்பது போல் விஷ்வாவை பார்த்துக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
ஆனால் தாரக்கின் இந்த அமைதியை வேறு மாதிரி புரிந்து கொண்ட விஷ்வா “அப்போ அதுதான் இல்லையா..? எங்க அக்காவை பத்தி நீங்க பேசினது, அவ நினைவுகளோடவே நீங்க வாழ நினைக்கறது, இத்தனை வருஷம் தனியா இருந்ததை எல்லாம் வெச்சு நான் தான் உங்களை தப்பா கணக்கு போட்டுட்டேன் போல, பொண்ணு விஷயத்தில் நீங்களும் சரிக்கிட்டீங்க இல்லை..” என்று ஏமாற்றமான குரலில் கூறினான் விஷ்வா.
 
 
“வாயை மூடு விஷ்வா..” என்று ஆத்திரத்தில் கத்தி இருந்தவன், சட்டென திரும்பி அவனின் கழுத்தை நெறிப்பது போல் பிடித்து “என்னடா தெரியும் உனக்கு..? என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு..? உன் இஷ்டத்துக்கு பேசாதே..” எனவும், சிறு இகிழ்ச்சியான புன்னகையோடு தன் கழுத்தில் பதிந்திருந்த தாரக்கின் கைகளை விலக்கினான் விஷ்வா. 
 
 
கோபத்தில் கழுத்தை பிடித்து விட்டாலும் தாரக்கும் அப்படி ஒன்றும் இறுக்கத்தை கொடுக்கவில்லை என்பதால் எளிதாகவே கைகளை விலக்கிக் கொண்டான்.
 
 
“உண்மையை சொன்னா வலிக்குதா..?” என வேண்டுமென்றே தாரக்கை குத்தி கிழிக்கும் எண்ணத்தோடு விஷ்வா பேசிக் கொண்டிருக்க.. “உன் உளறலுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஷட் அப் அண்ட் கெட் அவுட்..” என்று கத்தினான் தாரக்.
 
 
அதற்கும் அசராமல் நின்ற விஷ்வா “இது இயலாமையில் வரக் கோபம் மாமா.. தனாவுக்கு துரோகம் செஞ்சிட்டோமேன்னு வர கோபம்.. இப்படி இன்னொருத்திக்கு இடம் கொடுத்துட்டோமேன்னு வர எரிச்சல்..” என்றான்.
 
 
“நீ பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டு கண்டபடி உளறாதே விஷ்வா..” என்றான் தாரக். “ஆமா பொய் சொன்னேன், எனக்கு நான் நினைச்சது நடக்கணும்.. அதுக்காக பொய் சொன்னேன், ஏன் நீங்க சொல்லலையா..? என் கூட இருப்பேன், எல்லாத்தையும் சரியா செஞ்சு முடிப்பேன்னு நீங்க பொய் சொல்லலையா..? என்னை நமப வெச்சு ஏமாத்தலையா..? 
 
 
எத்தனை வருஷ காத்திருப்பு..? எவ்வளவு திட்டம்..? என்னெல்லாம் இதுக்காக செஞ்சேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. எல்லாம் சரியா நடந்து வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைச்ச மாதிரி.. வேற யாராவது இதை செஞ்சிருந்தா கூட மனசு ஆறிப் போகும், ஆனா நீங்க.. நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை மாமா..” என்றான் விஷ்வா.
 
 
தன் கோபத்தை எல்லாம் தள்ளி வைத்து அவனை பாவமாக பார்த்த விஷ்வா “இது சரி இல்லைடா புரிஞ்சுக்கோ.. நியாயமா ஒரு அப்பாவி பெண்ணோட உயிர் இதில் போகக்கூடாது, எந்த தப்பும் செய்யாத அவ எதுக்குடா சாகணும்..?” என்றான் தாரக்.
 
 
“அப்போ எங்க அக்கா மட்டும் என்ன தப்பு செஞ்சா..? அவ எதுக்கு சாகணும்..?” என்றான் விஷ்வா. “அவளும் சாகக்கூடாது தான்டா, அதுவும் தப்புதான்.. ஆனா ஒரு தப்பை சரி செய்ய இன்னொரு தப்பு எப்படி சரியாகும்..? ஒரு மரணத்துக்கு இன்னொரு மரணம் ஈடாகுமா..! இவ ஏன் சாகணும் நீயே சொல்லு..” என்றான் தாரக்.
 
 
“சாகணும், செத்துத்தான் ஆகணும்.. எந்த தப்பும் செய்யலையா இவ..? அந்த நாகராஜனுக்கு பொண்ணா பொறந்ததே பெரிய தப்பு தான், அப்பாவுடைய சொத்தில் மட்டும் பிள்ளைகளுக்கு பங்கு இருக்குன்னு யார் சொன்னா..? அவங்க பாவத்திலும் பங்கு இருக்கு..
 
 
நேற்று மட்டும் நான் நினைச்சது நடந்திருந்தா எல்லாம் முடிஞ்சுருக்கும்.. வாழ்நாள் முழுக்க இந்த வலியில் துடிதுடிச்சு சாகும் வரை வாழ்ந்து இருப்பான் அந்த கொலைகாரன்.. ஒரு நொடியில் அவன் உயிர் போறதை விட வாழ்நாள் முழுக்க உயிர் வலியோடு வாழறது தான் நரகம், அவனுக்கு நான் அதைத்தான் கொடுக்க நினைச்சேன்.. என்னைப் போல வாழ்நாள் முழுக்க அதை நினைச்சு நினைச்சு அவன் துடிக்கணும்..” என்றான் விஷ்வா. 
 
 
“பைத்தியம் மாதிரி பேசாதடா, பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம கொலை செய்ய துணிஞ்சவனுக்கு அந்த பொண்ணு இறந்ததை நினைச்சு வலி இருக்கும்னு நினைக்கறியா..? ஒரு நொடி கூட துக்கம் இருக்காது அவனுக்கு, அடுத்த வேலையை பார்க்க ஈசியா கிளம்பிடுவான்..” என்றான் தாரக்.
 
 
“பைத்தியம் மாதிரி பேசுறது நான் இல்லை.. திரும்ப இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானு யோசிங்க.. மறுபடியும் இதை எல்லாம் செய்ய நமக்கு அவகாசம் கூட இல்லை, எல்லாம் உஷாராகி இருப்பாங்க.. எப்படி இதையெல்லாம் இனி செய்யறது..?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு இங்கும் அங்குமாக நடந்தான் விஷ்வா.
 
 
“தண்டிக்க வேண்டியவனை விட்டு எந்த தப்பும் செய்யாதவளை தண்டிச்சு என்னாகப் போகுது..?” என தாரக் சொல்லிக் கொண்டிருக்க.. சத்தம் போட்டு சிரித்து கைகளை தட்டியவன் “எந்த போதி மரத்தடியில் உட்கார்ந்துட்டு வந்தீங்க..? ஒருவேளை..!” என யோசிப்பது போல் நிறுத்தியவன், “நேத்து அவளை கூட்டிட்டு வந்தீங்க.. ஒரு நாள் முழுக்க உங்க கூட இருந்திருக்கா, அப்போ..” என்று விகாரமாக சிரிக்க.. சட்டென விஷ்வாவின் சட்டையை பிடித்து விட்டிருந்தான் தாரக்.
 
 
“என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. நீ தனாவின் தம்பின்னு தான் இவ்வளவு நேரம் அமைதியா இருக்கேன்.. என்னை சீண்டாதே, இது இன்னைக்கு வந்த ஞானம் இல்லை.. ஆரம்பத்தில் இருந்தே நான் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா நீ தான் அவங்க கூடவே இருந்தேன், அவங்க கூடவே வளர்ந்தேன், எனக்கு தான் அவங்களை பற்றி தெரியும்.. என்ன நடந்தா எப்படி எதிர்வினை கிடைக்கும்னு எல்லாம் உங்களை விட எனக்கு மட்டும்தான் தெரியும்னு எல்லாம் அன்னைக்கு பேசியே என்னை குழப்பிட்டே..
 
 
நானும் அப்போ இருந்த மனநிலையில் வேறு எதையும் யோசிக்காம நீ சொன்னது சரியா இருக்கும்னு நினைச்சு பெரிய தப்பு செஞ்சுட்டேன்.. நம்ம திட்டம் மனதளவில் திட்டமா இருக்கும் வரை என் மனசில் இத்தனை கலக்கமோ பாரமோ வலியோ இல்லை.. எப்போ அவளை தூக்கிட்டு வந்தேனோ அந்த நொடியில் இருந்து கொஞ்சம் கூட நிம்மதியா என்னால் மூச்சு விட முடியலை..
 
 
ஏதோ ஒரு அழுத்தம் பாரம் என்னை தொடர்ந்து தொல்லை செஞ்சுட்டே இருந்தது.. அதுவும் கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சும் அதை கலைக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்த பிறகு அந்த ஆளை நம்பி திரும்ப அங்கே கொண்டு போய் விட்டு வந்த நொடியில் இருந்து எனக்குள் நடந்த போராட்டம் அது எனக்கு மட்டும்தான் தெரியும்..
 
 
எதை நினைச்சு நான் அவ்வளவு கலங்கினேனோ, எது நடந்திட கூடாதுன்னு நான் அத்தனை பயந்தேனோ, அதுவே தான் நடந்தது.. நல்லவேளையா நான் சரியான நேரத்தில் போனதினால் திரும்ப நடக்க இருந்த ஒரு பெரிய தவறில் இருந்து என்னால் அந்த பொண்ணை காப்பாத்த முடிஞ்சுது.. அதையும் செய்ய தவறி இருந்தேனா என் குற்ற உணர்வே என்னை கொன்று இருக்கும்.. 
 
 
இப்போவும் சொல்றேன், நாம பழி வாங்க நினைக்கறது கொஞ்சமும் தப்பு இல்லை.. அவனை பழிவாங்கினாலும் ஏன் அந்த அரக்கனை கொன்னே போட்டாலும் கூட தப்பு இல்லை.. ஆனா இது ரொம்ப தப்பு, இப்போவே தெரியாம செஞ்ச பாவத்தில் இருந்து எப்படி மீள போறேன்னு தெரியலை..” என வருந்தி தாரக் பேசிக் கொண்டிருக்க.. அப்போதே நினைவு வந்தவனாக “நீங்க எப்படி அங்கே வந்தீங்க..? சரியான நேரத்துக்கு ஆளங்களோட எப்படி அங்கே உங்களால் வர முடிஞ்சது..?” என்று கூர்மையாக தாரக்கின் முகத்தை பார்த்தபடியே கேட்டான் விஷ்வா. 
 
 
அதில் அவனை நிதானமாக பார்த்து தாரக் பதில் சொல்வதற்குள் “நான் தான் வர சொன்னேன்..?” என்ற குரல் தாரக்கின் அலுவலக அறையில் இருந்து வர, அந்தப் பக்கம் பார்வையை திருப்பிய விஷ்வா உட்சபட்ச அதிர்வோடு இங்கு நடப்பது புரியாமல் நின்றான். 
 
 
அவனின் அதிர்வை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் நிதானமாக அலுவலக அறையில் இருந்து வெளியில் வந்தான் அருண். அப்போதே அருணை அங்கு கண்ட சிந்து ‘முதலில் வந்தது இவன்தானா..!’ என்பது போல் பார்த்திருக்க.. “நீ.. நீங்க இங்கே..?” என்று வெகுவாக தடுமாறினான் விஷ்வா.
 
 
“நானே தான், நீ என்ன நினைச்சுட்டு இருக்கே விஷ்வா..? உன்னைத் தவிர இந்த உலகத்தில் இருக்க எல்லாரும் முட்டாளுங்கனா..! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கியா..?” என்ற அருணின் நிதானமான பேச்சும் தன்னை கேலி செய்வது போல் அவன் பார்வையும், சிந்து தப்பிக்க இவன் தான் காரணம் என்ற உண்மையும் புரிய வந்ததில் தன் கட்டுப்பாட்டுகளை எல்லாம் முற்றிலும் இழந்திருந்தான் விஷ்வா. 
 
 
“ஓ குடும்பமா எல்லாம் ஒண்ணு கூடிட்டீங்களா..? நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு..” என்று வெறிவந்தவன் போல் சிரித்தவன், “அப்போ நான் தான் இங்கே ஏமாளி இல்லை.. நான் தான் பைத்தியக்காரன், உங்களை நம்பினேன் இல்லை நான் பைத்தியம் தான்.. நான் மட்டுமல்ல உங்களை காதலிச்ச எங்க அக்கா கூட பைத்தியம் தான்.. கடைசி வரைக்கும் உங்களுக்காக வாழ்ந்து உங்களுக்காகவே செத்தாலே அவளை சொல்லணும்.. 
 
 
அந்தக் கடைசி நிமிஷத்தில் கூட உங்க குழந்தையை காப்பாற்ற முடியலைன்னு தானே துடிச்சா.. அவளுக்கு நீங்க செய்யற நியாயம் இது தானா..?” என்று தாரக்கை பார்த்து கேட்டவன், திடீரென “எங்க அக்கா செத்ததுக்கு நீங்க தான் காரணம்.. உங்களால் தான், அவ உங்களை காதலிச்சது தான் அவ செஞ்ச தப்பு.. உங்களை காதலிக்காம இருந்திருந்தா இப்போ அவ உயிரோட எங்க கூட சந்தோஷமா இருந்திருப்பா.. நான், எங்க அக்கா, எங்க அம்மான்னு குடும்பமா வாழ்ந்திருப்போம்.. இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்..” என்று தாரக்கின் மீது கோபமாக பாய முயல.. இதையெல்லாம் இனியும் பார்க்க முடியாமல் கண்ணீர் வழிய வேதனையான முகத்தோடு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் சிந்து. 
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
MNM - 28(b) & 29
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 

This post was modified 2 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 30
 
‘இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்..’ என வெறி பிடித்தவன் போல் விஷ்வா கத்திக் கொண்டிருக்க.. விழிகளில் வலியோடு அவனை பார்த்தபடி நின்றான் தாரக்.
 
 
‘தனாவை காப்பாற்ற தவறி விட்டோமோ..! அன்று நான் வீட்டில் இருந்திருந்தால் அவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காதோ..!!’ என்றெல்லாம் அவன் நினைத்து வருந்தாத நாளே இல்லை எனலாம். 
இப்போது அதையே பிரதிபலிப்பது போல் அப்படி ஒரு வார்த்தையை விஷ்வாவே தன்னை பார்த்து சொல்லும் போது தாரக்கினால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதில் அசைவின்றி தாரக் அப்படியே நின்றுவிட, “வாயை மூடுடா, இதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு..?” என்றிருந்தான் அருண். 
 
 
அருணின் இந்த கேள்வியில் ஆத்திரமான விஷ்வா “என்ன தகுதி இல்லை..? எனக்கு எல்லா தகுதியும் இருக்கு, என் அக்கா..” என்று ஏதோ சொல்ல வந்தவனை இடையிட்டு “அப்போ நீ காப்பாத்தி இருக்க வேண்டியது தானே உங்க அக்காவை..!” என்றிருந்தான் அருண். 
 
 
அதில் கோபமாக அருணை நெருங்கிய விஷ்வா நெற்றியை சுருக்கி புரியாமல் பார்த்தபடி அப்படியே நிற்க.. “இவராவது அந்த நேரத்தில் தனா அக்கா கூட இல்லை.. ஆனா நீ இருந்தியே.. நீ தான் ரொம்ப நல்லவனாச்சே..! ஏன் காப்பாத்தலை..?” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமான குரலில் அருண் கேட்கவும், “நான்.. நான் எப்படி..? நான்.. அப்போ சின்ன பையன்..” என்று பதட்டத்தோடு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் விஷ்வா.
 
 
“சின்ன பையன்னா காப்பாத்த கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன..? நீ நினைச்சுருந்தா காப்பாத்தி இருக்கலாமே..!” என்று அருண் வேண்டுமென்றே விஷ்வாவை நோகடிக்கும் நோக்கத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.
 
 
“நான்.. நான் எப்படி காப்பாத்தி இருக்க முடியும்..? அங்கே எத்தனை பேர் அப்போ இருந்தாங்கன்னு தெரியுமா உனக்கு..? எல்லாரும் அருவா கத்தி கம்புன்னு வெச்சுருந்தாங்க, என்னால் என்ன செஞ்சு இருக்க முடியும்னு நினைக்கறே..?” என்று பழி தன் பக்கம் திரும்புவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பதறினான் விஷ்வா. 
 
 
“காப்பாத்தணும்னா சண்டை போட்டு தான் காப்பாத்தணும்னு இல்லையே..! யாருக்கும் தெரியாம என்ன வேணும்னாலும் செஞ்சு இருக்கலாமே, இப்போ நான் சிந்துவை காப்பாத்தலையா..? இதை நான் தான் செஞ்சேன்னு யாருக்கும் இப்போ வரைத் தெரியாது.. இப்படி உன்னால் முடிஞ்சதை நீயும் செஞ்சுருக்கலாமே..!” என்றான் அருண்.
 
 
“இல்லை, நான் அப்போ..” என்று தொடங்கி என்ன சொல்வது என தெரியாமல் விஷ்வா திணற.. “நீ உங்க அக்காவை காப்பாத்தறதை பத்தி யோசிக்கலை.. உங்க அம்மாவுக்கு நடந்ததை பத்தி யோசிக்கலை, நீ யோசிச்சதெல்லாம் என்ன தெரியுமா..?” என்று கேட்டு அவன் சிறிய இடைவெளி விட, ‘என்ன சொல்ல போகிறானோ..?’ என்பது போல் அருணையே பார்த்திருந்தான் விஷ்வா. 
 
 
“உன் உயிரை எப்படி காப்பாத்திக்கறதுன்னு மட்டும் தான் நீ அன்னைக்கு யோசிச்சு இருக்கே.. இதெல்லாம் உனக்கு தெரியாம நடந்திருந்தா கூட பரவாயில்லை.. உன் கண்ணு முன்னேயே நடந்திருக்கும் போது நியாயமா நீ என்ன செஞ்சுருக்கணும்..? அவங்களை எப்படியாவது திசை திருப்பி அங்கிருந்து அனுப்பி வைக்க ஏதாவது ஒரு முயற்சி எடுத்திருக்கலாமே..! அதையாவது செஞ்சியா நீ..?” என்றான் அருண். 
 
 
“நான்.. நான் அப்போ சின்ன பையன்..” என்று மீண்டும் விஷ்வா அதையே சொல்ல.. “தெருவில் விளையாடும் சின்ன பசங்களை பார்த்து இருக்கியா..? திடீர்னு ஒரு நாய் அவங்க மேலே விழுந்து கடிக்க வருதுனா நாய்கிட்ட மாட்டிகிட்ட அவங்க கூட விளையாடின பிள்ளையை அப்படியே விட்டுட்டு ஓட மாட்டாங்க.. அந்த நாயை எதிர்க்கும் பலம் அவங்களுக்கு இல்லைன்னு தெரிஞ்சும், பக்கத்தில் இருக்க கல்லை தூக்கியாவது அடிச்சு நாயை விரட்ட பார்ப்பாங்க.. அவங்களும் சின்ன பிள்ளைங்க தான், நாயை எதிர்க்கும் அளவுக்கு அவங்களுக்கும் சக்தி கிடையாது.. தன் கூட இருக்கிறவங்களை எப்படியாவது காப்பாத்தணும்னு ஒரு எண்ணம் இருக்கும், அது கூட உன்கிட்ட இல்லையே..!” என்றான் குற்றம் சாட்டுவது போலான குரலில் அருண். 
 
 
“இல்லை, இல்லை அப்படியெல்லாம் இல்லை..” என்று பதறிய விஷ்வா “நான் அப்போ பயந்துட்டேன்..” என்று மீண்டும் சொல்ல.. “இல்லை நீ சுயநலமா உன்னை மட்டும் காப்பாத்திகிட்டே..” என்றான் அழுத்தமான குரலில் அருண். 
 
 
இதில் திகைத்து தடுமாறிய விஷ்வா, ‘தன் பக்கம் பேச மாட்டானா..!’ என்பது போல் தாரக்கை திரும்பி பார்க்க.. அவனோ இருவரையும் அமைதியாக பார்த்தபடி நின்றிருந்தான். 
 
 
இதில் வேகமாக தாரக்கை நெருங்கிய விஷ்வா “மாமா இல்லை, இல்லை இவன் சொல்றதை நம்பாதீங்க.. இப்படி எல்லாம் சொல்லி தான் உங்களை எனக்கு எதிரா திரும்பி விட்டானா..? எல்லாம் சரியா தானே போயிட்டு இருந்தது..! எங்கே தப்பாச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..? அதுக்கு காரணம் இவன் தானா..! மாமா ப்ளீஸ் அவனை நம்பாதீங்க, இவன் அந்த நாகராஜனோட பையன்.. அதே குறுக்கு புத்தியும் கொடூர குணமும் இவனுக்கும் இருக்கு..” என்றான் வேகமாக விஷ்வா. 
 
 
“ஏன் இவ்வளவு பதறறே..? உண்மையை சொன்னதும் பயமா இருக்கா..!” என்று அப்போதும் அருண் கேலி குரலில் கேட்க.. “என்ன உண்மை..? என்னடா உண்மை..?” என்று கோபத்தோடு அவனை அடிக்கப் பாய்ந்தான் விஷ்வா.
 
 
அதில் வாகாக வளைந்து அவனிடமிருந்து விலகி நின்ற அருண் “இப்போ உனக்கு எப்படி இருக்கு..? செய்யாத ஒரு விஷயத்தை நீதான் செஞ்சேன்னு சொன்னா எவ்வளவு வலிக்குது..? அப்படிதான்டா இவருக்கும் வலிக்கும், ஒவ்வொருத்தருக்கும் அந்தந்த சூழ்நிலையில ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம்.. அவ்வளவு ஈஸியா தனா அக்கா இறந்ததுக்கு இவர் தான் காரணம்னு சொல்றே..! அப்போ இவர் கூட எதுக்கு கூட்டு சேர்ந்து திட்டம் போட்டே..? இவர் தான் காரணம்னு இத்தனை நாள் தெரியலையா உனக்கு..! அப்புறம் ஏன் அவர் கூட சேர்ந்து எல்லாம் செஞ்சே..?” என்று அருண் கேட்கும் எந்த கேள்விக்கும் விஷ்வாவிடம் பதில் இல்லை. 
 
 
அதில் அவன் பதிலின்றி திணறலாக பார்த்திருக்க.. “உனக்கு மட்டுமில்லை விஷ்வா, தனா அக்காவுக்கு இப்படியானது எனக்கும் கூட வலிதான்.. நீ வேணும்னா எங்களை பிரிச்சு பார்க்கலாம், ஆனா நாங்க அப்படி உங்களை ஒரு நாளும் பார்த்தது இல்லை.. 
 
 
எங்கேயோ மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு தான் நினைச்சேன்.. ஒரு வருஷத்துக்கு பிறகு தான் எனக்கு இது தெரியவே வந்தது..” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் உணர்ச்சி தளும்ப பேச்சை நிறுத்தி விழிமூடி ஒரு நொடி நின்றான். 
 
 
பின் முகத்தை துடைத்துக் கொண்டு “நீ பழி வாங்க நினைச்சதில் தப்பு இல்லை விஷ்வா, ஆனா அதுக்காக தேர்ந்தெடுத்த ஆளுதான் தப்பு.. எப்படிடா சிந்துவை வெச்சு இதெல்லாம்..” என்ற கேட்கும் போதே அவனுக்கு குரல் உடைந்தது. 
 
 
‘யாருக்கு என இங்கு பார்ப்பான் அருண். அவள் தங்கைக்கு என்றா..? இல்லை தம்பிக்கு என்றா..!’ 
 
 
ஒவ்வொரு நாளும் இவர்களை எதிரியின் பிள்ளைகளாக மட்டுமே பார்த்து அவர்கள் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்த விஷ்வாவுக்கு வேண்டுமானால் எல்லாம் அத்தனை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் சிந்துவை பார்த்தது போலவே விஷ்வாவையும் பார்த்திருந்த அருணுக்கு இது பெரும் வலியை தான் கொடுத்தது. 
 
 
இதில் தொடர்ந்து பேச முடியாமல் அவன் இடைவெளி விட, “ஹே சும்மா நடிக்காதேடா.. நீயும் உன் அப்பாவை மாதிரி தான்னு எனக்கு நல்லா தெரியும், கொலைக்கார கும்பல் நீங்க எல்லாம்..” என்றான் வெறுப்போடு விஷ்வா. 
 
 
இதை கேட்டு ஒரு கசந்த புன்னகை அருணின் இதழில் வந்து போக “அப்போ நீ யாரு..?” என திரும்ப கேட்டிருந்தான்.
 
 
அதில் நேருக்கு நேர் அருணை எதிர்கொள்ள முடியாமல் ஒரு நொடி தடுமாறினாலும் சட்டென சுதாரித்துக் கொண்டு “நான் ஒன்னும் உங்களை மாதிரி கொலைகாரன் இல்லை..” என்று வீம்பாக கூறினான் விஷ்வா. 
 
 
‘அப்படியா..!’ என்பது போல் பார்த்திருந்த அருண் வேறு எதுவும் பேசவில்லை. இதுவே விஷ்வாவை கோபம் கொள்ள செய்ய.. “சிந்துவையும் உங்க அப்பா தான் கொலை செய்ய பாத்தார், நான் இல்லை..” என்றான். 
 
 
“அது நடக்கலைன்னு தானே இங்கே வந்து குதிச்சுட்டு இருக்கே..!” என அருண் கேட்கவும் ‘என்ன சொல்லி சமாளிப்பது..? எப்படி தன் பக்கத்தை நியாயப்படுத்துவது..!’ என புரியாமல் திகைத்தவன் “நீ எதுக்கு இங்கே வந்தே..? எப்போ நீ நல்லவனா மாறினே..? அதுவும் திடீர் நல்லவனா..!” என நக்கலாக கேட்டான் விஷ்வா.
 
 
“நான் நல்லவன்னு சொல்லவே இல்லையே..!” என அவன் எதிர்பார்த்ததற்கு மாறான கொஞ்சமும் பதட்டமில்லா குரலிலேயே பேசிய அருண், “ஆரம்பத்தில் நீ இதில் இருக்கேன்னு எனக்கு தெரியாது.. ஆனா தெரிஞ்ச பிறகு உன் மேலே ஒரு கண்ணை எப்போவும் வெச்சுருந்தேன்.. அது தான் இன்னைக்கு சிந்து உயிரோட இருக்க காரணம்..” என்றான் அருண்.
 
 
தன் திட்டமெல்லாம் வீணாகி போன கோபம், நினைத்ததை செய்து முடிக்க முடியாததில் உண்டான எரிச்சல், அதற்குள் தன் முகத்திரை கிழிந்ததை எண்ணி உண்டான வெறுப்பு என்று எல்லாம் சேர அருணை முறைத்தவன் “இன்னும் எதுவும் முடியலை.. அவ்வளவு சீக்கிரம் முடியவும் விடமாட்டேன்.. நான் நினைச்சதை கண்டிப்பா நடத்தி காட்டுவேன்..” என வெறுப்போடு கூறினான் விஷ்வா.
 
 
“தாராளமா செய், ஆனா அதுக்கு காரணமானவங்களை செய், இப்படி சுத்தி வளைச்சு மூக்கை தொடாதே..! இத்தனை வருஷம் அவர் கூடவே இருந்து வளர்ந்து இருக்கே, ஆனா கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லை.. எனக்கோ, சிந்துவுக்கோ, ஏன் எங்க அம்மாவுக்கே ஏதாவது நடந்தா கூட உங்க பெரியப்பா வருத்தப்படுவாருன்னு நினைக்கிறாயா..?” என்ற பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் அருண்.
 
 
“கண்டிப்பா வருத்தப்படுவார், ஏன் செய்ய மாட்டார்..? நீங்க எல்லாம் அவரோட பிள்ளைங்களாச்சே..!” என விஷ்வா சொல்லவும், “இங்கே தான் நீ தப்பு செய்யயறே.. அவரைப் பொருத்தவரை உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.. அவர் நினைச்சுருக்கும் அந்த கௌரவத்துக்கும் ஜாதிக்கும் ஊர் முன்னே தலைவனா தலை நிமிர்ந்து நிற்கறதுக்கும் எந்த ஒரு தடையோ கலங்கமோ வருதுனா.. அதுக்கு காரணமானவங்க யாராயிருந்தாலும் யோசிக்காம அவங்களை முடிச்சுடுவார்..
 
 
சிந்துவை அவர் முடிக்க சொன்னதிலேயே உனக்கு அது புரிஞ்சு இருக்கணும்..,” என்றான் அருண். அதில் ஒரு இகழ்ச்சியான புன்னகை விஷ்வாவின் முகத்தில் வந்து நிற்க.. “முடிக்க தான் சொன்னார்.. ஆனா தனா அக்காவை முடிக்க சொன்னது போல இல்லையே..!” என்று சொன்னவனின் முகம் அத்தனை விகாரமாக இருந்தது. 
 
 
“இதுவே உனக்கு சொல்லலையா அவர் உங்களுக்கும் எங்களுக்கும் நடுவில் எவ்வளவு வித்தியாசமா இருக்காருன்னு, இப்போவாது நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்கோ.. நானும் நீங்களும் ஒண்ணு கிடையாது, அதே தப்பை இதே ஆள் கூட எங்க அக்கா தனா செஞ்சதுக்கு அந்த தண்டனை.. அதே தப்பை இதே ஆள் கூட உன் தங்கச்சி சிந்து செஞ்சா அதுக்கான தண்டனை வேற.. இப்போ புரியுதா உனக்கு..?” என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான் விஷ்வா.
 
 
ஒரு நொடி இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல் அருண் திகைத்து நிற்க, “குட் உனக்கு புரிஞ்சிருச்சு, எனக்கு இது தான் வேணும்.. இனி நான் பார்த்துக்கிறேன்..” என்று விட்டு என்ன நடக்கிறது என உணர்ந்து அருண் அதை தடுக்க முயல்வதற்குள் சட்டென அருகில் நின்ற அருணை பிடித்து வேகமாக தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி இருந்தான் விஷ்வா. 
 
 
அதில் நிலை குலைந்து அருண் கீழே சரிய, வேகமாகச் சென்று தாரக் அவனை தூக்கி “ஆர் யூ ஓகே..?” என்றான். அதற்கு ‘ஆம்’ என்ற தலையசைப்போடு அருண் எழுந்து நிற்கவும், இருவரும் அடுத்து என்ன என்பது போல் செய்வதறியாது விஷ்வா சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
 
*****
 
 
அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்ட சிந்துவுக்கு மனம் வெறுமையாக இருந்தது. இப்போது அவளுக்கு கலக்கமோ பயமோ ஏன் வருத்தமோ கூட இல்லை. எதையும் யோசிக்கக்கூட தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 
 
‘இப்போது உயிர் வாழ வேண்டுமா..? இல்லை சாவதே மேலா..!’ என கூட அவளுக்கு தெரியவில்லை. நடந்ததையெல்லாம் அறிய நேரும்போது இதற்கு தன் உயிர் அன்றே போய் இருக்கலாம் என்றே சிந்துவுக்கு தோன்றியது.
 
 
ஆனால் உயிர் மட்டும் போவதாக இருந்தால் பரவாயில்லை என்று மனம் எண்ணும் போதே அன்றைய நினைவுகள் அவளுள் எழுந்து நடுக்கத்தை வரவழைத்தது.
 
 
அதில் தன்னையும் மீறி கைகள் நடுங்க அமர்ந்திருந்த படுக்கையை இறுக பிடித்துக் கொண்டவள், விழிமூடி அந்த நினைவுகளில் இருந்து வெளிவரப் போராட.. அவளின் நேரமோ என்னவோ மீண்டும் அதே நினைவுகளே அவளுள் முட்டி மோதிக்கொண்டிருந்தது. 
 
 
எதையும் நினைக்க கூடாது என்று மனம் நினைத்தாலும், அதற்கு மாறாக அதை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தது.
 
 
நாகராஜன் நல்லவர் இல்லை, அடிதடிகள் எல்லாம் செய்யக்கூடியவர் தான் என சிறு வயதிலிருந்து அறிந்திருந்தாலும் அவரிடம் இருந்து ஒதுங்கியே வளர்ந்திருந்தாலும் இதெல்லாம் அவள் கொஞ்சமும் கனவிலும் நினைத்துப் பார்க்காததாக இருந்தது.
 
 
‘இப்படி எல்லாம் செய்ய அவருக்கு எப்படி மனம் வந்தது..?’ என்று எண்ண கூட மறந்து மனம் மறுத்துப் போய் அமர்ந்திருந்தாள் சிந்து. அதிசயமாக இந்த விஷயத்தில் விஷ்வாவின் மீது துளி கூட அவளுக்கு கோபம் வரவில்லை. அவன் நினைப்பதில் என்ன தவறு என்றே தோன்றியது. 
 
 
மனம் நிர்மலமாக இருந்ததாலோ.. இல்லை அருணை இங்கே பார்த்த பின் உண்டான நினைவுகளோ.. ஏதோ ஒன்று தாரக் அன்று சிந்துவை அங்கிருந்து காப்பாற்றி அழைத்து வரும் போது இருவரையும் அந்த பக்கம் செல்லாமல் வேறு பக்கம் செல்ல சொல்லியது அருண் என்ற நினைவே அவளுக்கு இப்போது தான் வந்தது.
 
 
தன் மேல் அன்பு கொண்டவனாக மட்டுமே பார்த்திருந்தவனின் இன்னொரு முகமும், தன் மேல் அன்பே இல்லாதவன் என நினைத்திருந்தவனின் இன்னொரு முகமும் இன்று தெரிய வந்ததில் செய்வதறியாமல் செய்வதற்கு எதுவுமில்லாமல் அறைக்குள்ளேயே ஒரே இடத்தில் மாலை மங்கி இரவானதையும் உணராமல் சிந்து அமர்ந்திருக்க.. அதே நேரம் தனாவோடு அவன் வாழ்ந்த வீட்டிற்குள் தஞ்சமாகி இருந்தான் தாரக்.
 
 
அவன் மனம் உலைகளனாக கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு நொடி கூட நிம்மதியாக தாரக்கினால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தனாவை பற்றி விஷ்வாவின் மூலம் கேள்விப்பட்டிருந்த உண்மை தெரிய வந்த அதிர்விலும், அவன் சொன்னதை செய்து நாகராஜனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்தவனால் அதை செயல்படுத்த தொடங்கிய பிறகு ஒரு நொடி கூட இயல்பாக இருக்கவே முடியவில்லை.
 
 
ஒவ்வொரு முறையும் சிந்துவை நெருங்கும் போதெல்லாம் அவனுள் உண்டாகும் கோபமும் வலியும் அவன் மட்டுமே அறிவான். அதை எப்படி யாரிடம் காண்பிப்பது என தெரியாமல் இதற்கெல்லாம் காரணமானவனின் மகளிடமே அதை பலமுறை இறக்கியும் இருக்கிறான்.
 
 
‘நாகராஜன் எங்களை நிம்மதியாக வாழ விட்டிருந்தால் எனக்கு இந்த நிலை இல்லையே..! நீயும் நிம்மதியாக எங்காவது சந்தோஷமாக இருந்திருக்கலாமே..!! இப்போது உன்னையும் கஷ்டப்படுத்தி, நானும் கஷ்டப்பட்டு எதற்கு இப்படி ஒரு நிலை..?’ என்ற கோபம் தான் சிந்துவிடம் அவன் ஒவ்வொரு முறையும் கடினமாக நடந்து கொள்ள காரணமாக இருந்தது. 
 
 
அந்த நொடி ஆத்திரத்தில் அவளிடம் தன் கோபத்தை கொட்டி விட்டு பின் தனிமையில் எவ்வளவு தான் அதைப்பற்றி யோசித்து வருந்தினாலும் செய்த எதுவும் மாறாது என அவனுக்குமே தெரியும்.
அப்போதே அத்தனை பாரத்தை மனதில் சுமந்து கொண்டு இருந்தவன், இப்போது நாகராஜன் தன் மகளுக்கும் அதையே தான் செய்ய பார்த்தார் என தெரிய வந்த நொடி முதல் முற்றிலும் மனதளவில் உடைந்தே போனான் தாரக்.
 
 
எது நடக்காது நடக்க வாய்ப்பில்லை என நினைத்து இத்தனையும் திட்டமிட்டு செய்திருந்தார்களோ..! இப்போது அத்தனையும் வீணாகிப் போயிருந்தது. இதில் உண்டான குற்ற உணர்வில் நிம்மதியாக மூச்சுக் கூட விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனை இன்றைய விஷ்வாவின் பேச்சு மேலும் உடைத்துப் போட்டிருந்தது. 
 
 
அதில் தனாவை தேடி வந்து விட்டிருந்தவன், அவளில் மடியில் ஆதரவு தேடும் பிள்ளையை போல் அவளின் பழைய சேலையை அணைத்து பிடித்த படி தரையில் சுருண்டு படுத்திருந்தான்.
 
 
வழக்கமாக இது போலான சூழ்நிலையில் அவன் சுருண்டு படுத்திருக்கும் போதெல்லாம் மென்மையாக அவன் தலையை வருடும் மென் கரம் இன்று அப்படி வருடாதது போல் ஒரு எண்ணம் அவனுள் உண்டானது. இது வேறு மனதை பிசைய, தாரக்கின் விழிகள் கலங்கி கண்ணீர் வழிந்தது.
 
 
இங்கே தாரக்கின் வீட்டில் அடர்ந்த அமைதி நிலவியது. விஷ்வா கொஞ்சம் சத்தமாக பேசத் தொடங்கியதுமே, இனி அங்கே இருப்பது சரியில்லை என்று புரிந்து உமா தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அவுட் ஹவுஸூக்கு சென்று விட்டிருந்தார்.
 
 
அதன் பின் தாரக்கும் வெளியே கிளம்பிச் சென்று விட, இனி தனக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை என்பதால் அங்கேயே இருந்த உமா, இரவு உணவு தயாரிக்க எண்ணி அதற்கான நேரத்திற்கு தாரக் வீட்டிற்குள் நுழைய, இருளில் மூழ்கி இருந்த வீடே அவரை வரவேற்றது. 
 
 
சிந்துவின் அறைக்கதவும் மூடியிருக்க.. ஒரு நொடி அதை பார்த்தவாறே நின்றவர், பின் சமையலறைக்குள் சென்றுவிட.. வீட்டிற்கு வெளியே நான்கு பாதுகாவலர்கள் வந்து நின்றனர்.
 
 
கேட்டில் நின்றிருந்த காவலாளி, முன்பே தாரக் இவர்களைப் பற்றி சொல்லியிருந்ததால் அவர்களை உள்ளே அனுமதித்தார். வீட்டைச் சுற்றி அவர்கள் பாதுகாப்பு அரண் போல் நின்றனர்.
 
 
சிந்துவை அங்கிருந்து அழைத்து வந்த போதே இதற்கும் சேர்த்து ஏற்பாடு செய்திருந்தான் தாரக். எப்படியும் நாகராஜனும் அவரின் ஆட்களும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என அவன் முன்பே கணித்திருந்தான். 
 
 
அதற்கேற்றார் போல் தான் நாகராஜனின் கட்டளைப்படி முத்து அனைத்தையும் செய்து முடிக்க தேவையான ஏற்பாடுகளோடு ஊரிலிருந்து கிளம்பி இருந்தான். 
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
 
 
நேசம் - 31
 
குட்டி போட்ட பூனை போல அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஆத்திரத்தோடு நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். மனம் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்க.. சட்டென நினைவு வந்தவராக நின்றவர், தன் அலைபேசியை எடுத்து வேகமாக யுவனுக்கு அழைத்தார். 
 
 
முதன்முறை அழைப்பு முழுதாக சென்று நின்றது. அதில் உண்டான எரிச்சலோடு விடாமல் நாகராஜன் தொடர்ந்து அழைக்கவும் அந்தப் பக்கம் அதை ஏற்றிருந்தான் யுவன். “சொல்லுங்க அங்கிள், கொஞ்சம் வேலையா இருந்தேன்.. என்ன விஷயம்..?” என அவன் சாதாரணமாக தொடங்கவும், “அந்த பையனை பத்தி உனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லு..” என்று மொட்டையாக கேட்டார் நாகராஜன்.
 
 
அதில் புரியாமல் குழம்பியவன் “யாரு..?” எனவும், திரும்பத் திரும்ப அவனை பற்றி பேச வேண்டி இருப்பதில் உண்டான எரிச்சலோடு “அதான் பிசினஸில் உன்கிட்ட பிரச்சனை செஞ்சானே..!” என்றார் நாகராஜ். 
 
 
யுவனுக்கும் சட்டென நினைவு வந்துவிட, “ஓ தாரக் பத்தி கேட்கறீங்களா..? அவனைப் பத்தி என்ன தெரியணும் உங்களுக்கு..?” என்றான்.
 
 
“அவனே ஒன்னும் இல்லாத வெறும் பைய, அடுத்த வேலை சோத்துக்கே வழியில்லாமல் தெருவில் சுத்திட்டு இருந்த பிச்சைக்கார பைய.. திடீர்னு அவனுக்கு இவ்வளவு சொத்து, பணம், வசதி எல்லாம் எங்கே இருந்து வந்தது..?” என்றார் நாகராஜன். 
 
 
அதில் அவர் சொல்ல வருவது புரியாமல் குழம்பிய யுவன் “என்ன அங்கிள் சொல்றீங்க..? எனக்கு எதுவும் புரியலையே..! தாரக் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இல்லையே, அவன் பிறந்ததிலிருந்தே கோடீஸ்வரன் தான்.. எனக்கு சின்ன வயசில் இருந்தே அவனை தெரியுமே..! அதோடு இப்போ நடக்கும் தொழில் போட்டி எனக்கும் அவனுக்கும் மட்டுமில்லை.. எங்க அப்பாவுக்கும் அவங்க அப்பாவுக்கும் கூட நடந்தது..” என அவன் சொல்லிக் கொண்டே செல்ல.. குழப்பமாக நெற்றியை சுருக்கினார் நாகராஜன். 
 
 
அவரறிந்தவரை தனாவை தேடிக் கொண்டிருந்த போது நாகராஜனின் ஆட்கள் சொன்ன விஷயங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் சாதாரண ஒரு வாடகை வீட்டில் மாத வருமானத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தனர். 
 
 
அதுவும் பெரிதான வருமானமெல்லாம் இல்லாத ஏதோ ஒரு சின்ன வேலையில் தான் தாரக் அப்போது இருந்தான். இதெல்லாம் நன்றாக நாகராஜனுக்கு இப்போதும் நினைவிருக்கிறது. ஆனால் இவன் வேறு மாதிரி சொல்லவும் யோசனையானவர் “உனக்கு நல்லா தெரியுமா..?” என்று அவன் சொல்லுவதை துளியும் நம்பாத குரலில் கேட்க லேசாக புன்னகைத்தான் யுவன்.
 
 
“நிஜமாவே எனக்கு அவனை சின்ன வயசில் இருந்தே நல்லா தெரியும் அங்கிள்.. அப்போவே எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது, எப்போவுமே எங்க அம்மா அவனைத்தான் எனக்கு உதாரணமாக சொல்லி பேசுவாங்க.. அவன் அப்படி இருக்கான், அவன் இப்படி இருக்கான், நீ ஏன் அது மாதிரி இல்லை.. உனக்கு கொஞ்சமும் பொறுப்பில்லை, வசதியான வீட்டில் பிறந்துட்டா இப்படி பொறுப்பில்லாம இருக்கணும்னு என்ன அவசியம்..? தாரக்கை பார்த்து கத்துக்கோன்னு அடிக்கடி எங்க அம்மா சொல்லுவாங்க.. 
 
 
அதனாலேயே எனக்கு அவனை பிடிக்காம போச்சு.. எனக்கு தெரிஞ்ச வரை சின்ன வயசில் இருந்தே அவன் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்.. இப்போ வரை அதில் எதுவுமே மாறலை..” என்று தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டெனு நிறுத்தி “இல்லையில்லை, ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு..” என்றான். 
 
 
அதில் “என்ன..?” என்று லேசான ஆர்வத்தோடு நாகராஜன் கேட்கவும் “ஆரம்பத்தில் அவன் இவ்வளவு முசுடு இல்லை.. அதிகம் யார் கூடவும் பேச மாட்டான், அளந்து தான் பேசுவானாலும் ரொம்ப மென்மையா யாரையும் காயப்படுத்திட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கும் அவன் பேச்சு செயல் எல்லாம்.. இப்போ அதெல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலை.. ஒருவேளை பிசினஸில் அப்படி இருந்தா செட் ஆகாதுன்னு நினைச்சிட்டானோ என்னவோ..! 
 
 
ஆனா நான் பார்த்து வளர்ந்த அந்த தாரக் இவன் இல்லை, யார் எவ்வளவு காயப்பட்டாலும் பரவாயில்லை.. அவங்களுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு அதிரடியா எல்லாம் செய்யற இந்த தாரக் எனக்குமே புதுசு தான்.. ஒரு அஞ்சு ஆறு வருஷமா தான் அவன் இப்படி இருக்கான்னு நினைக்கறேன், இது தான் எனக்கு இப்போ பிரச்சனையா இருக்கு.. என்னால் அவனை சமாளிக்கவே முடியலை, இதில் எங்க அப்பா வேற..!” என்று சலித்துக் கொண்டவன், 
 
 
“அவன் சாஃப்ட் நேச்சர் எங்க அம்மாக்கு பிடிச்சது போல, அவனுடைய இந்த ரஃப் அண்ட் டஃப் நேச்சர், பிசினஸை அவன் ஹேண்டில் செய்யற விதம் எல்லாம் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. கடைசியில் அவன் இப்படி இருந்தாலும் சரி அப்படி இருந்தாலும் சரி எனக்கு தான் அது டார்ச்சராகியிருக்கு..” என யுவன் பேசிக்கொண்டே சென்றான்.
 
“நான் உன்கிட்ட விவரம் கேட்டா, நீ அவனுக்கு விளம்பரம் ஓட்டறியா..? உனக்கு அவன் பெருமையை பேச அவ்வளவு பிடிக்கும்னா போய் தெருத்தெருவா அவன் பெருமையை போஸ்டர் அடிச்சு ஓட்டு..” என்று சிடுசிடுத்து விட்டு அழைப்பை துண்டித்து இருந்தார் நாகராஜன்.
 
 
அதில் ‘அவர் தானே தாரக் பத்தி கேட்டார்..! இப்போது என்ன..?’ என்பது போல் தன் காதில் இருந்த அலைபேசியை எடுத்து புரியாமல் பார்த்தான் யுவன்.
 
 
அதேநேரம் மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருந்த அருண், நேராக சென்று நாகராஜனை சந்தித்தான். பக்கத்து ஊருக்கு அவர் அனுப்பி இருந்த வேலை சரியாக முடிந்த செய்தி நேற்று முன்தினமே அவருக்கு வந்து சேர்ந்து இருந்ததில், அமைதியாகவே அருணை ஏறிட்டவர் “ஒரு வேலையை சொன்னபடி செய்து முடிச்சா மட்டும் போதாது, எல்லா நெளிவு சுளிவையும் கத்துக்கணும் போ..” என்றார். 
 
 
அருணும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே அங்கிருந்து நகர்ந்தான். தன் அறைக்குச் சென்று படுக்கையில் சோர்வாக சரிந்தவனுக்கு மூன்று நாட்களாக ஓய்வில்லாமல் அலைந்ததின் களைப்பு மிச்சம் இருந்தது. 
 
 
அன்று சிந்துவை இவர்கள் அடைத்து வைத்திருந்த போது அருண் இங்கு திரும்ப வந்ததை விரும்பாதது போல் நாகராஜன் நடந்து கொண்டதும், உடனே அவனை அங்கிருந்து கிளப்ப முயன்றதும் சந்தேகத்தை கொடுத்திருந்தது. 
 
 
அதிலேயே சிந்து அறையில் இருக்கிறாளா என யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பி இருந்தான் அருண்.
 
 
ஊருக்கு வந்ததிலிருந்து எங்கேயும் செல்லாதவள், இன்று திடீரென வெளியில் சென்று இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் சுஜாதாவும் வீட்டில் இல்லை என அவரை பற்றி விசாரித்த போது, வேலையாட்கள் அவர் கோவிலுக்கு சென்று இருப்பதாக கூறினர். 
 
 
சிந்து அவரோடு செல்லவில்லை என்றும் உறுதியாக, ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு இங்கு என்ன நடக்கப் போகிறது என தெளிவாகவே புரிந்தது.
 
 
அதற்கேற்றார் போல் முத்துவும் கொஞ்சம் பரபரப்பாக இருந்ததோடு சிவாவை அழைத்து ஏதோ அடிக்கடி ரகசியம் பேசுவதையும் கவனித்திருந்தவன், மற்றவர்களுக்கு ஊருக்கு போவது போல் போக்கு காண்பித்து விட்டு யாரும் அறியாமல் தோப்பிற்குள் பதுங்கிக் கொண்டான் அருண்.
 
 
இதையெல்லாம் பார்த்தவனின் மனம் நர்த்தனாவுக்கு நடந்ததை பற்றி தெரிய வந்த நாளுக்குச் சென்றது. எதிர்ப்பாரா ஒரு நேரத்தில் தான் நாகராஜனும் முத்துவும் பேசுவதை யாருமறியாமல் கேட்டிருந்தான் அருண். அவன் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம் அது. 
 
 
தன் உடன்பிறந்த சகோதரியாக நினைத்திருந்தவளின் மரணம், அதுவும் இத்தனை கோரமான மரணம் பற்றி அறிய நேர்ந்த நொடி முற்றிலும் உடைந்தே போனான் அருண். யாரிடமும் இதை சொல்லி ஆறுதல் தேட கூட முடியாத நிலை. தனக்குள்ளேயே வைத்து மருகிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கொடூர செயலை செய்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நாகராஜன் அதை பெருமையாக கருதுவது தான் அதிக வலியை கொடுத்தது. 
 
 
இதைப் பற்றி சுஜாதாவுக்கு தெரியுமோ இல்லையோ என்ற பயம். அவருக்குத் தெரிய வந்தால் என்னாகுமோ என்ற பதட்டம். இனி இப்படி ஒரு செயல் இந்த வீட்டில் மீண்டும் நடந்து விடக்கூடாதே என்ற பரிதவிப்பு என்றெல்லாம் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இனி ஒரு நிகழ்வு இப்படி தன் வீட்டில் நடந்து விடவே கூடாது என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது. 
 
 
தன்னால் முடிந்தவரை இப்படி ஒரு இழப்பு இனிமேல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என நினைத்தவன், அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து எடுத்த முடிவு தான் நாகராஜனிடமிருந்து தள்ளி இருப்பதை விட, அவர் அருகிலேயே இருந்து அவரின் செயல்களை கண்காணிப்பது என்பது. 
 
 
அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரோடு இருக்கவும் நெருங்கவும் முயன்றான் அருண். திடீரென அவரோடு நெருக்கம் காண்பித்தால் நாகராஜனுக்கு சந்தேகம் வரும் என்றே கொஞ்சம் கொஞ்சமாக அதை செய்து அவர்களோடு இணைந்து கொண்டான் அருண். 
 
 
அதன் பின் பெரும்பாலும் சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்பவன், பெரிய உயிர் போகும் அளவுக்கான விஷயங்களில் எல்லாம் தன்னால் முடிந்தளவுக்கு எதையாவது செய்து சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைத்து விடுவான்.
 
 
இன்று வரை அதை செய்தது அருண் தான் எனக் கூட இவர்கள் யாருக்கும் சந்தேகம் வந்ததே இல்லை. இயல்பாக நடப்பது போல் ஏதோ ஒன்றை செய்து தன் மனம் விரும்பாத ஒன்றை அங்கே நடக்க விடாமல் அழகாக தவிர்த்து விடுவான் அருண். 
 
 
பெரும்பாலும் அருணிடம் ஒப்படைக்கும் பொறுப்புகள் எல்லாம் ஏதோ ஒரு தடையால் சரியாக நடந்து முடியவில்லை என்ற எண்ணம் மட்டுமே நாகராஜன் மனதில் பதிந்திருக்க.. அதற்கே சொல்லும் வேலையை சரியாக செய்யவில்லை என எப்போதும் மகனை திட்டிக் கொண்டிருப்பார் நாகராஜன்.
 
 
இதெல்லாம் அவரின் சட்டவிரோதமான செயல்களில் மட்டும் தான். தொழிலைப் பொறுத்தவரை அவர் நினைப்பதற்கு மேலாக அனைத்தையும் சரியாக செய்து முடிப்பானான் அருண். இப்போதும் அப்படியே பக்கத்து ஊரில் அவர் பேசி முடிக்க வேண்டிய தொழில் முறை ஒப்பந்தத்தை பெரிய அளவிலேயே முடித்தும் கொடுத்திருந்தான்.
 
 
அதனாலேயே இரண்டு நாட்கள் கழித்து அருண் வந்ததை கூட நாகராஜன் பெரிது படுத்தவில்லை. இதையெல்லாம் யோசித்தபடியே குளித்து முடித்து வெளியில் வந்தவன் சாப்பிட சென்று அமர்ந்தும் சுஜாதா அவன் கண்ணில் தென்படவே இல்லை.
 
 
எப்போதும் சமையலறையிலேயே அதிகம் இருப்பவரை, அங்கு காணாததில் வேலை செய்பவர்களிடம் அருண் விசாரிக்க.. சுஜாதாவுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிய வந்தது.
 
 
அதில் அவரைக் காண சென்றவன் சோர்வாக சுருண்டு கிடந்த சுஜாதாவைக் கண்டு கவலையாகி “என்னாச்சு ம்மா..?” எனவும் விழிகளை பெரும் சிரமத்திற்கு பிறகு திறந்து பார்த்தவர் ‘ஒண்ணுமில்லை’ என்பதாக தலையசைக்க.. அவரை வருத்தமாக பார்த்தான் அருண். 
 
 
சுஜாதாவுக்கு தன் மேல் நிறைய கோபமும் வருத்தமும் உண்டு என அவனுக்கு நன்றாக தெரியும். இன்னொரு நாகராஜனாக தயாராகி நிற்பதாகவே நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார். அவனுக்கும் அனைத்தையும் சொல்லிவிட மனம் துடித்தது தான். ஆனால் இது இவர்கள் இருவருக்கே வினையாகி போகும் என புரிந்து அமைதி காத்தான் அருண். 
 
 
இதில் எதுவும் பேசாமல் அங்கேயே அருண் நின்றிருக்க.. அவனை சில நொடிகள் வெறுமையாக பார்த்த சுஜாதா, “விஷ்.. விஷ்வா இரண்டு நாளா வீட்டுக்கு வரலை.. கொஞ்சம் என்னன்னு பார்க்கறியா..?” என்றார் மெல்லிய குரலில்.
 
 
அதில் வலி நிறைந்த ஒரு பார்வை அவரைப் பார்த்தவன், தன் கையால் வளர்த்த பிள்ளை இப்படி தன் குடும்பத்திற்கு எதிராகவே சதி செய்கிறான் எனத் தெரிந்தால் சுஜாதா தாங்க மாட்டார் என புரிந்து, அதை அவரிடம் சொல்லாமல் மறைத்து, “அவன் என்ன சின்ன குழந்தையா காணாமல் போக..? ஏதாவது வேலையா போயிருப்பான், வந்துடுவான்.. கவலைப்படாம இருங்க..” என ஆறுதலாக கூறினான்.
 
 
“அவன் அப்படியெல்லாம் எங்கேயும் போக மாட்டான், அவனுக்குன்னு யார் இருக்காங்க..? அவனுக்கு யாரை தெரியும்..? எங்கே போவான்..? அவன் இந்த மாதிரி எல்லாம் செஞ்சதில்லை, அவனுக்கு ஏதோ பிரச்சனையோன்னு மனசு கிடந்து தவிக்குது, கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்..” என்றார்.
 
 
இவரிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என உணர்ந்தவனாக “சரி என்னன்னு பார்க்கறேன், காலேஜ் ஃபிரண்ட்ஸ் யாரையாவது பார்க்க போயிருக்கான்.. வேலை சம்பந்தமா ஏதாவது இருக்கலாம்..” என அவர் நம்பும்படி எதையோ சொல்லி வைக்க.. அவரும் “அப்படியும் இருக்குமோ..! ஆனா என் என்கிட்ட சொல்லாம ஏன் போனான்..? அப்படி எல்லாம் போக மாட்டானே..!” என்றார்.
 
 
“ஏதாவது அவசர வேலை இருந்திருக்கும், நீங்க இப்படி எல்லாரையும் பார்த்து கவலைப்பட்டுட்டு இருந்தா போதுமா..! உங்களை பத்தியும் கொஞ்சம் கவலைப்படுங்க, டாக்டர்கிட்ட போனீங்களா..?” என்றான்.
 
 
“எனக்கு ஒண்ணுமில்லை, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்..” என அவர் சொல்லும்போதே குரல் அத்தனை மெலிந்து ஒலித்தது. இப்போதே வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மனம் நினைத்தாலும், தேவையில்லாத சந்தேகம் நாகராஜனுக்கு வந்தால் அது பெரும் பிரச்சனையை உண்டாக்கி விடும் எனப் புரிந்து, சுஜாதாவும் என்ன ஏது என யோசித்துக் குழம்பி உடம்பை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என நினைத்தவனாக அவர் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயத்தை பேச எண்ணினான் அருண். 
 
 
“உங்க பொண்ணு எந்த பிரச்சனையும் இல்லாம அவ புருஷன் வீட்டில் பாதுகாப்பா இருக்கா போலே..! இப்போ தான் அப்பாவுக்கு தகவல் வந்தது..” என்று கூறியவனை அவர் நிம்மதியோடு பார்க்க.. சட்டென குரலை மாற்றிக் கொண்டவனாக “இவ்வளவு அக்கறை இருக்கிறவன் எதுக்கு கூட்டிட்டு வந்து இங்கே விடணும்..? அவ திரும்ப இங்கே வராத வரைக்கும் நல்லது..” என தன் மனதில் இருப்பதையே நாகராஜனின் இன்னொரு பிம்பமாக மாறி பேசிவிட்டு அவன் வெளியேற.. அவன் சென்ற திசையை கலவரமாக பார்த்தார் சுஜாதா.
 
 
‘அப்படியே அவங்க அப்பாவை போலவே இருக்கான்.. நல்லவேளை சிந்து இங்கே இருந்து தப்பிச்சிட்டா, இனி திரும்ப இங்கே வராம இருக்கணும்..! கடவுளே என் பொண்ணை காப்பாத்துப்பா..” என மனதார வேண்டிக் கொண்டார் சுஜாதா.
 
 
*****
 
 
அன்று காலை முதலே தாரக்கிற்கு வேலை சரியாக இருந்தது. சாப்பிட கூட நேரம் இல்லாமல் அலுவலக அறையில் அமர்ந்தவாறு வேலையை செய்து முடித்து வெளியில் வந்தவன் சிட் அவுட்டின் கதவை திறந்து நின்றான்.
 
 
அவ்வளவு நேரம் வேலையில் மூழ்கியிருந்தவனுக்கு குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோதியது அத்தனை இதமாக இருந்தது. அதில் அந்த நொடியை விழிமூடி ரசித்தபடி தாரக் நின்றிருக்க.. மெல்ல தயக்கத்தோடு அவன் பின்னே வந்து நின்றாள் சிந்து. 
 
 
அவள் வந்ததை உணர்ந்து என்ன என்பது போல் திரும்பி பார்த்தான் தாரக். “உங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என லேசான தடுமாற்றத்தோடு சிந்து சொல்லவும் “ஹ்ம்ம் சொல்லு..” என்றான். 
 
 
அதில் அக்கம் பக்கம் பார்வையை சுழற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள் “நீங்க.. நீங்க தப்பா எடுத்துக்கலைனா, எனக்கு தனா அக்கா பத்தி சொல்றீங்களா..?” என அவள் கேட்டு முடித்த நொடி அதுவரை இலகுவாக இருந்த அவன் உடல் மொழியில் ஒரு விறைப்புத் தன்மை வந்து அமர்ந்து கொண்டது. 
 
 
முகம் இறுக அவளை ஒரு நொடி பார்த்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொள்ள.. “ப்ளீஸ் எனக்கு சொல்லுங்களேன்..” என கெஞ்சலாக சிந்து கேட்கவும், விழியை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன் “இப்போ எதுக்கு அதெல்லாம்..?” என்றான்.
 
 
“எனக்கு தெரிஞ்சுக்கணும், எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது.. இப்போ வரைக்கும் எதுவுமே முழுசா தெரியாது, நீங்க எல்லாம் பேசுறதில் இருந்து தான் கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. அதுவே எனக்கு ரொம்ப பயத்தை கொடுக்குது, ப்ளீஸ் எனக்கு எல்லாம் சொல்லுங்களேன்..” என்று கேட்டு முடிப்பதற்குள் அவள் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்திருந்தது.
 
 
“திரும்ப அதையெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்தாதே..” என்றான் தாரக். அதில் அவரை இருநொடிகள் அமைதியாக பார்த்து, “இதையெல்லாம் உங்களால் மறந்துட முடியும்னு உங்களுக்கு தோணுதா..? இல்லை இத்தனை நாள் மறந்துட்டு தான் இருக்கீங்களா..?” என்றாள். 
 
 
அவளின் அந்த கூர்மையான பார்வையும் அதைவிட கூர்மையாக வந்த கேள்வியும் ஒரு நொடி அவனை அமைதியாக்க.. பின், “இந்த வலி எல்லாம் உனக்கு வேண்டாம், இதைப் பற்றி தெரிஞ்சுகிட்ட யாராலேயும் ஒரு நொடி கூட நிம்மதியா இருக்க முடியலை.. அப்படியே விட்டுடு வேண்டாம்..” என்றான் தாரக்.
 
 
அதில் அங்கு பெரும் அமைதி நிலவ, மீண்டும் மறுப்பான தலையசைப்போடு அவனைப் பார்த்தவள், “இந்த திரைக்குப் பின்னே என்ன மர்மம் இருக்கு..? எவ்வளவு பெரிய பூதம் மறைஞ்சு இருக்குன்ற பதட்டமே எனக்கு பெரும் பயத்தை கொடுக்குது.. 
 
 
தினமும் அது கொடுக்கும் படபடப்பையும் அழுத்தத்தையும் என்னால் தாங்கிக்கவே முடியலை.. எவ்வளவு பெரிய வலியா இருந்தாலும் சரி அதை நான் ஏத்துக்க தயாரா இருக்கேன், அது என் இந்த பதட்டத்தையும் பயத்தையும் கொஞ்சமாவது குறைக்குமே.. ப்ளீஸ் எனக்கு சொல்லிடுங்களேன்..” என்று அவள் கெஞ்சுதலாக கேட்கும் போதே, சிந்துவின் குரல் உடைந்தது.
 
 
அதில் சரியென்ற தலையசைப்போடு அவளைப் பார்த்தவன், தன் அலுவலக அறையை நோக்கி கையை காண்பித்தான். அங்கு போய் பேசுவோம் என்பது போல் அவன் சைகை செய்ய.. அதை புரிந்து கொண்டவளாக சிந்துவும் தாரக்கின் பின்னே அறைக்குள் நுழைந்தாள்.
 
 
அவளை அமருமாறு சொன்னவன், எப்படி எங்கிருந்து இதைத் தொடங்குவது எனத் தெரியாத தடுமாற்றத்தோடு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்க.. இதைப்பற்றி பேசுவது தாரக்கிற்கு பெரும் சங்கடத்தையும் வலியையும் கொடுப்பதை புரிந்து கொண்டவளாக சிந்து அவனுக்கான நேரத்தை கொடுத்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 
 
ஒருவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டவனாக தாரக், சிந்துவின் பக்கம் திரும்பவும் அவனின் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. முதலில் அதை தவிர்க்க நினைத்தவன், பின் மேசை மேலிருந்த தன் அலைபேசியை சென்று எடுத்துப் பார்க்க.. சாரதா தான் அழைத்திருந்தார். 
 
 
தேவையில்லாமல் அவர் எப்போதும் அழைக்க மாட்டார் என்று புரிந்து உடனே அதை எடுத்திருந்தான் தாரக். 
 
 
“தீபன் தம்பி கொஞ்சம் அவசரமா வாங்களேன்..” என சாரதாவின் குரல் பதட்டமாக ஒலிக்க.. “என்னாச்சு..? ஐயாவுக்கு எதுவும் பிரச்சனையா..!” என்றான் அவரின் பதட்டம் தொற்றிக் கொண்ட குரலில் தாரக்.
 
 
“ஆமா என்னாச்சுனே தெரியலை, கண்ணையே திறக்கலை.. நான் ரொம்ப நேரமா எழுப்பறேன்..” என அவர் சொல்லிக் கொண்டே இருக்க.. “இதோ நான் வந்துட்டு இருக்கேன், எனக்கு முன்னே ஆம்புலன்ஸ் வந்துடும்.. நீங்க கவலைப்படாம இருங்க..” என்று விட்டு வேகமாக செயல்பட்டான் தாரக். 
 
 
அவனின் பதட்டமான பேச்சிலேயே எழுந்து நின்று விட்டிருந்த சிந்துவை வேகமாக கதவை நெருங்கிய பிறகே திரும்பிப் பார்த்திருந்த தாரக், “நான் அவசரமா போயாகணும்.. நாம இன்னொன்னு நாள் பேசலாம்..” எனவும் ‘சரி’ என்பதாக தலையசைத்தவள், அடுத்த நொடி வாயிலை நோக்கி விரைந்த தாரக்கின் பின்னே வேகமாக ஓடினாள்.
 
 
“எதுவும் அவசரமா..? ஹெல்ப் ஏதாவது தேவையா நான் வரட்டுமா..?” என்று கேட்டபடியே வந்தவளை காரை நெருங்கி இருந்த தாரக் வெறுமையாக திரும்பி பார்த்தான். பின் வேண்டாம் என்பது போல் மட்டும் தலையசைத்துவிட்டு அவன் காரில் ஏறி கிளம்பி விட, தாரக் சென்ற திசையை பார்த்துக்கொண்டு நின்ற சிந்துவுக்கு அடுத்து என்ன என்று எதுவுமே புரியவில்லை.
 
 
தாரக் பேசிய இரண்டு மூன்று வார்த்தைகளில் இருந்தே இது அந்த வீட்டில் இருந்த வயதானவரை பற்றியது என ஓரளவு சிந்துவுக்கு புரிந்திருந்தது. ஆனால் இப்போது வரை அவர்கள் யார் என்ன என்று எந்த விஷயமும் அவளுக்கு தெரியாது.
 
 
தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைக்கும் நேரடி சாட்சியாக இருந்தவர்கள் என்ற கோபம் எல்லாம் அவளுக்கு இந்த நொடி தோன்றவே இல்லை. ஏதோ ஒரு அவசரம் என்று மட்டும் தான் புரிந்தது. அதில் அப்படியே வாசலில் நின்றிருந்தவள், ஏதேச்சையாக பார்வையை திருப்ப.. அப்போதே கருப்பு உடை அணிந்த இரண்டு பேர் அங்கு இருப்பது அவளுக்குத் தெரிந்தது. 
 
 
அவர்களை யோசனையாக விழிகளை சுருக்கி பார்த்தபடியே சிந்து உள்ளே செல்ல.. அதேநேரம் இருபதாவது முறையாக முத்துவுக்கு அலைபேசியில் முயன்று பார்த்துவிட்டு அது இப்போதும் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலில் “எங்கே தான்டா போய் தொலைஞ்சே..? ஒன்றரை நாளா ஆளையும் காணும் போனையும் காணோம்..” என எரிச்சலான நாகராஜன் தன் அலைபேசியை சுவரில் தூக்கி அடித்து உடைத்திருந்தார்.
.
 
தொடரும்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 419
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
MNM - 30 & 31
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page