All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 16
 
தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் திடீரென பாதியில் பேச்சை நிறுத்தவும், கேள்வியாக திரும்பி அவனை பார்த்திருந்த தாரக், விஷ்வா அதிர்வோடு அசையாமல் நின்றிருப்பதை கண்டு அவன் பார்வையை பின்தொடர.. அங்கு இவர்களை பார்த்தபடியே சிந்து மயங்கி சரிவது தெரிந்தது. 
 
 
அதில் பதட்டமான இருவரும் வேகமாக ஓடி சென்று அவளைத் தூக்க.. “அய்யய்யோ என்னாச்சு..?” என்று பதறினான் விஷ்வா. “முதலில் இவளை பிடி..” என்று தாரக் சொல்ல.. “குழந்தை.. குழந்தைக்கு எதுவுமில்லையே..!” என தவிப்பதோடு கேட்டாவாறே இப்படியும் அப்படியுமாக விஷ்வா சுற்றி வருவதைக் கண்ட தாரக், அவனே சிந்துவை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான். 
 
 
மெல்ல அவளின் கன்னத்தில் தட்டி தாரக் சிந்துவை எழுப்ப முயன்று கொண்டிருக்க.. “மாமா.. குழந்தைக்கு, குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்காது இல்லை..” என்று விஷ்வா பயத்தோடு கேட்கவும், அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பதிலேதும் சொல்லாமல் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து சிந்துவின் முகத்தில் தெளித்து அவளை எழுப்ப முயன்றான்.
 
 
ஆனால் சிந்துவிடம் துளியும் அசைவில்லை. அதற்குள் தாரக் சிந்துவை தூக்கிச் செல்வதை பார்த்திருந்த பாபு வீட்டிற்குள் சென்று விஷயத்தை சொல்லி இருக்க.. சாரதா பதட்டத்தோடு அறைக்குள் நுழைந்தார். “என்னாச்சு தீபன் தம்பி..?” எனவும் “மயங்கி விழுந்துட்டா.. அதான் தூக்கிட்டு வந்து படுக்க வெச்சேன்..” என்றான் தாரக். 
 
 
“சரியா சாப்பிடறதே இல்லை தம்பி, சொன்னா கேட்டா தானே..! ரொம்ப பலவீனமா இருந்தா, நான் சொல்லிக்கிட்டே இருந்தேன் ஒரு குழந்தையை தாங்கும் அளவுக்கு உடம்பில் பலமே இல்லைன்னு..” என்றவர் “பயப்படற மாதிரி எதுவும் இல்லையே..!” என மெல்லிய குரலில் கேட்கவும், அவர் பக்கம் திரும்பி வெறுமையாக பார்த்தவன் “இருக்காதுன்னு நினைக்கறேன்..” என்றான்.
 
 
“நான் இன்னைக்கு இங்கே வந்தே இருக்க கூடாது மாமா.. என்னால் தான் இப்போ இப்படி ஆகிடுச்சு, நம்ம பிளான் எல்லாம்..” என்று விஷ்வா ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை தடுப்பது போல் கை காண்பித்த தாரக் அலைபேசியை எடுத்து வேகமாக மருத்துவருக்கு அழைக்க முயன்றான். 
 
 
சிந்து கருவுற்றிருப்பது தெரிந்தவுடன் வீட்டிற்கே வந்து அவளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்திருந்தான் தாரக். இப்போதும் அவரையே அழைக்க அவன் முயல.. அதேநேரம் மெல்ல சிந்துவின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தார் சாரதா. அதில் லேசாக அவளிடம் அசைவு தெரிந்தது. 
 
 
அதைக் கண்டு “தீபன் தம்பி..” என சாரதா அழைக்கவும், அவளின் பக்கம் பார்வையை திருப்பியவன் அலைபேசியை அணைத்துவிட்டு சிந்துவின் முன் வந்து குனிய.. பெரும் சிரமத்துக்கு இடையே மெல்ல விழிகளை திறந்தவள் தன் முன் இருந்த தாரக்கை வெறுமையாக பார்த்தாள். 
 
 
சிந்துவிடம் அசைவு தெரிந்த உடனேயே அவள் அருகில் நின்று கொண்டிருந்த விஷ்வா மெல்ல பின்வாங்கி பால்கனி கதவுக்கு அருகே சென்று நின்றுவிட.. “ஆர் யூ ஓகே..?” என்றான் தாரக். அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. அதற்குள் கொஞ்சம் தண்ணியை எடுத்து “ஹேய் பொண்ணே இந்தா இதை குடி..” என்றிருந்தார் சாரதா. 
 
 
அதில் விழிகளை மெல்ல திறந்தவள், அவரிடம் இருந்து அதை வாங்க முயல.. கைகளை கூட வேகமாக நகர்த்த முடியாமல் மெல்ல அவள் அசைப்பதைக் கண்ட சாரதா தானே அவளுக்கு அதை புகட்டினார். 
 
 
அவளிடம் இருந்த அதீத களைப்பை கண்டு “எதுக்கும் டாக்டரை வர சொல்லிடேன் தம்பி..”.என்றார் சாரதா. சரி என்று மீண்டும் தாரக் அலைபேசியை எடுக்க.. சாரதாவின் கைகளை லேசாக பிடித்து அழுத்தி சிந்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். 
 
 
“ஏன் எதுக்கு வேண்டாம்..? இப்படியே இருந்து என்ன சாதிக்கலாம்னு நினைக்கறே..?” என்று எரிச்சலோடு சாரதா சத்தமிடவும் அவருக்கு அவளின் மயக்கத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் தாரக்கிற்கு தெரியும் என்பதால் “சாரதாம்மா பயப்படற மாதிரி எதுவுமில்லை, கொஞ்சம் குடிக்க ஏதாவது கொடுங்க ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. சாயந்திரம் வரைக்கும் இப்படியே இருந்தா டாக்டரை வர வெச்சுக்கலாம்.. இப்போ ரெஸ்டே போதும்னு தான் எனக்கு தோணுது..” என்றிருந்தான். 
 
 
“அப்படியா தம்பி..! சரி நான் வாணிகிட்ட சொல்லி பால் கொண்டு வர சொல்றேன்..” என அவர் எழுந்து செல்ல.. அங்கேயே நின்றிருந்த தாரக் சிந்துவை ஒருமுறை திரும்பி பார்க்கவும், அவளோ யாரையும் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்பது போல் விழிகளை மூடிக்கொண்டாள்.
 
 
இதில் தாரக்கும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியில் வர, அவனின் பின்னேயே விஷ்வாவும் வெளியேறியிருந்தான். இருவரும் அங்கிருந்து சென்றதை உணர்ந்த பிறகே மெல்ல விழிகளை திறந்து அவர்கள் சென்ற திசையை உயிர்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. 
 
 
இந்த நொடியை அவளால் எந்த வார்த்தைகளிலும் விவரிக்க முடியாது, அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள் சிந்து. உயிரோடு இருக்கும் போதே அவள் இதயத்தை பிடுங்கி வெளியில் எறிந்தது போல் இருந்தது அவள் மனநிலை. 
 
 
கடந்த சில மாதங்களாகவே அவள் வாழ்வில் சிந்து கனவிலும் எதிர்பார்க்காத ஏதேதோ நடந்து கொண்டிருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலையோ இப்படி ஒரு அதிர்வோ தன் வாழ்வில் வரும் என அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
 
 
அதில் தாங்க முடியா வலியோடு சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. சூடான கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது. 
 
 
எதுவும் நடக்காதது போல் இயல்பாகச் சென்ற தாரக்கின் பின்னே பதட்டத்தோடு சென்ற விஷ்வா “அக்கா என்னை பார்த்து இருப்பா இல்லை..?” என்றான். “பார்த்ததால் தானே இந்த மயக்கம்..?” என தாரக் கேலியோடு கேட்கவும், “ஆமா நான் இன்னைக்கு வந்திருக்கக் கூடாது, வழக்கம் போல வெளியிலேயே நாம சந்திச்சுருக்கலாம்.. இல்லை போனில் பேசி இருக்கலாம்..” என்று விஷ்வா வருந்தி கொண்டிருக்க.. “இப்போ என்ன ஆகிப்போச்சு எதுக்கு இவ்வளவு பயப்படறே..?” என்றான் தாரக். 
 
 
“இல்லை, பயமெல்லாம் இல்லை..” என சமாளிப்பாக விஷ்வா சொல்லவும், “என்னைக்கு இருந்தாலும் தெரிய தானே போகுது.. அது இன்னைக்குன்னு நினைச்சுக்கோ, அவ்வளவுதான்..” என்று தாரக் சாதாரணமாக சொல்ல.. “அப்படி இல்லை மாமா, என்னைக்கு இருந்தாலும் தெரியும் தான்.. ஆனா அது இன்னைக்கா இருந்தது தான் பிரச்சனை..” என்றான் விஷ்வா. 
 
 
“ஏன் என்ன பிரச்சனை..? உங்க அக்கா உன்னை வெறுத்துடுவான்னு நினைக்கறியா..?” என்று சிறு கேலியோடு தாரக் கேட்கவும், “அதை பத்தி எல்லாம் யோசிக்கவோ கவலைப்படவோ இனி என்ன இருக்கு மாமா.. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தானே நான் இதில் இறங்கினேன், என் கவலை அதை பத்தி இல்லை.. இதனால் குழந்தைக்கு ஏதாவது..” என்று விஷ்வா இழுக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவ நல்லா தான் இருக்கா..” என்றான் தாரக். 
 
 
“நாம இவ்வளவு தூரம் இத்தனை வருஷமா திட்டம் போட்டு காத்திருந்து செஞ்சது எல்லாம் நேரம் கை கூடி வர நேரத்தில் பானையை நானே கீழே போட்டு உடைச்ச மாதிரி ஆகிட கூடாதே மாமா.. அது தான் எனக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்குது..” என்றான் விஷ்வா. 
 
 
இப்போதே அவனின் பதட்டத்திற்கான காரணம் புரிய.. அத்தனை முறை குழந்தைக்கு எதுவும் இல்லையே என்று விஷ்வா கேட்டதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன், “டோன்ட் ஓர்ரி, நாம நினைச்சது நடக்கும், நடத்துறோம்.. புரியுதா..!” என அவன் தோளை தட்டி கொடுத்தான் தாரக். 
 
 
விஷ்வாவும் சரி என்ற தலையசைப்போடு அங்கிருந்து கிளம்பி விட, மற்ற வேலைகளில் கவனத்தை திருப்பினாலும் தாரக் மனதில் அடுத்தடுத்து நிகழ வேண்டியது எல்லாம் பட்டியலாக ஓடிக்கொண்டே இருந்தது.
 
*****
 
அதன் பின்னான நாட்களில் சிந்துவிடம் நிறைய மாற்றங்கள். தன் வேலைகளை யார் உதவியும் வேண்டாம் என மறுத்து தானே செய்து கொள்ள தொடங்கினாள். முன்பு அடிக்கடி வந்து உதவி செய்த வாணியை இப்போது அருகில் கூட வர விடுவதில்லை சிந்து. 
 
 
விஷ்வா இங்கே வந்து சென்றதை பற்றியோ அவனுக்கும் தாரக்கிற்கும் இடையேயான உறவை பற்றியோ இது வரை யாரிடமும் சிந்து எதுவும் கேட்கவே இல்லை. தாரக்கே அவள் இதை பற்றி பேசாததை கண்டு ஆச்சர்யமானான்.
 
 
அவள் பேச்சை நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டிருந்தாலும், இப்போதெல்லாம் தலையசைப்பு கூட அவளிடம் இருந்து வருவதில்லை. யாரோ யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தது அவளின் நடவடிக்கைகள்.
 
 
இரண்டு மூன்று முறை அவளிடம் பேசிப் பார்த்த சாரதாவிற்குமே ஒரு கட்டத்தில் கோபமே வந்து விட்டது. அவள் தன்னிடமே திமிர் காட்டுவதாக நினைத்தவர், அதன் பின் சிந்துவின் அறை பக்கமே போவதில்லை. இது சிந்துவுக்கு ஒரு வகையில் நிம்மதியாக கூட இருந்தது. யாரையும் பார்க்கவோ யாரிடமும் பேசவோ அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
 
 
விஷ்வா இங்கே இத்தனை உரிமையாக பேசிக் கொண்டிருந்ததையும் தாரக் அவனோடு நெருக்கமாக இருந்ததையும் பார்க்கும் போதே அவர்களுக்குள் பல காலமாக பழக்கம் இருப்பது அவளுக்கு புரிந்தது.
 
 
அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக யோசித்துப் பார்க்கும் போது இதெல்லாம் திட்டமிட்டு அழகாக காய் நகர்த்தப்பட்டு நடந்து முடிந்திருப்பது புரிந்தது. இப்போது வரை இதெல்லாம் ஏன் எதற்கு என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும் அதன் மூல காரணமாக இருப்பது யார் என புரிந்தது அவளுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 
 
 
இனி யாரை நம்ப முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டு இருந்தவள், நாட்களை அதன் போக்கு நகர்த்திக் கொண்டிருக்க.. அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியது. 
 
 
மாதம் ஒருமுறை மருத்துவர் ஷாலினி வந்து சிந்துவை பரிசோதித்து அவளுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்வார். அதை தொடர்ந்து எடுத்துக் கொண்டதில் இப்போது கொஞ்சம் சிந்துவின் உடல்நிலை தேறி கூட இருந்தது. 
 
 
முன்பு போல் அடிக்கடி வாந்தி மயக்கம் வருவதில்லை. அதற்காக முற்றிலும் நின்று விட்டது என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது உள்ளே செல்லும் அனைத்தும் வெளியே வந்து அவளை ஒரு வழியாக்கிவிடும். அந்த நேரங்களில் எல்லாம் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடுபவள், துணைக்க கூட யாரும் இல்லாமல் அவளே தட்டு தடுமாறி சுவரை பிடித்தபடியே வந்து படுக்கையை சேர்வதற்குள் பெரும் சிரமத்தை அனுபவித்து விடுவாள். 
 
 
அந்த நேரங்களில் மட்டும் தன் அன்னையை எண்ணி அவள் கண்கள் கலங்கும். ஆனால் இந்த சூழ்நிலையில் அவரின் ஆதரவும் தனக்கு கிடைக்குமோ என்ற சந்தேகம் சிந்துவினுள் ஆழ வேரூன்றி விட்டிருந்தது. யாரையும் எதற்காகவும் எந்த விதத்திலும் இனி நம்ப அவள் தயாராக இல்லை.
 
 
தன் கூடவே தன் கை அணைப்பில் சொந்தத் தம்பியாக எண்ணி அத்தனை அன்பை வாறி கொடுத்து வளர்த்திருந்தவனின் இந்த துரோகம் சிந்துவை அடியோடு அசைத்துப் பார்த்திருந்தது. தாரக் அவளை தாலி கட்டி தூக்கி வந்து இத்தனை கொடுமைகள் செய்த போது கூட ஏற்படாத ஒரு வலி விஷ்வாவின் இந்த இன்னொரு முகத்தை பார்த்த நொடி அவளுக்கு உண்டாகி இருந்ததது.
 
 
தாரக் யாரோ ஒருவன் அவனிடமிருந்து எதையும் அவளால் எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஷ்வா அப்படி இல்லையே..! அவனே இதில் உடன் இருந்து செயல்பட்டு இருக்கிறான் என்பதை எண்ணும் போதே ஆரம்ப நாட்களில் எல்லாம் நெஞ்சே வெடித்து விடுவது போல் சிந்துவுக்கு வலித்தது. 
 
 
‘அவள் இங்கே அனுபவித்த அத்தனைக்கும் காரணம் அவள் அன்போடு உடன் இருந்து வளர்த்த தம்பியா என்ற அதிர்வும் அப்பாவியாய் தன்னையே சுற்றி சுற்றி வந்து அன்பை வாறி வழங்கிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கொடூர முகம் யாரும் அறியாமல் இருக்கிறதா..?’ என்ற அதிர்ச்சியும் சிந்துவை இன்று வரை மீள விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தது. 
 
 
இந்த அதீத மன அழுத்தமே அவளை பேசா மடந்தையாக்கி இருந்தது. ஆனால் தாரக் எப்போதும் போல் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை கொள்வதில்லை. நேரத்திற்கு அவளுக்கு எல்லாம் சரியாக செல்கிறதா என்று மட்டும் கண்காணிக்க சாரதாவிடம் சொல்லி இருந்தான். 
 
 
அதேபோல் மருத்துவர் வந்து பார்த்து செல்லும் போது மட்டும் உடன் இருந்து அவரிடம் அவளின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்வான். இன்றும் இன்னும் சில நிமிடங்களில் மருத்துவர் வருவதாக இருந்தது. அதற்காகவே தயாராகி அவருக்காக காத்திருந்தாள் சிந்து. 
 
 
எப்போதும் போல் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு உள்ளே நுழைந்த டாக்டர் ஷாலினியை அதே வெறுமையான முகத்தோடு சிந்து வரவேற்க.. அவருடன் உள்ளே நுழைந்தான் தாரக். 
 
 
எப்போதும் மருத்துவரை தனியே இங்கே வர அனுமதித்ததில்லை தாரக். இப்போதும் அப்படியே தாரக் உடன் வருவதை கண்டவள், ‘எங்கே நான் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேனோன்னு இன்னும் பயப்படறார் போல..! இனி சொல்லி மட்டும் என் வாழ்க்கையில் என்ன மாறப் போகுது..?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள.. ஷாலினி தன் போக்கில் வந்த வேலையை பார்க்கத் தொடங்கினார்.
 
 
அவளை பரிசோதித்து விட்டு “ஹ்ம்ம், முன்பை விட இப்போ நல்ல மாற்றம் தெரியுது, நான் கொடுத்த மருந்து சரியா சாப்பிடறீங்கன்னு நினைக்கறேன்.. வாந்தி மயக்கம் எல்லாம் கண்ட்ரோலில் இருக்கா..?” என்ற ஷாலினியை பார்த்து ஒரு தலையசைப்பை மட்டும் சிந்து கொடுத்தாள்.  
 
 
அடுத்தடுத்து அவர் கேட்கும் அனைத்திற்குமே இப்படியே பதில் அளித்துக் கொண்டிருந்தாள் சிந்து. இது இன்று மட்டுமல்ல எப்போதுமே வழக்கம் தான் என்பதால் ஆரம்பத்தில் வினோதமாக தெரிந்த ஷாலினிக்கும் இப்போதெல்லாம் இது பழகி விட்டிருந்ததில் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாதவர், தன் வேலையை மட்டும் கவனித்து கொண்டிருந்தார். 
 
 
அடுத்த பதினைந்து நிமிடம் தாரக்கின் பக்கம் திரும்பியவர், “எந்த பிரச்சனையும் இல்லை சார், உங்க வைஃப் ஹெல்த்தியா நல்லா இருக்காங்க.. பேபியும் அப்படித்தான், நான் சொன்ன மாதிரி இந்த மன்த் என்டில் ஒரு ஸ்கேன் மட்டும் செஞ்சு பார்த்துடுவோம்.. தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்க சொல்லுங்க..” என்று அவர் எழுதிக் கொடுக்க.. “ஓகே டாக்டர்..” என்று கேட்டுக் கொண்டவன், “டாக்டர் ஒரு டவுட்.. இப்போ போர் மந்த்ஸ் ஆகிடுச்சு இல்லையா.. இவங்க இனி ட்ராவல் செய்யலாமா..?” என்றான்.
 
 
“டிராவல் ரொம்ப தூரம் இருக்குமா..?” என்று ஷாலினி கேட்கவும் “இல்லை டாக்டர், பிளைட்டில் போற மாதிரி தான் இருக்கும்.. அதுக்கு பிறகு காரில் ஒரு ஹாஃப் ஆன் ஹவர் டிராவல் ஓகே தானே..!” என்றான் தாரக். “அது ஒன்னும் பிரச்சனை இல்லை சார், போகலாம்..” என்று ஷாலினி சொல்லவும், அவரை வழி அனுப்பி வைக்க தயாரானான் தாரக். 
 
 
தாரக் சார்பில் டிரைவரோடு கார் சென்று ஷாலினியை அழைத்து வந்து அதேபோல் வேலை முடிந்தவுடன் அழைத்துச் சென்று விட்டு விடும். இப்போதும் அப்படியே ஷாலினி கிளம்ப.. அவருக்கு கொடுக்க வேண்டிய பீஸ்ஸை கொடுத்தவன், “என் வைஃப் அவங்க அப்பா அம்மாவை பார்க்கணும் ரொம்ப ஆசை படறாங்க, அவங்களால் இங்கே வந்து இவளை பார்க்க முடியாத சிச்சுவேஷன்.. அதான் ட்ராவல் செய்யலாமான்னு கேட்டேன்..” என்று தானாகவே கூறினான் தாரக். 
 
 
“ஓ.. அதான் அவங்க கோபத்துக்கு காரணமா..! நான் கூட யோசிப்பேன் ஏன் எப்போவும் ரொம்ப சைலன்ட்டா இருக்காங்கன்னு, இதுதான் ரீசனா..? இருக்கும் தானே சார், மாசமா இருக்க எல்லா பொண்ணுக்கும் அப்பா அம்மா கூட இருந்து பார்த்துக்கணும்னு ஆசை இருக்கும் தானே..!” என்று ஷாலினி சொல்ல.. “ஆமா டாக்டர் அதான் இத்தனை நாள் அவளோட ஹெல்த்தை காரணமா சொல்லி ட்ராவலை தள்ளி போட்டுட்டே இருந்தேன்.. இப்போ டிராவல் செய்யலாம்னு நீங்க சொல்லிட்டீங்க இல்லை, இனி அவ ஆசையை நிறைவேத்திட வேண்டியதுதான்..” என்றான் தாரக்.
 
 
“மாசமா இருக்க பொண்ணுங்க ஆசைய உடனுக்குடன் நிறைவேத்திடுங்க சார், அதுதான் அவங்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.. இல்லை போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷனில் உங்களை வெச்சு செஞ்சுடுவாங்க..” என்று கேலியாக சொல்லிவிட்டு ஷாலினி கிளம்பி விட, அதுவரை புன்னகை முகமாக நின்றிருந்தவன், தீவிரமான முகத்தோடு திரும்பி சிந்துவின் அறைக்குள் நுழைந்தான் தாரக். 
 
 
அப்போதே விழிமூடி ஓய்வாக சாய்ந்திருந்தவள், திரும்ப தாரக் உள்ளே நுழையவும் அவனை புரியாமல் பார்த்தாள் சிந்து. வழக்கமாக ஷாலினி வரும் நேரங்களில் மட்டுமே இங்கே வருபவன், அவரோடு சேர்ந்து வெளியில் சென்று விடுவதோடு சரி, திரும்ப அறைக்குள் வருவதில்லை. 
 
 
இன்று அவன் வந்திருக்கவும், அடுத்து என்ன வரப்போகிறதோ என்பது போல் சிந்து அவனை பார்த்துக் கொண்டிருக்க.. ‘எழுந்திரு..’ என்பது போல் விரலசைத்தான் தாரக். 
 
 
அதில் ஏன் எதற்கு என ஒரு வார்த்தையும் கேட்காமல் சிந்து எழுந்து நிற்க.. அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வெளிவாயிலை நோக்கி நடந்தான் தாரக். 
 
 
இதையெல்லாம் சமையலறையில் இருந்த வாணி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. சாரதாவிற்கு அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என தெரிந்திருந்ததால் அவர் இறுக்கமான முகத்தோடு நின்றிருந்தார்.
 
 
இங்கு சிந்து தான் குழம்பி போய் வழக்கம் போல் தாரக்கின் செயல்கள் புரியாமல் அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள். ஆனால் இந்த வீட்டிற்குள் இதே போல் அவளை இழுத்து வந்த போது அவளிடம் இருந்த எதிர்ப்போ மறுப்போ இப்போது சிந்துவிடம் துளியும் இல்லை.
 
 
அவன் இழுத்த இழுப்பிற்கு கீ கொடுத்த பொம்மை போல் சென்று கொண்டு இருந்தவள் கார் கதவை திறந்து ஏறு என்பது போல் தாரக் விழியசைவில் கட்டளையிடவும், மறுபேச்சு பேசாமல் ஏறி அமர்ந்தாள். அன்று இதே காரில் அவளை பின்னுருக்கையில் தள்ளி தாரக் கதவடைத்தது சிந்துவின் மனக்கண்ணில் வந்து போனது.
 
 
அதில் அவளையும் அறியாமல் சிந்துவின் உடல் ஒரு நொடி பயத்தில் குலுங்க.. மறுபக்கம் வந்து ஏறி அமர்ந்த தாரக் காரை எடுத்திருந்தான். அன்று போல் அசுர வேகத்தில் பாயாமல் கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ‘எங்கே செல்கிறோம் ஏன் எதற்கு..?’ என எதுவுமே கேட்க அவளுக்கு தோன்றவில்லை. அவனும் இப்படி ஒருத்தி அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாதது போல் சாலையில் மட்டுமே கவனமாக இருந்தான். 
 
 
விமான நிலையத்தில் சென்று காரை நிறுத்தியவன், அவளை ஒரு பார்வை திரும்பிப் பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க.. அதுவே அடுத்து அவள் செய்ய வேண்டியதை சிந்துவுக்கு உணர்த்தி இருக்க தானும் இறங்கி நின்றாள். 
 
 
அங்கே இவர்களுக்காகவே காத்திருந்தவன், தாரக்கிடம் இரண்டு பயண சீட்டுகளை நீட்ட.. அதை வாங்கிக் கொண்டவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே செல்ல.. மீண்டும் கீ கொடுத்த பொம்மையாக அவன் பின்னே சென்றாள் சிந்து. 
 
 
இதுவே முன்பு போல் இருந்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்கவோ இல்லை அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்கவோ முயன்றிருப்பாள். ஆனால் இப்போது அதற்கு எல்லாம் அவள் மனம் ஆசைப்படவில்லை.
ஏதோ இனி தன் வாழ்வில் எதுவுமே இல்லை என வாழ்க்கையையே வெறுத்தது போலான மனநிலையோடு அவன் பின்னே சென்றவள், விமானத்தில் அருகருகில் அமர்ந்திருந்த போதும், அடுத்து அதே போல் விமானத்திலிருந்து இறக்கி வெளியில் வந்து மற்றொரு காரில் அவளை ஏற சொன்ன போதும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருப்பதை முதல் முறையாக கேள்வியாக பார்த்தான் தாரக்.
 
 
இத்தனை மாதத்தில் முதல் முறையாக வெளியில் வருபவளிடம் இருந்து வேறு சில செயல்களை அவன் எதிர்பார்த்து இருந்தானோ..! என்னமோ..? அதெல்லாம் இல்லாமல் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு சிந்து நடந்து கொண்டிருப்பதை கூர்மையாக கவனித்தாலும் அவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
 
 
எங்கோ பார்வையை பதித்தபடி காரில் அமர்ந்திருந்தவளுக்கு கண்ணில் பட்ட காட்சிகள் எதுவும் கருத்தில் பதியவே இல்லை. ஒரு வளைவில் கார் திரும்பி பெரிய கேட்டினுள் நுழையவும், அப்போதே சுற்றுப்புறம் புரிய.. பார்வையை வேகமாக சுழற்றியவளுக்கு அவளின் வீட்டினுள் கார் நுழைவது தெரிந்தது. 
 
 
வீட்டிற்கும் கேட்டிற்கும் இடையே இருந்த பறந்து விரிந்த மணற்பரப்பில் கார் மிதமான வேகத்தில் சென்று நிற்க.. சிறு பதட்டம் தன்னையும் அறியாமல் சிந்துவின் உடலில் வந்து ஒட்டிக்கொண்டது. 
அதில் வேகமாக பார்வையை சுழற்றி தன் கண் முன் காணும் காட்சிகள் நிஜம்தானா என உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றவளின் பார்வை தாரக்கின் பக்கம் முதல்முறையாக திரும்ப.. அவனும் அவளை திரும்பி பார்த்து லேசாக புன்னகைத்தான். 
 
 
ஆனால் அந்தப் புன்னகை அவளுள் பெரும் குளிரை பரப்பியது. அத்தனை கொடூரமான புன்னகை அவன் இதழில் வந்து போக.. முன்பை விட இந்த நொடி தாரக்கை பார்க்கும் போது அவளுள் பெரிதாக ஒரு பயம் பரவியது.
 
 
சுற்றிலும் அங்கங்கே நின்றிருந்த ஆட்கள் எல்லாம் புதிதாக வந்து நிற்கும் காரை கேள்வியாக பார்த்தபடியே அதை நெருங்க.. அவளை இறங்கு என்பது போல் விழியசைவில் சொல்லிவிட்டு கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் தாரக்.
 
 
காரில் இருந்து இறங்கிய தாரக்கை கண்டு பதட்டமான நாகராஜனின் ஆட்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிய ஒரு நொடியில் இன்னும் இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தவளை லேசாக குனிந்து பார்த்த தாரக் “உன்னை இறங்குன்னு சொன்னேன்..” என்றான் அழுத்தமான குரலில். 
 
 
இவ்வளவு நேரமும் அவன் சொன்னதை எல்லாம் மறுக்காமல் செய்து கொண்டிருந்தவளுக்கு, இதை செய்ய மட்டும் கொஞ்சமும் தைரியம் வரவில்லை. கால்கள் தடதடக்க.. மனம் அதைவிட வேகமாக பந்தய குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்ததில், அசையாமல் கைகளை பிசைந்தபடியே சிந்து கலவரமான முகத்தோடு அமர்ந்திருந்தாள். 
 
 
“அண்ணே.. அண்ணே.. இங்கே வாங்களேன்.. கொஞ்சம் வெளியே வந்து பாருங்களேன்..” என்று நாகராஜனின் ஆட்கள் குரல் கொடுத்திருக்க.. “ஏன்டா இப்படி கத்தறீங்க..? அப்படி என்ன நடந்துச்சு ஊரில் இல்லாத அதிசயத்தை கண்ட மாதிரி சத்தம் போடறீங்க..” என்று எகத்தாளமாக கேட்டபடியே வந்தவர், தன் முன் காரில் சாய்ந்து நின்றிருந்தவனை கண்டு விழிகள் சிவக்க முறைத்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் காரினுள் குனிந்து “இப்போ நீயா இறங்கறியா..? இல்லை நான் வந்து தூக்கிட்டு போகணுமா..!” என்று பல்லை கடித்தபடி கேட்டிருந்தான் தாரக். 
 
 
அதில் கண்டிப்பாக சொன்னதை செய்வான் என்று புரிய.. இப்போது இருக்கும் சூழ்நிலையை மேலும் கடினமாக்கிக் கொள்ள விரும்பாத சிந்து, அவளுள் மீதம் இருந்த தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி மெல்ல காரில் இருந்து இறங்கி நின்றாள். 
 
 
இருவரையும் இப்படி ஜோடியாக இங்கே கண்ட நாகராஜன் எரிமலைக்கு நிகரான கொந்தளிப்போடு அவர்களை கண்கள் சிவக்க முறைத்தார். 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

This post was modified 4 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 

MNM - 16

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/267/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா 


This post was modified 4 weeks ago 3 times by Kavi Chandra
This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 17
 
தன்முன் வந்து நின்றிருந்தவனை அதிர்வோடு பார்த்த நாகராஜன், ஆத்திரமாக முறைக்க.. அவர் மணக்கண்ணில் காவல் நிலையத்தில் நரகமாக கழிந்த மூன்று நாட்கள் நினைவுக்கு வந்தது. 
 
 
தனக்குப் பிடிக்காதவர்களை இழுத்து வந்து வீட்டிற்கு பின்புறம் இதற்கென தனியே இருக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து சித்திரவதை செய்வது நாகராஜனின் நெடுநாள் வழக்கம். அதை அவருக்கே செய்தது போல் இருந்தது அந்த மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் அவர் இருந்த நிலை.
 
 
நாகராஜனையும் அவரின் ஆட்களையும் கைது செய்து அழைத்துச் சென்ற காவலர்கள், காவல் நிலையத்தின் பின்னே இருந்த இருட்டறையில் அவர்களை அடைத்து வைத்திருந்தனர்.
 
 
அன்று உள்ளே இழுத்துச் சென்று இவர்களை அடைத்து வைத்ததோடு சரி, அதன் பின் யாரும் இவர்களை விசாரிக்கவோ, அடித்து துன்புறுத்தவோ எதற்குமே அந்த மூன்று நாட்களில் இவர்கள் இருந்த அறைக்கு வரவே இல்லை.
 
 
முதலில் என்ன நடக்கிறது என புரியவில்லை என்றாலும், பின் இவர்களை திட்டமிட்டு இங்கே அழைத்து வந்து அடைத்து வைத்திருப்பது நாகராஜனுக்கு நன்றாகவே புரிந்தது. 
 
 
தங்களை காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் போது கூட, முறைப்படி இது தன்னை சார்ந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் உடனே வழக்கறிஞர் வந்து தன்னை ஜாமினில் எடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த நாகராஜன் தன்னை தேடி யாரும் வராததில் யோசனையானார். 
 
 
ஏனெனில் முறையாக இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என அப்போது அவருக்குத் தெரியவில்லை. அதோடு இவர்களின் அலைபேசிகளும் வாங்கி அணைத்து வைக்கப்பட்டிருக்க.. திடீரென கிளம்பி சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பாததில் கவலையானார் சுஜாதா.
 
 
எப்போதும் பொறுப்பான குடும்ப தலைவனாக எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் என்பதை எல்லாம் தெரிவிக்கும் பழக்கம் நாகராஜனுக்கு இல்லை என்றாலும் அவரை சுஜாதாவால் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். இந்த முறை அதுவும் முடியாமல் போனதோடு அவர்களும் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருக்க.. சுஜாதாவின் மனதில் பயமேகங்கள் சூழ்ந்தது.   
 
 
தன் கணவன் மற்றும் மகனின் நிலையை எண்ணி பயந்தவர், அவர்களின் வழக்கறிஞரிடம் சென்று விவரத்தை சொல்ல.. அவருமே தன்னாலான முறையில் எல்லாம் முயன்று பார்த்தும், நாகராஜன் குழுவினர் இருக்கும் இடத்தை யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. 
 
 
நான்காம் நாள் காலை சரியான உணவோ உறக்கமோ இல்லாமல் கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அனைவரும் சென்றிருந்த நிலையில், அவர்களை ஒரு வேனில் அழைத்துச் சென்று ஏதோ ஒரு ஆள் அரவமற்ற இடத்தில் இறக்கிவிட்டு அந்தக் காவலர்கள் சென்று விட்டனர். 
 
 
விடிந்த பிறகே அந்த வழியாக சென்றவர்களிடம் உதவி கேட்டு தன்னை சார்ந்தவர்களை வரவழைத்து நாகராஜன் தன் குழுவினரோடு வீடு திரும்பு இருந்தார். 
 
 
இதெல்லாம் நடந்து ஒரு மாதமாகி இருந்தாலும் அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் ரணமாய் அவர் மனதில் இருக்க.. அதற்கு காரணமானவனை பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் அதே அளவு அவருள் வேரூன்றி இருந்தது. 
 
 
ஆனால் அவர் தேடிச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே தன் முன் வந்து நிற்பதை கண்டதும் எரிமலையானார் நாகராஜன்.
 
 
“ஏய்.. உனக்கு என்னடா இங்கே வேலை..? எவ்வளவு தைரியம் இருந்தா இங்கே வந்து இருப்பே..!” என்று ஆத்திரத்தோடு கத்தியபடியே அவர் அங்கிருந்து வேகமாக இறங்கி வர.. “என்னை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டியாமே..! அதான் நானே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..” என்றான் கொஞ்சமும் அவரின் கோபத்தை எல்லாம் கணக்கில் எடுக்காத நக்கல் குரலில் தாரக். 
 
 
“என்னடா நக்கலா..? இதை எல்லாம் உன் இடத்தில் வெச்சுக்கோ, இப்போ நீ வந்திருக்கறது என் இடம்.. உன்னை கண்டம் துண்டமா வெட்டி நாய்க்கு போட்டுடுவேன்..” என்றவர் “என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..? அந்த அருவாளை எடுத்துட்டு வாங்கடா..” என கத்தினார். 
 
 
அதற்கு ஒரு இதழ்பிரியா சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்த தாரக், “பயந்துட்டேன்..” என்றான். அவனின் அந்த உடல் மொழியும் பேச்சும் நாகராஜனை யோசனையாக்க.. “உன் இடத்தில் இத்தனை பேர் அருவாளோட இருப்பாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சமும் யோசிக்காம தனியா வந்திருக்கேனா எந்த பிளானும் இல்லாமலா வந்திருப்பேன்..?” என்றான் நிறுத்தி நிதானமான குரலில் தாரக். 
 
 
அன்றும் இப்படியே அவன் எந்த பதட்டமும் இல்லாமல் அவர்களை எதிர்கொண்டது நாகராஜனின் நினைவுக்கு வர, “என்னடா பெரிய பிளான்..? மிஞ்சிப்போனா போலீஸ்கிட்ட சொல்லி இருப்பே.. வர சொல்றா எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம், எதுவும் செய்யாம மூணு நாள் என்னை இருட்டறையில் உட்கார வெச்ச இல்லை, அதுக்கு உன்னை வெட்டி கூறு போட்டுட்டு மொத்தமா ஜெயிலுக்கு போக கூட நான் தயாரா இருக்கேன், வர சொல்றா பார்த்துக்கலாம்..” என்று நாகராஜன் தன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு திரும்ப.. இதையெல்லாம் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிந்து அவர் பார்வையில் விழுந்தாள். 
 
 
அவளைப் பார்த்ததும் நாகராஜனின் ஆத்திரம் மேலும் உச்சத்திற்கு சென்றது. “ஓ***ளி நா** உன்னை பெத்து வளர்த்ததுக்கு நல்ல மரியாதை செஞ்சுட்டே.. அப்படி என்னடி..” என்று காது கூசும் அளவுக்கான கேவலமான வார்த்தைகளால் அவர் சிந்துவை அர்ச்சித்துக் கொண்டிருக்க.. இத்தனை பேர் முன்பு பெற்ற மகள் என்றும் பாராமல் நாகராஜன் இவ்வளவு மோசமாக பேசுவதில் உண்டான அவமானத்தோடு விழிமூடி இதழ் கடித்து நின்றிருந்தவள் கண்ணீரோடு பார்வையை உயர்த்தவும் நாகராஜனின் பின்னே வீட்டு வாயிலில் பதட்டத்தோடு வந்து நின்ற சுஜாதாவின் அருகில் பவ்யமாக ஒன்றுமறியாத பாவணையோடு நின்ற விஷ்வா தெரிந்தான். 
 
 
தோட்டத்திலிருந்த சுஜாதாவிற்கு இப்போதே சிந்து வந்திருப்பதை பற்றி செய்தி தெரிய வந்திருந்தது. அதில் கோபத்தில் இருக்கும் நாகராஜன் அவளை ஏதும் செய்து விடக்கூடாதே என்ற பதட்டத்தோடு அடித்துப் பிடித்து ஓடி வந்தவரை, கை தாங்கலாக பிடித்தபடி விஷ்வா அழைத்து வந்த காட்சி சிந்துவின் கவனத்தில் பதிய.. அவனையே இரு நொடிகள் வெறுமையாக பார்த்தவள், பின் தன் பார்வையை தழைத்துக் கொண்டாள். 
 
 
அதற்குள் நாகராஜனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவரின் ஆட்கள் பொருட்களோடு வந்து சூழ்ந்து கொள்ள.. கொடூரமாக தாரக்கை பார்த்து புன்னகைத்தவர், “இந்த வீட்டில் இருந்து உன்னால் ஒரு அடி வெளியே எடுத்து வைக்க முடியாதுடா..” என்றார். 
 
 
“அதையும் பார்த்திடலாம் மாமனாரே..!” என தாரக் நக்கலாக சொல்லவும், “அடச்சீ.. வாயை மூடு, யாருடா உனக்கு மாமனார்..” என்றார் எரிச்சலோடு நாகராஜன். “ஏன் நீங்க தான்..? இதில் உங்களுக்கு சந்தேகம் வேறயா..! எனக்காகவே ஆசையா அருமையா ஒரு பெண்ணை பெத்து கொடுத்து இருக்கீங்களே.. அப்போ நீங்க எனக்கு மாமனார் தானே..!” என்று அவரின் இத்தனை ஆத்திரத்திற்கும் கொஞ்சமும் பதட்டமில்லாமல் கேலியாகவே பேசிக் கொண்டிருந்தான் தாரக். 
 
 
இது கொஞ்சம் கொஞ்சமாக நாகராஜனை தூண்டி விட்டுக் கொண்டே இருக்க.. “அந்த அருவாளை கொடுடா..” என முத்துவிடம் திரும்பி கத்தியவர், தாரக்கை நோக்கி பாய இருந்த நொடி, அவரை பிடித்து தடுத்து நிறுத்தி “ப்பா, வேண்டாம் திரும்ப இந்த பிரச்சனையிலும் மாட்டிக்காதீங்க..” என்றான் அருண். 
 
 
“இதுக்கு மேலே என்னடா பிரச்சனை வரணும்..? இவனால் நான் என் வாழ்க்கையில் பார்க்காத அளவுக்கு எல்லா அவமானங்களையும் அசிங்கங்களையும் பார்த்தாச்சு.. என் வீட்டை தேடி வந்து நான் ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்தி என் கண்ணு முன்னேயே என் பொண்ணை தூக்கி போனதில் தொடங்கி போன மாசம் நடந்த பிரச்சனை வரை பார்த்தாச்சு.. இதை எல்லாம் விட புதுசா வேற என்ன அசிங்கம் வந்துடும்..? எதையுமே செய்யாம போலீஸ் ஸ்டேஷனில் மூணு நாள் சோறு தண்ணி இல்லாம உட்கார வெச்சான் இல்லை.. அதுக்கு இவனை வெட்டிட்டு போய் உட்கார்ந்துக்கறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று எகிறினார். 
 
 
“அச்சச்சோ, நீங்க அப்படி செஞ்சுட்டா பிறக்க போற உங்க பேர குழந்தைக்கு அப்பா இல்லாம போயிடுமே மாமனாரே..!” என அவன் நக்கலாக சொல்ல.. அதுவரை கோபத்தில் மகனிடம் பொங்கிக் கொண்டிருந்த நாகராஜன், பேச்சை நிறுத்தி நெற்றி சுருங்க தாரக்கை பார்த்தார். 
 
 
“ஆமா மாமனாரே.. நீங்க தாத்தாவாக போறீங்க.. அந்த சந்தோஷஷஷஷஷஷஷஷஷமான விஷயத்தை சொல்லிட்டு போக தான் வந்தேன்..” என்றவன் வேண்டுமென்றே அந்த வார்த்தையில் அதீத அழுத்தத்தை கொடுத்து ஏகத்திற்கும் நக்கல் தெறிக்கும் குரலில் கூறினான் தாரக்.
 
 
அதுவரை நாகராஜன் எந்த நேரத்தில் யாரை என்ன செய்து விடுவாரோ என்ற பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா, இந்த வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடி முகம் மலர்ந்து மகளைப் பார்த்த அடுத்த கணமே அவரின் முகத்தில் பெரும் கலவரம் ஒன்று உருவானது.
 
 
“இங்கே பிரச்சனை செய்யவே வந்து இருக்கீங்களா..?” என்று இப்போது கோபத்தோடு அருண் தாரக்கை பார்த்து கேட்டிருக்க.. “இது என்னடா வம்பா போச்சு.. உங்க வீட்டுக்கு வாரிசு வர போகுதுன்னு ஆசையா சொல்ல வந்தா பிரச்சனை செய்ய வந்து இருக்கேன்னு சொல்றீங்க..!” என்றான் தாரக். 
 
 
“உங்களுக்கு குழந்தை பிறந்தா எங்களுக்கு என்ன..? அதான் யாரும் வேணாம்னு முடிவு செஞ்சு கல்யாணம் முடிச்சுட்டு போயிட்டீங்க இல்லை.. இப்போ குழந்தை வந்தா மட்டும் எல்லாம் மாறிடுமா..! முதலில் இங்கிருந்து கிளம்புங்க..” என்று கோபத்தோடு சொல்லி இருந்தான் அருண். 
 
 
“எங்க வீட்டு பொண்ணு எங்கே..? எங்க வீட்டு பொண்ணை காணோம்.. எங்க பொண்ணை நாங்க பார்க்கணும்னு எல்லாம் நீங்க தானே தேடி அலைஞ்சீங்க..! இதோ இப்போ உங்க வீட்டு பொண்ணை கூட்டிட்டு வந்து உங்க கண்ணு முன்னே நிறுத்தி இருக்கேன்.. ஆனா இங்கிருந்து போன்னு சொன்னா என்ன அர்த்தம்..? அப்போ உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு வேண்டாமா..!” என்று தாரக் இழுத்து நிறுத்தி ஒரு மாதிரி கேலி குரலில் கேட்டான். 
 
 
“உங்க சங்காத்தமே வேண்டாம், முதலில் இங்கே இருந்து கிளம்புங்க, தேவையில்லாம இங்கே வந்து பிரச்சனை செய்யாதீங்க..” என்றான் அருண். அதற்கு தாரக் ஏதோ பதில் சொல்ல முயல்வதற்குள் “என்னடா அவனை அவ்வளவு ஈஸியா கிளம்ப சொல்றே..! அப்படியெல்லாம் அவனை சாதாரணமாக விட்டுட முடியாது, தானா வந்து சிக்கி இருக்கான்.. இன்னைக்கு அவன் கைமா தான்..” என்றார் நாகராஜன்.
 
 
“விளையாடாதீங்க மாமனாரே..! வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விருந்து வைக்க ஆட்டை வெட்டி தான் பார்த்திருக்கேன்.. நீங்க என்ன மாப்பிள்ளையை வெட்டறேன்னு சொல்றீங்க..” என்று அப்போதும் தாரக் கேலி செய்து கொண்டே இருக்க.. “யாருடா மாப்பிள்ளை.. அவ திமிர் எடுத்து உன் கூட ஓடி வந்தா நீ எனக்கு மாப்பிள்ளை ஆகிடுவியா..?” என்று அதற்கும் ஏறினார் நாகராஜன். 
 
 
“அப்போ இல்லையா..! அடடா இது தெரியாம உன் பொண்ணு கூட நாலஞ்சு மாசம் வாழ்ந்துட்டேனே..!! இப்போ என்ன செய்யலாம்..?” என்று அப்போதும் தாரக் கேலி செய்ய.. “டேய் யாருகிட்ட வம்பு செய்யற..?” என நாகராஜனின் ஆட்கள் பொருட்களோடு தாரக்கை சுற்றி வளைத்தனர்.  
 
 
“அய்யய்யோ.. இது என்ன உங்க பொண்ணை பார்க்கணும்னு நீங்களும்.. உங்களை பார்க்கணும்னு உங்க பொண்ணும் ரொம்பபபப ஆசைப்பட்டீங்கன்னு பாசமா கூட்டிட்டு வந்தா.. இங்கே என் உயிருக்கே உத்தரவாதம் இருக்காது போலேயே..! இது சரி இல்லை, இதெல்லாம் கொஞ்சம் கூட சரிப்பட்டு வராது.. 
 
 
நானும் பார்க்கறேன், கல்யாணமான நாளிலிருந்து எங்கே போனாலும் என்னை தேடி விரட்டிட்டு ஆளுங்களோட வந்து எனக்கு உயிர் பயத்தை காட்டிட்டு இருக்கீங்க.. இது சரிப்பட்டு வராது, நீங்களே உங்க பொண்ணை வெச்சுக்கோங்க..” என்றிருந்தான் தாரக். 
 
 
இதில் அவ்வளவு நேரம் கத்திக் கொண்டும் துள்ளிக் கொண்டும் இருந்த நாகராஜனும் அவர் ஆட்களும் திகைப்போடு அப்படியே நின்று அவனை பார்க்க.. “நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன்.. உங்க வீட்டுக்கு பொண்ணை ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சதுக்கு எல்லாம் என்னால் சாக முடியாது.. உங்க பொண்ணே எனக்கு வேண்டாம்ப்பா..! நீங்களே பத்திரமா வெச்சுக்கோங்க.. நான் கிளம்பறேன்..” என்று தோள்களை குலுக்கியவாறே சாதாரணமாக சொல்லி இருந்தான் தாரக். 
 
 
அந்த நொடி சிந்துவுக்கு பெரும் அதிர்ச்சி எல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. இங்கே அவளை அழைத்து வந்த போதே பெரிதாக ஏதோ வரப் போகிறது என அவள் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்க.. அது என்னவென்று அறிய எண்ணி காத்திருந்தவள் தாரக் இந்த வார்த்தைகளை உச்சரித்த நொடி விஷ்வாவை மட்டுமே பார்க்க.. அவன் விழிகளில் கொடூரமாக ஒரு சின்ன மின்னல் வந்து போனது.
 
 
அதை சிந்து கவனித்துக் கொண்டு இருக்கும் போதே, விஷ்வாவும் அவளை பார்த்திருந்தான். அடுத்த நொடி அவன் பார்வையை தழைத்துக் கொள்ள.. சிந்துவின் பார்வை முழுக்க அவன் மேல் மட்டுமே இருந்தது.
 
 
“என்ன விளையாடறீங்களா..?” என்று அருண் கோபமாக கத்த.. “இல்லையே.. நான் ரொம்ப சீரியஸா பேசறேன், எனக்கு உயிர் முக்கியம் பாஸ்.. உயிரை விட காதல் ஒன்னும் பெருசு இல்லை.. என் வீடு வரைக்கும் வெரட்டி தேடி வந்து வெட்ட பார்த்திருக்கீங்க.. நாளைக்கு எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன செய்ய..? எனக்கு பயமா இருக்குப்பா.. உங்க பொண்ணும் வேண்டாம்.. நீங்களும் வேண்டாம்.. என்னை நிம்மதியா வாழ விடுங்க போதும்..” என்று அப்பாவி போல் அவன் பேசிக் கொண்டே செல்ல.. “டேய்.. டேய்.. நடிக்காதடா..! இதுக்கெல்லாம் பயப்படறவனா நீ..? இப்போ என்ன திட்டத்தோட இங்கே வந்து இருக்கே..? எதுக்காக அவளை இங்கே விட்டுட்டு போக நினைக்கறே..” என்று கத்தினார் நாகராஜன். 
 
 
“ஐயையோ.. இப்படி எல்லாம் கத்தாதிங்க மாமனாரே.. எனக்கு பயமா இருக்கு..” என தாரக் காதை பொத்திக்கொள்ள.. “பாருடா.. பாருடா இவன் எப்படி நடிக்கறான் பாரு.. என்னை வெறுப்பேத்தறதுக்குனே வந்து இருக்கான்..” என்று அருணிடம் தொடங்கியவர் “ஏய், எதுக்குடி இங்கே வந்தீங்க..?” என்று அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டு சிந்துவின் பக்கம் திரும்பினார் நாகராஜன். 
 
 
அவள் என்னவென சொல்வாள்..! இங்கு நடப்பதை பற்றி அவளுக்கு என்ன தெரியும்..? அதில் சிந்து பதிலேதும் சொல்லாமல் நின்றிருக்க.. “உனக்கும் குளிர் விட்டு போச்சில்லை.. இவன் கூட சேர்ந்து திமிர் அதிகமாகிப்போச்சு..” என மிரட்டியவர், “மரியாதையா சொல்றேன் இங்கே இருந்து கிளம்பிடுங்க.. இல்லை..” என மேலும் ஏதோ அவர் சொல்ல வருவதற்குள் “முடியாது.. முடியாது.. உங்க பொண்ணை நீங்களே வெச்சுக்கோங்க.. அவ என்னை காதலிச்சதும் கல்யாணம் செஞ்சுக்கிட்டதும் தான் உங்களுக்கு பிரச்சனைனா நான் என் காதலை ரத்து செஞ்சுடறேன்.. வேணும்னா நீங்க இந்த கல்யாணத்தை ரத்து செஞ்சுக்கோங்க..” என்று விட்டு தாரக் காரில் ஏறி அமர்ந்தான். 
 
 
இவன் என்ன சொல்கிறான் எனப் புரியாமல் அனைவரும் திகைத்து நிற்கும் போதே காரை ரிவேர்ஸ் எடுத்திருந்தான் தாரக். இதில் சிந்து செய்வதறியாது அவனை பார்க்க.. அதே நேரம் தாரக்கும் அவளை ஒரு பார்வை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தான். 
 
 
நடப்பது என்னவென்று புரியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவர்களையும் அறியாமல் கார் வெளியேற வழி விட்டனர். அதில் கார் வெளி கேட்டை நெருங்க.. அதே நேரம் முழு போதையில் உண்டான தள்ளாட்டத்தோடு இடையில் வந்து நின்றான் சபரி. 
 
 
அதில் அவன் மேல் மோதி விடக் கூடாது என்று தாரக் காரை நிறுத்த.. விழிகளை சுருக்கி உள்ளே அமர்ந்திருப்பவனை தலை சாய்த்து பார்த்தவன், “ஹேய்.. நீ தானே அது..!” என்றான் குழறலான குரலில் சபரி. அதில் அவன் சொல்ல வருவது புரியாமல் தாரக் யாரோ ஒரு குடிகாரன் உளறுகிறான் என்பது போல் பார்த்திருந்தான்.
 
 
“அன்னைக்கு நீ தானே என்கிட்ட வந்து நாகராஜன் அண்ணே வீடு எங்கே இருக்குதுன்னு கேட்டே..? நான் இவனுங்ககிட்ட சொல்றேன், ஆனா இவனுங்க நம்ப மாட்டேங்கறாங்க.. அது நீதானே..!” என்றான் கொஞ்சமாக காரின் மேல் சரிந்து படித்தபடியே தேய்த்து கொண்டு முன் இருக்கைக்கு அருகில் வந்து நின்றான் சபரி.
 
 
அதில் விழிகளை சுருக்கி தாரக் யோசனையாக சபரியை பார்த்தான். “ஒருநாள் இவனுங்க தான் உன் போட்டோ எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்து உன்னை தெரியுமான்னு கேட்டானுங்க.. நான் இன்னும் கூட அதை வெச்சுருக்கேன்.. அந்த போட்டோ பார்க்கறியா..?” என்று தன் கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்துவிட்டு அவசரமாக தன் பாக்கெட்டில் தேடி எட்டாக மடித்து வைத்திருந்த அவன் போட்டோவை எடுத்து காண்பித்தான் சபரி.
 
 
“இது.. இது நீதானே..! நான் சொன்னேன், எனக்கு தெரியும்டா.. நான் பார்த்து இருக்கேன்.. எட்டு வருஷம் முன்னே என்கிட்ட தான் உங்க வீட்டுக்கு வழி கேட்டான்னு நான் தான் சொன்னேன்.. எவனும் காது கொடுத்து கூட கேட்கலை, திரும்ப வந்து இவனை தெரியுமான்னு என்கிட்டயே கேட்கறானுங்க, பைத்தியக்கார பயலுங்க..” என்றான் சபரி. 
 
 
இப்போதே அவன் குடித்துவிட்டு உளறவில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறான் என தாரக்கிற்கு புரிய.. “ஆமா அது நான் தான், பரவாயில்லையே உங்களுக்கு ஞாபகம் இருக்கே..” என்றான் தாரக்.
“பார்த்தியா.. நான் சரியா சொன்னேன், ஆமா அன்னைக்கு நீ இவ்வளவு பெரிய காரில் எல்லாம் வரலையே.. அழுக்கு டிரஸோட அறக்க பறக்க ஓடி தானே வந்தே..! இப்போ எப்படி இவ்வளவு பெரிய கார்.. வசதி எல்லாம் வந்தது..?” என்றான் சபரி.
 
 
“ஹாங், அது சீக்ரெட்.. உனக்கு வேணும்னா சொல்லு அப்புறமா சொல்றேன்..” என தாரக் மெல்லிய குரலில் கிசுகிசுக்க.. “வேணாம்பா எனக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை.. டெய்லி எனக்கு ஒரு ஃபுல் இருந்தா போதும், என் வாழ்க்கை சொர்க்கம்..” என்றான் சபரி. 
 
 
“உன்னை மாதிரி எல்லாரும் இருந்துட்டா வாழ்க்கையில் யாருக்குமே பிரச்சனை இருக்காது..” என்ற தாரக் தன்னிடம் இருந்த நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து சபரியிடம் நீட்டினான். 
 
 
அதை இரு கைகளிலும் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டவன், “ஐயா மகாராசா நீ பாரி வள்ளல்யா.. நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்..” என்று இருக்கையையும் தூக்கி வாழ்த்த.. “உங்க ஆசிர்வாதம்..” என தலையை சாய்த்து சொல்லியவன், “நான் கிளம்பட்டுமா..?” என்றான். 
 
 
“மகராசனா போய்ட்டு வாங்க சாமி.. எப்போ வேணும்னாலும் வாங்க.. நான் இருக்கேன், இந்த ஊரில் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க நான் செய்றேன்..” என்று மார்தட்டி சபரி சொல்ல.. “ஞாபகம் வெச்சுக்கறேன்..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான் தாரக். அவன் சென்ற திசையை சபரி பார்த்துக் கொண்டு நிற்க.. வேகமாக வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தார் நாகராஜன். 
 
 
அதில் புரியாமல் அவரைப் பார்த்த சபரி “என்னாச்சு ண்ணே..?” எனவும் “யார்ரா அவன்..? உனக்கு அவனை எப்படி தெரியும்..?” என்று கோபமாக நாகராஜன் கேட்க.. “ஐயோ இதை தான் ண்ணே நான் அன்னையிலிருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க தான் கேட்கலை..” என்றான் சபரி.
 
 
“அப்படியா..! சரி எங்கே இப்போ சொல்லு கேட்போம்..” என்று நாகராஜன் சொல்லவும், “எட்டு வருஷம் முன்னே ஒரு நாள் ராத்திரி நம்ம தோப்பில் நான் படுத்து இருக்கும் போது உங்க வீட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டுட்டு வந்தார் ண்ணே.. நான் தான் வழி சொல்லி அனுப்பிவிட்டேன், அப்போவும் பாவம் பதறி அடிச்சு ஓடும் போது கீழே கூட விழுந்தார்.. நான் வந்து தூக்கி விடலாம்னு நினைக்கும் போதே எழுந்து ஓடினார்.. ஏதோ அவசரம் போலன்னு நினைச்சேன்.. ஆனா அந்த முகம் அது என்னை என்னவோ செஞ்சது.. இப்போவும் நடு ராத்திரி கண்ணு கலங்க பதட்டமா வந்து நின்ன அந்த கோலத்தை என்னால் மறக்க முடியாது.. அது அன்னைக்கு முழுக்க என் மனசை என்னவோ செஞ்சுது, அதான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..” என்றான் குழறலாக என்றாலும் எதையும் மறக்காமல் தெளிவாக சபரி.
 
 
இதில் நெற்றியை சுருக்கிய நாகராஜன், “எட்டு வருஷம் முன்னே எதுக்காக என்னை தேடி வந்தான்..? என்ன விஷயமா இருக்கும்னு உனக்கு ஏதாவது தெரியுமா..? அதுவும் நடு ராத்திரி நேரம் வந்திருக்கான்..!” என்று நாகராஜன் கேட்க.. தெரியவில்லை என்பது போல் தலையசைத்தான் சபரி. 
 
 
“அன்னைக்கு நடந்த வேற ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்காடா..?” என்று கேட்டு சபரியிடம் இருந்து வேறு எதுவும் தகவல் கிடைக்குமா என அறிய முயன்றார் நாகராஜன். 
 
 
“வேற.. வேற..!” என யோசித்தவன், “ஹாங்.. மறுநாள் தான் நம்ம சின்னவர் சம்சாரம் கிணத்தில் விழுந்து செத்துட்டாங்க ண்ணே.. இத்தனை வருஷமா நான் இவரை மறக்காம இருக்க அதுவும் ஒரு காரணம்.. வருஷா வருஷம் நான் தானே ண்ணே வீட்டில் சடங்குக்கு தேவையான எல்லாம் செய்வேன்.. அதான் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கு..” என்று சபரி சொல்லிய நொடி தீயை மிதித்தது போல் திகைத்து நின்றார் நாகராஜன். 
 
 
“நல்ல தெரியுமா..? அவனா இவன்..!” என்று பதட்டத்தோடு நாகராஜன் கேட்கவும் “ஆமாங்க ண்ணே, எனக்கு நல்லா தெரியும்.. இப்போ நீங்க கூட பார்த்தீங்களே அந்த தம்பியும் ஆமான்னு தானே சொல்லிட்டு போச்சு..” என்று சபரி அடித்துக் கூற, நாகராஜனின் பார்வை முத்துவின் பக்கம் அவசரமாக திரும்பியது. 
 
 
அதில் சபரி சொல்வதை எல்லாம் கேட்டு தீவிர யோசனைக்கு சென்றிருந்த முத்துவின் முகமும் இப்போது கலவரமாக மாற.. பயத்தோடு நாகராஜனை பார்த்தான் முத்து. 
 
 
இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை அருண் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. விஷ்வாவோ அவர்களை பழி வெறியோடு கொடூரமாக பார்த்துக் கொண்டிருந்தான். 
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

This post was modified 4 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
MNM - 17
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 18
 
திகைப்பும் குழப்பமான முகத்தோடு நாகராஜன் வேகமாக வீட்டிற்குள் செல்ல.. அவரை அவசரமாக பின் தொடர்ந்து உள்ளே சென்றான் முத்து. அதுவரை பதட்டமும் பரிதவிப்புமாக அழுது கொண்டிருந்த சுஜாதா, இவர்கள் இறுதியாக பேசிய வார்த்தைகளை கேட்ட நொடி நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே தூணில் சரிந்து தரையில் அமர்ந்தார். 
 
 
இதையெல்லாம் புரியாமல் பார்த்த அருண் வேகமாக நாகராஜனை தேடிச் செல்ல.. சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்ல தொடங்கி இருக்க.. அடுத்து என்ன செய்வதென புரியா திகைப்போடு அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள் சிந்து. 
 
 
அவளுக்கு அடுத்து என்னவென புரியவில்லை. இப்போது உள்ளே செல்வதா..? இல்லை இப்படியே நிற்பதா..! என புரியா குழப்பமும், நாகராஜன் அவ்வளவு எளிதாக தன்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டார் என்ற தயக்கமும் சேர்ந்து சிந்துவை கலவரப்படுத்தி இருக்க.. கலக்கத்தோடு தன் அன்னையைப் பார்த்தாள் சிந்து. 
 
 
அவரோ மகளை கூட மறந்து “ஐயோ இப்படியாகும்னு நான் நினைக்கலையே..! செஞ்ச பாவம் சும்மா விடாதுன்னு படிச்சு படிச்சு சொன்னேனே இந்த மனுஷன் கேட்கலையே..!! இப்போ எல்லாம் சேர்ந்து என் மக வாழ்க்கையில் இப்படி வந்து நிற்குதே..!!!” என்று அழுது அரற்றிக் கொண்டிருந்தார் சுஜாதா. 
 
 
அவரை நெருங்க சிந்து நினைத்த அதே நொடி சுஜாதாவுக்கு ஆறுதல் சொல்வது போல் விஷ்வா அவரை அணைத்து பிடித்தது போல் அருகில் குனிந்து அமர்ந்தான்.
 
 
இதைக் கண்டு சிந்து அசையாமல் அப்படியே நிற்க.. சிந்துவின் பார்வை முழுக்க தன் மேல் இருப்பதை அவனும் அறிந்தே இருந்தாலும் விஷ்வா நிமிர்ந்தும் அவளை பார்க்கவில்லை. அவளின் இந்த அமைதி தான் விஷ்வாவை அதிகம் குழப்பியது. 
 
 
அன்று தாரக் வீட்டில் தன்னை பார்த்த பிறகு சிந்து இதைப் பற்றி இதுவரை எதுவும் தாரக்கிடம் கேட்கவில்லை என விஷ்வாவுக்குமே தெரியும். அங்கிருந்து வந்தது முதல் ‘எங்கே இத்தனை நாள் காத்திருந்து திட்டமிட்ட அனைத்தும் வீணாகி விடுமோ..?’ என்ற பதட்டமும் சிந்து தன்னை பார்த்து விட்டதில் ‘ஏதாவது குழப்பம் உண்டாகி விடுமோ..!’ என்ற பயமும் அவனைத் தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருந்ததில் மறுநாள் காலையிலேயே தாரக்கை அழைத்திருந்தான் விஷ்வா. 
 
 
வெகு இயல்பாக ஒலித்த “சொல்லு விஷ்வா..” என்ற தாரக்கின் குரலில் குழம்பியவன், “என்ன மாமா இவ்வளவு அமைதியா பேசுறீங்க..? அங்கே பிரச்சனை எதுவும் இல்லையா..?” என்றான் விஷ்வா. 
 
 
“பிரச்சனையா..! என்ன பிரச்சனை..?” என்று தாரக் கேட்கவும், “அக்கா என்ன பார்த்துட்டாளே..! அவ எதுவும் என்னை பத்தி கேட்கலையா..? உங்ககிட்ட சண்டை எதுவும் போடலையா..?” என்று விஷ்வா கேட்க.. “முதலில் என்கிட்ட சண்டை போடற உரிமை உங்க அக்காவுக்கு கிடையாது.. இரண்டாவது உன்னை பத்தி உங்க அக்கா இப்போ வரை எதுவும் பேசலை, போதுமா..!” என்று நிதானமாகவே பதில் அளித்து இருந்தான் தாரக். 
 
 
இது அவனை மேலும் யோசனைக்குள்ளாக்க.. “ஏன் இப்படி..? ஏன் எதுவும் கேட்கலை..?” என்றான் விஷ்வா. “இப்போ உனக்கு என்ன தெரியணும்..? ஏன் கேட்கலைனா என்ன அர்த்தம்..! கேட்டே ஆகணும்னு நீ எதிர்பார்க்கிறாயா என்ன..?” என்றான் தாரக். 
 
 
“இல்லை மாமா.. அங்கே என்னை பார்த்த பிறகு கேட்டு இருக்கணும் தானே..!” என்றான் அப்போதும் புரியா குழப்பத்தோடே விஷ்வா. “இல்லை.. இப்போ வரைக்கும் உங்க அக்காவை என்னால் புரிஞ்சுக்க முடியாத சில விஷயங்களில் இதுவும் ஒண்ணு.. ஆரம்ப நாட்களில் அவகிட்ட இருந்த கோபம், அழுகை, ஏன் எதுக்குன்னு எழுந்த கேள்வி எல்லாம் திடீர்னு காணாம போய் அப்படியே அமைதியாகிட்டா..
 
 
இது நடக்கறதை ஏத்துக்க பழகிட்டான்னு வேணும்னா நாம சொல்லிக்கலாம்.. ஆனா எனக்கு அப்படி தோணலை, அவளுக்குள் ஏதோ இருக்கு.. அது என்னன்னு எனக்கு தெரியலை.. அதை பத்தி யோசிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை..” என்றிருந்தான் தாரக். 
 
 
அதற்கு மேல் அவனிடம் வேறு எதுவும் பேசாமல் விஷ்வா அமைதியாகி விட்டு இருந்தாலும், கடந்த ஒரு மாதமாகவே ஏன் தன்னைப் பற்றி எதுவும் கேட்டு தெரிந்து கொள்ள சிந்து முயலவில்லை என்ற கேள்வி அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது. 
 
 
இப்போது இங்கு வந்த பிறகும் அவள் தன்னை வெறுமையான பார்வையோடு பார்த்ததை கண்டவனுக்கு பெரிதாக ஒரு ஏமாற்றம் மனதில் பரவியது.
 
 
சிந்து கண்ணீரோடு விழிகளில் வலியோடோ முறைத்து பார்த்திருந்தாலோ கூட அவனுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவுமில்லாமல் அவனை வெறுமையான விழிகளோடு சிந்து பார்த்துக் கொண்டிருந்ததன் அர்த்தம் தான் அவனுக்கு புரியவில்லை. அதில் அவளை பார்ப்பதையே விஷ்வா தவிர்த்துக் கொண்டிருக்க.. அதே நேரம் முத்துவிடம் கத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். 
 
 
“டேய் என்ன நடக்குது இங்கே..? அந்த சபரி பைய என்னடா சொல்றான்..? அவன் சொல்றது நிஜமா..?” என ஆத்திரத்தோடு நாகராஜன் கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தான் முத்து. 
 
 
“உனகிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.. காதில் என்ன வெச்சுட்டு இருக்கே..?” என அவர் கத்தவும், மெல்ல தலையை உயர்த்தி அவரைப் பார்த்தவன், “ஆமாங்க ண்ணே.. சபரி சொல்றது நிஜம்தான்..” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.  
 
 
“நிஜம் தான்னா என்னடா அர்த்தம்..? உனக்கு இதெல்லாம் முன்னேயே தெரியுமா..? ஏன் என்கிட்ட சொல்லலை..? இத்தனை நாள் கூடவே இருந்து குழி பறிச்சு இருக்கியா நீ..” என்று கோபத்தோடு கத்தியாவாறே அவனை பளாரென அறைந்திருந்தார் நாகராஜன். 
 
 
அதில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பின்னால் சரிந்து இருந்தவன், மெல்ல எழுந்து “இல்லை ண்ணே.. எனக்கு இதெல்லாம் தெரியாது..” என்றான். 
 
 
அதேநேரம் அவர்களின் பின்னையே அங்கே வந்திருந்த அருண் “என்ன நடக்குது ப்பா இங்கே..? ஏன் முத்துவை அடிச்சீங்க..? சபரி என்ன சொல்லிட்டு போனான்..? எட்டு வருஷம் முன்னே என்ன நடந்தது..?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்க.. ஏற்கனவே ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தவருக்கு, அருணின் இந்த தொடர் கேள்விகள் மேலும் எரிச்சலை கொடுக்க.. “வாயை மூடிட்டு வெளியே போடா..” என்றார் நாகராஜன்.
 
 
“அப்பா என்ன நடக்குதுன்னு சொல்லுங்களேன்.!” என அருண் தொடங்கவும், “அது உனக்கு தேவையில்லாத விஷயம், முதலில் இங்கே இருந்து வெளியே போ, பேசிட்டு இருக்கறது தெரியலை.. நேரா உள்ளே வர..” என அவனிடம் தன் கோபத்தை கொட்டியவர், “அவனை வெளியே தள்ளி கதவை மூடுடா..” என்று முத்துவுக்கு கட்டளையிட்டார். 
 
 
ஏற்கனவே தன் மேல் கோபத்தில் இருப்பவரின் பேச்சை மீற முடியாமல் முத்து தயக்கத்தோடு அருணை பார்க்கவும், இருவரையும் கோபமாக பார்த்துவிட்டு விருட்டென அருண் அங்கிருந்து வெளியேறியிருந்தான். 
 
 
மெல்ல கதவை பூட்டிவிட்டு முத்து திரும்பவும் “உனக்கு எப்போ தெரியும்..? எப்படி தெரியும்னு கேட்டேன்..?” என்று நாகராஜன் முறைத்துக் கொண்டே கேட்கவும், “இல்லை ண்ணே இப்போ சபரி சொன்ன பிறகு தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அன்னைக்கு நடந்ததெல்லாம் ஞாபகம் வருது.. அன்னைக்கு நான் அங்கே போகும் போது அவன் வீட்டில் இல்லை.. அது உங்களுக்கே தெரியுமில்லை..” என்று முத்து இழுக்கவும் பல்லை கடித்தபடி அவனை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார் நாகராஜன். 
 
 
அவரின் அந்தப் பார்வையே அவனுள் அச்சத்தை பரப்ப.. “அன்னைக்கு நைட் அவன் இங்கே வந்தப்போ நாம இருந்த சூழ்நிலையில் சரியா அவன் முகத்தை என்னால் பார்க்க முடியலை.. இருட்டில் அடிச்சு தூக்கிட்டு போகும் போதே அவன் எங்களை அடிச்சுட்டு தப்பிச்சுட்டான்.. அதில் கொஞ்சம் கொஞ்சம் தான் அவன் முகம் ஞாபகம் இருக்கு, இப்போ அவன் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம பாப்பாவை தூக்கிட்டு போன போது..” என முத்து சொல்ல “திரும்ப திரும்ப அதையே சொல்லாதடா..” என்று கத்தினார் நாகராஜன். 
 
 
“இல்லை ண்ணே அன்னைக்கு கூட இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு நான் சொன்னது இதனால் தான் போல..! அதுக்கு பிறகு நம்ம கூட இருந்தவங்க தான் சமீபத்தில் அவன் விருது வாங்கின போட்டோ பேப்பரில் வந்தது, அப்போ கொடுத்த பேட்டி எல்லா டிவிலேயும் வந்ததுன்னு சொல்லி என்னை குழப்பி விட்டுட்டாங்க..” என்றான் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து நிறுத்தி தயக்கத்தோடு முத்து. 
 
 
“நீ சொல்ற எதையும் என்னால் நம்ப முடியலை.. நீயும் அவன் கூட கூட்டாடா..? இதுக்கெல்லாம் கூட இருந்து நீ தான் திட்டம் போட்டு கொடுத்தியா..? எவ்வளவு கொடுத்தான் உனக்கு..? சொல்லு எவ்வளவு கொடுத்தான்..?” என்று கத்தினார் நாகராஜன். 
 
 
அதைக் கேட்டு பதறிய முத்து “ஐயையோ என்னெண்ணே..? என்னை போய் சந்தேகப்படறீங்க.. நான் உங்க வீட்டு நாய் ண்ணே.. உங்களுக்கு விசுவாசமா இருக்க மட்டும் தான் எனக்கு தெரியும்.. உங்களுக்கு எதிரா நிற்க எனக்கு தெரியாது..
 
 
இத்தனை வருஷமா உங்க வீட்டு உப்பை தின்னு வளர்ந்து இருக்கேன்.. உங்களுக்காக யாரையும் எதிர்த்து நிற்பேன், யாருக்காகவும் எதுக்காகவும் உங்களுக்கு எதிராக போக மாட்டேன் ண்ணே..” என்று நாகராஜனின் காலை பிடித்துக் கொண்டு கதறினான் முத்து.
 
 
அவன் எந்த அளவு தனக்கு விசுவாசமானவன் என நாகராஜனுக்கு நன்றாக தெரியும். பல வருடங்களாக தன்னோடு இருப்பவன் வேறு யாரையும் நம்பாத போதும் கண்ணை மூடிக்கொண்டு முத்துவை நம்புவார் நாகராஜன். இதுவரை அருணை நம்பி சொல்லாத ரகசியங்கள் எல்லாம் கூட முத்துவை நம்பி பகிர்ந்து இருக்கிறார். 
 
 
அப்படிப்பட்டவன் தனக்கு எதிராக போயிருப்பான் என அவராலேயே நம்ப முடியவில்லை தான். ஆனாலும் நடப்பதை எல்லாம் பார்க்கும் போது உண்டான சந்தேகத்தோடே அவனிடம் கேட்டிருந்தார் நாகராஜன். 
 
 
இப்போது முத்து கொடுத்த விளக்கத்தை வைத்து அவன் மேலான சந்தேகம் விலகி இருக்க.. மெல்ல யோசனையோடு அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சென்று விழிமூடி அமர்ந்தவரின் மனம் எட்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. 
 
***
 
அதே நேரம் புயல் வேகத்தில் காரை தன் வீட்டிற்குள் சென்று நிறுத்தியிருந்த தாரக் அங்கிருந்து இறங்கி உள்ளே செல்ல.. வழக்கத்திற்கு மாறான தாரக்கின் இந்த வேகத்தை ஜெய்சிங் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். 
 
 
எப்போதும் தாரக்கை இப்படி எல்லாம் பார்த்திராதவனுக்கு இன்றைய நடவடிக்கைகள் கொஞ்சம் அதிசயமாகவும், அதே நேரம் பதட்டமாகவும் இருந்தது. ‘சாருக்கு ஏதாவது பிரச்சனையா..?’ என்று அவன் அமர்ந்திருந்த கூண்டிலிருந்து மெல்ல பார்வையை திருப்பி உள்ளே பார்க்க.. காரில் இருந்து இறங்கி அதே வேகத்தில் விறுவிறுவென உள்ளே நுழைந்து இருந்தான் தாரக். 
 
 
தன் அறைக்குள் நுழைந்து கதவை படார் என அடித்து மூடியவன், அங்கிருந்த கப்போடில் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த காற்று ஊதும் தலையணையை மெல்ல எடுத்து வருடி கொடுத்தவன், முகத்தில் படர்ந்த பெரும் வலியுடன் அதை தன்னோடு சேர்த்து அணைத்தபடி நின்று விட்டான்.
 
 
அது அவனுள் பல நினைவுகளை கிளறி விட்டிருக்க.. அந்த தலையணை அவன் மனம் வெகுவாக தேடும் ஒரு உறவாக அவனுக்கு தோன்ற.. மேலும் தன்னோடு சேர்த்து அதை இறுக்கிக் கொண்டவன், அப்படியே சில நிமிடங்கள் நின்று விட்டான்.
 
 
சில மணி நேரங்களாக காரில் தனியே பயணித்து வீடு வந்து சேரும் வரை அவனுள் இருந்த தவிப்பு எல்லாம் இந்த நொடி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல் இருக்க.. “நான் செஞ்சது சரியா தப்பான்னு இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு தெரியலை.. இதுக்காக நீ என்னை மன்னிப்பியா இல்லையான்னு கூட எனக்கு தெரியலை.. ஆனா முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்னு சொல்றது போல, வலிக்கு பதிலா வலியை தான் கொடுக்கணும்.. அதை தான் நான் அவனுக்கு கொடுத்துட்டு வந்து இருக்கேன்..” என்று மனதிற்குள் யாருடைனோ பேசிக் கொண்டான் தாரக். 
 
 
அதுவரை அவனுள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியிருந்த ஏதோ ஒரு தவிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து பழைய நினைவுகளை கிளறி விட.. மெல்ல விழிகள் கலங்கி கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிய தொடங்கியதில் மெதுவாக படுக்கையில் சென்று விழிமூடி சாய்ந்தவன், ஒரு நொடி கூட தன்னிடம் இருந்து அந்த தலையணையை விளக்கவில்லை. 
அவன் நினைவுகள் பின்னோக்கி பயணிக்க துவங்கியது.
 
*
 
இங்கே வெட்ட வெளியில் தனியே செய்வதறியாது மனம் கலங்க தவித்து நின்று கொண்டிருந்தாள் சிந்து. இத்தனை மாதங்களாக எப்படியாவது தன் வீட்டிற்கு திரும்பச் சென்று விட மாட்டோமா என அவளுள் இருந்த தவிப்பெல்லாம் இன்று நிஜமாகி அந்த வீட்டு வாயிலுக்கு வந்து சில மணி நேரம் கடந்திருந்தது. 
 
 
ஆனால் உரிமையோடு உள்ளே செல்லவோ நடந்ததை மறந்து வா இனி நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என அவளுக்கு உறுதுணையாக நிற்கவோ அங்கே யாரும் தயாராக இல்லை என மீண்டும் ஒருமுறை அவளுக்கு தெளிவாக புரிந்ததில், தன்னை நினைத்தே வருந்தியவள் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். 
 
 
நாகராஜன் தன்னை இத்தனை பேசி சென்ற பின்னும் இங்கே இருக்க அவளுக்கும் மனமில்லை தான். ஒரு நொடி கூட தன் பக்கம் என்ன நடந்தது என கேட்கவோ யோசிக்கவோ அவர் தயாராக இல்லை என்று எண்ணும் போதே மனம் வலித்தது.
 
 
ஆனால் அவர் இப்படித்தான் என சிறுவயதிலிருந்தே தெரிந்திருந்ததால், அதை ஓரளவு புறம் தள்ள முடிந்தவளால் ஒரு வார்த்தை கூட உள்ளே வா என அழைக்காமல் அவர் சென்றதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
 
அன்று எதையோ யாரையோ பழிவாங்க தன்னை தூக்கிச் சென்றவனும் திரும்பி அழைத்து வந்து ஏன் எதற்கென தெரியாமலே விட்டு சென்றிருக்க.. இவரும் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் உள்ளே சென்றது அவளை பெரும் அளவில் பாதித்து இருந்தது.
 
 
இப்படி ஒரு இடத்தில் இனி தனக்கென்ன வேலை என்று இங்கிருந்து வெளியேற அவளுக்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் எங்கு போவாள்..? அவளுக்கு யாரை தெரியும்..? தன் குடும்பமே இப்படி ஒரு நிலையில் தன்னை கைவிட்டு இருக்கும் போது இனி யார் தனக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்க முடியும்..?
 
 
அதைவிட கடந்த மாதங்களின் நிகழ்வுகளால் அவள் மனதில் உண்டாகி இருந்த அச்சம், அவளை இனி யாரை நம்ப வைக்கும்..? அதில் போக்கிடம் இல்லாமல் உறவென அத்தனை பேரும் கண்முன் இருந்தும் யாரும் இல்லாத ஒரு நிலையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள் சிந்து. 
 
 
இந்த நொடி சுஜாதாவின் மேல் அவளுக்கு எந்த ஒரு கோபமோ வருத்தமோ இல்லை. அவருக்கு இந்த வீட்டில் எந்த அளவுக்கு உரிமையும் மரியாதையும் இருக்கிறது என சிறுவயதிலிருந்தே பார்த்திருந்தவள் என்பதால் நாகராஜனின் அனுமதி இல்லாமல் சுஜாதாவினால் தன்னை உள்ளே அழைக்க முடியாது என சிந்துவுக்கு நன்றாகவே புரிந்தது. 
 
 
அதே நேரம் எதையோ சொல்லி அவர் மார்பில் அடித்துக் கொண்டு அழுவதை காணும் போது ஒரு மகளாக அவளின் மனம் கலங்கத்தான் செய்தது. ஆனால் அவரை நெருங்கி ஆறுதல் சொல்லும் உரிமை இந்த நொடி தனக்கு இருக்கிறதா எனக் கூட அவளுக்கு புரியவில்லை. 
 
 
ஒருவேளை அதற்கும் தனக்கு அனுமதி இல்லையோ என்ற எண்ணத்தோடே அப்படியே சிந்து அசையாமல் நின்று பார்த்திருக்க.. அவளின் மனநிலையை பிரதிபலிப்பது போல் வானம் இரண்டு மழையாக பொழிந்தது. 
 
 
அப்போதும் இங்கும் அங்கும் ஓடி தன்னை காத்துக் கொள்ள எண்ணாமல் சிந்து அசையாமல் அப்படியே நின்றிருக்க.. இப்போதே மழையின் வேகத்தில் சுஜாதாவுக்கு சுற்றுப்புறம் புரிந்தது. அதில் வேகமாக பார்வையை உயர்த்தியவர் சொட்ட சொட்ட நனைந்தபடி சிந்து கைகளை கட்டியவாறு நின்றிருப்பதை கண்டு பதற்றத்தோடு எழுந்தார். 
 
 
“ஐயோ என் புள்ளை.. இப்படி நனையறாளே..!” என்று பதறி வேகமாக மகளை நெருங்கியவர், “என் கண்ணு.. ஏன் இங்கே நிற்கறே..? உள்ள வா..” என அவளின் கையைப் பிடித்து இழுக்க.. ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து அப்படியே நின்றாள் சிந்து. 
 
 
“ஒழுங்கா அடம் பிடிக்காம உள்ளே வா சிந்து.. மழையில் நனைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்..! நீ இப்போ ஒத்த ஆள் இல்லை, இரட்டை ஆள்..” என்று ஒரு அன்னையாக பதறி சுஜாதா அவளை உள்ளே அழைத்துச் செல்ல முயல.. இங்கு வந்து இத்தனை நேரத்தில் முதல்முறையாக வாயைத் திறந்து “வேண்டாம்மா இதனால் உங்களையும் சேர்த்து அப்பா வெளியே அனுப்பினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை..” என்றாள் சிந்து. 
 
 
அதில் அவளை அங்கிருந்து உள்ளே அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தவரின் கரம் அப்படியே நின்றது. இப்படி ஒரு நிலையிலும் தன்னைப் பற்றி யோசிக்கும் மகளை எண்ணி கதறியவர், “எல்லாரைப் பத்தியும் யோசிச்சு எல்லாருக்காகவும் கவலைப்பட்ட உன்னை பத்தி யோசிக்கவும் கவலைப்படவும் இங்கே ஒருத்தரும் இல்லாம போயிட்டாங்களே சிந்து..!” என்றார் சுஜாதா. 
 
 
அதற்கு வருத்தத்தோடான ஒரு சிறு முறுவலே அவளிடம் இருந்து பதிலாக வந்தது. இந்த நொடி வேறு எதை பற்றியும் கவலைப்பட விரும்பாத சுஜாதா “என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் நீ உள்ளே வா..” என மகளின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முயல..
 
 
“அம்மா வேண்டாம், உங்களுக்கு தான் இது பிரச்சனையாகும்..” என மீண்டும் சிந்து சொல்ல.. “பரவாயில்லை.. நான் வாழறதே உங்களுக்காக தான்.. நீ இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் போது உன்னை இங்கே விட்டுட்டு அந்த வீட்டுக்குள்ளே இருந்து நான் என்ன சாதிக்க போறேன்..? 
 
 
இத்தனை வருஷம் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவருக்கு உண்மையா இருந்ததற்கும் இல்லாத மரியாதை.. கிடைக்காத வாழ்க்கை உன்னை இங்கே இந்த நிலையில் தவிக்க விட்டுட்டு உள்ளே போறதால் மட்டும் கிடைக்கும்னா இப்படி ஒரு வாழ்க்கை இனி எனக்கு எதுக்கு..? என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் நீ வா..” என சுஜாதா மகளின் கையை பற்றி உறுதியோடு உள்ளே அழைத்துச் செல்ல முயல.. இதற்கு மேல் மறுக்க விரும்பாமல் அவரோடு சென்றாள் சிந்து. 
 
 
இங்கு நடப்பதை எல்லாம் அருண் அவன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான். தன் தந்தையின் சம்மதம் இல்லாமல் சுஜாதா சிந்துவை உள்ளே அழைத்து வருவதை கண்டவனுக்கு அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் தோன்றவில்லை. 
 
 
முத்துவை அறைக்குள் வைத்துக் கொண்டு தன்னை அவர் வெளியே தள்ளியதில் உண்டான கோபத்தோடு நின்றிருந்தவனுக்கு, இந்த நொடி இதெல்லாம் அவர் சம்பந்தப்பட்ட விஷயம் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.  
 
 
அதில் அசையாமல் அவன் நின்றிருக்க.. இங்கு தூணுக்கு அருகில் நின்றிருந்த விஷ்வாவின் முகம் தான் இதையெல்லாம் கண்டு இறுகியது. இத்தனை தைரியத்தோடு சுஜாதா ஒரு முடிவு எடுப்பார் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
 
 
ஆனால் இதைச் சென்று தடுக்கவும் அவனால் முடியவில்லை. தன் முகமூடி இப்போது கழல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. இத்தனை நேரத்திற்கு சிந்துவே அவனின் முகத்திரையை கிழித்து எறிந்து இருக்க வேண்டும். ஆனால் அவளே அப்படி செய்யாத போது தானாக முன் வந்து அவன் ஏன் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடே நின்றிருந்தான் விஷ்வா. 
 
 
தாரக்கிடம் தன்னை பற்றி பேச விரும்பவில்லை என்றாலும் இன்று எப்படியும் தன்னை பற்றிய உண்மையை நாகராஜனிடம் வெளிப்படுத்தி விடுவாள் சிந்து என்று நினைத்திருந்தவனுக்கு இங்கும் அவள் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்திருந்தாள். அவளின் இந்த அமைதிக்கான காரணம் அவனுக்கு புரியவில்லை என்றாலும் தனக்கு சாதகமாக அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் விஷ்வா. 
 
 
இனி இங்கிருந்து சென்று விடுவதால் அவனுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. அவர்களின் திட்டம் தொண்ணூறு சதவீதம் சரியாக நடந்திருந்தது. மீதமுள்ள பத்து சதவீதத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் உள்ளிருந்து தாரக்கிற்கு உதவ வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தோடே இன்றும் இங்கு இருக்கிறான் விஷ்வா.
 
 
இத்தனை நாள் திட்டமிட்டு காத்திருந்த அத்தனையும் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் அவனே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் அமைதியாக நின்றிருந்தாலும் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கோபம் அவனுள் நிறையவே இருந்தது. 
 
 
அதை தன் விரல்களை இறுக மூடி அவன் மறைத்துக் கொள்ள முயன்றப்படி நின்றிருக்க.. அதே நேரம் வீட்டு வாயிலில் ஏறிக் கொண்டிருந்த சிந்துவின் பார்வை அவனின் அந்த இறுக்கமான விரல்களில் ஒருமுறை பதிந்து மீண்டது. 
 
 
நேராக சிந்துவை அவளின் அறைக்கு அழைத்துச் செல்ல சுஜாதாவுக்கு ஏனோ மனம் இடம் தரவில்லை. அதில் அவளை தன்னறைக்கு அவர் அழைத்துச் செல்ல.. “இங்கே எதுக்கும்மா..?” என்றாள் மெல்லிய குரலில் சிந்து. 
 
 
“என் கூட கொஞ்ச நேரம் இரு சிந்துமா.. இத்தனை நாள் நீ எங்கே இருக்கே..? என்ன செய்யறேன்னு தெரியாம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.. உன் கூட கொஞ்ச நேரம் இருக்கணும்னு ஆசைப்படறேன், ஏன் இருக்க மாட்டியா..?” என அவர் கேட்கவும், வேறு எதையோ மனதில் வைத்து அவர் இதை செய்தாலும் அதை சொல்ல விரும்பாமல் சமாளிப்பது புரிந்து வேறு எதுவும் கேட்கவில்லை சிந்து. 
 
 
அவளுக்கு மாற்றுத் துணியை எடுத்து வந்து கொடுத்தவர் “முதலில் ஈரத் துணியை மாத்திக்கோ..” எனவும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் வேண்டாம் என தலையசைத்தாள் சிந்து. 
 
 
“இப்படியே இருந்தா உடம்பு தாங்காது சிந்து, சொன்னா கேளு.. அடம் செய்யாம மாத்திக்கோ..” என மெல்லிய குரலில் அவளுக்கு புரிய வைத்து உடைமாற்ற செய்து தலையை துவட்டி விட்டவர் “இரு நான் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்..” என அங்கிருந்து நகர முயல.. “வேண்டாம்மா, எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றாள் சிந்து. 
 
 
“இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் அடம் செய்யாதே சிந்துமா..! சில விஷயங்களை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. சில விஷயங்கள் நமக்கு விருப்பமே இல்லைனாலும் அதை சில நேரங்களில் செஞ்சா தான் நல்லதுனா நாம செஞ்சு தான் ஆகணும்.. அப்போ தான் நம்ம அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.. புரிஞ்சு நடந்துக்கோ..” என்று சுஜாதா மகளின் கூந்தலை ஆதரவாக வருடி சொல்ல.. “இல்லைம்மா, எனக்கு இப்போ எதுவும் வேண்டாம்.. சாப்பிட தோணினா நானே கேட்கறேன்.. கொஞ்ச நேரம் அமைதியா உங்க மடியில் படுத்துக்கவா..?” என்று சிந்து கேட்கவும் அவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சுஜாதாவை முற்றிலும் உடைத்து போட்டிருந்தது.
 
 
“இது என்ன கேள்வி சிந்துமா..? தாராளமா படுத்துக்கோ..” என அவளை நோக்கி சுஜாதா தன் கையை நீட்ட.. பசுவின் மடியை தேடும் கன்று போல் அவரின் மடியில் தஞ்சம் புகுந்தாள் சிந்து. பல நாட்களாக மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்தவள், இந்த நொடி கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாமல் விழிமூடி அவரின் மடியில் சாய.. சிந்துவின் கண்ணீர் அவரின் உடையை தாண்டி உடலில் இறங்கியது.
 
 
இதில் மனம் கணக்க.. அப்படியே மகளின் தலையை வருடியபடி அமர்ந்திருந்தவரின், மற்றொரு கரத்தை சிந்து தன் இரு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொள்ள.. கரகரவென சுஜாதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது. 
 
 
ஆனால் அதை சிந்துவுக்கு காண்பிக்காமல் மறைத்தவர், அவளின் முகத்தையே கலக்கமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவரின் மனமோ இதற்கெல்லாம் காரணமான அந்த கருப்பு நாளை நோக்கி பயணிக்க தொடங்கியது. 
 
 
தொடரும்...
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 19
 
சார் பதிவாளர் அலுவலகத்தில் மாலையும் கழுத்துமாக நின்றிருந்த நர்த்தனாவின் முகத்தில் அதீத பதட்டம் தெரிந்தது. அதை கண்டு அவளின் அருகில் நின்றிருந்த தாரக், நர்த்தனாவின் கையை ஆதரவாக பிடித்து மெல்ல அழுத்தி கொடுத்தான். அதில் மெதுவாக பார்வையை திருப்பி அவனைப் பார்த்தவள் லேசாக புன்னகைக்க முயன்று மோசமாக தோற்றாள்.
 
 
அவளின் அழகிய புன்னகை எப்போதும் தாரக்கின் விருப்பமான ஒன்றாக இருந்தது. இன்று அதுவே அவள் முகத்தில் காணாமல் போய் இருப்பதை வருத்தத்தோடு பார்த்தவன், “இப்போவும் சொல்றேன் தனா, நல்லா யோசிச்சுக்கோ.. அவசரம் எதுவுமில்லை பொறுமையா யோசிச்சு வேற ஏதாவது முடிவுக்கு வரலாம்.. இப்போ இங்கிருந்து போயிடலாமா..?” என்றான் தாரக். 
 
 
அதற்கு வேண்டாம் என மறுப்பாக தலையசைத்தவள், “இனி யோசிக்க எல்லாம் எதுவுமில்லை தீபன்.. எப்போ முடிவெடுத்தாலும் எவ்வளவு யோசித்தாலும் என் வாழ்க்கை உங்க கூட தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை..” என்று மெல்லிய குரலில் என்றாலும் உறுதியோடு கூறினாள் நர்த்தனா.
 
 
“அப்பறம் என்ன தனா..? எதுக்காக இவ்வளவு பயம்..? உன் முகத்தில் எவ்வளவு பதட்டம் இருக்கு தெரியுமா..! நம் வாழ்க்கையோட முக்கியமான நாள், நம்ம வாழ்க்கை தொடங்கப் போற நாள்.. இன்னைக்கு நீ இப்படி இருக்கறது எனக்கு ஏதோ போல இருக்கு..” என அவன் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ள.. அவன் மனநிலை அந்த நொடி அவளுக்கு புரிய தாரக்கின் கையை அழுத்திக் கொடுத்தவள், “சாரி தீபன், நான் என்னை மட்டுமே யோசிச்சு உங்களை பத்தி யோசிக்க தவறிட்டேன்.. ரியலி வெரி சாரி..” என்றாள் நர்த்தனா. 
 
 
“ஹே.. என்ன இது இவ்வளவு ஃபார்முலா பேசிட்டு இருக்கே.. உன் சாரி எல்லாம் யாருக்கு வேணும்..? எனக்கு வேண்டியது உன் சிரிப்பு.. இதோ இங்கே அழகா மலருமே அந்த சிரிப்பு..” என அவளின் கன்னத்தில் இருபுறம் கையை வைத்து இழுத்து பிடிக்கவும், அந்த செயலில் சட்டென சிரித்து விட்டவள் “ஒன்ஸ் அகெயின் சாரி..” என்றாள். 
 
 
“ஓகே அக்செப்ட்டட்..” என்று தாரக் புன்னகையோடு சொல்லவும், இவர்களுக்கு முன் நின்று இருந்தவர்கள் உள்ளே சென்றனர். “அடுத்து நாம தான்னு நினைக்கறேன்..” என்று மெதுவாக அவளின் செவிக்கு அருகில் சென்று முணுமுணுத்தான் தாரக்.
 
 
அவனை பிடித்திருந்த கைகளில் இறுக்கத்தை கூட்டியவள், “எனக்கு பயமா இருக்கு.. எல்லாம் நல்லபடியா நடக்குமில்லை, எந்த பிரச்சனையும் வந்துடாதே..!” என்று பதட்டத்தோடு வாயில் பக்கம் ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள் நர்த்தனா.
 
 
“எதுவும் நடக்காது, பயப்படாம இரு..” என அவளுக்கு ஆறுதலாக பேசியவன், தன் இருப்பை அவளுக்கு தெரிவிப்பது போல் நர்த்தனாவை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொள்ள.. அடுத்த ஐந்து நிமிடத்தில் இவர்களின் பெயர் அழைக்கப்பட்டது. அடுத்து உள்ளே சென்றவர்கள் சட்டப்படி தங்கள் திருமணத்தை பதிவு செய்துவிட்டு வெளியில் வந்தனர். 
 
 
அங்கு கையெழுத்திடும் போதே நர்த்தனாவின் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை கவனித்திருந்த தாரக், “இப்போ ஓகேவா நீ..?” என்று அக்கறையான குரலில் கேட்கவும், ‘ஆம்’ என தலையசைத்தவள், வேறு எதுவும் பேசவில்லை. விழிகள் லேசாக கலங்கி நிற்க.. முகம் பயத்திலும் பதட்டத்திலும் வேர்த்து போயிருந்தது. 
 
 
“தனா என்னடா..? ஏன் இப்படி இருக்கே..? நீ இப்படி இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” என தாரக் சொல்லவும், “இல்லை தீபன், இப்படி யாரும் இல்லாம கல்யாணம் செய்துக்கறது என்னவோ போல இருக்கு..” என்றவளை “எப்படி சமாதானம் செய்வது..?” என தாரக்கிற்கு புரியவில்லை 
 
 
அதில் அவன் செய்வதறியாது நின்றிருக்க.. “அப்பா தான் இல்லைன்னு ஆகிடுச்சு.. இன்னைக்கு அம்மாவும் தம்பியும் வந்து இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்.. ஆனா என் நிலைமை இப்படி இருக்கே.. யாரும் இல்லாம கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு விதிச்சு இருக்கு..” என்று குரல் தழுதழுக்க அவள் சொல்லிய போது தானும் சேர்ந்து கலங்கினான் தாரக். 
 
 
தனக்குத்தான் யாருமில்லை என்றாகி விட்டது, அவளாவது குடும்பத்தோடு சேர்ந்து இருக்க வேண்டும் என தாரக் நினைத்தான். நர்த்தனாவின் இந்த முடிவிற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பும் தெரிவித்தான். ஆனால் அவள் கண்ணீரோடு இதைத் தவிர அவர்கள் ஒன்று சேர வேறு வழி இல்லை என்று புரிய வைக்கவும் தான் மறுப்பின்றி சம்மதித்திருந்தான் தாரக். 
 
 
அவளுக்காகவே இந்த முடிவிற்கு சம்மதித்திருந்தவன், இப்போது இதிலும் நர்த்தனா கலங்கி நிற்பதை காண முடியாமல் “தனா என்னடாம்மா நீ இப்படி இருந்தா நான் என்ன செய்வேன்..? உனக்காகத்தானே இதெல்லாம்..” என்று மெல்லிய குரலில், அவளை சமாதானம் செய்ய முயலவும் சட்டென அவனை அணைத்துக் கொண்டவள், எதுவும் பேசாமல் சில நொடிகள் அப்படியே இருந்தாள். 
 
 
பின் அவனிடமிருந்து மெல்ல விலகி விழிகளை துடைத்துக் கொண்டவள், “சாரி உங்களை ரொம்ப சங்கடப்படுத்தறேன் இல்லை..” எனவும், “அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ சந்தோஷமா நிம்மதியா இருந்தா அதுவே எனக்கு போதும்..” என்றான் தாரக். 
 
 
அதில் புரிந்தது என்பது போல் தலையசைத்தவள், “நாம நிறைய நேரம் இங்கே இருக்க வேண்டாம் தீபன்.. இங்கே இருந்து கிளம்பிடுவோம், யாராவது பார்த்துட்டா பிரச்சனை ஆகிடும்..” என்று அவசரமாக பார்வையை அந்த இடத்தை சுற்றி சுழற்றினாள் நர்த்தனா. 
 
 
அவளின் அதீத பயத்திற்கான காரணம் இன்று வரை அவனுக்கு சரியாக புரியவில்லை. ஆனால் அவளுக்காக “ஹேய் என்ன இது..? இவ்வளவு பயப்பட நாம என்ன கொலை குத்தமா செஞ்சுட்டோம்..? காதலிச்சோம் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம் அவ்வளவுதானே..!” என்றான் தாரக். 
 
 
“இல்லை, உங்களுக்கு புரியாது.. எங்க பெரியப்பா பத்தி உங்களுக்கு தெரியாது.. அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது, நம்மை என்ன வேணாலும் செய்வார்.. வாங்க முதலில் இங்கிருந்து கிளம்பிடுவோம்..” என்று அவசரமாக தாரக்கின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் நர்த்தனா.
 
 
இவர்கள் இருவரும் தங்குவதற்காக தாரக் ஏற்பாடு செய்திருந்த வீடு தான் சாரதாவின் வீடு. சாரதா குமரேசன் தம்பதிகள் முதல் தளத்தில் வசிக்க.. தரைத்தளத்தில் இருந்து வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தனர். 
 
 
நேராக அங்கு சென்று மாலையும் கழுத்துமாக இறங்கியவர்களை ஏதேச்சையாக வெளியில் வந்த சாரதா பார்த்து திகைத்தார். உடன் யாரும் வராததை கண்டு யோசனையானவர், “பிள்ளைங்களா அப்படியே நில்லுங்க.. ஒரு நிமிஷம்..” என்று குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தி விட்டு வேகமாக அவர்களை நோக்கி வந்தவர், “இப்போ தான் கல்யாணம் செஞ்சுட்டு வந்து இருக்கீங்களா..?” எனவும் ‘ஆம்’ என அசைந்தது இருவரின் தலை. 
 
 
“உங்க கூட யாரும் வரலையா..? வீட்டாளுங்கன்னு யாரும் உங்களுக்கு இல்லையா..?” என்று சாரதா அவர்கள் மட்டுமே நிற்பதை கண்டு கேட்கவும் “எங்களுக்குன்னு யாருமில்லை.. இனி எனக்கு இவர், அவருக்கு நான்..” என்றாள் நர்த்தனா. 
 
 
குழந்தைத்தனமான முகம் எதற்கோ பயந்து நடுங்கியது போலான குரலில் தாரக்கின் கரங்களை இறுக பற்றியபடி அவள் நின்றிருந்த விதம் என அத்தனையும் சேர்ந்து நர்த்தனாவை பார்த்த நொடியே சாரதாவினுள் ஏதோ ஒன்று உருகியது. 
 
 
“ஏன்..? அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நாங்க இல்லை.. ஒரு நிமிஷம் இங்கேயே நில்லுங்க, நான் ஆரத்தி தட்டோட வரேன்..” என்று விட்டு உள்ளே வேகமாக சென்றவர், அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களை வரவேற்கத் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். 
 
 
குமரேசனும் அவரின் பின்னேயே வர, இருவருக்கும் ஆரத்தி எடுத்து முறைப்படி வீட்டிற்குள் வரவேற்றவர், கீழ் தளத்தில் உள்ள வீட்டிற்குள் அழைத்துச் சென்று சம்பிரயதாயத்திற்காக முதலில் பாலை காய்ச்சி வீட்டில் இருந்த பழத்தைக் கொண்டு பாலும் பழமும் சாப்பிட வைத்தார்.
அப்போதே அங்கு பெரிதாக எந்த பொருட்களும் இல்லாததை கண்டவர் “உங்களுக்கு என்ன உதவி எப்போ வேணும்னாலும் கேளுங்க, நாங்க இருக்கோம்.. யாரும் இல்லைன்னு யோசிச்சு இனி கவலைப்பட வேண்டாம்..” என்றார் சாரதா.
 
 
அதுவரை அமைதியாக இருந்த தாரக் “நாங்க தேவைப்பட்டா கேட்கறோம்மா.. நீங்க செஞ்ச இந்த உதவிக்கு ரொம்ப நன்றி..” என மனதார கைகூப்பி கூறவும், “அட என்ன தம்பி நீங்க..? இதுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு, மனுஷங்கன்னு இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யறது இயல்பு தானே..!” என்றவர் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். 
 
 
சில நொடிகள் அமைதியாக கழிய, ஒற்றை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்த நர்த்தனா மெல்ல விழிகளை உயர்த்தி தாரக்கை பார்த்து “இந்த உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்க இல்லை..” எனவும், ‘ஆம்’ என தலையசைத்தான் தாரக். அவனுக்குமே சாரதாவின் செயல்களில் மனம் சற்று நெகிழ்ந்து தான் போயிருந்தது. 
 
 
அதில் எதுவும் பேச முடியாமல் அவன் அமைதியாகவே இருக்க.. அங்கிருந்து ஜன்னலுக்கு அருகில் சென்று அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று விட்டான் தாரக். அந்த வீடு வீதியின் இறுதியில் இருந்ததால் பெரிதாக வாகன நெரிசல்களோ போக்குவரத்தோ கிடையாது. அமைதியாக இருந்த வீதியின் வெறுமையை சில நொடிகள் வெறித்துக்கொண்டு நின்றிருந்தவனின் பின்னே வந்து அவன் முதுகில் முகம் புதைத்து தாரக்கை இறுக அணைத்துக் கொண்டாள் நர்த்தனா.
 
 
அவளுக்கு இந்த நொடி தேவைப்படும் ஆறுதலையுணர்ந்து தன் இடையே இறுக்கி இருந்த அவளின் கரங்களை அழுத்தமாக தாரக் பிடித்துக் கொள்ள.. “உங்களுக்கு என் மேலே கோவம் எதுவுமில்லையே தீபன்..?” என்றாள் சிறு விசும்பலோடான குரலில் நர்த்தனா. 
 
 
“கோபமா..! உன் மேலேயா..? எனக்கா..! எதுக்கு..?” என்று அவன் புரியாமல் கேட்கவும், “இப்படி அவசரமா கல்யாணம் செஞ்சுக்க உங்களை நான் வற்புறுத்தினதுக்கு.. அதுவும் யாருமில்லாமல் செஞ்சுக்க சொன்னதுக்கு..” என்று சிறு தயக்கத்தோடு நர்த்தனா கேட்கவும், “எனக்கு நிஜமாவே யாரும் இல்லை தனா.. அதனால் இதில் கவலைப்பட எனக்கு எதுவுமில்லை, இப்போ என் மனசில் கவலைன்னு ஒண்ணு இருக்குனா அது உன்னை நினைச்சு மட்டும் தான்.. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, ஆனாலும் அவங்க இல்லாம நீ இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கேனா.. அதில் என்னவோ இருக்குன்னு தானே அர்த்தம்..” என்றான் தாரக்.
 
 
“நான் அவசரப்பட்டுட்டேன்னு உங்களுக்கு தோணுதா..?” என்று நர்த்தனா மெல்ல அவன் முகம் பார்த்து கேட்கவும், திரும்பி அவளைப் பார்த்தவன் “இல்லை நீ எதையோ யோசிச்சு தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்னு மட்டும் எனக்கு நல்லா புரியுது.. ஆனா ஏன் தேவையில்லாம உங்க பெரியப்பாவை நினைச்சு இவ்வளவு பயப்படறேன்னு தான் எனக்கு புரியலை..” என்றான் தாரக்.
 
 
“உங்களுக்கு அவரை பற்றி தெரியாது, அவர் எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்.. அவருக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடந்தா அவர் என்ன செய்வாருன்னு அவருக்கே தெரியாது.. ரொம்ப மோசமானவர்..” எனும் போதே அதுவரை அவளுள் இருந்த கலக்கம் விஸ்வரூபம் எடுக்க.. பெரிதாக மீண்டும் நர்த்தனாவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது. 
 
 
இப்போது அவளை இழுத்து தன் முன் நிறுத்தி இறுக அணைத்துக் கொண்டவன், “சரி இனி பயப்பட என்ன இருக்கு..? அதான் நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டோமே..! நம்மை இனி யாராலும் பிரிக்க முடியாது, உங்க பெரியப்பா நினைச்சாலும் கூட புரியுதா..! நான் இருக்கேன் என்னை நம்பு..” என்று அவள் உச்சந்தலையில் அழுத்தமாக தான் இதழை பதித்தான் தாரக். 
 
 
அவனுக்காக சரியென தலையசைத்து இருந்தாலும் நர்த்தனாவினுள் இருந்த கலக்கம் கொஞ்சமும் குறையவில்லை. நாகராஜனை பற்றி தாரக்கிற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் சிறு வயதில் இருந்து அங்கேயே அவருடனே வளர்ந்த நர்த்தனாவுக்கு தெரியாமல் இருக்குமா..? 
 
 
‘திருமணம் முடிந்து விட்டது என்பதால் அப்படியே விட்டுவிடக் கூடியவரா அவர்..? எப்படியும் தேடி வருவார்..!’ என்ற பயம் அவளுள் பெருமளவில் இருந்தது. அதை உண்மையாக்குவது போல் நாகராஜன் ஊரில் விவரம் அறிந்து கொதித்துக் கொண்டிருந்தார். 
 
 
நர்த்தனா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி எம்எஸ்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அவள் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் தான் காலையில் தாரக்கும் பயணிப்பான். 
 
 
அவன் வேலை செய்த சண்முகா ஸ்டோர் என்ற வீட்டிற்கு தேவையான அத்தனையும் கிடைக்கும் ஐந்து அடுக்கு பல்பொருள் அங்காடியும் அந்த பகுதியில் தான் இருந்தது. இதில் தினமும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்துக் கொள்ள தொடங்கி, அது கொஞ்சம் கொஞ்சமாக நேசமாக மாறி.. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி இருந்தனர்.
 
 
தன் மனம் புரிந்த நொடி கொஞ்சமும் தாமதிக்காமல் தாரக், தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்து இருக்க.. நர்த்தனாவின் உள்ளும் அதே காதல் மலர்ந்து இருந்தாலும், தன் குடும்பத்தை எண்ணி பெரும் தயக்கம் ஒன்று அவளை சூழ்ந்து கொண்டதில் தயங்கி தடுமாறி நின்றாள் நர்த்தனா. 
 
 
அதற்காக தாரக்கிடம் மறுப்பை தெரிவிக்கவும் அவளால் முடியவில்லை. மாறாக அவனின் முன் வருவதை குறைத்துக் கொள்ள தொடங்கினாள். தினம் செல்லும் பேருந்தை தவிர்த்து இரண்டு பேருந்துகள் பிடித்து கல்லூரிக்கு செல்வது அவளின் பழக்கமாக மாற.. ஆரம்பத்தில் அவளை காணாமல் தவித்த தாரக், ‘ஒருவேளை அவளுக்கு இதில் விருப்பம் இல்லையோ..?’ எனத் தோன்றவும் சோர்ந்து போனான்.
 
 
‘பிடிக்கலைனா கூட சொல்லி இருக்கலாமே..! அதுக்காக இப்படி என்னை தவிர்க்கறது போல நடந்து கொள்வது தான் ரொம்ப வலிக்குது..’ என அவன் மனம் நினைக்க.. ‘இல்லை அவளுக்கு பிடிக்கலைன்னு எப்படி உன்னால் சொல்ல முடியும்..? அந்த கண்ணில் உனக்கான காதலை நீ பார்த்ததில்லையா..!’ என்று அவன் மனம் கேள்வி கேட்டது.
 
 
அதைக் கண்டு உண்டான நம்பிக்கையில் தானே அவளிடம் தன் மனதை மறைக்காமல் பகிர்ந்து இருந்தான் தாரக். இதில் குழம்பிப்போனவன் செய்வதறியாமல் தவித்தாலும் மீண்டும் நர்த்தனவை தேடிச் சென்று தொல்லை செய்ய அவனுக்கு விருப்பமில்லை. 
 
 
இதில் ஒரு நாள் தாரக் சற்று தாமதமாக வர, அவன் வழக்கமாக செல்லும் பேருந்து சென்று விட்டிருந்தது. அதில் வேறு வழி இல்லாமல் தாரக் இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலையில், அந்த பக்கமாக சென்ற பேருந்தில் வேகமாக ஓடி ஏற.. நர்த்தனாவும் அந்த பேருந்தில் தான் இருந்தாள்.
 
 
இருவரும் ஒருவரை ஒருவர் கண்டதும் சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டவன், அவளை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தான். தன்னை பிடிக்கவில்லை என தவிர்க்க நினைத்து பேருந்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒருத்தியை இதற்கு மேலும் தொல்லை செய்யக்கூடாது என நினைத்து தாரக் அப்படி நடந்து கொள்ள.. ஆனால் இது நர்த்தனாவை மேலும் வலிக்க செய்திருந்தது. 
 
 
இப்போதே இரு வாரமாக அவனை தினமும் பார்க்காமல் தவித்து துடித்து தனக்குள் மருகிக் கொண்டிருந்தவளுக்கு இன்று கண் முன் வந்து நின்றும் அவன் தன்னை பார்க்காமல் திரும்பிக் கொண்டது பெரும் வலியை கொடுக்க விழிகள் கலங்கிவிட்டது. 
 
 
இதில் சூழ்நிலை உணர்ந்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள், அவனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்க.. தாரக்கோ மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை. 
 
 
முதலில் அவள் இறங்க வேண்டிய இடம் வரவும், நர்த்தனா நின்றிருந்த இடத்தில் இருந்து பின்பக்க வழி அருகில் இருந்தாலும் தாரக் நின்றிருந்த முன் பக்க படிக்கட்டை நோக்கி நகர்ந்தவள், அவன் மற்றவர்கள் இறங்குவதற்காக வழிவிட்டு இறங்கி நிற்கவும், தாரக்கையே பார்த்தபடி இறங்கியவள் கடந்து செல்லும் போது மெல்ல தன் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்திருந்தாள். 
 
 
அந்த நொடி அவள் விழிகளில் தெரிந்த வலியும் தவிப்பும் அவன் மனதை ஏதோ செய்தது. அதில் சட்டென அவளையே அவன் கவனிக்க.. விழிகள் கலங்க இரண்டு அடி எடுத்து வைத்தவள் திரும்பி மீண்டும் தாரக்கை ஏக்கத்தோடு பார்க்க.. அந்த நொடி தாரக் உடைந்தே போனான். 
 
 
இது அவளுக்கு தன்னை பிடிக்காமல் செய்வது போல் நிச்சயமாக அவனுக்கு தோன்றவில்லை. அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது, அதனால் ஏதோ ஒன்று அவளை இதற்கு சம்மதிக்க விடாமல் தடுக்கிறது என புரிய.. நொடியும் தாமதிக்காமல் அவளை பின்தொடர்ந்தான் தாரக். 
 
 
அடுத்த திருப்பத்தில் தாரக் தன் பின்னே வருவது தெரியாமல், மெல்ல விசும்பலோடு அழுதப்படியே நடந்து கொண்டிருந்தவள், “நர்த்தனா..” என்ற தாரக்கின் குரல் பின்னிருந்து கேட்கவும், திகைத்து திரும்பிப் பார்க்க.. தன் முன்னே வந்து நின்றவனை கண்டு அவளின் விழிகள் அதிர்வில் விரிந்தது.
 
 
கண் கலங்கத் தன் முன் நின்றிருப்பவளை கண்டு ஒரு நொடி செய்வதறியாது நின்றவன், “பின் உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைச்சு தான் உங்களை திரும்ப தொந்தரவு செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்திருந்தேன்.. ஆனா இப்போ உங்களை பார்க்கும் போது நீங்க பிடிக்காம விலகி போறதா எனக்கு தெரியலை.. வேற ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க சேர்ந்து சரி செய்யலாம்..” என்றான் தாரக்.
 
 
ஆனால் இது சரி செய்யக்கூடிய விஷயமா என்று அவளுள் ஒரு பெரும் பதட்டம் உருவாக.. ‘ஒண்ணுமில்லை’ என்று மட்டும் அவள் தலையசைத்தாள். அதற்குள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க.. 
 
 
“உங்களுக்கு என்ன பிடிக்கலைனா கூட பரவாயில்லை சொல்லிருங்க.. அதுக்காக இப்படி எல்லாம் அழாதீங்க, உங்களை இப்படி கண்ணீரோட என்னால் பார்க்க முடியலை..” என்றான் தாரக். 
 
 
‘எப்படி அவளால் பிடிக்கவில்லை என சொல்ல முடியும்..? மனம் தெரிந்து பொய் சொல்ல அவளால் முடியவில்லை..’ அதில் செய்வதறியாது அவள் நேருக்கு நேர் தாரக்கை பார்க்க தயங்கி விழிகளைத் தழைத்துக் கொண்டே, துடிக்கும் இதழ்களை மெல்ல தன் பற்களால் கடித்து அமைதியாக்க முயன்றாள்.
 
 
அவளையே சில நொடிகள் பார்த்தபடி நின்றிருந்தவன், நர்த்தனாவாக எதுவும் சொல்லப்போவதில்லை என்று புரிந்து “ஓகே உங்களுக்கு என் கூட பேச விருப்பம் இல்லைன்னு நினைக்கறேன்.. உங்களை தொந்தரவு செஞ்சுருந்தா மன்னிச்சுக்கோங்க.. இனி இப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு உருவாகாது.. இனி உங்க கண்ணு முன்னேயே வரமாட்டேன்..” என்று விட்டு தாரக் அங்கிருந்து நகர.. எங்கே இனி அவனைப் பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவளின் மற்ற கலக்கத்தை எல்லாம் துடைத்து தூர ஏறிந்ததில் அவசரமாக “ஒரு நிமிஷம்..” என்று அவனை அழைத்து இருந்தாள் நர்த்தனா. 
 
 
அதில் தாரக் திரும்பி அவளை கேள்வியாக பார்க்கவும், “எனக்கு உங்களை பிடிக்கும்..” என்று தலை குனிந்தவாறே மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் நர்த்தனா. தன் காதில் விழுந்தது நிஜம்தானா என ஒரு நொடி புரியாமல் சந்தோஷமாக அதிர்ந்து நின்றவன், பின் “என்ன சொன்னீங்க..?” என்று இரண்டடி முன்னே எடுத்து வைக்க.. மெல்ல விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவள் “எனக்கு உங்களை பிடிக்கும், ரொம்ப பிடிக்கும்.. ஆனா.. ஆனா.. இதெல்லாம் சாத்தியம் இல்லை, இது நடக்காது.. நடக்கவும் விட மாட்டாங்க, நாம ஒண்ணு சேரவே முடியாது..” என்று பதட்டத்தோடு பேசினாள் நர்த்தனா. 
 
 
“ஏன்..? என்ன நடக்காது..? யார் நடக்க விட மாட்டாங்க..?” என்று அவள் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் குழப்பமாக பார்க்க.. “எங்க வீட்டு ஆளுங்க, எங்க வீட்டில் காதல் கல்யாணத்துக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க.. நம்மை பிரிச்சுடுவாங்க, அதான் எனக்கு பயமா இருக்கு..” என்றாள் நர்த்தனா. 
 
 
அவளின் இந்த பயம் வழக்கமாக எல்லா பெண்களுக்கும் குடும்பத்தை எண்ணி தோன்றும் பயமாகவே அவனுக்கு தோன்ற.. “ஊப்ப்ப்.. இவ்வளவு தானா..! நான் கூட பெருசா ஏதோ சொல்ல போறீங்கன்னு நினைச்சு பயந்துட்டேன்..” என்று ஆசுவாச பெருமூச்சை வெளியேற்றியவனை புரியாமல் பார்த்தவள் “இது உங்களுக்கு பெரிய விஷயமா தெரியலையா..?” என்றாள். 
 
 
“எந்த வீட்டில் தான் காதல் கல்யாணத்துக்கு உடனே சம்மதிப்பாங்க..? எல்லா வீட்டிலேயும் பிரச்சனை தான் செய்வாங்க.. அதை நாம எப்படி சரி செய்யறோம் என்பதில் தான் இருக்கு நம்ம வெற்றி.. நம் காதலுக்கான வெற்றி.. நாம அதில் வெற்றி பெறுவோம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்களும் நம்பினா சேர்ந்து ஜெயிக்கலாம்..” என்றான் தாரக்.
 
 
அதில் லேசாக குழம்பி நர்த்தனா அவன் முகம் பார்க்க.. “எந்த வீட்டிலேயும் காதலுக்கு அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டாங்க.. ஆனா நாம முயற்சி செஞ்சா முடியும்.. பொறுமையா காத்திருந்து அவங்களுக்கு புரிய வெச்சு நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.. இப்போ என்ன நம்ம கல்யாணத்துக்கு அவசரம்..?” என்று அவன் சொல்ல.. ‘இது நடக்குமோ..! இல்லையோ..? ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும்.!!’ என்ற எண்ணம் அந்த நொடி அவளுக்கு தோன்றியது. 
 
 
அதில் சம்மதமாக அவளும் தன்னை மறந்து தலையசைக்க.. “இது போதும்.. இது போதும் எனக்கு, இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்னு நம்புவோம்..” என்றான் தாரக். 
 
 
இப்படி தொடங்கிய இவர்களின் காதல் அடுத்த ஒரு வருடங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் அழகாக பயணித்து கொண்டிருந்தது.
 
 
இதற்கிடையில் விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருந்த போது தான் நாகராஜன் நர்த்தனாவுக்காக ஒரு வரன் பார்த்திருக்கும் விவரம் அவளுக்கு தெரிய வந்தது. இதை எப்படி தடுப்பது என அவளுக்கு புரியவில்லை. தன் காதலை பற்றி வீட்டில் சொல்லவும் அவளுக்கு பயமாக இருந்தது. 
 
 
இதில் என்ன செய்வது என்று தவிப்போடு அவள் இரண்டு நாட்களை நெட்டி தள்ளிக் கொண்டிருக்க.. மூன்றாம் நாள் காலை தன் காதலைப் பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லவே கூடாது என்ற முடிவுக்கு நர்த்தனா வரும் அளவுக்கு ஒரு சம்பவத்தை செய்திருந்தார் நாகராஜன். 
 
 
தொடரும்...
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 20
 
நாகராஜனிடம் வேலை பார்க்கும் செல்வம் என்பவரின் மகள் அகல்யா இவர்கள் தோப்பில் வேலை செய்யும் கந்தன் என்பவரின் மகன் பாரியை காதலிக்கும் செய்தி ஊருக்குள் தீயாகப் பரவத் தொடங்கியது. இதைக் கேட்டு கொதித்துப் போன நாகராஜன் செல்வத்தை வரவழைத்து “என்ன செல்வம் என் காதில் ஏதேதோ விழுதே அதெல்லாம் நிஜமா..?” என்றார். 
 
 
அதில் தலை குனிந்து நின்ற செல்வம் “ஆமாங்கய்யா.. என் காதுக்கும் வந்தது.. என் மககிட்ட விசாரிச்சேன், ஆமான்னு சொல்றா..” என மெல்லிய குரலில் சொல்லவும், “ச்சீ.. இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லை.. அவ சொன்னாளாம், இவன் கேட்டுட்டு வந்து நின்னானாம்.. சொன்ன வாயை கிழிச்சுட்டு வந்து நீ நின்னு இருந்தா கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன்..” என்றார் நாகராஜன்.
 
 
“எனக்கு என்ன செய்யறதுனே தெரியலைங்கய்யா..” என்றவரை முறைத்த நாகராஜன் “முதலில் உன் பொண்ணுக்கு சொந்தத்தில் ஏதாவது வரன் பார்த்து பேசி முடி..” என்றார் கட்டளை குரலில்.
 
 
“சரிங்கய்யா..” என்று சென்ற செல்வத்தின் மகள் அடுத்த மூன்று நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்ட நர்த்தனாவுக்கு பெரும் திகைப்பு உண்டானது. இந்த திருமண ஏற்பாடு பிடிக்காமல் அவள் இந்த முடிவுக்கு வந்துவிட்டாளோ என நர்த்தனா நினைத்திருக்க.. இங்கோ செய்தி அறிந்த நாகராஜன் பெரும் சந்தோஷத்தோடு செல்வத்தை பாராட்டிக் கொண்டிருந்தார். 
 
 
“நல்லவேளை செஞ்ச செல்வம்.. நம்ம கௌரவம் மரியாதையை விட்டுக் கொடுக்காம, பொண்ணு பாசத்தில் தடுமாறாம.. அவ சோத்தில் விஷம் வெச்ச பாரு.. நீ தான்யா நம்ம ஆளு..” என்று அவர் செல்வத்தை பாராட்டிக் கொண்டிருக்க.. இதை எதிர்பாராமல் கேட்க நேர்ந்த நர்த்தனாவுக்கோ பாதத்துக்கு கீழே பூமி நழுவியது. 
 
 
நிச்சயமாக தன் காதலைப் பற்றி தெரிய வந்தாலும் இதுதான் தனக்கான முடிவு என அந்த நொடி நர்த்தனாவுக்கு புரிய.. இனி அவர் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளட்டும் தாரக் பற்றி இங்கு பேசிவிடவேக் கூடாது என்று முடிவோடு அமைதியாக விடுமுறை முடியும் வரை காத்திருந்தவள், அங்கிருந்து தப்பித்தால் போதுமென கிளம்பி விட்டாள். 
 
 
நர்த்தனா ஊருக்கு கிளம்பும் போது அவளை அழைத்து “இன்னும் உனக்கு படிப்பு முடிய எவ்வளவு நாள் இருக்கு..?” என்றார் நாகராஜன். “மூ.. மூணு மாசம் இருக்கு பெரியப்பா..” என்று அவர் எதற்கு கேட்கிறார் என புரிந்து சிறு தடுமாற்றத்தோடு சொல்லி முடித்தாள் நர்த்தனா. 
 
 
“அடுத்த முறை நீ ஊருக்கு வரும் போது பரிசம் போட்டுடலாம்.. படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வெச்சுக்கலாம் சரியா..?” என்று அவளிடம் அனுமதி கேட்பது போல் வார்த்தைகள் இருந்தாலும் அதில் உத்தரவு மட்டுமே இருப்பதை உணர்ந்த நர்த்தனா, சரி என்பதாக தலையசைத்து விட்டு ஊரிலிருந்து கிளம்பினாள். 
 
 
அடுத்த பதினைந்து நாட்கள் தீவிரமாக அவள் யோசித்ததின் விளைவே வீட்டிற்கு தெரியாத இந்த அவசர திருமணம். முதலில் இதற்கு தாரக் சம்மதிக்கவே இல்லை. ஆனால் இதை தவிர தனக்கு வேறு வழியில்லை என அவனுக்கு பேசி புரிய வைத்து திருமணம் வரை கொண்டு வந்திருந்தாள் நர்த்தனா. 
 
 
அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் நிச்சயம் இன்னொருவருடன் திருமணம் உறுதி செய்யப்பட்டு விடும் என பயந்தே நர்த்தனா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.  
 
 
நர்த்தனாவை விடுதியில் சேர்த்த நாளிலிருந்தே அவள் மாலை விடுதி திரும்பியவுடன் அங்கே இருக்கும் தொலைபேசியின் வழியாக அழைத்து வீட்டிற்கு தகவல் சொல்லியாக வேண்டும் என்பது நாகராஜனின் கட்டளை.  
 
 
இதன் மூலம் அவள் எப்போது விடுதி திரும்புகிறாள் என அவரால் அறிந்து கொள்ள முடியும் என்பதோடு நர்த்தனா தன் கட்டுப்பாட்டில் தான் அங்கே இருக்கிறாள் என்பதை அவளுக்கு புரிய வைக்கவும் இப்படி ஒரு கட்டளையை அவளுக்கு விதித்திருந்தார் நாகராஜன். 
 
 
இத்தனை வருடங்களாக அதில் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று மாலை அவளிடம் இருந்து வழக்கமாக வரும் அழைப்பு வரவில்லை என்றதும் யோசனையானவர், நர்த்தனாவின் அன்னை மைதிலியிடம் விசாரிக்க தொடங்கினார். 
 
 
வழக்கமாக அந்த நேரத்திற்கு வரும் நர்த்தனாவின் அழைப்பை எடுத்து பேசுவது மைதிலி தான். அவரிடம் இருந்து தான் நாகராஜனுக்கு தகவல் போகும். இன்று அது வழக்கப்படி நடக்கவில்லை என்றதும் “என்னாச்சு நேத்து பேசும் போது காலேஜில் எதுவும் விழா நடக்குதுன்னு சொன்னாளா..? என்றார் நாகராஜன். 
 
 
“அப்படி எதுவும் சொல்லலைங்க பெரிய மாமா..” என பயந்து கொண்டே மைதிலி சொல்லவும் “கல்யாணம் பேசி இருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் செஞ்சா என்ன அர்த்தம்..? மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா நம்மை தானே அசிங்கமா பேசுவாங்க.. அவ செல்போனுக்கு கூப்பிட்டீங்களா..?” என்றார். 
 
 
“முயற்சி செஞ்சேங்க பெரிய மாமா, ஆனா சுவிட்ச் ஆஃப்னு வருது..” என்று மைதிலி பயத்தோடு சொல்லவும் “அவ்வளவு என்ன பொறுப்பில்லா தனம்.. உங்க பொண்ணுக்கு போனை சார்ஜ் போட்டு வெச்சுக்க தெரியலையே..! இன்னைக்கு அவ பேசினா என்கிட்ட போனை கொடுங்க..” என்று விட்டு அவர் சென்றுவிட, இரவாகியும் நர்த்தனாவிடமிருந்து அழைப்பே வரவில்லை. 
 
 
இதில் பயந்து போன மைதிலி மகளுக்கு என்ன நடந்ததோ என்ற கவலையில் மீண்டும் மீண்டும் நர்த்தனாவின் அலைபேசிக்கு முயன்று பார்த்துக் கொண்டு இருக்க.. பத்து மணியை நெருங்கும் வேலையில் இப்போது வரை நார்த்தனா அழைக்காததில் உண்டான கோபத்தோடு விடுதி எண்ணிற்கு அழைத்த நாகராஜன் விவரம் கேட்க முயல.. அங்கு நர்த்தனா இல்லை என்ற தகவலே அவருக்கு கிடைத்தது. 
 
 
இதில் மைதிலி ரொம்பவே பயந்து போக.. சுஜாதா அவரை தேற்றிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடக்கும் போது விஷ்வா பதினான்கு வயது சிறுவன். முதலில் நாகராஜன் சுஜாதாவுக்கு திருமணம் நடந்திருந்தாலும் அவர்களுக்கு சில வருடங்களாகவே குழந்தைகள் இல்லை. நாகராஜனின் தம்பி கதிரவனுக்கு திருமணமான அடுத்த வருடத்திலேயே நர்த்தனா பிறந்து விட்டிருந்தாள். 
 
 
அடுத்த இரண்டு வருடங்களில் நாகராஜனுக்கு அருண் பிறந்திருக்க.. அதற்கடுத்த ஐந்து வருட இடைவெளியில் சிந்துவும், அடுத்து ஒரு வருடம் கழித்து நர்த்தனாவின் தம்பி விஷ்வாவும் பிறந்திருந்தனர்.
 
 
நர்த்தனா அந்த வீட்டின் முதல் குழந்தை என்பதால் அனைவருக்குமே அவள் மேல் அதீத அன்பு உண்டு. சுஜாதாவும் அவளை தன் மகள் போலவே தான் பார்ப்பார். அதற்கு கொஞ்சமும் குறையாமல் மைதிலி அருணையும் சிந்துவையும் தன் பிள்ளைகள் போல தான் நடத்துவார். 
 
 
எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது நாகராஜனின் சட்ட திட்டங்களை யாரும் மீறாத வரை. அந்த எல்லையை யாராவது கடப்பதை அறிந்தால் நாகராஜன் தன் இன்னொரு முகத்தை காண்பிப்பார்.
 
 
மறுநாளே நர்த்தனாவை தேடி கண்டுபிடிக்க தன் ஆட்களை சென்னைக்கு அனுப்பி இருந்தார் நாகராஜன். அங்கு சென்று அவர்கள் விசாரித்தவரை நர்த்தனாவுக்கு தவறாக எதுவும் ஆகவில்லை என புரிந்தது.
 
 
அதேநேரம் மைதிலிக்கு ஒரு கொரியர் வந்தது. அதில் தனக்குத் திருமணமான விவரத்தை தெரிவித்து இருந்தவள், தனக்கு எதுவும் ஆகவில்லை, தன்னை தேட வேண்டாம் என்றும் அவருக்கு தகவல் தெரிவித்து, அதே நேரம் தாரக்கோடு அவள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அனுப்பி இருந்தாள். 
 
 
இதைக் கண்டு மகளுக்கு பயப்படும் வகையில் எதுவும் ஆகவில்லை என நிம்மதி அடைவதற்கு பதில் மைதிலியினுள் கலவரமே அதிகமானது. இதைக் கண்டு சுஜாதாவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தோடு அமர்ந்திருக்க.. அதற்குள் மைதிலிக்கு வந்த கடிதம் பற்றி அறிந்து கொண்ட நாகராஜன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து “மைதிலி இங்கே வா..” என்று பெரும் குரல் எடுத்து கத்தினார். 
 
 
அதில் உடல் நடுங்க பயத்தில் எழுந்து நின்ற மைதிலி வெளியே செல்ல முயல.. அவரிடமிருந்து அந்த புகைப்படத்தை சட்டென வாங்கியிருந்த சுஜாதா, ‘இதை அவருக்கு காண்பிக்காதே..!’ என சத்தமில்லாமல் சொல்லியவர், அங்கேயே போட்டோவை மறைத்து வைத்துவிட்டு வெறும் கடிதத்தை மட்டும் மைதிலியிடம் கொடுத்து அனுப்பினார். 
 
 
ஆனால் அந்தக் கடிதத்தை கண்டே நாகராஜனுக்கு அத்தனை ஆத்திரம் உண்டானது. கிட்டத்தட்ட எரிமலை போல் மாறியவர் “திமிர் எடுத்த கழுதை.. ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கறாளா..! இதில் என்னை தேட வேண்டாம், நிம்மதியா வாழ விடுங்கன்னு வேற நமக்கு கட்டளை போடுவாளோ..! எப்படி வாழறான்னு நானும் பார்க்கறேன்..” என்று அந்த கடிதத்தை சுக்குநூறாக கிழித்து வீசிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார். 
 
 
அதைக் கண்டு பயந்து போன மைதிலியை சுஜாதா தான் ஏதேதோ சொல்லி தேற்ற வேண்டியிருந்தது. இந்த வீட்டின் நான்கு பிள்ளைகளுமே வேறு வேறு இடங்களில் விடுதியில் தங்கி தான் தங்கள் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தனர். 
 
 
அடுத்த விடுமுறையில் வீட்டிற்கு வந்த போதே அவர்களுக்கு அரசல் புரசலாக நர்த்தனா இப்படி திருமணம் செய்து கொண்டு சென்று விட்ட விஷயம் தெரிய வந்தது. 
 
 
அதில் பெரிதாக அவர்களுக்கு அதிர்ச்சியோ கோபமோ இல்லை. அந்த வயதில் அவர்களுக்கு வேறு எதுவும் தெரியவும் இல்லை. அக்காவின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத வருத்தமும், அக்காவை இனி பார்க்க முடியாதா என்ற கவலையும் மட்டுமே சிந்துவுக்கும் விஷ்வாவுக்கும் அதிகம் இருக்க.. நர்த்தனா இப்படி அவசரப்பட்டு இருக்க வேண்டாம் என்று அருண் மட்டுமே எண்ணினான். 
 
 
நான்கு மாதங்கள் இப்படியே கடந்து இருக்க.. 
 
 
தங்கள் மண வாழ்க்கையை சொர்க்கமாக சந்தோஷத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தனர் தாரக் மற்றும் நர்த்தனா. இருவருக்குமே பெரிதாக ஆடம்பர வாழ்க்கையில் ஆசைகளோ எதிர்பார்ப்போ இல்லை. தாரக் எவ்வளவோ சொல்லியும் தன் படிப்பை தொடர நாத்தனா விரும்பவில்லை. 
 
 
அதற்கான காரணம் நாகராஜன் தான். தன்னை எளிதாக கண்டுபிடிக்க கல்லூரி ஒன்றே தீர்வு என நினைத்து அங்கு தன் ஆட்களை நிறுத்தி இருப்பார் என்று அறிந்தே கல்லூரியின் பக்கமே செல்லவில்லை நர்த்தனா. 
 
 
அவளின் மனநிலை புரிந்து தாரக்கும் நர்த்தனாவை எதற்கும் வற்புறுத்தவில்லை. இதற்கிடையில் சாரதா மற்றும் குமரேசன் உடனான நர்த்தனாவின் பந்தம் மேலும் இறுக்கமானது. 
 
 
குழந்தை வரம் இல்லாத சாரதாவுக்கு நர்த்தனாவின் அமைதியும் அழகும் பொறுமையும் அத்தனை பிடித்து போக.. குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு வந்திருக்கும் அவளின் நிலையை உணர்ந்து ஒரு அன்னையாக உடனிருந்து அத்தனை உதவிகளையும் செய்தார் சாரதா. 
 
 
நர்த்தனாவும் தாரக் வேலைக்கு கிளம்பிச் சென்றவுடன் தங்கள் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு மேலே சென்று சாரதாவுடன் இருந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தபடி அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பாள். 
 
 
தங்கள் வீட்டு பெண்ணாகவே குறைந்த நாட்களுக்குள் மாறி போயிருந்த நர்த்தனாவை இருவரும் அத்தனை அன்போடு கவனித்துக் கொண்டனர். தாரக்கிற்கும் அவர்களுக்குள் உண்டாகி இருந்த அழகான பந்தம் பிடித்திருந்தது. 
 
 
அப்படியே நாட்கள் செல்ல.. நர்த்தனா கருவுற்றிருக்கும் செய்தி தாரக்கிற்கு தெரிய வந்தது. இதை அவன் எளிமையாக கொண்டாடுவதற்கு முன்பே, சாரதா இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து அங்கு இருக்கும் சிலருக்கு உணவு வாங்கி கொடுத்து கொண்டாடி தீர்த்து விட்டார்.
 
 
அவர் இத்தனை வருடங்களாக கிடைக்காமல் ஏங்கிய வரம். தன் மகளாக நினைக்கும் நர்த்தனாவுக்கு கிடைத்திருந்ததில் பெருமகிழ்ச்சி உண்டானது. சாரதா வரவிருக்கும் தன் பேர குழந்தையை வரவேற்க எல்லா வகையிலும் தயாராக இருக்க.. பிறக்காத குழந்தைக்கு வீட்டில் தன் சேலையில் தூளி கட்டும் அளவுக்கு இந்த புதிய உறவை எதிர்பார்த்து காத்திருந்தாள் நர்த்தனா. 
 
 
இந்த குழந்தையின் மூலம் திரும்ப தன் அன்னையுடன் சேரும் வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கமும் அவளுக்கு இருந்தது. 
 
 
அவள் தூளி கட்டி இருப்பதைக் கண்டு புன்னகைத்தான் தாரக். “இதுக்கு இன்னும் நிறைய மாசம் காத்திருக்கணும் தனா..” என அவளை பின்னிருந்து அணைத்தபடி அவன் சொல்ல.. “தெரியும், ஒவ்வொரு நாளும் அதுக்காக நான் காத்திருக்கேன்னு இதுவும் எனக்கு உணர்த்திட்டே இருக்கும்.. இந்த தூளி நம் காதலுக்கான சாட்சி.. நம் வாழ்க்கையில் ஒரு புதிய உறவு சீக்கிரம் வந்து சேரும் இல்லையா..?” என்று அவள் லேசாக கலங்கிய விழிளோடு சொல்லி முடிக்கவும், அவளை அப்படியே திருப்பி அந்தத் தூளியில் அமர வைத்திருந்தவன் “நமக்கான புதிய உறவு வந்த பிறகு தான் இதை பயன்படுத்தணும்னு இல்லை.. இதை இப்படியும் பயன்படுத்தலாம்..” என்று மெல்ல ஊஞ்சல் போல் அதை ஆட்டி விட, மற்றதெல்லாம் மறந்து தனக்காக யோசித்து தனக்காகவே வாழும் தாரக் மட்டுமே அவள் மனதில் இந்த நொடி நிறைய.. நர்த்தனாவுக்கு சொர்க்கமே தன் கைவசமானது போல் தோன்றியது. 
 
 
அன்று காலையிலிருந்தே நர்த்தனாவுக்கு மனம் ஏதோ ஒன்றை நினைத்து பயத்தில் படபடத்துக் கொண்டே இருந்தது. ஏதோ தவறாக நடக்க போவது போல் மனம் பரிதவிக்க தொடங்க.. சாரதாவிடம் சொல்லி அருகில் இருக்கும் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தாள் நர்த்தனா.
 
 
கோவிலில் அர்ச்சனை முடிந்து பிரகாரத்தில் அவள் அமர்ந்திருக்கும் போது, சாரதாவுக்கு தெரிந்த ஒருவர் அங்கு வர அவரோடு பேசியபடியே பிரகாரத்தைச் சுற்றி வந்த சாரதா, அப்படியே கோவிலில் இருந்து வெளியில் வந்து நின்று கொள்ள.. “என்ன சாரதா நின்னுட்டே..? வா போகலாம்..” என அழைத்தார் மல்லிகா.
 
 
“இல்லை மல்லிகா நான் நர்த்தனா கூட வந்து இருக்கேன்.. உன் கூட பேசிட்டே வெளியே வந்துட்டேன், நீங்க கிளம்புங்க..” என்று அவரை அனுப்பி விட்டு சாரதா அங்கிருந்தே நர்த்தனாவை கையசைத்து அழைக்க.. அவளோ ஏதோ நினைவில் எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 
 
 
அதில் சாரதா சற்று சத்தமாக “நர்த்தனா..” என்று குரல் கொடுக்கவும், அந்தப் பக்கமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முத்துவின் உடன் வந்திருந்த ஒருவன் இந்த பெயரை கேட்டு வாகனத்தை சட்டென நிறுத்தி திரும்பி பார்த்தான். 
 
 
அதே நேரம் சாரதா அழைப்பதை கவனித்திருந்த நர்த்தனாவும் மெல்ல எழுந்து வெளியில் வர.. இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்தவளை, இங்கே கண்டவுடன் பழிவெறியில் கண்கள் மின்ன அவளை பார்த்தவன், அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்து வந்து நர்த்தனா இருக்கும் இடத்தை கண்டு கொண்டான். 
 
 
உடனே அவன் அந்த தகவலை முத்துவிடம் பகிர, முத்துவின் மூலம் நாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. “அந்த ஓ**ளி அங்கேயா இருக்கா.. அவளை அடிச்சு தூக்கிட்டு வாங்க..” என்று நாகராஜன் கட்டளையிட, அதே நேரம் அவசரமாக வீடு வந்து சேர்ந்தான் தாரக்.
 
 
முகம் கலங்கி விழிகள் சிவந்து வந்து நின்றவனை கண்ட நர்த்தனா பதறிப் போய் விவரம் கேட்க.. தன் தந்தை சந்திரகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கும் செய்தியை தெரிவித்தான் தாரக். 
 
 
அதைக் கேட்டு பதறியவள் “ஐயோ.. இப்போ என்ன செய்யறது..?” எனவும் “நான் ஹாஸ்பிடல் போறேன், அங்கே இப்போ என்ன சூழ்நிலைன்னு எனக்கு தெரியலை.. ஒருவேளை என்னால் நைட் வீட்டுக்கு வர முடியாமல் போனா உன்னால் தனியா இருக்க முடியுமா..?” என்றான் தாரக். 
 
 
“என்ன தீபன் இது..? இந்த நேரத்தில் இதை பத்தி எல்லாமா யோசிப்பாங்க..! நீங்க முதலில் கிளம்புங்க, நான் சாரதாம்மா கூட இருந்துப்பேன்..” என்றாள் நர்த்தனா. 
 
 
“இல்லை தனா நீ மாசமா இருக்கும் இந்த நேரத்தில் உன்னை தனியா விட்டுட்டு போக எனக்கு மனசு இல்லை.. நிஜமா சொல்லு உன்னால் சமாளிக்க முடியுமா..? முடிந்த வரைக்கும் நான் நைட் திரும்பி வர பார்க்கறேன், ஆனா அங்கே சூழ்நிலை எப்படி இருக்குன்னு எனக்கு தெரியலை..” என்றவன் சிறு இடைவெளி விட்டு “கிட்டத்தட்ட இரண்டு வருஷம் கழிச்சு எனக்கு போன் வந்திருக்குனா அப்போ நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு தான் அர்த்தம்.. அதனால் தான் நான் முதலிலேயே உன்கிட்ட சொல்றேன்..” என்று விளக்கம் அளித்தான் தாரக்.
 
 
“ஐயோ தீபன் நீங்க இவ்வளவு எல்லாம் எனக்கு புரிய வைக்கணும்னு அவசியமில்லை.. முதலில் கிளம்புங்க, அப்பாவோட உடம்பு தான் முக்கியம்.. நீங்க அதை பாருங்க..” என அவனை தேற்றி வாசல் வரை வந்து நின்று வழி அனுப்பி வைத்தவள், இது தான் அவனை பார்ப்பது இறுதி என அப்போது அறிந்திருக்கவில்லை. 
 
 
தாரக்கிற்கும் ஒருவேளை முன்பே இது தெரிந்திருந்தால் கிளம்பி செல்லாமல் இருந்திருப்பானோ..! என்னவோ..? 
 
 
இதையெல்லாம் சாலையின் ஓரம் இருந்த ஒரு மரத்தின் பின் நின்று கவனித்துக் கொண்டிருந்தான் அவளை கோவிலில் இருந்து பின் தொடர்ந்து வந்திருந்த குமார்.
 
 
நர்த்தனாவுக்கு முன்பை விட மனம் ஏனோ கணத்து பரபரத்துக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை இதுதான் காலையிலிருந்து என் மனசு இப்படி இருக்க காரணமோ..? அவங்க அப்பாவுக்கு எதுவும் நடக்கக்கூடாது ஆண்டவா..’ என மனதார வேண்டிக் கொண்டவள், சாரதாவிடம் சென்று அனைத்தையும் பகிர.. அவரும் ஆறுதலாக அவளை அணைத்து “அதெல்லாம் தப்பா எதுவும் நடக்காது தனாம்மா.. நீ கவலைப்படாம இரு, இந்த நேரத்தில் நீ தேவையில்லாம யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்க கூடாது.. அது உன் உடம்பையும் சேர்த்து பாதிக்கும்.. தீபன் தம்பி போயிருக்கு தானே அது எல்லாம் பார்த்துக்கும்.. ஏதாவது சாப்பிட்டியா..? சாப்பிட கொடுக்குறேன் இரு..” என்று சூடாக தோசை ஊற்றி கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார் சாரதா. 
 
 
கொஞ்சம் கூட அது அவளுக்கு உள்ளே செல்லவில்லை. ஆனால் தன் உள் இருக்கும் ஜீவனுக்காக கஷ்டப்பட்டு ஒன்றரை தோசையை விழுங்கியவள், “போதும் சாரதாம்மா, இதுக்கு மேலே என்னால் முடியலை.. மனசு என்னவோ செய்யுது, நான் கொஞ்ச நேரம் போய் படுக்கறேன்..” என்று கீழே இறங்கிச் சென்றாள். 
 
 
“ராத்திரிக்கு நான் வந்து உன் கூட படுத்துக்கறேன், கவலைப்படாம இரு.. இவருக்கு சமைச்சு வெச்சுட்டு உனக்கும் சேர்த்துக் கொண்டு வரேன்.. நீ எதுவும் தனியா செஞ்சுட்டு இருக்காதே..” என நர்த்தனாவிடம் சொல்லி அனுப்பி வைத்தவர், “அந்த பிள்ளை முகமே சரியில்லைங்க, தம்பியை விட்டு இருக்க முடியாம தவிக்குதுன்னு நினைக்கறேன்..” என்று புலம்ப.. “பெத்தவங்க ஞாபகமா கூட இருக்கலாம் இல்லையா சாரதா.. மாசமா இருக்கும் பொண்ணுங்க அம்மா கூட இருக்கணும்னு நினைப்பாங்களே..!” என்றார் குமரேசன். 
 
 
“ஆமாங்க அதுவும் இருக்கும் தான்.. ஆனா பாவம் அந்த பிள்ளைக்கு கொடுத்து வைக்கலையே..! நாம என்ன செய்ய முடியும்..? முடிஞ்ச வரைக்கும் கூட ஆறுதலாக இருக்கறது தான் நம்மளால் முடிஞ்சது..” என்று பேசிக்கொண்டே வேலைகளை செய்து கொண்டிருந்தார் சாரதா. 
 
 
அதற்குள் இந்த வீட்டின் சூழ்நிலை, அங்கிருக்கும் மனிதர்கள், அக்கம் பக்கம் சட்டென உதவிக்கு யாரும் வர வாய்ப்பில்லை என்பது வரை கவனித்திருந்த குமார் அனைத்தையும் முத்துவிடம் பகிர்ந்து இருக்க.. நர்த்தனாவை அடித்து இழுத்துச் செல்ல உண்டான அத்தனை ஏற்பாடுகளோடும் வந்து இறங்கினான் முத்து.
 
 
கிட்டத்தட்ட எட்டு மணியளவில் அங்கு வந்த முத்துவின் குழுவினர், பொறுமையாக ஊர் அடங்கி அத்தனை பேரும் உறங்க செல்வதற்காக காத்திருக்க.. பத்து மணிக்கு முன்பே அவர்கள் எதிர்பார்த்த சூழ்நிலை முத்துவுக்கு அமைந்தது. 
 
 
ஆனால் அப்போதும் அவசரப்படாமல் பதினொரு மணியளவில் மெல்ல அந்த வீட்டின் கேட் ஏறி குதித்து உள்ளே நுழைந்த முத்துவும் அவன் ஆட்களும் நர்த்தனாவின் வீட்டுக் கதவை தட்ட.. மாத்திரை போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த சாரதாவை தொல்லை செய்ய விரும்பாத நர்த்தனா மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தாள். 
 
 
ராத்திரி முடிந்தவரை திரும்பி வந்து விடுவதாக தன்னிடம் சொல்லிச் சென்றிருந்த தாரக் தான் வந்துவிட்டானோ என்று நினைத்தே வந்து கதவை திறந்திருந்தவள், அங்கே முத்துவைக் கண்டு அதிர்ந்து மீண்டும் கதவை வேகமாக மூட முயல்வதற்குள் அவளை தள்ளிக் கொண்டு அத்தனை பேரும் உள்ளே நுழைந்திருந்தனர். 
 
 
அங்கு நடந்த தள்ளு முள்ளிலும் நர்த்தனாவின் கதறலிலும் பதறி அறைக்குள் இருந்து எழுந்து வெளியில் ஓடி வந்த சாரதா, அங்கு நின்றவர்களை கண்டு அதிர்ந்து “ஏன்பா யாரு நீங்கெல்லாம்..? என்ன செய்யறீங்க இங்கே..?” என்று அவர்களை தடுக்க முயல.. ஒரே தள்ளில் அவரை கீழே தள்ளி விட்டிருந்தவர்கள், நர்த்தனாவை இழுத்துச் செல்ல முயல.. “அண்ணே.. முத்து அண்ணே.. என்னை விட்டுடுங்க.. நான் திரும்ப அந்த ஊர் பக்கம் கூட வரமாட்டேன், என்னை நிம்மதியா வாழ விட்டுடுங்களேன்..” என்று அவன் காலில் விழுந்து கதறினாள் நர்த்தனா.
 
 
“இது உங்க பெரியப்பா உத்தரவு.. அங்கே அவரை நிம்மதியில்லாம அலைய விட்டு, நீ மட்டும் இங்கே நிம்மதியா இருக்கணுமோ..! அவர் பேச்சை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்னு உனக்கே தெரியும்.. நீயா வந்துட்டா உனக்கு எதுவும் ஆகாம கூட்டிட்டு போவேன்.. இல்லை எந்த நிலையிலும் உன்னை கொண்டு போய் அவர்கிட்ட சேர்க்க வேண்டியது தான் என்னோட கடமை.. நான் நாகராஜன் அண்ணனுக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு உனக்கே தெரியும், நீயா வந்துடு..” என்று அவளை மிரட்டினான் முத்து. 
 
 
“இல்லை நான் வரமாட்டேன்.. நான் இங்கே இருந்து வரமாட்டேன்.. என்னை உங்களால் கூட்டிட்டு போக முடியாது..” என்ற நர்த்தனாவை அவன் கன்னம் கன்னமாக அறைந்ததில், அங்கேயே தரையில் சுருண்டு விழுந்தாள் நர்த்தனா.  
 
 
அப்படியே அவளை இழுத்துச் செல்ல முயன்றவர்களை கண்டு பதறிய சாரதா “ஏய் யாருப்பா நீங்க எல்லாம்..? என்ன செய்றீங்க..? மாசமா இருக்க பிள்ளையை இப்படி எல்லாம் செய்யாதீங்க..!” என்று பதறி நர்த்தனாவை காப்பாற்ற முயல.. அதில் இன்னும் கோபமான முத்து “ஓஹோ இது வேறயா..?” என நக்கலாக கேட்டப்படியே அவளை வேகமாக பிடித்து இழுக்க.. அதை தடுக்க சாரதா முயன்றார். 
 
 
இந்த சத்தம் கேட்டு குமரேசன் கீழே இறங்கி வந்திருந்தார். அடுத்து நடந்த கொடூரங்கள் எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாததாக இருந்தது. நர்த்தனாவை முத்துவும் அவன் ஆட்களும் இழுத்துச் செல்ல முயன்று அடித்து உதைத்து கொண்டிருக்க.. அதை எதிர்த்து அவள் போராடியதில் உடலெங்கும் நர்த்தனாவுக்கு காயமானது. 
 
 
இதைக் கண்டு அவளைக் காப்பாற்ற முயன்ற குமரேசனின் கால்கள் வெட்டப்பட்டு வலது தோளிலும் அருவாள் இறங்கி இருக்க அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதைக் கண்டு பதறிய சாரதா யாரைக் காப்பாற்றுவது என தெரியாமல் போராடி தவித்து பின் நர்த்தனாவை இழுத்துச் செல்பவர்களை தடுத்து நிறுத்த முயல.. அவரின் தலையிலும் பலத்த கட்டையால் தாக்கப்பட்டதில் அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி வாயில் கேட்டிற்கு அருகில் சரிந்திருந்தார். 
 
 
நள்ளிரவில் நடந்திருந்த இந்த கொடூரம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் போனது. விடியற்காலை நாலரை மணியளவில் பால் போடுவதற்காக அந்தப் பக்கம் வந்தவர், ரத்த வெள்ளத்தில் சாரதா வாயில் கேட் அருகே மயங்கி சரிந்து இருப்பதை கண்டு பதறி, ஆம்புலன்ஸை அழைத்திருந்தார். 
 
 
அதன் பிறகே உள்ளே குமரேசன் இருந்த நிலை அவர்களுக்கு தெரிய வர, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தாரக்கின் தந்தையின் நிலை மிக மோசமாக இருந்ததில் இடையில் ஒருமுறை நர்த்தனாவை பத்து மணியளவில் அழைத்துப் பார்த்தவன், அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன் உறங்கி விட்டாள் போலும் என்று நினைத்து மீண்டும் தொந்தரவு செய்ய விரும்பாமல் காலையில் பேசிக்கொள்ள நினைத்திருந்தான். 
 
 
ஆனால் விடியற்காலையில் அங்கே தாரக்கின் தந்தையின் உயிர் பிரிந்திருந்தது. இதில் உடைந்து போனவன், அடுத்து நடக்க வேண்டியதை உடன் இருந்து கவனிக்க தொடங்க.. அதே நேரம் கொஞ்சமாக சாரதாவுக்கு நினைவு திரும்பியிருந்தது. அதில் மீண்டும் மீண்டும் தீபனின் பெயரை மட்டுமே அவர் சொல்லிக் கொண்டே இருக்க.. அவனை அறிந்தவர்கள் என அங்கு மருத்துவமனையில் யாரும் இல்லை. 
 
 
இதற்கிடையில் ஒருமுறை நர்த்தனாவே அழைக்க முயன்ற தாரக்கிற்கு அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலே கிடைக்க.. எப்போதும் அவள் அலைபேசியை காலையில் சார்ஜ் போடுவது அவனின் வழக்கம் தான் என்பதால் ஒருவேளை நர்த்தனா சார்ஜ் போட மறந்து இருப்பாள் என்று நினைத்தவன், இதையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று பேசிக் கொள்ளலாம் என எண்ணி தன் தந்தையின் இறுதி சடங்கை முடித்துக் கொண்டு இருள் கவிழ தொடங்கியிருந்த மாலை நேரத்தில் வீடு திரும்ப.. அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது. 
 
 
அங்கே உறைந்திருந்த ரத்தங்களையும், காவலர்கள் அந்த வீட்டை தங்கள் பொறுப்பில் எடுத்திருப்பதையும் கண்டு பதறியவன் விவரம் அறிய முயல.. அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை மட்டும் தெரிவித்தனர். 
 
 
‘இதில் குமரேசனும் சாரதாவும் மட்டும் மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்றால் நர்த்தனாவின் நிலை என்ன..?’ என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து அவனை பயம் கொள்ள செய்ய.. பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான் தாரக். 
 
 
காலையில் ஒருமுறை நினைவு திரும்பியதோடு சரி அதன் பிறகு மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட்டிருந்தார் சாரதா. அதில் காவலார்களாலும் அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களும் சாரதா கண் திறக்கப்பதற்காக காத்திருக்க.. தாரக் மருத்துவமனை சென்ற சில நிமிடங்களிலேயே அவருக்கு மீண்டும் நினைவு திரும்பியது. 
 
 
அதில் முதலில் அவர் தீபனை பார்க்க விரும்புவதாக சொல்ல.. வேகமாக உள்ளே நுழைந்தவனிடம் நடந்ததை அழுகையோடு விவரித்தார் சாரதா. இதைக் கேட்டு பதறியவன் வேகமாக நர்த்தனாவை தேடி கிளம்ப இருந்த இறுதி நொடியில் நின்று அவரிடம் “வெளியில் போலீஸ் இருக்கு சாரதாம்மா, அவங்களுக்கு நடந்த எதையும் முழுசா சொல்ல வேண்டாம்.. இது வேற ஒரு பிரச்சனையில் கொண்டு போய் விடும்.. யாரோ திருடனுங்க உள்ளே நுழைஞ்சு இப்படி செஞ்சுட்டானுங்கன்னு சொல்லிடுங்க..” என்றான்.
 
 
“ஏன் தம்பி..? அவங்க அவ்வளவு கொடூரமா நடந்துட்டு இருக்காங்க.. அப்புறம் ஏன் அவங்களை காட்டிக் கொடுக்க வேண்டாம்னு சொல்றீங்க..?” என சாரதா கேட்கவும், “இல்லை சாரதாம்மா.. இது தனா வீட்டு ஆளுங்க வேலை தான்.. இப்போ அவங்க மேலே கேஸ் கொடுத்து நாம எதையும் சாதிக்க போறதில்லை.. தனாவை திரும்ப இங்கே கூட்டிட்டு வரணும்னா இப்போ நாம சுமூகமா போனா தான் சரியா இருக்கும்..” என குமரேசனின் நிலை தெரியாமல் அவன் விவரிக்க.. அந்த நொடி சாரதாவுக்கும் அது சரியாக தோன்ற.. சரி என சம்மதித்திருந்தார். 
 
 
குமரேசனின் நிலை மிக மோசமாக இருந்ததை பற்றி இப்போது வரை சாரதாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதே போல் அவரும் தேறி வருவதாகவே சாரதாவின் உடல்நிலையை மனதில் வைத்து மருத்துவர்கள் சொல்லி இருக்க.. அதை உண்மையென்றே நம்பிய சாரதா, அதையே தாரக்கிடம் சொல்லி இருந்தார். 
 
 
அதன்படியே காவலர்களிடம் சாரதா பேசி இருக்க.. மருத்துவர்களிடம் இருவரையும் கவனமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு இங்கு நர்த்தனாவின் ஊரை நோக்கி கிளம்பி இருந்தான் தாரக்.
 
 
கிடைத்த பேருந்தில் எல்லாம் ஏறி ஒரு வழியாக அவன் ஊர் சென்று சேர நள்ளிரவை தொட்டிருந்தது. நர்த்தனாவின் மூலம் அவளின் ஊர் பெயரும் இந்த ஊரில் பெரிய மனிதரான அவளின் பெரியப்பா நாகராஜன் பெயரும் மட்டுமே அவனுக்குத் தெரியும் என்பதால் அவர் வீட்டுக்குச் செல்ல அருகில் இருந்த தோப்பின் வழியே நடந்து கொண்டிருந்தவன், அங்கிருந்து சபரியிடம் வழி கேட்டு வந்து சேர்வதற்குள் இங்கு அனைத்துமே முடிந்து போயிருந்தது. 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
 
 
நேசம் – 21
 
நர்த்தனாவை சிவந்து வீங்கி இருந்த முகத்தோடு பின்பக்க வீட்டில் அடைத்து வைத்திருக்க.. அதற்காகவே அவ்வளவு நேரமும் காத்திருந்த நாகராஜன் அவள் இழுத்து வரப்பட்ட செய்தி அறிந்து கொலை வெறியோடு அந்த வீட்டை நோக்கி பாய்ந்து சென்றார். 
 
 
அங்கே பயத்தில் கோழிக் குஞ்சாக நடுங்கி தரையில் காலை சேர்த்து அணைத்தபடி நர்த்தனா அமர்ந்திருக்க.. “ஏன்டி ஓ**ளி நா** என்ன வயசாகுது உனக்கு..? அதுக்குள்ளே ஆம்பள தேவையா போச்சோ..” என்றவாறே வந்தவர், எட்டி நர்த்தனாவை மார்பிலேயே மிதிக்க.. பெரும் அலறலோடு பின்னே சரிந்திருந்தாள் நர்த்தனா. 
 
 
“எச்**க** நா** உன்னை இத்தனை வருஷமா பிச்சை எடுக்க விடாம என் பிள்ளைக்கு சமமா நடத்தி சோத்தை போட்டு பாதுகாப்பா வெச்சு வளர்த்ததுக்கு நீ காட்டின நன்றி கடன் இது தானா..! உன்னை எல்லாம் அன்னைக்கு உங்க அப்பனை கொன்னப் போதே சேர்த்து கொன்னு இருக்கணும்.. இல்லை எப்படியாவது போய் தெருவில் பிச்சை எடுன்னு விரட்டி விட்டு இருக்கணும்.. நா** குளிப்பாட்டி நடு வீட்டில் வெச்சாலும் அது புத்தியை தான் காட்டும்னு சொல்றது சரியா தானே இருக்கு..!” என்றவரின் வார்த்தைகளில் அவ்வளவு நேரம் அடிப்பட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் திகைத்துப் போய் அவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.
 
 
“என்னடி அப்படி பார்க்கறே.. உங்க அப்பனை கொன்னது யாருன்னு உனக்கு தெரியாதா..! நான் தான்.. அந்த நல்ல காரியத்தை செஞ்சேன்.. ஏன்னு தெரியுமா..? இதோ உன்னை மாதிரியே திமிர் எடுத்து போய் கண்டவளையும் தேடிப்போனான்.. அவனுக்கு ஒருத்தி பத்தலைனா நம்ம ஜாதியிலேயே இன்னொருத்தியை தேடிக்க வேண்டியது தானே..! போயும் போயும் நம்மகிட்ட வேலை செய்யறவ கூடவே தொடர்பு வெச்சுருந்தான், ஜாதி கெட்ட பைய.. அதான் கூட பொறந்தவன்னு கூட பார்க்காம போட்டு தள்ளினேன்.. அவனையே கொன்ன எனக்கு நீ எல்லாம் தூசுடி..” என்று இன்னொரு மிதி அவள் முகத்திலேயே மிதித்தார் நாகராஜன். 
 
 
பிள்ளைகளுக்கு அப்போது விடுமுறை நேரம். பக்கத்து ஊரில் இருக்கும் சுஜாதாவின் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அங்கு கிடா வெட்டி விருந்து நடந்து கொண்டிருக்க.. தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் சுஜாதா. 
 
 
எப்போதும் விஷ்வா மைதிலி நர்த்தனா என அனைவரோடும் செல்வது தான் அவரின் வழக்கம். ஆனால் நர்த்தனா இப்படி வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு மைதிலியை நாகராஜன் நடத்தும் முறையில் பெரும் மாற்றம் வந்திருந்தது. 
 
 
பெண்ணை ஒழுங்காக வளர்க்கவில்லை என சொல்லி முகத்திற்கு நேராக மைதிலியை தினமும் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். அதில் மைதிலி ஒரு கட்டத்தில் நாகராஜன் முன் வருவதை முற்றிலும் தவிர்த்து அறைக்குள்ளேயே ஒடுங்கிப் போனார். 
 
 
அந்த வீட்டின் கடைக்குட்டியான விஷ்வாவை எப்போதுமே சுஜாதா தனியாக செல்லம் கொடுத்து கவனிப்பார் என்பதால் அவனை தன்னோடு அழைத்துச் செல்ல தான் இன்றும் முயன்றார் சுஜாதா. 
 
 
ஆனால் அன்று அவனுக்கு கொஞ்சம் காய்ச்சலாக இருந்ததில் மைதிலி வேண்டாம் என மறுத்து விட, சுஜாதா தன் இரு பிள்ளைகளோடும் கிளம்பிச் சென்று விட்டிருந்தார். 
 
 
இதில் மருந்து கொடுத்து உறங்க வைத்திருந்த விஷ்வாவின் அருகில் கவலையோடு அமர்ந்திருந்த மைதிலி, தொடர்ந்து தோட்டத்தின் பக்கம் இருந்து ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததில் எழுந்து சென்று ஜன்னல் அருகே நின்று, கவலையோடு பின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்க.. அங்கிருந்து கேட்ட அழுக்குரல் அவர் மனதை ஏதோ செய்தது. 
 
 
அதில் கவலையும் பதட்டமுமாக அங்கே பார்த்தவர், ‘என்ன நடக்கிறது..?’ என புரியாமல் நின்றிருக்க.. நாகராஜனின் ஆக்ரோஷமான குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததில் பயந்தே போனார் மைதிலி. 
 
 
மெதுவாக அவர் விஷ்வாவை திரும்பிப் பார்க்க.. அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனின் தூக்கத்தை கலைக்காமல் மெல்ல அங்கிருந்து வெளியில் வந்தவர், சிறு தயக்கத்தோடே தோட்டத்து வீட்டை நோக்கி சென்றார். 
 
 
பல வருடமாக அந்த வீட்டை நாகராஜன் எதற்காக பயன்படுத்துகிறார் என அறிந்திருந்தவர் என்பதால் எப்போதும் இது போலான நேரங்களில் மைதிலி அங்கு செல்ல மாட்டார்.
 
 
இன்று ஏதோ ஒன்று அவரை அங்கு இழுத்துச் செல்ல.. மனம் எதையோ எண்ணி பதைபதைக்க.. தடதடக்கும் இதயத்தோடு மைதிலி அந்த இடத்தை நெருங்கவும் நாகராஜன் மைதிலியின் கணவரை கொன்றதைப் பற்றி பெருமையாக சொல்லவும் சரியாக இருந்தது. 
 
 
அதைக் கேட்டு நிற்க முடியாமல் தடுமாறி மைதிலி அருகில் இருக்கும் மரத்தை பிடிக்க.. அதே நேரம் உள்ளிருந்து நர்த்தனாவின் அழுகுரல் அவருக்கு கேட்டது. இது மைதிலியின் அடி வயிற்றை கலங்கச் செய்ய.. மெல்ல திறந்திருந்த கதவு வழியே உள்ளே எட்டிப் பார்த்தவர், நர்த்தனா அங்கே இருந்த நிலையைக் கண்டு திடுக்கிட்டார். 
 
 
ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் உடனே தன் மகளைக் காப்பாற்ற எண்ணி வேகமாக உள்ளே செல்ல முயன்றவரை நாகராஜனின் ஆட்கள் பிடித்து நிறுத்த.. அதே நேரம் மைதிலியை திரும்பி பார்த்திருந்த நர்த்தனா “ம்மா..” என்று அழுகுரலில் அழைத்தாள். 
 
 
“தனாம்மா..” என்று மைதிலி பரிதவிப்போடு அழைக்கவும் “வா.. வா.. உன்னை தான் தேடிட்டு இருந்தேன்.. இப்படி ஒரு பொண்ணை பெத்து வளர்த்து வெச்சதுக்கு இவ என்ன நிலைக்கு ஆளாகறான்னு நீயும் பார்க்க வேண்டாம்..” என்று திமிரோடு பேசியவர், “அவளை அடிச்சு கொல்லுங்கடா..” என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டார். 
 
 
அதில் நான்கு பேர் நர்த்தனாவை வேகமாக நெருங்க.. அவர்களை தடுக்க முயன்றார் மைதிலி. இதை கவனித்த நாகராஜன் மைதிலியை ஒற்றை கையில் பிடித்து இழுத்து பின்னே தள்ள.. அங்கிருந்து சுவரில் மோதி கீழே விழுந்தார் மைதிலி. 
 
 
அதற்குள் தன்னை நெருங்கியவர்களை கண்டு மிரண்டு பின்னே நகர்ந்த நர்த்தனா “பெரியப்பா வேண்டாம்.. ப்ளீஸ் வேண்டாம்.. என்னை விட்டுட சொல்லுங்க, நான் உங்க கண்ணுலேயே படமாட்டேன்.. இந்த ஊர் பக்கமே வரமாட்டேன், எங்கேயாவது போயிடறேன் ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
 
 
“நீ போயிட்டா நாகராஜன் தம்பி பொண்ணு எவனையோ காதலிச்சு வீட்டை விட்டு ஓடி போயிட்டான்னு காலத்துக்கும் பேச மாட்டாங்களா..? இப்போவே என் கூட இருக்கறவனுங்களை தவிர யாருக்கும் தெரியாம இதை மறைச்சு வெச்சு இருக்கேன்..” என்றார் நாகராஜன்.  
 
 
“இல்லை பெரியப்பா.. இனி எப்போவும் நான் இந்த பக்கம் கூட வரமாட்டேன், வேணும்னா நான் செத்துட்டேன்னு கூட சொல்லுங்க..” என்று அவசரப்பட்டு நர்த்தனா சொல்லவும், “அப்படித்தான் சொல்ல போறேன்.. ஆனா பொய்யா சொல்ல எனக்கு விருப்பமில்லை..” என்றவர், “என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..?” என்று திரும்பி தன் ஆட்களை பார்த்து கத்தினார். 
 
 
“அய்யய்யோ.. உங்களை கையெடுத்து கும்பிடறேன் விட்டுடுங்க, என் பொண்ணை விட்டுடுங்க..” என்று மைதிலி கதறிக் கொண்டு மீண்டும் முன்னே வர பார்க்க.. அங்கிருந்த இருவர் மைதிலியை தடுத்து பிடித்துக் கொண்டனர். 
 
 
அவரால் நர்த்தனாவை நெருங்கவும் முடியவில்லை. தன் முன்னே நர்த்தனாவை அடித்து துன்புறுத்துவதை காணவும் முடியவில்லை. இதில் உயிர் வலியோடு ஒரு பக்கம் மைதிலி கதறிக் கொண்டிருக்க.. மற்றொரு பக்கம் அதே வலியோடு நர்த்தனா தட்டுத்தடுமாறி நகர்ந்து வந்து நாகராஜனின் காலை பிடித்தபடி “பெரியப்பா என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. என் வயித்தில் ஒரு உயிர் இருக்கு.. அந்த உயிர் இன்னொருத்தருக்கு சொந்தமானது, நான் அதை அவர்கிட்ட பத்திரமாக கொண்டு போய் சேர்க்கணும்..” என்று அரைகுறை நினைவோடு மடங்கி அமர்ந்து தன் வயிற்றை பிடித்தபடி கதறினாள் நர்த்தனா. 
 
 
“ஓ இது வேறயா..? அவன் கூட நீ போனதே அசிங்கம்னு சொல்லிட்டு இருக்கேன்.. அந்த அசிங்கத்துக்கு சாட்சியா ஒண்ணை சுமந்துட்டு வேற வந்து நிற்கறியா நீ..? எவ்வளவு தைரியம் இருந்தா இதை என்கிட்டேயே சொல்லுவே..?” என்றவர், கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் வயிற்றில் எட்டி உதைத்து இருந்தார்.
 
 
இதில் நிலை குலைந்து நார்த்தனா பின்னே சரிய.. “ஐயோ பெரிய மாமா.. என் பொண்ணை விட்டுடுங்க, அவளை விட்டுடுங்க..” என்று மைதிலி கதறியதெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போக.. திடீரென ஏதோ புகுந்தது போல் ஆக்ரோஷமான நாகராஜன் “உனக்கு ஆம்பள தானடி வேணும்.. அதுக்கு ஏன் கண்டவனையும் தேடி போறே..? நானே வர சொல்றேன்..” என்றவர் அங்கு இருந்த பத்து பேரையும் பார்த்து “இவளை உங்க விருப்பம் போல என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க..” என்று விட்டு வெளியேறினார். 
 
 
அந்த வார்த்தை தன் காதில் விழுந்த நொடி திடுக்கிட்டு நிமிர்ந்த நர்த்தனா, தன் வலியையும் பொருட்படுத்தாமல் வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி அமர்ந்த வாக்கிலேயே மெல்ல அவரை நோக்கி நகர்ந்து “பெரியப்பா..” என தீனமான குரலோடு அழைத்தபடி வந்து கொண்டிருக்க.. அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் ஆட்களை திரும்பி முறைத்தவர் “நான் சொன்னது உங்க காதலில் விழலையா..?” என்றார்.
 
 
இதில் கோபத்தில் சொல்கிறாரோ என ஆரம்பத்தில் தயங்கி நின்றவர்கள் எல்லாம் இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயல.. இதைக் கண்டு பாய்ந்து சென்று அவர்களின் குறுக்கே நின்று தடுக்க முயன்ற மைதிலியை முத்து பிடித்து இழுத்து வெளியில் தள்ளி இருந்தான். 
 
 
அதில் வந்து வெளியே விழுந்த வேகத்தில் படிக்கட்டில் தலை மோதிக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து நின்ற மைதிலி வேகமாக முன்பக்க வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த நாகராஜனின் முன் சென்று நின்று தடுத்து அவர் காலில் விழுந்து கெஞ்ச.. “ச்சீ விடு..” என்று மைதிலியை உதறித் தள்ளினார் நாகராஜன். 
 
 
“பெரிய மாமா இது ரொம்ப தப்பு.. நீங்க இப்படி செய்யக்கூடாது, அவளும் உங்க பொண்ணு மாதிரி தானே..!” என மைதிலி கதறியதெல்லாம் கொஞ்சமும் நாகராஜனின் காதில் விழவே இல்லை.
 
 
“உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லிடுங்க.. நானும் என் பிள்ளைகளும் கண்காணாத ஏதாவது ஒரு இடத்துக்கு போயிடறோம், உங்க முன்னே காலம் முழுக்க வரவே மாட்டோம்.. எங்களுக்கு சொத்து சுகம் எதுவுமே வேண்டாம்.. என் பிள்ளைகள் மட்டும் போதும்.. அவங்களை என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க..” என்று மைதிலி கெஞ்சிக் கொண்டே இருக்க.. ஒரு கட்டத்தில் ஆத்திரமானவர் தன்னை நடக்க விடாமல் காலை பிடித்து தடுத்துக் கொண்ட பின்னே வந்த மைதிலியின் கூந்தலை பிடித்து தூக்கி “ச்சீ நா** என்னையே தடுக்க நினைக்கறியா..?” என ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்திருந்தார்.
 
 
“பொண்ணை ஒழுங்காக வளர்க்க துப்பில்லை.. என்னடி எனக்கு பிச்சை போடறியா..? உன் சொத்தை வெச்சு நான் என்ன செய்ய போறேன்..? நீ என்ன எனக்கு சொத்து கொடுக்கறது..? நானா பார்த்து உனக்கு ஏதாவது பிச்சை போட்டா தான் உண்டு, முதலில் அதை தெரிஞ்சுக்கோ.. 
 
 
இங்கே நான் நினைக்கறது தான் நடக்கணும்.. நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும், இன்னைக்கு உன் பொண்ணு ஓடி போனதை நானும் அப்படியே விட்டா.. இந்த ஊரில் இருக்கும் ஒருத்தனும் என் பேச்சைக் கேட்க மாட்டானுங்க.. இந்த ஊருக்கு மட்டுமில்லை நம்ம சாதிக்கும் இங்கே நான் தான் தலைவன்.. 
 
 
என் வீட்டில் நடக்கும் தப்பை நான் எப்படி சரி செய்யறேன்னு பார்த்தா தான் நாளைக்கு அவன் வீட்டுக்குள்ளே போய் நான் நாட்டாமை செய்ய முடியும்..? இந்த நாளு மாசமா எவனும் மூஞ்சுக்கு நேரா கேள்வி கேட்க தயங்கிட்டு இருக்கானா அதுக்கு என் மேலே அவன் வெச்சு இருந்த நம்பிக்கை தான் காரணம்.. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டாமா..?” என்றவரின் குரலில் அத்தனை பழிவெறி வழிந்தது.
 
 
“மா.. மா.. நீ.. ங்க.. நினைச்சா..” என அப்போதும் மைதிலி கெஞ்சலோடு எதுவோ சொல்ல வருவதற்குள், “அவளுக்கு அப்பன் புத்தி அப்படியே இருக்கு.. அவ செஞ்ச தப்புக்கு உன் மக அனுபவிச்சு தான் ஆகணும்.. இடையில் புகுந்து தடுக்க நினைச்சா உனக்கும் அதே கதி தான்..” என்று துளியும் இரக்கமில்லா கொடூர குரலில் சொல்லிவிட்டு மைதிலியைப் பிடித்திருந்த தன் கையை ஆக்ரோஷமாக நாகராஜன் உதற.. அதில் பின்னே போய் சரிந்த மைதிலி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்திருந்தார். 
 
 
நாகராஜன் சொல்லிய வார்த்தைகளோ இல்லை தன் மகள் இந்நிலையில் இருந்தும் காப்பாற்ற முடியவில்லையே என்ற எண்ணமோ ஏதோ ஒன்று தண்ணீரில் விழுந்த மைதிலியை எதிர்த்துப் போராட விடாமல் செய்ய.. அப்படியே அமிழ்ந்து போக தொடங்கினார் மைதிலி. 
 
 
ஒரு நொடி நாகராஜனும் இதை எதிர்பார்க்காமல் திகைத்துப் போய் அருகில் சென்றாலும், பின் என்ன நினைத்தாரோ “போகட்டும் சனி**” என்று விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
 
 
இவை அனைத்தையும் மாடி அறையின் ஜன்னலில் இருந்து திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா. சற்று முன்பே அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. அறை இருளில் மூழ்கி இருக்க.. அருகில் மைதிலி இல்லாததை கண்டு மெல்ல எழுந்தவன், தண்ணீர் குடிப்பதற்காக ஜன்னலுக்கு அருகில் வர.. மைதிலி தயங்கித் தயங்கி அந்த வீட்டிற்கு செல்லும் காட்சி அவன் பார்வையில் விழுந்தது.
 
 
சிறு வயதிலிருந்தே அந்த வீட்டுப் பக்கம் செல்லவே கூடாது என தன்னை கண்டித்து வைத்திருந்தவர், ‘இப்போது ஏன் அங்கே செல்கிறார்..?’ என்று குழப்பத்தோடும் உறக்கம் கலையா விழிகளோடும் அவன் நின்றிருக்க.. அதற்குள் உள்ளிருந்து கலவையான சத்தங்களும் பெரும் குரல் எடுத்து யாரோ அழுவதும் கேட்டது. 
 
 
இதில் ‘இறங்கி அங்கே செல்வதா..? வேண்டாமா..!’ என அவன் நினைத்திருக்கும் போதே, அங்கிருந்து நாகராஜன் கோபமாக வெளியில் வருவதும் அவரின் பின்னேயே வந்த மைதிலி நாகராஜனின் காலில் விழுந்து கதறுவதும், அவர் அடுத்தடுத்து செய்த அத்தனையும் அவனுக்குத் தெரிந்தது. 
 
 
இதில் திகைத்து போய் தன் கண் முன்பே தன் அன்னை இறப்பதை விழிகளில் வழிந்த நீரோடு பார்த்தபடி செய்வதறியாது நின்றிருந்தான் விஷ்வா. அவனுக்கு எப்போதுமே நாகராஜன் என்றால் பயம் அதிகம். மைதிலியும் அதற்கேற்றார் போல் நாகராஜனை பற்றி பயம் கொள்வது போலவே சொல்லி தான் சிறு வயதில் இருந்தே வளர்த்திருந்தார். 
 
 
தன் கணவனை இழந்து நாகராஜனின் கட்டுப்பாட்டில் இந்த வீட்டில் இருக்கும் போது அவருக்கு பிடிக்காத எதையும் பிள்ளைகள் செய்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை எப்போதுமே மைதிலிக்கு உண்டு. இப்படி சொல்லி மைதிலி வளர்த்திருந்தும் நர்த்தனா துணிந்து இப்படி ஒரு காரியத்தை செய்திருந்ததை மைதிலியாலேயே நம்ப முடியவில்லை. 
 
 
அதில் உண்டான கோபத்தோடு இருக்கும் நாகராஜனிடம் தெரியாமல் கூட விஷ்வா எந்த வகையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்றே கடந்த நான்கு மாதங்களாக அவனுக்கு பல புத்திமதிகளை சொல்லிக் கொண்டே இருந்தவர், நாகராஜனின் கண்முன்னே மட்டும் சென்றுவிடக்கூடாது, அவர் கோபப்படும்படி நடந்து விடக்கூடாது என்று தினமும் மந்திரத்தைப் போல உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
 
 
அதில் அவரைப் பார்த்து பயந்து போய் நின்றிருந்தவன், நாகராஜன் அங்கிருந்து வேகமாக வீட்டிற்குள் நுழைவதை கண்ட பிறகே மெல்ல அழுகையோடும் பதட்டத்தோடும் அந்தக் கிணற்றை நோக்கி ஓடினான். 
 
 
மைதிலி கிணற்றில் விழுந்த சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்த இருவர் வேகமாக வந்த போதும், “அப்படியே சாகட்டும் விடுங்க..” என்று அவர்களை தடுத்து விட்டு நாகராஜன் சென்றிருக்க.. அவர்களும் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எண்ணி வீட்டிற்குள் சென்று விட்டிருந்தனர். 
 
 
இதில் இருட்டில் தயங்கி தயங்கி கிணற்றடியை நெருங்கிய விஷ்வா “ம்மா.. ம்மா..” என்று சத்தம் வராமல் கதறிக் கொண்டே உள்ளே பார்க்க.. அவனுக்கு இருளில் எதுவுமே தெரியவில்லை. 
 
 
கிணற்றில் குதித்து மைதிலியை எப்படியாவது காப்பாற்றி விட முடியுமா என்று எண்ணிய விஷ்வாவுக்கும் நீச்சல் சுத்தமாக தெரியாது. பகலிலேயே அந்த கிணற்றுக்குள் பாரக்க பயமாக இருக்கும்.. அத்தனை பெரிய ஆழமான கிணறு அது.
 
 
ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் கிணற்றின் மேல் ஏறுவதும், பின் பயத்தில் இறங்குவதுமாக விஷ்வா இருக்கும் போதே வீட்டிற்குள் இருந்து தீனமாக முணுகும் நர்த்தனாவின் குரல் கேட்டது. 
 
 
இதில் திகைப்போடு அந்தப் பக்கம் திரும்பி பார்த்தவன், ‘தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் குரல் தன் அக்காவோடதோ..?’ என்று தோன்ற.. சத்தம் வராமல் மெதுவாக இறங்கி வீட்டின் பின்பக்கமாக நகர்ந்தான். 
 
 
வீட்டின் கதவும் பூட்டப்படாமல் லேசான இடைவெளியில் திறந்து தான் இருந்தது. ஆனால் அங்கு சென்று இவனை யாராவது பார்த்துவிட்டால் என்ற பயத்தோடு பின்பக்கமாகச் சென்றவன், அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க.. நர்த்தனா அங்கிருந்த கோலத்தை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 
 
 
அதில் சட்டென முகத்தை மூடிக்கொண்டு அப்படியே தரையில் மடிந்த அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து சத்தம் வராமல் அழத் தொடங்கினான் விஷ்வா. பதினான்கு வயதை இப்போதே தொட்டிருக்கும் சிறு பாலகன் அவனுக்கு நடப்பது அனைத்தும் புரிந்தும் புரியாத நிலை தான். 
 
 
ஆனால் ஒரு பக்கம் தாய் இறந்து கிடக்க.. மறுபக்கம் தமக்கையும் இப்படி ஒருநிலையில் இருப்பதை கண்டவனுக்கு பயத்திலும் பதட்டத்திலும் மனம் பரிதவிக்க.. உடல் நடுங்கத் தொடங்கியது. 
 
 
கண்முன் கண்ட காட்சியில் குறைந்திருந்த காய்ச்சல் அதிகரிக்க.. இருளில் அப்படியே அமர்ந்து செய்வதறியாது அழுது கொண்டிருந்தான் விஷ்வா. அதே நேரம் உள்ளிருந்து “ஏய் நாகராஜன் அண்ணனை கூப்பிடுவோமா..?” என்று முத்து சொல்லும் குரல் கேட்டது. 
 
 
அந்த குரலில் எழுந்து பார்க்க நினைத்தாலும் அவன் மனம் பதறி அதை தடுக்க.. அதில் உண்டான பயத்தோடு அசையாமல் விஷ்வா அப்படியே அமர்ந்திருக்க.. அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார் நாகராஜன். 
 
 
கிட்டத்தட்ட அரை உயிர் மட்டுமே மிச்சமிருக்க.. விழிகளில் உண்டான வலியோடு அவரை நர்த்தனா பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “இவ இன்னும் உயிரோட தான் இருக்காளா..? மானஸ்தியா இருந்தா செத்துருப்பாளேடா..!” என்று எகத்தாளமாக கேட்டப்படியே சிரித்தார் நாகராஜன். 
 
 
இதில் பெரும் நகைச்சுவையை கேட்டது போல் அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரிக்க.. “என்னடி ஓடு***ளி நா** இப்போ உனக்கு புரிஞ்சுருக்குமே நம்ம ஜாதிக்காரனுக்கும் மத்தவனுக்கும் இருக்க வித்தியாசம்..” என்றவாறே அவளை நெருங்கியவரை கண்டு நர்த்தனாவின் கைகள் தானாக அவளின் வயிறை தாங்கி பிடித்தது. 
 
 
“அட ஓடு**ளி கழுதை.. இன்னும் அந்த கருமத்தை காப்பாத்த தான் நினைக்கறியா நீ..? என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாதுன்னு இன்னும் உனக்கு புரியலை பார்த்தியா..!” என விழிகளிலும் இதழிலும் வழிந்த எகத்தாளத்தோடு சொல்லியவர், திரும்பி தன் அருகில் நின்றிருந்தவனின் கைகளில் இருந்த கத்தியை பறித்து சட்டென நர்த்தனாவின் வயிற்றில் ஆழமாக கீறி இருந்தார். 
 
 
யாரும் எதிர்பாரா நொடியில் சட்டென இது நடந்து முடிந்திருக்க.. “ஐயோ..” என்ற கதறலோடு எழுந்து தன் வயிற்றை இருக்கைகளாலும் நர்த்தனா தாங்கி பிடிக்க முயல.. ஆனால் பாவம் அவளால் அசைய கூட முடியவில்லை.
 
 
சற்று முன் பத்து மிருகங்களும் சேர்ந்து அவளை சிதைத்து சின்னா பின்னமாக்கியிருக்க.. அவள் உடல் அசைய முடியா நிலையில் அப்படியே நர்த்தனா கதறிக் கொண்டிருந்தாள். 
 
 
அதற்குள் வயிற்றில் போட்ட கீறலை மேலும் ஆழமாக்கியவர், துளியும் மனிதத் தன்மையில்லாமல் சட்டென குனிந்து அவள் வயிற்றுக்குள் கையை விட்டு பையில் இருந்து பொருட்களை எடுப்பது போல் அங்கிருந்த உறுப்புக்களை பிடித்து வெளியே இழுத்து கொண்டிருந்தார். 
 
 
ரத்த வெள்ளத்தில் உயிர்வலியில் துடித்துக் கொண்டிருந்தவளின் நினைவெங்கும் ஒருவனே நிறைந்திருக்க.. ‘என்னை மன்னிச்சிடுங்க தீபன்.. என்னால் உங்க வாரிசை காப்பாத்த முடியலை..’ என்று மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு தன் குழந்தை இப்படி ஒரு கொடூர அரக்கனின் கையில் சிக்கி கொண்டிருப்பதை காப்பாற்ற முடியவில்லையே என்ற பரிதவிப்போடு கிடந்தவளுக்கு நாகராஜனிடம் கெஞ்சுவதற்கு கூட அவளின் உடல் உத்துழைக்கவில்லை. 
 
 
மனம் வலியிலும் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியா அழுத்தத்திலும் துடித்துக் கொண்டிருக்க.. “இது தானடா கர்ப்பப்பை..?” என்று சந்தோஷ கூக்குரலிட்டு சிரித்தார் நாகராஜன். 
 
 
அதில் அரை விழியை திறந்து நர்த்தனா அவரைப் பார்க்க முயல.. கை முழுக்க ரத்தம் வழிய அவள் உடலில் இருந்து ஒரு உறுப்பை கிட்டத்தட்ட பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தார் நாகராஜன். இதில் உயிர் வலியில் தன் இறுதி நொடியில் இருந்த நர்த்தனா ‘இந்த பாவம் உங்களை சும்மா விடாது..!’ என்று மனதிற்குள் நினைக்க.. அதே நேரம் “இப்படி வெட்டினா ஈசியா எடுத்துடலாம் ண்ணே..” என முத்து நாகராஜன் செயலுக்கு துணை நின்றான். 
 
 
“இந்தக் கருமத்தை அப்படியே காலில் போட்டு நசுக்கினா தான் என் மனசு ஆறும்டா..” என்றவர், தன் கையில் இருந்ததை பலம் கொண்ட மட்டும் தரையில் வீச.. அந்த நொடியே நர்த்தனாவின் உயிர் அவள் விழி வழி வெளிவருவதற்கு தயாராக.. நர்த்தனாவின் நெஞ்சுக்கூடு ஒருமுறை முழு வேகத்தில் ஏறி இறங்கியது. 
 
 
அடுத்த நொடி நாகராஜன் தன் வலது காலை அந்த சதை குவியலின் மீது முழு வேகத்தில் இறக்க.. இதற்கு மேலும் அவள் உயிர் தாக்குபிடிக்க முடியாமல் நர்த்தனாவை விட்டு அவள் குழந்தையோடு சேர்ந்தே பிரிந்து இருந்தது.  
 
 
கொடூர சிரிப்போடு இதையெல்லாம் செய்து கொண்டிருந்த நாகராஜனை புன்னகையோடு பார்த்த முத்து “இப்போ சந்தோஷமா இருக்கீங்களா..? நாலு மாசமா உங்க முகத்தை பார்க்க முடியலை.. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு..” என்றான். 
 
 
“அந்த நா**யும் சேர்த்து இழுத்துட்டு வந்து இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன்டா முத்து, அவன் தப்பிச்சுட்டானே..!” என்றார் நாகராஜன். “நாங்க போகும் போது அவன் வீட்டில் இல்லை ண்ணே.. அவன் வருவதற்காக காத்திருந்து பார்த்தோம், ஆனா அவன் வரலை.. மணியும் பதினொன்னு ஆகிடுச்சு, இதுக்கு மேலே காத்திருந்து நம்ம திட்டத்தில் ஏதாவது பிரச்சனையாகிட கூடாதேன்னு தான் சட்டுன்னு வேலையில் இறங்கிட்டேன்.” என்றான் முத்து. 
 
 
“அதுவும் சரி தான், இவக் கொடுத்த தைரியம் தானே அவனை துணிஞ்சு ஒரு முடிவு எடுக்க வெச்சது.. முதலில் இவளை தான் முடிக்கணும், அவனை பொறுமையா பார்த்துக்கலாம் தான்.. உனக்கு தான் வீடு தெரியுமில்லை, இப்போ இல்லைனாலும் ஒரு நாள் அவனையும் தூக்கணும் புரியுதா..?” என்று நாகராஜன் மிரட்டலாக சொல்லிக் கொண்டிருக்க.. வெளியே அமர்ந்த நிலையிலேயே லேசாக எம்பி ஜன்னலில் வழியே அழுகை சத்தம் வெளியில் கேட்டு விடாமல் இருக்க தன் இரு கைகளையும் வாயில் வைத்து மறைத்தபடி அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
 
 
இதேநேரம் சுஜாதா வீடு திரும்பி இருந்தார். வழக்கமாக திருமணமானதில் இருந்தே நாகராஜன் சுஜாதாவை எங்கும் இரவு தங்க அனுமதித்ததில்லை. அது அவரின் தாய் வீடாக இருந்தாலும் சரி. பிள்ளைகள் விடுமுறைக்கு சென்றாலும் கூட அழைத்துச் சென்று விட்டு, மாலை வரை அங்கிருந்து விட்டு கிளம்பி விடுவார் சுஜாதா. 
 
 
இன்று பூஜை விருந்து என கொஞ்சம் தாமதமாகி இருக்க.. தன் தம்பியின் உதவியோடு வீடு வந்து சேர்ந்தவர், நள்ளிரவில் அவர் உள்ளே வர விரும்பாததை புரிந்து கொண்டு வாசலிலேயே வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். 
 
 
நேராக விஷ்வாவை தேடி தான் சுஜாதா சென்றார். அவன் உடல்நிலை பற்றி அறிய எண்ணி அங்கே சென்றவர், அறையில் யாரும் இல்லாததை கண்டு குழம்பி, அடுத்து மைதிலியின் அறைக்குச் சென்று பார்க்க.. அங்கும் யாருமில்லை.
 
 
ஆனால் மைதிலியின் அறை வெளியில் தாழிடப்பட்டிருந்தது. விஷ்வாவின் அறையில் மின்விசிறி ஓடிக்கொண்டிருப்பதை கண்டு இப்போதே இருவரும் எங்கோ சென்று இருப்பார்கள் என நினைத்து வீடு முழுக்க தேடியவர், அவர்கள் எங்கும் இல்லாததை கண்டு யோசனையாக.. பின்பக்க வீட்டில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
 
 
அதில் அங்கே செல்ல தயங்கி சுஜாதா நின்று இருந்தாலும், மனம் ஏனோ அவரை அங்கு செல்ல சொல்லி முரண்டியது. யோசிக்காமல் இருளில் இறங்கி அங்கு வந்த சுஜாதா, இறுதியாக கண்டது நாகராஜன் காலுக்கு அடியில் சிக்கி இருந்த சிசுவை தான். 
 
 
அடுத்த நொடி “ஐயோஓஓஓஓஓ..” என்ற பெரும் கதறலோடு பதறி கொண்டு வந்த சுஜாதா, நாகராஜனின் காலை பிடித்து அகற்றி விட்டு “என்ன காரியம் செஞ்சு இருக்கீங்க..?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார்.  
 
 
“நம்ம குடும்பத்தையும் ஜாதியையும் காப்பாத்திருக்கேன்..” என்று திமிராக நாகராஜன் பதில் சொல்ல.. “நீங்க செய்யறது பாவம்ன்னு உங்களுக்கு புரியவே புரியாதா..? ஏன் இப்படி பாவத்துக்கு மேலே பாவமா செஞ்சுட்டு இருக்கீங்க..? பொண்ணு மாதிரி பார்த்து வளர்த்தவளை இப்படி சிதைச்சு வெச்சுருக்கீங்களே..! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..? ஐயோ தனாம்மா.. தனா எழுந்திரும்மா..” என்று சுஜாதா கதறிய கதறல் விஷ்வாவை வெளியில் இருந்து மேலும் கதற செய்தது. 
 
 
“இதெல்லாம் நாளைக்கு நம்ம குழந்தைங்க தலையில் தானே வந்து விடியும்..! மைதிலி.. மைதிலி எங்கே..? இதையெல்லாம் பார்த்தா எப்படி தாங்குவா..?” என திடீரென நினைவு வந்தவராக பதறி சுஜாதா எழுந்து கொள்ள.. “அவ உயிரோட இருந்தா தானே பார்க்க..?” என்றார் சிறு குற்ற உணர்வும் இல்லா குரலில் நாகராஜன். 
 
 
அதைக் கேட்டு திடுக்கிட்ட சுஜாதா “என்ன சொன்னீங்க..?” என்று பதற.. “அவ பொண்ணு ஓடிப் போன துக்கம் தாங்காம கிணத்தில் விழுந்து தற்கொலை செஞ்சுகிட்டா..” என்ற நாகராஜனை நம்பாமல் பார்த்த சுஜாதா “இதை நான் நம்புவேன்னு நினைக்கிறீங்களா..? அப்படி அவ செஞ்சுக்கணும்னு நினைச்சுருந்தா நாலு மாசம் சும்மா இருந்திருக்க மாட்டா.. மைதிலி எங்கே..?” என்று மீண்டும் கேட்க.. “அதான் சொன்னேனே கிணத்தில் விழுந்துட்டா..” என்றார் நாகராஜன். 
 
 
ஓரளவு நடந்திருப்பது என்ன என்று சுஜாதாவுக்கு தெளிவாக புரிந்தது. “அவளா விழுந்தாளா..? இல்லை..!” என்று அழுகையோடு சுஜாதா கேட்கவும் “நான் தான் கொன்னேன்.. என்னை தடுக்க நினைச்சா அதான் அவளையே இல்லாம செஞ்சுட்டேன்..” என்று கூறவும், வேகமாக ஓடிச் சென்று கிணற்றைப் பார்த்த சுஜாதா “மைதிலி..” என்று கத்த.. “அவ பரலோகம் போய் சேர்ந்து பல மணி நேரம் ஆகி இருக்கும்..” என்று வீட்டிற்குள்ளிருந்தே நக்கலாக குரல் கொடுத்தார் நாகராஜன். 
 
 
“இப்படி பாவமா சுமந்துட்டு நிற்கறீங்களே..! நமக்கும் பிள்ளைங்க இருக்கு, நாளைக்கு அவங்க எப்படி நிம்மதியா வாழ முடியும்..? ஒரு நிமிஷமாவது இதைப் பற்றி யோசிச்சீங்களா..?” என்று மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறிய சுஜாதா சட்டென நினைவு வந்தவராக “வி.. விஷ்வா.. விஷ்வா எங்கே..?” என பதற.. “என்னை கேட்டா..!” என்றார் அலட்சியமான குரலில் நாகராஜன்.
 
 
விஷ்வாவை எண்ணி அடி வயிறு கலங்க.. “அவ.. அவனையும் நீங்க எதுவும் செஞ்சுடலையே..!” என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்டார் சுஜாதா. “அவனை நான் எதுவும் செய்யலை..” என்றார் அதே அலட்சியமான குரலில் நாகராஜன். 
 
 
அப்போதும் “குழந்தையை காணோமே..! நான் வீடு முழுக்க தேடிட்டேனே..!” என்று சுஜாதா பதட்டமாக.. ‘எங்கே தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ..?’ என்று பயந்து நடுங்கி ஒடுங்கி அங்கே இருளில் மறைந்து உட்கார்ந்தான் விஷ்வா. 
 
 
அவனுக்கு இப்போது நாகராஜனை மட்டுமல்ல இந்த வீட்டில் இருக்கும் யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது. யாரையும் நம்ப அவனால் முடியவில்லை. 
 
 
இவர்கள் தன்னையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்று மட்டுமே அந்த நொடி அவனுக்கு தோன்ற.. பயத்தோடு இருளில் ஒடுங்கி அவன் அமர்ந்திருக்க.. அதே நேரம் நர்த்தனாவை தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தான் தாரக். 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
MNM - 18, 19, 20 & 21
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page