நேசம் – 16
தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் திடீரென பாதியில் பேச்சை நிறுத்தவும், கேள்வியாக திரும்பி அவனை பார்த்திருந்த தாரக், விஷ்வா அதிர்வோடு அசையாமல் நின்றிருப்பதை கண்டு அவன் பார்வையை பின்தொடர.. அங்கு இவர்களை பார்த்தபடியே சிந்து மயங்கி சரிவது தெரிந்தது.
அதில் பதட்டமான இருவரும் வேகமாக ஓடி சென்று அவளைத் தூக்க.. “அய்யய்யோ என்னாச்சு..?” என்று பதறினான் விஷ்வா. “முதலில் இவளை பிடி..” என்று தாரக் சொல்ல.. “குழந்தை.. குழந்தைக்கு எதுவுமில்லையே..!” என தவிப்பதோடு கேட்டாவாறே இப்படியும் அப்படியுமாக விஷ்வா சுற்றி வருவதைக் கண்ட தாரக், அவனே சிந்துவை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான்.
மெல்ல அவளின் கன்னத்தில் தட்டி தாரக் சிந்துவை எழுப்ப முயன்று கொண்டிருக்க.. “மாமா.. குழந்தைக்கு, குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்காது இல்லை..” என்று விஷ்வா பயத்தோடு கேட்கவும், அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பதிலேதும் சொல்லாமல் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து சிந்துவின் முகத்தில் தெளித்து அவளை எழுப்ப முயன்றான்.
ஆனால் சிந்துவிடம் துளியும் அசைவில்லை. அதற்குள் தாரக் சிந்துவை தூக்கிச் செல்வதை பார்த்திருந்த பாபு வீட்டிற்குள் சென்று விஷயத்தை சொல்லி இருக்க.. சாரதா பதட்டத்தோடு அறைக்குள் நுழைந்தார். “என்னாச்சு தீபன் தம்பி..?” எனவும் “மயங்கி விழுந்துட்டா.. அதான் தூக்கிட்டு வந்து படுக்க வெச்சேன்..” என்றான் தாரக்.
“சரியா சாப்பிடறதே இல்லை தம்பி, சொன்னா கேட்டா தானே..! ரொம்ப பலவீனமா இருந்தா, நான் சொல்லிக்கிட்டே இருந்தேன் ஒரு குழந்தையை தாங்கும் அளவுக்கு உடம்பில் பலமே இல்லைன்னு..” என்றவர் “பயப்படற மாதிரி எதுவும் இல்லையே..!” என மெல்லிய குரலில் கேட்கவும், அவர் பக்கம் திரும்பி வெறுமையாக பார்த்தவன் “இருக்காதுன்னு நினைக்கறேன்..” என்றான்.
“நான் இன்னைக்கு இங்கே வந்தே இருக்க கூடாது மாமா.. என்னால் தான் இப்போ இப்படி ஆகிடுச்சு, நம்ம பிளான் எல்லாம்..” என்று விஷ்வா ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை தடுப்பது போல் கை காண்பித்த தாரக் அலைபேசியை எடுத்து வேகமாக மருத்துவருக்கு அழைக்க முயன்றான்.
சிந்து கருவுற்றிருப்பது தெரிந்தவுடன் வீட்டிற்கே வந்து அவளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்திருந்தான் தாரக். இப்போதும் அவரையே அழைக்க அவன் முயல.. அதேநேரம் மெல்ல சிந்துவின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தார் சாரதா. அதில் லேசாக அவளிடம் அசைவு தெரிந்தது.
அதைக் கண்டு “தீபன் தம்பி..” என சாரதா அழைக்கவும், அவளின் பக்கம் பார்வையை திருப்பியவன் அலைபேசியை அணைத்துவிட்டு சிந்துவின் முன் வந்து குனிய.. பெரும் சிரமத்துக்கு இடையே மெல்ல விழிகளை திறந்தவள் தன் முன் இருந்த தாரக்கை வெறுமையாக பார்த்தாள்.
சிந்துவிடம் அசைவு தெரிந்த உடனேயே அவள் அருகில் நின்று கொண்டிருந்த விஷ்வா மெல்ல பின்வாங்கி பால்கனி கதவுக்கு அருகே சென்று நின்றுவிட.. “ஆர் யூ ஓகே..?” என்றான் தாரக். அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. அதற்குள் கொஞ்சம் தண்ணியை எடுத்து “ஹேய் பொண்ணே இந்தா இதை குடி..” என்றிருந்தார் சாரதா.
அதில் விழிகளை மெல்ல திறந்தவள், அவரிடம் இருந்து அதை வாங்க முயல.. கைகளை கூட வேகமாக நகர்த்த முடியாமல் மெல்ல அவள் அசைப்பதைக் கண்ட சாரதா தானே அவளுக்கு அதை புகட்டினார்.
அவளிடம் இருந்த அதீத களைப்பை கண்டு “எதுக்கும் டாக்டரை வர சொல்லிடேன் தம்பி..”.என்றார் சாரதா. சரி என்று மீண்டும் தாரக் அலைபேசியை எடுக்க.. சாரதாவின் கைகளை லேசாக பிடித்து அழுத்தி சிந்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.
“ஏன் எதுக்கு வேண்டாம்..? இப்படியே இருந்து என்ன சாதிக்கலாம்னு நினைக்கறே..?” என்று எரிச்சலோடு சாரதா சத்தமிடவும் அவருக்கு அவளின் மயக்கத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் தாரக்கிற்கு தெரியும் என்பதால் “சாரதாம்மா பயப்படற மாதிரி எதுவுமில்லை, கொஞ்சம் குடிக்க ஏதாவது கொடுங்க ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. சாயந்திரம் வரைக்கும் இப்படியே இருந்தா டாக்டரை வர வெச்சுக்கலாம்.. இப்போ ரெஸ்டே போதும்னு தான் எனக்கு தோணுது..” என்றிருந்தான்.
“அப்படியா தம்பி..! சரி நான் வாணிகிட்ட சொல்லி பால் கொண்டு வர சொல்றேன்..” என அவர் எழுந்து செல்ல.. அங்கேயே நின்றிருந்த தாரக் சிந்துவை ஒருமுறை திரும்பி பார்க்கவும், அவளோ யாரையும் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்பது போல் விழிகளை மூடிக்கொண்டாள்.
இதில் தாரக்கும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியில் வர, அவனின் பின்னேயே விஷ்வாவும் வெளியேறியிருந்தான். இருவரும் அங்கிருந்து சென்றதை உணர்ந்த பிறகே மெல்ல விழிகளை திறந்து அவர்கள் சென்ற திசையை உயிர்ப்பில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
இந்த நொடியை அவளால் எந்த வார்த்தைகளிலும் விவரிக்க முடியாது, அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள் சிந்து. உயிரோடு இருக்கும் போதே அவள் இதயத்தை பிடுங்கி வெளியில் எறிந்தது போல் இருந்தது அவள் மனநிலை.
கடந்த சில மாதங்களாகவே அவள் வாழ்வில் சிந்து கனவிலும் எதிர்பார்க்காத ஏதேதோ நடந்து கொண்டிருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலையோ இப்படி ஒரு அதிர்வோ தன் வாழ்வில் வரும் என அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
அதில் தாங்க முடியா வலியோடு சிந்து விழிகளை மூடிக்கொள்ள.. சூடான கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது.
எதுவும் நடக்காதது போல் இயல்பாகச் சென்ற தாரக்கின் பின்னே பதட்டத்தோடு சென்ற விஷ்வா “அக்கா என்னை பார்த்து இருப்பா இல்லை..?” என்றான். “பார்த்ததால் தானே இந்த மயக்கம்..?” என தாரக் கேலியோடு கேட்கவும், “ஆமா நான் இன்னைக்கு வந்திருக்கக் கூடாது, வழக்கம் போல வெளியிலேயே நாம சந்திச்சுருக்கலாம்.. இல்லை போனில் பேசி இருக்கலாம்..” என்று விஷ்வா வருந்தி கொண்டிருக்க.. “இப்போ என்ன ஆகிப்போச்சு எதுக்கு இவ்வளவு பயப்படறே..?” என்றான் தாரக்.
“இல்லை, பயமெல்லாம் இல்லை..” என சமாளிப்பாக விஷ்வா சொல்லவும், “என்னைக்கு இருந்தாலும் தெரிய தானே போகுது.. அது இன்னைக்குன்னு நினைச்சுக்கோ, அவ்வளவுதான்..” என்று தாரக் சாதாரணமாக சொல்ல.. “அப்படி இல்லை மாமா, என்னைக்கு இருந்தாலும் தெரியும் தான்.. ஆனா அது இன்னைக்கா இருந்தது தான் பிரச்சனை..” என்றான் விஷ்வா.
“ஏன் என்ன பிரச்சனை..? உங்க அக்கா உன்னை வெறுத்துடுவான்னு நினைக்கறியா..?” என்று சிறு கேலியோடு தாரக் கேட்கவும், “அதை பத்தி எல்லாம் யோசிக்கவோ கவலைப்படவோ இனி என்ன இருக்கு மாமா.. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தானே நான் இதில் இறங்கினேன், என் கவலை அதை பத்தி இல்லை.. இதனால் குழந்தைக்கு ஏதாவது..” என்று விஷ்வா இழுக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவ நல்லா தான் இருக்கா..” என்றான் தாரக்.
“நாம இவ்வளவு தூரம் இத்தனை வருஷமா திட்டம் போட்டு காத்திருந்து செஞ்சது எல்லாம் நேரம் கை கூடி வர நேரத்தில் பானையை நானே கீழே போட்டு உடைச்ச மாதிரி ஆகிட கூடாதே மாமா.. அது தான் எனக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்குது..” என்றான் விஷ்வா.
இப்போதே அவனின் பதட்டத்திற்கான காரணம் புரிய.. அத்தனை முறை குழந்தைக்கு எதுவும் இல்லையே என்று விஷ்வா கேட்டதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன், “டோன்ட் ஓர்ரி, நாம நினைச்சது நடக்கும், நடத்துறோம்.. புரியுதா..!” என அவன் தோளை தட்டி கொடுத்தான் தாரக்.
விஷ்வாவும் சரி என்ற தலையசைப்போடு அங்கிருந்து கிளம்பி விட, மற்ற வேலைகளில் கவனத்தை திருப்பினாலும் தாரக் மனதில் அடுத்தடுத்து நிகழ வேண்டியது எல்லாம் பட்டியலாக ஓடிக்கொண்டே இருந்தது.
*****
அதன் பின்னான நாட்களில் சிந்துவிடம் நிறைய மாற்றங்கள். தன் வேலைகளை யார் உதவியும் வேண்டாம் என மறுத்து தானே செய்து கொள்ள தொடங்கினாள். முன்பு அடிக்கடி வந்து உதவி செய்த வாணியை இப்போது அருகில் கூட வர விடுவதில்லை சிந்து.
விஷ்வா இங்கே வந்து சென்றதை பற்றியோ அவனுக்கும் தாரக்கிற்கும் இடையேயான உறவை பற்றியோ இது வரை யாரிடமும் சிந்து எதுவும் கேட்கவே இல்லை. தாரக்கே அவள் இதை பற்றி பேசாததை கண்டு ஆச்சர்யமானான்.
அவள் பேச்சை நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டிருந்தாலும், இப்போதெல்லாம் தலையசைப்பு கூட அவளிடம் இருந்து வருவதில்லை. யாரோ யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தது அவளின் நடவடிக்கைகள்.
இரண்டு மூன்று முறை அவளிடம் பேசிப் பார்த்த சாரதாவிற்குமே ஒரு கட்டத்தில் கோபமே வந்து விட்டது. அவள் தன்னிடமே திமிர் காட்டுவதாக நினைத்தவர், அதன் பின் சிந்துவின் அறை பக்கமே போவதில்லை. இது சிந்துவுக்கு ஒரு வகையில் நிம்மதியாக கூட இருந்தது. யாரையும் பார்க்கவோ யாரிடமும் பேசவோ அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.
விஷ்வா இங்கே இத்தனை உரிமையாக பேசிக் கொண்டிருந்ததையும் தாரக் அவனோடு நெருக்கமாக இருந்ததையும் பார்க்கும் போதே அவர்களுக்குள் பல காலமாக பழக்கம் இருப்பது அவளுக்கு புரிந்தது.
அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக யோசித்துப் பார்க்கும் போது இதெல்லாம் திட்டமிட்டு அழகாக காய் நகர்த்தப்பட்டு நடந்து முடிந்திருப்பது புரிந்தது. இப்போது வரை இதெல்லாம் ஏன் எதற்கு என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும் அதன் மூல காரணமாக இருப்பது யார் என புரிந்தது அவளுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இனி யாரை நம்ப முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டு இருந்தவள், நாட்களை அதன் போக்கு நகர்த்திக் கொண்டிருக்க.. அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியது.
மாதம் ஒருமுறை மருத்துவர் ஷாலினி வந்து சிந்துவை பரிசோதித்து அவளுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு செல்வார். அதை தொடர்ந்து எடுத்துக் கொண்டதில் இப்போது கொஞ்சம் சிந்துவின் உடல்நிலை தேறி கூட இருந்தது.
முன்பு போல் அடிக்கடி வாந்தி மயக்கம் வருவதில்லை. அதற்காக முற்றிலும் நின்று விட்டது என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது உள்ளே செல்லும் அனைத்தும் வெளியே வந்து அவளை ஒரு வழியாக்கிவிடும். அந்த நேரங்களில் எல்லாம் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடுபவள், துணைக்க கூட யாரும் இல்லாமல் அவளே தட்டு தடுமாறி சுவரை பிடித்தபடியே வந்து படுக்கையை சேர்வதற்குள் பெரும் சிரமத்தை அனுபவித்து விடுவாள்.
அந்த நேரங்களில் மட்டும் தன் அன்னையை எண்ணி அவள் கண்கள் கலங்கும். ஆனால் இந்த சூழ்நிலையில் அவரின் ஆதரவும் தனக்கு கிடைக்குமோ என்ற சந்தேகம் சிந்துவினுள் ஆழ வேரூன்றி விட்டிருந்தது. யாரையும் எதற்காகவும் எந்த விதத்திலும் இனி நம்ப அவள் தயாராக இல்லை.
தன் கூடவே தன் கை அணைப்பில் சொந்தத் தம்பியாக எண்ணி அத்தனை அன்பை வாறி கொடுத்து வளர்த்திருந்தவனின் இந்த துரோகம் சிந்துவை அடியோடு அசைத்துப் பார்த்திருந்தது. தாரக் அவளை தாலி கட்டி தூக்கி வந்து இத்தனை கொடுமைகள் செய்த போது கூட ஏற்படாத ஒரு வலி விஷ்வாவின் இந்த இன்னொரு முகத்தை பார்த்த நொடி அவளுக்கு உண்டாகி இருந்ததது.
தாரக் யாரோ ஒருவன் அவனிடமிருந்து எதையும் அவளால் எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஷ்வா அப்படி இல்லையே..! அவனே இதில் உடன் இருந்து செயல்பட்டு இருக்கிறான் என்பதை எண்ணும் போதே ஆரம்ப நாட்களில் எல்லாம் நெஞ்சே வெடித்து விடுவது போல் சிந்துவுக்கு வலித்தது.
‘அவள் இங்கே அனுபவித்த அத்தனைக்கும் காரணம் அவள் அன்போடு உடன் இருந்து வளர்த்த தம்பியா என்ற அதிர்வும் அப்பாவியாய் தன்னையே சுற்றி சுற்றி வந்து அன்பை வாறி வழங்கிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கொடூர முகம் யாரும் அறியாமல் இருக்கிறதா..?’ என்ற அதிர்ச்சியும் சிந்துவை இன்று வரை மீள விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தது.
இந்த அதீத மன அழுத்தமே அவளை பேசா மடந்தையாக்கி இருந்தது. ஆனால் தாரக் எப்போதும் போல் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை கொள்வதில்லை. நேரத்திற்கு அவளுக்கு எல்லாம் சரியாக செல்கிறதா என்று மட்டும் கண்காணிக்க சாரதாவிடம் சொல்லி இருந்தான்.
அதேபோல் மருத்துவர் வந்து பார்த்து செல்லும் போது மட்டும் உடன் இருந்து அவரிடம் அவளின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்வான். இன்றும் இன்னும் சில நிமிடங்களில் மருத்துவர் வருவதாக இருந்தது. அதற்காகவே தயாராகி அவருக்காக காத்திருந்தாள் சிந்து.
எப்போதும் போல் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு உள்ளே நுழைந்த டாக்டர் ஷாலினியை அதே வெறுமையான முகத்தோடு சிந்து வரவேற்க.. அவருடன் உள்ளே நுழைந்தான் தாரக்.
எப்போதும் மருத்துவரை தனியே இங்கே வர அனுமதித்ததில்லை தாரக். இப்போதும் அப்படியே தாரக் உடன் வருவதை கண்டவள், ‘எங்கே நான் அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேனோன்னு இன்னும் பயப்படறார் போல..! இனி சொல்லி மட்டும் என் வாழ்க்கையில் என்ன மாறப் போகுது..?’ என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள.. ஷாலினி தன் போக்கில் வந்த வேலையை பார்க்கத் தொடங்கினார்.
அவளை பரிசோதித்து விட்டு “ஹ்ம்ம், முன்பை விட இப்போ நல்ல மாற்றம் தெரியுது, நான் கொடுத்த மருந்து சரியா சாப்பிடறீங்கன்னு நினைக்கறேன்.. வாந்தி மயக்கம் எல்லாம் கண்ட்ரோலில் இருக்கா..?” என்ற ஷாலினியை பார்த்து ஒரு தலையசைப்பை மட்டும் சிந்து கொடுத்தாள்.
அடுத்தடுத்து அவர் கேட்கும் அனைத்திற்குமே இப்படியே பதில் அளித்துக் கொண்டிருந்தாள் சிந்து. இது இன்று மட்டுமல்ல எப்போதுமே வழக்கம் தான் என்பதால் ஆரம்பத்தில் வினோதமாக தெரிந்த ஷாலினிக்கும் இப்போதெல்லாம் இது பழகி விட்டிருந்ததில் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாதவர், தன் வேலையை மட்டும் கவனித்து கொண்டிருந்தார்.
அடுத்த பதினைந்து நிமிடம் தாரக்கின் பக்கம் திரும்பியவர், “எந்த பிரச்சனையும் இல்லை சார், உங்க வைஃப் ஹெல்த்தியா நல்லா இருக்காங்க.. பேபியும் அப்படித்தான், நான் சொன்ன மாதிரி இந்த மன்த் என்டில் ஒரு ஸ்கேன் மட்டும் செஞ்சு பார்த்துடுவோம்.. தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்க சொல்லுங்க..” என்று அவர் எழுதிக் கொடுக்க.. “ஓகே டாக்டர்..” என்று கேட்டுக் கொண்டவன், “டாக்டர் ஒரு டவுட்.. இப்போ போர் மந்த்ஸ் ஆகிடுச்சு இல்லையா.. இவங்க இனி ட்ராவல் செய்யலாமா..?” என்றான்.
“டிராவல் ரொம்ப தூரம் இருக்குமா..?” என்று ஷாலினி கேட்கவும் “இல்லை டாக்டர், பிளைட்டில் போற மாதிரி தான் இருக்கும்.. அதுக்கு பிறகு காரில் ஒரு ஹாஃப் ஆன் ஹவர் டிராவல் ஓகே தானே..!” என்றான் தாரக். “அது ஒன்னும் பிரச்சனை இல்லை சார், போகலாம்..” என்று ஷாலினி சொல்லவும், அவரை வழி அனுப்பி வைக்க தயாரானான் தாரக்.
தாரக் சார்பில் டிரைவரோடு கார் சென்று ஷாலினியை அழைத்து வந்து அதேபோல் வேலை முடிந்தவுடன் அழைத்துச் சென்று விட்டு விடும். இப்போதும் அப்படியே ஷாலினி கிளம்ப.. அவருக்கு கொடுக்க வேண்டிய பீஸ்ஸை கொடுத்தவன், “என் வைஃப் அவங்க அப்பா அம்மாவை பார்க்கணும் ரொம்ப ஆசை படறாங்க, அவங்களால் இங்கே வந்து இவளை பார்க்க முடியாத சிச்சுவேஷன்.. அதான் ட்ராவல் செய்யலாமான்னு கேட்டேன்..” என்று தானாகவே கூறினான் தாரக்.
“ஓ.. அதான் அவங்க கோபத்துக்கு காரணமா..! நான் கூட யோசிப்பேன் ஏன் எப்போவும் ரொம்ப சைலன்ட்டா இருக்காங்கன்னு, இதுதான் ரீசனா..? இருக்கும் தானே சார், மாசமா இருக்க எல்லா பொண்ணுக்கும் அப்பா அம்மா கூட இருந்து பார்த்துக்கணும்னு ஆசை இருக்கும் தானே..!” என்று ஷாலினி சொல்ல.. “ஆமா டாக்டர் அதான் இத்தனை நாள் அவளோட ஹெல்த்தை காரணமா சொல்லி ட்ராவலை தள்ளி போட்டுட்டே இருந்தேன்.. இப்போ டிராவல் செய்யலாம்னு நீங்க சொல்லிட்டீங்க இல்லை, இனி அவ ஆசையை நிறைவேத்திட வேண்டியதுதான்..” என்றான் தாரக்.
“மாசமா இருக்க பொண்ணுங்க ஆசைய உடனுக்குடன் நிறைவேத்திடுங்க சார், அதுதான் அவங்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.. இல்லை போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷனில் உங்களை வெச்சு செஞ்சுடுவாங்க..” என்று கேலியாக சொல்லிவிட்டு ஷாலினி கிளம்பி விட, அதுவரை புன்னகை முகமாக நின்றிருந்தவன், தீவிரமான முகத்தோடு திரும்பி சிந்துவின் அறைக்குள் நுழைந்தான் தாரக்.
அப்போதே விழிமூடி ஓய்வாக சாய்ந்திருந்தவள், திரும்ப தாரக் உள்ளே நுழையவும் அவனை புரியாமல் பார்த்தாள் சிந்து. வழக்கமாக ஷாலினி வரும் நேரங்களில் மட்டுமே இங்கே வருபவன், அவரோடு சேர்ந்து வெளியில் சென்று விடுவதோடு சரி, திரும்ப அறைக்குள் வருவதில்லை.
இன்று அவன் வந்திருக்கவும், அடுத்து என்ன வரப்போகிறதோ என்பது போல் சிந்து அவனை பார்த்துக் கொண்டிருக்க.. ‘எழுந்திரு..’ என்பது போல் விரலசைத்தான் தாரக்.
அதில் ஏன் எதற்கு என ஒரு வார்த்தையும் கேட்காமல் சிந்து எழுந்து நிற்க.. அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வெளிவாயிலை நோக்கி நடந்தான் தாரக்.
இதையெல்லாம் சமையலறையில் இருந்த வாணி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. சாரதாவிற்கு அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என தெரிந்திருந்ததால் அவர் இறுக்கமான முகத்தோடு நின்றிருந்தார்.
இங்கு சிந்து தான் குழம்பி போய் வழக்கம் போல் தாரக்கின் செயல்கள் புரியாமல் அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள். ஆனால் இந்த வீட்டிற்குள் இதே போல் அவளை இழுத்து வந்த போது அவளிடம் இருந்த எதிர்ப்போ மறுப்போ இப்போது சிந்துவிடம் துளியும் இல்லை.
அவன் இழுத்த இழுப்பிற்கு கீ கொடுத்த பொம்மை போல் சென்று கொண்டு இருந்தவள் கார் கதவை திறந்து ஏறு என்பது போல் தாரக் விழியசைவில் கட்டளையிடவும், மறுபேச்சு பேசாமல் ஏறி அமர்ந்தாள். அன்று இதே காரில் அவளை பின்னுருக்கையில் தள்ளி தாரக் கதவடைத்தது சிந்துவின் மனக்கண்ணில் வந்து போனது.
அதில் அவளையும் அறியாமல் சிந்துவின் உடல் ஒரு நொடி பயத்தில் குலுங்க.. மறுபக்கம் வந்து ஏறி அமர்ந்த தாரக் காரை எடுத்திருந்தான். அன்று போல் அசுர வேகத்தில் பாயாமல் கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ‘எங்கே செல்கிறோம் ஏன் எதற்கு..?’ என எதுவுமே கேட்க அவளுக்கு தோன்றவில்லை. அவனும் இப்படி ஒருத்தி அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாதது போல் சாலையில் மட்டுமே கவனமாக இருந்தான்.
விமான நிலையத்தில் சென்று காரை நிறுத்தியவன், அவளை ஒரு பார்வை திரும்பிப் பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க.. அதுவே அடுத்து அவள் செய்ய வேண்டியதை சிந்துவுக்கு உணர்த்தி இருக்க தானும் இறங்கி நின்றாள்.
அங்கே இவர்களுக்காகவே காத்திருந்தவன், தாரக்கிடம் இரண்டு பயண சீட்டுகளை நீட்ட.. அதை வாங்கிக் கொண்டவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே செல்ல.. மீண்டும் கீ கொடுத்த பொம்மையாக அவன் பின்னே சென்றாள் சிந்து.
இதுவே முன்பு போல் இருந்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்கவோ இல்லை அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்கவோ முயன்றிருப்பாள். ஆனால் இப்போது அதற்கு எல்லாம் அவள் மனம் ஆசைப்படவில்லை.
ஏதோ இனி தன் வாழ்வில் எதுவுமே இல்லை என வாழ்க்கையையே வெறுத்தது போலான மனநிலையோடு அவன் பின்னே சென்றவள், விமானத்தில் அருகருகில் அமர்ந்திருந்த போதும், அடுத்து அதே போல் விமானத்திலிருந்து இறக்கி வெளியில் வந்து மற்றொரு காரில் அவளை ஏற சொன்ன போதும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருப்பதை முதல் முறையாக கேள்வியாக பார்த்தான் தாரக்.
இத்தனை மாதத்தில் முதல் முறையாக வெளியில் வருபவளிடம் இருந்து வேறு சில செயல்களை அவன் எதிர்பார்த்து இருந்தானோ..! என்னமோ..? அதெல்லாம் இல்லாமல் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு சிந்து நடந்து கொண்டிருப்பதை கூர்மையாக கவனித்தாலும் அவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
எங்கோ பார்வையை பதித்தபடி காரில் அமர்ந்திருந்தவளுக்கு கண்ணில் பட்ட காட்சிகள் எதுவும் கருத்தில் பதியவே இல்லை. ஒரு வளைவில் கார் திரும்பி பெரிய கேட்டினுள் நுழையவும், அப்போதே சுற்றுப்புறம் புரிய.. பார்வையை வேகமாக சுழற்றியவளுக்கு அவளின் வீட்டினுள் கார் நுழைவது தெரிந்தது.
வீட்டிற்கும் கேட்டிற்கும் இடையே இருந்த பறந்து விரிந்த மணற்பரப்பில் கார் மிதமான வேகத்தில் சென்று நிற்க.. சிறு பதட்டம் தன்னையும் அறியாமல் சிந்துவின் உடலில் வந்து ஒட்டிக்கொண்டது.
அதில் வேகமாக பார்வையை சுழற்றி தன் கண் முன் காணும் காட்சிகள் நிஜம்தானா என உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றவளின் பார்வை தாரக்கின் பக்கம் முதல்முறையாக திரும்ப.. அவனும் அவளை திரும்பி பார்த்து லேசாக புன்னகைத்தான்.
ஆனால் அந்தப் புன்னகை அவளுள் பெரும் குளிரை பரப்பியது. அத்தனை கொடூரமான புன்னகை அவன் இதழில் வந்து போக.. முன்பை விட இந்த நொடி தாரக்கை பார்க்கும் போது அவளுள் பெரிதாக ஒரு பயம் பரவியது.
சுற்றிலும் அங்கங்கே நின்றிருந்த ஆட்கள் எல்லாம் புதிதாக வந்து நிற்கும் காரை கேள்வியாக பார்த்தபடியே அதை நெருங்க.. அவளை இறங்கு என்பது போல் விழியசைவில் சொல்லிவிட்டு கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் தாரக்.
காரில் இருந்து இறங்கிய தாரக்கை கண்டு பதட்டமான நாகராஜனின் ஆட்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிய ஒரு நொடியில் இன்னும் இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தவளை லேசாக குனிந்து பார்த்த தாரக் “உன்னை இறங்குன்னு சொன்னேன்..” என்றான் அழுத்தமான குரலில்.
இவ்வளவு நேரமும் அவன் சொன்னதை எல்லாம் மறுக்காமல் செய்து கொண்டிருந்தவளுக்கு, இதை செய்ய மட்டும் கொஞ்சமும் தைரியம் வரவில்லை. கால்கள் தடதடக்க.. மனம் அதைவிட வேகமாக பந்தய குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்ததில், அசையாமல் கைகளை பிசைந்தபடியே சிந்து கலவரமான முகத்தோடு அமர்ந்திருந்தாள்.
“அண்ணே.. அண்ணே.. இங்கே வாங்களேன்.. கொஞ்சம் வெளியே வந்து பாருங்களேன்..” என்று நாகராஜனின் ஆட்கள் குரல் கொடுத்திருக்க.. “ஏன்டா இப்படி கத்தறீங்க..? அப்படி என்ன நடந்துச்சு ஊரில் இல்லாத அதிசயத்தை கண்ட மாதிரி சத்தம் போடறீங்க..” என்று எகத்தாளமாக கேட்டபடியே வந்தவர், தன் முன் காரில் சாய்ந்து நின்றிருந்தவனை கண்டு விழிகள் சிவக்க முறைத்துக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் காரினுள் குனிந்து “இப்போ நீயா இறங்கறியா..? இல்லை நான் வந்து தூக்கிட்டு போகணுமா..!” என்று பல்லை கடித்தபடி கேட்டிருந்தான் தாரக்.
அதில் கண்டிப்பாக சொன்னதை செய்வான் என்று புரிய.. இப்போது இருக்கும் சூழ்நிலையை மேலும் கடினமாக்கிக் கொள்ள விரும்பாத சிந்து, அவளுள் மீதம் இருந்த தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி மெல்ல காரில் இருந்து இறங்கி நின்றாள்.
இருவரையும் இப்படி ஜோடியாக இங்கே கண்ட நாகராஜன் எரிமலைக்கு நிகரான கொந்தளிப்போடு அவர்களை கண்கள் சிவக்க முறைத்தார்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா