“நீ குழந்தை இல்லைன்னு எனக்குத் தெரியும் டி என் பொண்டாட்டி..” என்று அவளின் முகமெங்கும் தன் முத்திரையைப் பதித்தவன், மீண்டும் அவளை இறுக அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைக்க.. நீருவுக்கு அதில் ஏதோ ஒரு தவிப்புத் தெரிந்தது.
என்னவெனப் புரியவில்லை என்றாலும் அவள் அணிந்து இருக்கும் கோபமெனும் முகமூடியையும் மீறி ஏதோ ஒன்று அவளைத் தாக்கியது. அதில் தன்னையும் அறியாமல் அவனை அணைத்தவள், மெல்ல சஞ்சய்யின் தலையை வருடி கொடுத்தாள்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக சஞ்சய்யின் மனம் நிலையானது. வெகு நாட்களுக்குப் பிறகான அவளின் இந்த எதிர்வினை அவனைச் சமன் செய்து இருந்தது. “பார்த்து இருந்துக்குவ தானே டி குல்பி.. போகவே மனசில்லை டா.. ஆனா போய்த் தான் ஆகணும்..” என்றவன் அவளின் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி கலக்கத்தோடு கேட்கவும், அவனின் கலக்கத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் ஒரு நொடி கூட யோசிக்காமல் ‘ஆம்’ என விழியசைப்பில் பதிலளித்து இருந்தாள் நீரு.
மீண்டும் தன் முத்திரைகளைப் பதித்தவன், நீருவை அணைத்துக் கொள்ள.. இப்போது அவனின் உடல் மொழிக்கான காரணம் நீருவுக்குத் தெளிவாகப் புரிந்தது.
மெதுவாக சஞ்சய்யின் முதுகை நீவி விட்டுக் கொண்டு இருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை. ஆனால் இந்த ஒன்றே போதும் என்பது போல் இருந்தது அவனுக்கு. பின் “டேக் கேர் டி குல்பி..” என விலகி இரண்டடி எடுத்து வைத்தவன், திரும்பி “பிளீஸ் டி.” என்ற வார்த்தையோடு அவள் அதை உணரும் முன் நீருவின் இதழை சிறை எடுத்திருந்தான்.
வெகு நிதானமாக ஆழ்ந்த இதழொற்றல். நீருவுமே விலகவில்லை என்பதால் நிறைவாகவே நீண்டது. என்றுமே அவளால் சஞ்சய்யின் அருகாமையை விலக்க முடியாதே.. அதற்குப் பயந்து தானே அவனை அருகில் அனுமதிக்காமல் கோபம் என்ற போர்வையில் தள்ளி நிற்கிறாள்.
இன்றும் அப்படியே தான் சஞ்சய்யின் செய்கைக்கு உடன்பட்டு அவன் கைகளில் கறைந்து கொண்டிருந்தாள். மெல்ல அவளிடமிருந்து விலகியவன் “தேங்க்ஸ் குல்பி.. அண்ட் சாரி டி ரொம்பக் கஷ்டபடுத்திட்டேனா..” என்றான் குற்றவுணர்வோடு கூடிய குரலில்.
நீரு எதுவும் சொல்லாமல் அவனையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்க.. இதற்கு மேல் இங்கு நின்றால் மனம் தன் வசம் இழந்து விடும் என்று புரிய.. “பை டா..” என்று விலகி சென்று விட்டான்.
அன்று முழுவதுமே நீருவுக்கு மனம் ஒரு வித நிறைவில் இருந்தது. கிளம்பும் நேரம் அவனின் தவிப்பு தனக்கானது என்று கண்டுக்கொண்டவளுக்கு அந்த ஒன்றே மனதை நிறைத்து இருந்தது. அங்கு ராணியும் ராமின் பிரிவை தான் ஏற்றுக் கொள்ளப் பழகி கொண்டு இருந்ததால் இருவரில் நாளுமே அப்படியே கழிந்தது.
அதற்கடுத்தடுத்த நாட்களில் இருவரும் கதை பேசி கொண்டும் குழந்தையைக் கவனித்துக் கொண்டும் என்று நாட்கள் நகர்ந்தாலும் மனம் அவ்வபோது அவரவர் கணவன்களைத் தேட தான் செய்தது. சஞ்சய் மேல் முன்பு இருந்த கோபம் கூடக் கொஞ்சம் போல நீருவுக்குக் குறைந்து தான் இருந்தது என்பதை அவளே உணரவில்லை.
எங்கு என்ன வேலையில் இருந்தாலும் தினம் இருமுறையாவது அழைத்து அவளின் நலனை விசாரித்து விடுவான் சஞ்சய். சில நேரங்களில் நான்கு வார்த்தைகளுக்கு மேல் பேச கூட நேரம் இருக்காது. அவன் கேட்க வந்ததை மட்டும் கேட்டு விட்டு வைத்து விடுவான்.
அப்படிபட்ட நேரங்களில் அவனை வாய்க்குள்ளேயே வறுத்தெடுத்துக் கொண்டு வெகு நேரம் தனிமையில் அமர்ந்து இருப்பாள் நீரு. இத்தனைக்கும் அவன் பேசும் போது ஒன்றும் மேடம் காதல் மனைவியாக மாறி கொஞ்சி எல்லாம் பேச போவதில்லை. அவன் கேட்பதற்கு எல்லாம் ‘ம்ம்’ ‘ம்ஹும்’ என்று தான் பதில் வரும். இருந்தும் அவன் குரலை கேட்டுக் கொண்டு இருப்பதில் அப்படி ஒரு நிம்மதி மனமெங்கும் பரவுவதை உணருவாள். ஆனால் இதே ஆசையும் ஏக்கமும் அவனுக்கும் இருக்கும் என்பதை உணர தவறினாள்.
அதிலும் இப்போது வீட்டில் இருந்து வெளியே இருப்பவனுக்கு அந்த ஏக்கமும் தேடலும் அதிகம் இருக்கும் என்று புரியாமல் அவளறியாமலே அவனை நோகடித்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. சஞ்சய் சொல்லி இருந்தது போல அவனால் வீடு திரும்ப முடியவில்லை. நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் இருந்தது. உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இன்னும் சில நாட்கள் ஆகும் என்று சொல்லி சஞ்சய் தள்ளி போட்டுக் கொண்டே செல்ல.. இங்கே மீண்டும் அவன் மேல் கோபம் எழ துவங்கியது நீருவுக்கு. அவனை மனதளவில் எவ்வளவு தேடுகிறாள் என அவளுக்கு மட்டுமே தெரியும்.
இரவில் பல நாட்கள் அவனின் பாதுகாப்பான அணைப்பு இல்லாமல் உறக்கம் இன்றி விழித்தே இருந்து இருக்கிறாள். அந்த நிமிடம் அவன் குரலை கேட்டால் கூடப் போதும் என மனது சண்டி தனம் செய்யும்.. ஆனாலும் சஞ்சய்யை அழைக்க ஏதோ தடுக்க அமைதியாக இருந்து விடுவாள்.
சிறு குழந்தைகள் ஊருக்கு சென்ற தாயோ தந்தையோ திரும்பி வரும் நாளை இன்னும் ஐந்து நாள்.. நான்கு நாள்... என எண்ணுவது போல எண்ணி கொண்டு நாட்களைக் கடத்தியவளுக்கு இந்தப் பதில் கோபத்தைக் கொடுப்பது இயல்பு தானே.
அடுத்ததாக இரண்டாவது முறையும் அவன் தவணை சொல்ல.. பேசி கொண்டு இருக்கும் போதே பாதியில் வைத்து விட்டாள் நீரு. மீண்டும் மீண்டும் சஞ்சய் அழைத்த போதும் அவள் அதை எடுக்கவில்லை. இப்போது அவளைச் சமாதனபடுத்த முடியாது என்று புரிந்த போதும் சஞ்சய்க்கு மனம் கேட்கவில்லை.
குறுஞ்செய்தியில் மன்னிப்பை யாசித்து இருந்தான். அதைப் பார்த்ததற்கான அடையாளம் தெரிந்தும் பதில் இல்லாமல் போகவே அவளின் கோபம் உச்சத்தில் இருப்பது புரிந்து அவளை மேலும் தொல்லை செய்யாமல் விட்டு விட்டான்.
அன்று மட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களும் நீரு அவனின் அழைப்பை எடுக்கவில்லை. எனவே குறுஞ்செய்தியிலேயே அவளின் நலனை விசாரித்தவனுக்கு அவளின் பதில் தான் கிடைக்காமல் போனது.
“அம்மு சாப்பிட்டியா டா..”
“..”
“என்ன பண்றே.. மருந்து எடுத்துகிட்டியா..?”
“...”
“அம்மு பேசு டி.. நீ சொல்ற அந்த ம்ம் ம்ஹும் கூட இல்லாம கஷ்டமா இருக்கு டி..”
“..”
“என்னைப் புரிஞ்சுக்க டா.. எனக்கும் உன்னை விட்டு இருக்க ஆசையா என்ன..? எனக்கும் தான் உன்னைப் பார்க்கணும், உன் கூடவே இருக்கணும்னு தோணுது.. ஆனா இதையும் பார்க்கணுமே டி.. அம்மு.. பிளீஸ் டி..”
இப்படித் தினமும் அவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கெஞ்சி கொண்டு தான் இருந்தான். அனுப்பிய உடனே நீரு அதைப் பார்த்து விட்டாள் என்பதற்கான் நீல குறியிடும் கூட வரும். ஆனால் பதில் மட்டும் தான் வராது.
இங்கு இந்த மெசேஜை பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்கள் அந்த மெசேஜை விட்டு கொஞ்சமும் நகரவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகான அந்த அம்மு என்ற அழைப்பு அவளின் தாயையும் தனக்குத் தெரியாமலேயே தாயாய் நின்று தாங்கியவனையும் நினைவுபடுத்த.. கண்கள் கலங்கி போனது.
“சாருக்கு மெசேஜ்ல பேசினா மட்டும் தான் அம்மு வரும் போலப் பொறுக்கி..” என்றவளின் வார்த்தையிலும் சரி குரலிலும் சரி கொஞ்சமும் கோபமென்பதே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் சஞ்சய்யின் மேல் அவளுக்கும் மலையளவு கோபம் இருந்தது தான்.
ஆனால் ராமுவுமே இதே போலத் தான் சொல்லி இருப்பது புரிய.. சற்று அமைதியானவள். அதுவரை கவனிக்கத் தவறிய கொரோனா பற்றிய செய்திகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். காவல்துறையினர் எந்த அளவுக்கு மக்களுக்கு நிலைமையைப் புரியவைக்கக் முயல்கின்றனர் என்பதுவும் அதை அலட்சியம் செய்து கொஞ்சமும் அக்கறையில்லாமல் இருக்கும் மக்களின் போக்கும் அதனால் கடந்த சில நாட்களாக ஏறு முகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வது எனப் பார்க்க பார்க்க நிலைமையின் விபரீதம் புரிய துவங்கியது.
அதிலும் மருத்துவர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆட்கள், பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பவர்கள் எல்லாம் எந்த அளவு தங்கள் உயிரையே பணையம் வைத்து வேலை செய்கிறார்கள் என்று புரிய..
இவர்களைப் பள்ளி மாணவர்கள் முதல் நாட்டின் தலைவர்கள் வரை புகழ்ந்து பேசுவதும் அவர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்துவதுமாக ஏதோ ஒரு செய்தியோ குறும்படமோ கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க இத்தகைய உன்னதமான வேலையில் தன் கணவனும் பங்கேற்று இருக்கிறான் என மனம் பெருமை கொண்டது.
அங்கு அவர்களுக்கு இருக்கும் வேலைபளுவும் நாடே விடுமுறையில் இருக்கும் போது நாம் மட்டும் வேலை செய்ய வேண்டுமா எனச் சண்டி தனம் செய்யும் சிலரை இழுத்து பிடித்து வேலை வாங்குவதில் உள்ள சிரமமும் எனச் செய்தி அறிக்கை விளக்கி கொண்டே செல்ல.. இதில் நாம் வேறு பேசாமல் அவன் மனதை நோகடித்து விட்டோமே என வருந்த தொடங்கினாள் நீரு.
அப்போது அவளின் எண்ணத்தின் நாயகனே தொலைக்காட்சி திரையில் தரிசனம் கொடுத்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள் சந்தோஷ அதிர்வில் அப்படியே உறைந்து போய் அமர்ந்து விட.. கண்களோ மழையெனப் பொழிய துவங்கியது.
ஒரு செய்தி சேனலுக்குச் சிறு பெட்டி ஒன்றை கொடுத்து இருந்தான் சஞ்சய். “உங்களுக்காகத் தான் நாங்க எங்க குடும்பத்தை விட்டு தள்ளி இருந்து இதெல்லாம் செய்யறோம்.. நீங்க ஒத்துழைத்தால் மட்டுமே எங்கள் இலக்குச் சாத்தியம் ஆகும்.. ஒரு கை தட்டினால் ஓசை வராது.. இரு கை தட்டணும்.. உங்களுக்காக உழைக்கத் தயாரா இருக்க எங்க கூடச் சேர்ந்து கரம் கோர்த்துக் கை தட்ட நீங்க தயாரா..” என்று அவன் மக்களைப் பார்த்து கேட்டுக் கொண்டு இருந்தான்.
அவ்வளவு சோர்வு தெரிந்தது அவன் உடலிலும் முகத்திலும். இதுவரை இப்படி ஒரு சஞ்சய்யை நீரு பார்த்ததே இல்லை. ‘அவ்வளவு வேலையா உறக்கமே இல்லாமல் உழைக்கிறானா..!?’ என மனம் மருகியது. களைத்து போன முகம் சோர்வான கண்களுமாக நின்றிருந்தாலும் அவனிடம் அந்த மிடுக்கு துளியும் குறையவில்லை.
‘இவ்வளவு வேலைக்கு இடையிலும் என் நலனை அறிய முயன்றானா..?!’ என்று என்னும் போதே இதுவரை திரும்ப அவனின் நலனை விசாரித்து ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் போனது மனதை வலிக்கச் செய்தது.
இத்தனை நாட்கள் அவனோடு பேசாமல் இருந்து அவனை மேலும் துன்புறுத்தியது வேறு மனதை பாராமாக்க.. யோசிக்காமல் அறைக்குள் நுழைந்து சஞ்சய்க்கு அழைத்து விட்டாள்.
அவனுடனான பிணக்குக்குப் பிறகு இத்தனை மாதத்தில் இப்போது தான் அவளாக அழைக்கிறாள் என்பதால் உடனேயே எடுத்து இருந்தவனின் குரலில் அத்தனை பதட்டம். “நீரு என்ன டா.. உடம்புக்கு ஒண்ணுமில்லையே, ஏதாவது வேணுமா..?” என்று கேட்டு கொண்டிருந்தவனுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல்,
“எங்கே இருக்க..?”
“ரூமுக்கு வந்துட்டேன் டா.. என்னம்மா என்ன பண்ணுது உனக்கு.. வலி ஏதாவது இருக்கா..?!” என்று என்றும் இல்லாத திருநாளாக அவளின் அழைப்பிலும் விசாரிப்பிலும் சஞ்சய் பதறிக் கொண்டிருக்க.. அவளோ கூலாக, “வீடியோ காலுக்கு வா..” என்றிருந்தாள்.
“ஆங்”
“ஏன் காது கேக்காதா உனக்கு..?”
“இல்லை.. என்ன விஷயம் டா..” என்றவனின் குரலில் அத்தனை தயக்கம்.
“ஓ.. விஷயம் என்னன்னு சொன்னா தான் சார் வருவீங்களா..?”
“அப்படி இல்லை டா.. ஒரு டென் மினிட்ஸ் கொடுக்கறீயா..!!”
“எதுக்கு?”
“குளிச்சிட்டு இருக்கேன் டி”
“அதுக்கு”
“என்னது அதுக்கா..!!”
“ம்ம்.. உடனே ஆன் செய்..”
“அடியேய்.. புரிஞ்சுக்க டி.. உன் கால்லை பார்த்து பாதில வந்து எடுத்து இருக்கேன்.. டென்..”
“தனியா தானே குளிக்கற..” என்ற அடுத்த நொடி அவளின் கால் கட் செய்யப்பட்டு விடியோ கால் வந்து இருந்தது. இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போன்ற ஒரு புன்னகையோடு எடுத்து இருந்தவள், அவன் தன்னைப் பார்க்கும் முன் மீண்டும் முகத்தை ஊரென்று வைத்து கொண்டாள்.
சோப்பு நுரை வழிய குளியலறையில் நின்று இருந்தவனைச் சில நொடிகள் நிதானமாக அளவெடுத்தவள், “இதுக்கு எதுக்கு அவ்வளவு சீன்.. ஏதோ இவரு அழகுல நாங்க அப்படியே மயங்கிடற மாதிரியும்.. இல்லை இதுக்கு முன்னே நாங்க பார்க்காத மாதிரியும்..” என்று நொடித்துக் கொண்டாள்.
“ஒருத்தி அப்படித் தான் மயங்கி இரண்டு வருஷம் முன்னே தலை குப்பற விழுந்துட்டா..” என்றான் குறும்பான கண் சிமிட்டலோடு. “ஐயோ பாவம்.. அது ஏதாவது விவரம் இல்லாத பொண்ணா இருக்கும்..” என்றவள், “ம்ம்.. முன்னைக்கு இப்போ நல்லா பல்கா தான் இருக்க, செம்ம ஊட்டமோ..?” என்றாள் கிண்டலாக.
“சாப்பாடு எல்லாம் பிரச்சனை இல்லை டா.. எனக்குத் தான்..” என்றவன் உன் நினைவில் சாப்பாடு இறங்கவில்லை என்று வாய் வரை வந்ததை அப்படியே நிறுத்தி கொண்டாலும் அவனின் மனையாள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டாள்.
இப்படியே வம்பிழுத்து இரவில் உறங்குகிறானா.. எப்போது போகிறான் எப்போது வருகிறான் என்றெல்லாம் மறைமுகமாக விசாரித்துத் தெரிந்து கொண்டவள், “சரி சரி.. எனக்குப் பசிக்குது.. வெட்டி கதை பேச எனக்கு நேரமில்லை..” என்று வைத்துவிட்டாள்.
பின் அவனை எண்ணி சிரித்துக் கொண்டே படுத்து இருந்தவளுக்கு மனம் நிறைவாக இருந்தது. அங்கு சஞ்சய்யும் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். முதலில் அவளின் அழைப்புக்கான காரணமும் பேச்சின் போக்கும் புரியவில்லை என்றாலும் சில நொடிகளிலேயே அதைக் கண்டு கொண்டான்.
அவளின் கண்களில் தெரிந்த காதலும் தவிப்பும் அவனின் பழைய குல்பியை அவனுக்கு அடையாளம் காண்பித்து இருந்தது. ஆனால் இதெல்லாம் நிஜம் தானா, திடீரென இது எப்படிச் சாத்தியம் என எதுவும் புரியாமல் திகைத்து இருந்தான்.
அடுத்தடுத்த நாட்களில் ஓரளவு தெளிவாகவே இருந்தாள் நீரு. ராணியோடு சேர்ந்து கதையளந்து கொண்டும் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டும் யூ டியூப் பார்த்துப் புதிதாக எதையாவது சமைத்து பார்த்து அவர்களே பாராட்டி கொண்டு என்று இருப்பதற்குள்ளேயே சந்தோஷமாக இருக்கப் பழகி கொண்டு நாட்கள் நகர்ந்தது.
வாரத்தில் இரண்டு முறை சஞ்சய் அனுப்பி விட்டதாகவும் ராம் அனுப்பி விட்டதாகவும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வீடு தேடி வந்து கொண்டிருந்ததால் எந்த ஒரு சிரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. இடையில் வித்யாவோடு பேசிய போது தான் சஞ்சய் அவள் இங்கு இருந்து கிளம்பியதில் இருந்து எப்படி நிழலாக எல்லாம் செய்தான் என்றும் இவள் கனவு என்று எண்ணி இருந்தது எல்லாம் நிஜம் தான் என்றும் தெரிந்து கொண்டாள்.
அவன் காதலை எண்ணி நெகிழ்ந்து போனாள். இப்படி ஒருத்தன் தன் கணவனாக வர எந்தப் பிறவியில் என்ன தவம் செய்து இருப்பேன் என்று தெரியாமல் கலங்கினாள். அவனை இப்போதே காண வேண்டும் என்றும் அவனுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத அளவு தனக்கு அவன் மேல் இருக்கும் காதலை கட்டி அணைத்து வெளிபடுத்தும் நாளை எண்ணி ஏக்கத்தோடும் காத்திருக்கத் துவங்கினாள்.
இன்றே இதை அவனிடம் அலைபேசியில் அவளால் பகிர்ந்து கொண்டிருக்க முடியும், ஆனால் இவ்வளவு அன்பை சுமந்து கொண்டு தள்ளி நிற்பவனின் மனதை இன்னும் பலவீனமாக்க விரும்பாமலே அவன் நேரில் வரும் நாளுக்காகக் காத்திருந்தாள்.
அவள் மனதில் சஞ்சய் மேல் இருந்த சிறு கோபமும் எப்போதோ விடை பெற்று சென்று இருக்க முக்கியக் காரணம் தொடர்ந்து தினமும் கொத்துக் கொத்தாக விழும் மரணங்கள். இந்தத் துறை தான் என்று இல்லை. தற்சார்பு பணியாளர்கள் துவங்கி மருத்துவர்கள் காவல்துறையில் உள்ளவர்கள் துப்பரவு தொழிலாளர்கள் என்று மக்கள் பணியில் ஈடுபட்டவர்கள் என மட்டுமில்லாமல் சிறு குழந்தைகள் முதல் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் குடும்பத்திற்கே தூணாக இருப்பவர்கள் பல கனவுகளோடு கல்லூரியில் காலெடுத்து வைத்திருக்கும் இளம் தலைமுறை இத்தனை வருடங்களாகத் தனக்காக உழைத்த பெற்றோர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சம்பாதிக்கத் தொடங்கி இருக்கும் பிள்ளைகள் என இவர்கள் தான் என்று இல்லமால் எல்லாரும் இறந்து கொண்டிருந்தனர்.
பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்றும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இவளுக்கு இருந்த பயம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியது தான். இப்போது இருக்கும் சூழ்நிலை எதிர்காலம் என்பது எப்படிபட்டது என்பதை யாராலும் கணிக்க முடியாதது என்று தெள்ள தெளிவாகப் புரிய வைத்துக் கொண்டிருந்தது.
சஞ்சய்யின் வேலை தான் அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனப் பயந்து கொண்டிருந்தவளுக்கு ஆபத்து என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதை இது தெளிவாக்கி இருந்தது. யாருடைய வாழ்க்கையும் இப்படித் தான் என யாராலும் நிர்ணயிக்க முடியாது என்றும் புரிந்தது.
தன்னை விரும்பி பல வருடம் காத்திருந்து அழகாகக் காய் நகரத்தி மணந்து இன்று வரை தன்னைக் கண்ணுக்குள் வைத்து காத்து என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒருவனுக்காக அவனுக்குப் பிடித்த ஒரே ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டாள் நீரு.
ஆனால் அதை நேரில் தான் வெளிபடுத்த வேண்டும் என்று மட்டும் உறுதியாக இருந்தாள் நீரு. தன் அன்பு கூட அவனைப் பலகீனபடுத்தக் கூடாது என்று எண்ணினாள்.
சஞ்சய்யின் நினைவுகளிலேயே புதிதாகக் காதல் வந்த சிறு பெண் போல் கனவுலகில் தன் நிறைமாத வயிற்றோடு சுற்றி திரிந்து கொண்டிருந்தவள், அவன் அதிகம் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் தொட்டு அவனின் அருகாமையை உணர முயன்று கொண்டிருந்தாள்.
அப்படிக் கடைசியாக அவள் வந்து நின்றது சஞ்சய்யின் பிளாக் ஸ்டோனின் முன்.
அதனுடனான பல பசுமையான நினைவுகள் திருமணத்துக்கு முன் பின் என்று தொடர்ச்சியாக அவளுக்கு நினைவுக்கு வந்தது. அதை மெல்ல தொட்டுத் தடவி சுற்றி வந்தவளுக்கு சஞ்சய் அதன் மேல் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் காட்சி கண் முன் விரிந்தது.
“டேய் ஜூனியர் பொறுக்கி.. எங்கே டா உங்க அண்ணன் அந்தச் சீனியர் பொறுக்கி.. எப்போ வருவான்..” என்றவள் பிளாக் ஸ்டோன் மீதான பயணத்தை ரொம்பவே மிஸ் செய்தாள். நீறு கருவுற்று இருப்பதை அறிந்த நாள் முதல் சஞ்சய் அவளைக் காரில் தான் அழைத்துச் செல்வான்.
அவளின் நல்லதற்காகத் தான் இது என்று புரிந்து இருந்தாலும் மனம் ஏனோ அவர்களின் காதல் வாகனத்தையும் அதனுடனான பயணத்தையும் எண்ணி ஏங்கியது.
“முதலில் அந்தப் பொறுக்கி வந்ததும் இதுல ஒரு ரவுண்டு போகணும்..” என்றவள், ஒரு பறக்கும் முத்தத்தை அதற்குக் கொடுத்து விட்டே வீட்டிற்குள் சென்றாள்.
நீருவின் பிரசவ தேதியை கணக்கிட்டு அதற்கு இருபது நாட்கள் முன்பே தன்னை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முறைப்படி விடுவித்துக் கொண்டு தனிமைபடுத்திக் கொண்டான் சஞ்சய். கொரோனாவுக்கான பரிசோதனைகளும் செய்து கொண்டு வீடு திரும்பப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கத் தொடங்கினான்.
இங்கு சஞ்சய் ஒவ்வொரு நாளையும் கணக்கிட்டு தள்ளி கொண்டிருந்தான் என்றால் இந்த விவரம் அறிந்த நீருவும் அவனுக்குத் தன் மன மாற்றத்தை சொல்லி அவனின் முகபாவத்தைக் காணும் நொடிக்காக இதே போல நாள் கணக்கிட்டு ஒவ்வொரு மணி நேரத்தையும் தள்ளிக் கொண்டிருந்தாள். ஆனால் விதியின் கணக்கு தான் வேறாக இருந்தது.
மருத்துவர் குறித்து இருந்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நீருவுக்கு வலி எடுக்கத் துவங்கி விட்டது. முதலில் இதைக் கண்டு பதறினாலும் அழகாக அந்த நிலைமையைக் கையாண்டு நீருவை அழைத்துக் கொண்டு கை குழந்தையோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருந்தாள் ராணி.
நீருவின் வலியை கண்ட உடனேயே சஞ்சய்க்கும் ராமுக்கும் அழைத்துச் சொல்லி விட்டு இருந்தாள். ராணி கை குழந்தையோடு நின்று தனியாக அனைத்தையும் சமாளிக்க வேண்டி இருந்ததால் மேலும் அவளைக் கலவரபடுத்த விரும்பாமல் முடிந்தவரை நீரு தன் வலியின் அளவை முழுமையாக வெளிபடுத்திக் கொள்ளவில்லை.
ஆனாலும் இந்த வலியை அளவை அனுபவபூர்வமாக அறிந்து இருந்த ராணிக்கு நீருவின் திடமும் சமாளிக்கும் விதமும் தெரிந்தே இருந்தது. மருத்துவமனை வந்ததில் இருந்து ஒரு பதட்டமும் படபடப்பும் தொற்றிக் கொள்ள ராணி சற்று தடுமாறச் சரியாகத் தன் தனிமைபடுத்தல் முடிந்து வந்து இணைந்து கொண்டு தோள் கொடுத்தான் ராம்.
இதில் அவன் உள் நின்று செய்ய எதுவும் இல்லை என்பதால் குழந்தையின் பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டு ராணியை நீருவை பார்த்துக் கொள்ள உள்ளே அனுப்பி வைத்து வெளியில் நின்று செய்யும் அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.
சஞ்சய்க்கு தான் இங்குப் பதினான்கு நாட்கள் முடிந்து இருந்தாலும் இறுதியாகச் செய்ய வேண்டிய பரிசோதனை முடிவுகள் வர தாமதமாகி கொண்டு இருந்தது. மனதின் பதட்டத்தோடும் பரிதவிப்போடும் தன் மனையாளின் வலியையும் சேர்த்து மனதில் தாங்கி நின்று தவித்துக் கொண்டிருந்தான்.
பிரசவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடக்க.. நீருவை அந்தத் தளத்தில் முடிந்தவரை நடக்கச் சொல்லி இருந்தார் மருத்துவர். வீட்டில் வலியை உணர்ந்த நொடி முதல் இதோ இந்த நிமிடம் வரை நீரு கத்தி அழுது ஆர்பாட்டம் எதுவும் செய்யவில்லை.
“வலியை மறைச்சுக்காதே நீரு, உனக்கு எப்படி வெளிபடுத்தணும்னு தோணுதோ அப்படிச் செய்.. இது உனக்குத் தான் கஷ்டம்..” என ராணியும் எத்தனையோ முறை சொல்லி பார்த்து விட்டாள். அதற்கு ஒரு இதழ் கடிப்போடு கூடிய சிறு புன்னகையையே பதிலாகத் தந்தாளே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.
இப்போதும் கூட வலியோடு நடக்க வேறு வேண்டும் எனும் போது அது எந்த அளவுக்கு உயிர் வரை தீண்டும் வலியை கொடுக்கும் என்று அறிந்திருந்த ராணி வேதனையோடு இப்போதும் அதை வெளிகாட்டாமல் இருக்கும் நீருவையே பார்த்து கொண்டிருந்தாள்.
இதற்கு மேல் நடக்கமுடியவில்லை என்பது போல் சுவரோடு ஒட்டி நீரு மூச்சு வாங்க நின்று கொள்ளவும் அவளின் நிலையை உணர்ந்தவள், யாரையாவது அழைக்க எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க.. ஆட்கள் அருகில் யாரும் இல்லாமல் போனாலும் சற்றுத் தொலைவில் ஒரு சக்கர நாற்காலி இருப்பது தெரிய, அதனிடம் விரைந்தாள்.
நடக்கச் சென்றவர்களை இன்னும் காணவில்லையே எனப் பார்க்க வந்த ராம் ராணியின் பரபரப்பை கண்டு ஏதோ சரியில்லை என்று அங்கு விரையவும், நீரு இதற்கு மேல் என்னால் நிற்க முடியாது என்பது போலக் கண்மூடி தரையில் மடங்கி விழ போனாள்.
அவளைத் தரையில் விழாமல் சரியாக இரு வலிய கரங்கள் தாங்கி பிடிக்கவும், அந்த நிலையிலும் அந்தக் கரங்களுக்குச் சொந்தகாரனை உணர்ந்தவள் தன் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி கண்ணைத் திறந்து பார்க்க “ரொம்ப வலிக்குதா டா..?” என்று வேதனையைச் சுமந்த கேள்வியோடு அங்கு நின்றிருந்தான் சஞ்சய்.
அதுவரை கட்டுபடுத்திக் கொண்டு இருந்தவள் தன்னவனைக் கண்டவுடன் “ஆஆஆஆ..” என்று கத்தி தன் இத்தனை நேர வேதனையை வெளிபடுத்தவும் துடித்துப் போய் அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளி கொண்டான் சஞ்சய்.
“ஒண்ணுமில்லை டா.. ஒண்ணுமில்லை டா..” என்றவாறு நீருவை தூக்கி கொண்டு வேகவேகமாக மருத்துவரிடம் விரைந்தவாறே அவளுக்குத் தேறுதல் சொல்லி கொண்டிருந்தான் சஞ்சய்.
“ரொம்ப வலிக்குது.. முடியலை டா பொறுக்கி..” என அவ்வளவு நேரமும் பெரிய மனுஷியாக நின்று வலியைக் கூட மற்றவர் முன் வெளிபடுத்தி அவர்களைக் கலவரபடுத்த விரும்பாமல் கட்டுபடுத்திக் கொண்டிருந்தவள், தன்னவனைக் கண்ட நொடி பிறக்க போகும் குழந்தைக்குப் போட்டியாக அவனின் முதல் குழந்தையாக மாறி அவனிடம் ஆறுதல் தேடி கொண்டிருந்தாள்.
சஞ்சய்யின் சட்டையைப் பற்றிக் கொண்டு அந்த நிலையிலும் மூச்சு வாங்க “இப்போ கூட லேட்.. இன்னைக்குக் கூடச் சீக்கிரம் வரலை, உனக்கு எப்போ தான் டா நான் முக்கியமா தெரிவேன்..” என்று சண்டையிட்டாள்.
“இல்லை டா.. இன்னைக்கு ரிசல்ட் வர லேட் ஆகிடுச்சு மா.. சாரி டா.. சாரி.. அது தெரியாம வர முடியலை மா..” என்று இவ்வளவு பொறுமையாகக் கூட இவனுக்குப் பேச வருமா என்று வியக்கும் வகையில் பதிலளித்துக் கொண்டு சென்றான். ராமும் ராணியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
அதற்குள் மருத்துவரை அணுகி நீருவை உள்ளே அழைத்துச் செல்ல சஞ்சய் முயல, “எவ்வளவு வலிக்குது தெரியுமா டா.. நீ பொறுமையா வந்துட்டு ரீசன் வேற சொல்றே, உனக்கும் தானே இதுல பங்கு இருக்கு.. பாப்பாவுக்கு நான் தான் அப்பான்னு நீ தானே கெத்தா சுத்த போறே.. அப்போ ஏன் டா நான் மட்டும் வலியை தாங்கணும்.. இத்தனை மாசம் நான் சுமந்தேன் இல்லை, இப்போ நீ வலி தாங்கு.. நானே ஏன் தாங்கணும்..” என்றாள் ஆத்திரமாகச் சஞ்சய்யின் சட்டையைப் பற்றி உலுக்கி கொண்டே.
நீருவின் இந்த வேதனையைத் தாங்க முடியாத சஞ்சய் முகம் கசங்க, “கொடுக்க முடிஞ்சா என்கிட்ட அந்த வலியை கொடுத்துடு டி.. நான் வாங்கிக்கறேன், உன்னை இப்படிப் பார்க்க என்னால முடியலை டி..” என்றான்.
மருத்துவக் குழு காத்திருக்க, உள்ளே செல்ல விடாமல் தடுத்தவாறு நீரு பேசி கொண்டிருக்க.. மருத்துவர் அவசரபடுத்துவதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் “நிஜமா வாங்கிக்குவியா..?!” என்றாள்.
“உண்மையா தான் டா..” என்று சஞ்சய் கூறிய அடுத்த நொடி ‘பளார்’ என அவனை அறைந்து இருந்தாள் நீரு. அங்கிருந்த அத்தனை பேரும் சஞ்சய் யார் என அறிந்திருந்ததால் திகைத்துப் போய்ப் பார்த்திருக்க.. அவனோ இங்கு யார் இருக்கிறார்கள் எவர் பார்க்கிறார்கள் என்ற கவலையெல்லாம் துளியும் இல்லாமல் நீருவிடமே தன் முழுக் கவனத்தையும் வைத்து அவளின் அத்தனை அடிக்கும் மாறி மாறி கன்னத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
“ஏன் டா என்னை விட்டுட்டு போனே.. வலி வந்ததும் ஏன் டா வரலை, நான் எப்படி டா அதைத் தனியா தாங்குவேன்.. நீ இல்லாம நான் எப்படி டா சமாளிப்பேன்..” என்றெல்லாம் கேட்டு ஒவ்வொரு கேள்விக்கும் சஞ்சய்யை அடி வெளுத்து கொண்டிருந்தாள் நீரு.
குற்றவாளிகளை அடி வெளுப்பவன் என்று பெயர் பெற்றவன் இங்கு அவனின் மனையாளின் அடிக்கு அடிபணிந்து நின்றிருந்தான். “சார்.. லேட் ஆகுது..” என மருத்துவர் நினைவு படுத்தவும், “குல்பி.. இங்கே பாரு டா, பாப்பா இந்த உலகத்துக்கு வரவும் நம்மளை பார்க்கவும் வைட்டிங் டா.. நீ பாப்பா பொறந்த அப்பறம் வந்து என்னை எத்தனை அடி வேணாலும் கொடு டா.. நான் வாங்கிக்கறேன்.. இப்போ உள்ளே போ டா குல்பி.. பிளீஸ் டா...” என்று கொஞ்சி கூந்தல் ஒதுக்கி நெற்றியில் முத்தமிடவும், “அப்போ நீயும் வா..” என்றாள் அவன் சட்டையை விடாது பற்றிக் கொண்டு.
மருத்துவரும் சம்மதிக்க.. அவளின் வலியை பார்க்கும் சக்தி தனக்கு இல்லை என்று தெரிந்து இருந்தாலும் நீருவின் ஒரே தைரியம் தான் தான் என்று அறிந்து இருந்தவன் மறுக்காமல் உள்ளே சென்றான்.
அடுத்த அரைமணி நேரம் நீருவை துடியாய் துடிக்கச் செய்து இந்த மண்ணில் தன் வருகையைத் தன்னை வெளியே எடுத்த மருத்துவரின் அருகில் நின்றிருந்த செவிலியின் முகத்தில் தன் காலால் ஒரு எத்து விட்டு தான் அதிரடிக்கு பெயர் போன சஞ்சய்யின் மகன் என்பதைத் தவறாமல் பதிவு செய்திருந்தான் அவர்களின் தவப் புதல்வன்.
அவ்வளவு நேரமும் நீருவின் வலது கையைப் பற்றி ஆறுதலாகத் தடவி கொடுத்தவாறே அவளிடம் மெல்ல பேசி கொண்டு இருந்தவன் நீருவின் இந்த வேதனையைக் காண முடியாமல் கண் கலங்கினான். தன் வாழ்க்கையில் எத்தனையோ கொடிய வழக்குகளையும் கொடும் பாதகம் செய்யும் அரக்கர்களையும் அநாயாசமாகக் கையாள்பவன் இன்று இந்தப் பெண்ணவளின் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கலங்கி தவித்தான்.
நீருவை அறைக்கு மாற்றி இருக்க.. பிள்ளையின் சிணுங்கலான அழுகுரல் கேட்டுக் கண் விழித்தவள், தன் முகத்தருகே சஞ்சய்யின் கைகளில் சயனித்து இருக்கும் மகனை விழிகளால் வருட, அவள் தேவை உணர்ந்து குழந்தையை அவளின் முகத்தற்கே சஞ்சய் கொண்டு செல்லவும் அழுந்த முத்தமிட்டாள் நீரு.
பின் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தவனை நீரு விழிகளாலேயே அருகில் அழைக்க.. அப்போது விட்டு சென்ற அடியை தொடர போகிறாள் என்றெண்ணியவன் “இப்போ நீ ரொம்ப வீக்கா இருக்க டா.. உடம்பு சரி ஆனதும் வீட்டுக்கு போய் எவ்வளவு வேணும்னாலும் அடி, நான் வாங்கிக்கறேன்..” என்றான் தலை வருடி நெற்றியில் முத்தமிட்டு.
“என்னைப் பார்த்தா ரவுடி மாதிரியா டா இருக்கு பொறுக்கி..” என்று முறைத்தவளை, சமாதானம் செய்யத் தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்க.. அவனின் திகைப்பை உணர்ந்தவளுக்கு நன்கு புரிந்தது சஞ்சயின் மனநிலை.
இன்னும் தன் மன மாற்றம் புரியாததினாலேயே இப்படி விழிக்கிறான் என்று அறிந்தவள், எப்படி எப்படியோ வெளிபடுத்த நினைத்து அவன் வரவை ஆசையோடு எதிர்பார்த்திருந்த காட்சியெல்லாம் மாறி போய் இருக்க.. இப்போது இங்கு வைத்து சொல்லவில்லை என்றால் வீடு போகும் வரை சஞ்சய்யின் இயல்பை காண முடியாது என்றுணர்ந்து அவன் சட்டையைப் பற்றி அருகில் இழுத்து “நான் கேட்டது போல உன்னைப் போல ஒரு பையன் வந்தாச்சு.. நீ கேட்டது போல என்னைப் போல ஒரு பொண்ணு எப்போ பெத்துக்கலாம், அடுத்தப் பத்துமாசத்துல எனக்கு ஒகே உனக்கு ஒகே வா..” என்றாள் விஷமமான கண் சிமிட்டலோடு.
அதைக் கேட்டு, “என்னதுஊஊஊ..” என்று சஞ்சய் திகைப்பில் கத்த, “ஏன் டா இப்படி கத்தறே.. உனக்கு பொண்ணு வேணாம்னா போ..” என்றாள் ஒரு அலட்சியமான இதழ் சுழிப்போடு.
அவசரமாக “வேணாம்னு இல்லை.. ஆனா..” என்றவனுக்குச் சற்று முன் அவள் துடித்ததே போதுமென்று தோன்றியது. அதை உணர்ந்து இருந்தவளும் “இப்படி எல்லாம் எங்க அம்மா யோசிச்சு இருந்தா அப்பறம் நான் எல்லாம் பொறந்தே இருக்க மாட்டேன்.. அதுக்கு அப்பறம் நீ பொண்டாட்டிக்கு எங்கே போய்த் தேடுவ.. இங்கே பாரு எனக்கு உடனே அடுத்தப் பாப்பா வேணும்.. இந்த முறை தவற விட்டதுக்கு எல்லாம் சேர்த்து உன்னை நாங்க இரண்டு பேரும் ஒவ்வொரு நாளும் கதற விடணும்..” என்று சபதம் போலச் சொன்னாலும் அதில் காதலே நிறைந்து இருந்தது.
அதைச் சரியாகப் புரிந்து கொண்டவனும் “இது தான் உன் லட்சியம்னா அதை நிறைவேத்த நானும் ரெடி, தாராளாமா சீக்கிரமே ஏற்பாடு செஞ்சிடுவோம்..” என்று கூறி நீருவின் கன்னத்தில் மனநிறைவோடு இதழ் பதித்தான். அவளும் அவனைத் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டாள்.
முற்றும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா