சஞ்சயின் வார்த்தைகளைக் கேட்டு அப்பட்டமாக அதிர்ந்தவன், “சார்ர்ர்ர்... என்ன சொல்றீங்க, என்ன என்ன ஆச்சு என் பிரண்ட்ஸ்க்கு...?! சும்மா சொல்றீங்களா அவனுங்களுக்கு ஒண்ணுமில்லையே...?” என்று பதறினான்.
“அவங்களுக்கு நடந்தது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா...?”
“இல்லை சார் எனக்கு நிஜமாவே எதுவும் தெரியலை.. நிஜமாவே இப்போ அவங்களுக்கு எதுவும்...” என எப்படிக் கேட்டபது என்று புரியாமல் தடுமாறியவன், அப்போதே சஞ்சய் கேட்டதின் பொருள் புரிய... “சார்.. நீங்க என்னைச் சந்தேகபடறீங்களா... நான்... நான்... அவங்களை எதுவும் செஞ்சு இருப்பேன்னு... இல்லை சார், அவனுங்களுக்கு என்ன நடந்ததுன்னு கூட எனக்குப் புரியலை சார்...” என்றான்.
“மூணு நாளா டாக் ஆப் தி டவுன் அவனுங்க தான்..."
“சார் போன வெள்ளிகிழமைல இருந்தே நான் நானா இல்லை சார்... மொத அம்மாக்கு உடம்பு முடியலை, போற வழியில போன் உடைஞ்சுது... அங்கே போய் அம்மாவையும் அவ்வளவு நேரம் எல்லாத்தையும் தனியா சமாளிச்சு பயந்து போய் இருந்த சனாவையும் கவனிச்சு... இரண்டு நாள் அதுலேயே போய்டுச்சு... அப்பறமா திடீர்னு கல்யாண ஏற்பாடு, அதுல கூட நின்னு உதவி செய்யக் கூட அங்கே யாருமில்லை சார், நானே எல்லாம் பார்க்கணும்... அவசரமா எல்லாம் ரெடி செஞ்சு முடிச்சு.. அம்மா கூட இரண்டு நாள் இருந்துட்டு தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி இருக்காங்க அவங்களைக் கூட்டி வந்து அம்மாக்கு துணைக்கு விட்டுட்டு சனாவை கூட்டிட்டுக் காலையில் தான் சென்னையே வந்தேன்... இங்கே வந்து வீட்டில் இருக்கப் பழைய போன் எடுத்துச் சிம் போட்டதும் சார் தான் பேசினாரு.. உங்களை வந்து பார்க்க மட்டும் தான் சொன்னாரு, வேறு எதுவும் சொல்லலை... இந்த அலைச்சலில் டிவியோ பேப்பரோ நான் பார்க்கலை சார்.. போனும் கையில் இல்லாததால எனக்கு எதுவுமே தெரியலை சார்... அவனுங்களுக்கு என்ன நடந்தது சார்...” என்றவனுக்கு, சஞ்சய் அனைத்தையும் சுருக்கமாக ஒரே வரியில் கூற... அப்படியே தலையைக் கையில் தாங்கி கண் மூடி அமர்ந்துவிட்டான்.
சிறிது நேரத்திற்குப் பின் நிமிர்ந்தவனின் கண்கள் கலங்கி சிவந்து இருக்க... “யார் ஏன்னு ஏதாவது தெரிஞ்சுதா சார்...?” என்றான்.
“இன்னும் இல்லை... விசாரிச்சுட்டு இருக்கோம்... கூடிய சீக்கிரம் சிக்கிடுவான்... உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா குமரன்...?”
“எனக்கா... எனக்கு எப்படிச் சார்...?”
“விசாரிச்ச வரையில் நீங்க நாலு பேரும் தான் ரொம்பக் கிளோஸ்னு சொல்றாங்க... அதுல மூணு பேரு இப்போ இல்லைனா...?!!” என்று சஞ்சய் இழுக்கவும்,
“என்னைச் சந்தேகபடறீங்களா சார்...? நான் சொன்னது எல்லாம் நிஜம் சார், இந்த நாலஞ்சு நாளா நான் ஊரில் தான் இருந்தேனான்னு நீங்க வேணா விசாரிச்சுக்கோங்க சார்...”
“யாருகிட்ட விசாரிக்கச் சொல்றீங்க...!! மயக்கத்துல இருந்த உங்க அம்மாகிட்டேயா..?! உங்க காதல் மனைவிக்கிட்டேயா..?! இல்ல ரிஜிஸ்டர்ல மட்டும் வந்தேன்னு காட்டிட்டு லீவ் போட்டு இருந்த உங்க ஊர் டாக்டர்கிட்டேயா...?!” என்றவன், ஒரு சிறு இடைவெளிவிட்டு,
“ஆனா நான் கேக்க வந்தது அது இல்லை... அவங்க மூணு பேரும் இல்லனா அடுத்து உங்ககிட்ட தானே விசாரிக்க முடியும்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அவங்க எப்போவாவது யாரை பத்தியாவது உங்ககிட்ட பேசி இருக்காங்களா... இல்லை வேற ஏதாவது யோசிங்க...”
“அப்படி எதுவும் அவங்க என்கிட்ட சொல்லலை சார்.. இந்தக் கடைசி ஆறு மாசமா நான் அவங்களை அதிகம் பார்க்கலை சார்...”
“அதாவது உங்க சனாவை திரும்பப் பார்த்த பிறகு ரைட்...”
“சார்... இதுக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல சார்... நானா தான்...”
“ரிலாக்ஸ்... நானும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லலையே, அவங்க திரும்ப வந்த பிறகு உங்களுக்குப் பிரண்ட்ஸ்ஸோட இருக்க நேரம் கிடைக்கலை... அவங்களோடவே பேசி இருப்பீங்கன்னு தான் சொன்னேன்...”
“ஆ.. ஆமா... ஆமா சார்...”
“ம்ம்ம்... இவனுங்க பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசம்னு சொல்றாங்களே...?”
“ஆமா சார்..”
“நீங்க எப்படி...”
“சார்... நான் அப்படி இல்லை சார், யார்கிட்ட வேணாலும் கேட்டு பாருங்க சார்...”
“ம்ம்.. கேட்டுப் பார்த்துட்டேன்... அதான் எனக்கு இடிக்குது, எல்லாருமே உங்களை நல்ல பிள்ளைன்னு சொல்றாங்க.. யாருமே அவங்களை நல்ல பிள்ளைன்னு சொல்லலை, அப்படிப்பட்ட அவனுங்க கூட நீங்க எப்படி..?”
“அவங்க என் ப்ரண்ட்ஸ் சார்...”
“அதைத் தான் நானும் சொல்றேன்... உன் நண்பன் யார் என்று சொல் உன்னைப் பற்றி நான் சொல்றேன்னு சொல்லுவாங்க... இங்கே உங்க நண்பர்களைப் பற்றிச் சொன்னா உங்களையும் சேர்த்து தானே தப்பா நினைப்பாங்க.. அப்படிபட்டவங்களோட அவங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நீங்க உங்க பேரும் கெட்டுப் போகக் கூடிய எல்லா வாய்ப்பும் இருந்தும் எப்படி இப்படி ஒரு நட்போட கூட இருந்தீங்க...?”
“சார் நான் அவனுங்களைப் போல வசதியோ அதிகாரமோ இருக்கக் குடும்பத்து பையன் இல்லை சார்... எங்ககிட்ட இருந்த சின்ன நிலத்துல விவசாயம் செஞ்சு தான் அப்பா எங்களைப் பார்த்தினாரு, திடீர்னு ஒரு நாள் தூங்கினவரு மறுநாள் எழுந்துக்கல... அடுத்து என்னன்னு தெரியாம நின்னோம், அப்போ எங்க அம்மாவோட தம்பி என்னைப் படிக்க வைக்கற பொறுப்பை எடுத்துகிட்டு இங்கே என்னைக் கூட்டி வந்தாரு...
அவரு கவர்மெண்ட்ல வேலை செஞ்சாரு, பசங்களும் இல்லை... நல்லா பார்த்துகிட்டாரு படிக்க வெச்சாரு... அவர் பதவியைப் பயன்படுத்தி அவ்வளவு பெரிய ஸ்கூல்ல சீட் வாங்கி எல்லாம் செஞ்சாரு... ஆனா அங்கே படிச்சவங்க எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிய இடத்து பசங்க... அப்போ தான் கிராமத்துல இருந்து வந்த என்னை ஏதோ ஜந்து போலப் பார்த்தாங்க...
எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கபடுத்துவாங்க... என் கூட டீம் ஒர்க், குரூப் ப்ராஜெக்ட்னு எது வந்தாலும் சேர்த்துக்க மாட்டாங்க... டீச்சர்கிட்ட போய்ப் பேசி மாத்திக்குவாங்க, எப்போவும் தனியாவே இருப்பேன்... அப்போ தான் என்னை இவங்க மூணு பேரும் அவங்க கூடச் சேர்த்துக்கிட்டாங்க... இவங்க கூட நான் இருக்க ஆரம்பிச்சதும் யாரும் என்னை ஒரு வார்த்தை சொல்லவும் இவங்க விட்டதில்லை..
எனக்காக எல்லாம் செய்வாங்க... ஆமா சார் அவங்க செய்யற நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிக்காது தான் உடன்பாடு இல்லை தான் ஆனா என்னை எங்கேயும் அதைச் செய்யச் சொல்லி அவங்க வற்புறுத்தினது இல்லை... காலேஜ் லாஸ்ட் இயர் நான் படிக்கும் போது என் தாய் மாமா இறந்துட்டாரு... அத்தை அவங்க அண்ணன் வீட்டுக்கு போய்ட்டாங்க...
அப்போ லாஸ்ட் செமஸ்டர் பீஸ் கட்ட நிலத்தை அடகு வைக்க நானும் அம்மாவும் முயற்சி செஞ்சிட்டு இருந்தோம், எனக்குத் தெரியாமலேயே பீஸ் கட்டிட்டு வந்து நின்னது என் பிரண்ட்ஸ் தான் சார்... அப்படிபட்டவங்க கூட நான் இருக்கறதுல என்ன சார் தப்பு...”
“ம்ம்ம்... உங்களுக்காக இவ்வளவு செஞ்சவங்களை அப்பறம் ஏன் கொன்னீங்க குமரன்...?”
“சார், என்ன சார்... மறுபடியும் அதையே கேக்கறீங்க... நான் ஏன் சார் அவங்களைக் கொல்ல போறேன்... இன்னும் சொல்ல போனா இந்த நியூஸ் கேட்ட பிறகு நிம்மதியா என்னால வாய் விட்டு கூட அழ முடியலை சார்... என் துக்கத்தை மறைச்சுட்டு தான் இங்கே உட்கார்ந்து உங்களுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கேன்...”
“சரி, இதுக்குப் பதில் சொல்லுங்க... மூணு பேருமே ரொம்ப அழகா திட்டம் போட்டுக் கொஞ்சம் கொடூரமா கொலை செய்யப்பட்டு இருக்காங்க... யோசிச்சு பார்த்தா ஏதாவது பொண்ணு விஷயமா தான் இருக்கும்னு புரியுது... அப்படி உங்க உயிர் தோழன்களால மோசமா பாதிக்கப்பட்டவங்க யாரையாவது உங்களுக்குத் தெரியுமா...?!”
“இல்ல சார்.. அவங்க நிறையப் பேர்கிட்ட தப்பா தான் நடந்து இருக்கானுங்க... அதுல யாருன்னு நான் எப்படிச் சார் சொல்ல முடியும், அதிலும் இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் நான் அவனுங்களோட இருக்க மாட்டேன் சார்.. கொஞ்சம் அவங்க மது அதிகம் எடுக்கத் தொடங்கினாலே நான் விலகிடுவேன், எனக்காகவே சில நேரங்களில் மதுவை தாமதமா தொடுவாங்க...”
“நீங்களே சொல்றீங்க அவங்க நிறையப் பெண்கள்கிட்ட தப்பா நடந்து இருக்காங்கன்னு, ஒரு நல்ல நண்பனா அவங்களை நீங்க ஏன் எடுத்து சொல்லி மாற்ற முயற்சிக்கலை.. ஒரு நல்ல நண்பன் எப்போவும் கண்ணை மூடி தன் நண்பன் செய்யும் தவறை ஆதரிக்கறவன் இல்லை, அவங்களையும் நல்வழிபடுத்தறவன் தான், நாம மட்டும் நல்லவனா இருந்தா போதும்னு நினைக்கறவன் இல்லை...”
“நான் சொல்லாம இருந்து இருப்பேனா சார் நினைக்கறீங்க... அவங்க நாங்க உன்னை எதையாவது செய்யச் சொல்லி கட்டாயபடுத்தறோமா, நீயும் அதே போல இருந்துக்கோன்னு சொல்லிட்டாங்க சார்...”
“அப்போ நீங்களாவது விலகி இருக்கலாமே...?”
“நான் ஏன் சார் விலகணும்... மத்தவங்களுக்கு அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு அவங்க நல்ல நண்பர்கள் தானே சார்...”
“ஹ்ம்ம்... அதுவும் சரி தான், நீங்க கெமிக்கல் லைன்ல இருக்கீங்க இல்லையா...”
“ஆமா சார்..”
“உங்க பிரண்ட்ஸ் டெத்ல கூடக் கெமிக்கல் ஒரு மேஜர் பார்ட் பிளே செஞ்சு இருக்கு...”
“சார் அதுக்காக என் மேலே சந்தேகப்படறீங்களா...!! என் கம்பெனில மட்டும் மொத்தம் நானூறு பேர் வேலை செய்யறாங்க... சென்னைல மட்டும் எத்தனை கெமிக்கல் கம்பெனி இருக்கும் சார்.. இந்தியா புல்லா எத்தனை இருக்கும் சார்...” என்றவனின் குரலில் அத்தனை பணிவு இருந்தது.
“ஹா ஹா... அது சரி தான்..” என்று சஞ்சய் ஒரு மார்க்கமாகச் சிரிக்கத் துவங்கவும், குமரனின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. தயக்கத்தோடு பார்த்து அவன் அதைக் கட் செய்யவும், மீண்டும் அடிக்கத் துவங்கியது.
“ஏன் கட் செய்யறீங்க எடுங்க...”
“பரவாயில்லை சார்... நான் அப்பறம்...”
“உங்க மனைவி அங்கே பயந்துட்டு இருப்பாங்க எடுங்க...” என்று சஞ்சய் கூறியதும் அழைப்பது தன் மனைவி தான் என்று எப்படித் தெரிந்தது என்ற யோசனையோடே அதை எடுத்தவன்,
“இல்ல மா.. சீக்கிரம் வந்துடுவேன், ஒன்னும் பிரச்சனை இல்லை...”
“....”
“இல்லை, நான் வந்து சொல்றேன்...”
“....”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை...” என்று சுருக்கமாகத் தயங்கி தயங்கி பேசியவனையே சஞ்சய் கூர்மையான விழிகளோடு அளந்து கொண்டிருந்தான்.
அவன் பேசி விட்டு வைத்தவுடன், “அது எப்படிக் குமரன் அவ்வளவு கான்பிடன்ட்டா சொல்றீங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு...?” என்ற சஞ்சயின் கேள்விக்கு,
“நான் தான் எதுவுமே செய்யலையே சார்... எனக்கு ஏன் சார் பயம்...”
“ம்ம்ம்... அதுவும் சரிதான், மூணு பேரையும் ஒரே மாதிரி கொலை செஞ்சது போலத் தெரிஞ்சாலும், இதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கு... ஒவ்வொருத்தரோட தண்டனையின் அளவும் படிபடியா வேறுபடுது, ஆனா நின்னு நிதானமா அவங்க இறப்பை அவங்க கொஞ்சம் கொஞ்சமா உணரும்படியான தண்டனை...
நம்ம உயிர் உடனே போயிட்டா பரவாயில்லைன்னு ஒவ்வொரு நிமிஷமும் துடிக்க வெச்சு கொன்னு இருக்கான், அந்த அளவு அவனுக்குத் தண்டனை தரணும்னா கொன்னவன் மனதளவில் அவ்வளவு காயப்பட்டு இருக்கான், அவனுக்கு வேண்டிய அவனுக்கு முக்கியமான யாருக்கோ இவங்க மிகப் பெரிய கொடுமையைச் செஞ்சு இருக்காங்க... அதான் பட்டுன்னு உயிர் போகாம, அவங்க கண்ணாலேயே அவங்க மரணத்தைப் பார்க்க வெச்சு இருக்கான்...
இப்படித் தான் டா ஒவ்வொருத்தருக்கும் நீங்க தொடும் போது வலிச்சு இருக்கும்னு அவங்களுக்குக் காட்டி இருக்கான்... அவ்வளவு பெரிய இடத்துல இருக்க மூணு பேர் மேலேயும் இவ்வளவு ஈஸியா கை வெச்சு இருக்கானா அவங்க நம்பிக்கைக்கு உரியவனா தான் இருப்பான்... சோ இது போல உங்களுக்கு அவங்களோட தொடர்பு உடைய யாரையாவது தெரியுமா குமரன்...?!”
“இல்ல சார்.. தெரியலை...” இவ்வளவு நேரம் சஞ்சய் மூச்சை பிடித்துக் கொண்டு பேசியதற்கு ரொம்பவே சிம்பிளாக குமாரனிடமிருந்து பதில் வந்தது.
“உங்க வொய்ப் நிரஞ்சனா...” என்று சஞ்சய் துவங்கியதும் “சார் அவ எதுக்கு சார் இதுல... பிளீஸ் சார் அவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு திரும்பி இருக்கா...” என்று பதறினான்.
“இயல்புக்கு திரும்பறாங்கனா... என்ன மீன்ஸ்ல சொல்றீங்க குமரன், அவங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்ததா...?!”
“இல்ல.. இல்ல சார்.. அவளுக்கு எதுவும் இல்லை... அவங்க அப்பா அம்மா இழப்புல இருந்து மீள முடியாம தனியா தனக்குள்ளேயே சுருண்டு கிடந்தவளை இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே கொண்டு வரேன் அதைத் தான் சொன்னேன்...”
“ஓ... ஒகே, இப்போ நீங்க போகலாம், வெளியூர் எங்கேயும் போகாதீங்க.. புதுசா கல்யாணம் ஆகி இருக்கு... ஆனா வேற வழியில்லை, அப்படியே ஏதாவது அவசரம்னா எங்களுக்குத் தகவல் கொடுத்துட்டு போங்க...” என்றதும் சம்மதமாகத் தலையசைத்து எழுந்து வாசல் வரை சென்றான்.
“கமல் நடிச்ச பாபநாசம் படம் பார்த்து இருக்கீங்களா குமரன்...?”என்ற சஞ்சய்யின் கேள்வி அவனின் நடையைத் தடுத்து நிறுத்தியது.
“இல்ல சார்...” என்று அங்கேயே நின்று திரும்பி குமரன் பதிலளிக்க... “ஓ... அப்போ அவர் நடிச்ச உன்னைப் போல் ஒருவன் பார்த்து இருக்கீங்களா...?” என்றான் வெகு சாதாரணக் குரலில்.
“இல்ல சார்... நான் படம் எல்லாம் பார்க்கறது இல்லை சார்...”
“ஓ... ஒகே ஒகே கேரி ஆன்....” என்றுவிட, குமரன் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வெளியேறுவதை உறுதி செய்து கொண்டே “சார் நீங்க பேசறதை பார்த்தா இவன் தான் அதைச் செஞ்சானா சார்...?”
“ம்ம்... அப்படித் தான் 99.9% எவிடென்ஸ் சொல்லுது...”
“அப்பறம் ஏன் சார்... போக விட்டீங்க...?!”
“அந்தப் பேலன்ஸ் ௦௦.01% சந்தேகத்தை மனசுல வெச்சு தான்... யூ நோ ஆனந்த் சட்டம் என்ன சொல்லுதுனா நூறு குற்றவாளி தப்பிக்கலாம் ஆனா ஒரே ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக் கூடாது... அதான் விட்டுட்டேன்...”
“சார்... யாரு நீங்க..!! 99.9% சந்தேகம் இருந்தும் அவனை வெளியே விடறீங்க அப்படிதானே, இதை நான் நம்பணும்... வெறும் ௦௦.01% சந்தேகம் வந்தாலே அவனை நீங்க சிறப்பா கவனிக்கறதுல மீதி இருக்க 99.9% விஷயத்தையும் அவனா காலில் விழுந்து சொல்லுவான்... இதுல நீங்க சட்டத்தை மனசில் வெச்சு... ஹ்ம்ம்...” என்று ஆனந்த் இழுத்து நிறுத்தவும்,
“ம்ப்ச்... கொஞ்சம் நல்லவன்னு பெயரேடுக்க விடுதா இந்தச் சமூகம்...” எனப் போலியாகச் சலித்துக் கொண்டு சோக முகம் காட்டவும் அவனைப் பார்த்து சிரித்த ஆனந்த், இப்போவே நீங்க நெம்ப நல்லவருஊஊஊ தானே சார்...” என்றான்.
சஞ்சய்யும் அவனோடு சிரிப்பில் இணைந்து கொள்ள, “பிளீஸ் சார் சொல்லுங்களேன்... அவன் தான் இதைச் செஞ்சதா...? இவ்வளவு கிளோஸானவங்களை ஏன் கொன்னான்...? அவனை ஏன் வெளிய விட்டீங்க...?” என்று ஆனந்த் அடுக்கி கொண்டே போகவும்,
“ஹா ஹா விட்டா ஏன்.. ஏன்... ஏன்னு பாட்டே பாடிடுவீங்க போல... இவன் தான் கொன்னு இருக்கான் ஆனந்த்... வெல் பிளான்ட் மர்டர்... இவன் காதலிக்கற பொண்ணு மேலேயே கை வெச்சு இருக்கானுங்க, அது இவனுக்கு இப்போ தான் தெரிய வந்து இருக்கு... என் கணக்கு சரினா லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்னே ஸ்டடி ஹாலிடேஸ் விடும் போது கடைசி நாள் இவங்களுக்கு ஒரு பார்ட்டி போலக் காலேஜில் நடந்து இருக்கு...
அதுல தான் எல்லாரும் இந்தப் பொண்ணைக் கடைசியா பார்த்து இருக்கானுங்க, அப்பறம் எக்ஸாம் எழுத கூட இந்தப் பொண்ணு வரலையாம்... அன்னைக்குப் பார்ட்டி முடியறதுக்கு ஒரு மணி நேரம் முன்னேயே சீக்கிரமா குமரன் ஊருக்குப் போகப் பஸ் டிக்கெட் புக் செஞ்சு இருந்ததாலே கிளம்பிட்டான்... அப்போவே இவனுங்க மூணு பேரும் ட்ரக்ஸ் எடுத்து இருக்கானுங்க, ஒரு ப்ரொபசர் பார்த்து கண்டிச்சு இருக்காரு... அவரையே கிண்டல் செஞ்சு கலாய்ச்சு இருக்கானுங்க...
அப்பறம் எல்லாம் முடியும் போது கிளம்பி இருக்கானுங்க, மே பி வழியிலே அந்தப் பொண்ணைப் பார்த்து இருக்கலாம்... வீட்டில் விடக் கூட்டிட்டு போகும் போது மனசும் மூடும் மாறுச்சா...?! இல்லை அந்தப் பிளான்ல தான் தூக்கினாங்களான்னு அவனுங்களே திரும்ப வந்து சொன்னாதான் உண்டு, கடைசியா அந்தப் பொண்ணை அவங்க வீட்டு வாசலில் வீசிட்டு, பதறி போய் வெளியே ஓடி வந்த அவங்க அப்பாவையும் மிரட்டிட்டு போய் இருக்கானுங்க...
பொண்ணையும் அவ உயிரையும் காப்பாத்த வேற வழி தெரியாத பெரிய இடத்துல மோத கூடிய தைரியம் இல்லாதவர் அன்னைக்கு நைட்டோட நைட்டா ஊரை காலி செஞ்சுகிட்டு கிளம்பிட்டாரு, அதுக்குப் பிறகு எக்ஸாம் டைமுக்கு இங்கே வந்த குமரன் அவளைக் காணாம தேடி போக அக்கம் பக்கத்தில் தெரியலை, நாங்களே பார்க்கலைன்னு தான் தகவல் கிடைச்சு இருக்கு...
ரொம்பப் பயந்து தவித்து குமரன் ஊரெல்லாம் தேடி அலைய கூடவே உதவறது போல அவனுங்களும் சுத்தி இருக்கானுங்க... ஆறு மாசத்துக்கு மேலே தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததுனால குமரன் அமைதியாகிட்டாலும் அவளை மறக்க முடியாம தான் இருந்து இருக்கான்...”
“இப்போ தான் ஆறு மாசம் முன்னே அந்தப் பொண்ணைப் பார்த்தானா சார்...?”
“இல்லை அவன் ஒரு வருஷம் முன்னேயே அவளைக் கொல்கத்தாவுல எதிர்பாரமா சந்திச்சு இருக்கான்.. ஆனா அவ இவன்கிட்ட பேசவோ இவனை சந்திக்கவோ விரும்பலை போல, ஒருவேளை இவனோட பிரண்ட்ஸ்னு கோபமோ, இல்லை எல்லாக் காதலியையும் போல அவனுங்க கூடப் பழகி இவன் பேரை கெடுத்துக்க வேண்டாம்னு சொல்லியும் கேக்காம பழகி இன்னைக்குத் தன் நிலைக்கு இவனும் ஒரு காரணம்னு கோபமோ அது நமக்குத் தெரியலை... ஆனா கிட்ட சேர்க்காம நல்லா அலைய விட்டு இருக்கா...”
“எப்படிச் சார் இவ்வளவு உறுதியா சொல்றீங்க...?”
“சார், தொடர்ந்து ஆறு மாசமா கொல்கத்தாக்கு ஒவ்வொரு மாசமும் போயிட்டு வந்து இருக்காரு... சனி ஞாயிறு இரண்டு நாள் எல்லாம் மாச கடைசியும் அங்கே இருந்து இருக்காரு... அந்த ஆறாவது மாசம் தான் இவனுக்கு உண்மை தெரிய வந்து இருக்கு... எப்படிச் சொல்றேன்னா வழக்கம் போல அப் அண்ட் டவுன் பிளைட் டிக்கெட் போட்டு போனவரு... பத்து நாளா திரும்பி வரலை, பத்தாவது நாலு அந்தப் பொண்ணையும் கூட்டிகிட்டு தான் வந்து இருக்காரு...
நேரா பொண்ணைக் கொண்டு போய் அவங்க அம்மாகிட்ட விட்டுட்டு, தெளிவா திட்டம் போட்டு ஒண்ணு ஒண்ணா செஞ்சு இருக்கான்... பல வருஷமா கூட இருக்கறவன் அவனுங்களைப் பத்தி அணுஅணுவா தெரியும் இல்லையா... கூடவே இருந்து சந்தேகமே வராம காய் நகர்த்திக் கச்சிதமா முடிச்சிட்டான்... இதில் மெயின் கல்பிரிட் ரூபனா தான் இருப்பான் போல அவனுக்கான தண்டனை தான் பயங்கரம்...
அதே போல ஜலபதிக்கும் கொஞ்சம் அப்படித் தான் இருந்தாலும் இதில் பாடி டேமேஜ் ஆகாதது சுரேந்தருக்கு தான், ஒருவேளை அவன் இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்.. இல்லை வேற ஏதாவது செஞ்சு இருக்கலாம், ஆனா உள்ளே போய் இருந்த சரக்கும் கூட இருந்த நல்லவனுங்களும் சேர்ந்து அவனையும் உதவ முடியாம செஞ்சு இருக்கணும்...
எத்தனை வருஷ பழக்கம் அழகா இவனுங்க இடம் எங்கே எல்லாம் இருக்கு எது நமக்குச் செட் ஆகும்னு தெரிஞ்சு அழகா பாண்டிக்கு போக இருந்த அவங்க பிளானை கூடவே இருந்து மாத்தி வெளியே விஷயம் போகாம அவனுங்க போனை ஆப் செஞ்சு இருக்கான்... உயிரும் உணர்வும் இருக்க உடல் மட்டும் அசைவில்லாமல் செஞ்சு அவனுங்களுக்குச் செம்ம தண்டனை கொடுத்து இருக்கான்...
நாம கேட்டா சாட்சியா கொடுக்கப் பஸ் டிக்கெட்டும் அதை ஆன்லைனில் புக் செஞ்ச எவிடன்சும் கூட வெச்சு இருக்கான்.. ஆனா அவன் அதில் போகலை, சாவகாசமா எல்லா வேலையும் முடிச்சிட்டு லேட் நைட் கிடைச்ச லாரியோ வண்டியோ எதையோ பிடிச்சு மாறி மாறி போய் விடிகாலையில் இறங்கி இருக்கான்...
மதியம் பஸ் ஏறி இருந்தா நைட் தான் போய் இறங்கி இருப்பான்... அதையே காலையில் அங்கிருப்பவங்க முன்னே நைட் வந்ததா காட்டிகிட்டாலும் நடுவில் இருக்க அந்த இரவை மிகச் சரியா பயன்படுத்திகிட்டு இருக்கான்... குமரனோட மனைவி தனக்காகக் கணவன் செஞ்ச சம்ஹாரத்துக்குத் துணையா தானே இருப்பாங்க, மயக்கத்துல இருக்க அவங்க அம்மா எப்படியும் சாட்சி சொல்ல போறது இல்லை...” என்று நீண்ட ஒரு விளக்கம் சஞ்சய் கொடுக்கவும் ஆனந்துக்கு அனைத்து கேள்விகளும் ஒரு புள்ளியில் சேர்ந்து அழகாகப் பதில் கிடைப்பது புரிந்தது.
“ஆனா அவங்க அம்மாவுக்கு எப்படிச் சார் சரியா உடம்பு முடியாம போச்சு.. அவங்களும் ஒருவேளை இதில் உடந்தையா...?!!”
“நோ.. நோ.. அவங்க ஒரு அப்புராணி கிராமத்து பெரிய மனுஷி, இதையெல்லாம் சொன்னா பயந்து மொதல்ல காட்டி கொடுத்துடுவாங்க... அதனால் சொல்லாம தான் செஞ்சு இருப்பானுங்க, அதான் கூடவே அந்தப் பொண்ணு இருந்ததே... இரண்டு நாள் அவங்களை மருந்து எடுக்கவிடாம செஞ்சு இருந்தா போதாது மயங்கி விழ... அப்பறம் ஒரு ஐவி போட்டு சரி பண்ணிக்கலாம் இல்லை...”
“அடேங்கப்பா செம்ம மாஸ்டர் பிளான் சார்... ஆனா எல்லாம் தெரிஞ்சும் ஏன் சார் விட்டீங்க..?”
“ஆமா செத்தவனுங்க எல்லாம் தியாகிங்க பாரு... போய்ச் சேர வேண்டியவனுங்க தான்... ஏன் களை எடுக்க நாம செய்யலை என்கௌன்ட்டர்.. அப்படித் தான் இதுவும், இதுல எனக்குப் பிடிச்சதே இவ்வளவும் தெரிஞ்ச பிறகும் அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சு இருக்கான் பாருயா... இவன் மனுஷன், அவ்வளவு காதலிச்சு இருக்கான்... நல்லா வாழ்ந்துட்டு தான் போகட்டுமே...”
“அப்போ அவனுங்க அப்பாங்க எல்லாம் கேட்டா என்ன சார் சொல்லுவீங்க...?”
“ம்ம், தீவிர தேடுதல் வேட்டை நடக்குதுன்னு சொல்லு... அப்படியே பிடிச்சாலும் கோர்ட்டில் தான் ஒப்படைப்போம்னும் சேர்த்து சொல்லு...” என்று சற்று நக்கலோடு சஞ்சய் கூறவும்,
“நடக்கவே போறது இல்லைன்னு தெரிஞ்சும் அதுலேயும் கூட அவனுங்களை வெறுப்பு ஏத்தி பார்க்காறீங்களே சார்...” என்றான் ஆனந்த் சிரிப்பினோடே.
“ஹா ஹா... அது என்னமோ இவனுங்களைப் பார்த்தாலே அப்படியே இரிடேட் ஆகுது ஆனந்த்...” என்று சூரி போலக் கையை ஆட்டி பேசிய சஞ்சய் சத்தம் போட்டுச் சிரித்தான்.
“சார் எப்படி இதையெல்லாம் அரைநாளில் கண்டுபிடிச்சீங்க..?” என்று நிஜமாகவே ஆச்சர்யபட்டு விழி விரித்தான் ஆனந்த்.
“நாம என்ன கற்காலத்திலா இருக்கோம்... எல்லாத்துக்கும் நேரில் போய் நிக்கணும்னு சொல்ல, இப்போ உலகமே கைக்குள்ளே வந்தாச்சு.. அதெல்லாம் சின்ன லீட் கிடைச்சிட்டா போதும் ஆனந்த்...”
“சார் செம்ம ஆளு சார் நீங்க... ஒருவேளை நாம கண்டுபிடிக்கலைன்னு அவங்க ஆளுங்களை வெச்சு ஏதாவது செஞ்சா, இல்லை இவனைத் தூக்கிட்டா...?”
“இன்னும் இரண்டு நாளில் இவன் இங்கே இருக்க மாட்டான் ஆனந்த்... பொண்டாட்டியோட எங்கேயாவது எஸ் ஆகிடுவான்...” என்றான்.
“வேற யாரையாவது வெச்சுக் கண்டுபிடிக்கச் சொன்னா... ஒருவேளை மாட்டிக்குவான் இல்லை சார்...”
“இன்டெர் போலே வந்தாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது ஆனந்த்... எல்லா எவிடன்சும் ஹோகயா..” என்று அவனுக்காக தான் செய்து முடித்திருந்த மிக பெரிய செயலை இலகுவாக சொல்லி புன்னகைத்தான் சஞ்சய்.