நேத்ரா இருள் சூழ்ந்த அந்த அறைக்குத் தூக்கி செல்லப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில் வரதராஜனின் முன் அமர்ந்திருந்தான் சஞ்சய்.
திடீரென வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்றவனுக்கு யோசனையோடே அனுமதி அளித்திருந்த வரதராஜன், ஒரு புன்னகையோடு தன்னையே பார்த்தவாறே அமர்ந்திருப்பவனைக் கண்டு தானே மெல்ல பேச்சை துவங்கினார்.
“சொல்லுங்க ஆபிசர்.. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க...?”
“சும்மா தான்...” என வெகு சாதாரணக் குரலில் பதிலளித்த சஞ்சய்யை கண்டு புன்னகைத்தவர்,
“ஹா ஹா... சும்மா வர அளவு நீங்களும் சரி நானும் சரி வெட்டி இல்லையே...”
“ம்ம்ம்... கரெக்ட் தான், உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா நான் ரொம்பபபபப பிஸி...” என்றவன், ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு “ஒரு கேஸ் விஷயமா உங்ககிட்ட சில தகவல் தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்...” என்றான்.
“எது அந்த மதன் கேஸ் சம்பந்தமாவா...?!” எனத் தன் கண்ணாடியை கழற்றி துடைத்தவாறு இதை நான் எதிர்ப்பார்த்தேன் என்பது போன்ற சாதாரணக் குரலில் கூறினான் வரதராஜன்.
“மதன்ன்னன்... மதன்... கேஸ்ல நீங்க எங்க வரீங்க வரதராஜன்...?!”
“என்ன ஆபிசர், மதன் வொய்ப்பும் அவ கூடத் தொடர்பு வெச்சு இருந்தவனும் இங்கே நம்ம ஸ்கூல்ல தானே வேலை செஞ்சாங்க... கருமம் அதுங்க அடிச்ச கூத்துல நம்ம ஸ்கூல் பேர் தேவை இல்லாம அடிப்பட்டது...”
“ஆனா... அந்தக் கேஸ் தான் அப்போவே முடிஞ்சு தண்டனையும் கொடுத்தாச்சு இல்ல வரதராஜன்...”
“இப்போ தான் அவன் வெளியே வந்து உங்க வீட்டு வாசல்ல செத்து தொலைச்சு இருக்கானே...” என்ற வரதராஜனை வியப்பாக நிமிர்ந்து பார்த்தவன்,
“அவன் செத்தது வரை தெரிஞ்சு வெச்சு இருக்கீங்களே...?!” என்று ஆச்சர்யப்பட...
“அதான் எல்லா நியூஸ் பேப்பரிலும் முதல் பக்கத்திலேயே போட்டாங்களே... காவல் அதிகாரி வீட்டு வாசலில் பரோலில் வெளியே வந்த கைதி தற்கொலைன்னு...” என்று சற்றும் சலிக்காமல் பதில் அளித்தார் வரதராஜன்.
“ம்ம்... ஆனா நான் அது விஷயமா வரலை வரதராஜன்... அந்தக் கேஸ் முடிஞ்சிடுச்சு... இது வேற...”
“முடிஞ்சிடுச்சாஆஆஆ... எப்படி...?”
“அது கான்பிடன்ஷியல்...! இப்போ நாம நம்ம வேலையைப் பார்ப்போமா...?”
“ம்ம்ம்... உங்க வொய்ப் ஏன் இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலை ஆபிசர்...?!”
“என்னது வரலையா...?!” என்று ஆச்சர்யமாகக் கேட்டவாறு நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தவனுக்கு,
“ஆமா... வரலை...” என்று திட்டவட்டமாகப் பதிலைத்தார் வரதராஜன்.
“உங்க ஸ்கூல் ஏன் இவ்வளவு பெஸ்ட்டா இருக்குன்னு இப்போ தான் புரியுது வரதாராஜன்... ஒவ்வொரு வொர்க்கர் மேலேயும் இவ்வளவு கவனம் எடுக்கறீங்களே... எல்லாரையும் உங்க கண் பார்வையில் வெச்சுக்கறீங்க...” என்றான் மெச்சுதலான குரலில்.
“ஹீ.. ஹீ... அது வந்து... இப்போ தான் ஹெட் மாஸ்டர் இதைப் பத்தி பேசிட்டு போனாரு... அதான்... நேத்தும் பாதியில் போய்ட்டாங்களாம், ஒருவேளை உடம்பு சரியில்லையோன்னு தான் கேட்டேன்...” என்று சமாளிப்பாகப் பேசினார்.
“மே பி... நேத்தும் உடம்பு சரியில்லைன்னு சொன்னா, அதான் நான் இறக்கி விட்டு போன பிறகு திரும்பி போயிட்டா போல...” என அதை ரொம்பவே சாதாரணமாக எடுத்துக் கொண்டான் சஞ்சய்.
“ஓ... அப்படியும் இருக்கும், சொல்லுங்க ஆபிசர்... என்ன விஷயமா வந்தீங்க... அந்தப் பையன் மனோ தற்கொலை சம்பந்தமாவா...?” என கேட்டவரை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சஞ்சய். இவன் அமைதியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை பதட்டப்படுத்தி பேச வைத்துக் கொண்டிருந்தான்.
“நோ... அவன் எந்த லெட்டரும் எழுதி வைக்கலை, பெற்றவங்க ஏதோ ஆற்றாமையில் புலம்பினாலும் அது தற்கொலை தான்... அவங்க வீட்டுகுள்ளே வந்து யார் என்ன செய்திருக்க முடியும்... சொல்லுங்க...”
“ஹீ ஹீ... ஆமா...”
“நான் வந்தது ஷாலினி கேஸ் விஷயமா...” என்று சஞ்சய் சொன்னது தான் தாமதம். அதுவரை இருந்த ஒரு இலகுத்தன்மை வரதாராஜனிடம் காணாமல் போயிருக்க...
“ஷா.. ஷாலினியா...?! எந்த ஷா... ஷாலினி...” எனக் கேட்டிருந்தார் ஒரு திணறலோடு.
“உங்க ஸ்கூல் ஸ்டுடண்ட் தான் வரதராஜன்... மிஸ்ஸிங் கேஸ்...” என்றவனின் பார்வை கூர்மையாக வரதராஜின் முகத்தைத் துளைத்தது.
இவ்வளவு நேரமும் சஞ்சய் இதற்காகத் தான் வந்திருக்கக் கூடும் என்று இப்போது நடந்து முடிந்து இருக்கும் விஷயங்களை நினைத்து அதே எண்ணத்தோடு மிக இலகுவாகத் தயார் நிலையில் இருந்த பதிலோடு எதிர் கொண்டவருக்கு சஞ்சய் இந்தக் கேஸ் சம்பந்தமாக வந்திருப்பான் என்பது அவர் கொஞ்சமும் எதிர்ப்பாராதது.
அதனாலேயே சட்டெனச் சமாளிக்க முடியாத திணறலோடு பேசியவர், சில நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “ஓ.. அந்தப் பொண்ணா...?! இப்போ ஞாபகம் வந்துடுச்சு... இன்னுமா அவ கிடைக்கலை, ஆனா அவ அன்னைக்கு ஸ்கூலுக்கே வரலையே... எங்கே போனாளோ, என்ன ஆனாளோ... இப்போ தான் எட்டாவது படிக்கறதுல இருந்து எல்லாம் லவ் செஞ்சிட்டு திரியுதுங்களே...”
“அவங்க அப்பா தான் தினப்படி வழக்கமா கொண்டு வந்து வாசலில் விட்டுட்டு போய் இருக்காரு.. அப்பறம் அவ என்ன ஆகி இருப்பா...?!” எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்வதைப் போலத் தாடையைத் தேய்த்தவாறு யோசித்தான் சஞ்சய்.
“ஆனா அவ ஸ்கூல் உள்ளேயே அன்னைக்கு வரலை... மெயின் கேட்ல இருக்க சிசிடிவி கேமரா முதல் டெய்லி அட்டடென்ஸ் வரை எல்லாத்தையும் அப்போ கேஸ் டீல் செஞ்ச போலீஸ்க்கு கொடுத்தோம்.. அவங்களும் நல்லா பார்த்துட்டு அந்தப் பொண்ணைப் பத்தி எந்த ஒரு தடயமும் கிடைக்கலைன்னு சொல்லிட்டாங்க...” என நிஜ வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினார்.
“ஓ... அப்போ இப்போ செக் செஞ்சா என் வொய்ப் பத்தியும் இதே போல எந்த ஒரு தகவலும் தடயமும் கிடைக்காது இல்லை வரதராஜன்...?!” என்றவனின் குரலில் இருந்த பாவம் என்ன என்பதைக் கணிக்க முடியாத வகையில் இருந்தது அவன் குரல்.
“என்... ன.. என்... ன... ஆபிசர்...?” என்று வெகுவாகத் திணறி போன குரலில் கேட்டவரை, கண்டு புன்னகைத்தவன்,
“இல்லை என்னைப் போலத் தானே அவங்க அப்பாவும் வாசலில் இறக்கி விட்டுட்டு போனாரு.. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணும் என் வொய்ப் போலவே உள்ளே வரலை தானே அதைச் சொன்னேன்..” என்றான்.
“ஆங்... ஆமா.. ஆமா அப்படித் தான்...” என்றவர் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் சஞ்சய்யை ஒரு ஒட்ட வைத்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க...
“ஒன் செக்... இப்போ எனக்குப் பயமா இருக்கு... என் வொய்ப்க்கு ஒரு போன் செஞ்சு எப்படி இருக்கான்னு கேட்டுக்கறேன்...” என்றவன் நீருவுக்குத் தொடர்ந்து முயற்சித்தும் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருக்கும் தகவலே வந்தது.
சஞ்சய்யின் முகத்தையே கேள்வியாகப் பார்த்தப்படி அமர்ந்திருந்த வரதராஜனை நோக்கி, “ஸ்விட்ச் ஆப்னு வருது... மேடம் தூக்கத்தை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு சில நேரங்களில் இப்படிச் செய்வாங்க... போகும் போது ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு தான் போகணும்...” என்று இலகுவாகச் சொல்லவும் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை சஞ்சய் அறியாமல் வெளிவிட்டார் வரதராஜன்.
அதே நேரம் அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்து இருந்த நீருவுக்கு அவளின் கை கால்களைக் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. அந்த அளவு இறுக கட்டியிருந்தார்கள்.
வாயும் கட்டப்பட்டு இருக்க... குரல் எழுப்பவும் முடியாமல் அசையவும் முடியாமல் நரக வேதனையாக இருந்தது. தன் அருகில் அதே நிலையில் இன்னும் மயக்கம் தெளியாமல் கிடந்த சரண்யாவை காண, காண அவ்வளவு வேதனையாக இருந்தது.
‘என்ன வயது இருக்கும் இந்தப் பெண்ணுக்கு மிஞ்சி போனாள் ஒரு பதினேழு இருக்குமா...?! இந்த வயதில் பார்க்கவும் கேட்கவும் கூடிய விஷயங்களா இதெல்லாம்...?! பட்டாம்பூச்சியாய் எந்தக் கவலையுமின்றித் துள்ளி திரியும் வயதல்லவா இது...?! இங்கு வந்து இப்படி அவர்களின் சதி வலையில் சிக்கி கொண்டாளே...!!’ என்று எண்ணியவளுக்கு எப்படியாவது அவளைத் தப்பிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் மனமெங்கும் எழுந்தது.
மெல்ல அத்தனை நேரத்தில் அந்த இருளுக்குப் பழக்கப்பட்டு இருந்த கண்களைக் கொண்டு சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள். அது நிச்சயம் ஒரு அறையோடு கூடிய இடம் மட்டும் இல்லை என்பது புரிய, மெதுவாகத் தலையைச் சாய்த்து பார்த்தவளுக்கு, இவர்கள் இருந்த அறையின் கதவு மூடி இருந்தாலும் சுவரில் ஒரு பக்கம் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே மேலும் சில அறைகள் இருப்பதும், இருபக்கமும் வழிகள் பிரிந்து செல்வதும் நன்றாகவே தெரிந்தது.
ஓரளவு அந்தத் தடியர்கள் புத்தக அலமாரியை திறந்து கொண்டு வெளியே வரும் போதே பார்த்திருந்ததால் அவர்கள் தங்களை எங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்த போதும், இங்கிருந்து வெளியே செல்வது அத்தனை எளிதல்ல என்பதும் சேர்ந்தே தெளிவாகியது.
எப்படி இவளை காப்பாற்றுவது என்று யோசனையில் இருந்தவளுக்கு மெல்லிய குரலில் யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கவே.. ஊன்றி கவனிக்கத் தொடங்கியவள் அதன் கூடவே காலடி சத்தமும் கேட்கவும், அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களைச் சமீபிப்பதும் புரிய, முதலில் படுத்திருந்த நிலையிலேயே கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
அறைக்குள் நுழைந்தது மூன்று பேர், இவர்களை நெருங்கி “இன்னும் தெளியலை டா...” என்று ஒருவன் சொல்ல, மற்றொருவன் நீருவின் முகத்தையும் சரண்யாவின் முகத்தையும் பற்றி இப்படியும் அப்படியுமாகப் பார்த்து விட்டு, “இந்தக் குட்டிக்குச் சீக்கிரம் தெளிஞ்சிடும்னு நினைக்கறேன்... மறுபடியும் ஸ்பிரே அடி...” என்றான் நீருவை காண்பித்து.
“ம்ம்ம்... இன்னும் அடுத்து எங்கே கொண்டு போறதுன்னு சார் எதுவும் சொல்லலையே...” என்று மூன்றாமவன் யோசனையோடு கேட்க, “வேலையா இருப்பாருன்னு நினைக்கறேன், குட்டியை பார்த்தே இல்ல... சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு ஓடிவந்துடுவாரு... ம்ம்ம், கொடுத்து வெச்ச மவராசன்... சும்மா அப்படி வாழறாரு...” என்று பெருமூச்சு விட்டான்.
அதில் அனைவரும் பலமாகச் சிரித்தபடியே அறையில் இருந்து வெளியேற, அவர்கள் பேசியதை கேட்டவளுக்கு ஒரு வித பயம் மனதை கவ்வி பிடிக்க... சஞ்சய் தன்னை எச்சரிக்கை செய்ததும், தான் அதை அலட்சியம் செய்ததும் நினைவுக்கு வந்தது.
அவன் பேச்சை கேட்காதது... நேற்று நடந்ததைப் பற்றி அவனிடம் சொல்லாதது... தன் மன குழப்பத்தைப் பற்றிப் பேசாதது என்று எல்லாம் சேர்ந்து இன்றைய நிலையைப் புரிய வைக்கவும், ‘பொறுக்கி... பொறுக்கி... அதான் எல்லாம் முதலிலேயே தெரிஞ்சு இருக்கே, தெளிவா சொன்னா தான் என்ன...? அவன் சொல்லி இருந்தா கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாம்... இப்போ பார் எவ்வளவு பெரிய சிக்கல், அவனா வந்து காப்பாத்துவான்... தொல்லைவிட்டதுன்னு அந்த ஜூனியர் பொறுக்கி கூடச் சேர்ந்து ஊரை சுத்திக்கிட்டு இருப்பான்...’ என மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
சரியாக அதே நேரம் வேறு ஒரு இடத்தில் இருந்த இதே போன்ற மற்றொரு இருள் அறையில் தூணோடு சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தான் ராம்.
பல நாட்களாக மழிக்கப்படாத தாடியும், அவன் அணிந்திருந்த உடையில் இருந்த அழுக்குமே அவன் இங்கு அடைக்கப்பட்டு வெகு நாட்கள் கடந்து விட்டு இருப்பதைச் சொல்லாமல் சொல்லியது.
ரொம்பவே சிறிய அறை அது. அதில் பகலில் வெளிச்சம் வருவதற்காகச் சிறு மூங்கில் துவாரம் மட்டுமே இருந்தது. அதன் மூலம் ஒன்றும் வெளிச்சம் வந்து அறையை நிறைத்து விடப் போவதில்லை தான். ஆனால் இரவு எது பகல் எதுன்னு தெரிவதற்காகவே அந்தத் துவாரம். எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவனின் நினைவு முழுவதும் நிறைந்து இருப்பவளே இப்போதும் நீங்காது நிறைந்து இருந்தாள்.
அவளின் திருமணச் செய்தி பற்றி அறிந்த அன்று இனி அவளின் வாழ்வில் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருந்தவன், அதன் பின் அவனாக அவளைத் தொடர்புக் கொள்ள முயலவே இல்லை...
ஆனால் அவளின் நினைவை அவனால் மறக்கவோ விளக்கவோ கொஞ்சமும் முடியவில்லை என்பது தான் நிஜம்... யாரிடமும் இதைப் பற்றிப் பேசவோ பகிரவோ முடியாமல் தனக்குள்ளேயே வைத்து தினம் தினம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான் ராம்.
ஆனால் அவள் அவனிடம் பேச முயன்றதும் அதை அவனால் விளக்கவோ ஒதுக்கவோ கொஞ்சமும் முடியாதே... அவளின் நலம்விரும்பியாக என்றும் போல் அன்றும் அவளுக்குப் பல விஷயங்களை விளக்கி புரிய வைத்தவன், அலைபேசியை அணைத்த அடுத்த நொடி அவனின் பின்னந்தலையில் எதுவோ கனமாகத் தாக்கியது.
அப்போது மயங்கியவன், அதன் பின் கண் விழித்த போது இதோ இதே நிலையில் இங்குக் கட்டப்பட்டு இருந்தான். முதலில் ஒன்றும் புரியாமல் தவித்தவன், அதன் பின்னான நாட்களில் இது ரொம்பவே திட்டமிட்டு நடத்தப்பட்டு இருப்பதும் செய்தவர்கள் ரொம்பவே கை தேர்ந்தவர்கள் என்பதும் புரிய தன் எதிர்ப்பை காணப்பிக்கவில்லை ராம்.
ஆனால் இங்கிருந்து வெளியேற சரியான சந்தர்ப்பத்திற்காக எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான். ராம் இங்கு வந்த நாள் முதலாக இப்படியே தான் இருக்கிறான். யார்..? எதற்காக...? ஏன்...? என இப்போது வரை அவனுக்குப் புரியவில்லை.
இந்த இருட்டு அறையைத் தவிர வேறு எதுவும் தெரியாது அவனுக்கு. மாலை மங்கி இருள் கவிழ தொடங்கிய பிறகு ஒருவன் தினமும் அறைக்குள் வந்து அன்றைய நாளுக்கான ஒரு வேலை சாப்பாடும், தண்ணீரும், இயற்கை உபாதைகளுக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவான்.
அவன் முகத்தையே வரி வடிவமாகத் தான் ராமால் பார்க்க முடியும்... ஒரு வார்த்தையும் பேச மாட்டான்.. ராம் பேசினாலும் பதில் இருக்காது. ஆரம்பத்தில் முயன்று பார்த்து விட்டு ராமும் அமைதியாகி போனான்.
அந்தக் கதவு திறக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பிக்கவும் ராமால் முடியாது... கதவு திறந்த நொடி முதல் மூன்று பேர் வாயில் நின்று இருப்பார்... அவர்களைக் கடந்து செல்வது என்பதோ இந்த இருளில் எங்கிருக்கிறோம் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் தப்பிக்க முயல்வதும் வீண்... அழகாகத் திட்டமிட்டே இந்த நேரத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தனர்.
ஆசை ஆசையாய் விரும்பியவளும் கைவிட்டு போன பிறகு ராமுக்கு தனக்கு என்ன இருக்கிறது இந்த உலகில் என்ற மனோபாவமே... ஆனால் தவறான முடிவு எடுக்கவும் அவன் தயாராக இல்லை... இப்போது இங்கு அடைப்பட்டுக் கிடப்பவனின் மனமெங்கும் ஒரு பற்றில்லா தன்மையே நிறைந்து இருந்தது.
‘இத்தனை நாள் எது வந்தால் என்னக்கென்ன...?!’ என்ற மனநிலையிலேயே இருந்தவனுக்கு இன்று காலை முதல் உள்ளத்தில் ஏதோ ஒரு வகைத் தவிப்பு. ஏனோ அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
அவனின் நேசத்துக்குறியவளுக்கு ஏதோ ஆபத்து என்று மனம் அடித்துக் கொள்ள... நிலைக் கொள்ளாமல் தவித்தான் ராம். கைகள் கட்டப்பட்டு இருக்கும் இந்த நிலையில் அவனால் அவளுக்கு எந்த வகையிலும் உதவ முடியாதே...!! முகம் கசங்க இந்தத் தவிப்பை தாங்க முடியாமல் கண்களை மூடியவன், அவளுக்காகப் பிராத்திக்கத் தொடங்கினான்.
“அப்போ ஷாலினி...” என விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய சஞ்சய்யை கண்டு “இதைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச அத்தனை விவரமும் அப்போவே சொல்லிட்டேன்... நீங்க வேணும்னா செக் செஞ்சிக்கோங்க...” என்றிருந்தான் வரதராஜன்.
“எல்லாமே சொல்லிட்டீங்களா...?! அப்படியா..?!” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், “எங்கே உங்க அசிஸ்டெண்ட் கோகிலா...?” என்றான்.
“அவங்க என்னோட அசிஸ்டெண்ட் இல்லை... எச்எம் அசிஸ்டெண்ட்...” என்று கடுப்போடு வரதராஜன் பதில் அளிக்க... “எச்எம்க்கு அசிஸ்டெண்ட்டா...?! இல்லை எச்சை அசிஸ்டெண்ட்டா...?!” என்றவனைக் கண்டு ஆத்திரமானவன்,
“மைண்ட் யுவர் வர்ட்ஸ் ஆபிசர்...”
“ஆஹான்... சரிங்க வரதராஜன் மைண்ட் பண்ணிக்கறேன்...” எனப் போலி பணிவு காட்டியவன், “ஆங்... சொல்ல மறந்துட்டேன்... உங்க எச்சை... ச்சே... கோகிலா நம்ம கஸ்ட்டடிக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது...”
“வாட்... என்ன விளையாட்டு இதெல்லாம், எதுக்காக அவங்களைக் கஸ்டடி எடுத்தீங்க... உங்களால் கண்டுப்பிடிக்க முடியாத கேசை எல்லாம் எங்கே தலையில் கட்டுவீங்களோ... மதன் போல நாளைக்கு ஷாலினி அப்பா வந்து உங்க வீட்டில் சாகக் கூடாதுன்னு பயம் இருந்தா உங்க ஆளுங்க யாரையாவது பிடிச்சு உள்ளே போடுங்க... எந்த ஆதாரமும் இல்லாம எங்கே ஸ்கூல் ஸ்டாப்பை எப்படி நீங்க கஸ்டடி எடுக்கலாம்...” என்று கோபத்தில் ஏகத்துக்கும் கொந்தளிக்கத் தொடங்கினார் வரதராஜன்.
அதற்கு ஒரு துளியும் சம்பந்தமே இல்லாமல் வெகு கூலாக அவரைப் பார்த்தவன், “நீங்க கேட்ட ஆதாரம் கிடைக்காததினால் இத்தனை நாள் செய்ய முடியாததை இன்னைக்கு அது கிடைச்சதனால் செஞ்சு இருக்கேன்...” என்றான்.
அதில் திகைத்தவன், “என்ன... என்ன... ஆதாரம்...?” என்றான் திணறலோடு, நிச்சயம் அப்படி எதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் மனதின் ஓரம் இன்னமும் ஒட்டிக் கொண்டு இருந்தது.
இன்னைக்குக் காலையில் வரைக்கும் இருந்த ஆதாரம் சுமார் தான் வரதராஜன்... ஆனா, இப்போ கொஞ்சம் முன்னே கிடைச்ச ஆதாரம் தான் எச்... ஹா ஹா... நீங்க நினைக்கறது போல எதுவும் இல்லை.... எச்டி குவாலிட்டில சும்மா சூப்பரா இருக்கு...” என்றவன்... எழுந்து வரதராசனை நெருங்க, பதட்டத்தில் எழுந்து நின்றவன், “எ.. ன்.. ன...” என்றான் குரல் குழற.
“இல்லை... செம்ம அழகா இருக்கு இந்தப் புக் செல்ப்... இம்போர்ட்டடா...?” என்று அதன் அருகில் செல்ல முயன்றவனைத் தடுத்த வரதராஜன், “அது கொஞ்சம் பர்சனல்... முக்கியமான பேப்பர் எல்லாம் இருக்கு...” என்றான்.
“ஓ... அப்போ அது எதுக்கு நமுக்கு... சரி வாங்க நாம போகலாம்...” என்று திரும்ப நடக்க முயல, “எங்... கே...?” என்றவனுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.
“வேற எங்கே உங்க மாமியார் வீட்டுக்கு தான்...” என்றவன்,
“இனி தினம் தினம் உங்களுக்கு விருந்து தான்... போலாமா...?!” என முன்னால் நடந்தபடியே பின்னால் திரும்பி பார்க்க... வரதராஜன் அசையாமல் நின்று இருப்பது தெரிந்தது.
சஞ்சய் அவனைக் கேள்வியாகப் பார்க்கும் போதே “உங்க இஷ்டத்துக்கு வந்து நீங்க கூப்பிட்டதும் வரதுக்கு நான் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை... வரதராஜன்ன்ன்ன்... என்ன கேஸ்...? வாரண்ட் இருக்கா...? நான் என் லாயர்கிட்ட பேசணும்...?” என்று என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற தோரணையோடு பேசிய வரதராஜன் அருகில் இருந்த போனை எடுக்கவும், “ஜாமர் வெச்சு அரைமணிநேரம் ஆகுது...” என்ற பதில் சஞ்சயிடம் இருந்து வந்தது.
“என்ன... என்ன இதெல்லாம்...?! என்ன கேஸ்...?”
“கேஸ்...!! ம்ம்ம், ஷாலினியை கடத்தி கொன்னது ஐபிசி செக்ஷன் 361 டூ 364... மனோவை வீடு புகுந்துக் கொள்ள ஆள் அனுப்பினது ஐபிசி செக்ஷன் 307... சரண்யாவை கடத்தினது... மைனர் பெண்ணைத் தவறா பயன்படுத்தப் பார்த்தது இதுக்கெல்லாம் போக்சோ... எல்லாத்துக்கும் மேலா என் செல்ல பொண்டாட்டியை கடத்தி அடைச்சு வெச்சதுக்கு ஐபிசி... ம்ஹும்... அதுக்கு ஐபிசி செக்ஷன் இல்லை... இல்லை... இந்த ஏசிபி செக்ஷன்படி வரும் வெய்ட் கரோ ஜி...” என்றவன், தான் சொல்ல சொல்ல வரதராஜனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெளிறி போனதை கவனித்துக் கொண்டே பேசி முடித்தான்.
“என்... ன... என்... ன... இதெ... ல்லா...ம் ஏதேதோ... உள... றறீ... ங்க...?!” என்று கோபத்தோடு கேட்க நினைத்தவனின் குரலோ வெகுவாக உள்ளடங்கித் தந்தி அடிக்கத் தொடங்கியது.
“இதோ நீங்க கேட்ட அரஸ்ட் வாரண்ட்... அப்பறம் வேற என்ன கேட்டீங்க...” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், “ஆங்...” என்றவாறே வரதாரஜனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு “இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினே, மூஞ்சி பேந்துடும்... மூடிகிட்டு கிளம்பு...” என்றான்.
“இதெல்லாம் அபாண்டம்... சமூதாயத்துல பெரிய இடத்தில் இருக்க என் மேல வீண் பழி சுமத்தற... தேவை இல்லாம கை நீட்டற... இருடா உன்னை மானநஷ்ட வழக்கு போட்டு தெருவுக்குக் கொண்டு வரலைனா நான் வரதராஜன் இல்லை...” என்று அந்த மூக்கில் இருந்து ரத்தம் வடியும் நிலையிலும் அடங்காது பேசினான்.
அதே நேரம், அந்த அறைக்குள் காக்கி உடையில் நால்வர் நுழையவும்... “அபாண்டமாவா நாங்களா...?! ஷாலினி கையில் அவ கடைசியா ஸ்கூலுக்கு வந்த அன்னைக்கு மொபைல் இருந்தது உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்றதும் அவன் கண்களில் அப்பட்டமாக அதிர்வு தெரிந்தது.
“ஆயிஷா ஆதாரத்தை அவங்க போனில் மட்டும் இல்லாம ஒரு பென்டிரைவ்லையும் சேவ் செஞ்சது உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்ற சஞ்சயின் அடுத்தக் கேள்விக்குக் கண்கள் அப்படியே பயத்தில் நிலை குத்தி நின்றது.
“மனோவை கொலை செஞ்சு முடிச்சதும் நீங்க அனுப்பின பூபதி கொஞ்சம் கூட மூளையே இல்லாம அவங்க வீட்டு வாசலில் இருந்தே உங்களுக்குப் போன் செஞ்சதும்... வேலையை முடிச்சிட்டேன்னு சொன்னதாவது உங்களுக்குத் தெரியுமா வரதராஜன்...” என்றதில் தன் சக்தி எல்லாம் வடிந்து இருக்கையில் சரிந்தான் வரதராஜன்.
“இது... இது... எல்லாம்...” என்று அப்போதும் எப்படியாவது சமாளிக்க நினைத்து பேச முயன்றவரை, “வெய்ட்... நான் இன்னும் முடிக்கலை...” என்று சொல்லியவாறே அதுவரை அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன்,
“இதுக்கெல்லாம் மேலே நீ தப்பிக்கவே முடியாத அளவுக்குச் சுயவாக்கு மூலம் நீ கொடுத்தது ஒண்ணு இருக்கு பார்க்கறீயா...?!” என்ற சஞ்சய்யை புரியாமல் பார்த்தவனுக்குப் பயத்தில் முகம் வெளிறி வேர்க்க தொடங்கியது.
“இத்தனை ஏசி போட்டும் உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்குது வரதராஜன்... சுகர் இருக்கா...?!” என்றவனின் குரலில் மருந்துக்கும் அக்கறை இல்லை மாறாக டன்டன்னாகக் கேலி தான் இருந்தது.
சஞ்சயின் கேலியை புறம் தள்ளி, “என்... ன... வாக்... வாக்கு... மூலம்...?” என்றவனுக்கு, “ஆங், அதை மறந்துட்டேன் பாருங்க...” என்றவாறே தன் கைபேசியை எடுத்தவன், “ஆமா உங்களுக்கு ஏன் இவ்வளவு குழறுது...? பிபி எதுவும் இருக்கா...?” என்றான்.
வரதராஜனுக்கு இருந்த பதட்டத்தில் சஞ்சய்யின் பேச்சை கவனிக்கவோ பதிலளிக்கவோ முடியாத இல்லை இயலாத ஒரு நிலையிலேயே நின்றிருக்க... சஞ்சய் தன் கைபேசியை உயிர்பித்து ஒரு காணொளியை காண்பித்தான்.
அதைப் பார்த்ததும் வரதராஜனின் கண்கள் தெறித்து விழும் அளவுக்கு ஆனது. அதில் சற்று நேரத்திற்கு முன் இதே அறையில் நடந்த அத்தனையும் பதிவாகி இருந்தது.
இது எப்படி என்று வரதராஜனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. சரண்யாவோ நேத்ராவோ அதன் பிறகு இந்த அறையில் இருந்து வெளியில் போகவில்லை... அவள் யாருக்கும் தகவலும் கொடுக்கவில்லை என்பது நிச்சயம்... பிறகு இது எப்படி...?! என்று யோசித்தவருக்கு, நேத்ராவை இங்கிருந்து தூக்கி சென்ற பிறகு அவள் வந்தது இருந்தது என அத்தனை தடையத்தையும் அழித்ததை நினைவு கொண்டு வந்த போதும் அவள் திகைத்து மருண்டு விழித்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதுவும் செய்திருக்கவில்லை என்பது தெளிவாகியது.
அதே போல அவளின் பொருட்களை அப்புறப்படுத்திய போதும் அதில் அலைபேசி இருந்ததைப் பார்த்து தகவல் கூறியவர்களுக்கு அதை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வரதராஜன் தெளிவாகக் கூறியிருந்தார்.
இது எப்படிச் சாத்தியம் என்று ஒரு பக்கம் மனம் யோசித்தாலும் மற்றொரு பக்கம் இப்படி முழு ஆதாரத்தோடு சிக்கிக் கொண்டோமே என்றும் மனம் வேகமாக அதில் இருந்து தப்பிக்கும் மார்கத்தைக் கணக்கிட்டது.
ஆனால் அதற்கெல்லாம் எந்த ஒரு சந்தர்ப்பமும் தராமல் சஞ்சயின் கண் அசைவின் பேரில் அங்கிருந்த காவலர்கள் வரதராஜனை அவர் திமிர திமிர இழுத்துக் கொண்டு சென்றனர்.
அனைவரும் சென்ற பின்னும் ஆனந்த் மட்டும் தயங்கி நிற்கவும், “நீங்களும் போங்க ஆனந்த்..” என்றவனைத் தயக்கத்தோடு பார்த்தவன், “உள்ளே எத்தனை பேர் இருப்பாங்களோ சார்...?!” என்றான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீங்க கிளம்புங்க, இது அபிசியல் இல்லை.. என் பர்சனல்...” என்றவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாது ஆனந்த் சென்று விட,
அந்தப் புத்தக அலமாரியை திறந்துக் கொண்டு சென்றான் சஞ்சய். அது ஒரு பாதாள அறை போலப் படிக்கட்டுகள் கீழ் நோக்கி சென்றது. கதவு திறந்த சத்தம் அங்கிருந்த அடியாட்களுக்குக் கேட்டாலும் வரதராஜன் தான் வருவதாக நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் முன் புறம் இருந்தவர்கள் எழுந்து நின்றனர்.
ஆனால் வந்தது சஞ்சய் என்பதைப் படி இறங்கும் இடத்தில் இருந்த ஒருவன் முதலில் பார்த்து விட்டு சஞ்சய்யை தாக்க முயல, தன் வலது கையை மடக்கி முட்டியை கொண்டு அவன் கழுத்தில் சஞ்சய் இறக்கிய ஒரு குத்து அவனை அப்படியே சரிய செய்திருந்தது.
தங்கள் ஆள் கீழே வந்து விழுந்ததைக் கண்டு உஷாரானவர்கள், தங்கள் கையில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்க பாய்ந்து செல்ல... இதற்கெல்லாம் தயாராகவே வந்திருந்த சஞ்சய் அவர்களை ஆனாயாசமாக எதிர்க் கொண்டு அடித்துச் சாய்த்தான்.
மொத்தம் பத்து பேருக்கும் மேல் அங்கிருந்தனர். ஒவ்வொருவரும் மலையளவு இருந்தனர்... இதற்காகவே வளர்க்கப்பட்டு வருகின்றனர் போலும்...! சஞ்சய் நினைத்தது போல் அது ஒரு அறையாக இல்லாமல் மிகப் பெரிய இடமாக இருந்தது.
பள்ளிக்கு கீழே இப்படி ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்... வரதராஜனின் அத்தனை திரைமறைவு செயல்களுக்கும் இந்த இடமே பயன்படுத்தப்பட்டு வந்தது. வெளி உலகின் கண்ணுக்கு மறைவாக நடக்கப் பள்ளி என்ற பெயர் வெகுவாகப் பயன்பட்டது.
ஒவ்வொருவராக அடித்துத் துவைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருந்தவன், மிகுத்த கவனத்தோடே தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான். சுற்றும் முற்றும் பாத்தவாறே முன்னேறியவன் பின்னால் அரவம் உணர்ந்து சட்டெனக் குனியவும் நாற்காலி கொண்டு சஞ்சயின் தலையில் அடிக்க வந்தவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
விழுந்தவனின் உடல் பாதி நாற்காலியில் சரிந்து இருக்க... அப்படியே அவன் முகத்தைத் தன் ஷூ காலால் மிதித்து நசுக்கியவன், அருகில் இருந்த கப்போர்டை அவன் மேல் சட்டெனத் தள்ளி விட்டுவிட்டு நகர்ந்துக் கொண்டான்.
அதில் அவன் அலறிய அலறல், உள் அறையில் நேத்ரா நகர முயன்றதை எதிர்ப்பாராமல் அந்தப் பக்கம் வந்த ஒருவன் பார்த்து அவளை அங்கிருந்த மேசையோடு சேர்த்து கட்டி போட நினைத்து கட்டுகளை அவிழ்த்து கொண்டிருக்க அவன் செவிகளை எட்டியது.
உடனே வேகமாகத் தன்னிடம் இருந்த கத்தியை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன், தங்கள் ஆட்கள் அங்கங்கு ஒவ்வொரு கோணத்தில் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ந்து சுற்றுபுறத்தை அலசிக் கொண்டே சென்றவன், சஞ்சய் கண்மண் தெரியாமல் அடித்து வீழ்த்துவதையும் எத்தனை பேர் வந்தாலும் அடித்துச் சாய்ப்பவர்கள் இங்கு அடிவாங்கிச் சரிவதையும் கண்டு தயங்கி தயங்கி சஞ்சய்யை பின் தொடர்ந்தான்.
சஞ்சய் அங்குத் துப்பாக்கியோடு நிற்கும் ஒருவனை ஒரே அடியில் அவன் கையைச் செயல் இழக்க செய்வதையும் அடுத்த அடியில் அவன் கழுத்தை அப்படியே திருப்பி வாய் கோண கீழே விழ செய்வதையும் கண்டு திகைத்தான்.
ஏனெனில் அங்கு அடி வாங்கி விழுபவன் தான் இவர்களுக்கு எல்லாம் தலைவன் போன்றவன், அவனையே இவ்வளவு எளிதாகச் சாய்த்து இருப்பவனைக் கண்டு ஒரு வித பயம் எழ, அவன் அடித்த விதமே வர்மக்கலையைக் கற்று தேர்ந்தவன் என்பதைப் புரிய வைக்க... தங்கள் ஆட்கள் என்று ஒருவரையும் காணாமல் அரண்டுப் போனான்.
வந்திருப்பவனை எதிர்ப்பதும் அடிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல என்று புரிய, தன் இருப்பைக் காட்டாது மறைந்துக் கொண்டவன் சஞ்சய் அறியாமல் தாக்க அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
சஞ்சய் அங்கிருந்து நகர்ந்து மெல்ல முன்னேறி ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே சென்றான். இங்கே நேத்ரா தன்னைப் பிணைத்து இருந்த கயிறு அவிழ்ந்து கிடக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தப்பிக்க நினைத்தவள், இப்போதைக்கு அது முடியவில்லை என்றாலும் அங்கேயே எங்கேயாவது ஒளிந்துக் கொள்ள எண்ணி, இன்னும் மயக்கம் தெளியாமல் கிடந்த சரண்யாவை உலுக்கி எழுப்ப முயன்றாள்.
ஆனால் அவளின் முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை... இன்னுமே அசைவற்றே கிடந்தவளை சத்தம் போட்டும் எழுப்ப முடியாத நிலை நீருவுக்கு... அவளின் சத்தம் கேட்டு யாரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடு தன் முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டிருந்தாள் நீரு.
அதே நேரம் வாசலில் அரவம் உணரவும், ஒரு பய பந்து உருண்டு வந்து கழுத்தில் அடைக்க... தான் எழுந்து நின்று அவளை எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்தோடு மெல்ல குனிந்து நின்று எழுப்பிக் கொண்டிருந்த நிலையிலேயே மெதுவாகத் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தாள்.
அங்கு நேத்ராவை கண்டுவிட்ட நிம்மதியோடு கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் சஞ்சய். அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாள் என்பதைச் சொல்ல வார்த்தையே இல்லை... அவ்வளவு நேரம் இருந்த பயம் படபடப்புப் பதட்டம் எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போனதை போல் ஒரு நிம்மதியுணர்வு மனதில் எழ அப்படியே மண்டியிட்டு மடங்கி அமர்ந்தாள் நீரு.
சஞ்சய் உள்ளே நுழைந்தவுடன் கண்டது அவளையும் அவளின் நலனையும் தான். அவளை முழுவதுமாக அளவிட்டவன், ஒரு நிம்மதி பெருமூச்சோடு நின்றிருந்த போது தான் நீரு அவனைக் கண்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றிருக்க... தக்க சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவன், ஒரு இரும்பு கம்பியால் சஞ்சயின் தலையைப் பின்னால் இருந்து தாக்க முயன்ற கடைசி நொடி சஞ்சய் அசைந்து விட அடி பலமாக வலது முழங்கையில் பட்டது.
அதில் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவன், “கொஞ்சமாவது உனக்கு டீ டிகாஷன் இருக்கா மேன்...” என அசால்ட்டாகக் கேட்கவும், “ஙே” என விழித்துக் கொண்டு இருந்தான் அவன். அடி தவறிப் போனதால் எங்கே தன்னை அடி வெளுக்க போகிறானோ என்று பயந்துக் கொண்டிருந்தவன், இப்படி பேசுபவனை கண்டு பேய் முழிமுழித்தான்.
“ரோஜா படம் பார்த்து இருக்கீயா மேன் நீ...?” என்று அவனை முறைத்துக் கொண்டு அடுத்து சஞ்சய் கேட்கவும், ஏற்கனவே தான் அடித்த அடி தவறிவிட்டதில் வெளியே அவனின் ருத்ர தாண்டவத்தால் தன் கூட்டாளிகள் சுருண்டு கிடப்பதை கண்டு தன் நிலையை எண்ணி மிரண்டு நின்று இருந்தவன், இங்கு வெளிப்படும் அவனின் வேறு முகத்தைப் புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“சொல்லு மேன்... படம் பார்த்தீயா, இல்லையா...?!” என்று மீண்டும் அழுத்தி கேட்டதில் இவன் தன்னிடம் இருந்து என்ன பதிலை எதிர்ப்பார்க்கிறான் எனத் தெரியாமல் ஆம் இல்லை என அவன் தலையை எல்லாப் பக்கமும் ஆட்ட...
“ஓ... இல்லையா, அதான் உனக்கு இப்போ நடக்கற சீன் புரியலை... கடத்தப்பட்டு மீண்டு வந்த கணவனும் மனைவியும் திரும்பச் சந்திக்கற போது அப்படியே கண்ணாலேயே பேசி, கொஞ்ச நேரம் ஒருத்தரை ஒருத்தர் பார்வையாலேயே தழுவி, அப்படியே உருகி ஒரே ஓட்டமா ஓடி வந்து கட்டிப்பிடிச்சிப்பாங்க... எல்லாம் இங்கே சரியா நடந்தாச்சு... அந்தக் கடைசி ஸ்டெப் நடக்க இருந்த நேரத்தில் கரெக்ட்டா நந்தி மாதிரி நீ வந்துட்டே... இப்போ அவளுக்கு மறுபடியும் அந்தப் பீல் வருமான்னு தெரியலையே...” என்று தன்னை ஏதோ வேற்று கிரக ஜந்துவை போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு சொல்லியவன் திரும்பி நீருவை பார்த்து,
“நாம முதலில் இருந்து ஸ்டார்ட் செய்வோமா குல்பி... நான் அங்கே போயிட்டு மறுபடியும் வரேன்... நீ அப்போ தான் என்னைப் பார்க்கற மாதிரி பாரு... அப்படியே ஓடிவந்து உனக்கு என்னென்ன தோணுதோ எல்லாம் செய்...” என்று ஏற்ற இரக்கத்தோடு சீரியசான குரலில் கூறிக் கொண்டு இருந்தான் சஞ்சய்.
அதில் இத்தனை நேரம் இருந்த மனநிலை என்ன...?! எங்கு வந்து என்ன பேசிக் கொண்டு இருக்கிறான்...!! என அவனை இமைக்காமல் சோர்ந்து போன மனநிலையோடு பார்த்துக் கொண்டு இருந்தவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீரும் இதழ்களில் தன்னை அறியாமல் ஒரு புன்னகையும் வந்தது.
அவளின் நிலையை அணுஅணுவாக உள்வாங்கிக் கொண்டு இருந்தவன், சற்று அந்த மனநிலையில் இருந்து அவள் வெளிவந்துவிட்டாள் எனப் புரியவும், இரு கைகளையும் விரித்து ‘வா’ என்பது போல் கண் அசைக்க... வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போலப் பாய்ந்து ஓடி வந்து அவன் கரங்களுக்குள் அடைக்கலமாகியவள், அவன் மார்பில் “பொறுக்கி” எனச் சலுகையாகக் குத்தியபடியே சாய்ந்துக் கொண்டாள்.