வீட்டிற்கு வந்த பிறகு இருந்த இடத்திலிருந்தே நேத்ரா போகும் இடமெல்லாம் சஞ்சய் கூர்மையான பார்வையோடு அவளை தொடர்ந்தபடியே அமர்ந்திருந்தான். இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் நேத்ராவும் சஞ்சயின் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள், பின் அவன் முன் வந்து இடுப்பில் கை வைத்து முறைத்தவாறே “என்ன...?” என்று கேட்க... ஒன்றுமில்லை என்பது போலத் தோள்களைக் குலுக்கியவன், அந்தக் கூர்மையான பார்வையைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் அவளின் கண்களுக்குள் ஊடுருவி பார்க்க தொடங்கினான்.
வழக்கமாக வம்பிழுப்பது போலவோ அவளைச் சீண்டுவது போலவோ இல்லாமல் இந்தப் பார்வையில் இருந்த வித்தியாசம் புரிய, யோசனையாக அவனைப் பார்த்தவள்... “எ..ன்...ன...?!” என்றாள் காற்றாகி போன குரலில்.
“அவங்ககிட்ட ஏன் பொய் சொன்னே...?” என்று அதே பார்வையோடு கேட்டவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தடுமாறியவள், “யாரு... யாருகிட்ட...?!” என்றாள்.
அதற்கு அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை... ஆனால் தன் பார்வையில் கொஞ்சமும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நேத்ராவையே பார்த்துக் கொண்டிருக்க... அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நகர முயன்றவளை “பொய் பேச உனக்கு வரலை...” என்றான். “நான்... நான்... ஏன் பொய் சொல்லணும்...?” என்று வீம்பாகக் கேட்க முயன்று மீண்டும் காற்றாகி போன குரலிலேயே கேட்டாள் நீரு.
“அதை நீங்க தான் சொல்லணும் மிஸ் நேத்ரா ரங்கராஜன் அலைஸ் மிஸஸ் நேத்ரா சஞ்சய் தத்தாத்ரேயன்...” என்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவனைக் கண்களில் தோன்றிய சிறு அதிர்வோடு பார்த்தவள், “என்ன சொல்லணும்... சொல்லறதுக்கு எல்லாம் எதுவும் இல்ல... ஏன் இன்னைக்கு வெளியே எதுவும் கேஸ் கிடைக்கலையா...?! எல்லாரும் செய்றது போலப் பெண்டிங் கேஸ் எல்லாம் என் மேலே போட்டு உள்ளே தள்ள பார்க்கறீயா...?” எனச் சிடுசிடுத்துவிட்டு அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.
அவளையே யோசனையோடு பார்த்தவன், வலது கை கொண்டு கன்னங்களைத் தேய்த்தப்படியே சிந்தனையில் மூழ்கினான். மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை கண்டவன், “உன்னை வேற ஸ்கூல் பார்த்துக்கச் சொன்னேன் இல்ல...! அது என்னாச்சு...?” என்றான்.
“இப்போ என்ன ப்ரச்சனை அந்த ஸ்கூல்ல...?! சும்மாவே இருக்க மாட்டீயா... எப்போ பாரு இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு ஏன் என்னைப் போட்டு படுத்தறே... நான் என்ன குழந்தையா... எனக்குத் தெரியும் என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு... சும்மா சும்மா தொல்லை செய்யாதே...?!” என்று படபடத்தவள் அங்கிருந்து கிளம்ப முயல, “சீக்கிரம் வேற ஸ்கூல் பார்த்துக்கோ...” என்று அழுத்தமான குரலில் உரைத்தவன், அவளுக்கு முன்னே வெளியே சென்றிருந்தான்.
அவன் சென்ற திசையையே பார்த்து முணுமுணுவெனத் திட்டியவள், அவன் பின்னே கிளம்பி சென்றாள். ஆனால் அத்தோடு அந்தப் பேச்சை விடாமல் சஞ்சய் மாலையும் அதையே தொடர, நேத்ராவுக்கு ஆயாசமாக வந்தது.
“இப்போ என்ன தான் பிரச்சனை உனக்கு..?! நான் எங்கேயும் போகக் கூடாது, எதுவும் செய்யக் கூடாது, அதானே...?! இங்கேயே உன் பேச்சை கேட்டு தலை ஆட்டும் பொம்மையா இருக்கணும் இல்ல...” என்று படபடத்தவளை, இழுத்து பிடித்த பொறுமையோடு பார்த்தவன், “நான் சொல்ல வருவதைப் புரிஞ்சிக்கவே மாட்டீயா...?” என்றான்.
“முதலில் நான் சொல்ல வருவதை நீ புரிஞ்சிக்க... என் விஷயத்தில் தலையிடாதே...” என்று நீரு விரல் நீட்டி எச்சரிக்கும் தொனியில் பேசவும், அந்த விரலை பற்றி மடக்கி தன்னருகில் அவளை இழுத்தவன், “வேலைக்குப் போகாதேன்னு சொல்றதுக்கும் வேற இடம் பார்த்துகோன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டி...” எனவும், “அதே தான் நானும் சொல்றேன், உண்மையில் எனக்கு நல்லது நினைக்கறவங்களுக்கும் உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...” என்றாள் முறைப்போடு. “போன ஜூலையில் உங்க ஸ்கூலில் ஒரு பொண்ணு காணாம போனா உனக்குத் தெரியுமா...?” என்று பல்லை கடித்தபடியே கேட்டான்.
“ஆமா தெரியும்... அதுக்கென்ன இப்போ...?! பாவம் ஸ்கூல் வர வழியில் காணாம போயிட்டா... உங்க ஆளுங்களால் இப்போ வர அவளைக் கண்டுப்பிடிக்க முடியலை... இதில் எனக்கு அட்வைஸ் செய்ய வந்துட்ட போ...” என்று பதிலுக்கு முறைத்தாள் நீரு.
“ஊஊப்ப்ப்ஸ்... உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கறது டி...?” என்று உன்னை என்ன தான் செய்வது என்பது போன்ற குரலில் கூறியவன், “நீயே இந்த லட்சணம்னா இதில் உன் ஸ்டுடென்ட்...?” என்று கேலியாகக் கேட்கவும், “ஹே... யாரை கிண்டல் செய்யற... என் ஸ்டுடன்ஸ் எல்லாம் சென்டம் எடுக்கறவங்க...” என்றாள் சிலிர்த்துக் கொண்டு.
“ஆமாமா... ஸ்கூல் முடிஞ்ச பிறகும் மூணு ஹவர் அடைச்சு வெச்சு டார்ச்சர் செய்யறீங்களே, இது கூட இல்லைனா எப்படி...?” என்று சஞ்சய் எகத்தாளமாகக் கூறவும், “யாரு...? யாரு..? அடைச்சு வெச்சு டார்ச்சர் செய்யறா...?! அதுக்குப் பேர் அக்கறை அவங்க நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்கணும்னு அக்கறை...” என்றாள் தன்னையும் தன் வேலையையும் கேலி செய்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத குரலில்.
“கம்பெனிகளில் கொடுக்கறது போல உங்களுக்கும் இது மந்த் எண்டு டார்கேட் தானே... ஒரு கிளாஸ்ல இருக்க எல்லா ஸ்டுடன்ட்டும் இத்தனை மார்க் எடுத்தே ஆகணும்... அதுக்கு எவ்வளவு வேணாலும் அவங்களைத் தொல்லை செய்யலாம்னு சொல்லி இருக்காங்க அதானே... அப்படி எல்லாரும் அவங்க சொன்ன மார்க் எடுக்கலைனா உங்க சம்பளத்தில் கை வைப்பாங்க... சோ கொஞ்சமும் மனசாட்சி இல்லாம உங்க லாபத்துக்கு அவங்களை டார்சர் செய்யறீங்க...” என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சஞ்சய் எடுத்து வைத்துக் கொண்டே போனான்.
‘என்ன உளறல் இது...?!’ என்று எழுந்த எரிச்சலோடு நீரு கோபமாகப் பதில் அளிக்க இருந்த நேரத்தில் வெளி வாயிலின் அழைப்பு மணி ஒலித்தது. அதில் அந்தப் பக்கம் கவனத்தைத் திருப்பியவன், மணியைப் பார்க்க அது இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையோடு கதவை சென்று சஞ்சய் திறக்க... அந்தப் பக்கம் புதியவன் ஒருவன் நின்றிருந்தான். சஞ்சய் அவனை யார் என்பது போலப் பார்க்க...
“வணக்கம் ஏசிபி சார்..”
“வணக்கம்... நீங்க..?”
“பெயரை சொன்னாலே தெரியற அளவுக்கு நான் உங்க அளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை சார்... உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கு வேணா லேசா ஞாபகம் இருக்கலாம்... அதுவும் இருக்கோ இல்லையோ தெரியலை...” என்றான் விரக்தியான குரலில்.
“சரி உள்ளே வாங்க...”
“இல்லை... இது தான் வசதி, இங்கேயே இருக்கேன்...” என அவன் பேச ஆரம்பத்தில் இருந்தே இவனிடம் ஏதோ சரியில்லை என்று புரிய, சஞ்சய் ஓரு அடி அவனை நோக்கி முன் வைக்கவும், அந்தப் புதியவனின் கைகளில் துப்பாக்கி முளைத்து இருந்தது. சரியாக அதே நேரம் சஞ்சய் சென்று இவ்வளவு நேரம் ஆகுதே வந்தது யாராக இருக்கும் என்று பார்க்க சஞ்சயின் பின்னால் வந்து நின்று இருந்தாள் நீரு.
“டோன்ட் டிரை டு டூ எனிதின்ங் ஸ்மார்ட் ஆபிசர்...” என்றவன் சஞ்சய்யின் முன் துப்பாக்கியை காண்பிக்கவும், அவனையும் அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் கொஞ்சமும் பதட்டமும் பயமும் இல்லாத சாதாரணப் பார்வை பார்த்து வைத்தான் சஞ்சய்.
“ஐ நோ ஆபிசர்... என்னை அடிச்சு சாய்க்கவோ இல்லை இதை உங்க கைக்குக் கொண்டு வரவோ உங்களுக்கு அரை நொடி கூட ஆகாது... அவ்வளவு ஏன் உங்களுக்கு அந்த அவசியம் கூட இருக்காது... நீங்களே துப்பாக்கி வெச்சு இருந்தாலும் இருப்பீங்க... ஆனா எனக்குத் தேவை வெறும் ஐந்து நிமிஷம் தான்... அதை மட்டும் கொடுங்க போதும்...” என்றவன், சஞ்சயையும் அவன் அருகில் இருந்த நீருவையும் ஒரு பார்வை பார்த்தான்.
அந்த ஒரு பார்வைக்கே தன் அருகில் இருந்தவளை இடது கையால் தன் பின்னால் நகர்த்தி அவளை மறைத்தது போல நின்றான் சஞ்சய். “ம்ஹும்... பயப்படாதீங்க ஆபிசர், என்னால் உங்க மனைவிக்கு எந்த ஆபத்தும் வராது... நாம காதலித்து மணந்தவங்களை எந்த நிலையிலும் காப்பாத்த தானே நினைப்போம் ஏசிபி சார்...?! அப்பறம் நான் மட்டும் அப்படிச் செய்வேன்னு ஏன் யாருக்குமே தோணாம போச்சு சார்...?” என்றான் விரக்தியும் வேதனையுமான குரலில்.
யார் இவன்...!? என்ன பேசுகிறான்...!? எனப் புரியாமல் சஞ்சய் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே... “கறை படாத கைகள்... பணத்தால் வளைக்க முடியாத நேர்மையான விசராணை... அலசி ஆராய்ந்து உண்மையை வெளி கொண்டு வரும் துணிச்சல்... சட்டத்திடம் தப்பித்தாலும் உங்க சட்டத்தில் தப்பிக்க முடியாது... இப்படிப்பட்ட நீங்க ஒன்பது மாசம் முன்னே ஏன் சார் இங்கே வரலை... ஏன் வரலை... வந்திருக்கலாம் இல்லை... வந்திருக்கலாம் தானே... ஆறு... ஆறு உயிர் காப்பாத்தப்பட்டிருக்குமே சார்... காப்பாத்தப்பட்டிருக்குமே...” என்று சாதாரணக் குரலில் தொடங்கித் துயரத்தோடான குரலில் முடித்தான்.
ஒன்றும் புரியாமல் சஞ்சய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு நெற்றியில் சுட்டுக் கொண்டு சரிந்து இருந்தான் அவன். கடைசி நொடியிலேயே அவன் செய்ய இருக்கும் செயல் புரிந்து சஞ்சய் அவனைத் தடுக்க முயல்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது.
“ஹக்” என அருகில் கேட்ட சத்தத்தில் சஞ்சய் நீருவை பார்க்க... விழிகள் நிலை குத்தி நிற்க, பயத்தில் திறந்த வாய் மூடாமல் நின்றிருந்தவளை சட்டென அணைத்து “ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்ல.. ஈஸி... ஈஸிடா...” என்று முதுகை நீவி விட்டவாறே அங்கிருந்து அவளை மெல்ல அறைக்குள் நகர்த்திச் சென்றவன், அவளைப் படுக்கையில் அமர வைக்க முயல, வெளியே பயத்தில் இறுக்கமாக பற்றி இருந்த அவனின் இருபக்க சட்டை காலரை இன்னுமும் விடாமல் பிடித்திருந்தாள் நீரு.
“பேபி... ஒண்ணுமில்லடா, ஈஸி...” என்று ஆறுதல்படுத்த முயன்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன டா செஞ்சீங்க அவனை, என்ன செஞ்சீங்க... பாவம் டா அவன், இன்னும் நீங்கல்லாம் எத்தனை பேர் வாழ்க்கையை அழிக்கப் போறீங்க... என்னையும் இவனையும் போல இன்னும் எத்தனை பேர்... சொல்லுங்க எத்தனை பேர்... அப்போவும் உங்க வெறி அடங்காது இல்ல... அடங்காது...” என்று சஞ்சயின் சட்டையைப் பற்றி உலுக்கியவளின் இந்தத் திடீர் செய்கை புரியாமல் திகைத்தான் சஞ்சய்.
“நீரு... நீரு...” என்று அவளை மெல்ல சமாதனப்படுத்த சஞ்சய் எடுத்த எந்த ஒரு முயற்சியும் அவளிடம் பலிக்கவில்லை என்பதை விட அவள் இவனின் அழைப்பை கூட உணரும் நிலையில் இல்லை... மீண்டும் மீண்டும் அதையே பேசியவாறு அரற்றிக் கொண்டு இருந்தவளை தன்னிடமிருந்து ஒரு வேகத்தோடு பிரித்தவன், படுக்கையில் அமர செய்து “ஹேய்... இனி ஒரு வார்த்தை வாயில் இருந்து வந்துது அப்படியே அறைஞ்சிடுவேன்... மூச்...” என வாயின் மேல் விரலை வைத்து மிரட்ட... அவனின் இந்தக் குரலில் மிரண்டு திகைத்தவள் அமைதியானாள்.
அவளின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டவன், அவசரமாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து விஷயத்தைக் கூறி வேகமாக அவர்களை வருமாறு கட்டளையிட்டான். அவர்கள் வருவதற்குள் வாசல் படியில் தலைகீழாகச் சரிந்து இறந்து கிடந்தவனின் அருகில் சென்று அவனைத் தொட்டுக் கிரைம் சீனை கலைத்து விடாமல் சுற்றி வந்து கூர்மையாக ஏதேனும் புலப்படுகிறதா என ஆராயத் தொடங்கினான்.
அதே நேரம் சஞ்சயின் அலைபேசி அழைக்கவும், கவனம் முழுவதையும் உடலை சுற்றி ஆராய்வதிலேயே வைத்திருந்தவன், யார் என்று கூடப் பார்க்காமல் எடுத்து காவல் நிலையத்தில் இருந்து என்று எண்ணி பேச தொடங்கினான்.
“சொல்லுங்க ஏன் லேட்...” என்ற குரலில் இருந்த குழப்பத்திலும் கோபத்திலும் அந்தப் பக்கம் அழைத்திருந்த ஆராவுமுதன், “என்ன ஆச்சு சஞ்சு...?” எனவும், “அங்கிள் நீங்களா...?!” என்றவாறே அலைபேசியை எடுத்து பெயரை பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் குரலிலும் அதன் பின்னான அமைதியிலுமே சஞ்சயின் சைகையைக் கணித்து இருந்தவர், “எனி பிராப்ளம் சஞ்சு..?” என்றிருந்தார். அவனும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் அவரிடம் கூறி இருக்க... “ம்ம்ம்... கொஞ்சம் வியர்டா இருக்கு, என்ன கேஸ்னு முதலில் கவனி சஞ்சு...” என்று தொடங்கி மேலும் சிலவற்றைப் பேசிவிட்டுப் போனை வைத்திருந்தார்.
சஞ்சய் இப்போது இருக்கும் மன நிலையில் அவரும் எதற்கு அழைத்தார் என்று கூறாமல் விட்டிருக்க.. அவனுமே அவரின் இந்த நேரத்து அழைப்பையும் அவரின் குரலில் இருந்த வித்தியாசத்தையும் கவனிக்கத் தவறி இருந்தான், பின் இதைக் குறித்து வருந்த போவது தெரியாமலே.
சம்பந்தமே இல்லாமல் ஒருவன் தன் வீட்டு வாசலில் வந்து புரியாத எதையோ பேசி விட்டு இறந்ததே சஞ்சயின் மனம் முழுவதும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் விதைத்து இருக்க... வேறு எந்த நினைவுமே அவனுக்கு வரவில்லை.
அதற்குள் காவலர்களும் வந்து விடவே, இறந்தவனின் உடலை வேகமாக ஆராய்ந்து முடித்து அவனை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அவர்களுக்குச் சில பல கட்டளைகளையிட்டவன், இவன் யார் என்ன என்ற தகவல் தனக்கு உடனடியாக வேண்டும் என்று தெரிவித்து இருந்தான்.
அவர்கள் கிளம்பி சென்றதும் யோசனையோடே நடந்துக் கொண்டு இருந்தவனுக்கு, இறந்தவன் கூறிய “பெயரை சொன்னாலே தெரியற அளவுக்கு நான் உங்க அளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை சார்... உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கு வேணா லேசா ஞாபகம் இருக்கலாம்... அதுவும் இருக்கோ இல்லை தெரியலை...” என்ற வரிகள் நினைவுக்கு வரவும், மீண்டும் மனதில் அதையே சில முறை ஓட்டிப் பார்த்தவன், இன்ஸ்பெக்டர் ஆனந்த்திற்கு அழைத்தான்.
“சார்... இப்போ தான் விஷயம் கேள்விபட்டேன் சார்...”
“ம்ம்... ஆனந்த், ஒரு ஒன்பது இல்லை பத்து மாசம் முன்னே நடந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவனா இருக்கலாம்னு நினைக்கறேன்... அப்போ இருக்க மேஜர் கேஸ் என்னனு லிஸ்ட் கொடுங்க...” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே சற்று முன் இறந்தவனைத் தூக்கி சென்ற ஏட்டுவிடம் இருந்து சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.
உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து இதை எடுத்தவனுக்கு, “சார்... செத்தவன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு சார்...” என்ற ஏட்டின் உற்சாகமான பதில் வியப்பை தந்தாலும், “அதுக்குள்ளவா கோவிந்தன்...” என ஆச்சர்யமாகக் கேட்டிருந்தான்.
“ஆமா சார்... முகத்தில் இருந்த ரத்தத்தை டாக்டர் இப்போ தான் துடைச்சாங்க சார்... இவன் பேரு மதன்... பொண்டாட்டியை கொலை செஞ்ச வழக்கில் உள்ளே இருந்தவன் சார் இவன்...” என்று அவர் கூறவும், சற்று முன்பு அவன் தன் மனைவியைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வரவும்,
“ஏன் மனைவியைக் கொன்னான் கோவிந்தன்...?”
“இல்லிகள் ரிலேஷன்ஷிப் சார்... கண்ணால் பார்த்ததும் ரெண்டு பேரையும் குத்தி கொன்னுட்டான்...”
“ஓ...” என்று இழுத்தவனுக்கு, ‘காதலித்து மணந்தவங்களை எந்த நிலையிலும் காப்பாத்த தானே நினைப்போம் ஏசிபி சார்...?! அப்பறம் நான் மட்டும் அப்படிச் செய்வேன்னு ஏன் யாருக்குமே தோணாம போச்சு சார்...?’ என்ற அவனின் குரலே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது.
“சார்... சார்...”
“ஆங்... கோவிந்தன் சொல்லுங்க...?”
“இல்லை சார்... இவன் ஏன் உங்க வீட்டு வாசலில் வந்து தற்கொலை செஞ்சிக்கணும் சார்..?”
“அதான் எனக்கும் புரியலை... பார்க்கலாம், நீங்க அங்கே பார்த்துகோங்க...” என்றபடியே யோசனையோடு வைத்தவனுக்கும், இதே கேள்வி தான் மனம் முழுக்க இருந்தது. ‘இந்த வழக்கு நடக்கும் போது தான் இங்கு இல்லை... தனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வழக்கில் தண்டனை பெற்ற ஒருவன் ஏன் இங்கு வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், உடனே ஆனந்தை அழைத்து மதன் சம்பந்தப்பட்ட கேஸ் பைலை கொண்டு வர பணித்தான்.
அடுத்தப் பதினைந்து நிமிடத்தில் ஆனந்த் அந்தக் கோப்போடு வந்து விடவே, “இது யார் பார்த்த கேஸ் ஆனந்த்...?”
“மதுசூதனன் பார்த்தார் சார்...”
“ஓ...” என்றவன், அனைத்தையும் படித்துப் பார்த்ததில் ஏதோ எங்கோ தவறாக இருப்பது போலப் பட்டது.
“ஏதோ பிசுறுதட்டுதே ஆனந்த்... அங்கே என்ன பார்த்தீங்க ஒருமுறை கிளியரா சொல்லுங்க...”
“என்ன சார்... எல்லாம் கிளியரா தானே சார் இருக்கு... நானும் அன்னைக்கு அவர் கூடப் போய் இருந்தேன் சார்... உடம்பெல்லாம் ரத்தத்தோடு இரண்டு பிணங்களுக்கு நடுவில் உட்கார்ந்து நானே உன்னைக் கொன்னுட்டேனேன்னு புலம்பிகிட்டே இருந்தான் சார்...”
“சோ... இவன் தான் கொலை செஞ்சான்னு முடிவே செஞ்சிட்டீங்க அப்படித் தானே...”
“இதில் சந்தேகப்படும்படி எதுவுமே இல்லையே சார்... இவன் வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு ஒய்ப் வேற ஒருத்தன் கூட இருந்து இருக்கா... உள்ளே வந்து அதைப் பார்த்தவன், கோபத்தில் இரண்டு பேரையும் கொன்னுட்டான்...”
“ஓ... அப்படி வரீங்க... ம்ம்ம்... சரி இவன் என்ன செய்யறான்...?”
“வக்கீல் சார்...”
“யாருஊஊ...?”
“வக்கீல்”
“இவனே தான் கேஸ் அட்டென்ட் செஞ்சானா...?”
“இல்லை சார்... வேற யாரும் கூட வேண்டாம்னு சொல்லிட்டான்... தண்டனையையும் அமைதியா ஏத்துகிட்டான்... பத்து வருஷ ஆயுள்தண்டனை கொடுத்தாங்க சார்... இப்போ எப்படி வெளியே வந்தான்னு இப்போ தான் நீங்க பைல் கேட்டதும் விசாரிச்சேன், பெயில் வாங்கி இருக்கான் சார்... வெளியே வந்து பத்து நாள் ஆகுது...”
ஆனந்த் கூறிய அனைத்தையும் மனதிற்குள் ஒட்டி பார்த்தான் சஞ்சய், ‘இவனே வக்கீல் ஆனாலும் வழக்கை எதிர்த்து வாதாடலை... அரஸ்ட் செய்யும் போதும் கொலை செய்யலைன்னு சொல்லலை... இப்போ இத்தனை மாசத்துக்குப் பிறகு தானே பெயில் கேட்டு வெளியே வந்தவன், ஏன் தற்கொலை செஞ்சிக்கணும்... அப்படித் தற்கொலை தான் அவன் எண்ணம்னா அதை அவன் உள்ளேயே கூடச் செஞ்சிகிட்டு இருந்து இருக்கலாமே...!? அப்படியே செஞ்சிக்கிட்டாலும் என் வீட்டு வாசலில் ஏன்...?!’ இப்படி விடை இல்லாத கேள்விகள் நீடு கொண்டே செல்ல...
“அந்த லேடி பேர் என்ன...?”
“ஆயிஷா சார்...”
“ஆயிஷா...?!!!”
“எஸ் சார்... லவ் மேரேஜ், ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே இரண்டு பேருக்கும் லவ்... இரண்டு வீட்டிலேயும் சம்மதிக்கலை... முடிஞ்ச வரை போராடி பார்த்துப் பின் வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க... கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது... குழந்தை இல்லை, ஐந்து வருஷத்துக்குக் குழந்தை வேண்டாம்னு முடிவு செஞ்சு இருந்தாங்களாம்...
இவங்களே தான் எல்லாம் செய்யணும்னு வரும்போது அதுக்கு முதலில் தயாராகிட்டு குழந்தை பற்றி யோசிக்கலாம்னு முடிவாம்... வீடு சொந்த வீடு தான் சார்... வளர்ந்து வரும் ஏரியா அது... அந்த வீதியில் மொத்தம் இருப்பதே ஆறு வீடு தான் சார்... லோன் போட்டு வாங்கி ஒரு வருஷம் கூட ஆகலையாம்...
கொலை நடந்த அன்னைக்கு அந்த ரவி ஆயிஷாவை பார்க்க நைட் அவங்க வீட்டுக்கு எட்டரை மணிக்கு வந்திருக்கான் சார்... ஆயிஷா தான் வெளியே வந்து கூட்டிகிட்டு போய் இருக்கா... இரண்டு பேரும் உள்ளே போகறதுக்கு முன்னே சுத்தி முத்தி பார்த்துட்டு தான் போய் இருக்காங்க..
எதிர் பக்கம் கொஞ்சம் தள்ளி இருந்த வீட்டு லேடி வாக்கிங் போயிட்டு திரும்ப வரும் போது கவனித்து இருக்காங்க சார்... தனி வீடு தான் அதனால் எந்த ப்ரச்சனையும் இல்ல... மதன் சனிக்கிழமை சயந்திரம் பெருமாள் கோவில் போவதை வழக்கமா வெச்சு இருக்கான் சார், ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருவானாம்... அந்த நேரத்தை இவங்களுக்குச் சாதகமா யூஸ் செஞ்சிக்கப் பார்த்து இருக்காங்க... அப்போ மதன் வீட்டுக்கு வந்து இவங்களைப் பார்த்ததும் எழுந்த கோபத்தில் கொன்னுட்டான் சார்... எல்லாம் கிளியரா தானே சார் இருக்கு...?”
“நம்ம பக்கம் தப்பில்லைன்னு ரொம்ப உறுதியா இருக்கீங்களா...?! இல்லை தப்பிலைன்னு நம்ப வைக்க முயற்சிக்கறீங்ககளா ஆனந்த்...?!” என்ற சஞ்சயின் கேள்வியில் “சார்... இல்லை சார்... நம்ம பக்கம் தப்பிருக்க வாய்ப்பே இல்லை சார்... நல்லா விசாரிச்சிட்டேன்..” என்று பதறினான் ஆனந்த்.
“ம்ம்ம்... ஆயிஷா என்ன செஞ்சுகிட்டு இருந்தாங்க...?”
“டீச்சர் சார்..”
“என்ன...?”
“ஆமா சார், டீச்சர்... அந்த ரவியும் டீச்சர் தான் சார்... இரண்டு பேரும் ஒண்ணா எம்எட் பண்ணி இருக்காங்க... அப்போதிலிருந்து பழக்கம் போலச் சார்... ஆயிஷா மூணு வருஷமா அங்கே வேலை செஞ்சு இருக்கா... ரவி இரண்டு மாசம் முன்னே தான் அங்கே சேர்ந்து இருக்கான்... மறுபடி அவங்களுக்குள்ளே கனெக்ஷன் ஆகிடுச்சு...”
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லறீங்க ஆனந்த்...?”
“ஸ்கூல்ல போய் விசாரிச்சேன் சார்... கூட வேலை செய்யற டீச்சர் எல்லாம் அவங்க எப்பவும் ஒண்ணாவே தான் இருப்பாங்கன்னும்... மத்தவங்களுக்குத் தெரியாம புரியாம ரகசியம் பேசிக்குவாங்கன்னும் சொன்னாங்க சார்...”
“பிரண்ட்ஸ் ரகசியம் பேசிக்கக் கூடாதா ஆனந்த்...?”
“அப்படி இல்லை சார்... அந்த ஸ்கூல் கரஸ் ஒரு படி மேலே போய் இரண்டு பேரும் லேப்ல கட்டி பிடிச்சு இருக்கறதை பார்த்து வார்ன் செஞ்சி விட்டேன்னு கூடச் சொன்னாரு சார்... இதை அன்னைக்குச் சில டீச்சரும் பார்த்து இருக்காங்க சார்...”
“ஓஹோ... இதுக்கெல்லாம் வாக்குமூலம் இருக்கா...? பைல் செஞ்சு இருக்கீங்களா...?!”
“இருக்கு சார்...”
“எந்த ஸ்கூல்...?”
“புஷ்பாஞ்சலி கல்வி குழுமம் சார்..”
“வாட்...?”
“எஸ் சார்”
“ஓ...” என்று யோசனையோடு கன்னத்தைத் தடவியவன், “ரவிக்குப் பேமிலி இல்லையா...?”
“இருக்கு சார்... அது இன்னும் ரொம்ப வேதனை... அவன் ஒய்ப் நிறை மாசம் சார்... விஷயம் தெரிஞ்சு தற்கொலை செஞ்சுகிட்டாங்க...”
சஞ்சய்க்கு இதைக் கேட்டதும் மனம் பதறிப் போனது. சில நொடிகள் எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “ஆயிஷா, ரவி, அவன் மனைவி, குழந்தை, இதோ இப்போ மதன்... ஆக மொத்தம் ஐந்து உயிர் பலி, ஆனா அவன் ஏன் ஆறுன்னு சொன்னான்...?!”
“அதுதான் சார் எனக்கும் புரியலை... ஏதோ கோபத்தில் வந்து உளறி இருக்கான் சார்...” என்றவன், ஒரு சிறு இடைவெளிவிட்டு “ஆனா சார்... இந்தக் கேசை ஹாண்டில் செஞ்சது மதுசூதனன்... அவர் மேலே கோபம் வருவது நியாயம், அவர் இப்போ உள்ளே இருக்கும் பட்சத்தில் அடுத்து கூட இருந்தது நான் என் வீட்டுக்கு வந்திருந்தா கூடப் பரவாயில்லை... சம்பந்தமே இல்லாம உங்க வீட்டுக்கு எதுக்கு சார் வரணும்...”
“அதே தான் எனக்கும் புரியலை ஆனந்த்...”
“ஏதோ இடிக்குது சார்...”
“எனக்கும் தான் ஆனந்த்... பார்ப்போம், ஒகே ரொம்ப லேட் நைட் ஆகிடுச்சு, நீங்க கிளம்புங்க... காலையில் சிக்கீரம் ரிப்போர்ட் வந்ததும் வேலையைத் தொடங்கணும்...” என்று எழுந்துக் கொண்டான்.
கூடவே எழுந்துக் கொண்ட ஆனந்தும் “எனக்கு இதில் புதுசா என்ன இருக்கப் போகுதுன்னு தான் தோணுது சார்...” என்று தயங்கி இழுக்க...
“அதையும் தான் ஒரு முறை பார்த்துடுவோமே...” என்று ஆனந்துக்கு விடைக் கொடுத்துவிட்டு வந்து சஞ்சய் படுக்கையில் விழுந்த போது மணி இரண்டை தொட்டிருந்தது. அருகில் நீரு சரியாகக் கூடப் படுக்காமல் அப்படியே சாய்ந்தவாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல ஐந்தரை மணிக்கு நீரு விழித்த போது, எப்போதும் போலவே சஞ்சய் அருகில் இல்லை. உடற்பயிற்சி அறையில் இருப்பான் என்ற எண்ணத்தோடு குளித்துத் தயாரானவள், வெளியில் வரும் போது உணவு மேசை மேல் இருந்த துண்டு சீட்டு அவளை வரவேற்றது.
“அவசர வேலை... நீ ஆட்டோ பிடித்து ஸ்கூல்க்கு போயிடு... காலை உணவு ஆர்டர் செஞ்சிடறேன்... மறக்காமல் சாப்பிட்டு கிளம்பு...” – உன் பொறுக்கி
இரண்டே வரிகள் அதுவும் செல்லும் வேகத்தில் அவசரமாக எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. முன்பே அவன் என்றால் பிடிக்காது... இதில் நேற்று அவன் பேசிய பேச்சும் வைத்த குற்றசாட்டும் அதன் பின் நிகழ்ந்தவைகளும் கண் முன்னால் வந்து போனதில் நீ இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அது எனக்கு ஒன்று தான் என்பது போன்ற மன நிலையோடு தயாராகிக் கொண்டிருந்தாள் நீரு.
ஆட்டோவில் பள்ளி இருந்த வீதியின் உள்ளே நுழைய முடியாத அளவு வீதி முழுவதும் கும்பல் இருக்கவே... அங்கேயே இறங்கி நடந்தவளின் பார்வையில் பள்ளியின் பிரதான வாசல் அருகே அதை அடைத்ததைப் போல ஒரு சிறுவனைப் படுக்க வைத்து அதைச் சுற்றிலும் இருந்தவர்கள் அழுகையிலும் கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“பாவிங்களா... பாவிங்களா... அப்படி என்னடா செஞ்சிட்டான் என் பையன், இப்படிப் பொட்டலமா கட்டி கையில் கொடுத்துட்டீங்களே... ஐந்து வருஷமா தவம் இருந்து பெத்தேனே... இப்படி இருந்த ஒத்த புள்ளையையும் இல்லாம செஞ்சிட்டீங்களே டா... என் வயித்தெரிச்சல் உங்களைச் சும்மா விடாது டா...” என்று மார்பிலும் வயிற்றிலும் ஒரு தாய் அடித்துக் கொண்டு அழுவது தெரிந்தது.
அருகில் சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லாம் உள்ளே புகுந்து துவம்சம் செய்யும் வெறியில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடி தடியான ஆட்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். இதெல்லாம் எதையோ உணர்த்த, மெல்ல அங்குக் கிடத்தப்பட்டிருந்த சிறுவனின் முகத்தைச் சற்று நகர்ந்து எட்டி பார்த்தவளுக்கு நேற்று காலை முதல் மாலை வரை மூன்று நான்கு முறை அலுவலக அறைக்குச் செல்லும் வழியில் இவன் பள்ளி முதல்வரின் அறைக்கு வெளியே பெற்றோரோடு நின்றிருந்ததைப் பாத்தது நினைவு வந்து திக்கென்றது.