About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
வணக்கம் தோழமைகளே.
என்னுடைய தாழம் பூ நாவல் இனி தளத்தில் ...பாய்மரக் கப்பலின் இரண்டாவது பாகமான தாழம் பூவும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். கதையை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
தாழம் பூ
பனியும் , காற்றும் பதவிசாய் விலாவி வீசியது போல் இருந்தது அந்த அதிகாலை நேரம். நல்ல பளீர் வெளிச்சம் பரவாமல் அழுக்காய் விடிந்திருந்தது.
இரவில் வானம் லேசாய் அழுதிருக்கும் போலவே. வராண்டா முழுக்க ஈரமாய் மலர்ந்திருக்க, ஈசி சேரில் அமர்ந்தபடி பெருத்த யோசனையில் இருந்தாள் வானதி.
இறுக பின்னிய சடையைப் போல், பிரிக்க முடியாமல் முடியிடப்பட்டு இருந்தது சிந்தனை.
" ஆப்னி கீ உத்லேன்..?" மெல்லிய குரலில் கேட்டபடி அருகில் வந்து நின்ற மம்தாவை நிமிர்ந்து பார்த்தபோது முகம் முழுக்க புன்னகை பூவாகி இருந்தது.
" ரெம்ப நேரமாச்சு." என்றவள், காலை குறுக்கிக் கொண்டு முழங்காலை கட்டிக் கொண்டாள். அந்த அதிகாலை சுகமான ரசமாய் அவளுள் விரவத் தொடங்கி இருந்தது.
வெளுப்பு தட்டத் தொடங்கிய ஆகாயத்தை இமைக்காமல் பார்க்கத் தொடங்கி இருந்தாள். இயற்கை மீது சலனமில்லா பிரியம் பூத்து புன்னகைத்தது.
" என்னம்மா, ஆகாயத்தை இப்படி பார்க்கிறீங்க..? இன்னைக்கு இது புது வானமா..?" மம்தா எதிரில் இருந்து ஸ்டூலில் அமர்ந்து கொண்டு மெலிதாக புன்னகைக்க, கால்களை இன்னுமே இறுக கட்டிக் கொண்டாள் குழந்தை போல.
" எனக்கு கருமையில இருந்து ஆகாயம் மெல்ல மெல்ல வெண்மையா நிறப் பிரிகை செய்றதை பார்க்க ரெம்பவே பிடிக்கும் மம்தா. எனக்கும் நாற்பத்தஞ்சு வயசாயிடுச்சு இன்னும் கூட வானம் பிரிச்சு துப்பிய கருப்பு எங்க போச்சுன்னு கண்டுபிடிக்க முடியல. இது மட்டுமில்லை, பூ ஒண்ணு மலர்வதை பார்க்கணும். மொட்டுல இருந்து எப்படி முகம் மாறி அது வடிவாகுதுன்னு பார்க்கணும்…" அவள் சொல்லி முடித்தபோது மம்தா கண்களை முகம் முழுக்க விரித்து சிரிக்க ஆரம்பித்து இருந்தாள்.
" மாய், நீங்க பெரிய கலா ரசிகை… அதான் உங்க பொண்ணும் அப்படியே இருக்கா."
" என்னை ரசிச்சது போதும். இன்னைக்கு நம்ம மிஷனரிக்கு ஜெர்மனியில இருந்து டிரஸ்டி எல்லாம் வர்றாங்க தெரியும் தானே..?" அன்றாடத்தில் புகுந்ததால் மற்றேனய ரசனைகளை அடுத்த நாள் இரவுக்கு அள்ளி கட்டி வைத்து விட்டு இருந்தாள்.
" நியாபகம் இருக்கு மாய். அவங்களுக்கு ஸ்பெசலா டிபன் தயார் செய்யணுமா..?"
" தேவையில்லை. நம்முடைய வாழ்வியல் சூழலை பார்க்கத் தான் இங்கே வர்றாங்க. எதுக்கு மிகைப்படுத்தி அவங்களை நம்ப வைக்க..? எப்பவும் செய்றதே செய்ங்க. ஆனால் சுவை குன்றாமல் செய்ங்க."
தலையாட்டி விட்டு மம்தா நகர, எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டாள். இறுதியாய் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். சுத்தமாய் பிரசவம் முடிந்திருந்து. வெள்ளை மேகங்கள் நீந்தி நீந்தி திசை தேடிக் கொண்டிருந்தன. பறவைகள் சொல்லி வைத்தது போல், கிசுகிசுத்தபடி ஒரே திசையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தன.
குளியலறையில் இருபது நிமிடத்தை நீரோடு சேர்த்து விரயம் செய்து முடித்து, கண்ணாடி முன் வந்து நின்றாள். கருநீலத்தில் வெண்பூக்கள் தூவிய டிஷ்யூ காட்டனில் வெகு கம்பீரமாய் இருந்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை பார்த்து இருந்தது தலைமுடியில்.
முன்பிருந்த பொலிவு கேசத்திலும் இல்லை, தேகத்திலும் இல்லை. இதயம் வேண்டுமானால் நின்ற இடத்தில் நிற்கும், எலும்பிற்கும் தோலுக்கும் அந்த இத்யாதி வேலைகள் தெரியாது. ஆனால் நாற்பதில் நரைதான் அழகு… அதை கரும் மை' திரையிட்டு மறைக்கும் அளவிற்கு முதுமை பற்றிய பதட்டம் வந்திருக்க வில்லை இன்னும்.
புடவை மடிப்பை நீவி சரிசெய்து கொண்டிருந்த நிமிசம் அலைபேசி பிரத்யேகமாய்ச் சிணுங்க, அந்தச் சத்தம் அங்கமெல்லாம் தட்டி எழுப்பும் அலாரம் போல் உள்ளத்தை உரச, வேகமாய் வந்து கையில் எடுத்தாள்.
இணைப்பு சென்னையை அவள் கன்னத்தில் உரசி உயிரூட்ட வைத்தது.
" வானு…" ஒரு வார்த்தை தான். அதில் இருந்தது இரண்டு எழுத்துகள்தான். அதற்கே காதுவழி ரத்தம் பாய்ந்து அவள் உடம்பு முழுக்க இன்னொரு உயிரை ஊடாட வைத்தது.
" சொல்லுங்க நந்தா." என்றாள் உணர்வை கட்டி நிறுத்தியபடி.
" நைட் தூங்கலயா..? "
அட..! ஐந்தாம் தலைமுறை அலைகற்றை (5G) வரவில்லை என்ற மனக்குறை எதற்கு..? மனசோடு மனசு மோதும் வேகத்திற்கு 15ம் தலைமுறை அலைகற்றையின் வேகம் இருந்தது.
" உங்களுக்கு எப்படி தெரியும் நந்தா..?" என்றாள் சிறு பெண்ணின் உத்வேகத்தோடு.
" ரெம்ப நேரம் ஆன் லைன்ல காட்டுச்சு. கால் பண்ணலாம்னு கூட நினைச்சேன். எதுவும் வேலையா இருப்பியோனு யோசிச்சிட்டே…"
" நீங்களும் தூங்கல. அதானே."
அவன் வாக்கியத்தை அவள் முடித்தபோது, இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு. உணர்வுகளை உணர்கின்ற தருணத்தை விட உன்னதமான தருணம் உலகில் எது..?
" வேலைலாம் இல்ல நந்தா. இன்னைக்கு மிஷனரியில இருந்து வர்றாங்க இன்ஸ்பெக்சன் செய்ய. அதைப் பத்தி யோசனை." என்றாள் பொய்யாக.
மறுமுனையில் அவள் கூற்றில் உண்மை கண்டறியும் சோதனையில் இருந்தான் நந்தா.
" சரி, தொண்டை ஏன் கரகர' னு இருக்கு..?" ஆரம்பித்து விட்டான். இனி அவனை சமாளிப்பதிற்குள் அவள் பாடு, வம்பாடு.
" மழையா இருக்கு நந்தா இங்கே."
" உனக்கு மழையில அலையற வேலை இல்லயே."
" கிளைமெட் சேன்ஞ் ஆனால் இதெல்லாம் வரும் இல்லயா? நான் என்ன பதினாறு வயசுப் பொண்ணா..?" என்றாள் வேண்டுமென்றே அவனைச் சீண்ட,
" எனக்கு எப்பவும் அப்படித்தான். சரி இந்த முறை சந்தியா வரும்போது நானும்…" வழக்கமான விசயத்தை ஆரம்பிக்க மெல்ல அவள் முகம் இறுகியது.
" நான் வச்சிடட்டுமா..? நிறைய வேலை இருக்கு. "
" எனக்கு நிறைய வேதனை இருக்கு. ஆனால் அதை கேட்கவே மாட்டேங்கற உன் மேல கோபம் இருக்கு. உன் ஆதங்கத்துல அர்த்தம் இருக்கு, அதே மாதிரி என் தவிப்பில நியாயமும் இருக்கு."
" நந்தா…" என்றாள் தவிப்பாக.
" நீ போட்ட லஷ்மண ரேகையை தாண்டறது அவ்வளவு பெரிய விசயமில்லை. உன் வார்த்தைக்கு நான் தர்ற மரியாதையை, என் உணர்வுக்கு நீ எப்போ தரப்போறே..? இல்ல, நம்ம ரெண்டு பேருடைய சந்திப்பு ஒரு இழப்பில தான் நிகழணும்னு நினைக்கிறியா..?"
" நந்தா…" வீறிட்டு விட்டாள். உடலும் மனசும் ஒருசேர நடுங்கியது. அந்த காலை நேரத்தில் அந்த வார்த்தை அவள் இதயத்தை என்னவோ செய்தது. மெல்ல எட்டிப் பார்த்த விசும்பலை உதடு கடித்து அடக்கினாள். அழுவது தெரிந்தால் இன்னும் கோபப்படுவான்.
மெல்ல நிலைப் பட்டான். சினம் காட்டத் தெரியாதவனின் சினம், வீரியமாய் காரியம் ஆற்றும் தான்.
" யாழி எங்கே..? என்கிட்டே பேசி எத்தனையோ நாள் ஆகுது." என்றான் இறுக்கம் குறையாமல்.
" கேம்பஸ் போய் இருக்கா ஷில்லாங் வரைக்கும். வந்ததும் பேசச் சொல்றேன்." குரல் அடங்கி இருந்தது. அந்த தர்க்கமில்லாத வெறுமை குரல் அவனுள் தாக்கத்தையும் ஏக்கத்தையும் உண்டாக்கியது.
" இப்போ என்ன சொல்லிட்டேன் வானு..? எதுக்கு அழறே..?"
" நான் அழல. ஆனால் ரெம்ப கஷ்டமா இருக்கு நந்தா அந்த வார்த்தை. சுமக்கவே முடியல. இனியும் இழக்க என்கிட்ட என்ன இருக்கு.?" என்று முடித்த போது குரல் வெடித்து இருந்தது.
" நான் நாளைக்கு அங்கே இருப்பேன். இப்படி கண்ணீர் விட்டா எனக்கு தாங்காது. எனக்கே ரெண்டு நாளா…" என்றவன் நிறுத்திவிட்டான். இப்போது அவள் இதயம் இடம்மாறி, தடம்மாறி பரிதவிக்க ஆரம்பித்து இருந்தது.
" ரெண்டு நாளா என்ன நந்தா..? உடம்புக்கு எதுவும் பண்ணுதா..?"
" அதெல்லாம் இல்ல. லேசா மார்வலி. கேஸ் ப்ராபளமா இருக்கும். அம்மா பூண்டு தட்டி பால் காய்ச்சி தந்தாங்க." அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் இணைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ காலில் வந்திருக்க, அவசரமாய் இணைத்தான்.
அடடா! அந்த கண்களில் தான் எத்தனை பரிதவிப்பு. அந்த முகத்தில் தான் எத்தனை பரிமளிப்பு. 6 இன்ச் தொடுதிரையில் அலைகழிந்து கொண்டு இருந்தாள் அவனை துளைக்கும் கண்களால்.
மொபைலை தாங்கியில் பொருத்திவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தான். சின்ன சிரிப்பு ஒரிரு முடி நரைக்க தொடங்கி இருந்த மீசையில் முளைத்து மறைந்து நின்றது.
‘’ நல்லா பார்த்துட்டே இல்லே..? சொல்லு பார்க்கலாம், அந்த ஸ்கேன் ரிப்போர்ட், இ.சி.ஜி ரிப்போர்ட், அப்பறம் அந்த ப்ளட் டெஸ்ட் கூட முடிச்சிட்டேன்னு உன் கண்ணு சொல்லுதே..!’’ சட்டையின் கை முனையை மெல்ல சுருட்டிக் கொண்டு முஷ்டியை மடக்கி காட்டிய மேனரிசம் எப்போதும் போல இப்போதும் அவளை உள்ளக் கிடக்கையில் அழுத்தியது.
‘’ போதும் கேலி..! அத்தையை கூப்பிடுங்க. நான் உங்களைப் பத்தி பேசணும்.’’
‘’ அடேங்கப்பா..!’’
‘’ கேலி என்ன நந்தா இப்போ வேண்டி கிடக்கு..? என்ன பண்ணுது நிஜமா..!’’
அவள் கேட்டுக் கொண்டே இருக்க, மெல்ல விரல் நீட்டி அவள் தலையை மென்மையாக வருடித் தந்தான். வீடியோ காலில் தன் கண்ணீரை கட்டுபடுத்த இயலாமல் தவித்தாள்.
‘’ பயப்பட ஒண்ணுமில்ல வானு..! பேங்கில போஸ்டிங் வந்ததுல இருந்து நிறைய ஓர்க் டென்சன். ஒரு இடத்தில நிம்மதியா இருக்க முடியல. தபு மெடிக்கல்ல இருக்கா. நித்தமும் ஆயிரம் கம்ப்ளைண்டோட வந்து நிக்கிறா. குடும்பம் வளர வளர, கவலைகளும் வளர்ந்துட்டே தானே இருக்கு.’’
‘’ அதுக்குன்னு உங்களை கவனிச்சுக்காம இருப்பீங்களா நந்தா..? உங்களுக்கு ஏதாவதுனா, அதை தாங்கிக்கிற சக்தியாவது எங்களுக்கு இருக்கா..?’’
‘’ ஏன் வானு, இத்தனை சொன்னாலும், ஒரு வார்த்தை, நான் உங்களை வந்து பார்க்கிறேன்னு சொல்ல தோணல இல்லையா..? நான் உனக்காக இருக்கணும்கிற உன்னோட சிந்தனை ரெம்ப சுயநலமானதுனு உனக்கு தோணும் போது என்னைத் தேடி நீயே வருவே..!
யாழியை பார்க்கணும்கிற என் எண்ணத்தின் நேர்மை உனக்கு புரியலயா..? அம்மாக்கு எழுபது வயசுக்கு மேலே ஆகுது. பலநேரம் உன்னையும் யாழினியையும் பார்க்காமல் தனக்கு எதுவும் ஆகிடுமோங்கிற அவங்களுடைய கண்ணீர்க்கு என்னால் நியாயமே பண்ண முடியல வானு. இந்த அழுத்தமெல்லாம் சேர்ந்துதான் என்னை கவலையில் ஆழ்த்துது. ’’
‘’ நந்தா…’’
‘’ நான் வைக்கிறேன். உனக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னே இல்லே..! யாழியை என்கிட்ட பேசச் சொல்லு..! ‘’ இணைபில் இருந்து வெளியேறினான். குமைந்து போனாள் அந்த செயலில்.
தன்னுடைய இயலாமையை அதிருப்தியாக கூட வெளிப்படுத்த விரும்பாத அவன் மனதை இன்னும் எத்தனை நாள்கள் காயப்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறோம், என்ற எண்ணமே அவளை சின்னா பின்னமாக்கினாலும், அதைப்பற்றி சிந்திக்க இப்போது நேரமில்லை என்பதால், இறங்கி கீழே வந்தாள்.
கீழ்தளத்தில் இருந்து ஒட்டி பிரிந்து உள்ளே நகர்ந்த சின்ன நடைபாதையில் இரைந்து கிடந்த பூக்களை மிதிக்காமல் நடந்து வந்தால், சின்ன மரகேட்டை திறந்து கொண்டு காரிடரில் நடந்தாள்.
விதைக்காமல் விளைந்திருந்தது அமைதி. கொல்கத்தா மிசினரி ஹாஸ்பிடல் என்று வங்கத்திலும், அதற்கு நேர் கீழே ஆங்கிலத்திலும், வெள்ளை எழுத்துக்கள் மின்னின.
நெடிய ஹாலில் ஒருபக்கம் மரியோடு மைந்தன் இருக்கும் முகப்பு படமும், மற்றொரு பக்கம் மிசினரியின் வரலாற்றோடு, புன்னகை முகமாய் இருந்த மதர் சுப்பீரியர்களின் படமும் சுவற்றில் அமைதியாக வீற்றிருந்தது.
அவற்றின் நடுநாயகமாக இருந்த மதர் கேப்ரியலாவின் சாந்தம் தவழ்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். இந்த வாழ்க்கையும், இந்த பாதுகாப்பும், இந்த நிம்மதியும் அவர் இல்லாது போயிருந்தால், சொல்லாது எங்கோ போயிருக்கும். எல்லா நிலைகளிலும் பாதுகாப்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் தருகின்ற இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மனமார.
‘’ மாய், ரெடியாகி வந்தாச்சா..? நான் டிபன் எடுத்து வைக்கட்டும..?’’ மம்தா பக்கத்தில் வந்து நின்று நினைவை டேக் டைவர்சன் போட வைத்தாள்.
‘’ நான் முதல்ல ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு மதரை பார்த்துட்டு வந்திடறேன். நீ மத்த ஸ்டாப்புகளுக்கு முதல்ல சாப்பாட்டை அனுப்பி வச்சிடு. கிச்சனை துப்புரவாக வைக்கணும். அதிகாரிகள் வந்து கேட்டால், எந்தக் குறையா இருந்தாலும் தயங்காமச் சொல்லணும். அது என் மீதான குறையா இருந்தாலும். அதுதான் நம்முடைய ஹாஸ்பிடலுக்கு நல்லது.’’ சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்தவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு மெல்ல மம்தா சமையலறையை நோக்கி நகர, மதர் கேத்ரீனாவின் அறை வாசலில் நின்றாள் வானதி.
அவள் ஒலி அனுப்பி அனுமதி கேட்க, உள்ளிருந்து அழைப்பு வந்தது.
‘’ குட் மார்னிங் மை சைல்டு…’’
‘’ குட் மார்னிங் மதர்..! எனக்கு எதுவும் தகவல் இருக்கா..?’’
’’ மிசினரி டிரஸ்டில் இருந்து அதிகாரிகள் இன்னும் சில மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க. நம்முடைய மருத்துவமனையோடு சேர்த்து இந்தியா முழுக்க, முப்பத்தி இரண்டு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து இவர்கள் சமர்பிக்கும் அறிக்கையை வைத்துத்தான் வருங்காலத்தில் நமக்கான நிதியை டிரஸ்ட் விடுவிக்கும். அதனால, நம்முடைய தேவையை அவங்களுக்கு புரிய வைக்கவேண்டிய சாமார்த்தியம் உன்னை சேர்ந்தது.’’
‘’ புரியுது மதர் சுப்பீரியர்..! அது ரொம்பவே எளிதான விசயம். உண்மை பேசினா போதும். மிகைப்படுத்தலும், பேராசையும் இல்லாத உண்மைக்கு நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும். ’’
‘’ வானதியிடம் பொறுப்பை தந்த பிறகு நமக்கு எந்தக் கவலையும் தேவையில்லைனு’ மதர் கேப்ரியலா சொன்ன வார்த்தைகள் இன்னும் காதருகில் தான் இருக்கு வானதி. ஆனாலும் நினைவூட்ட வேண்டியது என் கடமை.’’ என்றார் புன்னகையோடு.
தலையசைத்து விட்டு வெளியேற திரும்பியவளை மதரின் குரல் மறுபடியும் தடை போட, நின்று திரும்பி பார்த்தாள்.
‘’ இன்னொரு தகவல் கூட இருக்கு வானதிக்காக.’’
இந்தமுறை வானதியின் முகத்தில் தான் வியப்பு குழுமி இருக்க, என்ன என்பதுபோல் அமைதியாக நின்றாள்.
’’ ஷில்லாங்கில் இருந்து கேம்பஸ் முடிச்சிட்டு, யாழினி அப்படியே உன் தோழி சந்தியாவை சந்திக்க சென்னை கிளம்பறதா எனக்கு தகவல் அனுப்பி இருக்கா. உன்கிட்ட விசயத்தை சொன்னால் நீ அனுமதிக்க மாட்டேன்னு தெரியும்கிறதால, என்கிட்ட மட்டும் தகவல் சொல்லிட்டு கிளம்பி இருக்கா. அவளைப் பொறுத்தவரை நீயும் நானும் வேறில்லை தானே..? ’’ கேத்தரின் அர்த்தமாய் புன்னகைக்க, வானதியின் பூமி தரை தட்டி நசுங்கி இருந்தது.
அறையை விட்டு வேகமாய் வெளியில் வந்தவள் இமைகள் இரண்டும் பட்டாம் பூச்சியாய் சிறகாட்ட, பதட்டத்தில் கைகளை அழுத்திக் கொண்டாள்.
‘ எத்தனை அழுத்தம்..! எத்தனை பிடிவாதம்..! இத்தனை நாள் கட்டுக்குள் நின்ற காற்று கரை கடந்து கொண்டு இருக்கிறது, அவளின் கண் பார்வையைத் தாண்டி.. இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது. சந்திக்க போவது சந்தியாவை அல்ல, நந்தாவை..! அவரின் குடும்பத்தை.இவளின் கோபத்தை அந்த குடும்பம் தாங்குமா..?
ஆயிரம் கேள்விகள் மனதில் முளைத்து முளைத்து சரிய, தன் வசம் இழந்த உணர்வுகளை கட்டி நிறுத்த வழியற்று அப்படியே நாற்காலியில் சரிந்தாள்.
"பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால்
வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான்
நான் எடுத்த முத்துப் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே மானே இள மானே…"
3
இரவு போட்ட தார்சாலை இன்னும் பளபளப்பை இழந்திருக்க வில்லை. கருமையின் பிசுபிசுப்பு அழகாய் ஒட்டி உறவாடிக் கொண்டு வாகனங்களோடு.
கே.கே. நகர் உள்ளே தரங்கிணி நகர். கருப்பு வட்டத்தில் வெள்ளை மசியில் ஆறு என்ற இலக்கம் இட்டிருக்க, வாசலில் அகண்ட கேட் கைவிரித்து இருந்தது.
கார் ஷெட்டை விஸ்தீனம் செய்து இருந்தார்கள். உள்ளே காருக்கு போட்டியாய் ஸ்கூட்டியும், பல்சரும் நின்றது. ஒரு பக்கம் நிழல் மரங்கள் ஒதுங்கி நிற்க, போன் சாய்கள் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியது.
ஹாலில் கிடந்த ஷோபாவில் கால்நீட்டி கைகளை தலைக்குத் தந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான் நந்தா. உள்ளே மிருதுளாவும், பிள்ளைகளும் பெரும் ஆர்பாட்டத்தில் இருந்தார்கள், விடிந்து விட்டதிற்கு அடையாளமாய்.
" எனக்கு இன்னைக்கு பிராக்டிகல் இருக்கு. மெட்டீரியல் வாங்கணும். கே.ஆர் மால் போகணும்." தபு முகத்தை டிஷ்யூவால் ஒற்றியபடியே சொன்னாள்.
" உங்கப்பாக்கு இன்னைக்கு ஆஃப் தான். படுத்துதான் இருக்காரு. எழுப்பிட்டு போ." மிருதுளா இட்லியை லாவகமாய் அவி தட்டில் இருந்து பிரித்துக் கொண்டே சொன்னாள்.
" அப்பா வேண்டாம் மா. நீ வா…"
"எனக்கு இன்னைக்கு ட்யூட்டி இருக்கு. அவருக்கென்ன சும்மாதானே இருக்காரு கூட்டிட்டு போ." கையும், வாயும் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, பின்னால் வந்து நின்ற சாதுர்யன் நெகு நெகுவென வளர்ந்து பதின்ம வயது நந்தாவை உரித்து உள்ளடக்கி இருந்தான்.
" இப்போ எதுக்கு இவ அடி போடறானு தெரியலயா மம்மி, கார் சாவி வேணும். மேடம் தனியா ஆவர்தனம் செய்துக்குவாங்க." என்ற தம்பியை திரும்பி முறைத்து விட்டு, அம்மாவிடமே பார்வையை மீட்டாள்.
" அப்பா அநியாயத்துக்கு இளமையா இருக்காருமா. அவர் உன் அண்ணவானு கேட்டு எல்லாரும் கண்ணு வைக்கிறாங்க. மத்தவங்க கண்ணை விட்டு அப்பாவை காப்பாத்தறதே பெரிய வேலையா இருக்கு." மகள் சிணுங்க, மிருதுளாவின் முகத்தில் பூரிப்பு ததும்பினாலும் காட்டிக் கொள்ள நாணமுற்றோ, பின் ஏனோ தன் வேலையில் மும்முரமாக்கி கொண்டு திரும்பி நிற்க,
" அதுசரி, ஏற்கனவே ரெண்டு இப்போ மூணாவது வேறயாக்கும்." நகைச்சுவையாய் எண்ணி சாதுர்யன் சொன்ன வார்த்தைகள் எதற்கோ உள்ளே வந்த நந்தாவின் காதுகளை மிகச்சரியாக சென்று சேர, அப்படியே நின்று விட்டான்.
மிருதுளா கூட இந்த இதமற்ற வார்த்தைகளை எதிர்பார்த்து இருக்கவில்லை, அதிலும் அந்த சமயத்தில் மிகச் சரியாய் நந்தாவையும் அங்கே எதிர்பார்த்து இருக்க வில்லை.
"துர்யன்…" மிருதுளாவின் குரல் ஒங்கி ஒலிக்க, அந்த அதட்டலில் பதட்டம் கொண்டு திரும்பி பார்த்தவன் முகத்தில் ஈயாடவில்லை.
" சாரி பா." என்றான் தலை கவிழ்ந்து. நந்தா எதுவுமே பேசவில்லை. மூவரையும் நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை வெறித்துக் கொண்டே சில வினாடிகள் நின்றவன், எதுவும் பேசாமல் திரும்ப சென்று விட்டான்.
குமைந்து போனாள் மிருதுளா. கோபம் முழுக்க மகன் முகத்தில் திரும்ப, அவளின் மனதை படித்தவனாய், எப்போதோ சிட்டாய் மறைந்து இருந்தான் துர்யன்.
ஆனாலும் வலித்தது. நந்தாவின் மெளனமும், அமைதியும் அதன் பின் இருந்த வேதனையும் அவள் இதயத்தை என்னவே செய்தது. இந்த நொடியே அவன் முகம் பார்த்து, அதை தன் மார்பில் பொதித்து தலை கோதி விட உயிர் துடித்தது.
மகளை அனுப்பிவிட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். நந்தா பால்கனியில் தலைகீழாய் தொங்கிய பூச்செடிக்கு நீரை ஸ்ப்ரே செய்து கொண்டு இருந்தான். முகத்தில் இறுக்கமில்லை, ஆனால் மிதமிஞ்சிய வருத்தமிருந்தது.
‘’நந்தா… இந்தாங்க.’’ நீட்டிய பாட்டிலை வாங்கி நீரை தொண்டையில் சரித்துக் கொண்டான் மறுவார்த்தை பேசாமல்.
‘’ அவன் சின்னப் பையன். விளையாட்டா ஏதோ சொல்லிட்டான்.’’
‘’நான் எதுவும் சொல்லல மிருதுளா. என் வாழ்க்கையும், தனிப்பட்ட உணர்வும் மற்றவர்களுக்கு விளையாட்டு தானே..? நீ பேங்க்குக்கு கிளம்பிட்டியா..? நான் டிராப் பண்ணிட்டு வந்திடறேன்.’’ இத்தனை பாரமாய் வார்த்தைகளை வீச முடியுமா..? கேட்பவர்களின் இதயத்தை வலிக்க வலிக்க நார் உரிக்க..?
‘’நான் கேப் புக் பண்ணிக்கிறேன் நந்தா..! நீங்க ஆஃப்ல இருக்கீங்க. எதுக்கு சிரமப்படறீங்க..?’’
துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான். மெல்ல மனைவியை திரும்பிப் பார்த்துச் சொன்னான்,
‘’ நான் ஆஃப்ல இருக்கிறது வேலைக்கு தான். கடமைக்கு இல்லை. அஞ்சு நிமிசத்துல வந்துடறேன்.’’
போய்விட்டான். ஏனோ இப்போதெல்லாம் அவனின் அதீத மெளனம் கூட வலிக்க வலிக்க உயிரை துளைக்கிறது. இருபது வருடங்களாய் அவனுக்குள் அனல் மூட்டிக் கொண்டிருக்கும் வானதி என்ற நெருப்பு, அவளை உணர்வுகளால் தழுவி தழுவி தன்னைத் தானே உயிர்பிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவனின் தனிமை ஏனோ இப்போதெல்லாம் வெகுவாய் மிருதுளாவை உரசுகிறது.
இல்லாமல் போயே அவர்கள் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டு இருக்கிறாள். அவள் பாய்ச்சி விட்டுப் போன நங்கூரத்தின் வீரியத்தில் இருந்து மொத்த குடும்பமும் துளிகூட நகர முடியாமல் கட்டுண்டு கிடக்கிறது.
அவள் திரும்பி வரவே இல்லை இதுவரைக்கும். ஆனால் அவள் நினைவும், தொடர்பும் இந்த வீட்டில் அத்தனை பேரிடமும் இருந்தது. விக்கியின் திருமணம், வீணாவின் திருமணம், அவர்கள் குழந்தைகள் என்று அத்தனை நிகழ்விலும் எங்கிருந்தோ அவள் தன்னை புகுத்திக் கொண்டுதான் இருந்தாள்.
தவறாமல் பரிசுகள் வந்தது. இந்த கலர் நல்லாயில்ல, இந்த ஆரம் செட் ஆகல உனக்கு, கல்கத்தாவில் இருந்து ஜர்தோசி ஓர்க் பண்ணினது வாங்கி அனுப்பறேன். தபுமா’வுக்கு ‘ அத்தைக்கு ஷால் அனுப்பி இருக்கேன்..’ இப்படி அவளிடம் இருந்து அக்கறையும் அன்பும் வந்துகொண்டே இருக்கும்.
இங்கிருந்தும் அன்பும், நம்பிக்கையும், அக்கறையும், பரிசுகளும் சந்தியாவின் மூலமாய் சென்று கொண்டே இருக்கும். அதை வானதி மறுத்ததே இல்லை. ஆனால் உரிமைகளை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தாள். நந்தாவை உணர்வுகளால் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். இந்த நிமிசம் வரைக்கும் அவளின் குரலை மீறுகின்ற சக்தி அவனுக்கு இல்லவே இல்லை.
தபு’விற்கு வானதியிடம் இருந்த பிடிப்பும், நன்மதிப்பும் சாதுர்யனுக்கு இல்லை. அவள் அருகாமையை அனுபவிக்காததால் இருக்கும் என்றாலும், வீடியோ காலில் வரும்போது, ஹாய் சித்தி’ என்று அவன் சொல்லும் போது வானதிக்கு வலிக்கும்.
தபஸ்வியும், விக்னேஷின் பிள்ளைகளும் நதிமா' என்று உணர்வு பொங்க அழைக்கும் போது, இவன் மட்டும் சித்தி’ என்று அவள் மாற்றாந்தாய் என்பதை மறைமுகமாய் சுட்டிக் கொண்டே இருப்பான்.
‘’வானதி, எப்படி என்னை வந்து பார்க்கப் போறே..? என் காலம் முடியறதுக்குள்ளே, உன்னை கண்ணால காணுகிற பாக்கியத்தை தர மாட்டியா..? என் பேத்தியை பார்க்காமயே போயிடுவேனா..?’’ கல்பனாவின் கண்ணீரும் வானதியை இதுவரைக்கும் கரைத்ததில்லை. ஏனோ தன்னை கட்டுபடுத்தி வைத்திருந்தாள். அது புரியாதது போல் இருந்தது, புரிந்தது போலவும் இருந்தது.
குளித்து முடித்துவிட்டு டிராக் பேண்டும், டீ ஷர்ட்டுமாய் கீழே இறங்கி வந்தான். மிருதுளா தயாராகிக் கொண்டு இருந்தாள். அவள் திரும்பி வந்தபிறகு, அவள் இருப்பை உறுதி செய்து, மீண்டும் அத்தனை சான்றுகளையும் சமர்பித்து, இழந்த வேலையை வாங்குவதிற்குள் மூன்று வருடங்கள் கடந்து போய் இருந்தது.
மிருதுளா மீண்டும் பணிக்கு செல்ல பிரியப்பட்ட போது நந்தா தடையேதும் சொல்லவில்லை. இதோ இன்று அதே நாட்டுடமையாக்கப் பட்ட வங்கியில் ஒரு கிளையின் மேலதிகாரியாக நந்தா இருக்க, மற்ற கிளைகளில் சந்தியாவும், மிருதுளாவும் பணியில் இருந்தார்கள்.
காலம் நிறைய வளமையை காட்டி இருந்தது. அப்பாவின் காலத்திற்கு பிறகு காலுன்ற தவித்த குடும்பம் இன்று அழகாய் கிளை பரப்பி கோலோச்சிக் கொண்டு இருந்தது. விக்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தான். காதல் திருமணம், திருவான்மியூரில் சொந்த வீடு என்று எந்தக் குறையும் இல்லாமல் இருந்தான்.
படிப்பை முடித்த வீணா, நெட் தேர்வில் மூன்றாவது அட்டம்ட்டில் தேர்வாகி, அரசு கல்லூரியில் பேராசிரியையாக, அதற்கு தகுந்த வாழ்க்கையும் அமைய, அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் நிறைவும் நிம்மதியுமாகவே சுழலத் தொடங்கி இருந்தார்கள்.
ஆனால், நந்தா மட்டுமே எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவனாக இருந்தான். புன்னகையும், சந்தோசமும், நிறைவும், கடமையும், அவனை அழுத்தி அழுத்தி குடும்ப சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க வைத்தாலும், அவன் மனம் மட்டும் அந்த ரயிலடியிலேயே தேங்கி கிடந்தது.
அவளிடம் பேசினான், அவளை வீடியோ காலில் பார்த்துக் கொண்டும் தான் இருந்தான். கட்டளை இட்டான், கட்டுப்பட்டான். அவள் கண்ணீரையும் ஆனந்தத்தையும் பகிர்ந்து கொள்ள இவனைத் தேடித்தான் ஒலிக்கற்றையில் ஓடி வந்தாள். ஆனாலும் ஏனோ மனம் தள்ளாடியது.
ஸ்பரிசத்துக்கு இருவருமே அடிமைகள் இல்லை. அறைக்குள்ளேயே அவர்கள் அந்தரங்கங்களை தேடியதும் இல்லை. ஆனால் அவளின் உணர்வு பிரவாகத்தை அவன் மட்டுமே முழுக்க உணர்ந்திருக்கிறான்.
இயல்பான நாளில் எல்லாமுமாய் இருப்பது என்பது வேறு. இக்கட்டான அந்த நாள்களில், அவள் இந்த குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்திருக்கிறாள்..! இன்னுமே இல்லாமலும் இங்கே இணைந்தே இருக்கிறாள்.
அந்த நாளில் அவள் காட்டிய பாசமும், ஸ்பரிசமும், அக்கறையும், அன்பும் கிணற்று படிகளில் படிந்த பாசியாய் அவனுள் பிரிக்க முடியாமல் அப்பிக் கொண்டது. எல்லோர்க்கும் யாரோ இருந்தார்கள். அவளுக்கு தான் மட்டும் தானே,' என்ற நினைப்பே அவனை குற்றவுணர்வில் கொதிக்க வைத்தது.
உணர்வுகள் உரசி, உரசி, தீ வைக்கும் பொழுதுகளில் தன்னை மறக்க அவன் நாடியது ரயிலடியை… அவள் நிழல் இறுதியாய் அவனிடம் இருந்து பிரிந்து போன இடத்தில் வந்து மணிக்கணக்காய் அமர்ந்து கொள்வான். கரைக்க, கரைக்க, கரைந்து போகாத நினைவுகளை, கல்லைப் போல மென்று தின்றபடி அமர்ந்து இருப்பான்.
அந்த நிமிசம், அவள் அருகாமையும், ஸ்பரிசமும், கண்ணீரும், மென் பட்டில் பொதிந்த பக்த மீரா சிலையும், தரையில் கிடக்கும் நிழலும், ஆழ்ந்த மூச்சும், அவளின் அருகிருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும். மகளை மனசு நாடும். அம்மாவின் வார்த்தைக்கு கட்டுபட்டு மட்டுமே, தன்னிடம் பாராமுகமாய் பேசும் யாழியை மனசு நாடிக் கொண்டே இருக்கும்.
நினைவுகளை வெளித்தள்ள இயலாமல் தவிக்கும் துளையற்ற, இருதலைக் கொள்ளி எறும்பாய் தன்னை உணர்வான். அடிக்கடி வந்து அடித்து அடித்து நொறுக்கும் சில வார்த்தைகளும் இப்படித்தான் மெல்ல முடியாத சவ்வு போல், அவனை வெதும்ப வைத்துக் கொண்டே இருக்கும்.
‘’ நந்தா’’ கண்களை மூடி தலைக்கு கையை அணைகட்டி அமர்ந்து இருந்தவன், நினைவுகளை நிறுத்திவிட்டு நிஜத்துக்கு வந்திருந்தான்.
‘’ கிளம்பலாம் மிருது’’ கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
மிருதுளாவை அண்ணா நகர் கிளையில் இறக்கி விட்டுவிட்டு, சாந்தோம் வந்து பேங்கை விட்டு தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு, சந்தியாவிற்கு அழைத்திருந்தான்.
‘’ என்ன நந்தா பீக் ஹவர்ல கூப்பிடறே..? அவசரமா.? ‘’
‘’ இல்ல சந்தியா. ஃப்ரீயா இருந்தா பர்மிசன் போட்டுட்டு வாயேன். கொஞ்சம் காபி ஷாப் வரைக்கும்.’’
‘’காலையில பதினொரு மணிக்கே, ஃப்ரீயா உட்கார்ந்து ஈ ஓட்டிட்டு இருக்க, இது திருவான்மியூர் ப்ரான்ச் இல்லே. அங்கே மேனேஜரா இருக்கிறது அசமஞ்சம் நந்தகோபாலன். இது சாந்தோம் ப்ரான்ச். இங்கே அசிஸ்டெண்ட் மேனேஜர் சந்தியா சிவராமனாக்கும்.’’
‘’ரொம்ப பீத்தாதடி தங்கமே. லோன் டிபார்ட்மெண்ட் ஹெட்டா இருந்தப்போ, நீ வாரி வாரி அனாமத்தா தந்த கடனெல்லாம் வசூலிக்க முடியாம நிலுவையில இருக்குன்னு தானே உன்னை, டீ ப்ரோமோசன் பண்ணி ப்ரான்ச் மாத்தினது, முன்னால் மேனேஜரே..!’’ அவன் சிரிக்காமல் சொன்னபோது சந்தியாவின் முகத்தில் அசடு வழிந்தது.
‘’போதும். உன்னை நான் கேவலமா பேசறதும், என்னை நீ கேவலமா பேசறதும் புதுசா என்ன..? நீதான் உள்ளே வாயேன். ஏன் தயங்கி தயங்கி வெளியே நிக்கிறே..?’’
‘’ப்ச்..! வேண்டாம் சந்தியா. நான் கேசுவல்'ல இருக்கேன். மிருதுவை டிராப் பண்ண வந்தேன். உள்ளே வந்தா தேவையிலாத மரியாதைகள் கிடைக்கும். அதையெல்லாம் ரசிக்கிற மனநிலையில் இல்லை நான். எனக்கு கொஞ்சம் உன்கூட பேசணும்.’’ அவன் இணைப்பைத் துண்டித்து விட்டு காத்திருந்த நிமிசம், பேங்க் கதவை திறந்துகொண்டு சந்தியா வருவது தெரிந்தது.
காரை பூட்டிக் கொண்டு இறங்கியவன் கூலரை பொருத்திக் கொண்டு இங்கிருந்து கையசைத்து காபி ஷாப்பிற்கு அவளை வரச் சொல்லி சைகை செய்துவிட்டு முன்னே சாலையை கடந்தான்.
அருகில் வந்ததும் எப்போதும் போல் கள்ளமில்லாமல் சிரித்தாள்.
‘’ சொல்லுங்க பாஸ், என்ன விசயம்..?’’ நாகரீக நாற்காலியை நந்தாவுக்கு எதிரில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிறைய மாறி இருந்தாள் தோற்றத்தில். பாப் கட் கூட அவள் முகத்திற்கு வெகுவாய் பொருந்தி இருந்தது.
‘’ ஸ்பெசலா எதுவும் இல்ல.’’
‘’ அட கிறுக்கு பயலே. அப்புறம் எதுக்கு பெர்மிசன் போட்டுட்டு வரச் சொன்னே..?’’
‘’ சொல்லத் தெரியல. மனசு ஏனோ பாரமா இருக்கு.’’
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அமைதியாக. ஒரு தவிப்பின் மிச்சத்தை மெல்ல முடியாமல் மிடறு கூட்டிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
‘’சரி சொல்லு, இப்போ எதுக்கு லீவு போட்டு இருக்கீங்க சார்..? ஏதாவது முக்கிய வேலையா நந்தா..? எனக்கு தெரியாதது, என்ன அது..?’’
‘’ வேலையெல்லாம் இல்ல சந்தியா. லாஸ்ட் வீக் கொஞ்சம் ஹெல்த் இஷ்யூவா இருந்தது. ஒர்க் லோடினால் இருக்குமானு எனக்கே சின்ன குழப்பம். அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன்.’’
பலுடாவை ஸ்பூனால் கலக்கிக் கொண்டு இருந்தவள், துணுக்குற்று போய் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் பயம் கவ்வியது.
‘’நந்தா…’’ எதிரில் அமர்ந்திருந்தவனின் வலக்கையை பற்றினாள். அதில் மெல்லிய நடுக்கம் தெரிய, வியந்துபோய் நிமிர்ந்து பார்த்தான்.
‘’அட.! எதுக்கு இத்தனை பதட்டம்..? கூல்டா. ‘’
‘’இல்ல நந்தா. உனக்கும் எனக்குமான பந்தம் விசித்திரமானது. நீ மட்டுமில்லே எனக்கு உயிர் நட்பு, உன் வாழ்க்கையில இருக்கிற இரண்டு பெண்களுமே எனக்கு உயிர். உங்கள்ல யாருக்கு எது நடந்தாலும், எனக்கு அது என் உயிரை உருகிட்டு போன வலியை கொடுக்கும்.
சரி சொல்லு, என்ன பண்ணுது உடம்புக்கு..? மிருதுவுக்குத் தெரியுமா..? அம்மாக்கு..? வானதிக்கு விசயம் தெரியுமா..?’’
‘’அப்படியே அப்போலாவில அட்மிசனும் வாங்கிட்டு, பரேல் கிரவுண்டுல இடம் புக் பண்ணிட்டு, ஐஸ் பாக்சுக்கும் சொல்லிடு.’’
‘’டேய்..! அடங்க மாட்டே என்கிட்டே. இரு உன் இரண்டு பொண்டாட்டிகளுக்குக்கும் தகவலைச் சொல்றேன்.’’ போனை கையில் எடுத்தவளை அயர்ச்சியாக பார்த்தான்.
’’பேச சந்தர்ப்பம் தரவே மாட்டியா சந்தியா..?’’
‘’ சரி சொல்லு.’’
‘’ சொல்லத் தெரியல மனநிலையை. உணர்வுகளை சமாதானம் செய்ற மாதிரி, மனசாட்சியை சமாதானம் செய்ய முடியல. வானதியை பார்க்கணும், யாழியை கட்டிபிடிச்சு முத்தம் தரணும். இரண்டு பேர் கையையும் பிடிச்சிட்டு இந்த ஊரையே சுத்தி வரணும். இந்த ஏக்கம் கவலையா மாறி, பயமா என்னை ஆட்கொள்ள ஆரம்பிச்சிடுச்சு. நான் உண்மையாவே தவிப்பில இருக்கேன் சந்தியா. இதை உன் பிடிவாதக்கார ப்ரெண்ட் எப்போ உணர்வா..?
இந்தக் கவலைதான் என்னை அரிச்சு, அரிச்சு, வியாதிக்காரன் ஆக்கிடுமோனு பயமா இருக்கு.’’
‘’போதும் நந்தா. கிழவன் மாதிரி பில்டப் பண்ணாதே.’’ என்றவளை குசும்பாய் பார்த்தபடி நாடியை நீவிக் கொண்டான்.
‘’அப்போ நான் கிழவன் இல்லையா சந்தியா..? ‘’
முகத்தை அஷ்ட கோணலாக்கி திருப்பிக் கொண்டவளை பார்க்க, சிரிப்பாய் வந்தது. ஆனாலும் கைகளைக் கட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டே இருந்தான்.
‘’உடம்புக்கு என்ன நந்தா..?’’
‘’லைட்டா ஹார்ட் பெயினா இருந்தது.கேஸ்டிக் ப்ராபளமா இருக்கும்னு மருந்து எடுத்து இருக்கேன். என் பயம் அது இல்லை. எனக்கு வானுவை பார்க்கணும்.’’ குழந்தை போல் சொன்னவனின் முகத்தைப் பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது.
நடுவில் புகுந்து வானதி கெடுத்திருக்கா விட்டால், இன்று யாழி தன் தந்தையின் அணைப்பில் இருந்திருப்பாள். அத்தனையும் ஒற்றை மயக்கத்தில் நிறுத்தி விட்டாள் என்றபோதும், உடல் உபாதையில் கூட ஒருசேர இருக்கும் இருவரின் ஒற்றுமையை மனதிற்குள் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
‘’ நான் என்ன நந்தா செய்யட்டும்..? அவ பிடி கொடுக்க மாட்டேங்கிறாளே. அவ மனசு முழுக்க, எந்த நிலையிலும் மிருதுளாவுக்கு போட்டியா தான் வந்துட்டதா சிந்தனை கூட வந்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் தான் இருக்கு.
அந்த முட்டாள் தன்னையும் யோசிக்கல, உன்னையும் யோசிக்கல, ஏன் என்னையும் யோசிக்கல. இப்போ உனக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா, பதறுவா, தன்னைத் தானே வருத்திக்குவா. ஆனால் அவள் சிந்தனையில் உன்னை வந்து சேரணும்கிற நிதர்சனம் உரைக்கவே உரைக்காது. செக்கு மாடு வட்டத்துக்குள்ள பழகின மாதிரி, அவள் எண்ணம் முழுக்க நீ மட்டும் தான்..! ஆனால் உன்னை அடைகிற வழி இருந்தும் அதை செயல்படுத்த அவளுக்கு உணர்வும் இல்லை.’’
இருவருக்கும் இடையே ஒரு கெட்டியான மெளனம் அப்பிக் கிடந்தது. எதிரில் இருந்த காப்பி நீர்த்து ஆறிப் போயிருக்க, ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொன்றுக்கு ஆர்டர் செய்தான்,
‘’ உனக்கு நேரமாகுது. நீ கிளம்பு சந்தியா. ஏதோ மனசுல இனம் புரியாத தவிப்பு. அதுக்கு முகம் தரத் தெரியல எனக்கு. உன்னைத் தேடி அதனால தான் வந்தேன். பார்ப்போம்.’’ எழுந்து கொண்டான்.
கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் அவனின் உள்ளத்துக்கு தளர்ச்சி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. எதையோ சொல்லத் தெரியாமல் தவிக்கிறான். ஒரு நேர்மையான ஆணின் பரிதவிப்பு ஆயிரம் ஆழிகளை விட ஆர்பரிப்பானது. உள்ளடக்கி, உள்ளடக்கி, தன் உணர்ச்சிகளுக்கு உயிரையே விலையாக தந்து கொண்டு இருக்கிறான், என்று புரிந்தபோது இயல்பாக அவன்மீது இரக்கம் சுரந்தது.
அவன் மறுபாதியிடம் பேச வேண்டும். எண்ணிக் கொண்டு அவளும் எழுந்து கொள்ள, சாலையைக் கடத்தி பத்திரமாய் பேங்கிற்குள் அனுப்பி வைத்து விட்டேதான் தன் காருக்குச் சென்றான்.
நேற்று முழுக்க அழைத்தும் யாழி இணைப்பில் வரவே இல்லை. இன்றும் அழைத்தான்… இதயம் தான் வலித்தான்.
"...காயமொன்று நீ கொடுத்தாய
காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கைதவழும் சேய் கொடுத்தாய்
உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்…
என் கதையை நீ எழுதி, ஏடுகளை மறைத்து விட்டாய்
கனவுகளே கனவுகளே
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ…"
4
கொல்கத்தா. லாலா லஜ்பதிராய் சாலை. 'குங்கட் கே பீச்சே…’ ஹிந்தி பாடலில் இருந்த மசாலாவை விட, சபகெட்டியில் அதிகமாய் இருந்தது போல், எலெக்ட்ரிக் லாந்தார்கள் ஏற்றிய தள்ளு வண்டி முழுக்க நிறைந்து இருந்தது தெருக்கள் முழுக்க.
குறுகிய தெருக்கள் முழுக்க தின்பண்டக் கடைகளாய் சொப்பி வழிய, அங்கிருந்த ஏதோ ஒரு கடையில், அம்ரித்துடன் நின்று சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தாள் யாழி.
‘’ சொல்லு, யாழினி. எப்படி இருக்கு இந்த மசாலா முர்கி…’’ கோழி காலை கவ்வி இழுத்துக் கொண்டு அம்ரித் கேட்டபோது , ஆள்காட்டி விரலை சப்பிக் கொண்டு இருந்தாள் யாழி.
‘’நல்லாத்தான் இருக்கு. ஆனால் பகதூர் ஸ்டீட் முர்கி மாதிரி இல்லடி. அங்கே ஒரு மசாலா போடுவான் தெரியுமா..? அச்சோ அள்ளும்.’’ வங்கம் தண்ணி பட்டபாடாய் அவளுக்கு வந்தது. கரு தரித்தது முதல், அத்தனையும் அவளுக்கு இங்கேதான். வானதியிடம் பேசுவதைத் தவிர வேறு யாரிடமும் தமிழ் தேவைப்படுவதில்லை என்றாலும், வானதி தமிழில் தான் பேசியாக வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து இருந்தாள்.
‘’ இன்னொரு நாள் அங்கே போகலாம். நமக்கு பிராக்டிகல் இருக்கிற நாள் கட் அடிச்சிட்டு.’’
‘’பானார்ஜி கடை இருக்கானு விசாரிச்சிட்டு போகணும், அதுவும் அந்த மசாலா தூத்… உப்..! அப்பா..!’’ நாக்கை சுழற்றி சுவை காட்டிய போது, அந்த அழகு பார்க்க போதையாக இருந்தது.
ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், லெகின்ஸும். தூக்கி போட்ட குதிரைவாலும், ரசகுல்லா கன்னமும், அளவான நிறமுமாய் கண்களை கசக்கி பிழிந்து கவன ஈர்ப்பு செய்து கொண்டு இருந்தாள்.
கன்னத்தில் அடக்கிய கறித்துண்டு, அவள் கன்னக் கதுப்புகளை தின்ன அழைப்பு விடுப்பது போல இருந்தது. வானதிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். சுதந்திரத்தோடு சேர்த்து இலவச இணைப்பாய் சொல்லி மாளமுடியாத அளவிற்கு கட்டுபாடுகளையும் வாரி இரைத்துக் கொண்டே தான் சுற்றுவாள்.
மேகம் திரளத் தொடங்கி இருந்தது. காற்று ஊடாடி ஊடாடி மேக கர்பத்தை கலைக்க ஆரம்பித்து இருக்க, ஒருமணிநேரம் ஊரையே குளிர் பெட்டியில் வைத்து பதப்படுத்தி எடுத்ததுபோல், சில்’லென்று இருக்க, கைகளை உரசி கழுத்தில் வைத்துக் கொண்டாள்.
‘’ இன்னொரு ப்ளேட் முர்கி சொல்லவா..?’’ அம்ரித் கேட்டாள்.
‘’ வேண்டாம். எனக்கு தஹி வடா சொல்லு டி அதுக்கு மேல கொஞ்சமாய் சில்லி ப்ளாக்ஸ் தூவி. ‘’
சொல்லிவிட்டு மெல்ல வானத்தை அண்ணாந்து பார்க்க, அவசரமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த மேகங்கள் அவளை ஆனந்தப்படுத்த ஆரம்பித்தது. மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கி நின்றாள். அலைபேசி சிணுங்க எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் சின்ன சலிப்பு மிகுந்தது.
நந்தா..! மூன்று நாட்களாய் அழைத்துக் கொண்டே இருக்கிறான். அழைத்து அழைத்து மனம் வெறுத்து போய் வானதியிடம் புகாரும் சென்று இருக்கிறது.
காலையில் கிளம்பும் போதே அம்மாவிடம் இருந்து நந்தா அழைத்தால் பேச வேண்டும்' என்ற கண்டிப்பும் வந்திருந்தது. பெரிதாய் நந்தாவின் மீது பாசமும் அன்பும் இல்லைதான். எட்ட எட்ட விலகினாலும், வந்து ஒட்டி ஒட்டி அன்பு செய்யும் அந்த பாசத்தின் மீது ஒரு இனம் தெரியாத பிடிப்பு இருந்தது. தசையாடும் இயற்கையின் தீர்ப்பு.
கோபம் முட்டிக்கொண்டு வந்தாலும், தகப்பனின் முகத்தை பார்க்கும் போது அது ஒத்திப் போய்க்கொண்டே தான் இருக்கிறது, என்பதுதான் நிஜத்திலும் நிஜம்.
முதல் அழைப்பு முற்றுப்பெற்ற சில வினாடிகளிலேயே அடுத்த அழைப்பு வர, லேசாய் முகம் சுளித்தபடி எடுத்தாள். எப்போதும் வீடியோ காலில் தான் வருவான். இப்போதும் அப்படியே.
சட்டென்று தொடு திரை விலகி, முழு மதியாய் தன்முன்னே நின்ற மகளின் தோற்றம் நந்தாவை என்னவோ செய்தது.
‘’ பாப்பா..!’’ என்றான் பரவசமாய்.அந்த கண்ணின் பளபளப்பு, அடிவயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்ய, எடுக்கும் போது இருந்த இறுக்கமும் அழுத்தமும் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்க, இமைக்காமல் நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
’’என் பேரு பாப்பா இல்ல..! யாழி… யாழினி.’’ அந்த செப்பு உதடுகளின் அசைவை பார்த்துக் கொண்டே இருந்தான். பார்க்காமல் தன்னைப் பார்க்கும் அந்த கண்களில் நர்த்தனமாடிய ஒரு மயக்கும் அசைவும், அந்த தகப்பனை அங்கமெல்லாம் குளிர வைத்தது.
‘’கோபமா என்ன பாப்பாவுக்கு..? நான் கால் பண்ணிட்டே இருந்தேன்,எடுக்கவே இல்லையே…’’
பதிலில்லை. உதட்டு சுளிப்பு மட்டும் தான். பார்வை எங்கோ பதிந்து கொண்டது. மகளின் அத்தனை அசைவும் நந்தாவை மெய் மறக்க வைத்தது. கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
கடைத் தெருவின் இரைச்சலும், லஜ்பதிராய் தெருவின் நெருக்கமும் திரையைத் தீண்டி தீண்டி நகர்ந்தது. மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஆறுக்கு இன்னும் ஐந்து நிமிடம் பாக்கி இருக்கிறது என்று சொல்ல, லேசான கவலையோடு மகள் முகத்தைப் பார்த்தான்.
‘’யாழி, எங்கே இருக்கே இப்போ..? அங்கே மழை வருதா..? ஸ்கிரின்ல தெரியுதே.’’
‘’ம்ம்..! க்ளைமேட் ரெம்ப ஜாலியா இருக்கு. காலையில இருந்து பயங்கர வெயில். இப்போ சில் சில் கூல் கூல்…’’ அண்ணாந்து பார்த்து கைகளை மடக்கி சைகை செய்தாள்.
‘’எங்கே இருக்கே இப்போ..? ‘’
‘’ லாலா லஜபதிராய் ஸ்டீட்ல. இங்கே மசாலா முர்கி ரொம்ப நல்லா இருக்கும். முர்கி, முர்கி.! அப்படின்னா உங்களுக்கு என்னன்னு தெரியுமா..?’’ தூக்கி போட்ட குதிரைவாலில் மிச்சமிருந்த முடி அனைத்தும் நெற்றியில் கொட்டி பூத்திருக்க அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க மனசு தவியாய் தவித்தது.
‘’அதென்னமா முர்கி..! எனக்குத் தெரியாதே.’’என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
‘’கோழி. இளம் கோழியை நல்லா மசாலா தடவி, கான் ப்ளாக்ஸ்ல புரட்டி, தவால போட்டு நிறைய எண்ணெய் விட்டு மொறு மொறுனு பொரிச்சு, சில்லி சாஸ் வச்சு தருவாங்க. அவ்வளவே நல்லா இருக்கும்.’’ கண்களை மூடி லயித்துச் சொன்னவளை அவள் அறியாமலே நூறு ஸ்டில் எடுத்து முடித்து இருந்தான். ஒவ்வொரு அசைவும் அவனுள் விரைவி விரைவி என்னவோ செய்து கொண்டு இருந்தது.
‘’இது உடம்புக்கு நல்லதா..? அம்மாக்கு நீ இப்படி சாப்பிடறது தெரியுமா..?’’
உதட்டை சுளித்துக் கொண்டாள்.
‘’தெரியாது. நீங்க அம்மாகிட்ட சொல்லக் கூடாது. ‘’ கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.
‘’ஏன் சொல்லக் கூடாது..?இது ஹெல்தியே கிடையாது இல்ல. அது என் பாப்பா உடம்புக்கு கெடுதல் தானே..?’’
‘’ரெகுர்லாம் இல்ல, எப்பயாச்சும் தான்.’’ குரலை உள்ளிழுத்து சொன்னாள். வானதியிடம் நிறைய பயமிருப்பது தெரிந்தது. அந்த கண்டிப்பு லேசான ஆச்சர்யத்தை தந்தது.
‘’ஏன் சொல்லக் கூடாதுனு கேட்டேன்.’’ என்றான் இன்னும் அழுத்தமாக
‘’ஏன்னா நீங்க…’’ நிறுத்திவிட்டாள். சொல்ல மாட்டாளா' என்று நந்தாவும், சொல்லி விடப் போகிறோம்' என்று யாழியும் சேர்ந்தே தவித்தார்கள்.
‘’சொல்லுடா…’’ என்றான் குரல் இடற. நிமிர்ந்து பார்த்தாள். வெறுப்பும் இல்லாத விருப்பும் இல்லாத தகப்பன். அம்மாவின் தனிமைக்கு சொந்தகாரன் என்ற வகையில் அவன் மீது அளப்பறிய கோபம் இருக்கிறது தான். ஆனால், அந்த உறவுக்காக தான் எத்தனை ஏங்குகிறோம் என்றும் அவள் மட்டும் தானே அறிந்தவள்.
‘’சொல்லேன் பாப்பா…’’ என்றான் ஏக்கத்தின் மூர்க்கத்தில்.
உதடு சுளித்து அதிருப்தி பட்டுக் கொண்டாள். அவளின் எந்த அலட்சியமும் நந்தாவை எதுவுமே செய்யவில்லை. இல்லாமையை விட எதுவாகவோ இருப்பது அத்தனை ஏகாந்தமாய் இருந்தது. மகளின் புறக்கணிப்பை விட, வெறுப்பு தித்திப்பாக இனித்தது.
’’எதுக்கு கால் பண்ணினீங்க..? நான் வீட்டுக்கு போகணும்.’’ என்றாள் முணுமுணுப்பாய்.
‘’எப்படி போவே..? வண்டி ஓட்டறியா..? கல்கத்தா ரெம்ப ஜனநெருக்கமான சிட்டியாச்சே..? பத்திரமா ஓட்டணும் இல்ல.’’
‘’நீங்க எதுக்கு அதைப்பத்தி சொல்றீங்க..? ஒருமுறை கூட கல்கத்தா வந்ததில்லை தானே..? நான் வண்டியெல்லாம் ஓட்ட மாட்டேன். அம்மாக்கு பிடிக்காது.’’
‘ என்னைப் பார்க்க வந்தாயா..?’ என்று கேட்காமல் கேட்கிறாள். நெகிழ்ந்து போய் நின்றான். வானதியின் மீது பொங்கி வந்த கோபத்தை அமைதியாக கட்டுப்படுத்திக் கொண்டான். அவளின் உருவமில்லாத பயத்துக்கு விலையில்லாத எத்தனை பேரின் உணர்வுகளை காவாக தந்து இருக்கிறாள்.
‘’ சரி, அப்போ கிளம்பு. மழை வந்திடும் இல்லே..? வீட்டுக்கு போயிட்டு கால் பண்றியா எனக்கு.’’ அவன் கோரிக்கைக்கு பிடித்தம் இல்லாமல் மெல்ல தலையசைத்தாள்.
அதற்குள் அம்ரித் எதையோ வாங்கிக் கொண்டு வர, அதை கேமரா அருகில் குவித்து காட்டிவிட்டு, விரல்களை மடக்கி, நல்லா இருக்கும்’ என்று சைகை செய்துவிட்டு மூன்று விரல்களை மட்டும் ஆட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்து, நந்தாவை தண்டித்தாள்.
+ + +
கல்கத்தா செண்ட் ஜான்ஸ் மிசினரி ஹாஸ்பிடல். மெல்லிய ஊசித் தூறல் ஈசித்துக் கொண்டு இருந்தது காரிடரை. உள்ளே வந்து கல்கத்தா டைம்சில் கண்களை சுழற்றிவிட்டு, தீதியின் ஆக்ரோச அறிக்கைகளை வாசித்து விட்டு, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள்.
மணி ஆறு..! வீட்டுக்கு வந்தாச்சா.?’ என்று விசாரித்து யாழிக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, உள்ளே இருந்து வரும் அழைப்பிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மதர் கேத்தரின் ரவுண்ட்ஸ் முடித்து திரும்பிப் போகும் போது மிசினரிகளிடம் இருந்து நல்ல தொகை மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஓதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் சொல்லிச் சென்றார்.
இரண்டு நாள்கள் முன்னர் நிர்வாகத்தினர் அத்தனை பேரும் செய்து கொண்ட முழு உடல்தகுதி பரிசோதனை அறிக்கையை வாங்கிப் போக வந்திருந்தாள்.
அத்தனை பேருக்கும் அறிக்கைகள் தனித்தனியாக அனுப்பப்பட்டு இருக்க, டீன் டாக்டர் போஸ் வானதியை வரச்சொல்லி தகவல் அனுப்பி இருந்தார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அழைப்பு வந்ததும் எழுந்து உள்ளே சென்றாள்.
‘’ வெல்கம் வானதி.’’ என்றார் பரிட்சயமான அன்பில்.
நிமிர்ந்து பார்த்து சிரித்தாள். மெல்ல இருக்கையை நிறைத்துக் கொள்ள, வழக்கமாக விசாரிப்புகள், மருத்துவமனை பற்றிய தகவல்கள் என்று நேரத்தைக் கடத்தி, உரையிட்ட மருத்துவ அறிக்கையை எடுத்து நீட்டினார், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.
" உங்களுக்கு நிறைய உபாதைகள், அதன் அறிகுறிகள் இருக்கிறதா முன்னேயே சொல்லி இருந்தீங்க. ஆனால் எந்த நோயுக்கான முகாந்திரமும் உடலில் இல்லை. அது உங்கள் மனதோடு சம்பந்தப்பட்டதா இருக்கலாம். மனதை காபந்து செய்யுங்கள் வானதி." என்றார் புன்னகையோடு.
"...உறக்கமில்லாமல்
அன்பே நான் ஏங்கும் ஏக்கம்
போதும்
இரக்கமில்லாமல்
என்னை நீ வாட்டலாமோ நாளும்
எந்நாளும்
தனிமையே எனது
நிலைமையா
தந்த கவிதையா கதையா
இரு கண்ணும்
என் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன்
உயிரே
தினம் தினம்
உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு
நீயில்லாது வாழும்
வாழ்வுதான் ஏனோ…"
5
சென்னை மெடிக்கல் காலேஜ். அனாடமி வகுப்பு முடிந்து, அலுத்துப் போய் மரத்தடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் தபஸ்வி.
ஆர்த்தி வகுப்புகளை முடித்து விட்டு வந்து விட்டால்,கிளம்பி விடலாம் .நான்கு நாட்களாய் நந்தா விடுப்பில் இருந்ததால் கல்லூரிக்கு வந்து போகும் சிரமமே தெரியவில்லை.
பின்னால் வந்து தோளில் கை போட்டாள் ஆர்த்தி.
" என்னடி அனாடமி கிளாஸ்க்கு போயிட்டு வந்து மந்திரிச்சு விட்ட மாதிரியே திரியறே. அரண்டுட்டியோ…" வாய்விட்டுச் சிரிக்க, கைகளை ஊன்றி எழுந்து நின்றாள்.
"என்ன செய்ய..? நான் கைனகாலஜிஸ்ட்டாகியே தீரணும்னுகிறது என் அம்மாவோட லட்சியம். இப்போ நான் கிடந்து அல்லாடறேன். பசி உயிர் போகுது. ஏதாவது வயித்துக்கு போடணும். அதுக்கு முதல்ல குளிக்கணும்."
"டாக்டர் இப்படி அசூசை பார்க்க கூடாது மேடம்." ஆர்த்தி குறும்பாய் தோள்களை கட்டிக் கொள்ள, மெல்ல அவள் கைகளை பிரித்து விட்டாள்.
"உங்கப்பா வருவாரா..? "
" ம்ஹூம். அவர் லீவ் முடிஞ்சு ட்யூட்டியில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. நீ உன் வீட்டுக்கு கால் பண்ணு." என்னும் போதே உள்ளுக்குள் சிலிர்த்தது.
பள்ளி காலம் தொட்டு இருவரும் நெருங்கிய தோழிகள். கொஞ்சம் நெருக்கமாய் வசிப்பிடம் இருந்ததும் இரு குடும்பத்தின் நட்பை வெகுவாய் கெட்டிப் படுத்தி இருந்தது.
அலைபேசி எடுத்து தகவலை சொல்லி முடித்து வைத்த ஐந்தாவது நிமிடம், கே'போடு தபஸ்வி எதிர்பார்த்தது போலவே அமர் வந்து நிற்க, உள்ளுக்குள் பறந்த பட்டாம்பூச்சியை வெகு சிரமப்பட்டு கட்டி வைத்தாள்.
போலீஸ் டிரெயினிங்கில் இருந்தான். போஸ்டிங்கிற்கு முன்னமே மிடுக்கும் கம்பீரமும் முகத்தில் மெருகை ஏற்றி இருந்தது.
ஆர்த்திக்கு அப்பா இல்லை. அம்மா கல்லூரி பேராசிரியை. அமரும், ஆர்த்தியும் மட்டும்தான். நேர்த்தியான குடும்பச் சூழல். அப்பா இல்லாததால் அந்தப் பொறுப்பையும் சேர்த்து சுமக்கும் அமரின் கடமை உணர்வின் மீதுதான் இளமை பூஞ்சைக் காளானாய் காதலை படர விட்டு இருந்தது.
பசி சிறுகுடலை ருசித்துக் கொண்டிருந்த நிமிசம் தான், சரியாக அமர் வந்திருந்தான். பார்த்ததும எப்போதும் தபுவை கிறங்க வைக்கும் அந்த வசீகரச் சிரிப்பை சிரித்தான். குளோரோபார்ம் செலுத்தாமலே உடம்பு சொக்கிச் சரிந்தது.
" இன்னைக்கு அப்பா வரலியா தபு..?" என்றான்.
" இல்ல அமர். அப்பா ட்யூட்டில ஜாயிண்ட் பண்ணிட்டாரு. துர்யன் இருந்தா வருவான். அவனுக்கு காலேஜ்ல வேலை இருக்குன்னு சொல்லிட்டான். நீங்க டிரெயினிங் ஸ்பார்ட்க்கு போகலயா..?"
" முடிச்சிட்டு ஃபோர் ஒ கிளாக் வீட்டுக்கு வந்துட்டேன். இனி நாளைக்குத் தான்."
"நானும் ஒருத்தி இங்கே இருக்கேன்." நடுவில் புகுந்து கைகளை ஆட்டி ஆர்த்தி கேலி செய்ய அசடு வழிந்தபடி இருவரும் கேப்பில் ஏறிக் கொண்டார்கள்.
முன் இருக்கையில் டிரைவரோடு அமர்ந்து கொண்டான். ஒரு அத்துமீறிய பார்வையைக் கூட அவசியமின்றி விரயம் செய்யாமல் கண்ணியமாய் அமர்ந்து இருந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் அவள் நெஞ்சில் சிகரம் ஏறினான்.
வீடு வந்து சேர்ந்தும் வெகு நேரம் மட்டுக்குக்கும் நினைவுகளின் தித்திப்பு அடங்கவே இல்லை அவளுள்.
நிலைகளை மாற்றமல், சுளை தேடி தேன் உறிஞ்சும் பெரும் மாய வித்தை கொண்டது காதல் உலகம். கண்ணியமான மனிதர்களுக்கு மத்தியில் உருவாகும் ஈர்ப்பு விசை, பெரும் சக்தி வாய்ந்தது.
"வந்ததுல இருந்து கனா கண்டுட்டே இருக்கியே அம்மாலு, உன் அத்தைகாரி நம்பர் இதுல இருக்கு போட்டு குடேன்." பழசான கைத்தறி புடவை போல் உடம்பு முழுக்க ஏகப்பட்ட சுருக்கத்தோடு வந்து நின்ற கல்பனா பாட்டியை அயர்ச்சியாய் பார்த்தாள்.
சிந்தனை, சிறகில்லாமல் பறந்து கொண்டிருக்கும் போது, நடுவில் தொண தொணத்த படி அதென்ன டீல் செய்வது..? எரிச்சல் மண்டியது.
"சும்மா இருங்க பாட்டி..? அத்தை காலேஜ்ல இருந்து வந்திருக்க மாட்டாங்க. வந்தா வீட்டில வேலை இருக்கும் இல்ல..? அப்புறம் பேசிக்கலாம்." எழுந்து போய் விட்டாள்.
இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் எட்டி பார்க்கும் தூரம்தான். ஏனோ அது இளமையில் புரிவதில்லை.
கல்பனா மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டார். வலி எடுத்த கழுத்தை நீவி விட்டுக் கொண்டார்.
எப்போதும் போல வயதை கணக்கு போட ஆரம்பித்து இருந்தார். இப்போது எல்லாம் நாட்களை எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டு இருந்தார் சிக்கனமாக. மனசு முழுக்க வானதியும், தான் ஒரு முறை கூட பார்க்காத பேத்தியுமே நின்றார்கள்.
தொடுவானம் போல் கண்ணுக்கு எட்டியும் எட்டாமலும் நின்ற அந்த பந்தத்திற்கு பந்தக்கால் போட்டவர் என்ற வகையில், ஒரு டீஸ்பூன் குற்றவுணர்வு அதிகமாய்த்தான் இருந்தது.
வானதியிடம் அடிக்கடி பேசுவார் தான். பிடிவாதக்கார பேத்திதான் எத்தனை முயற்சி செய்தும் முகம் காட்ட மறுக்கிறாள்.
சில நாட்கள் முன்பு நந்தா தந்த யாழியின் படங்களை பார்த்ததில் இருந்து உள்ளுக்குள் ஒருவித தவிப்பு. அள்ளி அணைத்து, கொத்து முடியில் பின்னல் போட்டு, பால் கன்னம் வருடி, அந்த எழுத்தாணி மூக்கில் மூக்குத்தி போட்டு, காஞ்சிபுர பாவடை தாவணி உடுத்தி… வயதானவர் கனவில் இளமை மட்டுமே இருந்தது.
கொஞ்ச நாட்களாய் கண் கோளாறு செய்கிறது. எழுபதை தாண்டியாகி விட்டது. ஆரோக்கிய சதவிகிதம் பின்னடைவு தான் இனி. எல்லாம் முடிவதிற்குள் ஒரு காலத்தில், தனக்கு எல்லாமுமாய் இருந்தவளை பார்க்க வேண்டும்.
அது வரைக்கும், நடை தளராமல், பார்வை பஞ்சடையாமல், நடமாட வேண்டும். மனசு வைராக்கியமாய் காத்திருந்தது. ஆனால், அவள் வருவாளா..?
உதிரிப் பூவாய் உதிர்ந்து கொண்டிருந்த மழை, வேகமெடுத்து சரம் தொடுக்க ஆரம்பித்து இருந்தது.
யாழிக்கு அழைத்து அவள் வருகையை உறுதி செய்து கொண்ட பிறகு, மருத்துவமனை முகப்பில் இருந்த ஒய்வறையில் கண்களை மூடி அமர்ந்து இருந்தாள் வானதி.
உள்ளுக்குள் ஒரு பிரளயம் உண்டாகி கால்விரல் நரம்பு முதல் தலை உச்சி வரைக்கும் ஆட்கொண்டு இருந்தது.
வெளிச்சம் குறைவான நியான் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்த பரிசுத்தமான அறை. சுவற்றில் மேரியின் பிடியில் சிசுபாலன் இருந்தார். அந்த அமைதி தவளும் முகம், அவள் இதயத்தின் சர்வத்தை நுணுக்கி நூறாக்கியது.
மாடத்தில் மெழுகுவர்த்தி மேல் அடர்ந்த சுடர் ஒன்று குத்த வைத்து அமர்ந்திருக்க, அதற்கு நேர் எதிரே மதர் சுப்பீரியர் கேபிரியலாவின் தெய்வீக படம்.
' இத்தனை கால வாழ்க்கையின் அஸ்திவாரமும், அன்று மேய்ப்பன் இல்லாத இந்த செம்மறியை, அந்த மரி தோளில் ஏந்திய துவக்கம் தான்.
மேம்போக்காய் பார்த்தால் அங்கே எதுவுமே பிரச்சனையாய் இருக்கவில்லை தான். இவள் மட்டும் விலகாமல் இருந்திருந்தால், நந்தா என்ற பேரன்பான மனிதன் இரண்டு நல் இதயங்ளுக்கு நடுவே பயணம் செய்ய இயலாமல் இல்லாமலே போயிருப்பான்.
வடுவாய் கூட அங்கே வாழ்ந்து உறுத்தலை தந்துவிடவே கூடாது என்றுதான் பிரிந்து வந்தாள்.
உருவத்தில் மட்டும் தானே பிரிவு… உள்ளத்தில் இல்லயே. இந்த பிரிவுக்கு பிறகுதான் இருவரும் பிரிக்கவே இயலாமல் கலந்து போனார்கள்.
அவன் தீண்டல் அவளுக்கு தேவைப்பட்டதே இல்லை எப்போதும். அவன் குரலும், அதில் வழியும் அவளுக்கே அவளுக்கான பிரத்யேக அன்புமே போதுமானதாய் இருக்கும் எப்போதும்.
மதர் கேப்பரியலா மட்டும் இல்லாது போயிருந்தால் இத்தனை வருடம் தாக்கு பிடித்திருக்க முடியுமா..?' அயர்ந்த பெருமூச்சு ஒன்று எழுந்தது.
வைப்ரேசனில் இருந்த ஃபோன் மடியில் துள்ளத் துடித்து அடங்கி இருந்தது. நேரம் அனல் மேல் விழுந்த புனல் போல் இருந்த இடம் தெரியாமல் தொலைய, எழுந்து கொள்ள பிரியமின்றி அமர்ந்தே இருந்தாள்.
மூன்று முறை அழைத்து ஓய்ந்து, பொறுமையை காற்றில் பறக்க விட்டுவிட்டு யாழி தேடிக் கொண்டு வந்து நின்றாள். உடன் மம்தாவும்.
"மாய், யாழியே தேடிட்டு வந்திருச்சு." குரலுக்கு கட்டுபட்டு கண் திறந்து பார்த்தாள்.
கையில் சிப்ஸ் பாக்கெட்டை வைத்து நொறுக்கி கொண்டு, அம்மாவை முறைத்துக் கொண்டு நின்ற யாழியை பார்த்ததும் அடிவயிறு என்னவோ செய்தது. இருபது வருடங்கள், எந்த உறவுமே இல்லாமல், அம்மாவை மட்டுமே ஆட்கொண்டு வாழ்கிறாள்.
"என்னம்மா பண்றீங்க..?" இயல்பாய் கேட்டபடி இரண்டு சிப்சை எடுத்து அம்மாவுக்கு ஊட்ட, மெல்ல பலமற்று அசைய மறந்திருந்தது வானதியின் தாடைகள்.
" சாப்பிடலயா யாழி.? இப்படி ஜங் புட் சாப்பிடாதனு எத்தனை முறை சொல்றேன். மம்தா டிபன் செய்து தரலியா..? " மகளின் அடர்ந்த கேசத்தை ஒதுக்கி விட, அவள் வானதியின் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பதின்ம வயது சிறுமி போல.
"மா இன்னைக்கு நந்தா கூட பேசினேன். அவரும் இதையேதான் சொன்னார். என்னை பார்த்த்த்த்த்த்துட்டே இருந்தாரு. லைப்ல முதல் முறையா அவர் கூட கோபப்படாம, சண்டை போடம பேசி இருக்கேன்." கழுத்தை கட்டிக் கொண்டு காலாட்டினாள்.
அமைதியாகவே இருந்தாள். மடிமீது அமர்ந்திருந்தவளின் மீது இறுக்கமாக விரல்களை பதியவிட்டு இருந்தாள். சஞ்சலமான மனநிலைக்கு அந்த அழுத்தம் ஒருவித இதமாக இருந்தது.
"மா, என்ன முகமே சரியில்லை. நந்தா உனக்கு கால் பண்ணி சண்டை போட்டாறா..? " வேண்டுமென்றே கண் சிமிட்டி கேட்டவளை பதில் சொல்லாமல் பார்த்தாள்.
"அப்பா'னு கூப்பிட மாட்டியா..?" மகளின் கன்னம் வருடி காது மடலை நிமிண்டி விட்டாள். அம்மாவின் நெஞ்சணையை பஞ்சணை ஆக்கி இருந்தாள் யாழி. சிப்ஸ் சாப்பிட்ட விரல் நுனியை குழந்தைபோல் சப்பித் தீர்க்க, அவளின் ஒவ்வொரு அசைவும், கண்களில் விழுந்து எண்ணத்தில் கலந்தது.
"அப்பாங்கிறது பட்டம் இல்லமா படிச்சு வாங்க. பதவி..!அதை அடைய போராடணும். அவர் எனக்கு என்ன செய்தார்? இந்த உபகாரம் கூட உங்களுக்குக்காத் தான்.
மா, வீட்டுக்கு போகலாம்மா. பசிக்குது." கொஞ்சியவள் மேற் கொண்டு சிந்திக்க விடாமல் அம்மாவை இழுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வந்ததும் முகம் அலம்பி உடை மாற்றி சோபாவில் சரிந்தவள் கண்கள், பெங்காளி தொடரில் லயித்துப் போக, சிந்தனையாகவே வானதி சமையலறையில் இயங்கிக் கொண்டிருந்தாள்.
புல்காவும், கடாய் பனீரும் செய்து முடித்து ஹாலுக்கு வந்த போது, யாழி அங்கே இல்லை.
விளக்குகள் தனிமையில் விழித்திருக்க, டி.வி. கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தது. பக்கவாட்டு ப்ரன்ச் டோர் திறந்திருக்க அங்கே வானதி போலவே ஒற்றையாய கிடந்த மடக்கு நாற்காலியில் கால்களை குறுக்கி அமர்ந்து இருந்தாள் யாழி.
"யாழி மா…" அம்மாவின் அழைப்பு காதில் விழுந்தாலும், கருத்தில் விழவே இல்லை.
பொட்டு பொட்டாய் இருந்த நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டே இருந்தாள். அருகில் வந்து மோடாவை நகர்த்திப் போட்டு முன்னே அமர்ந்த அம்மாவை பார்த்துவிட்டு, அந்த ஷணமே பார்வையை மாற்ற, வானதி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள்.
"யாழி, திடீர்னு என்ன ஆச்சு..?"
பெற்றவளுக்கு பதில் சொல்லாமல், பார்வை அவளைத் தாண்டி குதித்து, ஹாலில் அனாதையாய் ஓடிக் கொண்டிருந்த டி.வி.யில் நிலைக்க வானதி புரியாமல் மகளைப் பார்த்தாள்.
" ஏன்மா, உனக்கு ஒரு முறை கூட நந்தாவோட அருகாமை தேவைப்படவே இல்லையா…" அந்தக் குரலில் வழிந்த உணர்வு இதுவரை வானதி அறியாதது.
மெல்லிய தடுமாற்றமும், பதட்டமும், வேர்வைச் சுரப்பிகளுக்கு வேலை வாய்ப்பை தந்திருக்க, கழுத்தடியில் கச கச' வென நனைய ஆரம்பித்தது.
"பசிக்குதுன்னு சொன்னியே யாழி, வா, தட்டெடுத்து வைக்கிறேன்." அவசரமாய் எழுந்தவள் கைகளைப் பற்றிக் கொண்டாள், எங்கோ வெறித்தபடி.
"சொல்லிட்டு போம்மா."
" அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை யாழி மா." என்றாள் கண்டிப்பான குரலில்.
" அது தான் ஏன் மா..? தன் பிறப்பிற்க்கே அப்பா, அம்மாவுடைய அந்தரங்கம் தான் காரணம்னு குழந்தை உணரும் நிமிசம், தாம்பத்யத்தின் தயக்கம் எல்லாம் முடிஞ்சு போயிடுதுமா. வேர் இல்லாம மரமேது… எனக்கும் அது புரியற வயசுதான். ஒரு நீண்ட இடைவெளி… 20 வருசம், அதுவும் உணர்வுகள் கூர்மையான 20 வருசம்…
எனக்கு வலிக்குதுமா உன் தனிமை. அந்த சீரியல்ல காம உணர்வோட நியாயத்தைச் சொல்லி புது வாழ்க்கையைத் தேடி ஓடற ஒரு நடு வயது பெண்ணை பார்த்தப்போ, எனக்கு உன் முகம் நியாபகம் வந்து, அழுகை அழுகையா வந்தது."
சட்டென்று தளர்ந்து அம்மாவின் இடையைக் கட்டிக்கொண்டு விசும்ப, சொக்கிப் போனாள் வானதி. சொல்லில் வடிக்க இயலாத உணர்வாக இருந்தது.
" யா..ழி...'" என்றாள் கண்கள் ததும்ப. ஆணை பெண் அறிவதும், பெண்ணை ஆண் அறிவதும் காலத்தின் கட்டாயம். ஆனால் பெற்றவளை பிள்ளை அறிவது, பேறு அல்லவா..!பெற்ற மகளின் நுணுக்கமான கேள்விகள், வானதியை உணர்வுக் குவியலாக மாற்றி இருந்தது.
மகளின் தலைகோதி, முகம் துடைத்து விட்டு, இரண்டு தோள்களையும் பற்றி தூக்கி நிறுத்தினாள். சிணுங்கிக் கொண்டு துவளப் போனவளை, இழுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்த்தி, புல்காவை எடுத்து வைத்தாள்.
"'எனக்கு சாப்பிட பிடிக்கல."' கையைக் கட்டிக் கொண்டு, அழிச்சாட்டியம் செய்தவளை, சட்டையே செய்யாமல் புல்காவை விள்வி கிரேவியில் தோய்த்து ஊட்ட ஆரம்பித்தாள்.
இரண்டு ரொட்டிகளை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, அதே தட்டில் தானும் எடுத்து வைத்துக் கொண்டு உண்டு முடித்தாள்.
படுக்கையை தட்டிப் போட்டு, பேசி பேசி களைத்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்கியும் போனாள்.
முதுகில் தட்டி தட்டித் தந்தபடி மகளை உறங்க வைத்தவளுக்குத் தான் உறக்கம் ஒரு சொட்டுக் கூட வரவில்லை.
மகள் எடுத்து தாக்கிய ஆயுதம் கூராய் நெஞ்சுக்குள் குத்திக் கொண்டு நின்றது.
'... 20 வருடங்கள்… அதுவும்,கூர்மையான 20 வருடங்கள். ' மெல்ல ஒரு புன்னகை உதட்டில் விரிந்தது. எத்தனை சிந்திக்கிறாள், என் செல்ல மகள்…!
சமையல் அறையில் இருந்த சந்தியா, சர்க்கரை டப்பாவின் மேல் இருந்த டேப்பில் ஒடிய சமையல் குறிப்பை எட்டி எட்டிப் பார்த்து சமைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்க, அரைத்த சட்னியை வழித்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான் சிவராமன்.
"ஏன் சந்தியா, இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி யூ ட்யூப் பார்த்து சமைப்பே ? உனக்கு வெட்கமாவே இருக்காதா? " கேட்டவன் முதுகில் பொளேர் என்று அறை விழுந்தது.
"நான் எப்படி சமைச்சா உனக்கென்ன மேன்? பசிக்கும் போது சாப்பிட தட்டில ஏதாவது விழுதானு பாருங்க. " அவள் முடிக்கும் முன்னே ஹாலில் இருந்து கரண் சத்தமிட்டு அழைத்தான்.
" மீ, கால் வந்துட்டே இருக்கு உங்க நம்பர்ல."
"யார்னு பார்த்து சொல்லு கரண்.'' கொத கொதவென கிளறி இருந்த எனதயோ உள்ளங்கையில் கொஞ்சமாய் வைத்து நக்கி சுவைத்து தனக்கு தானே மெச்சிக் கொண்டு நின்றவளை திரும்பி நக்கலாய் பார்த்தான் சிவராமன்.
"என்ன நல்லா இருக்கு தாக்கும்…"
" அடி தூள்னு இருக்கு சிவா. இப்படியொரு வாங்கிபாத்'தை உன் பரம்பரையில இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க." கண்களை மூடி லயித்தவளை பார்த்த பார்வையில் கேலி கேட்பாரற்று கிடந்தது.
" அதுசரி, இப்படி நீயே கொஞ்சம் கொஞ்சமா நக்கி டேஸ்ட் பார்த்துட்டு என்னையும் என் புள்ளையையும் காப்பாத்தி விட்ரு." என்றவனை அடிக்க கை ஓங்க, போனுடன் கரண் சமையலறையில் இருந்தான்.
" மீ, வானு ஆன்ட்டி…" சட்டென்று முகத்தில் குறும்பு மறைய, அலைபேசியை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள். அழைத்து ஓய்ந்து சளைத்திருந்த அலைபேசியில் வானுவை அழைக்க, உடனே இணைப்பில் வந்தாள்.
"என்ன வானு..? காலையில தானே பேசினோம்? எதுவும் முக்கியமா?" குரலில் கவலை அலைகடலில் கட்டுமரமாய் தத்தளித்தது.
" முக்கியம்னு இல்ல. சும்மாதான்…" என்ற குரலே, இது சும்மாவே இல்லை' என்று சும்மா சும்மா மூளைக்குள் வந்து சொல்ல, கவனத்தை வானதி வார்த்தைகள் மீது, குவி லென்சாக்கினாள்.
"என்ன நினைக்கிறியோ பேசு. அது சும்மாவா இல்லையானு நான் முடிவு பண்ணிக்கிறேன்."
இரண்டு நிமிடம் மெளனத்தில் வீணாக்கிய பிறகு, வானதி தயக்கமாய் கேட்டாள்,
" நீ சாப்பிட்டியா சந்தி..?"
"விளக்கெண்ண. சொல்ல வந்ததை சொல்லு டி நீ. எனக்கு இன்னும் பி.பி-லாம் வரவே இல்ல. உன்னால வந்தது, உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்க."
தவிப்பின் உச்சத்தில் வானதி நிற்பது புரிந்தது. கல்தூண் மனசு கூட காற்றுக்கு துருப்பிடிக்கும் காலத்தில் அவள் இருப்பதும் புரிந்தது.
"என்னடிமா யோசிக்கிறே? ஏதாவது பேசேன்."
"நான் கல்கத்தா வந்து இருபது வருசத்துக்கு மேல் ஆயிடுச்சு இல்ல. இருபது வருசமா நா…ன்… யாரை…யும் பார்க்…கல இல்…ல" குரல் நசுங்கி வந்தது.
"வார்த்தையை சாதுர்யமா, உனக்கு சாதகமா பயன்படுத்தாதே. நீ யாரையும் பார்க்க விடல."
"ப்ச். ரெண்டும் ஒண்ணு தான் டி." என்றாள் அலுப்பாக.
"அதெப்பிடி டி ஒண்ணாகும்? வனவாசத்துக்கும், சிறை வாசத்துக்கும் வித்யாசம் இருக்குல. நீ போனது வனவாசம். அதனால மத்தவங்களுக்குத் தான் சிறைவாசம்."
வானதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, சந்தியாவின் இதயம் கனிந்துருக ஆரம்பித்தது.
"சரிடா, இப்ப என்னாச்சு? எதுக்கு இந்த சிந்தனை எல்லாம்? ஏதாவது கெட்ட கனவு பார்த்தியா?"
" சொல்லத் தெரியல. ஒரே தவிப்பா இருக்கு. காரணம் புரியல. நீண்ட தவத்துக்கு பிறகு, அந்த கடைசி நொடிகள்ல ஒரு நடுக்கம் உடம்பு முழுக்க ஒடுமே, அதுமாதிரி இருக்கு. எனக்கு, எனக்கு நந்தா…வை பார்க்கணும் போல இருக்கு…" வார்த்தைகளை கட்டுபாடாய் உதிர்த்த வானதியால், கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போனது விசித்திரமே.
சந்தியா கண்களை மூடி நின்றாள். காதில் அலைபேசி ஆயிரம் உணர்வுகளின் கதையை பேசிக் கொண்டு இருந்தது ஆனால் அது எதுவுமே அவள் கவனத்தில் இல்லை. கண்கள் தன்னால் சுரக்க, உதடு தன்னிட்சையாய் துடிக்க, மூக்கு துவாரங்கள் விரிந்து, சிவந்து விஸ்தீனமாக… அந்த வார்த்தையின் வீச்சை அவளாலே தாங்க இயலவில்லையே, அந்த பைத்தியக்காரன் கேட்டால் என்னாவான்' என்ற கவலை அவளை வெட்டி சரித்திருந்தது.
"...நான் உன்னை நெனச்சேன்,
நீ என்ன நெனச்சே…
தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு…
நம்ம யாரு பிரிச்சா,
ஒரு கோடு கிழிச்சா,
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு…
உன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு…"
Currently viewing this topic 1 guest.
Recently viewed by users: Jacky 47 minutes ago.
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! கதை விமர்சனம் Our newest member: Aarthi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page