All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

சித்திரையில் நீ மார...
 
Notifications
Clear all

சித்திரையில் நீ மார்கழி..!! - Story Thread

Page 5 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 306
Topic starter  
 
 
சித்திரை - 35
 
 
மூன்று மாதம் கடந்திருந்தது..
 
 
வர்மாவோடு தினமும் நிலாவும் அலுவலகம் சென்று கொண்டிருந்தாள். இருவருக்குமே இது பிடித்தும் இருந்தது. அலுவலக நேரங்களில் கூட ஒன்றாக இருக்கும் வாய்ப்பை இருவருமே தவற விட விரும்பவில்லை.
 
 
இதில் காதலும் கடமையும் சரி விகிதத்தில் கலந்து நடக்க.. அவர்களின் அலுவலகப் பணி அழகாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பாலுவும் வர்மாவை தொடர்ந்து தொல்லை கொடுத்து அவன் காதல் மனைவி சங்கீதாவிற்கு இதே அலுவலகத்தில் வேலையை வாங்கி விட்டிருந்தான்.
 
 
ஆம் பாலுவுக்கும் சங்கீதாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. பாலுவின் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது வர்மாவும் நிலாவும் தான் சங்கீதாவின் வீட்டில் சென்று பேசி முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர்.
 
 
இரண்டு வார விடுமுறைக்குப் பிறகு இருவரும் இன்று தான் அலுவலகம் வந்திருந்தனர். இதில் வர்மாவை நேரில் பார்த்து பேசி விட்டு செல்ல இருவரும் ஒன்றாக அறைக்குள் வந்திருக்க.. “எனக்கும் தான் கல்யாணமாச்சு.. இரண்டு நாள் கூட முழுசா என்னால் லீவ் எடுக்க முடியலை.. ஆனா நீ ஜாலியா இரண்டு வாரம் லீவ் எடுத்திருக்க..” எனப் போலி பெருமூச்சோடு பாலுவை கலாய்த்தான் வர்மா.
 
 
“இதுக்குத் தான் பாஸா இருக்கக் கூடாதுன்னு சொல்றது.. என்னை மாதிரி எம்ப்ளாயா இருந்தா இந்த மாதிரி சலுகைகள் எல்லாம் கிடைக்கும் பாஸ்.. உங்களை யார் அவசரப்பட்டுப் பாஸாகச் சொன்னது..?” என்றான் பவ்யமான குரலில் பேசினாலும் வர்மாவை கேலி செய்து பாலு.
 
 
இதில் ‘எங்கே வர்மா தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறானோ..!’ எனப் பதறிய சங்கீதா பாலுவை கண்டிப்பாகப் பார்க்க.. அதைப் புரிந்து கொண்டது போல் “அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டேன், நீங்க டென்ஷன் ஆகாதீங்க..” என சங்கீதாவிடம் கூறியிருந்தவன், “இவன் எப்போவுமே என்கிட்ட இப்படித்தான் பேசுவான், நாங்க அதைப் பெருசா எடுத்துக்கறது இல்லை..” என்றான் வர்மா.
 
 
“நீங்க பிரண்ட்லியா இருக்கீங்க தான் அதனால் இவர் அதை அட்வான்டேஜா எடுத்துக்கக் கூடாது இல்லை..” என்று சங்கீதா பொறுப்போடு பேசவும், “ஹ்ம்ம், உங்களுக்கு இருக்கும் பொறுப்பும் அக்கறையும் அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லையே..!” என்று வேண்டுமென்றே சங்கீதாவிடம் போட்டுக் கொடுத்தான் வர்மா.
 
 
“பாஸ் நீங்க வேற அடுக்கடுக்கா போட்டு கொடுக்காதீங்க.. அவ உண்மைன்னு நினைச்சுக்கப் போறா..” என வர்மாவிடம் சொல்லியவன், அதே வேகத்தில் திரும்பி சங்கீதாவை பார்த்து “அவர் விளையாடறார்மா..” என்று பம்மினான் பாலு.
 
 
“அடடா இது கூட நல்லா இருக்கே.. இப்படி ஒரு பாலுவை நாங்க இதுக்கு முன்னே பார்த்ததில்லையே..” என்று நிலா கேலி செய்யவும், “நாங்க கூடத் தான் இப்படி ஒரு வர்மா சாரை நீ வரதுக்கு முன்னே பார்த்ததில்லை.. இப்போ அவர் மாறலையா..?” என அவளிடம் வம்புக்கு நின்றான் பாலு.
 
 
“சரி, போதும் போதும்.. இப்படியே பேசுட்டு இருந்தா வேலையை எப்போ பார்க்கறது.. ஏற்கனவே இரண்டு வாரம் லீவாகிடுச்சு.. பெண்டிங் இருக்கும் வேலையெல்லாம் முடிக்கணும் வாங்க..” என சங்கீதா பாலுவை அவசரப்படுத்த.. “அண்ணி நாளைக்கு அம்மா உங்களை விருந்துக்கு வர சொல்லி இருக்காங்க, ஞாபகம் இருக்கில்லை மறந்துடாதீங்க..” என நினைவு படுத்தினாள் நிலா.
 
 
“அதெப்படி மறப்போம்..” என பாலு சொல்லும் போதே, “காலையிலேயே வந்துடுவோம்னு சொல்லு..” என்றாள் சங்கீதா. “ஆமா காலை டிபனுக்கே வந்துருவோம்னு சொல்லு..” என்றான் இடையிட்டு பாலு. அதில் அவனைத் திரும்பி முறைத்தவள், “இவர் பேசறதை எல்லாம் நீ கணக்கில் எடுத்துக்காதே நிலா.. காலையிலே வந்துடறோம்..” என்று விட்டு பாலுவை அழைத்துக் கொண்டு இல்லையில்லை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியேறினாள் சங்கீதா.
 
 
“பாவம் அந்தப் பொண்ணு அவனிடம் தெரியாம மாட்டிக்கிச்சு.. எப்படித் தான் அவனைச் சமாளிக்கப் போகுதோ தெரியலை..” என்று கவலை குரலில் கூறினான் வர்மா.
 
 
“ஏன் எங்க அண்ணனுக்கு என்ன..?” என்று சண்டைக்கு நின்றாள் நிலா. “ஐயோ உங்க அண்ணனுக்கு ஒண்ணுமில்லைமா.. நீங்க எல்லாம் தனி மேக்.. ஸ்பெஷல் பீஸ், பெஸ்ட் குவாலிட்டி..” என்றான் உடனே பவ்யமாக வர்மா.
 
 
“அதானே பார்த்தேன்..” என நிலா அவனை முறைக்க.. ‘கல்யாணமான உடனே தானா உடம்பில் இந்தப் பயமும் நடுக்கமும் எங்கே இருந்து தான் வருதோ தெரியலை..!’ என்று தனக்குள்ளேயே புலம்பியவாறு வேலையைப் பார்க்கத் தொடங்கினான் வர்மா.
 
 
**
 
 
மறுநாள் காலை சங்கீதாவோடு வந்து நிலாவின் வீட்டில் இறங்கிய பாலுவிற்கு முதன்முதல் இந்த வீட்டிற்கு வந்த போது ராணி செய்த அமர்க்களங்கள் எல்லாம் கண்முன் வந்து போனது.
 
 
ஆம் இப்போது உமா அவரின் சொந்த வீட்டில் தான் இருக்கிறார். அன்று அந்த வீட்டைப் பற்றி உமா சொன்னதைக் கேட்ட அடுத்த நொடி வர்மாவுக்கு அழைத்து அனைத்தையும் பகிர்ந்திருந்த பாலு, மறுநாள் விடியற்காலையிலேயே விநாயக்கை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று நின்றிருந்தான்.
 
 
போலீஸோடு பாலு வந்திருப்பதைக் கண்டு மிரண்ட ராணி, என்னவெனப் புரியாமல் திகைக்க.. சேகரும் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து ஓடி வந்தார்.
 
 
அங்கு விநாயக் தன் ஆட்களோடு நிற்பதை கண்டதுமே இருவருக்கும் கொஞ்சம் அடிவயிறு கலங்க தான் செய்தது. அவர்களின் செல்ல மகன் வெங்கட்டை இப்படித் தானே திடீரென வீடு புகுந்து கைது செய்து அழைத்துச் சென்றிருந்தான்.
 
 
அதெல்லாம் இப்போது மனக்கண்ணில் வந்து போக.. “என்ன சார்..? எதுக்கு வந்திருக்கீங்க..? என்ன விஷயம்..?” என்று திணறலாகக் கேட்டபடியே விநாயக் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பயந்து பின்னால் நகரந்தார் சேகர்.
 
 
“நீங்க இந்த வீட்டை உடனே காலி செய்யணும்..” என்றதும் மிரண்ட இருவரும் “என்னது..? ஏன்..? எதுக்கு..? இது எங்க வீடு..” என்று பதறிக் கொண்டு பேச.. “அப்படியா..!” என ஆச்சர்யமானவன், “எங்க டாக்குமெண்ட்ஸ் காட்டுங்க பார்ப்போம்..” என்றான் விநாயக்.
 
 
அதில் தடுமாறியவர்கள் “அது.. அது பேங்க்கில் அடமானத்தில் இருக்கு..” என்று எதையோ சொல்லி சமாளிக்க முயல.. “இவ்வளவு தூரம் உங்க வீடு தேடி வந்து இருக்க நாங்க என்ன பொட்டு வெச்சுட்டு பொறி சாப்பிட வந்திருக்கோம்னு நினைச்சீங்களா..?” என்றவாறே அந்த வீட்டை ஒரு முறை சுற்றி வந்தவன், “மிஸஸ் உமாவுக்குச் சொந்தமான இந்த வீட்டை நீங்க அவங்களை மிரட்டி வெளியே அனுப்பிட்டு அபகரிச்சுட்டதா எங்களுக்குக் கம்ப்ளைன்ட் வந்திருக்கு..” என்றான் மிரட்டலாக விநாயக்.
“இல்லை சார், ஏதோ தப்பா புரிஞ்சுட்டு வந்து இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. உமா என் சிஸ்டர், அவங்க பர்மிஷனோட தான் நாங்க இந்த வீட்டில் இருக்கோம்..” என அவசரமாக சேகர் எதையோ சொல்லி சமாளிக்க முயல.. “ஆமா சார் உமா எங்க நாத்தனார் தான், எங்களுக்கு இந்த வீட்டை அவங்க தான் கொடுத்தாங்க..” என்றாள் ராணியும் பின்பாட்டு பாடியவாறே.
 
 
“ஆனா பாருங்க.. உங்களுக்கு இந்த வீட்டை கொடுத்த அதே உமா தான் நீங்க அவங்க வீட்டை அபகரிச்சுட்டதா எங்ககிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.. அவங்க ஹஸ்பண்ட் கஷ்டப்பட்டுச் சிறுக சிறுக சேர்த்து கட்டின இந்த வீட்டில் அவங்களுக்கு இடம் இல்லைன்னு சொல்லி நீங்க விரட்டி விட்டுட்டதாவும், இந்த வீட்டை உங்ககிட்ட இருந்து மீட்டு அவங்களுக்குத் தரணும்னு அவங்க கோரிக்கை வெச்சுருக்காங்க.. இதில் உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்லி எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு..” என்றான் மிரட்டலான குரலில் விநாயக்.
 
 
இதில் பதறிப் போனவாறே “இல்லையில்லை.. உமா அப்படிச் செய்யவே மாட்டா.. ஏதோ தப்பு நடந்திருக்கு..” என்று சேகர் சொல்லவும், “அடடா.. உங்களுக்குச் சாதாரணமா சொன்னா புரியாது போல இருக்கே.. ஓகே ஸ்டேஷனில் போய்ப் பேசிக்குவோம் கிளம்புங்க..” என்று அவர்களைப் பார்த்து கூறியவன், “டாக்குமெண்ட்ஸ் எல்லாம் உன்கிட்ட ரெடியா இருக்கு தானே..!” என்று பாலுவிடம் திரும்பி கேட்டான்.
 
 
உடனே “எஸ் சார்..” என்றான் விரைப்பாக பாலு. “ஓகே எவிடன்ஸ் கையில் இருந்தா எஃப்ஐஆர் ஃபைல் செய்ய ஈசியா இருக்கும்.. அதுக்காகத் தான் கேட்டேன்..” என்றவன், திரும்பி ராணியைப் பார்த்து “இவங்களைக் கூட்டிட்டு போக லேடி கான்ஸ்டபிள் வேணுமே.. லேடி கான்ஸ்டபிள் இருக்காங்களாப்பா..?” எனத் தன்னுடன் வந்திருந்த மூன்று காவலர்களைப் பார்த்து கேட்கவும், “வெளியே வெயிட் செய்யறாங்க சார்..” என்றார் கான்ஸ்டபிள்.
 
 
இதில் மிரண்டு போன ராணி எச்சிலைக் கூட்டி விழுங்க.. அப்போதே எழுந்து வந்து இதையெல்லாம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் பக்கம் திரும்பியவன் “ஏற்கனவே அண்ணன் ஜெயிலில் இருக்கான்.. இப்போ அப்பா அம்மாவும் கூடப் பிராட் கேஸில் ஜெயிலுக்குப் போகப் போறீங்க.. இந்தப் பொண்ணை என்ன செய்யலாம்..? அண்டர் எய்ட்டின் வேற, ஏதாவது காப்பகத்தில் தான் சேர்க்கணும்.. ஏன்னா இப்போ இருக்கச் சூழ்நிலையில் தனியா இருக்கறது ரிஸ்க்.. எண்பது வயசு பாட்டியை கூட விட்டு வைக்க மாட்டேன்றாங்க..” என விநாயக் மறைமுகமாக அவர்களின் பெண்ணை வைத்து மிரட்டத் தொடங்கியதில் நிலைமையின் தீவிரம் உணர்ந்து “சார், அதெல்லாம் வேணாம் சார்.. இப்போ நாங்க என்ன சார் செய்யணும்..” என்று உடனே பணிந்து வந்தார் சேகர்.
 
 
“ரொம்பச் சிம்பிள், அரெஸ்ட் எல்லாம் வேண்டாம்னா காம்ப்ரமைஸா போயிட வேண்டியது தான்.. இன்னைக்கு.. இப்போவே நீங்க இந்த வீட்டை காலி செஞ்சுட்டு கிளம்பிட்டீங்கனா இந்தக் கேஸ் இங்கே இந்த நிமிஷத்தோட முடிஞ்சுடும்..” என்றான் விநாயக்.
“அது எப்படிங்க இன்னைக்கு இப்போவே காலி செய்ய முடியும்..?” என்று அப்போதும் அடங்காமல் பேசினாள் ராணி. “வாயை மூடிட்டு இரு, இப்போ காலி செய்யாம ஜெயிலில் போய் உட்கார்ந்துட்டு களி திங்க போறியா..?” என்று ராணியின் மேல் எரிந்து விழுந்தார் சேகர்.
 
 
“கொஞ்சம் டைம் கொடுங்க சார், நாங்க எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பிடறோம்..” என்ற சேகரை மறுப்பாகப் பார்த்தவன், “உங்களை நம்ப முடியாது..” என்று வேண்டுமென்றே சொல்ல..
 
 
“இல்லை சார் கண்டிப்பா கிளம்பிடுவோம்..” என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “எங்கே போகணும்..? நான் எங்கேயும் வரமாட்டேன்.. இங்கேதான் இருப்பேன்..” என்று ஸ்ருதி அமர்க்களம் செய்ய.. “இன்னொருத்தருக்கு சொந்தமான வீட்டில் அப்படி எல்லாம் இருக்க முடியாது பாப்பா.. முதலில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுட்டு அதுக்கப்புறம் அடம் செய் சரியா..?” என்றான் பாலு.
 
 
“யாருக்கு சொந்தம்..? இது எங்க வீடு, எங்க அப்பா வாங்கின வீடு.. எதுவும் தெரியாம பேசாதீங்க..” என்று அனைத்தும் தனக்குத் தான் தெரியும் என்பது போல் ஸ்ருதி சண்டைக்கு வர.. “அதை உங்க அப்பாவை சொல்ல சொல்லு..” என்றான் விநாயக்.
 
 
தன் பார்வையை சேகரின் பக்கம் திருப்பியவள், அவர் பதிலின்றி நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டு “அப்போ இது உங்க வீடு இல்லையாப்பா..? சொல்லுங்க இது நம்ம வீடு இல்லையா..?” என்று கேட்டு கத்தி அழ தொடங்கவும் “இங்கே பாருங்க, சின்னப் பொண்ணு முதலில் எல்லாத்தையும் அவளுக்குப் புரிய வைக்கணும்.. வீட்டில் இருக்கும் முக்கியமான பொருட்களை எல்லாம் பேக் செய்யணும்..” என்றார் சேகர்.
 
 
“ஹ்ம்ம், அதுவும் சரி தான்.. போனா போகுதுன்னு இதுக்காக ஒரு அரை நாள் கொடுக்கறேன்.. அதுக்கு மேலே ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க மாட்டேன், மதியம் ஒரு மணிக்கு நான் இங்கே வரும் போது நீங்க இங்கே இருக்கக் கூடாது.. அதுவரைக்கும் வெளியே இரண்டு கான்ஸ்டபிள் நிற்பாங்க புரியுதா..” என்று மிரட்டி விட்டு வெளியேறினான் விநாயக்.
 
 
இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர், “நடக்கற அநியாயத்தைப் பாரேன்.. இது உமாவோட வீடாம் இல்லை..”
 
 
“அவளையே இங்கே இருந்து விரட்டிவிட்டு இருக்காங்கனா.. எவ்வளவு பெரிய கொள்ளை கும்பலா இருப்பாங்க..”
 
 
“இதைத் தான் சொல்லுவாங்க ஒண்ட வந்த பேய் ஊர் பேயை விரட்டுச்சாம்..”
 
 
“அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொல்லும்னு சும்மாவா சொன்னாங்க..”
 
 
 
“உமாவுக்குச் செஞ்ச பாவம் தான் இன்னைக்கு இவங்களைச் சுத்தி சுத்தி அடிக்குது.. பையன் ஜெயிலில் இருக்கான், இதோ இவங்க வீடு வாசல் இல்லாம இனி நடுத்தெருவில் நிற்க போறாங்க..” என்று ஒவ்வொருவரும் பேசியதெல்லாம் காதில் விழ..
 
 
“ஐயோ.. ஐயோ.. என்னை இப்படி நடுத்தெருவில் நிறுத்திட்டாளே.. அமுக்குணி மாதிரி இருந்துட்டுக் கமுக்கமா காரியத்தைச் சாதிச்சுட்டாளே..! இத்தனை வருஷமா அவளுக்கும் அவ பெத்ததுக்கும் தண்டமா சோறு போட்டு வளர்த்ததுக்கு என்னைக் கொண்டு போய் இப்படி அசிங்கப்பட வெச்சுட்டாளே.. நல்லா இருப்பாளா அவ..” என்று ராணி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து கதறி அழுதாள்.
 
 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் விநாயக் கொடுத்த நேரம் முடிந்து போகும் எனப் புரிந்து கொண்ட சேகர், வேகவேகமாக அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கத் தொடங்கினார்.
“நான் இங்கிருந்து வரவே மாட்டேன்..” என அப்போதும் ஸ்ருதி அடம் செய்து அழுதபடி அமர்ந்திருக்க.. அவளைக் கண்டு கொள்ளாமல் அனைத்தையும் செய்து கொண்டிருந்தவர், தனக்குத் தெரிந்த வீடு வாடகைக்குக் கொடுக்கும் நபர்களுக்கு அழைத்து அவசரமாக ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தரும்படி சொல்ல.. அவர்களோ வாடகையாக யானை விலையும் குதிரை விலையும் கேட்டனர்.
“நான் என்ன சொந்தமா வீடு வாங்கவா போறேன்.. என் நிலைமை புரிஞ்சு ஒரு சிங்கிள் பெட்ரூம் சின்னதா இருந்தாலும் பரவாயில்லை.. அதுவும் இன்னைக்கு இப்போவே வேணும், வாடகை கம்மியா இருக்கறது போலப் பாரு..” என்று அவர்களிடம் சிடுசிடுத்து விட்டு திரும்பியவரை கோபமாக முறைத்த ஸ்ருதி “சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கு எல்லாம் நான் வரமாட்டேன்..” என்று மீண்டும் அமர்க்களம் செய்தாள்.
 
 
“வரலைனா போ.. மறுபடியும் போலீஸ் வந்து உன்னைத் தூக்கி வெளியே வீசுவாங்க, அப்போ பிளாட்பாரம்மில் படுத்துக்கோ..” என்று ஆத்திரத்தில் கத்தியவர், அடுத்த வேலையைப் பார்க்க.. வேகமாக வந்து அவரின் வழியை மறித்தவள், “அப்போ அட்லீஸ்ட் இரண்டு பெட்ரூம் இருக்கறது போலவாவது பாருங்க ப்பா..” என்றாள் ஸ்ருதி.
 
 
‘அதுக்கு யார் உங்க அப்பனா வாடகை கட்டுவான்..?’ என வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு “என் வசதிக்கு என் வருமானத்துக்கு என்ன செய்ய முடியுமோ..! அதைத் தான் என்னால் செய்ய முடியும்..” என சேகர் எரிச்சலோடு கத்தி விட்டு செல்ல.. “அம்மா.. பாருங்கம்மா அப்பாவை..” என்று சலுகையாக ராணியின் பக்கம் திரும்பினாள் ஸ்ருதி.
 
 
“நான் இருக்க வெறுப்புக்கு என்கிட்டே வந்தே வெளுத்து விட்டுடுவேன் பார்த்துக்க..” என ராணி சிடுசிடுக்கவும், அவர்களை முறைத்துக் கொண்டே சென்று ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள் ஸ்ருதி.
 
 
இப்போது வரையும் தூணில் சாய்ந்து அமர்ந்தபடி இருந்த ராணியைத் திரும்பிப் பார்த்து முறைத்த சேகர், “மகாராணி அப்படியே ஒய்யாரமா உட்கார்ந்து அழுதுட்டு இருந்தா எல்லா வேலையும் யாருடி பார்க்கறது..? நான் என்ன உங்களுக்கு வேலைக்காரனா..? நானே எல்லாம் செஞ்சு உன்னையும் தலையில் தூக்கிட்டு போய் அங்கே இறக்கி விடவா..! எந்திரிச்சு வேலையைப் பாருடி..” என்றவாறே வேகமாக வந்து எட்டி உதைத்தார்.
 
 
இப்படியே அவசர அவசரமாகச் சிங்கிள் பெட்ரூம் வீடு ஒன்றை குறைந்த வாடகையில் பார்த்துக் கொண்டு அன்று மதியமே சேகரின் குடும்பம் அங்கிருந்து காலி செய்திருந்தது.
 
 
நிலாவின் திருமண வேலைகள் அந்த நேரத்தில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க.. இந்த வீட்டை புதுப்பிக்கும் பணியும் இன்னொரு பக்கம் அவர்களுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.
 
 
சரியாகத் திருமணம் முடிந்த அன்று மறுவீட்டுக்கு என நிலாவை அழைத்துக் கொண்டு இங்கு வர்மா வந்து இறங்கிய போது தான் இவை அனைத்துமே உமாவுக்கும் நிலாவுக்கும் தெரிய வந்திருந்தது.
 
 
புத்தம் புது வீடு போல ஜொலித்துக் கொண்டிருந்த இடத்தைக் கண்டு மகிழ்வதா..? இல்லை தங்கள் வீடு திரும்பத் தங்களுக்கே கிடைத்து விட்டதை நினைத்து நெகிழ்வதா..!’ எனத் தெரியாமல் உணர்ச்சி பெருக்கில் இருவரும் நின்றிருந்தனர்.
 
 
இதையெல்லாம் யோசித்தபடியே சமையலறையில் உமாவுக்கு உதவி கொண்டிருந்தாள் நிலா. பாலு வருவதற்குள் வேக வேகமாகக் காலை உணவுகள் தயார் செய்யப்பட்டு உணவு மேஜையில் காத்திருக்க.. வர்மாவும் அவர்கள் வந்த பிறகு சேர்ந்து சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறிவிட்டான்.
 
 
அதே நேரம் தன் மனைவியோடு வீட்டிற்குள் நுழைந்த பாலுவை கண்டு நிலா “வாங்க வாங்க..” என்று ஆரவாரமாக வரவேற்க.. “வந்தேன் வந்தேன்.. மீண்டும் நானே வந்தேன்..” என அவனும் உள்ளே நுழைந்தான்.
 
 
இந்தக் குரல் கேட்டு வெளியே வந்த உமா சங்கீதாவை அன்போடு அணைத்துக் கன்னம் பற்றி நலம் விசாரித்தார். “வாடாம்மா.. எப்படி இருக்கே..? பயணம் எல்லாம் எப்படி இருந்தது..?” என்று அவர்கள் ஹனிமூன் சென்று வந்ததைப் பற்றி விசாரிக்க.. “நான் நல்லா இருக்கேன் ம்மா, நீங்க எப்படி இருக்கீங்க..? ட்ரிப் எல்லாம் நல்லா இருந்தது..” என்றவள், “என்ன ஹெல்ப் செய்யணும், சொல்லுங்க ம்மா..” எனச் சமையலறைக்குள் நுழைய முயல..
 
 
“முதலில் சாப்பிடுங்க, இப்போ அது தான் நீங்க செய்யற பெரிய உதவி..” என்று நிலா சங்கீதாவை இழுத்துச் சென்று உணவு மேஜையில் அமர வைத்தாள். “என்னை எல்லாம் யாரும் கூப்பிட மாட்டீங்களா..?” என்று பாலு குரல் கொடுக்கவும், “உன் வீட்டில் உன்னைத் தனியா வரவேற்க வேற செய்வாங்களா..? வந்து உட்கார்..” என அவனைப் பார்த்து கேலி செய்தவள், வர்மாவை சாப்பிட அழைக்க.. மூவரும் வந்து அமர்ந்ததும் நிலாவும் உமாவும் பரிமாறினர்.
 
 
பேச்சும் சிரிப்புமாக அன்றைய நாள் செல்ல.. மதிய உணவுக்கான ஏற்பாடுகளை சங்கீதா நிலா மற்றும் உமா சமையலறையில் கவனித்துக் கொண்டிருக்க.. தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருந்த வர்மாவின் அருகில் சென்று “பாஸ் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்..” என்று மெல்லக் காதை கடித்தான் பாலு.
 
 
இதில் என்ன என்பது போல் திரும்பி வர்மா பாலுவைப் பார்க்க.. “அந்த ஸ்ருதி பொண்ணு ஓடிப்போயிருச்சாம் பாஸ்..” என்றான் பாலு. முதலில் ஸ்ருதி யார் எனப் புரியாமல் நெற்றியை சுருக்கியவனுக்கு, பிறகு ராணியின் மகள் என்பது நினைவில் வரவும், “என்னாச்சு..” என்றான் எரிச்சலோடு வர்மா.
 
 
“இங்கிருந்து போனதிலிருந்து அந்தப் பொண்ணு தினம் ஏதோ பிரச்சனை செஞ்சுட்டே இருந்திருக்கு.. சின்ன வீட்டில் இருக்க முடியாது, தனி ரூம் வேணும்.. வசதியா வளர்க்க தெரியலைனா நீ எல்லாம் எதுக்கு என்னைப் பெத்துகிட்டன்னு எல்லாம் பேசி தினமும் பிரச்சனை.. சண்டைன்னு இருக்கவும், ஹவுஸ் ஓனர் காலி செய்யச் சொல்லிட்டாங்களாம்..
 
 
ஏற்கனவே அவங்க பையன் விஷயத்தில் ரொம்ப மனசு நொந்து போயிருந்த சேகர், எப்படியாவது கடனை உடனை வாங்கியாவது பெரிய வக்கீலை வெச்சுப் பையனை ஜாமினில் வெளியே எடுத்துட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்னு யோசிச்சு சேகர் வட்டிக்கு கடன் வாங்கிட்டு வந்து வீட்டில் வெச்சு இருக்கார்..
 
 
இது தெரிஞ்சதும் அந்தப் பொண்ணு நைட்டோட நைட்டா பணத்தைத் தூக்கிட்டு அவ காதலன் கூட ஓடிப் போயிடுச்சு..” என பாலு சொல்லி முடிக்கவும், “சின்னப் பொண்ணு தானே அவ..? ஸ்கூல் தானே படிச்சுட்டு இருந்தா..?” என்றான் வர்மா.
 
 
“அந்தக் கதையை ஏன் கேட்கறீங்க..?” என்று தொடங்கி நிலா அன்று ஸ்ருதியை வெளியில் பார்த்துட்டு ராணியை எச்சரிக்கை செய்ய வந்ததைப் பற்றி பாலு சொல்லவும் “இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..?” என்றான் சலிப்பாக வர்மா.
 
 
“என்ன செய்யறது பாஸ் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்னே நாங்க வளர்ந்து பழகிடும்.. வெள்ளந்தி மனசு கேட்கலை, அதான் நிலா அக்கறையோட சொல்ல வந்தா.. ஆனாலும் அதைப் புரிஞ்சுக்காம அந்த அம்மா என்ன பேச்சு.. ஹப்பா நிலாவை வீட்டுக்குள்ளேயே விடமாட்டேன்னு அப்படி ஒரு அமர்க்களம், அன்னைக்கே எனக்கு இது நிலா வீடுன்னு மட்டும் தெரிஞ்சிருந்தது, ஒரு ரகளையே செஞ்சு இருப்பேன்..
 
 
சரி விடுங்க, இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சே.. ஆனா அன்னைக்கே நிலா பேச்சை கேட்டு இருந்தா அந்தப் பொண்ணைக் கண்டிச்சுக் கண் காணிச்சு இருந்திருக்கலாம்.. இப்போ மொத்தமா எல்லாம் போச்சு..” என்றான் பாலு.
 
 
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சொல்லுவாங்க பாலு.. நாம என்ன விதைக்கிறோமோ, அதைத் தான் அறுவடை செய்வோம்.. அவங்க பாவத்தை விதைச்சாங்க, அதுக்கான பலனை இப்போ அறுவடை செஞ்சு தானே ஆகணும்.. சரி இப்போ அவங்களைப் பத்தின பேச்சு நமக்கு எதுக்கு..?” என வர்மா சொல்லி முடிக்கவும், நிலாவும் சங்கீதாவும் அங்கு வரவும் சரியாக இருந்தது.
 
 
அதன் பிறகு பேச்சுத் திசை மாற.. ஒருவரை ஒருவர் வம்பு இழுத்துக் கொண்டு சந்தோஷமாக அவர்களின் நேரம் சென்றது.
 
 
*
 
 
மாலை மங்கத் தொடங்கி இருக்க.. நால்வரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஒரு நகைச்சுவை படத்தைப் பார்த்து கொண்டிருந்தனர். நிலா தண்ணீர் குடிப்பதற்காக எழ.. திடீரென அவளுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
 
 
காலுக்குக் கீழே பூமி நழுவது போல் இருக்க.. லேசாகத் தடுமாறி சட்டென அருகில் இருந்த சோபாவை பிடித்துக் கொண்டவளைக் கண்டு “என்னாச்சு ஹனி..?” என்று பதறி அவளைச் சென்று தாங்கினான் வர்மா.
 
 
“ஒண்ணுமில்லைங்க.. லேசா தலை சுத்துறது போல இருந்தது..” என்று நிலா சொல்லவும், வேகமாகச் சென்று சில்லெனத் தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான் பாலு. “என்ன செய்யுதுடா டாக்டர்கிட்ட போகலாமா..?” என்று வர்மா கேட்டுக் கொண்டிருக்க.. அதற்குள் “இருங்க நான் லெமன் ஜூஸ் போட்டுட்டு வரேன்..” எனச் சமையலறைக்கு விரைந்தார் உமா.
 
 
“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க.. காலையில் இருந்து கொஞ்சம் வேலை அதிகம் இல்லை, அதனால் தான் இப்படி இருக்குன்னு நினைக்கறேன், அவ்வளவு தான்..” என நிலா சொல்லவும், “இல்லை எனக்கு என்னமோ டாக்டரை பார்க்கறது தான் சரின்னு தோணுது.. நான் காலையிலேயே கவனிச்சேன், உன் முகம் கொஞ்சம் சோர்வா தான் இருந்தது..” என்றாள் சங்கீதா.
 
 
“அப்படி எல்லாம் எதுவுமில்லை அண்ணி.. இன்னைக்கு வழக்கத்தை விட வேலை கொஞ்சம் அதிகமில்லை அதனால் தான்..” என்று மீண்டும் நிலா சொல்லவும் “இல்லை.. ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்குன்னு நானுமே காலையிலேயே கேட்டேன்..” என வர்மா கண்டிப்பாகச் சொல்லவும், “நிஜமாவே ஒண்ணுமில்லைங்க.. இப்போ பாருங்க நான் நல்லா தானே இருக்கேன், திடீர்னு எழுந்ததில் அப்படி இருக்கோ என்னவோ,,?” என்று நிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹே நிலா ஏதாவது விசேஷமா..?” என்று பரபரத்தாள் சங்கீதா.
 
 
அதில் பதட்டத்தோடு நின்றிருந்த அத்தனை பேரின் கவனமும் அவள் பக்கம் ஆர்வமாகத் திரும்பியது. ‘ஒருவேளை இருக்குமோ..?’ என அந்த நொடி உமாவுக்கும் தோன்ற.. வேகமாக மகளை நெருங்கி அவள் கன்னத்தைத் தாங்கி “நிலாம்மா நிஜமாவாடா..?” எனச் சந்தோஷத்தில் பரபரக்க.. அப்போதே அந்தக் குழப்பம் நிலாவுக்கும் வந்திருந்தது.
 
 
“தெரியலையே ம்மா..” என்றாள் குழப்பத்தோடு நிலா. “இதெல்லாம் ஒரு பதிலா..? இப்போவே தெரிஞ்சுக்கலாம் கிளம்பு ஹாஸ்பிடல் போவோம்..” எனப் பாலு கூறவும் “என்ன இப்போவா..?” என்றாள் நிலா.
 
 
“ஆமா இப்போ தான் உடனே கிளம்பு..” என்று வர்மாவும் சொல்ல.. “சரி நான் டிரஸ் மாத்திட்டு வரேன்..” என எழுந்தவள், மீண்டும் தலை சுற்றியதில் அப்படியே பின்னே சரிய.. அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டான் வர்மா.
 
 
“நான் போய்க் கார் எடுக்கறேன் பாஸ்..” என பாலு வேகமாக வெளியே செல்ல.. நிலாவை தூக்கிக் கொண்டு அவன் பின்னே ஓடினான் வர்மா. அடுத்தப் பத்து நிமிடத்தில் தர்ஷனின் மருத்துவமனையில் நிலா அனுமதிக்கப் பட்டிருக்க.. வேக வேகமாக வந்து சேர்ந்தாள் அபி.
 
 
அங்கு நிலாவுக்கு அத்தனை பரிசோதனைகளும் நடந்து கொண்டிருந்தது. இப்போதே மனைவியைப் பிரசவத்திற்கு அனுமதித்திருப்பது போல் கைகளைப் பின்னே கட்டியப்படி வர்மா முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்க.. “இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா பாஸ்..?” என்றிருந்தான் பாலு.
 
 
“நீ வேற என் டென்ஷன் புரியாம கொஞ்ச நேரம் அமைதியா இருடா..” எனப் பாலுவிடம் சிடுசிடுத்த வர்மா, நிலா அனுமதிக்கப்பட்டிருந்த அறையைப் பார்ப்பதும் பின் நடப்பதுமாக இருக்க.. சில நிமிடங்களில் வெளியே வந்த அபி, வர்மாவை நெருங்கி “மஹி நான் அத்தையாகிட்டேன்..” என்று சந்தோஷிக்க.. அவளை அப்படியே தூக்கி சுற்றி விட்டான் வர்மா.
 
 
“அடேய்.. விட்டா எனக்குத் தலை சுத்த வெச்சுடுவே போல.. கீழே விடு என்னை..” என்று அபி சிரிக்க.. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்திருந்த சரோஜா அபியின் குரலில் “முருகா போற்றி.. நன்றி நன்றி, கந்தா.. ஓம் சரவணபவ..” எனக் கையெடுத்து கும்பிட்டார்.
 
 
அங்கிருந்த அத்தனை பேரும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்க.. வேகமாக அறைக்குள் இருந்த நிலாவை தேடி சென்ற வர்மா.. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
 
 
************
 
 
இவர்கள் வீட்டிற்கு வருவதற்குள், அபியின் மூலம் இந்த விவரம் அறிந்த அத்தனை பேரும் வர்மாவின் வீட்டில் காத்திருந்தனர்.
 
 
சரோஜா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அந்தச் சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருக்க.. உமா மகளை நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
 
 
“நாளைக்குக் கோயிலுக்குப் பூஜைக்குச் சொல்லிடு..” என்று தொடங்கிய சரோஜா, அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு ஸ்வீட்டோடு ஒரு மாத சம்பளத்தையும் கொடுக்குமாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்ல.. “பாட்டி மட்டும் கலக்கறாங்க.. நம்ம பங்குக்கு நாம எதுவும் செய்ய வேண்டாமா..?” என்றான் தர்ஷன்.
 
 
“என்ன செய்யலாம்னு சொல்லு மச்சான் செஞ்சுடுவோம்..” என்றான் விநாயக். “பார்ட்டி ஏற்பாடை எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. கரகாட்ட மாட இதோ நம்ம அபி இருக்கா..” என்றவனின் மேல் பக்கத்தில் இருந்த பொம்மையைத் தூக்கி எறிந்தாள் அபி.
 
 
“வேணும்னா நீ ஆடு மேன்..” என்று அவள் எகிறவும், “அது தான் உன் ஆசைனா நான் ஏன் கெடுக்கப் போறேன்.. வா இரண்டு பேரும் சேர்ந்து “மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடுவோம்.. நாளைக்கே பிராக்டிஸ் இருக்கு..” எனச் சலிக்காமல் வம்பிழுத்தவனை அவள் அடித்துத் துவைக்க.. இருவரையும் பிரித்து விடுவதே பெரும் வேலையானது.
 
 
அனைவரும் சிரித்து முடிக்கவும், “மஹி.. நீ ஏன் இந்தச் சந்தோஷமான நேரத்தை மேலும் சந்தோஷமாக்குவது போல அந்த வீணான போன ஆளவந்தான் மேலேயும் அவன் பெத்த அந்த அழகு மயில் மேலேயும் மான நஷ்ட வழக்கு போட கூடாது..?” என்று திடீரெனக் கேட்டான் தர்ஷன்.
 
 
அதில் அனைவரும் அவனைத் திரும்பி பார்க்க.. “அன்னையிலிருந்தே எனக்கு மனசே ஆறலை.. அவனைச் சும்மா விடவும் எனக்குப் பிடிக்கலை.. அதுக்காக லைனை கிராஸ் செய்யவும் பிடிக்கலை.. இப்போ அவனுங்க சொன்னது பொய்னு எல்லாருக்கும் தெரியுமில்லை, மான நஷ்ட வழக்கு போட்டு நடுத்தெருவில் அவனை நிறுத்தணும்..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான் தர்ஷன்.
 
 
இதுவரை அவனிடம் இருந்த விளையாட்டுத் தனமெல்லாம் காணாமல் போயிருக்க.. அத்தனை கோபம் அவனிடம் வெளிப்பட்டது. “எனக்கும் தர்ஷ் சொல்றது தான் சரின்னு தோணுது..” என்றான் விநாயக்.
 
 
“அதெல்லாம் வேண்டாம்..” என்றான் வர்மா. “ஏன் வேண்டாம்..? அவனை அப்படியே ஜாலியா விட்டுட சொல்றியா..?” என தர்ஷன் பொங்கவும், “இப்போ அவன் ஜாலியா இருக்கான்னு உனக்குத் தோணுதா..?” என்றான் வர்மா.
 
 
இதற்கு இருவரிடமும் பதிலில்லை. ஆம் செய்த பாவத்திற்கெல்லாம் சேர்த்து நிறையவே அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஆளவந்தான்.
 
 
வர்மா துஷ்டனைக் கண்டால் தூர விலகு என நினைத்து ஒதுங்கி சென்றது போல் ரத்தன் விலகிச் செல்லவில்லை. அவர்களிடத்திற்கே வந்து பிரச்சனை செய்து மொத்தமாக அவர்களின் பெயரை கெடுத்து தலை குனிய வைக்க நினைத்த நேஹாவை சும்மா விட விரும்பாமல் தனக்குத் தெரிந்த தொழில் வட்டங்களில் எல்லாம் ஆளவந்தானை பற்றிய அத்தனை உண்மைகளையும் சொல்லி விட்டிருந்தார் ரத்தன்.
 
 
இதில் முன்பே அரசல் புரசலாக அவரைப் பற்றித் தெரிந்து இருந்தவர்களுக்கு எல்லாம் அது மேலும் உறுதியாகப் பரவியதில் உண்டான கெட்ட பெயரில் யாருமே ஆளவந்தானோடு இணைந்து தொழில் செய்ய விரும்பாததோடு, இதற்கு முன்பு அவர்களோடு போட்டிருந்த காண்டிராக்ட்டை எல்லாம் கூடக் கேன்சல் செய்திருந்ததில் ஆளவந்தானுக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டிருந்தது.
 
 
புதிதாகப் போட்டிருந்த ஒப்பந்தத்தை நம்பி சில கோடிகளை அதில் முதலீடு செய்திருந்தவருக்கு, இப்படிப் பாதியில் அந்த வாய்ப்புக் கை விட்டுப் போனதில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அடுத்தடுத்துத் தொழிலில் அடி வாங்கி எழுந்து கொள்ள முடியாத அளவிற்கு அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆளவந்தானுக்கு அடுத்தப் பெரும் இடியாக நேஹா ஓரு மனநோயாளியாக மாறி இருந்தாள்.
 
 
வர்மா திருமணம் செய்து கொண்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதையே நினைத்து வர்மா தனக்கு வேண்டும் என்ற கோபமும் தன்னை விட்டு எப்படிப் போகலாம் என்ற வெறியும் திரும்பத் தன்னிடம் வந்து விட வேண்டும் என்ற ஆசையும் எல்லாம் சேர்ந்து அவளைப் பித்துப் பிடித்தவள் போலாக்கி இருக்க.. உண்ண மறந்து, உடுத்த மறந்து, உறங்க மறந்து ஒரே அறைக்குள் அடைந்து கிடந்து மனநோயாளியாகவே மாறி இருந்தவளுக்கு இப்போது சுற்றமும் நட்புமென யாருமே அடையாளம் தெரியவில்லை.
 
 
ஆளவந்தானே அவள் முன் சென்று நின்றாலும் யாரோ போல் தான் பார்ப்பாள். அவளுக்கு இப்போது வரை மறக்காத ஒரே முகம் மஹேந்திரவர்மனின் புன்னகை முகம் தான். அவளுக்குத் தெரிந்த ஒரே பெயர் மஹி மட்டும் தான்.
 
 
தனக்குள்ளேயே ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொண்டு அதில் அவளின் மஹியோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவள் ஒரு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
 
 
இதெல்லாம் நினைவுக்கு வந்து தர்ஷன் அமைதியாக.. “யாருக்கு எதையும் நிரூபிக்க நாம வாழ கூடாது மச்சான்.. நம்ம வாழ்க்கையைச் சந்தோஷமா நாம வாழ்ந்தா போதும், அதோட இப்போ அவன் மேலே நான் கேஸ் போட்டா இதுக்காகவே நான் கல்யாணம் செஞ்சது போலாகிடும்.. இது நிலாவை அவமானப்படுத்தறதுக்குச் சமம்.. எனக்குச் சம்பந்திமில்லா ஒருத்தனை பழி வாங்கறதை விட, என் நிலா நிம்மதியும் சந்தோஷமா இருக்கறது தான் எனக்கு முக்கியம்..” என்றான் வர்மா.
 
 
சற்று தள்ளி நண்பர்கள் பேசட்டுமென அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு பெரியவர்களோடு அமர்ந்திருந்த நிலாவுக்கு வர்மாவின் இந்த வார்த்தைகள் மனநிறைவையும் நெகிழ்வையும் கொடுக்க. காதலோடு அவனைப் பார்த்திருந்தாள் நிலா.
 
 
அவளின் பார்வையை உணர்ந்தது போல் திரும்பி அவளைப் பார்த்தவன், அந்த விழிகளில் வழிந்த காதலில் சிக்குண்டு கிடக்க.. அதன் பின் பேசிய எதிலும் அவன் கவனம் பதியவில்லை.
 
 
ஒருவாறாக எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின், இருவருக்கும் தனிமை கிடைக்க.. தங்கள் அறைக்குள் நுழைந்தவளை தன் கையில் அள்ளிக் கொண்டவன், “என்ன ஹனி அப்படி ஒரு லுக்..?” என்றான் கிறக்கமான குரலில்.
 
 
“ஹ்ம்ம்.. சைட் அடிக்கறேன்..” என நிலா குறும்பாகக் கண் சிமிட்ட.. “ம்ஹும்..” என ராகம் இழுத்த வர்மா அவளின் கன்னத்தோடு கன்னம் இழைந்தான்.
 
 
“இப்படி ஒரு பரிசை எனக்குக் கொடுத்த உனக்கு என்ன வேணும் கேளு..?” என்றவனை விழியைச் சுருக்கி யோசனையாகப் பார்த்த நிலா, ஒற்றை விரலை நீட்டி அவனைக் காண்பித்தாள்.
இதில் முகமெங்கும் மலர்ந்த புன்னகையோடு தனக்கேயுரிய விதத்தில் அவளின் பரிசை நிலாவிடம் ஒப்படைத்தான் வர்மா.
 
                                                                              நிறைந்தது.
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 13 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 306
Topic starter  

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் இறுதி அத்தியாயங்களை பதிந்து விட்டேன்..  கதையின் லிங்க் வரும் புதன்கிழமை (16-07-2025) மாலை 6 மணி வரை மட்டுமே இருக்கும்.. படிக்க நினைப்பவர்கள் படித்து விடுங்கள்..

CNM - 33, 34 & 35

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/265/

 

கதையை பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடுங்கள்..

 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா 

This post was modified 13 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page