இன்னைக்கு வந்த செய்திக்காக நடந்த திருமணமா இதுன்னு எல்லாம் சில்லியா கேக்க மாட்டீங்க நினைக்கறேன்...” என்று பத்திரிக்கையாளர்களை நோக்கி கூறியவன், “இதோ கமிஷனர் சார் கூட இங்கே தான் இருக்கார், வேணும்னா அவர்கிட்ட கேட்டுக்கோங்க... அவர் முன்னிலையில் அவர் ஆசிர்வாதத்தோடு தான் எங்கே கல்யாணம் நடந்தது...” என்று ஆராவமுதனை நோக்கி கைக்காட்டினான்.
“எஸ்... மிஸ்டர் ஆத்ரேயன் இரண்டு வாரம் முன்னேயே என்னை இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்...” என்று தன் கம்பீர குரலில் கூறியவர், “படுபாவி காலங்காத்தால கனவுல என் பொண்டாட்டிக் கூட லவ்ஸ் விட்டுகிட்டு இருந்த என்னைக் கதற கதற கடத்திகிட்டுப் போனான்னா சொல்ல முடியும்... இப்படியே நம்ம கெத்தை மெயின்டைன் செய்வோம்...” என்று முணுமுணுத்தது சஞ்சய்க்கு மட்டும் தெளிவாகக் கேட்டது.
அதில் அவரை ஒரு மர்ம புன்னகையோடு பார்த்தவன், மீண்டும் செய்தியாளர்களை நோக்கி திரும்ப... “சார் உங்க மிஸ்ஸஸையும் கூட்டிக்கிட்டு வந்து பேட்டி தந்து இருக்கலாமே...” என்று ஒருவர் கேட்டிருக்க... “மேடம் ரொம்பவே அமைதி விரும்பி... அப்படி எல்லாம் சட்டுன்னு வந்துட மாட்டாங்க...” என்றவனிடம், “நீங்க இங்கே வந்தே இரண்டு மாசம் கூட ஆகலையே சார்... அதுக்குள்ளே எப்படிக் காதல்... கல்யாணம்...?” என்று சந்தேகமும் பொறாமையுமாகச் செய்தியாளராக அமர்ந்திருந்த ஒரு நைன்டீஸ் கிட் கேள்வி எழுப்பியது.
“இங்கே பதிய இரண்டு மாசம் எல்லாம் தேவை இல்ல... இரண்டு நிமிஷம் போதும்...” எனத் தன் இதயத்தைச் சுட்டிக் காண்பித்தப்படி கூறியவன், “ஆனா அதுக்குள்ள உயிர் உள்ள வரை உயிரா நினைச்சு பார்த்துக்க முடியும்னு தோணனும், அப்படித் தோணினா யோசிக்காம உடனே முடிவேடுத்துடலாம்...” என்று கூறி முடிக்கவும், படபடவெனக் கைதட்டிய ஒரு இளம் பெண், “சான்சே இல்ல சார்... நீங்க ஒரு சிறந்த காவலன் மட்டுமில்ல.. காதலன் கூடன்னு நிருபிச்சிட்டீங்க சார், சூப்பர்...” என்றாள்.
ஒரு புன்னகையை மட்டும் அதற்குப் பதிலாகக் கொடுத்தவன், அங்கிருந்தவர்களைக் கூர்மையாகப் பார்த்தவாறே “உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா...?!” என்றான்.
“சொல்லுங்க சார்...” என ஒட்டு மொத்தமாகக் குரல் வரவும், “பத்திரிகை சுதந்திரம் என்பது என்ன...?” எனக் கேட்டு சிறு இடைவெளிவிட, ஒவ்வொருவரும் ஒரு பதிலை சொல்லிக் கொண்டே சென்றனர்.
அவர்களைக் கையமர்த்தித் தடுத்தவன், “உண்மையை ஊருக்கு சொல்வதும், மறைந்து இருக்கும் உண்மையை வெளிக் கொண்டு வருவதும் தான் பத்திரிகை சுதந்திரம்... இது எப்போ அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாக மாறி போனது...? அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது...
நான்கு பேருக்கு தெரியும் அளவுக்குப் பிரபலமாக இருப்பவர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையே இருக்கக் கூடாதா என்ன...? இன்னைக்கு நீங்க செய்தது சரின்னு உங்களுக்குத் தோணுதா...? என் வருங்கால மனைவியோடு நான் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை இப்படிப் பொதுவில் பகிரும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது... என் மனைவி அமைதி விரும்பியாக யாரோடும் அதிகமாகப் பேசி பழகாதவளாக இருந்த போதும் மன தைரியம் மிக்கவள், இதே அவள் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் என்ன செய்துக் கொண்டு இருப்பாளோ...?! உங்க டிஆர்பி, உங்க சர்குலேஷன், உங்க இன்கிரிமென்ட்னு மட்டும் யோசிக்காம கொஞ்சம் மனசாட்சியோடவும் யோசிங்க...
உங்க வீட்டை சேர்ந்தவங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வீங்க... எங்க குடும்பத்துல இருக்கறவங்க அப்படி எல்லாம் இல்லைன்னு ஸ்டாண்டர்ட் டையலாக் பேசாதீங்க... தன் குடும்பத்தில் இருக்கவங்களைத் தவிர மத்தவங்க எல்லாம் தப்பானவங்கன்னு நினைக்கறதும் பார்க்கறதும் தொழில் இல்ல அது ஒரு வியாதி... இன்னைக்கு வந்த செய்தியால் என் மனைவி அடைந்த மன உளைச்சலுக்கும் பட்ட அவமானத்துக்கும் யார் பொறுப்பு... என்னோட சேர்த்தே பேசப்பட்ட போதும் அதில் இருந்த வார்த்தைகள் அளவோடு இல்லாமல் அத்து மீறி இருந்தது சரியா...? இதனால் என் மனைவிக்குச் சுற்றி இருந்தவர்களால் ஏற்பட்ட அவமானம் எல்லாம் இப்போது உண்மை தெரிந்த பிறகு இல்லாமல் போய்டுமா என்ன...?
அந்த மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டதுதானே...? கல்யாணம் நடக்க இருந்த இன்னைக்கு அந்தச் சந்தோஷத்தை முழுசா அனுபவிக்க முடியாம அவங்க மனவலியோடு தானே இருந்து இருப்பாங்க... நம்மளை சுத்தி எத்தனையோ ப்ரச்சனைகள் நடக்குது, அதைச் சுட்டிக் காட்டி தீர்வு காண பாருங்க... வெளிச்சதுக்கு வராத எவ்வளவோ திரைமறைவு வேலைகள் நடக்குது... அதைப் பகிரங்க படுத்துங்க... அதைவிட்டு அடுத்தவங்க படுக்கையறை எட்டி பார்ப்பது தான் பத்திரிக்கை சுதந்திரம்னு நினைச்சு செயல்படாதீங்க... கத்தி முனையைவிட சக்தி வாய்ந்தது உங்க பேனா முனை... ஒரு செய்தி உங்களுக்குத் தெரிய வந்தா முதலில் அது உண்மையானு தெரிஞ்சிக்கோங்க, அப்பறம் பிரசுறீங்க... அதை ஆக்கபூர்வமா பயன்படுத்தி நமக்கும் நம்மைச் சுத்தி இருப்பவங்களுக்கும் நாட்டுக்கும் முடிஞ்ச அளவு உபயோகமா இருப்போமே...!!” என்றவனின் தெளிவான இடைவிடாத பேச்சை கேட்டவர்கள் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் அமைதி காக்க...
அங்கிருந்தவர்களில் சற்று நடுத்தர வயதில் இருந்த பெண்மணி எழுந்து, “நீங்க சொன்ன அத்தனையும் சரி தான் சார்.. இப்போ எல்லாம் வியாபார கண்ணோட்டத்தோடே பார்க்கவும் அணுகவும் படுது... அதில் தேவையில்லாமல் பாதிக்கப்படுபவர்களைப் பற்றிக் கவலைபடவெல்லாம் இங்கு யாருக்கும் நேரமும் இல்லை... பொறுமையும் இல்லை... இதில் செய்தியாளர்களை மட்டும் குறை கூறி எந்தப் பயனும் இல்லை... மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு வரும் பிரஷர் அப்படி... அதற்காக உங்களுக்கு நடந்தது சரின்னு நான் சொல்ல வரலை... ஒரு பெண்ணா உங்க மனைவியின் மனம் என்ன பாடுப்பட்டு இருக்கும்னு என்னால் புரிஞ்சிக்க முடியுது... ஒரு செய்தியாளரா இதுக்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கறேன்...” என்று கைக் கூப்பி மன்னிப்பு கேட்டார்.
“அட ஏன் மா நீ வேற... அவன் இதையே சாக்கா வெச்சு கல்யாணத்தையே முடிச்சிட்டான்... நீ என்னனா...” என மெல்லிய குரலில் புலம்பிய ஆராவமுதனை திரும்பி ‘என்ன’ என்பது போலப் பார்த்தான் சஞ்சய். அவரோ தனக்கும் சற்று முன் கேட்ட முணுமுணுப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்றே அமர்ந்திருந்தார்.
“இல்ல இல்ல... நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை... இது முழுக்க முழுக்க என் மேல் உள்ள வஞ்சத்தைத் தீர்த்துக்க நடந்த ஒரு கேவலமான செயல், என்றவன் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆதாரங்களை அவர்களிடம் கடை பரப்பினான்.
சஞ்சய் ஆந்திராவில் இருந்த போது ஒரு மிகப் பெரிய கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்திருந்தான். பல கோடி ரூபாய் பெறுமானம் உள்ள சரக்குகளோடு பிடிப்பட்டு இருந்தவர்களால் தப்பிக்கவும் முடியவில்லை சஞ்சயின் நடவடிக்கையைத் தடுக்கவும் முடியவில்லை... கடைசி நேரம் வரை எப்படியாவது இதிலிருந்து தப்பித்துவிடுவோம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர் பிடிப்பட்டவர்கள்... ஆனால் அப்படிப்பட்ட எந்த மேஜிக்கும் அங்கு நிகழவே இல்லை என்று கூறுவதை விடச் சஞ்சய் நிகழவிடவில்லை என்பதே சரி.
எத்தனையோ பேரங்கள், கெஞ்சல்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்து வந்த போதும் தூசியைத் தட்டுவது போலத் தட்டிவிட்டு சென்று விட்டான் சஞ்சய். இதில் அளவுக்கு அதிகமாகவே அவன் வேகத்தையும் கெடுபிடியையும் கையாண்டு வழக்கை முடிக்கக் காரணம் அது ஒரு மத்திய மந்திரி தன் பினாமி பெயரில் நடத்திக் கொண்டிருந்த கடத்தல் தொழில் என்பதைக் கண்டு கொண்டதால் தான்.
அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கடத்தல் தொழில் வெளிச்சத்துக்கு வந்ததில் அந்த அறகட்டளை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதில் பிடிபட்ட சரக்கே பல கோடிகளைத் தொட்டு இருக்க... அதன் பிறகும் ஏதும் செய்ய முடியாத நிலை அந்த மந்திரிக்கு... அவரால் இதை மேலிடத்து துணையோடு கையாளவும் முடியவில்லை பாவம்... அவர்தான் இப்படி ஒரு தொழில் இருப்பது தெரிந்தால் பங்கு கொடுக்க வேண்டி இருக்குமே என அதை மறைத்திருந்தாரே...!!
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரின் கோபம் மொத்தமும் இதற்குக் காரணமான சஞ்சயின் மேல் திரும்பியது. அவனைப் பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திச் செய்வது போல் அவரின் சொந்த ஊருக்கு மாற்றலாகி வந்தான் சஞ்சய்.
அவனை ஆள் வைத்து அவர் கண்காணித்த போது தான் அன்று கலவரத்தில் நேத்ராவுக்கு ஒன்று என வரும் போது அவனிடம் காணப்பட்ட துடிப்பும் பதட்டமும் அவருக்கு சஞ்சய் என்னும் திமிங்கிலத்தைப் பிடிக்க நேத்ரா தான் தூண்டில் என்று புரிய வைத்தது.
அதன் பிறகு நேத்ராவின் விடுதி அருகே நின்று கண்காணிப்பதே அவனின் முழு நேர வேலையாக மாறிப் போனது. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தான் ஊர் பேர் குறிப்பிடாமல் பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் அதில் உள்ள உண்மை தன்மையைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமலே மற்ற பத்திரிகைகளில் வருவதற்கு முன் தங்கள் பத்திரிகையில் வர வேண்டும் என்று போட்டுவிட்டார்கள்.
ஆனால் சஞ்சய்யை அழிக்க அந்த மந்திரி எடுத்த முயற்சி அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. எப்போதோ அவர் பற்றி அறிந்துக் கொண்டாலும் மேலும் அவரின் சில தகிடுதத்தங்களோடும் தக்க ஆதாரத்தோடும் வெளிக் கொண்டு வர காத்திருந்தவன் இன்றே அவற்றை வெளிபடுத்திவிட்டான்.
சஞ்சய் இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததை வைத்துத் தன்னைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்து இருக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த மந்திரி தலையில் துண்டை போட வேண்டிய நிலை இப்போது. அவனைத் தொட்டாலே சும்மா விட மாட்டான்... இதில் அவர் தொட்டது அவனின் உயிரை எனும் போது சும்மாவிட்டுவிடுவானா என்ன...?!
அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம்... எதையோ எதிர்ப்பார்த்து வந்து புதையலே கிடைத்தது போல் இருந்தது அவர்கள் நிலை...
சஞ்சய்யின் கோபம், ஆளுமை, திமிர், அதிரடி, ஆக்ஷன் என அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதனுக்கு அவ்வளவு சந்தோஷமும் பெருமையுமாக இருந்தது. ஆனாலும் தன் பதவிக்கு மதிப்பளித்து இதை எதையும் வெளிபடுத்திக் கொள்ளாமல் இறுக்கமாகவே அமர்ந்திருந்தார்.
‘பத்திரிகையில் செய்தி வந்து அரை நாளுக்குள்ளேயே அதைச் செய்தவர் யார் எனக் கண்டறிவதில் தொடங்கி அதற்கு மூலம் யார் என்பது வரை கண்டறிந்து அவர்களை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான தண்டனையையும் ஊர்ஜிதப்படுத்தி விட்டு அதோடு சேர்த்து தான் விரும்பிய பெண்ணோடு திருமணத்தையும் முடித்துக் கொண்டானே...!!’ என்று அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவரின் பார்வை அருகில் இருந்த புகைப்படத்தின் மேல் பதிய...
தன் மகனிடம் சென்றது அவரின் நினைவுகள்... அவனுமே யாரையோ விரும்புகிறான்... கூடிய விரைவில் அவனோடு பேசி திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்திருந்தவருக்குத் தன் ஒரே மகனின் திருமணத்தை எண்ணி பல கனவுகள் இருந்தது.
இதே நினைவுகளோடே வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தவருக்கு அவரின் எண்ணங்களின் நாயகனே அழைத்தான். மகிழ்வோடு எடுத்து நலம் விசாரித்தவர், சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு சஞ்சயின் திருமணத்தைப் பற்றிச் சந்தோஷத்தோடு பகிர்ந்துக் கொண்டார்.
அதைக் கேட்டு அந்தப் பக்கம் இன்பமாக அதிர்ந்தவன், “என்னப்பா திடீர்னு...? என்கிட்ட கூடச் சொல்லலை...” என்று சந்தோஷமாகவே கேட்டான்.
“லவ் மேரேஜ் டா... சடனா முடிவாகிடுச்சு...” என்று பதில் அளித்தவர் நடந்தது அனைத்தையும் கூறி எங்கோ இருக்கும் மகனை கவலையில் ஆழ்த்த விரும்பாமல், அவன் மனம் ஏற்றுக் கொள்ளமாறு பதிலளித்தார்.
“லவ்வா..?! சஞ்சுவா பா...?” என்று நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்டவனுக்கு ஆராவமுதனின் பதில் ஆச்சர்யத்தையே கொடுத்தது. இதுவரை சஞ்சய் அவனின் காதலை பற்றியோ நேத்ராவை பற்றியோ ஒரு வார்த்தை கூட ராமிடம் கூறியது இல்லை.
இரண்டு நாட்கள் முன்னதாகப் பேசிய போது கூடத் தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே என்று யோசனை செல்ல... திருமணம் வரை வந்து இருக்கிறான் என்றால் காதலில் தீவிரமாகவே இருந்து இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவன் தன்னிடம் ஏன் மறைத்தான் என்றே யோசித்துக் கொண்டிருந்தான்.
“டேய் தம்பி... உன் கூட்டாளி கூடக் கல்யாணம் செஞ்சிகிட்டான் டா... நீ எப்போ டா ஒகே சொல்ல போறே...? காலையில் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து நான் தான் எல்லாம் செஞ்சேன், அப்போ எனக்கு உன் ஞாபகம் தான் கண்ணா... சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு பா...” என்றவரின் குரலில் இருந்த பாச தவிப்பில் பேச்சிழந்து நின்றான் ராம்.
அவருக்கு என்ன பதில் அளிப்பது என்று உண்மையாகவே அவனுக்குத் தெரியவில்லை... அவனவளின் காதலுக்காகக் காலமெல்லாம் காத்திருக்க அவன் தயார் தான்... ஆனால் அதையே தன்னைச் சார்ந்தவர்களிடமிருந்தும் எதிர்பார்க்க முடியுமா...?! ஆனால் அவளைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட அவனால் தன் அருகில் வைத்து பார்க்க முடியாதே...!!
இதெல்லாம் எப்படி இவரிடம் பேசி புரிய வைக்க முடியும், ஒரு தந்தையாக அவரின் தவிப்பும் நியமானது தான்... தனக்காகக் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுமாறு சொன்னால் நிச்சயம் காத்திருப்பார் தான்... ஆனால் அது எவ்வளவு நாள் என்று தனக்கே தெரியாத போது அவரிடம் என்ன சொல்ல முடியும்..!! அவள் மனதில் தனக்கென ஒரு இடம் இருப்பதை ராம் தெள்ள தெளிவாக அறிந்தே இருந்தான்... அதை அவள் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறாள் என்பது முதற்கொண்டு அறிந்து இருந்ததனாலேயே அவளை வற்ப்புறுத்தவோ தொந்தரவு செய்யவோ இல்லாமல் அவளுக்காகக் காத்திருக்கிறான்.
மனதில் ஆயிரம் கேள்விகளும் குழப்பமும் சூழ பதிலளிக்காமல் இருந்தவனின் அமைதியை சரியாகப் புரிந்துக் கொண்டவர், நொடியில் பேச்சை மாற்றி, சஞ்ஜயின் திருமணத்தைப் பற்றிக் கேலி பேசி மகனையும் அதற்குள் இழுத்தார். ஒரு நல்ல தந்தையாக அவரின் கணக்குத் தப்பாகாமல் நண்பனின் திருமணத்தைப் பற்றி ஆர்வமாகவே பேச தொடங்கினான் ராம்.
“எல்லாத்தையும் அதிரடியா செய்றவன் அவன் கல்யாணத்தையும் அப்படியே முடிச்சிட்டான் பாரேன்... ஆனா சும்மா சொல்லக் கூடாது இரண்டு பேரு ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகு டா கண்ணா...” என்றவர், “ஒரு நிமிஷம் நீயே பாரேன்...” என அவர்களின் திருமணத்தின் போது தான் எடுத்திருந்த புகைப்படத்தை ராமுக்கு அனுப்பி வைத்தார்.
அதை ராம் பார்த்ததற்கான அறிகுறி தெரிந்த அடுத்த நிமிடம் அவனின் அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது... அவன் இருக்கும் இடத்தில் அடிக்கடி தொடர்புகள் தகராறு செய்யுமென்பதால் ஆராவமுதன் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... ‘இது வேற’ எனச் சலிப்போடு அலைபேசியை அணைத்திருந்தார்.
இங்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த சஞ்சயின் மனம் காலையில் நடந்த விஷயங்களைத் தான் அசைப்போட்டுக் கொண்டிருந்தது. முதலில் வந்து பேசிய போதே நேத்ராவை சம்மதிக்க வைக்க அவன் எவ்வளவோ இறங்கி போய்ப் பேசியும் அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை...
ஆரம்பத்தில் அவன் மனதில் இருந்ததெல்லாம் அந்தச் செய்தியை பார்த்து நேத்ராவின் மனம் என்ன பாடுப்பட்டதோ என்பதே...?! அதற்குத் தானே காரணம் ஆகிவிட்டதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எனவே அவளைச் சமாதனப்படுத்தும் விதமாகப் பேச தொடங்கியவன்,
“இது இன்னையோடு முடிய போற விஷயம் இல்ல நீரு... உன்னை ரொம்பவே மனம் நோக பேசுவாங்க... ஒவ்வொரு நாளும் உன்னை இதையே பேசி நோகடிப்பாங்க... அப்படியெல்லாம் உனக்கு நடக்க நான் விட மாட்டேன்... நம்ம கல்யாணம் இது எல்லாத்துக்கும் ஒரு முற்று புள்ளியா மாறும்...” என்று அமைதியாகவே அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
‘இது போல உங்க கூடச் சேர்த்து செய்தி வரவங்களை எல்லாம் கல்யாணம் செஞ்சிகிட்டே போவீங்களா...?!” என்று நக்கலாகக் கேட்டவளை கண்டு ஒரு நொடி திகைத்து அப்படியே நின்றுவிட்டான் சஞ்சய். ‘இது இவள் என்பதால் தானே இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்... வேறு யாரோடாவது இப்படி நெருங்கி இதுவரை பழகி இருக்கிறானா... இல்லை வம்பிழுத்து இருக்கிறானா...? இவளாக இல்லையென்றால் இதை வேறு மாதிரி தானே டீல் செய்திருப்பான்...’ என்ற எண்ணம் மனதில் ஓட...
“உனக்கு நிலைமையின் விபரீதம் கொஞ்சமும் புரியலை...” என்று தொடங்கியவனை இடைமறித்தவள், “நல்லா புரியுது... ஆனா அதுக்கு இந்தக் கல்யாணம் தான் ஒரே தீர்வுன்னு நான் ஒத்துக்க மாட்டேன்... நாளைக்கே இன்னொருத்தனோடு இப்படிச் சேர்த்து வெச்சு எழுதினா அவனையுமா நான் கல்யாணம் செஞ்சிக்க முடியும்...” என்று எகத்தாளமாகக் கேட்டப்படியே இகழ்ச்சியாக இதழ் சுழித்தாள்.
“விதண்டாவாதம் பேசாதே நீரு... உங்க அப்பா அம்மா இருந்து இருந்தா இப்போ இப்படி ஒரு முடிவை நீ எடுக்க விட்டு இருப்பாங்களா...? அவங்க பெயர் முதற்கொண்டு இதில் நீ கவனிக்கணும்...” என்று வேண்டுமென்றே அவளின் குடும்ப மரியாதையை இதில் இழுத்து நேத்ராவை சற்று குழப்பி அதில் தன் திட்டத்தைச் செயல்ப்படுத்த எண்ணினான்.
சஞ்சயின் திட்டம் என்னவோ கல்யாணத்தை முடிப்பதாகவே இருந்தாலும் அதில் அவளின் நலனே அவனுக்குப் பிரதானமாக இருந்தது. ஆனால் இவன் நினைத்ததற்கு நேர்மாறாகப் பேச தொடங்கினாள் நேத்ரா.
“உனக்கு என்ன தெரியும் அவங்களைப் பற்றி... இப்போ இருந்து இருந்தா நிச்சயம் நான் எடுத்த முடிவு தான் சரின்னு சொல்லி இருப்பாங்க... நான் செய்யாத தப்புக்கு யாரோ எதுவோ பேசுவாங்கன்னு நான் ஏன் பயப்படணும்... இந்தத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எனக்குக் கொடுத்ததே அவங்க தான்...” என்று அசால்ட்டாகக் கூறியவள், இறங்க முயலவும் தான் இனி அதிரடி தான் வேலைக்கு ஆகும் என்று புரிந்து இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுத்துச் சென்றிருந்தான்.
தன் அலைபேசியில் வந்த சஞ்சயின் மெசேஜை கண்டு நேத்ரா திகைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. சற்றும் யோசிக்காமல் உடனே அவளின் கரங்கள் அதை எடுத்திருந்தது.
“என்ன மேடம் பார்த்தீங்களா...? எப்படி...? எப்படி...? எந்தத் தப்பும் செய்யாத நான் ஏன் பயப்படணும்... செம டையலாக்... இதுக்கெல்லாம் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம், என் மாமனார் மாமியாரை சொல்லணும்... இந்தத் தைரியம் துணிச்சல் எல்லாம் பார்க்கும் போது போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு இது கூட இல்லைனா எப்படினு தோணுச்சு... உன்னை அப்படியே அள்ளிக் கொஞ்சணும் போல இருந்தது குல்பி... ஆனா அதெல்லாம் வெளியே இருக்கவங்ககிட்ட காட்டினா ஒகே... நீ என்கிட்டேயே காட்டக் கூடாது இல்ல... இந்தக் கல்யாணம் இன்னைக்கு நடந்தே ஆகணும் அதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணா போவேனு காட்ட ஒரு சாம்பிள் தான் இது... உனக்கு வேணா இது சாதரணமா கடந்து போக முடிஞ்ச ஒண்ணா இருக்கலாம்... ஆனா எனக்கு இது என் மனைவியோட கௌரவம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்... அவ்ளோ ஈசியா என்னால் விட்டு கொடுக்க முடியாது...” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் அனுப்பி இருந்தது எல்லாம் இது தான்.
காலையில் பத்திரிக்கையில் வந்திருந்த புகைப்படங்களை அனுப்பி அதன் கீழே, “இப்படி எல்லாம் என் கூடப் பழகிட்டு காதலிச்சிட்டு இப்போ கல்யாணம் செஞ்சுக்க மறுக்கும் என் காதலியை எப்படியாவது என் கூடச் சேர்த்து வைங்க... என் காதல் உண்மை, அவ இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்ல...” என்று ஒன்பது மணிக்கு நீ என் கூட வரலைனா ஒன்பதரை மணிக்கு எல்லா டிவி சேனலுக்கும் பேட்டி கொடுப்பேன்... இப்படித் தான் அனுப்பி இருந்தான்.
அதில் தான், இதை எதிர்ப்பார்க்காதவள் அதிர்ந்து அலைபேசியை உடனே எடுத்திருந்தாள். இப்போது சஞ்சய் கூறிய அனைத்தையும் கேட்டவள் பதில் கொடுப்பதற்குள், அதற்குக் கொஞ்சமும் சந்தர்ப்பம் கொடுக்காமல் மீண்டும் அவனே, “இல்லை நீ என்ன செஞ்சாலும் எனக்குக் கவலை இல்லைன்னு மேடம் சொன்னீங்கனா...” என்று சற்று இடைவெளிவிட்டு அவளின் ரத்த அழுத்தத்தைக் கொஞ்சம் எகிற செய்தவன், “நீங்க ஒரு டீச்சர்னும் பாடம் எடுக்கறது பத்தாம் கிளாசுக்குனும் நியாபகம் வெச்சுக்கோங்க... இரண்டும் கேட்டான் வயதில் இருக்கும் பிள்ளைங்க எது சரி எது தப்புன்னு புரியாத ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருப்பாங்க... இப்போவே காலையில் வந்த செய்திய வெச்சு எல்லாரும் பேசறதை கேட்டுக் கொஞ்சமா குழம்பி போய் இருப்பாங்க... அடுத்து என் செய்தியும் வந்தா உன்னை எப்படிப் பார்ப்பாங்க தெரியுமா...?! அதையும் விட இப்போதான் பதின் பருவத்தில் இருக்கும் அவங்க உன்னையே ஒரு முன் உதாரணமா எடுத்துகிட்டு நடக்கத் துவங்கினா...?!” என்று வேண்டும் என்றே நேத்ரா இந்தத் தொழிலையும் அந்தப் பிள்ளைகளையும் எவ்வளவு நேசிக்கிறாள் எனத் தெரிந்தே ஏற்ற இறக்கத்தோடான குரலில் சஞ்சய் அவளின் மன உறுதியை குலைக்க வேண்டும் என்றே பேசிக் கொண்டு சென்றான்.
அதில் நிஜமாகவே நேத்ரா ஆடி தான் போய் விட்டாள். இந்தக் கடைசி அஸ்திரத்தை அவன் எய்யவில்லை என்றால் எப்படியோ... ஆனால் இப்போது தன்னால் பிள்ளைகளின் வாழ்க்கை தவறான பாதையில் சென்றுவிடுமோ என்ற பயமே அவளை வார்த்தைகள் இல்லாமல் திணற செய்தது.
அவளின் இந்த நிலையைச் சரியாக அந்தப் பக்கம் இருந்தவன் அறிந்துக் கொண்டதன் அடையாளமாக அவன் முகத்தில் ஒரு மென்னகை தவழ்ந்தது. “இதெல்லாம் நடக்கக் கூடாதுனா என்னோடு நீ வரணும்...” என்று கட்டளையிடும் குரலில் கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அவன் வைத்துவிட்டான்.
அதே நேரம் தயாராகி அருகில் வந்த வித்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல் கீழ் இறங்கி சென்றவளின் அருகே மீண்டும் அதே கார் வந்து நிற்க... ஒரு தயக்கத்தோடான பார்வையை வித்யாவை நோக்கி செலுத்திய நேத்ரா அமைதியாகக் கதவை திறந்து ஏறி அமர்ந்திருந்தாள். இதில் மொத்தமாகக் குழம்பி நின்றது வித்யா தான்.
கதவை திறந்த சில நொடிகளில் உள்ளே இருப்பது சஞ்சய் என்று பார்த்திருந்தவளுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தான் புரியவில்லை... அவள் அதிர்வோடு விழித்துக் கொண்டிருக்கும் போதே கார் சென்றுவிட்டு இருந்தது.
அதன் பின் சஞ்சய் தான் ஏற்பாடு செய்திருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று அவன் தயாராக வைத்திருந்த பையைக் கொடுத்து அங்கிருந்த அறையில் சென்று மாற்றிக் கொண்டு வருமாறு கூறியவனின் வார்த்தைகளுக்குக் கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் செய்துக் கொண்டு இருந்தாள் நேத்ரா.
அங்கு ஆராவமுதன் ஆசிர்வாதத்தோடு கடவுளின் முன் மாங்கல்யம் அணிவித்தவன், அடுத்து அவளைக் கையோடு அழைத்து சென்று அதை முறைப்படி ரிஜிஸ்டரும் செய்திருந்தான்...
நேத்ராவின் பள்ளியில் மதிய உணவு நேர இடைவெளியில் எதேச்சையாகச் சஞ்சயின் பேட்டியை கண்டவரின் வழி அனைவருக்கும் செய்தி பரவ, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதைப் பார்க்க தொடங்கினர். வழக்கம் போல வித்யாவின் மூலமே இதுவும் நேத்ராவுக்குத் தாமதமாகவே தெரிய வந்தது.
அவளுக்கு நேர்ந்த அத்தனை அவபெயரையும் ஒன்றுமில்லை என்று ஆதாரத்தோடு நிரூபித்துக் கொண்டிருந்தான் அங்கு அவளின் கணவன். ஓர் உணர்வில்லா பார்வையோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
அதன் பின் ஒவ்வொருவராகத் தேடி வந்து நேத்ராவை வாழ்த்திவிட்டு செல்ல... அவர்கள் காலை இவள் இரண்டு மணி நேர பிர்மிஷனுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த போது எப்படித் தன் முகத்திற்கு நேராகப் பேசினார்கள் என்ற நினைவோடு அவர்களின் இந்த வாழ்த்தையும் ஒரு சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டிருந்தாள் நேத்ரா.
நேத்ராவின் திருமணம் முடிந்திருந்ததைப் பற்றி அறியாதவர்கள் எல்லாம் தாங்கள் அப்படிப் பேசவும் கூட இவள் அவர்களிடம் எதையும் வாயை திறந்து கூறாததே காரணம் என்பது போலச் சொல்லிவிட்டு செல்ல... அதையும் அமைதியோடே பார்த்திருந்தாள்.
வித்யாவுக்குத் தான் தலையும் புரியவில்லை... காலும் புரியவில்லை... இது எல்லாம் எப்படிச் சாத்தியம் என்ற எண்ணம் செல்லும் போதே காலையில் அவளின் அலைபேசியில் பார்த்த ‘புருஷ் காலிங்’ நினைவுக்கு வர, ‘கள்ளி நம்மகிட்டேயே மறைச்சு இருக்கா பாரேன்...’ என்று எண்ணிக் கொண்டாள்... பாவம் அவளுக்குத் தெரியாதே, இது எல்லாம் நேத்ரா அறியாமல் அந்தப் புருஷ் நேற்று இரவு அவளின் அலைபேசியை பறித்து வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் செய்திருந்த வேலை என்பது...!!