கமிஷனர் அலுவலகத்திற்குள் புழுதியை கிளப்பிக் கொண்டு வேகமாக நுழைந்து வட்டமடித்து நின்றது சஞ்சயின் ஜீப். அந்த வளாகத்திற்குள் வாகனம் நுழைந்த வேகத்திற்கும் அது நின்ற ஸ்டைலிலும் அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையும் இங்கேயே தான் இருந்தது. இத்தனைக்கும் சஞ்சய் அமர்ந்து இருந்ததென்னவோ ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் தான்.
மெல்ல திரும்பி ஓட்டுனரை ஓர் ஒற்றைப் புருவ தூக்கலோடு சஞ்சய் பார்க்கவும், “அதென்னவோ சார்... நீங்க பக்கத்துல உட்கார்ந்தாலே கையில அப்படியே வண்டி பறக்குது சார்...” என்று தன் அத்தனை பற்களும் தெரிய இளித்துக் கொண்டே கூறிய ராஜேந்திரன் பெயரில் மட்டுமல்ல உருவத்திலும் கூட மொட்டை ராஜேந்திரன் போலத் தான் இருந்தார்.
அதில் ஒரு புன்னகையை அவரை நோக்கி வீசியவன், தன் தலையை அசைத்து சிரித்தபடியே கீழே இறங்கி நின்றான். இன்று சஞ்சய் முழுமையான காக்கி சீருடையில் இருந்தான். கண்களில் கருப்பு கண்ணாடி சகிதம் தன் வேக நடையில் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
ஒரு நிமிடமும் யோசிக்காமல் தான் கலவரத்தை அடக்கக் கொடுத்திருந்த உத்தரவு, அடுத்துத் தன்னை இங்குத் தான் கொண்டு வந்து நிறுத்தும் என அவனுக்கு நன்றாகவே தெரியும்... இருந்தும் இதைப் பற்றி மட்டுமல்ல வேறு எதைப் பற்றியுமே எப்போதும் கவலைப்படாமல் தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்வதே சஞ்சயின் வழக்கம்.
அப்படி இப்போதும் செய்ததின் பலன் தான் இந்த விசாரணை கமிஷன். சரியான நேரத்திற்கு வந்தவனை அங்கிருந்த காவலர் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே அனுமதிக்க... உள்ளே நுழைந்து அவரை மரியாதை நிமித்தமாக வணங்கியவனை முறைத்துக் கொண்டிருந்தார் ஆராவமுதன்.
“என்ன செஞ்சு இருக்கீங்க மிஸ்டர் ஆத்ரேயன்...” என்ற அவரின் கோபக் குரலுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் “இன்னைக்கு லேட்டா எழுந்ததால் எதுவும் செய்யலை அங்கிள்...” என்றவாறே எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சஞ்சய்.
“அதுக்காகச் சாப்பிடாமலே இருப்பீயா மேன்...” என்று கடிந்துக் கொண்டவர், “இதுக்குத் தான் கேட்டேன்..” எனச் சொல்லிக் கொண்டே ஹாட் பேக்கில் இருந்து ஒரு சிறிய பாக்ஸை எடுத்து சஞ்சயின் முன்னால் வைத்தார்.
உடனே அதை எடுத்து சாப்பிட தொடங்கிய சஞ்சய்யை கனிவோடு பார்த்தவர், “இவ்வளவு பசியோடவா சாப்பிடாம இருக்கே...” எனக் கனிவோடு கேட்டார்.
“இங்கே தானே அங்கிள் வரேன்... உங்க கையால் சாப்பிட தான் வெளிய கூடச் சாப்பிடலை...” என்று பதில் மட்டும் அளித்தவனின் முழுக் கவனமும் உணவில் தான் இருந்தது.
“இல்லைனா மட்டும் நீ வெளியே சாப்பிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பே...” என்று கடிந்துக் கொண்டவருக்கு நன்றாகத் தெரியும் சஞ்சயின் குணம். மிகவும் தவிர்க்க முடியாத சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் வெளி உணவை அறவே தவிர்ப்பவன் அவன்.
சஞ்சய் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர், “ஏன் டா... இங்கே வந்ததும் வராததுமா இப்படி...?” எனவும், “இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்த்துகிட்டா இருக்க முடியும்... போங்க அங்கிள்...” என்றான்.
“அதானே உனக்கு இதெல்லாம் புதுசா என்ன...?” என்று அவரும் ஆர்பாட்டமாகச் சிரித்தார். அதன் பிறகு வந்த இருபது நிமிடமும் இருவரும் அரசியல் தொடங்கி விளையாட்டு செய்தி வரை அலசினர்.
“இப்போ கிளம்பினா சரியா இருக்கும் கிளம்பு...” என்று அவர் கூறவும், புன்னகையோடு எழுந்தவன், “இப்படிப் போட்டுக் காய்ச்சி எடுத்துட்டீங்களே விசாரனைங்கற பேருல...” என்று கண் சிமிட்டிவிட்டு நகர, “போடா படவா...” என்று போலியாக அவர் லத்தியை ஓங்கினார்.
அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் முகத்தில் உள்ளே அதுவரை இருந்த குறும்பு தனமும் புன்னகையும் எங்கே போனது என்று தெரியாத அளவிற்கான தீவிரம் வந்து அமர்ந்திருந்தது. அதே போல உள்ளே இருந்தவரின் முகமும் விறைப்பும் கடுப்புமாக மாறி இருந்தது.
அதே வேகத்தில் வந்து ஜீப்பில் ஏறியவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்த்தாரே தவிர, வேறு எதுவும் கேட்காமல் வண்டியை எடுத்தார் ராஜேந்திரன். வண்டி நகரத் தொடங்கிய நொடி சஞ்சயின் அலைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்ததற்கான ஓசை கேட்கவும், அதை எடுத்து பார்த்தவனின் முகத்தில் ஒரு ரகசிய முறுவல் வந்து போனது.
“சூப்பர் ஆக்டிங் ஏசிபி சார்...” என்று ஆராவமுதன் அனுப்பி இருக்க...
“நீங்களும் தான் கமிஷனர் சார்...” என்று அவருக்குப் புன்னகையை மறைத்த முகத்தோடு பதில் அனுப்பி இருந்தான் சஞ்சய். இப்படியே இவர்களின் இந்த அன்பும் அக்கறையும் நிலைக்குமா...?! நீடிக்குமா...?! என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சஞ்சய் அருகில் அமர்ந்து இருந்த ராஜேந்திரன் இப்போது இவர் சிரித்தாரா...?! இல்லை எல்லாம் என் பிரம்மையா...?! என்று திரும்பி திரும்பி பார்த்தாவாறே வாகனத்தைச் செலுத்திக் கொண்டு இருந்தார்.
அன்று மாலை சஞ்சய் வீடு திரும்பிக் கொண்டு இருந்தான். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் வேலையே இல்லையென்றாலும் கூட நேத்ராவின் விடுதி இருக்கும் பகுதியை சுற்றிக் கொண்டே வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தான் சஞ்சய்.
எப்போதாவது அவளைக் காண சந்தர்ப்பம் கிடைக்காதா...!? என்ற அவனின் ஆசையே அதில் மறைந்து இருந்தது. அவனின் ஆசைக்கு ஏற்றாற்போல் நேத்ரா விடுதிக்கு சில வீடுகளுக்கு முன் சென்றுக் கொண்டிருப்பதைக் கண்டவன் தன் கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பிப் பார்க்க... மாலை ஆறே முக்கால் ஆகி இருந்தது.
அவள் எங்குச் சென்றுவிட்டு வருகிறாள் எனத் தெரிந்து இருந்தவன், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளைக் கண்டதில் உற்சாகி, வேகமாகத் தன் பிளாக் ஸ்டோனை விரட்டிக் கொண்டு சென்று அவளின் வழியை மறிப்பது போல நிறுத்தினான்.
காலை முதல் இருந்த தொடர் வேலைகளால் கலைத்து போய் நடந்துக் கொண்டு இருந்தவள், இதை எதிர்ப்பாராமல் அதிர்ந்து பயத்தில் இரண்டு அடி பின்னுக்கு நகர்ந்து நின்றவள் அவனை முறைக்கத் தொடங்கினாள்.
“உனக்கு வேற ஸ்கூலே கிடைக்கலையா குல்பி... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேற ஸ்கூல் பார்த்துக்கோ... இனி இங்கே வேணாம்...” என்று ஏதோ அது தான் முக்கியம் போலப் பேசிக் கொண்டு சென்றவனைக் கண்டவளுக்கு அவ்வளவு எரிச்சலாக வந்தது.
‘இப்போ இந்த ஸ்கூலுக்கு என்ன குறைச்சல்..’ என்று எண்ணியவள்... எதுவும் பேசாமல் நகர முயல, வண்டியில் அமர்ந்திருந்தவன் அதற்கு வாய்ப்பளிக்காமல் இறங்கி வழி விடாமல் நின்றான். ஒரு பக்கம் அவன் பிளாக் ஸ்டோன் மற்றொரு பக்கம் இவன் என்று நின்றிருக்க நேத்ராவுக்குக் கொஞ்சமும் வழி இல்லாமல் போனது.
“உனக்குப் பல முறை சொல்லி இருக்கேன்... நான் பேசும் போது பதில் வரணும், இப்படிப் பாதியில் எல்லாம் போகக் கூடாது...” என்றவனின் முகத்தின் தீவிரமே அவனின் மனநிலையை நேத்ராவுக்குத் தெளிவாகப் புரிய வைத்தது.
“எங்கே வேலை செய்யணும்னு நான் தான் முடிவு எடுக்கணும்...” என்று முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு மெல்லிய குரலில் பதிலளித்தவளை தீர்க்கமாகப் பார்த்தவன், “உனக்கு நான் நல்லதுக்குத் தான் சொல்லுவேன் நீரு...” என்று உறுதியான குரலில் கூறினான்.
அதில் மேலும் சலிப்படைந்தவள், “யாரு சார் நீங்க... எனக்கு எதுக்கு நல்லது செய்யணும்... இத்தனை வருஷம் நீங்களா என்னைப் பார்த்துக்கிட்டீங்க, என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்...” என்று சற்று வேகத்தோடு பதிலளித்தாள்.
“அது மாமா உன் வாழ்க்கையில் வரதுக்கு முன்னே செல்லம்... இனி உன்னைப் பார்த்துக்க மாமா இருக்கேன் பேபி...” என்றவனின் குரலில் அத்தனை நேசம் வழிந்தது.
இது அவளை மேலும் எரிச்சலடைய செய்ய... “உங்களுக்கும் எனக்கும் என்ன சார் சம்பந்தம்... எதுக்கு என்னையே இப்படிச் சுத்தி சுத்தி வந்து தினம் தொல்லை செய்யறீங்க... பிளீஸ் என்னைத் தொந்தரவு செய்யாதீங்க...” என்று இத்தனை நாளாக அவள் அனுபவித்த வேதனைகளை எல்லாம் வார்த்தைகளில் கொண்டு வந்து மன்றாடும் குரலில் கேட்டாள் நேத்ரா.
“என்ன செய்யறது குல்பி... எப்போ இந்தக் கூகுள் மேப்கிட்ட அழகான பொண்ணு இருக்க இடத்துக்கு வழி கேட்டாலும் அது நேரா கொண்டு வந்து உன்கிட்ட விட்டுடுது... நான் என்ன செய்ய, தப்பு என் மேல இல்ல பா... கூகுள் மேப்கிட்ட தான்...வேணும்னா சுந்தர்பிச்சை மேலே கேஸ் போடுவோமா...!!” என்று முகத்தைச் சீரியஸாகவும் அதற்கு நேர்மாறான குறும்பு கூத்தாடும் குரலிலும் பதிலளித்தான் சஞ்சய்.
அதில் உன்னையெல்லாம் திருத்தவே முடியாது என்பது போல அவனைப் பாத்தவள், மீண்டும் நகர முயல... “அப்பறம் எப்போ நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு நீ இன்னும் சொல்லவே இல்லையே குல்பி...” என்று மீண்டும் வழிவிடாமல் நின்றவாறே கேட்டவனை இரண்டுக்கும் சேர்த்து முறைத்தவள், “ச்சீ.. போடா..” என்று வெறுப்போடும் எரிச்சலோடும் மொழிந்து விட்டு சஞ்சய்யை சுற்றிக் கொண்டு நடக்க முயன்றவளின் கையைப் பற்றித் தடுத்து ஒரு சுழற்று சுழற்றி அருகில் இருந்த மரத்தில் சாய்த்தவன்,
“என்ன சொன்னே டா வா...?” என்று கேட்டவனின் கண்கள் கனலை கக்கியது. சஞ்சயின் இந்த அதிரடியில் அதிர்ந்து விழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்போதே தான் கூறிய வார்த்தை புரிய... முன்பே மிரட்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் மேலும் பயத்தோடு அந்த மரத்திலேயே ஒன்றிக் கொண்டாள்.
“நம்ம கல்யாணத்துக்கு ஒகே சொன்னதுக்குத் தாங்க்ஸ் டி என் செல்ல பொண்டாட்டி...” என்று சற்று முன் இருந்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குரலில் இதழ்கிடையில் தவழும் புன்னகையோடு கூறியபடியே அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்றவனை அவள் விளங்கா பாவனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் நிலையைச் சரியாக உணர்ந்துக் கொண்டவன், “இவ்வளவு உரிமையா டா போட்டு கூப்பிடறேன்னா என்னைப் புருஷனா ஏத்துகிட்டதாலே தானே...?!” என்று ஒரு கண் சிமிட்டலோடு அவளுக்குப் புரிய வைக்க... அதுவரை இருந்த பயம் விடைபெற்றுச் சென்றிருக்க... ஒரு முகச் சுழிப்போடு “அதெல்லாம் ஒண்ணுமில்லை...” என்றிருந்தாள் நேத்ரா.
“ஆஹான்...” என்று ஆச்சர்யப்படும் குரலில் கேட்டவன், “என்னைப் போல வேற யாரையாவது இவ்வளவு உரிமையா டா போட்டு பேசி இருக்கீயா பேபி...” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தவும், யோசித்துப் பார்த்தவளுக்குப் பாவம் இல்லை என்பதே விடையாகக் கிடைத்தது.
“இப்போ புரிஞ்சதா குல்பி...” என்று அவளின் முகப் பாவனையிலேயே பதிலை அறிந்துக் கொண்டவன், மேலும் அவளின் முகத்தை நோக்கி குனிந்து கிசுகிசுப்பான குரலில் கூறினான். அதில் எழுந்த படபடப்போடு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சட்டென சஞ்சயின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டு ஓடிவிட்டாள் நேத்ரா.
தன்னை விலக்கி விட்டு ஒடுபவளை தடுக்க நினைக்காமல் நின்ற இடத்திலேயே நின்றவாறே சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தவனின் சிரிப்பொலி நேத்ராவை துரத்தியது.
***********
ஒருவழியாகத் தன் இருப்பிடம் திரும்பிய ராம், முதலில் செய்தது தன்னவளிடம் பேசுவது தான்... அவள் வேலைகளை முடித்துத் தனிமையில் இருக்கும் நேரத்திற்காகக் காத்திருந்து ஆவலோடு பேசியவனுக்கு அவளின் குரல் ஏதோ சரியில்லாதது போலவும் எதையோ தன்னிடம் மறைக்க முயல்வது போலவும் தோன்ற...
எத்தனையோ முறை எப்படி எப்படியோ விசாரித்துப் பார்த்தவனுக்கு ஒன்றுமில்லை என்ற பதிலே கிடைத்தது. அவளோடு பேச கிடைக்கும் கொஞ்சம் நேரத்தையும் கெடுத்துக் கொள்ள மனம் இல்லாமல் அவளின் நலன் முதற்கொண்டு விசாரித்து விட்டு வைத்தவனுக்குக் கொஞ்சமும் தெரிய வாய்ப்பில்லை பாவம் அன்றே சற்று அழுத்தி கேட்டு இருந்து இருக்கலாம் என்று பின்னால் வருந்த போவது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் நேத்ராவும் வித்யாவும். வித்யா கணித ஆசிரியை மற்றும் நான்காம் வகுப்புக்கு வகுப்பு ஆசிரியை... ஏதோ தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை வித்யாசமாகத் திரும்பி திரும்பி பார்த்தவாறே பயணித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
வெகு நேரமாக அவள் அப்படியே இருக்கவும், வழக்கமாகத் தனக்குள்ளேயே புலம்பிக் கொள்ளும் ஆள் தான் என்றாலும் இன்று அவளின் புலம்பலின் அளவு அதிகமாக இருப்பதையும் முடிவில்லாமல் நீண்டுக் கொண்டே செல்வதையும் கண்டு என்னவென்று நேத்ரா விசாரிக்க... அதற்காகவே காத்திருந்தார் போல் அனைத்தையும் கூற தொடங்கிவிட்டாள் வித்யா.
மாலை பள்ளி முடிய இருந்த நேரம் தனக்கு ஒரு சந்தேகம் என்று அவளிடம் வந்து நின்றான் அவளின் வகுப்பு மாணவன் பிரவீன். ஒருவேளை இன்று கொடுத்த டெஸ்ட் மார்க்கிலோ என்று தோன்றவே என்னவென்று அக்கறையாக வித்யாவும் விசாரித்தாள்.
“இல்ல மிஸ் நம்ம ரவி இருக்கான் இல்ல மிஸ் அவன் டெஸ்டில் பெயில் ஆகிட்டான்... வீட்டில் தெரிஞ்சா திட்டுவாங்கன்னு அழுவறான்...” என்று கூறவும், “இப்போ அழுது என்ன செய்யறது பிரவீன்... படிக்க வேண்டிய நேரத்தில் ஒழுங்கா படித்து இருக்கணும்...” என்று வித்யா அவனுக்குப் புரிய வைக்க முயன்றவள், “ஆமா நீ எவ்வளவு மார்க்...” என்றாள்.
“நான் தேர்ட்டி பை மிஸ்...” எனப் பெருமையாகக் கூறியவனை சரியா பாஸ் மார்க் தான் எடுத்து இருக்கீயா என்பது போலப் பார்த்தவள், “சரி போய் உட்கார்...” என்று கூற, “மிஸ் ஒரு டவுட்” என்றிருந்தான் அவன்.
“என்ன..?” என்றவளுக்கு “இல்ல மிஸ்... அவன் வெறும் சிக்ஸ் மார்க் தான் எடுத்து இருக்கான்... அதனால் அவங்க அப்பா அடிப்பாருன்னு பயந்து அழுகிறான்... இந்த வீக் எண்டு வேற பிக்னிக் போறாங்களாம்... இந்த மார்க் பார்த்தா கூட்டிகிட்டு போக மாட்டாருன்னு பயப்படறான்...” என்றும் சொல்லிக் கொண்டே போக... அதுக்கு நான் என்ன செய்யறது என்பது போலக் குழப்பமாகப் பார்த்திருந்தாள் வித்யா.
“அதான் நான் ஒரு ஐடியா கொடுத்தேன் மிஸ்... நீ எடுத்து இருக்கும் மார்க் சிக்ஸ் தானே... அதுக்குப் பக்கத்துல இன்னொரு சிக்ஸ் போட்டு சிக்ஸ்டி சிக்ஸ் ஆக்கிடு ப்ராப்ளம் சால்வ்ட்னு சொன்னேன்...” என்றவனை அடபாவி என்பது போல அவள் பார்த்து இருக்க...
“அவனுக்கும் அந்த ஐடியா பிடிச்சு இருக்கு, ஆனா...” என்று இழுத்தவனை என்ன அது தப்புன்னு புரிஞ்சு தயங்கறானோ என்று வித்யா சிந்தித்துக் கொண்டு இருக்க... அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தலையில் சுத்தியலை கொண்டு அடிப்பது போலப் புரிய வைத்திருந்தான் பிரவீன்.
“ஆனா அந்தச் சிக்ஸை இந்தச் சிக்ஸ்க்கு முன்னாடி போடணுமா...? இல்லை பின்னாடி போடணுமான்னு கேக்கறான் மிஸ்...” என்றதும் வித்யா அப்படியே மயங்கி சரிந்து இருப்பாள். இருந்தாலும் கொஞ்சம் தன் மனதை சமாதானபடுத்திக் கொண்டவள், “அதுக்கு நீ என்ன சொன்னே...?” என்றதும், “அது தான் எனக்கும் தெரியலை மிஸ்... அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன்...” என்றானே பார்க்கலாம்.
வித்யாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான். மீண்டும் மீண்டும் அவன் அதையே கேட்டு அவளை ஒரு வழியாக்க... அதே நேரம் பள்ளி முடியும் மணி அடித்து அவளைக் காப்பாற்றியது. இதை வித்யா சொல்லி முடிக்கவும் அவர்கள் இறங்கி விடுதியை நோக்கி நடக்கவும் சரியாக இருக்க... வித்யா முடித்த நொடி அப்படி வெடித்துச் சிரிக்கத் தொடங்கினாள் நேத்ரா.
நேத்ராவிடம் கூறினால் தனக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் கூறுவாள் என்று வித்யா எதிர்ப்பார்த்து இருக்க... அவளோ சிரிக்கத் தொடங்கிவிடவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள் வித்யா.
அந்தப் பாவமான முகம் மேலும் சிரிப்பை வரவழைக்க “ஹே... சாரி வித்தி...” என்று எவ்வளவு தான் கூறி, சிரிப்பை நிறுத்த நேத்ரா முயன்றாலும் அது அவளால் முடியாமலே போனது. இப்படி நேத்ரா சிரிப்பதை இத்தனை மாத பழக்கத்தில் வித்யா பார்த்ததே இல்லை என்பதாலும் சில நாட்களாக அதிக யோசனையோடும் கவலையான முகத்தோடுமே இருப்பதைக் கவனித்து இருந்தவளும் சிரிப்பில் அவளோடு இணைந்துக் கொண்டாள்.
ஒரு அவசர வேலையாக அந்த வழியாக ஜீப்பில் வேகமாகச் சென்று கொண்டு இருந்த சஞ்சையும் நேத்ராவின் இந்தச் சிரிப்பை காண நேர்ந்ததில், நேத்ரா அறியாமலே கனிவோடு அவளைப் பார்த்தவாறே கடந்துச் சென்றான்.
நேத்ரா தன்னோடு படித்த தோழியின் அக்கா மகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மாலை நேர தமிழ் வகுப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கிறாள். மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அப்பெண்ணுக்குத் தமிழ் மட்டும் எப்போதுமே தகராறு தான்.
மற்ற பாடங்களில் எல்லாம் எண்பது மதிப்பெண்களை வாங்குபவள் தமிழில் மட்டும் பத்து பதினைந்து தான் எடுப்பாள். இப்போது பன்னிரெண்டாம் வகுப்புப் போது தேர்வில் கவனம் செலுத்தும் அதே நேரம் இதையும் அதிகப்படியாக படிக்க வேண்டி வந்ததில் மிகவும் சிரமப்பட்டாள் அப்பெண்.
அவளின் பெற்றோர் அனைத்தும் கற்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவளாக தங்கள் மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, இப்போது இது தேவை இல்லாத அழுத்தத்தை மகளுக்கு கொடுக்கும் என்று கொஞ்சமும் யோசிக்கவில்லை.
அவர்களை பொறுத்தவரை மற்றவர்களிடம் தங்கள் மகளை பற்றி பெருமை பட்டுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். அப்போது தான் நேத்ராவிடம் உதவி கேட்டிருந்தாள் அவள். இவளும் முழுதாக இதை பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல் பணம் எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டு அவளுக்கு உதவ முன்வந்தாள். கடந்த மூன்று மாதமாக நேத்ராவின் கடும் உழைப்பின் காரணமாக அப்பெண் ஓரளவு தேறி இருந்தாள்.
பெசன்ட் நகரில் சற்று வசதியானவர்கள் வசிக்கும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்தது அவர்கள் வீடு. அது சற்று உள் அடங்கிய பகுதி என்பதால் இரவு எட்டு மணிக்குள் அனைத்தையும் முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவது நேத்ராவின் வழக்கம்.
இன்று செய்யுள் பகுதியை படிக்க வைத்து அவளை அதை பொருள் புரிந்து ஓரளவு பிழை இல்லாமல் எழுத வைத்து தயார் செய்து முடிக்க ஒன்பதரையைக் கடந்து இருந்தது. சற்றுத் தாமதமாக வருவதாக வித்யாவுக்குத் தெரியப்படுத்தியவள், அங்கிருந்து கிளம்பி சற்று இருள் சூழ்ந்து இருக்கும் கடலோர பகுதியில் வேகமாக நடந்து வந்துக் கொண்டிருக்கும் போது அவள் சற்றும் எதிர்பாராமல் வந்து வழிமறித்து நின்றிருந்தான் சஞ்சய்.
அதில் திடுக்கிட்டவள் சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழற்ற... அந்த இருளில் இவர்களைத் தவிர அங்கு வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறி கொஞ்சம் கூட இல்லை.
அந்த இரவுக்கும் அவளின் படபடப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் "நாம நாளைக்கே கல்யாணம் செஞ்சுக்கலாமா குல்பி...?" என்று கண்களில் அத்தனை ரசனையோடு கேள்வி கேட்டவனை (அது நாளைக்கே பலிக்கப் போவதை அறியாமல்) கொலைவெறியோடு பார்த்தவள், அவனைச் சுற்றிக் கொண்டு நகர முயல...
அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் வழி மறித்து நின்றவன் பதில் சொல்லாமல் இங்கிருந்து நீ போக முடியாது என்பதை அவளுக்கு வார்த்தைகளால் அல்லாமல் தன் செய்கையால் புரிய வைத்துக் கொண்டிருந்தான்.
அவனால் ஏற்பட்ட கோபத்தையும் வெறுப்பையும் வார்த்தைகளில் கொண்டு வந்து "எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லை..." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவள், மீண்டும் நகர முயல...
"ஓ... அப்போ லிவிங்டுகெதர் ஓகேவா...?!" என்றவாறே தன் காலரை ஒற்றைக் கையால் ஸ்டைலாகத் தூக்கி விட்டபடியே அவளை நோக்கி இன்னும் இரண்டடி நெருங்கி நின்றவனை அதிர்வோடு பார்த்தவள் "வாட்ட்டட்ட்" எனக் கத்தினாள்.
"நீதானே குல்பி சொன்னே... கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு, அப்போ கல்யாணம் பண்ணிக்காமல் சேர்ந்து வாழ்வோம்... உனக்காக நான் இதைக் கூடச் செய்ய மாட்டேனா...?" என்றவனின் உடல் மொழியில் இருந்த திமிரும் தேனாவட்டும் அவளைக் கொலை வெறி கொள்ள செய்தது.
'நீ திருமணத்திற்குச் சம்மதித்ததாலும் சரி சம்மதிக்காவிட்டாலும் சரி உன் வாழ்க்கை என்னோடு மட்டும்தான்...' எனச் சொல்லாமல் சொல்லியவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தவள் அடுத்து என்ன செய்திருப்பாளோ...?! அதற்குள் எப்போது எப்படி முளைத்தது எனத் தெரியாமல் அவனின் கரங்களில் துப்பாக்கி முளைத்திருந்தது.
அதைக் கண்டு பயத்தில் விழி விரித்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் சுட்டுக் கொள்வதை எல்லாம் நேரிலேயே பார்த்து இருந்ததனால், 'எங்கே அவனுக்குச் சம்மதம் சொல்லவில்லை என்று தன்னையும் சுட்டு விடுவானோ...?!' என்ற எண்ணத்தோடு பின்னால் நகர முயல, அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் தன் இடது கரம் கொண்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான் சஞ்சய்.
திடீரென இழுத்து அணைத்ததில் சஞ்சயின் மார்பில் முட்டி நின்றிருந்தவள் பயத்தில் விழிகளை இறுக மூடிக் கொள்ள, சில நொடிகளில் தன் முதுகில் ஏதோ கனக்க துவங்கவும், மெல்ல விழிகளைத் திருப்ப... சஞ்சய் தன் வலது கால் கொண்டு எட்டி உதைத்ததில் ஒரு மாமிச மலை "ஹக்" என்ற சத்தத்தோடு தரையில் தேய்த்தபடியே தூரப் போய் விழுவது தெரிந்தது.
'என்ன நடந்துக் கொண்டிருக்கிறது...?' எனப் புரியாமல் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தம் கண்ணில் பட... சஞ்சய் அவனைச் சுட்டு இருப்பதைப் புரிந்துக் கொண்டாள் நேத்ரா.
அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இரண்டு முறை உடல் துடித்து அடங்க அவன் பரலோகம் போய்ச் சேர்ந்து இருந்தான். தன் கண் முன் நிகழ்ந்துக் கொண்டிருப்பதை நம்பமுடியாமல் நா வரண்டு நேத்ரா நின்று கொண்டிருக்க... அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு அசால்ட்டான தோரணையோடு தன் கண் முன் இறந்து கிடப்பவனைப் பார்த்தபடி நின்றிருந்தான் சஞ்சய்.
திடீரெனத் தங்கள் கால்களுக்கு அருகில் அலைபேசி இசைக்கத் தொடங்கவும், நேத்ரா பதறி விலக முயல... அவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக் கொஞ்சமும் அளிக்காமல் தன்னோடு சேர்த்து பிடித்தபடியே குனிந்து அதை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தவன், அந்தப் பக்கமிருந்து "குமரா முடிச்சிட்டியா...?" என்ற ஆக்ரோஷமும் ஆரவாரமுமான குரல் காதில் விழவும் அட்டகாசமான ஒரு சிரிப்பு சிரித்தபடியே "குமரனை தான் முடிச்சுட்டேன் பைரவா..." என்றிருந்தான்.
"ஹேய்ய்ய்ய்ய்.... என்ன சொல்றா என் தம்பி... என் தம்பி..." என அந்தப் பக்கமிருந்து பதட்டமும் பரிதவிப்புமாகக் குரல் ஒலிக்கத் துவங்கவும், "அதுக்கு நீ இந்த ஆத்ரேயனை முடிக்க நினைச்சு இருக்கவும் கூடாது... உன் தம்பியை அனுப்பி இருக்கவும் கூடாது பைரவா... இதுல முழுக்கமுழுக்கத் தப்பு உன்னோடுதான் தெரியுமா..." என்று கிண்டலான குரலில் வம்பு செய்தவன், திடீரென "ஆமாம் குமரன் உன் சொந்த தம்பியா...?" என்று மிகச் சீரியசான குரலில் கேட்கவும்,
'ஒருவேளை இன்னும் தன் தம்பிக்கு எதுவும் ஆகவில்லையோ...?!' என்ற ஒரு எதிர்பார்ப்போடு "ஆமா... ஆமா ஏன் கேட்கறே...? அவன் என் தம்பி தான்... அவனை ஏதும் செஞ்சிடாதே..." என்று அவசரமாக ஒலித்தது பைரவனின் குரல்.
"அதெல்லாம் செஞ்சு முடிச்சு அரை மணி நேரம் ஆகுது... நான் கேட்டது, உன் சொந்த தம்பினா 16 நாள் துக்கம் அனுஷ்டிப்பியா...? இல்ல நாளைக்கே என் தம்பியை கொன்னவனைச் சும்மா விட மாட்டேன்னு பழிவாங்க துப்பாக்கி எடுத்துட்டு கிளம்பிடுவியான்னு தெரிஞ்சிக்கத் தான்... ஏன் கேக்கறேன்னா நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு பா... நான் உன்னை மாதிரி வெட்டி ஆபிசர் இல்ல பாரு..." என்று இவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே படார் என்ற சத்தத்துடன் அந்தப் பக்கம் அலைபேசி உடைந்து நொறுங்கும் ஒலி கேட்டது.
சஞ்சய் அலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கும் தருணத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து நகர்ந்து விட முயன்றவளுக்கு அதற்கான வாய்ப்பை கொஞ்சமும் கொடுக்காமல் தன் வலது கையில் அலைபேசியைப் பிடித்துப் பேசியபடியே இடது கையால் அவளின் கரங்களை இறுகப் பற்றியபடி நின்று கொண்டிருந்தான் சஞ்சய்.
இதில் அவனிடமிருந்து விடுபட முயன்று, அது முடியாமல் போன கடுப்பில் வெறுப்போடு அவனை ஒரு குற்றம் சாட்டும் பார்வை நேத்ரா பார்க்க... அவனோ அதற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இங்கு நடந்து இருந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் உல்லாச சிரிப்போடு அவளைக் கண்டு குறும்பாகக் கண்சிமிட்டி இதழை குவித்துக் காற்றில் அவளுக்கான பரிசை பறக்க விட்டுக் கொண்டிருந்தான்.