All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

கையில் மிதக்கும் கன...
 
Notifications
Clear all

கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  
கையில் மிதக்கும் கனவா நீ..! 
 
கதையை ரீரன் செய்யறேன்..
 
 
இவங்க தான் நம்ம கதையோட ஹீரோ & ஹீரோயின்..
 
தொடர்ந்து இவங்க கூட பயணித்து உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. முன்பே இந்த கதையை படிச்சவங்க, ப்ளீஸ் டிவிஸ்ட் & சஸ்பென்ஸ் எதையும் உடைக்காதீங்க.. அப்போ தான் புதுசா படிக்கறவங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும்..
 
வாங்க கதைக்குள்ளே போகலாம்..
 
 
கனவு – 1
 
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீராமசந்த்ரருஷி
காயத்ரீச்சந்த ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா
மாருதாத்மஜ இதி பீஜம்
அஞ்ஜனாஸூனுரிதி சக்தி
ஸ்ரீராமதூத இதி கீலகம்
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக
 
 
என்ற மந்திர உச்சரிப்பின் சத்தத்தில் தன் பார்வையைத் திருப்பிய நேத்ரா அங்குக் கை கூப்பிக் கண் மூடி அமர்ந்திருந்தவனைக் கண்டு மீண்டும் தன் விழிகளை அந்த இடம் முழுவதும் ஒரு முறை சுழல விட்டு அனைத்தும் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு அவனை நோக்கி நகர்ந்தாள்.
 
 
அவனின் வேண்டுதலை முடித்துக் கொண்டு கண் திறந்தவன், தன் முன் ஒரு சிறு புன்னகையோடு நின்றிருந்த நேத்ராவை கண்டு பயத்தோடு பார்க்கவும், “என்னாச்சு விக்ரம் பயமா இருக்கா...?” என மெல்லிய அன்பான குரலில் கேட்டாள் அவள்.
 
 
“எஸ் மிஸ்... கொஞ்சம் பயமாவும் பதட்டமாவும் இருக்கு...” என்றவனின் குரலே அவனின் பதற்றத்தின் அளவை அவளுக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க... “ஏன்...? என்ன ஆச்சு...? சரியா படிக்கலையா...?!” என்றவளுக்கு மறுப்பாகத் தலையசைத்தவன் “நோ மிஸ், நல்லாவே படிச்சிருக்கேன்... ஆனாலும் ரொம்பப் பயமாயிருக்கு...” என்றான்.
 
 
அதுவே அவனின் மனநிலையைத் தெளிவாகப் புரிய வைக்க... தன் கைக்கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தவள் பத்து மணியாக இன்னும் பத்து நிமிடம் இருப்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு “ஸ்டுடென்ட்ஸ் என்னைக் கவனிங்க...” என அந்த அறையில் இருந்தவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.
 
 
“நீங்க இப்போ எழுத போறது வெறும் மாதிரி தேர்வு தான்... இந்தப் பத்தாம் வகுப்பு தேர்வை எல்லாரும் ஏதோ புலி வருது புலி வருதுன்னு பேசிப்பேசியே உங்க பதட்டத்தை அதிகரித்துக் இருப்பாங்க... அப்படி எல்லாம் நீங்கள் பார்த்து நடுங்க இது புலியோ சிங்கமோ இல்லை, இத்தனை வருடம் நீங்கள் எழுதிய மற்ற தேர்வை போலத் தான் இதுவும்... என்ன படித்து இருக்கீங்களோ அதைத் தெளிவாகவும் சரியாகவும் எழுதினாலே போதும், தேவையில்லாத பயமும் பதட்டமும் அவசியமில்லை...
 
 
நிறையப் பேர் இதைப் பற்றிப் பேசியே உங்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருந்தால் அதைத் தூக்கி தூர போட்டுட்டு ரிலாக்ஸ்டாக எழுதுங்க... அதிகபட்ச பயமும் பதட்டமும் நாம படித்ததை எல்லாம் மறக்கடித்துவிடும், அதற்குப் பிறகு இத்தனை நாள் படித்ததற்கு எந்தப் பயனுமே இல்லாமல் போய்டும்... இப்போது எழுதுவது மாதிரி தேர்வு தான் என்பதால் அந்தப் பயம் கூட உங்களுக்கு வேண்டாம்...
 
 
பொதுத் தேர்வை எப்படி எழுத வேண்டும் என்ன மாதிரியான கேள்விகள் வரும் அதற்கு எப்படித் தயாராக வேண்டும் என்பது போன்ற சில பயிற்சிகளுக்காகத் தான் இந்தத் தேர்வை இப்போ நீங்கள் எழுத போறீங்க... இதில் புதிதாக வேறு எதுவும் இல்லை நீங்க பயப்பட, இரண்டு நிமிஷம் பேனாவை எல்லாம் மூடி வைச்சுட்டுக் கண் மூடி மனதை ஒரு நிலைப்படுத்திப் பதட்டத்தைக் குறைத்து முதலில் அமைதியாகுங்க... அதன் பிறகு தெரிஞ்சதை எழுதுங்க, அவ்வளவுதான்...” என அன்பும் அமைதியுமான குரலில் பேசியவளின் வார்த்தைகளுக்கு உடனடியாகக் கட்டுப்பட்டு அதைப் பின்பற்றினர் அவளின் மாணவர்கள்.
 
 
நேத்ரா இருபத்து நான்கு வயதுடைய அழகான யுவதி. ஐந்தரை அடி உயரம் அதற்கேற்ற எடை, பால் நிறம், கவி பாடும் கண்கள் எனப் பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை திரும்பப் பார்க்க வைக்கும் அளவு அழகி. இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவள் என்றாலும் துறுதுறுப்பும் கொண்டாட்டமுமே வாழ்கை என்று எண்ணும் ரகமில்லை அன்பும் அமைதியுமானவள்.
 
 
இங்கு இவள் இப்படி என்றால்...! அங்கு ஒருவனோ...!!
 
 
தன் கையிலிருந்த புத்தம் புதிய ரகத் துப்பாக்கியை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துப்படி இருந்தவன், தன் எதிரில் இருந்தவர்களை நோக்கி குறி வைத்து பார்த்து விட்டு, கைக்கு அடக்கமாக இருக்கிறதா...?! தன் பாக்கெட்டில் வைக்கவும் எடுக்கவும் எளிதாக இருக்கிறதா...?! என்றும் விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிப் பார்த்துச் சட்டெனக் குனிந்து நெளிந்து சுட வருகிறதா, என்றெல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி ‘என்னடா பண்ற...?’ என்பது போன்ற பாவனையில் பார்த்தபடி அமர்ந்திருந்த விற்பனையாளனை நோக்கி “எல்லாம் ஓகே... ஆனா ரேட் தான் கொஞ்சம் ஓவரா சொல்ற பாத்து சொல்லு அண்ணாத்தே...” என்றான்.
 
 
“எது இது ஓவரா... மார்கெட்ல போய் விசாரிச்சு பார் பா அப்போ தெரியும், நம்மகிட்ட ரேட்டும் சரி ஐட்டமும் சரி ரொம்பவும் தரமா இருக்கும்... அதிக விலைக்கு எல்லாம் விற்க மாட்டேன் பா... முப்பது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கோம், அப்பாகிட்ட இருந்து நான் தொழிலை கையில் எடுத்து நாலு வருஷம் ஆகுது... இதுவரைக்கும் போன பொருள் திரும்பி வந்தது இல்லை... நம்மகிட்ட க்வாலிடி அப்படி...” என்றவனைப் பார்த்து “அது தெரிஞ்சது தானே உன்னைத் தேடி வந்தேன்... பார்த்து சொல்லிக் கொடு அண்ணாத்தே...” என்றான் மீண்டும்.
 
 
“இல்லப்பா இதுக்கு மேல ஒத்தை பைசா குறைக்க முடியாது... புதுச் சரக்கு யா இந்த மாதிரி இன்னும் ஒண்ணு கூடப் போலீஸ், சிபிஐன்னு யாரு கையிலயும் இருக்காது... இப்பதான் நம்மாளுங்க ஸ்பெஷலா ரெடி பண்ணி மார்கெட்க்கு வந்திருக்கு... நீ வேண்டான்னா வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க...” என்றவன் தன் பிடியிலேயே நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
 
 
‘இனி இவனிடம் பேசி பலன் இல்லை’ என்பதனால் கையில் இருந்த துப்பாக்கியின் தரமும் மனதைக் கவர்ந்திடவே தன் இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் ஒரே நேரத்தில் கையை நுழைத்து இரண்டு பணக் கட்டுக்களை எடுத்து டேபிளில் வைத்தவன், “சரி ஓகே, நான் வரேன்...” என்று கிளம்பினான்.
 
 
“தம்பி தப்பா எடுத்துகாதப்பா... இது புதுச் சரக்கு அதான் இந்த ரேட்டு... நீ பழைய சரக்கு ஏதாவது பாரேன், நாம பேசி குறைச்சிக்கலாம்...” என்று தத்தாத்ரேயனின் முகம் கசங்கவும் மனம் பொறுக்காமல் இறங்கி வந்தான் கள்ளத்துப்பாக்கி விற்பதையே தொழிலாக வைத்திருப்பவன்.
 
 
“இல்ல அண்ணாத்தே... எனக்கு இது தான் வேணும், நான் இதையே எடுத்துக்கறேன்... ஒன்னும் பிரச்சினை இல்லை...” என்று விட்டு வெளியேறிவனின் மனதில் தான் இதை முதன்முதலில் பயன்படுத்த வேண்டியது யாருக்கு என்பதும் எப்படி என்பதும் தெளிவான திட்டமாக ஓட துவங்கியிருந்தது.
 
 
புஷ்பாஞ்சலி கல்விக் குழுமம்
 
 
சென்னையில் மட்டும் பல கிளைகளைக் கொண்டு பரந்து விரிந்து இருக்கும் ஒரு கல்வி ஸ்தாபனம். அதில் ஒரு கிளையில் தான் நேத்ரா தமிழ் ஆசிரியையாகவும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வகுப்பாசிரியையாகவும் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறாள்.
 
 
நேத்ரா இங்குப் பணியில் சேர்ந்து பத்து மாதங்கள் தான் ஆகிறது. முதல் முறையாக அவள் வகுப்புப் பிள்ளைகள் பொதுத் தேர்வை எழுத போவதை எண்ணி அவர்களைப் போலப் பயமும் படபடப்பும் கொள்ளாமல், அதை எப்படி எளிதாக அணுகுவது பிள்ளைகளை எப்படி மிகுந்த சிரமம் எதுவுமின்றி எளிதாக அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கலாம் என்பது போன்றே இருந்தது அவளின் அணுகுமுறை எல்லாம்.
 
 
சென்ற வாரம் தொடங்கிய மாதிரி தேர்வுகள் அனைத்தும் முடிந்திருக்க... மாணவர்கள் எளிதாக மதிப்பெண் எடுக்கக் கூடிய வகையில் சில தேர்வுத் தாள்களைப் பல நாட்களாக உழைத்து தயார் செய்து முதல் மாதிரி தேர்வுக்கு அதைப் படித்துத் தயார் ஆகும்படி செய்திருந்தவள் அடுத்தத் தேர்வுக்கு வேண்டிய மாதிரி தாள்களை மீண்டும் தயார் செய்து தன் பென்ட்ரைவில் வைத்திருந்தாள் நேத்ரா.
 
 
அதைக் கொண்டு மீதமுள்ள நாட்களில் இன்னும் எளிதாக அவர்களைச் சிறு சிறு கேள்விகளில் கூடக் கவனம் செலுத்த வைத்து எளிதாக மதிப்பெண் எடுக்க வைக்க எண்ணியவள், அவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நகலெடுத்துக் கொண்டு நாளை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வெளியில் செல்ல கிளம்பியவளை அவளின் அறை தோழியும் நேத்ரா பணிபுரியும் பள்ளியிலேயே உடன் பணிபுரிபவளுமான வித்யா அந்த ஞாயிறு மதியத்தில் தனக்கு வேண்டிய அனைத்தையும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி தி.நகர் அழைத்து (இழுத்து) சென்றாள்.
 
 
ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடை கடையாக ஏறி இறங்கியும் வித்யா எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி ஒன்றுமே வாங்காமல் சுற்றிக் கொண்டு இருக்க... நேத்ரா சற்றும் எதிர்பாராமல் அவள் கைப்பையைப் பிடிங்கிக் கொண்டு சென்றனர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்.
 
 
அதில் “திருடன்... திருடன்...” என்று நேத்ரா குரல் கொடுக்க, “பிடிங்க... பிடிங்க...” என்று வித்யா கத்த தொடங்கினாள். அங்குக் கூடியிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை.
 
 
கொஞ்சம் தூரம் வரை ஓடி சென்ற நேத்ராவால் அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள் என்று கூட அடையாளம் காண முடியவில்லை. இதற்கு மேல் ஓடுவதிலும் எந்தப் பலனும் இல்லை என்பது புரிய நேத்ரா அங்கேயே நின்று நாலா புறமும் தன் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருக்க... மெதுவாகத் தன் உடலை தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் ஓடி வந்து அவளோடு இணைந்து கொண்டாள் வித்யா.
 
 
“ஹே... என்ன டி கிடைக்கலையா...” என்று கவலையோடு கேட்டவளுக்கு “ம்ஹும்...” என்று தலையசைத்தவள், “அவங்களுக்கு இது ரெகுலரான ஒரு விஷயம்... இப்போ நம்மகிட்ட இருந்து பேக் எடுத்தவங்களைப் பிடித்தாலும் நம்ம பொருள் அவங்க கையில் இருக்காது... இதற்குள் பல கைக்கு மாறி இருக்கும், தேடுவதும் வேஸ்ட்... பிடிக்கிறதும் வேஸ்ட்... இது ஒரு பெரிய நெட்வொர்க் இவங்களை எதுவும் செய்ய முடியாது...” என்றவள், “சரி வா... நாம போலாம்...” என்று தங்கள் இரு சக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.
 
 
நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் “போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுமா... நாம எல்லாம் அவங்களைப் பிடிக்க முடியாது...” என்று போகிற போக்கில் கூறிவிட்டு நடந்தார்.
 
 
“சரி வா வித்து, நாம கிளம்புவோம்...” என்றபடி நேத்ரா நடக்கத் துவங்கவும், “முக்கியமான பொருள் எதுவும் இருக்கா தாரா... நாம வேணா ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடுவோமா...?!” என்றபடி அவளோடு இணைந்துக் கொண்டாள் வித்யா.
 
 
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்... அதில் எடிஎம் கார்ட் இருந்துச்சு... பணம் ஒரு ஐநூறு ரூபா தான் இருந்தது... இது தவிரப் பெருசா அதுல ஒன்னும்...” என்று யோசனையோடு கூறிக் கொண்டிருந்தவள், “அச்சச்சோ இத்தனை நாள் கஷ்டப்பட்டு ரெடி செஞ்ச பென்டிரைவ் இருக்குடி...” என்றாள் மெல்ல தலையில் அடித்துக் கொண்டே.
 
 
“கார்ட்... கேஷ்... போச்சு, அதுக்குப் பீல் பண்ணல... இதுக்குப் போய்ப் பீல் பண்றா லூசு...” என்று அவளைக் கடிந்தபடியே வித்யா நடந்துக் கொண்டிருக்க... “கார்ட் பத்தி பேங்க்ல போய்க் கம்ப்ளைன்ட் லெட்டர் கொடுத்தா போதும், ஆனா பென்டிரைவ் அப்படிச் செய்ய முடியுமா...? அது என் எத்தனை நாள் உழைப்பு தெரியுமா...?!” என்று குறைபட்டுக் கொண்டாள்.
 
 
நடந்தவாறே தன் கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தபடியே “இப்போ கூட நேரம் இருக்கு வா வித்து...” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
 
 
“அடியே உன் தொல்லை தாங்க முடியல... நீ வேணா போ டி... இந்த உடம்பை வெச்சுகிட்டு என்னால ஓட முடியாது... எனக்கு எந்த வேலையும் இல்லை நான் பொறுமையா வந்துக்கறேன்...” என்று வித்யா கதற, கதற அவளை இழுத்துக் கொண்டு சென்றே விடுதியை அடைந்து இருந்தாள் நேத்ரா.
 
 
அவசர அவசரமாகத் தன்னிடம் இருந்த புத்தகங்களை எல்லாம் சேகரித்து எடுத்துக் கொண்டு தெரு முனையில் இருந்த பிரவுசிங் சென்டரை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள் நேத்ரா.
 
 
தன் மடிகணினியில் இங்கு அமர்ந்து மீண்டும் அனைத்தையும் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு ஆகிவிடும், இன்று ஞாயிறு என்பதால் மாலைக்கு மேல் பிரவுசிங் சென்டர்கள் அனைத்தையும் மூடிவிடுவார்கள் என்பதாலேயே அங்கேயே அமர்ந்து தயார் செய்ய, செய்யப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள நினைத்தே அங்குச் சென்றாள்.
 
 
இரண்டு நாட்களுக்கு முன்பே அவளின் மடிகணினி சர்வீஸ்க்கு சென்று வந்து இருந்தது. இல்லையென்றால் அதில் சேகரித்து வைத்திருந்ததையே பயன்படுத்திக் கொண்டிருந்து இருப்பாள். அங்குச் சென்றே இருக்க மாட்டாள்.
 
 
அவளின் விடுதி இருந்த தெருமுனையில் இருக்கும் அந்த மூன்று அடுக்கு வணிக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த ப்ராஜெக்ட் மற்றும் அசைன்மென்ட்களைச் செய்து முடிக்கும் சென்டரில் அமர்ந்து அவசர அவசரமாக எல்லாம் தயார் செய்து முடித்து நேத்ரா நிமிரும் போது நேரம் இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது.
 
 
நிமிர்ந்து நேரத்தை பார்த்தவள், தான் வந்து வெகுநேரம் ஆகிவிட்டு இருப்பதையே அப்போது தான் உணர்ந்து மெல்ல தன் தலையில் வலிக்காமல் அடித்துக் கொண்டவள், கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.
 
 
சரியாக அதே நேரம் அந்தச் சென்டரின் உரிமையாளர் நேத்ராவை நெருங்கி இருக்க... "சாரி... சாரிண்ணா... கொஞ்சம் லேட்டாயிடுச்சு..." என முகத்தைச் சுருக்கி அவள் அவசரமாகப் பேசத் துவங்கவும், "பரவாயில்ல மா... நேரம் ஆச்சே, இன்னும் முடியலையான்னு தான் பார்க்க வந்தேன்..." என்று கூறியவருக்குத் தான் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்டு அதை அவரிடம் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினாள் நேத்ரா.
 
 
ஆனால் வெளியே வந்த பிறகே அந்தத் தளத்தில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருள் சூழ்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு இவ்வளவு நேரம் உள்ளே விளக்கொளியில் இருந்ததனால் நேரமும் சூழலும் தெரியாமலேயே போனது.
 
 
சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியவள் விரைவாகத் தன் இருப்பிடம் செல்ல எண்ணி வேகத்தோடு நடக்கத் தொடங்கவும், இருள் சூழ்ந்த அந்தப் பகுதி அவளுக்கு ஒரு கலக்கத்தைக் கொடுத்தது.
 
 
பின்பக்கமாக இருக்கும் வீதிக்கு இறங்கி செல்லும் பாதையில் அங்கு வளாகத்திற்கு வெளியில் இருக்கும் வீதியோர உணவு கடைகள் வெளிச்சத்தைக் கொடுக்கும் என்பது நினைவுக்கு வர... இந்த இருளில் இறங்குவதை விட, அந்த வெளிச்சத்தில் இறங்கலாம் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாகச் சுற்றிக் கொண்டு பின் பக்க படி வழியே இறங்கியவள் முதல் தளத்தைக் கடந்து படிகளை நோக்கி நடந்த போது அங்கு இறுதியாக இருந்த கடையில் இருந்து வந்த வித்தியாசமான ஒலியில் தன் பார்வையை அந்தப் பக்கம் திருப்பியவள் விழிகள் அப்படியே நிலை குத்தி போக, அசையாமல் உறைந்து நின்றிருந்தாள்.
 
 
அங்கு இருந்ததோ ஒரு பினான்ஸ் கம்பெனி... முதலாளி நாற்காலியில் அமர்ந்திருந்தவன், ரத்த வெள்ளத்தில் தன் மார்பை பிடித்தப்படி துடிதுடித்துக் கொண்டிருக்க... கொஞ்சமும் பதட்டமில்லாமல் அவனின் துடிப்பை கண்கள் பளபளக்க பார்த்தபடி அங்குக் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான் ஒருவன்.
 
 
அதைக் கண்டதில் மூச்சு விடக் கூட மறந்து பயத்தில் உறைந்து அப்படியே அசைவற்று நின்று இருந்தாள் நேத்ரா.
 
 
வெகு சாவகாசமாகத் துப்பாக்கியை அதில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது தான் முக்கியம் என்பது போல எண்ணி இப்படியும் அப்படியும் பார்த்து தன் சட்டையில் துடைத்தபடியே பேண்டின் பின் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டே திரும்பியவன் அப்போதே நுழைவாயிலின் எதிர்ப்புறத்தில் நின்றிருந்தவளை கண்டான்.
 
 
இந்தத் தளம் முழுவதும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே உள்ளே நுழைந்து இருந்தவன், அவளை இங்குக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் ஒரு நொடி விழி சுருக்கமே காட்டிக் கொடுத்தது... பின் அந்த விழியில் ஒரு அலட்சிய பாவம் வந்து குடிக் கொள்ள... தன் வாயில் இருந்த சூயிங்கத்தை மென்றபடியே ஒவ்வொரு எட்டாக வைத்து அவன் நேத்ராவை நெருங்கவும், அதுவரை அசைவற்று இருந்த அந்தச் சிலைக்கு உயிர் வர, அவன் தன்னை நெருங்குவதற்குள் பதறி அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் நேத்ரா.
 
 
அவளால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகத்தோடு ஓடி அதே தெருவில் இருந்த தன் விடுதிக்குள் நுழைந்தவள் கொஞ்சமும் தன் வேகத்தைக் குறைக்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
 
 
பயத்தில் மனம் படபடக்க, அப்படியே படுக்கையில் சுருண்டு கொண்டவளுக்கு அறையில் இருந்த இருள் சற்று ஒளிந்துக் கொள்ள வசதியாக இருந்ததோ என்னவோ தடக் தடக் என்று துடிக்கும் மனதோடு அதிக நேரம் தலையணையை அணைத்தபடியே கிடந்தவளுக்கு இதைப்பற்றி யாரிடமும் பேசவோ பகிர்ந்துக் கொள்ளவோ கூடப் பயமாகத்தான் இருந்தது.
 
 
நல்லவேளை வித்யாவும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருக்க... என்ன...? ஏது...? என்று நேத்ராவின் நிலையைக் கண்டு கேள்வி கேட்டு தொல்லை செய்யவும் அங்கு ஆள் இல்லாமல் போனதினால் படபடவென அடித்துக் கொண்ட இதயத்தோடே வெகு நேரம் படுத்துக் கொண்டு இருந்தவளின் பதட்டம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.
 
 
அவள் இதயத்தின் துடிப்பும் படபடப்பும் சரியாகக் கேட்டது போல வழக்கம் போலவே ஒலித்தது அந்த மெசேஜ் வந்ததற்கான சத்தம். கண் மூடி படுத்துக் கொண்டிருந்தவள் ஒரு பரபரப்போடு எழுந்து அருகிலிருந்த அலைபேசியை எடுத்து பார்க்க... தான் எதிர்பார்த்து இருந்த நபரிடம் இருந்து தான் வந்திருந்தது மெசேஜ்.
 
 
“அம்மு”
 
 
“என்னாச்சுடா..?”
 
 
“ஆர் யூ ஓகே..?”
 
 
“என்ன ஆச்சு..?”
 
 
என்று அடுத்தடுத்து நேத்ரா பதில் அளிப்பதற்குள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த மெசேஜ்களே அந்தப் பக்கம் இருந்து அனுப்புபவனின் பதட்டத்தை நேத்ராவிற்குச் சரியாகப் புரிய வைத்தது.
 
 
இருந்தும் “ஒண்ணுமில்லை” என்று மட்டும் பதிலளித்தாள் நேத்ரா. “ஏதாவது பிரச்சினையா” என மீண்டும் கேள்வி தான் அங்கிருந்து வந்தது. இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை வியந்ததைப் போன்றே இப்போதும் இவனுக்கு மட்டும் எப்படி என் ஒவ்வொரு உணர்வும் அசைவும் தெரிகிறது என்ற அதே வியப்போடு அமர்ந்து இருந்தவள் “இல்லை” என்றே கூறினாள். இன்று நடந்தவற்றைக் கூறி அவனையும் பதட்டப்பட வைக்க விரும்பாமல்.
 
 
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... மனசை போட்டு குழப்பிக்காதே, எப்பவும் நீ தனி ஆள் இல்ல, அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ...” என்று நீ சொன்ன எதையும் நான் நம்பவில்லை என்ற ரீதியிலேயே பதிலளித்தவன் மீண்டும் அதைப் பற்றிப் பேசி அவள் மனதை குழப்ப வேண்டாம் என்ற எண்ணத்தோடு “சாப்பிட்டாச்சா...? இன்னைக்கு எங்க போனீங்க இரண்டு பேரும், உன் பிரண்ட் இன்னைக்கு ஏதாவது வம்பு செஞ்சாளா...?” என்று அவள் மனதை திசை திருப்பினான்.
 
 
‘இன்னும் சாப்பிடவில்லை’ என்று பதிலளித்தால் அதற்குத் திட்டோ இல்லை அறிவுரையோ வழங்க ஆரம்பித்து விடுவான் என்று அறிந்து இருந்தவள் இப்போது இருக்கும் மனநிலையில் அதையெல்லாம் கேட்கும் மனது இல்லாததால் “சாப்பிட்டேன்’ என்று மட்டும் பதில் அளித்து விட்டு வேறு எதற்கும் பதில் அளிக்காமல் இருந்தாள்.
 
 
“சரி... சரி... நைட் ரொம்ப லேட் ஆச்சு பாரு... போய்ச் சாப்பிட்டு தூங்கு... எதுக்கும் மனசை போட்டு குழப்பிக்காதே... இந்த நேரத்துக்கு ஹாஸ்டலில் எல்லாம் காலியாகி இருக்குமே, நீ என்ன சாப்பிடுவே... நான் ஏதாவது ஆர்டர் செய்து அனுப்பவா... சாப்பிட்டுப் படுத்தாதான் நீ இப்போதிருக்கும் மனநிலையில் தூக்கம் கூட வரும்...” என்றான்.
 
 
“வேண்டாம் பழம் இருக்கு...” என்று பதிலளித்தாள் நேத்ரா. அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் ‘இப்போது அவள் நார்மலாக இல்லை என்று புரிய, அதையாவது சாப்பிட்டால் சரி...’ என்ற மனநிலையோடு மேலும் அவளை வற்புறுத்தாமல் “குட்நைட் அம்மு... டேக் கேர்...” என்று சற்று இடைவெளிவிட்டுக் கூறினான்.
 
 
‘இவனிடம் மட்டும் தன் உணர்வுகளை எப்போதும் மறைக்கவே முடியாதா...?’ என்ற சந்தேகம் எப்போதும் போல இப்போதும் மனதில் ஓட... இப்போது அவன் அமைதி காத்ததும் தனக்காகத் தான் என்பது தெரிந்ததால் எந்தப் பதிலும் அவனுக்கு அளிக்காமல் அந்த வாட்ஸ் அப் சாட்டில் தெரிந்த ராம் என்ற அவனின் பெயரையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா.
 
 
இரவு வெகு நேரத்திற்குப் பிறகு உறங்கியதாலோ என்னமோ காலை வித்யா கிளம்பிச் செல்லும் வரை கூட நேத்ரா எழுந்திருக்கவில்லை. வழக்கமாக இப்படி இருப்பவள் இல்லை என்பதனால் ‘உடம்பு முடியவில்லையோ...?!’ என்று நினைத்த வித்யா பள்ளிக்குக் கிளம்புவதற்கு முன் நேத்ராவை எழுப்பி விசாரிக்க... சற்றுத் தலைவலியாக இருப்பதாகவும் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாகப் பள்ளியில் தனக்காகக் கூறி விடுமாறும் சொன்னவள் மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
 
 
அன்று வித்யாவிற்கு வழக்கத்திற்கு மாறாகச் சற்று முன்னதாகச் செல்ல வேண்டியிருந்தது. அவளின் வகுப்புப் பிள்ளைகளுக்குக் காலை பிரேயர் நேர செய்தியும் பொன்மொழியும் வாசிக்கும் முறை இன்று இருந்ததனால் வழக்கமாகக் கிளம்புவதற்கு முக்கால் மணி நேரம் முன்பாகவே கிளம்பிச் சென்று விட்டாள்.
 
 
மைக்கில் வாசிக்கும் பிள்ளை வருவதற்குள் இன்றைய முக்கியமான செய்தி என்ன என்பதைச் சுருக்கமாக எழுதி வைத்துக் கொண்டு அதைப் பற்றிய தங்கள் பார்வையையும் சேர்த்து பேசும் அளவுக்கு அந்தப் பெண்ணைத் தயார்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவசரமாகக் கிளம்பியவள், நேத்ரா தலைவலி என்று கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக நேத்ரா இதுபோல் எல்லாம் கூறுபவள் இல்லை என்பதனால் நிஜமாகவே உடல்நிலை சரியில்லை போலும் என்ற எண்ணமே வித்யாவிற்கு இருந்தது.
 
 
முதல் முறையாக ஒரு கொலையை நேரடியாகப் பார்த்த பயமும் தான் பார்த்ததை அந்தக் கொலைகாரன் பார்த்து விட்டான் என்ற படபடப்பும் நேத்ராவை இரவெல்லாம் பாடாய்ப் படுத்திக் கொண்டு இருந்ததில் உறக்கம் என்பது வெகு தூர போயிருந்தது.
 
 
விடிய விடிய பயத்திலேயே விழித்துக் கொண்டு படுத்திருந்தவள் அவளையும் அறியாமல் விடிந்ததற்குப் பிறகே உறங்கியிருந்தாள். அதனாலேயே அவளால் இப்போது தலை பாரமாகக் கனத்ததில் எழுந்துக் கொள்ள முடியவில்லை.
 
 
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எழுந்தவளுக்கு மீண்டும் அதே ஞாபகங்கள் வந்து சூழ்ந்து கொள்ள... படபடக்கும் மனதோடே பள்ளிக்குக் கிளம்பத் தயாரானாள். வழக்கமாக இவர்கள் இருவரும் பள்ளி பேருந்தில் தான் செல்வார்கள்.
 
 
இதுபோல ஏதாவது நேரம் மாற்றிச் செல்ல வேண்டியிருந்தால் தங்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இன்று வித்யா விரைவாகச் செல்ல வேண்டி இருந்ததனால் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டு இருக்க...
 
 
பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற நேத்ராவின் பார்வையில் எதிரில் இருந்த சிறிய தேநீர் கடையின் முன்பு தொங்கவிடப்பட்டிருந்த செய்தித்தாள் கண்ணில் பட... அதில் கொட்டை எழுத்தில் பிரபல பைனான்ஸியர் மோகித் ஜெயின் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை என்ற செய்தி கண்ணில் படவும், மீண்டும் இரவு தான் பார்த்த காட்சி அவளின் கண் முன் விரிந்தது.
 
 
அதே நேரம் நேத்ரா செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட... அதில் ஏறி முதலில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள், தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் கையில் இருந்த செய்தித்தாளை கண்டு படித்து விட்டுத் தருவதாகக் கூறி அதை வாங்கி, அவசரமாக அதில் தன் பார்வையை ஓட்டத் தொடங்கினாள்.
 
 
பிரபல பைனான்சியர் மோஹித் ஜெய்யின் நேற்று இரவு அவரின் அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பத்து வருடமாகப் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மோஹித்துக்கு அவரின் தொழில் முறையிலும் சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
பலரிடம் அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலித்து வந்ததனால் சாமானியர் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அவரின் மீது ஆத்திரத்தில் இருந்தவர்களில் யாராவது இதைச் செய்து இருப்பார்களா என்ற கோணத்திலும் இதைத் தவிரவும் அவருக்குத் திரைமறைவு தொழில்கள் கூட உள்ளதாக ஒரு செய்தி காற்று வழி பரவுவதால் அதனால் ஏற்பட்ட பகையாலும் கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
 
 
எப்போதுமே தன்னோடு மூன்று நான்கு அடியாட்களை வைத்துக் கொண்டு வலம் வரும் மோஹித் ஜெயின் தனியாக மாட்டும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்து எவரும் அருகில் இல்லாத நேரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதால் வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி நடத்தப்பட்ட கொலையாக இருக்குமோ என்ற ஒரு எண்ணமும் எழுந்துள்ளதாக மதுசூதனன் நம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
 
செய்தித்தாளை படித்து முடித்தவளுக்கு இரவு பார்த்த அந்தக் கொலைகாரனின் முகம் கண்முன் விரிந்தது. அத்தனை சர்வ சாதாரணமாக ஒரு கொலையைச் செய்து முடித்தவனின் வெகு இயல்பான செய்கைகள் அவனுக்குக் கொலைகள் புதிது இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துவது போலவே இருந்தது.
 
 
அதுவே அத்தனை சீக்கிரம் அவனை இவர்களால் பிடித்து விட முடியாது என்பதை நேத்ராவிற்குப் புரிய வைக்க... ‘அவனை எங்க இவங்க பிடிக்கப் போறாங்க...!!?’ என்று தனக்குள்ளேயே எண்ணியபடி பார்வையைத் திருப்பிவளுக்கு அவளின் பேருந்துக்கு அருகில் புல்லட்டில் கருப்பு நிற சட்டையும் ஆகாய நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து குளிர் கண்ணாடியோடு அலை அலையான கேசம் காற்றில் பறக்க, படு ஸ்டைலாக அவனே காட்சியளித்துக் கொண்டிருந்தான்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 
This topic was modified 6 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 1

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 6 days ago by Kavi Chandra
This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  
கனவு – 2
 
 
செய்தித்தாளை படித்ததில் நேற்றைய சம்பவம் கண்முன் விரிய அதிலேயே படபடத்துப் போன மனதோடு பார்வையைத் திருப்பியவளுக்குக் கொலைகாரனே காட்சி தரவும் கை கால்கள் உதறல் எடுக்கத் துவங்கியது.
 
 
நேற்று நடந்து முடிந்திருந்த கொலைக்கு ஒரே கண்ணால் கண்ட சாட்சி அவள் மட்டுமே எனும் போது அவளையும் கொள்ள அந்தக் கொலைகாரன் கொஞ்சமும் தயங்க மாட்டான் என்பது ஒரு கொலையை அசால்டாகச் செய்து முடித்திருந்தவனின் உடல் மொழியிலேயே நேத்ராவிற்குப் புரிந்துப் போனது.
 
 
எனவே முடிந்த வரை அந்தக் கொலைகாரனின் கண்களில் படாமல் இருக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து இருந்தவள் இப்படி அவனே தன் கண்முன் தோன்றுவான் எனச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
 
தன் பேருந்தின் கூடவே பயணித்துக் கொண்டிருந்த அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முயன்றவள் ஜன்னல் ஓரம் வேறு அமர்ந்து இருக்கவே, தன் இடது கையைக் கொண்டு முகத்தை முடிந்த அளவு மறைத்தபடி திரும்பி அமர்ந்துக் கொண்டாள். அவ்வப்போது தன் முகத்தை மறைத்திருந்த கரங்களின் விரல் இடுக்கின் வழியே அவனை நோட்டம் விடுவதும் பின்பு திரும்பி கொள்வதுமாகவே பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் நேத்ரா.
 
 
ஒரு கொலை செய்து இருப்பதற்கான எந்த ஒரு பதட்டமும் பயமும் இல்லாமல் வெகு இயல்பாகவே பயணித்துக் கொண்டிருந்தான் அந்தக் கொலைகாரன். அதைக் காணும் போதெல்லாம் இவன் எதற்கும் தயாராக இருப்பவன் என்று மீண்டும் மீண்டும் அவளுக்குத் தெளிவாகிக் கொண்டே இருந்தது.
 
 
அடுத்து வந்த சிக்னலில் பேருந்து நிற்கவும் நேத்ராவிற்கு நேரெதிராகத் தன் ராயல் என்பீல்டை கொண்டு வந்து நிறுத்திய சஞ்சய் அதில் லேசாகத் தாளம் தட்டியபடியே ஏதோ பாடலைப் பாடிக் கொண்டு பார்வையை இவள் இருந்த பக்கம் திருப்ப... நேத்ராவுக்கு அப்படியே பயத்தில் தூக்கிவாரிப் போட்டது. தன் கரம் கொண்டு முகத்தை மூடியபடி அமர்ந்து இருந்தாலும் அவளுக்கு ஏனோ மனம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கியது.
 
 
அதற்குள் சிக்னல் விழுந்து இருக்க, பேருந்து கிளம்புவதற்கு முன்பே வேகமாகத் தன் வாகனத்தை விரட்டிக் கொண்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான். அதற்குப் பிறகு தான் படபடப்புக் குறையச் சற்று நிமிர்ந்து அமர்ந்தவள் பேருந்தின் ஜன்னல் வழியாக முன்னால் வாகனங்களின் இடையே புகுந்து புகுந்து சென்றுக் கொண்டிருப்பவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
அவளுக்கு ‘தான் பேருந்தில் இருந்ததனாலேயே அவன் கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டோம்...! ஒருவேளை இறங்குகையில் அவன் கண்ணில் பட்டுவிட்டால் தன் நிலை என்ன...?’ என்ற பயம் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவன் மேலேயே பார்வையைப் பதித்தபடி பயணித்துக் கொண்டிருந்தாள்.
 
 
ஆனால் அவனோ இப்படி ஒருத்தி தன்னைப் பயத்தோடும் படபடப்போடும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கூட அறியாமல் தன் போக்கில் வாகனத்தை வேகமாகவும் வளைத்து வளைத்தும் செலுத்திக் கொண்டிருந்தான்.
 
 
சரியாக நேத்ரா இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முன்பு இருந்த திருப்பத்தில் அவன் சென்றுவிட... அதைக் கண்ட பிறகே அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள் நேத்ரா.
 
 
பேருந்தில் இருந்து இறங்கி குனிந்த தலையோடு அவசர அவசரமாகப் பள்ளிக்கு சென்று சேரும் வரை ஒரு பயம் அவளுக்கு இருந்துக் கொண்டே இருந்தது. எங்கிருந்தாவது தன்னைப் பார்த்து விடுவானோ என்ற பயம் தான் அது.
 
 
பள்ளிக்குள் நுழைந்து தன் தாமதமான வருகைக்கான காரணத்தைத் தலைமையாசிரியரிடம் கூறி முறையாக அனுமதி பெற்றுக் கொண்டவள் தன் வகுப்பறையை நோக்கி செல்லும் போது அவள் வருகைக்காகவே காத்திருந்த வித்யா விரைந்து வந்து இவளின் உடல் நலனை விசாரிக்கத் தொடங்கினாள்.
 
 
பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் சற்றுத் தலைவலியாக இருந்தது அவ்வளவுதான் என்றும் அவளுக்குச் சமாதானம் கூறி அனுப்பி வைத்தவள் தன் பணியைக் கவனிக்கச் சென்று விட்டாள்.
 
 
அதே நேரம் அந்தப் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஒரு ஹைடெக் டீக்கடையில் அமர்ந்தபடி சஞ்சய் அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான். அதில் மோகித் ஜெயின் கொலை பற்றி வந்திருந்த செய்தியை ஒரு கோணலான சிரிப்போடு படித்து முடித்தவன் எதையோ மனதில் நினைத்தபடி ஒரு புன்னகையோடு தனக்குத்தானே தலையசைத்துக் கொண்டான்.
 
 
அப்போது அவனின் அலைபேசிக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்ற யோசனையோடு அதை எடுத்தவன் அந்தப் பக்கமிருந்து சொல்லப்பட்ட செய்தியில் கண்கள் கோவைப் பழமாகச் சிவக்க ரௌத்திரம் ஆனான்.
 
 
“அவ்வளவு பெரிய ஆட்டக்காரனா அவன்... அந்த வெளியூர் ஆட்டகாரானை பார்க்க உள்ளூர் ஆட்டக்காரன் வைட்டிங்...” என்று கொஞ்சமும் பதட்டபடாமல் கூறியவன், மீண்டும் அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ஒரு சிறு இடைவெளி விட்டு “அதையும் பார்த்துடுவோமே...” என்று கூறி தான் இருக்கும் இடத்தையும் சேர்த்தே கூறினான்.
 
 
“இன்னைக்கு முழுக்க இங்க தான் இருக்கப் போறேன்... முடிஞ்சா செஞ்சு பாரு டா...” என்று அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரித்தவாறே அலைபேசியை அணைத்து அருகில் வைத்துவிட்டு படு ஸ்டைலாகத் தான் அமர்ந்திருந்த நாற்காலியை திருப்பிப் போட்டபடியே கால் மேல் கால் போட்டு வாயிலை நோக்கி அமர்ந்துக் கொண்டான்.
 
 
பள்ளியில் 11 மணி இடைவேளைக்கான மணி அடிக்கவும், வகுப்பறையில் இருந்து வெளிவந்த நேத்ராவின் அலைபேசி குரல் எழுப்பத் துவங்கியது. நேத்ராவிற்கு நட்பு வட்டம் என்பது மிகச் சிறியது. அவள் அதிகமாக யாரோடும் அவ்வளவு எளிதாகப் பழகிவிடும் ரகம் இல்லை என்பதனால் அவளுக்கு அலைபேசி அழைப்புகள் வருவது கூட மிகவும் அரிது தான்.
 
 
தன்னை யார் இந்த நேரத்தில் அழைப்பது என்ற எண்ணத்தோடு எடுத்தவள் ‘ராம் காலிங்’ என்ற எழுத்துக்கள் மின்னியதில் யோசனையின்றி அதை எடுத்து காதுக்குக் கொடுத்து இருந்தாள்.
 
 
“அம்மு இப்போ எப்படிடா இருக்கே...?” என்று அன்பொழுக குரல் காதில் ஒலித்தது. “ம்ம்ம்... நல்லா இருக்கேன்...” என்று பதில் அளித்தவள், அடுத்து ஏதோ பேச வருவதற்குள் “சரி இப்பவாவது சொல்லு, நேத்து என்ன ஆச்சு...” என்று ராம் கேட்டிருந்தான்.
 
 
“எனக்குப் பிரச்சனைனு நான் எப்போ உங்க கிட்ட சொன்னேன்...?!” என்று எதிர் கேள்வி ராமை நோக்கி நேத்ரா கேட்டு இருக்க... “உனக்கு ஏதாவதுனா எனக்கு யாரும் சொல்லணும்னு அவசியம் இல்ல... நீ உட்பட...” என்ற ராமின் வார்த்தைகளில் அத்தனை காதல் வழிந்தது.
 
 
அது சரியாக நேத்ராவிற்கும் புரிந்தது, அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அவள் அமைதி காக்க... “அம்மு” என அன்போடான அழைப்பு அவளின் செவிகளைத் தீண்டியதில் தன்னையும் மீறி “ம்ம்ம்...” என்று கேட்டிருந்தாள்.
 
 
“நைட்டு தான் எதுவும் சாப்பிடல... இப்பவாவது ஏதாவது சாப்பிட்டுட்டு வந்தீயா...?” என்ற அன்பும் அக்கறையுமான குரலில் நேத்ராவிற்குக் கண்கள் லேசாகப் பனிக்கத் தொடங்கியது.
 
 
இப்படித் தன் மேல் அன்பும் அக்கறையும் செலுத்தியவர்களின் நினைவு அவளை அறியாமலேயே வரத் தொடங்கவும் நெகிழ்ந்து பலவீனமாகத் தொடங்கிய மனதை இறுக்கிப் பிடித்தவள் கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமன் செய்துக் கொண்டாள்.
 
 
ராம் விசாரிக்கும் வரை அவளுக்கு உணவு பற்றிய நினைவு கூடக் கொஞ்சமும் வரவில்லை. இருந்தும் சமாளிக்கும் விதமாக “சாப்பிட்டேன்...” என்று மட்டும் தடுமாறிய குரலில் பதில் அளித்தவளின் வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அந்தப் பக்கமிருந்து படபடவென வசைமாரி பொழியத் தொடங்கி இருந்தது.
 
 
“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா...? நைட்டும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடல, கண்டிப்பா மதியத்துக்கும் எதுவும் கொண்டு வந்திருக்க மாட்டே... இப்படியே போனா உன் உடம்பு என்ன ஆகிறது... இதுல டீச்சர் வேற, பிள்ளைங்களுக்கு நல்லதை எடுத்துச் சொன்னா மட்டும் போதாது... நாமளும் அதன்படி நடந்துக்கணும்...” என்று தொடர்ந்து வசை பாடிக் கொண்டே ராம் செல்லவும் தன்னையறியாமலேயே ஒரு புன்னகை அரும்பியது நேத்ரா முகத்தில்.
 
 
“டீச்சர் தான் திட்டுவாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்... இங்க டீச்சரையே திட்டறாங்க பா...” குறும்போடு நேத்ரா கூறவும், அந்தப் பக்கமிருந்து திட்டிக் கொண்டிருந்தவனுக்கும் புன்னகை அரும்பியது.
 
 
“என்ன செய்யறது இந்த டீச்சரை வழிக்குக் கொண்டு வர கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் சரிப்பட்டு வராதே...” என்றவன் ஸ்நாக்ஸ் டைம் முடிந்ததற்கான மணி அடிக்கும் ஒலி கேட்கவும், “ஓகே ஈவினிங் மெசேஜ் பண்றேன்...” என்று விட்டு அலைபேசியை அணைத்து இருந்தான்.
 
 
மணி அடித்தவுடன் தான் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று நேத்ரா கூறுவதற்கு எந்த அவசியமும் இல்லாமல் சரியான புரிந்துணர்வோடு நடந்துக் கொண்ட ராமை நினைத்துக் வழக்கம் போலவே வியப்பு தான் தோன்றியது.
 
 
மெல்ல அவனை நினைத்தபடியே நடந்துக் கொண்டிருந்தவளின் மனதிற்குள் ஐந்து வருடமாக ராம் பழக்கமாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன் அவன் தன் காதலை சொன்னதும் இப்போது வரை அதை ஏற்றுக் கொண்டு தான் பதில் அளிக்காத நிலையிலும் கூட மீண்டும் வற்புறுத்தவோ தொல்லை செய்யவோ முயலாமல் இன்று வரை அன்று போலவே அதே அன்போடு பழகிக் கொண்டிருப்பவனையும் எண்ணி வழக்கம் போலவே வியந்தவள், எப்படி எல்லாம் சில சந்தர்பங்களில் அவன் இன்றியமையாதவனாகி போனான் என்பதையும் அசை போட்டபடியே வகுப்பிற்குள் நுழைந்தாள் நேத்ரா.
 
 
அதன் பிறகு அவளுக்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு செல்ல... மதிய உணவு நேர இடைவெளியில் அவளோடு வந்து இணைந்துக் கொண்டாள் வித்யா. அவளும் சீக்கிரமாகக் கிளம்பிவிட்டதால் உணவுக் கொண்டு வரவில்லை என்று கூறி நேத்ராவை வற்புறுத்தி கேன்டின் அழைத்துச் சென்றாள்.
 
 
அங்கு ஏதேதோ பேசியபடி சாப்பிடத் தொடங்கியவர்களின் பேச்சு நேற்று நடந்த கொலையில் வந்து நின்றது. வித்யாதான் அதை ஆரம்பித்து வைத்தாள். “தாரா உனக்குத் தெரியுமா... நம்ம தெரு முனையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்குல்ல, அங்க நேத்து ஒரு கொலை நடந்து இருக்காம்...” என்று பரபரப்பாகச் சொல்லியவள் காலைல நான் வரும் போது ஒரே கும்பல்... போலீஸ் அது இதுன்னு நம்ம ஏரியா மொத்தமும் நின்னுட்டு இருந்தாங்க...”
 
 
“என்ன எதுன்னு இறங்கிப் போய் விசாரிக்கத்தான் நேரமே இல்லை... நமக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்ல... நம்ம ஏரியால ஒரு கொலை... அங்க போய் இருந்தா நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்...” என்று ஏதோ காணாததைக் கண்டது போல விழிகள் விரிய பேசிக் கொண்டே சென்றாள்.
‘அதை நேரில் பார்த்தவளே நான்தான்’ என்று கூற முடியாமல் ஒரு தலையசைப்போடு வித்யா சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் நேத்ரா.
 
 
அப்போதே நினைவு வந்த வித்யா “நேத்துச் சாயந்திரம் நீ கூட அங்க போனே இல்ல...” என்று கேட்கவும், இதற்கு என்ன பதில் அளிப்பது எனத் தெரியாமல் நேத்ரா திருதிருத்துக் கொண்டு இருக்கும் போதே “நல்லவேளை லேட் நைட் தான் கொலை நடந்திருக்கும் போல... இல்லைனா உனக்குத் தேவையில்லாத சிக்கல் வந்து இருக்கும்... இப்படியெல்லாம் செய்யறவங்க கொஞ்சமும் இரக்கமே இல்லாதவங்களா தான் இருப்பாங்க... அவங்க தப்பிப்பதற்காக அங்க இருக்கற அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வச்சுக்கிறதோ... இல்ல அவங்களை யாரவது பிடிக்க வந்தா இவங்களைச் சுட்டுத் தள்ளிட்டு ஓடுவதோ... இல்ல கொலையை யாராவது பாத்துட்டா அவங்களையும் போட்டு தள்ளறதுன்னு பயங்கரச் சைகோத்தனமா பிஹேவ் பண்ணுவாங்கன்னு எத்தனை பேப்பர்ல படிச்சிருக்கோம்...” என்று நேத்ராவின் மனநிலையைப் பற்றிக் கொஞ்சமும் அறியாமல் வித்யா அவள் பாட்டிற்குப் பேசிக் கொண்டே செல்லச் செல்ல பயத்தில் விழி விரிய அமர்ந்திருந்தாள் நேத்ரா.
 
 
அதே நேரம் அவளின் மனமோ ‘நேற்று அந்தக் கொலையை நேரில் கண்ட சாட்சி நான்தான் எனும் போது அவன் அதே இடத்திலேயே நினைத்திருந்தால் என்னையும் சுட்டு தள்ளி இருக்க முடியும்... ஆனால் அவன் ஏன் அதைச் செய்யவில்லை...’ என்று எண்ணும் போதே ஏதோ ஒரு பயமும் பதட்டமும் அவளைச் சூழ்ந்துக் கொண்டது.
 
 
தன்னைக் கண்ட பிறகு அவன் கண்களில் வந்து போன அலட்சியமும் தன் கொலையைப் பார்த்து விட்டாள் என்ற பயம் சிறிதும் இல்லாமல் படு நிதானமாகத் தன்னை நோக்கி அவன் நடந்து வந்ததும் மீண்டும் ஒருமுறை கண்முன் தோன்றியது.
 
 
மீண்டும் ஒருமுறை அவன் கண்ணில் படாமல் இருப்பதே தனக்கு நல்லது என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து போனது. எப்போது அவன் கண்ணில் சிக்குகிறோமோ அன்று தன் உயிர் தன்னை விட்டுப் பிரிந்து இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள், இதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாத ஒரு பதட்டத்துடனும் பயத்துடனுமே அன்றைய நாளை கழிக்கத் தொடங்கினாள்.
 
 
வித்யாவிடம் இதைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்வதில் நேத்ராவிற்கு எந்தத் தயக்கமும் இல்லை தான். முதலில் இதைக் கூறி அவளையும் பயம் கொள்ள வைக்கக் கூடாது என்று எண்ணியவள் பிறகு வித்யாவின் படபடவென எல்லோரோடும் தாராளமாகப் பேசிப் பழகும் குணம் நினைவு வரவும் பேச்சு வாக்கில் அனைத்தையும் அனைவரிடமும் கூறி விடும் அபாயமும் இருப்பதால் இதைப் பற்றி அவளுக்குத் தெரியவே வரக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
 
 
பாவம் யாரு கண்ணில் படவே கூடாது இனி யாரை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தாளோ அவனை அன்று மாலையே பார்க்க நேரும் என்று அந்த நிமிடம் அவளுக்குத் தெரியவில்லை.
 
 
பள்ளி முடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது... நேத்ராவுக்கு அலுவலகச் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் இருந்ததனால் அவற்றை முடித்துக் கொண்டு கிளம்பத் தாமதமாகிவிட்டது. பள்ளி பேருந்து வேறு சென்றுவிட்டு இருக்க... பேருந்து நிறுத்தம் வரை செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக மாலை மங்க தொடங்கியிருந்த நேரத்தில் பள்ளியின் வளாகத்தைக் கடந்து நேத்ரா வெளியே ஒரு அடி எடுத்து வைக்கவும், "அம்மாஆஆஆ...." என்ற அலறலோடு அவளின் காலடியில் ஒருவன் வந்து விழவும் சரியாக இருந்தது.
 
 
அதில் பயத்தில் நடுங்கியவள் தன் கையில் இருந்த புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்தபடி நின்றிருக்க... அவளின் காலடியில் வந்து விழுந்தவனின் முழங்காலில் இருந்து ரத்தம் வழிந்தோட தொடங்கியிருந்தது.
 
 
அதை அவள் அதிர்வோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரு முரட்டுக் கால்கள் இருவரையும் நெருங்கியிருக்க... 'யார்...?!' என்ற பதட்டத்திலும் பயத்திலும் விழிகளை நிமிர்த்தியவள் மேலும் அதிர்ந்துப் போனாள்.
 
 
நேற்று இரவு பார்த்தவன், அதே போலத் துப்பாக்கியோடும் கண்களில் கனலோடும் அங்கு நின்றிருப்பதைக் கண்டவள் பயத்தில் இரண்டடி பின்னால் நகர... அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன், "ஹே... என்ன என்னைப் பாலோ பண்றியா நீ...?" என்று எகத்தாளமான குரலில் கேட்டபடியே அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்கவும், ஏற்கனவே ஓருமுறை அவன் செய்கைகளை நேரில் கண்டு பயத்தில் நின்றிருந்தவளுக்கு அவனை மீண்டும் கண்டதில் எழுந்த பதட்டமும் அவனின் இந்தக் கேள்வியும் கோபத்தை உண்டு செய்ய... தன்னை அறியாமலேயே அவனை மனதிற்குள் அடையாளப்படுத்திக் கொண்டு இருந்த "பொறுக்கி..." என்ற வார்த்தையை வாயில் இருந்து சத்தம் வராமல் முணுமுணுத்தபடியே அங்கிருந்து வேகமாக விலகி நடக்கத் தொடங்கினாள் நேத்ரா.
 
 
நேத்ராவை நெருங்கியதிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் இதழசைவிற்கான பொருளும் எளிதாகப் புரிய... அதற்கு அவன் பதிலளிப்பதற்குள் நேத்ரா அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
 
 
வேகவேகமாக ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து செல்பவளையே தலையை மட்டும் திருப்பிப் பார்த்தபடி நின்றிருந்தவன் "பொ... று... க்... கி... யா...?!" என ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துப் பார்த்தவன் "பாருடா... ம்ம்ம், அப்போ நம்ம பொறுக்கித்தனத்தைக் காட்டிட வேண்டியதுதான்..." என்று சுயிங்கம் மென்றுக் கொண்டிருந்த இதழில் ஒரு நக்கல் புன்னகையோடு கூறினான் அவன்.
 
 
அந்த வீதியில் அவள் சென்று திரும்பும் வரை நேத்ராவின் மேல் பதித்த பார்வையை எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவன் பின் தன் பார்வையை எதிரிலிருந்த பள்ளியின் பெயர் பதிக்கப்பட்ட அந்த உயரமான மதில் சுவரின் மேல் செலுத்தி சில நொடிகள் அதையே ஒரு பொருள் விளங்கா பார்வையோடு பார்த்துக் கொண்டு இருந்தவனின் இதழ்களில் ஒரு மந்தகாச புன்னகை வந்துப் போனது.
 
 
அதே நேரம் அவனின் அலைபேசி தன் இருப்பைப் பாடல் இசைத்து தெரிவிக்க... அதை அவன் காதுக்குக் கொடுத்த அடுத்த நொடி “என்ன தத்தாத்ரேயன்... சொன்ன வேலையைக் கச்சிதமாக முடிச்சிட்ட போல...” என்ற கரகரப்பான குரல் கேட்டது.
 
 
அதில் ஒரு அட்டகாசமான புன்னகையோடு “சொன்னதே முடிக்கத் தானே... அப்புறம் முடிக்காம எப்படி...?!” என்று அவனும் பதிலளித்து இருந்தான்.
 
 
“என்ன சார் பேச்சுல எதுகை மோனை எல்லாம் துள்ளி விளையாடுது... பயங்கரக் குஷியில் இருக்கீங்க போலவே...”
 
 
“குஷி இல்லாமலா...!? இப்பத் தானே ஒரு டீச்சரம்மா பொறுக்கின்னு பெயர் சூட்டு விழா நடத்தி கௌரவிச்சிட்டு போயிருக்காங்க...” என்றான் ஒரு ரசனையான புன்னகையோடு.
 
 
“என்னடா குரலே அவ்வளவு ரசனையா இருக்கு... டீச்சரம்மாகிட்ட விழுந்துட்டியா...?”
 
 
“சேச்சே... யாரு...” என்று கெத்தான குரலில் கூறியவன், பேச்சை மாற்றும் விதமாக “விஷயம் இல்லாம கூப்பிட மாட்டீங்களே... இன்னைக்கு யாரை முடிக்கணும்...” என்றான் குறும்பு குரலில்.
 
 
“அடப்பாவி கொலைகாரா... கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் கொலை செய்யறதை பத்தி இப்படிப் பேசுற... இது மட்டும் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் காதில் விழுந்தது அப்படியே வந்து உன்னை அமுக்கி இருப்பார்...” என்று அந்தப் பக்கம் இருப்பவர் கூறியவுடன்
 
 
“அச்சச்சோ நேக்கு பயமா இருக்கே... இப்படியெல்லாம் பயங்காட்டினா நான் அப்புறம் அழுதுருவேன் பாத்துக்கோங்க... இப்ப நான் என்ன செய்யறது ஏதாவது ஸ்கேல் பின்னாடியோ... இல்ல பெஞ்சுக்கு கீழேயோ ஓடி ஒளிஞ்சுகட்டா...” என்று பயந்த குரலில் பேச முயன்றவனின் குரலில் டன்டன்னாகக் குறும்பு மட்டுமே வழிந்துக் கொண்டிருந்தது.
 
 
“என்னது ஸ்கேல்லு பென்ஞ்சா டீச்சரம்மாவோட தாக்கம் ரொம்பவே அதிகமாத்தான் இருக்கு போலவே...” என்று யோசனையோடானா குரல் கேட்கவும், “அதெல்லாம் எதுவும் இல்லை...” என்று தத்தாத்ரேயன் சமாளிக்க முயன்றான்.
 
 
“இந்த ரவுடி பயலை எனக்குப் பத்து வருஷமா தெரியும்... இப்படி ஒரு வார்த்தையை ஒரு பொம்பளப்புள்ள அவனைப் பார்த்து அசால்ட்டா சொல்லிட்டுப் போகத்தான் முடியுமா...? அதைச் சாரும் இப்படி ரசனையோடு பேசிட்டுதான் இருப்பாரா...?!” என்று சரியாகப் பாயிண்ட்டை பிடித்து இருந்தார் அந்தப்பக்கம் இருந்தவர்.
 
 
அதற்குப் பதிலளிக்க முடியாமல் தலையைக் கோதிக் கொண்ட தத்தாத்ரேயன் “அப்புறம் என்ன சொல்றார் இன்ஸ்பெக்டர் மதூஊஊஊசூதனன்ன்ன்னன்... அந்தத் தியாகியோட மரணத்திற்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சிட்டாராமாம்...” என்றான் வேறு பேச்சுக்குத் தாவி...
 
 
“ம்ம்ம்... குற்றவாளிகளை நெருங்கிட்டாராம்...”
 
 
“ஆஹான்... என் பக்கத்துல அப்படி யாரும் இல்லையே...” என்று தன்னைச்சுற்றி ஒருமுறை சுழன்றபடியே கேலி செய்தவன் “ஒருவேளை உங்க பக்கத்துல நிக்கிறாரா பாருங்க...” என்று அவரையே வாரினான் தத்தாத்ரேயன்.
 
 
“என்ன மிஸ்டர் தத்தாத்ரேயன்... யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு மறந்து போச்சா...! என்னையே கேலி செய்யற அளவுக்குத் துணிச்சல் வந்துடுச்சா...?!” என்று அவர் அதட்டலான குரலில் கேட்க தொடங்கவும்,
 
 
“ஏன் தெரியாம... நல்லா தெரியுமே, நான் பேசிட்டு இருக்கிறது மிஸ்டர் ஆராவமுதன் இந்தச் சிட்டியோட கமிஷனர்கிட்டன்னு... அதுமட்டுமல்லாமல் அவர் என்னோட செல்ல அங்கிளும் கூட...” என்று அவர் முடிப்பதற்குள் இடையே புகுந்து சிரிப்போடு பதிலளித்திருந்தான் ஏசிபி சஞ்சய் தத்தாத்ரேயன்.
 
 
“போடா அரட்டை... நாளைக்கு என்னை வீட்டில் வந்து பாரு...” என்று விட்டு அவர் தன் தொடர்பை துண்டித்துக் கொள்ள... அதே நேரம் தத்தாத்ரேயன் அழைத்து இருந்ததன் பேரில் அங்கு வந்து சேர்ந்த அவன் சரகத்திற்கு உட்பட்ட காவலர்கள் அங்குக் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு இவனிடம் வந்து அனுமதி வேண்டி நின்றிருந்தனர்.
 
 
ஒரு தலையசைப்பில் அவர்களுக்கு விடை கொடுத்தவன், தன் ராயல் என்பில்டை நோக்கி நடக்கும் போது அந்தப் பக்கம் தன் தாயோடு சென்று கொண்டு இருந்த குழந்தை ஒன்று “குல்பிஈஈஈஈஈஈ...” என்று கத்தி அழைத்ததில் அந்தப் பக்கம் திரும்பியவனுக்கு நேத்ராவின் முகம் மன கண்ணில் தோன்றியது.
 
 
அவள் அமைதியான மிளகாய் பஜ்ஜி என்று தெரியாமல்...!!!
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 2

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 3 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  
கனவு – 3
 
 
சஞ்சய் தத்தாத்ரேயன் ஐபிஎஸ்
 
 
இருபத்து ஒன்பது வயதுடைய ஆறடி ஆணழகன். உயரத்திற்கேற்ற உடல்வாகு காவல்துறைக்கேயான உடற்பயிற்சியினால் மேலும் முறுக்கேறி இருக்கும் கட்டுடல். ஆந்திராவில் மூன்று வருடங்களாக உதவி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவிட்டு மாற்றலாகி இங்கு வந்து மூன்று  வாரங்கள் ஆகிறது.
 
 
அவன் மனதளவில் நெருக்கமாக நினைப்பவர்களுக்கு மட்டும் அன்பானவன் குறும்பானவன் அடிபணிபவன். மற்றவர்களுக்கு அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமான எதிரி. எதையும் பேசித் தீர்க்கும் வழக்கம் அவனிடத்தில் இல்லை...! தீர்த்துவிட்டு தான் பேசுவான்...!!
 
 
அதே போல யார் சொல்வதையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடும் பழக்கமும் அவனிடம் இல்லை. தானே அதை முழுவதுமாக அலசி ஆராய்ந்து விட்டே அடுத்த நடவடிக்கையை எடுப்பான்.
 
 
இங்கு வந்த பிறகு சஞ்சய் எடுத்த முதல் நடவடிக்கையைத் தான் துரதிருஷ்டவசமாக நேத்ரா நேரில் காண நேர்ந்தது. மோஹித் ஜெயின், அவனின் மரணத்தை எண்ணி மற்றவர்கள் பரிதாபப்படும் அளவிற்கு அவன் ஒன்றும் அப்பாவி எல்லாம் இல்லை... பல அடப்பாவி வேலைகளைச் செய்து கொண்டிருந்தவன் தான்.
 
 
இன்றும் கூட அவனின் மரணச் செய்தியைக் கேட்டு வருந்தியவர்களை விடச் சந்தோஷித்தவர்களே அதிகம். ஒரு சிலர் அவரிடம் வாங்கிய பணத்தை இனி திரும்பச் செலுத்த வேண்டியது இல்லை என்று சந்தோஷித்தனர் தான். ஆனால் அதைவிடவும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்தவர்கள் வேறு சிலர். அந்த வேறு சிலருக்காகத்தான் இந்த வதத்தையே நடத்தி முடித்திருந்தான் சஞ்சய் தத்தாத்ரேயன்.
 
 
தத்தாத்ரேயன் இங்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அவனின் சரகத்திற்கு உட்பட்ட காவல்நிலையத்திற்கு ஒரு நாள் செல்லும் போது அதனுள் இருந்து ஒரு பெண்மணி அழுகையோடும் ஆற்றாமையோடான புலம்பலோடும் தலையிலும் மார்பிலும் படார் படார் என அடித்துக் கொண்டும் மண்ணை அள்ளி காவல்நிலையத்தின் மேல் தூத்தியவாறும் வந்துக் கொண்டு இருப்பதைக் கண்டு காவல்நிலையத்தின் அருகில் செல்லாமல் தூரத்திலேயே தன் புல்லட்டை நிறுத்தியவன் யோசனையோடு அவர்களையே கவனித்துக் கொண்டு இருந்தான்.
 
 
அவர்கள் சஞ்சய்யை நெருங்கவும் தான் சீருடையில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு என்னவென்று விசாரிக்க அவன் முயலவும், தன் கோபம் அனைத்தையும் அவன் மேல் கொட்டி தீர்த்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.
 
 
உடன் இருந்த பெண்ணோ கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் அந்தப் பெண்மணியை அங்கிருந்து இழுத்து செல்வதிலேயே குறியாக இருந்தது.
 
 
ஆனால் அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்த தீவிரம் சஞ்சய்க்கு எதையோ உணர்த்த, அவளின் இந்த அதீத அமைதி கொஞ்சமும் அவனுக்குச் சரியாகப் படவில்லை.
 
 
ஓரளவு அந்தப் பெண்மணி திட்டி தீர்த்து முடிக்கும் வரை அமைதி காத்தவன், “இப்போ உங்க கோபம் குறைந்ததா...? இனியாவது சொல்லுங்க... என்ன பிரச்சனை...?” என்று அமைதியான குரலிலேயே கேட்டான்.
 
 
“என்ன ப்ரச்சனையா...? அதை உன்கிட்ட எதுக்குயா சொல்லணும்... ஏன் சொல்லணும்...? சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியே ஒண்ணும் நடக்கலையாம், இதுல இவர்கிட்ட சொன்னா அப்படியே*...” என்று தன் அழுகையைக் கூட மறந்து அந்தப் பெண்மணி கத்த தொடங்கினார்.
 
 
மேலும் அவர் பேசிக் கொண்டே செல்வதற்குள் அவரைத் தடுத்த அந்தப் பெண் அங்கிருந்து போவதிலேயே குறியாக இருந்தாள். அந்தப் பெண்மணியும் சஞ்சய்யை ஒரு எரிச்சலான பார்வை பார்த்து விட்டு நகர முயல, அவர்களுக்கு வழி விடாமல் மறித்தவாறு நின்றவனைக் கண்டு ஏதோ அப்பெண்மணி பேச தொடங்குவதற்குள்,
 
 
“என்ன ப்ரச்சனைன்னு சொல்லுங்க மா... நிச்சயமா உங்களுக்கு என்னால் உதவ முடியும்...” என்று அவருக்கு எடுத்து சொல்ல சஞ்சய் முயல, “நீ ஒண்ணியும் இங்கே *வாணாம்... நாங்க பாத்துக்கறோம் எங்க ப்ரச்சனையை...” என்றார் அவர்.
 
 
“என்ன பார்த்துக்கப் போறீங்க...! இதோ இங்கே நிக்கற உங்க பொண்ணு சூசைட் செஞ்சுக்கறதையா...?!” என்றிருந்தான் அதுவரை கடைபிடித்து வந்த பொறுமை காற்றில் பறக்க...
 
 
அதில் இருவரும் இரு வேறு வகையான திடுக்கிடலோடு சஞ்சய்யை பார்த்தனர். “எங்குலசாமிஈஈஈ...” என்று பெரும் குரல் எடுத்து அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு கதற தொடங்கியவரோடு அப்பெண்ணும் கதறினாள்.
 
 
ஒரு வழியாக இருவரையும் சமாதானம் செய்து தன்னை அடையாளபடுத்திக் கொண்டவன் என்னவென்று விசாரித்தான். அவனால் உதவ முடியும் என்று கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படாத அளவிற்கான அனுபவம் தங்களுக்கு ஏற்பட்டு இருந்தாலும் கிடைத்த துரும்பை பற்றிக் கொண்டு கரைசேரும் வாய்ப்பை தவறவிட விரும்பாமல் மகளின் தற்கொலை என்ற வார்த்தை பெற்ற வயிறை பதற செய்ததில் அனைத்தையும் கூறத் தொடங்கினார்.
 
 
மோஹித் வீட்டில் ஆறு வருடங்களாக வீட்டு வேலைக்கு இருப்பவர் தான் இந்த சரோஜா. கணவன் வேறு ஒரு பெண்ணோடு சென்றுவிடவே இவரே வேலை செய்து பெண்ணைக் காப்பாற்ற வேண்டிய நிலை. திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்த பெண் என்பதால் பொத்தி பொத்தி வளர்த்தார்.
 
 
தங்கள் குப்பம் இருந்த பகுதிக்கு வெகு அருகில் இருந்தது மோஹித்தின் வீடு என்பதால் போக வர எந்தச் செலவும் இல்லை என்பதோடு மாத வருமானமும் சரியாகக் கொடுத்து விடுவதால் ஓரளவு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவரால் ஜீவனத்தை ஓட்ட முடிந்தது.
 
 
சில வீடுகளில் சொல்லவதை போல நாளெல்லாம் வேலை சொல்லி அங்கேயே இருக்கும்படி மோஹித்தின் மனைவி சோனாலி தொந்தரவு எல்லாம் கொடுப்பதும் கிடையாது... வேலையை எப்போது முடித்துக் கொடுக்கறாரோ அப்போதே வீட்டிற்குச் சென்று விடலாம் என்பதால் நிம்மதியாகவே சென்றுக் கொண்டு இருந்தது இவரது வாழ்க்கை.
 
 
சரோஜாவும் மோஹித்தை பற்றி அவரின் பெண் மோகம் பற்றியெல்லாம் நிறையவே கேள்வி பட்டு இருக்கிறார் தான். ஆனால் உழைத்து உழைத்து மெலிந்து போன தோற்றத்தில் தன்னைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் எப்போதும் கசங்கிய உடையுடணும் கலைந்த தலையுடணும் இருக்கும் சரோஜா மோஹித்தின் கவனத்தைக் கவராமல் போனது அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்துப் போனது.
 
 
இதனாலேயே இத்தனை வருடங்கள் அவரால் அங்கு வேலையில் நீடிக்க முடிந்தது.
 
 
ஆனால் வெகு கவனமாகத் தன் மகளை அந்தப் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார் சரோஜா. அவரின் மகள் ரம்யா இப்போது தான் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் சின்னப்பெண் என்பதால் என்ன காரணம் என்றெல்லாம் அவளுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை சரோஜா.
 
 
ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த வீட்டிற்குத் தன்னைத் தேடிக் கொண்டு கூட வரக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் வைத்திருந்தார். இத்தனை வருடங்களில் ஒரு முறை கூடச் ரம்யா அங்கு வந்ததே இல்லை.
 
 
இந்நிலையில்தான் நேற்று சரோஜா சமையலறையில் வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாக மாடிப்படியில் வழுக்கி சோனாலி கீழே விழுந்துவிட... வீட்டில் வேறு யாரும் இல்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் சரோஜா. அங்குச் சற்று நேரம் ஆகிவிட்டது.
 
 
இதற்கிடையில் வழக்கமாகச் சரோஜா வீட்டிற்கு வரும் நேரத்தை கடந்தும் வீட்டிற்கு வந்து சேராததால் பள்ளி முடிந்து வந்து காத்திருந்து பார்த்த ரம்யா வீடு பூட்டி இருந்த காரணத்தினால் உள்ளேயும் செல்ல முடியாமல் வெகுநேரம் நின்று பார்த்துவிட்டு ஏதாவது அவசர வேலை இருந்து இருக்கும் இல்லை என்றால் இதுவரை இப்படித் தாமதமானது இல்லையே என்ற எண்ணத்தோடு வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு வர எண்ணி மோஹித்தின் வீட்டிற்குச் சென்றாள்.
 
 
அங்கு அப்போதே வீட்டிற்குத் திரும்பி இருந்த மோஹித் சோனாலியை பற்றிய தகவல் தொலைபேசி வழியாகத் தனக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டதால் வீட்டில் தனித்திருக்க... அந்த நேரம் பார்த்து சாவியை வாங்க வந்து நின்றாள் ரம்யா.
 
 
இதுவரை சரோஜாவின் மகளைப் பார்த்திராத மோஹித் இளமை அழகுடன் தன் முன் வந்து நின்றவளை கண்கள் பளபளக்க பார்த்துக் கொண்டிருந்தவன் வீட்டிற்கு வந்தவளை உபசரிப்பது போல உள்ளே அழைத்து அமர சொல்ல... அவளோ அதெல்லாம் வேண்டாம் சாவி மட்டும் போதும் என்று உள்ளே வர மறுத்துக் கொண்டிருந்தாள்.
 
 
“சரோஜா பக்கத்தில் இருக்கும் கடை வரை சென்று இருப்பதாகவும் அவர் வந்த பின்பு இருவரும் சேர்ந்தே வீட்டிற்குப் போகலாம்... ஏன் நீ போய்ப் பூட்டியிருக்கும் வீட்டின் முன் வெளியில் நிற்க வேண்டும்...” என்றெல்லாம் மோஹித் கூறவும்,
 
 
அதுவும் சரி என்று தோன்றவும், ரம்யா அவன் சொன்னதை நம்பி வீட்டிற்குள் சென்றாள். ‘பள்ளி முடிந்து களைப்பாக வந்திருப்பாய் ஏதாவது குடிக்கத் தருகிறேன்...” என்ற பெயரில் அவளுக்குக் கொடுத்த பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட... அவனின் குணம் பற்றி அறியாமல் எந்தச் சந்தேகமும் இன்றி வாங்கிப் பருகியவள் சில நிமிடங்களில் மயக்கத்திற்குச் சென்றாள்.
 
 
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மோஹித் அந்தச் சிறு மலரை சூறையாடிக் கொண்டிருக்கும் வேளையில் வீடு திரும்பினர் சோனாலியும் சரோஜாவும். தன் கண்முன் கண்ட காட்சியில் அலறித் துடித்துப் பதறிய சரோஜா மோஹித்தோடு சண்டையிட்டுத் தலையில் அடித்துக் கொண்டு அழுது புரண்ட எதற்கும் அவனிடமிருந்து எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமலே போனது.
 
 
மிக அலட்சியமாகச் சரோஜாவை எட்டி உதைத்தவன் குளியலறைக்குள் சென்று புகுந்துக் கொள்ள... சோனாலியும் இங்கு இப்படி ஒன்றை பார்த்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்.
 
 
ஒருவழியாக மகளின் மயக்கத்தைத் தெளிய வைத்து அவளை எழுப்பி வீடு கொண்டு வந்து சேர்பதற்குள் பெரும்பாடுபட்டு போனாள் சரோஜா. தன் உண்மை நிலையைப் புரிந்து அழுது அரற்றிக் துடித்துக் கொண்டிருந்த மகளைச் சமாதானப்படுத்தத் தெரியாது அவரும் கூடச் சேர்ந்து துடித்துக் கொண்டிருந்தார்.
 
 
மறுநாள் காலை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்திட போராட எண்ணியவர்கள் காவல் நிலையத்தை நாடினார்கள். ஆனால் அங்கும் வெகு அலட்சியமாகவே நடத்தப்பட்டார்கள் இருவரும். முதலில் இவர்கள் கொடுத்த புகாரை கூட அங்கு யாரும் வாங்க தயாராக இல்லை.
 
 
‘சரி நடந்தது நடந்து போச்சு... இப்போ அதுக்கு என்ன...?’ என்பது போலவே இருந்தது அவர்களின் நடவடிக்கைகள். அதற்கும் மேலாகப் போய் அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் மதுசூதனன் “ஆறு வருஷமா அவர் வீட்டு பணத்துல வளர்த்த உடம்பு தானே, அதில் அவருக்கு இல்லாத உரிமையா...?” என்று எகத்தாளமாகப் பேச... கோபத்தில் அவரை அடிக்கப் பாய்ந்த விட்டார் சரோஜா.
 
 
ஆனால் அதற்குள் அவரைத் தடுத்து நிறுத்தி இருந்த ரம்யா இங்குத் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பது புரிந்துப் போக, தாயை அழைத்துக் கொண்டு வீடு திரும்ப எண்ணினாள். ஆனால் அதற்கும் விடுவதாக இல்லை மதுசூதனன், “என்னையே அடிக்க வரீயா... உன்மேல விபசார வழக்கு போட்டு உன்னையும் உன் பொண்ணையும் என்ன செய்யறேன் பாரு...” என்று ஆங்காரமாகக் கத்தியவன் மற்ற காவலர்களிடம் அதற்கான செயலில் இறங்குவதற்குக் கட்டளையிட்டபடியே தன் பார்வையைச் ரம்யாவின் மேல் படர விட்டான்.
 
 
அழகோடு இளம்பெண்ணாகத் தன் முன் நின்றிருந்தவளை கண்டவனுக்கு வேறு ஒரு எண்ணம் தலைதூக்க... அவளை அlருகில் இருந்த சிறைக்குள் இழுத்துச் சென்று நாசம் செய்ய முயன்றான். சரோஜா கதறித் துடித்துக் காலில் விழுந்து கெஞ்சியது எதுவும் அவனிடம் வேலைக்கு ஆகவில்லை.
 
 
அங்கிருந்த மற்ற காவலர்களுக்கு எல்லாம் பாவமாக இருந்த போதும் மதுசூதனனை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர் அவர்கள். அவனின் அடாவடித்தனம் தெரிந்தே இவர்கள் இங்கு வந்து சிக்கிக் கொண்டதை எண்ணி பாவப்பட்டவர்கள் இவர்களுக்கு உதவ முடியாமலும் அவன் பக்கம் நிற்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
 
 
சரியாக அதே நேரம் இவர்கள் இங்கு வந்து இருந்த செய்தி மோஹித்தை சென்று அடைந்திருந்தது. இங்கு என்ன நிலவரம் என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டவன், மதுசூதனன் எடுத்திருந்த முடிவை கேட்டு “அதுவும் சரிதான்... அப்படியே செய்துடு...” என்று கட்டளையிட்டு விட்டு நாளை வந்து தன்னைப் பார்க்கும்படியும் கூறியிருந்தான்.
 
 
அந்தக் கடைசி வரியே மதுசூதனனுக்குத் தனக்கு நாளை கிடைக்கப் போகும் வெகுமதியை பற்றிப் புரிய வைத்திருக்க... வாயெல்லாம் பல்லாகப் பேசிவிட்டு திரும்பியவன் அங்குச் சரோஜாவும் ரம்யாவும் இல்லாததைக் கண்டு திகைத்து மற்ற காவலர்களிடம் எகிறத் தொடங்கியிருந்தான்.
 
 
இங்கு அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்த இடைவெளியில் அங்கிருந்த ஏட்டு தான் இவர்களை அவன் அறியாமல் வெளியே அனுப்பி வைத்திருந்தார். வார்த்தைகளால் எதுவும் பேசாமல் சைகை மூலமே தன்னாலான உதவியை அவர்களுக்குச் செய்து முடித்திருந்தார் அந்த இரு பெண் குழந்தைகளின் தகப்பன்.
 
 
அவரால் அது மட்டுமே செய்ய முடியும், அதற்கு மேல் செய்யவோ அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடவோ அங்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. இதற்கெல்லாம் முயன்றால் இருக்கிற வேலையையும் இழந்து மற்றவர்களின் முன் குற்றவாளியாகக் கூட நிற்க வைக்கப்பட அனைத்து வாய்ப்புகளும் உண்டு என்று பல வருடங்களாக இங்குப் பணியில் இருக்கும் அவருக்கு நன்றாகவே தெரியும்.
 
 
அங்கிருந்து தப்பித்து வெளியில் சென்றவர்களைப் பிடித்து வர சொல்லி மதுசூதனன் மற்ற காவலர்களுக்குக் கட்டளையிட... அதையும் அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த  ஒருவன் அழகாகச் சமாளித்து இருந்தான்.
 
 
புதிய உதவி கண்காணிப்பாளர் பதவியேற்று ஒரு வாரமே ஆகியிருந்ததை அழகாகப் பயன்படுத்திக் கொண்டவன், “அவர் இன்று இங்கு வருவதாகத் தகவல் கிடைத்து இருக்கு சார்... இப்போ இந்தப் பிரச்சினை எல்லாம் வேண்டாம்...” என்று மதுசூதனனுக்கு நன்மை செய்வது போலவே கூறவும், அவனுக்கும் அது சரியாகப்பட்டது.
 
 
வந்திருப்பவன் யார் எப்படி என்ற எதுவும் இன்னும் சரிவரத் தெரியாத நிலையில் எதிலும் தேவை இல்லாமல் சிக்கிக் கொள்ள விரும்பாதவன் ‘தன்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள வசதியோ பின்புலமோ இல்லாத இரு பெண்கள் தானே இவர்கள் எங்குப் போய் விடப் போகிறார்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் அவர்களை...’ என்ற எண்ணத்தில் மதுசூதனனும் விட்டு விட்டான். அங்கிருந்து வெளியில் வந்த கொண்டிருந்தவர்களைத் தான் சஞ்சய் காண நேர்ந்தது.
 
 
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய்க்கு ரத்தம் கொதித்துப் போனது. கண்கள் கனல்களாக மாறி மதுசூதனனை அப்போதே உள்ளே புகுந்து அடித்துத் துவம்சம் செய்யும் அளவு ஆவேசம் எழுந்தவுடன், இதில் இன்னும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதை உணர்ந்தவன் “மோஹித் மனைவி ஏன் இதையெல்லாம் தட்டிக் கேட்கலை...?” என்ற தன் சந்தேகத்தை முதலில் தெளிவுபடுத்த எண்ணி கேட்டான்.
 
 
“அவங்க தட்டி கேட்காததனால தான் இப்போ வர உயிரோட இருக்காங்க சார்...” என்ற சரோஜா, அவர் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமைகளையும் கூறி, “படுபாவி அவங்களைக் கொஞ்சமாவா கொடுமைப்படுத்தறான்... தினம்தினம் வீட்டுக்கு பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து அவங்களுக்கு எல்லாம் சேவகம் செய்ய வெச்சு... இவங்க கொஞ்சம் முகம் சுளித்தாலும் கூட அடி உதைன்னு அவங்களைக் குதறி எடுத்துடுவான்... இதுக்கெல்லாம் மேல அவங்க எல்லாத்துக்கும் அடிபணிந்து போக முக்கியமான காரணம் அவங்க பொண்ணு... அந்தப் பாவிகிட்ட இருந்து அவங்க பிரிந்து போக முடிவு செய்தப்போ, சமூகத்தில் அவனுக்கான கௌரவத்தைக் காப்பாத்தணும்னா அவன் பொண்டாட்டி அவனை விட்டு போனா அது மிகப்பெரிய அவமானம்னு நினைச்ச அந்தப் படுபாவி “நீ என்னை விட்டுப் பிரிய நினைச்சா அடுத்த நிமிடம் உன் பொண்ணையும் ****....” என மிரட்டவும் அதிர்ந்து போன சோனாலி “அவ... அவ... எனக்கு மட்டும் இல்லை... உங்களுக்கும் பொண்ணு தானே...?!” என்று கையெடுத்து கும்பிட்டு அழ தொடங்கினாள்.
 
 
“எனக்குப் பொண்ணுங்கனாலே ஒரே மாதிரி தான் தெரிவாங்க... அதில் என் பொண்ணு, உன் பொண்ணுன்னு எல்லாம் நான் பார்க்கறதே இல்லனு சொல்லி இருக்கான்... அப்பறம் தான் அந்த அம்மா அவங்க குழந்தையை அவங்க கிராமத்துக்கு அனுப்பிட்டு இங்கே ஒரு நடை பிணமா வாழறாங்க... இந்த விஷயமெல்லாம் எனக்கு இரண்டு மாசம் முன்னே தான் தெரிய வந்தது... ஒரு நாள் அந்தாளு இவங்களை மிரட்டும் போது கேட்டுட்டேன்... இனி நாம இங்கே இருக்கக் கூடாதுன்னு அப்போவே முடிவெடுத்துட்டேன், ஆனா மூணு மாசம் முன்னே புள்ளைக்குப் பீஸ் கட்ட என் சம்பளத்துல அட்வான்ஸ் வாங்கி இருந்தேன் சார்... அது அடுத்த மாசத்தோட முடியுது, அதுவரைக்கும் வேலை செஞ்சி கணக்கை தீர்த்துக்க நினைச்சேன்... ஆனா அதுக்குள்ள அந்தப் படுபாவி...” எனக் கதறி அழுதபடியே விளக்கம் அளிக்கவும், இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தத்தாத்ரேயனுக்கு மோஹித் மனித உருவில் உலா வரும் ஒரு அருவருக்கத்தக்க மிருகமாகவே தெரிந்தான்.
 
 
மோஹித்தை போல எத்தனையோ காமகொடூரன்களை இந்தச் சமீப காலங்களில் பார்த்திருந்தாலும் கூட மோஹித் போன்ற ஒருவனின் செயல்களையும் அவன் தன் மனைவியை மிரட்டுவதற்காகக் கையிலெடுத்த ஆயுதத்தையும் தத்தாத்ரேயனால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போனது.
 
 
அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக இருவருக்கும் உறுதி அளித்த சஞ்சய், ரம்யாவிடம் அவளின் முடிவை பற்றிக் கூறி “இதற்கு எந்த அவசியமும் இல்லை...” என்று புரிய வைக்க முயல, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறி கதறியவள் “நேற்றே இந்த முடிவை எடுத்து இருப்பேன்... ஆனால் என் இறப்பிற்கு முன் எனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கணும்னுதான் இவ்வளவு தூரம் வந்தேன்... ஆனால் அது இனி கிடைக்காதுனு இப்போ தெளிவா தெரிஞ்சு போச்சு...” என்று கூறி அழ தொடங்கினாள்.
 
 
‘நியாயம் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்... ஆனால் இதுல நீ எதுக்குச் சாகணும்...?” எனவும் “நான்... நான்...” என்று அருவருப்போடு தன்னையும் தன் உடலையும் பார்த்துக் கொண்டே கூறியவளின் மனநிலை சஞ்சய்க்கு நன்றாகவே புரிந்தது. மெல்ல அவளை நெருங்கி அவளுக்குப் புரிய வைக்க முயல, பயத்தோடும் பதட்டத்துடனும் பல அடிகள் பின்னுக்குச் சென்றாள் ரம்யா.
 
 
ஒரு புன்னகையோடு மீண்டும் அவளை நெருங்கி மெல்ல அவளின் தலையில் தன் கரங்களைப் பதித்து ஆதரவாகத் தடவி, முதலில் அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான் சஞ்சய். முதலில் முரண்டு பிடித்தவள் கூட அந்தத் தாய்மையோடான வருடலில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கினாள். “உனக்கு என்ன வயசு ஆகுது...?” என்று கேட்டான்.
 
 
“பதினேழு” எனத் தயக்கமும் அழுகையுமான குரலில் அவனை நிமிர்ந்து பார்க்காமல் பதிலளித்தாள் ரம்யா. “இத்தனை வருஷத்துல சாக்கடை உன்மேல தெரிக்கிறதோ... இல்ல நீ தவறிப் போய்ச் சேறில் விழுவதோ நடக்கவே இல்லையா...?” என்று சஞ்சய் கேட்கவும், புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள் ‘நடந்திருக்கிறது’ என்பது போலத் தலையை அசைத்தாள்.
 
 
“அப்போ எல்லாம் நீ சேறுபட்ட இடத்தைக் கழுவி சுத்தம் செய்வியா...?! இல்லை, அந்த இடத்தை வெட்டி தூக்கி எறிஞ்சிடுவியா...!?” என்று மீண்டும் கேட்க, சஞ்சய் கூறவருவது ரம்யாவிற்கு நன்றாகவே புரிந்தது.
 
 
ஆனாலும் முயன்று ஏதோ விளக்கமளிக்க முயன்றவளை தடுத்து நிறுத்தியவன் “நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லடா, உனக்குத் தெரியாமலே நடந்த தவறுக்கு நீ எந்த வகையில் பொறுப்பாக முடியும் சொல்லு...” என்று விளக்கினான்.
 
 
“ஆனாலும் இந்தச் சமுதாயம்...” என மீண்டும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டு பயந்து பேசுபவளை பரிதாபமாகப் பார்த்தவன் “நீ நினைப்பது போல எல்லாம் எதுவும் இல்ல... இன்னைக்கு இருக்கிற இளைய சமுதாயம் ரொம்பவே தெளிவா இருக்காங்க, அவங்களுக்குத் தவறு செய்றவங்க யாருனும் தெரியும்... தெரிஞ்சே தவறா போறவங்க யாருனும் தெரியும்... எந்தத் தப்பும் செய்யாமல் தவறு இழைக்கப்பட்டவங்க யாருனும் தெரியும்... யார் யாரை எப்படி அணுகுவது நடத்தணும்னு எல்லாம் நல்லாவே தெரியும்... உனக்கு இப்படி ஒண்ணு நடந்ததையே நீ மறந்து உன் வாழ்க்கையை நீ எப்பவும் போல வாழு... உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைனா சொல்லு உனக்கு எல்லா உதவியும் நான் செஞ்சு உன்னை வேறு பள்ளியில் வேறு இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கறேன்... அங்கே நீ ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கு, இதையெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே...” என்று தைரியம் அளித்தவன் மதுசூதனனை மனதில் கொண்டு அன்றைய அவர்களின் பாதுகாப்பை தன் கையில் எடுத்துக் கொண்டவன் அவர்களை ஒரு காப்பகத்தில் தற்சமயம் தங்க ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு வேறு பள்ளிக்கு ரம்யாவை மாற்றும் முயற்சியில் இறங்கினான்.
 
 
இதற்கு நடுவில் மோஹித்தைப் பற்றித் தன் பாணியின் விசாரிக்கத் துவங்கியவனுக்கு அடுக்கடுக்காக வந்து குவிந்தது அவன் மீதான குற்றச்சாட்டுகள் மட்டுமே.
 
 
தன்னிடம் பணிபுரிபவர்களில் தொடங்கி, பணம் கொடுத்து இருந்தவர்கள் வரை அனைவரிடமும் தன் கைவரிசையைக் காட்டி இருந்தான் மோஹித். இதில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் மிரட்டி பணிய வைத்ததாகவே இருந்தது.
 
 
பணிபுரிபவர்களிடம் மிகப் பெரிய தொகையைக் கையாடல் செய்து விட்டதாகப் போலியாகச் சாட்சிகள் தயாரித்து அவர்கள் மேல் வழக்குத் தொடுப்பேன் என்றும் பணம் வாங்கி இருந்தவர்களிடம் அவர்கள் வாங்கிய தொகையை அப்படியே பத்து மடங்கு உயர்த்திக் காட்டி அதில் இதுவரை ஒரு பைசா கூட வட்டியும் அசலும் வரவில்லை என்று புகார் கொடுப்பேன் என்றும் கூறி எல்லாம் மிரட்டி பணிய வைத்திருந்தான். பலரும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதால் இதை வெளியில் சொல்லவும் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கி தவித்துக் கொண்டிருந்தனர்.
 
 
அனைத்தையும் அறிந்துக் கொண்டு மோஹித்தை என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்த சஞ்சய்க்கு உதவிக்கு வந்தான் அவனின் ஆருயிர் தோழனான ராம்.
This post was modified 3 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 3

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  
கனவு – 4           
 
                                                        
தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதைப் போல மோஹித்தை பற்றி சஞ்சய் விசாரிக்க... விசாரிக்க... இவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவு அவனின் கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
 
 
முன்பே அவனைப் பற்றிச் சஞ்சய் அறிந்ததிலேயே ஓரளவு எப்படிபட்டவன் என்று கணித்து இருந்தாலும் இப்போது வெளிவர தொடங்கி இருப்பவை அனைத்தும் முற்றிலும் எதிர்ப்பாராத வகையில் இருந்ததோடு கொடூரத்தின் உச்சமாகவே இருந்தது.
 
 
இவை அனைத்திலும் மோஹித்துக்குத் துணையாய் நின்று காப்பாற்றிக் கொண்டு இருப்பது மதுசூதனன் என்பதும் அதற்கு அவன் தொடர்ந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு வருவதும் தெளிவாகியது.
 
 
இருவரின் செய்கைகளைத் தெரிந்துக் கொண்ட சஞ்சய்க்கு அப்போதே அவர்களைத் துண்டு துண்டாக வெட்டி போட வேண்டும் என்ற வெறி எழ தான் செய்தது. ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதும் அவனுக்குப் புரிந்தது.
 
 
ஒருவன் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவன் மற்றொருவன் காவல் துறையில் இருப்பவன் எனும் போது அவசரப்பட்டு எதையும் செய்யக் கூடாது என்று நிதானமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 
 
அதே நேரம் அவனின் ஆருயிர் தோழன் ராம் சஞ்சய்யை அழைத்து இருந்தான். இவன் அதை எடுப்பதற்காகவே காத்திருந்தது போல அந்தப் பக்கம் இருந்து பொரிய தொடங்கி இருந்தான்.
 
 
“மனுஷனாடா நீயெல்லாம்...!? சென்னைக்குப் போய் எத்தனை நாள் ஆகுது...? இன்னும் வீட்டுக்கு போய் நீ அப்பாவை பார்க்கலையாமே...?” என்று ராம் திட்ட தொடங்கவும் தான் அங்குப் போவதாகக் கூறி இருந்ததே சஞ்சய்க்கு நினைவு வந்தது.
 
 
நெற்றியில் தட்டிக் கொண்டவன், “சாரி டா... கொஞ்சம் வேலை, அதான்...” என்று இழுக்கவும், “அப்படி என்னடா வேலை... கொஞ்ச நேரம் கூடக் கிடைக்கலையா...?” என்று அதற்கும் திட்டே பதிலாகக் கிடைத்தது.
 
 
“இல்லை டா ஒரு கேஸ்...” என்று தொடங்கியவன் முழுதாக எதையும் கூறாமல் அப்படியே நிறுத்திக் கொண்டான் தன் அதிரடியை எப்போதும் விரும்பாத அமைதியையே விரும்பும் நண்பனிடம்.
 
 
இல்லையென்றால் சட்டத்தை நீ கையில் எடுக்காதே... சட்டம் தன் கடமையைச் செய்யும்... என்று தொடங்கி ஒரு பொறுப்பான கலெக்டராக அவன் கொடுக்கும் அறிவுரையைக் கேட்கும் அளவுக்கு எல்லாம் சஞ்சய்க்கு கொஞ்சமும் பொறுமை இல்லை.
 
 
சிறு இடைவெளிவிட்டு “இன்னைக்குப் போய் அப்பாவை பார்த்துடுவேன் மச்சி...” என்று அவனின் கோபத்தைக் குறைக்க முயன்றான். அவனும் உடனே சமாதானம் ஆகாமல் “ம்ம்... அதைச் செய் முதலில்” என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
 
 
‘ஹப்பா சார் ரொம்பவே சூடா இருக்கார் போலேயே... இன்னைக்குப் போய் அங்கிளை பார்த்தாதான் கூல் ஆவார்...’ என்று எண்ணியபடியே ராமின் வீட்டிற்குச் செல்ல தயாரானான்.
 
 
இருவரும் பதினொன்றாம் வகுப்பில் இருந்து நண்பர்கள். கல்லூரியிலும் ஒன்றாகவே தொடர்ந்தவர்கள் இருவருக்கும் எப்போதுமே எண்ணமும் விருப்பமும் பாதையும் கிட்டத்தட்ட ஒன்றே தான். ஆனால் ராம் அவனின் அமைதிக்கு ஏற்றது போல் ஐஏஎஸ்ஸை தேர்ந்தெடுக்க, சஞ்சய் அவனின் அதிரடிக்கு ஏற்ற ஐபிஎஸ்ஸை தேர்ந்து எடுத்தான்.
 
 
இரண்டு வருடங்கள் ஆந்திராவில் ஒன்றாகவே தங்கி பணி புரிந்தார்கள். அதன்பிறகு ராமிற்கு ராஜஸ்தானிற்கு மாற்றல் ஆகிவிட, வேலைபளுவின் காரணமாக நேரில் பார்ப்பதே அரிதான ஒன்றாகிப் போனது.
 
 
இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று போலவே பார்த்துக் கொண்டதோடு தங்களின் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உடன் நின்று வழி நடத்திய ஆராவமுதனை சஞ்சய்க்கு ரொம்பவே பிடிக்கும். அவருக்கும் அப்படியே, எதற்கும் வளைந்து கொடுக்காமல் தனக்குச் சரி என்று பட்டதைச் செய்பவனை வெகுவாக ரசிப்பார்.
 
 
மாலை நேரம் ராமின் வீட்டிற்குச் சென்றவனை ஆராவமுதன் சந்தோஷமும் ஆரவாரமுமாக வரவேற்றார். இங்கு வர தாமதமானதற்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரோடு அரட்டை அடிக்கத் தொடங்கினான் சஞ்சய்.
 
 
ஆராவமுதன் வெளி உலகில் எத்தனை கறாரான பேர்விழியோ அதற்கு நேரேதிர் குணமுடையவர் நெருக்கமானவர்களிடம்... அதிலும் அவரைப் போலவே அதிரடியும் துறுதுறுப்புமான சஞ்சய்யை அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.
 
 
இருவரும் அரட்டை கச்சேரியோடே இரவு உணவை சாப்பிட தொடங்கினார்கள். என்னதான் பேசிக் கொண்டு இருந்தாலும் சஞ்சய்யின் மனதில் வேறு ஏதோ தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பதைக் கண்டவர், “என்ன கேஸ் சஞ்சு உன்னைத் தொந்தரவு செய்யுது...” என்றவருக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் அனைத்தையும் சஞ்சய் கூறினான்.
 
 
அவருக்குமே அனைத்தும் தெரிந்து தான் இருந்தது. “எப்படி முடிக்கணும்னு பிளான் செஞ்சிட்டியா...?” என்று திடுமென அவர் கேட்கவும், அவரை நிமிர்ந்து பார்த்தவன், “அந்தப் பிளானிங்ல தான் இருக்கேன்...” என்றான் குறும்பு புன்னகையோடு.
 
 
“டேய் நான் கேசை சொன்னேன் டா...” என்றவரை கண்டு புன்னகைத்தவாறே “நானும் அதைத் தான் சொன்னேன் அங்கிள்...” என்றான். அதன் பின் அவர் சஞ்சய் அறியாத பல தகவல்களை அவனின் திட்டம் எளிதாக முடியும் வகையில் கூற, அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.
 
 
இன்னும் சில நாட்களில் அவற்றையும் சஞ்சய்யே அறிந்துக் கொள்வான் என்பது அவருக்குமே தெரியும் தான்... ஆனால் இப்போதே மாற்றலாகி வந்து இருப்பவன் என்பதால் அனைத்தையும் கண்டுபிடித்து அதன்பிறகு திட்டமிட கொஞ்சம் அவகாசம் தேவைப்படும், இவருக்குக் கிடைத்து இருக்கும் தகவலின்படி மிகப் பெரிய போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு இருக்கும் மோஹித் அது முடிந்ததும் தலைமறைவாகவும் வாய்ப்பு இருக்கு என்பதோடு அதன் பிறகு அவனை முடிப்பதும் சிக்கலாகும் என்பதாலேயே உடனடியாக அதைச் செய்து முடிக்கக் கூறினார்.
 
 
அவருமே சஞ்சய்யை போலே சில விஷயங்களில் பாவம் புண்ணியம் பார்த்துக் கொண்டு சட்டம் பார்த்துக் கொள்ளும் என்று கைக் கட்டி நிற்கும் ரகமில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நேரிடையாக இது போல இறங்கி செய்ய அவரின் பதவி தடையாக இருந்தது.
 
 
எனவே உண்மையிலேயே நேர்மையாக வழக்குகளைக் கையாளும் காவலர்களுக்குச் சில மறைமுக உதவிகளைச் செய்வதின் மூலம் அவற்றைச் செய்துக் கொண்டு இருப்பவருக்குச் சஞ்சயிடம் அது போன்ற எந்தத் தயக்கமும் இல்லை.
 
 
சஞ்சய் அனைத்தும் முடிந்து அங்கிருந்து கிளம்பும் தருவாயில் எதிரில் மாற்றப்பட்டு இருந்த ராமின் அமைதியும் புன்னகையுமான புகைப்படம் கண்ணில் படவும், “ஆஹா... இந்த அதிரடி மன்னனின் மகனா இவன்...?!” என்று அதே பாணியில் பேசி கட்டியவனைக் கண்டு சிரித்தவர், “உங்க ஆண்டிக்கு என் அதிரடி ஆக்ஷன் எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது டா... அதான் அவளைப் போலவே ஒரு மகனை பெத்துக் கொடுத்துட்டு போய்ட்டா...” என்றவரின் குரலில் அத்தனை காதலும் வருத்தமும் கலந்ததே இருந்தது.
 
 
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் இறந்த மனைவியைப் பற்றிப் பேசும் போது இன்றும் அவர் குரலில் இழையோடிய வருத்தமே அவரின் காதலை புரிய வைக்கப் போதுமானதாக இருந்தது. சஞ்சய்க்குமே இருவரின் அன்னியோன்யம் பற்றி நன்கு தெரியும் என்பதால் அதைப் பற்றிப் பேசி அவரை ஆறுதல்படுத்த முயன்று மேலும் வருத்தத்தில் ஆழ்த்தாமல் இயல்பாகவே விடைப் பெற்று சென்றுவிட்டான்.
 
 
அதன் பிறகே உடனடியாகத் திட்டமிட்டுக் கிடைத்த சந்தர்ப்பத்தில் மோஹித்தை முடித்திருந்தான் சஞ்சய். இல்லையென்றால் வேறு ஒரு சிறப்பான சம்பவம் இருந்தது அவன் மனதில் மோஹித் மற்றும் மதுசூதனனுக்கும் சேர்த்து...!! இப்போது உடனடியாக மதுசூதனனை முடிக்க முடியாது, நடந்து முடிந்த நிகழ்வில் அவன் சற்று உஷாராகி இருப்பான் என்பதால் கொஞ்சம் விட்டு பிடிக்க முடிவெடுத்து இருந்தான் சஞ்சய்.
 
 
மறுநாள் காலை சற்று அந்தப் பகுதியை பற்றியும் மக்களின் நடவடிக்கைகள் குறித்தும் சாதாரண மனிதனாக அவர்களோடு கலந்து தெரிந்துக் கொள்ள நினைத்தே சுற்றி வந்துக் கொண்டு இருந்தான் சஞ்சய்.
 
 
அப்படித் தான் நேத்ராவின் பள்ளி இருந்த பகுதியில் அந்த டீ கடையிலும் வந்து அமர்ந்தான் சஞ்சய். இதில் இன்னொரு காரணமும் இருந்தது, அன்று சஞ்சய் கள்ள துப்பாக்கி வாங்க சென்று இருந்த போது இந்தக் கடையில் சில தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களுக்குத் தங்கு தடையின்றிக் கிடைப்பதாக இருவர் போதையில் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்க நேர்ந்ததே..!
 
 
அப்போதே சஞ்சய்க்கு அந்த அலைபேசி அழைப்பு வந்தது. இங்கு மாற்றலாகி வருவதற்கு முன்பு சஞ்சய் அவன் ஸ்டைலில் டீல் செய்துவிட்டு வந்திருந்த கேஸில் விண்ணுலகப் பயணம் சென்றிருந்தவனின் தம்பியே அழைத்து “இனி நீ தப்பிக்க முடியாது... உன் கதையை முடிக்கப் பெரிய தொகைக்கு ஒரு ஐட்டகாரனை அமர்த்தி இருக்கிறோம்...” என்று வெறியோடு கொச்சை தெலுங்கில் கத்தினான்.
 
 
அதற்கேவே தான் இருக்கும் இடத்தை விலாசத்தோடு கூறியவன், முடிந்தால் வந்து பார் என்று கூறி அவனுக்காகத் தான் காத்திருந்தான். ஆனால் ஏனோ அவன் வரவே இல்லை... அதே போலச் சஞ்சய் எதிர்ப்பார்த்தது போல எதுவும் அங்கு நடப்பது போலவும் தெரியவில்லை... இனி இங்கு இருப்பது வீண் என எண்ணி சஞ்சய் எழுந்துக் கொள்ள இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தனர் இரு புள்ளீங்கோக்கள்.
 
 
சஞ்சய் இருந்த மேசைக்கு எதிரில் வந்து அமர்ந்தவர்களின் பேச்சில் ஒரு பெண்ணின் மேலான வன்மம் தெரியவே தான் அவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான் சஞ்சய்.
 
 
வந்தவர்கள் டீ காபி போன்ற பானங்கள் எதையும் ஆர்டர் செய்யாமல் தங்களுக்குள்ளேயே காரசார விவாதத்தின் நடுவே கல்லாவில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து விரல்களை மடக்கி அசைத்து யாரும் அறியா வண்ணம் ஏதோ சமிஞ்சை செய்ய... அதற்கு அவனிடமிருந்து விழி மட்டுமே அசைத்துச் சம்மதம் வந்தது.
 
 
குளிர்கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்த சஞ்சய் அனைத்தையும் கவனிப்பது போலக் காண்பித்துக் கொள்ளாமல் தன் கையில் இருந்த அலைபேசியிலேயே கவனமாக இருப்பது போலக் கவனித்துக் கொண்டு இருந்தான்.
 
 
சற்று நேரத்தில் அங்குப் பணிபுரிபவன் போல் ஒருவன் அந்தப் புள்ளிங்கோக்களுக்கு அருகில் தண்ணீர் ஜக்கை வைப்பது போல வந்து மேசைக்கு அடியில் இடது கையால் எதையோ கொடுத்துவிட்டு நகர்ந்து இருந்தான்.
 
 
மற்றவர் கவனத்தைக் கவராத வகையில் நொடியில் இவை நடந்து முடிந்து இருக்க, அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சய்க்கு மட்டுமே தெரிந்தது.
 
 
அதன்பிறகு அவர்கள் எழுந்து சென்று சாப்பிட்டதற்குப் பணம் செலுத்துவது போல அங்கிருந்தவனிடம் பணம் தந்துவிட்டு சென்றனர். அவர்களைத் தொடர்ந்து வெளியே வந்த சஞ்சய் சற்று இடைவெளிவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்துக் கொண்டு இருந்தான்.
 
 
அந்த நிமிடமே இருவரையும் மற்றும் கடையில் இருப்பவனையும் பிடிக்க நினைத்தவனுக்கு வேறு யாரோ இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெளிவாகப் பொறுமையாக ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க நினைத்தே வெளியேறினான்.
 
 
அப்போதே அவர்கள் பேசிக் கொள்வது கேட்டது. முதலில் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் மூலம் வேறு ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள நினைத்தவன், அதைப் பயன்படுத்திக் கொண்டே அவர்கள் அடுத்துச் செயல்படுத்த போகும் திட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டுத் திகைத்தான்.
 
 
இப்போது இவர்களைப் பிடிப்பதை விட அடித்துத் துவம்சம் செய்வதை விட, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதே முக்கியம் என்பது புரிய, சுறுசுறுவெனப் பொங்கிய கோபத்தைக் கை விரல்களை இறுக மூடி கட்டுபடுத்தியவன், இறுதிவரை அவர்களுக்கு அருகில் தன் இருப்பை வெளிபடுத்திக் கொள்ளவே இல்லை.
 
 
அவர்கள் பேசிக் கொண்டது இது தான்... அந்த இருவரில் ஒருவன் அவனோடு கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து(!) இருக்கிறான்... அவளிடம் கூறியதற்கு அவள் அதற்குச் சம்மதிக்கவில்லையாம், எனக்குச் சம்மதம் சொல்லாமல் இருக்க எத்தனை திமிர் அவளுக்கு, அழகாக இருக்கும் திமிர் தானே அது... அதையே அழித்து விட்டால் என்று யோசித்தவன் எனக்குச் சம்மதிக்காததின் பலனை அவள் அனுபவித்தே ஆகணும் என்று உளறினான்.
 
 
இவன் தான் இப்படி என்றால் உடன் வந்தவனோ நீ செய்வது தவறு என்று கூறித் திருத்துவதற்குப் பதில் நீ சொல்வது தான் சரி, அப்படியே செய்... உன்னையே வேண்டாம்னு சொன்னவளை சும்மா விடலாமா... அப்பறம் ஒரு பயலும் காலேஜில் நம்மளை மதிக்க மாட்டான் என்றெல்லாம் ஏற்றிவிட்டுக் கொண்டு இருந்தான்.
 
 
அவர்களின் பேச்சில் இருந்தே இவர்கள் இதையே தான் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது. இன்றைக்கு அவர்கள் நினைத்ததைச் செய்து முடிக்க அரை நாள் கல்லூரியை கட் செய்து விட்டு வந்து இங்குப் போதை ஏற்றிக் கொண்டு காத்திருந்தனர்.
 
 
அந்தப் பெண் இந்த வழியே தான் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி அவளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதால் அவளின் வரவிற்காகக் காத்திருந்தனர். அடுத்து அவர்கள் பேசியது தான் இங்கு ஹைலைட்... கல்லூரி அருகில் இதைச் செய்யாமல் இந்த ஏரியாவை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணமே, இங்கு மதுசூதனன் இருப்பதால் தானாம்... அப்படியே ஏதாவது பிரச்சனை ஆனால் கூட, அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும் எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார் என்று அவர்கள் அறியாமலேயே சஞ்சயிடம் மதுசூதனனின் கிரைம் ரேட்டை ஏற்றிக் கொண்டு இருந்தனர். தன் இருப்பை மறைத்தபடி நின்று இவர்கள் பேசியதை கேட்டவன் ‘பணத்திமிர்’ என வெறுப்போடு இவர்களை முறைத்துக் கொண்டு இருந்தான்.
 
 
திடீரென அவர்களிடம் ஒரு பரபரப்பு தோன்றவும், சஞ்சய் அந்தப் பக்கம் பார்வையைத் திருப்ப... அமைதியும் அழகுமாக ஒரு இளம் பெண் அங்கு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்படிப்பட்டவள் இப்படி ஒருவனை எப்படி விரும்புவாள் என்பது போல இருந்தது இருவருக்குமான வித்தியாசம்.
 
 
அவளின் வழியை மறிப்பது போலக் குறுக்கே சென்று இவர்கள் நிற்கவும், திகைத்து விழித்தவள் இரண்டடி பின்னால் நகர, இவர்களும் அவளை நோக்கி நகர்ந்தனர்.
 
 
ஏதோ கோபமாகப் பேசி மிரட்டுவதும் அவள் பயத்தில் மிரண்டு பின் வாங்குவதும் தெரிய, தான் இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சஞ்சய் அவர்களை நோக்கி நகர முயன்ற நொடி, அதற்கு மேல் பின்னால் நகர முடியாதபடி மற்றொருவன் பின்னல் சென்று நின்று அந்தப் பெண்ணின் இரு கரங்களையும் பற்றி அவளை அசைய முடியாதவாறு பிடித்துக் கொண்டான்.
 
 
மற்றொருவன் அதற்காகவே காத்திருந்தது போல மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை வெளியே எடுக்கவும், அந்தப் பெண் தன்னை விட்டுவிடுமாறு கத்தி கதற தொடங்கினாள்.
 
 
ஆனால் அதைக் கண்டு இறக்கம் கொள்வதற்குப் பதில் “இதையெல்லாம் எனக்கு நோ சொல்றதுக்கு முன்னே யோசிச்சு இருக்கணும் செல்லம்...” என்று வன்மமாகச் சிரித்தபடியே கூறியவன், அதை ஊற்ற தயாராகவும், அந்த வழியே சென்று கொண்டு இருந்தவர்கள் எல்லாம் அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவரும் உதவிக்கு வரவில்லை.
 
 
‘இதுவே அவர்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்தால் இப்படித் தான் நிற்பார்களா...?!’ என்ற ஆத்திரம் சஞ்சய்க்கு எழ, தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்தப் பெண்ணுக்கு ஆபத்து என்பதால் இரெண்டே எட்டில் துப்பாக்கியை குறி வைத்தவாறே அவர்களை நெருங்கி இருந்தான் சஞ்சய்.
 
 
அதே நேரம் அவளின் முகத்தை நோக்கி ஆசிட்டை அவன் விசிறவும், இமைக்கும் நொடிக்குள் சஞ்சய் தன் வல கரத்தை கொண்டு அவனின் கரத்தை தடுத்து எதிர் திசையில் தட்டியதில் ஆசிட் ஊற்ற முயன்றவனின் முகத்திலேயே அது கொட்டிக் கொண்டது.
 
 
அதில் கீழே விழுந்தவன் இரு கரங்களைக் கொண்டும் முகத்தை மூடியவாறே அலறி துடிக்கத் தொடங்கினான். யாரும் எதிர்பாராத வகையில் அனைத்தும் நடந்து முடிந்து இருக்க... திகைத்து போய் நின்றிருந்தனர் அங்கிருந்தவர்கள் அனைவரும்... அப்பெண் உட்பட...!
 
 
அதற்குள் தன் நண்பனின் நிலையையும் சஞ்சய் கையில் இருக்கும் துப்பாக்கியையும் கண்டு அந்தப் பெண்ணின் கரங்களைப் பிடித்துக் கொண்டு இருந்தவன் அவளைக் கீழே தள்ளி விட்டுவிட்டு ஓட தொடங்கினான்.
 
 
கீழே விழுந்தவளை கரம் கொடுத்து தூக்கியவன், “ஆர் யூ ஓகே” எனவும் மிரட்சியோடு தான் காப்பாற்றப்பட்டு விட்டதை நம்ப முடியாமல் ‘ஆம்’ எனத் தலையசைத்தாள் அவள்.
 
 
அவளின் நலனை நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் உறுதி செய்துக் கொண்டவன் அவனை விரட்டி கொண்டு ஓடும் போதே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அழைத்து விவரம் சொல்லி அவர்களை இங்கு வர சொல்லி உத்தரவிட்டு இருந்தான்.
 
 
ஓடுபவனும் சஞ்சயிடம் இருந்து தப்பிக்க எத்தனையோ முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆனால் அவனால் அது முடியவே இல்லை. இறுதியாகக் கைக்கு எட்டும் தூரத்தில் நெருங்கி விட்டவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவன் அந்தப் பக்கம் தாயோடு சென்று கொண்டிருந்த சிறு குழந்தையைப் பிடித்துக் கழுத்தில் கத்தி வைக்க முயன்றான்.
 
 
ஆனால் அதற்குச் சந்தர்ப்பமே கொடுக்காமல் அவன் குழந்தையை நோக்கி குனியும் போதே முட்டிக்கு கீழே சுட்டிருந்தான் சஞ்சய். அதில் அலறியவன் அடுத்து எங்கே மார்பில் சுட்டு விடுவானோ என்ற பயத்தில் ஓட முயல, மீண்டும் அடுத்தக் காலிலும் அதே போலச் சுட்டிருந்தான்.
 
 
இதில் தான் அவன் நேத்ரா காலில் போய் அவன் விழுந்து துடித்தது. ஏற்கனவே சஞ்சய் கண் முன் கொலை செய்வதைப் பார்த்திருந்தவள் வேறு என்பதால் இதையும் அதே போல ஒரு வெறி செயலாகவே பார்த்ததினால் தான் அப்படிப் பேசிவிட்டு சென்றிருந்தாள்.
 
 
அதையும் நம்மாளு ரசித்துக் கொண்டு அமைதியாக நின்றதுதான் இங்கு வினோதத்திலும் வினோதம்.
அடுத்த நாள் ராமின் தந்தை அழைத்ததின் பெயரில் அங்குச் சென்றவனைச் சந்தோஷமாக வரவேற்றவரிடம் “என்ன விஷயம்..?” என்று சஞ்சய் விசாரித்துக் கொண்டு இருக்கும் போதே அங்குப் பிரசனமானான் ராம்.
 
 
அதே நேரம் ஆராவமுதனும் “சர்ப்ரைஸ்” என்று உற்சாகமாகக் கத்த தொடங்கினார். நிஜமாகவே இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சஞ்சய் தன் முன் வந்து நின்றவனைத் தாவி அணைத்தபடியே “எப்போ வந்தே ராம்...?” என்றான்.
 
 
“ம்ஹும்... சரண்” என்று ஏதோ அது தான் முக்கியம் என்பது போலப் பதிலளித்தவனைக் கண்டு சஞ்சய் முறைக்கவும், “எப்படி மச்சி இருக்கே...” என்று ராம் பேச்சை மாற்ற முயல, “பார்த்து பார்த்து ஆசையா வெச்ச பேரு, எனக்கே அப்படிக் கூப்பிட இப்போ அனுமதி இல்லையாம்... இதில் இவரு கூப்பிடறாராம்...” என்று அலுத்துக் கொண்டவாறே சஞ்சயிடம் வேண்டுமென்ற மகனை சிக்கவைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார் அவர்.
 
 
ஏற்கனவே முறைத்துக் கொண்டு இருப்பவனிடம் சிக்க வைத்துவிட்டு சென்ற தந்தையை எண்ணி “அப்பாஆஆஆ” என்று பல்லை கடித்தவன், “நான் அவளுக்கு மட்டுமே ராமா இருக்க ஆசைப்படறேன் சஞ்சு...” என்றவாறே சஞ்சய்யை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான் ராம் சரண்.
 
 
ராமின் மனம் அறிந்தவன் என்பதால் “எப்படி இருக்காங்க உன் டீச்சரம்மா...? என்ன தான் சொல்றாங்க...?” என்றான் இன்னுமும் இறங்கி வராத குரலில் கூறியவனின் மனதில் டீச்சர் என்ற வார்த்தையை உச்சரித்த நொடி நேத்ராவின் முகம் மின்னியது. “இன்னும் ஒண்ணும் சொல்லலை” என்று பதிலளித்தவனின் குரலில் லேசாக வருத்தம் இழையோடியது.
 
 
“என்ன தான் பிரச்சனை...?” என்ற கேள்விக்கு ராமிடம் இருந்து பதில் வரவில்லை. அவனின் வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்க்க முடியாமல் “ஏன் என்னவாம்... இப்படி ஒரு அக்மார்க் நல்ல பையன் உலகம் முழுக்கத் தேடினாலும் கிடைக்க மாட்டான் அவங்களுக்கு... இன்னும் எவ்வளவு வருஷம் தான் காக்க வைப்பாங்களாம்... நான் பேசி பார்க்கறேன்னு சொன்னாலும் நீ கண்ணுலேயே காட்ட மாட்றே...” என்று பொரிந்து தள்ளி கொண்டே சென்றான்.
 
 
“இல்ல சஞ்சு, அவ வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா என்னாலே வேறு கஷ்டப்படக் கூடாது... என் மனசை திறந்து ஓபனா சொல்லிட்டேன், இனி அவ தான் முடிவு செய்யணும்... அது எத்தனை வருஷமானாலும் நான் காத்திருக்கத் தயார்...” என்று சஞ்சய் தனக்காகத் தான் கோபப்படுகிறான் என்பதால் விளக்கமளித்தான் ராம்.
 
 
“ஹப்பா அமைதியின் சிகரமே... உன் பொறுமை எல்லாம் எனக்கு வராது பா... நீ பொறுமையா காத்திருந்து அறுபதாம் கல்யாணம் கூடச் செஞ்சிக்கோ யாரு வேண்டாம்னா... நமக்கெல்லாம் பொறுமை கிலோ என்ன விலைன்னு கேட்டு தான் பழக்கம்...” என்றவன்,
 
 
“ஆமா பேசவாவது செய்யறீயா...?! இல்ல அதுவும் இல்லையா...?!” என்றான் சந்தேகமாக, “ம்ம்...” என்று சம்மதமாகத் தலையசைத்தவனைச் சஞ்சய் கேள்வியாகப் பார்க்க... அவன் கேட்க வருவது புரிந்து “ஆனா அதைப் பற்றி எதுவும் பேச மாட்டேன்...” என்று கூறினான்.
 
 
“அதே மாதிரி அவங்களும் இதைப் பற்றி எதுவும் பேச மாட்டங்க அப்படித் தானே...” என்று நக்கலாகக் கேட்டவனுக்கு ‘ஆம்’ என்ற தலையசைப்பே பதிலாகக் கிடைத்தது. “அப்பறம் என்ன தான்டா பேசுவீங்க... உலக பொருளாதாரமா...?!” என்று முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு கேட்டவனை ‘ஏன் டா..?’ என்பது போல பாவமாக பார்த்தான் ராம்.
 
 
“நல்லா வருவீங்க டா... நல்லா வருவீங்க... தினமும் பேசுவாங்கலாம் ஆனா பேச வேண்டியதை பேச மாட்டங்களாம்... இதுல இவரு ஐஏஎஸ் ஆபிசர்... அவங்க டீச்சர்... விளங்கிடும், நமக்கெல்லாம் இதெல்லாம் புரியவும் புரியாது... செட்டும் ஆகாது... பார்த்தோமோ, பிடிச்சுதா, தூக்கினோமானு போயிட்டே இருக்கணும்...” என்றவனின் மனமோ தன்னவளை நினைத்த அதே நேரம், ‘இப்படியே இவன் இலவு காத்த கிளியா காத்து இருக்க... எவனாவது வந்து கொத்திகிட்டு போய்ட போறான்... பாவம்’ என்றே நண்பனுக்காக வருந்தியது.
 
 
அவனிடம் இதை நேரில் கூறி நண்பனின் மனதை நோகடிக்க விரும்பாமல் சஞ்சய் அமைதி காக்க.... ஆனால் அதுவே தான் நிகழப் போவதை அப்போது அவன் அறியவில்லை.
 
 
வெகு நாட்களுக்குப் பிறகு நேரில் கண்ட நண்பனோடு அன்றைய பொழுதை இனிமையாகக் கழித்த சஞ்சய் சந்தோஷமாகவே விடைக் கொடுத்தான். மறுநாள் ஊர் திரும்பும் நண்பனுக்கு, இனி அவன் சந்தோசம் பறிப் போகப் போவது தெரியாமலேயே.
 
 
ஒரு வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டு இருந்த சஞ்சய் சாலையின் எதிர் புறமாகச் சென்றுக் கொண்டு இருந்த நீருவை கண்டு தன் ராயல் என்பீல்டை திருப்பிக் கொண்டு சென்று அவளின் வழியை மறிப்பது போல நிறுத்தியவன், “உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கணும்னா யார்கிட்டயாவது கேட்கணுமா...?!” என்றிருக்க... அவளோ அதிர்ச்சியில் நின்று இருந்தாள்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 4

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 15 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  
கனவு – 5
 
 
நேத்ரா தன் முன் எதிர்ப்பாராமல் வந்து வழி மறித்தவனையே அதிர்வோடு பார்த்துக் கொண்டு இருந்தவள், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
 
 
நொடியில் தன்னைத் தேற்றிக் கொண்டு அங்கிருந்து நகர முயன்றவளை கண்டு “எனக்குக் கேட்ட கேள்விக்குப் பதில் வரலைனா பிடிக்காது...” என்று கூர் பார்வையோடு தன் வல கையில் அணிந்திருந்த காப்பை இட கையால் இறுக்கி கொண்டே ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி உச்சரித்தவனைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கியவள், வெளியில் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் “யாரிடமும் கேட்க வேண்டாம்...” என்றாள் மெல்லிய குரலில் கோபத்தை மறைத்து பல்லை கடித்தவாறே.
 
 
“ஓ... அப்போ வா குல்பி இப்போவே கல்யாணம் செஞ்சுக்கலாம்...” என்று அத்தனை நேரம் இருந்த குரலுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கூலாகக் கூறியவனைக் கண்டு, “ஙே” என நேத்ரா விழித்துக் கொண்டு நிற்க, “நீதானே யார்க்கிட்டேயும் கேட்க வேண்டாம்னு சொன்னே... அப்பறம் எதுக்கு டைமை வேஸ்ட் செய்யறது... வா...” என்றவாறே வண்டியை உதைத்துக் கொண்டு கிளம்பத் தயாரகியவனை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தாள் நேத்ரா.
 
 
ஆனால் அவனிடம் அதை வெளிபடுத்தவோ கோபப்படவோ அவள் கொஞ்சமும் தயாராக இல்லை. கண் முன்னே அவன் இரு முறை துப்பாக்கியோடு காட்சி அளித்ததும் இருவர் ரத்த வெள்ளத்தில் துடித்ததுமே மீண்டும் மீண்டும் வலம் வர, அவனைச் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாரானவள் தன் துப்பட்டா பிடித்து இழுக்கபடவும், அதிர்வோடு சேர்ந்த கோபத்தோடு திரும்ப... அவனோ அவளைக் குறும்பாகப் பார்த்து புன்னகைத்தவாறே தன் இரு கரங்களையும் உயர்த்திக் காண்பித்தான்.
 
 
பின் அவன் விரல் நீட்டிய இடத்தை நோக்கி பார்வையைச் செலுத்தியவள், துப்பட்டா வண்டியின் நம்பர் பிளேட்டில் மாட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டு தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அதை எடுக்கக் குனிந்தாள். (வேற என்ன அவன் மட்டுமில்ல அவன் வண்டியும் பொறுக்கியா இருக்குனு தான் சொல்லி இருப்பா...!!)
 
 
“நம்ம பிளாக் ஸ்டோன் என்ன சொல்றான்னு புரியுதா குல்பி... நான் இருக்கும் போது நீங்க ஏன் அண்ணி நடந்து போய்க் கஷ்டப்படறீங்கன்னு கேக்கறான்...” என்று வாஞ்சையாகத் தன் கரத்தால் வண்டியை தடவிக் கொடுத்தபடியே இவளை கண்டு கண் சிமிட்டியவாறே கூறியவனையும் வண்டியையும் மாறி மாறி பார்த்தவள், வெடுக்கெனத் துப்பட்டாவை பிடித்து இழுத்துக் கொண்டு வேகாமாக நடக்கத் தொடங்கினாள்.
 
 
“ஒய் குல்பி... எனக்கும் என் தம்பிக்கும் நீ இன்னும் பதில் சொல்லலை...” என்றவனின் குரல் அவளின் நடையைத் தடை செய்தது. ஏனோ அவனின் இந்த விளிப்பு பேச்சுத் தோரணை எல்லாமே நேத்ராவை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொறுமையை இழக்க செய்துக் கொண்டு இருந்தது.
 
 
விருட்டெனத் திரும்பி அவனைக் கண்டவள், “மிஸ்டர்” என்று அழைக்கவும், “ம்ப்ச்” என்று கண்களைச் சுருக்கி இல்லை என்பது போலத் தலையசைத்தவன், “பொறுக்கி... உன் குரலில் என்னை நீ அப்படிக் கூப்பிடறதே தனி கிக் தான்... பொறுக்கினே கூப்பிடு குல்பி...” என்றான் வெகு ரசனையோடு.
 
 
“டோன்ட் கால் மீ லைக்தட் எனிமோர்...” என்று விரல் நீட்டி எச்சரிக்காத குறையாக முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறியவள், “அண்ட் மை ஆன்செர் இஸ் நோ...” என்றவள் சஞ்சய்யையும் அவனின் பிளாக் ஸ்டோனையும் சேர்த்து ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
 
 
“நோ” என அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே சத்தம் வராமல் அவள் கூறியது போலவே உச்சரித்துப் பார்த்தவன், “நோவை எப்படி எஸ்ஸா மாத்திக்கறதுன்னு எனக்குத் தெரியும் பேபி...” என்றான் உல்லாசமாக.
 
 
சஞ்சய் மேல் இருத்த கோபத்தில் வழியெங்கும் “பொறுக்கி... பொறுக்கி...” என ஆற்றாமையோடு வாய்க்குள்ளேயே திட்டியபடியே நடந்துக் கொண்டு இருந்தவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்லி அவனைத் திட்டுவது என்று கூடத் தெரியவில்லை.
 
 
வேக வேகமாக விடுதியை வந்தடைந்தவளுக்கு மனம் கொதித்துக் கொண்டு இருந்தது. ‘எத்தனை தைரியம் அவனுக்கு, இத்தனை கொலை செய்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியா உலா வருவதும் இல்லாமல்... என்கிட்டே வந்து வம்பு செய்யறான்...’ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
 
 
பாவம் இதை அவளால் வாய் விட்டு கூட யாரிடமும் புலம்ப முடியவில்லை. ஆனால் யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் போல் ஒரு எண்ணம் எழுந்து அலைக்கழிக்கத் தொடங்கியதில் உடனே அலைபேசியை எடுத்து ராமுக்கு மெசேஜ் செய்ய அவனின் வாட்ஸ் ஆப்பை திறந்தவள்... வேக வேகமாக டைப் செய்வதும் பின் அதை அழிப்பதுமாக இரண்டு முறைக்கும் மேல் செய்துவிட்டுத் தேவையில்லாமல் இதைக் கூறி எங்கோ இருப்பவனை வேறு குழப்ப வேண்டாம் என்ற எண்ணத்தோடு அலைபேசியை அணைத்து விட்டு அதை இறுக பற்றிக் கொண்டு அதிலேயே தலை கவிழ்ந்து அமர்ந்துக் கொண்டாள். இதுவரை நேத்ராவாக ராமை அழைத்ததோ மெசேஜ் செய்ததோ கிடையாது.
அதே நேரம் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்கவும், அவசரமாக எடுத்து பார்த்தவள் வழக்கம் போலத் தன் மனம் புரிந்தது போல “அம்மு... என்ன டா...?” என்று ராம் மெசேஜ் செய்திருப்பதைக் கண்டு எப்படி உணர்கிறோம் என்று புரியாத ஒரு உணர்வில் தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.
 
 
இப்போதே இந்த நிமிடமே அவனிடம் அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்றும் அவனருகில் அவன் பாதுகாப்பில் சென்று ஒளிந்துக் கொள்ள வேண்டும் என்றும் மனம் பரபரக்க தொடங்கவும், ‘ராமிடம் சம்மதம் சொல்லிவிடலாமா...?!’ என்ற எண்ணம் கூட அவளை அறியாமலேயே எழுந்தது.
 
 
ஆனால் இத்தனை நாட்களாக எழாத எண்ணம் இப்போது எழுகிறது என்றால் இது இங்கு இருப்பவனிடம் இருந்து தப்பிக்கவே என்று எண்ணியவள், ராமின் நல்ல மனதிற்கு அப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று தோன்ற, யாரிடமிருந்தோ தப்பிக்க ராமின் தூய்மையான நேசத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடு நன்றாக யோசித்து முடிவெடுத்த பின் இதைப் பற்றி ராமிடம் பேசுவதே சரி என்ற முடிவுக்கு வந்து வேறு எதையோ பேசி சமாளித்து இருந்தாள். ஆனால் ஒருவனிடம் இருந்து தப்பிக்க நினைக்க அவனிடம் உதவி கேட்போமே தவிர, சம்மதம் சொல்வோமோ என்று அங்கு யோசிக்கத் தவறினாள் நேத்ரா.
 
 
நேத்ராவின் மனம் அமைதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக அவளின் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
‘இல்லையென்றால் யாரோ யாரையோ கொலை செய்வதைத் தான் ஏன் பார்க்க வேண்டும்...?! அடுத்தடுத்து அவன் செய்யும் குற்றங்கள் எல்லாம் என் கண்ணிலேயே ஏன் பட வேண்டும்...?! அதிலும் ஒவ்வொரு முறையும் அவனும் தன்னை ஏன் பார்க்க வேண்டும்...?! இத்தனை குற்றங்களை வெகு சாதரணமாகச் செய்பவன் அனைத்தும் தெரிந்த பிறகும் என்னைச் சும்மா விட்டு வைத்திருக்க என்ன காரணம்...?!’ என்று இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் தொடங்கிய அதே வேலையில் மூன்று நாட்களுக்கு முன்னால் அவனைப் பார்த்ததும் நினைவு வந்தது.
 
 
சனிக்கிழமை மதியம் பேங்கில் இருந்து வெளிவந்தவள், ஒரு இளம்பெண்ணின் கையில் இருந்த பையை அவள் எவ்வளவோ போராடி தர மறுத்தும், ஒரு பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து பிடிங்கிக் கொண்ட அந்தப் பொறுக்கி அதோடும் விடாமல் அந்தப் பெண் கதற கதற அவளை இழுத்துக் கொண்டு சென்றதை கண்டிருந்தாள்.
 
 
அங்குச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருவரும் அப்பெண்ணுக்கு உதவிக்கு வரவில்லை. இந்தப் பொறுக்கியின் மேல் அவ்வளவு பயம் என்று நேத்ராவிற்குப் புரிந்தது.
 
 
கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களிடம் தவறாக நடப்பது என்று செய்துக் கொண்டு இருப்பவன், இன்று திடீரென வந்து நின்று அப்படிப் பேசினான் என்றால் அவளுக்கு எப்படி இருக்கும். உள்ளுக்குள் அரண்டு போய்விட்டாள்.
 
 
அவனைத் தெரிந்தது போலவும் காண்பித்துக் கொள்ளாமல் கோபத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு வழியாக அவனிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் பெரும்பாடு பட்டு போனாள் நேத்ரா.
 
 
இப்போது இதையெல்லாம் கூறி ராமையும் சிக்கலில் சிக்க வைக்க நேத்ரா விரும்பவில்லை. உடனே ராம் கிளம்பி வந்து இவளை கையோடு அழைத்துச் செல்லவும் முடியாத நிலை இப்போது. காரணம் நேத்ரா அவள் பணிபுரியும் பள்ளியில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறாள்.
 
 
பத்து மாதங்கள் தான் முடிவடைந்து இருக்கும் நிலையில் இப்போது வெளி வரவேண்டும் என்றால் அவளின் ஒரு வருட சம்பளத்தை அபராதமாகக் கொடுக்க வேண்டும். அவ்வளவு பணம் நேத்ராவிடம் சுத்தமாக இல்லை. ராமிடம் வாங்க அவளின் தன்மானம் இடம் தராது.
 
 
இப்போது இதற்கான தீர்வை காண முடியாத சூழலில் ராமின் மனதையும் குழப்பி எங்கோ இருப்பவனின் நிம்மதியை கெடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு இறுதியாக வந்திருந்தாள் நேத்ரா.
 
 
இந்த இடைப்பட்ட நாட்களில் சஞ்சய் பற்றி வெளி உலகிற்கு நன்றாகவே தெரிய தொடங்கி இருந்தது. அதற்குக் காரணமாக அமைந்தது அன்றைய ஆசிட் அட்டாக் தான். ஒரு பெண்ணிற்கு நடக்கவிருந்த கோரத்தை தடுத்த இளம் துணை கண்காணிப்பாளர் என்ற தலைப்பில் அன்றைய நாள் முழுவதும் அவனே அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி.
 
 
ஊடகளியலாளர்கள் ஒரு விஷயத்தை அப்படியே விட்டு விடுவார்களா என்ன...?! இத்தனை திறமையாகச் செயல்பட்டு இருவரையும் பிடித்து இருந்தவனின் அதிரடியில் மிளிர்ந்த தைரியத்தைக் கண்டு அவனின் பின்னணியை ஆராய்ந்தவர்களுக்கு அடுக்கடுக்காக அவன் ஆந்திராவில் நிகழ்த்தியிருந்த சாகசங்கள் பற்றிய தகவல்கள் வந்து விழுந்ததில், அதையே தேய தேய போட்டு காண்பித்து அவர்களின் டிஆர்பியை ஏற்ற பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
 
 
ஆனால் அவர்களுக்கு இதனால் நன்மை கிடைத்ததோ இல்லையோ சஞ்சய் இதன் மூலம் தமிழ்நாட்டில் கதாநாயகனாக உயர்ந்துக் கொண்டு இருந்தான். இளம் பெண்கள் எல்லாம் ஜொள்ளுவிட்டுக் கொண்டு பார்க்க... மற்றவர்கள் எல்லாம் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.
 
 
பாவம் இவையெல்லாம் நேத்ராவிற்குத் தெரிய வரவேயில்லை. தன் கண்ணில் இப்போது தொடர்ந்து பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களே அவளின் மனதை அதிகமாக ஆக்கிரமித்து இருக்க, பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அதைப் பற்றிய யோசனையிலேயே மூழ்கி இருந்தாள் நேத்ரா.
 
 
விடுதியில் பொதுவாக வைக்கப்பட்டு இருந்த தொலைக்காட்சியின் மூலம் வித்யா உட்பட அனைவரும் சஞ்சய் பற்றி அறிந்திருந்தனர். அது மட்டுமல்லாமல் தன்னைப் பற்றிச் செய்தி வந்த அன்றே அவனைப் பேட்டி கண்ட போது தன் அலைபேசி எண்ணை பொதுவில் பகிர்ந்து இருந்தவன் எந்த நேரத்திலும் என்ன அவசரம் என்றாலும் தன்னை அழைக்கத் தயங்க வேண்டாம் என்று வேறு கூறியிருந்தது, அனைவரிடையேயும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.
 
 
அவனின் எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு ரகசியமாக ரசித்துக் கொண்டு இருந்தனர் இளம் பெண்கள். அழகு, படிப்பு, கம்பீரம், துணிச்சல், ஆளுமை, அதிகாரம் என்று இருப்பவனை யாருக்கு தான் பிடிக்காது...?! ஆனால் அவனின் மனம் கவர்ந்தவளுக்கோ இவனைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
 
 
இதில் அடுத்தடுத்து சஞ்சய் செய்யப் போகும் அதிரடியில் அவனை முற்றிலும் வெறுத்து விடுவாளா...?! இல்லை ராமை தேடி சென்றுவிடுவாளா...?! என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
 
 
இரு வாரம் சென்று இருந்தது. ஒவ்வொரு நாளும் விடுதியை விட்டு வெளியில் செல்ல நேரும் போதெல்லாம் நேத்ரா ஒரு திகிலோடே சென்றுக் கொண்டு இருந்தாள். அந்தப் பொறுக்கி எங்காவது இருப்பானோ...?! ஏதாவது தொல்லை கொடுப்பானோ என்றெல்லாம் நினைத்து பயத்தோடே நடமாடிக் கொண்டு இருந்தாள்.
 
 
நேத்ரா வாழ்க்கையைத் தன்னந்தனியாகத் தைரியமாக எதிர் கொள்ளக் கூடிய பெண் தான். ஆனால் அவள் வாழ்க்கையில் கடந்து வந்த சில கசப்பான விஷயங்கள் அவளை முற்றிலும் தனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் இருந்தும் ஆபத்தான நபர்களிடம் இருந்தும் ஒதுங்கி போகச் செய்திருந்தது.
 
 
அதனாலேயே இரு வாரங்களாகப் பள்ளிக்கு செல்வதைத் தவிர வேறு எங்கும் செல்வதை முற்றிலும் தவிர்த்தவள், பள்ளிக்கு கூடப் பள்ளி வாகனத்திலேயே சென்று வந்துக் கொண்டிருந்தாள்.
 
 
அன்று வெகு நாட்களுக்குப் பிறகு தனக்குத் தேவையானவற்றை வாங்க அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றிருந்தாள் நேத்ரா. அங்கு அனைத்தையும் வாங்கி முடித்துக் கொண்டு வேறு ஏதாவது தேவையா என ஒரு முறை பார்வையைச் சுழற்றிக் கொண்டு இருந்தவள் வெகு அருகில் கேட்ட “எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரலில் திரும்பினாள்.
 
 
அங்கு எதிர் புறம் இருந்த அலமாரியில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்பியவனைக் கண்டு திகைத்தவள், உடனே அங்கிருந்து நகர முயல, “இந்த ஏரியா பேர் என்னன்னு தெரியுமா...?!” என யோசனையோடான முகபாவத்தோடு வெகு தீவிரமான குரலில் கேட்டான் சஞ்சய்.
 
 
அதில் ‘இங்கேயே சுற்றி திரிபவனுக்கு இது எந்த இடம் என்று தெரியாதா...?’ என அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை கண்டு, “ஓ... உனக்கும் தெரியாதா...?!” என்றவனின் குரலில் வம்பிழுக்கும் பாவனையோ குறும்போ இல்லாமல் வெகு இயல்பாக இருந்தது.
 
 
அவனையே திகைப்போடு நேத்ரா பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, “ஆக்சுவலி எனக்குத் தெரியும்... ஆனா பாரு குல்பி, உன்னைப் பார்த்தாலே எனக்கு உலகமே மறந்து போகுது...” என இடது கையால் இடபக்க தலையை ஸ்டைலாகக் கோதியபடியே குறும்போடு கண்சிமிட்டியவனை ‘உன்னையெல்லாம் திருத்தவே முடியாது...’ என்பது போலப் பார்த்தவள் விருட்டெனத் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
 
 
ஏதோ துரத்துவது போல வேக வேகமாகச் செல்பவளையே பொங்கி வந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளின் எதிர் பக்கமாக அடுத்திருந்த பகுதியை சுற்றிக் கொண்டு போய் நேத்ராவின் வழியை மறித்துக் கொண்டு நின்றான்.
 
 
தன்னைப் பின் தொடர்ந்து வருகிறானா எனத் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றவள் முன்னால் வந்து வழி மறித்தவனைக் கண்டு மிரண்டு நின்றாள். “பத்து நாளைக்கு அப்பறம் நல்ல முகூர்த்தம் இருக்கு குல்பி... அன்னைக்கே நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாமா...?” என்று தன் வார்த்தை நிஜமாகப் போவதை அறியாமலேயே அசால்ட்டாகக் கேட்டவனை ‘என்னை விட்டுவிடேன்’ என்பது போலக் கண்களில் கெஞ்சுதலோடு பார்த்தாள் நேத்ரா.
 
 
அந்தக் கண்களின் வார்த்தைகள் சரியாகப் புரிந்தாலும் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் சஞ்சய் நின்றிருக்க... அப்போது அந்தப் பகுதிக்குள் நுழைந்த பெண்ணொருத்தி “ஹலோ சார், நீங்களா...?” என்று உற்சாகமாகக் குரல் எழுப்ப... அந்தக் குரலில் திரும்பியவர்களும் வந்து அவனைச் சூழ்ந்துக் கொண்டனர்.
 
 
ஏன் எதற்கு இத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் அப்போது கொஞ்சமும் இல்லாத நேத்ரா கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு விட்டால் போதுமென அங்கிருத்து ஓடிவிட்டாள்.
 
 
நேத்ராவின் மனது அன்று ஏனோ ராமை அதிகமாகத் தேடியது. இத்தனை வருட பழக்கத்தில் இந்தப் பொறுக்கியை கண்ட பிறகே ராமை மனதளவில் தேட தொடங்கி இருக்கிறாள் நேத்ரா.
 
 
ராம் அவளிடம் தன் காதலை சொல்லியே வருடங்கள் கடந்து விட்டது. ஆரம்பத்தில் இதைக் கேட்டுத் திகைத்தாலும் அப்போதைக்கு அதைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரும் நிலையில் அவள் இல்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டாள்.
 
 
ஆனால் ராமும் அதன் பிறகு அவளை அதைப் பற்றிக் கேட்டு தொந்தரவோ வற்புறுத்தலோ செய்யாமல் இருந்ததோடு கொஞ்சமும் இவளின் மேல் இருந்த அக்கறையை மாற்றிக் கொள்ளவோ விலகவோ செய்யாமல் தொடர்ந்து அதே அன்போடும் அக்கறையோடும் பழகியது நேத்ராவை இன்று வரை ராமை வியப்பாகப் பார்க்க செய்யும் ஒரு செயல்.
 
 
எப்படி இவனால் இப்படி எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இவ்வாறெல்லாம் இருக்க முடிகிறதென அவள் எத்தனையோ முறை வியந்து இருக்கிறாள். ஆனால் அப்போது கூட அவனை மனதளவில் தேடவோ சம்மதம் சொல்லவோ எல்லாம் தோன்றியது இல்லை.
 
 
இதற்கு முன்பு இப்படியெல்லாம் அவள் தேடியதே இல்லை... தேடும்படி அவனும் வைத்துக் கொண்டதே இல்லை... நேத்ராவிற்கு எப்போதெல்லாம் மனதளவில் ஒரு குழப்பமோ தேடலோ இருக்கிறதோ அப்போதெல்லாம் தன் இருப்பை அவன் சரியாக உணர்த்தி இருப்பான்.
 
 
இப்போதும் அவன் அப்படியே தான் இருக்கிறான். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனாலும் முதலில் இதைப் பற்றி ராமிடம் பேச தயங்கியவளுக்கு இப்போது சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழ தொடங்கியது.
 
 
ஆனால் எப்போது அந்தப் பொறுக்கி இவளை தொல்லை செய்யத் தொடங்கினானோ அன்றிலிருந்து தான் இதெல்லாம். மனதில் இவையெல்லாம் ஓட... நேத்ராவின் கரங்கள் தானாக ராமிற்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து இருந்தது.
 
 
ஆனால் இவளின் நேரமோ என்னமோ தெரியவில்லை, அந்தப் பக்கம் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்ற தகவலே தொடர்ந்து வந்துக் கொண்டு இருந்தது.
 
 
இதுவரை நேத்ராவாக ராமிற்கு அழைத்தது இல்லை... இதுவே முதல் முறை. இந்த அழைப்பை ராம் ஏற்று இருந்தால் ஒரு வேலை அவளின் வாழ்க்கை பாதையே மாறி இருக்குமோ என்னவோ...?! ஆனால் அனைத்தும் தலைக்கீழாக மாறி அவளே அவளின் வாழ்வை பாழாக்கி கொள்ள வேண்டும் என்று இருந்ததோ என்னமோ...!? விதியின் சதியால் அந்த அழைப்பு அதற்குரியவனை சென்று அடையாமலே போனது.
 
 
ராமின் அன்பான குரலில் நேசம் வழிய அழைக்கும் “அம்மு” என்ற அழைப்பிற்காகக் கண் மூடி காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே கிடைக்க, அதன் பலனாக வெகு நாட்களுக்குப் பிறகு நேத்ராவின் கண்களில் இருந்து விழிநீர் வழிய தொடங்கியது.
 
 
அங்கு ஒருத்தி தன்னைத் தேடி தனக்காகக் காத்திருக்கிறாள் என்று தெரியாமல், தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதியில் கடமையே கண்ணாக இருந்தான் அவளின் ராம்.
 
 
பாவம் ஒருவேளை தெரிந்து இருந்தால் அவனின் இத்தனை வருட தவமும் காத்திருப்பும் பலித்ததில் மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளி குதித்து இருப்பானோ என்னவோ...?! இங்குத் தான் விதி தன் திருவிளையாடலை தொடங்கியது.
 
 
மறுநாள் சனிக்கிழமை என்பதால் பொறுமையாகத் தன் வேலைகளையெல்லாம் முடித்தவள் அன்று மாலை தங்களோடு பணிபுரியும் பெண்ணின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா இருப்பதால் அதற்குப் பரிசு வாங்க வித்யாவையும் அழைத்துக் கொண்டு கடை தெருவிற்குச் சென்றாள்.
 
 
அனைத்தும் முடிந்து இவர்கள் வெளியேற இருந்த நேரத்தில் வீதியில் ஏதேதோ சத்தங்களும் கூச்சலும் கேட்க தொடங்கியது. என்னவென்று புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டு இருக்கும் போதே கடையில் இருப்பவர்கள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு அவசர அவசரமாகக் கடையை மூட தொடங்கினார்கள்.
 
 
திகைப்போடு வெளியில் வந்த போது தான் தெரிந்தது. அந்தக் கடை மட்டும் இல்லாமல் அங்கிருத்த அத்தனை கடைகளுமே அவசர அவசரமாக மூடப்பட்டுக் கொண்டு இருந்தது.
 
 
விஷயம் இது தான், அந்தப் பகுதியில் இருந்த இரண்டு ரவுடிகளும் தங்களின் நெடு நாள் பகையைத் தீர்த்துக் கொள்ளத் தீடிரெனச் சண்டையிட தொடங்கினர். அதில் இரு பக்கம் உள்ளவர்களும் கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கி அடித்ததில் அது கலவரமாக மாறத் தொடங்கி இருந்தது.
 
 
அது அந்தப் பகுதியின் மிகப் பெரிய கடைவீதி என்பதால் பல்வேறு வயதினரும் அடுத்து செய்வதறியாது என்ன என்று திகைத்து போய் நின்றிருந்தனர். அப்போது “எப்பா யாருனா அந்தப் புதுசா வந்த போலீஸ் தம்பிக்குப் போனை போடுங்கப்பா... அவரு வந்தா தான் இவனுங்க எல்லாம் அடங்குவானுங்க...” என்று கும்பலில் தன் பேர பிள்ளைகளோடு நின்றிருந்த வயதான பெண்மணி குழந்தைகளைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே என்ற கவலையில் குரல் எழுப்பினார்.
 
 
“அதெல்லாம் அப்போவே செஞ்சாச்சு பாட்டி மா...” என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளம் குரல் கொடுத்தது. “ஹை... ஆத்ரேயன் வராராம்... அவர் ஆக்ஷனை நேரில் பார்க்கலாம்...” எனக் கைதட்டி குதிக்காத குறையாகக் குதூகலித்தாள் வித்யா.
 
 
சமீபமாக அவளின் வாயில் இருந்து அதிகமாக உதிரும் பெயர் இது என்பதால் அசுவாரசியமாக முகத்தைத் திருப்பினாள் நேத்ரா. சரியாக அப்போது ஒரு போலீஸ் ஜீப்பும் வேனும் சீறிக் கொண்டு அங்கு வந்து நின்றது.
 
 
அது நிற்பதற்காகவே காத்திருந்தது போல வேனில் இருந்து பத்துக் காவலர்கள் லத்தியும் முங்கிளாலான கேடையுமுமாக இறங்கி ஓடினர். இவர்கள் போய் என்ன செய்து விடப் போகிறார்கள் என்பது போல முகத்தைச் சுழித்த நேத்ராவின் பார்வையில் அந்த வெள்ளை நிற சைரைன் வைத்த வாகனத்தில் இருந்து வெள்ளை சட்டையும் காக்கி பேண்ட்டும் பிரோவுன் நிற ஷூவும் குளிர் கண்ணாடியும் அணிந்து படு ஸ்டைலாக லத்தியை இரு விரல்களுக்கு இடையில் வைத்து சூழற்றியவாறே சஞ்சய் இறங்குவது படவும் அப்படியே திகைக்கத்து நின்றுவிட்டாள் நேத்ரா.
 
 
சஞ்சய் இறங்குவதற்காகவே காத்திருந்தது போல முனையில் நெருப்பு பற்ற வைத்த சோடா பாட்டில் ஒன்று அவனை நோக்கி கும்பலில் இருந்து பறந்து வந்தது.
 
 
அந்தப் பக்கம் நோக்கி வேகமாக அடி எடுத்து வைத்தவன், நொடியில் அதைக் கவனித்து வளைந்து குனிந்து விட, அது வந்த வேகத்திற்குச் சஞ்சய்யை கடந்து சென்றது. அதில் அந்தப் பக்கம் மூடியிருந்த கடை வாயிலில் நின்றிருந்தவர்கள் எல்லாம் அலறிக் கொண்டு சிதறி ஓடினார்கள்.
 
 
அந்த இரைச்சலில் பார்வையைத் திருப்பியவன் அப்போதே அங்கு நேத்ரா திகைப்போடு தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டான். அவளை இங்கு எதிர்ப்பாராமல் திகைத்தவன், “மூவ் பிரம் தேர் நீரு...” என்று உச்சஸ்தாதியில் அவளை நோக்கி ஓடியவாறே கத்தினான்.
 
 
ஆனால் அவளோ இந்த உலகப் பிரகஞையே இல்லாமல் அப்படியே திகைத்த பார்வையோடு நின்றிருக்க... தன் கையில் இருந்த லத்தியை சுழற்றி அதை நோக்கி சஞ்சய் வேகமாக விசிறியதில் சரியாக நேத்ராவை நெருங்கி இருந்த பாட்டில் லத்தி இடையில் புகுந்து தட்டிவிட்டதனால் அவளின் இடப்பக்கமாக மூடி இருந்த கடையின் வாயிலில் மோதி சிதறியது.
 
 
அந்தச் சத்தத்திலேயே பார்வையைத் திருப்பிய நேத்ரா தன் வெகு அருகில் நெருப்பு பற்றிக் கொண்டு எரிவதை கண்டு திகைக்கவும், அவளின் மென் கரங்களை ஒரு முரட்டுக் கரம் பற்றி இழுத்துச் சென்றது.
 
 
நேத்ரா என்ன நடக்கிறது என உணர்வதற்குள் சஞ்சய் அவளை ஓர் மறைவான இடத்தில் இழுத்து சென்று நிறுத்தி இருந்தான். அத்தனை அருகில் அவனைக் கண்டு அவள் அதிர்வதற்குள் “எங்கே எல்லாம் பிரச்சனை இருக்கோ அங்கெல்லாம் தேடி போய் நிப்பியா டி நீ... கொஞ்ச நேரத்துல உயிரே போயிடுச்சு டி...” என்று படபடவெனப் பொரிந்தவன், “ஆர் யூ ஒகே குல்பி...” எனக் கண்களால் அவளை அளந்தபடியே தவிப்போடு கேட்டான்.
 
 
அவளோ அவனையும் அவன் வார்த்தைகளையும் அதில் இருந்த அக்கறையையும் கொஞ்சமும் கவனித்தது போலக் கூடத் தெரியவில்லை. அவனை மட்டுமே திகைத்த விழிகளோடு இமைக்காமல் கூடப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
 
 
அங்கிருந்து நேத்ராவை மறைவான இடத்தில் கொண்டு வந்து பத்திரமாக நிற்க வைத்து விட்டு செல்ல எண்ணியவன், அதற்கு முன்பு அவளின் நிலையை எண்ணியே பதட்டத்தில் பேசிவிட்டு அவளைப் பார்க்க... இமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பவளை கண்டு “என்ன குல்பி மாமனையே பார்த்துகிட்டு இருக்க... இந்தப் பொறுக்கி போலீஸா இருப்பான்னு நீ எதிர் பார்க்க்கலையா...?” என்றான் உல்லாச மனதோடு குறும்பு கூத்தாடும் குரலில்.
 
 
அதில் அவனைத் தன் அருகாமையில் இருந்து உதறி தள்ளியவள், “இதுக்கு நீ பொறுக்கியாவே இருந்து இருக்கலாம்...” என்று அப்பட்டமாக வெறுப்பை உமிழும் விழிகளோடும் குரலோடும் கூறிவிட்டு சென்றாள்.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 293
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 5

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 


   
ReplyQuote

You cannot copy content of this page