சித்திரை - 27
மீட்டிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்மா சிக்னலில் நின்றிருக்க.. எதிர் சிக்னலில் பாலுவின் இருசக்கர வாகனத்தில் நிலா அமர்ந்திருப்பது அவன் பார்வையில் விழுந்தது.
சிக்னல் விழுந்ததும் இருவரும் சிரித்துப் பேசியப்படியே சென்று கொண்டிருக்க.. நிலா சிரித்துக் கொண்டே செல்லமாக பாலுவின் தலையில் தட்டினாள். இதைக் கண்ட வர்மாவின் மனதில் ஏதோ ஒரு ஏமாற்றம் பரவியது.
சற்று முன்பு தான் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கம்பெனி சம்பந்தமான தகவலை பற்றிக் கேட்பதற்காக பாலுவுக்கு அழைத்து இருந்தான் வர்மா. “சாரி பாஸ், நான் இப்போ ஆபீஸில் இல்லை.. ஒரு அவசரமான வேலை ஒன் ஹவர் பர்மிஷன் போட்டு கிளம்பிட்டேன்..” என்று பாலு கூறியிருந்தது இப்போது வர்மாவின் நினைவுக்கு வந்தது.
இருவரும் ஒன்றாகப் பர்மிஷன் போட்டு விட்டு, அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி எங்கோ வெளியில் சென்று விட்டு திரும்புவது புரிய.. அவர்கள் தன்னைக் கடந்து சென்ற பின்னும் அந்தத் திசையையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா.
நிலாவை இழக்க விரும்பா மனம் இதைக் கண்டு ஒரு விதத்தில் தவிக்க.. அதே நேரம் அவளை எதற்கும் கட்டாயப்படுத்தவும் அவனுக்கு விருப்பமில்லை. இதில் ஒருவித கலவையான உணர்வில் வர்மா தத்தளித்துக் கொண்டே, சோர்வாக வீட்டை நோக்கி சென்றான் வர்மா.
பெரிதாக எதையோ இழந்தது போலான உடல் மொழியோடு வீட்டிற்குள் நுழைந்த வர்மாவை புரியாமல் பார்த்தார் சரோஜா பாட்டி. இந்த வாரம் முழுக்கவே ஏதோ ஒரு குழப்பமும் கவலையும் அவன் முகத்தில் படர்ந்திருக்க.. எதையோ இழந்தது போலான ஒரு தவிப்பு அவனிடம் வெளிப்பட்டது.
‘என்னவா இருக்கும்..?’ என யோசித்தவருக்கு நிலாவின் முகம் தான் நினைவில் வந்து நின்றது.
‘அவங்களுக்குள்ளே ஏதாவது பிரச்சனையா இருக்குமா..? என்னன்னு தெரியலையே..! நிலா பொண்ணு ரொம்ப நல்லவளாச்சே..! எதுவும் சண்டை போட்டு இருப்பாங்களோ..?” என்றெல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவருக்கு, இதுவரை அவர்கள் இருவரும் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ளவே இல்லை என்பது தெரியவில்லை பாவம்.
‘இப்போ தான் கொஞ்சம் பழைய மாதிரி வந்துட்டு இருக்கானேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன்.. அதுக்குள்ளே என்னாச்சுன்னு தெரியலையே..! பேசாம நிலாகிட்டயே நேரில் போய்ப் பேசி பார்ப்போமா..? மஹிகிட்ட என்ன கேட்டாலும் சொல்ல மாட்டான்.. தானா சரியாகும்னு நினைச்சு இனியும் காத்திருக்க முடியாது.. இப்போ தான் கொஞ்சமா மனசு மாற ஆரம்பிச்சுருக்கான், இந்தச் சந்தர்ப்பத்தை விடாமல் கெட்டியா பிடிச்சுக்கணும்.. இல்லை திரும்பப் பழைய மாதிரியே வனவாசம் கிளம்பினாலும் கிளம்பிடுவான்..” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவர், நிலாவை நேரில் பார்த்து பேச முடிவு செய்தார்.
**
மறுநாள் அலுவலகத்திற்குள் நுழைந்த வர்மாவை சோதிப்பதற்கென்றே பாலுவுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தாள் நிலா. இயல்பாக இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசிக்கொள்வதும், அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமும் கண்ட வர்மாவுக்கு அத்தனை பொறாமையாக இருந்தது.
அதற்காக நிலாவின் மேல் அவனுக்குச் சந்தேகமா என்றால் நிச்சயம் இல்லை என்பான் வர்மா. ஆனால் அவள் தன்னுடையவள் என உறுதியான பிறகு வரும் மனோதிடம் இப்போது அவனிடம் இல்லை. அவள் தனக்குக் கிடைப்பாளா..? இல்லையா..! என மனம் ஒரு பதட்டத்திலேயே இருந்தது.
அதற்கு ஏற்றார் போல் பாலு உடனான நிலாவின் இந்த நெருக்கமும் தன்னைத் தவிர்ப்பது போல் சமீபமாக அவள் நடந்து கொள்வதும், அவனைப் பொறாமை தீயில் பொசுங்க செய்து கொண்டிருந்தது.
பார்வையாலேயே இருவரையும் எரித்து விடுவது போல் சில நொடிகள் வெறித்தவன், வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஆனால் இதில் இவர்கள் இருவருமே வர்மா வந்ததையோ, நின்றதையோ, சென்றதையோ கவனிக்கவே இல்லை. அத்தனை சுவாரஸ்யமாக அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
தன் இருக்கைக்கு வந்த பின்பும் மீண்டும் மீண்டும் நிலா பாலுவை தொட்டு பேசிக் கொண்டிருந்ததும் சிரித்துக் கொண்டிருந்ததுமே அவன் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருக்க.. வேலையில் வர்மாவால் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை.
இதே மனநிலையில் அவன் இருக்கும் போதே அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் நிலா. “குட் மார்னிங் சார்..” என்றப்படியே நகர்ந்தவள், “இது தான் ஆஃபீஸுக்கு வர நேரமா..?” என்ற வர்மாவில் இறுக்கமான குரலில், தன் நடையை நிறுத்தி மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
முதன்முதலில் இந்த அலுவலகத்தில் நிலா வேலைக்குச் சேர்ந்த போது இருந்தது போல் வர்மாவின் முகம் இருக்க.. ‘என்னாச்சு..? ஏன் இப்படி இருக்காங்க..? எதுவும் பிரச்சனையா..! நேத்து மீட்டிங் போயிருந்தாங்களே அங்கே எதுவும் சரியா போகலையோ..!’ என்றெல்லாம் நொடியில் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், அமைதியாக இருப்பதைக் கண்டு பொறுமை இழந்த வர்மா “உன்கிட்ட தான் கேட்கறேன்.. ஏன் லேட்..?” என்று எரிச்சலில் கத்தவும், “இல்லை சார், நான் அப்போவே வந்துட்டேன்..” என லேசான தடுமாற்றத்தோடு கூறினாள் நிலா.
“அப்போவே வந்து என்ன செஞ்சுட்டு இருந்தே..? வேலை எதுவும் நடந்த மாதிரி தெரியலையே..!” என நிலாவின் மேஜையை நிதானமாகப் பார்த்தப்படியே மீண்டும் அதே போன்ற குரலில் கேட்டான் வர்மா. “இல்... இல்லை சார், நான் இப்போ தான் இங்கே வரேன்.. கீழே பாலு கூட..” எனக் கையை வெளிபக்கம் காண்பித்தவாறே சொல்ல தொடங்கியவள், வர்மாவின் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி அமைதியானாள்.
“ஓஹோ.. உனக்கு இந்த ஆபீஸில் வெட்டி கதை பேச தான் சம்பளம் கொடுக்கறேனா..?” என வர்மா கடினமான குரலில் கேட்கவும், இதற்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டவள் அமைதியாக நின்றிருக்க.. அவளின் இந்தத் தயக்கமும் அமைதியும் வர்மாவிற்கு அதீத கோபத்தை வர வழைத்தது.
அதில் மேலும் அவன் ஏதோ சொல்ல வர.. அதே நொடி அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் பாலு. இருவரும் இருந்த நிலையைக் கண்டு தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பது போல் இருக்க.. என்னவென்பது போல் நிலாவை பார்த்தான் பாலு.
அவளும் அதே நேரம் அவனை என்னை எப்படியாவது காப்பாற்றேன் என்பது போல் பாவமாகப் பார்க்க.. இவர்கள் இருவரின் இந்தப் பார்வை பரிமாற்றத்தை கண்ட வர்மா கோபத்தில் தன் கை விரல்களை இறுக மூடியவாறே பாலுவை பார்த்து “என்ன விஷயம்..?” என்றான்.
அந்த இறுக்கமான குரலிலேயே வர்மாவின் பக்கம் திரும்பிய பாலு, தன் கையில் இருந்த கோப்பை வர்மாவின் முன் வைத்து “இல்லை பாஸ், நேற்று ஈவினிங் நீங்க கால் செஞ்சு கேட்ட பைல் அண்ட் டீடெய்ல்ஸ்.. இந்தப் பைல் மூன்.. ம்ப்ச் நிலா தான் ஹேண்டில் செஞ்சுட்டு இருந்தா, அதான் நேற்று எனக்கு இதைப் பற்றித் தெரியலை.. நிலாவை காலையில் கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லி இன்னைக்கு இந்த வேலையை முடிச்சுட்டோம் பாஸ்.. நீங்க கேட்ட எல்லா டீடைல்ஸும் இதில் இருக்கு..” என வர்மா அதைப் புரட்டிப் பார்ப்பதற்கு ஏதுவாகக் கோப்பை தள்ளி வைத்தான் பாலு.
இதில் இவ்வளவு நேரமும் கொதித்துக் கொண்டிருந்த வர்மாவின் மனம் லேசாகத் தணிய.. இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் ‘சரி போ..’ என்பது போல் பாலுவிடம் விரலசைவில் கூறினான். வர்மாவின் முகத்தில் இருந்த அழுத்தமும் குரலில் தெரிந்த இறுக்கமும் பாலுவுக்கு நன்றாகப் புரிய.. ‘பாஸ் செம்ம கோபத்தில் இருக்கார் போல..’ என நினைத்தவனாக அவனும் வேறு எதுவும் பேசாமல் சரி என்ற தலையசைப்போடு நகர்ந்தான்.
அறையின் கதவு வரை சென்றவனுக்கு நிலாவின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை மீண்டும் திரும்பி நிலாவை பார்க்க செய்திருந்தது. அவளும் என்னைத் தனியே விட்டு போகாதே..!’ என்பது போல் பாலுவை பார்த்திருக்க.. வர்மாவும் இதைக் கவனித்திருந்தான்.
ஆனாலும் பாலுவிடம் எதையும் பேச விரும்பாமல் அமைதியாக இருந்தவன், அவன் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி நிலாவின் பக்கம் திரும்பி “இங்கே இன்னும் நின்று என்ன செய்யறே..? வேலை எதுவும் செய்யும் ஐடியா இருக்கா..?” என்று சிடுசிடுக்கவும், “சா.. சாரி சார்..” என வேகமாகத் தன் இருக்கைக்குச் சென்றாள் நிலா.
ஆனாலும் திடீரென்ற இந்த வர்மாவின் கோபம் எதற்கெனப் புரியா குழப்பம் அவளைத் தாக்க.. திரும்பி திரும்பி வர்மாவை பார்த்தப்படியே வேலை செய்து கொண்டிருந்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கம் அவனையும் சேர்த்து கலங்க செய்தது.
‘ச்சே.. என்ன செஞ்சுட்டு இருக்கேன் நான்..?’ என்ன தன்னையே தீட்டிக் கொண்டவன், அதன் பின் அவளின் பக்கமே திரும்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்தது போல் வேலையில் கவனமானான்.
இதன் பின் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சும் இல்லாமல் அறையே நிசப்தத்தில் மூழ்கியிருக்க.. அவரவர் வேலையில் கவனமாக இருந்தாலும் அவ்வபோது ஒருவர் அறியாமல் மற்றவரின் பார்வை அவர்களைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
மதிய உணவு இடைவேளைக்காக எழுந்த நிலா, அப்போது வரையும் கூட வர்மா அங்கிருந்து அசையாமல் வேலையிலேயே மூழ்கி இருப்பதைக் கண்டு கவலையானாள். இடையில் தன் வழக்கம் போல் டீ குடிக்க நிலா சென்று வந்திருக்க.. வர்மா அதைக் கூடச் செய்திருக்கவில்லை.
இதில் கவலையாக அவனைத் திரும்பி பார்த்தபடியே வெளியேறியவள், சாப்பிடச் சென்று அமர.. மனமோ வர்மாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அவன் இப்படியிருக்கையில் அவளால் நிம்மதியாகச் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை.
‘காலை இங்கே வந்ததிலிருந்து எதுவும் சாப்பிடாம இருக்காங்களே.. என்ன பிரச்சனையா இருக்கும்..? பழைய மாதிரி ரொம்ப டென்ஷனா கோவமா வேற இருக்காங்க, பிசினஸில் ஏதாவது பிராப்ளமா..? இல்லை டீலிங் எதுவும் கையை விட்டு போச்சா..? பாலுவை கேட்டா தெரியுமா..? இல்லை வேண்டாம், அப்பறமா பேசிக்கலாம்..’ என்றெல்லாம் யோசித்தவள், அவன் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே மீண்டும் மீண்டும் மனதை ஏதோ செய்து கொண்டிருந்ததில், சட்டென அங்கிருந்து எழுந்து காபி மேக்கரை நோக்கி சென்றாள்.
வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் வர்மா லெமன் டீயை விரும்பி குடிப்பது வழக்கம் என்பதால் அதைத் தயார் செய்து கொண்டு மீண்டும் அறைக்குச் சென்றவள் “சார் நீங்க காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை.. கொஞ்சம் டீ குடிச்சுட்டு வேலையைப் பாருங்க..” என்றப்படியே அவன் முன் அதை நகர்த்தி வைத்தவள், வர்மா திட்டுவதற்குள் வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள்.
தன் மடிக்கணினியில் கவனமாக இருந்தவன், விழிகளை உயர்த்தி அவளைப் பார்த்தான். ‘இப்போ உன்கிட்ட யார் இதைக் கேட்டது..?’ எனச் சொல்ல நினைத்தவன், அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும், வேகமாக இங்கிருந்து ஓடுவதையும் கண்டு வேறு எதுவும் பேசாமல் சரியெனத் தலையசைத்தான்.
அவள் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒற்றை விரலால் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவாறே வேலையின் பக்கம் கவனத்தைத் திருப்பினான். அதன் பிறகு அன்று முழுக்க வர்மா அமைதியாக மட்டுமே இருந்தான். நிலாவின் அந்த ஒரு சின்னச் செயல் அவன் மனதை அமைதியாக்கி இருந்தது.
அவனுக்கே தன் செயல்களை நியாயப்படுத்த முடியவில்லை. தன் விருப்பப்படி எப்படி வேணும்னாலும் இருக்க நிலாவுக்கு எல்லா உரிமையும் இருக்க.. அவளிடம் கேள்வி கேட்கவோ கோபப்படவோ தனக்கு என்ன உரிமையும் அதிகாரமும் இருக்கிறது என அவன் மனமே வர்மாவை குற்றம்சாட்ட.. இனி இப்படி இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான் வர்மா.
ஆனால் அதை அவனால் ஒரு நாள் கூட முழுதாகக் கடைபிடிக்க முடியவில்லை. மறுநாள் மீண்டும் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி அவனுள் ஒரு கோபம் தானாக உருவானது.
ஏனோ அதை ஒரு நாளும் பாலுவிடம் காண்பிக்க வர்மாவுக்குத் தோன்றவே இல்லை. தன் கோபம் அனைத்தையும் நிலாவிடம் மட்டுமே அவன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் யாரும் எல்லா நேரங்களில் மட்டுமே..! பாலுவின் முன்பு கூட நிலாவிடம் கோபப்பட அவன் விரும்பவில்லை.
இதில் வர்மாவின் செயல்கள் புரியாமல் நிலா முற்றிலும் குழம்பிப் போயிருந்தாள். திடீரெனச் சூரியனைப் போல் சுட்டெரிப்பவன், கோபம் திடீரெனக் குளிர் நிலவைப் போல் இதமான பார்வையால் வருடி செல்வான். இப்படி ஒரே நாளில் பல காலநிலைகளை அவளுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தான் வர்மா.
‘என்னதான் ஆச்சு இவங்களுக்கு..? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க..? திடீர்னு ஏன் இப்படி ஒரு கோபம் என் மேலேன்னு நானே போய்க் கேட்டுடட்டுமா..?’ என்றெல்லாம் யோசித்தவளை, ‘ஓ, உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா..? எங்கே நேரில் போய் அவரைக் கேளு பார்க்கலாம்..!’ என நிலாவின் மனசாட்சியே அவளைக் கேலி செய்தது.
“ஐயோ.. எனக்கு எதுக்கு வம்பு..? சும்மாவே சிடுசிடுன்னு இருக்கார், இதில் நான் போய்க் கேள்வி கேட்டேன் அவ்வளவு தான்.. நமக்கு வேலை முக்கியம் பிகிலு.. அதைக் காப்பாத்திக்கப் பார்..” என்றவாறே அமைதியாகி போனாள் நிலா.
ஆனால் அவள் மனம் அப்படி அமைதியாக மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்ததில், தினமும் அது என்னவென அறிந்து கொள்ள எண்ணி வர்மாவையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தாள் நிலா.
இதை பாலுவும் சில நேரங்களில் கவனித்திருந்தான். அவனுக்கும் ஓரளவு நிலாவின் மனம் புரிந்து தான் இருந்தது. ஆனால் ‘இது எங்கு எப்படிப் போய் முடியுமோ..!’ என்ற பயம் அவளின் மேல் அக்கறை உள்ளவனாகப் பாலுவுக்கு அதிகம் உண்டானது.
ஏனெனில் வர்மாவின் மனதில் என்ன இருக்கிறது என இந்த நொடி வரை பாலுவுக்குத் தெரியாது. நடந்ததை எல்லாம் மறந்து மற்றொரு வாழ்க்கைக்கு அவன் தயாரா..? என்று கூடத் தெரியாத நிலையில் நிலாவை இந்த விஷயத்தில் ஊக்குவிப்பதில் பாலுவுக்கு விருப்பமில்லை.
சிறு வயதில் இருந்தே பெரிதாக எந்தச் சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்தவள் நிலா. அவளுக்கு இனி வரும் வாழ்க்கையாவது சந்தோஷமும் நிம்மதியுமாக அமைய வேண்டும் என்ற வேண்டுதல் பாலுவிடம் இருந்தது.
இப்படி நடக்குமா..? நடக்காதா..! என்று தெரியாத ஒன்றில் சிக்கி அவள் மனவேதனை அடைவதை விட, அதிலிருந்து வெளி வருவது தான் நிலாவின் நிம்மதியான வாழ்க்கைக்குச் சரியென எண்ணியவனாக முடிந்த வரை வர்மா பற்றிய பேச்சை அலுவலகச் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவளிடம் தவிர்க்க தொடங்கினான் பாலு.
அவளாக இந்தத் திடீரென்ற வர்மாவின் நடவடிக்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள எண்ணி பேச்சை தொடங்கினாலும் அதை அவளே அறியாமல் தவிர்த்து விட்டு அடுத்தப் பேச்சுக்குத் தாவி விடுவான் பாலு. நிலாவுக்கும் இது புரியாமலே போனது.
அவளின் மனம் உடைந்து நிலா வலிகளை அனுபவிக்காமல் இதில் இருந்து அவளை வெளிக்கொண்டு வருவது எப்படி என்ற தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான் பாலு.
அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடி வழி தெரிந்த சாலையைப் பார்த்தவாறு தனியே அமர்ந்திருந்தான் வர்மா. வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. இன்று ஒரு கிளையண்டை சந்திக்க வேண்டி இங்கே வந்திருந்தான் வர்மா. ஏனோ பேச்சுவார்த்தை முடிந்த பின்பும் அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான் வர்மா.
வானம் மேகமூட்டத்தோடு இருள் சூழ்ந்திருக்க.. தன் மனமும் இப்படித்தான் இருக்கிறது என நினைத்தவனுக்கு இதை எப்படிச் சரி செய்வது என்றே புரியவில்லை.
இதுவே நேஹா என்ற ஒருத்தி அவன் வாழ்வில் இல்லையென்றால் எந்த ஒரு தயக்கமுமின்றி நிலாவிடம் சென்று இதைப் பற்றிப் பேசிவிட்டு இருப்பான் வர்மா. ஆனால் அப்படி ஒருத்தி வந்து போனதோடு தீரா பழியையும் அவன் மேல் சுமத்தி விட்டுச் சென்றிருக்க.. எப்படி இந்தப் பேச்சை தானாகச் சென்று துவங்குவது என்றே அவனுக்குப் புரியவில்லை.
அதே நேரம் இது வேண்டாம் எனவும் அவனால் நினைக்க முடியவில்லை. எங்குச் சென்றாலும் எதைச் செய்தாலும் மனம் நிலாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது. இதில் செய்வதறியாது திகைத்தவன், வெளியில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க.. அவன் மனதை பிரதிபலிப்பது போல் மெல்லிய ஒலியில் அந்தப் பாடல் அங்கே ஒலித்தது.
உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே..
ஓயாமலே என்னைப் பந்தாடுதே..
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே..
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே..
இந்த வரிகளைக் கேட்ட நொடி அழகு பதுமையாய் கொடைக்கானலில் அவனோடு சேர்ந்து இருந்த நிலாவின் நினைவுகள் வர்மாவின் மனதில் வந்து நின்று அவனை வதைத்தது.
‘நிலா என்ன செஞ்சு வெச்சிருக்கே நீ..? உன்னைத் தவிர்த்து வேறு எதையுமே என்னால் யோசிக்க கூட முடியலை, இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்க நீ..!’ என மனதிற்குள் அவன் புலம்பிக் கொண்டிருக்க..
படித்தால் இனித்திடும் புதினம்..
உன்னை நான் மறப்பது கடினம்..
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு..
வலைக்குள் தவித்திடும் தவிப்பு..
துடிக்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்..
என்ற வரிகள் மீண்டும் மீண்டும் நிலாவை மட்டுமே நினைவு படுத்திக் கொண்டிருக்க.. ஏற்கனவே அவள் நினைவுகளில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருந்தவன், இதற்கு மேலும் இங்கேயே அமர்ந்திருந்தால் நிலாவின் தாக்கம் தன் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும் என உணர்ந்து வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான் வர்மா.
அவன் காரை சற்று தள்ளி இருந்த மரத்தடியில் நிறுத்தியிருக்க.. கொட்டும் மழையில் நனைந்தபடியே காரை நெருங்கியவன், அதனுள் ஏறி அமர்ந்த நொடி ‘ஓ காட்.. என்ன ஒரு மனநிலை இது..?’ என ஓங்கி ஸ்டீரிங்கில் குத்தினான் வர்மா.
அதே நேரம் நிலாவும் வர்மாவை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தாள். ‘ஒரு வாழ்க்கை தப்பா போனா என்ன..? அதுக்காக அவங்க அப்படியே இருக்கணுமா..! இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கக் கூடாதா என்ன..? ஏன் அப்படிச் செய்யாம இத்தனை வருஷமா இப்படியே இருக்காங்க..? ஒருவேளை நேஹாவை அவங்களால் மறக்க முடியலையோ..!
இவ்வளவு செஞ்ச பிறகும் அவ ஞாபகமாவா இருப்பாங்க..? நேஹாவை எப்போவோ மறந்துட்டு இருப்பாங்க, இல்லையே மறந்திருந்தா இன்னொரு கல்யாணம் செஞ்சு இருந்திருப்பாங்களே..! பாட்டியும் அதுக்குத் தானே ஆசைப்படுறாங்க.. எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்காங்கனா என்ன அர்த்தம்..?
நேஹாவை மறக்க முடியலைன்னு தானே அர்த்தம், அவ்வளவு செஞ்சும் அவளை மறக்க முடியலைனா அவ மேலே எவ்வளவு காதல் இருக்கணும்..? இல்லை அதெல்லாம் அப்போ.. இப்போ அவர் மனசில் நேஹா இல்லை.. அன்னைக்குக் கொடைக்கானலில் அவர் எப்படி நடந்துக்கிட்டார்னு பார்த்தே தானே..!’ என நிலாவும் அவளின் மனதும் மாறி மாறி வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
‘இப்போ எனக்கு ஒரு சந்தேகம்.. நீ வர்மா கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சு பீல் செய்யறியா..? இல்லை உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சு பீல் செய்யறியா..!’ என அவளின் மனது திடீரெனக் கேள்வி கேட்கவும், சட்டெனத் திகைத்தவள் “அதெல்லாம் இல்லை.. அவங்க சந்தோஷமா வாழ்ந்தா போதும்னு தான் நினைக்கறேன்..” என்றாள் லேசான தடுமாற்றத்தோடு நிலா.
ஆனால் அவளின் மனமோ அதை நம்பாமல் கேலியாகச் சிரிக்க.. அதன் பின் இதைப் பற்றி யோசிக்கவே பயந்தது போல் வேறு வேலையில் தன் கவனத்தைத் திருப்பினாள் நிலா.
எப்போதும் தன் குழப்பத்தை உமாவிடம் பகிர்ந்து கொண்டு அதற்கு விடை காண நினைப்பவளுக்கு இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் பேசவே தயக்கமாக இருந்தது.
எந்தத் தைரியத்தில் வர்மாவை விரும்புவதாக உமாவிடம் அவளால் சொல்ல முடியும். இதைப் பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் உமா தன்னைத்தான் திட்டுவார் என நிலாவுக்கு நன்றாகவே தெரியும்.
அதேபோல் பாலுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்பவளால் இதைப் பற்றி மட்டும் மனம்விட்டு அவனிடம் பேசவே முடியவில்லை. ‘வர்மாவை விரும்ப உனக்கு என்ன தகுதி இருக்கிறது..?’ என ஒரு வார்த்தை கேட்டு விட்டாலும் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
தனக்கும் வர்மாவுக்கும் இடையே உள்ள அத்தனை வித்தியாசங்களும் அவள் கண் முன்னே வந்து போனாலும் வர்மாவை மறக்க தான் அவளால் முடியவில்லை.
***
இரண்டு நாட்கள் இப்படியே நிலாவின் குழப்பத்திலும் வர்மாவின் மனப்போராட்டத்திலும் சென்றிருக்க.. நிலாவில் முகவாட்டத்தைக் கண்டு அவளை இயல்பாக்க முயன்று கொண்டிருந்தான் பாலு.
அன்று காலையில் இருந்து வர்மாவும் அலுவலகத்தில் இல்லாததால் நிலாவுக்கு உடனே செய்து முடிக்க வேண்டிய வேலை என எதுவும் இல்லை. அதில் பிறகு பார்க்கலாம் என எடுத்து வைத்திருந்த சில வேலைகளை மட்டும் அப்போதைக்குச் செய்து முடித்தவள், பாலுவின் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டாள்.
அவன் சில நிறுவனங்களின் கோப்புகளைச் சரி பார்த்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். அதற்கு உதவியாய் நிலாவும் இருக்க.. இருவரும் பேசியபடியே அந்த வேலையைச் சுலபமாகவும் வேகமாகவும் செய்து கொண்டிருந்தனர்.
இடையிடையே பாலுவின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்த ஒலி கேட்டுக் கொண்டிருக்க.. அதை எடுத்துப் பார்த்து லேசான புன்னகையோடு பதில் அளித்தபடியே பாலு வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க.. அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் நிலா.
அவளின் பார்வையைக் கண்டு கொண்டவனும் “என்ன அப்படிப் பார்க்கறே..?” எனவும், “இல்லை மெசேஜ் சவுண்ட் கேட்கும் போதெல்லாம் உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதே..! அதோட ரகசியம் என்னன்னு பார்க்கறேன்..” என நிலா குறும்பாகச் சொல்லவும், அவனும் பதிலேதும் சொல்லாமல் ஒரு மாதிரியாகப் புன்னகைத்துக் கொண்டான்.
“உன் சிரிப்பை பார்த்தா சந்தேகமா இருக்கே.. அப்போ அதுதானா..?” என நிலா குறுகுறுப்போடு புன்னகைக்க.. “எது தானா..?” என்றான் ஒன்றுமறியா பாவனையில் பாலு. “ஒய், உண்மைய சொல்லு.. நிஜமா எனக்கு அண்ணி இருக்காங்க தானே..!” என நிலா குதூகலத்தோடு கேட்கவும், “அண்ணியா..? அது யாரு..?” என்றான் வேண்டுமென்றே அவளை வம்பு இழுப்பது போல் பாலு.
“ஆமா உன்னை அப்படிக் கூப்பிட பிடிக்கலைனாலும், நீ எனக்கு அண்ணன் தான்..” எனப் போனால் போகிறது என்பது போலான குரலில் கூறினாள் நிலா. அதில் அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன், “நானும் அப்படி நினைச்சு தான் உன்னைப் பத்திரமா பார்த்துக்கணும்னு நினைக்கறேன்..
சின்ன வயசிலேயே எங்க அம்மா இறந்து, அப்பாவும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருந்ததால் பெருசா உறவுகள் இல்லாமல் தனியா வளர்ந்தவன் நான்.. உன் அப்பாவித்தனம், இந்த ஆபீஸுக்கு வந்த புதுசில் நீ மருண்டு விழிச்சதுன்னு எல்லாம் சேர்ந்து உன்னைப் பார்த்ததும் சட்டுன்னு மனசில் ஒட்டிக்கிட்டே.. இப்படி ஒரு குட்டி தங்கச்சி நமக்கு இருந்தா எப்படி இருக்கும்னு அப்போவே எனக்குத் தோணுச்சு.. அதனால் தான் யார்கிட்டயும் எடுக்காத உரிமையையும் அக்கறையையும் உன் மேல் அதிகம் எடுத்தேன்..” என பாலு சொல்லிக் கொண்டே செல்ல.. “அம்மாவும் இதையே தான் அடிக்கடி சொல்லுவாங்க.. உனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா இப்படித்தான் பாலு போல உன்னை அன்பா பார்த்துட்டு இருப்பான்னு..” எனக் கூறினாள் நிலா.
அப்படியே சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதில் சட்டெனப் பேச்சை நிறுத்தி அவனைத் திரும்பி முறைத்தவள், “பேச்சை மாத்த பார்க்காதே.. என் அண்ணியைப் பத்தி சொல்லு..” என்றாள் மிரட்டல் குரலில் நிலா.
“அவ பேர் சங்கீதா.. என் கூடக் காலேஜில் படிச்சவ, அப்போ எல்லாம் எங்களுக்குள்ளே பெருசா எந்த ஒரு ஃபீலும் இல்லை.. ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸா தான் இருதோம்.. ஆனா காலேஜ் முடிச்சுட்டு வெளியே வந்த பிறகு தான் எங்க மனசு எங்களுக்கே புரிஞ்சது.. ரொம்ப அவளை மனசளவில் தேடி தவிக்கத் தொடங்கினேன்.. ஆனா இதை அவகிட்ட எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை..
ஒருவேளை நான் இதைச் சொல்லி அதை அவ தப்பா எடுத்துக்கிட்டு எங்களுக்குள் இருக்கும் நட்பும் காணாமல் போயிடுச்சுனா என்ன செய்யறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்.. அப்போ ஒரு நாள் எங்க கூடப் படிச்ச ஒரு பிரிண்ட் கல்யாணத்தில் ஏதேச்சையா மீட் செஞ்சோம்..
ஆனா என்னைப் போல எந்தத் தயக்கமும் அவளுக்கு இல்லை.. நேரா வந்து எனச் சட்டையை பிடிச்சுச் சண்டை போடாத குறையா ஏன் என்னைத் தேடி வர தெரியாதான்னு கேட்டா.. அன்னைக்குப் புரிஞ்சது அவ மனசு எனக்கு..” என பாலு ரசனையான குரலில் சொல்லிக் கொண்டு செல்ல.. கன்னத்தில் கை வைத்தப்படி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், “கவிதை போல இருக்கு..” என்றாள்.
“என்னது..?” என பாலு புன்னகையோடு கேட்கவும் “உங்க காதல் அப்படியே கவிதை போல இருக்கு..” என்றாள் ரசனையோடு நிலா. அதைக் கேட்டு சிரித்தவன் “உன்னைப் பற்றியும் சங்கீகிட்ட சொல்லி இருக்கேன்.. உன்னைப் பார்க்கணும்னு சொன்னா, ஒரு நாள் போகலாம் தானே..” என்றான் பாலு.
“இது என்ன கேள்வி..? கண்டிப்பா போகலாம், எங்க அண்ணியை எப்போ பார்ப்பேன்னு இருக்கு.. உன்னை மாதிரி ஒருத்தனை எப்படி வெச்சு சமாளிக்கிறாங்கன்னு முதலில் எனக்குத் தெரியணும்..” என்று நிலா சொல்லவும் “என்னது..? என்னை மாதிரி ஒருத்தனா..! ஹலோ நான் கிடைக்க உங்க அண்ணி தான் கொடுத்து வெச்சு இருக்கணும்..” என்றான் காலரை தூக்கி விட்டு கொண்டவாறே பாலு.
“ஆமாமா.. ஞாபகம் வெச்சுக்கறேன், எங்க அண்ணியைப் பார்க்கும் போது மறக்காம நீ சொன்னேன்னு சொல்லிடறேன்..” என நிலா சீரியஸான குரலில் சொல்லவும், பதறியவன் “அடியே குட்டி ராட்சசி.. அப்படி எதுவும் செஞ்சுடாதே..” என அலற.. “அது அந்தப் பயம் இருக்கணும்..” என்றாள் மிரட்டலாக நிலா.
அதில் “சரிங்க மேடம்..” என பவ்யமாக பாலு கையைக் கட்டிக் கொள்ளவும், “சரி எங்க அண்ணி போட்டோ எங்கே காட்டு..” என்றாள் நிலா. “அதெல்லாம் என்கிட்டே இல்லை, நீ நேரில் வந்து பார்த்துக்கோ..” என பாலு சொல்லவும், “இந்த உருட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம் தம்பி.. மரியாதையா கொடு..” என மிரட்டினாள் நிலா.
தன் அலைபேசியை எடுத்து சங்கீதாவின் படத்தை பாலு காண்பிப்பதற்குள் அவனிடமிருந்து அலைபேசியைப் பறித்துக் கொண்டு சற்று தள்ளி சென்றவள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அடுத்து நகர்த்த.. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போலான ஒருப்படம் இருந்தது.
அதைக் கண்டு விழிகளை விரித்தவள், “ஆஹா.. சார் செம ரொமான்டிக் தான் போலேயே..” என பாலுவை நிலா வம்புக்கு இழுக்க.. “அச்சோ நீ ஏன் அதையெல்லாம் பார்க்கறே.. என்கிட்ட கொடு..” என அலைபேசியை அவளிடமிருந்து வாங்க முயன்றான் பாலு.
“அடடே, அப்படி எல்லாம் கொடுத்துட முடியாது சார்.. இருங்க இன்னும் என்னென்ன எல்லாம் செஞ்சு வெச்சு இருக்கீங்கன்னு பார்க்கறேன்..” என அவள் அலைபேசியில் கவனமாக.. நிலாவிடமிருந்து அதைப் பறிக்க முயன்றான் பாலு.
இதைக் கண்டு கொண்ட நிலாவும் அந்த அறையிலேயே சுற்றி சுற்றி ஓடி அவனிடமிருந்து தப்பிக்க முயல.. அவளை எட்டிப் பிடிக்க பாலு முயன்று கொண்டிருந்த அதே நொடியில் அலுவலகத்திற்குள் நுழைந்த வர்மா பாலுவை காண்பதற்காக அங்கு வந்து நின்றான்.
கண்ணாடி கதவின் வழியே தெரிந்த இந்தக் காட்சியைக் கண்டவனின் முகம் ஆத்திரத்தில் இறுகியது. கோபத்தில் தன் விரல்களை இறுக்கமாக மூடியவன், இருவரையும் முறைத்துக் கொண்டே விரட்டென அங்கிருந்து நகர்ந்தான் வர்மா.