All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

சில்லாஞ்சிருக்கியே - 10

 

VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 16
Topic starter  

சில்லாஞ்சிருக்கியே - 10

“டேய் நேத்ரா..” 

 

“தோ வரேன் பா” என்று குரல் கொடுத்தபடி வந்தவன், “என்னாச்சு பா? ஏன் இவ்ளோ அவசரமா கூப்பிட்டீங்க?” என்றான். அவன் கையில் ஒரு பத்திரத்தைக் கொடுத்தவர்,

 

“சீக்கிரம் இதுல ஒரு சைன் போடு டா” என்றார்.

 

“என்ன பத்திரம் பா இது?” என்று கேட்டவன் அதனைப் படிக்க எத்தனிக்க,

 

“அது நம்ம பூர்வீக நிலம் ஊர் எல்லைல இருக்குல்ல. அதுக்கு தான் விலை பேசி முடிச்சுருக்கேன். நான் அவசரமா போக வேண்டியது இருக்கு. நீ சீக்கிரம் சைன் போட்டு கொடுத்துட்டா நான் கிளம்பிருவேன். உன் கேள்வி எல்லாம் அப்புறம் கேட்டுக்கோ” என்று அவசரப்படுத்தினார். 

 

“அந்த நிலத்தை ஏன் பா விக்குறீங்க? அங்க தானே நம்ம தாத்தாவோட சமாதியும் பெரியப்பாவோட சமாதியும் இருக்கு. அது போக நம்ம தமிழோட டீ கடை வேற அங்க இருக்கு. அதை எப்படி விக்க முடியும்?” என்றான் தெளிவாக.

 

“நம்ம நிலத்தை மட்டும் தான் விக்குறோம். இப்போ அந்த நிலத்தை நாம ஒரு பெரிய கம்பெனிக்கு கொடுக்க போறோம். இதனால நமக்கும் நல்ல லாபம். ஊருக்கும் லாபம். நிறைய பேருக்கு வேலை கிடைக்கலாம் இது மூலமா. என் அப்பா, அண்ணனோட சமாதி நம்ம கையைவிட்டு போயிடுமேன்னு எனக்கு வருத்தம் தான். ஆனா அது மூலமா நல்லது நடக்குதுன்னா ஒகே தான. உன் தாத்தா ஓட ஆசையும் ஊருக்கு நல்லது பண்றது தான். அதனால தப்பில்லன்னு தோனுச்சு. அது மட்டுமில்ல.. தமிழோட கடை அந்த கம்பெனி முன்னாடி இருந்தா அவளுக்கும் நல்ல வியாபாரம் ஓடும்” என்று அவர் கூற அனைத்தையும் யோசித்தவனுக்கு சரி என்று பட,

 

“இது மூலமா தமிழுக்கும் நம்ம ஊருக்கும் நல்ல விஷயம் நடந்தா எனக்கு சந்தோஷம் தான் பா” என்றவன் சந்தோஷமாக கையெழுத்திட எத்தனிக்க ஏதோ ஒன்று அவனை தடுத்தது. 

 

“என்ன டா யோசிக்குற? எனக்கு அவ்ளோ நேரம் இல்ல நேத்திரா. நான் போகணும்” என்று அவர் துரிதப்படுத்த பிறகு கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு வயலுக்கு சென்றுவிட்டான். 

____________

 

உறக்கம் விழித்து எழுந்த யாஷுக்கு இப்பொழுது காய்ச்சல் முற்றிலுமாக குறைந்திருந்தது. அவனுக்கு இரவில் தமிழ் வந்தது அவனுக்கு கஷாயம் கொடுத்தது என அனைத்தும் நினைவில் இருந்தது. ஆனால் அப்பொழுது பேசும் நிலையில் தான் இல்லை. எழுந்து அமர்ந்தவன் மேஜையைப் பார்க்க அவனுக்கு காலை உணவாக அரிசிக் கஞ்சி சூடாக இருந்தது. அதனைப் பார்த்து சிரித்தவன் பல்துலக்கி குளித்துவிட்டு வந்து உண்ண ஆரம்பித்தான். 

 

‘எனக்காக நீ இவ்ளோ பண்றியே.. இது காதல் இல்லையா? கேட்டா இது காதல் இல்ல மனிதாபிமானம்னு சொல்லுவ.. கூடிய சீக்கிரம் நீயே என்கிட்ட காதலை சொல்ற நேரமும் வரும் பேபி..’ என்று நினைத்துக் கொண்டவன் பாதி உண்டு முடித்தவனுக்கு உடல் சோர்வாக இருக்க மீதமுள்ள கஞ்சியைக் கட்டிலின் கீழ் வைத்துவிட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். 

 

நேரம் மதியத்தைக் கடக்க மதிய உணவு கொண்டு வந்த தமிழோ உறங்கும் யாஷை பார்த்துவிட்டு,

 

“என்ன இந்த ஆளு இம்புட்டு நேரம் தூங்குராப்டி? இன்னும் காய்ச்சல் குறையலையோ” என்று எண்ணியபடி அவன் நெற்றியைத் தொட்டு பார்க்கவும் அவள் ஸ்பரிசத்தில் சட்டென கண் விழித்து விட்டான் யாஷ். இவ்வாறு திடீரென அவன் விழிப்பான் என்று எதிர்பாராதவள் வெடுக்கென்று நகர கால் இடறி கட்டிலின் கீழே வைத்திருந்த மீதமிருந்த அரிசி கஞ்சி கீழே சிந்த,

 

“ஹே என்னாச்சு..” என்று யாஷ் கேட்க அதற்கு பதில் கூறும் முன் கீழே சிந்திய அரிசிக் கஞ்சியில் தெரியாமல் கால் வைத்தவள் வழுகி கட்டிலில் அவன் மீதே சரிந்தாள். அவனது வேற்றுடம்பில் அவளது பட்டு மேனி மோத இருவருக்கும் மின்சாரம் தாக்கிய உணர்வு தான். ஏற்கனவே அவளிடம் தன் இதயத்தைத் தொலைத்தவன் இந்த திடீர் தாக்குதலில் தன்னை மொத்தமாக தொலைத்தான். அவனது ஹேசல் விழிகளோ அவளை சுயமிழக்க செய்ய ஸ்தம்பித்து போய் பார்த்தாள் அவனை. 

 

அவனது பார்வையோ அவளது நெற்றி, புருவம், விழிகள், நாசி என்று ஒவ்வொன்றாக பயணித்து கடைசியாக இதழில் நிலைக்குத்த ‘ஐயோ கொல்றாளே’ என்று நினைத்தவனுக்கு நேற்று அவளை ஈர உடையில் பார்த்தது வேறு தேவையில்லாமல் நினைவிற்கு வர தன்னையறியாமல் அவளது இதழ்களை நெருங்கினான். அவளும் அவளறியாமல் நெருங்க தான் செய்தாள். இருவரின் இதழ்களும் இடித்துக் கொள்ள இம்மி அளவு இடைவெளி மட்டுமே இடையில் இருக்க பார்வையை அவளின் விழியில் செலுத்தியவன்,

 

“வில் யூ பீ மை கேர்ள்?” என்றான் ஆழ்ந்து பார்த்தபடி. அவனது குரலில் மீண்டவளுக்கு அப்பொழுது தான் இவ்வளவு நேரம் நடந்ததும், தான் இருக்கும் நிலையும் புரிய, சட்டென எழும்ப பார்க்க அவளால் முடியவில்லை. அவனது பிடி தான் உடும்பு பிடியாக இருந்ததே. 

 

“விடுங்க ப்ளீஸ்” என்று கூறியபடி விடுபட முயன்றவளுக்கு குரல் நலிந்து வந்தது. 

 

“எதுவும் செய்ய மாட்டேன். கொஞ்ச நேரம் அப்படியே இரு” என்றான் அவன். அதில் அவளுக்கு கோபம் வர,

 

“என்ன பேசறீங்க நீங்க? விடுங்க முதல்ல” என்று சீற,

 

“மேடம் இவ்ளோ நேரம் என்ன செஞ்சிட்டு இருந்தீங்கன்னு தெரியுமா? நான் நினைச்சுருந்தா உன்னை கிஸ் பண்ணிருக்க முடியும்” என்றபடி சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தான் அவன். தன் இடையை இறுக்கியிருந்த அவனது கரத்தை எடுக்க முயன்றாள் அவள்.

 

“நீயும் கோஆப்ரேட் பண்ணி கிட்ட வர தான் செஞ்ச. ஆனா உன்கிட்ட இருந்து பதில் கிடைக்காம உன்னை டேஸ்ட் பண்ண என் மனசு இடம் கொடுக்கல.. பதில் சொல்லு.. வில் யூ பீ மை லவ்?” என்றவன் பிடியை மேலும் இறுக்கினான். 

 

“விடுங்க யாஷ்.. ப்ளீஸ்” என்றவளுக்கோ கண்கள் கலங்கியது. அவளது கலங்கிய கண்களை பார்த்தவன்,

 

“காதல் இல்லாம தான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட உன் கண்ட்ரோல் லாஸ் பண்ணியா? எனக்கு தெரியும் உன்னைப் பத்தி. இதே என் இடத்துல வேற எவனோ இருந்துருந்தா நான் பேசுற பேச்சுக்கு அவனோட கன்னம் என்னைக்கோ பழுத்திருக்கும். பட் யூ காண்ட் அவாய்ட் மீ.. ரைட்? காதல் இல்லாம தான் என்னை திட்டக் கூட முடியாம தவிச்சியா? காதல் இல்லாம தான் நேத்து தண்ணிக்குள்ள விழுந்த என்னை காப்பாத்த அவ்ளோ போராடுனியா? வொய் டோன்ட் யூ அக்செப்ட் தி ட்ரூத்?” என்று கூறியவன் தனது பிடியைத் தளர்த்த அவன் உரைத்த உண்மையில் திகைத்து பார்த்தாள். 

 

அவனது பார்வை அவள் கழுத்தில் அணிந்திருந்த டாலரில் பதிய,

 

“ஒருவேளை இதோ இந்த டாலரை கொடுத்தவன் வருவான்னு முட்டாள்தனமா வெயிட் பண்றியா? சரி அப்படியே அவன் வந்தாலும் அவன் மேல உனக்கு காதல் வரும்னு நினைக்குறியா? அது காதலே இல்ல. அவன் யாரா இருக்கும்னு உனக்குள்ள இருக்குற ஒரு க்யூரியாசிட்டி தான். இதுக்கு மேலயும் நீ யோசிச்சா ஃபைன்.. பட் ஐ வான்ட் அ க்ளியர் ரிஜெக்ஷன் ப்ரம் யூ. நீ நோ சொன்ன அடுத்த நாளே நான் இந்த ஊரவிட்டு போயிடுறேன். உன்னை எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று தீர்க்கமாக கூறியவன் தனது பிடியை முற்றிலுமாக தளர்த்த விறுவிறுவென எழுந்தவள் அங்கிருந்து செல்ல போக,

 

“ஒரு நிமிஷம்” என்று தடுத்தான். வாசலில் நின்றவள் அவனை என்னவென்று பார்க்க,

 

“இன்னைக்கு முழுக்க நல்ல யோசிச்சுக்கோ. நாளைக்கு காலைல உன் கடைக்கு வருவேன். உனக்கு ஓக்கேன்னா உனக்கு பிடிச்ச டீ எனக்கு கொடு. ஓகே இல்லன்னா எப்போதும் போல எனக்கு பிடிச்ச காபி எனக்கு கொடு. தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ். வெயிட்டிங் பார் யுவர் ரெஸ்பான்ஸ்” என்றவன் கண்ணடிக்க மௌனமாக சென்றுவிட்டாள் தமிழ். 

 

வீட்டிற்கு வந்த தமிழுக்கு திரும்ப திரும்ப யாஷின் சொற்களே ஒலித்துக் கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்தவள் கட்டிலில் சாய்ந்துவிட்டாள். அதனைக் கண்ட தேன்மொழியோ,

 

“என்னாச்சுக்கா? கடைக்கு வரலையா? இந்நேரம் நீங்க தூங்க மாட்டீங்களே.. உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என்று கேட்க,

 

“தலை லேசா வலிக்குது தேனு. நீ போ.. நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்” என்றிட தேன்மொழியும் சென்றுவிட்டாள். 

 

படுத்தபடி யோசித்தவளுக்கு குழப்பமாக இருந்தது. யாஷ் கூறிய அனைத்தும் உண்மையே. அவன் மட்டும் சுதாரிக்காமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று நினைக்கவே அவளுக்கு கன்னம் சிவந்தது. கோபம் வர வேண்டிய இடத்தில் வெட்கம் வந்து தொலைக்கிறதே. இது ஒன்று போதாதா அவளுக்கும் காதல் இருக்கிறது என்பதை அறிய. 

 

அவன் ஏதேனும் செய்திருந்தால் கூட கோபம் வந்திருக்குமோ என்னவோ. ஆனால் முத்தத்தை எல்லாம் சர்வ சாதாரணமாக நினைக்கும் கலாச்சாரத்தில் பிறந்தவனாக இருந்த போதும் காதல் கூறிய பின்பு தான் இதழ் சுவைப்பேன் என்று கண்ணியமாக கூறியவனை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். இன்னும் இன்னும் பிடித்தது பெண்ணவளுக்கு. 

 

“அப்போ நிஜமாவே நானும் அவரை காதலிக்குறேனா.. அப்போ ஏன் எனக்கு இந்த டாலர் மேல இவ்ளோ சென்டிமென்ட்..” என்று தனக்கு தானே கேட்டுக்கொள்ள,

 

‘இப்போ அந்த டாலரை கொடுத்த ஆளு நிஜமாவே நேர்ல வந்து அவரை உனக்கும் பிடிச்சுருந்தா கூட யோசிக்கலாம். ஆனா அப்படி ஒருத்தர் வருவாரா மாட்டாரான்னே தெரியல.. அது மட்டுமில்ல.. சின்ன வயசுல இருந்தே நம்ம கிட்ட ஒரு பொருள் இருந்துட்டே இருக்குன்னா அது மேல ஆட்டோமேட்டிக்கா ஒரு எமோஷனல் கனெக்ஷன் உண்டாக தான் செய்யும். அது அந்த பொருள் மேல இருக்குற சென்டிமென்ட் தானே தவிர்த்து அதை கொடுத்தவர் மேல இருக்குற பீலிங்ஸ் கிடையாது’ என்று அவளது மனசாட்சியும் யாஷ் பக்கமே நியாயம் கூறியது.

 

‘பிராடு.. என் மனசாட்சியையும் சேர்த்து கவுத்து வச்சுருக்காரு’ என்று நினைத்தவள் தன் போக்கில் சிரித்தாள்.

 

“பட் நாளைக்கே நம்ம லவ்வ சொல்லனுமா என்ன? கொஞ்சம் அலைய விட்டு தான் பார்ப்போமே.. இல்லன்னு சொன்னா தானே மனுஷன் ஊரைவிட்டு போவாரு. இல்லன்னும் சொல்லக் கூடாது. ஆமான்னும் சொல்ல கூடாது. அப்படி ஏதாச்சும் செய்யணும்” என்று கூறிக் கொண்டவள் அதற்கான திட்டத்தை தீட்டினாள் சற்று நேரத்தில் விதி வேறொரு திட்டம் தீட்ட தயாராக இருப்பது அறியாமல்.

 

பிறகு படுக்கையை விட்டு எழுந்தவள் தன் கடைக்கு புறப்பட்டாள். ஆனால் அங்கு மந்திரமூர்த்தி நின்று தேன்மொழியிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். 

 

“இவரு அவகிட்ட என்ன பேசிட்டு இருக்காரு?” என்று புருவம் இடுங்கியபடி வந்தவள்,

 

“என்னாச்சு தேனு?” என்றிட தேன்மொழியிடம் கேவல் மட்டுமே தென்பட்டது. 

 

“ஏட்டி எதுக்கு அழுகுற நீயு?” என்றவள் மந்திரமூர்த்தியிடம்,

 

“மாமா.. என்னாச்சு? அவகிட்ட என்ன சொன்னீங்க? எதுக்கு இப்படி அழுகுறா?” என்று கேட்க,

 

“நான் என்ன தாயி சொல்றது? செய்ய கூடாததை எல்லாம் செஞ்சா கடைசில இப்படி அழுக தான் செய்யணும். அவ மேல ஊர் மக்கள் பிராது கொடுத்துருக்காங்க. கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்து இருக்கு. கூட்டிட்டு வந்துரு” என்றவர் அடுத்து யாஷ் வீட்டை நோக்கி நடந்தார். அவர் கூற்றில் குழம்பிய தமிழோ,

 

“ஏட்டி.. அழுவுறத நிப்பட்டிட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலையேன்ட்டி” என்று கத்த,

 

“என்ன ரொம்ப மோசமா ஊருக்குள்ள நினைச்சு வச்சுருக்காங்கக்கா.. புருஷனை இழந்துட்டு கைக் குழந்தையோட நிக்குறேன்னு கூட யோசிக்காம இப்படி கொச்சைப் படுத்துறாங்க என்னை.. அதுவும் அவர் கூட சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்கக்கா.. இந்த வார்த்தை எல்லாம் கேக்குறதுக்கு நான் செத்தே போயிடலாம் போல இருக்குக்கா” என்று அழுபவளை பார்க்க தமிழுக்கும் கண்கள் கலங்கியது. 

 

“நேத்திரன் கூட சேர்த்து வச்சு தப்பா பேசுறாங்களா?” என்று தமிழ் கேட்க இல்லையென தலை ஆட்டிய தேன்மொழி முன்பைவிட அதிகமாக கேவினாள். தமிழின் முகத்தில் தீவிரம் கூட,

 

“யார் கூட சேர்த்து வச்சு பேசுறாங்க?” என்று புருவம் சுருக்கி கேட்க,

 

“யாஷ் அண்ணா கூட சேர்த்து பேசுறாங்கக்கா..” என்றவள் தரையில் அமர்ந்து தலையிலடித்தபடி அழ, குழந்தைக்கு என்ன புரிந்ததோ.. தாயின் கண்ணீரை காண முடியாமல் அதுவும் அழுதது. அவ்வார்த்தையைக் கேட்டு தமிழோ ஸ்தம்பித்து போய் நின்றாள். இத்தனைக்கும் வாய் நிறைய அண்ணா அண்ணா என்று அழைப்பதையும் இவ்வூர் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் இத்தகைய கேவலமான குற்றச்சாட்டை வைக்க எப்படி மனது வந்தது.

 

“மனசாட்சி இல்லாத ஜென்மங்க” என்று பல்லிடுக்கில் அவர்களை திட்டியவள் அலைபேசியில் நேத்திரனுக்கு அழைக்க அழைப்பை ஏற்றவன்,

 

“சொல்லு புள்ள” என்றான்.

 

“எங்க இருக்க?”

 

“உரம் வாங்க பக்கத்து ஊரு வரைக்கும் அப்பா அனுப்புனாரு.. இப்போ தான் பாதி தூரம் போயிருக்கேன். என்னாச்சு?” என்றான்.

 

‘பிளான் பண்ணி இந்த மூர்த்தி மாமா இவனை வெளிய அனுப்பிருக்காரோ?’ என்று யோசித்தவள்,

 

“உடனே திரும்பி வா.” என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில். 

 

“எதுக்கு புள்ள?”

 

“டேய் வா டான்னு சொன்னா வர மாட்டியா? சொல்ற மாதிரியா இங்க நடந்து தொலைச்சுருக்கு” என்று எரிச்சலோடு கூறியவள் தேனை விட்டு சிறிது தூரம் தள்ளி வந்து நடந்ததைக் கூற நேத்திரனுக்கு ரத்தம் கொதித்தது. கண்கள் சிவப்பேற,

 

“இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு தலைக்கவசத்தை எடுத்து அணிந்தவன் வண்டியைத் திருப்பி தனது ஊரை நோக்கி பறந்தான். 

___________

 

அங்கு யாஷ் வீட்டிற்கு சென்ற மந்திரமூர்த்தியோ,

 

“தம்பி.. உங்க மேல பிராது கொடுத்துருக்காங்க. கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்து கூடும். வந்துருங்க” என்க,

 

“வாட்? என் மேல கம்ப்லைன்ட்டா? என்ன கம்ப்லைன்ட்” என்று புரியாமல் கேட்டான். 

 

“ஆமா. உங்க மேல தான். நீங்க எங்க ஊரு பொண்ணுக் கிட்ட வரம்பு மீறி நடக்கிறதா குற்றச்சாட்டு வந்துருக்கு.” என்க அவர் தமிழை தான் கூறுகிறாரோ என்று நினைத்தவன்,

 

‘ஒருவேளை இன்னைக்கு நடந்ததை யாரும் பார்த்துருப்பாங்களோ? அப்போ இன்னைக்கு அவ சொல்ல போற பதில்ல நமக்கு முடிவு தெரிஞ்சுரும்” என்று நினைத்து சிரித்துக் கொண்டவன்,

 

“வரம்பு மீறுறதுன்னா அந்த பெண்ணுக்கும் விருப்பம் இல்லாம இருந்தா தான். நீங்க வேணா அவகிட்ட கேட்டுக்கோங்க. அவளுக்கு விருப்பமா இல்லையான்னு” என்று இவன் சாதாரணமாக கூற அவனை ஒருமுறை புரியாமல் பார்த்தார் மந்திரமூர்த்தி. உடன் வந்திருந்த பெரியவர்களை ஒருகணம் பார்த்து தலையசைத்த மந்திரமூர்த்தி பிறகு,

 

“எதுனாலும் பஞ்சாயத்துல வந்து சொல்லுங்க” என்றுவிட்டு நகர்ந்தார். அவனும் சர்வ சாதாரணமாக பஞ்சாயத்து கூடும் இடத்திற்கு செல்லலானான் நடக்க போகும் விபரீதம் புரியாமல். 

 

அரச மரத்தை ஒட்டி அமைந்த மேடையில் நடுநாயகமாக மந்திரமூர்த்தி அமர்ந்திருக்க அவருக்கு இரண்டு பக்கமும் ஊரின் மூத்த பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் கூடி நின்று தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்க அப்பொழுது தான் அங்கு வந்து சேர்ந்த யாஷின் கண்களில் தேன்மொழி அழுதபடி தமிழின் தோள்பட்டையில் சாய்ந்திருக்கும் காட்சி தென்பட்டது. 

 

‘தேனு எதுக்கு அழுகுறா?’ என்று புரியாமல் பார்த்தவன் அவர்கள் அருகில் செல்ல போக,

 

“தம்பி… நீங்க இங்க நில்லுங்க” என்றார் ஊர் பெரியவர். அவனோ புரியாமல் தமிழைப் பார்க்க அவள் கண்களோ சோகமே உருவாய் காணப்பட்டது. என்னவென்று புரியாமல் புருவத்தை நீவியவனுக்கு அப்பொழுது தான் விஷயம் பிடிப்பட தமிழை பார்த்தவன், ‘தான் நினைப்பது சரியா?’ என்றபடி பார்க்க அது அவளுக்கு புரிந்ததோ என்னவோ ஆமென்று தலையசைத்தவளுக்கு கண்கள் கலங்கியது. அவள் ஆமென்று கூறியதும் தன் தலையிலடித்தவன் முட்டியில் கை ஊன்றியபடி அங்கேயே அமர்ந்துவிட்டான்.

 

‘வாட் தி ****** தீஸ் பீப்புள் ஆர் டாக்கிங்.’ என்றவனின் வாயில் இன்னும் சில ஆங்கில கெட்ட வார்த்தைகள் வர தயாராக இருந்தது. 

 

“என்னப்பா பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாமா?” என்று ஊர் பெரியவர்கள் மக்களிடம் கேட்க அனைவரும் சம்மதித்தனர். 

 

“பிராது கொடுத்தவங்க முன்னாடி வாங்க” என்று மந்திர மூர்த்தி கூற இன்று அதிகாலை தேன்மொழி யாஷின் வீட்டிற்கு செல்லும் போது பார்த்த பால்க்கார பெண் வந்து முன்னே நின்றாள்.

 

“யார் மேல? என்ன பிராது கொடுக்க போறன்னு மக்களுக்கு தெளிவா சொல்லு மா” என்று மந்திரமூர்த்தி கூற,

 

“வணக்கமுங்க ஐயா. இன்னைக்கு விடிய காலைல ஒரு மூணு மணி இருக்கும். நான் பால் கறக்க பண்ணைக்கு போயிட்டு இருக்கும் போது இந்த விதவை பொண்ணு இந்த அசலூர்காரர் வீட்டுக்கு போனதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேங்கய்யா. எல்லாரும் அசந்து தூங்குற சாமத்துல இந்த பொண்ணு எதுக்கு அந்த பையன் வீட்டுக்கு போகணும். எனக்கு என்னமோ சரியா படலை. ஊருக்குள்ள நிறைய வயசு பசங்க இருக்காங்க. இவங்கள மாதிரி ஆளுங்களால நம்ம ஊருக்கு தான் ஐயா கெட்ட பேரு. அதான் பிராது கொடுத்தேன்” என்று அப்பெண் கூற தமிழோ,

 

“யக்கா.. கொஞ்சம் கூட மனசுல ஈரம் இல்லாம பேசாத. ஒரு பொண்ணு ஒருத்தர் வீட்டுக்கு போனா அப்படின்னா எதுக்கு போனான்னு விசாரிக்கணும். நடந்த உண்மை தெரியாம நீயாவே ஒரு கதையை உருவாக்கி அந்த பொண்ணை இப்படி அசிங்கப்படுத்துரியே.. ச்சைக்” என்று சீறினாள். 

 

“இந்த பாரு தமிழு. நான் பார்த்ததை தான் சொன்னேன். தப்பு செஞ்சாங்களா இல்லையான்னு நிரூபிக்க தானே பஞ்சாயத்தை கூட்டிருக்கு. தீர்ப்பை அவங்க சொல்லுவாங்க. நீ சும்மா எல்லா விஷயத்துக்கும் மூக்கை நுழைச்சுட்டு வராத” என்று திட்டிய அப்பெண்,

 

“நடந்தது இது தாங்க. நீங்க விசாரிச்சுக்கோங்க” என்றபடி ஓரமாக போய் நின்றுக் கொண்டாள். யாஷ் ஏதோ பேசவர,

 

“நாங்க பேச சொல்லும் போது நீங்க பேசுனா போதும்” என்றுவிட அவனால் பேசவும் முடியவில்லை. மேலும் தொடர்ந்த ஊர் பெரியவர்,

 

“இந்த பிராதுக்கு வேற யாராச்சும் சாட்சி இருக்கீங்களா?” என்று கேட்க நேற்று மதியம் யாஷுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு தேன்மொழி அவன் வீட்டில் இருந்து வெளியே வரும் போது அவளை பார்த்த ஊர் பெரியவர் முன்னே வந்து நின்றார்.

 

“ஐயா வணக்கம். இந்தம்மா சொன்ன காட்சியை நான் பார்க்கலை. ஆனா நேத்து மதியமும் இந்த புள்ள அந்த தம்பி வீட்டுல இருந்து சிரிச்சிட்டே வெளிய வந்ததை நான் பார்த்தேன்.” என்று கூற அதனைக் கேட்ட தேன்மொழியோ,

 

“ஐயோ ஐயோ.. இப்படி எல்லாரும் என்னை தப்பா பேசுறாங்களே” என்று தலையிலடித்து அழுக ஆரம்பித்தாள். 

 

“யத்தா தேனு.. இப்படி அழுதா என்ன அர்த்தம். உன்மேல தப்பு இல்லைனா நீ உன் பக்க விளக்கத்தை சொல்ல வேண்டியது தானே. அதை விட்டுட்டு எதுக்கு இப்படி அழுகுறவ?” என்க,

 

“நான் என்னத்த சொல்லுவேன். அண்ணன் மாதிரி நான் நினைக்குற ஒருத்தரோட சேர்த்து வச்சு இப்படி தப்பா பேசுறவங்க கிட்ட நான் என்னன்னு விளக்கணும். இங்க பாருங்க.. இவங்க சொல்ற மாதிரி எங்களுக்குள்ள அப்படி தப்பான உறவு ஏதும் இல்லை.. தயவு செஞ்சி நம்புங்க. இது என் புள்ள மேல சத்தியம்” என்றவள் மேலும் அழுதாள். 

 

“நீங்க என்ன தம்பி சொல்றீங்க?” என்று கேட்க யாஷோ,

 

“தேனு சொல்றது உண்மை தான். நான் வெளிநாட்டு காரன் தான் இல்லன்னு சொல்லல. அதுக்காக தமிழ் மரபு பத்தியும், உறவுமுறை, பழக்கவழக்கம் பத்தியும் தெரியாதவன் இல்ல. தமிழ் வழக்கத்தை மதிக்க தெரிஞ்சவன் நான். தேனை என்கூட பொறந்த தங்கச்சி மாதிரி மட்டும் தான் நான் நினைக்குறேன்.” என்று யாஷ் கூற சரியாக வந்து சேர்ந்தான் நேத்திரன். அவனைக் கண்ட மந்திரமூர்த்தியோ,

 

‘இவனை யார் இப்போ இங்க வர சொன்னது?’ என்று பல்லைக் கடித்தபடி பார்த்தார். வந்தவன்,

 

“அப்பா.. என்ன நடக்குது இங்க?” என்று ஆதங்கமாக கேட்க,

 

“நேத்திரா.. பஞ்சாயத்துல எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியாதா? வாய மூடிட்டு நில்லு” என்றிட வேறு வழியின்றி அமைதியாக நின்றவனுக்கு தேன்மொழியைப் பார்க்கவே மனது வலித்தது. அருகில் நின்ற தனது தாயிடம்,

 

“அம்மா.. தேன்மொழி அப்படி எல்லாம் பண்றவளா மா? உனக்கு தெரியும் தானே அந்த பொண்ணை பத்தி. அப்பா கிட்ட பேசு மா” என்று கெஞ்சினான் நேத்திரன்.

 

“எனக்கும் பாவமா தான் டா இருக்கு அவளை நினைக்க. ஆனா உன் அப்பாவை மீறி நான் என்ன செய்றது” என்று கூறியவர் தலைக் குனிந்து கொண்டார். 

 

“சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் அவங்க பக்க கருத்தை சொல்லிட்டாங்க. இதுக்கு யாரெல்லாம் வழிமொழியுறீங்க? யாரெல்லாம் கண்டனம் தெரிவிக்குறீங்க” என்று கேட்க தமிழ், நேத்திரன், நேத்திரனின் அன்னை மஞ்சுளா ஆகிய மூவர் மட்டுமே அவர்களுக்கு சார்பாக இருந்தனர். மற்ற அனைவரும் கண்டனம் தான் தெரிவித்தனர். அதிலும் பல நாட்களாக தேன்மொழியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒருவனோ,

 

‘எத்தனை தடவை கூப்பிட்டுருப்பேன். வந்தியாடி நீ? உனக்கு இது தேவை தான்.. இப்போ பாரு’ என்றபடி வஞ்சமாய் நினைத்தவன்,

 

“மாதிரி என்னைக்கும் உண்மை ஆகாது தானே. ரெண்டு பேருமே அண்ணன் மாதிரி தங்கச்சி மாதிரின்னு தானே சொல்றாங்க.. தப்பு பண்ண யாரு தான்.. ஆமா நான் தப்பு பண்ணேன்னு ஒத்துகிட்டாங்க. எனக்கு இவங்க பேச்சை நம்ப தோணலை.. அதுவும் தேனு வேற வயசு பொண்ணு. சின்ன வயசுலயே புருஷனை இழந்துட்டா. அதுக்காக அவ புருஷனோட சேர்ந்து அவ உணர்ச்சிகளும் செத்துட்டுன்னு ஆயிடாது தானே.. அவளும் மனுஷி தானே” என்று மேலும் எரிகிற தீயில் எண்ணையை ஊற்ற அவ்வார்தைகளை கேட்டு நேத்திரனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. 

 

“என்ன டா சொன்ன?” என்றபடி வேகமாக அவனை நோக்கி வந்த நேத்திரனோ அவனது மூக்கை உடைத்தான். உடன் நின்றவர்கள் அவனை தடுத்து நிறுத்த அடிவாங்கியவனோ நாசியில் குருதி வழிய நேத்திரனைப் பார்த்து முறைத்தான். முறைத்தவன் அதோடு நில்லாமல்,

 

“சும்மா சொல்லக் கூடாது தேனு. நல்ல பெரிய பெரிய இடமா தான் பார்த்து வளைச்சு போட்டு வச்சிருக்க” என்றிட கூர் கத்திக் கொண்டு யாரோ நெஞ்சைக் கிழிக்கும் உணர்வு ஏற்பட்டது தேனுக்கும் நேத்திரனுக்கும். நேத்திரன் மேலும் அடிக்கவர மந்திரமூர்த்தியோ,

 

“நேத்திரா.. அமைதியா நில்லு. நீ எதுக்கு மல்லுக்கு நிக்குற.. அவன் ஒன்னும் தப்பா சொல்லலை.” என்று கூற,

 

“என்னப்பா நீங்க மனசாட்சி இல்லாம பேசறீங்க?” என்று கேட்டான் ஆற்றாமையில். மக்களுக்குள் சலசலப்பு அதிகரிக்க,

 

“எல்லாரும் அமைதியா இருங்க. இந்த இடத்துல நான் ஒரு விஷயத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அதாவது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் யாஷ் தம்பியை பஞ்சாயத்துக்கு வர சொல்லி அழைக்க போயிருந்தேன். அப்போ அவரு, ‘வரம்பு மீறுறதுன்னா அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாம நடக்கிறது தான். நீங்களே அந்த பொண்ணுகிட்ட விருப்பமா இல்லையான்னு கேட்டுக்கோங்க’ அப்படின்னு ஒரு விஷயம் சொன்னாரு.” என்று அவர் கூற தேன், தமிழ், நேத்திரன், யாஷ் என நால்வரும் அதிர்ந்தனர். தேன்மொழியோ கண்கள் கலங்க யாஷைப் பார்க்க அவனோ தன் கலங்கிய கண்களால் தமிழை காட்டினான். 

 

அப்பொழுது தான் தேனுக்கு புரிந்தது. அவன் தமிழை நினைத்து அவ்வாறு கூறியிருக்கிறான் என்று. இவ்வாறு மந்திரமூர்த்தி கூறியதும் அருகில் இருந்த பெரியவர்கள்,

 

“ஆமா நாங்களும் கேட்டோம்” என்று கூறிட,

 

“கேட்டியாடி கதையை. அங்க அப்படி சொல்லிட்டு இங்க வந்து ரெண்டு பேரும் நாடாகமாடுறதை” என்று அவர்கள் காதுபடவே அனைவரும் பேசினர். தேன்மொழிக்கோ இப்பொழுதே இந்த பூமி இரண்டாக பிளந்து தன்னை உள்ளிழுத்துக் கொள்ள கூடாதா என்று தோன்றியது. 

 

“அதனால நடந்த எல்லாத்தையும் பார்க்கும் போது.. கொடுக்கப்பட்ட பிராது உண்மை தான்னு உறுதியாகுது. அதுக்கு பிராயச்சித்தமா ஒன்னு இந்த தம்பி விதவையான தேன்மொழிக்கு இப்போவே இங்கேயே தாலி கட்டி மனைவி ஆக்கிக்கணும்” என்றவர் ஒரு மஞ்சள் கயிற்றை முன் வைக்க நால்வருக்கும் பேரதிர்ச்சி. யாஷோ,

 

“என்ன பேசுறீங்க. நான் அமெரிக்கா சிட்டிசன். உங்க ஊரு பஞ்சாயத்துக்கு நான் கட்டுப்படனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. அப்படியும் வற்புறுத்துனா நான் கோர்ட்டுக்கு போவேன்” என்றவன் தீர்க்கமாக கூறினான். அதனைக் கேட்ட மந்திரமூர்த்தியோ,

 

“அப்படி ஒருவேளை திருமணம் செய்துக்க மறுத்தா.. நம்ம ஊருக்காரியான தேன்மொழி நம்ம சட்டத்துக்கு கட்டுப்படலைன்னு குற்றம் சாட்டப்பட்டு அதுக்கு தண்டனையா அவளுக்கு மொட்டையடிக்கணும். ஊரைவிட்டு ஒதுக்கியும் வைக்கணும். எது நடக்கணும்னு நீங்களே பேசி முடிவு பண்ணிக்கோங்க” என்று தீர்ப்பு கூற மறுநொடியே தன் கண்ணீரைத் துடைத்த தேன்மொழியோ,

 

“நான் மொட்டையடிச்சுக்குறேன்” என்றாள் சிறிதும் தயங்காமல். ஆனால் யாஷோ,

 

“தேவையில்ல.. என்னால ஒரு பொண்ணு பாதிக்கப்பட வேணாம். நான் தாலி கட்டுறேன்” என்று கூற இப்பொழுது யாஷை தவிர்த்து மற்ற மூவரும் அதிர்ந்தனர். தமிழோ வெகுவாக அதிர்ந்து பார்க்க அவளை பார்த்தவன் நேத்திரனைக் கண்காட்டி தன் கண்களை மூடி திறக்க தமிழுக்கு புரிந்து போனது. நேத்திரனோ யாருமறியாவண்ணம் யாஷின் காதில்,

 

“ப்ரோ.. என்ன பேசுறீங்க நீங்க? இது ஒன்னும் நீங்க நினைக்குற அளவுக்கு சாதாரணம் விஷயம் இல்ல” என்க அவனோ,

 

“டேய் மாங்கா.. தாலியை எடுக்க போறது மட்டும் தான் நான். கட்டப்போறது நீ தான்” என்று அவன் காதில் மெதுவாக கூற நேத்திரனுக்கு முகம் முழுவதும் பிரகாசமாக ஜொலித்தது. 

 

“ப்ரோ” என்றபடி இன்ப அதிர்ச்சியில் நேத்திரன் யாஷைப் பார்க்க,

 

“சிரிச்சு காட்டி கொடுத்துறாத ப்ரோ. யாருக்காச்சும் சின்னதா சந்தேகம் வந்தாலும் அப்புறம் உன் ஹனி உனக்கு கிடைக்கமாட்டா.” என்று கூற முயன்று தன்னை இயல்பாக்கிக் கொண்டான் நேத்திரன்.

 

‘கடவுளே.. எது நடந்தாலும் அதுக்கு பின்னாடி காரணம் இருக்கும்னு சொல்வாங்க. இப்போ தான் உணர்வுபூர்வமான உணருறேன். நன்றி கடவுளே’ என்று மனதினுள் குத்தாட்டம் போட்டவன் வெளியே காட்டிக்கொள்ளாமல் நிற்க அரும்பாடு பட்டான்.

 

“அப்புறம் என்ன பா.. அதான் அந்த தம்பி தாலி கட்டுறேன்னு சொல்லிடுச்சே.. ஐயரை கூட்டிட்டு வாங்க” என்று கூறிய மந்திரமூர்த்தியோ,

 

‘ஹப்பாடா இனிமே என் மகன் அந்த சிறுக்கி தேன்மொழி பக்கம் போக மாட்டான்’ என்று நினைத்து ஆசுவாசமடைந்தார் நிகழப்போவது தெரியாமல். சற்று நேரத்தில் ஐயர் வர,

 

“ம்மா இப்படி வந்து அவர் பக்கம் நில்லு” என்று தேன்மொழியைக் கூற,

 

“முடியாது. இது நடக்க நான் விட மாட்டேன்” என்று கதறினாள் அவள். வயதான பெண்மணி ஒருவரோ,

 

“அதான் அந்த தம்பியே உன்னை கட்டிக்க சம்மதிச்சுட்டு தானே. பேசாம தாலியை வாங்கிட்டு வாழ பாரு” என அறிவுரை என்ற பெயரில் அரிவாளை அவன் மனதில் இறக்க, அவளுக்கோ உலகம் வெறுத்து போனது. இங்கு இப்பொழுது என்ன நடந்தாலும் சரி. இன்றைக்குள் தன் உயிர் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என்று மட்டும் அவள் மனதில் முடிவு செய்தவள் உயிர் இருந்தும் ஜடம் போல தான் வந்து நின்றாள். யாஷ் வேறு வழியின்றி இவ்வாறு செய்கிறான் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. 

 

ஐயர், “மாங்கல்யம் தந்துனானே” என்று மந்திரத்தை உச்சரிக்க தொடங்க தாலியை எடுத்த யாஷோ கட்டுவதற்கு தயாராக நிற்பது போல் நின்றவன் நேத்திரனுக்கு கண்ணைக் காட்ட நேத்திரனோ நொடியும் தாமதியாது அவன் கையில் இருந்து தாலியை வாங்கி கடகடவென தேன்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக்கிக் கொண்டான்.

தொடரும்...


   
ReplyQuote

You cannot copy content of this page