All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 27

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

அத்தியாயம் 27

 

அன்னை வீட்டில் பத்து நாட்கள் தங்கி விட்டு வருவதற்காகச் சென்றவள் கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு மேல் கடந்த வந்திருந்தாள் தன் கணவனின் வீட்டிற்கு. தாத்தாவின் இறப்பிற்கு பின்பு அந்த வீட்டின் உயிர்ப்பே குறைந்தது போன்று ஆனது.

அன்று சக்தி அங்கேயே தங்கி விட இரவு உணவிற்கு பிறகு, யாரும் சொல்லாமல் தங்களின் அறையை நோக்கிச் சென்றிருந்தார் பாட்டி. அவரைத் தனியாக விட மனம் இல்லாமல் வைஷ்ணவியின் தந்தையும் தாயும் அவரோடு சென்று அவருக்குத் துணையாகத் தங்கி கொண்டார்கள்.

 

அதற்குப் பின் வந்த நாட்களில் அவரின் பேச்சும் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்து இருந்தது. தாத்தாவும் பாட்டியும் பெரிய பாட்டி உடன் தங்குவதை பார்த்துக் கொண்டிருந்த குமரனின் மகன் வைஷ்ணவியின் தந்தையிடம் வந்து 

 

"தாத்தா பெரிய பாட்டி கூட நானே படுத்துகிறேன். நீங்களும் பாட்டியும் உங்க ரூம்ல படுத்துக்கோங்க." என்று கூற யாரும் சொல்லாமலே வீட்டின் சூழல் அறிந்து பெரிய மனிதனாக முடிவெடுக்கும் அந்தச் சின்ன மனிதனை பார்த்து அவ்வளவு பெருமை அவருக்கு.

 "சரிடா குட்டி. பாட்டி திடீர்னு எந்திரிச்சி ஏதாவது கேட்டாங்கன்னா நீ என்ன பண்ணுவ.?"

"அவங்க என்ன கேக்குறாங்களோ அதை நான் செஞ்சு கொடுப்பேன். என்னால செய்ய முடியலன்னா அப்பாவ போய் எழுப்பவேன். நீங்க ஒன்னும் வொர்ரி (worry) பண்ணிக்காதீங்க தாத்தா. ஐ வில் டேக் கேர் (i will take care)." என்று பெரிய மனித தோரணையில் கூறிய பேரனைப் பார்த்தவருக்கு அவ்வளவு மகிழ்வு.

 

"சரிடா குட்டி.?" எனச் சம்மதித்தவர். அவன் அவரோடு தங்கிக்கொள்ள அனுமதித்தார். கல்பனாவிற்குமே மகனின் முடிவில் பெருமையே. குமரனின் மகனாகச் சின்னவனை தெரியவில்லை பாட்டிக்குக் குமரனாகவே அவனை நினைத்துக் கொண்டு அவனோடு தங்குவதில் பெரு மகிழ்ச்சி கொண்டிருந்தார் அவர். இடையில் ஒரு முறை மட்டும் 

"தாத்தா எங்கே.?" என்று அவனிடம் கேட்க.

"தாத்தா ஊருக்குப் போயிருக்காங்க." என்ற இவனின் பதிலில் சமாதானம் அடைந்தவர், அதற்குப் பின் அவரைப் பற்றிக் கேட்பதை நிறுத்தி இருந்தார்.

 

பள்ளிக்கூடத்திலிருந்து வந்தபிறகு, அவனின் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு பாட்டியோடு அமர்ந்து ஏதேனும் கலர் புத்தகத்தை அவரிடம் கொடுத்து இவனும் ஒன்றை எடுத்துக்கொண்டு கலர் அடிக்க ஆரம்பித்து விடுவான். அவருக்கும் ஒவ்வொரு கலராக எடுத்துக் கொடுத்து அடிக்கச் சொல்வதில், யார் அழகாகச் செய்கிறார்கள் என்ற குதுகுலத்துடன் சிறு குழந்தையாகவே மாறி அவனோடு மும்முறமாக ஈடுபடுவார். 

தற்கால நினைவுகள் முற்றிலுமாக மறந்திருந்தது அவருக்கு. பேச்சு மெதுவாகக் குறைந்திருக்க சிறுவர்களோடு இருப்பதிலும், வேலை முடித்து அவருடன் சிறிது நேரம் அமர்ந்திருக்கும் அவரின் மகனின் வரவிலும் மகிழ்பவர் வேறு எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.

அவ்வப்போது சக்தியையும் கல்பனாவையும் நெற்றியை சுருக்கி யார் இவர்கள் என்று பார்ப்பவர்பின் அதைப் பற்றி எதுவும் கேட்பதில்லை. கேட்க நினைத்தாலும் அதுவும் அவருக்கு மறந்துவிடும். வேற எந்த உடல் நிலை தொந்தரவும் இல்லாமல் சிறுவர்களுடன் அவர் காலம் கழிந்தது.

 

சக்தி தான் சென்று அழைத்து வந்திருந்தான் வைஷ்ணவியை அவர்கள் வீட்டுக்கு. அவள் தன் வீடு வந்து இரண்டு நாட்கள் முடிந்து இருந்தது. பழைய கலகலப்புகள் குறைந்து, சோக சித்திரமாகவே வலம் வந்தாள். அவளின் மனநிலையை மாற்ற ஏதேதோ சொல்லிச் சிரிக்க வைக்க முயலும் சக்தியின் செயல்பாட்டினால் லேசாகச் சிரிப்பவள் மறுபடியும் அமைதியாகிவிடுவாள். பவித்ராவும் அவள் மனநிலை புரிந்து எதற்காகவும் அவளைத் தொல்லை செய்வதில்லை. முடிந்தவரை அவரே அணைத்து சமையல் வேலைகளையும் பார்த்து விடுவார்.

 

அன்று மாலை ஏதோ ஒரு சிந்தனையில் சுற்றம் உணராமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்த பவித்ரா. 

"இங்க பாரு வைஷ்ணவி."என அழைக்க, திடீரெனக் கேட்ட அத்தையின் குரலில் அதிர்ந்து அவரை நோக்கியவளிடம் காபியை கொடுத்தார். அதை வாங்கியவளுக்கு வந்த நாளிலிருந்து எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருப்பது ஒருவித சங்கடத்தைக் கொடுத்தது.

 

"கூப்பிட்டு இருக்கலாமே அத்தை. நான் வந்து காபி போட்டு இருப்பேனே." என்று குற்ற உணர்ச்சியின் காரணமாக மெதுவாகக் கூறியவளை பார்த்தவர், "எங்க நீ தான் இடிச்ச புளியாட்டம் ஒரே இடத்தில் உட்கார்ந்து ஏதோ பலமா சிந்தனை செஞ்சுட்டு இருக்கியே. இங்க பாரு தாத்தா போனது கஷ்டம் தான்." எனக் கூறிய உடனே கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது அவளுக்கு. அதைப் பார்த்தவர் மெதுவாக அவள் கைகளைத் தட்டிக் கொடுத்து. 

 

"பிறந்தவங்க எல்லாரும் ஒரு நாள் போய்த் தான் ஆகணும். இங்கேயே பட்டா எழுதிக் கொடுத்திருக்காரா கடவுள் நமக்கு. வந்த மாதிரி போகவும் செய்யணும். அப்பதான் புதுசா வரவங்களுக்கு இடம் இருக்கும். நாமே இங்க தொடர்ந்து இருக்கணும்னு ஆசைப்பட்டா உலகம் தாங்குமா." எனக்கேட்க நிதர்சனம் புரிந்திருந்தாலும் ஏனோ மூளைக்கு தெரிந்தது மனதிற்கு தெரியவில்லை. 

'இன்னும் கொஞ்ச நாள் அவர் இருந்திருக்கலாமே.' என்று தான் ஆசைப்பட்டது மனது. 

"இங்க பாரு, ஒவ்வொரு இடத்துல நம்ம எவ்வளவோ கேள்வி படுறோம். இப்போ உங்க பாட்டியவே எடுத்துக்கோ. எவ்வளவு நல்லா திடகாத்திரமா இருந்தாங்க. இப்ப பாரு, அவங்களுக்கு சுற்றி நடக்கிறது எதுவுமே அவ்வளவா ஞாபகம் இல்லாம அவங்களுடைய உலகத்துல அவங்க தேங்கி நின்னுட்டாங்க. இப்ப இருக்கிற ஞாபகங்கள் எதுவுமே அவங்களுக்கு இல்லை. எல்லாமே பழைய ஞாபகங்கள் தான் இருக்கு. ஆனா அதைப் பத்தி யார்கிட்டயும் கேட்கக் கூட முடியல அவங்களால. அதனாலயே தன்னை தானே அமைதிப்படுத்தி, பேசுவதையும் குறைச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் நானு." என்றவருக்கு, 

'இருக்கலாமோ.?' என்று நினைத்தவளாக ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் அவள்.

 

"இப்படி அவங்கள பாக்குறதுக்கு நமக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு சொல்லு. ஆனா இதே உங்க தாத்தாவைப் பாரு, யாருக்கும் எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கல அவரு. எந்த நோய் நொடின்னும் படுக்கல. நடமாட முடியாமல் படுக்கையில இருந்து அவரும் கஷ்டப்பட்டு, அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தல. ஆரோக்கியமா நடமாடிட்டு இருந்த மனுஷன், ஒரே நாளில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிஞ்சிருச்சு. அவருக்கான நேரம் முடிஞ்ச உடனே கிளம்பிட்டாரு. இப்படி கிடைக்கிற சாவும் வரம் தான். இந்த மாதிரி எல்லோருக்கும் அமைந்திடுமா.? கிடையாது. சில பேர் ஏன்டா இன்னும் இருக்கோம் என்று நினைத்து வருத்தப்படுவாங்க. ஆனா அவங்களுக்கான நேரம் இன்னும் வராம இழுத்துகிட்டு இருப்பாங்க. அதெல்லாம் பார்க்கும்போது இது எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைத்து மனச தேத்திக்கோ. வந்தவங்க எல்லாம் தங்கிட முடியாது இல்லையா.? அதை மட்டும் மனசுல பதிய வச்சுக்கோ. போகப் போக மனம் லேசாகும். அவர மறந்திடுன்னு சொல்லல. அது எந்தக் காலத்திலும் யாராலும் முடியாது. 

 

நம்மோடு உயிராய் இருந்த உறவுகளையெனறும் நம்மால் மறக்க முடியாது.  ஆனால் அவர்கள் நினைவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். அவர்களுடனானா சந்தோஷத் தருணங்களை நினைத்து மகிழ்ந்து கொள்ள முடியும். நிதர்சனத்தை புரிஞ்சு நடந்துக்கோ. அதைப் புரிஞ்சுக்கிட்டாலே உன்னாலே இந்தக் கவலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியில வர முடியும்.

 

 

 எல்லாத்துக்கும் நேரம் தான் காரணம். அந்த நேரம் உனக்கான ஆறுதலை கொடுக்கும். இப்படி எந்த நோய்லயும் படுக்காமல் அவர் போனதே நல்லது என்று நீயே ஒரு நாள் நினைக்கிற மாதிரியும் ஆகும்.

அதனால கவலைகளை ஏறக் கட்டிட்டு இதுதான் இறைவன் அவருக்கு விதித்தது என்று நினைத்து மனச சமாதானப்படுத்து. மூளைக்கு புரிவது கட்டாயமா மனசுக்கும் புரியும். கொஞ்ச நாள் ஆகும் ஆனா அதுக்கு நீயும் முயற்சி செய்யணும் புரியுதா.?" என்று நீளமான விளக்கம் கொடுத்து அவளிடம் கேட்க. 

 

அவர் கூறியதில் இருந்த உண்மை நன்றாகவே அவள் மனதில் பதிந்தது. சற்று தெளிவும் ஏற்பட்டது.

புன்னகையோடு அவரை ஏறிட்டவள் அவர் கைகளை அழுந்தப் பிடித்து "கட்டாயமா நீங்கச் சொன்னது எனக்கு நல்லாவே புரிஞ்சது அத்தை. கொஞ்சம் கொஞ்சமா இதுல இருந்து வெளியில் வந்துடுவேன். நீங்கச் சொன்ன மாதிரி வந்தவங்க எல்லாம் தங்கியிட்டா இனி வர்றவங்களுக்கு இடம் இருக்காது அவங்களுக்கும் இடம் வேண்டுமே."

என்று கூறியவள், மனதோடு 

'எங்க தாத்தா சொன்ன ராஜா குட்டிக்கும் இடம் வேணுமே.' என நினைத்துக் கொண்டு புன்னகையோடு அவரைப் பார்க்க, 

சற்று தெளிந்த முகத்துடன் புன்னகைத்தவளை பார்த்தவருக்கும் மனம் லேசானது.

 

"அவன் வர நேரம் முகம் கழுவிட்டு பிரிட்ஜ்ல பூ வாங்கி வச்சிருக்கேன் பாரு, அதை எடுத்துத் தலை நிறைய வச்சுக்கோ. இனிமே அழுது வடிஞ்சுகிட்டு இருக்கக் கூடாது…நல்ல சிரிச்ச முகமா உன் கணவனைக் கவனிக்க பாரு. உன் முகத்தைப் பார்த்து, பார்த்து அவன் தான் சோகமா சுத்திக்கிட்டு இருக்கான்." எனக் கூற. மாமியாரின் வெளிப்படையான பேச்சில் இவளுக்குத் தான் வெட்கத்திலும், சங்கோஜத்திலும் முகம் சிவந்தது. அவர் சொன்னபடியே முகம் கழுவி அவருக்கும் சிறிது பூவைக் கொடுத்துவிட்டு, தன் தலை நிறைய கணவனுக்கு மிகவும் பிடித்த மல்லிகையை சூடியவள். சற்று பொலிவுடன் தன்னவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

இப்போதெல்லாம் சற்று சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விடுகிறான் சக்தி. மனைவியின் மனநிலையில் மாற்றம் கொண்டு வரப் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான் அவன். இன்றும் வளமை போல விரைவாக வீடு வந்தவன். 

 

'இன்று என்ன சொல்லி மனைவியைச் சிரிக்க வைக்கலாம்.?' என யோசித்துக் கொண்டே வர, லேசான அலங்காரத்தில் அப்சரஸ் போல் புன்னகை முகத்துடன் தன் எதிரில் நின்றவளை பார்த்தவனுக்கு பெரும் அதிர்வுடன் மூச்சு முட்டிப் போனது. 

"என்னடி இது வன மோகினி மாதிரி எதிரில் நின்னு ஆள அசத்துற.?' என்று ஆச்சரியமும், ரசிப்பும் கலந்து கேட்டவனை பார்த்து முறைத்தவள்.

"மோகினியா நானு." என இடுப்பில் கைவைத்து கேட்க 

"அடடா.! என் பொண்டாட்டி ஃபார்முக்கு வந்துட்டா போலையே." என்று சற்று சத்தமாகக் கூறியவன். அவள் அருகில் நெருங்கி வந்து "அடிக்கிற மோகினி இல்ல. மயக்குற மோகினி."என்றான் இரண்டையும் நடித்துக் காட்டிய படி தலைச்சுற்றி சாய்வது போல அவள்மேல் லேசாகச் சாய்ந்து கிசுகிசுப்பான குரலில்.

அதே நேரம் கண்களைச் சுழற்றி தன் அன்னை எங்கும் இருக்கிறாரா. என்று நோட்டமிட்டவன். அவள் கன்னத்தில் ஒரு அவசர முத்தத்தைக் கொடுக்க. 

"அச்சோ.! என்னது இது.?"

என்றவள். அதைக் கேட்பதற்குள்ளாகவே சிவந்து போனாள்.

"ரொம்ப நாளைக்கு அப்புறம் நீ இப்படி அதிர்ச்சி கொடுத்தா. நானும் இப்படித்தான் அதிர்ச்சி கொடுப்பேன்." என்றான் ஒற்றை கண் அடித்து.

"சக்தி வந்துட்டியா.?" என்று கேட்டபடியே வந்த பவித்ராவை பார்த்தவன் 

"ஆமாம் மா. இப்பதான்... என்ன உங்க மருமக அசத்துறா.?"என்று அவளைக் கண்களால் காட்டிய படி புன்னகையுடன் கேட்க. 

"ஆமா, அவ இப்படி இல்லன்னு தானே மூஞ்ச தொங்க போட்டுக்கிட்டு சுத்திட்டு இருந்த. அதான் வாழ்க்கையோட நிதர்சனத்தை எடுத்துச் சொன்னேன். கற்பூரமா புரிஞ்சுகிட்டா என் மருமக."என்றார் அவரும்.

"அப்பாடா.! என் கஷ்டத்தை நீங்களாவது புரிஞ்சிக்கிட்டிங்களே மா. அழுமூஞ்சி பாப்பாவா மாறிட்டவளை, எப்படிடா பழைய மாதிரி மாற்றுவது என்று கவலையோடு இருந்தேன்.?"

 

"என்னைத் தவிர உன்னை வேறு யாரால புரிஞ்சுக்க முடியும்." என்று புருவம் உயர்த்தி கேட்டவரிடம். 

"அது என்னவோ உண்மைதான் மா." என்றவன் சிரித்தபடி, கைகளை விரித்து அவரை அணைக்க வந்தவன் முன் ஒற்றை விரலை நீட்டி,

"டேய்.! சும்மா கட்டிப்பிடித்து பொசுக்கு, பொசுக்குன்னு முத்தம் கொடுக்க வராத. அதுக்கு தான் ஒருத்தியை தயார் பண்ணி கொடுத்திருக்கேன் உனக்கு." என்றவரின் பேச்சில் ஆண் அவனுக்கே வெட்கம் வந்தது.

 

"நான் குளிச்சிட்டு வந்துடறேன்." என்றவாறு அறைக்குள் வேகமாக நுழைந்தவனின் பின்னால் அதே வேகத்துடன் ஓடிச் சென்றாள் வைஷ்ணவி.

 

வெகுநாட்களுக்குப் பிறகு கிடைத்த மனைவியின் அண்மையில் அவளைக் கொண்டாடி தீர்த்துவிட்டான் சக்தி. காதலும், மோகமும் சற்று அதிகமாகவே இருந்தது. கணவனின் அதீத காதலில் திளைத்த வைஷ்ணவிக்கும் அது மிகவும் தேவையாக இருந்தது. அவனுக்கு இணையாக இவளும் அவனைத் தேடியதை அவனுக்கும் உணர்த்தினாள். இன்பக் கடலில் நீந்திக் களைத்து உறங்கியவர்களை அலைபேசி அழைப்பே விழிக்க வைத்தது.

 

தொடர்ந்து ஒளித்த அலைபேசி சத்தத்தில் கண் விழித்த சக்தி கட்டிலின் அருகில், சிறு மேஜை மேல் இருந்த வைஷ்ணவியின் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன். அது அவள் தாய் வள்ளியிடமிருந்து வந்த அழைப்பு என்பதை தெரிந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல் மெதுவாக உசுப்பினான்.

தாத்தாவின் இறப்பிற்கு பிறகு ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் உழன்று கொண்டே இருந்தவள். இன்றே, வெகுநாட்களுக்குப் பிறகு கிடைத்த கணவனின் அணைப்பில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தாள்.

 

சக்தியின் குரல் அவள் காதுகளை எட்டவே இல்லை. மெதுவாக அவள் தோள்களைத் தட்டி எழுப்ப, அது அவளுக்குத் தாலாட்டாக இருக்க, இன்னும் நன்றாக அவனுடன் ஒன்றியவள். அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்து நிம்மதியான உறக்கத்தை தொடர்ந்தாள்.

இது வேலைக்காகாது என்பதை உணர்ந்தவன் 

"வைஷு, வைஷு." என்று அவளை நன்றாகத் தட்டி எழுப்பியவன். 

"உங்க அம்மா டி." எனக் கூறி அலைபேசியை காட்ட, பதறி எழுந்தவள்.

 "என்ன ஆச்சு.?" என்று வேகமாகக் கேட்க. "எதுக்கு இப்படி பதறுற. ஒன்னும் இல்ல. உங்க அம்மா தான். பேசு." எனக் கொடுக்க,

"அம்மா, அம்மா என்ன ஆச்சு.? ஏன் இவ்ளோ காலையில கூப்பிட்டு இருக்கீங்க...? யாருக்கும் ஒன்னும் இல்லையே. பாட்டி நல்லா இருக்காங்கல்ல. ? அப்பா எப்படி இருக்காரு.? அண்ணா, நீங்க." என அனைவரையும் விசாரிக்க. 

"வைஷுமா எல்லாரும் நல்லா இருக்கோம்.யாருக்கும் எதுவும் இல்லை." என்று அவள் பதட்டத்தை குறைத்தவரிடம்,

"அப்புறம் ஏன் இவ்வளவு காலையில் கூப்பிட்டு இருக்கீங்க.? என்றவளின் கேள்விக்கு,

"மணி பத்துக்கு மேல ஆகுது மா." எனக் கூறிய பிறகே மணியைப் பார்க்க. அதற்குப் பின்பே இவ்வளவு நேரம் உறங்கியது புரிந்தது அவளுக்கு.

இரவெல்லாம் விழிக்க வைத்த கணவனின் மேல் கோபப்பட முடியவில்லை அவளால். ஏனென்றால் அவனுக்கு இணையாக அவளுமே அவன் அன்மையை விரும்பி ஏற்றிருந்தாள்.

 

"என்னம்மா மாப்பிள கிளம்பி கடைக்குப் போயிருப்பாங்கன்னு நெனச்சு தான் இந்த நேரம் போன் பண்ணேன். என்ன ஆச்சு.? அவர் இன்னும் கடைக்குக் கிளம்பலையா.? உடம்பு நல்லா இருக்குல்ல.?"என இவர்களை விசாரிப்பது இப்போது அவர் முறையானது. 

"நல்லா இருக்கோம் மா. இன்றைக்கு கடையில் அவ்வளவாக வேலை இல்லைன்னு சொன்னாரு. அதான், கொஞ்சம் தாமதமாகக் கிளம்புவாரு." என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே.

"அப்படியா.!மாப்பிள்ளைக்கு வேலை இல்லன்னா நீ அவரை அழைத்துக்கொண்டு வீடுவரைக்கும் வந்துட்டு போறியா.?" எனத் தயக்கமாகக் கேட்க.

"ஏன் மா.? எதுக்கு வரச் சொல்றீங்க.? யாருக்கும் எதுவும் இல்லல்ல. என்னன்னு சொல்லுங்க.?"என்று மீண்டும் பயந்து கேட்டவளிடம் 

"நீ பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லம்மா. விசாலாட்சி வந்திருக்கா.?" 

"அக்கா வா, எதுக்கு.?" 

"பாட்டிய பாத்துட்டு போக வந்து இருக்கா. அதான் நீயும் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூப்பிட்டேன்." என்று கூற. "அவ்வளவுதானா. சரிமா, நான் இவர்கிட்ட கேட்டுட்டு வரப் பார்க்கிறேன்."

"மாப்பிள்ளை பக்கத்துல இருந்தா குடும்மா. அவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடறேன். "

"பக்கத்துல தான் இருக்காரு. கொடுக்கிறேன்." என்றபடி 

"அம்மா உங்க கிட்ட பேசணுமாம்." என்று அவனிடம் அலைபேசியை கொடுத்தவள். 

"நீங்கப் பேசிட்டு இருங்க. நான் வந்துடறேன்." என்றபடி அவனைத் தாண்டிக் குளியலறை நோக்கிச் சென்றாள். 

 

"சொல்லுங்க அத்தை. எப்படி இருக்கீங்க.?" என்று கேட்ட சக்தியிடம். "நல்லா இருக்கேன் மாப்பிள. நீங்க நல்லா இருக்கீங்களா.?" என்று கேட்டவர். "வைஷ்ணவி பக்கத்தில் இருக்கிறாளா.?' எனக் கேட்க 

"இல்ல அத்தை. பாத்ரூம் போய் இருக்கா. என்னன்னு சொல்லுங்க.?" என்று கேட்டான் குளியல் அறை வாசலை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே. 

 

விசாலாட்சி வந்திருக்கா மாப்ள. ஒரு பிரச்சனை. வைஷு கிட்ட எதுவும் சொல்லாதீங்க. அவளை கூட்டிட்டு கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா..?"

"ஏன் அத்தை..? என்ன ஆச்சு..?"என்று யோசனையாக கேட்டவனிடம்,

"நேர்ல வாங்க மாப்ள சொல்றேன்.." என கூறியதும். ஏதோ முக்கியமான விஷயம் என்பதை அறிந்து கொண்டவன். 

"கட்டாயமாக அவளை கூட்டி வருகிறேன்.." என்று அவருக்கு உறுதி அளித்துவிட்டு அலைபேசியை அணைத்தான்.

 

 

குளித்துவிட்டு வந்தவள், ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சக்தியைப் பார்த்து,

"அம்மா என்னங்க சொன்னாங்க.? என்று சற்று கவலையுடன் கேட்க.

"அது ஒன்னும் இல்ல, உங்க அக்கா வந்திருக்காங்க இல்லையா.? இத்தனை நாள் ஒன்றாக தானே எல்லாரும் இருந்தீங்க.. அதான், நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க போல. இன்னைக்கு எனக்கு அவ்வளவா வேலை இல்ல. நாம போயிட்டு வந்துடலாம். நான் அம்மா கிட்ட சொல்றேன். நீ கிளம்பி தயாராக இரு.." என்றவன் குளியலறை நோக்கிச் செல்ல. 

 

"அப்பாடா.! நான் கூட ரொம்ப பயந்துட்டேன். ஏன்னா.? ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு சந்தோஷமா இருந்தேன்ல. நான் சந்தோஷமா இருந்தாலே துக்கப்படுற மாதிரி உடனே ஏதாவது நடந்திடுதா... அதான் கொஞ்சம் பயந்துட்டேன்..." என்றவளின் கூற்றைக் கேட்டவன்.

"முதல்ல இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமான நினைப்பை எல்லாம் உன் மூளையிலிருந்து எடுத்தெறி ."என்று கோபமாக அவளைக் கண்டித்து விட்டுக் குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.

 

குளித்து வெளிவந்தவன் தன் அன்னையைத் தேடி சமையலறைக்குச் செல்ல. அங்கு வைஷ்ணவி தான் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தாள்.

" நீ என்ன பண்ற.? அம்மா எங்க.?" என்றவனின் கேள்விக்கு 

"காபி போடுறேன். அத்தை எங்கன்னு தெரியல.?" என்றாள் வேலை பார்த்துக் கொண்டே.

அவரின் அறையில் இருப்பாரோ என நினைத்தவாறு அங்குச் சென்று பார்க்க. யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அறை.தந்தையுடன் கடையில் அமர்ந்திருப்பாரோ என நினைத்தவனாக அங்கு வர அங்குத் தான் அமர்ந்திருந்தார் பவித்ரா.

 

 இவனைப் பார்த்ததும், "எழுந்திருச்சிட்டியா.? அவளை எங்க.?" என்று கேட்டபடி எழ.

"அவ காபி போட்டுட்டு இருக்காம்மா. நீங்க உட்காருங்க. உங்க கிட்ட பேசணும்." என்றான்.

"என்னாச்சு.?" என்றவரின் கேள்விக்கு 

"அத்த போன் பண்ணி இருந்தாங்க. விசாலாட்சி அண்ணி வந்து இருக்காங்க போல. ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். எங்களைக் கொஞ்சம் வர முடியுமான்னு கேட்டாங்க. அதுதான் இவளைக் கூட்டிட்டு போயிட்டு வரலாம்ன்னு பாக்குறேன்." என்று கூற. 

"அடப்பாவமே.! இப்பதான் தாத்தா இறந்தாறு. அதுக்குள்ள என்ன பிரச்சனையாம் அங்க.?" என்று கவலையாகக் கேட்டவரிடம், மேற்கொண்டு கூற வருவதற்குள் வைஷ்ணவி அனைவருக்கும் காபியை எடுத்துக்கொண்டு வந்துவிட. 

"நானே கேட்கலாம்னு நெனச்சம்மா நீயே கொண்டு வந்துட்ட.' என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே சரவணன் காபியை எடுத்துக் கொள்ள. மற்ற இருவரும் எடுத்துக் கொண்டார்கள். 

"சரி, அப்பக் கிளம்பி போயிட்டு வாங்க. நான் இன்னைக்கு கோலா உருண்டை செய்யலாம்னு நினைச்சிருந்தேன், இவளுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு.கொஞ்சம் உடம்பை தேற்றி வைத்திருந்தோம். இப்ப மறுபடியும் மெலிந்து தெரியறா.." என்று வைஷ்ணவியை பார்த்துக்கொண்டே கூறியவரிடம். "நீங்கச் செய்யுங்கம்மா நாங்க இரவு வந்திடுவோம். வந்து சாப்பிட்டுகிறோம்..."

"அப்படியா.! அப்பச் சரி." என்றவர்.

 

 "ரவா கிச்சடி செய்து தயாராகத் தான் இருக்கு. சாப்பிட்டு கிளம்புங்க." என்றவர். வைஷ்ணவியை பார்த்து 

"நீ எதுவும் கவலைப்படாத. எந்தப் பிரச்சினையும் இருக்காது. தைரியமா போ." எனக் கூற, அதிர்ந்து அத்தையை பார்த்தவள். கணவனைத் திரும்பிப் பார்க்க, அதற்குள் சத்தமின்றி நெற்றியில் அறைந்தவன், அவள் பார்க்கும் முன் கையை எடுத்துவிட்டு அன்னையை பார்க்க, அவனின் செயலில் தான் ஏதோ உளறி விட்டது புரிந்தது பவித்ராவுக்கு.

"நான் யதார்த்தமா தான் சொன்னேன். அதுக்கு நீ ஏன் மா இப்படி அரெண்டு போய்ப் பாக்குற.?"எனப் பவித்ரா சகஜமாகக் கேட்க. அவரின் கூற்றில் சற்று ஆசுவாசமாக உணர்ந்தவள் 

"நான் போய்க் கிளம்புறேன்." என்றபடி உள்ளே சென்றுவிட.

"எப்படியோ சமாளிச்சுட்டீங்க." என்று மெதுவான குரலில் அன்னையிடம் கூறியவன். மனைவியைப் பின்பற்றிச் சென்றான்.

 

இவர்கள் சென்று நேரம் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் விசாலாட்சி. 

"அக்கா எப்ப வந்த." எனக் கேட்டபடி அவளின் அருகில் அமர்ந்த வைஷ்ணவி.

"பாட்டி எங்க.? நல்லா இருக்காங்களா.?" எனக் கேட்டபடி சுற்றி பார்க்க. சமையலறையிலிருந்து வந்த வள்ளியும், கல்பனாவும் இவர்களை வரவேற்று தண்ணீர் கொடுத்துவிட்டு, மகளைப் பார்த்தவர் 

"சாப்பிட்டு நிதானமா பேசலாம். இப்ப வந்த அலுப்புக்கு கொஞ்ச நேரம் உட்காருங்க. பாட்டி அறையில் தான் இருக்காங்க போய்ப் பாரு." என்று கூறிவிட்டு விட்ட வேலைகளைத் தொடர சென்றார். விசாலாட்சியை பார்த்த சக்தி.

'என்ன இவங்க இவ்வளவு சோர்வாகத் தெரியறாங்க. அன்னைக்கு கூட இவ்வளவு சோகமா இல்லையே.' என்று யோசித்தபடி பார்த்திருந்தான்.

சற்று நேரத்தில் விஷாலாட்சியின் கணவனும் வந்துவிட,

 'ஒஹ்.! இவரும் வந்திருக்காரா.? அப்ப விஷயம் பெருசுதான் போல.' என்று யோசித்த சக்தி, பின் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தான் அவருடன்.

 

 

வீட்டு ஆண்கள் வந்தபின் உணவு நேரமும் முடிந்து,அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, பெண்கள் உணவு மேஜையின் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்.

வைஷ்ணவி அருகில் அமர்ந்திருந்த வள்ளி. 

"உங்க அக்கா மாசமா இருக்கலாம்." என்றார் மெதுவாக. அவர் பேசியது வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஆண்களுக்கும் கேட்டது. 

"அப்படியா அக்கா.!" என்று ஆர்ப்பரித்த வைஷ்ணவி. அவளின் அருகில் சென்று அவளை அணைத்து பிடித்தவள். 

"சொல்லவே இல்ல." என்றாள் சிரிப்புடன். 

"அவளுக்கே அது தெரியல. நேற்று தான் ரொம்ப வாந்தியும் தலை சுத்தும்மா இருக்கேன்னு மருத்துவரைப் போய்ப் பார்த்து இருக்காங்க. அப்பதான் மூன்று மாதம்னு அவளுக்கே தெரிஞ்சிருக்கு."

"ரொம்ப சந்தோஷம் அக்கா." என்றவளுக்கு பதிலாக 

"ஆமா அதுதான் இப்ப குறைவு.." என்று சடைத்தார்.

 "ஏன் மா.? அப்படி சொல்றீங்க." என்று அதிர்வாகக் கேட்க,

"ஆமா, இந்த வயசுல பிள்ளையைப் பெத்து எப்படி வளர்த்துக் கரையேத்துவா. முதல் குழந்தையே தாமதமா தான் பெத்தா. அதுக்கே அவ்வளவு ஆரோக்கியமும் போயிடுச்சு. இப்ப இன்னொரு குழந்தை என்றால் யோசிக்க தானே வேணும்." என்றவரின் கூற்றுக்கு யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

"அதுக்கு என்னமா பண்ண முடியும். யாருக்கு எப்போ கடவுள் கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்பதானே கொடுப்பாரு.." என்றவள் எழுந்த பெருமூச்சை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

 

சிறிது நேர அமைதிக்கு பிறகு, வள்ளியை பார்த்த விசாலாட்சியின் கணவன். 

"எதிர்பார்க்காததுதான் அத்தை. ஆனா அதுக்கு என்ன பண்ண முடியும். வைஷ்ணவி சொன்ன மாதிரி, எதுவும் நம்ம கைல இல்ல. கடவுள் கொடுக்கணும்னு நினைச்சுட்டாருன்னா அதை யாராலும் தடுக்க முடியாது."என்பதற்கும் அனைவரும் அமைதியாகவே இருந்தார்கள். 

 

'ஆனால் இதற்காகவா தன்னை அவசரமாக அத்தை வரவழைத்தார்.' என்ற பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் சக்தி. பின் சற்று ஓய்வெடுக்க அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல. தங்களின் அறைக்கு வந்த வைஷ்ணவி கணவனை இருக அணைத்துக் கொண்டாள். 

"வேண்டாம்னு நினைக்கிறவங்களுக்கெல்லாம் குழந்தையைக் கொடுக்கிறார். ஆனால் வேணும்னு கேட்டு எதிர்பார்த்துகிட்டு இருக்கிற நமக்கு அந்த வரம் கிடைக்க மாட்டேங்குது." என்றவள், அவன் மார்பில் சாய்ந்து, அங்கு அடக்கிய பெருமூச்சை இங்கு வெளியிட்டாள்.

 "ப்ச் வைஷு.அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது."

"சேச்சா நான் பொறாமை எல்லாம் படலைங்க. எனக்குச் சந்தோஷம்தான்." என்றாள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்த படி.

"உன்னை எனக்குத் தெரியாதா.?" என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு இறுக்கிக் கொண்டான்.

"நான் கொஞ்ச நேரம் பாட்டி கூட இருக்கவா.?" என அவன் பிடியில் நின்றபடியே கேட்க.

"போ." என்று அனுப்பினான் அவளை.

 

மகள் மாமியாருடன் இருப்பதை பார்த்த வள்ளி அவர்களின் அறை வாசலுக்கு வந்து,

"மாப்பிள்ளை." என்று மெதுவாக அழைக்க. ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவன் மாமியாரின் குரல் கேட்டு, 

"வாங்க அத்தை." என்ற படியே அறை வாசலுக்கு வர அவரும் அங்குதான் நின்றிருந்தார், இவனை எதிர்பார்த்து. 

"சொல்லுங்க அத்தை." என்றவவனுக்கு எப்படியும் அவர் தன்னை தேடி வருவார் என்ற அனுமானம் இருந்தது.

"அண்ணியை பற்றிய இந்த விஷயத்தைக் கூறவா எங்கள் அழைச்சீங்க.?" என்று கேள்வியாகக் கேட்க.

அதுக்கு மட்டும் இல்ல மாப்ள. அந்தக் குழந்தையை நீங்கத் தத்தெடுத்துக்றீங்களா.? என்று கேட்கத்தான் உங்கள் அவசரமா வரச் சொன்னேன்."

"என்னத்த சொல்றீங்க.? இது எப்படி சாத்தியமாகும்.?" என அதிர்வுடன் கேட்க. 

"எல்லாம் சாத்தியமாகும் மாப்பிள்ளை. அவளுக்கும் இந்தக் குழந்தையைப் பெற்று வளர்க்கறதுல சிரமம் இருக்கு. நீங்களும் குழந்தைக்காக ஏங்கி தவிசுகிட்டு இருக்கீங்க. இது இரண்டு பேருக்குமே தீர்வா இருக்கும். அதுதான் நான் யோசிச்சு இந்த முடிவை எடுத்தேன். உங்க மாமாக்கு கூட இன்னும் தெரியாது. நான் சொல்லல. முதல்ல உங்க கிட்ட கேட்டுட்டு, உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு தான் மற்ற எல்லோருக்கும் சொல்லணும்.."

 

"இது நான் மட்டும் எடுக்கிற தனிப்பட்ட முடிவு இல்ல அத்தை. வைஷ்ணவி கிட்ட கேட்கணும். அதுக்கு முதல்ல எங்க அம்மா கிட்ட கேக்கணும்.."

"கண்டிப்பா மாப்பிள்ளை. எனக்கும் அது தெரியுது. நீங்க உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வைஷ்ணவி கிட்டயும் பேசிட்டு சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் மற்ற எல்லார்கிட்டயும் பேசறேன்.."

 

"ஆனா அத்தை. சகலைக்கு இந்த குழந்தையை பெற்றுக் கொள்வதிலும், வளர்ப்பதிலும் அப்படி ஒன்றும் விருப்பம் இல்லாதது போல தெரியலையே..? குழந்தையோட வரவை ஆவலா எதிர்பார்க்கிற மாதிரி தான் இருக்கு.." "அவருக்கு என்ன மாப்ள..? கஷ்டப்பட போறது என் பொண்ணு தானே.நீங்க உங்க வீட்ல பேசிட்டு உங்க விருப்பம் என்னன்னு சொல்லுங்க. இங்க பேச வேண்டியது என்னோட பொறுப்பு.." என்றவர் அவன் பதிலுக்காக அவன் முகத்தை பார்த்து நிற்க.

"சரிங்க அத்தை நான் எல்லார்கிட்டயும் பேசிட்டு ரெண்டு மூணு நாள்ல உங்களுக்கு தகவல் சொல்றேன்.." என்றான் அவனும்.

This topic was modified 5 days ago by VSV 41 – வரமாய் வந்த உயிரே

   
ReplyQuote

You cannot copy content of this page