All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 26.2

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

அத்தியாயம் 26.2

 

இரவு வெகுநேரம் தூங்காமல் மன அலைக்கழிப்பில் இங்கும், அங்கும் உருண்டு படுத்துக்கொண்டிருந்தவள் விடியும் நேரத்திலேயே தூக்கத்தை தழுவி இருந்தாள் வைஷ்ணவி.

ஒருவிதமான அமைதி சூழ்ந்திருந்தது வீட்டில். திடீரென விழிப்பு தட்ட முழித்துப் பார்த்தவள், நேரத்தைப் பார்க்க எட்டாகப் பத்து நிமிடம் என்றது அது. 

'இவ்வளவு நேரமாவா தூங்கிட்டோம்.' என யோசித்த படியே எழுந்தவள். திரும்பி மெத்தையில் படுத்து இருக்கும் பாட்டியைப் பார்க்க, அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

 

சற்று நிம்மதியுடன் எழுந்தவள். அவரின் அருகில் சென்று அவரைத் தொட்டுப் பார்க்க லேசாக உடல் சூடு இருந்தது அவருக்கு. 

'பரவால்ல காய்ச்சல் குறைந்து தான் இருக்கு.' என்று நினைத்தவளாகக் குளியல் அறைக்குச் சென்றவள், 'தாத்தா எப்படி இருக்காங்கன்னு போய்ப் பாக்கணும்.' என்று நினைத்தபடியே தன்னை சுத்தப்படுத்தி வெளி வந்தவள், அறையை விட்டு வெளியேற, வீட்டில் ஒருவரும் இல்லாததை போல அமைதியாகக் காட்சி அளித்தது வீடு. அது ஒரு விதமான பயத்தை கொடுக்க இவள் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாத்தாவின் அறையிலிருந்து யாரோ ஒரு மத்திய தர அன்னிய ஆண் ஒருவருடன் பேசியப்படியே வெளியில் வந்தான் குமரன். 

'யார் இது.?' என யோசித்தபடி அண்ணனைப் பார்க்க,

 "சரி டாக்டர்." என அவருக்குப் பதில் அளித்தபடியே அவரை வழி அனுப்ப வாசல்வரை சென்றவன் இவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான். கண்கள் கலங்கி இருந்தது.

அண்ணனின் கலங்கிய கண்களும் டாக்டர் என்ற வார்த்தையும் இவளுக்குத் தொண்டையை அழுத்திப் பிடிக்கும் பயத்தை கொடுக்க, கைக்கொண்டு நெஞ்சை அழுத்திப் பிடித்தவளுக்கு தாத்தாவின் அறைக்குச் செல்லவே பயமாக இருந்தது. ஏதோ விபரீதம் நடந்து விட்டது போன்ற எண்ணம் தோன்ற, 'ஐயையோ.!' என்று கைகளைப் பயத்தில் ஆட்டியபடி நின்றிருந்தவளின் தோளை அணைத்து பிடித்தான் குமரன். 

 

அவனை ஏறிட்டு பார்த்தவள் "அண்ணா." என்று அழைக்க, கலங்கும் கண்களைச் சிமிட்டியபடி தாத்தாவின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். தாத்தாவின் மெத்தையில் அவரின் கால் பக்கத்தில் அவரையே வெறித்துப் பார்த்தபடி தந்தை அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் சேலை முந்தானை கொண்டு வாய் மூடி அழுதபடி நின்றிருந்தார் வள்ளி. கல்பனாவும் ஒரு ஓரத்தில் கண்களில் கண்ணீரோடு நின்று இருந்தாள். சுற்றி நிற்கும் அனைவரையும் பார்த்த படியே வந்த வைஷ்ணவிக்கு தாத்தாவை ஏறிட்டு பார்க்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை. அண்ணனின் தோளில் முகத்தைப் புதைத்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

 

இவள் செயல்களைப் பார்த்த அவளின் தந்தை

"வைஷுமா…." என்று கலங்கிய குரலில் அழைக்க. இன்னும் அண்ணனோடு புதைந்து கொண்டாள். மகளின் அருகே வந்தவர் அவளைத் தன் கைப்பிடியில் கொண்டு வந்து, 

"தாத்தாவைப் பாருமா." என்றார் அழுகையை அடக்கியபடி.

"நம்மள எல்லாம் விட்டுப் போயிட்டாரு. மீளாத் துயில் கொண்டுட்டாரு." என்று தந்தையின் பிரிவில் கண்ணீரோடு கூற, தாத்தாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை அவளுக்கு.

 

 தங்கையின் செயல்பாடு மிகுந்த பயத்தை கொடுக்க, அவளின் அருகில் வந்த குமரன் 

"தாத்தாவைப் பாரு வைஷ்ணவி. உன் மேல தானே உயிராய் இருந்தாங்க அவங்க..." என்றான் அவளை உலுக்கியபடி. அண்ணனின் கட்டாயத்தில் மெதுவாகக் கண்களைத் திறந்து தாத்தாவைப் பார்க்க. இரவின் நடுவில் அவள் வந்து பார்க்கும்போது எப்படி படுத்திருந்தாரோ அப்படியே இப்போதும் படுத்து இருந்தார்.அவர் கை மெத்தையில் மடங்கி இருந்தது. 

'அப்போ நாம பார்க்கும்போது அவர் உயிரோடு இல்லையா.? அதுக்கு முன்ன ஒரு முறை வரும்போது பெரிதாக குறட்டை விடுவது போல் சத்தம் எழுப்பினாரே அதுதான் அவரின் கடைசி சத்தமா..? அவர் உயிர் பிரியும் நேரம் சரியா அவர் கூட தான் இருந்தேனா நான்..? ஆனா அது தெரியாம குறட்டை விட்டு அவர் தூங்குவதாக நினைத்து நிம்மதி கொண்டேனே.. ஐயோ..!' என்று மனம் அரற்ற. பெரும் கேவலொன்று தொண்டையிலிருந்து வர. அதை அடக்கியவள் அப்படியே இறுகி நின்று இருந்தாள்.

 

"பாட்டி என்ன செய்றாங்க.? ஐயோ..! இதை எப்படி அவங்க தாங்கப் போறாங்க."என்று கதறிய அன்னையைப் பார்த்தவள். வேகமாகத் தன் அறை நோக்கிச் செல்ல, அவள் பின்னோடு சென்றார்கள் வள்ளி, கல்பனா மற்றும் குமரன். இவர்கள் சென்றபோதும் ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தார் அவர். அவரையே பார்த்தபடி மூவரும் நிற்க அலமாரியில் வைத்திருந்த அவரின் தாலிக்கொடியை எடுத்து வந்து அவர்களிடம் காட்டினாள் வைஷ்ணவி. பார்த்தவர்கள் அதிர்ந்து நெஞ்சில் கை வைக்க.

 

"என்னடி இது.?" என்று கேட்டார் வள்ளி 

"இரவு திடீர்னு பாட்டி எந்திரிச்சு வந்து அவங்க காதுல இருந்த கம்மல கழட்டி கொடுத்தாங்க. "ஏன் பாட்டி இப்படி செய்றீங்கன்னு.?" நான் கேட்டுட்டு இருக்கும்போதே சடார்னு கழுத்தில் இருந்த தாலி கொடியைக் கழட்டி, "எனக்கு வேண்டாம்னு." சொல்லி என் கையில கொடுத்துட்டாங்க. நான் ரொம்ப பயந்துட்டேன். அப்போவே வேகமா வந்து தாத்தாவைப் பார்த்தேன். இப்போ படுத்துட்டு இருக்க மாதிரியே தான் அப்பவும் படுத்துட்டு இருந்தாங்க. அவங்க தொடைமேல் வைத்திருந்த கை நழுவி மெத்தையில் விழுந்ததை அவங்களாவே கையை நகர்த்தறாங்க என நினைத்து நிம்மதியோடு நான் படுக்க வந்துட்டேன். ஆனா அப்பவே அவங்க உயிர் பிரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரியாம போயிடுச்சு." என்றவள் கண்மூடி சுவற்றில் சாய, அவளை அரவணைத்துக் கொண்டான் குமரன். 

"குமரா." என்ற தந்தையின் அழைப்பில் வெளிவந்தவனிடம், "எல்லோருக்கும் தகவல் சொல்லிடு. முதல்ல வீட்டு மாப்பிள்ளைக்கும் உங்க அக்கா விசாலாட்சிக்கும் தகவல் சொல்லு." என்றவர் தந்தை இருக்கும் அறைக்குத் திரும்பவும் சென்றார்.

 

அதற்குப் பின் அனைத்தும் வேக வேகமாகவே நடந்தன. தாத்தாவின் இறப்பு அனைவருக்கும் சொல்லப்பட்டு உள்ளூரிலேயே இருந்த அங்காளி பங்காளிகள் வீட்டிற்கு வர ஆரம்பித்திருந்தார்கள். வரவேற்புரையில் இருந்த சோபாக்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு அங்கு ஒரு டேபிளில் தாத்தாவைக் கிடத்திருந்தார்கள். வந்திருந்த இரண்டு மூன்று வயோதிக பெண்மணிகள் பாட்டியைப் பார்க்க அவரைத் தேடி அறைக்குள் செல்ல முயல, அவருக்குக் காய்ச்சலாக இருப்பதாகக் கூறி நாசுக்காக அவர்களைத் தடுத்து வரவேற்பு அறையில் பெரிய ஜமுக்காளம் விரித்து அதில் அமர வைத்தாள் கல்பனா. 

 

இன்னும் உறங்கிக் கொண்டிருந்த பாட்டி விழிக்கவே இல்லை. அவரின் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவிக்கும் வள்ளிக்கும் பெரும் கவலையாக இருந்தது. விழித்து எழும்போது அவர் என்ன மனநிலையில் இருப்பார் என்பது தெரியாமல், தாத்தாவின் இறப்பை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ அதனால் இவரின் உடல் நிலையும் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் அவர் விழித்தெழும் நேரத்திற்காகக் காத்திருந்தார்கள் இருவரும்.

 

சுற்றி நடப்பது தெரிந்தாலும் அதைக் கிரகித்து மூளையில் பதித்துக் கொள்ள முடியவில்லை வைஷ்ணவியால்.

தாத்தாவின் இறப்பு ஒரு விதமான அழுத்தத்தையும் அதிர்வையும் கொடுக்க அதிலிருந்து வெளிவராமல் இறுகி போய் அமர்ந்திருந்தாள். அவளின் நிலையை அவதானிக்கத்தான் அங்கு யாரும் இல்லை.

 

மின்னலென வந்துகொண்டிருந்தான் ஒருவன் விரைந்து. மனம் முழுவதும் கலக்கத்துடன், தன் மனைவியை நினைத்துக் கவலையுடன். அவளை தன் நெஞ்சோடு புதைத்துக் கொள்ளும் வேகத்துடன்.

 

உறக்கம் களைந்து எழுந்த பாட்டி வெளியில் கேட்கும் சலசலப்பில் நெற்றியை சுருக்கியவராகத் தன் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவியின் கலக்க முகத்தைப் பார்த்தவர், அவள் கைகளை மெதுவாகத் தட்டிக் கொடுத்து 

"என்னம்மா.?" என்று சோர்ந்த குரலில் கேட்க. ஒன்றுமில்லை என்பதாகத் தலையாட்டினாள் அவளும். 

 

மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு. தாத்தாவின் இறப்பிலிருந்து மீள முடியாமல் இருந்த அவளுக்கே ஆறுதல் தேவைப்பட, இங்குப் பாட்டிக்கு என்ன ஆறுதலை அவளால் கூற முடியும் எனப் புரியாமல் அத்துவான காட்டில் தொலைந்து போன குழந்தையின் மனநிலையில் தான் இருந்தாள் அவள். 

அவளின் இறுகிய நிலை தெரிந்து இருந்தது வள்ளிக்கு. 

"அத்தை நீங்கப் போய் முகம் கழுவிட்டு வாங்க." என்று அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று குளியலறை வாசலில் விட, வேறு எதுவும் கேட்காமல் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தார்.

 

அவர் குடிக்கும் விதமாகச் சத்து மாவு கஞ்சியில் சற்று இனிப்பு அதிகம் போட்டு அவருக்குக் கொண்டு வந்து கொடுத்த கல்பனாவை பார்த்தவர் 

"எனக்கு எதுவும் வேண்டாமா." என்றார் சோர்ந்த குரலில். 

"குடிங்க பாட்டி ஏற்கனவே காய்ச்சலா இருக்கு. குடிச்சிட்டு மாத்திரை போடணும் நீங்க." என்று அவள் சற்று கண்டிப்பான குரலில் கூற

"இல்ல வேண்டாம். என்னால எதுவும் சாப்பிட முடியாது, குடிக்கவும் முடியாது. மனசு ஒப்பல." என்றார் மனதை அழுத்தும் துயரத்துடன். 

தாத்தாவின் இறப்பு பாட்டிக்குத் தெரிந்தே இருக்கிறது என்று நேற்று அவர் நடந்து கொண்ட விஷயங்களிலேயே கிரகித்துக் கொண்டாள் வைஷ்ணவி. அது மற்ற இரு பெண்களுக்கும் புரிந்தே இருந்தது.

 

பாட்டிக்குக் கொண்டு வரும் போதே வைஷ்ணவிக்கும் சத்து மாவு கஞ்சியை கொண்டு வந்தாள். அவளின் நிலை கல்பனாவிற்கு பெரும் கவலையை கொடுத்தது.

"இங்க பாருங்க நீங்கக் குடிக்காம வைஷ்ணவியும் எதுவும் குடிக்க மாட்டேன்கிறா." என்று கூற

 

எதையும் சாப்பிடும் மனநிலையில் இல்லாதவளை இப்படித்தான் வற்புறுத்த வேண்டும். எனத் தெரிந்து, இருவரையும் இதையேனும் குடிக்க விட வைத்து விட வேண்டும் என்று சிந்தனையில் வந்தவள், ஒருவருக்கொருவரை காரணம் காட்டி சற்று கண்டிப்புடன் இருவரையும் குடிக்க வைத்தாள்.

 

 மருமகளின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு மனம் சற்று இதமாக இருந்தது. அவருக்கும் சூடான காபியை கொடுத்துக் குடிக்க வைத்திருந்தாள். வந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு. கேட்பவற்றை எடுத்துக் கொடுத்து எனப் பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் வீட்டு பெண்ணாக.

திடீரென" தாத்தா." என அலறும் சத்தமும் அழுகையும் அதிகமாகக் கேட்க விசாலாட்சி வந்துவிட்டது தெரிந்தது பெண்களுக்கு.

 

வள்ளி, வேகமாக அறையிலிருந்து அழுகையை அடக்கியபடி மூத்த மகளை எதிர்கொள்ள வெளியேற, சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்த பாட்டி பின் மெதுவாக எழுந்தவர் வைஷ்ணவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற நடக்க. அவர் கைகளைப் பிடித்துத் தடுத்தாள் வைஷ்ணவி. 

 

பேத்தியை ஏறெடுத்துப் பார்த்தவர் "ஒண்ணும் இல்ல வா." என்று அவளுக்குத் தைரியமூட்டிய படி அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்து முன்னேறிச் செல்ல, இன்னும் அதிர்விலிருந்து வெளி வராதவள் அவர் பின்னோடு சென்றாள். 

நட்ட நடு வரவேற்பறையில் தாத்தாவைக் கிடத்தி இருக்க. பார்த்தவளுக்கு நெஞ்சம் முட்டியது வேதனையில். பாட்டி பேத்தியின் கைப்பிடித்து அழைத்து வருவதை பார்த்த குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்த சொந்த பந்தங்களும் அவர்களின் அருகில் வந்து நிற்க,

 

 பாட்டி என்ன செய்வாரோ என்ற பயத்துடன் அவரையே பார்த்திருந்தார்கள் குமரன், கல்பனா மற்றும் விசாலாட்சி. பாட்டியின் நிலை அறிந்து, அதுவரை ஒப்பாரி வைத்து அழுதவளின் அழுகையும் சட்டென்று நின்றிருந்தது. கால்களில் வலுவே இல்லாதது போலத் துவண்டு போய் வந்து கொண்டிருந்த தங்கையைப் பார்த்தவள் வேகமாக அவளின் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள, அதற்குள் தாத்தாவின் சடலத்தின் அருகில் வந்திருந்தார் பாட்டி. 

அவர் முகத்தைச் சில நொடிகள் உற்றுப் பார்த்தவர்.

 

"தூங்குறீங்களா.?' என்று மெதுவான குரலில் கேட்கக் கூடியிருந்தவர்களுக்கு தான் அவரின் கேள்வியால் கண்ணீர் பெருகியது.

மெதுவாக நடந்து அவரின் கால் பகுதிக்குச் சென்றவர் கையெடுத்து கும்பிட்டு. 

"தூங்குங்க. இனி என்ன இருக்கு..? நல்ல சுகமா தூங்குங்க என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டீங்க.." என்றபடி அவரையே பார்த்திருக்க, தன் கைப்பிடியில் வைத்திருந்த பேத்தியின் கைகளை மட்டும் விடவே இல்லை அவர். தாத்தாவை கும்பிடும்போதும் அவள் கைகளை விடாமல் அவள் கரங்களையும் சேர்த்து வைத்தே கும்பிட்டார். இதற்கெல்லாம் எந்த எதிர்வினையும் காட்டாமல். தாத்தாவை நிமிர்ந்தும் பார்க்காமல் குனிந்தபடியே நின்றிருந்தாள் வைஷ்ணவி. பாட்டியைப் பற்றி பயந்து இருந்தவர்களுக்கு இப்போது இவள் நிலைதான் மிகுந்த பயத்தையும் கவலையையும் கொடுத்தது.

 

புயல் போல் உள் நுழைந்தான் சக்தி, கண்களில் தேடலை சுமந்து. தாத்தாவைச் சுற்றி அனைவரும் நின்று இருக்க, கண்களில் ஜீவன் இல்லாமல் எங்கோ வெறித்தபடி நின்றிருந்த தன் மனைவி மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிந்தாள். சக்தியைப் பார்த்ததும் தன் கைப்பிடியில் வைத்திருந்த பேத்தியின் கரத்தை விடுவித்த பாட்டி. மெதுவாகத் தன் அறையை நோக்கி நடந்து சென்றார் யாரையும் ஏறிட்டு பார்க்காமல். 

பாட்டி கைகளை விட்டதும் வேகமாக வந்து தன் மனைவியைக் கைவளைவில் அணைத்த படி வைத்துக் கொண்டான் சக்தி. அவனைப் பார்த்ததும் பெரிதாக மூச்செடுத்து விம்மியவளுக்கு பேச்சும் வரவில்லை, கண்ணீரும் வரவில்லை.

அவளின் நிலையைப் பார்த்துப் பயந்த சக்தி, 

"வைஷு, வைஷு." என்று அவள் கண்ணங்களில் தட்டி அவளைத் தன்னைப் பார்க்க வைக்க முயல இங்கும் அங்கும் அலைபாய்ந்தது அவளின் விழிகள். பின்பு தாத்தாவின் சடலத்தை வெறித்துப் பார்த்தவளுக்கு அப்போதுதான் தன் உயிரான தாத்தா உயிரோடு இல்லை என்பதும் இனி எப்போதும் அவரோடு பேச முடியாது. அவர் குரலைக் கேட்க முடியாது என்பதும் புத்தியில் உரைக்க, சூழ்நிலையும் நடக்கும் நிகழ்வுகளும் மெது மெதுவாக அவள் உள் இறங்க, உச்ச கட்ட அதிர்ச்சியில்,

"தாத்தா." என்று பெருங்குரலெடுத்து கதறியவள். அதிர்வு தாங்காமல் சக்தியின் மேலே மயங்கிச் சரிந்தாள். இவன் பின்னோடு வந்திருந்தார்கள் பவித்ராவும், சரவணனும். மருமகளின் நிலை கண்ட பவித்ரா 

"அவள உள்ள கூட்டிட்டு போய்ப் படுக்கவை சக்தி." என்றார். தாயின் சொல்லுக்கு இணங்கி, தங்களின் அறைக்குக் கைகளில் ஏந்தி சென்றான் அவளை.

 

அறையில் உறவுக்கார பெண்கள் பாட்டியுடன் அமர்ந்திருக்க, பேத்தியைத் தூக்கி வருவதை பார்த்த பாட்டி, மெதுவாக எழுந்து அவளைப் படுக்க வைக்க வழி விட்டவர். பின் அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை மெதுவாகத் தடவியவர், 

"அவங்க தாத்தான்னா உசுரு." என்றார் மெதுவான குரலில்.

 

அவனின் பின்னோடு வந்த பவித்ரா, "அவளை எழுப்ப வேண்டாம் சக்தி. ஏற்கனவே தாத்தாவ நெனச்சு ரொம்ப கலக்கத்தில் இருக்கா. அவர கொண்டுட்டு போகும்போது இன்னும் அதிர்ச்சி ஆகிடுவா. அதனால எல்லாம் முடியட்டும்." என்று கூற. அவரின் கூற்றை ஒப்புக் கொண்டார்கள் அனைவரும். பாட்டிக்கு தான் அவர் பேச்சு புரிந்தும் புரியாமலும் இருந்தது.

 

பேத்தியின் அருகில் உட்கார்ந்து இருந்த பாட்டி சகஜமாக அங்கிருந்த பெண்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் தாய் தந்தையரை பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பது அவருக்கு முழுவதுமாக மூளையில் பதியாமல் இருந்தது.

 

வந்திருந்த உறவுக்கார பெண்களுக்கு, அவர் நேற்றிலிருந்தே தன் அனைத்து நகைகளைக் கழட்டி வைத்ததும், நடு ஜாமத்தில் தாலிக்கொடியை கழட்டி வைத்ததும் பெரும் ஆச்சரியமாகவும் பேசும் பொருளாகவும் இருந்தது.

 

தாத்தாவின் இறுதி பயணம் தொடங்கி விட்டிருந்தது. அதுவரை தைரியமாக அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்த கல்பனா அதற்கு மேல் முடியாமல் உடைந்து அழுதாள். இந்தக் குடும்பத்தில் திருமணம் முடித்து வந்ததிலிருந்து தன் சொந்த பேத்தியைப் போலவே அவள்மீது அன்பு செலுத்திய தாத்தாவின் பிரிவு அவளுக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்து. தானும் வருந்தி அமர்ந்தால் என்ன ஆவது என்றே வீட்டு பெண்ணாக அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அழும் மனைவிக்கு எட்ட நின்ரே ஆறுதல் கூறிய குமரன், அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க, அவளை அரவணைத்து நின்று கொண்டார் வள்ளி.

 

தாத்தாவை இறுதியாக ஒரு முறை பார்ப்பதற்காக அனைவரும் அறையிலிருந்து வெளிவந்திருக்க, வைஷ்ணவியும் பாட்டியும் மட்டுமே அறையினுள் இருந்தார்கள். சத்தமாக வெடித்த பட்டாசு சத்தத்தில் அதிர்ந்து விழித்து எழுந்த வைஷ்ணவி அறையினுள் ஒருவரும் இல்லாமல் அவளும் பாட்டியும் மட்டும் இருப்பதைப் பார்த்தவள், 

'அவ்வளவுதானா அனைத்தும் முடிந்ததா.? இனி ஒரு முறை தன் செல்லத் தாத்தாவைப் பார்க்க முடியாதா.! அவருடன் பேச முடியாதா.? அவன் மடியில் படுக்க முடியாதா.?' என்று ஏக்கத்துடன் நினைத்தவள். தாத்தாவை எடுத்துச் சென்று விட்டார்களோ என்று அஞ்சியவளாக வேகமாக வெளியில் ஓடினாள்.

 

தாத்தாவின் கடைசி காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே மனைவி வருகிறாளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி. இறுதியாக ஒரு முறை தாத்தாவின் முகத்தைப் பார்த்து அவள் அழுது விட்டால் மனதில் இருக்கும் அழுத்தங்கள் அவளுக்குக் குறையும் என மனைவியை நினைத்துக் கவலை கொண்டிருந்தவன், அவள் வேகமாக ஓடி வருவதை பார்த்து, அவளைவிட வேகமாக அவளை நெருங்கி எதிர்கொண்டான்.

 

"தாத்தா, தாத்தா." என்று தொண்டையை அடைக்கும் வலியுடன் அவள் கதற, அதற்கு நேர் மாறாக ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை அவள் கண்களிலிருந்து. கணவனின் இறுகிய பிடியிலிருந்து வெளிவர முயன்ற படி அவரை ஏற்றி இருந்த வண்டியை நோக்கிக் கையை நீட்டியபடி, 

"தாத்தா வேணும். அவரை நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன். என்னை விடுங்க. நான் அவர்கிட்ட போகணும். எனக்கு ராஜா குட்டி வரும்ன்னு சொன்னாரு. அந்த ராஜா குட்டியைப் பாக்காமலே எப்படி அவர் போகலாம்.? முடியாது. அவர், என்னை விட்டு எங்கேயும் போக முடியாது. போக நான் அனுமதிக்கவும் மாட்டேன்." என்கிறபடி சக்தியின் பிடியிலிருந்து வெளிவரத் துடித்தவள்,

கணவனின் எந்தச் சமாதானத்திற்கும் செவி சாய்க்கவில்லை. 

 

அவளின் ஆவேச நடத்தையில் அனைவருமே அதிர்ந்து அவளை வேடிக்க பார்த்துக் கொண்டிருந்தார்கள் யாருக்குமே அவளைத் தடுக்க வேண்டும், சமாதானம் செய்ய வேண்டும் என்ற நினைவே சிந்தையில் இல்லை. 

திடீரென "வைஷ்ணவி." என்று கேட்ட அழுத்தமான சத்தத்தில், வேகமாகக் கணவனைப் பிரிந்து திரும்பியவள், சற்று தளர்ந்திருந்தாலும் உறுதியான நடையில் வந்து கொண்டிருந்த பாட்டியைப் பார்த்ததும்,

 

"ஐயோ பாட்டி.! தாத்தா போறாரு. நம்மளை எல்லாம் விட்டுட்டு போறாங்க.நான் எங்கேயும் அவரை அனுப்ப மாட்டேன். நீங்கச் சொல்லுங்க பாட்டி. நாம எப்படி தாத்தா இல்லாமல் இருப்போம்." என்றபடி அவர் கைகளைப் பிடித்துக் கெஞ்சியவள், 

"வாங்க பாட்டி, நீங்க வந்து கூப்பிடுங்க." என்று அழைத்தாள். இவ்வளவு வேதனையுடன் அழுகுரலில் பேசினாலும், இப்போது வரை அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரவே இல்லை. 

"உங்க தாத்தா தூங்குறாரு மா." என்று அவள் நாடி பிடித்துக் கூறிய பாட்டியைப் பார்த்தவள், உச்சஸ்தானியில் மனம் வலிக்க,

 

"ஐயோ.! உங்களை ஒரு முறை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாரே. உங்களை எங்கேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரே என்கிட்ட., அவ நல்லா இருக்கால்ல அவ உடம்புக்கு ஒன்னும் இல்லல்லன்னு எத்தனை விசாரிப்பு... ஐயோ..! பாவி..! நான், அப்பவே அவர உங்க கிட்ட கூட்டிட்டு வந்து இருக்கலாம். இல்ல, உங்கள அவர் கிட்ட கூட்டிட்டு போய் காட்டி இருக்கலாம்.. ரெண்டும் செய்யாம இப்படி ஏக்கத்தோடு என் தாத்தாவை அனுப்பி வைக்கிறேனே. அவருடைய கடைசி ஆசையை கூட நிறைவேற்ற முடியாத பாவியாயிட்டேனே.. இத்தனை வருஷம் உங்க கூட வாழ்ந்து. கடைசில உங்க முகத்தை கூட பார்க்காமலே போறாரே..."என்று அறற்றியவள். திடீரென ஆவேசமடைந்தவளாக,

 

"முடியாது, முடியாது அவரை எங்கேயும் அனுப்ப முடியாது. எனக்கு அவர் வேணும். தாத்தா..! இதோ பாட்டி இருக்காங்க. பாக்கணும்னு சொன்னிங்களே வாங்க.. அவங்கள பாருங்க..." என்றபடி வண்டியின் அருகே செல்ல முயன்றவளின் கைகளை தன் புறம் இழுத்து, அவள் கன்னத்தில் வேகமாக அறைந்தார் பாட்டி. அவரின் வயதிற்கும் வலுவிற்கும் அது லேசான அடியாகத்தான் விழுந்தது. ஆனால் திடீரென பாட்டி அடிக்கவும் அதிர்ச்சியில் அமைதியான வைஷ்ணவி, பின், பெருங்கூரலெடுத்து 

"தாத்தா.. பாட்டி, என் தாத்தா..." என நெஞ்சில் அடித்து, கதறி அழுதாள்.. இப்போது தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது அவளின் கண்களில் இருந்து. அவளை நெருங்கி வந்த பாட்டி, அவள் இரு கன்னங்களையும் பிடித்து கண்ணீரை துடைத்து விட்டபடி, 

"நம்ம தாத்தா தூங்குறாருல்ல. பாவமில்ல அவரு. நமக்காகத்தானே எல்லாம் செஞ்சாரு. நம்ம எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டாரு..? இப்ப அவருக்கு ஓய்வு கிடைச்சிருக்கு. அதுதான் முழிக்காமல் தூங்கிட்டு இருக்காரு. அவரை நாமே தொந்தரவு செய்யலாமா..? பாவம், தூங்கட்டும். விட்டுடு வைஷு குட்டி.." என தாத்தாவைப் போலவே அழைத்து கெஞ்சலாக கூற. 

அதற்கு மேல் முடியாமல் தாத்தாவை வைத்திருந்த வண்டியை பார்த்தபடி முட்டி போட்டு அமர்ந்து வாசலில் இருந்தபடியே அவரை கும்பிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். தரையில் விழுந்து.

மனைவியின் அருகிலேயே நின்றிருந்தவன் அதற்கு மேல் முடியாமல் அவளை தூக்கி, இருக அணைத்தவன், அவளை ஒரு கை வளைவிலும் பாட்டியை ஒரு கை வளைவிலும் வைத்துக் கொண்டு மெதுவாக அவர்களின் அறையை நோக்கி அழைத்துச் சென்றான். அவன் பின்னோடு வலியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே பவித்ரா, கல்பனா, விசாலாட்சி சென்றார்கள்.

 

தாத்தாவின் இறுதி பயணம் வீட்டு வாசலை தாண்டும் வரை பார்த்திருந்த வள்ளி, பிறகு அவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மாமியார் மற்றும் மகள் இருக்கும் அறையை நோக்கி சென்றார். மனைவியின் அழுகை கேவலாகி விட , அவள் கண்களை கை கொண்டு அழுந்த துடைத்து விட்டு, வீட்டுப் பெண்களின் பொறுப்பில் அவளையும் பாட்டியையும் விட்டுவிட்டு மயானம் நோக்கி சென்றான் சக்தி. வந்த சொந்தங்கள் அனைத்தும் சொல்லாமல் கிளம்பி விட முக்கியமான சிலர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்.

 

வீட்டின் பெரிய தலை குடும்பத்திலிருந்து இன்னுயிர் நீங்கி சென்றது, தீராத வேதனையை கொடுத்தது அனைவருக்கும். அவர் நினைவுகளை மறக்க முடியாது. ஆனால் நிதர்சனம் உணர்ந்து, காலத்தின் ஓட்டத்திற்கு இணைந்து செல்ல சிறிது காலம் ஆகும் அவர்களுக்கு...

 

அவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொது இதுதான். வீட்டின் பெரியவர்கள் நம்மை பிரிந்து செல்லும் போது அவர்களோடு நின்று விடுவதில்லை நமது காலம். அவர்களை எப்போதும் மனதில் இருத்தி காலத்தை நகர்த்த வேண்டும். அதன் போக்கில்...

 

அடுத்து என்ன மனம் கணக்க  காத்திருப்போம் நாமும்...

This topic was modified 5 days ago by VSV 41 – வரமாய் வந்த உயிரே

   
ReplyQuote

You cannot copy content of this page