All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

VSV45 கனலை அணைக்க வா கவியே

Page 3 / 3
 

VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 24:

லயவர்ஷினியும் ஆர்யனும் ,டில்லி வரையில்  விமானத்தில் வந்து , அங்கிருந்து குலுவிற்கு காரில் வந்து சேர்ந்தனர். 

தனது தாய் பத்மினிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து விட்டுதான் கிளம்பினான்.

பயணமெங்கும் புது மணத்தம்பதிகளுக்கே உரிய சீண்டல்களும் ,வெட்கமும் நிறைந்திருந்தது.

அங்கு ஆடம்பரமான நட்சத்திர விடுதியை பதிவு செய்திருந்தான் ஆர்யன்.

இவர்கள் செல்லும் நேரம் இரவாகிவிட்டதால் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை காண முடியாது போனது.

இருவருக்கும் அசதியாக இருக்கவே இரவு உணவினை விடுதியிலே முடித்துக்கொண்டு தங்களுக்கென பதிவு செய்யப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.

நன்கு விசாலமான அறையாக இருந்தது.

அனைத்து வசதிகளும்  இருந்தது. கடும் குளிர் இருந்துக்கொண்டே இருப்பதினால் அறைக்குள்ளே ஹீட்டர் வசதியும் பொருத்தப்பட்டிருந்தது.

அசதியில் இருவரும் உடை மாற்றிக்கொண்டு மெத்தையில் விழுந்தனர்.

லயவர்ஷினிக்கோ கடும் குளிர் ஹீட்டரையும் மீறி அவளது ‌தேகத்தை துளைத்தது.

ஆர்யனோ மெத்தையில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் முட்டி மோதியது.

தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று நன்றாகவே அவனுக்குப்‌புரிந்தது.

ஆனால் அவளது வார்த்தையின் வீரியம் அவனை அந்த அளவிற்கு பாதித்திருந்தது.

அவனைப் பார்த்து அருவருந்து முகத்தை சுழித்த வர்ஷினிதான் கண்முன்னே வந்தாள்.

அன்று அவனது முகத்தை கண்டுஅருவருத்தவள் இன்று தன்னருகே ஒன்றாக இழைந்து நிற்கிறாள். அதனை நினைத்தவனது உள்ளம் எகத்தாளமாகச் சிரித்தது.ஒன்றை அவன்‌வசதியாக மறந்தும் போனான் நம்பிக்கை மட்டுமே பெண்களின் ஆணிவேர் என்பதை...அந்த நம்பிக்கையில் தான் எவ்விதமான சஞ்சலமும் இன்றி தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்தாள் லயவர்ஷினி.

“அப்படி என்ன‌ பலமான யோசனை..?” எனக் கேட்டாள் அவனது தோளினைத் தொட்டு.

“ம்ம்….எப்படியெல்லாம் உன் கூட ஹனிமூன் கொண்டாடனும் ன்னு யோசனை தான் …இங்க வந்து வேற‌ என்ன யோசனை வரப்போகுது…?" என‌ மையலுடன் அவளது விழிகளைப்‌ பார்த்தான் ஆர்யன்.

“ ஐய்யோ…எப்பவும் இதே நினைப்பு தானா..?” எனக் கூறி அவனது நெஞ்சில் புதைத்தாள்.

அவளை இறுக்கி அணைத்தவன்.

“ நீயே …ஏன்டா மடையா..! இன்னும் பேசிக்கிட்டே இருக்க..? ஸ்டார்ட் பண்ணுன்னு சிக்னல் கொடுத்துட்ட. ஆரம்பிக்கலாமா..?” என்றவாறே அவளது இதழ்களை நோக்கி வந்தவனை தனது கரங்கள் கொண்டு தடுத்து ,” ஹலோ..! நான் எப்ப‌அப்படி சொன்னேன்..? . நீங்களா கற்பனை பண்ணாதீங்க.. எனக்கே பயங்கரமா குளிருதுன்னு இருக்கேன்…நீங்க‌ வேற மாதிரி கற்பனை பண்ணாதீங்க…சரியா..?” என அவனது மீசையை பிடித்து இருகைகளாலும் இழுத்தாள்.

அவனோ அவளை கீழேத் தள்ளி ,” அதெல்லாம் விடு .. இப்ப என்னோட‌ முதல் வேலை உன்னோட குளிரை குறைக்குமாறு தான்..” என்றவன் அவள் மறுத்து ஏதோ கூற வருவதற்குள் அவளது இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான்.அவளதுமென்மையான இதழ்கள் அவனிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டது.

தனது ஆளுகைக்கு கீழ் அவளைக் கொண்டு வந்து அவளை மொத்தமாக கொள்ளையிட ஆரம்பித்தான்.

பெண்ணவளின் தேகம் குளிருக்கு இதமாக அவனைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டது.

அவனது வேகத்திற்கு பதமாக வளைந்துக் கொடுத்தது.

முத்தங்களின் சப்தமே அறை முழுவதும் எதிரொலித்தது.

தனது பெண்மையை எந்த விதமான தயக்கமின்றி அவனிடம் ஒப்படைத்தாள்.

அவனோ அவளை வேறு ஒரு மாய உலகத்திற்கு அழைத்துச் சென்றான் . இனி மீளவே முடியாது என்ற‌ அளவிற்கு அவளது நிலையிருந்தது.

மெல்லிய தேகம் அவனது மென்மையையும் வன்மையும் தாங்க‌முடியாது தள்ளாடியது.

புதுப்புது பாடங்களை கற்றுத் தரும் ஆசானாக அவன்‌. அவன் கற்றுத்தந்ததை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்‌ நல்ல மாணவியாய் அவள்.

ஆணவனின் மீசை அவள் தேகமெங்கும் கவிதை எழுதியது.

அவனையறியாமலேயே அவனது காதல் மட்டுமே காமத்திலும் வெளிப்பட்டது.

நினைவில் என்றுமே தங்கும் காவியத்தை பெண்ணவளின் மனதினுள் ஆழப்பதிய வைத்தான் .

குளிர் பிரதேசத்திற்கு அவளுக்கு இதமாக அவனும் அவனுக்கு இதமாக அவளும் இருந்தனர். விடியலில் தான் உறக்கத்தை இருவரும் தழுவினர்.

மறுநாள் காலை பதினோரு மணியளவில் தான் இருவரும் எழுந்தனர்.

கொஞ்சி , கெஞ்சி இருவரும் தங்களது காதல் விளையாட்டினை முடித்து கொண்டு , குளித்து தயாராகி இருவரும் மதிய உணவினை உண்டனர்.

மதிய நேரமாகிவிட்டதால் இருவரும் அருகிலும் உனக்கும் இடங்களுக்கு மட்டுமே சென்று வந்தனர்.

மாலையில் பனிப்பொழிவுத் தொடங்கிவிட்டதால் மீண்டும் வந்து அறைக்குள்ளேயே முடங்கினர்.

அறையிலுள்ள சன்னல் வழியே பனிப்பொழிவினை ரசித்தவாறே நின்றிருந்தாள் வர்ஷினி.

ஒரு நாற்காலியை எடுத்து சன்னலருகேப் போட்டு ஆர்யன் அமர்ந்தான்.

பின்னர் , நின்றிருந்தவளை ,” இங்க வந்து பாரு இன்னும். நல்லாவே ஸ்னோஃபாலை பாக்கலாம் “ என்று அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவளை இடையோடு பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்.

ஆர்யனோ தனது தாடையை அவளது தோளில் பதிந்திருந்தான்.

அந்த ரம்மியமான அமைதியை இருவருமே ரசித்திருந்தனர்.

லயவர்ஷினி திடீரென,

” ஆர்யன் உங்கிட்ட ஒண்ணு சொல்லவா..?” என்றாள்.

அவனோ அவளது கன்னத்தில் தனது மீசை ரோமங்கள் உரச ,” ம்ம்…” என்று மட்டும் கூறினான்.

அவளோ அவனது முகத்தினை தனது இரு கைகளாலும் பிடித்து நிமிர்த்தி அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே ,” ஐ லவ் யூ…உங்கள‌ மனப்பூர்வமா விரும்புறேன்…” என்றாள்.

ஆர்யனோ கண்கள் இடுங்க அவளைப் பார்த்து,” கம் ஆன்... சே இட் ஒன்ஸ் அகெய்ன்…” என்றான்.

அவளோ அவனது விழிகளை நேருக்கு நேர் சந்தித்தபடியே, “ நா உங்கள விரும்புறேன்…எஸ் ...ஐ லவ் ‌யூ. எனக்கு இந்த லவ்ல எல்லாம் பெருசா நம்பிக்கை கிடையாது. ஆனா உங்களப்‌பாத்த பிறகு உங்க கூட பழகினப்‌பிறகு உங்கள ரொம்பவே பிடிச்சிருக்கு . இப்படியே வாழ்க்கை முழுவதும் உங்க கூட சந்தோஷமா வாழ்ந்து குழந்தை குட்டின்னு லைஃபை லீட் பண்ணனும்னு ஆசையா இருக்கு. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா..? “ எனக்கூறி விட்டு பதிலுக்காக அவனது முகத்தைப் பார்த்தாள்.

அவனோ, ” ஹா‌..ஹா….” என ராட்சசன் போல் சிரிக்க ஆரம்பித்தான்.

முதலில் அவனது சிரிப்பினை ரசித்தவள் சில வினாடிகள் கழித்து முகம் மாறினாள்.

அவளுக்கு ஒரு வித பதற்றம் ஏற்பட்டது . “ ஏன்…ஏன்.. பா சிரிக்கிறீங்க..? ஏதாவது தப்பா கேட்டுட்டேனா..? “ என‌ முகம் வாடக் கேட்டாள்

அவனோ நிறுத்தாமல் சிரித்தக் கொண்டே இருந்தான்.

அவனது உள்ளம்‌ அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு எரிமலையாய்‌ சிதறியது.

அதே வெளிக்காட்டாமல் இருக்கத்தான் இந்த அசுரத்தனமான சிரிப்பு.

தன்னை இகழ்ந்து பேசிய பெண்ணின் வாயாலேயே தன்னை விரும்புவதாக கேட்பது கலவையான உணர்வுகளை அவளுள் தோற்றுவித்தது.

கோபம் , அகங்காரம், ஏளனம், வருத்தம், இகழ்ச்சி என அனைத்து உணர்வுகளால் அவன் தத்தளித்தான்.

இந்த வார்த்தைகளை கேட்கத்தானே ஒரு காலத்தில் அவன் தவமாய் தவமிருந்து அவள் பின்னாலே பைத்தியக்காரன் போல் சுற்றிக்கொண்டு இருந்தான்‌.

என்று அவள் அவனது உணர்வுகளை கொன்று புதைத்தாளோ அன்றே அவன் வேறு மாதிரி மாறிப் போனான்.

பழைய ஆர்ய இளநெடுமாறன் இவனல்லவே…! அன்பையும், பாசத்தையும், காதலையும், அக்கறையையும் கொட்டிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தவனின் உள்ளம் முழுவதும் இன்று வஞ்சமும், அகங்காரமும், கர்வமும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

காதல் மட்டுமே அவனது வாழ்வில் வஞ்சிக்கவில்லை, தொழில் முறையிலும் ஏமாற்றப்பட்டு அனைத்தும் இழந்து நின்றான்‌.

வாழ்க்கை அவனை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வைத்தது.

வாழ்க்கை அவனுக்கு கொடுத்த அடியிலிருந்து பட்டுத் தெளிந்தவன், இன்று தனது தொழில் சாம்ராஜ்யத்தில் முடி சூடா மன்னனால் வலம்‌வருகிறான்.

அவனது தொடர்ந்து சிரிப்பதைக் கண்டவளது கண்கள் கலங்கியது‌.

அதனைக் கண்ட ஆர்யன் சட்டென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு தனது முகப் பாவனையை மாற்றிக்கொண்டு,” சாரி…வெரி…சாரி…உன்னை ஹெர்ட் பண்ண‌ நா சிரிக்கல டி…. ரொம்ப சீக்கிரம் நீ லவ் யூ சொல்லிட்டியா…அதான் சிரிச்சுட்டேன் மா..இதைத்தான் நான் முதல்லயே எதிர்பார்த்தேன். ம்ம்…ஆனா..என்ன.. மகாராணிக்கு இப்பதான் என்னைய கண்ணுக்கு தெரியுது போல்…நான் குடுத்து வைச்சது அவ்வளவு தான்…. நீ இவ்வளவு நாள் கழிச்சு ஐ லவ் யூன்னு சொல்றியேன்னு தான் ‌சிரிச்சேன். இதுக்குப்‌போய் கண் கலங்கிட்டு இருக்க…இங்க வா..” என‌‌க்கை நீட்டி ‌அழைத்தான்.

அவளோ வில்லில் இருந்து புறப்பட்ட ‌நாண் போல அவன் கைகளில் தஞ்சமடைந்நு மார்பினில் சாய்ந்தாள்.

“ நான் என்னவோ, ஏதோன்னு பயந்துட்டேன் தெரியுமா…! எதாயிருந்தாலும் சொல்லிட்டு சிரிங்க.. மனசுக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு…” என முகத்தினை நிமிர்த்தி அவனது விழிகளைப்‌‌பார்த்தாள்.

கூர்மையாகவும் எதிராளி களை கூறும் போடவும் தெரிந்த  அவனது விழிகள் அவளது தூய்மையான நேசத்தை கண்கள் மூலமாக கடத்தும் ஆளைத் கொல்லும் பார்வையில் தடுமாறிப் போனான்.

அவனால் அவளை கண்ணெடுத்துப் ‌பார்க்ககவே முடியவில்லை.

அவளது பார்வையை தவிர்க்க ‌வெளியே பனிப்பொழிவைப்‌ பார்த்தான்.

அவளோ அவனது முகத்தை தன் புறமாக திருப்பி அவனை இன்னும் நெருக்கமாக நெருங்கி ,” என் கிட்ட ஏதாவது ‌மறைக்கிறீங்களா ஆரயன்..? ஏன்‌ என்ன நேரா பாக்க‌ மாட்டேன்றீங்க..?” என அவனது முகத்தை அவதனித்தாள்.

அவனது முகத்தில் இன்று ஏனோ தவிப்பும் அலைப்புறுதலும் அதிகமாகவே தெரிந்தது.  "சொல்லுங்க ஆர்ய…” என முடிப்பதற்குள் அவளது வார்த்தைகள் அவனது முரட்டு இதழ்களுக்குள் அடங்கியது.

வன்மையான முத்தத்தை உணர்ந்தாள் அவனிடம்.

அவளை அப்படியே இரு கரங்களில் ஏந்திக்கொண்டு மீதி கதையை மஞ்சத்தில் தொடர்ந்தான்.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து,மணிக்கரனில் உள்ள சில கோவில்களுக்கு சென்றார்கள் .

மணிக்கரன் குலுவிலுருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிக்கரன்.

அங்கு இருக்கும் ஒரு சீக்கிய‌ குருத்துவாராவில் இயற்கையான வெந்நீர் ஊற்றினை பார்த்தார்கள்.

அதனை பற்றி அதிக தகவல்களை அவளிடம் கூறினான் ஆர்யன்.

சிறிது நேரம் அருகில் உள்ள ஆற்றின் அழகையும்,இயற்கையின் அழகையும் ‌ரசித்துவிட்டு திரும்பினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று‌வந்தார்கள்.

பனிச்சறுக்கு விளையாட்டினை சிறு‌பிள்ளைப் போல் விளையாடினாள் வர்ஷினி.

இருவரும் சேர்ந்து பனிக்கட்டிகளால் ஸ்னோமேன் செய்து விளையாடினார்கள்.

காலை முழுவதும் வெளியே செல்வது இரவு‌ முழுவதும்‌அவனது மார்பினில் துயில் கொள்வது என மகிழ்ச்சியில் வர்ஷினி இன்னும் மெருகேறியிருந்தாள்.

அவனுக்கோ அவள் சிவப்பு வைரத்தை எங்கு வைத்திருத்திறாள் எனத் தெரிய வேண்டும்.

எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை தலையில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு அவசியமே யில்லாமல் அவளே வாயை விட்டாள்.

“இந்த சிவப்பு வைரத்தை ஏலத்துல எடுக்க நான் வரலன்னா ..உங்கள் பாத்துருக்கவே மாட்டேன்.. நீங்களும் எனக்கு கிடைச்சிருக்க‌மாட்டீங்க..” என்றாள்.

அவனோ சிரித்தபடி , "சரிதான் “ , என்றவன்‌ “அந்த வைரத்தை ரொம்ப கேர்புல்லா வச்சிக்கோ….அதுக்கு டிமாண்ட் ‌ஜாஸ்தி…ரொம்ப‌ சேஃப்பான இடத்துல வச்சிக்கோ” என்றான்.

சாமர்த்தியமாக "எங்கே வைத்திருக்கிறாய்‌…?”என‌ கேட்காமல் அவள் மூலமாகவே அறிய விரும்பினான்.

அவளோ திருடன் கையிலேயே சாவி என்பதைப் போல அவள் வைரத்தை வைத்திருக்கும் இடத்தைக் கூறினாள்.

ஆனால் அவனோ , "அது‌ சேஃபா இருக்காதே வர்ஷினி . வேற இன்னும் சேஃபான இடத்தில வைக்கனும் மா..” என்றான்.

“ வேற‌ எங்க வைக்கிறது…? தெரியலையே…? நீங்க ஏதாவது சேஃப்டியான இடம்‌இருந்தா சொல்லுங்க.அங்கேயே வச்சிடலாம்…” என்றாள்.

அவனோ குறும்புடன், “நா ‌சேப்ஃபான இடத்தை சொல்றேன். ஆனா உனக்கு அங்க வைக்க இஷ்டமா..?நான் எங்கயாவது அந்த வைரத்தை அடிச்சிட்டு போய்டேன்னா..என பண்ணுவ..?” என்றான்.

“ அப்படி எல்லாம் நீங்க பண்ண மாட்டீங்க…ஆனா எடுத்துட்டு போனீங்கன்னா…அப்ப மாட்டுவீங்க..ஏன்னா அந்த வைரத்துல ஒரு சூப்பர் சென்சார் அட்டாச் பண்ணிருக்கேன். அது உங்களை காட்டி கொடுத்திடும்… சரி..சரி.. ஊருக்கு போன உடனே வைரத்தை சேஃப்டியா வச்சிடலாம் “ என்று‌கூறினாள்.

“ நீ கவலைப்படாதே சேஃப்பா வச்சிடலாம்….” என்றான்.

ஒரு பெண் ஆண் மீது வைக்கும் அதீத நம்பிக்கை விலை மதிப்பற்ற வைரத்தை விட பெரியது .

லயவர்ஷினி வைரத்தை வைத்திருக்கும் இடத்தைப் பற்றி காதல் மயக்கத்தில் கூறினாளோ அல்லது அவன் மீதிருந்த அதிகமான நம்பிக்கையில் கூறினாளோ தெரியாது ….ஆனால் ஆள் மனதில் தன்னவன் தப்பானவனாக இருக்க மாட்டான் என்ற எண்ணம் ஆழப்பதிந்ததினால் முட்டாளாகிப் போனாள் பெண்ணவள்.

குலுவில் இருந்த பத்து நாட்களுமே அவளுக்கு சொர்க்கத்தைக் போன்றிருந்தது.

அவளை மகாராணியைப் போல் உணரவைத்தான்.

எல்லாப் பெண்களின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பே கணவனின் அன்பான வார்த்தைகளும் அரவணைப்பும் தான். அதைத் தான் ஆர்யன் அவளுக்கு திகட்ட திகட்டக் கொடுத்துக் கொண்டு இருந்தானே…..எனவே

அவளது சிந்தை,உடல் பொருள், ஆவி என அனைத்தையும் அவனுக்கே என அடிமை சாசனம் எழுதித் தரும் அளவிற்கு அவன் மீது பித்தாகிப் போனாள் .

கல்லூரி காலத்திலும் சரி தனது தொழில் முறையிலும் சரி எத்தனையோ ஆண்களை கடந்து வந்திருக்கிறாள்.

அவர்களின் ஆணவத்தையும் தொழிற்போட்டியையும் சமாளித்து வெற்றிகரமாக வந்திருக்கிறாள்.

அனைத்து ஆண்களையுமே ஒரு எல்லையிலேயே நிற்க வைத்துவிடுவாள். எந்த ஆண்மகனையும் கண்டு அஞ்சாதவள், தன் சுண்டு விரலை தொட்டுப் பார்க்க நினைக்கும் ஆண்களை பார்வையாலேயே எரிக்கும் ஆதிக்கமான பெண் இன்று ஆர்யனின் காதலாலும்(?) அவனின் அன்பாலும் (?) மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் அவனிடமே சரணடைந்து விட்டாள்.

பத்து நாட்கள் தேனிலவை முடித்து விட்டு ஊரிற்கு திரும்பினார்கள்.

லயவர்ஷினி தனது தொழில் சம்பந்தமான விஷயங்களை சரியாக பார்க்க முடியவேயில்லை .

கிட்டத்தட்ட முக்கியமான தொழில் சம்பந்தமான விஷயங்களை அவளது கவனத்திற்கு வராத வண்ணம் ஆர்யன் பார்த்துக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும்.

சில இடங்களில் அவளது கையெழுத்து தேவைப்பட்டது ,சில முக்கிய முடிவுகளையும் ‌எடுக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அனைத்தையும் ஒவ்வொன்றாக‌ பார்த்து பதிலளிக்க முடியவில்லை.

அவளது காரியதரிசியும் விடுமுறையில் சென்று‌விட்டாள் .எனவே அனைத்து வேலைகளும் தேங்கியிருந்தது.

ஒரு சிலருக்கு மட்டுமே அலைப்பேசியில் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் ஊரிலிருந்து திரும்பிய இரண்டாம் நாள் பத்மினிக்கு லேசாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

ஆர்யன் மற்றும் பத்ரி முக்கிய வேலையாக கேரளாவிற்கு சென்றிருந்தார்கள்.

வர்ஷினியே பத்மினியை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றாள் .

பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை எனவும் உணவில் மட்டும் பத்தியம் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

அன்றே பத்மினியை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

பத்மினியை பார்த்துக் கொள்ளும் செவிலியரை வேறு இடத்திற்கு மாற்றி விட்டான் ஆர்யன்.

எந்த ஒரு செவிலியரையும் வர விடாமல் பார்த்துக் கொண்டான்.

பத்மினியின் உடல்நிலை குறித்து ஆர்யனுக்கு தெரியப்படுத்தியிருந்தாள் வர்ஷினி.

இரண்டு நாட்களாக இருந்த தனது மீட்டிங்கை ஒரே நாளில் முடித்துக்கொண்டு விரைவாக வந்திருந்தான்.

மருத்துவர் கூறிய செய்தியை அவனிடம் கூறினாள் வர்ஷினி.

அவனோ சோர்வாக அவளின் கைகளை பற்றி, "ரொம்பவே தாங்க்ஸ் லயா…..நல்ல நேரம்‌ நீ வீட்ல இருந்ததுனால அம்மாவை சீக்கரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்ட..நா உன்கிட்ட ஒன்னு கேட்கவா…” என உருக்கமானக் குரலில் கேட்டான்.

“ சொல்லுங்க ஆர்யன்…” என்றாள்.

“ அது…வந்து…உன்கிட்ட எப்படி..இத கேக்றதுன்னு தெரியல…நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல…” என தயங்கினான்.

 அவனது கைகளைப்‌பிடித்துக் கொண்டு, “ ஏன் இவ்வளவு தயங்குறீங்க…என்னன்னு சொல்லுங்க பா…” என ஆறுதலாக கேட்டாள்.

“ அப்பாயிண்ட் பண்ற நர்ஸும் அம்மாவ சரியா பாத்துக்க மாட்டேன்றாங்க. பத்திய சாப்பாடு அம்மாவுக்கு நேரத்துக்கு குடுக்கனும். அது நீ கொஞ்சம் பெர்சனல் கேர்‌ எடுத்து கொஞ்ச நாளைக்கு பாத்துகிட்டனா நல்லா இருக்கும்…இதை நான் உன்கிட்ட ரிக்வெஸ்டா தான் கேக்றேன்…” எனக்கூறி விட்டு அவளது முகத்தை பார்த்தான்.

முதன் முதலில் அவளுக்கு மனதில் குழப்ப மேகங்கள் சூழ்ந்தது.

தெளிவாக சிந்திக்க முடியாத சூழ்நிலை.

“ ப்ளீஸ்…மா முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே…நீ வேணுங்குற நேரம் உன் கம்பெனிக்கு போ…நான்‌ வேண்டாம்னு சொல்ல மாட்டேன்…பட்‌அம்மா கொஞ்சம் நல்லா ஆகுற வரைக்கும் நீ அவங்களை பாத்துக்கிட்டே நான்‌

சந்தோஷப்படுவேன். நீ ஆன்லைன்லயே உன்னோட‌வேலைகளை பாத்துக்கலாம்…உனக்க கஷ்டம்ன்னா சொல்லு வேற யாரையும் பாக்குறேன்…யாரும் புல் டைமா வர‌மாட்டேங்குறாங்க….ம்ம்..என்ன செய்றது ன்னு தெரியல..” எனக் கூறினான்.

அவளோ ,” இதுக்கு போய் ‌ஏன்‌ ரிக்வெஸ்ட் அது…இதுன்னு பெரிய வார்த்தை சொல்லிட்டு இருக்கீங்க…எனக்கு சின்ன வயசுலயே அம்மா தவறிட்டாங்க..உங்க அம்மாவ பாக்குறப்ப நான் இழந்த சொந்தம் திரும்ப எனக்கு கிடைச்ச‌ மாதிரி தான் இருக்கு.அவங்கள பாத்துக்குறதுல்ல எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. கவலைப்படாம நீங்க உங்க‌ வேலையைப் பாருங்க..நான் அவங்களை கவனிச்சுக்கிறேன்”. என அவனுக்குத் தைரியம் கொடுத்தாள் வர்ஷினி.

அவனோ அவளை லேசாக அணைத்து விடுவித்து விட்டு, ” தாங்க்ஸ் லயா…ரிஷி ஐ யம் ஹாப்பி…” எனக் கூறிவிட்டு வெளியே சென்றான்.

அந்தோ பரிதாபம்…! சிறந்த தொழிலதிபராய் ஆளுமையும் நேர்மையும் மிக்க பெண்மணியாய் வலம் வந்தவளை கூட்டில் அடைய வைத்தான் ஆர்யன்.

அவளது மனம் என்னதான் அவனுக்கு சமாதானம் கூறியிருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவளைப் புரட்டிப்போட்டது என்னவோ உண்மைதான்.

வயதானவர்களுக்கு பணிவிடை செய்வத்ற்கெல்லாம் அவள் தயங்கவில்லை.

அதே சமயம் தனது அடையாளத்தை விட்டுவிடுவோமோ என்ற நிதர்சனம் மெல்ல மெல்ல உரைக்கத் தொடங்கியது .

ஆம்..! மறு நாளிலிருந்தே முழு நேரமும் அடுப்படியிலும் பத்மினிக்கு பணிவிடை செய்வதிலும் அவளுக்கு நாள் முழுவதும் சரியாக இருந்தது.

வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவள் சிரத்தையுடன் இருந்தாள்..

வெற்றிக்களிப்புடன் அவளை ஏளனமாகப்‌பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.ஏதோ ஒன்றை சாதித்து விட்ட குரூர திருப்தி அவனிடம்.

அதே சமயம் மனதினோரம் பழைய இளமாறனின் குரல் லேசாக கேட்டுக் கொண்டுதான் இருந்தது….

 


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 25:

நாட்கள் அதன் போக்கில் சென்றது . ஆராதனா தேவ் வின் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

அன்பான காதலும், அழகான புரிதலும் எத்தகைய காயங்களையும் ஆற்ற வல்லமையுடையது. அழகியலாய் அவர்களின் தாம்பத்தியம் இனித்தது.

சூர்யாவும் தேவ்வை “அப்பா..அப்பா..” என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான்.

ஆரம்பத்தில் “டாக்டர் அங்கிள், டாக்டர் அப்பா” எனத் தடுமாறி பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் விரைவில் மாற்றிக்கொண்டான்‌ சூர்யா.

அவனது உடல்நிலையையும் சரியாகப் பார்த்துக் கொண்டான் தேவ். அழகிய குடும்பமாக அவர்களை காணுகையில் லதா மற்றும் பிரசாத்திற்கு மனநிறைவாக இருந்தது ‌.

ஆராதனா சூர்யாவிற்கு முழுமையாக குணமானப் பிறகே வேலைக்குச்  செல்வதாகக் கூறிவிட்டாள். சிறு சிறு உரசல்கள் வந்தாலும் இரவின் பிடியில் இருவரும் சமாதானமாகிப் போவார்கள்.

ஆர்யனோ தனது தொழிலில் மிகவும் பரப்பரப்பாக இருந்தான்.

வர்ஷினியோ காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாக சுழன்று , பத்மினி கவனித்து , தங்களுக்கு சமைத்து , பத்மிக்கு தனி சமையலை சமைத்து அவருக்குக் கொடுத்து, மருந்துகளை நேரத்திற்கு கொடுத்து, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் பத்திய உணவோ அல்லது நீராகராமோ கொடுத்து அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.

 

பத்மினியே ஒருதரம்,  "ஏம்மா …எல்லா வேலையையும் நீயே இழுத்துப் போட்டு செய்யற…? நர்ஸ் வரலையா..? , நீயும் உன் கம்பெனிக்கு போய் நாளாச்சே மா…நான்‌ என்ன வயசான கட்டை...நீ உன்னோட வேலையை பாரும்மா….”என்றார்.

அதற்கு லயவர்ஷினியோ, “ எங்க அம்மாவ பாத்துக்கிட்டேன்னனா சலிச்சிக்குவேனா..? அது போல தான் நீங்களும் எனக்கு இன்னொரு அம்மா மாதிரி.. தயவுசெய்து இனிமே இப்படி பேசாதீங்க…உங்கள் பாத்துகிறதுல்ல எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை “ என்று கூறி அவரது வாயை அடைத்து விட்டாள்.

பத்மினியின் ‌மனமோ நெகிழ்ந்து போனது. அவளை அழைத்து கன்னம் வழித்து, ” என்‌ பையனை விட நான் தான் ரொம்ப கொடுத்து வச்சவ" என்று கூறி சிரித்தார்.

அவளும் அவரது இணைந்து சிரித்தாலும் மனதினுள் ‌முணுமுணுவென வலியிருக்கத்தான் ‌செய்தது.

ஆர்யனும் அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். அவனுடைய மனமும் தளர்ந்து போனது என்னவோ உண்மைதான். அதற்கான பரிசினை இரவில் அவளை முத்தத்தால் மூழ்கடித்து, மோகத்தால் சிறைப்பிடித்தான். அவனது அருகாமையில் அவளது உலகத்தை மறக்கச் செய்தான். அவள் மட்டும் உலகை மறக்கவில்லை.அவனும் தான்‌. பகலில் அவள் மீது பற்றியெரியும் வன்மத்தீ இரவில் மெழுகாய் உருகி அவளது காலடியில் கிடப்பான்.

அவனது மனநிலையைக் குறித்து அவனுக்கு தன் மீதே கோபமாக வந்தது. தீய பழக்கம் எதுவும் இல்லாமல் இருந்தவனுக்கு மிகப்பெரிய போதையாக லயவர்ஷினி இருந்தாள்.

ஆர்யனுக்கு பயம் வந்துவிட்டது தனது பலகீனமாய் எங்கே அவள் மாறிப் போவாளோ என்று. ஆனால் அது என்றோ நிகழ்ந்து விட்டது அவனுள். பாவம் அதை ஒத்துக்கொள்ள தான் அவனுக்கு மனமில்லை .

அன்று காலையில் கையில் சில காகிதங்களுடன்  வந்த ஆர்யன் “ லயா…! லயா..! “ என்றழைத்தான்.

பத்மினியின் அறையிலிருந்தவளுக்கு கேட்டது. உடனே கைகளை துடைத்துக் கொண்டு வந்தாள்.

“ என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க..? “ என்றாள்.

“ இங்க வா…ஒரு‌ முக்கியமான விஷயம்…” எனக்கூறி அவளின் கைகளை பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டான்.

காகிதங்களை அவளிடம் கொடுத்து,” பிரிச்சிப் பாரு..” என்றான்.

“ என்ன இது…?” என சற்றே கலவரத்துடன் கூறினாள்.

“ ம்ம் … டிவெர்ஸ் நோட்டீஸ்..பிரிச்சு பாரேன்..” என்றான். 

அவளோ அதிர்ந்து போய் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்தாள். கன்னம் தாண்டியது அவளது கண்ணீர்.

அவளை நிமிர்ந்து பார்த்தவனது மனம் திடுக்கிட்டு தான் போனது. 

இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஹேய்..ஹேய்… சும்மா சும்மா தான் நான் சொன்னேன். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை….இது...

..புதுசா நான் உன் பேர்ல வாங்கிருக்கிற ஷேர் டாக்குமெண்ட்….ப்ளீஸ் அழாதே…நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் …” என அவளை தாஜா பண்ண ஆரம்பித்தான்.

அவளோ லேசில் சமாதானம் ஆகவில்லை. மூன்று நாட்களாக முகத்தை தூக்கிக்கொண்டு நடமாடினாள். அவன் கொடுத்த ஷேர் பத்திரத்தை அவள் கையால் கூட தொடவில்லை.

கிட்டத்தட்ட அவளிடம் காலில் விழாத கொஞ்சி ,கொஞ்சி ஆயிரம் மன்னிப்புகள் கேட்ட பின்னர் தான் அவள் சமாதானமானாள்.

அவனது பொய்யான ஓரு‌ வார்த்தைக்கே இவ்வளவு தூரம் விலகிப்போகிறவள். அவனது துரோகத்தை எவ்வாறு மன்னிப்பாள்.

 அவளது உள்ளத்தை மொத்தமாக நொறுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறான். அதற்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டான் .

முதல் கட்டமாக தனது இருப்பிடத்தை ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர அனைத்து வசதிகளும் செய்து முடித்துவிட்டான்.

தனது தாயாரை அங்கு ஏதாவது கூறி அழைத்து செல்ல வேண்டும் .அவரது உடல்நிலையும் பாதிக்ககாத வண்ணம் அவரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று அவருடைய அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும் என்பது அவனது இரண்டாவது திட்டம்.

இன்னும் இரண்டு மாதத்தில் உலகளாவிய வைர வியாபார சங்கங்களின் தொழிற்முறை கலந்தாய்வு பிரேசிலில் நடைப்பெற உள்ளது.

அதற்குள் அனைத்தயும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான். லயவர்ஷினியுடனான உறவினை அதோடு முடித்துக்கொண்டு தனது பழியுணர்வை தீர்த்துக் கொள்ள வேண்டும் அவன் ‌ஏற்கனவே என முடிவு செய்தது தான்.அதற்கான திட்டங்களை அழகாக செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு சனிக்கிழமை காலையில் வர்ஷினி அவனிடம் வந்து ,” ஆர்யன் இன்னிக்கு நம்ம போய் சிவப்பு வைரத்தை நீங்க சொன்ன மாதிரி சேஃப்டி பாக்ஸ் ரெடி பண்ணி டிஜிட்டல் லாக்கர் ல வச்சிட்டு வந்துடலாமா..?" எனக் கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான் ஆர்யன் . உள்ளிருந்த நல்லவனோ “வேண்டாம் ஆர்யா…செல்லாதே..! பெண்ணவளின் நம்பிக்கையை உடைக்காதே …!” என‌ அலறியது. அவனது மிருக குணமோ ,” இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது…வைரம் வைத்திருக்கும் இடத்தையும் , வாக்கரின் கடவுச் சொல்லையும் அவளிடமிருந்து அறிந்து விடு” என எக்காளமிட்டது. புத்திக்கும் மனதிற்கும் நடுவில் தடுமாறியபடி அவன் நின்றிருக்க ,அவன் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு,” என்ன…? என்ன யோசனை..? வாங்க போலாம் “ என தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் லயவர்ஷினி.

மணிகண்டன் அவர்களை உற்சாகமாக வரவேற்று பிரம்மாண்ட விருந்தினை தயார் செய்தார்.

ஆர்யனுக்கோ எப்போதடா அங்கிருந்து கிளம்புவோம்‌ என்றிருந்தது . அவனால் எந்த ஒரு‌ செயலையும் ‌ரசிக்க முடியவில்லை. நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதைப் போல் இருந்தான்.

 “ என்னாச்சு…ஆர்யன்? ஏன்‌ டல்லா இருக்கீங்க..?” என்றாள்.

“ ஒண்ணுமில்லை லயா…லைட்டா தலைவலி அவ்வளவு தான்…” என்றான்.

அவளோ உடனடியாக தைலத்தை எடுத்து வந்து அவனது நெற்றியில் அழுந்தத் தேய்த்தாள் அவனோ கண்மூடி சுகமான சோஃபாவில் சாயந்திருந்தான். அவளது பிஞ்சு விரல்கள் என்னவோ மாயம் செய்தது போலிருந்தது. சிறிது நேரத்திற்கு பின்னர் கண் விழித்து அவளை ஆழ்ந்து பார்த்தான். அவளோ ,” என்ன அப்படி பாக்குறீங்க..?” என்றாள்.

அவனோ அவளை  இழுத்து தன்‌மடியில் அமர்த்திக் கொண்டு அவளது முகத்தில் தன் விரல்களால் கோலமிட்டு கொண்டு , “ தினம்.. தினம் உன் மேல பைத்தியமாக வைக்கிற டி. என்னவோ மாயம்‌ இருக்கு உன் கிட்ட. நானும் டெய்லி உன்கிட்ட அதைத் தேடுறேன்…ஆனா நான் தேடுறது மட்டும் உன்கிட்ட கிடைக்கவே மாட்டேங்குது..” என்று கிறக்கத்துடன் அவளது இதழ்களை அழுத்தமாக சிறை செய்தான் .

அவளோ கணவனின் பேச்சிலும் செயலிலும் கூச்சமடைந்தவள் அவனது இதழ்களை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்து ," அப்பப்பா... நீங்க வர வர

ரொமான்ஸ் மன்னனாவே ஆகிட்டங்க…நேரம்‌ காலம் தெரியாம….” என்று பேச்சை  பாதியில் நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

அவனோ இன்னும் கிறக்கத்துடன் அவளை பார்துத்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல், "வாங்க பா…வைரத்தை சேஃபா வைச்சிடலாம்” என்று கூறி அவளது அறைக்குள் அவனை அழைத்து சென்றாள்.

அவன் இதுவரை அவர்களின் வீட்டினை முழுவதுமாக பார்த்தது கிடையாது . இப்போது தான் பார்க்கிறான்.

அதுவும் அவளது அறைக்குள் நுழையும் போதே தனி வாசனை அவனது நாசியில் நுழைந்தது.

அது எப்போதும் அவளிடம் அவன் உணரும் வாசனை தான். அதை உணர்ந்து கொண்டே அவளின் பின்னால் சென்றான்.

அவளது அறை முழுவதும் அவளது புகைப்படங்களே இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக அழகாக இருந்தாள். கண்களால் அதனை நிரப்பிக்கொண்டான்.

அவளது அறைக்குள்ளேயே மற்றொரு சிறிய அறையிருந்தது. அதற்கு கடவுச்சொல்லை போட்டு திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அந்த கடவுச்சொல்லை கவனித்து கொண்டான்.

அதன் உள்ளே மிகப்பெரிய இரும்பு பீரோ இருந்தது அதில் கைரேகையை பதிவு செய்து பின்னர் சிறு சாவியை போட்டு திறந்தாள். அதற்குள்ளே இன்னும் சிறியப் பெட்டி இருந்தது . அதற்கு கடவுச்சொல்லை போட்டு திறந்தாள். அதற்குள்ளே அடர்நீல நிற வெல்வெட்டு துணியில் சுற்றப்பட்டு இருந்தது விலையுயர்ந்த சிவப்பு வைரம். அவள் செய்த அனைத்தையும் கூர்மையாக கவனித்துக்கொண்டான். தான் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய டிஜிட்டல் லாக்கரில் அதை வைக்கப் சொன்னான். 

அவளும் வைத்துவிட்டு,” பாஸ்வேர்டு என்ன‌ போடுறது..?” எனக் கேட்டாள்.

“உன்னோட பொருள் தானே உன் பேரும் உங்க அப்பா பேரும் சேர்ந்து போடு…லயாமணி.. எப்படியிருக்கு..? “ என்றான்.

அவளோ,” ஏன் என் பொருள் உன் பொருள் ன்னு பிரிச்சு பேசுறீங்க…? நம்ம பொருள் தான் இது…. சரியா?” என அந்த மக்கு உளறியது‌.

அவனோ சிரித்தபடி ,” சரி.. சரி.. எதுக்கும் என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரும்மா…” என்றான்.

அவள் வைத்திருந்த சூப்பர் சென்சார் ஐ எடுத்துவிட்டு எளிதாக கடவுச்சொல்லால் திறக்கும் டிஜிட்டல் லாக்கரை சாமர்த்தியமாக அவளுக்கு கொடுத்திருந்தான்.

மனதில் மோகம் மறைந்து மீண்டும் வன்மம் தலைதூக்கியது.

லயவர்ஷினியின் சில வேலைகளை அவளது தந்தை செய்து முடித்தாலும். முக்கிய வேலைகள் முடங்கி போய் வியாபாரத்தில் தொடர் சறுக்கல்கள் ஏற்பட்டது. தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ஒரு சில நாட்களில்  மட்டுமே அவளை அவளது அலுவலகத்திற்கு செல்ல அனுமதித்தான்.

ஒரு கிளையின் சறுக்கலை தூக்கி நிறுத்தினால் அடுத்த கிளை அதலபாதளத்திற்குச் சென்றது. சமாளிக்க முடியாமல் தடுமாறினாள் லயவர்ஷினி. பகலில் வீட்டுவேலை சமயத்தில் அலுவலக வேலை என இரண்டையும் சமாளித்து வந்தால் இரவில் அவனின் தேடல்கள் அவளை அதீத சோர்வுக்கு தள்ளின.

ஆர்யன் அவனது சென்னை வீட்டை விற்றுவிட்டான். இது லயவர்ஷினிக்கு தெரியாது பார்த்து கொண்டு தானும் தனது தாயும் மட்டும் ஆஸ்திரேலியா செல்ல விமான சீட்டை வாங்கிவிட்டான். பிரேசில் செல்ல இன்னும் ஒரு மாதமே இருந்தது.லயவர்ஷிக்கும் இதில் கலந்துக்கொள்ள ஆர்வம் இருந்தது.ஆனால் சூழ்நிலை காரணமாக 

அவள் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

ஆர்யன் தீடிரென்று அவளிடம் பிரேசில் விமான சீட்டை நீட்டினான்.

“ என்ன இது..?” என்றாள்.

“ இன்டிர்நேஷனல் கான்பெரன்ஸ்க்கான ஃப்ளைட் டிக்கெட்..” என்றான்.

அவளுக்கோ சொல்ல முடியாத சந்தோஷம். கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது.

“ ரொம்ப தேங்க்ஸ்…ஆனா நா எப்படி போக முடியும்..? இங்கே என்னோட கம்பெனி ல ஹெவி லாஸ்.அதுவே என்னால மேனேஜ் பண்ண முடியல .இதுல கான்பெரன்ஸ் எப்படி போறது.அப்பறம்‌அம்மாவ பாத்துக்கனுமே…என்ன பண்றது..? வேணாம் பா…நா எங்கேயும் போகல ..இங்கேயே இருந்துக்கிறேன்.” என்றாள்.

“ நா சொல்றேன் ல..என்னை நம்பு …நீள போய்ட்டு வர்றதுக்குள்ள இங்க நிலைமை தலைகீழாக மாறிடும் …நான் இருந்து அம்மாவையும் உன்னோட கம்பெனியையும் பாத்துக்கிறேன்..யூ டோண்ட் வொர்ரி…” என்றான்.

அவன் ஏற்கனவே அவளது கம்பெனி சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதால் சரியென்று ஒப்புக்கொண்டாள். ஆனால் விதியோ அவளைப் பார்த்து சிரித்தது..

நாட்கள் வேகமாக நகர்ந்தது .வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைகளையும் திணறியவாறே சமாளித்தாள். அவள் கிளம்புவதற்கு முதல் நாள் இரவு . இரவு உணவை உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்தாள் வர்ஷினி.

ஆர்யனோ கணினியில் ஏதோ வேலையாக இருந்தான் . தனது பெட்டிகளை சரி பார்த்து விட்டு இரவு உடைக்கு மாறினாள்.

கணினியை மூடி வைத்து விட்டு அவளருகே வந்து அமர்ந்தான் .சொல்ல முடியாத வேதனை மற்றும் குற்றவுணர்ச்சி அவனிடம். 

ஆர்யனோ அவளது கைகளை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். மனதில் பல போராட்டங்கள். இனி அவளின் அன்பினை பெறுவது , இயலாத காரியம் என நன்கு புரிந்தது.

“வேண்டாம்… இந்த அன்பும் வேண்டாம்… பாசமும் வேண்டாம்…நான்‌தனி ஆள். யாரையும் நம்பியும் நானில்லை .என்னை பலவீனமாக்கும் எதுவும் எனக்குத் தேவையேயில்லை..” என‌மனதினுள் சூளுரைத்தவன் ,” லயா…கவனமா போயிட்டு வா…எல்லாத்தையும் எடுத்திட்டியா..? திரும்பவும் செக் பண்ணிக்கோ…எதுவும் மிஸ் பண்ணிடப் போற..” என்றான்‌அவளைப் பார்த்து. வர்ஷினியோ அவனருகே வந்து அவனது கேசத்தில் தன்‌இரு கரங்களையும் நுழைத்து அவனது விழிகளைப்‌பார்ததவாறே,” ஆமாம்…! ‌ஒரு‌பொருளை மிஸ் பண்ணிட்டு தான் போறேன்” என்றாள். 

அவள் கூறியதோ ஒரு‌அர்த்தத்தில் அவனுக்கு தோன்றியதோ வேறு அர்த்தம்..

“ திரும்ப‌ இங்க வரத்தான போற…அப்பறம்‌ ஏன் இப்படி பேசுற..” என்றான்.

“ என்னவோ தெரியல இன்னிக்கு மனசு ஒரு மாதிரி சரியில்லாம இருக்கு…ஏதோ நடக்கப்போகுதுன்னு படபடன்னு அடிச்சிக்குது. முழுசா பதினஞ்சு நாள் உங்களையும் , அம்மாவையும் பாக்க முடியாது. இந்த பதினஞ்சு நாளுக்கும் சேர்த்து இன்னிக்கு முழுக்க நீங்க வேணும்….கேக்க‌ கூச்சமாதான் இருக்கு.. ஆனா என்னவோ மனசே சரியில்லை பா..” என நிலத்தைப் பார்த்து கொண்டே தனது விருப்பத்தைக் கூறினாள்.

அவனோ அதிர்ந்து அவளைப் பார்த்தான். சற்று முன்னர் தான் தன்னை பலகீனப்‌‌படுத்தும் எதுவும் தேவையில்லை என்று உறுதிமொழி எடுத்தான் , அதற்குள் இவள் இப்படி கூறுகிறாளே எனத் தயக்கம் அவனிடம்.

அவனோ மறுத்து கூற முயலும் போது அவனது வாயைப் தனது தளிர் கரங்களால் மூடி ,” ப்ளீஸ்…வேணாம்னு சொல்லாதீங்க…” என கண் கலங்க கேட்டாள். அடுத்த நிமிடம் அவள் அவனது மடியில் விழுந்திருந்தாள்.

ஆவேசமாக ஒரு ஆலிங்கனம் அவனிடத்தில் . அவளின் மெல்லிய இதழ்களை முரட்டுத்தனமாக சுவைத்தான். நிதானம் இல்லை அவனிடத்தில். காட்டாற்று வெள்ளம் போல் அவளை வாரி தன்னுள் சுருட்டிக் கொண்டான் . தன்னுடைய கைப் பொருள் ஒன்று தன்னை விட்டு போகப்போகிறது என்ற எண்ணம் அவனை அமைதியிழக்கச் செய்தது. ஆதி மனிதர்களாய் இருவரும் மஞ்சத்தில் இணைந்தனர். உதடு , கன்னம்,கழுத்து என அனைத்து இடங்களும் அவனது வன்மையான முத்தத்தில் கன்றி சிவந்தது.

அவளால் அவனது வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை .அவளுக்குமே அந்த வலிகள் தேவையானாதாக இருந்தது அவனது முரட்டுத்தனமும் வேண்டும் என மனம் அடம்பிடித்தது .

அவளை மீண்டும் மீண்டும் நாடி இணைந்திருந்த நேரங்களையும் அவளது முக உணர்வுகளையும் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்தான்.

ஓய்ந்து போய் அவள்‌ கழுத்து வளைவிலேயே முகம்‌ புதைத்து அவளைது வாசனையை தன்னுள் நிரப்பிக்கொண்டான்.

லயவர்ஷினி அதிக அசதியில் அப்படியே உறங்கிக் போனாள். ஆர்யனின் உறக்கமோ தொலைதூரம் சென்றது.

மறுநாள் விமானத்தில் பறந்தாள் லயவர்ஷினி ‌. 

 அவள் சென்றவுடன் நான்கு நாட்கள் கழித்து அவளின் வீட்டிற்கு சென்று அவளது தந்தையிடம் வர்ஷினிக்கு தேவையான ஆவணம் ஒன்று எடுத்து போக வந்திருப்பதாகக் கூறி அவளது அறைக்குச் சென்று கடவுச்சொல்லை போட்டு வைரத்தை லாவகமாக எடுத்து விட்டு போலி வைரத்தை வைத்து விட்டு வந்துவிட்டான்.

மணிகண்டனுக்கு நம்பிக்கை இருந்ததால் அவனை கண்காணிக்க வில்லை.

அந்த அறைக்குள் இருந்த சிறிய அளவிலான சிசி டிவி கேமராவை ஜாமர் உதவியுடன் செயலிழக்கச் செய்து வைரத்தை எடுத்து விட்டான். நிச்சயமாக வைரத்தை கேட்டிருந்தாலே அவளே‌ அவனுக்கு கொடுத்திருப்பாள் தான்.

தன் ஊன் , உயிர் அனைத்தையும் அவனுக்காக தர சித்தமாக இருப்பவள் ,உயிரற்ற வைரத்தை தர மாட்டாளா.. என்ன…?. அவனது அகந்தையும் ஆணவமும் அவளிடமிருந்து எடுத்து விடு என்பதை உரக்கச் சொல்லிக்கொண்டு இருந்தது.

விதியோ இவன் செய்த சதியோ அவர்களது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியமைக்கத் தயாரகிக்கொண்டிருந்தது.

This post was modified 2 weeks ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 26:

 


லயவர்ஷினி பிரேசில் வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது.

ஆர்யனுடைய அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டாள் அவன் எடுக்கவேயில்லை.

பத்மினியின் எண்ணும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்று வந்தது. அவளோ யோசனையுடன் வைத்துவிட்டாள்.

அவளுக்கு பத்ரியின்‌ எண்ணும் தெரியாது. எனவே அவனையும் தொடர்பு கொள்ள வழியில்லாமல் போனது.

கலந்தாய்வு முடிந்தாலும்  அவளுக்கு அங்கே திடீரென  அவளது வியாபார சம்பந்தமாக வேறு வேலைகள் வந்து சேர்ந்தது. அவற்றை முடித்து விட்டு தனது தந்தைக்கு அழைத்தாள்.

அவர் எடுத்தவுடன் ," ஹலோ...டாடி எப்படியிருக்கீங்க...?" என்றாள் .

" நல்லாயிருக்கேன்‌ மா...நீ எப்படி இருக்க..? நீ கிளம்புனதுக்கு அப்புறம் ஆர்யன் நம்ம வீட்டுக்கு வந்தார். ஏதோ உன்‌ பேர்ல ஷேர்ஸ் வாங்கியிருந்தாராம் அதுக்காக உன்னோட டாக்குமெண்ட்ஸ் சிலதை உன்னோட கப்போர்ட்ல இருந்து எடுத்துட்டு போனாரு.." என்றார்.

அவளோ பருவம் சுருக்கி யோசனையுடன் சிறிது நேரம் இருந்தாள்.

பின்னர் சில நாட்களுக்கு முன்னர் ஆர்யன்  தனது பெயரில் ஷேர்ஸ் வாங்கியிருப்பதாக சில காகிதங்களை கொண்டு வந்து கொடுத்தான். ஆனால் அவன் மேலிருந்த கோபத்தினால் அதனைப் பற்றி பிறகு அவள் கேட்கவேயில்லை .

இப்போது தனது தந்தை கூறியவுடன் அவளிற்கு நினைவுக்கு வந்தது. பின்னர் அவளே ," ஆமா பா சொல்லிருந்தார் .நான் அவருக்கு கால் பண்ணிட்டே இருக்கேன் எடுக்க மாட்டேன்றாரு . பத்மினி அம்மாவும் எடுக்கல. நீங்க டைம் கிடைக்கறப்ப கொஞ்சம் போய் பாத்துட்டு வாங்கப்பா.." என்றாள்.

"சரிம்மா..." என வைத்து விட்டார். 

மூன்று நாட்கள் கழித்து மணிகண்டன்  ஆர்யனது வீட்டிற்கு சென்று பார்த்தார். வீடு பூட்டியிருந்தது. ஆர்யன் வசிக்கும் இடத்தில் ஒவ்வொரு வீடும் சற்று தூர தூரமாகவே அமைந்திருக்கும். அருகில் உள்ள வீட்டில் என்ன நடக்கிறது...?யார் வருகிறார்கள் ...? என்று கூட‌ தெரியாது.

அவர் அருகில் உள்ள வீடுகளில் விசாரித்ததில் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை.

உடனே  தனது தொழில் வட்டாரத்தில் உள்ள சில ஆட்களை தீவிரமாக அணுகியதில் , ஆர்யன் ஆஸ்திரேலியாவில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தனது தொழிலை பார்த்துக் கொள்ள போவதாக தெரியவந்தது. மேலும் ஆர்யன் வசித்து வந்த வீட்டினை விற்றுவிட்டான் என்றும் கூடுதல் தகவல் கிடைத்தது அவருக்கு.

மணிகண்டனுக்கு தலையே சுற்றியது. இப்படி திடீரென்று ஏன் சொல்லாமல் கொள்ளாமல் அவன் சென்றான்..? எனத் தெரியாமல் தவித்தார்.

ஆனாலும் தனது மகளுக்கு உடனே அழைக்கவில்லை அவர்.

வர்ஷினிக்கு இந்த விடயம் தெரியுமா...?தெரியாதா..? ,என அவருக்கு உறுதியாகத் தெரியாத போது என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

இங்கோ ஆஸ்திரேலியாவில் அந்த பிரம்மாண்டமான வீட்டில் சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார் பத்மினி.

அவரது எண்ணம் முழுவதும் வர்ஷினியையும் மகனையும் பற்றியே இருந்தது.

ஆர்யன் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திடீரென இங்கு அழைத்து வந்துவிட்டான்.

சரியான காரணத்தை அவன் கூறவேயில்லை. ஏதோ  சரியில்லை என்று மட்டும் தோன்றியது அவருக்கு.

படிக்கட்டுகளில் இறங்கி வந்த ஆர்யன் தனது தாயின் அருகில் சென்று அமர்ந்தான்.

" என்னம்மா...? என்ன யோசனை..? சாப்டீங்களா..?" என்றான்.

அவரோ ," ம்ம்..,ஆச்சு பா. நாம எப்ப திரும்ப இந்தியா போவோம்...வர்ஷினியும் இங்கேயே வந்துடுவாளா...?" என்றார்.

ஆர்யனோ மனதில் தோன்றிய வலியை மறைத்துக்கொண்டு , "அவளுக்கு அங்கே பிசினஸ் ல லாஸ் ஆகிடுச்சு மா. அதை கொஞ்சம் எடுத்து செய்யனும்.  அவ பிரேசில் போய்ட்டு வந்துட்டு தான் பாக்கனும்னு சொன்னா மா. இங்க உங்களோட ஹெல்த் கனசல்டேஷன்காக டாக்டர் வார்ன் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிருக்கேன் . இன்னிக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு ரெடியா இருங்க நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் . ரெண்டு மூணு மாசம் நாம் இங்கதான் தங்கனும். நான்சி கிட்ட உங்களுக்கான சமையலை பண்ணச் சொல்லிருக்கேன். நேரத்துக்கு சாப்டுங்க மா. வர்றேன் ." எனக் கூறி விட்டு வெளியே சென்றான்.

பணமே பிரதானம் என்று ஓடும் மகன் மனிதர்களின் மனத்தை புரிந்துகொள்ளவில்லையே  என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.ஆனால் அவனது மாற்றம் அவன் மட்டுமே அறிந்தது.

அவன் கூறியதைப் போல் மாலை நான்கு மணியளவில் அவரை டாக்டர் வார்னிடம் அழைத்துச் சென்றான்.

அவரோ பத்மினியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும். மாத்திரைகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்து கொடுத்தார்.

பிரேசிலில் இன்னும் நான்கு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. அவளுக்கோ எப்போதடா  ஊருக்குச் செல்வோம் என்றிருந்தது.

அன்று காலை எழுந்ததிலிருந்தே அவளுக்கு தலை சுற்றல் இருந்தது. காலை உணவை உண்டவுடன் ஓங்கரித்து கொண்டு 

வாந்தியெடுத்தாள்.

ஏன்..? இப்படி இரு நாட்களாக இருக்கிறது என்று யோசித்த போதே அவளது கண்கள் பனித்தது. ஆம்... ! இந்த மாதம் அவள் இன்னும் விலக்காகவில்லை. நாற்பது நாட்களை கடந்திருந்தது.

ஊரிற்கு கிளம்பும் அவசரத்திலும் , பதட்டத்திலும் மாதாந்திர நாளை மறந்திருந்தாள்‌.

உடனே அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனைக் கருவியை வாங்கி வந்து பரிசோதித்து பார்த்தாள்.

இரு சிவப்பு கோடுகள் தெரிந்தது. மகிழ்ச்சியில் அவளது உள்ளம் துள்ளிது.இப்போதே ஆர்யனை அழைத்து கூறிவிட துடித்தாள்.

ஆனால் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வேலையை இரு நாட்களுக்கு முன்னரே சீக்கிரம் முடித்து விட்டு இந்தியா செல்லும் விமானம் பதிவு செய்து மறுநாளே ஏறி அமர்ந்தாள்.

தனது தந்தைக்கு மட்டும் அழைத்து தான் மறுநாள் காலை இந்தியா வந்து விடுவதாகவும், ஆர்யனிடம் கூற வேண்டாம் என்றும் , இன்ப அதிர்ச்சி ஆர்யனுக்கு கொடுக்க விரும்புவதாகவும் கூறினாள்.

மேலும் தனது விமானம் தரையிறங்கும் நேரத்தையும் விமானத்தின் பெயரையும் கூறி அவரை காலையில் விமான நிலையத்திற்கு வந்து விட கூறி‌வைத்து விட்டாள்.மணிகண்டனுக்கோ சொல்ல முடியாத தவிப்பு மனதினுள்.

அதனை வெளிக்காட்டாமல் மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து விமான நிலையத்திற்கு வந்து விட்டார்.

லயவர்ஷினியோ ஓடி வந்து அவரை அணைத்து விடுவித்து ,  "டாடி...எப்படியிருக்கீங்க..? நான் ஆர்யனுக்கும் , அத்தைக்கும் ஃபோன் பண்ணிட்டேயிருக்கேன் எடுக்கவே மாட்டேன்றாங்க. என்னப்பா யாருக்காவது உடம்பு சரியில்லாம இருக்கா..? நீங்க போய் பாத்தீங்களா...? என்ன ஆச்சு..? வாங்கப்பா முதல்ல போய் அவங்கள பாக்கனும" என படபடவென பேசினாள்.

மணிகண்டனோ, 

"அம்மாடி..! முதல்ல நம்ம வீட்டுக்கு போலாம் மா " என்று நா தழுதழுக்க கூறினார்.

அவளோ , "அப்பா…நான் எப்படி அங்க வரமுடியும். நான் முதல்ல ஆர்யனை பார்த்து ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்…அத்தையையும்  பாக்கணும் . அதுக்கப்புறம் நான் அங்க வந்த உங்கிட்ட அந்த விஷயத்தை சொல்றேன்." என தாய்மையின் பூர்ப்பில் அவள் பேசிக்கொண்டே போக…
அவரோ இடைமறித்து,” முதல்ல நம்ம வீட்டுக்கு போலாம் மா…” எனக்கூறி கொண்டு இருக்கும் போதே, “ ஹலோ…!எக்ஸ்கியூஸ் மீ…மிசஸ் ஆர்ய இளநெடுமாறன்..” என‌ ஒரு‌ ஆண்‌குரல் கேட்டது.

அவளோ திரும்பி , “எஸ் …நான் தான் மிசஸ் ஆர்யன்…சொல்லுங்க…யார் நீங்க..? ,என்ன வேணும் உங்களுக்கு…? “ என‌ யோசனையுடன் எதிரில் நின்றிருந்தவனைப் பார்த்தாள்‌ .

அவனோ அதற்கு தகுந்த பதிலைக் கூறாமல், "மிஸ்டர் ஆர்ய‌ இளநெடுமாறன் இந்த செக்கையும். இந்த போனையும் உங்க கிட்ட குடுக்கச் சொன்னார். அவர் ஆஸ்திரேலியால அவங்க அம்மா கூட‌ செட்டில் ஆகிட்டார். இனி அங்க இருந்து தான்‌ பிசினஸ்ஸ பாத்துக்க போறார்.இதையும் ‌உங்ககிட்ட சொல்லச் சொன்னார். அப்பறம்…அப்பறம்..” எனத் தயங்கியபடி அவளது முகத்தைப் பார்த்தான்.

அவளது முகமோ நிற்மலமாக இருந்தது. ,

"சொல்லுங்க…மிஸ்டர்..?” எனக் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.


“ ஐ யம் கரன்…ஆர்யனோட பி.ஏ …அப்பறம் இங்க அவங்க இருந்த வீட்டை வித்துட்டு ஆஸ்திரேலியால வீடு வாங்கிட்டார். அவங்க அம்மாவுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டிரீட்மெண்டுக்கான

டாக்டர் கன்சல்டேஷனும் இருக்கு ஒரு ஆறு‌மாசத்துக்கு . இந்த ஃபோனை வீட்டுக்குப் போய் ஆன் பண்ணுங்க… அப்பறம் கடைசியாக ஒண்ணே ஒண்ணு சொல்லச் சொன்னார்….” என்றான்.


அவளோ இறுகிய முகத்துடன்,” சொல்லுங்க…என்னன்னு…” என எரிச்சல்பட்டாள்.


“ ஏழு வருஷத்துக்கு முன்னாடி இளநெடுமாறன் , கமல் டயமண்ட்ஸ்…உங்களுக்கு நியாபகப்படுத்தச் சொன்னார். அவர் சொல்லச் சொன்னதை நான் சொல்லிட்டேன் மேம். மேலும் ஏதாவது கேக்கனும்னா இந்த ஃபோனை ஆன் பண்ணினா மெசேஜ் வந்திருக்கும். அந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..‌நான்‌ வர்றேன்‌
மேடம்..” என்று விடைப் பெற்றுக் கொண்டான்.


அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை

.”என்னவாயிற்று ஆர்யனுக்கு …? ஏதோ கமல் டயமண்ட்ஸ் ..? இளமாறன்…? என்றானே என்னவாக இருக்கும்..?” என்று மூளையை கசக்கிப் பிழிந்ததில் , ஏழு வருடத்திற்கு முன்னர் ஒரு சிறிய கடையின் திறப்பு விழாவிற்கு நன்கு தந்தையுனடன் சென்றிருந்த போது தன்னை காதலிப்பதாக கூறிய ஒருவனை நன்றாக‌த் திட்டியது லேசாக நினைவுக்கு வந்தது.

என்னவென்று திட்டினோம் என்று நினைவுக்கு வந்தது அவளுக்கு .தான் அவனிடம் மன்னிப்பு கேட்க சென்று அவன் வேறு ஊருக்கு சென்று விட்டதாக கூறினார்களே...? அவன் எப்படி இப்போது..? பல கேள்விகள் தெளிவில்லாமல் தோன்றியது. 

ஆனால் அதற்கும் இவன் ஆஸ்திரேலியா சென்றதற்கும்‌என்ன சம்மந்தம் …? என்றுதான் அவளுக்கு புரியவேயில்லை.

உயிரும் உடலும் சோர்ந்து போனது போல் ஒரு மாயை அவளிடம்‌ .


அவள் தனது தந்தையை அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு , ஒப்பனை அறைக்குச் சென்று கைகள் நடுங்க ஃபோனை உயிர்பித்தாள்.

அதில் ஏழு வருடங்களுக்கு முன்பு ஆர்யனது கடைக்கு வெளியே அவன் நின்றிருந்த புகைப்படத்தையும் தற்போதைய அவனது புகைப்படமும் இணைத்து அதற்கு கீழே,  "உன்னுடைய வார்த்தைகளுக்கு நன்றி….என் திறமையை உணர வைத்ததற்க்கு மிகவும் நன்றி” என்று எழுதியிருந்தது.

மேலும் அதில் அவன் பேசியது காணொலியாக பதியப்பட்டிருந்தது.

அதை ஓட விட்டாள்.
“ வணக்கம் ‌மிசஸ் ஆர்ய‌ இளநெடுமாறன். இதை நீ பார்க்கும்போது நான் ஆஸ்திரேலியாலை இருப்பேன். இனி உனக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை . இதை உன்கிட்ட கொடுத்தது என்னோட பி.ஏ கிரன். நான்‌ யாருன்னு இப்ப உனக்கு தெரிஞ்சிருக்குமே…! எஸ்… எந்த முகத்தை பார்த்து அருவருப்பான இருக்கு , வாந்தி வருதுன்னு சொன்னியோ அந்த முகத்தோடு முகம் வைச்சு இழைஞ்சிருக்க… உன்னை முழுசா எடுத்து கிட்டேன். என் கைகளும் முகமும் உன் உடம்பில படாத இடங்களே இல்லங்குற அளவுக்கு என் கூட‌ நீ சந்தோஷமா இருந்திருக்க.   என்னோட தொடுகையை நீ விரும்பியே எத்துக்கிட்டுருக்க . என்ன…சொல்றது இதுதான் விதி போல…என்னையும் என்னோட தொழிலையும் கேவலப்படுத்தி மட்டம் தட்டின. இப்ப அதை விட  ஆயிரம் மடங்கு சம்பாதிச்சு நிமிர்ந்து நிற்கிறேன். என் கால் தூசுக்கு நீ தான் இப்ப இல்லை. சொல்லப்போனால் உனக்கு நான் நன்றி தான் சொல்லணும். நீ மட்டும் அன்னைக்கு சாஃப்டா பேசியிருந்தா கண்டிப்பா நான் இந்தளவுக்கு முன்னேறியிருக்க மாட்டேன் . எனக்குள்ள முன்னேறனும்ன்னு தீ எரிய ஆரம்பிச்சது உன்னோட வார்த்தையில் தான்.  என்னோட அசுர வளர்ச்சியோட பெரும் பங்கு உன்னைத்தான் சேரும். ரொம்ப வருஷம் கழிச்சு உன்னை நான் வைர ஏலத்தில பாத்தேன். நீ வரப்போறதா கேள்விப்பட்டேன். உன்னோட ஃபோட்டோவ பார்த்தவுடனே ‌எனக்குள்ள பல வருஷமா எரிஞ்சிட்டு இருந்த ஒரு‌ உணர்வு  பல மடங்காகிடுச்சு. உன்னைய அங்கயே என் முன்னாடி தோத்துப் போக வைக்கனும்ன்னு நினைச்சேன். ஆனா முடியல. அம்மாவுக்கு முடியாம போச்சு. எவ்வளவோ ப்ளான்‌ பண்ணி அந்த வைரத்தை வாங்கனும்ன்னு நினைச்சேன் . ஆனா நான் நினைச்சதுக்கு நேர்மாறாக நடந்து போச்சு. ஆமா….அங்க வந்திருந்த எல்லா வெளிநாட்டுகாரங்களையும் அடுத்த கட்ட ஏலத்துக்கு வரவிடாம பண்ணினேன். கடைசில என்னாலையே அங்க இருந்து வைரத்தை வாங்க முடியாம‌ போச்சு…அவ்வளவு கோடி‌க்கணக்குல காசு செலவு பண்ணி அவங்கள துரத்திவிட்டா ...நீ அதை நோகாம எடுத்திட்டு வந்துட்ட. எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம் இருக்கு. இந்த மாதிரி ஆபூர்வ பொருட்களை வாங்கனும் ன்னு நினைச்சா அதை என்னவானது பண்ணி வாங்கிடுவேன். எனக்கு நீ வைரத்தை லட்டு மாதிரி வாங்கிட்டு போனதும் கண்மண் தெரியாத கோபம் வந்துச்சி. அப்பத்தான் உன்னைய கல்யாணம் பண்ணி கிட்டா வைரமும் என் கையில் வந்திடும். நீயும் எனக்கு கிடைச்சிடுவ. உருவகேலி பண்ணி என்னை கேவலமா பேசுற உன்னை பழிவாங்கனும்மன்னு எண்ணம் எனக்குள்ள தீவிரமானது அப்பதான். மீதி தான் உனக்கே தெரியுமே…உங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணி , கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வைச்சாச்சு. என்னோட உண்மையான காதலை கால்ல போட்டு மிதிச்ச. நீ என்னைய வேண்டாம், முடியாதுன்னு மட்டும் சொல்லிட்டு ‌போயிருந்தாக் கூட எனக்கு ஒண்ணும் தோணியிருக்காது. உன்னோட அகம்பாவம், ஆணவம் தான் உன்னோட இந்த நிலைக்கு காரணம். அம்மாவை காரணமாக காட்டி உன்னை தொழில் முறையில் முடக்கி வச்சேன் . சில இடங்களில் உனக்கு நஷ்டமும் ஆச்சு. ஆனா நான் நினைச்சது விட நீ ரொம்பவே புத்திசாலி . அந்த நஷ்டங்கள் எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடிஞ்சது. அப்ப உன்னைப் பார்த்து ரொம்பவே பிரமிச்சு போனேன் .பரவாயில்லை வீட்டையும் பிசினஸ்ஸயும் ரொம்ப நல்லாவே பேலன்ஸ் பண்ணுன. என்னையும் கூட‌தான்.”
இந்த இடத்தில் அவனது குரல் கரந்து இருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.


மேலும் அவனது குரலை கேட்டாள், “இப்ப நீ எப்படி வேணா நல்ல முறையில நடந்திட்டு இருக்கலாம். ஆனா நீ பேசின பேச்சு என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. மனுஷங்க தான் முக்கியம்ன்னு இருந்தவன பணம் தான் பிரதானம் இந்த உலகம் எனக்கு புரிய‌ வச்சிடுச்சிடுச்சு. நம்பின நண்பர்களே என்னைய ஏமாத்திட்டு போனாங்க.. ரொம்பவே அடிபட்டுதான் இந்த நிலைக்கே வந்துருக்கேன். உன்னை வார்த்தையால காயப்படுத்தனும்ன்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா
இந்த அருவருப்பான‌ முகத்தை நீ காதலிக்கனும்...,என்னை நீயே உள்வாங்கிக்கனும்.., என்னைய நீ பாக்கறப்பவே உன் ‌கண்ணுல ஆசை வரணும்னு தோணிச்சு . அதுக்கப்புறம்.... உன்னை விட்டு விலகிடனும்ன்னு ப்ளான் ‌பண்ணிதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது எல்லாமே நான் உன்கிட்ட பாத்துட்டேன். சோ…உனக்கு இனி பை‌.. பை.. அப்பறம்‌ கடைசியா ஒரு விஷயம் உன்னோட வைரம் இப்ப எனகிட்ட தான் இருக்கு. உன் கிட்ட கெஞ்சி கொஞ்சி உன் கிட்ட வாங்க எனக்கு விருப்பம் இல்லை. என் ‌பொருளை நானே எடுத்துக்கிட்டேன். அம்மாவுக்கு போன்‌ பண்ண ட்ரை பண்ணாத. இனி உனக்கும் எனக்குமான‌உறவு அவ்வளவுதான். பை…” என்பதோடு முடிந்திருந்தது.
தளர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

எத்தனை பெரிய துரோகம். அவளது இதயத்தை ஆயிரம் ஈட்டியால் குத்தியது போன்றதொரு வலி.

கண்களின் கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்ட இருந்தது.

அதனை துடைக்க‌கூடத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளது மனமோ இவையனைத்தும் பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது .

ஓஓ..வென கதறத்  துடித்த இதழ்களை அழுந்த கடித்துக்கொண்டு மீண்டும் அந்த காணொளி பதியப்பட்டிருந்த எண்ணிற்கு
அழைத்தாள்.

இரண்டு முறை அழைத்தாள்.

அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை.

மூன்றாவது முறையாக, "எஸ்...! ஆர்யன்‌ ஸ்பீக்கிங்.” என அவனது குரல் கணீரென ஒலித்தது.

இத்தனை நாட்கள் கண்டிராத கடினம் அவனது குரலில் அவளால் உணர முடிந்தது.


“ ஹ..ஹலோ…!

ஆ..ஆர்யன்…நா..நா…லயா...லயவர்ஷினி பேசுறேன்.”

“ சொல்லுங்க வர்ஷினி என்ன வேணும் உங்களுக்கு…? “ என்று கூறியதிலே தெரிந்து விட்டது அவன் கூறியது அனைத்தும் உண்மையென்று.


அதற்கு மேல் அவளுக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை அமைதியாக இருந்தாள்.


அவனோ,” என்ன வர்ஷினி ‌போன் பண்ணிட்டு பேசாம இருந்தா எப்படி…? சொல்லுங்க என்ன வேணும்..? ஏதாவது ஹெல்ப் வேணுமா..? அதான் ப்ளாங்க் செக் குடுத்திருக்கேனே.. எவ்வளவு வேணுமோ ஃபில் பண்ணிக்கோங்க... ம்ம்ம்... வேற என்ன சொல்ல…? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்குதா..?” என‌ ஏளனமாக இதழ் வளைத்துக் கேட்டான்.

அவளோ துடித்துப் போனாள்அவனது வார்த்தைகளில் .

பின்பு துக்கம் தொண்டை அணைக்க, “ நான் அப்ப அகம்பாவத்துல தான் பேசினேன். அப்பறமா அதை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டேன். உங்கள சந்திச்சு மன்னிப்பு கேட்கனும்ன்னு நினைச்சேன், ஆனா …அடுத்த நாளே வெளிநாடு போயிட்டேன். திரும்ப வர ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. எனக்கு மறந்தே போச்சு. ஆனா அதுக்கப்புறம் அப்பப்ப நியாபகம் வந்தது .எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கும். நாளைடைவில மறந்தும் போச்சு எனக்கு. நான் பேசினது தப்புதான் .அதுக்கு நான் மனப்பூர்வமாக உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா எனக்கு..? விவரம் பத்தாத வயசுல பேசின பேச்சுக்கு இவ்வளவு தூரம் நீங்க இறங்கி பழிவாங்கனுமா..? எதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை..? உங்களுக்கு ஏன்‌ என்‌ மேல் இவ்வளவு வன்மம்.?. இவ்வளவு பகையை மனசுல எப்படி என் கூட எப்படி சின்ன உறுத்தல் இல்லாம சந்தோஷமா இருக்க முடிஞ்சது..?  இப்படி கோழை மாதிரி விட்டுட்டு வெளிநாட்டுக்கு போயிட்டீங்களே… இதெல்லாம் தப்புன்னு உங்களுக்கு தெரியாதா ..? உங்க அம்மாவுக்கு நீங்க பண்ணுன காரியம் தெரியுமா..? . கண்டிப்பா ஒரு நாள் நீங்க என்னைத் தேடி வருவீங்க….ஆனா இப்ப நான்‌ உங்க கிட்ட வாழ்க்கை பிச்சை கேட்க‌மாட்டேன். அந்த வைரத்தை நீங்க கேட்டிருந்தாலே நானே கொடுத்திருப்பேன். இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்க வேண்டாம். நான் முழுசா உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை நீங்க தப்பா உபயோகப்படுத்திட்டீங்க . கண்டிப்பா இனிமே உங்க கண்ணுல நான் பட மாட்டேன். உங்களோட ஷேர்ஸ் ,செக் எல்லாமே கணக்கு பாத்து உங்க அகொளண்ட்க்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன் மிஸ்டர் ஆர்யன். பை..என்னைய‌ எதையுமே யோசிக்க முடியாது கோழையாக மாத்துன பெருமை உங்களையே சேரும்….இது தான் நான் உங்க கூட பேசுற‌‌ கடைசி வார்த்தை, ஐ லவ் யூ சோ மச்....பட்‌‌ நவ் ஐ ஹேட்‌ யூ….” எனக் கூறி முடித்து அலைப்பேசியை துண்டித்து அணைத்து வைத்தாள்.

பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தி முகத்தினை நீரினால் அடித்துக் கழுவியவள் , தனது தந்தையை நோக்கி நடந்தாள்.

நாற்பத்தைந்து நாள்‌ கரு‌ அவளின்‌ மணி‌வயிற்றில் வளருவதை அவனிடம் கூற விரும்பவேயில்லை.


“என்னாச்சு மா…?” என்றார்‌ மணிகண்டன்.


“ வாங்கப்பா நம்ம‌ வீட்டுக்குப் போகலாம்..” என சோர்ந்த முகத்தோடு கூறினாள்.


மகளின் முக வாட்டம்‌ மணிகண்டனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

பதிலொன்றும்‌ கூறாமல் அவரின் கைபிடித்து நடந்தாள் செல்ல மகள் லயவர்ஷினி. ஒரு வயதில் நடை பயின்ற போது எவ்வாறு பிடிமானத்திற்கு அவரின் கைகளை பற்றியிருந்தாளோ அதே நிலை தான் இன்று அவளிடம்.

மீண்டும் குழந்தையாக மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது அவளுக்கு.

 

This post was modified 1 week ago 4 times by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 27:

 வர்ஷினி ஆர்யனைப் பிரிந்து இதோ இன்றோடு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. 

அவளது வயிறு சற்று பெரிதாக தெரிய ஆரம்பித்தது.

மணிகண்டனுக்கோ தனது மகளது வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று கவலை மனதினை அரித்துக்கொண்டே இருந்தது.

வர்ஷினியோ முழு நேரமாக தன்னை தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டாள்.

அவனையும்  , அவனது கொடுத்த வலியையும் மறக்க வெறி கொண்டு தன் தொழிலை மேம்படுத்தினாள்.

ஆறு மாதத்தில் தனது நஷ்டமான தொழிலை தூக்கி நிறுத்தி மும்மடங்காக லாபத்தை ஈட்டினாள்.

இப்போது தான் அவளுக்கு பெருமூச்சு விட முடிந்தது.

தொழிலிலும் சரி வாழ்க்கையிலும்‌ சரி தோல்வி ‌என்பதை அறியாதவள் முதன்முதலில் அவன் செய்த சதியால் நிலைக்குலைந்து தான் போனாள்.

தன்னை அவனது நினைவினிலும் அவனது துரோகத்திலும் இருந்து‌ மீட்டெடுக்கவே சில நாட்கள் ஆனது.

இயல்பாகவே அவள் துணிச்சலான பெண் என்பதால் சற்று வேகமாக தன்னை நிதானப்படுந்திக் கொண்டு தொழிலில் மிகத் தீவிரமாக இறங்கினாள்.

இதற்கிடையில் தேவ்விற்கு ஆர்யன் ஏமாற்றிவிட்டு போன விடயம் தெரிய வந்தது .

 லயவர்ஷினியிடம்‌ கேட்டதற்கு ,” ப்ளீஸ் தேவ் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனவர் எனக்கும் வேண்டாம். இதோட இந்த விஷயத்தை விடுங்க. அப்பறம்…ஆராதனா ப்ரெக்னன்டா இருக்காங்கன்னு சொன்னீங்க …என்னோட‌ வாழத்துக்கள் உங்க ரெண்டு பேருக்கும்.” என்பதோடு முடித்துக்கொண்டாள்.

ஆனால் தேவ்விற்கு மனது கேளாமல் ரிஷியிடம்‌ விவரங்களை கூறி ஆர்யனின் முகவரியை ‌வாங்கச்‌சொல்லியிருந்தான்.

தேவ்விற்கோ அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. எத்தனை துன்பங்களை இந்தப் பெண்கள் கடந்து வருகிறார்கள்.

இந்த இடத்தில் அவனது மனைவி ஆராதனாவையும்‌ நினைத்துபபார்த்தான் .

அவளது துன்பம் ‌ஒருவகை என்றால் வர்ஷினியின் துன்பம் பச்சை நம்பிக்கை துரோகம் அல்லவா…? மனமே தாளவில்லை அவனுக்கு.

ஆராதனாவிடம்‌‌ புலம்பித் தள்ளிவிட்டான். 

"என்‌ கையில மாட்டுனான் அவன்‌ செத்தான். அவனென்னால்லாம்‌ ஒரு‌ ஆம்பிளையா..? வயித்துல பிள்ளையக் கொடுத்திட்டு ஊரை விட்டு ஓடிப்போயிட்டான்‌. சரியான …****” என பச்சை பச்சையாக திட்டித் தீர்த்தான்.

ஆராதானாவோ காதைப் பொத்திக்கொண்டு , "அய்யோ..! ஏன்‌ இப்படி நாராசமா பேசுறீங்க…?” என கத்தினாள்.

“ சாரி..சாரி…மா…கொஞ்சம் இல்ல…நிறையவே எமோஷனல் ஆகிட்டேன்…அதான் நிதானமில்லாம வார்த்தைகள் வந்துடுச்சு….ஹி…ஹி..” என‌ இளித்தான்.

“ உங்களால என்னப் பண்ண முடியும் தேவ். இது கண்டவன் மனைவிக்குண்டான பிரச்சினை . நாம தலையிட முடியாது. நாளைக்கு என்ன நிலைமைன்னு நம்மால சொல்ல முடியாது . கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம். ஆனா…பாருங்க..இந்த ஆம்பிளைங்கயெல்லாம் தன்னை சுத்தி சுத்தி பெண்கள் வர்றதுனால பெண்களை ரொம்பவே அலட்சியமா நினைச்சிடுறீங்க…எங்க அன்பை என்னிக்குமே நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்க…” என்று தேவ்வையும் சேர்த்து குத்தினாள்.

தேவ்வோ அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, "நான்‌ பண்ணினது தப்புதான். ஆனால் ‌என்னோட நிலைமை அன்னிக்கு அப்படி பேச வச்சிருச்சு. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. சுத்தியும் நஷ்டம்,கடன்‌ கிட்டத்தட்ட ஒண்ணுமே என்கிட்ட இல்லாத நிலை. அப்படியிருக்கும் போது எந்த நம்பிக்கையில உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு வாக்கு குடுக்கறது…? . ஆயிரம் தான்‌ சமாதானம் சொல்லி குடிசையிலும் வாழலாம்,கஞ்சியும் குடிக்கலாம்‌ன்னு சொன்னாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துறது‌ ரொம்பவே கஷ்டமான விஷயம். இன்னும் ஓபனா சொல்லப் போனா காசில்லாம கல்யாணம் பண்ணிக்கறது என்னோட பிரஸ்டீஜ் இஷ்யூவா நான்‌ நினைச்சேன். ரெண்டாவது எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. எங்கே காசில்லாத காரணத்தினாலயோ.... இல்ல வியாபாரத்தை சரிவுல இருந்து தூக்கி நிறுத்துற அழுத்தத்திலயோ... என்னையறிமா உனை காயப்படுத்திடுவேனோன்னு பயம்…அதனால் தான் அன்னைக்கு நீ என்கிட்ட இருந்து முழுசா விலகிடனும் ன்னு அப்படி நடந்து கிட்டேன். ஆனா அதுக்கு நேர்மாறா பல கஷ்டங்களை நீ கடந்து வந்துருக்க. ரிஷி இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லும்போது எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்தது. "அன்னைக்கே உன்னை கல்யாணம் பண்ணியிருக்கலாமோன்னு..?  தோண‌ ஆரம்பிச்சிடுச்சு. ஒன்னை இழந்தா தான்‌ ஒன்னைப் பெற‌முடியும்ங்கற‌

நிலைமை. உன்னை இழந்தேன். ஆனா அன்னைக்கு விட்டதை இப்ப பிடிச்சிட்டேன்ல “ என்று அவளுடைய கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தான் .

அவளோ அவனது வெற்று‌ மார்பினில் சாய்ந்து கொண்டாள்.

தனது துன்பம் அணைத்தும் கணவனின் அன்பிலும் அரவணைப்பிலும் , அக்கறையிலும் பகலவனை கண்ட பனித்துளி‌ போல் விலகியதை போல் தோன்றியது .

இப்போது ‌அவளுக்கும் ஏழாம் ‌‌மாதம்‌‌ தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்திருந்தது. சூர்யாவோ உறங்கியிருந்தான்.‌

அவளது ‌புடவையினூடே தெரிந்த அவளது மணி வயிற்றைத் தன் கரங்களால் லேசாக அணைத்திருந்தான்.

அவனது உள்ளங்கையின் வெப்பத்தினை அவளது வயிற்றில் ககடத்தினான்.

திடீரென ஒரு அசைவு . ஆம்..! தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் ‌இதே வாடிக்கையாக போய் விட்டது அவனக்கு.

அவனது முரட்டு கரங்கள் அவளது மென் வயிற்றில் சற்று அழுந்தப் பதிந்தவுடன் குழந்தை தன்‌ இருப்பினை  தாயிற்கு  ஒரு உதையை   பரிசளித்து விட்டு , தந்தைக்கு‌ தனது அசைவினைக் காட்டிக்கொடுக்கும்.

அவனோ அந்த இனிய த‌ருணத்திற்காகவே காத்திருந்து மகவின் அசைவை உண்ரந்தவுடன் குழந்தைக்கு ஒரு‌ முத்தமும், அதை சுமக்கும் தாயிற்கும் ‌முத்தங்களையும் வாரி வழங்கிவிட்டு தான்‌ உறக்கத்தை தழுவுவான்.

இன்றும் அசைவினை உணர்ந்தவன்‌ வழக்கம் போல் முத்தங்களை தாய் சேய் இருவருக்கும் வழங்கிவிட்டு அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

இங்கோ லயவர்ஷினி உறக்கம் வராமல் சன்னல் வழியே தெரிந்த பால் நிலாவை வெறித்துப்‌ பார்த்தாள்.

தூங்கா ‌இரவாகத்தான் பெரும்பாலும் இரவுகள் இருக்கின்றது.

பகல் நேரங்களில் தன்னை தொழிலில் மூழ்கடித்துக் கொண்டாலும் , இரவின் தனிமை அவளை அலைக்கழித்துக் கொல்லும்.

வேதனையும் வலியும் கழுத்து வரை நின்று நெறிப்பதைப் போல் தோன்றும்.

“தன்னைப் பற்றி இத்தனை நாட்களில் ஒருமுறையேனும் எண்ணியிருப்பானா…? அவனது வாரிசு தனது கருவறையில் வளர்வது தெரிந்திருக்குமா..? இல்லையா…? அப்படித் தெரிந்திருந்தால் இன்னேரம் தன்னைப்‌பார்க்க வேண்டாம்… ‌குழந்தைக்காவது வந்திருக்காலாமே…!” என்ற எண்ணங்களில் சுழன்று சோர்ந்த முகத்தோடு விடியலில் தான் துயில் கொள்வாள்.

அன்று காலை எழுந்ததிலிருந்தே உடற்சோர்வும் மனச்சோர்வும் அதிகமாக இருந்தது.

மெதுவாக எழுந்து தனது தந்தையிடம் சென்று,” அப்பா இன்னைக்கு ஸ்கேன் எடுக்கப் போகனும். பத்து மணிக்கு கிளம்பலாம் பா” என்றாள்.

“ ம்ம்…சரிம்மா “ என்றவர் , “வர்ஷினி மா…” என அவளை அழைத்தார். அவளோ , “என்னப்பா..?” என்றாள்.

“ நீ‌ ஆர்யனோட‌ நம்பரை ‌கொடு‌மா… நா‌ வேணா பேசி பாக்குறேன்…” என்றார்.

“ தேவையில்லை‌ பா…” என்றாள்.

“ எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப்போற…? “ என்றார்.

“ அப்பா….ப்ளீஸ் இந்த பேச்சை‌ இனி எடுக்காதீங்க..” எனக் கூறி விட்டு சென்றாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு‌ மனம்‌ பாரமாகிப் போனது.

லயவர்ஷினியும் ஆராதானாவும் ஒரே மகப்பேறு மருத்துவமனைக்கு ஸ்கேன் ‌எடுக்க வந்திருந்தார்கள்..

இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்

“ இங்க தான்‌ கன்சல்ட் பண்ணுறீங்களா..?” என்றாள் ஆராதனா.

“ ஆமா…உமாராணி ‌மேம் கிட்டதான் கன்சல்ட் பண்ணுறேன்.” என்றாள் வர்ஷினி.

“ நானும் தான்‌” எனக் கூறினாள் ஆராதனா.

இருவரும் ‌பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே தேவ் வந்தான்.

அவனைப் பார்த்து சினேகமாய் சிரித்து, "ஹாய் தேவ்.. எப்படியிருக்கீங்க…? சூர்யா எப்படியிருக்கான்…?” என்றாள் ‌லயவர்ஷினி.

“ ஐ‌ யம்‌ ஃபைன்‌ வர்ஷினி ,ஹீ இஸ் பெர்பெக்ட்லி ஆல் ரைட்” என்ற‌படி தேவ் ‌மணிகண்டனைப்‌ பார்க்க அவரோ வேறு புறம் முகத்தை திருப்பினார்.

ஏகக் கோபம் அவருக்கு. தனது மகளை அவனது காதலுக்கு பகடைக்காயாய் ‌பயன்படுத்திக் கொண்டானே… என.

இப்போது ஆர்யனும் அதே காரியத்தை செய்து வைக்க அவரது மொத்த கோபமும் ஏனோ தேவ்வின் மீது திரும்பியிருந்தது.

லயவர்ஷினி என்னதான் அவருக்கு சமாதானம் சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆர்யனுடன் நன்றாக வாழ்ந்திருந்தால் அவர்‌ சமாதானம் ஆகியிருபபாரோ என்னவோ ‌.. தற்போது தேவ் தனது மனைவியுடன் சேர்ந்து வந்திருப்பதை கண்டதும் ,தனது மகள் மட்டும் பட்ட‌ மரமாக நிற்கிறாளே என்ற‌ வேதனை அவ்வாறு நடந்துக் கொள்ளச் செய்தது.

பெற்றவர் அன்றோ…! மனம் காயப்படத்தானே செய்யும்.

தேவ் அவரிடம் ஏதோ கூற‌ முயலும் முன்.. ஆராதனாவிற்கான அழைப்பு வந்து அவள் மருத்துவர் அறைக்குள் சென்றாள்.

அவளை பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன்‌ செய்ய‌அனுப்பினார்.

அடுத்தது வர்ஷினியின் முறை. டாக்டர் வழக்கம்போல்,” என்னம்மா..? இந்த தடவையும் உன்‌ ஹஸ்பண்ட் வரலையா..? அப்படி என்னதான் வேலை..? முதல் குழந்தை வேற... எப்படி இருக்குன்னு பாக்கனும்னு ஆசை இருக்காதா…? அப்படி சம்பாதிச்சு என்ன பண்ணப் போறீங்க..? என்னவோ போ…” என்று திட்டினார்.

அவளது கண்களோ கலங்கத் தொடங்கியது.

“ சரி …சரி‌அந்த ரூமுக்கு போய் ஸ்கேன் ‌பண்ணிட்டு ‌வாங்க அப்பறம் ரிப்போர்ட்ஸ் பாக்கலாம். உனக்கும் உடம்பு ரொம்பவே வீக்கா இருக்கு. நல்லா சாப்பிடு…” என‌சிடுசிடுத்து விட்டு அவளை அனுப்பினார்.

 இங்கு‌ ஸ்கேன் அறைக்குள் ஆராதனா தேவ் இருவரும் தங்களது குழந்தையின் பிம்பத்தை திரையில் பார்த்து பூரித்துப் போனார்கள்.

ஆராதனாவிற்கு பிறகு லயவர்ஷினி சென்றாள்.

அவளை அங்கிருந்த கட்டில் மேல் ஏறி படுக்கப் சொல்லி அவளது வயிற்றில் ஜெல் தடவி கருவியை வைத்து பரிசோத்தார்கள்.

அவளது கண்களோ குழந்தையின் பிம்பத்தை உள்வாங்கிக் கொண்டது.

நீர் திரையிட்டு காட்சிகள் மங்கின அவளுக்கு.

இருப்பினும் கண்ணீரை துடைத்துக் கொண்டு திரையைப் பார்த்தாள்.

சிறு கை,சிறு கால்கள் என்று அசைந்தாடியது அவளது வயிற்றில் அந்த சிறு‌மொட்டு.

அவளுக்கு மகிழ்ச்சி ஒருபுறம் ‌துக்கம் ஒருபுறம் என்ற கலவையான மனநிலையில் இருந்தாள்.

கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.

“ எழுந்துக்கோங்க மா” என்று செவிலியர் கூறினார்.

கண்களை துடைத்துக் கொண்டே எழுந்து சென்று வெளியே நாற்காலியில் அமர்ந்தாள்.

ஆராதனா தனது ரிப்போர்ட்டை டாக்டரிடம் காட்டி விட்டு அவளருகே வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை ஆராதனாவிற்கு.

“வர்றேன்... வர்ஷினி. எல்லாம் நார்மலா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இனி ஒன்பதாவது மாசம் செக்கப்புக்கு வந்தா போதும்னாங்க. நீங்க உங்க ஹெல்த்த பாத்துக்கோங்க…எதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க நல்லதே நடக்கும்….எதுன்னாலும் எங்களை ஹெல்புக்கு இமீடியட்டா கூப்பிடுங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம் “ என அவளது கைகளைப் பிடித்து லேசாக அழுத்தினாள்.

“கண்டிப்பாங்க…உங்ககிட்ட கேக்காம வேற‌ யாருகிட்ட கேக்கப்‌போறேன். “ என சோர்வான முகத்துடன் கூறினாள்.

அவளின் மனதின் சோர்வு முகத்திலும் பிரதிபலித்ததை ஆராதனாவால் உணர முடிந்தது.

அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

கண்மண் தெரியாமல் ஆர்யன் மீது கோபம் வந்தது.

லயவர்ஷினியை ஆர்யன் பிரிந்து சென்ற காரணம்‌ யாருக்கும் தெரியாது.

யார்‌ மீது குற்றம் சொல்வது எனத் தெரியவில்லை. ஆனால் அவன்‌ அவளுக்கு செய்த நம்பிக்கை துரோகம் மட்டுமே ஒட்டுமொத்த காரணமாக அவன் மீது வெறுப்பினை உண்டாக்கியிருந்தது.

தனது ரிப்போர்ட்டை டாக்டரிடம் காட்டினாள். குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளதாக கூறினார்.

அடுத்த முறையாவது வரும்போது கணவரோடு வரவேண்டும் என்று கூறினார் .

அவளோ சரியென்று கூறிவிட்டு தனது தந்தையுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

மாதங்கள் சென்றது. ஒன்பதாம் மாதம் துவக்கத்தில் ஆராதனாவிற்கு சற்றே விமர்சையாக வளைகாப்பை நடத்தினான்.

லயவர்ஷினிக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.

ஆனால் அவள் தனியாக வந்து ஆராதனாவை பார்த்துக் கொள்வதாக கூறி நாசூக்காக மறுத்து விட்டாள்.

அங்கு சென்றால் தேவையில்லாத மனவுளைச்சல் ஏற்படும் என்பதறிந்திருந்தாள்.

அதனாலையே விழாவை தவிர்த்து விட்டாள்.

தேவ்வும் அவளை மேலும் வற்புறுத்தவில்லை.

தேவ் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.

அவனது அன்பினில் ஒரு சுற்று பூசினார் போல் இருந்தாள் ஆராதனா.

சூர்யாவும்,” ஹய்…! எனக்கு தம்பி வரப்போறான்…தம்பி வரப்போறான்….” என குதூகலித்திருந்தான்‌.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. மீண்டும் ஆர்யன் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தான்.

 

 

This post was modified 1 week ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 28:

 முழுதாக எட்டு மாதங்களுக்கு பிறகு தனது தாயுடன் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறான் ஆர்யன்.

அவனது தாயிற்கு தேவையில்லாத அலைச்சல் தான். ஆனால் வேறு வழியின்றி அழைத்து வர வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.

முதல் ஒன்றரை மாதங்கள் ‌அமைதியாக இருந்த பத்மினி ‌பிறகு அவனிடம் வர்ஷினியைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.

தாயிடம் ‌எதையும்‌ மறைத்து பழக்கமில்லாத வன் ,அவளை‌ பழிவாங்கவே திருமணம் செய்து கொண்டதாகவும், இனி அவளுடன் சேர்ந்து வாழ‌ விருப்பமில்லை எனவும் தெரிவித்தான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அவமானம் அவனுக்குள் கனன்று கொண்டிருப்பதாகவும் எதையும் அத்தனை எளிதில் மறக்கமுடியவில்லை என்றான்.

முதலில் அமைதியாக இருந்த பத்மினி பிறகு ,  "இங்க‌ பாரு‌ இளா… உனக்கு அவமானமே நடந்திருக்கட்டும் அதுக்குன்னு ‌உன்னை நம்பி வந்து, அக்னி சாட்சியா கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ண இப்படித்தான் நம்ப வச்சு கழுத்தருப்பியா…? எங்கிருந்து உனக்கு இவ்வளவு வன்மம் மனசுல வந்துச்சு…? சரி…இதை சொல்லு... அந்த பொண்ணு திமிரும், அகங்காரமும் பிடிச்ச பொண்ணா இருந்திருந்தா…இங்க வந்து தன்னோட அடையாளத்தை விட்டுட்டு எனக்கு பணிவிடையை செஞ்சிட்டு இருப்பாளா….? உன்னை அசிங்கப்படுத்திட்டா…..! அவமானப்படுத்திட்டான்னு கோபப்படுறியே ….. அந்த அவமானம் தானே உன்னையே இவ்வளவு தூரம் வளர்த்து விட்டுருக்கு…கூட‌ இருந்த நண்பர்களும்‌, சொந்தங்களுமே உனக்கு தூரோகம்‌ பண்ணிட்டு போனாங்களே…. அப்ப‌ நீ பழிவாங்கனும்ன்னா முதல்ல அவங்களைப் தான் ‌பழிவாங்கியிருக்கனும்…..! ஏன் உன்னால அவங்களை ‌பழிவாங்க முடியலை…?”  என்ற கேள்வியோடு நிறுத்தினார்.

அவனோ அவரது முகத்தை கேள்வியுடன் ‌பார்த்தான்.

“ ஏன்னா…. அவங்கள ‌நீ‌‌ உன்னோட கவனத்துக்கு கொண்டு போகலை…அதே மாதிரி வர்ஷினியையும் நீ கடந்தே வந்துருக்கலாமே…ஏன் வரல…? .‌ ஏன்னா….. உன்னோட மனசுல இருந்து அவளை விலக்கி வைக்க முடியல. அவளை பாக்காத வரை அமைதியா இருந்த உன்னோட மனசு….பாத்ததுக்கப்பறம் அவளை விட்டுக்கொடுக்கவும் முடியாம…விலக்கிவைக்கவும்‌ முடியாம உன்னோட தக்க வச்சுக்குறதுக்காக உன்னோட ஈகோ.,. பழிவாங்குறேன்னு அவளை கல்யாணமும் பண்ணி குடித்தனமும் பண்ணிட்ட. எங்க அவ கூடவே இருந்தா உன்‌ மனசு ‌‌மாறி அவ கால்ல விழுந்துடுவோம்மோன்ற பயம் வந்துடுச்சு. அதான் ‌அவளை விலக்கி வைச்சிட்ட. வார்த்தைகளால கூட‌ உன்னால அவள் கஷ்டப்படுத்த முடியல. குரங்கு பிடிக்க போய் ‌பிள்ளையார் ஆன கதை தான் ‌உன்னது . வீட்டு வேலையால அவளை திணர‌வைச்சவன் அதைக் கூட அவளை காயப்படுத்தாத வார்த்தைகளால தான் சொன்ன . “ எனக் கூறி கொண்டு இருக்கும்போதே ஆர்யன்‌அவனதே தாயை இடைமறித்து , “ அது அவளுக்கு என் மேல சந்தேகம் ‌வராம‌ இருக்கறதுக்காக தான்.மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை…” என்று‌‌ கூறி முகம் திருப்பி நின்றான்.

பத்மனியோ ,” அப்ப‌ இது என்ன…?” என்று வர்ஷினியின் புடவையை எடுத்துக் காட்டினார்.

அவனோ சிறிது தடுமாறி, ”அது…அது…” தயங்கி நின்றான் .

 தினமும் அவளது புடவையில் முகம்‌ புதைத்து தூங்க மட்டுமே முயற்சிப்பான் . ஆனால் தூக்கம் என்பது அவனுக்கு தொலைதூரம் சென்ற பல மாதங்களாகிவிட்டது.

“ நைட்‌ பூரா நீ தூங்கறதில்லைங்கறது எனக்கு நல்லாவே தெரியும். ஏதோ பிரச்சினைன்னு மட்டும் என்னால ஊகிக்க முடிஞ்சது. ஆனா என்னன்னுத் தெரியலை. நீயா ….வந்து சொல்லுவன்னு பாத்தேன். ஆனா நீ வாயே திறக்கல.உன்னை நீயே ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்திக்குற‌…. ஆஸ்திரேலியா வீடு வாங்கி ,சென்னை வீட்டை வித்து …. இதெல்லாம் தேவையா இளா…? இங்க இருந்து ‌என்னப் ‌பண்ணப் ‌போற…? . பேசாம அவளை சமாதானம் பண்ணி அவளை இங்கேயே கூட்டிட்டு வந்துடு பா. உன்னோட கோபம், பழிவாங்குவது இதெல்லாம் தூக்கி தூரப் போடு….” என நல்ல தாயாக தனது மகனது செயலைப்‌ பொறுக்காது அறிவுரைக் கூறினார்.

அவனோ அழுத்தமாக , "அம்மா ப்ளீஸ் என்னை கம்பல் பண்ணாதீங்க . அவ சொன்ன வார்த்தைகளுக்கு வீரியம் ஜாஸ்தி மா. நான் எதை வேணாலும்‌‌ மன்னிப்பேன. ஆனா உருவகேலி செய்றது எனக்கு பிடிக்காத ஒண்ணு. . இதே பேச்சை ஒரு ஆம்பிளை பேசியிருந்தா... அங்கயே அடிச்சு மூஞ்சிய‌ பேத்துருப்பேன். பொண்ணா போயிட்டா. கை நீட்டி அடிக்க முடியலை. அவ என்னைய பார்த்து முகத்தை சுழிச்சது தான் நியாபகத்துக்கு வருது . பிரிஞ்சது பிரிஞ்சதாகவே இருக்கட்டும். “ என உறுதியாக. கூறினான்.

இதை இப்படியே விடக் கூடாது என்று நினைத்த பத்மினி ,அவனை விட அழுத்தமாக ,

“ அப்ப‌ என் கிட்ட‌ இனி பேசாத…! நான் இனி இங்க சாப்பிட மாட்டேன் “ என பிடிவாதம் பிடிக்க ஆர்மபித்து விட்டார்.

முதல் இரண்டு ‌நாட்கள் அவரது உண்ணாவிரதத்தில் அலட்சியம் காட்டியவன். அவர்‌‌ மயங்கியவுடன் பதறி அடித்துக் கொண்டு அவரது சமாதனத்திற்கு ஒத்து வந்தான்.

ஆனால் ‌டாக்ட‌ர் வார்னிடம் மேலும் இரண்டு மாதங்களுக்கு கன்சல்டேஷன் பெற வேண்டும்‌ என்பதாலும் , ஆர்யனுடைய வியாபார‌ சம்பந்தமான சில விஷயங்கள் இழுபறியில் இருந்ததாலும் அவனால் உடனடியாக இந்தியா வர‌முடியவில்லை. பத்மினியின் வைராக்கியம் ஆர்யனை இந்தியாவிற்கு வர வைத்தது.

இந்தியாவிற்கு கிளம்பும்‌ வரையிலும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டுதான் நடமாடினார் பத்மினி.

அவருக்கு மகன் ‌மீது இந்த விஷயத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தது.

இந்தியாவிற்கு விமானம் ஏறியவுடன் தான் அவரது முகம் தெரிந்ததை கண்டான் ஆர்யன். அவரிடம் ,” அவ்வளவு நம்பிக்கை என் மேல... , இப்ப தான் என்னைய நீங்க நம்புறீங்க இல்ல…” என்றான்.

பத்மினியோ ,” இல்லை நான் இன்னும் உன்னை நம்பல….வர்ஷினியை‌ என் கண்ணுல பாத்ததுக்கு அப்பறம்... , அவ நம்ம கூட‌ வந்தா தான்‌ நான் உன்னை நம்புவேன்.” என‌ முறுக்கிக்கொண்டார்.‌

ஆர்யனோ தலையில் கை வைத்துக் கொண்டான்.

“ அம்மா அதெல்லாம் உடனே நடக்காது மா….அவ என்‌ மேல செம கோபத்துல இருப்பா….அவ கிட்ட கொஞ்சி

கெஞ்சிலாம் என்னால பேச முடியாது.”என்றான்.

பத்மினியோ ,” நீ இறங்கிப் போய் பேசலாம் தப்பில்லை. ஆம்பிளைன்னா….பெரிய இவனா நீ…. பொண்டாட்டிய தனியா தவிக்க விட்டுட்டு நாடு விட்டு நாடு வந்துருக்க…. அவ கிட்ட நீ மன்னிப்பு கேட்க எல்லாவித தகுதியும் உனக்கு மட்டும் தான் இருக்கு….” என்றார்

“ அம்மா…” என ஆற்றாமையால் கத்தினான்.

பத்மினியோ காதைக் குடைந்து கொண்டே ,” ஏண்டா…ஏன் ‌இப்படி கத்துற…? . இங்க பாரு இளா…ஒரு நல்ல ஆம்பிளைக்கு அழகே…காசு பணம் இல்லன்னாலும் பொண்டாட்டிய கண்கலங்காம பாத்துகிறது தான். நல்ல பொண்டாட்டிக்கு அழகே…எவ்வளவு கஷ்டம் வந்தாலும், துவண்டு போற சமயத்துல தன் கணவனுக்கு ஆதரவாக தோள் குடுக்கறது தான். வாழ்க்கையில் ஒருத்தர் மட்டுமே எப்பவும் விட்டு கொடுத்திட்டு போகனுமன்னு ஏதாவது விதி இருக்கா என்ன…? ரெண்டு பேரும் பரஸ்பர புரிதலோட ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அனுசரிச்சு போனாதான் வாழ்க்கை நல்லா இருக்கும். அதனால நீயே முதல்ல போய் அவ கிட்ட பேசு. கோபப்படுவா தான் …. அசிங்கப்படுத்துவா தான் … பொறுத்துக்கோ…ஏதாவது பண்ணி என் மருமகளை கூட்டிட்டு வந்துடு …அவ்வளவு தான்..” என முடித்துக்கொண்டு விட்டார்.

ஆர்யன் அவரை முறை முறையென்று முறைத்துக் கொண்டே இருந்ததான்.

இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே பத்மினி. சிறு வயதிலேயே கணவரை இழந்தாலும், சிறுவன்‌ஆர்யனோடு தன்னம்பிக்கையோடு சவாலான வாழ்கையை எதிர்கொண்டவர் .

 இவ்வாறு ஆயிரத்தெட்டு வாக்குவாதங்களோடு தான் வந்திருந்தான். இந்த ஒன்பது மாதங்களிலும் வர்ஷினியை பற்றி எந்த செய்தியும் தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டாம் என பத்ரியிடம் கூறிவிட்டு தான் வந்திருந்தான் ஆர்யன் .

ஏதாவது கேள்விப்பட்டால் தனது மனம் இளகி விடுமோ என்ற‌ அச்சம் தான் அவனுக்கு.

எனவே அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவனுக்கு தெரியவில்லை.

இந்தியா வந்தபிறகு தான் முதலில் வசித்த வீட்டிற்கு அருகேயே மற்றொரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கே தனது தாயுடன் தங்கியிருந்தான்.

லயவர்ஷினிக்கு நிறைமாதமானதால் அன்று தான் கடைசியாக அலுவலகத்திற்கு வந்திருந்தாள்.பிரசவ நாள் நெருங்க நெருங்க அவளுக்கு அலுவலகம் வந்து போவது சற்று கஷ்டமாகத்தான்‌ இருந்தாது.

எனவே அன்றோடு அனைத்தையும் சரி பார்த்து விட்டு செல்லலாம் என வந்திருந்தாள்.

கணக்கு வழக்குகளை சரிபாரத்து , பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு நகைகளுக்கான டிசைனிங் பாம்ளட்டை சரி பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளது அலுவலக அலைப்பேசி அலறியது. எடுத்து , "ஹலோ..! “ என்றாள்.

அலுவலக காரியதரிசிதான் அழைத்திருந்தாள்.

“ மேம்…உங்க ஹஸ்பண்ட் வந்துருக்காரு மேம். உள்ளே அனுப்பவா…?” என்றாள்.

லயவர்ஷினிக்கு தூக்கி வாரிப்போட்டது.தனக்கு தான் காது கேட்காமல் போய்விட்டதோ என காதை தேய்த்தபடி ,” என்ன‌ உளர்ற…?" என்றாள்

“ ஆமாம்‌…மேம்‌…ஆர்யன் ‌சார் உங்களை பாக்கனுமாம்… வந்துருக்கார் உள்ளே அனுப்பவா..?” என்றாள்.

அவளுக்கோ ஆத்திரம் தலைக்கேறியது . மறுபுறமோ சட்டபூர்வமாகம விவகாரத்தை கேட்டு வந்திருப்பானோ என்ற‌ எண்ணம் அவளை அலைக்கழித்தது.

உடனே, ” எனக்கு இப்ப முக்கியமான வேலையிருக்கு …நாளைக்கு வரச்சொல்லு…” என காட்டமாகவே கூறினாள்.

காரியதரிசியோ யோசனையானாள். ஏனென்றால் லயவர்ஷினி இவ்வாறெல்லாம் கூறக்கூடிய ஆள் கிடையாது.

எத்தகைய வேலையாய் இருந்தாலும் தன்னை சந்திக்கவேண்டும் ம்‌ எனக் கூறுபவரை முதலில் சந்தித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். அப்படியிருப்பவள் இன்று தனது கணவரை இப்படி விரட்டுவதன் காரணம் புரியாமல் விழித்தாள்.

யாருக்குமே அவள் ஆர்யனைப் பிரிந்தது தெரியாது .எனவே வேலையே இல்லாதபோது ஏன் ஆர்யனை பார்ப்பதை தவிர்க்கிறாள்…? என்று குழம்பியபடியே ஆர்யனிடம் சென்று ,” சார் மேம் வேலையா இருக்காங்க…சோ நீங்க நாளைக்கு வந்து பாருங்க..” என்று‌ முடிப்பதற்குள் , "அப்படின்னு உங்க மேடம் சொல்லச் சொன்னாங்களா…?” என கேட்க , காரியதரிசியின் தலை “ ஆம்” என ஆடி பின்னர் “ இல்லை “ என ஆடியது.

அவனோ சிரித்தபடி, “ சரி…நான் வர்றேன் “ என்றவன் வாயில் புறமாக திரும்பி நடந்தவன் , காரியதரிசி அசந்திருந்த நேரத்தில் வேகமாக வர்ஷினியின் அறையை நோக்கி நடந்தான்.

காரியதரிசியோ ,” சார்…சார்… நில்லுங்க…இப்ப‌ மேடமை பாக்க‌முடியாது…பிசியா..” என சொல்லி முடிப்பதற்குள் அவளது அறையை படாரெனத் திறந்தான்.

லயவர்ஷினி கண்களை மூடி சோர்வாக அமர்ந்திருந்தாள்.

மனதினுள் பெரும்‌ போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஏதோ பெரிய சத்தம் கேட்கவும் பட்டென்று கண்களை திறந்து பார்த்தாள் ‌.

வெளிப்புற சூரிய‌வெளிச்சம் அறையை திறந்தவுடன் உள்ளே வரவே அவளது கண்கள் கூசியது.

கைகளை நெற்றிக்கு அணைவாக வைத்துக் கொண்டு பார்த்தாள்.

அடர்ந்த தாடி மீசையுடன் பார்க்கவே சற்று முரட்டுத்தனமாக இருந்தான்.

அவளோ ஆத்திரத்துடன், "உங்கள யாரு உள்ளே வரச்சொன்னது… அவுட்..” என‌நாற்காலியில் அமர்ந்தபடியே கத்தினாள்.

முகமெல்லாம் இரத்தமெனச் சிவந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

ஆர்யனோ சாவகாசமாக அவளருகே நடந்து வந்து அவளது உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டான்.

சற்று மெலிந்து இருந்தாலும்‌ முகத்தில் தனிக் களை கூடியிருந்தது போல் தோன்றியது அவனுக்கு.

ஆம்..! நிறைமாத கர்ப்பிணியான அவளது முகம் தாய்மையின் தனி சோபையை‌த் தத்தெடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் பாவம் அவளது முகத்தின் பொலிவின் ரகசியம் அவனுக்குத் தான் புரியவில்லை.

அவளருகே வந்து நின்றவன்,” என்ன மேடம் …ஒரு வேலையும் இல்லாமலே பிசியா இருக்குற‌ மாதிரி சீன் போடுறீங்க…” என நக்கலாகக் கூறினான்.

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மேலும் அவன் ,” என்ன …என்னைய பாத்து பயமா..?" என்றான்.

அவளோ அதை விட நக்கலாக ,” பயமா…? எனக்காக..? நெவர்…! முதுகுல குத்திட்டு  போன உங்களைப்‌ பாத்து நான் ‌ஏன் பயப்படனும்‌ மிஸ்டர்…” என்றாள்.

அவனோ தாடையை தடவியவாறே , "அப்படியா…? அப்ப என்னைப் பாத்து உங்களுக்கு பயமில்லை…. அப்படித்தானே..? “ என்றான்.

 அவளோ ,” ஆமா..” என்று கூறினாள்.

“ அப்ப‌ சரி …மாமாக்கு ஓரு முத்தம் குடு பாப்போம்…” என்றானே பார்க்கலாம்.

அவளோ கோபத்தோடு வேகமாக எழுந்ததில் அவளது தேடிட்டு வயிறு டேபிளில் இடித்ததில், "ஆஆ…” என கத்தினாள்.

அவள் கத்தியதில் ஆர்யனது மனம் திடுக்கிட்டதென்றால் , அவளது வயிற்றினைப்‌பார்த்து அவளை தாங்கிப் பிடிக்கவும் மறந்து அதிர்ந்து போய் நின்று விட்டான்.‌

” இதை எவ்வாறு யோசிக்காமல் இவ்வளவு நாட்கள் விட்டேன் “ என மனம் நொந்து போனான்.

அவளோ அவன் அசையாமல் நிற்பதைக் கண்டு, ” இப்ப கூட கீழே நான் விழனும்னு தான் விரும்புறீங்க இல்ல..?” என கண்களில் நீருடன் கேட்டாள்.

“லயா…நீ..நான்…எப்ப..?” என வார்த்தைகள் தடுமாறியபடி அவளருகே வேகமாக வந்து அவளின் கையைப் பிடிக்கும் போது

“ தொடாதீங்க….என்னைய தொடாதீங்க….என் மேல் எனக்கே கோபமா வருது. எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்னு‌ நினைச்சா.. யாரும் கேட்டா சிரிப்பாங்க…என் நிலைமை அவ்வளவு கேவலமான போச்சு…தயவு செய்து என்னைய பாக்க வராதீங்க..ப்ளீஸ்…வெளியே போங்க..” எனக் கக்தினாள்

அவனோ அதையெல்லாம் காதில் வாங்காமல் அவளது வயிற்றில் கை வைத்தபடியே…” லயா… இது நம்ம குழந்தை…இது உண்மை தானா..? என்னால …நம்பவே முடியல…” என சந்தோஷத்தில் கண்களில் நீர் வர அவளது முகத்தை தன் க கரங்களால் தாங்கினான்.

அவளோ மிகவும்  நிதானமாக,” இந்த உலகத்தில் நீங்க மட்டும் தான் ஆம்பிளை கிடையாது மிஸ்டர் ஆர்யன்” எனக் கூறி அவனை மொத்தமாக நொறுக்கினாள்.

அவனோ பதறி விலகினான். அவள் கோபப்படுவாள் எனத் தெரியும்.ஆன்ல் தன்னையே தாழ்த்திக் கொள்ளும் அளவிற்கு இப்படி பேசுவாள் என அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“ வேணாம் டி…மேலும் எதுவும் பேசிடாத…” எனக்கூறி விட்டு விடுவிடுவென வெளியேறினான்.

போகும் அவனயே விழியகற்றாமல் பார்த்திருந்தாள் பேதையவள்.

..

 

 

 

 


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 29:


வேகமாக வெளியேறிய ஆர்யனோ தனது கார் கதவினை திறந்து உள்ளே அமர்ந்தான்.

அவனால் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.

இரு கரங்களால் கேசத்தை அழுந்தக்கோதி கண்களை மூடிக் கொண்டான்‌.

அவள் கோபப்படுவாள் எனத் தெரியும் தான் ‌ஆனால் இவ்வளவு கொடுஞ்சொற்களை வீசுவாள்‌ என‌ துளியும் எண்ணவில்லை .

என்னவெல்லாம் பேசிவிட்டாள். “ இடியட்” என‌வாய்குள் அவளைத் திட்டிக்கொண்டான்.

அவனது மனக்கண்ணில் அவள் தனது தேடிட்டு வயிற்றைப் பிடித்து கொண்டு நின்றிருந்த காட்சியே தோன்றி அவனுக்கு சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

ஆறடி ஆண்மகனாலும் தனது குழந்தையின் வரவை எதிர்பார்ப்பதும் தவித்துப் போவதும் இயல்பான‌ ஒன்றுதானே.தனது உயிர் நீரில் ஜனிக்கப்போகும்‌ பூங்குவியலை அள்ளி அணைத்துக் கொள்ள கைகள் இப்பொழுதே பரபரத்தது.

.இச்சின்னஞ் சிறு சிட்டை கையிலேந்தும் நாளுக்காக இன்னும் எத்தனை காத்திருக்க வேண்டுமோ என எண்ணி அவன் மனம் தவித்தது.

தாயினுடைய வற்புறுத்தலால் தான்‌ அவன்‌ இந்தியா வந்ததே.... ஒருவேளை அவன் இந்தியா வராமலே இருந்திருந்தால் …..? கண்டிப்பாக வர்ஷினி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியாமலேயே இருந்திருக்கும்.

தன் மேல் இருக்கும் கோபத்தில் தான் இத்தனை நாட்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறாமல் இருந்திருக்கின்றாள் , குழந்தை பிறந்திருந்தாலும் தனக்கு கூறியிருக்க‌மாட்டாள் என‌ப்‌ புரிந்தது அவனுக்கு.

உடனே தனது நண்பன் பத்ரிக்கு அழைத்தான். அவன் எடுத்ததும் , “ ஹலோ…! எனக்கு சில டீடெய்ல்ஸ் வேணும்… வர்ஷினி இப்ப ப்ரெக்னன்டா இருக்கா‌. சோ எனக்கு இப்ப சில டீடெய்ல்ஸ் தேவை…அதாவது.. வர்ஷினி எந்த டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணுறா...? அடுத்த கன்சல்டேஷன் எப்ப..? எத்தனை மணிக்கு…? இதெல்லாம் நீ இமீடியட்டா எனக்கு கேட்டு சொல்லு…” என்றான்.


பத்ரியோ அதிர்ந்து போய், ” எப்படா…? சொல்லவே இல்ல.. நீ எப்ப வர்ஷினியப் பாத்த…?” என்றான்.


ஏனெனில் ஆர்யன் தனது தாயுடன் இந்தியா வந்திருப்பதை மட்டுமே தெரிவித்த ஆர்யன் ,வந்த காரணத்தை கூறவே வில்லை.

வர்ஷினியைப் பற்றி‌யும் எதுவும் கேட்கவில்லை என்பதால் இந்த சந்தேகம் .


ஆர்யன் ஒரு‌ பெருமூச்சுடன்‌ தனது தாயின் ‌விருப்பத்தைக் கூறி அதனால் தான் இந்தியாவிற்கு வந்ததாகவும் கூறி‌ முடித்தான்.

மேலும் “ அப்பறம்…இப்பதான் நான் வர்ஷினிய பாத்தேன். அவ‌ கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிஞ்சது. கிட்டத்தட்ட நைன்‌ மன்த்ஸ் மேல ஆகியிருக்கலாம் ‌டா. கன்னாபின்னானு பேசிட்டா… அவ ஆபிஸ்க்கு வெளியே தான் நிக்குறேன். வந்த கோவத்துக்கு பல்ல உடைச்சிருப்பேன். ப்ரெக்னன்டா இருக்குறதுனால தப்பிச்சுட்டா…இல்லனா…அவள..” எனப் பல்லைக் கடித்தான்.


“அடேய்…அடேய்…ஏன்டா அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுக்குற…ஏன்டா அவ்வளவு பண்ணிட்டு கிளம்பி ஆஸ்திரேலியாக்கு போனவன் . ஏன்டா திரும்பி வந்த...? இப்ப உடனே அந்தப் பொண்ணு நீ பண்ணுனதயெல்லாம் மன்னிச்சு உன்னை உடனே ஏத்துக்கனுமா..? பொண்டாட்டி கர்ப்பமானது கூட தெரியம எப்படி நீ... இருந்திருக்க.. அந்தளவுக்கு உன்னோட‌ ஈகோ தலைவிரிச்சு ஆடிருக்கு…நல்லவேளை அட்லீஸ்ட் குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே வந்துட்ட…தாங்க் காட்.” என்றான்.


ஆர்யனோ, ” ஓவரா.. பேசாத…மூடிட்டு நா சொன்னது மட்டுமே செய் சரியா…?” என சீறினான்.


“ சரிடா‌…நல்லவனே…” எனக்கூறி விட்டு அவன் அடுத்து திட்டுவதற்குள் அலைப்பேசியை அணைத்து விட்டான்.


ஆர்யனோ காரினை ரிவர்ஸ் எடுக்கும் போது வர்ஷினி தனது மேடிட்ட‌வயிற்றைப்‌ பிடிந்துக் கொண்டு தனது காரினை எடுக்கச் சென்றாள்.

அவனுக்கோ அவள் செய்வதை கண்டு சர்வமும் பதறியது.

நிறைமாத கர்ப்பிணியான அவள் காரினை ஓட்டுவது ஆபத்தான விஷயமாயிற்றே என அவளின் காரின்‌அருகில் செல்வதற்குள்‌ அவள்‌ காரில் ஏறியிருந்தாள்.  


நான்கே எட்டில் அவளது காரினை அடைந்தவன் கோபமாக, “ ஏய்….ஏய்‌…என்ன பண்ற நீ…”என்றவாறே அவள் அமர்ந்திருந்த சன்னலருகே நின்று சற்று உரக்கவே கேட்டான்.


அவளோ அலட்சியமாக அவனைப்‌. பார்த்தவாறே…” ஹலோ…! மிஸ்டர்…..நீங்க இன்னும் கிளம்பலயா…?. நான் என்ன‌ பண்ணனும் ஏது பண்ணனும்னு சொல்றதுக்கு நீங்க யாரு..? உங்கள பெரிய ஆபத்து வேற எதுவும் ‌எனக்கு வராது..சோ…நீங்க…உங்க வழிய பாத்துட்டு போங்க..” என சைகையால் வழியை அவனுக்கு காட்டிவிட்டு காரை விருட்டென்று எடுத்துக்கொண்டு சென்றாள்.

அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது காரினை எடுத்துக் கொண்டு அவளை நீ பின்தொடர்ந்தது சென்றான்.

அவள் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்ற பின்னர் தான் அவனால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.


மனதினுள் ,” என்ன பைத்தியக்காரத்தனமான பிடிவாதம் இவளுக்கு…!” என‌த் திட்டினான்.

அவன் யோசித்து கொண்டே இருக்கும் போது அவனது அலைப்பேசி அலறியது.

எடுத்து ,” ஹலோ…! சொல்லு டா. அடுத்து எப்ப அப்பாயிண்ட்மெண்ட்..?” என்றான்.


பத்ரியோ ,” டாக்டர் உமாராணி கிட்டதான் கன்சல்டேஷன் போறாங்க . நாளை கழிச்சு ‌காலையில பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு.. அனேகமா இது தான் ‌லாஸ்ட் ஸ்கேன். இன்னும் மூணு வாரத்துல் டெலிவரி டேட் …போதுமா…டா…டீடெய்ல்ஸ் . மீதியை டாக்டர் கிட்ட கேட்டுக்கோ” என்று வைத்து விட்டான்‌.


அவனோ யோசனையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

பத்மியிடம் வர்ஷினி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறினான்.

பத்மினிக்கோ மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை .

உடனே தனது மருமகளை காண வேண்டும் என சிறு பிள்ளை போல் அடம் பிடித்தார்.

ஆர்யனோ எவ்வளளவோ சமாதானம் செய்து பார்த்தான்.

ஆனால் வர்ஷினியை பார்த்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்.

அவனுக்கோ தன்னை அவமானப்படுத்தியதைப் போல் தன் தாயிடமும்‌ ஏதாவது ஏடாகூடமாக பேசி‌ அவரது மனதினை காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று பலத்த யோசனையுடன்
இரு நாட்கள் பிறகு மருத்துவமனையில் சென்று அவளைப் பார்க்கலாம் என்று உறுதியளித்தான்.

மருத்துவமனை செல்லும் நாளும் வந்தது.

வழக்கம்போல் தனது தந்தையுடன் ‌சென்றாள்.

கண்டிப்பாக இம்முறையும் மருத்துவரிடம் திட்டு வாங்க வேண்டுமே என்ற‌ எண்ணத்தில் அமர்ந்திருந்தாள்.

அவளது முறை வந்ததும்‌உள்ளே சென்றாள்.


அவளை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் அசைவு நன்றாக உள்ளது எனக் கூறினார்


“ என்னம்மா…இந்த தடவையும் ‌உன் ஹஸ்பண்ட் வரலயா…? என்னம்மா நீ…” என்று‌சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “ மே ஐ கம்மின் ‌மேம்..?” என கணீரென்ற ஆண்‌‌குரல் கேட்டு நிமிர்ந்தார்‌கள் மூவரும் .

ஆர்யனோ தனது பேன்ட் பாக்கெட்டில் இரு கரங்களையும் நுழைத்தவாறே அவளைப் பார்த்தான்.


மருத்துவரோ,” யாரு நீங்க..? இப்படி தீடிர்ன்னு உள்ள வர்றீங்க..? பேஷண்ட்ட பாத்துட்டு இருக்கேன் ல. வெளியே இருங்க…ப்ளீஸ்…” என்றார்.


ஆர்யனோ,” ஷீ ஆஸ் மை வைஃப். அப்ப நான் உள்ள‌ இருக்கலாம்‌ல..? “ என‌ப் பார்வையால் அவளைத் துளைத்தெடுத்தவாறே கேட்டான்.


உடனே மருத்தவரோ ,ஓ..ஓஹ்…நீங்க தானா..? . ஃபர்ஸ்ட் பிரக்னென்ஸி தானே. நீங்க தானே அவங்க கூட இருக்கனும். இப்படி பொறுப்பில்லாம இவ்வளவு லேட்டா வர்றீங்க…அவஙீக மேல் ஒரு கன்சர்ன் வேணாம்..? அட்லீஸ்ட் பேபி மூவ்மெண்ட்ஸ் பாக்கனும்னு இவ்வளவு நாளா தோணலயா உங்களுக்கு…?” என பிடிபிடியென அவனை ஒரு வழி பண்ணிவிட்டார் .


அவனோ தலைக்கவிழ்ந்து நின்றிருந்தான்.

ஏனெனில் அவன் செய்தது மிகப்பெரிய தவறல்லாவா…? அதனால் அவர் திட்டுவதெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு “ சாரி..‌மேடம்..!” என்று ‌மட்டும் ‌கூறி‌விட்டுஅமைதியாக இருந்தான்.


மருத்துவருக்கே அவனைத் திட்டி வாய் வலித்திருக்க வேண்டும், ” சரி..சரி அந்த ரூம்ல போய்‌ ஸ்கேன்‌ பண்ணிட்டு வாங்க. ரிப்போர்ட் பாக்கலாம் “ என்றார் ‌.

மணிகண்டன், வர்ஷினி இருவரும் வேகமாக வெளியேறினர்.

ஸ்கேன் அறைக்குள் நுழைய முற்ப்பட்டவனை வெளியேவே தடுத்து நிறுத்தினாள் வர்ஷினி, "உள்ள வந்தீங்க…அப்புறம் நா .மனுஷியாவே இருக்க மாட்டேன். கூட ப*** உங்களுக்கு குழந்தை வந்துருக்கும்ன்னு தோணல ல..? இப்ப வந்து என் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடுறீங்க…வெக்கமா இல்லை உங்களுக்கு..” அமிலமாய்‌ வந்து விழுந்தது வார்த்தைகள் .

மருத்துவரின் அறைக்கு வெளியே அமரந்திருந்த பத்மினி வர்ஷினி பேசியதைக் கேட்டு விட்டார்.

அவரது உள்ளமோ நடுங்கிப்‌போனது. உடனே,” வர்ஷினி” என்று‌அழைத்தார்.

அவளோ வேகமாக திரும்பினாள்.
வர்ஷினி அவரை எதிர்பார்க்கவில்லை.

ஓரே ஒரு கணம் அவள் உள்ளம் அவருக்காக இறங்கியது.‌

மறுநிமடம் முகத்தை திருப்பிக் கொண்டு ஸ்கேன்‌அறைக்குள்‌ சென்றாள்.


திடீரென ஒரு கைத்தட்டல் கேட்டது.

யாரென்று திரும்பிப் பார்த்தான்‌ஆர்யன் ,தேவ் தான் ‌நின்றிருந்தான்.

“ வாவ் …. சூப்பர் …கரெக்டா தான் வர்ஷினி பேசிருக்கா…. நீயெல்லாம் ஒரு மனுஷன்…ச்சை…உன் சுயநலத்துக்காக அவளுக்கு வயித்துல பிள்ளையக் கொடுத்திட்டு ஊரை விட்டு ஓடிப்போன…இப்ப எந்த மூஞ்சியை வச்சிட்டு திரும்ப வந்துருக்க..? “ என எகத்தாளமாக கேட்டான்.


ஆர்யனோ ஆத்திரத்துடன் தேவ்வின்‌ சட்டையை பிடித்து கொண்டு,” நீயும் சுயநலவாதிதான்டா…. உன்னோட காதலுக்காக அவளை பகடைக்காயா உபயோகப்படுத்திக்கிட்ட ல…நீயென்ன‌..யோக்கியனா…?” என‌ தேவ்வின்‌ சட்டைக் காலரைப்‌ பிடித்துஇழுத்தான்.

ஆராதனாவோ வேகமாக ஆர்யனிடம் வந்து ,” ஏன் இப்படி பிகேவ் பண்ணுறீங்க…?.என்‌ புருஷன் சட்டையில் இருந்து கையை எடுங்க..? “ என உரக்கக் கூறினாள்.


ஆர்யனோ சட்டென கையை எடுத்து விட்டான்.


தேவ்வோ , “ நான் மணமேடை வரையிலும் கொண்டு வந்து நிறுத்தினேன் தான்.ஆனா உன்னைப் போல அவ முதுகுல குத்துல…என்னோட‌உண்மையான காதலுக்காக மட்டும் தான் …. அதுவும் வர்ஷினியோட சம்மத்த்த்தோட தான் மணமேடை வரை அவள் கொண்டு வந்தேன். அது தப்புதான்..ஆனா என்னோட சூழ்நிலை அப்படி இருந்தது. இப்பவும் சொல்றேன் வர்ஷினிக்கு ஏதும் ஒண்ணுனா நா முதல் ஆளாக நிப்பேன் . இப்ப தயவு செய்து இடத்தை காலி பண்ணு….” என ஆர்யனே விலக்கிவிட்டு ஆராதனா வின் கையைப் பிடித்து மருத்துவரின் அறைக்குள் சென்றான்.


தேவ்வையே பார்த்தபடி நின்றிருந்தான்.

அதிகமாக வலித்தது அவனக்கு .

பிரச்சனையின்‌ உச்சக் கட்ட தீவிரம் ‌அவனுக்குப்‌ புரிந்தது ‌ .

சிசுவின் அசைவை கூட பார்க்க முடியாத நிலையை நினைத்து‌ கை முஷ்டி இறுக நின்றிருந்தான்.

அவனது ஆணவம் ,திமிர், கர்வம் ஆகியவை தூள் தூளாகிப் போனது.

தனதே துரோகத்திற்கு அவன் கொடுத்த விலை அதிகம் தான்.


வர்ஷினியின் செயலில் அதிர்ந்த பத்மினி மகன் நின்ற கோலத்தை பார்த்ததும் மனம் கலங்கிக் தான் போனார்.

ஆயிரம் அவனை திட்டினாலும் அவருக்கு இன்னமும் அவன் ஒரு வளர்ந்த குழந்தையே…
மெல்ல அவனது தோளினைத் தொட்டார்.

அவனோ ,” போதுமா…மா…” இதைப் பார்க்கத் தானே ஆசைப்பட்டீங்க… போகலாமா…இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது மா…” என்று கண் கலங்க அவரின் கைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.


வினை விதைத்தவன் வினையறுப்பான்.


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 43
Topic starter  

அத்தியாயம் 30:

மனம் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான் ஆர்யன்.

அடுத்து என்ன செய்வது எனப் புரியவில்லை.

தெரியாமல் செய்த தவறுகளே சில நேரங்களில் மன்னிக்கப்படுவதில்லை.

இதில் தெரிந்தே செய்த தவறு அவ்வளவு எளிதில் மன்னிக்கப்படுமா …? என்பது சந்தேகமே…!.

பத்மினியோ அவனருகில் வந்து அமரந்தார். மகனது வாடிய முகத்தை கண்டவருக்கு உள்ளே ஏதோ பிசைவது போல் இருந்தது.

அவனிடம் , "கவலைப்படாதே இளா.. சீக்கிரம் எல்லாம் சரியாகும்…” என அவனது கேசத்தை வருடினார்‌.

“ ம்ம்ச்”, இல்லம்மா…. இன்னும் மூணு வாரத்தில் குழந்தை பிறக்கப் போகுது. கண்டிப்பா டெலிவரி டைம்ல  அவ கூட‌ ஆள்‌ இருக்கனும் மா…வர்ஷினியோட அப்பாவும் வயசானவரு அவரால எப்படி எல்லாத்தையும் பாத்துக்க முடியும்…? . அதுவுமில்லாம குழந்தையோட‌ முகத்தைக் கூட பாக்க முடியாது போலவே…” என மிகவும் வருந்தினான்.

“ எதுவும் நம்‌ம கையில இல்லை பா… எல்லாம் நல்லபடியா நடக்கும்…கவலைப்படாதே..” என்றார் பத்மினி.

இங்கோ ஆராதனாவிற்கும்‌ கிட்டத்தட்ட அதே போல் மூன்று வாரங்கள் பிரசவத்திற்கு இருந்தது.

அவளுக்குத் தேவையானதையெல்லாம் பார்த்து பார்த்து செய்தான் தேவ்.

 

லதாவோ தனது மருமகளுக்கு நாவிற்கு சுவையாக உணவை வித விதமாக சமைத்துக் கொடுத்தார். குழந்தை பிறந்தவுடன் சில மாதங்களுக்கு பத்திய உணவை உண்ண வேண்டும் என்பதால் இப்போதே அவளுக்கு பிடித்த உணவினை கேட்டு கேட்டு செய்து கொடுத்தார்.

தேவ்வோ ,” இப்படியே பண்ணி போட்டுட்டு இருந்தா இந்த ரூம் கதவை இடிக்க வேண்டி வரும் “ என‌க்கிண்டலடித்தான்.

பத்மினியோ ,” கண்ணு வைக்காத டா….” என் அவனை வைதார்.

ஆம்.. தாய்மை தந்த பூரிப்பிலும், லதாவின் கவனிப்பிலும்‌ தனி அழகோடு மிளிரந்தாள் ஆராதனா. சற்று பூசினார் போல் இருந்ததால் தேவ் அவ்வாறு அவளை கிண்டலடித்தான்.

சூர்யா இப்போது அதிகமாக ஆராதனாவை தொந்திரவு செய்வதில்லை. லதாவும் தேவ்வும் மாறி‌மாறி அவனை நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள்.

ஒரு வாரம் சென்றிருந்தது. லயவர்ஷினி தனது தந்தையுடன் ஊருக்கு சற்று தள்ளியிருந்த ஒரு பெரிய கடையில்

 பிரசவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்டு காரில் அமர்ந்திருந்தாள். முடிக்க வேண்டிய வேலைகள் முதல் நாள் இரவு வரை இழுத்தடித்ததால் அவளால் பிரசவத்திற்கு தேவையான பொருட்களை வாங்க நேரமே இல்லை. எனவே முதல்நாள் வேலை முடிந்தவுடன் உடனடியாக வாங்கிட தனது தந்தையோடு வந்திருந்தாள்.

மணிகண்டன் வண்டியை எடுத்தார். சில நிமிடங்களிலேயே அவளுக்கு சுளீரென்று வலி ஏற்பட்டது. பல்லைக் கடித்துக் கொண்டாள் ‌. பின் சற்று மட்டுப்பட்டது. மிகவும் அசௌகரியமாக இருந்தததினால் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் வலி  விட்டு விட்டு வர ஆரம்பித்தது.

அவளோ ,” அப்பா….” எனக்‌ கத்திவிட்டாள். சடாரென்று வண்டியை நிறுத்திவிட்டு, என்னாச்சு பா…? என்ன செய்யுதுடா மா…?” எனப் பதறினார்.

“ தெரியல ப்பா…வலிக்குது பா….என்னால முடியல…ஆ…” என‌க் கத்த ஆரம்பித்து விட்டாள்.

பதட்டமான அவர் என்ன செய்வது எனப் புரியாமல் காரில் இருந்து இறங்கி யாரேனும் உதவிக்கு அழைக்கலாமா…? எனப் பார்த்தார்‌.

சில நிமிடங்கள் கழிந்தது. ஆனால் யாரும் வருவது போல் தெரியவில்லை.

அவளுக்கோ வலி அதிகமாகத் தொடங்கியது.

“ஆஆஆ…வலிக்குது பா…” என அலற ஆரம்பித்தாள். அவளது மனக்கண்ணில் ஆர்யனது முகமே வந்தது.

இன்னும் அவளுக்கு அழுகை அதிகமாகியது.

மணிகண்டன் தன் அலைப் பேசியை எடுக்கும் போது, ஏதேச்சையாக அந்த வழியாக சென்ற ஆர்யனது கார் வர்ஷினியின் கார் நிற்பதை கண்டு அருகில் வந்து அவரிடம்

,” என்னாச்சு சார்..? என்றான்

அவனை முறைத்தவர்,

” ஒண்ணுமில்…” எனத் தொடங்கியவர்‌ , மீண்டும் மகளின் அலறல் சத்தத்தை கேட்டு பரிதவிப்பாக “பிரசவ வலி வந்துடுச்சு…” என்றார் .

அவன் வேகமாக குனிந்து காரினுள் பார்த்தவன் அவள் துடிப்பத்தை கண்டு திடுக்கிட்டு அவரைப் பார்த்து,” இப்படித்தான் கொஞ்சமும் பொறுப்பில்லாம வயித்து பிள்ளைக்காரியை இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வருவீர்களா….? இங்க பக்கத்துல எதுவும் ஹாஸ்பிடல் இல்லை.அப்பறம் ஏன்‌ வந்தீங்க..?” என படபடவென பொறிந்தான்‌.

மணிகண்டனோ ,” உங்களை விட நான் பொறுப்பில்லாதவன் கிடையாது…அவளுக்கு தேவையானதை வாங்க தான் வந்தோம். நேத்திக்கு வரைக்கும் அவளுககு கிளைண்ட் மீட்டிங், பில் செட்டில்மென்ட் ன்னு ரொம்ப வேலையா இருந்தது . அதனால எதுவும் வாங்க‌ முடியல. இன்னும் ரெண்டு வாரம் இருக்குறதுனால தான் வெளியே வந்தோம். சீக்கிரம் கிளம்பிட்டோம். ஆனாலும் வலி வந்தேடுச்சு…” என நீண்ட விளக்கத்தை அவனுக்கு கொடுத்தார்.

அவளோ ஏற்கனவே வலியில் இருந்தவள் ஆர்யனைப் பார்த்தவுடன்‌, "இவன் ….ஏன்…ப்பா… இங்க…வந்தான்….போ…சொல்லுங்க…. ப்ளீஸ்…ஆனா…. முடியல…. எல்லாம் இவனாலதான்‌…நான். ….கஷ்டப்படுறேன்….இவனைப் போகச் சொல்லுங்க….ஐ ஹேட் ஹிம்…ப்பா….ம்மா…ஜஸ்ட் கெட் அவுட்…யூ இடியட்…. எல்லாம் இவனாலதான்…இதோ இந்த வலியும் இவனாலதான்…இவன் தான்…இவன் தான்….ஆஆஆ..” என கண்டபடி பேசினாள். மரியாதையெல்லாம் காணாமல் போனது.

ஆர்யனோ மணிகண்டனை வர்ஷியின் அருகே உட்காரச் சொல்லி விட்டு,தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து விருட்டென்று காரை எடுத்தான். ப்ளுடூத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து விவரங்களைத் தெரிவித்து ஏற்பாடுகளை மளமளவென‌ செய்தான்.

லயவர்ஷினியோ அவனை இறங்கி போகுமாறு ஆர்ப்பாட்டம் செய்தாள் , மேலும் உமாராணி மருத்துவரிடம் தான் செல்ல வேண்டுமெனவும் அடம்பிடித்தாள். மணிகண்டனுக்கோ மகளை சமாதானப்படுத் வே முடியவில்லை.

ஆர்யனுக்கோ கோபம் கோபமாக வந்தது.ஆனால் அவளிருக்கும் ‌நிலையில் எதைக் கூறினாலும் பிரயோஜனம் இல்லை என்பதால் உபாராணியிடம்‌ மணிகண்டனைப்‌ பேசச் சொன்னான்.

அவரோ அழைத்துப் பார்த்தார் . மருத்துவர் உமாராணி எடுக்கவில்லை என்பதால் அவருக்குமே ஆர்யனது யோசனைதான் சரியாகப்பட்டது.

மெதுவாக தன் மகளிடம் நிலைமையை எடுத்து கூறி அவளை சம்மதிக்க வைத்தார்.

 சற்று அருகிலுருந்த மகப்பேறு மருத்துவமனைக்கு விரைந்து வந்தடைந்தான்.

அங்கிருந்த செவிலியர்களின் உதவியினால் தனது கரங்களில் அவளை ஏந்தி ஸ்டெரச்ரில் ஏற்றுவதற்குள் அவனை அடித்து பிராண்டி வைத்துவிட்டாள் அவனின் மனைவி….ஏனோ அவ்வளவு ஆக்ரோஷம் அவளிடம், மனவலியுடன் பிரசவ வலியும் அவளை படுத்தி எடுக்கவே , சகட்டுமேனிக்கு அவனைத்திட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இத்தனை நாட்கள் அவள் உள்ளே கனன்று கொண்டிருந்த ஏமாற்றம் வலி, வேதனை, எதிர்பார்ப்பு ,காதல் ,என அனைத்தையும் அவன் மீதுக் கொட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

அவள் கொடுத்த மொத்த அடியையும் தனது தவறுகளுக்கான தண்டனையாக வாங்கிக் கொண்டே அவளை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றான் .

ஒரு கட்டத்தில் பனிக்குடம் உடைந்து அதீத வலி வரவே அவனது கையை நன்றாக கடித்து விட்டாள்.

அவனோ வலியில், ”ஷ்ஷ்….ஆ…” என லேசாக கையை விலக்க‌ முயன்று தோற்றான்.

ஏனெனில் அவனது கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதை கண்டவனது உள்ளமோ கலங்கிக் தவித்தது.

“ லயா…ஐயா…இங்க பாரு ஒண்ணுமில்லை…இன்னும் கொஞ்ச நேரத்துல பேபி வந்துடும் மா…. பொறுத்துக்கோ டி…. ப்ளீஸ்…காம்பிளீகேட்‌ பண்ணிடாதே டி…நீ எனக்கு வேணும் டி…நான் பண்ணது மிகப்பெரிய தப்பு தான். மன்னிச்சுடுன்னு ஒரு வார்த்தையில உன்கிட்ட சிம்பதி கிரியேட் ‌பண்ண‌ மாட்டேன். பட் எனக்குள்ள நீ மட்டும் தான் இருக்க டி.. எனக்கு இன்னொரு வாய்ப்பு குடு டி.”என அவளது கைகளைப் பிடித்து கொண்டு கெஞ்சினான்.

அவளோ தனது வலி மறந்து அவனை ஒரு நிமிடம் அவனௌ ஆழ்ந்து பார்த்தாள்.

அவனது கண்களில் வழிந்து கொண்டிருந்தது கண்ணீரை தனது‌ சட்டையில் அழுந்தத் துடைத்தான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் இருந்த பிரசவ அறையின் கதவு மூடப்பட்டது. உள்ளிருந்து அவளது அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவனோ பதட்டமாக தன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு ‌நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு ஆண்‌ மகவை பெற்றெடுத்தாள் வர்ஷினி.

மருத்துவர் வெளியே வந்து,  "கன்கிராஜுலேஷன்ஸ் ஆர்யன். ஆண் குழந்தை பிறந்திருக்கு”என்றார்

அவனோ கண்களை துடைத்துக் கொண்டு, “தாங்க்‌யூ டாக்டர்…தாங்க் யூ சோ மச்…லயா எப்படியிருக்கா...?  இஸ் ஷீ ஆல் ரைட்... ?” என்றான்.

“ எஸ் ஷீ இஸ் ஆல் ரைட்…மயக்கத்தில இருக்காங்க.‌ இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் அவங்க கண்முழிக்க…இருங்க பேபிய குளிப்பாட்டி கொண்டு வந்து தருவாங்க…” என்று கூறிய மருத்துவர் , "பாவம் சார் நீங்க…உங்க கையை பாருங்க எவ்வளவு காயம் ன்னு. கன்னம் கூட வீங்கியிருக்கு சார் கொஞ்சம் மெடிசின் போட்டுக்கோங்க…பேபிய தூக்கனும் …சோ காயத்தோட தொட வேண்டாம்..” என்றவர் அருகில் இருந்த செவிலியரிடம் கூறிவிட்டு சென்றார்.

அவனும் மருந்திட்டுக்கொண்டு வரவும். பிரசவ அறையிலுருந்து மருத்துவர் கையில் குழந்தையுடன் வந்தார்.

ஆர்யனின் அருகிலேயே மணிகண்டனும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார்.

மருத்துவரோ ,” இந்தாங்க ஆர்யன் உங்க பேபி..”என அழகிய பூங்குவியலாய்‌ உறங்கிக் கொண்டிருந்த ரோஜா மொட்டை அவனிடம் நீட்டினார்.

படக்கென்று கை நீட்ட முயன்றவன் பின்னர் ஏதோ நினனத்தவனாய் ,” இவர் ...இவர்....கிட்ட கொடுங்க டாக்டர்…” எனத் தயங்கி நின்றான்.

அவனது செயலை வித்தியாசமாக பார்த்த மருத்துவர் , மணிகண்டனிடம் குழந்தையை அவரிடம் கொடுத்தார். ஏனோ குழந்தையைத் தொடும் தகுதி தனக்கு இருக்கிறதா..? என்று சந்தேகம்‌ வந்துவிட்டது. 

முதலில் வர்ஷினியை‌ பார்த்து விட்டு வர வேண்டும் என நினைத்தான். 

மருத்துவரிடம் குழந்தையை வாங்கிய மணிகண்டனின்   கண்கள் ஆனந்தத்தில் பனித்தது. நிமிர்ந்து ஆர்யனைப் பார்த்தவரின் கண்களில் என்ன இருந்ததோ தெரியவில்லை.

கலங்கிய கண்களுடன் குழந்தையை அவனது கரங்களில் கொடுத்து ,” இனியாவது சந்தோஷமா வாழ்ற வழியப்‌பாருங்க. என் பொண்ணோட முடிவு தான் என்னோடதும். அவளுக்கு விருப்பமில்லாத எதுவும் நான்‌ பண்ண‌மாட்டேன்‌. அவ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா…அவளோட‌ ரணங்கள் ஆற‌

நாளகும். வெயிட் ‌பண்ணுங்க. இப்போ போய்‌ அவளைப் ‌‌பாருங்க‌” என்றார்.

குழந்தையை கையில் ஏந்திய அந்த நிமிடம் ‌அவனது மனம்‌ ஜிவ்வென்று வானத்தில் பறந்தது. கண்களில் நீர் தளும்பி நின்றது.

குழந்தையை ஏந்தியபடி அவளருகே வந்து நின்றான்.  சோர்ந்து போய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வர்ஷினி.

குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டவன் ,” தாங்க்ஸ் டி…அண்ட் ஐ யம் சாரி….இது போதும் ‌எனக்கு…எனக்கு வேற எதுவும் தேவையில்லை…. அகெய்ன் சாரி….” என்றவன் அவளருகே குழந்தையை வைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.

கணகள் கலங்க செல்லும் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்‌ மணிகண்டன்.

அடுத்த இரண்டு நாட்களில் ஆராதனா பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

சூர்யாவோ, ” ஐ…. தங்கச்சி பாப்பா…தங்கச்சி பாப்பா…என்ன‌ பேரு‌ வைக்கலாம்…..? ம்ம்.‌..” என‌ யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

தேவ்விற்கோ உலகத்தை வென்ற‌ மகிழ்ச்சி. ரிஷி, வந்தனா , சகானா வந்திருந்தனர் குழந்தையைப் பார்க்க. சகானாவும் சூர்யாவும் குழந்தையின் ‌பிஞ்சசு ‌விரலையும் ‌கால்களையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர்.

வந்தனாவும் இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்திருந்தாள். ஆறாம் மாதம் நடந்துக் கொண்டிருந்தது. அனைவரும் ‌மகிழ்ச்சியாக இருந்தனர்.

தேவ் வர்ஷினிக்கும்‌ குழந்தை பிறந்திருப்பதாக ரிஷியிடம் கூறினான்.

“ போய் வர்ஷினி குழந்தையையும் பாத்திட்டு வரணும்…” என்றான் தேவ்

“ ம்ம்…ஆமா டா…ஆனா ஆர்யன்‌ இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சுக் கூட‌பாக்கல தேவ். ரொம்ப கஷ்டமா இருக்கு. அவன் இங்க வந்துட்டான் போலவே…?” என்றான்.

“ ம்ம்..பாத்தேன்‌…அவங்க‌ அம்மாவோட…கொஞ்சம் கூட பொறுப்பில்லாம‌ அவன் செஞ்ச வேலையால வர்ஷினி தான் ரொம்ப திணறிட்டா...சரி விடு கொஞ்ச‌நாள் கழிச்சு போய் பாத்துட்டு வந்துடலாம் டா…” என்றான் தேவ் . ரிஷியும் அதனை ஆமோதித்தான்.

இங்கே மருத்துவமனையில் குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

அவளது எண்ணம் முழுவதும் ஆர்யனே ஆக்கிரமித்திருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

This post was modified 2 days ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page