About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 37
இரவு 9 மணி
வழக்கமாக 10 மணிக்கு அடங்கும் ஊர், முனி பிரச்சினைகளுக்குப் பிறகு இரவு 8 மணிக்குள் அடங்கிவிட, தெருக்களில் வெகு சொற்பமான நடமாட்டம். அதிலும் குறிப்பாக முனி பாய்ச்சல் இருக்கும் இடங்களை, ஜனங்கள் கவனமாக கருக்கலுக்கு பிறகு தவிர்த்தார்கள்.
வீட்டின் ஹால் சோபாவில் அமர்ந்தபடி சகாயராஜ் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இரவு நேர கடைசி கட்ட வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி பிலோமினாவை ஓரக்கண்ணால் பார்த்தார். அவள் புஷ்டியான இடுப்பின் வேர்வை மினுமினுப்பு என்னமோ செய்தது.
"அந்த பன்னாடை பார்த்து தொலைச்சிட்டதனால, சந்தனமேரி வீட்டுக்கும் போக முடியல. ரொம்ப நாள் ஆச்சு இன்னைக்கு நைட் ஷோ போட்டுற வேண்டியதுதான்.."
ஏதோ வேலைக்காக அவரைத் தாண்டி, முந்தானையில் கை துடைத்தபடி சென்றவளை கையை பிடித்து இழுத்து தாகமாய் பார்த்தார்.
"என்னங்க என்னாச்சு?
சகாய ராஜின் ஏக்கப்பார்வையை பார்த்ததும்,
" இந்தாளு வேற நேரங்கெட்ட நேரத்துல..", சலித்துக் கொண்டாள்.
"உடம்பு சரியில்ல அது இதுன்னு சொல்லி பக்கத்திலேயே நெருங்க விட மாட்டேங்குற... இப்பதான் தெம்பா இருக்கியே? அப்புறம் என்ன?...." என்று இழுத்தார்.
"அதுக்காக இப்பவே வா? உங்க மக தூங்கிட்டாளா இல்லையான்னு தெரியல... கதவு வேற திறந்து கிடக்கு...", அவர் சொன்னதைப் கேட்டதும், சகாயராஜ் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவள் வேண்டாம் என்று சொல்லவில்லை, மகள் தூங்கட்டும், கொஞ்சம் லேட்டாகட்டும் அதன் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாள்.
"அவ எப்பவோ தூங்க போயிட்டா... அரை மணி நேரமாச்சு."
"பாத்ரமெல்லாம் கழுவ வேண்டியது இருக்கு"
"அதெல்லாம் காலைல பண்ணிக்கலாம். நானே கழுவி தர்றேன். இப்ப நீ அவ ரூம் கதவையும், மெயின் டோரையும் பூட்டிட்டு வாயேன்", என்று சினுங்கலாக சொன்னார்.
பிலோமினாவும் சிரித்தபடி, மகள் ரூம் கதவை வெளிப்பக்கமாக சத்தம் வராமல், நைசாக பூட்டி விட்டு, சோபாவில் இருந்த சகாயராஜை உரசியபடியே சென்று, வீட்டு முன் கதவையும் பூட்டினாள். சகாயராஜ் எழும்பி ஹால் லைட்டை ஆப் செய்தார்.
இருட்டுக்குள் இருவரும் நெருங்கி கைகோர்த்து நின்றார்கள்.
சகாயராஜ்: கதவெல்லாம் கரெக்டா பூட்டினியா?
பிலோமினா: ம்ம்ம்... என்றாள் கொஞ்சலாக.
அடுத்த நொடி சகாயராஜ் பிலோமினாவை ஆவேசமாக அணைக்க போக,
சித்தப்பூபூபூ..... என்றொரு குரல்.
இருவரும் திடுக்கிட்டு போய், விலகி கதவை பார்க்க, கதவு பூட்டி தான் இருந்தது. வேறு எங்கிருந்து குரல் வருகிறது?
"சித்தப்பூபூபூ.... நான் இங்க இருக்கேன்...."
சகாயராஜ் பக்கவாட்டு ஜன்னலை திரும்பிப் பார்த்தார். ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே திருமுடி, ஈஈஈ.... என்று ஜனகராஜ் போல் இளித்து கொண்டிருந்தான்.
பிலோமினா முந்தானையை சரி செய்து கொண்டு சோபாவில் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தாள்.
சகாயராஜ்: இங்கேயும் வந்துட்டியால. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விட மாட்டியே?
திருமுடி ஜன்னலுக்கு வெளியே இருந்து, "என்ன சித்தப்பு நாம அப்படியா பழகிருக்கோம். வாங்க கதவு திறங்க.. உங்கள பாக்காம இருக்க முடியல. அதான் பார்த்து, ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தேன்.
ஹாய் சித்தி..." என்று உற்சாகமாக கத்தினான்.
பிலோமினா அவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருக்க, சகாயராஜ் செம கடுப்பில் லைட்டை போட்டுவிட்டு, கதவை திறந்தார். வெளியே திருமுடியும், அவனுக்கு பின்னால், தாமசும் நின்றிருந்தார்கள்.
சகாயராஜ் தாமசை பார்த்ததும், வழிந்து நெளிந்து, "வாங்க சார்... வாங்க" என்று வீட்டுக்குள் கூப்பிட்டார்.
திருமுடி: தாமஸ் சார் உள்ள வாங்க.. நம்ம வீடுதான்...
என்று சொல்லியபடி அவன் பாட்டுக்கு, எந்த சங்கோஜமும் இல்லாமல் உள்ளே நுழைந்தான்.
தாமசை பார்த்ததும், சித்தி வெக்கப்பட்டு கொண்டு சமையல் கட்டுக்குள் சென்றாள்.
சகாயராஜ் திருமுடி காதுக்குள், "ஏம்ல இது உனக்கே நியாயமா இருக்கா? பாக்க வர்றதுக்கு இதான் நேரமா? அப்படி என்ன தல போற விஷயம்? வந்தது தான் வந்த ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்திருக்க கூடாதா?" என்று கிசுகிசுத்தார்.
திருமுடி பதிலுக்கு சகயராஜ் காதுக்குள், "இவ்வளவு நாள் சந்தன காத்து அடிச்சிட்டு தானே இருந்துச்சு... நல்ல செழிப்பா தான் இருந்தீங்க? அப்புறம் என்ன? ஒரு முக்கியமான விஷயம் சார் பேசணும்னு சொன்னாரு, அதுதான் வந்தோம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நான் கிளம்பிட்டா கூட நீங்க சித்தி பக்கத்தில் நெருங்க கூடாது... விஷயம் தெரிஞ்சுச்சு. அப்புறம் சந்தன காத்து எல்லா பக்கமும் வீசிடும்.."
"ஐயா சாமி மாட்டேன்பா.." என்பது போல் கையெடுத்து அவனை கும்பிட்டார்.
தாமஸ்: சித்தப்பாவும் மகனும் கிசுகிசுன்னு அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க?
சகாயராஜ்: அது ஒண்ணுல்ல சார். ஊர்ல காத்து ஓவரா வீசுது. அதான் காற்றாலை மின்சாரம் வைக்கிறதுக்கு கவர்மெண்ட்ல மனு குடுக்கலாமான்னு பேசிட்டு இருந்தோம்... அது கிடக்குது. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க?
திருமுடி: நான் சொல்றேன். அதுக்கு முன்னால ... சித்தி சூடா ரெண்டு டீ போடுங்க... என்று கிச்சனை பார்த்து கத்தினான்.
அவன் கேட்டதும், கிச்சனில் பாத்திரங்கள் கடுப்பாக தூக்கி எறியப்படும் சத்தம் கேட்டது.
சகாயராஜ்: பாத்திரம் கை தவறி விழுந்திருக்கும்... என்று சமாளித்தார்.
திருமுடி: சரி விஷயத்துக்கு வரேன். நம்ம தாமஸ் சார் முனி சம்பந்தமான விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொன்னாரு. ஏற்கனவே தங்கதுரை ஐயா கிட்ட ஒரு சில விஷயங்கள் கேட்டுருக்காரு. நம்ம ஊர்ல விவரமானவங்கன்னா... அந்தோணி அண்ணனும், நீயும் தானே. அந்தோணி அண்ணன் கிட்டயும் பேசினோம். அடுத்தது உன்னையும் பார்த்து ஒரு சில விஷயம் கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.
சகாயராஜ் தாமசை பார்த்து, "என்ன விஷயம் தெரிஞ்சுக்கணும், சொல்லுங்க?", என்று அவசரமாக கேட்க,
திருமுடி: என்ன அவசர அவசரமா கேக்குற? வேற அப்படி உனக்கு என்ன வேலை இருக்கு? இரு, சார் பொறுமையா கேப்பாரு.
தாமஸ்: என்ன விஷயம்னு குறிப்பிடும்படியா இல்ல. சண்டி முனி பத்தி, முனி ஓட்டம், முனி பாய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லுங்க?
சகாயராஜ் சொல்ல ஆரம்பித்தார். ஏற்கனவே நமக்கு தெரிந்த கதை தான். பல வருடங்களுக்கு முன்னால், இருந்த முனி கோவில். முனியை கும்பிட்ட குறிப்பிட்ட வகுப்பினர், அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றது, முனி கோவில் பராமரிப்பின்றி நிராதரவாகி பாழடைந்து போனது, இருளாயி கோயில் கட்டப்பட்டது, முனி ஓட்டம் தடம் மாறியது, காலப்போக்கில் முனி பற்றிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது என்று எல்லாவற்றையும் சொன்னார்.
முடிவாக,
"எப்போ கருப்பன் தாத்தா சண்டி முனிக்கு நேர்ந்து விடப்பட்ட காவண வீட்டை விக்கிறதை பத்தி பேச்சு எடுத்தாரோ, அதன் பிறகு தான் ஊருக்குள்ள முனி ஓட்டம் மறுபடியும் ஆரம்பிச்சது. பாவம், அவரையும் குறை சொல்ல முடியாது. ரொம்ப வருஷ காலமா முனி நடமாட்டமோ, எந்த பேச்சும் இல்லங்கறதுனால, முனி வேறு பக்கமா போயிருச்சுன்னு நினைச்சிருப்பார். வீட்டை வித்து அனாதரவா நிக்கிற பேத்திகளுக்கு ஏதாவது செய்யணும்னு பிரியப்பட்டுருப்பார். அவரையே முனி அடிச்சிருச்சு."
தாமஸும், திரு முடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இதற்கிடையே, சித்தி டீ போட்டுக் கொண்டு வர, அனைவரும் டீ சாப்பிட்டபடியே பேசினார்கள். முனி விஷயம் என்பதால் சித்தியும் உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
தாமஸ்: நானும் மாட்டியிருப்பேன்.. எப்படியோ தப்பிச்சிட்டேன். ஒரு நாள் ராத்திரி ஏதோ சத்தம் கேக்குதேனு வெளியே வந்து எட்டி பார்த்துட்டு இருந்தேன். ஏதோ காத்து மாதிரி ஒன்னு அடிக்க வந்த மாதிரி இருந்துச்சு.. யாரோ என்னை கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள தூக்கி போட்டுருக்காங்க. யாருன்னு சரியா தெரியல. அநேகமா சடை சாமியா தான் இருக்கணும்.
சகாயராஜ்: சார் முனி பாய்ச்சல் இருக்கிற வீதில, அந்த நேரத்துல நாம குறுக்கிட்டா நிச்சயமா அடிச்சு தூக்கி வீசிடும். சண்டி முனி மோசமானது. ஒரே அடியில் ஆள் காலி ஆயிடுவான்.
தாமஸ்: சார் தங்கதுரை ஐயா கிட்ட பேசிட்டு இருக்கும்போது, அவர் என்ன சொன்னார்ன்னா முனிங்கறது நம்ம மூதாதையர்கள் தான். இயற்கைக்கு மாறாக சாவு நேரும்போது, செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இருக்கும்போது, ஆத்ம சாந்தியாகாமல் ஆவியா உலவுவாங்க. சில நேரங்களில் அந்த மாதிரி ஆவிகள், அந்த மண்ணுக்குரிய இயற்கை சக்திகளுடன் கலக்கும் போது முனியா மாறுது. இயற்கையிலேயே நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் இருக்குற மாதிரி, நல்ல முனியும் இருக்கு, கெட்ட முனியும் இருக்கு. அப்படிப்பட்ட முனிகளை மக்கள் குல தெய்வங்களாக, உபாசனை சக்திகளாக ஏத்துக்கும் போது அதற்குரிய பூஜை மரியாதைகளை செய்யணும். அப்படி செஞ்சா என்னதான் கெட்ட முனியா இருந்தாலும், கும்பிடுகிறவர்களுக்கு நல்லது தான் பண்ணும். தேவைக்கு பயன்படுத்திட்டு முனியை கண்டுகொள்ளாமல் விடும்போது தான் உக்கிரமடைதுன்னு சொன்னாரு...?
சகாயராஜ்: கரெக்டு தான் சார். சண்டி முனி விஷயத்திலும் நீங்க கடைசியா சொன்னது தான் நடந்திருக்கு. ஏற்கனவே கைவிடப்பட்டதால் இருக்கிற கோபம், இப்ப நேர்ந்துவிட்ட வீடும் போயிருச்சேங்குறது தான் சண்டி முனியோட ஆக்ரோஷத்துக்கு காரணமா இருக்கணும்.
தாமஸ்: சார் இன்னொரு கேள்வி. கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமா தான் இருக்கும்... இருந்தாலும் கேட்கிறேன். நீங்க சொல்ற முனி வகையறாக்கள், முனி பாய்ச்சல் சமயத்துல, ஸ்டார்டிங் பிளேஸ்ல இருந்து கிளம்புனா எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி, நிக்காம அதிவேகத்தில் ஒரு சுத்து சுத்தி மறுபடியும் வந்து சேருமா? அதனால்தான் எதிர் படுறவங்களை அடிச்சு தூக்குதா? இல்ல, புல்டோசர் மாதிரி பல இடங்களில் நின்னு நின்னு போகுமா? சைடு வாங்கி வீட்டுக்குள்ளல்லாம் போயிட்டு வருமா?
சகாயராஜ் புன்முறுவலுடன் பதிலளித்தார்.
"முனி ஓட்டம், முனி பாய்ச்சல்ன்கிற வார்த்தை பிரயோகத்தினால் நீங்க இந்த கேள்வி கேக்குறீங்க? புரியுது... ஆனா யாருமே இதுக்கு சரியான பதில் சொல்ல முடியாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நின்னு நிதானமா ஷேர் ஆட்டோ மாதிரி போற கதைல்லாம் பொதுவா நடக்காது. அதுபோக்ல போகும். வழக்கமான பாதையிலருந்து விலகுவதல்லாம் இருக்காது. அதனால்தான் முனி ஓட்டம் நேரத்துல எக்கு தப்பா எதிர் படுறவங்களை அடிச்சு தூக்குது. ஆனால் சில முனிகள், தவறுதலா யாராவது எதிர் பட்டாலும் அவங்க கால்ல விழுந்து கும்பிட்டா மன்னிச்சு விட்ரும்ன்னும் கேள்வி பட்டுருக்கேன். சண்டி முனி நிச்சயமா அந்தரகம் கிடையாது. கடற்கரை பாதையில கீழத்தெரு வழியா மேட்டு தெருவுக்குள்ள நுழைஞ்சு...மேட்டு தெருவோட மறுபக்க சந்துகளை கடந்து, முள்ளுக்காடு வழியாக திரும்பவும் முனி கோயிலுக்கு வந்து சேருது. இதுதான் முனி பாய்ச்சல் இருக்கக்கூடிய வழி.
பெரியவர் காவண வீட்டை நேர்ந்து விட்டதால வீட்டுக்குள் நுழையலாம். வாய்ப்பு இருக்கு. ஆனா மந்திர கட்டு போட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதனால வீட்டை சுத்தி வரலாம், வீட்டுக்குள்ள நுழைய முடியாது...."
தாமஸ்: கடைசியா ஒரே ஒரு கேள்வி... முனி பாய்ச்சல் இருக்குனு ஊர்க்காரங்க எல்லாருக்கும் தெரியுது. முனியின் கோவிலை சீரமைச்சி, பூஜை நடத்தி, ஏன் நீங்க அதை சாந்தி படுத்த கூடாது? அட்லீஸ்ட் தேவையில்லாத மரணங்ளையாவது தடுக்கலாமே.
சித்தி: கரெக்டு தான் சார்... என்று அவன் சொன்னதை ஆமோதித்தாள்.
"ராமசாமியை முனி அடிச்சப்பவே நானும், நம்ம ஊரு பொண்ணுங்க நிறைய பேரும் இதையே சொன்னோம். யாரு கேட்டாங்க? அவன் பொண்டாட்டி புள்ளைங்க இப்ப அனாதையா நிக்குது", என்றாள்
சகாயராஜ்: இல்ல சார், கோவில் சீரமைக்கிறதல்லாம் ஓகே. செஞ்சிரலாம். ஆனா மறித்துக்கட்டும் பூஜைகள் நடத்துவதற்கு, முனி கோவில் கட்டினால், பராமரிப்பதற்கு சரியான ஆள் கிடைக்கல்லை. ஏன்னா முனி விஷயம்ங்கறதால விவரம் தெரிஞ்சவங்க தான் தேவைப்படும். அதுக்கு சரியான ஆள் கிடைக்கல. அதனால தான் லேட் ஆகுது.
சித்தி கொஞ்சம் காட்டமாக: அப்படின்னா நீங்க ஆள் தேடிக்கிட்டே இருப்பீங்க.. ஊருக்குள்ள எல்லாரும் செத்துகிட்டு இருப்பாங்க... ஒவ்வொரு நாளும் நாங்க பயந்து செத்துகிட்டு இருக்கணும். ராமசாமி குடும்பம் மாதிரி எல்லா குடும்பமும் நடுத்தெருவில் நிக்கணும்... என்றாள்.
திருமுடி: நல்லா கேளுங்க சித்தி, ஊர்ல சித்தப்பா ஒரு முக்கியஸ்தர்... கருப்பன் தாத்தாவும் இல்லை. முத்துப்பாண்டியும் இல்லை, முடிவெடுக்க வேண்டிய ஒரு பொறுப்புல இருக்குறவரு, பொறுப்பில்லாமல் வீட்டுக்குள் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கிறார்... என்று ஏத்தி விட்டான்.
அடப்பாவி!!! நல்லா இருந்த குடும்பத்துல கும்மி அடிச்சுட்டானே!!!
சகாயராஜ்: அதுக்கில்லம்மா, எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒரு முடிவெடுத்து தானே செய்ய முடியும்? நான் நினைச்ச உடனே பண்ணிட முடியுமா?
சித்தி: நீங்க முடிவு எடுத்துக்கிட்டே இருங்க. ஊருக்குள்ள எல்லாரும் முண்டச்சியா அலையறோம்... கோபித்துக் கொண்டு எழும்பி, பெட் ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
திருமுடி தூசி தட்டுவது போல் கையை தட்டிக் கொண்டே எழும்பினான்: சரி சித்தப்பு, வந்த வேலை முடிஞ்சுது நாங்க கிளம்புறோம்.
சகாயராஜ் அவனை கடுப்பாக பார்த்துக் கொண்டிருக்க,
தாமஸ் வணக்கம் வைத்துவிட்டு, "ரொம்ப நன்றி சார், அப்ப நாங்க கிளம்புறோம்", என்று விடைபெற்று கிளம்பினான்.
இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள். சகாயராஜ் கதவை மூடிவிட்டு, நேராக பெட்ரூம் கதவை தட்டினார்.
"நீ சொல்ற படில்லாம் செய்றம்மா. கொஞ்சம் கதவை திற..."
மறுபடியும் சித்தப்பு என்ற குரல்...
சகாயராஜ் ஜன்னலை பார்த்து திரும்பி,
"லேய்ய்ய்ய்...", என்று கொலை வெறியோடு கத்த,
திருமுடி: இல்ல ஜன்னலை பூட்ட மறந்துட்டீங்க, அதை பூட்ட சொல்றதுக்காக தான் கூப்பிட்டேன்... என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்து ஓடினான்.
இருட்டு சந்தில் டகடகவென சைக்கிள் சத்தம். அளவில் சற்றே பெரிய சந்து. இரண்டு பக்கமும் வீடுகள். திருமுடி சைக்கிளை ஓட்ட இரண்டு பக்கமும் கால் போட்டு தொங்கவிட்டபடி தாமஸ் உட்கார்ந்திருந்தான். முக்கால்வாசி வீடுகளில் தூக்கம் ஆட்சியைப் பிடித்திருக்க, மிச்சம் மீதி வீடுகளில் ஆட்சியை பிடிப்பதற்கான ஆயுத்தங்களை நடத்தி கொண்டிருந்தது
திருமுடி: எவனாவது ஒருத்தனாவது வீட்டை விட்டு வெளியே எட்டிப் பாக்குறானா பாத்தீங்களா? இத்தனைக்கும் இது முனி ஓட்டம் இல்லாத ஏரியா. அப்படி இருந்தும் ஒருத்தனும் வெளியே வரல்லை.
அவன் பேச்சு சத்தத்தை, எக்ஸ்பைரி டேட் முடிந்த, தெருவோர டியூப் லைட் வெளிச்சம் குறுக்கிட்டது.
தாமஸ் எந்த பதிலும் சொல்லாமல் யோசனையில் இருப்பதை பார்த்ததும்,
திருமுடி: என்ன சார் பதிலே இல்ல. ஏதோ யோசிச்சுகிட்டே வர்றீங்களே?
தாமஸ்: முனிவோட்டம்னு சொல்றாங்க, அத கன்ஃபார்ம் பண்ண வேண்டாமா? அதான் எப்படின்னு யோசிக்கிறேன். நம்ம தெருவுல ஏதாவது வீடியோ கேமரா செட் பண்ணிடலாமா?
திருமுடி: ஏன் சார் உனக்கு இந்த வேண்டாத வேலை. நான் என் கண்ணால பார்த்தேனே. அதுக்கு மேல எதுக்கு கேமரா? இப்ப நினைச்சு பார்த்தாலும் கை காலல்லாம் நடுங்குது.
தாமஸ்: இல்ல, இல்ல... அடுத்தவங்க கண்ணை நம்ப முடியாது. ஆமா, எந்த இடத்தில் வச்சி ராமசாமியை தூக்கி அடிச்சதுன்னு சொன்ன?
திருமுடி: "அதுவா சார், கீழத்தெருவில் இருந்து திரும்பி, கடற்கரை ரோட்டுல போகும்போது ரோட்டுக்கு லெப்ட் சைடுல சின்னதா ஒரு குட்டி சுவரு உண்டு. அதுக்கு பின்னால ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்."
அதைத்தொடர்ந்து,
"ஆமா எதுக்கு கேக்குறீங்க?".......
என்று கேட்க வந்தவன், கேட்காமல், படக்கென்று சைக்கிளை நிறுத்திவிட்டு, பின்னால் திரும்பி, தாமசை பார்த்தான்.
தாமஸ் மந்தஹாசமாக சிரிப்பதை பார்த்ததும்,
"ஐயையோ வேண்டாம் சார், ஆள விடுங்க", என்று அவன் கத்தியது,
அந்த அரை இருட்டு சந்தில் அனாதரவாக ஒலித்தது.
தொடரும்
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 44
பிரபா அத்தையை பார்த்து குழம்பி போன தாமஸுக்கு என்ன நினைப்பதென்றே தெரியவில்லை.
பின்னர் சுதாரித்து,
"பிரபா அத்தை வர்றாப்புல. ஸ்கிரிப்ட் அதேதான். பேர மட்டும் மாத்திக்க... போன் ஆன்லயே இருக்கட்டும்', என்று போனில் பரபரப்பாக கிசுகிசுத்தான்.
குடிசைக்குள் இருந்த திருமுடி திகைத்தான்.
பிரபாவா??? எப்படி???
கொலைகாரனுக்கு ஆப்பு வைக்கணும்னு நினைச்சா நமக்கே ஆப்பா மாறிடுமோ!
கருப்பு தாத்தா கொலை சமாச்சாரங்கறதால, ராகினி மெசேஜ் விஷயத்தை பிரபா அத்தை கிட்ட சொல்லி, எவன் அதுன்னு நேர்ல பாக்குறதுக்கு வெறியோட வந்துட்டாளோ? ஐயையோ!!
கருப்பு தாத்தா கொலை விஷயத்துல ஆதாரம் இருக்குன்னு, வாக்குமூலம் கொடுத்த மாதிரி, மெசேஜ் அனுப்பிருக்கோமே. எக்குத்தப்பா நாம இந்த மர்டர் மேட்டர்ல மாட்டிக்க கூடாதே!!!
சரக் சரக் சத்தம் குடிசையை நெருங்கியதும், அலர்ட் ஆனான்.
சரி வந்தது வந்தாச்சு. சமாளிச்சுருவோம்.
குடிசை கதவை பட்டா ரென்று தள்ளி திறந்தபடி தலையை குனிந்து உள்ளே நுழைந்த பிரபா, உள்ளே திருமுடி நின்றிருந்ததை பார்த்ததும், திகைத்தாள். முகம் இருண்டது. சமாளித்து திகைப்பை துடைத்தெடுத்தாள்.
இவன் எப்படி இங்கே என்று விசாரத்துடன் நோக்கி, நிசாரமாக மாறி, காரசாரமாக ஆனது அவள் பார்வை. மாற்றங்கள் அனைத்தும் மைக்ரோ நொடிகளில்...
தென்னந்தோப்பில் மறைந்திருந்த தாமஸ்,
குடிசைக்குள் பிரபா நுழைந்ததும், நுனிக்காலில் ஓடி,
லப்... சக்... டப்...சக்
இதயத்துடிப்பும் காலடி சத்தமுமாய் மிக்ஸ் ஆகி,
குடிசைக்கு பின் பக்கமாக வந்து நின்றான். ஏற்கனவே பிரித்து வைத்திருந்த ஓலையின் துளை வழியாக பார்த்தான். மற்றொரு கேப்பில் சொருகி வைத்திருந்த வீடியோ கேமரா வேலை செய்து கொண்டிருக்கிறதா என்று பார்த்தான். கமுக்கமாக ஆனால் ஆர்வத்துடன் காட்சிகளை விழுங்கி கொண்டிருந்தது.
தெனாவட்டாக பேசுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த திருமுடிக்கு ஸ்கிரிப்ட் மறந்து போனது. பிரபாவதி பாக்குற பார்வையை பார்த்ததும், குழைந்து, குரலை தாழ்த்தி பேசினான்.
"அத்தை.... வந்து நான், எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்..."
பிரபாவதி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டினாள். குடிசைக்குள் வேறு யாரும் இல்லை என்பது உறுதியானதும்,
பிரபா: நான் இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது உனக்கு எப்படில தெரியும்? எந்த வழியில தெரிஞ்சுகிட்ட?
பதட்டத்தில் வார்த்தையை விட்டதும், அவசரமாக நாக்கை கடித்துக் கொண்டாள்.
சுளீர் ரென்று சாட்டையால் அடிபட்டது போல் திருமுடி நிமிர்ந்தான்.
வழக்கமாக அவள் இருப்பை எவனுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவள் குரலில் இவ்வளவு கடினத்தன்மை இருக்கும் என்பதை திருமுடி இப்போதுதான் உணர்ந்தான்.
சின்னதா திரவாங்கனை மீனு மாட்டுமுன்னு பார்த்தால், திமிங்கலமே மாட்டும் போலிருக்கே.
திருமுடியின் பாடி லாங்குவேஜில் அதிரடி மாற்றம். தயக்க சட்டையை தூர எறிந்து விட்டு, தெனாவெட்டு டி-ஷர்ட் மாட்டிக் கொண்டான்.
"தப்பு... தப்பு... எப்படி தெரியும்? வழி என்ன? சுழி என்ன? அப்படியெல்லாம் நீங்க கேள்வி கேட்கக்கூடாது. நான் கேட்கிற கேள்விகளுக்கு தான், நீங்க பதில் சொல்லணும்... உன்னை கேரக்டர் ஆர்டிஸ்ட்... செட் ப்ராபரிட்டின்னு எல்லாரும் நினைச்சா... நீ தான் மெயின் வில்லன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.."
வெளியே நின்று ஓட்டை வழியாக பார்த்துக் கொண்ட தாமஸ் M.V:
"என்ன இவன் ஸ்கிரிப்ட்டை மாற்றி என்னவோ பேசுகிறான்? எப்படி பெர்பாம் பண்ண போறானோ?"
பிரபா அமர்த்தலாக கேட்டாள்: உன்கிட்ட ஆதாரம் இருக்குன்னு நான் எப்படி நம்புறது?...
திருமுடி: நேரா விஷயத்துக்கு வந்துட்டீங்களா? சூப்பர், அப்படித்தான் இருக்கணும். உங்க சமாச்சாரம் எல்லாம் இந்த மெமரி கார்டுல வீடியோவா இருக்கு. (வலது கையை நீட்டி கார்டை காண்பித்தான்) இதே மாதிரி இன்னும் ஒரு மெமரி கார்டு, அப்புறம் தப்பித்தவறி மெமரி கார்டு corrupt ஆயிரக்கூடாதுங்கறதுக்காக ஒரு பென் டிரைவ்ல காப்பி எடுத்து, நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தர்கிட்ட கொடுத்து வச்சிருக்கேன்.
அவன் சொல்ல சொல்ல பிரபா நெற்றி சொத சொதப்பாய் வியர்த்து, திருதிருவென முழித்தாள். அவள் போடும் அவசர கணக்குகள், எல்சிடி டிஸ்ப்ளேவில் தெரிவது போல், நெற்றியில் தெரிந்தது.
"நான்... வேற வழி... நீ..."
வார்த்தைகளுக்கு திணறினாள்.
திருமுடி: இருங்க, இருங்க... டென்ஷன் ஆகாதீங்க. அப்படியெல்லாம் மாட்டி விட்ற மாட்டேன். அதனால எனக்கு என்ன லாபம்? எனக்கும் இதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கணும்ல. எவ்வளவு நாள் தான் சும்மா ஓட்டாண்டியா சுத்திட்டு இருக்கிறது? போலீஸ்ல மாட்டி விட்றதுன்னு நினைச்சிருந்தா வீடியோ எடுத்தன்னைக்கே கொண்டு போய் கொடுத்திருக்க மாட்டேனா?
பிரபா பதில் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
திருமுடி: இந்நேரம் லாஜிக்கா நீ ஒரு கொஸ்டின் கேட்டுருக்கணும்ல? அதெப்படி கரெக்டா சம்பவத்தை வீடியோ எடுக்க முடிஞ்சுது? கேட்டுருக்கணும்ல்ல. வெரி வெரி இம்பார்டன்ட் கொஸ்டின் ஆச்சே? நீ பாட்டுக்கு நான் சொல்றதை கேட்டு முழிச்சுக்கிட்டு நிக்குற? என்ன பெருசா வில்லத்தனம் பண்ணி கிழிச்ச நீ.. அட போம்மா.
பிரபா அவனை பிரபஞ்ச வெறுப்புடன் பார்க்க, மரியாதை தேய்ந்து போய், திருமுடி ஒருமையில் பேசினான்.
"நானே சொல்றேன். மேட்டு தெருவுல முனி நடமாட்டம் இருக்கிறதால தாமஸ் வாத்தியாரு அதை படம் பிடிக்கிறதுக்கு மரத்து மேல வீடியோ கேமரா வச்சாரு. அடுத்த நாள் பார்த்தால், கேமராவை காணல. 2 நாள் கழிச்சு முனி கோவில் பின்னால, கேமராவை கண்டுபிடித்தோம். கேமரா டேமேஜ் ஆகி இருந்ததால, வாத்தியார் போட்டுட்டு போயிட்டாரு. நான் மனசு கேட்காம ஆக்கர் கடைக்கு போட்டு காசு வாங்கலாமேன்னு தூக்கிட்டு போனேன். வீட்டுக்கு போய் குடைஞ்சி பார்த்தா, மெமரி கார்டு டேமேஜ் ஆகாம இருந்துச்சு. எடுத்து பாத்தா முனி மாட்டல, நீங்க பண்ண சம்பவம் மாட்டிக்கிச்சு. என்னைக்காவது நமக்கு உதவுமுன்னு பத்திரமா வச்சுக்கிட்டேன். இப்போ உதவுது. நான் பெருசா எதுவும் கேக்க மாட்டேன். 10 லட்சம் ரூபாய். ஒன்லி 10 லாக்ஸ். இந்த மெமரி கார்டு, பென்டிரைவ் எல்லாம் உன் கைல கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்."
பிரபா அவனைப் பார்த்த பார்வையில் சந்தேகம் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. பிரபாவுக்கு ஈரட்டியான நிலை. பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தடுமாறுவது தெரிந்தது.
வந்ததுமே வார்த்தையை விட்டுருக்க கூடாது! வேற மாதிரி பேச்சுவார்த்தை ஆரம்பிச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்!
இவனை நம்புறதா? வேண்டாமா?
பிரபா: உனக்கும் இந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்ன்னு விசாரிக்கறதுக்கு வந்தா, நீ என்னையே போட்டு பாக்குறியா? மெமரி கார்டை குடு. ஃபோன்ல போட்டு பார்க்கிறேன். அப்படி என்னதான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்னு பார்க்கிறேன்.
தாமஸ் மைண்ட் வாய்ஸில் கத்தினான்: அய்யய்யோ மாட்னான். எப்படி சமாளிக்க போறானோ? ஏதாவது பேசி டைவர்ட் பண்ணுடா.....
திருமுடிக்கு திக்கென்று இருந்தது. பாயிண்ட்டை புடிச்சுட்டாளே!
வலுவா ஏதாவது பிட்ட போட்டு திசை திருப்பணுமே... இதயமும் மூளையும் ஓவர் டைம் வேலை செய்தது.
திருமுடி: அதுக்கு என்ன நல்லா போட்டு பாரு. அதுக்கு முன்னால நானே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன்.
பிரபா சொல்லு என்பது போல், தலையாட்டி சைகை செய்தாள்
திருமுடி: காவண வீட்டை ஆட்டைய போடணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதனால தான் நம்ம ஆளையே அங்க வாடகைக்கு வெச்சேன். தாத்தா இருந்தா வீட்டை வளைக்க முடியாது. இப்போ நீ அந்தாள போட்டு தள்ளுனதுனால எங்களுக்கு ஈஸியா போச்சு. எப்படிப் பார்த்தாலும், நீ நம்ம ஆளு தான். இருந்தாலும் எனக்கு பணம் முக்கியம், நீ கொடுத்தா கையோட ஆதாரங்களை ஒப்படைச்சிருவேன். வேலை முடிஞ்சிரும். உன் வழியில நீ போலாம், என் வழியில நான் போவேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாது... என்ன சொல்ற?
பின்னிட்டான்.... தாமஸ் சத்தம் வராமல் சொடக்கு போட்டான்.
பிரபா ரொம்ப யோசிக்காமல், சரியென மெதுவாக தலையாட்டினாள்.
"இப்படி திடுதிப்புன்னு கேட்டா பணத்துக்கு எங்க போவேன். இந்த நிலத்தை வித்தா தான் கிடைக்கும். கொஞ்சம் பொறுமையா இரு, ரெடி பண்ணி தரேன்.."
திருமுடி; உன் கிட்ட பணம் இல்லைன்னு எனக்கும் தெரியும். ஆனால் எப்படியும் இந்த நிலத்துக்கு 40 லட்சமாவது மினிமம் கிடைக்கும். நான் கேட்கிறது வெறும் 10 லட்சம் தான். என்னை ஏமாத்தணும்னு நினைக்காத.
ஆமா என்றும், இல்லை என்றும் சொல்லாமல் வெறுமனே தலையாட்டினாள்.
தூண்டில கடிச்ச மீனு, வசமா சிக்க மாட்டேங்குதே!
திருமுடி: "எனக்கு என்ன குழப்பமா இருக்குன்னா எதுக்காக கருப்பன் தாத்தாவையும், சடசாமியையும் போட்டே?"
"அதெல்லாம் உனக்கு எதுக்கு? பணத்தை வாங்கினோமா, ஆதாரத்தை கொடுத்தோமானு போயிட்டே இரு.."
"இல்ல, பணம் ஒருத்தனுக்கு முழு சேடிஸ்பேக்சன் தராதுல்ல. ரொம்ப நாளா எனக்கு மண்டையை குடைஞ்சுட்டிருக்க விஷயம் அதுதான்... நீ சொல்லலைன்னா, அதுக்கு ஒரு பத்து லட்சம் தனியா கேக்க வேண்டிருக்கும் பரவால்லையா?"
பிரபா உதடு மடித்து, பற்களை கடித்து, கோப மூச்சு விட்டாள். நெற்றியில் விரலால் கீறி கொண்டாள். தீயில் பொசுக்குவது போல் அவனை பார்த்துவிட்டு, கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக, பற்கள் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாக்கை எடுப்பது போல், நாக்கால் வாய்க்குள் உழற்றினாள்.
"எல்லாம் என் தலையெழுத்து... இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையா?" தலை உயர்த்தி மேலே தொங்கி கொண்டிருந்த மஞ்ச பல்பை பார்த்தாள்.
பத்தே வரியில் அவள் சொன்ன விஷயம்... இங்கே
பிளாஷ்பேக்காக,
கருப்பன் தாத்தா சம்பவம் நடந்த அதே நாள்,
இதே இடம், இதே நேரம்.
மஞ்ச பல்பை பார்த்தபடியே பிரபா ஜாக்கெட்டை போட்டுக் கொண்டாள். அவள் பாவாடை முடிச்சு போடும் இடத்தில் வரி வரியாக இருக்க, பக்கத்தில் படுத்திருந்த முத்துப்பாண்டி அந்த இடத்தை தடவிக் கொண்டிருந்தான்.
அவன் கையை தட்டி விட்டு, அவிழ்ந்து கிடந்த சேலையை கட்டி, சரி செய்து கொண்டு, மாராப்பை எடுத்து மேலே போட்டாள்.
முத்து பாண்டியிடம்,
"என்னல ரெண்டு தடவைக்கே இப்படி கொளஞ்சி போயிட்ட... முதல்ல இருந்த வேகம் குறைஞ்சுகிட்டே போகுது, ஃபர்ஸ்ட் குடியை நிறுத்து. இப்படியே போச்சுன்னா ரெண்டு நிமிஷத்துக்கு கூட தாங்க மாட்டே..."
முத்துப்பாண்டி எதுவும் பேசாமல், எழும்பி, அவிழ்ந்து கிடந்த சாரத்தை கட்டிக் கொண்டான்.
பிரபா: சொல்லணும்னு நினைச்சேன், சாயங்காலம் அப்பா நம்மள பார்த்த பார்வையே சரியில்ல. அவருக்கு ஏதோ சந்தேகம் வந்துருக்கணும். குடிசை முன்னால, மண்ணுல புல்லட் டயர் தடத்தை பார்த்துட்டு, புல்லட்ல யாரு இங்க வர்றது? முத்துப்பாண்டி வருவானான்னு கூட கேட்டார். நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சிட்டேன். அவரு முன்னால கூடவா, என்ன கடிச்சு திங்கிற மாதிரி பாப்ப? கொஞ்சமாவது அறிவு இருக்கா?
பாண்டி: என்னை பண்ண சொல்ற? இவ்வளவு வயசுலயும் இப்படி நிமிர்ந்து நின்னா பாக்க மாட்டாங்களா?...
என்று எந்த இடத்தை குறிப்பிட்டானோ, அந்த இடத்தில் கை வைத்தபடி பேசினான்.
அவள் கையை தட்டி விட்டாள்.
"போதும் எடு கைய.. ஒரு சின்ன பயல வீட்டை விட்டு காலி பண்ண வைக்கிறதுக்கு உனக்கு துப்பில்லை... இந்நேரம் வேலையை முடிச்சிருக்க வேண்டாமா?"
"அவன் நீ நினைக்கிற மாதிரி சாதாரண வாத்தியார் கிடையாது. ஏதோ பெரிய திட்டத்தோட வந்திருப்பான் போல.."
"என்ன திட்டத்தோட வந்தாலும், இந்த சமயத்துல அவன தீர்த்துட்டேனா... பழி முனி மேல போய் விழும் புரியுதா?"
பாண்டி பெருமூச்சு விட்டபடி, தலையாட்டினான்.
"என் பொண்ணையும் கட்டி வச்சி, உன்னை கைக்குள்ள வச்சுக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்னடான்னா அவளை கட்டிக்காம, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கியே..."
"இத பாரு அந்த வேலையெல்லாம் வச்சுக்காத... சொத்தும் பணமும் கையில வந்துச்சுன்னா.. ஆளுக்கு பாதி பிரிச்சிட்டு, இந்த மாதிரி அப்பப்ப ராத்திரி வந்தமா, சந்தோஷமா இருந்தோமான்னு போயிட்டே இருக்கணும். அவள கல்யாணம் பண்ணி வச்சி வீட்டோட மாப்பிள்ளையாக்கி உறவு கொண்டாடுற வேலையெல்லாம் வேண்டாம். அது மட்டுமில்லாம உன்கிட்ட இருக்குற குவாலிட்டி, அவகிட்ட இல்ல.. புரிஞ்சுதா.." என்று கண்ணடித்தான்.
பிரபா பதில் சொல்வதற்குள், குடிசை வாசலில் காலடி சத்தம் கேட்க... இருவரும் அதிர்ச்சியாக தலையை உயர்த்தி பார்த்தார்கள்.
தட்டார்... வெளியே இருந்து யாரோ கதவை எட்டி உதைத்தார்கள்.
"எச்சிக்கல நாய்களா... வெளிய வாங்கல.."
பெரிய கருப்பனின் குரல்.
பாண்டிக்கு தூக்குவாரி போட்டது. பிரபா இதயம் ஒருமுறை தடம் புரண்டு நிமிர்ந்தது. இருவரும் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
பிரபா என்ன செய்யலாம் கண்களால் கேட்க, பாத்துக்கலாம் என்று அவன் தலையசைத்தான்.
"நீங்க ரெண்டு பேரும் உள்ள இருக்கறது எனக்கு நல்லாவே தெரியும். சாயங்காலம் வரும் போதே பாண்டி புடிக்கிற சிகரெட் துண்டுகளை பார்க்கும்போதே சந்தேகப்பட்டேன்..இப்ப வெளியே வரப் போறீங்களா இல்லையா?"
முத்துப்பாண்டி தலை குனிந்தபடியே வெளியே வர, அவனுக்கு பின்னால் பிரபா வெளியே வந்தாள்.
கருப்பனின் முகம் தீப்பிழம்பாக கனன்று கொண்டிருக்க, ரோட்டில் புணர்ந்து கொண்டிருக்கும் நாய்களை பார்ப்பது போல் அவர் முகத்தில் அருவருப்பு.
மாத்தி மாத்தி இருவரையும், வெடி வைத்து கொளுத்தும் ஆக்ரோஷத்துடன் பார்த்தார்.
பிரபா சமாளிக்கும் விதமாக: "என்னப்பா இந்த நேரத்துல? தூக்கம் வரலையா? நாங்க சும்மா நிலத்தை விக்கிறதை பத்தி பேசுறதுக்காகவும் வந்தோம்.. வேற ஒண்ணுல்ல....", என்று பதட்டம் கலந்த, பீதி கலந்த, தர்ம சங்கட சிரிப்பு சிரித்தாள்.
கருப்பன்: சீ!! வாய மூடு நாயே. குடியை கெடுக்க வந்த பாவி. எல்லாம் எனக்கு தெரியும். உங்க முழியை பார்த்ததுமே எனக்கு சாயங்காலமே சந்தேகம், அத்தைய பாக்குற மாதிரியா இவன் பார்த்தான்.. கேடு கெட்ட உறவு உனக்கு தேவையா?... இந்த வயசுல உனக்கு எதுக்குடி இவ்வளவு *** அரிப்பு!!!
பிரபா, கண்டுபிடிக்கப்பட்டதை உணர்ந்தாள். வேறு வழி இல்லை. கண்ணீர் சுரப்பிகள் அவசரமாக வேலை செய்தன.
"ஐயோ அப்பா, என்ன மன்னிச்சிடுங்க.. இவன் மிரட்டி பணிய வச்சிட்டான்", என்று அழுதபடி ஓடிப்போய் அவர் காலில் விழ,
கருப்பன் எட்டி அவள் மாரில் உதைத்தார். ஐயோ என்று அவள் மண்ணில் உருண்டாள்.
கருப்பனுக்கு கோபாவேசம் தாங்காமல் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. என்ன சொல்வதென்று தெரியாமல் உர்ரென்று உறுமியபடி அங்கும் எங்கும் நடந்தார். பேராத்திரத்தில் அவரின் கன்னத்து சதைகள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தது. முத்துப்பாண்டி எதுவும் பேசாமல், முறைப்புடன் கை கட்டியபடி நின்றிருந்தான்.
"தாய் மாதிரி நினைக்க வேண்டிய அத்தை கிட்ட இப்படி முறை தவறி நடக்கிறதுக்கு எப்படில உனக்கு மனசு வந்துச்சு?..
தூ....நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியவா போகுது?"
பிரபா எழும்பாமல், மண்ணில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்க,
கருப்பன்: நானும், என் பேத்திகளும் உன்னை எவ்வளவு உயரத்தில் வச்சிருந்தோம். மூதி!!! நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவ பெயரை தேடி கொடுத்துட்டே. அருவா கொண்டு வந்திருந்தா கண்டம் துண்டமாக வெட்டி போட்டுருப்பேன். பாவம், அந்த வாத்தியாரு, நம்ம குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை அவர் பிரச்சனையா எடுத்துக்கிட்டு சரி பண்ணனும்னு நினைக்கிறாரு. அவரையே கொலை பண்ண முயற்சி பண்றீங்களா? உங்களை சும்மா விடமாட்டேன்... நேரா போலீஸ்க்கு தான் போகப்போறேன். ஃபிராடு, கொலை முயற்சின்னு கைது செஞ்சி உள்ள வச்சா தான் நீங்க திருந்துவீங்க..."
சொல்லிவிட்டு இருவரையும் பார்க்க பிடிக்காமல், விருட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
பிரபா: அப்பா... அப்பா... என்று கதற,
அவர் திரும்பி கூட பார்க்கவில்லை.
அவள் முத்துப்பாண்டியிடம் கண்ணை காட்ட .... அவன் ஓடி சென்று அவர் கைகளை பிடித்தான். "விடுல கையை", என்று கையைத் தட்டி விட்டு, மறுபடியும் நடந்தார். மறுபடியும் அவன் கையைப் பிடித்து இழுத்து, இந்த தடவை பலத்தை காண்பித்து முறுக்கினான்.
"யோவ் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கோம்... உன்பாட்டுக்கு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்? கொஞ்சம் நில்லு", என்று ஒருமையில் எகத்தாளமாக பேச... வேகமாக திரும்பிய கருப்பன், அவன் கன்னத்தில் பொளேரென்று ஒன்னு வைத்தார்.
முத்து பாண்டி ரெண்டு சுத்து சுத்தி கீழே விழுந்தான்.
"பொசக்கெட்ட பயலே... கைய மடக்கி குத்தினேன்னு வச்சுக்க... உடம்புல இருக்குற ரத்தம் அவளத்தையும் கக்கி செத்துருவ. அவளோ கோவத்துல இருக்கேன். என் கண்ணு முன்னால நிக்காத, பேசாம போயிரு....", என்று சொல்லிவிட்டு, விசுக் விசுக் என்று நடக்க ஆரம்பித்தார்.
முத்துப்பாண்டி தூசியை தட்டி கொண்டு எழும்பினான். அவர்களைப் திரும்பி பார்க்க கூட பிடிக்காமல், கருப்பன் மனவெறுக்கையில் சென்றார்.
அவர் நிலத்தை தாண்டி, தென்னந்தோப்புக்குள் ஏறும் போது, தடதடவென பின்னால் சத்தம் கேட்க, கருப்பன் நின்றார்.
இந்த எச்சிகலைகளை மறுபடியும் திரும்பி பார்க்கணுமா என்ற வெறுப்பில், மெதுவாக திரும்பினார்.
தட்ட்ட்ட்....
அவர் புற மண்டையில் கம்பியால் அடி விழ...
க்ரக்... கீறல் விழுந்தது.
ஆ!!!! என்று அலறிய கருப்பன் தலையில் கை வைத்தபடி திரும்பினார். முத்துப்பாண்டி தான் நிற்பான் என்று எதிர்பார்த்து, அவன் கழுத்தை நெரிப்பதற்காக கையை நீட்டிப்படியே திரும்ப, கையில் இரும்பு கம்பியுடன் பிரபா நிற்பதை பார்த்ததும், உச்சக்கட்டமாக அதிர்ந்தார்.
அவளைத் தொடக் கூட கைக்கூசியது. சே!!!!நீட்டிய கைகள் தளர்ந்து தொங்கியது.
"உன்னை எவன் இந்த சமயத்துல வர சொன்னது? சாவு...", என்று ஆங்காரமாக கத்தியபடி,
அவர் துள்ள துடிக்க, மண்டையில் பட் பட்டென்று அடித்தாள். கருப்பன் சுருண்டு கீழே விழுந்தார். மண்டை உடைந்து பிளக் பிளக் என்று ரத்தம் வந்தது. வலியால் சிறிது நேரம் முனகி கொண்டு இருந்தவரின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டி, அவர்கள் அருகில் ஓடி வந்தான்.
"என்ன இப்படி பண்ணிட்ட?"
"வேற என்ன பண்றது? உன்னையும் என்னையும் பாத்துட்டான். இனிமே இவன் உயிரோட இருந்தா, நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டான்.." கொஞ்சம் கூட இரக்கமற்ற குரலில் பதிலளித்தாள்.
முத்துப்பாண்டி மூச்சி இருக்குதா என்று கருப்பனை திருப்பி போட்டு பார்த்தான். மூச்சுப் பேச்சு இல்லை. நிலை குத்திய அவர் கண்களில் உயிர் இல்லை.
"ஆளு செத்துட்டான்..."
பிரபா எதுவுமே யோசிக்காமல், "இவனை தூக்கிட்டு போய் மேட்டு தெரு அவன் வீட்டு வாசலில் போட்டுடுவோம். யாராவது பார்த்தா முனி இவனை அடிச்சிருச்சுன்னு நினைச்சுக்கட்டும்..."
முத்துப்பாண்டி பதட்டமாக, "மேட்டு தெருவுக்கு தூக்கிட்டு போகும்போது யாராவது பாத்துட்டா என்ன பண்றது?"
பிரபா: 12 மணிக்கு மேல தூக்கிட்டு போனா, பிரச்சனையே இருக்காது. முனி பயத்துல ஒரு பய இருக்க மாட்டான்.. கவலைப்படாதே.
தென்னந்தோப்பில் இருந்த தென்னை மரங்கள் நடந்த சம்பவத்தை ரகசியமாக உள்வாங்கிக் கொண்டன. காற்று விஷ் விஷ் என்று சத்தமிட்டபடி அடித்து, பாவ கறையை துடைத்து கொண்டிருந்தது.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
Latest Post: 32. எழுந்திடும் காதல் காவியம் Our newest member: Dharani Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page