சித்திரை – 20
ஆரம்பத்தில் வர்மா, ஜனார்த்தன் மற்றும் ரத்தனோடு பேச தொடங்கிய போது மற்றவர்களும் வந்து இணைந்து கொள்ள.. நிலா அவர்களுக்கு இடம் விட்டு நகர முயன்ற நேரம், சற்று முன் இதே போல் அவள் இடம் விட்டு நகர்ந்து நிற்கும் போதே மாதேஷ் வந்து அவனைத் தொல்லை செய்தது நினைவுக்கு வர.. மீண்டும் அது போல் நடந்து விடக் கூடாது என்றே அவளின் கையைப் பிடித்துத் தன் அருகில் நிறுத்திக் கொண்டவன், நிலா தனக்கு முக்கியமானவள் எனத் தெரிந்தால் இனி யாரும் நிலாவை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்திலேயே அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டு நின்றான் வர்மா.
ஆனால் அதைக் கண்டு ஜனாத்தனும் ரத்தனும் கேலி பேச.. ‘அதெல்லாம் இல்லை..’ என மறுக்க நினைத்த வர்மா, அப்போதே வெகு அருகில் நேஹா நின்று இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் அத்தனை அலட்சியமான ஒரு புன்னகை வந்ததையும் கண்ட பின்பே சட்டென ஆமென்று சொல்லி விட்டிருந்தான் வர்மா.
இதைக் கேட்டதும் அவள் முகத்தில் உண்டான அதிர்வும், அதன் பின் வேகமாக நேஹா அங்கிருந்து விலகிச் சென்றதையும் கண்டு வர்மாவுக்குச் சந்தோஷமானது. ‘இனியாவது தன்னை அவள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்..’ என்ற எண்ணத்தோடே அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தான் வர்மா.
ஆனால் அங்கிருந்து வேகமாகச் சென்றவளோ அதற்கு நேர் மாறாக வேறு ஒன்றை செய்து கொண்டிருந்தாள். இங்கே வர்மாவோடு தங்க இருக்கும் இந்த மூன்று நாட்கள் தான் தனக்கான வாய்ப்பு என்று நேஹாவுக்கு நன்றாகவே தெரியும்.
இதைத் தவற விட்டால் திரும்ப இப்படி ஒரு வாய்ப்போ ஆளவந்தான் இல்லாத பயணமோ சாத்தியமில்லை என்று அறிந்திருந்தவள், எப்படியாவது இந்த மூன்று நாட்களுக்குள் திரும்ப வர்மாவை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள்.
அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய ஓரளவு தயாராகவே வந்திருந்தாள் நேஹா. இப்போதும் அப்படியே ரத்தன் அங்கிருந்த வெயிட்டரிடம் அனைவருக்கும் மதுபானம் கொண்டு வரச் சொன்னதைக் கவனித்திருந்தவள், வேகமாக அவரை நோக்கி சென்றாள்.
தன் கையோடு கொண்டு வந்திருந்த போதை பொருளை அவரிடம் கொடுத்தவள், வர்மாவை கை காண்பித்து “அவருக்குக் கொடுக்கும் கிளாஸில் மட்டும் யாருக்கும் தெரியாம இதைக் கலந்துடுங்க..” என்றாள் நேஹா.
ஆனால் அதைக் கேட்டு அதிர்ந்த வெயிட்டரோ “இல்லை மேடம், இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.. ரத்தன் சாருக்கு மட்டும் தெரிஞ்சதுனா அவ்வளவு தான்..” என்று பயந்து பின் வாங்கினான்.
“என்ன அண்ணா அவருக்கு எப்படித் தெரிய வரும்..? அதெல்லாம் யாருக்கும் தெரியாது, ப்ளீஸ் எனக்காக இந்த ஹெல்ப்பை செய்யுங்களேன்..” என்று தன் தலை கணத்தை எல்லாம் விடுத்துக் கெஞ்சலில் இறங்கினாள் நேஹா.
“மேடம் நீங்க நினைக்கறது போல இது சின்ன விஷயம் இல்லை, நான் இதைச் செய்ய மாட்டேன்.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகும்.. போலீஸ் கேஸ் வரைக்கும் போகும்..” என்று அவன் அப்போதும் மறுத்தான்.
“இது பெரிய பிரச்சனை எல்லாம் ஆகாது அண்ணா.. நீங்க நினைக்கறது போல அவர் வேற யாரோ இல்லை.. எங்களுக்குள்ளே ஒரு சின்னப் பிரச்சனை, என்னால் அவர்கிட்ட போய்ப் பேச கூட முடியலை.. நான் சொல்றதை கேட்கறதுக்கு அவருக்கு நேரமும் இல்லை, இது போல ஏதாவது நடந்து நான் அவருக்கு உதவி செய்யறது போலப் போனா தான், நான் என்ன சொல்ல வரேன்னே அவர் கேட்பார்.. நிச்சயமா தப்பா எதுவும் நடக்காது, பிரச்சனையாவும் ஆகாது.. எல்லாம் நல்லாபடியா முடியும், உங்களுக்குப் புரியுதா..
நாங்க திரும்பச் சேர நீங்க தான் உதவி செய்யணும்.. நாளைக்கு எல்லாம் சரியான பிறகு அவரே வந்து உங்களுக்கு நன்றி கூடச் சொல்லுவார்.. ஏன்னா அந்த அளவுக்கு அவர் என்னை விரும்பறார், இப்போ ஏதோ ஒரு கோபம்.. அதில் இப்படி எல்லாம் நடந்துக்கறார்..” எனக் கண்கலங்க அவள் பேசியதை, அவர் யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்க.. இது தான் தனக்கான சந்தர்ப்பம் என முடிவு செய்தவள்,
“நான் அவரை ரொம்ப விரும்பறேன், அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியாது.. ஒரு சின்னப் பிரச்சனை, அது இவ்வளவு தூரம் எங்களுக்குள்ளே பெரிய இடைவெளியை உண்டாக்கும்னு நான் நினைச்சு கூடப் பார்க்கலை.. ஆனா அப்படி ஒண்ணு நடந்து நாங்க இப்போ தனித்தனியா இருக்க வேண்டிய சூழல்..
இப்போ உடனே இதை நான் சரி செய்யலைனா திரும்ப நாங்க வாழ்க்கையில் ஒண்ணா சேரவே முடியாதோன்னு எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.. இங்கே இருந்து ஊருக்குப் போனதும், அடுத்த நாளே அவர் வெளிநாடு கிளம்பி போறார், அதுக்குப் பிறகு அவர்கிட்ட பேசக்கூட எனக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிடும்..
நான் பெருசா எதுவும் ஆசைப்படலை, நான் சொல்றதை அவர் ஒருமுறை கேட்டா போதும்.. நிச்சயம் அதற்குப் பிறகு என் மேலே இருக்கும் கோபம் எல்லாம் அவருக்குக் காணாம போயிடும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..
நீங்க இந்த உதவி மட்டும் எனக்குச் செஞ்சா, என் வாழ்நாள் முழுக்க உங்களை நான் மறக்கவே மாட்டேன்.. திரும்ப நாங்க சேர்ந்ததுக்கான காரணமா நீங்க தான் இருப்பீங்க.. இப்போவும் உங்களுக்கு நம்பிக்கை வரலைனா இதோ பாருங்க..” எனத் தன் அலைபேசியில் இருவரும் சேர்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படத்தைக் காண்பித்தாள் நேஹா.
அதில் நேஹாவை பின்னிருந்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு புன்னகை முகமாக நின்றிருந்தான் வர்மா. புகைப்படத்தில் இருந்த இருவரின் முகங்களிலும் அவ்வளவு சந்தோஷம்.
அதையே பார்த்தப்படி வெயிட்டர் நின்றிருக்க.. “வேணும்னா உங்களுக்கு இதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் அண்ணா.. என் வாழ்க்கையை எனக்கு மீட்டுக் கொடுங்க..” என்றவளின் உருக்கமான பேச்சில் அவர் மனம் கரைந்து போனது.
அவளின் அண்ணா என்ற அழைப்பும், ஒரு சிறு தவறால் தன் காதல் வாழ்க்கை பிரச்சனையில் இருப்பதாகச் சொல்லி அதைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுவதாக அவள் பேசியதும் எல்லாம் சேர்ந்து அவரின் மனதை கரைத்திருந்தது.
ஏனெனில் அவரின் காதலும் இப்படியான ஒரு சிறு தவறால் தான் பெரும் பிரிவை சந்தித்து இருந்தது. அங்கே தவறை சரி செய்து கொள்ள இப்படியொரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவே இல்லை.
அதில் இவளாவது சந்தோஷமாக வாழட்டும் என்ற முடிவுக்கு வந்தவராக “பணம் எல்லாம் வேண்டாம் மேடம், உங்க வாழ்க்கையை இது சரி செய்யும்னு சொல்றீங்க, அதுக்காகச் செய்றேன்..” என்றிருந்தார் நேஹா ஒரு நச்சுப் பாம்பு என அறியாதவராக அந்த வெயிட்டர்.
“இல்லை, நீங்க செய்யப் போற உதவிக்கு நான் ஏதாவது கைமாறு செஞ்சே ஆகணும்.. இதை என்னோட பரிசா வெச்சுக்கோங்க..” என அவள் எடுத்துக் கொடுத்த தொகை அவரின் இரண்டு மாத சம்பளம்.
அதைக் கண்டு அவர் திகைக்க.. “வெச்சுக்கோங்க அண்ணா ப்ளீஸ், இதை யாருக்கும் தெரியாம கச்சிதமா செஞ்சு முடிப்பீங்கன்னு நம்பறேன்.. உங்க கையில் தான் என் வாழ்க்கையே இருக்கு அண்ணா.. இப்போ விட்டா திரும்ப இப்படி ஒரு வாய்ப்ப்பு நமக்குக் கிடைக்காமலே போகலாம், பார்த்து செய்ங்க..” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நேஹா.
அதில் அவரும் “இது உங்க வாழ்க்கையைச் சரி செய்ய உதவும்னா கண்டிப்பா செய்யறேன் மேடம்..” என்று விட்டு நகர்ந்தார். அதன்படி அவர் சரியாக அந்தப் போதைப் பொருள் கலந்த மது கோப்பையை வர்மாவிடம் சேர்த்து விட்டு, நேஹாவுக்கு விழியசைவில் அதைத் தெரியப்படுத்தி விட்டு நகர்ந்தார் வெயிட்டர்.
அவளும் மறைந்திருந்து வர்மா அந்தக் கோப்பையில் இருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பதை விழிகள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள் நேஹா.
தன் திட்டப்படி அனைத்தும் சரியாகச் செல்வதை எண்ணி உண்டான மகிழ்ச்சியோடே, இனி உன்னால் எதுவும் செய்ய முடியாது.. நான் நினைத்தது தான் இங்கே நடக்கும்..’ என்ற திமிரோடே அவள் நிலாவை இடித்துக் கொண்டு சென்றாள்.
ஆனால் அதுவே தனக்குப் பிரச்சனையாகுமென அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகு நேஹா கொஞ்சமும் எதிர்பாராதது எல்லாம் நடந்திருந்தது. நிலா தடுமாறுவதைக் கண்டு வர்மா ஓடி சென்று அவளுக்கு உதவியதையும், இத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள் என்ற தயக்கம் கொஞ்சமும் இல்லாமல் நிலாவின் காலை பிடித்துக் கொண்டு இருந்ததும், அதன் பின்னான மற்றவர்களின் கேலியும் என அத்தனையும் நேஹாவை முள் மேல் நிற்பது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளி இருந்தது.
அதிகபட்சம் இன்னும் ஒரு அரை மணி நேரம் சென்றிருந்தால், அவள் நினைத்தது போல் எல்லாம் நடந்திருக்கும். அதற்குள் நிலா கீழே விழுவது போல் தடுமாறியதில் எல்லாம் தலைகீழாக மாறிப் போய் இருந்தது. இப்போது தன் கண் முன்பே நிலாவின் காலை பிடித்துக் கொண்டிருக்கும் வர்மாவை காண காண அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம் பொங்கியது.
இதற்கெல்லாம் தானே காரணம் என எப்போதும் போல் மறந்து விட்டு, இப்போதும் நிலாவே தவறு என எண்ணியவள், வர்மாவை தன் பக்கம் இழுக்க அவள் நாடகம் ஆடுவதாகவே நினைத்தாள்.
‘என் வாழ்க்கையிலேயே விளையாட நினைக்கறியா..? என் மஹியை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கறியா..?’ எனப் பல்லை கடித்தவளுக்கு நிலாவை அடித்துத் துவைக்கும் அளவுக்கு ஆத்திரம் எழ.. இத்தனை பேர் முன்பு என்ன செய்வதெனத் தெரியாமல் நேஹா முறைத்துக் கொண்டு இருக்கும் போதே கை தாங்கலாக நிலாவை பிடித்தபடி அவர்கள் தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றான் வர்மா.
இது வேறு அவளுள் பயப்பந்தை உருளை செய்திருந்தது. அவனுள் சென்று இருக்கும் போதை இன்னும் சில நிமிடங்களில் தன் வேலையைக் காண்பிக்கத் தொடங்கும் என்று புரிய.. வேகமாகச் சென்று அவர்களை அறைக்குச் செல்ல விடாமல் வழி மறிக்க நினைத்தவள், அங்கிருந்த அத்தனை பேரின் கவனமும் வர்மா மற்றும் நிலாவின் மேல் பதிந்திருப்பதைக் கண்டு லேசாகத் தயங்கினாள் நேஹா.
ஏற்கனவே இங்கே சிலருக்கு நேஹா மற்றும் ஆளவந்தானின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.. அதோடு அவள் தங்கி இருக்கும் இடமும் வேறு திசையில் இருப்பதால் என்ன காரணம் சொல்லி இவர்களின் பின்னே செல்வது எனப் புரியாமல் விழித்தவள், அவசரமாக யோசித்து ஏதோ ஒரு முடிவுக்கு வருவதற்குள் அங்கே வர்மாவின் நடை லேசாகத் தள்ளாடத் தொடங்கி இருந்தது.
நிலாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவள் கால்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குக் கண்கள் லேசாக இருட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது. ஆனால் தலையை உலுக்கி அதைச் சரி செய்து கொண்டப்படியே அப்போது சமாளித்து விட்டிருந்தவன், அறையை நோக்கி நடக்கத் தொடங்கிய நொடியில் இருந்து காலுக்குக் கீழே பூமி நழுவுவது போல் அவனுள் ஒரு எண்ணம்.
தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு நிலாவை வர்மா கை தாங்கலாகப் பிடித்து அழைத்துச் செல்வது போல் தோன்றினாலும், உண்மையில் அவள் தான் வர்மாவை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்.
வர்மாவின் கைபிடித்துச் சில அடிகள் நடக்கத் தொடங்கிய போதே அவளுக்கு அந்த வித்தியாசம் புரிந்து விட்டிருந்தது. அவனின் மொத்த பாரமும் தன் மேல் சரிய.. நடக்க முடியாமல் தடுமாறியவள் “சார் உங்களுக்கு ஒண்ணுமில்லையே..?” என்றாள் வர்மாவை பார்த்துப் பதட்டத்தோடான குரலில் நிலா.
“நோ.. ஐ ம் நாட் ஓகே நிலா, எனக்கு என்னவோ செய்யுது, ஆனா என்னன்னு சொல்ல தெரியலை.. இப்போ என்னால் பேசவும் முடியலை.. என்னை எப்படியாவது ரூமுக்கு கூட்டிட்டு போயிடு ப்ளீஸ், வேற யாரும் இதைக் கவனிக்கறதுக்கு முன்னே நாம ரூமுக்கு போயிடலாம்..” என்று மெல்லிய குரலில் சொல்லி இருந்தான் வர்மா.
அதில் சூழ்நிலை புரிய, நிலாவும் வர்மாவை மெதுவாக அறையை நோக்கி அழைத்துச் சென்றாள். அவளுக்கும் காலில் வலி இருந்ததால் இருவராலும் வேகமாகச் செல்ல முடியவில்லை. மெதுவாகவே நடந்தவர்கள் மற்றவர் கண்ணில் இருந்து மறையும் வரை பொறுமையாக இருந்த பின் “சார் உங்களுக்கு என்ன செய்யுது..? நாம டாக்டரை பார்க்கணுமா..?” என்று பதறினாள் நிலா.
ஏனெனில் கண்கள் சொருகி நடை தள்ளாட வர்மா இருந்த நிலை அவளைக் கலவரம் கொள்ளச் செய்திருந்தது. இதுவரை இப்படி ஒரு நிலையில் வர்மாவை அவள் பார்த்ததே இல்லை.. அந்த அளவிற்கு அவன் பார்ட்டியில் குடித்து விட்டான் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.
அவள் கவனித்த வரை வர்மா பார்ட்டி முழுக்க ஒரே கோப்பையைத் தான் கையில் வைத்திருந்தான். இப்போது குடித்தது இரண்டாவது கோப்பை. இங்கிருக்கும் பலர், ஆறேழு கோப்பைகளுக்கு மேல் குடித்தும் இவ்வளவு தள்ளாடவில்லை.
அப்படி இருக்கும் போது இது என்ன என அவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை வர்மாவுக்கு உடல்நிலையில் எதுவும் பிரச்சனையோ என்று எண்ணியவள், “சார் நாம டாக்டர்கிட்ட போயிடலாமே..?” என்று தயங்கி இழுத்தாள்.
“இல்லை வேண்டாம், நாம ரூமுக்குப் போயிடலாம்.. எனக்கு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு நினைக்கறேன்.. சம்திங் பிஷி.. ஐ திங்க் லாஸ்ட்டா நான் குடிச்சதில் தான் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்..” என்று அவன் சொல்ல.. அப்போதே அந்தத் திசையில் யோசித்தவள் “ஓ அப்படியா சார், ஓகே நாம ரூமுக்கே போயிடலாம்.. நீங்க தூங்கி எழுந்தா சரியாகிடும்னா ஒகே தான்..” என்று ஒருவாறாக அவனை அழைத்துக் கொண்டு குடிலுக்கு வந்து சேர்ந்திருந்தாள் நிலா.
இப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும். கீ கார்ட் வர்மாவிடமிருந்து இருந்தது. “சார் கார்ட் கொடுங்க..” என்று நிலா கேட்கவும், “கார்ட்டா..? என்ன கார்ட்..?” என்று புரியாமல் கேட்டான் வர்மா.
இதில் அவனுக்குப் புரிய வைக்க இப்போது நேரம் இல்லை என்று உணர்ந்தவள், ‘என்ன செய்வது..?’’ என அவசரமாக யோசித்தாள் நிலா. வர்மாவின் முழுப் பாரத்தையும் அவளால் அதிக நேரம் தாங்கிப் பிடிக்க முடியாது.
அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உணர்வை இழந்து கொண்டிருப்பது தெளிவாக நிலாவுக்குப் புரிந்தது. அதே நேரம் அவளுக்கும் கால் அதிக வலியை கொடுக்க நிலாவாலும் சரியாக நிற்க முடியவில்லை.
அதில் உள்ளே செல்ல என்ன வழி என யோசித்தவள், இங்கிருந்து கிளம்பும் போது வர்மா கீ கார்டை தன் பர்ஸில் வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே வர்மாவின் பக்கம் திரும்பி “சார் பர்ஸ் எடுங்க..” என்றாள் நிலா.
அவளின் குரலுக்குத் தலையை நிமிர்த்தி விழிகளைத் திறந்து நிலாவை பார்க்க முயன்றவன், அது முடியாமல் மீண்டும் அவள் மீதே சரிய.. இனி அவனிடம் பேசி பயனில்லை என்று புரிய.. வர்மாவை அருகில் இருந்த சுவரில் சாய்த்து நிற்க வைத்தவள், அவனின் முன் நின்று வர்மாவின் பேக்கட்டில் இருந்து பர்ஸை எடுக்க முயன்றாள் நிலா.
ஆனால் சுவரில் சாய்ந்து நிற்காமல் வர்மா மீண்டும் இவள் மீதே சரிய.. “இரண்டு நிமிஷம், இரண்டே நிமிஷம் சார், ப்ளீஸ் இப்படியே சாய்ந்து இருங்க..” என அவனை மீண்டும் சுவரில் சாய்த்து நிற்க வைத்தவள், ஒரு கையால் வர்மா மீண்டும் சாய்ந்து விடாதவாறு அவன் மார்பில் கை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் பர்ஸை எடுக்க முயன்று தன் கையை வர்மாவின் அருகில் கொண்டு சென்றவள், அவனின் பேக்கெட்டிற்குள் கையை நுழைக்கத் தயங்கி அப்படியே நின்றாள்.
‘என்ன இருந்தாலும் இப்படிச் செய்வது சரியா..?’ என அவளுக்கே புரியவில்லை. அதில் உண்டான தயக்கத்தோடு ‘இது.. இது தப்பில்லையா..?’ என்று நிலா தனக்குத் தானே கேட்டுக் கொள்ள.. ‘ஆபத்திற்குப் பாவம் இல்லை, இப்போ இதைச் செய்யலைனா இரண்டு பேருமே உள்ளே போக முடியாது.. அதோட சாரும் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும்..? கீழே விழுந்துட்டா என்ன செய்ய..? எனக்குத் தேவையான போது கேட்காமலே வந்து உதவி செஞ்சவருக்கு இப்போ உதவி தேவை.. அதை மட்டும் தான் நான் யோசிக்கணும்.’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திடமான ஒரு முடிவுக்கு வந்தாள் நிலா.
பெரும் தயக்கத்தோடு தன் வலது கையை வர்மாவின் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தவள் பஸ்ஸை எடுக்க.. மீண்டும் வர்மா அவள் மேல் சரிந்தான்.
அவனைக் கீழே விழுந்து விடாதவாறு தாங்கி பிடித்து மீண்டும் சுவரில் சாய்த்தவள், வேகமாக அந்தப் பர்ஸில் இருந்து கீ கார்டை வெளியில் எடுத்தாள்.
அதேநேரம் தலையை உலுக்கிக் கொண்டு அவளைப் பார்த்த வர்மா மீண்டும் அவள் மேல் தலை சாய்க்க.. “ஒன் மினிட் சார்.. இதோ உள்ளே போயிடலாம்..” என்றவாறே சென்சாரின் முன் கீ கார்ட்டை காண்பித்தவள், கதவை திறந்து கொண்டு வர்மாவோடு உள்ளே நுழைந்தாள்.
வர்மா தங்கி இருந்த அறைக்குள் அவனை அழைத்துச் சென்றவள், அவனைப் படுக்க வைக்க முயல.. சரியாக அதே நேரம் நிற்க முடியாமல் வர்மா தடுமாறியதில் நிலாவின் கால் இடறி அவளோடு சேர்ந்து படுக்கையில் விழுந்தான் வர்மா.
தன் மேல் சரிந்திருந்தவனைப் பெரும் திகைப்போடு பார்த்தவள், வர்மாவை மெதுவாகத் தன் மேல் இருந்து நகர்த்த முயல.. ஆனால் அவளால் அது முடியவே இல்லை.
இவ்வளவு தூரம் அவனை அழைத்து வந்திருந்ததிலேயே சோர்ந்து போய் இருந்தவள், முழு வேகத்தோடு அவனை நகர்த்த முடியாமல் முயன்று தோற்றாள்.
விழிமூடி நினைவே இல்லாமல் தன் கழுத்து வளையில் முகம் புதைத்திருந்தவனை எப்படித் தன் மேல் இருந்து நகர்த்துவது என்று புரியாமல் விழித்தவள், மீண்டும் மீண்டும் அதற்கு முயன்று கொண்டிருக்க.. இந்த அசைவில் லேசாக விழிகளைத் திறந்தான் வர்மா.
தன் முகத்திற்கு நேரே வெகு அருகில் தெரிந்த அவள் முகத்தையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், தன் ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை வருட.. இதைக் கண்டு திகைத்தவள் விழி விரிய அவனைச் செய்வதறியாது பார்க்க.. “ப்யூட்டிஃபுல்..” என்றான் ரசனையான குரலில் வர்மா.
இப்போது மூச்சு விட மறந்து நிலா அப்படியே அசையாமல் இருக்க.. அவள் முகத்தையே ரசனையோடு பார்த்தவனின் விழிகள் அவளின் முகம் முழுக்க பயணித்து இதழில் வந்து நிலைத்தது. பின் மெதுவாக அவள் முகத்தை வர்மா ஆசையோடு நெருங்க.. பெரும் அதிர்வோடு அவனைப் பார்த்தாள் நிலா.
வர்மா தன் நிலையில் இல்லை என்று புரிந்திருந்ததால் மெல்ல அவனை நிலா நகர்த்த முயல.. அவனோ அதற்கு வாய்ப்பளிக்காமல் மேலும் அழுத்தமாக அவள் மேல் சரிந்தான். இதில் செய்வதறியாது நிலா விழிக்க.. மெல்ல மெல்ல அவள் இதழ்களை நெருங்கியவன், அப்படியே மீண்டும் மயங்கி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் வர்மா.
அதுவரை மனம் மத்தளம் வாசிக்கத் திகைப்போடு வர்மாவை தடுக்கும் வழி தெரியாது பார்த்திருந்தவள், இப்போதே “ஊப்ப்ப்ப்..” என ஆசுவாச பெருமூச்சோடு விழிமூடினாள்.
பின் மெதுவாக வர்மாவை தன் மேல் இருந்து நகர்த்திப் படுக்கையில் சரித்தவள், அவனின் ஷூ மற்றும் கோட்டை மட்டும் கழற்றி வர்மாவுக்கு உறங்க வசதி செய்து கொடுத்தவள், நன்றாகப் போர்த்தி விட்டு அந்த அறையின் கதவை மூடிக் கொண்டு வெளியில் வந்தாள்.
தன் அறைக்குள் வந்து குளித்து முடித்து உடை மாற்றிப் படுத்தவளுக்குக் கொஞ்சமும் உறக்கமில்லை. வர்மாவின் இன்றைய நிலையே அவள் மனதை எதுவோ செய்தது. எப்போதும் கம்பீரமாகவே பார்த்து பழகி இருந்தவனின் இன்றைய நிலை அவளைக் கவலைக் கொள்ளச் செய்தது.
‘இத்தனை பெரிய மனிதர்கள் கூடி இருக்கும் இடத்தில் வர்மாவுக்கு இப்படியானது மற்றவர்களுக்குத் தெரிந்தால் அது எவ்வளவு அசிங்கம்..?’ எனத் தோன்ற.. இரவெல்லாம் அவளுக்கு உறக்கமே வரவில்லை.
அதிலும் வர்மா இறுதியாகச் சொன்ன ‘கடைசியா குடிச்சது தான் ஏதோ ஒத்துக்கலை..’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் மனதில் ஒலிக்க.. நிலா சற்று தள்ளி வந்து நின்ற பின் வெயிட்டர் வர்மாவுக்கு மதுக் கோப்பையைக் கொடுத்து விட்டு நகரும் போது நேஹாவை பார்த்து ஏதோ சைகை செய்தது போல் அவளுக்குத் தோன்றியது.
மீண்டும் அந்தக் காட்சியை மனதில் ஒட்டி பார்த்தவளுக்கு, அது நிஜம் தான் என்பது போல் நேஹா திரும்பப் புன்னகைத்ததும் புரிந்தது. இதில் அவளே எதுவோ செய்திருப்பதைக் கண்டு கொண்டவள், விடிந்ததும் முதல் வேலையாக நேஹாவை தேடி சென்றாள்.
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் நேஹா இவர்களின் குடிலுக்கு வெளியே தான் சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்றிருந்தாள். நிலாவுக்கு மட்டுமில்லை, நேஹாவுக்கும் இரவெல்லாம் துளியும் உறக்கமில்லை. இங்கே இரவு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளும் வரை அவளுக்கு நிம்மதியும் கிடையாது.
அதில் பிங்கியின் தடையை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தமால் இங்கே வந்து நின்றிருந்தவள், நிலா கதவை திறந்ததில் இருந்து அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க.. நேராக அவள் முன் வந்து நின்ற நிலா “ச்சீ.. இப்படி எல்லாம் செய்ய உனக்கு வெட்கமா இல்லை..?” என்றாள்.
தன் அத்தனை முயற்சியையும் வீணாக்கியதோடு திமிராகத் தன் முன் வந்து நின்று பேசுபவளை ஆத்திரமாகப் பார்த்த நேஹா “உனக்கே இல்லாத வெட்கம் எனக்கு எதுக்கு..? காலில் அடிப்படாமலே போலியா நடிச்சு அவரைப் பணத்துக்காக ஏமாத்த பார்த்தவத் தானே நீ..?” என்றாள்.
“உன்னைப் போலவே என்னையும் நினைச்சா அப்படித் தான் யோசிக்கத் தோணும்.. நீ செஞ்ச கேவலமான வேலை எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா.?” என்றாள் நிலா.
“ஹாஹா.. என்னைப் போல உன்னை நினைச்சேனா..? யாரு நானா..? என் கால் தூசிக்கு நீ வர மாட்டே.. உன்னை எனக்குச் சமமா நான் நினைப்பேனா..!” என்று பெரிய ஜோக் சொன்னது போல் சிரித்தாள் நேஹா.
“நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ.. அதைப் பற்றி நான் கவலைப்படவே மாட்டேன், ஆனா நேற்று நீ செஞ்சது எவ்வளவு கேவலமான செயல் தெரியுமா..? இத்தனை பேர் வந்திருக்க இடத்தில் சாருக்கு ஏதாவது நடந்திருந்தா அவருக்கு எவ்வளவு அசிங்கம்..?” என்றாள் நிலா.
“போதும் உன் நடிப்பு, உன் நாடகத்தை எல்லாம் அவர்கிட்ட காட்டு, நம்புவார், உன்னை விட அவர் மேலே எனக்கு அக்கறை இருக்கு..” என அலட்சிய குரலில் கூறினாள் நேஹா.
“உன் அக்கறையைத் தான் நேற்று நான் பார்த்தேனே..! இத்தனை நாள் சார் மேலே ஆசைப்படறீங்க..” என்று தொடங்கியவள், “இனி உனக்கு என்ன மரியாதை..?” என்று விட்டு “அதனால் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறேன்னு நினைச்சேன், அதனால் தான் உங்களுக்கு இடையில் நான் வரவே இல்லை.. ஆனா இனி அப்படி இருக்க மாட்டேன்.. உனக்கு ஒண்ணு தேவைனா அதுக்கு எந்த எல்லைக்கும் நீ போவேன்னு தெரிஞ்சுடுச்சு.. இனி என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது.. என் அனுமதி இல்லாம உன்னால் அவரை இனி நெருங்கவே முடியாது..” என்றாள் கோபக் குரலில் நிலா.
ஆனால் அவளின் கோபத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் சத்தம் போட்டு சிரித்தவள், “நான் அவரை நெருங்க உன் அனுமதி யாருக்கு வேணும்.. முதலில் என்னை அனுமதிக்க நீ யார்..?” என்றவள் அப்படியே குரலை மாற்றி “ஆமா, இவ்வளவு திமிரா வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கியே, நான் யார்னு உனக்கு தெரியுமா..? நான் அவர் மனைவி.. மிசஸ் மஹேந்திரவர்மன்..” என்றாள் திமிராக நேஹா.
இதைக் கேட்டு அடுத்த வார்த்தை வராமல் நிலா திகைத்து நிற்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் வர்மா.
தொடரும்...
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா