சஞ்சாரம் – 07
சிறிது நேரம் அந்தப் போட்டவையோ பார்த்தவள் “ஒன்று பீனிக்ஸ் அல்லது அவனுடன் தொடர்புடைய ஆள்” என்றாள்.
புருவத்தை ஏற்றி இறக்கியவன் பாண்ட் போக்கேடினுள் கைவிட்டு கீழ் உதட்டை சப்பினான்.
“உங்களுக்கு தெரியுமா?” கேட்டவளுக்கு பதிலாய் எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தான்.
இருவரும் வெளியே செல்ல முன் தோளுக்கு மேலாய் திரும்பி படத்தை பார்த்தவன் உதடுகளில் மெல்லிய முறுவல்.
‘கவனம் பிஃசர், பௌமி பியுட்டி வித் பிரைன்’ மனதினுள் எச்சரித்தவாறே வெளியேறினான். நேற்றே பிஃசரை கவனித்திருந்தான். பேச நினைத்தாலும் சூழ்நிலை சரியாய் அமையவில்லை.
கீழே ஒரே கூட்டமாய் இருக்க அருகே நின்றவரிடம் பௌமி விசாரித்தாள் “என்ன நடந்தது?”.
“திருடர்கள், நேற்றிரவு யாரோ கட்டிப் போட்டு வைத்திருகின்றார்கள்”. எட்டிப் பார்க்க நாயரின் ஆட்கள். அப்படியானால் நேற்று இவர்களை அடித்து கட்டிப் போட்டு விட்டுதான் மேலே வந்தானா!
பிரஜனை தேட அவனோ அலட்சியமாய் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
**
“நேற்று இருவர் இன்ஸ்பெக்டர் நாரயணன் வீட்டிற்கு வந்திருந்தார்கள் ஹிப்னோஸ்” தேவராஜ் போன் மூலம் தகவலைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“அவளாய் தான் இருக்கும், அவர்களுக்கு ஏதாவது கிடைத்ததா?”
“தெரியல கண்ணீர் புகை ஒரு கிரனேட் இரண்டையும் போட்டு இருக்கிறார்கள். அதோட...” சொல்ல தயங்கினான்.
“என்ன?”
“இருவரை கொன்று விட்டாரகள்”
“என்ன கிரனேட் வெடித்ததிலா?”
“இல்ல கத்தியால்” மெதுவாய் ஒலித்தது தேவராஜ் குரல்.
“ஒரு பெண் இரண்டு ரவுடிகளை கத்தியால் குத்திக் கொன்று இருக்கிறாள். அவர்கள் உண்மையில் ரவுடிகள் தானா” ஹிப்னோஸ் சீறினான்.
“அவள் தனியாய் வரவில்லை, கூட ஒருவன் சுற்றுகிறான். நேற்று அனுப்பிய ஆட்களையும் அடித்து போலீசில் கொடுத்துவிட்டான். அங்கே இருந்தவர்களுக்கு அவளை அடையாளம் தெரியல அதோடு நேரில் பார்க்கவும் இல்ல”
சற்று நேரம் யோசித்த ஹிப்னோஸ் “அவர்களை வெளியில் எடு. அந்த இருவரையும் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். கில்லரிடமும் சொல்லி விடு. ஆனா பின்தொடர ஆள் போடு. அந்த ஆதாரம் முக்கியம் சிபிஐக்கு கிடைத்து விடக் கூடாது. அவர்கள் கைக்கு கிடைத்த பின்னர்” சற்று இடைவெளி விடவே “புரிகிறது” என்றான் தேவராஜ்.
“அந்த இன்கிரிடியன்ஸ் வந்து விட்டதா?” விசாரித்தான்.
“இன்று தீவுக்கு வந்து விடும் நாளை காலை கையில் இருக்கும்”
கொச்சினில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் தனிப்பட்ட அறையில் அமர்ந்து இருந்தனர் பிரஜனும் பௌமியும்.
நாராயணனின் மெமரி கார்டை மடிக்கணினியில் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜன் நெற்றியை சுளித்தான்.
சில ஆடியோ கோப்புகள் இருக்கவே ஒலிக்க விட்டான்.
ஹிப்னோஸ் என்ற ஒருவருடன் தேவராஜ் பேசினான். அனைத்தும் அறுபது செக்கனுக்கும் குறைவனா கிளிப்புகள். அவர்கள் பேசிக் கொண்டது அதிகம் கோட் வார்த்தைகளாக இருந்தது.
டிரெயில்ப்ளேசர்கள், காம்பஸ், இன்கிரிடியன்ஸ் இது போன்ற வார்த்தைகளே அதிகமாய் இருந்தது.
வீடியோ ஒன்று இருக்கவே அதை பிளே செய்தான்.
இன்ஸ்பெக்டர் நாராயணன் திரையில் வந்தார்,
“இதை யாரு பாக்குறீங்கன்னு தெரியல ஆனா பார்க்கும்போது நான் உயிரோடு இருப்பேனா தெரியல. இன்று வீட்டிற்கு வரும் போதே நாயரின் ஆட்கள் என்னை கொலை செய்ய ட்ரை பண்ணங்க. சிவகுமார் என்னிடம் கொடுத்த ஆதாரங்களையும் இந்த வீடியோவையும் எப்படி பாதுகாக்க என்றும் தெரியல. அதனால போன் சிம்ம கழட்டி போட்டு வீட்டுக்குள்ள நிலத்தில் வைத்து புதைக்கிறேன்”.
க்ரோபாரை வைத்து நிலத்தை தோண்டியவாறே வீடியோவை எடுத்திருந்தார் இன்ஸ்பெக்டர் நாராயணன்.
“சில நாளைக்கு முன் சிவகுமார் என்ற ஒருத்தர் வந்து தேவராஜின் கம்பெனியில் நடக்கும் சட்ட ரீதியற்ற பணப்பரிமாற்றங்களை பற்றி எனக்கு சொன்னார். அதைப் பற்றி அறிய முயன்று விசாரித்தேன்.”
“அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது மூடுமந்திரமாவே இருக்கு. போதைபொருள் கடத்துறாங்க. ஆனா அது மருந்துக்கு யூஸ் பண்றது. ஆய்வுக்கூடத்துக்கு கொடுத்து எடுத்த ரிப்போர்ட் இந்த மெமரி சிப்ல இருக்கு. அத வச்சு என்ன செய்றாங்க, என்ன செய்யப் போறாங்க என்று என்னால் கண்டு பிடிக்க முடியல. இந்த தகவல் எல்லாத்தையும் அதே கம்பெனியில் உள்ள ஒருத்தர்தான் சிவகுமாருக்கு சொல்லி இருக்கிறார். அது யார் என்று எனக்கும் தெரியவில்லை. அவரை சந்திக்கதான் சிவகுமார் மூணாறுக்கு போயிருக்கிறார். என்னிடம் சொல்லிட்டுதான் போனார். ஆனால் அவருக்கும் உயிராபத்து வரும் என்று பயமாத்தான் இருக்கு.”
“அது மட்டும் இல்ல போலீசுக்கு உள்ளேயே அந்த ஹிப்னோஸ்க்கு தேவராஜுக்கும் ஆட்கள் இருக்கு. நான் ரகசியமா ஆய்வுகூடத்திற்கு பரிசோதிக்க கொடுத்தது அவர்களுக்கு தெரிந்திருக்கு. அதுக்கு பிறகுதான் என்ன கொல்ல முயற்சி செய்றாங்க. அந்தத் தகவல்கள் எல்லாம் இந்த மெமரி சிப்பில் இருக்கு.”
ஹிப்னோஸ்க்கும் தேவராஜ்க்கும் இடையிலான உரையாடல்கள் சிலதும் இந்த சிப்பில இருக்கு ஆனா அதிலிருந்து என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியல, நேரமும் இல்ல. அதிகம் கோட் வார்த்தையில் பேசுகின்றார்கள்.”
“வெறும் கஞ்சா கடத்துவதற்காக மட்டும் கொலை அளவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. அதோட அவர்களின் இணைந்து செயல்படும் நடவடிக்கைகள், அவர்களிடம் இருக்கும் ரிசொஸ்... இதெல்லாம் சாதரண கடத்தல்காரர்களிடம் இருக்காது. இது அதுக்கு மேலே ஏதோ ஒன்று. இட்ஸ் சின்டிகேட் கிரைம்.”
“நானும் மூணாறு போறேன். சிவகுமாரை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடிந்த வரை முயற்சி செய்வேன். அப்படியில்லாமல் நீங்கள் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால் தயவு செய்து இளம்பிள்ளைகளை காப்பாற்றுங்கள். இப்போதைக்கு அவர்களது டார்கெட் பதினாறு வயதிலிருந்து இருபத்தியொரு வயதுக்குட்பட்ட பிள்ளைகள்”
அத்துடன் வீடியோ முடிந்திருந்தது.
“அப்பா” முகம் வெளிறி உதடுகள் துடிக்க பிரஜனை நிமிர்ந்து பார்த்தாள் பௌமி.
அவள் தோளை சுற்றி கையை போட்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட பிரஜன் “பயப்படாதே அப்பாவுக்கு எதுவும் நடந்திருக்காது” அவள் உச்சியில் இதழ் பதித்தான் “நல்லதையே நினைப்போம்”.
மறுப்பின்றி அவன் அணைப்பில் இருந்தவள் சற்று நேரம் கழித்து கேட்டாள் “என்ன நினைகின்றீர்கள்?”.
அவனுக்கும் இது வெறும் கடத்தல் போல் தென்படவில்லை
“யெஸ் இட்ஸ் சிண்டிகேட் கிரைம்” என்றான் பிரஜன்.
“எனது கணிப்பு சரியானால் பீனிக்ஸ்ஸை பின்வாங்க சொல்லி இருப்பார்கள். அப்படியே எங்களை கண்காணிக்கவும் ஆட்கள் போட்டு இருப்பார்கள்”.
அதே நேரம் பௌமியின் கைபேசி அதிர எடுத்துப் பார்த்தாள். அவனது நண்பன் அவளது நண்பன் ஜோனிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது.
‘மூணார்’ என்பதுடன் மப்பில் இடத்தை குறிக்க பயன்படும் லாங்டியூட் லட்டிடியுட் இலக்கமும் இருந்தது.
“நாங்க மூணார் போயே ஆக வேண்டும்” உறுதியாய் சொன்னாள் பௌமி.
அவள் தோளை வருடியவாறே யோசனையாய் தலையசைத்த பிரஜன் “இன்றிரவு அந்த தீவுக்கு போய் பார்த்து விட்டு, நாளை காலை ஷங்கரையும் சந்தித்து விட்டு புறப்படுவோம்” என்றான் பிரஜன்.
சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது.
அவள் அப்பாவை நினைத்து கவலைப்படுவது புரிய, மனதை மாற்ற குனிந்து காதுக்குள் கேட்டான். “இதுதான் நீ சொன்ன வேலையா? இதுக்கு சம்பளம் கூட வேண்டாம்.”
“பிரஜன்” அவன் நெஞ்சில் விளையாட்டாய் குத்திய பௌமி மெதுவாய் விலக, அவன் தடுக்கவில்லை.
“நான் சொன்னது எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் வேலை. அதைதான் நீங்கள் சொல்லாமலே செய்து விட்டீர்களே” புன்னகைத்தாள்.
இதயத்தில் ஏதோ அமைதியின்மை அலைகழிக்க அவள் முகத்தையே பார்த்தான் பிரஜன். அவளை கொல்வதுதான் அவனின் மிஷன். யார் கொல்ல வந்தார்களோ அவனையே காவலன் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.
உண்மை தெரிந்தால் என்ன சொல்வாள்!
அவன் கண் முன்னே சுண்ட ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து வைத்தான்.
“எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள் பௌமி.
டிரைவிங் செய்தாவாறே ‘சொல்லு’ என்பது போல் பார்த்தான் பிரஜன்.
“இல்ல, நாங்கள் அங்கே வருவோம் என்று நாயரின் ஆட்களுக்கு எப்படி தெரியும். அப்படியே எங்களை பின் தொடர்ந்து வந்திருந்தாலும், அவர்கள் முன் நின்ற எங்களை அவர்களுக்கு அடையளாம் தெரியலையே”.
“உன்னையும் என்னையும் தவிர நாம் அங்கே போவது பற்றி ஒருவருக்கு தான் தெரியும்”.
“சங்கர் வேறு யாருக்கும் சொன்னாரா என்று நேரடியாய் கேட்கவும் முடியாது” யோசித்தவள் கண்கள் மின்ன “திரும்ப சங்கரை வசியம் செய்து விடுங்கள்” என்றாள்.
சட்டென சத்தமாய் சிரித்து விட்டான் பிரஜன் “வசியம், சீரியஸ்லி” மீண்டும் நகைத்தான்.
கண்ணோரம் சுருங்க இனிமையான குரலுடன் அவன் சிரிப்பு பௌமியின் கண், காது இரண்டுக்கும் விருந்தாய் இருந்தது.
“எங்கள் ஊரில் அதுக்கு பெயர் அதுதான்” என்றாள் சிவந்த முகத்துடன்.
மனமோ ‘உண்மையில் வசியகாரன் தாண்டி’ என்று சான்றிதழ் கொடுத்தது.
காரை விட்டு இறங்கி இருவருக்குமாய் வாங்கிய ஆடைகளை எடுத்துக் கொண்டே கேட்டாள் “எதுக்கு ட்ரெஸ்?”.
“உனக்கே விளங்கும்” என்றவன் கையிலிருந்த டப்பில் கண்ணை பதித்தான். நாயரின் ஆட்களின் மொத்த நடமாட்டமும் அதில் தெரிந்தது.
***
கொச்சினின் கிழக்கு பகுதியில் இருந்த வாட்டர் வேயில் தண்ணீரை கிழித்துக் கொண்டு சென்றது, அந்த குட்டி மோட்டார் படகு.
அதில் அமர்ந்திருந்த பௌமி திரும்பி அதை செலுத்திக் கொண்டிருந்த பிரஜனைப் பார்த்தாள். முழங்கால் வரை நீண்ட அடர் நீல டெனிம் சோர்ட்ஸ், மேலே வெள்ளை டீசேர்ட் கண்ணில் கூலர், கழுத்தில் காமரா என அக்மார்க் டூரிஸ்ட் போலவே இருந்தான்.
தன்னை குனிந்து பார்த்தாள். அதே போலவே தான் ட்ரெஸ், ஒரேயொரு வித்தியாசம். அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். குறும்பாய் உதட்டைக் கடித்தவள் அருகே கடந்து சென்ற படகில் இருந்த வெள்ளைகாரியை காட்டி “அதே போல் சோர்ட்ஸ் எடுத்திருக்காலாம் தானே. அப்பதான் என்னையும் டூரிஸ்ட் என்று நம்புவார்கள்” அப்பாவியாய் கண்ணை விரித்தாள்.
அதன் மொத்த நீளமே ஒரு சாண்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் படகை செலுத்துவதில் கவனத்தை செலுத்தினான்.
மனமோ ‘அன்றே அவள் காலை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. இதில் இந்த சோர்ட்சை வேறு போட்டால் வேறு வினையே வேண்டாம். நான் வேலை செய்த மாதிரிதான்’ முனங்கியது.
சிறு முறுவலுடன் மறுபுறம் திரும்பினான்.
அவனுக்கு நெளித்துக் காட்டி விட்டு தொலைநோக்கி வழியே நோக்கினாள். சற்று தூரத்தில் உள்ள தீவில் நாயரின் ஆள் நடமாட்டம் தெரிந்தது.
விளையட்டுத்தனம் மறைய “பிரஜன் டென் ஒ குலோக்” என்றாள்.
அவன் முகமும் தீவிரத்தை தத்தெடுக்க “சுற்றி வருவோம் அங்கே தான் போட் மறைவாய் விட இடமிருக்கு” என்றான்
ஒருபுறம் முழுதும் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்க மரத்தின் மீது ஏறியிருந்து அந்த தீவை நோட்டாம் விட்டார்கள் இருவரும்.
நீர்வழிகள் கடலுடன் இணையும் இடத்தில் தனியாய் பிரிந்து நின்றது அந்த சிறு தீவு,
தீவு நடுப்பகுதி முழுவதும் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருக்க முன் பகுதியில் கருவாடுகளை காயப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்தில் இறால் பதபடுத்தும் தொழிற்சாலை. கூடவே கருவாட்டினை ஸ்டோர் செய்து வைப்பதற்காக தகரத்தலான சிறு ஸ்டோரேஜ்கள்.
அந்த தீவின் மறுகரையில் நின்றிருந்த படகுகளையும் அதிலிருந்து பொருட்களை இறக்குவதையும் கழுகு போன்ற பிரஜனின் கண்கள் கண்டு கொண்டது. கூடவே கருவாட்டை ஸ்டோர் செய்யும் அந்த ஸ்டோரேஜ்களை விட உள்ளே மரங்கள் அடர்ந்த பகுதியினுள்ளும் ஸ்டோரேஜ்கள் தென்பட்டன.
கருவாட்டுக்கு கொண்டு வந்த மீன்களின் பரல்கள் ஒருபுறம் செல்ல சில பரல்களை மட்டும் மரங்களடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு வந்தார்கள்.
தாங்கள் போக வேண்டிய இடம் அதுதான் என்பதை முடிவு செய்த பிரஜன் மரத்திலிருந்து இறங்க அவனருகே குதித்தாள் பௌமி.
தொலைநோக்கி மூலம் பௌமியும் நடந்ததை கவனித்திருந்தாள். இருவரும் அந்த சிறு காட்டின் ஊடே ஸ்டோரினை நோக்கி நகர பின்னிருந்து ஒரு குரல் கேட்டது.
“அசையாதீர்கள்”