சஞ்சாரம் – 06
அவள் பிளாட் வாசலில் நின்றவனை ஏறிட்டாள் பௌமி.
தயக்கத்துடனே கேட்டான் “இல்ல சிலவேளை நாயரின் ஆட்கள் இரவில் இங்கே உன்னைத் தேடி..” எதுவும் பேசமால் கதவை அகலத் திறந்தாள்.
“அவர்கள் எங்களை பார்த்தார்களா?” யோசனையை கேட்டாள் பௌமி.
அவள் சோபாவின் முன்னிருந்த மேசை மீது பரப்பி வைத்திருந்த பேப்பர்களையும் குறிப்புகளையும் குனிந்து பார்த்தவாறே “பார்த்திருக்க வாய்ப்பில்லை, எங்களை தாண்டித் தானே போனார்கள்”.
“அந்த அறையை நீங்க பயன்படுத்தலாம்” என்றதுடன் அவள் மீண்டும் வேலையில் ஆழ்ந்து விட வீட்டை சுற்றிப் பார்த்தான். பீனிக்ஸ்ஸின் மனம் கணக்கு போட்டது. ஒருவன் உள்ளே வருவதனால் எந்த இடத்தின் வழியே வரலாம், எப்படி தப்பி போகலாம்.
அறை கதவைத் திறக்க போக பௌமியின் குரல் தடுத்தது “அது என் பெட் ரூம்”.
குறும்பாய் கண்ணை சுருக்கிப் பார்த்தவன் “பயப்படாதே வெறும் செக்யூரிட்டி பேர்பஸ் மட்டும்தான்” என்றான்.
விழிகளை மேல் நோக்கி சுழற்றியவள் “எதையும் பார்த்து பயந்திர கூடாது” வேடிக்கையாய் சொல்லி விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தாள்.
உள்ளே அவள் ஆடைகள் கன்னா பின்னாவென்று போடப் பட்டிருந்தது. சிறு புன்னகையுடன் கண்ணை மூடித் திறந்து புருவத்தை உயர்த்தினான். அப்படியே குளியல் அறையையும் பரிசோதித்தான். வெளியில் இருந்து யாரும் வர முடியாது, திருப்தியாய் வந்தவன் கண்ணில்பட்டது பௌமியின் அழகான கொட்டாவி.
இருவருக்குமாய் தேநீர் போட்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
“தாங்க்யூ” நன்றியுடன் வாங்கிக் கொண்டவளை பார்க்க பூனைக் குட்டி போலிருந்தது.
அவள் தேநீரை அருந்த, கையில் மக்கை பிடித்தவாறே கால் முட்டியில் கையூன்றி சற்று முன்னே குனிந்து அமர்ந்திருந்தவன் திடிரென்று கேட்டான் “யாரவன்?”.
“யாரு” தன் கப்பின் மேலாய் பார்த்தாள்.
“அதான் உன்னை ஒருத்தன் கமெண்ட் பண்ணானே” சினத்துடன் கேட்டான்.
“யாரென்று தெரியல. இது வேற குரூப் போல இருக்கு” யோசனையுடன் கூறியவள் “ஒரு நிமிடம், நாங்க போய் வந்தது முழுக்க வீடியோவா இருக்கும். அதில் பார்ப்போம்” டீசேர்ட்டில் பென் போல் செருகியிருந்த கமராவை எடுத்தாள்.
“எஎன்ன?” குடித்த ஒரு வாய் தேநீரையும் துப்பியிருந்தான்.
அவன் சாயம் இத்தனை சீக்கிரம் வெளுக்கும் என்று நினைக்கவேயில்லை.
புருவத்தை உயர்த்தியவள் கேலியாய் கேட்டாள் “பத்திரிக்கைகாரி காமரா கூட இல்லாமல் சும்மா வருவேன் என்றா நினைத்தீர்கள்?”.
நெற்றியில் லேசாய் வியர்க்க டென்சனாய் அவளருகே வந்து அமர்ந்தான். காட்சிகளை வேகமாய் ஓட விட, பதட்டத்தை கட்டுப்படுத்த விரல்களை முஷ்டியாய் இறுக்கினான்.
வீட்டினுள் க்ரோபாரை ஓங்கி போட அவன் புஜத்தின் தசைகள் திரள்வதை ரகசியமாய் ரசித்தாள் அவள். வேகமாய் அதை பிடித்ததை வீடியோவில் பார்த்தவளுக்கு தெளிவாய் தெரிந்தது. எத்தனை துரிதமாய் செயல்பட்டிருகின்றான். இல்லையென்றால் குறைந்தது காயமாவது பட்டிருக்கும்.
அவனை திரும்பி பார்க்க இறுகிப் போய் இருந்தான்.
“ரிலாக்ஸ், ரவுடிகள் வேறு எப்படி பேசுவார்கள்” அவன் புஜத்தில் தட்டிக் கொடுத்தாள்.
அவன் எதையோ தூக்கி எறிவதை பார்த்தவள் ஆச்சரியத்துடன் கேட்டாள் “என்ன எறிந்தீர்கள்?”.
அவனோ இமை வெட்டாது காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் வெளியே ஓடிவரும் போதே இது போன்ற ஆபத்துக்கு பழக்கப்பட்ட அவன் காதுகள் பின்னால் இருவர் வருவதை சரியாய் கணித்து அவள் கையை விட்டு திரும்பியிருந்தான்.
அந்த நேரத்திற்கு முன்னே மதில் தான் தெரிந்தது. அவள் திரும்பவே அவன் உருவம் முன்னே மறைக்க அவன் நெஞ்சு தெரிந்தது. அதன் பின் மதிலுக்கு மேலால் தாண்டியது.
“வாவ் என்னையும் தூக்கிக் கொண்டு மதிலை தாண்டி இருக்கிற மேன் சூப்பர்” அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள். அவனோ தொண்டை குழி ஏறி இறங்க சோபாவில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தான்.
விசித்திரமான விதத்தில், ஆறுதல் அளிப்பதற்கு பதிலாய் மனம் கனத்து போனது. அவளுக்கு தெரிந்திருந்தால் கூட பரவாயில்லை போல் இருந்தது.
“அஹ் இதுதான் அவர்கள்” வீடியோவை நிறுத்த அவர்களை துரத்தி வந்தவர்கள். ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவர்கள் படத்தினை பிரிண்ட் எடுத்தாள்.
பிரிண்டர் சத்தத்தில் கண் திறந்த பிரஜன் விசாரித்தான் “ஏன்?”.
“தப்பி தவறி எனக்கு ஏதாவது நடந்தாலும்..” அவள் முடிப்பதற்குள் எழுந்தவன் கேட்டான் “கேன் ஐ ஸ்மோக்?”.
யோசனையுடன் அவனைப் பார்த்த பௌமி பல்கனியை கை காட்டி “அங்கே” என்றாள்.
மறு பேச்சின்றி வெளியே சென்றான்.
சிகெரட் மணத்தில் பௌமி லேசாய் இருமவே கண்ணாடி கதவை சாற்றி விட்டு திரும்பி நின்று புகையை வெளியே ஊதினான். கேரளாவின் குளிர்ந்த காற்று முகத்தில் மோத ஆழ்ந்து மூச்சுவிட்டான்.
ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசை பார்த்துக் கூட பயம் வரவில்லை. சில நொடிகளில் அவன் இரத்த அழுத்தத்தை ஏற்றி இறக்கிவிட்டாள்.
அவனின் நிழலுருவம் வாயில் சிகரெட்டை வைத்து லைட்டர் மூலம் பற்ற வைப்பதை, பாதி திரும்பிய நிலையில் சோபாவின் பின்புறத்தில் கையூன்றி பார்த்துக் கொண்டிருந்தாள் பௌமி.
ஒரு பொக்ஸ்ஷும் காலியானது.
உள்ளே வந்தவன் பௌமியை பார்த்து கேட்டான் “கேன் ஐ டேக் வாஷ் ஹியர்? பிரெஷ் ஆக முடியுமா?”.
“யா உங்களுக்கு தந்த அந்த இரண்டாவது ரூம்” என்று விட்டு தன் வேலையில் ஆழ்ந்தாள்.
குளித்து தோள்பையில் எப்போதும் தயாராய் இருக்கும் ஒரு செட் உடையை மாற்றி வெளியே வந்த போது, பௌமி பிரின்ட் எடுத்த படங்களைக் ஹாலில் ஒட்டிக் கொண்டிருந்தாள்.
ஷம்போ வாசம் நாசியை துளைக்க திரும்பியவள் “அடிக்கடி ஸ்மோக் செய்வீர்களா?”.
“ம்கூம், எப்போதாவது, எனக்கும் சிகரெட் ஸ்மெல் பிடிக்காது”.
“கடைசியாய் எப்ப இது போல் ஒரு பொக்ஸ்...”
“இரண்டு வருடத்திற்கு முன்”
சட்டென திரும்பிப் பார்த்தாள். அவனோ சங்கடமாய் புன்னகைத்தான்.
ஏன் என்று கேட்க துடித்தாலும் ஏனோ வார்த்தை மல்லுக்கட்டியது.
“சோ என்ன செய்கிறாய்?” மார்புக்கு குறுக்கே கைகட்டிக் கேட்டான். உடலோடு ஓட்டிப் போட்டிருந்த டீசேர்ட்டை மீறிப் புடைத்தது அவன் புஜங்கள்.
“இது வழமையாய் இன்வெஸ்டிகேசன் போய் வந்தால் செய்வதுதான்” இது முக்கியமில்லை என்பது போல் கையசைத்தவள் “நிச்சயமாய் இவர்களுக்கு என்று ஒரு இடம் இருக்கும் அதைதான் தேடிக் கொண்டிருக்கின்றேன்” என்றாள்.
“அவர்கள் போன் லோகேசன் ட்ரக் செய்ய முடியலையா?” யோசனையாய் கேட்டான்.
“ட்ரை பண்ணேன் முடியல. அந்த ஜோன் இன்னும் ரிப்ளே செய்யல” உதட்டை பிதுக்கினாள்.
“உன் லப்பை தா” கையை நீட்டினான்.
“அந்தா இருக்கு. நான் பிரெஷ் ஆகி வாறன்” பேப்பர் குவியலுக்கு நடுவே கை காட்டி விட்டு சென்றுவிட்டாள்.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவன் வாய் வழியே காற்றறை ஊதி குறுக்கே தலையாட்டினான். அவள் அறைக் கதவைத் தட்ட தலையை நீட்டினாள்.
“இந்த கூடையினுள் உன் ட்ரெஸ் எல்லாம் போடு” என்று அவளிடம் கொடுத்து விட்டு ஹால் சுவரில் சாற்றி வைத்திருந்த போர்ட்டை இழுத்தான்.
குளித்து விட்டு அழுக்கு ஆடைகள் போட்ட கூடையை தூக்கிக் கொண்டு வர தோய்த்த அவன் உடைகளை எடுத்து கொண்டிருந்தான் பிரஜன்.
அசடு வழிய சிரித்தவாறே அவள் ஆடைகளை மெசினில் போட்டாள். குளித்து வரும் நேரத்தினுள் கன்னா பின்னாவென்று இருந்த அந்த இடத்தையே மாற்றியிருந்தான்.
“நீட் ஃபீரீக் ஹா” லேசாய் கேலி செய்தாள்.
கிட்சின் டேபிளில் இருந்த காபியை ஒரு விரலால் சுட்டிக் காட்டி “காபி” என்றவன் தன்னுடையதை எடுத்துக் கொண்டு செல்ல அவனை பின் தொடர்ந்தாள்.
“அந்த சிப் போட்டு பார்க்கலையா?” ஆர்வமாய் தேடியவளுக்கு “லப்பில் சார்ஜ் இல்ல” பதிலளித்தவன் கையில் இருந்த காபியை குடித்தவாறே போர்டில் மாட்டிய கொச்சின் துறைமுகத்தின் படத்தை ஆராய்ந்தான்.
சிவப்பு மார்கரால் ஒரு இடத்தில் பெருக்கல் குறியிட்டான். “இந்த இடத்தில் வெலிங்கடன் தீவு இருக்கு. அங்கேதான் இந்தியாவின் முதல் ஏர்கிராப்ட் கருடா கேம்ப் இருக்கு சோ இதிலும், இந்த தீவும் இதற்கு பக்கத்தில் உள்ள இடங்களிலும், பாதுகாப்பு அதிகம். சட்டவிரோத வேலைகள் செய்ய முடியாது” என்று அதை சுற்றியிருந்த ஒரு சில இடங்களையும் பெருக்கல் குறியிட்டான்.
“ஆனா இந்தக் கிழக்கு கடற்கரையோரம் இங்கே நிறைய சாத்திய கூறு இருக்கு. நிறைய டொக், மரினா, குட்டி குட்டியா தீவு. இப்படிப்பட்ட இடங்கள்தான் கடத்தலுக்கு வசதி”,
பிரஜன் உதட்டின் மீது மார்கரை வைத்து யோசிக்க “அங்கேதான் நாயரின் ரெஸ்டாரென்ட் ஒன்றும் இருக்கு.” ஓரிடத்தை சுட்டிக் காட்டினாள். “ஒவ்வொரு தீவாய் போய்ப் பார்க்கவும் முடியாது. சந்தேகம் வரும் என்னிடமுள்ள ஹான்ட்போன் நம்பரை வைத்து லோகேசன் கண்டு பிடித்தால் தேடும் இடத்தை குறைக்கலாம்” என்றாள் பௌமி.
“ஹக் பண்ண முடியலையா?” காபியை பருகியவாறே கேட்டான்.
“ட்ரை பண்ணேன் பட் பைஃயர்வால் உடைத்து போக முடியல” சிறு சோகமாய் சொன்னாள்.
“காட்டு” அவள் எடுத்துக் கொடுக்க சில பட்ச் பைலை உருவாக்கி ஏற்கனவே அவர்கள் கைபேசிக்கு அனுப்பியிருந்த பைலுடன் இணைத்து படம் டவுன்லோட் செய்யும் லிங்கை போல் அனுப்பி வைத்தான்.
கூடவே ஒரு மெசேஜ் “இதனை ஐந்து க்ரூப்பில் ஷேர் செய்தால் ஒரு லட்சம் அதிஷ்ட பரிசு”.
அவன் பின்புற தோள் வழியாய் கோடிங்கை கவனித்தவள் “வாவ் க்ரூப்பில் ஒருவர் டச் செய்தாலே போதும் புஃல் டீட்டெயில்ஸ் எடுத்திராலாம்” அவன் தோளில் தட்டினாள்.
அவள் பக்பாக்கில் இருந்து பென்னையும் சிப்பையும் கொடுத்து “அந்த பட்ச் பைலில் பாஸ்வோர்ட் கிராக்கர் இருக்கு” என்றாள்.
அதை செயல்படுத்தி என்டர் கீயை தட்டி விட கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் ஓட தொடங்கியது. சிறிது நேரம் பார்த்து விட்டு “நாளை விடியும் போது திறக்க கூடியதாய் இருக்கும்” கூறியவாறே திரும்பியவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
சோபாவில் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். த்ரீ குவாட்டர் டீசேர்ட்டில் இன்னும் சிறுபிள்ளையாய் தோன்றினாள்.
தலைக்கு அணைவாய் தலையணையை வைத்து சோபாவிலேயே படுக்க வைத்து விட்டு கீழே அமர்ந்து உறங்கும் அவள் முகம் பார்த்தான். பார்த்த நொடியில் இருந்தே இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள்.
******
அடுத்த நாள் விடிந்த போது நிலத்தில் அமர்ந்தபடி அவளருகே தலை வைத்துப் படுத்திருக்க, உறக்கத்தில் நகர்ந்து பிரஜனின் கழுத்தை சுற்றிக் கையை போட்டிருந்தாள் பௌமி.
மெதுவாய் விலகி சோம்பல் முறித்தவனுக்கு ஆண்டுகள் கழிந்து நிம்மதியாய் உறங்கி எழுந்த உணர்வு. புன்னகையுடன் வழமையான காலை நேர வேலைகளில் ஆழ்ந்தான்.
எழும்ப மனமின்றி போர்வைக்குள் சுருண்டவளுக்கு நேற்று பிரஜன் வீட்டிற்கு வந்தது நினைவுக்கு வர சட்டென எழுந்தமர்ந்தாள். எழுந்ததுமே பசி வயிற்றைக் கிள்ள முன்னே சிறு மேசையில் இருந்த பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்தவாறே “பிரஜன்” அழைத்தாள்.
பின்னிருந்து குரல் கேட்டது “இங்கே”.
திரும்பி பார்த்தவள் வாயிலிருந்த பிஸ்கட் பொத்தென்று கீழே விழுந்தது.
த்ரீ குவாட்டர் மட்டும் அணிந்து வெறும் மேலுடன் தண்டல் எடுத்துக் கொண்டிருந்தான் பிரஜன். திரண்டிருந்த தோள்களும் புஜங்களும் அவளுள் ஏதேதோ இராசயன மாற்றங்களை ஏற்படுத்த லேசாய் திறந்த வாயுடன் அவனையே பார்த்திருந்தாள்.
பிரஜன் ஒற்றைப் புருவத்தை தூக்கிப் பார்க்க சட்டென திரும்பி அமர்ந்த பௌமி லேசாய் நெற்றியில் அறைந்து கொண்டாள் “லூசு பௌமி”.
குனிந்து தன்னைத்தானே பார்த்தவன் சிறு சிரிப்புடன் வியர்வையை துடைத்து விட்டு கையில்லாத டீசேர்ட்டை மாட்டியவாறே அவளருகே அமர்ந்தான்.
சிவந்த முகத்துடன் எழுந்து போக முயல கேட்டான் “எங்கே?”.
“டீ” வாய்க்குள் முனங்கினாள்.
மேசை மீதிருந்த பிளஸ்கை திறந்த பிரஜன் மக்கில் ஊற்றி அவளிடம் கொடுக்க அவனைத் தவிர மீதி அனைத்து இடத்தையும் பார்த்தாள்.
சிவந்திருந்த அவள் முகத்தையே ஆர்வமாய் நோக்கியவன் அருகே நெருங்கி வேண்டுமென்றே “ஒகே தானே பௌமி” என்றான் கிசுகிசுத்த குரலில்.
“எஎஎன்ன?” அவள் தடுமாறவே கண்ணில் சிரிப்புடன் லப் திரையை காட்டினான்.
அவன் அனுப்பிய வைரஸ் தன் வேலையை தொடங்கியிருந்தது. நாயரின் ஆட்கள் எந்த இடத்தில் இருகின்றார்கள் என்பதை டாட்ஸ் மூலம் மப்பில் காட்டிக் கொண்டிருந்தது.
அவள் எதையோ செய்ய முயல “அஹ் ஹா இங்கே வேண்டாம். பிரெஷ் ஆகி வா. வெளியில் இருந்து செய்வோம்” என்று அனுப்பி வைத்தான்.
அவள் குளித்து வந்த போது அவனும் தயாராகி ஹாலில் மாட்டியிருந்த பலகையை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு போட்டோவை சுட்டு விரலால் தட்டிக் காட்டிக் கேட்டான்.
“யார் இது?”
“பீனிக்ஸ்”