About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
கருப்பு 15
மாலை 5 மணி
காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ் லேட் ஆகிவிட்டதால், தான் ஏற வேண்டிய பஸ் நிறுத்தத்தை நோக்கி சென்று சித்ரா, அதே இளைஞனை பார்த்தாள். பஸ் ஸ்டாப்பில் அவள் பார்வையில் படும்படியாக நின்றிருந்த அந்த இளைஞன் ரசனையோடு டிரஸ் பண்ணிருந்தான். சட்டை பையில் குளிர் கண்ணாடியின் ஒரு காது மட்டும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தது.
சித்ராவை பார்த்ததும், அவனிடம் ஒரு பதட்டம். சாயங்கால நேரம் என்பதால், பஸ் ஸ்டாப்பில் நிறைய கூட்டம். இரண்டு வாரமாகவே இந்த விஷயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவள் காலேஜுக்கு வரும் டைம்ல அவன் வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்பது, காலேஜ் முடிந்து போகும் டைமில் கரெக்டாக வந்து நிற்பது, பஸ் ஏறும் வரை பார்த்துக் கொண்டிருப்பது, சில நேரங்களில் அதே பஸ்ஸில் ஏறி பஸ் ஸ்டாண்ட் வருவது, என்னவோ சொல்ல முயற்சிக்கிறான்? பாக்கெட்டில் இருந்து லெட்டர் எடுக்கிறான், அவன் கை படபடக்கிறது. உள்ளே வைத்து விடுகிறான் வேறு என்னவாக இருக்கும்? ரோமியோக்கள் ஐ லவ் யூ தான் சொல்வார்கள். வேறு பெரிதாக என்ன இருக்கப் போகிறது?
தினமும் பின்தொடர்ந்தாலும், ஒரு தடவை கூட மனம் சுளிக்கும்படி எதுவும் பண்ணியதில்லை, கலாய்த்ததில்லை. பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நேரடியாக வந்து பேசுவதற்கு தயக்கப்படுகிறான்.
சித்ராவுக்கு அவனை பார்க்கும்போது கோபத்தை விட பரிதாபம் தான் ஏற்பட்டது.
என் மேல் இவனுக்கு எப்படி காதல் ஏற்பட்டது? என்னை பற்றி என்ன தெரியும்? அக்காவே இன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறா? அன்றைக்கு நான் அரவிந்துடன் பைக்கில் நெருக்கமாக போனதை வேறு பார்த்தான். பார்த்தும் புரியவில்லையா? அண்ணன்னு நெனச்சிட்டானோ என்னவோ தெரியல்லை.
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அரவிந்த் ஏன் இரண்டு நாட்களாக பேசவில்லை? இன்றைக்கு அவன் ஷோரூமுக்கு கால் பண்ணி விட வேண்டியது தான். மீனாட்சிபுரத்தில் அவர்களின் யமஹா டீலர்ஷிப் ஷோரூம் இருக்கிறது. அவன் அப்பா தான் பார்த்துக் கொள்கிறார். இருந்தாலும் அரவிந்தும் அவ்வப்போது கவனித்துக் கொள்வது உண்டு. அவளுக்கு ஒரு வருட சீனியர். ஹிந்து காலேஜை சேர்ந்தவன். இன்டெர் காலேஜ் காம்பெடிஷனல் பார்த்து தான் பழக்கம் ஏற்பட்டது.
பஸ் ஸ்டாப் இளைஞன் அவளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
இன்றைக்கு இவனிடம் நேரடியாக பேசி விட வேண்டியது தான்.
ரோட்டை கிராஸ் பண்ணி, பஸ் ஸ்டாப்புக்கு போவதற்காக சாலையின் மறுமுனையில் நின்றிருந்தாள். அவனைத்தான் பார்க்கிறாள் என்று தெரிந்ததும், அந்த இளைஞன் அவசரமாக வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான். வாகனங்கள் ஓய்வதற்காக நின்றிருந்தவள், கொஞ்சம் போக்குவரத்து மெலிந்ததும், ரோட்டை கிராஸ் செய்து மறுபக்கம் சென்றாள்.
நேராக அவனை நோக்கி தான் சென்றாள். அவன் பதட்டத்தில் கை குட்டை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொண்டான். அவன் கால்கள் தடுமாறின.
அவனை நெருங்கி, கூர்மையாக அவனை பார்த்தாள்.
"சார், கொஞ்ச நாளாவே பாக்குறேன், நீங்க என்னை ஃபாலோ பண்றீங்கன்னு தெரியுது...உங்களுக்கு என்ன வேணும்?"
அவன் பதட்டமாக,
"மேடம், வந்து... நீங்க... நான்..."
"சும்மா பதட்டப்படாம சொல்லுங்க.. என்ன என்னை லவ் பண்றீங்களா?"
"இல்ல... அது வந்து..."
"இதோ பாருங்க, ஆல்ரெடி நான் commited. ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன். அது போக, என் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. So நீங்க என் பின்னால சுத்தி உங்க டைமையும் வேஸ்ட் பண்ண வேண்டாம். எனக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம். அதனால் உங்க கிட்டயே நேரடியா பேசி கிளாரிஃபை பண்ணிரலாம்னு நினைச்சு தான் வந்தேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்."
பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள், அவர்கள் பேசுவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவர்கள் பஸ் பிடித்து கிளம்பும் அவசரத்தில் நின்றிருந்தார்கள்.
"இல்ல, அதுக்கு வரல.."
"வேற எதுக்கு வந்தீங்க?"
சுற்றிலும் பார்த்தான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது பின்னர்,
"நான் சொல்றது ரகசியமா இருக்கட்டும்... கடந்த ஒரு சில நாட்களாக உங்ககிட்ட இந்த விஷயத்தை எப்படியாவது சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். நேரடியா பேச முடியலன்னா லெட்டர்ல எழுதி குடுத்துரலாம்னு, லெட்டர் கூட எழுதி வச்சிருக்கேன் பாருங்க... என்று எடுத்து நீட்டினான்.
"சரி, அதான் பேசிட்டிங்களே. நீங்களே என்ன விஷயம்னு சொல்லுங்க?"
அவன் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்ல சொல்ல சித்ராவின் முக எக்ஸ்பிரஷன்கள் மாறியது. சற்று முன்னால் அவனுக்கு இருந்த பதட்டம், சித்ராவுக்கு தொற்றிக் கொண்டது.
"என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது உண்மைதானா? நம்ப முடியலையே?",
பிரபாவதி போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
மறுமுனையில் சொல்லப்படும் தகவல்கள், அவ்வளவு நல்ல செய்தி இல்லை என்பது கேட்டு கொண்டிருந்த அவளின் முகம் போன போக்கை பார்த்தாலே தெரிந்திருக்கும், ஆனால் பார்ப்பதற்கு யாருமே இல்லை... முழு தகவலையும் கேட்டுவிட்டு போனை வைத்தாள்.
அவள் கோபப்படுகிறாளா, வருத்தப்படுகிறாளா என்னவென்று தெரியாத அளவுக்கு, அவள் முகம் சுணங்கி போயிருந்தது.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 16
போன் பேசி முடித்ததும் பிரபாவதி பெட்ரூம் நோக்கி சென்றாள். கண்ணாடி முன்னால், உட்கார்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ராகினி தலையில் வெறுப்பாக தட்டினாள்.
"ஏண்டி, எப்ப பாரு சும்மா சீவி சிங்காரிச்சுட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து, தின்னு தூங்கிட்டு இருக்கியே. இதுக்கு பதிலா முத்துப்பாண்டி கிட்ட போய் சிரிச்சி பேசேன். உன் முறை பையன் தானே..."
"போமா, அவன் எத்தனை ஊர்ல சின்ன வீடு வச்சிருக்கான். உனக்கு தான் தெரியுமே. பாதி சொத்தை சீட்டு, சின்ன வீடுன்னு அழிச்சிட்டான். அவன் கூட பேசி பழகுறதுக்கு பாழுங் கிணத்தில் குதிச்சுருவேன்..:
"அடியே அது எனக்கு தெரியாதா? உன் புருஷனும் உன்னை கை விட்டுட்டான். பாண்டி பொண்டாட்டியும் விட்டுட்டு போயிட்டா. அவன் ஆளு கொஞ்சம் சோக்கு பேர்வழியா இருந்தாலும், நம்ம ரத்த சொந்தம். அவனுக்கு தான் நியாயப்படி உன்னை கட்டி வச்சிருக்கணும். ஆனா அவன் வேற ஒருத்தியை கட்டிக்கிட்டதனால பண்ண முடியல. இப்ப சும்மா தானே இருக்கான். அவனுக்கு உன்னை கட்டி வச்சுட்டா, இருக்கிற பாதி சொத்தும் உனக்கு வந்துரும். நாளைக்கு என் காலத்துக்கு அப்புறம், உனக்கு ஒரு பிடிமானம் வேண்டாமா? இப்படியே தனி கட்டையா உன்னை விட்டுட்டு போனா, என் கட்ட எப்பிடிடி வேகும்."
ராகினி சலித்துக் கொண்டாள்.
பிரபாவதி: தண்டச்சோறு நான் சொல்றத செய். சரி எனக்கு மேட்டு வீட்ல, ஒரு வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்...
என்று சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள்.
மேட்டு வீடு,
அதே நேரம்
காவண வீட்டுக்கு வெளிய பெரிய கருப்பன் பயபக்தியுடன் நின்றிருந்தார். காவண வீட்டுக்குள் மந்திர உச்சாடனங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. சித்ராவும், அகல்யாவும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. கார்த்திகாவை மேட்டு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு சொல்லிருந்தார். அவள் மொபைல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
காவண வீட்டுக்கு எதிரே மேட்டு தெருவில் நின்றிருந்த சிக்னி என்ன நடக்கிறதென்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது. தெருவில் டேக்ஸி ஒன்று நின்றிருக்க, அதற்கு பக்கத்தில் டிரைவர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
20 வருடங்களுக்கு முன்னால், முனிக்கு வீட்டை நேர்ந்து விட்டு, அதன் பிறகு மந்திர கட்டு போட்டு முனியை வீட்டுக்குள் வராமல் செய்த பிறகு, இரண்டாவது முறையாக மறுபடியும் மந்திர கட்டு போடுவதற்காக பெரிய கருப்பன் விஜயாபதியில் இருந்து சந்திர சூடனை கூப்பிட்டு இருந்தார்.
அந்த வட்டாரத்திலே ரொம்ப புகழ் பெற்ற சாமியார் கம் மந்திரவாதி.
சமீபத்தில் ஊருக்குள் முனி பற்றிய பேச்சுகள் கிளப்பிவிட்டது முத்துப்பாண்டி வேலை தான் என்று பெரிய கருப்பன் நினைத்தாலும், எதற்கும் ஒரு சேப்டிக்காக இருக்கட்டும் என்று மந்திரவாதியை கூப்பிட்டு இருந்தார்.
வீடு வாடகைக்கு விடும் விஷயத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பது தான் அவருடைய பிரதான எண்ணம்.
காவண வீட்டுக்குள் மந்திர உச்சாடனங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
"ஓம் பஹவதி பைரவி
இந்த வீட்டை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தை கட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன். சபையை கட்டு.
சத்ருவை கட்டு, எதிரியை கட்டு.
எங்கேயும் கட்டு.
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம்
சிவாய நம சிவாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா"
ஹரி ஓம் அவ்வும் சிவாய நம அங் அங் அகோர வீர பத்திர காளி
விரித்த சடையும், மூன்று கண்ணும், இருண்ட மேனியும், ஆயிரம் கையும், உன் திரிசூலமும் நீ ஏரிய. வேதாளமும் குந்தமும் பாசமும் பாச பந்தமும் காப்பு. கங்கணமும் கடகவாளும் வல்லயமும் உடுக்கையும் வீரதண்டாயுதமும் கையில் பிடித்து,
பூத படை சூழ,
என் தாயே வா வா,
பூத பிரேத பிசாசுகளையும் சர்வ கிரகங்களையும் கட்டு. கட்டு.
தூரு தூரு இருக்கு இருக்கு. முட்டு முட்டு இடி தாக்கு தாக்கு மோது மோது ஜயும் கிலியும் சவ்வும் சண்ட பிரசண்டி ஜாடு ஜாடு
அகோர மாங்காளி என்னுடைய சத்திராதி இன்னானை ஜாடு ஜாடு
ஓம் ஆம் றீம் மங் சிங் வங் யங் யங் யங் நங் கிலியும் றீயும் ஆனந்த பத்ரகாளியே நமஹ
விரித்த சடை, மேல்நோக்கிய ரோமம், எதிர்த்த விழியும், இளம்பிறை நெற்றியும், சவுந்தரமேனியும், சிரித்த முகமும், சீரிய பார்வையும், சிங்கப்பல்லும், காதில் ஒலையும், கழுத்தில் மாங்கல்யமும்,
பட்டுப்பாவாடையும்,
பரமா ஆபரணமும், முருக்கின கழுத்தில் அமரா தூணியும், கையில் வில்லும், தாங்கிய பரதமும், லங்கைகேகிய லஷ்ஷயோசனை தூரம் எங்கும் அதிர்ந்திட...
என் முன் வா வா சிங்கவாகனமேறி கையில் சூலமேந்தி பூதப்படை சூழ. பேய் முனியாட
என் முன்னே வா வா...
ஓம் பத்திரகாளி ஓம் பிடாரி. நமசிவாய பாதத்தாணை ஒடி. வா.
அங் இங். உங். எங். ஜயும். கிலியும். சவ்வும். அகோர. வீர. மாங்காளி உன்னையும் முன்னையும் படைத்த ஆதி பரமேஸ்வரன் ஆணை. சீக்கிரம் என் முன் ப்ரசன்னமாக ஸ்வாஹா...
15 நிமிடங்களுக்கு பிறகு, சந்திர சூடன் வெளிப்பட்டார். பிரஷர் குக்கர் போல் தடதடவென அதிர்ந்து கொண்டிருந்த காவண வீடு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது. பின்னாலேயே அவர் சிஷ்யன் ஒருவன் வந்தான்.
சந்திர சூடன் நல்ல வாட்ட சாட்டமான உருவம். அடர்ந்த தாடி, பாம்பின் பார்வை உள்ள கண்கள், கழுகு அலகு போல் சற்றே வளைந்த மூக்கு, காவி உடை, தலைப்பாகை, கழுத்தில் ருத்ராட்ச மாலை.
பெரிய கருப்பன்: சாமி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?
சந்திர சூடன்: எல்லாம் முடிஞ்சுது. இந்த வீட்டுக்குள்ள முனி மட்டுமல்ல, எந்த தீய சக்தியும் நுழைய முடியாதவாறு மந்திர கட்டு போட்டுருக்கேன். அதனால நீங்க பயப்பட வேண்டாம்.
பெரிய கருப்பன்: ரொம்ப நன்றி சாமி.... அப்புறம் உங்க காணிக்கை..
என்று கவரில் பணத்தை வைத்து நீட்டினார்.
சந்திர சூடன் சிஷ்யனை திரும்பிப் பார்க்க, அவன் வாங்கிக் கொண்டான். பின்னர் வணக்கம் வைத்துவிட்டு, சந்திர சூடன் விடை பெற்றுக்கொண்டார்.
சந்திர சூடனை கூப்பிட்டு வருவதற்காக, பெரிய கருப்பன் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் போய் ஏறிக்கொண்டார். சிஷ்யன் ஏறிக்கொள்ள டாக்ஸி கிளம்பியது.
"என்னப்பா, மந்திர தந்திரம்னு இறங்கிட்டீங்க. என்கிட்டேயும் ஒரு வார்த்தை கூட சொல்லல", என்று குரல் கேட்க பெரிய கருப்பன் திரும்பி பார்த்தார். மேட்டு வீட்டிலிருந்து காவண வீட்டுக்கு வரும் வழியில் பிரபாவதி நின்றிருந்தாள்.
தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து உதறி, மறுபடியும் தோளில் போட்டபடி அவளை நோக்கி சென்றார்.
"ஆமா, ஊருக்குள்ள கண்டதெல்லாம் பேசிட்டு இருக்காங்க. எனக்கு இந்த வீட்டை விக்கிறது ரொம்ப முக்கியம். அதனால எதுக்கும் இருக்கட்டுமேன்னு மந்திர கட்டு போட்டேன்."
"நல்லதுதான்பா... நானே சொல்லனும்னு நினைச்சேன்."
இருவரும் பேசிக் கொண்டே சிட் அவுட்டை நோக்கி நடந்தார்கள்.
"தூத்துக்குடிக்காரி இப்பதான் போன் பண்ணிருந்தா, அதை சொல்லத்தான் வந்தேன். குமார் ஆபீஸ்ல வேலை பாக்குற ஏதோ ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவானாம். ரெண்டு பேரும் லவ் பண்றாங்களாம். நல்லவேளை அகல்யா கிட்ட நான் சொல்லும் போதே அவ முடியாதுன்னு சொல்லிட்டா, அதனால நல்லதா போச்சு... ரெண்டு பேருக்கும் பேசி முடித்ததற்கு அப்புறம் அவன் லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா ஏற்கனவே வெறுத்து போயிருக்கும் அகல்யா நிலைமை என்ன ஆயிருக்கும்?"
பெரிய கருப்பன் சற்று ஏமாற்றத்துடன் பிரபாவதியை பார்த்தார்.
"அந்தப் பையன் சின்ன வயசுல அவ கூட பழகுனவன், எப்படியாவது பேசி அகலை சம்மதிக்க வச்சிருலாம்ன்னுல நெனச்சேன். இப்படி பண்ணிட்டானே!!! இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். சொன்னா இன்னும் அவளுக்கு கோபம் தான் அதிகமாகும். நீ அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதே..."
எதேச்சையாக வெளியே வந்த கார்த்திகா, இருவர் பேசுவதையும் கேட்டுவிட்டு, திரும்பி உள்புறமாக கதவருகே நின்றாள். விஷயம் என்னவென்று அவளுக்கு புரிந்து விட்டது.
பிரபாவதி: இந்த பையன் இல்லன்னா என்ன? கொஞ்ச நாள் போகட்டும். நம்ம ஊரு பக்கத்துல, இல்ல, ஊருக்குள்ள ஏதாவது ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.
பெரிய கருப்பன் எதுவும் சொல்லவில்லை. ஏமாற்றத்தின் கசப்பு தொண்டை குழியில் இறங்கிக் கொண்டிருந்ததால், பேசாமல் அமைதியாக இருந்தார்.
அன்றிரவு 12 மணி
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சித்ரா திடுக்கென்று விழிப்பு வர முழித்துக் கொண்டாள்.
சே! என்ன ஒரு பயங்கரமான கனவு
தலையணை கழுத்து வியர்வையால் நனைந்திருந்தது. அவள் அணிந்திருந்த டி-ஷர்ட் நீரில் துவைத்து எடுத்தது போல் மாறியிருந்தது. எழும்பி கட்டிலில் உட்கார்ந்தாள்.
பஸ் ஸ்டாப் இளைஞன் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மைதானா என்று நினைத்து, குழம்பி, தூக்கம் வராமல், சற்று முன்னால் தான் தூங்கியிருந்தாள்.
கொட்டாவி விட்டபடி சைடில் திரும்ப திகைத்தாள்.
சற்று தள்ளி போடப்பட்டிருந்த கட்டிலில், கார்த்திகா தூங்காமல் எழும்பி உட்கார்ந்து இருப்பதை பார்த்தாள்.
கட்டிலில் உட்கார்ந்தபடி எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று சித்ரா பார்க்க, கார்த்திகா ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தாள்.
வெறிக்க வெறிக்க அப்படி ஜன்னலில் என்ன பார்க்கிறா?
அவள் இதயம் பறவையின் இறக்கைகள் போல் படபடவென அடித்துக் கொண்டது.
ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். செடி கொடிகளை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. சுவர் கோழிகளின் இடைவிடாத ரீங்காரம் கேட்டது. மரக்கிளைகள் நிலவை அரித்திருந்தன.
ஜன்னல் வழியாக பார்த்தபடி, சிலை போல் உட்கார்ந்திருந்த கார்த்திகாவை பார்ப்பதற்கு சித்ராவுக்கு ரொம்ப கலவரமாக இருந்தது.
சித்ரா: ராத்திரி எழும்பி உக்காந்துட்டு அப்படி என்ன பார்த்துட்டு இருக்க?
கார்த்திகா சித்ராவை திரும்பி ஸ்லோ மோ வில் பார்க்க, அவள் முகம் பூராவும் திகில் அப்பி இருந்தது.
உதட்டருகே சுட்டு விரலை வைத்து, உஷ் என்று சைகை காண்பித்தாள்.
சித்ரா: என்னடி என்னாச்சு??
கார்த்திகா பதில் சொல்லவில்லை.
சித்ரா: அக்கா கேக்குறேன்ல, சொல்லு.
கார்த்திகா முகம் பீதியில் வெளுத்திருக்க, எதுவும் பேசாமல் ஜன்னலை கை காட்டினாள்.
வெறும் இருட்டை பார்த்து கார்த்திகா பயப்பட கூடியவள் இல்லையே!!! சித்ரா மறுபடியும் திரும்பி ஜன்னலை பார்க்க, அவளுக்கு எதுவுமே வித்தியாசமாக தெரியவில்லை.
"அங்க என்ன தாண்டி இருக்கு", என்று கேட்டபடியே, திரும்பி மறுபடியும் கார்த்திகாவை பார்க்க,
சித்ராவுக்கு தூக்கி வாரி போட்டது. 100 சதவீதம் அதிர்ந்தாள்.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
காற்றின் நிறம் கருப்பு 17
கட்டிலில் கார்த்திகாவை காணவில்லை.
எங்கே போய்ருப்பாள்!! பரபரவென்று அவள் எங்கே என்று சித்ரா தேட, கட்டிலுக்கு கீழே கார்த்திகா பதுங்கி இருந்தது, நைட் லேம்ப் வெளிச்சத்தில் தெரிந்தது.
உஷ் உஷ் என்று சைகை காட்டிக் கொண்டிருந்தாள்.
நைட் லேம்பின் வெளிச்ச ரேகைகள் அவள் கண்களில் பிரதிபலித்தது. ஜன்னலுக்கு வெளியே என்னமோ இருக்கத்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதற்கு இப்படி பயப்பட போகிறாள். சுதாரித்த சித்ரா கட்டிலில் இருந்து எழும்பி, ஜன்னலை பார்த்தபடியே, பூனை போல் கார்த்திகா கட்டிலை அடைந்து, கீழே உட்கார்ந்தாள்.
ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே, இருட்டும், நிலவு வெளிச்சமும், மரங்களின் கிளைகளும் வழக்கம் போல் தெரிந்தது. வெகு தூரத்தில் இருந்து கடல் அலைகளின் இடைவிடாத ஹோ ஹோ என சன்னமான மூச்சிரைப்பு. ரஸ்தா காட்டில் முந்தி இருந்ததை விட நிறைய வீடுகள் வந்து விட்டாலும், மேட்டு தெரு மாதிரி மரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் வீடு இருப்பதால், ஊருக்குள் இருக்கும் ஒரு உணர்வு வரவில்லை. மூடப்பட்டிருந்த ரூமுக்குள் சிறைபட்ட காற்று கனத்திருந்தது.
கார்த்திகா அவளை கட்டிலுக்கு கீழே இழுக்க, அவளும் நுழைந்தாள்.
சித்ரா கிசுகிசுப்பாக,"பயந்து போய் ஒளிர அளவுக்கு என்னடி ஆச்சு? திருட்டு பசங்க யாராச்சும் பாத்தியா?"
கார்த்திகா இல்லை என்று தலையாட்டினாள்.
"ஜன்னலுக்கு வெளியே என்னமோ இருக்கு."
கார்த்திகா கிசுகிசுத்தாள்.
கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த சித்ராவின் கண்களுக்கு ஜன்னலுக்கு வெளியே எதுவும் தெரியவில்லை.
கார்த்திகாவுக்கு உடல் பயத்தில் துடித்தது. மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. இதயம் படபடவென அடித்து கொண்டிருந்தது.
பயம் அலை அலையாய் அவள் உடல் முழுவதும் பரவியிருந்தது.
சித்ராவுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், கார்த்திகாவின் கண்களுக்கு நன்றாக தெரிந்தது. ஜன்னலுக்கு வெளியே, பூச்செடிகளுக்கு பின்னால், இருட்டுக்குள்ளே இருட்டாய் காற்று போல் சுழன்று கொண்டிருந்தது. அந்தக் கருப்பு காத்துக்குள் தீக்கங்கு போன்று இரண்டு கண்கள், சிறிய கண்கள், அந்தரத்தில் மிதந்தன.
பெண்களுக்கே இருக்கும் இயல்பான அச்ச உணர்வு காரணமாக, அனிச்சை செயலாக, பாதுகாப்பான இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்புடன், கட்டிலுக்கு கீழே பதுங்கிக் கொண்டாள்.
அந்திரத்தில் மிதந்து கொண்டிருந்த தீ கங்குகள், ஆக்ரோஷமாக மிதந்து கொண்டிருந்தது போல் அவளுக்கு தோன்றியது.
ஜன்னலுக்கு வெளியே சித்ரா எவ்ளோ கூர்ந்து பார்த்தும், அவள் கண்களுக்கு தெரியவில்லை.
உ... உ... ஊஊஊஊஊஊ என்று ஏதோ ஒரு நாயின் ஊளை சத்தம் இருவருக்கும் மிக அருகில் கேட்ட மாதிரி இருந்தது. திடீரென்று கேட்டதால், அவர்களின் இதயம் ஒருமுறை தடம் புரண்டது. சித்ராவே மேலும் அதிர்ந்தாள். அதைத் தொடர்ந்து, மேட்டு தெருவில் சிக்னி முரட்டுத்தனமாக குறைக்கும் சத்தம் கேட்டது.
கட்டிலுக்கு கீழே இருந்து எழும்பி, ஜன்னலை நோக்கி சித்ரா சென்றாள். கார்த்திகா "அக்கா வேண்டாம்", என்று கையை பிடித்து இழுக்க, பயப்படாதே என்பது போல் அவள் கையைத் தட்டி கொடுத்துவிட்டு, ஜன்னலை நோக்கி சென்றாள்.
"வேண்டாக்கா வந்துரு.."
ஜன்னலுக்கு வெளியே மங்கலான, சோகமான பல்பு வெளிச்சத்தில் பனி இறங்கிக் கொண்டிருந்தது. சித்ராவுக்கு பயம் இருந்தாலும், என்னதான் நடக்கும் பார்த்திரலாமே என்ற பூனை ஆர்வம். ஜன்னலுக்கு வெளியே சுற்றிலும் பார்த்தாள். பரந்த வானத்தில் தூக்கி எறியப்பட்டது போல், நிலா விள்ளல்.
பாஸ் பண்ணி வைத்த ஹாரர் படத்தின் காட்சி போல், எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக தெரிந்தது.
தெருவில் சிக்னியின் குறைப்பு சத்தம் தொடர்ந்தது.
ஜன்னல் திறந்து இருந்தால் தானே கார்த்திக்கு பயம் வரும், சித்ரா ஜன்னலை மூடுவதற்காக, கம்பி வழியாக கையை வெளியே விட்டாள். கையை வெளியே விடும்போது யாராவது பக் என்று பிடிப்பார்களோ என்று அவளுக்கு நினைப்பு வந்தது. யாரும் பிடிக்கவில்லை. சிரித்தபடி தலையாட்டிக் கொண்டு ஜன்னலை மூடினாள்.
ரூம் லைட்டை போட்டாள். உலகமே பிரகாசமானது.
கார்த்திகாவை நோக்கி, திரும்பி,
"ஜன்னலை மூடியாச்சு. லைட்டை போட்டாச்சு. இனிமே இந்த பயமும் இல்லை. அப்படி என்னதான் பார்த்தே?"
கார்த்திகா கட்டிலை விட்டு வெளியே வந்தாள். பயம் காரணமாக நெஞ்சில் கை வைத்துக் கொண்டிருந்தாள்.
சித்ரா: சரி சரி பயப்படாத. ஒன்னுமில்ல. தண்ணி கொஞ்சம் குடி... என்று வாட்டர் ஜக் எடுத்து கொடுத்தாள்.
கார்த்திகா இரண்டு மிடறு குடித்துவிட்டு, வாட்டர் ஜக்கை டேபிளில் வைத்தாள். இரண்டாவது மிடறு தண்ணீரை விழுங்காமல், வாய்க்குள்ளே வைத்து, இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி, வாய் கொப்பளிப்பது போல் செய்து கொண்டிருந்தாள். ரூமுக்குள்ளேயே பெரிய மனுஷி போல், யோசித்தபடி, நாட்டாமை நடை நடந்தாள்.
அவள் கொஞ்சம் நிதானமாகட்டும் என்று சித்ரா அவளிடம் எதுவுமே சொல்லவில்லை.
சித்ரா வியர்வையில் நனைந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டினாள். வேறு டீ சர்ட் ஒன்றை எடுத்து, போடுவதற்காக உதறினாள். எதேச்சையாக திரும்பி பார்த்த கார்த்திகா, சித்ராவின் வலது மார்பில் சிவப்பாக, சிறியதாக, வீங்கியிருந்தததைப் பார்த்தாள்.
கார்த்திகா அவள் அருகில் வந்து, "என்னக்கா காயம் இது?"
என்று கேட்க,
சித்ரா அவசரமாக: அது ஒண்ணும் இல்லடி. ஏதாவது பூச்சி கடிச்சிருக்கும்... என்றாள்.
அவள் வேற என்ன சொல்ல முடியும்? கொஞ்ச நாள் முன்னால, நானும் அரவிந்தும் திருப்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு போனோம். அரவிந்த் நீருக்குள் இறங்காமல் ஓரமாக நின்றிருந்தான். அவன் கையைப் பிடித்து, நான் தான் நீருக்குள் இழுத்துச் சென்றேன். முழுக்க நனைந்து விட்டோம். குளித்து முடித்துவிட்டு உடைல்லாம் ஈரமாகிவிட்டதால், உடை மாற்றுவதற்காக அங்கேயே ஒரு ரூம் போட்டோம். அங்கே அரவிந்த் செய்த சில்மிஷம் என்றா சொல்ல முடியும்?
திரும்பிப் பார்க்க மாட்டாள் என்று டி-ஷர்டை அப்படியே கழட்டியது தப்பா போச்சு. உதறிக் கொண்டிருந்த டி-ஷர்டை பட்டென்று போட்டு விட்டு,
"இதை விடு, நீ என்னத்தடி பார்த்து அப்படி பயந்த, நீ அவ்வளவு சாதாரணமாக பயப்படுற ஆள் இல்லையே! அதுதான் ஆச்சரியமா இருக்கு..."
கார்த்திகா: இருட்டுக்குள்ளருந்து பயங்கர கண்ணு மாதிரி, எதையோ பார்த்தேன். வெறும் கண்ணு மட்டும். என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்துச்சு.
சித்ரா: கண்ணா? யாராவது வெளியில் நின்னு பார்த்திருப்பாங்களோ?
கார்த்திகா: அக்கா உனக்கு புரியலையா? யாராவது நின்னா எனக்கு தெரியாதா? வெறும் கண்ணு மட்டும். காத்துல மிதந்துட்டு இருந்துச்சு. ஜன்னலை நோக்கி மிதந்து வந்துச்சு. அதான் பயந்துட்டேன்.
அதைக் கேட்கும் போது, சித்ராவுக்கும் லேசாக பீதியாக தான் இருந்தது.
நாம் பார்க்கும் போது எதுவுமே இல்லையே, சித்ரா யோசித்தாள். இவள் வேறு எதையாவது பார்த்து பயந்துருக்கலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.
சித்ரா: கன்னம் வைப்பதற்காக திருட்டு பசங்க யாராவது வந்திருக்கலாம். தேவை இல்லாமல் நீ எதையாவது நினைச்சு குழம்பிக்காதே. காலையில் தாத்தா கிட்ட சொல்லலாம்.
கார்த்திகா: வேண்டாக்கா சொல்லாதே. தாத்தாவே மனசு சரியில்லாமல் இருக்கிறார். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லல. சாயங்காலம் பிரபா அத்தை வந்து...
என்று ஆரம்பித்து, அவள் காதில் விழுந்த விஷயத்தை சொன்னாள்.
சித்ரா: எனக்கு அப்பவே தெரியும். ஊர்லருந்து போனதுக்கப்புறம் குமார் கண்டுக்கவே இல்ல. மெட்ராஸ்லயே தெருவுக்கு தெரு அழகான பொண்ணுங்க இருப்பாங்க. அதை விட்டுட்டு எதுக்கு திரும்ப அவன் ஊரு பக்கம் வரப்போறான். இந்த காலத்து பசங்க கிட்ட நம்பிக்கையை எதிர்பார்க்கிறது ரொம்ப கஷ்டம் தான். அவன் வந்திருந்தா கூட அக்கா ஒத்துக்கிட்டுருக்க மாட்டாங்க. அது வேற விஷயம். எதுக்கும் அக்கா கிட்ட தப்பித்தவறி கூட இந்த விஷயத்தை சொல்லிராத.
கார்த்திகா: இதே தான் தாத்தாவும் சொன்னார். பாவம் அக்கா!! நமக்காக எல்லாத்தையும் இழந்துட்டாங்க. கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றாங்க. அட்லீஸ்ட் இனிமே நம்மால அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது. இப்ப நடந்த விஷயம் எதுவும் தாத்தா கிட்டையோ, அக்கா கிட்டையோ சொல்ல வேண்டாம். நாமளே பார்த்துக்கலாம்.
சித்ராவுக்கு சுருக்கென்று இருந்தது.
"நம்மால அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது", என்று அவள் சொன்னது சித்ரா காதுக்குள் ஒரு சில முறை எதிரொலித்தது.
கார்த்திகா: எனக்கு ஒரு ஆசைக்கா... சினிமாவில் காட்டுவாங்களே, கஷ்டப்படுற சிண்ட்ரெல்லாவை காப்பாத்த வர்ற ராஜகுமாரன் மாதிரி, நம்ம அக்காவுக்காக எவனாவது ஒரு ராஜகுமாரன் வர மாட்டானா?
அவள் குரலில் நிஜமான ஏக்கம்.
சித்ரா சிரித்தாள்.
"கேட்க நல்லாத்தான் இருக்கு. சினிமாவுக்கு ஓகே... நிஜ வாழ்க்கையில் சிண்ட்ரெல்லாக்களுக்கு ராஜகுமாரன்கள் தேவைப்படுவதில்லை. சிண்ட்ரெல்லாவுக்கு அவளைப் பார்த்துக் கொள்ள தெரியும்."
"கரெக்டு தான் இல்ல" என்பது போல், கார்த்திகா தலையாட்டினாள்.
"சரி வாக்கா தூங்கலாம்.."
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு எப்படி சட்டென்று மனநிலையை மாற்றிக் கொள்ள முடிகிறது. சித்ரா ஆச்சரியமாக அவளை பார்த்தாள்.
கார்த்திகா அவள் கட்டிலில் போய் படுக்க போக,
சித்ரா: என்கூட வந்து படுத்துக்கோ.
கார்த்திகா: வேண்டாங்கா, அதான் ஜன்னலை மூடிட்டியே. நீ லைட் ஆஃப் பண்ணு... நான் கண்ணை மூடிகிட்டு பேசாம தூங்கிடுவேன்... என்றாள் உறுதியான குரலில்.
ரூமுக்குள் பேச்சு சத்தம் நின்றதும்,
பூட்டப்பட்டிருந்த ஜன்னலுக்கு வெளியே, சரசரவென செடிகள் அசைந்தன.
இருட்டுக்குள் கருப்பு காற்றாய், நெகிழ்வுத் தன்மையுடன், மினுமினுப்பாய், ஏதோ ஒன்று சுழன்று கொண்டிருந்தது. மூர்க்கத்தனமான மெல்லிய உறுமல் சுழல் காற்றுக்குள் கேட்டுக் கொண்டிருக்க,
விஷ்க் என்று சுழண்டு, துள்ளி துள்ளி, செடிகளை தாண்டி, மரங்களை தாண்டி, மதில் சுவரைத் தாண்டி, கடந்து சென்றது.
மேட்டு தெருவில்,
சிக்னியின் குறைப்பு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
கருப்பு 18
அரசு மேல்நிலைப்பள்ளி பனையூர்
மறுநாள் காலை 10 மணி
ரஸ்தா காட்டில் இருந்து பனையூர் போகும் வழியில் இருந்தது அந்த அரசு மேல்நிலை பள்ளி. அரசு பள்ளிகளை பற்றி சலிக்க சலிக்க பல படங்களில், பல கதைகளில், வர்ணித்து விட்டார்கள். அந்த வர்ணனைகளுக்கு இம்மி கூட பிசகாமல், அப்படியே இந்தப் பள்ளியும் இருந்தது.
குப்புற போட்ட ப வடிவில் மூன்று கட்டிடம். நடுவே ஒரு சிறிய மைதானம். முதல் கட்டிடத்தில் மட்டும் ஒரு மாடி. பக்கவாட்டில் மற்றும் எதிரே இருப்பவை தலை மேல் மாடி எதுவும் இல்லாமல் இருந்தது. ப வின் ஆரம்பத்திலேயே தலைமையாசிரியர் அறை. அவர் அறையின் படிக்கட்டுகளை விட்டு கீழே இறங்கினால், கொஞ்சம் முன்னால் கொடி கம்பம்.
கிளாஸ் ரூம்கள் இயங்கிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாக மாணவர்கள் சத்தமும், அவ்வப்போது வாத்தியார்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. தலைமையாசிரியர் அறையில்,
50 சதவீத நரை முடியுடன், வெள்ளெழுத்து கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர் ஜானகிராமன். எதிரே அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தார். டேபிளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இளைஞன், உதட்டோரம் புன்னகையுடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தான்.
மேலே மின்விசிறி கிர் என்று சுத்தி கொண்டிருந்தது. சுவரோரமாக இரண்டு மர செல்ஃபுகள். அதில் நிறைய பைல்கள். டேபிளில் பாட புத்தகங்கள், அட்டனன்ஸ் ரெஜிஸ்டர், இன்னும் வேறு ஏதோ ரெஜிஸ்டர்கள்.
ஹெட் மாஸ்டர் ஜானகிராமன் அந்த லெட்டரை மறுபடியும் படித்தார்.
Name: Thomas Ittiyvarah Nedumparambil
என்ன பெயர் இது? வாயிலேயே நுழைய மாட்டேங்குது!
அமர்ந்திருந்த இளைஞன் புதிய வாத்தியாராக இந்த ஊர் ஸ்கூலுக்கு வந்திருக்கிறான். அதற்குரிய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தான் ஹெட் மாஸ்டர் கையில் இருந்தது.
ஹெட் மாஸ்டர்: தம்பி, தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க பேருல தாமஸ் மட்டும் தான் புரியுது. மத்தது எனக்கு வாயில நுழையல. கேரளாக்காரர் மாதிரி தெரியுது. தமிழ் தெரியுமா உங்களுக்கு?
அவன் புன்னகை சிந்தினான். சிந்தினான் என்று சொல்வதை விட, புன்னகையை தவழ விட்டான்னு சொல்றது தான் சரி.
அவன்: சார் என்னோட பேரு தாமஸ் இட்டிவரா நெடும்பரம்பில்... நெடும்பரம்பில் என்பது குடும்பப் பேர். நான் ஒரு கிறிஸ்டின். அம்மா கேரளா, அப்பா தமிழ். சொந்த ஊர் நெய்யாற்றின்கரா. ஆனா மார்த்தாண்டத்தில் செட்டில் ஆகி ரொம்ப நாளாச்சு. தமிழ் எனக்கு சரளமாகவே வரும்.
உட்கார்ந்திருந்தாலும், நல்ல உயரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. உறுதியான முகம், கூர்மையான பார்வை. கருமையான புருவங்கள். சற்று சிறிய மூக்கு, புஷ்டியான கன்ன மேடுகள், கவர்ச்சிகரமான சிவந்த உதடுகள், ஆரோக்கியமான பற்கள், ஏதோ ஒரு மலையாள நடிகருக்கு இருப்பது போல் முகவாய் குழிவு.
ஹெட் மாஸ்டருக்கு அவனை பார்த்ததும், இயல்பாகவே நல்லெண்ணம் தோன்றியது. தான் செல்லும் கூட்டங்களில் தனியாக தெரிவான். எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்து கொள்வான். கவர்ச்சியாக செயல்படுவான்.... என்று கூடவே இவை அனைத்தும் தோன்றியது.
ஹெட் மாஸ்டர்: எப்படி பனையூர் மாதிரி, காஞ்சாங்காட்டிற்கு வாத்தியாரா வர சம்மதிச்சீங்க?
தாமஸ்: நான் எங்க சார் சம்மதிச்சேன்? போர்டுல ரெக்ரூட்மெண்ட் ஆர்டர் கொடுக்கும் போதே, கிராம பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றில், ரெண்டு வருஷமாவது வேலை பார்க்கணும்னு எழுதி வாங்கிட்டாங்க. மார்த்தாண்டத்தில் தான் போஸ்டிங் கேட்டேன். குடுக்கல. DEO வரைக்கும் போய் பார்த்தேன். ஒன்னும் நடக்காததனால, வேற வழி இல்லாம வந்தேன்.
ஹெட் மாஸ்டர்: அதானே பார்த்தேன், மார்த்தாண்டம் எவ்வளவு செழிப்பான ஊரு. அதை விட்டுட்டு இந்த காஞ்சாங்காட்டுக்கு வந்திருக்கிறாரேன்னு நெனச்சேன். எப்படியோ வெல்கம் டு அவர் ஸ்கூல். உங்களுக்கு ஜாயினிங் டேட் நாளையிலிருந்து தானே. ஏன் இன்னைக்கே வந்தீங்க?
தாமஸ்: தெரியும் சார், தங்குவதற்கு இடமில்லை. நல்ல வீடா பார்க்கணும். அதான் ஒரு நாள் முன்கூட்டியே வந்தேன். வீடு கிடைக்கிற வரைக்கும் அஞ்சு கிராமத்தில் ஏதாவது லாட்ஜில் தங்கியிருந்து தான் வரணும்.
ஹெட் மாஸ்டர்: நம்ம ஏரியாவுல வீட்டுக்கா பஞ்சம். அதெல்லாம் நிறையவே கிடைக்கும். நான் ஒரு புரோக்கர் நம்பர் தரேன். நீங்க அவரை காண்டாக்ட் பண்ணுங்க. ஒரே நாளில் கிடைச்சிரும்.
"தேங்க்யூ சார்", என்று சொல்லிவிட்டு தாமஸ் எழும்பி நின்று கைநீட்ட, ஹெட் மாஸ்டரும் எழும்பி நின்று, கை குலுக்கினார்.
மாலை 5 மணி
காவண வீட்டின் முன்னால், திருமுடியும் தாமஸும் நின்றிருந்தார்கள்.
திருமுடி: இதுதான் சார் நான் சொன்ன வீடு. காவண வீடுன்னு சொல்லுவாங்க. ஊருக்குள்ள பேசுவதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. ரொம்ப நாளா ஒரு வீடு பூட்டி போட்டுருந்தா, ஏதாவது பேச்சு வரத்தான் செய்யும். வீட்டுக்கு சொந்தக்காரர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. பக்கத்துல இருக்குற அந்த வீட்டுல தான் இருக்கிறார். அதை மேட்டு வீடுன்னு சொல்லுவாங்க. அவருக்கு மூணு பொண்ணுங்க. ரொம்ப நாளா வீடு பூட்டி போட்டு சும்மா கிடக்குதுன்னு எங்கள மாதிரி ஒரு சில பேர் சொல்ல போய் தான், வாடகைக்கு விட ஒத்துக்கிட்டார்.
திருமுடி போனை எடுத்து பேசினான்.
"ஆமாங்கய்யா, கூட்டிட்டு வந்துட்டேன். அருமையான இடம். பனையூர் ஸ்கூல்ல வாத்தியாரு. வீட்டு முன்னால தான் நிக்கிறோம். நீங்க சாவி எடுத்துட்டு காவண வீட்டுக்கு வந்துருங்க.."
திருமுடி தாமசை பார்த்து, "சொல்லிட்டேன் வந்துருவாரு. இந்த மாதிரி ஒரு பெரிய வீடு உங்களுக்கு இந்த சுற்றுவட்டாரத்தில் இவ்வளவு கம்மி வாடகையில் கிடைக்காது. கம்மி வாடகைக்கு கிடைக்கிறதுனால லேசு பாசா நினைச்சுறாதீங்க. ஒரு காலத்துல இந்த ரெண்டு வீடும் தான் இந்த சுற்று வட்டாரத்திலேயே பிரபலமான வீடுகள். எல்லாம் கல்யாணங்களும் காவண வீட்ல தான் நடக்கும். இப்பதான் ஊருக்கு நாலு திருமண மண்டபம் வந்துடுச்சே. ஆள் யாரும் இல்லாமல் சும்மா பூட்டி போட்டுருக்காங்க. அவ்வளவுதான் வேற ஒரு விஷயம் இல்லை... ஐயா சும்மா யாருக்கு வேணாலும் வாடகைக்கு விட்ற மாட்டார். நீங்க வாத்தியார்ன்கிறதால ஒத்துக்கிட்டார்.."
தாமஸ் காவண வீட்டை ஏறிட்டுப் பார்த்தான்.
ரகசியங்கள் அனைத்தும் ஒளித்து வைத்துக்கொண்டு, திருட்டு முழி முழிக்கும் குற்றவாளியை போல் தான் காவண வீடு தோன்றியது.
தாமஸ் முகத்தில், வீடு பிடிக்காதது மாதிரி, திருப்தியின்மை தெரிந்தது.
தொடரும்
தொடரும்
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/
Latest Post: காலம் தாண்டிய பயணம் -07 Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page