All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 08

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம் 8

அகன் கிட்டத்தட்ட வேங்கையனின் வலது கையாக செயலாற்ற தொடங்கி விட்டான். கட்டிட கலைஞரோடு சேர்ந்து அகழியின் மதில் சுவரை சீரமைக்கும் பணியை செய்து முடித்தான். அதன்பிறகே மோகனாங்கியை அந்த நீரோடையில் நீராட அனுமதித்தான்.

 

எல்லா துறையிலும் தன்னுடைய ஆலோசனையை ஒவ்வொன்றாக சொன்னான். அவன் சொல்வது எல்லாமே சிறந்த முடிவாக தோன்றவே, மெல்ல மெல்ல மோகனாங்கி மட்டுமல்ல அவள் பெற்றோரும் அகனின் பேச்சை கேட்டு நடக்க ஆரம்பித்தார்கள். 

 

சில மாதங்களுக்கு பிறகு வேங்கையன் நிலவழகியிடம், “நம்ம மோகனாவுக்கு அகனையே கல்யாணம் செய்து வைச்சிடலாம்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்றே அழகி?”

 

“அவன் என்ன குலமோ? என்ன கோத்திரமோ? சத்ரிய குலத்துல பிறந்த ஒரு அரசனுக்கு தான் என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கணும்” என்றார் நிலவழகி

 

“குலத்தை பார்க்காதே அழகி, குணத்தை பாரு. நம்ம மோகனாவோட அழகுக்கும் அறிவுக்கும் அகன் ரொம்பவே பொருத்தமா இருப்பான். மிக சிறந்த வீரன். மோகனா அவனை பார்க்கும் போது அவ முகத்தை கவனிச்சிருக்கியா? பெண்மைக்கான வெட்கம், நாணம், பயிர்ப்பு எல்லாம் தெரியுது. அவனை கல்யாணம் செய்து வச்சிட்டா, ஆண் என்கிற அகந்தை இல்லாம நம்ம மோகனாவையே அரசி ஆக்கி ஆட்சி செய்ய வைப்பான். கூடவே நாட்டோட தளபதியா இருந்து நம்ம நாட்டுக்கு பாதுகாவலனா இருப்பான்னு தோணுது

 

அதுமட்டுமில்லாம, மோகனா ரொம்ப ஆளுமையான பொண்ணு. அறிவிலும் அழகிலும் சிறப்பானவ, இப்போ வீரத்திலும் அவளோட முன்னேற்றம் தெரியுது. அப்படிப்பட்ட பெண்ணுக்கு நாடாளும் அரசனை கல்யாணம் பண்ணி வச்சா, அவன் அவளுக்கு தேவையான சுதந்திரத்தை தருவானா? ஒரே உறையில இரண்டு கத்தி எப்படி இருக்க முடியாதோ, அதே மாதிரி கணவன் மனைவி இரண்டு பேருமே எல்லா விதத்திலயும் சிறந்தவங்களா இருந்தா, யார் பெரியவங்கனு அகங்காரம் எழும். 

 

திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யாராவது ஒருத்தராவது விட்டு கொடுத்தா தான் அந்த வாழ்க்கை நிலைச்சிருக்கும். நம்ம மோகனாவுக்கு அந்தளவுக்கு பக்குவம் இருக்கான்னு தெரியல. அதனால தான் நான் அகனுக்கு நம்ம மோகனாவை கல்யாணம் செய்து வச்சிடலாம்னு நினைக்கிறேன்”

 

“என்னவோ சொல்றீங்க? அகன் இப்போ சாதாரண தளபதி, மோகனாவுக்கு அடிபணிஞ்சு தான் ஆகணும். கல்யாணத்துக்கு பிறகு அவன் அப்படியே இருப்பான்னு என்ன நிச்சயம்?”

 

“என்னோட எண்ணம் அகன் எப்பவும் மோகனாவுக்கு அடிபணிஞ்சு இருக்கணுங்கிறது இல்ல. இரண்டு பேரும் ஒத்து போய் ஒண்ணாவே ஆட்சி செஞ்சாலும் எனக்கு சந்தோஷம் தான். எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. வேணும்னா நாம அவன்கிட்ட நேரடியா பேசுவோம். அவனை கூப்பிட்டு மோகனாவை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன். கூடவே மோகனா தான் கடைசி வரைக்கும் அரசியா இருக்கணும்னு சொல்றேன். அவன் என்ன சொல்றான்னு பார்க்கலாம்”

 

“அதுக்கு முன்னாடி உங்க பெண் கிட்ட சம்மதம் கேளுங்க”

 

உடனே அரசர் காவலாளியை அழைத்து மோகனாங்கியை கூட்டி வர சொன்னார். 

 

அவள் வந்ததும், “மோகனா உனக்கு அகனை திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். உனக்கு சம்மதமா?”

 

அவர் கேட்டதுமே மோகனாவின் முகம் நாணத்தில் சிவந்து விட்டது. அதை மறைக்க தலையை கவிழ்ந்து கொண்டாள். “என்னப்பா திடீர்னு?” என்றவளின் குரல் குழைந்து போயிருந்தது.

 

அகன் அவளுடைய உயிரை காப்பாற்றி இருக்கிறான். அதுவும் அவள் அரைகுறை ஆடையில் இருக்கும் போது அவன் கண்கள் கொஞ்சமும் வரம்பு மீறவில்லை. பயிற்சிக்காக அவன் அவளை தொடும் போது, அவளுக்கு மனதில் ஒரு படப்படப்பு, வயிற்றுக்குள் பல வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன. ஆணின் முதல் ஸ்பரிசம் அவளை கிளர்ச்சியுறச் செய்தது. ஆனால் அவனோ முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தன் வேலையில் கவனமாய் இருந்தான்.

 

இவள் கிளர்ச்சியை அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் தள்ளியே இருந்தான். அதனால் அவன் மேல் இன்னுமே காதல் கூடியிருந்தது. அவளுக்கு தெரியும் அவனும் அவளை காதலிக்கிறான் என்று. ஆனால் இளவரசியாயிற்றே என்று தயங்குகிறான்.

 

அவனாக தன் காதலை வெளிப்படையாக சொல்லாத போது, அவள் என்ன செய்ய முடியும்? அவன் காதலை சொல்லும் நாளுக்காக காத்திருந்தவளுக்கு, அவள் தந்தையே அவனோடு திருமணமே செய்து வைக்க போவதாக சொல்லவும், பழம் நழுவி பாலில் அல்ல, அவள் வாயில் விழுந்தது போல அவ்வளவு இனித்தது.

 

“மோகனா உன் தந்தையின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லு. உன் சம்மதம் தெரிந்த பின்பு தான் அகனிடம் சம்மதமா என்று கேட்க வேண்டும்” என்றார் நிலவழகி

 

“எனக்கு சம்மதம், அவருக்கும் சம்மதம் என்று எனக்கு தெரியும்” என்றவள் பெற்றவர்களின் முகத்தை பார்க்க வெட்கப்பட்டு நிற்காமல் அங்கிருந்து ஓடி விட்டாள்.

 

அரசர் சிரித்துக் கொண்டே மீசையை தடவி, “பார்த்தாயா அழகி? என் மகளுக்கு என்ன பிடிக்கும்? அவள் மனதில் என்ன இருக்கு என்று எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றார் பெருமையாக

 

“அது தெரியாதா எனக்கு? தந்தையும் மகளும் ஒரே மாதிரி தானே யோசிப்பீர்கள். உங்கள் மகள் ஒருபடி மேலே போய் அகனுக்கு என்ன பிடிக்கும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறாள். எனவே தாமதிக்காமல் திருமண வேலையை தொடங்குங்கள்” என்று நிலவழகியும் சிரித்தார்.

 

“அகன் மறுக்க போவதில்லை தான் என்றாலும் சம்பிரதாயத்திற்காக அவனை அழைத்து ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்” என்றவர் இப்போது அகனை வரச் சொல்லி செய்தி அனுப்பினார்.

 

அகன் அரசரை வணங்கி, “சொல்லுங்கள் அரசே” என்றதும் 

 

வேங்கையன், “அகன், உனக்கு என் மகள் மோகனாங்கியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறோம். நீ என்ன சொல்கிறாய்?”

 

“என்ன? சாதாரண பிரஜையான எனக்கு தென்மதுரை நாட்டின் இளவரசியை கல்யாணம் செய்து வைக்க போறீங்களா? அரசே உங்களுக்கு உடல் நலம் நன்றாக தானே இருக்கிறது?” அதிர்ச்சியுடன் கேட்டான் அகன்.

 

“நீ சாதாரண பிரஜை இல்லை. அகந்தையே இல்லாத சிறந்த ஆண்மகன், வலிமையான வீரன், பண்பாளன். என் காலத்திற்கு பிறகு என் மகளையும் என் நாட்டையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

 

“நிச்சயம் மோகனாங்கிக்கு சிறந்த காவலனாக இருப்பேன். ஆனால் கணவனாக அல்ல. மன்னிக்கனும் அரசே. இந்த திருமணப்பேச்சை இத்தோடு விட்டு விடுங்கள். இதைப்பற்றி இளவரசியிடம் பேச வேண்டாம்”

 

“ஏற்கனவே அவளிடம் சம்மதத்தை கேட்டாயிற்று. அவள் சம்மதித்த பின்பு தான் உன்னை கேட்கிறேன். ஆனால் நீ இப்படி என் மகளை மறுப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை”

 

“மன்னித்து விடுங்கள் அரசே. இளவரசிக்கு கொடுக்கப்பட வேண்டிய பயிற்சியை கொடுத்து விட்டு நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி விட்டு சென்றான்.

 

“என்ன இவன்? மோகனாவை கல்யாணம் செய்தால் நாட்டை அரசாளும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்கிறான்” என்று நிலவழகி அரசரை பார்த்து கேட்க,

 

“அகன் மீதான மதிப்பு இன்னும் கூடியிருக்கு அழகி. பேராசையில்லாத இவன் நம் மகளுக்கு கணவனாக வந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அகனை கட்டாயப்படுத்துவதும் முறையல்ல” என்று பெருமூச்செறிந்தார் வேங்கையன்

 

*********

 

அகன் தன்னை திருமணம் செய்ய மறுத்திருக்கிறான் என்பதை கேள்விப்பட்டதும் மோகனாங்கியால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளை பார்க்கும் போது அவன் கண்களில் தெரியும் மெச்சுதலான பார்வை சொல்லுமே அவன் அவளை ரசித்து பார்க்கிறான் என்று. அவள் உயிரை காப்பாற்றியதை கூட அவன் உயிரை காப்பாற்றியதாக சொன்னானே. இப்போது ஏன் திருமணம் வேண்டாம் என்று மறுக்க வேண்டும்?

 

அகன் அவளை மறுத்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் மறுநாளில் இருந்து அவள் பயிற்சிக்கு செல்லவில்லை. சில நாட்கள் பொறுத்து பார்த்த அகன், பின்பு மோகனாவை சந்திக்க நேரில் வந்தான்.

 

“மோகனா, இறுதியாக செய்ய போகும் பயிற்சிகள் தான் முக்கியமானவை. ஏன் பயிற்சிக்கு வரவில்லை”

 

“உங்களுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே, என் முகத்தை பார்க்கும் கஷ்டத்தை தரவேண்டாம் என்று தான் பயிற்சிக்கு வரவில்லை” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

 

“உன்னை எனக்கு பிடிக்காது என்று யார் சொன்னது?”

 

“நீங்க தான். அரசரிடம் என்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லைனு சொன்னீங்களாமே”

 

சற்று நேர மெளனமாக இருந்தவன், “மோகனா, நீ இந்த நாட்டின் இளவரசி. நான் மலைபிரதேசத்தில் வாழும் சாதாரண ஆதிவாசி. நான் எந்த வகையிலும் உனக்கு பொருத்தமானவன் இல்லை”

 

“மணம் புரிய மனப்பொருத்தம் ஒன்றே போதும்” என்றாள் வெடுக்கென்று

 

“மோகனா, நீ என்னை விரும்புகிறாயா?” என்றான் நம்பமாட்டாமல்

 

“தெரியாது, தந்தையின் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னேன். அவ்வளவு தான்”

 

“அப்படியானால் சரி, உன் தந்தை சொன்னதை மறந்து விடு. இப்போது கிளம்பு. இன்று உன் கண்களை கறுப்பு துணியால் கட்டி விட்டு, வாள் பயிற்சி தருகிறேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

ஒரளவிற்கு மேல் மோகனாவால் வெட்கத்தை விட்டு அவனிடம் அவளை ஏற்றுக் கொள்ளும்படி கேட்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. பயிற்சியை தவிர்ப்பதும் முறையல்ல என்பதால் மெளனமாக அவன் பின்னால் சென்றாள்.

 

அவள் கண்களை கட்டிவிட்டு, அவளிடம் வாளை கொடுத்து, “நான் வாளை உனக்கெதிரே சுழற்றுவேன். அதன் ஓசையை வைத்து நீ என்னை கண்டுபிடித்து தாக்க வேண்டும்” என்றான்.

 

“நீங்களும் கண்ணை கட்டிக்கொள்ள வில்லையா?”

 

“நான் கண்ணை கட்டிக்கொண்டால் நீ சரியாக செய்கிறாயா என்று எனக்கு எப்படி தெரியும்? பயிற்சி பெறும் உன் கண்ணை மட்டும் தான் கட்டுவேன்” என்றான்.

 

அதன் பிறகு மோகனாங்கி வாளை வாங்கி கொண்டு அகன் சுழற்றும் வாளை தாக்க முயற்சி செய்து, இடவலமாக கையை மாற்றி மாற்றி சுழற்றினாள். அகன் அகப்படாததால் உடலை பல கோணத்தில் அவள் வளைக்க, அகன் தான் தடுமாறி போனான்.

 

மோகனாவின் அங்க அசைவுகளில் பெண்மையின் செழுமையில் தடுமாறி நின்றான். ஆடை நெகிழ்ந்து போயிருக்க, அவள் மேனியில் இருந்த மச்சம் அகன் கண்களுக்கு விருந்தாகி போனது. அவனால் கண்களை அகற்ற முடியவில்லை. வாளை சுழற்ற மறந்து அப்படியே நின்று விட்டான்.

 

அது தெரியாமல் மோகனா வெகுநேரம் கைகளை சுழற்றி சோர்ந்து போனாள், “ரொம்ப கடினமா இருக்கு அகன். ஓய்வு தேவை” என்று சொல்லிக் கொண்டே கண்கட்டை அவிழ்த்தாள்.

 

அகனின் பார்வை அவள் மேல் இருந்ததால், அவள் பேச்சை கவனிக்க வில்லை. ஆடை விலகி இருப்பதை உணராமல் மோகனா அவன் எதிரே வந்து நிற்கவும் தான் சுயம் பெற்றான். “மோகனா நாளைக்கு பயிற்சி செய்யலாமா?” என்றான் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டு

 

“ஏன் என்னாச்சு?”

 

“உடம்பு சோர்வா இருக்கற மாதிரி இருக்கு” என்றவன் விறுவிறுவென்று முன்னே நடந்தான். புரியாமல் அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். 

 

அப்படியே திரும்பாமலே, “மோகனா, போகும் போது ஆடையை சரி செய்துட்டு போ” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.

 

அப்போது தான் அவள் தன்னை குனிந்து பார்த்தாள். சட்டென்று ஆடையை அவள் கை சரி செய்தாலும், இந்த கோலத்தில் அவன் அவளை பார்த்து விட்டானே என்று வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

 

அன்று இரவு வெகுநேரமாகியும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. அகன் எப்போதும் இல்லாமல் உடல் சோர்வாக இருக்கிறது என்றானே, உடல் நலமில்லையோ என்று கவலை பட்டாள். ஏனோ அப்போதே அவனை பார்த்து அவன் உடல்நலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நடுநிசி ஆகி போனதால் ஓசைப்படாமல் வெளியே வந்து அகன் தங்கியிருந்த விருந்தினர் அறைக்கு சென்றாள்.

 

அங்கே அகன்  காலையில் கண்ட மோகனாவின்  ஆடை கலைந்த கோலத்தை அழகாக வரைந்து முடித்திருந்தான். பின்னாலிருந்து அதை பார்த்த மோகனாவிற்கு அதிர்ச்சி. அவள் வந்ததை உணராதவன் ஓவியத்தில் இருந்தவளின் நெற்றியில் தொடங்கி முகம் முழுவதும் விரலால் கோலமிட்டான். பின்பு ரசனையோடு அந்த ஓவியத்தை வருடினான். பின்பு ஏதோ நினைவு வந்தவனாக ஏதோ ஒரு குச்சியை எடுத்து கருப்பு மையில் தோய்த்து, அவள் இதழோரம், கழுத்தோரம் புள்ளி வைத்தான்.

 

பெண்மையின் மென்மையருகே சற்று தயங்கி, புள்ளி வைத்தான். பின்பு இடதுப்பக்கம் இடையருகே ஒரு புள்ளி வைத்தான். அவன் வைத்த புள்ளிகள் எல்லாம் அவள் மேனியில் இருக்கும் மச்சங்கள் என்று அப்போது தான் மோகனாவிற்கு புரிந்தது.

 

“மோகனா, மச்சமிருக்கும் இடங்களில் எல்லாம் முத்தமிட ஆசை. ஓவியத்திலிருந்து உயிர் பெற்று வருவாயா?” என்று ஓவியத்தை பார்த்து ஏக்கமாக கேட்டான்

 

மோகனா இப்போது கள்ள சிரிப்புடன் அவன் முன்னே வந்து நின்றாள். சற்றும் யோசிக்காமல் அவளை அள்ளி அணைத்தவன் அவள் கழுத்துவளைவிலிருந்த மச்சத்தின் மேல் அழுத்தமாக இதழ்பதித்தான்.

 

அப்போது தான் உணர்ந்தான், கைகளில் இருப்பது நிழலல்ல, நிஜமென்று. ஆனால் அரண்மனை அந்தபுரத்தில் இருக்கும் மோகனா இப்போது இங்கே எப்படி வரமுடியும்? மேலும் உறுதி செய்துக் கொள்ள, “மோகனா, மோகி” என்றபடி அவளை மேலும் இறுக அணைத்தான்.

 

அகனின் இறுகிய அணைப்பில், எதிர்பாராத அவனுடைய அழுத்தமான முத்தத்தில் உணர்ச்சி மிகுதியில் அவன் கைகளில் மயங்கி சரிந்தாள் மங்கையவள்.

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page