All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
நேசம் – 8
 
(ஹாய் டியர்ஸ்..
ஒரு முக்கியமான வேலை.. வியாழன் வெள்ளி வர வேண்டிய பதிவுகள் எதுவும் வராது. இரண்டு கதைக்கான பதிவையும் முடிந்தால் சனி இரவோ இல்லை ஞாயிறு இரவோ கொடுக்கிறேன்.. இது போன்ற முக்கியமான செய்தியை எல்லாம் அத்தியாயம் முடிந்ததும் கீழே கொடுத்தால் யாரும் பார்ப்பதே இல்லை.. அதனால் தான் கதை தொடங்கும் போதே கொடுத்து விட்டேன்.. எப்படி என் ராஜ தந்திரம்.. ஹிஹி..)
 
நாகராஜனுக்கு யுவனிடம் இருந்து அழைப்பு வந்தது. யோசனையோடு அதை ஏற்றிருந்தவர், “சொல்லுங்க தம்பி..” என்று தொடங்கவும் “உங்களுக்கு தாரக் தெரியுமா..?” என்று கேட்டிருந்தான் யுவன். இதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவர் “என்ன விஷயம்..? உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்..?” என்றார் தன் மகளின் விஷயமாக யுவன் பேசப் போவதாக நினைத்து நாகராஜன்.
 
 
“நாம அன்னைக்கு ஒரு டெண்டர் சம்பந்தமா பேசினோம் இல்லை, அப்பா கூட ரொம்பக் கோபப்பட்டாரே..” என்று யுவன் தொடங்கவும் “ஆமா ஞாபகம் இருக்கு, சொல்லுங்க..” என்றார் நாகராஜன்.
 
 
“இன்னைக்கு அந்த டெண்டர் சைன் ஆகிடுச்சு..” என்று யுவன் கூறவும் “வாழ்த்துக்கள் தம்பி.. எப்படியோ திட்டம் போட்டு கச்சிதமா முடிச்சிட்டீங்க போல, அப்பாகிட்ட சொல்லுங்க ரொம்பச் சந்தோஷப்படுவார்..” என்றார் நாகராஜன்.
 
 
அதில் அந்தப் பக்கம் ஒரு நொடி அமைதியானவன் “இல்லை இந்த முறையும் அவனுக்குத் தான் டெண்டர் கிடைச்சு இருக்கு..” என்றான் யுவன்.
 
 
இதில் யோசனையானவர், “போன முறை பேசும் போது நான் சொன்னதை வெச்சு ஏதோ ஏற்பாடு செஞ்சு இருக்கேன்னு சொன்னீங்களே..” என்றார் நாகராஜன்.
 
 
“ஆமா சொன்னேன், ஆனா..” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “இது எப்படி நடந்ததுன்னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியலை..” எனத் தொடங்கி அனைத்தையும் சொல்லி முடிக்க.. “அவ்வளவு பெரிய ஆளா அவன்..?” என்றார் நாகராஜன்.
 
 
“அவன் எவ்வளவு பெரிய ஆளுன்னு பேச நான் இப்போ உங்களைக் கூப்பிடலை..” என்ற யுவன், “அவனுக்கு உங்களைத் தெரிஞ்சு இருக்கு, எப்படித் தெரியும்..?” என்றான்.
 
 
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்..? நாம கொஞ்சம் இந்தப் பக்கம் பிரபலம் தம்பி, அதனால் நம்மை எல்லாருக்கும் இங்கே தெரியும் தானே..!” என்று நாகராஜன் நிலைமை புரியாமல் பெருமை பேச, அதில் சலிப்பான யுவன், “நீங்க எனக்கு உதவி செஞ்ச வரைக்கும் அவனுக்குத் தெரிஞ்சு இருக்கு.. உங்களுக்குப் புரியுதா..?” என்றான் சிறு எரிச்சலோடான குரலில் யுவன்.
 
 
“என்ன சொல்றீங்க அது எப்படித் தெரிய வரும்..?” என்று குழப்பத்தோடு நாகராஜன் நெற்றியை தேய்த்துக் கொள்ள.. “அது தான் எனக்கும் புரியலை.. அவன் உங்களைக் கேட்டதா சொன்ன விதம், அதில் அவ்வளவு நக்கல் இருந்தது..” என்றான் யுவன்.
 
 
“நான் உங்களுக்கு நேரடியா இதில் எந்த உதவியும் செய்யலையே..!” என்றவர் “ஆமா அவங்க ஆபீஸில் யாரையோ பிடிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டேன்னு சொன்னீங்களே.. அவன்கிட்ட என்ன இது..? எப்படியாச்சுன்னு விசாரிச்சீங்களா..!” என்றார் நாகராஜன்.
 
 
“இல்லை காலையில் இருந்து அவனுக்குத் தான் ட்ரை செஞ்சுட்டு இருக்கேன்.. அவன் ஃபோன் ரீச் ஆகவே இல்லை..” என்றான் யுவன். “ஒருவேளை உங்களையும் ஏமாத்திட்டானோ..!” என்று நாகராஜன் எடுத்துக் கொடுக்க.. “வாய்ப்பு இருக்கு.. அதனால் தான் அவனைத் தேடிட்டு இருக்கேன், அவன் ஆபீஸுக்கும் வருவதில்லைன்னு தெரிஞ்சது.. அவன் வீடு எங்கேன்னு விசாரிக்கணும்..” என்றான் யுவன்.
 
 
“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்கீங்க..?” என்று நாகராஜன் கேட்கவும், “தெரியலை பட் உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்னு கேட்க தான் கூப்பிட்டேன்..” என்றான் யுவன்.
 
 
“நீங்க யாரை சொல்றீங்க..? எனக்குத் தெரியலையே..” என்றார், பேச்சு ஆரம்பித்த விதத்தையே மறந்து நாகராஜன். “அதான் சொன்னேன் தாரக்..” என்றான் யுவன். அந்தப் பெயரைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தவர், “முழு பெயர் சொல்லுங்க..?” என்று கேட்க.. மீண்டும் “தாரக் அக்னிதீபன்..” என்றிருந்தான் யுவன்.
 
 
இதில் தன் நெற்றியில் இரு விரல் கொண்டு வேகமாகத் தட்டியபடியே முன்னும் பின்னும் நடந்த நாகராஜன் “இவனைப் பத்தி தான் அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசினதா..?” என்றார். ஆமென யுவன் கூறவும், “ஆபீஸில் யாரையோ பிடிச்சு வேலைய முடிச்சதா சொன்னீங்களே அவன் பேர் என்ன..?” என்றார் அடுத்ததாக நாகராஜன்.
 
 
“கிரி.. கிரிதர்..” என்று யுவன் சொல்லி முடித்த நொடி, “நான் அப்புறம் பேசறேன்..” என்று அழைப்பை துண்டித்து இருந்தார் நாகராஜன். இதில் புரியாமல் யுவன் தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக கிரியை கட்டி வைத்திருந்த பின்பக்கத்தை நோக்கி சென்றார் நாகராஜன்.
 
 
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வேகத்தில் நாற்காலியோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்த கிரியை எட்டி உதைத்திருந்தார் நாகராஜன். அதில் நிலை குலைந்து கிரி கீழே விழுந்திருக்க.. “என்ன ண்ணே ஆச்சு..” என்று கேட்டிருந்தான் முத்து.
 
 
“ஏன்டா நாயே.. என்னவோ நல்லவன் போலவே இத்தனை நாள் பேசிட்டு இருந்தே.. ஃபிராட் பையன் தானே நீ..? ஏதோ கம்பெனி விவரம் எல்லாம் அந்த தாரக்கிட்ட இருந்து திருடி யுவனுக்குக் கொடுத்து இருக்கே.. அந்த ஆத்திரத்தில் தான்டா அவன் இங்கே வந்து இவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து வெச்சு இருக்கான்.. உன்னைப் பழி வாங்கறதா நினைச்சு என் பொண்ணைத் தூக்கி இருக்கான்.. எனக்கு அவமானமா போச்சு..” என்று பேசியபடி கிரியை மிதித்து எடுத்து விட்டார் நாகராஜன்.
 
 
“இல்லையில்லை அங்கிள்.. அது வேற, இது வேற.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கிரி வலியோடு பேச முடியாமல் திணறவும், “என்ன சம்பந்தமா..? இன்னைக்கு அந்த யுவன் கூப்பிட்டு சொல்றான்டா அந்த தாரக் என்னைப் பத்தி அவன்கிட்ட விசாரிச்சானாம்..” என்றார் நாகராஜன்.
 
 
“என்ன ண்ணே சொல்றீங்க..? நிஜமாவா..!” என்று அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியாகக் கேட்கவும், “அவன் ஏன் இப்படி ஒரு கோக்குமாக்குத்தனம் செஞ்சான்னு இப்போ புரியுது.. பல வருஷமா அவன் கையில் இருந்த ஏதோ கான்ட்ராக்டோ டென்டரோ என்னவோ சொல்றாங்க அதை இவன் ஈஸியா இன்னொருத்தனுக்குத் தூக்கி கொடுக்கப் பார்த்திருக்கான்..
 
 
அந்த ஆத்திரம் அவனுக்கு, கூட இருந்தே குழி பறிக்கப் பார்த்தா சும்மா விடுவானா..? ஏன் நாம சும்மா தான் விடுவோமா..? அந்தக் கோவத்தில் தான் அந்தப் பரதேசி பழிவாங்க இங்கே வந்து குதிச்சு இருக்கான்..” என்று எரிச்சலோடு கத்தினார் நாகராஜன்.
 
 
இதில் கிரிதரனின் தந்தை அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “இப்போ பேசுடா.. பேசு, என் பிள்ளை நல்லவன் வல்லவன்னு நாலு பக்கத்துக்குப் பேசுவியே எங்கே இப்போ பேசு பார்க்கலாம்..
 
 
இவனும் இதில் கூட்டுன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேனே..” என்று நாகராஜன் சொல்லவும், “அவர் அப்படியே பழிவாங்க செஞ்சு இருந்தாலும் அது எனக்கு எப்படி அங்கிள் தெரியும்..?” என்றிருந்தான் வீங்கி இருந்த வாயோடு கிரி.
 
 
“பரதேசி.. ஏதாவது பேசினே அடுச்சு மொகரையைப் பேத்திடுவேன் ராஸ்கல்.. செய்யறது எல்லாம் செஞ்சுட்டு விளக்கமா கொடுக்கறே.. நீ செஞ்சு வெச்சு இருக்க வேலைக்கு என் மானம் இங்கே போகுது..” என்று எரிச்சலானவர் மேலும் ஏதோ சொல்ல வருவதற்குள் வேகமாக அங்கு வந்த அருண், “அப்பா போலீஸ் வந்து இருக்காங்க..” எனவும், “என்னவாம்..?” என்றார் துளியும் பதட்டமில்லாத குரலில் நாகராஜன்.
 
 
“தெரியலைப்பா, உங்களைத் தான் பார்க்கணுமாம்..” என்று அருண் கூறவும் “நம்ம ரத்தினம் தானே..! காசுக்காக வந்திருப்பான், நீயே கொடுத்து அனுப்பு..” என்றார் எரிச்சலோடு நாகராஜன்.
 
 
“இல்லைப்பா.. வேற ஒருத்தர் புதுசா இருக்கு..” என்று அருண் கூறவும் “ண்ணே ரத்தினத்துக்கு மாற்றல் ஆகிடுச்சு..” என்றிருந்தான் சிவா. “இது எப்போ..? என்கிட்ட யாரும் சொல்லலையே..” என யோசித்த நாகராஜன், “சரி புதுசா வந்தவன் மட்டும் எதுக்கு வரப் போறான்..? இனி நான் தான் இங்கேன்னு சொல்லி கை நீட்ட தான் வந்திருப்பான், வேற என்ன ..?”என்று சொல்லியவாறே வீட்டின் முன்பக்கம் வந்தார் நாகராஜன்.
 
 
அங்கே இளம் இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருக்க.. “வாங்க தம்பி, உள்ளே போய்ப் பேசலாம்..” என்றார் நாகராஜ். “இல்லை இருக்கட்டும் பரவாயில்லை.. இங்கேயே பேசுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர் ராகவ்.
 
 
“அட பரவாயில்லை வாங்க தம்பி..” என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல திரும்பிய நாகராஜன், அடுத்து இன்ஸ்பெக்டர் கூறிய வார்த்தைகளில் அப்படியே நின்றார்.
 
 
“உங்க மேலே ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு..” எனவும், “என்னது கம்ப்ளைன்டா..? அதுவும் என் மேலேயா..?” என்று நம்பாமல் நாகராஜன் கேட்கவும், “ஆமா..” என்று அழுத்தமாகப் பதில் சொன்ன இன்ஸ்பெக்டர் திரும்பி பின்னால் பார்க்க.. அதுவரை ஜிப்பில் அமர்ந்திருந்த கிரியின் அம்மா லக்ஷ்மி இறங்கி வெளியில் வந்தார்.
 
 
லக்ஷ்மியை அங்குக் கண்டதும் நாகராஜனின் முகம் மாறியது. “இவங்க கணவரையும் மகனையும் மூணு வாரமா காணவில்லைன்னு சொல்றாங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“காணோம்னா போய்த் தேடுங்க.. அதுக்கு இங்கே வந்து நின்னா என்ன அர்த்தம்..?” என்று அப்போதும் வீராப்பாகவே பேசினார் நாகராஜன். “மிஸ்டர் நான் ரொம்ப மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இதே மாதிரி நீங்க பேசிட்டு இருந்தா, அப்புறம் உங்களைப் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய்த் தான் விசாரிக்க வேண்டி இருக்கும்..” என்று ராகவ் கறார் குரலில் கூறவும், சத்தம் போட்டுச் சிரித்திருந்தார் நாகராஜன்.
 
 
“ஹாஹா.. எங்கே கூட்டிட்டு போ பார்க்கலாம்.. என் ஊரில் என் வீட்டில் வந்து நின்னுட்டு என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போவாராம் இல்லை.. எங்கே தைரியம் இருந்தா கூட்டிட்டு போ..” என்று தெனாவட்டாக நாகராஜன் பேசவும், அவரின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
 
 
அதை எடுத்துப் பேச.. அந்தப் பக்கம் இருந்து அழைத்தது காவல்துறையின் நாகராஜனுக்கு மிக நெருக்கமான ஒரு உயர் அதிகாரி சுந்தர். அதைக் கண்டு தெனாவட்டாகச் சிரித்தப்படியே இன்ஸ்பெக்டரை பார்த்த நாகராஜன், “சொல்லு சுந்தர்..” என்று தொடங்கி அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை ராகவுக்கு காண்பிக்க முயன்றார்.
 
 
ஆனால் அதற்கு நேர்மாறாக.. “நாகு இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன், நான் சொல்றதை அமைதியா கேளு.. இப்போ புதுசா வந்திருக்கப் பையன் நாம நினைக்கறது போல இல்லை.. எல்லா ஊரிலும் பெரிய ஆளுங்க கூடப் பிரச்சனை செஞ்சுட்டு வந்து இருக்கான்.. கொஞ்சம் பார்த்து அவனை ஹேண்டில் செய், பையன் கொஞ்சம் பெரிய கையும் கூட.. தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுக்காதே பார்த்துக்கோ..” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அலைபேசியை வைக்க.. யோசனையோடு இன்ஸ்பெக்டரை பார்த்தார் நாகராஜன்.
 
 
அதில் இன்ஸ்பெக்டரை திரும்பி நாகராஜன் பார்க்கவும், “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை..” என்றார் ராகவ். “தேவையில்லாம பிரச்சனை செய்ய வந்து இருக்கீங்களா..?” என்றார் நாகராஜன்.
 
 
“நான் இங்கே பிரச்சனை செய்ய வரலை.. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“எவனோ காணோம்னு இங்கே வந்து நின்னா நான் பதில் சொல்லணுமா..?” என்று அப்போதும் நாகராஜன் திமிராகவே பேசவும். “இங்கே பாருங்க கடைசியா அவங்களை உங்க கூடத் தான் அனுப்பி இருக்காங்க.. ஆனா அதுக்குப் பிறகு அவங்க வீடு வந்து சேரலை, இதுக்கு நீங்க தானே பதில் சொல்லியாகணும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஆமா என் கூடத் தான் வந்தாங்க, வேலை முடிஞ்சதும் அவங்களை இறக்கி விட்டுட்டேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..” என்று முடிவான குரலில் கூறியிருந்தார் நாகராஜன்.
 
 
“இல்லை இன்ஸ்பெக்டர் நம்பாதீங்க, இவர் பொய் சொல்றார்.. இவர் தான் அவங்களைப் பிடிச்சு வெச்சு இருக்கார், இவருக்கு மட்டும் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியும், ஃபோன் கூடப் போகலை..” என்று லக்ஷ்மி அழுது கதறவும், “இருங்கம்மா விசாரிக்கறேன் இல்லை, பொறுமையா இருங்க..” என்ற ராகவ், “ஹ்ம்ம் சொல்லுங்க உங்களுக்கு அவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா..?” என்றார்.
 
 
“எத்தனை முறை கேட்டாலும் எனக்குத் தெரிஞ்சா தான் சொல்ல முடியும்.. எனக்குத் தெரியாது..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு கேள்விப்பட்டேன்..” என்று இன்ஸ்பெக்டர் தொடங்கவும், “அது இந்தக் கேஸ்க்குச் சம்பந்தம் இல்லாதது..” என்றார் பல்லை கடித்துக் கொண்டே நாகராஜன்.
 
 
“இல்லை உங்க பொண்ணு கல்யாணத்தில் நடந்ததை எல்லாம் கேள்விபட்டேன், ஆனா பொண்ணைக் காணோம்னு நீங்க இப்போ வர எந்தக் கேஸும் கொடுக்கலை..” என்று இன்ஸ்பெக்டர் கேட்கவும், நாகராஜனின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
 
 
பிரைவேட் நம்பர் என்று வந்த திரையைக் குழப்பமாகப் பார்த்தபடி அலைபேசியை எடுத்திருந்த நாகராஜனுக்கு “ஹ.. ஹலோ.. அ.. அப்பா..” எனக் கதறலாக சிந்துவின் குரல் அந்தப் பக்கம் இருந்து கேட்டிருந்தது.
 
 
அதில் ஒரு நொடி திகைத்தவர், “சிந்து.. ஏய்..” என்று அழுத்தத்தோடு அழைக்கவும், “அ.. அப்பா..” என்று மீண்டும் என்று கதறலோடு அழைத்தவள், “அப்பா நான்..” என்று அடுத்து பேச முடியாமல் திணற, எதிரில் இருப்பவரை நிமிர்ந்து பார்த்தபடியே அங்கிருந்து அலைபேசியுடன் நகர முயன்றார் நாகராஜன்.
 
 
“என்னாச்சு ஏதாவது பிரச்சனையா..?” என்று அதைக் கண்டு இன்ஸ்பெக்டர் ராகவ் கேட்டிருக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என நாகராஜன் கூறவும் “அப்போ நாம பேசி முடிச்சிடுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
அதில் வேகமாக “என் பொண்ணு..” என்று தொடங்கி அப்படியே நிறுத்தியவர், “முக்கியமான ஃபோன், நான் பேசணும்..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணா ஃபோனில்..? நான் அவங்ககிட்ட பேசலாமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“என்னையா வீடு புகுந்து அராஜகம் செய்யறியா..? யாரோ சொன்னாங்கன்னு இங்கே வந்து நின்னுட்டுக் கேள்வியா கேட்டுட்டு இருக்கே.. என்கிட்ட வந்து விசாரிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதில் என் பொண்ணுகிட்ட வேற நீ பேசுவியா..?” என்று எகிறினார் நாகராஜன்.
 
 
“இல்லைங்க நான் அவங்களை விசாரிக்க நினைக்கலை..” என இன்ஸ்பெக்டர் கூறவும் “வேற எதுக்கு நீ அவகிட்ட பேசணும்..?” என்றார் நாகராஜன். இதையெல்லாம் இந்தப் பக்கம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த தாரக் “என்னமோ அப்பா, அப்பான்னு அப்படி உருகினே..? இத்தனை நாள் கழிச்சு நீ பேசியும், உங்க அப்பாவுக்கு உன்னை விட அங்கே எவன் கூடவோ பேசறது தான் முக்கியமா இருக்கும் போலேயே..!” என்றான் கேலியாக.
 
 
அதில் அழுகையோடு அலைபேசியைப் பிடித்திருந்த சிந்து, “அப்பா.. அப்பா..” என்று இந்தப் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க.. அது அந்தப் பக்கம் இருந்த இருவருக்குமே கேட்டது.
 
 
“ரொம்ப நேரமா கூப்பிடறாங்க பேசுங்க..” என இன்ஸ்பெக்டர் கூறியது வேறு நாகராஜனுக்கு எரிச்சலை கொடுத்தது “என் பொண்ணுகிட்ட நான் பேசணுமா வேண்டாமான்னு நீ என்ன சொல்றது..?” என அவர் சிடுசிடுக்க..
 
 
“இங்கே பாருங்க.. உங்க பொண்ணு கல்யாணத்தில் இருந்து தான் எல்லாப் பிரச்சனையும் தொடங்கி இருக்கு.. உங்க பொண்ணை யாரோ திடீர்னு தாலி கட்டி கடத்திட்டு போனதால், இவங்க கணவர் மேலேயும் மகன் மேலேயும் சந்தேகப்பட்டு அவங்களை நீங்க பிடிச்சு வெச்சு இருக்கறதா இவங்க சொல்றாங்க.. அப்போ உங்க பொண்ணுகிட்ட பேசினா தானே விவரம் தெரியும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஏன்யா அறிவு இருக்கா உனக்கு..? புரிஞ்சு பேசறியா இல்லை புரியாம பேசறியா..? யாரோ ஏதோ சொன்னா அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..? என் மேலே கோபம் இருக்க யார் வேணும்னாலும் என் மேலே பழி சொல்லலாம், அதுக்காக நேரா விசாரணைக்கு வீடு தேடி வந்துடுவீங்களா..?
 
 
படிச்சிருக்கே இல்லை, பொறுப்பான வேலையிலேயும் இருக்கே.. யோசிக்க மாட்டியா..? புத்தி வேண்டாம்..” என்று தன்னை மீறி நாகராஜன் இருந்த கோபத்தில் பேசிக் கொண்டே செல்ல.. “வார்த்தையைப் பார்த்து பேசுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஹாங்.. இப்போ மட்டும் கோபம் வருதோ..? அப்படித் தானே எங்களுக்கும் இருக்கும், யாரோ சொன்னா நேரா வந்துடுவீங்களா..? நான் யார் என்னன்னு ஊருக்குள்ளே விசாரிக்க மாட்டீங்களா..? கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கேன், இங்கே இப்படி வந்து நின்னா, நாலு பேரு என்ன நினைப்பாங்க..?” என்றார் நாகராஜன்.
 
 
“இவ்வளவு பேசறதுக்கு உங்க மககிட்ட என்னை ஒரு வார்த்தை பேச விட்டாலே எல்லாம் முடிஞ்சு போய் இருக்கும்..” என்ற இன்ஸ்பெக்டரை முறைத்தவர், “இவ்வளவு சொல்றேன்.. வீட்டு பொம்பளைங்ககிட்ட பேசணும்னு என்கிட்டேயே சொல்றே..” என்றார் ஆத்திரமாக நாகராஜன்.
 
 
அதற்குள் இங்குப் பத்து முறைக்கு மேல் அழுகையோடு “ஹலோ.. அப்பா..” எனக் கத்தி கதறி விட்டிருந்தாள் சிந்து. இப்படி ஒருத்தி அழைப்பில் இருப்பதோ..! இத்தனை நாள் கழித்துத் தன் மகள் அழைத்து இருப்பதோ..! துளியும் நினைவில்லாமல் நாகராஜன் அங்குப் பிரச்சனை செய்து கொண்டிருக்க.. “உங்க அப்பாவுக்கு உன் கூடப் பேச இஷ்டம் இல்லை போல..” என்று அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் தாரக்.
 
 
இதில் திகைத்துப் போய் அவனைச் சிந்து பார்க்க.. “வாய்ப்பு எப்போவாவது ஒருமுறை தான் கிடைக்கும்.. அப்படிக் கிடைக்கும் போதே அதைப் பயன்படுத்திக்கணும்.. உனக்கு அந்த வாய்ப்பு முடிஞ்சு போச்சு..” என்று விட்டு தாரக் அலைபேசியோடு அங்கிருந்து நகர முயல..
 
 
“இல்லை.. இல்லை ப்ளீஸ்.. வேண்டாம் இன்னும் ஒரே ஒருமுறை.. ப்ளீஸ்..” என்று வேகமாக வந்து அவன் வழியை மறித்தது போல் நின்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் சிந்து.
 
 
“ஹேய் பொண்ணே.. உங்க அப்பாவுக்கே உன்கிட்ட பேச இஷ்டமில்லை.. அப்புறம் பேசி என்னாகப் போகுது விடு..” என்று அவன் மேலும் நகர முயல.. “அப்பா அங்கே ஏதோ கோபமா இருக்காங்க.. அதனால் தான் ப்ளீஸ்.. நான் இன்னொரு முறை.. பேசறேன்.. எனக்காக ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் சிந்து.
 
 
யோசனையாக அவள் முகத்தைப் பார்த்தவன், “உனக்காக இல்லை.. உங்க அப்பாவுக்காக இதைச் செய்யலாம்..” என்று மீண்டும் தாரக் அலைபேசியை அவளிடம் கொடுக்க.. நாகராஜன் இங்கு வாதிட்டுக் கொண்டிருந்ததில் அலைபேசி துண்டிக்கப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை.
 
 
மீண்டும் அது அடிக்கவும் திரும்பி அதைப் பார்த்தவர், இன்ஸ்பெக்டரின் முன் அதை எடுப்பதா வேண்டாமா என்பது போல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அதை வாங்கி ஆன் செய்து ஸ்பீக்கரிலும் போட்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.
 
 
“என்ன இது அராஜகம்..?” என்று அவரிடம் இருந்து அலைபேசியை நாகராஜன் பறிக்க முயல.. “இரண்டு நிமிஷம் நான் பேசி முடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.. இப்படி எல்லாம் நீங்க அமர்க்களம் செஞ்சா தான் இது வேற மாதிரி மாறும்.. நான் சொன்னது போல அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போக வேண்டிய நிலைமை கூட வரும்.. புரிஞ்சு நடந்துக்கோங்க..” என்று மிரட்டலாகக் கூறிய இன்ஸ்பெக்டர் திரும்பி அலைபேசியில் கவனமாகி “ஹலோ..” என்றார்.
 
 
அதற்குள் இங்குப் பேசியதெல்லாம் அந்தப் பக்கம் கேட்டிருக்க.. பயத்தில் சிந்துவுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அதில் அவள் அமைதியாக இருக்க.. “ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்..” என்றான் மீண்டும் ராகவ்.
 
 
அப்போதும் சிந்து பயத்தில் அமைதியாக இருக்க.. வேகமாக அலைபேசியை இன்ஸ்பெக்டரிடமிருந்து வாங்கினார் நாகராஜன். அவர் ஸ்பீக்கரை ஆப் செய்ய முயல.. “நான் உங்களை வார்ன் செய்யறேன் மிஸ்டர் நாகராஜன்.. நான் அவங்ககிட்ட பேசணும், அட்லீஸ்ட் அவங்க பேசறதையாவது கேட்கணும், அப்போ தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்..
 
 
இல்லை நீங்க தான் இவங்க கணவரையும் மகனையும் கடத்தி இருக்கீங்கன்னு உங்க மேலே நான் கேஸ் போடுவேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமாகி கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. தன் தந்தையின் மேல் கேஸ் அது இதுவெனக் காதில் விழவும், பயந்து போனவள் நாகராஜன் “ஹலோ..” என்றதில் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
 
 
அதில் கோபமான நாகராஜன் தன் எதிரில் இருந்த ராகவ் மேல் காண்பிக்க முடியாத ஆத்திரத்தை எல்லாம் ஒன்று சேர்த்து “ஹலோ..” எனவும், “ஹலோ..” என்றிருந்தாள் நடுக்கத்தோடான குரலில் சிந்து.
 
 
“ஏய் இப்போ நீ எங்கே இருக்கே..?” என்று அவர் அடுத்ததாகக் கத்தவும், “அப்பா.. நீங்க.. நீங்க என்னைத் தேட வேண்டாம்.. நா.. நான்..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் திணறி தாரக்கை பார்க்கவும், நீ பேசுவதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலக் கைகளைக் கட்டியப்படி நின்றிருந்தான் தாரக்.
 
 
அதில் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விடலாம் என்று கூட ஒரு நொடி சிந்துவுக்குத் தோன்றியது. ஆனால் வீட்டுக்குத் திரும்பச் செல்ல கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இது எனும் போது அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவள், முயன்று வர வழைத்துக் கொண்ட மன தைரியத்தோடு, “அப்பா.. என்.. என்னை யாரும் கடத்திட்டு போகலை.. நா.. நானா விரும்பி தான் அவர் கூடப் போனேன்..” என்றாள் சிந்து.
 
 
இதைக் கேட்ட நொடி “என்ன சொன்னே..?” என்று ஆத்திரத்தில் நாகராஜன் கத்தி இருக்க.. அந்தக் குரலிலேயே சிந்துவுக்கு நடுக்கம் எடுத்தது. அதில் அடுத்து பேச முடியாமல் சிந்து அமைதியாக.. “ஹ்ம்ம்.. மேலே பேசு..” என்பது போல் அவளைப் பார்த்து கையசைத்தான் தாரக்.
 
 
அதில் எச்சில் கூட்டி விழுங்கியவாறே “நா.. நான் விரும்பி தான்.. நானே அவர் கூட..” என்று சிந்து இப்போது மேலும் பயத்தில் திணறவும், சட்டென நிலைமையைக் கையில் எடுத்திருந்த இன்ஸ்பெக்டர் “அதாவது இது உங்க விருப்பப்படி நடந்த கல்யாணம்னு சொல்றீங்களா..?” என்றார்.
 
 
அதற்குப் பதில் சொல்லாமல் சிந்து அமைதியாக.. ‘சொல்’ என்பது போல விழியசைத்தான் தாரக். அதில் “ஆ.. ஆமா..” என்று திணறலோடு சிந்து சொல்லவும், “உங்களோடது காதல் கல்யாணமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
இதற்குப் பதில் என்ன சொல்வது எனத் தெரியாமல் சிந்து விழிக்கவும், ‘ஆம்’ என்பது போல தலையசைத்தான் தாரக். ஆனால் அவளுக்கு வார்த்தைகளில் கூட இதைச் சொல்ல விருப்பமில்லை.
 
 
அதில் தொடர்ந்து சிந்து அமைதியாகவே இருக்க.. “சொல்லுங்க.. இது உங்க விருப்பப்படி நடந்த காதல் கல்யாணமா..?” என்றார் மீண்டும் இன்ஸ்பெக்டர்.
 
 
அதில் தாரக் கைகளைக் கட்டிக் கொண்டு சிந்துவை முறைக்கவும், “ஆ.. ஆமா..” என்றிருந்தாள் சிந்து. “அப்போ நீங்க பிளான் செஞ்சு தான் இங்கே இருந்து கிளம்பி இருக்கீங்க இல்லையா..?” என்று இன்ஸ்பெக்டர் திரும்பக் கேட்க.. இப்போதும் “ஆமா..” என்று திணறலோடு வந்தது சிந்துவின் குரல்.
 
 
“சரி ஓகே..” என இன்ஸ்பெக்டர் அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக் கொள்ள.. வேகமாக அவரிடம் இருந்து அலைபேசியைப் பறித்திருந்த நாகராஜன் “ஏய் திமிர் எடுத்த கழுதை என்னடி சொன்னே..?” என்று கத்திக் கொண்டிருக்கும் போதே, அவளிடம் இருந்து அலைபேசியைப் பறித்து அதை அணைத்திருந்தான் தாரக்.
 
 
அவள் இப்படிச் சொன்ன பிறகு, இந்த நொடி அங்கு எத்தனை பிரச்சனைகள் நடக்கும் என சிந்துவுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அவளால் இப்போது என்ன செய்ய முடியும்..? இது ஒன்று தான் இங்கிருந்து அவள் தப்பிக்க வழி எனும் போது இதை அவள் சொல்லித் தானே ஆக வேண்டும்.
 
 
அதே நேரம் ‘வீட்டிற்குச் சென்றால் எத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்குமோ..? எப்படியெல்லாம் பழி வருமோ..? முதலில் தன்னை வீட்டிற்குள் சேர்ப்பாரா..?’ என்ற பயம் வேறு சிந்துவின் மனதை பெரிதாக அழுத்தியது.
 
 
ஆனாலும் இங்கு யாரென்று தெரியாத ஒருவனிடம் சிக்கி தினமும் அனுபவிக்கும் வலியை விட, அது பரவாயில்லை என்று தோன்ற.. அறையை விட்டு வெளியேற முயன்ற தாரக்கை பார்த்து “நா.. நான் எப்போ இங்கே இருந்து போகலாம்..?” என்றிருந்தாள் சிந்து.
 
 
அதைக் கேட்டு இதழில் வழியும் கேலி புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “என்னை இன்னுமா நீ நம்பறே..? நான் சும்மா உலுலாய்க்கு சொன்னேன்.. உன்னால் எங்கேயும் போக முடியாது, இப்போதைக்கு நீ இங்கே தான்..” என்று விட்டு வெளியேறினான் தாரக்.
 
 
அதில் உண்டான திகைப்போடு அவன் சென்ற திசையையே அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
தொடரும்...
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 8
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
நேசம் – 9
 
 
ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது கரைந்து கொண்டிருந்தாள் சிந்து. இத்தனைக்குப் பிறகும் தாரக் சொன்ன வார்த்தைகளை நம்பி ஏமாந்து போன தன் முட்டாள் தனத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
‘என்கிட்ட இவ்வளவு மிருகதனமா.. இவ்வளவு தப்பா நடந்துக்கும் ஒரு மனுஷன் சொல்லும் வார்த்தை உண்மையாக இருக்கும்னு எப்படி நான் நம்பினேன்..? எப்படி என்னால் அவரை நம்ப முடிஞ்சது..? அவர் நம்பிக்கைக்குரியவரா இருப்பாருன்னு நான் எந்த நொடியில் எப்படி நினைத்தேன்..? அவர் சொன்னதைச் செய்வார்னு எப்படி எனக்குத் தோணுச்சு..?’ என ஆயிரம் முறை தனக்குள் கேட்டு கேட்டு சோர்ந்து போனாள் சிந்து.
 
 
‘எதுக்காக இதெல்லாம்..? யார் மேலே அவருக்குக் கோபம்..? எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்தார்னு இப்போ வரைக்கும் நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கிட்ட இருந்து பதில் வரலை.. என்கிட்ட அவர் நடந்துக்கும் முறைக்குச் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்னு நான் நம்பி இருக்கவே கூடாது.. இதை நம்பி அப்பாகிட்ட வேற அப்படிப் பேசி வெச்சுட்டேன்.. இப்போ நான் என்ன செய்வேன், என்னை வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டாரே..!’ என்று அவளின் மனம் நினைக்கும் போதே..
 
 
‘இங்கே இருந்து நீ வெளியே போவேன்னு இன்னும் கூட நீ நம்பிட்டு இருக்கியா..? முதலில் நீ இங்கே இருந்து வெளியே போகணும்.. அடுத்து தான் உங்க அப்பா வீட்டுக்குள்ளே சேர்ப்பாரா இல்லையான்னு முடிவாகும்.. எனக்குத் தெரிஞ்சு காலம் முழுக்க நீ இங்கேயே அடைஞ்சு கிடந்து சாக வேண்டியது தான்..!’ என அவளின் மனசாட்சியே இடித்துரைத்தது.
 
 
இதில் தன் நிலையை எண்ணி அழுது கரைந்து கொண்டிருந்தவளுக்கு இதில் இருந்து மீள்வோமா என்ற சந்தேகம் எல்லாம் இப்போது துளியும் இல்லை. இனி சாகும் வரை தனக்கு இங்கிருந்து விடுதலை இல்லை என இப்போது தெளிவாகப் புரிந்திருந்தது.
 
 
ஆனால் மரணத் தண்டனை கைதிக்கு கூட அவரின் குற்றம் என்னவெனத் தெரிந்திருக்கும், இங்கு அவள் செய்த என்ன குற்றத்திற்கான தண்டனை இது எனப் புரியாதது தான் சிந்துவை மேலும் பாதித்தது.
 
 
இதில் காலையில் இருந்து சாப்பிட கூட விருப்பம் இல்லாமல் சுருண்டு படுத்து அழுது கொண்டிருந்தாள் சிந்து. இருமுறை அறைக்குள் வந்து பார்த்து விட்டு சென்ற சாரதாவும், சிந்துவை சாப்பிட சொல்லி வற்புறுத்தவில்லை.
 
 
அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தும் அவருக்குச் சமாதானம் செய்யக் கூடத் தோன்றவில்லை. இரண்டு நிமிடம் நின்று அவளைப் பார்த்து விட்டு வெளியேறி இருந்தார் சாரதா.
 
 
அதே நேரம் அவன் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் வீட்டின் தரையில் சுருண்டு படுத்திருந்தான் தாரக். விழிமூடி சாய்ந்திருந்தவனின் கண்களில் இருந்து லேசாகக் கண்ணீர் துளிகள் வழிந்திருந்தது. ‘இன்னும் கொஞ்ச நாள் தான்.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்..! எல்லாம் முடிஞ்சுடும்.. சீக்கிரம் எல்லாம் முடிஞ்சுடும்..
 
 
அதுக்குப் பிறகு எனக்கு இந்தத் தண்டனை இல்லை.. சீக்கிரம் இந்தத் தண்டனையிலிருந்து எனக்கு விடுதலை கிடைச்சுடும்.. இன்னும் கொஞ்ச நாள் தான்..!’ எனத் திரும்பத் திரும்ப அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
 
 
இது ஒரு வகையில் மனதளவில் துவண்டு போய்க் கிடந்தவனுக்கு ஒருவித ஆறுதலை கொடுக்க.. இதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சா தான் நல்லது என்று எண்ணிக் கொண்டவனுக்கு ஆறுதலாக மெல்லிய கரம் ஒன்று தாரக்கின் தலையை வருடி விடுவது போல் இருந்தது.
 
 
அந்த நொடியை இழந்து விட்டால் இப்படி ஒரு ஆறுதல் திரும்பக் கிடைக்காது என்பது போல விழிமூடி அதை உணரத் தொடங்கினான் தாரக். இது போலான ஆறுதல் மனதளவில் கூட வேறு எங்கும் அவனுக்குக் கிடைக்காது..
 
 
ஆயிரம் வார்த்தைகள் கொடுக்க முடியாத ஆறுதலை, அந்த ஒற்றைத் தலை கோதல் அந்த நொடி அவனுக்குக் கொடுப்பது போல் இருந்தது. இது நிஜமில்லை எனப் புரிந்தாலும், மெல்லிய கரம் அவனின் தலை முழுக்கத் தன் விரல் கொண்டு வருட தொடங்கியதில் கட்டுப்பாடின்றித் தாரக்கின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
 
 
********
 
 
வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு நொறுக்கி கொண்டிருந்தார் நாகராஜன். அத்தனை பேர் முன்பு சிந்து கூறிய வார்த்தைகள் அவரைக் கொந்தளிக்கச் செய்திருந்தது.
 
 
“இதை.. இதை நான் எப்படி யோசிக்க மறந்தேன்.. இந்த ஓடு**லி வேலை தானா இது எல்லாம்..! அதனால் தான் என்னால் அவனை எந்த வகையிலேயும் கண்டுபிடிக்கவே முடியலையா..?” என்று அவர் கொந்தளித்துக் கொண்டிருக்க.. அவரிடம் நெருங்கி எதுவும் பேச அங்கிருக்கும் யாருக்குமே தைரியம் வரவில்லை.
 
 
“இது தெரியாம ஊரெல்லாம் தேடி அலைஞ்சு பைத்தியக்காரன் போலச் சுத்திட்டு இருந்து இருக்கேன்..” என்றவர், “ஏய் சுஜாதா.. எங்கே போய்த் தொலைஞ்சே..?” என்று கத்தவும், ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து அழுகையோடு உள்ளே நின்று நடுங்கி கொண்டிருந்தவருக்கு இப்போது நெஞ்சு வலியே வந்து விட்டது.
 
 
ஆனாலும் நாகராஜன் கூப்பிட்ட ஒரு குரலுக்கு வெளியே செல்லவில்லை என்றால் அது வேறு பெரும் பிரச்சனையாக வெடிக்கும் என புரிந்து கால்கள் நடுங்க, பயத்தோடு வந்து அவர் முன் நின்றிருந்தார் சுஜாதா.
 
 
அடுத்த நொடி இடி இறங்கியது போல் அவரின் கன்னத்தில் நாகராஜன் அறைந்திருந்ததில், சுருண்டு கீழே விழுந்து அருகில் இருந்த தூணில் சுஜாதாவின் தலை மோதிக் கொண்டது.
 
 
“சித்தி..” என வேகமாக விஷ்வா சென்று கை கொடுத்து அவரைத் தூக்க முயல.. “பக்கத்தில் போன கையைக் காலை உடைச்சுடுவேன் ராஸ்கல்.. தூரப் போடா..” என்று அவனிடம் எகிறினார் நாகராஜன்.
இதில் அவர் சொல்வதை மீற தைரியம் இல்லாத விஷ்வா தயக்கத்தோடு அப்படியே நிற்க.. வேகமாக வந்து கீழே விழுந்திருந்த சுஜாதாவின் கூந்தலை பிடித்துத் தூக்கி நிறுத்தியவர், “ஏன்டி நா** இத்தனை வருஷமா தண்டத்துக்குச் சோத்தை போட்டு உன்னை வீட்டில் வெச்சு இருந்ததுக்குப் பொண்ணை ரொம்ப அழகா வளர்த்து வெச்சிருக்க.. இதைக் கூட ஒழுங்கா செய்ய முடியலனா நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே..? இப்படி என் மானத்தை வாங்கறதுக்கு எப்போவோ நீயும் உன் பொண்ணும் விஷத்தை குடிச்சு’ட்டு செத்து தொலைஞ்சு இருக்கலாமே..!” என்று மேலும் கன்னம் கன்னமாக அறைந்தார் நாகராஜன்.
 
 
“இல்லைங்க.. சிந்து அப்படிப்பட்டவ இல்லை.. அவ ரொம்ப நல்ல பொண்ணுங்க..” என்று திக்கி திணறி அழுகையோடு அடி தாங்க முடியாமல் சுஜாதா சொல்லிக் கொண்டிருக்க..
 
 
“வாயமூடு உன் நல்ல பொண்ணு லட்சணம் தான் இப்போ ஊரே வேடிக்கை பார்த்தே..! அவளே ஃபோன் செஞ்சு என்கிட்ட சொல்றான்னா நான் இங்கே அவளைத் தேடிட்டு இருக்கறது தெரிஞ்சு, என்னைத் தேட வேண்டாம்.. நான் கிடைக்க மாட்டேன், நானே திமிர் எடுத்துப் போய்த் தான் தெருவில் போய் இருக்கேன்.. எவனும் என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு போகலைன்னு எனக்குச் சொல்றா.. புரிஞ்சுதா உனக்கு..? அத்தனை பேர் முன்னே என்கிட்ட சொல்றாடி அவ.. எவ்வளவு திமிரும் தெனாவட்டும் இருந்தா என்கிட்டேயே இப்படிச் சொல்லுவா..?” என்று கேட்டு மீண்டும் அடிக்க விஷ்வாவுக்குத் தான் சுஜாதாவை இந்த நிலையில் பார்க்க முடியாமல் மனம் கலங்கியது.
 
 
ஆனால் இடையில் சென்று இதைத் தடுக்கத் தான் அவனுக்குத் தைரியம் வரவில்லை. எப்போதும் நாகராஜன் மேல் இருக்கும் பயம் அவரின் இந்த ஆக்ரோஷ முகத்தைக் கண்ட பின் இன்னும் அதிகமாகியது. அதில் அவன் ஓரமாக நின்று விட..
 
 
“இது தெரியாம முட்டாளா.. முட்டாளா இருந்திருக்கிறேனே..!” என்ற கோபம் வேறு அவரைக் கொதிக்கச் செய்து கொண்டிருந்ததில், வழக்கம் போல் எல்லாக் குடும்பத் தலைவர்களும் அதை இறக்கி வைக்கும் இடமான தன் மனைவியிடத்திலேயே அதைத் துளியும் குறையாமல் இறக்கிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
எதிர்ப்பில்லா இடத்திலேயே தன் வீரத்தை காட்டுவது இங்கு உள்ள பலருக்கு வழக்கமாகி இருக்க.. அதற்குக் கொஞ்சமும் பிசாகாமல் இருந்தார் நாகராஜன்.
 
 
இவை அனைத்தையும் அருண் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குமே சற்று முன் சிந்து பேசியது துளியும் பிடிக்கவில்லை. அதில் பல்லை கடித்தபடி அவன் அமைதியாக நின்றிருக்க.. சட்டென அவன் பக்கம் திரும்பியவர் “இங்கே நடக்கறதை எல்லாம் பார்த்தியா..? இதெல்லாம் உனக்கு முன்னேயே தெரியுமா..?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டார் நாகராஜன்.
 
 
“இல்லைப்பா எனக்கு எதுவும் தெரியாது..” என்று அருண் உடனே கூறவும், “ச்சீ இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா இல்லை உனக்கு.. வீட்டில் ஒரு வயசு பொண்ணு இருக்கா அவ என்ன செய்யறா ஏது செய்யறான்னு கூடத் தெரிஞ்சு வெச்சுக்காம என்ன டேஷ்க்கு நீ அண்ணனா இருக்கே..?
 
 
என் கூடவே இருந்து என்னைப் போலவே ஆகணும்னு நினைக்கறதுக்கு எல்லாம் எனக்குப் பிறந்தா மட்டும் போதாது.. இதுக்கு எல்லாம் நான் என்ன செஞ்சேன்..? சின்ன வயசில் எப்படி எல்லாம் இருந்தேன்னு தெரியுமா..? அதில் பத்துப் பர்சன்ட் கூட இல்லை டா நீ..
 
 
இன்னைக்கு இருக்கும் செல்போன், கேமரா, அது இதுன்னு ஆயிரம் விஷயங்கள் அன்னைக்கு எங்களுக்கு இல்லை.. அப்போவே நாங்க அப்படி இருந்தோம்.. ஆனா நீ அத்தனையையும் கையில் வெச்சுட்டு ஒன்னும் வேலைக்கு ஆகாம நிற்கறியே வெக்கமா இல்லையாடா உனக்கு..?” என்று அவனிடம் எகிறினார் நாகராஜன்.
 
 
அதில் அருண் அமைதியாகத் தலை குனிந்து நிற்க.. “எனக்கு இப்போ தான்டி உன் மேலே சந்தேகமே வருது.. நிஜமாவே இவன் எனக்குத் தான் பிறந்தானா..?” என்று சுஜாதாவை பார்த்து கேட்கவும், மேலும் உடைந்து போனார் சுஜாதா.
 
 
இதற்கு வழக்கம் போல் ஒரு பத்து அடிகளை அவர் கொடுத்திருந்தால் கூட சுஜாதா தாங்கிக் கொண்டிருப்பார். ஆனால் இந்த வார்த்தைகளை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
 
 
அதுவும் இத்தனை பேர் சூழ்ந்து இருக்க அவர்களின் முன் இப்படியான வார்த்தைகளைத் தன்னை நோக்கி அவர் வீசுவது சுஜாதாவை மனதளவில் குறுகிப் போகச் செய்தது.
 
 
“சித்தப்பா..” என்று தயக்கத்தோடு ஏதோ சொல்ல தொடங்கிய விஷ்வாவை முறைத்தவாறே “வாய மூடுடா அனாதை நா**..!” என்று நாகராஜன் கூறியதில், அப்படியே ஒடுங்கிப் போனான் விஷ்வா.
 
 
“இப்படிக் கண்டவனையும் செல்லம் கொடுத்து சீராட்டி வளர்க்கறதில் காட்டின அக்கறையை உன் பொண்ணைப் பார்த்துக்கறதிலும் வளர்க்கறதிலும் காட்டி இருக்க வேண்டியது தானேடி..” என்று மீண்டும் சுஜாதாவிடம் எகிறிக் கொண்டு செல்லவும், அதில் பயந்து பின்னுக்கு நகர்ந்தார் சுஜாதா.
 
 
அதைக் கண்டு, “நாடகம் போடாத நாயே..” என சுஜாதாவை பிடித்துத் தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேறினார் நாகராஜன். அதில் மீண்டும் கீழே விழுந்தவரை விஷ்வா வேகமாகச் சென்று தாங்கி பிடித்து அமர வைக்க.. அப்படி ஒரு அழுகை சுஜாதாவிடம் இருந்து வெடித்துக் கொண்டுக் கிளம்பியது.
அவரால் சிந்து பேசிய ஒரு வார்த்தையைக் கூட நிஜம் என நம்ப முடியவில்லை. ‘ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு தவிர்க்க முடியாமல் அழுகையோடு சிந்து பேசியது போல் மட்டுமே அவருக்கு அந்தக் குரல் உணர்த்தி இருந்தது.
 
 
ஆனால் அதைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் நாகராஜன் சுத்தமாக இல்லை எனப் புரிந்து அவர் அமைதியாக இருந்தாலும் அவரின் மனம் மகளின் நிலையை எண்ணி வருந்தியது.
 
 
அதில் அவர் மௌனமாக அழுது கொண்டிருக்க.. எப்படிச் சமாதானம் சொல்வது எனத் தெரியாமல் அருகில் நின்றிருந்தான் விஷ்வா.
 
 
அங்கிருந்து அதே கோபத்தோடு கிரியை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்ற நாகராஜன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும் “எங்கே இருந்துடா எனக்குன்னு ஒவ்வொருத்தனா கிளம்பி வரீங்க..? இத்தனை வருஷமா நான் கட்டி காப்பாற்றி வெச்சு இருந்த என் பேரு, என் கௌரவம் எல்லாம் உங்களால் வீணா போகுது..” என்று கிரியின் மீதும் அவன் தந்தையின் மீதும் காண்பிக்க.. முன்பே அடி வாங்கித் துவண்டிருந்த இருவரும் உடலில் உள்ள மொத்த சத்தும் போனது போல் கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்குச் சென்றனர்.
 
 
அதில் பயந்து போன முத்து “ண்ணே வேண்டாம்..” என்று இடையில் வந்து நின்று நாகராஜனை தடுக்க முயல.. “என்னடா வேண்டா.. இல்லை என்ன வேண்டா..? தேடி அலைஞ்சு நானே ஒரு சூனியத்தைப் பிடிச்சு மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து இருக்கேன் பார்..” என்று கிரியை பார்த்து கூறியவர், “அடிச்சு கொல்லணும் இவனுங்களை..” என்று கத்தினார்.
 
 
“ண்ணே.. இவன் செஞ்சது தப்பு தான், நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா தப்பு இப்போ இவனுங்க மேலே மட்டும் இல்லை..” என்று முழுதாகச் சொல்ல முடியாமல் முத்து மெல்லிய குரலில் இழுக்கவும், “அதுதான்டா இப்போ எனக்கு எரிச்சலா இருக்கு.. வீட்டுக்குள்ளேயே பிரச்சனையை வெச்சுட்டு நான் ஊரெல்லாம் சுத்தி வந்துட்டு இருக்கேன்.. இதை நான் எங்கே போய்ச் சொல்றது..?” என்று வெறுப்பில் கத்தினார் நாகராஜன்.
 
 
இதையெல்லாம் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த அருண் “அப்பா இவங்களை இனியும் இங்கே வெச்சு இருக்கறது சரி இல்லை..” என்றான். அதில் அவனைத் திரும்பி முறைத்தவர் “உன் கடமையை ஒழுங்கா செய்யாம இப்போ எனக்குப் புத்தி சொல்ல வந்துட்டியா..?’ என்றார் நாகராஜன்.
 
 
“அதுக்கு இல்லைப்பா, இவங்க விஷயம் போலீஸ் வர போயிருக்கு.. அதுவும் வழக்கமா நம்ம பக்கம் இருக்கும் போலீஸும் இப்போ இங்கே இல்லை.. புதுசா வந்து இருக்கறவர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்கே புரிஞ்சு இருக்கும்.. இனி பிரச்சனை வேற மாதிரி எப்படித் திரும்பவும் வாய்ப்பு இருக்கு..” என்று அவன் பொறுமையாகவே தொடங்கவும் “அதுக்கு என்ன செய்யச் சொல்றே..? அவன் காலில் போய் விழ சொல்றியா..?” என்றார் நாகராஜன்.
 
 
“இல்லைப்பா..” என்றவன் வேறு ஏதோ சொல்ல தொடங்கவும், “வாயை மூடுடா..” என்று கத்தியவர், முன்னும் பின்னுமாக எதையோ யோசித்தப்படியே நடந்து விட்டு திரும்பி முத்துவை பார்த்து “இந்தக் குப்பைகளைக் கொண்டு போய், ஊருக்கு வெளியில் எங்காவது வீசிட்டு வா..” என்றார் நாகராஜன்.
 
 
“ண்ணே..” என்று அப்போதும் முத்துத் தயக்கமாக இழுக்கவும், “வேற எதுவும் செய்ய முடியாதுடா.. இல்லை இவனுங்களை மொத்தமா முடிக்கணும்னா சொல்லு முடிச்சுடலாம்..?” என்று ஒருவித அழுத்தத்தோடு நாகராஜன் கேட்கவும், “வேண்டாம்னா இப்போ சூழ்நிலை சரியில்லை..” என்றான் முத்து.
 
 
“அதனால் தான் சொல்றேன், தூக்கிட்டு போய் வீசிட்டு வாங்க..” என்றவர் திரும்பி கிரியை பார்த்து “வெளியே தான் போயிட்டோமேன்னு எவன்கிட்டயாவது எப்போவாவது வாயைத் திறந்தே.. அதுக்கப்புறம் பேசறதுக்கு நீயும் உங்க அப்பனும் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டீங்க.. நான் எதையும் செய்யக் கூடியவன்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும்.. பார்த்து நடந்துக்கிட்டீங்கனா உசுரோட வாழலாம்..” என்று எச்சரித்து விட்டு வெளியேறினார் நாகராஜன்.
 
 
*****
 
 
அன்று முழுக்க தாரக் வீட்டிற்கு வரவில்லை. இது சாரதாவை கவலையாக்கி இருக்க.. இரண்டு முறை அவனுக்கு அழைத்துப் பார்க்க.. அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
 
 
அதிலேயே தாரக் எங்குச் சென்று இருப்பான் என ஓரளவு புரிந்து கொண்டவர், கவலையோடு வாயிலை பார்த்தபடி அமர்ந்திருக்க.. அங்குத் தன் சக்கர நாற்காலியில் வந்தார் குமரேசன்.
 
 
“என்னாச்சு ஏன் இங்கே இப்படி உட்கார்ந்து இருக்கே..?” என்றவரை திரும்பிப் பார்த்து “தீபன் இன்னும் வீட்டுக்கு வரலை.. ஃபோன் செஞ்சாலும் எடுக்கலை..” என்றார் கவலையோடு சாரதா.
 
 
“அப்போ வீட்டுக்கு தான் போயிருக்கும் தம்பி..” என்று குமரேசன் சரியாகக் கணித்துக் கூறவும், “எனக்கும் அதுதாங்க தோணுது..” என்றவர், “எப்போ தான் இதெல்லாம் சரியாகுமோ..!” என்று ஒரு பெருமூச்சோடு சாரதா கூறவும் “எனக்கு இதெல்லாம் தேவையான தோணுது..” என்றார் குமரேசன்.
 
 
அதில் சிறு அதிர்வோடு திரும்பி அவரைப் பார்த்த சாரதா, “தேவையானா என்ன அர்த்தம்..?” என்று கேட்கவும், சற்று நேரம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர், “இவ்வளவு எல்லாம் தீபன் தன்னையே கஷ்டப்படுத்திட்டு இப்படி ஒரு வேலை செய்யணுமான்னு தான்..” என மெல்லிய குரலில் இழுக்க.. “எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிப் பேசினா எப்படி..?” என்றார் சாரதா.
 
 
“அதில்லை சாரா.. அந்தப் பொண்ணு அழுதுட்டே இருக்கறதை பார்த்தா பாவமா இருக்கு..” என்று வருத்தத்தோடு குமரேசன் சொல்லவும், “இந்தப் பொண்ணு மட்டும் தான் பாவமா..? நம்ம பொண்ணு பாவமில்லையா..? உங்க கண்ணு முன்னே நடந்ததெல்லாம் மறந்து போச்சா..?” என்ற சாரதாவுக்கு அன்றைய நாளின் நிகழ்வுகள் எல்லாம் கண் முன் விரிந்தது.
 
 
அதில் அதீத பதட்டமாகி, கை கால்கள் லேசாக உதறல் எடுக்கத் தொடங்கி சாரதாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. அதைக் கண்டு பதட்டமான குமரேசன், “இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்ஷனாகறே..? கொஞ்ச நேரம் ரிலாக்ஸாகு.. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்..” என்று ஆறுதல் படுத்த முயன்றார்.
 
 
அதற்குள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கியிருந்த சாரதா, “எப்படிங்க மறக்க முடியும்..? எப்படி என்னால் அமைதியாக முடியும்..? அந்த நாளை நினைச்சாலே உடல் மட்டுமில்லை என் உயிரும் சேர்ந்து பதறுது.. இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில வராமலே இருந்திருந்தா இன்னைக்கு எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்து இருப்போம்.. தீபன் இப்படியா வாழ்க்கையே வெறுத்து ஒரு நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருப்பான்.. நீங்களே யோசிச்சு பாருங்க..” எனத் தன் மன வலிகள் மீண்டும் கிளறி விடப்பட்டதில் அழுகையோடு சாரதா பேசிக் கொண்டிருக்க.. “அழாதே சாரா.. நான் ஏதோ மனம் தாங்காம பேசிட்டேன்..” என்றார் குமரேசன்.
 
 
எப்படியோ பேசி சாரதாவை ஒருவாறு சமாதானம் செய்து முடிப்பதற்குள் அரைமணி நேரம் கடந்திருந்தது. அதன் பின் மெதுவாகச் சாப்பிட வைத்து இரவு மருந்து கொடுத்து தூங்க செய்து விட்டு மீண்டும் வெளியில் தன் சக்கர நாற்காலியில் வந்து அமர்ந்திருந்த குமரேசனின் மனம் பழையதை எல்லாம் அசை போட்டதில் மேலும் கலங்கி போனது.
 
 
மறுநாள் காலை களைப்போடு, சோர்வான நடையில் வீட்டிற்குள் நுழைந்த தாரக்கை எதிர்கொள்வது போல் சாரதா வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தார். “நைட்டெல்லாம் அங்கே இருந்தியா தீபா..?” என்று அவர் கேட்கவும், ஆமென அசைந்தது தாரக்கின் தலை.
 
 
சோர்ந்திருந்த உடலும், கலைந்திருந்த தலையும், கலங்கி சிவந்திருந்த அவன் விழிகளும் முகமும் தாரக்கின் மனநிலையை அவருக்குத் தெளிவாகப் புரிய வைக்க.. “எல்லாம் சரியாகிடும், இன்னும் கொஞ்ச நாள் தான்..” என்றார் சாரதா.
 
 
“இதையே தான் நான் எனக்கு ஆயிரம் முறை சொல்லிட்டு இருக்கேன்..” என்றவன் அப்படியே அவரின் மடியில் தலை சாய்த்து படுத்து விட, அவன் மனநிலைப் புரிந்தது போல் மெல்ல தலையைக் கோதிவிட்டார் சாரதா.
 
 
இந்தத் தலைக்கோதல் அவனுக்குத் தன் இழப்பை உணர்த்த.. மேலும் கலங்கி தவித்தது தார்க்கின் மனம். அடுத்தப் பல நிமிடங்களுக்கு இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
 
 
அதன் பின் அலுவலகம் கிளம்பி சென்று விட்ட தாரக்கிற்கு நாகராஜின் நேற்றைய நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவல் வந்து சேர்ந்திருந்தது. அதை இதழில் நெளிந்த ஓர் அலட்சிய புன்னகையோடு கேட்டுக் கொண்டவன், “மிஸ்டர் நாகராஜனுக்கு வலிக்குது போலேயே..! ஆனா இந்த வலி எல்லாம் போதாது, இன்னும் கொடுக்கணும்..” என்றவன் அடுத்து என்ன செய்யணும்னு நான் அப்புறம் சொல்றேன்..” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
 
 
இதையெல்லாம் கேட்ட பிறகு, நேற்று முதல் இருந்த மனநிலை தாரக்கிற்கு முற்றிலும் மாறிப் போனது. அதே மனநிலையோடு அன்றைய நாளை கழித்தவன், மாலை வீடு திரும்பியவுடன் நேராக சிந்துவை தான் காணச் சென்றான்.
 
 
அங்கு இருள் படிய தொடங்கி இருந்த மாலை நேரத்தில் அந்தச் சிட் அவுட்டின் கிரில்லை பிடித்தபடி சோகமாகச் சித்திரமாக எங்கோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள் சிந்து.
 
 
ஒரு வேகத்தோடு உள்ளே நுழைந்தவனின் பார்வையில் இந்தக் காட்சி விழவும், பக்கவாட்டுத் தோற்றத்தில் அவளைக் கண்டவன் தன்னை மறந்து ஒரு நொடி அப்படியே நின்று விட்டான்.
 
 
கலைந்திருந்த அவளின் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து சிந்துவின் முகத்தில் உரசி விளையாடிக் கொண்டிருக்க.. கைகள் இறுக அந்தக் கிரில்லை பிடித்துக் கொண்டு இருந்தது.
 
 
பக்கத்தில் இருந்த சுவரில் லேசாகச் சாய்ந்து நின்று இருந்தவளையே சில நொடிகள் பார்த்தவன் தன்னை மறந்த ஒரு மோன நிலையில் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான் தாரக்.
 
 
சிந்து இன்னும் அறைக்குள் தாரக் நுழைந்ததைக் கவனித்திருக்கவில்லை. அவளின் கவனமும் இங்கு இல்லை.. நேற்றைய ஏமாற்றமும் இனி தன் வாழ்வு என்னாகுமோ என்ற கலக்கமும் அவளைத் தன்னை மறந்து நிற்க செய்திருந்ததில், அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, சிந்து எதிர்பார்க்காத தருணத்தில் பின்னால் இருந்து அவளை அணைத்திருந்தான் தாரக்.
 
 
இதில் திடுக்கிட்டு சிந்து தன் உணர்வு திரும்பவும் தாரக் அவளின் கழுத்தில் தன் முகத்தைப் பதிக்கவும் சரியாக இருந்தது. இதில் திகைத்து விலக முயன்றவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் அவள் கழுத்தில் புதைத்திருந்த தாரக்கின் இதழ்கள் மெல்ல ஊர்ந்து முன்னேறி காது மடலை தீண்டவும், சிந்துவினுள் அப்படி ஒரு அதிர்வு உண்டானது.
 
 
இத்தனை நாள் தாரக்கிடம் இருந்த அதிரடியோ, மூர்க்கமோ இன்றைய அணைப்பிலோ இதழ் தீண்டலிலோ துளியும் இல்லை. அத்தனை மென்மையோடு இருந்த அவனின் அணுகுமுறையில் அவள் உணர்ந்த வேறொரு உணர்வில் கேள்வியாகத் திரும்பி தார்க்கை பார்த்தாள் சிந்து.
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 9
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
நேசம் – 10
 
சிந்துவுக்குத் திடீரென வந்து இப்படிப் பின்னால் இருந்து தாரக் அணைத்ததே பெரும் அதிர்வு என்றால் அந்த அணைப்பில் இருந்த அழுத்தம் மற்றொரு வித அதிர்வை கொடுத்தது.
 
 
இதுவரை அவள் உணர்ந்த அழுத்தம் இது இல்லை. இதற்கு முன் இருந்த ஆத்திரமுமோ கோபமோ இதில் கொஞ்சமுமில்லை. மாறாக மென்மையான நேசம் இதில் வெளிப்படுவது போல் அவளுள் ஒரு எண்ணம்.
 
 
‘இப்படி இருக்க வாய்ப்பில்லை..!’ என சிந்துவுக்கு நன்றாகவே புரிந்தாலும் அவள் மனமும் உடலும் உணரும் ஒன்றை இல்லை என அவளாலேயே மறுக்க முடியவில்லை.
 
 
அதில் உண்டான நம்ப முடியாத திகைப்போடு சிந்து அசையாமல் நின்றிருக்கும் போதே, அவளின் கழுத்து வளைவில் புதைத்திருந்த தன் முகத்தை மெல்ல நகர்த்திச் சின்னச் சின்ன முத்தங்களிட்டவாறே அவளின் செவி மடலை நெருங்கினான் தாரக்.
 
 
இதெல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிது. ‘இத்தனை மென்மையாகத் தாரக்கினால் நடந்து கொள்ள முடியுமா..?’ என்ற திகைப்போடும் ‘இது என்ன புதுசா..?’ என்ற மலைப்போடும் சிந்து நின்றிருக்கும் போதே மெதுவான குரலில் அவன் எதையோ முணுமுணுப்பது சிந்துவுக்குக் கேட்டது.
 
 
ஆரம்பத்தில் அவளுக்கு தாரக் முணுமுணுப்பது என்னவெனப் புரியவில்லை. ஆனாலும் அந்தக் குரலில் இருந்த தவிப்பும் தன் காது மடலில் இதழ் பதித்து அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்த குரலும் சேர்ந்து அவளுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
 
 
அவளை அணைத்திருந்த தன் கைகளில், அவன் கூட்டிக் கொண்டே சென்ற இறுக்கம் கண்டு அவள் குழம்பி நிற்கும் போதே தாரக்கின் அந்த மெல்லிய முணுமுணுப்பு சிந்துவுக்குத் தெளிவாகக் கேட்டது.
“நீ இல்லாம என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.. ப்ளீஸ் என்னை விட்டு எங்கேயும் போயிடாதே..! என் கடைசி நாள் வரை நீ என் கூடவே இருக்கணும்.. நீ இல்லைனா நான் இல்லை..” என்று அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்க.. அதிர்வில் விழிகள் விரிய அசைய கூட மறந்து நின்று விட்டாள் சிந்து.
 
 
இப்படி ஒரு வார்த்தையை தாரக்கிடம் இருந்து அவள் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. தன் மேலான அவனின் வெறுப்பும் கோபமும் பற்றி நன்றாக அறிந்திருந்தவளுக்கு இப்படி ஒரு வார்த்தை அவனிடம் இருந்து வரும் என எப்படி நம்ப முடியும்..?
 
 
இதில் தன் காதில் விழுந்தது சரி தானா என்பது போல் அவள் அப்படியே அசையாமல் நின்றிருக்க.. மீண்டும் அவளின் சந்தேகத்தைத் தீர்ப்பது போல் அதே வார்த்தைகளைத் தன்னை மறந்து உச்சரித்துக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
இப்போது நடந்த அனைத்தையும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவளுக்கு எதுவோ புரிவது போல் இருக்க.. மெதுவாகப் பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்தாள் சிந்து. அவளின் அந்த அசைவிலேயே அதுவரை விழி மூடிக் கொண்டிருந்தவன் தன் மோன நிலை கலைந்து விழிகளைத் திறந்து பார்த்தான்.
 
 
இருவரின் முகங்களும் வெகு அருகில் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருக்க.. இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள.. ஒரு நொடி சிந்துவின் விழிகளில் தெரிந்த கேள்வியில் சட்டென அவளிடம் இருந்து விலகினான் தாரக்.
 
 
அதே வேகத்தில் அங்கிருந்து நகர முயன்றவனை சிந்துவின் குரல் தடுத்து நிறுத்தியது. “நீங்க.. நீங்க என்னை.. காதலிச்சீங்களா..?” என்ற கேள்வியில் அப்படியே நின்றவன், பின் பதிலேதும் சொல்லாமல் சிந்துவை திரும்பியும் பார்க்காமல் மீண்டும் அங்கிருந்து நகர முயல.. “உங்ககிட்ட தான் கேட்கறேன் சொல்லுங்க.. நீங்க என்னைக் காதலிக்கறீங்களா..?” என்று மீண்டும் கேட்டாள் சிந்து.
 
 
அதில் இவ்வளவு நேரம் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாமல் எதிலிருந்தோ தப்பிப்பது போல் அங்கிருந்து நகரவே முயன்று கொண்டிருந்தவன், சிறு கேலியோடு திரும்பி அவளைப் பார்த்தான்.
 
 
“லவ்வா..? நானா..? அதுவும் உன்னையா..?” என்று கூறும் போதே அவன் குரலில் இருந்த வெறுப்பும் கோபமும் தெளிவாக சிந்துவுக்குப் புரிந்தது. ‘ஆனால் சற்று முன் அவள் உணர்ந்தது என்ன..?’ என அவளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
 
“அப்.. அப்போ இதெல்லாம் என்ன..?” என்று அவள் வார்த்தைகளில் அவனிடம் கேட்டிருக்க.. அதற்குப் பதிலளிக்காமல் அவளை நக்கலாகப் பார்த்தவன் “நீ வேணும்னா உன் காலேஜ் பியூட்டியா இருக்கலாம்..! அதனால் உன் பின்னே நிறையப் பேர் சுத்தியும் இருக்கலாம்.. ஆனா அதுக்காக உலகத்தில் இருக்க எல்லா ஆண்களும் உன்னைக் காதலிப்பாங்கன்னு நினைக்கறதெல்லாம் ஓவர் கான்ஃபிடன்ட்.. அதிலேயும் நான்..!” என்று ஒருவித கேலி குரலில் கேட்டு இடைவெளி விட்டவன், “வாய்ப்பே இல்லை..” என்றிருந்தான் ஒருவித அழுத்தம் திருத்தமான குரலில் தாரக்.
 
 
அதில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவள், “அப்புறம் இது..! இப்.. இப்போ நீங்க சொன்னது..!” என்று எதையோ சிந்து சிறு தடுமாற்றத்தோடு கேட்கத் தொடங்கவும், “இங்கே பார், உன் பின்னே காதல்னு பைத்தியமா சுத்தின கேசவ், நீரஜ், ரகு போல என்னையும் நினைச்சு இருந்தா.. இப்போவே அதை அழிச்சுடு.. உன் இந்த அழகால் என்னைக் கொஞ்சமும் அசைக்க முடியாது.. அவங்களைப் போல உன் பின்னே சுத்தி க்யூவில் நிற்கும் டைப் நான் இல்லை.. உன் இந்தச் சீப் டிரிக்ஸ் எல்லாம் என்கிட்ட பலிக்காது.. வேற ஏதாவது டிரை செய்..” எனக் கேலியில் தொடங்கிக் கடினமான குரலில் முடித்தான் தாரக்.
 
 
இதில் உண்டான சிறு திகைப்போடு சிந்து நின்று இருக்கும் போதே, “உனக்கு ஞாபகம் இருக்கா நீ பைனல் இயர் படிக்கும் போது உன்னைக் கட்டி பிடிச்சதுக்காக ஒருத்தனை.. ஹ்ம்ம் அவன் பெயர் என்ன..? சரத்.. எஸ் சரத் இல்லை.. உங்க அண்ணன்.. அந்த மினி நாகராஜன் அருண்கிட்ட சொல்லி நல்லா அடி வாங்கிக் கொடுத்தே இல்லை.. அவனும் ஏதோ ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துப் பாவம் அந்தப் பையனை காலேஜில் வெச்சு புரட்டி எடுத்தானே..!” என்றவன், மீண்டும் ஒரு நக்கல் சிரிப்போடு அவளைப் பார்த்து “இதோ இப்போ நான் உன்னை உன் அனுமதியில்லாம தான் தினம் தொட்டுட்டு இருக்கேன்.. எங்க முடிஞ்சா உங்க அண்ணன் ஹ்ம்ம், ஏன் உங்க அப்பாகிட்ட கூடச் சொல்லி அடி வாங்கிக் கொடேன் பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் தாரக்.
 
 
அதில் சிந்து அவள் கேட்க வந்ததையே மறந்து தாரக் சென்ற திசையையே அதிர்வோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நிஜமாகவே அவளுக்கு எதுவும் புரியவில்லை.
 
 
தன் கல்லூரி கால நிகழ்வுகள் முதல் அனைத்தையும் தாரக் தெரிந்து வைத்திருப்பது அவளுக்கு அத்தனை அதிர்வாக இருந்தது. இதில் பல விஷயங்கள் இன்று வரை அவள் வீட்டினருக்கே தெரியாது.
தன் பின்னே சுற்றியவர்களின் பெயர் முதற்கொண்டு தாரக் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் பல வருடங்களாக அவன் தன்னைக் கண்காணித்து இருப்பதும் புரிந்தது. இது ஒரு வகையில் சிந்துவுக்குப் பயத்தையும் மற்றொரு வகையில் குழப்பத்தையும் கொடுக்க.. அப்படியே செய்வதறியாது நின்றிருந்தாள் சிந்து.
 
 
நிஜமாவே அவளுக்கு தாரக்கை புரிந்து கொள்ள முடியவில்லை இந்தக் கடத்தல், கல்யாணம், தன்னிடம் அவன் நடந்து கொண்டு கொள்ளும் முறை என எதற்குமே காரணம் புரியாமல் இத்தனை நாள் குழம்பிக் கொண்டிருந்தவளை மேலும் இன்றைய தாரக்கின் பேச்சு குழப்பி விட்டுச் இருந்தது.
 
 
அன்று அருண் திடீரெனக் கல்லூரிக்கு வந்த போது நடந்த சம்பவம் அது. சிந்துவே எதிர்பாராமல் நடந்த ஒன்று. அவள் அருணிடம் சொல்லி எல்லாம் அன்று அடிதடி நடந்திருக்கவில்லை. நேரில் தன் தங்கையிடம் ஒருவன் தவறாக நடப்பதை கண்ட ஆத்திரத்தில் அருண் அடித்திருந்தான்.
 
 
அதன் பின் அது ஒரு பிரச்சனையாகி, நாகராஜன் தன் செல்வாக்கினால் அதை ஒன்றுமில்லமால் செய்தது எல்லாம் தனிக் கதை. ஆனால் இப்போது வரை அருணுக்கு கூட அடித்தவனின் பெயர் தெரியாது.
 
 
இதையெல்லாம் நேரில் பார்த்தது போல் தாரக் பேசி செல்வது வேறு சிந்துவை குழப்பமடையச் செய்ய.. தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி அங்கேயே மடங்கி அமர்ந்தாள் சிந்து.
 
 
இப்போது தாரக் பேசி சென்ற எல்லாம் ஒரே சமயத்தில் நடந்த விஷயங்கள் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடந்தவை. இவை அத்தனையும் தாரக்கிற்குத் தெரிந்திருக்கிறது என்றால் பல காலமாக அவன் தன்னைப் பின் தொடர்ந்து கண்காணித்து இருக்கிறான் எனப் புரிகிறது.
 
 
ஒருவேளை தன் மீது அதீத காதல் இருந்து அதனால் தன்னைப் பின் தொடர்ந்து இதையெல்லாம் அறிந்து கொண்டிருந்து இப்போது நடப்பதெல்லாம் அதன் பின்னான நிகழ்வுகள் என்றால் கூட ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகிறது.
 
 
ஆனால் அதுவுமில்லை எனும் போது தன்னை இத்தனை வருடங்களாக எதற்காகப் பின் தொடர்ந்து இருக்க வேண்டும்..? ஒருமுறை கூடத் தாரக்கை பார்த்தது போல் அவளுக்கு நினைவே இல்லை. அப்போது தாரக் தன் எதிரில் வரவே இல்லையோ என்ற சந்தேகமும் அவளுக்கு உண்டு.
 
 
இத்தனை விவரங்களைத் தெரிந்து வைத்து இருக்கும் ஒருவன் தன் மேல் காதலோடு இருந்தால் எதிரே வராமல் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் புரிந்தது.
 
 
தன் காதலை சொல்லி, அதை ஒருவேளை நான் மறுத்து இருந்தால் கூடச் சிலர் அதைப் புரிந்துக் கொள்ளாமலும், தன் காதலை எப்படி மறுக்கலாம் என்ற கோபத்திலும் இப்படி அதிரடியாகத் திருமண நேரத்தில் நுழைந்து பிரச்சனை செய்ய வாய்ப்பு உள்ளது.
 
 
ஆனால் இங்கு அப்படி எதுவுமே நடந்திருக்கவில்லை. அதிலும் தாரக் தன்னை விரும்பி இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது தன் ஒவ்வொரு செயலையும் தெரிந்து வைத்திருப்பது எதற்காக..? எனப் பல கேள்விகள் அவளுள் உண்டானது.
 
 
எவ்வளவு யோசித்தும் தாரக் தன்னை விரும்புவதாக அவளால் எண்ணவே முடியவில்லை. இது நிச்சயமா காதல் இல்லை.. அப்போ இது என்ன..? எதுக்காக..?’ என்று எண்ணம் செல்ல.. சற்று முன்னான தாரக்கின் செயல்களும் அந்த வார்த்தைகளும் மேலும் அவளைக் குழப்பியது.
 
 
இதில் தலையே வெடித்து விடும் போல் இருக்க.. தினமும் இதையே யோசித்துக் குழம்பி இருந்த மனம் இன்று மேலும் சோர்ந்து போக.. அப்படியே தலையைப் பிடித்தப்படி தரையில் சுருண்டுக் கொண்டாள் சிந்து.
 
 
*********
 
 
அதே நேரம் தன் அறையில் இருந்த தாரக்கிற்கு இன்ஸ்பெக்டர் ராகவனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் இதழின் ஓரம் வழிந்த ஒரு புன்னகையோடு அழைப்பை எடுத்திருந்தவன் “எஸ் ராகவ்..” எனவும், “உன் பிளான் சக்சஸ்..” என்றான் சுருக்கமாக ராகவ்.
 
 
“ஹ்ம்ம் எதிர்பார்த்தேன்..” என்று தாரக் சொல்லவும், “நீ சொல்லும் போது கூட நான் இவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் நடக்கும்னு நினைக்கலை.. பட் மிஸ்டர் நாகராஜனை நீ நல்லாவே புரிஞ்சு வெச்சு இருக்கே..” என்று சிறு நக்கலோடு கூறினான் ராகவ்.
 
 
“ஹாஹாஹா.. இல்லையா பின்னே மாமனாராச்சே சும்மாவா.. அவர் யார்..? எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சா தானே என் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என்றவனின் குரலில் இருந்த கேலியில் அந்தப் பக்கமும் சிரித்த ராகவ், “என்னவோ செய்யறே.. ஆனா என்னன்னு தான் புரியலை, சரி விடு.. இப்போ அந்த கிரியை என்ன செய்யலாம்..?” என்றான் ராகவ்.
 
 
“அவனை வெச்சு என்ன ஊறுகாயா போட முடியும்..? நாகராஜனே அவனை வெச்சு எதுவும் செய்ய முடியாதுன்னு தூக்கி தூர வீசிட்டான்.. இனி அவன் நமக்கு எதுக்கு..? பாவம் எதுக்கு அவன் இன்னும் அடியும் உதையும் வாங்கணும்னு தான் அங்கிருந்து வெளியே கூட்டிட்டு வர சொன்னேன்.. எனக்கு அவன் செஞ்ச துரோகத்துக்கு இத்தனை நாள் அவன் வாங்கினதே போதும், அப்படியே விட்டுடு..” என்றான் தாரக்.
 
 
“ஆனா அவன் வாயை திறந்தா..? எங்கேயாவது போய்க் கேஸ் கொடுத்தா..?” என்று ராகவ் கேட்கவும், மீண்டும் பலமாகச் சிரித்திருந்த தாரக் “அவ்வளவு தைரியம் எல்லாம் அவனுக்குக் கிடையாது ராகவ்.. இந்த யுவன் விஷயத்தில் கூட ஆரம்பத்தில் பயந்து முடியாதுன்னு தான் பின் வாங்கி இருக்கான்.. ஆனா யுவன் கொடுத்த பெரிய தொகை அவனைக் கொஞ்சம் தடுமாற வெச்சுடுச்சுப் பாவம், அதுக்கான தண்டனையையும் அவனுக்குக் கொடுத்தாச்சு, விட்டுடுவோம்..” என்றிருந்தான் தாரக்.
 
 
“ஆனாலும் உனக்கு ரொம்பப் பெரிய மனசு தான்பா..” என்ற கேலி செய்தான் ராகவ். “ஹாஹா..” என்று சிரித்த தாரக், “இப்போ எங்கே இருக்காங்க இரண்டு பேரும்..?” என்றான். “அவங்க இப்போ இருக்க நிலைமைக்கு வீட்டுக்கா அனுப்ப முடியும்..? ஹாஸ்பிடலில் தான் சேர்த்திருக்கோம்..” என்றான் ராகவ்.
 
 
“சுயநினைவு இருக்கா..?” என்று தாரக் கேட்க.. “அதெல்லாம் இருக்கு, ஆனா இரண்டு பேருமே வாயைத் திறக்கலை.. என்ன கேட்டாலும் பதில் சொல்லலை..” என்ற ராகவ். “ஆனா, இது நாம எதிர்பார்த்தது தான்..” என்றும் சேர்த்துக் கூறினான்.
 
 
“ஆமா வாங்கின அடி ஞாபகத்தில் இருக்கும் இல்லை..” என்ற தாரக், “சரி நீயும் அவங்களை ரொம்பத் தொந்தரவு கொடுக்காதே..” என்று தாரக் சொல்லவும், “அவ்வளவு தான்.. அவங்க வீட்டில் கொடுத்த கம்ப்ளைன்டையும் வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லி இருக்காங்க..” என்றான் ராகவ்.
 
 
அதன் பின் சிறிது நேரம் ராகவ்வோடு பேசிக் கொண்டிருந்து விட்டு அழைப்பை துண்டித்தான் தாரக். அடுத்தடுத்து அவன் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது தாரக்கின் மனம் கொஞ்சம் அமைதியானது.
 
 
இதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வந்தது என்று எண்ணியவன் விழி மூடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
 
 
இதற்கு நேர் மாறாகத் தன் அறைக்குள் குட்டி போட்ட பூனை போல் விழிகள் சிவக்க முழுப் போதையில் நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். தொலைத்த இடத்தை விட்டு வேறு எங்கோ தேடிக் கொண்டிருந்தது போல் தன் மகளைச் சந்தேகப்பட மறந்து, மற்ற இடங்களில் எல்லாம் சுற்றி அலைந்ததை எண்ணி அவருக்கு அவமானமாக இருந்தது.
 
 
‘எப்படி அவளைச் சந்தேகப்பட மறந்தேன்..?’ என அதைப் பற்றி என்று மட்டுமே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தார் நாகராஜன். ஆனால் அதற்கு அவருக்கு விடை தான் கிடைக்கவில்லை.
 
 
‘அவ்வளவு அழகா இத்தனை வருஷமா நடிச்சு என்னை ஏமாத்தி இருக்கா.. நான் சொன்ன பேச்சை எல்லாம் கேட்கறது போலவும், நான் கிழிச்ச கோட்டை தாண்டாது போலவும் என்ன அழகா நாடகம் ஆடி இருக்கா..? ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து பேசி இருந்தா கூடக் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கும்.. ஆனா அதையும் செய்யாம, மறுவார்த்தை பேசாம நடிச்சு தன் காரியத்தைச் சாதிச்சுட்டா..’ என்று எண்ணிக் கொண்டிருந்தவர், தன் சிந்தனையைக் கலைப்பது போல் “அண்ணே..” எனத் தன் முன் வந்து நின்ற முத்துவை எரிச்சலோடு பார்த்து “என்ன..?” என்றார் நாகராஜன்.
 
 
“ண்ணே.. அந்த சபரி வந்து இருக்கான்..” என்றான் சிறு தயக்கத்தோடான குரலில் முத்து. “எந்த சபரி..?” என்று புரியாமல் எரிச்சலோடு கேட்டவர், அப்போதும் சிறிய தயக்கத்தோடு “அதானே அந்தத் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து இருக்கானே தவசி, அவன் மகன் சபரி..” என்று முத்து எடுத்துக் கொடுக்கவும், “அவனா..? அந்தக் குடிகாரன் இங்கே எதுக்கு வந்தான்..?” என்றார் வெறுப்போடு நாகராஜன்.
 
 
“அது.. அது அண்ணே.. அவன் உங்களைத் தான்..” என்று முத்து இழுக்கவும், “என்னன்னு சொல்லி தொலை..” என மீண்டும் கோபத்தில் கத்தினார் நாகராஜன்.
 
 
“அது நாம அந்தப் போட்டோவை வெச்சு தேடினோம் இல்லை அண்ணே..?” என்றான் முத்து. “எந்தப் போட்டோ..?” என்று முழுபோதையில் இருந்தவருக்கு உடனே முத்து சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
 
“அதானே நம்ம வீட்டு பாப்பாவை தூக்கிட்டு போனானே..! அவன் போட்டோ..” என்று முத்து தொடங்கவும், “ஏன்டா நானே அதை மறக்க தான் குடிச்சுட்டு இருக்கேன்.. இன்னும் அதையே சொல்லிட்டு இருக்கே.. அவ தான் நானே திட்டம் போட்டு தான் அவன் கூடப் போனேன்னு சொல்லிட்டாளே.. இன்னும் என்ன..?” என்று சிடுசிடுத்தார் நாகராஜன்.
 
 
“அதில்லை அண்ணே.. ஆரம்பத்தில் அவனைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு அவன் போட்டோவை வெச்சு தேடிட்டு இருந்தோம் இல்லை, அந்தப் போட்டோவை தான் இப்போ எடுத்துட்டு வந்து இருக்கான் சபரி..” என்றான் முத்து.
 
 
“சரி, இனி அதை வெச்சு நாம என்ன செய்ய..?” என்று நாகராஜன் சிடுசிடுக்கவும், “இல்லை அண்ணே அவன் வேற என்னமோ சொல்றான்..” என்றான் முத்து. அதில் புரியாமல் முத்துவை பார்த்து “ஏன் என்னவாம்..?” என்றார் நாகராஜன்.
 
 
“அவன் அந்தப் போட்டோவில் இருக்கறவனைப் பார்த்து இருக்கானாம்.. என்கிட்ட தான் உங்க வீட்டுக்கு போக வழி கேட்டார், நான் தான் வழி சொன்னேன்னு சொல்றான்..” என்று முத்து தொடங்கவும், “ஏன்டா அவன் தான் குடிச்சிட்டு எதையோ உளறிட்டு இருக்கான்னா, நீயும் அதைக் கேட்டுட்டு இங்கே வந்து என் நேரத்தை வீணாக்கிட்டு இருக்கே.. அது தான் நான் பெத்து வெச்ச ஓடு** அவளே தான் அவனை வர வெச்சு கிளம்பி போனேன்னு சொல்லிட்டாளே.. இதுக்குப் பிறகும் வழி வேற இவன்கிட்ட கேட்டானாமா..? ஒழுங்கா அவனை வீட்டுக்குப் போகச் சொல்லு, குடிக்கக் காசு இல்லைன்னு நீங்க வந்து பொய் சொல்லிட்டு நிற்கறான் போல..” என்றார் நாகராஜன்.
 
 
“அது இல்லை அண்ணே..” என்று அப்போதும் முத்து தயங்கி நிற்க.. “என்னதான்டா உன் பிரச்சனை..? சொல்லி தொலை..” என எரிச்சலில் படபடத்தார் நாகராஜன்.
 
 
“அண்ணே அவன் சொல்றது..” என்று தொடங்கி விட்டுப் பின் தயங்கி நாகராஜன் முகம் பார்த்து நிறுத்தினான் முத்து. “இப்போ நீ ஏதாவது சொல்லணும்னா சொல்லிட்டுக் கிளம்பு.. ஏற்கனவே கொலைவெறியில் குடிச்சுட்டு இருக்கேன், இதில் நிம்மதியா குடிக்கக் கூட விடாம வந்து தொல்லை கொடுத்துட்டு இருந்தேன்னு வெச்சுக்கோ.. இன்னைக்கு எவன் மேல இருக்கக் கோவத்துக்கோ நீ பலி ஆகிடாதே..” என்றார் நாகராஜன்.
 
 
“அண்ணே சபரிகிட்ட அந்தப் பையன் வந்து வழி கேட்டது இப்போ இல்லை.. எட்டு வருஷத்துக்கு முன்னேயாம்..” என்று முத்துச் சட்டெனச் சொல்லிவிடவும், “என்னது..?” என்றார் ஒன்றும் புரியாமல் நாகராஜன்.
 
 
“அப்படித்தான் சொல்றான்..” என்று முத்து தொடங்கவும், “நான் தான் சொன்னேனே அவன் போதையில் இங்கே வந்து உளறிட்டு இருக்கான், அடிச்சு விரட்டி விடு அவனை..” என்றார் நாகராஜன்.
 
 
“ஆனா அண்ணே..” என்று அப்போதும் முத்து தயங்கவும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சொற்களால் முத்துவை அர்ச்சித்து முடித்தவர் “என்ன தான்டா உன் பிரச்சனை..? இன்னைக்கு என் நிம்மதியை கெடுக்கணும்னு எல்லாரும் முடிவு செஞ்சு வந்து இருக்கீங்களா..?” என்று தன் கையில் இருந்த மது நிறைந்த கண்ணாடி கோப்பையை எதிரில் இருந்த சுவரில் தூக்கி அடித்து உடைத்து விட்டு கேட்டார் நாகராஜன்.
 
 
அதிலேயே அளவுக்கு மீறி நாகராஜனின் பொறுமையைச் சோதித்து விட்டதைப் புரிந்து கொண்ட முத்து, “அவன் சொல்றதை எல்லாம் வெச்சு பார்த்தா அவன் பொய் சொல்றது மாதிரி தெரியலை அண்ணே..” என்றான் முத்து.
 
 
“அப்படி என்ன தான் சொல்லிட்டான் அவன்..? எங்கே சொல்லு கேட்போம்..” என நாகராஜன் கேட்கவும், “எட்டு வருஷத்துக்கு முன்னே இங்கே அவன் நம்ம வீட்டை தேடி, அன்னைக்கு நைட்டு வந்தப்போ சபரிகிட்ட தான் வீட்டுக்கு வழி கேட்டிருக்கான்.. இவன் தான் வழி சொல்லி அனுப்பினதா சொல்றான்..” எனச் சொல்லவும், “எட்டு வருஷத்துக்கு முன்னே அவனுக்கு இங்கே என்னடா வேலை..?” என்றார் அப்போதும் புரியாமல் நாகராஜன்.
 
 
“அண்ணே உங்களுக்கு இன்னுமா புரியலை..?” என்ற முத்து எதையோ மெல்லிய குரலில் அக்கம் பக்கம் பார்த்தப்படியே சொல்லி முடிக்கவும், “என்னது..?” என்றார் திகைப்போடு நாகராஜன்.
 
 
‘ஆமா அண்ணே.. இவன் சொல்றதை எல்லாம் வெச்சு பார்த்தா.. அப்போ நடந்தது தான்..” என்றான் மெல்லிய குரலில் முத்து. “நல்லா தெரியுமா உனக்கு..?” என்று முழுப் போதையும் இறங்கி இருக்க.. வேர்த்து போன முகத்தைத் துடைத்தப்படியே கேட்டார் நாகராஜன்.
 
 
“ஆமா அண்ணே.. எனக்கு ஆரம்பத்திலேயே இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.. அவன் பெயரும் தான்.. அது ஏன்னு இப்போ புரியுது..” என்றான் முத்து.
 
 
“இதை முதலிலேயே சொல்றதுக்கு என்னடா..?” என எரிந்து விழுந்தார் நாகராஜன். “அது எட்டு வருஷம் ஆகிடுச்சு.. அதிலேயும் அப்போ நான் அவனை ஒரே முறை இருட்டில் தான் பார்த்தேன். அதான் சட்டுன்னு எதையும் கண்டுப்பிடிக்க முடியலை..” என்றான் முத்து.
 
 
ஆனால் அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாத நாகராஜன், “அவன்.. அவன் எப்படி சிந்து கூட..?” என்றார் பதட்டமாக. “அதான் அண்ணே எனக்கும் புரியலை..” என்றான் முத்து.
 

தொடரும்...

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
நேசம் – 11
 
நாகராஜனின் எதிரே செல்லவே பயந்து விஷ்வாவின் அறையில் சுருண்டு படுத்திருந்தார் சுஜாதா. அழுதழுது அவரின் கண்ணீரே வற்றிவிடும் நிலைக்கு வந்திருந்தது.
 
 
விஷ்வாவினால் அவரைத் தேற்றவே முடியவில்லை. எத்தனையோ முயன்று பார்த்து செய்வதறியாது அமர்ந்திருந்தான் விஷ்வா.
 
 
நாகராஜன் அடித்திருந்ததில் உண்டான வலியும் வீக்கமும் ஒரு புறம் அவரைத் துடிக்கச் செய்து கொண்டிருக்க.. மற்றொரு புறம் தன் மகளின் நிலையை எண்ணி துடித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.
ஆரம்பம் முதலே சிந்துவுக்கு வேறு ஏதோ பெரும் பிரச்சினை என அவருக்குத் தெளிவாகப் புரிந்து இருந்தும் அதைத் தன் வீட்டினரிடம் சொல்லி மகளைக் காக்கும் முயற்சியில் அவரால் இறங்க முடியவில்லை. ஏனெனில் இங்கு நாகராஜன் பேச்சை மீறி எதுவும் நடக்காது.
 
 
வீட்டுப் பெண்கள் சொல்லும் எதையும் கேட்கும் எண்ணம் நாகராஜனுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்போதும் அப்படியே தாரக்கின் மீதே அவரின் கவனம் முழுக்க இருக்க.. அவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு, தன் மகளைப் பற்றிய அக்கறை துளியும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின் என்ன செய்ய முடியும் என்பது போல் தான் இருந்தது சுஜாதாவின் நிலை.
 
 
‘தன் மகனாவது முன் நின்று தங்கையின் நிலையை அறிந்து காப்பாற்றி விடமாட்டானா..?’ என்ற ஏக்கம் அவரின் மனம் முழுக்க இருந்தாலும் அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருப்பதை உணர்ந்திருந்தவர் அருணிடம் கூட எதையும் பேசவில்லை.
 
 
இப்போது அவரின் சந்தேகம் உண்மை என்பது போல் சிந்து அலைபேசியில் பேசியிருந்த வார்த்தைகள் அவரை நிம்மதி இழக்க செய்து கொண்டிருந்தது.
 
 
‘எங்கே யாரின் பிடியில் எப்படித் தன் ஒரே மகள் சிக்கித் தவிக்கிறாளோ..!’ என்ற கவலையே அவரைத் துடிக்கச் செய்து கொண்டிருக்க.. அதை உணர்ந்தது போல் “நாம வேணும்னா போலீஸ்கிட்ட போயிடலாமா சித்தி..?” என்றிருந்தான் விஷ்வா.
 
 
அதில் அவனை விரக்தியாக விழிகளை உயர்த்திப் பார்த்தவர், “போய் என்ன செய்ய முடியும்..? நம்மால் எதுவுமே செய்ய முடியாது, உங்க சித்தப்பாவை மீறி எதுவுமே செய்ய முடியாது..” என்றிருந்தார் வெற்றுக் குரலில் சுஜாதா.
 
 
“முயற்சியே செஞ்சு பார்க்காம எப்படிச் சித்தி அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க..? நாம ஒருமுறை முயற்சி செஞ்சு பார்ப்போமே..” என்றான் விஷ்வா.
 
 
“இத்தனை வருஷத்துதில் நான் முயற்சி செஞ்சுருக்க மாட்டேன்னு உனக்குத் தோணுதா..?” என்ற சுஜாதாவின் கேள்விக்கு விஷ்வாவிடம் பதில் இல்லை. ஆனால் சிந்துவின் நிலையை எண்ணி அவர் துன்பப்படுவதைப் பார்த்தவன் ஏதாவது பேச வேண்டுமே என்றே அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தான்.
 
 
அவனுக்குமே நாகராஜனை எதிர்த்து ஒரு துரும்பையும் இங்கு அசைக்க முடியாது என நன்றாகவே புரிந்திருந்தது. அவனின் அமைதியை கண்டு தானாகவே சுஜாதா, “நானும் எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்து, இதெல்லாம் எதுவும் இங்கே வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு தான் அப்புறம் வேறு எதுவும் செய்யாம இங்கே இப்படி அடி உதைகளுக்குப் பழகிட்டேன்..” என்றிருந்தார் சுஜாதா.
 
 
இதில் அமைதியான விஷ்வா “இப்போ மட்டும் அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லை சித்தி..” என்று கவலை குரலில் கேட்கவும், அவனை விழிகளில் தோன்றிய சிறு வலியோடு நிமிர்ந்து பார்த்தவர் பதிலேதும் பேசவில்லை.
 
 
சிறுவயதில் தன் தந்தையை இழந்தவனுக்கு கதிரவன் ஒருவேளை கதாநாயகனாக மனதில் பதிந்து போயிருக்கலாம். ஆனால் அவரும் நாகராஜனுக்குக் கொஞ்சமும் குறையாத அளவிலான ஒரு அரக்கனே என அவர்களோடு வாழ்ந்து பார்த்திருந்த சுஜாதாவிற்குத் தெரியுமே..! அதைச் சொல்லி இந்தச் சின்னப் பிள்ளையின் மனதை உடைக்க மனம் இல்லாமல் அமைதியாகி போனார் சுஜாதா.
 
 
தன்வினை தன்னைச் சுடும் என்பார்களே அப்படி ஒரு நிலையில் தான் விஷ்வாவின் தந்தை கதிரவனின் உயிரும் பிரிந்திருந்தது. ஆனால் அப்போது விஷ்வாவுக்கு எட்டு வயது என்பதால் அதை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
 
 
தன் தந்தை சிறுவயதிலேயே இறந்தது மட்டுமே விஷ்வாவுக்குத் தெரியும் அதில் ஒருவேளை அவர் இருந்திருந்தால் இதைச் செய்திருக்கலாம், அதை மாற்றி இருக்கலாம் என்று கற்பனையில் தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான் விஷ்வா.
 
 
அதைக் கலைக்க விரும்பாத சுஜாதாவும் பெரிதாக எந்த விளக்கமும் அவனுக்குச் சொல்வதில்லை. கற்பனையிலாவது அவன் விருப்பப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளட்டும் என்ற எண்ணம் தான் சுஜாதாவுக்கு இருந்தது.
 
 
சிந்து மட்டும் அவ்வப்போது விஷ்வா தன் பெரியப்பா பற்றிய பேச்சை தொடங்கும் போதெல்லாம் சுஜாதா அமைதியாகி போவதை கவனித்து ஒருமுறை தனிமையில் அவரிடம் பேசி சில விஷயங்களை அறிந்திருந்தாள்.
 
 
அப்போதும் கூட உடனே சுஜாதா அனைத்தையும் சொல்லிவிடவில்லை. முதலில் அதெல்லாம் ஒண்ணுமில்லை என மறுக்கத்தான் பார்த்தார். ஆனால் தன் அன்னையை நன்றாகப் புரிந்து வைத்திருந்த சிந்து கேட்டிருந்த விதத்தில் முழுமையாக இல்லை என்றாலும் அவரும் நாகராஜனுக்குக் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை என்று மட்டும் மேலோட்டமாகக் கூறியிருந்தார் சுஜாதா.
 
 
அதில் சிந்துவுக்கு ஓரளவு தன் தந்தையைப் பற்றியும் பெரிய தந்தையைப் பற்றியும் தெரியும். இப்போது இதை எல்லாம் எண்ணிய சுஜாதா அமைதியாக இருக்க.. அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் எனச் சுஜாதாவும் எண்ணுவதாக நினைத்துக் கொண்டான் விஷ்வா.
 
 
அதே நேரம் அந்த அறைக்குள் வந்த அருண், விஷ்வாவை முறைத்துக் கொண்டே “உனக்கு இதெல்லாம் முன்னையே தெரியுமாடா..?” என்றான்.
 
 
அதில் லேசான பதட்டத்தோடு எழுந்து நின்றிருந்த விஷ்வா “எ.. எதைப் ப.. பத்தி கேட்கறீங்க அண்ணா..?” என்று மெல்லிய குரலில் தடுமாற்றத்தோடு பேசவும், “அடச்சீ.. முதலில் இப்படிப் பேசும் போதே வாயில் தந்தி அடிக்கறதை நிறுத்து.. உனக்கு சிந்து காதலிக்கும் விஷயம் முன்னேயே தெரியுமா..?” என்றான் அருண்.
 
 
“இல்லை அண்ணா, எனக்கு அப்படி எதுவும் தெரியாது..” என்று அவசரமாக விஷ்வா கூறவும், “அவ ஊருக்கு வந்தா நாள் முழுக்க அவ கூடவே தானே இருப்பே.. அப்புறம் எப்படி உனக்குத் தெரியாம போச்சு..?” என்றான் நம்பாமல் அருண்.
 
 
“அப்படி ஏதாவது இருந்தா தானே அவனுக்குத் தெரியும்..!” என்று சுஜாதா கூறவும், அவரைத் திரும்பி முறைத்தவன் “நீங்க சும்மா இருங்க, அவளைச் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சதே நீங்க தான்..” என்றான் அருண்.
 
 
“உன்னை எப்படி வளர்த்தேனோ அப்படித்தான் அவளையும் வளர்த்தேன்..” என்றார் சுஜாதா. “அம்மா..” என்று அருண் கோபமாக இடையிடவும், “உன் கூடப் பிறந்தவத் தப்புச் செய்ய மாட்டான்னு கூட உனக்குப் புரியலை இல்லை..” என்றார் சுஜாதா.
 
 
“இப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்கு ம்மா அவ செஞ்ச தப்பை மூடி மறைக்கப் போறீங்க..? நான் தான் செஞ்சேன்னு அவளே போன் செஞ்சு ஊர் முன்னே சொல்லியாச்சு, இப்போவும் நீங்க நம்ப மாட்டீங்க இல்லையா..? அவளா நேரா வந்து சொன்னா தான் நம்புவீங்களா..?” என்றான் அருண்.
 
 
“இல்லை அப்போவும் நான் நம்ப மாட்டேன்.. யார் சொல்லி எதுக்காகப் பயந்து அவ வந்து இங்கே இப்படிப் பேசறான்னு தான் யோசிப்பேன்..” என்றார் சுஜாதா. அதில் அவரை முறைத்து விட்டு அந்த அறையில் இருந்து வேகமாக வெளியேறினான் அருண்.
 
 
“அப்போ நீங்க சிந்து அக்கா சொன்னதை நம்பலையா சித்தி..?” என்றான் விஷ்வா. “ஏன் நீ நம்பறியா..?” என்று திரும்ப சுஜாதா கேட்கவும், “இல்லவே இல்லை.. அக்கா அப்படிச் செய்யற ஆளே இல்லை, என்னைப் போல நீங்களும் நம்பலைன்னு நினைக்கும் போது ரொம்பச் சந்தோஷமா இருக்கு.. எப்படித் தான் சித்தப்பா உடனே நம்பினாங்களோ எனக்குத் தெரியலை.. அண்ணாவும் நம்பி இருக்கார் பாருங்க..” என்றான் விஷ்வா.
 
 
“வீட்டு ஆட்கள் மேலே அவங்களுக்கு இருக்க நம்பிக்கை அவ்வளவு தான் விஷ்வா..” என்றதோடு சுஜாதா முடித்துக் கொள்ள.. அதன் பின் விஷ்வாவும் வேறு எதுவும் பேசவில்லை.
 
 
*****
 
 
முத்து சொன்னதை எல்லாம் கேட்டு குழப்பமான நாகராஜன் வேகமாக வெளியில் செல்லவும், அவரை சபரி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் முத்து.
 
 
அங்கு முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த சபரி, அப்படியே 90 டிகிரி கோணத்தில் சாய்ந்து அமர்ந்த நிலையிலேயே தலை மட்டும் தரையில் முட்டிக் கொண்டிருக்குமாறு சரிந்திருந்தான்.
 
 
அவனை அந்த நிலையில் கண்ட நாகராஜன் “இவன் என்னவோ நமக்கு முக்கியமான தகவல் சொல்ல வந்ததா சொன்னே.. ஆனா இவனைப் பார்த்தா தலையாலேயே தரையில் ஏதோ புதையல் எடுத்துட்டு இருக்கறது போல இல்லை இருக்கு..” என்றார் எரிச்சலோடு நாகராஜ்.
 
 
“இல்லை ண்ணே இதோ எழுப்பறேன்..” என்று சரிந்திருந்த சபரியின் தலையை நிமிர்த்தித் தூணில் சாய்த்த முத்து “ஏய் சபரி.. நாகராஜன் அண்ணே வந்திருக்கார் பார்.. அவர்கிட்ட என்னவோ சொல்லணும்னு சொன்னியே..” என்று கன்னம் தட்டி அவனை எழுப்ப.. சபரியோ முழுபோதையில் வேறு ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
 
 
கொஞ்சமும் சபரியிடம் அசைவில்லாததைக் கண்டு முத்துவை நாகராஜன் முறைக்கவும், “இல்லை ண்ணே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னே வரை நல்லா தான் பேசிட்டு இருந்தான்.. அதுக்குள்ளே போதையில் சாய்ஞ்சுட்டான்.. இருங்க இப்போ எழுப்பிடறேன்..” என்று அவசரமாக மீண்டும் முத்து சபரியின் கன்னம் தட்டிக் கொண்டிருந்தான்.
 
 
“டேய்.. அவனைப் பார்த்தா பாட்டிலில் குடிச்சது போலவா இருக்கு.. பக்கெட்டில் குடிச்சுட்டு வந்திருக்கான், இப்படி எல்லாம் தட்டினா அவனுக்கு எறும்பு கடிக்கறது போலத் தான் இருக்கும்.. கொண்டு போய்க் கிணத்தடியில் உட்கார வெச்சுத் தலையில் தண்ணியைக் கொட்டு..” என்றார் கடுப்போடு நாகராஜன்.
 
 
“சரிங்க அண்ணே..” என்ற முத்து இன்னும் இரண்டு பேரை அழைத்து சபரியை குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கிணற்றடியில் அமர வைத்து அவன் தலையில் தண்ணீரை கொட்டினான்.
 
 
அத்தனைக்கும் சபரி லேசாக அசைந்தானே தவிர, அவன் கண் விழிக்கவே இல்லை. இதைக் கண்டு எரிச்சலான நாகராஜன், “ஏன்டா என் நேரத்தை வீணாக்கறே..? நானே கடுப்பில் உட்கார்ந்து இருந்தேன்.. நீ சொன்னதும் நானும் என்னமோன்னு வந்தேன் பார்.. என்னைச் சொல்லணும்..” என்று அங்கிருந்து நகர முயன்றார்.
 
 
“இல்லை அண்ணே, அவன் தெளிவா தான் சொன்னான்..” என்ற முத்து மீண்டும் அனைத்தையும் அனைவரின் முன்பும் பகிர்ந்து கொள்ள முடியாமல் அங்கு இருந்தவர்களைத் தயக்கத்தோடு பார்த்தான்.
 
 
இதைக் கண்டு நாகராஜன் தன் நடையை நிறுத்த.. மீண்டும் சபரியின் கன்னத்தை வேகமாகத் தட்டிய முத்து சற்றுச் சத்தமாக “டேய் எழுந்துடுடா நாகராஜன் அண்ணேகிட்ட பேசணும்னு சொன்னியே, வந்திருக்காரு பார்..” என்றதும், சட்டென விழிகளைத் திறந்த சபரி “அண்ணே நாகராஜ் அண்ணே வணக்கம்..” என்று அமர்ந்த வாக்கிலேயே இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி பெரிதாக வணங்க.. “ம்க்கும், இப்போ இது ரொம்ப முக்கியம்..” என்றவர், “டேய்.. நீ இந்தப் படத்தில் இருக்கறவனைப் பார்த்து இருக்கியா..?” என்று சபரியிடம் கேட்டார் நாகராஜன்.
 
 
ஆனால் அதற்குள் சபரிக்கு மீண்டும் தலை சரிந்து இருந்தது. இதில் கடுப்பானவர் முத்துவை முறைக்க.. “இதோ அண்ணே..” என்று அவன் மீண்டும் தண்ணீரை கொண்டு வந்து சபரியின் தலையில் கொட்ட.. “ஐயோ மழை வருது..” என்ற உளறலோடு இன்னும் வாகாகக் கிணற்றுச் சுவரில் சரிந்து படுத்தான் சபரி.
 
 
“டேய்.. அவன் இப்போதைக்கு எழுந்துக்கறது போலத் தெரியலை.. கொண்டு போய்ப் பின்னால் இருக்க வீட்டில் அடைச்சு வை.. அவன் எழுந்ததும் பேசிக்கலாம்..” என்று விட்டு நாகராஜன் அங்கிருந்து வேகமாகச் செல்ல.. “இப்போ இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு இந்தக் குடிகாரனை எதுக்கு அண்ணே நாம எழுப்பிட்டு இருக்கோம்..?” என்று கேட்டிருந்தான் முத்துவிடம் அங்கிருந்த ஒருவன்.
 
 
“ஹாங்.. வேண்டுதல்டா, இவனை நடுராத்தியில் குளிப்பாட்டி சீராட்டறேன்னு வேண்டுதல்..” என எரிச்சலான முத்து, மற்றவர்களோடு சேர்ந்து தரதரவென்று சபரியை இழுத்துச் சென்று பின்னால் இருந்த வீட்டில் போட்டு கதவை அடைத்தான்.
 
 
கதவை வெளிப்பக்கம் பூட்டியவன், “உள்ளே இருக்கறவன் மேலே ஒரு கண்ணு வைங்க, அவன் எழுந்ததும் என்கிட்ட சொல்லணும்.. அவன் கேட்டான்னு யாராவது கதவை திறந்து விட்டது தெரிஞ்சது அவ்வளவு தான்.. துவைச்சு தொங்க விட்டுடுவேன்..” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றான் முத்து.
 
 
“இப்போ எதுக்குடா இவனுக்கு நம்மைக் காவல் வெச்சுட்டு போறார்..” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.. எரிச்சலோடு அங்கிருந்து நகர்ந்தான் முத்து.
 
 
***
 
 
அன்று முழுக்க சிந்துவின் அறைக்கு யாருமே வரவில்லை. வழக்கமாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளை வந்து பார்த்து விட்டுச் செல்லும் சாரதா பாட்டி கூட இன்று முழுக்க உள்ளே வந்திருக்கவில்லை. சிந்துவோடு அவர் வந்து பேசி பழகவில்லை என்றாலும் தினமும் அவளின் செயல்களைக் கவனித்துக் கொண்டே இருப்பார் சாரதா.
 
 
வெளியே வயதான ஒருவர் இருப்பதற்கு அடையாளமாக அவ்வபோது சாரதா பாட்டியோடு அவர் பேசும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் இவர்கள் இருவர் குரலோடு தாரக்கின் குரலும் கேட்கும்.
 
 
அதிகம் மூவரும் பேசி பழகி சிரித்து மகிழவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஒரு நெருக்கமும் நல்ல புரிதலும் இருப்பது ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதை ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து வைத்தது போல் பேசுவதிலிருந்தே சிந்து புரிந்து கொண்டிருக்கிறாள்.
 
 
எப்போதும் மூடி இருக்கும் அவளின் அறையின் கதவிற்கு வெளியே நடக்கும் எதுவும் சிந்துவுக்குத் தெரியாது. எப்போதாவது கேட்கும் இது போலான குரல்களை வைத்தே தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவளுக்கு உண்டாகும்.
 
 
பெரும்பாலும் தனிமையே அவளின் துணையாக இருக்க.. எவ்வளவு நேரம் தான் ஒரே விஷயத்தைத் தனியே யோசித்துக் குழம்பி தவித்துத் தீர்வே இல்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்க முடியும்..? இது போலான பேச்சுக் குரல்கள் தான் அவ்வப்போது சிந்துவை திசை திருப்பும். அதிலிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முடிகிறதா என முயற்சிப்பாள் சிந்து.
 
 
ஆனால் இன்று அப்படி எந்த ஒரு குரலும் அந்த வீட்டில் கேட்கவே இல்லை. ஏனோ இந்த அமைதி ஒருவித அமானுஷ்யத்தை அவளுக்கு உணர்த்துவது போல் இருந்தது. தவறாக ஏதோ நடக்கப் போகிறது என மனம் அடித்துக் கொண்டே இருக்க.. இந்த அமைதி அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
 
 
ஆனால் அந்த அமைதியை கலைக்கும் முயற்சியை இன்று அங்கிருக்கும் யாரும் எடுக்கவே இல்லை. நீண்ட நெடிய அமைதி அவளுள் ஒருவித பயத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது.
 
 
அந்த அமைதியைக் கலைப்பது போல் வந்து நின்ற காரின் ஓசையில் திடுக்கிட்டு தன் உணர்வு பெற்றவள், விழிகளைத் திருப்பி மூடியிருந்த வாயிற்கதவை பார்த்தாள் சிந்து.
 
 
இது நிச்சயம் தாரக்கின் கார் தான் என அவளுக்குப் புரிந்தது. ஆனால் அது வந்து நின்ற வேகமும் அதை அவன் கொண்டு வந்து நிறுத்திய விதமும் அவளுள் ஒருவித நடுக்கத்தை உருவாக்கி இருந்தது. இத்தனை ஆத்திரத்தோடு முதல் நாள் சிந்துவை இங்கே அழைத்து வந்த போது காரை தாரக் இந்த வீட்டின் உள்ளே நிறுத்தியது தான் அவளுக்கு நினைவு வந்தது.
 
 
அன்றைய நாளின் நினைவுகள் சிந்துவினுள் பயப்பந்தை விதைத்திருக்க.. அடித்து என்ன என்பது போல் மூடியிருந்த அறைக் கதவையே அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் எண்ணத்தைத் துளியும் பொய்யாக்காமல் ஒரு வேக நடையோடு அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான் தாரக்.
 
 
எப்போதும் மிடுக்கோடு இருக்கும் அவனின் தோற்றத்திற்கு நேர் மாறாக இன்றைய அவனின் தோற்றம் இருந்தது. கசங்கி இருந்த உடைகளும், கலைந்திருந்த தலையும், சிவந்திருந்த விழிகளும் முகத்தில் படர்ந்து இருந்த சோகமும் என முற்றிலும் வேறு தோற்றத்தில் வந்து நின்றவனை சிந்து அசையாவது நின்று பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக அவளை நெருங்கியவன், அதே வேகத்தில் அவளைப் படுக்கையில் சரித்திருந்தான் தாரக்.
 
 
இதில் திகைத்து அவனிடமிருந்து விடுபட சிந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் வழக்கம் போல் வீணானது. ஆனாலும் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் சிந்து முரண்டு பிடிக்க.. இது ஏற்கனவே மூர்க்கமாக இருந்த தாரக்கின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
 
 
எப்போதும் தாரக் தன்னிடம் மென்மையாக நடந்து கொண்டது இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த மூர்க்கம், அதன் பின் ஓரளவு குறைந்திருந்ததை அவளும் உணர்ந்தே இருந்தாள். தன் பிடித்தமின்மையை உணர்ந்தும் அதைப் பற்றிக் கவலையில்லாமல் தன்னை நெருங்குபவனிடம் குறைந்திருந்த மூர்க்கம் இன்று மீண்டு இருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.
 
 
அதில் மிரண்டவள், மேலும் தன் முயற்சியைத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்க.. இது ஒரு கட்டத்தில் தாரக்கிற்கு எரிச்சலை கொடுத்தது. “உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதாடி..?” என்று அவள் கழுத்தைப் பிடித்து நெருக்கி இருந்தவன், “உன்னால் என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. இன்னும் எத்தனை முறை இதை உனக்கு நான் சொல்லணும்..?” என்றான்.
 
 
அப்போதும் சிந்து வலியில் கண்ணீர் வழியும் விழிகளோடு அவனைப் பார்த்திருக்க.. “நானா உனக்கு விடுதலை கொடுத்தா தான் உண்டு.. இப்போதைக்கு உனக்கு விடுதலை கொடுக்கும் எண்ணம் எனக்குச் சுத்தமா இல்லை.. புரியுதா..? இல்லைனா நல்லா பதிய வெச்சுக்கோ.. அமைதியா இருந்தா வலியும் வருத்தமும் உனக்குக் குறையும்.. இல்லைனா உன் விருப்பம்..” என்றவன், தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளின் கழுத்தை பிடித்திருந்த கையில் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
இதில் ஒரு கட்டத்தில் தன் கழுத்து எலும்பு உடைந்து விடுமோ என்ற அளவுக்குப் பயந்து போனவள், தன் முயற்சியைக் கை விட்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
அந்தப் பார்வையோ அவளின் விழிகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரோ எதுவும் அவனைப் பாதித்தது போல் தெரியவில்லை. அவன் செயல்களெல்லாம் துளியும் மனித தன்மையை இல்லாதது போல் இருந்தது.
 
 
அவளின் இந்த அமைதியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தாரக், “இதைத் தானே கூடாதுன்னு சொன்னான்.. இப்போ எப்படித் தடுக்கறான்னு நானும் பார்க்கறேன்.. இப்போ என்ன செய்யறான்னு பார்க்கறேன்.. என்னைத் தடுக்க அவன் யார்..? என் வாழ்க்கையை முடிவு செய்ய அவன் யார்..? எல்லாம் அவன் தான் முடிவு செய்வானா..? இது நான் முடிவு செஞ்சது.. இப்போ அவன் என்ன செய்யறான்னு நான் பார்க்கறேன்..” என்று எதையோ விடாமல் சொல்லிக் கொண்டே அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தவனைப் புரியாமல் பார்த்தபடி அவனுள் அடங்க மறுத்து போராடி கலைத்து சோர்ந்து கிடந்தாள் சிந்து.
 
 
அவளின் இந்தத் தோல்வியை மனதார கண்டு ரசித்தவனின் விழிகள், அந்த ஆத்திரத்திலும் லேசாக மின்னியது. இதழில் வழிந்த நக்கல் புன்னகையோடு அவளைப் பார்த்து “இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்..” என்றவன், “ஆனா உனக்கு எதையும் ஒருமுறை சொன்னா புரியாதே.. மறுபடியும் மறுபடியும் சொல்லணும் இல்லை, சொல்லிடுவோம்..” என்றவன்,
 
 
அவளின் செவியின் அருகில் குனிந்து “நீ விலகணும்னு நினைக்க நினைக்கத் தான் உன்னை விடவே கூடாதுன்னு எனக்குத் தோணுது.. ஒருவேளை நீயும் அதுக்காகத் தான் இப்படிச் செய்யறியா..? உனக்கும் இங்கிருந்து போக வேண்டாம் தானே.. அப்போ நான் சொல்லும் எதையும் கேட்காம இப்படியே செய், இது தான் எனக்கும் வசதியா இருக்கும்..” என்றான் தாரக்.
 
 
இதில் அழுகையோடு அவள் அமைதியாக இருக்க.. “அடடே இந்தக் கண்ணீர் என்னைக் கலங்க செய்யுதே..! உன்னை இப்படி என்னால் பார்க்க முடியலையே..! இப்போ நான் என்ன செய்ய..?” எனக் கேலியாகக் கேட்டவன், “இந்த மௌன கண்ணீர் மட்டுமில்லை நீ கதறி அழுதே நடிச்சாலும், வேலைக்கே ஆகாது..” என்றவன் அவளிடம் இருந்து விலகி எழுந்தான்.
 
 
இன்றும் அவளுள் பல கேள்விகள் இருந்தது. ஆனால் எதற்கும் வழக்கம் போல் தாரக்கிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்த பின் கேட்டு தான் என்ன பயன் என எண்ணியவள், அமைதியாக அவனையே விழிகளில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்க.. ‘இந்தப் பார்வையோ விழியில் வழியும் கண்ணீரோ என்னை எதுவும் செய்யாது..’ என்பதைப் போல் அவளைப் பார்த்தான் தாரக்.
 
 
அது புரிந்தும் சிந்து தன் பார்வையை விலக்கி கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “என்கிட்டே எதையோ கேட்கணும்னு நினைக்கற போல.. கேள்..” என்றான் வேண்டுமென்றே தாரக்.
 
 
அப்போதும் சிந்து அமைதியாகவே இருக்க.. “ஹ்ம்ம்.. தெளிவாயிட்டே போலேயே..” என்றான் கிண்டலாகத் தாரக். அதில் மறுப்பாக அவனைப் பார்த்து தலையசைத்த சிந்து, “இப்போவும் நான் கேட்கும் எதுக்கும் உங்ககிட்ட இருந்து எனக்குப் பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சும், கழுத்து வரைக்கும் உங்ககிட்ட கேட்க எனக்குக் கேள்வி இருக்கு..” என்றாள்.
 
 
அதில் இகழ்ச்சியான ஒரு இதழ் வளைவோடு அவளைப் பார்த்தவன், “அப்படி என்ன கேள்வி..? எங்கே கேளேன் பார்ப்போம்..” என்றான் தாரக்.
 
 
“இதெல்லாம் ஏன் எதுக்குன்னு கூட நீங்க எனக்குச் சொல்ல வேண்டாம்.. ஆனா உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்னு மட்டும் சொல்லுங்களேன்..?” என்று தன்னையும் மீறி நேற்று தாரக் பேசி சென்றதில் இருந்து அவளுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியைச் சிந்து கேட்டு விட்டிருந்தாள்.
 
 
“ஹ்ம்ம்.. விதின்னு வெச்சுக்கோயேன்.. உன்னைத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் வந்தது, தெரிஞ்சுக்கிட்டேன்..” என்று விட்டு, அதற்கு மேல் அந்த அறையில் நிற்காமல் வெளியேறி விட்டான் தாரக்.
 
 
இது என்ன பதில் என்பது போல் அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 

தொடரும்...

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 10 & 11
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page