All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 28

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 28

 

" What are you doing here?." என்ற சஜித்தின் அடக்கப்பட்டக் கோவக்குரலில் கேட்டவளுக்கு அச்சமே மேலோங்கி இருந்தது. 

 

அவனின் தனிப்பட்ட கேபினுக்குள் நுழையும் அனுமதி யாருக்கும் கிடையாது. நுழைய யாரும் நினைத்ததும் இல்லை. 

 

இன்று காபி கப்புடன் கதவைத் திறந்து கொண்டு கோகோ உள்ளே செல்ல, "என்னடா இது பலான படச் சூட்டிங் நடக்குற இடம் மாறி ஒரே இருட்டா இருக்கு. இத பாக்கும்போது 'இருட்டு அறையில் ____'ன்னு தலைப்பு போடலாம் போலயே." என முணுமுணுத்தாள்.  

 

ஒவ்வொரு டிவியிலும் வெவ்வேறு மனிதர்கள் காரசாரமான அன்றைய‌ மார்கெட் நிலவரங்களைக் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

"சத்யா, ஏ டீவி பாக்குறதுக்குன்னே தனி ரூம் வச்சிருக்கான். வீட்டுலயும் இந்த மாறிப் புரியாம, கும்பலா உக்காந்து பேசுற சேனல் தான் ஓடும். இங்கையும் இதுவா! ஏன்?. ஆமா என்னதிது." என அங்கிருக்கும் காகிதங்களை எடுத்தாள். அப்போது,

 

சஜித்தின் திடுக் குரலில் பாவம் கையில் இருந்த காகிதங்களைச் சிதற விட்டாள். 

 

அறை இப்போது பளிச்சென மாறி,  அவனின் இருப்பிடத்தைக் காட்டியது‌.

 

"ஸாரி சத்யா. நீ திடீர்னு வந்ததும் பயந்து கீழ போட்டேன். இதோ எடுத்து வச்சிடுறேன்." என்றபடி காபி கோப்பை டேபிளில் வைத்துவிட்டு குனிந்து காகிதங்களை அடுக்கினாள்.

 

அப்படியே எடுத்து மட்டும் வைத்துவிட்டு அசட்டு சிரிப்புடன் சென்றிருந்தால், பின் விளைவுகள்‌ எதுவும் இருந்திருக்காது. 

 

யார்விட்டது அவளை?

காகிதத்தில் இருந்தவற்றை வாசித்தவாரே,

 

"Rule of company acquisition and merger. acquisition-ன்னா கையகப்படுத்துறதுன்னு தான அர்த்தம் சத்யா. நீ எந்தக் கம்பெனிய வாங்கப் போற?. அவ்ளோ பணம் வச்சிருக்கியா? ஆமா யாரு நீ? என்ன வேல பாக்குற? JET industry_யோட பேப்பர்ஸ் உன்னோட டேபில்ல ஏ இருக்கு?" என்றபடி காகிதத்தை மேஜையில் வைத்தாள். 

 

'என்னடா கேள்வி கேட்டிருக்கோம். பதிலையே காணும்.' என யோசித்தபடி அடுக்கிவிட்டு திரும்ப அங்குப் பச்சைக் கண்கள் இடுங்க, அவளை முறைத்தபடி உரசி வந்திருந்தான் சஜித். 

 

கதவின் அருகில் நின்றிருந்தவன் எப்போது தன்னை நெருங்கி வந்தான்.? ஏன் வந்தான்? என்ற யோசனையுடன் வாயில் சுரந்த உமிழ்நீரை கஷ்டப்பட்டு விழுங்கியவள், அவனின் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை உணரத் தொடங்கினாள்.

 

விவரிக்க இயலாத பயம் அவளைத் தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அச்சத்தை வரவைக்கும் செயலைத் தான் சஜித்தும் செய்தான்.

 

அவளின் இருபக்கத் தோளில் கிடந்த துப்பட்டா இப்போது அவனின் பிடிக்குள்‌ இருக்க, அதைக் கயிறு திரிப்பதைப் போல் திருக்கியபடி, 

 

"எங்கிட்ட கொஸ்டீன் கேக்குற உரிம என்னோட க்ளோஸ் ரிலெட்டிவ்ஸ்க்கு மட்டும் தான் இருக்கு. அவங்கள தாண்டி... யாரும் கேள்ளி கேட்டது இல்ல. கேட்டா... நாப்பதில் சொல்ற முறை ரொம்ப... வித்தியாசமா இருக்கும். அன்சர் வேணுமா?." என்றவனின் தோரணை பீதி கொள்ள வைத்தது.  

 

"வேணுமா? வேண்டாமா? வேணும்னா தலைய மேல கீழ ஆட்டனும். வேண்டாம்னா இடது வலதா ஆட்டனும். இதெல்லாம் ரூல்ஸ். தெரியும் தான?" என்றவனுக்கு எங்கிருந்து பதிலைச் சொல்வது. 

 

தலையை மட்டுமல்ல வாயைக் கூட அசைக்க முடியாத படி உறைந்துபோய் அல்வவா நிற்கிறாள். அவளின் துப்பட்டா தூக்கு கயிறுபோல் கழுத்தைச் சுற்றி இருக்கும்போது உறையவில்லை என்றால்தான் ஆச்சர்யம். 

 

அவனின் தோள்பட்டை அளவு மட்டுமே இருந்தவளின் காது மடலை நோக்கிக் குனிந்தவன் அவளை அவளின் எல்லைக்குள் இருக்கும் படி எச்சரிக்கை செய்து விட்டு நிமிர்ந்தான்,  

 

மற்ற யாராக இருந்திருந்தால், அவனைத் தள்ளி விட்டு விட்டுப் பறந்திருப்பர். ஒரு பக்கம் அதீத அச்சம் இருந்தது உண்மை தான். ஆனால் மறுபக்கம் கோகோ போதையில் இருந்தாள்.

 

அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்த பின்னும் அவனின் நேத்திரத்தின் ஈர்ப்பால், சோமபானம் பருகியது போன்ற போதை ஏறத் தொடங்கியது. அது எப்போதும்போல் தன்னிலை இழக்கச் செய்ததென்றால் அவனின் உதடுகள் செவியில் உரசியபோது, க்ளீன் சேவ் செய்து பழக்கமில்லாத அவனின் தாடி மீசை முடிகள், அவளின் மடலில் மடல் எழுதி மயிர் கூச்சத்தை உண்டாக்கியது.

 

மில்லி மீட்டர் இடைவெளியைக் கடைப் பிடித்தவன் அவளின் விழிகளை உற்று நோக்கியபடி துப்பட்டாவை விடுவித்து, "அவுட்..." என்க, இருமல் வந்தது அவளுக்கு. 

 

அதைப் பார்த்தபடி நகராது நின்றவனை, உரசாதவாறு தன்னை உருகிக் கொண்டு வந்தவள், தொண்டையை தடவிக்கொடுத்துக் கொண்டே நடக்க, மேஜையில் இருந்த காபி கப்பைக் கவனிக்கவில்லை. 

 

பாவம் அவனின் லேப்டாப்பிற்கு இப்போது காபி அபிசேகம் நடந்திருந்தது. கோகோ பேந்தப் பேந்த அவனையும் மடிக்கணினையையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஓடியே விட்டாள், திரும்பியும் பார்க்காது. 

 

'அடிப்பாவி அவனோட லேப்டாப்புக்கு ஆப்பு வச்சிட்டு, அவங்கூட அன்னம் தண்ணி பிழங்க மாட்டேன்னு சொன்னியா!' 

 

அதன்‌ பின் வந்த நாட்களில் அவள் சஜித்தை தொந்தரவு செய்யவில்லை. எங்கே லேப்டாப்பிற்கு காசு கேட்டு விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அவனின் நெருக்கமும் ஆழ்ந்த குரலில் வந்த மிரட்டலும், உருவத்தை மாற்றி மந்திரம் செய்யும் மந்திரவாதியாகக் காட்டியது அவனை. 

 

'ஏதோ இருக்கு. அவன நேருக்கு நேரா ஐஸ் டூ ஐஸ் பாக்கும் போதெல்லாம் யாரோ என்ன பிடிச்சி இழுக்குற மாறி இருக்கு. அவங்கூட அவனுக்குள்ள போகச் சொல்லி யாரோ என்னோட காதுல கத்திட்டே இருக்காங்க. இனக்கவரச்சி தான். ஆனா அவன்ட்ட அதுக்கும் மேல எதோ இருக்கு எனக்கு. 

 

ஆனாலும் என்னோட துப்பட்டாவ தூக்கு கயிறா‌ மாத்தினத மறக்கவே முடியாது. அவனே சொன்ன மாறி அளவோட நிறுத்திக்கிவோம். இல்லன்னா நிஜமாவே தூக்கு மேடை ஏத்திடுவான்.' என நினைத்தவள் தன் எல்லைக்குள் நின்ற முயன்றாள். 

 

ஆனால் அது வீண் முயற்சியானது தான் பெரும் சோகம். 

 

மாதம் ஒரு திங்கள் அன்று, கம்பெனியில் தூய்மைப் பணிகள் நடைபெறும் காரணமாக விடுமுறை உண்டு. 

 

அப்போது பங்குச் சந்தை நிறைவடைந்த பின் வீடு வந்து விடுவான். 

 

இன்றும் அப்படி வந்தவனுக்கு மனதில் சஞ்சலம். விழிகள் தானாகக் கோகோவின் வீட்டு பால்கனியை கண்டன. 

 

எப்பொழுதும் அங்குத் தான் அமர்ந்து குறுநகையுடன் தன் இன்ஸ்டா மெஜ்ஏஜ்களுக்கு பதிலளித்துக் கொண்டிருப்பாள். இல்லையேல் இளவேந்தனுடன் பேசிக் கொண்டிருப்பாள். அதுவும் இல்லையென்றால் செடிகளைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பூந்தொட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருப்பாள்.

 

இன்று வெளிச்சம் இல்லாது இருள் மண்டிக் கிடந்தது. இன்னும் காணும் அவளை. அலுவலகம் முடிய நேரம் உள்ளது என்பதால் வருவாளென நினைத்தபடி உள்ளே செல்ல, அங்கு டீவி ஸ்டாண்டில் ஒரு மீன் தொட்டி தெரிந்தது. 

 

அதற்கு உணவிட்டவனுக்கு அது வந்த கதை நினைவு வந்தது. 

 

"சத்யா‌ இத நா சூப்பர் மார்க்கெட்ல பாத்தேன். நல்லா இருக்குல. உனக்குத் தான் வாங்கிட்டு வந்தேன். இந்தா. என்னோட ஞாபகமா வச்சிக்க. நல்லா பாத்துக்கனும் அத. சரியா." எனத் தன்‌ முதல் மாத வருமானத்தில் அவனுக்கென வாங்கி வந்தாள் பரிசாக.

 

ஒரு ஜோடி மீன் அது. கோல்ட் ஃபிஷ். ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து அதன் உலகில் சந்தோஷமாகச் சஞ்சரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

 

'அதுக்கு சாப்பாடு போட்டியா சத்யா.?' எனக் கேட்டு அவனின் வீட்டை எட்டிப் பார்க்காது அவள்‌ சென்றதே இல்லை. 

 

சில தினங்களாக அவளின் மதி முகத்தை அருகாமையில் காணவில்லையே என்ற எண்ணம் எழ, வேகமாக அவனின் ஃபோனை எடுத்தான். 

 

அன்று அவனின் நம்பரை வாங்கியிருந்தாலும் இன்று வரை அவள் கால் செய்தது இல்லை. 

 

'தேவையில்லாம யாரையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.' என்று அவள் இருக்க, இவன் இன்று அதைத் தேடிப்பிடித்தான். 

 

அழைக்கவா? வேண்டாமா! என்ற யோசனையில் எட்டு மணியாகும் வரை அலைபேசியின் திரையைப் பார்த்தபடி இருந்தவன், எட்டைத் தாண்டிச் சென்றதும் அழைப்பு விடுத்தான்.

 

ஒரே ரிங்கில் அது எடுக்கப்பட்டது. ஆனால் பேசவில்லை. 

 

சில நொடிகள் நகர்ந்தன.

 

"கோகிலா...." என்றவன் வார்த்தைகளுக்கு வலிக்காமல் அவளின் பெயரைச் சொல்ல, 

 

"சத்யா!!!…" என்றது அவளின் அழுகுரல். 

 

"என்னாச்சி."

 

"நா.... தொலஞ்சி போய்ட்டேன் சத்யா." என்றாள் அழுதுகொண்டே. 

 

"What!... Come again." 

 

"ஒரு க்ளைண்ட் மீட்டிங் இருந்தது. அத முடிச்சிட்டு டாக்சில வந்தேன். அவன் என்ன எங்கயோ இறக்கி விட்டுட்டு போய்ட்டான்."

 

"இப்ப நீ எங்க இருக்க.?" 

 

"எனக்குத் தெரியல." என்றவளின் அழுகை கூடியது. 

 

"காம் டவுன்... உன்ன சுத்தி என்ன இருக்கு?."

 

"நா ஒரு சப்வே(சுரங்க நடைபாதை)ல இருக்கேன். எம்முன்னாடி இருக்குற பாதை நாலா பிரியுது. எதுல போகன்னு தெரியாம முழிச்சிட்டு ரொம்ப நேரமா நிக்கிறேன். என்ன சுத்தி யாருமே இல்ல சத்யா.

 

பயமா இருக்கு சத்யா. என்னோட ஹன்ட் பேக்க ஒரு பையன் பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஓடிட்டான். அவனத் துரத்திட்டு வந்து இங்க நிக்கிறேன். ஃபோன் கைல இருந்ததால அது மட்டும் தான் எங்கிட்ட இருக்கு. காசு கூட இல்ல. இளா அத்தானுக்கு கூப்பிட்டேன். அவர் எடுக்கவே இல்ல. வேற யாருக்கு கூப்பிடன்னு தெரியல." 

 

'ஏன் என்னை அழைக்கவில்லை' என்ற கேள்வி மனதில் உண்டானது சஜித்திற்கு. ஆனால் அதுவே பதிலையும் சொல்லியது, 'அன்று நீ அவளை எல்லைக்குள் நில் என்றாயே.' என்று.

 

"இங்க யாருக்கும் இங்லிஷ் புரியல. அவங்க பேசுற மராத்தியும் ஹிந்தியும் எனக்குப் புரியல. ஃபோன்ல நெட் வேல செய்யல. மேப் பாக்க முடியால. லொக்கேஷன(location) ட்ராக்(tag) பண்ண முடியல. சார்ஜ்ஜும் தீரப் போது. அப்பவே ரெட் லைட் காட்டுடுச்சி. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல சத்யா!. நான் தொலைஞ்சி போய்ட்டேன்." என்று அழ, 

 

"இப்படியே அழுதிட்டு இருந்தா விடிஞ்சாலும் உன்னால அங்கிருந்து நகர முடியாது. நீ தைரியமான பொண்ணு தானா?." 

 

"ம்..."

 

"அப்படியே நட."

 

"எங்க?"

 

"நாலுல எதாவது ஒரு பாதைல நட. கண்ணுல யாராவது ஒருத்தர் படுவாங்க.” என்றவன் 

 

“அழாத கோகிலா." என்று சொன்ன வார்த்தையில் சிறு தெம்பு வந்தது அவளுக்கு.

 

"ம்..." என்றவள் அவன் ஃபோனில் கூறியதை செய்தாள்.

 

என்றுமில்லாத திருநாளாய் சஜித்தின் பேச்சுக் கட்டுரைபோல் நீண்டு கொண்டே இருக்க, அந்தோ பரிதாபம் அவளின் ஃபோன் ஜீவனற்றுப் போனது. 

மயக்கம் தொடரும்...

 

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம்: 29

https://kavichandranovels.com/community/postid/1171/


   
ReplyQuote

You cannot copy content of this page