சித்திரை – 14
உமா கண் விழித்துப் பார்க்க மறுநாள் ஆகி இருந்தது. தன் முன் கண்ணீரும் தவிப்புமாக நின்ற நிலாவை கண்டவருக்கு ஒரு நொடி ‘இது கனவா..? இல்லை நிஜமா..!’ என புரியவில்லை.
அதேநேரம் “ம்மா..” என்ற நிலாவின் பரிதவிப்பான குரல் அவரின் செவியைத் தீண்ட.. சூழ்நிலை புரிந்து, தன் கரங்களைப் பிடித்துக் கொண்டிருந்த நிலாவின் கையை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார் உமா.
அன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாயும் போது மீண்டும் நிலாவை பார்ப்போம் என்று நம்பிக்கை உமாவுக்குத் துளியும் இல்லை. அதில் இப்போதும் பிழைத்து விட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு வர மறுக்க.. சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவர், அந்த மருத்துவமனை அறையைப் பார்த்தார். அங்கிருந்த வசதியை கண்டு யோசனையாக விழிகளைச் சுருக்கினார் உமா.
“நிலா நாம எங்கே இருக்கோம்..?” என்று மெல்லிய குரலில் உமா கேட்கவும், “ம்மா.. உங்களுக்கு எதுவுமில்லை எல்லாம் சரியாகிடுச்சு..” என வார்த்தைகள் வராமல் தழுதழுத்தாள் நிலா.
“ஆனா நாம..” என்று அப்போதும் அங்கிருந்த வசதிகளைக் கண்டு உமா விழிகளைச் சுருக்க.. “இப்போ இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு..? அமைதியா ரெஸ்ட் எடுங்கம்மா..” என்றாள் நிலா. அதே நேரம் அவருக்கும் மருந்தின் வீரியத்தில் மீண்டும் உறக்கம் கண்களைத் தழுவியது.
அது அவர் தூங்கி விட, சில நொடிகள் அவரையே அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றவள், சற்று தள்ளி இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் நிலா.
அன்று இரவு தனியே உமாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பிய போது திரும்ப அவரை உயிரோடு பார்ப்போம் என்று நம்பிக்கை நிலாவுக்கே இல்லை. அந்த அளவு அருகில் இருந்த மருத்துவமனையில் உமாவின் உடல் நிலையைப் பற்றிச் சொல்லி பயம் காண்பித்து இருந்தனர்.
அது ஓரளவு நிஜமும் கூட. அன்றைய உமாவின் நிலை அப்படித்தான் இருந்தது. வர்மா மட்டும் இதில் தலையிடவில்லை என்றால் இன்று அவளின் நிலை எப்படி இருந்திருக்கும் என நிலாவால் ஒரு நொடி கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை.
அதில் உண்டான சோர்வோடு அப்படியே விழிமூடி அமர்ந்திருந்தவளின் தோளை மெல்ல தொட்டான் பாலு.
அதில் விழிகளைத் திறந்தவள், அவனைக் கேள்வியாகப் பார்க்க.. “இப்படியே எவ்வளவு நேரம் இங்கே உட்கார்ந்து இருக்கப் போறே..? வா சாப்பிட்டு வரலாம்..” என்றான் பாலு.
“இல்லை, நான் வரலை.. எனக்கு எதுவும் வேண்டாம்..” எனச் சோர்வாக நிலா கூறவும், “இப்போவே நீ எவ்வளவு சோர்வா இருக்கேன்னு உனக்குத் தெரியுதா..? சாப்பிடாம இருந்தா அடுத்து பக்கத்து ரூமில் உனக்கும் ஒரு பெட் போடணும்.. நீ நல்லா இருந்தா தான் உங்க அம்மாவை பார்த்துக்க முடியும், நீயும் படுத்துட்டா உங்க இரண்டு பேரையும் யார் பார்த்துப்பாங்க யோசி..” என்றான் பாலு.
அதில் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அவனோடு எழுந்து சென்றவளை, அங்கிருந்து கேண்டினுக்கு அழைத்துச் சென்றவன், இரண்டு இட்லியும் ஒரு காபியும் மட்டும் வாங்கி அவளின் முன் வைத்தான்.
அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தவள், மெதுவாகச் சாப்பிட தொடங்க.. பாலுவும் அவளோடு சேர்ந்து சாப்பிட்டான். சிறு தயக்கத்திற்குப் பிறகு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகி இருக்கும்..?” என்றாள் நிலா.
அதில் அவளைக் கேள்வியாகப் பார்த்தானே தவிர பாலு எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியை கண்டு, “நிறைய ஆகி இருக்கும் இல்லை..?” என்று நிலா தயக்கத்தோடு இழுக்கவும், பாலுவின் தலை ஆமென அசைந்தது.
“அதான் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டா..” என நிலா தொடங்கவும், “தெரிஞ்சுகிட்டா..?” என்று பாலு கேள்வியாக அவள் முகம் பார்த்து நிறுத்த.. “இல்லை, உடனே என்னால் எதுவும் கொடுக்க முடியாது தான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா.. இதை எல்லாம் கொடுத்து நான்..” என்று தயங்கி நிறுத்தினாள் நிலா.
“இங்கே பாரு மூன், இதெல்லாம் நீ சார்கிட்ட பேச வேண்டிய விஷயம், அவர் சொல்றதை செய்யறது தான் என் வேலை.. எவ்வளவு செலவாகி இருக்கு, அதை நீ எப்போ எப்படிச் செட்டில் செய்யப் போறேன்னு எல்லாம் எனக்குத் தெரியாது.. இன்னும் சொல்லப் போனா இப்போ நீ இதைப் பத்தி யோசிக்காம இருக்கறது தான் நல்லது.. எல்லாம் சார் பார்த்துக்குவார் கவலைப்படாதே..” என்றான் பாலு.
“இல்லை பாலு, அதெல்லாம் எனக்குப் புரியுது.. ஆனா அவருக்கு நாம ரொம்பத் தொந்தரவு கொடுக்கக் கூடாது இல்லை..” என்று நிலா தயக்கத்தோடு நிறுத்தவும், “அவர் அப்படி நினைச்சு இருந்தா உனக்கு உதவி செஞ்சு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. நீ நினைக்கும் அளவுக்கு சார் கிடையாது, இது உனக்குக் கொஞ்சம் கொஞ்சமா புரியும்..” என்று விட்டு அமைதியாகி போனான் பாலு.
அதற்கு மேல் நிலாவும் எதுவும் பேசவில்லை. இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்து மேலே வரவும், வர்மாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
அதை உடனே ஏற்றுப் பாலு பேசவும், சில கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தான் வர்மா. “ஓகே சார்..” என்று பவ்யமாகக் கூறிய பாலு, நிலாவிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
வர்மாவின் கட்டளையின் படி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலாவும் உமாவும் தங்கிக் கொள்ளும்படியான ஒரு வீட்டை அடுத்த இரண்டு மணி நேரத்தில் வாடகைக்குப் பேசி முடித்திருந்தான் பாலு.
இரண்டு பெண்கள் தனியே அங்கே தங்க வேண்டும் என்பதால் பாதுகாப்பான பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்கு எடுத்திருந்தான் பாலு.
அந்த வீட்டிற்கான அட்வான்ஸ் தொகையை வர்மா கொடுத்திருக்க.. இதைப் பற்றி வர்மாவிடம் பாலு விளக்க முயன்றான். ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் கேட்டு கொள்ளாத வர்மா, “நீ பார்த்துப் பிக்ஸ் செஞ்சுட்டே இல்லை.. அது போதும், நீ தேன்நிலாவை கூட்டிட்டு போய் அவங்க திங்ஸ் எல்லாம் கொண்டு வந்து இந்த வீட்டில் வெச்சுடுங்க..” என்று பேச்சை முடித்துக் கொண்டான் வர்மா.
பாலுவுக்கும் இப்போது அதைச் செய்வது தான் சரி என்று தோன்றியது. அனைத்தும் சரியான பிறகு, நிலா மட்டும் சென்று பொருட்களை இடம் மாற்றம் செய்ய முயன்றால், அங்கு வேறு விதமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து கொண்ட பாலு, நேராக மருத்துவமனைக்குச் சென்றான்.
அங்கு உமா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து உமாவின் கைகளைப் பிடித்தப்படியே படுக்கையில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.
மெதுவாக இரு முறை அவளை அழைத்துப் பார்த்தவன், நிலா எழுந்து கொள்ளாததில் அவளை நெருங்கி லேசாகத் தோளை தட்ட.. அதில் உறக்கம் கலைந்து கண்விழித்தாள் நிலா. இரண்டு நாட்களாகக் கொஞ்சமும் ஓய்வின்றித் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு உமா குணமாகிவிட்ட நிம்மதியில் நல்ல உறக்கம் வந்திருந்தது.
அதில் சுற்றும் முற்றும் பார்த்தப்படி புரியாமல் சில நொடிகள் விழித்தவள், பின்பு பாலுவை கண்டு அவசரமாக எழுந்து நிற்க.. “மெதுவா, மெதுவா.. என்ன அவசரம்..?” என்றான் பாலு.
“சாரி அப்படியே தூங்கிட்டேன்..” என்று அவள் குற்றஉணர்வோடு சொல்லவும், “தூங்குறதுக்கு எல்லாமா சாரி சொல்லுவே..? உனக்கும் ரெஸ்ட் வேணும்..” என்றவன் “சரி இப்போ நாம உங்க வீட்டுக்கு போய் உங்க திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்..” என்றான் பாலு.
இதைக் கேட்டு திகைத்த நிலா, “என்.. என்னது..?” எனப் புரியாமல் விழிக்கவும், “சார் உனக்கு ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு வீடு பார்க்க சொன்னார், நானும் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.. அந்த வீட்டுக்கு உங்க பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வரணும் இல்லை..” என்றான் பாலு.
“ஐயோ சார் ஏன் எனக்கு மேலே மேலே உதவி செஞ்சுட்டே போறார்..? இதுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்றது..? இந்தப் பணத்தை எல்லாம் நான் எப்படித் திரும்பக் கொடுக்கப் போறேன்..? என்கிட்ட எதுவுமே இல்லை பாலு, திரும்பக் கொடுக்கறதுக்கு நான் இனி உழைச்சு தான் சம்பாதிக்கணும்.. ஆனா கண்டிப்பா கொடுத்துடுவேன்..” என்று கலக்கத்தோடு பேசினாள் நிலா.
“இதெல்லாம் சாருக்கு தெரியாதுன்னு நினைக்கறியா நீ..? உன்கிட்ட அவர் பணம் கேட்டாரா..? இன்றைய உன் நிலைமையும் தேவையும் புரிஞ்சு தான் உனக்கு உதவி செய்ய நினைக்கறார்.. அது புரியலையா உனக்கு..?” என்றான் பாலு.
“அதெல்லாம் புரியுது..” என்று அப்போதும் நிலா தயங்கி நிற்கவும், “சரி நீ என்ன தான் செய்யலாம்னு இருக்கே.. உங்க அம்மா டிஸ்சார்ஜ் ஆனதும் திரும்ப அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைக்கறியா..?” என பாலு கேள்வியாக அவள் முகம் பார்த்து நிறுத்தினான்.
இதற்குச் சட்டென அவளால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இதற்கு முன்பு தயக்கத்தோடு பேசிய வார்த்தைகள் கூட இப்போது அவளுக்கு வரவில்லை. நிச்சயமாகத் திரும்ப அந்த வீட்டிற்குள் அவளால் செல்ல முடியாது என அன்றே நிலாவுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்திருந்தது.
தன் உழைப்பில் வந்த ஊதியத்தையும் பறித்துக் கொண்டு, உடல்நலம் சரியில்லாத உமாவை எப்படியோ போகட்டும் என்று விட்டு வேடிக்கை பார்த்த அரக்கர்களை எண்ணி மனம் அருவருத்துப் போனது. மீண்டும் அவர்கள் முகத்தைப் பார்க்க கூட நிலாவுக்கு விருப்பமில்லை அதில் அவள் அப்படியே நின்றிருக்க.. “உனக்கே புரியுது இல்லை, திரும்ப நீ அங்கே போய் இருக்க முடியாது மூன்..” என்றான் பாலு.
அதற்கு ஆம் என நிலாவின் தலை அசைய.. “அதுக்காகத் தான் சார் இப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சு இருக்கார்.. இதுக்கெல்லாம் நீ எப்படித் திரும்பத் தரணும்னு அவரே உன்கிட்ட சொல்லுவார்.. அப்போ நீ இதைப் பத்தி சார்கிட்ட பேசிக்கோ, இது என் பணம் இல்லை.. நான் இதுக்கு எதுவும் சொல்ல முடியாது..” என்றான் பாலு.
அவன் சொல்வதில் உள்ள உண்மை புரிய.. இதெல்லாம் முடிந்த பிறகு வர்மாவிடம் நேராக இதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் “இப்போ நாம என்ன செய்யணும்..?” என்றாள்.
“என் கூட வா அந்த வீட்டுக்கு போய் உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்..” என்றான் பாலு. “பொருள்னு எங்களுக்கு அங்கே பெருசா எதுவுமில்லை பாலு..” என்று நிலா கூறவும், “அப்போ அங்கிருந்து உனக்கு எதுவும் வேண்டாமா..?” என்றான் பாலு.
அவளின் சான்றிதழ்கள், நிலாவின் தந்தை நடராஜனின் நினைவாக இருக்கும் ஒரே புகைப்படம், இவர்கள் இருவரின் உடைகள் என்று சொற்பமாகக் கொஞ்சம் பொருட்களே அங்கு இவர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
அதை எல்லாம் வேண்டாம் என விட்டு விடவும் நிலாவால் முடியாது என்பதால் “சரி போகலாம், ஆனா அம்மா..? அவங்களை இங்கே நாம தனியா விட்டுட்டு..” என்று நிலா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அறையின் கதவை லேசாகத் தட்டி விட்டு மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் உள்ளே நுழைந்தார்.
“டாக்டர் தர்ஷன் என்னை அனுப்பினார், எனக்கு டியூட்டி முடிஞ்சுருச்சு, நீங்க எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னார்.. நீங்க திரும்ப வர வரைக்கும் நான் இங்கே இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க..” என்றார் உறுதியான குரலில் அந்தப் பெண்மணி.
அவரை யோசனையாகப் பார்த்த நிலாவுக்கும், இதெல்லாம் வர்மாவின் ஏற்பாடு என்று தெளிவாகப் புரிந்தது. அதே நேரம் இவரை நம்பி உமாவை ஒப்படைத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையும் அவரைப் பார்த்தவுடனே நிலாவுக்கு வந்தது. பல வருடங்களாக மருத்துவமனையில் வேலை செய்யும் அனுபவம் அவரின் பேச்சிலேயே தெரிந்தது.
அதில் நம்பிக்கையோடு பாலுவை திரும்பி நிலா பார்க்கவும், அவனுக்கும் அதே எண்ணம் தான் என்பதால் ஒரு தலையசைப்பை மட்டும் அவளுக்குப் பதிலாகக் கொடுத்தவன், அந்தப் பெண்மணியின் பக்கம் திரும்பி “உங்க பேர் என்ன..?” என்றான்.
“கலாவதி..” என்று அவர் கூறவும், “சரிங்க அக்கா, நாங்க வர வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க.. சீக்கிரம் வந்துடறோம்..” என்று விட்டு நிலாவை அழைத்துக் கொண்டு வெளியேறினான் பாலு.
வழியெங்கும் அமைதியாக ஏதோ யோசனையோடே நிலா பயணிக்க.. அவளை இரு முறை திரும்பி பார்த்தவனும் வேறு இதுவும் பேசி அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
நேராக நிலாவின் வீட்டு முன்னே சென்று பாலு காரை நிறுத்தவும், அதில் இருந்து இறங்கியவள் “இங்கே இருக்கறவங்க எப்போ எப்படி நடந்துப்பாங்கன்னு என்னால் மட்டுமில்லை யாராலயுமே சொல்ல முடியாது.. அவங்க உன்னை ஏதாவது பேசிட்டா தப்பா எடுத்துக்காதே, எனக்காகத் தயவு செய்து அமைதியா இரு, என்னை மன்னிச்சுடு இது எல்லாருக்குமே சங்கடமான ஒரு விஷயம் தான்.. ஆனா என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது..” என்று முன் கூட்டியே நிலா பாலுவை தயார்படுத்துவது போல் பேசிக்கொண்டிருந்தாள்.
“அன்னைக்கு இங்கே நடந்ததை ராஜன் சொன்னான்.. இப்போ சமீபமா நடந்ததை நீ சொல்லும் போது கேட்டேன்.. அப்போவே இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்களே இல்லைன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு.. அதனால் இவங்க பேச்சும் செயலும் என்னை எந்த வகையிலும் பாதிக்காது.. இதையெல்லாம் யோசித்துக் குழம்பாம சீக்கிரம் போய் உன் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா..” என்று விட்டு வெளியில் நின்று கொண்டான் பாலு.
நிலாவும் வேகமான ஒரு தலையசைப்போடு வீட்டிற்குள் செல்ல.. அது மாலை நேரம் என்பதால் ராணியும் அவரின் மகள் ஸ்ருதியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ராணியின் பெண் ஸ்ருதி நிலாவை கண்டதும் “வாங்க மகாராணி.. இப்போ தான் இந்தப் பக்கம் வர வழி தெரிஞ்சுதா..? கொஞ்சமாவது வீட்டில் இத்தனை பேர் இருக்காங்களே அவங்க சாப்பிட கஷ்டப்படுவாங்களே நேரத்துக்குப் போய் எல்லாம் செஞ்சு கொடுக்கணுமேன்னு யோசனை இருக்கா..? இல்லை நம்ம வேலையை நாம பார்க்கணுமேன்னு பொறுப்பு தான் இருக்கா..?” என்று தன் வயதுக்கு மீறின தோரணையோடு எரிச்சலோடு நிலாவைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்.
வழக்கமாக இதற்கெல்லாம் நின்று பதில் சொல்லியோ, இல்லை பொறுமையாகப் பதிலின்றி நின்றோ மட்டுமே பழகி இருந்த நிலா, இன்று அவளைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென அவர்கள் தங்கி இருந்த அறையை நோக்கிச் செல்லவும். “திமிரை பார்..” என்றவள் “அம்மா..” என்று சத்தமாக அழைத்தாள்.
இதில் இரண்டு நாட்களாக வெளியில் வாங்கிச் சாப்பிட்டு உடல்நலம் சரியில்லாமல் போயிருந்த ராணி, இரவுக்காவது வீட்டில் சமைக்கச் சொல்லி சேகர் கோபமாகப் பேசி சென்றிருந்த கடுப்பில் சமையல் அறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.
திடீரெனக் கேட்ட மகளின் குரல் அவளுக்கு மேலும் எரிச்சலைக் கூட்ட “என்னடி இப்போ..?” எனச் சிடுசிடுப்போடு கேட்டபடியே சமையலறை வாயிலில் வந்து நின்றார் ராணி.
“அந்தத் திமிர் பிடிச்சவ வந்திருக்கா, நான் எங்கேடி போனேன்னு கேட்டுட்டு இருக்கேன்.. பதிலே சொல்லாம உள்ளே போயிட்டா..” என்றாள் ஸ்ருதி.
“என்ன வந்துட்டாளா..! இரண்டு நாளா வேலை செய்யாம சோம்பேறி கழுதை எங்கே ஊர் சுத்திட்டு இருந்தாளோ..?” என்று முந்தானையை இழுத்து சொருகியப்படியே கிட்டதட்ட நிலாவை அடித்து விடும் வேகத்தில் அந்த அறையை நோக்கிச் சென்றார் ராணி.
அதே நேரம் பெரிதாக இவர்களின் உடமைகள் எதுவுமில்லை என்பதால் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் இரண்டு கட்டைப் பைகளில் வைத்துக் கொண்டபடி அந்த அறையின் வாயிலுக்கு வந்திருந்தாள் நிலா.
அவளையும் பையும் மாறி மாறி பார்த்த ராணி “எங்கேடி போறே..? இது என்ன மடமா உன் இஷ்டத்துக்கு வரதுக்கும் போறதுக்கும்..? வீட்டில் இருந்து நீயும் உங்க அம்மாவும் கிளம்பி போய் இரண்டு நாள் ஆகுது, எங்கே போனே எப்போ வருவேன்னு எதுவும் தெரியாம இப்போ வந்து சமைப்போ அப்போ வந்து வேலையைப் பார்ப்பேன்னு நான் உட்கார்ந்துட்டு இருக்க வேண்டி இருக்கு..
கொஞ்சமாவது பொறுப்பும் நம்ம வேலையை நாம தானே செய்யணும்ன்ற அக்கறையும் இருக்கா உனக்கு..?” என்று ராணி திட்டி தீர்த்துக் கொண்டிருக்க.. ‘இப்போதும் கூட உமா எப்படி இருக்கிறார்..?’ என ஒரு வார்த்தை கேட்க தோன்றாமல், தன் சுயநலத்தை மட்டுமே எண்ணிப் பேசிக் கொண்டிருக்கும் ராணியை நிலா வெற்று பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ஏய் நில்லுடி, நான் பேசிட்டே இருக்கேன் எங்கே போறே நீ..?” என ராணி, அதட்டலாகக் குரல் கொடுக்கவும், நின்று அவரைத் திரும்பி பார்த்த நிலா, “நான் எங்கே போனா உங்களுக்கு என்ன..? எங்கே மேலே உங்களுக்கு அக்கறை ஏதாவது இருக்கா..! இல்லையே அப்புறம் நான் எங்கே போறேன்னு உங்ககிட்ட எதுக்குச் சொல்லணும்..?” என்றாள் நிலா.
“என்னடி வாய் ரொம்ப நீளுது..?” என ராணி கேட்கவும், “அம்மா வெளியே கார் ஒண்ணு நிற்குது..” என்று எடுத்துக் கொடுத்தாள் ஸ்ருதி.
“ஓஹோ அதான் விஷயமா..? கூட ஆள் இருக்கும் தைரியம் தான் இப்படிப் பேசறாளா..? இப்போ எல்லாம் மகாராணி கால் தரையிலேயே படறதில்லை போலேயே..! கார்லேயே போறது என்ன..? கார்லேயே வரது என்ன..? அது தான் கட்டுக் கட்டா பணத்தைக் கொட்டி கொடுக்கறானுங்க..” என்று எகத்தாளமாகப் பேசினார் ராணி.
எத்தனை முறை கேட்டிருந்தாலும் இப்படியான வார்த்தைகள் மனதை வலிக்கச் செய்தது. அதில் நிலாவுக்கும் லேசாக விழிகள் கலங்கி விட.. ஆனால் அதை இவர்கள் முன் காண்பித்து விடக் கூடாது என்ற உறுதியோடு நின்றவள், “நான் இல்லைன்னு சொன்னா மட்டும் நீங்க நம்பிட போறீங்களா..? உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படியே நினைச்சுக்கோங்க..” என்றாள் நிலா.
“அடடா பேச்செல்லாம் பலமா இருக்கே..! இதெல்லாம் யாரு அன்னைக்கு வந்தவன் சொல்லிக் கொடுத்தானா..? இல்லை இன்னைக்கு வந்திருக்கவன் சொல்லிக் கொடுத்தானா..?” என்று வேண்டுமென்ற ராணி ஒரு மாதிரி இழுத்து கேட்டார்.
இதற்கெல்லாம் பதில் சொல்லி மேலும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பாத நிலா, திரும்பி வாயிலை நோக்கி நடக்கத் தொடங்க.. “உன் இஷ்டத்துக்குப் போகவும் வரவும் இது மடமில்லை.. என் பேச்சைக் கேட்காமல் திமிர் எடுத்து இந்த வீட்டு வாசப்படியை தாண்டி ஒரு அடி நீ எடுத்து வெச்சாலும் திரும்ப இந்த வீட்டுக்குள்ளே வர முடியாது..” என்றார் திமிராக ராணி.
அதேநேரம் வாயிலுக்கு நேராக நின்றிருந்த பாலுவும், ஓரளவு உள்ளே நடப்பதை கவனித்திருந்தான். அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் நிலாவை வெளியே வர விடாமல் அவர்கள் நிறுத்தி பேசுவதும் ராணியின் முகபாகமும் ஏதோ சூழ்நிலை சரியில்லை என அவனுக்கு உணர்த்தியது.
அதில் வேகமாக உள்ளே வந்தவன், “எல்லாம் எடுத்தாச்சா..? கிளம்புவோமா..!” என்று அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான் பாலு.
“பாருடா இவளுக்கு மட்டும் புதுசு புதுசா ஒவ்வொருத்தனும் எங்கிருந்து தான் கிடைக்கிறாங்கன்னு தெரியலையே..! இவன் யாருடி புதுசா..?” என்று நக்கலாகக் கேட்டார் ராணி. இதில் பாலு அவரின் பக்கம் திரும்பி முறைக்கவும் அவன் கைகளைப் பற்றித் தடுத்த நிலா “வேண்டாம் பாலு, போகலாம்..” என்றாள்.
“போடி, போ.. அப்படியே போயிடு, இந்தப் பக்கம் வந்துடாதே.. உனக்கும் உங்க அம்மாவுக்கும் இனிமேல் இந்த வீட்டில இடம் கிடையாது..” என்று தன் இறுதி ஆயுதத்தை அவளை நோக்கி வீசினார் ராணி.
அதில் நிதானமாக நின்று ராணியைத் திரும்பிப் பார்த்த நிலா “இனி நீங்களே கூப்பிட்டாலும் நாங்க இங்கே திரும்ப வருவதா இல்லை.. இதையெல்லாம் எடுத்துட்டுப் போகத் தான் வந்தேன்..” என்றாள் நிலா.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்து நின்ற ராணி சட்டெனச் சுதாரித்துக் கொண்டு ‘சம்பளம் இல்லாமல் வீட்டில் இத்தனை வேலைகளைப் பார்க்க இனி யார் கிடைப்பார்கள்..?’ என்ற பதட்டத்தோடு “போறதுனா நீ போ, என் வீட்டில் இருந்து ஒரு பொருளையும் நீ எடுத்துட்டு போக நான் அனுமதிக்க மாட்டேன், அந்தப் பையைக் கொடுடி..” என்று அவளின் வழியை மறிப்பது போல் வந்து நின்றார்
“இது எல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் சொந்தமானது..” என்று நிலா கூறவும், “திருடிட்டுப் போறதும் இல்லாம திமிரா வேற பேசறியா நீ..? இந்த வீட்டில் உங்களுக்குச் சொந்தமா என்னடி இருக்கு..? எல்லாமே என்னோடது..” என்றார் ராணி.
“உங்களைப் போல அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படற ஆள் நான் கிடையாது..” என்று நிலா கூறிய நொடி அவளை அடிக்கக் கை ஓங்கி இருந்தார் ராணி.
ஆனால் சட்டென பாலு அவரின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தான். “இதுக்கு மேலே உங்களுக்கு மரியாதை இல்லை.. இவ்வளவு நேரமும் நிலாவுக்காகத் தான் சும்மா இருந்தேன்.. இனி ஒரு வார்த்தை பேசினாலும் அதுக்குப் பிறகு வயசை எல்லாம் பார்க்க மாட்டேன்..” என்று மிரட்டலாகக் கூறினான் பாலு.
அவன் பேசிய விதமே சொன்னதைச் செய்வான் என்பதை ராணிக்கு உணர்த்தி இருக்க.. இருந்தாலும் தன் வீம்பை கைவிடாது “ஆமா அப்படியே பயந்துட்டேன் போடா..” என எரிச்சலாக அவனைப் பார்த்து கூறியவர், “இவன் பேசறதை எல்லாம் நம்பி இவன் கூடக் கிளம்பி போனா அவன் முடிஞ்ச வரைக்கும் உன்னைப் பயன்படுத்திட்டு தூக்கி வீசிட்டுப் போயிடுவான்.. அப்பறம் நடுதெருவில் பிச்சை தான் எடுக்கணும்..” என்று சாபம் போல் பேசினார் ராணி.
அதற்குக் கோபமாக பாலு ஏதோ பதில் சொல்ல முயல.. அவனின் கையைப் பிடித்துத் தடுத்திருந்த நிலா “பரவாயில்லை.. அப்படியே பிளாட்பார்மில் தங்கினாலும் தங்குவோமே தவிர, இனி இந்த வீட்டுக்குள்ளே வரமாட்டோம்..” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு வெளியேறி இருந்தான்.
இவர்களிடம் எப்படி இத்தனை உறுதியும் திடமும் எங்கிருந்து வந்தது எனப் புரியா அதிர்வோடு ராணி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அங்கிருந்து கிளம்பி இருந்தாள் நிலா.
****
ஒரு வாரத்திற்குப் பிறகு..
உமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்க.. அவருக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி விட்டு, தேவையான உணவையும் மருந்துகளையும் நேரத்துக்கு எடுத்துக் கொள்ள வசதியாகக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு அலுவலகத்திற்கு வந்திருந்தாள் நிலா.
நிலாவுக்கு தேவையான விடுமுறையை எடுத்துக் கொள்ள சொல்லி பாலுவின் மூலம் முன்பே கூறி இருந்தான் வர்மா. ஆனால் இதற்கு மேலும் உதவி கிடைக்கிறது என்று அதை வீணடிக்க கூடாது என்ற எண்ணத்தோடே கிளம்பி வந்திருந்தாள் நிலா.
அன்று ஒரு தொழில் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான் வர்மா. அது சம்பந்தப்பட்ட வேலைகளில் பிஸியாக இருந்தவன், தயக்கத்தோடு தன் அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை விழிகளை உயர்த்திப் பார்த்தான்.
இன்று நிலா அலுவலகத்திற்கு வருவாள் என அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதில் உண்டான ஆச்சரியத்தோடு “இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க..! ஆல் ஓகே..?” என்றான் வர்மா.
“ஆமா சார், அம்மா இப்போ நல்லா இருக்காங்க..” என்று கைகளைப் பிசைந்தபடியே நிலா பேசவும், அவளைப் புரியாமல் பார்த்தான் வர்மா.
“உங்களுக்கு, உங்களுக்கு எப்படி நன்றி..” என்று அவள் மெல்லிய குரலில் தொடங்கவும், “அப்புறம் பேசிக்கலாம், நல்லவேளை நீங்க இன்னைக்கு வந்துட்டீங்க.. அந்த ரத்தன் குரூப்ஸ் டீல் ஞாபகம் இருக்கா..?” என்றான் அவசர குரலில் வர்மா.
“எஸ் சார்..” என்று நிலா கூறவும், “அந்தப் பைலை எடுத்துக்கோங்க.. இப்போ நாம கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு.. உங்களுக்கு அதில் இருக்கும் டீடைல்ஸ் எல்லாம் தெரியும் இல்லை..” என்று அவன் தன் போக்கில் எதிரில் இருந்த கணினியிலேயே கவனமாக இருந்தவாறு கேட்கவும், நிலாவும் சட்டென வேலைக்குத் தாவி, வர்மா கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் பாலுவுக்குச் சில வேலைகளைக் கொடுத்து விட்டு வர்மா நிலாவோடு அங்கிருந்து கிளம்பி இருக்க.. இருவரும் ரத்தன் குரூப்சை நோக்கி சென்றனர்.
அங்கு வர்மாவை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தாள் நேஹா.
தொடரும்...
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா