சித்திரை – 5
திடீரெனக் கதவு மூடிக் கொண்டதில் பதறிப் போய் நிலா கதவை தன் பலம் கொண்ட மட்டும் தட்டியும், சத்தம் போட்டு அழைத்தும் யாரும் வரவில்லை. இருள் வேறு அவளுள் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்க.. நிலாவின் மனம் பயத்தில் மத்தளம் கொட்டியது.
பின்னே யாரோ நிற்பது போலும், தன்னை நோக்கி நடந்து வரும் சத்தம் கேட்பது போலும் அவளுக்கு தோன்ற.. விழிகளை இறுக மூடி, காதையும் சேர்த்து பொத்திக் கொண்டவள் கதவின் முன் மண்டியிட்டு கண்ணீரோடு அமர்ந்து விட்டாள் நிலா.
“யாராவது வெளியே இருக்கீங்களா..? ப்ளீஸ்.. வந்து என்னைக் காப்பத்துங்களேன்..” என அவளின் இதழ்கள் விடாமல் முணுமுணுத்துக் கொண்டே இருக்க.. அவளின் கெட்ட நேரமாக அனைவரும் அலவலகத்தில் இருந்து கிளம்பி விட்டிருந்தனர்.
பல நிமிடங்களாக அவளின் பயமும் தவிப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க.. இருளை கண்டு உண்டான பதட்டத்தில் கை கால் எல்லாம் அவளுக்கு நடுங்க தொடங்கி இருந்தது. இதில் செய்வதறியாது பதறிக் கொண்டிருந்தவள், சட்டென நினைவு வந்தவளாக தன் அலைபேசியை எடுக்க முயன்றாள் நிலா.
யாரையாவது உதவிக்கு அழைக்க வேண்டும் என்பதை விட, அலைபேசியில் உள்ள டார்ச்சை உயிர்பித்து முதலில் இங்கு வெளிச்சம் வர வழைக்க வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு இருந்தது.
ஆனால் நிலாவின் போதாத நேரமோ என்னமோ..? பதட்டத்தில் அவள் அலைபேசியை எடுத்ததில் கை தவறி அருகில் இருந்த அலமாரியின் கீழே அது விழுந்தது.
“ஐயோ..” என்ற பதறியவள், இருளில் குனிந்து அதை எடுக்க நிலா முயல.. அவளால் ஒரு நொடிக் கூடக் கையை இருளில் அப்படி அலமாரிக்கு கீழே விட முடியவில்லை. அங்கு யாரோ நிற்பது போலவும், அவனின் ஷூவை இவளின் விரல்கள் தொட போவது போலவும் நிலாவுக்குத் தோன்றியதில் பட்டெனக் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் நிலா.
இப்போது பயத்திலும் பதட்டத்திலும் அவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது. அதில் கால்களைக் குறுக்கிக் கொண்டு கதவின் மேலேயே சாய்ந்து அமர்ந்தவள், “யாராவது வந்து என்னைக் காப்பாத்துங்களேன், எனக்கு ரொம்பப் பயமா இருக்கு..” என்று இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தாள் நிலா.
அதே நேரம் இவள் உள்ளே வந்ததும் வரிசை பார்த்து அடுக்கிக் கொண்டிருந்த கோப்பு ஒன்று, கதவு மூடியதில் அவசரமாக நிலா சரியாக வைக்காமல் நகர்ந்திருந்ததில் சரிவாக அவ்வளவு நேரமும் நின்றிருந்த கோப்பு, படாரென கீழே விழுந்திருந்தது.
கொஞ்சம் கணம் அதிகமான கோப்பு என்பதோடு அந்த இருளின் அமைதியில் நிலாவுக்குப் பின்னே அது பெரும் சத்தத்தோடு விழுந்திருக்க.. ஏற்கனவே பயத்தில் இருந்த நிலா இந்த அதிர்வில் யாரோ உள்ளே இருப்பதாக எண்ணி பயந்து, இதயம் பலமாக அதிர்ந்து நின்றதில் மூர்ச்சையாகி இருந்தாள்.
********
அதேநேரம் தன் வீட்டிற்குள் நுழைந்தான் வர்மா. வரவேற்பறையில் அமர்ந்து கந்த சஷ்டிக்கவசம் படித்துக் கொண்டிருந்த பாட்டி, கேள்வியாக நிமிர்ந்து பேரனை பார்த்தார்.
அவருக்கு ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தவன், மேலேறி செல்ல.. “சாப்பிட ஏதாவது தயார் செய்யவா மஹி..?” என்றார் வழக்கத்திற்கு மாறாக விரைவாக வீடு திரும்பி இருந்த பேரனை கண்டு பாட்டி. அதில் தன் நடையை நிறுத்தியவன், “நீங்க செய்யறீங்களா பாட்டி..?” என்றான்.
இதில் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி விட்டுப் பேரனை பார்த்தவர், “நான் செய்யணுமா..?” என்றார். “ஹ்ம்ம்.. நீங்க செய்ங்க, உங்க கையால் சாப்பிட்டு ரொம்ப நாளாகுது.. தோசையும் தக்காளி தொக்கும் செய்யறீங்களா..?” என்றான் வர்மா.
“அவ்வளவு தானே செஞ்சுட்டா போச்சு.. நீ குளிச்சுட்டு வா, அதுக்குள்ளே தயாராகிடும்..” என்று புன்னகைத்தார் பாட்டி. பதிலுக்கு லேசான சிரிப்போடு ஒரு தலையசைப்பை கொடுத்தவாறே மேலேறி தன் அறையை நோக்கி சென்றான் வர்மா.
ஆனால் வர்மா சென்ற பிறகும் அந்தத் திசையையே பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி. இப்படி விருப்பப்பட்டதை வர்மா கேட்டெல்லாம் பல காலம் ஆகி இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகான அவனின் இந்தப் பேச்சும் மெல்லிய புன்னகையும் சரோஜாவின் விழிகளைக் கலங்க செய்தது.
மற்றவர்களிடம் காண்பிக்கும் கோபமும் ஆத்திரமும் எப்போதும் இவரிடம் வெளிப்படாது என்றாலும், இறுக்கமான முகமும் உணர்வுகளற்ற குரலுமாகவே இருந்தவனிடம் வெளிப்பட்ட இந்த ஒரு மாற்றம் அவரின் மனதை நிறையச் செய்திருந்தது.
‘இது தான்.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.. எடுத்ததும் எல்லாம் நாம நினைக்கறது போல நடந்துடாது, ஆனா எதுக்குமே தொடக்கம்னு ஒண்ணு இருக்கணும்.. அது இது தான்..’ என்று எண்ணியவர், “ஓம் சரவணபவ..” என்று மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொண்டவர், “நன்றி முருகா..” எனும் போதே நிலாவின் முகம் அவரின் மன கண்ணில் மின்னி மறைந்தது.
‘இதெல்லாம் அந்தப் பொண்ணால் வந்த மாற்றம் தான்.. என்னவோ அன்னைக்கே அவளைப் பார்க்குப் போது எல்லாம் நல்லதா நடக்கும்னு மனசுக்கு தோணுச்சு.. அவளை ஒரு நாள் பார்த்து பேசணும்..’ என நினைத்தப்படியே வர்மா கேட்டதைச் செய்து முடித்தார் பாட்டி.
சரியாக வர்மாவும் கீழே இறங்கி வர, உணவு மேஜையில் அவனை அமர வைத்து முறுகலாக நெய் தோசையைப் பாட்டி சுட்டு கொடுக்க.. எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டாலும் அவன் அதை விரும்பி உண்பது வர்மா அதைச் சாப்பிடும் வேகத்திலேயே தெரிந்தது.
அதில் பாட்டியும் சுட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க.. திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு எழுந்தான் வர்மா. “பால் குடிக்கறியா மஹி..?” என்றார் பாட்டி.
“ஓ நோ.. இப்போவே செம்ம புல்..” என்றவனை வாஞ்சையோடு பார்த்து “சரி இப்போ வேண்டாம் தூங்கறதுக்கு முன்னே குடி..” என்றார் பாட்டி. இந்த நொடி சிறு வயது வர்மாவே அவரின் முன் நிற்பது போல் அவருக்கு தோன்றியது.
அவனும் சரியென்ற தலையசைப்போடு தன் அறைக்குச் சென்றான். இப்படி விரைவாக வர்மா வீடு வந்து எத்தனை வருடங்களாகிறது என நினைத்த பாட்டி, “அந்த நிலா வந்து மஹிக்கு வேலை குறைஞ்சு தான் இருக்கு போல.. இப்படியே எல்லாம் பழைய மாதிரி மாறினா எவ்வளவு நல்லா இருக்கும்..” என்ற வேண்டுதலோடு அமர்ந்தார் பாட்டி.
********
நேரம் எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருக்க.. இப்போது வரை நிலா வீடு வந்து சேராததில் உண்டான கடுப்போடு வாசலையே பார்த்தப்படி அமர்ந்திருந்தார் ராணி.
“ம்மா பசிக்குது..” என்று ஸ்ருதி குரல் கொடுத்தாள். அதில் எரிச்சலானவர், “உனக்கு மட்டுமா பசிக்குது..? எனக்கும் தான் பசிக்குது.. இவ எங்கே போய்த் தொலைஞ்சாளோ தெரியலை.. வேலைக்குப் போனதில் இருந்து அவளுக்குத் திமிர் கூடி தான் போச்சு.. நேத்து ஏழு மணிக்கு வந்தா, இன்னைக்கு இதோ எட்டாவது.. வீட்டில் எல்லாரும் பசியோட இருப்பாங்களே, போய்ச் சமைக்கணுமேன்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.. வரட்டும் இன்னைக்கு அவ..” என்று நிலாவை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார் ராணி.
அறைக்குள் இருந்த உமாவுக்கு இதெல்லாம் கேட்டது. அவரே அரைமணி நேரமாக மகளைக் காணாமல் வழக்கத்திற்கு மாறாக அவள் வர தாமதமாவாதில் உண்டான தவிப்போடு அமர்ந்திருக்க.. அப்படியான எந்த ஒரு கவலையும் இல்லாமல் ராணி எப்போதும் போல் குறைக் கூறிக் கொண்டிருந்தது மனதை வருத்தியது.
ஆனால் தன் வருத்தத்தை வாய் விட்டு யாரிடமும் சொல்ல கூட முடியாமல் தனியே அவர் மகளின் நலனை எண்ணி தவித்துக் கொண்டிருக்க.. நிலாவோ இங்குச் சுயநினைவின்றி விழுந்துக் கிடந்தாள்.
ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருக்க.. வீட்டிற்கு வந்தார் சேகர். “சாப்பிட எடுத்து வை ராணி..” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தவரை எரிச்சலோடு பார்த்து, “என்ன இருக்கு இங்கே எடுத்து வைக்க..?” என்று கத்தினார் ராணி.
அதில் புரியாமல் திரும்பி ராணியை அவர் பார்க்கவும், “இன்னும் அந்த மகாராணி வீட்டுக்கு வரலை.. சாப்பிட எதுவுமில்லை..” என்றார் வெறுப்பான குரலில் ராணி.
“ஏன் இன்னும் வரலை..?” என்று மணியைத் திரும்பி பார்த்தவர் சாப்பாட்டை பற்றி யோசித்த அளவுக்கு கூட நிலாவுக்காக யோசித்ததாகக் கொஞ்சமும் தெரியவில்லை. “ஹாங்.. என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்..?” என்றார் ராணி.
அதற்குள் சேகரின் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்த உமா, “நிலா இன்னும் வரலை சேகர்.. போன் செஞ்சாலும் எடுக்கலை.. கொஞ்சம் என்னன்னு பாரேன்..” எனவும், “அவ என்ன குழந்தையா..? வீட்டுக்கு வந்தா வேலை செய்யணுமேன்னு எங்கேயாவது போய் ஒளிஞ்சுட்டு இருந்திருப்பா, காலையில் சத்தம் போட்டோம் இல்லை.. அதான் எல்லாரும் பசியோட இருப்போம்னு தெரிஞ்சும் நம்மைப் பழி வாங்க பட்டினியா இருக்க வைக்கறா..” என்றார் முந்திக் கொண்டு ராணி.
அதைக் கேட்டு வருத்தமான உமா, “ஏன் இப்படிப் பேசறே ராணி..? நிலா இப்படி எல்லாம் செய்யக் கூடியவளா..?” என்று கூறவும், இதில் ஆத்திரமான சேகர், “ஏன் செய்ய மாட்டாளா என்ன..? அதான் செஞ்சு இருக்காளே..!” என்றார்.
“இத்தனை நாள் ஊமை கொட்டான் போல இருந்தது எல்லாம் நடிப்புன்னு இப்போவாவது உங்களுக்குப் புரியுதா..? வேலைக்குப் போனதும் அவ திமிரை நம்மகிட்டேயே காண்பிக்கறா பாருங்க..” என்றாள் ராணி.
“அப்படியெல்லாம் நிலா செய்ய மாட்டா ராணி.. தப்பா சொல்லாதே.. அவளுக்கு என்ன..” என்று பேசிக் கொண்டிருந்த உமாவை கோபமாக இடைமறித்திருந்த சேகர், “அவ செய்ய கூடியவ தான்..” என்றார்.
“எனக்குப் பசிக்குது.. இப்படியே தான் பேசிட்டு இருக்கப் போறீங்களா..? இல்லை ஏதாவது சாப்பிட கொடுப்பீங்களா..” என்றாள் ஸ்ருதி. “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானா வளரும்னு சொல்லுவாங்க.. ஆனா இங்கே இத்தனை வருஷமா உங்களுக்குத் தண்ட சோறு போட்டு வளர்த்ததுக்கு என் பிள்ளைங்களும் நாங்களும் பட்டினியா தான் இருக்கோம்..” என்றார் வெறுப்பும் கோபமுமாக ராணி.
“ப்பா பசிக்குது..” என ஸ்ருதி கூறவும், “இப்படியே வெட்டியா நின்னு பேசாம போய் எதையாவது செய்.. எல்லாருக்கும் இங்கே பசிக்குது..” என உமாவை பார்த்து சிடுசிடுத்தார் சேகர்.
சரியாக நிற்கவே முடியாமல் சுவரை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் உமாவை பார்த்து கொஞ்சமும் இரக்கமில்லாமல் சேகர் இப்படிக் கூறவும், இவர்களிடம் இனி பேசியும் எந்தப் பயனுமில்லை எனப் பல வருட அனுபவத்தில் புரிந்து வைத்திருந்த உமா அமைதியாகச் சமையலறைக்குள் சென்றார்.
அங்கிருந்த சுவரில் சாய்ந்தவாறே ப்ரிட்ஜில் இருந்து மாவை எடுத்து இட்லி ஊற்றியவர், காலையில் நிலா வைத்திருந்த குருமாவையும் சூடு செய்து விட்டு, கொஞ்சமாகத் தேங்காய் சட்னியும் தன் வலியையும் பொருட்படுத்தாமல் செய்து வைத்தார்.
நின்ற இடத்திலேயே இதையெல்லாம் எப்படியோ சமாளித்துச் செய்ய முடிந்தவரால் அதை உணவு மேஜைக்கு எடுத்து வந்து வைக்க முடியவில்லை. அதில் தட்டில் வைத்து அங்கேயே பரிமாறியவர், “சேகர் வந்து சாப்பிடு..” என அழைக்கவும், ராணி வேகமாக வந்து மூன்று தட்டில் இருந்ததை எடுத்து சென்றார்.
ஆனால் அதைக் கண்டு முகம் சுழித்த ஸ்ருதி, “ஐயையே அதே குருமாவா..? எனக்கு வேண்டாம்..” என்றாள். “வேண்டாம்னா என்ன செய்ய.. பட்டினியா தான் தூங்கணும்..” என ராணி சிடுசிடுக்கவும், “ப்பா..” என்றாள் சிணுங்கலாக ஸ்ருதி.
“இப்போ இதைச் சாப்பிட்டுகோம்மா.. நாளைக்கு உனக்குப் பிடிச்சதை செஞ்சுக்கலாம்..” என சேகர் சொல்லவும், “எப்படிச் செய்ய முடியும் ப்பா..? அவ தான் வீட்டில் எதுவுமில்லைன்னு காலையிலேயே சொன்னாளே..! வீட்டுக்கு வரும் போது வாங்கிட்டு வரேன்னு தானே சமாளிச்சா.. ஆனா இப்போ வேணும்னே லேட்டா வரா.. இதுக்கு என்ன அர்த்தம்..? நாளைக்கும் எனக்கு பிடிச்சதை செய்ய மாட்டான்னு அர்த்தம்..” என்று அழுதாள் ஸ்ருதி.
“நீ அழாதே கண்ணு.. அவ இன்னைக்கு வரட்டும்.. நான் பார்த்துக்கறேன்..” என சேகர் பேசிக் கொண்டிருக்க.. வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தார் உமா.
சேகர் சாப்பிட்டு முடித்த பிறகாவது நிலாவை சென்று பார்க்குமாறு கூற எண்ணி இருந்தவருக்கு, இப்போதிருக்கும் நிலையில் ராணி நிச்சயமாக அதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனத் தெளிவாகப் புரிந்தது.
அதில் மெதுவாக அறைக்குள் சென்றவர் மீண்டும் மகளுக்கு அழைக்க முயன்று தோற்றார். அவள் வைத்திருந்ததோ பழைய மாடல் ஃபோன். அதுவும் கல்லூரி முதலாம் ஆண்டுப் படிக்கும் போது அங்கு நடந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டு அவள் ஜெயித்ததற்காகக் கிடைத்த பரிசு பணத்தில் வாங்கி இருந்தாள் நிலா.
அதுவரை அவளிடம் ஃபோன் கிடையாது. தன்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் வைத்திருக்கும் லேட்டஸ்ட் மாடல் ஃபோன் போல் வேண்டுமென எல்லாம் அவளுக்கு ஆசையில்லை. ஆனால் அவசரத்திற்கு எதையாவது கேட்கவும் பேசவும், பாட சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் நிலாவுக்கு ஒரு அலைபேசி தேவைப்பட்டது.
இதுவரை அருகில் இருந்த அரசு பள்ளியில் படித்ததால் பெரிதாக அவளுக்கு அலைபேசி தேவைப்படவில்லை. உமாவிடம் ஒரு பழைய பட்டன் போன் உண்டு. அதுவும் சேகர் குடும்பமாக வெளியே சென்றிருக்கும் நேரங்களில் அங்கிருந்த வேலை சொல்ல உமாவுக்கு வாங்கி கொடுத்தது தான்.
அதில் இப்போது கிடைத்திருக்கும் மூவாயிரம் ரூபாயை வீட்டிற்கு எடுத்து சென்றால் அடுத்த நிமிடமே அதுவும் காணாமல் போகுமெனப் புரிய.. தன் தோழியை அருகில் இருக்கும் கடைக்கு அழைத்துச் சென்று சைனா மாடல் அலைபேசியை வாங்கி விட்டிருந்தாள் நிலா.
மிக சாதாரணமானத் தொடு திரையோடு கூடிய ஒரு அலைபேசியை வாங்கிக் கொண்டு வந்தவள், கல்லூரியில் பரிசாகக் கிடைத்தது எனச் சொல்லி விட்டாள். வாய் தவறியும் பரிசாக பணம் கிடைத்ததாக நிலா யாரிடமும் சொல்லவில்லை.
ஏனெனில் அந்த பணத்தை கொண்டு வந்து தன்னிடம் தரவில்லை என ராணி அடுத்த ஜென்மம் வரை திட்டிக் கொண்டிருப்பார் என நிலாவுக்கு தெரியும்.
இந்த நான்கு ஆண்டுகளில் அது பலமுறை கீழே விழுந்து சமையலறையில் தண்ணீர் பட்டு எண்ணெய் தெளித்து என உருமாறி இருக்க.. இப்போது அதில் பேசவோ தகவல் பரிமாறிக் கொள்ளவோ இப்போது அவளுக்கென யாருமில்லை என்பதால் அதையே துடைத்து துடைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள் நிலா.
ஆனால் இங்கு வேலைக்கு வந்த பின் அதைத் தட்டி தட்டி அவ்வபோது உயிர்பிக்க அவள் போராடுவதையும், அவசரத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் கூட முடியாமல், பல நேரங்களில் அந்தப் பக்கம் பேசுவது கேட்காமல் நிலா மீண்டும் மீண்டும் கேட்பதையும், அதனால் இவர்கள் காத்திருக்க வேண்டி வருவதையும் கண்டு கடுப்பான வர்மா அலுவலகம் சார்பில் அவளுக்கு ஒரு அலைபேசியை வாங்கிக் கொடுக்கச் சொல்லி இருந்தான்.
முதன்முதலில் பாலு அதை அவளிடம் கொடுக்கும் போது, லேட்டஸ்ட் மாடல் 5ஜி சாம்சங் ஃபோனை வாயை பிளந்தவாறு பார்த்தவள், ஏதோ பொக்கிஷத்தை தொடுவது போல அதை தடவி பார்த்துக் கொண்டிருந்தாள். அதிலும் பாலு சொல்லிய அதன் விலையைக் கேட்டவளுக்குத் தலையே சுற்றியது.
அதில் “ஏன் பாலு வேலையை விட்டு போகும் போது இதைக் திருப்பி கொடுத்துடணுமா..?” என்று அலைபேசியிலேயே கவனமாக இருந்தப்படி கேட்டவளை செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி திரும்பி பார்த்தவன், “ஏன் நீ வேலையை விடப் போறியா..?” என்றான்.
“ச்சேச்சே.. சும்மா தான் கேட்டேன்..” என உடனே அவள் சரணடைய.. “போய் வேலையைப் பாரு.. சார் உன்னால் செம்ம காண்டில் இருக்கார், முடிஞ்சா அதைக் குறைக்கப் பார்.. அதிகமாக்கின உனக்குச் சங்கு தான்..” என்று அனுப்பி வைத்தான் பாலு.
வர்மாவுக்கு அறைக்குள் சத்தமே இருக்கக் கூடாது, நிலாவோ புது அலைபேசி கிடைத்த சந்தோஷத்தில், இதுவரை செய்ய முடியாதை எல்லாம் முயன்று பார்த்து கொண்டிருந்தாள். அதில் அவளின் ரிங்க்டோனாக வேறு,
அறியாமல் நானிருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை
தூறுமடா..!!
என்று சத்தமாகப் பாடி அவனை அவ்வபோது வெறுப்பேற்றிக் கொண்டிருக்க.. “அதைச் சைலண்ட்டில் போடறியா இல்லை ஃபோனை இங்கே இருந்து கீழே நான் போடட்டுமா..?” என இரண்டு நாட்களுக்கு முன் வர்மா கத்தி இருந்ததில் “ஆத்தி என் ஃபோன்னு..!” எனப் பயந்து போனவள், தானாக அலுவலகத்திற்குள் சென்றதும் அதைச் சைலண்ட்டில் போட பழகி இருந்தாள்.
இப்போதும் அதனால் அலமாரிக்கு அடியில் இருந்த அலைபேசி விட்டு விட்டு ஒளிர்ந்து தன் இருப்பை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்க.. அதை அறியா நிலையில் அங்கே விழுந்து கிடந்தாள் நிலா.
அதேநேரம், எதற்கும் அவசரத்திற்கு உதவுமென நிலாவிடம் கேட்டு பாலுவின் எண்ணை வாங்கி வைத்திருந்த உமா, சிறு தயக்கத்திற்குப் பின் அவனுக்கு அழைத்தார்.
இரவு பத்து மணிக்கு மேலாகி இருக்க, புதிய எண்ணாக இருக்கவும் முதலில் தவிர்த்தவன், திரும்ப அதே எண்ணில் இருந்து அழைப்பு வரவும், அதை ஏற்று இருந்தான்.
“ஹலோ..” எனப் பெரும் தயக்கத்தோடு ஒலித்த வயதான குரலில் “ஹலோ சொல்லுங்க..” என்றான் பாலு. “இ.. இது.. பா.. பாலு.. தம்பிங்களா..?” என்று கேட்பதற்குள் அவர் தடுமாறிக் கொண்டிருக்க.. “ஆமாம்மா.. நீங்க யாரு..” என்றான் பாலு.
வெளியாட்களிடம் அதிகம் பேசி பழக்கமில்லாததால் தடுமாறியவர், பாலுவின் இந்த அம்மா என்ற அழைப்பில் உடைந்து அழ தொடங்கினார் உமா.
அதில் பதறியவன், “ஹலோ.. அம்மா அழறீங்களா..? என்னாச்சு..? யார் நீங்க..?” என்று அடுக்கடுக்காக அவன் கேட்டுக் கொண்டே செல்ல.. “நா.. நான் நிலா.. தேன்நிலா அம்மா..” எனத் தொடங்கி அவர் அனைத்தையும் அழுகையோடு சொல்லி முடிக்கவும், திகைத்து போய் நேரத்தை பார்த்தான் பாலு.
அது பத்தரையை நெருங்கி கொண்டிருக்க.. “என்ன இன்னும் வரலையா..?” என்றவனின் குரலில் உமாவுக்கு மேலும் பயமாகிப் போனது. “அப்போ நிலா ஆபீஸில் இல்லைங்களா தம்பி..?” என்று பதறியவரை “அப்படியில்லைம்மா.. நான் தான் ஆபீஸில் இல்லை, ஊருக்கு போயிட்டு இருக்கேன், அதனால் தெரியலை.. இருங்க நான் பார்த்து சொல்றேன்..” எனச் சமாதானம் செய்து அழைப்பை துண்டித்தவனுக்கும் லேசாகப் பதட்டமானது.
வர்மா கொடுத்த வேலையை முடித்துக் கொண்டு பாலு நாளை நடக்க இருக்கும் தன் நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளத் திண்டுக்கல் சென்று கொண்டிருந்தான். அதில் யோசனையோடே ஆபிஸ் காவலாளிக்கு அழைத்து அவன் விவரம் கேட்க.. அவரோ அலுவலகத்தில் யாருமே இல்லை என்றார்.
இதை ஒரளவு பாலுவும் எதிர்பார்த்தே இருந்தான். இவ்வளவு நேரம் யாரையும் வர்மா அலுவலகத்தில் இருக்க அனுமதிப்பது இல்லை. ஏதாவது முக்கிய வேலையாக இருந்தாலும் வர்மா இருந்து இரவெல்லாம் வேலை செய்வானே தவிர, ஊழியர்களைச் சிரமபடுத்த மாட்டான்.
அதில் கவலையானவன், உமா சொல்லி இருந்த போதும் எதற்கும் இப்போது எடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் நிலாவுக்குத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது யாரும் ஏற்கபடாமலே போகவும், நிஜமாகவே அவனுக்குப் பயமானது.
உடனே காவலாளிக்கு மீண்டும் அழைத்தவன், நிலா அலுவலகத்தில் இருந்து எப்போது வெளியே போனாள் என சிசிடிவியில் பார்த்துச் சொல்லுமாறு சொல்ல.. எத்தனை தேடியும் அவள் உள்ளே வந்த காட்சி மட்டுமே இருக்க.. வெளியே போனது பதிவாகவே இல்லை.
இதைக் கண்டு பதட்டமான காவலாளி பாலுவை அழைத்து விவரம் சொல்லி விட்டு உள்ளே சென்று தேடினான். அதற்குள் நேரத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் திட்டினாலும் பரவாயில்லை என வர்மாவுக்கு அழைத்து விட்டிருந்தான் பாலு.
பதினொரு மணியளவில் பாலுவிடமிருந்து அழைப்பு என்றதும் யோசனையாக அதை ஏற்றிருந்தான் வர்மா. “சார்.. நிலா.. நிலா எங்கே..?” என்று பாலு பதட்டத்தில் உளறவும், “வானத்தில் இருக்கா பாரு..” என்றான் எரிச்சலோடு வர்மா.
“ஐயோ சார்.. அதில்லை, நம்ம ஆபீஸில் இருக்க தேன்நிலா மிஸ்ஸிங்..” எனத் தொடடங்கிச் சுருக்கமாக அனைத்தையும் பாலு சொல்லி முடிக்கவும், “வாட்..?” என்று எழுந்து அமர்ந்தான் வர்மா.
“ஆமா சார்.. வாட்ச்மேன் உள்ளே பார்க்க போயிருக்கார்..” என்று பாலு சொல்லவும், காவலாளி பாலுவை அழைக்கவும் சரியாக இருந்தது. “வாட்ச்மேன் கூப்பிடறார் சார்..” என்ற பாலுவை “கான்பிரன்ஸில் போடு..” என்றான் வர்மா.
பாலுவும் அப்படியே செய்ய.. “பாலு சார் ஆபீஸில் முழக்க தேடிட்டேன்.. யாருமே இல்லை..” என்றான் காவலாளி. “புட்டேஜ் நல்லா செக் செஞ்சியா.. அவ வெளியே போகலைன்னு தெரியுமா..?” என்று வர்மாவின் குரல் அழுத்தத்தோடு இடையிடவும், இதை எதிர்பாராமல் பதறி போனாலும், “ஆ.. ஆ.. ஆமா.. சா.. சார்..” என்று தந்தியடிக்கும் குரலில் சொல்லி இருந்தான் காவலாளி.
“சரி கட் செய்..” என்று கட்டளையிட்டவன், மீண்டும் பாலுவுக்கு அழைத்து “தேன்நிலா வழக்கமான நேரத்துக்குக் கிளம்பியாச்சு பாலு.. அப்பறம் எப்படி வெளியே போகாம இருக்க முடியும்..? புட்டேஜில் க்ளிட்ச் எதுவும் இருக்கான்னு பார்க்கணும்.. அதை செக் செஞ்சுடு..” என்றான் வர்மா.
“சார் நானா..? நான் திண்டுக்கல் போயிட்டு இருக்கேன்..” என பாலு தயக்கமாக இழுக்கவும், “ஓ எஸ்..” என நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு இப்போதே அது நினைவுக்கு வந்தது.
அப்படி யோசனையோடு நெற்றியை நீவும் போதே நிலாவுக்கு அவன் இறுதியாகச் சொன்ன வேலை நினைவுக்கு வந்தது. உடனே அதை பாலுவிடம் பகிர்ந்தவன், “வாட்ச்மேன்கிட்ட ஸ்டோர் ரூமில் போய்ப் பார்க்க சொல்லு..” என்றவாறே எழுந்து வெளியில் வந்தான்.
பாலுவும் உடனே அதைச் செய்ய.. காவலாளி மூன்றாம் தளம் நோக்கி விரைந்தார். அதே நேரம் வர்மாவும் தன் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.
அந்த அறை முன் சென்று நின்ற காவலாளிக்குக் கதவில் தொங்கிக் கொண்டிருந்த சாவியைக் கண்டதுமே நிலா உள்ளே இருக்க வாய்ப்புகள் அதிகமெனத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அதைத் திறக்க தான் அவருக்குத் தெரியவில்லை.
தனிப்பட்ட பேட்டர்ன் லாக் முறையில் வடிவமைக்கபட்டிருந்த அந்தக் கதவின் பூட்டை சாவியே இருந்தாலும் அத்தனை எளிதாகத் திறக்க முடியாது. அதற்கெனச் சில முறைகள் உண்டு. நிலாவுக்கே அதை பாலு சொல்லிக் கொடுத்து இருந்ததால் மட்டுமே தெரியும்.
அதில் அவர் கதவை திறக்க போராடிக் கொண்டிருக்க.. வர்மா அழைத்து விட்டிருந்தான். அவர் தன் முயற்சியைக் கூறவும், பொறுமையற்று ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், அழைப்பை துண்டித்துவிட்டு காரை புயல் வேகத்தில் செலுத்தினான்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தவன், மூன்றாம் தளம் வந்து சேரவும், அதுவரையும் கதவோடு போராடிக் கொண்டிருந்த காவலாளி பயத்தோடு வர்மாவை பார்த்து விலகி நின்றான். ஆனால் அவனைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் கதவை திறந்து கொண்டு வர்மா உள்ளே நுழையவும், கதவை முழுதாகத் திறக்க கூட முடியா வகையில் கதவருகிலேயே விழுந்து கிடந்தாள் நிலா.
ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாமல் இப்படி சிக்கலாக்கி வைத்திருக்கும் அவள் மேலான ஆத்திரத்தோடு அங்கே வந்தவன், நிலா இருந்த நிலையை கண்டு பதறி உள்ளே நுழைந்தான்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா