All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அன்பு - 19 📜

 

VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

அன்பு – 19 💖

சந்தனா மனோவிடம் செய்த சத்தியத்தை மனதில் உருப்போட்டவாறு நாட்களை கடத்த, மனோ அவளிடம் கொடுத்த வாக்கை காப்பாத்துதற்காக தினமும் அவளுடன் அமர்ந்து படித்தான். காலையில் கூட விளையாட செல்லவில்லை. நன்றாய் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால்தான் சந்தனாவைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எண்ணமே அவனது படிப்பிற்கு ஒரு உந்துதலைக் கொடுத்தது. அதைவிட குட்டியிடம் அவன் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.

மனோ, சந்தனா போன்று சத்தியத்திற்கு எல்லாம் அத்தனை மதிப்புக் கொடுப்பவனில்லை. ஆனாலும் அவனது குட்டியின் விஷயத்தில் எல்லாமே தலைகீழ்தான். அவளை எள் அளவும் ஏமாற்றக் கூடாதென அன்றைக்குப் பிறகு எப்போதும் அவன் திருமணம், காதல் என்ற வார்த்தைகளைப் பற்றி பேசவில்லை. பேச்சு படிப்பு சம்பந்தமாகத்தான் இருந்தது.

முன்பு போல அவளிடம் எந்த வேலையும் மனோ கொடுக்கவில்லை. இவனே முடிந்தளவிற்கு தன்னுடைய வேலையை செய்தான். சந்தனாவை இன்னுமே அக்கறையாய், அன்பாய்ப் பார்த்துக் கொண்டான். நேசம் காதல் என்ற வார்த்தையைத் தாண்டி குட்டி அவனுடையவள். சாகும்வரை அவள் தன்னுடன்தான் இருக்கப் போகிறாள். அவளை யாரும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாத என்றொரு எண்ணமும் அவள் மீதான அன்பை பிரவாகமாகப் பொங்கச் செய்தது.

தேர்வு நாளும் வந்தது. மனோ சந்தனாவிற்கு புதிய எழுதுகோல் வாங்கிக் கொடுக்க, அவள் மறுத்துவிட்டாள். அவனுக்கு வருத்தம்தான். இருந்தும் அவள் நன்றாய் தேர்வை எழுதினால் போதுமென்று நினைத்துக் கட்டாயப்படுத்தவில்லை.

சந்தனாவிற்கு முதலில் தேர்வுகள் முடிந்துவிட, மனோவிற்கு இன்னும் ஒரு பரிட்சை மட்டும் இருந்தது. இவள் அமர்ந்து அவனுக்கு உதவி செய்தாள். அவன் மிக மிக நன்றாக உற்சாகமாக தேர்வுகளை முடித்துவிட்டான்.

மகன் படிப்பில் திடீரென இத்தனை ஆர்வம் காண்பிக்கவும் வாழ்க்கையைப் பற்றிய கவலை அவனை மாற்றியிருக்கிறது எனப் பெற்றவர்கள் பூரித்துப் போயினர். அவன் நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவான் என்று பெற்ற உள்ளம் உவகை கொண்டது.

தேர்வு முடிந்து விடுமுறை வந்துவிட, சந்தனாவின் வகுப்பாசிரியர் நாட்களை வீணாக்காமல் கணினி வகுப்பிற்கு செல்லுமாறு பரிந்துரை செய்தார். அவள் வகுப்பில் ஒரு சில மாணவ, மாணவிகள் கணினி கற்கும் வகுப்பில் சேர, இவளுக்கும் ஆசையாய் இருந்தது‌. பூரணியிடம் கேட்க நினைத்தாலும், அவரிடம் பணமிருக்காது என எண்ணித் தயங்கியபடி கேட்கவில்லை.

சந்தனாவின் ஆசிரியர் ஒருவர், “சந்தனா, நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் ஜாய்ன் பண்ணலையா?” என அழைத்துக் கேட்க, இவள் பதிலேதும் உரைக்காது அமைதியாய் நின்றாள்‌.

“ஏன்னாச்சு சந்தனா, மணிதான் இஷ்ஷூவா?” என அவர் சரியாய்க் கேட்க, இவள் மெதுவாகத் தலையை அசைத்தாள்.

“பணப்பிரச்சனை எதுவும்னா என்கிட்டே சொல்ல சொல்லியிருக்கேன் இல்ல. ஹம்ம், நான் பீஸ் கட்றேன். நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் ஜாய்ன் பண்ணு!” என்று அவர் கூற, இவள் மறுத்தாள். அவர் கொஞ்சம் அழுத்தியுரைக்க, சரியென்றுவிட்டாள்‌.

பூரணியும் சம்மதம் தெரிவித்துவிட, இவள் கணினி வகுப்பில் சேர்ந்த மறுநாளே மனோவும் அதே வகுப்பில் சேர்ந்துவிட்டான். அவள் காலையில் வீட்டிலிருந்து அங்கே செல்ல, மனோவும் வந்துவிடுவான். வகுப்பு முடிந்து இருவரும் இங்கே வந்துவிடுவார்கள்.

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவர்களது பிணைப்பு அதிஇறுக்கத்துடன் பிரிக்க முடியாததாக மாறிப் போயிற்று. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தான் எப்போதும் முதலில் வெளிவரும்.

ஓரீரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என செய்தியில் அறிவிப்பு வந்துவிட, சந்தனா பதற்றத்துடன் சுற்றினாள். மனோ அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனுக்கு எந்தவித சந்தேகமும் இல்ல. அவனுடைய குட்டி நல்ல மதிப்பெண் பெறுவாள் என சர்வ நிச்சயமாய் நம்பினான். அதனாலே மதிப்பெண் பற்றிய கவலை அற்றுப் போனது.

“எல்லாம் டீச்சர்ஸூம் நான் நல்ல மார்க் எடுப்பேன்னு ரொம்ப நம்பிக்கையா இருக்காங்க மனோ. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா. மார்க் கம்மியா வந்துட்டா, நான் படிக்காதப் பொண்ணுன்னு நினைச்சுடுவாங்க இல்ல?” சந்தனா பயத்துடன் வினவ, மனோ பதிலளிக்காது அமர்ந்திருந்தான்.

“மனோ... உன்கிட்டதான் டா கேட்குறேன் நான்!” இவள் முறைக்க, “ஏன் குட்டி, நான் டென்த்ல கம்மி மார்க்தான் எடுத்தேன். சோ, நீ என்னை மக்குப் பையன்னு நினைச்சுட்டீயா என்ன?” எனக் கேட்டான்.

அவன் கேள்வியில் தலையை நொடியில் இடம்வலமாக அசைத்தவள், “மனோ... அப்படிலாம் நினைக்கலை டா. நீ படிக்கிற பையன்தான்...” என்றாள் அவசரமாய்.

“ஹம்ம்... அப்போ மார்க் கம்மியா எடுத்தாலும் படிக்கிற பசங்கதான்னு ஒத்துக்குற. அப்போ நீ மார்க் குறைச்சு எடுத்தாலும் மிஸ் எதுவும் நினைச்சுக்க மாட்டாங்கடி. எதையும் போட்டு குழப்பிக்காத. நாளைக்கு வர்றதை நாளைக்குப் பார்த்துக்கலாம்...” என்றான் அவளின் கையை அழுத்தி. சந்தனாவின் உடல் தளர்ந்தது. பதற்றம் வடிந்து போக, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“குட்டி... உனக்கொரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் தெரியுமா?” மனோ கூற, இவள் ஆர்வமானாள்.

“என்ன மனோ, என்ன சர்ப்ரைஸ்?” சந்தனா மற்றவற்றை மறந்திருந்தாள்.

“ஹம்ம்... கண்ணை மூடி பிஃப்டி வரை கவுண்ட் பண்ணுடி. நான் சர்ப்ரைஸை எடுத்துட்டு வரேன்!”

“ஹே மனோ... மேஜிக் பண்ணி ரோஸ் வர வைக்கப் போறீயா?” சந்தனா துள்ளியபடி கேட்டாள். மனோவுக்கு சிரிப்பு வந்தது. அவன் சிறுவயதில் கூறிய பொய்யை இந்தப் பெண் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறாளே என எண்ணி புன்னகைத்தான். ஆனால் அவனறியாதது மனோ கூறிய அனைத்தையும் சந்தனா கண்ணை மூடி ஏற்றுக் கொள்வாள் என்று.

“ப்ம்ச்... அதெல்லாம் இல்ல குட்டி. நீ கண்ணை மூடுவியா? மட்டீயா?” அவன் மென்மையாய் அதட்ட, “ஹம்ம்... சரி சரிடா. கோபப்படாத!” என்றவள் கண்ணை மூடி எண்ணத் துவங்க, மனோ தன் கால்சராயில் வைத்திருந்த வெள்ளி கழுத்தணியை எடுத்து அவளது கழுத்தில் அணிந்தான்.

அவன் கூறியதை அட்சர சுத்தமாக பின்பற்றி ஐம்பது வரை எண்ணிக் கொண்டிருக்கும் சந்தனாவை மனோ அன்பாய் பார்த்திருந்தான். ஏனோ குட்டியை அவனுக்கு எவ்வளவுப் பிடிக்குமென வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. அத்தனையாய் அவள் மீது அன்பும் அள்ள அள்ள குறையாத பாசமும் நேசமும் வைத்திருந்தான்.

ஐம்பது எண்ணி முடித்தவள் கண்ணைத் திறக்க, மனோ நின்றிருந்தான். “மனோ... என்ன சர்ப்ரைஸ், எங்க?” என அவள் சுற்றும் முற்றும் தேட, அவள் கழுத்தைக் காண்பித்தான் அவன். குனிந்து பார்த்தாள் சந்தனா. எம் மற்றும் எஸ் என ஆங்கில எழுத்தில் பொறிக்கப்பட்ட வெள்ளி கழுத்தணி அவள் கழுத்தை அலங்கரிக்க, அதைத் தொட்டுப் பார்த்தாள்.

“மனோ... இது?” என அவள் கேள்வியாகப் பார்க்க, “மனோ அண்ட் சந்தனாவோட ஃபர்ஸ்ட் லெட்டர் குட்டி. என் ஞாபகமா இதை எப்பவும் நீ கழட்டக் கூடாது!” என அவன் கூறவும், இவளது முகம் மாறியது.

அதில் மனோவிடம் மெலிதாய் சுணக்கமும் வருத்தமும் தோன்றிற்று. “ஏன் குட்டி, உனக்காக பாக்கெட் மணியை சேர்த்து வச்சு வாங்குனேன். பிடிக்கலையா?” வருத்தம் மிகுந்த குரலில் கேட்டான்.

“மனோ... இல்ல, இல்ல. செயின் சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா. ஆனால், அம்மா திட்டுவாங்க டா. உன்கிட்ட எதையும் வாங்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்னு உனக்கே தெரியும் இல்ல?” என கவலையாய்க் கேட்டாள். இப்போது மனோவிற்கு பூரணி மீது கோபம் வந்தது. அவர்கள் சத்தியத்தின் மீதும் ஏகக் கடுப்பும் வந்து தொலைத்தது.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது டி. இதை நீ கழட்டக் கூடாது!” அவன் கடுப்புடன் கூற, “மனோ... இல்ல டா. இதை, இதை நானே கூட வச்சிக்குறேன். ஆனால், கழுத்துல போடலை டா!” என சந்தனா கழட்டச் செல்ல, “குட்டி... இந்த செய்னை நான் கோவில்ல வச்சு வாங்கிட்டு வந்தேன். இதை நீ கழட்டுனா எனக்கு எதுவும் ஆகிடும்...” அவள் கழட்டக் கூடாதென படபடவென கூறினான் மனோ. சந்தனாவின் கை அப்படியே நின்றுவிட்டது.

“மனோ...போ, போ. நீ பொய்தானே சொல்ற?” என அவள் முகம் முழுவதும் கலவரம் படர்ந்தது. உண்மையிலே அவனுக்கு எதுவும் நிகழ்ந்தது விடுமோ என மனம் நொடியில் பயத்தில் குளித்திருந்தது.

“இந்த விஷயத்துல நான் பொய் சொல்வேனா டி. நிஜமா, நீ கழட்டுனா, என் உயிருக்கு எதாவது ஆகிடும். நான் செத்துடுவேன். பரவாயில்லையா?” அவன் கேட்டதும், இவளது விழிகள் தளும்பிற்று. அவனது கன்னத்திலே பட்டென அறைந்திருந்தாள். மனோவிற்கு சத்தியமாய் வலிக்கவில்லை. அவள் கண்ணீர் தனக்கானது எனும்போது நெஞ்சமெல்லாம் ஏதோ செய்து தொலைத்தது.

“இனிமே இந்த மாதிரி எதுவும் பேசுன, நான் உன்கூட பேச மாட்டேன் மனோ... போ, போ...” என அவள் தேம்ப, “ச்சு...சாரி டி. நான், அது சாமிகிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டேன். என் குட்டி இந்த செயினை கழட்ட மாட்டான்னு. அதான்!” என அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். அவனது கையை சந்தனா வெடுக்கென தட்டிவிட்டாள். அவளது உதடுகள் பூட்டுப் போட்டுக் கொண்டன.

“சாரி டி... சாரி, நிஜமா இனிமே இப்படி பேச மாட்டேன்!” என மனோ கெஞ்சலில் சந்தனா சமாதானமடைந்தாலும் அவளது முகம் பயத்தில் மெதுவாய் வெளுத்தது.

“அம்மா கேட்டா, என்ன சொல்லுவேன் மனோ. நீ வாங்கிக் கொடுத்தன்னு தெரிஞ்சா, வெளுத்துடுவாங்க!” என்றவளின் குரலில் பயம் அப்பிக் கிடந்தது.

“நான் வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லாத. பொய் சொல்லு குட்டி. அதான் உன் ஃப்ரெண்ட் ராதிகா இருக்கால்ல, அவ வாங்கி கொடுத்தான்னு சொல்லு...” என்றான் அவன்.

“பொய் சொல்றது தப்பு மனோ...” அவனை முறைத்தாள்‌.

“என் உயிர் முக்கியமா இல்ல, உண்மையைப் பேசறது முக்கியமா?” அவன் கேட்க, இவளிடம் கலக்கம் சூழ்ந்தது.

“குட்டி... எனக்காக ஒரே ஒரு பொய்தானே. இது சில்வர் இல்ல, உங்க ஸ்கூல் பக்கத்துல ஒரு கடைல ராதிகா வாங்கி குடுத்தான்னு சொல்லிடு...”

“அம்மா ராதிகிட்டே கேட்டுட்டா?”

“குட்டி... என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு எவ்வளவோ கிஃப்ட் பண்ணியிருக்காங்க. அவங்ககிட்டே எல்லாம் என் அம்மா, அப்பா போய் கேட்டாங்களா என்ன? அதெல்லாம் கண்டு பிடிக்க மாட்டாங்க. நீ பயப்படாம சொல்லு...” என அவன் தைரியம் கொடுக்க, இவள் அரைமனதாக தலையை அசைத்தாள்.

“மனோ... இதான் லாஸ்ட். இதுமாதிரி எதுவும் நீ வாங்கி கொடுக்க கூடாது!” என்றாள் கண்டிப்புடன்.

“சரி டி. இனிமே எதுவும் கொடுக்க மாட்டேன். கல்யாணத்துக்கப்புறம் வாங்கித் தரேன்!” என்றுரைத்தவன், தனது அலைபேசியை எடுத்தான்.

“குட்டி, ஒரு ஃபோட்டோ எடுத்துப்போமா? புது செயின் கிஃப்ட் பண்ணி இருக்கேன் இல்ல?” என மனோ இறைஞ்சலாகக் கேட்க, எட்டிப் பூரணியைப் பார்த்தவள், “சீக்கிரம் எடு மனோ. அம்மா பார்த்தா திட்டுவாங்க!” என்றவளின் தோளில் கையைப் போட்டவன், தங்களுக்கான முதல் சுயமிப்புகைப்படத்தை அலைபேசியில் பதிந்தான்.

சுயமி எடுத்து முடிய சந்தனா அவன் கையைத் தட்டிவிட்டு விலகி அமர்ந்தாள். மனோ அந்தப் புகைப்படத்தை பெரிதாக்கிப் பார்த்தான். அழகாய் வந்திருந்தது. மனம் நிறைந்து போனது அவனுக்கு.

சந்தனா விடைபெற, மனோ விளையாடச் சென்றான்.

பூரணி சந்தனாவின் கழுத்திலிருந்த கழுத்தணியை கவனிக்கவில்லை. ஆனால் இவளுக்குத்தான் ஒவ்வொரு நிமிடமும் மனது தடதடவென்றிருந்தது. உணவு உண்ணும்போது கேட்டுவிட்டார் பெண்மணி.

“குட்டி... என்ன அது? கழுத்துல செயின்?” அவர் வினவ, “ம்மா... ராதிகா வாங்கி கொடுத்தா மா...” என்றாள் நடுக்கத்தை மறைத்து.

“யார்கிட்டேயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனில்ல டி?” அவர் அதட்டலாய்க் கேட்க, “ம்மா... நான் நான் வேண்டாம்னுதான் சொன்னேன். ஆனால் அவதான்மா கட்டாயப்படுத்தி குடுத்தா. அவளுக்கு நான் மேக்ஸ் சொல்லி கொடுத்தேன் மா. அதுக்காக வாங்கி குடுக்குறேன்னு சொன்னாளா, நான் வாங்கிட்டேன் மா...” என்றாள் பதற்றத்துடன்.

“இதுவே கடைசியா இருக்கட்டும் குட்டி. இனிமே வாங்க கூடாது. விலை அதிகமா?” எனக் கேட்டார்.

“இல்ல மா... எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க கடைலதான் வாங்குனா. இருபது ரூபான்னு சொன்னாம்மா!” என்றாள். மனோ சொல்லிக் கொடுத்ததை உருப்போட்டிருந்து அப்படியே கூறினாள். பூரணியும் அதோடு விட்டுவிட்டார்‌.

மறுநாள் அவர் வேலைக்குச் செல்லும் போது ராதிகாவையும் அவளது தாயையும் பூரணி சந்திக்க நேர்ந்தது. ராதிகா அவரிடம் சந்தனாவைப் பற்றி கேட்க, “ஏன் மா, நேத்து தானே அவளைப் பார்த்த. செயின் கூட வாங்கி கொடுத்தேன்னு சொன்னா அவ!” என பூரணி வினவ, அவள் மறுத்திருந்தாள். 

 

மீண்டும் ஒருமுறை ராதிகாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டவர், “சரிமா...” என்றுவிட்டு கோபமாய் வீட்டிற்குச் சென்றார். ஏனோ வயது பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து கரை சேர்க்க வேண்டும் என்று பயத்துடன் ஒற்றை ஆளாய் தான் அவளைப் பாதுகாக்க, மகள் என்னவென்றால் தன்னிடமே பொய் கூறுகிறாளே என அவருக்கு ஆற்றாமை பொங்கியது. இந்த வயதில் எங்கேயும் அவள் தடுமாறிவிடுவாளோ எனத் தாயாய் தவித்துப் போனார்.

சந்தனா கணினி வகுப்பிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். வேலைக்குச் செல்லாது திரும்பி வரும் தாயைப் பார்த்தவள், “என்னம்மா... திரும்பி வர்ற?” எனக் கேட்டாள்.

உள்ளே வந்து கதவை தாழ்போட்டவர், “குட்டி... இந்த செய்னை யாரு வாங்கிக் கொடுத்தது?” என அழுத்தமாய்க் கேட்டார். அதில் ஒரு நொடி இவளது தொண்டைக் குழி ஏறியிறங்கியது. மனது தடதடவென அடித்துக் கொள்ள, தாயைப் பார்த்தவளுக்கு உள்ளே உதறல் எடுத்தது‌.

“ம்மா... அதான் சொன்னேன்ல மா. ராதிகா வாங்கி கொடுத்தா!” என்றவளின் முதுகில் சுள்ளென அவர் ஒரு அடிக்க, சந்தனா வலியில் துடித்துப் போனாள். பூரணியின் மொத்த கோபமும் அந்த ஒரு அடியில் இறங்கியிருக்க, மகளுக்கு நொடியில் விழிகள் தளும்பின‌.

“பொய் சொல்றீயா டி... ஹம்ம், எப்போதுல இருந்து நீ என்கிட்ட பொய் சொல்ல பழகுன?” எனக் கேட்டவர் மீண்டும் அடிக்க கை ஓங்க, “ம்மா... வேணாம்மா. ப்ளீஸ் மா, வலிக்குதுமா. ம்மா...” என்றவள் தேம்பியழ, “யார் கொடுத்தா இதை? அதை சொல்லு டி.‌..” என்றார் கோபம் குறையாது.

“ம்மா... ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தான் மா. நிஜமா ஃப்ரெண்ட்தான் மா!” என அவள் தேம்ப, “எந்த ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தான்னு சொல்லு சந்தனா...” என அவர் சினத்தில் இரைய, இவளிடம் அழுகை மட்டுமே வெளிப்பட்டது. ஒரு வார்த்தைக் கூறவில்லை சின்னவள். வாயை இறுக மூடிக் கொண்டவளுக்கு மனோவின் பெயரை கூற உத்தமமாய் எண்ணமில்லை. அவன் பெயரைக் கூறினால், அவனுக்கு எதுவும் பிரச்சனையாகி விடக் கூடும். அதுவுமின்றி மனோதான் கொடுத்தான் எனத் தெரிந்தால் பூரணி தன்னை இனிமேல் சதாவீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டார் என மனம் அஞ்சியது.

“வாயைத் தொறந்து சொல்லு டி...” எனக் காயம்பட்ட முதுகிலே அவர் மீண்டும் அடிக்க, சந்தனா வலியில் சுருண்டுப் படுத்துவிட்டாள். திகுதிகுவென எரிந்த முதுகால் அவளுக்கு வலி உயிர் போனது. அந்நிலையிலும் அவள் எதுவும் பேசாதிருந்தது பூரணியின் கோபத்திற்கு தூபமேற்ற, கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்தார்.

“இப்போ நீ வாயைத் தொறந்து யார் கொடுத்தான்னு சொல்லலை, பழுத்தக் கரண்டியால கைல இழுத்துடுவென் டி!” என்றவரின் விழிகள் லேசாய் கலங்கின. தாயாய் மகள் தடம்மாறி விட்டாளோ என அவருக்கு உள்ளம் பதறியது.

“ம்மா... வேணாம்மா. ப்ளீஸ் மா, வலிக்கும் மா...” என சந்தனா அலற, கரண்டியை அவள் கையருகில் கொண்டு வந்தவர், “இப்போ யாரு வாங்கிக் குடுத்ததுன்னு சொல்ல போறீயா? இல்லையா குட்டி?” என அவர் அழுத்தமாய்க் கேட்க, சந்தனா கண்களில் வலியும் கண்ணீருடன் அவரைப் பார்த்தாள். பூரணிக்கு கண்மண் தெரியாத கோபம் வர, அவளது உள்ளங்கையில் கரண்டியை வைத்திருந்தார்.

“ஆ... அம்மா... எரியுதும்மா... விடும்மா. ப்ளீஸ் மா. விடும்மா!” என் அவள் கையை அவரிடமிருந்து உருவ, பூரணியின் கண்களிலிருந்து சரசரவென நீர் வழிந்தது. சந்தனா கீழே அமர்ந்து கையைப் பிடித்தபடி தேம்ப, அவர் அப்படியே அமர்ந்துவிட்டார். நெஞ்சு வரை பயம் பரவ, யாரிடமும் சொல்லி கூட அவரால் அழ முடியவில்லை. மகளை சரியாக தான் வளர்க்கவில்லையோ என அவர் மனம் வருந்த, சிறிது நேரம் அமைதியாய் சென்றது. சந்தனா மட்டும் ஒரு வார்த்தை உதிர்க்காது தேம்பியபடியே அமர்ந்திருந்தாள்.

வேலைக்குச் செல்லும் மனநிலை சுத்தமாய் இல்லையெனினும் போய் ஆக வேண்டிய கட்டாயம் உணர்ந்தவர், “இன்னைக்கு எந்த க்ளாஸூம் போக வேணாம். வீட்லயே இரு...” என மகளிடம் காய்ந்துவிட்டு கிளம்பினார்.

சந்தனா அப்படியே தரையில் படுத்துவிட்டாள். பூரணி சூடு வைத்த கை சிவந்து தோள் கழண்டு வருமளவிற்கு இருந்தது‌. கையை ஊதிக் கொண்டே இருந்தாள். வலிதான் குறையவில்லை. என்ன செய்து வலியைப் போக்குவதெனத் தெரியாது தேம்பியழுதவளுக்கு தேற்றுவார் இன்றி மேலும் மேலும் அழுகை பொங்கியது. தலையணையில் முகம் புதைத்துத் தேம்பியபடியே தூங்கிவிட்டாள்.

மதிய உணவும் உண்ணவில்லை. மாலை மங்கிய நேரம் பூரணி வீட்டிற்கு வந்தார். மகளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இருந்தும் அவள் அப்படியே படுத்திருப்பதைக் கண்டு தாயாய் உள்ளம் துடிக்க, கையில் எண்ணெய் வைத்துவிட்டார். உணவை தானே ஊட்டிவிட, சந்தனா எதுவும் பேசாது உண்டாள். ஆனாலும் அவளுக்கு வலியில் விழிகள் கலங்கின. தாய் தன்னிடம் பேசவில்லை என்று மேலும் அழுகை பொங்கியது. அவளது முதுகிலும் எண்ணெய் தேய்த்துவிட்ட பூரணி, கலங்கிய கண்களோடு படுத்துவிட, இவளுக்கு குற்றவுணர்வில் கண்கள் கரித்தன.

நேராய் படுக்க முடியவில்லை. முதுகு காந்தியது. ஒருபுறமாய் படுத்தாள். அப்படியே பூரணி அருகே சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவர் எதுவும் பேசாது மகளைத் தட்டிக் கொடுக்க, அவளும் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள். ஆனால் பூரணி தூங்கவே இல்லை. மகளைப் பற்றிய கவலை அரித்ததில் அவருக்கு உறக்கம் பறிபோயிருந்தது.

மறுநாள் காலை சந்தனா உறங்கிக் கொண்டிருக்க, பூரணி எழுந்து சமைத்தார். குளித்து வந்தார். மனம் எதிலுமே செல்லவில்லை. மகளிடம் கோபம் கொள்ளாது என்னவென விசாரிக்க வேண்டுமென நிதான மனது கூற, அதை ஏற்றுக் கொண்டார். அன்றைக்கு காலையில் சமைக்க வரவேண்டாம் என சதா கூறிவிட்டார். அவரும் உமாநாதனும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதால், மதியம் போல் வந்தால் போதுமென கூறிவிட்டார். மனோவும் நண்பர்களுடன் வெளியே உண்டு கொள்வதாகக் கூறிவிட்டான்.

அவனுக்கு நேற்று சந்தனா கணினி வகுப்பிற்கு வரவில்லை என்பதே மனதில் ஓடியது. அவளுக்கு வயிற்று வலியாக இருக்குமோ என தானே எண்ணிக் கொண்டான்.

தாமதமாய் கண்விழித்த சந்தனா படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து வேலை செய்யும் தாயையே பார்த்திருந்தாள். அவர் தன்னிடம் பேசவில்லை என நினைத்ததும் குபுக்கென நீர் விழிகளில் பொங்கியது. 

 

தன்னையே தொடரும் மகளின் விழிகளைப் பார்த்தவர், “என்னடி பார்க்குற... போ, போய் பல்ல விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்பிடு...” எனக் கூறவும், எழுந்து படுக்கையை ஒற்றைக் கையிலே எடுத்து வைத்தாள். மற்ற கையில் எரிச்சல் இப்போது பரவாயில்லை. இருந்தும் உள்ளங்கையிலிருந்த காயம் மொத்தக் கையிலும் பரவியது போல வலித்தது.


   
ReplyQuote
VSV 48 – என்றென்றும் அன்புடன் சந்தனா
(@vsv48)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

எழுந்து குளித்து வர, மகளுக்கு ஊட்டியபடி தானும் உண்டார் பூரணி. அவளிடம் என்ன பேசவென அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க, மரிக்கொழுந்து வந்து சிறிது நேரம் பேச, நேரம் சென்றது. பூரணி வைத்திருந்த கையடக்க கைபேசி இசைத்தது.

புது எண்ணாக இருக்கவும் அவர் யோசனையுடன் எடுத்துப் பேச, “நாங்க சந்தனா படிக்கிற ஸ்கூல்ல இருந்து பேசுறோம்...” என்றார் ஒரு பெண்மணி.

“சொல்லுங்க டீச்சர், என்ன விஷயம்?” என்றவருக்கு மனதில் பயம் துளிர்த்தது.

“இன்னைக்கு டென்த் ரிசல்ட் வந்துடுச்சு மா. உங்கப் பொண்ணுதான் டிஸ்ட்ரிக்ல செகண்ட் மார்க். ஸ்கூல் ஃபர்ஸ்ட்!” என அவர் கூற, பூரணியின் முக்ம் நொடியில் பூவாய் மலர்ந்து போனது.

“டீச்சர் நிஜமாவா?”

“ஆமா சந்தனா மா... ஐநூறுக்கு நானூத்து தொன்னூறு மார்க் எடுத்திருக்கா உங்கப் பொண்ணு. ஹெச்.எம் உங்கப் பொண்ணை பார்க்கணும்னு சொன்னாரு. அவளைக் கூட்டீட்டு நீங்களும் வர்றீங்களா?” என அவர் கேட்க, “இதோ வர்றோம் டீச்சர்...” என அலைபேசியை வைத்தார். சந்தனா என்னவெனத் தெரியாது தாய் முகத்தையே பார்த்திருந்தாள்.

“குட்டி... பரிட்சைல நல்ல மார்க் எடுத்து பாஸாகியிருக்க. டீச்சர் ஸ்கூலுக்கு வர சொல்றாங்க. போ, போய் கிளம்பு...” என அவர் முகம் மலர்ந்து கூற, பூரணி சிரித்துப் பேசியதிலே சந்தனாவின் வலி மறந்து போயிருந்தது. நல்ல மதிப்பெண் எடுத்தது வேறு மகிழ்ச்சியைப் படரச் செய்ய, விரைவில் உடைமாற்றி வந்தாள்.

செல்லும் வழியில், “குட்டி... இந்தா ஐம்பது ரூபா. போய் சாக்லேட் வாங்கிக்கோ...” என அவர் கொடுத்ததும், துள்ளி குதித்து இவளும் இன்னெட்டுகளை வாங்கி வந்தாள். பள்ளியின் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் இவளுக்கு வாழ்த்தைக் கூற, பாராட்ட என்றிருக்க, சந்தனாவிற்கு பேச்சே வரவில்லை.

ஆசிரியர்ள் பூரணியையும் சந்தனாவையும் அழைத்து முன்னே நிற்க வைத்துப் பாராட்டினர். பூரணியை தனியே அழைத்தும், “எனக்கு அப்பவே தெரியும். உங்கப் பொண்ணு நல்லா படிப்பா. அமைதி, அவ உண்டு, அவ படிப்பு உண்டுன்னு இருப்பா‌. ஒழுக்கமான பொண்ணு. இன்னும் நல்லா வருவா...” என ஆசிரியர் கூற, பூரணிக்கு மகளைப் பற்றிய தன் எண்ணமும் கணிப்பும் தவறோ என்று தோன்றிற்று. அவளை அடித்துவிட்டோம் என்று லேசாய் குற்றவுணர்வும் எட்டிப் பார்த்தது.

தலைமை ஆசிரியர் சந்தனாவின் கையில் ஆயிரம் ரூபாயைத் திணிக்க, அவள் நிமிர்ந்து தாயைப் பார்த்தாள். அவர் தலையை அசைக்க, சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டாள். ஆரவாரம் முடிய, இருவரும் கிளம்பினர்.

“குட்டி வீட்டுக்குப் போறீயா? இல்ல என்னோட வர்றீயா?” பூரணி வினவ, “உன் கூடவே வரேன் மா...” என்றாள் துள்ளலாய். மனோவிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா மனம் முழுவதும் ததும்பி வழிந்தது.

மனோ வகுப்பிலிருந்தாலும் சந்தனா முதல் மதிப்பெண் எடுத்தது தெரிய வர, இருப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. நண்பர்கள் அனைவரிடமும் அவனே முதல் மதிப்பெண் எடுத்தது போல கூறி மகிழ்ந்து அவளைக் காணவேண்டும் என்று கிளம்பிவிட்டான். சந்தனா பள்ளியில் இருக்க கூடுமென கருதி அவன் அங்கே செல்ல, அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என அவளது தோழியொருத்தி கூறினாள்.

மிதிவண்டியை வேகமாக மிதித்து சந்தனாவின் வீட்டை அடைந்தான். அங்கே அவளில்லாது ஏமாற்றம் சூழ, நிச்சயம் தன் வீட்டில்தான் இருப்பாள் என விரைய, அவனை ஏமாற்றாது அவர்களது ஆஸ்தான கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் மிதிவண்டியை கீழேவிட்டவன், “குட்டி... ரொம்ப சந்தோஷமா இருக்கு டி...” என துள்ளி குதிக்க, அவனுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து சந்தனாவுக்கு மனம் நிறைந்து போனது.

அவளது கையைப் பிடித்து மனோ உலுக்கச் செல்ல, சட்டென கையைப் பின்னிழுத்து அவனறியாது மறைத்துவிட்டாள்.

“நான்தான் சொன்னேனில்ல டி. பாரு, ஃபர்ஸ்ட் மார் வாங்கி இருக்க நீ...” என அவன் மூச்சு வாங்க அமர, சந்தனாவும் அவனருகே அமர்ந்தாள்.

“மனோ... மூச்சு வாங்குது பாரு. பொறுமையா பேசு டா...” என தண்ணீர் பொத்தலை அவனிடம் கொடுத்தாள்.

“எனக்கு சந்தோஷத்துல பேச்சே வரலை டி. சோ ப்ரவுட் ஆஃப் யூ டி. என் குட்டி மார்க் வாங்கிடுவான்னு எனக்கு முன்னாடியே தெரியும்!” என்று பரவசமாய் அவன் பேச பேச, சந்தனாவிற்கு சற்றே வெட்கம் வந்தது. அவள் மதிப்பெண் எடுத்ததைவிட, மனோவின் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியிலே மனம் லயித்துப் போனது. பூரணி அடித்த அடி, வைத்த சூடு என எல்லாவற்றையும் மறந்திருந்தாள்.

இடது கையால் அவனுக்கு இன்னெட்டைக் கொடுத்தாள். “இந்தா மனோ... சாக்லேட்!” என அவள் தர, ஆசையாய் அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். 

 

சந்தனா வலதுகையை மறைத்து வைத்திருந்ததை கவனித்தவன், “குட்டி... என்ன கைல?” என அவன் தொட வர, கையைப் பின்னிழுத்தவள், “ஒன்னும்...

ஒன்னுமில்ல மனோ!” என்றாள் திணறலாய். 

 

அவளது முகத்தைப் பார்த்தே அகத்தைக் கணித்தவன், “பொய் சொல்லாதடி... கையைக் காட்டு...” என இழுத்துப் பார்க்க, நொடியில் அவன் முகம் மாறிப் போனது.

“ஏய்... என்னடி, எப்படி இவ்வளோ பெரிய காயம். ஏன் இப்படி ஆச்சு?” எனப் பதறியவனின் கண்கள் மெலிதாய் கலங்கின.

“ஒன்னும் இல்ல மனோ... சும்மா சின்ன காயம்தான். அது, தோசை சுடும் போது தெரியாம சுட்டுகிட்டேன்!” என்றாள் அவன் முகம் வாட பொறுக்காது.

“குட்டி... பொய் சொல்லாத டி. இது தெரியாம சுட்ட மாதிரி தெரியலை. சூடு வச்ச மாதிரி இருக்கு. யார் வச்சா? ஆன்ட்டி வச்சாங்களா?” என கோபமாய்க் கேட்டான்.

“இல்ல மனோ...” அவள் மறுத்துக் கூற வர, “என் மேல ப்ராமிஸ் பண்ணி சொல்லுடி...” என்றான் அதட்டலாய். 

 

சந்தனா சில நொடிகள் தயங்கி, “அம்மாதான் சூடு வச்சாங்க மனோ...” என்றுவிட்டாள்.

“ஆன்ட்டி எதுக்கு சூடு வச்சாங்க... என்னாச்சு?” அவன் படபடக்க, இவளின் வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.

“இப்போ நீயா என்னென்னு சொல்றீயா? இல்ல நான் அவங்க கிட்டே போய் கேட்கவா?” அவன் கூறியதில் பயந்தவள், “இல்ல... நானே சொல்றேன் மனோ. அது அம்மாகிட்ட பொய் சொன்னேன் இல்ல. அதை கண்டு பிடிச்சுட்டாங்க‌. அதான் கோபத்துல சூடு வச்சுட்டாங்க!” என்றாள் மென்று விழுங்கியபடி.

“என்ன பொய்?” எனக் கேட்டவனுக்கு மண்டைக்குள் மணியடிக்க, “குட்டி... செயின், செயின் வாங்குனதுக்குத்தான் சூடு வச்சாங்களா?” எனக் கேட்டவனுக்கு சட்டென குரல் இறங்கிப் போனது. தன்னால்தான் தன்னுடைய குட்டி இந்தக் காயத்தை அனுபவிக்கிறாள் என்றதும் நெஞ்சு துடித்துப் போனாது.

“குட்டி... சாரி டி. சாரி, சாரி. நிஜமா நான் நான் இப்படியாகும்னு நினைக்கலை டி‌. என்னாலதானே உனக்கு இந்தக் காயம்?” என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க, “மனோ... இல்ல. எனக்கு வலிக்கவே இல்லை டா. நீ அழாத. கொஞ்சமாதான் வலிச்சது. இப்போ சரியாகிடுச்சு...” என அவன் கண்ணைத் துடைத்தாள் இவள்.

“குட்டி... நீ அந்த செயினை கழட்டு!” மனோ அவள் கழுத்தருகே கையைக் கொண்டு செல்ல, “இல்ல... தொடாத மனோ. உனக்கு எதுவும் ஆகிடும்!” என்றாள் பதறிப்போய்.

“ஐயோ...குட்டி. இல்ல டி... நான் சும்மா பொய்தான் சொன்னேன். நீ செயினை கழட்டு ஆன்ட்டி மறுபடியும் எதுவும் செஞ்சுடப் போறாங்க!” என்றான் பயந்தபடி.

“ஹ்கூம்... இல்ல மனோ. இந்த செயினை நான் கழட்ட மாட்டேன். அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க டா!” என அவனை சமாதானம் செய்தாள். மனோவுக்கு மனம் ஆறவே இல்லை. உள்ளே சென்று களிம்பொன்றை எடுத்து வந்து அவளது கையில் பூசிவிட்டான். வாயைக் குவித்து காயத்தில் ஊதிக் கொண்டே இருந்தான். அவ்வப்போது வலிக்கிறதா எனக் கேட்டு கலங்கிப் போனான். சந்தனாவிற்கு அவனை அப்படிப் பார்க்க பாவமாகிவிட்டது.

“மனோ... என்ன டா?” எனக் கேட்க, என்ன நினைத்தானோ சந்தனாவின் மடியில் முகம் புதைத்துக் கண்ணீரை உகுத்தான். பூரணி வந்துவிடுவாரோ என மனம் பயந்தாலும் சந்தனா அவனைத் தேற்றினாள். சில நிமிடங்களில் தன்னை மீட்டவன், “சாரி குட்டி...” என மீண்டும் ஒரு மன்னிப்பை உதிர்த்தான்.

“போ மனோ... உன் சாரியைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு!” என்றவளுக்கு மதிப்பெண் எடுத்த மகிழ்ச்சியே வடிந்திருந்தது. 

 

மனோவிற்கு பூரணியிடம் பேச வேண்டும் என்று தோன்ற, “குட்டி... நான் வரேன் இரு...” என எழுந்து அவரிடம் சென்றான்.

“ஆன்ட்டி... குட்டிக்கு நான்தான் அந்த செயின் வாங்கி கொடுத்தேன். அதை அவளுக்கு கிஃப்டாதான் கொடுத்தேன். அவ வேணாம்னுதான் சொன்னா. நான்தான் கேக்கலை. அதுக்காக அவளுக்கு நீங்க சூடு வைப்பீங்களா ஆன்ட்டி?” என அவரிடம் கோபமாய் நியாயம் கேட்டு நின்றான் மனோ.

“தம்பி... நீங்க செயின் வாங்கி கொடுத்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா?” அவர் வினவ, இவன் இல்லலயென தலையை அசைத்தான்.

“அவங்களுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க பா. இனிமே இந்த மாதிரி எதுவும் வாங்கித் தராதீங்க. அதான் உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது...” சற்றே எரிச்சலான குரலில்.

“ஏன் ஆன்ட்டி... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் நான் கிஃப்ட் பண்ணுவேன். அதே மாதிரிதான் குட்டிக்கும் வாங்கிக் கொடுத்தேன். இதுல என்ன தப்பிருக்கு ஆன்ட்டி?” அவன் பிடியிலே நின்றான்.

“தம்பி, உங்களுக்குப் புரியாது. இனிமே என் பொண்ணுக்கு இந்த மாதிரி வாங்கித் தராதீங்க. எனக்குப் பிடிக்கலை!” என்றார் கோபமாய். அவனால் அதற்குமேல் பேச முடியவில்லை. அவரை முறைத்துவிட்டு வந்தான்.

சந்தனா என்ன செய்வதெனத் தெரியாது ஒற்றைக் கையில் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற, “குட்டி... அறிவிருக்கா உனக்கு? கைல காயம் இருக்குல்ல? தண்ணிப் படாம பார்த்துக்கோ. டாக்டர் கிட்டே போகலாமா? ஊசிப் போட்டா, சீக்கிரம் ஆறிடும்...” என்றான் படபடவென கோபமும் அக்கறையுமாய்.

“ஐயயோ... ஊசியெல்லாம் வேணாம் மனோ. அதுவே சரியாகிடும்!” என்றாள் பயந்து. அவள் கையைப் பிடித்துக் கொண்டு மனோ விடவே இல்லை‌. மாலை அவள் கிளம்பும்போது கூட, ஒரு மன்னிப்பை யாசித்துவிட்டே விட்டான்.

உமாநாதனிடம் மனோ சந்தனாவின் மதிப்பெண் கூறி மகிழ, "கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறவ கூட நல்ல மார்க் எடுத்திருக்கா. பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சா, இவன் நானூறு மார்க் எடுத்து வச்சிருக்கான்!" என சதா மகனை குறையாய்க் கூற, உமாநாதன் அவரைக் கண்டித்தார்.

பூரணிக்கு மகள் மீது எந்த தவறும் இல்லையென புரிந்தது. இனிமேல் மனோவிடம் எதையும் வாங்க கூடாது என மட்டும் அறிவுறுத்த அவளும் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள். ஒரு வாரத்தில் சந்தனாவின் கையிலிருந்த காயம் ஓரளவிற்கு சரியாகிவிட்டது. சில நாட்களிலே மனோவின் தேர்வு முடிவுகளும் வந்தன. அவன் தொன்னூற்றிரண்டு சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தான்‌. நல்ல மதிப்பெண் என ஆசிரியர்கள் பாராட்ட, சந்தனாதான் கண்முன்னே வந்து போனாள். அவளன்றி இந்த மதிப்பெண் சாத்தியமில்லை என எண்ணிக் கொண்டான்‌.

வீட்டிற்குச் சென்றதும் அவளிடம் தன் மதிப்பெண்ணைப் பகிர்ந்து மகிழ, அவளுக்கும் மனம் நிறைந்தது. அடுத்து மனோ என்ன படிக்கலாம் என அவளிடம் கலந்துரையாட, சந்தனாவும் தன் ஆசிரியர் கூறிய துறைகளைப் பற்றி அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

 

மனோ கோயம்புத்தூரிலே சிறந்ததாய் நான்கு கல்லூரியைத் தேர்வு செய்து எதில் சேரலாம் எனக் கேட்க தந்தையிடம் சென்றான். “மனோ... இங்க வேணாம் டா. எனக்கு நெக்ஸ்ட் மந்த் ப்ரமோஷனோட ட்ரான்ஸ்பர் கிடைச்சிரும். நம்ப சென்னைக்கு ஷிஃப்ட் ஆகுறோம். அங்க எதாவது நல்ல காலேஜா பாரு. அப்ளை பண்ணலாம்...” என அவர் கூறியதும் இவனுக்கு பக்கென்றது. குட்டியை விட்டு பிரிந்து அத்தனை தூரமெல்லாம் செல்ல முடியாது என மனம் முரண்ட, “ப்பா... சென்னைலாம் வேணாம் பா. நான் வரலை, இங்கேயே இருக்கலாம்!” என்றான் அடமாய்.

“டேய்... அவருக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு. அதை வேணாம்னு சொல்ல சொல்றீயா? இங்க விட சென்னைல பெரிய பெரிய காலேஜ் எல்லாம் இருக்கு. அதுல ஒன்னைப் பார்த்து சேர்த்து விட்றோம் மனோ!” என சதா கடிய, இவனால் அதை ஒரு பேச்சிற்கு கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“ம்மா... போறதுன்னா, நீயும் அப்பாவும் போங்க. நான் இங்கேயே ஒரு காலேஜ் ஜாய்ன் பண்ணி ஹாஸ்டல் பார்த்துக்கிறேன்...” என்றான் பிடிவாதமாக.

சதாம்பிகா அதில் கோபமாக ஏதோ திட்ட வர, “சதா... நான் பேசிக்கிறேன். நீ உள்ள போ!” என்ற உமாநாதன் மகனிடம் பொறுமையாய் எடுத்துக் கூறினார். எல்லாவற்றையும் காதில் வாங்கினாலும் அவனால் சர்வ நிச்சயமாய் சந்தனாவைப் பிரிவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனதெங்கும் அவளுக்கான தவிப்பே கொட்டிக் கிடந்தது. தான் இல்லாது குட்டி தனியாய் தனித்துப் போய் விடுவாளே என பதறிப் போனான். ஆனால் பெற்றவர்கள் அவர்கள் பேச்சிலே உறுதியாய் நின்றுவிட, இவன் கையறு நிலைக்கு ஆளானான்.

இரண்டு நாட்களாக சரியாக உண்ணாது போராட்டம் நடத்தினான். சந்தனா கூட அவன் முகத்தை வைத்தே அகத்தைக் கணித்து என்னவென வினவ, அவளிடம் எதையும் கூறவில்லை. எப்படியும் இங்கேயே கல்லூரி சேர்ந்துவிடலாம் என அவன் அதீத நம்பிக்கை வைத்திருக்க, அதெல்லாம் பொய்த்துப் போனது.

உமாநாதன் கூறியது போல அவருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றமும் கிடைக்க, இவனால் எதுவும் செய்ய முடியவில்லை. சந்தனாவைப் பிரிய போகிறோம் என்ற நினைப்பே எதிலும் கவனத்தை செல்ல விடாது தடுத்துவிட்டது.

“மனோ... பயோ மேக்ஸ் குரூப்ல ஜாய்ன் பண்ணிட்டேன் டா நான். எனக்கு எதாவது டவுட்னா நீயே சொல்லி தருவல்ல?” என சந்தனா பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை முடிந்த கையோடு இவனைப் பார்க்க வந்திருந்தாள்.

சந்தனாவிடம் எப்படி சொல்வது எனத் தெரியாது அவன் தயங்கியே கூறாதிருந்தான். ஆனால், இன்று காலையில் உமாநாதன் இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் சென்னைக்கு மாற்றலாகி செல்ல வேண்டும் என்றுரைத்தவர், இவனுக்கு அங்கேயே பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ப்பதற்கும் ஏற்பாடு செய்துவிட்டதாய் கூறினார். அதைக் கேட்டதிலிருந்தே மனோ முகத்தைத் தூக்கி வைத்திருந்தான். அவனாய் சரியாகிவிடுவான் எனப் பெற்றவர்கள் மகனை கண்டு கொள்ளவில்லை. அங்கே மாற்றலாகி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினர்.

“மனோ... என்னாச்சு டா? ஏன் ஒரு மாதிரியாவே இருக்க? மேடம் திட்டீட்டாங்களா?” எனக் கேட்டு அவனருகே அமர்ந்தாள். எதுவும் பேசாது அவளது தோளில் கையைப் போட்டவன், “குட்டி... நான் உன்னைவிட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சிருந்தா, என்னை மறந்துடுவீயா டி?” என வேதனை ததும்ப கேட்டான்.

அவனை முறைத்து கையைத் தட்டிவிட்டவள், “லூசு மாதிரி பேசாத டா. அப்படியெல்லாம் மறப்பேனா நான்?” எனக் கோபமாய்க் கேட்டாள்.

“எனக்காக வெயிட் பண்ணுவீயா டி. என்னைதானே கல்யாணம் பண்ணிப்ப?” எனக் கேட்டான். அவனையே பார்த்த சந்தனா, “ஏன் மனோ... ஏன் டா இப்படிலாம் பேசுற? என்னாச்சு உனக்கு? என்னைவிட்டு எங்கடா போக போற நீ? இங்க தானே என் கூட இருக்கப் போற?” என கவலையுடனும் யோசனையுடனும் கேட்டான்.

“குட்டி... நாங்க சென்னைக்குப் போறோம். அப்பாவுக்கு அங்க ட்ரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்புறோம்!” என்றான் சோகம் அப்பிய குரலில். சந்தனாவிடம் ஒரு நொடி அதிர்ந்த பாவனை.

“மனோ... நீ, பொய் தானே சொல்ற? என்கிட்ட விளையாட்றீயா டா?” எனக் கேட்டவளுக்கும் குரல் உள்ளே சென்றிருந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“இல்ல டி... நிஜமா, நாங்க கிளம்புறோம்!” என்றான் வேதனையுடன். சந்தனா அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள்‌. நொடியில் அவளது விழிகள் தளும்பிற்று.

“மனோ... அப்போ என்னைவிட்டுப் போய்டுவீயா நீ?இனிமே வர மாட்டீயா டா?” என அழும் குரலில் கேட்டாள் சந்தனா. அவனுக்கும் கண்கள் பனித்தன.

“குட்டி... லூசு மாதிரி பேசாத. நான் காலேஜ் மட்டும் அங்க படிச்சுட்டு, இங்க எதாவது ஒரு ஐடி கம்பெனியா பார்த்து ஜாய்ன் பண்றேன் குட்டி. இங்கேயே வேலை பார்க்குறேன். அப்புறம் உங்க அம்மாகிட்ட வந்து பேசுறேன்!” என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கோடு.

“போ மனோ... என்னைவிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டு நீ இப்போ போற இல்ல?” என அவள் தேம்ப, இவன்தான் தவித்துப் போனான். எப்படியோ அவளை சமாதானம் செய்தான். இன்னும் பதினான்கு நாட்கள் மட்டும்தான் மனோவுடன் இருக்க முடியும் என சந்தனாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

தினமும் நாள் தவறாது அவனைப் பார்க்க வந்தாள். மனோ கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை சமாதானம் செய்தான். ஒருவழியாய் இருவரும் அந்தப் பிரிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்திருந்தனர்.

மறுநாள் காலை கோயம்புத்தூரிலிருந்து மனோ மற்றும் அவனது பெற்றவர்கள் கிளம்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்தனா அவனைக் காணவேண்டும் என்று தாயிடம் கெஞ்சிக் கேட்டு வந்திருந்தாள். பூரணி இரண்டு நாட்கள் முன்புதான் இங்கு வேலையை விட்டுவிட்டு வேறு வீட்டு வேலைக்குச் சேர்ந்திருந்தார். மனோவைப் பார்த்துவிட்டு இருட்டுவதற்குள் வீட்டிற்கு சென்று சேர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்க, இவள் தலையை அசைத்துவிட்டு இவனைப் பார்க்க வந்திருந்தாள்.

சந்தனாவைக் கண்டதும் மனோவின் முகம் மலர்ந்தாலும் கண்கள் முழுவதும் சோகம் அப்பிக் கிடந்தது. இவளுக்கு அழுகை வந்தாலும், தான் அழுதால் அவனும் அழுவான் என கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

இன்றுதான் அவர்களது ஆஸ்தான இடத்தில் அமரும் கடைசிநாள் என எண்ணும்போதே இருவருக்கும் வலித்தது. சந்தனா வந்ததும் மனோ அவளின் தோளில் கையைப் போட்டு அருகே இருத்திக் கொண்டான்.

“மனோ... நாலு வருஷம்தானே டா. சீக்கிரம் போய்டும். நீ நல்லா படிக்கணும். என்கிட்ட ப்ராமிஸ் பண்ணியிருக்க. மறந்துடாத. ஹம்ம், படிச்சு முடிச்சிட்டு நீ சொன்ன மாதிரி இங்கேயே வேலைக்கு வந்துடு மனோ...” என்றவளின் குரல் லேசாய் தளும்பியது.

“எனக்காக வெயிட் பண்ணுவல்ல டி?” எனக் கேட்ட மனோவின் குரல் முழுவதும் தவிப்பிருந்தது.

“கண்டிப்பா மனோ. நான் வெயிட் பண்ணுவேன். நீ வந்துடுவ இல்ல?” என அவளும் கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள்.

“ப்ராமிஸா வருவேன் குட்டி. வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்!” என்று அவளது கையில் மீண்டுமொரு சத்தியம் செய்தான்.

“எவ்வளோ நாள் வெயிட் பண்ணுவ குட்டி. நான் வர லேட்டாச்சுன்னா, என்னை மறந்துட மாட்டல்ல? என்னை தானே கல்யாணம் பண்ணிப்ப?” என மனோ மீண்டும் மீண்டும் அதையே கேட்டான்.

“மனோ... சாகுறவரைக்கும் வெயிட் பண்ணுவேன் டா. நான் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன்ல? உன்னை மட்டும்தான் டா கல்யாணம் பண்ணிப்பேன்...” என்றாள். சந்தனா கூறிய அத்தனை வார்த்தைகளும் அவளது அடியாழத்திலிருந்து வந்தன.

“மனோ... உனக்கு முட்டை சப்பாத்தி செஞ்சு எடுத்துட்டு வந்தேன். பனியாரமும் சுட்டேன் டா!” என தன் பையிலிருந்த உணவுப் பொருட்களை அவனிடம் நீட்டினாள்.

“நீயே ஊட்விடு டி...” என்றான் அவன். பூரணி இல்லையென்ற எண்ணத்திலும், அவனுக்கு கடைசியாய் ஊட்டப் போகிறோம், இனி அடுத்து நான்கு வருடங்கள் கழித்து தானே காணப் போகிறோம் என்றெண்ணி மனம் வருந்த, அந்த உந்துதலில் அவனுக்கு ஊட்டிவிட்டாள். அவளது கைகாயம் நன்றாய் ஆறியிருக்க, அதற்கான வடு மட்டும் மறையாது தங்கிவிட்டிருந்தது.

மனோவும் அவளுக்கு ஊட்டினான். அமைதியாய் உண்டாள்.

“மனோ... உனக்கொரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் டா. கண்ணை மூடிக்கோ...” என அவனைப் போலவே செய்தவள், தன் பையிலிருந்த மோதிரத்தை எடுத்து அவனது கையில் அணிந்துவிட்டாள். அது கொஞ்சம் தளர்வாய்தான் இருந்தது‌. இவளுக்கு சரியாய் அளவு சொல்ல வரவில்லை.

அவன் கண்ணைத் திறந்து பார்த்தான். அவனைப் போலவே எம் மற்றும் எஸ் என அதில் எழுதியிருந்தது. “குட்டி... சூப்பரா இருக்கு டி.‌.‌.” என அவன் முகம் மலர்ந்தது.

“நல்லா இருக்கா மனோ. இதை என் ஞாபகமா போட்டுக்கோடா. நான் சாமிக்கிட்டே வச்சு உன்னை மாதிரி வேண்டிட்டு வந்தேன். சாமி, எனக்கும் மனோவுக்கும் கல்யாணம் நடத்தி வச்சிடுன்னு. அதனால இதை நீ கழட்டக் கூடாது மனோ!” என்றாள் கண்டிப்பாய். அவளது முகத்தையே ஆசையாய்ப் பார்த்திருந்தவனின் விழிகள் நிரம்பின.

“ஐ லவ் யூ குட்டி... லவ் யூ சந்தனா!” என்றான் ஆத்மார்த்தமாக. சந்தனாவுக்கு ஒரு நொடி என்னவோ செய்தது.

“மனோ...” என்னப் பேசுவதென தெரியாது விழித்தாள். திருமணம் என்ற வார்த்தையை எளிதாக ஏற்றுக் கொண்டவளால் காதல் என்ற வார்த்தையை மட்டும் இப்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர் கூறியது, தாய் அறிவுறுத்தியது என அனைத்தும் நினைவில் எழ, எதுவும் பேசவில்லை அவள்.

“குட்டி... நீ சொல்ல மாட்டீயா?” என அவன் ஆதங்கமாய்க் கேட்க, “மனோ... அது. இப்போ வேணாம் டா. நான், நான் பெரிய பொண்ணானதும் நம்ப கல்யாணம் பண்ணும்போது சொல்றேன் டா!” என்றாள் தவிப்பாய். மேலும் அவளை வருத்த விரும்பாதவன், தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அச்சுப்படமாய் அவளிடம் கொடுத்தான். 

 

சந்தனா ஆசையாய் அதை வாங்கிக் கொண்டாள். மோதிரம் வாங்க காசு ஏதென அவன் கேட்க, தலைமை ஆசிரியர் கொடுத்த பணத்தை அவளது படிப்பு செலவிற்காக பூரணி கொடுத்ததாகவும், அதில் வாங்கி வந்ததாக உரைத்தாள்.

மெலிதாய் இருட்டத் தொடங்க, சந்தனா கிளம்பும் நேரமும் வந்தது. மனோவைப் பிரியப் போகிறோம் என நினைத்ததுமே குபுக்கென கண்ணீர் பெருகியது. “மனோ... டைமாச்சு டா. நான் வீட்டுக்குப் போறேன். அம்மா திட்டுவாங்க!” என பையை எடுத்து தோளில் மாட்டினாள். மனோவிற்கும் தொண்டை அடைத்தது போல. அவள் கையை விடாதுப் பிடித்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் இருடி. இப்பவே போகணுமா?” என அவன் கரகரத்தக் குரலில் கேட்டான்.

“இல்ல மனோ... இருட்டுறதுக்குள்ள அம்மா வர சொன்னாங்க டா!” என புன்னகைக்க முயன்ற முகம் அவளது உவர்நீரால் பிசுபிசுத்துப் போனது.

“குட்டி... உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். சாரி டி... சாரி!” என்றவன் அவளது முகம் தாங்கி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டிருந்தான். சந்தனாவின் மூளை அவனை விலக்கு என்று கூற, மனம் ஆழ்ந்த அமைதியாயில் லயித்திருக்க, மனதின் கட்டளைக்கு கீழ் பணிந்திருந்தாள்‌. அவன் கண்களில் வழிந்த கண்ணீர் அவளையும் நனைத்தது.

“குட்டி.‌‌.. நான் வருவேன். உனக்காக வருவேன் டி. வெயிட் பண்ணு நீ!” என புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“மனோ... டைமாச்சு டா!” வாசலில் மனோவின் பள்ளித் தோழன் ஒருவன் குரல் கொடுத்தான். அவன் நாளை கிளம்புவதால் பள்ளி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சின்னதாய் அவனுக்கு பிரிவு உபச்சார விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காகத்தான் மனோவை அழைக்க வந்திருந்தான் அவனது தோழன்.

“வினோத்... நீ போடா. நான் குட்டியை வீட்ல விட்டுட்டு பத்து நிமிஷத்துல வரேன்!” என்றவன் சந்தனாவை மிதிவண்டியில் ஏற்றி வீடுவரை சென்று இறக்கிவிட்டான்.

“பார்த்து பத்திரமா போ மனோ...” என அவள் கூற, தலையை அசைத்து அவனது குட்டியைக் கண்களில் நிரப்பிக் கொண்டு அவன் நகர, சந்தனா விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்திருந்தாள். அன்றுதான் மனோ அவளைக் கடைசியாய் பார்த்தது‌.

இதோ இப்போதுதான் பதினெட்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவளைக் காண்கிறான் அவளின் மனோ என செல்லமாய் அழைக்கப்படும் மனோரஞ்சன்.

அந்த அறையே நிசப்தமாய் இருக்க, மனோ அந்த நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான். அவனது விழிகள் தளும்பியபடி இருக்க, தன்முன்னே நின்றவளை வேதனையுடன் பார்த்தான். எத்தனை பெரிய துரோகம். எத்தனை பெரிய இழப்பு.

நினைவிழந்த போது கூட குட்டி என அரற்றிய மூளையும் மனதும் அவனது குட்டியை அடையாளம் காட்ட விழைந்திருகின்றன. ஆனால், அவன் மறந்திருக்கிறான். தன்னுயிரில் சேமித்து வைத்திருந்த பெண்ணை மறந்திருக்கிறான் என நினைக்க நினைக்க நெஞ்சு முட்டுமளவிற்கு வேதனை தளும்பி நின்றது.

அவன் வேதனை சுமந்த முகத்தைக் கண்டதும் சந்தனாவிற்கு உயிர்கண் வரை வலித்திருக்க வேண்டும். “மனோ...” என்றாள் உதடுகளை அழுந்தக் கடித்து, அழுகையை அடக்கி புன்னகைத்தாள். உருண்டு திரண்டு நின்ற கண்ணீரை உள்ளிழுத்து தோற்க முயன்றவளின் முகம் உவர் நீரால் நனைந்தது. நான் நன்றாய் இருக்கிறேன் என அந்தப் புன்னகையில் கூற முயன்றவளைப் பார்த்த மனோவின் உயிர் மொத்தமும் உடைந்து உருகியிருந்தது.

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page