All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

உன்னை அமுதவிஷமென்பத...
 
Notifications
Clear all

உன்னை அமுதவிஷமென்பதா..!! (முதல் பாகம்) - Story Thread

Page 1 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை இன்று முதல் ரீரன் செய்கிறேன்.. தினமும் மாலை இந்த கதைக்கான அத்தியாயம் பதிவு செய்யப்படும்.

 

தொடர்ந்து இந்த கதையோடு பயணித்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

 
This topic was modified 2 months ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 1
 
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ
 
 
மெல்லிய குரலில் முணுமுணுத்து கொண்டிருந்தவளின் மனதில் ‘எப்போவும் கண்ணன் பாட்டு தானா..?! அப்பப்பா அப்படி என்ன தான் இருக்கு அதுல..! உனக்கு கண்ணன் ஸ்பெஷலா இல்லை அந்தப் பேரு ஸ்பெஷலா..!!’ என விழியில் குறும்பை தேக்கி ஏற்ற இறக்கத்தோடு மாலை தன்னிடம் கேட்டவனின் பிம்பம் தோன்றவும், “தெரியலையே..” என்று அப்போது அவனிடம் உதிர்த்த அதே பதிலையே இப்போதும் முணுமுணுத்தவளின் இதழ்கள் அழகிய புன்னகையைச் சிந்தியது.
 
 
அந்த இரவு பத்தரை மணிக்கு அந்தப் பகுதியே இருளில் மூழ்கி இருக்க.. அதைப் பற்றின எந்தப் பயமோ பதட்டமோ கொஞ்சமும் இல்லாமல் தன் வீடு இருந்த வீதியில் மிக இயல்பாக ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.
 
 
விடிந்தால் தீபாவளி அதற்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருளில் மூழ்கி உறங்கி கொண்டிருந்தது அந்தப் பகுதி. தீபாவளியை பற்றிப் பல்வேறு கதைகள் நம்பிக்கைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு. அதில் ஒன்று சீதையைச் சிறை எடுத்ததற்காக ராமன் ராவணனை வதம் செய்து நாடு திரும்பிய நாள் என்று இன்றும் ஒருசிலரால் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
 
 
மாலை நண்பர்கள் மத்தியில் இந்தப் பேச்சு வார்த்தை நடந்ததை நினைவு கூர்ந்தவாறே அதைப் பற்றிய யோசனையில் வீடு வந்து சேர்ந்தவளுக்கு இன்னும் சில நிமிடங்களில் தன்னைச் சிறையெடுக்க ஒரு ராவணன் வந்து கொண்டு இருக்கிறான் எனத் தெரிய நியாயம் இல்லை.
 
 
வண்டியை உள்ளே கொண்டு நிறுத்து விட்டு சாவியால் வீட்டை திறந்து உள்ளே சென்றவள், வெளி விளக்கை அணைத்து விட்டு கதவை உள்பக்கமாக பூட்டவும் பசி வயிற்றைக் கிள்ளியது.
மாலை நண்பர்களோடு சேர்ந்து குடித்த சாத்துக்குடி ஜூஸ் எப்போதோ கரைந்து காணாமல் போய் இருந்தது. அப்போதே சாப்பிட வேண்டும் போல் எழுந்த உணர்வில் சமையல் அறைக்குள் நுழைந்தவள், தோசை ஊற்ற எண்ணி மாவை எடுத்து வைக்கவும், அதைச் செயல்படுத்த முடியாத அளவிற்கு உறக்கமும் சோர்வும் வந்து தடுத்தது.
 
 
ஒரு குளியலை போட்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றவே, தோசை ஊற்றும் முடிவை மாற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்ரு. காலையில் கிளம்பும் அவசரத்தில் கலைத்து போட்டு விட்டு சென்ற வீடு அவளைப் பார்த்துச் சிரித்தது.
 
 
அம்ருவுக்கு எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். இன்று வெளியே கிளம்பும் போது ஆடைக்குப் பொருத்தமாக வாங்கி வைத்து இருந்த நகை செட்டில் ஒன்று மறைந்து இருந்து இவளோடு கண்ணாமூச்சு ஆடியதன் விளைவே வீடு இந்த நிலையில் இருப்பதற்கான காரணம்.
 
 
அனைத்தையும் கலைத்து போட்டு தேடி எடுத்தவளுக்கு மீண்டும் அதை எடுத்து வைக்க நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் “அம்ரு கிளம்பியாச்சா..?” எனக் கேட்டு பல்வேறு அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததில் அவசரமாகக் கிளம்பி விட்டாள்.
 
 
இப்போதும் இதை எடுத்து வைக்க நினைத்தவளுக்குப் பசியே பிரதானமாக இருக்க.. முதலில் குளித்து விட்டு வந்து சாப்பிடுவோம் பின் இதை எல்லாம் சரி செய்வோம் என்ற எண்ணத்தோடு சேலையைக் களைய முயன்றவள் ஊக்கை எல்லாம் கழற்றவும், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
 
 
‘இந்த நேரத்தில் யார்..?’ என்ற யோசனையோடு அம்ரு புருவத்தை நெரிக்கும் போது மன கண்ணில் வந்து புன்னகைத்தது ஒருவனே. “வீட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்டேனான்னு ஒரு போன் செஞ்சு கேட்டா போதாதா..? வீட்டுக்கே வந்து தான் கேக்கணுமா..! அப்போவே அவங்க கூப்பிட்ட உடன் அவங்க காரிலேயே வந்து இருக்கலாம்.. இப்போ அவங்களுக்குத் தான் தேவை இல்லாத அலைச்சல் பாவம்..” என்று சிறு புன்னகையோடு அலுத்து கொண்டவள், களைய துவங்கிய புடவையை அப்படியே அவசரமாக மேலே சுற்றிக் கொண்டு செல்ல முயலுவதற்குள் பொறுமையின்றிப் பல முறை அடித்து ஓய்ந்தது அழைப்பு மணி. “ஹப்பா அப்படி என்ன அவசரம்..?” என்று சென்று விரிந்த புன்னகையோடு கதவை திறந்தாள் அம்ரு.
 
 
ஆனால் வெளியே இவள் எதிர்பார்த்திருந்த நபருக்கு மாறாகக் கருப்பு நிற புல் சூட்டில் ஒரு புதியவன் நின்று கொண்டிருந்தான். அம்ரு யார் இவன் எனக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இங்கு இப்படி ஒருத்தி நிற்கிறாள் என்ற எண்ணமே இல்லாதது போல அவளைக் கொஞ்சமும் மதிக்காமல் உள்ளே நுழைந்து இருந்தான் அவன்.
 
 
விறுவிறுவெனத் தன்னைக் கடந்து உள்ளே செல்பவனைத் திகைத்துப் போய்ப் பார்த்திருந்தவள், “ஹலோ யாரு நீங்க.. உங்களுக்கு யார் வேணும்..?” என்று படபடக்க.. இவள் பேசுவதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல அங்கிருந்த அறைக்குள் எல்லாம் நுழைந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான் அவன்.
 
 
இந்த இரவு பதினோரு மணிக்கு புதியவனின் அத்துமீறல்களால் தோன்றிய பயத்தோடு அவன் பின்னே சென்று கொண்டிருந்தவள் அவனிடமிருந்து பதில் வர போவதில்லை என்று தெரிந்து போகவே, வேகமாகத் தன் கை பையைத் தேடி அதிலிருந்த அலைபேசியை எடுத்தாள்.
 
 
அதற்குள் தன் உருவத்திற்கு முன் தீப்பெட்டி அளவே இருந்த அந்தச் சிறிய வீட்டை எட்டே அடிகளில் அளந்து முடித்து இருந்தவன் வீடு இருந்த நிலையைக் கண்டு முகத்தைச் சுழித்தவாறே தான் தேடி வந்ததைக் காணாத ஆத்திரத்தோடு ஹாலுக்கு வந்தான்.
 
 
அங்கே பதட்டத்தோடு யாருக்கோ அழைக்க முயன்று கொண்டிருந்த அம்ரு அப்போதே அவன் கண்களில் பட்டாள். அடர் சிகப்பு நிற சீத்ரு சேலையில் அவசரமாகச் சுற்றிக் கொண்டு வந்ததாலும் பதட்டமாக அங்கும் இங்கும் இவன் பின் அலைந்ததாலும் கலைந்து ஆங்காங்கே அது நெகிழ்ந்து இருக்க.. இந்த இரவுக்குக் கொஞ்சமும் ஒத்துவராத அளவு அலங்காரத்தோடும் அதீத ஒப்பனையோடும் நின்றிருந்தவளின் அடர் சிகப்பு நிற உதட்டுச் சாயம் அவளின் உடையின் நிறத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருக்க.. மொத்தமாக அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து வெளிப்படையாகவே முகம் சுழித்தான் ஷௌர்ய வர்மன்.
 
 
பதட்டத்திலும் பயத்திலும் கைகள் நடுங்க அலைபேசியில் யாருக்கோ அழைக்க முயன்றுக் கொண்டிருந்தவளை ஒரே எட்டில் அவன் நெருங்கவும் அவனின் அருகாமை கொடுத்த பயத்தில் ஏற்கனவே யார் இவன் எதற்கு வந்து இருக்கிறான் என்று தெரியாமல் பயத்தில் இருந்தவள் நடுக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.
 
 
‘ஹப்பா அந்தக் கண்களில் தான் எத்தனை வெறுப்பு..!’ என்று அம்ரு உதறலோடு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்தக் கண்களில் அப்பட்டமாக வழிந்த வெறுப்பிலும் அருவருப்பிலும் அம்ருவின் உடல் வெளிப்படையாகவே நடுங்க துவங்கியது.
 
 
அதற்குள் அம்ருவின் கையில் இருந்த அலைபேசி திரையில் தன் பார்வையைப் பதித்து இருந்தவன், அவள் அவசர உதவி எண்ணான நூறை அழைக்க முதல்வதைக் கண்டு இகழ்ச்சியாக இதழ் வளைக்க.. அவ்வளவு நேரமும் அத்தனை அருகில் அவனையே மிரட்சியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் உள்ளே உதறல் எடுக்கத் தொடங்கியது.
 
 
இவளின் நிலையைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அலைபேசியோடு சேர்த்து அவளின் கையை அழுந்த பற்றி அவன் இழுத்துச் சென்றதில் விரலின் அழுத்தம் தாங்காமல் அந்த அலைபேசி சுவிட்ச் ஆப் ஆனது.
 
 
வெளிவாயிலுக்குத் தன்னை இழுத்துக் கொண்டு சென்றவனிடமிருந்து கையை விடுவித்துக் கொள்ள முயன்றவளால் விரலை கூட அசைக்க முடியவில்லை. அவன் பிடித்திருந்த அழுத்தத்தின் வலி வேறு வலிக்கச் செய்ய.. அவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடியவாறே “விடுங்க.. விடுங்க.. யார் நீங்க..? என்ன செய்யறீங்க..?” என்று கத்தி கொண்டிருந்தாள்.
 
 
அவளின் அத்தனை கேள்விக்கும் அவனிடம் ஒரு அசைவுமே இல்லை. தன் கரிய நிற லம்போகினியின் பின் பக்க கதவை திறந்து அம்ருவை உள்ளே தள்ளியவன் அதே வேகத்தில் முன் பக்க கதவை திறந்து ஏறி காரை எடுத்து இருந்தான்.
 
 
அது சற்று நகரை விட்டு தள்ளி இருந்த குடியிருப்பு பகுதி. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் அம்ருவின் வீட்டை தவிர, அனைத்துமே மிகப் பெரிய பங்களாக்கள். அதில் நடு இரவில் விளக்கு கூடப் போடபடாத இருளில் நடந்த இந்தச் செயலை பார்க்கவோ தடுக்கவோ அங்கு யாருமே இல்லை.
 
 
உள்ளே தள்ளிய வேகத்தில் நெற்றியில் முட்டி “ஸ்ஆஆ” என்ற சிறு வலியோடான குரலோடு அம்ரு நிமிர்ந்து பார்ப்பதற்குள் அந்தக் கார் தன் வேகத்தோடு பயணத்தைத் துவங்கி இருக்க.. “ஐயோ என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க..? வண்டியை நிறுத்துங்க..!” என்று அலறியவளின் குரலுக்குக் கொஞ்சமும் அவனிடம் அசைவு இல்லை.
 
 
தன் கதறலுக்குச் செவி சாய்க்காமல் இருப்பவனின் மேல் எழுந்த கோபத்தோடு எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டதில் “பிளீஸ் காரை நிறுத்துங்க.. யாரு நீங்க..? எதுக்கு என்னைக் கூட்டிட்டு..” என்று கோபத்தோடு கேட்டபடியே சற்று முன் வந்து அவனின் இட தோள் பகுதியின் சட்டையைப் பற்றி அம்ரு இழுக்கவும், அத்தனை நேர கல் போல் அமர்ந்திருந்த சிலைக்கு உயிர் வந்தது போலத் திரும்பி அம்ருவை பார்த்தான் ஷௌர்யா.
 
 
அந்த ஒற்றைப் பார்வைக்கு ஒடுங்கி தானாகவே பின்னால் நகர்ந்தவளுக்கு அந்தக் கண்களில் கண்ட பளபளப்பும் வெறுப்பும் பழி உணர்ச்சியும் சேர்ந்து உயிர் வரை அசைத்துப் பார்த்தது. அப்படி ஒரு பார்வையை அவள் தன் வாழ்நாளில் இதுவரை எதிர் கொண்டது கிடையாது.
 
 
இதிலேயே ஒடுங்கி போய் அமர்ந்து இருந்தவளுக்கு அதற்கு மேல் என்ன என்று யோசிக்கக் கூட முடியாத அளவுக்குப் பயத்தில் மூளை மறுத்து போய் இருக்க அப்படியே அச்சத்தில் விழிகள் விரிய வெறித்துக் கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அம்ரு.
 
 
அந்த லம்போகினி கார் இரவு 12 மணியின் அமைதியை கிழித்துக் கொண்டு காற்றை விட வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைச் செலுத்திக் கொண்டு இருந்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் அந்தக் கார் தடுமாறுவது மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதில் தெரிய வாய்ப்பில்லை.
 
 
ஒரு கையில் அனாயாசமாகக் காரை செலுத்தியபடியே மற்றொரு கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு தொடர்ந்து யார் யாருக்கோ அழைத்தபடி கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தவனின் முகம் பாறை கூட இத்தனை இறுக்கமாக இருக்குமா என்று எண்ணும் அளவிற்கு இருந்தது.
 
 
சாதாரணமாகவே அவன் எதிரில் நின்று பேச யாருக்கும் துணிவு அவ்வளவு சீக்கிரத்தில் வருவதில்லை. இன்று கண்கள் சிவந்து முகம் இறுகி அமர்ந்து இருந்தவனிடம் எப்படிக் கேட்பது என்னவென்று கேட்பது எனப் புரியாமல் மிரண்டு விழித்தபடி விழிகளில் இருந்து கண்ணீர் வழிய மிரண்டு போய்ப் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் அம்ரு.
 
 
இதுவரை கேட்ட எதற்குமே அவனிடமிருந்து பதில் இல்லை.. இனியா பதில் வந்து விடப் போகிறது...!! நிச்சயம் அவன் தனக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்பது புரிந்தது ஏன் எதற்காகத் தன்னை இப்படி இந்த இரவில் கடத்தி செல்கிறான் இது கூடப் புரியாமல் அவனிடம் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
 
 
இரவு பணி முடிந்து தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவன் வழக்கமாக இந்த நேரத்தில் இந்தப் பாதையில் வாகனங்கள் எதுவும் அதிகம் வராததால் சாதாரணமாகச் சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தவன் சற்றும் எதிர்பாராமல் தன்னை அடித்துத் தூக்குவது போல மின்னல் வேகத்தில் தன்னை நெருங்கிய லம்போகினியை கண்டு செய்வதறியாது திகைத்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட... தன் பாதையில் குறுக்கே வந்தவனைக் கடைசி நொடியில் கண்டு வாகனத்தைக் கிரீச்சிட்டு நிறுத்தி இருந்தான் ஷௌர்யா.
 
 
அதுவரை தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்த அம்ரு, இந்தத் திடீர் பிரேக்கில் முன்னால் சென்று முட்டி கொள்ள.. முன்பு அடிபட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டது. அதில் “ஸ்ஸ்ஸ்..” என்று தலையை நிமிர்த்தியவள் முன் இருக்கையில் அவன் இல்லாமல் காலியாக இருப்பதைக் கண்டு பார்வையைத் திருப்ப...
 
 
காரை நிறுத்திய வேகத்திலேயே வாகனத்தில் இருந்து இறங்கி அவன் அருகில் சென்றவனைத் தன் உறை நிலையிலிருந்து மீண்டவன் ‘எனக்கு ஒன்னும் இல்ல சார்’ என்று கூற வாயைத் திறந்த நொடி அவனை வண்டியோடு சேர்த்து எட்டி உதைத்ததில் அவன் ஒரு பக்கமும் வண்டி ஒரு பக்கமும் தெறித்து விழுந்திருந்தது.
 
 
தூக்கி எறியப்பட்டதால் எழுந்த வலியோடு எழுந்து நிற்க முடியாமல் தலையை மட்டும் உயர்த்தி என்னவென்று புரியாமல் அவன் மிரட்சியும் குழப்பமுமாக ஷௌர்யாவை பார்க்க...
 
 
“நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா...? உன்னை மாதிரி தெருவுல போற பன்னியை எல்லாம் அடிச்சு என் வண்டி கறையாகணுமா... போய்க் குப்பை லாரியில் விழு டா...” என்று கர்ஜனையாகக் கூறியவனின் குரலில் மிரண்டு போய்ப் பார்த்து இருந்தவனைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மீண்டும் வந்து காரில் ஏறியவனை அதுவரை இருந்த அழுகை கூட நின்று போய்ப் பயம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் இரு கரங்களும் தானாக உயர்ந்து அவளின் வாயை பொத்திக் கொண்டது பயத்தில்...!
 
 
அவளின் வாழ்க்கையில் இது போல ஒரு அசுரனை இதுவரை அவள் பார்த்ததில்லை. அவள் பார்த்து பழகிய அத்தனை பேரும் இனிமையான மனிதர்கள் தான் என்பதால் ஷௌர்யாவையே அச்சத்தோடு வெறித்தவளின் இதழ்கள் அவள் அனுமதி இல்லாமலே “டீமன்” என மெல்ல உச்சரித்தது.
 
 
அந்த இரவின் அமைதியில் முன்னால் அமர்ந்து இருந்தவனின் காதிலும் அது தெளிவாக விழுந்தது. ஆனாலும் அவன் அம்ருவின் பக்கம் திரும்பவே இல்லை. அந்தக் கடற்கரை சாலையில் பறந்த காரில் வெளியே இருந்த குளுமைக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இருவருக்கும் இரு வேறு மனநிலையின் காரணமாக அனல் அடித்தது.
 
 
அப்போது திடீரெனக் கேட்ட போன் சத்தத்தில் தன் ஸ்தம்பித்த நிலையில் இருந்து கலைந்தவள் முன்னே பார்க்க.. காரில் இருந்த ப்ளுதூத்தில் அலைபேசி இணைக்கப்பட்டு யாருக்கோ அழைப்பு போவது தெரிந்தது.
 
 
“சொல்லுங்க மிஸ்டர் வர்மா..” என்ற சற்று பவ்யமான குரல் கம்பீரமாக கேட்கவும், “மிஸ்டர் கமிஷனர்.. நான் ஓல்ட் மகாபலிபுரம் ரோட்ல போயிட்டு இருக்கேன்.. இங்கே உங்க ஆளுங்க இருக்காங்க, என் வண்டில ஒரு பொண்ணு இருக்கா..” என்று ரத்தின சுருக்கமாகப் பேசினான் ஷௌர்யா.
 
 
“நான் பார்த்துக்கறேன் மிஸ்டர் வர்மா..” என்று அவர் சொன்ன அடுத்த நொடி அழைப்பை துண்டித்து இருந்தான் ஷௌர்யா. இதைக் கேட்ட பிறகே எதிரில் பார்வையைத் திருப்பியவளுக்குச் சற்றுத் தூரத்தில் சாலை தடுப்பை குறுக்கே வைத்துக் கொண்டு ஒரு காவலர் குழு நிற்பது தெரிந்தது.
 
 
இவர்கள் அருகே நெருங்கவும், சாலை தடுப்பை அகற்றி அவர்கள் வழி விடவும் சரியாக இருந்தது. எங்கும் நிறுத்த வேண்டிய அவசியமோ வண்டியின் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியமோ இல்லாமல் வந்த வேகத்திலேயே அந்தப் பகுதியை கடந்து இருந்தான் ஷௌர்யா.
 
 
அதைக் கண்டவளுக்கு ‘எவ்வளவு தைரியமா கமிஷ்னரிடமே ஒரு பெண்ணைக் கடத்தி போவதாகச் சொல்றான்..!’ என்று எண்ணம் தோன்றவும், வீட்டில் தன் அலைபேசியில் காவல்துறைக்கு அழைக்க முயன்றதை கண்ட பின் அவன் இகழ்ச்சியாக இதழ் வளைத்ததற்கான காரணம் புரிந்தது.
 
 
இவன் யார்..? என்ன..? எதற்கு..? என்று எதுவும் புரியாத நிலையில் எந்த ஒரு கேள்விக்கும் இதுவரை பதிலும் கிடைக்காத நிலையில் எதற்காக எங்குக் கொண்டு செல்லப்படுகிறோம் என்ற அச்சத்தோடே பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு அதன் பிறகு அவனிடம் எதையும் கேட்கவும் தைரியம் இல்லை.
 
 
அந்தக் கார் ஒரு பெரிய கேட் போட்ட வீட்டிற்குள் நுழையவும், அதுவரை இருந்த பயத்தின் அளவு பன்மடங்கு பெருக.. எகிறி குதிக்கும் இதயத்தோடு அம்ரு பார்த்திருந்தாள். கார் உள்ளே அரைக் கிலோமீட்டர் சென்று நிற்கவும், அதற்காகவே காத்திருந்தது போல் ஒருவன் ஓடி வந்து காரின் அருகில் நின்றான்.
 
 
ஒரு வேகத்தோடு இறங்கிய ஷௌர்யா, அதே வேகத்தோடு பின் பக்க கதவை திறந்து அம்ருவை பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். “இங்கே பாருங்க யார் நீங்க..? எதுக்கு இப்படி..? இது என்ன இடம்..? நீங்க எதுவோ தப்பா..? நீங்க நினைக்கற ஆள் நான் இல்லை..?” என்று விடாமல் கத்தியவாறே அவனின் பிடியை விலக்கவும் கையை உதறிக் கொண்டு ஓடவும் போராடியபடியே அம்ரு போட்ட அத்தனை சத்தமும் முயற்சியும் வீணானது.
 
 
அவனின் பிடியை அசைக்கக் கூட அவளால் முடியவில்லை. இறுதியாக இவனிடம் பேசி பயனில்லை என்று எண்ணியவள் திரும்பி தங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவனிடம் ஷௌர்யா உயிரை விடச் சொன்னால் கூட யோசிக்காமல் செய்யும் விஸ்வாசி இவன் எனத் தெரியாமல் “பிளீஸ் நீங்களாவது சொல்லுங்க, இங்கே என்ன நடக்குது.. நீங்க நினைக்கற நபர் நான் இல்லை பிளீஸ் புரிஞ்சுக்கோங்க.. வேற யாரோன்னு நினைச்சு நீங்க என்னை..” என்று அம்ரு வார்த்தைகளை முடிப்பதற்கு முன் ஒரு அறைக்குள் அவளை அலட்சியமாகத் தள்ளி கதவை அடைத்து இருந்தான் ஷௌர்யா.
 
 
அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறியவன், “பிரபு, அங்கே என்ன நடக்குது..?” என்றதும் வேகமாக அனைத்தையும் ஒப்பித்தான் பிரபு. ஷௌர்யா கார் அருகில் வரவும் நான்கு ஜிம் பாய்கள் அதுவரை நின்றிருந்த இடத்தில் இருந்து அருகில் வந்து நின்றனர்.
 
 
தன் காரின் கதவை திறந்தவன், அப்படியே பார்வையை மட்டும் திருப்பி “நான் திரும்பி வரும் வரை கவனம்.. ஏதாவது தப்பாச்சு, உங்க உயிர் உங்களுக்கு இல்லை..” என்று கூறியவனின் குரலில் இருந்த சீற்றத்தை கண்டு பயத்தோடே அவர்கள் தலையசைத்தனர்.
 
 
அடுத்த நொடி ஷௌர்யாவின் கார் புயல் வேகத்தில் பறக்க.. அதைப் பின் தொடர்ந்து பிரபுவின் கார் சென்றது.
 
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 1

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

விஷம் – 2

அம்ரு அந்தப் பூட்டி இருந்த கதவையே திகைப்போடு பார்த்திருந்தாள். மனமெங்கும் பயம் பந்து போல உருண்டு வந்து அவளை நிலைகுலைய செய்தது.

 

யாரென்றே தெரியாத ஒருவன் திடீரென வீடு புகுந்து இழுத்து வந்து இப்படி ஓரு அறையில் அடைத்து வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று புரியாமல் திகைத்து நின்றிருந்தாள் அம்ரு.

 

தன்னைச் சுற்றி என நடக்கிறது என்றே அம்ருவுக்குப் புரியவில்லை. ‘ஒருவேளை இந்தப் படங்களில் செய்திகளில் எல்லாம் வருவது போலத் தன்னிடம் அத்துமீற போகிறானோ..!’ என்று எண்ணியவளுக்கு இதயம் தொண்டைக்கு வந்து துடித்தது.

 

‘வேறு எதற்கு இப்படி நடு இரவில் வீடு புகுந்து இழுத்து வர போகிறான்’ என்று மனம் கேள்வி கேட்கவும், ‘அதுக்கு வீடு புகுந்தா தூக்கி வருவாங்க..?! நைட்ல தனியா வரும் போதோ இல்லை யாரும் இல்லாத இடத்திலோ தானே இப்படி எல்லாம் நடக்கும்’ என மூளை வாதிடவும் ‘நீயும் தானே தனியா நைட் வந்தே..?’ என்று மீண்டும் மனம் கேள்வி எழுப்பியதில் ‘அப்போ அதுல இருந்து உன்னைப் பாலோ செஞ்சு வந்து இருப்பானோ..?!’ என மூளை குழப்பி விட மொத்தத்தில் பயந்து தான் போனாள் அம்ரு.

 

இப்படி ஏதேதோ எண்ணி குழம்பி பயந்தவள் எதில் இருந்தோ தன்னைக் காத்துக் கொள்வது போல அந்த அறையின் கதவின் மேல் சாய்ந்து யாரும் அதைத் திறந்து விடாமல் தடுப்பது போல நின்று கொண்டாள்.

 

பாவம் ஷௌர்யாவின் ஒரே தள்ளில் கதவு மட்டுமல்ல அவளும் தூர போய் விழுவாள் எனப் புரியாமல் அப்படியே வெகு நேரம் நின்றிருந்தாள் அம்ரு. எவ்வளவு நேரம் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாது. அப்படியே தன்னையே மறந்தே ஒரு நிலை அது. இரவு வீடு திரும்பும் வரையும் கூடத் தன் வழக்கப்படி எதுவும் மாறாமல் தானே நடந்தது. இதில் எங்கு என்ன தவறாகி போனது என்று தான் இந்த நொடி வரை அம்ருவுக்குப் புரியவில்லை.

 

அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தவள் எப்போது அங்கேயே சரிந்து மடிந்து அமர்ந்தாள் என்று கூட அவளுக்குத் தெரியாது. ஏனெனில் அவளே இந்த நொடி வரை அதை உணரவில்லை. எதிரில் தெரிந்த சுவரையே வெறித்துக் கொண்டு அப்படியே உறை நிலையில் இருந்தாள் அம்ரு.

 

திடீரெனக் கதவிற்கு வெளியே கேட்ட சிரிப்புச் சத்தத்தில் அதுவரை மறந்து இருந்த தன்னிலை மீண்டவள் சுற்றும் முற்றும் ஒரு பதட்டத்தோடு பார்க்க.. பொழுது விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது தெரிந்தது.

 

இவற்றையெல்லாம் விட வெளியில் இருந்து கேட்ட சத்தமே அவளைப் பயத்தில் உறைய செய்வதாய் இருக்க.. மெதுவாக எழுந்து கதவை மேலும் சுவரோடு சேர்த்து இறுக்கி தடை செய்வது போல நின்றுக் கொண்டாள்.

 

வெளியே பேச்சும் சிரிப்புமாகச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதில் மிரண்டு நின்றிருந்தவளின் மனம் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனாகத் துடிதுடித்துப் படபடத்துக் கொண்டிருந்தது.

 

ஆனால் அவள் பயந்தது போலச் சில மணி துளிகள் கடந்த பின்னும் எதுவும் நடக்கவே இல்லை. இருந்தும் அவளின் பயம் மட்டும் விட்டு விலகாமல் அப்படியே இருக்க.. மெல்ல கதவின் மேல் காதை வைத்து ஊன்றி கவனிக்கத் தொடங்கினாள்.

 

அங்குப் பல்வேறு குரல்கள் கேட்டுக் கொண்டு இருந்தது. மூன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் வெளியில் இருப்பது புரிய.. அவசரமாகக் கதவை உள்பக்கமாகப் பூட்டி கொள்ள எண்ணி கைகளால் தேடியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு இருந்தது நம்பர் போட்டு பூட்டும் கதவு.

 

அதில் சோர்ந்து போய்க் கதவின் மேலேயே சாய்ந்தவளுக்கு அப்போதே மனதில் தோன்றியது அது, வெளியில் கேட்கும் குரல்களில் ஒன்று கூட அந்த டீமேனுக்குச் சொந்தமானது இல்லை. ‘அப்போது அவன் இங்கு இல்லையா..?!’ என்று எண்ணம் செல்லும் போதே, ‘அதெப்படி சில நிமிடங்களில் அவன் பேசிய சில என்று கூடச் சொல்ல முடியாது சிற்சில வார்த்தைகளைக் கொண்டு அவன் குரலை உன்னால் அடையாளம் காண முடியுமா என்ன..?’ என்று மூளை கேள்வி எழுப்பியது.

 

அப்படி ஒரு அதிகாரமும் ஆத்திரமும் கலந்த குரலை இதுவரை அவள் கேட்டது இல்லை என்பதோடு அதில் இருந்த அழுத்தமான கர்ஜனை அவளை நடுங்க செய்வதாய் இருந்தது. அதுவே அந்தக் குரலை வாழ்நாளில் அவள் மறக்க முடியாத அளவு செய்து இருந்தது.

 

அப்படியே வெகு நேரம் அம்ரு நின்றிருந்தும் கூட அந்தக் கதவை திறக்கவோ யாரும் உள்ளே வர முயலவே இல்லை என்றானவுடன் அவளுக்கே ஒரு சந்தேகம் எழுந்தது. ஒருவேளை இது எல்லாமும் தன் கொடுங்கனவாக இருக்குமோ..?! என்று எண்ணியவள் தன் கையில் கிள்ளி பார்க்க.. அதுவோ வலியை கொடுத்து இது அனைத்தும் உண்மை தான் என்று அழுத்தமாகச் சொல்லி சென்றது.

 

அப்போது மட்டுமல்ல அன்று முழுவதுமே அந்தக் கதவு திறக்கபடவும் இல்லை. யாரும் உள்ளே வரவும் இல்லை. இதில் தான் நினைத்துப் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை என்று தான் சந்தோஷபட வேண்டுமா..?! இல்லை ஏன் இங்கு அடைக்கப்பட்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் அழ வேண்டுமா..?! என்று புரியாத நிலையிலேயே அன்றைய நாளை கடத்தினாள் அம்ரு.

 

மெல்ல இருள் கவிழ தொடங்கிய நேரத்தில் அதுவரை அமர்ந்திருந்த கதவுக்கு அருகில் இருந்து எழுந்தவள் இந்த இருளை துணையாகக் கொண்டு எங்காவது எப்படியாவது தப்பிக்க முடியுமா என்று அந்த அறை முழுவதையும் சுற்றி வந்தாள்.

 

எங்காவது ஒரு வழியாவது கிடைக்குமா என்றவளின் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துப் போனது. அங்கு இன்னொரு கதவோ வேறு தப்பிக்கும் வழியோ எதுவும் தென்படவில்லை.

 

ஒரு கட்டத்தில் தனக்கு இங்கிருந்து விடுதலையே கிடைக்காதோ என்று மனம் சோர்ந்து போக அப்படியே படுக்கைக்கும் வாட்ரோபுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் மடங்கி அமர்ந்தவளுக்குக் கண்ணீர் அருவியாக வழிய தொடங்கியது.

 

மனம் தன் போக்கில் யோசிக்கத் தொடங்கி இருந்தது. இவனை இதற்கு முன்பு எங்காவது எப்போதாவது பார்த்து இருக்கிறோமா.?! நமக்கே தெரியாமல் இவனுக்கு நம்மால் ஏதேனும் தொந்தரவு நிகழ்ந்து இருக்குமா..?! வண்டியில் வரும் போது யாரையாவது மோதி அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து இருக்குமா..?!’ என்றெல்லாம் தனக்குத் தெரிந்தவரை யோசித்துப் பார்த்தவளுக்கு அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது.

 

இதோ இங்குக் கொண்டு வந்து அடைக்கப்பட்டு இருபத்து நான்கு மணிநேரத்தை கடந்த பின்னும் அம்ருவுக்குப் பசி, தாகம், தூக்கம் போன்ற எந்த உணர்வுமே இப்போது வரை தோன்றவில்லை. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் பயம்.. பயம்.. பயம் மட்டுமே..!

 

அப்படியே அமர்ந்து இருந்தவள் அந்த நாளும் கடந்து அடுத்த நாளும் வந்த போதும் கூட அங்கிருந்து அசையவோ எழவோ இல்லை.

 

இங்குத் தன் வீட்டில் கையில் இருந்த அலைபேசியையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஷௌர்யாவின் எதிர் பார்ப்பை பூர்த்திச் செய்வது போல அழைப்பு வரவும், எந்த உணர்வையும் முகத்திலும் குரலிலும் காட்டாமல் எடுத்து காதுக்குக் கொடுத்தவன் அந்தப்பக்கம் சொன்ன செய்தியை கேட்டு “நல்லா தெரியுமா பிரபு... நியூஸ் உண்மை தானா...” என்று கர்ஜனையோடு கேட்டான்.

 

இவனின் கர்ஜனையில் அந்தப்பக்கம் அலைபேசியைப் பிடித்திருந்தவனின் கைகள் கூடப் பயத்தில் நடுங்கியதோ என்னவோ...!! அவ்வளவு பயம் அவன் உயிர் வரை சென்று அவனை அசைத்துப் பார்த்தது.

 

“ஆமா சார் தகவல் உண்மைதான்...” என்று பவ்யமான குரலில் கூறியவன் அதற்கான சாட்சியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் சேர்த்து கூற, உடனே அவனின் அழைப்பை துண்டித்தவன் பிரபு அனுப்பிய சாட்சியைத் தன் அலைபேசியின் திறந்து பார்த்தான்.

 

அவன் சொல்லியிருந்தது அப்படியே புகைப்படமாக ஷௌர்யாவின் கண்முன் நின்றிருந்தது. அதையே தாடை இறுக கண்கள் சிவக்க சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகள் அந்த அலைபேசியே உடையும் அளவுக்கு அதை இறுக்கி பிடித்தது. அடுத்த நொடி புயலென அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

 

தன் காரை புயல் வேகத்தில் செலுத்தி கொண்டு இருந்தவனின் மனமோ எரிமலைக்குப் போட்டியாகப் பல அழுத்தங்களையும் ஆத்திரங்களையும் உள்ளடக்கி கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 

இப்போது நடந்து முடிந்த ஒன்றுக்காகப் பழி தீர்க்கவே புயலெனச் சென்று கொண்டு இருந்தவனின் மனதில் திடீரென ஒரு எண்ணம் தோன்றவே சற்றும் யோசிக்காமல் காரை வளைத்துத் திருப்பிக் கொண்டு சென்று நகை கடையின் முன் நிறுத்தினான் ஷௌர்யா.

 

இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென அறையின் கதவை உடைத்துக் கொண்டு வருவது போலப் பெரும் சத்தத்தோடு உள்ளே நுழைந்தவனைக் கண்டு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பயத்தில் எழுந்து நின்றிருந்தாள் அம்ரு.

 

அவளை நெருங்கிய வேகத்தில் என்ன நடக்கிறது என அம்ரு உணர்வதற்கு முன்பாக அவளின் கழுத்தில் மங்கல்யத்தைக் கட்டி முடித்திருந்தான் ஷௌர்யா.

 

இரண்டு நாட்களாக நடப்பது எல்லாம் அதிர்வுக்கு மேல் அதிர்வை தர, இப்போது நடந்து முடிந்து இருப்பதை உணர்ந்து கொள்ளக் கூட அம்ருவுக்கு அவகாசம் இல்லாமல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டிருந்தது.

 

முதலில் ஷௌர்யா அருகில் வந்ததிலேயே கண்கள் தெரித்து விடும் அளவுக்குப் பயத்தில் கை கால் எல்லாம் வெடவெடக்க அவனைப் பார்த்திருந்தவள், ஷௌர்யா தன் கழுத்தில் அணிவிப்பது என்ன என்று புரியா ஒரு நிலையில் தான் நின்றிருந்தாள்.

 

காரணம் ஜெய்பூரை பூர்விகமாகக் கொண்டவனான ஷௌர்யா அணிவித்தது அவன் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படியான கருக மணியில் கழுத்தை விட்டு சற்று இறங்கி இருக்கும் அளவிளான அழகிய கல் வைத்த டாலர் போன்ற டிசைன் உள்ள மாங்கல்யம்.

 

அவளுக்கு இது மாங்கல்யம் என்றே புரியாத நிலையில் தன் கழுத்தில் எதற்கு இந்தச் செயின் என்பது போலத் தான் திகைத்து நின்றிருந்தாள் அம்ரு. அதையே ஒரு புரியா பார்வையில் அலசியவாறு நின்றிருந்தவளை சொடுக்கிட்டு தன்னிலைக்குக் கொண்டு வந்தவன்,

 

"இது உன் கூட வாழறதுக்கான லைசென்ஸ்ன்னு நினைச்சுக் கனவு எதுவும் கண்டுடாதே... உன்னை என் கூடவே வெச்சு அணுஅணுவாய் சித்திரவதை செய்றதுக்கான லைசென்ஸ் இது...” என்று கூறியவன் அவளைத் தொட்ட தன் விரல்களை அருவருப்போடு பார்த்துக் கொண்டே “பிரபு சனைடைசர் எடுத்துட்டு வா...” என்று கூறியபடியே வெளியேற போனவன் அறை வாயிலில் நின்று மீண்டும் சொடுகிட்டு அவளை தன்னை நோக்கி நிமிர செய்தான்.

 

“யுவர் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்... என்னுடைய சித்ரவதைக்கு ரெடி ஆகிக்கோ மை டியர் பொண்டாட்டி...” என்று விட்டு வெளியேறிவிட... நடப்பது.. நடந்து கொண்டிருப்பது என்று எதுவுமே புரியாமல் விக்கித்து நின்று இருந்தாள் அம்ரு.

 

அவனின் வார்த்தைகளிலேயே பயத்தில் உறைந்து இருந்தவளுக்கு வெகு தாமதமாகவே ஷௌர்யாவின் வார்த்தைகளும் அதில் அவன் அழுத்தத்தோடு உச்சரித்த பொண்டாட்டி என்பதும் பதிந்தது. அதில் ஒரு திடுக்கிடலோடு தன் கழுத்தை குனிந்து மீண்டும் பார்த்தவளுக்கு அவன் வார்த்தைகள் உண்மை என்பதைச் சிறு வயதில் இருந்து அவள் பார்த்த பல ஹிந்தி படங்கள் புரிய வைத்து இருந்தது.

 

தான் இதுவரை ஏதேதோ எண்ணி கலங்கி தவித்துக் கொண்டிருந்தது எதுவும் நிகழாமல் அதற்கு முற்றிலும் நேர் மாறாக இப்படி ஒரு நிகழ்வை இங்குக் கொஞ்சமும் எதிர்பாராதவள் அதன் தாக்கத்தைக் கொஞ்சமும் தாங்க முடியாமல் மயங்கி சரிந்தாள்.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் அவளிடம் தன் ஆத்திரத்தை வார்த்தைகளாகக் கொட்ட எண்ணி அறைக்குள் நுழைந்தவன் அங்கு அலங்கோலமாக விழுந்து கிடந்தவளை கண்டு அவளையே ஒரு உணர்வில்லா பார்வையில் அளந்தான்.

 

மூன்று நாட்களாக அவள் உடுத்தி இருந்த சேலை வேறு கசங்கி உடலோடு ஒட்டி சில இடங்களில் விலகி இருக்க.. அம்ரு விழுந்து இருந்த நிலையில் அது இன்னும் தன் தாராள மனப்பான்மையைப் பறை சாற்றிக் கொண்டு இருந்தது.

 

இதையும் அவளின் ஒருவகைத் தந்திரம் என்று எண்ணியவன் அருவருப்பாக முகம் சுழித்துத் தனக்குள் எதையோ உச்சரித்தவாறு அறையில் பார்வையைச் சுழலவிட்டு எதையோ தேட.. அங்கு அவன் தேடியது எதுவும் கிடைக்கவில்லை. பின் வெளியில் சென்று அங்கிருந்த உணவு மேசையில் இருந்த கண்ணாடியிலான தண்ணீர் ஜக்கை கொண்டு வந்து மொத்தமாக அவள் மேல் கவிழ்த்தான் ஷௌர்யா.

 

அதில் பதறி எழுந்து கொள்ள வேண்டியவளோ இதை உணரும் நிலையில் கூட இல்லை பாவம். தண்ணீரை கொட்டிவிட்டு அவளின் செயல்களையே ஊன்றி கவனித்துக் கொண்டு இருந்தவன், அப்போதும் அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லாததைக் கண்டு தான் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று அம்ருவின் அருகில் சென்று அவளின் முகத்தைத் தன் ஷூ கால்களால் அப்படியும் இப்படியுமாக அசைத்துப் பார்த்தான்.

 

அப்போதும் கண்கள் மூடி எந்த ஒரு அசைவும் இல்லாமலேயே தான் அம்ரு கிடந்தாள். அவளையே சில நொடிகள் பார்த்தவன், “பிரபு..” என்றழைக்க.. வேகமாக வந்து அறை வாயிலில் நின்றான் அவன்.

 

அம்ருவை சுட்டி காண்பித்து ஏதோ சொல்ல துவங்கியவன், பின் தன் கார் சாவியைத் தூக்கி அவனிடம் போட்டு, “பேக் டோர் ஓபன் செய்..” என்றவாறே அம்ருவை குனிந்து தூக்கினான். அதில் நொடியில் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பிரபு காரை நோக்கி வேகமாக ஓடினான்.

 

அவர்கள் பார்ம் ஹவுஸ் இருந்த பகுதிக்கு அருகில் பெரிய மருத்துவமனைகள் எதுவும் இல்லாமல் போனதால் கண்ணில்பட்ட சற்று சுமாரான மருத்துவமனையின் வாயிலில் காரை கொண்டு சென்று நிறுத்தினான் ஷௌர்யா.

 

அவர்களைப் பின் தொடர்ந்து வந்த பிரபு, காரை விட்டு ஷௌர்யா இறங்குவதற்குள் வேகமாக ஸ்ட்ரெச்சரோடும் உதவிக்கு ஆளோடும் வந்து நின்றான். அம்ரு வேகமாக உள்ளே கொண்டு செல்லப்படவும், அவளைப் பரிசோதித்த பெண் மருத்துவர்,

 

“என்ன ஆச்சு இவங்களுக்கு..? ஏன் மயங்கினாங்க..? உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா..?” என்றெல்லாம் வெளியே நின்றிருந்த இருவரில் கம்பீரமும் அழுத்தமுமாக இருக்கும் ஷௌர்யாவையே பார்த்து அனைத்து கேள்விகளையும் கேட்க..

 

அவனோ அத்தனைக்கும் சேர்த்து மிகச் சாதாரணமாக ஒரே பதிலை “டோன்ட் நோ” என்றான் ஒரு சிறு தோள் குலுக்கலோடு. அவனை ஒரு புரியாத பார்வையோடு அளந்தவர், “அவங்க பேர் அப்பறம் வயசு சொல்லுங்க..” என்று நர்ஸ் கொண்டு வந்து கொடுத்த கேஸ் ஷீட்டில் எழுதுவதற்காகக் கேட்டார்.

 

அதற்கும் அதே போலத் தன் இரு பேக்கேட்டிலும் கையை விட்டுக் கொண்டு நின்ற நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாமல் மீண்டும் அதே போல விட்டேற்றியான தொனியில் “டோன்ட் நோ” என்றான் ஷௌர்யா.

 

அதில் ஷௌர்யாவை யோசனையோடு நிமிர்ந்து பார்த்தவர், “ஓ.. அவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியாதா..? வழியில் மயங்கி இருந்தாங்களா..?! ஓகே ஒகே..” என்றவர், நர்ஸ் பக்கம் திரும்பி “இவங்க யாருன்னு தெரிஞ்சுக்கக் கூடிய திங்க்ஸ் ஏதாவது இருக்கான்னு செக் செய்ங்க.. நாம பர்ஸ்ட் எட் மட்டும் செய்வோம், நாளைக்கு அவங்க சொந்தகாரங்க வந்து..” என்று பேசி கொண்டிருந்தவரின் வார்த்தையை முடிக்கக் கூட விடாமல் “அப்படி யாரும் வர மாட்டாங்க.. நீங்க உங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் செய்ங்க..” என்று இடையிட்டது ஷௌர்யாவின் அழுத்தமான குரல்.

 

“அப்படி எல்லாம் செய்ய முடியாது சார். இது சாதாரண மயக்கம் போலத் தெரியலை.. நாளைக்கு ஏதாவது பிரச்சனையான நான் தான் மேனேஜ்மெண்ட்டுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்..” என்று மருத்துவர் தன் நிலைமையைப் புரிய வைக்க முயன்றார்.

 

“அப்படி என்னை மீறி இங்கே யாரும் வர வாய்ப்பில்லை..”

 

“அது எப்படிச் சார் நீங்க அவ்வளவு உறுதியா சொல்ல முடியும்..”

 

“ஷி இஸ் மை வொய்ப்.. வேற யாரு உரிமை கொண்டாட்டிட்டு வர முடியும்..?!” என்று அவரைப் பார்த்து எகத்தாளமாகக் கேட்டான் ஷௌர்யா.

 

இதில் இப்போது திகைத்து விழிப்பது அவரின் முறையானது. ‘இவர் என்ன சொல்றார்.. நாம சரியா தான் கேட்டோமோ.?! அது இவர் மனைவியா..! ஆனா பேர் தெரியாதா..?!!’ என்று அவர் குழப்பத்தோடு ஷௌர்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

“இப்போ என்ன ட்ரீட்மெண்ட் தொடங்கற ஐடியா இருக்கா..? இல்லை இப்படியே என் முகத்தைப் பார்த்துகிட்டு நிக்கப் போறீங்களா..?! இதுக்குத் தான் நான் இது போலச் சீப்பான பிளேஸ்க்கு எல்லாம் வரதே இல்லை..” என்றான் சுள்ளென்று.

 

அதில் அவருக்கும் முகம் லேசாகக் கறுத்துக் கோபம் வந்து விட்டது, ‘இப்போ மட்டும் எதுக்கு சார் வந்தீங்க..?’ என்று கேட்க வாய் வரை வார்த்தை வந்த போதும் அவனின் நடை உடை பாவனைகளே மிகப் பெரிய இடத்தில் இருப்பவன் என்பதைப் புரிய வைத்து இருக்க.. நாளை இது பெரும் பிரச்சனையானால் மேனேஜ்மெண்ட்டுக்குப் பதில் சொல்லும் நிலைக்குத் தான் தள்ளபடுவோம் என்று உணர்ந்து அமைதியாக அறைக்குள் சென்றார்.

 

“பேரு தெரியாதாம், வயசு தெரியாதாம் ஆனா பொண்டாட்டியாம்..!” என்று மெல்ல முணுமுணுத்தவாறே அவர் அம்ருவை கவனிக்க அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நர்சுக்கு எதுவுமே புரியவில்லை.

 

வெளியில் நின்றிருந்த ஷௌர்யாவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க பொறுமை இல்லாமல் போக.. தன் வேக நடையுடன் வாசலை நோக்கி சென்றான்.

 

“சார்.. சார்..” என்று ஷௌர்யா வாசலை நெருங்கவும் நர்ஸ் பின்னாலேயே ஓடி வந்தார். ஒற்றை விழியையும் புருவத்தையும் மட்டும் வளைத்து என்ன என்று முழுவதுமாகக் கூடத் திரும்பி நிற்காமல் கேட்டவனின் அந்த ஆளுமையிலும் அழகிலும் ஒரு நிமிடம் அந்த முப்பத்தைந்து வயதை கடந்து கொண்டு இருக்கும் நர்ஸே தன்னை மறந்து நின்றுவிட்டார்.

 

ஒரு பொறுமை இல்லாத வேக மூச்சோடு அந்தப் பெண்ணை ஷௌர்யா பார்க்கவும், அவனின் உடல் மொழி புரிந்து அங்கு விரைந்து வந்தான் பிரபு. “எதுக்குக் கூப்பிட்டீங்க..?” என்று பிரபுவின் கேள்வியில் அவ்வளவு நேரம் அப்படியே நின்றுவிட்டது புரிந்து அவஸ்தையோடு தலையைக் குனிந்து கொண்டவர், பின் மெதுவாக முகத்தை நிமிர்த்தி “அவங்களுக்கு மாத்தி போட டிரஸ் வேணும் சார்.. துணி எல்லாம் ஈரமா இருக்கு..” என்றார்.

 

அதைக் கேட்டு ஷௌர்யா பிரபுவின் பக்கம் பார்வையைத் திருப்பவும், அதற்கான அர்த்தம் புரிந்தவன், “ஒகே சார்” என்றான் உடனடியாக. அதன் பின் தன் நடையைத் தொடர்ந்த ஷௌர்யா, காரை நெருங்கி பின் மீண்டும் திரும்பி பிரபுவை பார்த்தான்.

 

அதில் பிரபு விரைந்து சென்று ஷௌர்யாவின் அருகில் நின்றான். “நீ இங்கேயே இரு.. எதுக்காவது கூப்பிடுவாங்க..” என்றவன் காரில் ஏறி சென்றுவிட்டான்.

 

அதற்கான அர்த்தம் புரிந்த பிரபுவும் உள்ளே செல்ல திரும்ப அந்த நர்ஸ் அப்போதும் அங்கேயே நின்று அதிக வார்த்தைகள் இல்லாமல் விழி அசைவிலேயே அனைத்தையும் செய்து முடிப்பவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அருகில் இருந்த ஏதோ ஒரு அவன் கால் வைக்கவே தகுதி இல்லை என்று நினைக்கும் கடையில் நுழைந்து அங்கிருந்தவைகளில் சிலதை அவர்களையே பேக் செய்யச் செய்து வாங்கி வந்து கிட்டத்தட்ட விட்டெரிந்து இருந்தான் ஷௌர்யா.

 

இதையெல்லாம் தன்னைச் செய்ய வைத்தவளின் மேல் ஏகத்துக்கும் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு அவள் கண் விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தவனுக்கு அவனின் ஒவ்வொரு நொடியும் எத்தனை விலையுயர்ந்தது ஆனால் இன்று அரை நாளாக இங்குக் காத்திருக்கும் நிலை வந்ததற்கும் எல்லாம் சேர்த்து கூண்டு புலி போல நடை பயின்று கொண்டு இருந்தான். அதற்குப் பின் அங்கிருந்து போகும் எண்ணம் ஷௌர்யாவுக்குத் துளியும் இல்லை.

 

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவர், “அவங்க இரண்டு இல்லை மூணு நாளா எதுவும் சாப்பிடலை போலச் சார்.. தண்ணீ கூடக் குடிக்கலைன்னு நினைக்கறேன்.. அதான் மயக்கத்துக்குக் காரணம், ஐவி போட்டு இருக்கோம்.. மருந்து கொடுத்து இருக்கோம்.. இதையெல்லாம் விட ஏதோ ஒரு பாதிப்பு மனசளவுல ரொம்ப ஆழமா பட்டு இருக்கும் போல அந்த அதிர்ச்சி தான் இதுக்கு எல்லாம் காரணம்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் கண் விழிச்சிடுவாங்க..” என்று சொல்லி சென்றார்.

 

உடனே அங்கிருந்து கிளம்பி வெளியேறிய ஷௌர்யா அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக அம்ரு இருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

அவனைக் கண்டு தயங்கி நின்ற நர்ஸை ஒரே கண்ணசைவில் வெளியேற செய்தவன், அம்ரு கண் விழிக்கும் நேரத்திற்காக இமைக்காமல் அவளையே வெறித்துப் பார்த்தப்படி காத்திருந்தான்.

 

அவனை மேலும் இருபது நிமிடங்கள் காக்க வைத்த பின்னே அவளிடம் லேசான அசைவு தெரிந்தது. அதைக் கண்ட நொடி வேட்டையாட காத்திருக்கும் பளபளப்பான கண்களோடு அவளை நெருங்கியவன் அம்ருவின் முகத்திற்கு நேராகக் குனிந்து அவள் கண் விழிக்கும் நொடியையே எதிர் பார்த்து காத்திருந்தான்.

 

அதே நேரம் லேசான அலைப்புறுதலோடு இப்படியும் அப்படியுமாகத் தலையை அசைத்து எதையோ நினைத்து தனக்குள்ளேயே போராடிய பின் “முகுந்த்த்த்த்...” என்ற அலறலோடு கண் விழித்த அம்ரு முகத்தின் வெகு அருகே தெரிந்த ஷௌர்யாவின் முகத்தைக் கண்டு திகைத்தாள்.

 

தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 2

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 3
 
முகுந்த் என்ற அலறலோடு கண் விழித்த அம்ரு தன் முகத்தருகே தெரிந்த ஷௌர்யாவின் கோப முகத்தைக் கண்டு திடுக்கிட்டு விழிக்க.. அவளையே பார்த்திருந்தவனின் புருவம் ஒரு நொடி சுருங்கி பின் சரியானது.
 
 
தன்னையே டன்டன்னாக கண்களில் பயத்தைத் தேக்கி பார்த்து கொண்டிருப்பவளை கூர்மையாகப் பார்த்தவாறே “உன் பேர் என்ன..?” என்றான்.
 
 
அதில் அவ்வளவு நேரம் இருந்த பயத்தோடு ஒரு அதிர்ச்சியும் சேர, விழிகள் தெறித்து விடும் அளவுக்கு அவனையே மெலிதாகத் திறந்த வாயை மூடாமல் அம்ரு பார்த்திருந்தாள்.
 
 
ஆனால் அவளின் அதிர்ச்சிக்கும் பார்வைக்கும் அவனிடம் எந்த ஒரு அசைவுமே இல்லாமல் போனது. கொஞ்சம் கூட அசைவில்லாமல் அதே பார்வையோடு அவளின் கண்களையே ஷௌர்யா பார்த்து கொண்டிருந்ததில் அம்ருவுக்கு நா வறண்டு போனது. அதில் சற்று முன் தோன்றிய அதிர்ச்சியின் ஆயுள் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்து இருந்தது.
 
 
மெல்ல ஈச்சிலை கூட்டி விழுங்கியவள் கொக்குக்கு மீன் ஒன்றே மதி என்பது போலத் தன் கண்களையே பார்த்துக் கொண்டு இருப்பவனைக் கண்டு உள்ளுர எழுந்த நடுக்கத்தோடு “அமி.. ர்த.. வர்.. ஷினி..” என்றாள் காற்றாகி போன மெல்லிய குரலில்.
 
 
அந்தக் குரலும் அது உச்சரிக்கப்பட்ட விதமும் அவளின் பெயரை சில நொடிகளுக்குப் பிறகே ஷௌர்யாவுக்குப் புரிய வைத்து இருந்தது. அடுத்த நொடி வேகமாக அங்கிருந்து விலகி கதவை நோக்கி சென்றான் ஷௌர்யா.
 
 
அவன் கடத்தி வந்ததிலிருந்து மனதில் தோன்றி அழுத்தி கொண்டிருந்த பயம் ஷௌர்யா அவளிடம் பெயர் கேட்ட நொடியில் சற்று விலகி சென்று இருக்க.. ‘அப்போ யாரையோ கடத்த நினைச்சு மாத்தி என்ன கடத்தி இருப்பானோ..! அப்போ நான் அது இல்லைன்னு தெரிஞ்சா என்னை விட்டுடுவானோ..!!’ என்று மனதில் பரவிய திடீர் நம்பிக்கையோடு கதவை நெருங்கி கொண்டு இருந்தவனை “சார்.. ஒரு நிமிஷம்..” எனத் தன் ஒட்டு மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி லேசாக எழுந்து அமர முயன்றவாறே அழைத்தாள் அம்ரு.
 
 
அவளின் அழைப்பு நன்றாகக் கேட்டு இருந்த போதும் திரும்பியும் பார்க்காமல் அந்த அறையில் இருந்து அதே வேகத்தில் வெளியேறி இருந்தான் ஷௌர்யா. அந்த அடித்துச் சாற்றப்பட்ட கதவையே ஏக்கமும் ஏமாற்றமுமாகப் பார்த்து கொண்டிருந்தாள் அம்ரு.
 
 
ஆனால் மீண்டும் அவன் எப்போது உள்ளே வந்தாலும் இதைப் பற்றிப் பேசியே தீருவது என்று முடிவெடுத்து காத்திருந்தவளுக்கு இனி அவன் இங்கு வர போவது இல்லை என்று தெரியவில்லை பாவம்.
 
 
அம்ருவின் அறையில் இருந்து வெளியேறியவன் அதே வேகத்தில் வாசலை நோக்கி நடக்க.. “சார்..” என்ற அழைப்போடு அவனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தான் பிரபு.
 
 
என்ன என்பது போலத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தானே தவிர தன் நடையை நிறுத்தவே இல்லை ஷௌர்யா. “அங்கே நம்ம ஆளுங்க வைட்டிங் சார்.. அவங்களை என்ன செய்யணும்னு..” என்று தொடங்கியவனின் வார்த்தை முடியும் முன்பே, “ம்ம்.. நாம ஏன் செய்யணும்.. அதுவும் அங்கே..! நம்மளை தேடி இங்கே வர வைப்போம்..” என்று ஒரு வித எள்ளல் குரலில் சொல்லி விட்டு அதே வேகத்தோடு வெளியேறி இருந்தான் ஷௌர்யா.
 
 
அவனின் இந்தக் குரலுக்கான அர்த்தம் புரிந்தவனும் உடனே அங்கிருக்கும் தங்கள் ஆட்களுக்கு அழைத்துக் கட்டளை பிறப்பித்து இருந்தான். அதன் பின் கடமையே கண்ணாக அம்ரு அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டான் பிரபு.
 
 
ஷௌர்யாவிடம் ஐந்து வருடங்களாக வேலையில் இருப்பவன் தான் பிரபு. அவனின் அத்தனை வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரிந்தவன் அவன். ஷௌர்யா ஒன்றை சொன்னால் அதை ஏன் எதற்கு என்ற எந்தக் கேள்வியும் கேட்காமல் சரியாகச் செய்து முடிப்பவன் என்றாலும் ஒரு விசுவாச ஊழியனுக்கான இடத்தை மட்டுமே மனமுவந்து கொடுத்து இருக்கும் ஷௌர்யா அதைக் கடந்து எந்த எல்லைக்குள்ளும் பிரபுவை வர விட்டதில்லை.
 
 
ஜெய்பூர் அரச குடும்ப வம்சாவளியை சேர்ந்தவன் என்பதால் ஷௌர்யா பிறப்பிலேயே யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்ற வரையறை அறிந்தவன். அதற்கு மேல் யாரையும் அவன் அனுமதிப்பதில்லை. ஷௌர்யாவின் அனுமதி இல்லாமல் யாராலும் அவனை அணுகவும் முடியாது.
 
 
எப்போதுமே அதிக வார்த்தைகள் ஷௌர்யாவிடமிருந்து வராது. அவன் உதிர்க்கும் சில வார்த்தைகளைக் கொண்டே அவன் சொல்ல வருவதை அறிந்து செயல்படுபவர்களுக்கே அவனிடம் வேலை செய்யும் தகுதி உண்டு. அவனிடம் பணியில் இருக்கும் அனைவருமே அதில் தேறியவர்களே.
 
 
இதோ இப்போதும் சற்று நேரத்துக்கு முன் அம்ருவுக்கு உடை வாங்க சொன்னவன் அடுத்து உதிர்த்து இருந்த வார்த்தைகளே அதற்குச் சான்று. அந்த நான்கு வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்கள் பல.
 
 
அம்ருவை கடத்தியதற்கான காரணம் அறிந்த பிரபுவுக்குமே இந்தத் திருமணம் பற்றியும் அதன் பின்னணியில் இருப்பதுவும் தெரியாது. அம்ருவை தூக்கி சென்று காரில் ஏற்றும் போதே அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தைக் கவனித்து இருந்தான் பிரபு.
 
 
ஷௌர்யா தான் இன்று அங்கு வந்தான். ஆனால் பிரபு நேற்று இரவே அங்கு வந்துவிட்டான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே பிரபுவின் வேலை. அதையும் கடந்து எதையும் ஆராயவோ அறிந்து கொள்ளவோ அவன் முயல்வது இல்லை. இதுவே வெகு சீக்கிரம் ஷௌர்யாவிடம் அவனுக்கு நல்ல பெயரையும் நம்பிக்கையையும் பெற்று கொடுத்து இருந்தது.
 
 
அடுத்து இங்கு வைத்து அம்ருவுக்கு உடை வாங்க பிரபுவை செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்ததின் பின்னணியில் தன் மனைவிக்கு எவனோ உடை வாங்க அனுமதிக்க அவன் உடம்பில் ஊறி இருந்த வேலையாட்களை அவர்களின் எல்லையிலேயே நிறுத்த வேண்டும் என்ற ஒன்றே தடுத்து இருந்தது.
 
 
அடுத்து அதில் இருந்த இரண்டு மறைமுகச் செய்தி.. ஒன்று நீ அவளை உன் முதலாளியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதும் அடுத்து என் அனுமதி வரும் வரை நீ இங்கு இருந்து நகரக் கூடாது என்பதும் தான். அதை அச்சுப் பிசகாமல் பின்பற்றும் ஊழியனாக இப்போது நின்று இருந்தான் பிரபு.
 
 
வெகு நேரம் ஷௌர்யாவை எதிர்பார்த்துக் காத்திருந்த அம்ரு தன்னை வந்து பரிசோதித்த டாக்டர் மற்றும் நர்ஸிடம் தன்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற சொல்லி கேட்க தவறி இருந்தாள். அவளின் கவனம் எல்லாம் அறை வாயிலேயே பதிந்து இருந்தது.
 
 
அவன் உள்ளே வரும் சந்தர்பத்தைப் பயன்படுத்தி எப்படிப் பேசி புரிய வைத்து இங்கிருந்து வெளியேறுவது என்றே மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தவள், அவர்களின் கேள்விக்கு எல்லாம் இயந்திர தனமாகப் பதில் அளித்துக் கொண்டு இருந்தாளே தவிர இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள மறந்து போனாள்.
 
 
மீண்டும் அவளுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைய போவது இல்லை என்று அந்த நேரம் அவளுக்குத் தெரியவில்லை பாவம். அம்ரு வெகு நேரம் காத்திருந்தும் ஷௌர்யா வராமல் போனதோடு மருந்தின் வீரியமும் சேர்ந்து அவளைத் தூங்க செய்து இருந்தது.
 
 
அன்று மட்டும் இல்லை அடுத்த நாளும் பெரும்பாளான நேரம் உறக்கத்திலேயே இருந்தாள் அம்ரு. அதற்குக் காரணமானவனோ அவன் இருந்த இடத்தில் இருந்து இதற்கு முன்பு இங்கிருந்தவர்களை அங்கிருந்து அகற்றி வேறு சிலரை வைத்து அனைத்தையும் செய்வித்துக் கொண்டிருந்தான்.
 
 
அடுத்த நாள் மாலை வீட்டிற்குப் போகச் சொல்லி டாக்டர் கூறிய நொடி ஏதோ தனக்கு எதில் இருந்தோ சுதந்திரம் கிடைத்த உணர்வில் அம்ருவுக்குக் கண்கள் கலங்கி போனது. ஆனால் அவள் படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும் முன்பே அறைக்குள் வந்து நின்ற பிரபுவை கண்ட நொடி அத்தனையும் அப்படியே வடிந்து போனது.
 
 
அவனையே பய பார்வை அம்ரு பார்த்துக் கொண்டு இருக்க.. அவனோ அவளின் பக்கமாகக் கூடத் திரும்பவில்லை. அம்ருவின் மருந்து மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு பிரபு முன்னே செல்ல.. அசைய மறுத்த காலோடு அப்படியே நின்றிருந்த அம்ருவை நெருங்கிய நர்ஸ் அவளைக் கைத்தாங்கலாக பற்றி அழைத்துச் செல்ல துவங்கினார்.
 
 
அம்ருவுக்கு பிரபுவை பார்த்த நொடியே அந்த டீமன் இங்குத் தான் இருப்பான் என்ற பயம் ஒருபக்கம் இதிலிருந்து தனக்கு விடுதலையே கிடையாதா என்ற பரிதவிப்பு ஒரு பக்கம் என இருந்ததில் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியவாறு பயத்தோடே சென்றாள்.
 
 
பிரபு தன் காரின் பின் கதவை அவளுக்காகத் திறந்து பிடித்தபடி நின்று கொண்டு இருக்க.. அவளோ அதில் ஏறாமல் ஒரு கெஞ்சுதலான பார்வையில் அவனைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். “மேம் டைம் ஆகுது.. லேட் ஆனா சாருக்குக் கோபம் வரும்.. அவருக்கு எல்லாமே நேரம் தவறாம நடக்கணும்..” என்று பிரபு இயந்தரக் கதியில் சொல்லவும் அந்த நர்ஸ் அவசரமாக அம்ருவை உள்ளே கிட்டத்தட்ட தள்ளுவது போல அமர்த்தி இருந்தாள்.
 
 
அந்தப் பெண் வேகமாகக் காரின் கதவை மூடவும் பிரபு ஒரு பணக்கட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினான். வாயெல்லாம் பல்லாக அப்பெண் அதை வாங்கிக் கொண்டதை கண்டவளுக்கு அனைவரும் இவர்கள் ஆட்கள் என்பது தெளிவாகியது.
 
 
அதன் பின் பிரபு காரிலேறிய நொடியில் இருந்து அம்ரு தன்னால் முடிந்த அளவு எவ்வளவோ கெஞ்சி அழுது என்று அத்தனை வழிகளிலும் முயன்று பார்த்து விட்டாள்.
 
 
ஆனால் பிரபு என்ற அந்தச் சிலைக்கு அதன் பின் வார்த்தைகள் மறந்து போனதோ என்னவோ சாலையில் மட்டுமே தான் கவனத்தைப் பதித்து வண்டியை செலுத்தி கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அம்ரு செய்த அத்தனை முயற்சிகளும் வீணாய்ப் போனது.
 
 
இவளின் அழுகையோ கெஞ்சலோ அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அதில் ஓய்ந்து போய்த் தன் முகத்தை மூடி கொண்டு அழ தொடங்கியவள், கார் நின்றதை உணர்ந்து பார்வையைத் திருப்ப.. அங்கு பிரபு அவளின் பக்க கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்று இருந்தான்.
 
 
அவளுக்கு இறங்கவே மனம் இல்லை.. வீம்பாக உள்ளேயே அமர்ந்து இருக்க எண்ணியவளுக்கு மன கண்ணில் தன்னைக் கடத்தியவனின் முகமும் அந்தக் கண்களில் பளபளத்த பழி உணர்ச்சியும் வந்து போகத் தன்னையறியாமல் உடல் ஒரு நடுக்கத்தை உணர்ந்தது.
 
 
அதில் அவளையறியாமலேயே இறங்கி நின்று இருந்தாள் அம்ரு. அவளை உள்ளே அழைத்துச் செல்லும் பொருட்டுப் பிரபு முன்னே செல்லவும், அப்போதே அந்தப் பக்கம் பார்வையைப் பதித்தவளுக்கு அங்குப் பிரம்மாண்டமாக நின்றிருந்த மாளிகையைக் கண்டு பிரமிப்பில் திகைப்பதற்குப் பதில் மனம் அச்சத்தில் படபடக்கத் தொடங்கியது.
 
 
இது அன்று அவளை அடைத்து வைத்திருந்த இடம் இல்லை என்பதை அறிந்தவளுக்கு அடுத்து என்ன காத்திருக்கிறதோ என்ற பயமே பிரதானமாக இருக்க.. தன் உணர்வு இல்லாமலேயே பிரபுவை பின் தொடர்ந்து உள்ளே வந்து இருந்தாள்.
 
 
அங்குப் பறந்து விரிந்து இருந்த மாளிகையையும் ஒவ்வொரு இடத்திலும் பணத்தை வாரி இறைத்து செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களையும் கண்டு மலைக்க வேண்டியவளின் கண்களோ சுற்றுபுறத்தில் யாராவது தனக்கு உதவக் கூடியவர்கள் தென்படுகிறார்களா என அலசி கொண்டு இருந்தது.
 
 
அவ்வளவு பெரிய இடத்தில் வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதில் முகமும் அகமும் சோர்ந்து போகத் தலையைக் குனிந்தவளின் கவனத்தைக் கலைப்பது போல அங்கு அவ்வளவு நேரமும் விரவி இருந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது அந்தச் சொடுக்கு ஒலி.
 
 
அதில் அம்ருவின் தலை தானாக மேலே நிமிர.. அங்கு இவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஷௌர்யா ஒற்றை விரலை அசைத்து மேலே அவளை வருமாறு கூறினான். அங்குச் செல்லவோ அவனை மீண்டும் எதிர்க்கொள்ளவோ அம்ருவுக்குத் துளியும் தைரியம் இல்லை.
 
 
எந்த உதவியும் அவனிடமிருந்து கிடைக்காது என்று தெரிந்தும் கடைசி முயற்சியாகக் கெஞ்சுதலான பார்வையோடு தன் பின்னால் நின்று இருந்த பிரபுவை திரும்பி பார்த்தாள் அம்ரு. ஆனால் அவனோ தன் பணி முடிந்தது என்பது போல வாசலை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
 
 
கடைசியாக இருந்த ஒரே நம்பிக்கையும் பலன் இல்லாமல் போய் விட.. அம்ரு தவிப்பும் தடுமாற்றமுமாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். அதற்குள் பொறுமையற்ற ஒரு வேகத்தோடு மீண்டும் ஒரு சொடுக்கொலி அந்த மிதியை கிழித்து கொண்டு கேட்டது.
 
 
இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று தெளிவாகிவிட, மனதை ஒருவாறு தயார் செய்து கொண்டு மேலே செல்லும் படியை நோக்கி திரும்பியவளின் மனதில் நேற்றைய எதிர்பார்ப்பு லேசாக நினைவு வந்து அம்ருவை அதை நோக்கி பயணிக்க வைத்தது.
 
 
நேற்று ஷௌர்யாவிடம் பேசி பார்ப்பது என்ற முடிவோடு காத்திருந்தது நினைவு வரவும், சாட்சிகாரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற எண்ணத்தோடு படியில் காலை வைத்தாள்.
 
 
ஆனால் இன்று அடி எடுத்து வைத்து இருப்பது படியில் மட்டுமல்ல அவளின் வாழ்வின் அடுத்த நிலையை நோக்கி எனப் பாவம் அந்த நிமிடம் அவளுக்குத் தெரியவில்லை.
 
 
எப்படியாவது பேசி அவன் தேடும் நபர் தான் இல்லை என்று புரிய வைத்து இங்கிருந்து செல்ல எண்ணி மேலே வந்தவள், அங்கு ஒரு மினி சாம்ராஜ்யமே இருப்பதைக் கண்டு பயத்தில் மிரண்டு விழிக்க.. மீண்டும் அதே சொடுக்கு ஒலி அவளை ஷௌர்யா இருந்த திசையின் பக்கம் திரும்பச் செய்தது.
 
 
அரசர் காலத்து சிம்மாசனம் போல் இன்றைய மாடர்ன் வாழ்க்கைக்கு ஏற்றது போல உருவாக்கப்பட்டு இருந்த ஒரு கலை வேலைபாடுகளோடான நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் ஷௌர்யா.
 
 
வேகமாக அவனை நெருங்கிய அம்ரு அவளை அறியாமலேயே அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த வாக்கில் “சார்.. நீங்க ஏதோ தப்பா.. நான் நீங்க நினைக்கற ஆள்..” என்று எதை முதலில் சொல்வது எதைப் பின்னால் சொல்வது எனத் தெரியாமல் துண்டு துண்டாகத் தான் சொல்ல நினைப்பதை எப்படியாவது புரிய வைக்க முனைய...
 
 
தன் வலது கையை உயர்த்தித் நிறுத்து என்பது போலச் சொல்லி இருந்தான் ஷௌர்யா. அதில் அவனை மன்றாடும் பார்வை பார்த்து கொண்டிருந்தவள், “சார், எங்க வீடு பழைய எண் 29.. புது எண் 29க்கு வர வேண்டிய கொரியர், கெஸ்ட் எல்லாம் இந்தப் புது எண் பழைய எண் குழப்பத்துல எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க சார்.. அந்த வீடு எங்க தெருவிலேயே கடைசி வீடு சார்..” என்று மீண்டும் எங்கே நிறுத்த சொல்லி விடுவானோ என்ற வேகத்தோடு அதே போல் தான் நீயும் தவறுதலாக என் வீட்டுக்கு வந்து விட்டாய் என்று சொல்லும் விதமாக ஒரு மூச்சாகப் பேசி இருந்தாள்.
 
 
அவளின் அந்த நான்கு வரிக்கே ஏதோ சொற்பொழிவையே கேட்டது போன்று முகத்தைச் சுழித்தவன், “இப்போ என்ன நான் ஆள் தெரியாம உன்னை மாத்தி தூக்கிட்டேன்னு சொல்ல ட்ரை செய்யற அதானே..” என்றான்.
 
 
அப்பாடா ஒரு வழியாகப் புரிந்து கொண்டான் இனி பிரச்சனை இல்லை என்ற நிம்மதியோடு ‘ஆம்’ என வேகமாகத் தலையசைத்து இருந்தாள் அம்ரு. “நீ யாருன்னு நான் சொல்றேன் சரியா இருக்கான்னு பார்க்கறீயா..?” என்றவனைப் புரியாமல் பார்த்தவாறே எல்லாப் பக்கமும் தலையசைத்துக் கொண்டு இருந்தாள் அவள்.
 
 
“நீ அமிர்தவர்ஷினி.. என் போண்டா... ம்ஹும், அது என்ன சொல்லுவாங்க ஆங்.. பொண்டாட்டி.. ஆம் ஐ ரைட்..” என்றவனின் குரலில் அத்தனை நக்கல் வழிந்தது.
 
 
“ஐயோ அது.. அது.. அப்படி இல்லை சார்.. நா’ன் இதுக்கு முன்னே உங்களைப் பார்த்தது கூட இல்லை சார்.. உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லையே, அப்பறம் எதுக்கு சார் இதெல்லாம்.. பிளீஸ், என்னை விட்டுடுங்க சார்..” என்று கை கூப்பி அழுதவளை துச்சமான பார்வையில் அளந்தவன்,
 
 
“என்கிட்ட பிரச்சனை செய்யக் கூட ஒரு மினிமம் தகுதி வேணும்.. அது..” என்று நிறுத்தியவன் அம்ருவை நோக்கி ‘உனக்கு அது கூட இல்லை’ என்பது போல இதழை வளைத்துக் கை அசைப்பது கூட உன் தகுதிக்கு அதிகம் என்பது போல விரலசைவிலேயே ஷௌர்யா புரிய வைத்திருக்க.. அவளோ அதெல்லாம் எனக்கு முக்கியமே இல்லை ‘நீ என்ன வேணுமானாலும் பேசி கொள்..’ என்பதைப் போல மீண்டும் எதையோ பேச முயன்றாள்.
 
 
ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் “அடுத்து என்னது.. ஆங்.. இதுக்கு முன்னே என்னைப் பார்த்தது இல்லை.. பார்த்து இருந்தா என்ன செஞ்சு இருப்ப, இதோ இந்த அத்தனையும் உனக்குச் சொந்தமாக்கிக்க நினைச்சு என்னை மயக்க முயற்சி செஞ்சு இருப்ப.. அவ்வளவு தானே.. ஆனா அதுக்கெல்லாம் அவசியமே இல்லாம அந்தக் கஷ்டத்தைஐஐஐஐ கூட உனக்குக் கொடுக்காம, நானே இதை உன் கழுத்துல கட்டிட்டேனே..” என்றான் சுற்றுபுறத்தை தன் பார்வையால் சுட்டி காண்பித்து எள்ளல் வழியும் கண்களோடும் குரலோடும்.
 
 
இதைக் கேட்டுக் கொண்டு இருந்தவள் அந்த ‘மயக்கி’ என்ற வார்த்தையிலேயே அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்ததில் பின் பாதி மனதில் பதியாமலே போனது. அவள் மனதில் ஓடியதெல்லாம் ‘இதுவரை பார்த்து பழகாத ஒருத்தியின் மேல் எப்படி இப்படி ஒரு பழியைப் போகிற போக்கில் சுமத்த முடியும்..’ என்ற ரீதியிலேயே இருந்தது.
 
 
“நான் அப்படிப் பட்ட பொண்ணு இல்லை சார்..” என்று பட்டென முகத்தைச் சுழித்தவாறே கூறியவளை, ஏளனமாகப் பார்த்தவன், “நீ எப்படிப்பட்ட பொண்ணுன்னு அன்னைக்கு நீ போட்டு இருந்த ட்ரஸ்ஸும் மேக்கப்புமே சொல்லுச்சு..” என்றான்.
 
 
“சார் அது..” என்று தொடங்கியவளை பேசவே விடாமல் “எப்படி இருந்தாலும் நீ பிளான் செஞ்சு கவுக்க நினைச்ச ஆட்களோடு கம்பேர் செஞ்சா நான் மச் பெட்டர் தான்.. அதனால் வேற சீன் எதுவும் டிரை செய்யாம அப்படி ஓரமா இரு..” என்றான்.
 
 
ஷௌர்யாவின் வார்த்தைகளும் அதி இருந்த பொருளும் தந்த அதிர்வில் திகைத்து அப்படியே அம்ரு அமர்ந்திருக்க.. அவளின் அந்த நிலையைக் கண்டு “என்ன அட நாம இப்படி யோசிக்கவே இல்லையேன்னு நினைக்கறீயா..! ஆனா இத்தோட உன் கனவை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுடு.. இது என் கனவை நினைவாக்க நடந்ததே தவிர.. உனக்கானது இல்லை..” என்றான் சீண்டும் குரலில்.
 
 
‘என்ன கனவு.. எதைப் பற்றிப் பேசுகிறான்..’ எனத் தலையும் புரியாமல் விழித்தவள், ஷௌர்யா பேசியதில் புரிந்த ஒரே ஒரு விஷயமான மாங்கல்யத்தை முன் வைத்து... அதைக் கையில் பிடித்துக் கொண்டு “சார்.. இது தப்பு சார்.. இதை நீங்க எனக்குக் கட்ட கூடாது, பிளீஸ் நீங்களே எடுத்துடுங்க சார்..” என்றாள்.
 
 
“ஆஹான்..”
 
 
“சார் நான்.. நான் இன்னொருத்தருக்கு சொந்தமானவ சார்..” என்றவளை புருவம் உயர்த்தி ஷௌர்யா பார்க்கவும்,
 
 
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு சார்.. இங்கே பாருங்க..” என்று தன் கையில் இருந்த மோதிரத்தை காண்பித்தாள்.
 
 
“சோ..” என அதற்கும் அசராமல் பதில் அளித்தவனைக் கண்டு சோர்ந்து போனாள் அம்ரு. அவளும் பாவம் எத்தனை வழிகளில் முயன்று பார்த்து விட்டாள். எதற்கும் அசையாமல் இருப்பவனை எந்தக் கணக்கில் எடுப்பது என்று தான் அவளுக்குப் புரியவில்லை.
 
 
அதற்காக அதை அப்படியே விடவோ இதை ஏற்றுக் கொள்ளவோ முடியாதே மீண்டும் ஒரு முயற்சியைத் தொடங்கினாள் அம்ரு. ‘சார் பிளீஸ் சார்.. இதை.. இதை நான் எடுத்துடறேன் சார்..” என்று கெஞ்சியவளை கொஞ்சமும் இளக்கமே இல்லாமல் பார்த்தவன் “எடுத்துட்டு..?!” என்றான் கேள்வியாக.
 
 
“எடுத்துட்டுடுடு..” என்றவளுக்கு ‘நீ விட்டால் போதும் அப்படியே ஓடிடுவேன்னு..’ என சொல்ல தான் வார்த்தை வரவில்லை, அப்படி ஒரு ஊடறுவும் பார்வையை அவள் மேல் பதித்து இருந்தான் ஷௌர்யா.
 
 
“சார்.. எனக்கு ஆல்ரெடி கல்யாணம் முடிவாகி இருக்கு.. இன்னும் இருபது நாளில் கல்யாணம், எனக்காக ஒருத்தர் காத்திருக்கார்..” என்றவளின் பதட்டத்துக்கும் தவிப்புக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் “முகுந்த்.. ரைட்..” என்றான்.
 
 
அதில் விழிகள் பளிச்சிட... “ஆமா சார்.. உங்களுக்கு முகுந்தை தெரியுமா..” என்றவளின் முகம் இங்கிருந்து வெளியேற வழி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பிரகாசித்தது.
 
 
அதை வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டவனின் விழிகள் வெறுப்பில் பளபளத்தது. “யூடோன்ட் வொரி பேபி.. அந்த முகுந்தை விட நான் எல்லா.. எல்லா வகையிலுமே நீ எட்ட கூட முடியாத இடத்தில் தான் இருக்கேன்.. சோ உனக்கு எந்த நஷ்டமும் இல்லை.. உன் தொழில் லாபத்தில் தான் போகுது..” என்றான்.
 
 
“தொழிலா..?!” என அதிர்வோடு புரியா பாவனையில் கேட்டவளை கேலி வழியும் விழிகளோடு கண்டவன், ‘அதுக்குத் தானே அன்னைக்கு அந்த நைட் டைம்ல அவ்வளவு மேக்கப் போட்டுட்டு அப்படி ஓடி வந்து கதவை திறந்த.. அவனா இருந்து இருந்தா அங்கே அப்போ சீனே வேற இல்லை..” என்றான் குத்தலாக.
 
 
“ஐயோ பிளீஸ்..” எனக் காதுகளை மூடி கொண்டவளுக்கு அவன் வார்த்தைகளை அடியோடு மறுக்கவும் வழியில்லாமல் போனது. அவளும் அன்று இரவு முகுந்தை எதிர் பார்த்து தானே வந்து கதவை திறந்து இருந்தாள். ஆனால் அதில் இவன் சொல்லும் அர்த்தம் மட்டுமே அபத்தம்.
 
 
ஆனால் அதைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாகவோ புரிந்து கொள்ளக் கூடியனாகவோ இவனைப் பார்க்கும் போது தெரியவில்லை என்பதால் கண்ணீர் வழிய அப்படியே அமர்ந்து விட்டாள் அம்ரு.
 
 
***************
 
 
அதே நேரம் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சோர்ந்து போய் வெளியில் வந்து கொண்டிருந்தான் முகுந்த். மூன்று நாட்களாக அவனும் அம்ருவை கண்டுபிடிக்கத் தன்னாலான அத்தனை முயற்சியையும் செய்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அதற்கான பலன் தான் கிடைக்கவில்லை.
 
 
அன்று இரவு அம்ரு பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துவிட்டாளா என அறிந்து கொள்ள எண்ணி அம்ருவின் அலைபேசிக்கு அழைத்தவனுக்கு அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவே தொடர்ந்து செய்தி வந்து கொண்டு இருந்தது.
 
 
அவள் அப்படிச் செய்பவள் இல்லை என்பதால் இடைவெளிவிட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அழைத்துப் பார்த்தும் அதுவே பதிலாக வரவும் பயந்து போனான். உடனே கிளம்பி செல்ல துடித்த மனதை அம்ரு தனித்து இருக்கும் வீட்டிற்கு அந்த நடு இரவில் கிளம்பி செல்வது சரியாக இருக்காது என்ற ஒரே காரணத்தை முன் வைத்து அலைபேசி சார்ஜ் இல்லாமல் போய் இருக்கும்.. அசதியில் தூங்கி இருப்பாள் என்றெல்லாம் தன்னையே சமாதனம் செய்து கொண்டு ஒருவாறு பெரும்பாடு பட்டு மனதை கட்டுபடுத்தியவன் விடியும் நேரத்திற்காகக் காத்திருந்தான்.
 
 
அந்த ஐந்து மணி நேரமும் அவனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. ‘அவள் மறுத்து இருந்தாலும் வற்புறுத்தி காரில் அழைத்துச் சென்று விட்டு இருக்க வேண்டும்.. அவளைத் தனியே போக விட்டு இருக்கக் கூடாது..’ என்றெல்லாம் எண்ணி தவித்துக் கொண்டிருந்தான்.
 
 
விடிந்ததும் முதல் வேலையாக அம்ருவை காண சென்றவனை வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த அம்ருவின் ஸ்கூட்டியே வரவேற்றது. அதைக் கண்ட பிறகே சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் திறந்து இருந்த வீட்டிற்குள் செல்ல தயங்கி அம்ருவை அழைக்க.. அவனுக்கு அதற்கான பதில் கிடைக்கவில்லை.
 
 
மூன்று நான்கு முறை அழைத்துப் பார்த்தவன், உள்ளே இருந்து பதிலே வராமல் போகவே அருகில் கடைக்கு எங்காவது சென்று இருப்பாளோ என்று எண்ணி வெளியே காத்திருக்கத் தொடங்கினான்.
 
 
ஆனால் ஒரு மணி நேரம் சென்ற பிறகும் அம்ரு திரும்பி வராமல் போகவே முகுந்துக்குச் சந்தேகம் தோன்றியது. அருகில் என்றாலும் பரவாயில்லை இவ்வளவு நேரம் ஆகிறது என்றால் தூரமாக எங்கோ சென்று இருக்க வேண்டும்.. அப்படி இருக்கையில் வீட்டை இப்படிப் பூட்டாமல் திறந்து போட்டு இருப்பது சந்தேகத்தைக் கொடுத்தது.
 
 
அதற்கு மேல் யோசிக்காமல் உடனே உள்ளே நுழைந்தவன் வீடு கலைந்து கிடப்பதையும் சமையல் அறையில் எடுத்து வைத்திருந்த தோசை மாவு பொங்கி வழிந்து அந்த இடமே பாழாகி இருப்பதையும் கண்டவனுக்கு எல்லாமே தப்பாக இருப்பதாகப் பட்டது.
 
 
அம்ருவை இத்தனை வருடங்களாக அறிந்து இருந்தவனுக்கு அவள் தன்னைச் சுற்றிலும் இருக்கும் இடத்தை எந்த அளவு தூய்மையாகவும் அழகாகவும் வைத்து கொள்வாள் என்று முகுந்துக்குத் தெரியும். அதே யோசனையோடு வெளியில் வந்தவனுக்கு வாசல் கதவின் அருகில் அவளின் கைப்பை விழுந்து கிடப்பதையும் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டதும் அம்ருவுக்கு ஏதோ ஆபத்து என்று உறுதியானது.
 
 
உடனே தாமதிக்காமல் காவல் நிலையத்திற்கு விரைந்தவாறே சூர்ய நாராயணனுக்கு இவன் அழைக்க முயல.. அதுவும் அணைத்து வைக்கப் பட்டு இருப்பதாகவே செய்தி வந்தது.
 
தொடரும் ..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 3

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 4           
  
சூர்யாவுக்கு வெகு நேரமாக அழைக்க முயன்றும் அது முடியாமல் போகவே அந்த முயற்சியைக் கைவிட்டு காவல் நிலையத்துக்கு விரைந்தான் முகுந்த். ஆனால் அங்கோ இவனின் பதட்டத்துக்கும் படபடப்புக்கும் கொஞ்சமும் செவி சாய்க்க யாரும் தயாராகவே இல்லை.
 
 
பொறுமையாக ஒருமணி நேரம் கழித்து ஒருவர் முகுந்தின் புகார் என்ன என்று கேட்டார். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணைக் காணோம் சார்..” என்று படபடத்தவனைக் கேலியாகப் பார்த்தவர், “ஹா ஹா கல்யாணம் பிடிக்கலைன்னு யார் கூடவாவது ஓடி போய் இருக்கும் யா..” என்றார்.
 
 
“சார்.. என்ன பேசறீங்க வர்ஷா அப்படிபட்ட பொண்ணு இல்லை..”
 
 
“ஓ.. அப்போ எப்படிபட்ட பொண்ணு நீதான் சொல்லேன்..”
 
 
“சார் அவ ரொம்ப நல்ல பொண்ணு சார்.. அவளுக்கு ஏதோ ஆபத்து நடந்து இருக்கணும் சார்.. கொஞ்சம் வேகமா ஆக்ஷன் எடுங்க..”
 
 
“ஆபத்தா..?! என்ன ஆபத்து..?”
 
 
“அவ வண்டி வீட்டில் தான் நிக்குது.. வீடு பூட்டாம திறத்தே இருக்கு, அவளுக்குப் பெருசா ஏதோ ஆபத்து நடந்து இருக்கணும் சார்..”
 
 
“இங்கே பாரு தம்பி.. ஒரு பொண்ணு காணோம்னா முதலில் அவங்க வீட்டு ஆளுங்க தான் வருவாங்க.. இங்கே நீங்க வந்து இருக்கீங்க.. அவங்க யாரும் வரலையே ஏன்..?”
 
 
“அவ அண்ணன் இங்கே இல்லை சார்... கொல்கத்தால வொர்க் செய்யறார், இவ இங்கே தனியா தான் இருக்கா.. நான் அவனுக்குக் கூப்பிட டிரை செஞ்சேன்.. ஆனா போன் ஆப் ஆகி இருக்கு..”
 
 
“ஹா ஹா.. இதுவே சொல்லுதே, இங்கே பாரு தம்பி.. அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்காம தான் ஓடி போய் இருக்கு.. இல்லைனா உன்னைவிட வசதியா ஒருத்தன் கிடைச்சுட்டான்னு அர்த்தம்..”
 
 
“சார்.. வர்ஷா அப்படி..” என்றவனை இடையிட்டு “அவ எப்படிபட்டவளா வேணும்னாலும் இருக்கட்டும்.. அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் சேர்ந்து தான் உனக்கு அல்வா கொடுத்து இருக்காங்க.. அதான் போன் எடுக்கலை.. ஒரு இரண்டு மாசம் கழிச்சு புருஷனோட வந்து நிப்பா பாரு.. இல்லை பொறுமையா ஒரு பத்து மாசம் கழிச்சு புள்ளையோடவே வருவா.. சும்மா இதுக்கு டைம் வேஸ்ட் செய்யாம போய்ப் பொழப்பை பாரு...” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.
 
 
அதன் பின்னும் முகுந்த் அங்கேயே இருந்து எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான். அவன் சொல்ல வருவதை நின்று கேட்க கூட யாருக்கும் நேரமே இல்லை.
 
 
அவனும் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் என்றாலும் பெரிய இடத்து தொடர்பு எல்லாம் அவனுக்கு அதிகமாக இல்லை. அவனின் தந்தை ஒரு பல்பொருள் அங்காடியை தன் சொந்த முயற்சியில் துவங்கி அதை இன்று ஐந்தாகப் பெருக்கி திறமையாக நிர்வகித்துக் கொண்டு உள்ளார்.
 
 
தானுண்டு தன் தொழில் உண்டு என்று இருக்கும் அமைதியான மனிதர் என்பதால் அவர் வழியில் இவனுக்கு இதற்கான உதவி கிடைக்க வாய்ப்பே இல்லை என்று புரிந்து தன்னோடு பழகுபவர்களில் யாருக்கு இது போன்ற பெரிய இடத்து தொடர்பு உண்டென யோசித்து அவர்களின் மூலம் கூடச் சில அடிகளை எடுத்து வைக்க முயன்றுவிட்டான் முகுந்த்.
 
 
ஆனால் இப்போது சற்றுப் பூடகமாக ஆனால் அதே வழக்கை எடுக்க முடியாது என்ற பதிலையே தான் அனைவரும் வேறு வகையில் சொன்னார்கள். இதில் அவர்கள் கூறியதும் அவனுக்கு முட்டுகட்டையானதும் அம்ருவுக்கு இவன் உறவினனோ ரத்த உறவோ இல்லை என்பதே..
 
 
இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதை முகுந்த் எடுத்து கூறினாலும் ஆனால் இன்னும் நடக்கலையே என்ற ரீதியிலேயே இருந்தது அவர்கள் பதில். அம்ருவின் வழக்கை அவர்கள் முறைப்படி எடுக்க அவளின் சொந்தம் என்ற முறையில் யாரையாவது வந்து புகார் கொடுக்கச் சொல்லி இவனைத் தட்டி கழித்தனர்.
 
 
முகுந்துக்குச் சிபாரிசுக்கு வந்தவர்களிடமுமே ஏன் இத்தனை சாக்கு என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஏதோ இடறுகிறது என்று மட்டும் புரிந்து கொண்டவர்களுக்கும் அது என்ன என்று தான் புரியவில்லை. இதற்குப் பின்னால் இருப்பவனை அத்தனை எளிதாக அவர்களால் அடையாளம் காண முடியுமா என்ன..!! உதவியும் பயனில்லை .என்றான பிறகு அவர்களும் விலகி கொள்ள... முகுந்துக்குத் தனியே போராட வேண்டிய நிலை.
 
 
இதோ இன்றும் அதே போலத் தான் இவரின் உதவியோடு தான் அழகாக அம்ரு கடத்தபட்டாள் எனத் தெரியாமல் பாவம் கமிஷனரை காண வந்து இதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சோர்ந்து போய் வெளியில் வந்து கொண்டு இருந்தான். இந்த மூன்று நாட்களாக அவனால் சூர்யாவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
 
தொடர்ந்து அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவே தெரிவித்துக் கொண்டு இருந்தது. மூன்று நாட்களாகப் பசி தூக்கம் மறந்து அலைந்தும் அவனால் ஒரு சின்ன அடியை கூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியவில்லை. இவனின் இத்தனை அலைச்சலிலும் சந்தோஷமாக இருக்கும் ஒரே ஜீவன் என்றால் அது முகுந்தின் தாய் செல்வி தான்.
 
 
அவருக்குத் தன் அண்ணன் மகளை முகுந்துக்கு மணமுடிக்க வேண்டும் என்ற பல வருட கனவு ஒன்று உண்டு. பணம் அந்தஸ்து என்று எல்லா வகையிலும் தங்களுக்குச் சமமாக இருக்கும் அண்ணன் குடும்பத்தில் சம்பந்தம் செய்ய எண்ணி இருந்தவரின் கனவை கலைப்பது போல் அம்ருவை காதலிப்பதாக வந்து நின்றான் முகுந்த்.
 
 
மிகுந்த ஆட்சேபத்தோடு முதலில் பலமாக எதிர்த்தவரும் முகுந் திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது அம்ருவுடன் மட்டுமே என்ற வார்த்தையில் தன் கணவரும் சம்மதித்து விட்டதில் வேறு வழி இல்லாமல் அமைதியாகி போனார்.
 
 
அதன் பின் அனைத்திலும் பட்டும்படாமலுமே கலந்து கொண்டவருக்குத் தாய் தந்தை இல்லாத அண்ணனின் துணையில் இருக்கும் வசதி குறைவான வீட்டில் இருந்து பெண்ணை எடுப்பதில் துளியும் விருப்பம் இல்லை தான். நாளை தாய் வீட்டில் இருந்து கிடைக்க வேண்டியோ சீரோ மற்ற சடங்குகளோ மாமியார் வீட்டில் மாப்பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையோ கெத்தோ எதுவும் இல்லாமல் அனைத்தும் தாங்களே பொறுப்பேற்றுச் செய்ய வேண்டி இருப்பதை எண்ணி மாபெரும் கவலை அவருக்கு உண்டு.
 
 
இதோ இப்போதும் கூடத் திருமண நாள் நெருங்கி கொண்டிருக்கச் செலவுக்கான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வேலைக்காக வெளியூரில் இருக்கும் சூர்யாவை தினமும் வசைபாடி கொண்டு தான் இருந்தார். பாதிச் செலவை இவர்கள் ஏற்றுக் கொண்டதோடு எல்லா வேலைகளையும் முன் நின்றும் பார்க்க வேண்டி இருப்பது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
 
 
மாப்பிள்ளை வீட்டு ஆட்களாகக் கெத்தாகத் திருமண நேரத்திற்குச் சென்று இறங்க வேண்டும் என்று சாதரான தாயாக விரும்பியவருக்கு இதுவே தன் அண்ணன் மகளாக இருந்தால் அவர்கள் எப்படி எல்லாம் முன் நின்று அனைத்தையும் செய்து இருப்பார்கள் என்ற எண்ணமே பெரும் கோபத்தை உண்டு செய்திருந்தது.
 
 
இப்போது அவரின் கவலைக்கெல்லாம் முற்று புள்ளி போல அம்ரு காணாமல் போன செய்தி வந்து மனதை குளிர்வித்து இருந்தது. ஆனால் எதிலும் நியாயமாக யோசிக்கும் கணவனையும் காதலியை காணாமல் உருகி கொண்டிருக்கும் மகனையும் வைத்துக் கொண்டு அதை முகத்தில் கூட அவரால் வெளிபடுத்த முடியவில்லை.
 
 
கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த முகுந் தன் காரை கடற்கரையோரம் கொண்டு சென்று நிறுத்தியவன், அப்படியே சீட்டை பின்னுக்கு நகர்த்திக் கண் மூடி சாய்ந்துவிட்டான். மனம் முழுக்க அம்ருவையே சுற்றி வந்து கொண்டு இருந்தது.
 
 
‘அவள் எங்கு என்ன கஷ்டபடுகிறாளோ..?!’ என்று என்னும் போதே மனம் வலித்தது. இதில் நிச்சயமாக அவளாகச் சென்று இருக்க வாய்ப்பில்லை என்பது முகுந்துக்குத் தெளிவாகப் புரிந்தது. வீட்டில் லைட், பேன் முதல் கொண்டு அணைக்காமல் அப்படியே விட்டு விட்டு வீட்டையும் பூட்டாமல் அவளின் கவச குண்டலம் என்று அனைவரும் கேலி செய்யும் ஸ்கூட்டியையும் கொண்டு செல்லாமல் கைப்பையையும் விட்டு சென்று இருக்கிறாள் என்பதே இதற்குச் சாட்சி.
 
 
அன்றே காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் அம்ருவின் வீட்டிற்குச் சென்று நிதானமாக ஏதாவது க்ளு கிடைக்குமா என்று முகுந் தேடி பார்த்து விட்டான். அவன் எதிர்பார்த்தது போல எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கைபையும் அதில் இருந்த பர்ஸ் என எல்லாமே அவளுக்குப் பெரிதாக ஏதோ ஆபத்து என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்லியது.
 
 
அவளாகவே வெளியே சென்று இருந்தால் அவளுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் அங்கே இருக்க, அவளும் அவளின் அலைபேசியும் மட்டுமே காணாமல் போய் இருக்க வாய்ப்பே இல்லையே. இதுவே அவளின் அனுமதி இல்லாமலேயே அவளை யாரோ ஏதோ செய்து இருப்பதைத் தெளிவாக்கியது.
 
 
அவளின் இன்றைய நிலை என்னவென்று தெரியாத பயமும் பதட்டமும் அவனை உள்ளுக்குள் வலிக்கச் செய்து கொண்டிருந்தது. மூன்று நாட்களாகச் செய்யும் அதே முயற்சியையே இப்போதும் அவனின் அனுமதி இல்லாமலே முகுந்தின் கைகள் செய்து கொண்டிருந்தது.
 
 
முதலில் அம்ருவுக்கு வழக்கம் போல அழைத்துப் பார்த்தவன், அதே போல அணைத்து வைக்கப்பட்ட தகவலையே அது தாங்கி வர.. அடுத்து ஆயாசமான ஒரு மனநிலையோடு கண்ணை மூடிக் கொண்டே சூர்யாவுக்கு அழைத்தான்.
 
 
ஆனால் இம்முறை அங்கு அழைப்புச் சென்றது. அதில் அத்தனை நேரம் இருந்த கலக்கமும் ஆயாசமும் காணாமல் சென்று இருக்க.. டக்கென எழுந்து அமர்ந்தான் முகுந்த்.
 
 
அந்தப் பக்கம் எடுக்கப் போகும் நொடிக்காகத் தடக்தடக்கென அடித்துக் கொள்ளும் மனதோடு படபடப்பாகக் காத்திருந்தான் முகுந்த். அவனின் படபடப்புக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அந்தப் பக்கம் எடுக்கப்பட்டு “ஹலோ” என்று சூர்யாவின் குரல் சிறு தயக்கத்துக்குப் பிறகு கேட்டது.
 
 
முகுந்த் இருந்த படபடப்பில் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. “ஹலோ சூர்யா.. என்ன ஆச்சு உன் போனுக்கு..? மூணு நாளா உனக்கு டிரை செய்யறேன்..” என்றவன் சூர்யா சட்டெனப் பதில் அளிக்காததைக் கூடக் கவனத்தில் கொள்ளாமல் “சூர்.. யா.. நம்ம.. நம்ம.. வர்ஷுவை காணோம்..” என்றான் தடுமாற்றமான குரலில்.
 
 
“என்ன சொல்றே முகுந்த்..?!” என்று அதிகபட்ச அதிர்வோடு சூர்யா கேட்கவும், “அவளை மூணு நாளா காணோம் மச்சான்.. என்ன ஆச்சுன்னு தெரியலை, எங்கே போனான்னும் புரியலை..” என்று தொடங்கி அனைத்தையும் சொல்லி முடித்தான்.
 
 
அந்தப் பக்கம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவன், குற்றவுணர்வில் தனக்குள்ளேயே குமைந்து போனான். உறவு என்று சொல்லி கொள்ளத் தான் மட்டுமே அவளுக்கு இருக்கும் நிலையில் தங்கைக்குத் தேவைப்படும் முக்கியமான நேரத்தில் உதவிக்கு முன்னால் சென்று நிற்க முடியாது போனதை எண்ணி வருந்தியவன், “நான் உடனே கிளம்பி வரேன் முகுந்த்..” என்று அழைப்பை வேகமாகத் துண்டித்து இருந்தான்.
 
 
சற்று முன் கேட்ட செய்தியை கண் மூடி ஏற்றுக் கொள்ளத் தனக்குள்ளேயே போராடியவனின் கண்கள் லேசாகக் கலங்க தொடங்கிய நேரம் அவன் தோளில் ஆதரவாகப் படிந்தது ஒரு மென் கரம். வேதனையோடு அவளைத் திரும்பி சூர்யா பார்க்கவும், “இப்போ என்ன செய்யப் போறீங்க..?” என்றிருந்தாள் காவ்யா.
 
 
“இதென்ன கேள்வி வியா.. நாம் உடனே கிளம்புவோம்..” என்று அங்கிருந்து நகர முயன்றவனை ஒரு திடுக்கிடலோடு பார்த்தவள், “எங்கே..?” என்றாள். அதில் அவளைத் திரும்பி பார்த்தவன், “சென்னைக்குத் தான்.. சீக்கிரம் கிளம்பு..” என்றான்.
 
 
“விளையாடறீங்களா..? நாம எப்படி அங்கே..! அதுவும் இப்போ..?” எனக் கேட்டவளின் கண்களும் முகமும் பயத்தை டன் கணக்கில் சுமந்து இருந்தது. “பிளீஸ் வியா.. ஏற்கனவே என் சுயநலத்துக்காக நான் போனை ஆப் செஞ்சு வெச்சு மூணு நாள் வேஸ்ட் ஆகிடுச்சுன்னு நினைக்கும் போது என்னை என்னாலேயே மன்னிக்க முடியலை.. அங்கே தனியா நின்னு போராடி இருக்கான் முகுந்த்.. எந்த விவாதமும் வேண்டாம்.. உடனே கிளம்பு..” என்று வேதனையான குரலில் கூறிவிட்டு நகர்ந்தவனின் கையைப் பற்றி நிறுத்தினாள் காவ்யா.
 
 
“பிளீஸ்.. நான் சொல்ல வருவதை ஒரு நிமிஷம் பொறுமையா கேளுங்க.. இப்போ நாம அங்கே போறது கொஞ்சமும் சேப் இல்லை.. அது உங்களுக்கே நல்லா தெரியும்..” என்றவளை முடிக்கக் கூட விடாமல் தன் இயல்புக்கு மீறிய கோபத்தோடு “அப்போ போக வேண்டாம்னு சொல்றீயா.. என் தங்கச்சிக்கு என்னை விட்டா யாரும் இல்லை..” என்றான் சூர்யா.
 
 
“ஐயோ அப்படி இல்லைங்க.. என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்களேன்..” என்று இதுவரை சூர்யா கோபபட்டே பார்த்திடாதவள் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு மன்றாடும் குரலில் சொன்னாள்.
“உன்னைப் புரிஞ்சுகிட்ட ஒரே காரணத்துக்காகத் தான் இன்னும் இருபது நாளில் தங்கச்சி கல்யாணத்தை வெச்சுகிட்டு அவகிட்ட கூட ஒரு வார்த்தையும் சொல்லாம உன் பிடிவாதத்துக்காக இதை உன் கழுத்தில் கட்டினேன்... அதனாலே தான் மூணு நாளா போனையும் ஆப் செஞ்சு வெச்சேன்.. ஆனா அது இவ்வளவு பெரிய பிரச்சனையா மாறும்னு நான் நினைக்கலை, அன்னைக்கு நைட்டே தெரிஞ்சு இருந்தா கூட உடனே கிளம்பி போய் ஏதாவது செஞ்சு கண்டுபிடிச்சு இருக்கலாமோன்னு மனசு அடிச்சுக்குது.. அம்ருவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அந்தக் குற்றவுணர்ச்சியே என்னைக் கொன்னுடும்.. பிளீஸ்.. நேரத்தை வீணாக்காம கிளம்பு மா..” என்றான்.
 
 
சூர்யாவின் வாயை அவசரமாக மூடி காவ்யா “ஐயோ பிளீஸ் அப்படி எல்லாம் பேசாதீங்க.. இனி எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை.. நீங்க இல்லைனா.. இனி நானும் இல்லைன்னு தான் அர்த்தம்..” என்றாள்.
 
 
“அம்ருவுக்கும் என்னை விட்டா யாரும் இல்லை மா.. என்ன தான் முகுந்த் அவளுக்காக அங்கே போராடிகிட்டு இருந்தாலும் அவன் இன்னும் அவளுக்கு உறவா ஆகலை, அதையே சொல்லி தான் இன்னைக்கு வரை கம்ப்ளெயின்ட் கூட எடுக்க மாற்றாங்கலாம்.. எவ்வளவு வேகமா போக முடியுமோ அவ்வளவு வேகமா போய்ச் சேரணும்.. அம்ரு எந்த ஆபத்தும் இல்லாம திரும்பக் கிடைச்சுட்டா எனக்கு அதுவே போதும்...” என்றவன் பிளைட் டிக்கெட் செக் செய்யத் துவங்கினான்.
 
 
“தேங் காட்.. இன்னும் டூ ஹார்ஸ்ல ஒரு பிளைட் இருக்கு.. நான் டிக்கெட் போட்டுடறேன், நீ கிளம்பு..” என்றவனை, “நீங்க மட்டும் போயிட்டு வாங்க.. நான்.. நான் இங்கேயே இருக்கேன்...” என்ற காவ்யாவின் குரல் நிமிர செய்தது.
 
 
“உன்னை இங்கே தனியா விட்டுட்டு அங்கே நான் நிம்மதியா இருக்க முடியும்னு நீ நினைக்கறீயா.. எனக்கு அம்ரு மட்டும் இல்ல வியா நீயும் தான் முக்கியம்..” என்றான் புரிய வைக்கும் விதமாக.
 
 
“அது இல்லீங்க.. நான் உங்களை எதுவும் சொல்லலை.. ஆனா எனக்கு.. எனக்குத் தான் அங்கே வர..” என்று தடுமாறியவளை கூர்ந்து நோக்கியவன், “நீ இங்கே இருந்தா மட்டும் கண்டுபிடிக்க முடியாதா..?!” என்றான். “முடியும் தான்..” என்றவளின் குரல் அப்படியே உள் இறங்கி ஒலித்தது.
 
 
“உனக்கே தெரியும் உங்க அண்ணனோட ஆள் படையும் அதிகாரமும் எவ்வளவு தூரம் இருக்குன்னு.. அதையும் மீறி நீ இங்கே எனக்கே சொல்லாம என்னைத் தேடி வந்தப்போ நான் உன் மனசை உனக்கு என் மேலே இருக்க நம்பிக்கையை மட்டுமே யோசிச்சு தான் வேற எதையும் யோசிக்காம தள்ளி போடாம அம்ருகிட்ட கூடச் சொல்லாம என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்னு தாலி கட்டினேன்.. எப்படியும் நாம எங்கே இருந்தாலும் தேடி வர தான் போறாங்க..” என்றான்.
 
 
“எக்ஸாட்லி அதே தாங்க நானும் சொல்றேன், எங்கே இருந்தாலும் அவங்க தேடி வருவாங்கனும் போது நாமா ஏன் அங்கே போய்ச் சிக்கணும்.. அதுக்காகப் போக வேணாம்னும் சொல்ல வரலை.. அம்ருவை கண்டுபிடிக்கறதும் முக்கியம் தான்.. ஆனாலும் பயமா இருக்குங்க.. எனக்கு நிஜமாவே என்ன செய்யறதுன்னு தெரியலைங்க..” என்றவளின் மனதில் அம்ருவின் இந்தத் திடீர் மறைவுக்குப் பின் தன் அண்ணன் இருப்பதாக உறுதியாக ஒரு எண்ணம் எழுந்தது.
 
 
இப்போது இல்லை இந்தச் செய்தியை கேட்ட நொடியே காவ்யாவின் மனதில் எழுந்த முதல் பயம் இதுவாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் இதில் எந்த வகையிலும் சம்பந்தபடாத அப்பாவியான அவளைத் தங்கள் சுயநலத்துக்காகச் சிக்க வைத்து விட்டோமோ என்று உள்ளம் தவிக்கத் தொடங்கும் போதே இது ஒருவேளை தங்களை அங்கே வர வழைக்கக் கூடிய வழி முறையோ என்றும் சந்தேகம் எழுந்தது.
 
 
அதுவே அவளை இவ்வளவு தூரம் பயம் கொள்ளவும் சூர்யாவை போக வேண்டாமென்று தடுக்கவும் காரணமாக இருந்தது. அதே நேரம் ஒரு பெண்ணாக அம்ருவுக்கு எந்த ஆபத்தும் நேராமல் காக்க வேண்டும் என்ற தவிப்பும் எழ தான் செய்தது.
 
 
அவளுக்குத் தெரியாத தன் உடன்பிறப்பின் கோபத்தின் எல்லை என்ன என்று..! கோபம் என்று வந்து விட்டால் அவன் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவன் என்பதைப் பல வருடங்களாக உடன் இருந்து பார்த்து இருக்கிறாளே..!!
 
 
ஆனால் இதை மனம் திறந்து சூர்யாவிடம் சொல்ல தான் அவளுக்கு மனம் வரவில்லை. எங்கே இது தெரிந்தால் தன்னை வெறுத்து விடுவானோ என்ற பயமே அவளைத் தடை செய்து கொண்டிருந்தது.
 
 
யோசிக்காமல் அவசரப்பட்டுச் சூர்யாவிடம் கூடச் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்து தவறு செய்து விட்டோம் என்று எண்ணியவளுக்கு அன்று அந்தச் சூழ்நிலையில் இதைத் தவிரத் தனக்கு வேறு வழி இருந்து இருக்கவில்லையே என்றும் தோன்றியது.. இதையெல்லாம் யோசித்தவாறே சென்னையை நோக்கி பயத்தோடும் தன் கணவனோடும் பயணித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
 
 
*******
 
 
அது எப்படி ஒரு முன் பின் தெரியாத பெண்ணைப் பற்றி இப்படி எல்லாம் கேவலமாகப் பேச முடியும் என்பதிலேயே மனம் அதிர்ந்து நின்று விட, தன் போக்கில் யோசனையில் மூழ்கி இருந்த அம்ருவை அவளின் முகத்தில் வந்து மோதிய சிகரெட் புகையின் வாசம் களைய செய்தது.
 
 
புகையின் நெடியில் இருமலோடு பார்வையைத் திருப்பியவள் ஷௌர்யா தான் அவன் அமர்ந்த இடத்தில் இருந்து லேசாக முன்னோக்கி வளைந்து அம்ருவின் முகத்தில் தன் கையில் இருந்த சிகெரட் புகையை உள் இழுத்து ஒரு இகழ்ச்சியான இதழ் சுழிப்போடு ஊதிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
 
 
அம்ரு அதில் மூக்கை கைகளால் மூடிக் கொண்டு இருமியவாறே இரண்டடி பின்னால் நகர்ந்தாள். “என்ன முகுந்தா முகுந்தாவோட கனவு கண்டு முடிச்சாச்சா..?!” என்றவனைக் கண்களில் வலியோடு பார்த்தவள், “பிளீஸ் சார்..” என்று ஏதோ சொல்ல தொடங்க..
 
 
“இங்கே பாரு எனக்கு வளவளன்னு பேசறது எல்லாம் பிடிக்காது.. இன்னும் சொல்ல போனா பேச்சே இருக்காது, எல்லாம் செயல் தான்.. புரியுதா..! வந்ததுல இருந்து ரொம்பப் பேசற.. இனி பேசினா சேதாரம் அதிகமா இருக்கும் காட் இட்.. இங்கே பேசறது நானா இருக்கணும். கேக்கறது தான் நீயா இருக்கணும்.. அதுக்குப் பிரிப்பேர் ஆகிக்கோ..” என்றான் எச்சரிக்கும் தொனியில்.
 
 
“ஐயோ சார் உங்களுக்கு நான் எப்படிச் சொல்லி புரிய வைப்பேன்.. இப்போவே என்னைக் காணாம எல்லாம் எப்படித் தேடி தவிக்கறாங்களோ தெரியலை.. நீங்க என்ன என்னவோ புரியாம பேசிட்டே போறீங்க.. எனக்குத் தலையே சுத்துது..” என்றவளை இடையில் “தேடி தவிக்கறாங்களா..?! இல்லை உன் முகுந் தவிக்கறானா..?!” என்ற ஷௌர்யாவின் வார்த்தைகள் தடுத்து இருந்தன.
 
 
“இன்னும் இருபது நாள்ல எங்களுக்குக் கல்யாணம்.. தேடினா என்ன தப்பு..?” ஏனோ சும்மா தன்னைத் தப்பாகப் பேசுவது போலவே பேசுகிறானே என்ற கோபத்தில் அம்ரு வீம்பாகக் கேட்டிருந்தாள்.
 
 
“ஹா ஹா இன்னும் இருபது நாள்ல கல்யாணமா.. யூ மீன் உனக்கு இரண்டாவது கல்யாணமா..?! நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கறேன் மிசஸ் அமிர்தவர்ஷினி ஷௌர்ய வர்மன்.. உங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் ஆகுது.. அட்வான்ஸ் கொடுத்தது வேணும்னா அவனா இருக்கலாம்.. ஆனா பட்டா போட்டது தி கிரேட் ஷௌர்ய வர்மன்.. நியாபகம் இருக்கட்டும்..” என்று எதையோ எண்ணி கண்கள் கோபத்தில் சிவந்து இருக்க, முகம் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க.. அதற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாமல் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தவனை மிரட்சியான பயத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் அம்ரு.
 
 
அந்தக் கோபம் ஆத்திரம் எல்லாம் அவளுக்கு எதையோ மெல்ல புரிய வைக்க.. இவன் நம்மை மாத்தியோ தெரியாமலோ இங்குக் கொண்டு வரலை.. தெரிந்தே தான் இதெல்லாம் செய்கிறான்... ஆனால் ஏன்.. எதற்கு என்று நாம் எவ்வளவு கேட்டாலும் அதை மட்டும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதில் இருந்தே எவ்வளவு கேட்டாலும் அதை மட்டும் சொல்ல தான் மாட்டான் என்று அம்ருவுக்குத் தெளிவாகப் புரிந்தது.
 
 
இதுவரை பார்த்து கூட இல்லாத யாரோ ஒருவன் எங்கிருந்தோ வந்து தன் வாழ்க்கையைத் தீர்மானிப்பதை அவ்வளவு எளிதாக அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் எழுந்த கோபத்தோடு “அப்போ இதுக்கு என்ன பதில்..?” என்றிருந்தாள் அவள் கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை ஷௌர்யாவின் முன் உயர்த்திக் காண்பித்து அழுகை வெடித்துக் கிளம்ப இருக்கும் குரலில்.
 
 
“ம்ம்.. கழட்டி தூக்கி போடு.. அவனை மட்டும் என்ன உண்மையாவா காதலிச்சு இருக்கப் போறே, பணத்துக்காகத் தானே பின்னாடி போய் இருப்ப.. இதே இந்த இருபது நாட்களுக்கு நடுவுல அவனை விடப் பணக்காரான யாராவது வந்து இருந்தா முகுந்தை கழட்டி விட்டு இருப்ப தானே.. அதையே இப்போவும் செய், அன்னைக்கு உன் கேவலமான அலங்காரமே சொல்லுச்சே நீ எந்த அளவு இறங்கி போய் மயக்க முயற்சி செஞ்சு இருக்கேன்னு.. இப்போவும் உன் கணக்கு வீண் போகலை.. நான் அவனை விடப் பணக்காரன் தான்.. அப்பறம் ஏன் ரொம்பபபப நல்லவ மாதிரி நடிக்கற..” என்றவன் தன் முன் நீண்டு இருந்த அம்ருவின் கையில் இருந்த மோதிரத்தை வெடுக்கென ஊருவி கீழே விசீனான்.
 
 
அந்தச் செயலில் அவன் பேசிய மற்றது எல்லாம் மறந்து போய் “ஐயோ” என்ற பதற்றத்தோடு அதை எடுக்க முனைந்தாள் அம்ரு. அமர்ந்தவாக்கிலேயே தாவி அதை எடுக்க முயன்றவளை கண்களில் கனலோடு வெறித்தவன், அம்ரு அந்த மோதிரத்தின் மீது கையை வைத்த நொடி அவளின் கையின் மீது தன் வலது காலை ஷூவோடு வைத்து அழுத்தினான்.
 
 
அம்ருவின் இரு விரல்கள் மோதிரத்துக்குக் கீழே மாட்டி இருக்க அதன் கூர்முனை விரலை அழுத்தி கொண்டு இருந்தது. அதோடு மோதிரத்துக்கும் ஷௌர்யாவின் ஷூவுக்கும் இடையே மற்ற விரல்கள் சிக்கி இருக்க.. இந்தப் பக்கம் இருந்த கூர்முனை விரலை பதம் பார்த்ததில் லேசாக இரு பக்கமும் ரத்தம் கசிய தொடங்கியது.
 
 
இந்த எதிர்பாராத அழுத்தத்திலும் வலியிலும் அம்ரு கண்கள் கலங்கி போக.. ஷௌர்யாவை நிமிர்ந்து பார்த்தாள். “நான் அவ்வளவு சொல்லியும் உனக்குப் புரியலை இல்லை.. நான் வேணாம்னு சொன்னா அது வேணாம்.. செய்யக் கூடாதுன்னு சொன்னா செய்யக் கூடாதுன்னு அர்த்தம்.. இப்போவாவது புரியுதா..?! நோ மீன்ஸ் நோ.. காட் இட்..” என்று பல்லை கடித்துக் கொண்டே கேட்டவன், அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் காலின் அழுத்தத்தைக் கூட்டி கொண்டே சென்றான்.
 
 
ஆரம்பத்தில் எதிர்பாராத இந்தத் தாக்குதலில் வலித்தாலும் வெளிக்காட்டாமல் பல்லை கடித்துக் கொண்டு கண் கலங்க அமர்ந்து இருந்தவள், ஒரு கட்டத்தில் அழுத்தம் கூடிக் கொண்டே சென்றதால் இருபக்கமும் இருமுனை குத்தி ஏற்படுத்திய காயத்தையும் மீறி ஷௌர்யாவின் ஷூ கொடுத்த அழுத்தமும் தாங்க முடியாத வலியை கொடுக்க.. “ஸ்ஸ்ஸ்ஆஆ..” என்று மெலிதான சத்தத்தோடு கண்ணீர் வழிய கையை வெளியில் இழுக்க அவள் போராடி கொண்டிருந்ததை உணர்வே இல்லாமல் பார்த்தவாறு அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் அமர்ந்திருந்தான் ஷௌர்யா.
 

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 4

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 5             
 
அந்தத் தளத்தில் கடைசியாக இருந்த தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் படுக்கைக்கு அருகில் தரையில் ஓரமாகக் கால்களைக் குறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள் அம்ரு. வலது கையில் வலியும் எரிச்சலும் மிகுந்து இருந்தது.
 
 
மெல்ல கையை ஊதி எரிச்சலை குறைக்க முயன்று கொண்டிருந்தவளுக்கு அந்த வலி மிகுந்த நிமிடங்கள் மனதில் ஓடியது. அவளாக மோதிரத்தை பிடித்து இருந்ததை விடுவிக்கும் வரை அவன் தன் காலின் அழுத்தத்தை நிறுத்தவே இல்லை. நேரம் செல்ல செல்ல இன்னும் கூட்டி கொண்டே தான் போனான்.
 
 
இது வெகு நேரம் அம்ருவுக்குப் புரிவில்லை. அம்ருவின் கவனம் எல்லாம் அவளின் கை மேலும் அதனடியில் இருந்த மோதிரத்தின் மேலும் மட்டுமே இருந்தது. ஒரு கட்டத்தில் அழுத்தமும் வலியும் தாங்க முடியாமல் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், அந்தக் கண்கள் கக்கிய வெறுப்பிலும் கனலிலும் தான் தன் வலியை கூட மறந்து அப்படியே திடுக்கிட்டு பார்த்திருந்தாள் அம்ரு.
 
 
அவளின் கவனம் மொத்தமாகத் தன் மேல் திரும்பியதை அறிந்திருந்தும் ஷௌர்யா தன் பார்வையை அவள் மடித்துப் பிடித்து இருந்த கையில் இருந்து விலக்கவே இல்லை. வெகுநேரம் இதே நிலையே நீடிக்க.. பயமும் அழுகையுமாக ஷௌர்யாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே கையை விடுவிக்க அம்ரு முயலும் போது அவள் முகத்தில் வந்து மோதியது சில காகிதங்கள்.
 
 
அது என்ன என்று புரியாமல் விழித்தவள் கீழே சிதறி கிடந்த காகிதங்களை எடுக்க முயல.. வலதுகை அவனின் காலுக்கு அடியில் சிக்கி இருக்க.. அவள் மண்டியிட்டு அமர்ந்திருந்த நிலையில் இருந்து இடது கையைத் திருப்பி இந்தப் பக்கமாகச் சிதறி இருந்த காகிதங்களை அவளால் தொட கூட முடியவில்லை.
 
 
ஏதோ முத்திரைகள் குத்தப்பட்டு இருந்த காகிதங்கள் வயிற்றுக்குள் பயத்தைச் சுரக்க செய்ததில் தன்னையறியாமல் அம்ரு வலது கையைக் காகிதங்களின் மேல் கவனமாக இருந்தவாறே உருவி கொண்டு இருந்தாள். அவ்வளவு நேரம் அசைக்கக் கூட முடியாமல் இருந்த கை இப்போது மட்டும் எப்படி எளிதாக எடுக்க வந்தது என்றெல்லாம் சிந்திக்கும் நிலையில் அவள் இல்லை.
 
 
பரபரவென எடுத்து அந்தக் காகிதங்களில் கண்களைப் பதித்து அதில் உள்ள விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள முயன்றவளுக்கு அது மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
 
 
ஷௌர்யாவுடன் அம்ருவுக்குச் சட்டப்படி திருமணம் ஆனதை உறுதிப்படுத்தும் சான்றையும் அதில் பதிந்திருந்த தன் கையெழுத்தையும் கண்டு உச்சபட்ச அதிர்ச்சியோடு அவள் கண்கள் நிலைகுத்தி நிற்க வெறித்துக் கொண்டிருந்தாள்.
 
 
“இது.. இது..” என்று திணறலோடு ஷௌர்யாவின் பக்கம் பார்வையைத் திருப்பியவள், அங்குச் சிகரெட்டை காலில் போட்டு அழுத்தும் பாவனையில் அந்த மோதிரத்தை தரையோடு சேர்த்து அவன் அழுத்தி கொண்டிருந்ததைத் தாங்க முடியாத துக்கத்தோடு பார்த்தவள் அவன் காலை எடுக்கும் நொடிக்காக அங்கேயே பார்வை பதித்து இருந்தவள் ஷௌர்யா காலை நகர்த்தியதும் பாய்ந்து அதை எடுக்க முயல.. அவனோ அதை எதிர்பார்த்தது போல ஓங்கி எட்டி உதைத்ததில் அது எங்கோ சிதறி போய் விழுந்தது.
 
 
பதட்டத்தோடு அது தெறித்து விழுந்த பக்கம் பார்வையைத் திருப்பியவளை சொடக்கிட்டுத் தன்னைப் பார்க்க செய்தவன், “இனி இது தான் நிஜம்.. உன் வாழ்க்கை இனி இங்கேன்னு பிக்ஸ் ஆகிக்கோ.. அது எப்படி என்னன்னு நான் முடிவு செஞ்சுக்கறேன்..” என்றான் அவள் கையில் இருந்த சான்றிதழை காண்பித்துக் கோணல் சிரிப்போடு.
 
 
“ஆனா நான்.. நான்.. இது.. சைன்..” என்று தடுமாறியவளுக்கு அதில் எப்படித் தன் கையெழுத்து வந்ததென்ற குழப்பமே பெரிதாக இருந்தது. கடந்த சில நாட்களாக நடக்கும் விஷயங்களை நிஜம் என நம்பவும் முடியாமல் கனவென ஒதுக்கவும் முடியாத நிலையில் இருப்பவளுக்கு இதுவும் சேர்ந்து கொண்டது.
 
 
அவளின் குழப்பமான முகத்தையும் அதில் வந்து போன கேள்விகளையும் கவனித்துக் கொண்டு இருந்தவன், “எனக்கு வேணும்னா... நான் நினைச்சா நீ என்ன செத்து போன உன் அப்பன் கூட வந்து இதுல சாட்சி கையெழுத்து போடுவான்..” என்று அம்ருவை பார்த்துக் கேலியாகக் கூறிவிட்டு எழுந்து சென்றான்.
 
 
ஷௌர்யா பேசிவிட்டு சென்ற வார்த்தைகளின் அர்த்தம் புரியவே அம்ருவுக்கு வெகு நேரம் ஆனது. ஆரம்பம் முதலே புரியா புதிராக இருப்பவனின் நடவடிக்கைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்துக் காரணம் தேடி கலைத்துப் போனது தான் மிச்சம். இந்த நொடி வரை அவன் யார் என்ன என்ற கேள்விக்குக் கூட அம்ருவிடம் பதில் இல்லை.
 
 
இதுவரை அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவன் நேரடியாக என்ன மறைமுகப் பதிலை கூடக் கொடுக்க முயலவில்லை. அவனின் ஒவ்வொரு செயலிலும் வார்த்தையிலும் வெளிப்படும் அதீத திமிரும் உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பது போன்ற செயல்களும் அம்ருவை சோர்வுற செய்து இருந்தது.
 
 
இவனோடு எந்த வகையில் எங்குச் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என்று அவளும் இத்தனை நாளில் எப்படி எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்து விட்டாள். அவள் வாழ்நாளில் இப்படி ஒரு கொரூரனை இதற்கு முன்பு பார்த்ததாகக் கூட நினைவே இல்லை.
 
 
அவனின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பது என்ன என்று புரியாமல் அவளே குழம்பி குழம்பி சோர்ந்து போனது தான் மிச்சம். இங்கு இவனிடம் சிக்கி தவிக்க முடியாது என்பதை அவனின் கண்கள் உமிழும் வெறுப்பைக் கண்டு எழுந்த நடுக்கம் அவளுள் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தது.
 
 
ஆனால் அவனிடமிருந்து தப்பிக்கும் மார்க்கம் தான் அவளுக்குத் தெரியவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து உறங்கி கொண்டிருந்ததையும் மீறி சில நேரங்களில் வந்த நினைவை கொண்டு அதற்கும் கூடத் திட்டமிட்டு பார்த்து விட்டாள்.
 
 
ஆனால் அறையில் இருக்கும் நர்ஸ் அதீத கவனத்தோடு தன்னையே கண் காணிப்பது போலத் தோன்றவும், மெல்ல கண்மூடி உறங்குவது போலச் சாய்ந்து கொண்டே அவளைக் கவனித்ததில் அது உறுதியாகியது. அதனாலேயே அங்கிருந்து வெளியேறும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினாள்.
 
 
அந்த நிமிடத்தில் கிடைக்கும் வாய்ப்பை எப்படியாவது தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணி இருந்தவளின் எண்ணத்தைப் பொய்யாக்குவது போன்று முதலில் பிரபு உள்ளே வந்து நின்றான் என்றால் அடுத்து அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்த நர்ஸ் கையைப் பிடித்துக் கொண்டே கூட வந்து காரிலும் ஏற்றி விட்டாள்.
 
 
அவள் பிரபுவிடம் பணம் வாங்கியதை கண்டு தன் சந்தேகம் சரியென ஆனதில் நல்லவேளை அவசரப்பட்டு எதையும் செய்து இன்னும் அதிகப் பிரச்சனையில் சிக்கி கொள்ளவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டாள் அம்ரு.
 
 
ஏனெனில் முதல் நாளே போலீஸ் உயரதிகாரியின் உதவியோடு தன்னைக் கடத்தியவனாயிற்றே..! அதை நேரில் கண்ட பின்னும் அவசரபட்டு எதையும் செய்து சிக்கி கொள்ளத் தைரியம் வருமா என்ன..!! இங்கிருந்து தப்புவது என்றால் அது ஒரே முறையில் நடந்து முடிய கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் அது இல்லாமல் தப்ப முயன்று மீண்டும் இவனிடம் சிக்கி கொண்டால் அது மேலும் பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்று அந்தக் கண்கள் உணர்த்தும் வெறுப்பில் இருந்து தெளிவாகப் புரிந்தே அதைச் செயல்படுத்தும் வேறு சாத்திய கூறுகளை யோசித்துக் கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள் அம்ரு.
 
 
மனதில் இருந்த வலிக்கும் வேதனைக்கும் முன் கையில் இருந்த வலி கூடப் பெரிதாகத் தெரியவில்லை. அப்படியே கண்ணில் இருந்து மழையெனப் பொழிய தன் காலிலேயே தலை சாய்த்து அமர்ந்திருந்தவளின் கவனத்தை வெகு அழுத்தத்தோடு அறைக்கு வெளியே கேட்ட காலடி ஓசை கலைத்தது.
 
 
அது அந்த டீமனுக்குச் சொந்தமானது என்று இதற்குள் அம்ருவுக்கு வெகுவாகப் பழகி இருந்தது. கண்ணை இறுக மூடி ஒருவாறு அவனை எதிர் கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொண்டு கண்களைத் திறந்தவள், தன் வெகு அருகில் அந்தக் கருப்பு நிற ஷூ கால்கள் தெரியவும், பயத்தோடு பார்வையை உயர்த்தினாள் அம்ரு.
 
 
ஷௌர்யாவின் முகத்தைப் பார்ப்பதற்கு முன் அவன் கைகளில் இருந்த தன்னுடைய அலைபேசியில் பார்வை பதியவும் அவளையும் அறியாமால் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. அதை அம்ரு வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம் ஆனால் அதைச் சரியாகக் கவனித்து இருந்தவன் கண்களோ அவளைக் கேலியாக அளந்தது.
 
 
பின் ஒரு இகழ்வான இதழ் வளைவோடு அவள் அருகில் இருந்த படுக்கையின் மேல் அம்ருவின் அலைபேசியை விட்டெறிந்தவன், “அன்னைக்கு யாருக்கோ கூப்பிட டிரை செஞ்ச இல்லை.. உனக்கு ஒரு சான்ஸ் தரேன்.. இதோ உன் போன் யாருக்கு கூப்பிடணுமோ கூப்பிடு, இங்கே இருந்து உன்னை யாரு கூட்டிட்டு போறாங்கன்னு நானும் பார்க்கறேன்..” என்றவன் பேச தொடங்கிய உடனே அவசரமாகப் போனை எடுத்து அதை ஆன் செய்திருந்தவளின் கரங்கள் அடுத்து ஷௌர்யா உதிர்த்த வார்த்தைகளில் அப்படியே அசைவற்று நின்றது.
 
 
“நீ யாருக்கு கூப்பிட்டு பேசறீயோ அவன் கூட நீ பேசறது இது தான் கடைசியா இருக்கும்.. ம்ஹும் அப்படிச் சொல்ல கூடாது அவன் பேசறதே அது தான் கடைசியா இருக்கும்..” என்றான் கேலியும் வெறுப்புமான குரலில்.
 
 
அதில் அசைவற்று அப்படியே அமர்ந்து விட்டவளுக்கு அதன் பின் அதைப் பயன்படுத்த மனம் வரவில்லை. அப்படியே அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டவள் பொங்கி வந்த அழுகையைத் தன் கைகளால் வாயை மூடி கட்டுபடுத்த முயன்றாள்.
 
 
ஆனால் அம்ரு அதை ஆன் செய்யவே காத்திருந்தது போல் உடனே ஒலிக்கத் தொடங்கி இருந்தது அலைபேசி. பயமும் நடுக்கமுமாக அதன் மேல் பார்வையைத் திருப்ப, “முகுந்த் காலிங்” என்ற எழுத்துக்கள் மின்னியது.
 
 
அதைக் கண்டு மனதில் எழுந்த பயத்தோடும் பதட்டத்தோடும் மெல்ல கண்களை அம்ரு உயர்த்தவும், ஷௌர்யாவும் அந்தத் திரையைத் தான் கேலியும் எகத்தாளமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
திருவிழாவில் காணாமல் போன குழந்தை பலமணிநேரம் தனக்குரியவர்களைத் தேடி அலைந்து கலைத்து சுருண்டு இருக்கும் போது தொலைவில் தன்னவர்களைக் கண்டால் அழுகையோடு பாய்ந்து சென்று அணைத்து ஆறுதலும் தேடுமே அப்படி ஒரு மனநிலையில் தான் இப்போது இருந்தாள் அம்ரு.
வெறும் மூன்று நாட்களே கடந்து இருந்தாலும் நீண்ட நெடிய தனிமை போராட்டத்துக்குப் பிறகான கலைத்து போன மனநிலையில் இருந்தவள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்ற தவிப்போடு அந்தத் திரையையே ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தாள்.
 
 
“ஹப்ப்பாஆஆ.. அந்தக் கண்ணுல தான் எவ்வளவு எழவு... ச்சீ ச்சீ.. லவ்வுவுவு... ஏக்கம்.. ஒரு நிமிஷம் நானே இது உண்மையான லவ்வுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்னா பாரேன், அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு சொல்லலாம்னா இங்கே அவள் மட்டுமே நோக்கியாவா இருக்காளே.. அங்கே அண்ணல் என்ன செஞ்சுட்டு இருப்பாருருரு... ம்ம்ம், போன் ஆன் செஞ்சதும் உடனே கூப்பிடறதை பார்த்தா மூணு நாளா இதே வேலையா தான் இருந்து இருப்பாரோ அந்தக் காவிய காதலர்..” என்று அவளைச் சீண்டும் குரலில் வேண்டுமென்றே ஏற்ற இறக்கத்தோடு பேசினான்.
 
 
பொங்கி வந்த துக்கத்தை இதழ் கடித்துக் கட்டுக்குள் வைக்கப் போராடியவள், தலையை நிமிர்த்தவும் இல்லை, அவனைப் பார்க்கவும் இல்லை. “கைக்கெட்டும் தூரத்துல காதலனை வெச்சுட்டு கொஞ்சி பேச முடியாம இருக்கறது ரொம்பக் கஷ்டம் தான் இல்லை.. அப்படி ஒரு கஷ்டம் உனக்கெதுக்கு மை போண்டா டீ, அவனும் விடாம அடிக்கறான், எடுத்து தான் பேசேன்..” என்றான் அத்தனை நக்கலையும் குரலில் தேக்கி.
 
 
அழைப்பும் நிற்பது போல் தெரியவில்லை, மூன்று நாட்களாக அணைத்து வைக்கப்பட்டு இருந்த அலைபேசியின் இணைப்பு இன்று கிடைத்து இருப்பதால் அதை அம்ரு எடுத்துவிட மாட்டாளா என்ற எதிர்பார்ப்போடு அவனும் விடாமல் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தான்.
 
 
இன்னும் சில நிமிடங்கள் அது தொடர்ந்து அடித்தாலும் எங்கே தன்னையும் மறந்து எப்படியாவது இங்கிருந்து காத்துக் கொள்ளும் ஆவலில் எடுத்து விடுவோமோ என்று அம்ருவுக்குமே தோன்ற தொடங்கி இருந்தது.
 
 
முகுந்திடம் உதவி கேட்ட உடனே அவன் வந்து தன்னை மீட்டுச் சென்றுவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பை விடத் தான் அழைப்பை எடுப்பதினால் அவனுக்கு இந்த ராட்சசனால் ஏதேனும் ஆபத்து நேர காரணமாகிவிடக் கூடாதே என்பது தான் இப்போதைக்கு அம்ருவின் மாபெரும் கவலையாக இருந்தது.
 
 
ஏனெனில் அவளறிந்த வரையில் இவன் தெலுங்குபட வில்லனை போலச் சத்தமிட்டு கத்தி அப்படிச் செய்து விடுவேன் இப்படிச் செய்துவிடுவேன் என்றெல்லாம் மிரட்டுவதை விட, சத்தமே இல்லாமல் அனைத்தையும் செய்து முடிக்கும் வில்லாதி வில்லானாக இருக்கிறான். ஆகையால் உடனே போனை எடுத்து வேகமாக அதனை அணைத்து விட்டெறிந்தாள்.
 
 
அம்ருவின் செயல்களை ஒரு ஏளன பார்வையோடு அளந்த ஷௌர்யா “குட்.. இப்படி நான் சொல்லவரதை எல்லாம் ஒரே முறையில் புரிஞ்சுகிட்டா எனக்கும் வேலை மிச்சம்..” என்றவன், “அப்பறம் இந்த அறையிலேயே உட்கார்ந்து மூணு வேலைக்கும் விதவிதமா சாப்பிட்டு ராஜபோக வாழ்க்கை வாழலாம்னு ஆசை இருந்தா அதை இப்போவே மூட்டை கட்டி தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சுடு.. இனி நீ இங்கே சம்பளம் இல்லாத வேலைகாரி.. மை பர்சனல் வேலைகாரி.. ரைட்ட்ட்ட்.. இந்தப் பிளோர்ல இருக்க அத்தனை வேலையும் இனி நீ தான் செய்யணும்.. எனக்கு எல்லா வோர்க்கும் ஆன் டைம் நடக்கணும்.. அதுல ஏதாவது தப்பாச்சு.. நடக்கற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லை..” என்று தன் முன் நின்று முகம் சிவக்க விரல் நீட்டி எச்சரிப்பவனையே தரையில் குறுகி அமர்ந்து எந்தப் பதிலும் இல்லாமல் முகம் வெளுற பார்த்து கொண்டிருந்தவளின் உடல் அறையின் கதவுக்கு வெளியே வெகு அருகில் கேட்ட அந்த ஆக்ரோஷமான நாயின் குறைப்பில் நடுங்கி தூக்கி போட்டது.
 
 
அதில் அதுவரை பேசிக் கொண்டு இருந்தவன், மழையில் நனைந்த கோழி போல வெடவெடத்தவாறே அறையின் கதவை பயபார்வை அம்ரு பார்ப்பதை கண்டு அவளையும் கதவையும் ஒரு நொடி மாறி மாறி பார்த்த பின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைய நின்றிருந்தாலும் அதற்கு மாறாகக் கண்களில் ஒரு பளபளப்பு வர அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
மறுநாள் காலை முதல் தன் வேலைகளைத் தொடங்கிவிட்டாள் அம்ரு. அவளின் பணிகள் என்று ஷௌர்யா பட்டியளிட்டவற்றைக் கேட்டவளுக்கு மயக்கம் வரும் நிலை தான். வீட்டின் ஒட்டு மொத்த வேலைகளையும் கிட்டத்தட்ட அவளுக்கு ஒதுக்கி இருந்தான் அவன்.
 
 
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்தாலும் அதில் அத்தனை குறைகளைக் கண்டு பிடித்து மீண்டும் மீண்டும் அதையே செய்ய வைத்துக் கொண்டிருந்தான். அவன் பட்டியலிட்ட வேலைகளைச் செய்து முடிக்கவே ஒரு நாள் போதாது என்ற நிலையில் மறுபடியும் மறுபடியும் அதையே செய்ய வைத்து வேலைகளின் அணிவகுப்பை முடிவில்லாமல் தொடர செய்து கொண்டிருந்தான் ஷௌர்யா.
 
 
அங்கு அனைத்து வேலைகளுக்குமே ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவனின் வேலைகளை எல்லாம் அவளையே செய்யும்படி செய்தான் அவன். அதன்படி சமையல் அறையில் தட்டு தடுமாறி ஷௌர்யா சொல்லி இருந்த மெனுவை தயாரித்துக் கொண்டிருந்தவளை பாவமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் சமையல் வேலை செய்யும் புவனா.
 
 
அம்ருவுக்கு அவர் உதவ முன் வந்தாலும் அதைத் தவிர்த்து விட்டவள், இதை வேறு அந்த டீமன் கண்டால் மீண்டும் முதலில் இருந்து செய்ய வைப்பான் என்று அதற்குள் புரிந்து வைத்து இருந்தவள் அவளாகவே அனைத்தையும் செய்யத் துவங்கி இருந்தாள்.
 
 
புவனாவின் பார்வை தன் மேலேயே பாவத்தோடு பதிந்து இருப்பதை அறிந்தவள், இவளிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்ற சிறு ஆசை துளிர் விடவும், மெதுவாகப் பேச்சு கொடுத்து “நீங்க இங்கே எத்தனை வருஷமா வேலை செய்யறீங்க மா..?” என்றாள்.
 
 
“இரண்டு நாள் முன்னே தான் மா வேலைக்குச் சேர்ந்தேன்..” என்றவரை அதிர்வோடு திரும்பி பார்த்தவள், “ஓ.. இதுக்கு முன்னே சமையலுக்கு இருந்தவங்க எங்கே..?’ என்றாள்.
 
 
“அதெல்லாம் தெரியாது மா.. நான் வரும் போது இங்கே அப்படி யாரும் இல்லை..”
 
 
“அப்போ மேல் வேலை செய்யறாங்களே அவங்க..?”
 
 
“அவளும் தான் மா..”
 
 
“ஓ.. இங்கே இருக்கறவங்களிலேயே ரொம்ப வருஷமா வேலை செய்யறவங்க யாருன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா மா..?”
 
 
“இங்கே இருக்க எல்லாருமே என் கூடத் தான் மா முந்தா நேத்து சேர்ந்தாங்க.. நாங்க எல்லாம் ஒரே ஏஜென்சில இருந்து தான் வரோம்.. பழைய ஆட்கள்னு இங்கே யாரும் இல்லை மா..” என்றவர் மெல்ல தயங்கி “உங்களை ஒண்ணு கேட்கட்டுங்களா மா..?” என்றார்.
 
 
“ம்ம் கேளுங்க.. என்னை அம்ருன்னே கூப்பிடுங்க, உங்களுக்கு என் அம்மா வயசு இருக்கும்..” என்றவளை வாஞ்சையாகப் பார்த்தவர், “நீங்க ஐயாவோட சம்சாரங்களா மா..?” என்றார்.
 
 
அதில் அம்ருவின் கைகள் சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்தது. பின் மீண்டும் வேலையைத் தொடர்ந்தவளின் தலை ‘ஆம்’ என்பது போல அசைந்தது. சட்டப்படி சாஸ்திரப்படி என்று அவனின் மனைவி என்பதற்கான இருவகை ஆதரங்களும் கண்முன் இருக்க.. இனி மறுத்து என்ன பயன் என்றே ஆமோதித்தவளுக்கு மனதார அந்த உறவையோ வாழ்வையோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை கொஞ்சமும் இல்லை.
 
 
எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இங்கிருந்து வெளியேறும் மனநிலையிலேயே தான் இப்போதும் அம்ரு இருக்கிறாள் என்றாலும் அதை வெளிப்படையாக அவனிடம் காண்பித்து மேலும் பிரச்சனையில் சிக்கி கொள்ள அவள் தயாராக இல்லை.
 
 
அதனாலேயே எதையும் எதிர்த்தோ கேள்வி கேட்டோ இனி எந்த முயற்சியும் செய்யாமல் தனக்கெனக் கிடைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்க முடிவெடுத்து இருந்தாள் அம்ரு.
 
 
அன்று மாலை ஷௌர்யாவின் அறையைச் சுத்தம் செய்து முடித்தவள், கதவை திறந்து கொண்டு வெளியில் வரவும் அவள் மேல் பாய்வது போல் “அவ்வவ்வ்வ்வ்” என்ற உறுமலோடு பாய்ந்து அருகில் வந்த கிட்டத்தட்ட அவளின் மார்பு உயரத்திற்கு இருந்த அந்த ஷேடோ என்ற திருநாமமுடைய கரிய நிற ஜெர்மன்ஷெப்பெர்டு வகை நாயை கண்டு மூச்சு விடக் கூட மறந்து கண்கள் பயத்தில் இமைக்காமல் நிலைகுத்தி நிற்க கையை மார்பில் வைத்து அழுத்தியவாறே சுவரோடு ஒட்டி கொண்டு நின்றாள் அம்ரு.
 
 
அங்கிருந்த மாடி ஹாலில் நடுநாயகமாகப் போடபட்டிருந்த அவனுக்கான பிரத்யேக ஒற்றைச் சோபாவில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து கொண்டு ஏதோ கலை நிகழ்ச்சியை ரசிக்கும் பாவனையில் இதைப் பார்த்துக் கொண்டே தன் கையில் இருந்த கிரீன் டீயை துளித்துளியாகப் பருகி கொண்டிருந்தான் ஷௌர்யா.
 
 
அங்கே அப்படி ஒருத்தன் இருக்கிறான் என்று கூடத் தெரியாமல் உயிர் பயத்தோடு தன் வெகு அருகில் அதன் மூச்சு காற்று முகத்தில் மோத எங்கே அசைந்தாலோ மூச்சு விட்டாலோ கூடப் பாய்ந்து கடித்து விடுமோ என்ற நடுக்கத்தோடு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள் அம்ரு.
 
 
அதுவோ கொஞ்சமும் அசையாமல் அப்படியே அம்ருவை வெறித்துக் கொண்டு இருக்க.. எவ்வளவு நேரம் என்ற கணக்கெல்லாம் துளியும் இல்லாமல் அப்படியே உறைநிலையில் நின்றிருந்தாள் அம்ரு. அங்கிருந்து அசையவோ தப்பிக்கவோ கூட முயல முடியாத அளவு மூளை மறுத்து போய் இருந்தது.
 
 
நீண்ட நெடிய நேரத்திற்குப் பின் கேட்ட சொடக்கொலியில் ஷேடோ அம்ருவிடமிருந்து விலகி சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்க்க.. “கோ” என்று மாடிப்படி இருந்த பக்கமாக ஷௌர்யா விரலசைக்கவும் அந்த ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதன் உயரத்துக்கும் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்துக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் வாலை ஆட்டியவாறே ஓடியது.
 
 
அதுவரை தன் ஒட்டு மொத்த சக்தியையும் இழுத்து பிடித்து நின்றிருந்தவள் தோய்ந்து போய்த் தரையில் மடங்கி அமர்ந்தாள். “என்ன நீ இவ்வளவு லேசியா இருக்க..? உன்னை நம்பி டீ டைமுக்கு எண்டர்டைன்மென்ட் எதிர்பார்த்தது தப்பா போச்சே..!! நீ இந்த இடத்தைச் சுத்தி சுத்தி ஓடுவே, அவனும் உன்னை விரட்டி விரட்டி கடிப்பான்.. ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்னு பார்த்தா.. இப்படி ஒரே இடத்தில் நின்னு என் டைம்மை இப்படி வேஸ்ட் செஞ்சுட்டீயே..?! இனி இப்படி எல்லாம் என் டைம் வேல்யூ தெரியாம நடக்காத.. புரியுதா..! பாவம் என் ஷேடோ ஈவ்னிங் ஸ்நாக்ஸா ஒரு கால் கிலோவோ இல்லை அரைகிலோவோ உன்னைச் சாப்பிட்டு இருப்பான்.. இப்போ ஏமாந்து போய்ப் போறான்.. உன்னோட இந்த ஏமாத்தற வேலையை எல்லாம் மனுஷங்களோட நிறுத்திக்கோ புரியுதா.. அந்த வாயில்லா ஜீவன்கிட்ட எல்லாம் காட்டாதே.. அவன் குழந்தை மாதிரி..” என்று அம்ரு ஏதோ நம்ப வைத்து ஏமாற்றித் தவறு செய்து விட்டது போலப் பேசி கொண்டே சென்றவனை உடல் நடுக்கம் கூட இன்னும் குறையாத நிலையில் சோர்வாகப் பார்த்து கொண்டிருந்தாள் அம்ரு.
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 5

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 6
 
காலை விடிந்து வெகு நேரம் ஆகியும் அம்ரு அவள் அறையில் இருந்து வெளியில் வரவில்லை. தன் தினசரி வேலைகள் முடியும் வரையும் பொறுத்து பார்த்த ஷௌர்யா வேகமாக அவளின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
 
அங்கு யாருமில்லா படுக்கையே அவனை வரவேற்றது. புருவம் சுருங்க பார்வையைத் திருப்பியவனுக்குக் கட்டிலுக்கு அந்தப் பக்கமாகக் கீழே தரையில் இரு வெண் பாதங்கள் கண்ணில் பட்டன.
 
 
இரண்டடி முன்னால் வைத்து அங்கு நகர்ந்தவன், தரையில் கால்களைக் குறுக்கி படுத்திருந்தவளை கண்டு “இந்த நடிப்புல ஒண்ணும் குறைச்சல் இல்லை.. இவ மேலே படுக்காததை நான் பார்க்கணும்னு தான் இவ்வளவு நேரம் வெளியே வராம ஆக்டிங்கா..?!” என்று முகத்தைச் சுழித்து முணுமுணுத்தவன், அன்று போலவே தண்ணீரை எடுத்து அம்ருவின் முகத்தில் ஊற்றினான்.
 
 
அதில் திடுக்கிட்டு விழித்தவள், எழுந்து அமர முயன்றும் முடியாமல் குளிரில் நடுங்கியவாறே பின்னால் சரிய.. “ஸ்டாப் யுவர் ஆக்டிங்.. எழுந்து வேலையைப் பாரு, உன்னோட நடிப்புக்கெல்லாம் இங்கே யாரும் ஆஸ்கார் தர போறது இல்லை.. வேலை செய்யறவங்களுக்காக எல்லாம் காத்து இருந்து எனக்குப் பழக்கம் இல்லை, இன்னையோட உன் இந்தக் கேவலமான நடிப்பை நிறுத்திக்கோ.. போய்க் கிரீன் டீ கொண்டு வா.. கியூக்..” என்று ஆத்திரப்பட்டவனைச் சாதாரணமாகக் கூட எதிர்க்கொள்ள முடியாமல் தள்ளாடியவாறே எழுந்து நின்றாள் அம்ரு.
 
 
அவளால் இயல்பாகக் கண்களைத் திறந்து கூட எதிரில் இருப்பவனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் மேலும் ஒரு நொடி அப்படியே நின்றாலும் கூட அதையும் நடிப்பு என்று ஏதாவது பேச கூடும் என்றே தன் கட்டுபாட்டில் இல்லாமல் மிதப்பது போல் இருந்த உடலை கடினப்பட்டு நகர்த்திக் கொண்டு வெளியேற முயன்றவளின் நடையில் இருந்த தள்ளாட்டத்தைக் கேலியும் வெறுப்புமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஷௌர்யா.
 
 
சரியாக ஷௌர்யாவை கடந்து சென்ற போது அதற்கு மேல் நடையைத் தொடர முடியாமல் அப்படியே பின்னால் சரிந்தாள் அம்ரு. அதில் அங்கு நின்றிருந்த ஷௌர்யாவின் மேல் அம்ரு விழவும், அதையும் அவளின் நாடகத்தின் ஒரு பகுதியாக எண்ணி “ஹே ச்சீ...” என்று ஒற்றைக் கையால் அவளை விலக்கி தள்ளி இருந்தான் அவன்.
 
 
அதில் அம்ரு படுக்கையில் சென்று பொத்தென விழவும், “இந்த உன் சீப் டிரிக்ஸ் எல்லாம் என்கிட்ட..” என்று ஆத்திரத்தோடும் அருவருப்போடும் அம்ருவை பார்த்து கத்த துவங்கியவனுக்கு அப்போதே சற்று முன் தன் கரங்கள் உணர்ந்த சூடு புரிய தன் பேச்சை நிறுத்தியவன், யோசனையாக அவளை நோக்கி கண்களை உயர்த்தினான்.
 
 
அதற்குள் அம்ரு விழுந்த நிலையில் இருந்து எழுந்து கொள்ள இரண்டு மூன்று முறை முயன்றும் முடியால் போக.. அப்படியே கண்மூடி கிடந்தாள். அவளையும் அவளின் செயல்களையும் சில நொடிகள் பார்த்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேற கதவை நோக்கி சென்று மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்து அம்ருவின் புஜத்தை பற்றித் தரதரவெனக் கீழே இழுத்துச் சென்றான்.
 
 
அம்ருவுக்கு நிற்க கூட முடியாத ஒரு நிலை தான். அவளுக்குத் தனக்கு ஏதோ நடக்கிறது என்று புரிந்து இருந்தாலும் அது என்ன என்று புரியாத ஒரு நிலையிலேயே தானாக நடக்காமல் காற்றில் மிதப்பதை போல் ஷௌர்யாவின் இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள்.
 
 
அவளைக் கீழே இருந்த ஒரு அறைக்குள் இழுத்து சென்று படுக்கையில் தள்ளியவன், இதை எதிர்பார்க்கவோ எழுந்து கொள்ளவோ கூட முடியாத நிலையில் நிலைகுலைந்து விழுந்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்று இருந்தான்.
 
 
அடுத்த அரைமணி நேரத்தில் அம்ருவை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் வந்து சேர்ந்தார். அதற்குள் அம்ருவின் நிலை முன்பைவிடவும் சற்று மோசமாக இருந்தது. குளிரும் அனத்தலும் அதிகமாகி கண் திறக்க கூட முடியா நிலையில் கிடந்தாள்.
 
 
அம்ருவுக்கு ஊசியைப் போட்டு மாத்திரைகளை எழுதி கொடுத்து விட்டு எதையோ கண்டு பயந்து இருப்பதே இந்த அதீத காய்ச்சலுக்கும் அனத்தலுக்கும் காரணம் என்று வெளியே காத்திருந்த பிரபுவிடம் கூறியவர், உணவுக்குப் பிறகு மாத்திரைகளைச் சரியாக எடுத்துக் கொண்டு இரண்டு நாட்கள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறிவிட்டு சென்றார்.
 
 
அதைப் பிரபு பொறுப்பாக அலுவலகத்தில் இருந்த தன் பாஸுக்கும் தெரியபடுத்த, “ம்ம்” என்ற ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டான் ஷௌர்யா. அதன் பின் புவனாவிடம் சொல்லி அம்ருவுக்குத் தேவையானதை தயாரித்து உடன் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு கூறினான் பிரபு.
 
 
அன்று முழுவதும் புவனா பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்டதில் அம்ருவுக்கு ஓரளவு காய்ச்சல் சரியாகி இருந்தது. ஆனாலும் இன்னும் அவளால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. புவனாவின் வற்புருத்தலிலேயே நான்கு ஸ்பூன் கஞ்சியாவது உள்ளே சென்றது.
 
 
அம்ருவின் இந்தத் திடீர் காய்ச்சலுக்குப் பின் அவளின் நாயின் மீதான அதீத பயமே காரணமாக இருந்தது. இரவில் இருந்து பயத்தில் நடுங்கி அலறி அழுது அவள் துடித்ததை எல்லாம் காணவோ அறிந்து கொள்ளவோ அங்கு யாருமே இல்லை.
 
 
ஆறுதல் சொல்ல கூட ஆளே இல்லாத நிலையில் அவளே பயந்து நடுங்கி பிதற்றி காய்ச்சலின் அளவை அதிகரித்துக் கொண்டாள். அவளுக்குச் சிறு வயதில் இருந்தே நாய் என்றால் பயம் நடுக்கம்.
அம்ரு நான்காம் வகுப்பு படிக்கும் போது அவளின் கண் முன்னேயே அம்ருவின் அம்மா அபிராமி வெறிபிடித்த வீதி நாயின் கோபத்திற்கு இரையாகி இறந்து இருந்தார். அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட நாளில் இருந்து அவள் மீண்டு வரவே பல நாட்கள் ஆனது.
 
 
அன்றிலிருந்து நாய் இருக்கும் பக்கம் கூட அம்ரு செல்ல மாட்டாள். அப்படிபட்டவளின் முகத்தை முட்டுவது போல் அவள் உயரத்திற்கு ஒன்று வந்து நின்றால் என்ன செய்வாள் பாவம். தன் மனதின் பயத்தையும் அந்த நிமிடம் அனுபவித்த வேதனையையும் சொல்லி ஆறுதல் தேட கூட அவளுக்கென யாரும் இல்லாத நிலை.
 
 
பயம் மனஉளைச்சல் அழுகை தனிமை என எல்லாம் சேர்ந்து அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டு இருந்தது. மாலை ஓரளவு கண் திறந்து பார்க்க முடிந்தாலும் எழுந்து அமரும் அளவுக்கு எல்லாம் இன்னும் உடல் தேறவில்லை என்பதால் அப்போதே புவனா வற்புறுத்தி அமர வைத்து இட்லியை சாப்பிட வைத்து விட்டு சென்று இருந்ததால் தலையணையை நிமிர்த்திச் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் அம்ரு.
 
 
*************
 
 
அதேநேரம் அங்கு அம்ருவை தேடி அலைந்து கலைத்து வீடு திரும்பினர் சூர்யாவும் முகுந்தும். காவ்யா தாம்பரத்தில் இருக்கும் தன் தோழியோடு தங்கி கொள்வதாகக் கூறியவள் அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் சூர்யாவோடு வீட்டுக்கு வர மறுத்துவிட்டாள்.
 
 
எனவே சூர்யா தனியே வீட்டுக்கு செல்ல, அவன் வரும் தகவல் முதலிலேயே கிடைத்து இருந்ததால் முகுந்து வந்து காத்திருந்தான். கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் உடனேயே அவர்களின் நடவடிக்கையை மேற்கொண்டனர் இருவரும்.
 
 
செல்லும் வழிலேயே முகுந் தான் இதுவரை செய்த முயற்சிகள் முதற்கொண்டு அனைத்தையும் தெளிவாக எடுத்து கூறி தற்போதைய நிலவரம் வரை தெரிவித்து இருந்தான். இடையில் அம்ருவின் அலைபேசி இணைப்பு கிடைத்ததையும் பகிர்ந்து கொண்டவன் ஆனால் யாரும் அதை ஏற்றுப் பேசவில்லை என்பதோடு அதுவே அதிகப் பயத்தையும் தருவதாகக் கூறினான்.
 
 
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த சூர்யாவுக்குமே அப்படித் தான் இருந்தது. இதில் தங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று மறைந்து இருப்பதாகவே அவனுக்கும் தோன்றியது. முதலில் அவர்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தான் முறைப்படி புகார் அளிக்கச் சென்றார்கள்.
 
 
ஆனால் அங்கு இப்போதும் அதற்கான எந்த உதவியோ வேலைகளோ மேற்கொள்ளபடாமல் தட்டி கழிக்கப்பட்டு இவர்களையே கேள்வி கேட்டுக் குற்றவாளி போல நடத்த துவங்கினர். வெகுநேரமாக இதுவே தொடர.. வெறுத்து போய் இனி இங்கு எதுவும் உதவி கிடைக்காது என்று புரிந்து அவர்களாகவே வெளியேறும் வரை அப்படியே நடத்தபட்டார்கள்.
 
 
சோர்ந்து போய் வெளியில் வந்து அடுத்து என்ன என்று தெரியாமல் கலங்கிய சூர்யாவுக்குத் தன் இந்த நான்கு நாள் அனுபவத்தில் இதையெல்லாம் முன்பே சந்தித்து இருந்த முகுந் தான் ஆறுதல் கூறித் தேற்றினான்.
 
 
அப்போது சூர்யாவுக்குக் காவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரமாக அவனிடமிருந்து வர போகும் தகவலை எதிர்பார்த்து பயத்தோடும் பதட்டத்தோடும் காத்திருந்தவள், அப்படி ஒன்று வரவே இல்லை என்றானதும் உடனே அழைத்து விட்டாள்.
 
 
அருகில் முகுந்து இருக்கவும் இன்னும் அவனிடம் கூடத் தனக்கு நடந்து முடிந்திருந்த அவசர திருமணத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்பதால் ஒரு தயக்கமான பார்வையோடு முகுந்தை ஏறிட்டவன் சற்று தள்ளி சென்று பேச துவங்கினான்.
 
 
இங்கு இருக்கும் நிலவரம் அனைத்தையும் சூர்யா சொல்லி முடிக்கவும், அவ்வளவு நேரம் தன் மனதை அழுத்தி கொண்டிருந்த பயத்தை மெல்ல கேட்டாள் காவ்யா. “அங்கே உங்களுக்கு.. உங்களுக்கு எதுவும் பிரச்சனை.. அங்கே அண்ணாவையோ இல்லை அவங்க ஆளுங்க யாரையாவது பார்த்தீங்களா..?” என்றாள்.
 
 
‘இல்லை வியா.. நான் யாரையும் பார்க்கலை, நீ கவலைப்படாதே.. இப்போ அம்ருவை எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னே தெரியலை.. இங்கே கேஸ் கூட எடுக்க மாட்றாங்க, எங்கே போக என்ன செய்யன்னு கூடத் தெரியலை.. முகுந்த் கமிஷனர் வரை போய்ப் பார்த்துட்டாராம்.. அங்கேயும் இதே நிலை தானாம்.. இதுக்குப் பின்னே பெருசா ஏதோ இருக்குன்னு மட்டும் புரியுது ஆனா அது என்னன்னு தான் தெரியலை.. நான் அது என்னன்னு இங்கே பார்க்கறேன் வியா அப்பறம் உன்னைக் கூப்பிடறேன்..” என்றவனுக்கு மனம் முழுக்க இதன் பின்னணியில் காவ்யாவின் அண்ணன் இருப்பாரோ என்ற சந்தேகம் இன்று இதையெல்லாம் நேரில் பார்த்த பிறகு உறுதியாக எழுந்தது.
 
 
ஆனால் ஏற்கனவே ரொம்பப் பயந்து போய் இருப்பவளிடம் இதை வேறு சொல்லி இன்னும் பதட்டப்படச் செய்ய வேண்டாம் என்றே எதையும் சொல்லாமல் தவிர்த்து விட்டான் சூர்யா.
 
 
********
 
 
மாலை அம்ரு இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தான் ஷௌர்யா. சோர்வோடு எழுந்து கொள்ள முயன்றவள் அவனின் வேகமான நடை தன்னை நெருங்கி வருவதைக் கண்டு தன் முயற்சியைக் கைவிட்டு திகைத்துப் போய்ப் பார்த்திருந்தாள்.
 
 
மிக நெருக்கமாக அவளின் முன் வந்து நின்றவன், “உன் மனசுல என்ன மாமியார் வீட்டுக்கு சீராட வந்து இருக்கறதா நினைப்பா..?! நீ இங்கே தங்கி சாப்பிட்டு உடம்பை தேத்த வரலை.. நான் உன்னை இங்கே தூக்கிட்டு வந்ததற்கான காரணத்தை நான் இன்னும் தொடங்க கூட இல்லை அதுக்குள்ள இரண்டு முறை பெட் ரெஸ்ட்டுக்கு போயிட்ட..
 
 
எனக்குப் பொறுமைன்றதே கிடையாது, எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு புரியுதா.. என் கோபத்தைக் கிளறாதே, அது உனக்குத் தான் பிரச்சனையா மாறும்.. என் கோபத்தைத் தாங்க அப்பறம் நீ உயிரோட இருக்க மாட்டே.. டாக்டர் சொன்னது போல எல்லாம் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு ஏதாவது கனவு கோட்டை கட்டி இருந்தா அதை இப்போவே ஜேசிபி வெச்சு இடிச்சிடு..
நாளைக்குக் காலையில் என் ஷெடியூல் படி நீ எல்லா வேலையையும் தொடங்கி இருக்கணும்..” என்று வந்த வேகத்தில் தன் ஆத்திரத்தையும் வெறுப்பையும் படபடவென அவள் மேல் கொட்டியவன் அடுத்து அம்ரு சொல்வதைக் கேட்க கூட அங்கு நிற்கவில்லை.
 
 
அம்ருவுக்கு அடைமழை பெருவேகத்தொடு எதிர்பாராத நேரத்தில் அடித்து ஓய்ந்ததைப் போல் இருந்தது. பின் மெல்ல தன் நிலையை எண்ணி மௌனமாக அழுது கரைந்தவள், தன்னையே தேற்றிக் கொண்டு உறங்க துவங்கினாள்.
 
 
மறுநாள் காலை அம்ரு தன் வழக்கமான நேரத்தை விடவும் கூட வெகு சீக்கிரமே எழுந்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். ஷௌர்யாவின் அறையையும் அந்தத் தளத்தில் இருந்த மற்ற இடங்களையும் அவன் வீட்டில் இல்லாத நேரங்களில் சுத்தம் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருந்ததனால் மற்ற வேலைகளை எல்லாம் செய்து முடித்து ஷௌர்யாவின் நேரம் வர காத்திருந்தாள்.
 
 
அவன் சொல்லி இருந்த நேரத்துக்கு முன்னே பின்னே என்று ஆகாமல் சரியாக நேரப்படி கிரீன் டீயை கொண்டு செல்ல தேவையான அனைத்தும் தயாராக எடுத்து வைத்தவள், இடையில் இருந்த அந்தப் பத்து நிமிடத்தைப் போக்க எண்ணி சமயலறையில் இருந்து இட பக்கமாகப் பிரிந்த பாதையில் நடக்கத் துவங்கினாள்.
 
 
அப்போது பூ கூடையோடு வந்த புவனா தோட்டத்து கதவை திறந்து கொண்டு செல்வதைக் கண்டு அவரைத் தடுத்து நிறுத்தி தானே அதைப் பறித்துக் கொண்டு வருவதாகக் கூறி சென்றாள் அம்ரு.
 
 
காலைவேளையை இன்னும் புத்துணர்ச்சியாக்குவது போல் அங்கு மலர்ந்து மணம் வீசி கொண்டு இருந்தது பன்னீர் ரோஜாக்கள். அவற்றைக் கண்டு மலர்ந்து புன்னக்க வேண்டிய கண்களும் இதழ்களும் அதைச் செய்ய மறந்து பலநாள் ஆனது போல் அம்ரு இயந்தரகதியில் அதை நெருங்கினாள்.
 
 
அவளின் மறுத்து போன மனநிலையையும் மீறி அந்தப் பூக்கள் அவளை ஈர்த்தது என்பதற்கு அடையாளமாக அந்த மலர்களை ஒரு அன்பான வருடலில் ஸ்பரிசித்தவள், அவற்றைப் பறிக்கத் துவங்கினாள். அம்ருவையும் அவளின் ஒவ்வொரு செயல்களையும் நெற்றி சுருங்க தன் அறை பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம்.
 
 
காலை உறக்கம் களைந்து எழுந்து வெளியில் வந்தவன் தன் உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு முன்பு சிறிது நேரம் இயற்கை காற்றில் நிற்க எண்ணி அப்படியே எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அப்போது அவன் கவனத்தைக் கலைப்பது போல் வீட்டின் பின் கதவு வழியே வெளியே வந்த பெண்ணையும் அவளின் ஒவ்வொரு செயல்களையும் பார்க்க துவங்கியவனுக்கு ‘யார் இவள்’ என்ற கேள்வியே முதலில் எழுந்தது.
 
 
பன்னீர் ரோஜாவுக்குப் போட்டியாக அதே கலர் சல்வாரில் அந்தக் காலையிலேயே குளித்து முடித்து இடையைத் தாண்டி படர்ந்திருந்த முடியை பின்னலிட்டு என்று பாந்தமாக இருந்தவள் ஒப்பனை என்ற எதுவுமே இல்லை என்றாலும் பேரழிகி என்பதைப் பார்த்த நொடியே புரிய வைத்து கொண்டிருந்தாள்.
 
 
ஆனால் அவளிடம் ஒரு இயல்பான மலர்ச்சியோ மகிழ்ச்சியோ இல்லை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. ‘இவள் யாராக இருக்கக் கூடும்’ என்ற யோசனையோடு அவளின் அத்தனை செயல்களையும் ஷியாம் கவனித்துக் கொண்டு இருக்கும் போதே அம்ரு உள்ளே சென்று விட்டு இருந்தாள்.
 
 
‘இந்த வீட்டில் ஒரு இளம் பெண்ணா..?!!’ என்ற கேள்வியே ஷியாமுக்கு திகைப்போடு சேர்த்து யோசனையையும் கொடுக்க.. அதே சிந்தனையோடு தனக்கான மாடி பகுதியில் இருந்து இறங்கி கொண்டிருந்தவன் எதிர்பக்கம் ஷௌர்யாவின் மாடியை நோக்கி கையில் டிரேவோடு சென்று கொண்டிருந்தவளை கண்டு வேகமாகச் சென்று இடைமறித்தான்.
 
 
அவளையும் அவள் கையில் இருந்த டிரேவையும் ஒரு பார்வை பார்த்து, “எனக்கு ஒரு டீ கொண்டு வாங்க..” என்றான். திடீரெனத் தன் வழியை மறிப்பது போல் வந்து நின்றவனைக் கேள்வியாகப் பார்த்த அம்ரு, லேசான தாடிக்குப் பின் மெல்லிய சோகம் படிந்த முகத்தோடு நின்றிருந்தாலும் அவனிடம் காணப்பட்ட மரியாதையான தோற்றமும் தன்னை விளித்ததில் இருந்த பன்மை வார்த்தையும் அவன் யார் எனத் தெரியாவிட்டாலும் மறுக்கத் தோன்றாமல் செய்ய, மேல் நோக்கி ஒரு பார்வை பார்த்தவள் நேரம் கடந்துவிட்டால் மேலிருப்பவன் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கிவிடுவான் என்று தோன்ற “இதைக் கொடுத்துட்டு வந்து போட்டு தரேன்..” என்று நகர முயன்றாள்.
 
 
அதில் எழுந்த கோபத்தோடு ஷியாம் ஏதோ பேச முயலவும் ஷௌர்யா படியில் இறங்கி வரவும் சரியாக இருந்தது. அதில் “மார்னிங் பையா..” என்றவாறே ஷியாம் மரியாதையோடு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றான். இருவரையும் கூர்மையாகப் பார்த்தவாறே இறங்கி வந்தவன், ஷியாமை நோக்கி அவனுக்கான பதிலாக ஒரு தலையசைப்பை மட்டுமே தந்து, “டிராவல் எப்படி இருந்தது.. ஆல் ஒகே வா..” என்றவனின் கண்களில் ஒரு வேதனையின் நிழல் வந்து போனது.
 
 
“இப்போ ஒகே பையா..” என்றவனின் முகமும் கண்களும் கூட அதையே பிரதிபலித்தது. அப்படியே பேசியவாறே ஷௌர்யாவின் பின்னே ஷியாம் செல்ல, அம்ரு அதே இடத்திலேயே நின்றிருந்தாள். ஷௌர்யா சென்று அமர்ந்து திரும்பி அம்ருவை பார்க்கவும் வேகமாகச் சென்று டிரேயை நீட்டினாள் அம்ரு.
 
 
பின் இருவரும் ஏதோ பேச துவங்கவும் அம்ரு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். சிறிது நேரத்திற்குப் பின் ஷௌர்யாவுக்கு அலைபேசியில் அழைப்பு வரவும், ஷியாம் எழுந்து உணவு மேசையை நோக்கி வந்தான்.
 
 
சமயலறையில் இருந்த அம்ருவிடம் ஏதோ பேசிவிட்டு புவனா வெளியில் வருவதைக் கண்டவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் அங்கு மேசையைத் துடைக்கத் துவங்கிய புவனாவை பார்த்து, “இங்கே எத்தனை நாளா வேலை செய்யறீங்க..?” என்றான்.
 
 
“அஞ்சு நாள் ஆச்சுங்க..” என்றார் அவர். “ம்ம், வேலைக்குச் சேரும் போது பிரபு அண்ணா உங்களுக்கு எல்லாம் தெளிவா சொல்லி இருப்பாரே.. அதை எதையும் மறக்கறது உங்களுக்கு அவ்வளவு நல்லது இல்லை.. எங்க பையாவோட மாடி பக்கம் கூட யாரும் போகக் கூடாது, அவருக்கு அது பிடிக்காது..” என்றான்.
 
 
“தெரியும்ங்க சார்.. பிரபு சாரும் சொன்னாரு.. நாங்க யாரும் அங்கே போறதே இல்லைங்க சார்..” என்று பணிவோடு பதிலளித்தார் புவனா. “நீங்க போகாதது மட்டும் முக்கியமில்லை.. அவங்க யாரு உங்க பொண்ணா அவங்ககிட்டேயும் நல்லா தெளிவா சொல்லி வைங்க.. என்ன கேட்டு இருந்தாலும் சரி, நீங்க ரெடி செஞ்சு இங்கே வெச்சா மட்டும் போதும்.. அண்ணாவே வந்து எடுத்துக்குவாங்க.. நீங்க மேலே போய்க் கொடுக்கணும்னு இல்லை, இன்னைக்குக் காலையிலே அவர் கோபத்துக்கு ஆளாகி இருப்பாங்க.. முக்கியமா முடிஞ்ச வரை அண்ணா எது கேட்டாலும் நீங்க கொடுங்க.. இனி அவங்ககிட்ட கொடுக்காதீங்க.. இதெல்லாம் அண்ணாக்கு பிடிக்காது..” என்று பாவம் புதியவர்கள் தெரியாமல் சிக்கி வேலையை இழந்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்திலேயே கூறினான்.
 
 
ஆனால் அனைத்தையயும் கேட்டு திகைத்து போன புவனா “அவங்க ஐயாவோட சம்சாரமுங்க சார்..” என்றார் சமயலறையில் நிற்கும் அம்ருவை திரும்பி பார்த்தவாறே தயக்கத்தோடு. அதைக் கேட்டு நெற்றியை சுருக்கியவன், “ஐயாவா எந்த ஐயா..?” என்று தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என்ற எண்ணத்தில் ஷியாம் மீண்டும் கேட்க, “பெரிய ஐயாவோட சம்சாரமுங்க..” என்று வெளி ஹாலில் அமர்ந்திருந்த ஷௌர்யாவை கை காண்பித்துப் புவனா கூறவும், “வாட்ட்ட்..?” என்று உச்சபட்ச அதிர்வில் எழுந்து நின்றுவிட்டான் ஷியாம்.
 
 
அதே நேரம் அவனுக்கான டீயோடு அம்ரு அங்கு வரவும், “நீங்க.. நீங்க.. இவங்க எதுவோ..” என்று தொடங்கி எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறியவன் பின் ஒருவழியாக “நீங்க யாரு..?” என்றான்.
 
 
அவன் முன் இருந்த மேசையில் டீயை வைத்தவள், “என் பேரு அமிர்தவர்ஷினி.. பேரை சொன்னாலே எல்லாரும் தெரிஞ்சுக்கற அளவு பெரிய ஆளெல்லாம் இல்லை..” என்றாள் சாதாரணக் குரலில்.
 
 
“நான் அதைக் கேட்கலை.. நீங்க, இங்கே.. நீங்க ஷௌர்யாபையாவோட வொய்ப்பா..?!” என்றான். இப்போது ஷியாமின் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள், “இதை என் கழுத்தில் கட்டினாதாலேயே அப்படிச் சொல்லலாம்னா.. ஆமா.. இல்லை அதை அந்தப் பொண்ணும் மனசார ஏத்துகிட்டா தான் அப்படிச் சொல்லலாம்னா.. இல்லை.. இதில் உங்களுக்கான பதில் எதுன்னு நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க..!!” என்றாள்.
 
 
ஏற்கனவே காதில் விழுந்த செய்தியில் ஏகத்துக்கும் குழம்பி போய் இருந்தவன், இதில் இன்னும் அதிகமாகக் குழம்பி போனான். அவசரமாக எதையோ பேச முயன்றவன், பின் திரும்பி புவனா இருந்த இடத்தைப் பார்க்க, அது யாருமற்றுக் காட்சியளித்தது.
 
 
இவர்கள் இருவரும் பேச தொடங்கிய உடனேயே இங்கிதமாக விலகி சென்று இருந்தார் அவர். “உங்க கல்யாணம் எப்போ நடந்தது..?” என்றவனுக்கு அம்ரு அளித்த பதில் இன்னும் அதிர்வை தான் கொடுத்தது. “நல்லா தெரியுமா..? கொஞ்சம் சரியா யோசிச்சு பாருங்களேன்..” என்றவனைக் கண்டு வலியோடு புன்னகைத்தவள் “நான் ஏன் பொய் சொல்ல போறேன், மாலை தென்றல் போல இயல்பா இருந்த வாழ்கையில் திடீரெனப் புயல் வீசிய நாளை என்னால் அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியுமா என்ன..?” என்றாள்.
 
 
“அச்சோ நீங்க பொய் சொல்றீங்கன்னு நான் சொல்லலை பாபி..” என்று தொட்டங்கியவனை அவசரமாக இடைமறித்தவள், “பிளீஸ் என்னை அப்படி எல்லாம் கூப்பிடாதீங்க.. அம்ருனே கூப்பிடுங்க..” என்றாள்.
 
 
“உங்களுக்குப் பிடிக்குது.. பிடிக்கலைன்றதை எல்லாம் கடந்து உங்க சம்மதத்தோடவோ சம்மதம் இல்லாமலேயோ இதை உங்க கழுத்தில் கட்டினது எங்க பையானா அதுக்கான மரியாதையை நான் கொடுத்து தான் ஆகணும்.. மத்ததெல்லாம் நீங்க இரண்டு பேர் சம்பந்தப்பட்ட தனி விஷயம்.. ஆனா நீங்க சொல்ற அன்னைக்கு இங்கே இருந்த நிலைக்குப் பையா இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க வாய்ப்பே இல்லை.. அப்படி இருந்தும் எடுத்து இருக்காங்கனா.. அதான் யோசனையா இருக்கு.. உங்களுக்கும் பையாவுக்கும் என்ன பிரச்சனை..? எப்படிப் பையாகிட்ட நீங்க சிக்கினீங்க..?” எனக் கேட்டவனைப் புரியாமல் பார்த்தவள், ‘தனக்கு இவனிடமிருந்தாவது உதவி கிடைக்காதா..?!’ என்ற எதிர்பார்ப்போடு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
 
 
“ஊப்ப்ப்.. தலையும் புரியலை, வாலும் புரியலை.. அப்படினா இதுக்கு முன்னே நீங்க பையாவை பார்த்ததே இல்லைன்னு சொல்றீங்களா..?” எனக் கேட்டான். இதற்கு ‘ஆம்’ என்பது போன்ற ஒரு தலையசைப்பு மட்டுமே அம்ருவிடமிருந்து வந்தது.
 
 
“நீங்க பார்த்தது இல்லை சரி.. உங்க குடும்பத்து ஆளுங்க ஏதாவது பிரச்சனை செஞ்சு.. இல்லை பையாவை ஏமாத்தி ஏதாவது பிசினஸ் டீலிங் அப்படி எதிலாவது..? ஆனாலும் அதுக்காகக் கூட ஷாதின்னு அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒண்ணைக் கையில் எடுப்பாரா என்ன..?” என்று ஷியாம் கேள்வியை முடிக்கக் கூட விடாமல், “பிசினஸ் டீலிங் செய்யற அளவுக்குப் பெரிய ஆளுங்க எல்லாம் நாங்க இல்லை.. ரொம்பவே சாதராண மாத சம்பளம் வாங்கற மிடில்கிளாஸ் ஆளுங்க தான்.. உங்க அடுத்தக் கேள்விக்கு உங்க பையா தான் பதில் சொல்லணும்..” என்றாள் அம்ரு.
 
 
“உங்க குடும்பத்தில் இருக்க யாராவது ஏதாவது ஒரு பாயிண்ட்ல பையாவோட சம்பந்தப்பட்டு இருப்பாங்களா.. ஏன்னா பையா கல்யாணம்ன்ற ஒரு விஷயத்தை டு தி கோர் வெறுக்கற ஒரு ஆள்.. அப்படிப்பட்டவர் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காருனா அதுவும் இப்போ இருக்க நிலையில் எடுத்து இருக்காருனா... ஐ ம் வெரி சாரி, அது அவ்வளவு நார்மலாவோ நல்லாதாவோ எனக்குத் தெரியலை..” என்றவனிடம் காணப்பட்ட பதட்டமும் துடிப்பும் அம்ருவுக்கு யோசனையைத் தந்தது.
 
 
‘அப்படி ஒரு டீமெனுக்கு இப்படி ஒரு தம்பியா..?!’ என்ற எண்ணம் எழும் போதே மனம் ஷியாம் கூறிய விஷயங்களை யோசிக்கத் தொடங்கி இருந்தது. “இதுல நீங்க சாரி சொல்ல என்ன அவசியம் இருக்கு.. நடக்கறது எல்லாம் நல்லதுக்கு இல்லைன்னு எனக்கே தெரியும்.. இப்போ எனக்குன்னு இருக்க ஒரே உறவு.. எங்க அண்ணன் தான்.. பேரு சூர்ய நாராயணன்.. ப்ரோபசரா இருக்காரு, அவரை உங்களுக்குத் தெரியுமா..? எங்கேயாவது கேள்விபட்டு இருக்கீங்களா..?” என்றாள்.
 
 
“சூர்யயய நாராயணன்ன்ன்... இல்லையே பாபி.. எனக்கு அப்படி யாரையுமே தெரியலை..” என்றவனை ஏமாற்றமாகப் பார்த்தவள், சட்டென ஞாபகம் வரவும் “முகுந்த்... இப்படி யாரையாவது உங்களுக்குத் தெரியுமா..?! அவர் யார் வம்பு தும்புக்கும் போகாதாவர் தான், இருந்தாலும் அவரால ஏதாவது பிரச்சனையா இருக்குமா..?” என்றாள்.
 
 
“முகுந்த்.. சாரி பாபி, இல்லை இப்படியும் எனக்கு யாரையும் தெரியாது..” என்றவன், மீண்டும் தன் ஞாபக இடுக்குகளை எல்லாம் தட்டி எழுப்பி ‘ இந்த இரு பெயர்களையும் இதற்கு முன்பு எங்காவது கேட்டு இருக்கோமா..?!’ என்று யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம் அவர்கள் இருவரும் ஷௌர்யாவின் வீட்டு வாயிலில் வந்து நின்றனர்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 6

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  

ஹாய் டியர்ஸ் 

சிலர் இங்கே கமெண்ட் எப்படி செய்யறதுன்னு கேட்டு இருந்தீங்க.. கீழே உள்ள லிங்க் உள்ளே போய் நான் கொடுத்து இருக்கும் படத்தில் இருப்பது போல் பாக்ஸ் இருக்கும்..

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

அங்கே உங்கள் மனதில் கதையை பற்றி தோன்றிய கருத்துக்களை டைப் செய்து விட்டு கீழே add reply என இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் கமெண்ட் இங்கே வந்து விடும்.

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 3 months ago
Posts: 115
Topic starter  
விஷம் – 7
 
 
அம்ருவோடு பேசிக் கொண்டிருந்த ஷியாமுக்கு ஷௌர்யாவிடமிருந்து அழைப்பு வரவும் அவன் கிளம்பி விட்டான். அதன் பின் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளின் மனதில் இதே கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது.
 
 
ஏதோ ஒரு விஷயத்திற்காகத் தன்னைத் தண்டிக்க நினைக்கிறான் என்று தெளிவாக அன்றே புரிந்து கொண்டவளுக்கு அது எதற்காக என்ற கேள்வியே இன்று வரை பெரிதாக இருந்தது. அனுபவிக்கும் தண்டனையை விடப் பெரிய வலி அதை நாம் எதற்காக அனுபவிக்கிறோம் என்று தெரியாமல் அனுபவிக்க நேர்வதே.. அதைத் தான் இந்தச் சில நாட்களாக அம்ரு அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
 
 
அதே மனநிலையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் முடங்கிக் கொண்டாள். இங்கு ஷௌர்யாவை பார்ப்பதற்காகச் சூர்யாவும் முகுந்தும் வீட்டின் வெளியே வெகு நேரமாகக் காத்திருந்தனர்.
 
 
திடீரெனச் சூர்யா சொன்னதால் இங்கு வந்து விட்ட முகுந்துக்கு இது யார் வீடு என்று கூடத் தெரியவில்லை. “நாம இங்கே எதுக்கு யாரை பார்க்க வந்து இருக்கோம் மச்சான்..?” என்றவனைத் திரும்பி பார்த்தவன், “மிஸ்டர் ஷௌர்ய வர்மன் வீடு இது.. இவர் ஒரு பிக் ஷாட், இவர் மூலமா போனா நம்ம வேலை கொஞ்சம் ஈசியா நடக்கும்.. இப்போ போலத் தட்டி கழிக்க மாட்டாங்க.. அதான் ஹெல்ப் கேட்டு வந்து இருக்கோம்..” என்றான் சிறு தயக்கத்தோடான குரலில்.
 
 
“ஓ.. இவரை உனக்குத் தெரியும்னு நீ சொல்லி இருந்தா, முன்னேயே வந்து பார்த்து இருக்கலாமே..” என்றவனுக்கு நாட்களை வீணடித்து விட்டோமே என்ற கவலை எழுந்தது.
 
 
“இல்ல முகுந்த், எனக்கு இவரை நேரிடையா தெரியாது.. இதுவரை சந்திச்சதும் இல்லை.. எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு வேண்டியவரு.. அப்படித்தான் தெரியும்.. ஆனா இவரைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டு இருக்கேன்.. அவ்வளவு சீக்கிரம் பார்த்துட முடியாது தான், இருந்தாலும் இதையும் முயற்சி செஞ்சு பார்த்துடுவோம்..” என்றான்.
 
 
“ஓஹோ பார்க்கறதே அவ்வளவு கஷ்டம்னா நாம உனக்கு வேண்டியவங்க மூலமா அப்பாயின்மெண்ட் வாங்கிட்டோ, இல்லை அவங்களையும் கூட்டிட்டோ வந்து இருக்கலாமே சூர்யா..” என்ற முகுந்துக்குக் கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பை தவறவிடக் கொஞ்சமும் மனம் இல்லை.
 
 
“அது.. அது.. இப்போதைக்குச் சரிபட்டு வராது முகுந்த்.. அதான் நானே பேசி பார்க்க நினைச்சேன்.. காத்திருந்து பார்ப்போமே..” என்று சூர்யா எதையோ சொல்லி சமாளிக்க முயன்று கொண்டிருந்த போது அங்கிருந்த பாடிகார்ட்டின் அலைபேசி வழியே இணைப்புக்கு வந்தான் பிரபு.
 
 
“யாரு நீங்க.. எதுக்காக அங்கே வந்து காத்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”
 
 
“வணக்கம்.. நாங்க ஷௌர்யா சாரை பார்க்கணும்..”
 
 
“அவர் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காரே.. எப்போ அது முடியும்னு சொல்ல முடியாது.. என்ன விஷயமா பார்க்க வந்து இருக்கீங்க..”
 
 
“பர்சனல் ரீசன்”      
 
 
“அப்பாயின்மெண்ட் இருக்கா..”
 
 
“இல்லை”
 
 
“நீங்க வருவீங்கன்னு சாருக்கு தெரியுமா..?!”
 
 
“தெரியாது..”
 
 
“அப்படி எல்லாம் அவரை உடனே பார்க்க முடியாதுங்க..”
 
 
“எனக்கும் தெரியும் சார்.. பட் இப்போ எங்க சிச்சுவேஷன் அப்படி இருக்கு..”
 
 
“அப்போ நீங்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்”
 
 
“பரவாயில்லை.. வெயிட் செய்யறோம்..” என்றதும் அழைப்புக் கை மாறி இருந்தது. அடுத்து பிரபு பாடிகார்டிடம் என்ன சொன்னானோ இருவரையும் அங்கு லானில் போடபட்டிருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு அவன் விலகி சென்று விட்டான்.
 
 
வெளி வாயிலில் இருந்து லானில் போடப்பட்டு இருந்த நாற்காலிக்கு வரவே ஒருமணிநேரத்திற்கும் மேல் இவர்கள் காத்திருக்க வேண்டி இருந்ததால் முகுந்தின் மனம் தக்க முன் ஏற்பாட்டோடு வந்து இருந்தால் இந்தக் காத்திருப்புக்கு அவசியமே வந்து இருக்காது என்றே எண்ணியது.
 
 
இவர்களிடம் பேசி முடித்த பின் பிரபு ஷௌர்யாவுக்கு அழைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் அனைத்தையும் கான் காலில் கேட்டுக் கொண்டு வீட்டிலிலுள்ள தன் அலுவலக அறை ஜன்னல் வழியே இவர்களையே பார்த்துக் கொண்டு கண்கள் வெறுப்பிலும் ஏளனத்திலும் ஜொலிக்க நின்றிருந்தான் ஷௌர்யா.
 
 
தன் அறையில் இருந்த ஜன்னலின் கீழே சுவரில் மடங்கிச் சரிந்து அமர்ந்திருந்த அம்ருவுக்குத் தொடர் வேலைகளினாலும் ஒரே விஷயத்தைத் தொடர்ந்து யோசித்ததனாலும் உடலும் மனமும் மறுத்து போய் இருந்தது. இப்போது அவளுக்குத் தேடலோ வலியோ யோசனைகளோ எதுவுமே இல்லை.
 
 
தேடினாலும் கிடைக்காது முயற்சித்தாலும் முடியாது என்றான பிறகு அதைச் செய்வதில் என்ன பயன் என்பது போலத் தான் இருந்தது அவளின் மனநிலை. அதற்காக இந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ தயாராகி விட்டாள் என்று அர்த்தம் இல்லை.
 
 
ஆனால் இது எதை நோக்கி போகிறது என்று அதன் போக்கில் போகத் தன்னைத் தாயார் செய்யத் துவங்கிவிட்டாள். இன்று ஷியாமோடு பேசியதிலிருந்து அவள் புரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான். தான் நினைத்ததை விட இந்த டீமன் மிகக் கொடியவன் என்பதே அது.
 
 
அவன் செய்கைக்கான காரணம் என்ன என்று உடன்பிறந்தவனுக்கே புரியாத ஒரு நிலை இருந்தும் அவனும் அதைச் சென்று உரிமையோடு கேட்க தயங்கி இவளிடமே அனைத்தையும் கேட்டு அறிய முயன்றதில் இருந்தே அவனிடம் நெருங்குவதோ விஷயத்தை வாங்குவதோ எளிதல்ல என்று தெளிவாகியது.
 
 
எனவே இனி இதையெல்லாம் யோசிப்பதில் பயனில்லை என்ற தெளிவான முடிவுக்கு வந்தவள், ஒருவேளை தனக்கென இங்கிருந்து வெளியேறும் ஒரு வாய்ப்பு அமைந்தால் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கினாள்.
 
 
அப்படியே பார்வையைத் திருப்பியவளின் கண்களில் எதிர் மேசையில் இருந்த அவளின் அலைபேசி படவும், இப்போது இருக்கும் இந்தச் சோர்வான மனநிலையை மாற்ற எண்ணி அதை எடுத்து உயிர்பித்தவள் அதில் இருக்கும் பாடல்களை ஒலிக்கச் செய்தாள்.
 
 
எப்போதும் நண்பர்கள் சூழ கலகலத்துக் கொண்டு இருப்பவளின் தனிமையில் துவண்டு இருக்கும் இன்றைய மனதிற்கு இந்த மெல்லிசை சற்று ஆறுதலை தந்தது. அப்படியே அதில் விழி மூடி லயித்து இருந்தவளின் உடல் தன்னை அறியாமலேயே இசைக்கு ஏற்ப மெல்ல அசைய தொடங்கியது.
 
 
அம்ருவுக்குச் சிறு வயதில் இருந்தே நடனம் மிகப் பிடித்தமான ஒன்று. சந்தோசம் துக்கம் எதுவாக இருந்தாலும் அந்த நேரத்து மூடுக்கு ஏற்றது போலச் சில பாடல்களைப் போட்டு ஆடுவாள்.
 
 
அதுவே அவளைப் பொறுத்தவரை அந்த நேரத்து மனதிற்கு ஒரு நிறைவை கொடுக்கும் ஒன்றாக இருக்கும். இன்றும் அது போல இத்தனை நாள் இருந்த குழப்பமும் தவிப்புமான மனநிலையை மாற்ற எண்ணியவள், அப்போது ஒலித்துக் கொண்டு இருந்த பாடலுக்குப் பாதியில் எழுந்து ஆட துவங்கினாள்.
 
 
காடு இருண்டு விடக் கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
 
 
அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
 
 
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
 
 
என்று கால் தரையில் படாமல் மனதின் வேதனை மறக்க கூடவே பாடியவாறே சுழன்று ஆடிக் கொண்டு இருந்தாள் அம்ரு. ஏதோ தன்னிலையையே கூறுவது போல் இருந்த அந்த இறுதி வரிகளைப் பாடும் போது எவ்வளவோ தடுக்க முயன்றும் அவளையும் அறியாமல் ஒரு கேவல் வெளியே வர, இதழ் கடித்து அதைத் தனக்குள்ளேயே புதைக்க முயன்றவாறே ஆட்டத்தை நிறுத்தாமல் நிறுத்தத் தோன்றாமல் தன் வலிகளை மறக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தொடர்ந்து ஆடி கொண்டிருந்தாள்.
 
 
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா வா
கண்ணீரில் உயிர் துடிக்கக் கண்ணா வா உயிர் கொடுக்க..
 
 
என்று ஆடிக் கொண்டே அதுவரை மூடி இருந்த விழிகளைத் திறந்தவள், அப்போதே அறையின் வாயிற்கதவில் கைகளைக் கட்டி ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்து கொண்டு ஷௌர்யா நிற்பதை கண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.
 
 
‘ம்ம்... அழைப்பு எல்லாம் பலமா தான் இருக்கு, ஆனா நீ கூப்பிட்டவுடனே இங்கே உன் கண்ணனால் ஓடி வர முடியாது மை டியர் போண்டா டீ... பிகாஸ் இது இந்தக் கம்சனோட கோட்டை... நான் அனுமதித்தால் தான் இங்கே காத்து கூட உள்ளே நுழைய முடியும்...” என்றவன் திரும்பி செல்ல முயன்று பின் அப்படியே நின்றான்.
 
 
“உன் டான்ஸ் அவ்வளவு ஓர்த் இல்லைனாலும்... ரோட்டில் இப்படி ஆடினா இதைவிடக் குறைவா போட்டு எனக்குப் பழக்கம் இல்ல..” என்று தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு கட்டுப் பணத்தை எடுத்து அம்ருவின் மேல் விட்டெறிந்தான்.
 
 
முகத்தில் வந்து மோதி சிதறிய பணக் கட்டை ஒரு முறை பார்வையைச் சுழற்றி பார்த்தவள், மீண்டும் வெடித்துக் கிளம்பிய அழுகையைத் தனக்குள்ளேயே புதைக்க முயன்று தோற்று, அப்படியே விழி நீர் வழிய மடங்கி அமர்ந்தாள்.
 
 
இங்கு வந்த பின்பு இப்படிபட்ட வார்த்தைகளும் அவமானங்களும் எதற்கென்றே தெரியாமல் அவளுக்கு அடிக்கடி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ கடந்து செல்லவோ அவ்வளவு எளிதாக அவளால் முடியவில்லை.
 
 
ஒவ்வொரு முறையும் வலிக்கத் தான் செய்கிறது. ஆனால் எதிர்க்கவோ சண்டையிடவோ தான் முடியவில்லை, அதன் பலனே இந்தக் கண்ணீர்... ‘எப்பவும் சிரிச்சிட்டே எப்படி இருக்கே.. உனக்கு அழவே தெரியாதா..?’ எனத் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கேட்டது நினைவு வந்து ‘ஒருவேளை இப்போது தேவைப்படும் என்று தான் அப்போ அழாம சேர்த்து வெச்சேன் போல..’ என்றே அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
 
 
அப்போது மீண்டும் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கவும், கண்ணீரோடு விழி உயர்த்தினாள் அம்ரு. “நீ இப்படி உருகி உருகி கூப்பிடுவேன்னு தெரிஞ்சு தானோ என்னவோ நீ கூப்பிடறதுக்கு முன்னமே உன் கண்ணன் அந்தக் காதல் மன்னன் இங்கே வந்தாச்சு..” என்றான் கேலி வழிந்து ஓடும் குரலில்.
 
 
ஷௌர்யாவின் வார்த்தைகளையும் அதன் பொருளையும் புரிந்து கொள்ளவே அம்ருவுக்கு வெகு நேரம் பிடித்தது. அதைப் புரிந்து கொண்ட அடுத்த நொடி முகம் பிரகாசிக்க மற்றது எல்லாம் மறந்து ஒரு சந்தோஷ தவிப்போடு எழுந்து அறையின் வாயிலை நோக்கி பாய்ந்து ஓடியவளின் கையைப் பற்றி ஷௌர்யா சுண்டி இழுத்ததில் அவன் மேலேயே வந்து மோதி நின்றாள் அம்ரு.
 
 
“அவ்வளவு ஆசையா அவனைப் பார்க்க..” என்று முகம் சிவக்க பல்லை கடித்துக் கொண்டு கேட்டவனை அத்தனை நெருக்கத்தில் கண்டு எழுந்த பயத்தை விட, எதிர்பாராமல் அமைந்த இந்தச் சந்தர்பத்தைத் தவற விட்டுவிட்டால் இதன் பின் இப்படி ஒன்று அமையாமலே போக வாய்ப்புண்டு என்ற தவிப்பே அம்ருவிடம் அதிகம் இருந்தது.
 
 
“பிளீஸ்ஸ்ஸ் சார்..” என்று இவ்வளவு நேரம் யோசித்து வைத்ததையெல்லாம் மறந்து கண்ணீரோடு கெஞ்ச துவங்கியவளை கொஞ்சமும் இறக்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷௌர்யா.
தன் கெஞ்சலுக்கும் தவிப்புக்கும் அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்புமே இல்லாமல் கல் போல் நிற்பதை கண்டு அவனிடமிருந்து விடுபட்டுக் கொள்ளப் போராடியவளுக்கு அது கொஞ்சமும் முடியவில்லை.
 
 
இடது கையை மடக்கி பின்னால் பிடித்து அழுத்தி கொண்டிருக்க வலது கையால் ஷௌர்யாவை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்த அம்ரு எடுத்த அத்தனை முயற்சியும் ஒன்றுமில்லாமல் போனது. அவனையும் அவனின் உடும்பு பிடியையும் அசைக்கக் கூட முடியவில்லை.
 
 
“உன் காதல் கண்ணாளன் வந்ததைச் சொன்னதுக்கே இப்படி ஓட துடிக்கறீயே, கூட வந்து இருக்க உன் பாசமலரை பத்தி சொன்னா என்ன பண்ணுவே..?” என்று கேலி போலக் கேட்டாலும் அவளின் முகப் பாவத்தை ஊன்றி கவனித்துக் கொண்டே தான் கூறினான்.
 
 
அவனிடமிருந்து விடுபடும் முயற்சியில் இருந்தவளின் கரங்கள் ஷௌர்யாவின் அந்த வார்த்தைகளில் அப்படியே நின்றது. திகைப்பும் நம்பிக்கை இல்லா தன்மையோடும் கண்களில் நீர் கோர்க்க ஷௌர்யாவின் முகத்தைப் பார்த்தவளின் முகமும் கண்களும் ‘இது நிஜம் தானா’ என்பது போல அத்தனை ஏக்கத்தைச் சுமந்து இருந்தது.
 
 
“ஹப்பாஆஆ... நவரசமும் நாட்டியம் ஆடுதே இந்த முகத்துல.. இத்தனை தேடலும் தவிப்பும் அண்ணனுக்கா இல்லை உன் கண்ணனுக்கா..?!” என்று இடக்காகக் கேள்வி கேட்டவனையும் அவன் கேலியையும் எதிர் கொள்ள முடியாமல் சற்று நேரத்திற்கு முன் யோசித்து எடுத்த அத்தனை முடிவுகளும் மறந்து போக..
 
 
“பிளீஸ் சார்.. என்னைப் போக விடுங்க, நான் அவங்களைப் பார்க்கணும்..” என்று அதற்கு மேல் எதிர்க்க முடியாமல் கெஞ்சியவளுக்குக் கையெடுத்து கும்பிடும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டு அவளின் கைகள் அவனிடம் சிறைபட்டுக் கிடந்தது.
 
 
கொஞ்சமும் அசையாமல் அம்ருவையே பார்த்தப்படி நின்றிருந்தான் ஷௌர்யா. “பிளீஸ்.. பிளீஸ்.. பிளீஸ்..” என்று அம்ரு விதவிதமாகக் கெஞ்சியதில் ஆச்சர்யமான முகபாவத்தைக் காண்பித்தவன், “அவங்களைப் பார்க்கணுமா.. ஓ பார்க்கலாமே..” என்று குரலில் என்ன பாவம் என்று பிரித்தறிய முடியா ஒரு பாவத்தில் கூறினான் ஷௌர்யா.
 
 
என்னத்தான் கெஞ்சி கொண்டு இருந்தாலும் அவன் ஒத்து கொள்வான் என்ற நம்பிக்கை அம்ருவுக்குத் துளியும் இல்லை. இப்போது திடீரென இப்படி ஷௌர்யா கூறியதில் திகைத்து போய் அடுத்த வார்த்தை வராமல் விழித்தவள், “நி.. நி.. நிஜ.. மாவா.. சார்..” என்றாள்.
 
 
“எஸ்..” என்று தலையை ஒருவிதமாக ஷௌர்யா அசைக்கவும், அப்போ நான் போகட்டுமா..” என்று முகம் மலர கேட்டவளை கண்டு “ஹ்ம்ம்” என்றான்.
 
 
அந்த ஒரு செய்கையில் அப்படி ஒரு நிம்மதி எழ, அவசரமாக அவனிடமிருந்து விலக அம்ரு முயல, ஷௌர்யாவோ தன் பிடியை கொஞ்சம் கூடத் தளர்த்தவில்லை. மீண்டும் மீண்டும் அதிலிருந்து விடுப்பட முயன்று பார்த்தவள், கேள்வியாக நிமிர்ந்து ஷௌர்யாவின் முகத்தைப் பார்க்க..
 
 
“ஆனா ஒரு கண்டிஷன்..” என்றான் உள்ளடங்கிய ராட்சச புன்னகையோடான இதழ் வளைவுடன். “க.. க.. கண்டிஷனா..?!!” என்று திகைத்தாலும் இவனிடமிருந்து தப்பித்து அவர்களைச் சந்தித்து ஆயத்தையும் கூறிவிட்டால் போதும் மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தோன்றவும், “எதுவா இருந்தாலும் ஒகே சார்..” என்றாள் அவசரமாக.
 
 
“நீ உனக்குத் தேவைனா என்ன செய்யவும் ரெடியா தானே இருப்ப.. ஆனா நான் அந்த மாதிரி ஆள் இல்லை பாரு, அதனால...” என்று கிடைத்த அந்தச் சந்தர்பத்திலும் அவளைக் குத்தி விட்டு சிறு இடைவெளி விட்டவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னே கண்ணா மன்னான்னு உன் முன்னாள் காதலனை நினைச்சு ஆடினியே, அதே போல இந்நாள் கணவனான என்னை நினைச்சு உருகி ஒரு ஆட்டம் போடறே..” என்றான் ஏளனமும் எகத்தாளமும் போட்டி போடும் குரலில்.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்பாராததால் அதைக் கேட்டு “ஆங்” என்று அதிர்வில் அம்ரு வாயை பிளக்க.. “ம்ம்” என்று கண்களை மூடி திறந்து இதை நீ செய்தே ஆக வேண்டும் என்பது போலத் தலையசைத்தான் ஷௌர்யா.
 
 
“சார் பிளீஸ்.. இப்போ நான் ஆடற மனநிலையில் எல்லாம் இல்லை..” என்று எப்படியாவது அவனுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்று தொடங்கியவளை இடைவெட்டி, “அதெல்லாம் எனக்குத் தேவை இல்லாதது.. உன் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கவோ இல்லை உன் அழுகுல மயங்கியோ எல்லாம் நான் இதைச் சொல்லலை.. உனக்கு அவங்களைப் பார்க்கணும்னா நீ ஆடியே ஆகணும்..” என்றான் கறார் குரலில்.
 
 
‘எப்படி எந்த ஒரு உணர்வுக்கும் மதிபளிக்காமல் கல்லை போல இவனால் இருக்க முடிகிறது.. யார் எப்படிப் போனாலும் இவன் நினைத்தது மட்டும் தான் நடக்கணும் போல.. ச்சீ.. உன்னைப் போல ஒருத்தனை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை..’ என்று மனதிற்குள் திட்டியவள் முகத்தை வெறுப்போடு திருப்பிக் கொண்டாள்.
 
 
“ம்ம், இந்தப் பாட்டு கூட எனக்கு ஒகே தான்..” என்று திடுமென ஒலித்த ஷௌர்யாவின் குரலில் நினைவு கலைந்து நிமிர்ந்தவள் “எந்தப் பாட்டு..?” என்றாள் புரியா குழப்பத்தோடு.
“அதான் இப்போ நினைச்ச இல்ல.. அதான்..” என்றவனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது. ‘என்ன பாட்டு..?’ எனப் புரியாமல் முகத்தைச் சுருக்கியவளுக்கு அப்போதே சற்றுமுன் தான் மனதில் நினைத்தது நினைவுக்கு வந்தது.
 
 
அதில் அதிர்வோடு ஷௌர்யாவின் முகத்தை அம்ரு பார்க்கவும், “என் டைம் ரொம்பப் பிரிஷியஸ்.. டோன்ட் வேஸ்ட் இட்..” என்ற கறாரான குரல் அவனிடமிருந்து வந்தது.
 
 
அதெல்லாம் முடியாது என மறுத்துக் கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பை தவற விட்டுவிட்டால் மீண்டும் தன்னைச் சேர்ந்தவர்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ என்ற எண்ணம் எழுந்து தவிக்கச் செய்ய.. ஆனால் அதற்காகவும் ஷௌர்யா சொன்னதற்கு ஒத்துக் கொள்ள மனம் வராமல் போனதில் “எனக்கு அந்தப் பாட்டு தெரியாது..” என்றாள் தப்பிக்கும் மார்கத்தை எதிர்பார்த்து.
 
 
“அவ்வளவு தானே..” என்று அசால்ட்டாகக் கூறியவன் அவளைப் பிடித்திருந்த பிடியை உதறி, அருகில் இருந்த அம்ருவின் அலைபேசியையே எடுத்து அதிலேயே யூடியூப்பில் அந்தப் பாடலை ஒரு வெற்றி புன்னகையோடு ஓடவிட்டான்.
 
 
இப்போது அம்ருவுக்கு வேறு வழி இல்லாமல் போகவும், கோபமும் அழுகையும் போட்டி போட..
 
 
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
 
 
என்று ஆத்திரமும் வெறுப்புமாக முகத்தை அவனைத் திட்டுவது போன்ற பாவனையில் வைத்துக் கொண்டு அம்ரு ஆடவும், “ம்ப்ச்.. இது இல்லையே அந்தப் பிலீங்.. அப்போ ஆடும் போது வந்துதே கண்ணான்னு உருகும் போதெல்லாம் அப்படியே உதடு துடிக்க உள்ளே இருந்து ஒரு தவிப்பு.. அப்படி வேணும்.. பழைய காதலனுக்கே அப்படி ஒரு பிலீங்கனா, நீ கஷ்டப்பட்டு நல்ல பொண்ணாவோ உண்மையான காதலியாவோ நடிக்க வேண்டிய அவசியமெல்லாம் எதுவும் இல்லாம.. இதோ இவ்வளவு பெரிய மாளிகையில் கூட்டிட்டு வந்து உனக்கு ஒரு வாழக்கை கொடுத்திருக்க இந்தப் புருஷருக்கு எப்படி ஒரு தவிப்பும் நடிப்பும்.. ச்சீ.. ச்சீ.. காதலும்ம்ம்.. நன்றியும் அப்படியே உள்ளே இருந்து பொங்கி வரணும்.. அப்படி நடிக்கணும்.. இல்லையில்லை ஆடணும்.. ஒகே..” என்றான்.
 
 
சாமி போல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்குச் சொந்தம் நீ தானே
 
 
ஷௌர்யாவின் வார்த்தைகளைக் கேட்டுப் பொங்கிய கோபத்தில் கையில் கிடைக்கும் எதையாவது எடுத்து அவன் தலையிலேயே போடலாம் என்று எழுந்த எண்ணத்தை மறைத்துக் கொண்டு எப்படியாவது தன்னைச் சார்ந்தவர்களைக் கண்டுவிடும் ஆவலில் அதை மட்டுமே முன் நிறுத்தி மனதை முகத்தில் காண்பிக்காமல் பல்லை கடித்துக் கொண்டு மீண்டும் அடுத்த வரிகளைத் தொடர்ந்து ஆடினாள் அம்ரு.
 
 
“கட்.. கட்.. கட்.. நான் எதிர் பார்க்கறது இது இல்லையே, நான் உனக்குக் கொடுத்து இருக்கும் வாழ்க்கைக்கு நீ என்னை எப்படிப் பார்க்கணும்னு அந்தப் பாட்டே சொல்லுது.. அதுக்குத் தகுந்தா மாதிரி ஆட சொன்னா நீ அழுது வடியற.. நியாயமா பார்த்தா நீ எதிர் பார்க்காத வாழ்க்கையை நான் உனக்குக் கொடுத்ததுக்கு நன்றி கடனா நீ எனக்குக் கோவில் கட்டி இவ்வளவு நேரத்துக்கு அதுக்குப் பூசாரியா மாறி இருக்கணும்.. நீ என்னன்னா..?!! உன் பர்பார்மன்ஸ் கொஞ்சமும் எனக்குப் பிடிக்கலை, டீல் கேன்சல்..” என்று எழுந்து அறையிலிருந்து வெளியேற முயன்றான்.
 
 
அவசரமாக ஓடி சென்று ஷௌர்யாவின் முன் நின்று வழியை மறித்தவள், “பிளீஸ்.. போகாதீங்க, எனக்கு அவ்வளவு தான் வருது..” என்றாள் மன்றாடும் குரலில். “அது என் பிரச்சனை இல்லையே.. நான் எதிர்பார்த்தது கிடைச்சா.. நீ எதிர்பார்க்கறது உனக்கும் கிடைக்கும்.. டீலா நோ டீலா..?” என்று துளியும் இறங்கி வராமல் இரக்கமில்லா குரலில் கூறினான்.
 
 
“ஒகே நான் டிரை செய்யறேன்..” என்றவள் வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்து முகத்தைக் குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவி மனதை ஒருவாறு தயார் செய்து கொண்டு வந்தாள். ஏதோ நடன மங்கையின் நாட்டியத்தைப் பார்க்கும் அரசனின் தோரணையோடு அங்கு அமர்ந்திருந்தவனைக் கண்டு மறந்தும் எந்த உணர்வும் வெளிவந்து விடாமல் முகத்தைப் புன்னகை பூசியது போல வைத்து கொண்டவள் மீண்டும் அடுத்த வரிகளுக்கு ஆட துவங்கினாள்.
 
 
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே
 
 
“வாவ்... கேட்கவே நல்லா இருக்கே.. ம்ம்.. ம்ம்..” என்று தொடர்ந்து ஆடு என்பது போல ஷௌர்யா கையசைக்க...
 
 
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே
 
 
“வாரே வா.. வாரே வா.. என்ன ஒரு எக்ஸ்பிரஷன், என்ன ஒரு நடிப்பு.. இப்படி எல்லாம் நடிச்சு தான் உலகத்தை ஏமாத்துவீங்க இல்லை.. ஆனாலும் வர்மா ஹாப்பித் தான்.. ஓகே நம்ம டீலை பார்ப்போமா..!!” என்றவன் எழுந்து முன்னால் செல்ல.. ஏக்கமும் எதிர்பார்ப்புமாக அவனைப் பின் தொடர்ந்தாள் அம்ரு.
 
 
அந்தத் தளத்திலேயே இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தவனைப் புரியாமல் பார்த்தாவாறே பின் தொடர்ந்தவள், ஒருவேளை இந்த அறைக்குள் தான் அவர்கள் காத்திருக்கிறார்களோ என்ற ஆவலோடு பார்வையைச் சுழற்றியவள் அங்கு யாருமற்று இருப்பதைக் கண்டு கேள்வியாக ஷௌர்யாவை பார்க்க.. அவனோ எதிரில் தெரிந்த கண்ணாடியாலான ஜன்னலை பார்வையால் சுட்டி காண்பித்தான்.
 
 
புரியா பாவனையோடே அதை அம்ரு நெருங்கவும் அங்கு இருந்த திரையைத் தன் கையில் இருந்த ரிமோட்டின் மூலம் விலக்கினான் ஷௌர்யா. அங்கு எதிரில் இருந்த லானில் சூர்யாவும் முகுந்தும் தவிப்போடு வாயிலையே பார்த்துக் கொண்டு நின்றிருப்பது தெரிந்தது.
 
 
இவ்வளவு நேரம் கூட ஒருவேளை இவன் நம்மை ஏமாற்றுகிறானோ என்ற ஒரு சிறு சந்தேகம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் கண் முன் தன்னைச் சேர்ந்தவர்களைக் கண்ட நொடி மற்றது எல்லாம் மறந்து போக.. வாயிலை நோக்கி பாய்ந்து ஓடினாள் அம்ரு.
 
 
ஆனால் அம்ரு அறையின் வாயிலை நெருங்குவதற்கு முன்பே “ஷேடோ” என்று ஷௌர்யா ஒரு குரல் கொடுத்து இருக்க.. அதற்காகவே காத்திருந்தது போலத் தாவி ஓடி வந்து அறை வாயிலில் நின்றது அது.
 
 
அதில் அம்ரு பிரேக் இட்டது போலத் தன் ஓட்டத்தை நிறுத்தவும், மூச்சு வாங்க நாக்கு வெளியில் தொங்க இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஷேடோ. “சிட்” என்று ஷௌர்யாவின் குரல் கட்டளை தொனியில் ஒலிக்கவும், அது அங்கேயே வழியை மறித்தது போல அமர்ந்து கொண்டது. இதைக் கண்டு உடல் பதற ஈச்சிலை கூட்டி விழுங்கியவள் பரிதாபமாகத் திரும்பி ஷௌர்யாவை பார்த்தாள்.
 
 
அவனோ சாவகாசமாகத் தன் முன் இருத்த டீபாயின் மேல் காலை நீட்டி அமர்ந்து கொண்டு, “உன் அண்ணனையும் அந்தக் கண்ணனையும் பார்க்கலாம்னு தான் சொன்னேன்.. பார்த்தாச்சு இல்லை..” என்றான்.
 
 
‘இதற்கா இத்தனை பாடு என்றும், கண் முன்னே இருப்பவர்களிடம் அடைக்கலம் தேடி புக முடியவில்லையே என்ற தவிப்பும் சேர, தாங்க முடியாத ஏக்கத்தோடு திரும்பி ஜன்னலை பார்த்தவள், “பிளீஸ் சார்” என்று தொடங்கவும் அதற்கு மேல் அவளைப் பேச விடாமல் “நான் சொன்னதைச் செஞ்சுட்டேன்..” என்று அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான் ஷௌர்யா.
 
 
தன் பலவீனமான மனதை பயன்படுத்தி அவனுக்குத் தேவையானது போல் வளைத்துக் கொண்டு இப்போது தன் சுயத்தைக் காண்பிப்பவனை வெறுப்பும் ஆத்திரமுமாகப் பார்த்தவள், “நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. ராட்ஷஷன்.. அசுரன்.. அரக்கன்..” என்று வெறுப்போடு கத்தினாள்.
 
 
“இதுவே உனக்கு இப்போ தான் தெரியுதா..?!” என்று அதையும் கூடத் தூசி போலத் தட்டியவன் தன் கையில் இருந்த அலைபேசியில் கவனமாக இனியும் இவனிடம் பேசுவது வீண் என்று உணர்ந்தவள், வேகமாகச் சென்று ஜன்னலை நெருங்கி அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள்.
 
 
ஆனால் பாவம் அம்ருவுக்குத் தெரியவில்லை. அது சாதாரணக் கண்ணாடி போலவே தெரிந்தாலும் அந்தக் கண்ணாடியில் உயரகத் தொழில்நுட்பத்தோடு உள்ளே இருந்து மட்டுமே வெளியில் பார்க்குமாறு டிசைன் செய்யப்பட்டு இருப்பதும் அங்கு இருந்து கத்தினாலும் கூட வெளியில் கேட்காது என்பதும்.
 
 
தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தவள், பொங்கி வந்த அழுகையோடு உதடு பிதுக்கி செய்வதறியாது திரும்பி ஷௌர்யாவை பார்க்க.. அவனோ ஏதோ வேடிக்கை பார்க்கும் பாவனையோடு கன்னத்தைக் கைகளில் தாங்கி அமர்ந்து அம்ருவின் செயல்களை எல்லாம் கொரூரமாக ரசித்துக் கொண்டு இருந்தான்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 
 

   
ReplyQuote
Page 1 / 3

You cannot copy content of this page