நேசம் – 7
எட்டு மணி நேரத்திற்கு முன்..
தனக்கேயான வேக நடையோடு வழக்கம் போல் பாதுகாவலர்கள் சூழ, ரேபானின் வழியே அந்தச் சுற்றுப்புறம் முழுவதையும் கண்காணித்தவாறே அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தான் தாரக்.
அதுவரை அங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தாரக் உள்ளே நுழைந்ததும் அவர்களின் கவனத்தை எல்லாம் இவன் பக்கம் திருப்ப.. யாரையும் துளியும் மதிக்காத உடல் மொழியோடு மீட்டிங் நடக்கும் பகுதியை நோக்கி சென்றான் தாரக்.
அவனைத் தங்கள் முன் மாதிரியாக நினைக்கும் சிலர் வலிய சென்று அறிமுகம் செய்து கொள்ள முயன்றாலும், தாரக்கின் பாதுகாவலர்கள் அவனை நெருங்க கூட யாரையும் அனுமதிக்கவில்லை.
இதில் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் ஒரு சிலர் அங்கிருந்து நகர்ந்து செல்ல.. தாரக்கை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த தொழிலதிபர்களும் அவனுடன் அறிமுகம் செய்து கொள்ள மறைமுகமாகக் காத்திருந்தனர்.
இளையவர்களைப் போல் பின்னேயே சுற்றி வர அவர்களால் முடியாது. எங்கிருந்தாவது யாரவாது இதைப் பார்த்து காணொளி ஆதாரத்தோடு செய்தியாக்கி விடுவார்கள். அதற்காக அவன் நட்பு வேண்டாமெனவும் சொல்ல முடியாது.
இன்று தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக இருக்கும் தாரக் எனக்கு நெருக்கமெனச் சொல்லிக் கொள்வதே ஒரு வகையில் பெருமை தான். ஆனால் அப்படி யாரும் இங்குச் சொல்லிக் கொள்ளவே முடியாத வகையில் நடந்து கொண்டான் தாரக்.
தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தையில் மட்டுமே அதுவும் நேரில் அவன் வர வேண்டி இருந்தால் மட்டுமே வந்து கலந்துக் கொள்பவன், அது முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி விடுவான். யாரிடமும் அதிகப்படியான ஒரு வார்த்தையும் பேச மாட்டான்.
இது இன்று மட்டுமில்லை. அவன் தொழிலை கையில் எடுத்த இந்த ஆறு வருடங்களாக இப்படித் தான். தாரக்கின் தந்தை சந்திரகாந்த் தொழிலை பாரத்தவரை இப்படியான கெடுபிடிகளோ, பாதுகாவலர்கள் புடை சூழ வருவதோ எதுவும் கிடையாது. அவர் கொஞ்சம் கலகலப்பானவர் தான்.
தாரக் அதற்கு அப்படியே நேர் மாறாக இருந்தான். சிறு வயதிலிருந்து அவனை அதிகம் தொழில் வட்டாரங்களில் யாரும் பார்த்து பழகியதில்லை. எப்போதாவது ஏதாவது விருது விழாக்களிலோ இல்லை அவர்கள் நிறுவனத்தின் ஆண்டு விழாக்களிலோ மட்டுமே அரிதாகத் தென்படுவான்.
அதுவும் கூடப் பெரும்பாலும் தன் அன்னை கங்காவோடு அமைதியாக அமர்ந்திருப்பான் தாரக். அதில் பெரும்பாலும் யாரின் கவனமும் அவன் பக்கம் சென்றதில்லை. இப்படித் திடீரென விருட்சமாக வளர்ந்து நிற்பான் எனத் தெரிந்திருந்தால் அப்போதே அவனோடு பேசி பழகி நட்பை வளர்த்துக் கொள்ள முயன்று இருப்பார்களோ என்னவோ..!
அன்றைய அமைதிக்குப் பின் இருக்கும் விஸ்வரூபம் யாருக்கும் தெரியாமல் போனதில் தொழில் வட்டாரத்தில் யாருமே அவனுக்கு நெருக்கமானவர்கள் இல்லை.
அதற்காகப் பேசத் தெரியாதவன் என்றில்லை. நறுக்குத் தெரித்தது போல் இரண்டே வார்த்தைகள் பேசினாலும் எதிரில் இருப்பவர்கள் அடுத்த வார்த்தை பேச முடியாத அளவில் பேசுவான்.
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுவான். அதைத் தவிர்த்து அதிகப்படியாக அவனிடமிருந்து ஒரு வார்த்தையும் வராது. அதே போல் வந்த வேலை முடிந்து விட்டால் அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி விடுவான் தாரக்.
அதன் பின் அவனை யாராலும் தடுக்கவும் முடியாது. எத்தனையோ பெரிய ஒப்பந்தங்கள் முடிந்த பிறகு நடக்கும் பார்ட்டிகளில் கூடக் கலந்து கொள்வதில்லை.
அதற்காகப் பார்ட்டி நடத்தாதவனும் இல்லை. எல்லாக் கேலிக்கைகளும் கொண்டாட்டங்களும் அவன் நிறுவனங்களிலும் உண்டு. அதில் முக்கிய விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் வரை மட்டுமே இருப்பவன், அதன் பின் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுவான்.
அவனுக்கென எந்தப் பலவீனமும் கிடையாது. மது, மாது என எதை வைத்தாவது தாரக்கை நெருங்க பலர் முயன்றும் அது முடியவில்லை. இதில் தனிப்பட்ட முறையில் அவனைப் பார்த்துப் பேசி பழக யாருக்குமே அவகாசம் கிடைக்கவில்லை.
அதனாலேயே அவனைப் பார்க்க கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சிலர் இப்படித் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இப்போதும் அப்படியே ஒரு முக்கிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக இங்கு வந்திருந்தவன், மற்றவர்கள் எல்லாம் முன்பே வந்து காத்திருக்க.. சரியாக அது தொடங்குவதற்கு மூன்று நிமிடம் முன்பு அந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
அவன் சென்று அமரவும் பேச்சு வார்த்தை தொடங்கவும் சரியாக இருக்க.. அங்குப் பலர் ஒப்பந்தத்திற்காகப் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். தங்கள் தரப்பு வாதத்தை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்லி அவர்கள் எதில் சிறந்தவர்கள் என வெளிப்படுத்திக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்க.. அதையெல்லாம் கால் மேல் கால் போட்டு இருக்கையில் சாய்ந்து அமிர்ந்தப்படியே தன் வலக்கை இரு விரலில் கன்னத்தைத் தாங்கியவாறே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் தாரக்.
அவன் முறை வந்ததும் கொஞ்சமும் பதட்டமில்லாமல், மூன்றே வரிகளில் மற்றவர்களை விட அவன் எதில் சிறந்தவன் என்பதை மட்டுமே சொல்லி விட்டு தன் பேச்சை முடித்துக் கொண்டான் தாரக்.
அவ்வளவு நேரமும் மூச்சை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ‘இவ்வளவு தானா..?’ என்பது போல் அவனைத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்க.. இவ்வளவு நேரமும் அவர்களைப் பேச விட்டு இதற்காகத் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தாரக்.
அதில் ஒரு இகழ்ச்சியான இதழ் வளைவு அவனிடமிருந்து வந்தது. மற்றவர்கள் எல்லாம் என்ன செய்யத் திட்டமிட்டு உள்ளனர் என இவ்வளவு நேரமும் சொல்லிக் கொண்டிருந்ததை வைத்து, நொடியில் இதையெல்லாம் விட இவன் எந்த வகையில் சிறந்தவன் என்பதைத் தனக்கான வாய்ப்பில் சொல்லி முடித்துக் கொண்டான் தாரக்.
அதற்கேற்றார் போல் அவன் தயாரித்திருந்த கொட்டேஷன், மாடல், ப்ராஜெக்ட் டீடெயில் என அனைத்துமே மற்றவர்களை விட, பல படிகள் மேலே இருந்தது.
அதில் இந்த முறையும் ஆர்டர் அவனுக்கே கிடைக்க.. அப்போதும் எந்தவித அலட்டலும் இல்லாமல் அதே முகத்தில் இருந்த உணர்வற்ற நிலையோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சட்டரீதியான விஷயங்களைச் சம்பந்தப்பட்டவர்களோடு பேசி முடிப்பதற்காகத் தனி அறைக்குச் சென்றான் தாரக்.
இதில் வழக்கம் போல் மற்றவர்கள் எல்லாம் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டே..
“என்னப்பா இது இந்த முறையும் இப்படியே ஆகிடுச்சு..”
“ஒவ்வொரு முறையும் எல்லா டெண்டரும் அவனுக்கே போகுது..”
“இப்படியே நடந்தா நாம எல்லாம் எப்படித் தொழில் செய்வது..?”
“நேத்து வந்த சின்னப் பையன் நம்மளை எல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடுவான் போலே..”
“இத்தனை வருஷம் நாமெல்லாம் தொழில் செஞ்சதே வேஸ்ட்ன்றது போல இல்லை இருக்கு..” என்று பேசிக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் அப்படிச் செல்ல முடியாமல் அங்குக் கொதித்துக் கொண்டிருந்தான் யுவன். எப்படியாவது ஒரு முறையாவது தாரக்கை வீழ்த்தி விட வேண்டும் என்ற வெறி அவனுக்கு உண்டு. தாரக்கை போலவே அவனும் தன் தந்தையின் தொழிலை தான் கையில் எடுத்திருந்தான்.
ஆனால் தொழில் தன் கைக்கு வந்தது முதல் ஒவ்வொரு இடத்திலும் இப்படி தாரக் தன்னை வெற்றி அடைய செய்ய விடாது, அவனே அனைத்தையும் தட்டி செல்வது, அவனுள் ஆத்திரத்தை கிளப்பி இருந்தது.
இத்தனைக்கும் திட்டமிட்டு எல்லாம் தாரக் இப்படிச் செய்வதில்லை. இப்படி ஒருவனைத் தனக்குப் போட்டியாகக் கூடத் தாரக் நினைத்ததில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாக யுவன் தன் ஒரே போட்டியாக நினைப்பது தாரக்கை தான்.
அதிலும் அவன் தந்தையே ஒருமுறை “உன்னை நம்பி பிசினஸை கொடுத்தேன் பாரு என்னைச் சொல்லணும், வயசானாலும் பரவாயில்லைன்னு நானே எல்லாம் பார்த்திருக்கணும்.. உன்னைப் போலத் தானே அவனும் அப்பா பிசினஸை கையில் எடுத்தான்.. ஆனா அந்த எஸ்டி குரூப்ஸ் இன்னைக்கு இருக்கும் நிலைமை என்ன..? நம்ம நிலைமை என்ன..?
உழைப்புனா அது.. வளர்ச்சினா அப்படி இருக்கணும்.. எனக்குப் பிறந்துட்ட ஒரே தகுதி தொழிலை நடத்த போதாது மகனே, இன்னும் ஒரு வருஷம் பார்ப்பேன்.. அதுக்குள்ளே நீ உன்னை நிரூபி, இல்லை மறுபடி நானே ஆபிஸ் வந்து எல்லாம் பார்க்க வேண்டி இருக்கும் பார்த்துக்கோ.. என் சாம்ராஜ்யம் என் கண்ணு முன்னேயே சாயறதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது..” என்று ஒரு நாள் காரசாரமாகப் பேசி விட்டிருந்தார் ஸ்ரீபதி.
இது யுவனுக்குப் பெரும் அவமானமாகப் போனது. இத்தனைக்கும் அவர்கள் தொழில் நஷ்டத்தில் எல்லாம் போகவில்லை. லாபகரமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அவர் தொழில் நடத்திக் கொண்டிருந்த போது இருந்த சூழ்நிலை வேறு, இந்த முறை ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் கிடைத்தால் அடுத்த முறை மற்றொரு நிறுவனத்திற்கு அது செல்லும்.
ஆனால் இப்போது தொடர்ந்து பெரிய டெண்டர் அனைத்தும் தாரக்கிற்கே போவதும், பெரிய முதலீடு செய்யும் நிறுவனங்கள் எல்லாம் அவனையே தேடி செல்வதும், தாரக் அத்தனை ஆர்டர்களையும் சலிக்காமல் எடுப்பதும் எல்லாம் தங்கள் தோல்வி என நினைத்தார் ஸ்ரீபதி.
ஆனால் இப்போது அவரே தொழில் நடத்திக் கொண்டிருந்தாலும் இதே நிலைமை தான் என அவருக்குப் புரியவில்லை பாவம். இதில் எப்படியாவது குறுக்கு வழியிலாவது சென்று இந்த முறை ஆர்டரை தன் வசமாக்கி கொள்ள வேண்டும் என அத்தனை முயற்சிகளும் செய்திருந்தான் யுவன்.
அதில் ஒரு படியாக தாரக் தயார் செய்திருந்த கொட்டேஷன் மற்றும் மாடலை ஆள் வைத்து திருடி இருந்தான் யுவன். அதை வைத்தே இன்றைய பேச்சுவார்த்தைக்கு யுவன் வேறு வகையான மாடலும் கொட்டேஷனும் தயார் செய்திருக்க.. அவனின் இத்தனை முயற்சிகளும் வீணாகி அதற்காக யுவன் செலவு செய்திருந்த பணமும் நஷ்டமடைந்து தாரக்கின் கைக்கே ஆர்டர் போய்ச் சேர்ந்து இருந்ததோடு, யுவனை ஆத்திரத்திலும் திகைப்பிலும் நிறுத்தி இருந்த மற்றொரு விஷயம் என்னவென்றால் யுவன் தயாரித்திருந்த மாடலையும் கொட்டேஷனையும் வைத்தே அதை விடப் பல மடங்கு சிறந்ததாக ஒன்றை தயார் செய்திருந்தான் தாரக்.
‘இது எப்படிச் சாத்தியம் என்று தான் இந்த நொடி வரை யுவனுக்குப் புரியவில்லை. இது எதிர்பாராமல் நடந்த ஒன்று என யுவனால் நம்பவும் முடியவில்லை. ஏனெனில் இதற்கு முன் தாரக் தயார் செய்திருந்த மாடலை யுவன் பார்த்திருந்தான்.
இப்போது அவன் சமர்பித்தது அது இல்லை. அப்போது அது எங்கே..? இது என்ன புதிதாக..? அதுவும் யுவன் தயார் செய்திருந்ததைப் போல் அதை விடச் சிறப்பான ஒன்று..?’
தாரக்கை வீழ்த்த அவன் எடுத்த முயற்சி அப்படியே தலைகீழாக மாறிப் போன மாயம் புரியாமல் யுவன் யோசனையோடு நின்றிருக்கும் போதே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்து அறையில் இருந்து வெளியில் வந்தான் தாரக்.
அவனுக்காக வெளியே காத்திருந்த பாதுகாவலர்கள் மீண்டும் தாரக்கை வந்து சூழ்ந்து கொள்ள.. அதே வேக நடையோடு வாயிலை நோக்கி சென்றவன், யுவன் நின்றிருந்த இடத்தைக் கடக்கும் போது தன் நடையை நிறுத்தி தலையை மட்டும் லேசாகத் திருப்பி யுவனைப் பார்த்திருந்தான் தாரக்.
அதில் கேள்வியாக யுவன் நெற்றியை சுருக்க.. “இவ்வளவு பெரிய ஆர்டர் சைன் செஞ்சுட்டு வந்துருக்கேன், ஒரு விஷ் கூடக் கிடையாதா யுவன்..?” என்றிருந்தான் தாரக்.
அது மற்றவர்கள் பார்வைக்குச் சாதாரணமாகப் பேசுவது போலத் தெரிந்தாலும் அந்தக் குரலில் அத்தனை நக்கல் ஒளிந்திருப்பது யுவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அதிலேயே இதெல்லாம் எதிர்பாராமல் நடந்த ஒன்றில்லை. தாரக் திட்டமிட்டே இதைச் செய்திருக்கிறான் என்று யுவனுக்குத் தெளிவாகப் புரிய.. இவன் போட்டிருந்த திட்டத்தைக் கண்டுபிடித்து அதையே தனக்கு தாரக் செய்திருப்பதும் அவனுக்குத் தெளிவானது.
அதில் முகம் இறுக யுவன் நின்றிருக்க.. மற்றவர்களின் பார்வையெல்லாம் இவர்கள் மேல் பதிவதைக் கண்ட தாரக், இயல்பாக யுவனின் தோளில் தட்டி நட்போடு பேசுவது போலான மெல்லிய குரலில் “இந்த ஹோட்டலில் தாய் ஸ்ப்பா ரொம்ப ஃபேமஸ், ட்ரை செஞ்சு பார்.. உன் முகத்தில் வழியும் அசடை கிளீயர் செய்ய உதவும்..” என்றவன் அங்கிருந்து நகர முயன்று, பின் நின்று மீண்டும் யுவன் முகத்தைப் பார்த்து “அப்புறம் மிஸ்டர் நாகராஜனை கேட்டதா சொல்லு..” என்று விட்டுச் சென்றிருந்தான் தாரக்.
இதில் யுவனுக்கு அப்படி ஒரு திகைப்பு. ‘தகவல்களைத் திருடியதை வேண்டுமானால் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு உள்ளது. நாகராஜனை பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்..?’ என்ற அதிர்வோடு யுவன் நின்றிருக்கும் போதே அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தான் தாரக்.
ஸ்ரீபதியின் தந்தையும், நாகராஜனின் தந்தையும் ஒரே ஊர்காரர்கள். இருவரும் தூரத்து சொந்தமும் கூட, பெரிதாக ஊர் பக்கம் ஸ்ரீபதி செல்வது இல்லை என்றாலும் அவ்வப்போது முக்கிய உறவினர்கள் திருமணத்தில் பார்த்து பேசும் அளவுக்கு இருவருக்குள்ளும் பழக்கம் உண்டு.
அப்படித்தான் ஒருமுறை திருமண வீட்டில் இவர்கள் சந்தித்துப் பேசும் போது அன்று நடந்திருந்த ஒரு டெண்டர் கைவிட்டுப் போன கோபத்தை ஸ்ரீபதி, தன் மகனிடம் கோபமாகக் காண்பித்துக் கொண்டிருக்க.. இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நாகராஜன் தான் ஸ்ரீபதியிடம் விஷயம் என்னவெனக் கேட்டு அறிந்து கொண்டு இப்படி ஒரு திட்டத்தை யுவனுக்குக் கூறினார்.
“இது நீங்க நினைக்கும் அளவுக்கு அவ்வளவு சுலபம் எல்லாம் இல்லை அங்கிள்..” என்று அப்போதும் யுவன் கூற.. “எதுவுமே சுலபம் கிடையாது தம்பி, முயற்சி நம்ம கையில் தான் இருக்கு, நாம நினைச்சா எதையும் செய்ய முடியும்.. எதையும் மாற்ற முடியும்..
தொழிலை லாபகரமாகக் கொண்டு போறது மட்டும் முக்கியம் கிடையாது.. அதில் கொடிகட்டி பறக்கறதும் முக்கியம், சில விஷயங்களைச் சாதுர்யமா செய்ய முடியலைனா சாணக்கியத்தனத்தோட செய்யணும் அவ்வளவு தான், ஆனா முடிவு நாம நினைச்சதா நமக்குச் சாதகமா இருக்கணும், அதுக்கு எந்த வழியில் போறோம்ன்றது முக்கியம் இல்லை..
வெற்றிக்கொடி யார் கையில் பறக்குதுன்றதும் முக்கியம், உங்க அப்பா இவ்வளவு வருத்தப்படற அளவுக்கு ஒருத்தன் கொண்டு வந்து விட்டிருக்கான்னா அவனை நம்ம பாதையில் இருந்து விளக்கி வைக்கறதில் தப்பே இல்லை, இறங்கி அடிங்க..” என நாகராஜன் கூறினார்.
அதை வைத்தே அவர் சொல்லியிருந்தது போல் தாரக்கின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவனைப் பிடித்து இதையெல்லாம் செய்திருந்தான் யுவன். இப்போது அத்தனையும் வீணாகிப் போனதோடு நாகராஜன் தான் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது என்பது வரை தாரக் கூறுவதைக் கேட்டு அதிர்ந்தவன், உடனே நாகராஜனுக்கு அழைத்திருந்தான்.
*************
அதேநேரம் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தாரக்கின் அலைபேசி அடித்தது. அதை எடுத்துப் பார்த்தவன் அதில் ஒளிந்த பெயரைக் கண்டு உடனே எடுத்துக் காதில் வைத்திருக்க.. அந்தப் பக்கம் சொல்லப்பட்ட தகவலில் “ஆஹாங்..” என்று கேட்டுச் சத்தம் போட்டு சிரித்து இருந்தான் தாரக்.
அவனின் அந்தச் சிரிப்பில் திகைத்து காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் திரும்பி தாரக்கை பார்த்திருக்க.. அதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன் தன் அலைபேசியிலேயே கவனமாக இருந்தான்.
“ஹாஹா.. இன்னுமா இந்த வீண் வீராப்பை எல்லாம் தூக்கி சுமந்துட்டு இருக்கான்..? நானா முடிவு செஞ்சு அவன் முன்னே வந்து நிற்கும் வரை அவனால் என்னை நெருங்க கூட முடியாது, முடிஞ்சா என்னைத் தேடி வர சொல்லு பார்க்கலாம்..” என்றான் சவால் விடும் குரலில் தாரக்.
அதற்கு அந்தப் பக்கம் இருந்து ஏதோ சொல்லப்படவும் “சரி அதையும் தான் கேட்போமே, நமக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் நல்லா தான் இருக்கும்.. கோமாளிங்க எல்லாம் கூடி என்ன கூத்து செய்யறாங்கன்னு நானும் பார்க்கறேன்..” என்றவன் அதன் பின் அலைபேசியோடு ஒன்றி விட.. இங்கு நாகராஜன் அவன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அத்தனையும் அலைபேசி வழியே தாரக்கிற்கு ஒலிபரப்பப்பட்டது.
தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து தன் அலுவலகத்தில் ஆள் வைத்துத் திருட்டுத்தனம் செய்யச் சொல்லிக் கொடுத்தவனின் வீட்டிலேயே ஆள் வைத்து இப்போது உளவு பார்த்துக் கொண்டிருக்கிறான் தாரக்.
‘இதைத்தான் விதின்னு சொல்லுவாங்க மாமனாரே..! உனக்காகக் கட்டம் கட்டி வருஷ கணக்கா இங்கே நான் காத்திருக்க, நீ எனக்கே பின்னாடி குழி தோண்டலாம்னு பார்த்தே இல்லை.. அதுக்கு ஒரு தனிக் கணக்கு இருக்கு, அதை அப்புறம் பாத்துக்கலாம்.. இப்படியே நீ என் விஷயத்தில் தேவையில்லாம நுழைஞ்சு பிரச்சனை செஞ்சு உன் க்ரைம்ரேட் ஏறிக்கிட்டே போகுது..’ என்று தனக்குள் முணுமுணுத்தவாறே வீட்டிற்குள் நுழைந்த காரில் இருந்து இறங்கி நேராக சிந்துவின் அறைக்குள் சென்று அமர்ந்தான் தாரக்.
இவ்வளவு நேரமும் அலைபேசியில் கவனமாக இருந்தவன், திடீரென எழுந்து தன்னை நோக்கி வரவும், உண்டான பதட்டத்தில் பின்னுக்கு நகர்ந்தவள், சுவரில் மோதி அப்படியே நிற்க.. அதற்கு மேல் நகர முடியாமல் பயத்தோடு அவனைப் பார்த்திருந்தவளையே விஷமமாகப் பார்த்தபடி நெருங்கியவன், “இது கூட நல்லா இருக்கில்லை, இனி உன்னால் எங்கேயும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..” என சிந்துவின் இரு பக்கமும் சுவரில் தன் கையை ஊன்றி அவளின் முகத்துக்கு நேரே குனிந்து கூர்மையாக அவளையே பார்த்திருந்தான் தாரக்.
அவனின் இந்தச் செயலும் பார்வையும் ஏற்கனவே பயத்தில் இருந்தவளை மேலும் கலங்க செய்ய.. எந்தப் பக்கமும் நகர முடியாமல் சிறைப்பட்டது போல் நின்றிருந்தாள் சிந்து.
சில நொடிகள் அசையாமல் அப்படியே அவளைப் பார்த்திருந்தவன், சுவரில் இருந்த தன் வலது கையை எடுக்கவும், தன்னைத் தொட போவதாக எண்ணி பயத்தில் முகத்தைச் சுருக்கிக் கொண்டாள் சிந்து. அதைக் கண்டு நக்கலாகச் சிரித்தவன், தன் கையில் இருந்த அலைபேசியைப் பாக்கெட்டில் வைத்தபடியே “நான் கையை இதுக்காகத் தான் எடுத்தேன்.. ஆனா உனக்கு நான் தொட்டா பிடிக்காது இல்லை..?” என்றான் ஒரு மாதிரியான குரலில் தாரக்.
பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விக்கு என்னவெனச் சொல்வது என்பது போல் சிந்து அமைதியாக நின்றிருக்க.. “உன்கிட்ட தான் கேட்டேன்.. பிடிக்காது தானே..?” என்றான் தாரக் மீண்டும் அழுத்தமான குரலில் தாரக்.
அதில் சிந்துவின் தலை மெதுவாக ஆமென அசைந்தது. “அப்போ அதுதான் எனக்கு வேணும்..” என்றவன் மெதுவாகத் தன் இரு விரல் கொண்டு அவளின் கன்னத்தை வருட.. கோபமும் வெறுப்பும் போட்டிப் போட அவனை எதிர்க்க முடியா தன் நிலையை எண்ணி விழிகளை இறுக மூடிக் கொண்டு முகத்தைத் திருப்ப முயன்றாள் .
ஆனால் அவளின் முயற்சிகள் எல்லாம் துளியும் பயனளிக்கவில்லை. கன்னத்தில் இருந்த அவன் விரல்கள் மெதுவாகப் பயணித்து சிந்துவின் இதழில் வந்து அதை அழுத்தமாகப் பிடித்து இழுக்க.. ஒரு பக்கம் அதில் உண்டான வலியும் மற்றொரு பக்கம் அவனின் தொடுகை பிடிக்காத நிலையும் அவளைக்குக் கண்ணீரை வரவழைத்திருந்தது.
அந்தக் கண்ணீரை நிதானமாக ரசித்தவன், மேலும் தன் இரு விரலுக்கு இடையில் சிக்கி இருந்த சிந்துவின் இதழில் அழுத்தத்தைக் கூட்டி அவள் வலியில் முகம் சுருக்குவதைக் கண்டு ரசித்த பிறகே தன் விரலை எடுத்தவன், “அல்மோஸ்ட் டூ வீக்ஸ்.. இன்னும் உனக்கு என்னை ஹேண்டில் செய்யத் தெரியலை.. இந்த நாகராஜ் உன்னை என்ன இப்படி வளர்த்து வெச்சிருக்கான்..?” என்றான் எரிச்சலோடு தாரக்.
அதுவரை அழுது கொண்டிருந்த சிந்து விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்து “எ.. எங்க அ.. அப்பாவை உங்களுக்குத் தெரியுமா..?” என்றிருந்தாள் தன் கேள்விக்கெல்லாம் விடை கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடான குரலில் சிந்து.
“அப்கோர்ஸ்..” என்று விட்டு சிந்துவின் முகத்தைப் பார்த்தவன், பின் “என் மாமனாராச்சே எனக்கு எப்படித் தெரியாம இருக்கும்.. நான் எங்கே இருக்கேன் என்னன்னு தெரியாம தேடி அலைந்து பாவம் கலைச்சு போய் எதுவும் செய்ய முடியாம வீட்டில் கத்தி தன் வீரத்தை காட்டிட்டு இருக்கார்.. அதையெல்லாம் இப்போ தானே லைவில் கேட்டு ரசிச்சேன், எவ்வளவு சுகமா இருந்துச்சு தெரியுமா..” என்று தன் இரு காதில் கை வைத்து விழிமூடி அந்த நொடிகளை மீண்டும் இப்போது ரசிப்பது போல் பேசிக் கொண்டிருந்தான் தாரக்.
சும்மாவே அவனைக் கண்டு நடுங்குபவள், இன்றைய தாரக்கின் இத்தகைய செயலிலும் பேச்சிலும் மிரண்டு போய்ப் பார்த்திருக்க.. அதே நேரம் விழிகள் திறந்து அவளைப் பார்த்தவன், “என்ன என்னை பாத்தா சைக்கோ மாதிரி இருக்கா..?” என்று கேட்டு ஒரு மாதிரியாக அவளைப் பார்த்தவன், சிந்து பதிலேதும் சொல்லாததில் “நான் சைக்கோவே தான், உனக்கும் உங்க அப்பனுக்கும் மட்டும்..” என்றிருந்தான் ஒருவித அழுத்தத்தோடான குரலில் தாரக்.
அந்தக் குரல் சிந்துவின் உடலில் குளிரை பரவ செய்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “உங்களுக்குள்ளே ஏதாவது பிரச்சனையா..?” என்றிருந்தாள் சிந்து.
“புவர் கேர்ள்.. இன்னும் என்கிட்ட இருந்து உனக்கு ஆன்சர் வரும்னு நினைச்சு நீயும் இத்தனை விதமா ட்ரை செய்யறே பார்.. அதைப் பார்த்தா தான் சிப்பு சிப்பா வருது.. சரியான முட்டாளா இருக்கியே..” என்று அவளுக்காகப் பரிதாபப்படுவது போல் பேசியவன் “நீ எத்தனை விதமா கேட்டாலும் என்கிட்ட இருந்து ஆன்சர் வராது, வேணும்னா உனக்கு ஒரு ஆஃபர் தரவா..?” என்றான் தாரக்.
நிமிடத்திற்கு நிமிடம் அவன் குரல் ஒவ்வொரு விதமாக மாறுவதைக் கண்ட மிரட்சியோடு தாரக் கேட்பதற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அப்படியே சிந்து பார்த்தபடி நின்றிருக்க.. “உன்கிட்ட தான் கேட்கறேன், ஆபர் வேணுமா..! வேண்டாமா..?” என்றான் தாரக்,
‘இதுவரை அவன் செய்தது அத்தனையும் வில்லங்கமாக இருக்க, இப்போது அவன் கொடுக்கும் ஆஃபர் தனக்குச் சாதகமாக இருக்குமென அவள் எப்படி நம்புவாள்..? எந்தத் தைரியத்தில் வேண்டும் எனச் சொல்ல முடியும்..?’
இதில் பதிலேதும் சொல்லாமல் சிந்து அப்படியே அசையாமல் நின்றிருக்க.. அதில் முகம் இறுக அவளைப் பார்த்தவன் “யூஷ்வல்லா நான் இந்த மாதிரி ஆஃபர் எல்லாம் யாருக்கும் கொடுக்கறதில்லை.. இன்னைக்கு ஏதோ கொஞ்சம் நல்ல மூட்டில் இருக்கேன்.. அதனால் கேட்டேன், இன்னொரு முறை இப்படிக் கொடுப்பேனான்னு கூட எனக்குத் தெரியலை.. லாஸ்ட் சான்ஸ் வேணுமா..! வேண்டாமா..? ஒரே ஆன்ஸர் எஸ் ஆர் நோ..” என்று நிறுத்தி நிதானமாக ஒருவித அழுத்தத்தோடு அவளைப் பார்த்து கூறி நிறுத்தினான் தாரக்.
இதில் என்னவெனப் புரியவில்லை என்றாலும் அவன் சொல்லிய மற்றொரு முறை கிடைக்காது என்ற வார்த்தை சிந்துவை யோசிக்காமல் வேண்டும் எனத் தலையசைக்கச் செய்திருந்தது.
அதில் இதழ் பிரியா கேலி புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “உங்க வீட்டுக்கு பேசணும்னு சொல்லி அன்னைக்கு ஃபோன் வேணும்னு கேட்டே இல்லை..” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு நிறுத்தி அவள் முகம் பார்த்தான் தாரக்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி அவளுள் ஒரு பரப்பரப்புத் தொற்றிக் கொள்ள.. ஆமென வேகமாகத் தலையசைத்து சிந்து எதிர்பார்ப்போடு அவன் முகம் பார்க்கவும், “கொடுக்கறேன்..” என்றான் தாரக்.
இதில் எதிர்பார்ப்பும் ஆர்வமுமாகச் சிந்து அவன் முன் கையை நீட்ட.. “ஆனா ஒரு கண்டிஷன்..” என்றான் தாரக். அது என்னவென்பது போல் சிந்து அவனைப் பார்க்கவும், “பெருசா ஒண்ணுமில்லை, மறுபடியும் ஒரு ஆஃபர் வெறும் ஃபோன் மட்டும் போதுமா இல்லை நீ வீட்டுக்கும் போகணுமா..?” என்றான் தாரக்.
இப்போது நொடியும் தாமதிக்காது “வீ.. வீட்டுக்கு போ.. போகணும்..” என்று சிந்து திணறலோடு கூறவும், “குட்.. ஆனா அதுக்கு நான் சொல்றதை நீ செய்யணும்..” என்றிருந்தான் தாரக்.
அதற்கு “எ.. என்ன.. செ.. செய்யணும்..?” என்றவளை சிறு புன்னகையோடு பார்த்து, “ரொம்பச் சிம்பிள், நான் சொல்றதை அப்படியே ஃபோனில் உங்க அப்பாகிட்ட நீ சொல்லணும், ஜஸ்ட் நாளே லைன் தான்..” என்றான் தாரக்.
இப்போது பெரும் பயம் மனதை தாக்க.. “எ.. என்ன சொல்லணும்..?” என்று தடுமாற்றத்தோடு சிந்து கேட்கவும் “அதுக்கு முன்னே இதை நீ சரியா சொன்னா உனக்குக் கிடைக்கற கிப்ட் என்னனு பார்க்கலாமா..?” என்றவன் அவள் இப்போது பெரிதான ஆர்வம் எதுவுமில்லாமல் அவனைத் தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு “முதலில் உனக்கு ஃபோன் கொடுப்பேன்.. நீ உங்க அப்பாக்கு போன் செய்யணும்..” எனவும், சரியெனச் சிந்து தலையசைக்க.. “இரு அவசரப்படக் கூடாது, முதலில் நான் சொல்றதை பொறுமையா கேளு.. நான் உனக்குப் போன் கொடுப்பேன், நீ உங்க அப்பாக்கு போன் செஞ்சு நான் சொல்ற மாதிரியே அவர்கிட்ட பேசணும்..” என்றவன் மீண்டும் ஒரு சிறு இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.
அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்பது போல் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. “இத்தனை நாள் என்னைப் பார்த்தாலே முகத்தை வெறுப்பா திருப்பிக்குவே தானே..! இன்னைக்கு என்ன இப்படிப் பார்க்கறே..? ஸ்மார்ட்டா இருக்கேனா..?” என்று சற்று முன் அவளிடம் பேசியதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாமல் தலையைக் கோதியவாறு கேட்டான் தாரக்.
“அ.. அப்பாகிட்ட நான் என்ன சொல்லணும்..? ப்ளீஸ் அதைச் சொல்லுங்க..” என்றாள் அழுகையோடு சிந்து. “ம்ப்ச் சொல்றேன்.. சொல்லாம எங்கே போகப் போறேன்..?” என்றவன் மீண்டும் ஒரு இடைவெளி விட்டு அவளின் பொறுமையைச் சோதிப்பது போல் அப்படியே அமைதியாக.. தார்க்கின் முகத்தையே எதிர்பார்ப்போடு பார்த்திருந்தாள் சிந்து.
“இத்தனை நாள் நான் கிட்ட வரும் போது எல்லாம் நீ முகத்தைத் திருப்பும் போது நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைச்சேன்.. ஆனா இப்போ இவ்வளவு ஆர்வமா ஆசையா நீ என்னைப் பார்க்கும் போது தான் ஒண்ணு புரியுது, விருப்பு வெறுப்பெல்லாம் நம் தேவை சம்பந்தப்பட்டது தான் இல்லை..?” என்றான் தாரக்.
அவன் தன்னை வேண்டுமென்று நோகடிக்க எண்ணி பேசுவது புரிய.. இதற்கு மேலான வார்த்தைகளை எல்லாம் கேட்டுவிட்டதில் அப்போதும் அமைதியாகவே இருந்தாள் சிந்து.
“ஹ்ம்ம் குட், நல்ல இம்ப்ரூவ்மெண்ட்..” என்று அவளைப் பாராட்டியவன் “மறந்தே போயிட்டேன் பார், விஷயத்துக்கு வரேன்..” என்று நெற்றியை நீவியவாறே கூறி விட்டு “நான் சொல்றதை அப்படியே உங்க அப்பாகிட்ட சொன்னா.. அடுத்த மூணு நாளில் நீ உங்க வீட்டுக்கு போகலாம்..” என்றான் தாரக்.
இதைக் கேட்டு முகம் மலர்ந்தவள், “கண்டிப்பா சொல்றேன்..” என்று உடனே ஒத்துக் கொள்ள.. “அப்புறம் பேச்சு மாறக் கூடாது..” என்றான் தாரக். “நிஜமா சொல்றேன், ஆனா மூணு நாளில் நான் வீட்டுக்குப் போகலாம் இல்லை..! என்னை விட்டுடுவீங்க தானே..?” என்று பதட்டமும் எதிர்பார்ப்புமாகச் சிந்து கேட்கவும் ஆமென அசைந்தது தாரக்கின் தலை.
“சரி நான் சொல்றேன், என்ன சொல்லணும்..?” என்று அலைபேசிக்கு கையை நீட்டியவாறு வேகமாகக் கேட்டவளை விஷமமாகப் பார்த்தபடியே தன் அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டியவன், “அப்பா, அப்பா.. நீங்க நினைக்கறது போல என்னை யாரும் கட்டாயக் கல்யாணம் செஞ்சு கடத்திட்டு எல்லாம் போகலை.. நானா விரும்பி தான் அவர் கூடப் போனேன், நான் அவரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சு இருக்கேன், நாங்க ரொம்பச் சந்தோஷமா இருக்கோம்.. எங்களைத் தேட வேண்டாம், நிம்மதியா எங்களை வாழ விடுங்க போதும்னு அப்படியே உருக்கமா உங்க அப்பா நம்பற மாதிரி பேசணும்..” என்றான் நிறுத்தி நிதானமாகத் தாரக்.
அதைக் கேட்டுத் திகைத்தவள் “இல்லை, இதை நான் சொல்ல மாட்டேன்..” என்று வேகமாக மறுக்கவும் “உனக்கு நான் ஆப்ஷன் அப்போ கொடுத்தேன்.. இப்போ இல்லை, நீ ஓகே சொல்லி இருக்க மறந்துடாதே..” என்றான் தாரக்.
“இல்லை, நான் இதைச் சொல்ல மாட்டேன்.. இது பொய், இதை நான் சொல்ல மாட்டேன்..” என்று வேகமாக மறுத்தபடியே அவனிடமிருந்து விலகிச் செல்ல முயன்றாள் சிந்து.
ஆனால் அதற்கு அனுமதிக்காமல் அவளின் கையைப் பற்றிச் சுண்டி தன்னை நோக்கி இழுத்துப் பின்னால் இருந்து அவளை இறுக்கமாக அணைத்து எங்கும் நகர விடாதபடி நிறுத்தியவன், “சொன்ன சொல்ல காப்பாத்துறது உங்க குடும்பத்துக்கே தெரியாதா..? முடியாதுனா நான் முதலில் கேட்கும் போதே சொல்லி இருக்கணும், இப்போ வந்து முடியாது, நடக்காது, செய்ய மாட்டேன்னு எல்லாம் சொன்னா எனக்குச் சுத்தமா பிடிக்காது..” என்று பல்லை கடித்தவன் “இப்போ நீ பேசறே.. அவ்வளவு தான்..” என்று உறுதியான குரலில் அழுத்தத்தோடு கூறவும் “முடியாது..” என்று அழுகையோடு தலையசைத்து “என்னை விட்டுடுங்க பிளீஸ், என்னால் முடியலை..” என்று அழுதாள் சிந்து.
“நானும் விட்டுடறேன்னு தான் சொல்றேன், ஆனா நீ தான் கேட்க மாட்டேங்கறே.. இதைச் சொன்னா மூணு நாளில் நீ வீட்டுக்கு போயிடலாம்..” என்றான் தாரக்.
அதில் அவனிடமிருந்து விடுப்பட முயன்றுக் கொண்டிருந்தவள், ஒரு நொடி தன் முயற்சியை நிறுத்தி அவனைப் பார்க்க.. ‘பேசு..’ என்பது போலத் தன் கையில் இருந்த அலைபேசியை விழிகளால் காண்பித்தான் தாரக்.
ஆனால் சிந்து அப்போதும் முடியாது என வேகமாகத் தலையசைக்கவும், “அப்போ உனக்கு இங்கே இருந்து போக விருப்பம் இல்லைன்னு சொல்லு.. என் கூடவே இருக்கணும்னு நினைக்கறே போலே.. நீ என்னை லவ் செய்யறியா..?” என்றான் நக்கலாகத் தாரக்.
இதில் திகைத்து சிந்து வேகமாக ‘இல்லை’ எனத் தலையசைக்கவும், “ஆனா நீ நடந்துக்கறதை பார்த்தா அப்படித் தெரியலையே.. உன் வீட்டுக்கு போக இவ்வளவு நல்ல ஒரு சான்ஸ் கொடுத்தும் வேண்டாம்னு சொல்றேனா நீ என்னை லவ் தானே செய்யறே..?” என்றான் தாரக்.
“இல்லை..” என சிந்து கதறவும், “அப்போ பேசு..” என்றவன், அப்போதும் அவள் அமைதியாகவே இருப்பதைக் கண்டு, அவனிடம் இருந்த மற்றொரு அலைபேசியை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான். அதில் அங்கு நாகராஜன் தன் சகாக்களோடு பேசுவது தெளிவாகக் கேட்டது.
அதைப் பாய்ந்து சிந்து பிடிக்க முயல.. சட்டென அவளிடமிருந்து அதைத் தள்ளி பிடித்தவன், “ஹாங்.. என்னைப் பார்த்தா அவ்வளவு ஏமாளியாவா இருக்கு..? இங்கே நீ என்ன பேசினாலும் அங்கே கேட்காது.. ஃபோன் ம்யூட்டில் இருக்கு..” என்றவன், “உங்க வீட்டுக்குள்ளே நடக்கறதை தெளிவா லைவ்வா கேட்க முடிஞ்சா என்னால் உங்க வீட்டு ஆளுங்களை என்ன வேணும்னாலும் செய்ய முடியும்னு உனக்குப் புரியலையா..? இன்னும் இரண்டு நிமிஷத்தில் நீ நான் சொன்னதைச் செய்யலை.. என் ஆள் உங்க அப்பா கழுத்தை அறுத்து போட்டுடுவான்..” என்றான் மிரட்டல் குரலில் தாரக்.
அவன் பேச பேச அதில் உள்ள உண்மையை எண்ணி மிரண்டு நின்றிருந்தவள், தாரக்கின் இறுதி வார்த்தையில் உண்டான பயத்தோடு வேகமாக அலைபேசியைக் கையில் எடுத்திருந்தாள் சிந்து.
தொடரும்...
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா