நேசம் – 8
(ஹாய் டியர்ஸ்..
ஒரு முக்கியமான வேலை.. வியாழன் வெள்ளி வர வேண்டிய பதிவுகள் எதுவும் வராது. இரண்டு கதைக்கான பதிவையும் முடிந்தால் சனி இரவோ இல்லை ஞாயிறு இரவோ கொடுக்கிறேன்.. இது போன்ற முக்கியமான செய்தியை எல்லாம் அத்தியாயம் முடிந்ததும் கீழே கொடுத்தால் யாரும் பார்ப்பதே இல்லை.. அதனால் தான் கதை தொடங்கும் போதே கொடுத்து விட்டேன்.. எப்படி என் ராஜ தந்திரம்.. ஹிஹி..)
நாகராஜனுக்கு யுவனிடம் இருந்து அழைப்பு வந்தது. யோசனையோடு அதை ஏற்றிருந்தவர், “சொல்லுங்க தம்பி..” என்று தொடங்கவும் “உங்களுக்கு தாரக் தெரியுமா..?” என்று கேட்டிருந்தான் யுவன். இதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவர் “என்ன விஷயம்..? உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்..?” என்றார் தன் மகளின் விஷயமாக யுவன் பேசப் போவதாக நினைத்து நாகராஜன்.
“நாம அன்னைக்கு ஒரு டெண்டர் சம்பந்தமா பேசினோம் இல்லை, அப்பா கூட ரொம்பக் கோபப்பட்டாரே..” என்று யுவன் தொடங்கவும் “ஆமா ஞாபகம் இருக்கு, சொல்லுங்க..” என்றார் நாகராஜன்.
“இன்னைக்கு அந்த டெண்டர் சைன் ஆகிடுச்சு..” என்று யுவன் கூறவும் “வாழ்த்துக்கள் தம்பி.. எப்படியோ திட்டம் போட்டு கச்சிதமா முடிச்சிட்டீங்க போல, அப்பாகிட்ட சொல்லுங்க ரொம்பச் சந்தோஷப்படுவார்..” என்றார் நாகராஜன்.
அதில் அந்தப் பக்கம் ஒரு நொடி அமைதியானவன் “இல்லை இந்த முறையும் அவனுக்குத் தான் டெண்டர் கிடைச்சு இருக்கு..” என்றான் யுவன்.
இதில் யோசனையானவர், “போன முறை பேசும் போது நான் சொன்னதை வெச்சு ஏதோ ஏற்பாடு செஞ்சு இருக்கேன்னு சொன்னீங்களே..” என்றார் நாகராஜன்.
“ஆமா சொன்னேன், ஆனா..” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “இது எப்படி நடந்ததுன்னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியலை..” எனத் தொடங்கி அனைத்தையும் சொல்லி முடிக்க.. “அவ்வளவு பெரிய ஆளா அவன்..?” என்றார் நாகராஜன்.
“அவன் எவ்வளவு பெரிய ஆளுன்னு பேச நான் இப்போ உங்களைக் கூப்பிடலை..” என்ற யுவன், “அவனுக்கு உங்களைத் தெரிஞ்சு இருக்கு, எப்படித் தெரியும்..?” என்றான்.
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்..? நாம கொஞ்சம் இந்தப் பக்கம் பிரபலம் தம்பி, அதனால் நம்மை எல்லாருக்கும் இங்கே தெரியும் தானே..!” என்று நாகராஜன் நிலைமை புரியாமல் பெருமை பேச, அதில் சலிப்பான யுவன், “நீங்க எனக்கு உதவி செஞ்ச வரைக்கும் அவனுக்குத் தெரிஞ்சு இருக்கு.. உங்களுக்குப் புரியுதா..?” என்றான் சிறு எரிச்சலோடான குரலில் யுவன்.
“என்ன சொல்றீங்க அது எப்படித் தெரிய வரும்..?” என்று குழப்பத்தோடு நாகராஜன் நெற்றியை தேய்த்துக் கொள்ள.. “அது தான் எனக்கும் புரியலை.. அவன் உங்களைக் கேட்டதா சொன்ன விதம், அதில் அவ்வளவு நக்கல் இருந்தது..” என்றான் யுவன்.
“நான் உங்களுக்கு நேரடியா இதில் எந்த உதவியும் செய்யலையே..!” என்றவர் “ஆமா அவங்க ஆபீஸில் யாரையோ பிடிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டேன்னு சொன்னீங்களே.. அவன்கிட்ட என்ன இது..? எப்படியாச்சுன்னு விசாரிச்சீங்களா..!” என்றார் நாகராஜன்.
“இல்லை காலையில் இருந்து அவனுக்குத் தான் ட்ரை செஞ்சுட்டு இருக்கேன்.. அவன் ஃபோன் ரீச் ஆகவே இல்லை..” என்றான் யுவன். “ஒருவேளை உங்களையும் ஏமாத்திட்டானோ..!” என்று நாகராஜன் எடுத்துக் கொடுக்க.. “வாய்ப்பு இருக்கு.. அதனால் தான் அவனைத் தேடிட்டு இருக்கேன், அவன் ஆபீஸுக்கும் வருவதில்லைன்னு தெரிஞ்சது.. அவன் வீடு எங்கேன்னு விசாரிக்கணும்..” என்றான் யுவன்.
“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்கீங்க..?” என்று நாகராஜன் கேட்கவும், “தெரியலை பட் உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்னு கேட்க தான் கூப்பிட்டேன்..” என்றான் யுவன்.
“நீங்க யாரை சொல்றீங்க..? எனக்குத் தெரியலையே..” என்றார், பேச்சு ஆரம்பித்த விதத்தையே மறந்து நாகராஜன். “அதான் சொன்னேன் தாரக்..” என்றான் யுவன். அந்தப் பெயரைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தவர், “முழு பெயர் சொல்லுங்க..?” என்று கேட்க.. மீண்டும் “தாரக் அக்னிதீபன்..” என்றிருந்தான் யுவன்.
இதில் தன் நெற்றியில் இரு விரல் கொண்டு வேகமாகத் தட்டியபடியே முன்னும் பின்னும் நடந்த நாகராஜன் “இவனைப் பத்தி தான் அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசினதா..?” என்றார். ஆமென யுவன் கூறவும், “ஆபீஸில் யாரையோ பிடிச்சு வேலைய முடிச்சதா சொன்னீங்களே அவன் பேர் என்ன..?” என்றார் அடுத்ததாக நாகராஜன்.
“கிரி.. கிரிதர்..” என்று யுவன் சொல்லி முடித்த நொடி, “நான் அப்புறம் பேசறேன்..” என்று அழைப்பை துண்டித்து இருந்தார் நாகராஜன். இதில் புரியாமல் யுவன் தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக கிரியை கட்டி வைத்திருந்த பின்பக்கத்தை நோக்கி சென்றார் நாகராஜன்.
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வேகத்தில் நாற்காலியோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்த கிரியை எட்டி உதைத்திருந்தார் நாகராஜன். அதில் நிலை குலைந்து கிரி கீழே விழுந்திருக்க.. “என்ன ண்ணே ஆச்சு..” என்று கேட்டிருந்தான் முத்து.
“ஏன்டா நாயே.. என்னவோ நல்லவன் போலவே இத்தனை நாள் பேசிட்டு இருந்தே.. ஃபிராட் பையன் தானே நீ..? ஏதோ கம்பெனி விவரம் எல்லாம் அந்த தாரக்கிட்ட இருந்து திருடி யுவனுக்குக் கொடுத்து இருக்கே.. அந்த ஆத்திரத்தில் தான்டா அவன் இங்கே வந்து இவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து வெச்சு இருக்கான்.. உன்னைப் பழி வாங்கறதா நினைச்சு என் பொண்ணைத் தூக்கி இருக்கான்.. எனக்கு அவமானமா போச்சு..” என்று பேசியபடி கிரியை மிதித்து எடுத்து விட்டார் நாகராஜன்.
“இல்லையில்லை அங்கிள்.. அது வேற, இது வேற.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கிரி வலியோடு பேச முடியாமல் திணறவும், “என்ன சம்பந்தமா..? இன்னைக்கு அந்த யுவன் கூப்பிட்டு சொல்றான்டா அந்த தாரக் என்னைப் பத்தி அவன்கிட்ட விசாரிச்சானாம்..” என்றார் நாகராஜன்.
“என்ன ண்ணே சொல்றீங்க..? நிஜமாவா..!” என்று அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியாகக் கேட்கவும், “அவன் ஏன் இப்படி ஒரு கோக்குமாக்குத்தனம் செஞ்சான்னு இப்போ புரியுது.. பல வருஷமா அவன் கையில் இருந்த ஏதோ கான்ட்ராக்டோ டென்டரோ என்னவோ சொல்றாங்க அதை இவன் ஈஸியா இன்னொருத்தனுக்குத் தூக்கி கொடுக்கப் பார்த்திருக்கான்..
அந்த ஆத்திரம் அவனுக்கு, கூட இருந்தே குழி பறிக்கப் பார்த்தா சும்மா விடுவானா..? ஏன் நாம சும்மா தான் விடுவோமா..? அந்தக் கோவத்தில் தான் அந்தப் பரதேசி பழிவாங்க இங்கே வந்து குதிச்சு இருக்கான்..” என்று எரிச்சலோடு கத்தினார் நாகராஜன்.
இதில் கிரிதரனின் தந்தை அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “இப்போ பேசுடா.. பேசு, என் பிள்ளை நல்லவன் வல்லவன்னு நாலு பக்கத்துக்குப் பேசுவியே எங்கே இப்போ பேசு பார்க்கலாம்..
இவனும் இதில் கூட்டுன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேனே..” என்று நாகராஜன் சொல்லவும், “அவர் அப்படியே பழிவாங்க செஞ்சு இருந்தாலும் அது எனக்கு எப்படி அங்கிள் தெரியும்..?” என்றிருந்தான் வீங்கி இருந்த வாயோடு கிரி.
“பரதேசி.. ஏதாவது பேசினே அடுச்சு மொகரையைப் பேத்திடுவேன் ராஸ்கல்.. செய்யறது எல்லாம் செஞ்சுட்டு விளக்கமா கொடுக்கறே.. நீ செஞ்சு வெச்சு இருக்க வேலைக்கு என் மானம் இங்கே போகுது..” என்று எரிச்சலானவர் மேலும் ஏதோ சொல்ல வருவதற்குள் வேகமாக அங்கு வந்த அருண், “அப்பா போலீஸ் வந்து இருக்காங்க..” எனவும், “என்னவாம்..?” என்றார் துளியும் பதட்டமில்லாத குரலில் நாகராஜன்.
“தெரியலைப்பா, உங்களைத் தான் பார்க்கணுமாம்..” என்று அருண் கூறவும் “நம்ம ரத்தினம் தானே..! காசுக்காக வந்திருப்பான், நீயே கொடுத்து அனுப்பு..” என்றார் எரிச்சலோடு நாகராஜன்.
“இல்லைப்பா.. வேற ஒருத்தர் புதுசா இருக்கு..” என்று அருண் கூறவும் “ண்ணே ரத்தினத்துக்கு மாற்றல் ஆகிடுச்சு..” என்றிருந்தான் சிவா. “இது எப்போ..? என்கிட்ட யாரும் சொல்லலையே..” என யோசித்த நாகராஜன், “சரி புதுசா வந்தவன் மட்டும் எதுக்கு வரப் போறான்..? இனி நான் தான் இங்கேன்னு சொல்லி கை நீட்ட தான் வந்திருப்பான், வேற என்ன ..?”என்று சொல்லியவாறே வீட்டின் முன்பக்கம் வந்தார் நாகராஜன்.
அங்கே இளம் இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருக்க.. “வாங்க தம்பி, உள்ளே போய்ப் பேசலாம்..” என்றார் நாகராஜ். “இல்லை இருக்கட்டும் பரவாயில்லை.. இங்கேயே பேசுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர் ராகவ்.
“அட பரவாயில்லை வாங்க தம்பி..” என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல திரும்பிய நாகராஜன், அடுத்து இன்ஸ்பெக்டர் கூறிய வார்த்தைகளில் அப்படியே நின்றார்.
“உங்க மேலே ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு..” எனவும், “என்னது கம்ப்ளைன்டா..? அதுவும் என் மேலேயா..?” என்று நம்பாமல் நாகராஜன் கேட்கவும், “ஆமா..” என்று அழுத்தமாகப் பதில் சொன்ன இன்ஸ்பெக்டர் திரும்பி பின்னால் பார்க்க.. அதுவரை ஜிப்பில் அமர்ந்திருந்த கிரியின் அம்மா லக்ஷ்மி இறங்கி வெளியில் வந்தார்.
லக்ஷ்மியை அங்குக் கண்டதும் நாகராஜனின் முகம் மாறியது. “இவங்க கணவரையும் மகனையும் மூணு வாரமா காணவில்லைன்னு சொல்றாங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“காணோம்னா போய்த் தேடுங்க.. அதுக்கு இங்கே வந்து நின்னா என்ன அர்த்தம்..?” என்று அப்போதும் வீராப்பாகவே பேசினார் நாகராஜன். “மிஸ்டர் நான் ரொம்ப மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இதே மாதிரி நீங்க பேசிட்டு இருந்தா, அப்புறம் உங்களைப் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய்த் தான் விசாரிக்க வேண்டி இருக்கும்..” என்று ராகவ் கறார் குரலில் கூறவும், சத்தம் போட்டுச் சிரித்திருந்தார் நாகராஜன்.
“ஹாஹா.. எங்கே கூட்டிட்டு போ பார்க்கலாம்.. என் ஊரில் என் வீட்டில் வந்து நின்னுட்டு என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போவாராம் இல்லை.. எங்கே தைரியம் இருந்தா கூட்டிட்டு போ..” என்று தெனாவட்டாக நாகராஜன் பேசவும், அவரின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
அதை எடுத்துப் பேச.. அந்தப் பக்கம் இருந்து அழைத்தது காவல்துறையின் நாகராஜனுக்கு மிக நெருக்கமான ஒரு உயர் அதிகாரி சுந்தர். அதைக் கண்டு தெனாவட்டாகச் சிரித்தப்படியே இன்ஸ்பெக்டரை பார்த்த நாகராஜன், “சொல்லு சுந்தர்..” என்று தொடங்கி அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை ராகவுக்கு காண்பிக்க முயன்றார்.
ஆனால் அதற்கு நேர்மாறாக.. “நாகு இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன், நான் சொல்றதை அமைதியா கேளு.. இப்போ புதுசா வந்திருக்கப் பையன் நாம நினைக்கறது போல இல்லை.. எல்லா ஊரிலும் பெரிய ஆளுங்க கூடப் பிரச்சனை செஞ்சுட்டு வந்து இருக்கான்.. கொஞ்சம் பார்த்து அவனை ஹேண்டில் செய், பையன் கொஞ்சம் பெரிய கையும் கூட.. தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுக்காதே பார்த்துக்கோ..” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அலைபேசியை வைக்க.. யோசனையோடு இன்ஸ்பெக்டரை பார்த்தார் நாகராஜன்.
அதில் இன்ஸ்பெக்டரை திரும்பி நாகராஜன் பார்க்கவும், “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை..” என்றார் ராகவ். “தேவையில்லாம பிரச்சனை செய்ய வந்து இருக்கீங்களா..?” என்றார் நாகராஜன்.
“நான் இங்கே பிரச்சனை செய்ய வரலை.. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“எவனோ காணோம்னு இங்கே வந்து நின்னா நான் பதில் சொல்லணுமா..?” என்று அப்போதும் நாகராஜன் திமிராகவே பேசவும். “இங்கே பாருங்க கடைசியா அவங்களை உங்க கூடத் தான் அனுப்பி இருக்காங்க.. ஆனா அதுக்குப் பிறகு அவங்க வீடு வந்து சேரலை, இதுக்கு நீங்க தானே பதில் சொல்லியாகணும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ஆமா என் கூடத் தான் வந்தாங்க, வேலை முடிஞ்சதும் அவங்களை இறக்கி விட்டுட்டேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..” என்று முடிவான குரலில் கூறியிருந்தார் நாகராஜன்.
“இல்லை இன்ஸ்பெக்டர் நம்பாதீங்க, இவர் பொய் சொல்றார்.. இவர் தான் அவங்களைப் பிடிச்சு வெச்சு இருக்கார், இவருக்கு மட்டும் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியும், ஃபோன் கூடப் போகலை..” என்று லக்ஷ்மி அழுது கதறவும், “இருங்கம்மா விசாரிக்கறேன் இல்லை, பொறுமையா இருங்க..” என்ற ராகவ், “ஹ்ம்ம் சொல்லுங்க உங்களுக்கு அவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா..?” என்றார்.
“எத்தனை முறை கேட்டாலும் எனக்குத் தெரிஞ்சா தான் சொல்ல முடியும்.. எனக்குத் தெரியாது..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு கேள்விப்பட்டேன்..” என்று இன்ஸ்பெக்டர் தொடங்கவும், “அது இந்தக் கேஸ்க்குச் சம்பந்தம் இல்லாதது..” என்றார் பல்லை கடித்துக் கொண்டே நாகராஜன்.
“இல்லை உங்க பொண்ணு கல்யாணத்தில் நடந்ததை எல்லாம் கேள்விபட்டேன், ஆனா பொண்ணைக் காணோம்னு நீங்க இப்போ வர எந்தக் கேஸும் கொடுக்கலை..” என்று இன்ஸ்பெக்டர் கேட்கவும், நாகராஜனின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
பிரைவேட் நம்பர் என்று வந்த திரையைக் குழப்பமாகப் பார்த்தபடி அலைபேசியை எடுத்திருந்த நாகராஜனுக்கு “ஹ.. ஹலோ.. அ.. அப்பா..” எனக் கதறலாக சிந்துவின் குரல் அந்தப் பக்கம் இருந்து கேட்டிருந்தது.
அதில் ஒரு நொடி திகைத்தவர், “சிந்து.. ஏய்..” என்று அழுத்தத்தோடு அழைக்கவும், “அ.. அப்பா..” என்று மீண்டும் என்று கதறலோடு அழைத்தவள், “அப்பா நான்..” என்று அடுத்து பேச முடியாமல் திணற, எதிரில் இருப்பவரை நிமிர்ந்து பார்த்தபடியே அங்கிருந்து அலைபேசியுடன் நகர முயன்றார் நாகராஜன்.
“என்னாச்சு ஏதாவது பிரச்சனையா..?” என்று அதைக் கண்டு இன்ஸ்பெக்டர் ராகவ் கேட்டிருக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என நாகராஜன் கூறவும் “அப்போ நாம பேசி முடிச்சிடுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
அதில் வேகமாக “என் பொண்ணு..” என்று தொடங்கி அப்படியே நிறுத்தியவர், “முக்கியமான ஃபோன், நான் பேசணும்..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணா ஃபோனில்..? நான் அவங்ககிட்ட பேசலாமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“என்னையா வீடு புகுந்து அராஜகம் செய்யறியா..? யாரோ சொன்னாங்கன்னு இங்கே வந்து நின்னுட்டுக் கேள்வியா கேட்டுட்டு இருக்கே.. என்கிட்ட வந்து விசாரிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதில் என் பொண்ணுகிட்ட வேற நீ பேசுவியா..?” என்று எகிறினார் நாகராஜன்.
“இல்லைங்க நான் அவங்களை விசாரிக்க நினைக்கலை..” என இன்ஸ்பெக்டர் கூறவும் “வேற எதுக்கு நீ அவகிட்ட பேசணும்..?” என்றார் நாகராஜன். இதையெல்லாம் இந்தப் பக்கம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த தாரக் “என்னமோ அப்பா, அப்பான்னு அப்படி உருகினே..? இத்தனை நாள் கழிச்சு நீ பேசியும், உங்க அப்பாவுக்கு உன்னை விட அங்கே எவன் கூடவோ பேசறது தான் முக்கியமா இருக்கும் போலேயே..!” என்றான் கேலியாக.
அதில் அழுகையோடு அலைபேசியைப் பிடித்திருந்த சிந்து, “அப்பா.. அப்பா..” என்று இந்தப் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க.. அது அந்தப் பக்கம் இருந்த இருவருக்குமே கேட்டது.
“ரொம்ப நேரமா கூப்பிடறாங்க பேசுங்க..” என இன்ஸ்பெக்டர் கூறியது வேறு நாகராஜனுக்கு எரிச்சலை கொடுத்தது “என் பொண்ணுகிட்ட நான் பேசணுமா வேண்டாமான்னு நீ என்ன சொல்றது..?” என அவர் சிடுசிடுக்க..
“இங்கே பாருங்க.. உங்க பொண்ணு கல்யாணத்தில் இருந்து தான் எல்லாப் பிரச்சனையும் தொடங்கி இருக்கு.. உங்க பொண்ணை யாரோ திடீர்னு தாலி கட்டி கடத்திட்டு போனதால், இவங்க கணவர் மேலேயும் மகன் மேலேயும் சந்தேகப்பட்டு அவங்களை நீங்க பிடிச்சு வெச்சு இருக்கறதா இவங்க சொல்றாங்க.. அப்போ உங்க பொண்ணுகிட்ட பேசினா தானே விவரம் தெரியும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ஏன்யா அறிவு இருக்கா உனக்கு..? புரிஞ்சு பேசறியா இல்லை புரியாம பேசறியா..? யாரோ ஏதோ சொன்னா அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..? என் மேலே கோபம் இருக்க யார் வேணும்னாலும் என் மேலே பழி சொல்லலாம், அதுக்காக நேரா விசாரணைக்கு வீடு தேடி வந்துடுவீங்களா..?
படிச்சிருக்கே இல்லை, பொறுப்பான வேலையிலேயும் இருக்கே.. யோசிக்க மாட்டியா..? புத்தி வேண்டாம்..” என்று தன்னை மீறி நாகராஜன் இருந்த கோபத்தில் பேசிக் கொண்டே செல்ல.. “வார்த்தையைப் பார்த்து பேசுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ஹாங்.. இப்போ மட்டும் கோபம் வருதோ..? அப்படித் தானே எங்களுக்கும் இருக்கும், யாரோ சொன்னா நேரா வந்துடுவீங்களா..? நான் யார் என்னன்னு ஊருக்குள்ளே விசாரிக்க மாட்டீங்களா..? கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கேன், இங்கே இப்படி வந்து நின்னா, நாலு பேரு என்ன நினைப்பாங்க..?” என்றார் நாகராஜன்.
“இவ்வளவு பேசறதுக்கு உங்க மககிட்ட என்னை ஒரு வார்த்தை பேச விட்டாலே எல்லாம் முடிஞ்சு போய் இருக்கும்..” என்ற இன்ஸ்பெக்டரை முறைத்தவர், “இவ்வளவு சொல்றேன்.. வீட்டு பொம்பளைங்ககிட்ட பேசணும்னு என்கிட்டேயே சொல்றே..” என்றார் ஆத்திரமாக நாகராஜன்.
அதற்குள் இங்குப் பத்து முறைக்கு மேல் அழுகையோடு “ஹலோ.. அப்பா..” எனக் கத்தி கதறி விட்டிருந்தாள் சிந்து. இப்படி ஒருத்தி அழைப்பில் இருப்பதோ..! இத்தனை நாள் கழித்துத் தன் மகள் அழைத்து இருப்பதோ..! துளியும் நினைவில்லாமல் நாகராஜன் அங்குப் பிரச்சனை செய்து கொண்டிருக்க.. “உங்க அப்பாவுக்கு உன் கூடப் பேச இஷ்டம் இல்லை போல..” என்று அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் தாரக்.
இதில் திகைத்துப் போய் அவனைச் சிந்து பார்க்க.. “வாய்ப்பு எப்போவாவது ஒருமுறை தான் கிடைக்கும்.. அப்படிக் கிடைக்கும் போதே அதைப் பயன்படுத்திக்கணும்.. உனக்கு அந்த வாய்ப்பு முடிஞ்சு போச்சு..” என்று விட்டு தாரக் அலைபேசியோடு அங்கிருந்து நகர முயல..
“இல்லை.. இல்லை ப்ளீஸ்.. வேண்டாம் இன்னும் ஒரே ஒருமுறை.. ப்ளீஸ்..” என்று வேகமாக வந்து அவன் வழியை மறித்தது போல் நின்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் சிந்து.
“ஹேய் பொண்ணே.. உங்க அப்பாவுக்கே உன்கிட்ட பேச இஷ்டமில்லை.. அப்புறம் பேசி என்னாகப் போகுது விடு..” என்று அவன் மேலும் நகர முயல.. “அப்பா அங்கே ஏதோ கோபமா இருக்காங்க.. அதனால் தான் ப்ளீஸ்.. நான் இன்னொரு முறை.. பேசறேன்.. எனக்காக ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் சிந்து.
யோசனையாக அவள் முகத்தைப் பார்த்தவன், “உனக்காக இல்லை.. உங்க அப்பாவுக்காக இதைச் செய்யலாம்..” என்று மீண்டும் தாரக் அலைபேசியை அவளிடம் கொடுக்க.. நாகராஜன் இங்கு வாதிட்டுக் கொண்டிருந்ததில் அலைபேசி துண்டிக்கப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை.
மீண்டும் அது அடிக்கவும் திரும்பி அதைப் பார்த்தவர், இன்ஸ்பெக்டரின் முன் அதை எடுப்பதா வேண்டாமா என்பது போல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அதை வாங்கி ஆன் செய்து ஸ்பீக்கரிலும் போட்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.
“என்ன இது அராஜகம்..?” என்று அவரிடம் இருந்து அலைபேசியை நாகராஜன் பறிக்க முயல.. “இரண்டு நிமிஷம் நான் பேசி முடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.. இப்படி எல்லாம் நீங்க அமர்க்களம் செஞ்சா தான் இது வேற மாதிரி மாறும்.. நான் சொன்னது போல அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போக வேண்டிய நிலைமை கூட வரும்.. புரிஞ்சு நடந்துக்கோங்க..” என்று மிரட்டலாகக் கூறிய இன்ஸ்பெக்டர் திரும்பி அலைபேசியில் கவனமாகி “ஹலோ..” என்றார்.
அதற்குள் இங்குப் பேசியதெல்லாம் அந்தப் பக்கம் கேட்டிருக்க.. பயத்தில் சிந்துவுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அதில் அவள் அமைதியாக இருக்க.. “ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்..” என்றான் மீண்டும் ராகவ்.
அப்போதும் சிந்து பயத்தில் அமைதியாக இருக்க.. வேகமாக அலைபேசியை இன்ஸ்பெக்டரிடமிருந்து வாங்கினார் நாகராஜன். அவர் ஸ்பீக்கரை ஆப் செய்ய முயல.. “நான் உங்களை வார்ன் செய்யறேன் மிஸ்டர் நாகராஜன்.. நான் அவங்ககிட்ட பேசணும், அட்லீஸ்ட் அவங்க பேசறதையாவது கேட்கணும், அப்போ தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்..
இல்லை நீங்க தான் இவங்க கணவரையும் மகனையும் கடத்தி இருக்கீங்கன்னு உங்க மேலே நான் கேஸ் போடுவேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமாகி கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. தன் தந்தையின் மேல் கேஸ் அது இதுவெனக் காதில் விழவும், பயந்து போனவள் நாகராஜன் “ஹலோ..” என்றதில் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
அதில் கோபமான நாகராஜன் தன் எதிரில் இருந்த ராகவ் மேல் காண்பிக்க முடியாத ஆத்திரத்தை எல்லாம் ஒன்று சேர்த்து “ஹலோ..” எனவும், “ஹலோ..” என்றிருந்தாள் நடுக்கத்தோடான குரலில் சிந்து.
“ஏய் இப்போ நீ எங்கே இருக்கே..?” என்று அவர் அடுத்ததாகக் கத்தவும், “அப்பா.. நீங்க.. நீங்க என்னைத் தேட வேண்டாம்.. நா.. நான்..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் திணறி தாரக்கை பார்க்கவும், நீ பேசுவதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலக் கைகளைக் கட்டியப்படி நின்றிருந்தான் தாரக்.
அதில் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விடலாம் என்று கூட ஒரு நொடி சிந்துவுக்குத் தோன்றியது. ஆனால் வீட்டுக்குத் திரும்பச் செல்ல கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இது எனும் போது அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவள், முயன்று வர வழைத்துக் கொண்ட மன தைரியத்தோடு, “அப்பா.. என்.. என்னை யாரும் கடத்திட்டு போகலை.. நா.. நானா விரும்பி தான் அவர் கூடப் போனேன்..” என்றாள் சிந்து.
இதைக் கேட்ட நொடி “என்ன சொன்னே..?” என்று ஆத்திரத்தில் நாகராஜன் கத்தி இருக்க.. அந்தக் குரலிலேயே சிந்துவுக்கு நடுக்கம் எடுத்தது. அதில் அடுத்து பேச முடியாமல் சிந்து அமைதியாக.. “ஹ்ம்ம்.. மேலே பேசு..” என்பது போல் அவளைப் பார்த்து கையசைத்தான் தாரக்.
அதில் எச்சில் கூட்டி விழுங்கியவாறே “நா.. நான் விரும்பி தான்.. நானே அவர் கூட..” என்று சிந்து இப்போது மேலும் பயத்தில் திணறவும், சட்டென நிலைமையைக் கையில் எடுத்திருந்த இன்ஸ்பெக்டர் “அதாவது இது உங்க விருப்பப்படி நடந்த கல்யாணம்னு சொல்றீங்களா..?” என்றார்.
அதற்குப் பதில் சொல்லாமல் சிந்து அமைதியாக.. ‘சொல்’ என்பது போல விழியசைத்தான் தாரக். அதில் “ஆ.. ஆமா..” என்று திணறலோடு சிந்து சொல்லவும், “உங்களோடது காதல் கல்யாணமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
இதற்குப் பதில் என்ன சொல்வது எனத் தெரியாமல் சிந்து விழிக்கவும், ‘ஆம்’ என்பது போல தலையசைத்தான் தாரக். ஆனால் அவளுக்கு வார்த்தைகளில் கூட இதைச் சொல்ல விருப்பமில்லை.
அதில் தொடர்ந்து சிந்து அமைதியாகவே இருக்க.. “சொல்லுங்க.. இது உங்க விருப்பப்படி நடந்த காதல் கல்யாணமா..?” என்றார் மீண்டும் இன்ஸ்பெக்டர்.
அதில் தாரக் கைகளைக் கட்டிக் கொண்டு சிந்துவை முறைக்கவும், “ஆ.. ஆமா..” என்றிருந்தாள் சிந்து. “அப்போ நீங்க பிளான் செஞ்சு தான் இங்கே இருந்து கிளம்பி இருக்கீங்க இல்லையா..?” என்று இன்ஸ்பெக்டர் திரும்பக் கேட்க.. இப்போதும் “ஆமா..” என்று திணறலோடு வந்தது சிந்துவின் குரல்.
“சரி ஓகே..” என இன்ஸ்பெக்டர் அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக் கொள்ள.. வேகமாக அவரிடம் இருந்து அலைபேசியைப் பறித்திருந்த நாகராஜன் “ஏய் திமிர் எடுத்த கழுதை என்னடி சொன்னே..?” என்று கத்திக் கொண்டிருக்கும் போதே, அவளிடம் இருந்து அலைபேசியைப் பறித்து அதை அணைத்திருந்தான் தாரக்.
அவள் இப்படிச் சொன்ன பிறகு, இந்த நொடி அங்கு எத்தனை பிரச்சனைகள் நடக்கும் என சிந்துவுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அவளால் இப்போது என்ன செய்ய முடியும்..? இது ஒன்று தான் இங்கிருந்து அவள் தப்பிக்க வழி எனும் போது இதை அவள் சொல்லித் தானே ஆக வேண்டும்.
அதே நேரம் ‘வீட்டிற்குச் சென்றால் எத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்குமோ..? எப்படியெல்லாம் பழி வருமோ..? முதலில் தன்னை வீட்டிற்குள் சேர்ப்பாரா..?’ என்ற பயம் வேறு சிந்துவின் மனதை பெரிதாக அழுத்தியது.
ஆனாலும் இங்கு யாரென்று தெரியாத ஒருவனிடம் சிக்கி தினமும் அனுபவிக்கும் வலியை விட, அது பரவாயில்லை என்று தோன்ற.. அறையை விட்டு வெளியேற முயன்ற தாரக்கை பார்த்து “நா.. நான் எப்போ இங்கே இருந்து போகலாம்..?” என்றிருந்தாள் சிந்து.
அதைக் கேட்டு இதழில் வழியும் கேலி புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “என்னை இன்னுமா நீ நம்பறே..? நான் சும்மா உலுலாய்க்கு சொன்னேன்.. உன்னால் எங்கேயும் போக முடியாது, இப்போதைக்கு நீ இங்கே தான்..” என்று விட்டு வெளியேறினான் தாரக்.
அதில் உண்டான திகைப்போடு அவன் சென்ற திசையையே அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
தொடரும்...
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா